பிரபாகரனை விடுவிக்க சர்வகட்சி கூட்டத்தினை கூட்டிய நெடுமாறனும், சிறையில் பிரபாகரனுடன் திருகோணமலை குறித்துப் பேசிய ரோவும்
பழ நெடுமாறன்
பிரபாகரனின் துணிகரமான செயற்பாடுகள் மற்றும் போராட்ட இலட்சியம் மீதான அவரது அர்ப்பணிப்பு ஆகியவை பற்றி அறிந்திருந்த நெடுமாறன் அந்த செயல்த்திறன் மிக்க போராளியை எப்படியாவது சந்தித்துவிடவேண்டும் என்று விரும்பியிருந்தார். பிரபாகரனைச் சந்திக்க ஆவண செய்யுமாறு அவர் பேபி சுப்பிரமணியத்தை முன்னர் பல தடவைகள் கேட்டிருந்தார். ஆனால், பேபியோ "பிரபாகரன் யாழ்ப்பாணத்திற்குச் சென்றுவிட்டார்" என்று அடிக்கடி கூறிவந்தார். ஆனால், இன்றோ நிலைமை வேறு. ஆகவே, பிரபாகரனைச் சந்திக்க நெடுமாறனை பாசையூர் உயர்பாதுகாப்புச் சிறைக்கு அழைத்துச் சென்றார் பேபி. அங்கு பிரபாகரனைக் கண்டதும் நெடுமாறன் வியந்துபோனார். இதற்கு முன்னரும் பிரபாகரனை தனது பாராளுமன்ற உறுப்பினர் விடுதியில் அவர் பார்த்திருக்கிறார், ஆனால், அவர்தான் பிரபாகரன் என்று நெடுமாறனுக்குத் தெரியாது.
முகத்தில் வியப்பினை வெளிப்படுத்திய நெடுமாறனைப் பார்த்து, "மன்னிக்க வேண்டும், நான் யாரென்பதை நான் ஒருபோது உங்களிடம் முன்னர் சொன்னதில்லை" என்று பிரபாகரன் நெடுமாறனை நோக்கிக் கூறினார். 1981 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்திற்கு பயணம் செய்தபோது நெடுமாறன் பிரபாகரனை ஒரு முறை சந்தித்திருந்தார். ஆகவே, அன்று சிறைச்சாலையில் பிரபாகரனை சற்று நேரம் உற்றுப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு பேசத் தொடங்கிய நெடுமாறன், "நான் கடந்த வருடம் யாழ்ப்பாணம் வந்திருந்தபோது, என்னைப்பார்க்க வந்திருந்த சில இளைஞர்களோடு நீங்களும் வந்தீர்களா?" என்று கேட்டார்.
பிரபாகரன், "ஆம்" என்று பதிலளித்தார்.
"ஏன் எனக்கு உங்களின் பெயரைச் சொல்லவில்லை" என்று நெடுமாறன் கேட்டார்.
அதற்குப் பதிலளித்த பிரபாகரன், தன்னை இராணுவத்தினரும், பொலீஸாரும் அப்போது தேடி வந்ததாகவும், நெடுமாறனைச் சந்திக்கச் சென்றிருந்த இளைஞர்கள் குழுவில் பொலீஸ் உளவாளிகளும் இருந்ததாகவும், ஆகவே தான் தன்னை அங்கு அடையாளப்படுத்தியிருந்தால், அவ்விடத்திலேயே தான் கைதுசெய்யப்பட்டிருக்கும் அபாயம் இருந்ததனால் தன்னை யாரென்று அடையாளம் காட்ட விரும்பவில்லை என்றும் கூறினார்.
நெடுமாறன் கோபப்படவில்லை. தனது பாதுகாப்புக் குறித்து பிரபாகரன் எவ்வளவு அவதானமாக இருந்தார் என்பதை அவர் புரிந்துகொண்டார். பிரபாகரன் பற்றிய அவரது மதிப்பு இன்னும் அதிகரித்துச் சென்றது. பிரபாகரன் கைதுசெய்யப்பட்டது தொடர்பான தனது வருத்தத்தை அவரிடம் தெரிவித்த நெடுமாறன், அவரைக் கவலைப்பட வேண்டாம், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறினார். அவரை பிணையில் விடுவிப்பதற்கான தன்னாலான அனைத்து முயற்சிகளையும் தான் எடுக்கப்போவதாக அவர் உறுதியளித்தார். மேலும், வெளிநாடொன்றில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் ஈடுபடுவது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தி விடும் என்றும் அவர் பிரபாகரனுக்கு அறிவுரை கூறினார்.
