தனிநாடு
தமிழர்களுக்கான ஒரே தீர்வு தனிநாடே என்று உறுதியாகத் தீர்மானித்த பிரபாகரன் இளைஞர்களை தனிநாட்டுக்கான போராட்டம் நோக்கி உந்திவந்த அரசியல்ச் செயற்ப்பாட்டாளர்களான ஈழவேந்தன், கோவை மகேசன் போன்றோரைத் தொடர்ச்சியாகச் சந்தித்து கலந்தாலோசித்து வந்தார். அவர்களுடனான ஆலோசனைகளின்போது சமஷ்ட்டிக் கட்சியின் கையாலாகாத் தனத்தையும், சிங்கள அரசுகளுக்கு ஆதரவாகச் செயற்படும் கொள்கையினையும் கடுமையாக விமர்சித்த பிரபாகரன், சுந்தரலிங்கம் மற்றும் நவரட்ணம் போன்றோரின் நிலைப்பாடான தனிநாடு நோக்கி சமஷ்ட்டிக் கட்சி போராட்டத்தினை முன்னெடுக்கவேண்டும் என்று கூறிவந்தார்.
சுந்தரலிங்கம்
தனியான நாடு எனும் கொள்கையினை முதன்முதலில் எதிர்த்தவர் சுந்தரலிங்கம்தான். ஆனால், 1958 இல் தமிழர் மீதான சிங்களவர்களின் தாக்குதலின் பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்ட அவர் பாராளுமன்றத்தில் உரையாற்றும்போது தமிழர்களுக்கான ஒரே தீர்வு தனியான நாடுதான் என்று கூறியதோடு, அதனை தாம் ஈழம் என்று அழைப்பதாகவும் கூறினார். மேலும், தனிநாட்டிற்குக் குறைவான எந்தத் தீர்வையும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றும் அவர் வாதிட்டு வந்தார். சிங்கள அரசியல்வாதிகளுடனும், புத்திஜீவிகளுடனும் தனக்கு இருக்கும் அனுபவத்தின் அடிப்படையில் அவர்கள் இலங்கையினை ஒரு பெளத்த சிங்கள நாடாக மாற்றவே முயன்று வருகிறார்கள் என்று வெளிப்படையாகவே அவர் கூறிவந்தார். சிங்களவர்கள் அரசியல் நம்பகத்தன்மையற்றவர்கள் என்றும், ஏற்றுக்கொள்ளும் எந்த முடிவினையும் அவர்கள் நடைமுறைப்படுத்தப்போவதில்லையென்றும் வாதிட்ட அவர் தமிழர்களுக்கான உரிமைகளையோ மொழிக்கான அந்தஸ்த்தையோ சிங்களவர்கள் ஒருபோதுமே தரப்போவதில்லை என்பதையும் ஆணித்தரமாகக் கூறிவந்தார். அந்நியர்களின் ஆக்கிரமிப்பிற்கு முன்னர் இருந்த நிலையான வடக்குக் கிழக்கின் பூர்வீக இனமக்கள் தமிழர்களே எனும் நிலையினை மீண்டும் உருவாக்கவேண்டும் என்றும் அத்தாயகம் ஈழம் என்று அழைக்கப்படவேண்டும் என்றும் சுந்தரலிங்கம் வாதாடிவந்தார்.
ஆனால், அவரது கோரிக்கையான தனிநாடு தமிழரிடையே முக்கியத்துவத்தினைப் பெறத் தவறிவிட்டது. 1960 இலும் 1965 இலும் பாராளுமன்றத் தேர்தல்களில் வவுனியாவில் ஈழத் தமிழர் ஒற்றுமை முன்னணி எனும் பெயரில் போட்டியிட்ட அவரது கட்சியைத் தமிழர்கள் புறக்கணித்திருந்தார்கள். 1960 தேர்தலில் சுயேட்சை வேட்பாளராகக் களமிறங்கிய சிவசிதம்பரத்தின் 5370 வாக்குகளுக்கு எதிராக சுந்தரலிங்கத்திற்கு 4231 வாக்குகளே கிடைத்தன. மேலும் 1965 தேர்தலில் தமிழ்க் காங்கிரஸில் போட்டியிட்ட சிவசிதம்பரத்தின் 7265 வாக்குகளுக்கு எதிராக சுந்தரலிங்கத்திற்கு 3952 வாக்குகள் மட்டுமே கிடைத்திருந்தன. இதன் பிற்பாடு காங்கேசந்துறையில் சமஷ்ட்டிக் கட்சியின் தலைவர் செல்வநாயகத்தை எதிர்த்துப் போட்டியிட்ட சுந்தரலிங்கம் 5788 வாக்குகளைப் பெற்றுக்கொள்ள செல்வாவோ 13,520 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருந்தார்.
