Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு சுகாதாரத்துறையும் காவல்துறையும் சேர்ந்து கடந்த சில நாட்களாக 25 வயது பழங்குடியின கர்ப்பிணி பெண் ஒருவரை தேடிக் கொண்டிருக்கின்றனர். இடம் : ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகா, சோளகர் தொட்டி கிராமம் தேதி : ஜூலை 05-ஆம் தேதி, மாலை 5மணி. அழகான மலைப்பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ள சோளகர் தொட்டி கிராமத்தில் மாவட்ட சுகாதாரத்துறையினர், கர்ப்பிணி பெண்களை கண்காணிக்கும் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். அந்த கிராமத்தில் இருந்த சேவந்தி என்ற 25 வயது கர்ப்பிணி பெண்ணுக்கு ஜூலை 7-ஆம் தேதி பிரசவ தேதி குறிக்கப்பட்டிருந்தது. அவருக்கு இது இரண்டாவது பிரசவம். ஒரு வாரம் முன்பே அவரை மருத்துவமனையில் அனுமதிக்க கிராம சுகாதார செவிலியர் ஜோதி வலியுறுத்தியிருந்தார். ஆனால் சேவந்தி மற்றும் அவர் குடும்பத்தினர் மறுத்துவிட்டனர். ஜூலை 5-ஆம் தேதி சேவந்தியை சந்திக்க சென்ற போது, ஜூலை 7-ஆம் தேதி மருத்துவமனைக்கு வருவதாக சேவந்தி கூறியிருந்தார். ஆனால் ஜூலை 7-ஆம் தேதி காலை ஜோதி அங்கு சென்ற போது, சேவந்தியின் வீடு பூட்டியிருந்தது. அவர் வீட்டிலிருந்த அவரது கணவர் சந்திரன், அவரது 3 வயது குழந்தை, அவரது மாமியார் நான்கு பேரும் காணவில்லை. அந்த கிராமத்தில் எங்கு தேடியும் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. படக்குறிப்பு,சோளகர் தொட்டி கிராமத்தில் மாவட்ட சுகாதாரத்துறையினர், கர்ப்பிணி பெண்களை கண்காணிக்கும் வழக்கமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். பத்து நாட்களுக்கும் மேலாக தேடப்பட்டு வரும் கர்ப்பிணி தமிழ்நாடு பிரசவங்கள் மருத்துவமனைகளில் நடைபெறுவதை தீவிரமாக ஊக்குவிக்கும் மாநிலமாகும். தேசிய குடும்ப நல ஆய்வு (2020-2021) தரவுகள் படி 99.6% பிரசவங்கள் மருத்துவ நிலையங்களில் நிகழ்கின்றன. Pregnancy and Infant Cohort Monitoring and Evaluation (PICME) திட்டத்தின்படி, ஒவ்வொரு கர்ப்பிணி பெண்ணின் பிரசவமும் கண்காணிக்கப்படுகிறது, குறிப்பாக கிராமங்களில் இந்த கண்காணிப்பு தீவிரமாக உள்ளது. செவிலியர் ஜோதி மட்டுமல்லாமல், பிளாக் மருத்துவ அலுவலர், விவசாய சங்கத் தலைவர் என பலர் முயற்சி எடுத்தும் சேவந்தி எங்கு இருக்கிறார் என்று கண்டறியமுடியவில்லை. அவரின் செல்போன் எண் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட சுகாதாரத்துறை, சேவந்தியை கண்டுபிடித்து தரக் கோரி மாவட்ட காவல்துறையின் உதவியை நாடியுள்ளது. காவல்துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. ஜூலை 16-ஆம் தேதி மாலை வரை சேவந்திக்கு பிரசவம் நடைபெற்றதா இல்லையா, அவர் எங்கு உள்ளார் என்ற தகவல் மாவட்ட நிர்வாகத்தினருக்கு கிடைக்கவில்லை. ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா பிபிசி தமிழிடம் பேசிய போது, "ஜூலை 14ம் தேதி கர்ப்பிணியை காணவில்லை என்று சுகாதாரத்துறை புகார் அளித்தனர். முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரது செல்போன் எண் அணைக்கப்பட்டுள்ளது. கிராமத்தில் உள்ள அவரது குடும்பத்தினரும் ஒத்துழைக்கவில்லை" என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ஈரோடு மாவட்டம் தாளவாடி தாலுகாவில் அமைந்துள்ளது சோளகர் தொட்டி கிராமம். சோளகர் பழங்குடியினத்தை சேர்ந்த மக்களே அந்த கிராமத்தில் வசித்து வருகின்றனர். பொதுவாக பிரசவங்களை வீட்டிலேயே பார்த்துக் கொள்ளும் வழக்கம் கொண்டவர்கள். "அவர் முதல் பிரசவத்திலேயே மருத்துவமனைக்கு வருவதற்கு தயக்கம் காட்டினார். பிறகு அவரிடம் பேசி அவரை கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வரவழைத்தோம். அவருக்கு சுகபிரசவம் ஆனது. எனவே இந்த முறை அவரை ஆரம்பத்திலிருந்தே தொடர்ந்து கண்காணித்து வந்தோம். மகப்பேறு பரிசோதனைகளுக்கு அவர் தவறவிடாமல் வந்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரை காண இயலவில்லை. இவரை போன்ற பலர் பிரசவ நேரத்தில் மருத்துவமனைக்கு வர வேண்டிய அவசியத்தை புரிந்து கொள்வதில்லை. பல மணி நேரங்கள் உட்கார்ந்து பேசி பல பெண்களை பாதுகாப்பாக மருத்துவமனைக்கு கூட்டி வந்துள்ளோம். ஆனால் அவரை காணவேயில்லை என்பதுதான் இதில் எங்களுக்கு சவால்" என்கிறார் இதில் சம்பந்தப்பட்ட அரசு மருத்துவர் ஒருவர். சேவந்தியை தேடும் பணியில் பல தரப்பினர் உதவியையும் சுகாதாரத்துறை நாடியுள்ளது. முதல் பிரசவத்தின் போதும் சுகாதாரத்துறையினரின் மிகுந்த வற்புறுத்தல், காவல்துறையினர் தலையீட்டுக்கு பிறகே சேவந்தி மருத்துவமனைக்கு வந்துள்ளார். தாளாவடி விவசாய சங்கத் தலைவர் கண்ணையன், "முதல் பிரசவத்தின் போது சேவந்திக்கு ரத்த சோகை இருந்தது. வேறு சில உடல் நல பிரச்னைகளும் இருந்தது. எனவே மருத்துவ நிபுணர்களை நேரில் சென்று ஆலோசனைப் பெற வேண்டும் என்று சுகாதார ஊழியர் கூறியிருந்தார். அவரை அழைத்துச் செல்ல வாகனம் வந்திருந்தது, ஆனால் அவர் அதில் ஏற மறுத்துவிட்டார். உதவிக்காக நான் கொடுத்த காசையும் வாங்க அவரது மாமியார் மறுத்துவிட்டார். பிறகு இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் அவரிடம் பேசி, மருத்துவரே காரை எடுத்துக் கொண்டு வந்த அவரை பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். நானும் உடன் சென்றிருந்தேன். அப்போது அவரது மாமியார், 'இவர்களுக்கு என்ன தெரியும்? நான் எத்தனை பிரசவங்கள் பார்த்திருக்கிறேன்' என்றார்" என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பழங்குடியினரின் உணவு பழக்கங்களில் நுண் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும் என்கிறார் சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர். (கோப்புப்படம்) சோளகர் தொட்டி அருகில் இருக்கும் மருத்துவ நிலையம் 4 கி.மீ தொலைவில் இருக்கும் பைனாபுரம் ஆரம்ப சுகாதார நிலையம். அடுத்து கிராமத்திலிருந்து 20 நிமிடத்தில் செல்லக் கூடிய தாளவாடி மேம்படுத்தப்பட்ட 24 மணி நேர ஆரம்ப சுகாதார நிலையம். அங்கு பிரசவம் பார்ப்பதற்கான வசதி உண்டு என்றாலும், அவருக்கு ரத்த சோகை இருந்ததால் கோவை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். "பிரசவத்தின் போது கடைசி நேர சிக்கல்கள் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர் பெரிய மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு எந்த பிரச்னையும் இல்லாமல் சுகப்பிரசவம் நடந்தது. ஆனால் அதையே காரணம் காட்டி அவரது மாமியார், எந்த பிரச்னையும் இல்லாத போதே பல கிலோ மீட்டர் தள்ளியுள்ள மருத்துவமனைக்கு தேவையில்லாமல் எங்களை அழைத்துச் சென்றீர்கள், எங்களுக்கு ரூ.7ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை செலவாகிவிட்டது என்று கூறுகிறார்" என்கிறார் கண்ணையன். "அவருக்கு முதல் பிரசவத்திலேயே ரத்த சோகை இருந்தது. இந்த முறையும் அவருக்கு ஹீமோகுளோபின் அளவு 8 மட்டுமே இருந்தது. இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்ததால், தேவையான இரும்புச் சத்து கொடுத்து அவரது ஹீமோகுளோபின் அளவு 11.2 ஆக உயர்ந்திருந்தது." என்கிறார் சேவந்தியை கண்காணித்து வந்த கிராம சுகாதார ஊழியர் ஒருவர். சேவந்திக்கு அரசு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் இரண்டு ஊட்டச்சத்து பெட்டகங்கள் கிடைத்துள்ளன. மேலும் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ரூ.14 ஆயிரத்தின் முதல் தவணை கிடைத்துள்ளது என்கிறார் கிராம சுகாதார ஊழியர். ஏன் பழங்குடியினர் மருத்துவமனை வர தயங்குகின்றனர்? சோளகர் தொட்டி கிராமம் வீரப்பன் தேடுதல் வேட்டை தீவிரமாக நடத்தப்பட்ட கிராமம். "அவரது மாமியார் காவல்துறை துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் தான் அரசின் இழப்பீட்டை பெற்றிருக்கிறார். இந்தப் பகுதியில் அவரைப் போன்று மேலும் சிலர் உள்ளனர். எனவே இப்பகுதியினருக்கு அரசு மீதான நம்பிக்கையும் குறைவாகவே உள்ளது. தாளாவடியில் தாலுகா மருத்துவமனை வேண்டும் என்பது இப்பகுதியினரின் நீண்ட நாள் கோரிக்கை," என்று கூறும் கண்ணையன் சோளகர் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த பிள்ளைகள் சிலர் கல்வி பயில உதவி வருகிறார். இதய நோய்கள் உள்ள கர்ப்பிணிகள் செய்யக் கூடாதவை என்னென்ன? மதுரை: அரசு செவிலியரின் மூன்றாவது கர்ப்பத்திற்கு மகப்பேறு விடுப்பு மறுப்பு - நீதிமன்றம் எடுத்த நடவடிக்கை என்ன? மாதவிடாய், மகப்பேறு காலங்களில் பெண்களை தனிமைப்படுத்தும் ஆந்திர கிராமம் கொல்லிமலை பழங்குடிகளின் உணவுமுறையையே மாற்றிய காலநிலை மாற்றம் - ஆய்வில் தெரிய வந்த உண்மை பழங்குடியின பெண்களின் எதிர்பார்ப்பை சரியாக புரிந்துக் கொள்ள வேண்டும் என்கிறார் பெயர் குறிப்பிட விரும்பாத சுகாதாரத்துறை உயர் அதிகாரி ஒருவர். "பழங்குடி பெண்களிடம் பிரசவ தேதி வந்துவிட்டது, மருத்துவமனைக்கு வாருங்கள் என்று கூறுவதை அவர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வலி வந்தால்தான் பிரசவத்துக்கு உடல் தயாராகிறது என்பது அவர்களின் புரிதலாக இருக்கும். ஏனென்றால் அவர்கள் குடும்பங்களில் அந்த வழக்கத்தையே அவர்கள் பார்த்திருப்பார்கள்." என்கிறார். பழங்குடியின பெண்கள் மத்தியில் ரத்த சோகை பரவலாக காணப்படுவதாகவும் அவர் கூறுகிறார். "பழங்குடியினரின் உணவு பழக்கங்களில் நுண் ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருக்கும். அவர்கள் வசிக்கும் பகுதியை பொறுத்து அதிக புரதம், அதிக கொழுப்பு இருக்கலாம். செருப்பு இல்லாமல் நடக்கும் பழக்கம் இருந்தால் கொக்கிப்புழு தொற்று ஏற்படலாம். அதுவும் ரத்த சோகைக்கு காரணமாகலாம்" என்றார். மேலும் அவர், "கர்ப்பிணி பெண்ணுக்கு அனைத்தும் இலவசம் என்றாலும், அவருடன் இருப்பவருக்கான தங்கும் செலவு, உணவு செலவு, போக்குவரத்து செலவு ஆகியவை அதிகரிக்கிறது. இந்த பெண்ணின் மாமியார் கூறியது போல, கையிலிருந்து செய்ய வேண்டிய செலவு அதிகரிக்கிறது. தேவைப்படும் இடங்களில், நோயாளியுடன் வருபவருக்கும் தனியார் மருத்துவமனைகளில் இருப்பது போல தனி படுக்கை, உணவு ஆகியவற்றை வழங்க ஆலோசிக்க வேண்டும்," என்று கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce37ewp130do
  2. 17 JUL, 2025 | 08:43 AM நல்லூர் பெருந்திருவிழாவை முன்னிட்டு காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே கப்பல் போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு விசேட சலுகைகளை வழங்கவுள்ளதாக சிவகங்கை கப்பல் நிறுவனத்தின் உரிமையாளர் சுந்தர்ராஜன் தெரிவித்ததாக அந்த நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது காங்கேசன்துறை - நாகபட்டினம் இடையே கப்பல் வழியாக போக்குவரத்தில் ஈடுபடும் பயணிகளுக்கு இருவழி கட்டணமாக 28 ஆயிரத்து முந்நூறு ரூபாவும், காங்கேசன்துறையில் இருந்து நாகபட்டினம் செல்வதற்கு ஒருவழி கட்டணமாக 12 ஆயிரத்து முந்நூறு ரூபாவும், நாகபட்டினத்தில் இருந்து காங்கேசன்துறை வருவதற்கு ஒருவழி கட்டணமாக 16 ஆயிரம் ரூபாவும் அறவிடப்படுகிறது. இதேவேளை நல்லூர் பெருந்திருவிழாவினை முன்னிட்டு எமது பயணிகளுக்காக விசேட சலுகைகளை வழங்கவுள்ளோம். அந்த சலுகைகள் தொடர்பாக விரைவில் அறிவிப்போம். எமது கப்பல் சேவையானது வழமை போல செவ்வாய் கிழமை தவிர்ந்த ஆறு நாட்களும் சிறப்பான சேவையில் ஈடுபட்டு வருகின்றது. கப்பல் சேவையில் ஏதாவது மாற்றங்கள் நிகழுமிடத்து அவை குறித்து நாங்கள் முற்கூட்டிய அறிவிப்பு வழங்குவோம் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/220182
