Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 15 JUL, 2025 | 06:12 PM தற்போது வடபகுதி கடற்பரப்பில் அதிகரித்துள்ள இந்திய மீனவர்களின் அத்துமீறலையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் கடற்படையால் கட்டுப்படுத்த முடியவில்லையெனில், முதல்வன் திரைப்பட பாணியில் அந்தப் பொறுப்புக்களை ஒரு மாதகாலத்திற்கு வடபகுதி மீனவர்களிடம் ஒப்படைக்குமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். மன்னார் - முசலி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (15) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளால் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் பேசப்பட்டது. இந்நிலையில் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இந்திய இழுவைப்படகுகள் எமது வடபகுதி கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து எமது மீனவர்களது வாழ்வாதாரங்களைச் சூறையாடிச்செல்கின்றன. இந்நிலையில் இந்திய மீனவர்களின் அத்துமீறிய வருகையினைத் தடுக்கவேண்டிய கடற்படையினரும், ஆட்சியாளர்களும் தொடர்ச்சியாக காரணங்களை மாத்திரம் சொல்கின்ற நிலையே காணப்படுகிறது. இந்த அரசாங்கம் இந்த விடயத்தில் கூடிய கரிசனையுடன் செயற்பட்டு இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். அத்தோடு கடற்படையினர் இந்திய மீனவர்களின் இந்த அத்துமீறலைத் தடுப்பதற்கு டோறா படகுகள் வேண்டுமென காரணங்களை இங்கு கூறிக்கொண்டிருக்கமுடியாது. இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி உள்நுழைந்து திருட்டு வேலைகளில் ஈடுபடும் இந்திய இழுவைப்படகுகளுக்கு எதிராக மிகக் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும். இந்திய மீனவர்களுடைய இத்தகைய அத்துமீறிய செயற்பாடுகளுக்கு இந்திய அரசும், இலங்கை அரசும் ஆதரவளிப்பதாகவே எம்மால் பார்க்கமுடிகிறது. இந்த விடயத்தில் கடற்படையினர் மீது மீனவ மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். இவ்வாறாக இந்திய மீனவர்கள், எமது மீனவ மக்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடி எமது மக்களை வறுமைக்கு உட்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்த அத்துமீறிய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தவேண்டிய முழுப்பொறுப்பும் கடற்படையினருக்கு இருக்கின்றது. எமது மக்களைக் காப்பாற்ற முடியவில்லை எனில் எமது பகுதிகளில் படையினர் எதற்கு இருக்கின்றனர். படையினரால் இந்த அத்துமீறல் செயற்பாட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லையெனில் எமது மக்களிடம் அந்தப் பொறுப்பினை வழங்குங்கள். கடற்படையினர் முள்ளிக்குளம் கிராமத்தையும் முற்றாக அபகரித்து வைத்துக்கொண்டு, அந்த கிராமத்திற்குரிய மக்கள் மீள்குடியேறுவதற்கு தடையாக இருக்கின்றனர். எமது மக்களுடைய வீடுகளையும் கடற்படையினர் அடாத்தாக கைப்பற்றிவைத்திருக்கின்றனர். கடற்படையினரால் இந்திய மீனவர்களின் அத்துமீறிய செயற்பாட்டைக் கட்டுப்படுத்த முடியவில்லையெனில் முதல்வன் திரைப்படத்தில் ஒருநாள் முதலமைச்சரைப் போன்று இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பையும், சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்தும் பொறுப்பையும் எமது மீனவ மக்களிடம் ஒரு மாதத்திற்கு ஒப்படையுங்கள். எமது மீனவர்கள் இந்த அத்துமீறிய இந்திய மீனவர்களின் செயற்பாட்டையும் சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளையும் கட்டுப்படுத்துவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/220079
  2. கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் திருவாரூரில் அரசு தொடக்கப் பள்ளியின் குடிநீர்த் தொட்டியில் மனித மலம் கலக்கப்பட்ட நிகழ்வு தொடர்பாக காவல்துறை விசாரணை நடத்தி வருவதாக, தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். ஜூன் 13ஆம் தேதியன்று இரவு நேரத்தில் பள்ளி வளாகத்தில் கீரியை சமைத்துச் சாப்பிட்ட சிலர், குடிநீர்த் தொட்டியை அசுத்தம் செய்துவிட்டதாக பள்ளி நிர்வாகிகள் கூறுகின்றனர். இந்த விவகாரத்தில் என்ன நடந்தது? மாவட்ட ஆட்சியர் கூறியது என்ன? திருவாரூர் மாவட்டம், திருவாரூர் ஊராட்சி ஒன்றியத்தில் தப்பளாம்புலியூர் ஊராட்சி அமைந்துள்ளது. இங்குள்ள காரியாங்குடி கிராமத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. சுமார் 30க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் இந்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். பட மூலாதாரம்,BBC TAMIL படக்குறிப்பு, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் பள்ளி வளாகத்தில் என்ன நடந்தது? திங்கள் கிழமை (ஜூலை 14) காலை 7 மணியளவில் காலை உணவு தயாரிப்பதற்காக பள்ளிக்கு சமையலர்கள் கார்த்திகா, பிரியா ஆகியோர் வந்துள்ளனர். "உள்ளே நுழையும்போதே உப்பு, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள் என சமையலுக்குத் தேவையான பொருட்கள் வெளியில் சிதறிக் கிடந்தன" எனக் கூறுகிறார், கார்த்திகா. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "பள்ளி வளாகத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. அவற்றில் இருந்து காய்களையும் பறித்துக் கீழே வீசியிருந்தனர். அங்கிருந்த குடிநீர் குழாய்களையும் உடைத்திருந்தனர். இதைப் பார்த்து பயந்து போய் வெளியில் வந்தோம்," என்கிறார். பள்ளி வளாகத்துக்குள் அசாதாரண சூழல் நிலவியதால், ஊர் மக்களில் சிலரை உதவிக்கு அழைத்து வந்துள்ளனர். "சமையல் அறைக்கு வெளியில் வாழை இலையில் மசாலாவை போட்டு பிரட்டியிருந்ததைப் பார்க்க முடிந்தது. உடும்பு அல்லது கீரியைச் சமைத்துள்ளதாக ஊர் மக்கள் கூறுகின்றனர். இதற்கு முன்பு இப்படி நடந்ததில்லை" எனக் கூறுகிறார் கார்த்திகா. பள்ளி வளாகத்தைப் பார்வையிட்ட ஊர் மக்கள், சமையலறைக் கதவை உடைத்து சிலர் பயன்படுத்தியுள்ளதைக் கண்டறிந்தனர். இதையடுத்து, திருவாரூர் தாலுகா காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். 'தற்செயலாக உள்ளே பார்த்தேன்' பட மூலாதாரம்,BBC TAMIL "சம்பவ இடத்தில் காவல்துறை ஆய்வு நடத்திவிட்டுச் சென்றது. அவர்கள் சென்ற பிறகு குடிநீர்த் தொட்டியின் முன்பு உடைக்கப்பட்ட குழாய்களைப் பார்த்துவிட்டு, தற்செயலாக குடிநீர்த் தொட்டிக்குள் எட்டிப் பார்த்தேன்" எனக் கூறுகிறார், காரியாங்குடி கிராமத்தைச் சேர்ந்தவரும் மார்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினருமான கோ.சி.மணி. இவரது மகள் இதே பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். பள்ளி வளாகத்தில் சுமார் 3 அடி உயரமுள்ள கான்கிரீட் சுவற்றின் மீது குடிநீர்த் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. "நீர் வெளியேறும் குழாய் உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே ஐந்து தேங்காய்கள் உரிக்கப்படாமல் கிடந்தன. ஒரு அடி அளவுக்கு நீர் தேங்கியிருந்தது. அதில் மனித மலம் இருந்ததைக் கண்டேன்" எனக் கூறுகிறார், கோ.சி.மணி. "உடனே காவல்துறையை மீண்டும் அங்கு வரவழைத்தோம்" எனக் கூறும் அவர், "காலையிலேயே இதைக் கவனித்துவிட்டதால் குழாயைச் சரி செய்து நீரைத் தொட்டிக்குள் நிரப்பும் வேலைகள் எதுவும் நடக்கவில்லை. அசுத்தம் கலக்கப்பட்டிருப்பதைக் கவனிக்காமல் இருந்திருந்தால் குழந்தைகள் நீரைப் பயன்படுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டிருக்கும்" எனவும் குறிப்பிட்டார். காவல்துறை விசாரணை தீவிரம் பட மூலாதாரம்,BBC TAMIL இதையடுத்து, திருவாரூர் காவல் துணைக் கண்காணிப்பாளர் மணிகண்டன் தலைமையிலான போலீசார், பள்ளியில் ஆய்வு நடத்தினர். மோப்ப நாய், கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அப்போது அங்குள்ள வீடு ஒன்றை நோக்கி மோப்ப நாய் சென்றுள்ளது. இந்த விவகாரத்தில் சந்தேக வளையத்தில் இருந்த நான்கு பேரிடம் திருவாரூர் காவல்நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை. "பள்ளி சுற்றுச்சுவரை ஒட்டி உடும்பு மற்றும் கீரியைப் பிடிப்பதற்காக கூண்டு ஒன்றை வைத்துள்ளனர். நாங்கள் சென்றபோது அந்தக் கூண்டு இருந்தது. அதன் அருகில் இருந்த சாக்குப் பையில் கீரியின் உரிக்கப்பட்ட ரோமங்கள் இருந்தன" எனக் கூறுகிறார், கோ.சி.மணி. சமையல் கூடத்தில் உள்ள சிலிண்டர் மூலம் கீரியை நெருப்பில் வாட்டி சுட்டு சமைத்துள்ளதாகக் கூறும் அவர், "சமையல் அறையைப் பயன்படுத்தி சாப்பிட்டதைக்கூட பெரிய பிரச்னையாக நாங்கள் பார்க்கவில்லை. ஆனால், மனித மலம் கலக்கப்பட்டதை ஏற்க முடியாது" என்கிறார். பட மூலாதாரம்,BBC TAMIL 'மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்' இதே கருத்தை முன்வைக்கும் சமையலர் கார்த்திகா, "ஒரு குழாய் விடாமல் அனைத்தையும் உடைத்துவிட்டனர். அந்த நீரை குழந்தைகள் குடித்திருந்தால் மிக மோசமான விளைவுகள் ஏற்பட்டிருக்கும்" எனத் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் தங்கள் பகுதியைச் சேர்ந்த நான்கு பேரை போலீசார் விசாரணைக்காக அழைத்துச் சென்றதாகக் கூறும் அவர், அதில் இருவர் பள்ளிக்கு அருகிலும் இருவர் பக்கத்து தெருவிலும் வசிப்பவர்ளாக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். "பள்ளி வளாகத்தை அடித்து நொறுக்கி மிக அராஜகமாக செயல்பட்டுள்ளனர். ஆனால், யாருக்கும் சத்தம் கேட்கவில்லை என்கிறார்கள். சாதிரீதியாக நடந்திருக்குமா எனத் தெரியவில்லை," எனவும் அவர் கூறினார். 'என்ன கோபம் எனத் தெரியவில்லை' பட மூலாதாரம்,BBC TAMIL மேலும், "குடிபோதையில் சமைத்துச் சாப்பிடலாம். ஆனால், நான்கு குடிநீர்க் குழாய்களை உடைத்துவிட்டு, தண்ணீர் தொட்டியில் மனித மலம் கலக்கும் அளவுக்கு என்ன கோபம் எனத் தெரியவில்லை," என்கிறார் கார்த்திகா. திட்டமிட்டே இதைச் செய்ததாகப் பார்க்க வேண்டியுள்ளதாகக் கூறும் கார்த்திகா, "தேங்காய்களைப் பறித்து வீசியதோடு இரண்டு வாழை மரங்களை அடியோடு சாய்த்துவிட்டுச் சென்றுள்ளனர். இப்படிப்பட்ட அட்டகாசத்தை ஏன் செய்ய வேண்டும்?" எனவும் கேள்வியெழுப்பினார். வரும் நாட்களில் பள்ளியில் காலை உணவு தயாரிப்பதற்குத் தனியாக வந்து செல்வதற்குத் தனக்கு அச்சமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். காரியாங்குடி அரசு தொடக்கப் பள்ளிக்கு தலைமை ஆசிரியர் நியமிக்கப்படாததால், பள்ளி ஆசிரியர் அன்புச்செல்வியிடம் பிபிசி தமிழ் பேசியது. "பள்ளி கட்டடத்துக்கு எந்தச் சேதமும் ஏற்படவில்லை. அதனால் பள்ளிக்கு விடுமுறை விடப்படவில்லை. தண்ணீர்த் தொட்டியை மாற்றிவிட்டோம்" எனக் கூறினார். காரியாங்குடி அரசு தொடக்கப் பள்ளிக்கு தான் வந்து பத்து மாதங்களே ஆகியிருப்பதாகக் கூறும் அன்புச்செல்வி, "இதற்கு முன்பு சிலர் தேங்காய்களைப் பறித்துச் சென்றதாகக் கேள்விப்பட்டுள்ளேன். ஆனால், இப்படியொரு சம்பவம் நடந்ததில்லை" என்கிறார். மாவட்ட ஆட்சியர் அளித்த விளக்கம் குடிநீர்த் தொட்டியில் அசுத்தம் செய்யப்பட்டது தொடர்பாக, திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், "சம்பவம் நடைபெற்ற பள்ளியில் காவல் துணை காண்காணிப்பாளர் விசாரணை நடத்தி வருகிறார். விரைவில் குற்றம் செய்த நபர்கள் கைது செய்யப்பட உள்ளனர்" எனக் கூறினார். பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்து சிலர் இவ்வாறு செய்துள்ளதாகக் கூறிய மாவட்ட ஆட்சியர், "என்ன நோக்கத்திற்காகச் செய்துள்ளனர் எனத் தெரியவில்லை. சாதிரீதியான காரணம் எதுவும் இல்லை. விசாரணை முடிவில்தான் தெரிய வரும்" என்றார். தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசும்போது, "குடிநீர்த் தொட்டியில் அசுத்தம் செய்த விவகாரத்தில் யார் யாரெல்லாம் ஈடுபட்டுள்ளார்கள் என விசாரிக்குமாறு காவல்துறைக்கு கூறியுள்ளோம். அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்" எனக் கூறினார். சம்பந்தப்பட்ட பள்ளியில் குடிநீர்த் தொட்டிகளைச் சுத்தம் செய்து வைக்குமாறு கூறியுள்ளதாகவும் தவறு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8rp86n2gjpo
  3. மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண்; நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! 15 JUL, 2025 | 05:28 PM அம்பாறை, பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற குற்றத்திற்காக கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண் ஒருவருக்கு 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒருமாத சிறைத்தண்டனையை விதித்து பொத்துவில் நீதவான் நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை (15) விதித்துள்ளது. 26 வயதுடைய தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவருக்கே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வெளிநாட்டுப் பெண் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து மற்றுமொரு ஹோட்டலுக்கு நேற்று திங்கட்கிழமை (14) பிற்பகல் மேலாடை இன்றி நிர்வாணமாக நடந்து சென்றுள்ளார். இது தொடர்பில் பொத்துவில் பொலிஸ் மகளிர் பணியகத்திற்கு கிடைத்த தகவலின் பேரில் சந்தேக நபரான வெளிநாட்டுப் பெண் கைதுசெய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டுப் பெண் தனது காதலனுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக இவ்வாறு செயற்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து கைதுசெய்யப்பட்ட வெளிநாட்டுப் பெண் பொத்துவில் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒருமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/220075
  4. இராமேஸ்வரம் - தலைமன்னார் கப்பல் போக்குவரத்து சேவை தொடர்பில் வெளியான அறிவிப்பு 14 ஜூலை, 2025 இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் இடையே கப்பல் போக்குவரத்தை ஆரம்பிக்க, தமிழக மாநில அரசின் சிறு துறைமுகங்கள் திணைக்களம் ஊடாக 118 கோடி ரூபாய்க்கு திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டுள்ளது. அத்துடன், இராமேஸ்வரம் துறைமுகத்தை சீரமைக்க, 6.24 கோடி ரூபாயில் மத்திய அரசின் ஊடாக பணிகள் நடந்து வருவதாகத் தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன. இருப்பினும், மத்திய அரசாங்கத்திடம் இருந்து இன்னும் சேவைக்கான அனுமதி கிடைக்கவில்லை. அதேநேரம், தலைமன்னாரிலும் கப்பல் சேவைக்கான ஆயத்தப்பணிகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை என தமிழக அரச தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. https://thinakkural.lk/article/318884
  5. "35 வருடங்களாக இடம்பெயர்ந்து துன்பத்தில் வாடுகின்றோம் எங்கள் செய்தியை ஜனாதிபதிக்கு சொல்வதற்காக கொழும்பிற்கு வந்தோம்" - வலிகாமத்தில் விடுவிக்கப்படாத காணிகளின் உரிமையாளர்கள் 15 JUL, 2025 | 05:23 PM 35 வருடங்களாக இடம்பெயர்ந்து துன்பத்தில் இருக்கின்றோம், நாம் போராட்டத்தில் ஈடுபட்ட போது அரச அதிகாரிகள் அதனை அலட்சியம் செய்து விட்டனர். இதனால் ஜனாதிபதிக்கு எங்கள் நிலையை தெரிவிப்பதற்காக கொழும்பிற்கு வந்தோம் என கொழும்பில் ஜனாதிபதி அலுவலகத்தின் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வலிகாமம் காணி உரிமையாளர்கள் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு பகுதியில் உள்ள விடுவிக்கப்படாத நிலங்களை விடுவிக்க வலியுறுத்தி இன்றைய தினம் ஜனாதிபதி செயலகத்துக்கு அருகில் போராட்டமொன்று நடைபெற்றது. குறித்த போராட்டத்தில், விடுவிக்கப்படாத காணிகளின் உரிமையாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்றனர். வலிகாமம் விடுவிக்கப்படாத காணிகளின் உரிமையாளர்கள் மேலும் தெரிவித்ததாவது, பழைய வர்த்தமானியை நீக்கி எங்களின் காணிகளை எங்களிடம் உடனடியாக ஒப்படைக்கவேண்டும். 35 வருடங்களாக இடம்பெயர்ந்து பெரும் துன்பத்தில் இருக்கின்றோம். வலிகாமத்தில் விடுவிக்கப்படவேண்டிய 2400 ஏக்கர் காணி உள்ளது அதனை உடனடியாக விட்டுதரவேண்டும். நாங்கள் மயிலிட்டியில் ஐந்து நாள் போராட்டம் நடத்தினோம், அதன்போது எந்த அரச அதிகாரியும் வந்து எங்களுடன் பேசவும் இல்லை எங்கள் போராட்டத்திற்கு ஆதரவு தரவும் இல்லை. இவ்வாறான நிலையில் ஜனாதிபதிக்கு அந்த செய்தி சென்றிருக்காது என்ற காரணத்தினால் இன்று கொழும்பில் நாங்கள் இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றோம். ஜனாதிபதிக்கு நாங்கள் எங்களின் நிலையை தெரிவிப்பதற்காகவும் அவருக்கு மகஜர் கையளிப்பதற்காகவும் இன்று இந்த போராட்டத்தினை முன்னெடுத்திருக்கின்றோம். எங்கள் காணிகளை விரைவாக விட்டுத்தரவேண்டும், மயிலிட்டியில் 1200 ஏக்கர் காணியை விடுவிக்கவேண்டும், அதில் சிறுபகுதிதான் இராணுவத்தின் கட்டுப்பாட்டின் பயன்பாட்டின் கீழ் உள்ளது ஏனையது வெறும் காணியாக காணப்படுகின்றது. அந்தக்காணியின் உரிமையாளர்கள் வந்து வீதியில் நின்று பார்த்துவிட்டு திரும்பிச்செல்லவேண்டிய நிலை காணப்படுகின்றது. சும்மா இருக்கும் காணியை எங்களிடம் தந்தால் நாங்கள் எங்கள் காணிக்குள் சந்தோசமாக இருப்போம். இதனை நாங்கள் பல இடத்தில் தெரியப்படுத்தியும் நடவடிக்கை எதுவும் இடம்பெறவில்லை. ஜனாதிபதி செய்து தருவார் என்ற நம்பிக்கை இருக்கு, இதன் காரணமாகத்தான் நாங்கள் இங்கு வந்து போராடுகின்றோம். ஜனாதிபதி எங்கள் காணிகளை விரைவாக விடுவித்து தரவேண்டும். இதேவேளை இந்த போராட்டத்தில் கலந்துகொண்டிருந்த பெண்ணொருவர் நாங்கள் எங்கள் காணிகளை விட்டுவிட்டு இங்கே இருக்கின்றோம், அவர்கள் தேங்காய் மாங்காய் பிடுங்குகின்றார்கள் என தெரிவித்தார். காணிகளை விட்டால்தான் நாங்கள் சீவிக்கலாம், இப்பவும் அங்கு ஒரு ஆக்களும் இல்லை எங்கள் கோவிலுக்கு கூட போகமுடியவில்லை என தெரிவித்த அவர் ஜனாதிபதியிடம் இதனை கேட்க போகின்றோம். எங்கள் வீட்டிற்கு பக்கத்தில் கோவில் நாங்கள் அங்கிருந்து வெளிக்கிட்டு முப்பத்தைந்து நாற்பது வருடங்களாகின்றன என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/220072
  6. 15 ஜூலை, 2025 நிறுவன பராமரிப்பு, பாதுகாவலரின் கீழ் உள்ள குழந்தைகள் மற்றும் வீதியோரக் குழந்தைகளுக்கு 5 ஆயிரம் ரூபா உதவித் தொகை வழங்கும் திட்டம் இன்று செவ்வாய்க்கிழமை (15) ஆரம்பிக்கப்படும் என்று மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் தெரிவித்தார். இந்த திட்டத்தின் மூலம் 9,191 குழந்தைகள் பயனடைவார்கள் என்றும் அவர் இதன்போது நம்பிக்கை வெளியிட்டார். https://thinakkural.lk/article/318947
  7. 15 JUL, 2025 | 05:08 PM சர்வதேச அங்கீகாரத்துடன் கூடிய (Accreditation) ஆய்வுக்கூடமொன்றை நிறுவுவதற்காக அமெரிக்க STEMedical மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனம் (SLIBTEC) என்பவற்றுக்கு இடையே இன்று (15) காலை ஜனாதிபதி அலுவலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தானது. ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறையின் (NIRDC) வழிகாட்டுதலின் கீழ் மேற்கொள்ளப்படும் இந்த 15 மில்லியன் டொலர் முதலீட்டு திட்டத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், அமெரிக்காவின் STEMedical சார்பில் அதன் ஸ்தாபகர் பேராசிரியர் ஹான்ஸ் கீர்ஸ்டெட் (Prof. Hans Keirstead) மற்றும் இலங்கை உயிரி தொழில்நுட்ப நிறுவனத்தின் (SLIBTEC) தலைவர் பேராசிரியர் சமித ஹெட்டிகே மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி அமாலி ரணசிங்க ஆகியோர் கையெழுத்திட்டனர். இலங்கையில் சுகாதாரம், விவசாயம், அழகுசாதனப் பொருட்கள் மற்றும் ஆயுர்வேதம் உள்ளிட்ட பல துறைகளிலும், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி துறைகளிலும் சோதனை செய்வதற்கு சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களின் திறனை அதிகரிப்பதற்கான நீண்டகால தேவை காணப்படுகிறது. இந்நிகழ்வில் உரையாற்றிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைக்கான ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக உடுகமசூரிய, இன்றைய தினம் இலங்கைக்கு ஒரு விசேட நாள் என்றும், ஒரு நாட்டிற்கு அங்கீகாரம் மிகவும் முக்கியமானது என்றும் கூறினார். 2030ஆம் ஆண்டுக்குள் நாட்டின் ஏற்றுமதி வருவாயை இரட்டிப்பாக்கும் அரசாங்கத்தின் இலக்கை அடைவதில் இதுபோன்ற அங்கீகாரம் பெற்ற ஆய்வகத் திட்டத்தின் முக்கியத்துவத்தை உடுகமசூரிய வலியுறுத்தினார். நாடு முழுவதும் உள்ள ஆய்வகங்களுடன் இணைந்து பிரதான ஆய்வகமாக செயல்பட்டு பல்வேறு துறைகளில் பொருட்கள் மற்றும் சேவைகளின் தரத்தை இந்த ஆய்வகத்தின் ஊடாக உறுதி செய்வதற்காக எதிர்பார்க்கப்படுகிறது. STEMedicalஇன் ஸ்தாபகர் பேராசிரியர் ஹான்ஸ் கியர்ஸ்டெட் குறிப்பிடுகையில், ஆய்வகத் திறனை அதிகரிப்பது போன்ற அறிவியல் துறையின் வளர்ச்சித் தேவைகளை அடையாளம் காண இந்தத் துறையின் பரந்த பார்வையைக் கொண்ட இலங்கையில் தற்போதைய தலைமைத்துவம் தொடர்பில் தான் மகிழ்ச்சியடைவதாகத் தெரிவித்தார். இந்தத் திட்டம் மருத்துவ ரீதியாக மட்டுமல்ல, பொருளாதார ரீதியாகவும் நாட்டிற்கு பல நன்மைகளைத் தரும் என்றும் அவர் கூறினார். குறிப்பாக பொருளாதார நிபுணர்களின் கவனமும் நாட்டிற்கு ஈர்க்கப்படும் என்றும், மருந்துகள் போன்ற பொருட்களை நம் நாட்டில் மட்டுமல்ல, ஏனைய நாடுகளிலும் அங்கீகாரத்திற்காக இங்கு அனுப்புவதன் மூலம் வருமானம் ஈட்ட முடியும் என்றும் கியர்ஸ்டெட் கூறினார். அமெரிக்காவில் STEMedical நிறுவன ஸ்தாபகரான பேராசிரியர் ஹான்ஸ் கியர்ஸ்டெட், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட முதன்மை உயிரணு (Stem cells) நிபுணர் ஆவார். அவர் அமெரிக்காவில் மீளுருவாக்கம் மருத்துவத் துறையில் அங்கீகரிக்கப்பட்ட தொழில்முனைவோராகவும் உள்ளார். தற்போது உலகளாவிய மனித நோயெதிர்ப்புத் திட்டத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பதவி வகிக்கும் பேராசிரியர் ஹான்ஸ் கியர்ஸ்டெட், டிஸ்கவர் சஞ்சிகையில் உலகின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் ஒருவராக அறிவிக்கப்பட்டவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரஸல் அபொன்சு, ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி வணிகமயமாக்கலுக்கான தேசிய அணுகுமுறையின் (NIRDC) பணிப்பாளர் நாயகம் கலாநிதி முதித செனரத் யாப்பா, அமெரிக்காவின் STEMedical நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, கலாநிதி நிஸ்டர் கேப்ரியல் லோன் (Dr. Nistor Gabriel Loan) உள்ளிட்டோர் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/220070
