Everything posted by ஏராளன்
-
டிப்பர் விபத்தால் கிளிநொச்சியில் பதற்றம்
டிப்பர் விபத்தால் கிளிநொச்சியில் பதற்றம் Jan 21, 2026 - 07:03 PM தமது மூத்த சகோதரர் விபத்துக்குள்ளாகி உயிரிழக்கக் காரணமான அதே டிப்பர் வாகனத்தில், இளைய சகோதரரும் விபத்துக்குள்ளான சர்ச்சைக்குரிய சம்பவம் ஒன்று கிளிநொச்சியில் பதிவாகியுள்ளது. கிளிநொச்சியில் சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபடுபவர்கள் தொடர்பான தகவல்களை வழங்கிய நபர் என சந்தேகிக்கப்படும் நபர், மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் டிப்பர் வாகனத்தால் மோதி கடந்த நவம்பர் மாதம் உயிரிழந்தார். இது தொடர்பான வழக்கு தற்போது நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. பொலிஸ் பொறுப்பிலிருந்த அந்த டிப்பர் வாகனம் அண்மையில் விடுவிக்கப்பட்டுள்ளது. மற்றுமொரு வாகனத்தின் உதவியுடன் அந்த டிப்பர் வீதியில் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருந்தபோது, உயிரிழந்த நபரின் இளைய சகோதரர் அதே வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். எவ்வாறாயினும் அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் அவருக்கு எந்தவித காயங்களும் ஏற்படவில்லை. எனினும், இந்த விபத்தானது திட்டமிட்டு செய்யப்பட்ட ஒன்று என பிரதேச மக்கள் குற்றம் சுமத்துகின்றனர். சம்பவத்துடன் தொடர்புடைய சாரதி கைது செய்யப்பட வேண்டும் என்றும், விபத்துக்கு நீதிக் கோரியும் பிரதேச மக்கள் எதிர்ப்பில் ஈடுபட்டமையினால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டிருந்தது. https://adaderanatamil.lk/news/cmko2cenw048ao29ndnhqypk9
-
உடல் எடையைக் குறைக்க வெண்காரம் சாப்பிட்ட மாணவி மரணம் – நிபுணர்கள் சொல்வது என்ன?
உடல் எடையைக் குறைக்க வெண்காரம் சாப்பிட்ட மாணவி மரணம் – நிபுணர்கள் சொல்வது என்ன? கட்டுரை தகவல் சேவியர் செல்வக்குமார் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் உடல் எடையைக் குறைப்பதற்காக, யூட்யூப் சேனலில் கூறிய தகவலை வைத்து, நாட்டு மருந்துக் கடையில் வெண்காரம் (போராக்ஸ்) வாங்கிச் சாப்பிட்ட மதுரையைச் சேர்ந்த கல்லுாரி மாணவி உயிரிழந்துள்ளார். ஆனால், வெண்காரம் என்பது நச்சுத்தன்மையுடைய பொருள் என்றும், அது நாட்டு மருந்துகளைத் தயாரிப்பதற்கு மிக மிகச் சிறிய அளவில் மட்டுமே பயன்படுத்தப்படுவதாகவும் சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். போராக்ஸ் என்று அழைக்கப்படும் சோடியம் போரேட் என்பது, பூச்சிக் கொல்லியைப் போன்ற நச்சுத்தன்மையைக் கொண்ட ஒரு ரசாயனப் பொருள் என்று வேதியியல் பேராசிரியர் விளக்குகிறார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வெண்காரம் என்றழைக்கப்படும் போராக்ஸ் ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர் (சித்தரிப்புப் படம்) இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, மருத்துவ சிகிச்சை சார்ந்து இத்தகைய தவறான பரிந்துரைகளைத் தெரிவிக்கும் யூட்யூப் சேனல்களை அரசு தடுக்க வேண்டுமென்று அலோபதி மற்றும் சித்த மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர். மதுரை இளம்பெண் சாப்பிட்டதாகச் சொல்லப்படும் வெண்காரம், ஆங்கிலத்தில் போராக்ஸ் (Borax) என்று அழைக்கப்படுகிறது. இதன் தன்மை உண்மையில் எத்தகையது? இதை உட்கொள்வதால் உடலுக்கு எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்? இதுகுறித்துத் தெரிந்துகொள்ள பிபிசி தமிழ் பல்வேறு நிபுணர்களிடம் பேசியது. 'யூட்யூப் பார்த்து வாங்கிச் சாப்பிட்ட இளம்பெண்' மதுரை செல்லூர் மீனாம்பாள்புரத்தை சேர்ந்த கலையரசி, ஒரு தனியார் கல்லுாரியில் இளங்கலை முதலாம் ஆண்டு படித்து வந்தார். 'உடல் சற்று பருமனாக இருந்த கலையரசி, யூட்யூப் சேனல் ஒன்றில், உடல் எடையைக் குறைக்க வெண்காரம் உதவுமென்று கூறியதை அடிப்படையாகக் கொண்டு, நாட்டு மருந்துக் கடையில் அதை வாங்கிச் சாப்பிட்டுள்ளார்' என காவல்துறை தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,போராக்ஸ் எனப்படும் உப்பில், போரேட் மற்றும் போரிக் அமிலம் கலந்து இருப்பதாகக் கூறுகிறார் குடலியல் மருத்துவ நிபுணர் வி.ஜி. மோகன் பிரசாத் (சித்தரிப்புப் படம்) அதைச் சாப்பிட்ட சிறிது நேரத்தில் அதிகளவில் வாந்தி ஏற்பட்டு மயக்கமடைந்துள்ளார். அவரை தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சையளித்து வீட்டிற்கு அழைத்து வந்துள்ளனர். இரவில் மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்படவே, அவரை மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதுதொடர்பாக செல்லூர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காவல்துறை விசாரணையில், அந்தப் பெண் நாட்டு மருந்துக் கடையில் வெண்காரம் வாங்கிச் சாப்பிட்டது தெரிய வந்துள்ளது. கலையரசி ஒரு யூட்யூப் சேனலில் இருந்த வீடியோவை பார்த்து வெண்காரம் வாங்கிச் சாப்பிட்டதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். தனது மகள் யூட்யூப் சேனலை பார்த்து, சுயமாக நாட்டு மருந்து வாங்கி வந்து சாப்பிட்டபோதே, தான் அதைத் தடுத்ததாக கலையரசியின் தந்தை வேல்முருகன் ஊடகங்களில் தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் வெண்காரம் என்பது என்ன? எளிமையாகச் சொல்வதெனில், அது நமது கேரம் போர்டில் பயன்படுத்தும் பவுடர்தான் என்கிறார் கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியர் செல்வராஜ். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இது மிகவும் மெல்லிய தன்மையைக் கொண்ட உப்பாகும். பொதுவாக இதை முகத்திற்குப் பூசும் பவுடர்களில் சிறிய அளவில் சேர்ப்பார்கள்'' என்று தெரிவித்த அவர், "'துத்தநாகத்தைக்கூட நமது மருந்துகளில் சிறிய அளவில் கலக்கிறார்கள். ஆனால், அந்த துத்தநாகத்தை நேரடியாகச் சாப்பிட்டால் அது எத்தகைய பாதிப்பை ஏற்படுத்துமோ அதைத்தான் வெண்காரமும் ஏற்படுத்தும்" எனவும் எச்சரித்தார். அவரது கூற்றுப்படி, சோடியம் போரேட் (sodium borate) என்ற ரசாயனம்தான் இந்த பவுடர், பேச்சுவழக்கில் அதை போராக்ஸ் என்பார்கள். ஆனால் "இது உணவாக உட்கொள்வதற்கான பொருளே இல்லை.'' ''சுத்திகரிப்பு செய்வதற்கான மூலப்பொருளாக மட்டுமே இதைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதே தவிர, நேரடியாக உணவாகப் பயன்படுத்தும் அளவுக்கு உகந்த பொருளில்லை. சுருங்கக் கூறுவதெனில், அதுவும் பூச்சிக்கொல்லியை போன்றதொரு ரசாயனம்தான்'' என்றார் பேராசிரியர் செல்வராஜ். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் சித்த மருத்துவத்தில் வெண்காரம் பயன்படுத்தப்படுகிறதா? போராக்ஸ் பவுடரை சித்த மருந்து தயாரிக்கவும் பயன்படுத்துவார்கள் என்கிறார் சித்த மருத்துவர் கு.சிவராமன். அதுகுறித்து பிபிசி தமிழிடம் விளக்கியபோது, "வாய்ப்புண்ணுக்கு வெளிப்புறமாகப் போடக்கூடிய மருந்தாகவும் அதை பயன்படுத்துவார்கள்" என்று தெரிவித்த அவர், தனக்குத் தெரிந்த சித்த மருத்துவத்தில் எடையைக் குறைப்பதற்கு அதைப் பயன்படுத்துவதில்லை என்றும் கூறினார். மாத்திரைகளால் உடல் எடையைக் குறைக்க முடியாது என வலியுறுத்தும் கு.