Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. வட்டுக்கோட்டையில் பதற்றம் : இரு குழுக்களிடையே மோதல்; பொலிஸார் துப்பாக்கிச் சூடு Published By: VISHNU 20 JUL, 2025 | 09:21 PM யாழ்ப்பாணத்தில் இரு குழுக்கள் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் . பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு வன்முறையை கட்டுப்படுத்தியுடன் , வன்முறையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை கைது செய்துள்ளனர். குறித்த வன்முறை சம்பவத்தில் ஒரு மோட்டார் சைக்கிள் தீக்கிரை ஆக்கப்பட்டுள்ளதுடன் , மேலுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டு , சேதமாக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மூளாய் பகுதியில் இரு தனி நபர்களுக்கு இடையில் சனிக்கிழமை (19) தினம் ஏற்பட்ட தர்க்கம் , வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையம் வரையில் சென்று, தீர்த்து வைக்கப்பட்டது. அந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை (20) இரு நபர்களின் பிரச்சனை மீண்டும் தலை தூக்கிய நிலையில், அது அப்பகுதியை சேர்ந்தவர்களின் பிரச்சனையாக உரு மாறி இரு தரப்பினரும் மோதலில் ஈடுபட்டுள்ளனர். அதன் போது மோட்டார் சைக்கிள் ஒன்று தீக்கிரையாக்கப்பட்டதுடன், மற்றுமொரு மோட்டார் சைக்கிள் அடித்து நொறுக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் அறிந்து வட்டுக்கோட்டை பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்த வேளை பொலிஸார் மீது கல் வீச்சு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. அதனை அடுத்து பொலிஸார் வானத்தை நோக்கு துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு அப்பகுதியில் குழுமி இருந்தவர்களை துரத்தினர். அத்துடன் வன்முறை சம்பவத்தில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். ஏனையவர்கள் தலைமறைவாகியுள்ள நிலையில் அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த சம்பத்தில் இடம்பெற்ற குழு மோதலைத் தொடர்ந்து பொலிஸ் விசேட அதிரடிப் படையினர், இராணுவத்தினர் களமிறக்கப்பட்டுள்னர். குறித்த பகுதியில் பொலிஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/220495
  2. பட மூலாதாரம்,ANUSH KOTTARY படக்குறிப்பு, புகார்தாரர் கருப்பு துணியால் தலை முதல் கால் வரை முழுவதும் மூடப்பட்ட நிலையில் நீதிபதி முன் ஆஜரானார். கட்டுரை தகவல் இம்ரான் குரேஷி பிபிசி ஹிந்திக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இந்த செய்தியில் உள்ள தகவல்கள் சங்கடத்தை ஏற்படுத்தலாம்) இரண்டு வாரங்களுக்கு முன், கர்நாடகாவின் மங்களூரு நகரில் தூய்மைப் பணியாளர் ஒருவர் 1995 முதல் 2014-க்கு இடைபட்ட காலத்தில் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சிறுமிகள், பெண்கள் மற்றும் ஆண்கள் என சுமார் 100 உடல்களை வெவ்வேறு இடங்களில் தான் புதைத்ததாக காவல்துறையிடம் தெரிவித்தார். புகார்தாரரான இவர் இந்திய பொது பாதுகாப்பு சட்டத்தின் (பிஎன்எஸ்எஸ்) 183ஆவது பிரிவின் கீழ் ஒரு நீதிபதியின் முன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்துள்ளார். தனக்கு மேல் இருந்தவர்கள் தன்னை கொன்றுவிடுவதாக மிரட்டியதால் தாம் இத்தனை ஆண்டுகள் அமைதியாக இருந்ததாக அவர் சொல்கிறார். தன்னால் "குற்ற உணர்வோடு இதற்கு மேலும் உயிரோடு இருக்கமுடியாது" என அவர் தெரிவித்துள்ளார். அவரது குற்றச்சாட்டு வெளியே வந்தபின்னர், இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் காணாமல் போன ஒரு பெண்ணின் தாயும் முன்வந்துள்ளார். உடல்கள் அடையாளம் காணப்பட்டால் தாம் டிஎன்ஏ சோதனைக்கு தயாராக இருப்பதாக காவல்துறையிடம் அவர் தெரிவித்துள்ளார். 22 ஆண்டுகளுக்கு மேல் பழமையான இந்த வழக்கில், விசாரணையை எப்படி முன்னெடுத்து செல்வது என்பதை காவல்துறையினர் இன்னமும் முடிவு செய்யவில்லை. இதற்கிடையில், இந்த விசாரணை குறித்து உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் குழு ஒன்று பல முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. "உடல்கள் ஒட்டுமொத்தமாக புதைக்கப்பட்ட இடங்கள் கண்டுபிடிக்கப்படுவதை தவிர்ப்பதற்கும், இந்த குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டால், பெயர்கள் வெளிவரக்கூடிய நபர்களைப் பாதுகாக்கவும் ஒரு யுக்தி கடைப்பிடிக்கப்படுவதாக தெரிகிறது," என உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் கேவி தனஞ்செய் தெரிவித்துள்ளார். இதற்கிடையே, இந்த விவகாரத்தை விசாரிக்க கர்நாடகா அரசு ஒரு சிறப்பு புலனாய்வு குழுவை ஞாயிறன்று அமைத்தது. இந்த சிறப்பு புலனாய்வு குழுவுக்கு டிஜிபி அந்தஸ்து உள்ள காவல் அதிகாரி பிரணாப் மொஹாந்தி தலைமை வகிக்கிறார். இந்த வழக்கில் சிறப்பு விசாரணைக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்படவேண்டும் என உச்சநீதிமன்ற நீதிபதி கோபால் கவுடா மற்றும் உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் பலர் வலியுறுத்தியிருந்தனர். இந்த கோரிக்கைக்கு பதிலளித்த கர்நாடகா முதலமைச்சர் சித்தராமையா, " அரசு எந்த அழுத்தத்தின் மீதும் பணி செய்யாது. நாங்கள் சட்டப்படி நடவடிக்கை எடுப்போம். காவல்துறையினர் சிறப்பு விசாரணைக்குழுவை அமைக்கவேண்டும் என கோரினால் நாங்கள் சிறப்பு விசாரணைக் குழுவை அமைப்போம்," என தெரிவித்திருந்தார். புகார்தாரர் முன்வைத்த குற்றச்சாட்டுகள் என்ன? இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்த தூய்மைப் பணியாளரின் அடையாளம் வெளியிடப்படவில்லை. அவர் ஶ்ரீ ஷேத்ர தர்மஸ்தாலா மஞ்சுநாதா ஸ்வாமி கோயிலில் பணியாற்றினார். இந்த கோயில் தர்மஸ்தாலா கோயில் என்றும் அறியப்படுகிறது. இந்தக் கோயில் தென்னிந்தியாவின் முக்கியமான மத தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது, இது சுமார் 800 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்டது. இது ஒரு சைவ கோயில், ஆனால் பூசாரிகள் வைஷ்ணவ பாரம்பரியத்தைச் சேர்ந்தவர்கள் மற்றும் கோயில் நிர்வாகம் ஜெயின் வம்சத்தினரிடம் உள்ளது. புகார்தாரர், 1995 முதல் 2014 வரை நேத்ராவதி ஆற்றங்கரையை தவறாமல் சுத்தம் செய்து வந்ததாகக் கூறினார். பின்னர், அவரது பணியின் தன்மை மாறியது மற்றும் "கடுமையான குற்றங்களின் ஆதாரங்களை மறைப்பது" என்ற பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. அவர் பல பெண்களின் உடல்களை பார்த்ததாகவும், அவை "ஆடைகள் இல்லாமல், பாலியல் வன்முறை மற்றும் தாக்குதலின் தெளிவான அடையாளங்களுடன்" இருந்ததாகவும் கூறினார். அவரது கூற்றுப்படி, இதைப் பற்றி காவல்துறையிடம் தெரிவிக்க முயன்றபோது, அவரது மேலதிகாரிகள் மறுத்துவிட்டனர். உத்தரவுகளைப் பின்பற்ற மறுத்தபோது, அவருக்கு மிரட்டல்கள் வந்ததாக அவர் கூறுகிறார். "உன்னை துண்டு துண்டாக வெட்டுவோம்," "உன் உடலை மற்றவர்களைப் போல புதைப்போம்," "உன் குடும்பத்தையே கொன்றுவிடுவோம்" என்று கூறப்பட்டதாக அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES "2010-ல் நடந்த ஒரு சம்பவம் இன்னும் என்னை அடியோடு உலுக்குகிறது. கலையரியில் உள்ள ஒரு பெட்ரோல் பம்பில் இருந்து சுமார் 500 மீட்டர் தொலைவில், காவலர்கள் என்னை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்கு 12 முதல் 15 வயதுக்குட்பட்ட ஒரு சிறுமியின் உடலைப் பார்த்தேன். அவரது உடலில் ஆடைகள் குறைவாக இருந்தன, பாலியல் வன்முறையின் தெளிவான அடையாளங்கள் இருந்தன. அவரது கழுத்தில் கட்டிப்போடப்பட்ட தழும்புகள் இருந்தன. அவரையும் அவரது பள்ளி பையையும் புதைக்க ஒரு குழியை தோண்டுமாறு என்னிடம் கூறப்பட்டது. அந்தக் காட்சி இன்னும் என் கண்களில் நிற்கிறது," என முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "என்னால் மறக்கமுடியாத மற்றொரு சம்பவம் 20 வயது பெண் ஒருவரின் முகம் ஆசிடால் எரிக்கப்பட்டதுதான்." முதல் தகவல் அறிக்கையின் கூற்றுப்படி, ஆண்கள் கொல்லப்பட்ட விதம் "மிகவும் கொடூரமானதாக" இருந்ததாக கூறப்பட்டுள்ளது. அவர்கள் ஒரு அறையில் நாற்காலியில் கட்டிப் போடப்பட்டு துண்டு ஒன்றால் அவர்கள் வாயைப் பொத்தி மூச்சுத் திணறல் ஏற்படுத்தி கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. புகார்தாரரின் கூற்றுப்படி இந்த சம்பவங்கள் அவர் கண்முன்னே நிகழ்ந்துள்ளன. "நான் பணியாற்றிய காலத்தில் நான் தர்மஸ்தாலா பகுதியில் பல இடங்களில் உடல்களை புதைத்துள்ளேன்," என அவர் தெரிவித்துள்ளார். "சில சமயம் அவர்களது உடல்கள் மேல் டீசலை ஊற்றும்படி சொல்வார்கள். பின்னர் எந்த ஆதாரமும் இல்லாமல் இருக்க அவர்களை எரிக்கும்படி உத்தரவு வரும். இந்த வகையில் நூற்றுக்கணக்கான உடல்கள் அழிக்கப்பட்டன." "மன அழுத்தத்தை" தம்மால் அதற்கு மேலும் தாங்கமுடியவில்லை என்றும் குடும்பத்துடன் மாநிலத்தைவிட்டே வெளியேறியதாகவும் புகார்தாரர் தெரிவித்துள்ளார். "நான் குறிப்பிடும் நபர்கள் தர்மஸ்தாலா கோயில் நிர்வாகம் மற்றும் பிற ஊழியர்களுடன் தொடர்புடையவர்கள். தற்போது அவர்களின் பெயர்களை வெளியிட முடியாது, ஏனெனில் சிலர் மிகவும் செல்வாக்கு மிக்கவர்கள் என்பதால் எதிர்ப்பவர்களை அழிக்கக் கூடியவர்கள். எனக்கும் என் குடும்பத்திற்கும் சட்ட பாதுகாப்பு கிடைத்தவுடன், அனைவரின் பெயர்களையும் அவர்களின் பங்கையும் வெளியிடத் தயாராக இருக்கிறேன்," என முதல் தகவல் அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது. தனது புகாரை நிரூபிக்கவும் ஆதாரங்களை வழங்கவும், தூய்மைப் பணியாளர் தானே ஒரு கல்லறையை தோண்டினார். பின்னர் நீதிபதி முன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களை சமர்ப்பித்தார். அவரது வாக்குமூலம் இந்திய பொது பாதுகாப்பு சட்டம் (BNSS) பிரிவு 183-ன் கீழ் பதிவு செய்யப்பட்டது. நீதிபதியின் முன் ஆஜரானபோது புகார்தாரர் தலை முதல் கால்வரை முழுமையாக கருமையான துணியால் மூடப்பட்டிருந்ததாக சொல்லப்படுகிறது. விசாரணை மந்தகதியில் நடைபெறுகிறதா? மூத்த உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் கே.