Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி என கூறி நிதி மோசடி; பொதுமக்களுக்கு எச்சரிக்கை! 18 JUL, 2025 | 10:30 AM இலங்கைக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் அதிகாரி என கூறி பொதுமக்களை ஏமாற்றி நிதி மோசடியில் ஈடுபடும் சந்தேக நபர் குறித்து எச்சிரிக்கையாக இருக்குமாறு ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபடும் சந்தேக நபர் இளம் தொழில்முனைவாளர்ளை அணுகி, ஐரோப்பிய ஒன்றியத்தின் மூலம் நிதியுதவிகள் மற்றும் மானியங்கள் வழங்கப்படும் என பொய்யான வாக்குறுதிகளை அளித்து பண மோசடியில் ஈடுப்பட்டுவருவதாக பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. நிதியுதவியை எளிதாக்க மூன்றாம் தரப்பு முகவர்களை ஈடுபடுத்துவதில்லை என்றும், மானிய விண்ணப்பங்கள் அல்லது கொள்முதல்கள், கேள்விப்பத்திரங்களைச் செயலாக்குவதற்கு தனி நபர்கள் அல்லது அமைப்புகளிடமிருந்து பணம் கோருவதில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது. பொதுமக்கள் அனைவரும் இவ்வாறான நபர்களிடம் இருந்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும், இதுபோன்ற ஏமாற்று செயல்கள் தொடர்பில் உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறைப்பாடு அளிக்க வேண்டும் என்றும் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/220277
  2. படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாகாணமான மத்திய குயின்ஸ்லாந்து கட்டுரை தகவல் மோனிகா கார்ன்சி & பிபிசி ஐ புலனாய்வுப் பிரிவு‎ 17 ஜூலை 2025 ஆஸ்திரேலியாவின் இரண்டாவது பெரிய மாகாணமான மத்திய குயின்ஸ்லாந்தில் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி நிலத்தின் தூசி நிறைந்த பகுதியில், 1,300 நாட்களுக்கும் மேலாக, பாரம்பரிய சடங்கு முறைப்படி நெருப்பு எரிந்து வருகிறது. நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போராட்டத்தின் தளத்தை இந்தச் சுடர் குறிக்கிறது. உள்ளூர்ப் பழங்குடி சமூகத்தின் ஒரு பகுதிக்கும், நாட்டின் சர்ச்சைக்குரிய சுரங்கத் திட்டங்களில் ஒன்றான கார்மைக்கேல் நிலக்கரிச் சுரங்கத்திற்கும் இடையிலான நீண்டகால மோதலின் மையமாக இந்தப் போராட்டம் அமைந்துள்ளது. உள்ளூரில் பிராவஸ் என்ற பெயரில் இயங்கும் இந்தியாவின் அதானி குழுமத்திற்குச் சொந்தமான இந்தச் சுரங்கம் சாலையின் மறுபுறம் தான் அமைந்துள்ளது. இது வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) மக்களின் பாரம்பரிய நிலத்தில் அமைந்துள்ளது. ஏட்ரியன் பர்ரகுப்பா மற்றும் அவரது மகன் கோடி மெக்காவோய், பிராவஸ் சுரங்க நிறுவனத்திற்கு எதிராக நீண்ட காலமாகப் போராடி வருகின்றனர். அவர்கள் இதை ஓர் ஆன்மீக நிலைப்பாடாகவும், கலாசாரத்தைப் பாதுகாக்கும் போராட்டமாகவும் கருதுகின்றனர். "என் நிலத்தில் ஒரு சுரங்கம் என் நாட்டை அழிக்க முயல்கிறது. அந்த நாடுதான் என் வரலாற்றையும், நான் யார் என்பதையும், என் மூதாதையர்கள் பற்றிய அறிவையும் தெரிந்துகொள்ளும் பாதை" என்று கூறுகிறார் ஏட்ரியன். இவர்களுடைய போராட்டத்தின் மையத்தில் தூங்கமபுல்லா நீரூற்றுகள் உள்ளன. இது வானவில் பாம்பு முண்டகுட்டாவால் உருவாக்கப்பட்ட புனித இடம் என்று வாங்கன் மற்றும் ஜகலிங்கோ மக்கள் நம்புகின்றனர். பழங்குடிக் கதைகளில் நீர், நிலம் மற்றும் படைப்புடன் தொடர்புடைய சக்தி வாய்ந்த மூதாதையர் என முண்டகுட்டா கருதப்படுகிறார். ஹைட்ரோகார்பன் தடயங்கள் தூங்கமபுல்லா நீரூற்றுகள், வறண்ட நிலத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் ஒரு பெரிய நிலத்தடி நீர் அமைப்புடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை கலிலி படுகையின் மேல் அமைந்துள்ளன. உலகின் மிகப்பெரிய பயன்படுத்தப்படாத நிலக்கரி இருப்புகளில் ஒன்றுதான் கலிலி படுகை. இது 247,000 சதுர கி.மீ. பரப்பளவில், 30 பில்லியன் டன்களுக்கு மேல் நிலக்கரியைக் கொண்டுள்ளது. மெல்போர்னில் உள்ள கிரிஃபித் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆஸ்திரேலியாவின் முன்னணி நீர்ப் புவியியலாளர்களில் ஒருவரான பேராசிரியர் மேத்யூ குர்ரெல் உள்பட சில விஞ்ஞானிகள், இந்த இடம் சுற்றுச்சூழல் ரீதியாக முக்கியத்துவம் வாய்ந்தது மற்றும் பாதிக்கப்படக் கூடியது என்று கூறுகின்றனர். "நாங்கள் சில விஷயங்களை கவனித்தோம். அவ்வப்போது அந்த ஊற்று நீரில் ஹைட்ரோகார்பன்கள் கண்டறியப்பட்டன" என்று பல ஆண்டுகளாக அந்தப் பகுதியை ஆய்வு செய்து வரும் கல்வியாளர் குர்ரெல் கூறுகிறார். "சுரங்கம் தொடங்கிய பிறகுதான் ஹைட்ரோகார்பன்கள் அதிகமாகிவிட்டன என்றால், அதற்கான காரணத்தை விளக்க வேண்டும். இது சுரங்க நடவடிக்கைகளுடன் தொடர்புடையதாக இருந்தால், ஊற்று நீரின் தரம் உடனடியாக அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்பதற்கான எச்சரிக்கை இது." மேலும், "சுரங்கத்தால் ஏற்படும் தாக்கம், அனுமதி அளிக்கப்பட்டபோது கணிக்கப்பட்டதைவிட அதிகமாக இருப்பதற்கான அறிகுறிகளை நாங்கள் காண்கிறோம். இதனால், அந்த அனுமதியை முழுமையாக மறு மதிப்பீடு செய்ய வேண்டும்," என்று அவர் வலியுறுத்துகிறார். சுரங்க நடவடிக்கைகள், நிலத்தடி நீரில் முதலில் எதிர்பார்த்ததைவிட அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதற்கான பல புதிய சான்றுகள் தற்போது வெளியாகி வருகின்றன. படக்குறிப்பு, நிலத்தடி நீரில் முதலில் எதிர்பார்த்ததைவிட இது அதிக தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதற்கான பல புதிய சான்றுகள் தற்போது வெளியாகி வருகின்றன. பேராசிரியர் மேத்யூ குர்ரெல் மற்றும் டாக்டர் ஆங்கஸ் கேம்ப்பெல் இணைந்து எழுதி, 2024இல் மதிப்பாய்வு செய்யப்பட்ட ஆய்வு, அதானி/பிராவஸின் நிலத்தடி நீர் மாதிரியாக்கம் குறித்து கவலைகளை எழுப்பியுள்ளது. பிராவஸ் இந்தக் கண்டுபிடிப்புகளை நிராகரித்து, ஆய்வின் ஆசிரியர்களில் சிலர் நிலக்கரிக்கு எதிராகப் பிரசாரம் செய்பவர்கள் என்று குற்றம் சாட்டியது. ஆனால், அந்த ஆய்வின் ஆசிரியர்கள் இந்தக் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். கார்மைக்கேல் சுரங்கம் நிலத்தடி நீரில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்த அதானியின் பகுப்பாய்வை, ஆஸ்திரேலியாவின் தேசிய அறிவியல் முகமை (CSIRO) 2023இல் மதிப்பாய்வு செய்தது. இந்த மதிப்பாய்வு, நடந்து கொண்டிருக்கும் ஒரு நீதிமன்ற வழக்கில் ஆராயப்படும் ஆதாரங்களின் ஒரு பகுதியாக உள்ளது. அதானி குழுமத்தின் மாதிரிகள், நீரூற்றுகளில் சுரங்கத்தின் தாக்கத்தை மதிப்பிடுவதற்கு "ஏற்றவை அல்ல" என்று அந்த மதிப்பாய்வு முடிவுகள் கூறுகின்றன. கடந்த 2023இல், அதானி/பிராவஸின் நிலத்தடி நீர் கண்காணிப்புத் தரவுகளை மதிப்பாய்வு செய்த பிறகு, தூங்கமபுல்லா நீரூற்றுகளில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்த நிச்சயமற்ற தன்மை காரணமாக, அரசு அவர்களின் நிலத்தடி சுரங்கத் திட்டத்தைத் தடை செய்தது. இந்தத் தடையை எதிர்த்து அதானி நிறுவனம் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. சுற்றுச்சூழல் ரீதியாகவும், சட்ட ரீதியாகவும் தரநிலைகளை முழுமையாகப் பின்பற்றியதாகவும் அந்நிறுவனம் வலியுறுத்துகிறது. "நாங்கள் நிலத்தடி நீர் விதிமுறைகளை மீறவில்லை. தற்போது செய்யும் அல்லது எதிர்காலத்தில் செய்ய அனுமதிக்கப்பட்ட சுரங்க நடவடிக்கைகளால் தூங்கமபுல்லா நீரூற்றுக்கு எந்த ஆபத்தும் இல்லை" என்று பிராவஸ் பிபிசிக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது. "நீரூற்றுகளின் கலாசார, சுற்றுச்சூழல் மதிப்புகளைப் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று குயின்ஸ்லாந்து சுற்றுச்சூழல் அமைச்சர் ஆண்ட்ரூ பவல் பிபிசியிடம் தெரிவித்தார். பிளவுபட்ட சமூகம் படக்குறிப்பு, ஏட்ரியன் பர்ரகுப்பா, அவரது மகன் கோடி மெக்காவோய் ஆகியோர் சுரங்கம் தங்கள் புனித நீராதாரத்தை அச்சுறுத்துவதாகக் கூறுகின்றனர். கார்மைக்கேல் சுரங்கத்திற்கு ஒப்புதல் அளித்த அரசாங்கத்தின் முடிவு, ஆஸ்திரேலியாவை கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளாக இரு துருவங்களாகப் பிரித்துள்ளது. ஏட்ரியன் பர்ரகுப்பா மற்றும் அவரது குடும்பத்தினர், இந்தச் சுரங்கம் தூங்கமபுல்லா நீரூற்றுகள் போன்ற புனித நீர் ஆதாரங்களை அச்சுறுத்துவதாகக் கூறுகின்றனர். பழங்குடி ஆஸ்திரேலியர்கள் தங்கள் மூதாதையர் தாயகத்தை "நாடு" என்று அழைக்கின்றனர். ஆனால், இந்தச் சுரங்கம், தங்கள் உரிமைகளையும், கலாசாரத்தையும், நிலத்துடனான தொடர்பையும் புறக்கணிப்பதாக அவர்கள் வாதிடுகின்றனர். கடந்த 2007இல் ஏற்றுக்கொள்ளப்பட்ட பழங்குடி மக்களின் உரிமைகள் குறித்த ஐ.நா. பிரகடனம், "சுரங்கம் போன்ற நில உரிமைகளைப் பாதிக்கும் திட்டங்களுக்கு முன், சுதந்திரமான, முன்கூட்டிய மற்றும் தகவலறிந்த ஒப்புதலைப் பெற வேண்டும்" என்று கூறுகிறது. இது சட்டப்பூர்வமாகப் பிணைக்கப்படவில்லை என்றாலும், மாநிலங்களுக்கும் பழங்குடி மக்களுக்கும் இடையிலான உறவில் நல்லிணக்கம் ஏற்படுவதற்கான ஒரு கட்டமைப்பாக உள்ளது. கார்மைக்கேல் சுரங்கம், காலநிலை விவாதத்தில் ஒரு முக்கியப் புள்ளியாக உள்ளது. இதற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்களை நடக்கின்றன. அதே நேரம், உள்ளூர் சுரங்க சமூகங்கள் இதற்கு வலுவான ஆதரவு அளிக்கின்றன. குயின்ஸ்லாந்து அரசு, இந்தத் திட்டம் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் மற்றும் ஏற்றுமதியை அதிகரிக்கும் போன்ற காரணங்களால் அனுமதி வழங்கியது. ஆஸ்திரேலியா, உலகின் முன்னணி நிலக்கரி உற்பத்தியாளர்களில் ஒன்றாக உள்ளது. கார்மைக்கேல் சுரங்கம், ஆசிய-பசிபிக் பகுதிக்கு நிலக்கரியை ஏற்றுமதி செய்கிறது. இந்தப் பகுதியில் நிலக்கரிக்கான தேவை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் பல பொருளாதாரங்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கி நகர்கின்றன. சுரங்கத் தொழிலாளர்கள் பலர் வசிக்கும் நகரத்தில் 486 மில்லியன் டாலருக்கும் அதிகமாக முதலீடு செய்துள்ளதாக பிராவஸ் கூறுகிறது. ஆனால் மோசமான பணிச்சூழல் குறித்த குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. பத்திரிகையாளர் கிம் நுயென், கார்மைக்கேல் சுரங்கம் தொடர்பான செய்திகளைப் பல ஆண்டுகளாக வெளியிட்டு வருகிறார். "பாதுகாப்பற்ற தூசி அளவுகளுக்கு மத்தியில் நீண்டகாலமாக இருக்கிறோம், தரமற்ற உள்கட்டமைப்பில் வேலை செய்ய வற்புறுத்தப்படுகிறோம், எங்களுக்கு உள்ள கவலைகளைக் கூறும்போது, அச்சத்துடனேயே பணியிடச் சூழலை எதிர்கொள்கிறோம்" என்று அவரிடம் பேசிய சுரங்கத் தொழிலாளர்கள் கூறியுள்ளனர். படக்குறிப்பு, உலகின் மிகப்பெரிய பயன்படுத்தப்படாத நிலக்கரி இருப்புகளில் ஒன்றான கலிலி படுகைக்கு மேலே தூங்மாபுல்லா நீரூற்றுகள் அமைந்துள்ளன. குயின்ஸ்லாந்தின் சுரங்கப் பாதுகாப்பு ஒழுங்குமுறை ஆணையம், 2019 முதல் 2024 வரை 875 பக்கங்கள் மதிப்புள்ள கடுமையான விபத்து அறிக்கைகளை உறுதிப்படுத்தியது. ஆனால், சுரங்கத்தில் நிகழும் சம்பவங்களின் விகிதம் "தொழில்துறை சராசரிகளுடன் ஒத்துப் போவதாகக்" கூறியது. "எங்களிடம் பூஜ்ஜிய இறப்பு சாதனை உள்ளது. நாங்கள் உயர்வான தரநிலைகளைப் பராமரிக்கிறோம், அனைத்து சட்டங்களையும் கடைபிடிக்கிறோம். மக்கள் தங்கள் தனிப்பட்ட விவரங்களைக் குறிப்பிடாமலோ அல்லது நேரிலோ குறைகளை எழுப்ப ஊக்குவிக்கிறோம். அவை உடனடியாகத் தீர்க்கப்படுகின்றன" என்று பிராவஸ் பதிலளித்தது. மாநில அரசு, பழங்குடி மக்களின் ஒப்புதல் இல்லாமல் சுரங்கத்தை அங்கீகரிப்பதாக அறிவித்த பிறகு, 12 வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) குடும்பங்களில் ஏழு குழுக்கள், சமூக நிதிக்கு ஈடாக அதானியுடன் நில ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. "இது குடும்பங்களைப் பிளவு செய்துவிட்டது. நிலம் அழிக்கப்படுவது பற்றி மிகவும் வேதனையாக உணர்கிறேன். ஆனால், நாங்கள் சுரங்கத் திட்டத்திற்கு ஒப்புக்கொள்ளாவிட்டாலும், அவர்கள் எப்படியும் செயல்படுத்தியிருப்பார்கள். அதிலிருந்து எங்களால் என்ன பெற்றுக்கொள்ள முடிந்ததோ அதை பெற்றுக்கொண்டோம்" என்று வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) குழுவைச் சேர்ந்த ஜாக்கி ப்ரோடெரிக் எனும் பெண் கூறுகிறார். சிலர் இந்த நில ஒப்பந்தம் மிக உயர்ந்த விலை கொடுத்து வந்ததாக நம்புகின்றனர். "இந்த நாட்டில் சுரங்கம்தான் கடவுள். ஒரே ஒரு சுரங்கம் ஒரு முழு நாட்டையும் பிரித்துவிட்டது" என்கிறார் கோடி மெக்காவோய். "புதைபடிவ எரிபொருள் எதிர்ப்பு இயக்கத்தில் ஏட்ரியன் பர்ரகுப்பாவும் அவரது கூட்டாளிகளும் பல ஆண்டுகளாக எங்கள் நிறுவனத்தை இழிவுபடுத்தவும், குயின்ஸ்லாந்து மற்றும் ஆஸ்திரேலிய சட்டத்தின்படி, பாதுகாப்பாகவும், பொறுப்புடனும் செயல்பட்டு வரும் எங்கள் கார்மைக்கேல் சுரங்கத்தை நிறுத்தவும் முயன்றனர்" என்று ஓர் அறிக்கையில் பிராவஸ் கூறியது. நில உரிமை கோரிக்கை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி மக்கள் "தண்ணீரில் இருந்து வருவதாகவும்" அதை அடிப்படை ஆதாரமாகக் கருதுவதாகவும் கூறுகிறார்கள். கடந்த 1915இல், குயின்ஸ்லாந்தின் பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டம், பழங்குடி மக்களை அவர்களின் நிலத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்ற அனுமதித்தது. வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) மக்கள், 1,000 கி.