Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. மனிதன் வாழத் தக்கதாக, பூமி போலவே பரிணமிக்கிறதா இந்த புறக்கோள்? கோவை விஞ்ஞானி புதிய கண்டுபிடிப்பு பட மூலாதாரம்,University of Geneva/NCCR PlanetS/Thibaut Roger படக்குறிப்பு,WASP-107 நட்சத்திரம் மற்றும் WASP-107b புறக்கோளின் சித்தரிப்பு ஓவியம் கட்டுரை தகவல் க. சுபகுணம் பிபிசி தமிழ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் விண்வெளியில் உள்ள பல கோடி நட்சத்திரங்களில் ஒன்று WASP-107. அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசையில் கட்டுண்டு, அதைச் சுற்றி வந்துகொண்டிருக்கும் கோள்களில் ஒன்றுதான் WASP-107b. இந்தப் புறக்கோளில் தமிழக விஞ்ஞானி ஒருவர், பூமியின் இயற்கை வரலாற்றில் நிகழ்ந்ததை ஒத்த ஓர் அதிசய நிகழ்வு நடப்பதைச் சமீபத்தில் கண்டுபிடித்துள்ளார். தமிழ்நாட்டின் கோவையைச் சேர்ந்தவரும் கனடாவின் மெக்கில் பல்கலைக்கழக வானியற்பியல் விஞ்ஞானியுமான முனைவர் விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி மற்றும் அவரது குழுவினர், பூமியில் இருந்து 210 ஒளி ஆண்டுகள் தொலைவிலுள்ள இந்த பிரமாண்டமான புறக்கோளை ஜேம்ஸ்வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்து இதைக் கண்டறிந்துள்ளனர். அளவில் மிகப் பெரிதான இந்தப் புறக்கோள் தான் சுற்றி வரும் நட்சத்திரத்திற்கு வெகு அருகில் இருப்பதால் வெப்பம் மிகுந்ததாகவும் உள்ளது. இந்த அதீத வெப்பம் காரணமாக, அதன் வளிமண்டலத்தில் உள்ள வாயுக்கள் ஆவியாகிக் கொண்டிருப்பதாக பிபிசி தமிழிடம் பேசிய முனைவர் விக்னேஷ்வரன் தெரிவித்தார். அதுகுறித்து ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி வாயிலாக அவதானித்துக் கொண்டிருந்தபோது, ஒரு பிரமாண்டமான ஹீலியம் வாயு மேகம் அதிலிருந்து வெளியேறுவதைத் தாங்கள் கண்டதாக அவர் குறிப்பிட்டார். இது தொடர்பான ஆய்வுக் கட்டுரை நேச்சர் அஸ்ட்ரானமி ஆய்விதழில் வெளியாகியுள்ளது. இந்த வாயு மேகம், கோளின் மொத்த அளவைவிட சுமார் 10 மடங்கு பெரிதாகப் பரவியிருந்ததாக இதுகுறித்து மெக்கில் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. "பிற கோள்களிலும் இதுபோன்ற வாயு மேகத்தை விஞ்ஞானிகள் கண்டிருந்தாலும், இவ்வளவு பிரமாண்டமான வாயு சூழ்ந்த வளிமண்டலத்தை அவதானிப்பது இதுவே முதல்முறை" என்றும் அந்தச் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது. இந்தக் கண்டுபிடிப்பு விண்வெளி ஆய்வில் முக்கியமான ஒன்றாகப் பார்க்கப்படுவது ஏன், இந்தப் புறக்கோளில் நடக்கும் மாற்றங்களுக்கும் பூமிக்கும் உள்ள தொடர்பு என்ன ஆகியவை குறித்து விரிவாகத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் முனைவர் விக்னேஷ்வரனிடம் பேசியது. படக்குறிப்பு,முனைவர் விக்னேஷ்வரன் கிருஷ்ணமூர்த்தி கனடாவின் மெக்கில் பல்கலைக்கழகத்தில் வானியற்பியல் விஞ்ஞானியாக உள்ளார் புறக்கோள் என்றால் என்ன? பூமி சூரியனை சுற்றி வருவதை நாம் அனைவருமே அறிவோம். சூரியன் என்பது ஒரு நட்சத்திரம். அந்த நட்சத்திரத்தின் ஈர்ப்புவிசைத் தளையில் கட்டுண்டுதான், பூமி, புதன், செவ்வாய் என்று எட்டு கோள்களும் அதைச் சுற்றி வருகின்றன. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது உடல் எடையைக் குறைக்க வெண்காரம் சாப்பிட்ட மாணவி மரணம் – நிபுணர்கள் சொல்வது என்ன? பாகிஸ்தான் - சௌதி பாதுகாப்பு கூட்டுக்கு பதிலடியாக இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஒன்று சேர்கிறதா? எல்ஐசி அலுவலகத்தில் 'தீ வைத்து கொல்லப்பட்ட' மேலாளர் - கடைசி ஃபோன் கால் மூலம் சிக்கிய ஊழியர் அமெரிக்க டாலருக்கு மாற்றாக தங்கத்தை வாங்கிக் குவிக்கும் சீனா, ரஷ்யா - இந்தியா என்ன செய்கிறது? End of அதிகம் படிக்கப்பட்டது நம்முடைய சூரியனை போலவே, விண்வெளியில் கோடிக்கணக்கான நட்சத்திரங்கள் உள்ளன. அந்த நட்சத்திரங்களைச் சுற்றியும் சூரிய மண்டலத்தில் இருப்பதைப் போன்று பல கோடிக்கணக்கான கோள்கள் உள்ளன என்பதைக் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு விண்வெளி ஆய்வுகளின் மூலம் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர். அதோடு, சூரியன் தவிர வேறு நட்சத்திரங்களைச் சுற்றிக் கொண்டிருக்கும் அத்தகைய 6,000க்கும் மேற்பட்ட கோள்களை விஞ்ஞானிகள் கண்டறிந்து அடையாளப்படுத்தியுள்ளனர். அவற்றில் ஒன்பது புறக்கோள்கள் தங்களது குழுவினர் கண்டுபிடித்தவை என்று கூறுகிறார் முனைவர் விக்னேஷ்வரன். இப்படியாக, சூரிய மண்டலத்திற்கு வெளியே பிற நட்சத்திரங்களைச் சுற்றி அமைந்திருக்கும் கோள்கள், புறக்கோள்கள் (Exoplanet) என்று அழைக்கப்படுகின்றன. இந்தப் புறக்கோள்களில் மனிதர்கள் உயிர் வாழ ஏதுவான கோள் ஏதேனும் உள்ளதா, நாம் உயிர் பிழைக்கத் தேவையான காற்று, தண்ணீர் போன்ற கூறுகள் உள்ளனவா என்பனவற்றை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். இந்தப் புறக்கோள் ஆராய்ச்சியில் நிபுணத்துவம் வாய்ந்தவரான விக்னேஷ்வரன், WASP-107b என்ற புறக்கோளில் மேற்கொண்ட ஆய்வில் சில முக்கியத்துவம் வாய்ந்த கண்டுபிடிப்புகளைச் செய்துள்ளார். பட மூலாதாரம்,Angel P. Geego படக்குறிப்பு,தன்னுள் இருந்து வெளியேறும் வாயு மேகத்தால் சூழப்பட்ட WASP-107b புறக்கோளை சித்தரிக்கும் ஓவியம். 'பூமியைவிட 11 மடங்கு பெரியது' "சூரியனைச் சுற்றி வரும் கோள்கள் வரிசையில் சூரியனுக்கு நெருக்கமாக சிறிய கோள்களும் அதைத் தொடர்ந்து அளவில் பெரிய கோள்களும் இடம்பெற்றுள்ளன. இவ்வளவு காலமாக இதுதான் எதார்த்தம் என்று நாம் கருதிக் கொண்டிருந்தோம். ஆனால், வியாழன் அளவுக்கு, அதாவது பூமியைவிட பத்து, பதினைந்து மடங்கு பெரிதாக இருக்கும் நிறைய புறக்கோள்கள் அவை சுற்றும் நட்சத்திரத்திற்கு மிகவும் பக்கத்திலேயே இடம்பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது," என்கிறார் விக்னேஷ்வரன். இருப்பினும், இப்படிப்பட்ட பிரமாண்ட கோள்கள் ஒரு நட்சத்திரத்திற்கு அவ்வளவு நெருக்கமாகத் தோற்றம் பெற்றிருப்பதற்கான சாத்தியக்கூறுகள் மிக மிகக் குறைவு என்று கூறும் அவர், அவை எப்படி அந்த இடத்திற்கு வந்தன என்பதைக் கண்டறிவதற்கான ஆய்வுகள் பலவும் நடந்து கொண்டிருப்பதாகத் தெரிவித்தார். அப்படிப்பட்ட ஒரு புறக்கோள்தான் WASP-107b. "WASP-107 என்ற நட்சத்திரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கும் இது, பூமியைவிட அளவில் 11 மடங்கு பெரியது. எடையில் சுமார் 30 மடங்கே அதிகம். ஒப்பீட்டளவில் WASP-107b கோளின் அளவை கணக்கிடுகையில் அதன் எடை மிகவும் குறைவு. இதற்கு என்ன காரணம் என்பதைத் தெரிந்து கொள்ள, அதை ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்தோம்" என்றார் விக்னேஷ்வரன். பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,Wasp-107 நட்சத்திரம் பூமியில் இருந்து சுமார் 200 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ளது 'பூமியைவிட 15-20 மடங்கு அதிக தண்ணீர்' முனைவர் விக்னேஷ்வரன் மற்றும் அவரது குழுவினர் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலமாக, WASP-107b புறக்கோள் அதன் நட்சத்திரத்திற்கு நேராக வரும்போது அதைக் கண்காணித்தனர். WASP-107 நட்சத்திரத்திற்கு நேராக இந்தப் புறக்கோள் வந்து, நட்சத்திரத்தின் ஒளியை இடைமறிக்கும்போது அதைத் தாங்கள் அவதானித்ததாக அவர் விளக்கினார். அதுகுறித்து விரிவாக விளக்கிய அவர், "புறக்கோள் நட்சத்திரத்தை இடைமறிக்கும்போது, இங்கு நாம் பார்க்கும் கிரகணத்தைப் போலவே அங்கும் நட்சத்திரத்தின் ஒளி மங்கலாகும். அந்த நேரத்தில், புறக்கோளின் வளிமண்டலத்தில் என்னென்ன மூலக்கூறுகள் உள்ளனவோ அவற்றைப் பொறுத்து, அதற்கேற்ற அலைநீளங்களைக் கொண்ட ஒளிகள் நமக்குத் தென்படும். உதாரணமாக, சிவப்பு நிற ஒளியை ஹைட்ரஜன் மூலக்கூறுகள் இடைமறிக்கும். இப்படியாக ஒரு குறிப்பிட்ட அலைநீளத்தைக் கொண்ட ஒளி இடைமறிக்கப்பட்டால், அதைத் தடுக்கும் திறன்கொண்ட மூலக்கூறு அந்தப் புறக்கோளில் உள்ளது என்பதை உறுதி செய்யலாம். இந்த ஆய்வு முறைக்கு டிரான்ஸ்மிஷன் ஸ்பெக்ட்ரோஸ்கோபி என்று பெயர்" என்றார். இதன் மூலம் ஒரு புறக்கோளின் வளிமண்டலத்தில் என்னென்ன வாயுக்கள் உள்ளன என்பதை அறிந்துகொள்ள முடியும் என்கிறார் விக்னேஷ்வரன். இதே முறையில் WASP-107bஐ ஆய்வு செய்தபோது அதில், பூமியைவிட 15-20 மடங்கு அதிக தண்ணீர் இருப்பதும், கார்பன் டை ஆக்சைட், மீத்தேன், சோடியம், பொட்டாசியம் போன்றவை அதிகளவில் இருப்பதும் அவர்களுக்குத் தெரிய வந்துள்ளது. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு,WASP-107b புறக்கோள் அதன் நட்சத்திரத்தைச் சுற்றி வருவதற்கு 5.7 நாட்களே எடுத்துக் கொள்கிறது 'ஓராண்டு என்பது 5.7 நாட்கள் மட்டுமே' பூமி சூரியனை சுற்றி வருவதற்குத் தோராயமாக 365 நாட்கள் எடுத்துக் கொள்கிறது. ஆனால், WASP-107b புறக்கோள் அதன் நட்சத்திரத்தைச் சுற்றி வருவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரம் பூமியின் நேர கணக்கீடு அடிப்படையில் பார்த்தால் வெறும் ஐந்தரை நாட்கள்தான் என்கிறார் விக்னேஷ்வரன். அதாவது, அங்கு ஓர் ஆண்டு என்பது வெறும் 5.7 நாட்கள் மட்டுமே. அதேபோல, "பூமியில் சராசரியாக 15 முதல் 20 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை நிலவுகிறது. ஆனால், அந்தப் புறக்கோளின் வெப்பநிலை 700 டிகிரி. அந்த வெப்பத்திலும்கூட காற்றில் தண்ணீர், கரிம வாயு, மீத்தேன் போன்றவை இருக்கின்றன" என்கிறார் விக்னேஷ்வரன். இவை எல்லாவற்றையும்விட மிக முக்கியமாக, அதில் ஹீலியம் வாயு அதிகளவில் இருப்பதையும் இந்த ஆய்வுக் குழு கண்டறிந்தது. ஆரம்பக் காலத்தில், பூமியிலும் இதேபோல அதிகளவில் ஹைட்ரஜன் மற்றும் ஹீலியம் இருந்திருக்கலாம் என்றும் சூரியனின் வெப்பத்தால் அவை ஆவியாகி வெளியேறி இருக்கலாம் எனவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளனர். "இந்த ஆவியாதல் செயல்முறை ஒரு கோள் உருவாகி சில நூறு மில்லியன் ஆண்டுகளிலேயே நடக்க வேண்டியவை. WASP-107b புறக்கோளை பொறுத்தவரை, அது கிட்டத்தட்ட பூமியை போலவே, சுமார் 300 முதல் 400 கோடி ஆண்டுகள் பழமையானது. அப்படி இருந்தும்கூட அவற்றில், புறக்கோளின் அளவைவிட பத்து மடங்கு அதிகமான ஹீலியம் இன்னமும் இருக்கிறது." அது எப்படி வந்தது, தான் சுற்றி வரும் நட்சத்திரத்திற்கு இவ்வளவு நெருக்கமாக, அதீத வெப்பநிலையில் அது இருந்தும்கூட இன்னமும் இந்த வாயுக்கள் ஆவியாகி கோளைவிட்டு வெளியேறாமல் அப்படியே இருப்பது ஏன் என்பன போன்ற கேள்விகள் தங்களுக்கு எழுந்ததாகக் கூறுகிறார் விக்னேஷ்வரன். இந்தக் கேள்விகளுக்கான விடையைத் தெரிந்துகொள்ள முயலும்போது தங்களுக்கு மேலும் சுவாரஸ்யமான ஒரு விஷயம் தெரிய வந்ததாகத் தெரிவித்தார் அவர். பட மூலாதாரம்,NASA, ESA, CSA, Northrop Grumman படக்குறிப்பு,ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி (சித்தரிப்புப் படம்) 'தொலைதூரத்தில் இருந்து நட்சத்திரம் அருகே நகர்ந்த WASP-107b' WASP-107b போலவே, அதற்கு அடுத்ததாக WASP-107c என்ற மற்றொரு கோளும் அந்த நட்சத்திரத்தைச் சுற்றிக்கொண்டு இருப்பதாகக் கூறிய அவர், "அது நட்சத்திரத்தை முழுதாகச் சுற்றி முடிக்க ஆயிரம் நாட்கள் எடுத்துக் கொள்வதாக" குறிப்பிட்டார். அப்போதுதான், "முன்பு எங்கோ தொலைதூரத்தில் WASP-107b உருவாகியிருக்கலாம் என்பதையும், WASP-107c கோளின் ஈர்ப்புவிசையால் இழுக்கப்பட்டு, தற்போது இருக்கும் இடத்தை அடைந்திருக்கலாம் என்பதையும்" தங்களது ஆய்வுக் குழுவினர் கண்டறிந்ததாக அவர் கூறினார். "நட்சத்திரத்தில் இருந்து தொலைதூரத்தில் இருந்த காரணத்தால் நிலவிய