வி. தனஞ்ஜய், விசாரணையின் மந்தமான வேகம் கவலையளிக்கிறது என்று கருதுகிறார். "புகார் ஜூலை 4-ம் தேதி பதிவு செய்யப்பட்டது. புகார்தாரர், BNSS பிரிவு 183-ன் கீழ் நீதிபதி முன் தனது வாக்குமூலத்தை பதிவு செய்யும் போது, தான் புதைத்த ஒரு உடலின் எச்சங்களையும் சமர்ப்பித்தார். ஆனால், எட்டு நாட்களுக்கு மேலாகியும், புகார்தாரரை அந்த இடத்திற்கு அழைத்துச் சென்று ஆய்வு செய்ய எந்த முயற்சியையும் காவல்துறை எடுக்கவில்லை," என அவர் தெரிவித்தார். "இதுபோன்ற அலட்சியத்தை புரிந்துக் கொள்ளமுடியவில்லை, இது காவல்துறை செல்வாக்கு மிக்க நபர்களைப் பாதுகாக்க முயற்சிக்கிறது என்பதற்கான முக்கியமான தீவிர அறிகுறியாகும், அல்லது முறையான விசாரணை அல்லது இடங்களை சீல் வைப்பதற்கு முன்பு எந்தவொரு ஆதாரங்களை அகற்றுவதில் அல்லது சேதப்படுத்துவதில் வெற்றிபெற அவர்களுக்கு அவகாசம் அளிக்கிறது" என அவர் மேலும் தெரிவித்தார். ஆனால், தக்ஷிண கன்னடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அருண் வேறு கருத்து தெரிவிக்கிறார். "பொதுவாக, 10-15 ஆண்டுகளுக்குப் பிறகு இதுபோன்ற வழக்கு பதிவு செய்யப்படுவதில்லை. ஆனால் இது, வழக்கு என்னவென்பதை பொறுத்து, விசாரணை அதிகாரியின் (IO) பொறுப்பில் உள்ளது. அதன் பின், விசாரணை நடைமுறையின்படி நடக்கும். இந்த வழக்கு விசாரணையில் இருப்பதால், இப்போது மேலும் தகவல்களை பகிர முடியாது," என அவர் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். கல்லறையை தோண்டி எச்சங்களை எடுத்த இடத்திற்கு கூட புகார்தாரர் அழைத்து செல்லப்படவில்லை என்ற விமர்சனம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அருண், "முதலாவதாக அவரது புகாரில் இருக்கும் உண்மைத்தன்மையை நாங்கள் உறுதி செய்யவேண்டும். அவரே குழியை தோண்டியுள்ளார். அது சட்டப்பூர்வமாக செல்லுபடியாகுமா என்பதை பார்க்கவேண்டும். அடுத்த கட்டம் அந்த இடத்தை ஆய்வு செய்து விசாரணை செய்வதுதான் என்பதில் உங்களுடன் நான் உடன்படுகிறேன். ஆனால் புகார்தாரர் ஒரு கல்லறையை தோண்டுவதும் குற்றம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. இதைப் பற்றிய உச்சநீதிமன்றத் தீர்ப்பு ஒன்று உள்ளது. விசாரணை செய்து உறுதி செய்வதற்கு எங்களுக்கு அவகாசம் தேவை, " என கூறினார். மீண்டும் திறக்கப்பட்ட பழைய காயங்கள் தூய்மைப் பணியாளரின் புகார் வெளிச்சத்திற்கு வந்த பிறகு ஒரு பெண்மணி, 22 ஆண்டுகளுக்கு முன்பு மர்மமாக காணாமல் போன தனது மகளைப் பற்றிய நினைவுகளைப் பகிர்ந்தார். அப்பெண் மருத்துவக் கல்லூரியில் முதல் ஆண்டு மாணவியாக இருந்தார். தாயின் கூற்றுப்படி, அவரது மகள் கடைசியாக கோயிலில் காணப்பட்டார். அவரது வழக்கறிஞர் மஞ்சுநாத், "அவர் யார் மீதும் குற்றம் சாட்டவில்லை. இந்த தூய்மைப் பணியாளரின் புகாரின் அடிப்படையில் உடல்கள் தோண்டப்பட்டால், அவற்றின் டி.என்.ஏ பரிசோதனை செய்யப்பட வேண்டும் என்பது மட்டுமே அவரது விருப்பம். மகளின் மரணத்தை ஏற்றுக்கொண்டு, இறுதிச் சடங்குகளை செய்ய வேண்டும் என்பதே அவரது ஒரே நோக்கம்," என பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். "நான் அந்த மதத் தலத்திற்கு சென்றேன். அங்கு அதிகாரிகளிடம் பேச முயன்றேன்,ஆனால் அங்கிருந்து விரட்டப்பட்டேன். அதன் பின்னர் நான் காவல்நிலையத்திறுல் சென்றேன், அங்கும் நான் திருப்பி அனுப்பப்பட்டேன்," என்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார் அப்பெண்ணின் தாய். இது ஒரு தனி வழக்காக பார்க்கப்படுவதாக அருண் பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். "இதை அந்த வழக்குடன் இணைக்கமுடியாது. ஆனால் அதுவும் விசாரிக்கப்படுகிறது," என அவர் சொல்கிறார். தூய்மைப் பணியாளரின் குற்றச்சாட்டுகள் நம்பகமானவையா? தூய்மைப் பணியாளார் 100-க்கும் மேற்பட்ட உடல்களை புதைத்திருப்பதாக கூறியுள்ளார். இது கவனத்தை கவர்வது மட்டுமல்லாது, மிகவும் கவலையளிக்கக் கூடிய ஒன்றாகும். 2012-ல் 17 வயது மாணவியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை மாநிலத்தில் பெரும் விவாதத்தைத் தூண்டியது. அப்போது, வி.எஸ். உக்ரப்பா தலைமையில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை, தாக்குதல் மற்றும் கொலை சம்பவங்களை விசாரிக்க ஒரு எம்எல்ஏக்கள் குழு அமைக்கப்பட்டது. "ஒவ்வொரு ஆண்டும் தக்ஷிண கன்னடா மாவட்டத்தில் 100 பெண்களின் இயற்கைக்கு மாறான மரணங்கள் பதிவாகின்றன என்று ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 2017ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் தேதி குழுவின் முன் கூறினார். அதே மாவட்டத்தில், 402 பெண்கள் மாயமான வழக்குகளும், 106 பாலியல் வன்கொடுமை வழக்குகளும் பதிவாகியுள்ளன." என உக்ரப்பா, பிபிசி ஹிந்தியிடம் தெரிவித்தார். இந்த குழுவின் அறிக்கை சில வாரங்களுக்கு முன்பு மாநில அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. 1983-ல் தர்மஸ்தாலாவில் நான்கு பெண்கள் காணாமல் போன விவகாரம் கர்நாடக சட்டமன்றத்தில் பெல்தங்கடி எம்எல்ஏ கே. வசந்த பங்கேடாவால், எழுப்பப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c24vjjzqeq1o
  3. Published By: VISHNU 20 JUL, 2025 | 09:24 PM (நெவில் அன்தனி) விளையாட்டுத்துறை அமைச்சும் விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைகளமும் இணைந்து காலியில் நடத்திய 49ஆவது தேசிய விளையாட்டு விழாவின் மரதன் ஓட்டப் போட்டியில் ஆண்கள் பிரிவில் மத்திய மாகாணம் சார்பாக பங்குபற்றிய அட்டன் வெலி ஓயாவைச் சேர்ந்த கே. சண்முகேஸ்வரன் முதலாம் இடத்தைப் பெற்று தங்கப் பதக்கத்தை சுவீகரித்தார். மரதன் ஓட்டப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 24 நிமிடங்கள், 43 செக்கன்களில் நிறைவுசெய்து முதலாம் இடத்தை சண்முகேஸ்வரன் பெற்றார். இவர் கடந்த வருடம் மஹியங்கனையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடத்தைப் பெற்றிருந்தார். காலி மரதன் ஓட்டப் போட்டியில் ஊவா மாகாண வீரர் சி. சந்தன (2:25:18) வெள்ளிப் பதக்கத்தையும் கிழக்கு மாகாண வீரர் ரி. டபிள்யூ. ரத்னபால (2:30:46) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். பெண்கள் பிரிவில் மத்திய மாகாணத்திற்கு தங்கம், வெள்ளி ஆகிய இரண்டு பதக்கங்களும் கிடைத்தது. மதுவன்தி ஹேரத் (2:53:42) தங்கப் பதக்கத்தையும் எஸ். ஹேரத் (3:00:21) வெள்ளிப் பதக்கத்தையும் ஊவா மாகாண வீராங்கனை நிமேஷா நிதர்ஷனி (3:02.32) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். பெண்கள் பிரிவில் போட்டியிட்ட நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்த வேலு கிருசாந்தினி (3:14:15) ஏழாம் இடத்தைப் பெற்றார். https://www.virakesari.lk/article/220497
  4. Published By: DIGITAL DESK 3 20 JUL, 2025 | 05:24 PM அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் இருந்து அட்லாண்டா நோக்கி புறப்பட்ட டெல்டா ஏர்லைன்ஸின் போயிங் 767-400 ரக பயணிகள் விமானத்தின் இயந்திரத்தில் தீப்பிடித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானம் புறப்பட்ட பின் அதன் இடதுப்புற இயந்திரத்தில் தீப்பிடித்ததால் அவ்விமானம் மீண்டும் லாஸ் ஏஞ்சல்ஸிலேயே அவசரமாகத் தரையிறங்கியது. விமானி அவசரநிலையை அறிவித்ததையடுத்து, விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு அறை, விமானம் மீண்டும் விமான நிலையத்திற்கு திரும்ப வழிகாட்டியது. தரையிறங்கியதும் தீயணைப்புப் படையினர் தீயை அணைத்தனர். இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இந்த விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. இவ்வாண்டு டெல்டா விமானத்தில் இயந்திரம் தீப்பிடிப்பது இது இரண்டாவது முறையாகும். https://www.virakesari.lk/article/220484
  5. Keeladi Report: 'அகழாய்வு செய்து கணித்த காலத்தை மாற்ற முடியாது’ - Amarnath Ramakrishna Interview தான் அளித்த கீழடி அகழாய்வின் ஆய்வறிக்கையை மாற்றப்போவதில்லை என அங்கே முதல் இரண்டு கட்ட அகழாய்வுகளை மேற்கொண்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணா தெரிவித்திருக்கிறார். பிபிசியிடம் விரிவாகப் பேசிய அமர்நாத் ராமகிருஷ்ணன், கீழடி கி.மு. 800 முதல் கி.மு. 500வரையிலான காலத்தைச் சேர்ந்தது என்பது எப்படி முடிவு செய்யப்பட்டது என்பதையும் விளக்கினார். இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  6. மான்செஸ்டர் டெஸ்டில் கருண் நாயர் இல்லையெனில் 3-ஆம் இடம் யாருக்கு? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் பேட்டிங் செய்தார் கட்டுரை தகவல் மனோஜ் சதுர்வேதி மூத்த விளையாட்டு செய்தியாளர், பிபிசி ஹிந்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய அணியின் தற்போதைய இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் குறித்த பிரச்னை தீர்க்கப்படவில்லை. இந்த சுற்றுப்பயணத்தின் இரண்டு டெஸ்ட் போட்டிகளில், எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு டெஸ்ட் அணிக்கு திரும்பியுள்ள கருண் நாயர் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக இருந்தார். ஆனால், அவர் திறமையான ஆட்டத்தால் கவனம் ஈர்க்க தவறிவிட்டார். எனவே, மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனை தேர்ந்தெடுப்பது இந்திய அணிக்கு ஒரு கவலையாக மாறியுள்ளது. கருண் நாயர் நன்றாக தொடங்கினாலும், அதை பெரிய இன்னிங்ஸாக மாற்ற அவர் தவறவிடுவதுதான் பிரச்னையாக உள்ளது. வேகமாக நகரும் பந்துகளை விளையாடுவதில் தாமதம் ஏற்பட்டதால் அவர் ஆட்டமிழந்துள்ளார். எளிதில் தீர்வு கிடைக்காத பிரச்னை இது. எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யவில்லை என்றும் கருண் நாயர் மீது விமர்சனம் முன்வைக்கப்படுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து பந்து வீச்சாளர் ஜோஃப்ரா ஆர்ச்சரின் பவுன்சரை கருண் நாயர் தடுக்கும்போது வாய்ப்பை பயன்படுத்த தவறவிட்ட கருண் நாயர் உள்நாட்டு கிரிக்கெட்டில் கருண் நாயர் நிறைய ரன்களை குவித்தார், அதனால் மூன்றாம் வரிசை வீரராக களமிறங்க அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது. எந்தவொரு இன்னிங்ஸையும் வலுப்படுத்த இது மிகவும் முக்கியம். ஆனால், பெரிய இன்னிங்ஸை விளையாடுவதில் கருண் நாயர் தோல்வியடைந்தது, இந்தியாவின் ஆட்டத்தை பாதித்துள்ளது. இந்த சுற்றுப்பயணத்தில் கருண் நாயர் விளையாடிய மூன்று டெஸ்ட் போட்டிகளில் அவர் 21.83 எனும் சராசரியில் வெறும் 131 ரன்களையே பெற்றுள்ளார். இதில் லார்ட்ஸில் விளையாடிய கடைசி டெஸ்ட் போட்டியில் பெற்ற 40 ரன்கள்தான் அவர் பெற்ற அதிகபட்ச ஸ்கோராகும். கருண் நாயர் நான்காவது டெஸ்டில் அதாவது மான்செஸ்டர் டெஸ்டில் விளையாடவில்லை என்றால், அவரது டெஸ்ட் வாழ்க்கை மீண்டும் முடிவுக்கு வரக்கூடும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உதவி பயிற்சியாளர் ரியான் டென் உதவி பயிற்சியாளர் ரியான் என்ன நினைக்கிறார்? இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் ரியான் டென் டோசெட், பெக்கென்ஹேமில் நடைபெற்ற பயிற்சியின்போது, இதுகுறித்து எந்தவொரு கருத்தையும் தெளிவாக தெரிவிக்கவில்லை. அவர் கூறுகையில், "கருண் நாயர் நல்ல வேகத்துடன் செயல்படுகிறார். மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனிடமிருந்து எங்களுக்கு நிறைய ரன்கள் தேவை. நாங்கள் எதில் சிறப்பாக இருக்கிறோம் என்பதிலும் போட்டியில் தோல்வியடைந்ததற்கான தவறுகளை சரிசெய்வதிலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம்." என அவர் கூறினார். "ஒவ்வொரு பேட்ஸ்மேனையும் தனித்தனியாக பார்த்தால், அவர்கள் நன்றாகவே விளையாடியுள்ளனர். விக்கெட்டுகள் கொத்தாக விழுவதுதான் அணியின் பிரச்னை" என கூறினார் ரியான் சில சந்தர்ப்பங்களில் கருண் நாயருடையது மட்டுமல்லாமல் அனைத்து பேட்ஸ்மேன்களுடைய ஆட்டமும் சரிவை கண்டதாக, அணி நிர்வாகம் நம்புகிறது. முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் அதிருப்தி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முன்னாள் இந்திய டெஸ்ட் வீரர் ஃபரூக் இன்ஜினியர் கருண் நாயரின் ஆட்டத்தில் திருப்தி அடையவில்லை. இந்திய முன்னாள் டெஸ்ட் ஆட்டக்காரர் ஃபரூக் இஞ்சினியரும் கருண் நாயரின் ஆட்டம் குறித்து அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், "கருண் நாயர் முதல் 20-30 ரன்களை நன்றாக விளையாடுகிறார். கவர் டிரைவ் (cover drives) ஷாட்டுகளை நன்றாக அடிக்கிறார். ஆனால், மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனிடமிருந்து