1981 இனக்கலவரம்
சிங்களக் காடையர்கூட்டங்களால் தமிழர்களுக்குச் சொந்தமான கடைகள் வீடுகள் ஆகியவை கொள்ளையிடப்பட்டதுடன் தீவைத்து எரிக்கப்பட்டன . நகர்ப்பகுதிகளான இரத்திணபுரி, பலாங்கொடை, கஹவத்தை, கொழும்புக் கரையோரப்பகுதிகள், மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களின் எல்லையோரத் தமிழ்க் கிராமங்கள் ஆகியவை இந்த அரச ஆதரவுபெற்ற காடையர்களால் தாக்குதலுக்குள்ளாயின. கொள்ளைகளும், தீமூட்டல்களும், படுகொலைகளும் நாட்டின் உட்புறம் நோக்கியும் விரிவைடைய ஆரம்பித்தன. மலையகத் தோட்டப்பகுதிகளில் வீதிகளில் கத்திகள், வாட்கள், தடிகள், சைக்கிள்ச் சங்கிலிகளுடன் சுதந்திரமாக வலம் வந்த சிங்களக் காடையர் குழு தமிழர்களின் வீடுகளை கொள்ளையிட்டதுடன் தீமூட்டி அழித்தது. கையில் அகப்பட்ட தமிழர்களை வெட்டியும், அடித்தும் கொன்றது. காடையர்களுடன் வலம் வந்த பொலீஸாரும் இராணுவத்தினரும், காடையர்களின் செயலை ஊக்குவித்ததுடன், பலவிடங்களில் அவர்களுடன் சேர்ந்தே தாக்குதல்களில் இறங்கியிருந்தனர். கிழக்கு மாகாணத்தின் எல்லையோரக் கிராமங்கள் பல முற்றாகவே சிங்களக் காடையர்களால் எரியூட்டப்பட்டன. பல தமிழர்கள் கிராமங்களிலிருந்து தப்பியோடி அருகிலிருந்த காட்டுப் பகுதிகளில் தஞ்சம் அடைந்தனர். இத்தாக்குதல்களில் குறைந்தது 25,000 மலையகத் தமிழர்கள் தமது வீடுகளை இழந்து நிர்க்கதியாகிய அதேவேளை கிழக்கு மாகாணத்தில் 10,000 தமிழர்கள் வீடுகளை இழந்திருந்தனர்.
மலையகத் தமிழர் மீது அரச ஆதரவுடன் சிங்களக் காடையர்கள் நடத்திய தாக்குதலால் மிகவும் கோபமடைந்திருந்து காணப்பட்ட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் தொண்டைமானும், செயலாளர் செல்லச்சாமியும் ஆவணி 17 ஆம் திகதி கொழும்பு வோர்ட் பிளேசில் அமைந்திருந்த ஜெயாரின் வதிவிடத்திற்குச் சென்று, "ஒன்றில் எனது மக்கள் மீது சிங்களக் காடையர்கள் நடத்திவரும் தாக்குதலை உடனே நிறுத்துங்கள், அல்லது நான் அவர்களைத் தடுத்து நிறுத்தவேண்டி வரும்" என்று கூறவும், தனது பாதுகாப்புப் பிரிவினரான உதவி பாதுகாப்பமைச்சர் வீரப்பிட்டிய, பாதுகாப்புச் செயலாளர் தர்மபால, ஒருங்கிணைப்புச் செயலாளர் சேபால ஆட்டிகல , பொலீஸ் மா அதிபர் அனா சென்விரட்ண ஆகியோருடன் உயர் பாதுகாப்பு மாநாட்டில் ஈடுபட்டிருந்த ஜெயவர்த்தன, தொண்டைமானைச் சாந்தப்படுத்தும் நோக்கில், "அதைத்தான் நாங்கள் அனைவரும் இங்கே பேசிக்கொண்டிருக்கிறோம்" என்று பதிலளித்தார்.
