Everything posted by ஏராளன்
-
'அடுத்த 48 மணிநேரத்தில் தெற்கு வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு' - எந்தெந்த மாவட்டங்களில் கனமழை பெய்யலாம்?
சென்யார் புயல்: புயல்களுக்கு பெயர் வைக்கப்படுவது எப்படி? முடிவு செய்வது யார்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பும் வேறு சில வானிலை அமைப்புகளும் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படி இந்தப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. (கோப்புப்படம்) 26 நவம்பர் 2025 (கடந்த 2020ஆம் ஆண்டு வெளியான இந்தக் கட்டுரை தற்போது மறுபகிர்வு செய்யப்படுகிறது) மலேசியா மற்றும் இந்தோனீசியா அருகே உருவான 'சென்யார்' புயல் இன்று காலை இந்தோனீசியாவில் கரையைக் கடந்தது. அடுத்த 24 மணிநேரத்தில் இந்தப் புயல் வலுவிழந்து மேற்கு நோக்கி நகரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதோடு, வங்கக் கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாகத் தீவிரமடையும் என வானிலை ஆய்வு மையத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இது மேலும் தீவிரமானால் புயலாகவும் மாறலாம் என வானிலை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதேபோலக் கடந்த அக்டோபர் மாதம் வங்கக் கடலில் உருவான மோன்தா புயல் ஆந்திராவில் கரையைக் கடந்தது. ஒவ்வொரு புயல் உருவாகின்ற போதும் அதன் பெயர் பற்றிய விவாதங்கள் சமூக ஊடகங்களில் எழுப்பப்படுகின்றன. ஆனால் இதன் பின்னுள்ள வழிமுறை மிகவும் சுவாரஸ்யமானது. புயல்களுக்கு இப்படிப் பெயரிடும் வழக்கம் 2004ஆம் ஆண்டில் தொடங்கியது. பல்வேறு நாடுகள் இணைந்து தயாரிக்கும் ஒரு பொதுப் பட்டியலின் அடிப்படையில் இந்தப் பெயர்கள் வழங்கப்பட்டு வருகின்றன. புயலுக்குப் பெயரிடும் நாடுகள் எவை? உலக அளவில் வெப்பமண்டல சூறாவளிகள் குறித்த அறிவுரைகளை வழங்குவது, அவற்றுக்குப் பெயர் சூட்டுவது ஆகிய அதிகாரம், பகுதியளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களுக்கும் பகுதியளவிலான வெப்பமண்டல சூறாவளி எச்சரிக்கை மையங்கள் ஐந்துக்கும் வழங்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பிராந்திய அளவில் தனித்தன்மை வாய்ந்த ஆறு வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆய்வு மையம் திகழ்கிறது. (கோப்புப் படம்) பிராந்திய அளவில் ஆறு வானிலை மையங்களில் ஒன்றாக இந்திய வானிலை ஆய்வு மையம் திகழ்கிறது. உலக அளவிலான வானிலை ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஆசிய - பசிஃபிக் பகுதிகளுக்கான பொருளாதார மற்றும் சமூக ஆணையத்தின் கீழ் அதன் உறுப்பு நாடுகளான வங்கதேசம், இந்தியா, இரான், மாலத்தீவு, மியன்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், செளதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஏமன் ஆகிய 13 நாடுகளுக்கான வெப்பமண்டல சூறாவளி மற்றும் புயல் உருவாக்கம் குறித்த அறிவுரைகளை வழங்கும் மையமாக இந்திய வானிலை ஆய்வு மையம் விளங்குகிறது. டெல்லியில் இருந்து செயல்படும் தனித்தன்மை வாய்ந்த இந்திய வானிலை மையம், வங்காள விரிகுடா, அரபிக் கடல் ஆகிய இந்திய பெருங்கடலின் வடக்குப் பகுதியில் உருவாகும் வெப்பமண்டல புயல்களுக்குப் பெயர் சூட்டும் அதிகாரம் பெற்றதாக விளங்குகிறது. பட மூலாதாரம், IMD படக்குறிப்பு, புயல்களுக்குப் பெயரிடும் இந்த வழக்கம் 2004ஆம் ஆண்டில் தொடங்கியது. எதற்காக புயல்களுக்கு பெயர் வைக்கப்படுகிறது? வெப்பமண்டல புயல்களுக்கு பெயர் சூட்டுவதென்பது பல்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்படுகிறது. அவை, அறிவியல் துறையைச் சார்ந்தவர்கள், பேரழிவுக் கால நிர்வாகத்தை மேற்கொள்வோர், ஊடகத் துறையினர், பொதுமக்கள் ஆகியோர் ஒவ்வொரு சூறாவளியையும் தனித்து அடையாளம் காண்பது அத்தகைய சூறாவளி எவ்வாறு உருப்பெற்று வருகிறது என்பதைப் பற்றிய புரிதலை உருவாக்குவது ஒரு குறிப்பிட்ட பகுதியில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட புயல்கள் உருவாகக் கூடுமானால் அவை குறித்த குழப்பத்தை அகற்றுவது ஒவ்வொரு வெப்பமண்டல சூறாவளியையும் எளிதாக நினைவில் கொள்வது மக்களுக்கு விரிவான எச்சரிக்கைகளைத் துரிதமாக வழங்குவது பொதுவாக, அரபிக் கடல், வங்காள விரிகுடா, இந்திய பெருங்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கான பெயர்களை 13 உறுப்பு நாடுகள் இணைந்துதான் வைக்கின்றன. சர்வதேச வானிலை ஆய்வு அமைப்பும் வேறு சில வானிலை அமைப்புகளும் இணைந்து வகுத்த வழிமுறைகளின்படி இந்தப் பெயர்கள் வைக்கப்படுகின்றன. புயலுக்கு பெயர் வைக்க உள்ள நிபந்தனைகள் இந்த நாடுகள் பரிந்துரைக்கும் பெயர்களுக்கு சில நிபந்தனைகள் உள்ளன. புயலின் பெயரில் எவ்வித அரசியல், அரசியல் பிரபலங்களின் பெயர்கள், கலாசாரம், மத நம்பிக்கை, இனம் போன்றவை பிரதிபலிக்கக் கூடாது. உலக அளவில் வாழும் மக்களில் எவருடைய உணர்வையும் காயப்படுத்தும்படி பெயர் இருக்கக்கூடாது மிகவும் கொடூரமானதாக பெயர் இருக்கக்கூடாது சிறியதாகவும், உச்சரிக்க எளிதாகவும் யாரையும் காயப்படுத்தாத வகையிலும் பெயர் இருக்க வேண்டும் பெயரின் அளவு அதிகபட்சமாக 8 எழுத்துகளில் இருக்க வேண்டும் பரிந்துரைக்கப்படும் பெயரை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதை சம்பந்தப்பட்ட நாடுகள் குறிப்பிட்டிருக்க வேண்டும் பரிந்துரைக்கப்படும் பெயரை நிராகரிக்க 13 நாடுகளின் வானிலை ஆய்வு நிபுணர் குழுவுக்கு உரிமை உண்டு பெயர் சூட்டல் அமல்படுத்தப்படும் முன்பாகக்கூட அதை மறு ஆய்வுக்கு உள்படுத்த அந்தக் குழுவுக்கு அதிகாரம் உண்டு ஒருமுறை பயன்படுத்தப்பட்ட பெயர்கள், மீண்டும் வைக்கப்படக்கூடாது. பட மூலாதாரம், RSMC இந்த நிபந்தனைகள் அடிப்படையில் ஒரு நாடு தலா 13 பெயர்களைப் பரிந்துரைக்கலாம். இந்தப் பெயர்கள் சுழற்சி முறையில் ஆங்கில அகர வரிசைப்படி பயன்படுத்தப்படும். அந்த வரிசையில் சென்யாரை தொடர்ந்து இந்திய பெருங்கடல் பகுதியில் உருவாகும் அடுத்த புயலுக்கு திட்வா (Ditwah) எனப் பெயர் வைக்கப்பட உள்ளது. இந்தப் பெயரை ஏமன் பரிந்துரைத்துள்ளது. பொதுவாக, தென் பசிஃபிக், இந்திய பெருங்கடல் பகுதியில் ஏற்படும் கடல் சீற்றத்தின் தீவிரம் "புயல்" (Cyclone) எனவும், வடக்கு அட்லான்டிக், மத்திய வடக்கு பசிஃபிக், கிழக்கு வடக்கு பசிஃபிக் பெருங்கடல் பகுதியில் ஏற்படும் கடல் சீற்றத்தின் தீவிரம் "சூறாவளி" (Hurricane) என்றும் அழைக்கப்படுகிறது. வடமேற்கு பசிஃபிக் பெருங்கடலில் ஏற்படும் சீற்றத்தின் தீவிரம் "கடும் புயல்" (Typhoone) என்று வானிலை ஆய்வக நிபுணர்களால் அழைக்கப்படுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c865wq24ld5o
-
வடக்கு, கிழக்கு மாகாண அனர்த்த நிலைமைகள் தொடர்பான செய்திகள் - 2025
முல்லைத்தீவு நகரின் வீதியின் குறுக்கே வீழ்ந்த புளியமரம் : போக்குவரத்து பாதிப்பு 27 Nov, 2025 | 10:41 AM (இணையத்தள செய்திப் பிரிவு ) முல்லைத்தீவு நகரில், இன்று வியாழக்கிழமை (27) காலை புளியமரம் ஒன்று சரிந்து விழுந்துள்ளதாகவும் அனை அகற்றும் பணிகள் நடைபெற்று வருவதாகவும் முலைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனால் வீதிப்போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், மின் கம்பங்களின் இணைப்புக்கள் மிகவும் தாழ்நிலையில் காணப்படுவதனால் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு வாகனங்களை குறித்த பகுதியில் செலுத்திச் செல்ல வேண்டாமென மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு அறிவுறுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/231582
-
நவம்பர் 2025 - இன்றைய வானிலை
சில பகுதிகளில் 200 மில்லி மீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி பதிவாகும்; வளிமண்டலவியல் திணைக்களம் Published By: Digital Desk 3 27 Nov, 2025 | 09:02 AM நாடு முழுவதிலும் வானம் முகில் செறிந்து காணப்படுவதுடன் அடிக்கடி மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியலல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வளிமண்டலவியல் விடுத்துள்ள அறிக்கையில், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களிலும் 200 மில்லிமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை பெய்யக்கூடும். வடக்கு, மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களிலும் அத்துடன் காலி, மாத்தறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களின் சில இடங்களிலும் 150 மில்லிமீற்றரிலும் கூடிய மிகப் பலத்த மழை செய்வதுடன் நாட்டின் ஏனைய பிராந்தியங்களின் சில இடங்களில் 100 மில்லிமீற்றரிலும் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மணித்தியாலத்திற்கு சுமார் 60 - 70 கிலோமீற்றர் வேகத்தில் அடிக்கடி பலத்த காற்று வீசக் கூடும். பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக்கூடிய சந்தர்ப்பங்களில் பொது மக்கள் விழிப்புடன் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களுக்கு மறு அறிவித்தல் வரையில் மீனவர்களும் கடல்சார் ஊழியர்களும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகின்றனர். மேலும் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வழங்கப்படுகின்ற அறிவுறுத்தல்களை கவனத்திற் கொண்டு செயற்படுமாறும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். சில இடங்களில் மிகப் பலத்த மழை பெய்யக்கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/231566
-
பல வெளிநாட்டு போர்க்கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ளன!
பல வெளிநாட்டு போர்க்கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிட்டுள்ளன! Published By: Digital Desk 1 27 Nov, 2025 | 08:31 AM (இணையத்தள செய்திப் பிரிவு) இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவைக் முன்னிட்டு, பிராந்திய மற்றும் உலகளாவிய நாடுகளைச் சேர்ந்த ஏழு போர்க்கப்பல்களின் பங்கேற்புடன், எதிர்வரும் 30 ஆம் திகதி காலி முகத்திடலில் நடைபெறவுள்ள, 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச போர் கப்பல்கள் கண்காணிப்பில் பங்கேற்க, பங்களாதேஷ் மற்றும் இந்தியாவை பிரதிநிதித்துவப்படுத்தும் மூன்று (03) போர்க்கப்பல்கள் 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடைந்துள்ளன. கொழும்பு துறைமுகத்தில் கடற்படை மரபுகளின்படி போர்க்கப்பல்களை இலங்கை கடற்படை வரவேற்றுள்ளது. நாட்டை வந்தடைந்துள்ள பங்களாதேஷ் கடற்படையின் போர்க்கப்பலான ‘PROTTOY’ 90.1 மீற்றர் நீளம் கொண்டதுடன், அதன் கட்டளை அதிகாரியாக CAPTAIN MD TOUHIDUL HAQUE BHUIYAN கடமையாற்றுகின்றார். 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச போர்க்கப்பல்கள் கண்காணிப்பில் இரண்டு இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் பங்கேற்கின்றது. அதன்படி, நாட்டை வந்தடைந்துள்ள இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐNளு ஏஐமுசுயுNவு 262.5 மீற்றர் நீளம் கொண்டது அதன் கட்டளை அதிகாரியாக உயிவயin யுளாழம சுயழ கடமையாற்றுகின்றார். அதேநேரம், மற்றுமொரு இந்திய போர்க்கப்பலான INS VIKRANT 149.2 மீற்றர் நீளம் கொண்டதுடன், அதன் கட்டளை அதிகாரியாக captain Ashok Rao கடமையாற்றுகின்றார். மேலும், 2025ஆம் ஆண்டுக்கான சர்வதேச போர்க்கப்பல்கள் கண்காணிப்புடன் இணைந்து, கடற்படைகளுக்கு இடையே பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்த இலங்கை கடற்படை பல திட்டங்களை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி, இந்த போர்க்கப்பல்களின் குழுவினர்களில் பங்கேற்புடன் எதிர்வரும் 28 மற்றும் 29 ஆகிய திகதிகளில் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம், விளையாட்டு திட்டம், சர்வதேச உணவு கண்காட்சி, சர்வதேச இசைக்குழு நிகழ்ச்சி மற்றும் நகர அணிவகுப்பு ஆகியவை நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/231562
-
தவெகவில் இணைந்த செங்கோட்டையன்; சால்வை அணிவித்து வரவேற்ற விஜய் - என்ன நடக்கிறது?