இது மட்டும் எதிர்பார்க்கப்படுவதில்லை. மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் நிறைய ரன்களை குவிக்க வேண்டும்." என கூறியுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தீப் தாஸ்குப்தா இந்த தொடரை ஒளிபரப்பும் டிவி சேனலின் கமெண்ட்ரியில், "கருண் நாயரை எப்படி கையாள வேண்டும் என்பது குறித்து அணி நிர்வாகம் முடிவெடுக்க வேண்டும். அணி நிர்வாகம் கருண் நாயரை தக்கவைக்க விரும்பினால், இந்த தொடர் முடிந்ததும் நடைபெறும் உள்நாட்டு போட்டிகளில் அவருக்கு வாய்ப்பளிக்க வேண்டும்." என கூறினார் "அணி நிர்வாகம் வருங்கால திட்டங்களில் சாய் சுதர்ஷனை மனதில் வைத்திருந்தால், ஓல்ட் டிராஃபோர்டில் நடக்கும் போட்டியிலிருந்தே அவருக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். சாய் சுதர்ஷன் வந்தவுடன் தனது விக்கெட்டை விட்டுக் கொடுக்க மாட்டார் என நமக்கு தெரியும். ஆனால், அவர் விளையாடுவது போதாது, அவர் இந்த நிலையில் விளையாடினால் 60-70 ஓவர்கள் பந்து வீசக் கற்றுக்கொள்ள வேண்டும்." இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் தேவாங் காந்தி தான் 2016ம் ஆண்டில் முதன்முறையாக டெஸ்ட் அணியில் கருண் நாயரை தேர்ந்தெடுத்தார். இந்த சுற்றுப்பயணம் கருணுக்கு கொடூரமாக இருந்ததாக அவர் தெரிவித்தார். இந்திய அணியிடம் உள்ள வாய்ப்புகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருண் நாயருக்குப் பதிலாக சாய் சுதர்ஷனுக்கு (பேட்டிங்) வாய்ப்பு கிடைக்கக்கூடும். (கோப்புப் படம்) மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியில் கருண் நாயர் இல்லை என்றால், இந்திய அணிக்கு முன் உள்ள மற்ற வாய்ப்புகள் என்ன? முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக விளையாடிய சாய் சுதர்ஷனுக்கு மற்றொரு வாய்ப்பு வழங்குவது முதல் வாய்ப்பு. முதல் டெஸ்ட் போட்டியில் மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக விளையாடிய சாய் சுதர்ஷன், முதல் இன்னிங்ஸில் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார், இரண்டாவது இன்னிங்ஸ்லில் 30 ரன்களை எடுத்தார். ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் தனது ஆட்ட பாணியால் கவனம் ஈர்த்தார். ஆனால் இரண்டாவது டெஸ்டில், ஆல்ரவுண்டரை களமிறக்கும் பொருட்டு சாய் சுதர்ஷன் களமிறக்கப்படவில்லை. முதலாவது டெஸ்டில் சாய் மூன்றாவதாகவும் கருண் நாயர் ஆறாவதாகவும் களமிறக்கப்பட்டனர். இதன்மூலம், மூன்றாவது வரிசை வீரருக்கு சாய் சுதர்ஷன் தான் பயிற்சியாளரின் கண்களுக்கு முதல் தேர்வாக இருந்துள்ளார் என்பது தெளிவாகிறது. எனவே, அவருக்கு மற்றொரு வாய்ப்பு வழங்கலாம். மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் ரிஷப் பந்த்தின் இடது கை விரலில் காயம் ஏற்பட்டதையடுத்து அவர் பேட்டிங் செய்தாலும், விக்கெட் கீப்பிங் செய்யவில்லை. துருவ் ஜுரெல் விக்கெட்டை தக்க வைத்துக்கொண்டார். தற்போது ரிஷப் பந்த் விக்கெட் கீப்பிங் செய்ய முடியாத நிலையில் இருந்தால், அவர் பேட்ஸ்மேனாக விளையாட வேண்டியிருக்கும், துருவ் ஜுரெல் விக்கெட்கீப்பர் பேட்ஸ்மேனாக களமிறங்க வேண்டும். பல சந்தர்ப்பங்களில் ஜுரெல் தன்னுடைய பேட்டிங் திறனை வெளிப்படுத்தியுள்ளார். மூன்றாம் வரிசை பேட்ஸ்மேனாக களமிறங்கும் திறன் அபிமன்யூ ஈஸ்வரனுக்கும் உள்ளது. 2024-25ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் இருந்து டெஸ்ட் அணியில் அவர் உள்ளார். ஆனால், இன்னும் அவர் டெஸ்ட் போட்டியில் விளையாடவில்லை. இந்த தொடருக்கு முன்பு அவர் இந்தியாவுக்காக நன்றாக விளையாடியுள்ளார். இந்திய அணிக்கு எதிராக விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அவர் அரைசதம் அடித்தார். முதல் தர கிரிக்கெட்டில் 27 சதங்கள் அடித்தும் அவர் சாதனை படைத்துள்ளார். ஷ்ரேயாஸ் அய்யர் இல்லாத இந்திய அணி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஷ்ரேயாஸ் ஐயர் உள்நாட்டு கிரிக்கெட்டிலும் சிறப்பாக செயல்பட்டார். கருண் நாயரை போன்றே ஷ்ரேயாஸும் உள்நாட்டு கிரிக்கெட்டில் அதிக ஸ்கோரை குவித்துள்ளார், சர்வதேச கிரிக்கெட்டிலும் அவருக்கு அதிக அனுபவம் உள்ளது. அவர் ஃபார்மில் இருந்தபோதிலும் டெஸ்ட் அணியில் அவரைத் தேர்வு செய்யாதது, வீரர்களை தேர்ந்தெடுக்கும் தேர்வாளர்களை ஆச்சர்யப்படுத்தியது. ஷ்ரேயாஸ் அணியில் இருந்திருந்தால், மூன்றாம் வரிசை பேட்ஸ்மேன் குறித்த பிரச்னை தீர்க்கப்பட்டிருக்கும் என நம்பப்படுகிறது. ஷ்ரேயாஸ் அணியில் இல்லாவிட்டாலும், தேவைப்பட்டால் அவர் அழைக்கப்படலாம். லார்ட்ஸ் டெஸ்ட் தோல்விக்கு என்ன காரணம்? சுப்மன் கில் பதில் சென்னையில் பாகிஸ்தானுக்கு எதிரான சச்சின் போராட்டம் நினைவிருக்கிறதா? இந்தியா நூலிழையில் கோட்டை விட்ட ஆட்டங்கள் கில் - ஸ்டோக்ஸ் கேப்டன்சியில் இருந்த வித்தியாசம் ஆட்டத்தில் எவ்வாறு எதிரொலித்தது? கில் - ஸ்டோக்ஸ் கேப்டன்சியில் இருந்த வித்தியாசம் ஆட்டத்தில் எவ்வாறு எதிரொலித்தது? 14 டெஸ்ட் போட்டிகளை விளையாடிய அனுபவம் அவருக்கு உள்ளது. அவர், 35க்கும் அதிகமான சராசரியுடன் 811 ரன்கள் எடுத்துள்ளார். சாம்பியன்ஸ் டிராஃபியில் மிகவும் திறமையாக தன் ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஷ்ரேயாஸ் அணிக்கு வந்தால் அது அணியை வலுப்படுத்தும் என்பது உறுதி. ஆனால் தேர்வாளர்கள் அவரைத் தேர்ந்தெடுக்கவில்லை என்றால், இப்போது அவர் மீது மேலும் கவனத்தை செலுத்த முடிவு செய்திருக்கலாம். -இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c86gxyyq287o
  7. மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு Published By: DIGITAL DESK 3 20 JUL, 2025 | 03:07 PM பெய்து வரும் பலத்த மழைக்கு மத்தியில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஒரு வான் கதவைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேல் கொத்மலையின் நீரேந்து பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு இன்று ஞாயிற்றுக்கிழமை (20) அதிகாலை முதல் திறக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகள் சுயமாகவே திறக்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது இதனால் நீர்த்தேக்க அணையின் கீழ்ப்பகுதியில் உள்ள கொத்மலை ஓயாவின் இருபுறமும் வசிக்கும் பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்து பிரிவின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மேல் கொத்மலை நீர்தேக்க பகுதிகளில் பெய்து வரும் கனமழையால், சென் கிளயார் மற்றும் டெவோன் நீர்வீழ்ச்சிகளில் இருந்து வெளியேறும் நீரும் அதிகரித்துள்ளமை குறிப்பிடதக்கது. https://www.virakesari.lk/article/220465
  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜூலை 13 அன்று சீனாவிற்கு மூன்று நாள் பயணம் மேற்கொண்டார். 20 ஜூலை 2025, 04:53 GMT புதுப்பிக்கப்பட்டது 20 ஜூலை 2025, 04:58 GMT இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் கடந்த வாரம் சீனா சென்றார். அங்கு சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யி உள்பட உயர்மட்ட அதிகாரிகளையும் ஜெய்சங்கர் சந்தித்தார். கடந்த சில ஆண்டுகளாக இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவிவரும் நிலையில், இருநாட்டு உறவுகளை மீண்டும் வலுப்படுத்த முயற்சிக்கும் காலகட்டத்தில் ஜெய்சங்கரின் சீன பயணம் அமைந்துள்ளது. இந்தியா-பாகிஸ்தான் மோதலின் போது சீனா பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தது குறித்து பெரும் விவாதம் நடைபெற்று வரும் வேளையில், ஜெய்சங்கரின் பயணம் பல்வேறு கேள்விகளையும் எழுப்புகிறது. இந்தியா-பாகிஸ்தான் மோதலின்போது பாகிஸ்தானை சீனா வெளிப்படையாக ஆதரித்ததோடு மட்டுமல்லாமல் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கியதாக தகவல்கள் வெளியாயின. இந்த சூழலில், இந்தியா-பாகிஸ்தான் மோதலுக்குப் பிறகு ஜெய்சங்கர் சீனா சென்றது எந்தளவுக்கு சரியானது? சீனாவுடன் நெருக்கமாவதன் மூலம் அமெரிக்காவுடனான உறவில் சமநிலையை பராமரிக்க இந்தியா விரும்புகிறதா? தெற்காசியா மற்றும் மற்ற வளர்ந்து வரும் நாடுகளில் சீனாவின் செல்வாக்கு இந்தியாவை விட பெரிதா? பிபிசி ஹிந்தியின் 'தி லென்ஸ்' எனும் வாராந்திர நிகழ்ச்சியில் கலெக்டிவ் நியூஸ்ரூமின் இயக்குநர் (இதழியல்) இந்த விவகாரங்கள் குறித்து விவாதித்தார். ராஜிய விவகாரங்கள் நிபுணர் ஷ்ருதி பாண்ட்லே, சர்வதேச அரசியல் பேராசிரியர் புஷ்ப் அதிகாரி மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தின் கிழக்காசிய ஆய்வுகள் துறையின் துணை பேராசிரியர் முனைவர் ராஜிவ் ரஞ்சன் ஆகியோர் இந்த விவாதத்தில் கலந்துகொண்டனர். புதிய அத்தியாயத்தின் தொடக்கமா? அல்லது ஒரு அடையாள பயணமா? கடந்தாண்டு அக்டோபர் மாதம் ரஷ்யாவின் கஸான் நகரில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் பிரதமர் நரேந்திர மோதி இருவரும் சந்தித்துக்கொண்டனர். 2020ம் ஆண்டு எழுந்த பதற்றத்துக்குப் பிறகு இருவரும் சந்தித்துக் கொண்டது அதுவே முதல் முறையாகும். அதன்பின், சீனாவுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. கடந்த ஜூலை மாதம், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இருவரும் பெய்ஜிங் சென்றனர். அங்கு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மாநாட்டில் கலந்துகொண்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES தற்போது ஜெய்சங்கர் சீனா சென்ற நிலையில் இருநாட்டு உறவுகளை மீட்டமைப்பதற்கான நடவடிக்கை இது என சிலர் கூறுகின்றனர். அதேசமயம், இது வெறும் அடையாள பயணம் என்றும் சிலர் கூறுகின்றனர். இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவதற்கான நேர்மையான முயற்சியாக இந்த பயணத்தை பார்க்க வேண்டும் என ஷ்ருதி பாண்ட்லே நம்புகிறார். ஷ்ருதி பாண்ட்லே கூறுகையில், "அமெரிக்க அதிபர் எடுக்கும் முடிவுகளால் உலகம் முழுவதும் ஒரு நிச்சயமற்ற சூழல் நிலவுகிறது. இப்போது உருவாகி வரும் உறவுகளில் நாடுகடந்த தேசியவாதம் பங்காற்றுகிறது என்பதை இந்தியா புரிந்துகொண்டுள்ளது. முன்பு, பிரச்னைகளை தீர்க்க சில நாடுகள் ஒன்றாக இணைந்துள்ளன. முன்பு, சீனாவை சமாளிப்பது ஒரு பிரச்னையாக இருந்தது. ரஷ்யாவை சமாளிப்பது பெரிய பிரச்னையாக இருந்தது. இப்போது, டிரம்பின் முடிவுகளை சமாளிப்பது பிரச்னையாக உள்ளது. எனவே, ஜெய்சங்கரின் பயணத்தை இந்த பார்வையுடனும் அணுக வேண்டும்." என்றார். இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே சுமார் 3,000 கி.