Leaderboard
-
கிருபன்
கருத்துக்கள உறவுகள்7Points39346Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்6Points20357Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்6Points19670Posts -
Nathamuni
கருத்துக்கள உறவுகள்5Points13720Posts
Popular Content
Showing content with the highest reputation on 12/18/23 in all areas
-
துவாரகா உரையாற்றியதாக...
2 pointsஆதாரங்கள் இருந்தால் செருகிவிடுங்கள்! ஆங்கில ஆசிரியர் நன்றாக தமிழ் கதைக்கின்றார்!2 points
-
துவாரகா உரையாற்றியதாக...
1 pointஎங்களை குறி வைத்து பணம் செலவு செய்வது பிரயோசனமில்லை. இவர்களுக்கு செலவு செய்து பிரயோசனமும் அடைகிறார்கள்.1 point
-
துவாரகா உரையாற்றியதாக...
1 pointஇந்த பேட்டியில் அதை (pray for Sri Lanka) தான் போட்டதாக ஒத்து கொள்கிறார். ஆனால் தானாக அதை உருவாக்கவில்லை, பேஸ்புக் போட்டதை போட்டேன் என்கிறார். இராவணனோ இன்னொரு படி மேலே போய் இலங்கை கொடியை போடவில்லை என கவர் எடுக்கிறார். கார்த்தி இலங்கை கொடியை போட்டு, pray for Sri Lanka என போட்டது உறுதியாகியுள்ளது. முடிவு இதை வைத்து மட்டும் அவரை முத்திரை குத்த முடியாது. ஆனால் நம்பவும் முடியாது. சாதராண மக்கள் நாமே இலங்கை மீது அனுதாபம் வரினும் கொடியை அதன் வரலாற்றை உணர்ந்து தவிர்க்கும் போது- இப்படி ஒரு குடும்பத்தில் இருந்து வந்தவர் - பேஸ்புக் போட்டது நானும் போட்டேன், இத்தாலிக்கும் போட்டேன் என சொல்வது - யோசிக்க வேண்டிய விடயம்.1 point
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
பகிர்வுக்கு நன்றி கிருபன் .....ஒரே மூச்சில் படித்து முடித்தேன்.......! ஆனால் எல்லா கதைகளுக்குள்ளும் ஏதாவது ஒரு தெய்வம் கூடவே வருகின்றது.......!1 point
-
போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
தகவலுக்கு நன்றி கிருபன். பின்னால் வாசிக்கும் போது நானும் அப்படித் தான் நினைத்தேன். சரி யாராவது தெளிவுபடுத்துவார்களே என்றிருந்தேன்.1 point
-
சிரிக்கவும் சிந்திக்கவும் .
1 point
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
1 point
- இரசித்த.... புகைப்படங்கள்.
1 pointஉலகின் சிறப்பான பாலங்களில் ஒன்று பிரான்சில் இருக்கின்றது.........நானும் சிலமுறை இந்தப் பாலத்தின் வழியாக சென்றிருக்கின்றேன்.......! 👍1 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
நீங்கள் புளட் டம்பிங் சங்கிலி கந்தசாமியுடன் இந்தக் கதையில் வரும் சங்கிலி என்பவர் என்று நினைத்து குழம்பியுள்ளீர்கள்! டம்பிங் சங்கிலி கந்தசாமி மிகவும் கொடூரமான புளட்டின் உட்கொலைகள், புலிகள் இயக்கத்தினரை படுகொலைகள் செய்தது என்று தெரிந்திருக்கும். டம்பிங் சங்கிலி இந்திய இராணுவம் நின்ற காலத்தில் புலிகளால் நடாத்பட்ட செட்டிக்குளம் புளட் முகாம் தாக்குதலில் கொல்லப்பட்டார் என்றுதான் ஞாபகம் இருக்கின்றது.1 point- இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
ஆண் : { கூண்டுக்குள்ள என்ன வெச்சு கூடி நின்ன ஊர விட்டு கூண்டுக்குள்ள போனதென்ன கோலக்கிளியே } (2) ஆண் : { அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே } (2) பெண் : கண்ணு வளத்து கண்ணு தானா துடிச்சுதுனா ஏதோ நடக்குமின்னு பேச்சு ஆண் : மானம் குறையுமின்னு மாசு படியுமின்னு வீணா கதை முடிஞ்சு போச்சு பெண் : ஈசான மூலையில லேசான பள்ளி சத்தம் மாமன் பேரை சொல்லி பேசுது ஆண் : ஆறாத சோகம் தன்னை தீராம சேத்து வச்சு ஊரும் சேந்து என்னை ஏசுது பெண் : மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ஆண் : தென்னன்கிளையும் தென்றல் காத்தும் குயிலும் அடி மானே உன்னை தினம் பாடும் பெண் : காஞ்சி மடிப்பும் கரை வேட்டி துணியும் இந்த மாமன் கதையை தினம் பேசும் ஆண் : பொள்ளாச்சி சந்தையில கொண்டாந்த சேலையில சாயம் இன்னும் விட்டு போகல பெண் : பன்னாரி கோயிலுக்கு முந்தானை ஓரத்தில நேர்ந்து முடிச்ச கடன் தீரல ஆண் : மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே பெண் : என் மாமா மாமா உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே ஆண் : அடி மானே மானே உன்னத்தானே எண்ணி நானும் நாளும் தவிச்சேனே1 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 07 ஆயிரத்து தொள்ளாயிரத்து தொண்ணூற்றி இரண்டாம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை மாலையில் சங்கிலி பெரியப்பாவை புலிகள் இயக்கம் சுட்டுக்கொன்றது. மூன்று பிள்ளைகளையும் அழைத்துச் சென்று வீதியில் கிடந்த கணவனின் உடலத்தின் முன்பாக விழுந்தரற்றினாள் கிடுகு பெரியம்மா. ஊர்ச்சனங்கள் கூடி அவளையும் பிள்ளைகளையும் ஆற்றுப்படுத்தி, சங்கிலியின் இறுதிச் சடங்கை செய்து முடித்தனர். சங்கிலி பெரியப்பா ஆயுதமேந்திய வேறொரு அமைப்பைச் சேர்ந்தவர். அவர்களுக்கும் புலிகளுக்கும் இடையே மோதல்கள் நடந்தன. அந்த நடவடிக்கைகளில் சங்கிலிக்கு பெரிய பங்கிருந்தது. பிறகான நாட்களில் தான் சார்ந்திருந்த ஆயுத அமைப்போடு முரண்பட்டு புலிகளிடம் சரணடைந்து விசாரணைகளைச் சந்தித்தார். உயிருக்கு அச்சமற்று உலகியலோடு மட்டும் அமைந்திருந்தார். கிணறு வெட்டுவது, வேலி அடைப்பது, வீடு வேய்வதென கூலியானார். ஆனாலும் மீண்டும் மீண்டும் விசாரணைகளுக்கு அழைக்கப்பட்டார். “பெடியள் உங்களில எதோ ஐமிச்சப்படுறாங்கள். அதுதான் இப்பிடி அடிக்கடி விசாரிக்கிறாங்கள். எனக்கு பயமாயிருக்கு” என்றிருக்கிறாள் பெரியம்மா. பதிலுக்கு “நான் பயப்பிடேல்ல, அதிகபட்சம் சுடுவாங்கள். அதுதானே நடக்கும்” என்றிருக்கிறார். பெரியம்மா மூன்று பிள்ளைகளுக்கு நடுவில் அவரை உறங்குமாறு கூறினாள். அவளுக்கு ஆறுதல் தருகிற ஒன்றைச் செய்வதில் பெரியப்பா பின் நின்றதில்லை. அப்படித்தான் உறங்கவும் செய்தார். குளித்து முடித்து குளத்திலிருந்து வீடு நோக்கி நடந்து சென்றவரை போராளிகள் அழைத்துச் சென்றனர். பெரிய புளியமரத்தின் கீழே நிற்கவைத்து அவருடைய தலைக்கு மேல் துரோகியென எழுதப்பட்ட சிறிய இரண்டடியிலான கரும்பலகையை அறைந்தார்கள். துரோகம் ஒழியட்டும் எனத்தொடங்கும் மரண தண்டனை அறிக்கையை வாசித்து முடித்த குரல் ஓய்வதற்குள் தோட்டாக்கள் பாய்ந்தன. வெளியேறிக் கொதித்த குருதியை வெடியோசைகள் அறைந்தன. சங்கிலி பெரியப்பாவின் உடலுக்கு கொள்ளிவைக்கும் போது சந்தனனுக்கு ஏழு வயது. மிச்ச இருவரும் அவனிலும் இளையவர்கள். தியாகம் துரோகம் எதுவுமறியாத மழலைகள். எச்சில் சிந்தும் அமுத உயிரிகள். சந்தனன் தோளில் கொள்ளிக்குடத்தை வைத்து சங்கிலி பெரியப்பாவின் உடலத்தை மூன்றுமுறை சுந்திவந்தான். ஒவ்வொரு சுற்று முடிந்ததும் தன்னிடமிருந்த கத்தி முனையால் கொள்ளிக்குடத்தைக் கொத்தினார் மார்க்கண்டு மாமா. சந்தனன் கொள்ளி வைத்து திரும்பிப் பார்க்காமல் அழைத்துச் செல்லப்பட்டான். ஆனாலும் அவன் எரியும் சிதையை ஒருகணம் திரும்பி நின்று பார்த்தான். தீயென எரியும் குருதி. நிணமுருக்கும் சுவாலை. மஞ்சள் சிவப்பென எழுந்தாடும் ஒரு போழ்தெனப் பிணையும் வெளிச்சம். அப்பாவென்று அழைத்தான். மார்க்கண்டு மாமா அவனை அணைத்தபடி கண்ணீர் உகுத்தார். காடாற்றும் சடங்குக்காக போயிருக்கையில் சாம்பலை அள்ளி சிறு மண்முட்டியில் போட்டனர். சந்தனன் கையில் வைத்திருந்து அந்த முட்டியைப் பார்த்தான். குருதி தளும்பிக் கிடந்தது. ரத்தமென பயந்தடித்து முட்டியைத் கை தவறிக் கீழே போட்டான். சாம்பல் மண்ணில் கலந்தது. மண்ணெனக் கிடந்த சாம்பலை அள்ளி வேறொரு முட்டியில் அடைத்து கடலில் கரைத்தனர். ஒரு பேரலையின் சீற்றம் சாம்பலை உள்வாங்கிக் கொண்டது. சந்தனன் ஆர்ப்பரிக்கும் கடலைப் பார்த்தான். குருதியலைகள். ஓலங்கள் நிரம்பிய உடலங்கள் அதில் சுருள்கின்றன. திடுமென கடலின் இரைச்சல் கூடி “துரோகி சங்கிலி” என்று ஒலித்தது. கரையொதுங்கிக் கிடந்த மண்டையோடொன்றையெடுத்து வெறிகொண்டு வீசினான். “அப்பாவை ஏனம்மா சுட்டவே” சந்தனன் கேட்டான். காற்று மோதும் குப்பி விளக்கு அணையாது தப்ப “ துரோகம் செய்திட்டாராம். துரோகியாம்” பெரியம்மா சொன்னாள். “துரோகமென்றால் என்னம்மா” இதனைக் கேட்ட சந்தனனை அணைத்துச் சொன்னாள் “ நாங்கள் மனுஷராய் பிறந்தது. அதுவும் இந்த மண்ணில பிறந்தது. இதுதான் துரோகம்” என்றாள். நிலவேறி அலை மடித்து வெறித்திருந்த கடலில் சாம்பல் முட்டி மிதந்தது. இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு நவம்பர் மாதம் இருபத்தேழாம் திகதி. இருபத்தோராவது வயதில் சந்தனன் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்தான். அவன் எழுதிய