தவெகவில் இணைந்த செங்கோட்டையன்; சால்வை அணிவித்து வரவேற்ற விஜய் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம், TVK 27 நவம்பர் 2025, 05:07 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் (இந்த செய்தி தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டு வருகிறது.) அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்தில் அக்கட்சி தலைவர் விஜயின் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தார். கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் பதவியை நேற்று (நவ. 26) அவர் ராஜினாமா செய்த நிலையில், இன்று தவெகவில் இணைந்துள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று குரல் எழுப்பிய செங்கோட்டையன் அதிமுகவிலிருந்து கடந்த அக்டோபர் மாதம் நீக்கப்பட்டார். இன்று தவெக கட்சி அலுவலகத்துக்கு சென்றார். அவர் விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்தார். அப்போது, செங்கோட்டையனுக்கு தவெகவின் சால்வை அணிவித்து வரவேற்றார். அப்போது, செங்கோட்டையனின் ஆதரவாளர்களும் உடனிருந்தனர். பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, தவெக அலுவலகத்தில் செங்கோட்டையன் தவெக உறுப்பினர் அட்டையை சட்டைப் பையில் வைத்துக் கொண்ட செங்கோட்டையன் கட்சியில் இணையும் நிகழ்வில் "வேற்றுமைகளை களைந்து மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சமவாய்ப்பு, சம உரிமை கிடைக்க பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமாற உறுதி கூறுகிறேன்" என்று செங்கோட்டையனும் அவரது ஆதரவாளர்களும் விஜய் முன்னிலையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மேடையில் விஜய்க்கு அருகில் நின்றிருந்த செங்கோட்டையனுக்கு உறுதிமொழி ஏற்ற பிறகு, பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் விஜய். அதன் பின் அவருக்கு பச்சை நிற சால்வை அணிவித்தார் விஜய். பிறகு, விஜய் தவெகவின் கட்சித் துண்டை செங்கோட்டையனின் கழுத்தில் அணிவித்தார். பிறகு விஜய் தவெகவின் உறுப்பினர் அட்டையை செங்கோட்டையனிடம் வழங்க, அதைப் பெற்றுக் கொண்டு தனது சட்டைப் பாக்கெட்டில் வைத்துக் கொண்டார். அதன் பின் செங்கோட்டையன் விஜய்க்கு சால்வை அணிவித்து, பூங்கொத்து கொடுத்தார். மேடையில் விஜயிடம் சில நூல்களையும் விஜய்க்கு பரிசாக அளித்தார். அப்போது புகைப்படத்துக்கு போஸ் கொடுக்க இருவரும் அருகருகே நின்ற போது, செங்கோட்டையனின் கழுத்தில் இருந்த தவெக கட்சித் துண்டை சரி செய்தார் விஜய். கட்சியில் இணைந்த செங்கோட்டையனின் ஆதரவாளர்கள் ஒருவர் பின் ஒருவராக மேடை ஏறி விஜயிடம் வாழ்த்துப் பெற்றனர். அவர்களுக்கு சால்வை மற்றும் தவெக கட்சித் துண்டை அணிவித்து, கட்சியில் வரவேற்றார் விஜய். விஜய் பேசியது என்ன? தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், செங்கோட்டையன் தனது கட்சியில் இணைந்த பிறகு அது குறித்து எக்ஸ் தளத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் விஜய், "20 வயது இளைஞராக இருக்கும் போதே எம்ஜிஆர்-ஐ நம்பி அவரது மன்றத்தில் சேர்ந்தவர். அந்த சிறுவயதில் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெரிய பொறுப்பை ஏற்றவர். அதன் பின் அவருடைய பயணத்தில், அந்த இயக்கத்தின் இரு பெரும் தலைவர்களுக்கு (எம்ஜிஆர், ஜெயலலிதா) பெரிய நம்பிக்கைக்குரியவராக அரசியல் களத்தில் இருந்தவர். 50 ஆண்டுகளாக ஒரே இயக்கத்தில் இருந்த அண்ணன் செங்கோட்டையன், இன்று அவரது அரசியல் அனுபவமும், அவருடைய அரசியல் களப்பணியும் நம்முடைய தமிழக வெற்றிக் கழகத்துக்கு பெரிய உறுதுணையாக இருக்கும் என்ற நம்பிக்கையுடன், அவருடன் இணைந்து பணியாற்ற நம்முடன் கைகோர்க்கும் அனைவரையும் மக்கள் பணியாற்ற வரவேற்கிறேன்" என்று பேசினார். பாஜக கூறுவது என்ன? செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது குறித்து பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேட்ட போது, "பாஜக யாருக்கும் எந்த வாக்குறுதியும் தரவில்லை. அதிமுகவில் இருந்துகொண்டு பாஜகவை நம்பி இருந்தோம் என்று கூறுவது எப்படி சரியாக இருக்கும், எப்படி பொருத்தமாக இருக்கும்? செங்கோட்டையன் தவெகவில் இணைந்தது அதிமுக-பாஜக கூட்டணியில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அவர்களின் உட்கட்சி பிரச்னை குறித்து பேசுவது நியாயமாக இருக்காது." என்று தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன? தமிழக வெற்றிக் கழகத்தில் செங்கோட்டையன் இணைந்தது குறித்து மதுரையில் இருந்த அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, "அவர் (செங்கோட்டையன்) அதிமுகவில் இல்லை. எனவே அதைப் பற்றி பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை" என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். அதிமுக முன்னாள் நிர்வாகி புகழேந்தி தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், "செங்கோட்டையனுக்கு எனது வாழ்த்துகள். செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது விஜய்க்கும் அந்த கட்சிக்கும் பலம் சேர்க்கும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவை பாராட்டி பேசுகிறார் விஜய். செங்கோட்டையனுக்கு உரிய மரியாதையை தவெக கொடுக்க வேண்டும். அதிமுகவில் பிரிந்து சென்றவர்கள் ஒன்றாக சேரப்போவதில்லை." என தெரிவித்தார். மேலும், "செங்கோட்டையன் தவெகவில் சேர்ந்தது குறித்து, எடப்பாடி பழனிசாமியிடம் கேட்ட போது, "என்னை ஏன் கேட்கிறீர்கள்" என்கிறார். இவர் தானே செங்கோட்டையனை கட்சியிலிருந்து நீக்கினார், இவர் தானே அந்த தொகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தினார், பிறகு வேறு யாரை கேட்பது? இப்படி இருந்தால் அதிமுகவின் எதிர்காலம் கேள்விக்குறியாக உள்ளது." என்றார். பின்னணி அதிமுகவை எம்.ஜி.ஆர் நிறுவிய காலம் தொட்டு அக்கட்சியில் பணியாற்றிவரும் மூத்த அரசியல்வாதியான செங்கோட்டையன், அவரது கோபிச்செட்டிபாளையம் சட்டமன்ற தொகுதியில் கட்சி அலுவலகத்தில் செப்டம்பர் 3 ஆம் தேதி ஊடகங்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், "நான் மனம் திறந்து பேசப் போகிறேன். எனது கருத்துக்கள் கட்சி தொண்டர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும்" என்று கூறியிருந்தார். மனம் திறந்து பேசப்போவதாக கூறிய அவர், "அதிமுகவில் இருந்து வெளியே சென்றவர்களை அரவணைக்க வேண்டும். அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும்" என்று செப்டம்பர் 5ம் தேதி பொதுவெளியில் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கை வைத்தார். அது குறித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு மேற்கொள்வதற்கு 10 நாட்கள் கெடுவும் விதித்தார். அடுத்த நாளே அவரை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கினார் எடப்பாடி பழனிசாமி. கடந்த மூன்று வாரங்களுக்கு முன் ஊடகங்களில் பேசிய செங்கோட்டையன், அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் தன்னை அழைத்து பேசியது பாஜகதான் என்றதுடன் "பாஜகவை விட்டால் நமக்கு வேறு வழியில்லை, நம்மை விட்டால் பாஜகவுக்கும் வேறு வழியில்லை என்று கூறினேன். என்னை வைத்து அதிமுகவை உடைக்க பாஜக ஒருபோதும் முயற்சிக்கவில்லை" என்று தெரிவித்தார். 2026-ல் அதிமுக மாநிலத்தில் ஆட்சி அமைக்க உதவ வேண்டும் என்றும் 2029-ல் பாஜகவின் எண்ணங்கள் நிறைவேற கட்சித் தலைமையிடம் பேசி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் தான் கூறியதாக அப்போது செங்கோட்டையன் பேசியிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgqpvkxvqvo
-
யாழ். மாவட்ட மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
27 Nov, 2025 | 11:48 AM அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலகத்தின் 0212117117 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் என அரசாங்க அதிபர் தெரிவித்துள்ளார். அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைக்கு முன்னேற்பாடாக பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்களுடன் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் நேற்று புதன்கிழமை (26) அரசாங்க அதிபர் அலுவலகத்தில் கலந்துரையாடினார். இக் கலந்துரையாடலில் கருத்து தெரிவித்த அரசாங்க அதிபர் , அனர்த்த அபாய குறைப்பு நடவடிக்கைகளுக்கு உத்தியோகத்தர்களால் மேற்கொள்ளப்பட்டுவரும் நடவடிக்கைகளை கேட்டறிந்துகொண்டதுடன், அனர்த்தம் ஏற்படும் போது உத்தியோகத்தர்கள் தமது கடமையிலிருந்து விலகமுடியாது எனவும், அடுத்த ஆண்டு தை மாதம் தொடக்கம் பங்குனி மாதம் வரை கிராம மட்ட ரீதியாக எடுக்க வேண்டிய முன்னாயத்த நடவடிக்கைகளுக்கான திட்டங்களை சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், தற்போது உடனடியாக வெள்ள நீர் வழிந்தோடாமைக்கான தடைகளை ஜேசிபி மூலம் அகற்றுவதற்கான இடங்களை உத்தியோகத்தர்களிடம் கேட்டறிந்து, உடனடியாக அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகத்துடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதற்கட்டமாக 0.75 மில்லியன் ரூபா நிதியினை வழங்குமாறு அரசாங்க அதிபரால் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. பாதுகாப்பு நிலையம் அமைக்கப்பட்டால் அவ் நிலையத்திற்கு சுழற்சி முறையில் உத்தியோகத்தர்களை கடமைகளில் ஈடுபடுத்தும் செயற்பாட்டை பிரதேச செயலாளர்கள் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்தார். மேலும், உணவுப் பொதிகள், தறப்பாள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கும் போது பிரதேச செயலாளர்களின் ஒருங்கிணைப்பில் வழங்கப்பட வேண்டும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். மேலும், அனர்த்தத்தின் போது பொதுமக்கள் அவசர உதவிகளைப் பெற்றுக்கொள்ள மாவட்டச் செயலக 0212117117 இலக்க தொலைபேசிக்கு 24 மணி நேரமும் தொடர்பு கொள்ள முடியும் எனவும் அவ் இலக்கத்திற்கு அனர்த்த முகாமைத்துவ பிரதிப் பணிப்பாளர் பதிலளிப்பார் எனவும் அவர் பதிலளிக்காது தவறுதலாக தவறும்பட்சத்தில் தமது தனிப்பட்ட தொலைபேசி இலக்கத்திற்கு அத் தொலைபேசி இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார். இக் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளரும், யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினருமான எஸ். கபிலன், பொதுமக்களிடமிருந்து வடிகால்கள் சீர் செய்ய வேண்டிய கோரிக்கைகள் அதிகம் கிடைக்கப்பெறுவதாகவும், வெள்ள அனர்த்தம் ஏற்பட்டால் முப்படையினர் உதவி செய்வதற்கு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்து அனைவரின் பூரண ஒத்துழைப்பினையும் வழங்குமாறும் கேட்டுக் கொண்டார். இக் கூட்டத்தில் வைத்து அரசாங்க அதிபரினால் அனர்த்த முகாமைத்துவ சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு 0.75 மில்லியன் ரூபா நிதியினை வழங்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு உடனடியாகவே நிதி விடுவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், திட்டமிடல் பணிப்பாளர் இ சுரேந்திரநாதன், உதவி மாவட்டச் செயலாளர் உ.தா்சினி, அனர்த்த முகாமைத்துவ பிரதிப்பணிப்பாளர் ரி. என். சூரியராஜா, அனர்த்த நிவாரண சேவைகள் மாவட்ட அலுவலர் ஆ. நளாயினி, உதவிப் பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலக அனர்த்த நிவாரண சேவைகள் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/231585
-
சீரற்ற வானிலை - எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அதிரடி பணிப்புரை
சீரற்ற வானிலை - எம்.பிக்களுக்கு ஜனாதிபதி அதிரடி பணிப்புரை Nov 27, 2025 - 01:04 PM அடுத்த இரண்டு நாட்களில் அதிகரிக்கவுள்ள கடும் மழையுடன் கூடிய ஆபத்தான வானிலை காரணமாக, உயிரிழப்புகளைத் தடுக்கவும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் உடனடியாகத் தலையிடுமாறு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, அனர்த்தம் மற்றும் அபாயத்திற்கு உள்ளான மாவட்டங்களின் மக்கள் பிரதிநிதிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். நாட்டில் ஏற்பட்டுள்ள அவசரகால அனர்த்த நிலைமை மற்றும் நிவாரணப் பணிகள் குறித்து ஆராய்வதற்காக இன்று (27) காலை பாராளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி இந்த ஆலோசனைகளை வழங்கினார். தமது மாவட்டங்களுக்குச் சென்று பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து ஆராயுமாறு அறிவுறுத்திய ஜனாதிபதி, மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கள் மற்றும் பிரதேச அபிவிருத்திக் குழுக்களைக் கூட்டி, அந்தந்தப் பகுதிகளில் நிலவும் அபாய நிலைமை மற்றும் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை இனங்கண்டு, மக்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் நிவாரணங்களை வழங்க துரித நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு ஆலோசனை வழங்கியதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது மாவட்டங்களுக்குச் சென்று மக்களுக்கு நிவாரணம் வழங்கும் பணிகளில் ஈடுபடுவதற்கு வரவு-செலவுத் திட்ட விவாதங்கள் மற்றும் பாராளுமன்ற நடவடிக்கைகள் தடையாக உள்ளதால், இது குறித்து இன்று பிற்பகல் 2.00 மணிக்கு நடைபெறவுள்ள கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மேலும் கலந்துரையாடத் தீர்மானிக்கப்பட்டது. இங்கு முக்கியமாக மக்களின் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகள் குறித்தும், பாதிக்கப்பட்ட மக்களுக்கான சுகாதார வசதிகள் உள்ளிட்ட நிவாரண சேவைகளைத் தொடர்ச்சியாக வழங்குவது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், உயர்தரப் பரீட்சையை நடத்துதல் மற்றும் கல்வி நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதில் உள்ள சிக்கல்கள் குறித்தும் விசேட கவனம் செலுத்தப்பட்டது. நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்கள், வீடுகளில் சிக்கியுள்ள மக்கள் மற்றும் அனர்த்தம் காரணமாக உறவினர்களின் வீடுகளில் தங்கியுள்ள மக்களுக்கும் சமைத்த உணவு மற்றும் உலர் உணவுப் பொருட்களைத் தொடர்ச்சியாக வழங்க ஜனாதிபதி ஆலோசனை வழங்கியதுடன், சேதமடைந்த வீடுகள் மற்றும் பயிர் நிலங்களுக்கு நட்டஈடு வழங்கும் முறைமை குறித்தும் கவனம் செலுத்தினார். அத்துடன், நீர்ப்பாசனக் கட்டமைப்பு மற்றும் அதன் பாதுகாப்பு குறித்தும், மண்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் பெருந்தெருக்கள் கட்டமைப்பின் பாதுகாப்பு குறித்தும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmih4bowl021zo29nr65krudr
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப்படம்.
-
வடக்கு மீனவர்களின் கடல் வளத்தை பாதுகாப்பது அவசியம் - துரைராசா ரவிகரன்
இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டுவருகின்றன; அவர்களை நாம் நிச்சயம் பாதுகாப்போம் - அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் 26 Nov, 2025 | 04:09 PM இலங்கை மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு வருகின்றன. அவர்களை நாம் நிச்சயம் பாதுகாப்போம். அதேபோல கடல்வளங்களை பாதுகாப்பதற்கும், ஏற்றுமதியை நோக்கி நகர்வதற்குரிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் புதன்கிழமை (26) நடைபெற்ற வரவு- செலவுத்திட்டத்தில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு, இலங்கையின் கடல்வளம் மற்றும் மீன்பிடித்துறை எவ்வாறு மேம்படுத்தப்படும் என எமது விஞ்ஞாபனத்தில் மிகவும் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. கடற்றொழில் விடயத்தில் நாம் இன்னமும் பழமையான நிலையிலேயே உள்ளோம் என்பதை ஏற்றாக வேண்டும். ஆழ்கடல் உட்பட மீன்பிடியில் ஈடுபடும் படகுகள் குறைந்தது 10 வருடங்களாவது பழைய நிலையில் உள்ளது. இதனால் ஆழ்கடல் மீன்பிடி தொடர்பில் நம்பிக்கை குறைந்து வருகின்றது. நவீன படகுகள் பற்றியும் கவனம் செலுத்தப்படுவதில்லை. இதனால் மீன்பிடித்துறை வலுவிழந்து வரும் நிலையும் காணப்படுகின்றது. இந்நிலைமையில் இருந்து நாம் மேம்பட வேண்டும், எமது மீனவர்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் உறுதியாக உள்ளது. 2025 வரவு- செலவுத் திட்டத்தில் எமது அமைச்சுக்கு 11.4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டது. 2026 ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்தில் மூலதனச் செலவுக்கு கூடுதல் ஒதுக்கீடு இடம்பெற்றுள்ளது. அதேபோல மீன்பிடித்துறைமுகம் அபிவிருத்திக்காக மேலும் 1000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பத்தை கையாள்வதற்காக 100 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. நன்னீர் மீன்பிடித்துறைக்கும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கடந்தமுறையைவிட இம்முறை எல்லா விடயங்களுக்கும் உரிய வகையில் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீனவர்களின் பிரச்சினைகளை இனங்கண்டு, அவற்றை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம். இதற்குரிய ஒதுக்கீடும் உள்ளது. மயிலிட்டி உட்பட வடக்கிலுள்ள மீன்பிடி துறைமுகங்கள் மேம்படுத்தப்படும். கடலறிப்பை தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. இலங்கையை சூழ கடல் வளம் உள்ளது. அப்படி இருக்கையில் கடந்த காலங்களில் வெளிநாடுகளில் இருந்தே ரின் மீன் இறக்குமதி செய்யும்நிலை காணப்பட்டது. இதற்கு நாம் கடந்த வருடம் முற்றுப்புள்ளி வைத்தோம். தற்போது இலங்கையிலேயே ரின்மீன் உற்பத்தி செய்யப்படுகின்றது. கருவாடு மற்றும் மாசி உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் செய்து தரப்படும். கடந்த காலங்களில் இவர்களுக்கு உப்பு பிரச்சினை இருந்தது. அது தற்போது சரிசெய்யப்பட்டுள்ளது. அதேவேளை, கடற்றொழில் அமைச்சால் இலங்கையில் பிரமாண்ட கண்காட்சி கடந்த வாரம் நடத்தப்பட்டது. எமது நாட்டின் மகத்துவம் இதன்மூலம் எடுத்துரைக்கப்பட்டது. சர்வதேசத்தின் கவனமும் ஈர்க்கப்பட்டது. மீனவர்களின் பிரச்சினைகள் எமக்கு தெரியும். அவற்றை தீர்ப்பதற்குரிய உரிய தலையீடுகளை நாம் மேற்கொள்வோம். மீனவ கிராமங்களுக்கே நேரில் சென்று நாம் தீர்வுகளை வழங்கி வருகின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/231507
-
உளவு பார்க்க சோவியத் ஒன்றியத்துக்கு சென்ற நிஜ 'ஜேம்ஸ் பாண்ட்' இறுதியில் என்ன ஆனார்?