மிகவும் குளிரான வெப்பநிலை, பல கோடி ஆண்டுகளுக்கு WASP-107bஇல் தண்ணீர், கரிம வாயு, ஹீலியம் உள்பட அனைத்து வாயுக்களையும் உறைநிலையில் வைத்திருக்கலாம். அதன் பின்னர், WASP-107c கோளின் ஈர்ப்புவிசையால் நட்சத்திரத்திற்குப் பக்கத்தில் நகர்ந்து வந்த பிறகு அங்கு வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதனால், உறைநிலையில் இருந்த வாயுக்கள் அனைத்தும் ஆவியாகத் தொடங்கியுள்ளன. அதைத்தான் நாங்கள் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் பார்த்தோம். இந்த வாயுக்கள் அனைத்தும் அடுத்த சில நூறு மில்லியன் ஆண்டுகளில் முற்றிலுமாக ஆவியாகி கோளைவிட்டு வெளியேறியிருக்கும் என்று கணித்துள்ளோம்," என்று விக்னேஷ்வரன் விளக்கினார். அதைத் துல்லியமாகக் கணிப்பதற்காக, இந்தப் புறக்கோளை மீண்டும் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் ஆய்வு செய்யத் திட்டமிட்டு இருப்பதாகக் கூறுகிறார் அவர். பூமி போலவே பரிணமிக்கிறதா இந்த புறக்கோள்? "பூமியிலும் ஆரம்பத்தில் அதிகளவிலான ஹீலியம், ஹைட்ரஜன் வாயுக்கள் வளிமண்டலத்தில் இருந்திருக்கலாம். அவை சூரியனில் இருந்து வெளிப்பட்ட அதீத வெப்பத்தின் காரணமாகச் சிறிது சிறிதாக ஆவியாகி, அதன் பின்னர் பூமியில் தண்ணீர் உள்பட உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற சூழலை உருவாக்கக்கூடிய மூலக்கூறுகள் உருவாகி நிலைபெற்று இருக்கலாம்" என்ற கருதுகோளை மேற்கோள் காட்டுகிறார் முனைவர் விக்னேஷ்வரன். அவரது கூற்றுப்படி, "அதே போன்றதொரு செயல்முறையே இப்போது WASP-107b புறக்கோளில் நடந்து கொண்டிருக்கலாம். அதன்மூலம், வளிமண்டலத்தில், புறக்கோளின் மொத்த அளவில் பத்து மடங்கு பெரிதாக இருக்கக்கூடிய வாயு மேகங்கள் முற்றிலுமாக விலகினால், தண்ணீர் உள்பட உயிர் வாழ ஏதுவான சூழலை உண்டாக்கும் மூலக்கூறுகள் கோள் முழுக்கப் பரவ வாய்ப்புள்ளது." ஆனால், அது நிச்சயமாக நடக்குமா என்பதை உறுதியாகக் கூறிவிட முடியாது என்றும் கூறுகிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c0jven4j0ngo
  2. நில ஆக்கிரமிப்பு, மொழி உரிமை மீறலுக்கு தொல்லியல் திணைக்களம் துணைபோகிறது - செ. நிலாந்தன் 21 Jan, 2026 | 03:54 PM வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது என சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் தெரிவித்துள்ளார். ஏறாவூர் பற்று பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான முதலாவது சபை அமர்வில் பிரதேச சபையின் அனுமதி பெறப்படாமல் நடப்பட்ட தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகைகளை அகற்றுவது தொடர்பாக கொண்டுவரப்பட்ட பிரேரணையில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்லியல் திணைக்களத்தினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் குழப்பத்தையும், முரண்பாடுகளையும் ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. வடகிழக்கில் உள்ள சிறுபான்மை இன மக்களின் நில ஆக்கிரமிப்பு மற்றும் மொழி உரிமை மீறலுக்கு சட்டரீதியாக துணைபோகும் திணைக்களமாக தொல்லியல் திணைக்களம் செயற்பட்டு வருகிறது. 1987, 15ம் இலக்க சட்டத்தின் பிரகாரம் பிரதேச சபைகளுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை மீறி பிரதேச சபையின் அனுமதி இன்றி தொல்லியல் திணைக்களம் பெயர்ப் பலகைகளை இட்டுள்ளனர். மட்டக்களப்பு மாவட்டத்தில் மாத்திரம் தொல்பொருள் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர் பலகைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தவர்கள், பெயர் பலகைகளை அகற்றியவர்கள் என்று கூறி 56 பேரை கைது செய்துள்ளனர். முன்னர் இருந்த எந்த அரசாங்கங்களும் செய்யாத செயற்பாட்டை தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கம் செய்துள்ளது. இதைவிட தொல்லியல் திணைக்களத்தின் ஊடாக நடப்பட்ட அனைத்து பெயர் பலகைகளிலும் மொழி உரிமை மீறப்பட்டுள்ளது. இந்த நாட்டின் அரச கரும மொழிகளாக தமிழ், சிங்கள மொழிகள் காணப்படுகிறது, அதேபோல் வடகிழக்கின் நிர்வாக மொழியாக தமிழ் மொழியே காணப்படுகிறது. இவ்வாறு இருக்கும் நிலையில் வடகிழக்கின் நிர்வாக மொழியான தமிழ் மொழியை முதலாவதாகவும், சிங்கள மொழியை இரண்டாவதாகவும் எழுதி இருக்க வேண்டும். ஆனால் தொல்லியல் திணைக்களத்தின் பெயர் பலகைகளில் மூன்றாவதாகவே தமிழ் மொழி அடையாளப்படுத்தும் பட்டுள்ளது. தமிழரசுக் கட்சியின் ஆட்சியின் கீழ் இருக்கும் பிரதேச சபைகளின் அதிகாரங்களை மீறி அரசியல் நோக்கங்களுக்காக, பிரதேச சபை சட்டங்களை மீறி தொல்லியல் திணைக்களம் செயற்படுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. இதனை வன்மையாக கண்டிக்கின்றேன். தொல்லியல் திணைக்களத்தினால் நடப்பட்ட பெயர் பலகைகள் அகற்றப்பட்டு பிரதேச சபையின் அனுமதி பெற்று, தமிழ் மொழியை முதன்மைப் படுத்தி மீளவும் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/236617
  3. பெண்கள் கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் மாத்திரை சாப்பிடலாமா? ஆய்வில் புதிய தகவல் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் ஃபிலிப்பா ராக்ஸ்பி & ஜிம் ரீட் சுகாதார செய்தியாளர்கள் 21 ஜனவரி 2026, 01:49 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் உட்கொள்வது பாதுகாப்பானது என்றும், அது குழந்தைகளுக்கு ஆட்டிசம், ஏடிஹெச்டி மற்றும் வளர்ச்சிக் குறைபாடுகளை ஏற்படுத்தும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் ஒரு புதிய பெரிய ஆய்வின் பின்னணியில் உள்ள நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாராசிட்டமால் மாத்திரை "நல்லதல்ல" என்றும், கர்ப்பிணிகள் அதைத் தவிர்க்க "கடுமையாகப் போராட வேண்டும்" என்றும் சர்ச்சைக்குரிய வகையில் கூறியிருந்தார். அதற்கு மாறாக அமைந்துள்ள இந்த ஆய்வின் முடிவுகள், கர்ப்பிணிகளுக்கு "நிம்மதி மற்றும் நம்பிக்கையை அளிக்கக்கூடும்" என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். டிரம்பின் கருத்துகள் அந்த நேரத்தில் உலகெங்கிலும் உள்ள மருத்துவ அமைப்புகளால் விமர்சிக்கப்பட்டன. 'தி லான்செட்' மருத்துவ ஆய்விதழில் வெளியாகியுள்ள இந்த சமீபத்திய ஆய்வு மிகவும் துல்லியமானது என்றும், பாராசிட்டமாலின் பாதுகாப்பு குறித்த விவாதங்களுக்கு இது முற்றுப்புள்ளி வைக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். இருப்பினும், கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்துவது குறித்து "பல நிபுணர்கள்" கவலை தெரிவித்துள்ளதாக அமெரிக்க சுகாதார அதிகாரிகள் இன்னும் கூறி வருகின்றனர். கர்ப்பிணிகள் அதிகமாக எடுத்துக்கொள்ளும் வலி நிவாரணி மருந்தான பாராசிட்டமாலை (அமெரிக்காவில் 'அசிட்டமினோஃபென்' என்று அழைக்கப்படுகிறது), கர்ப்ப காலத்தில் உட்கொண்டால் குழந்தைகளுக்கு ஆட்டிசம் ஏற்படக்கூடும் என்று டிரம்பும் அவரது நிர்வாகமும் கூறியபோது உலகெங்கிலும் உள்ள பல மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்தனர். அந்த வாதங்கள் பெண்களிடையே குழப்பத்தையும், சுகாதார நிபுணர்களிடையே கவலையையும் ஏற்படுத்தின. இதுவே இந்தப் புதிய ஆராய்ச்சிக்குத் தூண்டுகோலாக அமைந்தது. 'லான்செட் மகப்பேறியல், பெண் நோயியல் மற்றும் பெண்கள் ஆரோக்கியம்' (The Lancet Obstetrics, Gynaecology & Women's Health) என்ற ஆய்விதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, லட்சக்கணக்கான பெண்கள் சம்பந்தப்பட்ட 43 வலுவான ஆய்வுகளை ஆராய்ந்தது. குறிப்பாக, பாராசிட்டமால் உட்கொண்ட தாய்மார்களின் கர்ப்ப காலத்தையும், உட்கொள்ளாதவர்களின் கர்ப்ப காலத்தையும் ஒப்பிட்ட ஆய்வுகளை அது ஆராய்ந்தது. பட மூலாதாரம்,Getty Images உடன் பிறந்தவர்களைக் கொண்டு செய்யப்பட்ட உயர்தர ஆய்வுகளைப் பயன்படுத்தியதன் மூலம், மரபணுக்கள் மற்றும் குடும்ப சூழல் போன்ற பிற காரணிகளைத் தங்களால் நிராகரிக்க முடிந்ததாகவும், இதனால் இந்த ஆய்வு 'மிகவும் உயர்தரமானது' என்றும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆராய்ச்சி பாரபட்சமற்ற ஆய்வுகளையும், ஏதேனும் பாதிப்புகள் உள்ளனவா என்பதைக் கண்டறிய ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் குழந்தைகளைக் கண்காணித்த ஆய்வுகளையும் கணக்கில் எடுத்துக்கொண்டது. "நாங்கள் இந்த ஆய்வைச் செய்தபோது, பாராசிட்டமால் ஆட்டிசம் அபாயத்தை அதிகரிப்பதாகக் கூறப்படும் கூற்றுடன் எந்தத் தொடர்போ அல்லது ஆதாரமோ கிடைக்கவில்லை," என்று இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும், மகப்பேறு மருத்துவருமான பேராசிரியர் அஸ்மா கலீல் பிபிசியிடம் தெரிவித்தார். மேலும் அவர், "வழிகாட்டுதல்படி உட்கொள்ளும்போது, கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் ஒரு பாதுகாப்பான தேர்வாகவே நீடிக்கிறது என்ற செய்தி தெளிவாக உள்ளது," என்று கூறினார். இது பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் உள்ள முக்கிய மருத்துவ அமைப்புகளின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களை உறுதிப்படுத்துகிறது. பாராசிட்டமால் மருந்துக்கும் ஆட்டிசத்திற்கும் இடையே இதற்கு முன்பு தெரிவிக்கப்பட்ட தொடர்புகள், மருந்தின் நேரடி விளைவைவிட பிற காரணிகளால் ஏற்பட்டிருக்கலாம் என்று இந்த ஆய்வு கூறுகிறது. "கர்ப்பிணிகளுக்கு வலி அல்லது காய்ச்சல் ஏற்படும்போது முதலில் பரிந்துரைக்கப்படும் மருந்து பாராசிட்டமால் என்பதால் இது மிகவும் முக்கியமானது," என்று லண்டன் சிட்டி செயின்ட் ஜார்ஜ் பல்கலைக் கழகத்தின் தாய்-சேய் மருத்துவப் பேராசிரியர் அஸ்மா கலீல் கூறினார். பட மூலாதாரம்,Getty Images கர்ப்ப காலத்தில் அதிக வெப்பநிலையைக் குறைக்கவோ அல்லது வலியைப் போக்கவோ பாராசிட்டமால் எடுக்காவிட்டால், அது குழந்தைக்குத் தீங்கு விளைவிக்கும் என்று சுகாதார ஆலோசனைகள் எச்சரிக்கின்றன. இது கருச்சிதைவு, முன்கூட்டிய பிரசவம் அல்லது குழந்தைகளின் வளர்ச்சி சார்ந்த பிரச்னைகளை அதிகரிக்கக்கூடும். இந்த ஆராய்ச்சியில் ஈடுபடாத மருத்துவ நிபுணர்களும் இதன் முடிவுகளை வரவேற்றுள்ளனர். இது பெண்களிடையே உள்ள கவலையைக் குறைக்க உதவும் என்று அவர்கள் கூறுகின்றனர். லண்டன் கிங்ஸ் கல்லூரியின் பேராசிரியர் கிரெய்ன் மெக்கலோனன் இதுகுறித்துப் பேசியபோது, "தலை வலிக்கு பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒரு மருந்து குழந்தையின் ஆரோக்கியத்தில் நீண்ட கால பாதிப்புகளை ஏற்படுத்துமா என்ற கேள்வியால் எழும் மன அழுத்தத்திற்கு கர்ப்பிணிகள் ஆளாக வேண்டிய அவசியமில்லை. இந்த ஆய்வின் முடிவுகள் இந்தப் பிரச்னைக்கு முற்றுப் புள்ளி வைக்கும் என்று நம்புகிறேன்," என்றார். லண்டன் ஸ்கூல் ஆஃப் ஹைஜீன் அண்ட் டிராபிகல் மெடிசின் பேராசிரியர் இயன் டக்ளஸ், கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்தும் மற்றும் பயன்படுத்தாத தாய்மார்களுக்கு இடையே இருக்கும் அடிப்படை நோய்கள் போன்ற முக்கிய வேறுபாடுகளைக் கணக்கில் கொள்ளாத தரம் குறைந்த ஆய்வுகளைத் தவிர்த்துள்ள காரணத்தால் இந்த ஆய்வு "சிறப்பாக நடத்தப்பட்டது எனக் கூறலாம்" என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,செப்டம்பர் 2025இல் ஓர் உரையில், கர்ப்பிணி பெண்கள் பாராசிட்டமால் மாத்திரைகளை தவிர்க்க வேண்டுமென்று அதிபர் டிரம்ப் அறிவுறுத்தியது சர்ச்சையானது பெர்கன் பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு நரம்பியல் விஞ்ஞானியும் மனநல மருத்துவருமான பேராசிரியர் ஜான் ஹாவிக், கர்ப்ப காலத்தில் பாராசிட்டமால் பயன்படுத்துவது ஆட்டிசம், ஏடிஹெச்டி அல்லது அறிவுசார் குறைபாடுகளின் அபாயத்தை அதிகரிக்காது என்பதற்கு இந்த ஆய்வு "வலுவான ஆதாரங்களை" வழங்குவதாகவும், "இந்தக் கேள்விக்கு இது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" எனவும் கூறினார். ஆட்டிசம் என்பது மரபணு, சுற்றுச்சூழல் காரணிகள் உள்படப் பல சிக்கலான காரணிகளின் கலவையால் ஏற்படுகிறது என்பது இந்தத் துறையில் பணியாற்றும் விஞ்ஞானிகளின் பொதுவான கருத்தாகும். அமெரிக்க சுகாதார மற்றும் மனித சேவைகள் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், "கர்ப்ப காலத்தில் அசிட்டமினோஃபென் (பாராசிட்டமாலுக்கான அமெரிக்க பெயர்) பயன்படுத்துவது குறித்து "பல நிபுணர்கள்" கவலை தெரிவித்துள்ளனர்" என்றார். உதாரணமாக, ஆகஸ்ட் 2025இல் ஹார்வர்ட் டி.