கடிதம் செத்தையில் செருகியிருந்தது. பெரியம்மா அதனை வாசித்ததும் அச்சத்தில் துண்டு துண்டாய் கிழித்து அடுப்பை மூட்டி ஒவ்வொன்றாக சாம்பலாக்கினாள். பிள்ளைக்கு எதுவும் நேரக்கூடாதென தெய்வத்திடம் இறைஞ்சி அழுதாள். ஏனைய இரண்டு பிள்ளைகளையும் வெளியே செல்ல வேண்டாமென கட்டளையிட்டாள். தன் பிள்ளையிடம் துளிர்த்த வன்மத்தை எண்ணி கசந்து அழுதாள். ஏற்கமுடியாதவொரு சூளுரையை சந்தானம் அளித்திருக்கிறான். அவனுள் தலைவிரித்து நிற்கும் அனலரவத்தின் விஷம் முறிக்க ஏது வழி? இதற்கெல்லாம் காரணம் தானன்றி வேறு யார்? சொல்லிச் சொல்லி வளர்த்தேனா? என்று நெஞ்சிலடித்து அழுதாள். ரத்தத்தால் பழியழிக்கும் வெறியூட்டிய மார்போ தன்னுடையதென தாய்மை கருக பேதலித்தாள். அன்றிரவு அடிப்படை ஆயுதப் பயிற்சிக்கான முகாமில் சேர்க்கப்பட்டான் சந்தனன். அங்கே பேண வேண்டிய ஒழுங்குகளையும், மீறல்களையும் பயிற்சி ஆசிரியர்களில் ஒருவர் அறிவுறுத்தினார். தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சந்தனன் அமர்ந்தான். அதிகாலையில் விசில் சத்தம் கேட்டதும், எழுந்திட வேண்டுமென கூறப்பட்டிருந்தது. மெல்லக் கண்களை மூடி உறங்கிப் போனான். ஆனால் பெரியம்மா இயல்பு குலைந்திருந்தாள். ஒருதடவையேனும் அவனை நேரில் சந்தித்து அறிவுரை சொல்லவேண்டுமென பதகளித்தாள். அம்மாவைச் சந்திக்க வீட்டிற்கு வந்தாள். அம்மாவைத் தனியாக அழைத்துச் சென்று நடந்தவற்றை சொன்னாள். “உடனடியாக சந்திக்க வாய்ப்பிருக்குமோ தெரியாது. எண்டாலும் கேட்டுப் பார்க்கிறேன்” என்றாள் அம்மா. வெளியே துப்ப இயலாத ஒரு நஞ்சைத் தன்னுள்ளே விழுங்க இயலாமலும் துடித்து நின்றாள் பெரியம்மா. சந்தனனுக்கு இயக்கத்தைப் பிடியாது. எப்போதும் குற்றம் சொல்லுவான். தந்தையைக் கொன்றவர்கள் என்பதைத் தாண்டியும் இயக்கத்திடம் குறைப்பட அவனுக்கு காரணங்களிருந்தன. அந்தப் புளியமரத்தை தாண்டும் போதெல்லாம் “அப்பா கடைசியா இதில தான் படுத்திருந்தவர். ரத்தம் வேரடி முழுவதும் பரவியிருந்தது. குப்புறக்கிடந்த வாயில் ரத்தமும் மண்ணும் ஒட்டிக்கிடந்தது. ரத்தம் குடித்து செழித்து நிற்கும் புளியம் மரம்” என்பான். ஆனால் இன்று இயக்கத்தில் இணைந்திருக்கிறான். அவனுள் நிகழ்ந்திருப்பது திரிபென நம்ப இயலவில்லை. அம்மாவும் பெரியம்மாவும் இரவோடு இரவாக ஓட்டோவில் புறப்பட்டனர். “நான் வரப் பிந்துமடா, நீ படு” என்ற அம்மாவின் கண்களில் ஒருவிதமான அவசரத்தைப் பார்த்தேன். “எங்க போறியள்” கேட்டேன். “கிளிநொச்சிக்கு, ஏன் நீயும் வரப்போறியோ” என்று அம்மா கேட்டாள். அது அழைப்பல்ல. இதற்கு மேல் கேளாதே என்கிற சமிக்ஞை. ஓட்டோ புறப்பட்டது. பெரியம்மாவின் கண்ணீர் வெளியெங்கும் பறந்தது. இரண்டு கைகளையும் கூப்பி ஐந்தெழுத்து மந்திரத்தை சொல்லத் தொடங்கினாள். “இப்ப நடக்கிறதுக்கெல்லாம் நீ தான் காரணம் அக்கா” என்றாள் அம்மா. பெரியம்மா எதுவும் பதில் கதைக்கவில்லை. மூன்று மாத ஆயுதப் பயிற்சி முடித்த சந்தனனை சந்திக்க நாங்கள் போயிருந்தோம். உடல் பெருத்திருந்தான். புலிச்சீருடை அணிந்து மிடுக்கேறி நின்றான். பெரியம்மா அவனது கைகளைப் பிடித்து “சந்தனா, கடிதத்தில நீ எழுதியிருந்த எல்லாத்தையும் மறந்திடு. உன்னைத் தெய்வமாய் பார்த்தனான். ஆனா ரத்தம் கேக்கிற தெய்வமில்லை நீ” என்றாள். அந்தச் சொற்களில் எவற்றையும் பொருட்படுத்தவில்லையென அவன் உடல்மொழி கூறியது. தன்னுடைய கழுத்தில் கிடக்கும் குப்பியை தாயிடம் காட்டி “ இது கழுத்தில மட்டுமில்ல, எனக்குள்ளேயும் கிடக்கு” என்றான். பெரியம்மா அவனை கன்னத்தில் அறைந்து “நீ செத்தொழிஞ்சாலும் கவலையில்லை” என்று கத்தியபடி வெளியேறினாள். பெரியம்மாவுக்கு பின்னால் ஓடினேன். அம்மா சந்தனனிடம் “ நீ அவனைச் சுட்டுப் பழி தீர்க்க நினைக்கிறாய் எண்டு தெரிஞ்சாலே, அவ்வளவு தான்” என்றாள். என்ன நடந்தாலுமென்ன சாகத்தானே போகிறேன். அதிகபட்சம் என்ன செய்வார்கள். சுடத்தானே செய்வார்கள்” என்றான். சங்கிலிப் பெரியப்பாவை சுட்டுக்கொன்றவர் சரித்திரன். இன்றைக்கு முக்கிய பொறுப்பொன்றில் உள்ளவர். அன்று துரோகிகளை அழித்தொழிக்கும் பணியில் துடிப்புடன் இருந்தவர். இத்தனை வருடங்களில் பெரியம்மா சந்தனனுக்கு அடிக்கடி சொன்ன பெயர் சரித்திரன். எங்கு சரித்திரனைக் கண்டாலும் “அங்க பார், அவன் தான்” என்பாள். அப்படித்தான் சந்தனன் குருதியில் தீ மூண்டது. மெல்ல மெல்ல கங்குகள் பிணைந்து, காற்றில் தப்பிப் புகைந்து எரியத்தொடங்கியது. “அப்பாவைச் சுட்டவனை சுடுவேன்” என்று சந்தனன் முதன்முதலில் சத்தியம் செய்தது அந்தப் புளியமரத்தில் தான். அதற்கு ஒரே வழியாக இயக்கத்தில் சேர்ந்தான். ஆதிப்பலிக்கு ரத்தம் கேட்கும் உக்கிரம் அவனுள் உயர்ந்தது. சந்தனன் சொன்னதும் அம்மா அதிர்ச்சியடையவில்லை. அவனிடம் தெளிவாகவும் உறுதியாகவும் சொன்னாள். “இஞ்ச பார் சந்தனன், நீ சின்னப்பெடியனில்லை. உனக்கு நான் சொல்றது விளங்குமெண்டு நினைக்கிறன். பழிவாங்கத் துடிக்கிறது உனக்குத் தான் ஆபத்து.” என்றாள். சந்தனன் எதுவும் கதையாமலிருந்தான். புதிய போராளிகளின் பெற்றோர்கள் அனைவருக்கும் சந்திக்கும் நேரம் முடிவடைந்து விட்டதாக அறிவிக்கப்பட்டது. படையணி முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டான். அங்கிருந்து களமுனைக்கு கொண்டு செல்லப்படும் அணியோடு சேர்க்கப்பட்டான். சந்தனனிடமிருந்த ஆயுதத்தின் ஒயில் வாசனை அவனுக்குப் பிடிக்கவில்லை. மீண்டும் மீண்டும் துணியால் துடைத்தான். இரண்டு நாட்கள் பயணம் செய்து, களமுனைக்கு வந்தடைந்தான். முன்னரங்கு. எப்போதும் விழிப்பு. பதுங்குகுழிகள் நீண்டிருந்தன. காப்பரண்கள் கொதித்தன. நாளுக்கு பத்து மணிநேரம் மோதல் நிகழும் படுகளம். சந்தனனுக்கு காவலரண் ஒதுக்கப்பட்டது. ஏற்கனவே அங்கிருந்தவர்களோடு அறிமுகமானான். துவக்கைத் தன்னுடைய நெஞ்சோடு அணைத்தபடி பதுங்குகுழிக்குள் அமர்ந்தான். அன்றிரவு எந்த மோதலும் நிகழவில்லை. உறக்கம் வாய்த்தது. சந்தனன் மட்டும் விழித்திருந்தான். அவனுடைய காவல் நேரம் தாண்டியும் கடமை செய்தான். டிகரில் வலது கையின் ஆட்காட்டி விரலை வைத்தபடி புளியமரத்தை நினைத்துக் கொண்டான். தேசத்துரோகியென எழுதப்பட்டு முதல் ஆணியில் அறையப்பட்டிருந்த தந்தை பெயரைச் சொன்னான். உள்ளம் எரிந்து கண்ணீர் புகைந்தது. அப்பா அப்பா என்றான். இயலாமை ஊறி இருள் திரண்டு நின்றது. அவனிருந்த திசை நோக்கி குண்டுகள் பொழிந்தன. போழ்தின் இருள் அழிந்து ஊழி பொழிந்தது. சந்தனன் சண்டையில் காயமுற்றான். அவனிருந்த மருத்துவ விடுதியின் தலைமைப் பொறுப்பதிகாரியாய் சரித்திரன் இருந்தார். மேனியெங்கும் நஞ்சின் சூறை தீப்பிடிக்க சந்தனன் யாரோடும் கதையாமலிருந்தான். வீட்டில் செய்த உணவுகளை சரித்திரன் மூலமாய் அம்மா கொடுத்தனுப்பினாள். சந்தனன் அந்த உணவுகளைத் தீண்டக் கூடவில்லை. சரித்திரனுக்கு அது கவலையாகவிருந்தது. சில நாட்கள் கழித்து சரித்திரன் தனது வாகனத்தில் சந்தனனை ஏற்றிக்கொண்டு சென்றான். அவன் எதுவும் கதையாமல் வீதியை வெறித்திருந்தான். மழை பெய்யத் தொடங்கியது. “நீ என்னைச் சுடத்தான் இயக்கத்துக்கு வந்தனியெண்டு கேள்விப்பட்டனான்” என்ற சரித்திரனை அதிர்ச்சியோடு பார்த்தான் சந்தனன். உன்ர தந்தையைச் சுட்டது நானெண்டு தெரிஞ்ச உனக்கு ஏன் சுட்டனான் எண்டு தெரிஞ்சிருக்க வாய்ப்பில்லை” என்று தொடர்ந்தார். “அதுதான் நல்லாய்த் தெரியுமே, தேசத்துரோகி, ஒருத்தனைக் கொல்ல நீங்கள் துவக்கெடுக்க முதல், இப்பிடியொரு பட்டம் வைச்சே கொலை செய்திடுவியள்” என்றான் சந்தனன். சரித்திரன் கொஞ்சம் இறுக்கமாக “அது பட்டமில்லை. தண்டனையோட முதலடி.” என்று சொன்னார். வாகனம் புளியமரத்தடியில் நின்றது. அங்கு நிறைய ஆணிகள் அறையப்பட்டிருந்தன. சரித்திரன் வாகனத்தை விட்டு கீழே இறங்கி, தன்னுடைய பிஸ்டலை அவனிடம் கொடுத்து என்னைச் சுடு என்றார். சந்தனன் வாகனத்தை விட்டு கீழே இறங்கினான். பிஸ்டலை சரித்திரனின் நெற்றி நோக்கி நீட்டினான். மூன்று வெடிகள் முழங்கின. துரோகத்தின் துருவேறிய ஆணிகள் சிதறுண்டு பறந்தன. கிளையில் துளிர்த்திருந்த இலைகள் மெல்லக் காற்றில் அசைந்தன. இராணுவ மிடுக்கோடு, பிஸ்டலை சரித்திரனிடம் கையளிக்க முன்னே நடக்கலானான். துரோகத்தின் ஆணிகள் சிதறிக்கிடந்த நிலத்தில் சந்தனன் அவதானமும் விழிப்பும் கூட்டியிருந்தான். புளியமரத்தின் கீழே இரண்டு பேரும் நின்று கதைக்கத் தொடங்கினார்கள். இத்தனை நாட்களும் ஆறாத தன்னுடைய காயத்தைப் பார்த்தான் சந்தனன். அது கொதியடங்கி ஆறியிருந்தது. https://akaramuthalvan.com/?p=13041 point- உணவு செய்முறையை ரசிப்போம் !
