போராட்டத்துடன் தன்னை இணைத்துக்கொண்ட அன்டன் பாலசிங்கம்
***************************************************************************************************
செய்திக்குறிப்பு : திரு சபாரட்ணம் அவர்களுக்கு அவரது வாசகர் ஒருவர் அனுப்பிய தகவல் ஒன்றினை சபாரட்ணம் இணைத்திருந்தார். அதன் விபரங்கள் கீழே.
1978 முதல் 1979 வரையான காலப்பகுதியில் புலிகளும் டெலோ அமைப்பும் இளைஞர்களுக்கான மென்பந்து கிரிக்கெட் ஆட்டங்களையும், உதைபந்தாட்டங்களையும் வட மாகாணத்தில் ஒழுங்கு செய்திருந்தனர். கல்வி உயர்தரப் பரீட்சை நடந்துவந்த காலப்பகுதியில் வடமராட்சியின் வதிரி, துன்னாலை மற்றும் கரணவாய் ஆகிய பகுதிகளில் இந்த ஆட்டங்கள் நடந்தன. யாழ்ப்பாணம் மற்றும் அதனோடு அண்டிய பகுதிகளிருந்து வந்த அணிகளுடன் வடமாராட்சி அணிகள் போட்டிகளில் கலந்துகொண்டனர். இந்தப் போட்டிகளில் கலந்துகொண்ட முக்கியமானவர்களில் பொன்னமான் (குகன் - யோகியின் சகோதரர்) யாழ் இந்துக்கல்லூரியில் பயின்றுவந்த திறமையான கிரிக்கெட் வீரர். அப்படியான போட்டியொன்றில் நான் பிரபாகரனைக் கண்டேன். போட்டியின் பின்னர் வீரர்களும், பார்வையாளர்களும் கலந்துரையாடுவதுடன் உணவுவகைகளையும் பகிர்ந்துகொள்வது வழக்கம். இப்படியான கலந்துரையாடல்களில் அரசியலும் வழமையாக இடம்பெறுவதுடன் ஒரேவகையான கருத்தினைக் கொண்டவர்கள் ஒன்றிணைந்து பயணிப்பதும் வழமையானது.
கடல்ப்புறா எனும் சரித்திர நாவல் சோழர்களின் பெருமையினைப் பற்றியும், அவர்களின் கடலறிவு பற்றியும் பேசுகிறது. இந்த நாவலின்ன் பெரும்பகுதி கடாரம் எனப்படும் பகுதியினை மையப்படுத்தியே கூறப்படுகிறது. மேலும், அகூதா எனும் பிரபலமான பெயர் ஒன்றும் இக்கதையில் கூறப்பட்டிருக்கிறது.
திரு பிரபாகரன் இந்த நாவலை வாசித்திருந்தார். சோழர்களின் கடல்வலிமை பிரபாகரனை மிகவும் கவர்ந்திருந்தது. இதனாலேயே கேர்ணல் சங்கர் முதலாவது கப்பலை புலிகளுக்காக அமைத்தபோது அதற்கு பிரபாகரன் கடல்ப்புறா என்று பெயரிட்டார். பின்னாட்களில், 1987 ஆம் ஆண்டு புலிகளின் மூத்த தளபதிகளான லெப்டினன்ட் கேணல்கள் குமரப்பாவும் புலேந்திரனும் கடல்ப்புறாவில் பயணித்துக்கொண்டிருந்தவேளை இலங்கைக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
நான் இந்தச் சம்பவம் பற்றிய அனைத்துத் தகவல்களையும் நன்கு அறிந்திருந்தேன். அதுலத் முதலியுடன் இக்காலப்பகுதியில் அடிக்கடி தொடர்புகொண்டு வந்திருந்தேன். அதுபற்றிய தகவல்களை இங்கே தருகிறேன்,
குமரப்பாவின் தற்கொலையோடு தொடர்புபட்ட விடயம் ஒன்றைப்பற்றியும், அது என்னை எவ்வளவு தூரத்திற்குப் பாதித்திருந்தது என்பது பற்றியும் கூறுகிறேன். காங்கேசந்துறை சீமேந்துத் தொழிற்சாலையில் பொறியியலாளராகப் பணியாற்றிவந்த ஒருவரின் மனைவி தனது கணவருக்கு என்ன நடந்தது என்பற்றி அறிந்துகொள்ள டெயிலி நியூஸ் காரியாலயத்திற்கு வந்திருந்தார். மூத்த ஆசிரியர் மணிக் டி சில்வா அவரை என்னிடம் அழைத்து வந்திருந்தார். அந்தப்பெண் எனக்கு முன்னால் அமர்ந்துகொண்டார். நான் யாழ்ப்பாண அரசாங்க அதிபரைத் தொடர்புகொண்டு கேட்டபோது, அந்த இளம் பொறியியலாளர் கொல்லப்பட்டு விட்டதாகக் கூறினார். அந்த பொறியியலாளரை நான் கண்டிருக்கிறேன், கைத்தொழில் அமைச்சரான சிறில் மத்தியூ காங்கேசந்துறைக்கு விஜயம் செய்தவேளை நானும் அவருடன் சென்றபொழுது அந்தப் பொறியியலாலறைச் சந்தித்திருந்தேன். அவர் இறந்த செய்தி எனக்குக் கண்ணீரை வரவழைத்தது.