பட மூலாதாரம், Hulton Archive/Getty Images படக்குறிப்பு, பிரிட்டன் உளவு வரலாற்றில் சிட்னி ரைலியின் தந்திரங்கள் சிறந்தவையாக கருதப்பட்டன. கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி ஹிந்தி 23 நவம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 24 நவம்பர் 2025 ஆண்டு: 1925, நாள்: நவம்பர் 5, இடம்: ரஷ்யா ரஷ்யாவின் லுப்யான்கா சிறையில் அடைக்கப்பட்டிருந்த 73-ஆம் எண் கொண்ட கைதி அங்கிருந்து அருகில் உள்ள சோகோல்நிக்கி காட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டார். சோவியத் ராணுவ உளவு அமைப்பைச் சேர்ந்த (ஓஜிபியூ) மூன்று பேர் அவருடன் சென்றனர். பகோர்ஸ்க் சாலையில் அமைந்துள்ள ஒரு குளம் அருகே கார் நின்றது. காரிலிருந்து இறங்கி சிறிது தூரம் காட்டிற்குள் நடந்து செல்லுமாறு அந்த கைதியிடம் தெரிவிக்கப்பட்டது. இதில் அசாத்தியமாக எதுவும் இல்லை. இதற்கு முன்னரும் கூட கைதிகள் இது போல நடப்பதற்காக சில நாட்கள் இடைவெளியில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர். 2004-ஆம் ஆண்டு வார்ஃபேர் ஹிஸ்டரி நெட்வொர்க்கில் வெளியான 'தி மிஸ்டீரியஸ் சிட்னி ரைலி' என்கிற கட்டுரையில் வின்ஸ் ஹாவ்கின்ஸ் பின்வருமாறு எழுதுகிறார் - "கைதி காரிலிருந்து 30-40 அடிகள் நடந்திருக்க மாட்டார். அப்போது ஓஜிபியூ உளவாளியான ஆப்ரஹாம் அபிசாலோவ் தன்னுடைய துப்பாக்கியை எடுத்து அக்கைதியை பின்னிருந்து சுட்டார். தான் இவ்வாறு கொல்லப்படுவோம் என அவர் அறிந்திருக்கமாட்டார். ஒருவேளை அறிந்திருந்தாலும் அவர் தப்பிக்க வாய்ப்பில்லை, ஏனெனில் அவரைக் கொல்வதற்கான உத்தரவை ஸ்டாலினே பிறப்பித்திருந்தார். பிரிட்டன் உளவு வட்டாரங்களில் மிகச்சிறந்த உளவாளியாக கருதப்பட்ட சிட்னி ரைலி, இறுதியில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்." இவரை அடிப்படையாக வைத்துதான் பிரபல ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Biteback Publishing யுக்ரேனிய யூத குடும்பத்தில் பிறந்தவர் பிரிட்டன் உளவு வரலாற்றில் ரைலியின் தந்திரங்கள் சிறந்தவையாக கருதப்பட்டன. இவை 1931-ஆம் ஆண்டு அவர் இறந்த பிறகு வெளியான அவருடைய சுயசரிதை புத்தகமான, "அட்வெஞ்சர்ஸ் ஆப் ஏ பிரிட்டிஷ் மாஸ்டர் ஸ்பை" என்கிற புத்தகத்தின் மூலமாகத்தான் வெளி உலகிற்கு முதலில் அறிமுகமானது. இந்த சுயசரிதையின் சில பகுதிகள் லண்டன் ஈவினிங் ஸ்டாண்டர்டிலும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. ஸ்டீபன் க்ரே தனது, "தி நியூ ஸ்பைமாஸ்டர்ஸ்" புத்தகத்தில், "ரைலியிடம் ஒரு சிறந்த உளவாளிக்கான அனைத்து தகுதிகளும் இருந்தன. அவர் பல மொழிகள் பேசுவார், எளிதாக மக்களை ஏமாற்றக்கூடியவர், எந்த இடத்திலும் நுழையக்கூடிய திறமை அவரிடம் இருந்தது. நண்பர்களாகி அவர்களிடம் ரகசியங்களைப் பெறுவது அவருக்கு எளிதாக இருந்தது. சோவியத் ஒன்றியத்திற்கு அனுப்பப்பட்ட பிரிட்டனின் சிறந்த உளவாளிகளில் அவரும் ஒருவர்." என எழுதுகிறார். யுக்ரேனில் உள்ள ஒடேசாவில் ஒரு யூத குடும்பத்தில் 1873-ஆம் ஆண்டு பிறந்தார் ரைலி. 1890-ஆம் ஆண்டு லண்டனுக்கு குடிபெயர்ந்தவர், அங்கு ஒரு அயர்லாந்து பெண்ணை திருமணம் செய்து கொண்டதோடு அவரின் குடும்ப பெயரையும் தனது பெயருடன் சேர்த்துக் கொண்டார். தன்னையும் அயர்லாந்தைச் சேர்ந்தவர் என விவரிக்கத் தொடங்கினார். அப்போதிலிருந்து வணிகராகவும் பகுதிநேர துப்பறிவாளராகவும் பணியாற்றத் தொடங்கினார். பட மூலாதாரம், Tempus பிரிட்டன், ஜப்பானுக்கு உளவு பார்த்தவர் தகவல்களைச் சேகரித்து அவற்றை விற்பதுதான் அவரின் பணி. காக்கேசியா பகுதியில் உள்ள எண்ணெய்க்கான சாத்தியம் பற்றிய துல்லியமான தகவல்களையும் பிரிட்டன் உளவுப் பிரிவுக்கு வழங்கினார். ரஷ்யா-ஜப்பான் போரின்போது ரஷ்யாவின் பாதுகாப்பு திட்டங்களை திருடி அவற்றை ஜப்பானியர்களிடம் விற்றார். ஆண்ட்ரூ குக் தனது 'ஏஸ் ஆஃப் ஸ்பைஸ், தி ட்ரூ ஸ்டோரி ஆஃப் சிட்னி ரைலி' புத்தகத்தில், "போர் தகவல்களை வாங்கி விற்பதில் ரைலி முக்கியப் பங்கு வகித்தார். 1917-இல் ரஷ்ய புரட்சிக்கு முன்பாக அங்கு 1915-ஆம் ஆண்டின் கோடை காலத்தில் கடைசியாக காணப்பட்டார். 1914-இல் செயின்ட்.பீட்டர்ஸ்பெர்கில் உள்ள ஜெர்மன் கப்பல் கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளரிடமிருந்து ஜெர்மனியின் கடற்படை விரிவாக்கத்தின் முழுமையான ப்ளூபிரிண்டை திருடி அதை பிரிட்டன் உளவுப் பிரிவிடம் விற்றார்" என எழுதியுள்ளார். ரஷ்யாவில் அக்டோபர் புரட்சியைத் தொடர்ந்து பிரிட்டன் ராணுவத்தில் இணைய முடிவெடுத்தார் ரைலி. அப்போது நியூயார்க்கில் போர் ஒப்பந்தங்கள் தொடர்பாக வேலை செய்து வந்தார். அவருடைய சுயசரிதையை எழுதிய ஆண்ட்ரூ குக், "ரைலி வேறு சில நோக்கங்களுக்காக மீண்டும் ரஷ்யாவிற்குள் நுழைய திட்டமிட்டு வந்தார். செயின்ட்.பீட்டர்ஸ்பெர்கில் அதிக அளவிலான விலையுயர்ந்த பொருட்களையும் ஓவியங்களையும் விட்டுவிட்டு வந்திருந்தார். அவற்றை பிரிட்டனுக்கு எடுத்து வரும் முயற்சியில் இருந்தார்." எனத் தெரிவித்திருக்கிறார். ரஷ்யாவில் உளவுப்பணி பிரிட்டன் ரகசிய உளவு சேவையின் (எஸ்ஐஎஸ்) தலைவரான சார் மேன்ஸ்ஃபீல்ட் கம்மிங்ஸ், 1918-ஆம் ஆண்டு மார்ச் 18-ஆம் தேதி இவரை ரஷ்யாவிற்கு அனுப்புவதற்கு முன்பாக இவரின் பின்னணியை முழுமையாக விசாரித்திருந்தார். நியூயார்கில் உள்ள எஸ்ஐஎஸ் நிலையம் இவர் நம்பகமான நபர் இல்லையென்றும் ரஷ்யாவில் இவருக்கு வழங்கப்பட உள்ள பொறுப்புகளுக்கு உகந்தவர் இல்லையென்றும் தந்தி அனுப்பியிருந்தது. "நார்மன் துவெய்ட்ர்ஸ் என்கிற எஸ்ஐஎஸ் அதிகாரி, ரைலி ஒரு சிறந்த வணிகர், ஆனால் தேசப்பற்று அல்லது கொள்கை கொண்டவரோ இல்லை. எனவே விசுவாசம் தேவைப்படும் ஒரு வேலைக்கு இவரைத் தேர்வு செய்யக்கூடாது எனத் தெரிவித்திருந்தார். ஆனால் கம்மிங்ஸ் இவரின் பரிந்துரைகளைப் புறக்கணித்து ரைலியை ரஷ்யாவில் ஒரு உளவு திட்டத்தில் அனுப்ப முடிவெடுத்தார்." என குக் எழுதியுள்ளார். பட மூலாதாரம், Public Affairs பெண்கள் உடனான நட்பு ரஷ்யாவில் உள்ள தனது உளவாளிகளுக்கு ரைலியைப் பற்றிய குறிப்பு ஒன்றை கம்மிங்ஸ் அனுப்பியிருந்தார். அதில், "அவர் 5 அடி 10 அங்குலம் உயரம் இருப்பார். கண்கள் பழுப்பு நிறத்திலும் புடைத்துக் கொண்டிருப்பதைப் போலவும் இருக்கும். முகம் கருப்பாகவும் பல வெளிப்படையான கோடுகளைக் கொண்டும் இருக்கும்." எனக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் ரைலியிடம் உள்ள ஏதோ ஒன்று பெண்களை ஈர்த்துள்ளது. உளவு தகவல்களைச் சேகரிப்பதற்காக அவர்களைப் பயன்படுத்தி வந்தார். 'ஸ்பைஸ் அண்ட் கமிஷர்ஸ்' என்கிற தனது புத்தகத்தில் ராபர்ட் சர்வீஸ், "ரைலியுடன் தொடர்பில் இருந்தவர்களில் ரஷ்ய நடிகையான யெலிசவெடா ஓட்டனும் ஒருவர். ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளினிலிருந்து சில 100 யார்டுகள் தொலைவில் அடுக்குமாடி குடியிருப்பில் வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்திருந்தார். அதே குடியிருப்பில் வசித்த டக்மாரா கரோசஸ் என்கிற பெண்ணுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். ஜெர்மன் நாட்டு குடிமகளான டக்மாரா 1915-இல், உளவாளி என்கிற சந்தேகத்தில் ரஷ்ய உள்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தால் விசாரிக்கப்பட்டிருந்தார்." என எழுதியுள்ளார் ராபர்ட் தனது புத்தகத்தில் நீண்ட பட்டியல் ஒன்றை வழங்கியுள்ளார். "கூடுதலாக ஒல்கா ஸ்டார்ஜெவ்ஸ்கயா என்கிற பெண்ணும் அவரைத் தீவிரமாக காதலித்து வந்தார். அவர்களுக்கு விரைவில் திருமணமாகும் என்றும் அவர் நம்பி வந்தார். காங்கிரஸ் ஆஃப் சோவியத்ஸ் அலுவலகத்தில் அவர் தட்டச்சு வேலை செய்பவராக பணியாற்றி வந்தார். அவர் மீது ரைலி ஆர்வம் காட்டியதற்கு ஒரே காரணம் முக்கியமான ஆவணங்களை அணுக முடியும் என்பதுதான். மரியா ஃப்ரீடே என்கிற பெண்ணுடன் அவர் தொடர்பில் இருந்தார். அவரின் சகோதரர் அலெக்ஸாண்டர் ராணுவத்தில் லெப்டினன்ட் கர்னலாக இருந்தார். ராணுவ விவகாரங்களுக்கான அலுவலகத்தில் பணியாற்றி வந்தார்." என்று அதில் குறிப்பிடுகிறார். ஸ்டீபன் கேரி பின்வருமாறு எழுதுகிறார், "ரகசியமாக வாழ்வதிலும் வெவ்வேறு மாறு வேடங்களை அணிவதிலும் அவர் தேர்ந்து விளங்கினார். பெட்ரோகார்டில் அவரை துருக்கிய வணிகரான கொன்ஸ்டன்டின் மசினோ என மக்கள் அறிவார்கள். மாஸ்கோவில் அவர் கிரேக்க வணிகரான கான்ஸ்டன்டின் என அறியப்பட்டார். மற்ற இடங்களில் அவர் ரஷ்ய உளவு அமைப்பின் கிரிமினல் விசாரணை பிரிவின் உறுப்பினரான சிக்மண்ட் ரெலின்ஸ்கி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்." லெனினை நெருங்கிய ரைலி 1918-ஆம் ஆண்டு ஏப்ரலில் மாஸ்கோவிற்கு வந்த பிறகு அங்கிருந்த பிரிட்டன் உளவாளிகளுடன் தொடர்பை தவிர்த்து வந்தார். சோவியத் சாதனைகள் பற்றிய புத்தகத்திற்கான ஆய்வில் இருப்பதாகக் கூறி அவர் கிரெம்ளினுக்கு (ரஷ்ய அதிபர் மாளிகை) சென்றார். அதன் தொடர்ச்சியாக லெனினின் தலைமை பணியாளரான விளாடிமிர் ப்ரூயேவிசை சந்தித்தார். இந்த சந்திப்பை பற்றி ராபர்ட் சர்விஸ் தனது 'ஸ்பைஸ் அண்ட் கமிஷர்ஸ்' புத்தகத்தில் எழுதியுள்ளார். "சிட்னி மற்றும் ப்ரூயேவிச் இடையேயான சந்திப்பு எந்த அளவிற்கு வெற்றிகரமானது என்றால் அவருக்கு அரசு வாகனத்துடன் பாலிடெக்னிக் அருங்காட்சியகத்தில் நடைபெற இருந்த மே தின கொண்டாட்டத்திலும் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. மாஸ்கோவில் இருந்த பிரிட்டன் உளவாளிகளான ராபர்ட் லாக்ஹார்ட் மற்றும் ஜார்ஜ் ஹில், தங்களின் சுயசரிதையில் ரைலி சோவியத் அரசுக்கு எதிராக கலகம் செய்ய திட்டமிட்டார் எனக் குறிப்பிடுகின்றனர். லெனின் உட்பட மூத்த சோவியத் தலைவர்களை துப்பாக்கி முனையில் வைத்து கைது செய்ய வேண்டும் என்பதுதான் ரைலியின் திட்டம் என அவர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் லெனினைக் கொல்ல வேண்டும் என அவர் திட்டமிடவில்லை. ஏனென்றால் லெனின் வெளிநாட்டு சக்திகளால் கொல்லப்பட்டால் அதற்கு சோவியத் மக்களின் எதிர்வினை மிகவும் கொடூரமானதாக இருக்கும் என அவர் நம்பினார். ஜார்ஜ் அலெக்ஸாண்டர் ஹில் தனது 'கோ ஸ்பை தி லேண்ட்' புத்தகத்தில் இவ்வாறு எழுதுகிறார், "ரைலியின் நிஜ திட்டம் என்பது லெனின் உள்ளிட்ட அனைத்து சோவியத் தலைவர்களையும் மாஸ்கோவின் தெருக்களில் பேரணியாக அழைத்து வந்து ரஷ்யர்கள் எவ்வளவு வலுவிழந்தவர்கள் என்பதைக் காட்ட வேண்டும் என்பதுதான். இது கடினமான பணி. சிட்னியின் கூட்டாளி இது சாத்தியமானது இல்லை எனக் கூறி நிராகரித்துவிட்டார்." பட மூலாதாரம், Biteback Publishing தோல்வியில் முடிந்த திட்டம் ஆகஸ்ட் 17-ஆம் தேதி ரைலியும் இன்னொரு பிரிட்டிஷ் ஏஜென்டான ஜார்ஜ் ஹில்லும் லாட்விய பிரிவு தலைவரைச் சந்தித்தனர். செப்டம்பர் முதல் வாரத்தில் நடைபெறும் சோவியத் தலைவர்கள் மற்றும் கவுன்சில் ஆஃப் பீப்பில்ஸ் கமிஷர்ஸின் கூட்டத்தின்போது கிளர்ச்சியை நடத்த வேண்டும் என்பது தான் திட்டம். ஆனால் இறுதி நேரத்தில் நடைபெற்ற சில எதிர்பாராத சம்பவங்கள் இந்த திட்டத்தை குலைத்தது. ஆகஸ்ட் 30-ஆம் தேதி, ஒரு ராணுவ வீரர், சோவியத் உளவுப் பிரிவின் தலைவரான மொசல் உரிட்ஸ்கியைக் கொன்றார். அதே நாளில் ஃபன்யா கப்லான் என்பவர் மாஸ்கோ தொழிற்சாலைக்கு வெளியாக லெனினை சுட்டார். இந்த துப்பாக்கிச் சூட்டில் லெனின் காயமடைந்தார். இந்த நிகழ்வுகளைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான அரசியல் எதிரிகளை கைது செய்வதற்கான நடவடிக்கையைத் தொடங்கினார். இந்த கிளர்ச்சியைத் திட்டமிட்ட ரைலியின் கூட்டாளிகளும் இந்த ஆபரேஷனில் கைது செய்யப்பட்டனர். பிரிட்டன் தூதரகத்திற்குள் புகுந்து சிட்னி ரைலியின் கூட்டாளியான க்ரோமியைக் கொன்றனர். ரைலியின் மற்றுமொரு கூட்டாளியான ராபர்ட் லாக்ஹார்டும் கைது செய்யப்பட்டார். பின்னர் லண்டனில் சிறை வைக்கப்பட்டிருந்த மாக்ஸிம் லிட்வினோவின் விடுதலைக்கு கைமாறாக ராபர்ட் விடுவிக்கப்பட்டார். ரைலியின் தூதுவர் யெலிசவெடா ஆடென், மரியா ஃப்ரீடே மற்றும் இன்னொரு காதலியான ஒல்கா ஸ்டார்ஜெவ்ஸ்கயா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். ரைலியின் கைது ரைலியின் மறைவிடமும் ரஷ்ய உளவுப் பிரிவினரால் சோதனை செய்யப்பட்டது. ஆனால் பிரிட்டன் உளவாளிகளின் உதவியுடன் அவர் ரஷ்யாவில் இருந்து தப்பித்துச் சென்றார். பின்லாந்து மற்றும் ஸ்டாக்ஹோம் வழியாக நவம்பர் 9-ஆம் தேதி லண்டனை அடைந்தார். அதன் பிறகு ரைலி அடுத்த சில வருடங்களை வெவ்வேறு ஐரோப்பிய நாடுகளில் கழித்தார். இதற்கிடையே ரஷ்ய நீதிமன்றம் போல்ஷெவிக் அரசை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டதற்காக அவருக்கு மரண தண்டனை விதித்திருந்தது. 1925-இல் அவர் ஒரு கடைசி மிஷனுக்காக ரஷ்யாவிற்கு திரும்பினார். சோவியத் ஒன்றியத்தின் ராணுவ மற்றும் தொழில்துறை திறன்களைப் பற்றிய உளவுத் தகவல்கள் சேகரிப்பதே இதன் நோக்கமாக இருந்தது. யூஜீன் நீல்சன் எழுதிய "சிட்னி ரைலி, ஏஸ் ஆஃப் ஸ்பைஸ்" என்கிற கட்டுரை ஜெருசலேம் டைம்ஸில் ஆகஸ்ட் 21, 2023 அன்று வெளியானது. "சோவியத் அரசை கவிழ்க்க வேண்டும் என ரைலி வெறியுடன் இருந்தார். இந்தப் பணிக்கு சோவியத் ஒன்றியத்தில் செயல்பட்டு வந்த ரகசிய போல்ஷெவிக் எதிர்ப்பு அமைப்பான ட்ரஸ்ட் தனக்கு உதவும் என அவர் நம்பினார். ஆனால் இது போல்ஷெவிக் அரசின் எதிரிகள் மற்றும் வெளிநாட்டு ஏஜென்டுகளை ரஷ்யாவிற்குள் வரவைப்பதற்கு ரஷ்ய உளவு அமைப்பு வைத்த பொறி. ரைலி அதற்குப் பலியானார்." என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு வந்த ரைலி கைது செய்யப்பட்டு மாஸ்கோவின் லுப்யான்கா சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு பல நாட்கள் தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். 1925, நவம்பர் 5-ஆம் தேதி மாஸ்கோ அருகே உள்ள காட்டில் சுடப்பட்டார். அவர் சிறையிலிருந்து தப்பிச் செல்ல முயன்றபோது சுடப்பட்டார் என்றே ரஷ்யா நீண்ட காலமாக தெரிவித்துவந்தது. ஆனால் 2002-இல் சோவியத் ஏஜென்ட் போரிஸ் குட்ஸ், ரைலியின் சரிதையை எழுதியவரான ஆண்ட்ரூ குக்கிற்கு பேட்டி அளித்திருந்தார். அதில் சிட்னி ரைலியை விசாரித்து சுட்டுக் கொன்ற குழுவில் தான் ஒரு உறுப்பினராக இருந்ததாகத் தெரிவித்துள்ளார். சிட்னி ரைலி மற்றும் ஜேம்ஸ் பாண்ட் பட மூலாதாரம், Bradley Smith/CORBIS/Corbis via Getty Images படக்குறிப்பு, ஃப்ளெமிங், ரைலியின் தந்திரங்கள் பற்றி அவரின் நண்பரான ராபர்ட் லாக்ஹார்டிடம் இருந்து தெரிந்து கொண்டார். சிட்னி ரைலியின் வாழ்க்கையை வைத்து தான் இயன் ஃப்ளெமிங் ஜேம்ஸ் 'பாண்ட்' என்கிற உளவாளி கதாபாத்திரத்தை உருவாக்கினார் என நம்பப்படுகிறது. ஃப்ளெமிங், ரைலியின் தந்திரங்கள் பற்றி அவரின் நண்பரான ராபர்ட் லாக்ஹார்டிடம் இருந்து தெரிந்து கொண்டார். ரைலியுடன் ரஷ்யாவில் பணியாற்றிய ராபர்ட் லாக்ஹார்ட் புகழ்பெற்ற 'ரைலி: ஏஸ் ஆஃப் ஸ்பைஸ்' என்கிற புத்தகத்தை எழுதியிருந்தார். அவரின் நல்ல தோற்றம், சிறந்த உடைகள் மீதான அவரின் விருப்பம், பெண்கள், கார்கள் மற்றும் மதுபானம் மீதான அவரின் காதல், பல மொழிகள் மற்றும் ஆயுதங்களின் மீதான அவரின் நிபுணத்துவம் மற்றும் எதிரிகள் மீதான ஆக்ரோஷமான அணுகுமுறை போன்ற குணாதிசயங்களை அடிப்படையாக வைத்து ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரத்தை ஃப்ளெமிங் உருவாக்கினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpwk8pvklq9o