1 point- நடனங்கள்.
1 point- கொஞ்சம் சிரிக்க ....
1 point- துவாரகா உரையாற்றியதாக...
1 pointரொ இந்த காணொளியை தயாரித்திருக்காது..ஆனால் அறிவுரை வழங்கியிருக்கலாம் பி.ஜெ.பி யிடம் அதுவும் தமிழ் நாடு பி.ஜெ.பி யிடம்.அது தான் இந்த வீடியோ இவ்வளவு மட்டமாக வெளிவந்திருக்கிறது. 1)பழ நெடுமாறன் ஐயா இந்திரா காந்தியுடன் நெருங்கிய தொடர்பை கொண்டவர்,மேலும் இந்திராகாந்தி இந்தியாவின் தேசிய நலனுக்கு தான் முக்கியத்துவம் கொடுத்தவர் அவர் ஈழத் தமிழர் நலனுக்காக எதையும் செய்யவில்லை..இன்று இருந்தாலும் செய்திருக்க மாட்டார்.பழ நெடுமாறன் ஐயா ஊடாக அவர் எமது போராட்டத்தை தங்களது தேசிய நலனுக்காக பயன்படுத்த முயற்சி செய்தவர் அதன் அறுவடை தான் இன்று எமது தலைவர் இருக்கிறார் என அறிக்கை விடுவது.... இந்திரா காங்கிரஸின் வேலுச்சாமி , தலைவர் இருக்கின்றார் என அறிக்கை விடுவதும் இதன் பின்னனி என கொள்ளலாம். 2) இன்று மோடி ,அண்ணாமலை ஊடாக சில செயல்களை செய்ய முயல்கின்றார்,இந்தியாவின் தேசிய கட்சிகள் எமது போராட்டத்தை அழிப்பதற்கு முன் நிற்பார்கள் .ஆனால் அதை பிராந்திய கட்சிகளின் ஊடாக செய்ய முயல்வார்கள் ,அதே நேரம் எமக்கு முழுஆதரவு கொடுப்பது போல வெளியில் இருந்து பார்க்கும் பொழுது தெரியும் ஆனால் இறுதி முடிவு இந்தியாவின் தேசிய நலன் ,எமது தலையில் மிளகாய் அரைத்து விடுவார்கள்,நாம் வெள்ளி பார்க்க வேண்டியது... 3)இன்று காசி ஆனந்தன் காவி ஆனந்தனாக மாறி அறிக்கை விடுவதும் இதன் பின்னனி. 4) இந்தியாவின் அரசாங்கம் சிறிலங்கா அரசுடன் நேச உறவுடன் தொடர்ந்து செயல்படும் ...வியாபார நலன்கள் சார்ந்து செயல் படும்..... சிறிலங்காவை இராணுவ பலத்தினால்24 மணித்தியாலத்தினுள் தனது மாநிலமாகா மாற்ற முடியும் என்ற நம்பிக்கை இந்தியாவுக்கு உண்டு ஆகவே தான் சிறிலங்காவின் வெற்றிகரமான் ராஜந்திர நகர்வுகளை சகித்து கொண்டிருக்கின்றது... இந்தியா இன்று வடமாகாணத்துக்கு கப்பல் விடுவது,விமானம் பறக்கவிடுவது, இலவசமாக இசை நிகழ்ச்சி நடத்துவது ,பிரபலமான சைவ கோவில்களை புனருத்தாரணம் செய்வது அங்கு இராமர், அனுமான் மற்றும் எமக்கு தெரியாத கடவுள்கள அறிமுகம் செய்வது....இப்படி பல பல... 5) ஈழத் தமிழர்கள் என்ற தேசிய இனத்தை அழித்து கிறிஸ்தவர்கள்,இந்துக்கள் ,பெளத்தர்கள்,இஸ்லாமியர்கள் என்ற அடையாளத்தை வடக்கு கிழக்கில் முன் நிலைப்படுத்த திட்டமிட்டு செயல் படுவது... சிறிலங்காவின் பொருளாதரத்தை வளப்படுத்த இலவச இசை நிகழ்ச்சி நடத்துவது...இதன் ஊடாக மக்களின் பணம் வீணாக செலவு செய்யப்பட்டு நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் ஆனால் மக்களுக்கு எந்த லாபமும் கிட்டாஅது... இடக்கிட நாங்களும் புலனாய்வு அதிகாரியாக வந்து அறிக்கை விடுவமல்ல....1 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 06 இருபத்தைந்து வருடங்கள் வன்கவர் படை ஆக்கிரமித்திருந்த கேணியடி கிராமத்திற்குள் சனங்கள் அனுமதிக்கப்பட்டனர். ஐந்து ஏக்கர் பரப்பளவில் அமைந்திருந்த படைமுகாம் மட்டும் நாலுசுற்று முட்கம்பி வேலிகளால் அரணாகியிருந்தது. சூனியம் சடைத்த கிராமம் பெருவயிறெனத் திறந்து கிடந்தது. சனங்கள் கருப்பையின் தட்பத்தை உணர்ந்த உயிரென குதூகலத்தில் கால் பதித்தனர். ”இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது. அனுமதியின்றி உட்பிரவேசியாதீர்கள்” என்றெழுதப்பட்டிருந்த அறிவிப்பு பலகையை கழற்றி வீசினர். ஆயுதமற்ற சிப்பாயொருவன் குதிரையிலிருந்தபடி எல்லாவற்றையும் கண்காணித்தான். சின்னாச்சி மண்ணை அள்ளி மேலெங்கும் பூசினாள். உயிர்மீட்சி கொண்ட ஆனந்தத்தில் அருள் கொண்டாடினாள். குண்டுமணி அத்தை வேப்பிலைகளைப் பிடுங்கி வந்து சின்னாச்சி கையில் கொடுத்தாள். பேரன் புண்ணியன் வேதத்துக்கு மாறியிருந்தான். அதனால் பக்கத்தில் வரவில்லை. சின்னாச்சி சன்னதம் கொண்டாடினாள். மண்ணுக்குத் திரும்பியது சனங்கள் மட்டுமல்ல, கண்ணகித் தெய்வமும் தான் என்றார் ஊத்தை மாமா. சின்னாச்சி கண்கள் சிவந்து அந்தரத்தில் எழுந்து நிலத்தில் இறங்கி ஆவேசம் கொண்டாள். ஆங்காரம் பொங்க கைகள் விரித்து ஆலமரம் நோக்கி சின்னாச்சி ஓடினாள். “இந்த நிலம் இராணுவத்துக்குச் சொந்தமானது” என்ற அறிவிப்பு பலகையைத் மிதித்தேறி ஆலமரத்தை அண்மிக்கையில் நிலம் பிளந்து ஒலித்தது வெடியோசை. சின்னாச்சி கீழிருந்து மேலேறி ஒரு விழுதென நிலம் பதிந்தாள். ஆலமரத்தின் கீழே மேடெனக் கிடந்த பறவை எச்சங்களோடு அவளது கால்விரல்கள் எஞ்சியிருந்தன. சனங்கள் சின்னாச்சி என்று கதறினார்கள். சூனியமெரிந்த வெளியில் மனுஷ அழுகுரல் கேட்ட பறவைகள் எழுந்து பறந்தன. சிப்பாய் குதிரையை உசுப்பிவிட்டு சனங்களைச் சிதறியோடச் செய்தான். சனங்கள் உறைந்தனர். ஆலமரத்தின் கீழே குருதிக் குத்தியாய் சின்னாச்சி மீந்திருந்தாள். அவளுடைய உடலத்தை மீட்பது சிரமம். கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருக்கும் வலயத்திலிருந்து சின்னாச்சியை குப்பைவாரியால் இழுத்து எடுத்தோம். சின்னாச்சியின் கால் துண்டொன்று ஆலமரத்தின் வேர் இடுக்கில் இறுகிக்கிடந்தது. சின்னாச்சியை கேணியடிக் கிராமத்தின் சுடலையிலேயே தகனமாக்க முடிவெடுத்தனர். அந்தப் பகுதிக்குச் செல்ல அனுமதியில்லையென வன்கவர் படை மறுத்தது. “மொத்தக் கிராமத்தையும் சனங்களிட்ட குடுத்தாச்செண்டு சொல்லிப்போட்டு, இப்ப செத்துப்போன ஆள எரிக்க அனுமதியில்லை எண்டால் எப்பிடி?” புண்ணியன் கேட்டான். “உங்களுடைய எல்லா இடங்களையும் நீங்கள் துப்பரவு செய்யத்தானே போகிறீர்கள். அதற்கு தீ வைக்க வேண்டுமல்லவா. ஆகவே இங்குள்ள எந்த இடத்திலாவது போட்டு எரியுங்கள்” என்றான் வன்கவர் படை அதிகாரி. “இந்தப் பாழ்படுவார் இத்தனை சனங்களை முள்ளிவாய்க்கால்ல கொண்டு குவிச்சும் கொலைவெறி அடங்காமல் நிக்கிறாங்களே” என்று குண்டுமணி அத்தை கொதித்தாள். சின்னாச்சியின் உடலத்தை தூக்கி வந்து வன்கவர் படை முகாமுக்கு முன்னால் கிடத்தினார்கள். ஈமச் சடங்கை செய்து முடித்தனர். பட்டினத்தார் பாடலைச் சுந்தரம் பாடினார். நெற்றியிலும் வயிற்றிலும் கற்பூரம் குவித்து சிதை மூட்டினான் புண்ணியன். எரிந்துருகும் சின்னாச்சியின் உடலத்தைச் சூழ்ந்த பெண்கள், தங்களுடைய முலைதிருகி வான் பார்த்து எறிவதைப் போல பாவித்தனர். “தீ மூளும், தீ மூளுமெனப் பாடுகையில் சின்னாச்சியின் உடல் விறகென மிளாசி எரிந்தது. அடுத்து சில மாதங்களில் இருபது குடும்பங்கள் கிராமத்தில் குடியேறி அங்கிருந்த தேவாலயத்தைச் சுத்தப்படுத்தினர். சின்னாச்சி கண்ணிவெடியில் செத்துப்போன ஆலமரத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஆட்கள் நடமாட அஞ்சினர். “கண்ணிவெடியை நெருக்கிப் புதைச்சிருக்கிறாங்கள். அங்கால் பக்கம் போகாதேங்கோ” பெரியவர்கள் சொல்லினர். சுத்திகரிக்கப்பட்ட தேவாலய கிணற்றிலிருந்து பெரிய ரங்குப் பெட்டியொன்று மீட்கப்பட்டது. அது தண்ணீர் புகமுடியாத தடித்த பொலித்தீன் உறைகளாலும், விலையுயர்ந்த மெழுசீலையாலும் பொதி செய்யப்பட்டிருந்தது. தேவாலயத்தின் உள்ளே எடுத்துவந்து ரங்குப்பெட்டியைத் திறந்தனர். உள்ளே பாதிரியார் அணியும் வெள்ளைநிற அங்கியும், பவளத்தால் செய்யப்பட்ட செபமாலை இரண்டும் இருந்தன. இன்னொரு அடுக்கில் சிறிய தங்கச் சிலுவையொன்றில் அறையப்பட்டிருந்த இயேசுவும் தங்கமாயிருந்தார். புண்ணியன் அந்தச் சிலுவையைத் தூக்கிச் சென்று பீடத்தில் வைத்தான். சனங்கள் முழந்தாளிட்டு அமர “அவர் பூமி முழுவதும் போர்களுக்கு முடிவுகட்டுகிறார். வில்லை உடைத்து, ஈட்டிகளை முறிக்கிறார். போர் ரதங்களை நெருப்பில் சுட்டெரிக்கிறார்” என்றாள் ஒற்றைக்கண் சரசு. “கடவுளே, உங்களுடைய