Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. 'முதல்வர் வேட்பாளராக பழனிசாமி பெயரை குறிப்பிடாத மோதி' - மதுராந்தகம் பொதுக் கூட்டத்தில் என்ன நடந்தது? பட மூலாதாரம்,@EPSTamilNadu கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 24 ஜனவரி 2026, 02:52 GMT தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருக்கும் நிலையில், பிரதமர் நரேந்திர மோதி கலந்துகொண்ட மிகப் பெரிய கூட்டத்தை சென்னைக்கு அருகில் உள்ள மதுராந்தகத்தில் நடத்தியிருக்கிறது தேசிய ஜனநாயகக் கூட்டணி. தி.மு.க. மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ள பிரதமர் மோதி, இரட்டை என்ஜின் அரசு பற்றியும் பேசியிருக்கிறார். ஆனால், முதலமைச்சராக எடப்பாடி கே. பழனிசாமியை குறிப்பிடவில்லை. பிரதமர் கலந்துகொண்ட இந்தக் கூட்டம் தே.ஜ.கூட்டணிக்கு உற்சாகமூட்டியிருக்கிறதா? எதிரும் புதிருமாக இருந்த அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் டிடிவி தினகரனும் ஒரே மேடையில் பங்கேற்றது, தி.மு.க.வைக் கடுமையாகத் தாக்கி பிரதமர் பேசியது என கூட்டணிக்கு உற்சாகமூட்டக்கூடிய நிகழ்வுகள் இதில் அரங்கேறியிருக்கின்றன. ஆனால், தேர்தலில் கடும் போட்டியைக் கொடுக்க இதுமட்டும் போதுமா என்ற கேள்விகளும் இருக்கின்றன. தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இதுவரை இணைந்துள்ள கட்சிகள் பட மூலாதாரம்,@narendramodi அ.தி.மு.கவும் பா.ஜ.கவும் இணைந்து தேர்தலை சந்திக்கப் போவதாக அறிவித்த பிறகும், அந்தக் கூட்டணியில் பெரிய பரபரப்பு இல்லாமலேயே இருந்தது. இந்த நிலையில்தான் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோதியின் தலைமையில் தமிழ்நாட்டில் பொதுக்கூட்டம் நடக்கவிருக்கும் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து அரசியல் களத்தில் காட்சிகள் சூடுபிடித்தன. அ.தி.மு.க. கூட்டணிக்கு வரக்கூடிய சாத்தியமுள்ள அனைத்துக் கட்சிகளுடனும் பேச்சு வார்த்தைகள் துவங்கின. ஒரு கட்டத்தில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் சென்னையில் வந்து இறங்கி பேச்சுவார்த்தைகளைத் தீவிரப்படுத்தினார். முடிவில் பா.ம.கவும் டிடிவி தினகரனும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தனர். இவர்கள் தவிர, தமிழ் மாநில காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், புரட்சி பாரதம் ஆகியோரும் இந்தக் கூட்டணியை உறுதிசெய்திருந்தனர். 2019, 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம் கட்சி தற்போதுவரை இந்தக் கூட்டணியில் இடம்பெறவில்லை. "2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை அதிகாரபூர்வமாக யாரும் தங்களைக் கூட்டணிக்காக அணுகவில்லை; ஆகவே எந்தக் கூட்டணி என்பதை இன்னும் முடிவுசெய்யவில்லை" என்றும் அக்கட்சியின் தலைவர் கே. கிருஷ்ணசாமி கூறிவிட்டார். அதேபோல, பிரேமலதா விஜயகாந்த் தலைமையிலான தே.மு.தி.கவும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கப்போவதில்லை என்பதும் சில நாட்களுக்கு முன்பே தெளிவாகிவிட்டது. ஆகவே மதுராந்தகம் பொதுக்கூட்ட மேடையில் இந்தத் தலைவர்கள் படங்கள் இடம்பெறவில்லை. இருந்தபோதும் தேசிய ஜனநாயகக் கூட்டணி உற்சாகமடையும் வகையில் சில காட்சிகள் மதுராந்தகம் கூட்டத்தில் நடைபெற்றன. பியூஷ் கோயலுடன் நடந்த பேச்சுவார்த்தையை அடுத்து தே.ஜ. கூட்டணியில் இணைந்த டி.டி.வி. தினகரன், அதற்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசும்போது, "முதல்வர் வேட்பாளர் யார்? என செய்தியாளர்கள் கேட்டனர். "அது யார் என்பது எல்லோருக்கும் தெரியும்" என்று சொல்லி, எடப்பாடி கே. பழனிசாமி பெயரைச் சொல்வதை தவிர்த்தார் டிடிவி. ஆனால், இந்தப் பொதுக்கூட்டத்தில் இருவருமே மற்றவரின் பெயரை குறிப்பிட்டு பேசியது அங்கிருந்த தொண்டர்களை உற்சாகப்படுத்தியது. டிடிவி தினகரன் பேசும்போது ஒருபடி மேலேபோய், "பங்காளிச் சண்டையை மறந்துவிட்டு கூட்டணிக்கு வந்திருக்கிறாம்" என்று குறிப்பிட்டார். பிரதமர் பேசியது என்ன? பட மூலாதாரம்,@narendramodi கூட்டத்தில் பேசிய எடப்பாடி கே. பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், பிரதமர் நரேந்திர மோதி என அனைவருமே தி.மு.க. அரசை கடுமையாக தாக்கிப் பேசினர். பிரதமரின் நீண்ட உரையில், தி.மு.க. மீதான ஊழல் குற்றச்சாட்டுகள், தே.ஜ.கூவின் இரட்டை என்ஜின் அரசு, தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் ஆகிவற்றுக்கு முக்கியத்துவம் அளித்துப் பேசினார். "தி.மு.க. அரசின் கவுன்ட் டவுன் தொடங்கிவிட்டது. ஆட்சி செய்ய நீங்கள் தி.மு.கவுக்கு வாய்ப்பளித்தீர்கள். ஆனால், அவர்கள் தமிழக மக்களுக்கு நம்பிக்கை துரோகம் இழைத்துவிட்டார்கள். தி.மு.க. அரசை மக்கள் சிஎம்சி (CMC) அரசு என அழைக்கிறார்கள். சிஎம்சி என்றால், corruption (ஊழல்), mafia (மாபியா), Crime (க்ரைம்) ஆகியவற்றை ஆதரிக்கும் அரசாங்கம். தமிழக மக்கள் தி.மு.கவையும் சிஎம்சியையும் வேரோடு அகற்ற முடிவெத்துவிட்டார்கள். இங்கு பா.ஜ.க. தே.ஜ.கூவின் இரட்டை என்ஜின் அரசு அமைவது உறுதியாகிவிட்டது" என்று குறிப்பிட்டார் பிரதமர். மத்தியில் தே.ஜ.கூ ஆட்சி வந்த பிறகு தமிழகத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூடுதல் ரயில் திட்டங்கள் அளிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து தமிழ்நாட்டில் போதைப் பொருள் நடமாட்டம் பெருமளவில் இருப்பதாகவும் பெற்றோரின் கண்களுக்கு முன்பாகவே குழந்தைகள் நாசமாகிக் கொண்டிருப்பதாகவும் குறிப்பிட்டார் பிரதமர். பழனிசாமி- டிடிவி தினகரன் கூட்டணி பட மூலாதாரம்,PTI பொதுக்கூட்டம் முடிவடைந்து பிரதமர் மோதி புறப்பட்டவுடன், பியூஷ் கோயல், எடப்பாடி கே. பழனிசாமி, அன்புமணி ராமதாஸ், டிடிவி தினகரன் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அ.தி.மு.கவும் டிடிவி தினகரனின் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும் ஒரே கூட்டணியில் இடம்பெற்றது குறித்த கேள்விகளுக்கு எடப்பாடி கே. பழனிசாமியும் தினகரனும் அளித்த பதில்கள், இரு கட்சியின் தொண்டர்களுக்கும் உற்சாகம் அளிக்கும் வகையிலேயே இருந்தது. "இது எங்கள் குடும்பப் பிரச்னை. ஒரு கூட்டுக் குடும்பமாக இருந்தவர்களுக்குள் மனஸ்தாபம் ஏற்பட்டு பிரிந்திருந்தது உண்மை. அமித்ஷா 2021லேயே முயற்சி செய்தார். அப்போது நடக்கவில்லை. இப்போது அமித் ஷாவும் மோதியும் தி.மு.க. அரசை வீட்டிற்கு அனுப்ப எல்லோரும் ஒன்றிணைய வேண்டும் என்று சொன்னார்கள். இதெல்லாம் நடந்து இரண்டு, மூன்று மாதங்களாகிவிட்டன. இதற்கு எடப்பாடி கே. பழனிசாமி ஒப்புதல் அளித்த பிறகுதான் என்னை அழைத்துப் பேசினார்கள். 2017 ஏப்ரல் வரை எப்படியிருந்தோமோ அப்படி ஒன்றிணைந்துவிட்டோம்" என்றார் டிடிவி தினகரன். இருதரப்பும் கடுமையாக மோதிக் கொண்டிருந்த காலத்தில் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுகளை மாறிமாறி சுமத்திய நிலையில், அந்த வீடியோக்கள் தற்போதைய பிரசாரத்தில் பயன்படுத்தப்படலாமே என செய்தியாளர்கள் கேட்டபோது, அதற்கு எடப்பாடி கே. பழனிசாமி விரிவாகப் பதிலளித்தார். "வைகோ தி.மு.கவைப் பற்றியும் மு.க. ஸ்டாலினைப் பற்றியும் எவ்வளவு மோசமாகப் பேசினார். அதைப் பற்றி நீங்கள் கேட்பதில்லை. அதே வைகோ இப்போது மு.க. ஸ்டாலினோடு இணைந்துவிட்டார். அதற்கடுத்தபடியாக காங்கிரஸ். நெருக்கடி நிலையின்போது மிக மோசமாக சித்ரவதைக்கு உள்ளானோம் என்றது தி.மு.க. மேலும், அறிவாலயத்தின் மேல் தளத்தில் ரெய்டு நடந்தபோது கீழே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்தது. இருந்தபோதும் இருவரும் ஒன்றாக இணைந்துவிட்டார்கள். அந்த அளவுக்கு எங்களுக்குள் எந்த சங்கடமோ, மனவருத்தமோ கிடையாது" என்றார் எடப்பாடி கே. பழனிசாமி. "எடப்பாடி கே. பழனிசாமிக்கும் டிடிவிக்கும் இடையில் ஏற்பட்டிருக்கும் நல்லுறவு எல்லோருக்குமே ஆச்சரியமளிக்கிறது. அந்த அளவுக்கு வேகமாக எடப்பாடி பழனிசாமி டிடிவியை அரவணைத்துக் கொண்டார். இது உடல் ரீதியாகவும் மொழி ரீதியாகவும் வெளிப்பட்டது. இந்த அரவணைப்பு இரு கட்சியின் தொண்டர்களுக்குமே உற்சாகமளிக்கும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ். பி. லக்ஷ்மணன். 'இது ஒரு வழக்கமான கூட்டம் தான்' பட மூலாதாரம்,@narendramodi இதுபோன்ற தருணங்களைத் தவிர, இது ஒரு வழக்கமான கூட்டம்தான் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். மூத்த பத்திரிகையாளரான ஆர்.கே. ராதாகிருஷ்ணன், "மதுராந்தகம் கூட்டத்தில் பிரதமர் பேசியது ஒரு வழக்கமான பேச்சு. உள்ளடக்கம் குறைவாகவும் முழக்கங்கள் அதிகமாகவும் இருந்தன. பிரதமரின் உரை அங்கே கூடியிருந்த அவர்களுடைய தொண்டர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தலாம். ஆனால், கூட்டத்திற்கு வெளியில் இருந்தவர்களிடம் எந்த அளவுக்குத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது தெரியவில்லை." என்கிறார். "பேச்சு நெடுக, பா.ஜ.க. தலைமையிலான தே.ஜ.கூ. என்றே பிரதமர் குறிப்பிட்டதும் எடப்பாடி கே. பழனிசாமியின் பெயரை ஆரம்பத்தில் சொன்னதைத் தவிர்த்து வேறு எந்த இடத்திலும் சொல்லாததும் கவனிக்கத்தக்கதாக இருந்தது." என்று குறிப்பிடுகிறார் ராதாகிருஷ்ணன். அதேபோல, "மதுரையில் கட்டப்பட்டுவரும் எய்ம்ஸ் மருத்துவமனை இன்னமும் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியைப் புறக்கணித்துவிட்டு, எதிர்க்கட்சிகளைக் குற்றம்சாட்டுவது எந்த அளவுக்கு எடுபடும் எனத் தெரியவில்லை" என்கிறார் அவர். ஆனால், எஸ்.பி. லக்ஷ்மணனைப் பொறுத்தவரை, பிரதமர் ஒரு நல்வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டதாகக் குறிப்பிடுகிறார். "இந்தக் கூட்டணியை உருவாக்கியது அமித் ஷா. அதற்குப் பிந்தைய முதல் செய்தியாளர் சந்திப்பில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு தமிழ்நாட்டில் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி என்றும் தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோதி தலைவர் என்றும் குறிப்பிட்டார். ஆனால், தமிழ்நாட்டில் முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அவர் அறிவிக்கவில்லை. இப்போதுவரை அறிவிக்கவில்லை" என்கிறார். "தேர்தலுக்கு முன்பாக முதலமைச்சர் வேட்பாளரை அறிவிக்காமல் இருப்பது தேசிய அளவில் பா.ஜ.கவின் பாணியாக இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டில் கூட்டணிக்குத் தலைமை தாங்குவது அ.தி.மு.கதான். ஆகவே, அ.தி.மு.கவின் பாணியைத்தான் பின்பற்றியிருக்க வேண்டும். அப்படிச் செய்யவில்லை. அதைப் பற்றிக் கேட்கும்போது, தேர்தலில் வெற்றிபெறும்போது அ.தி.மு.கவிலிருந்து ஒருவர் முதல்வராவார் என்று தெரிவித்தார்கள். ஆனால், அதற்கு முன்பாகவே தன்னை முதலமைச்சர் வேட்பாளராக முன்னிறுத்தி 120 தொகுதிகளில் எடப்பாடி பிரசாரத்தை முடித்திருந்தார்." என்று கூறுகிறார் எஸ்.பி. லக்ஷ்மணன். தொடர்ந்து பேசிய அவர், "இன்று நடந்த பொதுக் கூட்டத்தைப் பொறுத்தவரை, கூட்டணி ஓரளவுக்கு வடிவம் பெற்றுவிட்ட நிலையில் நடந்த முதல் பிரசாரக் கூட்டம். இந்தக் கூட்டத்தில் யாரை வீழ்த்தப் போகிறோம், யாரை ஆட்சியில் அமர்த்தப் போகிறோம் என்பதை பிரதமர் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் அவர் எடப்பாடியின் பெயரையே சொல்லவில்லை. ஏன், அ.தி.மு.கவின் பெயரையே சொல்லவில்லை. தொடர்ந்து பா.ஜ.க - தே.ஜ.கூட்டணி என்றே குறிப்பிட்டார்." என்கிறார். இது பா.ஜ.க. தொண்டர்களுக்கு சந்தோஷமளிக்கலாம், ஆனால், அ.தி.மு.க. தொண்டர்களுக்கு அவ்வாறு இருக்காது எனக் குறிப்பிடும் எஸ்.பி. லக்ஷ்மணன், "தமிழ்நாட்டில் கூட்டணிக்கு தலைவர் எடப்பாடிதான். ஆகவே இங்கே அ.திமு.கவுக்குத்தான் முக்கியத்துவம் தர வேண்டும். இந்தப் போக்கை சரிசெய்வது அவசியம்" என்கிறார். முதலமைச்சர் கூறியது என்ன? இதற்கிடையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் பிரதமரின் பேச்சு குறித்து விமர்சனங்களை முன்வைத்திருக்கிறார். "ஒன்றிய பா.ஜ.க. அரசு ஏற்படுத்தி வரும் அத்தனை தடைகளையும் தகர்த்தெறிந்துதான் தமிழ்நாடு வரலாறு பேசும் வளர்ச்சியை அடைந்திருக்கிறது. கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க… நீங்கள் சொல்லும் "டபுள் எஞ்சின்" மாநிலங்களான உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம்,பிகாரை விட, தமிழ்நாடு, கேரளா, தெலங்கானா, கர்நாடகா, மேற்கு வங்கம் என உங்கள் "டப்பா எஞ்சின்" நுழையாத மாநிலங்கள்தான் வளர்ச்சியில் கொடிகட்டிப் பறக்குது. தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பா.ஜ.க. செய்யும் துரோகங்களை, நீங்கள் மறைத்தாலும் தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்" என 'இரட்டை என்ஜின்' என்ற பிரதமரின் முழக்கத்தை விமர்சித்திருக்கிறார் முதலமைச்சர். ஆனால், எல்லாவற்றையும் தாண்டி 2026ஆம் ஆண்டின் சட்டமன்றத் தேர்தல் களத்தை இந்தப் பொதுக்கூட்டம் சூடுபிடிக்க வைத்திருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c36837kzwl9o
