Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 12 JUL, 2025 | 01:04 PM தென்னிந்திய பிரபல பாடகர் ஶ்ரீநிவாஸ் பங்குபெறும் இசை நிகழ்ச்சி யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் சனிக்கிழமை (19) மாலை ஆறு மணிக்கு நடைபெறவுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிகளுக்காக பேருந்து ஒன்றை கொள்வனவு செய்வதற்கான நிதியை திரட்டும் முகமாக குறித்த இசைநிகழ்ச்சி யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ளது. யாழ் ஊடக அமையத்தில் அண்மையில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மகேந்திரன் சங்கீதன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட பீடாதிபதி இ.சுரேந்திரகுமாரன் ஆகியோர் இதனை தெரிவித்தனர். மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவர்கள் கற்றல் பயிற்சிகளை மேற்கொள்வதற்காக யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள போதனா வைத்தியசாலை மற்றும் ஆதார வைத்தியசாலைகளுக்கு செல்வது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் மருத்துவ பீட மாணவர்களின் போக்குவரத்து வசதிக்காக பேருந்து ஒன்று தேவை என்ற அடிப்படையில் அதனை கொள்வனவு செய்வதற்கு போதுமான நிதியை திரட்டுவதற்காக இசை நிகழ்ச்சி ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் அனுமதிச் சீட்டு, நன்கொடை மற்றும் அனுசரணை மூலமும் நிதி திரட்டப்படவுள்ளது. 25 ஆயிரம் தொடக்கம் 5 ஆயிரம் வரை பல்வேறு விலைகளில் இசை நிகழ்ச்சிக்கு அனுமதிச் சீட்டு விற்பனை செய்யப்படவுள்ளது. இந்த நிகழ்வு ஒரு களியாட்ட நிகழ்வாக அல்லாமல் மருத்துவ பீட மாணவர்களையும் மருத்துவ சமூகத்தையும் மேம்படுத்தும் ஒரு நிகழ்வாக இது காணப்படும். குறித்த இசை நிகழ்ச்சிக்கு முன் தினம் 18ம் திகதி மாலை ஆறு மணிக்கு பாடகர் ஶ்ரீநிவாசுடன் கலந்துரையாடலுக்கும் இராப்போசன விருந்து உண்பதற்கான சந்தர்ப்பத்தையும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட வளாகத்தில் ஒழுங்குப்படுத்தி இருக்கிறோம். குறித்த நிகழ்வில் பங்கேற்பதற்கும் 5 ஆயிரம் ரூபாய் அனுமதிச் சீட்டு விற்பனை செய்யப்படவுள்ளது. அனைத்திலும் கிடைக்கும் வருமானமும் பேருந்து வாங்குவதற்காகவே செலவிடப்படும்.சமூகத்தில் உள்ள அனைவரும் இந்த முயற்சிக்கு ஒத்துழைக்க வேண்டும் என வேண்டிக்கொள்கிறோம் - என்றனர். https://www.virakesari.lk/article/219797
  2. நெடுந்தீவுக்கு அருகில் கவிழ்ந்த படகு.. மயிரிழையில் உயிர் தப்பிய பயணிகள் நெடுந்தீவிற்கு அருகில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுப்பயணிகளை ஏற்றும் சிறிரக படகில் நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு கடலில் மூழ்கியுள்ளது. எனினும் அதில் பயணித்த 12 பயணிகள் உள்ளிட்ட 14 பேர் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டுள்ளனர். தென்னிலங்கையைச் சேர்ந்த 12 சுற்றுலா பயணிகள் நெடுந்தீவுக்கு சென்று குறிகாட்டுவான் திரும்பும் போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இடைக்கடலில் குறித்த சுற்றுலா படகில் இருந்து வெள்ளைக்கொடி காட்டுவதனை அவ்வழியே சென்ற நெடுந்தீவு தனியார் படகொன்றின் பணியாளர்கள் அவதானித்து விரைந்து செயற்பட்டு சேதமடைந்த படகில் இருந்து சகல சுற்றுலாப் பயணிகளையும் பத்திரமாக மீட்டுள்ளனர். எனினும் ஓரிரு நிமிடங்களில் குறித்த விபத்திற்குள்ளான படகு முழுமையாக கடலில் முழ்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னர் கடற்படையின் படகு குறித்த இடத்திற்கு விரைந்து மீட்கப்பட்ட பயணிகளை தங்களது படகில் ஏற்றிக்கொண்டு குறிகாட்டுவானை சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmd09uyjg012kqp4k8duubfkx
  3. குருக்கள்மடம் மனிதப் புதைகுழி வழக்கு : காணாமல்போனோர் தொடர்பான அலுவலகம், சட்டமா அதிபரை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு 12 JUL, 2025 | 10:09 AM கடந்த 1990.07.12 ஆந் திகதி புனித ஹஜ் கடமையை நிறைவு செய்து வீடு திரும்பிய யாத்திரிகர்கள் மற்றும் வியாபாரிகள் கல்முனை - மட்டக்களப்பு வீதியில் குருக்கள்மடம் எனும் இடத்தில் கடத்திக் காணாமலாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு புதைக்கப்படட்டமை தொடர்பில் பாதிக்கப்பட்ட அப்துல் மஜீத் அப்துல் ரவூப் என்பவரால் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டிருந்தது. அதனடிப்படையில் கடந்த 2014 ஆம் ஆண்டு களுவாஞ்சிக்குடி சுற்றுலா நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நீதிவான் குறித்த சந்தேகத்திற்கிடமான மனிதப்புதைகுழி அமைந்துள்ளதாக நியாயமாக சந்தேகிக்கப்படும் இடத்தைத் தோண்டுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை மேற்கொண்டு நீதிமன்றுக்கு அறிக்கையிடுமாறு உரிய அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கட்டளையிட்டார். அதனடிப்படையில் நில அளவைத் திணைக்களம், புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கங்கள் பணியகம், தொல்லியல் திணைக்களம், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம், தடயவியல் மருத்துவம் மற்றும் நஞ்சியல் நிறுவகம் என்பன தமது ஆய்வுகளை மேற்கொண்டு குறித்த சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி அமைந்துள்ளதாக நியாயமாகச் சந்தேகிக்கப்படும் இடத்தைத் தோண்டுவதற்கான பூர்வாங்க நடவடிக்கைகளை முடிவுறுத்தி மன்றுக்கு திட்ட வரைபையும் சமர்ப்பித்திருந்தனர். இந்நிலையில், மன்றுக்கு சமர்ப்பணங்களை மேற்கொண்டிருந்த களுவாஞ்சிக்குடி பொலிஸார் குறித்த விடயம் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று அதனை நீதிமன்றுக்கு அறிவிப்பதற்குத் தவணையொன்றை வழங்குமாறு மன்றுக்குத் தெரிவித்திருந்தனர். அதன் பிரகாரம், 04.10.2020 இல் சட்டமா அதிபரினால் களுவாஞ்சிக்குடி பொலிஸாருக்கு வழங்கப்பட்ட ஆலோசனைக்கு அமைவாக குறித்த வழக்கானது கிடப்பிலிடப்பட்டிருந்தது. இப்பின்னணியிலேயே இவ்வழக்கின் முறைப்பாட்டாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக 11.07.2025 ஆந் திகதியாகிய இன்று குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணியால் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட நகர்த்தல் பத்திரம் மூலம் குறித்த வழக்கானது திறந்த மன்றில் அழைக்கப்பட்டது. இதன்போது முறைப்பாட்டாளர் சார்பில் மன்றில் முன்னிலையாகி இருந்த சட்டத்தரணிகளின் சமர்ப்பணம் மற்றும் வழக்கேட்டை மிக நுணுக்கமாக ஆராய்ந்த நீதிமன்றமானது முறைப்பாட்டாளரின் முறைப்பாடானது நீதிமுறையாக அணுகப்படாமல் நிலுவையாக உள்ளமையானது நீதியின்பாற்பட்டதல்ல எனும் அடிப்படையில் குறித்த வழக்கை எதிர்வரும் 21.07.2025 க்கு தவணையிடுவதாகவும் குறித்த தினத்தில் மன்றில் முன்னிலையாகுமாறு சட்டமா அதிபருக்கும், காணாமல்போன ஆட்கள் பற்றிய அலுவலகத்துக்கும் களுவாஞ்சிக்குடி பொலிசாருக்கும் அறிவித்தல் அனுப்புமாறு கட்டளை ஆக்கியுள்ளார். குறித்த இவ்வழக்கில் முறைப்பாட்டாளர் சார்பில் குரல்கள் இயக்கத்தின் சட்டத்தரணிகளான முஹைமீன் காலித், முபாறக் முஅஸ்ஸம் ஆகியோர் மன்றில் பிரசன்னமாகியிருந்தனர். https://www.virakesari.lk/article/219782
  4. நாட்டைப் பிரிக்கும் இந்தியாவின் முயற்சி இன்றும் மாற்றமின்றி தொடர்வதாக பேராசிரியர் இந்துராகரே தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கம் இதற்காக பல்வேறு உத்திகளைத் கையாள்வதாக தேரர் குறிப்பிட்டுள்ளார். கொக்காவில் தாக்குதலின் 35வது நினைவேந்தல் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போதே பேராசிரியர் இந்துராகரே தம்மரதன தேரர் இவ்வாறு கூறியுள்ளார். "நாட்டைப் பிரிக்க வேண்டும் என்ற இந்தியாவின் நிலைப்பாடு ஒரு தசம புள்ளிக் கூட மாறவில்லை. இந்தியா இப்போது இலங்கைக்கு 300 பில்லியன் ரூபாய் கடன் நிவாரணம் வழங்கப் போகிறது. இலங்கை இந்தியாவிற்கு செலுத்த வேண்டிய 1.7 பில்லியன் டொலர்களை மீள அறவிடாமல் நமது பெரிய சகோதரர் கடன் நிவாரணம் வழங்கப் போகிறார்.... புலம்பெயர் மக்களைப் பயன்படுத்தியேனும், அப்பாவி தமிழ் மக்களைப் பயன்படுத்தியேனும், தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியேனும், நமது நாட்டை பொருளாதார ரீதியாகவோ, பிராந்திய ரீதியாகவோ அல்லது அரசியல் ரீதியாகவோ ஒரு நாடாக நிலைகுலைத்து இறுதியில் 29வது இந்திய மாநிலமாக உருவாக்கி, அதன் பின்னர் கிழக்கு மற்றும் வடக்கை உடைத்த உடனேயே 30வது இந்திய மாநிலமாக உருவாக்கும் திட்டமே இடம்பெறுகின்றது" என்றார். https://adaderanatamil.lk/news/cmd09a7rk012jqp4kv7liupqu
  5. 12 JUL, 2025 | 09:51 AM பாகிஸ்தான் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் திங்கட்கிழமை (21) இலங்கை மற்றும் இந்தோனேசியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக பாகிஸ்தானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இலங்கை விஜயத்திற்குப் பின் பீல்ட் மார்ஷல் சையத் அசிம் முனீர் இந்தோனேசியாவிற்கும் விஜயம் செய்யவுள்ளார். இரு நாடுகளின் வருகைகளின் போதும், இருதரப்பு நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் அதிகாரிகளுடன் கலந்துரையாடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219780
  6. வவுனியா சம்பவத்தில் காயமடைந்த 5 பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதி வவுனியா கூமாங்குளம் பகுதியில் நேற்று (11) இரவு பொலிஸாருக்கும் பிரதேச மக்களுக்கும் இடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவத்தின் போது பிரதேசத்தைச் சேர்ந்த சிலர் பொலிஸ் அதிகாரிகளைத் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உத்தரவைப் பின்பற்றாமல் வாகனத்தை செலுத்திய மோட்டார் சைக்கிள் ஓட்டுநரை கைது செய்ய முயன்றபோது ஏற்பட்ட சம்பவத்தில் அந்த நபர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. மதுபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிராம மக்கள் போராட்டம் நடத்தி இந்த சம்பவத்தை உருவாக்கி தங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். வவுனியா கூமாங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் விழுந்து கிடப்பதாக நேற்று (11) இரவு போக்குவரத்து பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகள் நால்வருக்கு நபரொருவர் தகவல் வழங்கியுள்ளார். அதன்படி, நான்கு பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்குச் சென்றபோது, அருகில் இருந்த ஒரு குழு அவர்களைத் தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது, பொலிஸார் அவரை கைது செய்ய சென்றபோது இடம்பெற்ற சம்பவமொன்றின் காரணமாகவே அந்த நபர் இறந்துவிட்டதாக பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குழு தெரிவித்துள்ளது. அருகிலுள்ள மதுபானக் கடையில் மது அருந்திக் கொண்டிருந்தவர்களை பொலிஸ் அதிகாரிகள் கைது செய்வதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மேலும், குறித்த நபர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிளின் சக்கரத்தில் பொலிஸார் ஒரு கட்டையை வீசியதன் காரணமாக, அவர் விழுந்து இறந்ததாகவும் கிராம மக்கள் கூறியுள்ளனர். இருப்பினும், அவ்வாறு நடந்திருந்தால், சக்கரம் சேதமடைந்திருக்கும், மேலும் விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிளின் சக்கரத்திற்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். பின்னர் நிலைமையைக் கட்டுப்படுத்த பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவும், பொலிஸ் விசேட அதிரடிப்படையும் வரவழைக்கப்பட்டன. பிரதேச மக்களால் தாக்கப்பட்ட 5 பொலிஸ் அதிகாரிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இறந்தவரின் சடலம் மீதான பிரேத பரிசோதனை நடவடிக்கைகள் இன்று (12) மேற்கொள்ளப்படவுள்ளது. https://adaderanatamil.lk/news/cmczxmhxe0125qp4k3rqodadb
  7. தொப்பி அணிந்து தாடி வளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அகிம்சைவாதியா! Jul 12, 2025 - 20:21 தொப்பி அணிந்து தாடிவளர்த்தால் பயங்கரவாதி, மொட்டை அடித்து தாடியை எடுத்தால் அவர்கள் அகிம்சைவாதி இதுவே இந்த நாட்டின் நிலைமையாக காணப்படுகின்றது என சமவுரிமை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் தென்தே ஞானானந்த தேரர் தெரிவித்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கோரியும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்குமாறு வலியுறுத்தியும் மட்டக்களப்பில் இன்று கையெழுத்து மற்றும் துண்டுப் பிரசுரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. சமவுரிமை இயக்கம் மற்றும் ஈரோஸ் ஜனநாயக முன்னணி ஆகியன இணைந்து மட்டக்களப்பில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு பிரதான பஸ் நிலையத்தில் சமவுரிமை இயக்கத்தின் மத்திய குழு உறுப்பினர் தென்தே ஞானானந்த தேரர் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஈரோஸ் ஜனநாயக முன்னணியின் தலைவர் இராஜேந்திரா, சமவுரிமை இயக்கத்தின் செயற்பாட்டாளர் எஸ்.கிருபாகரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். இதன்போது பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்கவும், வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கவும் அனைத்து இன மக்களின் உரிமையினை உறுதி செய்யும் சமவுரிமையுடைய அரசியலமைப்பினை உருவாக்கு ஆகிய கோரிக்கைகளை அடங்கியதாக இந்த கையெழுத்து போராட்டம் துண்டுப் பிரசுரப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தேரர், பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்க கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. வட கிழக்கில் இலக்குவைத்து முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகளே இந்த சட்டமாகும். இந்த சட்டத்தின் மூலம் இன்று வடகிழக்கில் தமிழ் மக்களுக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.இன்றுவரையில் அதில் எந்த மாற்றமும் இல்லாமல் முன்னெடுக்கப்படுகின்றன. பயங்கரவாத தடைச்சட்டத்தினை நீக்குமாறு கடந்த காலத்தில் பல வழிகளிலும் பல செயற்பாடுகளை முன்னெடுத்த அமைப்பு ஜேவிபியாகும். ஆனால் அந்த பயங்கரவாத சட்டத்தினை பயன்படுத்தி இன்று 12பேரை இந்த தேசிய மக்கள் சக்தி அரசு கைது செய்துள்ளது. இந்த அரசாங்கமும் பழைய அரசுகளின் அடி பாதையிலேயே செல்கின்றது. தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த மக்களுக்கு விரோதமாக செயற்படுகின்றது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னெடுத்த செயற்பாடுகளை கைவிடுமாறு அவர்களுக்கு வாக்களித்த மக்கள் சார்பில் கோருகின்றேன். கடந்த தேர்தல் காலத்தில் யாழில் வைத்து வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களிடம் காணாமல்ஆக்கப்பட்ட சம்பவத்திற்கு நீதியைப் பெற்றுத்தருவதற்கு நாங்களும் செயற்படுவோம் என்று கூறியவர்கள் இன்று வரையில் அதற்கான செயற்பாடுகளை முன்னெடுக்கவில்லை. பயங்கரவாத தடை பழைய சட்டத்தினை திருத்தப்போகின்றோம், நீக்கப்போகின்றோம் என்று கூறியவர்கள் இன்று புதிய பயங்கரவாத சட்டத்தினை கொண்டு வருகின்றார்கள். கடந்த காலத்தில் ரணில், கோத்தபாய ராஜபக்ஸவின் பாதையிலேயே இந்த அரசாங்கமும் செயற்படுகின்றது. இதன் காரணமாக மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிரான குரல்கொடுக்கவேண்டும். இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதற்காக பழைய பயங்கரவாத தடைச்சட்டத்தினை பயன்படுத்தி முஸ்லிம் இளைஞர் கைது செய்யப்பட்டார். நானும் இஸ்ரேலுக்கு எதிராக முகப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளோம். ஆனால் இந்த செயற்பாடு இந்த பயங்கரவாத தடைச்சட்டத்தின் மூலம் தமிழ்-முஸ்லிம் இளைஞர்களை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துவருகின்றது. மக்கள் இதற்காக இவர்களுக்கு வாக்களிக்கவில்லை. 30 வருட காலமாக வடகிழக்கில் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டும், அவர்களின் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைக்கு தீர்வு காணப்படவில்லை, காணாமல் ஆக்கப்பட்டவர்கள், காணி பிரச்சினையென பல்வேறு பிரச்சினைக்கு தீர்வு வழங்கப்படவில்லை. இவ்வாறான பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படவில்லையென்றால் கோத்தபாயவுக்கு நடைபெற்றதே உங்களுக்கும் நடக்கும்" என்றார். -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://adaderanatamil.lk/news/cmd0d5cn5012nqp4knsg67frg
