இணையத்தில் தன்னை ராணுவ விடயங்களின் வல்லுனர் என்று மார்தட்டி எழுதிவரும் மேத்தா ஈழத்தில் புலிகளால் பந்தாடப்பட்ட தனது ராணுவத்தின் தோல்விகரமான வரலாற்றினை திருத்தியெழுதும் கைங்கரியத்தில் ஈடுபட்டுவருகிறார். புலிகளுடனான போரில் இந்தியாவுக்கு ஏற்பட்ட இழப்புக்களுக்காக அரசியல்வாதிகளையு, அதிகாரிகளையும், உளவுத்துறையினரையும் குற்றஞ்சொல்லும் மேத்தா, தான் போன்ற ராணுவ அதிகாரிகளின் கையாலாகாத்தனத்தை வேண்டுமென்றே மறைத்து வருகிறார். அவர் பங்குனி 24 இல் எழுதிய ஒரு பந்தியில் கிழக்கில் தனது ராணுவ நடவடிக்கை ஒன்றுபற்றி பின்வருமாறு எழுதுகிறார்,
"கருணாவைக் கொல்வதற்கு உங்களுக்கு என்ன வேண்டும் என்று எனது தளபதி என்னிடம் கேட்டார். மட்டக்களப்பு - அம்பாறை தளபதியாகவிருந்த நான் என்னிடம் இன்னும் இரு பிரிகேட்டுக்களைத் தாருங்கள், கருணாவை உங்களிடம் ஒப்படைக்கிறேன் என்று கூறினேன். அன்று வெறும் 20 வயது இளைஞனாக இருந்த கருணா இன்று புலிகளின் கிழக்குப் பிராந்திய தளபதியாக இருக்கிறார். இந்திய அமைதிப்படையின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் இருந்து லாவகமாகத் தப்பித்துவரும் அவரைப் பிடிப்பது இயலாத காரியமாக இருந்தது. என்னிடம் ஐந்து கோடி பணமிருந்தால் அவரைப் பிடித்திருக்கலாம்" என்று கூறும் மேத்தா பணப்பற்றாகுறையினாலேயே கருணாவை அன்று பிடிக்கமுடியாமற்போனதாகக் கூறுகிறார்.
புலிகளின் பெரும் தலைவரான பிரபாகரன் கூட இதே கேள்வியை தனது புலநாய்வுத்துறைப் பொறுப்பாளரான பொட்டு அம்மாணிடம் கருணா பிரிந்துசென்றதிலிருந்து கேட்டிருக்கலாம். அவருக்கு பணத்தட்டுபாடோ, ஆளணிப்பற்றாக்குறையோ, வளங்களின் தட்டுப்பாடோ நிச்சயம் இருக்காது. ஆனால், இன்னொரு மாத்தையா உருவாவதை அவர் நிச்சயம் விரும்பமாட்டார்.
அஷோக் மேத்தாவின் இந்த 5 கோடி பணம் என்பது என்னை சிந்திக்க வைக்கிறது. போர்க்களத்தில் தனது எதிரியை போரில் சிறைப்பிடிப்பதை விடுத்து, பணத்தாசை காட்டி அன்று பிடித்திருக்காலாம் என்று அவர் கூற வருகிறாரா? அதாவது கருணா விலைபோகக் கூடியவர் என்பதை இந்திய அதிகாரிகள் அறிந்திருந்தார்களா? அப்படியானால் வெறும் ஐந்து கோடிகளைக் கொடுத்து அவர்களால் அன்று அதனை ஏன் செய்யமுடியாமல்ப் போனது? இன்று கருணா அன்றிருந்ததைக் காட்டிலும் பல மடங்கு பலமானவராக மாறியிருக்கலாம். ஆகவே அன்று தேவைப்பட்ட ஐந்து கோடிகளின் பல மடங்குகளை இன்று கொடுத்திருக்கலாம் என்று அவர் கூறுவதன் நோக்கம் கடந்த இரண்டு வருடங்களில் கருணாவை இந்திய உளவுத்துறை பெருந்தொகைப் பணத்தினைக் கொடுத்தே புலிகளிடமிருந்து பிரித்து துரோகத்தினைச் செய்யத் தூண்டியதாக இவர் சொல்லாமல் சொல்கிறாரா?
