எமது தாய்நாட்டின் போற்றுதற்குரிய, எமது நாட்டின் அரசியலைத் தீர்மானிக்கும் பெருஞ்சக்தியான பெளத்த மகா சங்கத்தினர் மற்றும் ஆளும் சுந்தந்திர ஐக்கிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளான மக்கள் விடுதலை முன்னாணி, சிஹல உறுமய மற்றும் பொதுவான சிங்கள மக்களின் வேண்டுகோளாக இருந்துவரும் இந்த நாட்டினைப் புலிப் பயங்கரவாதிகளுக்குப் பிரித்துக் கொடுக்கும் நோக்கில் செய்துகொள்ளப்பட்ட நோர்வேஜியர்களின் தலைமையிலான பேச்சுவார்த்தையினை உடனடியாக நிறுத்தவேண்டும் எனும் அதே கோரிக்கையினை கருணா அம்மானும், அவரின் பின்னால் திரளும் மக்களும் முன்வைத்துவருகிறார்கள் என்பது மிக முக்கியமான நிகழ்வாகக் கருதப்படவேண்டும்.
இதுவரை காலமும் இலங்கையில் சமாதானத்தைக் கொண்டுவருகிறோம் என்கிற போர்வையில் நோர்வேஜியர்கள் ஆடிவரும் நாடகத்தின் மூலம் இதுவரையில் பயங்கரவாதப் புலிகளின் நாசகாரத் தாக்குதல்களையோ, அரசியல்ப் படுகொலைகளையோ தடுக்க முடியாமல்ப் போயுள்ளதுடன், அந்தப் பயங்கரவாதிகளை ஜனநாயக நீரோட்டத்தினுள் கொண்டுவந்து அனைத்துக் கட்சி அரசியலில் பங்குபற்றும் நிலையினையோ இதுவரை ஏற்படுத்த முடியாமல் போய்விட்டது. அதுமட்டுமல்லாமல் புலிப் பயங்கரவாதிகளுக்குப் பக்கபலமாக நின்று, அவர்களை ஆதரிப்பதைத்தான் இந்த நோர்வேஜியர்களின் சமதானப் பேச்சுவார்த்தை நாடகம் இன்றுவரை செய்துவருகிறது.
கருணா அம்மான் அண்மையில் இப்பேச்சுவார்த்தைகளில் பங்குகொள்ளும் அனைத்துத்தரப்பினருக்கும் எழுதிய பகிரங்கக் கடிதத்தில் நோர்வேஜியர்களால் புலிப் பயங்கரவாதிகளுக்கு வழங்கப்பட்ட 250,000 பிரித்தானியப் பவுண்ட்ஸ், கனரக ஆயுதங்கள், நவீன இலத்திரனியல் சாதனங்கள், தொலைத் தொடர்புக் கருவிகள் என்பனவற்றை புலிகள் தமது அரசியல் பகையாளிகளைக் கொல்லவே பாவித்து வருகின்றனர் என்று நோர்வேஜியர்களின் உண்மையான பின்னணியைப் போட்டுடைத்திருக்கிறார்.
கருணா அம்மானின் தகவல்களை நோக்கும்போது, நோர்வேஜியர்கள் தொடர்ச்சியாகவே புலிகளுக்கு ஆதரவான நிலைப்பாட்டினை எடுத்து வருவதோடு, சமாதானப் பேச்சுவார்த்தைகள் மூலம் சமாதானத்தையும், தமிழர்களுக்கான விடுதலையினையும் எடுத்துத் தருவதற்குப் பதிலாக, புலிப்பயங்கரவாதிகளைத் தொடர்ச்சியாகப் பலப்படுத்தி, தமிழர்களை இன்னும் இன்னும் அவர்களின் சர்வாதிகாரப் பிடிக்குள் தள்ளிவிட்டிருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது.
கருணாவின் இந்த மக்கள் நலன் சார்ந்த சிந்தனையே அவரது அரசியல் முதிர்ச்சியினைக் காட்டுகிறது. ஆகவே அவரது தலைமையின்கீழ் இலங்கையில் சமாதானத்தை விரும்பும் தமிழர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, சுதந்திரமான, சுபீட்சமான வாழ்வினை முன்னெடுப்பதன் மூலம், இதுவரையில் தமிழர்களுக்கு அழிவினையும், இழப்பினையும் மட்டுமே தந்துகொண்டிருக்கும் கொலைகாரப் பயங்கரவாதியான பிரபாகரனையும், புலிகளையும் முற்றாகப் புறக்கணித்து நாட்டின் பெரும்பான்மையினத்துடன் ஒருமித்துப் பயணிக்க முன்வரவேண்டும்.
உலகின் புற்றுநோயாக மாறிவரும் பயங்கரவாதத்தினையும், தீவிரவாதத்தினையும் முற்றாக அழித்து, உலகினை காக்கும் நோக்கத்தோடு புதிய உலக ஒழுங்கு செயற்பட்டுவரும் இன்றைய நிலையில், இலங்கையில் நோர்வேஜியர்கள் செய்துவருவது இந்தப் புதிய உலக ஒழுங்கிற்கு முற்றிலும் முரணான ஒரு நாசகார நடவடிக்கையென்றால் அது மிகையில்லை. அதுமட்டுமல்லாமல் நோர்வேஜியர்களைத் தமது கவசமாகப் பாவித்துவரும் புலிகள் , அவர்கள் முன்னிலையில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மீறி, இன்றுவரை மிலேச்சத்தனமான படுகொலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தமிழர்களுக்கான உரிமைகளைப் பெற்றுத்தருகிறேன் என்கிற பெயரில் அவர்களைத் தொடர்ச்சியாக அழித்துவரும் பிரபாகரனுடன் ஒப்பிடும்போது, வடக்குக் கிழக்கில் வாழும் சமாதானத்தினை விரும்பும் தமிழ் மக்களுக்காகன உரிமைகளுக்காகவும், அமைதியான வாழ்வுக்காகவும் குரல்கொடுக்கும், மென்போக்கான, ஜனநாயக அரசியலை நேசிக்கின்ற, இலங்கைத் திருநாட்டின் நலனில் உண்மையான அக்கறைகொண்ட கருணாவின் இன்றைய வேண்டுகோளினை நாம் அனைவரும் செவிமடுக்க வேண்டும். அத்துடன், பிரபாகரனையும் அவரது பயங்கரவாத இயக்கத்தையும் முற்றாக அழிப்பேன் என்று திடசங்கற்பம் பூண்டிருக்கும் கருணா, அதேவேளை தமிழ் மக்களுக்கு மட்டுமல்லாமல் முழு நாட்டிற்குமே அமைதியையும், சமாதானத்தினையும், ஒற்றுமையினையும் கொண்டுவருவேன் என்று சபதம் எடுத்திருக்கிறார்.
கருணாவின் இந்த நிலைப்பாடு நாட்டின் பெரும்பான்மையின மக்களின் ஏகோபித்த ஆதரவினையும், வரவேற்பினையும் கொண்டிருக்கிறது என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.
முற்றும்
http://www.lankaweb.com/news/editorial/251004-1.html