பெயரைப் போலவே உங்களுடைய புகழும் பூமியெங்கும் எட்டுகிறது. உங்களுடைய வலது கை நீதியால் நிறைந்திருக்கிறது. உங்களுடைய நீதித்தீர்ப்புகளால் எங்கள் நிலம் சந்தோஷிக்கட்டும்.” என்ற புண்ணியனின் கண்களை முட்டிப் பெருகிய கண்ணீர் செபமாலையின் மீது சொரிந்தது. இந்தச் சம்பவத்திற்கு பிறகு “தங்க இயேசு கோயில்” என்று புதுநாமம் பொறிக்கப்பட்ட தேவாலயத்தில் கேணியடிச் சனங்கள் வாரமொருமுறை ஒன்று கூடுவர். கிராமத்தில் இன்னும் செய்யவேண்டிய பொதுவேலைகளைப் பற்றி கதைத்து முடிவு செய்வார்கள். முதலில் சுடலைக்குச் செல்லும் பகுதியை இராணுவத்திடமிருந்து பெற்றுத் தரவேண்டுமென தமிழ் பாராளுமன்ற உறுப்பினருக்கு அழுத்தமாக கடிதம் எழுதினர். கேணியடி கிராமம், மக்களிடம் கையளிக்கப்பட்டது தன்னாலென தம்பட்டம் அடித்த அரசியல்வாதியைச் சந்திக்க இயலாமல் சனங்கள் சோர்ந்தனர். குதிரையில் சென்றுவரும் சிப்பாய்கள், பெண்கள் நீரள்ளும் சந்திக்கிணற்றடியில் குவிந்து நின்றனர். பெண்பிள்ளைகளை வெளியே அனுப்ப பயந்தொடுங்கினர் சனங்கள். சிப்பாய்களிடமிருந்து இனிப்பும் பழங்களும் வாங்கியுண்ட எதுவுமறியாத குழந்தைகளை பூவரசம் கம்பு தும்பாக அடித்தனர் தாய்மார்கள். சுடலை மீட்பை கேணியடி தீவிரமாக்கியது. கையளிக்கப்பட்ட பகுதியிலிருந்து இடதுபக்கமாக ஆறுகிலோ மீட்டர் பகுதிகளை இன்னும் இராணுவமே வைத்திருப்பதாக சனங்கள் வீதிக்கு வந்தனர். புண்ணியன் அந்தப் போராட்டத்தை முன்னெடுத்தான். சின்னாச்சி எரியூட்டப்பட்ட அதே இடத்தில் சனங்கள் அமர கொட்டகை அமைக்கப்பட்டது. கைக்குழந்தைகளை ஏந்தி வந்தவர்களும் அங்கேயே இருந்தனர். நெடுத்துக் கிளைவிரித்து நிழலூட்டும் வேப்பமரத்தில் குழந்தைகள் உறங்க ஏணைகள் கட்டப்பட்டன. இரவு பகலாக சனங்கள் வீதியில் படுத்துறங்கினர். போராட்டத்தை தலைமையேற்று நடத்தும் புண்ணியனை அவனது அணியினரையும் அழைத்து வன்கவர் வெறியர்கள் மிரட்டினர். “கடத்திச் சென்று உயிரோடு புதைப்போம்” என்றார்கள். புண்ணியன் சாந்தமூறும் புன்னகையோடு “அரசனுடையதை அரசனுக்கும் கடவுளுடையதைக் கடவுளுக்கும் கொடுக்கும் நீங்கள் எங்களுடையதை எங்களிடம்தான் தரவேண்டும்” என்றான். இராணுவம் சனங்களைச் சுடலைக்குள் அனுமதிக்கவில்லை. சனம் போராட்டத்தில் அரசியல்வாதிகளை அனுமதிக்கவில்லை. மூன்று நாட்களுக்கு மேலாக தொடரும் போராட்டம் ஊடகங்களில் செய்தியானது. மனித உரிமை ஆர்வலர்கள் துணை நின்றார்கள். “பேச்சுவார்த்தைக்கு தயாரில்லை. எழுந்து செல்லுங்கள். நீங்கள் எரிய வேண்டுமென்று அவசியமில்லை. உங்கள் உடலங்களை நான் வளர்க்கும் நாய்களுக்கு அளிப்பேன்” என்ற வன்கவர் படை அதிகாரி, மேலும் ஒருமணி நேரம் கெடு வழங்கினான். அதற்குள் போராட்டம் கைவிடப்பாடாது போனால் உயிரிழப்பு நிகழுமென்றான். நிலவெறியும் இரவு. வேப்பமரத்தில் கட்டப்பட்டிருந்த ஏணைகளில் குழந்தைகள் உறங்கினர். குதிரைகளின் குளம்பொலிகள் நிலத்தை அதிர்வித்தன. வன்கவர் வெறிப்படை முகாமின் பெருத்த கதவுகள் வாய் பிளந்தன. குதிரைகளின் மூச்சில் நடுங்கிய இரவு, புழுதியால் போர்த்தப்பட்டது. ஏணையில் கிடந்த குழந்தையின் அழுகுரல் கேட்ட தாய் ஓடோடி விரைந்தாள். குதிரைகள் கொட்டைகையை நோக்கி பாய்ந்து வந்தன. சிப்பாய்கள் தங்களது துவக்குகளை நீட்டி “ பத்து நிமிசத்திற்குள் எழுந்து செல்ல வேண்டும், இல்லையேல் வெடிதான் கதைக்கும்” என்றனர். சனங்கள் பின்வாங்கினர். குதிரைகள் கொட்டகைக்குள் புகுந்து வெறிகொண்டு அலைந்தன. மண்ணில் சரிந்தது கொட்டகை. புண்ணியன் எல்லாவற்றையும் பார்த்தபடி நின்றான். அவனை நோக்கி வந்த சிப்பாயொருவன் துவக்கின் பின்பகுதியால் தோள்மூட்டில் ஓங்கி அடித்தான். புண்ணியன் ஷணத்தில் சுதாகரித்து தப்பி தங்க இயேசு கோயிலுக்குச் சென்றான். ஏற்கனவே அங்கு சனங்கள் கூடியிருந்தனர். புண்ணியன் யாரோடும் எதுவும் கதையாமல் தங்கச்சிலுவையின் முன்பாக முழந்தாளிட்டான். “கர்த்தாவே! நீரோ, வியக்கத்தக்க காரியங்களைச் செய்தீர்! விண்ணுலகம் இதற்காக உம்மைத் துதித்தது. ஜனங்கள் உம்மைச் சார்ந்திருக்கமுடிந்தது. பரிசுத்தரின் கூட்டம் இதைப்பற்றிப் பாடியது. ஆனால் என்றைக்கும் இருளை மட்டுமே எங்களிடம் நிலைகொள்ளச் செய்திருக்கிறீர். துயரங்களுக்காக அழுது எங்கள் கண்கள் புண்ணாகிவிட்டன. ஏற்கெனவே கொல்லப்பட்ட சனங்களை புதைக்காமலும் எரிக்காமலும் கைவிட்டோம். வாழப் பெலனற்று மரித்தவர்கள் இங்கு குறைவு. கர்த்தாவே! இது எத்தனை காலம் தொடரும், எதுவரைக்கும் நீர் எங்களை உதாசீனப்படுத்துவீர்? என்றென்றும் உமது கோபம் நெருப்பைப் போல் எரியுமென்றார்கள். எமக்காக ஒரு தீக்குச்சி அளவு கூட எரிய மாட்டேன் என்கிறீர்கள். எங்கள் ஆயுள் எத்தனை குறுகியது என்பதை நினைவுகூரும். குறைந்த காலங்கள் வாழ்ந்து, மடியும்படியா நீர் எங்களைப் படைத்தீர். நீர் எங்கள் அரசனின் பகைவர்கள் அனைவரையும் மகிழ்ச்சியடையச் செய்தீர். போர்ப் பகைவர்கள், அவனை வெற்றிக்கொள்ள அனுமதித்தீர். எம் அரசன் யுத்தத்தில் வெல்ல நீர் உதவவில்லை. நீர் அவனை வெல்ல விடவில்லை. நீர் அவனைத் தரையில் வீசினீர். நீர் அவனது ஆயுளைக் குறைத்தீர். நீர் அவனை அவமானப்படுத்தினீர். கர்த்தாவே, உமது அன்பு என்றைக்கேனும் எங்களுக்காய் நிலைக்குமென உண்மையாகவே நான் நம்புகிறேன். கர்த்தருக்கே என்றென்றும் ஸ்தோத்திரம்! ஆமென், ஆமென்” என்றான். அப்போது புண்ணியனைச் சூழ்ந்து நின்ற சனங்கள் ஒரு முடிவை அறிவித்தனர். சுடலை எப்போது தங்களுக்கு கையளிக்கப்படுகிறதோ அன்றைக்கு இந்தவூருக்கு திரும்பலாம் என்றார்கள். புண்ணியன் இந்த முடிவை ஏற்றுக்கொள்ளவில்லை. இனியும் இடப்பெயர முடியாது, எல்லாத்துக்கும் ஒரு முடிவு கிடைக்கும் தானே என்றான். அவர்கள் ஒப்புக்கொண்டனர். அடுத்தநாள் பகல் முழுதும் தேவாலயத்திலேயே தனித்திருந்தான் புண்ணியன். சூரியன் வீட்டுக்கூரையில் தொங்கிநிற்பதைப் போல வெயில் உலர்த்தியது. வன்கவர் வெறிப்படையினர் குதிரைகளோடு ஊர் புகுந்தனர். வாசலில் உறங்கிக் கிடந்த செட்டித்தாத்தாவை குதிரைகள் மிதித்தன. அவர் சீவன் சிலிர்த்து அடங்கியது. செட்டித்தாத்தா கண்கள் மலர்த்தி வானத்தைப் பார்த்திருந்தார். சனங்கள் ஓலமெழுப்பி குதிரைகளை எதிர்த்தனர். சிப்பாய்கள் புண்ணியனைத் தேடினர். அவன் தேவாலயத்தில் இருப்பதை அறிந்து கொண்டு பாய்ந்து விரைந்தனர். தேவாலயத்தினுள்ளே அமர்ந்திருந்த அவனுக்கு குளம்படிகள் கேட்டன. சிப்பாய்கள் வருவது நன்றாகத் தெரிந்தது. ஆனாலும் அவன் அஞ்சவில்லை. நடப்பதை எதிர்கொள்ள காத்திருந்தான். உள்ளே நுழைந்தவர்கள் ஆயுதமுனையில் அவனை மண்டியிடப் பணித்தனர். சிலுவையைப் பார்த்தபடி முழந்தாளிட்டு அமர்ந்தவனின் பிடரியில் துவக்கின் குழல் அமைந்தது. கபாலத்தில் உலோகக் குளிர். சனங்கள் ஆர்ப்பரிப்போடு உள்ளே நுழைந்தனர். புண்ணியனை நோக்கிப் அன்னை மரியாக்கள் ஓடிவந்தனர். சிப்பாய்கள் அங்கிருந்து வெளியேறினர். முழந்தாளிட்டு அமர்ந்திருந்தவன் எழுந்திராமல் நெடுநேரமாக கண்களை நிலைகுத்தியிருந்தான். குண்டுமணி அத்தை அவனைத் தொட்டு “புண்ணியா, எழும்புடா செல்லம், நாங்கள் இந்த ஊர விட்டே போகலாம்” என்றாள். தலையை மேல் நோக்கிய அவன் கருவிழிக்குள் நெருப்புச் சுவாலை. அன்றிரவு புண்ணியனின் தலைமையில் ஊர், சுடலை நோக்கிச் சென்றது. செட்டித்தாத்தாவின் உடலத்தை சாக்குப் பையில் போட்டு மூட்டையாக்கினார்கள். குழந்தைகள் அழாமல் முலைகள் அவர்களது வாயிலேயே கிடந்தது. பாதையில் அரவமில்லை. புண்ணியன் எதிரே உருவமொன்று அசைந்தது. பின்னால் வருபவர்களுக்கு தொடுதல் மூலம் தகவல் சொன்னான். உருவம் எங்கே பதுங்கிற்று? புண்ணியன் மெல்லக் காலடி எடுத்து வைத்து யாருமில்லையென