தனது மக்கள் மீது சிங்கள மக்கள் தாக்குதல் நடத்துவதை உடனடியாகத் தடுக்கவேண்டும் என்று ஜெயவர்த்தன உட்பட பல உயர் அதிகாரிகளுடன் தொண்டைமான் அழைப்புக்களை ஏற்படுத்தியிருந்தார். அவர்களுடனான அவரது உரையாடல்கள் மென்மையாக இருக்கவில்லை, அவரது குரலில் கோபமும் அழுத்தமும் தெரிந்தது.
"உங்கள் அனைவருக்கும் நான் பலமுறை தொலைபேசி அழைப்புக்களை ஏற்படுத்தியிருக்கிறேன். இதுவரை நீங்கள எந்த நடவடிக்கையினையும் எடுக்கவில்லை. ஆனால், நிலைமை மோசமாகிக்கொண்டே போகிறது. காடையர்கள் எமது தெருக்களில் வலம்வந்து எமது மக்களைத் தாக்குகிறார்கள். எனது மக்களை தனியாகப் பிரித்தெடுத்து கொலை செய்கிறார்கள். இந்தக் காடையர்களுக்கும், சமூக விரோதிகளுக்கும் உங்கள் அரசாங்கத்தில் இருக்கும் பலம்வாய்ந்த அமைச்சர்கள் ஆதரவு வழங்கிவருகிறார்கள் என்பது எமக்கு நன்றாகவே தெரியும். உங்களால் இந்தத் தாக்குதல்களைக் கட்டுப்படுத்த முடியவில்லை என்றால், கூறுங்கள். எனது மக்கள் தமது சொந்தப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகத் தேவையானதைச் செய்வார்கள்" என்று மிகவும் காட்டமாகப் பேசியிருந்தார். இதனையடுத்து தானே செயலில் இறங்கிய ஜெயவர்த்தன, உடனடியாக இராணுவத்தினரையும், பொலீஸாரையும் மலையகத்திற்கு அனுப்பி நிலைமையினைக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்தார்.
மலையகத் தமிழர்கள் மீது சிங்களக் காடையர்கள் நடத்திய மிலேச்சத்தனமான தாக்குதல்கள் தமிழகத்திலும், இந்தியாவிலும் எதிரொலித்தது. 1981 ஆம் ஆன்டு ஆவணி 19 ஆம் திகதி தமிழ்நாட்டு சட்டசபை உறுப்பினர்கள் மத்திய அரசாங்கத்தின் கவனத்திற்கு இத்தாக்குதல்களைக் கொண்டுசெல்லும் நோக்கில் "கவனயீர்ப்பு நடவடிக்கை" எனும் தீர்மானத்தை கொண்டுவந்தார்கள். இதுகுறித்து லோக்சபாவில் பேசிய இந்திய வெளிவிவகார அமைச்சர் நரசிம்ம ராவோ, இந்த வன்முறைகள் யாழ்ப்பாணத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட்டதாகவும், மாவட்ட அபிவிருத்திச் சபைகள் தேர்தல் வன்முறைகள், ஆனைக்கோட்டைத் தாக்குதல் ஆகியவற்றிற்குப் பிறகு கொழும்பிற்கும் மலையகப் பகுதிகளுக்கும் பரவியதாக இந்தியப் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
"இந்தத் தாக்குதல்களில் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் தமிழர்கள். குறிப்பாக மலையகத் தோட்டங்களில் வேலைபார்ப்பவர்கள். பல தமிழர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன் அவர்களின் சொத்துக்களும் சூறையாடப்பட்டு எரிக்கப்பட்டிருக்கின்றன. பல்லாயிரக்கணக்கான மலையகத் தோட்டத் தொழிலாளர்கள் தமது வீடுகளை இழந்து நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர்" என்று அவர் கூறினார்.