  3. Published By: VISHNU 16 JUL, 2025 | 08:13 PM (நா.தனுஜா) நாம் ஒரு சிறுமிக்காக துன்பப்படவில்லை என்றால், எம்மால் ஒரு சிறுமிக்காக நீதி கோரமுடியவில்லை என்றால், நாம் உண்மையில் எந்த நிலையில் இருக்கிறோம்? கடந்தகாலம் எம்மைத் துரத்துவதாக இதனைக் கருதமுடியாது. மாறாக நிகழ்காலத்தில் உண்மையை வெளிப்படுத்துமாறு கோரப்படுவதாகவே இதனைக் கருதவேண்டும் என சட்டத்தரணி பெனிஸ்லஸ் துஷான் சுட்டிக்காட்டியுள்ளார். செம்மணி மனிதப்புதைகுழியில் நீலநிறப்புத்தகப்பை மற்றும் சிறுவர்களின் விளையாட்டு பொம்மை என்பவற்றுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 - 5 வயதுடைய சிறுமியினுடையதாக இருக்கலாம் என சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் செவ்வாய்க்கிழமை (15) யாழ் நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளார். செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்து பொதுமக்கள் மத்தியில் தொடர்ந்து வெளிச்சம் பாய்ச்சிவரும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரும், சட்டத்தரணியுமான பெனிஸ்லஸ் துஷான் இதுகுறித்து அவரது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் செய்திருக்கும் பதிவில் மேலும் கூறியிருப்பதாவது: செம்மணி மனிதப்புதைகுழியில் நீலநிறப்புத்தகப்பை மற்றும் விளையாட்டு பொம்மை என்பவற்றுடன் கண்டறியப்பட்ட என்புத்தொகுதி 4 - 5 வயதுக்கு உட்பட்ட ஒரு சிறுமிக்குச் சொந்தமானது என சட்ட வைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் செவ்வாய்க்கிழமை யாழ் நீதிவான் நீதிமன்றுக்கு அறிவித்திருக்கிறார். நான்கு அல்லது ஐந்து வயதைத் தாண்டாத சிறுமியொருவர் படுகொலை செய்யப்பட்டு, மனிதப்புதைகுழியில் புதைக்கப்பட்டு, அச்சிறுமியைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருப்பவர்கள் அதுபற்றி மறந்துபோயிருக்கும் நாட்டிலேயே நாம் வாழ்கிறோம். இப்போது, தசாப்தங்கள் கடந்து, அந்த நிலம் தனது அமைதியை முடிவுக்குக்கொண்டுவந்திருக்கிறது. உண்மையை நீண்டகாலத்துக்குப் புதைத்து வைத்திருக்கமுடியாது. அவ்வாறிருந்தும் நாம் அதற்கான நீதியையும், கௌரவத்தையும், பொறுப்புக்கூறலையும் கோருகையில் பிறிதொரு எதிர்க்குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவதனைப் பார்க்கிறோம். துரோகிகள் என்றும், அமைதியை குழப்புபவர்கள் என்றும், நாட்டின் பொருளாதாரம் நெருக்கடிக்கு முகங்கொடுத்திருக்கும் வேளையில் ஸ்திரமற்றதன்மையைத் தோற்றுவிப்பவர்கள் என்றும் அக்குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன. இருப்பினும் போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒரு நபருக்கு 6.9 மில்லியன் மக்கள் வாக்களித்ததன் விளைவாகவே தற்போது சுட்டிக்காட்டும் இந்த பொருளாதார நெருக்கடி உருவானது என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். அங்கு வாக்குகள் அச்சத்தின் நிமித்தம் அளிக்கப்பட்டவையே தவிர, தூரநோக்கு சிந்தனையின் அடிப்படையில் அளிக்கப்பட்டவை அல்ல. அந்நபருக்கு வாக்களிப்பதென மேற்கொள்ளப்பட்ட தெரிவு எமது பொருளாதாரத்தை வங்குரோத்துநிலைக்கு இட்டுச்சென்றதுடன் மாத்திரமன்றி, நாட்டின் நேர்மை மற்றும் மனசாட்சி என்பவற்றையும் சீர்குலைத்தது. நாம் ஒரு சிறுமிக்காக துன்பப்படவில்லை என்றால், எம்மால் ஒரு சிறுமிக்காக நீதி கோரமுடியவில்லை என்றால், நாம் உண்மையில் எந்த நிலையில் இருக்கிறோம்? கடந்தகாலம் எம்மைத் துரத்துவதாக இதனைக் கருதமுடியாது. மாறாக நிகழ்காலத்தில் உண்மையை வெளிப்படுத்துமாறு கோரப்படுவதாகவே இதனைக் கருதவேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/220169
  4. 16 JUL, 2025 | 04:40 PM கனடா நாட்டுக்கு செல்வதற்காக முகவர் ஒருவரிடம் பெரும் தொகை பணத்தினை கொடுத்து ஏமார்ந்த குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார். யாழ்ப்பாணம், புங்குடுதீவு பகுதியை சேர்ந்த 34 வயதுடையவரே உயிரிழந்துள்ளார். கனடா செல்வதற்காக கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்னர் முகவர் ஒருவரிடம் 80 இலட்சம் ரூபாய் பணத்தினை வழங்கியுள்ளார். இரண்டு வருட காலமாக கனடா அனுப்பாது முகவர் தொடர்ந்து ஏமாற்றி வந்தமையால், பணத்தை மீள தருமாறு முகவருடன் தர்க்கப்பட்டு வந்துள்ளார். அதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையும் தனது பணத்தை மீள தருமாறு முகவருடன் தர்க்கம் புரிந்த நிலையிலும் பணத்தை முகவர் கொடுக்க மறுத்தமையால், விரக்தியில் தனது உயிரை மாய்க்க முயன்றுள்ளார். அதனை அவதானித்த வீட்டார், அவரை மீட்டு புங்குடுதீவு வைத்திய சாலையில் அனுமதித்த நிலையில், மேலதிக சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். https://www.virakesari.lk/article/220151
  5. 16 JUL, 2025 | 04:36 PM போரால் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கை மீளக் கட்டியெழுப்புவதற்கு கனடாவும் தம்மால் முடிந்த ஒத்துழைப்பை வழங்கும் என அந்நாட்டுத் தூதுவர் தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் உறுதியளித்துள்ளார். இலங்கைக்கான கனடா தூதுவருக்கும், தேசிய மக்கள் சக்தியின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெ.ரஜீவன், ஸ்ரீபவானந்தராஜா மற்றும் க.இளங்குமரன் ஆகியோருக்கும் இடையிலான சந்திப்பு இன்றைய தினம் புதன்கிழமை (16) யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. இதன்போது யாழ். மாவட்டத்தின் தற்போதைய நிலைவரம், காணி பிரச்சினை, வடக்கை இலக்காகக் கொண்டு அமையவுள்ள முதலீட்டு வலயங்கள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டன. தமிழ் மக்கள் எதிர்நோக்கும் அரசியல், பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு தேசிய மக்கள் சக்தியால் நிச்சயம் தீர்வுகள் முன்வைக்கப்படும் என்ற நம்பிக்கை தமக்கு இருப்பதாகவும், தமிழ் மக்களும் முழு அளவில் அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்துள்ளனர் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தூதுவரிடம் சுட்டிக்காட்டியுள்ளனர். அத்துடன், வடக்கு, கிழக்கை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டங்களுக்கு கனடாவும் உதவி நல்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். இதற்கு கனடா தம்மால் முடிந்த ஒத்துழைப்புகளை வழங்கும் என தூதுவர் பதிலளித்துள்ளார். கடந்த அரசாங்கத்தை போல இல்லாமல் இந்த அரசாங்க ஆட்சியாளர்கள் மிகவும் வித்தியாசமானவர்கள், மக்களுக்கு சேவை செய்யக்கூடியவர்களே தற்போது இருக்கின்றார்கள் எனவும், தற்போதைய ஜனாதிபதியும் சர்வ அதிகாரம் கொண்டவராக இல்லாமல் மக்களின் தலைவனாக செயற்படுகிறார் எனவும் தூதுவர் தெரிவித்துள்ளார். அதேபோல கனடாவில் புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் முதலீடுகள் செய்வதற்கான சூழல் பற்றியும் பேசப்பட்டுள்ளது. வடக்கில் பெண் தலைமைத்துவ குடும்பங்களை இலக்கு வைத்து கனடாவால் முன்னெடுக்கப்படவுள்ள திட்டம் வெற்றியளிக்க அரசாங்கத்தின் ஒத்துழைப்பு வழங்கப்படும் என தேசிய மக்கள் சக்தியின் எம்.பிக்கள், தூதுவரிடம் எடுத்துரைத்தனர். இலங்கைக்கான கனடா தூதுவர் தமது சேவைக்காலம் முடிவடைந்து இம்மாதத்துடன் தாயகம் திருப்பவுள்ளார். அவர் ஆற்றிய சேவைகளுக்கு தேசிய மக்கள் சக்தி எம்.பிக்கள் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/220150
  6. கூமாங்குளம் வன்முறைதொடர்பில் இருவர் கைது 16 JUL, 2025 | 04:34 PM வவுனியா கூமாங்குளம் பகுதியில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவம் தொடர்பில் இருவர் வவுனியா பொலிஸாரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். வவுனியா, கூமாங்குளம் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை (11) மோட்டர் சைக்கிளில் சென்ற நபர் ஒருவர் வீதியில் விழுந்து மரணமடைந்திருந்தார். குறித்த மரணத்திற்கு அந்தபகுதியில் பயணித்த போக்குவரத்து பொலிஸாரே காரணம் எனத் தெரிவித்த ஒரு குழுவினர் குழப்பத்தில் ஈடுபட்டதுடன், பொலிஸார் மீதும் தாக்குதல் மேற்கொண்டனர். இந்நிலையில், மரணித்தவர் மாரடைப்பு காரணமாக மரணித்ததாக சட்ட வைத்திய அதிகாரியின் அறிக்கை வெளியாகியுள்ளது. இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த வவுனியா குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் வாக்குமூலம் பெறுவதற்காக இருவரை அழைத்திருந்தனர். அவர்களிடம் வாக்குமூலம் பெற்ற பொலிசார் பல்வேறு குற்றச்சாட்டுக்களின் கீழ் அவர்களை கைது செய்து வவுனியா நீதிமன்றில் முற்படுத்தினர். அவர்கள் இருவரையும் எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் மேலும் சில நபர்களை கைதுசெய்யுமாறு பொலிசாருக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை (15) விளக்கமறியலில் வைக்கப்பட்டவர்களுள் ஒருவர் தமிழ் மக்கள் கூட்டணியின் வவுனியா தெற்கு தமிழ்ப் பிரதேச சபை உறுப்பினர் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220149
  7. Published By: DIGITAL DESK 3 16 JUL, 2025 | 04:33 PM சூரிய சக்தியைப் பயன்படுத்தும் எதிர்காலத்திற்காக பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன் செயல்படும் என பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் 7 ஆவது மாநாட்டில் தெரிவித்துள்ளார். சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது மாநாடு கொழும்பு ஐசிடி ரத்னதீப ஹோட்டலில் இன்று புதன்கிழமை (16) பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தலைமையில் ஆரம்பமானது. "பன்முகத்தன்மையும் வாய்ப்புகளும் நிறைந்த பிராந்தியத்தின் ஊடாக சூரிய சக்தி ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லுதல்" எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டின் இணைத் தலைமைத்துவத்தை இலங்கை வகித்தது. இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், பிராந்திய சூரிய சக்தி ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கும், நிலையான அபிவிருத்தியின் மூலம் சக்தி பாதுகாப்பை அடைவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதை வலியுறுத்தினார். இலங்கைக்கும் சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் பிராந்தியக் குழுவிற்கும் இடையிலான உள்ளூர் பங்களிப்பைக் குறிக்கும் வகையில், உத்தியோகபூர்வ வரைபடத் திட்டம் கையெழுத்திடப்பட்டு வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இந்நிகழ்வில் உரையாற்றிய வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, சூரிய சக்தி பயன்பாட்டை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் "சூரிய சக்திக்கான போராட்டம்" எனும் திட்டம் மற்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் 70% புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இலக்கை அடையும் நோக்கத்துடன் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார். இந்த மாநாடு புதிய பிராந்தியப் பங்காளிகளை உருவாக்குவதற்கான வாய்ப்பாக அமைந்ததுடன், மொரட்டுவ பல்கலைக்கழகமானது, சூரிய வலுசக்தி புத்தாக்கத்திற்கான பிரதான அறிவுசார் ஆராய்ச்சி மையமாக அடையாளம் காணப்பட்டது. சூரிய சக்தி தொழில்நுட்பத்தின் மூலம் பிராந்திய அபிவிருத்தி மற்றும் பல்வகை சமூக-பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் உள்ளிட்ட விசேட சூரிய சக்தி தாக்க புத்தாக்கக் கண்காட்சியின் ஆரம்ப விழாவிலும் பிரதமர் கலந்துகொண்டார். இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஆஷிஷ் கன்னா உள்ளிட்ட ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பிரதிநிதிகள் மற்றும் 124 நாடுகளின் உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/220146