ஹெச். சான் பொது சுகாதாரப் பள்ளியின் தலைவர் மருத்துவர் ஆண்ட்ரூ பாக்கரெல்லி தலைமையிலான ஆய்வு ஒன்றில், கர்ப்ப காலத்தில் அசிட்டமினோஃபென் பயன்படுத்துவது குழந்தைகளின் ஆட்டிசம் மற்றும் ஏடிஹெச்டி அபாயத்தை அதிகரிக்கக்கூடும் என்று கண்டறியப்பட்டது. குறிப்பாக "அதிகமான அல்லது நீண்ட காலப் பயன்பாடு" குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு சில மாதங்களுக்கு முன்பு, சுகாதார செயலாளர் ராபர்ட் எஃப். கென்னடி ஜூனியர், ஆட்டிசம் பாதிப்புகள் திடீரென அதிகரிப்பதற்கான காரணத்தைக் கண்டறியப் போவதாக உறுதியளித்திருந்தார். செப்டம்பர் மாதம் ஓவல் அலுவலகத்தில் ஆற்றிய சர்ச்சைக்குரிய உரையில், கர்ப்பிணிகளுக்கு இந்த வலி நிவாரணியைப் பரிந்துரைக்க வேண்டாம் என்று மருத்துவர்களுக்கு அறிவுறுத்தப்படும் என்று அமெரிக்க அதிபர் கூறினார். அதைத் தொடர்ந்து அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம்(எஃப்டிஏ) கர்ப்ப காலத்தில் அசிட்டமினோஃபென் பயன்படுத்துவதில் எச்சரிக்கையாக இருக்குமாறு மருத்துவர்களுக்குக் கடிதம் எழுதியது. அதே நேரத்தில், கர்ப்ப காலத்தில் காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க அங்கீகரிக்கப்பட்ட ஒரே மருந்து இதுதான் என்றும் குறிப்பிட்டது. தனது இணையதளத்தில், இந்த மருந்துக்கும் நரம்பியல் குறைபாடுகளுக்கும் இடையே "நேரடித் தொடர்பு" இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றும் எஃப்டிஏ கூறுகிறது. பாராசிட்டமால் இன்னும் கர்ப்பிணிகளுக்குக் கிடைக்கும் பாதுகாப்பான வலி நிவாரணியாகவே உள்ளது என்பதை பிரிட்டனின் சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp82zq0v1y4o
  4. ‘EX - DOSTI – XVII’ முத்தரப்பு கடலோர காவல்படை கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது! 21 Jan, 2026 | 11:34 AM இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கடல்சார் பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக, இலங்கை கடலோர காவல்படைத் துறை, இந்திய கடலோர காவல்படை மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையின் பங்கேற்புடன், ஜனவரி 16 முதல் 19 வரை மாலைத்தீவில் நடைபெற்ற ‘EX – DOSTI - XVII’ முத்தரப்பு கடலோர காவல்படை கடற்படைப் பயிற்சி வெற்றிகரமாக நிறைவடைந்தது. இந்தியா, மாலைத்தீவு மற்றும் இலங்கை கடலோர காவல்படை உறுப்பினர்களிடையே ஒத்துழைப்பை வளர்த்து நட்பை மேலும் வலுப்படுத்துதல், பரஸ்பர செயல்பாட்டு திறன்களை மேம்படுத்துதல் மற்றும் இயங்குநிலையை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டு, ‘EX – DOSTI – XVII ’ இந்த முத்தரப்பு கடற்படைப் பயிற்சி ஜனவரி 16 முதல் 19 வரை மாலைத்தீவின் மாலேவில் மற்றும் மாலைத்தீவின் கடற்கரையை மையமாகக் கொணடு நடைபெற்றதுடன், இலங்கை கடற்படை கப்பல் சுரனிமல, இலங்கை கடலோர காவல்படைத் துறையின் குழுவுடன் இணைந்து இந்தப் பயிற்சியில் பங்கேற்றது. மேலும், இந்திய கடலோர காவல்படைத் துறையை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய கடலோர காவல்படை கப்பல்களான ‘Varaha’, ‘Atulya’ மற்றும் மாலைத்தீவு தேசிய பாதுகாப்புப் படையை பிரதிநிதித்துவப்படுத்தும் மாலைத்தீவு கடலோர காவல்படை கப்பல்களான ‘Huravee’ மற்றும் ‘Ghazee’ ஆகியவை இந்தப் பயிற்சியில் பங்கேற்றதுடன், இந்தப் பயிற்சியின் துறைமுக கட்டம் மாலேயில் உள்ள வணிகத் துறைமுக வளாகத்திலும், ஃபனாதூ (Funadhoo) தீவைச் சுற்றியுள்ள கடல் மற்றும் நிலப் பகுதிகளிலும் நடைபெற்று. இந்தப் பயிற்சியின் போது, பங்கேற்பாளர்கள் எண்ணெய் கசிவு மேலாண்மையில் ஈடுபட்டு, கப்பல் ரோந்துப் பணிகளில் பங்கேற்று, ஏறுதல், ஆய்வு மற்றும் பறிமுதல் நடைமுறைகளின் தத்துவார்த்த அம்சங்களைப் பற்றி விவாதித்தனர், மேலும் கடல்சார் பாதுகாப்பு நடைமுறைகள் மற்றும் தகவல் தொடர்பு உபகரணங்களை சோதித்தனர். அதன்படி, இந்த முத்தரப்பு கடற்படைப் பயிற்சியின் போது, காயமடைந்தவர்களை சிகிச்சைக்காக வெளியேற்றுதல் (Medical Evacuation), படகுகளுக்கான அணுகல், தேடுதல் மற்றும் பறிமுதல் நடைமுறைகள் மற்றும் கடற்கொள்ளை எதிர்ப்பு பயிற்சிகள் (Visit Board Search & Seizure & Piracy), தேடல் மற்றும் மீட்பு பயிற்சிகள் (Search and Rescue Drill) மற்றும் போர்க்கப்பல்களுக்கு இடையே வணக்கம் செலுத்துதல் உட்பட (Steam Past) பயிற்சிகள் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டன. இந்தப் பயிற்சியில் இலங்கை கடலோரக் காவல்படையின் இயக்குநர் ஜெனரல் ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப், இலங்கை கடலோரக் காவல்படையைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். ரியர் அட்மிரல் ரொஹான் ஜோசப் மற்றும் சுரனிமில கப்பலின் கட்டளை அதிகாரி கெப்டன் சேனக வாஹல ஆகியோரும் பயிற்சியுடன் இணைந்து நடைபெற்ற இருதரப்பு சந்திப்பு மற்றும் கலந்துரையாடல்களில் பங்கேற்றனர். மேலும், பிராந்திய கடல்சார் தரப்பினரின் பங்கேற்புடன் இதுபோன்ற பயிற்சிகளில் பங்கேற்பதன் மூலம் மேம்பட்ட ஒத்துழைப்பு மற்றும் புதிய அறிவு மற்றும் அனுபவங்களைப் பரிமாறிக்கொள்வதன் மூலம், இலங்கை கடற்படை மற்றும் இலங்கை கடலோர காவல்படை ஆகியவை எதிர்காலத்தில் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் பொதுவான கடல்சார் சவால்களுக்கு கூட்டாக பதிலளிக்கவும் தீர்வுகளைக் கண்டறியவும் முடியும். https://www.virakesari.lk/article/236581
  5. நுவரெலியாவில் கடும் குளிர் : 7.4°C ஆகப் பதிவு Published By: Digital Desk 3 21 Jan, 2026 | 11:15 AM நாட்டில் நிலவி வரும் வரட்சியுடனான காலநிலையால் பல பகுதிகளில் வெப்பநிலைக் கணிசமாகக் குறைந்துள்ளது. நாட்டில் இன்று புதன்கிழமை (21) பதிவான மிகக்குறைந்த வெப்பநிலையாக 7.4°C நுவரெலியா வளிமண்டலவியல் திணைக்களத்தில் அதிகாலை வேளையில் பதிவு செய்யப்பட்டுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, நாட்டின் ஏனைய பகுதிகளிலும் குளிர்ச்சியான காலநிலை நிலவியது. பிராந்திய ரீதியான வெப்பநிலை விபரங்கள் இன்றைய தினம் அதிகாலை பதிவான குறைந்தபட்ச வெப்பநிலை விபரங்கள் பின்வருமாறு: நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில் அதிகாலை வேளையில் உறைபனி (Ground Frost) ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.மூடுபனி: மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, அம்பாறை மாவட்டங்களிலும் அதிகாலையில் மூடுபனி நிலவக்கூடும். தற்போது நிலவும் வரட்சியுடனான காலநிலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜனவரி 23) முதல் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வளிமண்டலவியல் திணைக்களத்தின் பிராந்திய நிலையங்களால் சேகரிக்கப்பட்ட இந்தத் தரவுகள், நாட்டின் தற்போதைய வெப்பநிலை விநியோக வரைபடத்தில் தெளிவாகக் காட்டப்பட்டுள்ளன. https://www.virakesari.lk/article/236580
  6. வடக்கு கடலில் 7 இந்திய மீனவர்கள் கைது; 2 படகுகள் பறிமுதல் Jan 21, 2026 - 01:36 PM சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இரண்டு இந்திய மீன்பிடிப் படகுகளுடன் 7 இந்திய மீனவர்கள் வடக்கு கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் - கோவிலன் பகுதிக்கு அப்பால் உள்ள இலங்கை கடல் எல்லைக்குள் மேற்கொள்ளப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை தெரிவித்துள்ளது. நேற்று (20) இரவு வேளையில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம், மயிலிட்டி மீன்பிடி பரிசோதகர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்படவுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmknqo916047xo29ny98j2hez
  7. டிப்பர் விபத்தால் கிளிநொச்சியில் பதற்றம் Jan 21, 2026 - 07:03 PM தமது மூத்த சகோதரர் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கக் காரணமான அதே டிப்பர் வாகனத்தில், இளைய சகோதரரும் விபத்துக்குள்ளான சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை வழங்கிய நபர் என சந்தேகிக்கப்படும் நபர், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டிப்பர் வாகனத்தால் மோதி கடந்த நவம்பர் மாதம் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. பொலிஸ் பொறுப்பிலிருந்த அந்த டிப்பர் வாகனம் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு வாகனத்தின் உதவியுடன் அந்த டிப்பர் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, உயிரிழந்த நபரின் இளைய சகோதரர் அதே வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். எவ்வாறாயினும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. எனினும், இந்த விபத்தானது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்று என பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட வேண்டும் என்றும், விபத்துக்கு நீதிக் கோரியும் பிரதேச மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டமையினால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. https://adaderanatamil.lk/news/cmko2cenw048ao29ndnhqypk9
