Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சமய இலக்கியங்கள்

Featured Replies

  • தொடங்கியவர்

தொடர்கிறது பன்னிறு திருமுறை.........

2.முற்றலாமையிள நாகமோடேன முளைக்கொம்பவைபூண்டு

வற்றலோடுகல னாப்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்

கற்றல்கேட்டலுடை யார்பெரியார்கழல் கையால் தொழுதேத்தப்

பெற்றமூர்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொ-ரை: வயது முதிர்ந்த ஆமையினது ஓட்டினையும், இளமையான நாகத்தையும், பன்றியினது முளை போன்ற பல்லையும் கோத்து மாலையாக அணிந்து, தசை வற்றிய பிரம கபாலத்தில் உண்பொருள் கேட்டு வந்து என் உள்ளம் கவர்ந்த கள்வன், கல்வி கேள்விகளிற் சிறந்த பெரியோர்கள் தன் திருவடிகளைக் கைகளால் தொழுது ஏத்த அவர்கட்கு அருளும் நிலையில் விடைமீது காட்சி வழங்கும் பிரமபுரத்தில் விளங்கும் பெருமானாகிய இவனல்லனோ!

கு-ரை: இதனால் இறைவன் அணிகளைக் கொண்டு அடை யாளங்கள் அறிவிக்கப் பெறுகின்றன. முற்றல் ஆமை-ஆதி கமட மாதலின் வயது முதிர்ந்த ஆமை. ஆமை என்றது ஈண்டு அதன் ஓட்டினை. இளநாகம் என்றது இறைவன் திருமேனியையிடமாகக் கொண்ட பாம்பிற்கு நரை திரை யில்லையாதலின் என்றும் இளமை யழியாத நாகம் என்பதைக் குறிப்பிக்க.

ஏனம் - பன்றி; ஆதிவராகம். வற்றல் ஓடு - சதை வற்றிய மண்டையோடு. கலன்-பிச்சையேற்கும் பாத்திரம். பலி - பிச்சை, பெரியார்க்கிலக்கணம் கற்றலும் கேட்டலுமே என்பது. கற்றல்-உலக நூல்களை ஓதித் தருக்குவதன்று, இறைவன் புகழையே கற்று அடங்கல். கேட்டலும் அங்ஙனமே.இறைவன் புகழை யன்றி வேறொன்றையுங் கல்லாத - கேளாத பெரியோர்களாலேயே இறைவன் தொழற்குரியன் என அதிகாரிகளை யறிவித்தவாறு. `கல்லார் நெஞ்சில் நில்லான் ஈசன்' `கற்றவர் விழுங்குங் கற்பகக் கனியை' என்பன ஒப்புநோக்கற்குரியன. `கற்றல் கேட்டலுடையார் பெரியார்' எனவே, உபலக்கணத்தால் சிந்தித்தல் தெளிதல் நிட்டைகூடல் முதலியனவும் கொள்ளப் பெறும். "கேட்டலுடன் சிந்தித்தல் தெளிதல் நிட்டை, கிளத்தல் என ஈரிரண்டாம் கிளக்கின் ஞானம்" என்பது சிவஞான சித்தியார். தமக்கு அருள் செய்தவண்ணமே தொழுதேத்தும் பெரியோர்க்கெல்லாம் அருள் வழங்கப் பெருமான் இடபத்தை ஊர்ந்தே இருக்கிறார் என்பதாம். பெற்றம் - இடபம்.

3.நீர்பரந்தநிமிர் புன்சடைமேலோர் நிலாவெண்மதிசூடி

ஏர்பரந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்

ஊர்பரந்தவுல கின்முதலாகிய வோரூரிதுவென்னப்

பேர்பரந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொ-ரை: கங்கை நீர் நிரம்பி நிமிர்ந்த சிவந்த சடைமுடி மீது ஒரு கலையை உடைய நிலவைப் பொழியும் வெள்ளிய பிறைமதியைச் சூடி வந்து விரகமூட்டிக் கைகளில் அணிந்துள்ள ஓரினமான சங்கு வளையல்கள் கழன்று விழுமாறு செய்து, என் உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மகாப்பிரளய காலத்தில் ஊர்கள் மிக்க இவ்வுலகில் அழியாது நிலை பெற்ற ஒப்பற்ற ஊர் இது என்ற புகழைப் பெற்ற பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவனல்லனோ!

கு-ரை: நீர் - கங்கை, நிமிர்புன்சடை - நிறைந்த புல்லியசடை, �#8220;ர் நிலா வெண்மதி - ஒரு கலைப்பிறை, ஏர் - அழகு. வெள்வளை - சங்குவளை. சோர - நழுவ, அவன் மதியைச் சூடியிருத்தலின் விரக மிக்கு உடலிளைத்து வளைசோர்ந்தது என்பதாம். ஊர் பரந்த உலகு - ஊர்கள் மிகுந்த உலகு. மகாப்பிரளய காலத்து உலகமே அழிக்கப் பெற்றபோது, இத்தலம் மட்டும் அழியாது இருத்தலின் உலகிற்கே ஒருவித்தாக இருக்கின்றது சீகாழி என்பது. பேர் - புகழ்.

4.விண்மகிழ்ந்தமதி லெய்ததுமன்றி விளங்குதலையோட்டில்

உண்மகிழ்ந்துபலி தேரியவந்தென துள்ளங்கவர்கள்வன்

மண்மகிழ்ந்தவர வம்மலர்க்கொன்றை மலிந்தவரைமார்பில்

பெண்மகிழ்ந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொ-ரை: வானவெளியில் மகிழ்ச்சிச் செருக்கோடு பறந்து திரிந்த மும்மதில்களையும் கணையொன்றினால் எய்து அழித்தது மல்லாமல், விளங்கிய பிரமகபாலமாகிய தலையோட்டில் மனமகிழ் வோடு பலியேற்க வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன் புற்றிடையே வாழும் பாம்பு, கொன்றை மலர் ஆகியவற்றால் நிறைந்த வரை போன்ற மார்பின் இடப்பாகத்தே உமையம்மையை மகிழ்வுடன் கொண்டருளியவனாய்ப் பிரமபுரத்தில் எழுந்தருளிய பெருமானாகிய இவன் அல்லனோ!

கு-ரை: விண்மகிழ்ந்தமதில் - ஆகாயத்தில் பறத்தலை விரும்பிய மதில். இவை திரிபுராரிகளின் பொன், வெள்ளி, இரும்பா லான கோட்டை. எய்தது - மேருவை வில்லாக்கி, வாசுகியை நாணாக்கித் துளைத்தது. உள்மகிழ்ந்து - மனமகிழ்ந்து, தேரிய - ஆராய, செய்யிய என்னும் வாய்பாட்டு வினையெச்சம். மண் மகிழ்ந்த அரவம் - புற்றினை விரும்பும் பாம்பு, இறைவன் அணிந்த பாம்பு புற்றில் வாழாததாயினும் சாதி பற்றிக் கூறப்பட்டது. அரவம் கொன்றை மலிந்த மார்பு-அச்சுறுத்தும் விஷம் பொருந்திய பாம்பையும், மணமும் மென்மையும் உடைய கொன்றையையும் அணிந்த மார்பு, என்றது வேண்டுதல் வேண்டாமையைக் காட்டும் குறிப்பாகும். பெண் - உமாதேவியார். பலிதேரவந்தார் எனதுள்ளம் கவர்ந்தார் என்றது என்னுடைய பரிபாகம் இருந்தபடியை அறிந்து ஒன்று செய்வார் போல வந்து உள்ளமாகிய ஆன்மாவை மலமகற்றித் தமதாக்கினார் என்பதை விளக்கியவாறு.

5.ஒருமைபெண்மையுடை யன்சடையன்விடை யூரும்மிவனென்ன

அருமையாகவுரை செய்யவமர்ந்தென துள்ளங்கவர்கள்வன்

கருமைபெற்றகடல் கொள்ளமிதந்ததொர் காலம்மிதுவென்னப்

பெருமைபெற்றபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொ-ரை: ஒரு திருமேனியிலேயே உமையம்மைக்கு இடப்பாகத்தை அளித்தவன் என்றும், சடைமுடியை உடையவன் என்றும், விடையை ஊர்ந்து வருபவன் என்றும் அவனது அழகைத் தோழியர் கூற அவ்வுரைப் படியே வந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், சர்வசங்கார காலத்தில் கரிய கடல் பொங்கி வந்து உலகைக் கொண்டபோது தோணிபுரமாய் மிதந்த பெருமை பெற்ற பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ.

கு-ரை: ஒருமை - ஒரு திருமேனியிலேயே, பெண்மை உடை யன் - பெண் உருவத்தை உடையன்; என்றதால் பெண்ணுருவும் ஆணுருவுமாகிய இருமையும் உடையன் என்பது குறித்த வாறு.பெண்மை - பெண்ணுரு. உடையன் என்றதிலுள்ள விகுதியால் ஆணுருவாயினும் பெண்மை உடைமையும், சிவம் உடையானும் ஆம் என்றவாறு. சடையன் - பெண்மையுருவில் பின்னிய சடையும் ஆணுருவில் அமைந்த சடையுமாயிருத்தலின் இரண்டிற்கு மேற்பச் சடையன் என்றார். உரைசெய்ய - தோழியர் தலைவன் இயல்பைச் சொல்ல. உரையின் வாயிலாக உள்ளத்தில் புகுந்து விரும்பி உள்ளத்தைத் தமதாக்கிக் கொண்டான் என்பார் "அமர்ந்து எனது உள்ளம் கவர்கள்வன்" என்றார். ஓர் காலம் கடல் கொள்ள மிதந்த தலம் இது என்னும் பெருமைபெற்ற பிரமபுரம்' என இயைத்துப் பொருள் காண்க. ஓர்காலம் - சர்வ சங்காரகாலம்.