உறுதி செய்தான். பிறகு மீண்டும் நடக்கத் தொடங்கினார்கள். சுடலை எங்கே இருக்கிறதென அடையாளம் சொல்ல வந்த ஊத்தை மாமா இன்னும் கொஞ்சத் தூரம் போகவேண்டுமெனச் சொன்னார். அவருக்கு பூதவராயர் கோயில் கடந்து மூன்றாவது வளைவு என்பது ஞாபகம். அவர் வளைவை எட்டிய போது அடையாளம் காணமுடியவில்லை. திடீரென ஒரு வளவில் சிதையெரிந்து ஒளி ஊண்டியது. எல்லோரும் தெய்வச் செயல் என்றார்கள். அவ்விடம் நோக்கி எல்லோரும் ஓடினார்கள். சிதைக்கருகில் புண்ணியன் சென்றான். ஒற்றைக்காலுடன் சின்னாச்சி எரிந்து கொண்டிருந்தாள். இழந்துபட்ட கால்விரல்களை பொறுக்கி பொறுக்கித் தீயிலிடும் இன்னொரு சின்னாச்சி நிலத்தில் அமர்ந்திருந்தாள். புண்ணியன் அவள் சிதையை விழுந்து வணங்கி, செட்டித்தாத்தாவின் உடலத்தில் தீ எழுப்பினான். சனங்கள் ஊருக்குள் நுழைந்த போது குதிரைகளின் ஓலவொலி எழுந்தது. பெருந்தீ எழுந்தாடும் வெளிச்சம் ஊர் முழுதும் நிலைத்தது. சிப்பாய்கள் உறங்கிய ஆடைகளோடு வெளியேறி ஓடினர். முகாம் வாசலுக்கு சனங்கள் போயினர். தீ மூண்டு ஆயுதங்கள் வெடித்தன. சிப்பாய்கள் எரிந்துருகிச் சாம்பலாய் ஆனார்கள். போர்க்குதிரைகளின் மயிர் பொசுங்கும் வாடை கேணியடிக் கிராமத்தை அடைத்தது. வன்கவர் படையின் முகாமுக்கு முன்பாக, சின்னாச்சியை எரித்த ஸ்தலத்தில் ஒரு முலை தீக்குண்டாய் தகித்துக் கிடப்பதைப் பார்த்த குண்டுமணி அத்தை “அது எங்கட கண்ணகியின்ர இடது முலை. காலங்காலமாய் கவிந்த இருள் எரிக்கும் அமுதம், அதுக்குள்ள சுரக்குது என்றாள். அப்போது “ என் பிள்ளைகளே! குந்த ஒருபிடி நிலமும், எரிய ஒரு பிடிநிலமும் சொந்தமாய் வேணும். இல்லாட்டி அலைவு தான்” என்றொரு குரல் கேணியடியெங்கும் ஒலித்தது. https://akaramuthalvan.com/?p=12721 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 05 புலித்தேவன் பிறந்து பத்து நாட்களில் அவனது தாயும் தந்தையரும் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்டார்கள். துரதிஸ்டவசமாய் உயிர் தப்பினான். நச்சுப்புகை மூடிய பாழ்வெளியில் பச்சிளம் குழந்தையாக அலறினான். இறந்துபட்ட தாயின் வலதுமுலையில் பாலுண்டு தவித்தான். குருதியும் பாலும் கலந்து ஊட்டிய தாய்நிலத்தில் தனியனாய் துடித்தான். தீச்சூளையில் பொசுங்கிடும் பட்டுப்பூச்சியைப் போல அலைகுமுறும் கடலுக்கு முன்பாக தாய்ப்பிணத்தின் மீது நெளிந்த புலித்தேவனை தூக்கி ஏந்தினாள் அம்மா. அக்கணம் எறிகணைகள் வீழவில்லை. போர்விமானங்கள் வானத்தில் இல்லை. கடற்பறவைகள் கரை வந்து திரும்பின. கூடாரங்களுக்குள் கிடந்த போர்க்காயங்களில் எரிவு அடங்கியிருந்தது. அம்மா புலித்தேவனை அரவணைத்து மிகவேகமாக பதுங்குகுழிக்குள் நுழைந்தாள். புலித்தேவனின் முகத்தை ஈரச் சீலையால் துடைத்து, சரையில் வைத்திருந்த புளியன் பொக்கணை நாகதம்பிரான் கோவில் திருநீற்றைத் தரித்தாள். பாலுக்குப் பாலகன் வேண்டியழுதிட பாற்கடல் ஈந்தபிரான் புலித்தேவனுக்கு இரங்கவில்லை. பால்வற்றிய தன்முலையை ஈய்ந்து போக்கு காட்டினாள் அம்மா. குடிதண்ணீரும் கிட்டாத கடல் வெளியில் சனங்களின் கண்ணீர் உப்பளமாயிற்று. ஓயாது அழுது சோர்ந்தான் பாலகன். மகப்பேறு கொண்ட பெண்ணொருத்தியை கூடாரங்களுக்குள் தேடி, புலித்தேவனுக்கு பாலூட்டினாள். “ஒருவேளை இஞ்ச நான் செத்துப்போனாலும், உங்களில ஆர் மிஞ்சியிருக்கிறியளோ புலித்தேவன கைவிடாமல் வளர்க்க வேணும்” என்றாள் அம்மா. நாங்களிருந்த இடத்திலிருந்து வேறொரு இடத்திற்கு நள்ளிரா வேளையில் ஓடிச்சென்றோம். கடுமையான தாக்குதல்கள் தொடர்ந்த வண்ணமிருந்தன. புலித்தேவனை அணைத்துப் பிடித்தோடி வந்த அம்மாவின் வலது காலை துப்பாக்கி ரவைகள் தாக்கின. அம்மா முகங்குப்புற மண்ணில் விழுந்தாள். புலித்தேவன் பிடிதளர்ந்து மண்ணின் மீது தொப்பென விழுந்தும் அழாமலிருந்தான். அவனுக்கருகில் அசையாமலிருந்தது வடலி. அடுத்த இரண்டு நாட்களிலேயே எங்கள் பனைகளை நாங்கள் பறிகொடுத்தோம். எங்கள் கம்பீரங்கள் முற்றுகையிடப்பட்டன. எரிந்தெரிந்து சாம்பலான நிலத்தின் மீது எஞ்சிய விறகுகளாய் தோற்கடிக்கப்பட்டோம். அம்மாவின் காயத்திலிருந்து குருதியின் பெருக்கு நிற்கவில்லை. அன்று தாயும் தாய்நிலமும் குருதியின் அனாதைகளாக முழங்காலில் நிறுத்தப்பட்டார்கள். ஆயுதங்கள் அவர்களை நிர்வாணப்படுத்திச் சோதனை செய்தன. யுத்தம் தீர்ந்த பின்னைய வருடங்களில் வெளிநாட்டிலிருந்த வந்தவர்கள் சிலர் புலித்தேவனை சந்தித்து உதவிகளைச் செய்ய விரும்புவதாகக் கூறினார்கள். அம்மா வேண்டாமென்று மறுத்தாள். புலித்தேவனோ அவர்களைச் சந்திக்கவே விரும்பாதிருந்தான். ஒருமுறை ஐரோப்பாவிலிருந்து தாயகம் திரும்பிய புலம்பெயர் தமிழர் மூன்று கிலோ சீனியும், இரண்டு ஷேர்ட்டும் அளித்து புகைப்படமாக்கினார். புலம்பெயர்ந்த தமிழர் நீட்டிய உதவிக்கரமென இணையத்தளங்களில் செய்தி வெளியானது. இதனைக் கேள்விப்பட்ட அம்மா கொதித்தாள். “கள்ள வேசமொக்கள், வெளிநாட்டில இருந்து வந்து எங்களை வைச்சு ஷோ காட்டுறாங்கள். மூண்டு கிலோ சீனிக்கும், ரெண்டு ஷேர்ட்டுக்கும் வழியில்லாமலா இஞ்ச நாங்கள் இருக்கிறம்” என்று பேருந்தில் ஏறினாள். அந்த நபர் தங்கியிருந்த வீட்டுக்குச் சென்று அவர் கொடுத்த பொருட்களை தூக்கி வீசிவிட்டு “இவ்வளவு பெரிய யுத்தத்துக்குள்ளையும் சாகாமல் தப்பி மீண்ட சனங்களை, இப்பிடி நீங்கள் குடுக்கிற சீனியையும், உடுப்பையும் போட்டோ எடுத்துச் செய்தி போட்டு அவமானப்படுத்தி கொல்லாதேங்கோ” என்றாள். புலித்தேவனின் கண்களை சந்திக்க முடியாமல் தலைதாழ்த்தி நின்றார் அந்த நபர். இப்போது அவனுக்கு பதின் மூன்று வயது. பள்ளிக்கூடத்தில் பெயர் பெற்ற மாணாக்கன். மாலையில் குளக்கரைப் பட்டியைப் பார்த்து வருவான். விடுப்பு நாட்களில் நாற்பது ஆடுகளையும் அழைத்துச் சென்று, சடைத்து வளர்ந்திருக்கும் புல் காணிகளுக்குள் மேய்ப்பான். வாய்க்காலில் நீரருந்தவிட்டு மரத்தின் கீழே இளைப்பாறுவான். வன்கவர் படையினரின் முகாம்கள் நிலந்தோறும் முளைத்து வளர்ந்திருந்தன. சஞ்சீவி தோட்டத்தின் வழியாக ஆடுகளைச் சாய்த்துப் பட்டிக்குத் திரும்புவான் புலித்தேவன். ஒருநாள் ஆடுகளைப் பட்டியில் கிடத்திவிட்டு வீட்டிற்கு வந்து குளித்துமுடித்து நீறள்ளிப் பூசியவன் “அம்மா, இண்டைக்கு ஒற்றன் தோப்பு பக்கமாய் ஆடு மேய்க்கப்போனான். வாய்க்கால தாண்டி அங்கால போனால் ஒரு குடிசை மண்ணோடு மண்ணாய் இத்துக் கிடக்குது. அதுக்கு மேல சிவப்புக் குமிழி உலையாய் பொங்கி வெடிக்குது” என்றான். “அலட்டாம சாப்பிடு. உலை பொங்கிறதுக்கு அங்க என்ன அடுப்பா இருக்கு. அது எதாவது பூச்சி புழுவாய் இருக்கப்போகுது” என்றாள். “இல்லை அம்மா. நான் நல்லாய்ப் பாத்தனான். அடுப்பில கொதிக்கிற மாதிரி உலை பொங்கின சிவப்புக் குமிழ்கள்” அம்மா எதுவும் பதிலுக்கு கதைக்கவில்லை. புலித்தேவன் சாப்பிட்டு முடித்ததும் படிக்க அமர்ந்தான். அவனுக்கு குமிழ் குமிழாக உலையெழுந்தது குழப்பமாகவே இருந்தது. நாளைக்கும் விடுமுறை என்பதால் ஒற்றன் தோப்புக்கே பட்டியை அழைத்துச் செல்வதென தீர்மானித்தான். அவன் சொன்ன சித்திரமே அம்மாவின் மூளையில் தையலாய் ஏறியும் இறங்கியும் பின்னியது. வன்னி முழுதும் காட்டாறாய் பெருகி மண்ணுக்குள் இறங்கிய ரத்தம் கனன்று பூமிக்கு திரும்புகிறதோ என எண்ணினாள். ஒருகணம் சிவந்து கொப்பளிக்கும் குருதியாக நிலம் அகத்துள் விரிந்தது. “என்ர நாகதம்பிரானே” என்று உடல் சிலிர்த்து விதிர்விதிர்த்து அம்மா திடுக்குற்றாள். புலித்தேவன் பயந்தடித்து “அம்மா, என்னனே, என்ன நடந்தது” என்றுலுக்கினான். ஒவ்வொருவருக்குள்ளும் சொல்லவியலாத துயரங்களும் அச்சங்களும் சுருண்டிருந்தன. உள்ளம் காய்ந்திருந்தது. அம்மா