நரசிம்ம ராவோ
"இலங்கையரசாங்கம் அவசரகால நிலைமையினைப் பிரகடணம் செய்திருக்கிறது. மேலும், நிலைமையினைக் கட்டுக்குள் கொண்டுவர தன்னாலான அனைத்து முயற்சிகளையும் அது செய்துவருகிறது. நாட்டின் இன்னமும் சுமூகமான நிலை திரும்பாதலால், மக்கள் மத்தியில் பாரிய குழப்பம் நிலவுகிறது. அதனால், இந்திய பிரஜைகளுக்கு உண்மையாகவே நடந்த அநர்த்தங்கள் பற்றி தெளிவான தகவல்கள் எமக்கு இதுவரையில் கிடைக்கவில்லை" என்றும் அவர் கூறினார்.
"அங்கு நடப்பது நிச்சயமாக இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினை. ஆனாலும், இந்தப் பாராளுமன்றத்தின் உறுப்பினர்கள் அங்கே நடந்துவரும் அவலங்கள் குறித்த இந்தியாவின் கவலையினை இலங்கை அரசிற்குத் தெரிவிக்க விரும்புகிறார்கள். ஏனென்றால், அங்கே பாதிக்கப்பட்டிருப்பவர்களில் பெரும்பாலானவர்கள் இந்திய பூர்விக்கத்தைக் கொண்டவர்கள், சிலர் இந்தியக் குடிமக்கள். ஆகவே, இந்த வன்முறைகளை முடிவிற்குக் கொண்டுவரும் இலங்கையரசின் நடவடிக்கைகள் வெற்றிபெறும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இதன்மூலம் தற்போது நடைபெற்றுவரும் சிக்கல்கள் முடிவிற்குக் கொண்டுவரப்படுவதுடன் சரித்திர காலம் தொட்டு, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே இருந்துவரும் நட்புறவு மீது எழும் எந்தச் சந்தேகமும் முற்றாகக் களையப்பட்டு விடும் என்றும் நாம் முழுமையாக நம்புகிறோம்" என்றும் அவர் கூறினார்.
கதிர்காமம் - முழுச் சிங்கள பெளத்த மயமாக்கலின் பின்னால்
இந்தியப் பிரஜைகள் மீதான முதலாவது தாக்குதல் சம்பவம் புரட்டாதி மாதம் முதலாம் வாரத்தில் இடம்பெற்றது. தென்னிந்திய யாத்திரீகர்களை ஏற்றிக்கொண்டு கொழும்பிலிருந்து கதிர்காமத்திற்குச் சென்றுகொண்டிருந்த பஸ்வண்டி திஸ்ஸமஹராம எனும் பகுதியில் இயந்திரக் கோளாறு காரணமாக நின்றுவிட்டது. தனபதி எனும் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த உள்ளூர்த் தலைவர் ஒருவரும் அப்பேரூந்தில் பயணம் செய்திருந்தார். பேரூந்து இயந்திரக் கோளாறு காரணமாக நின்றுவிட்டதையடுத்து, அருகிலிருக்கும் வாகனத் திருத்துமிடமொன்றிற்குச் சென்று உதவ முடியுமா என்று கேட்டிருக்கிறார். தம்மிடம் உதவிகேட்டு வந்திருப்பது தமிழர் என்பதை அறிந்துகொண்ட அங்குநின்ற சிங்களவர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கியதோடு வாட்களால் வெட்டிக் கொன்றிருக்கிறார்கள். இதனையடுத்து தமிழ்நாடு அரசு இச்சம்பவத்தைக் கடுமையாகக் கண்டித்திருந்ததுடன், சென்னையில் ஒருநாள் ஹர்த்தாலுக்கும் அழைப்பு விடுத்தது. தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ராஜ்ய சபாவில் (மேற்சபை) இந்தத் தாக்குதல் குறித்து புரட்டாதி 11 ஆம் திகதி விவாதித்திருந்தனர்.