  2. யாழில் ஆரம்பமான சர்வதேச சட்ட மாநாடு! 24 Jan, 2026 | 04:39 PM யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறை மற்றும் இந்தியாவின் பிரசித்தி பெற்ற சுரானா சட்ட நிறுவனம் ஆகியவை இணைந்து நடத்தும் '3வது யாழ்ப்பாண சர்வதேச சட்ட மாநாடு - 2026' சனிக்கிழமை (24) காலை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஹூவர் கலையரங்கில் ஆரம்பமானது. இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் விசேட அதிதியாகக் கலந்துக்கொண்டார். சுரானா சட்ட நிறுவனத்துடன் இணைந்து 2024ஆம் ஆண்டில் முதலாவது சட்ட மாநாட்டை நடத்திய யாழ். பல்கலைக்கழக சட்டத்துறை, 2025இல் இரண்டாவது மாநாட்டையும் வெற்றிகரமாக நடத்தியிருந்தது. அதன் தொடர்ச்சியாக, சர்வதேச சட்ட நிபுணர்களை இணைத்து மூன்றாவது முறையாக இம்முறை 2026 ஆம் ஆண்டிற்கான மாநாட்டை இன்றும் நாளையும் நடத்துகின்றது. இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமான இம்மாநாட்டின் முதல் நாள் அமர்வுகளில், நீதித்துறை மற்றும் நிர்வாகத் துறையின் உயர்மட்டப் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர். உயர்நீதிமன்ற நீதியரசர் சிதம்பரம்பிள்ளை துரைராஜா மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவர், நீதியரசர் ரோஹித்த அபேசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர். வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் சரண்யா ஹசந்தி உருகொடவத்தே திசாநாயக்க மற்றும் யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய் முரளி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சிறி சற்குணராஜா மற்றும் சட்டத்துறையின் தலைவர் கோசலை மதன், இவர்களுடன் சட்டத்துறை சார்ந்த விரிவுரையாளர்கள், சட்டத்தரணிகள், மாணவர்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரதிநிதிகள் எனப் பலரும் இதில் பங்கேற்றனர். https://www.virakesari.lk/article/236906
  3. ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு RIL Property PLC இனால் நிதி நன்கொடை 24 Jan, 2026 | 12:54 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான, அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு RIL Property PLC இனால் 10 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. அதற்கான காசோலையை RIL Property PLC இன் பிரதான செயற்பாட்டு அதிகாரி எம்.சி. விக்ரமசிங்க வெள்ளிக்கிழமை (23) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். இந்த நிகழ்வில் RIL Property PLC இன் பிரதான நிதி அதிகாரி டபிள்யூ. ஏ. இந்துனில் பெரேரா மற்றும் உதவி பராமரிப்பு பொறியியலாளர் கசுன் அனுரங்க ஆகியோரும் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/236889
  4. உயிரினை பறிக்கும் அதிகுளிர்!! நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் January 22, 2026 1 Minute 21/01/2026 அன்று இலங்கையின் வரலாற்றில் மிகக் குறைந்த வெப்பநிலை 3.5°C ஆக நுவரெலியாவில் பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. இதேவேளை பண்டாரவளையில் 11.5°C, பதுளையில் 15.2°C, அனுராதபுரத்தில் 18.6°C, யாழ்ப்பாணத்தில் 19.6 °C என வெப்பநிலை பதிவாகியுள்ளது. இவ்வாறு சூழல் வெப்பநிலை குறைவடையும் பொழுது அது மக்களுக்கு உயிராபத்தினை ஏற்படுத்தும் என்பது பலருக்கு தெரியாது. சூழல் வெப்பநிலை குறைவடையும் பொழுது எவ்வாறு உயிராபத்து நிகழுகின்றது என்பதை இப்பதிவு விளக்குகின்றது. சுற்றுச்சூழல் வெப்பநிலை மனிதர்களுக்கு மிகவும் முக்கியமானது, ஏனெனில் நமது உடல் சீராக இயங்குவதற்கும் உயிர்வாழ்வதற்கும் இதுவே அடிப்படை காரணியாகும். மனிதன் போன்ற பாலூட்டிகள் ஓர் சீர்த்திட வெப்பநிலைக்கு உரியவை. இதன் காரணமாக மனித உடல் எப்போதும் உடல் வெப்பநிலையை சுமார் 37°C (98.6°F) என்ற அளவில் நிலையாக வைத்திருக்க முயலும் . சூழல் வெப்பநிலை குறையும் பொழுது ஆரம்ப நிலையில் உடல் வெப்பநிலை மாறாமல் இருக்கும் ஆனால் சூழல் வெப்பநிலை குறித்த நிலையினை விட குறையும் பொழுது உடல் வெப்பநிலையும் குறையும் அதன் காரணமாக உடல் மாற்றங்கள் ஏற்பட்டு இறுதியாக இறப்பு ஏற்படும். உடல் வெப்பக்குறைவு (Hypothermia) ஏற்படுவதற்கு சுற்றுப்புற வெப்பநிலை உறைநிலைக்கு (0°C) கீழ் இருக்க வேண்டும் என்பதில்லை. 15°C (60°F) க்கும் குறைவான சுற்றுப்புற வெப்பநிலையிலேயே பாதிப்புகள் தொடங்கலாம். மேலும் உடல் வெப்பநிலை குறைவினால் ஏற்படும் மரணங்கள் கட்டாயம் பனி விழும் பிரதேசங்களில் தான் நடக்கும் என்றில்லை. ஆபத்தான சுற்று சூழல் வெப்பநிலை 10°C முதல் 15°C (50°F – 60°F): இது மிதமான குளிர் என்றாலும், மழையில் நனைந்தாலோ அல்லது பலத்த காற்று வீசினாலோ உடல் வெப்பம் வேகமாக குறையும். 0°C முதல் 5°C (32°F – 41°F): பெரும்பாலான நகரப்புற உயிரிழப்புகள் இந்த வெப்பநிலை வரம்பில்தான் நிகழ்கின்றன. நீண்ட நேரம் வெளியில் இருப்பது உயிருக்கு ஆபத்தானது. -15°C (5°F) க்குக் கீழே: இந்த வெப்பநிலையில் காற்றில் ஈரப்பதம் குறைவாக இருக்கும். இங்கு சருமம் நேரடியாகக் காற்றில் பட்டால் சில நிமிடங்களிலேயே உறைபனி காயம் (Frostbite) ஏற்படும். நீர் காற்றை விட 25 மடங்கு வேகமாக வெப்பத்தைக் கடத்தும் எனவே ஆபத்தான சுற்று சூழல் வெப்பநிலை நிலவும் காலங்களில் குளிர் நீரில் நீராடுவது அல்லது மழையில் நனைவது உடலுக்கு தீங்கானதாக மாறலாம். சுற்றுப்புற வெப்பநிலை அதிகமாக இருந்தாலும், காற்றின் வேகம் அதிகமாக இருந்தால் உடல் வெப்பம் மிக விரைவாக வெளியேறும். உதாரணமாக, சுற்று சூழல் வெப்பநிலை 5°Cஆக இருந்து, காற்றின் வேகம் மணிக்கு 30 கி.மீ ஆக இருந்தால், உங்கள் உடல் உணரக்கூடிய வெப்பநிலை -7°C ஆக இருக்கும். குறைந்த சூழல் வெப்பநிலைக்கு மனித உடல் வெளிக்காட்டிடப்படும் பொழுது ஏற்படும் மாற்றங்கள் 1. உடனடி உடல் எதிர்வினைகள்(Acute Responses) உடல் குளிர்ச்சியடையும் போது, வெப்பத்தைத் தக்கவைக்க இரண்டு முக்கிய தற்காப்பு நடவடிக்கைகளை எடுக்கிறது: இரத்த நாளச் சுருக்கம் (Vasoconstriction): தோலின் மேற்புறம் உள்ள இரத்த நாளங்கள் சுருங்குவதால், உட்புற உறுப்புகளுக்கு (Core) இரத்த ஓட்டம் திருப்பி விடப்படுகிறது. இதனால் கை, கால் விரல்கள் மரத்துப்போகும். நடுக்கம் (Shivering): மூளை தசைநார்களை வேகமாகச் சுருங்கச் செய்வதன் மூலம் வெப்பத்தை உருவாக்குகிறது. இது உடலில் வளர்சிதை மாற்றத்தை (Metabolism) அதிகரித்து அதிக கலோரிகளை எரிக்க உதவுகிறது. 2. முக்கியமான உறுப்புகளில் ஏற்படும் பாதிப்புகள் இதயம்: இரத்த நாளங்கள் சுருங்குவதால் இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. இதனால் இதயம் இரத்தத்தை பம்ப் செய்ய அதிக சிரமப்பட வேண்டியிருக்கும், இது மாரடைப்பு (Heart Attack) மற்றும் பக்கவாதம் (Stroke) ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது. சுவாசம்: குளிர்ந்த மற்றும் வறண்ட காற்று சுவாசப் பாதையில் எரிச்சலை உண்டாக்கி வீக்கத்தை (Inflammation) ஏற்படுத்தும். இது ஆஸ்துமா அல்லது நாள்பட்ட நுரையீரல் நோய்கள் உள்ளவர்களுக்கு மூச்சுத்திணறலை உண்டாக்கும். மூளை: உடல் வெப்பநிலை 35°C (95°F) க்கும் கீழே குறையும் போது, சிந்தனைத் திறன் மந்தமாகும், குழப்பம் ஏற்படும் மற்றும் சரியான முடிவெடுக்க முடியாமல் போகும். 3. குளிரால் ஏற்படும் நோய்கள்(Cold-Related Illnesses) பனிப்புண் (Frostbite): மிகக் கடுமையான குளிரால் தோலின் திசுக்கள் உறைந்து இறந்துவிடும் நிலை. இது பெரும்பாலும் மூக்கு, காது மற்றும் விரல் நுனிகளில் ஏற்படும். ட்ரெஞ்ச் ஃபுட் (Trench Foot): நீண்ட நேரம் ஈரமான மற்றும் குளிர்ந்த நிலையில் கால்கள் இருக்கும்போது திசுக்கள் அழுகத் தொடங்கும் நிலை. உடலின் வெப்பநிலை குறைவடையும் பொழுது முதலில் பாதிக்கப்படும் அங்கம் மூளை ஆகும். இதன் காரணமாக குளிரினை எதிர்கொள்பவர். அசாதாரண நடத்தைகளை காண்பிப்பார் (Abnormal Behavioral Signs) உதாரணமாக முரண்பாடான ஆடை களைதல் (Paradoxical Undressing): அதிக குளிர் நிலவிலும், மரணத்திற்கு முன் ஏற்படும் மாய வெப்ப உணர்வால் பாதிக்கப்பட்டவர் தன் ஆடைகளைத் தானாகவே கழற்றி எறிந்துவிடுவார். பதுங்கும் நடத்தை (Terminal Burrowing): ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடுவது போல, கட்டிலுக்கு அடியிலோ அல்லது குறுகிய இடங்களிலோ உடலை மறைத்துக்கொண்ட நிலையில் சடலம் கண்டெடுக்கப்படலாம். சூழல் வெப்பநிலைக் குறைவினால் உயிராபத்தினை எதிர்நோக்கும் நபர்கள் பின்வரும் நபர்கள் சூழல் வெப்பநிலை குறைவடையும் பொழுது உயிராபத்தினை எதிர்நோக்குவார்கள். இவர்கள் அதிக கவனத்தினை எடுக்க வேண்டும். முதியவர்கள்: வயதானவர்களுக்குக் குளிரை உணரும் திறன் (Nerve sensitivity) குறைவாக இருக்கும். மேலும், உடலில் வெப்பத்தை உருவாக்கும் வளர்சிதை மாற்ற விகிதம் (Metabolism) குறைவாக இருப்பதாலும், போதிய உடல் கொழுப்பு இல்லாததாலும் இவர்கள் விரைவில் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தைகள் மற்றும் பச்சிளம் குழந்தைகள்: இவர்களின் உடல் பரப்பளவு எடையை விட அதிகமாக இருப்பதால், வெப்பம் மிக வேகமாக வெளியேறும். இவர்களுக்கு நடுக்கம் (Shivering) மூலம் வெப்பத்தை உருவாக்கும் திறன் குறைவாக இருக்கும். மதுபானம் அருந்துபவர்கள்: இது மிக முக்கியமான ஆபத்துக் காரணியாகும். மது ரத்த நாளங்களை விரிவடையச் செய்வதால் (Vasodilation), ஒருவருக்கு உடல் சூடாக இருப்பது போன்ற மாய உணர்வு ஏற்படும், ஆனால் உண்மையில் உடலின் முக்கிய வெப்பம் வேகமாக வெளியேறிக்கொண்டிருக்கும். சில மருந்துகள் பாவிப்பவர்கள்: சில வகை மனநல மருந்துகள் (Antidepressants, Antipsychotics) மற்றும் தூக்க மாத்திரைகள் உடலின் வெப்பநிலை ஒழுங்குபடுத்தும் திறனைப் பாதிக்கும். தைராய்டுகுறைபாடு(Hypothyroidism) உள்ளவர்கள்: தைராய்டு ஹார்மோன் குறைவாக இருந்தால் உடல் வெப்பம் உருவாவது குறையும். நாள்பட்டநோய்கள் உள்ளவர்கள்: நீரிழிவு (Diabetes), இதய நோய்கள் மற்றும் பக்கவாதம் (Stroke) போன்றவை ரத்த ஓட்டத்தைப் பாதித்து உடல் வெப்பநிலையைப் பராமரிப்பதைக் கடினமாக்குகின்றன. மனநலப் பாதிப்புகள்: நினைவாற்றல் குறைபாடு (Dementia) உள்ளவர்கள் அல்லது மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், காலநிலைக்கு ஏற்ற ஆடைகளை அணியாமல் வெளியே செல்வதால் ஆபத்தில் சிக்கிக்கொள்கிறார்கள். சுற்றுச்சூழல் மற்றும் சமூகக் காரணிகள் வீடற்ற நிலை (Homelessness): போதிய தங்குமிடம் மற்றும் போர்வைகள் இல்லாத நிலையில் வெளிப்புறக் குளிரில் இருப்பது உயிருக்கு ஆபத்தானது. நீரில் மூழ்குதல்: காற்றை விட நீரில் உடல் வெப்பம் 25 மடங்கு வேகமாக வெளியேறும். எனவே, குளிர்ந்த நீரில் விழுவது உடனடி மரணத்தை விளைவிக்கும். சமூகத் தனிமை: தனியாக வசிக்கும் முதியவர்கள், உதவிக்கு ஆள் இல்லாமல் பாதிக்கப்படுகிறார்கள். மரணம் எவ்வாறு நிகழும் (Mechanism of Death) உடல் வெப்பக்குறைவினால் (Hypothermia) மரணம் ஏற்படுவதற்கு பின்னால் உள்ள உடலியல் மாற்றங்கள் மிகவும் சிக்கலானவை. உடல் வெப்பநிலை குறையும் போது, உடலின் முக்கிய உறுப்புகள் ஒவ்வொன்றாகச் செயலிழக்கின்றன. அதன் நிலைகள் பின்வருமாறு: 1. அனுசேபச்சிதைவு (Metabolic Breakdown) உடல் வெப்பநிலை 35°C (95°F) க்குக் கீழே குறையும் போது, உடல் நடுக்கம் (Shivering) மூலம் வெப்பத்தை உருவாக்க முயல்கிறது. ஆனால் வெப்பநிலை 30°C (86°F) க்குக் கீழ் செல்லும் போது, இந்த அனுசேப செயல்பாடுகள் நின்றுவிடுகின்றன. கலங்கள் சக்தியினை உற்பத்தி செய்ய முடியாமல் போவதால், உறுப்புகள் செயலிழக்கத் தொடங்குகின்றன. 2. இதயச் செயலிழப்பு (Cardiac Failure) – மிக முக்கியக் காரணம் குளிர் அதிகரிக்கும் போது இதயம் மற்றும் இரத்த ஓட்டத்தில் கடுமையான மாற்றங்கள் ஏற்படுகின்றன: இரத்த அடர்த்தி: குளிர்ச்சியால் இரத்தம் தடிமனாகிறது (Hemoconcentration), இதனால் இதயத்தால் இரத்தத்தை அழுத்தித் தள்ள முடிவதில்லை. இதயத் துடிப்பு மாற்றம் (Arrhythmia): வெப்பநிலை 28°C (82°F) க்குக் குறையும் போது, இதயத் துடிப்பு சீரற்றதாகிறது (Atrial/Ventricular Fibrillation). இறுதியில் இதயம் துடிப்பதை நிறுத்திவிடுகிறது. 3. சுவாசச் செயலிழப்பு (Respiratory Depression) ஆரம்பத்தில் குளிர் காரணமாக சுவாசம் வேகமாக இருக்கும், ஆனால் வெப்பநிலை குறையக் குறைய மூளையில் உள்ள சுவாசக் கட்டுப்பாட்டு மையம் (Respiratory center) மந்தமடைகிறது. சுவாசம் மிகவும் மெதுவாகி, இறுதியில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் (Hypoxia) மரணம் நிகழ்கிறது. பாதுகாப்பு நடவடிக்கைகள் உடல் வெப்பக்குறைவு காரணமாக ஏற்படும் மரணங்களைத் தவிர்க்க பின்வரும் தற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்: உடல் வெப்பம் வெளியேறுவதைத் தடுக்க தலை, கழுத்து மற்றும் கைகளை முழுமையாக மூடவும். தலை மற்றும் கழுத்துப் பகுதியை மூடி வைப்பதும் அவசியம். முக்கியமாக கழுத்து பகுதியினை மூடி வைக்க வேண்டும் ஏனெனில் அப்பகுதியில் தோலிற்கு கீழாக பாரிய இரத்த குழாய்கள் காணப்படுவதினால் வெப்ப இழப்பு இலகுவாக நடைபெறும் அதனை தடுப்பதற்காகவே ஆகும் கடும் குளிரில் கடினமான வேலைகளைச் செய்வதைத் தவிர்க்கவும். இதனால் ஏற்படும் வியர்வை ஆடைகளை நனைத்து, உடல் வெப்பத்தை விரைவாகக் குறைத்துவிடும். ஒரே கனமான ஆடைக்கு பதிலாக, பல அடுக்குகளாக தளர்வான ஆடைகளை அணியுங்கள். கம்பளி (Wool) அல்லது பாலியஸ்டர் துணிகள் உடல் வெப்பத்தைத் தக்கவைக்க உதவும். ஆடைகள் நனைந்தால் உடனடியாக அவற்றை மாற்றிவிடவும். ஈரமான ஆடை உடல் வெப்பத்தை 25 மடங்கு வேகமாக கடத்திவிடும். உடல் நடுக்கம் (Shivering) மூலம் வெப்பத்தை உருவாக்க அதிக ஆற்றல் தேவை. எனவே, அதிக கலோரி கொண்ட உணவுகளை உட்கொள்ளுங்கள். மதுவைத் தவிர்க்கவும் ஏனெனில் மது அருந்துவது தற்காலிகமாக வெப்பமாகத் தெரிந்தாலும், அது உண்மையில் இரத்த நாளங்களை விரிவடையச் செய்து உடல் வெப்பத்தை மிக வேகமாக வெளியேற்றிவிடும். போதிய அளவு தண்ணீர் மற்றும் சூடான பானங்களை அருந்துங்கள். நன்றி Dr. கனகசபாபதி வாசுதேவா MBBS , Post Graduate Diploma in Legal Medicine (DLM ), Post Graduate Diploma in Toxicology மற்றும் MD (Forensic Medicine) உயிரினை பறிக்கும் அதிகுளிர்!!