  8. உடல் எடையைக் குறைக்க வெண்காரம் சாப்பிட்ட மாணவி மரணம் – நிபுணர்கள் சொல்வது என்ன? கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உடல் எடையைக் குறைப்பதற்காக, யூட்யூப் சேனலில் கூறிய தகவலை வைத்து, நாட்டு மருந்துக் கடையில் வெண்காரம் (போராக்ஸ்) வாங்கிச் சாப்பிட்ட மதுரையைச் சேர்ந்த கல்லுாரி மாணவி உயிரிழந்துள்ளார். ஆனால், வெண்காரம் என்பது நச்சுத்தன்மையுடைய பொருள் என்றும், அது நாட்டு மருந்துகளைத் தயாரிப்பதற்கு மிக மிகச் சிறிய அளவில் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். போராக்ஸ் என்று அழைக்கப்படும் சோடியம் போரேட் என்பது, பூச்சிக் கொல்லியைப் போன்ற நச்சுத்தன்மையைக் கொண்ட ஒரு ரசாயனப் பொருள் என்று வேதியியல் பேராசிரியர் விளக்குகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வெண்காரம் என்றழைக்கப்படும் போராக்ஸ் ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர் (சித்தரிப்புப் படம்) இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவ சிகிச்சை சார்ந்து இத்தகைய தவறான பரிந்துரைகளைத் தெரிவிக்கும் யூட்யூப் சேனல்களை அரசு தடுக்க வேண்டுமென்று அலோபதி மற்றும் சித்த மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். மதுரை இளம்பெண் சாப்பிட்டதாகச் சொல்லப்படும் வெண்காரம், ஆங்கிலத்தில் போராக்ஸ் (Borax) என்று அழைக்கப்படுகிறது. இதன் தன்மை உண்மையில் எத்தகையது? இதை உட்கொள்வதால் உடலுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்? இதுகுறித்துத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் பல்வேறு நிபுணர்களிடம் பேசியது. 'யூட்யூப் பார்த்து வாங்கிச் சாப்பிட்ட இளம்பெண்' மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கலையரசி, ஒரு தனியார் கல்லுாரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். 'உடல் சற்று பருமனாக இருந்த கலையரசி, யூட்யூப் சேனல் ஒன்றில், உடல் எடையைக் குறைக்க வெண்காரம் உதவுமென்று கூறியதை அடிப்படையாகக் கொண்டு, நாட்டு மருந்துக் கடையில் அதை வாங்கிச் சாப்பிட்டுள்ளார்' என காவல்துறை தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,போராக்ஸ் எனப்படும் உப்பில், போரேட் மற்றும் போரிக் அமிலம் கலந்து இருப்பதாகக் கூறுகிறார் குடலியல் மருத்துவ நிபுணர் வி.ஜி. மோகன் பிரசாத் (சித்தரிப்புப் படம்) அதைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் அதிகளவில் வாந்தி ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இரவில் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்படவே, அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக செல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காவல்துறை விசாரணையில், அந்தப் பெண் நாட்டு மருந்துக் கடையில் வெண்காரம் வாங்கிச் சாப்பிட்டது தெரிய வந்துள்ளது. கலையரசி ஒரு யூட்யூப் சேனலில் இருந்த வீடியோவை பார்த்து வெண்காரம் வாங்கிச் சாப்பிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தனது மகள் யூட்யூப் சேனலை பார்த்து, சுயமாக நாட்டு மருந்து வாங்கி வந்து சாப்பிட்டபோதே, தான் அதைத் தடுத்ததாக கலையரசியின் தந்தை வேல்முருகன் ஊடகங்களில் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் வெண்காரம் என்பது என்ன? எளிமையாகச் சொல்வதெனில், அது நமது கேரம் போர்டில் பயன்படுத்தும் பவுடர்தான் என்கிறார் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியர் செல்வராஜ். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இது மிகவும் மெல்லிய தன்மையைக் கொண்ட உப்பாகும். பொதுவாக இதை முகத்திற்குப் பூசும் பவுடர்களில் சிறிய அளவில் சேர்ப்பார்கள்'' என்று தெரிவித்த அவர், "'துத்தநாகத்தைக்கூட நமது மருந்துகளில் சிறிய அளவில் கலக்கிறார்கள். ஆனால், அந்த துத்தநாகத்தை நேரடியாகச் சாப்பிட்டால் அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துமோ அதைத்தான் வெண்காரமும் ஏற்படுத்தும்" எனவும் எச்சரித்தார். அவரது கூற்றுப்படி, சோடியம் போரேட் (sodium borate) என்ற ரசாயனம்தான் இந்த பவுடர், பேச்சுவழக்கில் அதை போராக்ஸ் என்பார்கள். ஆனால் "இது உணவாக உட்கொள்வதற்கான பொருளே இல்லை.'' ''சுத்திகரிப்பு செய்வதற்கான மூலப்பொருளாக மட்டுமே இதைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதே தவிர, நேரடியாக உணவாகப் பயன்படுத்தும் அளவுக்கு உகந்த பொருளில்லை. சுருங்கக் கூறுவதெனில், அதுவும் பூச்சிக்கொல்லியை போன்றதொரு ரசாயனம்தான்'' என்றார் பேராசிரியர் செல்வராஜ். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் சித்த மருத்துவத்தில் வெண்காரம் பயன்படுத்தப்படுகிறதா? போராக்ஸ் பவுடரை சித்த மருந்து தயாரிக்கவும் பயன்படுத்துவார்கள் என்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன். அதுகுறித்து பிபிசி தமிழிடம் விளக்கியபோது, "வாய்ப்புண்ணுக்கு வெளிப்புறமாகப் போடக்கூடிய மருந்தாகவும் அதை பயன்படுத்துவார்கள்" என்று தெரிவித்த அவர், தனக்குத் தெரிந்த சித்த மருத்துவத்தில் எடையைக் குறைப்பதற்கு அதைப் பயன்படுத்துவதில்லை என்றும் கூறினார். மாத்திரைகளால் உடல் எடையைக் குறைக்க முடியாது என வலியுறுத்தும் கு.சிவராமன் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவையே உடல் எடையைக் குறைப்பதற்கான வழிமுறை என்கிறார். வெண்காரம் சித்த மருத்துவத்தில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்துப் பேசிய சித்த மருத்துவர் வீரபாபு, "வெண்காரம் சில சித்த மருந்துகளில் மிகச் சிறிய அளவு கலக்கப்படுமே தவிர, நேரடியாக மருந்தாகப் பரிந்துரை செய்யப்படுவதில்லை. அதையும் முறையாகச் சுத்திகரிக்காமல் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது" என்று எச்சரித்தார். வெண்காரம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நஞ்சாகவும் இருப்பதாக, சித்த மருத்துவர் வீரபாபு கூறுகிறார். அதுமட்டுமின்றி, ''பொதுவாக வாய்க்குள், பற்களில் இருக்கும் தொற்றுகளுக்கு, வாய்ப்புண்ணுக்கு இவற்றைச் சிறு அளவில் பரிந்துரைப்பது உண்டு. ஆனால் வெண்காரம் எந்த வகையிலும் உடல் எடையைக் குறைப்பதற்கான மருந்து கிடையாது'' என்றும் சித்த மருத்துவர் வீரபாபு தெரிவித்தார். படக்குறிப்பு,வி.ஜி. மோகன் பிரசாத் பாதிப்புகள் என்ன? போராக்ஸை மிகச் சிறிய அளவில் எடுத்துக் கொள்வதால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் நேராது என கூறுகிறார் குடலியல் மற்றும் லேப்ராஸ்கோபிக் மருத்துவ நிபுணர் வி.ஜி. மோகன் பிரசாத். வயிறு மற்றும் செரிமான மண்டல மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் வி.ஜி. மோகன் பிரசாத், இந்தியன் சொசைட்டி ஆஃப் கேஸ்ட்ரோ என்ட்ராலஜி அமைப்பின் தலைவராக உள்ளார். ''சுத்திகரிக்கப்பட்ட போராக்ஸ் பவுடரை மிகவும் நுண்ணிய அளவில் எடுத்திருந்தால் பிரச்னையில்லை. ஆனால் எந்த வயதினராக இருந்தாலும் அதை அதிகமாக உட்கொண்டால் சிறிது நேரத்தில் உடலின் உள்ளுறுப்புகளில் நச்சுத்தன்மை பரவி, அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். சிலருக்கு வலிப்பும் ஏற்படலாம். நேரமாகிவிட்டால் அதைச் சாப்பிட்டவரைக் காப்பாற்றுவது சிரமம்'' என்றார். ஒருவேளை யாரேனும் தவறுதலாக வெண்காரத்தைச் சாப்பிட்டாலும்கூட "ஒரு மணிநேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தால், டியூப் போட்டு நஞ்சை வெளியே எடுத்து விடுவதன் மூலம் காப்பாற்ற முடியும்" என்கிறார் குடலியல் நிபுணர் வி.ஜி. மோகன். அதேவேளையில், தாமதம் ஆகும்போது ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விவரித்த அவர், "போராக்ஸின் நச்சுத்தன்மை காரணமாக உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும். சிறிது நேரத்தில் சிறுநீரகம் செயலிழந்துவிடும், ரத்தப்போக்கு ஏற்படும். உரிய நேரத்தில் சிகிச்சைக்கு செல்லும்பட்சத்தில் நஞ்சை வெளியேற்ற முடியும்" என்று விவரித்தார். சமீபகாலமாக யூட்யூப் சேனல்களை பார்த்து சுயமாக மருந்து எடுத்துக் கொள்வதும், மருத்துவ சிகிச்சைகளைச் செய்துகொள்வதும் அதிகரித்து வருவதாக அலோபதி மற்றும் சித்த மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுபற்றிப் பேசிய சித்த மருத்துவர் வீரபாபு, ''முறையான சித்த வைத்தியம் படிக்காமல், எவ்வித ஆராய்ச்சி அனுபவமும் இல்லாமல் யூட்யூப் சேனல்களில் இயற்கை வைத்தியர் என்ற பெயரில் எதையெல்லாமோ மருந்தாக, உணவாகப் பரிந்துரைக்கிறார்கள். அரசு இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் இத்தகைய பதிவுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clynk91q9qlo
  9. ஈராக்கை விட்டு முழுமையாக வெளியேறியது அமெரிக்க படை! ; சதாம் ஹுசைன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக சென்ற படைகள் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற்றம்! 20 Jan, 2026 | 12:31 PM ஈராக் இராணுவ தளங்களிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதாகவும் இந்த வெளியேற்றம் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் (Ain al-Assad) விமானப்படைத் தளத்தில் இருந்த அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேறியுள்ளதை ஈராக் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இனி, அமெரிக்காவுடனான உறவானது நேரடி இராணுவ தலையீடாக இல்லாமல், இரு தரப்பு பாதுகாப்பு உறவாக மட்டுமே இருக்கும் என ஈராக் மேலும் அறிவித்துள்ளது. கடந்த 2003இல் சதாம் ஹுசைன் ஆட்சியை வீழ்த்துவதற்காக ஈராக்கை நோக்கி அமெரிக்கா படையெடுத்தது. அப்போது அமெரிக்க படைகள் முகாமிட்டிருந்தது அயின் அல் அசாத் விமானப்படைத் தளத்திலாகும். அங்கு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க படையினர் இருந்துவந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது ஈராக்கிலிருந்து வெளியேறியுள்ள அமெரிகக படைகள் உபகரணங்களையும் ஈராக் படைத்தளத்திலிருந்து அகற்றிவிட்டதாக பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/236512
  10. மீனவர்களுக்கு உயர் ஓய்வூதியப் பலன்கள்: புதிய திட்டம் அறிமுகம் Jan 21, 2026 - 12:37 PM கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும், விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையும் இணைந்து மீனவர்களுக்கான உயர் நன்மைகளைத் தரும் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளன. மீனவர்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப, அவர்களின் விருப்பத்தின் பேரில் ஓய்வூதியத் திட்டங்களைத் தெரிவு செய்ய முடிவது இதன் விசேட அம்சமாகும். இதற்கமைய, புதிய கடற்றொழில் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 60 வயதுக்குப் பின்னர் மாதாந்தம் ரூ. 5,000, ரூ. 10,000, ரூ. 15,000, ரூ. 20,000, ரூ. 25,000 அல்லது அதற்கும் அதிகமான தொகையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மீனவர்கள் தாங்கள் விரும்பிய திட்டத்திற்குப் பங்களிக்க முடியும். இந்தத் திட்டத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில், 60 வயதுக்குப் பின்னர் வரும் ஒவ்வொரு வயது எல்லைகளிலும் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படுவதாகும். உதாரணமாக, மாதாந்தம் ரூ. 1,000 ஓய்வூதியத்தைப் பெறும் திட்டத்திற்கு ஒருவர் பங்களிப்புச் செய்திருந்தால், அவருக்கு 64 - 70 வயது வரை ரூ. 1,250 ஓய்வூதியமும், 71 - 77 வயது வரை ரூ. 2,000 ஓய்வூதியமும், 78 வயதுக்குப் பின்னர் ரூ. 5,000 ஓய்வூதியமும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதன் மூலம் ஆயுள் காப்புறுதி நன்மைகள் கிடைத்தல், ஓய்வூதியம் பெறுபவர் உயிரிழந்தால் அவரது துணைவருக்கு (கணவன்/மனைவி) ஓய்வூதியம் உரித்தாதல் மற்றும் கடற்றொழில் சார்ந்த ஏனைய தொழில்களில் ஈடுபடுபவர்களும் இத்திட்டத்தில் இணைய முடிவது போன்றவை இதன் மேலதிக விசேட நன்மைகளாகும். https://adaderanatamil.lk/news/cmknokd44047to29n13m3udf1