  8. கபில்தேவை முந்திய பும்ரா: வழக்கமான பலவீனம் மீண்டும் வெளிப்பட்டதால் நெருக்கடியில் இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பும்ரா கட்டுரை தகவல் தினேஷ் குமார். எஸ் கிரிக்கெட் விமர்சகர் 12 ஜூலை 2025, 03:47 GMT பிரிட்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா - இங்கிலாந்து கிரிக்கெட் அணியினருக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான நேற்று நடந்தது என்ன? இந்த போட்டியில் வெற்றியை நோக்கிச் செல்கிறதா இந்திய அணி! ஒரு அலசல். கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ஜோப்ரா ஆர்ச்சர், தன்னுடைய மூன்றாவது பந்திலேயே அபாயகரமான பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை எடுத்து லார்ட்ஸ் மைதானத்தையே அதிரவைத்தார். டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்துவதை பார்ப்பதை விட மகிழ்ச்சியான விஷயம் வேறு ஒன்றுமில்லை. ஸ்விங் பந்துவீச்சுக்கு பெயர் போன பிரிட்டன் மண்ணில், ஆர்ச்சர் போன்ற முழுமையான வேகப்பந்து வீச்சாளரை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடுவது கண்கொள்ளா காட்சி. மெதுவான வேகம் கொண்ட மைதானம் என்பதால் லார்ட்ஸ் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டமும் மந்தமாக தொடங்கி மந்தமாகவே முடிந்தது. கீழ்வரிசை பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை எடுக்க முடியாமல் தடுமாறுவது இந்தியாவுக்கு ஒன்றும் புதிதல்ல. நல்ல டெக்னிக் தெரிந்த பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க வைக்கத் தெரிந்த இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசிக்கட்ட விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் தவிப்பது ஆச்சர்யம்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சதம் அடித்த ஜோ ரூட் கபில் தேவ் சாதனையை தகர்த்த பும்ரா ஸ்டோக்ஸ், ரூட், வோக்ஸ் என மூன்று முக்கிய விக்கெட்களை பும்ரா கைப்பற்றிய பிறகு, ஒருகட்டத்தில் 271 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இழந்து இக்கட்டான நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது. எட்டாவது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித்–கார்ஸ் இணைந்து 84 ரன்கள் சேர்த்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியை உண்டாக்கினர். சிராஜ் பந்துவீச்சில் ஜேமி ஸ்மித் கொடுத்த சுலபமான கேட்ச்சை ராகுல் தவறிவிட்டது ஆட்டத்தின் போக்கை மாற்றியது எனலாம். 387 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை இங்கிலாந்து பதிவு செய்ததற்கு ராகுல் செய்த தவறவிட்ட வாய்ப்புதான் முக்கிய காரணம். முதல் நாளில் புரூக் விக்கெட்டை கைப்பற்றிய பும்ரா, நேற்று ஆட்டம் தொடங்கிய மூன்றாவது ஓவரிலேயே ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பும்ரா பந்தில் ஜோ ரூட் கிளீன் போல்டான காட்சி பும்ராவின் வியூகங்கள், பொறி வைப்பு முறைகள் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் வார்னை நினைவுட்டுகின்றன. ஸ்டோக்ஸ் பவுண்டரி அடிப்பார் என்று தெரிந்தும் ஷார்ட் & வைடாக முந்தைய பந்தை வீசி செட் செய்த பும்ரா, அடுத்த பந்தை அரவுண்ட் த விக்கெட்டில் இருந்து உள்ளே கொண்டு வந்து இங்கிலாந்து கேப்டனின் ஆஃப் ஸ்டம்ப் தலையை பதம்பார்த்தார். அடுத்த ஓவரில் சதமடித்து பெரிய இன்னிங்ஸ் ஒன்றுக்கு தயாராகி கொண்டிருந்த ரூட்டின் மிடில் ஸ்டம்ப்பை தகர்த்தார். அடுத்த பந்திலேயே வோக்ஸ் விக்கெட்டையும் காவு வாங்கினார். 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா lord's honours board இல் தன் பெயரை பதிவுசெய்தார். அயல் மண்ணில் அதிகமுறை 5 அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகள் (Five wicket haul) கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக இருந்த கபில்தேவை(12) பும்ரா முந்தினார். பும்ரா இதுவரை 13 முறை வெளிநாட்டு மண்ணில் 5 அல்லது அதற்கும் மேல் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பும்ரா போட்டுக் கொடுத்த அடித்தளத்தை பிற வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பும்ராவின் வியூகங்கள், பொறி வைப்பு முறைகள் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் வார்னை நினைவுட்டுகின்றன கருண் நாயர் - ராகுல் அமைத்துக் கொடுத்த நல்ல 'ஓப்பனிங்' முதல் நாள் போலவே ஆகாஷ் தீப்பின் லைன் & லென்த் நேற்றும் சரியாக இல்லை. சிராஜ் ஒருபக்கம் கட்டுக்கோப்பாக பந்து வீசினாலும் அவருக்கு நேற்றும் அதிர்ஷ்டம் இல்லை என்றே சொல்ல வேண்டும். கடைசியாக ஜேமி ஸ்மித்–கார்ஸ் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியது ஆறுதலாக அமைந்தது. இந்திய அணி இங்கிலாந்து இன்னிங்ஸில் ஒட்டுமொத்தமாக 5 பந்துகளை பயன்படுத்தியது. Bazball யுகத்தில் Dukes பந்தின் தரம் குறித்து விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், புதிய பந்துக்காக அம்பயர்களிடம் கேப்டன் கில் போராடியது கவனம் பெற்றுள்ளது. 10 ஓவர்களில் பஞ்சு போல மாறிவிடும் Dukes பந்துகளில் Swing & Seam செய்து விக்கெட் வீழ்த்துவது சாதாரண விஷயமல்ல. நாசர் ஹுசைன், ஹார்மிசன் போன்றவர்கள் அடிக்கடி பந்தை மாற்றும் இந்திய அணியின் அணுகுமுறையை விமர்சித்த நிலையில், இங்கிலாந்து ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட், Dukes பந்துகளின் தரம் குறித்து வெளிப்படையாக விமர்சித்திருப்பது பாராட்டுக்குரியது. கருண் நாயர், தனது மறுவருகையில் நம்பிக்கை அளிக்கும்விதமாக விளையாடினாலும் பெரிய இன்னிங்ஸ் எதையும் பதிவுசெய்யவில்லை. ஆஃப் ஸ்டம்ப் லைனில் வெளியே செல்லும் பந்துகளுக்கு அவருக்கு இருக்கும் பலவீனம் நேற்றும் வெளிப்பட்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆர்ச்சரின் பந்தை எதிர்கொள்ளும் கருண் நாயர் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த பிறகு மூன்றாவது விக்கெட்டுக்கு ராகுலுடன் இணைந்த கருண், பிரமாதமான டைமிங்குடன் (Timing) விளையாடி தனது அனுபவத்தையும் திறமையையும் வெளிப்படுத்தினார். அலாதியான கால்பாடம் (Footwork) இல்லையென்ற போதும், எடையை முன்னும் பின்னும் இலகுவாக மடைமாற்றி சில அழகான டிரைவ்களை கவர், ஸ்கொயர் திசைகளில் அடித்தார். கர்நாடக மண்ணின் மைந்தர்களான ராகுல், கருண் இருவரின் நேர்த்தியான ஆட்டமும் அழகிய லார்ட்ஸ் மைதானத்தில் கண்களுக்கு விருந்தளித்தது. முதலிரு டெஸ்ட்களை போலவே நல்லபடியாக செட் ஆனபிறகு, விக்கெட்டை தாரைவார்த்தது அவருக்கு நிச்சயம் வருத்தம் ஏற்படுத்திருக்கும். சாதனை படைத்த ரூட் கருண் நாயர் கேட்ச்சின் மூலம், டெஸ்டில் அதிக கேட்ச்கள் பிடித்தவர் (210) என்ற சாதனையை ரூட் படைத்தார். உலகின் தலைசிறந்த ஸ்லிப் பீல்டர்கள் அனைவரும் Ball sense கொண்டவர்களாக இருப்பார்கள். கேட்ச்சிங்கின் போது மட்டுமில்லாமல் அவர்களுடைய பேட்டிங்கிலும் அந்த ball sense எதிரொலிக்கும். மார்க் வாஹ், டிராவிட், ஜெயவர்த்தனே என நிறைய பேரை உதாரணமாக சொல்லலாம். இந்திய அணியினர் தொடர்ச்சியாக ஸ்லிப் பிராந்தியத்தில் கேட்ச்களை கோட்டைவிடும் நிலையில், எப்படி ஸ்லிப்பில் செயல்பட வேண்டுமென ரூட் பாடமெடுத்தது போல அந்தக் கேட்ச் அமைந்தது. ஸ்டோக்ஸ் முழு உடற்தகுதியுடன் திரும்பி வந்து, முக்கிய விக்கெட்டான கருண் நாயர் விக்கெட்டை எடுத்துள்ளது இங்கிலாந்துக்கு சாதகமான விஷயம். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்காத வோக்ஸ், தன்னுடைய டிரேட் மார்க் wobble seam பந்தின் மூலம் கில் விக்கெட்டை கைப்பற்றி, கடைசி நேரத்தில் ஆட்டத்தை இங்கிலாந்தின் பக்கம் திருப்பியுள்ளார். உள்ளே வரும் பந்துகளுக்கு கவனத்தை குவித்த கில், பிட்ச் ஆகி எந்தப் பக்கம் செல்லும் என்று பந்துவீச்சாளருக்கு கூட தெரியாத, wobble seam பந்தில் விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் எட்ஜ் கொடுத்து ஆட்டமிழந்தார். கடந்த 5 ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களின் பேட்டிங் சராசரி அடிவாங்கியதில் wobble seam பாணி பந்துவீச்சுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. இந்தியாவின் சிராஜ் இதே பாணியில் பந்துவீசியும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாததற்கு ஆடுகளத்தின் மெதுவான தன்மையும் ஒரு காரணம். மெதுவான வேகம் கொண்ட மைதானத்தில் வோக்ஸ் போல வேகத்தை குறைத்து வீசுவதும் பலனளிக்கும். இந்த தொடரின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது ராகுல்தான். கில் அளவுக்கு ரன்கள் குவிக்கவில்லை என்றாலும் தொழில்நுட்ப ரீதியாக ராகுலின் பேட்டிங் உச்சத்தில் இருக்கிறது. கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் ராகுல் ரோஹித்துடன் சேர்ந்து பிரமாதமான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்ததை மறக்க முடியாது. 145 கிமீ வேகத்துக்கு மேல் வீசப்படும் பந்துகளையும் முன்னங்காலுக்கு சென்று ராகுல் நேர்த்தியாக தற்காப்பு ஆட்டம் விளையாடுகிறார். இந்திய அணி கில் விக்கெட்டை விரைவாக இழந்த நிலையில், இன்று பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டிய பொறுப்பு ராகுலுக்கு உள்ளது. முதல் நாளில் விரலில் காயமடைந்த பந்த், கடுமையான சிரமத்துடன் பேட்டிங் செய்து வருகிறார். இந்திய அணி 242 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், ராகுலுடன் சேர்ந்து மூன்றாம் நாளில் பந்த் எப்படி இன்னிங்ஸை தொடங்குகிறார் என்பது ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ராகுலுடன் சேர்ந்து மூன்றாம் நாளில் பந்த் எப்படி இன்னிங்ஸை தொடங்குகிறார் என்பது ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும். விரலில் காயமடைந்துள்ள பந்த்துக்கு சவால் அளிக்கும் விதமாக இங்கிலாந்து அணி ஆர்ச்சரை கொண்டு வந்து தாக்குதல் பாணி ஆட்டம் ஆடாதது ஏன் என புரியவில்லை. பந்துவீச்சில் 50-60 ரன்களை கூடுதலாக இந்தியா விட்டுக்கொடுத்த நிலையில், மூன்றாம் நாள் முழுவதும் பேட் செய்து ரன் சேர்க்க வேண்டிய நெருக்கடியில் இந்தியா உள்ளது. முதல் நாளில் இரு அணிகளுக்கும் சம பலத்தில் முடிந்த ஆட்டம், இரண்டாம் நாளில் இங்கிலாந்தின் கைகளுக்கு சென்றுள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cwyexdpn0jvo
  9. மன்னார் - நானாட்டான் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து Published By: VISHNU 11 JUL, 2025 | 11:44 PM மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் வியாழக்கிழமை (10) மாலை இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த சிறுவனின் உடலை குறித்த விபத்தில் படுகாயம் அடைந்து மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் குறித்த சிறுவனின் தந்தை இறுதியாக பார்க்கும் புகைப்படம் வெளியாகி பலரையும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. குறித்த சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில், மன்னார்-நானாட்டான் பிரதான வீதி, நறுவிலிக்குளம் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் வியாழக்கிழமை (10) மாலை நானாட்டான் நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது நானாட்டான் பிரதான வீதியூடாக மன்னார் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பட்டா ரக வாகனம் மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தை, தாய், மகன் மற்றும் மகள் ஆகிய நான்கு பேரும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டனர். எனினும் பலத்த காயங்களுக்கு உள்ளான 4 வயதுடைய சிறுவன் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். மேலும் பலத்த காயமடைந்த தந்தை, தாய் மற்றும் 12 வயதுடைய சிறுமி ஆகிய மூவரும் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் குறித்த 12 வயதுடைய சிறுமி மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த நிலையில் குறித்த 4 வயதுடைய சிறுவன் உயிரிழந்த சம்பவம் தந்தைக்கு தெரியாத நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(11) மகன் இறந்த செய்தியை தந்தையிடம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பலத்த காயங்களுக்கு உள்ளாகி சிகிச்சை பெற்று வரும் தந்தை எழுந்து நடக்க முடியாத நிலையில் தனது நான்கு வயதுடைய மகனுக்கு வைத்தியசாலையில் வைத்து இறுதி அஞ்சலி செலுத்தியுள்ளார். குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. உயிரிழந்த சிறுவனின் சடலம் இறுதிக் கிரியைகளுக்காக உறவினர்களிடம் கையளிக்கும் முன்னர் வைத்திய சாலையில் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் தந்தைக்கு காண்பிக்கப்பட்ட நிலையில், தனது மகனின் உடலை தடவி தந்தை அஞ்சலி செலுத்தினார். குறித்த புகைப்படம் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. https://www.virakesari.lk/article/219774