எழுந்து படுக்கைக்குச் சென்றாள். இரவு முழுதும் குருதி உலையெனக் கொதித்துப் பொங்கி காய்ச்சலில் தவித்தாள் அம்மா. அதிகாலையிலேயே இடியுடன் கூடிய மழை நீடித்துப் பெய்தது. புலித்தேவன் உறக்கம் கலைந்து சீதளக்காற்றால் நடுங்கினான். எரிந்துபட்ட எரிமலையின் மீதமாய் உறங்கிக் கொண்டிருந்த அம்மாவை அப்போதுதான் பார்த்தான். அவளுடைய உடலிலும் குமிழ்கள் தோன்றி மறைந்தன. அதனைக் கற்பனையென எண்ணி தன்னைத் தானே நொந்தான். கண்களை அங்கிருந்து நகர்த்தி மீண்டும் அம்மாவிடம் கொண்டு வந்தான். உலைக் குமிழ்கள் தோன்றி உடையும் நிலமென அம்மாவின் மேனியிருந்தது. மழையை உமிழும் இடியும் மின்னலும் தொடர்ந்தன. புலித்தேவன் பதறியடித்துக் கொண்டு தட்டியெழுப்பினான். ஆழ்ந்த கனவிலிருந்து அறுபட்டு எழுந்தவளைப் போல பிரமையற்று எழுந்த அம்மா, புலித்தேவனை அடையாளம் காணவே நொடிகள் ஆனது. நடப்பது எதையும் புலித்தேவனால் நம்பமுடியவில்லை. அவன் கட்டியணைத்தபடி “அம்மா உங்கட உடம்பிலயும் அந்தக் குமிழ்கள் தோன்றி மறைவதைப் பார்த்தேன்” என்றான். “சும்மா விசரன் மாதிரி அலட்டாத. உனக்கு தேத்தண்ணி வைச்சுத்தாறன்” என்று சொன்ன அம்மாவை கட்டியணைத்து விம்மி விம்மி அழுதான். அம்மா அவனுக்கு நீறள்ளிப் பூசினாள். மாலையில் ஒற்றன் தோப்புக்குள் ஆடுகளை சாய்த்து விட்டவன், அந்த இடத்துக்குப் போனான். அங்கே மட்டும் மழை பெய்தமைக்கான அறிகுறிகள் எதுவுமில்லை. நிலமுலர்ந்து வெப்பம் தகித்தது. கொஞ்சச் சருகுகளை எடுத்து வந்து போட்டால் தீ மூளுமளவுக்கு அனல் வந்தது. புலித்தேவன் அங்கேயே நின்று கொண்டான். குமிழ்கள் தோன்றத்தொடங்கின. குருதிக் குமிழ்கள். சூறைக்காற்றின் பேரொலி. காதை விண்ணென்று அதிர்விக்கும் கூர்மையான சப்தம். ஊன்றியிருக்கும் கால்களுக்கு கீழேயும் குமிழ்கள் கொப்பளித்தன. புலித்தேவன் சலனமுற்றான். நிகழ்வது மாயமல்ல.எங்கிருந்தோ தனக்கு கிடைக்கும் செய்தியென எண்ணினான். வானத்திலிருந்து பூமிக்கு இறங்கிய கட்டளைகளைப் போலவல்ல இது. பாதாளத்திலிருந்து பூமியை வந்தடையும் சமிக்ஞையென நம்பினான். அவன் மண்ணைத் தொழுது மண்டியிட்டு அமர்ந்தான். குருதிக் குமிழ்கள் தோன்றத் தோன்ற நிலம் பிளந்து நாகங்கள் மேலேறின. புலித்தேவனுக்குள் அச்சத்தின் தலை விரிந்தது. ஒவ்வொரு குருதிக் குமிழிலிருந்தும் நாகக் குட்டிகள் ஜனித்தன. புலித்தேவன் “என்ர நாகதம்பிரானே” என்று சிலிர்த்துச் சிலிர்த்து அழுதான். நிலம் பரவசமாய் பூர்வபிள்ளைகளை ஏந்தியது. நாகங்கள் நெளிந்தோடின. வாய்க்காலைக் கடந்து வீட்டிற்கு ஓடினான். நடந்தவற்றை அம்மாவிடம் சொல்லி அழைத்தான். இருவரும் ஒற்றன் தோப்பையடைந்து வாய்க்காலைக் கடந்து போயினர். அந்தவிடத்தில் நின்று கொண்டவன் “ அம்மா, இந்த இடத்தில் லட்சக்கணக்கான நாக குட்டிகள் நெளிந்தன. என் கண்ணுக்கெட்டிய தூரம் வரை புற்களைப் போல நாகங்கள் விளைந்திருந்தன” என்றான். அவ்விடத்தில் பெருகிய வெப்பத்தை அம்மாவும் உணர்ந்தாள். புலித்தேவன் சொல்வதைக் கேட்டதும் அவளுக்கு பயமாகவிருந்தது. “நாகதம்பிரான் சித்து விளையாட்டெதோ காட்டுறார்” என்றாள் அம்மா. “ஆயிரம் தலை கொண்டு பூமியைத் தாங்கும் ஆதிசேஷன் பாதாளத்திலிருந்து ஏதேனும் செய்திகள் அனுப்புகிறாரோ” “எங்கட நாட்டுப் பிரச்சனையை தீர்க்க எத்தனை பேர் செய்தியனுப்பி முடியாமல் போனதெண்டு உனக்கு தெரியாது. ஆதிசேஷனுக்கு நல்லாய்த் தெரியும். அதனால அவர் இப்ப மினக்கெட மாட்டார்” “அம்மா, நாகங்கள் மேல வந்தது ஏதோவொரு நல்ல சகுனம். எங்கட மூதாதையர் பாதாளத்திலயிருந்து பூமிக்கு வருகினம். அதுதான் நடக்குது” என்றான் புலித்தேவன். “எடே, இத்தனை பிள்ளையளைச் சாக குடுத்தும் விடிவு வராமல் போயிற்று. இனி ஆர் வந்தென்ன, வராமல் போனாலென்ன” “அம்மா அங்க பாருங்கோ. குமிழி தோன்றி உடையுது” என்று புலித்தேவன் காட்டினான். அவர்கள் நின்றதிலிருந்து ஏழடிகள் தள்ளி குமிழ்கள் உடைய நாகங்கள் அசைந்தன. அம்மா கையெடுத்துக் கும்பிட்டு, என்ர நாகதம்பிரானே, எல்லாமும் உன்ர அற்புதம் என்று நெக்குருகி அழுது கசிந்தாள். உடல் வியர்த்து விழுந்து மண்ணில் புரண்டாள். அன்றிரவு ஊருக்குள்ளிருந்த வன்கவர் வெறிப்படையினரின் முகாம்களுக்குள் பாம்புகள் புகுந்தன. ஆயுதங்களோடு வீதியில் குவிந்து நாகங்களை சுடத் தொடங்கினர். இரவே ஒரு மாபெரும் குமிழாகத் தோன்றி நாகங்கள் வந்தவண்ணமிருந்தன. சனங்கள் வீடுகளுக்குள் பதுங்கிக் கொண்டனர். நாகங்கள் தம்மைத் தீண்டத் துரத்துவதாக வன்கவர் வெறியர்கள் மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து அடைக்கலம் கேட்டனர். அம்மா வீட்டினுள்ளே அமர்ந்திருந்தாள். புலித்தேவன் படலையில் நின்றபடி வீதியில் நடப்பவற்றை வேடிக்கை பார்த்தான். வன்கவர் சிப்பாயொருவன் புலித்தேவனிடம் ஓடிவந்து “எங்களை விஷப்பாம்பு துரத்துகிறது. காப்பாற்றுங்கள்” என்றான். அவனிடம் ஆயுதமிருந்தது. கண்களில் போர் வெறியிருந்தது. பகைமையிருந்தது. ஆனால் புலித்தேவன் எதையும் பொருட்படுத்தவில்லை. நாகம் கொத்திய சிப்பாய் விஷமேறிச் சாகும் வரை புலித்தேவன் பார்த்துக் கொண்டேயிருந்தான். ஊர்ந்து சென்ற அந்த நாகத்தை வாசுகி என்று அழைக்க, சிவனின் கழுத்திலிருந்து கீழே இறங்கி புலித்தேவனின் கால்களுக்குள் ஊர்ந்து வந்தது. அச்சத்தில் அம்மாவென்று கதறியெழுந்தவனை கட்டியணைத்து மூன்றுமுறை எச்சிலால் துப்பி “ஒன்றுமில்லை ஒன்றுமில்லை கனவு” என்று உறங்க வைத்தாள் அம்மா. காலையில் பள்ளிக்கூடம் போகாமல் ஒற்றன் தோப்பின் வழியாக அந்த இடத்தை அடைந்தான். அப்போதும் குருதிக் குமிழ்கள் உடைத்து நாகங்கள் ஜனித்தன. புலித்தேவன் அந்தக் குடிசைக் கஞ்சல்களை அள்ளியெறிந்தான். நிலத்தில் புலிவரிக் கோடுகளோடு உறங்கிக் கிடந்த ராஜ நாகம் அசையத் தொடங்கியது. தனது செட்டையைக் கழற்றி அவனுக்கு தருவித்தது. இன்னும் பக்கமாய் புலித்தேவனை அழைத்தது. ஒரு கொடிபோல அவனில் பற்றியேறி கழுத்தில் படம்விரித்து நின்றது. பாரந்தாளது மண்ணில் அமர்ந்த புலித்தேவன் “அம்மா”வென அழைத்தான். நிலம் நீண்டு கடல் பிளந்து தொனித்தது அவன் குரல். உடலழிந்து, முகமழிந்த பெண்ணொருத்தி முலைகட்டிய வலியால் துடிதுடித்து அங்கே தோன்றினாள். அவள் அள்ளியெடுத்து அமுதூட்ட புலித்தேவன் உறங்கிப் போனான். ஒற்றன் தோப்புத்தாண்டி அம்மா அவனைத் தேடிப்போனாள். ராஜ நாகத்தின் பாம்புச் செட்டையால் போர்த்தப்பட்டிருந்தான். அவனது கடவாயில் குருதியும் பாலும் ஒட்டிக்கிடந்ததைப் பார்த்து “என்ர நாகதம்பிரானே” எனச் சதுரம் நடுங்கிப் அவனை அள்ளியெடுத்தாள். இப்போதும் பத்து நாள் குழந்தையாகவே அம்மாவின் கரங்களில் குளிர்ந்தான் புலித்தேவன். https://akaramuthalvan.com/?p=12131 point- போதமும் காணாத போதம் - அகரமுதல்வன்