*********************************************************************************************
இனப் பூசலின் அரசியல்
1978 ஆம் ஆண்டின் அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தன்னைப் பலப்படுத்திக்கொண்ட ஜெயவர்த்தனவின் பலம் சிறிமாவை மேலும் பலவீனப்படுத்தி மக்கள் முன் அவரது நம்பகத்தன்மையை வலுவிழக்கப்பண்ணியதன் மூலம் இன்னும் பலமடைந்து வந்தது. அவரது அடுத்த இலக்காக இருந்தது இரண்டாவது தடவையும் ஜனாதிபதியாகுவதுதான்.
புதிய அரசியலமைப்பின் மூலம் அவர் நாட்டின் தலைவராகவும், அரசாங்கத்தின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட தலைவராகவும், முப்படைகளின் பிரதான கட்டளையிடும் தளபதியாகவும், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராகவும் தன்னை நிலைப்படுத்திக்கொண்டார். 1978 ஆம் ஆண்டு பங்குனி 20 ஆம் திகதி விசேட விசாரணை ஆணைக்குழுவொன்றை நியமித்து சிறிமாவின் அரசியல் நம்பகத்தன்மையினை வெகுவாக அழித்திருந்தார். 1970 இலிருந்து 1977 வரையான காலப்பகுதியில் பிரதமராக இருந்த சிறிமா அதிகார துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டார் என்று ஜெயவர்த்தன குற்றஞ்சாட்டியிருந்தார். அவரது முதலாவது பதவிக்காலம் 1960 இலிருந்து 1965 வரை நடைபெற்றிருந்தது. அவருக்கெதிராக முன்வைக்கப்பட்டிருந்த முக்கியமான குற்றச்சாட்டு என்னவென்றால், அளவுக்கதிகமான விவசாயக் காணிகளை வைத்திருக்கும் நிலச் சுவாந்தர்களிடமிருந்து அவற்றினை கையகப்படுத்தி மக்களுக்குப் பகிர்ந்தளிக்கும் சட்டத்தினை சிறிமா கொண்டுவரவிருந்த சமயத்தில் தனக்குச் சொந்தமான தென்னங்காணிகளின் ஒருபகுதியினை அவர் தனியாருக்கு விற்றிருந்தார் என்பது. இதனால் அவரை ஒரு எமாற்றுப்பேர்வழி என்று மக்கள் அக்காலத்தில் தூற்றி வந்திருந்தனர்.