சிவராமன் உடற்பயிற்சி, உணவுக் கட்டுப்பாடு ஆகியவையே உடல் எடையைக் குறைப்பதற்கான வழிமுறை என்கிறார். வெண்காரம் சித்த மருத்துவத்தில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பது குறித்துப் பேசிய சித்த மருத்துவர் வீரபாபு, "வெண்காரம் சில சித்த மருந்துகளில் மிகச் சிறிய அளவு கலக்கப்படுமே தவிர, நேரடியாக மருந்தாகப் பரிந்துரை செய்யப்படுவதில்லை. அதையும் முறையாகச் சுத்திகரிக்காமல் பயன்படுத்துவது மிகவும் ஆபத்தானது" என்று எச்சரித்தார். வெண்காரம் உடலுக்குத் தீங்கு விளைவிக்கும் நஞ்சாகவும் இருப்பதாக, சித்த மருத்துவர் வீரபாபு கூறுகிறார். அதுமட்டுமின்றி, ''பொதுவாக வாய்க்குள், பற்களில் இருக்கும் தொற்றுகளுக்கு, வாய்ப்புண்ணுக்கு இவற்றைச் சிறு அளவில் பரிந்துரைப்பது உண்டு. ஆனால் வெண்காரம் எந்த வகையிலும் உடல் எடையைக் குறைப்பதற்கான மருந்து கிடையாது'' என்றும் சித்த மருத்துவர் வீரபாபு தெரிவித்தார். படக்குறிப்பு,வி.ஜி. மோகன் பிரசாத் பாதிப்புகள் என்ன? போராக்ஸை மிகச் சிறிய அளவில் எடுத்துக் கொள்வதால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் நேராது என கூறுகிறார் குடலியல் மற்றும் லேப்ராஸ்கோபிக் மருத்துவ நிபுணர் வி.ஜி. மோகன் பிரசாத். வயிறு மற்றும் செரிமான மண்டல மருத்துவத்தில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவர் வி.ஜி. மோகன் பிரசாத், இந்தியன் சொசைட்டி ஆஃப் கேஸ்ட்ரோ என்ட்ராலஜி அமைப்பின் தலைவராக உள்ளார். ''சுத்திகரிக்கப்பட்ட போராக்ஸ் பவுடரை மிகவும் நுண்ணிய அளவில் எடுத்திருந்தால் பிரச்னையில்லை. ஆனால் எந்த வயதினராக இருந்தாலும் அதை அதிகமாக உட்கொண்டால் சிறிது நேரத்தில் உடலின் உள்ளுறுப்புகளில் நச்சுத்தன்மை பரவி, அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்படும். சிலருக்கு வலிப்பும் ஏற்படலாம். நேரமாகிவிட்டால் அதைச் சாப்பிட்டவரைக் காப்பாற்றுவது சிரமம்'' என்றார். ஒருவேளை யாரேனும் தவறுதலாக வெண்காரத்தைச் சாப்பிட்டாலும்கூட "ஒரு மணிநேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்து வந்தால், டியூப் போட்டு நஞ்சை வெளியே எடுத்து விடுவதன் மூலம் காப்பாற்ற முடியும்" என்கிறார் குடலியல் நிபுணர் வி.ஜி. மோகன். அதேவேளையில், தாமதம் ஆகும்போது ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து விவரித்த அவர், "போராக்ஸின் நச்சுத்தன்மை காரணமாக உடல் உள்ளுறுப்புகள் பாதிக்கப்படும். சிறிது நேரத்தில் சிறுநீரகம் செயலிழந்துவிடும், ரத்தப்போக்கு ஏற்படும். உரிய நேரத்தில் சிகிச்சைக்கு செல்லும்பட்சத்தில் நஞ்சை வெளியேற்ற முடியும்" என்று விவரித்தார். சமீபகாலமாக யூட்யூப் சேனல்களை பார்த்து சுயமாக மருந்து எடுத்துக் கொள்வதும், மருத்துவ சிகிச்சைகளைச் செய்துகொள்வதும் அதிகரித்து வருவதாக அலோபதி மற்றும் சித்த மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதுபற்றிப் பேசிய சித்த மருத்துவர் வீரபாபு, ''முறையான சித்த வைத்தியம் படிக்காமல், எவ்வித ஆராய்ச்சி அனுபவமும் இல்லாமல் யூட்யூப் சேனல்களில் இயற்கை வைத்தியர் என்ற பெயரில் எதையெல்லாமோ மருந்தாக, உணவாகப் பரிந்துரைக்கிறார்கள். அரசு இவற்றைக் கட்டுப்படுத்த வேண்டும். மக்கள் இத்தகைய பதிவுகள் குறித்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்'' என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clynk91q9qlo
-
ஈராக்கை விட்டு முழுமையாக வெளியேறியது அமெரிக்க படை! ; சதாம் ஹுசைன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக சென்ற படைகள் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற்றம்!
ஈராக்கை விட்டு முழுமையாக வெளியேறியது அமெரிக்க படை! ; சதாம் ஹுசைன் ஆட்சியை கவிழ்ப்பதற்காக சென்ற படைகள் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு வெளியேற்றம்! 20 Jan, 2026 | 12:31 PM ஈராக் இராணுவ தளங்களிலிருந்து அமெரிக்க படைகள் முழுமையாக வெளியேறியுள்ளதாகவும் இந்த வெளியேற்றம் சுமார் 23 ஆண்டுகளுக்குப் பிறகு நடந்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஈராக்கின் அல்-அன்பர் மாகாணத்தில் உள்ள அயின் அல் அசாத் (Ain al-Assad) விமானப்படைத் தளத்தில் இருந்த அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேறியுள்ளதை ஈராக் பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. இனி, அமெரிக்காவுடனான உறவானது நேரடி இராணுவ தலையீடாக இல்லாமல், இரு தரப்பு பாதுகாப்பு உறவாக மட்டுமே இருக்கும் என ஈராக் மேலும் அறிவித்துள்ளது. கடந்த 2003இல் சதாம் ஹுசைன் ஆட்சியை வீழ்த்துவதற்காக ஈராக்கை நோக்கி அமெரிக்கா படையெடுத்தது. அப்போது அமெரிக்க படைகள் முகாமிட்டிருந்தது அயின் அல் அசாத் விமானப்படைத் தளத்திலாகும். அங்கு சுமார் 20 ஆண்டுகளுக்கும் மேலாக அமெரிக்க படையினர் இருந்துவந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், தற்போது ஈராக்கிலிருந்து வெளியேறியுள்ள அமெரிகக படைகள் உபகரணங்களையும் ஈராக் படைத்தளத்திலிருந்து அகற்றிவிட்டதாக பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/236512
-
மீனவர்களுக்கு உயர் ஓய்வூதியப் பலன்கள்: புதிய திட்டம் அறிமுகம்
மீனவர்களுக்கு உயர் ஓய்வூதியப் பலன்கள்: புதிய திட்டம் அறிமுகம் Jan 21, 2026 - 12:37 PM கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களமும், விவசாய மற்றும் கமநல காப்புறுதிச் சபையும் இணைந்து மீனவர்களுக்கான உயர் நன்மைகளைத் தரும் புதிய ஓய்வூதியத் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளன. மீனவர்களின் பொருளாதார வசதிக்கு ஏற்ப, அவர்களின் விருப்பத்தின் பேரில் ஓய்வூதியத் திட்டங்களைத் தெரிவு செய்ய முடிவது இதன் விசேட அம்சமாகும். இதற்கமைய, புதிய கடற்றொழில் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ், 60 வயதுக்குப் பின்னர் மாதாந்தம் ரூ. 5,000, ரூ. 10,000, ரூ. 15,000, ரூ. 20,000, ரூ. 25,000 அல்லது அதற்கும் அதிகமான தொகையைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் மீனவர்கள் தாங்கள் விரும்பிய திட்டத்திற்குப் பங்களிக்க முடியும். இந்தத் திட்டத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவெனில், 60 வயதுக்குப் பின்னர் வரும் ஒவ்வொரு வயது எல்லைகளிலும் ஓய்வூதியத் தொகை அதிகரிக்கப்படுவதாகும். உதாரணமாக, மாதாந்தம் ரூ. 1,000 ஓய்வூதியத்தைப் பெறும் திட்டத்திற்கு ஒருவர் பங்களிப்புச் செய்திருந்தால், அவருக்கு 64 - 70 வயது வரை ரூ. 1,250 ஓய்வூதியமும், 71 - 77 வயது வரை ரூ. 2,000 ஓய்வூதியமும், 78 வயதுக்குப் பின்னர் ரூ. 5,000 ஓய்வூதியமும் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இணைவதன் மூலம் ஆயுள் காப்புறுதி நன்மைகள் கிடைத்தல், ஓய்வூதியம் பெறுபவர் உயிரிழந்தால் அவரது துணைவருக்கு (கணவன்/மனைவி) ஓய்வூதியம் உரித்தாதல் மற்றும் கடற்றொழில் சார்ந்த ஏனைய தொழில்களில் ஈடுபடுபவர்களும் இத்திட்டத்தில் இணைய முடிவது போன்றவை இதன் மேலதிக விசேட நன்மைகளாகும். https://adaderanatamil.lk/news/cmknokd44047to29n13m3udf1
-
"வணக்க தலங்களில் மோதல்": பௌத்த விகாரைகள், தமிழர்கள் பற்றி இலங்கை ஜனாதிபதி கூறியது என்ன?
