துரோகத்தின் நாட்குறிப்பு : நாள் 13, மார்ச் 2004
தமிழ்மக்களால் புலிகள் இயக்கத்திற்கு வழங்கப்பட்ட பெருமளவு பணத்தினைக் கருணா கையாடினார், தண்டனைக்குப் பயந்தே இயக்கத்திலிருந்து பிரியும் நிலைப்பாட்டினை எடுத்தார் - கரிகாலன்
கிழக்குமாகாண அரசியல்த்துறைப் பிரமுகரும், கருணாவின் நெருங்கிய சகாவாகவும் விளங்கியிருந்த கரிகாலன் வன்னியிலிருந்து அவுஸ்த்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திற்கு வழங்கிய செவ்வியில் தமிழ்மக்களால் புலிகள் இயக்கத்திற்கு வழங்கப்பட்ட பெருமளவு பணத்தினைக் கருணா தனது சொந்தத் தேவைக்காகப் பயன்படுத்தினார் என்றும், இந்த நிதிமுறைகேடுகள் பற்றி தலைவர் அறிந்தபோது, அதுபற்றிப் பேசுவதற்கு வன்னிக்குக் கருணாவை அழைத்தபோது தனக்குத் தண்டனை வழங்கப்படலாம் என்றஞ்சிய கருணா தண்டனையிலிருந்து தப்புவதற்காகவே தாந்தோன்றித்தனமாக பிரிந்துசெல்லும் முடிவினை எடுத்தார் என்று தெரிவித்தார்.
கரிகாலன் மேலும் கூறுகையில் தனது ராணுவ செயற்பாட்டினால் தமிழ்மக்கள் மத்தியிலும், தலைவரின் மனதிலும் இடம்பிடித்த கருணா, சிறிது சிறிதாக தனது சொந்த நலன்கள்பற்றியும், தனது ஆசைகள் பற்றியும் அதிகம் அக்கறை காட்டத்தொடங்கினார். இயக்கத்தின் கொள்கைகளுக்கு மாறாக இயக்கத்தின் நிதியினை தனது சொந்த விருப்புகளுக்காகக் கருணா கையாடியபோது தேசியத் தலைமையுடன் நேரடியாக மோதும் நிலைக்கு அவர் வந்தார். கருணா தலைவரினால் பெரிதும் நம்பப்பட்டார் என்றும், அவரை மிக உயரிய ஸ்த்தானத்தில் தலைவர் வைத்திருந்தார் என்றும் கரிகாலன் மேலும் தெரிவித்தார்.
"மிக அண்மைய நாட்களிலேயே கருணா தேசியத் தலைமை கிழக்கு மாகாணத்தைப் புறக்கணிப்பதாகப் பேசி வந்தார். இயக்கத்திற்கு எதிராகவும், போராட்டத்திற்கெதிராகவும் கருணா செயற்பட ஆரம்பித்த போதே அவர் இயக்கத்திலிருந்து பிரிந்து செயற்படப்போகிறார் என்பதை நாம் உணர்ந்து கொண்டோம்".
" எங்களை பயிற்சிக்காக அனுப்புகிறேன் என்று கூறிவிட்டு, கிழக்கின் கட்டமைப்புகளில் பாரிய மாற்றங்களைக் கருணா செய்யத் தொடங்கினார். நிதித்துறை, உணவுத்துறை உள்ளிட்ட மிக முக்கிய துறைகளை தன்னிடம் எடுத்துக்கொண்ட கருணா, தனக்கு விசுவாசமானவர்களை முக்கிய ராணுவப் பொறுப்புக்களில் அமர்த்திக்கொண்டார்".