ஜே ஆர் இனால் நியமிக்கப்பட்ட மூன்று நீதிபதிகளான வீரரட்ண, சர்வானந்தா, அல்விஸ் ஆகியோர் அடங்கிய ஆணைக்குழுவினருக்கு, ஆணைக்குழு அமைக்கப்பட்ட ஆண்டிற்கு முன்னதாக நடைபெற்றதாகக் கூறப்படும் சம்பவம் ஒன்றினை விசாரிக்கும் அதிகாரம் இல்லையென்று சிறிமா தாக்கல் செய்த வழக்கினை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
ஆனால், சிறிமா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க தன்னாலான சகல முயற்சிகளையும் மேற்கொண்ட ஜெயவர்த்தன, நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அதிகாரங்களில் மாற்றங்களைக் கொண்டுவந்தார். 1978 ஆம் ஆண்டு கார்த்திகை 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் ஜே ஆர் முன்வைத்த திருத்தத்தினை அமைச்சரவை ஏற்றுக்கொண்டது. இதன்மூலம் நிறைவேற்றதிகாரம் மிக்க ஜனாதிபதியினால் அமைக்கப்படும் விசேட விசாரணைக் குழுக்களின் தீர்ப்புக்களுக்கெதிராக மேல்முறையீடு செய்யமுடியாது என்ற திருத்தம் அரசியல் யாப்பில் இணைக்கப்பட்டது.
1982 இல் ஜெயவர்த்தனவினால் அரசியல் யாப்பில் சேர்க்கப்பட்ட ஜனாதிபதி விசாரணைக்குழு பற்றிய சட்டத் திருத்தம் தன்னை அடுத்துவரவிருந்த ஜனாதிபதித் தேர்தலில் பங்கெடுக்காது தடுக்கவே என்று கடுமையாகக் குற்றஞ்சாட்டிய சிறிமா, இந்த விசாரணைகளில் பங்குகொள்வதை நிராகரித்திருந்தார். தனது காரணத்தை விவரித்து சிறிமா எழுதிய கடிதத்தினை உதாசீனம் செய்த விசாரணை ஆணைக்குழு அவரது பிரசன்னம் இன்றியே விசாரணைகளை நடத்தினர். மூன்று நீதிபதிகளடங்கிய குழு, சிறிமா தனது அதிகாரத்தினைத் துஷ்பிரயோகம் செய்திருந்தார் என்று தீர்ப்பளித்திருந்தனர். 1980 ஆம் ஆண்டு புரட்டாதி 24 ஆம் திகதி பாராளுமன்றம் இந்த ஆணைக்குழுவின் தீர்ப்பினை முழுமையாக ஏற்றுக்கொண்டது.
ஜோன் கொத்தலாவலை
முன்னாள் பிரதமர் ஜோன் கொத்தலாவலை உட்பட பல பிரமுகர்களின் எதிர்ப்பிற்கு மத்தியிலும் சிறிமாவுக்கெதிரான சிவில்த் தடைகளை பாராளுமன்றத்தின் ஆதரவுடன் ஜெயவர்த்தன நடைமுறைப்படுத்தினார். சாதாரண பொதுமகன் ஒருவருக்கிருக்கும் உரிமைகள் பறிக்கப்பட்ட சிறிமா 7 வருடங்கள் அவதிப்பட்டிருந்தார்.
சிறிமாவுக்கெதிரான உரிமை மறுப்பு நடவடிக்கைகளை அமிர்தலிங்கம் கடுமையாகக் கண்டித்திருந்தார். ஆனால், சிறிமாவின் உரிமைகளுக்கெதிரான தீர்மானம் 139 இற்கு 19 வாக்குகள் என்கிற அடிப்படையில் பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தமிழர் ஐக்கிய விடுதலைக் கூட்டணியும், சுதந்திரக் கட்சியும் எதிர்த்து வாக்களித்தன. சிறிமாவின் மீதான உரிமை மறுப்பு நடவடிக்கை இரு கட்சி ஜனநாயக அரசியலினை ஒரு பக்கமாகச் சரிக்கவே எடுக்கப்பட்ட நடவடிக்கை என்றால் அது மிகையில்லை.
சிறிமாவின் நெருங்கிய நண்பராக இருந்த இதிரா காந்தி, சிறிமா மீதான தடையினை ஜனநாயகத்திற்கெதிரான நடவடிக்கை என்று விமர்சித்திருந்தார். ஜெயவர்த்தனா அமெரிக்கா நோக்கிச் சாய்ந்துவருவதை உணர்ந்துகொண்ட இந்திரா, அதனை மாற்றுவதற்கு அடுத்த தேர்தலில் சிறிமா மீண்டும் பதவிக்கு வரவேண்டும் என்று விரும்பினார். ஆனால், அது நடைபெறாமல்ப் போய்விட்டது. சிறிமாவை அரசியலிலிருந்து முற்றாக அகற்றியதன் பின்னணியில், அமெரிக்காவின் பக்கம் நோக்கிச் சாய்ந்துவரும் இலங்கையை எப்படியாவது வழிக்குக் கொண்டு வந்திடலாம் என்று இந்திரா எதிர்பார்த்ததும் நிகழாது போய்விட்டது.