Edited by Shakana

  • தொடங்கியவர்

பன்னிரு திருமுறை தொடர்கிறது.........................

6.மறைகலந்தவொலி பாடலோடாடல ராகிமழுவேந்தி

இறைகலந்தவின வெள்வளைசோரவென் னுள்ளங்கவர்கள்வன்

கறைகலந்தகடி யார்பொழில்நீடுயர் சோலைக்கதிர்சிந்தப்

பிறைகலந்தபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொ-ரை: ஒலி வடிவினதான வேதத்தைப் பாடிக் கொண்டும், ஆடிக் கொண்டும், மழுவாயுதத்தைக் கையில் ஏந்திக் கொண்டும் வந்து எனது முன் கையில் உள்ள ஓரினமான வெள்ளிய வளையல்கள் கழன்று விழ என்னை மெலிவித்து உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், இருள் செறிந்த, மணமுடைய பொழில்களிடத்தும் நீண்டு வளர்ந்த மரங்களை உடைய சோலைகளிடத்தும் நிலவைப் பொழியும் பிறையைச் சூடியவனாய்ப் பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

கு-ரை: பாடுவது வேதம், செய்வது கள்ளம் என்ற நிலையில் பெருமான் இருக்கின்றார் என்பதைக் காட்டுவன முன் இரண்டு அடி. ஒலி கலந்த மறை பாடலோடு எனக் கூட்டி ஒலிவடிவாய வேதத்தைப் பாடுதலை உடையவர் எனப் பொருள் காண்க.

மழு - தவறிழைத்தாரைத் தண்டித்தற்காக ஏந்திய சங்கார காரணமாகிய தீப்பிழம்பு; ஆயுதமுமாம். இறை - மணிக்கட்டு. வெள் வளை-சங்க வளையல்கள். முன்கையில் செறிந்து கலந்திருந்த சங்க வளையல்கள் சோர்ந்தன என்பதால், `உடம்புநனி சுருங்கல்' என்னும் மெய்ப்பாடு உணர்த்திய வாறு. கறை - இருள். கடி - மணம். பொழில் - நந்தனவனத்தும், சோலை - தானே வளர்ந்த சோலைகளிடத்தும். கதிர் சிந்த என்றதால் நிலவொளி அங்குமிங்குமாகச் சிதறியிருந்தமை அறியப்படும். கதிர் சிந்து அப்பிறை எனப்பிரிக்க.

7.சடைமுயங்குபுன லன்அனலன்னெரி வீசிச்சதிர்வெய்த

உடைமுயங்குமர வோடுழிதந்தென துள்ளங்கவர்கள்வன்

கடன்முயங்குகழி சூழ்குளிர்கானலம் பொன்னஞ்சிறகன்னம்

பெடைமுயங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொ-ரை: சடையில் கலந்த கங்கையை உடையவனும், திருக் கரத்தில் அனலைஉடையவனும், ஆடையின் மேல் இறுகக் கட்டிய பாம்பினனுமாய் எரிவீசி நடனமாடித் திரிந்து வந்து என் உள்ளம் கவர்ந்த கள்வன், கடலைத் தழுவிய உப்பங்கழிகளால் சூழப் பெற்ற தும், குளிர்ந்த கடற்கரைச் சோலைகளையுடையதும், தம்முடைய பெடைகளை முயங்கித் திரியும் அழகிய சிறகுகளோடு கூடிய அன்னங் களை உடையதும், ஆகிய பிரமபுரத்தில் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

கு-ரை: சடைமுயங்கு புனலன் - சடையில் கலந்திருக்கின்ற கங்கையை உடையவன். அனலன்-திருக்கரத்தில் அனலை உடைய வன், உடை முயங்கும் அரவு - ஆடையின் மேல் இறுகக் கட்டிய கச்சை யாகிய பாம்பு.

சதிர்வு - பெருமை. உழிதந்து - திரிந்து. ஊடத்தக்க ஒரு பெண்ணையும், அஞ்சத்தக்க எரி அரவு முதலியவற்றையும் அணிந்து திரிபவராயிருந்தும் எனது உள்ளத்தைக் கவர்ந்தார் என்றது, அவர்க் குள்ள பேரழகின் திறத்தையும், கருணையையும், எல்லாவுயிரையும் பகைநீக்கியாளும் வன்மையையும் வியந்தவாறு.

கழி - உப்பங்கழி. கானல் - கடற்கரைச் சோலை. பிரமபுரத்தில் சடை முயங்கு புனலனாய் உள்ளம் கவர்கின்ற தன்மையால் போகியா யிருந்து உயிர்க்குப் போகத்தைப் புரிய, சிறகன்னங்களும் தத்தம் பெடைகளை முயங்குகின்றன எனல், `அவனன்றி ஓர் அணுவும் அசையாது' என்பதை அறிவித்தவாறு.

8.வியரிலங்குவரை யுந்தியதோள்களை வீரம்விளைவித்த

உயரிலங்கையரை யன்வலிசெற்றென துள்ளங்கவர்கள்வன்

துயரிலங்கும்முல கிற்பலவூழிகள் தோன்றும்பொழுதெல்லாம்

பெயரிலங்குபிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொ-ரை: கயிலை மலையைப் பெயர்த்துத் தனது பெரு வீரத்தை வெளிப்படுத்திய புகழால் உயர்ந்த இலங்கை மன்னன் இராவணனின் வியர்வை தோன்றும் மலை போன்ற தோள்களின் வலிமையை அழித்த எனது உள்ளம்கவர் கள்வன், துயர் விளங்கும் இவ் வுலகில் பல ஊழிகள் தோன்றும் பொழுதெல்லாம் அழியாது தன் பெயர் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

கு-ரை: வியர் இலங்கு தோள் - வியர்வை விளங்குகின்ற தோள். வியர் அகலம் எனவும் பொருள் கொள்ளலாம். இலங்கை அரையன் - இராவணன். அரையன் தோள்களை வலிசெற்று என மாறிக் கூட்டுக. துயர் இலங்கும் உலகு - துன்பம் விளங்குகின்ற கன்மபூமி. இதனைத் துன்ப உலகு என்றது வினைவயத்தான் மாறித் துய்க்கப்படும் இன்ப துன்பங்களுள் இன்பக் களிப்பைக் காட்டிலும் துன்பக்கலக்கம் மிகுந்து தோன்றலின். பல ஊழி-பிரம ஊழி முதலிய பல ஊழிகள். இறைவன் பல ஊழிகளை விளைவிப்பது ஆன்மாக்களின் மலம் பரிபாக மாதற்பொருட்டு. பெயர் - புகழ்.

9.தாணுதல்செய்திறை காணியமாலொடு தண்டாமரையானும்

நீணுதல்செய்தொழி யந்நிமிர்ந்தானென துள்ளங்கவர்கள்வன்

வாணுதல்செய்மக ளீர்முதலாகிய வையத்தவரேத்தப்

பேணுதல்செய்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொ-ரை: திருமாலும், தாமரை மலரில் எழுந்தருளியிருக்கும் நான்முகனும், தனது தாளையும் முடியையும் சிறிதே காணுதற் பொருட்டுப் பன்றியாயும் அன்னமாயும் தேடிச் செயலற, அண்ணா மலையாய் நிமிர்ந்தவனாய், என் உள்ளம் கவர் கள்வனாய் விளங்கு பவன், ஒளி பொருந்திய நுதலையும் சிவந்த நிறத்தையும் உடைய மகளிர் முதலாக உலகோர் அனைவரும் துதிக்க விரும்புதலைச் செய்யும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

கு-ரை: மாலொடு தண்தாமரையானும் தாள் நுதல் செய்து இறை காணிய நீணுதல் செய்து நிமிர்ந்தான் எனக் கூட்டுக. மால் தாள்காணிய நிமிர்ந்தான் எனவும், தாமரையான் நுதல் காணிய நிமிர்ந்தான் எனவும் தனித்தனிக் கூட்டிப் பொருள் காண்க. தாள் நுதல் செய்து - தாளையும் நுதலையும் தமது குறிக்கோளாகக் கருதி. இறை காணிய - தம்முள் யார் இறை என்பதைக் காணும்பொருட்டு; இறைவனைக் காணும்பொருட்டு என்பாரும் உளர். நீணுதல் - மால் பெரிய பன்றியாய் நீளுதலும் பிரமன் அன்னமாய் வானத்தில் நீளுதலுமாகிய இரண்டின் செயல்கள். ஒழிய - செயலற்றுப்போக. நிமிர்ந்தான் - அண்ணாமலையாய் உயர்ந்தவன். சென்று பற்றுவேன் என்று செருக்கிய தேவர்க்கு அப்பாற்பட்டவன், செயலழிந்திருந்த தலைவியின் சிந்தையை வலியவந்து கவர்கின்றான் என்பது இறைவனது எளிமை தோன்ற நின்றது. மகளிர் முதலாகிய வையத்தவர் ஏத்த மேவிய பெம்மான் என்றது இவளும் வையத்த வருள் ஒருத்தியாயிருக்க இங்ஙனம் கூறினாள், ஏனைய மகளிர்க்கு இல்லாததாகிய, இறைவனே வலியவந்து உள்ளங்கவரும்பேறு தனக்குக் கிட்டியமையைத் தெரிவிக்க.

