துரோகத்தின் நாட்காட்டி : நாள் 23, வைகாசி 2006
கருணா துணைப்படைக் குழுவினருடன் ராணுவத்தின் கீழ்மட்ட அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் தொடர்பிருக்கிறது - அரச சமாதானப் பணியகத்தின் அதிகாரி பாலித்த கோஹோண தெரிவிப்பு
துணைப்படை குழுவினருடன் சேர்ந்து இலங்கை ராணுவம் யாழ்ப்பாணத் தீவுப்பகுதிகள், குடாநாடு, மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் புரிந்துவரும் படுகொலைகள், கடத்தல்கள் தொடர்பாக அரசுமீது கடுமையான விமர்சனங்கள் உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் வைக்கப்பட்டு வரும் நிலையில், இலங்கை அரசின் சமாதானப் பணியகத்தின் அதிகாரி பாலித்த கோஹோண அவர்கள் ராணுவத்தின் கீழ்மட்ட அதிகாரிகளும், வீரர்களும் கருணா துணைப்படை மற்றும் ஈ பி டி பி குழுவினருடன் தொடர்புகளைக் கொண்டிருப்பது சாத்தியம் என்று ஒத்துக்கொண்டிருக்கிறார்.
அதிகரித்துவரும் பொதுமக்கள் மீதான படுகொலைகள், தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள் என்பவற்றை ராணுவத்தின் உயர்மட்ட அதிகாரிகளே திட்டமிட்டு, நடத்திவருவதுடன், தமிழர்களை உளவியல் ரீதியான போர் ஒன்றிற்குள் தள்ளி நிரந்தர அச்சநிலையினை தோற்றுவித்திருக்கிறார்கள்.
இலங்கை அரசுக்கும் துணைப்படைக் குழுக்களுக்கும் எதுவித தொடர்புகளும் இல்லையென்று இதுவரை மறுத்துவந்த சமாதானப் பணியகத்தின் அதிகாரி பாலித்த, முதன்முறையாக ரொயிட்டர்ஸ் செய்திச்சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இக்குழுகளுக்கும் ராணுவத்தின் கீழ்மட்ட அதிகாரிகளுக்கும் தொடர்புகள் இருக்கலாம் என்று ஒத்துக்கொண்டிருக்கிறார்.
"கடந்த 3 வருடகால சமாதானப் பேச்சுவார்த்தைக் காலத்தில் ராணுவத்தினருக்கும் புலிகளின் கருணா உட்பட ஏனைய சிலருக்கும் இடையில் தொடர்புகள் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம், அவையே இன்றும் தொடர்கின்றன என்று நான் நினைக்கிறேன். கருணா மற்றும் அவரின் ஆட்களுடனான தொடர்பினை விட்டுவிடுங்கள் என்று எமது ராணுவ வீரர்களை அரசினால் கோருவது இயலாத விடயம். மனிதர்கள் நண்பர்களாக இருப்பதும், அவர்களின் நட்பு தொடர்வதும் இயற்கையானதே. சமாதான காலத்தில் இரு தரப்பு வீரர்களும் ஒருவரது வீட்டிற்கு மற்றையவர் சென்றுவருவதுகூட நடந்தன. ஆகவே, இது இயல்பானதுதான்" என்று கூறினார்".
துணைப்படைக் குழுவிற்கும் அரச ராணுவத்திற்குமிடையிலான தொடர்புகளை ஒரு அரச அதிகாரி வெளிப்படையாகக் கூறுவது இதுவே முதன்முறையாகும்.
சமாதான ஒப்பந்தத்தின் சரத்து 1.8 இன் படி, அரச ராணுவம் தன்னுடன் சேர்ந்து இயங்கும் துணைப்படைக் குழுக்களின் ஆயுதங்களைக் களையவேண்டும் என்கிற கடப்பாடு இருக்கும்பொழுது அரச ராணுவமே அவர்களுக்கு ஆயுதங்களையும், பயிற்சியையும், முகாம்களையும், கூடவே பாதுகாப்பினையும் வழங்கிவருவதாக புலிகள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர்.
துணைப்படைக் குழுக்களின் ஆயுதங்களைக் களைவதாக அரசு ஒப்புக்கொண்டிருந்தபோதும்கூட, மூன்று மாதத்திற்கும் குறைவான காலத்திலேயே துணைப்படைக் குழுக்களின் மூலம் அரச ராணுவமும் புலநாய்வுத்துறையும் செய்துவரும் படுகொலைகள் தமிழர் தாயகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் ஆரம்பிக்கப்பட்ட அரச புலநாய்வுத்துறையினரின் துணைப்படையான கருணா குழுவின் நாசகார நடவடிக்கைகளைத் தொடர்ந்து வவுனியா யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களுக்கும் துணைப்படையினரின் வன்முறைகள் பரவியிருக்கின்றன.
வெலிக்கந்தைப் பகுதியில் துணைப்பட முகாம்கள் மீதான தாக்குதல்களில் ஒரு அதிகாரி உட்பட ஐந்து இலங்கை ராணுவத்தினர் கொல்லப்பட்டது துணைப்படையினருக்கும் ராணுவத்திற்கும் இடையிலான தொடர்பினை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தது.
அரசுடன் இணைந்து புலிகளுக்கு எதிராகச் செயற்படுவதென்று கருணா எடுத்த முடிவினையடுத்து புலிகளின் விசேட அணிகள் நடத்திய ராணுவ நடவடிக்கையில் கருணாவின் கிளர்ச்சி முழுமையாக அடக்கப்பட்டு விட்டாலும் கூட, அரச கட்டுப்பாட்டுப் பகுதியில் புலிகளின் போராளிகள் மீதான தாக்குதல்களும், புலிகளின் ஆதரவாளர்கள், சாதாரண பொதுமக்கள் மீதான படுகொலைகளையும் கருணா துணைப்படையினரைக் கொண்டு அரச புலநாய்வுத்துறை நடத்தி வருகிறது.
கல்வியாளர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசியல் செயற்பாட்டாளர்கள், தமிழ்த்தேசியத்திற்கு ஆதரவான சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மீது கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கும் இவ்வாறான திட்டமிட்ட படுகொலைகள் தற்பொழுது சாதாரண பொதுமக்கள் மீதும் திரும்பியிருக்கின்றன.
தோல்வியடைந்த தனது கிளர்ச்சியினையடுத்து தனது சகபாடிகளுடன் ராணுவக் கட்டுப்பாட்டுப் பகுதிக்குத் தப்பியோடிய கருணாவை பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துச் சென்ற ராணுவம் பாதுகாப்பான வீடொன்றில் தங்கவைத்திருந்தது. இவ்வாறான கருணா குழுவின் பாதுகாப்பான வீடொன்றில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் எட்டு துணைப்படையினரும், அவர்களை வழிநடத்திய ராணுவப் புலநாய்வுத்துறை அதிகாரியும் கொல்லப்பட்டதும் குறிப்பிடத் தக்கது.
கருணா சமாதான காலத்திலேயே ராணுவத்தின் புலநாய்வுத்துறைக்குப் பொறுப்பாகவிருந்த மேஜர் ஜெனரல் சாந்த கொட்டேகொடையுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தியிருந்ததாகவும் , அவர் லெப்டினட் ஜெனரலாகப் பதவியேற்றதன் பின்னரே கருணா துணைப்படையினரைக் கொண்டு தமிழர்கள் மீதான படுகொலைகளை அரசு தீவிரமாக நடத்தத் தொடங்கியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.