  10. விமானிகளின் உரையாடல் ஏர் இந்தியா விமான விபத்தின் மர்மத்தை இன்னும் அதிகரிப்பது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் சௌதிக் பிஸ்வாஸ் பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஜூன் மாதம் ஏற்பட்ட ஏர் இந்தியா விமான விபத்தில் 260 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்கான முதல் கட்ட விசாரணையில் புலனாய்வாளர்கள் மிகவும் அதிர்ச்சி அளிக்கும் ஒரு தகவலை வெளியிட்டுள்ளனர். விமானம் புறப்பட்ட சில வினாடிகளில், 12 ஆண்டு வயதுடைய போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் இரண்டு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் திடீரென "கட்-ஆஃப்" நிலைக்கு மாறியதால், என்ஜின்களுக்கு எரிபொருள் செல்வது நின்று, முழுமையாக செயலிழந்தது. "கட்-ஆஃப்" செய்வது பொதுவாக விமானம் தரையிறங்கிய பிறகு மட்டுமே நடக்கும் செயல். காக்பிட் குரல் பதிவில், ஒரு விமானி மற்றவரிடம், "நீ ஏன் கட்-ஆஃப் செய்தாய்?" என்று கேட்க, அதற்கு அவர், "நான் செய்யவில்லை," என்று பதிலளிக்கிறார். இந்த குரல் பதிவு யார் கேள்வி கேட்டது, யார் பதிலளித்தது என்பதை தெளிவுபடுத்தவில்லை. விமானம் புறப்படும் நேரத்தில், துணை விமானி விமானத்தை இயக்க, கேப்டன் கண்காணித்துக் கொண்டிருந்தார். எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள் மீண்டும் விமானத்தின் இயல்பான நிலைக்குத் திரும்பியதால், தானாகவே என்ஜின் மீண்டும் செயல்பட முயற்சி செய்தது. ஆனால், விபத்து நிகழ்ந்தபோது ஒரு எஞ்சின் உந்துதலை மீட்டெடுத்து வந்தது, மற்றொரு எஞ்சின் இயங்க தொடங்கியிருந்தாலும், அதன் முழு சக்தியையும் மீட்டெடுக்கவில்லை. ஏர் இந்தியா விமானம் 171, புறப்பட்ட 40 வினாடிகளுக்குள் விழுந்து விபத்துக்குள்ளானது. இது இந்தியாவில் ஏற்பட்ட மிகவும் குழப்பமான விமான விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. விமானம் புறப்பட்டவுடன் என்ன தவறு நடந்தது என்பதை அறிய, புலனாய்வாளர்கள் இடிபாடுகளையும் காக்பிட் பதிவுகளையும் ஆய்வு செய்தனர். ஃபிளைட்ராடார்24 தரவுகளின்படி, தெளிவான வானிலையில் விமானம் 625 அடி உயரத்தை எட்டியது, ஆனால் 50 வினாடிகளில் தொடர்பை இழந்தது. சனிக்கிழமை வெளியிடப்பட்டுள்ள 15 பக்க அறிக்கை இந்த விபத்து குறித்த ஆரம்பத் தகவல்களை வழங்குகிறது. இந்திய அதிகாரிகள் தலைமையில், போயிங், ஜிஇ (General Electric), ஏர் இந்தியா, இந்திய ஒழுங்குமுறை அமைப்புகள், அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் மற்றும் பிரிட்டன் நிபுணர்களுடன் இணைந்து நடத்தப்பட்ட விசாரணை, இந்த விமான விபத்து குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்புகிறது. புலனாய்வாளர்களின் கூற்றுப்படி இந்த லிவர் லாக் எரிபொருள் சுவிட்சுகள் தவறுதலாக இயக்கப்படுவதைத் தவிர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. சுவிட்சுகளின் இயக்கத்தை மாற்றுவதற்கு முன்பாக இதன் பாதுகாப்பு லிவரை மேல் நோக்கி இயக்கி அன்லாக் செய்ய வேண்டும். இந்த பாதுகாப்பு அம்சங்கள் 1950 முதல் பயன்பாட்டில் உள்ளன. துல்லியமான தரநிலைகளைக் கொண்ட இந்த சுவிட்சுகள் நம்பகத்தன்மை வாய்ந்தவை. பாதுகாப்பு காப்பான்கள் (Protective guard brackets) இந்த சுவிட்சுகள் தவறுதலாக இயக்கப்படுவதிலிருந்து பாதுகாப்பு அளிக்கின்றன. "ஒரு கையால் ஒரே இயக்கத்தில் இரண்டு சுவிட்சுகளையும் இழுப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. எனவே, இது தற்செயலாக நடந்திருக்க வாய்ப்பில்லை," என்று பெயர் வெளியிட விரும்பாத கனடாவைச் சேர்ந்த விமான விபத்து விசாரணையாளர் பிபிசியிடம் தெரிவித்தார். இதனால் தான் ஏர் இந்தியா விபத்து மிகவும் தனித்துவமானதாகவும், மர்மமானதாகவும் உள்ளது. விமானிகளில் ஒருவர், வேண்டுமென்றோ அல்லது தவறுதலாகவோ, எரிபொருள் சுவிட்சுகளை அணைத்திருந்தால், "ஏன் சுவிட்சுகளை ஆஃப் செய்ய வேண்டும் என்ற கேள்வி எழுகிறது," என்று ஓஹியோ ஸ்டேட் பல்கலைக்கழகத்தின் முன்னாள் விமான விபத்து ஆய்வாளரும், விமான நிபுணருமான ஷான் ப்ருச்னிக்கி பிபிசியிடம் கூறுகிறார். "இது வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது குழப்பத்தால் ஏற்பட்டதா? ஆனால் விமானிகள் அசாதாரணமான எதையும் தெரிவிக்கவில்லை என்பதால் அதற்கு சாத்தியமில்லை என்று தோன்றுகிறது. காக்பிட் அவசர சூழல்களில், விமானிகள் தவறான சுவிட்சுகளை அழுத்துவது அல்லது தவறானவற்றை தேர்வு செய்வது போன்ற சம்பவங்கள் நடக்கலாம். ஆனால், இங்கு அப்படியான எந்த அறிகுறியும் இல்லை. எரிபொருள் சுவிட்சுகள் தவறுதலாக அணைக்கப்பட்டதாகவும் எந்த விவாதமும் இல்லை. இத்தகைய பிழை, ஏதேனும் வெளிப்படையான பிரச்னை இல்லாமல் பொதுவாக நடக்காது," என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆமதாபாத்தில் நெரிசலான பகுதியில் ஏர் இந்தியா விமானம் 171 மோதியது. "விமானம் பறந்த சில வினாடிகளில் எரிபொருள் சுவிட்சை ஒரு விமானி அணைத்துவிட்டார் என்பது மிகவும் கவலையளிக்கிறது" என்கிறார் அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்தின் முன்னாள் நிர்வாக இயக்குநரான பீட்டர் கோயல்ஸ். "காக்பிட் குரல் பதிவில் இதுவரை வெளியானவற்றை விட அதிக தகவல்கள் இருக்கலாம். 'ஏன் சுவிட்சுகளை அணைத்தாய்?' என்ற ஒற்றை வார்த்தை மட்டும் போதாது," என்று கோயல்ஸ் கூறினார். "காக்பிட்டில் யாரோ ஒருவர் எரிபொருள் வால்வுகளை மூடியிருக்கிறார் என்பதை புதிய தகவல்களின்படி அறியமுடிகிறது. ஆனால், யார் மூடியது? ஏன் மூடினார்கள்? என்பதுதான் கேள்வி. இரண்டு சுவிட்சுகளும் அணைக்கப்பட்டு, சில வினாடிகளில் மீண்டும் இயக்கப்பட்டன. எஞ்சினை மீண்டும் இயக்க முயன்றது விமானத்தை இயக்கிய விமானியா அல்லது கண்காணித்த விமானியா? என்பது குறித்த விவரங்களை குரல் பதிவு வெளிப்படுத்தும்" என்றும் அவர் குறிப்பிட்டார். ஏர் இந்தியா விமானம் 171 விபத்து குறித்த விசாரணையில், காக்பிட் குரல் பதிவு முக்கிய திறவுகோலாக உள்ளதாக புலனாய்வாளர்கள் கருதுகின்றனர். இந்த பதிவில் விமானிகளின் மைக்குகள், ரேடியோ அழைப்புகள் மற்றும் காக்பிட் சுற்றுப்புற ஒலிகள் உள்ளன, இவை விபத்தைச் சுற்றியுள்ள மர்மத்தை அவிழ்க்க உதவும். "அவர்கள் குரல்களை இன்னும் அடையாளம் காணவில்லை, இது மிகவும் முக்கியமானது. பொதுவாக, குரல் பதிவை ஆய்வு செய்யும்போது, விமானிகளை நன்கு அறிந்தவர்கள் உடன் இருந்து அதில் கேட்கும் குரல்களை,விமானிகளின் குரல்களோடு பொருத்துவார்கள். ஆனால், இப்போது வரை, எந்த விமானி எரிபொருள் சுவிட்சுகளை அணைத்து மீண்டும் இயக்கினார் என்பது தெரியவில்லை," என்று பீட்டர் கோயல்ஸ் கூறினார். தெளிவான குரல் அடையாளம், பேசியவர்களின் பெயர்களுடன் முழு காக்பிட் உரையாடல் பதிவு, மற்றும் விமானம் வாயிலில் இருந்து புறப்பட்டு விபத்துக்குள்ளாகும் வரையிலான அனைத்து தகவல்களையும் முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என்று புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் பரிந்துரைத்தபடி, காக்பிட் வீடியோ பதிவு கருவிகள் தேவை என்று அவர்கள் வலியுறுத்துகின்றனர். காக்பிட்டில் உள்ள விமானிகளின் செயல்பாடுகளை, அவர்களின் தோள்பட்டைக்கு மேலிருந்து பதிவு செய்யப்பட்ட காட்சிகள், கட்-ஆஃப் சுவிட்சை யார் இயக்கினார் என்பதை காட்டியிருக்கக்கூடும். விமானம் 171-ஐ பறக்கத் தொடங்குவதற்கு முன், விமானிகளும் பணியாளர்களும் சுவாச பரிசோதனையில் (மது அருந்தியுள்ளார்களா என்ற சோதனை) தேர்ச்சி பெற்று, பறக்கத் தகுதியானவர்களாக இருந்ததாக அறிக்கை கூறுகிறது. மும்பையைச் சேர்ந்த விமானிகள், விமானம் புறப்படுவதற்கு முந்தைய நாள் ஆமதாபாத்துக்கு வந்து, போதுமான ஓய்வு எடுத்திருந்தனர். ஆனால், அறிக்கையில் ஒரு முக்கிய விவரத்தையும் புலனாய்வாளர்கள் ஆராய்கின்றனர். 2018 டிசம்பரில், அமெரிக்க பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் (FAA) ஒரு சிறப்பு விமானத் தகுதி அறிக்கை (SAIB) வெளியிட்டது. இதில், சில போயிங் 737 விமானங்களில் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளில், லாக் செய்யும் அம்சம் இல்லாமல் இருப்பதாக குறிப்பிடப்பட்டது. ஆனால் இந்தப் பிரச்னை உள்ளது எனக் குறிப்பிடப்பட்டாலும், இது பாதுகாப்பற்ற நிலையாகக் கருதப்படவில்லை. போயிங் 787-8 விமானங்களிலும் இதே சுவிட்ச் வடிவமைப்பு பயன்படுத்தப்படுகிறது, இதில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியாவின் VT-ANB விமானமும் அடங்கும். SAIB-ன் அறிக்கை ஒரு ஆலோசனை மட்டுமே என்பதால், ஏர் இந்தியா பரிந்துரைக்கப்பட்ட ஆய்வுகளை மேற்கொள்ளவில்லை. பட மூலாதாரம்,BLOOMBERG VIA GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவில் நடந்த விமான கண்காட்சியில் ஏர் இந்தியாவால் இயக்கப்படும் போயிங் 787 ட்ரீம்லைனர் விமானத்தின் காக்பிட். எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளில் ஏதேனும் சிக்கல் உள்ளதா என்று யோசிப்பதாகக் கூறுகிறார் ப்ருச்னிக்கி . இதுகுறித்து பேசிய அவர், "அறிக்கையில் உள்ள இந்த பகுதி சரியாக என்ன சொல்கிறது? ஒரு முறை சுவிட்சை அணைத்தால், இயந்திரம் அணைந்து எரிபொருள் விநியோகம் தடைபடுமா? லாக் அம்சம் துண்டிக்கப்படும்போது, என்ன நடக்கும்? சுவிட்ச் தானாகவே 'ஆஃப்' ஆகி இயந்திரத்தை நிறுத்த முடியுமா? இது உண்மையாக இருந்தால், இது மிகவும் தீவிரமான பிரச்னை. இல்லையெனில், இதை தெளிவாக விளக்க வேண்டும்"என்கிறார். ஆனால், மற்றவர்கள் இது ஒரு இது முக்கிய பிரச்னையாக இருக்க வாய்ப்பில்லை என்று கருதுகின்றனர். "இது FAA வெளியிட்ட ஒரு சிறிய அறிவிப்பு என்று தோன்றுகிறது, இதைப் பற்றி நான் கேள்விப்படவில்லை. விமானிகள், பொதுவாக விரைவாக புகார் கூறுபவர்கள், இந்த சுவிட்சுகள் குறித்து எந்த புகாரும் தெரிவிக்கவில்லை. இது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதால் ஆராய்வது நல்லதுதான் , ஆனால் இது ஒரு கவனச்சிதறலாகவும் இருக்கலாம்," என்று கோயல்ஸ் கூறுகிறார். இந்தியாவின் விமான விபத்து புலனாய்வுப் பணியகத்தின் (AAIB) முன்னாள் புலனாய்வாளர் கேப்டன் கிஷோர் சிந்தா, விமானத்தின் மின்னணு கட்டுப்பாட்டு அலகில் ஏற்பட்ட (Electronic Control Unit) பிரச்னையால் எரிபொருள் சுவிட்சுகள் செயலிழந்திருக்கலாமா என்ற கோணத்தில் சிந்திக்கிறார் . "விமானியின் ஈடுபாடு இல்லாமல், மின்னணு கட்டுப்பாட்டு அலகு மூலம் எரிபொருள் கட்-ஆஃப் சுவிட்சுகளை மின்னணு முறையில் இயக்க முடியுமா? அப்படி மின்னணு முறையில் சுவிட்சுகள் செயலிழந்தால், அது மிகவும் கவலைக்குரியது," என்று அவர் பிபிசியிடம் கூறினார். அறிக்கையின்படி, எரிபொருள் நிரப்பும் டேங்கில் இருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகள் "திருப்திகரமானவை" என்று கண்டறியப்பட்டன. முன்னதாக, இரட்டை இயந்திர செயலிழப்புக்கு எரிபொருள் மாசுபாடு காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதியிருந்தனர். மேலும், முழுமையான விசாரணை நிலுவையில் உள்ளதால், இயந்திரக் கோளாறு தற்போது நிராகரிக்கப்பட்டுள்ளது. "இப்போதெல்லாம், நான் 787 விமானத்தில் பறக்கும்போது, தரையிறங்கும் கியர் பின்வாங்கும் செயல்முறையை உன்னிப்பாகக் கவனிக்கிறேன். கியர் கைப்பிடியை இழுக்கும்போது, நாங்கள் ஏறக்குறைய 200 அடி (60.9 மீட்டர்) உயரத்தில் இருப்போம். முழு கியர் பின்வாங்கும் செயல்முறை சுமார் 400 அடி உயரத்தில், மொத்தம் எட்டு வினாடிகளில் முடிவடைகிறது. இது விமானத்தின் உயர் அழுத்த ஹைட்ராலிக் அமைப்பு காரணமாக சாத்தியமாகிறது."என்கிறார் ப்ருச்னிக்கி . விமானத்தை இயக்கியவர் சிந்திக்க நேரமே இல்லாமல் இருந்திருக்கலாம் என அந்த விமானி கருதுகிறார். "இரண்டு என்ஜின்களும் செயலிழந்து, விமானம் கீழே செல்லத் தொடங்கும்போது, நீங்கள் வெறுமனே அதிர்ச்சியடையவில்லை, மரத்துப் போய்விடுவீர்கள். அந்த நொடியில், தரையிறங்கும் கருவி உங்கள் கவனத்தில் இருப்பதில்லை. உங்கள் மனம் ஒரே விஷயத்தில் நிலைத்து இருக்கும். அதாவது, இந்த விமானத்தை எங்கு பாதுகாப்பாக இறக்க முடியும்? என விமானப் பாதையின் மீது தான் உங்களது கவனம் இருக்கும். ஆனால், இந்த விபத்தில், அதற்கு போதுமான உயரம் இல்லை," என்றும் அவர் விளக்கினார். விமானக் குழு நிலைமையை சரி செய்ய முயன்றது, ஆனால் எல்லாம் மிக விரைவாக நடந்துவிட்டது என்று கூறுகின்றனர் புலனாய்வாளர்கள் . "என்ஜின்கள் அணைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் இயக்கப்பட்டன. இயந்திரங்கள் உந்துதலை இழப்பதை விமானிகள் உணர்ந்தனர். முதலில் இடது என்ஜினை மீண்டும் ஆன் செய்து, பின்னர் வலது என்ஜினிலும் முயன்றிருக்கலாம்," என்று ஷான் ப்ருச்னிக்கி கூறினார். "ஆனால், வலது என்ஜின் மீண்டும் இயங்க போதுமான நேரம் கிடைக்கவில்லை, உந்துதலும் போதுமானதாக இல்லை. இறுதியில் இரண்டு என்ஜின்களும் "இயங்கும் நிலைக்கு" மாற்றப்பட்டன. ஆனால், இடது என்ஜின் முதலில் அணைக்கப்பட்டு, வலது என்ஜின் மீட்கப்படுவதற்கு மிகவும் தாமதமாகிவிட்டதால், சூழலை சரி செய்யும் முயற்சி பயனளிக்கவில்லை." என்பது ப்ருச்னிக்கியின் கூற்றாக உள்ளது. - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy0w1rvzz11o
  11. 12 JUL, 2025 | 05:40 PM நெடுந்தீவைச் சேர்ந்த தனியார் ஒருவருக்கு சொந்தமான சுற்றுப்பயணிகளை ஏற்றும் சிறிரக படகில் நெடுந்தீவுக்கு சென்று திரும்பும் போது படகில் ஏற்பட்ட கோளாறு காரணமாக படகு மூழ்கியுள்ளதுடன் சுற்றுலாப் பயணிகள் 12 பேரும் 02 பணியாளர்களும் என 14 பேர் உயிராபத்து இன்றி மீட்கப்பட்டுள்ளனர். இது தொடர்பில் தெரியவருகையில், தென்னிலங்கையைச் சேர்ந்த 12 சுற்றுலாப் பயணிகளுடன் நெடுந்தீவுக்கு சென்று குறிகாட்டுவான் திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இடைக்கடலில் குறித்த சுற்றுலா படகில் இருந்து வெள்ளைக்கொடி காட்டுவதனை அவ்வழியே சென்ற நெடுந்தீவு தனியார் படகான சபரிஷ் படகு பணியாளர்கள் அவதானித்த விரைந்து செயற்பட்டு சேசமடைந்த படகில் இருந்து சகல சுற்றுலாப் பயணிகளையும் பத்திரமாக தமது படகிற்கு மாற்றி ஓரிரு நிமிடங்களில் குறித்த சுற்றுலாவிகள் படகு முழுமையாக நீரில் முழ்கிவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன் பின்னர் கடற்படையினரது படகு குறித்த இடத்திற்கு வந்து மிட்கப்பட்ட பயணிகளை தங்களது படகில் ஏற்றிக்கொண்டு குறிகாட்டுவானை சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது. https://www.virakesari.lk/article/219822
  12. 11 JUL, 2025 | 07:07 PM மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள விடத்தல் தீவு கிராமத்தின் பன்னாட்டு மாநாடு வெள்ளிக்கிழமை (11) காலை 8.30 மணியளவில் மன்னார் நகர மண்டபத்தில் ஆரம்பமானது. குறித்த மாநாடு விடத்தல் தீவு கிராமத்தைச் சேர்ந்த துறைசார் வல்லுனர்கள். கல்விமான்கள் மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக பணியாற்றும் நபர்கள் ஒன்று சேரும் ஒரு அரிய சந்திப்பாக குறித்த நிகழ்வு வெள்ளிக்கிழமை (11) காலை ஆரம்பமானது. குறித்த நிகழ்வு 2 வது நாளாக சனிக்கிழமையும் (12) இடம்பெற உள்ளது. மேலும் இம் மாநாடு பொருளாதாரம் ,கல்வி, சுற்றுச்சூழல், சமயம், கலாச்சாரம், பண்பாடு மற்றும் விளையாட்டு போன்ற பல்வேறு துறைகளில் நடைபெறும் நிகழ்வுகளை ஆய்வு செய்து ஆவணப் படுத்துவதோடு இவ்விடயங்களில் பரஸ்பர புரிதலை ஏற்படுத்தி மக்களின் வாழ்வியலை மேம்படுத்தும் ஒரு முக்கிய அமர்வாக இடம்பெற்று வருகின்றது. மன்னாரில் அமைந்துள்ள விடத்தல்தீவு கிராமத்தின் சிறப்பும், பண்பாடும் மற்றும் கலை கலாசார பாரம்பரியமும் இம்மாநாட்டின் 2ஆம் நாள் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறவுள்ளது. போரின் அனர்த்தங்களினால் உருக்குலைந்து போன விடத்தல் தீவு போன்ற கிராமங்களின் பொருளாதார, சமூக கலாசார அம்சங்களை மீள்கட்டியெழுப்புவதற்கும் ஆவணப்படுத்துவதற்குமான இம் மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை (11) காலை 8.30 மணியளவில் முதல் நாள் நிகழ்வுகள் ஆரம்பமானது. இதன் போது விருந்தினர்கள் மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து மாலை அணிவிக்கப் பட்டு வாத்திய இசையுடன் நகரசபை மண்டபம் நோக்கி அழைத்து வரப்பட்டனர். குறித்த முதல் நாள் நிகழ்வில் விருந்தினர்களாக வவுனியா பல்கலைக்கழக உப வேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் அருளம்பலம் அற்புதராஜா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், உள்ளடங்களாக அழைக்கப்பட்ட விருந்தினர்கள் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/219757
