தரப்படுத்தல் - என் பார்வை
தரப்படுத்தல் ஒரு சிக்கலான விடயம். ஆனால் இதை தமிழர் தரப்பு கையாண்ட முறையில் பல பாடங்களை படிக்க முடியும்.
தரப்படுத்தல் மட்டும் அல்ல, நிர்வாக சேவையில், இராணுவத்தில், பொலிசில் இப்படி பல இடங்களில் தமிழர்கள் அளவு குறைக்கப்பட வேண்டும் என்ற நீண்ட கால உள்நோக்கம் சிங்கள பொது கூட்டுக்கு இருந்தது. அநகாரிக தர்மபால போன்றோர் ஆங்கிலேய ஆட்சி காலத்திலேயே இதை பற்றி பேச தொடங்கி விட்டார்கள்.
ஒரு காலத்தில் இருந்த தரப்படுத்தலுக்கும் இப்போ இருக்கும் தரப்படுத்தலுக்கும் பல வேறுபாடுகள் இருப்பினும் அடிப்படை ஒன்றுதான்.
இந்தியாவில் தரப்படுத்தல் சாதிவாரி இட ஒதுக்கீடு என்று உள்ளது. அது பிராமணர்கள் காலாகாலமாக பெற்ற அவர்கள் எண்ணிக்கைக்கு அதிகமான இடங்களை சுதந்திரத்தின் பின் ஏனைய சாதிகளுக்கு பிரித்து கொடுக்கிறது.
இலங்கையில் அதுவே மாவட்ட ரீதியாக இருக்கிறது.
இதில் இந்தியாவில் ஏழை பிராமணன் பாதிக்கபடுகிறான். அதே போல் யாழ் மாவட்டத்தில் வருவதால், யாழ்-வன்னியின் எல்லையில் செம்பியன்பற்றில் வாழும் ஒரு ஏழை மாணவனும் பாதிக்க படுகிறான்.
ஆனால் தரப்படுத்தலை உதவி அரசாங்க அதிபர் மட்டத்தில் செய்தால் - அது மேலும் குளறுபடி, களவுகளுக்கே வழி கோலும் (வாழ் நாள் முழுவதும் யாழில் படித்து விட்டு, ஓ எல், ஏ எல் சோதனையை மட்டும் மன்னாரில் எடுப்பது போல்).
நாம் யாரும் இந்திய பிராமணர்கள் இல்லை. எனவே 1947 இல் இருந்த பிராமண ஆதிக்கத்தை சமன் செய்ய ஏற்படுத்தபட்ட இட ஒதுக்கீட்டை நாம் பக்க சார்பின்றி அணுகுவதால் - அதன் நியாயம் எமக்கு இலகுவில் புரிகிறது.
ஆனால் இதே போல குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் மிக அதிகமான வளமான பதவிகளில், இடங்களில்தான் 1948இல் நாம் இருந்தோம். இங்கே தமிழர் என்று பொதுவாக கூறினாலும் அது யாழ் தமிழரையே சேரும்.
சிறுபான்மை ஒன்று, தனது எண்ணிக்கைக்கு பலமடக்கு விகிதாசரத்தில் கூடிய பெரும்பான்மை இடங்களை, பதவிகளை, வளங்களை அனுபவிப்பது என்பது ஒரு நியாயமான நிலை அல்ல.
இதை சமன் செய்ய இந்தியாவில், தென்னாபிரிக்காவில் எங்கும் இந்த கோட்டா முறை நடைமுறையில் உள்ளது.
1948 இல் இலங்கை ஒரு ஒற்றையாட்சி நாடு என்ற தத்துவத்தை எமது அரசியல் தலைமைகள் ஏற்று கொண்ட பின் (அதன் காரணங்களை பின்பு ஆராயலாம்) ஒன்று பட்ட இலங்கைக்குள் யாழ் தமிழர் தொடர்ந்தும் தம் எண்ணிக்கைக்கு அதிகமான அளவில் கல்வியில், ஏனையவற்றில் தொடர்ந்தும் கோலோச்ச முடியும் என எதிர்பார்த்தது நடைமுறை சாத்தியம் இல்லாதது.
இதை நிச்சயமாக சிங்கள பொதுக்கூட்டு இனவாத கண்ணோட்டத்தில்தான் முன்னெடுத்தது.
ஆனால் இதன் பின்னால் உள்ள நியாயத்தையும், இதை தடுக்க முடியாது என்பதையும் எமது தலைமைகள் கண்டு கொள்ள தவறி விட்டன.
தமிழ் தலைமகள் எப்போதும் proactive ஆக எதையும் செய்வது அரிது. ஒரு விடயத்தில் நாம் proactive ஆக செயல்படும் போது, அந்த விடயத்தின் agenda setting ஐ நாம் ஓரளவுக்கு கட்டுப்படுத்தலாம்.
ஆனால் நாம் எப்போதும் சிங்கள பொதுகூட்டு ஒரு விடயத்தை செய்த பின் react பண்ணுவதே வழமை. அப்போ அவர்கள் போட்ட அஜெண்டாவில்தான் விடயம் நகரும்.