"வணக்க தலங்களில் மோதல்": பௌத்த விகாரைகள், தமிழர்கள் பற்றி இலங்கை ஜனாதிபதி கூறியது என்ன? பட மூலாதாரம்,PATHMANATHAN SARUJAN படக்குறிப்பு,தையிட்டி பௌத்த விகாரைக்காக காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டதாக கூறி நடந்த போராட்டம் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 20 ஜனவரி 2026 இலங்கையின் பௌத்த விகாரைகள் முன்பாக நடைபெறும் போராட்டங்கள் மற்றும் இனவாதம் ஆகியவற்றைக் குறிப்பிடும் பொருளில் பேசியுள்ளார், அந்நாட்டின் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க. ஆனால் இவரது கருத்து தெளிவற்றதாக இருப்பதாக தமிழர்களின் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்பதற்காக போராட்டம் நடத்துவோர் கூறுகின்றனர். மற்ற விகாரைகளைக் கடந்து யாழ்ப்பாணத்திலுள்ள பௌத்த விகாரைகளுக்கு மக்கள் செல்வது, "வழிபாடுகளை மேற்கொள்வதற்காக அல்ல" எனவும், மாறாக இனவாதத்தை அடிப்படையாகக் கொண்ட செயற்பாடு எனவும் நாட்டின் ஜனாதிபதி குறிப்பிடுகின்றார். ''அங்காங்கே இனவாத செயற்பாடுகள் சிறு சிறு அளவில் காணப்படுவதை நான் அறிவேன். வணக்க தலத்தை மையமாகக் கொண்டு மோதல்கள் இடம்பெறுகின்றன. '' என்று ஜனாதிபதி பேசியுள்ளார். அத்தோடு ''ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் விகாரையை சூழ்ந்து இருக்கின்றார்கள். அது காணிக்காக அல்ல. இனவாதத்திற்காகவே சூழ்கின்றார்கள். மீண்டும் இனவாதத்தை தலைதூக்க முயற்சிகளை மேற்கொள்கின்றனர். இனவாத செயற்பாடுகள் தலைதூக்குவதற்கு நாம் ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.'' என்றும் திஸாநாயக்க குறிப்பிடுகின்றார். பௌத்த விகாரைகளை ஸ்தாபிப்பதற்கு எதிராக போராட்டங்கள் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல்வேறு பகுதிகளில் பௌத்த விகாரைகளை ஸ்தாபிப்பதற்கு எதிராக அந்த பகுதி மக்கள் பல வருட காலமாக எதிர்ப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். பௌத்தர்களின் புனித தினமாக அனுஷ்டிக்கப்படும் பௌர்ணமி தினங்களில் யாழ்ப்பாணம் தையிட்டி பௌத்த விகாரையில் விசேட வழிபாடுகள் ஏற்பாடு செய்யப்படுகின்றன. அவ்வாறான சந்தர்ப்பங்களில் தமிழர்கள் தமது காணி உரிமையை உறுதி செய்யுமாறு வலியுறுத்தி தையிட்டி விகாரை வளாகத்தில் போராட்டங்களை முன்னெடுத்து வருவதை கடந்த சில வருடங்களாகவே காணக்கூடியதாக இருக்கின்றது. இந்த விகாரை அமைந்துள்ள காணி பொதுமக்களுக்கு சொந்தமானது என போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், மாறி மாறி வந்த அரசாங்கங்கள் இதுவரை இறுதியாக தீர்மானத்தை எடுக்கவில்லை. இந்த விடயம் தொடர்பில் மாவட்ட ரீதியிலும், மத்திய அரசாங்கத்தின் மட்டத்திலும் பேச்சுவார்த்தைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகின்ற போதிலும், அது தொடர்பில் இறுதி தீர்மானம் இதுவரை எட்டப்படவில்லை. படக்குறிப்பு,குருந்தூர்மலை முழுமையாக பௌத்தர்களுக்கு சொந்தமான இடம் என கோரி கடந்த காலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இவ்வாறான நிலையில், ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நேற்றைய தினம் யாழ்ப்பாணத்தில் பேசுகையில் முன்வைத்த கருத்துக்கள் தமது பிரச்னையை அடிப்படையாகக் கொண்டே முன்வைத்தார் என யாழ்ப்பாணம் - தையிட்டி காணி பிரச்னையை எதிர்நோக்கியுள்ள மக்கள் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றனர். ஜனாதிபதி தையிட்டி விகாரை பிரச்னையை அடிப்படையாகக் கொண்டே கருத்து வெளியிட்ட போதிலும், அதில் போதிய தெளிவின்மை காணப்படுகின்றது என தையிட்டி காணி பிரச்னையை முன்னிறுத்தி வரும் பத்மநாதன் சாருஜன் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார். பௌர்ணமி தினங்களில் தாமே போராட்டங்களை நடத்தி வருவதாகவும், அதனை அடிப்படையாக் கொண்டே ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டார் எனவும் அவர் குறிப்பிடுகின்றார். ''குறிப்பாக அவர் நேற்றைய தினம் பேசிய விடயம் தையிட்டியை பற்றி தான். ஏனென்றால், போயாவிற்கு (பௌர்ணமி தினம்) போராட்டம் செய்யும் இடம் தையிட்டி தான். போயாவிற்கு ஆர்ப்பாட்டம் செய்வதை பிழையாக நினைக்கக்கூடாது. போயாவிற்கு அங்கு வரும் மக்களை தெளிவுப்படுத்தி அனுப்புவதற்காக தான் போயா தினத்தில் போராட்டங்களை செய்கின்றோம். நாங்கள் குழப்பத்திற்கு போகவில்லை. எங்களுடைய உரிமைகளை எங்களுடைய ஆதங்கங்களை வெளியில் கொண்டு வருவதற்காகவே அந்த போராட்டங்கள் தொடங்கப்பட்டது,' என அவர் குறிப்பிடுகின்றார். ''ஜனாதிபதி, தென் பகுதியிலிருந்து பல பௌத்த ஆலயங்களைத் தாண்டி இங்கு வந்து வழிபடுவது இனவாதம் என்று சொல்கின்றாரா?. போயா தினங்களில்; போராடுவது பிழை என்று சொல்கின்றாரா? என்று எங்களுக்கு தெரியவில்லை." என்கிறார். "'போராடுபவர்களின் காணிகள் அந்த இடத்தில் இருக்கின்றதா என்று புலனாய்வு துறையிடம் சொல்லி விசாரணை செய்ய வேண்டும்' என்றும் ஜனாதிபதி கூறியிருக்கும் நிலையில், இது மக்களுடைய காணி என்பதை எங்களுடைய அரச அலுவலகங்களில் உறுதிப்படுத்தியுள்ளோம்." என பத்மநாதன் குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு,குருந்தூர் மலை இந்த காணி பிரச்னை நிலவும் பகுதியில் பௌத்த பிக்கு ஒருவரின் காணி