"ஏன் உங்களுக்குள் சண்டைபிடிக்கிறீர்கள்?" என்று நெடுமாறன் கேட்டார். "உங்களால் ஏன் ஒன்றாகச் செயற்பட முடியவில்லை? உங்களின் சண்டைகளால் உங்களின் போராட்டத்திற்கான உதவியினை ஒருங்கிணைக்க நாம் இங்கு சிரமப்படுகிறோம்" என்று கூறிய நெடுமாறன், உமாவுடனான கருத்துவேறுபாட்டைச் சரிசெய்து விட்டு அவருடன் சேர்ந்து இயங்கவேண்டும் என்று பிரபாகரனைக் கேட்டார்.
தான் உறுதியளித்ததன்படி நடந்துகொண்டார் நெடுமாறன். ஆனி 1 ஆம் திகதி காமராஜர் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டமொன்றைக் கூட்டினார். பிரபாகரனை விடுவிக்கத் தேவையான அனைத்தையும் தான் செய்துவிட்டபடியினால், தான் அக்கூட்டத்தில் கலந்துகொள்ளப்போவதில்லை என்று கருநாநிதி நெடுமாறனிடம் அறிவித்தார். எம்.ஜி.அர் தன் சார்பாக பிரதிநிதியொருவரை கூட்டத்திற்கு அனுப்பி வைத்தார். தமிழ்நாட்டின் முக்கிய அரசியல்க் கட்சிகளும் அனைத்தும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டன. பேபி சுப்பிரமணியம் பார்வையாளராகக் அக்கூட்டத்தில் கலந்துகொண்டார். கூட்டத்தில் மூன்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முதலாவது தீர்மானம் போராளித் தலைவர்களை நாடுகடத்தும் விடயத்திற்கு தமிழ்நாடு அரசாங்கம் ஒத்துக்கொள்ளக் கூடாது எனும் கோரிக்கை.
இரண்டாவது, இலங்கையால் விடுக்கப்பட்ட போராளித் தலைவர்களை நாடுகடத்தும் கோரிக்கையினை மத்திய அரசாங்கம் நிராகரிக்க வேண்டும் என்பது.
மூன்றாவது, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு ஆதரவான பிரச்சாரத்தினை தமிழ்நாட்டில் முன்னெடுப்பது.
இந்திரா காந்தி அப்போது இது தொடர்பாக திட்டமொன்றினை ஏற்கனவே வகுத்திருந்தார். இலங்கைப் பிரச்சினை தொடர்பாக இந்தியா எந்த வகையில் தலையிடலாம் என்கிற பரிந்துரைகள் அடங்கிய ஆவணம் ஒன்றினைத் தயாரிக்குமாறு தான் 1980 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தவுடனேயே தனது ஆலோசகர்களை அவர் கேட்டிருந்தார். 1977 ஆம் ஆண்டு இந்திரா தோற்கடிக்கப்பட்டு, மூன்று வருடங்களின் பின்னர் 1980 தை மாதம் ஆட்சிக்கு மீண்டும் வந்தவுடன் அவர் செய்த விடயங்களில் இந்த பரிந்துரை அறிக்கையும் ஒன்று. அவருக்கு வழங்கப்பட்ட பரிந்துரைகளில் மிகவும் முக்கியமானது ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி, அவரது அரசாங்கத்தை நிலைகுலைய வைப்பதற்கு தமிழ்ப் போராளிக்குழுக்களை ஒரு கருவியாகப் பாவிக்க வேண்டும் என்பது.
தோழிகள் - சிறிமாவும் இந்திராவும்
பனிப்போர் நிலவிவந்த அக்காலத்தில் இந்திரா காந்தி சோவியத் அணி நாடுகளின் பக்கம் நோக்கியே செயற்பட்டு வந்தார். ஜெயாரின் அமெரிக்கச் சார்பு நிலைப்பாடும், இஸ்ரேல் - பாக்கிஸ்த்தான் - சீனா ஆகிய நாடுகள் நோக்கிய ஜெயாரின் பயணமும் இந்திராவை எரிச்சலடைய வைத்திருந்தது. 1983 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் சிறிமா பண்டாரநாயக்க வெற்றிபெற்றால், இலங்கை அமெரிக்காவின் ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு வெளியே வரும் என்று இந்திரா எதிர்பார்த்திருந்தார். ஆனால், தேர்தல்களில் சிறிமா பங்கெடுக்க முடியாதபடி அவரது சிவில் உரிமைகளை ஜெயவர்த்தனா பறித்துப் போட்டபோது இந்திராவின் எதிர்ப்பார்ப்பும் முற்றாகக் கலைந்துபோனது. ஆகவே, இந்திராவின் முன்னால் இருந்த ஒரே தெரிவு, வளர்ந்துவரும் தமிழ் ஆயுதக் குழுக்களைப் பயன்படுத்து ஜெயவர்த்தனவின் அரசாங்கத்தை நிலைகுலையச் செய்வதுதான்.