போதமும் காணாத போதம் – 04 வீரையாவின் இடத்தைக் கண்டுபிடிக்கவே வாரங்களாயின. அவருக்கு முன்னால் இரத்த அழுத்தம் அதிகரித்து பதற்றத்துடன் அழுதபடி நின்றாள் அத்தை. எதையும் பொருட்படுத்தாமல் அத்தையளித்த சரைகளைப் பிரித்து பொருட்களைச் சரிபார்த்தார். சடங்குக்கு தேவையான பொருட்களின் பட்டியலை அத்தைக்கு தெரிவித்தது யாரென்று வீரையாவுக்குத் தெரியவில்லை. ஆனால் எல்லாப் பொருட்களும் உபரியாக வந்திருந்தன. ரெண்டு சரை சாம்பிராணித் தூளுக்குப் பதிலாக ஐந்து வந்திருந்த போதுதான் இது செவிடன் ரத்தினத்தோட ஆளென்று அடையாளம் கண்டார். வீரையாவுக்கு வன்னி முழுதும் பக்தர்கள் பெருகியிருந்தமையால் ஏற்படும் குழப்பம் தானன்றி வேறில்லை. “அழாதே” என்று சைகை செய்து, அமர்ந்து கொள்ளெனக் கட்டளையிட்டார். நிலத்தைக் கால்களால் விலக்கித் துப்பரவு செய்து கைகூப்பி அமர்ந்தாள் அத்தை. வீரையாவின் கண்களில் சிவப்பு தரித்திருந்தது. தனது இருப்பிலிருந்து மாடப்புறா ஒன்றை எடுத்தார். கால்களில் இடப்பட்டிருந்த கட்டினை அவிழ்த்தார். அதனது கண்களில் காய்கள் வளர்ந்திருந்தன. புறாவை அத்தையின் கையில் கொடுத்து குங்குமத்தை தடவினார். சாம்பலில் குருதி இறங்குவதைப் போல புறாவின் இறகுகளுக்குள் குங்குமம் புகுந்தது. அத்தை அருவருத்தபடி புறாவை இறுக்கிப் பிடித்திருந்தாள். வெறிகொண்ட கொடுங்கரமேந்தி சிறிய வெள்ளிக்கத்தியால் புறாவின் கழுத்தை அறுத்தார் வீரையா. அத்தையின் மூக்கின் கீழ்ப்பகுதியில் புறாவின் குருதிச் சாரல். சிந்தும் குருதியை குப்பியொன்றில் பிடித்து, ஏதேதோ மந்திரங்கள் சொல்லி அடைத்துக் கொண்டார். அத்தை கண்களை மூடிக்கொண்டு “என்ர தெய்வமே” என்று உடல் நடுங்கினாள். வீரையா ஒருபிடி திருநீற்றையள்ளி குப்பியிலிட்டார். புறாக்குருதியும் நீறும் குப்பியில் கலந்தன. காட்டின் திக்குகள் அறிந்து திருநீற்றை ஊதி “தெய்வம் உன்னோட இருக்கும், தெய்வம் உன்னோட இருக்கும்” என்று சொன்னார். கூப்பிய தனது கரங்களை இன்னும் இறுக்கியபடி “நீயொரு சக்தியுள்ள தெய்வமெண்டால் என்ர மகள காப்பாத்திப் போடு” என்ற அத்தைக்கு மேலே குருவியுண்டு கனிந்த காட்டுப்பழமொன்று உதிர்ந்தது. அந்தக் குப்பியை ஒரு சிறிய துணிப் பொட்டலமாக கட்டிக்கொடுத்து “ அவளின்ர கழுத்தில இது எப்பவும் இருக்கவேணும். அவளுக்கு இதைவிடவும் ஒரு காவலில்லை. துணையில்லை. விளங்குதோ” என்றார். அத்தை பயபக்தியோடு அதை வாங்கி, அவரது காலைத் தொட்டு வணங்கி எழும் போதுதான் காட்டுக்குள் சிலர் கதைக்கும் சத்தம் கேட்டது. வீரையா விழிப்புற்று தடயங்களை அழித்தார். பொருட்களை அள்ளிக் கொண்டார். புறாக்கூடையை எடுத்துக் கொண்டார். அத்தையை தன்னோடு அழைத்துச் சிறிது தூரம் ஓடிச் சென்றார். மறைவிடத்தில் பதுங்கினார்கள். அத்தைக்கு மூச்சுத் திணறியது. அகப்பட்டால் மரணமன்றி வேறேது என்றுரைத்தபடி சத்தம் கரையும் திசை வரை காதை வளர்த்தார் வீரையா. அது புதிய போராளிகளின் அணி. பயிற்சி முடித்து காடு வழியாக நடத்திச் செல்லப்படுகிறார்கள் என்பதை வீரையா விளங்கிக் கொண்டார். “சரி நீங்கள் தாறத தந்திட்டு கெதியா வெளிக்கிடுங்கோ” அத்தை தன்னுடைய பணப்பையிலிருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து நீட்டினாள். வீரையாவுக்கு அதில் திருப்தியில்லை. “எனக்கு நீங்கள் பிச்சை போடவேண்டாம். என்ர வேலைக்கு தகுந்த காசு குடுங்கோ” என்றார் வீரையா. “இந்த மாசம்தான் நான் சீட்டு எடுக்கப்போறன். காசு வந்ததும் உங்களிட்ட செவிடன் ரத்தினம் மூலமாய் சேர்ப்பிக்கிறன். அதுவரைக்கும் பொறுத்துக் கொள்ளுங்கோ” அத்தை சொன்னாள். வீரையா சரியென்று சொல்லி தலையசைத்து “ஊருக்குள்ள போகேக்க கவனமாய்ப் போ, எந்தக் கஷ்டம் வந்தாலும் என்ர பேரைச் சொல்லிப்போடாத, தெய்வத்தைக் காட்டிக் குடுத்த பாவம் உன்ர குலத்தையே அழிக்கும்” என்றார். “வீரையாவைச் சந்திக்க காட்டில் ஒரு பாதையிருக்கு. அது இயக்கத்திற்கும் தெரியாது, ஆர்மிக்கும் தெரியாது. அமெரிக்காவுக்கும் தெரியாது, அன்ரன் பாலசிங்கத்துக்கும் தெரியாது” என்று கள்வெறியில் புலம்பிய வியட்நாம் பெரியப்பாவை இயக்கத்தின் புலனாய்வுப் பிரிவினர் பிடித்துச் சென்றனர். இந்தச் செய்தியோடு ஊருக்குள் நுழைந்ததும் அத்தைக்கு திகில் பெருகிவிட்டது. குளித்து முடித்து சமையல் செய்தாள். உள்ளேயொரு ஆடை அணிந்து அதற்குள் உணவைப் பத்திரமாக பதுக்கிக் கொண்டாள். மீண்டும் மேலேயொரு ஆடை. மலங்கழிக்க செல்லும் பாவனையோடு போத்தில் தண்ணீரோடு காட்டிற்குள் புகுந்தாள். காடெங்கும் அசையும் மரத்தின் இலைகள், தன்னைக் கண்காணிக்கும் காலத்தின் கண்களென அத்தை பதறினாள். பதினைந்து நாட்களாக காட்டுக்குள்ளேயே அமர்ந்திருக்கும் பூதவதியின் நிலையெண்ணி அத்தையால் எதுவும் செய்ய இயலாமாலிருந்தது. பூதவதி காத்திருக்கும் கருங்காலி மரத்தடியில் வேறு ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவருடைய கையில் சிறிய கோடாரியும், தலையில் பெரிய கடகமொன்றுமிருந்தது. அத்தை புதரொன்றுக்குள் படுத்துக் கொண்டாள். கருங்காலி மரத்தின் கீழே நின்றவர் பூமியின் கீழே புதையுண்டு போவதைப் பார்த்து கூக்குரலிட்டாள். சத்தம் எழவில்லை. சில நிமிடங்கள் கழித்து அவள் சுயத்திற்கு திரும்பிய போது பூதவதியின் மடியில் கிடந்தாள். “என்னம்மா, சின்னப்பிள்ளையள் மாதிரி காட்டுக்குள்ள எதையோ பார்த்திட்டு கத்தி மயங்கிப் போறியள்” “எடியே, அது எதோ இல்ல. எங்கட கருங்காலி முனி” “நீ முனியைப் பார்த்துக் கத்தி, புலி என்னப் பிடிச்சுக் கொண்டு போகப்போகுது” என்றாள் பூதவதி. “அது இனிமேல் நடக்காது. நான் வீரையாவ போய் பார்த்து காவலுக்கு எல்லாமும் செய்து எடுத்துக் கொண்டு வந்திட்டன்” சொல்லியபடி அந்தப் பொட்டலத்தைக் கொடுத்தாள். பொட்டலம், குருதிக் கறையோடு திருநீற்று வாசமெழும் வெள்ளை நிறச் சுண்டுவிரல் போலவிருந்தது. “இதை உன்ர கழுத்தில கட்ட வேணும். புலியில்லை. எலி கூட உன்னை நெருங்காது. வீரையா சும்மா ஆளில்லை. விளங்குதா” என்றாள் அத்தை. பூதவதி சாப்பிட்டு முடித்தாள். கழுத்தில் பொட்டலத்தை கட்டிவிட்டு அத்தை காட்டை விட்டுப் புறப்பட்டாள். பூதவதி காட்டின் நடுவே சீற்றம் கொண்டு உலரும் பேய் மகளாய் தேசம் பார்த்து வெறித்திருந்தாள். வீட்டுக்கு ஒருவர் கட்டாயமாக இயக்கத்தில் சேர்ப்பிக்கப்பட்டார்கள். பிள்ளைகளைக் காப்பாற்ற வழியற்று சனங்கள் காடுகளுக்குள் பாய்ந்தனர். இரவும் பகலும் துரத்தப்பட்டனர். படையில் பலாத்கார ஆட்சேர்ப்புக்கு எதிராகக் கொதித்தனர். தெய்வங்கள் உறைந்த வெளியில் பிள்ளைகள் பலி கேட்கப்பட்டனர். வீடுகளுக்கு நடுவே சின்னச் சுரங்கங்கள் வளர்ந்தன. மூச்சுப்பிடித்து மண்ணுக்குள் கிடந்தனர். புறாக்கூடுகளுக்குள், சுடுகாடுகளுக்குள், வைக்கோல் போருக்குள், பாழ் கிணற்றுக்குள், குளத்துக்குள் என காலத்தின் வேட்டைப்பற்களுக்குள் சிக்க விரும்பாத மாம்சங்களாய் தப்பிக்க எண்ணினர். “பூமியிலுள்ள எல்லாவற்றுக்கும் எங்கட சனங்களின் ரத்தம் தேவைப்படுகிறது” விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்டிருந்த வியட்நாம் பெரியப்பா சொல்லிக்கொண்டிருந்தார். வீரையா காட்டின் எந்தப் பகுதியில் இருக்கிறாரென அறியவே விசாரணை நடந்திருக்கிறது.“அது இயக்கத்திற்கும் தெரியாது. ஆர்மிக்கும் தெரியாது. அமெரிக்காவுக்கும் தெரியாது, அன்ரன் பாலசிங்கத்துக்கும் தெரியாது” என்று நான் சொல்லும்போதே எனக்கும் தெரியாது என்று சொல்லியிருக்கவேணும். அது என்ர பிழை தான். அதுக்காக என்னை நீங்கள் துரோகி எண்டு நினைக்க வேண்டாம். கிட்டண்ணா யாழ்ப்பாணத்தில இருக்கும் போது, அவருக்கு நிறைய மாம்பழங்கள் குடுத்திருக்கிறன்” என்றிருக்கிறார். கடுமையான மழை பெய்து கொண்டிருந்த அதிகாலையில் காட்டிற்குள் போராளிகளின் நடமாட்டத்தைப் பார்த்த வீரையா வேறொரு திக்கில் ஓட்டம் பிடித்தார். ஆனால் பச்சை நிறப்பட்டுத் துணியையும், கால்கள் கட்டப்பட்டிருந்த மாடப்புறாவையும் அவசரத்தில் விட்டுச் சென்றிருந்தார். அணியின் தலைமை அதிகாரி அந்த இடத்தை ஆய்வு செய்ய கட்டளையிட்டார். ஆழ ஊடுருவி அப்பாவிச் சனங்களைக் கொன்று குவிக்கும் வன்கவர் வெறிப்படையைத் தேடிய அணியினரின் கண்களில் வீரையாவின் தளம் சிக்கியது. மறைத்து வைக்கப்பட்ட திருநீற்று மூட்டையும், பெருந்தொகைப் பணமும், நகைகளும், அறுக்கப்பட்ட புறாத்தலைகளும் கைப்பற்றப்பட்டது. பல்வேறு புலனாய்வு விசாரணைகளுக்குப் பிறகு வீரையாவின் இடமென உறுதியாயிற்று. காடெங்கும் விரவி தேடத் தொடங்கினர் போராளிகள். பூதவதியைப் போல பலருக்கு