காங்கேசந்துறை இடைத்தேர்தலும் மக்கள் ஆணையும்
காங்கேசந்துறை தொகுதி இடைத்தேர்தலை அறிவித்ததமை அரசை சிக்கலில் வீழ்த்தியிருந்தது. தந்தை செல்வாவுக்கு எதிராக இத்தொகுதியில் போட்டியிடுவதற்கு ஒருவரைத் தெரிவுசெய்வதென்பது அரசைப்பொறுத்தவரையில் கடிணமான விடயமாகக் காணப்பட்டது. இவ்விடயம் வாராந்த அமைச்சரவைக் கூட்டத்தில் சிறிமாவினால் பிரஸ்த்தாபிக்கப்பட்டது. இத்தேர்தலில் அரசாங்கத்தினால் நிறுத்தப்படும் வேட்பாளர் நிச்சயம் தோல்வியடைவார் என்பதை தான் நம்புவதாகக் கூறிய சிறிமா, அத்தோல்வி கெளரவமான முறையில் அமைவதை உறுதிசெய்யவேண்டும் என்றும் கூறினார். இதற்காக தமிழர் ஐக்கிய முன்னணியினரின்ருக்கெதிரான வாக்குகள் பிரிக்கப்படாமல் இருக்க பொதுவேட்பாளர் ஒருவரைக் களமிறக்க அவர் தீர்மானித்தார். காங்கேசந்துறையில் ஆதரவுத்தளம் ஒன்றினைக் கொண்டிருக்கும் கம்மியூனிஸ்ட் கட்சியிலிருந்து ஒருவரைத் தெரிவு செய்யலாம் என்று அமைச்சரவை அவருக்கு ஆலோசனை வழங்கியது. இதன்படி, கம்மியூனிஸ்ட் கட்சி வி. பொன்னம்பலத்தை இத்தேர்தலில் நிற்குமாறு கேட்டுக்கொண்டாலும்கூட, அவர் இதனை இலகுவில் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. தந்தை செல்வாவின் தனிநாட்டுக் கோரிக்கைக்கு நிகரான மாற்று தீர்வொன்றினை தான் மக்களிடம் முன்வைத்தாலன்றி இத்தேர்தலில் தன்னால் போட்டியிட முடியாதென்று பொன்னம்பலம் தனது கட்சியின் அரசியல்த் துறையினரிடம் கூறினார். பொன்னம்பலம் தனது கட்சியினரிடையே தமிழரின் பிரச்சினைக்குத் தீர்வாக பிராந்தியங்களுக்கான சுயாட்சி முறையினை முன்வைத்து விவாதித்து வந்திருந்தார். ஆகவே, வடக்குக் கிழக்கு மாகாணங்களுக்கான தன்னாட்சி அதிகாரத்தை உருவாக்குவதாக உத்தியோகபூர்வமற்ற முறையில் அவர் தேர்தலில் மக்களின் முன் பிரச்சாரப்படுத்தலாம் என்று அவரது கட்சி மேலிடம் அனுமதியளித்தது.
சுமார் 41,227 வாக்காளர்கள் கொண்ட இத்தொகுதி மக்களிடம் இரு விடயங்களுக்கான ஆணையைத் தருமாறு தந்தை செல்வா கேட்டிருந்தார்.
முதலாவது 1972 ஆம் ஆண்டின் அரசியல் யாப்பான ஒற்றையாட்சி முறையினை நிராகரிப்பது. இரண்டாவது தமிழர்கள் தமக்கான தனிநாட்டை உருவாக்கிக்கொள்வதென்பது.
தந்தை செல்வாவின் தேர்தல் பிரச்சாரப் பேரணிகளில் ஆயுத அமைப்புக்களின் உறுப்பினர்களும் கலந்துகொண்டனர். பிரபாகரனும் அவரது தோழர்களும் தந்தை செல்வாவிற்கு ஆதரவாக தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். தமிழ் இளைஞர் பேரவையின் கொழும்புக்கிளையின் தலைவர் மற்றும் செயலாளர்களான ஈழவேந்தன் மற்றும் உமாமகேஸ்வரன் போன்றோரும் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இத்தொகுதியின் ஓவ்வொரு வீட்டிற்கும் சென்ற இவர்கள் மக்கள் அனைவரும் தமிழ் ஈழமென்னும் தனிநாட்டிற்காக வாக்களிக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். இந்த தேர்தல் பிரச்சாரத்தின்போதே பிரபாகரனும் உமாமகேஸ்வரனும் முதன்முதலாக சந்தித்துக்கொண்டதாக ஈழவேந்தன் கூறியிருந்தார்.
