தமிழர்களின் தாயகக் கோட்பாட்டினைச் சிதைத்து, அழித்துவிட உருவாக்கப்பட்ட குடியேற்றத் திட்டங்கள்
தேவநாயகத்தின் பத்திரிக்கையாளர் அழைப்பிற்கு வந்தவர்கள் ஓரளவிற்கு நடுநிலைமையுடன் நடந்துகொணடதுடன் அதற்குத் தேவையானளவு முக்கியத்துவத்தையும் தமது ஊடகங்களில் வழங்கியிருந்தனர். ஆனால், இந்த பத்திரிக்கையாளர் சந்திப்பு மகாவலி அபிவிருத்தி அமைச்சிற்கு மிகுந்த கோபத்தினை ஏற்படுத்தியிருந்தது. அமைச்சகத்தைக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த சிறிய, ஆனால் பலம்வாய்ந்த குழுவினர் உடனடியாக நடவடிக்கையில் இறங்கினர். தமிழ் மக்களின் தாயகக் கோட்பாட்டுடனான தனிநாட்டுக்கான கோரிக்கையின் அஸ்த்திவாரத்தினை முற்றாகத் தவிடுபொடியாக்கிவிட மகாவலி அபிவிருத்தி என்கிற பெயரில் தாம் எடுத்துவரும் இரகசிய நடவடிக்கைகளை தேவநாயகத்தின் இந்த முயற்சி முறியடித்துவிடும் என்று அவர்கள் அஞ்சினர். ஆகவே தமது இரகசியத் திட்டத்தினை துரிதப்படுத்தும் வேலைகளை அவர்கள் ஆரம்பித்தனர்.
மகாவலி அமைச்சில் செயற்பட்டு வந்த அதிதீவிர சிங்கள அமைப்பினால் இந்த இரகசியத் திட்டம் தயாரிக்கப்பட்டது. இக்குழுவிற்கு திட்டமிடல்ப் பிரிவின் இயக்குநர் டி.எச். கருணாதிலக்கவும், மகாவலி அபிவிருத்தி அமைச்சர் காமிணி திசாநாயக்கவின் செயலாளர் ஹேமப்பிரியவும் தலைமை தாங்கினர். இவர்களுக்கு மேலதிகமாக அமைச்சில் பணியாற்றிய ஏனைய உயர் அதிகாரிகள், சர்வதேச பிரசித்தி பெற்ற சிங்களக் கல்விமான்கள் ஆகியோரும் இத்திட்டத்திற்கு உதவிகளை வழங்கிவந்தனர். தமது திட்டத்தினை செயற்படுத்த மலிங்க ஹேர்மன் குணரட்ணவை இக்குழுவினர் அமர்த்திக்கொண்டனர். அமைச்சகத்தின் மேலதிக பொது முகாமையாளர் எனும் பதவியும் இத்திட்டத்தினை நடைமுறைப்படுத்துவதற்காக அவருக்கு வழங்கப்பட்டது.
1990 ஆம் ஆண்டு கொழும்பில் அவரது வீட்டில் என்னுடன் பேசிய ஹேர்மன் குணரட்ண, தமது இரகசியத் திட்டத்திற்கு மகாவலி அபிவிருத்தி அமைச்சரான காமிணி திசாநாயக்க முழு ஆதரவினையும் வழங்கியதாகக் கூறினார். ஜனாதிபதி ஜெயாரும் இத்திட்டத்திற்கு முற்றான ஆதரவினை வழங்கியிருந்ததாக தான் நம்புவதாகவும் அவர் கூறினார். தனது நம்பிக்கைக்கான காரணங்களாக பின்வரும் இரு விடயங்களை அவர் முன்வைத்தார். "முதலாவது காரணம், எமது இரகசியத் திட்டத்திற்கு முற்றான ஆதரவினை வழங்கிய மூன்று முக்கிய மனிதர்களும் ஜனாதிபதியின் நம்பிக்கைக்குப் பாத்திரமாகச் செயற்பட்டவர்கள்". அவர் குறிப்பிட்ட அந்த மூன்று முக்கிய நபர்கள், ஜெயாரின் மகனான ரவி ஜெயவர்த்தன, ஜெயார் தனது இன்னொரு மகனாக நடத்திவந்த அமைச்சர் காமிணி திசாநாயக்க, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக ஜெயாரினால் நியமிக்கப்பட்ட பண்டிதரட்ண ஆகியோராகும். இவர்கள் மூவரும் ஜெயாரிடமிருந்து எந்த விடயத்தையும் மறைப்பதில்லை என்று அறியப்பட்டவர்கள்.