  11. "வணக்க தலங்களில் மோதல்": பௌத்த விகாரைகள், தமிழர்கள் பற்றி இலங்கை ஜனாதிபதி கூறியது என்ன? பட மூலாதாரம்,PATHMANATHAN SARUJAN படக்குறிப்பு,தையிட்டி பௌத்த விகாரைக்காக காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி நடந்த போராட்டம் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 20 ஜனவரி 2026 இலங்கையின் பௌத்த விகாரைகள் முன்பாக நடைபெறும் போராட்டங்கள் மற்றும் இனவாதம் ஆகியவற்றைக் குறிப்பிடும் பொருளில் பேசியுள்ளார், அந்நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க. ஆனால் இவரது கருத்து தெளிவற்றதாக இருப்பதாக தமிழர்களின் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்காக போராட்டம் நடத்துவோர் கூறுகின்றனர். மற்ற விகாரைகளைக் கடந்து யாழ்ப்பாணத்திலுள்ள பௌத்த விகாரைகளுக்கு மக்கள் செல்வது, "வழிபாடுகளை மேற்கொள்வதற்காக அல்ல" எனவும், மாறாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடு எனவும் நாட்டின் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். ''அங்காங்கே இனவாத செயற்பாடுகள் சிறு சிறு அளவில் காணப்படுவதை நான் அறிவேன். வணக்க தலத்தை மையமாகக் கொண்டு மோதல்கள் இடம்பெறுகின்றன. '' என்று ஜனாதிபதி பேசியுள்ளார். அத்தோடு ''ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் விகாரையை சூழ்ந்து இருக்கின்றார்கள். அது காணிக்காக அல்ல. இனவாதத்திற்காகவே சூழ்கின்றார்கள். மீண்டும் இனவாதத்தை தலைதூக்க முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இனவாத செயற்பாடுகள் தலைதூக்குவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.'' என்றும் திஸாநாயக்க குறிப்பிடுகின்றார். பௌத்த விகாரைகளை ஸ்தாபிப்பதற்கு எதிராக போராட்டங்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் பௌத்த விகாரைகளை ஸ்தாபிப்பதற்கு எதிராக அந்த பகுதி மக்கள் பல வருட காலமாக எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பௌத்தர்களின் புனித தினமாக அனுஷ்டிக்கப்படும் பௌர்ணமி தினங்களில் யாழ்ப்பாணம் தையிட்டி பௌத்த விகாரையில் விசேட வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் தமிழர்கள் தமது காணி உரிமையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி தையிட்டி விகாரை வளாகத்தில் போராட்டங்களை முன்னெடுத்து வருவதை கடந்த சில வருடங்களாகவே காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த விகாரை அமைந்துள்ள காணி பொதுமக்களுக்கு சொந்தமானது என போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், மாறி மாறி வந்த அரசாங்கங்கள் இதுவரை இறுதியாக தீர்மானத்தை எடுக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் மாவட்ட ரீதியிலும், மத்திய அரசாங்கத்தின் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், அது தொடர்பில் இறுதி தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை. படக்குறிப்பு,குருந்தூர்மலை முழுமையாக பௌத்தர்களுக்கு சொந்தமான இடம் என கோரி கடந்த காலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பேசுகையில் முன்வைத்த கருத்துக்கள் தமது பிரச்னையை அடிப்படையாகக் கொண்டே முன்வைத்தார் என யாழ்ப்பாணம் - தையிட்டி காணி பிரச்னையை எதிர்நோக்கியுள்ள மக்கள் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றனர். ஜனாதிபதி தையிட்டி விகாரை பிரச்னையை அடிப்படையாகக் கொண்டே கருத்து வெளியிட்ட போதிலும், அதில் போதிய தெளிவின்மை காணப்படுகின்றது என தையிட்டி காணி பிரச்னையை முன்னிறுத்தி வரும் பத்மநாதன் சாருஜன் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். பௌர்ணமி தினங்களில் தாமே போராட்டங்களை நடத்தி வருவதாகவும், அதனை அடிப்படையாக் கொண்டே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். ''குறிப்பாக அவர் நேற்றைய தினம் பேசிய விடயம் தையிட்டியை பற்றி தான். ஏனென்றால், போயாவிற்கு (பௌர்ணமி தினம்) போராட்டம் செய்யும் இடம் தையிட்டி தான். போயாவிற்கு ஆர்ப்பாட்டம் செய்வதை பிழையாக நினைக்கக்கூடாது. போயாவிற்கு அங்கு வரும் மக்களை தெளிவுப்படுத்தி அனுப்புவதற்காக தான் போயா தினத்தில் போராட்டங்களை செய்கின்றோம். நாங்கள் குழப்பத்திற்கு போகவில்லை. எங்களுடைய உரிமைகளை எங்களுடைய ஆதங்கங்களை வெளியில் கொண்டு வருவதற்காகவே அந்த போராட்டங்கள் தொடங்கப்பட்டது,' என அவர் குறிப்பிடுகின்றார். ''ஜனாதிபதி, தென் பகுதியிலிருந்து பல பௌத்த ஆலயங்களைத் தாண்டி இங்கு வந்து வழிபடுவது இனவாதம் என்று சொல்கின்றாரா?. போயா தினங்களில்; போராடுவது பிழை என்று சொல்கின்றாரா? என்று எங்களுக்கு தெரியவில்லை." என்கிறார். "'போராடுபவர்களின் காணிகள் அந்த இடத்தில் இருக்கின்றதா என்று புலனாய்வு துறையிடம் சொல்லி விசாரணை செய்ய வேண்டும்' என்றும் ஜனாதிபதி கூறியிருக்கும் நிலையில், இது மக்களுடைய காணி என்பதை எங்களுடைய அரச அலுவலகங்களில் உறுதிப்படுத்தியுள்ளோம்." என பத்மநாதன் குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு,குருந்தூர் மலை இந்த காணி பிரச்னை நிலவும் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரின் காணி காணப்படுகின்ற போதிலும், அதையும் தாண்டி மக்களின் காணிகளை ஆக்கிரமித்தே இந்த விகாரை விஸ்தரிக்கப்பட்டு வருவதாக பத்மநாதன் கூறுகின்றார். ''அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளோம். நீதி அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு ஆகியன தலையீடு செய்திருந்தன. அவர்களின் குழுக்கள் இது பொது மக்களின் காணி என உறுதிப்படுத்தியிருந்தன.'' என அவர் தெரிவிக்கின்றார். இந்த காணி பிரச்னைக்கு இறுதி தீர்மானம் கிடைக்கப் பெறும் வரை பௌர்ணமி தினங்களில் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என காணி உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர். பட மூலாதாரம்,KOGULAN படக்குறிப்பு,வெடுக்குநாறி மலையில் சைவ அடையாளங்கள் காணப்பட்ட பகுதியில் பௌத்த சின்னங்கள் நிறுவ முயற்சி மேற்கொள்ளப்பட்டது சமூக செயற்பாட்டார்களின் பார்வை? வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்புக்களில் ஈடுபடுவோரின் பின்னணியில் அரசாங்கத்தின் அனுமதி இருக்கின்றது என சமூக செயற்பாட்டாளர் மாணிக்கம் ஜெகன் தெரிவிக்கின்றார். ''ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட விகாராதிபதியை தான் முன்வரிசையில் அமர்த்தி அழகு பார்த்தீர்கள். தமது இடம் பறி போகின்றது. இது நாங்கள் வாழ்ந்த இடம் என்று போராடிக் கொண்டிருக்கின்ற எந்தவொரு குடும்பத்தையாவது ஜனாதிபதி இம்முறை சந்தித்தாரா?" என மாணிக்கம் ஜெகன் கேள்வி எழுப்புகிறார். "நீங்கள் ஆக்கிரமிக்கும் ஆட்கள், நாங்கள் பாதிக்கப்படும் ஆட்கள். கடந்த கால ஆட்சியாளர்கள் செய்த அதேவேலையை தான் இந்த அரசாங்கமும் செய்து வருகின்றது.'' எனவும் ஜெகன் கூறகிறார். ஜனாதிபதியின் பேச்சை பத்திரிகையாளர் எவ்வாறு பார்க்கின்றார்? வடக்கு, கிழக்கில் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதே தவிர, பௌத்தத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன் தெரிவிக்கின்றார். ''தமிழ் இந்துக்கள் ஏன் பௌத்த அடையாளங்களை எதிர்க்கின்றார்கள் என்ற ஒரு கேள்வி வருகின்றது, போராட்டங்கள் ஆக்கிரமிப்பின் அடையாளமாக செய்வது தான். யாழ்ப்பாணத்தில் நாகவிகாரை இருக்கின்றது, நாகவிகாரை புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது வேறு கோவிலாக கட்டினார்களா?'' என வித்தியாதரன் கேள்வி எழுப்புகிறார். ''இது பௌத்தத்திற்கு எதிராக எதிர்ப்பு அல்ல. ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்ப்பு. பௌத்தத்தை எதிர்க்க போவதில்லை. ஆனால் எங்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு குறியீடாக தான் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன,'' என அவர் கூறுகின்றார். பட மூலாதாரம்,VITHIYADARAN படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன் தமிழர்கள் இனி ஆயுதம் ஏந்த மாட்டார்கள் என்பதை அநுர குமார திஸாநாயக்க நன்கறிந்தமையினாலேயே யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டார் என தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன், அவ்வாறு பாதுகாப்பு பிரச்னை இல்லை என உறுதியாக தெரிந்த அவருக்கு ஏன் தமிழர்களின் காணிகளை விடுக்கவிக்க முடியாது எனவும் கேள்வி எழுப்புகின்றார். ''வடக்கில் அப்படி நடக்காது என்று அவருக்கு தெரியும். தமிழர் மக்கள் இன்னுமொரு 100 வருடங்களுக்கு ஆயுதம் ஏந்த போவதில்லை என்பதை நூற்றுக்கு இருநூறு விகிதம் அவருக்கு தெரியும். அதை தெரிந்தவர் காணிகளை விடுவிக்க வேண்டும். அதிகாரத்தை வழங்க வேண்டும். சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும். அதையெல்லாம் செய்யவில்லை,'' என அவர் வினவுகிறார். பட மூலாதாரம்,PATHMANATHAN SARUJAN படக்குறிப்பு,யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை முன்பு நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆனால் விகாரை பிரச்னை யாழ்ப்பாணத்துடன் முடிந்துவிடவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் பெறுமதியாக இடமாக குருந்தூர்மலை காணப்படுகின்றது, இந்த குருந்தூர்மலையில் பௌத்த விகாரை மற்றும் சிவன் ஆலயம் இருந்தமைக்கான அடையாளங்கள் காணப்படுகின்ற போதிலும், இது முழுமையாக பௌத்தர்களுக்கு சொந்தமான இடம் என கோரி கடந்த காலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த பிரச்னையும் இறுதி தீர்மானம் இன்றி இன்றும் சர்ச்சையை தோற்றுவிக்கும் விடயமாக காணப்படுகின்றது. வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறி மலையில் தொல்லியல் பெறுமதியாக சைவ அடையாளங்கள் காணப்பட்ட இடத்தில், புத்தர் சிலையொன்றை பிரதிஷ்டை செய்ய பௌத்த தேரர்கள் தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கு எதிராகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதேவேளை, கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான பிரச்னைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj9rzw210ndo
  12. ரி20 உலகக் கிண்ண நெருக்கடி: பங்களாதேஷுக்கு ஆதரவாக ஐசிசிக்கு பாகிஸ்தான் கடிதம் 21 Jan, 2026 | 05:44 PM (நெவில் அன்தனி) ரி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷின் பங்கேற்பு குறித்து இன்றுவரை காலக்கெடு விதித்திருந்த ஐசிசி, அதன் நிலைப்பாட்டை இன்று வெளியிடத் தயாராகி வருகிறது. இந் நிலையில், இந்தியாவில் விளையாடுவதில்லை என்ற பங்களாதேஷின் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து ஐசிசிக்கு கடிதம் ஒன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அனுப்பியுள்ளது. இந்தக் கடிதத்தின் நகல்களை ஐசிசி பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கும் பாகிஸ்தான் அனுப்பிவைத்துள்ளது. இந்தியாவில் பாதுகாப்பு கரிசனைகள் காரணமாக பங்களாதேஷின் உலகக் கிண்ணப் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்திருந்தது. இந் நிலையில், அதன் கோரிக்கை தொடர்ப்பாக தீர்மானம் ஒன்றை எடுக்க இன்றைய தினம் பணிப்பாளர் சபை கூட்டத்திற்கு ஐசிசி அழைப்பு விடுத்திருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அனுப்பிவைத்துள்ள இந்தக் கடிதம் பலரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி இருக்கக்கூடும். ஆனால், ஐசிசியின் தீர்மானத்திற்கு அந்தக் கடிதம் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தெரியவருகிறது. இந்தியாவுடன் ரி20 உலகக் கிண்ண இணை ஏற்பாட்டாளரான இலங்கையில் பங்களாதேஷின் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக போட்டி அட்டவணையை மாற்ற முடியாது என்பதில் ஐசிசி உறுதியாக இருக்கிறது. இவ்விடயத்தில் உறுதியாக இருக்கும் ஐசிசி, தனது நிலைப்பாட்டை பங்களாதேஷுக்கு கடந்த வார கலந்துரையாடலின்போது அறிவித்திருந்தது. https://www.virakesari.lk/article/236629
  13. உண்மையில் 10 வருடங்களுக்கு முன்வரை ஓரளவு நியாயமான சம்பளம் தான் வாங்கினார்கள். இந்த அரச ஒப்பந்த விலைக்கணிப்புகளை(Estimate) எப்போது அறிந்து கொண்டார்களோ அன்றிலிருந்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சம்பளம் கேட்கிறார்கள்.
  14. அண்ணை, இரண்டு தொழிநுட்ப உத்தியோகத்தர்களிடம் பெற்ற தகவல்களின்படி புதிய கொமட் பொருத்த 5500 - 7500 ரூபா வரை வாங்குவதாக கூறினார்கள். சிலர் புதிய கொமட் பொருத்த 12000 ரூபா வரை வாங்குவதாக தெரிவித்தனர். சீலனுக்கு நன்றாக விளங்கப்படுத்தினேன், அவரும் புரிந்து கொண்டதாகக் கூறினார். லாப நோக்கு மட்டும் இருந்தால் பலருடைய அடிப்படைச் சுகாதார வசதி செயற்திட்டத்தைப் பாதிக்கும் என்று சொல்லி இருக்கிறேன்.