10.புத்தரோடுபொறி யில்சமணும்புறங் கூறநெறிநில்லா

ஒத்தசொல்லவுல கம்பலிதேர்ந்தென துள்ளங்கவர்கள்வன்

மத்தயானைமறு கவ்வுரிபோர்த்ததோர் மாயம்மிதுவென்னப்

பித்தர்போலும்பிர மாபுரமேவிய பெம்மானிவனன்றே.

பொ-ரை: புண்ணியம் இன்மையால் புத்தர்களும் அறிவற்ற சமணர்களும் சைவத்தைப் புறங்கூறச் சான்றோர் வகுத்த நெறியில் நில்லாது, தமக்கு ஏற்புடையவாகத் தோன்றிய பிழைபட்ட கருத்துக் களைச் சொல்லித் திரிய, உலகனைத்தும் சென்று பலி தேர்ந்து எனது உள்ளத்தைக் கவர்ந்த கள்வன், மதயானையை மருளுமாறு செய்து அதன் தோலை உரித்துப் போர்த்தது ஒரு மாயமான செயல் என்னு மாறு செய்து, பித்தனாய் விளங்கும் பிரமபுரம் மேவிய பெருமானாகிய இவன் அல்லனோ!

கு-ரை: பொறி இல் சமண் - அறிவற்ற சமணர்கள். புறங்கூற - நேர்நின்று சொல்லமாட்டாமையாலே மறைவான இடத்தில் எளிமை யாய்ச் சொல்ல. நெறி நில்லா - வரம்பில் நில்லாதனவாக. ஒத்த சொல்ல - ஒரே கருத்தை உரைக்க. புறச்சமயத்தார் ஒருமித்துப் புறங் கூறவும் பிச்சையேற்று உள்ளங்கவர்கின்ற கள்வனாதலின் யானைத் தோலைப் போர்த்து மாயம் செய்தார் என்று இயைபில் பொருள் தோன்ற வைத்தார்.

11.அருநெறியமறை வல்லமுனியகன் பொய்கையலர்மேய

பெருநெறியபிர மாபுரமேவிய பெம்மானிவன்றன்னை

ஒருநெறியமனம் வைத்துணர்ஞானசம் பந்தன்னுரைசெய்த

திருநெறியதமிழ் வல்லவர்தொல்வினை தீர்தல்எளிதாமே.

பொ-ரை: அருமையான நெறிகளை உலகிற்கு வழங்கும் வேதங்களில் வல்ல பிரமனால் படைக்கப்பட்டதும், அகன்ற மலர் வாவியில் தாமரைகளையுடையதும் ஆகிய பிரமபுரத்துள் மேவிய முத்தி நெறி சேர்க்கும் முதல்வனை, ஒருமைப்பாடு உடைய மனத்தைப் பிரியாதே பதித்து உணரும் ஞானசம்பந்தன் போற்றி உரைத்தருளிய திருநெறியாகிய அருநெறியை உடைய தமிழாம் இத்திருப்பதிகத்தை ஓத வல்லவர்களின் பழவினைகள் தீர்தல் எளிதாகும். ஊழ்வினை தீர்வதற்குரிய மார்க்கங்கள் பல இருப்பினும், இத்திருப்பதிகத்தை ஓதுதலே எளிமை வாய்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

கு-ரை: அருநெறியமறை வல்லமுனி - அருமையான நெறி களை வகுக்கும் மறைகளில் வல்ல முனிவனாகிய பிரமன். அலர்மேய அகன்பொய்கை பிரமாபுரம் மேவிய பெருநெறிய பெம்மான் இவன்றன்னை - தாமரைகள் பொருந்திய அகன்ற பொய்கையை உடைய பிரமாபுரத்தில் விரும்பியிருந்த முத்திநெறிசேர்க்கும் முதல்வனை. ஒருநெறியமனம் - ஒன்றுபட்ட மனம். மனம் ஐந்து வழியாகவும் அறிந்தவற்றை வழியடைத்தகாலத்தும் சென்று பற்றித் தன்மயமாயிருப்பதொன்றாகலின் அங்ஙனம் செல்லாது ஒருங்கிய மனத்தை ஈண்டு விதந்தார்கள். வைத்து - பிரியாதே பதித்து. திரு நெறியதமிழ் - சிவ நெறியாகிய அருநெறியையுடைய தமிழ். தொல் வினை - பழமையாகிய வினை; என்றது ஆகாமிய சஞ்சிதங்களையும், இனி வரக்கடவ பிராரத்த சேடத்தையும். முன்னைய தீரினும் பிராரத்த சேடம் நுகராதொழியாதாகவும் இங்ஙனங்கூறியது, யான் நுகர்கிறேன் என்ற இன்னலுமின்றிக் கழிக்கப்படுதலை. இதனால் பழவினை நீக்கமே இப்பதிகப் பயன் என்று உணர்த்தியவாறு.

குருவருள்: வேதம் உலகினருக்கு வேண்டிய பொது அறங்கள் பலவற்றைச் சொல்வது ஆதலின், அதை இங்குஅருநெறிய மறை என்றும், ஆகமம் சத்திநிபாதர்க்குரிய சைவ நுட்பங்களைச் சொல்வது ஆதலின், அதனை இங்கு அவற்றின் மேம்பட்டது எனும் பொருளில் பெருநெறி என்றும் கூறினார். ஒருநெறி அல்லது ஒருசமயம் என்றால் அது உலகினர் அனைவருக்கும் பயன்தரத் தக்கதாய் இருத்தல் வேண்டும். அதுபற்றியே ஞானசம்பந்தர் உலகினருக்கு அருநெறிப் பயனும் சத்திநிபாதர்க்கு பெருநெறிப்பயனும் உணர்த்தினார். ஆயினும் அருநெறியும் பெருநெறியும் ஒருநெறியே என்பதையும் அதுவே திருநெறி என்பதையும் உணர்த்தியருளினார். இக்கருத்தைத் திருமந்திரமும்

திருநெறி யாவது சித்தசித் தன்றிப்

பெருநெறி யாய பிரானை நினைந்து

குருநெறி யாம்சிவ மாநெறி கூடும்

ஒருநெறி ஒன்றாக வேதாந்தம் ஓதுமே.

என உணர்த்துவது காண்க. பீடுடைத்தேசிகன் செயல் திருநோக்கால் ஊழ்வினையைப் போக்குதல் எனவே தேசிகன் பேரருள் தொல்வினை தீர்த்தல் ஆயிற்று. "தோடு கூற்று பித்தா மூன்றும் பீடுடைத் தேசிகன் பேரருளாகும்" என்பது அபியுக்தர் வாக்கு.

அடுத்து திருப்புகலூர் தொடரும்.........

  • தொடங்கியவர்

2. திருப்புகலூர்

பண்: நட்டபாடை

பதிக வரலாறு:

திருஞானசம்பந்தப்பெருமான் திருப்புகலூருக்கு எழுந் தருளும்போது, இதற்கு முன்னரே அங்கு எழுந்தருளியிருந்த திருநாவுக்கரசு சுவாமிகள் அவ்வூர் அடியார் பெருமகனாராகிய முருக நாயனாரோடும் பிற அடியார்களோடும் பிள்ளையாரை எதிர்கொண்டு அழைத்தனர். சம்பந்தப் பெருமான் அவர்கள் வேண்டுகோட்கு இணங்கி, முருக நாயனார் திருமடத்தில் எழுந்தருளினார்கள். அங்கே சிறுத்தொண்டர், திருநீலநக்கர் முதலிய அடியார்களும் வந்து தரிசித்து அளவளாவி இருந்தனர். சுவாமிகள், அவர்கள் அனைவரோடும் திருக்கோயிலுக்குச் சென்று வழிபடும்போது புகலூர்ப் பெருமையை உணர்த்தும் முகத்தான் இப்பதிகத்தை அருளிச்செய்தார்கள்.

தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்

1.குறிகலந்தவிசை பாடலினான்நசை யாலிவ்வுலகெல்லாம்

நெறிகலந்ததொரு நீர்மையனாயெரு தேறிப்பலிபேணி

முறிகலந்ததொரு தோலரைமேலுடை யானிடமொய்ம்மலரின்

பொறிகலந்தபொழில் சூழ்ந்தயலேபுய லாரும்புகலூரே.

பொ-ரை: சுரத்தானங்களைக் குறிக்கும் இசையமைதியோடு கூடிய பாடல்களைப் பாடுபவன். உயிர்கள் மீது கொண்ட பெருவிருப் பால் இவ்வுலகம் முழுவதும் வாழும் அவ்வுயிர்கள் தம்மை உணரும் நெறிகளை வகுத்து அவற்றுள் கலந்து நிற்பவன். எருதின்மிசை ஏறி வந்து மக்கள் இடும்பிச்சையை விரும்பி ஏற்பவன், இடையில் மான் தோலாடையை உடுத்துபவன். அவன் விரும்பி உறையும் இடம் செறிந்த மலர்கள்மீது புள்ளிகளை உடைய வண்டுகள் மொய்த்துத் தேனுண்ணும் வானளாவிய பொழில் சூழ்ந்த புகலூராகும்.

