தரப்படுத்தல்
1970 ஆம் ஆண்டு, வைகாசி 27 இல் இடம்பெற்ற தேர்தல்களில் சமஷ்ட்டிக் கட்சி 13 ஆசனங்களையும், காங்கிரஸ் 3 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன. இதே தேர்தலில் சுதந்திரக் கட்சி தலைமையில் போட்டியிட்ட ஐக்கிய முன்னணி, சம சமாஜக் கட்சி மற்றும் கம்மியூனிஸ்ட் கட்சி ஆகியவை இணைந்து 106 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டன. தேசியப் பட்டியல் மூலம் தெரிவான மேலும் 6 ஆசனங்களையும் சேர்த்து இந்த முன்னணி 112 ஆசனங்களைப் பாராளுமன்றத்தில் பெற்றிருந்தது. இது வெறும் 151 உறுப்பினர்களை மாத்திரமே கொண்டிருந்த பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினைக் காட்டிலும் அதிகமானதாகும். ஐக்கிய தேசியக் கட்சி வெறும் 17 ஆசனங்களை மட்டுமே இத்தேர்தலில் பெற்றிருந்தது. சுதந்திரக் கட்சியின் தலைவரான சிறிமாவோ பண்டாரநாயக்கா தனது மந்திரிசபையினை அமைத்திருந்தார். தனது கல்வியமைச்சராக கம்பொல சகிராக் கல்லூரியின் முன்னாள் அதிபராகக் கடமையாற்றிய கலாநிதி பாடி உட் டின் மகமூட்டீனை நியமித்தார்.
பாடி உட் டின் மகமூட்
கல்வியமைச்சராக வந்தவுடன் அவர் செய்த முதலாவது வேலை ஊடகங்கள் மூலமாக மந்திரிசபையில் தீர்மானிக்கப்பட்ட தரப்படுத்தலினை அறிவித்ததுதான். ஏற்கனவே தமிழ் இளைஞர்கள் மனதில் முளைத்திருந்த பிரிந்துபோதல் எனும் எண்ணக்கருவிற்கு இந்த அறிவிப்பு மேலும் உரம் ஊட்டியது. பாராளுமன்றத்தில் பேசிய கல்வியமைச்சர் பாடி உட் டின், சிங்களவர்கள் பல்கலைக்கழகமூடான கல்வியினை நிராகரித்து வருகிறார்கள் என்றும், அதன்மீதான நம்பிக்கையினை இழந்துவருகிறார்கள் என்றும் கூறியதோடு, இதற்கெல்லாம் காரணம் பெரும்பாலான தமிழர்கள் பல்கலைக் கழக அனுமதியினைப் பெறுவதும், பல தமிழர்கள் பொறியியலாளர் மற்றும் மருத்துவர்களாக உருவாக்கப்படுவதும் இதற்கு இன்னொரு காரணம் என்றும் கூறினார்.
தற்போதிருக்கும் பல்கலைக் கழக அனுமதி மூன்று வழிகளில் தமிழ் மாணவர்களுக்கு அனூகூலமாக இருக்கின்றது என்று வாதிட்ட அவர், அவற்றைனைப் பின்வருமாறு விளக்கினார்.
முதலாவதக வரலாற்று ரீதியான காரணங்கள். அதாவது வடபகுதியில் இயங்கிவரும் மிகப் பிரபலமான, தரமான பாடசாலைகள். இரண்டாவது தமிழ் பரீட்சைத் தாள்களைத் திருத்தும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மாணவர்களுக்கு அதிகமான புள்ளிகளை வழங்கிவருகிறார்கள் என்பது. மூன்றாவதாக, பல்கலைக்கழகங்களில் செய்முறைத் தேர்வுகளின்பொழுது, தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மாணவர்களுக்கு உதவிவருகிறார்கள் என்பது. ஆகவேதான், சிங்கள மாணவர்களுக்கு இழைக்கப்பட்டுவரும் அநீதியினைத் தடுப்பதற்கு மந்திரிசபை கடுமையான தீர்மானங்களை நிறைவேற்றவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக அவர் அங்கே விபரித்தார். ஆகவேதான், விஞ்ஞானப் பாடங்களுக்கான செய்முறைத் தேர்வுகளை தான் இரத்துச் செய்வதாகவும், தரப்படுத்தலினை அமுல்ப்படுத்தப்போவதாகவும் கூறினார்.