றோவும், அதன் நீண்ட கரங்களும் : எனது தனிப்பட்ட கருத்து
றோவின் பணவளங்கள் குறித்துச் சிந்திப்பது அவசியமானது என்று நினைக்கிறேன். அமெரிக்க நிறுவனமொன்றின் இணையத்தளமொன்று பின்வருமாறு கூறுகிறது,
"இந்தியாவின் மிகப்பலம் வாய்ந்த உளவுத்துறையானது இந்தியாவின் தேசியப் பலத்தினை பாதுகாப்பதிலும், இந்தியாவின் உள்நாட்டு வெளிநாட்டுக் கொள்கைகளை வகுப்பதிலும் பாரிய தாக்கத்தினைச் செலுத்தி வருகிறது. பாக்கிஸ்த்தான் உட்பட பல அயல்நாடுகளில் தவறான செய்திகளையும், கொள்கைகளையும் பரப்புதல், நாசகார நடவடிக்கைகளில் ஈடுபடுதல் ஆகிய கைங்கரியங்களில் அது வெற்றிகரமாக ஈடுபட்டு வருகிறது. தொடர்ச்சியாக ஆட்சியில் ஏறும் அரசுகள் றோவின் இந்த நடவடிக்கைகளுக்கு முற்றான ஆதரவினை வழங்கிவருகின்றன. இந்தியப் பிரதமரின் கீழ் செயற்படும் றோ அதிகாரிகளின் விபரங்கள், அவர்களின் சம்பளம், தரம் ஆகியன பாராளுமன்றத்தில் கூட பேசப்படாமல் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது"
"றோ அமைப்பும் , இந்திய வெளியுறவுத்துறையும் வருடந்தோறும் 25 கோடி ரூபாய்களை அயல்நாடுகளில் தமது செயற்பாடுகளுக்காக ஒதுக்கி வருகின்றன".
ஆகவே, இதன்மூலம் அறியமுடிவது யாதெனில் வருடம் தோறும் 25 கோடிகளை வெளிநாடுகளில் தமது நாசகார நடவடிக்கைகளுக்கு ஒதுக்கிவரும் இந்திய உளவுத்துறை அதில் ஒரு பகுதியினை புலிகளின் முன்னாள் கிழக்கு மாகாணத் தளபதியாகவிருந்த கருணா, இயக்கத்திற்குத் துரோகமிழைத்து வெளியேறிச் செல்ல இந்தியா சன்மானமாகக் கொடுத்திருக்கலாம் என்பதுதான்.
இவற்றிற்கிடையில், தமிழரில் ஒரு சில செய்திகாவும் பிரிவினர் இந்திய புலநாய்வுத்துறையின் நாசகாரச் செயற்பாடுகள் பற்றிப்பேசுவதையோ, கேட்பதையோ, எழுதுவதையோ பாரிய குற்றம் என்று கருதி வாளாவிருக்கின்றனர். ஆனால் இந்திய புலநாய்வுத்துறையின் நாசகார சதித்திட்டங்கள் தற்போது பரவலாக வெளிச்சத்திற்கு வந்துகொண்டிருக்கின்றன. "ஒரு நூற்றாண்டின் உளவாளிகள் : 20 ஆம் நூற்றாண்டி உளவுத்துறைகள்" எனும் புகழ்பெற்ற புத்தகத்திலிருந்து ஒரு சிறு பகுதியினை இங்கே தருகிறேன்,
"இந்தியா விஞ்ஞான ரீதியிலும், தொழிநுட்ப ரீதியிலும் மிகத் தீவிரமான புலநாய்வு ஆராய்ச்சிகளை அமெரிக்கா உட்பட பல நாடுகளில் மேற்கொண்டு வருகிறது. கணிணி தொழிநுட்பத்தின் மூலம் மூன்றாம் உலக சந்தையினைத் தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவரமுடியும் என்று அது எதிர்பார்க்கிறது. அமெரிக்காவில் தொடர்ச்சியாக 5 மாதங்கள் தங்கியிருந்து தனது உளவாளிகளை வழிநடத்திவிட்டு, மீண்டும் இந்தியாவுக்குச் செல்ல எத்தனித்த றோவின் உதவி இயக்குநரை இறுதிநேரத்தில் தடுத்துவைத்த அமெரிக்காவின் எப் பி ஐ பிரிவு, அமெரிக்காவில் றோவின் செயற்பாடுகள் குறித்துத் தனது கடுமையான கண்டனங்களை 1993 இல் தெரிவித்திருந்தது".