கு-ரை: குறி கலந்த இசை - குறித்த சுரத்தானங்களோடு ஒன்றிய இசை, பாடலினான் - இறைவன், மனக்குறிப்போடு ஒன்றிய இசை யமைந்த பாடலினான் என்பாரும் உளர். நசை - விருப்பம். நெறி - முறை, அஃதாவது அவ்வவ்வான்மாக்களின் பருவநிலைக்கு ஏற்ப, விறகில் தீயாகவும் பாலின்நெய்யாகவும் மணியுட்சோதியாகவும் கலந்து நிற்கும் முறை, பலி - பிச்சை; முறி கலந்தது ஒரு தோல் - கொன்ற புலியின் தோலை.

பொறி - வண்டு. உடையான் இடம் புகலூர் என இயைக்க. இது பின்வரும் பாடற்கும் இயையும்.

2.காதிலங்குகுழை யன்னிழைசேர்திரு மார்பன்னொருபாகம்

மாதிலங்குதிரு மேனியினான்கரு மானின்னுரியாடை

மீதிலங்கவணிந் தானிமையோர்தொழ மேவும்மிடஞ்சோலைப்

போதிலங்குநசை யால்வரிவண்டிசை பாடும்புகலூரே.

பொ-ரை: காதில் விளங்கும் குழையை அணிந்தவன். பூணூல் அணிந்த அழகிய மார்பினன். இடப்பாகமாக உமையம்மை விளங்கும் திருமேனியன். யானையினது தோலை உரித்து மேல் ஆடையாக அணிந்தவன். அத்தகையோன் இமையவர் தொழமேவும் இடம், சோலைகளில் தேனுண்ணும் விருப்பினால் வரிவண்டுகள் இசைபாடும் புகலூராகும்.

கு-ரை: ஒருபாகம் மாது இலங்கும் திருமேனியன் என்பதால், காதிலங்கு குழையன் என்பதற்குப் பெண்பாதியில் காதில் விளங்கும் குழையை உடையவன் என்றும், ஆண்பாதியில் தளிரை உடையவன் என்றும் பொருள்கொள்க. குழை - பனந்தோட்டால் செய்யப்படும் மகளிர் காதணி; ஆடவர் காதில் செருகிக்கொள்ளும் மணத்தழை; இதனை வடநூலார் `கர்œவதம்சம்' என்பர். இழைசேர் திருமார்பன் - பூணூல் சேர்ந்த, இழைத்த தங்க அணிகள் சேர்ந்த மார்பினையுடை யவன். கருமான் - `கிருஷ்ண மிருகம்' என்னும் மான், உரி - தோல், இமையோர் - தேவர்கள்; சோலைப்போதில் அங்கு நசையால் வரிவண்டு பாடும் எனப் பிரித்துப் பொருள்கொள்க. அங்கு - அசை; போது இலங்கு எனப் பிரித்துக்கோடலும் ஒன்று.

3.பண்ணிலாவும்மறை பாடலினான்இறை சேரும்வளையங்கைப்

பெண்ணிலாவவுடை யான்பெரியார்கழல் என்றுந்தொழுதேத்த

உண்ணிலாவியவர் சிந்தையுள்நீங்கா வொருவன்னிடமென்பர்

மண்ணிலாவும்மடி யார்குடிமைத்தொழின் மல்கும்புகலூரே.

பொ-ரை: இசையமைதி விளங்கும் வேத கீதங்களைப் பாடு பவன் - முன்கைகளில் வளையல்கள் விளங்கும் அழகிய கைகளை உடைய உமையம்மையைத் தனது தேவியாக உடையவன். தன் திருவடிகளை என்றும் தொழுது ஏத்தும் பெரியவர்களின் உள்ளத்தே விளங்குவதோடு அவர்களின் அடிமனத்தில் என்றும் நீங்காதிருப் பவன். அத்தகையோன் விரும்பி உறையுமிடம் நிலவுலகில் வாழும் அடியவர்கள் குடும்பத்துடன் வந்து பணி செய்யும் புகலூராகும்.

கு-ரை : பண் நிலாவும் மறை - இசை தாமே விளங்கும் வேதம். இறை - முன்கை, பெண் - உமாதேவி, பெரியார் - சிவஞானத்தில் பெரியவர்கள்; உள்நிலாவி அவர் சிந்தை நீங்கா ஒருவன் எனப்பிரிக்க. குடிமைத்தொழில் - வேளாண்மைத் தொழில்; மிராசுக்குக் குடித்தனம் என்ற வழக்குண்மை காண்க. பாடலின், உடையான், ஒருவன் இடம் புகலூரே என்பர் எனக் கூட்டுக.

4.நீரின்மல்குசடை யன்விடையன்அடை யார்தம்மரண்மூன்றுஞ்

சீரின்மல்குமலை யேசிலையாகமு னிந்தானுலகுய்யக்

காரின்மல்குகடல் நஞ்சமதுண்ட கடவுள்ளிடமென்பர்

ஊரின்மல்கிவளர் செம்மையினாலுயர் வெய்தும்புகலூரே.

பொ-ரை : கங்கை நீரால் நிறைவுற்ற சடைமுடியை உடைய வன். விடையூர்தியன். முப்புரங்களையும் சிறப்புமிக்க மேருமலையை வில்லாகக் கொண்டு முனிந்தவன். உலக உயிர்கள் உய்யக் கருநிற முடைய கடலிடையே தோன்றிய நஞ்சை அமுதமாக உண்ட கடவுள். அத்தகையோன் விரும்பி உறையுமிடம் ஒழுக்கத்தால் உயர்ந்த மக்கள் வாழ்ந்து சிறப்பெய்தும் புகலூராகும்.

கு-ரை: அடையார் - (தேவர்க்குப்) பகைவர். மலையைச் சிலையாக முனிந்தான் என்றது அவன் முனிவொன்றுமே பகை தணித்து ஆட்கொண்டது; வில்லான மலை அன்று என்பதாம், காரின் மல்கும் - கருமைநிறத்தில் மிகுந்த, ஊரின் மல்கிவளர் செம்மையினால் உயர்வெய்தும் புகலூர் - ஊர்களில் ஒருகாலைக்கு ஒருகால் நிறைந்து வளரும் ஒழுக்கத்தாலுயர்ந்த புகலூர்.

5.செய்யமேனிவெளி யபொடிப்பூசுவர் சேரும்மடியார்மேல்

பையநின்றவினை பாற்றுவர்போற்றிசைத் தென்றும்பணிவாரை

மெய்யநின்றபெரு மானுறையும்மிட மென்பரருள்பேணிப்

பொய்யிலாதமனத் தார்பிரியாது பொருந்தும்புகலூரே.

பொ-ரை : சிவந்த திருமேனியில் வெண்ணிறமான திரு நீற்றைப் பூசுபவர். தம்மை வந்தடையும் அடியவர்களைத் தாக்க வரும் வினைகளை நீக்குபவர். என்றும் தம்மைப் பாடிப் பணிவார்க்கு உண்மையானவர். அவர் விரும்பி உறையும் இடம், அருளையே விரும்பிப் பொய்யில்லாத மனத்தவர் நீங்காது வாழும் புகலூர் என்பர்.

கு-ரை: அடியார்மேல் நின்றவினை பையப் பாற்றுவார். பைய - மெதுவாக, நோயை விரைந்து நீக்கில் அதனால் விளையும் தீமை பெரிதாய், நோயின் பெருமையும், மருத்துவன் உழைப்பும் அறியப்படாதவாறுபோல, வினைகளை விரைந்து நீக்கின் விளையுங் கேடு பலவாமாகலின் பையப் பாற்றுவார் என்žர். பாற்றுதல் - சிதறிப்போகச் செய்தல். பணிவாரை - அடியார்கள் இடத்தில்; வேற்றுமை மயக்கம், மெய்ய - உண்மையாக, பொய் - அஞ்ஞானம்.

  • 2 weeks later...
  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

7418594894.jpg

http://media.putfile.com/29863007299530212...997297029903021

பிள்ளையார் கவசம்.

Edited by குமாரசாமி

அழகிய விநாயகர் பாடலை இணைத்தமைக்கு நன்றி! பாடலின் வரிகளையும் இணைத்தால் நன்றாக இருக்கும்! :lol:

நித்திரையால் எழும்பிய கையோடு பக்திப் பரவசமாகிவிட்டேன்!

விநாயகப் பெருமானுக்கு அரோகரா!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

8017551470.jpg

அன்பே சிவம்.

Click here to watch 6001013-020-Anpenum-Pitiyul-Akappatum-Malaiye-MS

Click here to watch 7003-Nallor-Manaththai-Natungach-Cheydheno-MSG

Edited by குமாரசாமி

அன்பே சிவம் பாடல் கேட்க நன்றாக இருக்கின்றது.

நல்லோர் மனத்தை பாடலும் கேட்க நன்றாக இருக்கின்றது, நன்றி!

  • தொடங்கியவர்

பன்னிரு திருமுறை தொடர்கிறது.........................(2. திருப்புகலூர்)

06.கழலினோசைசிலம் பின்னொலியோசை கலிக்கப்பயில்கானில்

குழலினோசைகுறட் பாரிடம்போற்றக் குனித்தாரிடமென்பர்

விழவினோசையடி யார்மிடைவுற்று விரும்பிப்பொலிந்தெங்கும்

முழவினோசைமுந் நீரயர்வெய்த முழங்கும்புகலூரே.

