துரோகத்தின் நாட்காட்டி: நாள் 10 வைகாசி 2008
பரவலான வன்முறைகள், இறுதிநேர கள்ளவாக்குகள் உட்பட பல முறைகேடுகளுடன் முடிவிற்கு வந்த கிழக்கின் மாகாணசபைத் தேர்தல்
மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் பல வாக்குச் சாவடிகளில் இறுதி மணித்தியாலங்களில் அத்துமீறிப் பிரவேசித்த பிள்ளையான் கொலைக்குழுக் கூலிகள் வாக்குப் பெட்டிகளை அபகரித்ததோடு பலநூற்றுக்கணக்கான போலிவாக்குகளை அப்பெட்டிகளில் நிறைத்ததாக தேர்தல் கண்காணிப்பக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தமிழ் பகுதிகளில் சுமார் 45 வீதமாகக் காணப்பட்ட வாக்குப்பதிவு சிங்கள, முஸ்லீம் பகுதிகளில் சுமார் 55 இலிருந்து 60 வீதம்வரையில் காணப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்தல் கால வன்முறைகளைக் கண்காணிக்கும் அமைப்பு மட்டக்களப்பு மாவட்டத்திலேயே அதிகப்படியான வன்முறைகள் இடம்பெற்றதாகக் கூறியுள்ளதுடன், இவற்றில் பெரும்பாலானவை ( 64 வன்முறைச் சம்பவங்கள் மட்டக்களப்பில் மட்டும்) பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களால் நிகழ்த்தப்பட்டதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
மேலும் இந்த அமைப்புக் கூறுகையில் போலியான வாக்குப்பதிவு நிகழ்வுகளே அதிகம் இடம்பெற்றதாகவும், தமது முன்னிலையில் குறைந்தது 22 தடவைகளாவது பிள்ளையான் கொலைக்குழுவினர் இதனைப் புரிந்ததாகவும் கூறியிருக்கின்றனர்.
பிள்ளையான் கொலைக்குழுவினரின் அடாவடித்தனம் அதிகம் காணப்பட்ட பகுதிகளாக வாழைச்சேனை, காத்தான்குடி, மட்டக்களப்பு நகர், பொத்துவில், திரியாய் ஆகிய பகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
இப்பகுதிகளில் மீள் வாக்குப்பதிவினை நடத்துமாறு இவ்வமைப்பு தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்திருக்கிறது.
அம்பாறை மாவட்டம் திருக்கோவில், ஆலையடிவேம்பு ஆகிய பகுதிகளில் குறைந்தது 13 வாக்குச் சாவடிகள் பிள்ளையான் கொலைக்குழுவினரால் ஆக்கிரமிக்கப்பட்டு 12 - 13 வயதுச் சிறுவர்கள் உட்பட பலர் வாக்களிப்பில் கலந்துகொண்டதாகவும், பலநூற்றுக்கணக்கான போலிவாக்குகள் இக்குழுவினரால் இடப்பட்டதை தாம் நேரில் பார்த்ததாகவும் இவ்வமைப்பு தெரிவித்திருக்கிறது. பொலீஸார் எவரும் சமூகமளித்திருக்காத இவ்வாக்குச் சாவடிகளில் பிள்ளையான் கொலைக்குழு உறுப்பினர்களே வாக்குச் சாவடியினை நடத்தியதை தாம் கண்டதாக இவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
பொத்துவில் பகுதியில் பிள்ளையான் கொலைக்குழுவினரால ஆக்கிரமிக்கப்பட்ட வாக்குச் சாவடி விபரங்கள்,
42 கோரைகலப்பு ஷக்தி வித்தியாலயம், விநாயகபுரம்
48 ஏ கே கல்லியந்தீவு வடிவேல் வித்தியாலயம், திருக்கோவில் 4
50 ஏ கே காஞ்சிரங்குடா அரசு தமிழ்க் கலவன் பாடசாலை, தம்பிலுவில்
51 ஏ கே தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம், தம்பிலுவில், அறை 1
52 ஏ கே தம்பிலுவில் மத்திய கல்லூரி, தம்பிலுவில்
53 ஏ கே தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயம், அறை 2
54 ஏ கே தம்பிலுவில் சரஸ்வதி வித்தியாலயம், தம்பிலுவில்
70 ஏ கே ஆலையடிவேம்பு திருநாவுக்கரசு வித்தியாலயம், ஆலையடிவேம்பு
71 ஏ கே சிறி ராமக்கிரிஷ்ணா மத்திய கல்லூரி, அக்கரைப்பற்று, அறை 1
72 ஏ கே சிறி ராமக்கிரிஷ்ணா மத்திய கல்லூரி, அக்கரைப்பற்று, அறை 2
73 ஏ கே அக்கரைப்பற்று ராமகிரிஷ்ண மிஷன் பாடசாலை, அக்கரைப்பற்று
74 ஏ கே அக்கரைப்பற்று அஸ் சிபாயா வித்தியாலயம், ஜமத் அலிம் நகர்