ஒரு துரோகத்தின் நாட்காட்டி
தமிழினம் தனது சரித்திரத்தில் பல தியாகிகளை, வரலாற்று நாயகர்களை, வீர மறவர்களைக் கண்டிருக்கிறது. ராஜ ராஜ சோழன் முதல் பாண்டியர்கள், வன்னியர்கள் என்று பல தமிழ் எழுச்சி வரலாறுகளை அது கண்டிருக்கிறது. நமது முன்னோடிகளின் வாழ்க்கை வரலாறுகள் எமதினத்தின் எழுச்சிக்கும், வளர்ச்சிக்கும் இன்றியமையாதது என்பதுடன், அவைபற்றித் தொடர்ந்தும் பேசப்படவேண்டும் என்பதும், எமது எதிர்காலச் சந்ததிக்கும் இவை கடத்தப்படவேண்டும் என்பது அவசியமானது.
எமது வரலாற்றில் வீர மறவர்களினதும், வரலாற்று நாயகர்களினதும் கதை சொல்லப்படும்பொழுது உதிரியாக இன்னொரு விடயமும் கூட வருகிறது. இது தமிழினத்தால் தவிர்க்கமுடியாத, இனத்தினுள்ளேயே உருவாகி நெருக்கமாக இழையோடிப்போயிருக்கும் ஒரு சாபக்கேடு என்றால் அது மிகையில்லை. எமது வீர வரலாற்றின் ஒவ்வொரு எழுச்சியின்போதும் அல்லது அவ்வரலாற்றின் வீழ்ச்சிகளின்பொழுதும் இந்தச் சாபம் விடாது எம்மைப் பின் தொடர்ந்தே வருகிறது.
வரலாற்றில் தனது சொந்த இனத்தையே தனது நலன்களுக்காகவும், இச்சைகளுக்காகவும் காட்டிக்கொடுத்து, எதிரியுடன் சேர்ந்து நின்றே தனது இனத்தைக் கருவறுத்து, சொந்த இனம் அழிவதில் இன்புற்ற பல சாபங்களைத் தமிழினம் கண்டதுடன், இப்பிறப்புக்கள் பற்றிய சரியான பதிவினையும் எமது வரலாற்றில் பதிவுசெய்தே வந்திருக்கிறது. இவ்வாறு தமிழினத்திற்கெதிராக எதிரியுடன் சேர்ந்து செயற்பட்ட துரோகிகளின் வரலாறு சரித்திரத்தில் நிச்சயம் பதியப்படவேண்டும் என்பதுடன், இத்துரோகங்களால் எமதினம் பட்ட அவலங்கள் தொடர்ந்து பேசப்படுவதும் அவசியமாகிறது.
அந்தவகையில், கடந்த 15 அல்லது 16 வருடங்களுக்கு முன்னர் தமிழினம் இவ்வாறான மிகப்பெரிய துரோகம் ஒன்றிற்கு முகம் கொடுத்தது. தனது இச்சைகளுக்காகவும், நலனுக்காகவும் மட்டுமே தனது இனத்தையும், அவ்வினத்தின் சுந்தந்திர விடுதலைப் போராட்டத்தினையும் காட்டிக் கொடுத்து, பலவீனமாக்கி, ஈற்றில் அப்போராட்டமும் லட்சக்கணக்கான மக்களும் அழிக்கப்பட தானும் நேரடியாகக் காரணமாகவிருந்த ஒருவனது துரோகம் பற்றிய எனது புரிதலையும், நான் ஊடகங்கள் வாயிலாக அறிந்துகொண்ட விடயங்களையும் இங்கே பதிய நினைக்கிறேன்.
துரோகிகளை வரலாற்று நாயகர்களாகவும், உதாரண புருஷர்களாகவும் காட்ட முனையும் முனைப்புகள் வரலாற்றில் இத்துரோகிகளுக்கு வெள்ளையடித்து, அவர்களது துரோகத்தினை நியாயப்படுத்தும் கைங்கரியங்களில் ஈடுபடுவதால், இத்துரோகிகள் பற்றி நாம் தொடர்ந்து பேசுவதும், அந்தத் துரோகங்கள் பற்றித் தொடர்ந்து பதிவிடுவதும் அவசியமாகிறது. ஏனென்றால், இத்துரோகங்கள் மன்னிக்கப்படமுடியாத, மறக்கப்படமுடியாத, இனியொரு தடவை நடக்கக் கூடாத வெறுக்கப்படவேண்டிய நிகழ்வுகள் ஆகும்.
துரோகத்தின் நாள் 1 : 3 ஆம் திகதி மார்ச் மாதம், 2004
கேணல் கருணா என்னும் விநாயகமூர்த்தி முரளீதரனின் பேச்சாளர் செய்திச் சேவை ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் புலிகள் இயக்கத்தினுள் பிளவுகள் இல்லை. நாம் எமது தலைவரின் நேரடிக் கட்டளையின்கீழ்த்தான் இனிமேல் செயற்படுவோம் என்று கூறுகிறார். அவர் மேலும் கூறுகையில் மட்டக்களப்பு - அம்பாறை மாவட்ட புலிகள் இனிமேல் தலைவரின் நேரடிக் கட்டளைகளுக்கு மட்டுமே செவிசாய்ப்பதாகவும், இந்த மாவட்டங்களில் இருக்கும் மக்களின் நலன்களை மட்டுமே கருத்தில் கொண்டு இனிச் செயற்படப் போவதாகவும் கூறுகிறார்.