தமிழ் மாணவர்கள் பெருவாரியாக தகுதி அடிப்படையில் பல்கலைக் கழகங்களுக்குத் தெரிவாவதாகவும், பல்கலைக் கழகங்களில் பணியாற்றும் தமிழ் ஆசிரியர்கள் தமிழ் மாணவர்களுக்கு விஞ்ஞான செய்முறைத் தேர்வுகளில் உதவிவருவதால் சிங்கள மாணவர்கள் பாதிக்கப்படுவதாகவும் கூறி சிங்கள பெளத்த அமைப்புக்களும் மாணவர் சங்கங்களும் முறையிட்டு, இந்தத்ப் பல்கலைக் கழக தேர்வுமுறை முற்றாக நீக்கப்படவேண்டும் என்றும் சிறிமாவுக்குத் தொடர்ச்சியாக அழுத்தம் கொடுத்து வந்த நிலையில், தேர்தல் பிரச்சாரங்களில் இந்தக் கோரிக்கைகளை தான் நடைமுறைப்படுத்துவேன் என்று தான் அளித்த வாக்குறுதிகளுக்கு அமைவாக தான் ஆட்சியில் ஏறியதும் அதனைச் செய்யத் தலைப்பட்டார் சிறிமா. ஆனால், வடமாகாணப் பாடசாலைகள் பலவற்றில் செய்முறை விஞ்ஞான பாடங்களுக்கான திறமையான உபகரணங்கள் இருந்தன என்பதையும் மறுப்பதற்கில்லை. அதனாலேயே பல்கலைக்கழக விஞ்ஞான பாடங்களுக்கு பெருமளவில் வடபகுதித் தமிழ் மாணவர்கள் தெரிவுசெய்யப்பட்டார்கள். 1974 ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் விஞ்ஞான மற்றும் பொறியியல் பாடநெறிக்கு தேர்வானவர்களில் 37.2 வீதமானவர்களும், வைத்தியத்துறை மற்றும் பல்வைத்திய பாடநெறிகளுக்குத் தெரிவானவர்களில் 40.5 வீதமானவர்களும், விவசாயம் மற்றும் கால்நடை வைத்தியத்துறைக்குத் தெரிவானவர்களில் 41.9 வீதமானவர்களும் இலங்கைத் தமிழர்களாக இருந்தார்கள். இலங்கைத் தமிழ் மாணவர்கள் பல்கலைக் கழகத் தேர்வுகளில் கணிசமான இடங்களைத் தக்கவைத்துவந்த இந்த நிலை 1971 வரையில் தொடர்ந்து வந்தது. இவ்வருடத்தில் விஞ்ஞான பாடநெறிகளுக்குத் தெரிவானவர்களில் 35.2 வீதமான மாணவர்கள் இலங்கைத் தமிழர்களா இருந்ததுடன், பொறியியல்ப் பீடங்களுக்குத் தெரிவானவர்களில் 40.8 வீதமானவர்களும் மருத்துவத்துறைக்குத் தெரிவானவர்களில் 40.9 வீதமானவர்களும் இலங்கைத் தமிழர்களாக இருந்தார்கள்.
பாடி உட் டின் மகமூட்டீன் தமிழ் மாணவர்கள் மற்றும் தமிழ் ஆசிரியர்களின் மீதான கடுமையான விமர்சனம் தமிழ் மாணவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. கல்வித்திட்டத்தை ஏமாற்றியும், தமிழ் ஆசிரியர்களின் உதவியினையும் கொண்டே தமிழ் மாணவர்கள் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாவதாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டினைக் கடுமையாக மறுத்த தமிழ் மாணவர்கள், தமது அயராத உழைப்பினாலும் கடுமையான பயிற்சியினாலுமே தாம் பலகலைக் கழகங்களுக்குத் தெரிவாகி வருவதாக வாதிட்டார்கள்.
