பார்வை ஒன்றே போதுமே...... (7).
இப்பொழுது சாமிநாதனுக்கும் மனதில் ஒரு நிம்மதி உண்டாயிற்றுது. இனி இந்தக் குடும்பம் முன்னேறிவிடும் என்ற நம்பிக்கை வந்து விட்டது. அவரும் இங்கு வந்தபின் குடிப்பதையும் விட்டு விட்டார். ஒரு ஆம்பிளை இல்லாத வீட்டில் தான் இருக்க அவர்கள் அனுமதித்ததே பெரிய விஷயம். மேலும் தான் குடித்துக் கொண்டும் இருந்தால் நன்றாக இருக்காது என்று விட்டு விட்டார். இப்பொழுது தாடி மீசை எல்லாம் வளர்ந்து அவரது முகத்தோற்றமே மாறிவிட்டிருந்தது. எப்போதாவது முத்துதான் அவரை வற்புறுத்தி சலூனுக்கு அழைத்துச்சென்று கூட்டி வருவான். எப்போதும் அவன் கூடவே இருப்பதால் அவனிடம் ஒரு தனிப் பாசம் உண்டாகியிருந்தது.
இப்பொழுது அவர்கள் வேலை செய்யும் இடங்களும் சுற்று சூழல்களும் மாற்றமடைந்து வந்து கொண்டிருக்கின்றது. மக்கள் நடமாட்டமும் பெருகி வருகின்றது. "மழைக் காலக் காளான்கள்" போல் அவ்விடத்தில் பல கடைகள் திறக்கப் படுவதும் சில கடைகள் வருமானமின்றி பூட்டப்படுவதுமாக இருந்தது. நடைபாதையில் வியாபாரம் செய்பவர்களை போலீசார் வந்து விரட்டி விடுவதும் பின் அவர்கள் சென்றதும் மீண்டும் இவர்கள் வியாபாரம் செய்வதுமாக இருந்தார்கள். அந்த வகையில் இவர்களது சப்பாத்து கடையும் பாதிக்கப் பட்டுக் கொண்டிருந்தது.
இப்படி இருக்கையில் முன்பு சாமிநாதன் ஒரு கடைத் தாழ்வாரத்தில் படுத்து தூங்கியிருந்தபொழுது இவர் தலையில் தண்ணீர் ஊற்றிய சிப்பந்தி சோமு இப்பொழுது இவரோடும் நல்ல பழக்கமாகி இருந்தான்.சில மகிழ்ச்சியான தருணங்களில் சோமுவும் முத்துவும் சேர்ந்த இவரைக் கிண்டல் கேலி செய்து கலாய்ப்பார்கள். அந்த நேரங்களில் வீட்டில் வந்து இரவு எல்லோரும் சேர்ந்திருந்து சாப்பிடும்போது முத்து அதைச் சொல்ல எல்லோரும் சிரிப்பார்கள் அதில் சாமிநாதனும் சேர்ந்து கொள்வார். அவர்கள் போனதும் மகேஸ்வரி வந்து தனியாக இவரிடம் " ஐயா பிள்ளைகள் எதோ தெரியாமல் விளையாடுதுகள் நீங்கள் அதை மனசில் வைத்திருக்கக் கூடாது மன்னிக்க வேணும்" என்று சொல்லுவாள். இவரும் இல்லையம்மா எனக்கும் அதுதான் மிகவும் பிடித்திருக்கு நீங்கள் யோசிக்க வேண்டாம் என்று ஆறுதல் சொல்லுவார். (அவருக்கு தெரியும் தன்னோடு பத்து நிமிடங்கள் சந்திப்பதற்கு அனுமதி வேண்டி வாரங்கள் மாதங்கள் என்று காத்திருந்தார்கள் பல பிரமுகர்கள். அந்த யந்திர வாழ்க்கை ஒரு பொன்விலங்கு போல் என்னைக் கட்டிப் போட்டிருந்தது. இப்பொழுதுதான் எல்லாவற்றிலும் இருந்து விடுபட்டு சுதந்திரமாய் மூச்சு விட முடிகிறது. சின்ன சின்ன சந்தோசங்களை அனுபவிக்கவும் மனம் விரும்புகிறது).