மீ.க்கும் அதிகமான தொலைவுக்கு அனுப்பப்பட்டனர். குடும்பங்கள் பிரிக்கப்பட்டு, பழங்குடி கலாசாரத்தைப் பின்பற்றுவது தடை செய்யப்பட்டது. நிலத்துடனான நீடித்த தொடர்பை நிரூபித்தால், பழங்குடி மக்களுக்கு வரையறுக்கப்பட்ட நில உரிமைகளை 1993இல், பூர்வீக உரிமைச் சட்டம் வழங்கியது. இதில் சுரங்கத் திட்டங்களில் பேச்சுவார்த்தை நடத்தும் உரிமையும் அடங்கும். கடந்த 2004இல், வாங்கன் மற்றும் ஜகலிங்கோ பழங்குடி மக்கள் பூர்வீக உரிமைக்கான கோரிக்கையைப் பதிவு செய்தனர். இதன் மூலம், அதானி குழுமத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் உரிமை பெற்றனர். அதானி குழுமம் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு சலுகைகளை வழங்கியது. ஆனால், 2012 மற்றும் 2014இல் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை. எனவே, அதானி குழுமம் பழங்குடி ஒப்புதல் இல்லாமல், பூர்வீக உரிமை தீர்ப்பாயத்தின் மூலம் ஒப்புதல் கோரியது. கடந்த 2021ஆம் ஆண்டு, 17 வருட நீண்ட கால எதிர்பார்ப்புக்குப் பிறகு, வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) சமூகத்தின் பூர்வீக உரிமை கோரிக்கையை ஒரு நீதிபதி நிராகரித்தார். அந்தத் தீர்ப்பால், அவர்கள் எதிர்கால சுரங்க வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பான ஆலோசனைகளில் கலந்துகொள்வதற்கும், சுரங்கத் திட்டங்கள் தங்கள் நிலத்தைப் பாதிக்கும்போது இழப்பீடு பெறுவதற்குமான உரிமையை இழந்தனர். அதற்குக் காரணம், அவர்கள் நிலத்துடன் போதுமான தொடர்பு இருப்பதை சட்டரீதியாக நிரூபிக்கத் தவறியதாகக் கூறப்பட்டது. "ஒரு நீதிபதி இறுதியில், அந்தப் பகுதியில் பூர்வீக உரிமை இல்லை என்று தீர்மானித்தார். இப்போது, அந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்ய, ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றத்தில் 'சிறப்பு அனுமதி' கோர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது," என்று குயின்ஸ்லாந்து தெற்கு பூர்வீக உரிமை சேவையின் தலைவர் டிம் விஷார்ட் கூறினார். "இந்தக் கட்டமைப்பு நியாயமானது என்று நான் நினைக்கவில்லை, ஆனால் தற்போது எங்களிடம் இருப்பது இதுதான்" என்றும் அவர் கூறுகிறார். தொடரும் சட்டப் போராட்டம் படக்குறிப்பு,திவாலானபோதும், நீதிமன்ற இழப்புகள் மற்றும் சொந்த சமூகத்திலேயே பிளவுகள் ஏற்பட்டபோதும், ஏட்ரியனும் அவரது குடும்பத்தினரும் தளர்ந்துவிடவில்லை. ஏட்ரியன் பர்ரகுப்பா, குயின்ஸ்லாந்து உச்சநீதிமன்றத்தில் நீதித்துறை மறு ஆய்வு வழக்கைத் தொடர்கிறார். கார்மைக்கேல் சுரங்கம், தூங்கமபுல்லா நீரூற்றுகள் போன்ற புனித தலத்தை அச்சுறுத்துவதன் மூலம் வாங்கன் மற்றும் ஜகலிங்கோ (W&J) மக்களின் மனித உரிமைகளை மீறுவதாக அவர் வாதிடுகிறார். இந்த வழக்கு, குயின்ஸ்லாந்து மனித உரிமைச் சட்டத்தின் பிரிவு 28ஐ அடிப்படையாகக் கொண்டது. இது பழங்குடி மக்களின் கலாசாரத்தைப் பின்பற்றுவதற்கும், நிலம் மற்றும் நீருடனான தொடர்பைப் பேணுவதற்குமான உரிமையைப் பாதுகாக்கிறது. இதுவொரு முன்னுதாரண வழக்காக இருக்கும் என்று ஏட்ரியன் மற்றும் கோடியின் வழக்கறிஞர் அலிசன் ரோஸ் கூறுகிறார். "கலாசாரத்தையும் நாட்டையும் பாதுகாக்க விரும்பும் பிற பூர்வீக மக்களால் பின்பற்றப்படும் ஒரு முக்கியமான வழக்காக இது அமையும்," என்று அவர் குறிப்பிட்டார். இது அரசுக்கு எதிராக ஏட்ரியன் தொடுக்கும் நான்காவது வழக்கு. இதில் (இலவச) வழக்கறிஞர்களைப் பயன்படுத்தி இவர் போராடுகிறார். முன்னதாக, ஒரு நீதிமன்ற வழக்கை எதிர்த்துப் போராடியதில், 680,000 டாலர் செலவானதன் காரணமாக பயங்கர நஷ்டத்தைச் சந்தித்தார். ஆனால் திவாலான போதும், நீதிமன்ற இழப்புகளைச் சந்தித்தபோதும், சமூகப் பிளவுகள் இருந்தபோதும், ஏட்ரியனும், அவரது மகன் கோடியும், அவர்களது குடும்பமும் மனம் தளரவில்லை. "நாங்கள் தண்ணீரில் இருந்து வருகிறோம். தண்ணீர் இல்லாமல், நாம் அனைவரும் இறந்துவிடுவோம். நிலம் இல்லாமல், எங்களுக்கு எதுவுமே இல்லை" என்கிறார் ஏட்ரியன். இந்த மனித உரிமை வழக்கை ரத்து செய்ய நீதிமன்றத்தைக் கோரியுள்ளது அரசு. அதன் தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cnvm97q6d5go
  3. பட மூலாதாரம்,KAMARAJARUDAN KAAL NOOTRANDU கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 17 ஜூலை 2025, 13:52 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் "காமராஜருக்கு குளிர்சாதன வசதி இல்லாவிட்டால் உடலில் அலர்ஜி வந்துவிடும் என்பதால் அனைத்துப் பயணியர் விடுதிகளிலும் குளிர்சாதன வசதியைச் செய்து கொடுத்தார் முதலமைச்சராக இருந்த கருணாநிதி" என தி.மு.க எம்.பி திருச்சி சிவா பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தனது இறுதிக் காலத்தில், தமிழ்நாட்டைக் காப்பாற்றுமாறு கருணாநிதியிடம் காமராஜர் கேட்டுக் கொண்டதாகவும் திருச்சி சிவா பேசினார். "இது உண்மைக்குப் புறம்பானது" என காங்கிரஸ் நிர்வாகிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர். காமராஜர் தொடர்பாக திருச்சி சிவா பேசிய கருத்தில் உண்மை உள்ளதா? சென்னை பெரம்பூரில் செவ்வாய்க்கிழமையன்று (ஜூலை 15) தி.மு.க பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்தநாளும் அதேநாளில் வந்ததால் அவர் குறித்து சில தகவல்களை தி.மு.க துணைப் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா பகிர்ந்துகொண்டார். திருச்சி சிவா பேசியது என்ன? பட மூலாதாரம்,TIRUCHI SIVA படக்குறிப்பு, தி.மு.க துணைப் பொதுச்செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா "எனக்கு 23, 24 வயது இருந்தபோது நிறைய நிகழ்வுகளை கருணாநிதி கூறுவார். காமராஜர் தங்கும் இடத்தில் குளிர்சாதன வசதி இல்லாவிட்டால் உடலில் அலர்ஜி வந்துவிடும் என்பதால் அவர் தங்கும் அனைத்துப் பயணியர் விடுதியிலும் குளிர்சாதன வசதியைச் செய்து கொடுத்ததாகக் கருணாநிதி என்னிடம் கூறினார்." ஆனால், "அப்படிப்பட்ட சூழலில் தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறி காமராஜர் கண்டனக் கூட்டம் நடத்துவதாகவும் அவர் நம்மை எதிர்த்துப் பேசுவதாகவும்" கருணாநிதி கூறியதாக அவர் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய திருச்சி சிவா, "எமர்ஜென்சி காலத்தில் தமிழ்நாட்டில் காமராஜரை கைது செய்ய முடியவில்லை. அப்போது திருப்பதிக்கு ஒரு நிகழ்ச்சிக்கு அவர் கிளம்பினார். அப்போது முதலமைச்சர் அலுவலகத்தில் இருந்து தொலைபேசி அழைப்பு சென்றது." 'காமராஜரை போக வேண்டாம்' என, முதலமைச்சராக இருந்த கருணாநிதி கூறியதாகவும் 'நான் தி.மு.க அல்ல, காங்கிரஸ்காரன். என்னைப் போக வேண்டாம்' எனக் கூற இவர் யார்?' என காமராஜர் கேட்டதாகவும் திருச்சி சிவா குறிப்பிட்டுப் பேசினார். அதோடு, "தமிழ்நாட்டின் எல்லைக்குள் இருக்கும் வரை காமராஜரை நான் பாதுகாப்பேன் எனக் கருணாநிதி கூறியபோது, இவ்வளவு பெரிய உள்ளம் கொண்டவரா என காமராஜர் நெகிழ்ந்தார். தனது உயிர் போகும்போது, 'நாட்டையும் ஜனநாயகத்தையும் நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்' என கருணாநிதியிடம் அவர் கூறினார்" எனவும் திருச்சி சிவா பேசினார். எளிய முதலமைச்சராக அறியப்பட்ட காமராஜர் குறித்தும், காமராஜர் - கருணாநிதி நட்பு குறித்தும் திருச்சி சிவா கூறிய கருத்துகள், அரசியல்ரீதியாகப் பேசுபொருளாக மாறியது. 'தி.மு.க பரப்பிய கட்டுக் கதைகள்' - ஜோதிமணி எம்.பி பட மூலாதாரம்,JOTHIIYC/FACEBOOK படக்குறிப்பு, காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி "திருச்சி சிவா ஆதாரம் இல்லாமல் பேசுகிறார். காமராஜர் பற்றிப் பேசுவதற்கு யாருக்கும் தகுதி இல்லை" என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து, கரூர் எம்.பி ஜோதிமணி, சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலரும் திருச்சி சிவாவின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். தனது எக்ஸ் பக்கத்தில் ஜோதிமணி எம்.பி வெளியிட்டுள்ள பதிவில், "முதலமைச்சராக இருந்தபோது அரசினர் விடுதியில் தங்கியிருந்த காமராஜர், மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர். அவர் ஏ.சி இல்லாமல் தூங்க மாட்டார் என திருச்சி சிவா கூறியது உண்மைக்குப் புறம்பானது" எனக் கூறியுள்ளார். காமராஜருக்கு எதிராக கடந்த காலத்தில் காழ்ப்புணர்ச்சியில் பரப்பப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளதாகக் கூறியுள்ள ஜோதிமணி, "காமராஜர் வாழ்ந்த வீட்டுக்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது. ஆனால், அது அவரது சொந்த மாளிகை என தி.மு.க பரப்பிய கட்டுக்கதைகளால் தேர்தல் நேரத்தில் அவர் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு" எனக் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக, காமராஜருடன் நெருங்கிய நட்பில் இருந்த உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறனிடம் பிபிசி தமிழ் பேசியது. ஆனால் அவர், "தற்போது இந்த விவகாரம் குறித்துப் பேச விரும்பவில்லை" என்று மட்டும் பதில் அளித்தார். விளக்கம் அளித்த திருச்சி சிவா - ஆனால்? பட மூலாதாரம்,KAMARAJARUDAN KAAL NOOTRANDU படக்குறிப்பு, காமராஜருக்கு இறுதி அஞ்சலி செலுத்தும் இந்திரா காந்தி மற்றும் கருணாநிதி தனது பேச்சுக்குக் கண்டனம் எழுவதைத் தொடர்ந்து, அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள திருச்சி சிவா, "காமராஜரின் புகழுக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் நான் பேசியதாக விவாதங்கள் வலுத்து வருகின்றன. எதிர்வரிசையில் இருக்கும் தலைவர்களைப் பற்றி நான் கண்ணியத்தோடு விமர்சிப்பதை அனைவரும் அறிவார்கள்" எனக் கூறியுள்ளார். "மறைந்த தலைவர்களின் புகழுக்கு மாசு ஏற்படுவதை எந்த வகையில் யார் செய்தாலும் அதை ஏற்கும் மனநிலை கொண்டவனல்ல" எனக் கூறியுள்ள திருச்சி சிவா, "காமராஜர் மீது மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டுள்ளேன். என் உரையில் நான் கூறிய செய்தியை மேலும் விவாதப் பொருளாக்க வேண்டாம்" எனக் கூறியுள்ளார். அறிக்கையில் தான் பேசிய கருத்து தொடர்பாக எந்த மறுப்பையும் திருச்சி சிவா தெரிவிக்கவில்லை. ஆனால், இதுதொடர்பாக 2013ஆம் ஆண்டே காமராஜர் பிறந்தநாளன்று தி.மு.க தலைவராக இருந்த கருணாநிதி தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்தப் பதிவை தி.மு.க ஐ.டி விங் நிர்வாகிகள் பலரும் தற்போது சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர். கருணாநிதியின் ஃபேஸ்புக் பதிவு கூறுவது என்ன? பட மூலாதாரம்,FACEBOOK/PG/KALAIGNAR89 அந்தப் பதிவில், "முதன்முதலாக காமராஜருக்கு சிலை வைத்த பெருமை, தி.மு.க பொறுப்பில் இருந்த சென்னை மாநகராட்சியையே சாரும்" எனக் கூறியுள்ளார். காவிரி பிரச்னை, எமர்ஜென்சி போன்றவற்றில் ஒவ்வொரு முடிவுக்கு முன்பும் மூத்த அரசியல் தலைவர் என்ற முறையில் காமராஜரின் வீட்டுக்குச் சென்று கருத்துகளைக் கேட்டு அவ்வாறே செயல்பட்டு வந்ததாகவும் அவர் தனது பதிவில் கூறியுள்ளார். காமராஜருக்கு குளிர்சாதன வசதியைச் செய்து கொடுத்தது பற்றிப் பதிவிட்டுள்ள கருணாநிதி, "தி.மு.க அரசு பதவிக்கு வந்த பிறகு கடும் சுற்றுப் பயணத்தை காமராஜர் மேற்கொண்டிருந்தார். அவருடைய அந்தரங்க செயலாளர்கள், 'ஏ.சி இல்லாமல் அவரால் உறங்க முடியாது. அப்படிப்பட்ட உடல்நிலை அவருக்கு உள்ளது. எனவே அரசு விடுதிகளில் ஏ.சி ஏற்பாடு செய்து கொடுங்கள்' என்றனர். உடனே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு, 'அவர் அதிகாரத்தில் இல்லையே எனப் பார்க்கக்கூடாது. நாமெல்லாம் அதிகாரத்தில் வருவதற்கு அவர் வழிவிட்டவர். நீங்கள் யாரும் சுணங்கக் கூடாது' என உத்தரவு பிறப்பித்தேன்" எனத் தெரிவித்துள்ளார். அதோடு, ஆம்பூரில் காமராஜர் பங்கேற்ற காங்கிரஸ் கூட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்றையும் கருணாநிதி தனது பதிவில் மேற்கோள் காட்டியுள்ளார். 