மீ நீள எல்லை உள்ளது. அப்பகுதியில் ஆறுகள், ஏரிகள் மற்றும் பனி சூழ்ந்த பகுதிகள் இருப்பதால் எல்லைக் கோடு தெளிவாக இல்லை. இதனால். இருநாட்டு படையினருக்கும் அவ்வப்போது மோதல்கள் ஏற்படுகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியா மற்றும் சீனா மீது இறக்குமதி வரிகளை அறிவித்தார். சீனா அதை வெளிப்படையாக எதிர்த்தது, ஆனால் இந்தியா பேச்சுவார்த்தையை தேர்ந்தெடுத்தது. இந்தியாவின் முன்னுரிமைகள் என்ன? சர்வதேச அரசியல் பேராசிரியர் புஷ்ப் அதிகாரி இந்த கேள்விக்கு பதிலளிக்கையில், "எல்லைப் பிரச்னை தற்போது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் டொனால்ட் டிரம்ப். அமெரிக்க அதிபரின் கொள்கைகள், இந்தியா-சீனாவை ஒன்றாக இணைத்துள்ளன." என்றார். "இரு நாடுகளுக்கு இடையே உள்ள நம்பிக்கை எந்தளவுக்கு செல்லும் என்பதை பார்க்க வேண்டும். அமெரிக்கா இந்தியாவை இருதரப்பு வர்த்தகத்துக்கு அழைத்து, ரஷ்யா மற்றும் சீனா உட்பட பிரிக்ஸ் (BRICS) நாடுகளிடமிருந்து விலகி இருக்குமாறு கூறுவதற்கான சாத்தியம் உள்ளது. டிரம்பின் வார்த்தைகளை இந்தியா ஏற்றுக்கொண்டால், சீனாவுடனான உறவு வெகுதூரம் செல்லாது என நினைக்கிறேன். ஜெய்சங்கரின் முயற்சிகள் சிறப்பானவை, ஆனால் அதன் முடிவு வெகுவிரைவில் ஏற்படாது." பட மூலாதாரம்,X/DR S JAISHANKAR படக்குறிப்பு, கல்வான் மோதலுக்குப் பிறகு கடந்த ஐந்து ஆண்டுகளில் ஜெய்சங்கர் முதல் முறையாக சீனாவுக்கு பயணம் செய்தார். பாகிஸ்தான், அமெரிக்கா, ரஷ்யாவுக்கு இந்தியா சொல்லும் சேதி என்ன? இந்தியாவின் சர்வதேச அரசியல் குறித்த விவாதத்தையும் இந்த பயணம் எழுப்பியுள்ளது. பாகிஸ்தானுக்கு ஆதரவு அளிக்கும் சீனாவுக்கு செல்ல வேண்டிய அவசியம் என்ன என, எதிர்க்கட்சியான் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது. டெல்லி பல்கலைக் கழகத்தின் கிழக்காசிய ஆய்வுகள் துறையின் இணை பேராசிரியர் முனைவர் ராஜிவ் ரஞ்சன் கூறுகையில், "வெளியுறவு அமைச்சர் சீனாவுக்கு சென்றிருக்காவிட்டால், இந்தியாவின் விருப்பங்கள் வேறு எங்காவது பாதிக்கப்பட்டிருக்கலாம். எஸ்.சி.ஓ மாநாட்டில் பயங்கரவாதத்துக்கு எதிராக வெளியுறவு அமைச்சர் குரல் எழுப்பியிருந்தார். அவர் அங்கு சென்றிருக்காவிட்டால், இத்தகைய கருத்தை எழுப்பியிருக்க முடியாது. இந்தியா அதில் பங்கேற்காமல் இருந்திருந்தால், அந்த தளத்தை பாகிஸ்தான் பயன்படுத்தியிருக்கக் கூடும். 2026-ம் ஆண்டில் பிரிக்ஸ் மாநாடு இந்தியாவில் நடைபெற உள்ளது. நீங்கள் (இந்தியா) மறுத்தால், சீன தலைமையும் இந்தியாவுக்கு வருவதற்கு மறுக்கலாம்." என கூறினார். இந்தியா-பாகிஸ்தான் இடையே மோதல் உச்சகட்டத்தில் இருந்தபோது, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இருநாட்டுக்கும் இடையே அமைதியை ஏற்பத்தியதாக சமூக ஊடகத்தில் அறிவித்தார். பாகிஸ்தான் அதற்காக டிரம்புக்கு நன்றி தெரிவித்தாலும், மோதல் நிறுத்தத்தில் டிரம்பின் பங்கு இருப்பதாக கூறியதை இந்தியா ஏற்றுக்கொள்ளவில்லை. எனினும், சண்டை நிறுத்தம் ஏற்பட வேண்டும் என, டிரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வந்தார். ஷ்ருதி பாண்ட்லே கூறுகையில், "இந்தியா-பாகிஸ்தான் பிரச்னை இருநாட்டு விவகாரம் என, அமெரிக்காவிடம் இந்தியா தொடர்ந்து கூறிவந்தது. அதேபோன்று, சீனாவுடனான உறவையும் இருநாட்டு உறவாக தொடர இந்தியா விரும்பியது. எந்தவொரு மூன்றாவது தரப்பும் இருநாட்டு உறவை பாதிக்க முடியாது என வெளியுறவு அமைச்சர் தெளிவாக கூறினார். இங்கு, மூன்றாவது தரப்பு பாகிஸ்தானுடன் தொடர்புடையது. டிரம்பின் கொள்கைகளால் இந்தியா தன்னுடைய கொள்கைகளை மாற்ற வேண்டியுள்ளது. சீனா மற்றும் அமெரிக்கா இடையே சமநிலையை பேணுவது இந்தியாவின் நலனுக்கானதாகும்." என தெரிவித்தார். இந்தியா ஒரு பன்முக உலகம் பற்றிப் பேசுகிறது. இந்த சூழலில், ஜெய்சங்கரின் சீன பயணத்தை மற்ற நாடுகள் எப்படி பார்க்கின்றன? பேராசிரியர் புஷ்ப் அதிகாரி கூறுகையில், "ரஷ்யா-சீனா-இந்தியா என முத்தரப்பு கூட்டணியை செயல்படுத்த வேண்டும் என விரும்புவதாக ரஷ்யாவிலிருந்து செய்தி வெளியானது. இப்போது இந்தியா இதற்கு ஏதாவது பதில் சொல்ல வேண்டும், ஏனெனில் இந்த விவகாரத்தில் அமெரிக்காவுடன் இந்தியா நெருக்கமாக செல்கிறது. தங்கள் கூட்டாளியை தேர்ந்தெடுப்பதில் இப்போது இந்தியா சவாலை எதிர்கொள்ள வேண்டும். இதுகுறித்து அமெரிக்காவிடமிருந்து நிச்சயம் அறிக்கை வரலாம். இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அறிய நாம் கொஞ்சம் காத்திருக்க வேண்டும்." என்றார். இந்தியா முன்னுள்ள சவால்கள் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த ஆண்டு அக்டோபரில், பிரதமர் நரேந்திர மோதியும் அதிபர் ஷி ஜின்பிங்கும் ரஷ்யாவின் கஸானில் சந்தித்தனர். ராஜீய ரீதியில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையேயான உறவுகள் இயல்பானதாக இருப்பதாக தோன்றினாலும், களத்தில் இருநாடுகளுக்கிடையே அடிப்படையான மற்றும் நிரந்தரமான சவால்கள் பல உள்ளன. கடந்த சில ஆண்டுகளில், குறிப்பாக கல்வான் பள்ளத்தாக்கில் ஏற்பட்ட மோதலுக்குப் பிறகு இருநாட்டு உறவில் பதற்றம் அதிகரித்தது, அது தற்போது வரை முழுமையாக தீர்க்கப்படவில்லை. பாகிஸ்தானுடனான சீனாவின் நெருக்கம் மற்றும் பெல்ட் அண்ட் ரோட் போன்ற திட்டங்கள் இந்தியாவின் பாதுகாப்பு கவலைகளை அதிகரித்துள்ளன. அதேநேரம், அமெரிக்காவுடனான இந்தியாவின் ஒத்துழைப்பு மற்றும் குவாட் (Quad) அமைப்பில் அங்கம் வகிப்பது போன்ற காரணிகள் சீனாவை அசௌகரியமாக்குகின்றன. இந்தியா-சீனாவின் வர்த்தகத்தில் பெரும் சமநிலையின்மை நிலவுகிறது. இந்தியா சீனாவிடமிருந்து ஏராளமான பொருட்களை இறக்குமதி செய்கிறது, ஆனால் வெகுசில பொருட்களையே சீனாவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்கிறது. இந்த சமநிலையின்மை குறித்துப் பேசிய ஷ்ருதி பாண்ட்லே, "இதே விவகாரங்கள் குறித்து வெளியுறவு அமைச்சரும் குரல் எழுப்பியுள்ளார். நீங்கள் பேச்சுவார்த்தையை விரும்புகிறீர்கள், ஆனால் எங்கள் பிரச்னைகளையும் கேளுங்கள் என அவர் பேசியுள்ளார். உண்மையில் சீனாவுடன் எதுவுமே எளிது அல்ல. இந்தியா சீனாவுடன் பல ஆண்டுகளாக பேச்சுவார்த்தையில் உள்ளது." என தெரிவித்தார். தலாய் லாமா இந்தியாவில் இருப்பது குறித்தும் திபெத்துடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்தும் சீனா ஏற்கெனவே எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அத்துடன், பிரமபுத்திரா ஆற்றின் மீதான சீனாவின் நடவடிக்கைகள் குறித்து இந்தியா மிகவும் கவலைகொண்டுள்ளது. அப்படியான சூழலில், இருநாட்டு உறவை மேம்படுத்த இந்தியா எதில் கவனம் செலுத்த வேண்டும்? இந்த கேள்விக்கு பதிலளித்த பேராசிரியர் புஷ்ப் அதிகாரி, "சீனாவுடன் உறவை மேம்படுத்த பல்வேறு சர்வதேச விவகாரங்களில் இந்தியா தன் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். இந்தியாவும் சீனாவும் இரு வெவ்வேறு நாகரிகங்கள், ஆனால் ஒன்றாக வளரும் நாடுகள். எதிர்காலத்தில் இரு நாடுகளும் தங்கள் உறவுகளை வலுப்படுத்தினால், இரு நாடுகளும் இணைந்து அமெரிக்காவின் அழுத்தத்தைக் குறைக்கலாம். பிராந்திய அளவில் சிறப்பான ஒத்துழைப்பு இருந்தால்தான் எந்த தவறான புரிதலும் ஏற்படாது என்பதுதான் மிக முக்கியமான விஷயம். இது நடந்தால், இரு நாடுகளும் நல்ல நண்பர்களாக முடியும்." என கூறினார். பேராசிரியர் ராஜிவ் ரஞ்சன் கூறுகையில், இந்தியாவும் சீனாவும் முதலில் நிலைத்தன்மையில் கவனம் செலுத்தி உறவை வலுப்படுத்த வேண்டும் என்றார். அமெரிக்கா மிரட்டல் எதிரொலி: ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்தினால் இந்தியாவுக்கு நெருக்கடி வருமா? ஐஎன்எஸ் அர்னாலா: இந்திய கடற்படையின் புதிய போர்க் கப்பல் எதிரிகளை முறியடிக்க எவ்வாறு உதவும்? ஆசியாவை நிலைகுலைய வைக்கும் டிரம்பின் வரி விதிப்பு, கவலையில் உற்பத்தியாளர்கள் சீனாவுடன் நல்லுறவை மேம்படுத்த முயலும் இந்தியா - அமெரிக்கா குறித்த கவலை காரணமா? அவர் கூறுகையில், "முதலாவதாக, ஒரு உறவில் நிலைத்தன்மை அவசியம். இரண்டாவதாக, நீண்ட காலமாக நிலவும் எல்லைப் பிரச்னை தீர்க்கப்பட வேண்டும். மூன்றாவதாக, அமெரிக்கா மற்றும் பாகிஸ்தானையும் கவனிக்க வேண்டும். இந்த மூன்று விஷயங்களுக்கும் இந்தியாவும் சீனாவும் கவனம் செலுத்தினால், இரு நாடுகளுக்கும் இடையேயான உறவு சிறந்த திசையில் நகரும்." என்றார். வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் சீனா சென்றது, இருநாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தையை மீட்டெடுக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதற்கான அறிகுறியாக உள்ளது. எனினும், பரஸ்பர நம்பிக்கை மற்றும் வெளிப்படைத்தன்மை இரண்டும் நிரந்தர தீர்வு ஏற்படுவதில் பெரிய சவால்களாக உள்ளன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70xl1rrrjqo
  9. 20 JUL, 2025 | 05:10 PM கடந்த மாதம் 30ம் திகதி ஆரையம்பதி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த மூன்று வயது சிறுவனின் இழப்புக்கு நீதி கோரும் குறித்த சிறுவனின் தாயாரின் ஊடக சந்திப்பு ஞாயிற்றுக்கிழமை (20) மாலை மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்றது. இதன் போது குறித்த தாயார் தன்னுடைய விபத்தில் உயிரிழந்த மகனுக்கு சரியானதொரு விசாரணை முன்னெடுக்கப்பட்டு இந்த விபத்துக்கான நீதி கிடைக்க வேண்டும் எனவும் தனக்கு இந்த இழப்புக்கான பண இழப்பீடுகள் வேண்டாம் எனவும் சரியான நீதி கிடைக்க வேண்டும் எனவும் இதன் போது வலியுறுத்தினார். பொலிஸார் இந்த விபத்திற்கு சரியான விசாரணை முன்னெடுக்கவில்லை எனவும் இந்த விபத்தை ஏற்படுத்திய நபரும் குறித்த வாகனமும் இன்று வெளியில் இருப்பதாகவும் பொலிஸார் தங்களது வாக்குமூலத்தையும் பதிவு சரியான முறையில் செய்யவில்லை எனவும் நீதியான விசாரணை முன்னெடுக்கவில்லை எனவும் பக்க சார்பாக செயற்பட்டதாகவும் குறித்த தாயார் தெரிவித்தார். விபத்து இடம்பெற்ற சிசிடிவி காணொளிகள் இதன் போது வெளியிடப்பட்டதுடன் பொலிஸார் இந்த சிசிரிவி காணொளிகளை கூட பார்வையிட்டு சரியான விசாரணைகளை முன்னெடுக்கவில்லை எனவும் இதன் போது குற்றம் சுமத்தினார். குறித்த விபத்தான தாயின் கவனக்குறைவினால் இடம்பெற்றதாகவும் தாங்கள் சரியான முறையில் வாகனத்தை செலுத்தி வந்ததாகவும் கூறி குறித்த விபத்துக்கு காரணம் உயிரிழந்த சிறுவனின் தாயார் தான் என சித்தரித்துள்ளதாகவும் தெரிவித்தார். தனது பிள்ளையின் உயிருக்கு பேருந்து உரிமையாளர் 50 ஆயிரம் ரூபாயும் பேருந்து சாரதி ஒரு லட்சம் ரூபாயும் தங்களுக்கு இழப்பீடாக வழங்கியதாகவும் அதை அவர் ஏற்க மறுத்ததாகவும் தனக்கு சரியான நீதி வேண்டும் எனவும் இதன் போது தெரிவித்தார். தனது மகன் பேருந்தின் பின்பக்கம் அடிபட்டு விபத்துக்குள்ளானதாகவும் ஆனால் விசாரணையின் போது பேருந்து முன் பக்கம் விபத்துக்குள்ளானதாகவும் பொலிஸார் விசாரணையை முன்னெடுத்ததாகவும் இறந்த சிறுவனின் உடல் வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு கொண்டு வருவதற்கு முன்னரே சாரதியை பிணையில் விடுவித்ததாகவும் பேரூந்தையும் விடுவித்ததாகவும் குறித்த தாயார் இதன் போது தெரிவித்தார். பொலிஸார் உயிரிழந்த சிறுவனின் தாயாரின் வாக்குமூலத்தை கூட சரியான முறையில் பெறவில்லை எனவும் நீதியான விசாரணையை முன்னெடுக்கவில்லை எனவும் சிசிரிவி காணொளிகளை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை எனவும் இதன் போது குற்றச்சாட்டினர். உயிரிழந்த சிறுவனுக்கு சிறந்த விசாரணையை முன்னெடுத்து நீதியை நிலைநாட்டி தர வேண்டுமென இதன் போது கண்ணீர் மல்க ஊடகங்களிடம் வேண்டிக்கொண்டார். https://www.virakesari.lk/article/220481
  10. யாழ்ப்பாணத்தில் கல்சியத்தால் நீர்க்கடுப்பு வருவதில்லை. ஆனால் அதீத நீர்ப்பாவனை(மோட்டார் பாவிப்பது), மழை நீர் சேமிக்கப்படுவதில்லை, குட்டை, குளங்களின் தேவை அறியாது ஆக்கிரமிக்கப்பட்டு மூடப்படுவது, அதீத உரப்பாவனை போன்ற காரணங்களால் நிலத்தடி நீர் உவராகிறது. பயனுள்ள கட்டுரையை பகிர்ந்த @கிருபன் அண்ணைக்கு நன்றி.