-
வடக்கு மீனவர்களின் கடல் வளத்தை பாதுகாப்பது அவசியம் - துரைராசா ரவிகரன்
26 Nov, 2025 | 04:57 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) இந்திய மீனவர்களின் அத்துமீறல் மற்றும் சட்டவிரோத மீன்பிடியாளர்களின் அடாவடித்தனமான செயற்பாடுகளாலும் வடக்கு மீனவர்களின் வாழ்வாதாரக் கருவூலமான வடக்குக் கடல் சூறையாடப்படுகிறது. இக்கடல் வளத்தை முறையாக பேணவேணுவது வடக்கு மீனவர்களின் நிலைபேறான கடற்றொழில் வாழ்வை அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (26) நடைபெற்ற 2026 வரவு செலவுத் திட்டத்தின் கடற்றொழில், நீரியல் வளங்கள் மற்றும் கடல் வளங்கள் அமைச்சு மற்றும் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சு, டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு மீதான குழுநிலை விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, போசணையிலும் வேலைவாய்ப்பிலும் உணவு பாதுகாப்பிலும் அந்நியச் செலாவணியிலும் அரச வருவாயிலும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை ஆற்றுகின்ற கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் தொடர்பான இன்றைய விவாதத்திலே வன்னி மாவட்டத்தில் இன்னமும் சீர் செய்யப்படவேண்டியுள்ள பகுதிகளை விவாதிக்க விரும்புகிறேன். கிட்டத்தட்ட ஒவ்வோர் ஆண்டும் மொத்த தேசிய உற்பத்தியில் 1 சதவீத பங்களிப்பை கடற்றொழில் வழங்குகிறது. கடந்த ஆண்டின் தேசிய ஏற்றுமதி வருவாயில் 2.4மூ பங்களிப்பை வழங்கியுள்ளது. இலங்கை வாழ் மக்களின் விலங்கு புரத உட்கொள்ளலில் 50மூ இற்கும் அதிகமான பங்களிப்பை கடல்சார் உணவுகள் வழங்குகின்றன. இது உலகளாவிய சராசரியிலும் மூன்று மடங்கு உயர்வாகும். ஒரு மில்லியனுக்கும் அதிகமான இலங்கையர்கள் நேரயாகவோ மறைமுகமாகவோ இந்த மீன்வளத்தை வாழ்வாதார மூலமாக நம்பியுள்ளனர். கடலோர மீன்பிடி, கடலோர மற்றும் ஆழ்கடல் மீன்பிடி, நன்னீர் மீன்பிடி மற்றும் மீன்வளர்ப்பு அனைத்தும் கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறைக்கு முக்கிய பங்காற்றுகின்றன. இருப்பினும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறையின் வலிமை சீரற்றது. குறிப்பாக வடகடல் பகுதியில் மிகவும் சீரற்ற அணுகல் கடற்றொழில் பரப்பில் காணப்படுகிறது. இலங்கையின் கடந்த ஆண்டின் மொத்த மீன் விளைச்சலின் 16 சதவீத பங்களிப்பை வடகடல் வழங்கியுள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் 2024ஆம் ஆண்டு அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. ஆனால் வடகடலின் பங்களிப்பு அதன் வளநிலையுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவாகவே உள்ளது. உள்ளுரில் தொடரும் சட்டவிரோத மீன்பிடி முறைகள், எல்லைதாண்டிய இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய மீள்வளச்சுரண்டல் வடகடலின் மீன்விளைச்சலுக்கு சவாலாகும் முக்கிய காரணிகள் ஆகின்றன. சட்டத்துக்குப் புறம்பான, ஒழுங்குபடுத்தப்படாத, அறிக்கைப்படுத்தப்படாத மீன்பிடியால் (ஐயுயு) வருடாந்தம் உலகளாவிய வகையில் 26-50 பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான பொருளாதார இழப்பு ஏற்படுவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்திணைக்களத்தின் 2020ஆம் ஆண்டின் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. 2026ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் துறைமுக அபிவிருத்திப்பணிகள், படகுத்தள மறுசீரமைப்பு, மீன்பிடி தொழிலுக்கான துணை உபகரணங்களை வழங்கல், நன்னீர் மீன்பிடி ஊக்குவிப்பு, விழிப்புணர்வுத்திட்டங்கள், ஆராய்ச்சி முன்னெடுப்புகள் உள்ளிட்டவற்றுக்கான முன்மொழிவுகளை வரவேற்பதோடு மீனவர்களுக்கும் நிலைபேறான மீன்வளச்சூழமைவுக்கும் பெரும் அச்சுறுத்தலாகும் காரணிகளை இழிவளவாக்குவதற்கான முயற்சிகளிலும் கூடுதல் கரிசனை கொள்ளுமாறு கடற்றொழில் அமைச்சரைக் கேட்டுக்கொள்கின்றேன். வடமாகாணத்தில் உள்ள மீனவர்கள் எதிர்நோக்கும் சவால்கள் தொடர்பில் பல முறை இந்த அவையிலே விவாதிக்கப்பட்டன. ஏனைய துறைகளில் கொள்ளும் கரிசனையைக்கூட இத்துறையில் இதுவரை அரசு காட்டாதிருப்பது சற்று ஏமாற்றமாகத்தான் இருக்கிறது. இதுவரை காத்திரமான முடிவுகள் எட்டப்படாது நீடித்திருக்கும் இப்பிரச்சினைகளால் கடலை நம்பி வாழும் ஓரு இலட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இழுவைமடி படகுகள்,வெளிச்சம் பாய்ச்சி மீன்பிடித்தல்,வெடிவைத்து மீன்பிடித்தல், சுருக்கு வலைகளில் மீன்பிடித்தல் உள்ளிட்டவை இலங்கையின் சட்டத்துக்கு அமைவாக தடைசெய்யப்பட்ட தொழில் முறைகள். இத்தொழில் முறைகளால் இலங்கையின் கடல் வளம் அதிலும் குறிப்பாக வடகிழக்கின் கடல் வளம் தற்போது வெகுவாக சீர்குலைக்கப்பட்டு வருகிறது. சட்டங்கள் இயற்றப்பட்டாலும் அவை இதுவரை நடைமுறைப்படுத்தப்படாதிருப்பது அரசாங்கத்தின் தவறாகும். சட்டத்திற்கு புறம்பாக இயங்குபவர்கள் கட்டுப்படுத்தப்படவேண்டிய சூழ்நிலையில் தற்போது சட்டத்தை மதித்து இயங்குபவர்களே தண்டிக்கப்படுகிறார்கள். அவர்களின் நாளாந்த வாழ்வாதாரம் தண்டிக்கப்படுகிறது. தடைசெய்யப்பட்ட தொழில்முறைகளைக் கட்டுப்படுத்தாதிருக்கும் போது நாளுக்கு நாள் அவ்வாறான தொழில் முறைகளைப் பயன்படுத்தும் மீனவர்களின் எண்ணிக்கை வடகடல்பரப்பில் அதிகரித்துச் செல்கிறது. தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளில் நூற்றுக்கணக்கான கிலோ மீன்களை பிடித்து இலாபம் உழைக்கும் அதே கடற்பரப்பில் ஐந்து கிலோ பத்துகிலோ என எரிபொருளுக்கும் வருவாய் ஈட்டாத அளவுக்கு பாரம்பரிய மீனவர்கள் பாதிக்கப்படுகின்றனர். முல்லைத்தீவில் கடந்த 2024 ஆம் ஆண்டு 12,335 மெற்றிக் தொன் அளவிலான மீன்வளங்கள் கடற்றொழில் ஊடாக பெறப்பட்டதாக தங்கள் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இவ்வளவு தொகை மீன்களில் வெளிச்சம் பாய்ச்சியும் வெடிவைத்தும் இரவுவேளைகளில் சுருக்குவலைகளைப் பயன்படுத்தியும் பிடித்த மீன்கள் எவ்வளவு மெற்றிக் தொன் என்ற புள்ளிவிபரம் ஏதேனும் தங்களிடம் உள்ளதா? ஏனெனில் பெரும்பாலான நேரத்தில் எரிபொருளுக்கும் வருவாய் ஈட்டாத அளவு மீன்களுடனேயே பாரம்பரிய மீனவர்கள் கரை திரும்புகின்றனர். இந்த அரசாங்கம் யாரைக்காக்கிறது? யாரை வஞ்சிக்கிறது? என்று தெரியவில்லை. கடல் தொழிலில் இந்த அரசு ஊழலுக்கு துணைபோகின்றது என்பதையே நடக்கும் நிகழ்வுகள் சான்றாக்குகின்றன.இத்தகைய மீன்பிடி முறைகள் இந்த ஆண்டோடு அதாவது 2025ஆம் ஆண்டோடு முற்றாக இலங்கைக்குள் தடைசெய்யப்படும் என மீன்பிடி அமைச்சர் இவ்வாண்டு உறுதியளித்திருந்தார். அறத்தை மதித்து கடலை மதித்து மீன்பிடிக்கும் மீனவர்கள் உங்கள் காலத்தில் பட்டினியால் மாண்டார்கள் என்பதை நிகழ்வாக்கவேண்டாம் என தயவுடன் அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறேன். இலங்கை கடற்பரப்பினுள் தொடர்ச்சியாக அத்துமீறும் இந்திய இழுவைப் படகுகளை கட்டுப்படுத்தவேண்டியதும் இந்த அரசின் கடப்பாடு. இத்தகைய தொடர்ச்சியான அத்துமீறல் நாட்டின் இறையாண்மையை கேள்விக்கு உள்ளாக்குகிறது. எல்லோரும் பயன்படுத்திச் செல்வதற்கு வடக்கு கடல் ஓர் ஒழுங்குபடுத்தப்படாத, திறந்தவெளி அணுகல் வலயம் அல்ல. மாறாக இது வடமாகாணத்தைச் சார்பாக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்திடல்! அவர்களின் உரித்து. இந்தக்கடல் இந்தத்தலைமுறைக்கு மட்டும் அல்ல. இனி வரும் சந்ததிகளுக்குமானது. இனிவரும் காலத்திற்குமாக இக்கடல் வளத்தை முறையாக பேணவேண்டியது எம் எல்லோரின் பொறுப்பு! 1996ஆம் ஆண்டின் 2ஆம் இலக்க கடற்றொழில் நீர் வாழ் உயிரினவளங்கள் சட்டத்தின் 27ஆம் பகுதியின் முதல் கூற்று இலங்கை நீர்நிலைகளில் மீன் அல்லது பிற நீர் வாழ் வளங்களை நஞ்சாக்குதல், கொல்லுதல், அதிர்ச்சி ஊட்டுதல் அல்லது முடக்குதல் போன்ற நோக்கங்களுக்காக ஏதேனும் நஞ்சுஇ வெடிப்பு அல்லது மயக்கத்தை ஏற்படுத்தும் பொருள் (டைனமிக் உட்பட) அல்லது பிற தீங்கு விளைவிக்கும் பொருளைப் பயன்படுத்தல் அல்லது பயன்படுத்த முயற்சித்தலைத் தடைசெய்கிறது. முல்லைத்தீவு கடற்பரப்பில் இத்தகைய தடைசெய்யப்பட்ட தொழில்முறைகள் இன்றளவும் நடைபெறுகின்றன. குறித்த சட்டத்தின் இரண்டாம் கூற்று அவ்வாறான பொருள்களை தரைக்கு கொண்டுவருதல், விற்றல், வாங்குதல், வைத்திருத்தல், கொண்டுசெல்லல் போன்றவற்றையும் தடைசெய்கிறது.அத்தகைய பொருள்கள் தரைக்கு கொண்டுவரப்படுகின்றன. விற்கப்படுகின்றன. வாங்கப்படுகின்றன. கொண்டு செல்லப்படுகின்றன. சட்டத்தின் 28ஆம் பகுதி தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் அல்லது தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளை சாதாரண உள்ளுர் மீன்பிடி படகுகளில் வைத்திருப்பதையோ பயன்படுத்துவதையோ தடைசெய்கிறது. அத்தகைய தடை செய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மீன்பிடி படகுகளில் வைத்து பயன்படுத்தப்படுகின்றன. இலங்கை கடற்படை, கடலோர பாதுகாப்பு திணைக்களம், கடற்றொழில் திணைக்களம், தேசிய நீரியல் வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனம், பாதுகாப்பு அமைச்சு, இராணுவம் என அனைத்து துறையினரும் இணைந்து கூட இலங்கை மீனவர்களின் தடைசெய்யப்பட்ட தொழில்முறைகளையும் எல்லை தாண்டிவரும் இந்திய மீனவர்களையும் கட்டுப்படுத்த இயலவில்லை. முல்லைத்தீவின் கடற்பரப்பில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத தொழில்முறைகள் தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல் வள திணைக்களத்தின் உதவிப்பணிப்பாளரிடம் முறையிடச்செல்லும் போது தன்னிடம் போதியளவு ஆளணி இல்லை என பதிலளிப்பதாகவே மீனவர்கள் எம்மிடம் முறையிடுகின்றனர். இலங்கையின் அத்தனை பாதுகாப்புக் கட்டமைப்புகள் இணைந்து கூட கட்டுப்படுத்த இயலாதிருப்பின், தன்னிடம் போதியளவு ஆளணி இல்லை என முல்லைத்தீவு மாவட்ட உதவிப்பணிப்பாளர் கூறுவது உண்மை எனில் போதியளவு ஆளணியை குறித்த திணைக்களங்களுக்கு வழங்கி இவற்றை கட்டுப்படுத்த ஆவன செய்யுங்கள்.