பார்வை ஒன்றே போதுமே........(2).
ஆங்காங்கே வயல் வெள்ளத்துக்குள் வந்திருந்த சின்ன மீன்களை கொக்கு, நாரை போன்ற சில பறவைகள் கொத்திக்கொண்டு பறப்பதும் ஒன்றோடொன்று சண்டை பிடிப்பதும் பார்க்க ரம்மியமாக இருக்கின்றது. இவ்வளவு பிரச்சினைக்குள்ளும் எவ்வளவு காலமாச்சுது இப்படியெல்லாம் ரசிச்சு என மனம் எண்ணிக் கொண்டது. தூரத்தில் ஒரு மேட்டில் ஒராள் நிற்பதைக் கண்டு அங்கு செல்கிறார். அது ஒரு நடுத்தர வயதுடைய பெண் என்று தெரிகின்றது. அந்தப் பெண்ணும் இவரைக் கண்டு விடுகிறாள். இவரது கோலத்தைப் பார்த்ததும் அங்கிருந்து செல்வதற்கு எத்தனிக்கிறாள்.
உடனே சாமிநாதனும் ஆம் அதுதான் அவரது பெயர் தன்னை சுதாகரித்துக் கொண்டு அவளைப் பார்த்து அம்மா போகாதேங்கோ , கொஞ்சம் நில்லுங்கோ என்றதும் அவள் சற்று நின்று, ம்....என்ன என்பதுபோல் பார்க்கிறாள். அப்பொழுது ஒரு குமர்ப் பிள்ளையொன்று வயலுக்குள் இருந்து ஆளளவு உயர்ந்திருந்த நெற்கதிர்களை விலத்திக் கொண்டு யாரம்மா இவர் என்னவாம் என்று கேட்டவாறே வரப்பில் ஏறி வருகின்றாள். அவள், கையில் ஈர்க்கில் கோர்த்தபடி அஞ்சாறு மீன்கள் துடித்துக் கொண்டிருக்கின்றன. தெரியவில்லையம்மா, அதுதான் விசாரித்து கொண்டிருக்கிறேன் என்கிறாள்.
சாமிநாதனும் பயப்பிடாதையுங்கோ, கணக்க யோசிக்க வேண்டாம். நான் பக்கத்து ஊர்தான், அதோ அந்தக் குளத்தில் குளித்துக் கொண்டிருக்கும் போது யாரோ என்னுடைய உடுப்புகளை எடுத்துக் கொண்டு போட்டினம். சுருக்கமாக தன் கதையை சொல்லிவிட்டு எனக்கு ஒரு உதவி செய்வீங்களோ, நான் கட்டுறதுக்கு ஏதாவது ஒரு துண்டு தரமுடியுமோ என்று கேட்கிறார். ஆனாலும் அவர்களுக்கும் கொஞ்சம் யோசனையாய்த் தானிருக்கு. அவரின் நிலையைப் பார்க்க பாவமாயும் இருக்கு. அப்போது அந்தப் பிள்ளை சித்ராவும் சிறிதும் யோசிக்காமல் இந்தாங்கோ ஐயா இப்ப இந்தத் துண்டைக் கட்டுங்கோ என்று தனது தாவணியை எடுத்துக் குடுத்துவிட்டு, அதோ அங்குதான் எங்கள் வீடு இருக்கிறது அங்கே அப்பாவின் சாரம் இருக்கு வாங்கோ எடுத்துத் தாறன் என்கிறாள். அவரும் அதை வாங்கிக் கொண்டு தனது கழுத்தில் கிடந்த சங்கிலியை எடுத்து அவளிடம் குடுக்க அந்தச் சுட்டிப்பெண்ணும் என்ன ஐயா ஒரு தாவணிக்கு சங்கிலி தாறீங்கள் இது ரோல்ட்கோல்டோ என்று பகிடி விட உடனே தாய் மகேஸ்வரி சும்மா இருடி உனக்கு வாய் ரெம்ப நீளம் என்று அவளை அதட்டி விட்டு பரவாயில்லை, அது உங்களிடமே இருக்கட்டும் என்கிறாள். இப்பொழுது அவரைப்பற்றிய எண்ணம் மாறி நல்ல எண்ணமாக வருகிறது. பின் அவரைப் பார்த்து உங்களை பார்த்தால் பசியோடு இருப்பதுபோல் தெரிகிறது, வீட்டுக்கு வாங்கோ சாப்பிட்டுட்டு போகலாம் என்று சொல்ல மூவரும் கதைத்து கொண்டே வீட்டுக்கு செல்கின்றனர்.
அவர்களின் பேச்சில் இருந்து மகேஸ்வரியின் கணவன் மாணிக்கம் ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளி. அங்குள்ள சிறிய நகரத்தின் கடை வீதியில் பாதையோரத்தில் சின்ன இடத்தில் இருந்து தொழில் செய்து வந்திருக்கிறார். அவர்களுக்கு முத்து, சித்ரா என்று இரண்டு பிள்ளைகள். உழைப்பதில் தான் குடிப்பதுபோக கொஞ்சம் வீட்டுக்கும் கொடுப்பார்.ஊரில் நிறையக் கடன் வாங்கி வைத்திருந்தார். கடன் குடுத்தவர்கள் மாணிக்கத்தைக் கண்டால் வேறு பக்கமாக ஓடிவிடுவார்கள்....இவர் ஒன்றும் சண்டியனில்லை எங்கே மீண்டும் கடன் கேட்டு விடுவார் என்று.... கொசுவுக்கு பயந்து நாங்கள் வலைக்குள் படுப்பதுபோல்தான் இதுவும். கடந்த வருடம் இவரது நண்பரும் இன்னொருவரும் தவறணையில் சண்டை பிடித்த பொழுது மாணிக்கம் இடையிலே புகுந்து விலக்குப் பிடிக்கப் போய் எதிர்பாராமல் வயித்தில கத்தியால் குத்து வாங்கி இறந்து விட்டார். மாணிக்கத்துக்குப் பயந்து ஓடி ஒழிச்ச கடங்காரர் எல்லாம் இப்ப குளிர் விட்டுப்போய் வீட்டுக்கு வந்து கண்டபடி பேசி சண்டை பிடித்து விட்டு போவார்கள்.......!
பார்ப்போம் இனி......! ✍️