  11. வியட்நாமில் புயலில் சிக்கியது சுற்றுலாப்பயணிகளின் படகு – 35 பேர் பலி 20 JUL, 2025 | 08:38 AM வியட்நாமில் சுற்றுலாப்பயணிகள் படகு புயலில் சிக்கி விபத்துக்குள்ளானதில் 35 பேர் உயிரிழந்துள்ளனர். 53பேருடன் பயணித்துக்கொண்டிருந்த வொன்டர் சீ என்ற படகே அனர்தத்தை சந்தித்துள்ளது. சுற்றுலா பயணிகள் மத்தியில் பிரபலமான ஹா லோங் குடாவிற்கு வொன்டர் சீ பயணித்துக்கொண்டிருந்தவேளை புயல்காரணமாக கடலில் மூழ்கியுள்ளது. 11 பேரை உயிருடன் மீட்டுள்ளதாகவும் எட்டுபேருக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடும் காற்று காரணமாக படகு தலைகீழாக கவிழ்ந்தது என வியட்நாமின் செய்தித்தாள்கள் குறிப்பிட்டுள்ளன உயிரிழந்தவர்களில் அனேகமானவர்கள் வியட்நாமியர்கள் பகல் 2 மணியளவில் வானம் இருண்டது மழைபெய்ய தொடங்கியது, இடிமின்னல் கடும் காற்றுடன் மழை பெய்தது என ஒருவர் தெரிவித்துள்ளார். தலைகீழாக கவிழ்ந்த படகிற்குள் சிக்குண்டிருந்த 10 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டுள்ளான். நான் ஆழமாக மூச்சை இழுத்துவிட்டேன், கடலில் நீந்தினேன் காப்பாற்றுமாறு அலறினேன், அவ்வேளை என்னை படகொன்று காப்பாற்றியது என அந்த சிறுவன் தெரிவித்துள்ளான். மீட்கப்பட்ட உடல்களில் 8 சிறுவர்களுடையவை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/220416
  12. Published By: DIGITAL DESK 3 20 JUL, 2025 | 12:42 PM திருகோணமலை, சம்பூர் கடற்கரை ஓரமாக நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது மனித எச்சங்கள் வெளிவந்ததை அடுத்து குறித்த கண்ணிவெடி அகழும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது. கடந்த வியாழக்கிழமை (17) மூதூர் - சம்பூர் கடற்கரையோர பகுதியில் நிலக்கீழ் கண்ணிவெடி அகழும் பணி ஆரம்பிக்கப்பட்டிருந்தது. சம்பூர் சிறுவர் பூங்காவை அண்மித்துள்ள கடற்கரையோர பகுதியில் கடந்த ஒரு வாரகாலமாக எம்.ஏ.ஜி எனப்படுகின்ற கண்ணிவெடி அகழும் நிறுவனம் தங்களுக்குரிய தளபாடம் மற்றும் பொருட்களுடன் முகாமிட்டிருந்ததோடு வியாழக்கிழமை (17) கண்ணிவெடி அகழும் பணியை ஆரம்பித்திருப்பதாகவும் தெரிய வருகின்றது. இந்நிலையிலேயே இன்று ஞாயிற்றுக்கிழமை (20) குறித்த பகுதியில் மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து நீதிமன்ற கட்டளையை பெறுவதற்காக குறித்த பணி நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. சம்பூர் படுகொலையின் நினைவாக அமைக்கப்பட்ட தூபியை அண்மித்த பகுதியில் அகழ்வுப் பணி மேற்கொண்ட போதே மனித எமனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். https://www.virakesari.lk/article/220451
  13. 20 JUL, 2025 | 11:24 AM குப்பைகளை கண்ட கண்ட இடங்களில் கொட்டுபவர்களுக்கு எதிராக தண்டப்பணம் அறவிடுவதற்கும், அதே போன்று குப்பைகளை பொது இடங்களில் கொட்டுபவர்களை சரியான ஆதாரத்துடன் எங்களிடம் தெரிவிப்பவர்களுக்கு சன்மானம் வழங்குவதற்கும் நாங்கள் தீர்மானித்திருக்கின்றோம். எனவே பிரதேச மக்கள் எங்களுடன் ஒத்துழைப்பு வழங்கி செயல்பட வேண்டும் என்று காரைதீவு பிரதேச சபையின் தவிசாளர் எஸ். பாஸ்கரன் தெரிவித்தார். காரைதீவு பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக்கழிவகற்றல் பணியை மிகச் சிறப்பாக செய்வதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம். இதன் அடிப்படையில் சனிக்கிழமை (19) காரைதீவு - 03 லெனின் வீதி பிரதேசத்தில் சட்டவிரோதமாக கொட்டப்பட்டுள்ள குப்பைகளை அகற்றும் பணியில் காரைதீவு பிரதேச சபை ஊழியர்கள் திண்மக் கழிவகற்றல் முகாமைத்துவத்தில் ஈடுபட்டனர். இதன்போது இங்கு கருத்து தெரிவித்த பிரதேச சபையின் தவிசாளர் பாஸ்கரன், எமது பிரதேசத்தில் உள்ள மக்கள் சட்ட விரோதமாக திண்மக்கழிவுகளை வீதிகளில் கொட்டுகின்ற இந்த நிலை மாற்றப்பட வேண்டும். இது எதிர்காலத்தில் எமது பிரதேசத்தில் சுகாதார சீர்கேடுகளை, சூழல் பாதிப்புகள் ஏற்படுத்தக் கூடிய வாய்ப்பை ஏற்படுத்தும். எனவே, சுத்தமான, சுகாதாரமான சூழலையும் அழகான காரைதீவு பிரதேசத்தையும் உருவாக்குவதற்காக எங்களால் ஆன முயற்சிகளை செய்து வருகிறோம். எங்களுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இது போன்று எதிர்காலத்திலே வருகின்ற ஒவ்வொரு சனிக்கிழமையும் எமது பிரதேச சபைக்கு உட்பட்ட பிரதேசங்களில் திண்மக்கழிவகற்றல் விடயத்தை மிகச் சிறப்பாக செய்வதற்கு நாங்கள் முயற்சிகள் செய்து வருகின்றோம். அதற்கான ஒத்துழைப்பை பொதுமக்கள் எங்களுக்கு தர வேண்டும். மாறாக, இந்த கேட்டுக்கொள்வதோடு, எமது பிரதேச சபையின் ஊழியர்கள் என்னோடு இணைந்து மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள் அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/220440
  14. 20 JUL, 2025 | 10:41 AM (இராஜதுரை ஹஷான்) குழந்தை பிறந்தவுடன் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும்போது பெற்றோர் திருமணம் முடித்துள்ளார்களா என்பது தற்போது கேட்கப்படுவதில்லை. தந்தையின் பெயர் இல்லாவிடினும், தாயின் குடும்ப வழி பெயர் மற்றும் விபரங்கள் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும் போது பயன்படுத்த முடியும். அதற்கான வசதிகள் காணப்படுகின்றன என்று மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்தார். மகளிர் விவகாரம் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, குருணாகல் மாவத்தகம பகுதியில் கடந்த 17 ஆம் திகதியன்று பிறந்து இரண்டு நாட்களான சிசு ஒன்று வயல்வெளியில் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து சமூகத்துக்கு ஒரு அறிவுறுத்தலை வழங்க வேண்டிய பொறுப்பு மகளிர் மற்றும் சிறுவர் பாதுகாப்பு அமைச்சுக்கு உண்டு. பெண்கள் தந்தையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியாத நிலையில் அல்லது பொறுப்பேற்க முடியாத நிலையில் குழந்தையை பிரசவிக்க நேரிட்டால் பாரதூரமான சுகாதார பாதிப்புக்கும், சமூக நெருக்கடிகளுக்கும் உள்ளாக நேரிடும். ஆகவே இவ்வாறான சம்பவங்கள் குறித்து அமைச்சுக்கு பாரியதொரு பொறுப்பு காணப்படுகிறது. பொறுப்பேற்க முடியாத நிலை மற்றும் உறுதிப்படுத்த முடியாத சூழல் ஆகிய காரணிகள் பெண்கள் அச்சமடைந்து இவ்வாறு தாம் பெற்ற குழந்தையை கைவிட்டுச் செல்கிறார்கள். மனிதர்களின் உளவியல் தொடர்புகளை தடுக்க முடியாது, சட்டமியற்ற முடியாது. இருப்பினும் அந்த உளவியல் ரீதியிலான தொடர்பில் பிரதிபலனாக பிள்ளைகளை பாதுகாப்பற்ற வகையில் விட்டுச் செல்லும் நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டாம் என்று தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். குழந்தை பிறந்தவுடன் பிறப்பு அத்தாட்சிப் பத்திரம் பதியும்போது பெற்றோர் திருமணம் முடித்துள்ளார்களா என்பது தற்போது கேட்கப்படுவதில்லை. தந்தையின் பெயர் இல்லாவிடினும்,தாயின் குடும்பவழி பெயர் மற்றும் விபரங்கள் பிறப்பு அத்தாட்சிப்பத்திரம் பதியும் போது பயன்படுத்த முடியும். அதற்கான வசதிகள் காணப்படுகின்றன. பெண்கள் பிள்ளை பெற்றவுடன் அனைத்தையும் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும். பெற்ற குழந்தையை வளர்க்க முடியாவிடின் பிறிதொரு தரப்பினருக்கு அந்த குழந்தையை கையளிக்கும் சட்டத்திலான நிறுவன கட்டமைப்பு நாட்டில் உள்ளது. நீதிமன்ற கட்டமைப்பின் ஊடாக இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். இதற்கான வசதிகள் மற்றும் ஒத்துழைப்புக்கள் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் வழங்கப்படும். குருநாகல் மாவத்தகம பகுதியில் வயல்வெளியில் கைவிடப்பட்ட சிசு தற்போது வைத்தியசாலை கண்காணிப்பில் ஆரோக்கியமாக உள்ளது. இந்த சிசுவின் தாயை தேடி விசாரணைகள் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுள்ளன. தாயை கண்டுப்பிடித்தவுடன் அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இந்த தாய் மாத்திரம் பொறுப்புக்கூற வேண்டும் என்று குறிப்பிடும் சமூக நிலையே காணப்படுகிறது. இந்நிலைமை மாற்றம் பெற வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/220434
  15. 20 JUL, 2025 | 09:12 AM நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த பெருந்திருவிழா ஜுலை 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையி, மஹோற்சவ ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று சனிக்கிழமை (19) யாழ். மாநகர சபையின் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்றது. யாழ். மாநகர முதல்வர், யாழ் மாநகர சபை ஆணையாளர் ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்ற குறித்த கலந்துரையாடலில் பல்வேறு தீர்மானங்கள் எட்டப்பட்டது. குறித்த தீர்மானங்களின் படி, ஜுலை 27 ஆம் திகதி நள்ளிரவில் இருந்து நல்லூர் ஆலய சுற்றுவீதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு ஓகஸ்ட் 24 ஆம் திகதி வைரவர் சாந்தி நிறைவடைந்த பின்னர் நள்ளிரவே திறந்து விடப்படும். வீதி மூடப்பட்டிருக்கும் சமயங்களில் பருத்தித்துறை வீதி வழியாக வரும் வாகனங்கள் யாழ் மாநகர சபைக்கு முன்பாக உள்ள வீதியால் பயணித்து யாழ் நகரை அடைய முடியும். ஆனால் இரதோற்சவம் மற்றும் சப்பர திருவிழாக்களின் போது கச்சேரி நல்லூர் வீதியாலேயே பயணிக்க முடியும். ஆலயத்துக்கு நேர்த்திக்கடன்களைக் கழிப்பதற்காக வருகின்ற தூக்குகாவடிகள் அனைத்தும் ஆலயத்தின் முன்பக்க பருத்தித்துறை வீதி வழியாக மட்டுமே உள்நுழைய முடியும். அவ்வாறு வருகின்ற காவடிகள் இறக்கப்பட்டதும், வாகனங்கள் அனைத்தும், செட்டித்தெரு வீதி வழியாக வெளியேறுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளன. ஆலய வீதித் தடைக்குள் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கும் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களுக்கும் வழமைபோல மாநகர சபையினால் வாகன அனுமதி அட்டை வழங்கப்படும். நிரந்தர தற்காலிக வியாபாரிகளுக்கு பொருட்களை ஏற்றி இறக்க விசேட நேரக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. உற்சவ காலங்களில் சிறுவர்களைப் பயன்படுத்தி வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. ஆலய வெளிவீதி சூழலில் வியாபார, விளம்பர மற்றும் ஒளிபரப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது. உற்சவ காலங்களில் ஆலய சூழலில் பக்தி கீதங்களை மாத்திரமே ஒலிபரப்பு செய்யமுடியும். உற்சவ காலங்களில் விநியோகிக்கப்படும் விளம்பரங்கள் மற்றும் துண்டுப்பிரசுரங்களில் கடவுளின் உருவப்படங்கள் பிரசுரிப்பது தவிர்க்கப்பட்டுள்ளது. உற்சவ காலத்தில் ட்ரோன் கமராக்களை பயன்படுத்தி காணொளி பதிவுசெய்தல், வானூர்தியை பயன்படுத்தி பூ சொரிதல் மற்றும் வானவேடிக்கை நிகழ்வுகளை செய்தல் தடை செய்யப்பட்டுள்ளது. உற்சவ காலங்களில் ஆலய வெளிச் சூழலில் காலணிகளுடன் நடமாடுவது தவிர்க்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/220419
  16. Published By: DIGITAL DESK 3 20 JUL, 2025 | 11:01 AM தெற்கு சூடானிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இலங்கையின் முயற்சி, அரசியல் தடைகள், விநியோகத் தடங்கல்கள் மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என தெற்கு சூடானுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் கனநாதன் தெரிவித்துள்ளார். எனவே, இந்த முயற்சியை இலங்கை அதிகாரிகள் கைவிட வேண்டும் என்றும் அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார். தடைகள், நம்பகத்தன்மையற்ற விநியோகச் சங்கிலிகள் மற்றும் சுத்திகரிப்பு இணக்கமின்மை ஆகியவற்றைக் காரணம் காட்டி, அத்தகைய நடவடிக்கையை மறுபரிசீலனை செய்யுமாறு இலங்கை எரிசக்தி அதிகாரிகளை தூதர் கனநாதன் வலியுறுத்தினார். "எரிசக்தி பாதுகாப்பிற்கு பல்வகைப்படுத்தல் அவசியம் என்றாலும், இந்த கட்டத்தில் தெற்கு சூடான் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்வது இலங்கைக்கு நடைமுறைக்கு ஏற்றதாகவோ அல்லது பொருளாதார ரீதியாகவோ சாத்தியமில்லை" என்று அவர் கூறினார். அமெரிக்கத் தடைகள் மற்றும் ஒழுங்குமுறை தடைகள் 2018 முதல், அமெரிக்கா அரசுக்குச் சொந்தமான எண்ணெய் நிறுவனமான நைல்பெட் உட்பட குறைந்தது 15 தெற்கு சூடான் எண்ணெய் தொடர்பான நிறுவனங்கள் மீது தடைகளை விதித்துள்ளது. இந்தக் கட்டுப்பாடுகள் அந்த நாட்டின் உள்நாட்டுப் போருக்குப் பொருளாதார ஆதாரமளிக்க வேண்டாம் என்பதற்காக விதிக்கப்பட்டன. தெற்கு சூடான் கச்சா எண்ணெய் வர்த்தகம் செய்ய விரும்பும் எந்தவொரு நாடும் அல்லது நிறுவனமும் அமெரிக்க ஏற்றுமதி உரிமத்தைப் பெறுவது கட்டாயமாகும், இது அமெரிக்க டாலர்களில் பரிவர்த்தனைகளை சிக்கலாக்குகிறது மற்றும் கடுமையான இணக்கத் தேவைகளுக்கு உட்பட்டது. இத்தகைய சட்டப்பூர்வ அபாயங்கள் முக்கிய உலகளாவிய எண்ணெய் வர்த்தகர்கள் பொறுப்பை ஈடுசெய்ய குறிப்பிடத்தக்க தள்ளுபடிகள் வழங்கப்படாவிட்டால் தெற்கு சூடானுடன் ஈடுபடுவதைத் தடுத்துள்ளன, என்று தூதர் கனநாதன் வலியுறுத்தினார். விநியோகச் சங்கிலி உறுதியற்ற தன்மை தெற்கு சூடான் ஒரு நிலத்தால் சூழப்பட்ட நாடு, மேலும் அனைத்து கச்சா எண்ணெய் ஏற்றுமதிகளும் சூடான் வழியாக போர்ட் சூடானுக்குச் செல்லும் ஒற்றைக் குழாய்வழியை நம்பியுள்ளன. இருப்பினும், தொடர்ச்சியான