மேற்சபையில் பேசிய நரசிம்ம ராராவோ, இலங்கையின் ஜனாதிபதியும், வெளிவிவகார அமைச்சரும் நடந்த வன்செயலுக்காக வருத்தம் தெரிவித்திருப்பதாகவும், கொல்லப்பட்ட இந்தியரின் உடலை தமிழ்நாட்டிற்கு எடுத்துவர நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் தெரிவித்தார். "இலங்கையில் தற்போது நடந்துவரும் வன்செயல்கள் முழுக்க முழுக்க இலங்கையின் உள்விவகாரமாக இருந்தபோதும், நாம் இலங்கை அரசுடன் தொடர்ச்சியான தொடர்பாடல்களில் ஈடுபட்டிருக்கிறோம். அங்கு தற்போது இடம்பெற்றுவரும் வன்செயல்கள் குறித்த இந்தியாவின் கவலையினை அவர்களுக்கு தெரியப்படுத்தியிருக்கிறோம். தற்போதைய நிலைமைகள் குறித்து எமக்கு தகவல்களை வழங்கிவரும் இலங்கையரசு, தான் எடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றியும் எமக்கு விளக்கமளித்திருக்கிறது. இவ்விடயங்கள் குறித்து தாம் அதியுச்ச கவனம் எடுத்திருப்பதாகவும், இவற்றினை உடனடியாக முடிவிற்குக் கொண்டுவரும் அனைத்து நடவடிக்கைகளையும் தாம் எடுத்துவருவதாகவும் இலங்கையரசு எமக்கு உத்தரவாதம் அளித்திருக்கிறது" என்றும் அவர் கூறினார்.
தொண்டைமானின் வற்புருத்தலின் காரணமாக மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்ட இரத்திணபுரி, பலாங்கொடை ஆகிய இடங்களைப் பார்வையிடச் சென்றிருந்தார் ஜெயவர்தன. பாதிக்கப்பட்ட தமிழர்களிடம் பேசும்போது, தான் சிங்கள பெளத்த தீவிரவாதிகளின் நாசச் செயலினால் வெட்கப்படுவதாகக் கூறினார். "அவர்கள் மிருகங்கள். அவர்கள் மிருகங்களைக் காட்டிலும் கீழ்த்தரமாகச் செயற்பட்டிருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான அப்பாவி மக்களின் அவலங்களுக்குக் காரணமாக இருந்திருக்கிறார்கள்" என்று அவர் கூறினார்.
ஆனால், ஜெயவர்த்தனவின் இந்த முதலைக் கண்ணீரை தமிழர்கள் நம்பத் தயாராக இருக்கவில்லை. இதுகூட அவரது சூழ்ச்சியின் ஒரு பகுதிதானோ என்று அவர்கள் எண்ணினார்கள். "தனது சிங்கள மக்கள் எம்மீது இந்த அக்கிரமங்களை நடத்தும்வரையில் அவர் பார்த்துக்கொண்டுதானே இருந்தார்?" என்று அவர்கள் தமக்குள் பேசிக்கொண்டார்கள். 1981 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் நியூஸ் இன்டர்னஷனல் எனும் செய்திச்சேவை, ஜெயாரின் வேஷம் தொடர்பாகத் தமிழர் கொண்டிருந்த சந்தேகங்கள் குறித்து கேள்வியெழுப்பியிருந்தது.
"அவர்கள் உங்களை ஒரு ஏமாற்றூப்பேர்வழியென்றும், சூழ்ச்சிக்காரர் என்றும் அழைக்கிறார்களே?" என்று அச்செய்தியாளர் கேட்டதற்கு,
"அவர்கள் என்னை ஏமாற்றுப்பேர்வழி என்றும் சூழ்ச்சி செய்பவர் என்றும் அழைப்பது எனக்குத் தெரியும். ஆனால், நீங்கள் ஏமாற்றத் தெரியாதவராகவோ சூழ்ச்சி செய்யத் தெரியாதவராகவோ இருந்தால் , ஒரு நாட்டின் தலைவராக இருப்பதில் அர்த்தமில்லை. அரசியல் என்றாலும், போரென்றாலும் தனிமனித வாழ்வென்றாலும், சூழ்ச்சிகளின்றி வெற்றிபெற முடியாது. ஒரு குத்துச்சண்டை வீரர் கூட சூழ்ச்சி செய்யவேண்டும், எதிரியை ஏமாற்ற வேண்டும். நான் இளவயதினனாக இருக்கும்போது குத்துச்சண்டையில் ஈடுபட்டிருக்கிறேன். நீங்கள் எதிரியின் முகத்தில் அடிப்பதுபோல் பாசாங்குசெய்துவிட்டு, வயிற்றில் குத்த வேண்டும். ஆமாம், நீங்கள் கட்டாயம் சூழ்ச்சி செய்யவே வேண்டும்" என்று சாதாரணமாகப் பதிலளித்தார்.