அவ்வாறு போதிய அளவு ஆளணி உங்களிடம் இல்லையேல் இன்றுவரை சட்டத்துக்கு இசைவாக மீன்பிடிக்கும் எங்களின் நூற்றுக்கணக்கான மீனவர்கள் உங்கள் திணைக்களத்துடன் வருகிறோம். கட்டுப்படுத்துங்கள். ஒவ்வொரு முறைகேடும் இங்கு நடைபெறும் போது எங்களுக்கு விடுதலைப்புலிகளின் நிழல் நிர்வாகத்தையே உங்களுக்கு எடுத்துக் காட்ட வேண்டியுள்ளது. விடுதலைப்புலிகளின் காலத்தில் இங்கு இந்திய மீனவர்களும் எல்லை தாண்டி வரவில்லை. இலங்கை மீனவர்களும் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளை இங்கு பயன்படுத்த முனையவில்லை. அவர்களால் இயல்பாக கொண்டுவர முடிந்ததை ஓர் அரசாகக்கூட ஏன் உங்களால் இதுவரை இயலவில்ல கரையோரங்களில் கனிய மணல் அகழ்வுக்கான முயற்சிகள் பல இடங்களிலும் நடைபெற்றுவருகின்றன. கொக்கிளாய் முகத்துவாரத்தில் இருந்து சுமார் 44 ஏக்கர் கரையோரமாக 32 குடும்பங்களின் கரைவலைப்பாடுகள், காலபோக நெற்செய்கைக்கான விளைநிலங்கள், மானாவாரிக் காணிகள் அடங்கிய பகுதிகள் கனியமணல் அகழ்வுக்கென கையகப்படுத்தப்பட்டு வேலியிடப்பட்டன. முல்லைத்தீவின் கொக்கிளாய் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட கனிய மணல் அகழ்வின் பின்னர் அப்பகுதி முறையாக மீள்நிரப்பப்படாததால் கடல் நீர் ஊருக்குள் புகுந்து மக்களின் வாழ்வியலை சீர்குலைத்திருந்தது. அதற்கான மண் நிரப்பல் உள்ளிட்ட பரிகாரச் செயற்பாடுகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. கனிய மணலுக்காக அபகரிக்கப்பட்ட 44 ஏக்கருக்கு மேலதிகமாக அதற்கு முன்னர்,பூர்வீகத்தமிழ் மக்கள் வாழ்ந்து தொழில் புரிந்த 20 ஏக்கர் வரையான உறுதிக்காணிகளில் போருக்குப் பின்னர் சிங்கள மக்கள் குடியமர்த்தப்பட்டுள்ளனர். கொக்கிளாய் கனிய மணல் அகழ்வுக்கு ஒப்பான முயற்சிகள் மீண்டும் முல்லைத்தீவின் கரையோரப்பகுதிகளில் குறிப்பாக செம்மலை கிழக்கு, செம்மலை, அளம்பில், உடுப்புக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் கனிய மணல் அகழ்வுக்கான மணல் ஆய்வுக்கென உரிய தரப்பினர் வருகை தந்தபோது அதனை மக்கள் எதிர்த்திருந்தனர். கடந்த 2024.07.31ஆம் திகதி இவ்வாறானதொரு கனிய மணல் அகழ்வுக்காக கனியமணல் கூட்டுத்தாபனம், கடலோர பாதுகாப்புத் திணைக்களம், வனசீவராசிகள் திணைக்களம், சுற்றுச்சூழல் திணைக்களம், நீர் வழங்கல் முகாமைத்துவப்பிரிவுஇ புவிச்சரிதவியல் திணைக்களம் என்பவற்றின் அதிகாரிகளோடு கரைதுறைப்பற்று பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர் அடங்கலான ஓர் அணி அளம்பில் குருசடி எனும் பகுதிக்கு வருகைதரும் போது மக்களின் கடுமையான எதிர்ப்பினால் திருப்பி அனுப்பப்பட்டனர். அளம்பில் குருசடி தொடக்கம் தீர்த்தக்கரை வரையான சுமார் 10 கிலோமீற்றர் நீளத்துக்கும் கரையோரத்தில் இருந்து 300 மீற்றர் தூரமான மேல் பகுதி வரை அளவீடு செய்து கையகப்படுத்தி கனிய மணல் அகழ்வதற்கான தொடக்க முயற்சியே அன்று மக்களின் எதிர்ப்பால் தடுக்கப்பட்டது. முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரமானது கொக்கிளாய் தொடக்கம் சுண்டிக்குளம் வரையான சுமார் 75 கிலோமீற்றர் நீளமானது. முல்லைத்தீவு முழுதும் இவ்வாறு பல்வேறு தேவைக்கும் கரையோரம் கையகப்படுத்தப்பட்டால் அப்பகுதிகளின் மீனவர்கள் எங்கு தொழில் செய்வது! அம்மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு அரசின் பதில் என்ன? மன்னாரில் பேசாலையிலும் இத்தகைய கனிய மணல் அகழ்வுக்கான தொடக்க ஆய்வு முயற்சிகள் மக்கள் எதிர்ப்பால் தடுக்கப்பட்டன. மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுவின் அனுமதி இல்லாது இவ்வாறான முயற்சிகளை மேற்கொள்ளமுடியாது. மக்களின் கருத்துகளை புறந்தள்ளி வடகிழக்கின் கரையோரங்களை முறையற்று இவ்வாறு கையகப்படுத்தும் திட்டங்களை கைவிடுங்கள். மன்னார் தீவில் கடந்த காலங்களில் காற்றாலை நிறுவப்படும்போது ஏனைய சூழல் காரணிகள் தொடர்பாக முறையான கவனம் செலுத்தப்படாமையால் வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அவலநிலைகளால் மக்கள் பெரும் இன்னல்களை எதிர்கொண்டனர். இவ்வாறு வடகிழக்கில் பல்வேறு செயற்றிட்டங்களுக்கும் வடகிழக்கு வளங்கள் நிறுவனங்களுக்கு தாரைவார்க்கப்பட்டு அவை முறையாக செயற்படுத்தப்படாததாலும் முழுமைப்படுத்தப்படாததாலும் அவற்றினால் ஏற்படும் இலாபத்தை நிறுவனங்களும் பாதிப்பை மக்களுமே தான் எதிர்கொள்கின்றனர். கடந்த கால கசப்பான அனுபவங்களைக் கொண்டே கடல் வளத்தை பாதிக்கும் இத்தகையை தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளின் நீடித்த செய்கையையும் கரையோரங்களில் மேற்கொள்ளப்படும் கனியமணல் உள்ளிட்ட முயற்சிகளையும் எதிர்க்கிறோம். எச்செயற்றிட்டத்தை மேற்கொள்வதாயினும் முறைப்படி மக்களைத் தெளிவூட்டி அவர்களின் அனுமதியோடு அரசுகள் அவற்றை செயற்படுத்தவேண்டும் என்பதை இங்கு தெரிவிக்கிறேன். தேசிய அளவிலான மீன் வளக் கொள்கைகளின் பலவீனமான நடைமுறைப்படுத்தலால் வடகடல் வெகுவாகப் பாதிக்கப்பட்டு வருகிறது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்தத்தீவிலே மிகக்கடுமையாக உழைக்கும்இ மிகவும் குறைவாக பாதுகாக்கப்படும் ஊழியக்குடிமக்கள் மீனவர்கள் தாம். நான்கு புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவு என்ற வகையில் மீனவர்களின் நிலைபேறான வாழ்வு இத்தீவின் பொருளாதாரத்தை மிகவும் வலுப்படுத்தும். இந்நிலையில் சட்டவிரோத மீன்பிடி நடைமுறைகளைத் தடைசெய்யும் அனைத்து சட்டங்களையும் உடனடியாக நடைமுறைத்துங்கள் எனக் கேட்டுக்கொள்கிறேன். எமது கடல் வளத்தைப் பாதிக்கும் அயலக நடைமுறைகள் தொடர்பில் அதீத கரிசனை கொண்டு தீவின் வடகடலின் இறையாண்மையை காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். வடகடல் சார் பாதுகாப்பையும் நிலைபேறான மீனவர் வாழ்வாதாரத்தையும் உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறேன். இயற்கையான, செயற்கையான அழிவுகளில் இருந்து மீண்டெழும் வகையில் மீனவர்களுக்கான இழப்பீட்டையும் காப்புறுதித் திட்டங்களையும் சீரமைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.நிறைவாக, வடகடல் என்பது என்பதை புவியியல் சார்ந்த ஒரு தளமாக கருதுவதைத் தாண்டி,வடக்கு வாழ் மக்களின் வாழ்வாதார கருவூலம். மீனவர்களின் நிலைபேறான கடற்றொழில் வாழ்வை அரசு உறுதிப்படுத்த வேண்டும். அவ்வாறு உறுதிப்படுத்தினால் மீனவர்களின் வறுமை இயல்பாகவே விலகும். தீவுக்கே மீன் வழங்கும் இனத்தை வலுவூட்டுங்கள் என்றார். https://www.virakesari.lk/article/231522
-
நைஜீரிய கத்தோலிக்க பாடசாலையில் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தல்
நைஜீரியாவில் கடத்தப்பட்ட 24 மாணவிகள் விடுவிப்பு 26 Nov, 2025 | 02:26 PM வடமேற்கு நைஜீரியாவில் பாடசாலை விடுதிக்குள் நுழைந்த பயங்கரவாதிகளால் கடந்த வாரம் கடத்தப்பட்ட 24 மாணவிகள் விடுவிக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த திங்கட்கிழமை (17) கெப்பி மாநிலத்திலுள்ள இவ்விடுதிக்குள் நுழைந்த ஆயுதக் குழுவினர் பாடசாலையில் துப்பாக்கிகளால் தாக்கிவிட்டு, துப்பாக்கிமுனையில் மாணவிகளை கடத்திச் சென்றனர். அதேவேளை, அந்நாடு முழுவதும் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. குவாரா மாநிலத்தில் 10 பெண்கள் மற்றும் சிறுவர்கள் மீண்டும் கடத்தப்பட்டனர். இந்நிலையில், நைஜர் மாநில கத்தோலிக்க பாடசாலையொன்றில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தால் பெற்றோர் பதற்றத்தில் உள்ளனர். இந்நிலையில், விடுவிக்கப்பட்ட 24 மாணவிகளின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதோடு, மேலும் கடத்திச் செல்லப்பட்ட மாணவர்களை மீட்க பாதுகாப்புப் படைகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/231475
-
சீரற்ற காலநிலையால் நெடுந்தீவுக்கான கடற்போக்குவரத்து பாதிப்பு - மக்களை அவதானமாக வீடுகளில் இருக்குமாறு கோரிக்கை
26 Nov, 2025 | 03:51 PM யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடற்போக்குவாரத்து பாதிக்கப்பட்டுள்ளமையால் நெடுந்தீவு மக்களை மிக அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் கோரியுள்ளது. சீரற்ற காலநிலையால் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் இருந்து கடல் வழியாக யாழ். போதனா வைத்தியசாலைக்கு மேலதிக சிகிச்சைக்காக நோயளர்களை இடமாற்றீடு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. எனவே நெடுந்தீவு மக்கள் அனைவரையும் விபத்துக்கள், பாம்பு கடி உள்ளிட்ட தவிர்க்க கூடிய நோய் நிலைகளை குறைத்து வீடுகளில் அவதானமாக இருக்குமாறு நெடுந்தீவு வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதேவேளை கடற் போக்குவரத்து தடைப்பட்டுள்ள நிலையில் நெடுந்தீவு வைத்திய அதிகாரியினால் நோயாளிகளை யாழ்ப்பாணத்திற்கு மேலதிக சிகிச்சைக்காக வான் வழியாக அனுப்பி வைக்க விமான படையினர் ஊடாக நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/231500
-
கடந்த 130 ஆண்டுகளில் இலங்கைக்கு நெருக்கமாக ஆபத்தான தாழமுக்கம்: தொடரவுள்ள வானிலை மாற்றம்
"இலங்கைக்கு தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச் சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து ஒன்றாக இணைந்து தாழமுக்கமாக மாறவுள்ளன. இவ்வாறு இரு காற்றுச் சுழற்சிகள் இணைந்து இலங்கை ஊடாக நகர்கின்றமை 130 ஆண்டுகளில் இதுவே முதல் தடவை. இதனால், எதிர்வரும் 30ஆம் திகதிவரை வடக்கு மாகாணத்தில் கனமழை தொடரும் என யாழ்ப்பாணம் பல்கலைக்கழக புவியியற்றுறையின் மூத்த விரிவுரையாளர் நா.பிரதீபராசா தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், "இலங்கையின் தென் மேற்கிலும் தென்கிழக்கிலும் காணப்படும் காற்றுச்சுழற்சிகள் முறையே கிழக்கு மற்றும் மேற்கு நோக்கி நகர்ந்து இன்று புதன்கிழமை ஒன்றாக இணைந்து காற்றழுத்த தாழ்வு நிலையாக வலுப்பெறவுள்ளன. காற்றழுத்த தாழ்வுநிலை இந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை ஆரம்பத்தில் இலங்கையின் நிலப்பகுதி ஊடாகவும், பின்னர் இலங்கையின் கிழக்குக் கரைப்பகுதி ஊடாகவும் நகரவுள்ளது. எதிர்வரும் 30ஆம் திகதியளவிலேயே அந்தக் காற்றழுத்தத் தாழ்வுநிலை வடக்கு மாகாணத்தில் இருந்து நீங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் உட்பட்ட நாட்டின் பல பகுதிகளில் கனமான மழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அதேவேளை இன்று முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் அத்துடன் மேற்கு, தெற்கு, மத்திய, சபரகமுவா, ஊவா, வட மத்திய மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் மிகக் கனமழை கிடைக்கும் வாய்ப்புள்ளது. அத்துடன் கிழக்கு தெற்கு, மேற்கு, மத்திய, சப்ரகமுவா மற்றும் ஊவா மாகாணங்களில் காற்று மணிக்கு 50 கிலோமீற்றர் தொடக்கம் 70 கிலோமீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகின்றது." என்றார். https://tamilwin.com/article/close-proximity-to-sri-lanka-in-the-last-130-years-1764154057
-
மட்டக்களப்பில் மூன்று ஆற்றுப்படுகைகளுக்கு எச்சரிக்கை
மட்டக்களப்பில் மூன்று ஆற்றுப்படுகைகளுக்கு எச்சரிக்கை Nov 26, 2025 - 02:37 PM கல் ஓயா ஆற்றுப் படுக்கையின் தாழ்வான பகுதிகளில் தற்போது சிறு வெள்ளப்பெருக்கு நிலை ஏற்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. அம்பாறை இங்கினியாகல சேனாநாயக்க சமுத்திரத்தின் நீர் கொள்ளளவானது தற்போது அதன் அதிகபட்ச கொள்ளளவை அண்மித்து வருவதுடன், தற்போது சேனாநாயக்க சமுத்திரத்தின் தாழ்வான பகுதிகளில் வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இந்நிலைமை காரணமாக விசேடமாக தமன, அம்பாறை, இறக்காமம், அட்டாளைச்சேனை, சம்மாந்துறை, நிந்தவூர், காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, நாவிதன்வெளி ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலும், ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகத்தின் தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் அவதானத்துடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இன்று (26) நண்பகல் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த நீர்ப்பாசனப் பணிப்பாளர் (நீரியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவம்) பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார, நேற்று (25) அதிகபட்ச மழைவீழ்ச்சியாக 225 மி.மீ. அம்பாறையில் பதிவாகியுள்ளதாகத் தெரிவித்தார். தற்போது சேனாநாயக்க சமுத்திரத்தின் வான் கதவுகள் திறக்கப்படாவிட்டாலும், ஏனைய குளங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதால் தாழ்வான நிலப்பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளதாகவும் சூரியபண்டார தெரிவித்தார். அதிக மழைவீழ்ச்சி காரணமாக தற்போது நாட்டின் 25 பிரதான குளங்களும் 26 நடுத்தர குளங்களும் வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று ஆற்றுப் படுக்கைகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. சோமாவதிய மற்றும் மனம்பிட்டி ஆகிய பிரதேசங்கள் இன்று மாலைக்குள் நீரில் மூழ்கும் வாய்ப்பு உள்ளதாகவும் பொறியியலாளர் எல்.எஸ். சூரியபண்டார தெரிவித்தார். யான் ஓயா ஆற்றின் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களும் அப்பகுதி ஊடாகப் பயணிக்கும் சாரதிகளும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும், விசேடமாக குச்சவெளி, பதவிய ஸ்ரீபுர, கெப்பித்திகொல்லாவ, கோமரன்கடவல, ஹொரவபொத்தானை, மொரவெவ, கஹட்டகஸ்திகிலிய மற்றும் கலென்பிந்துனுவெவ ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. இதேவேளை, முந்தானை ஆற்றுப் படுக்கையில் நேற்று இரவு முதல் பெய்து வரும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக, முந்தானை ஆறு படுக்கையைச் சேர்ந்த அம்பாறை மாவட்டத்தின் மஹாஓயா பிரதேச செயலாளர் பிரிவு மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஏறாவூர்ப்பற்று மற்றும் கோறளைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட முந்தானை ஆறு சார்ந்த தாழ்வான பகுதிகளில், தற்போதிருந்து அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. மாதுறு ஓயா படுக்கையைச் சேர்ந்த கோறளைப்பற்று, கோறளைப்பற்று மேற்கு, கோறளைப்பற்று வடக்கு, ஏறாவூர்ப்பற்று, மஹாஓயா, பதியத்தலாவ, தெஹியத்தகண்டி, திம்புலாகல, வெலிகந்த மற்றும் மஹியங்கனை ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்குட்பட்ட மாதுறு ஓயா சார்ந்த தாழ்வான பகுதிகளில் தற்போதிருந்து அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் காணப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmifs777r020io29nbtfh9odi
-
திருமண பந்தத்தில் இணைந்து கொண்டார் ஜீவன் தொண்டமான்!