  8. '100% வரி': ரஷ்யாவை மிரட்டும் டிரம்ப் - இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, டிரம்ப் மற்றும் புதின் கட்டுரை தகவல் லாரா கோஸி பிபிசி செய்திகள் 15 ஜூலை 2025, 07:09 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நேட்டோ நாடுகள் மூலம் யுக்ரேனுக்கு "உயர் தர ஆயுதங்களை" அனுப்பப் போவதாக அறிவித்துள்ளார். 50 நாட்களுக்குள் யுக்ரேன் - ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டுவர ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்றும் அச்சுறுத்தியுள்ளார். "யுக்ரேனால் தனது இலக்குகளை அடைய முடியும் என்பதை நாங்கள் உறுதி செய்ய விரும்புகிறோம்"என்று வாஷிங்டனில் நேட்டோ தலைவர் மார்க் ருட்டேவுடன் நடந்த சந்திப்புக்குப் பிறகு டிரம்ப் கூறினார். "நேட்டோ வழியாக யுக்ரேனுக்குத் தேவையானவற்றை பெருமளவில் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. இதற்கான செலவை ஐரோப்பிய நாடுகள் ஏற்கும்"என்பதை ருட்டே உறுதிப்படுத்தினார். "ரஷ்யாவின் வான்வழித் தாக்குதல்களை எதிர்கொள்ள யுக்ரேன் எதிர்பார்க்கும் பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை, ஐரோப்பிய நாடுகள் யுக்ரேனுக்கு அனுப்பும். பின்னர், அந்த நாடுகளுக்கு அமெரிக்கா மாற்று ஆயுதங்களை வழங்கும்" என்று டிரம்ப் தெரிவித்தார். யுக்ரேனுக்கு அனுப்பப்படும் ஆயுதங்கள் குறித்து ரூட்டேவோ அல்லது டிரம்போ விரிவாகக் கூறவில்லை, ஆனால் ஒப்பந்தத்தில் "ஏவுகணைகள் மற்றும் வெடிமருந்துகள்" அடங்கும் என்று ரூட்டோ கூறினார். இருப்பினும் பில்லியன் டாலர் மதிப்புள்ள "உயர்மட்ட ஆயுதங்கள்" யுக்ரேனை வலுப்படுத்த "போர்க்களத்தில் விரைவாக" விநியோகிக்கப்படும் என்று டிரம்ப் கூறியிருந்தார். "நான் இன்று விளாடிமிர் புதினாக இருந்திருந்தால், யுக்ரேன் பற்றிய பேச்சுவார்த்தைகளை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வேன்," என்று ருட்டே கூறியபோது, டிரம்ப் தலையசைத்துக் கேட்டுக் கொண்டிருந்தார். "ரூட்டேவுடனான சந்திப்புக்குப் பிறகு டிரம்புடன் பேசினேன். யுக்ரேனை ஆதரிக்கவும், வன்முறையை நிறுத்தி, நீடித்த மற்றும் நியாயமான, அமைதியை நிலைநாட்ட இணைந்து பணியாற்றுவதற்கு விருப்பம் தெரிவித்த அவருக்கு நன்றி கூறுகிறேன்" என்று யுக்ரேன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி எக்ஸ் தளத்தில் தெரிவித்தார். "ரஷ்ய தாக்குதல்களிலிருந்து மக்களுக்கு சிறப்பான முறையில் பாதுகாப்பு அளிக்கவும், எங்கள் நிலைகளை வலுப்படுத்தவும் தேவையான வழிமுறைகள் மற்றும் தீர்வுகளை அதிபருடன் விவாதித்தோம். அமைதியை அடைய முடிந்தவரை பயனுள்ள முறையில் பணியாற்றத் தயாராக இருக்கிறோம்"என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, நேட்டோ தலைவர் மார்க் ரூட்டே திங்களன்று டிரம்பை சந்தித்தார். இந்தியாவை எவ்வாறு பாதிக்கும்? யுக்ரேனுடன் 50 நாட்களுக்குள் சமாதான ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால், ரஷ்யாவின் மீதமுள்ள வர்த்தக பங்காளிகளை குறிவைத்து அமெரிக்கா 100% இரண்டாம் நிலை வரிகளை விதிக்கும் என்று டிரம்ப் கூறினார். இதனால், ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும் தங்களது பொருட்களை அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்ய விரும்பினால், அவற்றுக்கு வரி செலுத்த வேண்டும். உதாரணமாக, இந்தியா ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதைத் தொடர்ந்தால், இந்தியப் பொருட்களை வாங்கும் அமெரிக்க நிறுவனங்கள், அந்தப் பொருட்கள் அமெரிக்காவை அடையும் போது 100% இறக்குமதி வரியைச் செலுத்த வேண்டியிருக்கும். இதனால், பொருட்கள் மிகவும் விலை உயர்ந்தவையாக மாறும். அதனைத் தொடர்ந்து, அமெரிக்க வணிகங்கள் அவற்றை மலிவாக வாங்க, வேறு இடங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இதன் விளைவாக இந்தியாவுக்கு வருவாய் இழப்பு ஏற்படும். அதாவது, ரஷ்யாவின் பொருளாதாரத்தை முடக்குவதே இதன் நோக்கம் . கோட்பாட்டளவில், ரஷ்யாவால் மற்ற நாடுகளுக்கு எண்ணெய் விற்பதன் மூலம் பணம் ஈட்ட முடியாவிட்டால், யுக்ரேன் போருக்கு நிதியளிக்க குறைவான பணம் இருக்கும். எண்ணெய் மற்றும் எரிவாயு ரஷ்யாவின் வருவாயில் மூன்றில் ஒரு பங்கையும், ஏற்றுமதியில் 60%க்கு மேலும் பங்களிக்கின்றன. எனவே, 100% வரி விதிப்பு என்பது ரஷ்யாவின் நிதியை கணிசமாகப் பாதிக்கக்கூடும். ரஷ்ய பங்குச்சந்தைகளில் உயர்வு ஆனால், இந்த அறிவிப்புக்குப் பிறகு ரஷ்யாவின் பங்குச் சந்தை குறியீடு கடுமையாக உயர்ந்தது. கடந்த வாரம் ரஷ்யா குறித்து "முக்கிய அறிவிப்பை " வெளியிடுவதாக டிரம்ப் கூறியிருந்ததால், அவர் இன்னும் கடுமையான நடவடிக்கைகளை எடுப்பார் என்று முதலீட்டாளர்கள் எதிர்பார்த்திருக்கலாம். வரிகள் மற்றும் நேட்டோ ஆயுத ஒப்பந்தம் பற்றிய விவரங்கள் குறைவாக இருந்தாலும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பிறகு முதல் முறையாக யுக்ரேனுக்கு புதிய ராணுவ உபகரணங்களை வழங்குவதாக திங்கட்கிழமையன்று உறுதியளித்தார். விளாடிமிர் புதின் மீதான டிரம்பின் விமர்சனங்கள் கடுமையாகி வருவதால், இந்த அறிவிப்பின் தொனி குறிப்பிடத்தக்கதாக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதிய ஒப்பந்தத்தின் கீழ், ஐரோப்பிய நாடுகள் தங்கள் சொந்த பேட்ரியாட் வான் பாதுகாப்பு அமைப்புகளை யுக்ரேனுக்கு அனுப்பும் (கோப்பு புகைப்படம்) புதின் மீது டிரம்ப் அதிருப்தி பிப்ரவரி 2022 இல் யுக்ரேன் மீது முழு அளவிலான படையெடுப்பைத் தொடங்க ரஷ்யா எடுத்த முடிவிற்கு யுக்ரேனும் சில விஷயங்களில் பொறுப்பேற்க வேண்டும் என்று டிரம்ப் மறைமுகமாகக் குறிப்பிட்டார். இவ்வாறு அவர் கூறுவது இது முதல் முறையல்ல. ஆனால், மோதலை எளிதில் தீர்க்க முடியும் என ஒரு காலத்தில் நம்பிய அவர், அதை முடிவுக்குக் கொண்டுவருவதில் முன்னேற்றம் இல்லாததால் விரக்தியடைந்ததாகத் தோன்றியது. புதினுடனான உறவு குறித்து கேட்கப்பட்ட போது, "இந்தப் பிரச்னையைத் தீர்ப்பது பற்றி நாங்கள் நிறையப் பேசுகிறோம்" என்று டிரம்ப் கூறினார். ஆனால், புதினுடனான "நல்ல தொலைபேசி அழைப்புகளைத்" தொடர்ந்து, யுக்ரேன் மீது பேரழிவு தரும் வான்வழித் தாக்குதல்கள் நடப்பதாகவும், அவை தீவிரமாகவும், அதிகரித்து வருவதாகவும் அவர் அதிருப்தி தெரிவித்தார். "நான் அவரை கொலைகாரன் என்று அழைக்க விரும்பவில்லை, ஆனால் அவர் ஒரு கடினமான மனிதர். பல ஆண்டுகளாக அவர் கிளிண்டன், புஷ், ஒபாமா, பைடன் ஆகியோரை ஏமாற்றியுள்ளார். ஆனால், அவர் என்னை ஏமாற்றவில்லை. ஒரு கட்டத்தில் பேச்சு பலனளிக்காது, செயல் தான் தேவை" என்றும் டொனால்ட் டிரம்ப் தெரிவித்தார். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே இரண்டு சுற்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் நடந்தன. ஆனால், இதுவரை வேறு எந்த சந்திப்புகளும் திட்டமிடப்படவில்லை. இதற்கு ரஷ்யா யுக்ரேனை குற்றம் சாட்டியுள்ளது. யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி, தற்போது யுக்ரேனில் அமெரிக்க தூதர் கீத் கெல்லாக்கை சந்தித்து வருகிறார். திங்கட்கிழமை அவர் அந்த "பயனுள்ள சந்திப்பை" பாராட்டி, டிரம்பின் ஆதரவுக்கு "நன்றி" தெரிவித்தார். கிரெம்ளின் இந்த அறிவிப்பு குறித்து உடனடியாக கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால், மாஸ்கோவிலிருந்து வரும் கருத்துகள் ஓரளவு நிம்மதியைக் குறிப்பதாகத் தோன்றியது. வரி அறிவிப்பை "ஏமாற்று வேலை" என்று என்று அழைத்த கிரெம்ளின் ஆதரவு நிபுணரும், புதினின் முன்னாள் உதவியாளருமான செர்ஜி மார்கோவ், இது டிரம்ப் "யுக்ரேனில் அமைதியை அடைய முயற்சிப்பதை கைவிட்டுவிட்டார்" என்பதைக் குறிக்கிறது என்றும் கூறினார். "இன்று டிரம்ப் யுக்ரேனைப் பற்றி சொன்னதெல்லாம் இதுதான் என்றால், இது பெரிய பேச்சாக இருந்தாலும் அதில் எந்த பயனும் இல்லை," என்று செனட்டர் கான்ஸ்டான்டின் கோசச்சேவ் கூறினார் 50 நாட்களில், "போர்க்களத்திலும், அமெரிக்கா மற்றும் நேட்டோவின் மனநிலையிலும் பல மாற்றங்கள் நிகழலாம்"என்றும் அவர் குறிப்பிட்டார். ஜனநாயகக் கட்சி வரவேற்பு டிரம்பின் முடிவு, போட்டியாளரான ஜனநாயகக் கட்சியினர் உட்பட விமர்சகர்களிடமிருந்து பாராட்டுகளைப் பெற்றது. "ஐரோப்பிய பங்காளிகளின் முதலீடுகளால், யுக்ரேனுக்கு பேட்ரியாட் ஏவுகணைகளை அனுப்பும் முடிவு, புதினின் கொடூரத் தாக்குதல்களில் இருந்து எண்ணற்ற யுக்ரேனிய உயிர்களைக் காப்பாற்றும்"என்று சக்திவாய்ந்த செனட் வெளியுறவுக் குழுவின் உயர்மட்ட ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த ஜனநாயகக் கட்சி செனட்டர் ஜீன் ஷாஹீன் தெரிவித்தார். இந்த நடவடிக்கையை, "நல்ல முடிவு, ஆனால் தாமதமானது" என்று குறிப்பிட்ட அவர், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு, புதினை சம்மதிக்க வைக்க, அமெரிக்கா யுக்ரேனுக்கு நீண்டகால, நிலையான பாதுகாப்பு உதவிகளை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். யுக்ரேனைச் சேர்ந்த 39 வயதான யுக்ரேனிய பல் மருத்துவர் டெனிஸ் போடில்சுக், டிரம்பை சம்மதிக்க வைத்த ஐரோப்பிய தலைவர்களைப் பாராட்டினார். "இறுதியாக ஐரோப்பிய அரசியல்வாதிகள் தங்கள் பொறுமையாலும், நம்பிக்கையாலும் டிரம்பை எங்கள் பக்கம் சற்று நகர்த்தியது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆரம்பத்திலிருந்தே அவர் எங்களுக்கு உதவ விரும்பவில்லை என்பது தெளிவாகத் தெரிந்தது"என்று அவர் ராய்ட்டர்ஸிடம் கூறினார். கூடுதல் தகவல்: டியர்பைல் ஜோர்டான் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c79q44rv1vdo
  9. சிறுமியின் வாக்குமூலத்தில் தான் அவர் தப்பமுடியுமா இல்லை களி தின்னுவாரா என்பது தெரியும் அண்ணை.
  10. கில் - ஸ்டோக்ஸ் கேப்டன்சியில் இருந்த வித்தியாசம் ஆட்டத்தில் எவ்வாறு எதிரொலித்தது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் தினேஷ் குமார். எஸ் கிரிக்கெட் விமர்சகர் 15 ஜூலை 2025, 05:22 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் சமீபத்தில் இப்படி ஒரு பரபரப்பான டெஸ்ட் மேட்சை ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள். இந்த தொடரின் பாக்ஸ் ஆஃபிஸ் ஆட்டம் என்றால் அது லார்ட்ஸ் டெஸ்ட்தான் என அடித்து சொல்லலாம். வெற்றிக்காக இரு அணிகளும் எந்தவொரு எல்லைக்கும் செல்ல துணிந்தனர். ஸ்டோக்ஸ் ஆக்ரோசத்துடன் அணியை வழிநடத்தி, வீரர்களை 5 நாள் முழுக்க உத்வேகம் குறையாமல் பார்த்துக்கொண்டார். இரு அணியினரின் வசைபாடல்களும் தோளுரசல்களும் கடந்த கால ஆஸ்திரேலிய அணியை நினைவூட்டின. இந்தியா இலக்கை நெருங்கி கொண்டிருந்த சமயத்தில், ஸ்லிப் திசையில் நின்றுகொண்டு இங்கிலாந்து வீரர்கள் உதித்த வார்த்தைகள் அனலைக் கிளப்பின. இந்த தொடர் இனி எந்த பாதையில் செல்ல போகிறது என்பதற்கு கட்டியம் கூறும் விதமாக அந்த வார்த்தை மோதல்கள் அமைந்தன. கில் - ஸ்டோக்ஸ் கேப்டன்சியில் என்ன வித்தியாசம்? இந்திய அணியின் கேப்டனும் ஆக்ரோசத்தை கையிலெடுத்தது என்பது உண்மைதான். ஆனால். அந்த ஆக்ரோசம் வெற்றுப் பேச்சாக இருந்ததே தவிர, வெற்றியை கொடுக்கவில்லை. இங்கிலாந்து தொடக்க பேட்டர் கிராலி நேரத்தை கடத்தும் விதமாக கையில் அடிபட்டது போல நடித்தது உண்மைதான். ஆனால், கேஎல் ராகுலே ஒத்துக்கொண்ட படி அது காலம்காலமாக கிரிக்கெட்டில் கைகொள்ளும் உத்திகளில் ஒன்றுதான். அதற்காக, கிராலியை முகத்துக்கு நேராக கில் கையை நீட்டி வசைபாடியதை இந்திய வர்ணனையாளர்களே ரசிக்கவில்லை. அணி தத்தளித்து கொண்டிருக்கும் போது களத்துக்கு வந்த கில், சோம்பலுடன் பேட்டிங் செய்வது போல ஆடி ஆட்டமிழந்த விதம், ஒரு கேப்டனுக்கு அழகல்ல. நான்காம் இடத்தில் விளையாடி, அணியை வழிநடத்துவதாலே தான் கோலியாக மாறிவிட முடியாது என்பதை கில் உணர்ந்துகொண்டு, தனக்கென ஒரு பாணியை வளர்த்துக்கொள்ள வேண்டும். இது முழுக்கமுழுக்க பென் ஸ்டோக்ஸின் வெற்றி. ஒரே மூச்சில் 14 ஓவர்களை தொடர்ச்சியாக வீசியது, பந்துவீச்சு மாற்றங்களை உள்ளுணர்வின்படி செய்தது என ஒரு கேப்டனாக தன் 100 சதவீதத்தை களத்தில் கொடுத்தார். குறிப்பாக 4.5 ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ஆர்ச்சரை சூழலுக்கு ஏற்ப அரவணைத்தும் அதட்டியும் அவருடைய முழுத்திறனை வெளிக்கொணர்ந்த விதம் நம்பமுடியாததாக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து துறைகளிலும் தன் சக்திக்கு மீறி ஸ்டோக்ஸ் பங்களித்தார். இவ்வளவு அழுத்தத்தை தன் உடல் தாங்குமா, அடுத்த டெஸ்டில் விளையாட முடியுமா, தன் எதிர்காலம் என்னவாகும் என எதையும் யோசிக்காமல், கிரிக்கெட்டுக்கு முழுமையாக தன்னை ஒப்புக்கொடுத்தார். ஸ்டோக்ஸ் போன்ற சுயநலமில்லாத வீரர்கள் கிரிக்கெட்டில் மிகவும் அருகிவிட்டனர். இந்திய கேப்டன் கில் இந்த அம்சத்தில்தான் ஆட்டத்தை கோட்டைவிட்டுவிட்டார். இரண்டாவது இன்னிங்ஸில் ரூட் வந்தவுடனே பும்ராவை கொண்டு தாக்குதல் தொடுத்திருக்க வேண்டும். ஆனால், பும்ராவின் வேலைப்பளுவை கருத்தில் கொண்டு ஓய்வுகொடுத்தார். இதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட ரூட், ஸ்டோக்ஸுடன் சேர்ந்து ஒரு நல்ல பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தார். ரூட் மட்டும் இல்லையென்றால், இங்கிலாந்து அணி 192 ரன்களை நிச்சயம் எட்டியிருக்காது. 'அடிப்படையான விஷயங்களில் செய்த தவறுகளே காரணம்' இந்திய அணி இந்த டெஸ்டில் தோற்றதற்கு அடிப்படையான விஷயங்களில் செய்த தவறுகளே காரணம். பந்த் இல்லாத நிலையில் ஜுரெல் விக்கெட் கீப்பிங்கில் பைஸ் வகையில் எக்கச்சக்க ரன்களை கோட்டைவிட்டது பாதகமாக முடிந்துவிட்டது. முதல் இன்னிங்ஸில் ராகுல் சதமடிப்பதில் கவனத்தை குவித்து பந்த் ரன் அவுட்டானார்; சதமடித்து நன்றாக செட்டான பின்னர் ராகுல் ஆட்டமிழந்தார். இவை இந்திய அணிக்கு பேரிடியாக அமைந்தன. லார்ட்ஸ் மைதானத்தில் 193 ரன்கள் என்பது உண்மையில் எட்டக்கூடிய ஒன்றுதான். டாப் ஆர்டரில் இருவர் அரைசதம் அடித்திருந்தாலே, ஆட்டம் இந்தியாவின் கைகளுக்கு எளிதாக வந்திருக்கும். ஆனால், இந்திய பேட்டர்கள், ஸ்கோர் கார்டு மீதான பதற்றத்தில் தங்கள் இயல்புக்கு மாறாக விளையாடி நடையைக்கட்டினர். ஜெய்ஸ்வால் தன் கரியரில் விளையாடிய மிக மோசமான புல் ஷாட் இதுவாகத்தான் இருக்கமுடியும். வழக்கமாக அவுட்சைட் ஆஃப் ஸ்டம்ப் லைனில் வீசப்படும் பவுன்சர்களை ஒன்று ஸ்லிப் திசையில் சீவிவிடுவார், இல்லை அப்பர் கட் விளையாடுவார். ஆனால், நான்காம் நாளில் உடல் எங்கோ இருக்க பந்தை மடக்கி அடிக்க முயன்று டாப் எட்ஜாகி ஆட்டமிழந்ததை பார்த்தோம். பட மூலாதாரம்,GETTY IMAGES 'இரண்டு புல் ஷாட்களால் ஆட்டம் பறிபோனது' இந்த டெஸ்டை இந்தியா இழந்ததற்கு இரண்டு புல் ஷாட்கள் தான் காரணம் என சொல்லலாம். ஒன்று ஜெய்ஸ்வால் விளையாடியது; மற்றொன்று பும்ரா விளையாடியது. பும்ராவை நம்மால் குற்றம்சொல்ல முடியாது. சொல்லப்போனால் பும்ரா, சிராஜ் போன்ற டெயில் எண்டர்களிடம் எப்படி நேர் கோட்டில் விளையாட வேண்டும் என டாப் ஆர்டர் பேட்டர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். அதேசமயம், கில் தலைமையிலான இந்தியா, ஓர் இளம் அணிதான் என்பதை மறந்துவிட கூடாது. கோலி, ரோஹித், அஸ்வின் ஆகியோர் ஓய்வுபெற்ற நிலையில், இந்தியா இங்கிலாந்திடம் தாக்குப்பிடிக்காது என்றே பொதுப்பார்வை இருந்தது. ஆனால், முதல் டெஸ்டில் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து மீண்டுவந்து பர்மிங்காம் டெஸ்டில் 336 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றதை குறிப்பிட்டாக வேண்டும். அற்புதமாக பாட்னர்ஷிப் கட்டமைத்த ஜடேஜா ஜடேஜா, இந்த தொடர் முழுக்க தன் பேட்டிங்கின் உச்சத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடுமையாக உழைத்து ஆட்டமிழக்காமல் 61 ரன்களை குவித்து, கடைசி வரை இங்கிலாந்துக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தார். ஆட்டம் இந்தியாவின் பக்கம் திரும்பியிருந்தால், ஆட்ட நாயகன் விருது ஜடேஜாவுக்குதான் கிடைத்திருக்கும். ஜடேஜா சேர்த்த ரன்களை விட இன்னிங்சை அவர் கட்டமைத்த விதம் பிரமாதமாக இருந்தது. கடைசிக்கட்ட வீரர்களுடன் விளையாடுவதற்கு ஒரு தனித்திறமை வேண்டும். அவர்களை, ரொம்பவும் நம்பிவிடக் கூடாது. அதே சமயம், அவர்களை புறக்கணித்து விடவும் கூடாது. முதலில், அந்த டெயில் எண்டர் எப்படி விளையாடுகிறார் என்று சோதிப்பதற்காக, ஒன்றிரண்டு பந்துகளை கொடுத்துப் பார்க்க வேண்டும். அவர் எந்த பந்து வீச்சாளரை எளிதாக சந்திக்கிறார் என்று பார்த்து, அவருடைய ஓவரில் விளையாடுவதற்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES முப்பது பந்துகளை நன்றாக எதிர்கொண்டு அவர் விளையாடிய பிறகு, அவருக்கு நிறைய பந்துகளை சந்திக்கும் வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அவருடன், அவ்வப்போது ஆட்டத்தின் போக்கு பற்றி விவாதிக்க வேண்டும். அது, அவருடைய நம்பிக்கையை அதிகப்படுத்தும். ஆனால், அதிகமாகப் பேசி, அவரைப் பதட்டத்தில் தள்ளிவிட்டு விடக்கூடாது. ஓரளவுக்கு செட்டில் ஆனவுடன், அதீத தன்னம்பிக்கையில் பெரிய ஷாட்களை டெயில் எண்டர்கள் விளையாடத் தொடங்குவார். நேற்று பும்ரா செய்ததைப் போல. உடனடியாக, அவரை கடிந்து கொண்டு அவருடைய இயல்பான எழுச்சியை தடைபோடக் கூடாது. தொடர்ச்சியாக, அபாயகரமான ஷாட்களை விளையாடப் பார்த்தார் என்றால், அவருக்கு ஒரு சில ஓவர்கள் ஸ்ட்ரைக் கொடுக்க கூடாது. அவராகவே, நம் மன ஓட்டத்தைப் புரிந்துகொள்வார். இந்த முறையில் தான் பும்ரா, சிராஜ் ஆகியோருடன் பார்ட்னர் ஷிப்பை ஜடேஜா கட்டமைத்தார். அடுத்த டெஸ்டில் இந்தியா வென்று தொடரை சமன் செய்வதற்கு ஜடேஜாவின் ஃபார்ம் ரொம்பவும் முக்கியம். இளம் வீரர்கள் அடங்கிய இந்த அணியில் ஜடேஜா கீழ் வரிசை பேட்டிங்கிற்கு ஒரு வழிகாட்டியாக மாறியுள்ளார். இந்தியாவுக்கு நம்பிக்கை தரும் விஷயம் குல்தீப் யாதவை சேர்க்காமல் விட்டது தொடங்கி நிறைய விமர்சனங்கள் கம்பீர் மீது வைக்கப்பட்டன. ஆனால், இப்போது பார்க்கும் போது சரியான அணியைத் தான் அணி நிர்வாகம் களமிறக்கியுள்ளது என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. தோல்வியை அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டோம் என இந்திய அணி கடைசிவரை போராடிய விதம் நம்பிக்கை அளிக்கிறது. ஜடேஜா, சுந்தர், நிதிஷ் என மூன்று ஆல்ரவுண்டர்களும் ஃபார்மில் இருப்பது இந்தியாவுக்கு சாதகமான அம்சம். இந்த டெஸ்டில் நிகழ்ந்த தவறுகளை களைந்து அடிப்படை விஷயங்களில் கவனம் செலுத்தினால் இந்தியா நிச்சயம் அடுத்த டெஸ்டில் மீண்டு எழுந்துவிடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly2ppg1xwjo
  11. Published By: DIGITAL DESK 3 15 JUL, 2025 | 03:54 PM அமெரிக்காவில் மாசசூசெட்ஸ் மாநிலத்தில் மூன்று மாடி முதியோர் காப்பகத்தில் ஞாயிற்றுக்கிழமை (13) இரவு ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்துள்ளனர். தீ விபத்தை தொடர்ந்து ஏற்பட்ட புகை மூட்டத்தில் சிக்கிய முதியவர்கள் ஜன்னல்கள் அருகே ஒடிவந்து உதவி செய்யுமாறு கெஞ்சியுள்ளார்கள். "நான் இறந்துவிட்டேன் என்று நினைத்தேன்," "நான் என்னை படைத்தவரை சந்திக்கப் போகிறேன் என்று நினைத்தேன்." . "என் வாழ்க்கையில் இதுபோன்ற எதையும் நான் பார்த்ததில்லை. என்னால் மூச்சு விட முடியாமல் போனது " என குளியலறை ஜன்னலிலிருந்து வெளியே இழுக்கப்பட்டு காப்பாற்றப்பட்ட லோரெய்ன் ஃபெரார தெரிவித்துள்ளார். 50 தீயணைப்பு வீரர்கள் இருந்தும் மீட்பு பணிகள் கடினமானதாக இருந்ததாக தீயணைப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உயிரிழந்தவர்களில் ஏழு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். 70 வயது வயோதிப பெண்ணும், 77 வயது ஆணும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை. ஆபத்தான நிலையில் உள்ள ஒருவர் உட்பட சுமார் 30 பேர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து தீயணைப்பு வீரர்கள் சிறிய காயங்களுக்குள்ளாகி உள்ளனர். தீ விபத்துக்கான காரணம் தொடர்பில் விசாரணை நடந்து வருகிறது. https://www.virakesari.lk/article/220054
  12. இலங்கையில் 16 வயதிற்கு உட்பட்ட சிறார் மீதான துஸ்பிரயோக செயற்பாடுகளுக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை அண்ணை.
