துரோகத்தின் நாட்காட்டி : நாள் 9, ஆனி, 2012
கிழக்கு பல்கலைக் கழகத்தின் நிர்வாக சபைக்கு கருணாவால் வலிந்து நியமிக்கப்பட்ட வைத்திய காலாநிதி ஜாபர் - மாணவர் போராட்டம்
கிழக்கு மாகாண பல்கலைக் கழகத்தின் நிர்வாக சபைக்கு அரசாங்கத்தினாலும் துணைராணுவக் குழுக்களாலும் மேற்கொள்ளப்பட்டுவரும் அரசியல் மயப்படுத்தப்பட்ட நியமனங்களைத் தடுக்கும் சக்தி பல்கலைக்கழகத்திற்கு இல்லையென்று அதன் துணைவேந்தர் பேராசிரியர் கே. கோபிந்தராஜா தெரிவித்திருக்கிறார்.
அண்மையில் துணைராணுவக் குழுத் தலைவரும், அரசின் மீள்குடியேற்ற துணையமைச்சருமான கருணாவினால் பல்கலைக்கழக நிர்வாக சபையினுள் மேற்கொள்ளப்பட்ட நியமனம் ஒன்றினையடுத்து மாணவர்கள் கடந்த மூன்றுநாட்களாக கல்விநடவடிக்கைகளைப் பகிஷ்கரித்துவருவது தொடர்பாகப் பேசும்போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
கல்முனை வைத்தியசாலையின் நிர்வாக இயக்குநரான வைத்திய கலாநிதி ஜாபர் என்பவரை பல்கலைக்கழக நிர்வாக சபையினுள் கருணா பலவந்தமாக நியமித்ததன் விளைவாகவே மாணவரின் பகிஷ்கரிப்புப் போராட்டம் ஆரம்பமாகியுள்ளது. நிர்வாக சபையின் உறுப்பினராகவிருந்து மரணித்த வணக்கத்திற்குரிய சில்வெஸ்ட்டர் சிறிதரன் எனும் பாதிரியாரின் வெற்றிடத்திற்கே கருணாவினால் ஜாபர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
கருணாவின் இந்த தாந்தோன்றித்தனமான நியமனம், பல்கலைக்கழகத்தின் சுயாதீனத்தினையும், அதன் உணர்வுகளையும் அடக்கியாண்டு கைய்யகப்படுத்தும் கருணவினதும் அவரை வழிநடத்தும் கொழும்பின் நடவடிக்கையே என்று குறிப்பிட்டுள்ள மாணவர்கள் இந்த நியமனத்தை எதிர்த்து பகிஷ்கரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அண்மைக்காலங்களில் வடக்குக் கிழக்கில் உள்ள பல்கலைக்கழகங்களில் அரசாலும், துணைராணுவக் குழுக்களாலும் ஏற்படுத்தப்பட்டுவரும் அரசியல் மயப்படுத்தப்பட்ட நியமனங்கள் இப்பல்கலைக் கழகங்களின் சுயாதீனத்தை பெருமளவில் பாதிக்கும் நோக்குடனேயே நடைபெற்றுவருகின்றன என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
சில வருடங்களுக்கு முன்னர், இந்த நிர்வாக சபைக்கு முழு அதிகாரங்களையும் கொண்ட சிங்களவர் ஒருவரை அரசு நியமித்திருந்தபோதும், மாணவர்களின் கடுமையான எதிர்ப்பினால் அந்த நியமனத்தை அரசு செய்யமுடியாமற் போனது என்பது குறிப்பிடத் தக்கது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினைப் போலவே மட்டக்களப்புப் பல்கலைக்கழகமும் தமிழ்த் தேசியத்தின், விடுதலை எழுச்சியின் மைய்யங்களாக இருந்துவருவதால், அவற்றினை தமது அரசியல்மயப்படுத்தப்பட்ட நியமனங்கள் மூலம் கட்டுப்படுத்தி, தமிழர்களின் எழுச்சியை, தேசிய உணர்வினைக் கட்டுப்படுத்திவிடலாம் என்று அரசாங்கமும், அதன் கூலியான கருணாவும் செயற்பட்டு வருகிறார்கள்.
புலிகளிடமிருந்து பிரிந்து சென்று அரச ராணுவத்தின் புலநாய்வுத்துறையால் இன்று வழிநடத்தப்படும் துணை ராணுவக் குழுக்களின் தலைவர்களான கருணா , பிள்ளையான் ஆகிய இருவருமே கிழக்குப் பல்கலைக்கழகத்தைத் தத்தமது கட்டுப்பாடினுள் கொண்டுவரப் பகீரதப் பிரயத்தனம் செய்வதாக மாணவர்கள் தெரிவித்திருக்கின்றனர். இன்று உப வேந்தராக இருக்கும் பேராசிரியர் கூட கருணாவின் ஆதரவுடன் வந்தவர் தான் என்று கூறும் மாணவர்கள், "அரசியலே பிரதானம் கல்வியெல்லாம் அதன் பிறகுதான்" என்னும் கோட்பாட்டிலேயே கருணா செயற்படுவதாக மேலும் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கத்தோலிக்க ஆயர், மரணமடைந்த பாதிரியாரின் இடத்திற்கு இன்னொரு தமிழ்ப் பாதிரியாரை நியமிப்பதன் மூலம் 6 தமிழர்கள், 3 முஸ்லீம்கள், 3 சிங்களவர்கள் என்று நிர்வாக சபையில் தமிழரின் பிரதிநித்துத்துவம் குறையாமல் பாதுகாக்கப்பட முடியும் என்று சிபாரிசு செய்தபோதும், அதனை நிராகரித்தே கருணா முஸ்லீம் இனத்திலிருந்து ஜாபரை நியமித்திருக்கிறார்.
ஆயரின் கோரிக்கைக்கு ஏற்ப தமிழ்ப் பாதிரியாரே நியமிக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்தும் போராடி வருகின்றனர். தமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படும்வரைக்கும் தமது போராட்டம் தொடரும் என்று மாணவர் அமைப்புத் தலைவர் டி. கிரிஷ்ணனாத் தெரிவித்தார்.
ஆனால், கருணாவினால் மேற்கொள்ளப்பட்ட இந்நியமனத்தில் எந்த மாற்றத்திற்கும் இடமில்லையென்று அமைச்சர் எம் எல் ஏ எம் ஹிஸ்பொள்ளா கூறியிருக்கிறார்.