'பேசிய பேச்சுக்குப் பரிகாரம்' - கருணாநிதி 'கூட்டத்துக்கு நேரமாகிவிட்டது' எனக் கூறி கட்சிக்காரர்கள் அவரை அழைத்தனர். அதற்குப் பதில் அளித்த காமராஜர், 'கருணாநிதியை திட்டுவதற்குத்தானே கூப்பிடுகிறாய். அவர்தான் ஊருக்கு ஊர் ஏ.சி வைத்துக் கொடுத்திருக்கிறார். அதை அனுபவித்துவிட்டு திட்டச் சொல்கிறாய்' என்று அவர் பேசியதாகவும் தனது பதிவில் கருணாநிதி கூறியுள்ளார். அதே பதிவில் காமராஜரை தான் எதிர்த்து அரசியல் செய்ததைக் குறிப்பிட்டுள்ள கருணாநிதி, "இந்தப் பாராட்டுகள், சிறப்புகள் எல்லாம் நான் அரசியலில் காமராஜரை எதிர்த்துப் பேசிய பேச்சுகள், ஈடுபட்ட செயல்களுக்குப் பரிகாரமாக என்னை மாற்றுகின்ற அளவுக்கு இருந்தன" எனக் குறிப்பிட்டுள்ளார். 'அதுவே அவரது கடைசி நிகழ்ச்சி' 'குளிர்சாதன வசதியை காமராஜர் பயன்படுத்தினாரா?' என்பது தொடர்பாக, அவரது இறுதிக் காலம் வரை உதவியாளராக இருந்த வைரவன் எழுதிய புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது. 'காமராஜருடன் கால் நூற்றாண்டு' என்ற தலைப்பில் வெளியான அந்தப் புத்தகத்தில் காமராஜரின் இறுதி நாட்கள், கருணாநிதி உடனான நட்பு ஆகியவை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. அதில், "இந்திரா காந்தியின் அவசரநிலைப் பிரகடனத்தால் காமராஜர் மட்டுமல்ல, இந்திய அரசியலே ஆடிப் போனது. தன்னைப் பற்றி காமராஜர் கவலைப்படவில்லை. நாட்டுக்கு ஏதேனும் ஆகிவிடுமோ என்ற கவலையில் மூழ்கினார்" எனக் கூறியுள்ளார். "மனக் கவலை எந்த ஆரோக்கியமான மனிதரையும் வீழ்த்திவிடும். ஆனால் காமராஜருக்கோ சர்க்கரை நோயும் ரத்த அழுத்தமும் இருந்தன" எனக் கூறியுள்ள வைரவன், "இதனால் அவரது உடல்நலம் மிக விரைவாக பாதிக்கப்பட்டது" என்று தன் நூலில் குறிப்பிட்டுள்ளார். "அதுவரை மாடியில் தூங்கி வந்தவர், கீழ்தளத்தில் தூங்கத் தொடங்கினார். 'நான் பழையபடி எழுந்து நடப்பேனா?' என மருத்துவர்களிடம் கேட்டார். எப்படியோ குணம் பெற்று நடமாடத் தொடங்கினார்" என்றும் காமராஜர் பற்றிக் குறிப்பிட்டுள்ளார் வைரவன். பட மூலாதாரம்,TIRUCHI SIVA காமராஜர், 1975, ஜூலை 15 ஆம் தேதி தனது பிறந்தநாளை மிக எளிமையாகக் கொண்டாடியதாகக் கூறியுள்ள வைரவன், "அக்டோபர் 1ஆம் தேதி சிவாஜிக்கு பிறந்தநாள். அதுவே அவரது கடைசி நிகழ்ச்சியாக இருக்கும் என நினைக்கவில்லை" எனத் தெரிவித்துள்ளார். "மறுநாள் (அக்டோபர் 2) காந்தியின் பிறந்தநாள். காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்துடன் இருந்தனர். அடுத்த தேர்தல் வரப் போகிறது. நிச்சயமாக தமிழ்நாட்டில் மீண்டும் காங்கிரஸ் ஆட்சி மலரும் என்ற கனவோடு காத்திருந்தார்கள். வழக்கமாக காந்தி பிறந்தநாளில்தான் தேர்தல் பற்றிய அறிவிப்பு வெளியாகும்" என்கிறார் வைரவன். "நீங்கள் (காமராஜர்) எனக்கு ஆதரவாக இருங்கள். இந்தி பேசாத மாநிலங்களில் நீங்கள் விரும்பியவர்களை முதலமைச்சர்களாக நியமித்துக் கொள்ளுங்கள். நான் எமர்ஜென்சியை விலக்கிவிட்டு தேர்தலை நடத்துகிறேன்" என இந்திரா காந்தி கூறியதாகவும் தனது நூலில் வைரவன் குறிப்பிட்டுள்ளார். குளிர்சாதன வசதியை காமராஜர் பயன்படுத்தினாரா? இந்த நூலில் காமராஜரின் இறுதி நாள் குறித்து வைரவன் விவரித்துள்ளார். "தலைவர் காலையில் வழக்கம்போல எழுந்தார். பத்திரிகைகள் படித்தார், குளித்து முடித்தார், மருத்துவர் ஜெயராமன் வந்தார். இன்சுலின் ஊசி போட்டுவிட்டுப் போனார். காலை சிற்றுண்டியாக முட்டையில் வெள்ளைக் கரு போட்டு பிரட் டோஸ்ட் தயாரித்தேன். அப்போது என்னை மின்சாரம் தாக்கியது" என்கிறார். "கடந்த 1955இல் மும்பையில் தானியங்கி டோஸ்டர் ஒன்றை காமராஜர் வாங்கினார். அது பழுதாகிவிட்டது. அதைச் சரிபார்க்க வாங்கிச் சென்ற எலக்ட்ரீஷியன், 'அண்ணே இன்றைக்கோடு போச்சு' என தலைவர் இருப்பதைக் கவனிக்காமல் கூறிவிட்டான். 'டோஸ்டர் இனி தேறாது' என்ற அர்த்தத்தில் அவன் சொன்னான். எப்போதும் அப்படிப் பேசாதவன் பேசியதும் என்னை மின்சாரம் தாக்கியதும் சற்று நெருடலாக இருந்தது" எனக் கூறியுள்ளார் வைரவன். நிமிஷா பிரியாவின் மரண தண்டனையை ஒத்திவைக்க உதவிய இஸ்லாமிய மதகுரு யார்? கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மன்னிப்பா? கொலையுண்ட மஹ்தியின் சகோதரர் பதில் 'தாயைப் பார்க்க ஏங்கும் மகள்' - நிமிஷா பிரியா பற்றி கணவர், சொந்த ஊர் மக்கள் கூறுவது என்ன? நிமிஷா பிரியாவை காப்பாற்ற ஏமனுக்கு சென்ற முக்கிய 'அழைப்பு' பட மூலாதாரம்,JOTHIMANI SENNIMALAI/FACEBOOK அவசரநிலைப் பிரகடனத்தை இந்திரா காந்தி விலக்காவிட்டால் மதுரையில் இருந்து போராட்டம் நடத்துவது என காமராஜர் முடிவெடுத்ததாகக் கூறும் வைரவன், "உடனே நெடுமாறனை வரச்சொல்' என்றார். ஆனால், சென்னையில் இருந்தாலும் அவர் வரவில்லை" என்று தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். "என்னிடம் சொன்னதற்கு மாறாக எதிரணியைச் சேர்ந்த சிவாஜியின் வீட்டுக்குப் போய்விட்டாரே என காமராஜருக்கு வருத்தம். மணி மதியம் இரண்டரை மணி. அப்போதும் நெடுமாறன் வரவில்லை. காமராஜர் மனதளவில் சோர்ந்து போனார்" எனவும் அவர் கூறியுள்ளார். "மனவெதும்பலுடன் சாப்பிட்டார். மின்விசிறி ஓடியபோதும் தலை லேசாக வியர்த்தது. துண்டால் துடைத்துக்கொண்டு சாப்பிட்டு முடித்தார். மதியம் சாப்பிட்டதும் சற்று தூங்குவது அவர் வழக்கம். அன்றும் படுத்தார். அந்த அறை குளிர்சாதன வசதி செய்யப்பட்டது" எனக் கூறுகிறார் வைரவன். "காமராஜர் இருந்தால் உள்ளே குழல் விளக்கு எரியும். அவர் தூங்கும்போது நாங்களாக விளக்கை அணைத்துவிடுவோம்" எனக் கூறியுள்ள வைரவன், "அப்போது அழைப்பு மணி அவசர அவசரமாக ஒலித்தது" எனக் குறிப்பிட்டுள்ளார். தனக்கு வியர்ப்பதாகக் கூறி மருத்துவர் சௌரிராஜனை காமராஜர் அழைக்குமாறு கூறியதாகக் குறிப்பிட்டார். "அறையை விட்டுக் கிளம்பும்போது, 'வைரவா விளக்கை அணைத்துவிட்டுப் போ' எனக் கூறினார். அவர் அப்படிக் கூறியதில்லை" என்கிறார் வைரவன். மருத்துவர் சௌரிராஜன் வந்து பார்த்தபோது அவரது உயிர் பிரிந்துவிட்டதாகக் கூறிக் கதறி அழுததாக வைரவன் தெரிவித்துள்ளார். ஆனால், கருணாநிதியின் கைகளைப் பிடித்துக்கொண்டு, தமிழ்நாட்டைக் காப்பாற்றுமாறு கூறியதாக எங்கும் குறிப்பிடப்படவில்லை. 'அடிக்கடி ரகசியமாக சந்தித்துப் பேசுவார்' அதே புத்தகத்தில் கருணாநிதி-காமராஜர் நட்பு குறித்தும் வைரவன் விவரித்துள்ளார். "தேசிய அளவில் காங்கிரஸ் பிளவுபட்டபோது தி.மு.கவினர் இந்திரா காந்திக்கு நேசக்கரம் நீட்டினார்கள். இந்திரா காந்திக்கும் தி.மு.கவுக்கும் காமராஜரை எதிர்ப்பது நோக்கமாக இருந்தது" எனக் கூறுகிறார். இந்த நிலையில், தி.மு.க பிளவுபட்டு அ.தி.மு.கவை தொடங்கிய எம்.ஜி.ஆர் இந்திரா காந்தியை ஆதரித்தார். "அப்போதுதான் காமராஜர் மீது கருணாநிதிக்கு அன்பு மலர்ந்தது. அடிக்கடி ரகசியமாக சந்தித்துப் பேசுவார்" என வைரவன் குறிப்பிடுகிறார். "நெருக்கடி நிலையை இந்திரா காந்தி அமல்படுத்தியபோது, தி.மு.க ஆட்சியை டிஸ்மிஸ் செய்யும் நச்சுக்கத்தி எட்டிப் பார்த்தது. அதைத் தடுக்க உதவும் முக்கியக் கேடயமாக காமராஜர் இருந்தார். அதைக் கருணாநிதியும் உணர்ந்தார்" என்கிறார் வைரவன். மு.க.ஸ்டாலினின் திருமண நிகழ்வில் காமராஜர் பங்கேற்றது குறித்துக் கூறியுள்ள வைரவன், "சென்னை அண்ணா சாலையில் உள்ள உம்மிடியார் மண்டபத்தில் மு.க.ஸ்டாலின் திருமணம் நடந்தது. அதற்கு நேரில் வந்து கருணாநிதி அழைப்பு கொடுத்தார். அப்போது காமராஜர் உடல் நலிவுற்று இருந்தார். அவரால் படிக்கட்டுகளில் ஏறி இறங்க முடியாது." காமராஜரின் கார் நேராக மணமேடை வரை போவதற்கு கருணாநிதி ஏற்பாடு செய்திருந்ததாகவும் காமராஜரும் சென்று வாழ்த்தியதாகவும் கூறியுள்ள வைரவன், ஆட்சியில் இருந்தபோதும் நெருக்கடி நிலையின்போதும் காமராஜரை பலமுறை சந்தித்து கருணாநிதி ஆலோசனை பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார். தி.மு.கவின் அதிகாரபூர்வ நாளேடான 'முரசொலி' வெளியிட்ட காமராஜர் நூற்றாண்டு மலரிலும் இதைப் பற்றிக் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார். 'எனக்குப் பெருந்துணையாக விளங்கிய காமராஜர்' என்ற தலைப்பில் அந்தக் கட்டுரை வெளியானது. அதில், "ஆட்சிப் பொறுப்பில் நான் இருந்தாலும் காவிரி பிரச்னை போன்ற பொதுப் பிரச்னைகளில் காமராஜரின் ஆலோசனைகளைப் பெறவும் எமர்ஜென்ஸி நேரத்தில் எடுக்கப்பட வேண்டிய நிலை குறித்து விவாதிக்கவும் அவரது இல்லத்திற்குப் பலமுறை சென்றுள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cq536elzlq2o
  4. 17 JUL, 2025 | 05:16 PM தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வவுனியா மாவட்டத்தில் புதிதாக நிறுவப்பட்ட குடியிருப்புகளில் வசிக்கும் சிங்கள மக்களுக்கு விவசாயத்துக்காக அரச நிறுவனமொன்று நிலத்தை பகிர்ந்தளித்தமையானது அருகருகே வாழும் சிங்களவர்களுக்கும் தமிழர்களுக்கும் இடையே முறுகல் நிலையை உருவாக்கியுள்ளது. தங்கள் விவசாய நிலங்களை ஏற்கனவே ஆக்கிரமித்துள்ள சிங்கள மக்கள் புதிதாக காடழிப்பிலும் ஈடுபடுவதாக தமிழ் பிரதிநிதிகள் குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்நிலையில், சிங்கள மக்கள் விவசாயத்துக்காக பயன்படுத்தும் காணி தமது பரம்பரைக் காணி எனவும், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் அந்தக் காணியில் துப்புரவுப் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், அந்தக் காணியில் விவசாயம் செய்துவரும் ஒரு சிங்கள விவசாயி சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார். வவுனியாவில் உள்ள நெடுங்கேணி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட, வெடிவைத்தகல் கிராம சேவகர் பிரிவில் உள்ள திரிவைத்தகுளம் கிராமத்திற்கு ஆய்வுப் பயணத்தை மேற்கொண்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அப்பகுதியில் வசிக்கும் சிங்கள மக்கள், தமிழ் மக்களின் சுமார் 1,000 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்துள்ளதாக குற்றஞ்சாட்டினார். வன்னி பகுதியில் காடழிப்பைத் தடுக்க வனப் பாதுகாப்பு திணைக்களம் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றஞ்சாட்டிய ரவிகரன், அந்த திணைக்களம் திட்டமிட்டு தமிழ் மக்கள் மீது பழி சுமத்தும் விதமாகவும் அல்லது தமிழ் மக்களை அழிக்கும் விதமாகவும் செயற்படுவதாக தெரிவித்தார். பெரிய அளவிலான காடழிப்பு குறித்து வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் விசாரித்ததாகக் கூறிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர் துரைராசா தமிழ்ச்செல்வன், துப்பரவு செய்யப்படும் காணி மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானது என பிராந்திய நில அலுவலர் தன்னிடம் குறிப்பிட்டதாக கூறியுள்ளார். இது குறித்து வவுனியா வடக்கு பிரதேச செயலாளரிடம் நான் விசாரித்தபோது, அவர், இது மகாவலி எல் வலயத்திற்கு சொந்தமானது என்பதால் மகாவலி அபிவிருத்தி அதிகார சபையே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். காணி, மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்குச் சொந்தமானது என்பதை உறுதிப்படுத்திய வனப் பாதுகாப்பு திணைக்களத்தின் நெடுங்கேணி அலுவலகம், காடுகளை அழிப்பதை நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு மகாவலி அபிவிருத்தி அதிகார சபையிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்ததாக, தமிழ்ச்செல்வன் பிராந்திய ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார். நெடுங்கேணி வன இலாகா திணைக்களத்திடம் கேட்டபோது 2021ஆம் ஆண்டு மகாவலி எல் வலயத்திற்கு கீழ் காணப்படுவதால் இது தொடர்பில் தலையீடு செய்ய முடியாது எனவும் எனினும் காணி அபகரிக்கப்படுவதாக தகவல் கிடைத்தமையால் தாங்கள் மகாவலி அபிவிருத்தி அதிகாரியின் போகஸ்வெவ மற்றும் வெலிஓயா அலுவலகங்களில் சென்று பேசியதோடு இதனை தடுத்து நிறுத்துமாறும் கோரியதாக அதிகாரி தெரிவித்தார். புதிதாக காடுகளை அழித்து கையகப்படுத்தப்பட்ட காணிக்கு மேலதிகமாக, தமிழர்களுக்குச் சொந்தமான சுமார் 400 ஏக்கர் நெல் வயல் காணிகளை சிங்கள மக்கள் வலுக்கட்டாயமாக கையகப்படுத்தியுள்ளதாக பிரதேச சபை உறுப்பினர் தமிழ்ச்செல்வன் குற்றம் சாட்டினார். 300, 400 ஏக்கர் காணி டோசர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே எங்களது 350, 400 ஏக்கர் வயல் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. 