  13. ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை ஒத்தி வைப்பு - கடைசி நேரத்தில் என்ன நடந்தது? படக்குறிப்பு, கேரள செவிலியர் நிமிஷா பிரியா 15 ஜூலை 2025, 09:03 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஏமனில் கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை நிறைவேற்றுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ஹூதி பிரிவின் கீழ் இயங்கும் ஏமன் குடியரசின் நீதித்துறை அறிவிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாளை திட்டமிடப்பட்டிருந்த நிமிஷா பிரியாவுக்கான மரண தண்டனை நிறைவேற்றத்தை ஒத்தி வைக்க அட்டர்னி ஜெனரல் முடிவெடுத்திருப்பதாக அதில் கூறப்பட்டுள்ளது. நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை நிறைவேற்றுவதை மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடைசி நேரத்தில் என்ன நடந்தது? முன்னதாக, இதுகுறித்து சாதகமான முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக சேவ் நிமிஷா குழுவின் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் தெரிவித்திருந்தார். அவர் பகிர்ந்து கொண்ட தகவலின்படி, "கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் மதகுருவான கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் தலையீட்டுக்குப் பிறகு, நிமிஷா பிரியா சம்பந்தப்பட்ட முக்கியமான பிரச்னை தொடர்பான பேச்சுகளில் முன்னேற்றம் இருக்கிறது. தலால் அப்தோ மஹ்தி குடும்பத்தினருடனான சந்திப்பு இன்று நடக்கும். ஷேக் ஹபீப் உமரின் ஆலோசனைப்படி, ஹொடைடா மாநில தலைமை நீதிபதியும், ஏமன் ஷுரா கவுன்சிலின் உறுப்பினருமான, மரணமடைந்த மஹ்தியின் நெருங்கிய உறவினர் ஒருவர் இன்றைய கலந்துரையாடலில் பங்கேற்க மஹ்தியின் சொந்த ஊரான தமருக்கு வந்துள்ளார். அவர் ஷேக் ஹபீப் உமரின் சூஃபி கட்டளையைப் பின்பற்றுபவர் மட்டுமின்றி மற்றொரு முக்கிய சூஃபி தலைவரின் மகன் என்பதும் நம்பிக்கை தருவதாக உள்ளது." படக்குறிப்பு, கேரளாவைச் சேர்ந்த முஸ்லிம் மதகுரு கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார். "மஹ்தி குடும்பத்துடன் பேச்சுவார்த்தை" "மஹ்தியின் கொலை அவரது குடும்பத்திற்கு மட்டுமின்றி, மஹ்தி வாழ்ந்த பிராந்தியத்தின் பழங்குடியினர் மற்றும் குடியிருப்பாளர்கள் மத்தியிலும் உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினையாகும். இதனால்தான் இதுவரை அந்தக் குடும்பத்தினருடன் யாரும் தொடர்பு கொள்ள முடியாத நிலை இருந்தது. முஸ்லிம் மதகுருவான கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியாரின் தலையீட்டால் மட்டுமே குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள முடிந்தது. புகழ் பெற்ற அறிஞரும் சூஃபியுமான ஷேக் ஹபீப் உமர் பின் ஹபீஸின் மத்தியஸ்தம் மூலம் இந்த விஷயத்தை மறுபரிசீலனை செய்ய மஹ்தி குடும்பத்தினர் ஒப்புக் கொண்டுள்ளனர். இன்றைய விவாதம் 'ப்ளட் மணி' (Blood money) அல்லது தியா (Diyah) எனப்படும் நஷ்டஈட்டை (பெரும்பாலும் பணம்) ஏற்றுக்கொள்வது குறித்து இறுதி முடிவை எட்டுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மஹ்தி குடும்பத்தினரை சமாதானப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது" என்று சேவ் நிமிஷா குழுவின் வழக்கறிஞர் சுபாஷ் சந்திரன் தெரிவித்துள்ளார். படக்குறிப்பு, நிமிஷா பிரியாவின் தாயார் பிரேமா குமாரி இந்திய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று கடந்த வருடம் ஏமன் சென்றார். உடன் சாமுவேல் ஜெரோம். "மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக பொருளல்ல" ஏமனில் நிமிஷா பிரியா வழக்கைக் கையாளும் அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோமும் நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக பிபிசி தமிழிடம் கூறியுள்ளார். "எல்லாம் நேர்மறையாக இருக்கிறது. மரண தண்டனை ரத்து செய்யப்பட்டதாக அதற்கு பொருளல்ல. நிமிஷாவின் மரண தண்டனையை நிறைவேற்றுவது ஒத்திவைக்கப்படும். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை விரைவில் பகிர்ந்து கொள்வேன்" என்று அவர் கூறினார். "மஹ்தியின் குடும்பத்தினர் இதுவரை மன்னிப்பு வழங்கவில்லை. அவர்கள் மன்னிப்பு வழங்கினால் மட்டுமே மரண தண்டனை ரத்து செய்யப்படும், மரண தண்டனையை ஒத்திவைப்பது மட்டுமே இப்போதுள்ள ஒரே வழி, இது மன்னிப்பு பெறுவதற்காக மஹ்தி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த எங்களுக்கு அதிக நேரத்தை கொடுக்கும்." என்று சாமுவேல் ஜெரோம் தெரிவித்தார். வழக்கின் பின்னணி என்ன? கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார். அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர். நிமிஷா, 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து சௌதி அரேபியாவை ஒட்டிய ஏமன் எல்லையில் நிமிஷா கைது செய்யப்பட்டார். மஹ்திக்கு 'அதிகப்படியான மயக்க மருந்து' கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது. மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்ததாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார். தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. ஆனால், 2020ஆம் ஆண்டில், சனாவில் உள்ள நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c307249pzjjo
  14. பட மூலாதாரம்,INSTA/R.C.C.LPS.EAST.MANGAD படக்குறிப்பு,தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் ப வடிவ இருக்கை முறை அமல்படுத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 15 ஜூலை 2025, 02:51 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டு அரசுப் பள்ளி வகுப்பறைகளில் மாணவர்களின் இருக்கைகள் 'ப' வடிவத்தில் இருக்க வேண்டும் என்று மாநில பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. 'கடைசி பெஞ்ச்' மாணவர்கள் என்ற கருத்து இதன் மூலம் உடைபடும் என்று அரசு நம்புகிறது. ப வடிவ இருக்கைகள் ஆசிரியர் - மாணவர் இடையேயான உரையாடலை அதிகரிக்கும் என்றும், பொதுவாக பேச தயங்கும் மாணவர்களும் இந்த வடிவில் இருக்கைகள் அமைக்கப்படும் போது வகுப்பறையில் அதிகம் பங்கேற்பார்கள் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அறிக்கை கூறுகிறது. ஆனால் இருக்கைகள் 'ப' வடிவில் இருந்தால் மட்டும் போதுமா? என்ற விமர்சனங்கள் பல தரப்பிலிருந்து எழுப்பப்படுகின்றன. ஆரோக்கியமான வகுப்பறை சூழலுக்கு ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, போதுமான கட்டுமானங்கள் இருப்பது ஆகியவற்றை செய்யாமல் இருக்கைகளை மாற்றியமைப்பது எப்படி உதவும் என்றும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. 'ப' வடிவ இருக்கை முறை அறிமுகம் சமீபத்தில் வெளியான 'ஸ்தானார்த்தி ஸ்ரீகுட்டன்' என்ற மலையாள திரைப்படத்தில் ப வடிவ இருக்கை முறையின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தப்பட்டது. இந்த திரைப்படம் வெளியானதை அடுத்து, கேரளாவில் சில பள்ளிகளில் ப வடிவ இருக்கை முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையும் இந்த முறையை அறிமுகப்படுத்த உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையில், "ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக அமரும் பாரம்பரிய இருக்கை முறையில், மாணவர்- ஆசிரியர் உரையாடல் குறைவாக இருக்கலாம். ப வடிவ இருக்கை முறையில், மாணவர்களின் ஈடுபாடு அதிகரிக்கும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இது சோதனை முயற்சியே என்றும், ஒரு வாரம் கழித்து முதன்மை கல்வி அலுவலர்களிடம் அறிக்கை பெற்று அவர்களின் கருத்துகள் பெறப்படும் என்றும் தெரிவித்தார். அரசின் இந்த உத்தரவை பாஜக, பாமக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன. ப வடிவ இருக்கை முறையில் மாணவர்களின் மனநிலை மேம்படும் உள்ளிட்ட சாதக அம்சங்கள் இருப்பது போலவே குறைகளும் உள்ளன என்று சுட்டிக்காட்டியுள்ளார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "பெரும்பான்மையான வகுப்பறைகள் 20 அடி அகலமும், 20 அடி நீளமும் கொண்டவையாகவே உள்ளன. இந்த வகுப்பறைகளில் ப வடிவில் அதிக அளவாக 20 முதல் 24 மாணவர்களை மட்டுமே அமர வைக்க முடியும்; அதற்கும் கூடுதலாக மாணவர்கள் இருந்தால் அனைவரிடத்திலும் ஆசிரியர்கள் கவனம் செலுத்த முடியாது." என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "தமிழ்நாடு முழுவதும் 3,800 தொடக்கப்பள்ளிகளில் 5 வகுப்புகளை கையாள்வதற்கு தலா ஓர் ஆசிரியர் மட்டுமே உள்ளனர். மீதமுள்ள 25,618 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சராசரியாக ஒரு பள்ளிக்கு 2.5 ஆசிரியர்கள் என்ற வீதத்தில் மட்டுமே உள்ளனர். இவ்வளவு குறைவான விகிதத்தில் ஆசிரியர்களை வைத்துக் கொண்டு அரசு பள்ளிகளில் தரமான கல்வியை எவ்வாறு வழங்க முடியும்?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்த உத்தரவை விமர்சித்து பேசியுள்ள பாஜக மூத்தத் தலைவரும் தெலங்கானாவின் முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் பள்ளிகளில் முதலில் அடிப்படை வசதிகள் இருப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். கிராமப்புற பள்ளிகளில் கழிவறைகள் இல்லை, குடி நீர் இல்லை, கற்பிக்க போதுமான ஆசிரியர்கள் இல்லை என்று அவர் விமர்சித்துள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகில் ப வடிவம், வட்ட வடிவம், குழுக்களாக அமர்வது என பல்வேறு வகுப்பறை இருக்கை முறைகள் உள்ளன. 'ப' வடிவ இருக்கை முறை : சாதகம் vs பாதகம் ப வடிவ இருக்கை முறை வகுப்பறையில் சில சாதகமான தாக்கங்களை ஏற்படுத்துகிறது. ப வடிவ முறையில் ஒவ்வொரு மாணவரும் ஆசிரியரையும், கரும்பலகையையும் பிற மாணவர்களையும் பார்க்க முடியும். எல்லா மாணவர்களையும் பார்த்து ஆசிரியரால் பேச முடியும். பிற மாணவர்கள் பேசுவதை கேட்கவும், அவர்களுடன் கலந்துரையாடவும் இந்த இருக்கை முறை உதவும். ப வடிவில் மாணவர்கள் அமரும் போது, ஆசிரியர் வகுப்பறைக்குள் நடமாட முடியும், அனைத்து மாணவர்களும் என்ன செய்கிறார்கள் என்பதை கவனிக்க முடியும். மாணவர்கள் வகுப்புகளில் அதிக ஈடுபாட்டுடன் இருக்க உதவும். பேச தயங்கும் மாணவர்கள் இந்த இருக்கை முறையில் கலந்துரையாடலில் பங்கேற்க அதிக வாய்ப்புகள் உண்டு ப வடிவ முறையின் இந்த சாதகமான அம்சங்களை யாரும் மறுக்காத நிலையில், இதற்கான பாதகங்களும் சுட்டிக்காட்டப்படுகின்றன. கல்வியாளர் பாலாஜி சம்பத், " மாணவர்கள் ப வடிவ முறையில் அமரும் போது, அனைத்து மாணவர்களாலும் கரும்பலகையை நேராக பார்க்க முடியாது. சில மாணவர்கள் இடது அல்லது வலது புறம் தங்கள் கழுத்தை திருப்பியே பார்க்க வேண்டியிருக்கும். பல மணி நேரம் இப்படி அமர்வதால் மாணவர்களுக்கு கழுத்து வலி ஏற்படும்." என்கிறார். அதிக மாணவர்கள் இருக்கும் பட்சத்தில், வகுப்பறையில் அனைவரையும் ப வடிவ முறையில் அமர வைப்பது சிரமமாக இருக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ப வடிவ இருக்கை முறை 'கடைசி பெஞ்ச்' மாணவர்கள் என்ற கருத்தை நீக்கிட உதவும் என்று அரசு கூறுகிறது. சர்வதேச அளவில் என்னென்ன இருக்கை முறைகள் உள்ளன? உலகில் பல்வேறு விதமான வகுப்பறை இருக்கை முறைகள் உள்ளன. அவை அந்தந்த கற்றல் முறையின் வெளிப்பாடாக உள்ளன. ப வடிவம்/ யூ என்ற ஆங்கில எழுத்து (U) வடிவ இருக்கை முறையில் மாணவர்களுடன் ஆசிரியர் உரையாடல் நிகழ்த்தவும், ஆசிரியர் அனைத்து மாணவர்களுக்கும் கவனம் செலுத்தவும் உதவும். சிறுசிறு குழுக்களாக மாணவர்கள் ஒரு மேசைக்கு அருகில் அமரும் முறையில் மாணவர்கள் தங்களுக்குள் சொல்லிக் கொடுத்து கற்றுக் கொள்ள உதவும். வட்ட வடிவிலான இருக்கை முறை குழு விவாதங்கள் நடத்தவும், அனைத்து மாணவர்களுக்கும் சமமாக பங்கேற்க வாய்ப்பு வழங்கவும் உதவும். இரு மாணவர் அமரும் முறை ஆசிரியர் மேசைகளுக்கு இடையே சென்று அனைத்து மாணவர்களையும் கவனிக்க உதவும். தரமான கல்வி முறையை கொண்டதாக கூறப்படும் பின்லாந்து நாட்டில், நவீன பள்ளிகள் சிலவற்றில் வகுப்பறைகளில் பாரம்பரிய மேசை, நாற்காலிகளுக்கு பதிலாக நகர்த்துவதற்கு எளிதான மென்மையான நாற்காலிகள், சோஃபாக்கள், நவீன மேசைகள் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் மாணவர்கள் தங்களது இருக்கை முறையை தேவைப்படும் போது மாற்றியமைத்துக் கொண்டே இருக்கலாம். அங்கே மாணவர்கள் குழுக்களாக அமரும் முறையும் உள்ளது. ஆசிரியர்களுக்கும் வகுப்பறையில் நிரந்தரமான இடம் கிடையாது. மாணவர்கள் தாங்கள் என்ன செய்யலாம் என்று தேர்ந்தெடுக்கும் வாய்ப்பை இந்த வகுப்பறை வழங்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறார் எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் 'யாருடைய வகுப்பறை' என்ற தனது நூலில், பின்லாந்து வகுப்பறைகளில் வட்ட வடிவ இருக்கை முறை எப்படி கற்றலை மேம்படுத்தவும், வகுப்பறையை ஆசிரியர் மையப்படுத்தியதாக இல்லாமல் மாணவர்களை மையப்படுத்தியதாக இருக்க உதவுகிறது என்று குறிப்பிட்டுள்ளார். பிபிசி தமிழிடம் பேசிய அவர் இந்த உத்தரவை வரவேற்காமல் இருக்க முடியாது என்றார். " கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு மாணவர்களிடம் 'என்னை கவனி' என்ற எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளது. கடைசி பெஞ்சில் இருக்கும் மாணவர்களின் பெற்றோர்கள், தங்கள் பிள்ளைகளை ஏன் கடைசியில் அமர வைத்துள்ளீர்கள், முதல் வரிசையில் அமர வையுங்கள் என்று ஆசிரியர்களுக்கு அழுத்தம் கொடுக்கின்றனர்" என்று கூறினார். எனினும் 25 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதம் இருந்தால் மட்டுமே வகுப்பறையில் இந்த இருக்கை முறை சாத்தியம் என்றும் அவர், "அனைத்து வகுப்பறைகளிலும் இந்த விகிதம் இல்லை, பல இடங்களில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அது போன்ற வகுப்பறைகளில் இருக்கை முறையை எப்படி அமைய வேண்டும் என்பதை ஆசிரியரின் சுதந்திரத்துக்கே விட்டுவிட வேண்டும்." என்கிறார். பட மூலாதாரம்,ஆயிஷா இரா. நடராசன் படக்குறிப்பு, சாகித்ய அகாடமி விருது பெற்ற சிறார் எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன், சில வரம்புகள் இருந்தாலும் அரசின் இந்த உத்தரவு வகுப்பறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்கிறார். பட மூலாதாரம், பாலாஜி சம்பத் படக்குறிப்பு,கல்வியாளர் பாலாஜி சம்பத் வருடாந்திர கல்வி நிலை (ASER) 2024 -ன் அறிக்கையின் படி தமிழ்நாட்டில் அரசுப் பள்ளி மாணவர்களில் ஐந்தாம் வகுப்பில் 37% பேருக்கே வாசிக்க தெரிந்திருந்தது. (தனியார் பள்ளிகளில் 32.3% மாணவர்களுக்கு வாசிக்க தெரிந்திருந்தது). அதே போன்று அரசுப் பள்ளிகளில் ஐந்தாம் வகுப்பு மாணவர்களில் 20.2% பேருக்கே வகுத்தல் கணக்குகளை செய்ய தெரிந்திருந்தது. இதுபோன்ற அடிப்படை கற்றல் திறன்களை மேம்படுத்த அரசு முன்னுரிமை வழங்க வேண்டும் என்று பாலாஜி சம்பத் கூறுகிறார். "அதை செய்வது சிரமமான காரியம் அல்ல. கழித்தலோ, வகுத்தலோ தெரியாத மாணவர்களை அழைத்து அவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தி சொல்லி தர வேண்டும். இது போன்ற சிறுசிறு முயற்சிகளை தொடர்ந்து செய்து வந்தால் தான் கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஒரே ஒரு விசயம் மொத்தமாக கல்வி முறையை மாற்றியமைத்து விடும் என்று நம்புவது தவறு" என்கிறார் அவர். தமிழ்நாட்டில் வாட்டர் 'பெல் திட்டம்' துவக்கம் - மாணவர்கள் எந்தெந்த நேரங்களில் தண்ணீர் குடிக்க அனுமதிக்கப்படுவர்? 'தமிழில் கல்வி, ஆங்கிலம் மலையாளத்தில் தேர்வு' - கேரளாவில் தமிழ் மாணவர்களுக்கு அநீதியா? 'கட்டணம் செலுத்த பள்ளிகள் நெருக்கடி', தவிக்கும் பெற்றோர் - கட்டாயக்கல்வி உரிமைச் சட்ட நிதி எப்போது கிடைக்கும்? குழந்தைகளின் மூளை வளர்ச்சியை மெல்ல மெல்லச் சிதைக்கும் வீடியோ கேம்களில் புதைந்துள்ள ஆபத்து கடந்த 21 ஆண்டுகளாக அரசுப் பள்ளி ஆசிரியராக பணிபுரிந்து வரும் வேலூர் மாவட்டத்தை ஷண்முகப்பிரியா ப வடிவ வகுப்பறையை அரசு வலியுறுத்தும் முன்பே தங்களது பள்ளியில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டதாக கூறுகிறார். "மாணவர்களின் கவனம் அதிகரிக்கும் என்பதால் ப வடிவ இருக்கை முறையை ஏற்கெனவே வகுப்பறைகளில் அமல்படுத்தியுள்ளோம். இந்த வடிவில் அமரும் போது, ஆசிரியரால் அனைத்து மாணவர்களையும் கவனிக்க முடியும். மெதுவாக கற்கும் மாணவர்களுக்கும் முழு கவனம் கிடைக்கும். மாணவர்கள் வகுப்பை கவனிக்காமல் தங்களுக்குள் பேசிக் கொள்வது குறைந்தது" என்கிறார். எனினும் வகுப்பறையின் அளவை பொருத்தே இதை அமல்படுத்த முடியும்" என்று அவர் கூறினார். கடந்த ஆண்டு ஒரு வகுப்பறையில் 23 மாணவர்கள் இருந்தபோது எளிதாக ப வடிவ முறையை அமல்படுத்த முடிந்தது என்றும் இந்த ஆண்டு 38 மாணவர்கள் இருப்பதால் சிரமமாக இருப்பதாகவும் அவர் கூறுகிறார். மாணவர்களுக்கு கழுத்து வலி ஏற்படலாம் என்ற விமர்சனம் குறித்து கேட்ட போது, மாணவர்களின் அமரும் இடங்களை ஒவ்வொரு வகுப்புக்கும் மாற்றியமைக்கலாம் என்கிறார் எழுத்தாளர் ஆயிஷா நடராசன். "ஒவ்வொரு வகுப்பின் போதும் மாணவர்கள் இடம் மாறி அமர்வது அவர்களுக்கு புத்துணர்வு தரும். இதனை நேர விரயமாக ஆசிரியர்கள் கருத கூடாது" என்பது அவரது கருத்து. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj4epnzdqk5o