  5. அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் – 18 மாநிலங்களில் அவசரநிலை அறிவிப்பு 24 Jan, 2026 | 01:42 PM அமெரிக்கா முழுவதும் கடும் பனிப்புயல் நிலவி வருகிறது. வடமேற்கு டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா நகரங்களில் தொடங்கிய இந்த பனிப்புயல், வடகிழக்கு மாகாணங்களுக்குச் செல்லும் போது அதிக பனிப்பொழிவை ஏற்படுத்தும் என்று வானிலை விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பனிப்புயல் அமெரிக்கா முழுவதும் 3,200 கிலோமீற்றர் தொலைவுக்கு பரவ வாய்ப்பு உள்ளதாகவும், மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களில் பனி மற்றும் உறைபனி நிலைமைகள் கடுமையாக இருக்கும் என்றும் மக்கள் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் நீண்ட நேர மின்வெட்டு, மரங்களுக்கு சேதம், மற்றும் பயணிக்க முடியாத வீதிப்போக்குவரத்து ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் மக்கள் உணவு, பால், முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்துள்ளதால், பல கடைகள் வெறுமையாக உள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அத்துடன் விமான சேவை பாதிக்கப்பட்டு, 1,800 க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. பனிப்புயல் காரணமாக 18 மாநிலங்களில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. பனிப்புயல் எதிரொலி ஏற்படுவதால் மக்கள் முன்னதாகவே தயாராக இருக்குமாறு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. பனிப்புயல் தாக்கம் அதிகமாகும் போது டாகோட்டாஸ் மற்றும் மிச்சிகன் மாநிலங்களில் வெப்பநிலை சாதாரண நிலையைவிட 30 டிகிரியை விட குறையும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் சில பகுதிகளில் காற்றின் ஈரப்பதம் 35 முதல் -50 டிகிரிக்கு கீழே செல்லும் என வானிலையாளர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் மக்கள் தேவையான உணவு, நீர், மருந்து மற்றும் தேவையான பொருட்களை முன்கூட்டியே வாங்கிக் கொள்ள வேண்டும் எனவும் வீடுகளில் தங்கிக் கொண்டு, அவசர தேவைகள் தவிர வீதியில் பயணம் செய்ய வேண்டாம் என்றும் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். https://www.virakesari.lk/article/236896
  6. டி-20 உலக கிண்ணத்தில் இருந்து பாகிஸ்தானும் வௌியேறுகிறதா? Jan 24, 2026 - 07:47 PM இந்தியாவுக்குச் செல்ல மறுத்த பங்களாதேஷ் அணியை 2026 டி20 உலகக்கிண்ணத் தொடரிலிருந்து ஐ.சி.சி உத்தியோகபூர்வமாக நீக்கியுள்ள நிலையில், இத்தொடரில் பாகிஸ்தானின் பங்கேற்பு குறித்தும் தற்போது நிச்சயமற்ற நிலை உருவாகியுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் அரசாங்கத்துடன் கலந்துரையாடிய பின்னரே இறுதி முடிவு எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். பங்களாதேஷ் நீக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே கருத்துத் தெரிவித்த நக்வி, ஐ.சி.சி இந்தியாவுக்குச் சாதகமாக இரட்டை நிலைப்பாட்டை கடைப்பிடிப்பதாகவும், பங்களாதேஷிற்கு இழைக்கப்பட்டது அநீதியாகும் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார். உலகக்கிண்ணப் பங்கேற்பு தொடர்பான எமது நிலைப்பாடு பாகிஸ்தான் அரசாங்கம் எனக்கு வழங்கும் அறிவுறுத்தலுக்கு அமையவே இருக்கும் என குறிப்பிட்டுள்ளார். பிரதமர் தற்போது நாட்டில் இல்லை. அவர் திரும்பியதும் இறுதி முடிவை அறிவிப்பேன். இது அரசாங்கத்தின் முடிவு. நாங்கள் ஐ.சி.சி-க்கு அல்ல, அரசாங்கத்திற்கே கட்டுப்படுவோம் என்று அவர் கூறினார். கடந்த ஒரு வாரமாக, போட்டிகளை இந்தியாவிலிருந்து வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோரிய பங்களாதேஷிற்கு பாகிஸ்தான் உறுதியான ஆதரவை வழங்கி வருகிறது. கடந்த வாரம் நடைபெற்ற ஐ.சி.சி கூட்டத்தில், பங்களாதேஷின் நிலைப்பாட்டிற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபை மட்டுமே ஆதரவு வழங்கியது. இத்தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் கூட்டாக நடத்தப்படுகின்ற போதிலும், பங்களாதேஷின் போட்டிகள் அனைத்தும் இந்தியாவிலேயே திட்டமிடப்பட்டிருந்தன. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் அறிவுறுத்தலின் பேரில் ஐ.பி.எல். 2026 குழாமை விட்டு பங்களாதேஷ் வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மானை விடுவிக்குமாறு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு ஜனவரி 3ஆம் திகதி உத்தரவிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தியாவில் விளையாடுவது தமக்கு பாதுகாப்பானதல்ல என பங்களாதேஷ் கூறியிருந்தது. பங்களாதேஷின் கோரிக்கையைத் தொடர்ந்து நிராகரித்த ஐ.சி.சி, அட்டவணையை அப்படியே ஏற்பது அல்லது தொடரிலிருந்து நீக்கப்படுவது என இவ்வாரத் தொடக்கத்தில் நிபந்தனை விதித்தது. பங்களாதேஷ் தமது முடிவில் உறுதியாக இருந்ததால், இன்று அவர்களைத் தொடரிலிருந்து நீக்கிவிட்டு ஸ்காட்லாந்தைச் சேர்ப்பதாக ஐ.சி.சி உத்தியோகபூர்வமாக அறிவித்தது. இந்த முடிவை விமர்சித்த நக்வி, "பங்களாதேஷிற்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. ஐ.சி.சி இரட்டை நிலைப்பாட்டை எடுக்க முடியாது. ஒரு நாட்டுக்கு, இந்தியா அவர்கள் நினைத்ததைச் செய்யவும், மற்றவர்கள் அதற்கு நேர்மாறாகச் செய்யவும் வற்புறுத்த முடியாது. இதனால்தான் நாங்கள் இந்த நிலைப்பாட்டை எடுத்துள்ளோம். பங்களாதேஷ் கிரிக்கெட்டில் ஒரு முக்கிய பங்குதாரர், அவர்கள் உலகக்கிண்ணத்தில் விளையாட வேண்டும், என்றார். பங்களாதேஷிற்கு ஆதரவாக பாகிஸ்தான் உலகக்கிண்ணத்தைப் புறக்கணிக்கக்கூடும் என செய்திகள் வெளியாகிய போதிலும், பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அதனை உறுதிப்படுத்த மறுத்துள்ளது. பாகிஸ்தான் அரசாங்கம் விளையாட வேண்டாம் எனக் கூறினால், ஸ்காட்லாந்திற்குப் பிறகு ஐ.சி.சி ஒருவேளை 22வது அணியைக் கொண்டுவர வேண்டியேற்படும். முடிவு அரசாங்கத்திடமே உள்ளது என அவர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmkse9c1z04d1o29nq7abgj45
  7. யாழ். சுழிபுரத்தில் உள்ள இராணுவ முகாமில் இருந்து வெளியேறிய இராணுவம்: பண்டத்தரிப்பு முகாமும் அகற்ற நடவடிக்கை! Published By: Digital Desk 1 24 Jan, 2026 | 10:40 AM யாழ்ப்பாணம் - சுழிபுரம் பகுதியில் கடந்த 30 ஆண்டு காலமாக முகாமிட்டு இருந்த இராணுவத்தினர் நேற்றிரவு அந்த முகாமை விட்டு முழுமையாக வெளியேறியுள்ள இராணுவத்தினர் சங்கானை படை முகாமுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இராணுவத்தினர் அந்த இடத்தை விட்டு வெளியேறுவது குறித்து, கடிதமொன்றை 513வது காலாட்படை பிரிவின் கட்டளை தளபதி சில தினங்களுக்கு முன்னர் சங்கானை பிரதேச செயலாளர் கவிதா உதயகுமாரிடம் கையளித்தார். அதேநேரம், பண்டத்தரிப்பு பகுதியில் உள்ள இராணுவ முகாமும் அகற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அந்த பகுதியில் நீண்டகாலமாக முகாமிட்டு குடியிருந்த இராணுவத்தினர் அராலி பகுதியில் உள்ள இராணுவ முகாமிற்கு மாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டத்தரிப்பு படை முகாமானது 100 அடி நீளத்தை கொண்டதால் அதனை அகற்றுவதற்கு, காலம் தேவை என்பதால் அவர்கள் அங்கிருந்து வெளியேற சற்று தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/236877
  8. கணேஷா ஹாட்வெயார் கடைக்கு செலுத்தவேண்டி உள்ள 4850 ரூபா கடை உரிமையாளர் திரு ரி.முருகசோதி அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டேன். இருப்பு இருப்பு 205,845.67-4875=ரூ 200,970.67 சதம் இன்று 23/01/2026 4850 ரூபா வைப்புச் செய்த பின் தற்போதைய வங்கி மீதி. 25 ரூபா இலங்கை வங்கிக்கு மாற்றுவதற்கான கட்டணம் எடுத்துள்ளார்கள். வைப்புச்செய்த இலத்திரனியல் பற்றுச்சீட்டு. மட்டமாக 30000 ரூபா தருவதாக கேட்டேன், சம்மதித்துள்ளார். 4 லீற்றர் அசிற் காசு 3200 ரூபா இன்று தெரிந்த பாமசி நண்பரின் வங்கிக் கணக்கிற்கு 33200 ரூபா மாற்றியுள்ளேன். ஏற்கனவே சம்பளம் 20000 ரூபாவை பாமசியில் வாங்கிவிட்டார். மிகுதி பத்தாயிரம் ரூபா மற்றும் அசிட் காசு 3200 ரூபா இன்னும் சென்று பெறவில்லை. வாங்கியதும் 30000 ரூபா பெற்றுக்கொண்டேன் என கையெழுத்து பெற்று படத்தைப்போடுகிறேன். இருப்பு இருப்பு 205,845.67-4875=ரூ 167,745.67 சதம் இன்று 23/01/2026 33200 ரூபா வைப்புச் செய்த பின் தற்போதைய வங்கி மீதி. 25 ரூபா இலங்கை வங்கிக்கு மாற்றுவதற்கான கட்டணம் எடுத்துள்ளார்கள். பொன்னாலை 3 இயலாமையுடையவர்களின் மலசலகூடப் புனரமைப்பிற்கான மொத்தச் செலவு பொருட்கள் வாங்கிய காசு (கணேசா காட்வெயார்) 84850 கொமட், பூட்டும் பொருட்கள், கொண்டுவந்த ஓட்டோ காசு 44500 அசிட் 3200 சம்பளம் 30000 மொத்த செலவு 162550 மலசலகூடக்குழியில் இருந்து காற்று வெளியேற இரண்டு குழாய்கள் நேற்று பொருத்திவிட்டார். இதன் மூலம் பிளாற் வெடிக்காமல் இருக்கும் என நினைக்கிறேன். பொன்னாலை மூன்று சகோதரர்களில்(நடமாடமுடியாது) இருவர் ஏதாவது ஒன்றில் சாய்ந்தபடி தான் இருப்பார்கள், ஒருவர் மட்டும் எந்தவொரு பிடிமானமும் இல்லாமல் இருப்பார். கழுத்து எலும்புகளில் ஏற்படும் பிரச்சனையால் தான் இவர்களுக்கு இந்த வருத்தம் என சகோதரி கூறினார். சகோதரிக்கு 2 மகள்கள் இரண்டாவது மகளுக்கும் அதன் தாக்கம் உள்ளது, ஆனால் நடமாடுகிறார். இவர்களைப் போன்ற 5 வேறு வேறு சிறார்களுக்கு கொழும்பில் சத்திரசிகிச்சை செய்ய அழைத்தவர்களாம். அதில் முதலாமவருக்கு செய்த சத்திரசிகிச்சை வெற்றியளிக்காது கோமாவிற்கு போனதால் ஏனையவர்களை திருப்பி அனுப்பிவிட்டதாகவும் கூறினார். அங்கே நிறைய உறவுகளுக்குள் திருமணமாகி ஜெனற்றிக் வருத்தக்காறர் இருக்கிறார்கள். 3 மாதத்திற்கு ஒருமுறை நிகழ்வுகள் ஏதாவது நடத்தவேண்டும் என்ற எண்ணம் அவர்களுடன் கலந்துரையாடிய போது உணர்ந்தேன். டிசம்பர் 3 ஆம் திகதி நிகழ்விற்கு 2 பேர் வந்தவர்கள், அழைத்து வராதவர் சண்டையாம் தன்னை அழைத்து செல்லவில்லை என. இந்த மகத்தான பணிக்கு உதவிய அத்தனை யாழிணைய உறவுகளுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகள்.❤️🙏💪 உங்கள் கருத்துகள், நன்கொடைகள், கரிசனைகள் எல்லாவற்றிற்கும் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிக்கிறேன். உங்கள் எல்லோரதும் ஆதரவோடு தொடருவோம்.