ஜீவன் தொண்டமானும் மனைவி சீதை ஸ்ரீ நாச்சியாரும் இலங்கை வந்தடைந்தனர் 26 Nov, 2025 | 05:38 PM இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானும் அவரது மனைவியான சீதை ஸ்ரீ நாச்சியார் இன்று புதன்கிழமை (26) இந்தியாவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். கடந்த 23 ஆம் திகதி திருப்பத்தூரில் திருமணம் செய்து கொண்ட நிலையில் இன்று காலை 11.05 மணிக்கு இந்தியாவின் திருச்சியிலிருந்து இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-132 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இன்று இலங்கையை வந்தடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/231498
-
மாவீரர் வாரம் இன்று ஆரம்பம் - தமிழர் தேசமெங்கும் உணர்வெழுச்சி நிகழ்வுகள்
வெகு சிறப்பாக இடம்பெற்ற மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் பச்சிலைப்பள்ளி கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பளை பகுதியில் இன்றையதினம் (26.11.2025) காலை 9:30 மணியளவில் பளை பிரதான பேருந்து தரிப்பிடத்தின் அருகாமையில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் கௌரவிப்பு மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது. இந்த கௌரவிப்பு நிகழ்வின் ஆரம்பத்தில் மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மங்கள வார்த்தை இசையுடன் அழைத்து வரவேற்கப்பட்டு மாவீரர் பெற்றோரால் நினைவு சுடர் ஏற்றப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து, மலர்கள் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. இந்த கௌரவிப்பு நிகழ்வில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், பச்சிளைப்பள்ளி பிரதேச சபை தவிசாளர் சுரேன், பச்சிளைப்பள்ளி பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் மாவீரர் பெற்றோர் மற்றும் மாவீரர் உரித்துடையோர் என பலரும் கலந்து கொண்டனர். செய்தி - எரிமலை யாழில் கட்டப்பட்டுள்ள கொடிகள் மாவீரர் நாளை முன்னிட்டு யாழ். நகர் பகுதி எங்கும் மஞ்சள் மற்றும் சிவப்பு கொடிகள் கட்டப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கு பகுதிகளில் மாவீரர் வாரத்தின் ஆறாம் நாள் இன்று வெகு சிறப்பாக அனுஷ்டிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. செய்தி - தீபன் https://tamilwin.com/article/the-sixth-day-of-maaveerar-work-1764159995
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப்படம்.
-
இந்தியா - தென் ஆபிரிக்கா கிரிக்கெட் தொடர்
தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 408 ரன்களில் இந்தியா தோல்வி - 5 காரணங்கள் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முதல் இன்னிங்ஸில் 109 ரன்கள் எடுத்தார் செனுரன் முத்துசாமி கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 26 நவம்பர் 2025, 08:03 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தோல்வியை சந்தித்திருக்கிறது இந்திய அணி. இதன் மூலம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 2 - 0 என கைப்பற்றியிருக்கிறது தென்னாப்பிரிக்கா. இதன் மூலம் 2000 ஆண்டுக்குப் பிறகு இந்திய மண்ணில் முதல் முறையாக ஒரு டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது தென்னாப்பிரிக்க அணி. முதல் போட்டியில் தோற்றிருந்த இந்திய அணி, இரண்டாவது போட்டியிலும் 408 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. இந்தப் போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததற்கான 5 காரணங்கள் என்ன? 1. சவால் கொடுத்த லோயர் மிடில் ஆர்டர் இந்தப் போட்டியின் முதல் நாள் இந்தியா ஓரளவு நல்ல நிலைக்கு வந்தது. தென்னாப்பிரிக்க அணி 201/5 என்ற நிலையில் இருந்தது. அங்கிருந்த அந்த அணியை 300 ரன்களுக்குள் ஆல் அவுட் ஆக்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகக் கருதப்பட்டது. ஆனால், வழக்கம் போல் லோயர் மிடில் ஆர்டர் மற்றும் லோயர் ஆர்டர் இந்திய அணி பௌலர்களுக்கு சவால் கொடுத்தது. வழக்கமாகவே பல போட்டிகளில் டாப் ஆர்டரை விரைந்து ஆட்டமிழக்கச் செய்தபின் அதன் பிறகு வரும் வீரர்களை அவுட் ஆக்க முடியாமல் இந்தியா தடுமாறும். சமீபத்திய போட்டிகளிலேயே அதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. பட மூலாதாரம், Getty Images நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட்டில் (பெங்களூரு, 2024) வேகப்பந்துவீச்சாளர் டிம் சௌத்தி 65 ரன்கள் எடுத்து இந்தியாவை சோதித்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மெல்போர்ன் டெஸ்ட் போட்டியின் (2025) இரண்டாவது இன்னிங்ஸில் 91/6 என்றிருந்த ஆஸ்திரேலிய அணி, அதன்பிறகு மட்டும் 47.4 ஓவர்கள் ஆடியது. கடைசி விக்கெட்டுக்கு நாதன் லயான், ஸ்காட் போலாண்ட் இருவரும் மட்டும் 19.3 ஓவர்கள் ஆடினார்கள். சமீபத்தில் கூட இங்கிலாந்துக்கு எதிரான லார்ட்ஸ் டெஸ்ட்டின் (2025) முதல் இன்னிங்ஸில் பிரைடன் கார்ஸ் 55 ரன்கள் எடுத்து இங்கிலாந்தின் ஸ்கோரை அதிகப்படுத்தினார். இது இந்த கவுஹாத்தி போட்டியிலும் தொடர்ந்தது. செனுரன் முத்துசாமி, மார்கோ யான்சன் மற்றும் கைல் வெரெய்னே ஆகியோர் இந்திய பௌலர்களுக்கு சவால் கொடுத்தனர். ஏழாவது விக்கெட்டுக்கு 88 ரன்கள் எடுத்திருந்த அந்த அணி, எட்டாவது விக்கெட்டுக்கு 97 ரன்கள் சேர்த்தனர். அதன் விளைவாக அந்த அணி 489 ரன்கள் குவித்தது. முத்துசாமி 109 ரன்கள் அடிக்க, யான்சன் 93 ரன்கள் எடுத்தார். இது இந்திய அணிக்கு மிகப் பெரிய நெருக்கடியை ஏற்படுத்தியது. பட மூலாதாரம், Getty Images 2. பதம் பார்த்த 12 ஓவர்கள் இந்தப் போட்டியில் பேட்டிங் செய்வது அவ்வளவு கடினமாக இருந்திருக்கவில்லை. தென்னாப்பிரிக்காவின் பெரிய இன்னிங்ஸுக்குப் பிறகு, இந்தியாவும் நல்ல தொடக்கத்தையே கண்டிருந்தது. 32.1 ஓவர்கள் முடிவில் 1 விக்கெட் இழப்புக்கு 95 ரன்கள் எடுத்திருந்தது இந்தியா. தென்னாப்பிரிக்காவின் தொடக்கத்தை விட இது ஓரளவு சிறப்பானதாகவே இருந்தது. ஆனால், அங்கிருந்து பெரும் சரிவைச் சந்தித்தது இந்தியா. 32.1 ஓவர்களில் 95/1 என்ற இந்தியா 43.3 ஓவர்கள் முடிவில் 122/7 என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. அந்த இடைப்பட்ட 11.2 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்தார்கள். அதில் பெரும்பாலானவை மோசமான ஷாட்களினால் வீழ்ந்த விக்கெட்டுகள். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மோசமான ஷாட் தேர்வால் முதல் இன்னிங்ஸில் இந்திய பேட்டர்கள் விரைந்து ஆட்டமிழந்தனர் தென்னாப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து 'ஷார்ட் லென்த் பால்'களாக வீச, இந்திய பேட்ஸ்மேன்கள் அதை அடித்து ஆட முற்பட்டு விக்கெட்டுகளை இழந்தார்கள். துருவ் ஜுரெல், ரிஷப் பண்ட், ஜடேஜா, நித்திஷ் குமார் ரெட்டி என அடுத்தடுத்து விக்கெட்டுகள் அப்படியே வீழ்ந்தன. ஹார்மர் பந்துவீச்சில் அவுட்டான சாய் சுதர்ஷன் கூட தவறான ஷாட் ஆடித்தான் ஆட்டமிழந்தார். அது இந்திய அணி ஃபாலோ ஆனைத் தவிர்க்க முடியாத ஒரு நிலைக்குத் தள்ளப்படக் காரணமாக அமைந்தது. அதிலிருந்து கடைசி வரை இந்திய அணி மீண்டு வரவேயில்லை. 3. அனைத்து திசையிலும் அணைபோட்ட யான்சன் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் பேட்டிங், பௌலிங் இரண்டு ஏரியாவிலுமே இந்தியாவுக்கு மிகப் பெரிய சவாலாக விளங்கினார் யான்சன். முன்னர் தன்னுடைய அதிரடி இன்னிங்ஸால் தென்னாப்பிரிக்காவின் ஸ்கோரை உயரச் செய்தார். 91 பந்துகளில் 93 ரன்கள் விளாசினார் அவர். இது இந்திய பௌலர்களுக்கு ஒருபக்கம் நெருக்கடி ஏற்படுத்தியதோடு, மறுபக்கம் பேட்டிங் செய்துகொண்டிருந்த முத்துசாமி மீதான நெருக்கடியையும் குறைத்தது. பேட்டிங்கில் சோபித்ததோடு மட்டுமல்லாமல், அடுத்ததாக பந்துவீச்சிலும் பெரும் தாக்கம் ஏற்படுத்தினார் யான்சன். இந்திய அணி தங்கள் முதல் இன்னிங்ஸில் அந்த பெரும் சரிவை சந்திக்க அவர்தான் முக்கியக் காரணமாக இருந்தார். 'ஷார்ட் லென்த்' பந்துகளாக தொடர்ந்து வீசிய அவர், இந்திய பேட்டர்களை பெருமளவு சோதித்தார். அதில் வேகமும் இருந்ததால், இந்திய பேட்டர்களால் அதிரடியும் காட்ட முடியவில்லை. அதன் விளைவாக பண்ட், ஜுரெல், ஜடேஜா, நித்திஷ் ஆனைவரும் அவரது ஷார்ட் லென்த் பந்துகளில் பெவலியின் திரும்பினார்கள். கடைசி கட்டத்தில் வந்து குல்தீப் மற்றும் பும்ரா ஆகியோரின் விக்கெட்டையும் வீழ்த்தினார் அவர். 19.5 ஓவர்களில் 48 ரன்கள் கொடுத்து 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார் அவர். முதல் இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணி 288 என்ற மிகப் பெரிய முன்னிலை பெறுவதற்கு அவர் மிக முக்கியக் காரணமாக விளங்கினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, முதல் இன்னிங்ஸில் பேட்டிங், பந்துவீச்சு இரண்டு பிரிவிலும் சோபித்தார் மார்கோ யான்சன் 4. சவாலான தருணத்தில் தரப்பட்ட டிக்ளரேஷன் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க அணியின் திட்டம் பலருக்கும் புதிராக இருந்தது. விரைந்து ரன்கள் சேர்த்து, நல்ல முன்னிலை பெற்றதும் டிக்ளேர் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அவர்களோ வேறொரு திட்டம் வைத்திருந்தார்கள். 83.5 ஓவர்கள் பேட்டிங் செய்த அந்த அணி 260 ரன்கள் எடுத்து, 548 ரன்கள் முன்னிலை பெற்றதும் டிக்ளேர் செய்தது. தென்னாப்பிரிக்கா இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கியபோது 450 - 480 என்ற இலக்கை நிர்ணயித்து விட்டு டிக்ளேர் செய்வார்கள் என்று வல்லுநர்கள் எதிர்பார்த்தார்கள். அதற்கு அவர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 170 - 200 ரன்கள் அடித்திருந்தாலே போதும், அதை அவர்கள் அதிரடியாக அடிப்பார்கள் என்றுதான் வர்ணனையாளர்கள் விவாதித்தார்கள். ஆனால், தென்னாப்பிரிக்க பேட்டர்கள் மிகவும் நிதானமாக விளையாடியது தங்களுக்கு ஆச்சர்யமளிப்பதாகக் கூறியவர்கள், அதற்கான காரணத்தை பெருமளவு விவாதித்தார்கள். பேட்டிங் செய்வதற்கு ஆடுகளம் நன்றாக இருக்கிறது என்பதால் அவர்கள் இந்தியாவுக்கு அதிக ஓவர்கள் கொடுக்கவேண்டாம் என்று திட்டமிட்டிருக்கலாம் என்று தமிழ் வர்ணனையாளர்கள் விவாதித்துக்கொண்டிருந்தார்கள். இந்தியாவை ஆல் அவுட் செய்ய 100 -110 ஓவர்கள் கொடுப்பது முக்கியம் என்றும் விவாதிக்கப்பட்டிருந்தது. இரண்டாவது செஷன் முடிந்ததும் கூட டிக்ளேர் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால், தென்னாப்பிரிக்கா அதைச் செய்யவில்லை. மூன்றாவது செஷனிலும் 8 ஓவர்கள் ஆடிவிட்டு அந்த அணி டிக்ளே செய்ய, வெளிச்சம் சற்று குறைவான, மிகவும் சவாலாக கடைசி கட்டத்தில் புதிய பந்தை எதிர்கொள்ளவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டது இந்தியா. இறுதியில் நான்காம் நாளின் முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்தது. இது கடைசி நாள் சரிவுக்கு அடித்தளம் போட்டதாக அமைந்துவிட்டது. ஒருவேளை முன்னதாகவே இந்திய அணியின் இன்னிங்ஸ் தொடங்கியிருந்தால் அவர்கள் நல்ல தொடக்கம் கண்டிருக்கலாம். அது போட்டியை டிரா நோக்கி நகர்த்தியிருக்கலாம். ஒருவேளை அந்த இரு விக்கெட்டுகள் கிடைக்காவிட்டாலும் கூட இந்தப் போட்டி டிரா ஆகியிருக்கலாம். ஆனால் தென்னாப்பிரிக்க அணி அந்த ரிஸ்க் எடுக்கத் தயாராக இருந்தது. அவர்கள் அதிக ஓவர்கள் பிடித்து இந்தியாவை கடைசி கட்டத்தில் ஆடவைக்கவேண்டும் என்பதில் தீர்க்கமாக இருந்திருக்கிறார்கள். அதை சிறப்பாகவும் நடைமுறைப்படுத்தினார்கள். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 25 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வென்றிருக்கிறது தென்னாப்பிரிக்க அணி 5. 'உத்வேகம் இல்லையா?' இந்தப் போட்டியின்போது வல்லுநர்கள் பலரும் விவாதித்த இன்னொரு விஷயம், இந்திய வீரர்களிடம் உத்வேகம் இல்லை என்பது. தென்னாப்பிரிக்க அணி இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்தபோது இந்திய வீரர்கள் யாரும் பெரிதாக உரையாடல்கள் எதுவும் மேற்கொள்ளவில்லை. வழக்கம்போல் ரிஷப் பண்ட் மட்டுமே பேசிக்கொண்டிருந்தார். இதை அப்போது வர்ணனையில் இருந்த இந்திய அணியின் முன்னாள் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஆர்.ஶ்ரீதர் கூடக் குறிப்பிட்டுப் பேசியிருந்தார். இந்திய அணியின் முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் கூட இதைப் பற்றி வர்ணனையில் விவாதித்தார். "இந்தப் போட்டியில் இந்திய வீரர்களிடம் பெரிதாக உத்வேகம் காணப்படவில்லை" என்று அவர் கூறினார். கொல்கத்தாவில் நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்திருந்தது. 2000ம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணி சொந்த மண்ணில் ஒரு தொடரை இழப்பது இதுவே ஐந்தாவது முறை. அதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இரண்டு முறை தோற்றிருக்கிறது இந்தியா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czdg5d76r5po
-
பிரிவினைவாதிகளின் நிறைவேற்றப்படாத 6 கோரிக்கைகள் அம்பலம்: ஜே.வி.பி.யை கடுமையாக விமர்சித்த உதய கம்மன்பில
26 Nov, 2025 | 04:39 PM மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா இங்கிலாந்தில் எதிர்கொண்ட விடுதலைப் புலிகள் அமைப்பின் ஆர்ப்பாட்டம் ஒரு "சுமுகமான ஆர்ப்பாட்டம்" என்று பிவிதுரு ஹெல உருமய (PHU) கட்சியின் தலைவர் உதய கம்மன்பில கடுமையாக விமர்சித்தார். புதன்கிழமை (26) எதுல் கோட்டையில் நடைபெற்ற பிவிதுரு ஹெல உருமய (PHU) கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில், அதன் தலைவர் வழக்கறிஞர் உதய கம்மன்பில மேற்கண்டவாறு தெரிவித்தார். உதய கம்மன்பில மேலும் தெரிவிக்கையில், தில்வின் சில்வாவுக்கு எதிராக புலிக்கொடிகள் ஏந்தி வந்தபோதும், எந்தவொரு கோரிக்கையையோ அல்லது கோஷத்தையோ அவர்கள் முன்வைக்கவில்லை. அவர் வாகனத்திலிருந்து இறங்கி விழா நடைபெறும் இடத்திற்குச் செல்வதைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதை, 2012இல் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக லண்டனில் நடந்த புலிகளின் ஆர்ப்பாட்டத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும். அன்றைய ஆர்ப்பாட்டக்காரர்கள் கோபத்துடன் வெறித்தனமாக இருந்தனர். மஹிந்த ராஜபக்ஷவுக்கு மரணம் வேண்டும் என்று கோஷமிட்டனர். அன்றைய தினம் அவர் மேலும் பத்து நிமிடங்கள் அங்கு நின்றிருந்தால், அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கலாம் எனப் பாதுகாப்பு நிபுணர்கள் பின்னர் குறிப்பிட்டனர். ஆனால், தில்வின் சில்வாவுக்கு எதிராக நாம் கண்டது ஒரு பெயரளவு ஆர்ப்பாட்டம், ஒரு சுஹத (சுமுகமான/நட்பான) ஆர்ப்பாட்டம், ஏதோ கடமைக்காகச் செய்த ஆர்ப்பாட்டம். எப்படியும், வடக்கின் பயங்கரவாதிகளுக்கும் தெற்கின் பயங்கரவாதிகளுக்கும் இடையில் ஒரு சகோதரத்துவ பிணைப்பு உள்ளது. நாங்கள் செய்ய முடியாததை இவர்கள் செய்துவிட்டார்களே என்று வடக்கின் பயங்கரவாதிகளுக்கு தெற்கின் பயங்கரவாதிகள் மீது ஒரு பெரிய மரியாதை இருக்கிறது. திசைகாட்டி அரசாங்கத்தின் வாக்குறுதிகள் நிராகரிப்பு: நம்பகத்தன்மையை மீட்டெடுக்க புலிகளின் உதவி? திசைகாட்டி (NPP) அரசாங்கம் பிரிவினைவாதிகளை திருப்திப்படுத்த முயற்சித்து, தனது தென் பகுதி வாக்குகளை இழந்துவிட்டதாக கம்மன்பில குற்றம் சாட்டினார். ரணவிருவோக்களுக்கு (போர் வீரர்களுக்கு) 'சிப்பாய்கள்' என்று கூறினர். புலிகள் அமைதிக்குத்தான் போராடினர் என்று கூறினர். வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றினர். வடக்கில் சிங்களவர்களுக்கு தொந்தரவு கொடுக்க உள்ளூராட்சி சபைத் தலைவர்களை ஏவி விட்டனர். வடக்கில் பௌத்த விகாரைகளை அகற்றும் ஆர்ப்பாட்டங்களில் தமது உறுப்பினர்களைப் பங்கேற்க அனுமதித்தனர். கிழக்கில் விகாரைகளை டோசர் செய்ய முயன்றனர். கிழக்கில் உள்ள விகாரைகளின் புத்த சிலைகளை பொலிஸாரைப் பயன்படுத்தி அகற்றினர். இதனால் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கை அரசாங்கத்தின் மீது உடைந்துள்ளது. பிரிவினைவாதிகளுக்கு உறுதியளிக்கப்பட்ட சமஷ்டி (Federal) யாப்பை கொண்டுவர வேண்டுமானால், இந்த நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்த வேண்டும். அதனால்தான், லண்டன் புலிகள் ஆர்ப்பாட்டம், தெற்கின் பயங்கரவாதிகள் மீண்டும் மக்கள் நம்பிக்கையைப் பெற வடக்கின் பயங்கரவாதிகளிடமிருந்து கிடைத்த ஒத்துழைப்பு என்ற நியாயமான சந்தேகம் நமக்கு எழுகிறது, என அவர் தெரிவித்தார். 6 நிறைவேற்றப்படாத பிரிவினைவாதக் கோரிக்கைகள் அம்பலம் கனடிய தமிழ்க் காங்கிரஸ், ஜனாதிபதி அனுர திசாநாயக்க வெற்றிக்குப் பின் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், "நாங்கள் எங்கள் கடமையைச் செய்துவிட்டோம், நீங்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள்" என்று குறிப்பிட்டதை கம்மன்பில நினைவுபடுத்தினார். "ஜனாதிபதி எனது கேள்விக்கு பதிலளிக்கவில்லை. ஆனால், கனடிய தமிழ்க் காங்கிரஸ் பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்குப் பின் அனுப்பிய வாழ்த்துச் செய்தியில், தலைவர் குமார் ரத்னம் கையொப்பமிட்டு வழங்கப்பட்ட கோரிக்கைகள் பட்டியலையும் முன்வைத்துள்ளனர். திசைகாட்டி அரசாங்கம் புலிகள் ஆதரவாளர்களுக்கு அளித்த வாக்குறுதிகள் இவைதான், என்று கூறி, கம்மன்பில அந்தக் கோரிக்கைகளைப் பட்டியலிட்டார்: * அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவித்தல் (கைதிகளாக உள்ளவர்கள் பயங்கரவாதிகளே தவிர, அரசியல் கைதிகள் அல்ல என்பதை நாங்கள் வலியுறுத்துகிறோம்). * பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குதல். * இராணுவ முகாம்கள் அமைப்பதற்காகப் பெறப்பட்ட அனைத்துப் தனியார் நிலங்களையும் அதன் அசல் உரிமையாளர்களிடம் ஒப்படைத்து, இராணுவ முகாம்களை அகற்றுதல். * வடக்கில் விகாரைகள் கட்டுவதைத் தடுத்து நிறுத்துதல். * புதிய அரசியலமைப்புச் சட்டம் நிறைவேற்றப்படும் வரை, பொலிஸ் அதிகாரங்கள் உட்பட 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துதல். * இராணுவம் உணவகங்கள் நடத்துவது போன்ற வர்த்தக நடவடிக்கைகளிலிருந்து முழுமையாக விலகி, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ நிலைநிறுத்தலை மற்ற மாகாணங்களுக்கு இணையாகக் குறைத்தல். "இவைதான் திசைகாட்டி அரசாங்கம் புலிகள் ஆதரவாளர்களுக்கு வழங்கிய வாக்குறுதிகள். பொலிஸ் அதிகாரங்கள் உட்பட 13வது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு சுயாட்சி வழங்கும் புதிய அரசியலமைப்பைக் கொண்டு வரவும் ஒப்புக்கொண்டுள்ளனர். அவற்றை நிறைவேற்றாததின் ஆவேசமே லண்டனில் இருந்து வெளிவந்துள்ளது," என்று அவர் கூறினார். "அனுரவே இலங்கையின் வரலாற்றில் ஊழல் மிகுந்த ஜனாதிபதி" நுகேகொட கூட்டத்தில் முன்வரிசையில் இருந்த அனைவருக்கும் இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் (CIABOC) நான்கு அல்லது ஐந்து கோப்புகள் இருப்பதாக திசைகாட்டி உறுப்பினர்கள் கூறிய குற்றச்சாட்டுக்கு கம்மன்பில சவால் விடுத்தார். "நானும் முதல் வரிசையில்தான் அமர்ந்திருந்தேன். எனக்கு எதிராக நான்கு ஐந்து கோப்புகள் அல்ல, ஒரே ஒரு கோப்பு இருப்பது பற்றி உங்களால் கூற முடியுமா என்று திசைகாட்டி உறுப்பினர்களுக்கு சவால் விடுக்கிறேன். நாங்கள் இலஞ்சமோ, கொள்ளையோ, ஒழுக்கக்கேடோ செய்யாததால்தான், அனுர திசாநாயக்கவே இலங்கையின் வரலாற்றில் ஊழல் மிகுந்த ஜனாதிபதி என்றும், திசைகாட்டி அரசாங்கம் ஊழல் நிறைந்தது என்றும் பயமின்றி கூறுகிறோம்," என்றார். அனுர திசாநாயக்கவின் நிர்வாகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பல முக்கிய முறைகேடுகளை பட்டியலிட்ட கம்மன்பில, பின்வருவனவற்றைச் சுட்டிக்காட்டினார்: * ஊழலை விசாரிக்கும் கணக்காய்வாளர் நாயகம் பதவிக்கு தகுதியானவரை நியமிக்காமல், அரசுத் தணிக்கையில் அனுபவமில்லாத கேளனி பல்கலைக்கழக சகா ஒருவரை நியமிக்க முயன்ற முதல் ஜனாதிபதி. * ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் உயர் பதவிக்கு அதிக மதிப்பெண் பெற்ற மாதவ தென்னக்கோன் என்பவரை நீக்கி, சதி மூலம் தனக்குச் சாதகமான ஒருவரை நியமித்தது. * 323 கொள்கலன்கள் மோசடியாக விடுவிக்கப்பட்டதில் ஜனாதிபதியின் கீழ் உள்ள நிதி அமைச்சுக் குழுவால் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட 'சீவலி அருக்கொடவுக்கு' தண்டனை வழங்குவதற்குப் பதிலாக, மரபுகளை மீறி சேவைக் கால நீட்டிப்புடன் பணிப்பாளர் நாயகமாகப் பதவி உயர்வு வழங்கியது. "இதைவிட ஊழல் மிகுந்த ஜனாதிபதி யாராவது இருந்தால், அவரை பெயரிடுமாறு நான் உங்களுக்கு சவால் விடுகிறேன்," என்று கம்மன்பில தெரிவித்தார். "பொய் வழக்குகள் போட்டால், அதுவே அரசாங்கத்திற்குப் பெரிய சிக்கலாகும்" நுகேகொட கூட்டம் "திருடர்களின் கூட்டம்" என்று கூறப்பட்டதை நிராகரித்த கம்மன்பில, "திசைகாட்டி தலைவர்கள் வாயைத் திறந்தாலே அப்பட்டமான பொய்களைத்தான் சொல்கிறார்கள். நுகேகொட கூட்டத்தில் இருந்தவர்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகள் உண்மையானதா, பொய்யானதா என்று எங்களுக்குத் தெரியாது. அதனால், அரசியலில் ஈடுபடும் அனைவருடனும் நாம் இணைந்து பணியாற்ற நேரிடும். எங்களில் யாராவது திருடர்கள் இருந்தால், பேசிக்கொண்டிருக்காமல் அவர்களைக் கைது செய்யுங்கள். நாங்கள் அதற்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்க மாட்டோம். திருடர்களைப் பிடிப்பதாக வாக்குறுதி அளித்ததால் தானே, மக்கள் ஆணை கிடைத்தது," என்று வலியுறுத்தினார். "ஆனாலும், எங்களைப் பயமுறுத்தி நிறுத்த முடியாமல், சிறையில் அடைப்பதற்காகப் பொய் வழக்குகளைப் புனைய முயற்சித்தால், அது அரசாங்கத்திற்கு ஒரு பேரழிவு சக்தியாக மாறும் என்று இப்போதே எச்சரிக்கிறேன்," என்றும் அவர் மேலும் கூறினார். https://www.virakesari.lk/article/231514
-
இளம் குடும்பஸ்தர் கொலை தொடர்பில் பொலிஸாரிடம் சிக்கிய தடயங்கள்!
