அது ஒரு நிலாக்காலம். வானத்தில் நட்சத்திரங்களை மேவி நிலா பொழிந்து கொண்டு இருந்தது. குளிர் அடர்ந்த வனமாக வானம் விரிந்து கிடந்தது. பறவைகளின் கூடுகளிற்குள் இருந்து அவற்றின் கலவி ஒலி சங்கீதமாக ஒலித்துக் கொண்டு இருந்தது. நந்தியாவட்டை மொட்டுக்கள் பூப்பதற்கான தன் இதழ்களை அவிழ்த்துக் கொண்டு இருந்தன. தெருவில் பவள மல்லிகையின் வாசம் பரவிக் கிடந்தது.
என்று இப்படி எல்லாம் வர்ணணைகளுடன் ஒரு கதை எழுதுவம் என்று யோசித்தால், இந்த சொந்தக் கதை, சோகக் கதையைத் தான் முதலில் எழுது என்று மனம் அருட்டிக் கொண்டு இருந்தது.
இது போன வருடம் சென்னை சென்று திரும்பும் போது நிகழ்ந்த சோகக் கதை. சோகக் கதை என்பதை விட நான் கிலோக்கணக்கில் அசடு வழிந்த வண்ணம் விமானத்தில் பயணம் செய்த கதை இது.
எப்பவும் விமானப் பயணம் என்றால் பக்கத்தில் ஒரு பருவ மங்கை அமர்ந்து பயணிக்கும் அதிஷ்டம் கிடைக்கலாம், அவர் என்னை பார்த்த முதல் வினாடியிலேயே சொக்கிப் போய் விட வேண்டும் என்று நல்ல ஆடையை தேர்ந்தெடுத்து அணிவது வழக்கம்.
அன்றும் அப்படி தான் சென்னைக்கு அக்கா குடும்பத்தை பார்க்க போய் 10 நாட்கள் நின்று விட்டு மீண்டும் ரொரண்டோ திரும்பு நாள்.
சென்னை - எப்ப நினைத்தாலும் என் மனசுக்குள் இனிக்கும் நகரம்!
அங்கு போனவுடன் ஒரு பழைய பாட்டா (Bata) செருப்பை மாட்டிக் கொண்டு, அரைக்காற்சட்டையுடன், ரொரண்டோவில் 10 டொலருக்கு வாங்கிய ஷேர்ட் போட்டுக் கொண்டு ஆட்டோவில் (Auto) வெளியே சுற்றுவது பிடித்த விடயங்களில் ஒன்று. பத்து நாட்கள் நின்றால் 5 நாட்களாவது அங்குள்ள சைவ கடைகளான சரவணபவனிலோ அல்லது அடையார் ஆனந்தபவனிலோ ஒரு நேரச் சாப்பாடாவது சாப்பிடுவன்.
ஊருக்கு சென்றாலோ அல்லது சென்னைக்கு சென்றாலோ "வெளிநாட்டு மிதப்பை " காட்டக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பதுண்டு. எனவே எப்பவும் சாதாரண உடுப்பும் பாட்டா செருப்பும் தான்.
ஆனால் விமானப் பயணத்தில் அப்படிச் செய்ய முடியுமோ? தச்சுத்தவறி பக்கத்து சீட்டில் ஒரு அழகி வந்து அமர்ந்து விட்டால் என்ன ஆவது? அதுவும் தனியாக பயணம் போகும் போது... சொல்லி வேலை இல்லை...!
எனவே அங்கு கொண்டு போய், ஒரு நாளும் போடாத நல்ல முழுக்கை ரீஷேர்ட் ஒன்றை எடுத்து அணிந்து கொண்டு, ஒன்றுக்கு பல தடவை கண்ணாடியில் என்னை நானே அழகு பார்த்து "நீ மன்மதன் தாண்டா.. " என்று திருப்தி பட்டுக் கொண்டு, அக்காவிடம் "நான் நல்ல வடிவா இருக்கின்றேனா" என கனக்க தரம் கேட்டு வெறுப்பேற்றி விட்டு, விமான நிலையம் வந்தேன்.
என்னைப் பொறுத்தவரைக்கும் சென்னை விமான நிலையம் ஒரு கரைச்சல் இல்லாத விமான நிலையம். நல்ல வசதியான விமான நிலையம் (இன்னும் 100 வரிகளிற்குள் இதை நான் மாற்றிச் சொல்ல போகின்றேன் என்று எனக்கே தெரியாது அப்ப). 10 வயது சின்னப் பிள்ளை கூட குழப்பம் இல்லாமல் பயணிக்கலாம் .