காணப்படுகின்ற போதிலும், அதையும் தாண்டி மக்களின் காணிகளை ஆக்கிரமித்தே இந்த விகாரை விஸ்தரிக்கப்பட்டு வருவதாக பத்மநாதன் கூறுகின்றார். ''அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தைகளையும் நடத்தியுள்ளோம். நீதி அமைச்சு மற்றும் புத்தசாசன அமைச்சு ஆகியன தலையீடு செய்திருந்தன. அவர்களின் குழுக்கள் இது பொது மக்களின் காணி என உறுதிப்படுத்தியிருந்தன.'' என அவர் தெரிவிக்கின்றார். இந்த காணி பிரச்னைக்கு இறுதி தீர்மானம் கிடைக்கப் பெறும் வரை பௌர்ணமி தினங்களில் போராட்டங்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என காணி உரிமையாளர்கள் குறிப்பிடுகின்றனர். பட மூலாதாரம்,KOGULAN படக்குறிப்பு,வெடுக்குநாறி மலையில் சைவ அடையாளங்கள் காணப்பட்ட பகுதியில் பௌத்த சின்னங்கள் நிறுவ முயற்சி மேற்கொள்ளப்பட்டது சமூக செயற்பாட்டார்களின் பார்வை? வடக்கு கிழக்கில் ஆக்கிரமிப்புக்களில் ஈடுபடுவோரின் பின்னணியில் அரசாங்கத்தின் அனுமதி இருக்கின்றது என சமூக செயற்பாட்டாளர் மாணிக்கம் ஜெகன் தெரிவிக்கின்றார். ''ஆக்கிரமிப்பில் ஈடுபட்ட விகாராதிபதியை தான் முன்வரிசையில் அமர்த்தி அழகு பார்த்தீர்கள். தமது இடம் பறி போகின்றது. இது நாங்கள் வாழ்ந்த இடம் என்று போராடிக் கொண்டிருக்கின்ற எந்தவொரு குடும்பத்தையாவது ஜனாதிபதி இம்முறை சந்தித்தாரா?" என மாணிக்கம் ஜெகன் கேள்வி எழுப்புகிறார். "நீங்கள் ஆக்கிரமிக்கும் ஆட்கள், நாங்கள் பாதிக்கப்படும் ஆட்கள். கடந்த கால ஆட்சியாளர்கள் செய்த அதேவேலையை தான் இந்த அரசாங்கமும் செய்து வருகின்றது.'' எனவும் ஜெகன் கூறகிறார். ஜனாதிபதியின் பேச்சை பத்திரிகையாளர் எவ்வாறு பார்க்கின்றார்? வடக்கு, கிழக்கில் ஆக்கிரமிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தே போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றதே தவிர, பௌத்தத்திற்கு எதிராக மக்கள் போராட்டங்களை முன்னெடுக்கவில்லை என மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன் தெரிவிக்கின்றார். ''தமிழ் இந்துக்கள் ஏன் பௌத்த அடையாளங்களை எதிர்க்கின்றார்கள் என்ற ஒரு கேள்வி வருகின்றது, போராட்டங்கள் ஆக்கிரமிப்பின் அடையாளமாக செய்வது தான். யாழ்ப்பாணத்தில் நாகவிகாரை இருக்கின்றது, நாகவிகாரை புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் போது வேறு கோவிலாக கட்டினார்களா?'' என வித்தியாதரன் கேள்வி எழுப்புகிறார். ''இது பௌத்தத்திற்கு எதிராக எதிர்ப்பு அல்ல. ஆக்கிரமிப்புக்கு எதிராக எதிர்ப்பு. பௌத்தத்தை எதிர்க்க போவதில்லை. ஆனால் எங்கள் மீதான ஆக்கிரமிப்புக்கு குறியீடாக தான் இந்த போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன,'' என அவர் கூறுகின்றார். பட மூலாதாரம்,VITHIYADARAN படக்குறிப்பு,மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன் தமிழர்கள் இனி ஆயுதம் ஏந்த மாட்டார்கள் என்பதை அநுர குமார திஸாநாயக்க நன்கறிந்தமையினாலேயே யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் உடற்பயிற்சியில் ஈடுபட்டார் என தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் என்.வித்தியாதரன், அவ்வாறு பாதுகாப்பு பிரச்னை இல்லை என உறுதியாக தெரிந்த அவருக்கு ஏன் தமிழர்களின் காணிகளை விடுக்கவிக்க முடியாது எனவும் கேள்வி எழுப்புகின்றார். ''வடக்கில் அப்படி நடக்காது என்று அவருக்கு தெரியும். தமிழர் மக்கள் இன்னுமொரு 100 வருடங்களுக்கு ஆயுதம் ஏந்த போவதில்லை என்பதை நூற்றுக்கு இருநூறு விகிதம் அவருக்கு தெரியும். அதை தெரிந்தவர் காணிகளை விடுவிக்க வேண்டும். அதிகாரத்தை வழங்க வேண்டும். சிறை கைதிகளை விடுவிக்க வேண்டும். அதையெல்லாம் செய்யவில்லை,'' என அவர் வினவுகிறார். பட மூலாதாரம்,PATHMANATHAN SARUJAN படக்குறிப்பு,யாழ்ப்பாணம் தையிட்டி விகாரை முன்பு நடந்த போராட்டத்தில் பங்கேற்றவர்கள் ஆனால் விகாரை பிரச்னை யாழ்ப்பாணத்துடன் முடிந்துவிடவில்லை. முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைந்துள்ள வரலாற்று சிறப்புமிக்க தொல்லியல் பெறுமதியாக இடமாக குருந்தூர்மலை காணப்படுகின்றது, இந்த குருந்தூர்மலையில் பௌத்த விகாரை மற்றும் சிவன் ஆலயம் இருந்தமைக்கான அடையாளங்கள் காணப்படுகின்ற போதிலும், இது முழுமையாக பௌத்தர்களுக்கு சொந்தமான இடம் என கோரி கடந்த காலங்களில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. இந்த பிரச்னையும் இறுதி தீர்மானம் இன்றி இன்றும் சர்ச்சையை தோற்றுவிக்கும் விடயமாக காணப்படுகின்றது. வவுனியா மாவட்டத்தின் வெடுக்குநாறி மலையில் தொல்லியல் பெறுமதியாக சைவ அடையாளங்கள் காணப்பட்ட இடத்தில், புத்தர் சிலையொன்றை பிரதிஷ்டை செய்ய பௌத்த தேரர்கள் தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், அதற்கு எதிராகவும் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதேவேளை, கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான பிரச்னைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதை அவதானிக்க முடிகின்றது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cj9rzw210ndo