http://www.cmb.ac.lk/wp-content/uploads/science-old.jpg
இலங்கைப் பல்கலைக்கழகம் 1942 இல் ஆரம்பிக்கப்பட்டது முதல் 1957 வரையான காலப்பகுதிவரை பாடநெறிகள் ஆங்கிலமொழியிலேயே நடைபெற்றுவந்தன சிங்கள மற்றும் தமிழ் மாணவர்கள் ஒரே பரீட்சையினை ஆங்கில மொழியிலேயே எழுதிவந்தனர். ஆனால், 1957 முதல் பரீட்சைகளுக்கான விளக்கப்படுத்தல்கள் சிங்களத்திலோ தமிழிலோ வழங்கப்பட முடியும் என்கிற முறை கொண்டுவரப்பட்டதோடு, அதுவரை இருந்த செயன்முறைகளும் மாற்றம் பெறத் தொடங்கின. இரு மொழிகளைப் பேசும் மாணவர்கள் ஒரே பரீட்சைத் தாளினை எழுதினாலும் கூட, அவற்றை தமது தாய் மொழிகளில் பதிலளிக்கும் வழிமுறை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டது. பரீட்சைகளில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளில் பதிலளிக்கப்பட்ட பரீட்சைத் தாள்கள் திருத்தப்பட்டு, அவர்கள் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் ஒரே பட்டியலில் அதிகூடிய புள்ளிகள் முதல் அதி குறைந்த புள்ளிகள் வரை தரப்படுத்தப்பட்டது. இந்த நடைமுறை, தகுதி அடிப்படியில் தரப்படுத்தும் முறை என்று அறியப்பட்டது. பல்கலைக்கழகங்களில் ஒவ்வொரு பாடநெறிக்கும் ஒதுக்கப்பட்ட ஆசனங்களுக்கு அமைவாக இந்தப் பட்டியலில் அதிகூடிய புள்ளிகளைப் பெற்ற மாணவர்களில் இருந்து தேர்வு செய்யப்பட்டார்கள். ஆனால், சிறிமாவின் அரசாங்கம் கொண்டுவந்த தரப்படுத்தல் திட்டத்தின்படி, சிங்கள மாணவர்களும் தமிழ் மாணவர்களும் தாம் பெற்ற புள்ளிகளின் அடிப்படையில் தனித்தனியாக பட்டியலிடப்பட்டு, ஒரே மொழியில் பரீட்சை எழுதியவர்களின் புள்ளிகள், ஒருவரின் புள்ளிகளுக்கெதிராக இன்னொருவரின் புள்ளிகள் ஒப்பிட்டுப் பார்க்கப்பட்டு தேர்வுசெய்யப்பட்டார்கள்.
இந்தப் புதிய தரப்படுத்தல் முறை சிங்கள மாணவர்களுக்கு மிகவும் அனூகூலமாகவும், தமிழ் மாணவர்களில் பல்கலைக் கழக அனுமதியில் கடுமையான தாக்கத்தினையும் ஏற்படுத்தப்போவதை தமிழ் மாணவர்கள் புரிந்துகொண்டார்கள். ஆகவே இந்தப் புதிய தரப்படுத்தல்த் திட்டத்திற்கெதிராக பாரிய மாணவர் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மாணவர்களான பொன்னுத்துரை சத்தியசீலனும் சபாலிங்கமும் ஏற்பாடு செய்தார்கள். இந்த மாணவர் ஆர்ப்பாட்டம் யாழ்ப்பாணம் வைத்தீஸ்வராக் கல்லூரியில் இருந்து ஆரம்பமாகி, பின்னர் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி, கனகரட்ணம் மகா வித்தியாலயம் (பின்னாளில் ஸ்டான்லிக் கல்லூரி என்று அறியப்பட்டது), பரி யோவான் கல்லூரி, புனித பத்திரிசியார் கல்லூரி, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகள் ஊடாகப் பயணித்து இறுதியாக யாழ்ப்பாணம் முற்றவெளியில் இடம்பெற்ற பாரிய பொதுக்கூட்டத்துடன் நிறைவுபெற்றது. கூட்டத்தின் இறுதியில் சிறிமாவின் நோக்கத்தின் கருவியாகச் செயற்பட்ட பாடி உட் டின் மகமூட்டீன் உருவப்பொம்மை தீக்கிரையாக்கப்பட்டது. கூட்டத்தில் பேசிய மாணவன் சத்தியசீலன் பின்வருமாறு கூறினார்,
"மொத்தத் தமிழ்ச் சமூகத்தினதும் இருப்பையும் பாதிக்கும் வகையிலேயே இந்த புதிய தரப்படுத்தல் திட்டம் கொண்டுவரப்பட்டிருக்கிறது. இதன்மூலம் பல தமிழ் மாணவர்களின் உயர்தரக் கல்வி கடுமையான வீழ்ச்சியினை அடையப்போவதுடன் பல தமிழ் மாணவர்களின் உயர்தரப் பெறுபேறுகளின் தகமையும் குறைவடையப் போகிறது. இத்திட்டத்தின் மூலம் பெருமளவு தமிழ் மாணவர்களின் உயர்கல்வியும் அதனூடான வேலைவாய்ப்பும் தட்டிப் பறிக்கப்பட்டிருக்கிறது. தமது கல்வியின் மூலம் தரமான தகுதியினையும், வேலைவாய்ப்புக்களையும் அடையமுடியும் என்று இருந்த தமிழ் மாணவர்களின் கடைசி நம்பிக்கையும் இதன்மூலம் அழிக்கப்பட்டிருக்கிறது".