ஹேர்மன் குணரட்ண கூறிய இரண்டாவது காரணம், மாதுரு ஓயா சிங்கள ஆக்கிரமிப்பில் ஈடுபட்டவர்களைக் கைதுசெய்யுமாறு ஜெயார் அறிவித்த அதே நாளான ஐப்பசி 6 ஆம் திகதி தனது வீட்டில் நடைபெற்ற நிதிதிரட்டும் நிகழ்வில் தன்னிடம் கேள்விகேட்ட தாஸ முதலாலிக்குத் காமிணி திசாநாயக்க வழங்கிய பதிலாகும். இதுகுறித்து பின்னர் விரிவாகப் பார்க்கலாம். காமிணியிடம் பேசிய தாஸ முதலாளி, "மகாவலி அமைச்சின் இரகசியத் திட்டம் குறித்து ஜனாதிபதிக்குத் தெரியுமா?" என்று வினவியிருந்தார். அதற்குப் பதிலளித்த காமிணி, "ஜனாதிபதிக்கு இத்திட்டம் தெரியும் என்பது மட்டுமல்லாமல், இத்திட்டத்தினை வெற்றிகரமாக பூரணப்படுத்த ஜனாதிபதி நிதியத்திலிருந்தும் பெருமளவு பணத்தினை அவர் வழங்க முன்வந்திருக்கிறார்" என்று பதிலளித்தார்.
பண்டிதரட்ண
1983 ஆம் ஆண்டின் கறுப்பு யூலை இனக்கொலை நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னதாக, மகாவலி அபிவிருத்தி அமைச்சின் குளிரூட்டப்பட்ட அறைகளில் ஒன்றில், பண்டிதரட்ண தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இந்த இரகசியத் திட்டத்திற்கான மூலம் விதைக்கப்பட்டது. அமைச்சகத்தில் பணிபுரியும் தமிழ் அதிகாரிகளுக்கு இத்திட்டம் தெரியாதவகையில் மிகவும் இரகசியமான முறையில் தீட்டப்பட்டது.
இரகசியத் திட்டம் இரு கட்டங்களாக நடைமுறைப்படுத்தப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது. முதலாவது, தமீழத்திற்கான அடிப்படையினை முற்றாக அழிப்பது. இதனை அடைவதற்கு தமிழர் தாயகத்தின் நிலத்தொடர்பினையும், ஒருமைப்பாட்டினையும் உடைக்கும் நோக்கில், தமிழர் தாயகத்தின் மாதுரு ஓயா, யன் ஓயா, மல்வத்து ஓயா ஆகிய நதிகளை அண்டிய பகுதிகளில் சிங்களக் குடியேற்றங்களை உருவாக்குவது. மாதுரு ஓயா விவசாயக் குடியேற்றத்தின் மூலம் திருகோணமலை மாவட்டத்திற்கும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கும் இடையே இருந்த நிலத்தொடர்பு முற்றாக அறுத்தெறியப்படும். யன் ஓயாக் குடியேற்றத்திட்டத்தின் மூலம் திருகோணமலை மாவட்டத்திற்கும் முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் இடையிலான நிலத்தொடர்பு கடுமையாகச் சிதைக்கப்படும். மல்வத்து ஓயா திட்டத்தின் ஊடாக மன்னார் மற்றும் புத்தளம் மாவட்டங்களுக்கிடையிலான தொடர்பு துண்டிக்கப்படும்.