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ரி20 உலகக் கிண்ண நெருக்கடி: பங்களாதேஷுக்கு ஆதரவாக ஐசிசிக்கு பாகிஸ்தான் கடிதம் 21 Jan, 2026 | 05:44 PM (நெவில் அன்தனி) ரி20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷின் பங்கேற்பு குறித்து இன்றுவரை காலக்கெடு விதித்திருந்த ஐசிசி, அதன் நிலைப்பாட்டை இன்று வெளியிடத் தயாராகி வருகிறது. இந் நிலையில், இந்தியாவில் விளையாடுவதில்லை என்ற பங்களாதேஷின் தீர்மானத்திற்கு ஆதரவளிப்பதாகத் தெரிவித்து ஐசிசிக்கு கடிதம் ஒன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அனுப்பியுள்ளது. இந்தக் கடிதத்தின் நகல்களை ஐசிசி பணிப்பாளர் சபை உறுப்பினர்களுக்கும் பாகிஸ்தான் அனுப்பிவைத்துள்ளது. இந்தியாவில் பாதுகாப்பு கரிசனைகள் காரணமாக பங்களாதேஷின் உலகக் கிண்ணப் போட்டிகளை இலங்கைக்கு மாற்றுமாறு ஐசிசியிடம் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை கோரிக்கை விடுத்திருந்தது. இந் நிலையில், அதன் கோரிக்கை தொடர்ப்பாக தீர்மானம் ஒன்றை எடுக்க இன்றைய தினம் பணிப்பாளர் சபை கூட்டத்திற்கு ஐசிசி அழைப்பு விடுத்திருந்தது. பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அனுப்பிவைத்துள்ள இந்தக் கடிதம் பலரை ஆச்சிரியத்தில் ஆழ்த்தி இருக்கக்கூடும். ஆனால், ஐசிசியின் தீர்மானத்திற்கு அந்தக் கடிதம் எத்தகைய தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தெரியவருகிறது. இந்தியாவுடன் ரி20 உலகக் கிண்ண இணை ஏற்பாட்டாளரான இலங்கையில் பங்களாதேஷின் போட்டிகளை நடத்துவதற்கு ஏதுவாக போட்டி அட்டவணையை மாற்ற முடியாது என்பதில் ஐசிசி உறுதியாக இருக்கிறது. இவ்விடயத்தில் உறுதியாக இருக்கும் ஐசிசி, தனது நிலைப்பாட்டை பங்களாதேஷுக்கு கடந்த வார கலந்துரையாடலின்போது அறிவித்திருந்தது. https://www.virakesari.lk/article/236629
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
உண்மையில் 10 வருடங்களுக்கு முன்வரை ஓரளவு நியாயமான சம்பளம் தான் வாங்கினார்கள். இந்த அரச ஒப்பந்த விலைக்கணிப்புகளை(Estimate) எப்போது அறிந்து கொண்டார்களோ அன்றிலிருந்து ஒவ்வொன்றுக்கும் தனித்தனி சம்பளம் கேட்கிறார்கள்.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அண்ணை, இரண்டு தொழிநுட்ப உத்தியோகத்தர்களிடம் பெற்ற தகவல்களின்படி புதிய கொமட் பொருத்த 5500 - 7500 ரூபா வரை வாங்குவதாக கூறினார்கள். சிலர் புதிய கொமட் பொருத்த 12000 ரூபா வரை வாங்குவதாக தெரிவித்தனர். சீலனுக்கு நன்றாக விளங்கப்படுத்தினேன், அவரும் புரிந்து கொண்டதாகக் கூறினார். லாப நோக்கு மட்டும் இருந்தால் பலருடைய அடிப்படைச் சுகாதார வசதி செயற்திட்டத்தைப் பாதிக்கும் என்று சொல்லி இருக்கிறேன்.
-
குடிநீரில் மலக்கழிவு !!
குடிநீரில் மலக்கழிவு !! நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் January 18, 2026 1 Minute அன்று ஞாயிற்று கிழமை அதிகாலை 5 மணிக்கே தொலைபேசி பலமுறை அலறி நித்திரையினை குலைத்தது. மறுமுனையில் அழைத்த நண்பன் என்னிடம் நீண்ட விளக்கம் ஒன்றினை எதிர்பார்த்தான். அதாவது அவன் தனது கிணற்று நீரினை தரக்கட்டுப்பாடு பரிசோதனை ஒன்றிற்கு உட்படுத்தி இருந்தான். அதன் முடிவில் அவனது கிணற்று நீரில் E. coli என அழைக்கப்படும் Escherichia coli பக்டீரியா இருந்தமையே ஆகும். எனது நண்பனின் கேள்வி இவ்வளவு நாளாகவும் இந்த நீரினை அருந்தியதினால் தனக்கும் குடும்பத்தினருக்கும் ஏதாவது பாதிப்பு ஏற்படுமா? மற்றும் ஏன் பாதிப்பு ஏற்படவில்லை? என்பதே ஆகும். நீர் மனித வாழ்விற்கு அடிப்படை தேவையாகும். ஆனால் குடிநீர் மாசுபடும் போது அது உயிருக்கு ஆபத்தான நோய்களை உருவாக்கும். குடிநீரில் Escherichia coli (E. coli) கிருமி கண்டறியப்படுவது, அந்த நீர் மனித அல்லது விலங்கு மலத்தால் மாசடைந்துள்ளது என்பதற்கான முக்கிய சான்றாகக் கருதப்படுகிறது. ஆகவே, E. coli மாசுபாடு ஒரு தனி கிருமி பிரச்சினை அல்ல; அது முழு சுகாதார அமைப்பில் ஏற்பட்ட தோல்வியை வெளிப்படுத்துகிறது. தண்ணீர் E. coli மூலம் மாசடைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. மலக்குழி கசிவு , திறந்த வெளியில் மலம் கழித்தல், கால்நடை கழிவுகள், வெள்ளத்தின் போது கழிவுநீர் குடிநீருடன் கலப்பது, குடிநீர் குழாய்களின் உடைப்பு மற்றும் பாதுகாப்பில்லாத கிணறுகள் ஆகியவை முக்கிய காரணங்களாகும். குறிப்பாக கிராமப்புற பகுதிகள், வெள்ளத்திற்குப் பிந்தைய சூழ்நிலைகள் அதிக ஆபத்தானவையாகும். யாழ் குடாநாட்டில் உள்ள மண்ணின் அமைப்பு மற்றும் பாறைகளின் அமைப்பு காரணமாக மலத்தினால் மாசடைந்த நீர் இலகுவாக கிணற்றினை சென்றடைகின்றது. மேலும் அண்மையில் ஏற்பட்ட வெள்ளபெருக்கு இதனை அதிகரித்து இருந்தது. முந்திய காலத்தில் கீழ்ப்பக்கம் திறந்த நிலையில் அமைக்கப்பட்ட மலக்குழிகள் இந்த ஆபத்தினை அதிகரித்து ஆனால் தற்பொழுது எல்லா பக்கமும் சீமெந்தினால் சீல் செய்யப்பட்ட குழிகளே அமைக்கப்டுகின்றன. E. coli என்பது இயல்பாக மனித குடலில் வாழும் கிருமியாகும். பெரும்பாலான E. coli இனங்கள் தீங்கற்றவையாக இருந்தாலும், குடிநீரில் அதன் இருப்பு சமீபத்திய மலம் சார்ந்த மாசுபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது. இதன் மூலம் Salmonella, Shigella, Vibrio போன்ற ஆபத்தான கிருமிகளும், வைரஸ்கள் மற்றும் பராசைட்களும் குடிநீரில் இருக்கக்கூடும் என்ற