பொ-ரை : இரண்டு திருவடிகளிலும், விளங்கும் வீரக் கழல் சிலம்பு ஆகியன ஒலிக்கவும், குழல் முதலிய இசைக்கருவிகள் முழங் கவும், குள்ளமான பூதகணங்கள் போற்றவும், பலகாலும் பழகிய இட மாக இடுகாட்டில் முற்றழிப்பு நடனம் புரியும் இறைவனுடைய இடம், திருவிழாக்களின் ஓசையும், அடியவர் மனமகிழ்வோடு எங்கும் முழக் கும் முழவோசையும் கடலோசையைத் தளரச் செய்யும் ஒலியைத் தரும் புகலூர் என்பர்.

கு-ரை : கழலின் ஒசை - ஆண்பகுதியாகிய வலத்தாளில் அணிந்த வீரக்கழலின் ஓசை; சிலம்பின் ஓசை - பெண்பகுதியாகிய இடத்தாளில் அணிந்த சிலம்பின் ஓசை. அன்றிச் சிவபெருமானது கழலின் ஓசையும் மாžடிய மகாகாளியின் சிலம்பின் ஓசையும் என்பாருமுளர். குனித்தார் - ஆடியவர், குறள்பாரிடம் - குள்ளமான பூதங்கள், மிடைவுற்று - நெருங்கி, முந்நீர் - கடல்.

07.வெள்ளமார்ந்துமிளிர் செஞ்சடைதன்மேல் விளங்கும்மதிசூடி

உள்ளமார்ந்தவடி யார்தொழுதேத்த வுகக்கும்அருள்தந்தெம்

கள்ளமார்ந்துகழி யப்பழிதீர்த்த கடவுள்ளிடமென்பர்

புள்ளையார்ந்தவய லின்விளைவால்வளம் மல்கும்புகலூரே.

பொ-ரை : கங்கைநீர் அடங்கி விளங்கும் செஞ்சடைமேல் விளக்கமான பிறைமதியைச் சூடி, தம்மிடம் மனம் ஒன்றிய அடியவர் தொழுது ஏத்த அவர்கள் மனம் மகிழும் அருளைப் புரிந்து என்னைப் பற்றிய வினையையும் பழியையும் தீர்த்தருளிய கடவுள் உறையும் இடம், மீன் கொத்தி முதலிய பறவை இனங்கள் மீன்களைக் கவர வந்து தங்கும் வயல்களின் விளைவால் வளம் மல்கிய புகலூராகும்.

கு-ரை: வெள்ளம் - கங்கை; வெள்ளம் ஆர்ந்து மிளிர் செஞ் சடை என்றது செருக்கால் மிக்க கங்கையை அடக்கியது என்றவாறு. விளங்கும் மதி சூடி என்பது இளைத்த மதியை விளங்க வைத்தது. இதல் தருக்கினாரை ஒடுக்குதலும் தாழ்ந்தாரை உயர்த்துதலும் இறைவன் கருணை என்பது தெரிவிக்கப்படுகின்றன. எம் கள்ளம் ஆர்ந்து பழிதீர்த்த கடவுள் - அநாதியே பற்றிநிற்கும் எமது ஆணவ மலமாகிய வஞ்சனை நீங்கப் `பெத்தான்மாக்கள்' என்னும் பழியைத் தீர்த்த கடவுள். புள் - நாரை முதலியன.

08.தென்னிலங்கையரை யன்வரைபற்றி யெடுத்தான்முடிதிண்டோள்

தன்னிலங்குவிர லால்நெரிவித்திசை கேட்டன்றருள்செய்த

மின்னிலங்குசடை யான்மடமாதொடு மேவும்மிடமென்பர்

பொன்னிலங்குமணி மாளிகைமேல்மதி தோயும்புகலூரே.

பொ-ரை : அழகிய இலங்கை அரசனாகிய இராவணன் கயிலை மலையை இரு கரங்களாலும் பற்றி எடுத்தபோது அவனுடைய தலைகள், திண்ணிய தோள்கள் ஆகியவற்றைத் தன் கால் விரலால் நெரித்துப் பின் அவன் சாமகானம் பாடக்கேட்டு அன்று அவனுக்கு அருள் செய்தவனாகிய தாழ்ந்த சடைமுடி உடைய பெருமான் தன் தேவியோடு மேவும் இடம், மதி தோயும் அழகிய மாளிகைகள் நிறைந்த புகலூராகும்.

கு-ரை : தென் - அழகு, திசைகுறித்ததன்று. வரை - கயிலை; நெரித்து எனாது நெரிவித்து என்றது விரலின்செயல் என்பதைத் தெரிவிக்க. இவரே நின›த்துச் செய்யின் நேரும் தீமை பெரிதாயிருக் கும் என்பது. இசை - சாமகானம். பொன்னிலங்கும் மணி மாளிகை யின்மேல் மதிதோயும் என்பது, புகலூரும் மதிசூடி இறைவனைப் போல் சாரூபம் பெற்றது என்பது அறிவித்தவாறு.

09.நாகம்வைத்தமுடி யானடிகைதொழு தேத்தும்மடியார்கள்

ஆகம்வைத்தபெரு மான்பிரமன்னொடு மாலுந்தொழுதேத்த

ஏகம்வைத்தவெரி யாய்மிகவோங்கிய எம்மானிடம்போலும்

போகம்வைத்தபொழி லின்னிழலான்மது வாரும்புகலூரே.

பொ-ரை : பாம்பை முடிமிசை வைத்துள்ளவனும், தன் திருவடிகளைப் போற்றும் அடியார்கள், தம் மனத்தின்கண் வைத்துப் போற்றும் தலைவனும், பிரமனும், திருமாலும் தொழுதேத்த ஏகனாய் எரி வடிவில் மிக ஓங்கிய எம்மானுமாகிய இறைவனுக்கு மிக உகந்த இடம், பல்வகைப் பயன்களையும் தருவதோடு நிழலாற் சிறந்ததாய்த் தேன் நிறைந்து விளங்கும் பொழில் சூழ்ந்த புகலூராகும்.

கு-ரை : அடியார்கள் ஆகம்வைத்த பெருமான் - அடியார் களைத் தமது திருவுள்ளத்து இடம்பெறவைத்த பெருமான், அடியார் கள் தமது நெஞ்சத்தில்வைத்த பெருமான் என்றுமாம். ஏகம்வைத்த எரி - ஒன்žன தீப்பிழம்பு, போகம்வைத்த பொழில் என்றது தனிமகன் வழங்காப் பனிமலர்க்கா என்றதுபோல இன்பச் சிறப்பு அறிவித்தவாறு.

10.செய்தவத்தர்மிகு தேரர்கள்சாக்கியர் செப்பிற்பொருளல்லாக்

கைதவத்தர்மொழி யைத்தவிர்வார்கள் கடவுள்ளிடம்போலும்

கொய்துபத்தர்மல ரும்புனலுங்கொடு தூவித்துதிசெய்து

மெய்தவத்தின்முயல் வாருயர்வானக மெய்தும்புகலூரே.

பொ-ரை : எண்ணிக்கையில் மிக்கதேரர், சாக்கியர் சமணர் கள் ஆகியவர்களின் உண்மையல்லாத வஞ்சகம் நிறைந்த மொழி களைக் கேளாதவராய், மிகுதியான தவத்தைச் செய்யும் மெய்யடியார் களின் தலைவராகிய சிவபிரானுக்கு மிக உகந்த இடம், அடியவர்கள் மலர் கொய்து வந்து தூவிப் புனலாட்டித் துதி செய்து தவநெறியில் முயன்று உயர் வானகத்தை எய்துதற்குரிய வழிபாடுகளை ஆற்றும் புகலூராகும்.

கு-ரை: மொழியைத் தவிர்வார்களாகிய செய்தவத்தரது கடவுளிடம் என இயைக்க. அன்றிச்செய்த அவத்தர் எனப்பெய ரெச்சத்து அகரம் விகாரத்தால் தொக்கதாகக்கொண்டு வீண்காரியம் விளைவிப்பவர்கள் எனத் தேரர்க்கு அடைமொழியாகவும் ஆக்கலாம். செப்பில் - உரையில், மெய்தவம் எதுகை நோக்கி மிகாதாயிற்று.

11.புற்றில்வாழும்அர வம்மரையார்த்தவன் மேவும்புகலூரைக்

கற்றுநல்லவவர் காழியுண்ஞார்ணூளி பந்தன்றமிழ்மாலை

பற்றியென்றும்இசை பாடியமாந்தர் பரமன்னடிசேர்ந்து

குற்றமின்றிக்குறை பாடொழியாப்புக ழோங்கிப்பொலிவாரே.

பொ-ரை: புற்றில் வாழும் பாம்புகளை இடையிலே கட்டிய வனாகிய சிவபிரான் எழுந்தருளிய புகலூர்மீது இறைவனது பொருள் சேர் புகழைக் கற்று வல்லவர்கள் வாழும் சீகாழிப் பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் பாடிய தமிழ்மாலையாகிய இத்திருப்பதிகத்தை, என்றும் இசையோடு பாடி வழிபடும் மாந்தர்கள் இறைவன் திருவடி நீழலை அடைந்து குற்றம் குறைபாடு அகன்று புகழோங்கிப் பொலி வெய்துவார்கள்.

கு-ரை: பாம்பு என்ற பொதுமை பற்றி, யாகத்திலிருந்து வந்த இந்தப் பாம்புகளையும் `புற்றில் வாழும் அரவம்' என்žர். சாதியடை. மேவும் - விரும்பும். கற்று நல்ல அவர் - இறைவன் புகழைப்படித்து நல்லவராயினார்கள். குற்றம் - சொல்லான் வருங்குற்றம். குறை - சிந்தனையால் வரும் தோஷம்.