புது தில்லியிலும், கொழும்பிலும் என்னுடன் பேசிய சில இந்திய அதிகாரிகள், சிறிமாவின் அரசியல் மீள்வருகை முற்றாக அழிந்துவிட்டதன் மூலம் இந்தியாவின் நலன்களுக்கு எவ்வகையான பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதைப்பற்றி தனக்கு விரிவான அறிக்கையொன்றினைச் சமர்ப்பிக்குமாறு இந்திரா தம்மைக் கேட்டிருந்ததாகவும், அந்த அறிக்கையில் அலசப்பட்ட விடயங்களிலிருந்து இலங்கையினை மீளவும் அணிசேரா நாடுகளின் அமைப்பிற்குள் எப்படிக் கொண்டுவரலாம் என்பதுபற்றிய திட்டங்களையும் வகுத்துக்கொண்டதாகவும் கூறியிருந்தனர். இந்த தேடுதல்களின் விளைவாகவே தமிழ் ஆயுத அமைப்புக்களுக்கு உதவுவதன் மூலம், அவர்களைக் கருவியாகப் பாவித்து, ஜெயவர்த்தனவின் அரசுமீது அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம் என்று இந்திரா முடிவெடுத்ததாகவும் கூறியிருந்தனர்.
சிறிமாவை 1982 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலி பங்குபற்றுவதிலிருந்து அகற்றுவது மட்டுமே ஜனநாயத்திற்கெதிரான செயலாக ஜெயவர்த்தனவினால் செயற்படுத்தப்படவில்லை. தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியினரை தனக்கு அடிபணிய வைக்கவும் ஜெயவர்த்தன அதனைச் செய்தார். தமிழர் விடுதலைக் கூட்டணி பிரதான எதிர்க்கட்சியாகவும், அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகவும் பாராளுமன்றத்தில் அமர்ந்தபோது ஜெயவர்த்தனா அவர்களிடமிருந்து எதிர்பார்த்ததெல்லாம் தனக்கு அடிபணிந்து தான் செய்வதை ஆமோதிக்கக் கூடிய ஒரு பொம்மை எதிர்க்கட்சியைத்தான். ஆனால், தான் எதிர்பார்த்தது நடக்காது போகவே தமிழர்களுக்கு ஒரு பாடத்தைப் புகட்டவும், அமிர்தலிங்கத்தை அச்சுருத்தி தனக்கு அடிபணிய வைக்கவும் 1977 ஆம் ஆண்டு ஆவணிக் கலவரத்தை ஜெயவர்த்தனா திட்டமிட்டு நடத்தினார்.
தான் இரண்டாவது முறையும் ஜனாதிபதியாவதற்கு சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை முற்றாகப் பலவீனப்படுத்துவதும் தமிழர்களின் வாக்குகள் அனைத்தையும் தனக்கே விழும்படி பார்த்துக்கொள்வதும் அவசியம் என்பதை ஜெயவர்த்தனா உணர்ந்திருந்தார். இதனை விடவும், காலம் காலமாக சுதந்திரக் கட்சியின் ஆதரவாளர்களாக இருந்துவரும் சிங்கள கடும்போக்குத் தேசியவாதிகளின் வாக்குகளையும் கவர்வதன் மூலம் 50 வீதத்திற்கு அதிகமான வாக்குகளைப் பெற்று தனது வெற்றியை உறுதிப்படுத்த முடியும் என்றும் அவர் தெரிந்துவைத்திருந்தார். புதிய அரசியலமைப்பின்படி தேர்தலில் முதலாவது சுற்றில் 50 வீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் வேட்பாளரே ஜனாதிபதியாகமுடியும் என்று கூறப்பட்டிருந்தது குறிப்பிடத் தக்கது.