ஆனால், அங்கிருந்த தளபதிகளில் ஒருவர் மட்டுமே கருணாவின் துரோகத்தை வேளிப்படையாக எதிர்த்தார். கிழக்கு மாகாணத்தின் தன்னிகரில்லாத் தளபதியெனும் மமதை தலைக்கேறிய கருணாவை தனியாளாக எதிர்த்து நின்றது கெளசல்யனே அன்றி வேறில்லை. மொத்தத் தமிழினத்தினதும் எதிர்கால இருப்பென்பது வடக்கும் கிழக்கும் இணைந்திருப்பதிலேயே தங்கியிருக்கிறது என்று நிதானத்துடன் அவர் கருணாவை நோக்கிக் கூறினார். மேலும், நாம் பிரதேச ரீதியாகப் பிரிந்துபோவது எமது போராட்டத்தை முழுமையான தோல்விக்கு இட்டுச் செல்லும் என்றும் அவர் கருணாவிடம் கூறினார். எமக்கிருக்கும் பிரச்சினைகளை நாம் பேசியே தீர்த்துக்கொள்ள வேண்டும், ஆகவே உங்களின் இந்த நாசகார முடிவினைக் கைவிட்டு விட்டு வன்னிக்குச் சென்று தலைவரிடம் நேரடியாகப் பேசுங்கள் என்று அவர் கருணாவைக் கேட்டுக்கொண்டார்.
கெளசல்யனை பேசவிடாது தடுத்து, அவரின் பேச்சை நிராகரித்து, அவரையும் தனது சூழ்ச்சிக்குப் பணியவைக்க கருணா முயன்றுகொண்டிருந்தான். அத்துடன், கிழக்கிலிருந்து புலிகளுக்கென்று சேர்க்கப்பட்ட பணம் எவ்வளவென்பதை நீ வன்னிக்கு சொல்லு என்று அவன் கெளசல்யனைப் பார்த்துக் கேட்டான். "எமது மண்ணில் சேர்க்கும் அனைத்துப் பணமும் பொன்னான கிழக்கு ஈழத்திற்காக மட்டுமே இனிமேல் பயன்படுத்தப்படும்" என்று கூறினான் கருணா. ஆனால், கெளசல்யனோ தனது முடிவிலிருந்து சிறிதும் பின்வாங்கவில்லை. தன்னை கருணா எதுவும் செய்யலாம் என்கிற நிலையிருந்தும், அவர் கருணாவின் துரோகத்திற்கெதிராக குரல்கொடுத்துக்கொண்டேயிருந்தார். இதனால் பொறுமையிழந்த கருணா, "இப்போதே வன்னிக்கு ஓடிப்போ, உன்ர மனுசியையும் கூட்டிக்கொண்டு ஓடு. இனிமேல் நான் உன்னை இங்கே பர்க்கக் கூடாது. அப்படிப்பார்த்தால் அந்த இடத்திலேயே உன்னைப் போடுவேன்" என்று கர்ஜித்தான்.
அங்கு கூடியிருந்தவர் எல்லாம் ஸ்தம்பித்து நிற்க, கெளசல்யன் அந்த மணடபத்தை விட்டு அமைதியாக வெளியேறிச் சென்றார். உடனடியாக தனது வருங்கால மனைவியும், கிழக்குப் பல்கலைக் கழகத்தில் இரண்டாம் ஆண்டில் கல்விகற்றுவந்த மாணவியுமான புஷ்பாவை அழைக்க அம்பிலாந்துரைக்குச் சென்றார். அங்கிருந்து, உடனடியாக அவர் வன்னிக்குக்கிளம்பிச் சென்றார். வன்னியை வந்தடைந்த கெளசல்யனை வரவேற்ற தலைவர் கிழக்கில் நடந்துவரும் கருணாவின் பிரதேசவாத நாடகத்தின் விபரங்கள் தொடர்பாக அவருடன் நீண்டநேரம் உரையாடிக்கொண்டிருந்தார்.
கருணாவின் துரோகத்தினை துணிவுடன் எதிர்த்து நின்றவர் கெளசல்யன் மட்டுமே
ஆரம்பத்தில் கருணாவின் கீழ் செயற்பட்ட தளபதிகளான ரமேஷ், ரமணன், ராம், பிரபா, கரிகாலன் ஆகியோர் பின்னர் அவனை விட்டு மீண்டும் வன்னிக்கே திரும்பிச் சென்றிருந்தாலும், ஆரம்பத்திலிருந்து கருணாவின் துரோகத்தினை துணிவாக எதிர்த்து நின்றவர் கெளசல்யன் மட்டும் தான். கெளசல்யனின் விசுவாசத்தை மெச்சிய தலைவர், பின்னர் வந்த சில வாரங்களில் அவரது திருமண நிகழ்விலும் கலந்துகொண்டு சிறப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
முற்றும்
இணையம் : கொழும்பு டெயிலி மிரர்
ஆக்கம் : டி பி எஸ் ஜெயராஜ்