ஞானசம்பந்தன் புகலூரைச் (சொன்ன) தமிழ்மாலை பற்றி, பாடிய மாந்தர் பொலிவார் என இயைத்துப் பொருள் கொள்க. `கற்று நல்ல அவர் காழி' என்றது `கற்றவர்கள் பணிந்தேத்தும் கழுமலத்துள் ஈசன்' என்ற பகுதியை நின›வூட்டுவது. ஒழியா - ஒழிந்து; செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.

அடுத்து திருவலிதாயம் தொடரும்.........

Edited by Shakana

  • தொடங்கியவர்

பன்னிரு திருமுறை தொடர்கிறது.........................

3. திருவலிதாயம்

பண்: நட்டபாடை

பதிகவரலாறு:

திருஞானசம்பந்த சுவாமிகள் அடியார் கூட்டத்தோடும் `மல›யுங் கானுங் கடந்து போந்து, பாலியாற்று வடகரையை அடைந்து, திருவேற்காட்டை வணங்கி அதனை அடுத்துள்ள வலிதாயத்தை வணங்கும்போது `பத்தரோடு' என்னும் இத்திருப் பதிகத்தைப் பாடியருளிர்கள்.

தி ரு ச் சி ற் ற ம் ப ல ம்

01.பத்தரோடுபல ரும்பொலியம்மலர் அங்கைப்புனல்தூவி

ஒத்தசொல்லியுல கத்தவர்தாந்தொழு தேத்தவுயர்சென்னி

மத்தம்வைத்தபெரு மான்பிரியாதுறை கின்றவலிதாயம்

சித்தம்வைத்தவடி யாரவர்மேலடை யாமற்றிடர்நோயே.

பொ-ரை : வலிதாயம் சித்தம் வைத்த அடியார்களை இடர் நோய் அடையா என வினை முடிபு கொள்க.சிவனடியார்கள், விளங்குகின்ற அழகிய மலர்களை அகங் கையில் ஏந்தி மந்திரத்தோடு நீர் வார்த்துப் பூசிக்க அவர்களோடு ஒரே இசையில் அம்மந்திரங் களைச் சொல்லி உலக மக்கள் தாமும் வெளிநின்று தொழுதேத்துமாறு ஊமத்தை மலரை முடிமிசைச் சூடிய பெருமான் பிரியாதுறையும் வலிதாயம் என்ற தலத்தைத் தம் சித்தத்தில் வைத்துள்ள அடியவர்கள் மேல் துன்பங்களோ நோய்களோ வந்தடைய மாட்டா.

கு-ரை : இது திருவலிதாயத்தைத் தியானிப்பவர்களுக்குத் துன்பம் இல்லை என்கின்றது.

மந்திர புஷ்பம் இடுவதற்காக வலக்கையில் பூவை வைத்து அர்க்கிய ஜலத்தைச் சொரிந்து கையைமூடி அபிமந்திரித்துப் பலர் கூடி வேத மந்திரங்களைச் சொல்லி, இறைவற்குச் சாத்துதல் மரபாதலின் அதனைப் `பத்தரோடு....... ஒத்தசொல்லி' என்பதால் குறிப்பிடுகிžர்.

பத்தர் - பூசிக்கும் சிவனடியார்கள். பலர் - உடனிருக்கும் சிவனடியார்கள். பொலியம்மலர் - விளங்குகின்ற அழகிய மலர். புனல் தூவி - அர்க்கிய ஜலத்தை மந்திரத்தோடு சொரிந்து. ஒத்த சொல்லி - ஒரே ஸ்வரத்தில் வேதமந்திரங்களைச் சொல்லி என்ற செய்தென் எச்சச்தைச் சொல்ல என்று செயவெனெச்சமாக்குக. அங்ஙனம் அவர்கள் திருவணுக்கன் திருவாயிலில் நின்று வேத மந்திரங்களைச் சொல்கின்ற காலத்து வழிபடும் அடியார்கள் தொழுவார்கள் ஆதலின், அதனை உலகத்தவர் தாம் தொழுதேத்த என்பதால் விளக்குகின்றார். பிரியாதுறைகின்ற என்றது இறைவன் எங்கணும் பிரியாது உறைபவனாயினும் இங்கே அனைவர்க்கும் விளங்கித் தோன்றும் எளிமைபற்றி. அடியாரவர்மேல் என்றதில் `அவர்' வேண்டாத சுட்டு. இதனைச் சேர்த்து அடியார்கள் பெருமை விளக்கியவாறு. இடர் - ஆதிபௌதிகம் முதலிய வினைகளால் வரும் துன்பம். நோய் - பிறவிநோய். `பத்தரோடு பலரும் தூவிச்சொல்ல உலகத்தவர் தொழுது ஏத்தப்பெருமான் பிரியாதுறைகின்ற வலிதாயத்தைச் சித்தம் வைத்த அடியார்மேல் இடர் நோய் அடையா' எனக் கூட்டுக.

02.படையிலங்குகர மெட்டுடையான்படி றாகக்கலனேந்திக்

கடையிலங்குமனை யிற்பலிகொண்டுணுங் கள்வன்னுறைகோயில்

மடையிலங்குபொழி லின்னிழல்வாய்மது வீசும்வலிதாயம்

அடையநின்றவடி யார்க்கடையாவினை யல்லற்றுயர்தானே.

பொ-ரை : படைக் கலங்களை ஏந்திய எட்டுத் திருக்கரங்களை உடைய பெருமானும், பொய்யாகப் பலியேற்பது போலப் பிரம கபாலத்தைக் கையில் ஏந்தி வீடுகளின் வாயில்களிற் சென்று பலி யேற்றுண்ணும் கள்வனும் ஆகிய பெருமான் உறையும் கோயிலை உடையதும், நீர்வரும் வழிகள் அடுத்துள்ள பொழில்களின் நீழலில் தேன்மணம் கமழ்வதுமாகிய வலிதாயத்தை அடைய எண்ணும் அடியவர்களை வினை அல்லல் துயர் ஆகியன வந்தடைய மாட்டா.

கு-ரை: இது வலிதாயத்தை அடையும் அடியார்கட்கு வினை யில்லை என்றது.

படிறாக - பொய்யாக. கலனேந்தி - பிரமகபாலத்தைத் திருக்கரத்தில் ஏந்தி; என்றது உலகமெல்லாவற்றையும் தமக்கு உடைமையாகக் கொண்ட இறைவன் பலிகொண்டுண்டான் என்பது பொருந்தாது ஆகலின், அதுவும் அவருக்கோர் விள›யாட்டு என்பதை விளக்க. படிžக, ஏந்தி, கொண்டு, உண்டுணும் கள்வன் எனக்கூட்டுக. அன்றியும், கள்வனாதற்குப் படிறும் இயைபுடைமை காண்க. வினை அல்லல் துயர் - வினை ஏதுவாக வரும் அல்லலும் துன்பமும்.

03.ஐயன்நொய்யன்னணி யன்பிணியில்லவ ரென்றுந்தொழுதேத்தச்

செய்யன்வெய்யபடை யேந்தவல்லான்றிரு மாதோடுறைகோயில்

வையம்வந்துபணி யப்பிணிதீர்த்துயர் கின்றவலிதாயம்

உய்யும்வண்ணந்நினை மின்நினைந்தால்வினை தீரும்நலமாமே.

பொ-ரை : வலிதாயத்தை உய்யும் வண்ணம் நினைமின்; நினைந்தால் பிணி தீரும், இன்பம் ஆம் என வினை முடிபு கொள்க. அழகன், நுண்ணியன், அருகிலிருப்பவன், செந்நிறமேனியன், நெடிய மழுவை ஏந்தும் ஆற்றலன். அவன் பாசங்கள் நீங்கிய அடியவர் எக்காலத்தும் வணங்கித் துதிக்குமாறு உமையம்மையோடு உறையும் கோயில் உலக மக்கள் அனைவரும் வந்து பணிய அவர்களின் பிணிகளைத் தீர்த்து உயரும் திருவலிதாயம் என்ற அத்தலத்தை நீர் உய்யும்வண்ணம் நினையுங்கள். நினைந்தால் வினைகள் தீரும். நலங்கள் உண்டாகும்.

கு-ரை : இது வலிதாயம் உலகப் பிணியைத்தீர்ப்பது; அதனை நினைத்தால் நும் பிணியும் தீரும்; இன்பம் ஆம் என்கின்றது.

ஐயன் - அழகியன். நொய்யன் - அணுவினுக்கு அணுவாய் இருப்பவன். பிணியில்லவர் - அநாதியே பந்தித்து நிற்பதாகிய ஆணவமலக் கட்டற்ற பெரியார்கள். என்றும் தொழுதேத்த - முத்திநிலையிலும் தொழ. வெய்ய படை - கொடியவர்களுக்கு வெம்மையாய் அடியவர்களுக்கு விருப்பமாய் இருக்கும்படை. திருமாது-உமாதேவி.

முடியுடை மன்னனைக்கண்டு பிடியரிசி யாசிப்பார் போலாது வலிதாயநாதரைத் தியானித்துக் காமியப் பயனைக் கருதாதீர்கள்; உய்யுநெறியைக் கேளுங்கள்; அப்போது அதற்கிடையூறாகிய வினைகள் நீங்கும்; இன்பம் உண்டாகும்; வினை நீங்குத லொன்றுமே இன்பம் என்பது சித்தாந்த முத்தியன்றாதலின் வினை தீரும் என்பதோ டமையாது நலமாமே என்று மேலும் கூறினார்.