  15. Published By: RAJEEBAN 15 JUL, 2025 | 12:16 PM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு பிரதமர் பதவியில் தொடர்ந்தும் நீடிப்பதற்காகவே ஹமாசிற்கு எதிரான யுத்தத்தை நீடித்தார் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளதை இஸ்ரேலிய பிரதமர் நிராகரித்துள்ளார். நியுயோர்க் டைம்ஸ் தனது நீண்ட புலனாய்வு செய்தியறிக்கையிடலில் தொடர்ந்தும் அதிகாரத்தில் நீடித்திருப்பதற்காக பெஞ்சமின் நெட்டன்யாகு ஹமாசிற்கு எதிரான யுத்தத்தை நீடிக்கின்றார் என தெரிவித்துள்ளது. பெஞ்சமின் நெட்டன்யாகு உள்நாட்டில் தனது பிம்பத்தை மீட்டெடுப்பதற்காகவும் அதிகாரத்தில் நீடிப்பதற்காகவும் தனது அரசியல் இலக்குகளை அடைவதற்காககவும் வேண்டுமென்றே காசா யுத்தத்தை நீடித்தார் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. தீவிரவலதுசாரி நிதியமைச்சர் பெசெலேல் ஸ்மோட்ரிச் அரசாங்கத்தை கவிழ்ப்பேன் என எச்சரித்ததால் பெஞ்சமின் நெட்டன்யாகு 30 பணயக்கைதிகளை காப்பாற்றியிருக்ககூடிய காசா யுத்த நிறுத்த உடன்படிக்கையை கைவிட்டார், என தெரிவித்துள்ள நியுயோர்க் டைம்ஸ் தீவிரவலதுசாரி பாதுகாப்பு அமைச்சரின் எச்சரிக்கை காரணமாக இஸ்ரேல் சவுதி அரேபியாவிற்கு இடையிலான உறவுகளை மேம்படுத்தும் அமெரிக்காவின் திட்டத்தை இஸ்ரேலிய பிரதமர் கைவிட்டார் என குறிப்பிட்டுள்ளது. காசா யுத்தத்தை முடிவிற்கு கொண்டுவரும் நிபந்தனையுடன் சவுதிஅரேபியா இஸ்ரேலுடனான உறவை வலுப்படுத்த தயாராகயிருந்தது. பெருமளவு அரச ஆவணங்கள் இராணுவ ஆவணங்கள் இஸ்ரேல் அமெரிக்கா உட்பட பல நாடுகளை சேர்ந்த 110 அதிகாரிகளுடனான உரையாடல்களை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து பெஞ்சமின் நெட்டன்யாகு குறித்த இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த கட்டுரை தொடர்பில் பேட்டிக்காகவும் ஏனைய விடயங்களிற்காகவும் இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகத்தை தொடர்புகொண்ட போதிலும் உரிய அனுமதி கிடைக்கவில்லை என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் ஏப்பிரல் மாதம் பெஞ்சமின் நெட்டன்யாகு குழப்பிய காசா யுத்த நிறுத்த திட்டம் யுத்தத்தை நிரந்தரமாக முடிவிற்கு கொண்டுவரக்கூடியதாகவும் மீதமுள்ள பணயக்கைதிகளை முடிவிற்கு கொண்டுவரக்கூடிய வாய்ப்பினை உருவாக்ககூடியதாகவும் காணப்பட்டது நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. இந்த யுத்த நிறுத்த திட்டத்தினை தொடர்ந்தும் முன்னெடுத்திருந்தால் சவுதி அரேபியாவுடன் இஸ்ரேல் உறவுகளை சுமூகமாக்கும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டிருக்கலாம் என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. காசா யுத்தம் முடிவிற்கு கொண்டுவரப்பட்டால் இஸ்ரேலுடனான சமாதான உடன்படிக்கையை துரிதப்படுத்த தயார் என்ற சமிக்ஞைகளை சவுதி அரேபியா வெளியிட்டுவந்தது என நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது. நெட்டன்யாகுவிற்கும் உயர் பாதுகாப்பு அதிகாரிகளிற்கும் இடையிலான உறவில் கசப்புணர்வு காணப்படுவதாக தெரிவித்துள்ள நியுயோர்க் டைம்ஸ் போரின் போது பாதுகாப்பு அதிகாரிகள் குறித்த பெஞ்சமின் நெட்டன்யாகுவின் அவநம்பிக்கை அதிகரித்தது. இராணுவ அதிகாரிகளை தான் சந்திக்கும் போது அந்த உரையாடல்கள் பதிவு செய்யப்படவில்லை என்பதை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளில் நெட்டன்யாகு ஈடுபட்டார் என குறிப்பிட்டுள்ளது. இதேவேளை இந்த செய்தி குறித்து மறுப்பு வெளியிட்டுள்ள இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் நியுயோர்க் டைம்ஸ் செய்திகள் இஸ்ரேல், அதன் துணிச்சலான மக்கள் மற்றும் வீரர்கள் மற்றும் அதன் பிரதமரை இழிவுபடுத்துகிறது" என்றுஎன தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/220039
  16. திருப்புவனம் கோவில் காவலாளி கொலை வழக்கில் மேலும் ஒரு ஆதாரமா? புதிய வீடியோவால் சர்ச்சை கட்டுரை தகவல் பிரபுராவ் ஆனந்தன் பிபிசி தமிழுக்காக 6 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மடப்புரம் காவலாளி அஜித்குமார் உயிரிழந்த விவகாரத்தில் மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது. அஜித்குமார் உயிரிழந்த பிறகு, அவரது தம்பியை அதிகாலையில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. ஜூன் 28-ம் தேதி அதிகாலை 5.38 மணி அளவில் பதிவானதாக கூறப்படும் அந்த சிசிடிவி காட்சியில், வெள்ளை நிற போலீஸ் வேன் ஒன்று வந்து நிற்கிறது. அந்த வாகனத்தில் அஜித்குமாரின் தம்பி நவீன்குமார் ஏறும் காட்சி பதிவாகியுள்ளது. அந்த காட்சியில், லுங்கி அணிந்தபடி நவீன் குமாரை அழைத்துச் சென்ற நபர் சீருடை அணியாமல் வந்த காவலர் என்று கூறப்படுகிறது. நகை திருட்டுப் புகாரில் காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட அஜித்குமார் உயிரிழந்தது தொடர்பாக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டு 5 காவலர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் குறித்து மதுரை மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து ஜூலை 8-ம் தேதி நீதிபதியின் விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை மாநில காவல்துறையிடமிருந்து சிபிஐக்கு மாற்ற முதல்வர் உத்தரவிட்டிருந்தார். இதனை கொலை வழக்காக பதிவு செய்து சிபிஐ விசாரணையை தொடங்கியுள்ள நிலையில் இந்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. நிகிதா புகாருடன் முரண்படும் முதல் தகவல் அறிக்கை காவலாளி அஜித் குமாருக்கு எதிராக நகையை காணவில்லை என மனுதாரர் நிகிதா அளித்த புகாரின் முதல் தகவல் அறிக்கை வெளியாகியிருந்தது. இதில் பல்வேறு முரண்பட்ட தகவல்கள் இருப்பதாக குற்றம்சாட்டு வைக்கும் அஜித் குமார் தரப்பு வழக்கறிஞர்கள் பல கேள்விகளையும் முன் வைத்துள்ளனர். உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, மதுரை மாவட்ட 4-வது நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் இந்தச் சம்பவம் தொடர்பாக விசாரிக்கவும், ஜூலை 8ந்தேதி அறிக்கை தாக்கல் செய்யுமாறும் உத்தரவிட்டிருந்தது. அதன் அடிப்படையில் கடந்த 2-ம் தேதி முதல் திருப்புவனம் நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகையில் தங்கியிருந்து நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை நடத்தி வந்தார். நீதிபதி விசாரணை: யாரெல்லாம் விசாரிக்கப்பட்டுள்ளார்கள்? படக்குறிப்பு, நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் முதல் மூன்று நாட்கள் நடந்த விசாரணையின் போது, ஆட்டோ ஓட்டுநர் அருண்குமார், கோவில் அலுவலர் பெரியசாமி, அஜித்குமாரை தாக்கியது தொடர்பான வீடியோவை உயர்நீதிமன்றத்தில் வழங்கிய கோயில் பணியாளர் சக்தீஸ்வரன், கோயில் பணியாளர்கள் பிரபு, கார்த்திக் ராஜா, அஜித் குமாரின் தாயார் மாலதி, அவரது சகோதரர் நவீன்குமார், திருப்புவனம் அரசு மருத்துவமனை மருத்துவர் கார்த்திகேயன், ஆட்டோ ஓட்டுநர் அய்யனார், அஜித் குமாரின் உடலை பிரேத பரிசோதனை செய்த மதுரை அரசு மருத்துவமனை மருத்துவர்கள் சதாசிவம், ஏஞ்சல் உள்ளிட்டோரிடம் நீதிபதி விசாரணை நடத்தினார். நான்காவது நாளான வெள்ளிக்கிழமை காலை நீதிபதி ஜான் சுந்தர் லால் சுரேஷ் திருப்புவனம் காவல் நிலையத்துக்குச் சென்று விசாரணை நடத்தினார். அஜித் குமார் மீதான நிகிதாவின் புகார் மனு, அந்தப் புகாரை பதிவு செய்த ஆவணத்தை ஆய்வு செய்த அவர், சம்பவத்தன்று பணியில் இருந்த போலீஸாரிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். பின்னர், நெடுஞ்சாலைத் துறை ஆய்வு மாளிகைக்கு வந்த நீதிபதி, சிவகங்கை ஏடிஎஸ்பி சுகுமாறனிடம் விசாரித்தார். தொடர்ந்து, திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ்குமார், சிறப்பு எஸ்.ஐ. சிவக்குமார், அன்று பணியில் இருந்த போலீஸ்காரர் இளையராஜா ஆகியோரிடம் தனித்தனியாக விசாரித்தார். இதையடுத்து, பணியிடை நீக்கம் செய்யப்பட்ட மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரத்திடமும் விசாரணை நடத்தினார். முதல் தகவல் அறிக்கையில் என்ன உள்ளது? படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையம் நிகிதாவின் புகாரின் பேரில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு தகவல்கள் முரண்பட்டதாக உள்ளதாகவும், அறிக்கையின் அடிப்படையில் சட்டத்திற்கு புறம்பாக அஜித் குமார் உட்பட ஐந்து இளைஞர்களை போலீசார் அழைத்துச் சென்று விசாரணை என்ற பெயரில் அடித்தது தெரியவந்துள்ளதாகக் கூறுகிறார் அஜித்குமாரின் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா. புகார் மனுவில் உள்ள நேரமும் முதல் தகவல் அறிக்கையில் உள்ள நேரமும் வேறு வேறாக உள்ளது என்கிறார் கார்த்திக் ராஜா. இது குறித்து பிபிசி தமிழிடம் பேசியவர், " முதல் தகவல் அறிக்கையில் 27 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு நகை காணாமல் போனதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் நிகிதா கொடுத்த புகார் மனுவில் காலை 9 மணிக்கு வீட்டில் இருந்து தானும் (நிகிதா) அம்மா சிவகாமியும் கோவிலுக்குப் புறப்பட்டதாக குறிப்பிட்டுள்ளார்." 'சடலமாக வருவான் என நினைக்கவில்லை' என்று கதறும் தாயார் - நகை திருட்டு புகார் கொடுத்த பெண் கூறுவது என்ன? பிபிசி கள ஆய்வு "அரசு தன் குடிமகனையே கொலை செய்துள்ளது" - திருப்புவனம் கோவில் காவலாளி வழக்கில் உயர்நீதிமன்றம் வேதனை சாத்தான்குளம் முதல் திருப்புவனம் வரை - காவல் அத்துமீறல்கள் ஏற்படுத்தும் அரசியல் எதிரொலி '44 காயங்கள், மூளையில் ரத்தக் கசிவு, காதுகளில் உலர்ந்த ரத்தம்' - மரணத்திற்கு காரணம் என்ன? முதல் தகவல் அறிக்கையில் குளறுபடிகளா? படக்குறிப்பு, அஜித்குமாரின் வழக்கறிஞர் கார்த்திக் ராஜா. நிகிதா 27ம் தேதி இரவு அளித்த பேட்டியில். காவலாளி சீருடையில் இருந்த அஜித் குமார் , தனது தாய்க்கு சக்கர நாற்காலியை எடுத்து வந்து கொடுத்தற்காக ரூ.500 கொடுக்க வேண்டும் என வாக்குவாதம் செய்ததாகவும், கோவிலில் இருந்து வீடு திரும்பிய பின்னர் காரில் இருந்த நகை காணாமல் போனதை அறிந்து காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் தெரிவித்திருந்தார். ஆனால் நிகிதா அளித்த புகார் மனுவில் உயிரிழந்த அஜித்குமார் 500 ரூபாய் கேட்டதாக குறிப்பிடப்படவில்லை என்கிறார் கார்த்திக் ராஜா. தொடர்ந்து பேசிய அவர். "நிகிதா 27ஆம் தேதி காலை 11 மணிக்கு கோவிலுக்கு வந்து சென்றுள்ளார். நகை காணாமல் போனதாக 3 மணிக்கு திருப்புவனம் காவல் நிலையத்தில் வாய் மொழியாக முதலில் புகார் அளித்துள்ளார். பிறகு இரவு 7 மணிக்கு வழக்கறிஞர் ஒருவர் உதவியுடன் புகார் மனு அளித்துள்ளார்." "எனவே முதல் தகவல் அறிக்கையில் பல்வேறு குளறுபடிகள் மற்றும் முரண்பட்ட தகவல்கள் உள்ளன. நீதிமன்றத்தில் அஜித் குமார் கொல்லப்பட்டதாக வழக்கு தாக்கல் செய்யப்பட்ட பிறகு திருப்புவனம் காவல்துறையினரால் தாமதமாக அவசரகதியில் தயாரிக்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையாக இதனை நான் பார்க்கிறேன்." என்று கூறினார். இந்த வழக்கில் நிகிதாவையும் சேர்த்து விசாரிக்க வேண்டும் என கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார். "உயிரிழந்த அஜித் குமார் மீது இதுவரை எந்த காவல் நிலையத்திலும் குற்ற பின்னணி இல்லை, ஆனால் புகார் அளித்த நிகிதா மீது பல்வேறு மோசடி வழக்குகள் பதிவாகியுள்ளன. அஜித்குமார் மரணத்தில் தற்போது போடப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையை மாற்றி எதிரியாக நிகிதாவை சேர்க்க வேண்டும்" என்றார். சட்டத்திற்குப் புறம்பாக விசாரித்துள்ளனரா? பட மூலாதாரம்,HENRI TIPHAGNE படக்குறிப்பு, மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் நிகிதா புகாரின் பேரில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை இந்த வழக்கிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிபிசி தமிழிடம் பேசிய மக்கள் கண்காணிப்பகத்தின் நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர். "நகை காணவில்லை என்பது தொடர்பாக 27 ஆம் தேதி 3 மணிக்கு நிகிதா புகார் அளித்ததாகவும் அது தொடர்பாக திருப்புவனம் காவல் நிலையத்தில் சிஎஸ்ஆர் போடப்பட்டுள்ளது என அரசு தரப்பில் நீதிமன்றத்தில் வாதம் முன் வைக்கப்பட்டது." "முதல் கட்ட விசாரணை தொடங்கிய திருப்புவனம் காவல் ஆய்வாளர் ரமேஷ் குமார் திருக்கோயில் அதிகாரிகளை தொடர்பு கொண்டு அஜித் குமாரை விசாரணைக்கு அனுப்பி வைக்குமாறு தெரிவித்ததன் அடிப்படையில் அஜித் குமார் காவல் நிலையத்திற்கு விசாரணைக்குச் சென்றிருக்கிறார்." "காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு வந்த அஜித் குமார் காணாமல் போன நகை தொடர்பாக தனக்கு ஒன்றும் தெரியாது தான் எடுக்கவில்லை என தொடர்ந்து சொல்லி வந்த நிலையில், நிகிதா இரவு 7 மணி அளவில் திருப்புவனம் காவல் நிலையத்தின் முன்பு நின்று கொண்டு ஊடகங்களுக்கு காரில் வைத்திருந்த நகையைக் காணவில்லை, நகையை காவலாளி அஜித் குமார் திருடியதாக பேட்டி ஒன்றை அளித்துள்ளார்." என்று தெரிவித்தார் நன்றாக விசாரித்து நகையை மீட்குமாறு கூறிய டிஎஸ்பி பட மூலாதாரம்,NIKITHA படக்குறிப்பு, நிகிதா திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் காவல் நிலையத்திற்கு வெளியே அமர்ந்திருந்த மானாமதுரை டி.எஸ்.பி சிறப்பு தனிப்படை போலீசாரை அழைத்து அஜித் குமாரை விசாரிக்குமாறு ஒப்படைத்துள்ளார். ஒப்படைக்கப்பட்ட அஜித் குமாரை காவல் நிலையத்தில் இருந்து தனிப்படை காவலர்கள் அழைத்துச் சென்றுள்ளனர். சிறப்பு தனிப்படை சார்பு ஆய்வாளர் பிரதாப் விடுப்பில் இருந்தால் தனிப்படை தலைமைக் காவலர் மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரத்தை அழைத்து அஜித் குமார் தொடர்பாக தகவல்களை அளித்ததாக அஜித் குமார் இறப்பு தொடர்பாக தனிப்படை தலைமைக் காவலர் கண்ணன் அளித்துள்ள புகாரின் மீது பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. டி.எஸ்.பி அஜித் குமாரை விசாரிக்க அனுமதி அளித்தன் அடிப்படையில் அஜித்குமாரை 27ஆம் தேதி இரவு கடுமையாக தாக்கியுள்ளனர் என்கிறார் ஹென்றி திபென் அஜித் குமார் நகையை தான் திருடவில்லை எனச் சொல்வதாக தலைமை காவலர் மீண்டும் டிஎஸ்பியை தொடர்பு கொண்டு கூறியுள்ளார். அதற்கு டி.எஸ்.பி சண்முகசுந்தரம் அஜித் குமாரை "நன்றாக விசாரித்து நகையை மீட்குமாறு கூறியுள்ளார்". தொடர்ந்து பேசிய அவர், "டி.எஸ்.பி உத்தரவின் பெயரில் சம்மன் அளிக்காமல் அருண்குமார், அஜித் குமார் மற்றும் அவரின் தம்பி நவீன் குமாரையும் விசாரணைக்கு அழைத்து வந்து கடுமையாக போலீசார் தாக்கியுள்ளனர். அதன் பின்னர் 28ஆம் தேதி காலை 10.30 மணி அளவில் நிகிதா கொடுத்த புகாரின் பேரில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படுகிறது." "அப்படியெனில் சட்டத்திற்கு புறம்பாக வழக்குப்பதிவு செய்யப்படாமல் மூன்று இளைஞர்களை போலீசார் விசாரணைக்கு அழைத்து வந்து இரவு முழுவதும் கடுமையாக தாக்கியது முதல் தகவல் அறிக்கையில் தெரியவந்துள்ளது. எனவே நிகிதாவின் முதல் தகவல் அறிக்கை இந்த வழக்கிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது." என்றார். "காவல் அதிகாரிகளை ஏன் இன்னும் வழக்கில் சேர்க்கவில்லை?" ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் டிஎஸ்பி சண்முகசுந்தரத்தை ஏன் இன்னும் வழக்கில் சேர்க்கவில்லை என கேள்வி எழுப்புகிறார் ஹென்றி திபென். "அஜித் குமாரை விசாரணைக்கு அழைத்து செல்ல போலீசாருக்கு உத்தரவிட்ட திருப்புவனம் காவல் நிலைய ஆய்வாளர் ரமேஷ் குமார் மற்றும் மானாமதுரை டி.எஸ்.பி சண்முகசுந்தரம் ஆகிய இருவரையும் இதுவரை ஏன் வழக்கில் சேர்த்து அவர்களை கைது செய்யவில்லை என்ற கேள்வி நிகிதாவின் முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில் எழுகிறது" என அவர் விவரித்தார். உடற்கூராய்வுக்கு அனுப்ப ஏற்பட்ட காலதாமதம் குறித்தும் கேள்வி எழுப்புகிறார் ஹென்றி திபென். "28 ஆம் தேதி மாலை அஜித்குமார் உயிரிழந்ததாக காவல் ஆய்வாளர் அஜித்குமாரின் குடும்பத்தினரிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்த நிலையில் 29ஆம் தேதி மாலை வரை உடற்கூராய்வுக்கு அனுப்பாமல் காலதாமதம் செய்ததற்கு என்ன காரணம் என்று பல்வேறு கேள்விகள் எழுகிறது" என்றார். "2011 ஆம் ஆண்டில் இருந்து பல்வேறு மோசடி வழக்குகள் உள்ள நிகிதாவை ஏன் காவல்துறை இதுவரை அழைத்து விசாரிக்கவில்லை" என்ற கேள்வி எழுவதாக கூறுகிறார் மக்கள் கண்காணிப்பக நிர்வாக இயக்குநர் ஹென்றி திபேன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c939xwd2z69o
  17. காசாவில் மேலும் மூன்று இஸ்ரேலிய படையினர் பலி 15 JUL, 2025 | 11:27 AM காசாவில் இஸ்ரேலிய படையினரின் டாங்கி குண்டுவெடிப்பொன்றில் சிக்கியதில் மூன்று படையினர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. 19 முதல் 20 வயதுடையவர்களே கொல்லப்பட்டுள்ளனர். படுகாயமடைந்த அதிகாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காசாவின் வடபகுதி நகரனா ஜபாலியாவில் குண்டுவெடிப்பில் சிக்கிய டாங்கியில் இருந்த படையினரே கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸ் தாக்குதல் காரணமாகவே டாங்கி வெடித்து சிதறியது என முதலில் கருதியதாக தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் எனினும் டாங்கியின் சுழலும் பீரங்கிமேடைக்குள் தவறுதலாக எறிகணை வெடித்ததால் இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என கருதுவதாக தெரிவித்துள்ளது. 401வது கவசவாகனப்பிரிவை சேர்ந்தவர்களே உயிரிழந்துள்ளனர். https://www.virakesari.lk/article/220035