திருகோணமலை மட்டக்களப்பு மாவட்டங்களின் நிலத்தொடர்பை அறுத்தெறியும் மாதுரு ஓயா குடியேற்றத் திட்டம்
திருகோணமலை முல்லைத்தீவு மாவட்டங்களுக்கிடையிலான நிலத்தொடர்பினைச் சிதைக்கும் யன் ஓயாக் குடியேற்றம்
புத்தளம் மன்னார் ஆகிய மாவட்டங்களைப் பிரிக்கும் மல்வத்து ஓயா குடியேற்றம்
இரகசியத் திட்டத்தின் முதலாவது கட்டம் தமிழர் பெரும்பான்மையினராக வாழும் வடமாகாணம் மற்றும் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டங்களை விலத்தியே அமுல்ப்படுத்துவது என்று முடிவெடுக்கப்பட்டது.
"இறையாண்மை கொண்ட நாட்டினை உருவாக்க" எனும் தலைப்பில் தான் எழுதிய புத்தகம் தொடர்பாக சண்டே டைம்ஸ் பத்திரிகையில் 1990 ஆம் ஆண்டு ஆவணி 26 ஆம் திகதி, இந்த இரகசியத் திட்டத்தினை முன்னெடுத்தவர் என்கிற வகையில் ஹேர்மன் ஒரு கட்டுரையினை வரைந்திருந்தார். என்னுடன் பேசுகையில் இத்திட்டத்தின் எல்லைகள் குறித்தும் குறிப்பிட்டார் ஹேர்மன். தமிழர் தாயகத்தில் முன்னெடுக்கப்படும் இத்திட்டங்கள் ஒவ்வொன்றிலும் 50,000 சிங்களவர்களைத் தாம் குடியேற்றத் திட்டமிட்டதாகவும், இதன்மூலம் இப்பகுதிகளின் இனப்பரம்பலினை முற்றாக மாற்றிவிடுவதே தமது நோக்கம் என்றும் அவர் கூறினார்.
குணரட்ணவுடன் பேசும்போது அவர் ஒரு நேர்மையான மனிதர் என்பதனை என்னால் உணர்ந்துகொள்ள முடிந்தது. தனது திட்டம் வெற்றியடைய வேண்டும் என்று அவர் கொண்டிருந்த உறுதிப்பாடும், அதற்காக அவர் நேர்மையாக உழைத்த விதமும் என்னை ஆச்சரியப்பட வைத்தன. அவருடன் நான் பேசிக்கொண்டிருக்கும்போது, "நீங்கள் எதற்காகச் சண்டை பிடிக்கிறீர்கள்?" என்று என்னைக் கேட்டார் ஹேர்மன். "தமிழர்களுக்கென்று தனியான நாட்டினை உருவாக்கவே போராடுகிறோம்" என்று நான் பதிலளித்தேன். "தமிழ் ஈழத்திற்கான அடிப்படையினையே நாம் அழித்துவிட்டால், அதன்பிறகு தமிழீழத்திற்காக நீங்கள் போராட முடியாது, இல்லையா?" என்று அவர் கேட்டார். பின்னர் சலித்துக்கொண்டே, "தமிழ் ஈழத்திற்கான அடிப்படையினைச் சிதையுங்கள் என்று அவர்களே எங்களிடம் கூறிவிட்டு, பின்னர் சர்வதேசத்திற்குக் காட்ட எம்மை சிறையில் அடைத்து தம்மை நேர்மையானவர்களாகக் காட்டிக்கொள்வார்கள். குள்ளநரிக் கூட்டம்" என்று அவர் மேலும் கூறினார். குணரட்ண உடபட 40 மகாவலி அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் அரசால் தடுத்து வைக்கப்பட்டார்கள். ஒருவரோடு ஒருவர் தொடர்புகொள்ள முடியாத பொலீஸ் தடுப்புக்காவல் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இவர்கள் மீது நீணட தொடர்ச்சியான விசாரணைகளும் அரசால் முன்னெடுக்கப்பட்டன.