காங்கேசந்துறை இடைத்தேர்தல் 1975 ஆம் ஆண்டு மாசி மாதம் 6 ஆம் திகதி நடைபெற்றது. தந்தை செல்வா அதிகூடிய வாக்கு வித்தியாசத்தில், அறுதியான வெற்றியைப் பெற்றார்.மொத்த வாக்காளர்களில் 87.09 வீதமானோர் வாக்களிப்பில் ஈடுபட்டிருந்தனர். அத்தொகுதியின் வரலாற்றில் இதுவே மிகக்கூடிய வாக்களிப்பு வீதமாகும். பொன்னம்பலத்திற்கு வழங்கப்பட்ட 9,547 வாக்குகளுக்கெதிராக தந்தை செல்வா 25,927 வாக்குகளைப் பெற்றார். உடல் ஊனமுற்றிருந்த வாக்காளர்களைக் கூட தமது தோள்களில் சுமந்துசென்று போராளிகள் வக்களிப்பில் கலந்துகொள்ளச் செய்திருந்தனர்.
தனது தேர்தல் வெற்றியின்பின்னர் மக்களிடம் உரையாற்றிய தந்தை செல்வா பின்வருமாறு கூறினார்,
"அந்நியரின் ஆக்கிரமிப்பினூடாக ஒருகுடையின் கீழ் கொண்டுவரப்படும்வரை இந்த நாட்டின் தமிழர்களும், சிங்களவர்களும் வெவ்வேறானஇறையாண்மைகொண்ட மக்கள் கூட்டங்களாகவே சரித்திர காலம் முதல் வாழ்ந்து வந்தனர். கடந்த 25 வருடங்களாக ஒருமித்த இலங்கையினுள் சிங்களவர்களுக்குச் சமமான வகையில் அரசியல் உரிமைகளைப் பெற நாம் போராடி வருகிறோம்".
"ஆனால், மிகவும் வேதனையளிக்கும் விதமாக தொடர்ந்து ஆட்சியமைத்துவரும் சிங்களத் தலைவர்கள் சுதந்திரம் அடைந்ததன் பின்னர் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அபரிதமான அதிகாரத்தினைப் பாவித்து எமக்கான அடிப்படை உரிமைகளை வழங்க மறுத்து வருவதுடன், எம்மை இரண்டாம்தர மக்கள் எனும் நிலைக்கும் தள்ளிவருகிறார்கள். தமிழ் மக்களுக்கெதிராகப் பாகுபாடு காட்டுவதன் மூலம் இதனை அவர்களால் செய்துவர முடிகிறது".
"இத் தேர்தல் வெற்றியின் மூலம் எனக்கு வழங்கப்பட்டுள்ள மக்கள் ஆணையின்படி எனது மக்களுக்கும், இந்தநாட்டிற்கும் நான் சொல்லிக்கொள்ள விரும்புவது என்னவெனில் தமிழ் மக்களுக்கு ஏற்கனவே இருக்கும் சுயநிர்ணய உரிமையின் பிரகாரம், சுதந்திரமான தனிநாடான தமிழீழத்தினை உருவாக்குவோம் என்பதாகும்".
இதனைச் செவிமடுத்துக்கொண்டிருந்த இளைஞர்கள் "தமிழ் ஈழமே எமது தாய்நாடு" என்றும் "தமிழ் ஈழமே எமது விருப்பு" என்றும் கோஷமிட்டனர்.
பல இளைஞர்கள் தந்தை செல்வாவின் அருகில் சென்று தமது சுட்டுவிரலில் கிறி, அவரது நெற்றியில் இரத்தத் திலகம் இட்டனர்.