  18. போராடிய ஜடேஜா: லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவை வீழ்த்திய ஸ்டோக்ஸின் அஸ்திரங்கள் எவை? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் தினேஷ் குமார். எஸ் கிரிக்கெட் விமர்சகர் 4 நிமிடங்களுக்கு முன்னர் லார்ட்ஸ் டெஸ்டில் இந்தியாவை 22 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து தொடரில் 2–1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் ஆட்டங்களில் ஒன்றான இதில் கடைசி நாளில் என்ன நடந்தது? கடைசி நாளில் லார்ட்ஸ் மைதானத்தில் இலக்கை விரட்டுவது என்பது பேட்டர்களுக்கு எப்போதுமே கொடுங்கனவு. தொடரில் 2–1 என்று முன்னிலை பெறுவதற்கு இந்தியாவுக்கு 135 ரன்கள் தேவை, இங்கிலாந்துக்கு 6 விக்கெட்கள் தேவை என்கிற நிலையில் ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கியது. நேற்று ஓவரின் மீதமுள்ள இரண்டு பந்துகளை வீசி முடிந்த ஸ்டோக்ஸ், பிறகு வோக்ஸ் கையில் பந்தைக் கொடுப்பார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், யாரையும் நம்பத் தயாராக இல்லாத ஸ்டோக்ஸ், ஆர்ச்சருடன் சேர்ந்து ராகுல் – பந்த் இணைக்கு எதிராக மூர்க்கத்துடன் பந்துவீசினார். 4.5 ஆண்டுகளுக்கு பிறகு மறுவருகை நிகழ்த்திய ஆர்ச்சர், தன்னுடைய மிகச் சிறந்த பந்துவீச்சை இன்று வெளிக்காட்டினார். மணிக்கு 89.6 மைல் வேகத்தில் அரவுண்ட் த விக்கெட்டில் இருந்து ஆர்ச்சர் வீசிய பந்தில் பந்த் போல்டானார். உள்ளே வரும் என்று நம்பி பந்த் தவறான லைனில் விளையாடி பரிதாபமாக ஸ்டம்புகளை பறிகொடுத்தார். உண்மையில், அது ஒரு அட்டகாசமான லெங்ந்தில் வீசப்பட்ட பந்து. முன்னே வருவதற்கும் வழியில்லை; பின்னங்காலுக்கு நகர்ந்து ஆடுவதற்கும் வழியில்லை. இரண்டும் கெட்டான் லெங்ந்த் (Corridor of uncertainty) என்பார்களே அப்படி ஒரு லைன் அண்ட் லெங்த். பந்த் நடையை கட்டினாலும், கேஎல் ராகுல் இன்னும் இருக்கிறாரே என்கிற ஆசுவாசம் சில நிமிடங்களுக்கு கூட நீடிக்கவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்தடுத்து விக்கெட் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் நம்பமுடியாத ஒரு பந்தை வீசி, ராகுலின் கால்காப்பை தாக்கி, LBW ஆக்கினார். கற்பனைக்கும் எட்டாத பந்து என்றே அதை சொல்ல வேண்டும். நான்காவது, ஐந்தாவது ஸ்டம்ப் லைனில் பயணிக்க தொடங்கிய பந்து, கடைசி நொடியில் அசாதாரணமாக உள்ளே திரும்பும் என ராகுல் நிச்சயம் நம்பியிருக்கமாட்டார். முதல் இன்னிங்சை போலவே பந்த் முதலில் பெவிலியனுக்கு திரும்ப அவருக்கு துணையாக ராகுலும் பின்னே சென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES கைகொடுத்த பும்ரா கடந்த இன்னிங்சில் நன்றாக தற்காப்பு ஆடியதால், நிதிஷுக்கு முன்பாக சுந்தர் அனுப்பிவைக்கப்பட்டார். ஆனால், ஆர்ச்சர் தன் சொந்த பந்துவீச்சில் கிடைத்த கடினமான கேட்ச் வாய்ப்பை விக்கெட்டாக மாற்றி சுந்தரை உடனே வெளியேற்றினார். . இந்தநிலையில் ஜடேஜாவும் நிதிஷும் ஆர்ச்சர்–ஸ்டோக்ஸ் பந்துவீச்சை திறம்பட எதிர்கொண்டு பர்சன்டேஜ் கிரிக்கெட் விளையாடினர். முதல் நாளில் ரன் ஓடமுடியாமல் சிரமப்பட்ட ஸ்டோக்ஸ், தொடர்ச்சியாக 1 மணி நேரத்துக்கு மேல் பந்துவீசி தன் உறுதியையும் கிரிக்கெட் மீதான காதலையும் வெளிப்படுத்தினார். ஜடேஜாவும் நிதிஷும் ஓவர் பின் ஓவராக தாக்குப்பிடித்து விளையாடியதை பொறுத்துக்கொள்ள முடியாத இங்கிலாந்து அணியினர், அவர்களை சூழ்ந்து கொண்டு வசைபாடத் தொடங்கினர். பட மூலாதாரம்,GETTY IMAGES மதிய உணவு இடைவேளைக்கு 10 நிமிடங்களுக்கு குறைவாகவே இருந்தபோது, அதுவரை நன்றாக விளையாடிக் கொண்டிருந்த நிதிஷ் ரெட்டி, வோக்ஸ் பந்தில் அவுட்சைட் எட்ஜ் ஆகி ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஏமாற்றம் அளித்தார். இந்த தொடரில் உணவு இடைவேளைக்கு அரை மணி நேரம் முன்பாக இந்திய அணி இதுவரை 10 முறை விக்கெட்டை இழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. மதிய உணவு இடைவேளைக்கு பிறகு, இந்திய அணி எளிதில் இங்கிலாந்திடம் சரணடையும் என்றே கருதப்பட்டது. ஆனால், யாரும் எதிர்பார்க்காத வகையில் ஜடேஜாவுக்கு தோள் கொடுத்தார் பும்ரா. அவ்வப்போது கடைசிக்கட்ட பேட்டருக்கே உரித்தான சில ஷாட்களை முயற்சித்தாலும், முழு கவனத்தையும் கொடுத்து விளையாடினார். கில் உள்பட இந்தியாவின் டாப் ஆர்டர் பொறுப்பில்லாமல் விக்கெட்டை பறிகொடுத்த நிலையில், பும்ராவின் போராட்டம் சற்று ஆறுதலாக அமைந்தது. நேரம் செல்ல செல்ல ரன் சிறுக சிறுக சேர்ந்துகொண்டே வந்தது. நீண்ட நேரமாக தடுப்பாட்டமாடிய ஜடேஜா, வோக்ஸ் பந்தில் டீப் மிட்விக்கெட்டில் ஒரு சிக்சர் விளாசி, ஆட்டத்துக்கு சுறுசுறுப்பை கொண்டுவந்தார். பும்ராவை எப்படியாவது விக்கெட் எடுத்துவிட ஸ்டோக்ஸ் தன்னால் முடிந்த அத்தனை பொறிகளையும் வைத்து பார்த்தார். பும்ரா அவசரப்படும் போதெல்லாம் அருகில் வந்து அறிவுரை சொல்லி ஜடேஜா வழிநடத்தினார். பும்ராவை தூக்குவதுதான் ஒரே வழி என்பதை உணர்ந்த ஸ்டோக்ஸ், பீல்டர்களை முழுவதுமாக பரப்பி வைத்து, ஜடேஜாவுக்கு எதிராக களத்தடுப்பை அமைத்தார். ஒன்று ரிஸ்க் எடுத்து பெரிய ஷாட்டுக்கு செல்ல வேண்டும். இல்லை, ஒற்றை ரன் ஓடி பும்ராவுக்கு ஸ்ட்ரைக் கொடுக்க வேண்டும். இரண்டில் எது நடந்தாலும் அது இங்கிலாந்துக்கு லாபம் என்பது ஸ்டோக்ஸ் கணக்கு. பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசியில் விருந்து 53 பந்துகள் தாக்குப்பிடித்த பும்ரா, ஸ்டோக்ஸ் வீசிய பவுன்சர் பந்தை ஒற்றைக் காலைத் தூக்கி pull ஷாட் அடிக்கப் போய் உள்வட்டத்தில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவருடைய விக்கெட்டுடன் இந்தியாவின் கடைசி நம்பிக்கையும் முடிவுக்கு வந்தது. தவறான ஷாட் விளையாடி பும்ரா பெவிலியன் திரும்பும் போது, ஜடேஜாவின் முகத்தில் ஆயிரம் சோக ரேகைகள். பந்து தேய்ந்து பஞ்சு போல மாறியிருந்ததால் பெரிய ஷாட் அடிக்க ஜடேஜா எடுத்த முயற்சிகளும் பலனளிக்கவில்லை. இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு ஒரே காரணம் பென் ஸ்டோக்ஸ்தான். களத்தில் வீரர்கள் சோர்ந்து போகும் போதெல்லாம் நம்பிக்கை வார்த்தைகள் கூறி, அவர்களை உற்சாகப்படுத்தினார். பந்துவீச்சில் அவர் காட்டிய உத்வேகம், பிற வேகப்பந்து வீச்சாளர்களுக்கும் பரவியதை பார்க்க முடிந்தது. நவீன கிரிக்கெட்டின் இரு உச்சபட்ச ஆல்ரவுண்டர்களான ஸ்டோக்ஸ், ஜடேஜா இருவரின் போராட்டம், பார்வையாளர்களுக்கு விருந்தாக அமைந்தது. ஸ்டோக்ஸ் பந்தில் ஸ்லிப் தலைகளின் மேல் ஒரு பவுண்டரியை சீவிவிட்டு அரைசதத்தை எட்டினார் ஜடேஜா. 9 விக்கெட்டுகள் விழுந்துவிட்டது, ஆட்டம் முடிந்தது என நினைக்கும் போது, சிராஜ் தன் பங்குக்கு 30 பந்துகள் பிடித்து இங்கிலாந்து அணியினர் வயிற்றில் புளியை கரைத்தார். ஜடேஜாவும் சிராஜும் எதிர்கொண்ட ஒவ்வொரு பந்தும் ஒரு ஈவன்டாக மாறி, ரசிகர்களுக்கு விருந்தளித்தது. ஆர்ச்சர், ஸ்டோக்ஸ், கார்ஸ் போன்றவர்களின் பந்துவீச்சில் எல்லாம் அவுட்டாகாத சிராஜ், கடைசியில் முழு உடற்தகுதி இல்லாமல் பந்துவீசிய பஷீர் பந்தில் போல்ட் ஆனார். ஆட்டமிழந்த பிறகு சிராஜ் சோகமே உருவாக அமர்ந்திருந்ததும் அவருக்கு இங்கிலாந்து வீரர்கள் ஆறுதல் சொன்னதும் 2005 எட்ஜ்பாஸ்டன் டெஸ்டை நினைவூட்டியது. தோல்வியின் விரக்தியில் இருந்த பிரெட் லீயை ஃபிளின்டாஃப் ஆற்றுப்படுத்தும் காட்சி மனதில் வந்துபோனது. இந்தியா தோற்றாலும் இந்திய வீரர்கள் காட்டிய போராட்ட குணம், நிச்சயம் பாராட்டப்பட வேண்டியது. ஆகச்சிறந்த இன்னிங்ஸ் விளையாடியும் ஜடேஜா வெற்றியுடன் ஆட்டத்தை முடிக்க முடியாதது துரதிர்ஷ்டம். முதல் நாளில் இருந்தே சரிக்கு சமமாக சென்று கொண்டிருந்த டெஸ்ட், ஒரு பரபரப்பான முடிவுடன் இறுதிக்கட்டத்தை அடைந்துவிட்டது. https://www.bbc.com/tamil/articles/c23g2penpg9o
  19. உக்ரைன் தலைநகரில் ரஸ்ய உளவாளிகள் இருவர் சுட்டுக்கொலை 14 JUL, 2025 | 01:28 PM உக்ரைன் தலைநகரில் ரஸ்யாவின் இரண்டு உளவாளிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் புலனாய்வு பிரிவை சேர்ந்த முக்கிய அதிகாரி கொல்லப்பட்டதை தொடர்ந்தே ரஸ்யாவின் உளவாளிகள் என கருதப்படும் ஆணும் பெண்ணும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் புலளாய்வு பிரிவை சேர்ந்த முக்கிய அதிகாரியான இவான் வொரொனிச் கையடக்க துப்பாக்கி மூலம் பத்தாம் திகதி சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு காரணமான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்த இருவரே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைன் தலைநகரில் மறைந்திருந்த இருவரும் மோதல் ஒன்றின் போது கொல்லப்பட்டுள்ளனர். உக்ரைனின் எஸ்பியு பாதுகாப்பு சேவையை சேர்ந்தவர்கள் இவர்களை கைதுசெய்ய முயன்றவேளை இடம்பெற்ற மோதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இரகசிய விசாரணைகள் எதிர் உளவுத்துறை நடவடிக்கைகளின் விளைவாக எதிரிகளின் குகை கண்டுபிடிக்கப்பட்டது. உக்ரைனின் பாதுகாப்பு சேவையின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். அவர்களை கைதுசெய்யமுயன்றவேளை அவர்கள் அதனை எதிர்த்தனர், இதன் காரணமாக துப்பாக்கிமோதல் இடம்பெற்றது, வில்லன்கள் அழிக்கப்பட்டனர், உக்ரைனில் மரணம் மாத்திரமே சாத்தியம் என எதிரிக்கு எச்சரிக்க விரும்புகின்றேன் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார். கொல்லப்பட்ட உக்ரைன் அதிகாரியை கண்காணிக்குமாறும் அவரின் நாளாந்த நடவடிக்கையை கண்காணிக்குமாறும் கொல்லப்பட்ட இருவருக்கும் அவர்களை வழிநடத்துபவர் உத்தரவிட்டிருந்தார். பின்னர் சைலன்சர் பொருத்தப்பட்ட கைத்துப்பாக்கியை பயன்படுத்தி கொலை செய்தனர் என உக்ரைன் இராணுவ அதிகாரி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/219960
  20. பட மூலாதாரம்,@GOOGLE படக்குறிப்பு, அமெரிக்காவின் ஓரிகானில் உள்ள கூகுள் போன்ற பல நிறுவனங்களின் தரவு மையங்கள், குளிரூட்டும் அமைப்புகளில் இருந்து தண்ணீரை ஆவியாக்குகின்றன. கட்டுரை தகவல் சாரா இப்ராஹிம் பிபிசி உலக சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) பயன்பாடு அசுர வேகத்தில் அதிகரித்து வருகிறது. ஆனால் இந்தத் தொழில்நுட்பத்துக்கு அதிக தண்ணீர் தேவைப்படுகிறது. குளிரூட்டுவதற்கும், அதிக அளவு மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கும் தண்ணீர் அவசியமாகிறது. உலகில் பாதி மக்கள் ஏற்கனவே தண்ணீர் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். பருவநிலை மாற்றமும், வளர்ந்து வரும் தேவையும் இந்தப் பற்றாக்குறையை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது என்கிறது ஐக்கிய நாடுகள் சபை. இந்நிலையில், ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்தால், தண்ணீர் பற்றாக்குறை இன்னும் அதிகரிக்குமா? ஏஐ எவ்வளவு தண்ணீரைப் பயன்படுத்துகிறது? சாட்ஜிபிடியிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு ஒரு டீஸ்பூன் தண்ணீரில் 15-ல் ஒரு பகுதி பயன்படுகிறது என்கிறார் ஓபன்ஏஐயின் தலைமை செயல் அதிகாரி சாம் ஆல்ட்மேன். ஆனால், கலிஃபோர்னியா மற்றும் டெக்சாஸைச் சேர்ந்த அமெரிக்க கல்வியாளர்களின் ஆய்வு, வேறு கருத்தைக் முன்வைக்கிறது. GPT-3 மாதிரியில் 10 முதல் 50 பதில்களுக்கு அரை லிட்டர் தண்ணீர் (அதாவது, ஒரு பதிலுக்கு 2 முதல் 10 டீஸ்பூன் தண்ணீர்) பயன்படுவதாக அவர்கள் கண்டறிந்தனர். கேள்வியின் வகை, பதிலின் நீளம், பதில் செயலாக்கப்படும் இடம் மற்றும் கணக்கீட்டில் கருத்தில் கொள்ளப்படும் காரணிகளைப் பொறுத்து தண்ணீர் பயன்பாட்டின் அளவு மாறுபடுகிறது. 10-50 கேள்விகளுக்கு 500 மில்லி தண்ணீர் தேவைப்படுவதாக அமெரிக்க கல்வியாளர்களின் மதிப்பீடு செய்துள்ளனர். இது நிலக்கரி, எரிவாயு அல்லது அணுமின் நிலையங்களில் மின்சார உற்பத்திக்காகப் பயன்படும் தண்ணீரையும் உள்ளடக்கியது. ஆனால், சாம் ஆல்ட்மேனின் கணக்கு இதை உள்ளடக்காமல் இருக்கலாம். பிபிசி கேட்டபோது, ஓபன்ஏஐ தனது கணக்கீடுகளின் விவரங்களை அளிக்கவில்லை. இருப்பினும் தண்ணீர் பயன்பாடு படிப்படியாக அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளும் ஒரு பில்லியன் (100 கோடி) கேள்விகளுக்கு சாட்ஜிபிடி பதிலளிக்கிறது. இது பல ஏஐ (செயற்கை நுண்ணறிவு) புரோகிராம்களில் ஒன்று மட்டுமே எனக் கூறுகிறது ஓபன்ஏஐ. 2027 ஆம் ஆண்டுக்குள், ஏஐ தொழில்துறை ஒவ்வொரு ஆண்டும் டென்மார்க் முழுவதும் பயன்படுத்தும் தண்ணீரை விட 4 முதல் 6 மடங்கு அதிக தண்ணீரை பயன்படுத்தும் என்று அமெரிக்க ஆய்வு ஒன்று மதிப்பிடுகிறது. "நாம் எவ்வளவு அதிகமாக ஏஐ உபயோகிக்கிறோமோ , அவ்வளவு தண்ணீரை நாம் பயன்படுத்துகிறோம்," என்று அந்த ஆய்வு ஆசிரியர்களில் ஒருவரான கலிபோர்னியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஷோலி ரென் கூறுகிறார். ஏஐ தண்ணீரை எவ்வாறு பயன்படுத்துகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஏஐ (செயற்கை நுண்ணறிவு) பயன்பாடு, குறிப்பாக படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்குவது, மின்சாரம் மற்றும் தண்ணீருக்கான தேவையை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்னஞ்சல் எழுதுவது, கட்டுரைகள் எழுதுதல் அல்லது டீப்ஃபேக் வீடியோக்கள் உருவாக்குதல் போன்ற ஆன்லைன் செயல்பாடுகள், தரவு மையங்கள் எனப்படும் பெரிய கட்டடங்களில் உள்ள கணினி சேவையகங்களால் செயலாக்கப்படுகின்றன. இந்த தரவு மையங்கள் சில நேரங்களில் பல கால்பந்து மைதானங்களைப் போன்று, பெரிய அளவில் கட்டப்படுகின்றன. கணினிகள் வழியாக மின்சாரம் பாய்வதால் இந்த அமைப்புகள் சூடாகின்றன. இவற்றை குளிர்விக்க, பொதுவாக சுத்தமான நன்னீர் பயன்படுத்தப்படுகிறது. குளிரூட்டல் முறைகள் வேறுபடுகின்றன, ஆனால் சில முறைகள் பயன்படுத்தும் தண்ணீரில் 80% வரை வளிமண்டலத்தில் ஆவியாகிவிடுகிறது. ஷாப்பிங் அல்லது இணையத்தில் தேடுதல் போன்ற வழக்கமான ஆன்லைன் செயல்பாடுகளை விட, ஏஐ பணிகளுக்கு, குறிப்பாக படங்கள் அல்லது வீடியோக்களை உருவாக்குவது போன்ற சிக்கலான செயல்பாடுகளுக்கு, அதிக கணினி சக்தி தேவை. எனவே, இவை மிக அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன. சர்வதேச எரிசக்தி ஏஜென்சி (IEA) மதிப்பீட்டின்படி, சாட்ஜிபிடியிடம் கேட்கப்படும் ஒரு கேள்விக்கு, கூகுளிடம் கேட்கப்படும் கேள்வியை விட கிட்டத்தட்ட 10 மடங்கு அதிக மின்சாரம் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் இந்த வித்தியாசத்தை துல்லியமாக அளவிடுவது கடினம். அதிக மின்சார பயன்பாடு அதிக வெப்பத்தை உருவாக்குகிறது. இதனால், கணினிகளை குளிர்விக்க அதிக அளவு குளிர்ச்சி தேவைப்படுகிறது. ஏஐ க்கான நீர் பயன்பாடு எவ்வளவு வேகமாக அதிகரித்து வருகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தரவு மையங்களில் ஆன்லைன் செயல்பாட்டைச் செயல்படுத்தப் பயன்படுத்தப்படும் கணினி சேவையகங்களின் நீண்ட அடுக்குகள் உள்ளன. பெரிய ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்கள் ஏஐ செயல்பாடுகளுக்காக பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவை தனியாக வெளியிடவில்லை. ஆனால், அவற்றின் மொத்த தண்ணீர் பயன்பாடு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கூகுள், மெட்டா, மற்றும் மைக்ரோசாப்ட் (ஓபன் ஏஐயில் முக்கிய முதலீட்டாளர்) ஆகியவற்றின் சுற்றுச்சூழல் அறிக்கைகளின்படி, 2020 முதல் அவற்றின் தண்ணீர் பயன்பாடு கணிசமாக உயர்ந்துள்ளது. குறிப்பாக, கூகுளின் தண்ணீர் பயன்பாடு இந்த காலத்தில் கிட்டத்தட்ட இரு மடங்காகிவிட்டது. அமேசான் வெப் சர்வீஸ் (AWS) இதுவரை தண்ணீர் பயன்பாட்டு புள்ளிவிவரங்களை வெளியிடவில்லை. ஏஐக்கான தேவை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், 2030 ஆம் ஆண்டளவில் தரவு மையங்களின் நீர் பயன்பாடு கிட்டத்தட்ட இரட்டிப்பாகும் என்று சர்வதேச எரிசக்தி ஏஜென்சி (IEA) கணித்துள்ளது. இதில் மின்சார உற்பத்திக்கும், கணினி சிப்கள் தயாரிப்பதற்கும் பயன்படும் தண்ணீரும் அடங்கும். 2024 இல் அதன் தரவு மையங்கள் 37 பில்லியன் லிட்டர் தண்ணீரை நீர் ஆதாரங்களில் இருந்து எடுத்தன. இதில் 29 பில்லியன் லிட்டர் தண்ணீர் "நுகரப்பட்டது", அதாவது பெரும்பாலும் ஆவியாகிவிட்டது என கூகுள் கூறுகிறது. இந்த அதிகமான அளவா என்றால்? அது எதனோடு ஒப்பிடுகிறோம் என்பதைப் பொறுத்தது. இந்த அளவு தண்ணீரால், ஐ.நா. பரிந்துரைப்படி, 1.6 மில்லியன் மக்களுக்கு ஒரு நாளைக்கு 50 லிட்டர் என்ற குறைந்தபட்ச தேவையை ஒரு வருடத்திற்கு வழங்க முடியும். அல்லது, கூகுள் கூறுவதன்படி, தென்மேற்கு அமெரிக்காவில் 51 கோல்ஃப் மைதானங்களுக்கு ஒரு வருடத்திற்கு நீர்ப்பாசனம் செய்யலாம். வறண்ட பகுதிகளில் தரவு மையங்களை ஏன் உருவாக்க வேண்டும்? சமீப ஆண்டுகளில், ஐரோப்பா, லத்தீன் அமெரிக்கா, மற்றும் அமெரிக்காவின் அரிசோனா போன்ற வறட்சி பாதிப்பு உள்ள பகுதிகளில் தரவு மையங்களுக்கு எதிரான உள்ளூர் எதிர்ப்பு, தலைப்பு செய்தியாகியுள்ளது. ஸ்பெயினில், தரவு மையங்களின் விரிவாக்கத்தை எதிர்த்துப் போராடுவதற்காக, 'யுவர் கிளவுட் இஸ் ட்ரையிங் அப் மை ரிவர்' என்ற சுற்றுச்சூழல் குழு உருவாக்கப்பட்டது. சிலி மற்றும் உருகுவே ஆகிய நாடுகள் கடுமையான வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளன. இங்கு, தண்ணீர் பயன்பாடு குறித்த பொதுமக்களின் எதிர்ப்புகளைத் தொடர்ந்து, கூகுள் தனது தரவு மையத் திட்டங்களை இடைநிறுத்தியோ அல்லது மாற்றியோ உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிலியில், கூகுளின் புதிய தரவு மையம் அதிக தண்ணீரைப் பயன்படுத்தும் என்று அஞ்சி, சுற்றுச்சூழல் குழுக்கள் எதிர்ப்பு தெரிவித்தன. என்டிடி டேட்டா நிறுவனம், உலகம் முழுவதும் 150-க்கும் மேற்பட்ட தரவு மையங்களை இயக்குகிறது. வெப்பமான, வறண்ட பகுதிகளில் தரவு மையங்களை அமைப்பதற்கு "ஆர்வம் அதிகரித்து வருவதாக" அதன் தலைமை நிர்வாகி அபிஜித் துபே கூறுகிறார். நிலம் கிடைப்பது, மின் உள்கட்டமைப்பு, சூரிய மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றல், மற்றும் சாதகமான விதிமுறைகள் ஆகியவை இந்தப் பகுதிகளை ஈர்க்கக்கூடியதாக மாற்றுகின்றன என்று அவர் விளக்குகிறார். ஈரப்பதம் அதிகமாக இருக்கும்போது, அரிப்பு (கொரோஷன்) ஏற்படுகிறது. மேலும், கட்டடங்களை குளிர்விக்க அதிக மின்சாரம் தேவைப்படுகிறது. இதனால், வறண்ட பகுதிகள் தரவு மையங்களுக்கு சிறந்த இடங்களாகக் கருதப்படுகின்றன என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். கூகுள், மைக்ரோசாப்ட், மற்றும் மெட்டா ஆகியவை தங்கள் சுற்றுச்சூழல் அறிக்கைகளில், வறண்ட பகுதிகளில் உள்ள தண்ணீரைப் பயன்படுத்துவதாகக் கூறுகின்றன. அந்த நிறுவனங்களின் சமீபத்திய சுற்றுச்சூழல் அறிக்கைகளின்படி, கூகுள் பயன்படுத்தும் தண்ணீரில் 14%, "அதிக" தண்ணீர் பற்றாக்குறை உள்ள பகுதிகளிலிருந்தும், மற்றொரு 14% "நடுத்தர" பற்றாக்குறை உள்ள பகுதிகளிலிருந்தும் எடுக்கப்படுகிறது. மைக்ரோசாப்டின் 46% தண்ணீர், "தண்ணீர் அழுத்தம் உள்ள பகுதிகளிலிருந்து" எடுக்கப்படுகிறது. மெட்டாவின் 26% தண்ணீர் "அதிக" அல்லது "மிக அதிக தண்ணீர் அழுத்தம்" உள்ள பகுதிகளிலிருந்து எடுக்கப்படுகிறது என்றும் அந்த நிறுவனங்கள் வெளியிட அறிக்கைகளின் படி அறியமுடிகிறது. அமேசான் வெப் சர்வீஸ் (AWS) தண்ணீர் பயன்பாடு குறித்து எந்த புள்ளிவிவரமும் வெளியிடவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 2024-ல் ஸ்பெயினில் ஏற்பட்ட கடுமையான வறட்சியின் காரணமாக, பார்சிலோனாவிற்கு அருகிலுள்ள ஒரு நீர்த்தேக்கம் கிட்டத்தட்ட காலியாகிவிட்டது. இதனால், நீர் பயன்பாடு குறித்து மக்கள் மத்தியில் அதிக கவலை உருவாகியுள்ளது. குளிரூட்டக்குவதற்கு வேறு வழிகள் உள்ளதா? உலர் அல்லது காற்றால் குளிரூட்டும் முறைகளைப் பயன்படுத்த முடியும், ஆனால் இவை நீர் குளிரூட்டல் முறைகளை விட அதிக மின்சாரத்தைப் பயன்படுத்துகின்றன என பேராசிரியர் ரென் கூறுகிறார். மைக்ரோசாப்ட், மெட்டா, மற்றும் அமேசான் ஆகியவை closed loop குளிரூட்டல் அமைப்புகளை உருவாக்கி வருவதாகக் கூறுகின்றன. இவற்றில், நீர் அல்லது வேறு திரவம் ஆவியாகவோ அல்லது மாற்றப்படவோ தேவையில்லாமல், கணினி உள்ளேயே சுழற்சி செய்யப்படுகிறது. எதிர்காலத்தில் வறண்ட பகுதிகளில் இத்தகைய மூடிய வளைய அமைப்புகள் பரவலாகத் தேவைப்படும் என்று துபே கருதுகிறார். ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு தேவைப்படும் அந்த தொழில்துறை "இன்னும் ஆரம்ப கட்டத்தில்" தான் உள்ளது என்றும் அவர் கூறுகிறார். ஜெர்மனி, பின்லாந்து, மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளில், தரவு மையங்களில் இருந்து வெப்பத்தை மீட்டெடுத்து உள்ளூர் வீடுகளுக்கு பயன்படுத்தும் திட்டங்கள் இயங்குகின்றன அல்லது திட்டமிடப்பட்டுள்ளன. தரவு மையங்களை குளிர்விக்க, நிறுவனங்கள் பொதுவாக சுத்தமான நன்னீரை (குடிநீர் போன்றவை) பயன்படுத்த விரும்புகின்றன. இது பாக்டீரியா வளர்ச்சி, குழாய் அடைப்பு, மற்றும் அரிப்பு ஆகியவற்றின் அபாயத்தைக் குறைக்கிறது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், சில நிறுவனங்கள் கடல் நீர் அல்லது தொழிற்சாலை கழிவுநீர் போன்ற குடிநீருக்கு தகுதியற்ற நீர் ஆதாரங்களையும் அதிகமாகப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளன. சுற்றுச்சூழலுக்கு நன்மை பயக்குமா ? ஏஐ தொழில்நுட்பம் சுற்றுச்சூழலுக்கு உதவவும் பயன்படுகிறது. எடுத்துக்காட்டாக, சக்திவாய்ந்த கிரீன்ஹவுஸ் வாயுவான மீத்தேன் கசிவைக் கண்டறிய ஏஐ உதவுகிறது. எரிபொருளை சிக்கனமாகப் பயன்படுத்தும் வகையில் போக்குவரத்தை மறுவழிப்படுத்தவும் ஏஐ பயன்படுகிறது. ஏஐயால் உலகெங்கிலும் உள்ள குழந்தைகளுக்கு கல்வி, சுகாதாரம், மற்றும் பருவநிலை மாற்றம் ஆகியவற்றில் "அளப்பரிய மாற்றத்தை" ஏற்படுத்த முடியும் என்று யுனிசெஃப் (ஐநா குழந்தைகள் நிறுவனம்) புத்தாக்க அலுவலகத்தின் உலகளாவிய இயக்குநர் தாமஸ் டேவின் கூறுகிறார். பட மூலாதாரம்,META படக்குறிப்பு, சில தரவு மையங்கள் வறண்ட பகுதிகளில் கட்டப்பட்டுள்ளன, ஆனால் நிறுவனங்கள் தண்ணீரை திறம்பட பயன்படுத்தவும், விநியோகங்களை நிரப்ப உதவுவதாகவும் கூறுகின்றன. ஏஐ (செயற்கை நுண்ணறிவு) நிறுவனங்கள் "மிகவும் சக்திவாய்ந்த மாதிரிகளை உருவாக்குவதற்கு பதிலாக", "திறமையான மற்றும் வெளிப்படையான" முறைகளை நோக்கி போட்டியிட வேண்டும் என தாமஸ் டேவின் கூறுகிறார். தொடர்ந்து பேசிய அவர், நிறுவனங்கள் தங்கள் ஏஐ மாதிரிகளை ஓப்பன் சோர்ஸ் ஆக்க வேண்டும். அதாவது, அனைவரும் இந்த மாதிரிகளை பயன்படுத்தவும், மாற்றியமைக்கவும் முடியும் வகையில் உருவாக்க வேண்டும் என்றும் கூறுகிறார். இது பயிற்சி செயல்முறையில் பயன்படும் அதிக மின்சாரம் மற்றும் தண்ணீரின் தேவையைக் குறைக்கும் என்கிறார் டேவின். இந்த செயல்முறையில், பெரிய அளவு தரவு உள்ளீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் பதில்கள் உருவாக்கப்படுகின்றன. ஆனால், லோரெனா ஜாமே-பலாசி எனும் ஒரு சுயாதீன ஆய்வாளர் மற்றும் எத்திக்கல் டெக் சொசைட்டியின் நிறுவனர், வேறொரு கருத்தை முன்வைக்கிறார். பல ஐரோப்பிய அரசுகள், ஐரோப்பிய ஒன்றியம், மற்றும் ஐநா அமைப்புகளுக்கு ஆலோசனை வழங்கிய அவர், ஏஐயின் அதிக வளர்ச்சியை சுற்றுச்சூழலுக்கு நிலையானதாக (sustainable) ஆக்குவதற்கு "எந்த வழியும் இல்லை" என்று கூறுகிறார். "நாம் ஏஐ (செயற்கை நுண்ணறிவு) தொழில்நுட்பத்தை திறமையாக செய்ய முடியும். ஆனால், அதை மிகவும் திறமையாக்குவது, அதிக பயன்பாட்டை உருவாக்கும்." "நீண்ட காலத்தில், பெரிய மற்றும் வேகமான ஏஐ அமைப்புகளை உருவாக்கும் இந்த போட்டியைத் தொடர, நம்மிடம் போதுமான மூலப்பொருட்கள் இல்லை" என்றும் அவர் கூறுகிறார். தொழில்நுட்ப நிறுவனங்கள் என்ன சொல்கின்றன? கூகுள், மைக்ரோசாப்ட், ஏடபிள்யூஎஸ் (Amazon Web Services), மற்றும் மெட்டா ஆகியவை, உள்ளூர் நிலைமைகளைப் பொறுத்து குளிரூட்டல் தொழில்நுட்பங்களை கவனமாகத் தேர்ந்தெடுப்பதாகக் கூறுகின்றன. இந்நிறுவனங்கள் அனைத்தும் 2030-க்குள் "வாட்டர் பாசிட்டிவ்" (water positive) ஆக இருக்க இலக்குகளை நிர்ணயித்துள்ளன. அதாவது இதன் பொருள் என்னவென்றால் , தங்கள் செயல்பாடுகளில், எடுக்கும் தண்ணீரை விட அதிக தண்ணீரை சுற்றுச்சூழலுக்கு திருப்பி வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இதற்காக, அவர்கள், காடுகள் மற்றும் ஈரநிலங்களை மீட்டெடுக்கும் திட்டங்களுக்கு நிதியளிக்கின்றனர். நீர் கசிவுகளைக் கண்டறிய உதவுகின்றனர். நீர்ப்பாசனத்தை மேம்படுத்தும் திட்டங்களை ஆதரிக்கின்றனர். ஏடபிள்யூஎஸ் , தனது இலக்கை 41% அடைந்துள்ளதாகக் கூறுகிறது. மைக்ரோசாப்ட் இந்த இலக்கை "நோக்கி முன்னேறி வருவதாகக்" கூறுகிறது. கூகுள் மற்றும் மெட்டாவின் புள்ளிவிவரங்கள், அவர்கள் திருப்பி நிரப்பும் தண்ணீரின் அளவு கணிசமாக அதிகரித்துள்ளதைக் காட்டுகின்றன. ஆனால், யுனிசெஃப்பைச் சேர்ந்த தாமஸ் டேவின், இந்த இலக்குகளை அடைய இன்னும் "நீண்ட தூரம் செல்லவேண்டும் " எனக் கூறுகிறார். நீர் மற்றும் ஆற்றல் திறனை மேம்படுத்த "கடினமாக உழைப்பதாக" ஓபன் ஏஐ கூறுகிறது. மேலும், "கணினி ஆற்றலை சிறப்பாகப் பயன்படுத்துவது மிகவும் முக்கியம்" என்று வலியுறுத்துகிறது. ஆனால், தண்ணீர் பயன்பாடு குறித்து ஒரே மாதிரியான, தரப்படுத்தப்பட்ட அறிக்கைகள் தேவை. "நாம் அதனை அளவிட முடியாவிட்டால், நிர்வகிக்க முடியாது."என்கிறார் பேராசிரியர் ஷோலி ரென் . - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdjxpg7x22lo
  21. 14 JUL, 2025 | 03:59 PM டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கையில் முக்கியமான அரசியல் தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்ட முதல் சம்பவம் 1959 செப்டெம்பரில் இடம்பெற்றது. பதவியில் இருந்த பிரதமர் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க, தல்துவ சோமராம தேரோ என்ற பௌத்த பிக்குவினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டபோது நாடு அதிர்ச்சியில் உறைந்தது. அதையடுத்து வந்த வருடங்களில் இனப்பிளவின் இருமருங்கிலும் மேலும் பல அரசியல் படுகொலைகள் இடம்பெற்றதை காணக்கூடியதாக இருந்தது. தமிழீழ விடுதலை புலிகள் உட்பட பல்வேறு தமிழப் போராளிக் குழுக்களினால் கட்டவிழ்த்துவிடப்பட்ட அரசியல் வன்முறை, ஜனதா விமுக்தி பெரமுனவின் ( ஜே.வி.பி.) வன்முறை மற்றும் அரசினாலும் அதன் அமைப்புக்களினாலும் மேற்கொள்ளப்பட்ட எதிர் வன்முறைகளில் பல வருடங்களாக பெரும் எண்ணிக்கையான அரசியல் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். தமிழ் அரசியல் தலைவர் அப்பாபிள்ளை அமிர்தலிங்கம் 1989 ஜூலை 13 ஆம் திகதி கொல்லப்பட்ட சம்பவம் இலங்கையின் அரசியல் படுகொலைகளின் வரலாற்றில் முக்கியமான ஒரு அத்தியாயமாகும். யாழ்ப்பாணத்தில் பண்ணாகத்தைச் சேர்ந்தவரான அமிர்தலிங்கம் 1927 ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிறந்தார். ஈழத்துக்காந்தி என்று அறியப்பட்ட -- பெருமதிப்புக்குரிய தமிழ்த் தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் பிரதம ' தளபதியாக ' பல வருடங்கள் செயற்பட்ட அமிர்தலிங்கம் மக்கள் வசீகரமும் ஆற்றலும் கொண்ட ஒரு அரசியல்வாதியாவார். சட்டத்தரணியான அமிர்தலிங்கம் 1956 ஆம் ஆண்டு தொடக்கம் 1970 ஆம் ஆண்டு வரை இலங்கை தமிழரசு கட்சியின் வட்டுக்கோட்டை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் 1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1973 ஆம் ஆண்டுவரை தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் காங்கேசன்துறை தொகுதி பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர். 1977 ஆம் ஆண்டு தொடக்கம் 1983 ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சி தலைவராகவும் பதிவி வகித்த அவர், 1989 ஆம் ஆண்டில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டார். இந்திய இராணுவம் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர். ஜெயவர்தனவும் 1987 ஜூலை 29 ஆம் திகதி கொழும்பில் கைச்சாத்திட்ட இந்திய -- இலங்கை சமாதான உடன்படிக்கையை தொடர்ந்து இந்திய அமைதிகாக்கும் படை என்று அறியப்பட்ட இந்திய இராணுவம் இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நிலைகொண்டது. இந்திய இராணுவத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் விரைவாகவே போர் மூண்டது. அதேவேளை, இலங்கையில் இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தை சிங்களவர்களில் பலரும் கூட வெறுத்தார்கள். இந்திய இராணுவத்தின் பிரசன்னத்தை எதிர்த்து ஜே.வி.பி.யும் வன்முறைப் போராட்டத்தை தொடங்கியது. முன்னர் பிரதமராக இருந்த ரணசிங்க பிரேமதாச ஜே.ஆர். ஜெயவர்தனவுக்கு பிறகு 1988 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஜனாதிபதியாக வந்தார். ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் இந்திய இராணுவம் இலங்கையில் இருந்து வெளியேறுவதை உறுதிப்படுத்துவது என்பது பிரேமதாசவின் முக்கியமான தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று. ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு விடுதலை புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பித்து பிரேமதாச வழக்கத்துக்கு மாறான ஒரு நடவடிக்கையை எடுத்தார். வேறுபட்ட காரணங்களுக்காக என்றாலும், ஜனாதிபதி பிரேமதாசவும் விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனும் இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்று விரும்பியதனால் அவர்கள் இருவரினதும் நலன்கள் சங்கமித்தன. ஆனால், இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையின் ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படும் வரை, இலங்கையில் இந்திய இராணுவம் தொடர்ந்தும் நிலகொண்டிருக்க வேண்டும் என்று தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் போன்ற பல தமிழர்கள் விரும்பினர். அந்த சமாதான உடன்படிக்கைதான் மாகாணசபைகள் அமைக்கப்படுவதற்கு வழிவகுத்தது. இந்திய இராணுவம் திருப்பியனுப்பப்பட வேண்டும் என்று பிரேமதாச அரசாங்கமும் விடுதலை புலிகளும் விரும்பிய அதேவேளை, அமிர்தலிங்கம் அதை எதிர்த்தார். அந்த கட்டத்தில் இந்திய இராணுவம் திருப்பியனுப்பப்படக் கூடாது என்று 1989 ஜூனில் அமிர்தலிங்கம் பாராளுமன்றத்தில் கடுமையாக வாதிட்டார். அமிர்தலிங்கத்தின் அரசியல் நம்பகத்தன்மை மற்றும் மதிப்பின் விளைவாக அகிம்சைவழி அரசியல் தலைவரான அவரின் அபிப்பிராயத்துக்கு சர்வதேச மட்டத்தில் செல்வாக்கு இருந்தது. துரோகிப் பட்டம் தமிழ் இளைஞர்கள் அமிர்தலிங்கத்தை மாபெரும் தலைவராக மதித்துப் போற்றிய காலம் ஒன்று இருந்தது. 1976 ஆம் ஆண்டில் தமிழீழம் என்று அழைக்கப்பட்ட தனிநாடு ஒன்றுக்கான கோரிக்கையை பிரசாரப்படுத்துவதில் அவர் தலைமைப் பாத்திரத்தைை வகித்தார். ஆனால், பிறகு அமிர்தலிங்கம் தமிழீழக் கோரிக்கையை தணித்து ஐக்கியப்பட்ட ஆனால், ஒற்றையாட்சி அல்லாத இலங்கைக்குள் அதிகாரப்பகிர்வு ஏற்பாட்டில் நாட்டம் காட்டினார். இதனால் ஆத்திரமடைந்த விடுதலை புலிகளும் அவர்களது ஆதரவாளர்களும் அமிரை துரோகி என்று அழைத்தனர். இந்திய இராணுவம் தொடர்பான அவரின் நிலைப்பாடு காரணமாக அமிர்தலிங்கம் மீதான விடுதலை புலிகளின் பகைமை மேலும் அதிகரித்தது. இத்தகைய ஒரு பின்புலத்திலேயே, 36 வருடங்களுக்கு முன்னர் அமிர்தலிங்கம் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். கொலை நடந்த நேரத்தில் நான் கனடாவில் இருந்தேன். ஆனால், காலஞ்சென்ற எம். சிவசிதம்பரம், கலாநிதி நீலன் திருச்செல்வம், திருமதி மங்கையர்க்கரசி அமிர்தலிங்கம், திருமதி சரோஜினி யோகேஸ்வரன், மருத்துவர் பகீரதன் அமிர்தலிங்கம், வீரசிங்கம் ஆனந்தசங்கரி, பி. சூசைதாசன் மற்றும் சோமசுந்தரம் (மாவை ) சேனாதிராஜா போன்ற தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியுடன் தொடர்புடைய பலருடன் வெவ்வேறு நேரங்களில் அந்த சம்பவம் குறித்து நான் பேசினேன். அவர்களுடனான சம்பாஷணைகள், நேர்காணல்கள் மற்றும் ஊடகச்செய்திகளை அடிப்படையாக வைத்து அமிர்தலிங்கத்தின் கொலை தொடர்பாக ஏற்கெனவே நான் விரிவாக எழுதியிருந்தேன். ஜூலை 13 ஆம் திகதி (கடந்த ஞாயிற்றுக்கிழமை) அமிர்தலிங்கத்தின் 36 வது நினைவுதினம் வந்துபோனதால் எனது முன்னைய எழுத்துக்களின் உதவியுடன் அவரின் கொலைச் சம்பவத்தை மீட்டுப்பார்க்கிறேன். 342/ 2 புல்லேர்ஸ் வீதி அமிர்தலிங்கமும் அவரது மனைவி மங்கையர்க்கரசியும் பௌத்தாலோக மாவத்தை / புல்லேர்ஸ் வீதியில் 342/2 ஆம் இலக்க இல்லத்தில் வசித்துவந்தனர். ஆடை உற்பத்தி தொழில்துறையில் ஈடுபட்ட மன்னாரைச் சேர்ந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவருக்கு சொந்தமானது அந்த வீடு. அமிர்தலிங்கத்தையும் மனைவியையும் தவிர, தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் முன்னாள் தலைவர் எம்.சிவசிதம்பரம், முன்னாள் யாழ்ப்பாண தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் வி. யோகேஸ்வரன், அவரது மனைவி சரோஜினி, தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் இளைஞர் பிரிவின் தலைவரான மாவை சேனாதிராஜா ஆகியோரும் அந்த வீட்டில் ஒன்றாக தங்கியிருந்தனர். காமினி திசாநாயக்க அமைச்சராக இருந்தபோது தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தலைவர்களின் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்திருந்தார். மகாவலி அமைச்சைச் சேர்ந்த சில பொலிஸ் அதிகாரிகள் அந்த தலைவர்களின் பாதுகாப்புக்காக பணிக்கமர்த்தப்பட்டனர். அதேவேளை, விடுதலை புலிகள் முன்னாள் யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரனுடன் தொடர்புகளை ஏற்படுத்தத் தொடங்கினர். தமிழர்களின் ஐக்கியம் குறித்து ஆராய்வதற்காக அமிர்தலிங்கத்துடன் சந்திப்பு ஒன்றுக்கு யோகேஸ்வரன் ஏற்பாடு செய்யவேண்டும் என்று விடுதலை புலிகள் விரும்பினர். அது தொடர்பாக யோகேஸ்வரன் அமிர்தலிங்கத்துடனும் சிவசிதம்பரத்துடனும் பேசி சந்திப்புக்கான அவர்களின் சம்மதத்தை பெற்றுக் கொண்டார். விக்னா என்ற அலோசியஸ், அறிவு என்ற சிவகுமார் ஆகிய இரு விடுதலை புலிகள் இயக்க உறுப்பினர்களே யோகேஸ்வரனுடன் தொடர்பில் இருந்தவர்கள். அமிர்தலிங்கம் தங்கியிருந்த புல்லேர்ஸ் வீதி வீட்டிலேயே சந்திப்பை நடத்தலாம் என்று யோகேஸ்வரன் புலிகளுக்கு அறிவித்தார். அலோசியஸ் 1989 ஜுலை 13 ஆம் திகதி காலை 10 மணியளவில் யோகேஸ்வரனுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட அலோசியஸ் புல்லேர்ஸ் வீதி வீட்டில் சந்திப்பை நடத்துவதற்கான யோசனைக்கு தங்களின் இணக்கத்தை தெரிவித்தார். அன்றைய தினம் மாலை 6 மணிக்கு சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அது குறித்து அமிர்தலிங்கத்துக்கும் சிவசிதம்பரத்துக்கும் யோகேஸ்வரன் அறிவித்தார். ஆனால், கொழும்பில் இருந்த அன்றைய இந்திய உயர்ஸ்தானிகர் லெக்கான் லால் மெஹ்ரோத்ரா தாஜ்சமுத்ரா ஹோட்டலில் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்துபசாரத்தில் இரு தலைவர்களும் கலந்துகொள்ள வேண்டியிருந்தது ஒரு தடையாக இருந்தது. மாலை 6 மணிக்கு விடுதலை புலிகளைச் சந்திப்பதற்கு தயாராயிருக்குமாறும் அதற்கு பிறகு இந்திய தூதுவரின் இரவு விருந்துபசாரத்துக்கு செல்லுமாறும இரு தலைவர்களையும் யோகேஸ்வரன் வேண்டிக்கொண்டார். அதற்கு அவர்கள் இருவரும் இணங்கிக் கொண்டார்கள். அலோசியஸிடமிருந்து மாலை 4 மணியளவில் யோகேஸ்வரனுக்கு இரண்டாவது தொலைபேசி அழைப்பு ஒன்று வந்தது. அலோசியஸும் விடுதலை புலிகளின் அரசியல் பிரிவு தலைவர் யோகி என்ற நரேந்திரனும் சந்திப்பில் கலந்துகொள்ளும் சாத்தியம் இருந்தது. முன்னர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததை போன்று மாலை 6 மணிக்கு அல்ல, மாலை 6.30 மணிக்கும் 7 மணிக்கும் இடைப்பட்ட நேரத்திலேயே விடுதலை புலிகள் சந்திப்புக்கு வருவார்கள் என்று அலோசியஸ் அறிவித்தார். யோகேஸ்வரன் அலோசியஸ் ஒரு வேண்டுகோளையும் விடுத்தார். தங்களிடம் ஆயுதங்கள் இருக்கிறதா இல்லையா என்று பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை செய்வது யோகியின் தரத்தில் உள்ள ஒரு தலைவரை அவமதிப்பதாக அமையும் என்பதால் அவ்வாறு சோதனை எதையும் செய்யக்கூடாது என்று பாதுகாப்பு அதிகாரிகளுக்கு கூறிவைக்குமாறு யோகேஸ்வரனிடம் அலோசியஸ் கேட்டுக் கொண்டார். பேச்சுக்களில் யோகி பங்கேற்கும் சாத்தியம் குறித்து யோகேஸ்வரனுக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர் உடனடியாக பாதுகாப்புக்கு பொறுப்பாக இருந்த சப் - இன்ஸ்பெக்டர் தம்பிராஜா கந்தசாமியிடம் பேச்சுக்களில் பங்கேற்கவிருக்கும் விடுதலை புலிகள் குழுவினரை அவமதிப்பதாக அமையும் என்பதால் அவர்களை சோதனை செய்யவேண்டாம் என்று அறிவுறுத்தினார். "இந்த பயல்களை நம்பமுடியாது சேர்" என்று கூறி கந்தசாமி ஆட்சேபித்தார். விபரீதமாக எதுவும் நடக்காது என்று அவரிடம் யோகேஸ்வரன் உறுதியளித்தார். விடுதலை புலிகளின் மூத்த தலைவர் ஒருவர் பேச்சுக்களில் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் அவமதிக்கப்படுவதாக உணரக்கூடாது என்றும் யோகேஸ்வரன் கூறினார். "அவர்கள் எங்களது விருந்தினர்கள் என்பதால் அவர்களை மிகுந்த மரியாதையுடன் நாம் நடத்தவேண்டும். அவமதிக்கப்பட்டதாக உணர்ந்தால் எதிர்காலத்தில் எம்மிடம் அவர்கள் வரமாட்டார்கள். எமது பேச்சுக்கள் முறிவடைந்துவிடும்" என்று யோகேஸ் கூறினார். கந்தசாமி தயக்கத்துடன் இணக்கி தனக்கு கீழ் பணியாற்றிய பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அதன் பிரகாரம் அறிவுறுத்தினார். யோகேஸ்வரனும் மனைவி சரோஜினியும் சிவசிதம்பரத்துடன் சேர்ந்து வீட்டின் மேல்மாடியில் தங்கியிருந்த அதேவேளை, அமிர்தலிங்கமும் மனைவியும் மாவை சேனாதிராஜாவும் கீழ்த்தளத்தில் குடியிருந்தனர். விக்னா, விசு, அறிவு மூன்று விடுதலை புலிகளும் வந்து சேர்ந்தபோது மாலை 6.40 மணி. எதிர்பார்க்கப்பட்டதற்கு மாறாக, யோகியை அங்கு காணவில்லை. விசு என்ற இராசையா அரவிந்தராஜா, விக்னா என்ற பீட்டர் லியோன் அலோசியஸ், அறிவு என்ற சிவகுமார் -- இவர்கள் மூவருமே வந்திருந்தனர். வாசலில் காவல் கடமையில் இருந்த சத்தியமூர்த்தி என்ற பொலிஸ் அதிகாரி மூவரையும் சோதனை எதுவுமின்றி உள்ளே அனுமதித்தார். சத்தியமூர்த்தி கந்தசாமிக்கு அறிவித்தபோது கந்தசாமி அவர்கள் மூவரையும் யோகேஸ்வரனை சந்திக்க மேல்மாடிக்கு அனுப்புமாறு கூறினார். விசுவும் அலோசியஸும் மேலே சென்ற அதேவேளை, அறிவு மாடிப்படிகளின் அடியில் நின்றுகொண்டார். மேல்மாடியில் யோகேஸ்வரனும் மனைவியும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். விடுதலை புலிகள் வந்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டதும் படிகளில் அரைவழியில் இறங்கிவந்து யோகேஸ்வரன் விசுவையும் அலோசியஸையும் சந்தித்தார். யோகி வரவில்லை என்று ஏமாற்றமடைந்தாலும் யோகேஸ்வரன் விசுவை அன்புடன் வரவேற்றார். அவர்கள் அமர்ந்திருந்து பேசினர். சரோஜினி சிற்றுண்டிகள் தயாரிப்பதற்கு சென்றார். கீழ்த்தளத்தில் இன்னொரு அறையில் சிவசதம்பரம், மாவை சேனாதிராஜா மற்றும் மங்கையர்க்கரசி சகிதம் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த அமிர்தலிங்கத்துக்கு ராஜு என்ற வேலைக்காரப் பையன் மூலமாக யோகேஸ்வரன் குறிப்பொன்றை அனுப்பினார். இந்திய தூதுவரின் விருந்துபசாரத்துக்கு செலாவதற்காக நன்றாக உடுத்து தயாராகியிருந்த அமிரும் சிவாவும் மேல்மாடிக்கு சென்ற அதேவேளை, மங்கையர்க்கரசியும் சேனாதிராஜாவும் தொடர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தனர். அமிரும் சிவாவும் அறைக்குள் பிவேசித்ததும் விசுவும் அலோசியஸும் எழுந்து நின்று வரவேற்றனர். ஒருவரின் தோழில் தட்டிய அமிர்தலிங்கம் அவர்கள் இருவருக்கும் இடையில் பிரம்புக்கதிரை ஒன்றில் அமர்ந்தார்.