வாசலில், கடவுச் சீட்டையும் விமான சீட்டையும் பரிசோதிக்கும் வேறு மானிலத்தை சேர்ந்த பொலிஸ்காரர் மேல் மட்டும் தான் குறை சொல்ல முடியும். ஒவ்வொரு முறையும், வேண்டும் என்றே தாமதித்து விட்டு, முறைத்து பார்த்து விட்டு தான் உள்ளே செல்ல அனுமதிப்பார்.
தமிழனை தமிழன் ஆள வேண்டும் என்று தொண்டைத் தண்ணீர் வற்ற பேசும் தம்பி சீமான் , தமிழர் விமான நிலைய வாசலில் தமிழர் தான் நின்று பரிசோதிக்க வேண்டும் என்ற உப கோரிக்கையையும் வைத்து பேசினால் புண்ணியம் கிடைக்கும் என எண்ணிக் கொண்டு உள்ளே சென்றேன்.
விமான நிலையம் சென்று 30 நிமிடங்களில் பரிசோதிப்புகள் எல்லாம் முடிந்து, போர்டிங் பாஸ் (Boarding pass) எல்லாம் எடுத்து விமானத்துக்காக காத்திருக்கும் அறைக்குள் சென்று விட்டேன். பாஸ்போர்ட்டை செக் பண்ணிய, நல்ல கறுத்த தமிழர் ஒருவர் "...அங்கம் முழுதும் பொங்கும் இளமை இதம் பதமாய் தோன்ற.. அள்ளி எடுத்த கைகள்" என்று "இளமை எனும் பூங்காற்று" பாடல் வரிகளை முணு முணுத்துக் கொண்டே செக் பண்ணினார். ஆள் வேலைக்கு வர முன்னர் வீட்டில் என்ன செய்து விட்டு வந்திருப்பார் என்று ஊகித்துக் கொண்டேன்.
உள்ளே இருக்கும் ஒரு பெரிய கண்ணாடியில் மீண்டும் என்னை பார்த்து... "அழகண்டா நீ" என்று மனசுக்குள் நினைத்து விட்டு மேலும் உள்ளே சென்றேன்.
அக்கா வீட்டில் இரவுச் சாப்பாட்டை 8 மணிக்கே முடித்து இருந்தேன். சாமம் 3 மணிக்கு கிளம்பும் விமானத்தை பிடிக்க நடு இரவு 11:30 இற்கே விமான நிலையம் வந்து விட்டேன். எப்பவும் 4 மணித்தியாலங்கள் முன்னதாக விமான நிலையம் வந்து விடுவேன். ( ஒரு முறை தாமதமாக போய் அருந்தப்பில் விமானத்தை தவற விட பார்த்த பின் ஏற்பட்ட ஞானத்தால் வந்த பழக்கம் இது)
8 மணிக்கே சாப்பிட்டதால் லைட்டாக பசி எடுக்க ஆரம்பித்தது.
சரி என்ன விற்கின்றார்கள் என்று பார்த்து வருவதற்காக எழும்பி மெதுவாக விமான நிலையத்துக்குள் நடக்க ஆரம்பித்தேன்.
ஒரு இடத்தில் அழகான சின்ன சின்ன சிலைகளுடன் பெரிய நடராஜர் சிலையையும் வைத்து இருந்தார்கள். நவராத்திரி காலம் அப்பதான் முடிவடைந்தமையால் கொலுவும் வைத்து இருந்தார்கள்.
ஒன்றிரண்டு படங்களை கிளிக்கி விட்டு என்ன சாப்பாட்டுக் கடை இருக்கு என்று பார்க்கத் தொடங்கினேன்.
ஒரு இடத்தில் இட்டலியும் சட்னியும் வைத்து இருந்தார்கள். ஆஹா, இட்டலி என்று நினைத்து வாங்க போகும் போது "உதை சாப்பிட்டால் உழுந்து சில நேரம் 'பின்' விளைவுகளை வேகமாக்கும்" என்று மனம் எச்சரித்தது. சரி இட்டலி வேண்டாம் என்று அங்கிருந்து நகர்ந்து இன்னொரு பக்கம் போனால், நல்ல சுடச் சுட பால் கோப்பியும், சமோசாவும் விற்றுக் கொண்டு இருந்தார்கள். ஐரோப்பியர் ஒருவர் அவற்றை வாங்கி நல்ல ஸ்ரைலாக சமோசாவை சாப்பிட்டுக் கொண்டு இருந்ததை பார்க்க எனக்கு வாயூறியது.
சமோசாவை சாப்பிட்டு விட்டு கோப்பியை குடித்தால் இந்த சாமத்தில் நல்ல தெம்பாக இருக்கும் என்று அவற்றை வாங்கினேன்.
இப்படி உணவை வாங்கியவர்கள் நின்றபடியே சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்கள்.
"என்ன இப்படி நின்றபடி சாப்பிடுகின்றார்கள்... நாகரீகம் தெரியாதவர்கள்... ஐ யாம் ப்றோம் கனடா.. இப்படி நின்று சாப்பிட்டால் சரியாக இருக்காது" என்று நினைத்துக் கொண்டு, வசதியாக எங்காவது அமறலாமா என தேடத் தொடங்கினேன்.
