சிறுநீரக நோய் பாதிப்பு அதிகரிப்பு - யாருக்கெல்லாம் வரும்? அறிகுறிகளும் தடுக்கும் வழிகளும் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 10 நவம்பர் 2025, 02:22 GMT இந்தியாவில் 13.8 கோடி பேருக்கு சிறுநீரக நோய் பாதிப்பு இருப்பதாக சமீபத்திய லான்செட் இதழில் வெளியான ஆய்வறிக்கை கூறுகிறது. உலகளவில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில் தான் சிறுநீரக நோய் பாதிப்புகளும் அதனால் ஏற்படும் உயிரிழப்புகளும் அதிகம் பதிவாகியுள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1990-ஆம் முதல் 2023 வரையிலான தரவுகள் அடிப்படையில் இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 2023-ஆம் ஆண்டு உலகளவில் 20 வயதுக்கும் மேற்பட்டவர்களில் 78.8 கோடி பேருக்கு நாள்பட்ட சிறுநீரக நோய் பாதிப்பு இருந்தது. 20 வயதுக்கு மேலானவர்களில் 14% பேர் சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் மூன்று தசாப்தங்களில் உலகளவில் இந்த எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. (1990-இல் 37.8 கோடி பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்) 2023-ஆம் ஆண்டு 14.8 லட்சம் பேர் நாள்பட்ட சிறுநீரக நோயால் உயிரிழந்துள்ளனர். உலகளவில் அதிக மரணங்களை ஏற்படுத்திய நோய்களில் சிறுநீரக நோய் 9வது இடத்தில் உள்ளதாக அந்த ஆய்வு கூறுகிறது. சீனாவில் 1,53,000 பேரும் இந்தியாவில் 1,24,000 பேரும் சிறுநீரக நோயால் உயிரிழந்துள்ளதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. உலகில் அதிகபட்சமாக சீனாவில் 15.2 கோடி பேரும், அதற்கு அடுத்த இடத்தில் உள்ள இந்தியாவில் 13.8 கோடி பேரும் நாள்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். பொருளாதாரத்தில் முன்னேறிய, வளர்ந்த நாடுகளில் சிறுநீரக நோய் பாதிப்பு விகிதம் குறைவாக உள்ளது. கடந்த 30 ஆண்டுகளில் சிறுநீரக நோயால் இறப்பவர்களின் விகிதம் அதிகரித்துள்ளதாக அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக சென்னை மருத்துவக் கல்லூரியின் சிறுநீரகவியல் துறை முன்னாள் தலைவரும், தற்போதைய தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலருமான மருத்துவர் கோபாலகிருஷ்ணனிடம் பிபிசி தமிழ் பேசியது. "சிறுநீரக செயலிழப்பு என்பது இரண்டு வழிகளில் நடைபெறுகிறது. ஒன்று திடீரென உடனே சிறுநீரகம் செயலிழப்பது, இரண்டாவது படிப்படியாக சிறுநீரகம் செயலிழப்பது. இதை தான் நாள்பட்ட சிறுநீரக நோய் என சொல்கிறோம். பெரும்பாலானவர்களுக்கு இந்த இரண்டாவது வகை பாதிப்பு தான் ஏற்படுகிறது." என்றார் அவர். படக்குறிப்பு, மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் கோபாலகிருஷ்ணன் மாறி வருகின்ற வாழ்வியல் முறைகளால் சிறுநீரக நோய் வருவதாக அவர் குறிப்பிட்டார். "நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமன், அதிக அளவில் கலோரிகளை உட்கொள்வது மற்றும் குறைந்த அளவிலான உடல் சார்ந்த வேலைகள் ஆகியன சிறுநீரக கோளாறு ஏற்பட காரணமாக அமைகின்றன." எனத் தெரிவித்தார். சிறுநீரக நோயின் அறிகுறிகளை பட்டியலிட்ட அவர், ஆட்களைப் பொருத்து அறிகுறிகள் வேறுபடலாம் என்றும் தெரிவித்தார். அறிகுறிகள் என்ன? கால் மற்றும் தலை வீக்கம் சிறுநீர் வெளியேற்றம் குறைவது சோர்வு பசி வாந்தி ரத்த சோகை தூங்கும் முறை மாறுவது தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக எடுத்துக் கொண்டாலும் சிறுநீரக கோளாறு ஏற்படும் என்று அவர் கூறினார். யாரை அதிகம் பாதிக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கட்டுமான பணியாளர்கள் (கோப்புப்படம்) விவசாயம், கட்டுமானம் போன்ற திறந்தவெளியில் பணிபுரியும் முறைசாரா தொழிலாளர்கள் தான் இதனால் அதிகமாக பாதிக்கப்படுவதாக கோபாலகிருஷ்ணன் கூறினார். "வெப்ப அழுத்தம், நாள்பட்ட நீரிழப்பு, காற்று மாசுபாடு மற்றும் ரசாயனங்களை நுகர்வது போன்ற காரணங்களால் சிறுநீரக நோய் ஏற்படுகிறது. நீண்ட நேரம் திறந்தவெளியில் வேலை செய்பவர்கள் குறிப்பிட்ட