அபாயம் ஏற்படுகிறது. எனவே, குடிநீரில் E. coli இருப்பது பொதுச் சுகாதார அவசர நிலையாகக் கருதப்படுகிறது. நீர் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனையின் பொழுது E. coli இருக்கின்றதா அல்லது இல்லையா என்பதே பரிசோதிக்கப்படுகின்றது. அத்துடன் அதன் எண்ணிக்கையும் பரிசோதிக்கப்படுகின்றது. ஆனால் முக்கியமாக E. coli இல் என்ன இனம் இருக்கின்றது என்பது குறித்து பரிசோதிக்கப்படுவதில்லை. ஏனெனில் E. coli இல் குறித்த சில இனங்களே மனிதருக்கு நோய்களை ஏற்படுத்துகின்றது. அவற்றின் விபரம் வருமாறு வகை நோய் முக்கியத்துவம் ETEC நீர் வயிற்றுப்போக்கு நீரிழப்பு மரணம் EPEC குழந்தைகளில் வயிற்றுப்போக்கு குழந்தை மரணம் EHEC (O157:H7) இரத்த வயிற்றுப்போக்கு, Hemolytic Uremic Syndrome (HUS) திடீர் மரணம் EAEC நீடித்த வயிற்றுப்போக்கு ஊட்டச்சத்து குறைபாடு மாசுபட்ட தண்ணீர் மூலம் உடலுக்குள் நுழையும் E. coli பலவகை நோய்களை ஏற்படுத்தக்கூடும். சில வகை E. coli கிருமிகள் நீர்வயிற்றுப்போக்கை ஏற்படுத்தி, கடுமையான நீரிழப்பையும் மினரல் சமநிலையிழப்பையும் உண்டாக்குகின்றன. குழந்தைகளில் இந்த நிலை உயிரிழப்புக்கே வழிவகுக்கலாம். EHEC (O157:H7) போன்ற வகைகள் இரத்த வயிற்றுப்போக்கையும், Hemolytic Uremic Syndrome (HUS) எனப்படும் கடுமையான நிலையும் உருவாக்குகின்றன. இதில் சிறுநீரக செயலிழப்பு, மூளை வீக்கம் ஏற்பட்டு திடீர் மரணம் நிகழலாம். E. coli பக்டீரியாக்களில் பல இனங்கள் மனிதனுக்கு தீங்கு விளைவிக்காதவை அத்துடன் இவை மனிதனின் குடலிலும் இயற்கையான சூழலிலும் இருப்பவை. இதன் காரணமாக மனிதனுக்கு குறித்த நீரினை அருந்தும் பொழுது எவ்விதமான மாற்றமும் தெரிவதில்லை. ஆனால் நீர் தரக்கட்டுப்பாட்டு பரிசோதனையில் E. coli பக்டீரியா இருப்பது கண்டிபிடிக்கப்பட்டால் விரைவில் தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். தொடர்ந்தும் குறித்த நீரினை அருந்த கூடாது. E. coli மாசுபாட்டைத் தடுப்பது முழுமையாக சாத்தியமானதாகும். குடிநீரை காய்ச்சி அல்லது குளோரினேஷன் செய்து பயன்படுத்துதல், கிணறுகளை பாதுகாப்பாக அமைத்தல், கழிப்பறைகளையும் குடிநீர் ஆதாரங்களையும் போதிய இடைவெளியில் அமைத்தல், வெள்ளத்திற்குப் பின் உடனடி நீர் பரிசோதனை மேற்கொள்ளுதல் மற்றும் பொதுச் சுகாதார கண்காணிப்பை வலுப்படுத்துதல் ஆகியவை முக்கியமான தடுப்பு நடவடிக்கைகளாகும் முந்தைய காலத்தில் நாம் இவ்வாறு கிணற்று நீரினை பரிசோதனைக்கு உட்படுத்தி குடிப்பதில்லை என்ற பழமைவாதிகள் குற்றச்சாட்டுக்கான பதில் முன்பு சனத்தொகை குறைவாக இருந்த காரணத்தினால் கிணறு – மலக்குழி ஆகியவற்றுக்கு இடையே கணிசமான தூரம் இருந்தது ஆனால் தற்போதைய காலத்தில் அவ்வாறு அல்ல என்பதே ஆகும். நன்றி Dr. கனகசபாபதி வாசுதேவா MBBS , Post Graduate Diploma in Legal Medicine (DLM ), Post Graduate Diploma in Toxicology மற்றும் MD (Forensic Medicine) https://tamilforensic.com/about/
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அண்ணை, புதிய மலசலகூடத்திற்கு காரைநகரில் ஏற்கனவே 5 பேருக்கு கோரிக்கை வைத்துள்ளார்கள், நேற்று மேலும் 3 பேருக்கு அவசரமாக தேவை என்று கேட்டவர்கள். முதலில் ஒன்றைத் செய்து நடைமுறைச் செயற்பாடுகளைப் புரிந்துகொண்டு பின்னர் தொடருவோம் எனக்கூறி இருக்கிறேன். உண்மையில் வீட்டில் இருந்தபடி பொருத்தமானவர்களிடம் வேலைகளை ஒப்படைத்து செய்வித்த நான் ஒரு கருவி மட்டுமே. இந்தப்பணிகளைச் செய்ய தூண்டியது மட்டுமல்லாமல் நிதி உதவி அளித்த நல்லுள்ளங்களுக்குத் தான் மிகப்பெரிய நன்றிகளைத் தெரிவிக்கிறேன். @குமாரசாமி அண்ணை, @வாத்தியார்அண்ணை , @goshan_cheஅண்ணை வட்டு.தெற்கு திரு நா.பரராஜசிங்கம் ஐயாவிற்கு மேலும் ஒரு 50000 ரூபாவை வழங்கட்டுமா? மலசலகூட குழிக்கு கல்லு கட்டவேணும்.(குழிக்குள் தண்ணீர் இருக்குதே என்று கேட்டதற்கு இறைத்து இறைத்துக் கட்டுவதாக கூறினார் T/O) கணேஷா ஹாட்வெயார் கடைக்கு செலுத்தவேண்டி உள்ளது 84850-80000=4850 ரூபாவையும் வழங்குகிறேன். கம்பிகட்டி பிளேற் போட்ட கூலி, கொமட் பூட்டிய கூலி, அசிட் போட்டு சுத்தமாக்கிய கூலி(அசிற் காசும்) கொடுக்கிறேன். 35000 ரூபா கேட்டவர், எல்லாவற்றையும் விபரமாக எழுதி தரச்சொல்லி உள்ளேன். வேலைக்காசு கூட என்று ரT/O தம்பி கூறினார், செய்து தந்த சீலனிடம் கேட்டதற்கு பாவனையில் உள்ள மலசலகூடப்பணிகளை(துர்நாற்றம்) செய்வதற்கு பலரும் வரமாட்டினம் என்று கூறினார். புதிதாக செய்வதற்கு உள்ள சம்பளம் வாங்குவினமாம். காரைநகரில் புதியமலசலகூடம் கட்டுவதற்கான செலவுக்கணிப்பு விபரம் காரைநகரில் புதியமலசலகூடம் கட்டுவதற்கான செலவுக்கணிப்பு விபரம் கிடைத்துள்ளது. அதன்படி 279,408 ரூபா எனக்குறிப்பிட்டுள்ளார். இது முன்னர் வேறொரு T/O கூறியதை விட 80000 ரூபா அதிகமாக உள்ளது. இதனை மாதிரியாக கொண்டு வேறு சிலரிடம் பட்ஜட் எவ்வளவு வரும் என விசாரித்து பின்னர் தொடங்குவோம். பொன்னாலை வேலை செய்த சீலனிடம் கேட்டபோது பொருட்களை வாங்கித்தரட்டாம் சம்பளத்திற்கு(லேபர் கொன்றாக்ற்) செய்து தருகிறேன் என்று சொன்னவர். இன்று காரைநகர் சென்று பார்த்துவிட்டு கணக்கு தருகிறேன் என்று கூறியுள்ளார்.