சிவசிதம்பரம் சற்று தள்ளி அமர்ந்தார். யோகேஸ்வரன் சிற்றுண்டிகள் தயாரித்துக் கொண்டிருந்த சரோஜினிக்கு உதவுவதற்காக எழுந்து சென்றார். சரோஜினி தக்காளி சாண்ட்விச்களையும் பிஸ்கட்களையும் கொண்டுவந்தார். என்ன குடிக்க விரும்புகிறீர்கள் என்று விசுவையும் அலோசியஸையும் சரோஜினி கேட்டார். மென்பானம் அருந்துவதற்கு இரு புலிகளும் விரும்பினர். அமிர்தலிங்கம் தேனீரை விரும்பினார். சிவாவும் யோகேஸும் எதையும் குடிக்க விரும்பவில்லை. சரோஜினி இரு பழரச பானங்களையும் ஒரு தேனீரையும் கொண்டு வந்தார். அதற்கு பிறகு அவர் தனது அறைக்கு சென்றுவிட்டார். சுமுகமான சம்பாஷணை யோகேஸ்வரன் அறிமுகம் செய்துவைத்த பிறகு இரு விடுதலை புலிகளும் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தலைவர்களை சந்திப்பது தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று கூறினர். அதே உணர்வுகளையே அமிர்தலிங்கமும் சிவசிதம்பரமும் பதிலுக்கு வெளிப்படுத்தினர். தமிழப் போராளிகளின் அர்ப்பணிப்பையும் தியாகங்களையும் தாங்கள் பெரிதும் மதித்து பாராட்டுவதாக தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் இரு தலைவர்களும் கூறினர். சகல தமிழ்க்குழுக்களும் ஒன்றுபட்டு பொதுவான அணுகுமுறை ஒன்றை வகுக்கவேண்டியது இப்போது அவசியம் என்றும் அல்லாவிட்டால் இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையின் மூலமாகக் கிடைத்த விளைவுகள் பயனற்றுப்போய்விடும் என்றும் அவர்கள் கூறினர். எந்தவொரு அரசியல் ஏற்பாட்டிலும் விடுதலை புலிகளுக்கு பெருமைக்குரிய இடம் வழங்கப்படும் என்று அமிர்தலிங்கம் உறுதியளித்தார் வெளிப்படுத்தப்பட்ட கருத்துக்களை விடுதலை புலிகளின் தலைவர்களுக்கு தெரியப்படுத்துவதாக விசு கூறினார். விடுதலை புலிகளின் உயர்பீடம் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தலைவர்களைச் சந்தித்து இந்த விடயங்களை ஆராய்வதற்கு அக்கறையாக இருக்கிறது என்றும் அவர் கூறினார். கொழும்பில் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியைச் சந்தித்து மேலும் பேச்சுவார்த்தைகளை நடத்துவதற்கு விடுதலை புலிகளின் மூத்த தலைவர்கள் தயாராயிருப்பார்கள் என்றும் விசு குறிப்பிட்டார். இரு தரப்புகளுக்கும் இடையிலான சம்பாஷணை மிகவும் சுமுகமானதாக அமைந்தது. பெரும்பாலான கருத்துப்பரிமாறல்கள் அமிர் -- சிவா இரட்டையர்களுக்கும் விசுவுக்கும் இடையிலானதாக இருந்த அதேவேளை, யோகேஸ்வரனும் அலோசியஸும் பொதுவில் அமைதியாக இருந்தனர். ஒரு கட்டத்தில் அமிர்தலிங்கம் விடுதலை புலிகள் ஆயுதப்போராட்டத்தைக் கைவிட்டு ஜனநாயகப் பாதைக்கு திரும்புவதற்கான நேரம் வந்துவிட்டது என்று நல்லெண்ணத்துடன் கூறினார். "உங்களைப் போன்ற இளைஞர்கள் எல்லோருக்கும் ஜனநாயகம் பழைய பாணியிலானதாக தோன்றக்கூடும். ஆனால், உங்களுக்கு பழையவர்கள் கூறுகின்றவற்றையும் அமைதியாகக் கேளுங்கள்" என்று சிவசிதம்பரம் கூறினார். மேல்மாடியில் பேச்சுவார்த்தை சுமுகமான முறையில் தொடர்ந்துகொண்டிருந்த அதேவேளை, கீழ் மாடியில் ஏதோ பரபரப்பு காணப்பட்டது. கீழே காத்துக்கொண்டிருந்த அறிவு என்ற சிவகுமார் மாலை 7மணிக்கு பிறகு குழப்படையத் தொடங்கி விட்டார். அவர் தனது கைக்கடிகாரத்தை பார்த்தவாறு அமைதியிழந்தவராக மேல்மாடியை நோக்கி அடிக்கடி நோக்கிக் கொண்டிருந்தார். நிசங்க திப்பொட்டுமுனுவ கடமையில் இருந்த பொலிஸ்காரர்களில் ஒருவருக்கு சிவகுமாரின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. அவரின் பெயர் நிசங்க திப்பொட்டுமுனுவ. அவரின் சொந்த இடம் கேகாலை மாவட்டத்தில் ஹெட்டிமுல்லவில் உள்ள அக்கிரியாகல என்ற கிராமமாகும். நிசங்க மகாவலி அமைச்சில் இருந்தே அமிர்தலிங்கத்தின் பாதுகாப்பு கடமைக்காக அனுப்பப்பட்டவர். நிசங்கவும் சத்தியமூர்த்தியும் சிவகுமாரை பலவந்தமாக சோதனை நடத்தி கிரனேட் ஒன்றும் துப்பாக்கி ரவைகளும் அவரிடம் இருந்ததைக் கண்டுபிடித்தனர். அது குறித்து தம்பிராஜா கந்தசாமிக்கு அறிவிக்கப்பட்டது. சிவகுமாரை சத்தியமூர்த்தியின் காவலில் வைத்த பிறகு கந்தசாமியும் நிசங்கவும் அமைதியாக மேல்மாடிக்குச் சென்றனர். கந்தசாமி மாடிப்படிகளின் உச்சியில் நிற்க நிசங்க பல்கணிக்கு சென்று பிரதான அறைக்குள் இருந்தவர்கள் தன்னை பார்க்கமுடியாதவாறு நி்ன்றுகொண்டார். நடைபெற்றுக் கொண்டிருந்த பேச்சுவார்த்தையை குழப்புவதற்கு இருவரும் விரும்பவில்லை. ஆனால், சிவகுமாரிடமிருந்து கிரனேட்டும் துப்பாக்கி ரவைகளும் மீட்கப்பட்டதால் உஷார் நிலையில் தயாராயிருந்தனர். அறைக்குள்ளே தோழமை உணர்வு தொடர்ந்து நிலவியது. அதற்கு பிறகு நடந்தது இது தான். நீங்கள் தான் உண்மையான அரக்கர்கள் அப்போது இரவு 7.20 மணி. விசு தனது பானத்தைக் குடித்து முடித்தபிறகு வெற்றுக் கிளாஸை மேசையில் வைப்பதற்காக எழுந்தார். பிறகு உடனே திரும்பி அமிர்தலிங்கத்தை பார்த்து "எல்லோரும் புலிகளைத்தான் அரக்கர்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால், உண்மையில் நீங்கள் எல்லோரும்தான் அரக்கர்கள்" என்று அவர் கூறினார். தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் மூன்று தலைவர்களும் விசு ஏதோ பகிடி விடுவதாக நினைத்துக் கொண்டனர். யோகேஸ்வரன் பலத்த சத்தத்துடன் சிரிக்க அமிரும் சிவாவும புனமுறுவல் பூத்தனர். அப்போது விசு தனது துப்பாக்கியை எடுத்து அமிர்தலிங்கத்தை நோக்கிச் சுடத் தொடங்கினார். யோகேஸ்வரன் சத்தமிட்டவாறு தனது கதிரையில் இருந்து எழுந்தார். அப்போது அலோசியஸ் தனது துப்பாக்கியால் யோகேஸ்வரனை நோக்கிச் சுட்டார். சற்று தள்ளி அமர்ந்திருந்த சிவசிதம்பரம் அதிர்ச்சியடைந்தவராக எழுந்து " வேண்டாம், வேண்டாம் " என்று தமிழில் கத்தினார். அப்போது விசு சிவாவின வலது தோளில் சுட்டார். துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டு அறையின் உள்ளே பார்த்த நிசங்க ஜன்னல் கண்ணாடிகளின் ஊடாக துப்பாக்கிப் பிரயோகம் செய்தார். அவர் விசுவையும் அலோசியஸையும் சுட்டுக் காயப்படுத்தினார். அப்போது இருவரும் அறையை விட்டு வெளியே ஓடினர். சூட்டுச் சத்தங்களைக் கேட்ட கந்தசாமியும் அவர்கள் இருவரையும் நோக்கி சுட்டுக்கொண்டு ஓடிவந்தார். காயமடைந்த விசுவும் அலோசியஸும் திருப்பிச் சுட்டுக் கொண்டு படிகளின் வழியாக கீழே ஓடுவதற்கு முயற்சித்தனர். ஆனால், நிசங்க தன்னிடமிருந்த இரண்டாவது துப்பாக்கியால் இருவரையும் நோக்கி தொடர்ந்து சுட்டுக் கொண்டேயிருந்தார். இருவரும் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டுச் சத்தங்களைக் கேட்டதும் சத்தியமூர்த்தி சிவகுமாரைப் பிடித்தவாறு மல்லுக் கட்டிக்கொண்டிருந்தார். சத்தியமூர்த்தியிடம் இருந்து தன்னை விடுவித்துக்கொண்ட சிவகுமார் ஏற்கெனவே தன்னிடமிருந்து கைப்பற்றப்பட்ட கிரனேட்டை எடுக்க முயற்சித்தார். அதை அவர் எடுத்து வெடிக்க வைக்க முன்னதாக நிசங்க படிகளில் இருந்து கீழே ஓடிவந்து அவரைச் சுட்டுக் காயப்படுத்தினரார். அப்போது சிவகுமார் ஓட முயற்சிக்கவே நிசங்க மீண்டும் அவரை நோக்கச்சுட்டுக் கீழே கொண்டுவந்தார். மூன்று கொலையாளிகளுமே சம்பவ இடத்தில் நிசங்கவினால் கொல்லப்பட்டனர். நிசங்கவின் சூடுகளினாலேயே விடுதலை புலிகள் இறந்தார்கள் என்றபோதிலும், மற்றையவர்களும் கூட அவர்கள் மீது தாக்குதல்களை நடத்தினார்கள். சப் - இன்ஸ்பெக்டர் கந்தசாமி அலோசியஸை சுட்டுக் காயப்படுத்திய அதேவேளை, கான்ஸ்டபிள் லக்ஸ்மனின் துப்பாக்கிப் பிரயோகத்தில் விசுவும் அறிவும் காயமடைந்தனர். இரு அதிகாரிகளும் தமிழர்கள் என்பதால் அவர்களது குடும்பங்களை விடுதலை புலிகள் பழிவாங்காமல் பாதுகாப்பதற்கான ஒரு முயற்சியாக அவர்கள் நடத்திய தாக்குதல் விபரங்கள் பத்திரிகைகளில் அப்போது வெளியிடப்படவில்லை. இரண்டாவது துப்பாக்கி துப்பாக்கிச் சண்டையில் நிசங்கவுக்கு பெரிதும் உதவியது அவரிடமிருந்த இரண்டாவது துப்பாக்கியேயாகும். குறிப்பாக, அறிவு முதலில் சுடப்பட்டபோது அவர் தனது கையில் கிரனேட்டை வைத்திருந்தார். அதனால் புலிகளை வெற்றிகொள்வதற்கு நிசங்கவிடமிருந்த இரண்டாவது துப்பாக்கி கைகொடுத்தது. அதற்கு காரணம் அமிர்தலிங்கத்தின் வீட்டில் பாதுகாப்பு கடமையில் இருந்த இன்னொரு பொலிஸ்காரர் அன்றையதினம் விடுமுறையில் சென்றிருந்ததேயாகும். சில்வா என்ற அந்த பொலிஸ்காரர் நிசங்கவிடம் தனது ஆயுதத்தை ஒப்படைத்திருந்தார். அதனால் புலிகள் மீது இரு துப்பாக்கிகளினால் நிசங்கவினால் தாக்குதல் நடத்தக் கூடியதாக இருந்தது. மகாவலி பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த நிசங்கவும் சில்வாவும் நம்பிக்கைக்குரிய அதிகாரிகளாக அமிர்தலிங்கத்தின் பாதுகாப்புக்காக காமினி திசாநாயக்கவினால் தனிப்பட்ட முறையில் கடமையில் அமர்த்தப்பட்டிருந்தனர். " பாஸ்ராட்ஸ், பாஸ்ராட்ஸ்" துப்பாக்கிச் சூட்டு சத்தங்களை கேட்டு மங்கையர்க்கரசி, சரோஜினி, மாவை சேனாதிராஜா ஆகியோர் பின்புறமாக இருந்த படிகளின் வழியாக மேல்மாடிக்கு ஓடிச் சென்றனர். அமிர்தலிங்கம் இரத்தம் வடிந்தோடிய நிலையில் அசைவின்றி தனது கதிரையில் கிடந்தார். அவர் இறந்துவிட்டார் எனப்தை அறியாத மங்கையர்க்கரசி அவரின் தலையின் பின்புறத்தில் தலையணை ஒன்றை வைத்து அவரை தாங்கிப்பிடித்தார். நிலத்தில் இரத்த வெள்ளத்தில் இறந்துகொண்டிருந்த யோகேஸ்வரன் " பாஸ்ராட்ஸ், பாஸ்ராட்ஸ் " என்று ஆங்கிலத்தில் முணுமுணுத்துக் கொண்டிருந்தார். அவரின் அருகில் மனைவி சரோஜினி முழந்தாளிட்டு நின்றுகொண்டிருந்தார். சிவசிதம்பரம் பேசமுடியாதவராக சுவரில் சாய்ந்து கிடந்தார். சுடப்பட்ட தலைவர்கள் அம்புலன்ஸ்களில் வைத்தியசாலைக்கு விரையப்பட்டனர். அமிர்தலிங்கத்தின் உடலை பரிசோதனை செய்த கொழும்பு சட்டமருத்துவ அதிகாரி டாக்டர் எம்.எஸ். எல். சல்காது தலையிலும் நெஞ்சிலும் ஏற்பட்ட காயங்களினால் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார். யோகேஸ்வரனின் உடலைப் பரிசோதித்த பிரதி மருத்துவ அதிகாரி இதயத்திலும் ஈரலிலும் ஏற்பட்ட காயங்களினால் அவர் இறந்துவிட்டதாக அறிவித்தார். விடுதலை புலிகளின் " மறுப்பு " கொலையாளிகள் மீதான மரணவிசாரணை ஜூலை 21 ஆம் திகதி நடைத்தப்பட்டது. அவர்களின் சடலங்களை பொறுப்பேற்பதற்கு எவரும் உரிமைகோரி வரவில்லை என்பதால் கணிசமான நாட்களுக்கு பிறகு அவை அரச செலவில் அடக்கம் செய்யப்பட்டன. தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி தலைவர்களின் கொலைக்கு தாங்கள் பொறுப்பில்லை என்று கூறிய விடுதலை புலிகள் இயக்கம் அந்த மறுப்பை தொடர்ந்து கூறிக் கொண்டிருந்தது. ஆனால், ஆனந்தபுரத்தில் ஒரு போலி இறுதிச்சடங்குகள் நடத்தப்பட்டதாக செய்திகள் வந்தன. கொலைகளுக்கு விடுதலை புலிகளே பொறுப்பு என்பதே தமிழ்ச் சமூகத்தில் கதையாக இருந்தது. கொலையாளிகள் மூவரும் உயிருடன் தப்பிச் சென்றிருந்தால் கொலைகளுக்கு பொறுப்பு என்ற குற்றஞ்சாட்டப்படுவதில் இருந்து விடுதலை புலிகள் இயக்கம் தப்பியிருக்கக்கூடும். அன்றைய பிரேமதாச அரசாங்கமும் கொலைகளுக்கு விடுதலை புலிகள் பொறுப்பு இல்லை என்று காட்டுவதற்கு சகல பிரயத்தனங்களையும் எடுத்திருக்கவும் கூடும். குற்றப்பொறுப்பு ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) அல்லது புதுடில்லிக்கு சார்பான தமிழ்க்குழு ஒன்றின் மீது சுமத்தப்பட்டிருக்கவும் கூடும். அரசாங்கத்துக்கும் விடுதலை புலிகளுக்கும் இடையில் நடைபெற்றுக் கொண்டிருந்த பேச்சுவார்த்தைகளை குழப்புவதற்கான ஒரு சதிமுயற்சியாகவே தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் தலைவர்கள் கொல்லப்பட்டார்கள் என்று கதை கட்டிவிடப்பட்டிருக்கவும் கூடும். ஆனால், அத்தகைய சூழ்நிலைக்கு வாய்ப்பு இல்லாமல் பே்ய்விட்டது. ஏனென்றால் மூன்று விடுதலை புலிகளும் சம்பவ இடத்திலேயே சுட்டுக்கொல்லப்பட்டதுடன அவர்களின் அடையாளங்கள் வெளிப்படுத்தப்பட்டும் இருந்தன. இந்த சோகமிகுந்த சம்பவத்தில் ' ஹீரோ ' மூன்று கொலையாளிகளையும் சுட்டுக்கொன்ற சிங்கள பொலிஸ்காரர் நிசங்க திப்பொட்டுமுனுவவேயாவார். ஒரு கொலை முயற்சியில் சம்பந்தப்பட்ட சகல விடுதலை புலிகள் இயக்கத்தின் கொலையாளிகளும் சுட்டுக்கொலை செய்யப்பட்ட முதலாவது சம்பவமும் ஒரேயொரு சம்பவமும் இதுவேயாகும். சிவசிதம்பரம் தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணி அல்லது இலங்கை தமிழரசு கட்சி பல வருடங்களுக்கு முன்னர் முயற்சி எடுத்திருந்தால் அமிர்தலிங்கம் கொலை பற்றி விரிவான முறையில் உண்மையை வெளிக்கொணரக்கூடியதாக இருந்திருக்கும். கொலைகளை நேரில் கண்ட ஒரேயொரு சாட்சியான முருகேசு சிவசிதம்பரம் சம்பவம் தொடர்பான விடயங்கள் குறித்து வெளிப்படையாக பேசாமல் மௌனம் காத்தார். அவ்வாறு அவர் செய்ததை அன்று நிலவிய சூழ்நிலைகளின் பின்புலத்தில் விளங்கிக்கொள்ள முடிந்தது. ஆனால், என்ன நடந்தது என்பதை குறிப்பிட்ட ஒரு சிலருக்கு சிவசிதம்பரம் தனிப்பட்ட முறையில் விரிவான முறையில் கூறினார். "சிவா ஐயா" உண்மையாக என்ன நடந்தது என்பதை ஒரு தொலைபேசி சம்பாஷணையில் என்னிடம் முழு விபரமாகக் கூறினார். அவரது நினைவுத் திறனுக்காக நான் பாராட்டியபோது "அன்றைய தினம் நடந்ததை எவ்வாறு தம்பி என்னால் மறக்கமுடியும்? " என்று கூறினார். அவருக்கும் எனக்கும் இடையிலான அந்த தொலைபேசி சம்பாஷணை கொலைச்சம்பவம் இடம்பெற்று சில வருடங்களுக்கு பிறகு நடந்தது. அன்று எனக்கு கூறியவற்றை பிரசுரிக்கக்கூடாது என்று சிவா ஐயா என்னிடம் உறுதி வாங்கினார். "நான் செத்தபிறகு நீங்கள் எழுதலாம்" என்று அவர் கூறினார். 2002 ஜூனில் சிவா ஐயா இறந்தார். மங்கையர்க்கரசி அமிர்தலிங்கத்துடனும் சரோஜினி யோகேஸ்வரனுடனும் கொலைச்சம்பவங்கள் குறித்து அவர்களின் நினைவுகள் பற்றி நான் பேசினேன். 1998 ஆம் ஆண்டில் யாழ்ப்பாண மாநகர மேயராக தெரிவான திருமதி யோகேஸ்வரனும் விடுதலை புலிகளினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டார் என்பது இன்னொரு சோகக்கதை. திருமதி அமிர்தலிங்கம் 2016 ஆம் ஆண்டில் லண்டனில் அமைதியாக மரணத்தை தழுவினார். சிறிமாவோ கவலை இதுதான் யோகேஸ்வரனுடன் சேர்த்து முன்னாள் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் விடுதலை புலிகளினால் படுகொலை செய்யப்பட்ட துன்பியல் கதை. அன்றைய எதிச்க்கட்சி தலைவி சிறிமாவோ பண்டாரநாயக்கவுக்கு தமிழ்த் தலைவர்களின் கொலை குறித்து லசந்த விக்கிரமதுங்க அறிவித்தபோது அவர் "யார் இதைச் செய்தது?" என்று பதறிக்கொண்டு கேட்டார். விடுதலை புலிகள் தான் செய்தார்கள் என்று லசந்த கூறியபோது நிம்மதிப் பெருமூச்சுவிட்ட திருமதி பண்டாரநாயக்க "அவர்களை சிங்களவர் ஒருவர் கொலை செய்வில்லை என்பது எனக்கு மகிழ்ச்சி" பதிலளித்தார். அமிர்தலிங்கத்தின் அரசியலை சிங்களவர்களில் பலர் வெறுத்திருக்கலாம். ஆனால், அவர்கள் அவரைக் கொலை செய்யவில்லை. அமிர்தலிங்கத்தை முன்னர் தங்களது ஹீரோவாக கருதிய தமிழ் இளைஞர்களே கொலை செய்தார்கள். https://www.virakesari.lk/article/219983
  22. பெருமளவு உறுப்பினர்களை இழந்துள்ள ஹமாசின் புதிய தந்திரோபாயம் - இஸ்ரேலிய படையினரை உயிருடன் பிடிப்பது - கார்டியன் Published By: RAJEEBAN 13 JUL, 2025 | 01:14 PM Jason Burke in Jerusalem காசாவில் உள்ள இஸ்ரேலிய படையினருக்கு எதிரான தனது நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் ஹமாஸ் அமைப்பு புதிய இலக்கொன்றினை அடிப்படையாக கொண்டு செயற்பட தொடங்கியுள்ளது - இஸ்ரேலிய இராணுவீரர்களை பிடிப்பதே அந்த இலக்கு. கடந்த வாரம் காசாவின் தென்பகுதியில் ஹான் யூனிசில் ஹமாஸ் இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவரை உயிருடன் கைதுசெய்ய முயன்றவேளை அவர் கொல்லப்பட்டார். ஏப்பிரஹாம் ஏசுலாயின் (25) உடலை கொண்டு செல்வதற்கு ஹமாஸ் உறுப்பினர்கள் முயன்றனர் எனினும் இஸ்ரேலிய படையினரின் தாக்குதல் காரணமாக அந்த முயற்சியை கைவிட்டனர். போர்நிறுத்தம் தொடர்பான மறைமுக பேச்சுவார்த்தைகள் இடம்பெறும் இவ்வேளையில் இஸ்ரேலிய இராணுவீரர் ஒருவரை பிடித்துவைத்திருப்பது அல்லது அவர்களின் உடல்களை வைத்திருப்பது பேச்சுவார்த்தைகளில் ஹமாஸ் செல்வாக்கு செலுத்தும் நிலையை ஏற்படுத்தும் என மேலும் இஸ்ரேலில் பொதுமக்கள் கருத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும். இஸ்ரேலிய இராணுவீரரை உயிருடன் பிடிக்கும் அல்லது அவரின் சடலத்தை கைப்பற்றும் முயற்சி தோல்வியடைந்துள்ளது. ஆனால் இஸ்ரேலிய இராணுவவீரர்களை பணயக்கைதிகயாக பிடிக்கும் அவர்களின் உடல்களை கைப்பற்றும் முயற்சிகளை ஹமாஸ் அமைப்பு தீவிரப்படுத்தும் என டெல்அவி பல்கலைகழகத்தில் உள்ள பாலஸ்தீன கற்கைகளிற்கான பிரிவின் மைக்கல் மில்ஸ்டெய்ன் தெரிவிக்கின்றார். 2023ம் ஆண்டு 7 ம்திகதி பணயக்கைதிகளாக பிடித்தவர்களில் இன்னமும் 50 பேரை ஹமாஸ் தன்வசம் வைத்துள்ளது. இவர்களில் 28 பேரின் விடுதலை குறித்து பேச்சுவார்த்தைகளில் ஆராயப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. யுத்தநிறுத்தத்திற்காக பணயக்கைதிகளை ஹமாஸ் விடுதலை செய்யலாம். அதேவேளை அந்த அமைப்பு இஸ்ரேலிய இராணுவவீரர்களை உயிருடன் பிடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என தெரிவிக்கும் ரமல்லாவை சேர்ந்த அரசியல் ஆய்வாளர், இதன் மூலம் எந்த உடன்படிக்கையும் மோதலிற்கு நிரந்தர முடிவை கொண்டுவரப்போவதில்லை என்பதை தெரிவிக்கின்றது என குறிப்பிட்டுள்ளார். வெற்றிகரமான தாக்குதல்களை பிரச்சாரத்திற்காக பயன்படுத்துவதில் ஹமாஸ் அமைப்பு தனது திறமையை நிரூபித்துள்ளது. அதன் ஊடகங்கள்ள் கடந்த வார கடத்தல் முயற்சியின் வீடியோவை ஒளிபரப்பின. பிற படங்கள் இஸ்ரேலிய கவச வாகனங்கள் மற்றும் புல்டோசர்களை போராளிகள் தாக்குவதைக் காட்டின. ஹமாஸின் மூலோபாயங்களை நன்கு அறிந்த கத்தாரை தளமாகக் கொண்ட பாலஸ்தீன ஆய்வாளர் கூறினார்: "இது பேச்சுவார்த்தைகளில்இது பேச்சுவார்த்தைகளில் விளையாடுவதற்கு ஹமாசிற்கு ஒரு துரும்பினை வழங்குகின்றது - இது உளவியல் போரின் முக்கிய பகுதியாகும். ஹமாஸ் போராளிகளை ஊக்குவித்து காசாவில் உள்ள இஸ்ரேலிய வீரர்களையும் இஸ்ரேலில் உள்ள பொதுமக்களையும் மனச்சோர்வடையச் செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது." ஹமாஸின் இராணுவ வலிமை எவ்வாறு குறைந்துள்ளது என்பதை இஸ்ரேலிய அதிகாரிகள் பலமுறை விவரித்துள்ளனர். மேலும் அதன் இராணுவபிரிவு பெரும இழப்பை சந்தித்துள்ளது என்பது குறித்து இராணுவ ஆய்வாளர்களிற்கு எந்த சந்தேகமும் இல்லை.. போரின் தொடக்கத்தில் சுமார் 30000 போராளிகள் காணப்பட்டனர். அவர்களில் 23000 பேர் வரை கொல்லப்பட்டதாக ஐடிஎஃப் ஆதாரங்களை வழங்காமல் கூறுகிறது. ஹமாஸின் தலைமைத்துவ இழப்புகள் தெளிவாக உள்ளன. 2023 இல் செயலில் இருந்த பெரும்பாலான மூத்த மற்றும் நடுத்தர தளபதிகள் இப்போது இறந்துவிட்டனர். கத்தாரை தளமாகக் கொண்ட ஆய்வாளர் ஹமாஸ் காசாவில் "சில நூறு உறுப்பினர்களை மட்டுமே நிறுத்தக்கூடும். ஆனால் இது அதன் மூலோபாய நோக்கங்களுக்கு போதுமானது என்று கூறினார். ஹமாஸிடம் இங்கே ஒரு சில மறைவிடங்கள் மாத்திரமே உள்ளன, ஆனால் அவர்கள் தங்கள் வளங்களை மிகவும் கவனமாகவும் துல்லியமாகவும் பயன்படுத்துகிறார்கள்" என்று அவர் கூறினர். 21 மாத மோதலின் போது ஹமாஸ் ஒரு "இராணுவ மாற்றத்தை" ஏற்படுத்தியுள்ளது ஒரு அரை-மரபுப் படையிலிருந்து கொரில்லாப் போருக்கு ஏற்ற ஒன்றாக மாறியுள்ளது என்றும் அதன் புதிய உத்தி காசாவில் ஏற்பட்ட பேரழிவிற்கு ஏற்றவாறு சிறப்பாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது என்றும் இராணுவ நிபுணர்கள் கூறுகின்றனர். இஸ்ரேலிய தாக்குதலில் 57000 பேர் கொல்லப்பட்டனர் பெரும்பாலும் பொதுமக்கள் மற்றும் பரந்த பகுதிகள் இடிபாடுகளாக மாறியுள்ளன. கடந்த வாரம் நடந்த ஒரு பதுங்கியிருந்து தாக்குதல் ஐந்து வீரர்களைக் கொன்றது மற்றும் ஒன்பது பேர் காயமடைந்தனர். பெய்ட் ஹனூன் ஒரு காலத்தில் காசாவின் வடக்கே செழிப்பான நகரமாக இருந்தது. இஸ்ரேலிய தாக்குதல்களால் நொறுக்கப்பட்ட கற்கள் மற்றும் முறுக்கப்பட்ட உலோகமாக மாற்றப்பட்டது. ஹமாஸின் சில விரிவான சுரங்கப்பாதை வலையமைப்பு இன்னும் அப்படியே உள்ளது. இது இஸ்ரேலின் வான் சக்தி மற்றும் கண்காணிப்பு திறன்களிலிருந்து தப்பிக்கும் வழியை வழங்குகிறது. முன்னாள் ஐ.