04.ஒற்றையேறதுடை யான்நடமாடியோர் பூதப்படைசூழப்

புற்றினாகமரை யார்த்துழல்கின்றவெம் பெம்மான்மடவாளோ

டுற்றகோயிலுல கத்தொளிமல்கிட வுள்கும்வலிதாயம்

பற்றிவாழும்மது வேசரணாவது பாடும்மடியார்க்கே.

பொ-ரை : அடியவர்க்கு வலிதாயத்தைப் பற்றி வாழ்வதே சரண் என முடிபு காண்க.

ஒற்றை விடையை உடையவன். சிறந்த பூதப்படைகள் சூழ்ந்துவர, புற்றில் வாழும் நாகங்களை இடையில் கட்டி நடனமாடி, உழலும் எம்பெருமான், உமையம்மையோடு உறையும் கோயில் உலகின்கண் ஒளி நிலைபெற்று வாழப் பலரும் நினைந்து போற்றும் வலிதாயமாகும். அடியவர்கட்கு அத்தலத்தைப் பற்றி வாழ்வதே அரணாம்.

கு-ரை : இது அடியார்களாகிய உங்களுக்கு வலிதாயத்தைப் பற்றி வாழ்வதே சரண் என்கின்றது.

ஒற்றையேறு - மற்ற இடபங்களோடு உடன்வைத்து எண்ணக் கூடாத அறவடிவமாகிய இடபம். புற்றில் நாகம் சாதியடை. வலிதாயம் உலகம் முழுவதுமே ஒளிநிறைய நினைக்கப்படுவது என்பது, வாழுமது - வாழ்வது. சரண் - அடைக்கலஸ்தானம்.

05.புந்தியொன்றிநினை வார்வினையாயின தீரப்பொருளாய

அந்தியன்னதொரு பேரொளியானமர் கோயிலயலெங்கும்

மந்திவந்துகடு வன்னொடுங்கூடி வணங்கும் வலிதாயஞ்

சிந்தியாதவவர் தம்மடும்வெந்துயர் தீர்தலெளிதன்றே.

5. பொ-ரை : வலிதாயம் கோயிலைச் சிந்தியாதவர் துயர் தீர்தல் எளிதன்று என முடிபு கொள்க.மனம் ஒன்றி நினைபவர் வினைகளைத் தீர்த்து அவர்க்குத் தியானப் பொருளாய்ச் செவ்வான் அன்ன பேரொளி யோடு காட்சி தரும் இறைவன் எழுந்தருளியுள்ள கோயிலாய் அயலில் மந்தி ஆண்குரங்கோடு கூடி வந்து வணங்கும் சிறப்பை உடைய திருவலிதாயத்தைச் சிந்தியாத அவர்களைத் தாக்கும் கொடிய துன்பம், தீர்தல் எளிதன்று.

கு-ரை : இது, பரிபாக விசேடம் கைவரப் பெறாத மந்தியும் கடுவனும்கூட வணங்கும்பொழுது, அச்சிறப்பு வாய்ந்த மக்கள் வழி படாராயின் அவர் வினை தீராதென்பதை அறிவிக்கின்றது. புந்தி யொன்றி நினைவார் - மனம் பொறிவழிச்சென்று புலன்களைப் பற்றாமல் ஒருமையாய் நின்று தியானிக்கும் அடியார்கள். பொரு ளாய - தியானிக்கும் பொருளாய. அந்தியன்னதொரு பேரொளி யான் - அந்திக்காலத்துச் செவ்வொளிபோன்ற திருமேனியுடையான். மந்தியும் கடுவனும் வணங்கும் வலிதாயம் என்றமையால் மக்களும் தம் இல்லற இன்பம் குலையாதே வந்து வணங்கும் பெற்றியர் என்பது விளக்கியவாறு.

06.ஊனியன்றதலை யிற்பலிகொண்டுல கத்துள்ளவரேத்தக்

கானியன்றகரி யின்னுரிபோர்த்துழல் கள்வன்சடைதன்மேல்

வானியன்றபிறை வைத்தவெம்மாதி மகிழும்வலிதாயந்

தேனியன்றநறு மாமலர்கொண்டுநின் றேத்தத்தெளிவாமே.

பொ-ரை : வலிதாயத்திறைவனை நறுமாமலர் கொண்டு நின்றேத்தத் தெளிவு ஆம் என வினை முடிபு கொள்க.ஊன் கழிந்த பிரமகபாலத்தில் பலி ஏற்று உலகத்தவர் பலரும் ஏத்தக் காட்டில் திரியும் களிற்றுயானையின் தோலை உரித்துப் போர்த்துத் திரியும் கள்வனும், சடையின்மேல் வானகத்துப் பிறைக்கு அடைக்கலம் அளித்துச் சூடிய எம் முதல்வனும் ஆகிய பெருமான், மகிழ்ந்துறையும் திருவலி தாயத்தைத் தேன் நிறைந்த நறுமலர் கொண்டு நின்று ஏத்தச் சிவஞானம் விளையும்.

கு-ரை : இது வலிதாயம் தொழ ஞானம் உண்டாம் என்கின்றது. ஊனியன்ற தலை - ஊன்கழிந்த தலை. பலி - பிச்சை. கான் - காடு. வானியன்ற - வானில் இலங்குகின்ற. ஆதி - முதற்பொருள்; யாவற் றிற்கும் முதலாயுள்ளவன். தெளிவு - ஞானம்.

07.கண்ணிறைந்தவிழி யின்னழலால்வரு காமன்னுயிர்வீட்டிப்

பெண்ணிறைந்தவொரு பான்மகிழ்வெய்திய பெம்மானுறைகோயில்

மண்ணிறைந்தபுகழ் கொண்டடியார்கள் வணங்கும்வலிதாயத்

துண்ணிறைந்தபெரு மான்கழலேத்தநம் முண்மைக்கதியாமே.

பொ-ரை : வலிதாய நாதன் கழலை ஏத்தினால் வீட்டின்பத்தை அடையலாம் என வினை முடிபு காண்க.நெற்றி விழியின் அழலால், தேவர் ஏவலால் வந்த காமனது உயிரை அழித்துத் தனது திருமேனி யின் பெண்ணிறைந்த இடப் பாகத்தால் மகிழ்வெய்திய பெருமான் உறை கோயிலாய் நிலவுல கெங்கும் நிறைந்த புகழைக்கொண்ட, அடியவர்கள் வணங்கும் திருவலிதாயத்துள் நிறைந்து நிற்கும் பெருமான் திருவடிகளை வணங்கினால் வீடு பேறு அடையலாம்.

கு-ரை : இது ஆன்மாக்கள் என்றும் அடையத்தகும் கதியாகிய வீட்டின்பத்தை வலிதாயநாதன் கழல் ஏத்த அடையலாம் என்கின்றது. கண்நிறைந்த விழி - கண்ணாகிய உறுப்பு முழுவதும் வியாபித் திருக்கின்ற விழி. அன்றியும் கண் நிறைந்த அழல் எனவும் கூட்டலாம். வருகாமன் - தேவ காரியத்தை முடிப்பதற்காக இந்திரன் கோபத்திற் காளாகி இறப்பதைக்காட்டிலும் சிவபெருமான் மறக்கருணையால் உய்வேன் என்று விரும்பிவந்த காமன். வீட்டி - அழித்து. உயிர் வீட்டி என்றது நித்தியமாகிய உயிரை அழித்ததன்று, அதனைத் தன்னகத் தொடுக்கி, உண்மைக்கதி - என்றும் நிலைத்த முத்தி.

08.கடலினஞ்சமமு துண்டிமையோர்தொழு தேத்தநடமாடி

அடலிலங்கையரை யன்வலிசெற்றருள் அம்மான்அமர்கோயில்

மடலிலங்குகமு கின்பலவின்மது விம்மும்வலிதாயம்

உடலிலங்குமுயி ருள்ளளவுந்தொழ வுள்ளத்துயர்போமே.

பொ-ரை : உடலில் உயிர் உள்ள அளவும் தொழுவாரது மனத் துயரம் கெடும் என வினை முடிபு காண்க.திருப்பாற்கடலைக் கடைந்த போது எழுந்த நஞ்சினை அமுத மாக உண்டு தேவர்கள் தொழுது வாழ்த்த நடனம் ஆடி, வலிமை மிக்க இலங்கை மன்னனின் ஆற்றலை அழித்துப் பின் அவனுக்கு நல்லருள் புரிந்த இறைவன் எழுந்தருளிய கோயிலை உடையதும், மடல்கள் விளங்கும் கமுகு பலாமரம் ஆகியவற்றின் தேன் மிகுந்து காணப்படுவதுமாகிய திருவலிதாயத் தலத்தை நினைக்க மனத்துயர் கெடும்.

கு-ரை : இது வினைக்கீடாகிய உடலில் உயிருள்ள அளவும் தொழுவாரது மனத்துன்பம் மடியும் என்கின்றது. கடல் - பாற்கடல் நஞ்சம் அமுதுண்டு என்றது நஞ்சின் கொடுமைகண்டும் அதனை அமுதாக ஏற்றமையை. இலங்கை யரையன் வலிசெற்று என்றது அவன் வலிமை காரணமாகவே செருக்கியிருந்தானாகலின் அவனை அது கெடுத்து ஆட்கொண்டார் என்றது.