எஸ் ஜே வி செல்வனாயகம்
அன்றிலிருந்து தான் இறந்த 1977, சித்திரை 5 ஆம் திகதிவரை தான் கொண்ட கொள்கையில் இருந்து அவர் பின்வாங்கவில்லை. தனது பேச்சுக்களில் தனிநாட்டிற்கான அவசியத்தை அவர் நியாயப்படுத்தியே வந்திருந்தார். தமிழீழம் என்பது நிலப்பரப்பு ரீதியியாகவும், மக்கள் தொகையிலும் சிறியதாக இருப்பதால் சாத்தியமற்றது என்று அவரை விமர்சித்தவர்களுக்கு அவர் வைகாசி மாதம், 1975 ஆம் ஆண்டு கொக்குவிலில் நடைபெற்ற கூட்டத்தில் பதிலளித்திருந்தார்.
"தமிழ் ஈழத்தைக் காட்டிலும் மக்கள் தொகையிலும், நிலப்பரப்பிலும் குறைந்த நாடுகள் தம்மை சுதந்திரமான, தனியான நாடுகளாக அரசாண்டு வருகின்றன. அப்படியிருக்கையில், ஏன் தமிழர்கள் தமக்கான தனிநாட்டிற்கான போராட்டத்தை முன்னெடுக்கக் கூடாது?" என்று அவர் கேள்வியெழுப்பினார்.
சிங்கள அரசுடன் மேலும் பேச்சுவார்த்தைகளில் தமிழர்கள் ஈடுபடவேண்டும் என்று கூறிவந்தோருக்கு 1975 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 2 ஆம் திகதி, தெல்லிப்பழை கொல்லன்கலட்டியில் பதிலளித்துப் பேசிய தந்தை செல்வா,
"நாங்கள் அவர்களுடன் தேவையானளவிற்குப் பேசியாயிற்று. எமக்கு சட்டரீதியாகக் கிடைக்கவேண்டிய உரிமைகளைப் பெறுவதற்காக எமது சிங்களச் சகோதரர்களுடன் கடந்த 25 வருடங்களாக சமாதான வழிமுறைகளில் கேட்டு வந்திருக்கிறோம். பல சிங்களத் தலைவர்களுடன் பல பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதோடு, பல ஒப்பந்தங்களையும் செய்திருக்கிறோம். ஆனால், எமது எல்லா முயற்சிகளும் தோற்றுப்போயுள்ள நிலையில் நாம் அவர்களுக்கு "வணக்கம்" கூறி விடைபெறும் காலமும் எமக்கான தனிநாட்டினை உருவாக்கும் காலமும் வந்துவிட்டது". என்று கூறினார்.
ஆயுத அமைப்புக்கள்
மிதவாத அரசியல்த் தலைவர்கள் தமது வன்முறையற்ற அரசியல் செயற்பாடுகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் முற்றான தோல்வியினைச் சந்தித்தையடுத்து, விரக்தியுற்று தமது முன்னைய நிலைப்பாடான ஒருமித்த இலங்கைக்குள் சமஷ்ட்டி அடைப்படியிலான தீர்வினைக் காணுதல் என்பதிலிருந்து தனியான நாடு என்பதே ஒரே வழி எனும் நிலைப்பாட்டிற்கு வந்துகொண்டிருக்க, ஆயுதப் போராட்டத்தில் நம்பிக்கை வைத்திருந்த இளைஞர்கள் தம்மை ஒருங்கிணைப்பதிலும், பலப்படுத்துவிதலும் ஈடுபட்டிருந்தார்கள். 1975 ஆம் ஆண்டின் ஆரம்பப்பகுதியில் இரு ஆயுத அமைப்புக்கள் யாழ்ப்பாணத்தில் மறைவாக இயங்க ஆரம்பித்திருந்ததுடன், மூன்றாவது அமைப்பு இங்கிலாந்து லண்டனில் உருவாக்கப்பட்டது.