2021ஆம் ஆண்டு வவுனியா வடக்கு மகாவலி எல் வலயத்திற்குள் 5259.83 ஹெக்டேயர் செல்வதால் இதில் தலையீடு செய்ய முடியாது எனவும் இதற்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதகாவும் குறிப்பிட்டனர். இதன் ஊடாக இதன் பின்னணியில் இருப்பவர்களை கண்டறிய முடியுமென வன இலாகா அதிகாரிகள் குறிப்பிட்டனர். சிங்கள மக்கள், தமிழ் மக்களின் விவசாய காணிகளை வலுக்கட்டாயமாக ஆக்கிரமித்துள்ளதாக தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கூறிய குற்றச்சாட்டுகள் ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அந்த விவசாய காணிகள் தனது மூதாதையர்களும் கிராம மக்களும் 1955 முதல் பயிரிட்டு வந்த காணிகள் என போகஸ்வெவ கிராமத்தில் வசிக்கும் பிமல் தர்மதாச, தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு காணொளியை வெளியிட்டுக் கூறியுள்ளார். அதில் அவர் கூறுகையில், “1955ஆம் ஆண்டு எனது தந்தை, எங்கள் பியதாச மாமா மற்றும் எங்கள் மக்கள் இந்த வயலில் பயிரிட்டனர். நாங்கள் இந்த வயலை பயிரிட்டுக் கொண்டிருந்தபோதுதான், 1985ஆம் ஆண்டு, எங்கள் கிராமமான போகஸ்வெவ புலிகளால் தாக்கப்பட்டு, எங்கள் கிராம மக்கள் கொல்லப்பட்டனர். நாங்கள் அகதிகளானோம். பின்னர் நாங்கள் அகதி முகாம்களில் வசித்து வந்தோம். போர் முடிவடைந்த பின்னர், 2010 ஜூலை மாதம் 26ஆம் திகதி நாங்கள் மீள்குடியேறினோம்” என்றார். இவ்வாறு மீள்குடியேறிய பின்னர், தமது காணியின் உரிமையை உறுதிப்படுத்தும் அனுமதிகளை சமர்ப்பித்து, நிலத்தை விடுவிக்க வனப் பாதுகாப்புத் திணைக்களத்திடம் கோரிக்கை விடுத்ததாக விவசாயத்தையே வாழ்வாதாரமாக கொண்டிருக்கும் போகஸ்வெவ கிராமத்தில் வசிக்கும் பிமல் தர்மதாச, தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றிய காணொளியில் விளக்கம் அளித்துள்ளார். வனப் பாதுகாப்புத் திணைக்களம் இந்த விவகாரம் குறித்து விசாரித்து வந்த நிலையில், கிவுல் ஓயா திட்டத்தை ஆரம்பிக்க வனப் பாதுகாப்புத் திணைக்களத்துக்கும் மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கும் இடையே தலா 12 ஆயிரம் ஹெக்டேயர் காணிப் பரிமாற்றம் நடந்ததாகக் கூறும் பிமல் தர்மதாச, வனப் பாதுகாப்புத் திணைக்களம் 12 ஆயிரம் ஹெக்டேயர் முள் காடுகளை மகாவலி அபிவிருத்தி அதிகார சபைக்கு வழங்கியதாகவும் கூறுகிறார். இதற்கமைய, அவரது விவசாய காணி மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் கைகளுக்குச் சென்றுள்ளதோடு காணி உரிமையை கொண்டுள்ள சிங்கள விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, மகாவலி அபிவிருத்தி அதிகார சபை தலா 40 ஏக்கர் நிலத்தை இரண்டு சந்தர்ப்பங்களில் விடுவித்து, 2020 முதல் விவசாய நடவடிக்கைகளுக்கான வாய்ப்பை வழங்கியதாக பிமல் தர்மதாச மேலும் கூறுகின்றார். கடந்த ஐந்து வருடங்களாக சிங்கள விவசாயிகள் அந்த நிலத்தில் விவசாயம் செய்துவருவதாக அவர் கூறுவதோடு, தற்போது தமிழ் பிரதிநிதிகள் காணியின் உரிமையை கோரியுள்ளதால், அந்தக் காணியில் விவசாயத்தில் ஈடுபட முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடுகிறார். சுமார் 40 வருடங்களாக அடர்ந்த காடுகளால் சூழப்பட்ட இந்த காணி, மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதியுடன் சிங்கள விவசாயிகளால் பயிரிடுவதற்காக விடுவிக்கப்படுவதாகக் கூறும் பிமல் தர்மதாச, சிங்கள விவசாயிகள் குத்தகை அனுமதியின் கீழ் காணியில் பயிரிடுவதாகவும் மேலும் கூறினார். https://www.virakesari.lk/article/220244
  5. பட மூலாதாரம்,ESO/O. HAINAUT படக்குறிப்பு, 3I/Atlas என்பது இதுவரை காணப்படாத மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். கட்டுரை தகவல் ஜார்ஜினா ரென்னார்ட் அறிவியல் & காலநிலை செய்தியாளர் 17 ஜூலை 2025, 11:40 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த வாரம் வானியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மர்மமான வால்மீன், இதுவரை காணப்பட்ட மிகப் பழமையான வால்மீனாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். 3I/Atlas என்று பெயரிடப்பட்ட இது, நமது சொந்த சூரிய குடும்பத்தைவிட மூன்று பில்லியன் ஆண்டுகள் (300 கோடி ஆண்டுகள்) பழமையானதாக இருக்கலாம் என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகக் குழு தெரிவிக்கிறது. நமது சூரிய மண்டலத்துக்கு அப்பால் இருந்து வரும் ஒரு பொருளை விஞ்ஞானிகள் கண்டறிவது மூன்றாவது முறை. டர்ஹாமில் நடைபெற்ற பிரிட்டனின் ராயல் வானியல் சங்கத்தின் தேசிய கூட்டத்தில் வெள்ளிக்கிழமையன்று இந்த முதல்கட்ட கண்டுபிடிப்புகள் விளக்கப்பட்டன. "நாங்கள் அனைவரும் 3I/Atlas வால்மீன் பற்றி அறிந்ததில் மிகவும் உற்சாகமாக இருக்கிறோம்" என்று ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழக வானியலாளர் மேத்யூ ஹாப்கின்ஸ் பிபிசியிடம் தெரிவித்தார். "நான் எனது முனைவர் பட்டத்தை முடித்துவிட்டேன், அதில் நான்கு ஆண்டுகள் விண்மீன்களுக்கு இடையிலான பொருட்களைக் கணித்து ஆய்வு செய்தேன். இறுதியாக, எனது ஆய்வுகளில் முதல் முறையாக ஒரு வான்பொருளைக் கண்டுபிடித்தோம்," என்று அவர் கூறினார். 3I/Atlas எனும் பொருளின் வேகத்தை ஆய்வு செய்த மேத்யூ ஹாப்கின்ஸ், இது ஏழு பில்லியன் ஆண்டுகளுக்கு (700 கோடி ஆண்டுகள்) மேல் பழமையானதாக இருக்கலாம் என்கிறார். மேலும், இதுவரை காணப்பட்ட வால்மீன்களுக்கு இடையிலான பொருட்களில் இது மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருக்கலாம் என்றும் அவர் கூறுகிறார். 3I/Atlas, ஜூலை 1, 2025 அன்று சிலியில் உள்ள அட்லஸ் சர்வே தொலைநோக்கி மூலம் முதலில் காணப்பட்டது. அப்போது அது சூரியனில் இருந்து 670 மில்லியன் கி.மீ. தொலைவில் இருந்தது. இப்போது, மிகப்பெரிய தொலைநோக்கிகள் மூலம் மட்டுமே பார்க்க முடியும் இந்த வான்பொருள், தனது மண்டலத்தில் உள்ள சூரியனிடம் இருந்து, பூமியில் இருந்து வியாழன் கோள் அமைந்திருக்கக்கூடிய தூரத்தில் அமைந்துள்ளது. அந்த வால்மீன் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்து, உலகெங்கிலும் உள்ள வானியலாளர்கள் அதன் பாதையைக் கண்டறியவும், அதைப் பற்றிய கூடுதல் தகவல்களைச் சேகரிக்கவும் முயன்று வருகின்றனர். அது பால்வீதி மண்டலத்தின்(Milky way galaxy) "தடிமனான வட்டில்" (thick disk) இருந்து வந்திருக்கலாம் என்கிறார் ஹாப்கின்ஸ். இந்தத் தடிமனான வட்டு என்பது, பெரும்பாலான நட்சத்திரங்கள் உள்ள பகுதியில் மேலும் கீழுமாகச் சுற்றி வரும் ஆதிகால நட்சத்திரங்களைக் குறிக்கிறது. பட மூலாதாரம்,MATTHEW HOPKINS படக்குறிப்பு, 3I/Atlas-ன் மதிப்பிடப்பட்ட சுற்றுப்பாதைகள் சிவப்பு நிறத்திலும், சூரியனின் சுற்றுப்பாதைகள் மஞ்சள் நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன. பால்வீதியை மேலிருந்து பார்க்கும்போது, 3I/Atlas நமது சூரிய மண்டலத்தைச் சுற்றி எவ்வாறு பயணிக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம். 3I/Atlas-ன் மதிப்பிடப்பட்ட சுற்றுப்பாதைகள் சிவப்பு நிறத்திலும், நமது சூரியனின் சுற்றுப்பாதைகள் மஞ்சள் நிறத்திலும் காட்டப்பட்டுள்ளன. 3I/Atlas ஒரு பழைய நட்சத்திரத்தைச் சுற்றி உருவாகியிருக்கலாம் என்பதால், இது பெரும்பாலும் உறைந்த நீரால் ஆனது என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இந்த ஆண்டு இறுதியில் இது அதன் சூரியனை நெருங்கும்போது, சூரிய ஆற்றல் இதன் மேற்பரப்பை வெப்பமாக்கி, நீராவியையும் தூசியையும் வெளிப்படுத்தலாம். இதனால் ஒரு ஒளிரும் வால் உருவாக வாய்ப்பு உள்ளது. ஹாப்கின்ஸ் உருவாக்கிய மாதிரியைப் பயன்படுத்தி, விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்புகளை மேற்கொண்டனர். "இது நாம் இதுவரை நெருக்கமாகப் பார்க்காத விண்மீன் மண்டலப் பகுதியில் இருந்து வந்த பொருள்," என்கிறார் ஆய்வின் இணை ஆசிரியர் பேராசிரியர் கிறிஸ் லிண்டாட். "இந்த வால் நட்சத்திரம் சூரிய குடும்பத்தைவிட பழமையானதாக இருப்பதற்கும், விண்மீன்களுக்கு இடையிலான விண்வெளியில் பயணித்து வருவதற்கும் மூன்றில் இரண்டு பங்கு வாய்ப்புள்ளது என்று நாங்கள் நம்புகிறோம்," என்றும் அவர் குறிப்பிட்டார். விண்மீன்களுக்கு இடையிலான பொருட்கள், நட்சத்திரங்கள் உருவாகும்போது அவற்றைச் சுற்றி உருவாகின்றன என்று விளக்கும் ஹாப்கின்ஸ், "அவற்றின் தாய் நட்சத்திரங்களுடனான இந்தத் தொடர்பு, பால்வீதியின் நட்சத்திரக் கூட்டத்தை ஆராய உதவுகிறது" என்று கூறுகிறார். இந்த ஆண்டு இறுதியில், 3I/Atlas தொடக்கநிலை தொலைநோக்கிகளால் பூமியில் இருந்து தெரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 3I/அட்லஸ் தோன்றுவதற்கு முன், வேறு இரண்டு விண்மீன் பொருட்கள் மட்டுமே காணப்பட்டன. அவை 2017இல் கண்டறியப்பட்ட 1I/'ஓமுவாமுவா மற்றும் 2019இல் கண்டறியப்பட்ட 2I/போரிசோவ் என்று அழைக்கப்படுகின்றன. பிரபஞ்சத்தின் ஆழம் நோக்கும் ரூபின் - புதிய காணாத உலகங்களை காணும் தொலைநோக்கி பூமி மீது மோதுமா? 4 சிறுகோள்களை தீவிரமாக கண்காணிக்கும் நாசா பூமியில் மின் தடையை ஏற்படுத்தக்கூடிய சூரிய புயல் என்றால் என்ன? சூப்பர்நோவாக்களை விட 100 மடங்கு பிரகாசமான வெடிப்பு - விண்வெளியில் என்ன நடக்கிறது? உலகெங்கிலும் உள்ள வானியலாளர்கள், சிலியில் வேரா சி. ரூபின் என்று அழைக்கப்படும் ஒரு புதிய, சக்தி வாய்ந்த தொலைநோக்கியைப் பயன்படுத்தத் தயாராகி வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆண்டு இறுதியில் தெற்கு இரவு வானத்தை முழுமையாக ஆய்வு செய்யத் தொடங்கும்போது, விண்மீன்களுக்கு இடையிலான 5 முதல் 50 புதிய பொருட்களைக் கண்டறிய முடியும் என்று விஞ்ஞானிகள் எதிர்பார்க்கின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg57lr4v82o
  6. கொழும்பில் செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி போராட்டம் - பேரணியாக செல்ல முயன்றவேளை பொலிஸார் தடுத்துநிறுத்தியதால் குழப்பநிலை 17 JUL, 2025 | 05:10 PM செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பேரணியாக செல்ல முயன்றவேளை பொலிஸார் தடுத்து நிறுத்தியதால் பெரும் குழப்பநிலையேற்பட்டது. செம்மணி மனித புதைகுழிக்கு நீதிகோரி கொழும்பு கோட்டை புகையிரதநிலையத்திற்கு முன்னாள் நீதிக்கான மக்கள் சக்தி ஏற்பாடு செய்த போராட்டம் இடம்பெற்றது. செம்மணி உட்பட அனைத்து புதைகுழிகளுக்குமான நீதிக்கான குரலைபலப்படுத்துவோம் ஆட்சியாளர்கள் மீது நம்பிக்கை இல்லை என்பதை உலகிற்கு கூறுவோம், சர்வதேச தரத்திலான அகழ்வு பணி மட்டுமல்ல, நீதிக்கான சர்வதேசத்தின் தலையீட்டையும் குற்றவாளிகள் நீதியின் முன் நிறுத்தப்படவும் ஓங்கி குரல் எழுப்புவோம் என தெரிவித்து நீதிக்கான மக்கள் சக்தி ஏற்பாடு செய்த போராட்டத்தில் பெருமளவானவாகள் கலந்து கொண்டிருந்தனர். போராட்டத்தில் கலந்துகொண்டோர் 'புத்த தேசமா? புதைகுழிகள் தேசமா? செம்மணயில் எலும்புகளாக எம்மவர்கள், சர்வதேசமே தமிழர்களை ஏமாற்றாதே..! யுத்த குற்றத்தின் சாட்சி செம்மணி வட கிழக்கில் நில ஆக்கிரமிப்பை நிறுத்து' போன்ற பதாதைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல், சிவில் சங்க உறுப்பினர்கள், ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மற்றும் பொதுமக்கள் என பலர் போராட்டத்தில் பெருமளவானவாகள் கலந்து கொண்டிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி பேரணியாக செல்ல முயன்றவேளை பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் தங்களை முன்னோக்கி செல்வதற்கு அனுமதிக்குமாறு பொலிஸாரிடம் வேண்டுகோள் விடுத்தபோதிலும் பொலிஸார் அதற்கு அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் முன்னோக்கி நகர முற்பட்டவேளை பொலிஸார் அவர்களை தடுத்து நிறுத்தியதால் குழப்பநிலையேற்பட்டது. இதேவேளை தமது போராட்டம் குறித்து தெரிவித்துள்ள நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினர் 1990 இன் பின்னர் வடக்கிலும் தெற்கிலுமாக புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. துரையப்பா விளையாட்டரங்கு, மிருசுவில், மன்னார் சாதொச கட்டிட தொகுதி, மாத்தளை போன்ற இடங்களிலும் மனித புதைகுழிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஆனால் அவற்றை தேடுவதிலோ அதற்கான நீதியை நிலைநாட்டுவதற்காக எந்த ஆட்சியாளரும் துணியவில்லை பட்டலந்த வதை முகாம் சலசலப்பை ஏற்படுத்திய போதிலும் தற்போது இது குறித்து மௌனமே நிலவுகின்றது என தெரிவித்துள்ளனர். அரசபயங்கரவாதத்தின் கோரப்பிடிக்குள் 1971-1988-89 காலப்பகுதியில் சிக்கி கொடுமைகளை அனுபவித்த மக்க விடுதலை முன்னணியினர் ஆட்சியில் இருந்தாலும் அவர்களும் கடந்த கால ஆட்சியாளர்களை போலவே குற்றவாளிகளை பாதுகாக்கும் நிலையிலேயே உள்ளனர், ஆதலால் இவர்கள் காலத்திலும் பாதிக்கப்பட்டோருக்கு நீதி கிட்டப்போவதில்லை என்பது திண்ணம் என தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/220243