  13. 11 JUL, 2025 | 04:28 PM மக்கள் சுதேச மருத்துவத்தை ஆர்வத்துடன் தேடிச் செல்லும் போக்கு அதிகரித்து வருகின்றது. ஏனைய மருத்துவங்களால் பக்க விளைவுகள் ஏற்படுகின்றன என அவர்கள் நம்புவதன் காரணமாக சுதேச மருத்துவத்தை தேடிச் செல்கின்றனர். இந்த மாற்றத்தை சரிவரப் பயன்படுத்திக் கொள்ளவேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். கிளிநொச்சி மத்திய சித்த மருந்தகத்தின் புதிய கட்டடம் வடக்கு மாகாண ஆளுநரால் வெள்ளிக்கிழமை (11) கிளிநொச்சி மத்திய பேருந்து நிலையத்துக்கு அருகில் திறந்து வைக்கப்பட்டது. வடக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்களத்தின் ஆணையாளர் வைத்தியர் தி.சர்வானந்தன் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், பிரதம விருந்தினராக ஆளுநர் கலந்துகொண்டதுடன், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலாளர் தனுஜா முருகேசன், கௌரவ விருந்தினராக வடக்கு மாகாண சுகாதார சுதேச மருத்துவ, சிறுவர் நன்னடத்தை பராமரிப்பு சேவைகள் அமைச்சின் செயலர் ப.ஜெயராணி, கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆளுநர் தனது உரையில், திணைக்களங்களுக்கு சிறப்பான பௌதீக வளம் இருந்தால் மக்களுக்குத் தேவையான சேவையை வழங்க முடியும். நாங்கள் அரச சேவைக்கு இணைந்து கொண்ட 1991ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரையிலான காலம் போருடனேயே இருந்தது. அந்தக் காலப் பகுதியில் பௌதீக வளங்கள் சிறப்பாக இல்லாவிட்டாலும் மக்களுக்கு திருப்திகரமான சேவையை நாம் வழங்கியிருந்தோம். எங்களுடைய சுகாதாரத் திணைக்களத்தின் கீழ் உள்ள மருத்துவமனைகளுக்கு மிகப் பெரிய கட்டடங்கள் மற்றும் நவீன உபகரணங்கள் கிடைக்கப்பெற்றன. ஆனால் மனித வளம் இல்லாமையால் அவை இயங்காமல் இருக்கின்றன. இவை எல்லாவற்றுக்கும் அப்பால் பௌதீக வளங்கள் இருந்தாலும் மக்களுக்கு தரமான – சிறப்பானதொரு சேவையை வழங்கினாலேயே அந்தத் திணைக்களங்களை நோக்கி மக்கள் வருவார்கள். மக்கள் எவ்வளவு விரும்பி திணைக்களங்களை நோக்கிச் செல்கின்றார்களோ அதில்தான் அந்தத் திணைக்களங்களின் வெற்றி தங்கியிருக்கின்றது. திணைக்களங்களும் மக்களுக்குச் சிறப்பான சேவையை வழங்கினால்தான், அந்தத் திணைக்களங்களுக்கு மேலதிக உதவிகளைச் செய்யவேண்டும் என்ற உந்துததல் எங்களுக்கும் ஏற்படும். எனவே மக்களுக்கு சிறப்பான சேவையை வழங்குவதை நோக்கமாகக் கொண்டு செயற்பட வேண்டும் என்பதுடன், நகரின் மத்தியில் திறக்கப்பட்டமையால் சித்த மருந்தகத்தை நோக்கி மக்கள் வருவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் என்பதையும் நினைவிலிருத்தி செயற்படவேண்டும் என்றார். வடக்கு மாகாண ஆளுநரால் வளாகச் சுற்றாடலில் மரக்கன்றுகளும் நடுகை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219751
  14. பட மூலாதாரம்,BADRI NARAYANAN படக்குறிப்பு, பவபூரணி கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் கோவை தனியார் மருத்துவக் கல்லுாரியில் படித்து வந்த பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவி பவபூரணி கழிவறையில் உயிரிழந்து கிடந்தது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவரது குடும்பத்தினர் கூறுகின்றனர். இந்த மரணம் குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாக முன் வந்து கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் கோவை மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பி, 5 நாட்களுக்குள் இதுபற்றி விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில், மருத்துவ மாணவி மூச்சுத்திணறலால் (asphyxia) உயிரிழந்திருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாகவும், அதற்கான காரணம் குறித்து உடற்கூறு ஆய்வக முடிவுகள் வந்த பின்பே தெரியவருமென்றும் கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார். மீண்டும் படிக்க வந்த பவபூரணி நாமக்கல் மாவட்டம் வகுரம்பட்டியைச் சேர்ந்த கந்தசாமியின் மகள் பவபூரணி (வயது 29), கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லுாரியில் மயக்க மருந்தியல் முதுகலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். கடந்த ஜூலை 6 ஞாயிற்றுக்கிழமையன்று காலையில், பவபூரணி இறந்துவிட்டதாக அவருடைய தந்தைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 5 ஆம் தேதி சனிக்கிழமையன்று இரவு, அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சைப் பிரிவில் பவபூரணி பணியாற்றி வந்ததாகவும், மறுநாள் காலை 6 மணியளவில் பணி மருத்துவர் அறையிலுள்ள கழிவறையில் இறந்து கிடந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பவபூரணியின் தந்தை கந்தசாமி, கூலித்தொழிலாளி. தாயார் இறந்து விட்டார். பவபூரணி மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லுாரியில் கடந்த 2014–2020 ஆம் ஆண்டுகளில் எம்.பி.பி.எஸ். முடித்த பின்பு, அதே மருத்துவமனையில் தொடர்ந்து பணியாற்றி வந்துள்ளார். இந்த ஆண்டு நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று, கோவை பி.எஸ்.ஜி. கல்லுாரியில் சேர்ந்துள்ளார் என்று பவபூரணியின் உறவினர்கள் தகவல் தெரிவித்தனர். பவபூரணியின் மரணம் தொடர்பாக, பீளமேடு காவல் நிலையத்தில் மர்ம மரணம் என்ற பிரிவில் (CRPC 174) வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்த பின், குடும்பத்தினரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையில் வெளிக்காயம் எதுவுமில்லை என்று உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும், அவருடைய உடற்கூறு மாதிரிகள், ஆய்வகப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் பீளமேடு போலீசார் தெரிவித்தனர். இதுபற்றி செய்தியாளர்களிடம் பேசிய பீளமேடு காவல் நிலைய ஆய்வாளர் அர்ஜூன், ''கழிவறைக்குச் சென்ற அவர் வெகுநேரமாக வரவில்லை என்றதும் சக மாணவிகள் சென்று பார்த்துள்ளனர். கழிவறை கதவை உடைத்துத் திறந்தபோது, அவர் உள்ளே கீழே விழுந்து கிடந்துள்ளார். அவருக்கு அருகில் ஒரு சிரிஞ்சும், மருந்து பாட்டிலும் இருந்துள்ளது. அவரை வெளியே கொண்டு வந்து பரிசோதித்தபோது, அவர் இறந்துவிட்டது தெரியவந்துள்ளது. '' என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,(சித்தரிப்புப் படம்) தற்கொலைக்கான முகாந்திரம் இல்லை - உறவினர்கள் பவபூரணியின் மரணம் குறித்து தங்களுக்கு தாமதமாக தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், தாங்கள் வரும் முன்பே அவரின் நகைகள் உள்ளிட்ட உடைமைகளை காவல்துறையிடம் ஒப்படைத்துவிட்டதாக மருத்துவமனை நிர்வாகம் கூறியதில் சந்தேகம் எழுவதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். பவபூரணி தற்கொலை செய்து கொண்டிருக்க வாய்ப்புள்ளதாக காவல்துறையினர் கூறும் நிலையில், அவர் தற்கொலை செய்து கொள்ள முகாந்திரமே இல்லை என்கின்றனர் பவபூரணியின் உறவினர்கள். பிபிசி தமிழிடம் பேசிய பவபூரணியின் சித்தப்பா கோவிந்தராஜ், ''எங்களுக்கு முதலில் தகவல் தெரிவித்த போது, பாத்ரூமில் வழுக்கி விழுந்து இறந்து விட்டதாகக் கூறினர். ஆனால் நேரில் சென்றபோது வெவ்வேறு விதமாகத் தகவல் தெரிவித்தனர். முதல் நாள் இரவு பவபூரணி, மருத்துவமனையில் பணியில் இருந்துள்ளார். அவருடன் கூடவே 2 பெண் டாக்டர்கள் இருந்துள்ளனர். அதிகாலை 3 மணியளவில் பவபூரணி, கழிவறை சென்றிருக்கிறார். அதன்பின் அவர் வரவேயில்லை. வேறு ஒரு நோயாளி இரவில் வந்ததால் அவர்கள் கவனிக்கவில்லை என்றும், 6 மணிக்குதான் கழிவறையில் சென்று பார்த்ததாகவும் கூறினர்.'' என்றார். மேலும் தொடர்ந்த அவர், ''கழிவறையை தட்டியபோது திறக்கவில்லை என்றும், பின்னாலுள்ள கண்ணாடி வழியாக பார்த்தபோது அவர் கீழே விழுந்து கிடந்ததாகவும், அதன் பின் கதவைத் தள்ளித் திறந்ததாகவும் உடனிருந்த பெண் டாக்டர்கள் கூறினர். ஆனால் காலை 8:30 மணிக்குதான் எங்கள் அண்ணனுக்குத் தகவல் தெரிவித்துள்ளனர். நாங்கள் சென்றபோது அவர்கள் கூறிய தகவல்களில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அதனால் சிசிடிவி கேமரா காட்சிகளைக் கேட்டோம். அவர்கள் காண்பிக்கவில்லை.'' என்றார். பட மூலாதாரம்,NCSC.NIC.IN படக்குறிப்பு,தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் இதுபற்றி விசாரித்து 5 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோவை மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சுயமாக முன் வந்து விசாரணை! அதன்பின் காவல்துறையினர் அவர்களின் மொபைலில் சில காட்சிகளைக் காண்பித்தனர் என்று கூறிய கோவிந்தராஜ், அவர்கள் காண்பித்த காட்சியில் பவபூரணியும், மற்றொரு பெண்ணும் நடந்து செல்வது மட்டும்தான் தெரிந்தது என்றும், கழிவறை கதவை உடைத்தது, அவரைத் தூக்கி வந்தது, பரிசோதித்தது போன்ற எந்தக் காட்சிகளையும் காண்பிக்கவில்லை என்றும் தெரிவித்தார். இதே கருத்தைத் தெரிவித்த பவபூரணியின் தம்பி பத்ரி நாராயணன், ''முதல் நாள் இரவு 7 மணிக்கு, 'நான் டூட்டியில் இருக்கிறேன். ரூமுக்கு வந்து பேசுறேன்' என்றார். அதுதான் அவர் என்னிடம் கடைசியாகப் பேசியது. அப்போது அவர் இருந்த மனநிலைக்கு, அவர் மறுநாள் காலையில் இப்படி இறந்திருப்பது பல விதமான சந்தேகங்களை எழுப்புகிறது.'' என்றார். பவபூரணியின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் சந்தேகம் எழுப்புவதற்கு முன்பே, இந்த மரணம் குறித்து பல்வேறு தரப்புக்கும் புகார் மனுக்கள் சென்றுள்ளன. பட்டியலினத்தைச் சேர்ந்த பவபூரணியின் மரணம் குறித்து, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் தாமாகவே முன் வந்து விசாரணை மேற்கொண்டு, இதுபற்றி விசாரித்து 5 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமாறு கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் ஆகியோருக்கு உத்தரவிட்டுள்ளது. பவபூரணியின் மரணம் குறித்து தமிழ்நாடு மருத்துவ மாணவர் சங்கம் வெளியிட்டுள்ள சமூக ஊடகப்பதிவில், ''மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், உரிய காரணம் என்னவென்று மருத்துவமனை நிர்வாகம் கூற மறுப்பதாகவும் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். மாணவியின் மர்மமான மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து இதுபோல் இனியொரு மரணம் நடக்காத வகையில் அதற்கேற்ற உடனடி நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு மருத்துவ மாணவர்கள் சங்கம் வலியுறுத்துகிறது.'' என்று கூறியுள்ளது. இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய சங்கத்தின் நிர்வாகி மது, ''மருத்துவமனை நிர்வாகமும் தெளிவான காரணத்தைச் சொல்ல மறுக்கிறது. காவல்துறை சார்பிலும் சரியான தகவல்களைத் தர மறுக்கிறார்கள். அதனால்தான் இந்த விஷயம் பற்றி சமூக ஊடகத்தில் பகிரங்கமாக எங்கள் பதிவை வெளியிட்டோம். நியாயமான விசாரணை நடக்க வேண்டுமென்பதே எங்கள் கோரிக்கை.'' என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES அதேபோன்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்புகளும், கோவை மாவட்ட ஆட்சியரிடம் இதுதொடர்பாக மனு கொடுத்துள்ளன. இதுபோன்று உயர் கல்வி படிக்கும் பட்டியலினத்தைச் சேர்ந்த மாணவர்கள் தொடர்ந்து மரணிப்பது பற்றி விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று அவர்கள் அந்த மனுக்களில் வலியுறுத்தியுள்ளனர். பிபிசி தமிழிடம் பேசிய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகி தினேஷ் ராஜா, ''எய்ம்ஸ் உட்பட பல்வேறு மருத்துவக் கல்லுாரிகளிலும் பட்டியலின மாணவர்கள், மாணவிகள் மர்மமான முறையில் இறப்பது தொடர்ந்து வருகிறது. இந்த மரணத்திலும் பல சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது இயற்கை மரணமா அல்லது தற்கொலையா என்பதை காவல்துறை நியாயமான விசாரணையில் உறுதி செய்யவேண்டும். முக்கியமாக பிரேத பரிசோதனை அறிக்கையை வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.'' என்றார். தனது சகோதரியின் மரணத்தில் தங்களுக்கு பல்வேறு சந்தேகங்கள் இருப்பதால், அதில் தேசிய மனித உரிமை ஆணையம் தலையிட வேண்டுமென்று மெயில் அனுப்பியிருப்பதாகத் தெரிவித்தார் பவபூரணியின் தம்பி பத்ரி நாராயணன். ''எனது அக்கா இரவு ஒன்றே முக்கால் மணிக்கு வார்டிலிருந்து வெளியே வந்ததாக சிசிடிவி காட்சியில் தெரிகிறது. அதன்பின் காலை 6 மணி வரை அந்த கழிவறையை யாருமே பயன்படுத்தவில்லை என்பது பல சந்தேகங்களை எழுப்புகிறது. அது டாக்டருக்கான தனி அறை என்றனர். ஆனால் வேறு சில படுக்கைகளும் அதில் இருக்கின்றன. பணியில் இருக்கும் டாக்டர் பல மணி நேரமாக வராமல் இருப்பதை ஏன் யாருமே சென்று பார்க்கவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.'' என்று பிபிசி தமிழிடம் தெரிவித்தார் பத்ரி நாராயணன். தனது அக்கா விழுந்து கிடந்த கழிவறையை திறந்து பார்த்த சக மாணவியான மற்றொரு பெண் டாக்டருக்கும், தன்னுடைய அக்காவுக்கும் இடையில் வாக்குவாதம் நடந்ததாக அங்கிருப்பவர்கள் கூறியதாகத் தெரிவிக்கிறார் பத்ரி நாராயணன். மற்ற மாணவர்களுக்கு இருப்பது போல தனது அக்காவுக்கும் நிர்ணயிக்கப்பட்டதை விட 3 மடங்கு அதிகமான பணி அழுத்தம் இருந்த விஷயமும் தனக்குத் தெரியுமென்று கூறினார். பவபூரணி யாரையும் காதலிப்பதாகவோ, திருமணம் செய்ய விருப்பமுள்ளதாகவோ தங்களிடம் எந்த விஷயத்தையும் பகிர்ந்தது இல்லை என்று அவரது கோவிந்தராஜ் கூறுகிறார் பவபூரணியின் மரணம் குறித்து பல்வேறு தரப்பிலும் எழுப்பப்படும் சந்தேகங்கள் குறித்து, கோவை பி.எஸ்.ஜி. மருத்துவக் கல்லுாரி நிர்வாகத்திடம் கருத்து கேட்க பிபிசி தமிழ் முயன்றது. இதுகுறித்து நிர்வாகத்தரப்பு பதிலை கேட்டுச் சொல்வதாக மக்கள் தொடர்பு அலுவலர் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் எந்த பதிலும் தரப்படவில்லை. இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய கோவை மாநகர காவல் ஆணையர் சரவணசுந்தர், ''மாணவி விழுந்து கிடந்த கழிவறையில் அவருக்கு அருகில் இருந்த சிரிஞ்ச்சில் இருந்த மருந்தை ஆய்வுக்கு அனுப்பியுள்ளோம். பிரேத பரிசோதனையில், முதற்கட்டமாக பவபூரணியின் மரணத்துக்கு மூச்சுத்திணறலே (asphyxia) காரணமென்று தெரியவந்துள்ளது. ஆனால் மூச்சுத்திணறலுக்கு ரத்த அழுத்தம் போன்ற உடல்ரீதியான பாதிப்பு காரணமா அல்லது அவர் எடுத்த ஊசி மருந்து காரணமா என்பது தெரியவில்லை.'' என்றார். பவபூரணியின் இதயம், நுரையீரல், மண்ணீரல் உள்ளிட்ட பல்வேறு உடல் பாகங்களின் மாதிரிகளும் ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவித்த காவல் ஆணையர் சரவணசுந்தர், அது வருவதற்கு சில வாரங்களாகலாம் என்பதால் அவற்றின் முடிவு வரும் வரை இறப்புக்கான காரணம் குறித்து எந்த முடிவுக்கும் வரமுடியாது என்றும் கூறினார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyz1j5jmd2o
  15. 11 JUL, 2025 | 02:56 PM கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வும் திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு ஒப்படைத்து அரசாங்கத்திற்கு 2.63 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக நஷ்டத்தை ஏற்படுத்தியதாக கூறப்படும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல இன்று வெள்ளிக்கிழமை (11) உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கு இன்று கொழும்பு மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனுவெல முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போது, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் நீதிமன்றில் முன்வைத்த கோரிக்கைகளை கருத்தில் கொண்ட நீதிவான், ராஜித சேனாரத்னவை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/219735