தொண்டைமானின் சுயசரிதையினை நான் எழுதியது குறித்து முன்னர் கூறியிருந்தேன். இதுதொடர்பான மேலதிகத் தகவல்களை சேகரிப்பதற்காக பெருந்தோட்டத்துறையில் ஆரம்பத்தில் பணியாற்றியவர் என்கிற ரீதியில், ஹேர்மன் குணரட்ணவைச் சந்திக்க தொண்டைமான் என்னை அனுப்பியிருந்தார். நான் அவரைச் சந்திக்க வருவது குறித்து தொண்டைமானின் செயலாளர் திருநாவுக்கரசு ஏற்கனவே குணரட்ணவிடம் தெரிவித்திருந்தமையினால், என்னுடன் ஒளிவுமறைவின்றி அவர் பேசினார். தான் எவ்வாறு கைதுசெய்யப்பட்டேன், தொண்டைமான் தன்னை எவ்வாறு பிணையில் விடுவித்தார் என்பது குறித்த பல தகவல்களை குணரட்ண என்னிடம் கூறினார்.
"காலை 4 மணியிருக்கும், எனது வீட்டுக் கதவினை யாரோ பலமாகத் தட்டும் சத்தம் கேட்டது. திறந்துபார்த்தால் உதவிப் பொலீஸ் அத்தியட்சகர் ரொனி குணசிங்க அங்கு நின்றிருந்தார். எனது வீட்டைச் சுற்றிப் பல பொலீஸார் நிற்பதும் எனக்குத் தெரிந்தது. வீட்டில் எனது புதல்விகள் மட்டுமே இருந்தனர். மாதுரு ஓயா இரகசியத் திட்டத்திற்காகவே நான் கைதுசெய்யப்படுவதாக ரொனி என்னிடம் தெரிவித்தார். நான் உடனேயே, இக்கைது குறித்து ஜனாதிபதிக்குத் தெரியுமா என்று ரொனியிடம் கேட்டேன். உங்களைக் கைது செய்யச் சொல்லி என்னை அனுப்பியதே ஜனாதிபதிதான் என்று ரொனி பதிலளித்தார். அப்படியானால், காமிணி திசாநாயக்கவுக்கு இக்கைது பற்றித் தெரியுமா என்று நான் மீண்டும் கேட்டேன். நீங்கள் என்னுடன் பொலீஸ் நிலையத்திற்கு வாருங்கள், இவைகுறித்து விரிவாக அங்கே பேசலாம் என்று அவர் பதிலளித்தார். என்னைக் கைதுசெய்து ஜீப் வண்டியில் தள்ளி ஏற்றிய விதத்தினைக் கண்ட எனது புதல்விகள் நடுங்கிப் போயினர்" என்று குணரட்ண என்னிடம் கூறினார்.