  8. பட மூலாதாரம்,RAMESHWARAN படக்குறிப்பு, பூனைக்கண் பாம்பு கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 28 நிமிடங்களுக்கு முன்னர் கொம்பேறி மூக்கன் என்றதும் பலருக்கும் நினைவுக்கு வருவது, அதுகுறித்த மூடநம்பிக்கை நிறைந்த தவறான தகவல்களே. நஞ்சற்ற, மரத்தில் வாழக்கூடிய இந்தப் பாம்பு இனம், "மிகவும் ஆபத்தான நஞ்சுள்ள பாம்பு" என்ற தவறான புரிதல் பலருக்கும் உள்ளது. இப்படியாக நஞ்சற்ற பல பாம்புகள் குறித்து மக்களிடையே இருக்கும் தவறான புரிதலைப் போக்க உதவுகிறது "தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் பாம்புகள்" என்ற புதிய கையேடு. பாம்புகள், இயற்கைச் சமநிலையின் முக்கியமான ஓர் அங்கம். இருந்தாலும், அவற்றைப் பார்த்தால் மட்டுமல்ல, காதில் கேட்டாலே மனித மனதில் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. இதன் விளைவாக பாம்புகள் பாதுகாப்பு பற்றிய அறிவியல் பல உயரங்களைத் தொட்டாலும், பொது மக்கள் மத்தியில் அது குறித்த அச்சமும், தவறான புரிதல்களும், மூட நம்பிக்கைகளும் இன்னமும் நீடிக்கவே செய்கின்றன. மக்கள் பாம்புக்கடியில் இருந்து தங்களைத் தற்காத்துக் கொள்ளவும், சுற்றுச்சூழலில் பாம்புகளின் பங்கை உணர்த்தவும் அடிப்படைத் தேவை, பொது மக்கள் மத்தியில் பாம்புகள் குறித்த புரிதலை ஏற்படுத்துவதே என்று காட்டுயிர் ஆய்வாளர்களும் ஆர்வலர்களும் பல ஆண்டுகளாகக் கூறி வருகின்றனர். பாம்பு கடித்த ஒருவரை காப்பாற்ற உடனே செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும்30 மே 2025 பாம்புகளை பார்த்தவுடன் அடித்துக் கொன்றவர், இன்று பாம்புகளின் பாதுகாவலர்19 மே 2023 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாகப் பாம்பு உள்பட தமிழகத்தில் காணப்படும் 9 வகை நச்சுப் பாம்புகள் பற்றிய தகவல்களை இந்தக் கையேடு வழங்குகிறது. அதோடு, பாம்பு கடித்த பிறகு ஒருவர் செய்ய வேண்டியவை குறித்து நிலவும் பல தவறான புரிதல்களே, பாம்புக் கடியால் உயிரிழப்புகள் அதிகம் நிகழக் காரணமாக இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த நிலையில், ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன் மாரியப்பன் மற்றும் பாம்பின் நஞ்சு குறித்து ஆய்வு செய்து வரும் பாம்புக்கடி விஞ்ஞானி முனைவர் மனோஜ் இணைந்து உருவாக்கியுள்ள பாம்புகள் தொடர்பான கையேடு, இத்தகைய தவறான புரிதல்களைத் தெளிவுபடுத்துவதோடு, தமிழ்நாட்டில் மக்கள் மத்தியில் அதிகம் காணப்படும் நஞ்சுள்ள, நஞ்சில்லாத பாம்புகள் பற்றிய அறிவையும் எளிய வகையில் வழங்குகின்றன. பாம்பு கடிப்பதால் உடலில் என்ன நடக்கும்? ஒருவரை நச்சுப் பாம்பு கடித்துவிட்டாலும், உடனடியாக மரணம் ஏற்படாது என்று கூறும் இந்தக் கையேடு, "நம்பகத்தன்மையற்ற மருத்துவ முறை, மூட நம்பிக்கைகள், காலம் தாழ்த்துதல் ஆகியவையே பாதிப்பைத் தீவிரப்படுத்துவதாக" கூறுகிறது. அதோடு, பாம்பின் நஞ்சு துரிதமாகச் செயல்படுவதால், உடலில் பல்வேறு உபாதைகள் ஏற்படுவதாகவும் அதுகுறித்த விழிப்புணர்வுடன் உரிய நேரத்தில் செயல்பட்டால், உயிரைக் காப்பாற்ற முடியும் எனவும் "தமிழகத்தில் பரவலாக காணப்படும் பாம்புகள்" என்ற புதிய கையேடு வலியுறுத்துகிறது. பாம்பும் கீரியும் இயற்கையாகவே பகையாளிகளாக இருக்க என்ன காரணம்? பாம்பு விஷம் கீரியை ஒன்றும் செய்யாதா?20 பிப்ரவரி 2025 'தமிழிகம்' என்று பெயர் சூட்டப்பட்ட புதிய விலாங்கு மீனின் தனிச்சிறப்புகள் என்ன?22 மார்ச் 2025 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கட்டு வரியன் இப்படியாக, தமிழ்நாட்டில் அதிகம் காணப்படும் 30 வகையான பாம்புகள் குறித்து விரிவான புகைப்படங்களுடன், அவற்றின் உடலமைப்பு, வடிவம், நஞ்சின் தன்மை மற்றும் வீரியம், காணப்படும் நிலப்பகுதிகள், உலவக்கூடிய நேரம் என அனைத்துத் தகவல்களும் தெளிவாக விவரிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, மக்களிடையே அதிகம் தென்படக்கூடிய 9 வகையான நச்சுப் பாம்புகள் பற்றிய ஆழமான அறிவியல்பூர்வ தகவல்களும் புகைப்படங்களும் இந்தக் கையேட்டில் வழங்கப்பட்டுள்ளது. "பாம்புகள் குறித்த அடிப்படைப் புரிதலோ, முதலுதவி குறித்த தெளிவோ இல்லாததுதான் பெரும்பாலான பாம்புக் கடி மரணங்களுக்குக் காரணமாக உள்ளன. இந்தக் கையேடு மக்களிடையே அந்தத் தெளிவை ஏற்படுத்தும். அதன்மூலம், பாம்புக் கடியைத் தவிர்ப்பது முதல் கடித்துவிட்டால் உயிரைக் காப்பாற்றிக் கொள்வது வரை தங்கள் பாதுகாப்புக்குத் தேவையான ஆழமான புரிதல் ஏற்படும்," என்று விவரித்தார் புத்தகத்தின் ஆசிரியர்களில் ஒருவரான முனைவர் மனோஜ். யுனிவர்சல் பாம்புக்கடி கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான இவர், "ஒவ்வொரு பாம்பின் நஞ்சும் எத்தகையது, அதனால் உடலில் எவ்வித பாதிப்புகள் ஏற்படும் என விரிவான தகவல்கள் இந்த நூலில் உள்ளதாக" தெரிவித்தார். படக்குறிப்பு, ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன் மாரியப்பன், முனைவர் மனோஜ் இணைந்து உருவாக்கிய இந்தக் கையேட்டை தமிழக வனத்துறை வெளியிட்டுள்ளது. பாம்பு கடித்தவுடன் முதல் நிமிடத்தில் என்ன செய்ய வேண்டும்? பாம்புகளை அடையாளம் காண்பது முதல் அவை கடித்தவுடன் உடலில் என்ன நடக்கும், எப்படிச் செயலாற்றுவது என்பதை மக்கள் தெரிந்து கொள்வதே பாம்புக்கடியால் நிகழ்வும் இறப்புகளைத் தடுக்கப் பெரியளவில் உதவும் என்கிறார் முனைவர் மனோஜ். மேலும், அந்த அறிவை பள்ளிக் குழந்தை முதல் மருத்துவர்கள் வரை அனைவரும் எளிதில் பெறுவதற்கு இந்தப் புத்தகம் உதவும் என்றும் அவர் குறிப்பிட்டார். இந்தக் கையேட்டில், பாம்பு கடித்துவிட்டால் அதன் முதல் நிமிடத்தில் இருந்து உயிரைக் காப்பாற்றுவது வரை என்ன கடைபிடிக்க வேண்டியவை, தவிர்க்க வேண்டியவை போன்ற தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. உதாரணத்திற்கு, ஒருவரை பாம்பு கடித்துவிட்டால், அது நஞ்சுள்ளது, நஞ்சற்றது என எதுவாக இருந்தாலும் முதல் நிமிடத்தில், "உடனடியாக அருகில் இருப்பவரை உதவிக்கு அழைக்க வேண்டும். அல்லது அவசர உதவி எண்ணை உடனடியாகத் தொடர்புகொள்ள வேண்டும். கடிபட்ட நபர் இருக்கக்கூடிய சூழ்நிலைக்கு ஏற்ப, சாத்தியக்கூறுகளை உணர்ந்து, உடனடியாக எப்படியாவது மருத்துவமனையை அடைவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும்," என்று கையேடு வலியுறுத்துகிறது. இப்படியாக, மக்கள் பாம்புகளைப் புரிந்துகொள்ளவும், பாம்புக் கடியில் இருந்து தற்காத்துக் கொள்ளவும் தேவையான தகவல்கள் வழங்கப்பட்டுள்ளன. எறும்புகள் தங்களுக்குள் போரிட்டுக் கொள்வது ஏன்? - நேரடி கள ஆய்வில் கிடைத்த சுவாரஸ்ய தகவல்கள்29 ஆகஸ்ட் 2024 ஆட்டுக்கால் சூப் குடிப்பதால் என்ன நன்மை? அதை யாரெல்லாம் சாப்பிடக் கூடாது?22 ஜூன் 2025 மக்களிடையே அதிகம் தென்படக்கூடிய நச்சுப் பாம்புகள் பட மூலாதாரம்,SUBAGUNAM KANNAN படக்குறிப்பு, சுருட்டை விரியன் தமிழ்நாட்டில் 130 பாம்புகள் 11 அறிவியல் குடும்பங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதில் 8 அறிவியல் குடும்பங்களைச் சேர்ந்த, தமிழ்நாட்டில் மக்களிடையே அதிகம் காணப்படும் பாம்பு இனங்கள் பற்றிய விரிவான தகவல்கள் இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. இந்தக் கையேடு, தமிழகத்தில் அதிகமாக மக்கள் மத்தியில் தென்படும் பாம்புகள் என ஒன்பது நச்சுப் பாம்புகளைக் குறிப்பிட்டுள்ளது. அவற்றில் மிகவும் அதிகமாகத் தென்படும், அதிக பாம்புக்கடி விபத்துகளுக்குக் காரணமாக இருக்கும் நான்கு வகைப் பாம்புகளும் அடக்கம். அவை, நாகப் பாம்பு கட்டு வரியன் சுருட்டை விரியன் கண்ணாடி விரியன் இவைபோக, மேலும் ஐந்து நச்சுப் பாம்புகள் குறித்து புத்தகத்தில் விரிவாக விவரிக்கப்பட்டுள்ளன. அவை, ராஜநாகம் அல்லது பெருநாகம் (King Cobra) குறுந்தலைக் கடற்பாம்பு (Branded Sea Snake) நாணற்குச்சி பவளப் பாம்பு (Slender Coral Snake) கூர்மூக்கு குழிவிரியன் பாம்பு (Hump-nosed pit viper) மூங்கில் குழிவிரியன் பாம்பு (Bamboo pit viper) தினசரி எத்தனை கிராம் உப்பு எடுக்கலாம்? இந்தியர்கள் அதிக உப்பு உட்கொள்வதால் என்ன பிரச்னை?6 மணி நேரங்களுக்கு முன்னர் எண்ணெய் மற்றும் சர்க்கரை உணவுகள் குறித்து எச்சரிக்கும் மத்திய அரசு - என்ன ஆபத்து?15 ஜூலை 2025 பாம்புகளை தெரிந்துகொள்வதால் மக்களுக்கு என்ன பயன்? படக்குறிப்பு, 'தமிழகத்தில் பரவலாக காணப்படும் பாம்புகள்' கையேட்டை 200 பள்ளிகளுக்கு முதல்கட்டமாக கொண்டு செல்லத் திட்டமிட்டு இருப்பதாகத் தெரிவித்தார் சுப்ரியா சாஹு தங்கள் அன்றாட வாழ்வில் பாம்புகளை அதிகம் எதிர்கொள்ளக்கூடிய மக்களிடையே, அவை குறித்த புரிதல் முழுமையாக இல்லை என்பதைத் தனது 24 ஆண்டுகால கள ஆய்வுகளின்போது உணர்ந்ததாகவும், அதுவே இப்படியொரு கையேட்டை தமிழில் கொண்டு வர வேண்டிய தேவை இருப்பதைத் தனக்கு உணர்த்தியதாகவும் கூறுகிறார், "தமிழகத்தில் பரவலாகக் காணப்படும் பாம்புகள்" என்ற நூல் உருப்பெறுவதில் முக்கியப் பங்காற்றிய சுயாதீன ஊர்வனவியலாளர் ரமேஸ்வரன் மாரியப்பன். பாம்புக் கடியால் மக்கள் பாதிக்கப்படுவது, மக்களால் பாம்புகள் கொல்லப்படுவது என இரண்டுமே நிகழ்வதற்குச் சில பொதுவான காரணங்கள் இருப்பதாகக் கூறுகிறார் ரமேஸ்வரன். அதில் முதன்மையான காரணம் பாம்பின் நஞ்சு. "பாம்பின் நஞ்சு தங்களுக்கு ஆபத்தானது என்று கருதுவதால் மக்கள் அவற்றைக் கண்டதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகின்றனர்." ஆனால், அதேவேளையில், எந்தெந்த பாம்புகள் மனிதர்களுக்கு ஆபத்தை விளைவிக்கக்கூடிய நஞ்சுள்ளவை, எவை நஞ்சற்றவை என்பதில் பொது மக்கள் மத்தியில் போதிய புரிதல் இல்லை என்கிறார் அவர். இதுவே, "நஞ்சற்ற பாம்பு என்ற தவறான புரிதலில் நஞ்சுள்ள பாம்பிடம் எச்சரிக்கையின்றி செயல்படுவதும், நஞ்சுள்ள பாம்பு என்று அஞ்சி ஆபத்தில்லாத, நஞ்சற்ற பாம்பை அடித்துக் கொல்வதும் நடக்கின்றன. நஞ்சுள்ளது, நஞ்சற்றது என இரு வகைப் பாம்புகளுமே சுற்றுச்சூழலுக்கு அளப்பறிய சேவைகளைச் செய்கின்றன. அதே வேளையில், தங்கள் உயிரைப் பாதுகாத்துக் கொள்ள, ஆபத்தான பாம்புகள் குறித்த அறிவும் மக்களுக்கு அவசியம்" என்று விளக்கினார் ரமேஸ்வரன். அவரது கூற்றுப்படி, பாம்புகள் கொல்லப்படுவதையும், பாம்புக் கடிக்கு ஆளாவதையும் தடுப்பதற்கான அடிப்படைத் தீர்வு, "மக்களிடையே அவை குறித்த அறிவியல் புரிதலை ஏற்படுத்துவதுதான்." அதையும் அவர்களின் மொழியிலேயே வழங்க வேண்டியது அவசியம் எனக் கூறிய ரமேஸ்வரன், "இந்த நோக்கத்துடன் தான் பல்லாண்டுக் காலமாக, அனுபவ அடிப்படையில், கள ஆய்வுகளின் மூலம்" பாம்புகள் பற்றிய அறிவியல்பூர்வ தகவல்களைச் சேகரித்து வந்ததாகத் தெரிவித்தார். ஒப்பீட்டளவில் கிராமங்களைவிட நகரங்களில் பாம்புகள் மீதான அச்சம் அதிகம் எனக் குறிப்பிடும் தமிழக சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்றத்திற்கான துறையின் கூடுதல் தலைமைச் செயலர் சுப்ரியா சாஹூ, "அந்த அச்சத்தைப் போக்குவதற்கான அடிப்படைத் தேவை அவை குறித்த அறிவுப் பகிர்வுதான். அதைச் சாத்தியமாக்குவதில் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டுள்ள இந்தக் கையேடு பேருதவியாக இருக்கும்," என்றார். மேலும், வனத்துறையால் வெளியிடப்பட்ட இந்தக் கையேட்டை பசுமைப் பள்ளிகளாக மாற்றப்பட்டிருக்கும் 200 அரசுப் பள்ளிகளுக்கு முதல்கட்டமாகக் கொண்டு செல்லவிருப்பதாகவும், அடுத்தடுத்த முயற்சிகளில் இதை மேலும் பரவலாகக் கொண்டு செல்லும் திட்டம் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c307yjr9ry2o
