ஆயுதங்களைக் கொள்வனவு செய்ய ஜெயார் மேற்கொண்ட பயணங்கள்
அலன் தம்பதிகளின் கடத்தல் நாடகத்தின் சூடு ஆறுமுன்னமே ஜெயார் தனது இராணுவத்திற்கான ஆயுதங்களைக் கொள்வனவு செய்வதற்காக சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் பயணங்களை மேற்கொண்டார். பீஜிங்கிலும், வோஷிங்டனிலும் வெளிப்படையாகவும் தனிப்பட்ட ரீதியிலும் ஆயுதங்களைத் தந்து உதவ வேண்டும் என்கிற கோரிக்கையினை அந்தந்த நாட்டு அதிகாரிகளிடம் முன்வைத்தார் ஜெயார். தமிழ் பிரிவினைவாதிகளுக்கு ஆயுதங்களையும், பயிற்சியையும் வழங்குவதன் மூலம் இலங்கையினைத் துண்டாட இந்தியா முயல்வதாகவும், இலங்கை மீது முற்றான ஆக்கிரமிப்பொன்றினை மேற்கொள்வதே இந்தியாவின் திட்டமென்றும் முறையிட்ட ஜெயார், இந்தியாவின் ஆக்கிரமிப்பைத் தடுத்து இலங்கையின் இறையாண்மையினைக் காத்திட தனது இராணுவத்திற்கு ஆயுத உதவிகளை கட்டாயம் சீனாவும் அமெரிக்காவும் வழங்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
வைகாசி 20 ஆம் திகதி சீன ஜனாதிபதி லி சியான் நானுடன் பேசிய ஜெயார் இலங்கை மக்கள் முற்காலத்தில் இந்தியாவிலிருந்து வந்த ஆக்கிரமிப்புக்களை எதிர்கொண்டு வெற்றிபெற்றதாகவும், இனிமேலும் எந்த ஆக்கிரமிப்பையும் எதிர்த்துப் போராடப்போவதாகவும் கூறினார். "15 மில்லியன் மக்களை இந்திய ஆக்கிரமிப்பு கொன்றுவிடும்" என்று ஜெயார் பேசினார். "சில மூளை பிசகியவர்கள் ஆக்கிரமிப்புக் குறித்துப் பேசலாம், ஆனால் இலங்கை தனக்கு வரும் சவால்களை எதிர்கொள்ளும் சக்தியைக் கொண்டுள்ளது என்பதை சீனா நம்புகிறது" என்று சீன ஜனாதிபதி பதிலளித்தார். சீன அதிபரின் கூற்றிற்கு நன்றி தெரிவித்த ஜெயார், "இலங்கை போன்ற நாடுகளுக்கு சீனாவின் கொள்கை உற்சாகத்தைத் தருகிறது" என்று கூறினார்.
இலங்கைக்கு ஆயுதங்களை வழங்க சம்மதம் தெரிவித்தமைக்காக சீன ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்த ஜெயார் பின்னர் சீனப் பிரதமருடன் பேசும்போது தமக்குத் தேவையான ஆயுதங்கள் குறித்த விபரங்களை வெளியிட்டார். உள்நாட்டுப் பிரச்சியினைச் சமாளிக்க தமக்கு உதவி தேவைப்படுவதாகக் கூறிய ஜெயார், சீனாவினால் ஏற்கனவே வழங்கப்பட்டிருந்த 6 கரையோர ரோந்துப் படகுகளுக்காக தனது நன்றியைத் தெரிவித்தார். மேலும், வடக்குக் கடற்பகுதியில் நடைபெற்றுவரும் சட்டவிரோத குடியேற்றக்காரர்களின் போக்குவரத்தையும், பயங்கரவாதிகளின் கடல் நடமாட்டத்தையும் கட்டுப்படுத்துவதற்கு தமக்கு மேலும் பல கரையோர ரோந்துப் படகுகள் தேவைப்படுவதாக அவர் கோரினார். ஜெயார் கேட்டுக்கொண்ட அனைத்துக் கோரிக்கைகளையும் தாம் வழங்கிவைப்பதாக சீனப் பிரதமர் சாஓ உறுதியளித்தார்.
அதன் பின்னர் சீன கம்மியூனிஸ்ட் கட்சியின் இராணுவ ஆணைக்குழுவின் தலைவரான டெங் சியாவோபிங் ஐச் சந்தித்தார் ஜெயார். அவரிடம் மேலும் ரோந்துப் படகுகளைத் தருமாறு கேட்டுக்கொண்டார். "பயங்கரவாதிகளிடமிருந்து எங்களைப் பாதுகாத்துக்கொள்ள பீரங்கிப் படகுகளைத் தாருங்கள். எமது வடக்குக் கரையிலிருந்து 20 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் இந்தியாவிலிருந்து எமது நாட்டுக்குள் அத்துமீறிப் பிரவேசிக்கும் இந்தியர்களையும், பயங்கரவாதிகளையும் தடுப்பதற்கு முன்னர் நீங்கள் எமக்குத் தந்து உதவிய பீரங்கிப் படகுகள் போன்று இன்னும் பல எமக்குத் தேவைப்படுகிறது" என்று அவர் கூறினார்.
