காந்தியத்தை திட்டமிட்டுச் சிதைத்த சிங்களப் பேரினவாதம்
சிங்களப் பேரினவாதத்தின் தூண்களில் ஒன்றான அன்றைய பாதுகாப்பமைச்சர் லலித் அதுலத் முதலி, ஜெயாருடன்
வவுனியா நகருக்கான உதவிப் பொலீஸ் அத்தியட்சகராக ஹேரத் எனும் சிங்கள இனவாதி நியமிக்கப்பட்டதன் பின்னர் காந்தியத்திற்கெதிரான பிரச்சாரங்கள் வேகம்பெறத் தொடங்கின. பொலீஸ் மா அதிபரூடாக பாதுகாப்பு அமைச்சிற்கு ஹேரத் அனுப்பிய பல அறிக்கைகளில் "சட்டத்திற்குப் புறம்பான இந்தியக் குடியேற்றவாசிகளை" உடனடியாக அகற்றவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இந்த அறிக்கைகள் ஜனாதிபதி ஜெயார் தலைமையில் இடம்பெற்ற பாதுகாப்பு கவுன்சில் கூட்டங்களில் தொடர்ச்சியாக கவனத்தில் எடுக்கப்பட்டு வந்தன. ஆகவே, அன்று பொருளியல், வர்த்தக மற்றும் கப்பற்றுரை அமைச்சராகவிருந்த இன்னொரு பெயர்பெற்ற இனவாதியான லலித் அதுலத் முதலியிடம் காந்தியம் குறித்து விசாரித்து தன்னிடம் அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜெயார் பணித்தார். இதற்கமைய 1982 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தின் ஆரம்பத்தில் காந்தியம் பற்றி விசாரிக்கவென்று இப்பகுதிக்குச் சென்றிருந்தார் லலித் அதுலத் முதலி.
காந்தியம் தொடர்பான தனது விசாரணைப் பயணம் பற்றி வெளித்தெரியாதிருக்க, அப்பயணத்தை அமைச்சர் ஒருவரின் சாதாரண பயணமாகக் காட்டிக்கொண்ட லலித் அதுலத் முதலி, மாங்குளம் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை சந்தையொன்றைத் திறக்கவே தான் வந்ததாகக் காட்டிக்கொண்டார். அமைச்சரின் இந்தப் பயணத்தைப்பற்றிய செய்திகளைச் சேகரிக்க அழைத்துச் செல்லப்பட்ட பத்திரிக்கையாளர் குழுவில் நானும் இருந்தேன். மாங்குளம் விருந்தினர் மாளிகையில் நாம் தங்கவைக்கப்பட்டதோடு சனிக்கிழமை இரவு ஒன்றுகூடல் ஒன்றும் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது. அந்த ஒன்றுகூடலில் வவுனியா நகரின் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ஹேரத்தும் பங்குகொண்டிருந்தார். பத்திரிக்கையாளர்களிடையே பேசிய ஹேரத், வவுனியாவில் இடம்பெற்றுவரும் விவசாயக் குடியேற்றங்களினால் ஏற்பட்டுவரும் பிரச்சினைகள் குறித்து கருத்து வெளியிட்டார். இலங்கையில் வாழத் தகுதியில்லாத இந்திய வம்சாவளித் தமிழர்களை தமிழர் புனர்வாழ்வுக் கழகமும், காந்தியமும் சட்டத்திற்கு முரணான வகையில் வவுனியா மாவட்டத்தில் அரசுக்குச் சொந்தமான காணிகளில் குடியேற்றிவருவது பாரிய குற்றமாகும் என்று அழுத்தமாகக் கூறினார்.
பத்திரிக்கையாளர் சந்திப்பு முடிந்தவுடன், தனிமையில் என்னுடன் உரையாடவேண்டும் என்று அழைத்த ஹேரத், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவனான என்னிடம், இக்குடியேற்றங்கள் தொடர்பாக, யாழ்ப்பாணத்தவன் என்கிற ரீதியில் எனது உணர்வுகளை அறிந்துகொள்ள எத்தனித்தார்,
"இக்காணிகள் யாழ்ப்பாணத்து விவசாயிகளுக்குத்தான் கிடைக்கப்பட வேண்டும். ஆனால், அவர்களோ இந்தியர்களைக் குடியமர்த்துகிறார்கள்" என்று என்னைப் பார்த்துக் கூறினார். மறுநாள் அப்பகுதியில் வியாபாரம் செய்துவந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர்களிடம் நான் பேசியபோது, வவுனியாவில் இந்திய வம்சாவளித் தமிழர்கள் குடியேற்றப்படுவதற்கு எதிராக யாழ்ப்பாணத்தவர்கள் கிளர்ந்தெழவேண்டும் என்று தம்மை ஹேரத் நச்சரித்துவந்ததாகக் கூறினார்கள்.
மாங்குளத்தில் லலித்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட சந்தையினைத் தொடர்ந்து நாம் வவுனியாவில் காந்தியத்தினால் அமைக்கப்பட்டிருந்த விவசாயக் குடியேற்றக் கிராமங்களைப் பார்க்க அழைத்துச் செல்லப்பட்டோம். அங்கே விளைச்சல் மிகுந்த காணிகளில் செழிப்பாக விவசாயம் செய்துவரும் இந்திய வம்சாவளித் தமிழர்களை நாம் கண்டோம். லலித் அதுலத் முதலியோ ராணுவத்துடனும், பொலீஸாருடனும் ரகசியச் சந்திப்புக்களை அவ்வேளை நடத்திக்கொண்டிருந்தார். இந்த கூட்டங்களிலேயே இந்திய வம்சாவளித் தமிழர்களை இந்த விவசாயக் குடியேற்றங்களிலிருந்து வெளியேற்றுவதற்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்டதாக பின்னர் அறிந்துகொண்டோம். ஆனால், தமது இந்த நாசகாரத் திட்டத்தினை உடனடியாகச் செய்ய அரசு எத்தனிக்கவில்லை. ஆகவே, தமது சதிச் செயலுக்கான உகந்த சூழ்நிலையினை தமது செய்தி ஊடகங்களைக் கொண்டு சிறுகச் சிறுக அரசு உருவாக்கத் தொடங்கியது. இவற்றுள் ஒன்றுதான் இக்குடியேற்றங்களூடாக காந்தியம் அமைப்பு மலையகத் தமிழர்களை புளொட் அமைப்பிற்காக சேர்த்துவருவதான பிரச்சாரம்.