டி.எஃப் (இஸ்ரேலிய இராணுவம்) இராணுவ வரலாற்றாசிரியரும் அந்தக் குழுவின் நிபுணருமான கை அவியாட் கூறினார்: "இது ஐ.டி.எஃப்-க்கு மிகவும் சிக்கலான போர்க்களம். ஹமாஸ் அனைத்து இடிபாடுகளையும் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறது. அவர்கள் கொரில்லாப் போரில் நிபுணர்கள் மற்றும் 20 ஆண்டுகளாக இஸ்ரேலுடன் சண்டையிட்டு வருகின்றனர் காசாவில் உள்ள இராணுவத் தலைவர்களுக்கும் கத்தார் மற்றும் இஸ்தான்புல்லில் உள்ள ஹமாஸின் அரசியல் தலைமைக்கும் இடையேயான தொடர்புகள் திறந்தே இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர். போர் தொடங்கியதிலிருந்து அப்போதைய தலைவர் இஸ்மாயில் ஹனியே உட்பட இரண்டு குறிப்பிடத்தக்க அரசியல் தலைவர்கள் மட்டுமே கொல்லப்பட்டுள்ளனர். இஸ்லாமிய உலகின் பெரும்பகுதியிலும் பிற இடங்களிலும் உள்ள தூதர்கள் அதிகாரிகள் ரகசிய செயல்பாட்டாளர்கள் மற்றும் அனுதாபிகளின் குழுவின் வலையமைப்பும் பெரும்பாலும் அப்படியே உள்ளது மற்றும் அமைப்புக்காக நிதி திரட்டி வருகிறது. 2007 முதல் காசாவை ஹமாஸ் ஆட்சி செய்து வந்தது. அதன் அதிகாரிகள் இன்னும் பெயரளவிற்கு அமைச்சகங்கள், நகராட்சி அதிகாரிகள் மற்றும் பலவற்றை நடத்துகிறார்கள். இருப்பினும் குற்றவியல் கும்பல்கள் சமூகத் தலைவர்களின் கூட்டணிகள் மற்றும் இஸ்ரேலால் ஆதரிக்கப்படும் புதிய போராளிகள் உள்ளிட்ட பிற ர் அதன் மீதமுள்ள அதிகாரத்திற்கு எதிராக போட்டியிடுவதால் பிரதேசத்தின் மீதான அதன் பிடி நழுவி வருகிறது. ஹமாஸ் அதிகாரிகளும் பாதுகாப்புப் பணியாளர்களும் ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட குறைவாகவே இருப்பதாக பிரதேசத்தில் உள்ள உதவிப் பணியாளர்கள் கூறுகின்றனர். இந்தப் பிரதேசத்தில் உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை தொடங்கிய சமீபத்திய சுற்று போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகளில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த மாதம் பத்து ஐ.டி.எஃப் வீரர்களும் ஜூலையில் 20 வீரர்களும் கொல்லப்பட்டுள்ளனர். “இஸ்ரேலின் அதிகாரத்தில் சில வரம்புகளை விதிக்கும் மற்றும் உலகம் முழுவதும் பொதுமக்களின் கருத்தை ஓரளவு பாதிக்கும் ஒரு வகையான போர் நிறுத்தப் போரை நாங்கள் இப்போது காண்கிறோம்” என்று ஹமாயேல் கூறினார். ஹமாஸ் யுத்தநிறுத்ததிற்கு தயாராக உள்ளது, ஆனால் அந்த அமைப்பு ஏற்றுக்கொள்ள முடியாததை ஏற்றுக்கொள்ள தயாராகயில்லை. நாங்கள் இங்கு இஸ்ரேலில் ஹமாஸிற்கு எதிராக மேலும் மேலும் கடும் அழுத்தங்களை கொடுத்தால் அவர்கள் இறுதியில் விட்டுக்கொடுப்பார்கள் என்ற கருத்தில் அடிப்படையில் செயற்படுகின்றோம். ஆனால் நாங்கள் எவ்வளவு அழுத்தங்களை கொடுத்துவிட்டோம், ஆனால் அவர்களின் தலைவர்களை அழித்துவிட்டோம், காசாவை அழித்துவிட்டோம், ஆனால் ஹமாசின் அடிப்படை மனோபாவத்தையும் வேண்டுகோள்களையும் எங்களால் (இஸ்ரேலால்) மாற்ற முடியவில்லை என மில்ஸ்டெய்ன் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/219863
  23. பூமி திரும்பும் சுபான்ஷு சுக்லா: Ax-4 விண்கலனின் 24 மணி நேர பயணத்தில் என்ன நடக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் த வி வெங்கடேஸ்வரன் பிபிசி தமிழுக்காக 14 ஜூலை 2025, 12:15 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தியர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்டோர் சென்ற Ax-4 க்ரூ டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விடுபட்டு பூமிக்கு திரும்புகிறது. கமாண்டர் பெக்கி விட்சன், பைலட் சுபான்ஷு சுக்லா, மற்றும் திட்ட நிபுணர்கள் ஸ்லாவோஷ் உஸ்னான்ஸ்கி-விஸ்னியெவ்ஸ்கி மற்றும் டிபர் காபு ஆகியோரை உள்ளடக்கிய, ஆக்சியம் மிஷன் 4 (Ax-4) குழு, ஜூன் 25, 2025 அன்று IST 12:01 மணிக்கு கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஏவப்பட்டது. அடுத்த 28 மணி நேர சுற்றுப்பாதை கட்டத்திற்குப் பிறகு இந்திய நேரப்படி (IST) ஜூன் 26 மாலை 4:30 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்துடன் (ISS) வெற்றிகரமாக இணைந்தது. அதன் பின்னர் குழுப் பயணிகள் தங்கள் பணியை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கினர். பட மூலாதாரம்,INTERNATIONAL SPACE STATION படக்குறிப்பு, Ax-4 க்ரூ டிராகன் விண்கலம், சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விடுபடும் தருணம் விண்வெளியில் வாழ்வதற்கு தகவமைத்தல் புதிய ஊருக்கு வீடு மாறி சென்றால் அங்கே நமக்கு பழக்கம் அடைய சில நாட்கள் ஆகும். அதுபோல விண்வெளிக்கு செல்லும்போது அங்கே உள்ள எடையற்ற நிலையில் இயங்க, தகவமைத்து கொள்ளச் சற்று காலம் எடுக்கும். பயணத்தின் இரண்டாம் நாளில், சுபான்ஷு சுக்லா மற்றும் குழு உறுப்பினர்கள் பூமியின் ஈர்ப்பு இல்லாத புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை பழக்கிக் கொண்டனர். அவர்கள் தங்கள் தூங்கும் இடங்களை அமைத்தனர். ISS-ல் ஏற்கனவே இருந்த எக்ஸ்பெடிஷன் 73 குழுவுடன் பணி ஒப்படைப்பு செயல்பாடுகளை மேற்கொண்டனர். எடுத்து சென்ற முக்கிய சரக்குகளை விண்கலத்திலிருந்து சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு எடுத்து வந்தனர். மேலும் அவசரகால நடைமுறைகளைக் கற்றுக்கொண்டனர். மூன்றாம் நாளில், அவர்கள் முழுமையாக ISS குழுவுடன் ஒருங்கிணைந்தனர். அவசரகால பயிற்சிகளை மேற்கொண்டனர், முக்கியமான விஞ்ஞான உபகரணங்களையும் பாதுகாப்பு சாதனங்களையும் ஆய்வு மேடையில் பொருத்தினர். நிலையத்தின் நடத்தை விதிகளைக் கற்றனர். சுபான்ஷு சுக்லா அடுத்து வரும் நாட்களில் மேற்கொள்ள இருக்கும் ஆராய்ச்சி சோதனைகளுக்குத் தேவையான உபகரணங்களை தயார் செய்வதில் முனைப்பு காட்டினர். உயிரியல் மாதிரிகளை சோதனை மேடைகளில் பொருத்தி சரிபார்த்தார். பட மூலாதாரம்,WWW.AXIOMSPACE.COM படக்குறிப்பு, பயணத்தின் இரண்டாம் நாளில், சுபான்ஷு சுக்லா மற்றும் குழு உறுப்பினர்கள் பூமியின் ஈர்ப்பு இல்லாத புதிய சூழலுக்கு ஏற்ப தங்களை பழக்கிக் கொண்டனர் முக்கிய சோதனைகளின் தொடக்கம் நான்காம் நாள் சுபான்ஷு சுக்லாவுக்கு மிகவும் முக்கியமானதாக இருந்தது. அவர் லைஃப் சயின்ஸஸ் கிளவ்பாக்ஸ் எனப்படும் உயிரியல் ஆய்வு மேடை அமைப்பில் மயோஜெனிசிஸ் சோதனையை மேற்கொண்டு, நீண்டகால விண்வெளிப் பயணங்களால் ஏற்படும் தசை சீரழிவு பற்றி ஆய்வு செய்தார். மேலும், செரிப்ரல் ஹீமோடைனமிக்ஸ் ஆய்வில் பங்கேற்று, அல்ட்ராசவுண்ட் மூலம் பூமியின் ஈர்ப்பு இல்லாத நிலையில் மூளை இரத்த ஓட்டத்தை ஆய்வு செய்தார். சுபான்ஷு பிரதமர் நரேந்திர மோடியுடன் நேரடி உரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றார். இது நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. ஐந்தாம் நாளில், சுபான்ஷு எதிர்கால ஆழ்விண்வெளிப் பயணங்களுக்கான நிலையான உணவு மூலங்களை ஆராயும் மைக்ரோ ஆல்கே மாதிரிகளை ஆய்வு மேடையில் வைத்து ஆய்வை துவங்கின்னர். இந்த ஆய்வு, இஸ்ரோ (ISRO), சர்வதேச மரபணு பொறியியல் மற்றும் உயிரிதொழில்நுட்ப மையம் (ஐ.சி.ஜி.இ.பி), தேசிய தாவர மரபணு ஆராய்ச்சி நிறுவனம் (என்ஐஜிபிஆர்) ஆகியவற்றின் உதவியுடன் நடத்தப்பட்டது. எடையற்ற நிலையில் வளரும் உணவாக உட்கொள்ளக்கூடிய மூன்று வகை மைக்ரோ ஆல்கே இனங்களின் வளர்ச்சி, வளர்சிதை மாற்றம் மற்றும் மரபணுச் செயல்பாட்டை உற்றுநோக்கி பதிவு செய்து அதனைப் பூமியில் உள்ள மாதிரிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வதே இந்தத் திட்டம். வளர்ஊட்டம் அளித்து, நுண்ணுயிர் மாதிரிகளை வளர்த்து அதன் வளர்ச்சியை படமெடுத்து, டிரான்ஸ்கிரிப்டோமிக்ஸ், புரோட்டியோமிக்ஸ் மற்றும் வளர்சிதை மாற்றங்கள் உள்ளிட்ட முக்கிய உயிரியல் அளவுருக்களை பதிவு செய்வது தான் சுபான்ஷு சுக்கலாவின் பணி. சுபான்ஷு சுக்லா உட்பட விண்வெளி நிலையத்தில் இருந்த எல்லா குழு உறுப்பினர்களும் நியூரோ மோஷன் VR எனும் ஆய்வு திட்டத்திலும் பங்கெடுத்தனர். எடையற்ற நிலையில் உடலியக்கத்தில் நரம்பு, நமது நிலை குறித்த மூளை அறியும் திறன் எப்படி மாறுபடுகிறது என்பதை ஆய்வு செய்வது இதன் நோக்கம். மேலும் மற்றொரு முக்கிய ஆய்வான விண்வெளியில் இருதய நலத்தை கண்காணிக்கும் டெலிமெட்ரிக் ஹெல்த் AI, திட்டத்திலும் குழுவினர் பங்குகொண்டனர். பட மூலாதாரம்,WWW.AXIOMSPACE.COM படக்குறிப்பு, ஆய்வுக்குத் தேவையான பொருட்களை எடுத்து வைக்கும் டிபர் காபு மற்றும் டக்கியா ஒனுஷி விண்வெளியில் தசை செல்களின் ஆறாம் நாளில், சுபான்ஷு மயோஜெனிசிஸ் சோதனையில் தனது பணியைத் தொடர்ந்தார். எடையற்ற நிலையில் தசை செல்களின் நடத்தையை ஆய்வு செய்தார். இந்தியாவின் 'இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்டெம் செல் சயின்ஸ் அண்ட் ரிஜெனரேடிவ் மெடிசின் (InStem)' முன்மொழியப்பட்ட இந்த ஆய்வு, ISS-ன் லைஃப் சயின்ஸஸ் கிளவ்பாக்ஸில் 3D திசு சில்லுகளைப் பயன்படுத்தி, விண்வெளியின் எடையற்ற நிலையில் தசை ஸ்டெம் செல்களின் நடத்தை மாற்றங்களை ஆராய்ந்து பதிவு செய்தார். விண்வெளியில் வளர்ந்த மாதிரிகளை பூமியில் வளர்ந்தவற்றுடன் ஒப்பிட்டு, தசை உருவாக்கத்தில் ஈர்ப்பு விசையின் தாக்கத்தை தனிமைப்படுத்தி காண இந்த ஆய்வு வழி செய்யும். இந்த ஆய்வின் முடிவுகள் இரட்டை நன்மைகளை வழங்கும்: எதிர்காலத்தில் நிலவு-செவ்வாய் நீண்டகால பயணங்களில் விண்வெளி வீரர்களின் தசைகளைப் பாதுகாக்கும் முறைகளை உருவாக்குதலில் நமக்கு வழிகாட்டும். மேலும் பூமியில் தசை சீரழிவு நோய்களுக்கான சிகிச்சைகளில் முன்னேற்றம் காணவும் உதவும். ஃபோட்டான் கிராவ் மூளை-கணினி இடைமுக பரிசோதனையிலும் குழுவினர் பங்கு கொண்டனர். இது விண்கல இயக்க கருவிகளுடன் தங்களது மூளை செயல்பாடு மூலம் கட்டுப்படுத்தும் முன்னணி தொழில்நுட்ப ஆய்வு. நரம்பியல் நோய்களுக்கு புதுவித சிகிச்சையை உருவாக்கவும் இந்த ஆய்வு உதவும். சயனோபாக்டீரியா வளர்ச்சி ஏழாம் நாளில், சுபான்ஷு இஸ்ரோவின் சயனோபாக்டீரியா வளர்ச்சியை ஆவணப்படுத்தினார். குழுவினர் வோயேஜர் டிஸ்ப்ளேஸ் எனும் ஆய்வு திட்டத்திலும் பங்கேற்றனர். கண் இயக்கம் மற்றும் பார்வை ஒருங்கிணைப்பபை எடையற்ற விண்வெளி நிலை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்யும். எட்டாம் நாள் பல ஆராய்ச்சி செயல்பாடுகளால் நிரம்பியிருந்தது. சுபான்ஷு மயோஜெனிசிஸ் ஆய்வுக்கான தசை செல் வளர்ச்சியை தொடர்ந்தார். மேலும் டார்டிகிரேட்ஸ் நுண்ணுயிரி சோதனையைத் தொடங்கினார். இது நுண்ணிய உயிரினங்கள் விண்வெளியில் எவ்வாறு உயிர் வாழ்கின்றன என்பதை ஆராய்கிறது. ஐஐஎஸ்சி பெங்களூர் வடிவமைத்த இந்த சோதனையில் டார்டிகிரேட்ஸ் அல்லது நீர் கரடிகள் என்று அழைக்கப்படும் சிறிய அரை மில்லி மீட்டர் நீளமே உடைய உயிரினங்கள் எப்படி வளர்கின்றன என்பதை ஆய்வு செய்வார்கள். இந்த வகை நுண்ணுயிரிகள் வெப்பம், கடும் குளிர், கடல்கள் மற்றும் எரிமலைகள் போன்ற தீங்கான சூழல்களில் கூட உயிர்வாழும் திறன் கொண்டவை. விண்வெளிப் பயணத்திற்கு முன், அவை உறக்க நிலையில் வைக்கப்பட்டன. இந்த உறக்க நிலையில் உணவு தேவையில்லாமல் வளர்சிதை மாற்றம் இல்லாமல் இருந்தன. ISS-ல், சுபான்ஷு சுக்லா நீரைப்பயன்படுத்தி அவற்றை எடையற்ற நிலையில் மீண்டும் உயிர்ப்பித்தார். AXIOM-4 திரும்பியவுடன், விண்வெளியில் வளர்ந்த மாதிரிகள் பூமியை அடையும். இவற்றை இந்திய விஞ்ஞானிகள் பூமியில் வளர்ந்த நுண்ணுயிரிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வார்கள். விண்வெளி உடை தயாரிப்பில் பயன்படுத்த, நிலையான வெப்பநிலையை பராமரிக்க உதவும் வகையான புதிய பொருட்களை சோதிக்க குழுவினர் உதவினர். மேலும் வாய்ஸ் இன் ஸ்பேஸ் எனும் ஆய்வு திட்டத்திலும் பங்கு கொண்டனர். எடையற்ற விண்வெளி நிலையில் நமது குரலில் எவ்வித மாற்றம் ஏற்படுகிறது என்பதை இது ஆய்வு செய்யும். பட மூலாதாரம்,WWW.AXIOMSPACE.COM படக்குறிப்பு, AXIOM-4 திரும்பியவுடன், விண்வெளியில் வளர்ந்த மாதிரிகள் பூமியை அடையும். இவற்றை இந்திய விஞ்ஞானிகள் பூமியில் வளர்ந்த நுண்ணுயிரிகளுடன் ஒப்பிட்டு ஆய்வு செய்வார்கள் விண்வெளி விடுமுறை பரபரப்பான ஒருவாரம் நீண்ட பணிகளுக்கு பிறகு ஒன்பதாம் நாள் விண்வெளிக்குழுவினர்களுக்கு விடுமுறையாக அமைந்தது. சுபான்ஷு மற்றும் அவரது குழு உறுப்பினர்கள் இந்த நேரத்தை ஓய்வெடுக்க, தங்கள் குடும்பங்களுடன் பேச பயன்படுத்திக்கொண்டனர். விடுமுறைக்கு பிறகு, பத்தாம் நாளில், சுபான்ஷு மயோஜெனிசிஸ், மைக்ரோ ஆல்கே ஆய்வு போன்ற ஆய்வை தொடர்ந்தார். இந்த ஆய்வுகளில் வளர்ந்த தசை செல்கள் நுண்ணுயிர்கள் போன்றவற்றின் மாதிரிகளை சேகரித்து பதம் செய்து வைத்தார். வோயேஜர் டிஸ்ப்ளேஸ் போன்ற ஆய்வுகளும் தொடர்ந்தன. பதினொன்றாம் நாள் தாவரவியலில் கவனம் சென்றது. சுபான்ஷு ஸ்ப்ரௌட்ஸ்- முளைவிடுதல்- சோதனையை துவக்கினர். இந்திய விவசாய மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் இஸ்ரோவுடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எடையற்ற நிலையில் முளைக்கும் தாவரங்களின் மரபணு மாற்றங்களை ஆய்வு செய்தார். பூமியிலிருந்து எடுத்து சென்ற விதைகளுக்கு நீர்ப்பாசனம் செய்தார். வேர்/தண்டு வளர்ச்சி மாறுபாடுகளை ஆவணப்படுத்தினார். விண்வெளியில் முளைத்த தாவரங்களின் மாதிரிகள் -80°C-ல் சேமிக்கப்பட்டன. எதிர்காலத்தில் விண்வெளி நிலையத்தில் இவ்வாறு முளைவிட செய்து தாவர உணவுகளை பெறுவதற்கு இந்த ஆய்வு உதவும். மேலும் தாவரங்களின் வளர்ச்சியில் ஈர்ப்பு விசையின் பங்கு குறித்து அறியவும் உதவும் பன்னிரண்டாம் நாளில், சுபான்ஷு மயோஜெனிசிஸ் ஆய்வின் செல்லுலார் மாதிரிகளை சேகரித்து சேதாரம் இல்லாமல் பூமிக்கு திரும்ப எடுத்துவர பதனம் செய்தார். மேலும் டெலிமெட்ரிக் ஹெல்த் AI திட்ட ஆய்விலும் பங்கு கொண்டார். 13-வது நாளில், சயனோபாக்டீரியா மாதிரிகளை பூமிக்கு திரும்ப எடுத்துவர பதனம் செய்து பத்திரப்படுத்தினார். மேலும் வோயேஜர் டிஸ்ப்ளேஸ் ஆய்வின் பகுதியாக எடையற்ற நிலையில் கண் இயக்கத்தை ஆய்வு செய்ய உதவினார். 14-ஆம் நாளில், விண்வெளியில் முளைவிட்ட தாவரங்கள் உட்பட அனைத்து உயரி ஆய்வுகளின் மாதிரிகளை -80°C உறைவிப்பானில் பதனம் செய்து பத்திரப்படுத்தினார். பதினைந்தாம் நாளில் குழு பூமியை சுமார் 230 முறை சுற்றி வந்தது. ஏற்கனவே துவங்கிய ஆய்வுகளை தொடர்ந்து மேற்கொண்டார். 16-ஆம் நாளில், சுபான்ஷு மைக்ரோ ஆல்கே ஆராய்ச்சியைத் தொடர்ந்தார். அதே நேரத்தில், குழு வோயேஜர் டிஸ்ப்ளேஸ் ஆய்வில் பங்கு கொண்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எடையற்ற நிலையில் முளைக்கும் தாவரங்களின் மரபணு மாற்றங்களை ஆய்வு செய்தார் சுபான்ஷு சுக்லா (சித்தரிப்புப் படம்) பூமி திரும்புவதற்கான ஆயத்தம் பதினேழாம் நாளில், மைக்ரோ ஆல்கே கலாச்சாரங்களை சென்ட்ரிஃப்யூஜ் செய்து பூமிக்கு பாதுகாப்பாக திரும்புவதற்கு உறைபனியில் வைத்தனர். வாய்ஸ் இன் ஸ்பேஸ் ஆய்விலும், அக்வயர்ட் ஈக்விவலன்ஸ் டெஸ்ட் எனும் ஆய்விலும் பங்களிப்பு செய்தார். பதினெட்டாம் நாளில், குழுவினர் தொடர்ந்த இரத்த குளோக்ஸ் அளவு பதிவு செய்தல் ஆய்வில் பங்கு கொண்டனர். விண்வெளியில் பல நாட்கள் வாழ்ந்த சூழலில் ரத்த சர்க்கரை அளவு எப்படி மாறுபடுகிறது என்பதை இந்த உடலியல் ஆய்வு பதிவு செய்தது. பத்தொன்பதாம் நாள் புறப்படுவதற்கான தயாரிப்புகளில் கழிந்தது. சுபான்ஷு மற்றும் குழு முளைத்த விதைகள் மற்றும் ஆல்கே 'கல்ச்சர்' உள்ளிட்ட சோதனை மாதிரிகளை பேக் செய்தனர். அவர்கள் ISS குழுவுடன் விடைபெறும் விழாவில் பங்கேற்றனர். இருபதாம் நாளில், Ax-4குழுவினர் மறுபடி க்ரூ டிராகன் விண்கலத்துக்கு வந்தனர். விண்கல கதவுகள் -ஹேச்சுகளை மூடினர். ISS-லிருந்து விடுபட தயார் செய்து கொண்டனர். இவ்வாறு அவர்களின் 20-நாள் பணி முடிவுக்கு வந்தது. ISS-லிருந்து விடுபடுதல், தரையிறக்கம் மற்றும் மீட்பு Ax-4 க்ரூ டிராகன் விண்கலம் தரையிறக்கத்திற்கு சுமார் 22-24 மணி நேரத்திற்கு முன்பு ISS-லிருந்து விடுபடும். பிரிந்த பிறகு, மெல்ல மெல்ல சுற்றுப்பாதை தாழ்வு எரிப்புகளை செயல்படுத்தி அதன் சுற்றுப்பாதையை படிப்படியாக தாழ்த்தும். கணக்கிடப்பட்ட தரையிறக்கத்திற்கு 30-60 நிமிடங்களுக்கு முன்பு டி-ஆர்பிட் எரிப்பு மூலம் வளிமண்டலத்தில் மீண்டும் நுழையும். இந்த சமயத்தில் உராய்வு காரணமாக, விண்கலத்தைச் சுற்றியுள்ள வெப்பநிலை 1,900°C வரை உயரும். சிறப்பாக தயாரிக்கப்பட்ட வெப்ப கேடயம் இந்தக் கட்டத்தில் குழுவைப் பாதுகாக்கும். வளிமண்டலத்தில் நுழைந்த பிறகு, 5.5 கிமீ உயரத்தில் பாராசூட்கள் விரிக்கப்படும், கலிபோர்னியா கடற்கரையில் பாதுகாப்பாக நீரிறக்கம் ஆகும். சுற்றுப்பாதை நிலைமைகளைப் பொறுத்து இந்த முழு செயல்முறை 20 முதல் 24 மணி நேரம் எடுக்கும். மீட்பு குழுக்கள் நீரிறக்கம் ஆவதற்கு 30 நிமிடங்களுக்குள் கேப்சூலை அணுகி பாதுகாப்பு சோதனைகளை மேற்கொள்வார்கள். தீ விபத்து போன்ற எந்த ஆபத்தும் இல்லை என்று உறுதி செய்தபின்னர், தரையிறங்கி கடலில் மிதக்கும் விண்கலத்தை கிரேன் கொண்டு கப்பல் தளத்துக்கு உயர்த்துவார்கள். இதன் பின்னர் கதவு திறக்கப்பட்டு குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவராக வெளியேற்றப்படுவார்கள். இரண்டு வாரங்கள் ஈர்ப்பு இல்லாத நிலையில் இருந்த பிறகு, விண்வெளி வீரர்கள் பூமியின் ஈர்ப்பு விளைவுகளுக்கு ஏற்பத் தங்களை சரிசெய்ய உதவி தேவைப்படலாம். எனவே அவர்களை முதலில் ஸ்ட்ரெச்சர் அல்லது சக்கர நாற்காலியில் வைத்து தான் அழைத்து செல்வார்கள். விண்வெளி வீரர்களை மருத்துவ குழுக்கள் ஆரம்பகட்ட உடல் சோதனை செய்வார்கள். உணவு, நீர் முதலிய வழங்குவார்கள். 20-25 மணிநேர பயணத்துக்கு பிறகு விண்கலத்திலிருந்து வெளிவருவதால் உடல் சுத்தம் செய்வார்கள். கப்பல் கரையை அடைந்ததும், மேலும் விரிவான மருத்துவ பரிசோதனை மேற்க்கொள்ளப்படும். தரையிறங்கிய சில மணி நேரத்துக்கு பிறகு பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெறும். புதிய ஆரோக்கிய கவலைகள் எழாவிட்டால், நீண்ட கால தனிமைப்படுத்தல் தேவையில்லை. தரையிறக்கத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, சுபான்ஷு சுக்லா இந்தியா திரும்புவதாக எதிர்பார்க்கப்படுகிறது. (கட்டுரையாளர் முனைவர் த.வி.வெங்கடேஸ்வரன் மொஹாலியில் உள்ள இந்திய அறிவியல் கல்வி ஆராய்ச்சி நிறுவனத்தில் பேராசிரியராக பணிபுரிகிறார்) - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cedgpnvp8pyo
  24. குறுங்காணொளிகளைக் காணவில்லையே @suvy அண்ணை?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.