  9. தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களை விடுதியிலிருந்து வெளியேறுமாறு அறிவுறுத்தல் 16 JUL, 2025 | 03:36 PM தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் நால்வர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையிலும் ஒலுவில் பிரதேச வைத்தியசாலையில் மாணவர் உட்பட பல்கலைக்கழக சாரதி என ஆறு பேர் தற்போது வரை சிகிச்சை பெற்று வருவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.ஐ. நௌபர் தெரிவித்தார். இதேவேளை இரவு விடுதியில் தங்கி கல்வி கற்றுவரும் 1 ஆம் வருட பொறியியல் பீட மாணவர்கள் அனைவரும் மறு அறிவித்தல் வரை உடனடியாக விடுதிகளை விட்டு வெளியேறுமாறு செவ்வாய்க்கிழமை (15) பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இதற்கமைய அனைத்து மாணவர்களும் வெளியெறி உள்ளதாக பல்கலைக்கழக தகவல்கள் தெரிவித்துள்ளன. சிரேஸ்ட மாணவர்களின் கல்வி செயற்பாடுகள் வழமை போன்று நடைபெற்று வருவதுடன், குறித்த மோதலானது ஒரே வகுப்பினை சேர்ந்த 1 ஆம் வருட மாணவர்களின் இரு குழுக்களுக்கிடையே விடுதியில் ஏற்பட்டதாக பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. இதனால் அம்பாறை ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்களை நேற்று இரவு 8 மணியுடன் விடுதிகளிலிருந்து வெளியேறுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த பரீட்சையும் பிற்போடப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீடத்தின் முதலாம் வருட மாணவர்கள் இடையே நேற்று ஏற்பட்ட மோதலை அடிப்படையாகக் கொண்டு இந்த அறிவிப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் நேற்றைய தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட விசாரணைகள் நடத்தப்படுவதாக தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் தெரிவித்துள்ளார். செய்தி பின்னணி தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீடத்தைச் சேர்ந்த முதலாமாண்டு மாணவர்கள் ஐவர் மற்றும் பல்கலைக்கழக சாரதியொருவர் - தாக்குதலுக்குள்ளான நிலையில் செவ்வாய்க்கிழமை (15) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதன் பின்னர் குறித்த தாக்குதலின் காரணமாக ஒலுவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 5 மாணவர்களில் நால்வர் விசேட வைத்திய நிபுணரின் ஆலோசனையைப் பெறுவதற்காக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக மாற்றப்பட்டுள்ளதாக தென்கிழக்கு பல்கலைக்கழகப் பதிவாளர் எம்.ஐ. நௌபர் குறிப்பிட்டார். இதேவேளை ஒலுவில் வைத்தியசாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட 4 மாணவர்களும் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எம். ஜவாஹிர் தெரிவித்தார். மேலும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பொறியியல் பீட 1 ஆம் வருட மாணவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஏற்பட்ட மோதல் காரணமாக இச்சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220139
  10. "ஜூலை 25 கறுப்பு ஜூலை நினைவேந்தலும் விடுதலைக்கான போராட்டமும் ; விடுதலைக்கான திறவு கோல்களை கனதியாக்குவோம் வாரீர் " - குரலற்றவர்கள் குரல் அமைப்பு அழைப்பு 16 JUL, 2025 | 03:37 PM கறுப்பு ஜூலை 'பொது நினைவேந்தலும்- விடுதலைக்கான போராட்டமும்'' குரலற்றவர்களின் குரல்' அமைப்பினால் யாழ்ப்பாணம் கிட்டுப் பூங்காவில் எதிர்வரும் 24ஆம் மற்றும் 25ஆம் திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளது. இது தொடர்பில், குரலற்றவர்களின் குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பபாளர் மு.கோமகன் யாழ் . ஊடக அமையத்தில் புதன்கிழமை (16) நடாத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில், இதுவரை காலமும் இலங்கையின் கொடூர சிறைக்கூடங்களுக்குள் நயவஞ்சகமாக படுகொலை செய்யப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான நீதி நியாயத்தை கோருகின்ற 'பொது நினைவேந்தலும்' 30 ஆண்டுகள் கடந்தும் விடுதலையின்றி சிறைகளுக்குள் வாடிக்கொண்டிருக்கின்ற தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்திய நூதன கவனயீர்ப்புப் போராட்டமும்' மக்களது ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்படவுள்ளது. இவ்வாறான அறப் பணிகளை தொடர்ந்து தொடர்ச்சியாக மேற்கொள்ளும் பட்சத்திலேயே, சமூகத்தின் பெயரில் சிறைவாடும் எமது உறவுகளான 'தமிழ் அரசியல் கைதிகளுக்கு' நீதி நியாயமும் விடுதலையும் கிடைக்கப்பெறும் எனும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மனிதநேயம் கொண்ட நல்லுள்ளங்கள் ஒருங்கிணைந்து முன்னெடுப்புகளை மேலும் வலுப்படுத்தக்கூடிய வகையிலான உதவிகளை, " விடுதலைக்கான திறவுகோல்களை கனதியாக்குவோம் " என்கின்ற 'உண்டியல் திட்டத்தின் ஊடாக' மனமுவந்து நல்க வேண்டுமென அன்புரிமையோடு வேண்டி நிற்கின்றோம். இந்தப் பொதுவெளி கவனயீஈர்ப்புப் போராட்டத்தில், இன மத மொழி கடந்து, வயது பால் வேறுபாடின்றி, கட்சி பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைவோம். சமூகநீதி சமூகநியாயத்தும் விடுதலைப் பயணம் நோக்கிய செயற்பாடுகளை பலப்படுத்தி முன்நகர்வோம். நல்லெண்ணமும் கருணை உள்ளமும் கொண்ட அனைவரும் சிரமம் பாராது வந்து கலந்து கொள்வதன் மூலமே, இலங்கை அரசிற்கும் சர்வதேசத்திற்கும் ஒரு திரட்சிமிகு அழுத்தத்தை கொடுத்து அன்புக்குரிய எமது சிறையுறவுகளை உயிர்ப்புடன் விடுவிக்க முடியும். அனைவரும் "ஒன்றிணைந்து குரல் கொடுத்து உறவுகளை சிறை மீட்போம் வாருங்கள்" என 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பினராகிய நாம் எமது மக்களை நோக்கி உரிமையோடு அழைப்பு விடுக்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/220137
  11. 16 JUL, 2025 | 03:45 PM வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனால் வடக்கு மாகாணத்தின் 4 செயலாளர்கள், மாநகர சபை ஆணையாளர் மற்றும் பதில் ஆணையாளர் ஆகியோருக்கான நியமனங்கள் ஆளுநர் செயலகத்தில் வைத்து புதன்கிழமை (16) வழங்கி வைக்கப்பட்டன. பருத்தித்துறை பிரதேச செயலராகக் கடமையாற்றிய எஸ்.சத்தியசீலன் வடக்கு மாகாண சபைக்கு புதிதாக உள்வாங்கப்பட்டிருந்த நிலையில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளராக கடமையாற்றிய மு.நந்தகோபாலன், மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கோப்பாய் பிரதேச செயலராகக் கடமையாற்றிய ச.சிவஸ்ரீ வடக்கு மாகாண சபைக்கு புதிதாக உள்வாங்கப்பட்டிருந்த நிலையில், வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நிதியும் திட்டமிடலும், சட்டமும் ஒழுங்கும், காணி, மின்சக்தி, வீடமைப்பும் நிர்மாணமும், சுற்றுலா, உள்ளூராட்சி, மாகாண நிர்வாகம், கிராம அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் போக்குவரத்து அமைச்சின் பதில் செயலாளராகக் கடமையாற்றிய அ.சோதிநாதன் அதே அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேநேரம், மாகாண காணி பதில் ஆணையாளராகவும் அவரே நியமிக்கப்பட்டுள்ளார். மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் செயலாளர் பதவி வெற்றிடமாக இருந்த நிலையில், வடக்கு மாகாண விவசாய மற்றும் கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசன, மீன்பிடி, நீர் விநியோக மற்றும் சுற்றாடல் அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய ஆ.சிறீ நியமிக்கப்பட்டுள்ளார். மகளிர் விவகாரம், புனர்வாழ்வளித்தல், சமூக சேவைகள், கூட்டுறவு, உணவு வழங்கலும் விநியோகமும் மற்றும் தொழிற்துறையும் தொழில் முனைவோர் மேம்பாடும் மற்றும் வர்த்தக வாணிப அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய பொ.வாகீசன், வவுனியா மாநகர சபையின் ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நிகழ்வில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசனும் கலந்துகொண்டிருந்தார். https://www.virakesari.lk/article/220140
  12. கர்நாடகா: இரு பெண் குழந்தைகளோடு குகையில் வசித்தது ஏன்? ரஷ்ய பெண் விளக்கம் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, கர்நாடகாவில் மலைக் குகையில் இருந்து மீட்கப்பட்ட நீனா குடினா 3 மணி நேரங்களுக்கு முன்னர் மலைக் குகையில் வசித்தபோது இயற்கையோடு ஒன்றி மகிழ்ச்சியுடன் வாழ்ந்ததாக, தனது மகள்களைக் கொல்வதற்காக அங்கு இருக்கவில்லை என்றும் கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு மலைக் குகையில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் மீட்கப்பட்ட ரஷ்ய பெண் தெரிவித்துள்ளார். ஏஎன்ஐ செய்தி முகமைக்கு நீனா குடினா என்ற அந்தப் பெண் அளித்த பேட்டியில் தங்களைப் பற்றிப் பல தவறான தகவல்கள் பரப்பப்படுவதாகக் கூறியிருக்கிறார். "நான் எனது மகள்களைக் காட்டில் சாவதற்காக அழைத்து வரவில்லை. அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தனர். அவர்கள் நீர்வீழ்ச்சியில் நீந்தி மகிழ்ந்தனர். அங்கு தூங்குவதற்கு மிக வசதியான இடம் இருந்தது. களி மண்ணில் கைவினைப் பொருட்கள் தயாரிப்பு, ஓவியங்கள் வரைவது எனப் பல நல்ல பாடங்களைச் சொல்லிக் கொடுத்தேன். நாங்கள் நல்ல உணவைச் சாப்பிட்டோம். நான் சமையல் எரிவாயுவில் சமைத்தேன். அது நல்ல, சுவையான, ஆரோக்கியமான உணவு. எனக்குப் பித்துப் பிடித்து, என் குழந்தைகளுக்கு எதுவும் தரவில்லை என்பது உண்மையில்லை. எனது மகள்களுக்குச் சிறந்தவையே கிடைத்தன. அவர்கள் நன்கு உறங்கினர், அவர்கள் ஓவிய பாடங்களையும் எழுதப் படிக்கவும் கற்றுக் கொண்டனர். அவர்கள் பட்டினியால் செத்துக் கொண்டிருக்கவில்லை. அது உண்மையில்லை," எனத் தெரிவித்தார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, தனது இரண்டு மகள்களுடன் மீட்கப்பட்ட நீனா குடினா மலைக்குகையில் இயற்கையோடு ஒன்றி வாழ்ந்ததாக கூறுகிறார் இயற்கையோடு ஒன்றி வாழ்வது ஆரோக்கியத்தை உறுதி செய்வதாகக் கூறிய நீனா குடினா 20 வெவ்வேறு நாடுகளில் காடுகளில் வசித்த காணொளிகளை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இயற்கையோடு வசித்து இயற்கை தரும் வளங்களைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் அவர் தெரிவித்தார். தாங்கள் முழு ஆரோக்கியத்துடன் இருந்ததாகவும் அவர் தமது பேட்டியில் கூறினார். "நாங்கள் மிகவும் ஆரோக்கியமாக இருந்தோம். இன்று எங்களை மருத்துவர்களிடம் பரிசோதனைக்காக அவர்கள் அழைத்து வந்தனர். எனது மகள்கள் மருத்துவமனைக்கு வருவது இதுதான் முதல் முறை. அவர்கள் மிகவும் நலமாக உள்ளனர். அவர்கள் பெரும்பாலும் நோய்வாய்ப்பட்டதே இல்லை. சளி போன்ற சிறு தொந்தரவுகள் மட்டும்தான் ஏற்பட்டிருக்கும்," எனக் குறிப்பிட்டார். "நாங்கள் இயற்கையிலேயே வசிக்க விரும்புகிறோம் என்பதுதான் இதற்குக் காரணம். அதுவொரு குகை, இது ஏதோ ஒரு பெரிய காடு போலவோ, எல்லோரிடம் இருந்தும் தொலைதூரத்தில் இருக்கிறோம் என்பது போலவோ, உணவு கிடைக்காது என்பது போன்றோ இல்லை. அது கிராமத்திற்கு வெகு அருகில் இருந்தது, அத்துடன் அது மிகவும் பெரிய, அழகான ஒரு குகை. கடல் தெரியும் வகையில் ஜன்னல் போன்ற ஓர் அமைப்புடன் இருந்தது," என்றார் நீனா. தாங்கள் அபாயகரமான இடத்தில் இருந்ததாகக் கூறப்படுவதையும் நீனா மறுத்தார். "அது அபயாகரமான இடமல்ல. சுற்றுலாப் பயணிகள் உள்பட யார் வேண்டுமானாலும் போகக்கூடிய இடம்தான். பாம்புகளைப் பொறுத்தவரை நாங்கள் ஒரு சில பாம்புகளைப் பார்த்தது உண்மைதான். ஆனால் கோகர்னாவில் வீட்டுக்குள், சமையலறை, கழிவறை உள்பட எல்லா இடங்களிலும் பாம்புகள் வந்த புகைப்படங்களைப் பார்க்கிறோம். இதுவும் அதைப் போன்றதுதான். நாங்கள் அவற்றைப் பார்த்தோம். அவை அதன் வழியில் செல்கின்றன. நாங்கள் எங்கள் வழியில் செல்கிறோம். யாருக்கும் ஆபத்தில்லை," என்று விளக்கம் அளித்துள்ளார். படக்குறிப்பு, கர்நாடகாவின் கடலோர மாவட்டமான உத்தர கன்னடத்தின் தொலைதூரப் பகுதியில் உள்ள ஒரு குகையில் தனது இரண்டு இளம் குழந்தைகளுடன் வசித்து வந்த ரஷ்ய பெண்ணை காவல்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். தன்னுடைய விசா 2017ஆம் ஆண்டிலேயே காலாவதியாகிவிட்டதாகக் கூறப்படுவது குறித்தும் அவர் விளக்கமளித்தார். "எங்களிடம் நடப்பு விசா இல்லை. அது காலாவதியாகிவிட்டது. ஆனால் அது அண்மையில் காலவதியானது. 