  7. துணுக்காயில் 40 ஆசிரியர்கள் கடமைகளை பொறுப்பேற்கவில்லை; இனி மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புங்கள் - ரவிகரன் வலியுறுத்து 17 JUL, 2025 | 02:17 PM துணுக்காய் கல்வி வலயத்தில் கடமையாற்றிய 44 ஆசிரியர்கள் பணி இடமாற்றம் பெற்று வெளிவலயங்களுக்கு சேவையாற்றச் சென்றுள்ளனர். இதன் மூலம் துணுக்காய் கல்வி வலயத்தில் ஏற்பட்ட 44 ஆசிரியர் வெற்றிடங்களுக்கு வெளிவலயங்களில் பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பணி இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளபோதும் நான்கு ஆசிரியர்கள் மாத்திரமே இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளனர் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இதுவரை கடமைகளைப் பொறுப்பேற்காத ஆசிரியர்களுக்கு கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். ஆசிரியர் நியமனங்கள் திறந்த போட்டிப் பரீட்சை முறையில் இடம்பெறுவதால்தான் இத்தகைய சிக்கல் நிலைமைகள் காணப்படுகின்றன. இனி மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் ரவிகரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு - துணுக்காய் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் இன்று (17) நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துரையாடியபோதே ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், நிச்சயமாக இந்த சிக்கல் நிலையைத் தீர்ப்பதற்கு வட மாகாண கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும். துணுக்காய் கல்வி வலயத்தில் பணியாற்றிய 44 பேர் இங்கிருந்து பணி இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிலையில், வெளிவலயங்களிலிருந்து 4 ஆசிரியர்கள் மாத்திரமே துணுக்காய் வலயத்திற்கு வருகைதந்துள்ளனர். 40 ஆசிரியர்கள் இதுவரை துணுக்காய் வலயத்திற்கு வருகைதந்து தமது கடமைகளைப் பொறுப்பேற்கவில்லை. இவ்வாறு தமது கடமைகளை இதுவரை பொறுப்பேற்காத ஆசிரியர்களுக்கு எதிராக கடுமையான ஒழுக்காற்று நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். ஆசிரியர் நியமனங்கள் திறந்த போட்டிப் பரீட்சை முறையில் இடம்பெறுவதால்தான் இத்தகைய சிக்கல்கள் காணப்படுகின்றன. மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொண்டால் இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும். எனவே, இனி மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்களை மேற்கொள்வதற்கு நாம் தீர்மானங்களை எடுக்கவேண்டும். துணுக்காய் வலயத்தில் ஏற்கனவே 160 ஆசிரியர் வெற்றிடங்கள் காணப்படுகின்றன. தற்போது 40 ஆசிரியர்கள் கடமைகளைப் பெறுப்பேற்காத நிலையில், துணுக்காய் வலயத்தில் ஆசிரியர்களின் வெற்றிடங்கள் 200ஆக உயர்வடைந்திருக்கிறது. இதனால் துணுக்காய் வலயத்தின் கற்றல் செயற்பாடுகள் இன்னும் மோசமடைவதற்கான சூழ்நிலையே காணப்படுகிறது. எமது பிள்ளைகளும் கல்வி கற்கவேண்டும். வன்னி என்றால் ஒதுக்கிவிடுக்கின்ற நிலைமை, முல்லைத்தீவு மாவட்டம் என்றால் ஒதுக்கிவிடுகின்ற நிலைமை, துணுக்காய் என்றால் ஒதுக்கிவிடுகின்ற நிலைமை இருக்கக்கூடாது. அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது என்றார். மேலும், இப்பிரச்சினை தொடர்பில் கடந்த 15ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மன்னார், முசலிப்பிரலி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் பேசப்பட்டது. அந்தக் கூட்டத்திலும் மன்னார் வலயத்திலிருந்து பல ஆசிரியர்கள் பணி இடமாற்றம் பெற்றுச் சென்றிருப்பதாகவும், அந்த வெற்றிடங்களுக்கு வெளிவலயங்களிலிருந்து ஆசிரியர்கள் சென்று, தமது கடமைகளை இதுவரை பொறுப்பேற்கவில்லை எனவும் மன்னார் வலயக் கல்விப் பணிப்பாளரால் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதன்போது ரவிகரனின் வலியுறுத்தலுக்கமைய மாவட்ட ஒதுக்கீட்டு முறையில் ஆசிரியர் நியமனங்களை முன்னெடுக்க வேண்டுமென முசலி பிரதேச அபிவிருத்திக் குழுவில் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220221
  8. வவுனியா மாநகர சபைக்கு புதிய ஆணையாளர் நியமனம்! 17 JUL, 2025 | 01:20 PM வவுனியா மாநகர சபையின் புதிய ஆணையாளர் பொ.வாகீசன் இன்று (17) தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார். வவுனியா நகரசபையாக இருந்து மாநகர சபையாக தரமுயர்த்தப்பட்டுள்ள நிலையில் அதன் ஆணையாளராக இதுவரை வவுனியா பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் தெ.ரதீஸ்வரன் செயற்பட்டிருந்தார். இந்தநிலையில் புதிய ஆணையாளராக, வட மாகாண மகளிர் விவகாரம் மற்றும் கூட்டுறவு அமைச்சின் செயலாளராக இதுவரை கடமையாற்றிய பொ.வாகீசன் நியமிக்கப்பட்டுள்ளார். வட மாகாண ஆளுநர் நா.வேதநாயகத்தினால் இந்த நியமனம் நேற்று வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய புதிய ஆணையாளர் இன்றைய தினம் தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார். https://www.virakesari.lk/article/220215
  9. இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளருக்கு ஆதரவாக ஹரி ஆனந்தசங்கரி எழுதிய கடிதத்தினால் சர்ச்சை - பிரதமர் ஆதரவு Published By: RAJEEBAN 17 JUL, 2025 | 01:19 PM இலங்கை தமிழ் புகலிடக்கோரிக்கையாளருக்கு ஒருவருக்கு புகலிடக்கோரிக்கை விடயத்தில் ஆதரவாக கடிதம் எழுதினார் என கனடாவின் பாதுகாப்பு அமைச்சர் ஹரி ஆனந்தசங்கரிக்கு எதிராக ஊடகமொன்று குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள அதேவேளை பிரதமர் மார்க் கார்னி ஹரி ஆனந்தசங்கரிக்கு தனது ஆதரவை வெளியிட்டுள்ளார். கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் என கனடா அதிகாரிகள் கருதிய நபர் ஒருவருக்கு கனடா பிரஜாவுரிமையை வழங்கவேண்டும் என கோரும் கடிதத்தை ஹரி ஆனந்தசங்கரி எழுதினார் என குளோபல் நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது. ஹரி ஆனந்தசங்கரி அமைச்சராவதற்கு முன்னர் கனடாவின் எல்லை பாதுகாப்பு முகவர் அமைப்பிற்கு அனுப்பப்பட்ட இந்த கடிதத்தில் இலங்கையை சேர்ந்த செல்வக்குமரன் செந்தூரன் என்ற நபரின் பிரஜாவுரிமை விண்ணபத்தினை மீள்பரிசீலனை செய்யவேண்டும் என வேண்டுகோள் விடுத்தார் என குளோபல் நியுஸ் தெரிவித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் செல்வக்குமாரன் செந்தூரனிற்கு "நீண்டகால ஈடுபாடு" இருந்ததாகக் கூறி 2005 முதல் நிரந்தர வதிவிடத்திற்கான அவரது விண்ணப்பத்தை கனடாவின் எல்லை பாதுகாப்பு முகவர் அமைப்பு நிராகரித்து வந்துள்ளது. 2023 ஆம் ஆண்டு எழுதிய கடிதத்தில் ஆனந்தசங்கரி செல்வகுமாரனை தனது கனேடிய மனைவி மற்றும் மகளுடன் மீண்டும் இணைக்க மறுத்ததை "கொடூரமானது மற்றும் மனிதாபிமானமற்றது" என்று ஆனந்தசங்கரி தெரிவித்தார் அரச-சுதேச உறவுகள் அமைச்சராக நியமிக்கப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது. அவர் மே 2025 இல் பொதுப் பாதுகாப்பு அமைச்சரானார்.என குளோபல் நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது. அவரது முந்தைய தலையீடு கடுமையான கேள்விகளை எழுப்புகிறது என்று விமர்சகர்கள் வாதிடுகின்றனர். கனடாவின் எல்லை பாதுகாப்பு முகவர் அமைப்பு முன்னாள் ஆய்வாளர் பில் குர்ஸ்கி இதை "ஒரு மிகப்பெரிய தவறு" என்று கூறி அவர் இராஜினாமாசெய்ய வேண்டும் என்று கோரினார். பயங்கரவாத தொடர்புகள் தொடர்பான வழக்குகளில் எம்.பி.க்கள் தலையிடக்கூடாது என்று வழக்கறிஞர் குழுவான செக்யூர் கனடா தெரிவித்துள்ளது என குளோபல் நியுஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இருப்பினும் பிரதமர் மார்க் கார்னி அமைச்சரைப் பாதுகாத்து ஆனந்தசங்கரி "வெளிப்படையாக நடந்து கொண்டார்" என்றும் தனது நம்பிக்கையைத் தக்க வைத்துக் கொண்டார் என்றும் தெரிவித்துள்ளார் ஹரி ஆனந்தசங்கரி ஸ்கார்பரோ-கில்ட்வுட்-ரூஜ் பார்க்கில் உள்ள தனது அலுவலகம் "ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கான குடியேற்ற விவகாரங்களைக் கையாளுகிறது 2015 இல் நான் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து 9000 க்கும் மேற்பட்டவை" என தெரிவித்துள்ளார் நாட்டின் மிகப்பெரிய நகரத்தில் பன்முகத்தன்மை கொண்ட ஒரு கொண்ட சமூகத்தினை பிரதிநிதித்துவப்படுத்துவதன் இயல்பு இதுதான். ஒரு தொகுதி ஒரு கனேடிய குடிமகன் ஒரு கனேடிய குழந்தையுடன் கனடாவில் தனது குடும்பத்தை மீண்டும் ஒன்றிணைக்க விரும்புவது அசாதாரணமானது அல்ல" . "அமைச்சர் மறுஆய்வு வழக்குகள் உட்பட அனைத்து கட்சிகளின் எம்.பி.க்களும் தொகுதி மக்களுக்கு ஆதரவு கடிதங்களை ஒரு வழக்கமான விஷயமாக வழங்குகிறார்கள்."என ஹரி ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார் திரு. செல்வகுமாரனின் சட்டக் குழுவில் உறுப்பினராக உள்ள டொராண்டோ குடிவரவு வழக்கறிஞர் லோர்ன் வால்ட்மேன் குடியேற்ற வழக்குகள் தொடர்பாக "ஏராளமான எம்.பி.க்கள்" தங்கள் தொகுதியினரின் சார்பாக கடிதங்கள் எழுதுகிறார்கள் என்றும். ஹரி ஆனந்தசங்கரி அவ்வாறு செய்வதில் "அசாதாரணமானது எதுவும் இல்லை" என்றும் தெரிவித்துள்ளார். "மாறாக அவர் செய்தது மிகவும் கடினமான சூழ்நிலையில் தன்னை உணர்ந்த ஒரு தொகுதியினருக்கு உதவ முயற்சிப்பதாகும்" என்று திரு. வால்ட்மேன் தெரிவித்துள்ளார் ஒரு தமிழ் கனடியனாக எனது சமூகத்தில் பல தசாப்தங்களாக தீவிரமாக செயல்பட்டு வருவதால் கனடா மீதான எனது விசுவாசத்தை கேள்விக்குள்ளாக்கும் மறைமுகமான மற்றும் கிசுகிசுப்பு பிரச்சாரங்களை நான் நீண்ட காலமாக எதிர்கொண்டுள்ளேன். அவை அவதூறானவை மற்றும் தவறானவை. நான் ஒரு பெருமைமிக்க கனடியன் எனது தமிழ் பாரம்பரியத்தைப் பற்றி பெருமைப்படுகிறேன். பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் நான் கண்டிக்கிறேன்" என்று ஹரி ஆனந்தசங்கரி. ஒரு மின்னஞ்சலில் தெரிவித்துள்ளார். "நான் பொது பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டபோது இந்தக் குற்றச்சாட்டுகளைச் சமாளிப்பதற்கான ஒரு வழி பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் தமிழீழ விடுதலைப்புலிகள் உலக தமிழர் அமைப்பு சேர்க்கப்பட்டமை குறித்த விடயங்களில் இருந்து விலகியிருப்பதே என தீர்மானித்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமைச்சராக பதவியேற்ற பின்னர் குடியேற்றவிவகாரங்களில் தலையீட்டை செலுத்தும் விதத்தில் எந்த கடிதத்தையும் அனுப்பவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். "ஜூலை 2023 இல் நான் அமைச்சராக நியமிக்கப்பட்டபோது எனது தொகுதி ஊழியர்களுக்கு இனி அத்தகைய கடிதங்களை வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தினேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இங்கு கேள்விக்குறியதாக காணப்படும் கடிதம் நான் அமைச்சரவையில் சேர்வதற்கு முன்னர் அனுப்பியது என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/220216
  10. காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவர் இரத்தினசிங்கம் முரளிதரனை பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸார் விசாரணைக்கு அழைப்பு 17 JUL, 2025 | 01:06 PM சமூக செயற்பாட்டாளரும், தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் யாழ் மாவட்ட தலைவரும், காணி உரிமைக்கான மக்கள் இயக்க தலைவருமான இரத்தினசிங்கம் முரளிதரனை இம் மாதம் 20 திகதி அன்று காலை 9:00 மணிக்கு பரந்தனிலுள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவு அலுவலகத்திற்கு சமூகமளிக்குமாறு பயங்கரவாத தடுப்பு பிரிவு தொலைபேசியூடாக அழைப்பு விடுத்துள்ளது. மேலும் இதற்கான எழுத்துமூலமான அழைப்பை மருதங்கேணி பொலிஸார் வழங்குவார்கள் என அறிவித்துள்ளதாக தெரிவித்தார். இவர் சமூக செயற்பாட்டாளராக, காணி உரிமை, மீனவர்கள் உரிமை, உட்பட பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்து வருகுன்ற நிலையில் தற்போது கொழும்பில் காணி உரிமை தெடர்பான கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கும் வேளையில் இ்ந்த அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/220213