குழாய்வழித் தடங்கல்கள், உள்நாட்டு அமைதியின்மை மற்றும் ஹவுதி கிளர்ச்சியாளர்களை உள்ளடக்கிய செங்கடல் மோதல் ஆகியவை விநியோக வழிகளை மிகவும் நிலையற்றதாக மாற்றியுள்ளன. சமீபத்திய மாதங்களில் பல முறை அசாதாரணச் சூழ்நிலை (force majeure) அறிவிப்புகள் சந்தை நம்பிக்கையை மேலும் அசைத்துள்ளன. ""நமது தேசிய இருப்புக்கள் குறைவாக இருப்பதாலும், நமது சுத்திகரிப்பு செயல்பாடுகளுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான கச்சா எண்ணெய் வரத்து தேவைப்படுவதாலும் இந்த கணிக்க முடியாத நிலை இலங்கைக்கு குறிப்பாக கவலை அளிக்கிறது," என்று கனநாதன் குறிப்பிட்டார். விநியோகம் பாதுகாக்கப்பட்டாலும், போர்ட் சூடான் வழியாக அனுப்புவதற்கு இராணுவமயமாக்கப்பட்ட மண்டலங்கள் மற்றும் வளர்ச்சியடையாத உள்கட்டமைப்பு வழிசெலுத்தல் தேவைப்படும் - இவை கப்பல் செலவுகளை உயர்த்தும் மற்றும் விநியோகங்களை தாமதப்படுத்தும் காரணிகள். சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையத்துடன் தர பொருத்தமின்மை தெற்கு சூடான் முதன்மையாக இரண்டு கச்சா எண்ணெய் கலவைகளை ஏற்றுமதி செய்கிறது: நைல் கலவை (அரை-இனிப்பு) மற்றும் டார் கலவை (கனமான, அமிலத்தன்மை). இரண்டில், டார் பிளென்ட் குறிப்பாக சிக்கலானது, அதிக மொத்த அமில எண் (2.1–2.4 TAN) கொண்டது, இது அத்தகைய தரங்களைக் கையாள வடிவமைக்கப்படாத சுத்திகரிப்பு உட்கட்டமைப்பிற்கு கடுமையான அரிப்பு அபாயங்களை ஏற்படுத்துகிறது. இலங்கையின் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம், ஒரு நாளைக்கு 50,000 பீப்பாய்கள் கொள்ளளவு கொண்டது, லேசானது முதல் நடுத்தரமானது வரையிலான இனிப்பு கச்சா எண்ணெய் பதப்படுத்த அளவீடு செய்யப்படுகிறது. தெற்கு சூடானின் கனமான கலவைகளுக்கு இடமளிக்க, கணிசமான முதலீடுகள் தேவைப்படும்: துருப்பிடிக்காத உலோகங்களுடன் உபகரணங்கள் கலவை மற்றும் விலப்பொருள் நீக்கும் (desulfurization) உபகரணங்கள் மேம்பட்ட வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் செயலாக்க அமைப்புகள் “இந்த தொழில்நுட்ப மேம்படுத்தல்கள் தள்ளுபடி செய்யப்பட்ட கச்சா எண்ணெயிலிருந்து பெறப்பட்ட எந்தவொரு விலை நன்மையையும் நீக்கும்,” என்று கனநாதன் மேலும் கூறினார். பொருளாதார பரிசீலனைகள் மற்றும் மூலோபாய திசை இலங்கையின் அந்நிய செலாவணி இருப்புக்கள் அழுத்தத்தின் கீழ் இருப்பதாலும், உலகளாவிய எண்ணெய் விலைகள் நிலையற்றதாக இருப்பதாலும், தள்ளுபடி செய்யப்பட்ட ஆனால் சுத்திகரிக்க கடினமான கச்சா எண்ணெய் இறக்குமதி குறைந்தபட்ச பொருளாதார வருவாயை வழங்குகிறது. அதற்கு பதிலாக, தொழில்நுட்ப ரீதியாக இணக்கமான மற்றும் வணிக ரீதியாக பாதுகாப்பான நைஜீரியாவின் போனி லைட் அல்லது அரபு லைட் கலவைகள் போன்ற நிலையான, அனுமதிக்கப்படாத சப்ளையர்களிடமிருந்து இறக்குமதிகளைத் தொடர தூதர் கனநாதன் அறிவுறுத்தினார். தெற்கு சூடானின் கச்சா எண்ணெய் இலங்கைக்கு சாத்தியமானதாக இல்லாததற்கான முக்கிய காரணங்கள்: அமெரிக்காவின் செயலில் உள்ள தடைகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் நிலையற்ற விநியோகச் சங்கிலிகள் மற்றும் அடிக்கடி குழாய் தடங்கல்கள் தற்போதைய சுத்திகரிப்பு உட்கட்டமைப்புடன் இணக்கமின்மை இணக்கம் மற்றும் சுத்திகரிப்பு நிலைய மேம்பாட்டிற்கான அதிக முதலீட்டு செலவுகள். இலங்கை நம்பகமான, அரசியல் ரீதியாக நிலையான சந்தைகளில் இருந்து கச்சா எண்ணெய் பெறுவதில் கவனம் செலுத்த வேண்டும், அதே நேரத்தில் உள்நாட்டு சுத்திகரிப்பு திறனை நவீனமயமாக்குவதில் தொடர்ந்து முதலீடு செய்ய வேண்டும் - குறிப்பாக முன்மொழியப்பட்ட அம்பாந்தோட்டா சுத்திகரிப்பு நிலையம் போன்ற திட்டங்கள் மூலம். நமது எரிசக்தி எதிர்காலம் நிச்சயமற்ற தன்மையின் அடிப்படையில் அல்ல, பாதுகாப்பின் அடிப்படையில் கட்டமைக்கப்பட வேண்டும். https://www.virakesari.lk/article/220437
  17. 19 JUL, 2025 | 10:07 PM உயிர்த்த ஞாயிறு தின குண்டுத்தாக்குதல்களை அறிந்திருந்தும் அவற்றை மறைத்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட முன்னாள் அரச புலனாய்வு துறையின் தலைவர் நிலந்த ஜெயவர்தன பொலிஸ் சேவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இந்த தீர்மானத்தை பொலிஸ் ஆணைக்குழு எடுத்துள்ளது. நிலந்த ஜெயவர்தனவை பணிநீக்கம் செய்வதற்கான உத்தரவுகளை பிறப்பிக்கும் பணிப்புரையை, பொலிஸ் ஆணைக்குழு, பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவுக்கு அனுப்பியுள்ளது. நிலந்த ஜெயவர்தன தனது கடமையை புறக்கணித்ததாகவும், குற்றவியல் குற்றத்தைச் செய்ததாகவும் உயிர்த்த ஞாயிறு தின குண்டுவெடிப்புகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை பரிந்துரைத்திருந்தது. அதன்படி, நிலந்த ஜெயவர்தன, மீது ஒழுக்காற்று விசாரணை நடத்தப்பட்டு, அவர் செய்த குற்றச் செயலுக்காக வழக்குத் தொடரப்பட வேண்டும் என்று பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220413
  18. -ஐ.வி.மகாசேனன்- மக்கள் போராட்டங்களை சீராக மதிப்பீடு செய்வதன் மூலமே எதிர்கால அரசியல் இலக்குகளை திட்டமிட்டு பயணிக்கக்கூடியதாக அமைகின்றது. ஈழத்தமிழ் அரசியலில் மிக சமீபத்திய மக்களின் தன்னெழுச்சியான போராட்டமாக அமைவது ‘அணையா விளக்கு’ போராட்டமாகும். செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் சர்வதேச கண்காணிப்பை வலியுறுத்தி, ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் கவனத்தை ஈர்க்கும் நோக்கோடு முன்னெடுக்கப்பட்டது. மக்கள் செயல் என்ற தன்னார்வ இளைஞர் கட்டமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தில் காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள், மதத் தலைவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள், அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். ஜூன் 23 – 25 ஆம் திகதிகளில் நடைபெற்ற இப்போராட்டத்தின் இறுதி நாளான ஜூன் -25 அன்று பெருந்திரளான மக்கள் தன்னார்வமாக கலந்து கொண்டிருந்தனர். இந்நிலையில் அரசியல்வாதிகள் ஒருசிலருடன் போராட்டத்தில் பங்குபற்றியிருந்தவர்கள் தமது கோபங்களை வெளிப்படுத்தியிருந்தனர். இது ‘அணையா விளக்கு’ போராட்டத்தின் பிரதான பேசுபொருளாகவும் மாறியிருந்தது. இக்கட்டுரை வெகுஜன போராட்டக்களங்களில் அரசியல்வாதிகள் மீதான மக்கள் எதிர்ப்பின் ஈழத்தமிழர் அரசியல் கலாசாரத்தை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது. ஜூன் – 25 அன்று இறுதி நாளில் தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் ‘அணையா விளக்கு’ போராட்டத்தில் கலந்து கொண்டிருந்த போது சிறு குழப்பம் உருவாகியது. இருவரும் மலர் அஞ்சலி செலுத்திய பின்னர் வெளியேறியபோது போராட்டத்தில் கலந்து கொண்ட ஒரு சிலர் தமது கோபத்தை வெளிப்படுத்தினர். அவர்களை வெளியேறுமாறு கூச்சலிட்டனர். குறிப்பாக உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதற்கு தமிழரசுக் கட்சி ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியிடம் ஆதரவு கோரியது தொடர்பில் எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டியிருந்தனர். பின்னர் தேசிய மக்கள் அரசாங்கத்தின் அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்ட களத்திற்கு வருகை தந்திருந்த போதும் சிறு குழப்பகரமான சூழல் உருவாகியது. மீன்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் ஆகியோர் அணையா விளக்கில் மலரஞ்சலி செலுத்த வந்தபோது போராட்டக்காரர்கள் ஒரு சிலர் அவர்களை உடனடியாக வெளியேறுமாறு கோரி எதிர்த்தனர். பதட்டங்கள் அதிகரித்ததால் அமைச்சர் பாராளுமன்ற உறுப்பினர் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் வெளியேறியிருந்தனர். இவ்முரண்பாட்டு செய்திகளுக்கு பின்னரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனும் வந்திருந்தார். போராட்டக்காரர்கள் ஒரு சிலரின் எதிர்ப்பை எதிர்கொண்டு அந்த இடத்தை விட்டு வெளியேறினார். வெகுஜன போராட்டங்கள் மற்றும் வெகுஜன நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையீனத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்துவது ஈழத்தமிழரசியலில் நீண்டதொரு மரபாக காணப்படுகின்றது. குறிப்பாக 1976 இல் வட்டுக்கோட்டை தீர்மானத்தினூடாக தனிநாட்டுக் கோரிக்கையை முன்வைத்து இளைஞர்களின் ஆயுதப் போராட்ட நகர்விற்கு உரமூட்டிய தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பின்னாளில் மாவட்ட சபைக்குள் முடங்கினார்கள். இது தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீது தமிழ் மக்களை சினங்கொள்ள வைத்தது. 1970 களின் இறுதியில் மற்றும் 1980 களில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்குகொள்ளும் வெகுஜன நிகழ்வுகளில் மக்கள் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள். குறிப்பாக பாராளுமன்ற உறுப்பினர் சிவசிதம்பரத்தின் வாகனத்தை பொதுமக்கள் தாக்கிய வரலாறுகள் காணப்படுகின்றது. அதேபோல் எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக நிகழ்வு ஒன்றிற்கு வருகை தந்திருந்த போது மாணவர்களின் எதிர்ப்பால் வெளியேறியிருந்தார். குறிப்பாக அமிர்தலிங்கத்தின் மெய்ப்பாதுகாவலரின் துப்பாக்கியினை மாணவர்கள் பறித்து பெரும் குழப்பகரமான சூழ்நிலையொன்று உருவாகியிருந்தது. இவ் எதிர்ப்புக்கள் தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 1977 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் நல்லூர் தொகுதியில் போட்டியிட்ட சிவசிதம்பரம் முழுநாட்டிலுமே அதிகப்படியான வாக்குகளால் வென்றவர் என்ற பெருமையை பெற்றார். எனினும் தொடர்ச்சியான தேர்தல்களில் 1989 இல் யாழ்ப்பாணம் மாவட்டம் மற்றும் 1994 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணியில் போட்டியிட்டு மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தார். இறுதியாக 2001 ஆம் ஆண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தின் பின்னர் நியமன உறுப்பினராக பாராளுமன்றம் சென்றிருந்தார். அவ்வாறே 1977 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவராயிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் அமிர்தலிங்கம் 1989 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்டிருந்தார். பின்னர் நியமன உறுப்பினராகவே பாராளுமன்றம் சென்றிருந்தார். இப்பின்னணியில் 1970 களின் இறுதியில் மற்றும் 1980 களில் வெகுஜன நிகழ்வுகளில் பொதுமக்கள் அரசியல்வாதிகள் மீது வெளிப்படுத்தியிருந்த கோபத்தை பின்னாளில் தேர்தல்களிலும் வெளிப்படுத்தி அவர்களை நிராகரித்திருந்தார்கள். ‘அணையா விளக்கு’ போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் வெளியேற்றப்பட்ட சந்தர்ப்பத்தில் அணையா விளக்கு ஏற்பாட்டாளர் ஒருவர் எதிர்ப்பாளர்களிடம் ‘உங்களுக்கு அவையள் பிழை செய்திருந்தால் வாக்குகளில் காட்டுங்கள்’ எனத் தெரிவித்திருந்த விடயம் முக்கியமானதாகும். 2009 களுக்கு பின்னர் தமிழ் மக்களின் அரசியலை நெறிப்படுத்தும் அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையீனத்தை வெகுஜன நிகழ்வுகளில் பொதுமக்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். 2017 ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நிகழ்வில் கலந்து கொண்டிருந்த இலங்கையின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை அங்கிருந்த பொதுமக்கள் சிலர் கடுமையாக எதிர்த்திருந்தனர். இரா.சம்பந்தன் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலிலிருந்து வெளியேற்றப்பட்டார். பல வெகுஜன நிகழ்வுகளிலும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு எதிரான கோஷங்கள் 2010 களுக்கு பின்னர் உயர்வாகவே இருந்து வந்துள்ளது. குறிப்பாக 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியாகிக் கொண்டிருக்கையில் யாழ்ப்பாணத்தில் வாக்கெண்ணும் நிலையத்துக்கு வருகை தந்திருந்த சுமந்திரன் அங்கிருந்த கட்சி ஆதரவாளர்களால் வெளியேற்றப்பட்டிருந்தார். 2018 ஆம் ஆண்டு அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தால் ஒழுங்கமைக்கப்பட்ட போராட்டத்தின் இறுதி நாளில் தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் என அனைவருக்கும் அழைப்பு விடுத்த போதும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா இலங்கை சுதந்திர கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஆகியோரே வருகை தந்திருந்திருந்தனர். அன்றைய காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கு ஏக பிரதிநிதித்துவத்தை வழங்கியிருந்த தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எவரும் வருகை தந்திருக்கவில்லை. மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக்கட்சி அலுவலகத்திற்கு வருகை தந்த தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் போராட்ட களத்திற்கு வருகை தந்தால் மாணவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாதெனக்கூறி மாணவப் பிரதிநிதிகளை வேறு இடத்திற்கு அழைத்திருந்தார்கள். இது தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெகுஜன நிகழ்வுகளில் கலந்து கொள்ள இயலாத மக்கள் எதிர்ப்பையே உறுதி செய்கின்றது. இதன் தொடர்ச்சியாகவே ‘அணையா விளக்கு’ போராட்டத்தில் ஒரு சில அரசியல்வாதிகள் மீதான எதிர்ப்பையும் அணுக வேண்டியுள்ளது. 