  16. 11 JUL, 2025 | 02:30 PM செம்மணி மனிதப் புதைகுழி விசாரணையில் உண்மையைக் கண்டறிதல், சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் நீதி ஆகியவற்றின் அவசியத்தை வலியுறுத்தி இலங்கை தமிழ் அரசுக் கட்சி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளது. குறித்த கடிதம் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் மற்றும் பதில் பொதுச் செயலாளர் எம்.ஏ சுமந்திரன் ஆகியோர் கையொப்பமிட்டு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி அனுப்பி வைத்துள்ளது அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, செம்மணியில் முன்னெடுக்கப்பட்டுவரும் புதைகுழி அகழ்வுப் பணி குறித்து ஆழ்ந்த கவலையை தெரிவித்து இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சார்பாக நாங்கள் எழுதுகிறோம். உண்மையை வெளிக்கொணரவும், தடயவியல் நெறிமுறைகள் சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரங்களை பூர்த்தி செய்வதை உறுதி செய்யவும், குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்தவும் அவசர மற்றும் தீர்க்கமான நடவடிக்கை எடுக்குமாறு நாங்கள் வலியுறுத்துகிறோம். 1998 ஆம் ஆண்டில், பாடசாலை மாணவியான கிருஷாந்தி குமாரசாமி மற்றும் குடும்ப உறுப்பினர்களை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்காக தண்டனை பெற்ற லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, தனது விசாரணையில் 300 முதல் 400 வரையிலான தமிழ் பொதுமக்கள் அங்கு புதைக்கப்பட்டதாக வெளிப்படுத்தினார். இதன் பின்னர் குறித்து பகுதியில் கடந்த 1999 இல் அகழ்வாராய்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன. அதன்போது அங்கு 15 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அவற்றில் இரண்டு 1996 ஆம் ஆண்டு காணாமல்போனவர்களது என அடையாளம் காணப்பட்டன. தடயவியல் உறுதிப்படுத்தல் இருந்தபோதிலும், வழக்குகள் தேக்கமடைந்தன, இன்றுவரை அதற்கு அர்த்தமுள்ள நீதி வழங்கப்படவில்லை. 2025 ஆம் ஆண்டின் முற்பகுதியில், யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி அரியாலைச் சித்துப்பாத்தி இந்துமையான புனரமைப்புப் பணிகளின் போது, மனித எலும்புக்கூட்டு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன, இதனால் யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றம் அந்த இடத்தை ஒரு பாரிய மனித புதைகுழியாக அறிவித்து, நீதிமன்ற மேற்பார்வையின் கீழ் அகழ்வாராய்ச்சியை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. அதன் படி தற்போதைய நிலையில், குழந்தைகள் உட்பட சுமார் 65 எலும்புக்கூடுகள் இரண்டு கட்டங்களாக தோண்டி எடுக்கப்பட்டன, அவற்றுடன் பாடசாலை பை, பொம்மை, வளையல்கள், செருப்புகள் மற்றும் துணித் துண்டுகள் போன்ற சான்றுப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளன. அனைத்து எலும்புக்கூடுகளும் தடயவியல் பரிசோதனைக்காக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இந்த மனித புதைகுழி அகழ்வாராய்ச்சிகள், இந்த நாட்டில் தமிழ் மக்களுக்கு எதிரான இனப்படுகொலை பிரச்சாரத்திற்கான தெளிவான சான்றுகளை காண்பிக்கின்றன. எந்தவொரு நிலைமாறுகால நீதி செயல்முறைக்கும் உண்மையைக் கண்டறிவது அடித்தளமாக இருக்க வேண்டும். 2009 இல் போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 16 ஆண்டுகளுக்கும் மேலாகியும், நூற்றுக்கணக்கான குடும்பங்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதியை எதிர்பார்த்து காத்துள்ளனர். எனவே, பின்வருவனவற்றை தாமதமின்றி செயல்படுத்துமாறு நாங்கள் உங்களிடம் வலியுறுத்துகிறோம்: 1.1999 மற்றும் 2025 ஆம் ஆண்டு புதைக்கப்பட்ட சடலங்கள் தோண்டி எடுக்கப்பட்டவை தொடர்பான சட்ட வழக்குகளை, கொழும்பு மற்றும் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றங்களின் கீழ் ஒரே நீதித்துறை மற்றும் தடயவியல் விசாரணையாக ஒருங்கிணைக்கவும். 2. விசாரணையின் அனைத்து நிலைகளையும் மேற்பார்வையிட, தடயவியல் ஒருமைப்பாடு மற்றும் பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்ய, சுயாதீனமான, சர்வதேச அளவில் மதிக்கப்படும் தடயவியல் நிபுணர்களை ஈடுபடுத்துதல். 3. அனைத்து இடைக்கால மற்றும் இறுதி தடயவியல் அறிக்கைகள், டி.என்.ஏ விவரங்கள் மற்றும் அடையாள முடிவுகளை வெளியிடுதல், மேலும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்கள், சிவில் சமூகம் மற்றும் சர்வதேச பார்வையாளர்களுக்கு அணுகலை எளிதாக்குதல். 4. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் காணாமல் ஆக்கப்பட்ட அன்புக்குரியவர்களைத் தொடர்ந்து தேடுகின்றனர், உண்மை மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாமல், நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது. தேசிய ஒற்றுமைக்கு அவசியமான இந்தக் கொடூரமான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் மீது வழக்குத் தொடர நடவடிக்கை எடுக்கவும். இலங்கையின் தார்மீக மற்றும் சட்டக் கடமைகளை நிலைநிறுத்துவதற்கும், உண்மை மற்றும் நீதியை நோக்கி நம்பகத்தன்மையை உருவாக்குவதற்கும் இந்த நடவடிக்கைகள் அவசியம் என்றும் இந்த நடவடிக்கைகளை எளிதாக்குவதிலும், அவை சரியான நேரத்தில் செயல்படுத்தப்படுவதை உறுதி செய்வதிலும் ஆக்கபூர்வமாக ஆதரவளிக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/219730
  17. வடக்கு மாகாணத்தின் கல்வி அமைப்பு, வரலாற்று ரீதியாக, தமிழ் மக்களின் மிக முக்கியமான சொத்தாகக் கருதப்பட்டு வந்துள்ளது. இது பல சவால்களையும், மோதல்களையும் தாண்டி, கல்வியறிவு மற்றும் உயர் கல்வி வாய்ப்புகளில் முன்னணியில் இருந்த ஒரு பகுதியாகும். ஆனால், "கல்வி படிப்படியாக அழிக்கப்படுகிறதா?" என்ற கேள்வி பல கோணங்களில் ஆராயப்பட வேண்டிய ஒரு சிக்கலான விடயமாக இன்று மாறியுள்ளது. இதற்கு பிரதான காரணம், இன்று வெளியாகிய க.பொ.த சாதாரணத்தர பரீட்சையில் வடக்கு மாகாணத்தில் உயர்தரத்திற்கு தகுதி பெற்ற மாணவர்களின் சராசரியில் ஏற்பட்ட பின்னடைவு நிலையே. வடக்கு மாகாணத்தில் 2024 ஆம் ஆண்டு இடம்பெற்ற க.பொ.த சாதாரணத்தர பரீட்சையில் 69.86% மாணவர்கள் மாத்திரமே உயர்தரத்திற்கு தகுதி பெற்றுள்ளனர். க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி 2024 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில் மொத்தம் 237,026 மாணவர்கள் க.பொ.த உயர்தரத்திற்குத் தகுதி பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை பரீட்சைக்குத் தோற்றிய மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 73.45% ஆகும். கூடுதலாக, மொத்தம் 13,392 மாணவர்கள் ஒன்பது பாடங்களிலும் 'ஏ' சித்திகளைப் பெற்று சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளனர். இந்த சாதனை மொத்த பரீட்சார்த்திகளின் எண்ணிக்கையில் 4.15% ஆகும். இதற்கிடையில், 2.34% மாணவர்கள் அனைத்துப் பாடங்களிலும் தோல்வியடைந்துள்ளனர். இந்த நிலையை நாம் வடக்கில் கருத்தில் கொண்டால் பரீட்சைக்கு தோற்றும் 5 மாணவர்களில் 1 அல்லது 2 மாணவர்கள் சித்திப்பெறாத நிலை உருவாகிறது. ஒரு பாடசாலை சிறந்த பெறுபேற்றையோ அல்லது மோசமான பெறுபேற்றையோ பெற்றால் அதற்கு பொருப்பானவர்கள் அப்பாடசாலையின் அதிபர், மற்றும் ஆசிரியர்களே. அவ்வாறென்றால் மாகாண ரீதியாக பெறுபேறு வீழ்ச்சியடையும்போது அதன் பொறுப்பு யாருடையது? இலங்கையில் உள்ள 9 மாகாணங்களுடன் ஒப்பிடும்போது வட மாகாணம் தொடர்ந்து இறுதி நிலையில் இருப்பது ஏற்க முடியாத விடயமே. 1. வடமாகாண கல்வி முறைமையின் பின்னணி வடமாகாணம், குறிப்பாக யாழ்ப்பாணம், கல்வியில் கடந்த காலங்களில் எப்போதும் முன்னணியில் இருந்தது. உயர்தரப் பரீட்சைகளில் உயர் சித்தி வீதம், பல்கலைக்கழக நுழைவு, மற்றும் தொழில்முறை கல்வியில் தமிழ் மாணவர்கள் தேசிய மட்டத்தில் பங்களித்து வந்தனர். ஆனால், உள்நாட்டுப் போரின் பின்னர், இப்பகுதி பல பொருளாதார, சமூக, மற்றும் உள்கட்டமைப்பு சவால்களை எதிர்கொண்டுள்ளன. 2. தற்போதைய சவால்கள் வடமாகாணத்தில் கல்வி நிர்வாகத்தில் ஏற்பட்டுள்ள பல சிக்கல்கள், குறிப்பாக ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களில் முறைகேடுகள், கல்வியின் தரத்தை பாதித்துள்ளன. உதாரணமாக, 2025ஆம் ஆண்டு ஜனவரியில், வடக்கு மாகாண ஆளுநரின் பணிப்பில் என்ற போர்வையில், சிரேஷ்ட நிலை கல்வி நிர்வாக அதிகாரிகளை கவனத்தில் கொள்ளாமல் தான்தோன்றித்தனமாக இடமாற்றங்கள் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டிருந்தன. இது கல்வி நிர்வாகத்தில் குழப்பத்தையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியிருந்தது. குறிப்பாக ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் நிர்வாக முடிவுகளில் மத்திய அரசாங்கம் அல்லது ஆளுநரின் தலையீடு, கல்வி முறைமையை பலவீனப்படுத்துவதற்கு வழிவகுக்கிறது என்று குறிப்பிடுகின்றன. உதாரணமாக, 2014இல் ஆசிரியர் இடமாற்றங்கள் தேர்தல் சட்டங்களுக்கு முரணாக மேற்கொள்ளப்பட்டதாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் அண்மையில் குற்றம் சுமத்தியிருந்தது. இதன்படி இனிவரும் காலங்களிலேனும் ஆசிரியர் இடமாற்றங்கள் மற்றும் நியமனங்களில் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்ய வேண்டும். 3. ஆசிரியர் பற்றாக்குறை இலங்கை ஆசிரியர் சங்கத்தை மேற்கோள்காட்டி 2024 ஆம் ஆண்டு "40,000 ஆசிரியர் பற்றாக்குறை உள்ளதாக செய்தி ஒன்றை தென்னிலங்கை பத்திரகை வெளியிட்டிருந்தது. அதில் வடமத்திய, கிழக்கு, ஊவா, வடக்கு மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும், மத்திய மாகாணத்தில் உள்ள கிராம பாடசாலைகளிலும் இந்த நிலைமை மிகவும் மோசமாக உள்ளது என்று பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் தெரிவித்ததாக கூறப்பட்டது. அதன்படி, கிழக்கு மாகாணத்தில் 3,698 ஆசிரியர் பற்றாக்குறையும், வடமத்திய மாகாணத்தில் 3,860 ஆசிரியர் பற்றாக்குறையும், ஊவா மாகாணத்தில் 3,200 ஆசிரியர் பற்றாக்குறையும், வட மாகாணத்தில் சுமார் 2,900 ஆசிரியர் பற்றாக்குறையும், வடமேல் மாகாணத்தில் 4,500 ஆசிரியர் பற்றாக்குறையும், தென் மாகாணத்தில் 2,900 ஆசிரியர் பற்றாக்குறையும், மேல் மாகாணத்தில் 4,700 ஆசிரியர் பற்றாக்குறையும், மத்திய மாகாணத்தில் 4,800 ஆசிரியர் பற்றாக்குறையும் உள்ளது. மேலும், தேசிய பள்ளிகளில் 3,000 க்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறையும் உள்ளது, இது நாடு முழுவதும் மொத்தம் சுமார் 40,000 ஆகும் என தெரிவிக்கப்பட்டது. இது 2025 இல் 42,000க்கும் மேற்பட்ட அளவாக காணப்படுவதாக கல்விஅமைச்சில் இடம்பெற்ற ஒரு ஊடகசந்திப்பில் உயர் கல்வி, கல்வி மற்றும் தொழில்சார் பயிற்சி அமைச்சர் என்ற வகையில் சிறிலங்காவின் பிரதமர் ஹரினி அமரசூரிய தெரிவித்திருந்தார். மேலும், வறுமை மற்றும் பொருளாதார பின்னடைவு காரணமாக, பல மாணவர்கள் கல்வியை தொடர முடியாத நிலை வடக்கில் இன்றும் தொடர்ந்து வருகிறது. இதன்படி வடமாகாண கல்விச் சமூகம் இந்தப் பிரச்சினைகளை வெளிப்படையாக விவாதித்து உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இல்லையேல் கல்வித்தரம் மேலும் சரியும் வாய்ப்புக்கள் அதிகரிக்கும். https://ibctamil.com/article/northern-province-education-decline-gce-ol-results-1752233400
  18. 323 கொள்கலன்களில் பிரபாகரனின் ஆயுதங்கள் என பாராளுமன்றில் தெரிவித்தவர்கள் விசாரணையில் வாக்கு மூலமளிக்கத் தயங்குவது ஏன்? - அமைச்சர் பிமல் ரத்நாயக்க கேள்வி 11 JUL, 2025 | 04:15 PM (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) பிரபாகரனின் ஆயுதங்கள் தான் கொள்கலன்களில் இருந்ததாக பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு குறிப்பிட்டார்கள். இது உண்மையாயின் ஏன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்க அச்சமடைய வேண்டும். ஒன்று பொய்யுரைத்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது விசாரணைகளுக்கு செல்லுங்கள். பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்து கொண்டு ஏதும் குறிப்பிட முடியாது, பொய்யுரைக்கவும் முடியாதென சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (11) நடைபெற்ற அமர்வின் போது பரிசோதனையின்றி கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டமை தொடர்பில் எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முன்வைத்த விடயங்களை சுட்டிக்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்ற சிறப்புரிமையை பயன்படுத்திக் கொண்டு எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்துக்குள்ளும், பேச்சுரிமையை பயன்படுத்திக் கொண்டு வெளியிலும் பொய்யுரைக்கிறார்கள். தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்று குறிப்பிட்டார்கள். அது குறித்து எவ்வாறு விசாரிக்காமல் இருக்க முடியும். விசாரணைகளுக்கு செல்ல இவர்கள் ஏன் அச்சமடைகிறார்கள். பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு ஏதும் கூற முடியுமா, பொய்யுரைக்க முடியுமா, 323 கொள்கலன்கள் விடுவிப்புக்கு நான் அனுமதி வழங்கியதாக குறிப்பிடும் குற்றச்சாட்டை முற்றாக நிராகரிக்கிறேன். கடந்த ஜனவரி மாத காலப்பகுதியில் இந்த கொள்கலன்கள் மேல் மாகாண ஆளுநருடையது என்று அனைவரும் குறிப்பிட்டார்கள். பாராளுமன்றத்தில் அதை குறிப்பிட்டு கூச்சலிட்டார்கள். இந்த குற்றச்சாட்டுக்கு எதிராக ஆளுநர் நடவடிக்கை எடுத்ததன் பின்னர் தற்போது அவ்வாறு குறிப்பிடவில்லை என்று குறிப்பிடுகிறார்கள். ஐந்து மாதங்களுக்கு பின்னர் இந்த கொள்கலன்களை நான் விடுவித்ததாக குறிப்பிட்டார்கள். நான் விடுவித்திருந்தால் நீதிமன்றத்துக்கு செல்லுங்கள், வழக்குத் தாக்கல் செய்யுங்கள். அரச நிதியை மோசடி செய்து நாங்கள் அரசியலுக்கு வரவில்லை. இந்த பாரதூரமான குற்றச்சாட்டை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். கொள்கலன்களை விடுவிக்கும் அதிகாரம் எனக்கு கிடையாது, அமைச்சர் என்ற வகையில் எனக்கு உரித்தாக்கப்பட்டுள்ள அதிகாரங்களையும் நான் பயன்படுத்துவதில்லை. பரிசோதனைகளின்றி கொள்கலன்களை விடுவிப்பதற்கு எனக்கு எவ்வித அவசியமும் கிடையாது. பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு பொய்யுரைத்து குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள். பிரபாகரனின் ஆயுதங்கள் தான் கொள்கலன்களில் இருந்ததாக பாராளுமன்ற சிறப்புரிமையில் இருந்துக் கொண்டு குறிப்பிட்டார்கள். இது உண்மையாயின் ஏன் குற்றப்புலனாய்வு பிரிவில் முன்னிலையாகி வாக்குமூலமளிக்க அச்சமடைய வேண்டும். பொய்யுரைத்ததாக ஏற்றுக்கொள்ளுங்கள் அல்லது விசாரணைகளுக்கு செல்லுங்கள். கீழ்த்தரமான செயற்பாடு தற்போது வெளிப்பட்டவுடன் என்மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என்றார். https://www.virakesari.lk/article/219744
  19. பூனைக்குட்டிய பிடிக்க பயந்தவர்(பகிடிக்கு தான்) வேற எப்பிடி இருப்பார் அண்ணை?!