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அண்ணை, வட்டு.தெற்கு வட்டுக்கோட்டை திரு நா.பரராஜசிங்கம் ஐயாவின் மலசலகூடம் அரைவாசி கட்டியபடி இருந்தது, இதனை பூரணப்படுத்தவேண்டும் என கோரிக்கை வைத்தபோது நீங்கள் உட்பட யாழ் - முன்னோடி செயற்றிட்டத்தில் பங்களிப்போர் பலரும் சம்மதித்து தான் அந்தப்பணிக்கு நிதி வழங்க தொடங்கினோம். இரண்டாவது பொன்னாலை திரு ஏரம்பு ஐயாவின் 3 இயலாமை உடைய பிள்ளைகளின் மலசலகூடத்திருத்தத்திற்கு ஏனைய உறவுகள் சம்மதித்துத் தான் அதனைத் தொடங்கி விரைவாக இன்று முடித்துக் கொடுத்துள்ளோம். அவர்களை நிலத்தில் உள்ள மலசல கூடத்தில் வைத்து தான் மலங்கழிக்க வைத்ததாக இன்றையதினம் நேரடியாக சென்றபோது சகோதரி கூறினார். இதனால் எனக்கு இந்தப்பணியை உடனடியாக செய்து கொடுத்தது மிகுந்த மனநிறைவைத் தந்தது. இவர்களுடைய மலசலகூடப் பிளேற் உடைந்துள்ளதால் உடனடியாக தண்ணீர்க் கொள்கலன் வைப்பதற்கு மாற்றுவழி செய்யவேண்டி உள்ளது. அவர்கள் உள்ளே இருக்கையில் ஆபத்தை தேடாமல் இருக்க குறைவாக நீரை அடித்து பாவிக்க சொல்லிவிட்டு வந்தேன். இந்தப்பணியை இத்தோடு முடித்துவிடவா? இல்லை தண்ணீர் கொள்கலன்(500 லீற்றர்) வைப்பதற்கான ஏற்பாட்டை செய்துகொடுப்பமா? உங்கள் பதில் தெரிந்தபின் செய்வோம். குமாரசாமி அண்ணா விரும்புவது போல் புதிய மலசலகூடம் கட்டுவது மட்டும் தான் நல்லது என விரும்பினால் இவர்களுடைய மலசல கூடப்புனரமைப்புக்கான நிதியை புலர் அறக்கட்டளை நிர்வாகத்திடம் அனுமதி பெற்று பெற்றுத்தர முயல்வேன், அல்லது வேறு பொருத்தமான அமைப்புகளிடம் கேட்டுப்பெற்றுத் தருவேன். நான் புரிந்து கொள்வது அறவே மலசலகூடம் இல்லாதவர்களின் வாய்ப்பைத்தட்டிப்பறிக்கக் கூடாதல்லவா? அங்கு எஞ்சியுள்ள பொருட்கள் 3 1/2 பைக்கற் சீமந்து 7000 ரூபா பெறுமதியானது, அண்ணளவாக 1 லான்ட் மாஸ்ரர் மண் 12500 ரூபா பெறுமதியானது, அண்ணளவாக 3/4 லான்ட் மாஸ்ரர் சல்லி 5625 ரூபா, 1 1/2 கம்பி 1500 ரூபா. மொத்தமாக மிஞ்சிய பொருட்கள் பெறுமதி அண்ணளவாக 26625 ரூபா.(லான்ட் மாஸ்ரர் கணக்கு என்னுடைய கண் பார்வையின் புரிதல்படி) இன்று நேரடியாகச் சென்று பார்த்து வந்தேன், படங்கள் சில. முதலாவது பற்றுச்சீட்டு: 8 பைக்கற் சீமந்து 16000 ரூபா பெறுமதியானது, 2 லான்ட் மாஸ்ரர் மண் 25000 ரூபா(விலை 1000 ரூபா கூட), 2 லான்ட் மாஸ்ரர் சல்லி 15000 ரூபா, 20 கம்பி 20000 ரூபா, 1 கிலோ கட்டுக்கம்பி 400 ரூபா, பொருட்கள் இறக்கிய கூலி 2000 ரூபா(1000 ரூபா கூட முதலில் கூறியதை விட 4 தடவைகள் இறக்கியது) இரண்டாவது பற்றுச்சீட்டு: 4 1/2 கிலோ பொலித்தீன் 1500 ரூபா மூன்றாவது பற்றுச்சீட்டு: என்ன பொருள் என விளங்கவில்லை 700 ரூபா, 1 1/2 இஞ்ச் பைப் 2 பிற் வென்ரிலேசனுக்கு 2500 ரூபா, 2 பென்ட் 400 ரூபா, 4 சீற் ரெஜிபோம் 1350 ரூபா. மொத்தச் பொருட்கள் செலவு 78400+1500+4950=84850 ரூபா கணேஷா ஹாட்வெயார் கடைக்கு செலுத்தவேண்டி உள்ளது 84850-80000=4850 ரூபா. கம்பிகட்டி பிளேற் போட்ட கூலி, கொமட் பூட்டிய கூலி, அசிட் போட்டு சுத்தமாக்கிய கூலி(அசிற் காசும்) கொடுக்கவேண்டும்.
-
அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய மறுசீரமைப்பு - அமைச்சரவை எடுத்த முடிவு
அரசாங்க ஊழியர்களின் ஓய்வூதிய மறுசீரமைப்பு - அமைச்சரவை எடுத்த முடிவு 20 Jan, 2026 | 07:40 PM அரச பணிகளுக்காக 2016.01.01 திகதியின் பின்னர் இணைத்துக்கொள்ளப்பட்ட அரசாங்க உத்தியோகத்தர்களின் நியமனக் கடிதங்களில் ஓய்வூதிய உரித்து தொடர்பான விதிகளை திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. அதன்படி, அவர்களின் நியமன கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதியம் தொடர்பான ஏற்பாட்டை ‘இந்நியமனம் ஓய்வூதியம் உள்ளதாகும். நீங்கள் விதவை அல்லது தபுதாரர் ஓய்வூதிய முறைக்கு பங்களிப்புத் தொகை செலுத்தப்படல் வேண்டும்’ என்றவாறு திருத்தம் செய்வதற்கும், குறித்த விடயம் தொடர்பான ஆலோசனை சுற்றறிக்கையை வெளியிடுவதற்கும் பொதுநிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்கள் அமைச்சர் சந்தன அபேரத்ன சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அரச அலுவலர்களுக்கு மிகவும் பொருத்தமான பங்களிப்பு ஓய்வூதிய முறையை அறிமுகம் செய்வது தொடர்பான 2016 வரவு - செலவு திட்ட முன்மொழிவுக்கமைய 2016.01.01 திகதியின் பின்னர் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அரச அலுவலர்களின் நியமன கடிதங்களில் ‘இந்நியமனம் ஓய்வூதியத்துடன் கூடியதாகும். ஊழியர்களுக்கு உரித்தான ஓய்வூதிய முறை தொடர்பாக அரசால் மேற்கொள்ளப்படும் கொள்கை ரீதியான தீர்மானத்துக்கு இணங்கியொழுக வேண்டும்’ எனும் ஏற்பாடு உள்ளடக்கப்பட்டுள்ளது. இருப்பினும், 2016.01.01 திகதியின் பின்னர் அரச சேவைக்கு நியமனம் பெறுவோருக்கு புதிய ஓய்வூதிய முறை இதுவரை அமுல்படுத்தப்படவில்லை என்பதுடன், தற்போதுள்ள ஓய்வூதிய முறைக்கான அவர்களது உரித்தை உறுதி செய்து, குறித்த நியமன கடிதங்களில் குறிப்பிடப்பட்டுள்ள ஓய்வூதியம் தொடர்பான நிபந்தனை திருத்தம் செய்வதற்காக 2026 வரவு - செலவு திட்டத்தின் மூலம் முன்மொழியப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/236558
-
கருத்து படங்கள்
அத தெரண கருத்துப்படங்கள்.
-
தமிழர் உள்பட 18 இந்தியர்களுடன் கப்பலை சிறைபிடித்த இரான் - என்ன நடக்கிறது?