  11. தங்கமுலாம் பூசப்பட்ட ரி - 56 ரக துப்பாக்கி விவகாரம்; சந்தேக நபரான பெண்ணுக்கு பிணை! 17 JUL, 2025 | 02:10 PM தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கியுடன் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பெண்ணை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு மேல்நீதிமன்ற நீதவான் மஞ்சுல திலகரத்ன இன்று வியாழக்கிழமை (17) உத்தரவிட்டுள்ளார். விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள குறித்த பெண் கொழும்பு மேல்நீதிமன்றில் இன்றைய தினம் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த பெண்ணை 2 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்க பிணை மற்றும் 25 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கொழும்பில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் இருந்த பெண்ணிடம் இருந்து தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி ஒன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து கைதுசெய்ய்பட்ட பெண் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, தங்கமுலாம் பூசப்பட்ட ரி -56 ரக துப்பாக்கி விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, மே மாதம் 23 ஆம் திகதி பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த திங்கட்கிழமை (14) கடும் நிபந்தனைகளுக்கு மத்தியில் பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220219
  12. மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பெண்ணா அல்லது ஆணா? 17 JUL, 2025 | 04:03 PM அம்பாறை, பொத்துவில் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் மேலாடை இன்றி நிர்வாணமாக வீதியில் நடந்து சென்ற குற்றத்திற்காக 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒருமாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பெண்ணா அல்லது ஆணா என்பது குறித்து சமூக ஊடகங்களில் பரவி வரும் கருத்துக்கள் சர்ச்சையை எழுப்பியுள்ளது. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த 26 வயதுடைய சுற்றுலாப் பயணி ஒருவர் அறுகம் குடா சுற்றுலா தளத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து மற்றுமொரு ஹோட்டலுக்கு கடந்த திங்கட்கிழமை (14) பிற்பகல் மேலாடை இன்றி நிர்வாணமாக நடந்து சென்ற நிலையில் பொத்துவில் பொலிஸ் மகளிர் பணியகத்தினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவருக்கு எதிராக 5 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டு வாரங்கள் மற்றும் ஒருமாத சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. பெண் என அடையாளம் காணப்பட்ட இந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பெண்ணா அல்லது ஆணா என சமூக ஊடகங்களில் தற்போது பல கருத்துக்கள் பகிரப்பட்டு வருகிறன. ஏனென்றால் இந்த சுற்றுலாப் பயணியின் கடவுச்சீட்டில் பாலினம் ஆண் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் இந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணி பெண்ணா அல்லது ஆணா என பல கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதன் காரணமாக நீதிமன்ற தீர்ப்பு குறித்து சமூக ஊடகங்களில் பல எதிர்மறை கருத்துக்களும் பகிரப்பட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/220231
  13. செம்மணி படுகொலைகளுக்கு எதிரான போராட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெறும்.- மனிதநேயத்தையும் மனசாட்சியையும் கொண்டு வாருங்கள் - மெலானி குணதிலக Published By: RAJEEBAN 16 JUL, 2025 | 05:19 PM செம்மணி தெற்கில் உள்ள எங்களின் மனச்சாட்சியுடன் பேசுகின்றது. யுத்தத்தின்போது மக்கள் கொல்லப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டபோது எங்களில் பலர் எங்கள் மனதுகளில் துப்பாக்கி ரவைகளையும் குண்டுவெடிப்புகளையும் உருவாக்கினோம். நாங்கள் தொலைக்காட்சிகளில் பார்த்தவற்றை. ஆனால் யுத்தத்தின்போது அரசாங்கத்தின் ஆதரவுடன் யுத்தத்தின் பெயரால் பாலியல் வன்முறை சிறுவர் பாலியல் வன்முறை உட்பட பல விடயங்கள் இடம்பெற்றன. இன்றும் செம்மணியிலிருந்து எலும்புகள் வெளியாகும் போது அப்போது அரந்தலாவை என்பதே எங்கள் குற்ற மனச்சாட்சியாக உள்ளது. இனவாத அரசியல்வாதிகளும் அரசியலுக்கான இனவெறியை பயன்படுத்திய சந்தர்ப்பவாதிகளும் ஊடகங்களும் பல வருடங்களாக வெறுப்பினால் உரமிடப்பட்டிருந்த மனங்களின் மனச்சாட்சியை அழைக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்தவில்லை. ஆனால் காயங்களை குணப்படுத்துவதற்கு நாங்கள் ஆழமாக தோண்டி அந்த காயங்களை சுத்தம் செய்யவேண்டும். அதிகாலையிலும் மாலையிலும் பிரீத் கேட்க்கும் நாட்டில் பொதுமக்கள் சிறிய சிறுவர்களாக புதைக்கப்பட்டபோது எம்மிடமிருந்து பறிபோன விழுமியங்கள் குறித்து நாங்கள் மீள ஆராயவேண்டும். வடக்குகிழக்கு மக்கள் தங்களிற்கு எதிரான அநீதிகள் குறித்து குரல் எழுப்பும் ஒவ்வொரு முறையும் நாங்கள் எங்கள் மனச்சாட்சிகளை மறைத்துவைத்திருக்கின்றோம் என்பதை நாங்கள் உணரவேண்டும். வடக்கில் நடந்த குற்றங்களும் தெற்கில் இடம்பெற்ற குற்றங்களும் மெல்லிசைகளில் சொல்லப்பட்ட கதைகளில் எழுதப்பட்ட கவிதைகளில் தொலைந்து போயின என்பதை தெற்கில் உள்ள நாம் உணரவேண்டும். நாங்கள் இறக்கவில்லை என்று சொன்னாலும் மரணத்தை நோக்கிப் பார்க்கவில்லை என்று சொல்ல முடியாது. செம்மணிக்கு நீதி கேட்கும்போது சிறு குழந்தைகளின் எலும்புகள் வெளிப்படும்போது அது ஒரு இருண்ட உணர்வு. ஆனால் "அப்புறம் அரலகங்வில அறந்தலவா" என்று அலறும் இதயத்துடன் சிறிது நேரம் உட்காருங்கள். கோபத்தைத் தாண்டி குற்ற உணர்வை நீங்கள் எதிர்கொள்வீர்கள். சிரமத்தைத் தாங்கி அந்த உணர்வை அடையாளம் காணுங்கள். இனவெறி மதம் சார்ந்த பெயரடைகளை அகற்றி மற்றவர்களை மனிதர்களாகப் பார்க்கத் தொடங்க வேண்டிய இடம் அதுதான். செம்மணி படுகொலைகளுக்கு எதிரான போராட்டம் நாளை பிற்பகல் 2 மணிக்கு கோட்டை ரயில் நிலையத்தில் நடைபெறும். மனிதநேயத்தையும் மனசாட்சியையும் கொண்டு வாருங்கள். https://www.virakesari.lk/article/220156
  14. காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வோம் - இஸ்ரேலிற்கு ஆயுதங்கள் வெடிமருந்துகளை வழங்குவதை தடுக்க முயல்வோம் - கொலம்பிய உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் இணக்கம் Published By: RAJEEBAN 17 JUL, 2025 | 11:34 AM காசாவில் இஸ்ரேலின் நடவடிக்கைகளிற்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்யப்போவதாக கொலம்பியாவில் இடம்பெற்ற மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன. இஸ்ரேலிற்கான ஆயுத விநியோகத்தினை தடுக்கப்போவதாகவும இந்த மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன. ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இஸ்ரேலின் தாக்குதலை கட்டுப்படுத்துவதற்கான ஆறு நடவடிக்கைகள் குறித்த இணக்கப்பாட்டுடன் கொலம்பிய மாநாடு முடிவடைந்துள்ளது. கொலம்பிய மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் ஹேக் குழு என அழைக்கப்படுகின்றன. இந்த குழுவில் பொலிவியா கொலம்பியா இந்தோனேசியா கியுபா ஈராக் மலேசியா உட்பட பல நாடுகள் இடம்பெற்றுள்ளன. ஆயுதங்கள் வெடிமருந்துகள் இராணுவ எரிபொருள் தொடர்புடைய இராணுவ உபகரணங்கள் மற்றும் இரட்டை பயன்பாட்டு பொருட்களை இஸ்ரேலுக்கு வழங்குவதையோ அல்லது மாற்றுவதையோ தடுப்பது; இஸ்ரேலுக்கு மேற்கூறிய பொருட்களை எடுத்துச் செல்ல கப்பல் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ள எந்தவொரு துறைமுகத்திலும் கப்பல்களின் போக்குவரத்துஇ நறுக்குதல் மற்றும் சேவையைத் தடுப்பது; பங்கேற்கும் நாடுகளில் கொடியிடப்பட்ட கப்பல்களில் அத்தகைய பொருட்களை கொண்டு செல்வதைத் தடுத்தல்; இஸ்ரேலின் பாலஸ்தீன சட்டவிரோத ஆக்கிரமிப்பை ஆதரிப்பதிலிருந்தும் அதன் சட்டவிரோத இருப்பை நிலைநிறுத்துவதிலிருந்தும் பொது நிறுவனங்கள் மற்றும் நிதிகளைத் தடுக்க அனைத்து பொது ஒப்பந்தங்களையும் அவசரமாக மறுஆய்வு செய்யத் தொடங்குதல். சர்வதேச சட்டத்தின் கீழ் மிகக் கடுமையான இஸ்ரேலிய குற்றங்களுக்கு பொறுப்புக்கூறலை உறுதி செய்வதற்கான கடமைகளுக்கு இணங்குதல்; மற்றும் பாலஸ்தீனத்தில் செய்யப்படும் சர்வதேச குற்றங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை உறுதி செய்வதற்கான தேசிய சட்ட கட்டமைப்புகள் மற்றும் நீதித்துறைகளில் உலகளாவிய அதிகார வரம்பு கட்டளைகளை ஆதரித்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபடப்போவதாக கொலம்பிய மாநாட்டில் கலந்துகொண்ட நாடுகள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/220201
  15. 17 JUL, 2025 | 10:58 AM அங்கோலாவில் மிகப்பெருமளவில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டுள்ள பகுதியில் நடந்து சென்றுள்ள பிரிட்டிஸ் இளவரசர் ஹரி சிறுவர்கள் வெளியில் விளையாடுவதற்கு அச்சப்படும் சூழல் நிலவக்கூடாது என தெரிவித்துள்ளார். ஆபிரிக்கநாட்டிற்கு மிகவும் உணர்ச்சிபூர்வமான விஜயத்தினை ஹரி மேற்கொண்டுள்ளார். தனது தாயாரின் பாராம்பரியத்தினை தொடர்ந்தும் முன்னெடுக்கும் அவர் இளவரசி டயனாவின் அடிச்சுவடுகளை பின்பற்றியுள்ளார். தனது தாயார் அங்கோலாவிற்கு விஜயம் மேற்கொண்டு 28 வருடங்களின் பின்னர் அந்த நாட்டிற்கு சென்றுள்ள ஹரி நிலக்கண்ணி வெடி ஆபத்து இன்னமும் நிலவும் குயிடோ குவானாவேல் பகுதிக்கு சென்று அங்கு பொதுமக்களை சந்தித்துள்ளார். வெளியில் விளையாடுவதற்கோ பாடசாலைக்கு செல்வதற்கோ சிறுவர்கள் ஒருபோதும் அச்சப்படும் நிலை நிலவக்கூடாது என தெரிவித்துள்ள அவர் மூன்று தசாப்தத்தின் பின்னரும் அங்கோலாவில் போரின் எச்சங்கள் அச்சுறுத்துகின்றன என தெரிவித்துள்ளார். 2019ம் ஆண்டும் இளவரசர் ஹரி டயான விஜயம் மேற்கொண்ட இந்த பகுதிக்கு சென்றிருந்தார். 1997 இல் இளவரசி டயனா ஹலோ டிரஸ்டுடன் அங்கோலாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் - கார் விபத்தில் அவர் உயிரிழப்பதற்கு ஏழு மாதங்களிற்கு முன்னர் இந்த விஜயத்தினை அவர் மேற்கொண்டிருந்தார். இரண்டுதசாப்தகால யுத்தத்தின் பின்னர் அமைதி ஏற்பட்டிருந்தவேளை அங்கோலாவில் நிலக்கண்ணிவெடிகள் புதைக்கப்பட்டிருந்த பகுதிகள் ஊடாக பாதுகாப்பு சாதனங்களுடன் டயான நடந்து செல்லும் படம் அவ்வேளை வெளியாகியிருந்தது. டயனாவின் பரப்புரை நிலக்கண்ணிவெடிகளை ஒழிக்கும் சர்வதேச உடன்படிக்கை சாத்தியமாவதற்கு காரணமாகயிருந்தது -டயனா உயிரிழந்து இரண்டு மாதங்களின் பின்னர் இது கைகச்சாத்திடப்பட்டது. https://www.virakesari.lk/article/220194
  16. Published By: VISHNU 17 JUL, 2025 | 08:11 PM தமிழ் திரைப்பட இயக்குநர் வேலு பிரபாகரன், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். ஆனால் சிகிச்சை பலனளிக்காத காரணத்தால், வியாழக்கிழமை (ஜூலை 17) மதியம் அவர் உயிரிழந்தார். வேலு பிரபாகரன் 1980 ஆம் ஆண்டு வெளியான 'இவர்கள் வித்தியாசமானவர்கள்' என்ற படத்தின் மூலம், ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வேலு பிரபாகரன். தொடர்ந்து, 1989 ஆம் ஆண்டு வெளியான நாளைய மனிதன் என்ற திரைப்படத்தின் மூலம், இயக்குநராக அவதாரம் எடுத்தார். அதைத்தொடர்ந்து, நெப்போலியன், சத்தியராஜ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களை வைத்த படங்களை இயக்கியுள்ளார். மேலும், வேலு பிரபாகரனின் காதல் கதை, ஒரு இயக்குனரின் காதல் டைரி, பீட்ஸா 3 என 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக, கடந்த மே மாதம் வெளியான கஜானா திரைப்படத்தில் நடித்திருந்தார். முன்னதாக, தமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் என கருதப்படும் ஜெயதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதை தொடர்ந்து, தனது 60 வயதில், வேலு பிரபாகரனின் காதல் கதை படத்தில் தன்னுடன் நடித்த ஷிர்லே தாஸ் என்ற நடிகையை திருமணம் செய்து கொண்டார். கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், இன்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு, திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/220264
  17. பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு எதிரான பிடியாணையை இரத்துசெய்யவேண்டும் - இஸ்ரேலின் கோரிக்கையை நிராகரித்தது சர்வதேச நீதிமன்றம் 17 JUL, 2025 | 12:07 PM இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர்களிற்கு எதிரான பிடியாணையை இரத்துச்செய்யவேண்டும், ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீன பகுதிகளில் இடம்பெறும் குற்றச்செயல்கள் குறித்த விசாரணைகளை கைவிடவேண்டும் என்ற இஸ்ரேலின் வேண்டுகோளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மே 9ம் திகதி இஸ்ரேல் விடுத்த வேண்டுகோளை நிராகரித்துள்ளதாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தெரிவித்தள்ளது. பாலஸ்தீன பகுதிகளில் இழைக்கப்படும் குற்றங்கள் குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்கு சர்வதேச நீதிமன்றத்திற்கு நியாயாதிக்கம் இல்லை என்ற இஸ்ரேலின் வாதத்தை நிராகரித்துள்ள சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் அதன் முந்தைய தீர்ப்பினை மீண்டும் உறுதி செய்துள்ளது. பாலஸ்தீனம் தனது கருத்துக்களை முன்வைப்பதற்கு இடமளிக்க கூடாது என்ற இஸ்ரேலின் வேண்டுகோளையும் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. https://www.virakesari.lk/article/220206