பிரபாகரன் குழு என்று அறியப்பட்ட புதிய தமிழ்ப் புலிகள் அமைப்பே இவற்றுள் முதன்மையானதாகக் காணப்பட்டது. அவ்வியக்கத்தினது அர்ப்பணிப்பு மிக்க போராடக் கூடிய இளைஞர்களின் எண்ணிக்கை 30 வரை அதிகரித்திருந்தது. அதனிடம் அப்போது இரு துருப்பிடித்த சுழற்துப்பாக்கிகளும், வீட்டில் செய்யப்பட்ட இரு கையெறிகுண்டுகளும் மாத்திரமே இருந்தன. இவற்றினை வைத்துக்கொண்டே சிறிமாவுக்கு வரவேற்பளிக்க துரையப்பாவும், குமாரசூரியரும் மேற்கொண்ட முயற்சிகளை பிரபாகரனின் போராளிகள் தவிடுபொடியாக்கியிருந்தனர். செட்டியே இந்த செயற்பாடுகளின் பிரதானமாகச் செயற்பட்டிருந்தார். செட்டிமேல் பிரபாகரன் வைத்திருந்த நம்பிக்கை அப்போது பலனளித்திருந்தது போலத் தோன்றியது.
ஆனால், செட்டி தொடர்பாக பெரிய சோதி கொண்டிருந்த ஐய்யமும் தவறானதல்ல. ஏனென்றால், தெல்லிப்பழை பலநோக்குக் கூட்டுறவுச் சங்கத்தைக் கொள்ளையடித்த செட்டி, சுமார் 69,000 ரூபாய்களை தன்னுடனேயே வைத்திருந்தார். திடீரென்று அவருக்கு வந்த வசதியினைப் பார்த்து சந்தேகித்த நண்பர்கள் இது குறித்து அவரிடம் வினவியபோது, அப்பணத்தைக்கொண்டு தான் ஒரு பழைய காரினை வாங்கியதாக அவர் பொய்யுரைத்திருந்தார். 1974 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதியில் அவர் கைதுசெய்யப்பட்டார்.
செட்டியின் கைது பிரபாகரனுக்கு சிக்கலான சூழ்நிலையினைத் தோற்றுவித்தது. பொலீஸாரின் கடுமையான விசாரணைகளின்போது, செட்டி தனது இருப்பிடங்க்களை நிச்சயம் காட்டிக்கொடுத்துவிடுவார் என்பதை பிரபாகரன் உறுதியாக நம்பினார். மேலும், தமிழ் அதிகாரி பத்மநாதன் செட்டிக்கு வழங்கிய சித்திரவதைகளை பிரபாகரனே எதிர்பார்க்கவில்லை என செட்டியின் நண்பர் ஒருவர் பிற்காலத்தில் என்னிடம் கூறியிருந்தார். பத்மநாதன் செட்டியை ஒருவாறு பொலீஸ் உளவாளியாக மாற்றுவதில் வெற்றி கண்டிருந்தார்.
செட்டியின் கைதின் பின்னர் பிரபாகரனுக்குப் பணத்தட்டுப்பாடு ஏற்பட்டிருந்தது. பழங்களையும், நண்பர்களிடமிருந்து கிடைக்கும் உணவையும் உட்கொண்டே அவர் சமாளித்து வந்தார். மிகுந்த களைப்புடனும், பசியுடனும் அவர் தனது தோழர்களின் வீடுகளுக்கு சொல்லமலேயே வந்துவிடுவார். அவரை தமது சமையலறைக்குள் அழைத்துச் சென்ற அவர்கள் அங்கிருந்த உணவுகளை அவருக்குக் கொடுப்பார்கள். அதனை அவர் உட்கொண்டுவிட்டு, அங்கேயே சில மணிநேரம் படுத்துறங்கிச் சென்றுவிடுவார். எம். என், நாராயணசாமி தனது புத்தகமான "இலங்கையின் புலிகள்" இல் குறிப்பிடும்போது, "அவருக்கு ஒருமுறை மஞ்சள்க் காமாலை வந்திருந்தது. ஆனால், அவரோ வைத்தியரிடம் போக விரும்பவில்லை. ஆனால் அதிசயமாக, அவரது தோழர்களுக்கு வியப்பளிக்கும் வகையில் அவர் குணமானார்" என்று எழுதுகிறார்.