குருவருள்: சிவபூசை எடுத்துக்கொள்பவர் "என் உடலில் உயிர் உள்ள அளவும் பூசையை விடாது செய்து வருவேன்" என்ற உறுதி மொழி கொடுத்தே எடுத்துக்கொள்வர். அக்கருத்தை இப்பாடலின் இறுதிவரி குறிப்பிடுதலைக் காணலாம். "பழனஞ்சேர் அப்பனை என்கண் பொருந்தும் போழ்தத்தும் கைவிட நான் கடவேனோ" என்ற அப்பர் தேவாரமும் காண்க.

09.பெரியமேருவரை யேசிலையாமலை வுற்றாரெயின்மூன்றும்

எரியவெய்தவொரு வன்னிருவர்க்கறி வொண்ணாவடிவாகும்

எரியதாகியுற வோங்கியவன்வலி தாயந்தொழுதேத்த

உரியராகவுடை யார்பெரியாரென வுள்கும்முலகோரே.

பொ-ரை : வலிதாயத்தை வணங்குவாரைப் பெரியார் என உலகோர் உள்குவர் என முடிபு காண்க.தேவர்களோடு மாறுபட்ட திரிபுரஅசுரர்களின் கோட்டைகள் மூன்றையும், மிகப் பெரிய மேரு மலையை வில்லாகக் கொண்டு எரியும்படி அழித்த ஒருவனும், திரு மால் பிரமன் ஆகிய இருவராலும் அறிய ஒண்ணாத அழல் வடிவாய் உயர்ந்தோங்கியவனும் ஆகிய சிவபிரானது திருவலிதாயத்தைத் தொழுது ஏத்தலைத் தமக்குரிய கடமையாகக் கொண்ட உலக மக்கள் பலரும் பெரியார் என நினைந்து போற்றப்படுவர்.

கு-ரை : இது வலிதாயத்தை வணங்குவாரே பெரியர் என உலகத்தோர் உள்குவர் என்கின்றது. பெரிய மேருவரை என்றது மலை களில் எல்லாம் பெரியதாய், தலைமையாய் இருத்தலின். சிலை - வில். மலைவுற்žர் - சண்டைசெய்த திரிபுராதிகள். எய்த ஒருவன் - அம்பு எய்து எரித்த ஒப்பற்றவன். இருவர் - பிரமனும் திருமாலும். எட்டுக்கண்ணும், இருகண்ணும் படைத்திருந்தும் அறியமுடியாத அக்கினிப்பிழம்பாகிய அண்ணாமலையாய் நின்ற இறைவன். தாம் தெய்வம் என்று இறுமாப்பார் இருவராலும் அறிய ஒண்ணாதவன் என்பதாம். ஏத்த உரியராக உடையார் - பணிதலே தமக்கு உரிமையாக உடைய அடியார்கள். உலகோர் உள்கும் - உலகத்தார் நினைப்பர்.

10.ஆசியாரமொழி யாரமண்சாக்கிய ரல்லாதவர்கூடி

ஏசியீரமில ராய்மொழிசெய்தவர் சொல்லைப்பொருளென்னேல்

வாசிதீரவடி யார்க்கருள்செய்து வளர்ந்தான்வலிதாயம்

பேசுமார்வமுடை யாரடியாரெனப் பேணும்பெரியோரே.

பொ-ரை : வலிதாயத்தின் புகழைப் பேசுபவர்க்கு யாம் அடியர் எனப் பெரியோர்கள் பேணுவர்.மனமார வாழ்த்தும் இயல்பின ரல்லாத சமணர் சாக்கியர் ஆகிய புறச்சமயிகள் கூடி இகழ்ந்தும் அன்பின்றியும் பேசும் சொற்களைப் பொருளாகக் கொள்ளாதீர். குற்றம் தீர, அடியவர்கட்கு அருள் செய்து புகழால் ஓங்கிய பெருமானது வலிதாயத்தின் புகழைப் பேசும் ஆர்வம் உடையவர்களே, அடி யார்கள் என விரும்பப்படும் பெரியோர் ஆவர்.

கு-ரை : இது, ஏற்றத்தாழ்வற அடியார் எல்லார்க்கும் அருள் செய்யும் வலிதாயத்தைப் பேசுபவர்க்கு யாம் அடியர் எனப் பெரி யோர்கள் பேணுவார் என்கின்றது. ஆசியார மொழியார் - ஆசிகளை நிரம்பச்சொல்லும் மனப்பண்பற்ற சமணர்கள். அல்லாதவர் - சைவத் திற்குப் புறம்பானவர்கள். ஏசி - இகழ்ந்து, ஈரம் - அன்பு. பொருள் என்னேல் - உறுதிப் பொருளாகக் கொள்ளாதே. வாசிதீர - வேற்றுமை நீங்க. இறைவன் வாசிதீரக்காசு நல்கும் வள்ளன்மை விளங்கக் கூறியதுமாம். பேசும் ஆர்வம் - இடைவிடாது பாராட்டிப்பேசும் விருப்பம். ஆர்வம் - அமையாத காதல். பெரியோர் ஆர்வமுடை யார்க்கு அடியார் எனப் பேணும் என உருபுவிரித்துப் பொருள்காண்க.

11.வண்டுவைகும்மண மல்கியசோலை வளரும்வலிதாயத்

தண்டவாணனடி யுள்குதலாலருண் மாலைத்தமிழாகக்

கண்டல்வைகுகடற் காழியுண்ஞானசம் பந்தன்றமிழ்பத்துங்

கொண்டுவைகியிசை பாடவல்லார்குளிர் வானத்துயர்வாரே.

பொ-ரை : வலிதாய நாதன்மீது பாடிய இத்திருப்பதிகத்தை இசையோடு பாடுவார் குளிர் வானத்துயர்வார் என முடிபு காண்க.

வண்டுகள் மொய்க்கும் மணம் நிறைந்த சோலைகள் வளரும் திருவலிதாயத்தில் விளங்கும் அனைத்துலக நாதனின் திருவடிகளைத் தியானிப்பதால், தாழைகள் வளரும் கடற்கரையை அடுத்துள்ள சீகாழிப்பதியில் தோன்றிய ஞானசம்பந்தன் தமிழ் மாலையாக அருளிச் செய்த இத்திருப்பதிகத்தைச் சிறந்த தோத்திரமாகக் கொண்டு அமர்ந் திருந்து இசை யோடு பாடவல்லார், குளிர்ந்த வானுலக வாழ்க்கையினும் உயர்வு பெறுவர்.

கு-ரை : இது, வலிதாயநாதன்மீது பாடிய இப்பத்துப் பாடலை யும் மனத்துள்கொண்டு சிந்தித்துத் தெளிந்து இசையோடு பாடவும் வல்லவர்கள் சுவர்க்கபோகத்தினும் பெரிய போகம் எய்துவர் என்கின்றது. மல்கிய - நிறைந்த. அண்டவாணன் - அண்டங்கள் தோறும் ஒன்றாயும் உடனாயுமிருந்து வாழ்பவன். அவன் திருவடியை இடைவிடாது தியானிப்பதால் மாலைபோன்ற தமிழாகக் கூறிய ஞானசம்பந்தப் பெருமானது தமிழ்ப்பாடல் பத்தையும் வல்லவர் உயர்வார் எனக் கூட்டுக. கண்டல் - தாழை. கடற்காழி - கடற்கரை நாடாகிய காழி என்பதுமட்டும் அன்று; கடலில் மிதந்த காழி என்ற தையும் உட்கொண்டு. மாலைத்தமிழ் - ஒருபொருள்மேற்கூறிய கோவையாகிய பாடல். வலிதாயநாதரை மனமொழி மெய்களான் வணங்கியவர் வினையறுவர் வீடுபெறுவர் என்ற ஒருபொருளையே கூறுதலின் இது மாலைத்தமிழாயிற்று. இசைபாடவல்லார் வானத்து வைகி உயர்வார் என இயைப்பாரும் உளர். இசைபாட வல்லார்க்கு வானத்தின்பம் ஒரு பொருளாகத் தோன்றாதாதலின் வானத்தினும் உயர்வர் என்பதே அமையுமாறு காண்க.

அதிகாரம் 4 தொடரும்.........

  • 1 month later...
  • 4 weeks later...

நாதஸ்வரம், தவிலில் சில அழகிய பாடகளை கேட்க இங்கே சொடுக்கவும்....

http://www.musicindiaonline.com/p/x/r4I0zP...MbgZwnfOkx_ZCO/

நாதஸ்வரம், தவில் ஓசை மனதில் அமைதியை ஏற்படுத்தவல்லன...

மாப்பு , கு.சா :rolleyes::unsure:

பக்க்திப் பழங்களே!! மெய் சிலிர்க்குதுப்பா :P :P

முருகன் பாடல்கள்

1. திருப்பரங்குன்றதில் நீ சிரித்தால்...

2. உள்ளம் உருகுதையா...

இங்கே சொடுக்கி கேட்கலாம்...

http://www.oosai.com/oosai_plyr/playerWin....640787853991483

  • கருத்துக்கள உறவுகள்

சகானா, மாப்ஸ், குமாரசுவாமி!

மிகவும் அருமையான பதிவுகள். நன்றி.

தொடரட்டும் நல்லதொரு பணி

உதவிக்கு

http://www3.sympatico.ca/s.thiru

Edited by aanaa

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.