நவரட்ணம்
1970 தேர்தல்களில் போட்டியிட்ட நவரட்ணத்தின் சுயாற்சிக் கழகமும் தேர்தலில் அவ்வளவாகப் பிரகாசிக்கவில்லை. அதுவும் தமிழ்மக்களால் நிராகரிக்கப்பட்டது. 1963 இல் இருந்து ஊர்காவற்துறை தொகுதியில் வெற்றிபெற்ற வந்த நவரட்ணம், புதிய கட்சிக்கு மாறியதன் பின்னர் தனது ஆதரவாளர்களின் வாக்குகளை இழந்தார். 1963 இல் 14,963 வாக்குகளையும் 1965 இல் 13,558 வாக்குகளையும் பெற்று வெற்றியீட்டிய நவரட்ணம், 1970 தேர்தலில் வெறும் 4758 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்திருந்தார். பெரும்பாலான வாக்காளர்கள் நவரட்ணத்தின் முன்னைய கட்சியான சமஷ்ட்டிக் கட்சிக்கே வாக்களித்ததுடன் புதிதாக போட்டியிட்ட ரட்ணம் என்பவரைத் தெரிவுசெய்தார்கள். முழு யாழ்ப்பாணக் குடாநாடுமே நவரட்ணத்தின் தனிநாட்டுக்கான கோரிக்கையினை அன்று நிராகரித்திருந்தது.
1956 ஆம் ஆண்டிலிருந்து தனிநாட்டுக் கொள்கையினை முற்றாக நிராகரித்திருந்த சமஷ்ட்டிக் கட்சியினர் தமிழருக்கான தீர்வாக சமஷ்ட்டி முறையிலான அரசியல் தீர்வையே தொடர்ச்சியாக முன்வைத்து வந்தனர். 1970 ஆம் ஆண்டு சித்திரை 4 ஆம் திகதி வெளியிடப்பட்ட சமஷ்ட்டிக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் பின்வருமாறு கூறுகிறது,
"...இந்த நாட்டினை கூறுபோடும் எந்த நடவடிக்கையும் இந்த நாட்டிற்குப் பாதகமாக அமையும் என்பதையும் , தமிழ் மக்களுக்கு இதனால் எந்தப் பலனும் கிடைக்காது என்பதனையும் நாம் மிகவும் உறுதியாக நம்புகிறோம். ஆகவே, தனிநாட்டுக் கோரிக்கையினை முன்வைத்து தேர்தலில் போட்டியிடும் எந்த அரசியல்க் கட்சிக்கோ அல்லது அமைப்பிற்கோ ஆதரவளிக்க வேண்டாம் என்று நாம் தமிழ்மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்"
தனது தேர்தல் தோல்வி குறித்து டெயிலி நியூஸிற்கு செவ்வி கொடுத்த நவரட்ணம், தனிநாட்டிற்கான தனது கோரிக்கைக்குக் கிடைத்த இத்தோல்வி தற்காலிகமானதுதான் என்று கூறியதுடன், தான் மாவட்ட சபைத் தேர்தல்களில் கூறிய நிலைப்பாடு மாறாது என்றும் கூறினார்.
"இந்தத் தேர்தலினை நான் அரசுக்கும், பெரும்பான்மைச் சிங்களச் சமூகத்திற்கும் ஒரு செய்தியை அனுப்பும் நடவடிக்கையாகப் பாவித்தேன். அதாவது, சிங்கள அரசுகளும், தலைவர்களும் தமிழர்களின் அவலங்களைத் தீர்த்துவைத்து கெளரவமான தீர்வொன்றைத் தருவார்கள் என்கிற நம்பிக்கையினைத் தமிழர்கள் முற்றாக இழந்துவிட்டார்கள் என்பதுதான் அந்தச் செய்தி. இவர்களின் செயற்பாடுகளினால் தமிழர் சிங்களவர் ஆகிய இரு இனங்களும் இனிமேல் ஒன்றாக வாழமுடியாது என்கிற நிலையினை அடைந்துவிட்டோம். இனிமேல் தமிழர்கள் பிரிந்துசென்று தமது தலைவிதியை தாமே தீர்மானிக்கும் கட்டத்தை அடைந்துவிட்டார்கள்" என்று அவர் கூறினார்.
தனிநாட்டிற்கான கோரிக்கையினை முன்வைத்து சுந்தரலிங்கமும், நவரட்ணமும் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்றிருந்தாலும்கூட, இளைஞர்களின் மனதில் தனிநாட்டிற்கான தேவையினை உணரவைப்பதில் பாரிய வெற்றியினைப் பெற்றிருந்தார்கள். பல இளைஞர்கள் தனிநாட்டை அடைவதற்கான வழிமுறைகள் பற்றித் தீவிரமாக ஆராய முற்பட்டிருந்தார்கள். வன்முறையற்ற வழிமுறைகள் மூலம் போராடுவது பலத்த தோல்வியினையே சந்தித்திருக்கிறது என்று அவர்கள் வாதாடினார்கள். ஆயுதத்தினை ஆயுதத்தின் மூலமே எதிர்கொள்ளவேண்டும், அதன்மூலமே தமிழர்களை மரியாதையுடன் நடத்தவேண்டும் என்பதனை சிங்களவர்கள் உணர்ந்துகொள்வார்கள். எமது பதிலடி கடுமையாக இருக்கும்போதுதான் திருப்பி எம்மீது தாக்குதல் நடத்து முன் அவர்கள் சிந்திப்பார்கள் என்று இளைஞர்கள் நியாயப்படுத்தத் தொடங்கினர்.