தரப்படுத்தலில் பல நல்ல விடயங்கள் யாழ் அல்லாத தமிழருக்கு நடந்தது. இப்போ ஒவ்வொரு வருடமும் மட்டகளப்பில் ஓ எல் சோதனை செய்த 10 மாணவர்கள் டொக்டர் ஆகிறார்கள். இதை தரப்படுத்தலுக்கு முன்னான நிலையுடன் ஒப்பிடுங்கள். அது மட்டும் அல்ல மருத்துவராக தேவைப்படும் புள்ளிகள் அடிப்படையில் ஒரு காலத்தில் மிக இலகு என்ற நிலையில் இருந்த மட்டகளப்பு இப்போ, யாழ், கொழும்பு, காலிக்கு நிகராக வந்து விட்டது. உலகெங்கும் கோட்டா சிஸ்டம் அடைய விழைவது இந்த பெறுபேறைத்தான். கொழும்பின் நிலைக்கு மட்டகளப்பை உயர்த்துவது அல்லது உயர்த்த முனைவது.
இந்த யதார்தத்தை புரிந்து கொண்டு, முடிந்தளவு எமது பங்கை உறுதி செய்யும் திரை மறைவு நகர்வுகள் எதையும் எம் தலைவர்கள் செய்யவில்லை.
இந்த தவிர்க முடியாத யதார்த்தை எமது மக்களுக்கு புரியவைக்கவில்லை.
அதிலும் கொஞ்சம் நியாயம் இருக்கிறது என்று பேசவே இல்லை.
சரி இந்த வாய்புகளை இழந்தால், வேறு வகையில் இவற்றை ஈடு செய்ய முடியுமா என சிந்திக்கவில்லை.
சரி இதை எப்படி அணுகி இருக்கலாம்?
இப்போ இருப்பதை போல், 30 ஆண்டுகால போரின் பிந்திய நிலை அல்ல அன்று. போர்கால சமநிலையும் அன்று இல்லை.
அன்றைய தமிழ் தலைவர்கள் அரசோடு டீல் போட பெரிய தடைகள் ஏதும் இருக்கவில்லை. தேவைபடும் போது போட்டார்கள்.
ஆனால் பண்டா-செல்வா, டட்லி-செல்வா என்று பெரும் எடுப்பில் ஒப்பந்தம் போட்டால் அதை இனவாதிகள் கிழிக்க வைப்பார்கள் என்பதை ஊகித்து, திரைமறைவில் சில டீல்களை போட்டிருக்கலாம்.
பின்னாளில் தொண்டைமானும், அஷ்ரப்பும் இதைதான் செய்து காட்டினார்கள்.
ஆனால் நாம் செய்தது முழுக்க முழுக்க வோட்டரசியல். உணர்சிப் பேச்சு. இரத்தப்பொட்டு, வட்டுக்கோட்டை தீர்மானம்.
இதை கூட உண்மையாக செய்யவில்லை என்பதுதான் ஆக பெரிய கொடுமை.
தனி நாடு சாத்தியமோ இல்லையோ தலைவர் அதற்கு முழு மனதோடு தன்னை அர்பணித்து போராடினார்.
ஆனால் இவர்களுக்கு தனிநாட்டை எப்படி அடைவது என்ற ஐடியாவே இல்லை. வெறும் வாயால் வடை மட்டுமே சுட்டார்கள். தனிநாட்டுக்கு ஒரு துரும்பைதானும் தூக்கி போடவும் இல்லை. முழுக்க முழுக்க வோட்டு அரசியல் மட்டுமே குறி.
கற்ற பாடங்கள் என நான் காண்பன
1. சிங்களவர்கள், முஸ்லீம்கள் போல் எமக்கும் ஒரு பொதுகூட்டு தேவை (இப்போ இது இல்லை).
2. நாம் proactive அரசியல் செய்யவில்லை. இனி செய்ய வேண்டும்.
3. வரலாற்றின் போக்குக்கு குறுக்கே நின்று ஒரு சிறுபான்மை அணை கட்ட முடியாது.
4. எமது அரசியல் மக்கள் நலன் சார்ந்து, எடுக்கும் கொள்கை முடிவுகளுக்கு உண்மையாக இருக்க வேண்டும். மக்களுக்கு உள்ளதை உள்ளபடி கூறல் வேண்டும். உணர்சி வசப்படுத்தல் அறவே ஆகாது.
5. சிங்கள தலைவர்களோடு டீல் பேசும் போது இரெண்டு விடயங்களை கருத வேண்டும்.
அ. நாம் அவர்களுக்கு எதையாவது கொடுக்க வேண்டும் - வாக்குகள், மாலை மரியாதை -எதுவாகிலும்.
ஆ. பெரிய எடுப்பில் ஒப்பந்தம் போட்டால் அதை சிங்களவர்கள் குழப்பி அடிப்பது நிச்சயம். ஆகவே தொண்டா பிரஜா உரிமை விடயத்தில் சாதித்தது போல, அஷ்ரப் ஒலுவில் துறைமுகம் இதர திட்டங்களில் சாதித்தது போல ஒரு அணுகுமுறை தேவை.
6. இந்த அணுகுமுறையை தமிழ் தேசிய அரசியல்வாதிகள், அரசாங்கத்தில் சேராமலே செய்ய வேண்டும். பொறுப்பான எதிர்கட்சியாக எல்லாம் அவர்கள் செயல்பட தேவை இல்லை. தமிழ் தேசிய அரசியலை நீர்த்து விடாமல் பேணுவது அதே சமயம் மக்கள் நலனின் பால்பட்டு சில டீல் களை செய்வது. இவர்கள் இந்த அணுகுமுறையை எடுக்க தவறினால் அந்த வெற்றிடத்தை இன்னும் பல அங்கஜன்கள் நிரப்புவார்கள்.
பிகு: இந்த பாடங்கள் போருக்கு பிந்தியவர்களுக்கே, போர்காலத்தில் இருந்த சமநிலை வேறு.