பிரான்ஸிலிருந்து வந்த இளைஞனின் படுகொலை தொடர்பில் நீதிமன்ற உத்தரவு! பிரான்ஸிலிருந்து யாழ்ப்பாணம் வந்த ராஜகுலேந்திரன் பிரிந்தனின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவரையும் எதிர்வரும் 01ஆம் திகதி வரை பொலிஸ் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்ய பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. ராஜகுலேந்திரன் பிரிந்தன், கடந்த 18ஆம் திகதி (18.11.2025) நள்ளிரவு, வெளிநாட்டிலிருந்து பொதி ஒன்று வந்திருப்பாதாக தொலைபேசியில் கூறப்பட்டு யாழ். வடமராட்சியில் உள்ள அவரது வீட்டிலிருந்து வெளியே வரவைக்கப்பட்டு கொல்லப்பட்டார். இந்த குற்றச்சாட்டு தொடர்பில் மட்டக்களப்பு அக்கரைப்பற்று பிரதேசத்தைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், குறித்த சந்தேகநபர்கள் இருவரும் நேற்று (25.11.2025) பிற்பகல் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர். நீதிமன்ற அனுமதி இதன்போது, குறித்த சந்தேக நபர்கள் இருவரிடமும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ள வேண்டும் என நெல்லியடி பொலிஸாரால் நீதிமன்றில் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் நெல்லியடி பொலிஸாரின் தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய எதிர்வரும் 01ஆம் திகதி வரை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. https://tamilwin.com/article/court-order-on-france-youth-murder-in-jaffna-1764148005#google_vignette
-
திருகோணமலை, தம்பலகாமத்தில் கனமழை - வெள்ளத்தில் மூழ்கிய தாழ் நிலப் பகுதிகள்
26 Nov, 2025 | 01:15 PM தற்போது பெய்துவரும் காற்றுடன் கூடிய கனமழை காரணமாக திருகோணமலை மாவட்ட தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் உள்ள தாழ் நிலப் பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் இன்று புதன்னிழமை (26) குறித்த பகுதிக்கு தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி, சபை தவிசாளர் எச்.தாலிப் அலி உள்ளிட்டோர் விஜயம் செய்து, நீரில் மூழ்கியுள்ள மற்றும் போக்குவரத்து பாதிக்கப்பட்ட வீதிகள் தொடர்பிலும் நிலைமையை கேட்டறிந்ததோடு, உடனடியாக அவ்வீதிகளை மூழ்கடித்துள்ள வெள்ள நீரை வெளியேற்ற நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த விஜயத்தின்போது சபை நிர்வாகிகள் முள்ளிப்பொத்தானை பாதிமா பாலிகா பாடசாலை வீதி, 4ஆம் வாய்க்கால் வீதி, பாலம் போட்டாறு, புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர். அங்கு கனமழை தொடர்ந்தும் பெய்து வருவதால் பாடசாலை செல்லும் மாணவர்கள் வீதியில் பயணிக்க முடியாமல் பெரும் அசௌகரியங்களை எதிர்கொள்கின்றனர். https://www.virakesari.lk/article/231487
-
75வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வதிக்கும் வகையில் ஒரு கூட்டு கிறிஸ்தவ உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனை
Published By: Vishnu 26 Nov, 2025 | 01:55 AM இலங்கை கடற்படையின் 75வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வதிக்கும் வகையில் நடத்தப்படும் மத நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக, கூட்டு கிறிஸ்தவ உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனை , கோட்டாஞ்சேனையில் உள்ள செயிண்ட் லூசியா கதீட்ரலில், கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் தலைமையில், பிரதி தலைமை அதிகாரி,விநியோகம் மற்றும் சேவை இயக்குநர் ரியர் அட்மிரல் ருவன் கலுபோவிலன் தலைமையில், 2025 நவம்பர் 21 அன்று நடைபெற்றது. 1991 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை கடற்படை கிறிஸ்தவ சங்கம், மிக உயர்ந்த கடற்படை பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளின்படி தொடர்ச்சியாக 34 ஆண்டுகளாக கூட்டு உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனையை நடத்தி வருகிறது. இந்த உற்சவம் மற்றும் நன்றி செலுத்தும் ஆராதனை திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிறிஸ்டியன் நோயல் எமெனுவேல் அவர்களின் தலமையின் கீழ், மேலும் இது எட்டு கத்தோலிக்க பாதிரியார்களின் கருணைமிக்க இருப்பு மற்றும் பிரார்த்தனைகளுடன் மிகவும் கண்ணியமான முறையில் நடைபெற்றது. "கடலின் பாதுகாவலரே, எங்கள் இறைவனின் அமைதியும் பலமும் உங்களுடன் இருக்கட்டும்," என்று திருகோணமலை ஆயர் டாக்டர் நோயல் இம்மானுவேல், இலங்கை கடற்படை அடைந்த அனைத்து வெற்றிகளுக்கும் கடவுளைப் புகழ்ந்து நன்றி தெரிவித்தார். தாய்நாட்டிற்கு அமைதியைக் கொண்டுவருவதற்காக உன்னத தியாகங்களைச் செய்த அனைவரையும் மரியாதையுடன் நினைவுகூரும் வகையில், கிறிஸ்தவ மத நடைமுறைகளுக்கு ஏற்ப கடற்படைக் கொடி மற்றும் கடற்படை கட்டளைக் கொடிகளுக்கு ஆசீர்வாதங்கள் வழங்கப்பட்டன. அதேபோல், கடற்படையின் 75 ஆண்டுகால வரலாற்றில் தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க தங்கள் உயிரைத் தியாகம் செய்த மற்றும் போரில் வீழ்ந்த அனைத்து கடற்படை வீரர்களுக்கும், தற்போது பணியாற்றும் மற்றும் ஓய்வு பெற்ற அனைத்து கடற்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும், முழு கடற்படைக்கும் ஆசீர்வாதங்கள் தெரிவிக்கப்பட்டன. மேலும், இந்த சேவையில் (ஓய்வு பெற்ற) முன்னாள் கடற்படைத் தளபதிகள் மற்றும் ஓய்வு பெற்ற சிரேஷ்ட அதிகாரிகள், கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், மேற்கு கடற்படை கட்டளைத் தளபதி உள்ளிட்ட கடற்படை இயக்குநர் ஜெனரல்கள், இலங்கை கடலோர காவல்படையின் இயக்குநர் ஜெனரல், கடற்படை சேவா வனிதா நிர்வாகக் குழு உறுப்பினர்கள், கடற்படை கிறிஸ்தவ சங்கத்தின் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள், கடற்படை தலைமையகம் மற்றும் மேற்கு கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட சிரேஷ்ட மற்றும் இளைய அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் குழு கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/231456
-
பௌத்த சிங்கள சமூகத்தை தூண்டி கோபத்துக்குள்ளாக முயற்சி தனி ஈழத்துக்புகு பாதை அமைப்பதற்கு இடமளித்து விடக் கூடாது - ஞானசார தேரர் எச்சரிக்கை
Published By: Vishnu 26 Nov, 2025 | 01:38 AM (எம்.மனோசித்ரா) திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் மற்றும் வாழைச்சேனையில் தொல்பொருள் பெயர் பலகைககள் அகற்றப்பட்மை போன்ற சம்பவங்கள் ஊடாக பௌத்த சிங்கள சமூகத்தை தூண்டி கோபத்துக்குள்ளாக முயற்சிக்கப்படுகிறது. எனவே இளம் பிக்குகள் மற்றும் தேசிய அமைப்புகள் அமைதியாகவும் விழிப்புணர்வுடனும் இருக்கும் அதேவேளை, மீண்டும் தனி ஈழத்துக்புகு பாதை அமைப்பதற்கு இடமளித்து விடக் கூடாது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் தெரிவித்தார். இராஜகிரியவிலுள்ள பொதுபல சேனா அமைப்பின் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (25) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட சம்பவம் பௌத்தர்களின் உணர்வுகளைத் தூண்டும் ஒரு மிக முக்கியமான பிரச்சினையாகும். இதுபோன்ற விஷயங்களைக் கையாளும் போது அரசாங்கம் விவேகத்துடனும் தூரநோக்குடனும் செயல்பட வேண்டும். அவ்வாறு செய்யத் தவறினால் பல்வேறு குழுக்களும் சக்திகளும் தமது தேவைக்கேற்ப நிலைமையைக் கையாள இது வழிவகுக்கும். கனடாவில் வசிக்கும் அயூப் அஸ்மின் என்ற நபர் திருகோணமலை சம்பவத்தின் போது தனது முகநூலில் 'நீங்கள் இப்படியே தொடருங்கள், சிலைகளை உடைக்கும் ஒரு இயக்கம் உருவாகும்வரை' எனப்பதிவிட்டிருக்கின்றார். இந்த நபர் ஜமாஅத் அமைப்பில் மாணவர் இயக்கத்தின் முன்னாள் தலைவராக செயற்பட்டிருக்கின்றார். அவ்வாறு செயற்பட்ட போது தமிழ் தேசிய கூட்டமைப்புடன் வடக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டார். தேர்தலில் தோல்வியடைந்த போதிலும், பட்டியலூடாக 5 ஆண்டுகள் மாகாணசபை உறுப்பினராகக் காணப்பட்டார். இவர் பிரிவினைவாதத்தை ஆதரிக்கும் மற்றும் நாட்டின் ஒற்றையாட்சித் தன்மையை கேள்விக்குள்ளாக்கும் ஒரு ஆபத்தான நபராவார். அவர் தலைமை தாங்கிய மாணவர் குழுவே மாவனெல்லையில் உள்ள புத்தர் சிலைகளை அழித்தன. அஸ்மி உலகளாவிய பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதக் குழுக்களுடன் தொடர்புகளைக் கொண்டிருக்கலாம். இலங்கையை ஒரு முஸ்லிம் நாடாக மாற்ற முயற்சிப்பதுடன், வெளிநாட்டில் இருந்து அப்பாவி முஸ்லிம் இளைஞர்களை அதிதீவிரவாதக் கருத்துக்களை நோக்கித் தள்ளுவதாகவும் சந்தேகிக்கின்றோம். எனவே நல்லாட்சியின் போது இடம்பெற்றதைப் போன்று உலகளாவிய பயங்கரவாத வலைப்பின்னல்களுடன் தொடர்புடைய நபர்களின் நடவடிக்கைகள் எவ்வாறு விரிவடைந்தன என்பதை விசாரிக்க ஒரு விசேட ஆணைக்குழுவை நியமிக்குமாறு அரசாங்கத்திடம் கோருகின்றோம். பெரும்பான்மை சமூகத்தினருக்கு மனவேதனையை ஏற்படுத்திய நடவடிக்கைகளாலேயே முந்தைய அரசாங்கம் கவிழ்க்கப்பட்டு, நாடு உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை எதிர்கொண்டது. திருகோணமலை போன்ற சம்பவங்களைத் தொடர்ந்து பௌத்த சிங்கள சமூகத்திலிருந்து வரும் ஆரவாரமும் கோபமும், அதிதீவிரவாதத்தின் ஆரம்ப நிலையில் உள்ளவர்களால் தமக்கான தீவிரவாத கருத்துகளுக்குத் தமிழ் மற்றும் முஸ்லிம் இளைஞர்களை விரைவாகச் சேர்ப்பதற்குப் பயன்படுத்தப்படுகிறது. இளம் பிக்குகள் மற்றும் தேசிய அமைப்புகள் அமைதியாகவும் விழிப்புணர்வுடனும் இருக்குமாறும், பொலிஸால் கையாளப்பட வேண்டிய விடயங்களில் தேவையற்ற விதத்தில் தலையிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொள்கின்றோம். அவர்களது கோபமான எதிர்வினைகள், அவர்களை இனவாதிகள் அல்லது மத அடிப்படைவாதிகள் என்று முத்திரை குத்த விரும்புபவர்களின் கைகளுக்குள் விளையாட வழிவகுக்கும். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரால் கனடாவில் தனிநாட்டுக் கோரிக்கைக்கு ஆதரவாகக் கருத்துக்களைத் தெரிவிக்கப்பட்டன. 30 ஆண்டுகாலப் போருக்குப் பிறகும், விடுதலைப் புலிகள் செய்த பல படுகொலைகளுக்குப் பிறகும் அவர்களை நினைவுகூர வேண்டிய தார்மீக அதிகாரம் இருக்கின்றதா? இந்த புதிய சித்தாந்தங்களை இப்போதே தோற்கடிக்கத் தவறினால், நாடு தவிர்க்க முடியாமல் ஒரு ஆபத்தான நிலைமைக்கு தள்ளப்படும். அத்தகைய சூழ்ச்சிகளுக்குத் தூண்டப்பட அனுமதித்தால், முந்தைய அரசாங்கம் சந்தித்த அதே வீழ்ச்சியை இந்த அரசாங்கமும் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றேன். விடுதலைப்புலிகளுடன் இணைந்து அஸ்மின் மீண்டும் வடக்கு, கிழக்கை மற்றொரு பலஸ்தீனாக மாற்றுவதற்கு முயற்சிக்கின்றாரா என்ற சந்தேகம் எழுகிறது. தனி ஈழத்துக்கு பாதை அமைக்க இடமளிக்க கூடாது. 13ஆவது திருத்தத்தை நீக்குவதற்கு பதிலாக அதனை மேலும் வலுப்படுத்தும் வகையிலேயே அரசாங்கம் செயற்படுகிறது. பிரதேசசபையின் அனுமதியின்றி தொல்பொருள் பெயர் பலகையை நிறுவ முடியாது என முரண்படும் நிலைமைக்கு அரசாங்கம் இடமளிக்கின்றதா? இந்த நிலைமைகள் இப்போதே அடியோடு அழிக்கப்பட வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/231454
-
தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர்ப் பலகைகளை அகற்றியவர்களை கைது செய்ய நடவடிக்கை!
பிணை வழங்கப்படமுடியாத மிகக்கொடூரமான தொல்லியல் சட்டம் மாற்றியமைக்கப்படவேண்டும் - எம்.ஏ.சுமந்திரன் Published By: Vishnu 26 Nov, 2025 | 01:31 AM (நா.தனுஜா) இலங்கையில் பிணை வழங்கப்படமுடியாத ஒரேயொரு சட்டமாக இருக்கக்கூடிய தொல்லியல் சட்டத்தை மிகக்கொடூரமான சட்டம் என்று கூறமுடியும். தொல்லியல் சட்டத்தின் ஊடாக அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களைத் தவறாகப் பிரயோகித்து, இன மற்றும் மதரீதியான ஆக்கிரமிப்புக்களை நிகழ்த்துவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. எனவே அச்சட்டம் கட்டாயமாக மாற்றியமைக்கப்படவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார். தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையை அகற்றியது தொடர்பான வழக்கில் வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளர், பிரதி தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் உட்பட 5 பேருக்கு வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றம் செவ்வாய்கிழமை (25) பிணை வழங்கியது. அந்த ஐவர் சார்பில் நீதிமன்றில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வழக்கின் முடிவில் நீதிமன்றுக்கு வெளியே ஊடகங்களுக்குக் கருத்துரைக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது: ஒரு வீட்டிலிருந்து அல்லது ஒரு கட்டடத்திலிருந்து அல்லது ஒரு கப்பலில் இருந்து ஏதாவதொரு பொருள் திருடப்பட்டால், அது தண்டனைக்குரிய குற்றம் என்று இலங்கைத் தண்டனைச் சட்டக்கோவையின் 369 ஆவது பிரிவு கூறுகிறது. அந்தப் பிரிவின் கீழேயே இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. அத்தோடு 410, 417 என்ற பிரிவுகளும் பொலிஸாரின் அறிக்கையிலேயே காண்பிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றுக்கு இந்த வழக்குடன் எந்தவொரு சம்பந்தமும் இல்லை என்பதுடன் அந்தப் பிரிவுகளில் கூறப்பட்டிருக்கும் விடயம் ஒரு அரச உத்தியோகத்தர் தன்னுடைய அதிகாரத்தின் கீழ் ஒரு விடயத்தை செய்தாலோ அல்லது அறிவிப்புப் பலகையைப் பொருத்தினாலோ, அதனை அப்புறப்படுத்துவது குற்றம் என்பதேயாகும். எனவே இச்சம்பவத்தில் வீதியிலிருந்து பெயர்ப்பலகைகள் திருடப்பட்டிருப்பதாக பொலிஸார் கூறுவது பொருத்தமற்ற குற்றச்சாட்டு என நான் மன்றிலே சுட்டிக்காட்டினேன். இலங்கையில் தொல்லியல் சட்டத்தை மிகக்கொடூரமானதொரு சட்டம் என்றுகூடச் சொல்லலாம். ஏனென்றால் எமது நாட்டில் பிணை வழங்கமுடியாத ஒரேயொரு சட்டமாக இருப்பது தொல்லியல் சட்டம் மாத்திரமேயாகும். மற்றைய எல்லாச் சட்டங்களின் கீழும், குறிப்பாக பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கூட பிணை வழங்கமுடியும். ஆகவே இந்தச் சட்டம் மாற்றப்படவேண்டும். ஏனெனில் தொல்லியல் இடங்கள் பாதுகாக்கப்படவேண்டும் என்பது எமது எல்லோருடைய விருப்பம். ஆனால் அந்தப் போர்வையின்கீழ் ஏராளமாக ஆக்கிரமிப்புக்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. தொல்லியல் பொருட்கள் அழிந்துவிடக்கூடாது என்பதற்காக வழங்கப்பட்டிருக்கும் அதிகாரங்களை அதிகாரிகள் தவறாகப் பிரயோகித்து மத மற்றும் இன ரீதியான ஆக்கிரமிப்புக்களை மேற்கொள்வதை எம்மால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இருப்பினும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுவரும் பின்னணியில், தொல்லியல் சட்டம் கட்டாயமாக மாற்றியமைக்கப்படவேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/231453