  9. ஏ.ஆர்.ரஹ்மான் கருத்தால் சர்ச்சை – தமிழ் சினிமா கலைஞர்கள் என்ன சொல்கிறார்கள்? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் மீனாட்சிசுந்தரம் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் சமீபத்தில் பிபிசிக்கு அளித்த பேட்டியில், அவர் மனம் திறந்து சொன்ன வார்த்தைகள், குறிப்பிட்ட சில விஷயங்கள் சில நாட்களாக விவாதப் பொருளாகி இருக்கின்றன. ''பாலிவுட்டில் தமிழ் சமூகத்திற்கு எதிராக இன்றும் நிறைய பாகுபாடு நிலவுவதை நான் பார்க்கிறேன். 90களில் அது எப்படி இருந்தது? நீங்கள் எப்போதாவது அதை எதிர்கொண்டீர்களா?'' என நேர்காணல் எடுத்த ஹரூண் ரஷீத் கேட்டார். அதற்கு பதிலளித்த ஏ.ஆர்.ரஹ்மான், ''நான் எதிர்கொள்ளாமல் இருந்திருக்கலாம். இந்த விஷயங்கள் எல்லாம் எனக்குத் தெரிய வரவில்லை. ஆனால், கடந்த 8 ஆண்டுகளில் இருக்கலாம். ஒருவேளை அதிகார மாற்றம் நடந்திருக்கலாம். முடிவெடுக்கும் அதிகாரம் படைப்பாற்றல் இல்லாதவர்களிடம் இப்போது இருக்கிறது. இது ஒருவேளை வகுப்புவாத விஷயமாகவும் இருந்திருக்கலாம். என் கண் முன்பாக நடக்கவில்லை. ஆனால் இது நடந்தது'' என்றார். மேலும் 'சாவா' படம் பற்றி பேசுகையில், "அது பிளவுபடுத்தும் படம்தான். அதன் மூலம் அப்படம் பணம் ஈட்டியதாக நினைக்கிறேன். ஆனால், அதன் மையக்கருத்து வீரத்தைப் பற்றியது என நினைக்கிறேன்" என்றார். முழு பேட்டி பல விஷயங்களை விரிவாகச் சொல்லியிருந்தாலும், இப்படிப்பட்ட அவரின் சில கருத்துகள் சர்ச்சைகளைக் கிளப்பின. ஏ.ஆர். ரஹ்மானின் கூற்றுக்கு பாலிவுட் திரையுலகைச் சேர்ந்த பலரும் எதிர்வினையாற்றினர். ஏ.ஆர். ரஹ்மானுக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்தனர். அதைத் தொடர்ந்து தான் கூறிய கருத்துக்கள் தவறாகப் புரிந்துகொள்ளப்பட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் வீடியோ மூலமாக விளக்கம் அளித்தார். தான் யாரையும் புண்படுத்த விரும்பவில்லை என்றும், இந்தியா எப்போதுமே தனது வீடு, ஆசிரியர் மற்றும் மிகப்பெரிய உந்துசக்தியாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். ஏ.ஆர்.ரஹ்மான் மகளின் கோபம் தனது தந்தையின் பேட்டி, அவர் மீதான விமர்சனங்கள் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் மகளும், இசையமைப்பாளர், பாடகியுமான கதீஜா, "தான் உணர்ந்த ஒரு விஷயத்தை அவர் பேசி இருக்கிறார். அது அவரது உரிமை. உங்களுக்கு வேறு கருத்து இருக்கலாம், ஆனால், அவர் பேசவே கூடாது என அவரது உரிமையை மறுக்கக் கூடாது. உலகளவில் மதிக்கப்படும் ஒரு கலைஞனை அவமானம் என சொல்வது, நம்பிக்கை மீது கேள்வி எழுப்புவது எல்லாம் விமர்சனம் அல்ல. இதெல்லாம் வெறுப்பு பேச்சு" என சமூக ஊடகங்களில் கூறியுள்ளார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சாவா படம் பற்றி பேசுகையில், "அது பிளவுபடுத்தும் படம்தான். அதன்மூலம் அப்படம் பணம் ஈட்டியதாக நான் நினைக்கிறேன்" என்றார் ஏ.ஆர்.ரஹ்மான் 'அமீர் கான், ஷாருக்கான், இப்போது ஏ.ஆர்.ரஹ்மான்' இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் 14 ஆண்டுகளுக்கு மேல் உதவியாளராக பணியாற்றியவரும், தற்போது இசையமைப்பாளராக இருப்பவருமான தாஜ்நுார் பிபிசி தமிழிடம், ''முந்தைய காலங்களில் இப்படிப்பட்ட அழுத்தம் இல்லை. இப்போது இருப்பதாக தோன்றுகிறது. உண்மையை சொன்னால் அவர் மட்டுமல்ல, அப்படிப்பட்ட பாகுபாட்டை பலரும் அனுபவிக்கிறார்கள்.'' என்றார் ''இந்தியாவுக்கு ஆஸ்கர் விருது கொடுத்தவருக்கே இப்படிப்பட்ட நிலை என்று சொல்லும் அளவுக்கு எதிர்தரப்பின் தாக்கம் அதிகரித்திருக்கிறது" என்றார். மேலும், "பாலிவுட்டில் அமீர்கான், ஷாருக்கான், சல்மான்கான் இல்லையா? 'அவர்கள் கொடிகட்டி பறக்கவில்லையா' என்று சிலர் கேட்கலாம். அவர்களுக்கும் பிரச்னைகள் இருக்கின்றன. அது பல நேரங்களில் வெளிப்பட்டு இருக்கிறது. இத்தனை நாட்கள் ஏ.ஆர்.ரஹ்மான் எதையும் வெளியில் சொல்லவில்லை. ஒரு கட்டத்தில் சொல்லியிருக்கிறார்'' என்கிறார் தாஜ்நுார். பட மூலாதாரம்,Getty Images 'இசைக் கச்சேரிகளில் கவனம் செலுத்துகிறார்' இசையமைப்பாளரும், பாஜக நிர்வாகியுமான தீனா பிபிசி தமிழிடம், ''சினிமாவில் மாற்றங்கள் வரும். ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வந்த மாற்றம் ஒரு காலத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜாவுக்கும் வந்தது. புதியவர்கள் வரவால் மாற்றங்கள் நிகழ்ந்தன. அதற்காக யாருடைய திறமையையும் குறை சொல்ல முடியாது. இன்றைக்கு இசையமைப்பாளர்கள் சினிமா தவிர பல விஷயங்களில் புகழ், பணத்தை சம்பாதிக்கிறார்கள். சமீபகாலமாக ஏ.ஆர்.ரஹ்மான் கவனம் உலகம் முழுக்க இசை நிகழ்ச்சி நடத்துவதில் இருக்கிறது. அதனால் பட வாய்ப்புகள் குறைந்திருக்கலாம்.'' என்றார் ''மும்பையில் இன்னும் ஷாருக்கான், அமீர்கான் முன்னணியில் இருக்கிறார்களே? ஏ.ஆர்.ரஹ்மானை மட்டும் எப்படி புறக்கணிக்க முடியும்? அவர் மீது இந்திய மக்களுக்கு தனி மரியாதை, மதிப்பு உண்டு. அவரின் வெளிநாட்டு பயணம், நேரமின்மை காரணமாக சில விஷயங்கள் நடந்திருக்கலாம்.'' "அவர் இசைக்கு எப்போதும் 'மவுசு' உண்டு. அவர் இசை மக்கள் மனதில் இருக்கும்" என்கிறார் தினா. ''ஒவ்வொரு காலகட்டத்திலும் புதியவர்கள் வருவார்கள். இவ்வளவு ஏன், ஏ.ஆர்.ரஹ்மானே ராமாயணம் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். அது, அவருக்கும் பெருமை. அவருக்கு வேலை குறையவில்லை. அடுத்த பெரிய வேலை வந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்'' என்கிறார் தீனா பட மூலாதாரம்,x படக்குறிப்பு,"ஏ.ஆர்.ரஹ்மான் கவனம் உலகம் முழுக்க இசை நிகழ்ச்சி நடத்துவதில் இருக்கிறது. அதனால் பட வாய்ப்புகள் குறைந்திருக்கலாம்" என்கிறார் தீனா 'களங்கம் தரும்' பாடலாசிரியர் கார்த்திக் நேத்தா பிபிசி தமிழிடம் கூறுகையில் , 'பொதுவாக, 'கலை மக்களுக்காகவே' என்றும் 'கலை கலைக்காகவே' என்றும் இருவேறு தரப்பு உண்டு. முதலாளியம் வல்லாண்மை செய்யத் தொடங்கிய நொடியில் இருந்து இவை இரண்டையும் கடந்து 'கலை லாபத்திற்காகவே' என்ற நிலை உருவாகி ஆதிக்கம் செய்து வருவதைப் பார்க்கிறோம்.'' என்றார் ''இப்படியான சூழலில், தனது கலையை ஒரு கலைஞன் லாபமாக்க வேண்டிய நிலைக்கு உள்ளாக்கப்படுகிறான். காலப்போக்கில் கலை என்பது பண்டம் என்ற நிலை மாறி கலைஞனே பண்டமாக உருவெடுக்கும் சூழ்நிலை வந்தது.'' என்றார் ''பெருங்கலைஞர்களுக்கு உலகமெங்கும் நடக்கும் ஒன்றுதான் இது. ஒரு கலைஞன் விலக்கப்படுவது அவனது கீழ்மையினால் என்றால் அது அறம் சார்ந்தது. ஆனால், பல்வேறு நுண்மையான நச்சுக் காரணங்களால் ஒரு கலைஞன் புறக்கணிக்கப்படுவது அல்லது ஒதுக்கப்படுவது கலைக்கு மட்டுமல்ல தேசத்திற்கே களங்கம் தரும்.'' என்கிறார் கார்த்திக் நேத்தா. '10 ஆண்டுகளாக இந்திய சினிமா மாறுகிறது' இயக்குனர் அமீரிடம் பிபிசி தமிழிடம் பேசியபோது, ''ஏ.ஆர்.ரஹ்மான் ஏன் பேசினார் என்று கேட்பதை விட, எதற்காக பேசினார் என்பதை நாம் யோசிக்க வேண்டும். ஆஸ்கர் விருதை இந்தியாவுக்கு வாங்கிக் கொடுத்தவர் இப்படி பேச காரணம் என்ன?'' என கேள்வி எழுப்பினர். ''இப்போது பாலிவுட்டில், மற்ற மொழிகளில் வேறு வகை படங்கள் அதிகம் வருகின்றன. 'பத்மாவத்' வருகிறது, 'காஷ்மீர் ஃபைல்ஸ்' வருகிறது. 'கேரளா ஸ்டோரி' வருகிறது. நம்பிநாராயணன் கதை வருகிறது. கேரளா ஸ்டோரி பற்றி, கர்நாடக தேர்தலில் பேசுகிறார்கள். சினிமா வேறு மாதிரி ஆகிறது. கடந்த 10 ஆண்டுகளில் பல மாற்றங்கள் நடக்கின்றன. இவ்வளவு ஏன், ரஹ்மானே சாவா படத்துக்கு இசையமைக்கிறார். பின்னர், பல விஷயங்களை உணர்ந்துகொள்கிறார்.'' என்கிறார் அமீர். ''அந்த பேட்டியில் அவர் பயன்படுத்திய வார்த்தைகளை உன்னிப்பாக கேளுங்கள். இதுவரை எந்த சர்ச்சையிலும் சிக்காத பண்பாளர் இப்படி பேச வேண்டிய தேவை என்ன? அதைப் புரிந்துகொள்ளுங்கள்." என்று கூறினார் அமீர். பட மூலாதாரம்,Getty Images 'கலை மீது பூசப்படும் சாயம் நாட்டுக்கே கேடு' பிபிசி தமிழிடம் பேசிய நடிகரும், இயக்குனரும் திமுகவை சேர்ந்தவருமான போஸ் வெங்கட், "கலைத்துறையில் சாதி, மதம், அரசியல், அதிகாரம் நுழைவது என்பது பஞ்சுகூடத்தில் தீ வைப்பது போல. ஒரு கலைஞனின் பேச்சும், படைப்பும் சுயநலமற்றது, அது அடர்ந்த காட்டில் மெல்லிய தென்றல் போன்றது. அதை, அதன் போக்கில் விடுவது சமூகத்திற்கு நல்லது . அதன் மீது பூசப்படும் சாயம் கலைக்கு மட்டுமல்ல, நாட்டுக்கே கேடு'' என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c89qq2gg1dzo
  10. என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட முடியாது – எஸ்.சிறிதரன் 23 Jan, 2026 | 04:16 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்று ஒருசிலர் கருதுகிறார்கள்.எமது கட்சியிலும் ஒருசிலர் அவ்வாறே நினைக்கிறார்கள். என்மீது பழிசுமத்தி என்னை வெளியேற்றி பதவியை பெற்றுக்கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். அது வெறும் பகல் கனவு மாத்திரமே, எனது மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள். எனது மக்களுக்கான பணியை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளேன்.ஜனாதிபதியாகும் கனவு காணும் தயாசிறி ஜயசேகர பாராளுமன்றத்துக்கு ஆடையணிந்துக் கொண்டு வருவாராயின் குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும். பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் கையொப்பமிடாத காரணத்தால் தான் என்மீது எதிர்க்கட்சியினர் குற்றஞ்சாட்டுகிறார்கள் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சிறிதரன் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர நேற்று (நேற்று முன்தினம்) எனது பெயரை குறிப்பிட்டு பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தார். இதன் உண்மைத்தன்மையை வெளிப்படுத்த வேண்டிய கடப்பாடு எனக்கு உள்ளது. தயாசிறி ஜயசேகர 2026.01.08 ஆம் திகதியன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினரான எஸ்.சிறிதரனை அரசாங்கம் பயன்படுத்துகிறது. இலங்கைத் தமிழரசுக் கட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார். கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு சொந்தமான ' தமிழ் சிலோன்' என்ற வலைத்தளத்தில் இந்த செய்தி முழுமையாக வெளியாகியிருந்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் மக்களுக்கு வசிப்பதற்கு இடமில்லை ஆனால் சிறிதரன் 1200 ஏக்கர் காணியை தன்வசப்படுத்தியுள்ளார். அதேபோல் சுமார் 7 கோடி ரூபா நிதியை சிறிதரனும் அவரது மகனும் வைப்பிலிட்டுள்ளார்கள் என்று தயாசிறி ஜயசேகர சபையில் குறிப்பிட்டிருந்தார். பூநகரி மின்னுற்பத்தி திட்டத்திலும் நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகவும் தயாசிறி குறிப்பிட்டுள்ளார். எனது 16 ஆண்டுகால பாராளுமன்ற பயணத்தில் நீதியாகவும்இ நீதியாகவும் செயற்பட்டுள்ளேன்.அரசியலமைப்பு பேரவையில் நீதியாகவும், சுயாதீனமாகவும் தமிழ் மக்களின் பிரதிநிதி என்ற அடிப்படையில் தீர்மானங்களை எடுத்துள்ளேன். எவரும் என்னை நிர்பந்திக்கவில்லை. அரசாங்கத்துக்கு வால் பிடித்து அவர்களுக்கு சார்பாக செயற்பட வேண்டிய தேவை எனக்கு இருக்கவில்லை. பல கட்சிகளுக்கு தாவிச் செல்லும் தயாசிறி சிரேஷ்ட அரசியல்வாதியாவார். அவர் நேற்று (நேற்று முன்தினம்) பாராளுமன்றத்தில் குறிப்பிட்ட விடயங்கள் முற்றிலும் தவறானது. எந்த வங்கியில், யாரால், எப்போது நிதி வைப்பிலிடப்பட்டது என்பதை தயாசிறி குறிப்பிட வேண்டும். தயாசிறி ஜயசேகர சிங்கள பௌத்த அரசியல்வாதி மற்றும் நியாயமானவர் என்றால் அடுத்த பாராளுமன்ற அமர்வில் என்மீது முன்வைத்த குற்றச்சாட்டுக்களை ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டும்.உண்மையில் அவர் ஆடையுடன் தான் பாராளுமன்றத்துக்கு வருகிறார் என்றால் குற்றச்சாட்டுக்களை ஆதாரத்துடன் நிரூபிக்க வேண்டும் என்று உயரிய சபையில் வலியுறுத்துகிறேன். இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் 2025.07.25 ஆம் திகதியன்று 'சிவில் புத்தி பெரமுன' என்ற அமைப்பின் உறுப்பினரான சஞ்சய் மாவத என்பவர் நிதி குற்றப்புலனாய்வுப் பிரிவில் முறைப்பாடளித்தார் ஆறு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் இந்த முறைப்பாடு தொடர்பில் என்ன முறைப்பாடு எடுக்கப்பட்டுள்ளது. ஏன் அறிக்கை வெளியிடவில்லை. அதேபோல் 2025.12.31 ஆம் திகதியன்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய ஆணைக்குழுவில் இவ்விடயம் தொடர்பில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது. ஏன் இதுவரையில் விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. பூநகரி மின்திட்டம் தொடர்பில் அப்பிரதேசத்தின் அரசாங்க அதிபர், அரச அதிகாரிகளை ஏன் இதுவரையில் விசாரிக்கவில்லை. தயாசிறி ஜயசேகரவிடம் தகவல்களை பெற்றுக்கொள்ளுங்கள். தன்னை சிரேஷ்ட அரசியல்வாதியாக காட்டிக் கொள்ளும் தயாசிறி ஜயசேகர ஏன் பொய்யுரைக்க வேண்டும். தயாசிறி ஜயசேகர அண்மையில் என்னுடன் உரையாடும் போது ' எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ளேன்.வடக்கு மக்கள் எனக்கு ஆதரவளிப்பார்களா' என்று கேட்டார். ' உங்களின் முகம் தமிழர்களுக்கு பரீட்சயமானது அல்ல ஆகவே முதலில் வடக்கு மாகாணம் உட்பட தமிழ் மக்களுடன் பழகுங்கள்' என்று அவருக்கு பதிலளித்தேன். பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நியாயமற்ற நம்பிக்கையில்லா பிரேரணைக்கு கையொப்பமிடுமாறு குறிப்பிட்டார்கள். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தேன் . எனது கட்சியும் அவ்வாறே குறிப்பிட்டது. எதிர்க்கட்சியில் இருந்துக் கொண்டு ஏதும் பேசலாம்,சேறுபூசலாம் என்பது நியாயமற்றது. கிபுல் ஓயா திட்டம், திருகோணமலை புத்தர் சிலை விவகாரம், தையிட்டி விவகாரம் பற்றி சஜித் பிரேமதாச, தயாசிறி ஜயசேகர ஏன் பேசவில்லை. சிறிதரன் தமிழ் மக்களுக்கு துரோகமிழைத்து விட்டார் என்று கத்துகிறார்கள். வடக்கு மற்றும் கிழக்கில் 2 இலட்சம் இராணுவம் குவிக்கப்பட்டுள்ளது, காணிகள் விடுவிக்கப்படவில்லை. இராணுவத்தினர் சலூன், முன்பிள்ளை பள்ளி நடத்துகிறார்கள். திறந்தவெளி சிறைச்சாலையாக யாழ்ப்பாணம் இருக்கிறது. வடக்கு கிழக்கில் இராணுவ ஆட்சி தான் இடம்பெறுகிறது. தயாசிறி, சஜித் ஆகியோர் ஏன் இதுபற்றி பேசுவதில்லை. இராணுவ அதிகாரி நியமனத்துக்கு சிறிதரன் ஆதரவளித்து விட்டார் என்று குறிப்பிடுகிறார்கள். 2024.01.21 ஆம் திகதியன்று நடத்தப்பட்ட தேர்தலில் .இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக தெரிவு செய்யப்பட்டேன். இதனைத் தொடர்ந்து கனடாவில் உள்ள டி.பி.எஸ். ஜெயராஜ்' சிறிதரன் ஒரு பிரிவினைவாதி அவர் சமஸ்டி கோருகிறார்' என்று எழுதியுள்ளார். சிங்கள மக்களிடம் நான் பிரிவினைவாதி என்று குறிப்பிடுகிறார்கள். தமிழர்களிடம் நான் இராணுவ அதிகாரி நியமனத்துக்கு ஆதரவளித்ததாக குறிப்பிடுகிறார். நான் யாருக்குரியவன் என்பதை முதலில் குறிப்பிடுங்கள். நான் சிங்கள மக்களுக்கும் எதிரி, தமிழ் மக்களுக்கும் எதிரி என்கிறார்கள். இதன் பின்னணியின் நிகழ்ச்சி நிரல் என்ன,? தயாசிறி ஜயசேக,சாமர சம்பத் கூறுவதென்ன,2011. பங்குனி மாதம் அநுராதபுரம் உடுக்குளம் பகுதியில் கோட்டபய ராஜபக்ஷ தனது இராணுவ குழுவை வைத்து என்மீது துப்பாக்கி சூட்டை மேற்கொண்டார். நான் மயிரிழையில் தப்பினேன். 2013 ஆம் ஆண்டு எனது அலுவலகத்தில் கைக்குண்டு வைக்கப்பட்டு எமது உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டு 13 மாதங்கள் சிறைப்படுத்தப்பட்டார்கள். அதே காலப்பகுதில் எமது அலுவலகத்தில் சுமந்திரன், மாவை சேனாதிராஜா, சரவணபவன் ஆகியோர் .இருக்கும் போது 500 பேர் சிங்க கொடியுடன் வந்து அலுவலகத்தின் மீது தாக்குதல் நடத்தினார்கள். தயாசிறி ஜயசேகர இதுபற்றி ஏன் பேசவில்லை.சாமர சம்பத்,அம்பிகா சற்குணநாதன் ஆகியோர் அப்போது ஏன் பேசவில்லை. ஏன் என்னை தற்போது இலக்காக கொண்டு என் மீது பாய்கிறார்கள். என்னை அரசியலில் இருந்து ஓரங்கட்ட வேண்டும் என்று ஒருசிலர் கருதுகிறார்கள்.எமது கட்சியிலும் ஒருசிலர் அவ்வாறே நினைக்கிறார்கள். என்மீது பழிசுமத்தி என்னை வெளியேற்றி பதவியை பெற்றுக்கொள்ளவும் முயற்சிக்கிறார்கள். அது வெறும் பகல் கனவு மாத்திரமே, எனது மக்கள் மிகத் தெளிவாக உள்ளார்கள். எனது மக்களுக்கான பணியை மிகவும் நேர்த்தியாக செய்துள்ளேன். என்மீதான குற்றச்சாட்டுக்களை ஏன் முறையாக விசாரிக்கவில்லை. அரசாங்கத்தின் பலம் என்ன? அரசாங்கமும் எனக்கு எதிராக செயற்படுகிறது. எதிர்க்கட்சியினரும்,எம்மவர்களும் என்னை பழிவாங்க பார்க்கிறார்கள். எனக்கு நீதி வேண்டும். நீதியை நிலைநாட்டுங்கள். முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களை விசாரித்து உண்மையை வெளிப்படுத்துங்கள். என்று வலியுறுத்துகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/236821