  18. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் ஜிரொபோர்ன் ஶ்ரீசாம் & கோ ஈவ் பிபிசி 51 நிமிடங்களுக்கு முன்னர் தாய்லாந்து நாட்டில் துறவிகளை மிரட்டிய விவகாரத்தில் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அப்பெண் பல துறவிகளுடன் பாலுறவு வைத்து, பிறகு அது சார்ந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பயன்படுத்தி துறவிகளை மிரட்டி பணம் பறித்துள்ளார். செவ்வாய்க்கிழமை (ஜூலை 15) அன்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய காவல்துறையினர் இது தொடர்பாக கூடுதல் தகவல்களை வழங்கினர். அப்போது அவர்கள், அந்த பெண்ணை " கோல்ஃப்" என்ற பெயரில் அழைத்தனர். மேலும் குறைந்தது 9 துறவிகளுடன் அப்பெண் உறவில் இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். மேற்கொண்டு பேசிய காவல்துறையினர், கடந்த மூன்று ஆண்டுகளில் அப்பெண் இந்த முறையில் 385 மில்லியன் பாட் (கிட்டத்தட்ட ரூ. 100 கோடி மதிப்பில்) பணம் பறித்துள்ளார் என்று தெரிவித்தனர். விசாரணை நடத்திய அதிகாரிகள், அப்பெண்ணின் வீட்டை சோதனையிடும் போது, அங்கே 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் கைப்பற்றினர். இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைக் காட்டியே துறவிகளிடம் அவர் பணம் பறித்தது குறிப்பிடத்தக்கது. புகழ்பெற்ற தாய்லாந்தின் புத்த அமைப்பு மீது சமீபத்தில் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு இது. கடந்த சில ஆண்டுகளாகவே புத்த துறவிகள் பாலியல் குற்றங்களிலும் போதைப் பொருள் கடத்தலிலும் ஈடுபட்டு வருகின்றனர் என்ற குற்றச்சாட்டுகள் நிலவுவது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,THAI NEWS PIX படக்குறிப்பு, செய்தியாளர்கள் சந்திப்பில் காவல்துறையினர் ஜூன் மாதத்தின் போது தான் முதல் வழக்கானது காவல்துறையின் கவனத்திற்கு வந்தது. பாங்காங்கில் இருந்த புத்தமதத்துறவிகளின் தலைவர் ஒருவர், பெண் ஒருவரால் மோசடி செய்யப்பட்டதைத் தொடர்ந்து துறவறத்தைவிட்டு வெளியேறினார் என்று அவர்கள் கண்டறிந்தனர். கோல்ஃப் அந்த புத்தத்துறவியுடன் 2024-ஆம் ஆண்டு மே மாதம் காதல் உறவில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். பிறகு அந்த பெண் அவரின் குழந்தைக்கு தாயானதாகவும், குழந்தை பராமரிப்பிற்காக 7 மில்லியன் பாட் பணம் கேட்டதாகவும் காவல்துறையினர் விளக்குகின்றனர். அதிகாரிகள், மேலும் பல துறவிகள் இதே ரீதியில் அப்பெண்ணுக்கு பணம் அனுப்பியதை கண்டறிந்தனர். அப்படி அனுப்பப்பட்ட பணம் முழுமையும் கணக்கில் இருந்து எடுக்கப்பட்டது என்றும் அதில் குறிப்பிடத்தக்க அளவு பணம் ஆன்லைன் சூதாட்டத்திற்கு பயன்படுத்தப்பட்டது என்றும் காவல்துறையினர் கூறுகின்றனர். விசாரணை அதிகாரிகள் கோல்ஃபின் வீட்டை இந்த மாதத்தின் துவக்கத்தில் சோதனையிட்டனர். அப்போது அவருடைய போனைக் கைப்பற்றிய காவல்துறையினர், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் அதில் இடம்பெற்றிருப்பதைக் கண்டனர். மிரட்டிப் பணம் பறித்தல், பண மோசடி மற்றும் திருட்டுப் பொருட்களை பெற்றது என்று பல்வேறு வழக்குகளை தற்போது அப்பெண் எதிர்கொண்டு வருகிறார். "மோசமாக நடந்து கொள்ளும் துறவிகள்" குறித்து புகார் அளிக்க சிறப்பு உதவி எண்களை அறிமுகம் செய்துள்ளதாகவும் காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தைத் தொடர்ந்து துறவற விதிமுறைகள் குறித்து மதிப்பாய்வு செய்ய சிறப்புக் குழு ஒன்றை அமைக்க இருப்பதாக கூறியுள்ளது தாய்லாந்து பௌத்த விவகாரங்களை நிர்வகிக்கும் சங்கா சுப்ரீம் கவுன்சில். துறவற விதிமுறைகளை மீறும் துறவிகளுக்கு அபராதம் மற்றும் சிறை தண்டனை உள்ளிட்ட கடுமையான தண்டனைகளை வழங்க அரசு தரப்பில் இருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஜூன் மாதம் 81 துறவிகளுக்கு தாய்லாந்து நாட்டு மன்னர் உயர் பட்டங்களை வழங்கி உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த விவகாரத்திற்கு பிறகு மன்னர் வஜிரலோங்கோர்ன் அந்த உத்தரவை ரத்து செய்தார். சமீபத்திய சம்பவங்களைமேற்கோள்காட்டிய அவர், பௌத்தர்கள் மனதில் பெரும் துன்பத்தை இது ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார். தாய்லாந்தில் 90%க்கும் மேற்பட்ட மக்கள் தொகையினர் புத்த மதத்தை பின்பற்றுபவர்கள். புத்த துறவிகள் மரியாதைக்குரியவர்களாக கருதப்படுகின்றனர். நற் கர்மத்தைப் பெறுவதற்காக தாய்லாந்து ஆண்கள் பலரும் குறிப்பிட்ட காலத்திற்கு துறவறம் மேற்கொள்வதுண்டு. ஆனால் சமீபத்தில் பல்வேறு ஊழல் புகார்களுக்கு ஆளாகியுள்ளது அங்குள்ள புத்த அமைப்பு. ஆடம்பர வாழ்க்கை வாழ்வதில் பெயர் பெற்றவரான விராபோல் சுக்போல் என்ற துறவி மீது 2017-ஆம் ஆண்டு பாலியல் குற்றங்கள், மோசடி, பண மோசடி போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட போது, அவர் பெயர் தலைப்புச் செய்திகளானது. 2022-ஆம் ஆண்டு, தாய்லாந்தின் வடக்கு பிராந்தியத்தில் அமைந்திருக்கும் பெட்சாபூனில் உள்ள புத்த கோவில் ஒன்றில் இருந்த நான்கு துறவிகளும் போதைப் பொருட்கள் பரிசோதனையின் போது கைது செய்யப்பட்டனர். தாய்லாந்து சங்கா அமைப்பில் ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறல் தொடர்பாக பல ஆண்டுகளாக விமர்சனம் வைக்கப்பட்டாலும் கூட, நூறாண்டுகால பழமை வாய்ந்த அந்த அமைப்பில் சிறிய அளவிலேயே மாற்றங்கள் வந்துள்ளன என்று பலரும் தெரிவிக்கின்றனர். பிரச்னையின் பெரும்பகுதி அதன் அதிகாரப் படிநிலையில் உள்ளது என்று நிபுணர்கள் கூறுகின்றனர். "இது தாய்லாந்து அதிகார அமைப்பைப் போன்றே செயல்படும் ஒரு சர்வாதிகார அமைப்பாகும். அங்கு மூத்த துறவிகள் உயர் அதிகாரிகளைப் போலவும், இளைய துறவிகள் அவர்களுக்குக் கீழ் பணிபுரிபவர்களாகவும் உள்ளனர்" என்று மத அறிஞர் சுரபோத் தவீசக் பிபிசி தாய்லாந்து சேவையிடம் பேசும் போது தெரிவித்தார். "அவர்கள் நெருடலை ஏற்படுத்தும் ஏதேனும் ஒன்றைக் கண்டால் அதனை எதிர்த்து அவர்கள் பேசத் துணிவதில்லை. ஏனெனில் புத்தக் கோவிலில் இருந்து அவர்கள் மிக எளிதில் வெளியேற்றப்பட்டுவிடுவார்கள்." தற்போது காவல்துறை மற்றும் சங்கா அமைப்பால் நடைபெற்று வரும் விசாரணைகளானது, தேவைப்படும் சீர்திருத்தத்தைக் கொண்டு வரும் முக்கிய நடவடிக்கையாகும். "உண்மையை வெளிக்கொண்டுவருவது மிகவும் முக்கியமானது." என்று ப்ரகிராதி சடாசுட் கூறுகிறார். அவர் பாங்காங் தம்மசாட் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் ஆராய்ச்சியாளராக உள்ளார். "தன் மதிப்பைக் காப்பாற்றிக் கொள்ள சுப்ரீம் சங்கா கவுன்சில் பலரின் தொடர்பை துண்டித்துக் கொள்ளுமா என்பதைப் பொறுத்தே அது அமையும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd975w0vzeko
  19. Published By: RAJEEBAN 17 JUL, 2025 | 10:40 AM பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சின் இரகசிய ஆவணம் கசிந்ததை தொடர்ந்து தலிபானால் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆப்கானின் முன்னாள் படைவீரர்கள் மற்றும் பொலிஸாரின் பெயர்கள் வெளியாகியுள்ளன என டெலிகிராவ் செய்தி வெளியிட்டுள்ளது அமெரிக்கா தலைமையிலான பன்னாட்டு படையினருடன் இணைந்து செயற்பட்டவர்களே கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து பிரிட்டனின் டெலிகிராவ் மேலும் தெரிவித்துள்ளதாவது. பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்கப் படைகளுடன் பணிபுரிந்த ஆப்கானியர்களின் அவல நிலையை எடுத்துக்காட்டும் சுயாதீன வழக்குரைஞர்களால் கொல்லப்பட்ட 200க்கும் மேற்பட்ட ஆப்கானின் முன்னாள் படைவீரர்கள் மற்றும் பொலிஸாரின் பெயர்கள் தொகுக்கப்பட்டன. ஆனால் ஒரு மூத்த நீதிபதி விதித்த நீதிமன்ற உத்தரவு இறந்தவர்கள் முதலில் பாதுகாப்பு அமைச்சக பட்டியலில் இடம்பெற்றார்களா என்பதை தி டெலிகிராஃப் செய்தியாக வெளியிடுவதைத் தடுக்கிறது. அந்த பட்டியல் பிப்ரவரி 2022 இல் தற்செயலாக வெளியிடப்பட்டது. பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சின் இரகசிய ஆவணம் 2022 இல் தங்கள் வசம் வந்ததாகவும், அன்றிலிருந்து அதில் அடையாளம் காணப்பட்டவர்களை வேட்டையாடி வருவதாகவும் தலிபான் கூறுகிறது. தலிபானின் சிறப்புப் படைகளின் ஒரு பிரிவு - யார்மோக் 60 என அழைக்கப்படுகிறது - அவர்களைக் கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதை டெலிகிராவினால் செய்தியாக வெளியிட முடியும். 2021 ஆம் ஆண்டு காபூலின் வீழ்ச்சிக்குப் பிறகு பிரிட்டிஷ் துருப்புக்களுடன் பணிபுரிந்த ஆப்கானியர்களுக்கு அடைக்கலம் அளிக்கும் நோக்கில் பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சகத்தால் நடத்தப்படும் புகலிடத் திட்டத்திற்கு விண்ணப்பித்தவர்களின் விபரங்கள் அடங்கிய ஆவணம் கசிந்துள்ளமையே தற்போது பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. பட்டியலில் உள்ளவர்களில் எத்தனை பேர் தலிபான்களால் அடையாளம் காணப்பட்டனர், கண்காணிக்கப்பட்டு அதன் விளைவாகக் கொல்லப்பட்டனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை. தரவு மீறலின் விளைவாக யாராவது கொல்லப்பட்டார்களா என்பதை "உறுதியாகக் கூற முடியவில்லை" என்று பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் ஜோன்ஹீலி புதன்கிழமை ஒப்புக்கொண்டார். பட்டியல் கசிந்த பின்னர் கொல்லப்பட்ட ஆப்கானியர்களில் இளவயதினரும் - நடுத்தர வயதினரும் உள்ளனர். இவர்கள் ஆப்கானின் பலபகுதிகளில் - சிலர் குடும்பத்தவர்களுடன் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த வருடம் ஜூன் 24ம் திகதி பொலிஸ் கொமாண்டோ பிரிவை சேர்ந்த கேர்ணல் டுர்ஜான் ஹெல்மண்டில் மசூதியிலிருந்து வெளியேறிக்கொண்டிருந்தவேளை குடும்பத்தவர்கள் பலருடன் சுட்டுக்கொல்லப்பட்டார். இதற்கு ஒரு மாதத்தின் பின்னர் மற்றுமொரு முன்னாள் இராணுவவீரர் கோஸ்ட் மாகாணத்தில் தலிபான்களால் கொல்லப்பட்டார். ஜூலை 23ம் திகதி ( 2024)அலிசார் மாகாணத்தில் ஹமிதுல்லா கோஸ்டி தலிபான்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் திருமணமொன்றிற்காக அந்த பகுதிக்கு சென்றிருந்தார். https://www.virakesari.lk/article/220191
  20. நிமிஷா செய்த குற்றத்துக்கு மன்னிப்பு கிடையாது: உயிரிழந்த தலால் மெஹ்தியின் சகோதரர் திட்டவட்டம் 17 JUL, 2025 | 09:36 AM புதுடெல்லி: தன் சகோதரரை கொலை செய்த கேரள தாதி நிமிஷாவின் குற்றத்துக்கு மன்னிப்பு வழங்க முடியாது என அப்தெல்ஃபத்தா மெஹ்தி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், “இந்திய ஊடகங்கள் குற்றவாளி நிமிஷாவை பாதிக்கப்பட்டவராக சித்தரிக்கும் பணியில் ஈடுவருகின்றன. இது எங்களது குடும்பத்தினரிடம் ஆழ்ந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனது சகோதரர் தலால் அப்தோ மெஹ்தியை கொலை செய்த குற்றத்துக்காகவே நிமிஷா பிரியாவுக்கு இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே அவருக்கு மரண தண்டனையை நிச்சயம் நிறைவேற்ற வேண்டும். இந்த குற்றத்துக்கு அவருக்கு மன்னிப்பு வழங்க முடியாது‘‘ என்றார். கடந்த 2017-ம் ஆண்டு தலால் அப்தோ மெஹ்தியை கொலை செய்த குற்றத்துக்காக கேரள செவிலியர் நிமிஷா பிரியாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு நேற்று அது நிறைவேற்றப்பட இருந்தது. இந்த நிலையில், நீண்டகாலமாக நடைபெற்ற பலமுனை பேச்சுவார்த்தைக்கு பிறகு நிமிஷாவின் மரண தண்டனை அடுத்த உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேரளாவின் இஸ்லாமிய மதத் தலைவர் அபூபக்கர் முஸ்லியாரின் மத்தியஸ்தம் மற்றும் இந்திய அரசின் தீவிர முயற்சியின் பலனாக இந்த தண்டனை நிறுத்தம் சாத்தியமாகியுள்ளது. இருப்பினும், கொலையான மெஹ்தியின் குடும்பத்துக்கு குருதிப் பணம் கொடுத்து நிமிஷாவை மீட்பதில் இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது. https://www.virakesari.lk/article/220186
  21. 3) வீட்டுத்திட்ட பணிகளை நிறைவு செய்ய உதவுவதற்காக திரு கந்தையா சிவராசா (சுழிபுரம் கிழக்கு) பிரான்ஸ்) குடும்பத்தினர் 25000 ரூபாவை திரு லக்‌ஷன் அவர்களுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்துள்ளனர். இதுவரை மொத்தமாக 104970 ரூபா திரு லக்சனுடைய வங்கிக் கணக்கில் வைப்புச் செய்யப்பட்டுள்ளது.