பொலீஸ் நிலையத்திலிருந்து காமிணி திசாநாயக்கவையும், பண்டிதரட்னவையும் தொடர்புகொள்ள தான் எடுத்த முயற்சிகள் தோல்வியில் முடிவடைந்ததாக குணரட்ண கூறினார். ஆனால், பெருந்தோட்டத்துறையில் பணிபுரிந்த நாட்களில் தனக்குப் பரீட்சயமான தொண்டைமானுடன் தன்னால் தொடர்புகொள்ள முடிந்ததாக அவர் கூறினார். "எனது அவல நிலையினை அவரிடம் கூறினேன். எனது புதல்விகள் குறித்த எனது கவலையினைனை அவரிடம் கூறினேன். அதன்பின் உடனடியாக என்னைப் பிணையில் விடுவித்தார்கள். ஜனாதிபதியுடன் தொடர்புகொண்ட தொண்டைமான் என்னை விடுவிக்கும்படி கேட்டுக்கொண்டதனாலேயே ஜெயார் என்னை பிணையில் செல்ல அனுமதித்ததாக நான் பின்னர் அறிந்துகொண்டேன். நான் தமிழர்களுக்கு எதிராக வேலை செய்கிறேன் என்பது அவருக்குத் தெரிந்தே இருந்தது. அப்படியிருந்தபோதும் அவர் எனக்கு உதவினார். அவருக்கு நான் எப்போதும் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று அவர் கூறினார்.
இரகசியத் திட்டத்தின் இரண்டாவது கட்டம், முதலாவது கட்டத்தின் மூலம் மாற்றியமைக்கப்பட்ட இனப்பரம்பலினைப் பாவித்து இலங்கைக்கான புதிய மாகாண வரைபடத்தினை உருவாக்குவது. பின்வரும் நான்கு மாகாணங்களின் எல்லைகளை மீள உருவாக்குவது இரண்டாம் கட்டத்தின் ஒரு அங்கமாகும். அம்மாகாணங்களாவன, வட மாகாணம், வட மத்திய மாகாணம், வட மேற்கு மாகாணம் மற்றும் கிழக்கு மாகாணம் ஆகியனவவாகும். இந்த நான்கு மாகாணங்களினதும் எல்லைகளை மாற்றியமைப்பதன் மூலம் ஐந்தாவது மாகாணம் ஒன்றினை உருவாக்குவதே இதன் நோக்கம். இவ்வாறு உருவாக்கப்படும் புதிய மாகாணம், வட கிழக்கு மாகாணம் என்று அழைக்கப்படும்.
இவ்வாறு உருவாக்கப்படும் மாகாணங்களுக்குள் உள்ளடக்கப்படும் மாவட்டங்களாவன,
1. வடக்கு மாகாணம் : யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு
2. வட மத்திய மாகாணம் : வவுனியா, அநுராதபுரம், வலி ஓய (மணலாறு, முல்லைத்தீவு மாவட்டத்தை சிதைப்பதன் மூலம் புதிய மாவட்டமான வலி ஓய முல்லைத்தீவிலிருந்து பிரித்தெடுக்கப்படும்).
3. வட மேற்கு மாகாணம் : மன்னார், புத்தளம், குருநாகலை
4. வட கிழக்கு மாகாணம் : பொலொன்னறுவை, திருகோணமலை
5. கிழக்கு மாகாணம் : மட்டக்களப்பு, அம்பாறை
மாவட்ட எல்லைகளை இவ்வாறு மீள வரைவதன் மூலம் வட மாகாணம் மட்டுமே தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மாகாணமாக விளங்கும். தற்போதைய வடக்குக் கிழக்கு மாகாணங்களின் எஞ்சிய மாவட்டங்கள் சிங்களப் பெரும்பான்மை மாவட்டங்களாக மாற்றப்படும். தமிழர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட வடக்கு மாகாணத்தின் தென் எல்லையாக மாங்குளம் அமைந்திருக்கும்.
குணரட்ண தனது இரகசியத் திட்டத்தில் தொடர்ந்தும் உறுதியாக இருந்தார். தனது புத்தகத்தின் இரண்டாம் பாகத்தையும் அவர் அச்சிட்டு வெளியிட்டார். தமது திட்டம் தோல்வியடைந்தமைக்கான காரணம் அரச மேல் மட்டத்திலிருந்து தொடர்ந்தும் ஆதரவு கிடைக்காது போனமையே என்று அவர் நம்புகிறார்.
நதிகளை அண்டி உருவாக்கப்படும் புதிய மாவட்ட எல்லைகள்