ஈரோஸ் அமைப்பின் அருளர் எனப்படும் அருளப்பு ரிச்சர்ட் அருட்பிரகாசம்
அக்காலத்தில் சென்னையில் தங்கியிருந்த ஈரோஸ் அமைப்பின் முக்கியஸ்த்தர் அருளர், இந்தியாவுக்கான சோவியத் ஒன்றியத்தின் தூதுவருடன் தான் நடத்திய இரகசியச் சந்திப்புக் குறித்து என்னிடம் கூறியிருந்தார். சோவியத் தூதுவரிடம் பேசிய அருளர், போராளித் தலைவர்களை நாடுகடத்த வேண்டாம் என்று இந்திராவிடம் கூறுங்கள் என்று தான் கூறியதாகக் கூறினார். அதற்கு சோவியத் தூதர் பின்வருமாறு பதிலளித்தார், "கவலைப்பட வேண்டாம். இந்தியாவுடன் இணைந்திருங்கள். இந்திரா காந்தி உங்களை பார்த்துக்கொள்ளுவார்" என்பதுதான்.
அவர் கூறியது போலவே இந்திரா காந்தி பிரபாகரனையும் உமா மகேஸ்வரனையும் பார்த்துக்கொண்டார். ஆனி மாதம் நடுப்பகுதியில், இந்தியாவின் புலநாய்வுத்துறையான ரோவை சேர்ந்த இரு அதிகாரிகள் பிரபாகரனும் உமா மகேஸ்வரனும் தடுத்து வைக்கப்பட்டிருந்த உயர் பாதுகாப்புச் சிறைக்கு அவர்களைச் சந்திக்க வந்திருந்தனர். தம்மை இந்திய அரசாங்கத்தின் அதிகாரிகள் என்று அறிமுகப்படுத்திய அவர்கள், பிரபாகரன் குறித்தும், அவரது இயக்கத்தின் செயற்பாடுகள் குறித்தும் கேட்டு அறிந்துகொண்டனர்.
இலங்கைத் தமிழர்கள் எதிர்நோக்கிவந்த அவலங்கள் குறித்து கரிசணையுடன் பேசிய அந்த அதிகாரிகள், தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு உதவும் நிலையில் இந்தியா இருப்பதாகக் கூறினர். பின்னர், பிரபாகரன் இந்தியாவுக்கு உதவக் கூடிய நிலைப்பாட்டில் இருக்கிறாரா என்று அவரைப் பார்த்துக் கேட்டனர். அவர்கள் அவரிடம் கேட்ட கேள்விகளுக்குள் திருகோணமலைத் துறைமுகமும் அடிக்கடி இடம்பெறலாயிற்று. அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும்போதே இந்தியாவின் உள்நோக்கம் என்னவாக இருக்கும் என்பதை பிரபாகரன் ஓரளவிற்கு ஊகித்துக் கொண்டார்.
அவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட நாளான ஆவணி 6 ஆம் திகதிக்கு சிலநாட்கள் முன்னரும் அவரை சந்திப்பதற்கு இரண்டாவது தடவையாகவும் ரோ அதிகாரிகள் வந்திருந்தனர். ஆனால், இந்தியாவிலும், இலங்கையிலும் இடம்பெற்றுவரும் அரசியல் மாற்றங்களை உன்னிப்பாகக் கவனித்து வந்த பிரபாகரன், இந்த அரசியல் மாற்றங்களும், நகர்வுகளும் தமிழரின் விடுதலைப் போராட்டத்தில் எவ்வகையான முட்டுக்கட்டைகளை போடப்போகின்றன என்பதையும், அவற்றினைத் தாண்டி போராட்டம் எப்படி வழிநடத்தப்படவேண்டும் என்பதையும் புரிந்து வைத்திருந்தார்.