  22. இலங்கையுடனான இருதரப்பு ரி20 கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் முதலாவது வெற்றியை சுவைத்தது Published By: VISHNU 16 JUL, 2025 | 11:05 PM (நெவில் அன்தனி) இலங்கை - பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் புதன்கிழமை (16) நடைபெற்ற தீர்மானம் மிக்க கடைசி சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் சகலதுறைகளிலும் அபரிமிதமான திறமையை வெளிப்படுத்திய பங்களாதேஷ் 8 விக்கெட்களால் அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரிக்கெட் தொரை 2 - 1 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் கைப்பற்றியது. இரண்டு அணிகளுக்கும் இடையில் 2013இலிருந்து நடைபெற்றுவந்த 2 அல்லது அதற்கு மேற்பட்ட போட்டிகளைக் கொண்ட ஐந்து சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடர்களில் பங்களாதேஷ் வெற்றியை சுவைத்தது இதுவே முதல் தடவையாகும். இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் 2003இல் நடைபெற்ற ஒற்றை ரி20 போட்டியில் இலங்கை வெற்றிபெற்றிருந்தது. அதன் பின்னர் விளையாடப்பட்ட 4 தொடர்களில் ஒரு தொடர் சமநிலையில் முடிவடைந்ததுடன் மற்றைய 3 தொடர்களில் இலங்கை வெற்றிபெற்றிருந்தது. பங்களாதேஷின் இந்த வெற்றியில் மெஹிதி ஹசனின் 4 விக்கெட் குவியல், தன்ஸித் ஹசனின் ஆட்டம் இழக்காத அரைச் சதம் என்பன முக்கிய பங்காற்றி இருந்தன. தீர்மானம் மிக்க கடைசிப் போட்டியில் வெற்றிபெறுவதாக இருந்தால் இலங்கை அணி சகலதுறைகளிலும் பிரகாசிப்பது அவசியம் எனவும் குறிப்பாக துடுப்பாட்டத்தில் முழுத் திறமை வெளிப்படவேண்டும் எனவும் சனத் ஜயசூரிய கூறியிருந்தார். அதுமட்டுமல்லாமல் இலங்கை அணி மீண்டு எழும் எனவும் அவர் தெரிவித்தார். ஆனால், அவர் கூறியவற்றுக்கு எதிர்மாறாகவே இலங்கை அணியின் விளையாட்டு அமைந்திருந்தது. இதேவேளை, இந்தப் போட்டியில் அதிக தவறுகளை இழைத்ததாலேயே தோல்வி அடைய நேரிட்டதாகத் தெரிவித்த அணித் தலைவர் சரித் அசலன்க, தவறுகளைக் குறைப்பதற்கான வழிமுறைகளைப் பின்பற்றவேண்டும் எனவும் கூறினார். கடைசிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 132 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. பவர் ப்ளே ஓவர்களுக்குள் 3 விக்கெட்களை இழந்ததால் இலங்கை பெரும் தடுமாற்றத்திற்குள்ளானது. குசல் மெண்டிஸ் 6 ஓட்டங்களுடன் வெளியேறிய சொற்ப நேரத்தில் குசல் ஜனித் பெரேரா தொடர்ச்சியான இரண்டாவது தடவையாக ஓட்டம் பெறாமல் களம் விட்டகன்றார். மூன்று வருடங்களுக்குப் பின்னர் சர்வதேச ரி20 அணிக்கு மீளழைக்கப்பட்ட தினேஷ் சந்திமால் தவறான அடி தெரிவால் 4 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து மெஹிதி ஹசனின் பந்துவீச்சை புரிந்துகொள்ள முடியாதவராக அணித் தலைவர் சரித் அசலன்க போல்ட் ஆகி 3 ஓட்டங்களுடன் வெளியேறினார். இந்நிலையில் பெத்தும் நிஸ்ஸன்கவும் கமிந்து மெண்டிஸும் அணியை மீட்டெடுக்க கடுமையாக முயற்சித்தனர். ஆனால், அதுவரை தனி ஒருவராக திறமையை வெளிப்படுத்திய பெத்தும் நிஸ்ஸன்க 46 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மெஹிதி ஹசன் வீசிய பந்தை அரைகுறை மனதுடன் அடித்து அவரிடமே பிடிகொடுத்து ஆட்டம் இழந்தார். அதன் பின்னர் கமிந்து மெண்டிஸும் தசுன் ஷானக்கவும் 6ஆவது விக்கெடடில் 22 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது கமிந்து மெண்டிஸ் 21 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். அவரைத் தொடர்ந்து ஜெவ்றி வெண்டசே 7 ஓட்டங்களை மட்டும் பெற்று ஆட்டம் இழந்தார். தசுன் ஷானக்க கடைசி ஓவரில் 2 சிக்ஸ்களையும் 2 பவுண்டறிகளையும் விளாசி அணியை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டார். அவர் அடித்து ஒரு பந்து விளையாட்டரங்கில் உள்ள எண்ணிக்கை பலகைக்கு மேலாக கூரையைக் கடந்து சென்று மைதானத்திற்கு வெளியே வீழ்ந்தது. அந்த பந்து கிடைக்காததால் வெறொரு பந்து அதன் பின்னர் பயன்படுத்தப்பட்டது. 25 பந்துகளை எதிர்கொண்ட அவர் 4 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 35 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். தசுன் ஷானக்கவும் மஹீஷ் தீக்ஷனவும் பிரிக்கப்படாத 8ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 29 ஓட்டங்களே இலங்கையின் சிறந்த இணைப்பாட்டமாக இருந்தது. பந்துவீச்சில் மெஹிதி ஹசன் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில் 11 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார். 133 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 16.3 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. பினுர பெர்னாண்டோ வீசிய முதல் பந்திலேயே பங்களாதேஷின் ஆரம்ப வீரர் பர்வெஸ் ஹொசெய்ன் ஏமொன் (0) ஆட்டம் இழந்ததும் இலங்கை பெரு மகிழ்ச்சியில் மிதந்தது. ஆனால், 2ஆவது விக்கெட்டில் ஜோடி சேர்ந்த தன்ஸித் ஹசன், அணித் தலைவர் லிட்டன் தாஸ் ஆகிய இருவரும் 50 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷை பலப்படுத்தினர். லிட்டன் தாஸ் 32 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது கமிந்து மெண்டிஸின் பந்துவீச்சில் குசல் பெரேரவின் சிறப்பான பிடி மூலம் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து தன்ஸித் ஹசன், தௌஹித் ஹிரிதோய் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 3ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷின் வெற்றியை உறுதிசெய்தனர். தன்ஸித் ஹசன் 47 பந்துகளில் ஒரு பவுண்டறி, 6 சிக்ஸ்கள் உட்பட 73 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். தௌஹித் ஹிரிதோய் ஆட்டம் இழக்காமல் 27 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் கமிந்து மெண்டிஸ், நுவன் துஷார ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். ஆட்டநாயகன்: மெஹிதி ஹசன். தொடர்நாயகன்: லிட்டன் தாஸ். https://www.virakesari.lk/article/220174
  23. Published By: VISHNU 17 JUL, 2025 | 02:52 AM யாழ்ப்பாணம் செம்மணி படுகொலை தொடர்பில் அரசின் கவனம் திரும்பியிருக்கின்றது. தோண்ட தோண்ட வெளிவரும் பச்சிளம் பாலகர்களின் மண்டை ஓடுகள், எலும்புக்கூடுகளும், அதிகமான உடல்கள் இருப்பதாகவும், புதைக்கப்பட்டிருப்பதாகவும், தோண்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வடமாகணத்திலே தமிழர்களின் ஆதரவைப் பெற்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் குறிப்பாக மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டுள்ள இந்த அரசாங்கம் இருக்கின்றது. இந்த நிலையில் செம்மணி புதைகுழி விடயம் கவனம் செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது இது வரவேற்கத்தக்கது இதற்கு நிச்சயமாக நீதி நிலைநாட்டப்பட வேண்டும். இவற்றைப்போல் கிழக்கிலும் இன்றும் கண்டுகொள்ளப்படாத படுகொலைகள், தோண்டப்பட வேண்டிய பல புதைகுழிகள் உள்ளன. அவற்றுக்கு நீதியை வேண்டித்தான் எமது நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியம் இன்று இந்த பத்திரிகையாளர் சந்திப்பினை நடத்துகின்றோம். என நாம் தமிழர சமூக சேவை ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் கோபாலன் பிரசாத் தெரிவித்துள்ளார். புதன்கிழமை (16.07.2025) மாலை களுவாஞ்சிகுடியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்…. குறிப்பாக 1990, 1991 ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம் ஜிகாத் எனும் அமைப்பினால் பல படுகொலைகள் திட்டமிட்டு செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இந்த செய்தியை சர்வதேசத்திற்கும் தேசிய அரசாங்கத்திற்கும் சர்வதேச அரங்கிக்கிற்கும், கொண்டு வருவதற்காகவே நாம் இந்த ஊடக சந்திப்பை செய்கின்றோம். குறிப்பாக 20.06.1990 ஆம் ஆண்டு வீரமுனை பிள்ளையார் கோயில் படுகொலை இதன் போது 60 தமிழர்கள் கொலை செய்யப்பட்டார்கள் அதேபோன்று 05.07.1990 ஆம் ஆண்டு வீரமுனையில் 13 தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள் 10.07.1990 ஆம் ஆண்டு வீரமுணையில் 15 தமிழர்கள் கொலை செய்யப்பட்டிருக்கின்றார்கள். 16.07.1990 ஆம் ஆண்டு மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லிம் ஊர்காவல் படையினருமாக 30 பேர் 8 பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர். அதேபோன்று 26.07.1990ஆம் ஆண்டு வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லிம் ஊர்கால் படையினரால் மிகவும் கொடூரமான முறையில் கைது செய்யப்பட்டு காணாமல் செய்து படுகொலை செய்து இருக்கின்றார்கள். 29.07.1990 ஆம் ஆண்டு ஆசிரியர் ஒருவர் குடும்பத்தினருடன் வெளியேறிக் கொண்டிருந்தபொழுது கடத்திச் செல்லப்பட்டு காணாமல் செய்யப்பட்டிருக்கின்றார். 01.08.1990 ஆம் ஆண்டு சவளக்கடையில் 18 பேர் கைது செய்யப்பட்டு காணாமல் செய்யப்பட்டிருக்கின்றார்கள். அதேபோன்று 12.08.1990 ஆம் ஆண்டு வீரமுரையில் அகதி முகாமில் புகுந்து முஸ்லிம் ஊர்காவல் படையினர் வாளால் வெட்டி தாக்குதல் நடத்தியதோடு, அதில் ஆலய தர்மாகத்தா உட்பட குறிப்பாக தம்பி முத்து சின்னத்துரை உட்பட 14 பேர் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். அதில் பலர் காயமடைந்து இருக்கிறார்கள். வீரமுனையிலே 600; வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைதீவு, வளத்தாப்பிட்டி, கணபதிபுரம், மல்வத்தை, ஆகிய கிராமங்களில் இருந்து 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லிம்களால் முற்றாக தீக்கிரியாக்கப்பட்டிருக்கின்றன. 20.06.1990 ஆம் ஆண்டிற்கும் 15.08.1990 ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் வீரமுனையில் மாத்திரம் 232 தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள். 1600 க்கும் அதிகமான வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டிருக்கின்றன. அயல் கிராமங்களான சம்மாந்துறை முஸ்லிம்கள் சிங்கள இராணுவத்தினரின் உதவியுடன் தமிழர்களை படுகொலை செய்திருக்கின்றார்கள். கிழக்கு மாகாணத்தில் மிகவும் மோசமான தாக்குதலுக்கு உள்ளான கிராமங்களான வாழைச்சேனை, செங்கலடி, ஆரையம்பதி நீலாவணை பாண்டிருப்பு போன்ற பல கிராமங்கள் காணப்படுகின்றன. அம்பாறை மாவட்டத்தில் நிகழ்த்தப்பட்ட இந்த முஸ்லிம் ஜிகாத் அமைப்பினரின் தாக்குதல்களால் பல தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கின்றார்கள் இதற்கு நிச்சயமாக இந்த அரசாங்கத்தில் நீதி நிலைநாட்டப்பட வேண்டும். கொலை செய்யப்பட்ட மக்களுக்கு நீதி பெற்றுக் கொடுக்க வேண்டும். கொலையாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். என்பதுதான் எமது கோரிக்கையாகும். பரம்பரை பரம்பரையாக தமிழர்கள் வாழ்ந்து வந்த கிராமங்கள் முஸ்லிம்களால் சூறையாடப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறு தற்போதுவரையில் சிதைவிக்குள்ளான கிராமங்களாக பாலமுனை, பாணமை, மீனோடக்கட்டு, ஒலுவில் நிந்தவூர், சம்மாந்துறை, கரவாகு, தீகபாவி, மாந்தோட்டம், கொண்டவட்டுவான், ஊரணி, செம்மணிக்குளம், தங்கவேலாயுதபுரம், உடும்பன்குளம், போன்ற பவகிராமங்கள் இருக்கின்றன. குறிப்பாக தமிழர்கள் பூர்விகமாகக் கொண்ட கிராமங்கள் இன்று முஸ்லிம் காடையர்களால் துடைத்தழிக்கப்பட்டு அந்த தமிழ் கிராமங்கள் முஸ்லிம் கிராமங்களாக மாறி இருக்கின்றன. இந்த சூழலில்தான் அம்பாறை மாவட்டத்தில் படிப்படியாக முஸ்லிம் ஆக்கிரமிப்புக்கு உள்ளான தமிழ் கிராமங்களாக அட்டைப்பள்ளம், சவளைக்கடை, வீரச்சோலை, போன்ற கிராமங்கள் உள்ளன. கூறலாம். இவை அனைத்து படுகொலைகளையும் ஊர்காவல்படை என்ற பெயரில் இராணுவத்துடன் சேர்ந்து இயங்கிய ஜிகாத் முஸ்லிம் ஆயுத குழுக்களே இந்த படுகொலைகளை நடத்தி இருந்தார்கள். அவர்களுக்கான தண்டனைகள் வழங்கப்பட வேண்டும். புதைகுழிகள் தோண்டப்பட வேண்டும். முஸ்லிம் புதை புலிகள் தோண்டப்படுவதற்கும் மக்களின் வாக்குமூலங்களை செய்கின்ற அதே வேளை முஸ்லிம் ஜிகாத் குழு என்று சொல்லப்படுகின்ற இந்த அமைப்பினர் அந்த அமைப்பின் பெயரில் இயங்கிய முஸ்லிம் காடையர்களையும் தேடி கண்டுபிடித்து இந்த அரசாங்கம் அவர்களை விசாரணை செய்வதோடு, அவர்களை தண்டிப்பதற்கும் குற்றவாளிகளை தண்டிப்பதற்கும் ஊர்காவல்படை என்ற பெயரில் அரசாங்கத்தில் சம்பள பட்டியலில் இருந்தவர்கள் இன்றும் அந்தந்த கிராமங்களில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் அவர்கள் கைது செய்யப்பட வேண்டும். அவர்கள் எங்கும் தப்பியோட முடியாது அவர்கள் விசாரித்து பொறுப்பானவர்களும் குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும். என்பதுதான் எமது கோரிக்கையாகும். இந்த கோரிக்கையை கிழக்கு மாகாணத்தில் இருக்கின்ற குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன், கோடீஸ்வரன், சிறிநேசன் சிறிநாத், போன்றவர்கள் பாராளுமன்றத்தில் நிச்சயமாக பேசவேண்டும். இதற்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருக்கின்ற சட்டத்தரணிகள் சங்கமும் பொது அமைப்புகளும் இதற்கு ஒரு பொதுநல வழக்கை தாக்கல் செய்ய வேண்டும். அதற்கு நீதியை நிலை நாட்டுவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். அது மாத்திரமன்றி ஜிகாத் அமைப்பினரின் பின்னணியில் உடைக்கப்பட்ட ஓட்டமாவடி காளி கோயிலுக்கு நீதி நிச்சயமாக வழங்கப்பட வேண்டும். நானே அந்தக் காளி கோயிலை உடைத்தேன் அதற்கு எதிராக இருந்த நீதிபதியை மாற்றினேன் அது மாத்திரமன்றி காளி கோயிலை உடைத்து மீன் சந்தையை கட்டி அதுவும் காளி கோயில் அமைந்திருந்த கருவறையில் மூலஸ்தானத்தில் மாட்டு இறைச்சிக் கடையை போட்டு இருக்கின்றேன், என முன்னாள் அமைச்சர், முன்னாள் ஆளுநர், தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர், எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கி இருக்கின்றார். எனவே இதனை இந்த அரசாங்கமும் பாராளுமன்ற சபாநாயகர் அவர்களும் விசாரணை செய்ய வேண்டும். எனவே தற்போதைய பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்ற எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா அவர்கள் பின்னணியில் உடைக்கப்பட்ட எங்களுடைய காளி கோயிலை மீண்டும் அதே இடத்தில் நிறுவப்பட வேண்டும். அவர் தற்போது பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றார் அவர் நீதித்துறை இவ்வாறு பயன்படுத்தி இருக்கின்றார், அவர் மாவட்ட அபிவித்துக் குழு தலைவர் என்ற பதவியை பயன்படுத்தி செய்திருக்கின்றார், இதற்கு நிச்சயமாக நீதி வழங்கப்பட வேண்டும். நிச்சயமாக இந்த அரசாங்க நீதி வழங்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது. எனினும் செம்மொழி புதைகுழி தோண்டப்படுகின்றது ஆங்காங்கே தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு விசாரணைகள் நடைபெறுகின்ற இந்த நேரத்தில் இந்த ஜிகாத் அமைப்பின் பேரில் தமிழ் மக்களை கொன்றளித்த இந்த முஸ்லிம் காடையர்களை நிச்சயம் விசாரிக்கப்பட்டு அவர்கள் இன்றும் கிராமங்களில் வாழ்கின்றார்கள். அவர்களுக்குரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். என்பதே எமது கோரிக்கை இந்த காளி கோயில் விடயத்திலும் எமது மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சாணக்கியன், சிறிநேசன், சிறிநாத், போன்றவர்கள் பாராளுமன்றத்திலே பேச வேண்டும். அந்த காளி கோயிலை உரிய இடத்தில் அமைப்பதற்கு நிச்சயமாக பாராளுமன்றத்தில் பேச வேண்டும் என்பது எனது கோரிக்கை. அது மாத்திரமன்றி இது தொடர்பில் ஒரு பொது நல வழக்கு ஒன்றை சிவில் அமைப்புகள் தமிழ் உணர்வாளர்கள் தமிழ் சட்டத்தரணிகள் ஒன்றிணைந்து இந்த வழக்கை தாக்கல் செய்ய வேண்டும். எனது என்பது எனது பணிவான வேண்டுகோள். இதற்கு யாரும் முன்வராத பட்சத்தில் எமது நாம் தமிழர் சமூக சேவை ஒன்றியத்தினராகிய ஆகிய நாம் இதற்காக பொதுநல வழக்கொன்றை நிச்சயமாக நாங்கள் வழக்கு தாக்கல் செய்து நீதியை நிலைநாட்டுவதற்கு நாங்கள் இந்த அரசாங்கத்திடம் முனைவோம். என அவர் இதன்போது தெரிவித்தார். https://www.virakesari.lk/article/220180
  24. 1990 பேர் புதிதாக சுகாதார சேவைக்கு ஆட்சேர்ப்பு - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ Published By: VISHNU 16 JUL, 2025 | 10:53 PM கடந்த காலங்களில் ஆட்சியிலிருந்த அமைச்சர்களின் அர்த்தமற்ற செயலை மாற்றி புதிதாக சுகாதார ஊழியர் சேவைக்காக 1990 நியமனங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். வடமாகாண சுகாதார சேவை திணைக்களத்தில் சமீபத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் இது தொடர்பில் மேலும் குறிப்பிடுகையில், வட மாகாணத்தில் தாதியரற்ற 33 பிரதேச வைத்தியசாலைகள் தொடர்பில் விசேடக் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் சுமார் 3147 தாதியர்களுக்கு புதிதாக நியமனம் வழங்கப்பட்டது. அந்த வகையில் இன்னும் இரண்டு மாதங்களில் 290 தாதியர்களுக்கான நியமனங்களை வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதுடன், வடமாகாண வைத்தியசாலைகளில் காணப்படும் தாதியர் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு அவர்களில் குறிப்பிடத்தக்க தாதியர்களை அப்பகுதிகளுக்கு நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். எதிர் வரும் மார்ச் மாதம் தாதியர் பட்டப்படிப்பை நிறைவு செய்ய உள்ள 875 பேர் சுகாதார சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்பட உள்ளனர். தாதியர் சேவைக்கு 100 பேரில் 5 ஆண்கள் மாத்திரமே ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர். ஆகையால் வடமாகாணத்தில் நிலவிவரும் தாதியர் பற்றாக்குறையை கருத்தில் கொண்டு எதிர்வரும் நாட்களில் ஆண் தாதியர்களை அதிகளவில் சுகாதார சேவையில் இணைத்துக் கொள்வதற்காக பொது சேவை ஆணை குழுவுடன் கலந்துரையாட உள்ளோம். கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அமைச்சர்களின் அர்த்தமற்ற செயலை மாற்றி புதிதாக சுகாதார ஊழியர் சேவைக்காக 1990 நியமனங்கள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோல் சுகாதார ஊழியர்களுக்கான பணியிட மாற்றம், வெற்றிடங்களை நிரப்பல் பதவி உயர்வு உள்ளிட்ட அவர்கள் எதிர்நோக்கும் ஏனைய சவால்களுக்கும் தீர்வு வழங்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/220173

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.