ஆவணியில் இடம்பெற்ற வன்முறைகள் இந்திய மேற்சபையில் மார்கழி 18 ஆம் திகதி மீண்டும் எதிரொலித்தன. நரசிம்ம ராவோ பேசும்போது, ஆவணி வன்முறைகளில் பல்லாயிரக்கணக்கான இந்திய வம்சாவளித் தமிழர்கள் பாதிக்கப்பட்டதாகக் கூறினார். பொலீஸாரின் கூற்றுப்படி 7 தமிழர்கள் கொல்லப்பட்டதோடு, 196 எரிப்புச் சம்பவங்களும், 35 கொள்ளைச் சம்பவங்களும், 15 வழிப்பறிச் சம்பவங்களும், 7 காயப்படுத்தல்களும் இடம்பெற்றதாகக் கூறப்பட்டதாக அவர் கூறினார். "இந்திய அரசு, இலங்கையரசுடன் நெருக்கமான தொடர்பாடல்களைப் பேணி வருவதுடன், எமது கவலையினை அவர்களுக்குத் தெளிவாக எடுத்துக் கூறியிருக்கிறோம். சட்டம் ஒழுங்கினை நிலைநாட்ட இலங்கையரசு எடுத்திருக்கும் நடவடிக்கைகள் போதிய பலனைத் தந்திருப்பதாக இந்தியா ஏற்றுக்கொள்கிறது" என்றும் அவர் தெரிவித்தார்.
இலங்கையரசால் உத்தியோகபூர்வமாக் வெளியிடப்பட்ட தகவல்களை மேற்கோள்காட்டி நரசிம்ம ராவோ பேசிவருவதாக லண்டன் ஒப்சேர்வர் பத்திரிக்கையில் ப்றையன் ஏட்ஸ் எனும் பத்திரிக்கையாளர் 1981 ஆம் ஆண்டு புரட்டாதி 20 ஆம் திகதி இப்படி எழுதுகிறார்,
"இலங்கையில் தேற்கிலும், கிழக்கிலும், மத்திய மலைநாட்டிலும் வாழும் தமிழர்களுக்கெதிராகவே ஆடி, ஆவணி ஆகிய மாதங்களில் சிங்களவர்களால் திட்டமிட்ட முறையில் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன என்பது தெளிவாகிறது. இத்தாக்குதல்கள் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் தலைமையில் மிகவும் திட்டமிடப்பட்ட வகையில் நேர்த்தியாக நடத்தி முடிக்கப்பட்ட தாக்குதல்கள் என்பதும் தெளிவாகிறது. இந்த அமைச்சர்கள் இலங்கை ஜனாதிபதியின் நெருங்கிய தோழர்கள். குறைந்தது 25 தமிழர்கள் கொல்லப்பட்டும், பல தமிழ்ப்பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கப்பட்டிருப்பதுடன், அவர்களின் வாழ்நாள் சொத்துக்களும் சூறையாடப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன. இந்த முழு முட்டாள்த்தனமான அக்கிரமங்களை நிகழ்த்தியவர்கள், சிங்கள மக்களின் அன்றாட வாழ்க்கைச் சுமைகளிலிருந்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்பவும், தமிழர்களின் இலட்சியமான ஈழம் எனும் தனிநாட்டிற்கெதிரான தடுப்பு நடவடிக்கையாகக் காட்டவுமே இந்தப் பாதகங்களைச் செய்திருக்கிறார்கள். இலங்கை எனும் தீவு முகம்கொடுத்துவரும் பல பிரச்சினைகளில் இதுவும் ஒன்றாகச் சேர்ந்திருக்கிறது" என்று கூறுகிறார்.