2017ஆம் ஆண்டுக்குப் பிறகு நாங்கள் நான்கு நாடுகளில் வசித்துவிட்டு இந்தியாவுக்கு வந்தோம். எனது பெரிய மகன் உயிரிழந்துவிட்டான், அது நடந்ததால் விசாவை புதுப்பிக்காமல் நான் கொஞ்சம் கூடுதலாக நாட்டில் இருந்துவிட்டேன். ஆனால் அவர்கள் கூறுவது போல் அத்தனை நாட்கள் அல்ல." ரஷ்யாவில் பிறந்திருந்தாலும், கடந்த 15 ஆண்டுகளாகப் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து வருவதாகக் கூறுகிறார் நீனா. "ரஷ்யாவை விட்டு 15 ஆண்டுகளுக்கு முன்னர் பயணம் மேற்கொண்டேன். அதற்குப் பிறகு நான் கோஸ்டா ரிக்கா, மலேசியா, பாலி, தாய்லாந்து, நேபாளம், யுக்ரேன் எனப் பல நாடுகளுக்குப் பயணம் செய்தேன்." இயற்கையின் மீதுள்ள காதல்தான் காட்டில் வசிக்க வைப்பதாகவும் கூறுகிறார் அவர். "இது ஆன்மீகம் தொடர்பானது அல்ல. எங்களுக்கு இயற்கை பிடிக்கும், அது ஆரோக்கியத்தைக் கொடுக்கிறது, தரையில் வசிக்க முடிகிறது, உடலைத் தூய்மைப்படுத்த நீர்வீழ்ச்சி இருக்கிறது. இயற்கையோடு இருப்பது என்பது வீட்டில் வசிப்பதைப் போல் அல்ல." தொடர்ந்து இந்தியாவில் வசிக்க விருப்பிகிறாரா என்ற கேள்விக்கும் அவர் பதிலளித்தார். "எனக்கு உண்மையில் எந்த வாய்ப்பும் இல்லை. ஏனென்றால் எங்கள் விசா காலாவதியாகிவிட்டது. ஆனால் அது அண்மையில்தான் காலாவதியானது. எனது மகன் இறந்துவிட்டான். அவன் இறந்த பின்னர் நான் அதிகம் அழுதேன். அந்த நேரத்தில் நான் செய்யக்கூடியது ஏதும் இருக்கவில்லை," என்றார் நீனா. "எனது மகள்கள் மிகவும் வசதியாக இருந்தனர். நாங்கள் குகையில் இருந்த நாட்கள் முழுவதும் வீடியோக்கள் மற்றும் போட்டோ பதிவுகளாக இருக்கின்றன. நாங்கள் எப்படி சுவையான உணவைச் சமைத்தோம், என்ன சாப்பிட்டோம், அவர்களுக்கு நான் எடுத்த வகுப்பு, ஓவியம் மற்றும் களிமண் பொருட்கள் செய்தது என அனைத்துமே வீடியோவாக உள்ளது." ரஷ்ய பெண் காட்டில் எப்போதிருந்து வசித்து வந்தார்? நீனா, 2016 அக்டோபர் 18 முதல் 2017 ஏப்ரல் 17 வரை வணிக விசாவில் இந்தியாவில் இருந்தார். விசா காலாவதியான பிறகு, கோவாவில் உள்ள வெளிநாட்டினர் பிராந்திய பதிவு அலுவலகம் (FRRO) அவருக்கு ஏப்ரல் 19, 2018 அன்று வெளியேறும் அனுமதியை வழங்கியது. அதன் பிறகு, நீனா நேபாளத்திற்குச் சென்று, 2018 செப்டம்பர் 8 அன்று மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார். காவல்துறையினர் அவரை ஒரு பெண் நடத்தும் ஆசிரமத்திற்கு அழைத்துச் சென்றனர். அவரது இரு குழந்தைகளும் குழந்தைகள் இல்லத்திற்கு மாற்றப்பட்டனர். பின்னர், நீனாவும் அவரது குழந்தைகளும் பெங்களூருவில் உள்ள வெளிநாட்டினருக்கான காவல் மையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்டனர். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx23v32pvpwo
  13. சிறுவர் இல்லங்களிலும் பாதுகாப்பு மையங்களிலும் வாழ்கின்ற சிறுவர்களுக்கு மாதாந்த கொடுப்பனவைப் பெற்றுக் கொடுக்கும் தேசிய நல்வாழ்வுத் திட்டம் அங்குரார்ப்பணம் 16 JUL, 2025 | 03:22 PM எந்த ஒரு பிள்ளையும் கைவிடப்படுதல் ஆகாது, சகல பிள்ளைகளினதும் எதிர்கால நல்வாழ்வை உறுதிப்படுத்த வேண்டும் என்ற ஜனாதிபதி அவர்களின் கருத்துக்கு அமைய, தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தின் மூலம் சமுதாயத்துடன் பகிரப்பட்ட, தற்போது அரசாங்கத்தின் பெரும் எதிர்பார்ப்புகளில் ஒன்றான 'அர்த்த' என்னும் திட்டத்தை யதார்த்தமாக்கும் முதல் படி எடுத்து வைக்கப்பட்டது. சிறுவர் இல்லங்களிலும் பாதுகாப்பு மையங்களிலும் வாழ்ந்து வருகின்ற சிறுவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் அச்சிறுவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபாய் கொடுப்பனவைப் பெற்றுக் கொடுக்கும் தேசிய நல்வாழ்வுத் திட்டத்தின் அங்குரார்ப்பண விழா செவ்வாயக்கிழமை (15) பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் பங்கேற்புடன் கொழும்பில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதிச் சபாநாயகர் வைத்தியர் ரிஸ்வி சாலி, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணாயக்கர, மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்சன, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் கே.டீ. ஓல்கா, தேசிய சேமிப்பு வங்கித் தலைவர் உள்ளிட்ட பிரமுகர்கள், பிரதேச செயலாளர்கள், அரசு உத்தியோகத்தர்கள், 'அர்த்த' பயனாளிகளான சிறுவர் இல்லங்களின் காப்பாளர்கள் அத்தோடு இந்த விழாவை அலங்கரிக்க தமது திறமைகளை வெளிப்படுத்திய சிறுவர் இல்லங்களைச் சேர்ந்த சிறுவர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர். சிறுவர் மற்றும் மகளிர் அமைச்சின் தலைமையில் செயல்படுத்தப்படுகின்ற 'அர்த்த' திட்டத்தின் உத்தியோகபூர்வ வங்கியாக இந்த நாட்டின் புகழ்பெற்ற அரசு வங்கியான தேசிய சேமிப்பு வங்கி கைகோர்த்துக் கொண்டிருக்கின்றது. சிறுவர்களுக்கு மாதாந்தம் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 5,000 ரூபாயில் 3,000 ரூபாய் அவர்களின் அன்றாட வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்காக அவர்கள் வாழ்ந்து வருகின்ற சிறுவர் இல்லங்களின் நிர்வாகத்திற்கு வழங்கப்படுவதோடு, எஞ்சிய 2,000 ரூபாய் பணம் அச்சிறுவர்களின் பெயரில் வங்கிக் கணக்கில் சேமிக்கப்படும். அவர்கள் இச்சமுதாயத்தில் அடியெடுத்து வைக்கும் போது அவர்களின் எதிர்கால கல்விக்காகவோ அல்லது தொழில் சார்ந்த தேவைகளுக்காகவோ பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையிலேயே இந்த சேமிப்பு மேற்கொள்ளப்படுகின்றது. இவ்விழாவில் உரையாற்றிய பிரதமர் தெரிவிக்கையில், "பல்வேறு காரணங்களினால், பல்வேறு சந்தர்ப்பங்களில், குடும்பத்தோடு சமுதாயத்தில் பெற்றோரின் அரவணைப்போடு தமது இல்லத்தில் வாழ வேண்டிய வாய்ப்பை இழக்கின்ற சிறுவர்களுக்குக் கிடைக்கப்பெறுகின்ற கடைசித் தேர்வாகவே சிறுவர் இல்லமோ அல்லது அத்தகைய பாதுகாப்பு மையங்களோ அமைகின்றன. அத்தகைய இடங்களில் வசித்து வருகின்ற சிறுவர்களின் நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் பாதுகாத்துக் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும் என்று நாம் கருதுகின்றோம். ஒரு அரசாங்கம் என்ற வகையில் இந்த சிறுவர்களின் கல்வியை உறுதிப்படுத்துதல், அவர்களின் உடல் மற்றும் உள ரீதியான ஆரோக்கியத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கின்றது. ஆகையினால் அனைத்துப் பிள்ளைகளையும் பிள்ளைகளாகக் கருதி, அந்த அனைத்து சிறுவர்களையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பிலிருந்து அரசாங்கத்தால் நழுவி விட இயலாது. அந்த வகையிலேயே இந்த 'அர்த்த' என்னும் செயல்திட்டம் அர்த்தமுள்ள தேசிய செயல்திட்டமாக அமைகின்றது. இந்த சிறுவர் இல்லங்களில் வசித்து வருகின்ற பிள்ளைகளின் அடையாளத்திற்குப் பங்கம் ஏற்படாத வகையில் அவர்களின் நிகழ்காலத்தையும், எதிர்காலத்தையும் பாதுகாப்பதே எமது இந்த 'அர்த்த' செயல்திட்டத்தின் முக்கிய நோக்கமும் எதிர்பார்ப்பும் ஆகும்." இவ்வாறு பாதுகாப்பு இல்லங்களில் வாழ்ந்து வருகின்ற பிள்ளைகளையும் எமது பிள்ளைகளாகவே கருத வேண்டும். ஏனைய சிறுவர்களுக்கு இருக்கின்ற சகல உரிமைகளும் இச்சிறுவர்களுக்கும் இருக்கின்றது என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அச்சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதே இந்த 'அர்த்த' செயல்திட்டத்தின் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். இச்சிறுவர்களின் கௌரவத்தைப் பாதுகாக்கின்ற வகையில் செயல்படுவது எம் அனைவரிடமும் இருக்கும் பொறுப்பாகும் எனக் குறிப்பிட்டுப் பிரதமர், இச்சிறுவர்களின் பாதுகாப்பையும் பராமரிப்பையும் உறுதிப்படுத்தும் முக்கிய பொறுப்பு, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்திற்கு இருப்பதாகவும் ஆகையினால் அவர்கள் தமது பொறுப்பை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக்கொள்வதாகவும் வலியுறுத்தினார். இச்செயல்திட்டத்திற்கு என அரசாங்கத்தின் வருடாந்த வரவு செலவுத் திட்டத்தின் மூலம் ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கி இருப்பதோடு, அதன் மூலம் நாடு தழுவிய ரீதியில் இருக்கின்ற 356 சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வசித்து வருகின்ற, கைவிடப்பட்ட, அனாதையான, அல்லது நீதிமன்றங்கள் மூலம் சிறுவர் பராமரிப்பு நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்ட என மொத்தமாக ஒன்பது ஆயிரத்து நூற்று தொண்ணூற்று ஒன்று (9191) சிறுவர்களுக்கு 'அர்த்த' செயல்திட்டத்தின் மூலம் மாதாந்தம் 5,000 ரூபாய் பெற்றுக் கொடுக்கப்படும். மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் உரையாற்றுகையில், "தமது சொந்த வீட்டை விட்டுப் பிரிந்து சிறுவர் இல்லத்திலோ அல்லது அத்தகைய பாதுகாப்பு மையத்திலோ வசித்து வருகின்ற பிள்ளைகளின் பொறுப்பினை ஏற்பதற்கு ஒரு அரசாங்கம் என்ற வகையில் இத்தகைய செயல்திட்டம் ஒன்றினைச் செயல்படுத்துவது வரலாற்றில் இதுவே முதல் தடவை ஆகும்" என்று கூறினார். அத்தோடு இது மனிதநேயம் மிக்க பொறுப்பாகும் என்றும் அதற்கு இந்நாட்டின் சகல குடிமக்களும் தமது பங்களிப்பினை வழங்கியிருக்கிறார்கள் என்றும் மேலும் கூறினார். https://www.virakesari.lk/article/220136
  14. 16 JUL, 2025 | 11:08 AM யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தின் மேலதிக அரசாங்க அதிபராக (காணி) பாலசுந்தரம் ஜெயகரன் இன்றைய தினம் (16) காலை 9 மணிக்கு அரசாங்க அதிபர் முன்னிலையில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார். இந்நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர், பிரதம கணக்காளர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதம பொறியியலாளர், பிரதம உள்ளகக் கணக்காய்வாளர், உதவி மாவட்டச் செயலாளர், கணக்காளர்கள், நிர்வாக உத்தியோகத்தர் உள்ளடங்கலான பதவிநிலை உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டார்கள். மேலதிக அரசாங்க அதிபராக (காணி) கடமையேற்ற ஜெயகரன், முன்னர் உடுவில் பிரதேச செயலாளராக கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220107