  15. குடிநீரில் மலக்கழிவு !! நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் January 18, 2026 1 Minute அன்று ஞாயிற்று கிழமை அதிகாலை 5 மணிக்கே தொலைபேசி பலமுறை அலறி நித்திரையினை குலைத்தது. மறுமுனையில் அழைத்த நண்பன் என்னிடம் நீண்ட விளக்கம் ஒன்றினை எதிர்பார்த்தான். அதாவது அவன் தனது கிணற்று நீரினை தரக்கட்டுப்பாடு பரிசோதனை ஒன்றிற்கு உட்படுத்தி இருந்தான். அதன் முடிவில் அவனது கிணற்று நீரில் E. coli என அழைக்கப்படும் Escherichia coli பக்டீரியா இருந்தமையே ஆகும். எனது நண்பனின் கேள்வி இவ்வளவு நாளாகவும் இந்த நீரினை அருந்தியதினால் தனக்கும் குடும்பத்தினருக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? மற்றும் ஏன் பாதிப்பு ஏற்படவில்லை? என்பதே ஆகும். நீர் மனித வாழ்விற்கு அடிப்படை தேவையாகும். ஆனால் குடிநீர் மாசுபடும் போது அது உயிருக்கு ஆபத்தான நோய்களை உருவாக்கும். குடிநீரில் Escherichia coli (E. coli) கிருமி கண்டறியப்படுவது, அந்த நீர் மனித அல்லது விலங்கு மலத்தால் மாசடைந்துள்ளது என்பதற்கான முக்கிய சான்றாகக் கருதப்படுகிறது. ஆகவே, E. coli மாசுபாடு ஒரு தனி கிருமி பிரச்சினை அல்ல; அது முழு சுகாதார அமைப்பில் ஏற்பட்ட தோல்வியை வெளிப்படுத்துகிறது. தண்ணீர் E. coli மூலம் மாசடைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. மலக்குழி கசிவு , திறந்த வெளியில் மலம் கழித்தல், கால்நடை கழிவுகள், வெள்ளத்தின் போது கழிவுநீர் குடிநீருடன் கலப்பது, குடிநீர் குழாய்களின் உடைப்பு மற்றும் பாதுகாப்பில்லாத கிணறுகள் ஆகியவை முக்கிய காரணங்களாகும். குறிப்பாக கிராமப்புற பகுதிகள், வெள்ளத்திற்குப் பிந்தைய சூழ்நிலைகள் அதிக ஆபத்தானவையாகும். யாழ் குடாநாட்டில் உள்ள மண்ணின் அமைப்பு மற்றும் பாறைகளின் அமைப்பு காரணமாக மலத்தினால் மாசடைந்த நீர் இலகுவாக கிணற்றினை சென்றடைகின்றது. மேலும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு இதனை அதிகரித்து இருந்தது. முந்திய காலத்தில் கீழ்ப்பக்கம் திறந்த நிலையில் அமைக்கப்பட்ட மலக்குழிகள் இந்த ஆபத்தினை அதிகரித்து ஆனால் தற்பொழுது எல்லா பக்கமும் சீமெந்தினால் சீல் செய்யப்பட்ட குழிகளே அமைக்கப்டுகின்றன. E. coli என்பது இயல்பாக மனித குடலில் வாழும் கிருமியாகும். பெரும்பாலான E. coli இனங்கள் தீங்கற்றவையாக இருந்தாலும், குடிநீரில் அதன் இருப்பு சமீபத்திய மலம் சார்ந்த மாசுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலம் Salmonella, Shigella, Vibrio போன்ற ஆபத்தான கிருமிகளும், வைரஸ்கள் மற்றும் பராசைட்களும் குடிநீரில் இருக்கக்கூடும் என்ற அபாயம் ஏற்படுகிறது. எனவே, குடிநீரில் E. coli இருப்பது பொதுச் சுகாதார அவசர நிலையாகக் கருதப்படுகிறது. நீர் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனையின் பொழுது E. coli இருக்கின்றதா அல்லது இல்லையா என்பதே பரிசோதிக்கப்படுகின்றது. அத்துடன் அதன் எண்ணிக்கையும் பரிசோதிக்கப்படுகின்றது. ஆனால் முக்கியமாக E. coli இல் என்ன இனம் இருக்கின்றது என்பது குறித்து பரிசோதிக்கப்படுவதில்லை. ஏனெனில் E. coli இல் குறித்த சில இனங்களே மனிதருக்கு நோய்களை ஏற்படுத்துகின்றது. அவற்றின் விபரம் வருமாறு வகை நோய் முக்கியத்துவம் ETEC நீர் வயிற்றுப்போக்கு நீரிழப்பு மரணம் EPEC குழந்தைகளில் வயிற்றுப்போக்கு குழந்தை மரணம் EHEC (O157:H7) இரத்த வயிற்றுப்போக்கு, Hemolytic Uremic Syndrome (HUS) திடீர் மரணம் EAEC நீடித்த வயிற்றுப்போக்கு ஊட்டச்சத்து குறைபாடு மாசுபட்ட தண்ணீர் மூலம் உடலுக்குள் நுழையும் E. coli பலவகை நோய்களை ஏற்படுத்தக்கூடும். சில வகை E. coli கிருமிகள் நீர்வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி, கடுமையான நீரிழப்பையும் மினரல் சமநிலையிழப்பையும் உண்டாக்குகின்றன. குழந்தைகளில் இந்த நிலை உயிரிழப்புக்கே வழிவகுக்கலாம். EHEC (O157:H7) போன்ற வகைகள் இரத்த வயிற்றுப்போக்கையும், Hemolytic Uremic Syndrome (HUS) எனப்படும் கடுமையான நிலையும் உருவாக்குகின்றன. இதில் சிறுநீரக செயலிழப்பு, மூளை வீக்கம் ஏற்பட்டு திடீர் மரணம் நிகழலாம். E. coli பக்டீரியாக்களில் பல இனங்கள் மனிதனுக்கு தீங்கு விளைவிக்காதவை அத்துடன் இவை மனிதனின் குடலிலும் இயற்கையான சூழலிலும் இருப்பவை. இதன் காரணமாக மனிதனுக்கு குறித்த நீரினை அருந்தும் பொழுது எவ்விதமான மாற்றமும் தெரிவதில்லை. ஆனால் நீர் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனையில் E. coli பக்டீரியா இருப்பது கண்டிபிடிக்கப்பட்டால் விரைவில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்தும் குறித்த நீரினை அருந்த கூடாது. E. coli மாசுபாட்டைத் தடுப்பது முழுமையாக சாத்தியமானதாகும். குடிநீரை காய்ச்சி அல்லது குளோரினேஷன் செய்து பயன்படுத்துதல், கிணறுகளை பாதுகாப்பாக அமைத்தல், கழிப்பறைகளையும் குடிநீர் ஆதாரங்களையும் போதிய இடைவெளியில் அமைத்தல், வெள்ளத்திற்குப் பின் உடனடி நீர் பரிசோதனை மேற்கொள்ளுதல் மற்றும் பொதுச் சுகாதார கண்காணிப்பை வலுப்படுத்துதல் ஆகியவை முக்கியமான தடுப்பு நடவடிக்கைகளாகும் முந்தைய காலத்தில் நாம் இவ்வாறு கிணற்று நீரினை பரிசோதனைக்கு உட்படுத்தி குடிப்பதில்லை என்ற பழமைவாதிகள் குற்றச்சாட்டுக்கான பதில் முன்பு சனத்தொகை குறைவாக இருந்த காரணத்தினால் கிணறு – மலக்குழி ஆகியவற்றுக்கு இடையே கணிசமான தூரம் இருந்தது ஆனால் தற்போதைய காலத்தில் அவ்வாறு அல்ல என்பதே ஆகும். நன்றி Dr. கனகசபாபதி வாசுதேவா MBBS , Post Graduate Diploma in Legal Medicine (DLM ), Post Graduate Diploma in Toxicology மற்றும் MD (Forensic Medicine) https://tamilforensic.com/about/
  16. அண்ணை, புதிய மலசலகூடத்திற்கு காரைநகரில் ஏற்கனவே 5 பேருக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள், நேற்று மேலும் 3 பேருக்கு அவசரமாக தேவை என்று கேட்டவர்கள். முதலில் ஒன்றைத் செய்து நடைமுறைச் செயற்பாடுகளைப் புரிந்துகொண்டு பின்னர் தொடருவோம் எனக்கூறி இருக்கிறேன். உண்மையில் வீட்டில் இருந்தபடி பொருத்தமானவர்களிடம் வேலைகளை ஒப்படைத்து செய்வித்த நான் ஒரு கருவி மட்டுமே. இந்தப்பணிகளைச் செய்ய தூண்டியது மட்டுமல்லாமல் நிதி உதவி அளித்த நல்லுள்ளங்களுக்குத் தான் மிகப்பெரிய நன்றிகளைத் தெரிவிக்கிறேன். @குமாரசாமி அண்ணை, @வாத்தியார்அண்ணை , @goshan_cheஅண்ணை வட்டு.தெற்கு திரு நா.பரராஜசிங்கம் ஐயாவிற்கு மேலும் ஒரு 50000 ரூபாவை வழங்கட்டுமா? மலசலகூட குழிக்கு கல்லு கட்டவேணும்.(குழிக்குள் தண்ணீர் இருக்குதே என்று கேட்டதற்கு இறைத்து இறைத்துக் கட்டுவதாக கூறினார் T/O) கணேஷா ஹாட்வெயார் கடைக்கு செலுத்தவேண்டி உள்ளது 84850-80000=4850 ரூபாவையும் வழங்குகிறேன். கம்பிகட்டி பிளேற் போட்ட கூலி, கொமட் பூட்டிய கூலி, அசிட் போட்டு சுத்தமாக்கிய கூலி(அசிற் காசும்) கொடுக்கிறேன். 35000 ரூபா கேட்டவர், எல்லாவற்றையும் விபரமாக எழுதி தரச்சொல்லி உள்ளேன். வேலைக்காசு கூட என்று ரT/O தம்பி கூறினார், செய்து தந்த சீலனிடம் கேட்டதற்கு பாவனையில் உள்ள மலசலகூடப்பணிகளை(துர்நாற்றம்) செய்வதற்கு பலரும் வரமாட்டினம் என்று கூறினார். புதிதாக செய்வதற்கு உள்ள சம்பளம் வாங்குவினமாம். காரைநகரில் புதியமலசலகூடம் கட்டுவதற்கான செலவுக்கணிப்பு விபரம் காரைநகரில் புதியமலசலகூடம் கட்டுவதற்கான செலவுக்கணிப்பு விபரம் கிடைத்துள்ளது. அதன்படி 279,408 ரூபா எனக்குறிப்பிட்டுள்ளார். இது முன்னர் வேறொரு T/O கூறியதை விட 80000 ரூபா அதிகமாக உள்ளது. இதனை மாதிரியாக கொண்டு வேறு சிலரிடம் பட்ஜட் எவ்வளவு வரும் என விசாரித்து பின்னர் தொடங்குவோம். பொன்னாலை வேலை செய்த சீலனிடம் கேட்டபோது பொருட்களை வாங்கித்தரட்டாம் சம்பளத்திற்கு(லேபர் கொன்றாக்ற்) செய்து தருகிறேன் என்று சொன்னவர். இன்று காரைநகர் சென்று பார்த்துவிட்டு கணக்கு தருகிறேன் என்று கூறியுள்ளார்.
  17. அண்ணை, வட்டு.தெற்கு வட்டுக்கோட்டை திரு நா.பரராஜசிங்கம் ஐயாவின் மலசலகூடம் அரைவாசி கட்டியபடி இருந்தது, இதனை பூரணப்படுத்தவேண்டும் என கோரிக்கை வைத்தபோது நீங்கள் உட்பட யாழ் - முன்னோடி செயற்றிட்டத்தில் பங்களிப்போர் பலரும் சம்மதித்து தான் அந்தப்பணிக்கு நிதி வழங்க தொடங்கினோம். இரண்டாவது பொன்னாலை திரு ஏரம்பு ஐயாவின் 3 இயலாமை உடைய பிள்ளைகளின் மலசலகூடத்திருத்தத்திற்கு ஏனைய உறவுகள் சம்மதித்துத் தான் அதனைத் தொடங்கி விரைவாக இன்று முடித்துக் கொடுத்துள்ளோம். அவர்களை நிலத்தில் உள்ள மலசல கூடத்தில் வைத்து தான் மலங்கழிக்க வைத்ததாக இன்றையதினம் நேரடியாக சென்றபோது சகோதரி கூறினார். இதனால் எனக்கு இந்தப்பணியை உடனடியாக செய்து கொடுத்தது மிகுந்த மனநிறைவைத் தந்தது. இவர்களுடைய மலசலகூடப் பிளேற் உடைந்துள்ளதால் உடனடியாக தண்ணீர்க் கொள்கலன் வைப்பதற்கு மாற்றுவழி செய்யவேண்டி உள்ளது. அவர்கள் உள்ளே இருக்கையில் ஆபத்தை தேடாமல் இருக்க குறைவாக நீரை அடித்து பாவிக்க சொல்லிவிட்டு வந்தேன். இந்தப்பணியை இத்தோடு முடித்துவிடவா? இல்லை தண்ணீர் கொள்கலன்(500 லீற்றர்) வைப்பதற்கான ஏற்பாட்டை செய்துகொடுப்பமா? உங்கள் பதில் தெரிந்தபின் செய்வோம். குமாரசாமி அண்ணா விரும்புவது போல் புதிய மலசலகூடம் கட்டுவது மட்டும் தான் நல்லது என விரும்பினால் இவர்களுடைய மலசல கூடப்புனரமைப்புக்கான நிதியை புலர் அறக்கட்டளை நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பெற்றுத்தர முயல்வேன், அல்லது வேறு பொருத்தமான அமைப்புகளிடம் கேட்டுப்பெற்றுத் தருவேன். நான் புரிந்து கொள்வது அறவே மலசலகூடம் இல்லாதவர்களின் வாய்ப்பைத்தட்டிப்பறிக்கக் கூடாதல்லவா? அங்கு எஞ்சியுள்ள பொருட்கள் 3 1/2 பைக்கற் சீமந்து 7000 ரூபா பெறுமதியானது, அண்ணளவாக 1 லான்ட் மாஸ்ரர் மண் 12500 ரூபா பெறுமதியானது, அண்ணளவாக 3/4 லான்ட் மாஸ்ரர் சல்லி 5625 ரூபா, 1 1/2 கம்பி 1500 ரூபா. மொத்தமாக மிஞ்சிய பொருட்கள் பெறுமதி அண்ணளவாக 26625 ரூபா.(லான்ட் மாஸ்ரர் கணக்கு என்னுடைய கண் பார்வையின் புரிதல்படி) இன்று நேரடியாகச் சென்று பார்த்து வந்தேன், படங்கள் சில. முதலாவது பற்றுச்சீட்டு: 8 பைக்கற் சீமந்து 16000 ரூபா பெறுமதியானது, 2 லான்ட் மாஸ்ரர் மண் 25000 ரூபா(விலை 1000 ரூபா கூட), 2 லான்ட் மாஸ்ரர் சல்லி 15000 ரூபா, 20 கம்பி 20000 ரூபா, 1 கிலோ கட்டுக்கம்பி 400 ரூபா, பொருட்கள் இறக்கிய கூலி 2000 ரூபா(1000 ரூபா கூட முதலில் கூறியதை விட 4 தடவைகள் இறக்கியது) இரண்டாவது பற்றுச்சீட்டு: 4 1/2 கிலோ பொலித்தீன் 1500 ரூபா மூன்றாவது பற்றுச்சீட்டு: என்ன பொருள் என விளங்கவில்லை 700 ரூபா, 1 1/2 இஞ்ச் பைப் 2 பிற் வென்ரிலேசனுக்கு 2500 ரூபா, 2 பென்ட் 400 ரூபா, 4 சீற் ரெஜிபோம் 1350 ரூபா. மொத்தச் பொருட்கள் செலவு 78400+1500+4950=84850 ரூபா கணேஷா ஹாட்வெயார் கடைக்கு செலுத்தவேண்டி உள்ளது 84850-80000=4850 ரூபா. கம்பிகட்டி பிளேற் போட்ட கூலி, கொமட் பூட்டிய கூலி, அசிட் போட்டு சுத்தமாக்கிய கூலி(அசிற் காசும்) கொடுக்கவேண்டும்.
  18. அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய மறுசீரமைப்பு - அமைச்சரவை எடுத்த முடிவு 20 Jan, 2026 | 07:40 PM அரச பணிகளுக்காக 2016.01.01 திகதியின் பின்னர் இணைத்துக்கொள்ளப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களின் நியமனக் கடிதங்களில் ஓய்வூதிய உரித்து தொடர்பான விதிகளை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அவர்களின் நியமன கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதியம் தொடர்பான ஏற்பாட்டை ‘இந்நியமனம் ஓய்வூதியம் உள்ளதாகும். நீங்கள் விதவை அல்லது தபுதாரர் ஓய்வூதிய முறைக்கு பங்களிப்புத் தொகை செலுத்தப்படல் வேண்டும்’ என்றவாறு திருத்தம் செய்வதற்கும், குறித்த விடயம் தொடர்பான ஆலோசனை சுற்றறிக்கையை வெளியிடுவதற்கும் பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச அலுவலர்களுக்கு மிகவும் பொருத்தமான பங்களிப்பு ஓய்வூதிய முறையை அறிமுகம் செய்வது தொடர்பான 2016 வரவு - செலவு திட்ட முன்மொழிவுக்கமைய 2016.01.01 திகதியின் பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரச அலுவலர்களின் நியமன கடிதங்களில் ‘இந்நியமனம் ஓய்வூதியத்துடன் கூடியதாகும். ஊழியர்களுக்கு உரித்தான ஓய்வூதிய முறை தொடர்பாக அரசால் மேற்கொள்ளப்படும் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு இணங்கியொழுக வேண்டும்’ எனும் ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2016.01.01 திகதியின் பின்னர் அரச சேவைக்கு நியமனம் பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய முறை இதுவரை அமுல்படுத்தப்படவில்லை என்பதுடன், தற்போதுள்ள ஓய்வூதிய முறைக்கான அவர்களது உரித்தை உறுதி செய்து, குறித்த நியமன கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதியம் தொடர்பான நிபந்தனை திருத்தம் செய்வதற்காக 2026 வரவு - செலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236558
  19. அத தெரண கருத்துப்படங்கள்.