  20. லார்ட்ஸ் டெஸ்டில் 'நங்கூரமிட்ட' ரூட் – இங்கிலாந்தின் பாஸ்பால் பாணிக்கு சவால் விடுத்த இந்தியா பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜோ ரூட் மாஸ்டர்கிளாஸ் நடத்திக்காட்டினார் கட்டுரை தகவல் எஸ். தினேஷ் குமார் கிரிக்கெட் விமர்சகர் 11 ஜூலை 2025, 02:04 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாஸ்பால் (Bazball) அணுகுமுறை காலாவதியாகிவிட்டது, இங்கிலாந்து அணி இந்தியாவின் கட்டுக்கோப்பான பந்துவீச்சுக்கு அடிபணிந்துவிட்டது என சமூக ஊடகங்கள் முழுக்க எக்கச்சக்க பதிவுகளை பார்க்க முடிகிறது. ஆனால், உண்மையில் நேற்று லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாளில் இங்கிலாந்து அணி பாஸ்பால் பாணியில்தான் பேட்டிங் செய்தது. "பாஸ்பால் என்பது வெறுமனே அதிரடியாக விளையாடுவது மட்டுமல்ல; தேவைப்படும் சமயத்தில் அணியின் நலனுக்காக அடக்கி வாசிப்பதும் பாஸ்பால் தான்" என்று ஒருமுறை இங்கிலாந்து முன்னாள் ஆல்ரவுண்டர் மொயின் அலி கூறியது இப்போது நினைவுக்கு வருகிறது. இந்தியா இங்கிலாந்துக்கு இடையே நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கிய 3வது டெஸ்டில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், வழக்கத்துக்கு மாறாக பேட்டிங்கை தேர்வு செய்தது ஆச்சர்யம்தான். பட மூலாதாரம்,GETTY IMAGES வழக்கமாக லார்ட்ஸ் ஆடுகளம், வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இந்தமுறை புற்களை அதிகம் விடாமல், ஆடுகளத்தை தயார் செய்திருக்கிறார்கள். முதல் 10–15 ஓவர்களை தாக்குப்பிடித்து விளையாடிவிட்டால், அதன்பிறகு பேட்டிங்கிற்கு சாதகமாக களம் மாறும் என்பது இங்கிலாந்தின் நம்பிக்கையாக இருந்திருக்கலாம். ஆனால், ஆடுகளம் மெதுவாகவும் (Slow), இரட்டை வேகம் (Two paced) கொண்டதாகவும் இருந்தது. அதாவது ஒரு பந்து தாறுமாறாக பவுன்ஸ் ஆகும். அடுத்த பந்து எதிர்பார்த்த அளவுக்கு பவுன்ஸ் ஆகாமல் தாழ்வாக செல்லும். இதுபோன்ற ஒரு ஆடுகளத்தில் எப்படி பேட்டிங் செய்ய வேண்டும் என ஜோ ரூட் மாஸ்டர்கிளாஸ் நடத்திக்காட்டினார். ஹைலைட்ஸ் மட்டும் பார்ப்பவர்களுக்கு ரூட்டின் நேற்றைய இன்னிங்ஸ் சுவாரஸ்யமாக இருக்காது. ஆடம்பரமான கவர் டிரைவ்களோ கண்ணைப் பறிக்கும் ஸ்கொயர் கட்டுகளோ இந்த இன்னிங்சில் எதிர்பார்க்க முடியாது. ஆடுகளத்தின் மெதுவான தன்மையை புரிந்துகொண்டு பந்தை நன்றாக உள்வாங்கி தன் பலத்துக்கு ஏற்ப விளையாடி உழைத்து ரன் சேர்த்தார் ரூட். பவுண்டரிகள் கூட நேர்க்கோட்டில் விளையாடியும் தேர்ட் மேன், பைன் லெக் திசையில் தட்டிவிட்டு ரன்களை எடுத்தார். பும்ராவை எதிர்கொள்ள தயங்கிய ரூட், ஆரம்பத்தில் அவர் ஓவரை புத்திசாலித்தனமாக தவிர்த்தார். போப் உடனான அவருடைய பார்ட்னர்ஷிப், இந்த இன்னிங்சில் இங்கிலாந்துக்கு ஒரு வலுவான அடித்தளத்தை அமைத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இங்கிலாந்து வீரர்கள் ரூட் மற்றும் பென் ஸ்டோக்ஸ் கட்டுக்கோப்பான பந்துவீச்சு... ஆனாலும்! போப் வழக்கம் போல பதற்றத்துடன் இன்னிங்ஸை தொடங்கினாலும், போகப் போக ஆடுகளத்தின் தன்மைக்கேற்ப தன் ஆட்டத்தை தகவமைத்துக்கொண்டார். பும்ராவின் ஓவர்களை ரூட் எதிர்கொள்ள தயங்கிய போது, பொறுப்பை ஏற்றுக்கொண்டு விளையாடி தனது சக வீரரின் நெருக்கடியை போக்கினார். இந்தியாவின் பந்துவீச்சு கட்டுக்கோப்பாக இருந்தாலும், அது கடந்த டெஸ்டை போல அபாயகரமானதாக தோற்றமளிக்கவில்லை. அதற்கு ஆடுகளத்தின் மெதுவான வேகம் மட்டுமில்லாமல் லார்ட்ஸ் ஆடுகளத்தின் ஸ்லோப்பை (Slope) பயன்படுத்தி பந்துவீசுவதில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் தடுமாறியதும் முக்கிய காரணம். லார்ட்ஸ் மைதானத்தில் pavilion end இல் இருந்து Nursery end நோக்கி பந்துவீசும் போது, அங்கு ஒரு சிறியதாக ஒரு சரிவு இருக்கும். அதை சரியாகப் பயன்படுத்தி வீசினால், பந்தை உள் நோக்கி கொண்டு சென்று பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி கொடுக்கலாம். ஆனால், கடந்த டெஸ்டில் சாதித்த ஆகாஷ் தீப், அனுபவமின்மை காரணமாக ஸ்லோப்பை நேற்று சரியாக பயன்படுத்திக்கொள்ளவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஓய்வுக்கு பிறகு அணிக்கு திரும்பிய பும்ரா, தொடக்கத்தில் சரியான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசி, இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் எளிதாக ரன் குவிக்க முடியாமல் செய்தார். நிதிஷ் குமார் தந்த திருப்புமுனை ஓய்வுக்கு பிறகு அணிக்கு திரும்பிய பும்ரா, தொடக்கத்தில் சரியான லைன் அண்ட் லெங்த்தில் பந்துவீசி, இங்கிலாந்தின் தொடக்க வீரர்கள் எளிதாக ரன் குவிக்க முடியாமல் செய்தார். பாஸ்பால் யுகத்தில் மிகவும் மெதுவான முதல் செஷன் இதுவாகத்தான் இருக்க முடியும். பும்ராவின் துல்லியமான பந்துவீச்சில் கைகள் கட்டப்பட்டிருந்த தொடக்க வீரர்களான டக்கெட்டும் கிராலியும் நிதிஷ் குமார் வந்தவுடன் ரன் குவிக்கும் ஆசையில் ஆட்டமிழந்தனர். முதன்மை வேக வீச்சாளர்கள் சரியான லெங்த் பிடிக்க முடியாமல் சிரமப்பட்ட நிலையில், பேட்டிங் ஆல்ரவுண்டரனான நிதிஷ் குமார், தனது High arm பந்துவீச்சு ஆக்சனில் ஆட்டத்தின் முதல் திருப்புமுனையை ஏற்படுத்தினார். இந்த டெஸ்ட் தொடரில் பும்ராவை ஓரளவுக்கு இங்கிலாந்து நன்றாக விளையாடியதாகவே சொல்லலாம். 200 பந்துகளுக்கு மேல் விக்கெட் எடுக்காமல் பும்ரா பந்துவீசி வருகிறார் என ஒரு புள்ளிவிவரம் திரையில் காட்டப்பட்ட சமயத்தில், உலகின் நம்பர் ஒன் பேட்ஸ்மேன் புரூக்கின் விக்கெட்டை வீழ்த்தினார். என்ன மாதிரியான ஒரு பந்து அது! ஆடுகளம் சுத்தமாக ஒத்துழைக்கவில்லை, இங்கிலாந்து அணி நங்கூரம் போல விளையாடியது. விக்கெட் எடுத்தால் மட்டும்தான் இந்தியாவுக்கு வாழ்வு. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒரு அபாரமான nip backer மூலம் கொஞ்சமே கொஞ்சம் பந்தை நகர்த்தி புரூக்கின் ஸ்டம்புகளை தகர்த்தார். இங்கிலாந்து அணி, வலுவான நிலைமைக்கு நகர்ந்து கொண்டிருந்த சமயத்தில் போப்பின் விக்கெட்டை ஜடேஜா கைப்பற்றினார். ரிஷப் பந்த் கையில் ஏற்பட்ட காயம் காரணமாக பெவிலியன் திரும்பிய நிலையில் மாற்று வீரராக விக்கெட் கீப்பிங் செய்த ஜூரெல் அபாரமான கேட்ச் பிடித்தார். இந்த இன்னிங்சில் இந்தியாவுக்கு நிறை கேட்ச் வாய்ப்புகள் கைக்கு எட்டவில்லை. பீல்டர்கள் மீது தவறில்லை என்றாலும் இன்னும் கவனமாக இருந்திருந்தால் இன்னும் சில விக்கெட்களை எடுத்திருக்கலாம். எப்போது இந்தியாவின் கைக்கு ஆட்டம் மாறும்? ரூட்டிடம் சென்று, "பாஸ்பால் விளையாடு இப்போது" என சிராஜ் சைகை செய்ததும், 'போரிங் கிரிக்கெட்' என இங்கிலாந்தின் தற்காப்பு ஆட்டத்தை கில் கிண்டல் அடித்ததும் ஆட்டத்துக்கு சுவாரஸ்யம் கூட்டின. மூன்றாவது, நான்காவது நாள்களில் சுழற் வீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக மாறும் என கணிக்கப்படும் சூழலில், குல்தீப் யாதவ் இல்லாமல் களமிறங்கியது சரியான முடிவா என்ற கேள்வி எழுவதை தவிர்க்க முடியவில்லை. 99 ரன்களுடன் களத்தில் உள்ள ரூட்டை இன்று விரைவில் ஆட்டமிழக்க செய்து, எஞ்சியுள்ள விக்கெட்களை விரைவில் வீழ்த்தினால் மட்டும்தான் ஆட்டம் இந்தியாவின் கைக்கு வரும். முழு உடற்தகுதியுடன் இல்லாத ஸ்டோக்ஸ் இன்று எப்படி இன்னிங்ஸை தொடங்கப் போகிறார் என்பதும் ஆட்டத்தின் போக்கை தீர்மானிக்கும் என கூறலாம். பாஸ்பால் பேச்சுகளை எல்லாம் உதறிவிட்டு பார்த்தால், லார்ட்ஸ் டெஸ்டில் முதல் நாளில் 251–4 என்பது நல்ல ஸ்கோர் என்றே சொல்ல வேண்டும். நான்காவது இன்னிங்சில் பேட்டிங் செய்ய வேண்டும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு, நாளை பேட்டிங் செய்யும் வாய்ப்பு கிடைத்தால், இந்தியா மிகப்பெரிய ஸ்கோரை குவித்தாக வேண்டும். ஒட்டுமொத்தமாக கட்டுக்கோப்பான பந்துவீச்சு, நேர்த்தியான பேட்டிங் என பக்கா டெஸ்ட் மேட்ச்சாக லார்ட்ஸ் டெஸ்டின் முதல் நாள் மாறியுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg75e2p8ejmo
  21. நேற்று மாலை நான் அருந்தப்பில் உயிர் தப்பினேன், நீங்கள் சொல்வதில் இருக்கும் ஒரு புள்ளிங்கோ 80-90 கி.மீ வேகத்தில் என்னை விலத்தி சென்றார். நான் ஒரு மில்லி செக்கன் வேகமாக வீதியில் ஏறிவிட்டேன். எப்போதும் பொறுமையாக ஆறுதலாக எல்லோரும் சென்றபின் வீதியை கடப்பேன். நேற்று கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டேன். ஆனாலும் புள்ளிங்கோ வேகமாக வருவது தெரியவே இல்லை. சிறுமி காணாமல்போய் வந்த சம்பவத்தில் முறை மச்சானுக்கு வெளிநாட்டில் மச்சாளோடு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருக்க உள்நாட்டு மச்சாள் சிறுமியை தவறான நடத்தைக்கு உட்படுத்தி இருந்தார்!
  22. Published By: RAJEEBAN 10 JUL, 2025 | 11:23 AM Sakuna M. Gamage daily mirror கனேரு மரத்தின் கீழ் நீ கீழே விழுந்துகிடந்தாய் உன் மார்பிலிருந்து குருதி வழிந்தோடியது நான் உன்னை இழந்தேன் இந்த தேசத்திற்கு அது இழப்பில்லை ஆனால் பூமிக்கு... ' உன்னால் எழுந்திருக்க முடிந்தாலும் எழுந்திருக்காதே" நீதியே புதைக்கப்பட்டிருக்கும் போது மக்கள் உண்மையில் எங்கு செல்ல முடியும்? அவர்களுக்காக யார் பேசுவார்கள்? சொல்ல முடியாத போர்க் காலத்தில் ரத்ன ஸ்ரீ விஜேசிங்கே எழுதிய ஒரு சிங்களக் கவிதையில் எழுதிய இந்த வரிகள் இன்று இன்னும் அதிகளவில் மனதை வேதனைக்குட்படுத்தும் அதிர்வுடன் திரும்பி வருகின்றன. ஜூலை 2025 இல் செம்மணியில் இரண்டாம் கட்ட மறு அகழ்வாராய்ச்சியின் ஏழாவது நாளில், ஒரு குழந்தையின் எலும்புக்கூடு எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஒரு ஆழமற்ற கல்லறைக்கு முன்னால் நான் நின்றேன், இன்னும் ஒரு யுனிசெஃப் பள்ளிப் பையையும், அதற்குள் ஒரு சிறிய பொம்மையையும் சுமந்து சென்றேன். இது வெறும் போரின் நினைவு அல்ல. இது தண்டனையின் கொடூரமான தொடர்ச்சி. செம்மணியிடமிருந்து நாம் கேட்பது கடந்த காலத்தின் எதிரொலி அல்ல, அது நிகழ்காலம் உடைந்து திறப்பது. அது மௌனத்தை நிராகரிக்கும் மண். செம்மணியிலிருந்து வெளிப்படுவது வெறும் ஆதாரம் மட்டுமல்ல; அது ஒரு குற்றச்சாட்டு. அது மனசாட்சியின் வீழ்ச்சி. இந்தத் தீவின் மேற்பரப்பிற்குக் கீழே எலும்புகள் மட்டுமல்ல, ஆனால் திட்டமிடப்பட்டு மௌனமாக்கப்பட்ட கதைகள்-மறதியின் மீது தனது யுத்தத்திற்கு பிந்திய அமைதியை கட்டியெழுப்பும் அரசாங்கத்தினால் அடக்கப்பட்ட குரல்கள் உள்ளன என்பதற்கான ஒரு கடும் நினைவூட்டலாகும். செம்மணிக்குத் திரும்புவது நினைவுடன் மோதுவதாகும். இது மௌனத்திற்கு பதில் கூறுதலாகும். நினைவில் வைத்திருப்பதற்கு பதில் மறப்பதற்காக உருவாக்கப்பட்ட நீதித்துறைக்கு எதிரான குற்றச்சாட்டாகும். 1996 ஆம் ஆண்டு கிருஷாந்தி குமாரசாமியின் கூட்டுப் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை, செம்மணிப் புதைகுழிகள் கண்டுபிடிக்கப்படுவதற்கு வழிவகுத்தது அழிப்பதில் சிறப்பு தேர்ச்சி பெற்ற அரசாங்கத்தின்மனச்சாட்சியை உறுத்துவதற்காக தற்போது மூன்று தசாப்தத்திற்கு பின்னர் கிருஷாந்தி குமாரசாமியிமண்ணிற்குள் காணாமல்போன ஆயிரக்கணக்கானவர்களின் கதைகளும் திரும்பிவருகின்றன. செம்மணியை மீண்டும் தோண்டி எடுத்தல்: செயல்முறை மற்றும் வலி செம்மணியின் புதைகுழிகளை மீண்டும் அகழும் நடவடிக்கை2025 ஆம் ஆண்டு கிட்டத்தட்ட தற்செயலாகத் தொடங்கியது. பிப்ரவரியில் ஒரு கட்டுமானத் திட்டம் எலும்புகளை கண்டுபிடித்தது. இது அதிகாரப்பூர்வ தலையீட்டைத் தூண்டியது. அகழ்வாராய்ச்சியின் முதல் கட்டத்திற்குப் பிறகு, தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர் ராஜ் சோமதேவா குறைந்தது 19 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தினார். இதில் 10 மாதங்களுக்கும் குறைவான மூன்று குழந்தைகள் அடங்கும். ட்ரோன்கள் மற்றும் செயற்கைக்கோள் படங்கள் அதிக சாத்தியமான புதைகுழிகளை அடையாளம் கண்டன, ஆனால் அறியப்பட்ட பகுதியில் 40 வீதத்திற்கும்க்கும் குறைவானது தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இது ஒரு தனிமைப்படுத்தப்பட்ட தொல்பொருள் முயற்சி அல்ல. இது ஒரு தேசிய அதிர்ச்சி தளம், உண்மையின் புதைகுழி. ஜூலை 4 (வெள்ளிக்கிழமை), யாழ்ப்பாணத்தில் உள்ள செம்மணி புதைகுழி பகுதியில்அகழ்வாராய்ச்சி குழுக்கள் மேலும் நான்கு எலும்புக்கூடு எச்சங்களை கண்டுபிடித்தன, அவற்றில் இரண்டு குழந்தைகளுடையவை என்று நம்பப்படுகிறது. இது நடந்துகொண்டிருக்கும் நடவடிக்கையின் போது தோண்டி எடுக்கப்பட்ட மொத்த எச்சங்களின் எண்ணிக்கையை 40 ஆக . அதிகரித்துள்ளது. மனித உரிமை வழக்கறிஞர் ரனிதா ஞானராஜாவால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட காணாமல் போனவர்களின் குடும்பங்கள், செயலற்ற பார்வையாளர்களாக அல்லm மாறாக நினைவின் தீவிர பாதுகாவலர்களாக அகழ்வாராய்ச்சியில் இணைந்துள்ளனர். யாழ்ப்பாணத்தில் மட்டும் 600 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இன்னும் காணாமல் போன அன்புக்குரியவர்களைத் தேடி வருகின்றன. கடந்த கால துரோகங்கள் மீண்டும் நிகழும் என்று பலர் அஞ்சுகின்றனர்: முழுமையற்ற தோண்டியெடுப்புகள், நீதித்துறை ஏய்ப்புகள் மற்றும் இறுதியில் அரசியல் மௌனம். அவர்களின் அச்சங்கள் நன்கு நிறுவப்பட்டவை. மன்னார் முதல் களவாஞ்சிகுடி வரையிலும், மாத்தளை முதல் சூரியகந்த வரையிலும் உள்ள புதைகுழிகளை விசாரித்த இலங்கையின் வரலாறு, தடைகளின் பட்டியலாக இருந்து வருகிறது. மன்னார் அகழ்வாராய்ச்சியில் 2018 மற்றும் 2019 க்கு இடையில் 346 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. இன்றுவரை, எந்த அடையாளங்களும் உறுதிப்படுத்தப்படவில்லை, பொறுப்புக்கூறல் நிறுவப்படவில்லை, இழப்பீடு வழங்கப்படவில்லை. இந்த அதிகாரத்துவ அலட்சியம் செயல்முறையின் தோல்வி மட்டுமல்ல, இது ஒரு நெறிமுறை தோல்வி. ஒரு தார்மீக சரிவு மனிதநேயத்தின் மரணம் செம்மணியில் வெளிப்படும் துயரம் வெறும் உள்ளூர் மட்டுமல்ல. அது உலகளவில் மனித மதிப்புகளின் பரந்த வீழ்ச்சியுடன்ஆழமாகப் பின்னிப் பிணைந்துள்ளது. 2025 ஆம் ஆண்டில், காசாவில் இருந்து போர்க்குற்றங்கள் நேரடியாக ஒளிபரப்பப்படும், குழந்தைகளின் இறப்புகள் நிகழ்நேரத்தில் கணக்கிடப்படும், மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் பெரும் வல்லரசு வீட்டோக்களால் சர்வதேச சட்டம் முடக்கப்படும் ஒரு உலகில் நாம் வாழ்கிறோம். இனப்படுகொலை இனி மறைக்கப்படவில்லை, அது முழு பார்வையில் நிகழ்த்தப்படுகிறது. ஜனநாயக மனிதநேயம் ஒரு அர்த்தமுள்ள உலகளாவிய சக்தியாக இறப்பதை நாம் காண்கிறோம். அமைதி மற்றும் கண்ணியத்தைப் பாதுகாக்கும் நோக்கில் உருவாக்கப்பட்ட இரண்டாம் உலகப் போரின் சாம்பலில் இருந்து பிறந்த நிறுவனங்கள், சக்தியற்றவையாக மாற்றப்பட்டுள்ளன. ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் பேசுகிறது, ஆனால் புவிசார் அரசியல் தண்டனையின்மைக்கு முன்னால் அதன் வார்த்தைகள் அதிக முக்கியத்துவம் பெறவில்லை. காசாவில் பொதுமக்கள் மீது இஸ்ரேலின் குண்டுவீச்சும், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் முழுமையான செயலற்ற தன்மையும் இந்த சரிவை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன இருப்பினும் ஜூன் 2025 இன் பிற்பகுதியில் மனித உரிமைகளுக்கான ஐ.