  15. செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிக்கான திகதி அறிவிப்பு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளை எதிர்வரும் 21 ஆம் திகதி மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி அகழ்வு வழக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் ஏ.ஏ. ஆனந்தராஜா முன்னிலையில் நேற்று (15) எடுத்துக்கொள்ளப்பட்டது. வழக்கு தொடர்பான விடயங்களை காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி தற்பரன் தெரிவித்தார். சட்டத்தரணி தற்பரன் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், ”அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் உள்ள செம்மணி மனித புதைகுழி அகழ்வில் முதலாவதாக எடுத்த புதைக்குழியில் 63 எலும்புக்கூடுகளும், அதற்குப் பிறகு கண்டெடுக்கப்பட்ட புதைக்குழியில் இருந்து 2 எலும்புக்கூடுகளும் கண்டெடுக்கப்பட்டு மொத்தமாக 65 எலும்புக்கூடுகள் அகழ்ந்தெடுக்கப்பட்டது. சிறுபிள்ளை என சந்தேகிக்கப்படும் எலும்புக்கூடு சம்பந்தமாக மேலதிகமான ஆய்வுகளை செய்து தருமாறு நீதிமன்றினால் கூறப்பட்டதற்கு அமைவாக அது சம்பந்தமான அறிக்கை இன்று சமர்ப்பிக்கப்பட்டது. தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவாவின் இரண்டாம் கட்ட செயற்பாடுகள் தொடர்பிலான அறிக்கையும் சட்ட வைத்திய அதிகாரி பிரணவனின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டது. அது தொடர்பான சுருக்கமான விவரங்கள் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. இதன்போது 3 விடயங்களை கோடிட்டு காட்டியுள்ளனர். மனித புதைக்குழியில் குற்றவியல் சம்பவம் நடந்ததற்கான தடயங்கள் இருப்பதாக தாங்கள் கருதுவதாக நிபுணர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். வழமையான சடலங்கள் தகனம் செய்யப்பட்ட தோற்றுவாய்கள் அங்கே காணப்படவில்லை என்ற விடயமும் மூன்றாவது இது சம்பந்தமாக மேலதிகமான ஆய்வுகள் தேவை என்ற விடயமும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எஸ் 25, எஸ் 48, எஸ் 56 என அடையாளப்படுத்தப்பட்ட சிறுவர்களது என நம்பப்படும் எலும்புக்கூடுகள் தொடர்பான ஆய்வின் முடிவுகள் மிக முக்கியமானதாக காணப்பட்டது. உடுப்பு, உடைகள், எலும்பியல் சம்பந்தமான விடயங்களில் ஒருமித்த தன்மை இருந்ததாக கூறப்பட்டது. அதிலும் குறிப்பாக நான்கு தொடக்கம் 5 உத்தேச வயதை கொண்ட சிறுமியின் உடைய எலும்புக்கூடாக இருக்கலாம் என்று சந்தேகத்தினை பேராசிரியர் வெளியிட்டு இருந்தார்”. என்றார். அதனை தொடர்ந்து சட்டத்தரணிகள், பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரன் ஆகியோர் தமது பிரசன்னம் இந்த மனிதப் புதைகுழி அகழ்வு பிரதேசத்தில் கட்டாயம் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்தக் கோரிக்கையை மன்ற பரிசீலனைக்கு எடுத்தது. ஏற்கனவே, மன்று இட்ட கட்டளைக்கு அமைவாக அகழ்வு பகுதிக்கு விஜயம் செய்கின்ற பொழுது விண்ணப்பம் செய்து விஜயத்திற்கான தன்னுடைய காரணத்தினை வெளிப்படுத்தி நடபடி முறை ஏற்று பின்பற்றப்படுவதாக நீதிவான் எடுத்துச் சொல்லி இருந்தார். அதற்கு மேலதிகமாக யாழ். மாவட்ட சட்டத்தரணிகள் சங்கம் தங்கள் பிரதிநிதிகளை அனுப்புவதற்கும் பொறுப்பாக பாதிக்கப்பட்ட மக்கள் சார்பில் இரண்டு சட்டத்தரணிகள் காலை, மாலையில் இரண்டு சட்டத்தரணிகள் ஒரு கிரமமான முறையில் ஏற்கனவே அகழ்வாய்வில் ஈடுபடுகின்ற உத்தியோகத்தர்களுக்கு நிபுணர்களுக்கும் இடைஞ்சல் இல்லாத வகையில் ஈடுபடுத்துவதற்கும் மன்றினால் அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சட்டத்தரணியின் பிரசன்னத்துடன் விஜயம் செய்யவும் மன்று அனுமதித்திருக்கிறது. இப்படியாக அனுமதித்திருக்கிறபோதும் ஊடகவியலாளர்கள், நிபுணர்கள் புகைப்படம் எடுப்பதற்கு மட்டும் அனுமதித்திருக்கிறது. தேவையில்லாத கட்டுக்கதைகளையும் புனைகதைகளையும் அங்கே கண்டெடுக்கப்பட்ட சான்றாதாரங்கள் சம்பந்தமான பொருள்களையும் மக்கள் மத்தியில் தேவையில்லாத விசனத்தையும் ஏற்படுத்தும் என்ற காரணத்தால் அதற்கான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த அகழ்வு பணிகளை 21 ஆம் திகதி ஆரம்பிப்பதாக சட்ட வைத்திய அதிகாரி மன்றுக்கு அறிவித்திருக்கிறார். ஆகவே 21 ஆம் திகதி அகழ்வு பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என்றார். குறித்த செம்மணி புதைகுழி அகழ்வு வழக்கு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி திறந்த நீதிமன்றத்தில் அழைக்கப்படவுள்ளது. https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/319012
  16. 5 மணி நேரங்களுக்கு முன்னர் கேலி, கிண்டல்களை தாண்டி இன்று தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் எனும் பெயரை பெற்றுள்ளார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த என். ஜென்சி. "பல்வேறு இன்னல்கள், தடைகளை தாண்டி இன்று பிஹெச்.டி முடித்து, லயோலா கல்லூரியில் ஆங்கில துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறேன்" என்கிறார் என். ஜென்சி. சிறுவயதிலிருந்தே நன்றாக படிக்கக்கூடிய ஜென்சி, பி.ஏ., எம்.ஏ.வில் தங்கப் பதக்கங்களை பெற்றுள்ளார். "சமூகம் என்னை அடக்குமுறை செய்தபோது என்னை காப்பாற்றியது கல்விதான்." என கூறுகிறார் ஜென்சி. ஏழ்மையான நிலையிலும் கல்வியை கைவிடாததற்கு இதுவே காரணம் என்கிறார் அவர். ஜென்சி லயோலா கல்லூரியில் பணியாற்றுவது தங்களுக்கு பெருமை அளிப்பதாக தெரிவிக்கிறார், லயோலா கல்லூரியின் ஆங்கில துறை தலைவரும் ஜென்சியின் முனைவர் பட்ட வழிகாட்டியுமான மேரி வித்யா பொற்செல்வி. "என்னை முதலில் பேராசிரியராக பாருங்கள், பின்னர் எந்தவித கற்பிதங்களும் இல்லாமல் திருநங்கையாக பாருங்கள்." என்கிறார் பேராசிரியர் ஜென்சி. தயாரிப்பு: நந்தினி வெள்ளைச்சாமி ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: டேனியல் - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு BBC News தமிழ்ஜென்சி: தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் கல்வியா...கேலி, கிண்டல்களை தாண்டி இன்று தமிழ்நாட்டின் முதல் திருநங்கை பேராசிரியர் எனும் பெயரை பெற்றுள்ளார் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த என். ஜென்சி.
  17. 16 JUL, 2025 | 09:29 AM திருகோணமலை மாவட்ட பிராந்திய ஊடகவியலாளர் M. H. யூசுப் மீது மணல் மாபியாக்களால் தாக்குதல் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதோடு, கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம், திங்கட்கிழமை (14) கந்தளாய் பகுதியில் வைத்து, மேற்கொள்ளப்பட்டதோடு, குறித்த, கொலை மிரட்டலையும் தாக்குதல் முயற்சியையும் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடும் கும்பலே மேற்கொண்டதாகவும் ஊடகவியலாளர் தெரிவித்துள்ளார். குறித்த ஊடகவியலாளர், அன்றைய தினம் இரவு 11 மணியளவில், தனது பகுதி நேர தொழிலான, சிசிரிவி கமரா பொருத்தும் பணியில், கந்தளாய் நகரில் ஈடுபட்டிருந்த போதே, இந்த சம்பவம் இடம்பெற்றிருக்கின்றது. இந்த நேரத்தில், இருவர் அவரிடம் வந்து முதலில் தீப்பெட்டி கேட்டுள்ளனர். "இல்லை" என பதிலளித்ததன் பின்னர், “பொய்யான செய்திகளை ஊடகங்களுக்கு பரப்புகிறாய்” என குற்றம்சாட்டி, கடுமையான வார்த்தைகளால் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். பின்னர், அவர்களில் ஒருவர் உடனடியாக அவரை தாக்க முயன்ற நிலையில், அருகிலிருந்த கடை உரிமையாளரும், பெண் ஒருவரும் ஊடகவியலாளருக்கு உடனடி பாதுகாப்பு வழங்கியுள்ளனர். இதனையடுத்து, அவர் கந்தளாய் பொலிஸாரிடம் முறைப்பாடு அளித்துள்ளார். பொலிஸார் சம்பவ இடத்திற்கு உடனடியாக வந்து ஊடகவியலாளரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த ஜூலை 13ஆம் திகதி, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட, தீத்தாந்தட்டி பகுதியில் நடந்த சட்டவிரோத மணல் அகழ்வு தொடர்பாக, "சட்டவிரோத மணல் ஈடுபட்ட 5 உழவு இயந்திரங்களோடு , 7 பேர் கைது!" என்ற தலைப்பில் இவர் அறிக்கையிட்ட செய்தி தேசிய தொலைக்காட்சிகளிளும், இணைய தளங்களிலும் ஒளிபரப்பானது. மேலதிக விசாரணை இந்த செய்தியை வெளியிட்டதன் காரணமாகவே, தனக்கு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் பொலிஸில் முறைபாடு செய்துள்ளார். இந்த செய்தியை வெளியிட்டதன் காரணமாகவே, தனக்கு இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர் பொலிஸில் முறைபாடு செய்துள்ளார். சமூக விரோத செயல்களை வெளிச்சத்திற்குக் கொண்டுவரும் ஊடகவியலாளர்களின் உயிருக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை இந்தச் சம்பவம் மீண்டும் எடுத்துக்காட்டுவதாக பலரும் கவலை தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கந்தளாய் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் எல்.எம்.எஸ். பண்டார முன்னெடுத்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/220099
  18. வெளிநாடுகளில் தலைமறைவாகியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளை நாட்டிற்கு அழைத்து வருவதற்கான திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் அடங்கிய பல குழுக்கள் அந்த நாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். குருநாகலில் ஊடகங்களிடம் உரையாற்றிய அமைச்சர், இந்த குற்றவாளிகள் மத்திய கிழக்கு உட்பட பல நாடுகளில் இருப்பதாகவும், அவர்களைக் கைது செய்ய சர்வதேச பொலிஸ் மூலம் சிவப்பு அறிவிப்புகள் பெறப்பட்டுள்ளதாகவும் கூறினார். பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மலேசியாவில் இருப்பதாக சமூக ஊடகங்கள் மற்றும் வெகுஜன ஊடகங்கள் மூலம் சமீபத்தில் தகவல் பரப்பப்பட்டதாகவும், இந்த தகவல் துல்லியமானது அல்ல என்றும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார். https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/318996
  19. அவுஸ்திரேலியாவில் தடைக்குப் பின்னர் பாடசாலை மாணவர்கள் மின் சிகரட்டுக்களை புகைப்பது குறைவடைந்துள்ளது - ஆய்வில் தகவல் Published By: DIGITAL DESK 3 16 JUL, 2025 | 11:49 AM அவுஸ்திரேலியாவில் பாடசாலை மாணவர்களிடையே மின் சிகரட்டுக்கள் புகைப்பது குறைவடைந்து வருவதாக ஆய்வில் தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு காரணம் ஒரு முறை பயன்படுத்திவிட்டு தூக்கி எறியும் நெருப்பின்றி புகை பிடிக்கும் மின் சிகரட்டுக்கள் (vaping) அரசாங்கம் தடை விதித்து சுமார் வருடங்கள் ஆகின்றது. கடந்த 2023 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் 14 முதல் 17 வயதுக்குட்பட்டவர்களிடையே 17.5% ஆக இருந்த மின் சிகரட்டு பாவனை இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 14.6% ஆகக் குறைவடைந்துள்ளதாக ஆஸ்திரேலியாவின் புற்றுநோய் அமைப்பு நடத்திய ஆய்வில் வெளிவந்துள்ளது. இந்த ஆய்வில் 15 வயதுக்கு மேற்பட்டவர்கள் மின் சிகரட்டுகளை பயன்படுத்தும் விகிதம் மூன்றில் ஒரு பங்கிற்கும் மேலாகக் குறைவடைந்துள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இளம் அவுஸ்திரேலியர்களிடையே மின் சிகரட்டுகள் பாவனை விகிதம் அண்மையகாலமாக தலைகீழாக மாறிவிட்டன. கடந்த ஆண்டில் அதிகாரிகள் 10 மில்லியனுக்கும் அதிகமான சட்டவிரோத மின் சிகரட்டுகள் கைப்பற்றியுள்ளது என அவுஸ்திரேலிய சுகாதார அமைச்சர் மார்க் பட்லர் தெரிவித்துள்ளார். "எங்கள் கல்வி மற்றும் தடுப்பு பிரச்சாரங்கள் மின் சிகரட்டுகள் மற்றும் புகைபிடிப்பதைத் தடுப்பதற்கு மற்றும் நிறுத்துவதற்கு மக்கள் மத்தியில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகின்றன" என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/220113