2010 களின் பின்னர் வெகுஜன நிகழ்வுகளில் தமிழ் அரசியல்வாதிகள் மீது மக்கள் தமது நம்பிக்கையின்மை மற்றும் கோபத்தை வெளிப்படுத்துகின்ற போதிலும்இ ‘அணையா விளக்கு’ ஏற்பாட்டாளர் சுட்டிக்காட்டியது போன்று தேர்தல்களில் இவ் கோபத்தையும் நம்பிக்கையீனத்தையும் வெளிப்படுத்த தவறுகின்றார்கள். 2017 இல் முள்ளிவாய்க்காலில் வெளியேற்றப்பட்ட இரா.சம்பந்தன் 2020 பொதுத் தேர்தலிலும் வெற்றி பெற்றார். 2010 ஆம் ஆண்டு தொடக்கமே தமிழ் மக்களிடம் எதிர்ப்பை பெற்று வரும் சுமந்திரன் 2015 ஆம் ஆண்டு மற்றும் 2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல்களில் மக்கள் வாக்குகள் மூலம் பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். 2024 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலேயே மக்கள் நிராகரித்துள்ளமை கவனிக்கத்தக்கதாகும். எனினும் 1980 கள் மற்றும் 1990 களில் வெகுஜன நிகழ்வுகளில் புறக்கணிக்கப்படும் தமிழ் அரசியல்வாதிகள் தேர்தல்களிலும் மக்களால் நிராகரிக்கப்படும் நிகழ்வுகளே அரங்கேறியிருந்தது. இது மக்களின் வெகுஜன எதிர்ப்பை ஒன்றுதிரட்டக்கூடிய உறுதியான நிறுவனக் கட்டமைப்பினாலேயே சாத்தியமாகியிருந்தது. 1980 களுக்கு பின்னர் தமிழ் மக்களிடையே எழுச்சியுற்ற ஆயுதப் போராட்டம் தமிழ் மக்களினை வெகுஜன அபிப்பிராயங்களை ஒன்றுதிரட்டி சாத்தியப்படுத்தக்கூடிய களமாக இருந்தது. அத்தகையதொரு பொதுக்கட்டமைப்பு 2009 களுக்கு பின்னர் தமிழ் மக்களிடம் வெற்றிடமாகவே அமைகின்றது. 1980 களில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் வெளியேற்றப்பட்டிருந்த எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கம் அடுத்த தேர்தலிலேயே மக்களால் நிராகரிக்கப்படும் சூழமைவு காணப்பட்டது. 2018 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் அழைப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்த போது அன்றைய மாணவர் ஒன்றியம் ‘தேர்தல் காலத்தில் அரசியல் கட்சிகளுக்கு சரியான பாடம் கற்பிக்கப்படும்’ என வீரவசனம் பேசியிருந்தார்கள். எனினும் அவ் ஒன்றிய காலப்பகுதியில் இடம்பெற்ற தேர்தலிற்கே மக்களுக்கு சரியானதையும் நிராகரிக்க வேண்டியவர்களையும் வழிகாட்ட மாணவர் ஒன்றியம் தவறியிருந்தது. இவ்வாறாக மக்களின் எதிர்ப்பை ஒன்றுதிரட்டக்கூடிய பொதுக்கட்டமைப்புகளின் பலவீனங்களினாலேயே வெகுஜன நிகழ்வுகளில் வெளிப்படும் எதிர்ப்புகளின் பிரதிபலிப்புகளை தேர்தல் முடிவுகளில் அவதானிக்க முடிவதில்லை.தேர்தல் நலன்களை மாத்திரம் மையப்படுத்தி இயங்கும் கட்சிகளும் வெகுஜன நிகழ்வுகளில் வெளிப்படும் மக்கள் எதிர்ப்புகளையும் புறந்தள்ளி போகும் நிலைமைகள் காணப்படுகின்றது. ‘அணையா விளக்கு’ போராட்டத்தில் வருகை தந்த போது போராட்டக்காரர்களின் ஒரு சிலரின் எதிர்ப்பினால் வெளியேற்றப்பட்ட தமிழரசுக்கட்சியின் பிரமுகர்களும் அரசாங்க உறுப்பினர்களும் அதனை மக்களின் எதிர்ப்பு மற்றும் கோபங்களிலிருந்து திசைமாற்றும் செய்திகளையே வழங்கி இருந்தார்கள். தமிழரசுக்கட்சியின் பிரமுகர்கள் வெளியேற்றம் தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தின் ஆரம்பம் தமிழரசுக் கட்சியின் உட்பூசலாகவே அமைந்திருந்தது. எனினும் தமிழரசுக்கட்சியின் பதில் தலைவர் சி.வி.கே.சிவஞானத்தை வெளியே செல்லுமாறு எழுப்பப்பட்ட கோஷத்திற்குரியவர்களை முழுமையாக தமிழரசுக் கட்சியின் உட்பூசலின் எதிர்த்தரப்பினராக சுருக்கிவிட முடியாது. காணொளியில் இயல்பான மக்களின் கோபங்களும் வெளிப்படுத்தப்பட்டது. எனினும் தமிழரசுக்கட்சி பிரமுகர்கள் தம்மை நியாயப்படுத்த முழுமையாகவே எதிர்ப்பினை திசைதிருப்பும் வகையில் செய்தி வழங்கி இருந்தார்கள். இதனை தொடரும் வகையிலேயே அரசாங்க உறுப்பினர்களின் செய்திகளும் அமைந்திருந்தது. அமைச்சர் மற்றும் அரசாங்க பாராளுமன்ற உறுப்பினர் வருகையை போராட்டக்களம் அணுகிய விதத்தில் சில குறைபாடுகள் காணப்படவே செய்கின்றது. குறிப்பாக இனப்படுகொலையை ஏற்றுக்கொள்ளாத அரசாங்கத்தின் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இனப்படுகொலைக்கான சர்வதேச நீதியைக் கோரும் போராட்ட களத்திற்கு ஆதரவு நல்கி வருகை தரும்போது அதனை போராட்ட ஏற்பாட்டாளர்கள் தந்திரமாக அணுகியிருக்க வேண்டும். போராட்டக்காரர்களின் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தி அரசாங்கத்தின் இரட்டை நிலையை தோலுரிக்கக்கூடிய வகையிலும் அல்லது இனப்படுகொலையை அரசாங்க உறுப்பினர்கள் பொதுவெளியில் ஏற்றுக்கொள்ளத்தக்க வகையில் களத்தை அணுகியிருக்க வேண்டும். எனினும் போராட்டக்களம் குழப்பகரமாக மாறியதன் பின்னணியில் மனிதப் புதைகுழிகள் மற்றும் இனப்படுகொலை தொடர்பான அரசாங்கத்தின் கடந்த கால செய்திகளே காணப்படுகின்றது. அரசாங்க உறுப்பினர்களை வெளியேறுமாறு எழுப்பப்பட்ட கோஷத்திலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கடந்த கால செய்திகளே கூறப்பட்டது. எனினும் போராட்டக்களத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரும் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களும் மக்களின் வெகுஜன போராட்டத்தை கொச்சைப்படுத்தும் வகையில் போராட்டக்காரர்கள் மதுபோதையிலிருந்ததாகவும் அவர்களே தமக்கு எதிர்ப்பு வெளிப்படுத்தியதாகவும் தெரிவித்திருந்தார்கள். இது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் ‘அணையா விளக்கு’ போராட்டத்தை திசைதிருப்பி குழப்பவே சென்றிருந்தார்கள் என்ற நுண்ணிய அரசியலையே வெளிப்படுத்துகின்றது. அதனை உறுதிப்படுத்தும் வகையிலேயே அமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் ரஜீவன் மக்கள் எதிர்ப்பால் வெளியேற்றப்பட்ட செய்தியின் பின்னரும் பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனும் போராட்ட களத்திற்கு வருகை தந்திருந்தமையும் அமைகின்றது. இதன் நுண்ணிய அரசியலை கையாளும் உத்தியை ‘அணையா விளக்கு’ போராட்டம் திட்டமிட தவறியுள்ளது. எதிர்காலங்களில் இதனையும் அணுகும் விதத்திலேயே ஈழத்தமிழர்கள் போராட்டங்கள் திட்டமிடப்பட வேண்டி உள்ளது. எனவே, வெகுஜன நிகழ்வுகளில் தமிழ் அரசியல்வாதிகள் மீதான நம்பிக்கையீனத்தையும் கோபத்தையும் வெளிப்படுத்துவது ஈழத்தமிழ் அரசியல் கலாசாரத்தின் பொதுப்பண்பாகவே காணப்படுகின்றது. எனினும் முன்னைய காலங்களில் வெகுஜனங்களின் எதிர்ப்பை திரட்டக்கூடிய பொதுக்கட்டமைப்பு ஈழத்தமிழர்களிடம் காணப்பட்டமையால்இ வெகுஜன நிகழ்வுகளின் எதிர்ப்பு தேர்தல் முடிவுகளிலும் பிரதிபலித்தது. இது அரசியல்வாதிகளுக்கான எச்சரிக்கையாக அமைந்திருந்தது. எனினும் 2009 களுக்கு பின்னர் தமிழ் மக்களினை திரட்டக்கூடிய பொதுக்கட்டமைப்பு இன்மையால் அல்லது உருவாக்கப்படும் பொதுக்கட்டமைப்புகளின் பலவீனங்களால் வெகுஜன நிகழ்வுகளில் அரசியல்வாதிகள் மீது வெளிப்படுத்தப்படும் எதிர்ப்புக்கள் தேர்தல்களில் பிரதிபலிக்கப்பட முடிவதில்லை. ஆதலால் வெகுஜன நிகழ்வுகளில் ஏற்படும் எதிர்ப்புக்களை அரசியல்வாதிகள் உதாசீனம் செய்பவர்களாகவே உள்ளனர். இதனூடாக வெகுஜன போராட்டங்களையும் மலினப்படுத்தும் செயற்பாடுகளையே அரசியல்வாதிகள் செய்யும் நிலைமைகளையே சமகாலத்தில் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. வெகுஜன நிகழ்வுகளில் வெளிப்படுத்தும் நம்பிக்கையீனமான அரசியல்வாதிகள் மீதான எதிர்ப்புகளை தொடர்ச்சியாகவும் அதேவேளை தேர்தல்களில் பிரதிபலிப்பதனூடாக மாத்திரமே வெகுஜன போராட்டங்களை பாதுகாப்பதுடன், அரசியல்வாதிகளின் தான்தோன்றித் தனங்களையும் கட்டுப்படுத்த முடியும். https://thinakkural.lk/article/318755
  19. 19 JUL, 2025 | 04:23 PM முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதிகளுக்குரிய ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலம் வெகுவிரைவில் நிறைவேற்றப்படும் என கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நெடுந்தீவுக்கு வெள்ளிக்கிழமை (18) சென்றிருந்த அமைச்சர் மக்கள் அமைப்புகள் மற்றும் மீனவ சங்க பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடி, அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்துகொண்டார். அதன் பின்னர் நெடுந்தீவு பகுதியில் முன்னெடுக்கப்படவுள்ள அபிவிருத்தி திட்டங்கள் பற்றியும் விளக்கமளித்தார். அதனை தொடர்ந்து அமைச்சர் கருத்து தெரிவிக்கையில், தேசிய மக்கள் சக்தி ஆட்சியின்கீழ் ஊழல்வாதிகள் மற்றும் மோசடியாளர்கள் தப்பவே முடியாது. ஊழல் அரசியல் கலாசாரத்துக்கு முடிவு கட்டவே நாம் ஆட்சிக்கு வந்தோம். அதற்கே மக்கள் ஆணை வழங்கியுள்ளனர். அதற்கமைய ஊழல்களில் ஈடுபட்ட மோசடியாளர்கள் தற்போது சட்டத்தின் பிடிக்குள் சிக்கியுள்ளனர். நாம் சட்ட விவகாரத்தில் தலையிடவில்லை. சட்டம் தனக்குரிய வகையில் தனது கடமையை நிறைவேற்றும். அதேபோல மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நாம் நிச்சயம் கட்டம், கட்டமாக நிறைவேற்றுவோம். இது தொடர்பில் அச்சம் கொள்ள வேண்டியதில்லை. ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் வழங்கப்பட்ட உறுதிமொழிகளை ஒரே இரவில் நிறைவேற்றிவிட வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். அது தவறு. அதேவேளை, வறுமையின் கோரப்பிடிக்குள் இருந்து மக்களை மீட்பதற்காக சமூக சக்தி வேலைத்திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. அரசியல், பொருளாதார மற்றும் சமூக மேம்பாடே எமது இலக்கு. அந்த சமூகமேம்பாட்டு திட்டத்தை வறுமை நிச்சயம் ஒழிக்கப்படும். அதற்குரிய வேலைத்திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன என்றார். https://www.virakesari.lk/article/220394
  20. 19 JUL, 2025 | 03:00 PM இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதிக்குள் 225 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ரஞ்சன் மாரசிங்க தெரிவித்துள்ளார். அதிகளவான யானைகள் ரயிலில் மோதியும், துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியும் மற்றும் மின்சார வேலிகளில் சிக்கியும் உயிரிழக்கின்றன. இதேவேளை, கல்லெல்ல பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை (18) அதிகாலை கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த ரயிலில் மோதி யானை ஒன்று உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/220389
  21. 19 JUL, 2025 | 04:37 PM மலையகத்தில் கடந்த சில நாட்களாக கடும் மழை பெய்து வருகின்றது. இதனால் நீர்த்தேக்கங்களில் நீர்மட்டமும் சடுதியாக அதிகரித்துள்ளது. அத்துடன், பெருந்தோட்டத் தொழிலாளர்கள் உட்பட நாளாந்தம் தொழிலில் ஈடுபடும் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது. கனமழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கம் சனிக்கிழமை (19) காலை முதல் நிரம்பி வழிகின்றது. அத்துடன், காசல்ரீ மற்றும் மவுஸ்ஸாகெல்லே நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது. எனவே, தாழ்நிலப் பகுதிகளில் வாழ்பவர்கள் விழிப்பாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/220402
  22. பட மூலாதாரம்,TAU படக்குறிப்பு, தங்கள் ஆரோக்கியத்தை காட்டும் விதமாக செடிகள் எழுப்பிய ஒலிகள் அடிப்படையில் அந்துப்பூச்சிகள் அவற்றின் மீது முட்டையிட்டன கட்டுரை தகவல் பல்லவ் கோஷ் அறிவியல் செய்தியாளர் 19 ஜூலை 2025, 06:31 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் தாவரங்கள் எழுப்பும் ஒலிகளுக்கு விலங்குகள் எதிர்வினையாற்றுகின்றன என்று புதிய ஆய்வு கூறுகிறது. அவற்றுக்கிடையில் கண்ணுக்கு புலப்படாத சூழல் மண்டலம் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. தக்காளி செடிகள் தாங்கள் ஆரோக்கியமற்ற நிலையில் இருக்கலாம் என்பதை உணர்த்தும் மன அழுத்தத்துடன் தொடர்புடைய ஒலிகளை எழுப்பினால், பெண் அந்துப்பூச்சிகள் அந்த செடிகள் மீது முட்டையிடுவதைத் தவிர்த்தன என்பதற்கான ஆதாரத்தை முதல்முறையாக டெல் அவிவ் பல்கலைக் கழக ஆய்வுக்குழு கண்டுபிடித்துள்ளது. செடிகள் அழுத்தத்தில் இருந்தாலோ, ஆரோக்கியமற்ற நிலையில் இருந்தாலோ "கூச்சலிடுகின்றன" என்பதை இரண்டு ஆண்டுகளுக்கு முன் முதலில் காட்டியது இந்தக் குழுதான். இந்த ஒலிகள் மனிதன் கேட்கும் வரம்புக்கு அப்பால் இருக்கின்றன. ஆனால் பல பூச்சிகள், வெளவால்கள் மற்றும் சில பாலூட்டிகளால் உணரமுடியும். "செடிகள் வெளிப்படுத்தும் ஒலிகளுக்கு ஒரு விலங்கு எதிர்வினையாற்றுவதை காட்டும் முதல் செயல்விளக்கம் இதுதான்," என்கிறார் டெல் அவிவ் பல்கலைக்கழக பேராசிரியர் யோஸி யோவெல். "இது இப்போதைக்கு ஊகம்தான். ஆனால், அனைத்து விதமான விலங்குகளும் செடிகளிடமிருந்து கேட்கும் ஒலிகளின் அடிப்படையில் மகரந்த சேர்க்கை செய்யவா, அதற்குள் ஒளிந்துகொள்ளவா அல்லது செடியை முழுமையாக உண்பதா போன்ற முடிவுகளை எடுத்துக் கொண்டிருக்கக் கூடும்." அந்துப்பூச்சிகள் செடிகளின் தோற்றத்திற்கு எதிர்வினையாற்றாமல் அவற்றின் ஒலிக்கு எதிர்வினையாற்றுகின்றன என்பதை உறுதிப்படுத்துவதற்காக ஆய்வாளர்கள் கவனமாக பரிசோதனைகளை மேற்கொண்டனர். இப்போது அவர்கள் பல்வேறு செடிகள் ஏற்படுத்தும் ஒலிகளையும் பிற இனங்கள் அந்த