"அமெரிக்கா உளவுத்துறையின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தனது உளவாளிகளை 5 மாதங்களாக அமெரிக்காவில் சந்தித்து சதிவேலைகளை முடிக்கிவிட றோவின் உதவி இயக்குநர் முயன்றார் என்றால், இலங்கையில், குறிப்பாக ஈழத்தில் எந்தவகையான நாசகாரச் செயற்பாடுகளை றோ முன்னெடுத்திருக்கிறது என்பதை விளங்கிக் கொள்வது கடிணமானதாக இருக்கப்போவதில்லை".
இது, ஜனவரி மாதம் 13 ஆம் திகதி சிலோன் டெயிலி மிரர் பத்திரிக்கையில் வந்த புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் ஊடுருவியிருக்கும் றோ உளவாளிகள் எனும் செய்தியை மீளவும் எனக்கு ஞாபகப் படுத்துகிறது. புலிகளை கீழ்த்தரமாக விமர்சிப்பதையே தொழிலாகச் செய்துவரும் ஜெயராஜ் போன்றவர்கள் , புலிகளின் உளவுத்துறையினை எவ்வளவுதான் மோசமாக விமர்சித்தாலும் பொட்டு அம்மாணும் அவரது உளவாளிகளும் இந்தியாவின் றோ உளவாளிகள் தொடர்பாகச் செய்துவரும் விசாரணைகளும் கண்டுபிடிப்புகளும் உண்மையிலேயே அபாரமானவை. புலிகளின் ஒப்பற்ற தியாகத்தால் ஈட்டப்பெற்ற வெற்றிகளைத் தக்கவைக்க அவரும், அவரது உளவாளிகளும் செய்துவரும் சேவை போற்றுதற்குரியது.
ஒரு மாதத்திற்கு முன்னால், கொழும்பிலிருந்து செயற்பட்டு வரும் இந்திய பத்திரிக்கையாளர் ஒருவருக்கு நான் எழுதிய மின்னஞ்சலில் மிகவும் காட்டமான கருத்தொன்றினை முன்வைத்திருந்தேன்.
"நீங்கள் உங்கள் தூதுவராலயங்களில் செயற்பட்டு வரும் அதிகாரிகள் பற்றி மிகைப்படுத்தப்பட்ட விம்பங்களை உருவாக்குகிறீர்கள். கொழும்பில் இருக்கும் இந்திய பாக்கிஸ்த்தானிய தூதரகங்கள் எப்படி இயங்குகின்றன என்பதுபற்றி எமக்குத் தெரியாது என்று நீங்கள் இன்னமும் நினைக்கிறீர்களா? இந்திய றோவினதும், பாக்கிஸ்த்தானிய ஐ எஸ் ஐ உளவுப்பிரிவினதும் உளவாளிகள் கொழும்பிலிருக்கும் தூதரகங்களில் "அதிகாரிகள்" எனும் போர்வையில் மறைந்திருப்பது ஏன்? உண்மைகள்" என்று கூறப்படும் திரிபுகளை சமைத்துக் கொடுப்பவர்கள் கூட இவர்கள் தானே?"
எனது கருத்தினை எதிர்த்தோ அல்லது ஆதரித்தோ அந்த "உளவாளிச் செய்தியாளர்" எனக்குப் பதில் எழுதவில்லை என்பது நான் சொல்லத் தேவையில்லை. ஆனாலும், எனது முந்தைய இரு மின்னஞ்சல்களுக்கு அவர் பதில் அனுப்பியிருந்தார். நான் இதை இங்கு எதற்காக முன்வைக்கிறேன் என்றால், கொழும்பில் இருக்கும் இந்தியத் தூதரகத்தில் செய்தியாளர்களாகத் தொழிற்படும் பலர் ஒரே சமயத்தில் செய்தியாளர்களாகவும், றோ உளவுப்பிரிவினரின் செய்திகளைக் காவிவந்து உள்ளூரில் தமது செயற்பாட்டாளர்களுக்கு கொடுக்கும் தூதர்களாகவும் செயற்படுகிறார்கள் என்பதைக் கூறவும், இவர்கள் தொடர்பாக நாம் அவதானமாக இருக்கவேண்டும் என்பதை நினைபடுத்தவும்தான்.