  11. அண்ணை, இதில கைப்புள்ள யாருன்னு சொல்லவே இல்லையே?! 'அமெரிக்க படை இரானை நோக்கி நகர்கிறது' - டிரம்ப் பட மூலாதாரம்,Chip Somodevilla/Getty அமெரிக்கா இரானை உன்னிப்பாக கவனித்து வருவதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். மேலும், அமெரிக்காவின் பெரிய படையொன்று இரானை நோக்கி நகர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “இரானை நோக்கி பெரிய படையொன்று நகர்ந்துவருகிறது. ஆனால், எதுவும் தற்போது நடைபெறும் என தோன்றவில்லை. ஆனாலும், நாங்கள் இரானை உன்னிப்பாக கவனித்துவருகிறோம்.” என்றார். இரானில் 837 பேரின் மரண தண்டனையை தாங்கள் நிறுத்தியதாக கூறியுள்ள டிரம்ப், அவர்களுள் பெரும்பாலானோர் இளம்வயதினர் என்றார். அவர் கூறுகையில், “நீங்கள் அவர்களை தூக்கிலிட்டால், உங்களுக்கு எதிராக இதுவரையிலான கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்த நடவடிக்கையை ஒப்பிடும்போது அணுசக்தி திட்டம் தொடர்பாக நாங்கள் எடுத்த நடவடிக்கை மிகச் சிறியதாக இருக்கும்.” என்றார். “அதை ரத்து செய்துவிட்டதாக அவர்கள் (இரான்) தெரிவித்துள்ளனர், ஒத்திவைத்துள்ளதாக அல்ல. அதுவொரு நல்ல அறிகுறி.” மேலும், “இரானை நோக்கி மிகப்பெரிய படை நகர்ந்து வருகிறது. அதை நாங்கள் பயன்படுத்தாமல் இருக்கலாம், பொறுத்திருந்து பார்க்கலாம்.” என்றார். இரானில் அதிகரித்துவரும் பணவீக்கம் மற்றும் பொருளாதார சரிவு ஆகியவற்றுக்கு எதிராக அரசுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்களில் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டனர். போராட்டங்களில் ஈடுபட்ட பலரும் இரானிய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர். கடந்த வார, இந்த போராட்டக்காரர்களுக்கு மரண தண்டனை அளிக்க இரான் திட்டமிட்டிருந்ததாக பல செய்திகள் வெளியாகின. அதன்பின், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த மரண தண்டனையை தான் தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தார். https://www.bbc.com/tamil/live/c5y34pvmg43t?post=asset%3A1ff5bd8d-a995-4834-a281-c9c77f6c8139#asset:1ff5bd8d-a995-4834-a281-c9c77f6c8139
  12. மாங்குளம் பேருந்து நிலையத்தை முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வர ஏதுவான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துக - அதிகாரிகளுக்குப் ஆளுநர் பணிப்புரை! Published By: Vishnu 23 Jan, 2026 | 07:04 PM முல்லைத்தீவு மாவட்டத்தின் முக்கிய மையப் புள்ளியாகத் திகழும் மாங்குளம் பேருந்து நிலையத்தை, முழுமையான பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதற்கு ஏதுவான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துமாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் அதிகாரிகளுக்குப் பணிப்புரை விடுத்தார். மாங்குளம் பேருந்து நிலைய அபிவிருத்தி தொடர்பாக நகர அபிவிருத்தி அதிகார சபையால், தயாரிக்கப்பட்ட திட்டவரைவு பற்றி ஆராயும் விசேட கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (23) மாலை நடைபெற்றது. மாங்குளம் பேருந்து நிலையம் மற்றும் அதனைச் சூழவுள்ள வர்த்தக நிலையங்கள் என்பன உரிய வகையில் பயன்படுத்தப்படாத நிலையில் காணப்படுகின்றன. இதனை மாற்றியமைத்து, அப்பகுதியை முழு அளவில் இயக்குவதற்கான திட்ட வரைபு நகர அபிவிருத்தி அதிகார சபையால் தயாரிக்கப்பட்டு, இக்கலந்துரையாடலில் சமர்ப்பிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகளுடன் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பின்வரும் விடயங்கள் ஆராயப்பட்டன. பேருந்து நிலையத்துக்கான போக்குவரத்துப் பாதைகள் மற்றும் வர்த்தக நிலையங்களுக்கான இணைப்பு வீதிகள் அமைத்தல். மாங்குளத்தை மையப்படுத்தி, முல்லைத்தீவு மாவட்டத்தின் உள்ளூர் பேருந்து சேவைகளை எதிர்காலத்தில் வினைத்திறனாக ஒருங்கிணைத்து நடைமுறைப்படுத்துதல். பேருந்து நிலையத்துக்காகத் திட்டமிடப்படும் வீதி, மாங்குளம் ரயில் நிலையத்திற்குரிய காணி எல்லைக்குள் வருவதால், ரயில்வே திணைக்களத்தின் அனுமதியை விரைவாகப் பெற்றுப் பணிகளை ஆரம்பிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது. இத்திட்ட முன்மொழிவை முல்லைத்தீவு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்து அங்கீகாரத்தைப் பெறுமாறும் ஆளுநர் இதன்போது பணிப்புரை வழங்கினார். இக்கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர், புதுக்குடியிருப்புப் பிரதேச சபைத் தவிசாளர், நகர அபிவிருத்தி அதிகார சபையின் வடக்கு மாகாணப் பணிப்பாளர் மற்றும் பிரதிப் பணிப்பாளர், ரயில்வே திணைக்களப் பொறியியலாளர், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்டப் பொறியியலாளர், வடக்கு மாகாண வீதி அபிவிருத்தித் திணைக்களப் பணிப்பாளர், இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் பேருந்து உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/236840
  13. சோழ மன்னனை சிறைபிடித்த கோப்பெருஞ்சிங்கன்: மூன்றாம் வீர வல்லாளரும் காடவராயர்களும் யார்? பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 23 ஜனவரி 2026, 01:31 GMT 14ஆம் நூற்றாண்டில் டெல்லியிலிருந்து நிகழ்த்தப்பட்ட படையெடுப்பை ஹொய்சாள மன்னரான மூன்றாம் வல்லாளர் எப்படி எதிர்கொண்டார்? சோழ மன்னனை வெற்றிகொண்ட காடவ மன்னர்கள் என்ன செய்தனர்? 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் தென்னிந்தியாவின் மீது டெல்லியிலிருந்து முகமதியப் படையெடுப்பு நடந்தபோது அதனை ஹொய்சாள மன்னரான மூன்றாம் வல்லாளர் இருவிதங்களில் எதிர்கொண்டார். இந்தக் காலகட்டத்தில் என்ன நடந்தது? காடவராயர்கள் என்ன செய்தனர்? பாண்டிய நாட்டில் வாரிசுரிமைப் போர் தென்னிந்தியாவின் மீது நடந்த மிக முக்கியமான முகமதியப் படையெடுப்பு அலாவுதீன் கில்ஜியின் தளபதியான மாலிக் காஃபூரால் நடத்தப்பட்டது. அந்தத் தருணத்தில், அதாவது 13ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் 14ஆம் நூற்றாண்டின் துவக்கத்திலும் துவாரசமுத்திரத்தையும் திருவண்ணாமலையையும் தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர்தான் மூன்றாம் வீர வல்லாளர். மூன்றாம் வீர வல்லாளர் துவாரசமுத்திரத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த காலத்தில், பாண்டிய நாடு மிகப் பெரிய வாரிசுரிமைப் போரில் சிக்கியிருந்தது. பாண்டிய நாட்டின் மன்னனாக இருந்த குலசேகர பாண்டியனுக்கு சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் என இரு மகன்கள் இருந்தன. சுந்தர பாண்டியன், பட்டத்து அரசியான கோப்பெருந்தேவியின் மகனாகப் பிறந்தவர். வீர பாண்டியன் மற்றொரு மனைவியின் மகன். ஆனால், வீர பாண்டியனையே பட்டத்து இளவரசனாக அறிவித்தார் குலசேகர பாண்டியன். இதனால் ஆத்திரமடைந்த சுந்தர பாண்டியன் குலசேகர பாண்டியனைக் கொன்றார். பிறகு சுந்தர பாண்டியனும் வீரபாண்டியனும் வாரிசுரிமை மோதலில் ஈடுபட ஆரம்பித்தனர். பாண்டிய நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இவர்கள் ஆதிக்கம் செலுத்திவந்தனர். அந்தத் தருணத்தில் மூன்றாம் வீர வல்லாளர் துவாரசமுத்திரத்தை மையமாகக் கொண்டு ஆட்சி செய்துவந்தார். பாண்டிய நாட்டில் வாரிசுரிமைப் போர் நடந்துகொண்டிருந்ததால், தெற்கில் உள்ள பிரதேசங்களைப் பிடிக்கும் நோக்கத்தோடு தெற்கு நோக்கிப் புறப்பட்டார் அவர். அவருடைய படை சென்ற வழிகளில் இருந்த ஊர்கள் அனைத்தும் சூறையாடப்பட்டதாக, பேராசிரியர் அ. சிங்காரவேல் எழுதிய 'தமிழகத்தில் விஜயநகர ஆட்சி' என்ற நூல் குறிப்பிடுகிறது. இந்தக் காலகட்டத்தில் டெல்லி அலாவுதீன் கில்ஜியின் ஆட்சியின் கீழ் இருந்தது. அவருடைய தளபதியான மாலிக் காஃபூர் கி.பி. 1310ல் தென்னகத்தின் மீது படையெடுத்தார். வீர வல்லாளர் மதுரையை நோக்கிச் சென்ற காலகட்டத்தில் மாலிக் காஃபூரின் படைகள் துவாரசமுத்திரத்தை நெருங்கின. இதைக் கேள்விப்பட்ட மூன்றாம் வல்லாளர் தனது தலைநகரத்தை நோக்கித் திரும்பினார். அதற்குள் துவாரசமுத்திரத்தில் முகமதியரின் படைகள் மிகப் பெரிய அளவில் குவிக்கப்பட்டிருந்தன. பட மூலாதாரம்,Rhythm book distributers படக்குறிப்பு,கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் 'தென் இந்திய வரலாறு' நூல் முகமதியப் படைகளை எதிர்த்துப் போரிடலாம் என அவர்களுடைய தளபதிகள் கூறிய நிலையிலும், வீர வல்லாளர் அதனை விரும்பவில்லை. இதனால், டெல்லி சுல்தானின் மேலாதிக்கத்தை மூன்றாம் வல்லாளர் ஏற்க வேண்டியதாயிற்று என கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் 'தென் இந்திய வரலாறு' நூல் கூறுகிறது. இந்த நிலையில், வீரபாண்டியனுக்கு சேர மன்னனான ரவிவர்மன் உதவிசெய்ததால், சுந்தரபாண்டியன், துவாரசமுத்திரத்தில் தங்கியிருந்த மாலிக் காஃபூரிடம் உதவி கோரியதாக இந்த நூல் கூறுகிறது. மாலிக் காஃபூர் மதுரையை நோக்கி படையெடுத்துச் சென்றபோது மூன்றாம் வல்லாளனும் அவர்களுடன் சென்றார். இந்தப் படை மதுரையைத் தாக்கி அழித்து, ராமேஸ்வரம் வரை சென்றது. இதற்குப் பிறகு, சுந்தரபாண்டியனின் மாமனால் பின்னடைவைச் சந்தித்த மாலிக்காஃபூர் டெல்லிக்கே திரும்பிவிட்டார். அப்படிச் செல்லும்போது மூன்றாம் வல்லாளரின் மகனை உடன் அழைத்துச் சென்ற மாலிக்காஃபூர் சுல்தானிடம், வல்லாளர் செய்த உதவியைப் பற்றிய கூறியதாகவும் தென் இந்திய வரலாறு நூல் கூறுகிறது. திருவண்ணாமலைக்கு மாற்றப்பட்ட தலைநகரம் படக்குறிப்பு,திருவண்ணாமலை இதற்குப் பிறகு டெல்லியில் தொடர்ந்து ஆட்சி மாற்றங்கள் நிகழ்ந்து முகமது பின் துக்ளக் சுல்தானாக முடிசூட்டிக் கொண்டார். மதுரை சுல்தானின் பிரதிநிதிகளின் ஆட்சியில் இருந்தது. இந்தக் காலகட்டத்தில் வடக்கிலிருந்து வரும் முகமதியப் படைகளின் தொந்தரவில்லாமல் ஆட்சி செய்ய விரும்பிய மூன்றாம் வல்லாளர் தனது தலைநகரத்தை துவார சமுத்திரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு மாற்றிக்கொண்டார். முகமதியப் படைகளால் தன் தலைநகரத்தை மாற்ற வேண்டிய கோபத்தில் இருந்த மூன்றாம் வல்லாளர், மதுரை மீது படையெடுத்து அங்கு ஆட்சியில் இருந்த முகமதியப் படைகளைத் தோற்கடிக்க நினைத்தார். அதன்படி அவரது படை மதுரையை நோக்கிப் புறப்பட்டது. இந்தப் படை காவிரிக் கரையில் கண்ணூர்க் குப்பம் என்ற இடத்தில் இருந்த கோட்டையை முற்றுகையிட்டது. இந்தத் தருணத்தில் மூன்றாம் வல்லாளர் மோசமான முடிவெடுத்ததாலேயே தோல்வியைச் சந்திக்க நேர்ந்ததாகச் சொல்கிறது தென் இந்திய வரலாறு நூல். அதாவது, கண்ணூர் குப்பம் கோட்டைக்குள் இருந்த முகமதியர்கள், சரணடவைதற்கு முன்பாக மதுரை சுல்தானின் யோசனையைப் பெற அனுமதிக்க வேண்டுமெனக் கோரியதால், அதற்கு அனுமதித்தார் மூன்றாம் வல்லாளர். இதற்குப் பிறகு, மதுரையின் சுல்தானாக இருந்த கியாசுதீன், 4,000 வீரர்களுடன் காவிரிக் கரையை வந்தடைந்தார். இந்தப் போரின் துவக்கத்தில் மூன்றாம் வல்லாளருக்கு வெற்றி கிடைத்தாலும், மதுரை சுல்தானின் படைகள் இறுதியில் அவரைத் தோற்கடித்தன. இந்தப் போரில் மிக மோசமான முறையில் மூன்றாம் வல்லாளர் கொல்லப்பட்டார். அவரது உடல் மதுரைக் கோட்டையில் தொங்கவிடப்பட்டதாகவும் 1342ல் இதனைப் பார்த்ததாக இபின் பதூதா குறிப்பிடுவதாகவும் தென் இந்திய வரலாறு கூறுகிறது. இந்த மூன்றாம் வல்லாளர் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு பல திருப்பணிகளைச் செய்திருப்பது குறித்த கல்வெட்டுகள் கிடைக்கின்றன. காடவராய மன்னர்கள் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் காடவராய மன்னர்களைப் பொறுத்தவரை, இந்த மூன்றாம் வல்லாளரின் காலத்திற்கு முற்பட்டவர்களாகவே பதிவாகியிருக்கிறார்கள். 12ஆம் நூற்றாண்டின் துவக்கத்தில் சோழ மன்னருக்குக் கீழே ஆணையர்களாக இருந்து, விரைவிலேயே சிற்றறசர்களாக வலிமையடைந்தனர். குறிப்பாக சோழப் பேரரசு வீழ்ச்சியடைய ஆரம்பித்த காலத்தில், கி.பி. 1229லிருந்து கி.பி. 1278வரை அவர்கள் வலிமை வாய்ந்த மன்னர்களாக இருந்திருப்பதாக சி.எஸ். ஸ்ரீநிவாஸாச்சாரி எழுதிய History Of Gingee And Its Rulers நூல் குறிப்பிடுகிறது. தமிழகப் பகுதிகளில் ஆதிக்கம் செலுத்த பாண்டியர்கள், ஹொய்சாளர்கள், காகதீயர்களுக்கு இடையில் நடந்த போரில் தொடர்ந்து பங்கேற்றதன் மூலம், வலிமைபெற்று வந்தனர். கி.பி. 1242லிருந்து கி.பி. 1278வரை ஆட்சிசெய்த கோப்பெருஞ்சிங்கன், இவர்களில் புகழ் வாய்ந்த மன்னனாக இருந்தார். இவர் பாண்டிய மன்னனான முதலாம் சுந்தர பாண்டியனுக்கு நெருக்கமானவராகவும் இருந்தார். முந்தைய தென்னாற்காடு மாவட்ட பரப்பில் வலிமை வாய்ந்த மன்னர்களாக இருந்த காடவராயர்களின் தலைநகரமாக கூடல் (கடலூர்) இருந்ததாகவும் பிறகு சேந்தமங்கலத்திற்கு மாற்றப்பட்டது என்றும் ஸ்ரீநிவாஸாச்சாரி கூறுகிறார். இந்த கோப்பெருஞ்சிங்கன்தான் மூன்றாம் ராஜராஜனை சிறைப்படுத்தி வைத்தார். கி.பி.1243ல் சோழர்களிடமிருந்து சுயாதீனம் பெற்ற மன்னராக ஆட்சி செய்ய ஆரம்பித்த அவர் தனக்கு 'மகாராஜ சிம்மன்' என்ற பெயரைச் சூட்டிக்கொண்டார். ஒரு கட்டத்தில் சோழமன்னனான மூன்றாம் ராஜராஜனை கோப்பெருஞ்சிங்கன் சிறைப்பிடித்தார். பட மூலாதாரம்,Juggernaut படக்குறிப்பு,அனிருத் கனிசெட்டி எழுதிய Lords of the Earth and Sea நூல் கோப்பெருஞ்சிங்கன் மன்னராக இருந்த காலகட்டத்தில், ஹொய்சாள நாட்டை இரண்டாம் நரசிம்மன், சோமேஸ்வரன், மூன்றாம் நரசிம்மன் ஆகியோரே ஆட்சி செய்துவந்தனர். மூன்றாம் ராஜராஜன் சிறைபிடிக்கப்பட்ட பிறகு என்ன நடந்தது என்பதை அனிருத் கனிசெட்டி எழுதிய Lords of the Earth and Sea நூல் விவரிக்கிறது. "மூன்றாம் ராஜராஜன் சிறைபிடிக்கப்பட்டபோது ஹொய்சாள மன்னராக இருந்த சோமேஸ்வரன், அவரை விடுவிக்க காடவராயர்கள் மீது படையெடுத்தார். காடவராய அரசின் முக்கிய பிரமுகர்கள், அமைச்சர்கள் இருந்த கிராமங்கள் சூறையாடப்பட்டன. சேந்தமங்கலத்தை நெருங்கியபோது, அதற்குச் செல்லும் தண்ணீர் தடுக்கப்பட்டது. இதற்குப் பிறகு இறங்கிவந்த கோப்பெருஞ்சிங்கன், மூன்றாம் ராஜராஜனை விடுவிக்க ஒப்புக்கொண்டார். இந்த நிகழ்வு நடந்து பத்தாண்டுகளுக்குப் பிறகு கோப்பெருஞ்சிங்கன் காலமானார்" என்கிறார் அனிருத். ஒரு சில வரலாற்றாய்வாளர்கள் இரண்டு கோப்பெருஞ்சிங்கர்கள் இருந்ததாகக் கருதுகின்றனர். முதலாவது கோப்பெருஞ்சிங்கன் கி.பி. 1185லிருந்து கி.பி. 1243 வரை ஆட்சி செய்ததாகவும் அடுத்த கோப்பெருஞ்சிங்கன் கி.பி. 1243லிருந்து கி.பி. 1248 வரை ஆட்சி செய்ததாகவும் அவர்கள் கருதுகின்றனர். ஆனால், அது சரியான கருத்து அல்ல என ஆர். சத்தியநாதய்யர் தனது 'The Kadavaraya Problem' கட்டுரையில் குறிப்பிடுகிறார். மூன்றாம் வீர வல்லாளரும் மகாராஜ சிம்மன் என அழைக்கப்பட்ட கோப்பெருஞ்சிங்கனும் வெவ்வேறு காலத்திலேயே ஆட்சியில் இருந்தனர். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgjjkm922ro