  20. காணாமல் ஆக்கப்பட்ட 281 நபர்களின் விபரங்களுடன் வெளியான அறிக்கை யாழ்ப்பாணத்தில் காணாமல் ஆக்கப்பட்ட 281 பேர் குறித்த விபரங்களுடன் சமர்ப்பித்த விசாரணை அறிக்கை 22 ஆண்டுகளுக்குப் பின்னர் இப்போது வெளிப்பட்டுள்ளது. இந்த அறிக்கை செம்மணியில் மனித எலும்புக்கூடுகளை இனங்காணுவதற்கு ஒரு திருப்பு முனையாக அமையலாம் என்று நம்பப்படுகின்றது. வடக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட நால்வர் கொண்ட குழுவினால் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்டவர்களில் 95 வீதத்துக்கும் அதிகமானோர், 1996 – 97 ஆம் ஆண்டு காலப் பகுதியில் யாழ். பிரதேசத்தில் இருந்து சீருடைத் தரப்பினரால் வலிந்து கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று தெரிகின்றது. அவர்களின் முழுப் பெயர், விபரம், விலாசங்கள் உள்ளிட்ட பதிவுகளுடன் இந்த அறிக்கை உள்ளதால், அவர்களது உறவினர்களின் மரபணுக்களை இப்போது செம்மணி புதைகுழியில் மீட்கப்படும் எலும்புக்கூடுகளின் மரபணுக்களோடு ஒப்பிடுவதன் மூலம், அந்த மனித எச்சங்களுக்கு உரியவர்களை அடையாளம் காணக்கூடிய வாய்ப்புக் கிட்டலாம் என்று நம்பப்படுகின்றது. 1996 – 97 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் யாழ். பிரதேசத்தில் பல நூற்றுக்கணக்கில் காணாமல் ஆக்கப்பட்டோரின் எலும்புக்கூடுகளே இப்போது செம்மணி மனிதப் புதைகுழிகளில் இருந்து அகழ்ந்து மீட்கப்படுகின்றன எனக் கருதப்படும் நிலையில், அவற்றை அடையாளம் காண்பதற்கான ஒரு திருப்புமுனையாக இந்த விசாரணை அறிக்கை விபரம் அமையும் என்று கருதப்படுகின்றது. இந்த விசாரணை அறிக்கையின் ஒரு பிரதியைத் தம் கைவசம் பெற்றுள்ள இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், அதனை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மூலம் அதன் உத்தியோகபூர்வ இணையத்தில் வெளியிடச் செய்யும் அழுத்தத்தைக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றார் எனவும் தெரிகின்றது. சுமார் 210 பக்கங்கள் கொண்ட இந்த அறிக்கை பலர் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பான விசாரணைகளின் சுருக்க விபரங்களையும் உள்ளடக்கி இருக்கின்றது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/http:/localhost:8080%20%20%20#%20Development%20base%20URL/article/318991
  21. கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பா? கொலையுண்ட மஹ்தியின் சகோதரர் பதில் படக்குறிப்பு, நிமிஷா பிரியா (இடது) மற்றும் தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா மஹ்தி 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஏமனில் இந்திய செவிலியர் நிமிஷா பிரியாவின் மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், பிபிசி அரபு சேவை நிமிஷா பிரியாவின் முன்னாள் தொழில் கூட்டாளியான, கொலையுண்ட தலால் அப்தோ மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா மஹ்தியுடன் பேசியது. தலால் அப்தோ மஹ்தி கொலை வழக்கில் நிமிஷா குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு, ஜூலை 16ஆம் தேதி அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்தது. ஆனால், அவரது மரண தண்டனையை ஏமனின் உள்ளூர் நிர்வாகம் ஒத்திவைத்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தலால், நிமிஷாவை கொடுமைப்படுத்தியதாகவும், அவரது பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டதாகவும், நிமிஷா பிரியாவின் வழக்கறிஞர் முன்வைத்த குற்றச்சாட்டுகளை அப்தெல் ஃபத்தா மஹ்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார். 2017ஆம் ஆண்டில், தலால் மஹ்தியின் உடல் ஒரு தண்ணீர் தொட்டியில் இருந்து மீட்கப்பட்டது. 36 வயதான நிமிஷா தற்போது ஏமன் தலைநகர் சனாவின் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மஹ்திக்கு 'அதிகப்படியான மயக்க மருந்து' கொடுத்து கொலை செய்து, பின்னர் உடலை துண்டாக்கியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுகளை நிமிஷா மறுத்தார். மஹ்தி, நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டதாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார். நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பு தரப்படுமா? இப்போது தலால் மஹ்தியின் சகோதரர் அப்தெல் ஃபத்தா மஹ்தி, "தலால், நிமிஷாவின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்தார், அவரை மிரட்டினார் என்பன போன்ற குற்றச்சாட்டுகள் பொய்யானவை" என்று கூறியுள்ளார். "இது ஒரு தவறான கூற்று, இதற்கு எந்த அடிப்படையும் இல்லை" என்று அப்தெல் மஹ்தி கூறினார். "குற்றம்சாட்டப்பட்ட நிமிஷா கூட இதைக் குறிப்பிடவில்லை அல்லது தன்னுடைய பாஸ்போர்ட்டை அவர் (தலால் மஹ்தி) பறித்துக் கொண்டதாக கூறவில்லை" என்று அவர் கூறினார். தனது சகோதரர் தலால், நிமிஷாவை 'கொடுமைப்படுத்தியதாக' வந்த செய்திகள் வெறும் வதந்தி என்றும் அப்தெல் கூறினார். நிமிஷாவிற்கும் அவரது சகோதரர் தலாலுக்கும் இடையிலான உறவைப் பற்றி பேசிய அப்தெல் மஹ்தி, "இருவருக்கும் (தலால் மற்றும் நிமிஷா) இடையில் ஒரு இயல்பான உறவே இருந்தது" என்று கூறினார். "அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அறிந்துகொண்ட பிறகு, ஒரு கிளினிக் நடத்துவதற்கான தொழில் கூட்டாண்மையை முன்னெடுத்தனர். பின்னர் அவர்கள் திருமணம் செய்துகொண்டு, 3-4 ஆண்டுகள் வரை அந்த திருமண உறவில் இருந்தனர்" என்று அப்தெல் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "உண்மையை மறுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. கொலையாளியை பாதிக்கப்பட்டவராக சித்தரித்து, ஒரு குற்றத்தை நியாயப்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படுகிறது" என்று அவர் கூறினார். இந்த வழக்கில் 'சமரசம்' குறித்த கேள்விக்கு, அதாவது நிமிஷா பிரியாவை மன்னிப்பது குறித்து பேசிய அப்தெல், "அவரை மன்னிப்பதற்கான முயற்சிகள் குறித்த எங்கள் கருத்து மிகவும் தெளிவாக உள்ளது. இந்த வழக்கில் 'கடவுளின் சட்டம்' செயல்படுத்தப்பட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதை விடக் குறைவான எதையும் நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்." என்றார். படக்குறிப்பு, நிமிஷா 2011ஆம் ஆண்டு டோமி தாமஸை திருமணம் செய்து கொண்டார். நிமிஷாவுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதற்கான தேதி முன்னதாக ஜூலை 16 ஆம் தேதி (புதன்கிழமை) என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. பிபிசி ஹிந்தியின் பத்திரிகையாளர் இம்ரான் குரேஷியின் கூற்றுப்படி, "இந்திய அதிகாரிகள் நிமிஷாவைக் காப்பாற்ற ஏமனின் சிறை நிர்வாகம் மற்றும் வழக்கு விசாரணை அலுவலகத்துடன் தொடர்பில் இருந்தனர். இதன் காரணமாக இந்த மரண தண்டனை தேதி தற்போதைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது." மரண தண்டனை குறித்த அறிவிப்பு வெளியான பிறகு, இந்த விஷயத்தில் நடவடிக்கை எடுக்குமாறு நிமிஷாவின் குடும்பத்தினர் இந்திய அரசிடம் முறையிட்டனர். இதன் பின்னர், இந்திய அரசாங்கம் நிமிஷா குடும்பத்திற்கு அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தது. சமீப காலங்களில், இரு தரப்பினருக்கும் (மஹ்தி மற்றும் நிமிஷா) இடையே ஒரு பரஸ்பர உடன்பாட்டை எட்ட கூடுதல் அவகாசம் கிடைக்க உதவும் வகையில் அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டது. நேற்று (ஜூலை 15), பிபிசி தமிழிடம் பேசிய ஏமனில் நிமிஷா வழக்கை கையாளும் அதிகாரம் பெற்றவரான சாமுவேல் ஜெரோம், "எல்லாம் நேர்மறையான திசையில் நகர்கிறது. இன்று (ஜூலை 15) இறுதிக்குள் சில நல்ல செய்திகள் வரக்கூடும். ஆனால் அது நிமிஷாவின் மரண தண்டனை ரத்து செய்யப்பட்ட செய்தியாக இருக்காது. மரண தண்டனை நிறைவேற்றப்படும் நாள் மட்டுமே ஒத்திவைக்கப்படும்" என்று தெரிவித்திருந்தார். மேலும், "இதுவரை மஹ்தியின் குடும்பத்தினர் நிமிஷாவை மன்னிக்கவில்லை. அவர்கள் மன்னித்தால் மட்டுமே மரண தண்டனையை ரத்து செய்ய முடியும். தற்போது, மரணதண்டனை நிறைவேற்றும் நாளை ஒத்திவைப்பது மட்டுமே எங்களுக்கு இருக்கும் வழி, இது மஹ்தி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க எங்களுக்கு அதிக அவகாசம் கொடுக்கும்" என்றும் அவர் கூறியிருந்தார். ஜூலை 14, திங்கட்கிழமை, கேரளாவில் மிகவும் மதிக்கப்படும் மற்றும் செல்வாக்கு மிக்க முஸ்லிம் மதகுருவான கிராண்ட் முஃப்தி ஏ.பி. அபுபக்கர் முஸ்லியார், நிமிஷா பிரியா வழக்கு தொடர்பாக 'ஏமனைச் சேர்ந்த சில ஷேக்குகளுடன் பேசினார். உச்ச நீதிமன்ற வழக்கறிஞரும் சேவ் நிமிஷா பிரியா கவுன்சில் உறுப்பினருமான சுபாஷ் சந்திரா பிபிசி ஹிந்தியிடம், "சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்ஷன் கவுன்சிலின் உறுப்பினர்கள் கிராண்ட் முஃப்தியைச் சந்தித்தனர். அதன் பிறகு அவர், அங்குள்ள (ஏமன்) சில செல்வாக்கு மிக்க ஷேக்குகளுடன் பேசினர்" என்று கூறினார். "மஹ்தியின் உறவினர்கள் உள்பட, ஏமனில் செல்வாக்கு மிக்கவர்கள் கலந்து கொள்ளும் ஒரு கூட்டம் கூட்டப்பட்டுள்ளதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது" என்றும் சுபாஷ் சந்திரா கூறினார். மரண தண்டனை ஏன்? படக்குறிப்பு, நிமிஷா பிரியாவின் கணவர் 2014 ஆம் ஆண்டு மகளுடன் கொச்சிக்குத் திரும்பினார். கேரளாவின் பாலக்காட்டைச் சேர்ந்த நிமிஷா பிரியா, கடந்த 2008ஆம் ஆண்டு ஏமன் நாட்டிற்கு செவிலியர் பணிக்குச் சென்றார். அங்கிருந்த சில மருத்துவமனைகளில் பணிபுரிந்த அவர், 2011ஆம் ஆண்டு கேரளாவுக்கு திரும்பி வந்து டோமி தாமஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு ஒரு மகள் உள்ளார். டோமி தாமஸும், நிமிஷாவின் மகளும் இப்போது கேரளாவில் வசித்து வருகின்றனர். நிமிஷா 2015ஆம் ஆண்டில், ஏமன் நாட்டைச் சேர்ந்த தலால் அப்தோ மஹ்தி என்பவருடன் இணைந்து ஒரு மருத்துவமனையைத் தொடங்கினார். 2017ஆம் ஆண்டு ஒரு தண்ணீர் தொட்டியில் மஹ்தியின் உடல் கண்டெடுக்கப்பட்டது. மஹ்தியின் துண்டாக்கப்பட்ட உடல் தண்ணீர் தொட்டியில் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாதம் கழித்து சௌதி அரேபியாவை ஒட்டிய ஏமன் எல்லையில் நிமிஷா கைது செய்யப்பட்டார். மஹ்திக்கு 'அதிகப்படியான மயக்க மருந்து' கொடுத்து கொலை செய்ததாகவும், அவரது உடலை அப்புறப்படுத்த முயன்றதாகவும் நிமிஷா மீது குற்றம் சாட்டப்பட்டது. மஹ்தி நிமிஷாவை உடல் ரீதியாக சித்திரவதை செய்ததாகவும், அவரது பணத்தை எல்லாம் பறித்ததாகவும், பாஸ்போர்ட்டை பறித்துக் கொண்டதாகவும், துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகவும் நிமிஷாவின் வழக்கறிஞர் வாதிட்டார். தனது பாஸ்போர்ட்டை மஹ்தியிடம் இருந்து மீட்கவே, அவருக்கு நிமிஷா மயக்க மருந்து கொடுத்தார் என்றும் ஆனால் தவறுதலாக மருந்தின் அளவு கூடிவிட்டது என்ற வாதமும் முன்வைக்கப்பட்டது. நிமிஷாவை காப்பாற்ற ஒரே வழி மஹ்தியின் குடும்பத்தினர் நிமிஷாவை மன்னிப்பதே ஆகும். நிமிஷாவின் குடும்பத்தினரும் ஆதரவாளர்களும், 1 மில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் ரூபாய் 8.59 கோடி) வரை தியா அல்லது 'ப்ளட் மணி' ஆக மஹ்தியின் குடும்பத்திற்கு வழங்க முன்வந்துள்ளனர். ஆனால் இந்தத் தொகையை ஏற்றுக்கொண்டு நிமிஷாவை மஹ்தியின் குடும்பத்தினர் மன்னித்தால் மட்டுமே அவரது விடுதலை சாத்தியமாகும். ஏமன் உச்ச நீதிமன்றத்தில் நிமிஷா பிரியா தரப்பு மனு நிராகரிப்பு படக்குறிப்பு, நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, 2024 ஏப்ரல் முதல் ஏமனில் இருக்கிறார். 