நா. உயர் ஆணையர் வோல்கர் டேர்க், செம்மணி புதைகுழி இடத்திற்கு ஒரு புனிதமான விஜயத்தை மேற்கொண்டார். சமீபத்தில் 19 எலும்புக்கூடு எச்சங்கள், அவற்றில் மூன்று குழந்தைகள், வெளிவந்த அகழ்வாராய்ச்சி பகுதியை டேர்க்நேரில் ஆய்வு செய்தார். இந்த காட்சியை " மிகவும் உணர்ச்சிவசப்படவைப்பது என்று அழைத்தார் மற்றும் சுயாதீன தடயவியல் நிபுணர்களின் அவசரத் தேவையை வலியுறுத்தினார்.. செம்மணியை முன்னிலைப்படுத்துவதன் மூலம், பொறுப்புக்கூறல் மற்றும் சர்வதேச மேற்பார்வையை வலியுறுத்தும் அதே வேளையில், இலங்கையின் உள்நாட்டுப் போரின் கொடூரமான பாரம்பரியத்தை டேர்க் அடிக்கோடிட்டுக் காட்டினார். இந்தப் பின்னணியில் செம்மணி ஒரு உலகளாவிய கதையின் ஒரு பகுதியாக மாறியுள்ளது.. பூமி உடைந்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்படாத கடமைகள் வடிவமைப்பால் மறுக்கப்பட்ட நீதி ஆகியவற்றின் கல்லறையாக மாறிவிட்டது என்பதை இது நமக்குச் சொல்கிறது. இடைக்கால நீதி மற்றும் மறதியின் கலாச்சாரம் செம்மணியில் முதல் மனிதபுதைகுழி அரசால் அல்ல, மாறாக ஒரு தகவல் தெரிவிப்பவரால் அம்பலப்படுத்தப்பட்டது. 1998 ஆம் ஆண்டில், கிருஷாந்தி குமாரசாமியின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலையில் தனது பங்கிற்காக மரணதண்டனையை எதிர்கொண்ட கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, புதைகுழிகள் இருப்பதை வெளிப்படுத்தினார். அவர் பெயர்களைக் குறிப்பிட்டு தன்னுடன் இணைந்து செயற்பட்டவர்களின் விபரங்களை வெளியிட்டார் அரசு நீதியுடன் அல்ல மாறாக ஒரு அவதூறு பிரச்சாரத்துடன் பதிலளித்தது. இறுதியாக 1999 இல் அகழ்வாராய்ச்சி தொடங்கியபோது 15 உடல்கள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டன. பெரும்பாலானவை கண்கள் கட்டப்பட்டிருந்தனஇ கைகள் கட்டப்பட்டிருந்தன,மரணதண்டனை பாணியில் புதைக்கப்பட்டன. மீதமுள்ள சந்தேகத்திற்குரிய புதைகுழிகள் ஒருபோதும் தொடப்படவில்லை. இது தற்செயல் நிகழ்வு அல்ல. தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் எந்த கட்சியாக இருந்தபோதிலும் மக்கள் எந்த ஆணையை வழங்கியிருந்தாலும் செம்மணி புதைகுழியை மறப்பதில் ஈடுபட்டன. உயர் பதவியில் இருந்த அதிகாரிகள் பாதுகாக்கப்பட்டனர். சாட்சிகள் அச்சுறுத்தப்பட்டனர், அல்லது காணாமல் போனார்கள். தண்டனை பெற்ற வீரர்களின் தலைவிதி கூட தெளிவாகத் தெரியவில்லை, பலர் 2010 களில் பொது வாழ்க்கையில் மீண்டும் தோன்றினர். ஜனாதிபதி மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சட்ட அறிஞர் கிஷாலி பிண்டோ-ஜெயவர்தன பொருத்தமாக கூறியது போல் "இங்கே இடைக்கால நீதி ஆதாரங்கள் இல்லாததால் தடைபடவில்லை மாறாக அதிகாரத்துவம் மற்றும் பயத்தில் உண்மையை வேண்டுமென்றே புதைப்பதன் மூலம் தடைபடுகிறது." NPP அரசாங்கத்திடமிருந்து ஒரு பெரும் மௌனம் 2024 இல் தேசிய மக்கள் சக்தி பொதுமக்கள் மத்தியில் காணப்பட்ட விரக்தி, ஆழமாக வேரூன்றிய ஊழல் மீதான விரக்தி, கட்டுப்பாடற்ற இராணுவமயமாக்கல் மற்றும் அரசியல் உயரடுக்கைப் பாதுகாக்கும் தண்டனையிலிருந்து தப்பிக்கும் தொடர்ச்சியான கேடயம் ஆகியவற்றின் ஆகியவற்றின் மீதான விரக்தி அலைகளை அடிப்படையாக வைத்து ஆட்சிக்கு வந்தது. கட்சியின் வாக்குறுதிகள் துணிச்சலானவை: உண்மை நீதி மற்றும் நல்லிணக்கம். அதன் வெற்றி சிங்கள தெற்கில் மட்டுமல்ல தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் வடக்கு மற்றும் கிழக்கிலும் வரலாற்று சிறப்புமிக்கதாக இருந்தது. பதவியேற்று எட்டு மாதங்கள் ஆகியும் செம்மணி மீதான மௌனம் காதை பிளக்கின்றது. விஜயம் எதனையும் அரசாங்கத்தின் பிரதிநிதிகள் மேற்கொள்ளவில்லை. அறிக்கை எதுவும் இல்லை. தற்காலிக அறிக்கைகள் ஒரு குறியீட்டு சமிக்ஞைகள் கூட இல்லை. காணாமல்போனவர்களின் எலும்புகளை மண் மீண்டும் வழங்கும் இலங்கையின் மிகவும் அபகீர்த்திக்குரிய மனித புதைகுழிகள் மீண்டும் தோண்டப்படுவது குறித்து நீதிக்காக குரல்கொடுப்பதாக போராடுவதாக தெரிவிக்கும் அரசாங்கம் பெரும் அலட்சியத்தை வெளிப்படுத்துகின்றது. https://www.virakesari.lk/article/219593
  23. பட மூலாதாரம்,DÓKIMOS PRODUÇÕES படக்குறிப்பு, மனித உடல் தீவிர உடல் செயல்பாட்டிற்கு எவ்வாறு எதிர்வினையாற்றுகிறது என்பதைப் பார்க்க ஹூகோ ஃபாரியஸ் இந்த சவாலை ஏற்றுக்கொண்டார் கட்டுரை தகவல் ஜூலியா கிரான்சி பிபிசி நியூஸ் பிரேசில் 3 மணி நேரங்களுக்கு முன்னர் கடந்த 2023இல் ஹுகோ ஃபாரியஸ் 366 மாரத்தான்களை அடுத்தடுத்து நிறைவு செய்து ஒரு உலக சாதனையைப் படைத்தார். அதாவது தொடர்ந்து ஓர் ஆண்டுக்கும் மேலாக மழையோ, வெயிலோ, உடல்நலக் குறைவோ, காயமோ எது வந்தபோதிலும், தினசரி 42 கிலோ மீட்டருக்கு மேல் ஓடியிருக்கிறார். இந்த அசாதரண சாதனையைச் செய்த 45 வயதான பிரேசில் தொழிலதிபர் ஹூகோ, 12 மாதங்களில் 15,000 கி.மீ ஓடும்போது அவரது இதயம், அதற்கு எவ்விதம் எதிர்வினையாற்றுகிறது என்பதை ஆய்வு செய்வதற்கான மருத்துவ ஆய்வில் பங்கேற்றார். "நான் பெரிய தடகள வீரர் அல்ல. அதற்கு முன்பு எனது வாழ்நாளில் நான் ஒரு மாரத்தான் மட்டுமே ஓடியிருந்தேன்," என்றார் அவர். "ஆனால் ஒரு புதிய அத்தியாயத்தை உருவாக்க, விளையாட்டு மூலம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமென்ற ஆர்வம் எனக்குள் வளர்ந்தது" பட மூலாதாரம்,CLAYTON DAMASCENO படக்குறிப்பு, தனது பயணம் பிறருக்கு உந்துசக்தியாக இருக்கும் என ஃபாரியஸ் நம்புகிறார் தினசரி வாழ்க்கை மீது அதிகரித்த அதிருப்தியின் விளைவாக, தனது வேலையை விட்டுவிட்டு, விளையாட்டுத் துறை சார்ந்த ஒரு சவால் மீது கவனம் செலுத்த வேண்டுமென அவர் முடிவெடுத்தார். "வாழ்வில், செய்துகொண்டிருந்த அனைத்தையும் அப்படியே நிறுத்திவிட்டு, 'நான் இதற்காகத்தான் பிறந்திருக்கிறேனா? திரும்பத் திரும்ப 35 -40 வருடங்கள் இதையே செய்வதற்காகத்தான் நான் பிறந்தேனா?' என்று என்னைச் சிந்திக்க வைத்த ஒரு தருணம் வந்தது," என ஹுகோ பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறினார். ஹூகோ, "18 வயதாகும் முன்பே நமக்கான தொழிலைத் தேர்ந்தெடுக்க, நிலைத்தன்மையைத் தேட, ஒரு குடும்பத்தை உருவாக்க, ஓய்வு காலத்திற்குத் தயாராக வேண்டுமென்று மிக இளைய வயதில் இருந்தே நாம் கற்றுக்கொள்கிறோம்." "இந்த நிலையில், மக்களை வித்தியாசமான முறையில் ஊக்குவிக்க வேண்டுமென்றும், அதற்கு என்னால் ஏதாவது செய்ய முடியும் என்றும் எண்ணத் தொடங்கினேன்." அறிவியல்ரீதியான பங்களிப்பு பட மூலாதாரம்,HANDOUT படக்குறிப்பு, சாவ் பாலோசாவ் பாலோ ஹார்ட் இன்ஸ்டிடியூட் இன்கோர் என்ற நிறுவனத்தைச் சேர்ந்த இதயவியல் நிபுணர்கள் ஹூகோ ஃபாரியஸின் இதய செயல்பாட்டைக் கண்காணித்தனர் கடந்த 1984இல் தெற்கு அட்லான்டிக்கை படகில் கடந்த பிரேசில் படகோட்டி ஏமிர் கிளின்க் தனக்கு உத்வேகமாக இருந்ததாக ஹூகோ கூறுகிறார். "ஆனால் அவரைப் போல படகோட்டுவதற்குப் பதிலாக நான் ஓடுவேன்," என்று அவர் முடிவெடுத்தார். அவர் தனது முத்திரையைப் பதிக்க விரும்பினார், எனவே இதற்கு முன் செய்யப்படாத ஒரு சவாலை அவர் தேடினார். பெல்ஜிய தடகள வீரர் ஸ்டெஃபான் எங்கெல்ஸ் ஏற்கெனவே ஒரு வருடத்தில் 365 மாரத்தான்களை ஓடியிருக்கிறார் என்பதை அறிந்த அவர், அதைவிட ஒரு நாள் கூடுதலாக மாரத்தான் ஓடத் திட்டமிட்டார். பயணம், பயிற்சி மற்றும் பல தொழில்முறை வல்லுநர்களின் உதவியை உள்ளடக்கிய விரிவான செயல் திட்டத்தை ஹூகோ எட்டு மாதங்களில் வடிவமைத்தார். "என்னால் இதைத் தனியாகச் செய்ய முடியாது என்று தெரியும். மருத்துவர்கள், பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்ட் உள்ளிட்ட தொழில்முறை வல்லுநர்கள், மற்றும் மனநல நிபுணர் உள்படப் பல்துறை நிபுணர்கள் கொண்ட ஒரு குழுவை உருவாக்கினேன்," என்கிறார் அவர். "நன்கு நிறுவப்பட்ட ஒரு தொழில் வாழ்க்கையை முற்றிலும் நிச்சயமற்ற ஒன்றுக்காக மாற்றிக்கொண்டேன். எனவே இது கவலை மற்றும் பாதுகாப்பின்மையை உருவாக்குகிறது. எனவே மனபாரத்தைக் குறைத்து குறிக்கோள் மீது கவனம் செலுத்த இந்தக் கோணத்தைப் பற்றிய புரிதல் கொண்ட ஒரு தொழில்முறை நிபுணர் இருப்பது அவசியம். தனது முயற்சியில் பங்கேற்க அவர் அழைப்பு விடுத்த தொழில்முறை அமைப்புகளில் ஒன்றுதான் சாவ் பாலோ ஹார்ட் இன்ஸ்டிடியூட் இன்கோர். "எனது இதயம் இந்த சவாலுக்கு எப்படி எதிர்வினையாற்றுகிறது - அளவில் பெரிதாகுமா அல்லது சிறியதாகுமா, அரித்மியா(சீரற்ற இதயத் துடிப்பு) ஏற்படுமா அல்லது வேறு ஏதேனும் மாற்றங்கள் ஏற்படுகிறதா - என்பதை ஆய்வு செய்ய என்னுடன் இணைந்து பணியாற்ற முடியுமா என்று அந்த நிறுவனத்தின் இதயவியல் நிபுணர்களிடம் கேட்டேன்." "ஏனெனில், இதன்மூலம் நான் அறிவியலுக்கும் பங்களிப்பு செய்ய விரும்பினேன்." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் இதயவியல் நிபுணர் மற்றும் ஆய்வாளரான மரியா ஜானியேர் ஆல்வ்ஸ் இந்த ஆய்வில் பங்கேற்றார். "இது இதற்கு முன் யாரும் செய்யாத ஒன்று. இதயத்தின் மீது குறிப்பிடத்தக்க தாக்கத்தை இது ஏற்படுத்தக்கூடும்," என விளக்குகிறார் அவர். ஹூகோ "இதயநோய் அபாயம் இல்லாமல்" சவாலை முடிக்கும் வகையில் விஞ்ஞானிகள் "தீவிரமற்ற அளவுகளை முக்கியமாகக் கொண்டு" அவருக்கான வரம்புகளை நிர்ணயம் செய்தனர். ஹூகோ, மாதந்தோறும் எர்கோஸ்பைரோமெட்ரி (உடற்பயிற்சியின் போது ஒரு நபரின் சுவாசம் மற்றும் வளர்சிதை மாற்றச் செயல்பாடுகளை மதிப்பிடப் பயன்படுத்தப்படும் ஒரு முறை) மற்றும் மூன்று மாதங்களுக்கு ஒருமுறை ஈ.சி.ஜி) சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டார். "பெரிய அளவிலும், நுண்ணிய அளவிலும் இதயத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிப்பது மற்றும் உடல் பயிற்சியால் ஏற்படும் ஒழுங்கின்மை, தகவமைப்பு அல்லது தவறான தகவமைப்பு ஆகியவற்றின் அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அவற்றைக் கவனிப்பது இதன் நோக்கமாக இருந்தது," என்று மருத்துவர் ஆல்வ்ஸ் கூறினார். 'பாதுகாப்பு மணடலம்' பட மூலாதாரம்,DÓKIMOS PRODUÇÕES படக்குறிப்பு, ஹூகோ ஃபாரியஸ் உடலின் மீதான அழுத்தத்தால் அவருக்கு காயங்கள் ஏற்படாமல் இல்லை இந்த சவாலை ஹுகோ 2023, ஆகஸ்ட் 28ஆம் தேதி நிறைவு செய்தார். மொத்தமாக, 15,569 கி.மீ ஓடி முடிப்பதற்கு அவருக்கு சுமார் 1,590 மணிநேரம் எடுத்தது. இந்தச் சாதனை அவருக்கு ஒரு கின்னஸ் உலக சாதனையைப் பெற்றுத் தந்தது. நாளின் எஞ்சிய பகுதியைத் தனது குடும்பத்துடன் நேரம் செலவிடவும், உடல் ஓட்டத்தால் ஏற்பட்ட அழுத்தத்தில் இருந்து மீள்வதற்கும், தசைகளை வலுப்படுத்துவதற்கான பயிற்சிகளைச் செய்வதிலும் கவனம் செலுத்த வசதியாக இரு குழந்தைகளின் தந்தையான இவர் எப்போதும் காலை நேரத்திலேயே ஒடினார். அதே போல் அவர் எப்போதும் சாவ் பாலோ மாகாணத்தில் உள்ள அமெரிக்கானா நகரில் கிட்டத்தட்ட ஒரே பாதையிலேயே ஓடினார். உடற்பயிற்சியின் கால இடைவேளை மற்றும் அளவு அதிகம் இருந்தபோது இதய தசை பாதிப்புக்கான எந்த அறிகுறியும் இல்லை என்று அறிவியல் இதழான அர்கிவோஸ் பிரேசிலிரோஸ் டி கார்டியோலோஜியாவில் (Arquivos Brasileiros de Cardiologia) வெளியிடப்பட்ட இந்த ஆய்வு முடிவு செய்தது. எந்த இதய தசை மாற்றமும் பெரும்பாலும் இயற்கையான, ஆரோக்கியமான உடலியல் ரீதியானவையாக இருந்ததுடன் எந்த நோயின் அறிகுறியாகவும் இருக்கவில்லை. "எல்லாவற்றுக்கும் மேலாக, விளையாட்டுப் பயிற்சியின் தீவிரம் மிதமாக இருக்கும் வரை அதிக அளவு விளையாட்டுப் பயிற்சிகளுக்கு ஏற்ப இதயம் தன்னைத் தகவமைத்துக் கொள்வது சாத்தியம் என்பதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது," என்கிறார் மருத்துவர் ஆல்வ்ஸ். "குறிப்பிட்ட வரம்புகள் இருந்தாலும், பயிற்சிகளுக்கு இடையில் உடல் சீராவதற்குப் போதிய அவகாசம் இருந்தால் பயிற்சி பெற்ற ஒரு வீரரின் இதயத்தால், மிகத் தீவிர அழுத்தத்தைப் பொறுத்துக் கொள்ள முடியும் என்ற கருத்தை இது வலுப்படுத்துகிறது" என இந்த ஆய்வுடன் தொடர்பில்லாத விளையாட்டு இதயவியல் நிபுணர் ஃபிலிப்போ சாவியோலி பிபிசியிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,DÓKIMOS PRODUÇÕES படக்குறிப்பு, ஃபாரியஸ் தனது இதயத்திற்கு எந்த பாதிப்பும் இல்லாமல் சவாலை நிறைவு செய்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர் சராசரியாக 140 பிபிஎம் (ஒரு நிமிடத்திற்கான இதயத் துடிப்பு எண்ணிக்கை) என்ற இதயத் துடிப்புடன் ஹூகோ மிதமான தீவிரத்தில் ஓடினார். இது அவரது வயதிற்கு எதிர்பார்க்கப்படும் அதிகபட்ச இதயத் துடிப்பில் சுமார் 70-80% ஆகும் என்று ஃபிலிப்போ சாவியோலி கூறினார். "ஆக்ஸிஜன் பயன்பாட்டையும் ஆற்றல் உற்பத்தியையும் சமநிலையில் வைத்திருக்க வல்ல ஒரு பாதுகாப்பான வரம்புக்குள் இது அவரை வைத்திருந்தது," என்று அவர் விளக்கினார். மருத்துவர் சாவியோலியின் கூற்றுப்படி, "நீண்டநேர தினசரி உடற்பயிற்சியின் போதும்கூட இந்த வரம்புக்குள் ஓடுவது இதயத்திற்கு ஏற்படும் பாதிப்புகளான வீக்கம், வடு அல்லது அரித்மியா போன்றவை ஏற்படுவதற்கான ஆபத்தைக் குறைக்கிறது." ஹூகோ இந்த சவாலை அதீத தீவிரத்தில் மேற்கொண்டிருந்தால், அதன் விளைவுகள் தீங்கு விளைவிக்கக் கூடியவையாக இருந்திருக்கும் என்று சுட்டிக்காட்டும் அவர், போதிய பயிற்சி அல்லது மருத்துவ கண்காணிப்பு இல்லாமல் இத்தகைய சவாலை மேற்கொள்வது ஆபத்தானது என்றும் எச்சரித்தார். "இதிலுள்ள அபாயம் கணிசமானது மற்றும் அறிவுறுத்தத்தக்கது அல்ல," என்றார் அவர். "உரிய தயாரிப்பு இல்லாமல் இதைச் செய்தால், அரித்மியா, வீக்கம் அல்லது திடீர் இறப்புகூட ஏற்பட வாய்ப்பு உள்ளது" என்றும் அவர் எச்சரித்தார். 'உங்கள் திறன் மீது நம்பிக்கை கொள்ளுங்கள்' ஹூகோவை பொறுத்தவரை ஆய்வின் முடிவு ஒரு வரவேற்கத்தக்க ஆச்சர்யமாக இருந்தது. "நான் என் வாழ்வில் அடைய முடியும் என கற்பனைகூடச் செய்திராத உடல் தகுதியை எட்டினேன். அதிலும், பின்விளைவுகள் ஏதும் இல்லை என்பதைக் கவனிக்க வேண்டியது மிகவும் முக்கியம்" என்றார். ஆனால் அந்த சவால் அபாயங்கள் இல்லாததாக இருக்கவில்லை. "குளிர், வெயில், மழை, போக்குவரத்து, காயம் என நான் அனைத்து விதமான ஆபத்துகளையும் எதிர்கொண்டேன்" என்கிறார் அவர். அவர் மூன்றுமுறை வயிற்றுப்போக்கை தாங்கிக்கொள்ள நேர்ந்தது. அதில் மிக மோசமான வயிற்றுப் போக்கு ஐந்து நாட்களுக்கு நீடித்தது. "நான் 4 கிலோ எடை இழந்தேன், என் உணவு மற்றும் தண்ணீர் உட்கொள்ளும் முறையைச் சீரமைத்துக்கொள்ள வேண்டியிருந்தது. ஆனால் நாங்கள் தொடர்ந்து கொண்டிருந்தோம்." தனது 120வது மாரத்தானை ஓடிய நேரத்தில், நெடுந்தூர ஓட்டப் பந்தய வீரர்கள் மத்தியில் பொதுவாகக் காணப்படும் பிளான்டர் ஃபாஸியிடிஸ் (Plantar fasciitis) எனப்படும் கால் பாதத்தின் அடிப்பகுதியில் வலியை ஏற்படுத்தும் வீக்கத்தால் அவர் பாதிக்கப்பட்டார். பின்னர் தனது 140ஆவது மாரத்தானை ஒட்டிய கட்டத்தில் கீழ்வயிறு மற்றும் உள் தொடையில் உள்ள தசைநார்கள் மற்றும் தசைகளைப் பாதிக்கும் புபால்ஜியா (Pubalgia) அல்லது விளையாட்டால் ஏற்படும் ஹெர்னியா எனப்படும் இடுப்புக்குக் கீழ் பகுதியில் ஏற்படும் காயத்தால் பாதிக்கப்பட்டார். பட மூலாதாரம்,DÓKIMOS PRODUÇÕES படக்குறிப்பு, ஃபாரியஸ் தனது 366ஆவது மாரத்தானின் இறுதிக் கட்டத்தை தனது குடும்பதினருடன் சேர்ந்து கடந்தார் அதன் பின்னர் ஹூகோ அந்த அனுபவம் குறித்து ஒரு புத்தகத்தை எழுதினார். அத்துடன் அவர் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார். அவரது அடுத்த சவால், அமெரிக்க கண்டங்களின் முழு நீளத்தையும் - அலாஸ்காவில் உள்ள ப்ரூதோ பே (Prudhoe Bay) முதல் அர்ஜென்டினாவில் உள்ள உஷுவையா (Ushuaia) வரை - ஓடி முடிக்கும் முதல் மனிதராக வேண்டும் என்பதுதான். "உடல் உழைப்பின் நன்மைகள் குறித்தும் மனிதர்கள் அற்புதமான விஷயங்களைச் செய்யக் கூடியவர்கள் என்பது குறித்தும் உலகளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம்," என்று அவர் கூறினார். "யாரும் தினசரி மாரத்தான் ஓட வேண்டிய தேவை இல்லை. ஆனால் அனைவரும் தங்கள் திறன் மீது உண்மையாக நம்பிக்கை கொள்ள வேண்டும்" என்கிறார் ஹூகோ. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8xv9n29gkro