"இந்தக் காலகட்டத்தில் கருணா பெருமளவு நிதியினைக் கையாடுவதை போராளியொருவர் அறிந்துகொண்டார். தனது நிதிக்கையாடல்பற்றி அறிந்துகொண்ட போராளியை கருணா கொல்லமுயன்றபோது, அப்போராளி சமயோசிதமாகத் தப்பி வன்னியை வந்தடைந்து கருணாவின் அனைத்து நிதிக் கையாடல்களையும் தேசியத் தலைமையிடம் அறியத் தந்தார். கருணாவின் நிதிக்கையாடல்கள் பற்றித் தெரிந்துகொண்ட அவரது பிரத்தியேக வாகனச் சாரதியும் ஒரு வாரத்திலேயே அவரால் கொல்லப்பட்டார். தனது சாரதி காய்ச்சலால் இறந்துவிட்டதாகக் கருணா கூறியபோதும், அவர் கருணாவினால் நஞ்சூட்டப்பட்டு கொல்லப்பட்டதை தளபதிகள் அறிந்துகொண்டார்கள். தனது நிதிக்கையாடல்கள்பற்றி தமிழ்மக்கள் அறிந்துகொண்டபோது கருணா வெட்கித்துப்போனார். ".
"கருணாவின் நிதிக்கையாடல்கள், கொலைகள் பற்றி தேசியத் தலைவர் அறிந்துகொண்டபோது, இதுபற்றிப் பேசுவதற்காக அவரை வன்னிக்கு அழைத்தார். தனது முறைகேடுகளுக்காகவும், கொலைகளுக்காகவும் தான் தண்டிக்கப்படலாம் என்று அஞ்சிய கருணா, வன்னிக்குச் செல்ல மறுத்ததோடு, தன் சார்பாக ஒரு பிரதிநிதியை வன்னிக்கு அனுப்பிவைத்தார்".
"இதே காலத்தில் தனது மனைவியையும் பிள்ளைகளையும் மலேசியாவிற்கு அனுப்பிவைத்த கருணா, இந்தவிடயம் தலைவரின் அனுமதியுடனேயே நடைபெற்றதாக மற்றைய தளபதிகளை நம்பவைத்தார். ஆனால், இந்த வழியனுப்பலின் பின்புலத்தில் கருணா மிகவும் திட்டமிட்ட வகையிலேயே தனது பிரிந்துசேலும் துரோகத்தனத்தை நடத்திக்கொண்டிருந்தார் என்பது இப்போது தெளிவாகிறது".
"கிழக்கு மாகாண மக்களுக்கிருந்த ஒரே கேள்வியென்னவென்றால், தலைவருக்கு மிக நெருங்கிய தளபதியாகவிருந்த கருணாவினால், அவர் இன்று கூறும் குற்றச்சாட்டுக்கள் பற்றி இதுவரை ஏன் நேரடியாக தலைவருடன் பேசமுடியாமற்போனது என்பதுதான்".
"தனது வெளிநாட்டுப் பயணங்களின் மூலம் தமிழீழ விடுதலைக்கு எதிராகச் செயற்படக் காத்திருந்த சக்திகளுடன் அவர் நெருங்கிப் பழகத் தொடங்கினார். கருணாவின் தொடர்பின் மூலம் இயக்கத்தில், கருணாவின் கீழிருந்த ராணுவப் பலம்பற்றியும் ஏனைய விடயங்கள் பற்றியும், இயக்கத்தில் கருணாவின் பங்குபற்றியும் இச்சக்திகள் அறிந்துகொண்டன. கருணாவின் சுயநலத்தையும், அவரது இச்சைகளையும் மூலதனமாகக் கொண்டு, இயக்கத்திலிருந்து இவரைப் பிரித்தெடுக்கும் கைங்கரியத்தில் இச்சக்திகள் இறங்கின".
"பெருமளவு போராளிகளையும் ஆயுதங்களையும் பராமரிப்பதற்கு பெருமளவு பணமும் வளங்களும் தேவை. ஆகவே கருணா தலைமைக்கெதிராக களம் இறங்குவதற்கு நிச்சயமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தை அழிக்கக் காத்திருக்கும் சக்திகளின் ஆதரவு அவருக்குக் கிடைத்தது என்பதில் எமக்குச் சந்தேகமில்லை. கிழக்கில் கருணாவோடு ராணுவம் நெருங்கிச் செயற்பட்டு வருவதை நாம் அறிவோம். கிழக்கு மாகாணத்தில் கருணாவின் ஆதரவாளர்களை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்திற்கு சிறிதுநேரத்திலேயே நகர்த்திச் செல்வதற்கு இலங்கை ராணுவம் உதவிவருகிறது" என்றும் அவர் தொடர்ந்து விவரித்தார்.
.