  14. எலுவங்குளம் - புத்தளம் வீதியைத் திறக்கக் கோரி கையெழுத்து வேட்டை Jan 23, 2026 - 07:32 PM மன்னாரிலிருந்து முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள எலுவங்குளம் ஊடாக புத்தளத்திற்குச் செல்லும் பிரதான வீதியைத் திறக்கக் கோரி, ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று (23) காலை மன்னார் பேருந்து நிலையத்தில் கையெழுத்து சேகரிக்கும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. மன்னார் - எலுவங்குளம் ஊடாக புத்தளத்திற்கான பிரதான வீதியைத் திறப்பதற்கான ஏற்பாட்டுக் குழுவினால் இந்த நடவடிக்கை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. குறித்த வீதியைத் திறந்து மக்களின் பாவனைக்கு விடுவிக்க ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தே இந்தக் கையெழுத்துப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. இதில் கலந்துகொண்டு கையெழுத்திட்ட மதத் தலைவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், "இவ்வீதி திறக்கப்படுவதன் மூலம் மன்னார் மாவட்ட மக்கள் மட்டுமன்றி, ஒட்டுமொத்த வட பகுதி மக்களும் நன்மையடைவார்கள்" என்று தெரிவித்தனர். மேலும், மன்னார் மாவட்ட மீனவர்கள் மட்டுமன்றி அனைத்துத் தரப்பினரும் தென்பகுதிக்கான போக்குவரத்தை இலகுவாக மேற்கொள்ளவும், தமது வாழ்வாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் இது வழிவகுக்கும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். மன்னார் மாவட்ட மக்களிடம் சேகரிக்கப்படும் இந்தக் கையெழுத்துக்கள் அடங்கிய மகஜர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பி வைக்கப்படும் என ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், மீனவ அமைப்புகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்துகொண்டு கையெழுத்திட்டு தமது ஆதரவை வழங்கியமை குறிப்பிடத்தக்கது. -மன்னார் நிருபர் லெம்பட்- https://adaderanatamil.lk/news/cmkqyact304bqo29njn0qgd08
  15. 19 வயதின் கீழ் ஆண்க உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலியாவிடம் இலங்கை பெருந்தோல்வி Published By: Digital Desk 3 23 Jan, 2026 | 05:19 PM (நெவில் அன்தனி) விண்ட்ஹோக் நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் நிறைவுபெற்ற ஐசிசி 19 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் அவுஸ்திரேலியாவிடம் 58 ஓட்டங்களுக்கு சுருண்ட இலங்கை, 9 விக்கெட்களால் பெருந்தோல்வி அடைந்தது. எவ்வாறாயினும், இக் குழுவில் ஜப்பானையும் அயர்லாந்தையும் ஏற்கனவே வெற்றிகொண்டதன் மூலம் சுப்பர் சிக்சஸ் (Super Sixes) சுற்றில் விளையாட இலங்கை தகுதிபெற்றுக்கொண்டிருந்தது. இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை இளையோர் அணி 18.5 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 58 ஓட்டங்களுக்கு சுருண்டது. துடுப்பாட்டத்தில் சாமிக்க ஹீனட்டிகல (14), கவிஜ கமகே (10) ஆகிய இருவரே இரட்டை இலக்க எண்ணிக்கைகளைப் பெற்றனர். பந்துவீச்சில் வில் பைரோம் 14 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களையும் கேசி பார்ட்டன் 13 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சார்ள்ஸ் லெக்மண்ட் 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். 59 ஓட்டங்கள் என்ற இலகுவான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 12 ஓவர்களில் ஒரு விக்கெட்டை இழந்து 61 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஸ்டீவன் ஹொக் 28 ஓட்டங்களுடனும் இலங்கை வம்சாவளி நிட்டேஷ் செமுவல் 19 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். ஜப்பானுக்கு எதிராக சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற இளையோர் உலகக் கிண்ணப் போட்டியில் வரலாற்றுச் சாதனைகளை நிலைநாட்டிய இலங்கை, 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 38 வருட வரலாற்றில் 100 ஓட்டங்களுக்குள் சுருண்டது இதுவே முதல் தடவையாகும். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக அவுஸ்திரேலியாவின் பாமேரா ஓவல் மைதானத்தில் 1988இல் நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ணப் போட்டியில் இலங்கை பெற்ற 101 ஓட்டங்களே அதன் முந்தைய மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையாக இருந்தது. ஆட்டநாயகன்: வில் பைரோம் https://www.virakesari.lk/article/236836
  16. குழந்தைகளுக்கு சர்க்கரை கொடுப்பதில் உள்ள ஆபத்து - வயதுக்கேற்ற உணவு முறையின் அவசியம் பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வயதாகும்போது நாம் வெவ்வேறு ஊட்டச்சத்துக்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள். கட்டுரை தகவல் ஜெசிகா பிராட்லி பிபிசி ஃபியூச்சர் 8 மணி நேரங்களுக்கு முன்னர் இரண்டாம் உலகப் போரின் போது, பிரிட்டிஷ் அரசாங்கம் ஒரு பங்கீட்டு முறையை அறிமுகப்படுத்தியது, இது குடும்பங்களுக்கு வாராந்திர கொடுப்பனவை அனுமதித்தது. மக்கள் தங்கள் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்ய அனுமதிக்கும், அதே நேரத்தில் உணவு நாடு முழுவதும் சமமாக விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வதுதான் இதன் நோக்கம். சர்க்கரை என்பது பங்கீடு செய்யப்பட்ட உணவுப் பொருட்களில் ஒன்றாக இருந்தது. தனிநபர்களுக்கு வாரத்திற்கு சுமார் 8 அவுன்ஸ் (227 கிராம்) இனிப்பு பொருட்கள் அனுமதிக்கப்பட்டன. அவர்களை வருத்தப்படுத்தும் வகையில், இரண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு எதுவும் ஒதுக்கப்படவில்லை. 1953-ல் சர்க்கரை பங்கீடு முடிந்தபோது, பெரியவர்களின் சராசரி சர்க்கரை உட்கொள்ளல் இருமடங்கானது. இதனை அந்த நேரத்தில் மக்கள் அறிந்திருக்கவில்லை, ஆனால் இது எதிர்கால விஞ்ஞானிகளுக்கு ஆரம்பகால சர்க்கரை நுகர்வு நமது ஆரோக்கியத்தில் ஏற்படுத்தும் விளைவுகளைத் துல்லியமாகக் கண்டறிய ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியது. 2025-ஆம் ஆண்டு ஆய்வறிக்கை ஒன்றில், உலகளாவிய ஆராய்ச்சியாளர்கள் குழு, சர்க்கரை பங்கீடு முழுவீச்சில் இருந்த 1951 மற்றும் 1956-க்கு இடையில் இங்கிலாந்தில் பிறந்த 63,000 பேரின் மருத்துவப் பதிவுகளை ஆய்வு செய்தது. கருப்பையிலும், வாழ்வின் முதல் 1,000 நாட்களிலும் குறைந்த சர்க்கரைக்கு ஆளான குழந்தைகளுக்கு, பிற்கால வாழ்க்கையில் இருதய நோய் வருவதற்கான வாய்ப்பு 20% குறைவு என்பதையும்; இதய செயலிழப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு 25% குறைவு என்பதையும்; பங்கீடு நடைமுறை முடிந்த பிறகு இனிப்புகளைச் சாப்பிட அனுமதிக்கப்பட்ட குழந்தைகளை விட பக்கவாதம் ஏற்படும் வாய்ப்பு 31% குறைவு என்பதையும் அவர்கள் கண்டறிந்தனர். சர்க்கரை உட்கொள்ளலுக்கும் ஆரோக்கியத்திற்கும் இடையிலான இந்த வலுவான உறவு நாம் பிறந்த பிறகும் தொடர்கிறது என்பதைத் தெரிந்துகொண்டு ஆச்சரியப்பட வேண்டியதில்லை. எளிமையாகச் சொன்னால், நாம் எந்த வயதினராக இருந்தாலும் அதிக இனிப்புச் சுவை கொண்ட தின்பண்டங்களை உண்பது நமக்குத் தீங்கானது. ஆனால் வேறு சில உணவுகளைப் பொறுத்தவரை, ஊட்டச்சத்து நன்மைகள் நீங்கள் வாழ்க்கையின் எந்தக் கட்டத்தில் இருக்கிறீர்கள் என்பதைப் பொறுத்தது. உதாரணமாக, சிறு குழந்தைகளுக்கும் கைக்குழந்தைகளுக்கும் பால் மற்றும் முழு பாலில் உள்ள கொழுப்புகள் அதிகம் தேவைப்படுகின்றன, ஆனால் அத்தகைய உணவு 20 மற்றும் 30 வயதுடையவர்களுக்கு ஆரோக்கியமானதாகக் கருதப்படாது. இங்கிலாந்தின் லண்டன் இம்பீரியல் காலேஜின் ஊட்டச்சத்து விஞ்ஞானி ஃபெடெரிகா அமதியின் கூற்றுப்படி, குழந்தைகளுக்கு அதிக ஆற்றல் தேவை என்பதால் அவர்களுக்கு ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகள் தேவை என்பதாகும். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது 'சாதி மாறி திருமணம் செய்ததால் புறக்கணிப்பு': திருவள்ளூர் காதல் தம்பதி கூறுவது என்ன? 'இந்தியாவின் வைரமாக போற்றப்பட்ட ஏ.ஆர் ரஹ்மான் இன்று துரோகி என முத்திரை குத்தப்படுகிறார்' – ஒரு பார்வை எல்ஐசி அலுவலகத்தில் 'தீ வைத்து கொல்லப்பட்ட' மேலாளர் - கடைசி ஃபோன் கால் மூலம் சிக்கிய ஊழியர் சோழ மன்னனை சிறைபிடித்த கோப்பெருஞ்சிங்கன்: மூன்றாம் வீர வல்லாளரும் காடவராயர்களும் யார்? End of அதிகம் படிக்கப்பட்டது பட மூலாதாரம்,Serenity Strull/BBC படக்குறிப்பு,வளரும் குழந்தையாக நமக்குத் தேவையான உணவுகள் பிற்கால வாழ்க்கையில் எப்போதும் நமக்குத் தேவையானவையாக இருப்பதில்லை. "குழந்தைப் பருவத்தில், உணவு என்பது உடலையும் மூளையையும் உருவாக்குவதாகும்," என்கிறார் அமதி. ஆரோக்கியமான கலோரிகள் தவிர, குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி, மூளை வளர்ச்சி மற்றும் தசை வளர்ச்சியை ஆதரிக்க இரும்புச்சத்து, அயோடின் மற்றும் பரந்த அளவிலான வைட்டமின்களும் தேவைப்படுகின்றன. இதன் பொருள் ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகள், முழு தானியங்கள், பீன்ஸ் மற்றும் பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் விதைகள் உள்ளிட்ட நல்ல தரமான கொழுப்புகள் மற்றும் மிகக் குறைந்த அளவில் அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகள் என்பதாகும். "கருத்தரித்தல் முதல் முதல் 1,000 நாட்கள் மற்றும் பள்ளி ஆண்டுகள் வரை, குழந்தைகள் வேகமாக வளர்கிறார்கள் மற்றும் அவர்களின் எதிர்கால எலும்பு நிறையில் பெரும்பாலானவற்றை உருவாக்குகிறார்கள்," என்கிறார் அமதி. "அதனால்தான் இந்த நிலையில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவை முன்னுரிமை ஊட்டச்சத்துக்களாக உள்ளன; சாதாரண எலும்பு வளர்ச்சிக்கும், ஆரோக்கியமான உச்ச எலும்பு நிறையை அடைவதற்கும் அவை அவசியம், இது பிற்கால வாழ்க்கையில் எலும்புப்புரை மற்றும் எலும்பு முறிவு அபாயத்தைக் குறைக்கிறது." நடைமுறையில், பால், தயிர், சீஸ், கால்சியம் நிறைந்த டோஃபு அல்லது பலப்படுத்தப்பட்ட தாவர பானங்கள் போன்ற வழக்கமான கால்சியம் ஆதாரங்கள் மற்றும் சூரிய ஒளி மற்றும் மீன் மற்றும் முட்டை போன்ற உணவுகளில் இருந்து கிடைக்கும் வைட்டமின் டி ஆகியவை இதில் அடங்கும் என்று அமதி கூறுகிறார். குழந்தைப் பருவத்தில் சரியான உணவுகளை உண்பது பிற்கால வாழ்க்கையில் ஆரோக்கியத்திற்குப் பயனளிக்கும் என்பதற்கு நல்ல சான்றுகள் உள்ளன. 2023-ஆம் ஆண்டு ஆய்வு ஒன்றில், ஆராய்ச்சியாளர்கள் குழந்தைகளின் உணவுகளை ஆய்வு செய்து, அதை அவர்களின் குழந்தைப் பருவம் மற்றும் இளம் பருவ ஆரோக்கியத்துடன் ஒப்பிட்டனர். ஏழு வயதில் இங்கிலாந்தின் ஈட்வெல் வழிகாட்டியில் (Eatwell Guide) இருந்து மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட உணவுப் பரிந்துரைகளைப் பின்பற்றிய குழந்தைகளுக்கு, எந்தத் தேவைகளையும் பூர்த்தி செய்யாதவர்களுடன் ஒப்பிடும்போது, 24 வயதில் இதய நோய் அபாயக் குறிகாட்டிகள் குறைவாக இருப்பதைக் கண்டறிந்தனர். பதின்ம வயது மற்றும் 20-கள் குழந்தைப் பருவம் ஒரு முக்கியமான காலம் என்றாலும், நமது பதின்ம வயது மற்றும் 20-களில் நாம் உண்ணும் உணவுகள் எதிர்கால ஆரோக்கியத்திற்கான அடித்தளத்தை அமைக்கலாம். அமதியின் கூற்றுப்படி, இந்த வாழ்க்கைக் கட்டத்தில்தான் நாம் எலும்பு மற்றும் தசை கட்டமைப்பை முடிக்கிறோம், மேலும் படிப்பதற்கும், வேலை செய்வதற்கும் மற்றும் சமூகமயமாக்குவதற்கும் மணிநேரங்களைச் செலவிடத் தொடங்குகிறோம் - இவை அனைத்தும் ஊட்டச்சத்து தேவைகளை அதிகரிக்கின்றன. "இளமைப் பருவம் மற்றும் முதிர்ந்த வயதின் ஆரம்பம் ஊட்டச்சத்திற்கான மற்றொரு பெரிய வாய்ப்பாகும்," என்கிறார் அமதி. "20-களில், வளர்ச்சி குறைகிறது, ஆனால் பிற்கால வாழ்க்கையில் இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும் பழக்கங்களை ஏற்படுத்துவதற்கு இது இன்னும் ஒரு முக்கியமான தசாப்தமாகும். அறிகுறிகள் மிகவும் தாமதமாகத் தோன்றினாலும் கூட இந்த வயதினரிடமே இருதய நோய்க்கான அடித்தளம் போடப்படுவதைக் காண்கிறோம்,." நமது பதின்ம வயதில், பிற்கால முதிர்ந்த வயதை விட உடலுக்குப் பல ஊட்டச்சத்துக்கள் அதிகம் தேவைப்படுகின்றன. இதில் கால்சியம், வைட்டமின் டி மற்றும் இரும்புச்சத்து ஆகியவை அடங்கும் - இது குறிப்பாக மாதவிடாய் சுழற்சி கொண்டவர்களுக்கு முக்கியமானது. புரதம் மற்றும் பி வைட்டமின்களும் முக்கியமானவை என்று அமதி கூறுகிறார். அப்படியானால் இந்த உணவு முறை எப்படி இருக்கும்? அமதியின் கூற்றுப்படி, பதின்ம வயதினர் மற்றும் இளைஞர்கள் பெரும்பாலும் தாவர அடிப்படையிலான உணவைப் பின்பற்ற வேண்டும் மற்றும் அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எனவே நிறைய பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், பீன்ஸ், கொட்டைகள், பருப்பு மற்றும் விதைகளை