  24. 09 JUL, 2025 | 12:41 PM போபால்: ஆசியாவின் மிக வயதான யானையான 'வத்சலா', நேற்று (செவ்வாய்க்கிழமை) மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் உயிரிழந்தது. அந்த யானைக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. ஆசியாவின் மிகவும் வயதான பெண் யானையான ‘வத்சலா’ பல ஆண்டுகளாக, பன்னா புலிகள் காப்பகத்தில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் அடையாளமாக இருந்தது. மிகவும் வயதான யானையாக இருந்ததால், அது காப்பகத்தில் உள்ள மற்ற யானைகள் குழு அனைத்தையும் வழிநடத்தியது. காப்பகத்தில் உள்ள மற்ற பெண் யானைகள் குட்டிகளைப் ஈன்றெடுக்கும் போது, ‘வத்சலா’ ஒரு பாட்டி போல செயல்பட்டு குட்டிகளை கவனித்துக்கொண்டது என பன்னா புலிகள் காப்பகம் தெரிவித்துள்ளது. வத்சலா யானையின் முன் கால்களின் நகங்களில் ஏற்பட்ட காயங்கள் காரணமாக, காப்புக்காட்டின் ஹினௌடா பகுதியில் உள்ள கைரையன் வடிகால் அருகே எழுந்து நடக்க இயலாமல் படுத்துக் கொண்டது. வனத்துறை ஊழியர்கள் இந்த யானையை தூக்க நிறைய முயற்சிகள் மேற்கொண்டனர். ஆனால் வத்சலா யானை நேற்று பிற்பகலில் உயிரிழந்தது. வயது முதிர்வு காரணமாக, சமீப காலமாக இந்த யானை பார்வையை இழந்ததால், அதனால் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை என புலிகள் காப்பகம் தெரிவித்தது. வத்சலா யானைக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, ம.பி முதல்வர் மோகன் யாதவ் தனது எக்ஸ் பதிவில், "'வத்சலாவின்' நூற்றாண்டு கால தோழமை முடிவுக்கு வந்தது. இன்று (நேற்று) மதியம், 'வத்சலா' பன்னா புலிகள் காப்பகத்தில் தனது இறுதி மூச்சை நிறுத்திக்கொண்டது. அது வெறும் யானை அல்ல; அவள் நம் காடுகளின் அமைதியான பாதுகாவலர், தலைமுறைகளுக்கு ஒரு தோழி, மத்தியப் பிரதேசத்தின் உணர்ச்சிகளின் சின்னம். புலிகள் காப்பகத்தின் இந்த அன்பான உறுப்பினர் தனது கண்களில் அனுபவங்களின் கடலையும், கைகளில் அரவணைப்பையும் சுமந்து வாழ்ந்தார். வத்சலா இன்று நம்மிடையே இல்லை என்றாலும், அவளுடைய நினைவுகள் நம் மண்ணிலும் இதயங்களிலும் என்றென்றும் வாழும். 'வத்சலா'வுக்கு பணிவான அஞ்சலிகள்!" என்று கூறினார். https://www.virakesari.lk/article/219563
  25. போராட்டக்காரர்களை கொல்ல உத்தரவிட்ட ஷேக் ஹசீனா – வெளியான ஆடியோ பதிவு கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி, வங்கதேசத்தில் மாணவர்கள் சூரையாடியதாகக் கூறப்பட்ட மெட்ரோ ரயில் நிலையத்தை ஷேக் ஹசீனா பார்வையிட்டபோது... கட்டுரை தகவல் கிறிஸ்டோபர் கில்ஸ், ரித்தி ஜா, ரஃபித் ஹுசைன் & தாரேகுஸ்ஸமன் ஷிமுல் பிபிசி ஐ புலனாய்வு பிரிவு & பிபிசி வங்க மொழி சேவை 10 ஜூலை 2025, 05:27 GMT கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு எதிராக கொடிய அடக்குமுறையைக் கையாள அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா அனுமதி அளித்ததாக, அவரது தொலைபேசி அழைப்புகளில் ஒன்றின் ஆடியோ பதிவு காட்டுகிறது. இந்த ஆடியோ பதிவு பிபிசி ஐ குழுவினரால் சரிபார்க்கப்பட்டது. கடந்த மார்ச் மாதம் இணையத்தில் கசிந்த இந்த ஆடியோவில், போராட்டக்காரர்களுக்கு எதிராக "கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்த" தனது பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரம் அளித்திருப்பதாகவும், "அவர்களை எங்கு கண்டாலும் பாதுகாப்புப் படையினர் சுடுவார்கள்" என்றும் ஹசீனா கூறுகிறார். இந்த ஆடியோ பதிவை வங்கதேசத்தில் உள்ள வழக்கறிஞர்கள் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். அவர் வங்கதேசத்தில் இல்லையென்றாலும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார். கடந்த ஆண்டு கோடையில் ஏற்பட்ட அரசுக்கு எதிரான போராட்டத்தில் 1,400 பேர் வரை உயிரிழந்ததாக ஐ.நா. புலனாய்வாளார்கள் தெரிவிக்கின்றனர். இந்தியாவுக்கு தப்பிச் சென்ற ஷேக் ஹசீனா மட்டுமின்றி அவரது கட்சியும், ஹசீனாவுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கின்றனர். ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் செய்தித் தொடர்பாளர், "அவர் சட்டவிரோதமாக எதையும் செய்யத் திட்டமிட்டதாகவோ அல்லது கடுமையாக பதிலளித்ததாகவோ" ஆடியோவில் காட்டப்படவில்லை என்று கூறி, குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். ஷேக் ஹசீனாவின் ஆடியோ பதிவு குறித்த பின்னணி கடந்த ஆண்டு கோடையில் அரசாங்கத்தை எதிர்த்து வீதிகளில் போராடிய போராட்டக்காரர்களைச் சுடுவதற்கு அவர் நேரடியாக அனுமதி அளித்தமைக்கான மிக முக்கியமான சான்றாக, ஷேக் ஹசீனா அடையாளம் தெரியாத மூத்த அரசு அதிகாரி ஒருவருடன் பேசியதாக வெளியான ஆடியோ பதிவு இருக்கிறது. கடந்த 1971ஆம் ஆண்டு சுதந்திரப் போரில் போராடியவர்களின் உறவினர்களுக்கான அரசுப்பணி இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஹசீனாவை பதவியில் இருந்து நீக்கிய ஒரு வெகுஜன இயக்கமாக உருவெடுத்தது. 1971 போருக்குப் பிறகு வங்கதேசம் கண்ட மிக மோசமான வன்முறைப் போராட்டம் இது. கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று, டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனாவின் வீட்டை மக்கள் கூட்டம் முற்றுகையிட்டது. அதற்கு முன்பு, அவர் ஹெலிகாப்டரில் தப்பினார். அன்றைய தினத்தில், மிக மோசமான வன்முறைச் சம்பவங்களில் சில நிகழ்ந்தன. பிபிசி உலக சேவை மேற்கொண்ட விசாரணையில், வங்கதேச தலைநகரில் போராட்டக்காரர்களை போலீசார் கொன்றது பற்றிய புதிய தகவல்கலைக் கண்டறிந்தது. இதில், முன்னர் அறியப்பட்டதைவிட அதிக அளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலும் அடங்கும். தற்போது கசிந்துள்ள ஆடியோ குறித்த தகவலறிந்த நபர் ஒருவர் பிபிசியிடம் பேசியபோது, அந்த உரையாடல் ஜூலை 18ஆம் தேதி நடந்ததாகவும், அதன்போது ஹசீனா டாக்காவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்ததாகவும் கூறினார். வங்கதேசத்தின் போராட்டத்தில் அதுவொரு முக்கியமான தருணமாக இருந்தது. போராட்டக்காரர்களை போலீசார் கொல்லும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் மீது பொதுமக்கள் சீற்றம் கொண்டு எதிர்வினையாற்றினர். ஹசீனாவின் தொலைபேசி அழைப்புக்குப் பிறகு சில நாட்களில், டாக்கா முழுவதும் ராணுவ பாணியிலான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக பிபிசி பார்த்த போலீஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன. ஆடியோ உண்மை என்பதை உறுதி செய்த பிபிசி பட மூலாதாரம்,AFP பிபிசி ஆய்வு செய்த ஆடியோ பதிவு, ஷேக் ஹசீனா சம்பந்தப்பட்ட பல தொலைபேசி அழைப்புகளில் ஒன்று. இந்த அழைப்புகள், தகவல் தொடர்புகளைச் சரிபார்த்துக் கண்காணிக்கும் வங்கதேசத்தில் உள்ள ஓர் அரசு நிறுவனமான தேசிய தொலைத்தொடர்பு கண்காணிப்பு மையத்தால் பதிவு செய்யப்பட்டன. இந்தத் தொலைபேசி அழைப்பின் ஆடியோ இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் கசிந்தது. ஆனால், யாரால் இது இணையத்தில் கசிந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. போராட்டங்களுக்குப் பிறகு, ஹசீனாவின் தொலைபேசி அழைப்புகளின் ஏராளமான பதிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றில் பல சரிபார்க்கப்படவில்லை. ஜூலை 18ஆம் தேதியன்று பதிவான தொலைபேசி உரையாடல், ஷேக் ஹசீனாவின் குரல் தொடர்பான அறியப்பட்ட ஆடியோ பதிவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது. வங்கதேச காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை, அந்தப் பதிவில் உள்ள குரல் அவரது குரலுடன் ஒத்துப் போவதை உறுதி செய்தது. ஆடியோ தடயவியல் நிபுணர்களான இயர்ஷாட்டுடன் பதிவை பகிர்ந்துகொண்டதன் மூலம் பிபிசி தனது சுயாதீன பகுப்பாய்வை மேற்கொண்டது. அவர்கள் இந்த உரையாடல் திருத்தப்பட்டதற்கோ அல்லது மாற்றப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்றும், அது செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறினர். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த ஆடியோ பதிவு ஓர் அறையில், ஸ்பீக்கரில் பேசப்பட்டிருக்கலாம் என்று இயர்ஷாட் நிபுணர்கள் கூறினர். தனித்துவமான தொலைபேசி ஒலி அதிர்வெண்கள் மற்றும் பின்னணி இரைச்சல் காரணமாக அவர்களால் அதை அறிய முடிந்தது. ஆடியோ பதிவு முழுவதும் இருந்த மின்சார நெட்வொர்க் அதிர்வெண் ஒன்றை இயர்ஷாட் நிபுணர்கள் அடையாளம் கண்டனர். உரையாடலைப் பதிவு செய்யும் சாதனங்கள் மின் சாதனங்களில் இருந்து சிக்னல்களை எடுக்கும்போது இது நிகழ்கிறது. இது அந்த ஆடியோ பதிவு உண்மையான மற்றும் திருத்தப்படவில்லை என்பதற்கான அறிகுறியாக உள்ளது. ஷேக் ஹசீனாவின் உரையாடலில் உள்ள, ரிதம், ஒலிப்பு முறை, சுவாச ஒலிகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்து, நிலையான இரைச்சல்களை அடையாளம் கண்டதன் மூலம், ஆடியோ செயற்கையாக மாற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று இயர்ஷாட் நிபுணர்கள் கண்டறிந்தனர். "இந்த ஆடியோ பதிவுகள், ஷேக் ஹசீனாவின் பங்கை நிறுவுவதற்கு மிக முக்கியமானவை. அவை தெளிவாக உள்ளன, முறையாக அவரால் நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன." என்று பிரிட்டிஷ் சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞர் டோபி கேட்மேன் பிபிசியிடம் கூறினார். ஷேக் ஹசீனா மற்றும் பிறருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமான வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்திற்கு கேட்மேன் ஆலோசனை வழங்கி வருகிறார். அவாமி லீக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்துப் பேசுகையில், "பிபிசி குறிப்பிடும் ஆடியோ பதிவு உண்மையானதா என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியாது" என்று தெரிவித்தார். வங்கதேச வரலாற்றில் மிகக் கொடூரமான போலீஸ் வன்முறை பட மூலாதாரம்,GETTY IMAGES ஷேக் ஹசீனாவுடன், முன்னாள் அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளும் போராட்டக்காரர்களின் கொலைகளில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 203 பேர் மீது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் 73 பேர் காவலில் உள்ளனர். பிபிசி ஐ புலனாய்வுக் குழு, 36 நாட்களில் போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறை தாக்குதல்களை விவரிக்கும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைப் பகுப்பாய்வு செய்து சரிபார்த்தது. தலைநகர் டாக்காவின் பரபரப்பான ஜத்ராபரியில் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று நடந்த ஒரு சம்பவத்தில், குறைந்தது 52 பேர் போலீசாரால் கொல்லப்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டது. இது வங்கதேசத்தின் வரலாற்றில் மிக மோசமான போலீஸ் வன்முறைச் சம்பவங்களில் ஒன்று. அந்த நேரத்தில் வெளியிடப்பட்ட ஆரம்பக்கட்ட அறிக்கைகள் ஜத்ராபரியில் அன்று 30 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தன. இந்தப் படுகொலை எவ்வாறு தொடங்கியது, முடிந்தது என்பது பற்றிய புதிய விவரங்களை பிபிசி புலனாய்வு வெளிப்படுத்தியது. நேரில் கண்ட சாட்சிகள் விவரித்த காட்சிகள், சிசிடிவி பதிவுகள், டிரோன் படங்களைச் சேகரித்ததன் மூலம், போராட்டக்காரர்களிடம் இருந்து போலீசாரை பிரித்துவிட்ட ராணுவ வீரர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறிய உடனே போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதை பிபிசி ஐ புலனாய்வு உறுதி செய்தது. சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக, சந்துகள், நெடுஞ்சாலையில் தப்பிச் செல்ல முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு முன்பு காவல்துறை அதிகாரிகள் அருகிலுள்ள ராணுவ முகாமில் தஞ்சம் புகுந்தனர். சில மணிநேரங்களுக்குப் பிறகு போராட்டக்காரர்கள் பதிலடி கொடுத்ததில், குறைந்தது ஆறு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஜத்ராபரி காவல் நிலையத்திற்குத் தீ வைக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடந்த வன்முறைச் சம்வபங்களில் ஈடுபட்டதற்காக 60 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக வங்கதேச காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார். "அப்போதைய காவல்துறையின் சில அதிகாரிகள் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தியதால் வருந்தத்தக்க சம்பவங்கள் நடந்தன. வங்கதேச காவல்துறை முழுமையான, பாரபட்சமற்ற விசாரணைகளைத் தொடங்கியுள்ளது" என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். ஷேக் ஹசீனா மீதான குற்றவியல் விசாரணை பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் தீ வைத்ததைத் தொடர்ந்து, எரிந்த நிலையில் இருந்த ஜத்ராபரி காவல் நிலையத்தைக் காண மக்கள் திரண்டனர் ஷேக் ஹசீனாவின் விசாரணை கடந்த மாதம் தொடங்கியது. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்கு எதிரான வன்முறையை ஏற்படுத்துதல், தூண்டுதல், சதித்திட்டம் தீட்டுதல், படுகொலைகளைத் தடுக்கத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகள் அடங்கும். ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை இந்தியா இதுவரை நிறைவேற்றவில்லை. விசாரணைக்காக ஹசீனா வங்கதேசத்திற்குத் திரும்புவது சாத்தியமில்லை என்று டோபி காட்மேன் கூறுகிறார். போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்புப் படையின் செயல்களுக்கு அதன் தலைவர்கள் பொறுப்பல்ல என்று அவாமி லீக் கூறுகிறது. பிரதமர் உள்பட அதன் உயர்மட்டத் தலைவர்கள் சிலர் மக்கள் கூட்டத்திற்கு எதிராக கொடிய பலத்தைப் பயன்படுத்துவதில் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டதாகவோ அல்லது அதற்கு உத்தரவிட்டதாகவோ கூறப்படும் கூற்றுகளை அவாமி லீக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் முற்றிலும் மறுத்துள்ளார். "மூத்த அரசு அதிகாரிகளால் எடுக்கப்பட்ட முடிவுகள் நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்டவை மற்றும் உயிரிழப்பைக் குறைக்கும் நோக்கம் கொண்டவை," என்றும் அவர் தெரிவித்தார். ஷேக் ஹசீனா மற்றும் அவரது அரசின் நடவடிக்கைகள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாக இருக்கலாம் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்களைக் கண்டறிந்ததாகக் கூறும் ஐ.நா புலனாய்வாளர்களின் கண்டுபிடிப்புகளை அவாமி லீக் கட்சி நிராகரித்துள்ளது. இதுகுறித்து கருத்து கேட்க வங்கதேச ராணுவத்தை பிபிசி அணுகியது. ஆனால், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் வங்கதேசத்தை நிர்வகித்து வருகிறது. அவரது அரசாங்கம் தேசிய அளவிலான தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. அவாமி லீக் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8xv9vjzllvo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.