  20. தமிழர் உள்பட 18 இந்தியர்களுடன் கப்பலை சிறைபிடித்த இரான் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,கடந்த ஆண்டு டிசம்பரில் இரான் ஒரு கப்பலைக் கைப்பற்றியது. கப்பலில் இருந்த (இடமிருந்து வலமாக) துங்கா ராஜசேகர், தலைமை அதிகாரி அனில் குமார் சிங் மற்றும் மசூத் ஆலம். கட்டுரை தகவல் முகமது சர்தாஜ் ஆலம் பிபிசி ஹிந்திக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில், இரானில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். மறுபுறம் உலக அரங்கில் இரானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அறிகுறிகளை அமெரிக்கா வெளிப்படுத்தியது. இந்நிலையில், இரானில் கடந்த மாதம் இந்தியாவைச் சேர்ந்த 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர், அவர்களில் 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இரானில் நிலவும் தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, சிறையில் உள்ள இந்தியர்களின் குடும்பங்களும் ஒரு குழப்பமான சூழலில் சிக்கியுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி, சட்டவிரோத டீசல் வைத்திருந்ததாகக் கூறி டிப்பா துறைமுகத்திற்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் 'எம்டி வேலியன்ட் ரோர்' (MT Valiant Roar) கப்பலை 18 பணியாளர்களுடன் இரான் அதிகாரிகள் கைப்பற்றினர். கப்பல் குழுவினரில் இந்தியர்கள் பத்து பேரை ஜனவரி 6-ஆம் தேதி இரான் அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த கப்பலில் 16 இந்தியர்கள், ஒரு வங்கதேசத்தவர், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இருந்தனர். இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது என்ன? பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,கப்பலின் கேப்டன் விஜய் குமார். இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இரான் பிரிவில் பணியாற்றும் இந்திய வெளியுறவுத் துறை (IFS) அதிகாரியான எம். ஆனந்த் பிரகாஷ் இந்த விவகாரத்தை பிபிசி ஹிந்தியிடம் உறுதிப்படுத்தியுள்ளார். எம். ஆனந்த் பிரகாஷ் கூறுகையில், "வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே குற்றச்சாட்டுகள் குறித்து இரான் நீதிமன்றமே முடிவு செய்யும். ஆனால் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், பணியாளர்களுக்குத் தூதரக ரீதியிலான அணுகலைப் பெற முயற்சி செய்து வருகிறது," என்றார். "ஜனவரி 10-ஆம் தேதி தூதரக அணுகல் கிடைக்கும் என்று நாங்கள் நம்பினோம், ஆனால் இரானில் நிலவும் குழப்பம் காரணமாக எங்களால் அதைப் பெற முடியவில்லை. நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்," என்றும் கூறினார். டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகமும் ஒரு செய்திக்குறிப்பில் இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளது. டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் மற்றும் 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து இரான் அரசாங்கம் இன்னும் பதில் அளிக்கவில்லை. இதற்கிடையில், 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' நிறுவனத்தின் உரிமையாளர் ஜோகிந்தர் பிரார், கப்பலில் ஆறாயிரம் மெட்ரிக் டன் சட்டவிரோத டீசல் இருந்ததாகக் கூறப்படுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்று கூறினார். பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், "கப்பல் டீசலை ஏற்றிச் செல்லவில்லை, ஆனால் 'மிகக் குறைந்த கந்தக எரிபொருள் எண்ணெயை' (VLSFO) ஏற்றிச் சென்றது. இது, சர்வதேச கடற்பரப்பில் எங்களது பிற கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக இருக்கக்கூடிய ஒரு வசதி. இது வழக்கமான செயல்முறையின் ஒரு பகுதியாகும்," என்றார். "ஆனால் கப்பலின் எரிபொருளை டீசல் என்று தவறாகக் கருதி இரான் எங்கள் குழுவினரை மோசமாக நடத்தியது கண்டிக்கத்தக்கது. இத்தகைய சூழ்நிலையில், எங்களது அனைத்துப் பணியாளர்களையும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வருவதே எங்களது முன்னுரிமை," என்றார் ஜோகிந்தர் பிரார். உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,ஆகாஷ் குப்தா, திவாகர் புத்தி மற்றும் விஷால் குமார் (இடமிருந்து வலமாக) உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கப்பல் கேப்டன் விஜய் குமார் மற்றும் ஆய்லர் (Oiler) ஆகாஷ் குப்தா, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலை அதிகாரி துங்கா ராஜசேகர், டெக் ஃபிட்டர் நந்தகி வெங்கடேஷ் மற்றும் சமையல் பணிகளைச் செய்யும் திவாகர் புத்தி, பஞ்சாப்பைச் சேர்ந்த சீமேன்-1 விஷால் குமார் ஆகியோர் கடந்த 45 நாட்களாகக் கப்பலில் இரான் பாதுகாப்புப் படையினரின் கடுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆறு இந்தியர்களைத் தவிர, வங்கதேசத்தைச் சேர்ந்த தலைமைப் பொறியாளர் முகமது லுக்மான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த மின்-தொழில்நுட்ப அதிகாரி பிரியா மனதுங்க ஆகியோரும் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கப்பலில் உள்ள பணியாளர்களிடமிருந்து பிபிசி ஹிந்திக்கு கிடைத்த தகவலின்படி, எட்டு பணியாளர்களின் நிலையும் மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் 14-க்கு-10 அளவுள்ள உணவு அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அங்கேயே அவர்கள் இரவில் உறங்குகிறார்கள். ஒவ்வொரு நாள் காலையிலும், இந்திய தூதரகமும் கப்பல் நிறுவனமும் தங்களை மீட்டுவிடும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் கண் விழிக்கிறார்கள். அதே சிறிய அறையிலேயே அவர்கள் தங்களது நாட்களைக் கழிக்கிறார்கள். இந்த நிலை கடந்த ஒன்றரை மாதங்களாகத் நீடிக்கிறது. பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,கேதன் மேத்தாவின் தந்தை முகேஷ் மேத்தா டிசம்பர் மூன்றாவது வாரத்தில் கப்பலில் இருந்த அனைத்து உணவுப் பொருட்களும் தீர்ந்துபோனபோது, கப்பல் உரிமையாளர் ஜோகிந்தர் பிரார் டிசம்பர் 25-ஆம் தேதி உணவுப் பொருட்களை அனுப்பினார். ஆனால் ஒரு வாரம் கழித்து, அரிசி மட்டுமே எஞ்சியிருந்தது. இத்தகைய சூழ்நிலையில், கப்பலில் உள்ள இந்தியச் சமையல்காரரான திவாகர் புத்தி, ஒரு நாளைக்கு இரண்டு முறை அரிசி சமைக்கிறார், அதை எட்டு பேரும் உப்போடு சேர்த்துச் சாப்பிடுகிறார்கள். கப்பலில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் கடந்த பத்து நாட்களாக குடிநீர் இல்லாமல் இருப்பதாகக் கூறுகின்றனர். எனவே, அவர்கள் கப்பலில் உள்ள "குடிப்பதற்கு அல்ல" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள தொழிற்சாலை நீரை (Industrial water) கொதிக்க வைத்து குடிப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள். எரிபொருள் பிரச்னை காரணமாக, அவர்கள் இரவில் மட்டுமே ஜெனரேட்டரைப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய முயற்சிகள் ஒருபுறம் என்றாலும், டீசல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கவலை உள்ளது. கேப்டன் விஜய்யின் சகோதரர் வினோத் பன்வாரின் கூற்றுப்படி, கப்பலின் எரிபொருளும் தீர்ந்துபோகும் நிலையில் உள்ளது. பணியாளர்களின் உடைமைகளைக் கைப்பற்றிய இரான் பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,அன்சாரி மன்சூர் ஆலம், கேதன் மேத்தா, ஷோயப் அக்தர் (இடமிருந்து வலமாக) டிசம்பர் 8-ஆம் தேதி, இரான் பாதுகாப்புப் படையினர் 'எம்டி வேலியன்ட் ரோர்' பணியாளர்கள் அனைவரின் மொபைல் போன்கள், லேப்டாப்கள் மற்றும் ஆடைகள் அடங்கிய பைகளை வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, இரான் பாதுகாப்புப் படையினர் அவர்களுக்கு ஒரு மொபைல் போனை வழங்கினர், அதன் உதவியுடன் இந்த ஆறு இந்தியர்களும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் தங்களது குடும்பத்தினருடன் பேசுகிறார்கள். ஆனால் ஜனவரி 31-ஆம் தேதி வரை 5 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும் என்பதால், இத்தகைய அழைப்புகளும் நீண்ட காலம் நீடிக்காது என்று கேப்டன் விஜய் குமாரின் சகோதரர் வினோத் பன்வார் கூறுகிறார். ஆரம்பத்தில், அனைவரும் மொபைல் போன்கள் பயன்படுத்தக் கடுமையாகத் தடை விதிக்கப்பட்டது. சமீப நாட்களில், அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள மொபைல் போன்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கப்பலில் நிலவும் தண்ணீர் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகளின் தட்டுப்பாடு குறித்துப் பேசிய ஜோகிந்தர் பிரார், "அவர்களுக்குத் தேவையான வசதிகளை விரைவாக வழங்க நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம்," என்றார். அதே சமயம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கப்பல் நிறுவனம் மீது அதிருப்தி தெரிவிக்கின்றனர். கப்பலின் மூன்றாவது பொறியாளர் கேதன் மேத்தாவின் தந்தை முகேஷ் மேத்தா கூறுகையில், "டிசம்பர் 8-ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்தபோதே, கப்பல் நிறுவனம் இதைத் தீவிரமாக எடுத்து முன்னுரிமை அளித்திருந்தால், இன்று எனது மகன் உட்பட பத்து பேர் சிறையில் இருந்திருக்க மாட்டார்கள்," என்றார். பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,மசூத் ஆலமின் தந்தை இப்ரார் அன்சாரி உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தலைமை அதிகாரி அனில் குமார் சிங், சீமேன் ஆகாஷ் குமார் சிங், கோபால் சௌகான் மற்றும் ஷோயப் அக்தர், ஆந்திரபிரதேசத்தைச் சேர்ந்த மூன்றாம் நிலை அதிகாரி ஜம்மு வெங்கட், ஹரியானாவைச் சேர்ந்த இரண்டாம் பொறியாளர் சதீஷ் குமார், டெல்லியைச் சேர்ந்த மூன்றாவது பொறியாளர் கேதன் மேத்தா, தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப பணியாளர் ஏரோ தாரிஷ், பிகாரைச் சேர்ந்த ஆயிலர் மசூத் ஆலம் மற்றும் மும்பையைச் சேர்ந்த ஆயிலர் அன்சாரி மன்சூர் அகமது ஆகியோர் ஜனவரி 6-ஆம் தேதி இரானிய பாதுகாப்புப் படையினரால் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 16 பணியாளர்களில், பலரது பயணம் இந்த ஜனவரியில் முடிவடையவிருந்தது. விஷால் குமார், நந்தகி வெங்கடேஷ் மற்றும் மசூத் ஆலம் ஆகியோரின் ஒன்பது மாதப் பயணம் இந்த ஜனவரியில் முடிவடையவிருந்தது. பிகாரைச் சேர்ந்த மசூத் ஆலமின் தந்தை இப்ரார் அன்சாரி கூறுகையில், "எனது மகன் கடைசியாக ஜனவரி 5-ஆம் தேதி அழைத்தான், ஆனால் அப்போது குறைவான நேரமே பேச முடிந்தது. அதன்பிறகு என்னால் அவனுடன் பேச முடியவில்லை," என்றார். தனது மகனின் ஆரோக்கியம் குறித்து கவலைப்படும் இப்ரார் அன்சாரி, "டிசம்பர் 8-ஆம் தேதி அனைவரும் காவலில் எடுக்கப்பட்டபோது, மசூத் ஆலமுக்கு காய்ச்சல் இருந்தது. இப்போது அவரது நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை," என்றார். ஈத் பண்டிகைக்குப் பிறகு மசூத் திருமணம் செய்யவிருந்தார், ஆனால் இப்போது அவரது குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மசூத்தைப் போலவே, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த துங்கா ராஜசேகரின் ஒரே சகோதரிக்கு மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. இத்தகைய சூழல்கள் குறித்துப் பேசிய முகேஷ் மேத்தா, "எனது வீட்டில் திருமணம் எதுவும் இல்லை, ஆனால் மகன் கேதன் சிறைக்குச் சென்ற செய்தியைக் கேட்ட பிறகு, அவரது தாயாரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது," என்றார். பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், "இது எனது குடும்பத்தின் பிரச்னை மட்டுமல்ல, 16 குடும்பங்களின் பிரச்னை. நாங்கள் மின்னஞ்சல் அனுப்பாத துறையே இல்லை, ஆனால் இன்றுவரை யாரிடமிருந்தும் எங்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை," என்றார். குடும்பத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,அனில் சிங்கின் மனைவி காயத்ரி சிங் முகேஷ் மேத்தாவைப் போலவே, அனில் சிங்கின் மனைவி காயத்ரி சிங், தனது கணவர் உட்பட கப்பல் பணியாளர்கள் அனைவரையும் இரான் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக நம்புகிறார். "இரானுக்குக் கப்பல் நிறுவனம் மீதோ அல்லது அதில் ஏற்றிச் செல்லப்படும் சரக்கு குறித்தோ ஏதேனும் பிரச்னை இருந்தால், அது நேரடியாக நிறுவனத்திடம் பேச வேண்டும், ஊழியர்களைத் துன்புறுத்தக் கூடாது," என்றார் காயத்ரி சிங். இந்தக் கருத்துடன் உடன்படும் இந்திய மாலுமிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரதீப் சிங் கூறுகையில், "நிறுவனமே கப்பலின் ஆபரேட்டர். கப்பலில் என்ன செல்கிறது என்பதை நிறுவனம் தான் தீர்மானிக்கிறது, பணியாளர்கள் அல்ல. எனவே, பணியாளர்களைச் சிறைக்கு அனுப்பும் இரானின் முடிவு முற்றிலும் மனிதத்தன்மையற்றது," என்றார். துபாயைச் சேர்ந்த 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' நிறுவனத்தின் உரிமையாளர் ஜோகிந்தர் பிரார், "இரானுடன் பேச்சுவார்தை நடத்த நிறுவனம் முயற்சி செய்து வருகிறது, ஆனால் இரான் அரசு பேசத் தயாராக இல்லை" என்றார். "இது முதல் முறை அல்ல, இரண்டாவது முறையாக எங்களது கப்பல் இரானால் கைப்பற்றப்பட்டுள்ளது," என்கிறார் ஜோகிந்தர் பிரார். பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,இந்திய மாலுமிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரதீப் சிங் டிசம்பர் 5, 2023 அன்று, பிராரின் மற்றொரு கப்பல் சட்டவிரோத டீசல் ஏற்றிச் சென்றதாகக் கூறி இரானால் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அந்தக் கப்பலில் "21 பணியாளர்கள் இருந்தனர். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர்களில் 18 பேரை இரான் விடுவித்தது. மூன்று பணியாளர்கள் இன்றும் சிறையில் உள்ளனர்," என்று ஜோகிந்தர் பிரார் கூறுகிறார். "நாங்கள் அன்றிலிருந்து முயற்சி செய்து வருகிறோம். இப்போது அவர்கள் இரண்டாவது கப்பலைப் பறிமுதல் செய்துள்ளனர். இரண்டு கப்பல்களிலும் மிகக் குறைந்த கந்தக எரிபொருள் எண்ணெய் (VLSFO) தொடர்பான ஆவணங்கள் இருந்தபோதிலும், இரானில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை," என்கிறார் அவர். இந்திய மாலுமிகள் பொதுச் செயலாளர் பிரதீப் சிங், 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' தொடர்பாகப் பல பிரச்னைகள் தனது கவனத்திற்கு வந்துள்ளதாகவும், அது குறித்து ஏற்கனவே கப்பல் போக்குவரத்துத் துறை இயக்குநரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார். ஆனால் கேப்டன் விஜய் குமாரின் மனைவி சோனியா பெரும் சோகமும் கோபமும் கலந்த ஒரு நிலையில் தவிக்கிறார். "இந்த 42 நாட்களில் நாங்கள் விரக்தியடைந்துவிட்டோம். எனவே இந்தப் பிரச்னையை சமாளிக்க, நாங்கள் (குழுவினரின் குடும்ப உறுப்பினர்கள்) அனைவரும் நீதிமன்றத்தை அணுகியுள்ளோம்," என்றார். பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,கேப்டன் விஜய் குமாரின் மனைவி சோனியா நீதிமன்றத்தை நாடியுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விஜய் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை ஜனவரி 15 அன்று நடைபெற்றது. அதில் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான சிஜிஎஸ்சி (CGSC) நிதி ராமன், "அரசாங்கத்தால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மனுதாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்," என்று கூறினார். நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை ஜனவரி 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நேரத்தில் கப்பல் நிறுவன உரிமையாளர், "விவகாரத்தைத் தீர்க்க நாங்கள் ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளோம். ஆனால் இரானில் நிலவும் மோசமான உள்நாட்டுச் சூழ்நிலை காரணமாக, வழக்கறிஞரால் பணியாளர்களைச் சந்திக்க முடியவில்லை," என்றார். இருப்பினும், சரக்குகளை கையாளும் கப்பல் நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று இந்திய மாலுமிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரதீப் சிங் கூறுகிறார். "பணியாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. எனவே, இந்த விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, அனைத்துப் பணியாளர்களையும் உடனடியாகத் தாயகம் அழைத்து வரக் கோரி கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரைச் சந்திப்போம்" என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgkzg67v6xo
  21. “சீனா அச்சுறுத்தல்” என்ற பெயரில் அரசியல் இலாபம் தேடுகிறது அமெரிக்கா – சீனா குற்றச்சாட்டு 20 Jan, 2026 | 11:41 AM கிரீன்லாந்துக்கு சீனா அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை சீனா கடுமையாக மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் “சீனா அச்சுறுத்தல்” என்ற சொற்றொடரை பயன்படுத்தி அமெரிக்கா தன்னிச்சையான சுயலாபங்களை அடைய முயற்சிப்பதாக சீன அரசு குற்றம் சாட்டியுள்ளது. பீஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் இந்த விடயத்தைத் தெரிவித்தார். “சீனா அச்சுறுத்தல்” என்ற பெயரை ஒரு காரணமாகக் கொண்டு தங்களின் அரசியல் மற்றும் இராணுவ இலக்குகளை முன்னெடுக்க அமெரிக்கா முயற்சிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த கண்டனம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நீண்ட பதிவைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது. அந்த பதிவில், ஆர்க்டிக் பிராந்தியத்தில் சீனா மற்றும் ரஷ்யா ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், வட அமெரிக்காவை கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும் “கோல்டன் டோம்” (Golden Dome) என அழைக்கப்படும் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்க அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து அவசியம் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், கிரீன்லாந்து தொடர்பான சீனாவின் நிலைப்பாடு ஏற்கனவே பல தடவைகள் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் நோக்கங்களும் கொள்கைகளும் அடிப்படையாகக் கொண்ட சர்வதேச சட்டமே இன்றைய உலக ஒழுங்கின் அடித்தளமாக இருப்பதாகவும், அந்தச் சட்டங்களை அனைத்து நாடுகளும் மதித்து பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பை பேணுவது சர்வதேச சமூகத்தின் பொது பொறுப்பாகும் எனவும், மோதல்களை தூண்டும் வகையிலான குற்றச்சாட்டுகள் உலக அமைதிக்கு பாதகமாக அமையும் எனவும் சீனா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/236505
  22. தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு Jan 20, 2026 - 01:26 PM ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச். எம். டி. என். கே. வத்தலியத்த குறிப்பிடுகையில், அதற்கமைய குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாகத் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச சம்பள திருத்தச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்தச் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திருத்தச் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் போது, இடைத்தரகர் அல்லது ஒப்பந்தக்காரர் மூலம் ஏதேனும் கைத்தொழில் அல்லது சேவையில் ஈடுபடுத்தப்படும் ஊழியர் தொடர்பில், அண்மைய தொழில் வழங்குநர் மற்றும் இறுதித் தொழில் வழங்குநர் உட்பட அனைத்துத் தொழில் வழங்குநர்களும் அச்சட்டத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டுள்ளதாகத் தொழில் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருத்தச் சட்டத்தின் 4 ஆவது பிரிவின் படி, வரவு செலவுத்திட்ட நிவாரணக் கொடுப்பனவுகளைச் சேர்ப்பதைத் தவிர, ஊழியர் ஒருவரால் 2025.03.31 ஆம் திகதியாகும் போது பெற்றுக்கொண்டிருந்த வேறு எந்தக் கொடுப்பனவையும் குறைந்தபட்ச சம்பளத்திற்காக ஈடுசெய்ய பயன்படுத்தக்கூடாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பள அதிகரிப்பிற்கு அமைய ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF), மேலதிக நேரம் (Overtime), பணிக்கொடை (Gratuity), மகப்பேற்று நன்மைகள் மற்றும் விடுமுறைத் தினக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்துச் சட்டப்பூர்வ கொடுப்பனவுகளுக்கும் இதனைப் பிரயோகிக்கும் பொறுப்பு தொழில் வழங்குநர்களுக்கு உரித்தாகும். ஏதேனும் ஒரு வகையில், உரிய முறையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளாத தொழில் வழங்குநர்கள் இருப்பின், அது தொடர்பான முறைப்பாடுகளை cms.labourdept.gov.lk ஊடாக தொழில் திணைக்களத்தின் முறைப்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்பில் பதிவிடலாம் அல்லது அருகில் உள்ள தொழில் அலுவலகத்தில் எழுத்துமூலம் சமர்ப்பிக்க முடியும். https://adaderanatamil.lk/news/cmkmavctd046ao29ng3cgx9f5
  23. சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் ; சரத் வீரசேகர 19 Jan, 2026 | 09:40 PM (இராஜதுரை ஹஷான்) பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார். திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உட்பட ஒன்பது பேர் திங்கட்கிழமை (19) திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது கஸ்ஸப்ப தேரருக்கு சார்பாக சரத் வீரசேகர உட்பட பௌத்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும், போசிக்கப்பட வேண்டும் எந்நிலையிலும் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வெண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்காமல் அரசியலமைப்புக்கு முரணாக செயற்படுகிறது. திருகோணமலை பகுதியின் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்ட பகுதியில் புத்தர் சிலை வைத்ததற்கு எதிராக கரையோர பாதுகாப்பு அதிகாரசபை வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அவ்வாறாயின் கடற்கரையோரங்களில் உள்ள சகல புத்தர்சிலைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அநுராதபுரத்துக்கு பௌத்த வழிபாடுகளுக்கு வருபவர்கள் மனதில் குரோதத்துடன் வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அரசாங்கம் பௌத்தத்துக்கு எதிராகவே செயற்படுகிறது. சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், தமிழ் அரசியல்வாதிகளை மகிழ்விப்பதற்காகவும் பௌத்த தேரர்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும், இல்லையேல் விளைவுகள் பாரதூரமானதாக அமையும் என்றார். https://www.virakesari.lk/article/236460
  24. அயர்லாந்தை வெற்றிகொண்ட இலங்கை உலகக் கிண்ண சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது Published By: Vishnu 19 Jan, 2026 | 11:35 PM (நெவில் அன்தனி) விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் அயர்லாந்தை 106 ஓட்டங்களால் மிக இலகுவாக இலங்கை வெற்றிகொண்டது. ஏற்கனவே ஜப்பானை வெற்றிகொண்ட இலங்கை 3.090 என்ற நிகர ஓட்ட வித்தியாசத்துடன் ஏ குழுவுக்கான அணிகள் நிலையில் 4 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பெற்று தனது சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது. இக் குழுவில் இடம்பெறும் அவுஸ்திரேலியா நாளைய போட்டியில் ஜப்பானை வெற்றிகொண்டால் சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை விளையாடுவது உறுதிசெய்யப்படும். இன்றைய போட்டியில் விமத் தின்சார, சாமிக்க ஹீனட்டிகல ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் துல்னித் சிகேரா, ரசித் நிம்சார ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. அயர்லாந்துடனான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றது. எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஜப்பானுக்கு எதிரான முதல் போட்டியில் சதங்கள் குவித்து உலகக் கிண்ண சாதனை நிலைநாட்டிய திமன்த மஹாவின்ச, விரான் சமுதித்த ஆகிய இருவரும் ஒற்றை இலக்கை எண்ணிக்கைகளுடனும் துல்னித் சிகேரா 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (59 - 3 விக்.) எனினும், அணித் தலைவர் விமத் தின்சார நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் கவிஜ கமகேயுடன் 80 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் சாமிக்க ஹீனட்டிகலவுடன் 100 ஓட்டங்களையும் பகிர்ந்து இலங்கையை பலமான நிலையில் இட்டார். விரான் சமுதித்த துரதிர்ஷ்டவசமாக 5 ஓட்டங்களால் சதத்தைப் பெறத் தவறினார். 102 பந்துகளை எதிர்கொண்ட விமத் தின்சார 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 95 ஓட்டங்களையும் கவிஜ கமகே 49 ஓட்டங்களையும் சாமிக்க ஹீனட்டிகல ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஒலிவர் ரைலி 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 40.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் கெலம் ஆம்ஸ்ட்ரோங் (39), ரூபன் வில்சன் (32), அணித் தலைவர் ஒலிவர் ரைலி (31 ஆ.இ.) ஆகிய மூவரும் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் துல்னித் சிகேரா 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ரசித் நிம்சார 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குகதாஸ் மாதுளன் 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: விமத் தின்சார https://www.virakesari.lk/article/236471
  25. ரி20 உலகக் கிண்ணத்துக்கான பங்களாதேஷின் நிலைப்பாடு குறித்து ஐசிசி காலக்கெடு விதித்துள்ளது 19 Jan, 2026 | 06:00 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு சென்று ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க பங்களாதேஷுக்கு ஜனவரி 21வரை (நாளைமறுதினம்) ஐசிசி காலக்கெடு விதித்துள்ளது. டாக்காவில் கடந்த சனிக்கிழமை (18) நடைபெற்ற கலந்துரையாடலின் போது பங்களாதேஷுக்கு ஐசிசி இந்த காலக்கெடுவை விதித்தது என அறியக்கிடைத்ததாக கிரிக்இன்போ செய்தி வெளியிட்டுள்ளது. ஐசிசிக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கும் இடையில் ஒரே வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தின்போது, தனது ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளை விளையாடத் தயார் எனவும் ஆனால் அவை இந்தியாவுக்கு வெளியே விளையாடப்படவேண்டும் எனவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மீண்டும் தெரிவித்திருந்தது. ரி10 உலகக் கிண்ணத்தை இணை வரவேற்பு நாடாக நடத்தும் இலங்கை அவர்களது மாற்று இடமாகும். இந்தியாவுக்கு பயணிப்பதிலும் அங்கு விளையாடுவதிலும் பாதுகாப்பு கரிசனைகள் இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் சி குழுவில் இடம்பெறும் பங்களாதேஷின் போட்டி அட்டவணை மாற்றப்படமாட்டாது என ஐசிசி உறுதிபடத் தெரிவித்துள்ளது. தங்களது கரிசனை குறித்து ஜனவரி 4ஆம் திகதி பங்களாதேஷ் முதல் தடவையாக ஐசிசியுடன் தொடர்பாடலில் ஈடுபட்டதிலிருந்து இந்த பிணக்கு கடந்த 3 வாரங்களாகத் தொடர்கிறது. பங்களாதேஷ் தனது ஆரம்பப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை கொல்கத்தாவில் பெப்ரவரி 7ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது. அதே மைதானத்தில்தான் இத்தாலியை பெப்ரவரி 9ஆம் திகதியும் இங்கிலாந்தை பெப்ரவரி 14ஆம் திகதியும் பங்களாதேஷ் சந்திக்கவுள்ளது. நேபாளத்துக்கு எதிரான பங்களாதேஷின் கடைசி போட்டி மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஒருவேளை, ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற இந்தியா செல்வதை பங்களாதேஷ் முற்றாக மறுத்தால் 1996இல் அவுஸ்திரேலியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் நடந்த கதியை பங்களாதேஷ் எதிர்கொள்ள நெரிடும் என கருதப்படுகிறது. அவுஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி 1996 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட இலங்கைக்கு செல்ல முடியாது என விடாப்பிடியாக இருந்தன. இதனை அடுத்து அவுஸ்திரேலியா, மேற்கிற்தியத் தீவுகள் ஆகியவற்றுடனான இலங்கையின் போட்டிகளுக்கு போட்டியின்றி தலா 3 வெற்றிப் புள்ளிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அடுத்து 1996 உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரே இலங்கை 6 வெற்றிப் புள்ளிகளை சம்பாதித்துக்கொண்டது. அந்த வருடம் தோல்வி அடையாத அணியாக இலங்கை உலக சம்பியனாகி இருந்தது. https://www.virakesari.lk/article/236459

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.