சித்திரை 6 ஆம் திகதி வவுனியா நகரில் இயங்கிவந்த காந்தியம் அலுவலகம் பொலீஸாரினால் முற்றுகையிடப்பட்டதோடு, வைத்தியர் ராஜசுந்தரமும் கைதுசெய்து இழுத்துச் செல்லப்பட்டார். அவரது அமைப்பினால் வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய நகரங்களில் நடத்தப்பட்டு வந்த அலுவலகங்களும் பொலீஸரினால் மூடப்பட்டன. கொழும்பு வை எம் சி ஏ கட்டிடத்தில் தங்கியிருந்த திரு டேவிட் அவர்களும் கைதுசெய்யப்பட்டார். குருநகர் ராணுவ முகாமில் கடுமையாக விசாரிக்கப்பட்ட பின்னர் வைத்தியர் ராஜசுந்தரமும், டேவிட் அவர்களும் பணாகொடை ராணுவ முகாமிற்கு மாற்றப்பட்டனர். அங்கு கடுமையான சித்திரவதைகளூடாக அவர்களிடமிருந்து பலவந்தமாக வாக்குமூலங்களை பொலீஸார் பெற்றுக்கொண்டனர்.
இவர்கள் இருவருக்காகவும் வாதாடிய வழக்கறிஞர் குமாரலிங்கம், ஜனாதிபதி ஜெயாருக்கு அனுப்பிய விண்ணப்பத்தில் டேவிட் அவர்கள் கடுமையான மலச்சிக்கலினால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், அவரது உடலிலிருந்து பெருமளவு இரத்தம் வெளியேறிவருவதாகவும் குறிப்பிட்டிருந்தார். மேலும், நீதிமன்ற ஆணை ஒன்றினூடாக டேவிட் அவர்களை தான் சந்திப்பதற்கான அனுமதியினையும் பெற்றுக்கொண்டார். இதன்படி, நீதிமன்றம் கொழும்பு நீதிமன்ற வைத்தியர் சல்காடோ ஆவர்களை டேவிட் அவர்களையும் ராஜசுந்தரத்தையும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பணித்தது. வைத்தியர் சல்காடோ வழங்கிய அறிக்கையில் ராஜசுந்தரம் மீது கடுமையான சித்திரவதைகளும், தாக்குதல்களும் நடத்தப்பட்டதற்கான ஆதாரங்கள் அவரது உடலில் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தார்.
ஆனால், அமைச்சர் சிறில் மத்தியூ ஊடாக தடுத்துவைக்கப்பட்டிருந்த ராஜசுந்தரம் மற்றும் டேவிட் ஆகியோர் மீது கடுமையான பிரச்சாரத்தை பொலீஸார் முடுக்கிவிட்டிருந்தனர். திரு டேவிட் அவர்களுக்கு அபகீர்த்தியை உருவாக்கும் விதத்தில் நடந்துகொண்ட சிறில் மத்தியூ, டேவிட் தங்கியிருந்த கொழும்பு யை எம் சி ஏ அறையிலிருந்து பாலியல் உணர்வினைத் தூண்டும் சஞ்சிகைகள் பலவற்றை பொலீஸார் கண்டெடுத்ததாகக் கூறி சில சஞ்சிகைகளை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தார். ஆனால், பொலீஸாரினால் சாட்சியங்களாக கைப்பற்றப்பட்ட அச்சஞ்சிகைகள் தன்னிடம் எவ்வாறு கிடைக்கப்பட்டன என்பதை அவர் கூற மறுத்துவிட்டார். மேலும், ஊடகங்களை தனது பிரச்சாரக் கருவிகளாகப் பாவித்த பொலீஸார், புலிகள் இயகத்திற்கும், புளொட் அமைப்பிற்கும் இடையிலான பிணக்கினைத் தீர்த்துவைக்க ராஜசுந்தரம் முயன்றுவந்ததாகவும், பிரெஞ்சு அதிகாரிகளை தமிழ் இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சிகளை வழங்கும்படி கோரியிருந்ததாகவும் பொய்ச் செய்திகளைக் கசியவிட்டிருந்தனர்.
ஆனால், பொலீஸாரினால் முன்வைக்கப்பட்ட சாட்சியங்கள் குற்றஞ்சாட்டப்பட்டவர்களைத் தண்டிக்க போதுமானவை அல்ல என்று சட்ட மா அதிபர் அலுவலகம் அறிவித்தது. இவ்வகையான சட்டச் சிக்கல்கள் தொடர்ந்துகொண்டிருக்க இலங்கை தனது சரித்திரத்தை நிரந்தரமாகவே மாற்றப்போகின்ற 1983 ஆண்டு தமிழினம் மீதான அரச ஆதரவுடன் நிகழ்த்தப்பட்ட இரத்தக்களரி நோக்கிச் சாய்ந்துகொண்டிருந்தது.