புரட்டாதி 1983 இல் ஜெயார் சீனாவுக்கு விஜயம் ஒன்றினை மேற்கொண்ட காலத்திலிருந்து இலங்கைக்கான ஆயுத உதவிகளை சீனா தொடர்ச்சியாக வழங்கியே வந்திருந்தது. ஆகவே, இம்முறை செல்லும்போது தனது இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களின் பட்டியல் ஒன்றினைத் தன்னுடன் எடுத்துச் சென்றிருந்த ஜெயார் அதனை டெங்கிடம் கையளித்து , ஆயுதங்களுக்கான பணத்தினை இலகுக் கடன் அடிப்படியில் செலுத்தும் வசதிகளைச் செய்து தருமாறும் வேண்டிக்கொண்டார். ஜெயாரின் இந்த ஆயுதக் கொள்வனவுப் பயணத்தின் பின்னர் 1984 ஆடியில் சீன விமானப்படை உயர் அதிகாரிகளின் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்தது. அதன் பின்னர் 1985 ஆம் ஆண்டு ஆடியில் லலித் அதுலத் முதலியும் உத்தியோகபூர்வ பயணம் ஒன்றினை மேற்கொண்டு சீனா பயணமாகியிருந்தார்.
இதே காலப்பகுதியில் தென்கொரியா, ஜப்பான் ஆகிய நாடுகளுக்கும் ஜெயார் பயணங்களை மேற்கொண்டிருந்தார். இதன்மூலம் பொருளாதார ரீதியில் பெருமளவு உதவிகளை அவரால் பெற்றுக்கொள்ள முடிந்திருந்தது.
ஆனியில் அமெரிக்காவுக்கு ஜெயார் மேற்கொண்ட பயணத்தின் மூலம் பெருமளவு ஆயுதங்களையும், இராணுவத் தளபாடங்களையும் இலங்கைக்குக் கொண்டுவர முடிந்தது. ஆனி 18 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி ரீகனை வெள்ளை மாளிகையில் ஜெயார் சந்தித்தார். தமிழ்ப் போராளிகளை அடக்குவதற்கு அமெரிக்கா இராணுவ ரீதியில் தமக்கு உதவ வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். ஜெயாரின் கோரிக்கையினைச் செவிமடுத்த ரீகன், ஜெயாரை அமெரிக்க உப ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ், அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோர்ஜ் ஷுட்ஸ், நிதிச் செயலாளர் மற்றும் அமெரிக்க உதவித்திட்டப் பணிப்பாளர் பீட்டர் மக்பேர்சன் ஆகியோருடன் பேசுமாறு கோரினார்.
ரீகன் குறிப்பிட்ட அதிகாரிகளுடன் பேசிய ஜெயார், புத்தளத்தில் அமைக்கப்பட்டுவந்த அமெரிக்க வானொலிச் சேவையின் அஞ்சல் நிலையக் கட்டுமாணப் பணிகள் குறித்தும், திருகோணமலைத் துறைமுகத்தினை அமெரிக்க கடற்படையின் பாவனைக்கு வழங்குவது குறித்தும் பேசினார். இப்பேச்சுக்களின்போது தாக்குதல் உலங்குவானூர்திகள் உள்ளிட்ட பெருமளவு அமெரிக்க ஆயுதங்களை இஸ்ரேல், தென்னாபிரிக்கா, பாக்கிஸ்த்தான் ஊடாக இலங்கைக்கு வழங்கும் ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகின.
சீனாவுக்கும், அமெரிக்காவுக்குமான தனது விஜயங்களை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில் இந்தியாவின் தலைநகர் தில்லியில் இந்திய அதிகாரிகளையும் ஜெயார் சந்திக்கத் தவறவில்லை. அங்கு இந்திய அதிகாரிகளிடம் பேசிய ஜெயார், தனது இராணுவத்திற்கான ஆயுத தளபாடங்களையும் பயிற்சிகளையும் இந்தியா விரிவாக்கவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதே காலத்தில் லலித் அதுலத் முதலியும் உள்நாட்டில் முப்படைகளுக்குமான ஆட்சேர்ப்பினை பரந்தளவில் முடுக்கிவிட்டிருந்தார்.
தனது இராணுவ இயந்திரத்தை பெருப்பித்துப் பலப்படுத்த ஜெயாருக்கு அவகாசம் தேவைப்பட்டது. அதனை இந்திரா காந்தியின் சிறப்புத் தூதுவரான கோபாலசாமி பார்த்தசாரதியுடனான பேச்சுவார்த்தைகள் ஊடாகவும், உள்நாட்டில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தினைத் தொடர்ச்சியாக நடத்துவதனூடாகவும் பெற்றுக்கொள்ள அவர் முனைந்தார்.