உண்ணவேண்டும். ஒவ்வொரு வேளை உணவிலும் போதுமான அளவு புரதத்தைக் கொண்டிருப்பதும் முக்கியம், அது தாவர அடிப்படையிலானதாகவும் இருக்கலாம் என்று அவர் கூறுகிறார். இத்தகைய உணவைப் பின்பற்றுவது உடலுக்குப் பயனளிப்பதோடு மட்டுமல்லாமல், மனநலத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. "இளமைப் பருவத்தில் உணவு முறைகள் மனநல அபாயத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதற்கு சான்றுகள் அதிகரித்து வருகின்றன - அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிகம் சேர்த்துக்கொள்வது மற்றும் முழு தாவர உணவுகள் குறைவாக உள்ள உணவுகளை உண்பது மனச்சோர்வு மற்றும் பதட்டத்தின் அதிக விகிதங்களுடன் தொடர்புபடுத்தப்படுகின்றன, அதே நேரத்தில் மெடிட்டரேனியன் பாணி முறைகள் பாதுகாப்பதாகத் தோன்றுகின்றன," என்று அமதி கூறுகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பருவமடையும் போது மாதவிடாய் தொடங்குபவர்கள் ஊட்டச்சத்துக்களின் சரியான சமநிலையைப் பெறுவது மிகவும் முக்கியமானது. மெடிட்டரேனியன் உணவு முறையில் காய்கறிகள், பருப்பு வகைகள், கொட்டைகள் மற்றும் ஆலிவ் எண்ணெய் அதிகமாகவும், மீன், பால் மற்றும் கோழி இறைச்சி குறைந்த அளவிலும் இருக்கும். மெடிட்டரேனியன் உணவு முறை ஒரு குடும்பத்தைத் தொடங்க விரும்பும் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும் பயனளிக்கலாம், இது பெரும்பாலும் ஒரு நபரின் 20, 30 மற்றும் 40-களில் நிகழ்கிறது. மெடிட்டரேனியன் உணவு கருவுறுதலில் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன, அதே நேரத்தில் நிறைவுற்ற கொழுப்பு, இறைச்சி மற்றும் வெள்ளை கார்போஹைட்ரேட்டுகள் அதிகமாக இருக்கும் மேற்கத்திய உணவுகள் பெண் மற்றும் ஆண் மலட்டுத்தன்மையுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. பெண்களைப் பொறுத்தவரை, ஃபோலேட் நிறைந்த உணவுகள் கருவுறுதல் சிகிச்சைக்கு உதவக்கூடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன. ஃபோலேட் அதிகம் உள்ள உணவுகளில் அடர் பச்சை இலைக் காய்கறிகள், முளைகட்டிய தானியங்கள், ப்ரோக்கோலி மற்றும் கொண்டைக்கடலை ஆகியவை அடங்கும். மத்திய வயது இங்கிலாந்தின் ஷெஃபீல்ட் பல்கலைக்கழகத்தின் மனித ஊட்டச்சத்து பேராசிரியரான எலிசபெத் வில்லியம்ஸின் கூற்றுப்படி, மத்திய வயதில், பிற்கால ஆரோக்கியத்திற்கு ஏற்ப நமது உணவை மேம்படுத்துவது பற்றி நாம் சிந்திக்கத் தொடங்க வேண்டும். மாதவிடாய் நிற்கும் காலத்தை நெருங்கும் பெண்களுக்கு இது மிகவும் பொருத்தமானது, "அப்போது எலும்பு அடர்த்தி இழப்பு, சார்கோபீனியா (வயது தொடர்பான தசை இழப்பு) மற்றும் எலும்புப்புரை ஆகியவை வேகமாக நடக்கும்," என்கிறார் வில்லியம்ஸ். எலும்புப்புரை தவிர, மாதவிடாய் நிற்றல் உடல் பருமன், இதய நோய் மற்றும் வகை 2 நீரிழிவு நோய்க்கான அதிகரித்த ஆபத்துடன் தொடர்புடையது. இனப்பெருக்க வயதுடைய பெண்களில், ஈஸ்ட்ரோஜன் மத்திய நரம்பு மண்டலத்தில் செயல்பட்டு பசியைக் குறைக்கிறது. இது இன்சுலின் உணர்திறன் மற்றும் தசைகளின் குளுக்கோஸ் உட்கொள்ளலையும் அதிகரிக்கிறது. இருப்பினும் மாதவிடாய் நிற்றலில், உடலில் ஈஸ்ட்ரோஜன் குறைவாகவே சுழல்கிறது. இதன் விளைவாக, எடை - மற்றும் உள்ளுறுப்பு கொழுப்பு (visceral fat) - அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. இருப்பினும், ஒரு நல்ல உணவு முறையை பின்பற்றுவதன் மூலம் இந்த அபாயத்தைக் கணிசமாக ஈடு செய்ய முடியும். உதாரணமாக, ஒரு சமீபத்திய மக்கள் தொகை ஆய்வில், குறைந்தது 39 வயதுடைய 1,00,000-க்கும் மேற்பட்ட அமெரிக்க ஆண்கள் மற்றும் பெண்களின் உணவு முறைகள் மற்றும் ஆரோக்கியத்தை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர். பட மூலாதாரம்,Serenity Strull/ BBC படக்குறிப்பு,மாதவிடாய் நிற்றலை நெருங்கும் பெண்கள் வரும் ஆண்டுகளில் தங்கள் உணவில் மாற்றங்களைச் செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என்று சில விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், நிறைவுறாக் கொழுப்புகள், கொட்டைகள், பருப்பு வகைகள் மற்றும் குறைந்த கொழுப்புள்ள பால் பொருட்கள் ஆகியவற்றைக் கொண்ட ஆரோக்கியமான உணவு, ஆரோக்கியமான முதுமையுடன் வலுவாகத் தொடர்புடையது என்று அவர்கள் கண்டறிந்தனர் (ஆரோக்கியமான முதுமையை அவர்கள் நாள்பட்ட நோய் ஏதுமின்றி குறைந்தது 70 வயது வரை வாழ்வது மற்றும் நல்ல அறிவாற்றல், உடல் செயல்பாடு மற்றும் மனநலம் என்று வரையறுக்கிறார்கள்). "பெண்கள் தங்கள் 40 மற்றும் 50-களில் செல்லும்போது, இரண்டு பெரிய ஊட்டச்சத்து முன்னுரிமைகள் உருவாகின்றன: இதய ஆரோக்கியம் மற்றும் எலும்பு மற்றும் தசை ஆரோக்கியம்," என்கிறார் அமதி. "மாதவிடாய் மாற்றமானது இருதய நோய் அபாயத்தில் கூர்மையான உயர்வுடன் தொடர்புடையது, ஏனெனில் ஈஸ்ட்ரோஜன் இழப்பு இரத்த லிப்பிடுகள், இரத்த நாளங்கள் மற்றும் உடல் கொழுப்பு விநியோகத்தைப் பாதிக்கிறது." ஒமேகா 3 கொழுப்புகள் - குறிப்பாக மேக்கரல் மற்றும் சால்மன் போன்ற எண்ணெய் மிகுதியாக உள்ள மீன்வகைகளில் காணப்படுபவை - உதவுகின்றன, ஏனெனில் அவை இதய நோய்க்கான ஆபத்துக் காரணிகளைக் குறைக்கின்றன மற்றும் அழற்சி எதிர்ப்பு பலன்களை கொண்டுள்ளன என்று அமதி கூறுகிறார். இதற்கிடையில், தசை நிறை இழப்பின் விளைவுகளை எதிர்கொள்ள புரத உட்கொள்ளலைச் சற்றே அதிகரிக்கவும், சிறந்த இதய வளர்சிதை மாற்ற ஆரோக்கியத்திற்கும் - மற்றும் குடல் ஆரோக்கியம் மற்றும் மனநலத்திற்கும் - மெடிட்டரேனியன் பாணி உணவைப் பின்பற்றுமாறு அமதி பரிந்துரைக்கிறார். இறுதியில், இதயம், எலும்பு மற்றும் மூளை ஆரோக்கியத்தை ஆதரிக்கும் போதுமான புரதம், கால்சியம், வைட்டமின் D மற்றும் ஒமேகா-3 களைக் கொண்ட மாறுபட்ட, தாவரங்கள் நிறைந்த, மெடிட்டரேனியன் பாணி உணவை இலக்காகக் கொள்வதும் என்றும் அதே வேளையில், அதி-பதப்படுத்தப்பட்ட உணவுகளை குறைப்பதும் முக்கியம் என்று அவர் கூறுகிறார். வாழ்க்கையின் பிற்பகுதி வயதாகும்போது, நமது உடல் அமைப்பு மாறுகிறது மற்றும் நமது ஆற்றல் தேவைகள் குறைகின்றன, எனவே நாம் குறைந்த கலோரிகளை உட்கொள்ள வேண்டும். இருப்பினும் எலும்பு மற்றும் தசை வலிமையைப் பராமரிக்க போதுமான ஊட்டச்சத்துக்களைப் பெறுவதை நாம் இன்னும் உறுதி செய்ய வேண்டும். வில்லியம்ஸின் கூற்றுப்படி, முதுமையில் நாம் கவனம் செலுத்த வேண்டிய இரண்டு முக்கிய ஊட்டச்சத்துக்கள் கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகும். போதுமான கால்சியம் அல்லது வைட்டமின் டி பெறாத முதியவர்களுக்கு எலும்புப்புரை மற்றும் பலவீனமான எலும்பு முறிவுகள் ஏற்படும் அபாயம் அதிகம். கால்சியம் பால் மற்றும் பலப்படுத்தப்பட்ட மாற்று பானங்கள், கடினமான சீஸ், தயிர், சார்டின் மீன், டோஃபு மற்றும் கீரை ஆகியவற்றில் காணப்படுகிறது. வைட்டமின் டி நிறைந்த உணவுகளில் எண்ணெய் மீன், முட்டை மஞ்சள் கரு மற்றும் செறிவூட்டப்பட்ட உணவுகள் அடங்கும். முதுமையில் போதுமான தரமான புரதத்தை உண்பதும் மிகவும் முக்கியம் என்று இங்கிலாந்தின் போர்ன்மவுத் பல்கலைக்கழகத்தின் முதுமை மற்றும் டிமென்ஷியா ஆராய்ச்சி மையத்தின் இணைத் தலைவரும் உணவியல் நிபுணருமான ஜேன் மர்பி கூறுகிறார். "வயதாகும்போது, நமது வடிவம் மற்றும் செயல்பாடுகள் மோசமடைகின்றன, நாம் தசை நிறை மற்றும் வலிமையை இழக்கிறோம், மேலும் சார்கோபீனியாவைத் தடுக்க புரதம் தேவைப்படுகிறது," என்று அவர் கூறுகிறார். ஆனால் நமது உடல் அதைச் சரியாகப் பயன்படுத்துவதை உறுதிசெய்ய, கார்போஹைட்ரேட்டுகள், தரமான கொழுப்புகள் (ஆலிவ் எண்ணெய், வெண்ணெய் பழம், கொட்டைகள் மற்றும் எண்ணெய் மீன் உள்ளிட்ட நிறைவுறாக் கொழுப்புகள் போன்றவை) மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் அடங்கிய சீரான உணவு முறையின் ஒரு பகுதியாகப் புரதம் இருக்க வேண்டும் என்று மர்பி கூறுகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வயதாகும்போது நமது குடல் பாக்டீரியாவில் ஏற்படும் மாற்றங்களும் கணக்கில் கொள்ளப்பட்டு உணவு முறையில் மாற்றம் செய்யப்படவேண்டும் நமக்கு வயதாகும்போது, நமது நுண்ணுயிரி மண்டலமும் மாறுகிறது, ஃபெர்மிகேட்ஸ் மற்றும் பிஃபிடோபாக்டீரியம் போன்ற நன்மை பயக்கும் பாக்டீரியாக்களின் இழப்பு ஏற்படுவதுடன், க்ளோஸ்ட்ரிடியம் போன்ற தீங்கு விளைவிக்கக்கூடிய இனங்களின் அதிகரிப்பும் ஏற்படுகிறது. இந்த ஏற்றத்தாழ்வு அல்சைமர், பக்கவாதம் மற்றும் இதய நோய் போன்ற பல ஆரோக்கிய நிலைகளுடன் தொடர்புபடுத்தப்படுகிறது. ஒவ்வொரு நோயுடனும் தொடர்புடைய குடல் நுண்ணுயிரி மண்டலத்தை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை என்றாலும், 100 வயது கடந்தவர்களிடமிருந்து நாம் நிறைய கற்றுக்கொள்ளலாம் என்று லண்டன் கிங்ஸ் காலேஜின் முதியோர் மருத்துவ விரிவுரையாளர் மேரி நி லோக்லைன் கூறுகிறார். " 100 வயது வரை வாழ்பவர்கள், முதுமையின் பொதுவான பாதிப்புகளைத் தவிர்ப்பதாகத் தெரிகிறது," என்கிறார் நி லோக்லைன். "அவர்கள் மற்ற முதியவர்களின் குடல் அமைப்பிலிருந்து வேறுபட்ட மாறுபட்ட நுண்ணுயிரி மண்டலத்தைக் கொண்டுள்ளனர்." பொதுவாக, ஆரோக்கியமான அல்லது ஆரோக்கியமற்ற குடல் பாக்டீரியா என்பதற்கு ஒரு வரையறை இல்லை, ஏனெனில் இது ஆரோக்கியத்தை மேம்படுத்த ஒன்றாகச் செயல்படும் நுண்ணுயிரிகளின் சமநிலையைப் பற்றியது. இருப்பினும், ஃபேக்கலிபாக்டீரியம் ப்ராஸ்னிட்ஸி போன்ற சில குறிப்பிட்ட பாக்டீரியா இனங்கள் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளன. ஆரோக்கியமாக வயதாகி வருபவர்கள் எஃப் ப்ராஸ்னிட்ஸியைக் கொண்டிருக்க அதிக வாய்ப்புள்ளது என்று நி லோக்லைன் கூறுகிறார், ஆனால் ஆராய்ச்சியாளர்கள் இது பாதுகாப்பு மற்றும் நேர்மறையான குணங்களைக் கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்தியிருந்தாலும், அது எவ்வாறு செயல்படுகிறது என்பதை அவர்கள் முழுமையாகப் புரிந்து கொள்ளவில்லை. உங்கள் குடலில் எஃப் ப்ராஸ்னிட்ஸி வாழ்வதை ஊக்குவிக்க நீங்கள் விரும்பினால், நார்ச்சத்து மற்றும் பாலிஃபீனால்கள் (பழங்கள் மற்றும் காய்கறிகளில் அதிகம் உள்ளவை) நிறைந்த உணவே சிறந்த வழியாகும். ஆரோக்கியமான குடலைக் கொண்டிருப்பது முதுமையுடன் தொடர்புடைய சில ஊட்டச்சத்து குறைபாடுகளை நிர்வகிக்கவும் உதவும், ஏனெனில் இளைஞர்களை விட முதியவர்கள் உணவில் இருந்து வைட்டமின்களை உள்வாங்கிக்கொள்வதில் குறைவான திறன் கொண்டவர்கள். ஆரோக்கியமான குடல் பாக்டீரியாக்கள் அந்த நபரின் தேவைகளுக்கு போதுமான பி12-ஐ உற்பத்தி செய்யக்கூடும் என்று ஆய்வுகள் காட்டுகின்றன, அதே நேரத்தில் சில குடல் பாக்டீரியாக்கள் ஃபோலிக் அமிலத்தையும் உற்பத்தி செய்யக்கூடும். ஆரோக்கியமான குடல் நுண்ணுயிரி மண்டலம் முதுமையில் தசை இழப்பு மற்றும் சார்கோபீனியா அபாயத்தைத் தடுக்கவும் உதவும். இறுதியாக, சில ஊட்டச்சத்து குறைநிரப்பிகள் பிற்கால வாழ்க்கையில் பயனுள்ளதாக இருக்கலாம். ப்ரீபயாடிக் குறைநிரப்பிகள் (நன்மை பயக்கும் நுண்ணுயிரிகளின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் இயற்கை கலவைகள்) முதியவர்களில் 12 வார காலப்பகுதியில் அறிவாற்றலை மேம்படுத்தும் என்று நி லோக்லைனின் ஆராய்ச்சி காட்டுகிறது. நி லோக்லைனின் ப்ரீபயாடிக்குகளில் இன்யூலின் என்ற ஒரு வகை நார்ச்சத்து மற்றும் தாவரங்களில் காணப்படும் சர்க்கரைகளான ஃபிரக்டோ-ஒலிகோசாக்கரைடுகள் உள்ளன. முதியவர்கள் - குறிப்பாக முதியோர் இல்லங்களில் வசிப்பவர்கள் வைட்டமின் டி குறைநிரப்பிகள் மூலம் பயனடையலாம் என்று பிற ஆராய்ச்சிகள் கூறுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3dmmk0dzreo
  17. ஜப்பானில் உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே இடைநிறுத்தம்! Published By: Digital Desk 3 23 Jan, 2026 | 10:16 AM ஜப்பானில் உள்ள உலகின் மிகப்பெரிய அணுமின் நிலையமான காஷிவாஸாகி-கரிவா (Kashiwazaki-Kariwa) நிலையத்தில், 15 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆரம்பிக்கப்பட்ட பணிகள் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. 2011-ஆம் ஆண்டு ஏற்பட்ட புகுஷிமா அணு உலை விபத்திற்குப் பின்னர், ஜப்பானின் அனைத்து அணு உலைகளும் பாதுகாப்பு காரணங்களுக்காக மூடப்பட்டன. இந்நிலையில், நிகாட்டா மாகாணத்தில் உள்ள இந்த அணுமின் நிலையத்தின் 6-வது அணு உலையை மீண்டும் இயக்குவதற்கான பணிகள் புதன்கிழமை (21) ஆரம்பிக்கப்பட்டன. எனினும், உலை செயல்பாட்டுக்கு வந்த சில மணி நேரங்களிலேயே, அணுக்கருப் பிளவைக் கட்டுப்படுத்தும் 'கட்டுப்பாட்டு தண்டுகள்' தொடர்பான எச்சரிக்கை மணி ஒலித்ததால், பாதுகாப்பு கருதி இயக்கம் உடனடியாக இடைநிறுத்தப்பட்டது. அணு உலை தற்போது ஆபத்தான நிலையில் இல்லை எனவும், கதிர்வீச்சு கசிவு ஏதும் ஏற்படவில்லை எனவும் அதன் செயல்பாட்டாளரான டெப்கோ (Tepco) நிறுவனம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே செவ்வாய்க்கிழமை ஆரம்பிக்கப்பட வேண்டிய இப்பணி, தொழில்நுட்பக் கோளாறு ஒன்றின் காரணமாக புதன்கிழமைக்கு மாற்றப்பட்டது. தற்போது மீண்டும் சிக்கல் ஒன்று எழுந்துள்ளது. புகுஷிமா விபத்தை ஏற்படுத்திய அதே 'டெப்கோ' நிறுவனம் இதனை இயக்குவதால், அப்பகுதி மக்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் இந்த மறுதொடக்கத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2050 ஆம் ஆண்டிற்குள் 'கார்பன் உமிழ்வு இல்லாத' நாடாக மாற இலக்கு நிர்ணயித்துள்ள ஜப்பான், தனது மின் தேவையை பூர்த்தி செய்ய மீண்டும் அணுசக்தியை நாட ஆரம்பித்துள்ளது. இதுவரை ஜப்பானில் உள்ள 33 அணு உலைகளில் 15 உலைகள் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்துள்ளன. https://www.virakesari.lk/article/236760
  18. சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளம் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Jan 23, 2026 - 03:32 PM சிவில் பாதுகாப்புத் திணைக்கள உறுப்பினர்களின் ஒரு நாள் சம்பளம், டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையையும் அனர்த்தத்தால் பேரழிவிற்கு உள்ளான நாட்டையும் மீண்டும் கட்டியெழுப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்ட ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. அதன்படி, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் மாவட்ட அதிகாரி ஜி. வை. பி. பெரேரா, 40,870,686 ரூபாய்க்கான காசோலையை நேற்று (22) ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பாலித பெர்னாண்டோ ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://adaderanatamil.lk/news/cmkqpoqqb04b8o29nltt1vlqa