முத்து கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து கடைக்கு வருவது குறைந்திருந்ததால் சோமு வந்திருந்து இவரோடு கொஞ்சநேரம் கதைத்து விட்டு போவான். இன்று கடையில் முத்துவும் வந்திருந்ததால் சோமுவும் வந்து கதைத்துக் கொண்டிருந்தான். அப்போது முத்து சோமுவிடம் என்ன சோமு இப்ப போலீஸ் கெடுபிடி எல்லாம் இங்கு அதிகமாகி இருக்காம். அடிக்கடி வந்து தொந்தரவு செய்கிறார்களாம் என்று சொல்ல, ஓம் முத்து வாரத்தில் நாலைந்து தடவை வந்து எல்லோரையும் விரட்டி விட்டு போவார்கள். இப்ப எங்கட கடையின் நிலமையைப் பார்க்கும்போது எனக்கும் வேலை போய் விடும்போல் இருக்கு. ஏண்டா என்ன விஷயம் என்று முத்து கேட்க, சோமுவும் இப்ப கடையில் வருமானமும் குறைவு. ஐயா வேலையாட்களுக்கு சம்பளம் கொடுக்கவே சிரமப் படுகின்றார். எனக்கே இரண்டு மாதமாக சம்பளம் வரவில்லை. அவரும் கடையை யாருக்காகவாது விற்று விடுவதற்கு முயற்சி செய்கிறார். நல்ல பார்ட்டி இருந்தால் சொல்லுபடி தனது நண்பரோடு போனில் பேசிக்கொண்டிருந்தவர். இந்த இடத்தில நல்ல பேரோடு இருக்கிற கடை இனி யார் எடுப்பார்களா தெரியாது.
இப்படி இவர்கள் கதைத்துக் கொண்டிருக்கும் போது சிரத்தையுடன் வேலை செய்து கொண்டிருந்த போதிலும் சாமிநாதனின் வியாபார மூளை உள்ளுக்குள் சில கணக்குகளைப் போட்டபடி இருந்தது. இங்கு வந்து தங்கிய இவ்வளவு காலத்தில் அந்தப் பக்கத்து கடைகள் காணிகளின் மதிப்புகள், வியாபாரங்களில் பெறுமதிகள் எல்லாம் அவருக்கு நன்றாகத் தெரிந்திருந்தது.
கை வேலை செய்துகொண்டிருக்க மெதுவாக சோமுவிடம் பேச்சுக் குடுத்தார். ஏன் சோமு, உங்க முதலாளிக்கு இப்ப கடையை விக்க வேண்டிய அவசரம் என்ன.
சோமுவும் அது வேறொன்றுமில்லை ஐயா இப்ப வியாபாரத்தால் வருமானமில்லை.அவருடைய பிள்ளைகளும் நகரத்தில் வசிக்கிறார்கள்.இனி அவர்களும் இங்கு வந்து கடையை கவனிக்கப் போவதில்லை. இவர்களுக்கும் வயதாகுதுதானே அதுதான் அவர்கள் இவைகளை வித்துவிட்டு தங்களோடு வந்திருக்கும்படி வற்புறுத்திக் கொண்டிருக்கினம்.
ஓமோம்....அதுவும் சரிதான் இப்ப இந்தக் கடை என்ன ஒரு பத்து லட்சம் போகுமோ.
என்ன ஐயா நீங்கள் விவரம் புரியாமல் கதைக்கிறியள் அவர் போனில் இருப்பது லட்சம் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.... சரி முத்து நேரமாச்சு நான் போட்டு பிறகு வாறன் என்று சொல்லிவிட்டு சோமு போகிறான்........!
பார்ப்போம் இனி.........! ✍️