வீரையா பொட்டலம் கட்டிக் காவல் செய்திருக்கிறார். சிலரைத் தான் இயக்கத்தாலும் நெருங்க முடிந்தது. ஆனால் வீரையாவை அவர்கள் அன்று மதியமே நெருங்கிப் பிடித்தனர். வீரையா தன்னிடமிருந்த புறாக்களை அவர்களை நோக்கி வீசி தற்காத்திருக்கிறார். காட்டிற்குள் மண்டியிட்டு கைகளை உயர்த்தி “தனது எஜமானர்களின் குருத்தையுண்டு வாழும் பிராணிகள் அழிந்துபோம்” என்று மட்டும் வீரையா அறம்பாடியிருக்கிறார். அவர் கைது செய்யப்பட்ட செய்தி, வன்னி நிலம் முழுக்க பாய்ந்தோடியது. அவரிடம் காவல் வாங்கியவர்கள் எச்சிலை விழுங்க முடியாமல் தொண்டையைப் பிடித்துக் கொண்டு மிரண்டனர். செவிடன் ரத்தினம் உட்பட வீரையாவிற்கும் சனங்களுக்கும் இடைத்தரகராக இருந்தவர்கள் பலரையும் இயக்கம் சடுதியாக கைது செய்தது. அவர்களுக்கு வழங்கப்பட்ட தொகை கணக்கிடப்பட்டது. ஆனால் அவரிடம் சென்று வந்த சனங்களை விசாரணைக்கு அழைக்கவில்லை. அந்தக் குழப்பமே பலருக்கு உறக்கத்தை தரவில்லை. வீரையாவை இயக்கம் சுட்டுக் கொல்லுமென அத்தை நம்பினாள். பூதவதி காட்டை விட்டு வெளியேறும் எண்ணத்தில் இருந்தாள். அத்தை வேண்டாமென தலைப்பாடாய் அடித்துக் கொண்டாள். “எத்தன நாளைக்குத் தான் இப்பிடி காட்டுக்குள்ள இருந்து ஆந்தை மாதிரி முழிக்க ஏலும். நான் போறன். அங்க போய்ச் சாகிறன்” “எடியே, நான் கும்பிடுகிற தெய்வம் உன்னைக் காப்பாத்தும். நீ கொஞ்சம் குழம்பாம இரு” “இல்ல, இஞ்ச காப்பாத்திற உன்ர தெய்வம், எல்லா இடத்திலையும் காப்பாத்தும் தானே, என்னால இனியொரு நிமிஷமும் இஞ்ச இருக்கேலாது” பூதவதியை கன்னத்தில் ஓங்கி அறைந்தாள் அத்தை. கழுத்தில் கிடந்த பொட்டலத்தை அறுத்து எறிந்தாள் பூதவதி. கழுத்துப் புடைத்து கண்கள் சிறுத்து புறாவாக எழுந்து பறக்க முனைந்தாள். அடுத்த கணத்தில் அவளது தலை அறுபட்டு நிலத்தில் துடிக்க, காடு ஒரு குப்பியாக அவளது குருதியை நிரப்பிக்கொண்டது. அய்யோ என்ர பிள்ளை என்று அத்தை எழுப்பிய சத்தம் கேட்டு நள்ளிராப் போழ்தின் நாய்கள் மிரண்டன. தலைமாட்டில் கிடந்த லாம்பைத் தீண்டி ஊரெழும்பியது. அத்தை வெளிச்சம் எதுவுமின்றி காட்டுக்குள் நுழைந்தாள். பூதவதியின் இருப்பிடம் நோக்கி அலறித் துடித்தது தாய்மை. ஒவ்வொரு திரளிலும் காடு இருளால் அசைந்தது. அத்தை நெடுமூச்சு விட்டு பூதவதி…பூதவதி என்று அழைத்துக் கொண்டே கருங்காலி மரத்தைக் கடக்கும் போது, அதில் நின்ற உருவம் அவளை மறித்தது. அத்தைக்கு திடுக்கிடல் எதுவுமில்லை. “என்ர முனியப்பா, வழிவிடு. துர்க்கனவு. பிள்ளையைப் பார்க்கவேணும்” முனி எதுவும் கதைக்கவில்லை. அவளைப் போ என்பதைப் போல கையசைத்தது. அத்தை பூதவதியின் இருப்பிடத்திற்குப் போன போது அங்கு அவளில்லை. இருளின் தோல் கிழித்து தன் பிள்ளையைத் தேடினாள் அத்தை. இல்லை, இல்லை. பூதவதி இல்லை. கையில் அகப்பட்ட கற்றையான தலைமுடியைப் பற்றிக் கொண்டு கதறியழுதாள். அவளுடைய காலணிகள் அறுபட்டிருந்தன. பொட்டலத்தின் முடிச்சு அவிழாமல் கழன்று விழுந்திருந்தது. காடுறைத் தெய்வங்கள் கண் மலர்த்தி கசிந்த கண்ணீர் இரவை எரியூட்டின. கருங்காலி மரத்தின் கீழே நின்றிருந்த முனிக்கு தகவல் வந்தது. அது தனது ஆயுதத்தை எடுத்துக் கொண்டு வாகனம் நிற்கும் திசையை நோக்கிப் போனது. அந்தக் காட்டிற்குள் மறைந்திருந்த எட்டுக்கு மேற்பட்டவர்களை அழைத்துக் கொண்டு முனியின் வாகனம் புறப்பட்டது அத்தைக்கு தெரியவில்லை. ஐந்து நாட்கள் கழித்து பூதவதி இயக்கத்தின் பயிற்சி முகாமிலிருந்தாள். அவளுக்கு ஆயுதத்தை தொடப் பிடிக்கவில்லை. தன்னால் முடியாதென மறுத்தாள். சில நாட்களுக்குப் பின் பயிற்சிக்கு ஒத்துக் கொண்டாள். மூன்று மாதங்களில் பயிற்சி முடிந்திருந்தது. வீரையாவின் பொட்டலம் கட்டப்பட்டிருந்த கழுத்தில் இப்போது நஞ்சு மாலை அணிந்தாள். பயிற்சி நிறைவு பெற்று தர்மபுரத்தில் நிகழ்ந்த போராளிகள் சந்திப்பில் பூதவதியைச் சென்று அத்தை பார்த்தாள். அவளுக்குப் பிடித்த பயித்தம் பணியாரமும், முறுக்கும் கொண்டு போயிருந்தாள். “நீ ஓடி வந்திடு. உன்ன நான் எப்பிடியாவது காப்பாத்தி வைச்சிருப்பன்” “அம்மா, எங்களை மன்னார் சண்டைக்கு அனுப்பப் போயினம். அங்க இருந்து வட்டக்கச்சிக்கு ஓடி வர ஏலுமே” “உனக்கு உந்த நக்கல் புண்டரியம் மட்டும் உதிர்ந்து தீராது என்ன” “அம்மா, உன்னோட இருந்தால் சாகாமல் இருக்க முடியுமோ சொல்லு. இஞ்ச எப்பிடியாய் இருந்தாலும் மண்ணுக்குள்ள தான். இந்தச் சாவில ஒரு ஆறுதல்” “என்னடி பிரச்சாரம் பண்ணுறியே” “பின்ன, கருங்காலி முனி மட்டும் என்ன, பயந்து செத்துப்போன தெய்வமே, துணிஞ்சு நிண்டவர் தானே, அதுமாதிரி நானும் நிண்டு சாகிறன். விடன்” “கருங்காலி முனியும் நீயும் ஒண்டோடி, என்னடி கதைக்கிறாய். துவக்கை கையில தூக்கினால் உங்களுக்கு தெய்வமும் தெரியுதுல்ல. கருங்காலி முனி, அண்டைக்கிரவு நான் ஓடி வரேக்க வழி மறிச்சு நிண்டது. பிறகு கை காட்டி போ எண்டு உத்தரவு சொன்னதெல்லாம் உனக்குத் தெரியாது” “அண்டைக்கு அங்க நிண்டது முனியில்லை. புலி. மேஜர் பகீரதன். பத்து நாளுக்கு முன்னாலதான் கிபிர் அடியில வீரச்சாவு அடைஞ்சிட்டார். “நீ முனியெண்டு நினைச்சு அவரிட்ட கதைச்சதை என்னட்ட சொல்லிச் சிரிச்சவர்” என்றாள். “இவங்கள் முனியாவும் உருமறைப்பு செய்யத் தொடங்கிட்டாங்களே” “இப்ப அவரும் முனி தான். நீ போய்ப்பார். கருங்காலி மரத்தடியில நிற்பார்” பூதவதி சிரித்துக் கொண்டு விடைபெற்றாள். “என்ர தெய்வமே” என்று அத்தை தன்னுடைய பிராணத்தை இழுத்து வெளியேற்றினாள். வீட்டிற்கு வந்து அழுதழுது நொந்தாள். சனங்களை ஏமாற்றி காசு, நகை போன்றவற்றை வாங்கியமைக்காக வீரையாவுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டதாக செய்திகள் உலவின. மன்னார் களமுனையில் பூதவதி சமராடினாள். பகைவர் அஞ்சும் போர்க்குணத்தோடு எல்லையில் நின்றாள். விடுமுறை அளித்தும் வீடு செல்ல மாட்டேனென அடம்பிடித்தாள். மன்னாரில் இருந்து முள்ளிவாய்க்கால் வரையிலான களமெங்கும் அனலாடினாள். அத்தை வீட்டுக்கு வருமாறு கடிதத்துக்கு மேல் கடிதம் கொடுத்தனுப்பினாள். பூதவதி வருவதாயில்லை. முள்ளிவாய்க்காலில் அத்தையை கூடாரத்தில் வந்து பார்த்தாள். அத்தை இப்படியே இங்கேயே தங்கிவிடு என்று கைகூப்பினாள். பூதவதி கூடாரத்தை விட்டு தனது அணியினரோடு புறப்பட்டாள். சில நாட்களில் சனங்கள் நிலத்தைக் கைகூப்பி தொழுதனர். நிலம் அவர்களை மட்டுமல்ல தன்னையும் பறிகொடுத்தது. இறுதிப்போரில் காணாமல்போனவர்கள் பட்டியலில் பூதவதியுமொருத்தியானாள். அத்தை சோதிடர்கள் சொல்வதைக் கேட்டு பூதவதி வருவாள் என்று நம்பிக் காத்திருந்தாள். ஊருக்குள் எல்லோரும் மீளக்குடியமர்த்தப்பட்டனர். நீண்ட வருடங்களின் பின்னர் பன்றி வேட்டைக்குச் சென்று திரும்பியவர்கள் கருங்காலி மரத்தின் கீழே பெண்ணொருத்தி நின்று மறைவதைக் கண்டிருக்கிறார்கள். அவளுடைய கழுத்தில் சுண்டு விரலளவில் பொட்டலம் தொங்கிக் கொண்டிருந்ததாகவும், தோளில் புறாவொன்று கால்கள் கட்டப்பட்டு பறக்க முடியாமல் சிறகடித்ததாகவும் சொன்னார்கள். அத்தை மறுகணமே கருங்காலி மரம் நோக்கி ஓடிச் சென்று பூதவதி… பூதவதி… என்று நிலம் தோய அழுதாள். மரம் அசைய மேலிருந்து நறுமணம் கமழ பொட்டலங்கள் உதிர்ந்தன. அத்தை ஒன்றைப் பிரித்துப் பார்த்தாள். ரத்தம் கண்டி நாள்பட்டிருந்த பூதவதியின் கால் பெருவிரல். “என்ர தெய்வமே” யென அதைக் கண்களில் ஒத்திக்கொண்ட அத்தையை நடுநடுங்கிப் பார்த்துக் கொண்டிருந்தது காடு. அத்தையின் முன்னே தோன்றி நின்றனர் பல்லாயிரம் முனிகள். https://akaramuthalvan.com/?p=11671 point - இரசித்த.... புகைப்படங்கள்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.