ஒரு கையில் சில்லு இருக்கும் சூட்கேஸ் (Hand luggage). மற்ற கையில் கோப்பியும் சமோசாவும் உள்ள ஒரு சிறு Tray. கோப்பி வாசனை நாக்கில் உள்ள சுவையரும்புகளை மீட்டிக் கொண்டு இருந்தது.
கதிரைகள் வரிசையாக இருக்கும் ஒரு இடத்தில் நாலு ஐந்து கதிரைகள் காலியாக இருந்தன. ஒருத்தரும் அந்த வரிசையில் இல்லை.
அப்பாடி, ஒருத்தரும் அருகில் இல்லை...ஆற அமர இருந்து சமோசாவை சாப்பிட்டு கோப்பியை குடிப்பம் என்று போய் ஐந்து கதிரைகள் கொண்ட வரிசையில் நடு நாயகமாக போய் இருக்கும் கதிரையில் போய் அமர்ந்தேன்.
ஒரு கிளிக் சத்தம்.. .சின்ன கிளிக் சத்தம்... அவ்வளவு தான்.
அந்த 5 கதிரைகளும் அப்படியே சற்று பின்னால் சரிந்தன.
அமரப் போகும் போது, கதிரைகள் பின்னால் சரிந்ததால், நிலை தடுமாறினேன்.
முதலில், முதலாவது சமோசா Tray யில் இருந்து வழுக்கி, என் மூக்கில் மோதி கீழே வீழ்ந்தது.
இரண்டாவது சமோசா நெஞ்சில் வீழ்ந்து, நிலத்தில் கலந்து, இரண்டாக பிழந்து தரையில் வீழ்ந்தது.
இவை எல்லாம் இப்படி சரிய முன்னரே..
கோப்பையில் இருந்த நல்ல சூடான பால் கோப்பி, முழுதுமாக என் மேல் கவிண்டு, என் அழகான, வடிவான, மெல்லிய உடலாக என்னைக் காட்டிய என் அருமை ரீஷேர்ட் மேல் முழுதுமாக கொட்டி, தெப்பலாக என்னை நனைத்து உருண்டோடி சற்று தள்ளி கிடந்து என்னைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தது.
என்ன நடந்தது என்று நான் உணரும் போது பால் கோப்பி என்னை முழுதுமாக நனைத்து விட்டது. பாலாபிஷேகம் போல், பால் கோப்பி அபிசேகம்!
எவராவது இந்த கோலத்தை பார்க்கின்றார்களா என சுற்றும் முற்றும் பார்த்தேன். ஒருவரும் கவனித்து இருக்கவில்லை. "ஆஹா.. இந்த கதிரைகளின் நிலை தெரிந்து தானா இந்த சனம் இந்த கதிரை வரிசைக்கு கிட்ட கூட வரவில்லை" என்பதை அப்போது தான் புரிந்து கொண்டேன்.
"சரி இப்படி கோப்பி நாற்றத்துடன் (வாசம் நாற்றமாகியது இந்த வரியில் இருந்து தான்) போக முடியாது, கோப்பியில் ஊறிய நனைந்த உடுப்பை உடனடியாக மாற்ற வேண்டும் என ஹாண்ட் லக்கேஜ் (Hand luggage) இனை திறந்து பார்த்தேன்.
வழக்கமாக இப்படி அவசரத்துக்கு தேவைப்படும் என்று இரண்டு செட் உடுப்பும் சறமும் ஹாண்ட் லக்கேஜ் ஜில் வைப்பது வழக்கம். கிட்டத்தட்ட 60 தடவைகளாவது விமானப் பயணம் செய்து உள்ளேன். ஒவ்வொரு முறையும் கண்டிப்பாக எடுத்து வைப்பேன்.
ஹாண்ட் லக்கேஜ் ஜினை திறந்து பார்க்கின்றேன்... அதில் மனுசிக்கு வாங்கிய சாறியும், துவாயும், போன் சார்ஜரும், தான் இருக்கு. என் உடுப்பு ஒன்றையும் காணவில்லை..
மாற்றிக் கொள்ள ஒரு உடுப்பும் இல்லை...
இனி நான் என்ன செய்வேன்...
(மிகுதி தொடரும். அதில் நான் புது உடுப்பு வாங்க இந்த வசதி ஒன்றும் இல்லாத விமான நிலையம் எங்கும் கோப்பியில் ஊறிய, பால் கோப்பி நாற்றத்துடன் கடை கடையாக ஏறி இறங்கிய கதையையும் எனக்கு வாய்த்த ரீஷேர்ட் பற்றியும் எழுதுகின்றேன்.)