2020ஆம் ஆண்டு, ஏமன் உள்ளூர் நீதிமன்றம் நிமிஷாவுக்கு மரண தண்டனை விதித்தது. அவரது குடும்பத்தினர் இந்த முடிவை எதிர்த்து ஏமன் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர், ஆனால் அவர்களின் மேல்முறையீடு 2023இல் நிராகரிக்கப்பட்டது. ஜனவரி 2024 இல், ஏமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்களின் உச்ச அரசியல் கவுன்சிலின் தலைவரான மஹ்தி அல்-மஷாத், நிமிஷாவின் மரண தண்டனையை அங்கீகரித்தார். ஏமனின் 'ஷரியா' என்று அழைக்கப்படும் இஸ்லாமிய சட்ட அமைப்பின் கீழ், இப்போது ஒரே ஒரு இறுதி வழி மட்டுமே உள்ளது. பாதிக்கப்பட்டவரின் (மஹ்தி) குடும்பம் விரும்பினால், 'தியா' (Blood Money) பணத்தைப் பெற்று அவர்கள் நிமிஷாவை மன்னிக்கலாம். நிமிஷாவின் தாயார் பிரேமா குமாரி, 2024 ஏப்ரல் முதல் ஏமனில் இருக்கிறார். தனது மகளைக் காப்பாற்ற தன்னால் முடிந்த அனைத்தையும் அவர் செய்து வருகிறார். மஹ்தியின் குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்த ஏமனில் வசிக்கும் சமூக ஆர்வலரான சாமுவேல் ஜெரோமிற்கு அவர் அதிகாரமளித்துள்ளார். 'சேவ் நிமிஷா பிரியா இன்டர்நேஷனல் ஆக்‌ஷன் கவுன்சில்' என்ற குழு பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டி பணம் சேகரிக்கிறது. அதன் மூலம், மஹ்தியின் குடும்பத்திற்கு 1 மில்லியன் டாலர்கள் வரை வழங்க தயாராக இருப்பதாக சாமுவேல் ஜெரோம் கூறியுள்ளார். இந்திய அரசு என்ன செய்தது? கடந்த ஆண்டு டிசம்பரில், நிமிஷாவின் குடும்பத்தினர் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிடுமாறு இந்திய அரசிடம் முறையிட்டனர். இந்த விஷயத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு அறிக்கையை வெளியிட்டு, சாத்தியமான அனைத்து உதவிகளையும் செய்வதாக உறுதியளித்தது. இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால், "ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறித்து எங்களுக்குத் தெரியும். நிமிஷாவின் குடும்பத்தினர் அவரை மீட்க சாத்தியமான அனைத்து வழிகளையும் ஆராய்ந்து வருவதை நாங்கள் புரிந்துகொள்கிறோம்" என்று கூறியிருந்தார். "இந்த விஷயத்தில் இந்திய அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது" என்று ஜெய்ஸ்வால் கூறியிருந்தார். கடந்த ஆண்டு டிசம்பரில், மஹ்தி குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை மூலம் மன்னிப்பு பெறுவதற்கான முயற்சிகள் தோல்வியடைந்ததை அடுத்து, மரண தண்டனை குறித்த அறிவிப்பு வெளியானதாக ஊடக செய்திகள் தெரிவித்தன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgwed177rwo
  22. இங்கிலாந்து அணியில் முக்கிய மாற்றம் இந்திய அணியுடனான நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணியில் லியாம் டாசன் சேர்க்கப்பட்டுள்ளார். இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில், 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலையில் உள்ளது. இதனைத் தொடர்ந்து, 4ஆவது போட்டி மான்செஸ்டரில் வரும் 23-ஆம் தேதி தொடங்க உள்ளது. இந்தப் போட்டிக்கான அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. காயம் காரணமாக விலகிய சுழற்பந்துவீச்சாளர் ஷோயப் பஷீருக்குப் பதிலாக லியாம் டாசன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். 35 வயதான டாசன் 3 டெஸ்ட் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். உள்ளூர் முதல்தர போட்டிகளில் அசத்தியதால் இந்த வாய்ப்பு அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மற்றபடி ஆடும் லெவனில் பெரிய மாற்றம் செய்யப்படவில்லை. மேலும் இந்திய அணியில் பும்ரா மற்றும் ரிஷப் பண்ட் விளையாட மாட்டார்கள் என கூறப்பட்டுள்ளது. மேலும் கருண் நாயருக்கு பதிலாக சாய் சுதர்ஷன் அணிக்கு திரும்பலாம் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது. இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜோஃப்ரா ஆர்ச்சர், கஸ் அட்கின்சன், ஜேக்கப் பெத்தேல், ஹாரி புரூக், பிரைடன் கார்ஸ், ஜாக் கிராலி, லியாம் டாசன், பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஜேமி ஸ்மித், ஜோஷ் டோங், கிறிஸ் வோக்ஸ் https://thinakkural.lk/article/319001
  23. டெஸ்ட்களில் இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கைக்கு சரிந்தது மேற்கிந்தியத் தீவுகள்; ஸ்டாக் அதிவேக 5 விக்கெட்கள் 15 JUL, 2025 | 05:34 PM (நெவில் அன்தனி) டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மேற்கிந்தியத் தீவுகள் இரண்டாவது மிகக் குறைந்த எண்ணிக்கையான 27 ஓட்டங்களுக்கு சரிந்ததுடன் அவுஸ்திரேலிய வேகபந்து வீச்சாளர் மிச்செல் ஸ்டாக் 15 பந்துகளில் 5 விக்கெட்களைக் கைப்பற்றி வேகமாக 5 விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனைக்கு உரித்தானார். துடுப்பாட்ட வீரர்களுக்கு சிம்மசொப்பனமாகத் திகழ்ந்த மிச்செல் ஸ்டாக், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் பந்தவீச்சுக்கான அபூர்வ சாதனையை நிலைநாட்டினார். ஜெமெய்க்கா கிங்ஸ்டன் சபினா பார்க் விளையாட்டரங்கில் நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 176 ஓட்டங்களால் இலகுவாக வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா தொடரை 3 - 0 என முழுமையாக கைப்பற்றியது. அவுஸ்திரேலியாவினால் நிர்ணயிக்கப்பட்ட 204 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் 14.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 27 ஓட்டங்களுக்கு சுருண்டது. இங்கிலாந்துக்கு எதிராக ஆக்லண்டில் 1955ஆம் ஆண்டு நியூஸிலாந்து பெற்ற மிகக் குறைந்த 26 ஓட்டங்கள் என்ற மொத்த எண்ணிக்கையை விட ஒரு ஓட்டம் அதிகமாக மேற்கிந்தியத் தீவுகள் பெற்றது. மிச்செல் ஸ்டார்க் தனது முதலாவது ஓவரில் 3 விக்கெட்களையும் 3ஆவது ஓவரின் முதல் 3 பந்துகளில் 3 விக்கெட்களையும் வீழ்த்தியதன் மூலம் 15 பந்துகளில் 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இன்னிங்ஸில் ஒன்றில் வேகமாக (குறைந்த பந்துகளில்) 5 விக்கெட்களை வீழ்த்தியவர் என்ற சாதனையை மிச்செல் ஸ்டாக் நிலைநாட்டினார். மேலும் மேற்கிந்தியத் தீவுகளின் இரண்டாவது இன்னிங்ஸில் 7 வீரர்கள் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தனர். டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஒரே இன்னிங்ஸில் 7 வீரர்கள் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தது இதுவே முதல் தடவையாகும். மேற்கிந்தியத் தீவுகளின் இரண்டாவது இன்னிங்ஸில் மிக்காய்ல் லூயிஸின் விக்கெட்டைக் கைப்பற்றியதன் மூலம் மிச்செல் ஸ்டாக், 400 டெஸ்ட் விக்கெட்களைப் பூர்த்திசெய்தார். மிச்செல் ஸ்டாக் 400ஆவது விக்கெட்டை தனது 100ஆவது டெஸ்ட் போட்டியில் கைப்பற்றியது விசேட அம்சமாகும். இதேவேளை, ஸ்டாக்குக்கு பக்கபலமாக பந்துவிசிய ஸ்கொட் போலண்ட், ஹெட் - ட்ரிக் முறையில் விக்கெட்களைக் கைப்பற்றி சாதனை படைத்தார். அவுஸ்திரேலியா சார்பாக டெஸ்ட் போட்டியில் ஹெட் ட்ரிக் சாதனை புரிந்த 10ஆவது பந்துவீச்சாளர் போலண்ட் ஆவார். மூன்று நாட்களுக்குள் முடிவடைந்த இந்த டெஸ்ட் போட்டியில் சகலரும் ஆட்டம் இழந்த நான்கு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 516 ஓட்டங்கள் மாத்திரமே பெறப்பட்டது. அத்துடன் இந்தப் போட்டியில் ஒருவர் கூட அரைச் சதம் பெறவில்லை. எண்ணிக்கை சுருக்கம் அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 225 (ஸ்டீவன் ஸ்மித் 48, கெமரன் க்றீன் 46, பெட் கமின்ஸ் 24, ஷமார் ஜோசப் 33 - 4 விக்., ஜஸ்டின் க்றீவ்ஸ் 56 - 3 விக்., ஜேடன் சீல்ஸ் 59 - 3 விக்.) மேற்கிந்தியத் தீவுகள்: 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 143 (ஜோன் கெம்பெல் 36, ஷாய் ஹோப் 23, ஸ்கொட் போலண்ட் 34 - 3 விக்., பெட் கமின்ஸ் 24 - 2 விக்., ஜொஷ் ஹேஸ்ல்வூட் 32 - 2 விக்.) அவுஸ்திரேலியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 121 (கெமரன் க்றீன் 42, ட்ரவிஸ் ஹெட் 16, அல்ஸாரி ஜோசப் 27 - 5 விக்., ஷமார் ஜோசப் 34 - 4 விக்.) மேற்கிந்தியத் தீவுகள் - வெற்றி இலக்கு 204 ஓட்டங்கள் - 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 27 (ஜஸ்டின் க்றீவ்ஸ் 11, மிச்செல் ஸ்டாக் 7.3 - 4 - 9 - 6 விக்., ஸ்கொட் போலண்ட் 2 - 3 விக்.) ஆட்டநாயகன்: மிச்செல் ஸ்டாக் (9 விக்கெட்கள்) தொடர்நாயகன்: மிச்செல் ஸ்டாக் (15 விக்கெட்கள்) https://www.virakesari.lk/article/220077
  24. செவிலியர் சேவையில் ஆர்வமுள்ளவர்களுக்கு சூப்பர் செய்தி! செவிலியர் சேவையில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்காக 2020 முதல் 2022 வரையிலான க.பொ.த உயர்தரப் பரீட்சையில் சித்தி பெற்ற 2,650 மாணவர்களையும், செவிலியர் பட்டம் பெற்ற 850 பட்டதாரிகளையும் ஆட்சேர்ப்பு செய்ய இரண்டு வர்த்தமானி அறிவித்தல்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (18) வெளியிடப்படும் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். இன்று (15) இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். அமைச்சர் மேலும் கருத்து தெரிவிக்கையில், "உண்மையில், எங்களுக்கு செவிலியர் பற்றாக்குறை உள்ளது. வடக்கில் மட்டும், 33 பிராந்திய வைத்தியசாலைகளில் செவிலியர்கள் இல்லை. 2020, 2021 மற்றும் 2022 க.பொ.த உயர்தரப் பரீட்சைகளுக்குத் தோற்றிய 2,650 மாணவர் செவிலியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வர்த்தமானி அறிவிப்பை இந்த வெள்ளிக்கிழமை (18) நாங்கள் அங்கீகரித்து வெளியிடுகிறோம். எனவே, இந்தப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அவர்களுக்கு வாய்ப்பு உள்ளது. கூடுதலாக, கடந்த காலத்தில் செவிலியர் பட்டம் பெற்ற 875 பட்டதாரிகளை பொது சேவையில் இணைத்துக் கொள்ள உள்ளோம். அதற்கான வர்த்தமானி அறிவித்தல் 18 ஆம் திகதி வெளியிடப்படும். அதன்படி, பயிற்சி பெறுபவர்களில் ஒரு பகுதியினருக்கும், AL சித்தி பெற்றவர்களில் ஒரு பகுதியினருக்கும் பயிற்சியைத் ஆரம்பிக்க எதிர்வரும் வெள்ளிக்கிழமை வர்த்தமானி அறிவித்தல்களை வெளியிடவுள்ளோம்" என்றார். https://adaderanatamil.lk/news/cmd4bdc4l0176qp4k7rfi2izs
  25. ஆக்கிரமிக்கப்பட்டுவரும் பாலஸ்தீனத்தில் உணவின்றி உயிருக்காகப் போராடிவரும் காசா பகுதி மக்களுக்கு ஐ.நா. முயற்சியால் உலக உணவுத் திட்ட உதவி வழங்கப்படுகிறது. இதில், இஸ்ரேல், அமெரிக்கா வழியாக வழங்கப்படும் உணவுப்பைகளில் போதை மருந்துகளும் சேர்த்து அனுப்பப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. பாலஸ்தீனத்தில் பணியாற்றிவரும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் இதைக் கண்டுபிடித்து வெளி உலகத்துக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். காசா அரசு ஊடகமும் இச்செய்தியை உறுதிப்படுத்தியுள்ளது. காசா முனைப் பகுதியில் பொது மக்களுக்கு வழங்கப்பட்ட நான்கு உணவுப் பைகளில் மாவுக்குள் இந்த போதை மாத்திரைகளை மறைத்துவைத்து அனுப்பியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டு, அரசு நிர்வாகத்துக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. போரால் பாலஸ்தீனத்தை அழித்துவரும் இஸ்ரேல் இராணுவ அரசு, பாலஸ்தீன அப்பாவி மக்களை போதைக்கு அடிமையாக்கும் அருவருக்கத்தக்க கொடூர செயலில் ஈடுபட்டிருப்பது அதன் இனப்படுகொலை வன்மத்தை வெளிப்படுத்துகிறது என்று காசா அரசு நிர்வாக அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/318802

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.