இடைவெளியில் அவ்வப்போது நிழலில் இளைப்பாறுவதையும் சுத்தமான குடிநீர் எடுத்துக் கொள்வதையும் தவறாமல் செய்ய வேண்டும்," என்றார். இதய நோய்க்கும் சிறுநீரக நோய்க்கும் உள்ள தொடர்பு இதய நோயால் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு சிறுநீரகம் செயலிழந்து போவதும் முக்கிய காரணமாக உள்ளதாக அந்த ஆய்வறிக்கை கூறுகிறது. நீரிழிவு நோயும் உடல் பருமனும் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கு முக்கிய காரணிகளாக உள்ளன. சிறுநீரக பாதிப்பில் ஐந்து கட்டங்கள் இருக்கின்றன. பெரும்பாலானவர்கள் 1-3 கட்ட பாதிப்பிலே உள்ளனர். நாள்பட்ட சிறுநீரக நோயும் இதய நோயும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்கிறார் கோபாலகிருஷ்ணன். சிறுநீரக பாதிப்பு அதிகரிக்கையில் இதய நோய் ஆபத்தும் அதிகரிப்பதாக அவர் தெரிவித்தார். ஆய்வறிக்கையின் படி, வயது அதிகரிக்க அதிகரிக்க நோய் பாதிப்பும் கூடுகிறது. முதியவர்களிடம் மிகத் தீவிரமான கட்டம் காணப்படுகிறது. ஆனால் அதற்கு மாறாக வயது கூடக்கூட டயாலிசிஸ் மற்றும் உறுப்பு மாற்று சிகிச்சை என்பது குறைகிறது. பரிசோதனை அவசியம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ரத்த பரிசோதனை (கோப்புப்படம்) சிறுநீரக நோய் பாதிப்பு உள்ளவர்களில் 30% பேருக்கு அது இருப்பதே தெரிவதில்லை என ஆய்வறிக்கை கூறுகிறது. "காலநிலை மாற்றத்தால் சராசரி வெப்பநிலை அதிகரிப்பு மற்றும் தீவிர வானிலை நிகழ்வுகளால் சிறுநீரக நோய் ஏற்படும். உகந்த வெப்பநிலை இல்லாததால் சிறுநீரகத்தின் செயல் திறனும் நாளடைவில் குறையும்" என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஒவ்வொரு ஆண்டும் பரிசோதனை மேற்கொள்வது அவசியம். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு, சிறுநீர் மற்றும் ரத்த பரிசோதனை மூலம் சிறுநீரக நோய் பாதிப்பை கண்டறிய முடியும். இதனை குறிப்பிட்ட இடைவெளிகளில் தொடர்ந்து எடுத்துக் கொள்ள வேண்டும்." என்றார் கோபாலகிருஷ்ணன். சிகிச்சைகள் என்ன? சிறுநீரக நோய்க்கு டயாலசிஸ் மற்றும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை என இரண்டு வாய்ப்புகள் உள்ளன. டயாலிசிஸ் முறை செலவு அதிகம் என்றாலும் தற்போது பெரும்பாலான காப்பீடுகளின் கீழ் டயாலிசிஸ் சிகிச்சை கொண்டு வரப்பட்டுள்ளது, அரசு மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை வழங்கப்படுகிறது. யாரெல்லாம் சிறுநீரக தானம் செய்ய முடியும்? சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையைப் பொருத்தவரை, இரண்டு சூழல்களில் மட்டுமே ஒருவர் உறுப்பு தானம் செய்ய முடியும் என்கிறார் தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலரான மருத்துவர் கோபாலகிருஷ்ணன். அவரது கூற்றுப்படி, ஒன்று சிறுநீரக தானம் செய்யும் நபர் நோயாளியின் குடும்ப உறுப்பினராக இருக்க வேண்டும் அல்லது நோயாளிக்கு மிகவும் நெருக்கமானவராக இருப்பதோடு மட்டுமல்லாது அதனை நிரூபிக்கவும் வேண்டும். அப்போது தான் அவரது சிறுநீரக தானம் ஏற்றுக்கொள்ளப்படும். இவை போக யாரேனு மூளைச் சாவு அடைகின்ற சமயங்களில் அவர்களின் குடும்பத்தினரின் சம்மதத்துடன் உடல் உறுப்புகள் மாற்றுக்கு எடுத்துக் கொள்ளப்படும். இந்தப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாட்டில் ட்ரான்ஸ்டான் என்கிற உறுப்பு மாற்று ஆணையம் உள்ளது. தடுக்கும் வழிகள் என்ன? பட மூலாதாரம், Getty Images ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் சரியான உணவு பழக்கம் போன்ற, சிறுநீரக நோய் வராமல் தடுப்பதற்கான வழிகளையும் அவர் குறிப்பிட்டார். தினசரி 45 நிமிட நடை பயிற்சி உடல் பருமனை தவிர்ப்பது குறைவான அளவில் உப்பு மற்றும் சோடியம் எடுத்துக் கொள்வது பொட்டாசியம் அதிக அளவில் எடுத்துக் கொள்வது தீவிர பதப்படுத்தப்பட்ட உணவுகளை தவிர்ப்பது அதிக அளவில் காய்கறிகள் மற்றும் பழங்களை எடுத்துக் கொள்வது புகையிலை நுகர்வை தவிர்ப்பது - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn7epvpzd8lo