வளர்ந்து வா மகனே !
- சுப.சோமசுந்தரம்
தமிழக தேர்தல் 2021 முடிவு வருமுன் அவசரம் அவசரமாக அனைத்துக் கட்சிக் கூட்டம் எனும் பெயரில் கூடி, ஆக்ஸிஜன் மட்டும் தயாரிக்க அனுமதிக்கலாம் எனப் பம்மாத்து வேலையாக ஸ்டெர்லைட்டைத் திறக்க வழி செய்த அனைத்துக் கட்சித் துரோகத்தை எழுதிய சிறிய பதிவு. சில காலம் முன்பு நிகழ்ந்த ஒரு ஸ்டெர்லைட் எதிர்ப்பு மக்கள் போராட்டத்தின் பின்னணியில்.
வளர்ந்து வா மகனே! நீயே இப்போது விடிவெள்ளி. நீயென்பது ஓட்டுக் கட்சிகளால் இன்னும் மூளைச்சலவை செய்யப்படாத உன் தலைமுறையினர். நாங்கள் பாசிசவாதிகளையும் அடிமைகளையும் என்றுமே நம்பியதில்லை; அதனால் அவர்கள் எங்களை ஏமாற்றவில்லை. முழுமையாக இல்லாவிட்டாலும் ஏதோ ஒட்டுப் போட்ட திராவிடக் கட்சி, நொண்டி நோக்காடான இடதுசாரிகள் என்று நம்பி ஏமாந்து போகிறோமே எங்களுக்கான நீதியை நீதானடா வழங்க வேண்டும். ஒவ்வொரு முறை ஏமாறும்போதும் பாமர மனம் நம்பிக்கையை வேறு எதிலாவது ஏற்றுகிறது. அப்படித்தான் இப்போது நீ கிடைத்திருக்கிறாய் மகனே ! நாங்கள் பெரும் விவேகிகள் என்று நினைத்தவர்கள் எல்லாம் சமாளிப்பு மன்னர்கள் என்று உணர எங்களுக்கு இத்தனை நாட்களா? அவரவர் கட்சிக்கு வாழ்க்கைப்பட்டு விட்டார்களாம். எங்களைப் போன்ற டியூப் லைட்டுகளைப் பார்த்து அந்தக் கொள்கைக் குன்றுகள் எள்ளி நகையாடுவது உன் காதுகளில் விழ வேண்டும். அந்தப் பதினான்கு உயிர்களின் ஓலத்தில் எங்கள் காது கிழிகிறதடா. அவர்களைச் சுட்டவன் எவன், சுடச் சொன்னவன் எவன் என்ற கேள்வியை இந்த அதிமேதாவிகள் யாரும் இன்று வரை கேட்கவில்லை. நியாயம்தானே! இவர்கள் ஆட்சிக் காலத்திலும் மக்களைச் சுட்டவர்கள்தானே ! அது தமிழகமாய் இருந்தால் என்ன, TATA முதலாளிக்கான சிங்கூர் ஆக இருந்தால் என்ன ? முதலாளி வர்க்கத்தின் முன் இடது என்ன, வலது என்ன, திராவிடம் என்ன, ஆரியம் என்ன ? Sterlite என்பது தேர்தல் முடிவுக்கு முன் இவர்களுக்கு வைக்கப்பட்ட litmus test. கையில் மை காயுமுன்பே தோற்றுப் போனார்கள். தேர்தல் முடிவு அறியும் ஆர்வமெல்லாம் போய்விட்டதடா. நீதியை வழங்க உன் தலைமுறையினருக்கான ஆயுதத்தை நீங்கள்தான் தீர்மானிக்க வேண்டும். அது மீண்டும் வாக்குச் சாவடியாகக் கூட இருக்கலாம். ஆனால் நீதி வேண்டும். நீயே வழங்க வேண்டும்.