  19. கிழக்கு முனைய மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் ஆரம்பம் Jan 23, 2026 - 02:46 PM கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் மூன்றாவது கப்பல் தளத்தின் செயற்பாடுகள் இன்று (23) ஆரம்பிக்கப்பட்டன. இந்தச் செயற்பாடுகளின் ஆரம்பத்தைக் குறிக்கும் வகையில், உலகின் 3 பிரதான கப்பல் நிறுவனங்களைச் சேர்ந்த 3 கப்பல்கள் கப்பல் தளத்திற்கு வருகை தந்தன. 12 கென்ட்ரி கிரேன்கள் மற்றும் 40 தானியங்கி முற்ற கிரேன்களைக் கொண்ட இந்தக் கப்பல் தளத்தின் ஊடாக, ஒரு பிராந்திய கப்பல் போக்குவரத்து மையமாக கொழும்பு துறைமுகத்தின் செயற்பாடுகள் மேலும் வலுவடையும். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தின் நிர்மாணப் பணிகள் முதன்முறையாக 2022 ஆம் ஆண்டு ஜனவரி 12 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன. 75 ஹெக்டேயர் நிலப்பரப்பில் நிர்மாணிக்கப்படும் கிழக்கு முனையத்தின் மொத்த நீளம் 1320 மீற்றர்களாகும். அதில் 1090 மீற்றர் பகுதியும் ஏனைய நிர்மாணப் பணிகளில் 82% ஆனவையும் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டில் கிழக்கு முனையத்தின் ஊடாக ஐந்து இலட்சத்திற்கும் அதிகமான கொள்கலன்கள் கையாளப்பட்டுள்ளதுடன், முழுமையான நிர்மாணப் பணிகள் முடிவடைந்த பின்னர் 1.5 மில்லியன் கொள்கலன்களைக் கையாள முடியும். கொழும்பு துறைமுகத்தின் செயற்பாட்டுத் திறனை அதிகரிக்கும் நோக்கில் துறைமுக அதிகார சபையின் கண்காணிப்பு மற்றும் முதலீட்டின் கீழ் இந்த கிழக்கு முனையம் நிர்மாணிக்கப்படுகிறது. கிழக்கு முனையம் மற்றும் அதானி நிறுவனம் தொடர்பில் ஏற்பட்ட சர்ச்சைக்குரிய நிலைமையின் அடிப்படையில் உருவான எதிர்ப்புகளுக்குப் பின்னரே இது இடம்பெறுகின்றமை ஒரு விசேட அம்சமாகும். https://adaderanatamil.lk/news/cmkqo1tdn04b7o29n7ve7zaf3
  20. முழு நாடுமே ஒன்றாக நடவடிக்கையின் கீழ் 70000க்கும் மேற்பட்டோர் கைது Jan 23, 2026 - 02:37 PM 'முழு நாடுமே ஒன்றாக' தேசிய நடவடிக்கையின் கீழ் முன்னெடுக்கப்படும் நாளாந்த சோதனை நடவடிக்கைகளுக்கு அமைவாக நேற்று (23) பொலிஸாரால் 819 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தைத் தடுத்தல், போதைப்பொருளுக்கான தேவையைக் குறைத்தல், தேடுதல் நடவடிக்கைகளை விரிவுபடுத்தல், போதைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வுக்கு உட்படுத்தல், போதைப்பொருள் பாவனையைத் தடுத்தல், அதற்கான விழிப்புணர்வுத் திட்டங்களை முன்னெடுத்தல் மற்றும் போதைப்பொருளுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துதல் ஆகிய பன்முக நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது. நேற்று முன்னெடுக்கப்பட்ட இந்த நடவடிக்கைகளின் போது மேற்கொள்ளப்பட்ட 304 சோதனைகளில், 367 கிராம் ஹெரோயின், 2 கிலோ 97 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 32 கிலோ 804 கிராம் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் தொகுதிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, கடந்த ஆண்டு ஒக்டோபர் 30ஆம் திகதி முதல் நேற்று (22) வரை ''முழு நாடுமே ஒன்றாக' நாளாந்த நடவடிக்கைகளின் மூலம் கைது செய்யப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கை 77,105 என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்போது சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பாக 68 பேருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், 1,582 சந்தேகநபர்களுக்கு எதிராக தடுப்புக்காவல் உத்தரவுகளைப் பெற்றுக்கொள்ளவும் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட மொத்த சோதனைகளின் எண்ணிக்கை 77,824 என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், இக்காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புகளின் போது 320 கிலோ 741 கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மேலும், 1,280 கிலோ 956 கிராம் ஐஸ், 6 கிலோ 816 கிராம் கொக்கெய்ன், 2,341 கிலோ 723 கிராம் கஞ்சா, 5,568,583 கஞ்சா செடிகள், 155 கிலோ 487 கிராம் குஷ், 44 கிலோ 47 கிராம் ஹாஷிஷ் மற்றும் 132,561 போதை மாத்திரைகள் உள்ளிட்ட பெருமளவிலான போதைப்பொருட்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. https://adaderanatamil.lk/news/cmkqnqkmv04b6o29n0z5owr3u
  21. மின்சார சபையின் தன்னிச்சையான தீர்மானங்களால் சூரிய சக்தி மின் உற்பத்தித் துறை முடங்கும் அபாயம்: 2,000 கோடி ரூபாய் இழப்பு என எச்சரிக்கை Published By: Digital Desk 3 23 Jan, 2026 | 04:15 PM இலங்கை மின்சார சபையினால் தன்னிச்சையாக மேற்கொள்ளப்பட்டு வரும் மின் உற்பத்தி மட்டுப்படுத்தல் மற்றும் கொள்கை மாற்றங்கள் காரணமாக, நாட்டின் உள்ளூர் புதுப்பிக்கத்தக்க மின் உற்பத்தியாளர்கள் சுமார் 2,000 கோடி ரூபாய் நிதி இழப்பை எதிர்கொண்டுள்ளதாக இலங்கை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்ட சூரிய சக்தி மின் உற்பத்தியாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த ஒன்பது மாதங்களாக, அதாவது 2025 பெப்ரவரி மாதம் முதல், வார இறுதி நாட்களிலும் பொது விடுமுறை நாட்களிலும் எந்தவித முன்னறிவிப்புமின்றி பெரிய அளவிலான சூரிய சக்தி மின் உற்பத்தி நிலையங்களின் மின் விநியோகத்தை மின்சார சபை கட்டுப்படுத்தி வருகின்றது. இதனை ஒரு அவசர நிலை என்று மின்சார சபை கூறினாலும், நீண்டகாலமாகத் தொடரும் இந்த நடைமுறை மின் கொள்வனவு ஒப்பந்தங்களை (PPA) மீறும் செயல் எனவும், இதனால் உற்பத்தியாளர்களின் மாத வருமானம் 15 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளதாகவும் சங்கத்தின் தலைவர் பொறியியலாளர் பிரபாத் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். மின் உற்பத்தி குறைக்கப்படும் நேரங்களில் அந்த மின்சாரத்தைச் சேமித்து வைத்து, இரவு நேர உச்ச மின் தேவையின் போது பயன்படுத்துவதற்கான மின்கல சேமிப்பு முறைமைக்கு (BESS) அமைச்சரவை மற்றும் நிதி அமைச்சு ஆகியன அனுமதி வழங்கியுள்ள போதிலும், மின்சார சபை அதனை நடைமுறைப்படுத்த வேண்டுமென்றே தாமதம் செய்வதாக சங்கம் குற்றம் சாட்டியுள்ளது. இதற்கான செயலாக்க வழிகாட்டுதல்களை வெளியிடுவதில் காட்டப்படும் இழுத்தடிப்பு காரணமாக, உள்நாட்டு சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்குப் பதிலாக, பாரியளவிலான டாலர்களைச் செலவழித்து டீசல் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்ய வேண்டிய நிலைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. மேலும், 2025 ஆம் ஆண்டிற்கான உத்தேச தேசிய மின்சாரக் கொள்கையானது சிறு மற்றும் நடுத்தர அளவிலான உள்ளூர் முதலீட்டாளர்களை இத்துறையிலிருந்து முற்றாக வெளியேற்றும் வகையில் அமைந்துள்ளதாகச் சங்கம் கவலை வெளியிட்டுள்ளது. தற்போது நடைமுறையிலுள்ள உள்ளீட்டு கட்டண (FIT) முறையை ஒழித்து போட்டி ஏல முறையைக் கொண்டு வருவது மற்றும் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படும் போது அதற்கான நட்டஈடு வழங்கப்பட மாட்டாது என்ற புதிய நிபந்தனைகள் முதலீட்டாளர்களுக்குப் பாரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளன. அரசாங்கத்தின் கொள்கை பிரகடனங்களுக்கு முரணாக மின்சார சபை எடுத்து வரும் இத்தகைய முடிவுகளால், இத்துறையில் முதலீடு செய்துள்ள பல தொழில்முனைவோர் வங்கிக் கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாமல் உள்ளனர். இது எதிர்காலத்தில் நாட்டின் வங்கி முறைமையில் செயலிழந்த கடன் நெருக்கடியை (NPL) உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மின்கல சேமிப்பு முறைமைக்கான ஒப்பந்தத் திருத்தங்களை உடனடியாக வெளியிட வேண்டும் எனவும், ஒப்பந்தங்களை மீறி மேற்கொள்ளப்படும் தன்னிச்சையான உற்பத்தித் தடையை நிறுத்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமான இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. நாட்டின் 2030 புதுப்பிக்கத்தக்க மின்சக்தி இலக்கை அடைவதற்குத் தனியார் துறையின் பங்களிப்பு அவசியம் என்பதால், அரசாங்கமும் மின்சக்தி அமைச்சும் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/236817
  22. Rebuilding Sri Lanka நிதியத்திற்கு கிடைத்துள்ள நன்கொடை விபரம் Jan 23, 2026 - 01:34 PM அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' புயலைத் தொடர்ந்து நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட 'Rebuilding Sri Lanka' நிதியத்தின் தற்போதைய நிலை குறித்து நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும விளக்கமளித்துள்ளார். அதன்படி, 'Rebuilding Sri Lanka' நிதியத்திற்காக இலங்கையின் வர்த்தக நிறுவனங்கள் மற்றும் பிரஜைகளினால் இதுவரை வழங்கப்பட்டுள்ள நன்கொடைத் தொகை 8.5 பில்லியன் ரூபாவையும் கடந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதேபோல், வெளிநாடுகளிலிருந்து கிடைத்துள்ள நிதியுதவியும் தற்போது அதிகரித்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, அவ்வாறு கிடைத்த வெளிநாட்டு நிதியின் அளவு தற்போது 9.49 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் கடந்துள்ளதாகத் தெரிவித்தார். நிதி உதவி வழங்கிய நாடுகளுள் அமெரிக்காவிடமிருந்து அதிகளவிலான நிதி கிடைத்துள்ளதாகவும், அந்தத் தொகை ஒரு பில்லியன் ரூபாவிற்கும் அதிகம் எனவும் அவர் குறிப்பிட்டார். இதனைத் தவிர, முறையே அவுஸ்திரேலியா, சீனா, இங்கிலாந்து, ஜேர்மனி, கனடா, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு இராச்சியம், பூட்டான், இத்தாலி மற்றும் கொரியா ஆகிய நாடுகள் அதிக நிதி உதவி வழங்கிய முதல் 10 நாடுகளாக உள்ளதாக ஹர்ஷன சூரியப்பெரும தெரிவித்தார். மேலும், இந்நாடுகளைத் தவிர பல வெளிநாடுகள் இலங்கைக்கு உதவி வழங்கியுள்ளதாகவும், அதன்படி அனர்த்தத்திற்குப் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக மொத்தம் 47 வெளிநாடுகள் உதவி வழங்கியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். இதேவேளை, பணமாகப் பெறப்பட்ட உதவிகளுக்கு மேலதிகமாக, இலங்கைச் சுங்கத்திற்குப் பெருமளவிலான பொருட்களும் கிடைத்துள்ளதாகத் தெரிவித்த அவர், இதுவரை சுங்கத்திற்கு கிடைத்துள்ள பொருட்களின் மொத்த மதிப்பு 2.3 பில்லியன் ரூபாவையும் தாண்டியுள்ளது என்றும் குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmkqlgyt404b1o29ngyj4bx1o
  23. வீட்டு திட்டங்களில் நிர்மாணப் பணிகள் நிறைவுற்ற குடியேற தாமதங்கள்: தீர்வு காண விசேட குழு நியமிப்பு - சுசில் ரணசிங்க Published By: Vishnu 23 Jan, 2026 | 05:24 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நாடளாவிய ரீதியில் நிர்மாணப் பணிகள் நிறைவுற்ற பெருமளவு வீட்டு திட்டங்கள் மக்கள் குடியேறாத நிலையில் காணப்படுகின்றன. அதற்கான காரணத்தை கண்டறியும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளனதுடன் அவ்வாறான வீட்டுத் திட்டங்களில் காணப்படும் சிக்கல்களை இனம் கண்டு அவற்றுக்கு தீர்வு காண விசேட குழு வொன்றை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (22) வாய்மூல விடைக்கான வினா நேரத்தில் திலின சமரக்கோன் எம்பி எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தமது கேள்வியின் போது, சரியான, தகுதியான நபர்களுக்கு வீடுகளை வழங்கத் தவறியுள்ளதால் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்ட பல வீட்டுத் திட்டங்கள் இன்னும் மூடிய நிலையிலேயே காணப்படுகின்றன. நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் குடியிருப்புப் பிரச்சினைகள் காணப்படும் இக் காலகட்டத்தில் கட்டப்பட்ட வீடுகள் மக்கள் குடியேறாத நிலையில் மூடிக் கிடக்கின்றன. அந்த வகையில் அந்த வீடுகளை மீளப் பெற்று அரசாங்கம் தகுதியானவர்களுக்கு அதனைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்குமா என கேட்கிறேன் என்றார். அது தொடர்பில் தொடர்ந்து அமைச்சர் பதிலளிக்கையில், கடந்த அரசாங்க காலத்தில் வறுமை நிலையில் உள்ள மக்களுக்கான வீட்டுத் திட்டங்களில் பெரும்பாலானவர்கள் அன்றைய அரசியல்வாதிகளுக்கு நெருங்கியவர்களாகவும் சற்றும் பொருத்தமில்லாதவர்களுக்கு அந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அனுராதபுரம், ஹம்பாந்தோட்டை உட்பட பல மாவட்டங்களில் வீட்டுத்திட்டங்கள் நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையிலும் மக்கள் அங்கு குடியேறாத நிலை காணப்படுகின்றது. அந்த வீட்டு திட்டங்கள் பொருத்தமற்ற இடங்களில் நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு வேறு இடங்களில் வீடுகள் இருப்பதன் காரணமாகவே அவர்கள் அந்த வீட்டுத் திட்டங்களில் குடியேறாமல் உள்ளனர் என்பதை ஊகிக்க முடிகிறது. உண்மையில் வீடு தேவையுள்ளோருக்கு இந்த வீடுகள் வழங்கப்பட்டுள்ளதா அல்லது யாருக்கு வழங்கப்பட்டுள்ளது என்பது தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது. அதேபோன்று கடந்த காலங்களில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக வீடமைப்பு அதிகார சபை பல்வேறு கட்டங்களில் கடன்களை வழங்கியுள்ளது. அவ்வாறு கடன் பெற்றுக் கொண்டவர்கள் அந்த கடனை மீள செலுத்த தவறியுள்ளதால் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை நிதி ரீதியில் பெறும் வீழ்ச்சியடைந்துள்ளது. அந்த கடன்களை மீள அறவிடுவதில் பெரும் பிரச்சினைகள் காணப்படுகின்றன. அனுராதபுரம் மாவட்டத்தில் 1656 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டு அதில் 973 வீடுகளின் நிர்மாணப் பணிகள் நிறைவு பெற்றுள்ளன. எனினும் அந்த வீடுகளில் இதுவரை எவரும் குடியேற வில்லை. அதற்கு பல காரணங்கள் உள்ளன. சில வீட்டு திட்டங்கள் வனப் பகுதியில் அமைந்துள்ளன. வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்கு கடன் வழங்கும்போது சம்பந்தப்பட்ட நபர் உண்மையில் அவருக்கு வீடு இல்லாவிட்டால் அந்த இடத்தில் கிடுகு வீடு ஒன்றையாவது அமைத்துக் கொண்டு அங்கு குடியேற முயற்சிப்பார். அவ்வாறானால் வீடு கட்டி முடிந்தும் அங்கு ஏன் மக்கள் குடியேறவில்லை? அதற்கு காரணம் அவர்களுக்கு வேறு இடத்தில் வீடு இருப்பதால்தான் என்பது தெளிவாகிறது. இத்தகைய பிரச்சினைகள் அனுராதபுரம் மாவட்டத்தில் மட்டுமன்றி நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் காணப்படுகின்றன. ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் இவ்வாறான பாரிய வீட்டுத் திட்டங்கள் காணப்படுகின்றன. நாம் தற்போது வீடமைப்பு அதிகார சபையில் அது தொடர்பான தகவல்களைக் கோரியுள்ளோம். அந்த தகவல்களைப் பெற்றுக்கொண்டு இத்தகைய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் குழுவொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளது என்றார். https://www.virakesari.lk/article/236750

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.