ஒலிகளின் அடிப்படையில் முடிவுகளை எடுக்கின்றனவா என்பதையும் ஆய்வு செய்வார்கள். "பல சிக்கலான செயல் - எதிர்செயல்கள் இருக்கக்கூடும் என நீங்கள் கருதக்கூடும், அதுவே முதல் படி," என்கிறார் பேராசிரியர் யோவெல். டெல் அவிவ் பல்கலைக்கழகத்தை சேர்ந்த மற்றொரு பேராசிரியர் லிலாக் ஹாடனியின் கூற்றுப்படி, வறட்சியான காலகட்டத்தில் தங்களது நீரை சேமித்து வைப்பது போன்ற தகவல்களை தாவரங்கள் ஒன்றுக்கொன்று ஒலி மூலம் பரிமாறிக் கொள்ள முடியுமா, அதற்கு பதிலளிக்க முடியுமா என்பதும் ஆய்வின் மற்றொரு அம்சமாக இருக்கும். "இது ஒரு உற்சாகமூட்டும் கேள்வி," என அவர் பிபிசியிடம் தெரிவித்தார். "ஒரு தாவரம் மன அழுத்தத்தில் இருக்கும் போது, அதைப் பற்றி மிகவும் அக்கறை கொள்ளும் உயிரினம் மற்ற தாவரங்கள்தான், அவை பல வழிகளில் பதிலளிக்கலாம்." செடிகள் புலன் உணர்வு கொண்டவை அல்ல என்பதை ஆய்வாளர்கள் வலியுறுத்திச் சொல்கிறார்கள். சுற்றுச்சூழல் மாறுபாட்டால் தாவரங்களில் ஏற்படும் இயற்பியல் விளைவுகளே ஒலியை உண்டாக்குகின்றன. இந்த ஒலியை கேட்கக்கூடிய ஆற்றல் படைத்த விலங்குகளுக்கும், பிற தாவரங்களுக்கும் இந்த சத்தங்கள் பயனுள்ளவையாக இருக்கலாம் என்பதைத்தான் தற்போதைய கண்டுபிடிப்பு காட்டுகிறது. பேராசிரியர் ஹடானியின் கூற்றுப்படி அதுதான் உண்மையென்றால், செடிகளும் விலங்குகளும் தங்களது பரஸ்பர பயன்களுக்காக ஒருங்கிணைந்த பரிணாம வளர்ச்சியின் மூலம் இந்த ஒலிகளை உருவாக்கவும் கவனிக்கவும் தேவையான ஆற்றலை பெற்றுள்ளன. "தங்களுக்கு பயனளிக்கக் கூடும் என்றால் அதிக கூடுதல் ஒலிகள் அல்லது உரத்த ஒலிகளை ஏற்படுத்தக்கூடிய பரிணாம வளர்ச்சியை தாவரங்கள் அடையக் கூடும். இந்த பெரும் தகவல்களை உள்வாங்கிக்கொள்ள வசதியாக விலங்குகளின் கேட்கும் திறனும் வளர்ச்சியடையலாம். "இது பரந்த, ஆய்வு செய்யப்படாத துறை- ஒரு உலகமே கண்டறியப்பட காத்திருக்கிறது." இந்த பரிசோதனையில், பொதுவாக குஞ்சுகள் பொரித்தவுடன் உண்ண வசதியாக தக்காளி செடிகளில் முட்டையிடும் பெண் அந்துப்பூச்சிகள் மீது ஆராய்ச்சியாளர்கள் கவனம் செலுத்தினர். அந்துப்பூச்சிகள், குஞ்சுகளுக்கு சரியாக ஊட்டமளிக்கக் கூடிய ஆரோக்கியமான தாவரத்தைத் தேடிப் பிடித்து முட்டியிடும் என்பது ஆய்வின் அனுமானம். எனவே, நீரிழப்பு மற்றும் அழுத்தத்தில் இருப்பதாக தாவரம் சமிக்ஞை செய்யும் போது, அந்துப்பூச்சிகள் இந்த எச்சரிக்கையை கவனித்து, அதில் முட்டையிடுவதைத் தவிர்க்கிறதா என்பதே கேள்வியாக இருந்தது. செடிகள் உருவாக்கிய ஒலிகள் காரணமாக அந்துப்பூச்சிகள் முட்டையிடவில்லை என்பதுதான் பதிலாக கிடைத்தது. இந்த ஆய்வு eLife இதழில் வெளியிடப்பட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gd4j4prggo
  23. பள்ளிகளுக்கு பதில் தந்தையின் கல்லறைகளுக்கு அருகில்; காசா சிறுமிக்கு ஏற்பட்டுள்ள சோக முடிவு காசா மக்களின் யதார்த்த வாழ்வை ஆவணப்படுத்தும் விருப்பத்தில், Palestine Chronicle எனும் ஊடகத்திற்கு செய்திகளை வழங்கி வந்த 11 வயது சிறுமி Lama Nasser இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் உயிரிழந்தார். கடந்த 2023 அக்டோபர் மாதத்தில் தொடங்கிய இஸ்ரேல் காஸா மோதலில் தற்போதுவரை 58,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டிருப்பதாக பாலஸ்தீன சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருக்கின்றனர். தொடர் மோதலால் காஸாவில் 2.3 மில்லியன் குடியிருப்பாளர்கள் பட்டியின் விளிம்பிற்குத் தள்ளப்பட்டிருக்கின்றனர். இந்தப்போரில் காஸாவில் நடக்கும் நிகழ்வுகளை உலகுக்குத் தெரிவித்த பல பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் வெளியாகியிருந்த Watson Institute for International and Public Affairs’ Costs of War project எனும் அறிக்கை, காசா மீதான இஸ்ரேலின் போரில் 232 பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாகத் தெரிவித்தது. இந்த எண்ணிக்கை மாதத்திற்கு சராசரியாக 13 பத்திரிகையாளர்கள். அதுமட்டுமின்றி, உலகப் போர்கள், வியட்நாம் போர், யூகோஸ்லாவியாவில் நடந்த போர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் போர் என உலகில் நடந்த எந்தப் போர்களையும் விட காஸாவில் நடக்கும் போரில் அதிகளவில் பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்டிருக்கின்றனர் என்றும் அந்த அறிக்கை தெரிவித்தது. இதற்கிடையே, குறிப்பாக தொடர்ச்சியாக பத்திரிக்கையாளர்கள் கொல்லப்படுவதை அடுத்து, நூற்றுக்கணக்கான தன்னார்வலர்களும், காஸா மக்களும் தாங்கள் எதிர்கொள்ளும் நிகழ்வுகளை வீடியோக்களாகப் பதிவேற்ற ஆரம்பித்தனர். இதில் குழந்தைகள் பலரும் இணைந்து கொண்டனர். அப்படி துணிச்சலாக குரல் கொடுத்த குழந்தைகளில் ஒருவர்தான் லாமா நாசர் எனும் 11 வயது குழந்தை. இவர் தனது வீடியோக்களில் தனது நண்பர்களையும் சேர்த்துக்கொண்டு காஸாவில் நடக்கும் நிகழ்வுகளை உலகிற்கு தெரிவித்து வந்தார். Palestine Chronicle எனும் ஊடகத்திற்கும் செய்திகளை வழங்கி லாமா நேற்று இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்திருக்கிறார். நகரத்தில் உள்ள ஆறு மாடி கட்டிடத்தின் மீது விழுந்த இஸ்ரேலிய குண்டு, அக்கட்டத்தை மொத்தமாக சிதைத்தது. இந்தத் தாக்குதலில் லாமா, அவரது பெற்றோர், அவரது சகோதர சகோதரிகளும் உயிரிழந்தனர். Palestine Chronicle ஊடகத்திற்கு கடைசியாக அவர் அளித்த வீடியோவில், “காசா என்பது குழந்தைப் பருவமும் வேதனையும் ஒன்று சேர்ந்த இடம். அங்கு உள்ள சிறுவர்கள், உலகின் மிகக் கடுமையான சூழ்நிலைகளில் ஒன்றில் வாழ்ந்துகொண்டு இருக்கின்றனர். ஒரு வருடத்திற்கும் மேலாக நீடித்து வரும் ஆக்கிரமிப்பு காரணமாக குழந்தைகள் கடினமான மற்றும் பேரழிவு தரும் சூழ்நிலைகளை கடந்து செல்கின்றனர். காசாவில், குழந்தைகள் பட்டினியால் அவதிப்படுகிறார்கள். சாப்பிட உணவு இல்லை. சாப்பிட உணவு இல்லை. மேலும், அவர்கள் தொற்றுநோய்கள், குறிப்பாக போலியோ பரவலால் அவதிப்படுகிறார்கள். இஸ்ரேலிய ஆக்கிரமிப்புகள் பள்ளிகளையும் பல்கலைக்கழகங்களையும் அழித்ததால், குழந்தைகள் கல்வி கற்கும் உரிமையை இழந்துள்ளனர். குழந்தைகள் பள்ளிக்குச் செல்வதற்கு பதிலாக, அவர்கள் தங்கள் தந்தையின் கல்லறைகளுக்கு அருகில் அமர்ந்திருக்கிறார்கள் அல்லது தங்கள் குடும்பங்களுக்கு தண்ணீர் வேண்டி வரிசையில் நிற்கிறார்கள். காசாவின் குழந்தைகள் உலகில் உள்ள எந்தக் குழந்தையையும் போலவே அமைதியாக வாழ விரும்புகிறார்கள். இனப்படுகொலையை நிறுத்துங்கள்!” எனத் தெரிவித்திருக்கிறார். https://thinakkural.lk/article/319073
  24. கடந்த 10 ஆண்டுகளாகப் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான இந்திய மத்திய அரசு, தமிழக கடற்றொழிலாளர்களைப் பாதுகாக்கத் தவறிவிட்டது என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். இந்நிலையில் இலங்கை இந்திய கடற்றொழிலாளர்களின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இரண்டு தரப்பினரையும் உடன்பாடு ஒன்றுக்கு கொண்டு வருவதே முக்கியமானதாகும் என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது. இது தொடர்பாக பாரதிய ஜனதா கட்சியின் பேச்சாளர் நாராயண் திருப்பதி கருத்துத் தெரிவிக்கையில் ”பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ் கடற்றொழிலாளர்கள் மற்றும் இந்திய தமிழ் கடற்றொழிலாளர்களுடன் இந்த பிரச்சினை தொடர்பில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். அத்துடன் அவர்களுடன் பேசி ஒரு தீர்வைக் காணாவிட்டால், இந்தப்பிரச்சினை முடிவடையப் போவதில்லை என்றும் நாராயண் திருப்பதி குறிப்பிட்டுள்ளார். மேலும் 1974 ஆம் ஆண்டு மத்திய காங்கிரஸ் ஆட்சியும், தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியும் இடம்பெற்ற போதே கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது எனவும், இதனையடுத்து 14 ஆண்டுகள் ஆட்சியை திராவிட முன்னேற்றக் கழகம் பகிர்ந்து கொண்டபோதும், இந்த பிரச்சினையைத் தீர்க்க முயலவில்லை என்றும் என்று நாராயண் திருப்பதி குற்றம் சுமத்தியுள்ளார். இதேவேளை, கச்சத்தீவை மீட்டெடுப்பது மட்டும் இந்தப் பிரச்சினையைத் தீர்க்காது என்று கடல்சார் மற்றும் ராஜதந்திர நிபுணர்கள் கருத்துரைத்துள்ளதாக இந்திய ஊடகமொன்று தெரிவித்துள்ளது. உண்மையான பிரச்சனை இந்தியக் கடல் பகுதியில் மீன் வளங்கள் குறைவதன் காரணமாக, இந்திய கடற்றொழிலாளர்கள் இலங்கைப் பகுதிக்குள் நுழைய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது என்றும் அந்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. இந்தநிலையில் கச்சத்தீவின் கட்டுப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு பதிலாக, இலங்கையுடன் நீண்டகால குத்தகை அல்லது மீன்பிடி உரிமை ஒப்பந்தம் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து இந்தியா பரிசீலிக்க வேண்டும் என்று நிபுணர்களை சுட்டிக்காட்டி இந்திய ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/319082
  25. 19 JUL, 2025 | 08:12 PM ஒரு பாடசாலை வகுப்பறையில் மாணவர்களின் எண்ணிக்கையை 25-30 ஆகக் குறைப்பது ஒரு இலக்காகும் என்றும், ஒரு வகுப்பறையில் 50-60 மாணவர்களுடன் தரமான கல்வியை வழங்க முடியாது என்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழில்சார் கல்வி அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். புதிய கல்வி மறுசீரமைப்பு குறித்து தென் மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அறிவூட்டும் நோக்குடன் காலி, தக்ஷினபாய கேட்போர் கூடத்தில் ஜூலை 19ஆம் திகதி நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு பிரதமர் இதனைத் தெரிவித்தார். புதிய கல்வி மறுசீரமைப்புகள் குறித்து மாகாண அதிகாரிகளுக்கு அறிவூட்டும் நான்காவது நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது, "கல்வி மறுசீரமைப்புக்காக நீங்கள் பெற்றுத்தரும் ஆதரவுக்கு நான் முதலில் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உண்மையில், எமது அரசாங்கம் ஆட்சிக்கு வருவதற்கு முன்பிருந்தே புதிய கல்வி மறுசீரமைப்பை மேற்கொள்வது பற்றி கலந்துரையாடப்பட்டு, திட்டமிடப்பட்டது. அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு ஏற்ப நிபுணர்களுடன் கலந்துரையாடி, பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பெற்றே, இந்தக் கொள்கைகள் வகுக்கப்பட்டன. புதியக் கல்வி மறுசீரமைப்பில் பாடத்திட்டத்தினை மட்டுமின்றி, ஆசிரியர்களின் தொழில்சார் திறனை மேம்படுத்துதல், புதிய மறுசீரமைப்புக்கு ஏற்ப கல்வி நிர்வாக அமைப்பை மறு சீரமைத்தல், அனைத்து குழந்தைகளுக்கும் சமமான, தரமான கல்வியைப் பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், ஆகியவற்றுக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இது எமது தனிப்பட்ட தேவைக்காகச் செய்யும் ஒன்றல்ல, நாட்டின் தேவையை உணர்ந்து, நாம் நிறைவேற்ற வேண்டிய ஒரு பொறுப்பாகும் என்ற உணர்வுடன் மேற்கொள்ளப்படும் ஒரு பணியாகும். நேர்மையான எண்ணத்துடன், சமூகத்தில் இது குறித்த ஒரு புரிந்துணர்வை விவாதத்தை ஏற்படுத்தும் ஒரு தரப்பினர் அது போலவே, சரியான புரிதலை பெறாது விமர்சிக்கும் தரப்பினரும் இருக்கின்றனர். இன்னும் சிலர் அரசியல் இலாபங்களுக்காகவும் விமர்சிக்கின்றனர். இந்த மறுசீரமைப்பை மேற்கொள்வது ஒரு சவாலாகும். அது எளிதானதல்ல என்பதை நாம் அறிவோம். இருப்பினும் இதனை செய்யாதிருக்க இயலாது. இவை அனைத்தையும் நிவர்த்திச் செய்யவே மக்கள் எமக்கு வாக்களித்தார்கள் புதிய கல்வி மறுசீரமைப்பிற்காக செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் இருக்கின்றன. ஆசிரியர் பயிற்சிக் கல்லூரிகளின் பாடத்திட்டங்கள் 16 வருடங்களாக மாற்றப்படவில்லை, அவை அனைத்தும் மாற்றப்பட வேண்டும். ஆசிரியர்களுக்கும், கல்வியாளர்களுக்கும் தொடர்ச்சியான பயிற்சிகளை வழங்க வேண்டும். ஆகஸ்ட் மாதம் முதல் பயிற்றுநர்களுக்குப் பயிற்சி அளித்து, ஆசிரியர் பயிற்சி வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார். இதன் போது கருத்துத் தெரிவித்த உயர்கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவாகே, "புதிய கல்வி மறுசீரமைப்புடன் தொழில்சார் கல்வி நிறுவனங்களை முன்னோக்கிக் கொண்டு செல்லத் தேவையான நடவடிக்கைகள் தற்போது முன்னெடுத்து வருகின்றோம். இதன் மூலம், தேர்ச்சியடையாத மாணவர்கள் தொழில்சார் கல்விக்குச் செல்வதற்குப் பதிலாக, அவர்களின் திறமை மற்றும் ஆற்றலின் அடிப்படையில் பாடசாலைக் கல்வியின் ஊடாகவே தொழில்சார் கல்வியை கௌரவமான முறையில் கற்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்படும்" என்றார். தென் மாகாண ஆளுநர் பந்துல ஹரிஷ்சந்திர, நிஹால் கலப்பத்தி உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ, தென் மாகாண பிரதம செயலாளர் சுமித் அலஹகோன், கல்வி அமைச்சு, பரீட்சைத் திணைக்களம், தேசிய கல்வி நிறுவனம், தென் மாகாண கல்வித் திணைக்களம் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள், வலயக் கல்விப் பணிப்பாளர்கள் மற்றும் தென் மாகாண கல்வி அதிகாரிகள் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/220412

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.