தமிழர் உள்பட 18 இந்தியர்களுடன் கப்பலை சிறைபிடித்த இரான் - என்ன நடக்கிறது? பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,கடந்த ஆண்டு டிசம்பரில் இரான் ஒரு கப்பலைக் கைப்பற்றியது. கப்பலில் இருந்த (இடமிருந்து வலமாக) துங்கா ராஜசேகர், தலைமை அதிகாரி அனில் குமார் சிங் மற்றும் மசூத் ஆலம். கட்டுரை தகவல் முகமது சர்தாஜ் ஆலம் பிபிசி ஹிந்திக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில், இரானில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடினர். மறுபுறம் உலக அரங்கில் இரானுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கான அறிகுறிகளை அமெரிக்கா வெளிப்படுத்தியது. இந்நிலையில், இரானில் கடந்த மாதம் இந்தியாவைச் சேர்ந்த 16 பேர் தடுத்து வைக்கப்பட்டனர், அவர்களில் 10 பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இரானில் நிலவும் தற்போதைய நெருக்கடியைக் கருத்தில் கொண்டு, சிறையில் உள்ள இந்தியர்களின் குடும்பங்களும் ஒரு குழப்பமான சூழலில் சிக்கியுள்ளனர். கடந்த ஆண்டு டிசம்பர் 8-ஆம் தேதி, சட்டவிரோத டீசல் வைத்திருந்ததாகக் கூறி டிப்பா துறைமுகத்திற்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் 'எம்டி வேலியன்ட் ரோர்' (MT Valiant Roar) கப்பலை 18 பணியாளர்களுடன் இரான் அதிகாரிகள் கைப்பற்றினர். கப்பல் குழுவினரில் இந்தியர்கள் பத்து பேரை ஜனவரி 6-ஆம் தேதி இரான் அதிகாரிகள் சிறையில் அடைத்தனர். 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' நிறுவனத்திற்குச் சொந்தமான அந்த கப்பலில் 16 இந்தியர்கள், ஒரு வங்கதேசத்தவர், இலங்கையைச் சேர்ந்த ஒருவர் இருந்தனர். இந்திய வெளியுறவு அமைச்சகம் கூறியது என்ன? பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,கப்பலின் கேப்டன் விஜய் குமார். இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் மற்றும் இரான் பிரிவில் பணியாற்றும் இந்திய வெளியுறவுத் துறை (IFS) அதிகாரியான எம். ஆனந்த் பிரகாஷ் இந்த விவகாரத்தை பிபிசி ஹிந்தியிடம் உறுதிப்படுத்தியுள்ளார். எம். ஆனந்த் பிரகாஷ் கூறுகையில், "வழக்கு அங்குள்ள நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. எனவே குற்றச்சாட்டுகள் குறித்து இரான் நீதிமன்றமே முடிவு செய்யும். ஆனால் டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம், பணியாளர்களுக்குத் தூதரக ரீதியிலான அணுகலைப் பெற முயற்சி செய்து வருகிறது," என்றார். "ஜனவரி 10-ஆம் தேதி தூதரக அணுகல் கிடைக்கும் என்று நாங்கள் நம்பினோம், ஆனால் இரானில் நிலவும் குழப்பம் காரணமாக எங்களால் அதைப் பெற முடியவில்லை. நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்," என்றும் கூறினார். டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகமும் ஒரு செய்திக்குறிப்பில் இந்த தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளது. டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் இது தொடர்பாக கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் மற்றும் 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' நிறுவனத்துடன் தொடர்பில் உள்ளது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து இரான் அரசாங்கம் இன்னும் பதில் அளிக்கவில்லை. இதற்கிடையில், 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' நிறுவனத்தின் உரிமையாளர் ஜோகிந்தர் பிரார், கப்பலில் ஆறாயிரம் மெட்ரிக் டன் சட்டவிரோத டீசல் இருந்ததாகக் கூறப்படுவது அடிப்படையற்ற குற்றச்சாட்டு என்று கூறினார். பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், "கப்பல் டீசலை ஏற்றிச் செல்லவில்லை, ஆனால் 'மிகக் குறைந்த கந்தக எரிபொருள் எண்ணெயை' (VLSFO) ஏற்றிச் சென்றது. இது, சர்வதேச கடற்பரப்பில் எங்களது பிற கப்பல்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக இருக்கக்கூடிய ஒரு வசதி. இது வழக்கமான செயல்முறையின் ஒரு பகுதியாகும்," என்றார். "ஆனால் கப்பலின் எரிபொருளை டீசல் என்று தவறாகக் கருதி இரான் எங்கள் குழுவினரை மோசமாக நடத்தியது கண்டிக்கத்தக்கது. இத்தகைய சூழ்நிலையில், எங்களது அனைத்துப் பணியாளர்களையும் பாதுகாப்பாக இந்தியாவுக்கு அழைத்து வருவதே எங்களது முன்னுரிமை," என்றார் ஜோகிந்தர் பிரார். உணவு மற்றும் குடிநீர் தட்டுப்பாடு பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,ஆகாஷ் குப்தா, திவாகர் புத்தி மற்றும் விஷால் குமார் (இடமிருந்து வலமாக) உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த கப்பல் கேப்டன் விஜய் குமார் மற்றும் ஆய்லர் (Oiler) ஆகாஷ் குப்தா, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த இரண்டாம் நிலை அதிகாரி துங்கா ராஜசேகர், டெக் ஃபிட்டர் நந்தகி வெங்கடேஷ் மற்றும் சமையல் பணிகளைச் செய்யும் திவாகர் புத்தி, பஞ்சாப்பைச் சேர்ந்த சீமேன்-1 விஷால் குமார் ஆகியோர் கடந்த 45 நாட்களாகக் கப்பலில் இரான் பாதுகாப்புப் படையினரின் கடுமையான கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆறு இந்தியர்களைத் தவிர, வங்கதேசத்தைச் சேர்ந்த தலைமைப் பொறியாளர் முகமது லுக்மான் மற்றும் இலங்கையைச் சேர்ந்த மின்-தொழில்நுட்ப அதிகாரி பிரியா மனதுங்க ஆகியோரும் கப்பலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கப்பலில் உள்ள பணியாளர்களிடமிருந்து பிபிசி ஹிந்திக்கு கிடைத்த தகவலின்படி, எட்டு பணியாளர்களின் நிலையும் மிகவும் மோசமாக உள்ளது. அவர்கள் 14-க்கு-10 அளவுள்ள உணவு அறையில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அங்கேயே அவர்கள் இரவில் உறங்குகிறார்கள். ஒவ்வொரு நாள் காலையிலும், இந்திய தூதரகமும் கப்பல் நிறுவனமும் தங்களை மீட்டுவிடும் என்ற நம்பிக்கையுடன் அவர்கள் கண் விழிக்கிறார்கள். அதே சிறிய அறையிலேயே அவர்கள் தங்களது நாட்களைக் கழிக்கிறார்கள். இந்த நிலை கடந்த ஒன்றரை மாதங்களாகத் நீடிக்கிறது. பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,கேதன் மேத்தாவின் தந்தை முகேஷ் மேத்தா டிசம்பர் மூன்றாவது வாரத்தில் கப்பலில் இருந்த அனைத்து உணவுப் பொருட்களும் தீர்ந்துபோனபோது, கப்பல் உரிமையாளர் ஜோகிந்தர் பிரார் டிசம்பர் 25-ஆம் தேதி உணவுப் பொருட்களை அனுப்பினார். ஆனால் ஒரு வாரம் கழித்து, அரிசி மட்டுமே எஞ்சியிருந்தது. இத்தகைய சூழ்நிலையில், கப்பலில் உள்ள இந்தியச் சமையல்காரரான திவாகர் புத்தி, ஒரு நாளைக்கு இரண்டு முறை அரிசி சமைக்கிறார், அதை எட்டு பேரும் உப்போடு சேர்த்துச் சாப்பிடுகிறார்கள். கப்பலில் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ள பணியாளர்கள் கடந்த பத்து நாட்களாக குடிநீர் இல்லாமல் இருப்பதாகக் கூறுகின்றனர். எனவே, அவர்கள் கப்பலில் உள்ள "குடிப்பதற்கு அல்ல" என்று தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ள தொழிற்சாலை நீரை (Industrial water) கொதிக்க வைத்து குடிப்பதற்குப் பயன்படுத்துகிறார்கள். எரிபொருள் பிரச்னை காரணமாக, அவர்கள் இரவில் மட்டுமே ஜெனரேட்டரைப் பயன்படுத்துகின்றனர். இத்தகைய முயற்சிகள் ஒருபுறம் என்றாலும், டீசல் எவ்வளவு காலம் நீடிக்கும் என்ற கவலை உள்ளது. கேப்டன் விஜய்யின் சகோதரர் வினோத் பன்வாரின் கூற்றுப்படி, கப்பலின் எரிபொருளும் தீர்ந்துபோகும் நிலையில் உள்ளது. பணியாளர்களின் உடைமைகளைக் கைப்பற்றிய இரான் பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,அன்சாரி மன்சூர் ஆலம், கேதன் மேத்தா, ஷோயப் அக்தர் (இடமிருந்து வலமாக) டிசம்பர் 8-ஆம் தேதி, இரான் பாதுகாப்புப் படையினர் 'எம்டி வேலியன்ட் ரோர்' பணியாளர்கள் அனைவரின் மொபைல் போன்கள், லேப்டாப்கள் மற்றும் ஆடைகள் அடங்கிய பைகளை வலுக்கட்டாயமாகப் பறிமுதல் செய்தனர். நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, இரான் பாதுகாப்புப் படையினர் அவர்களுக்கு ஒரு மொபைல் போனை வழங்கினர், அதன் உதவியுடன் இந்த ஆறு இந்தியர்களும் ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் தங்களது குடும்பத்தினருடன் பேசுகிறார்கள். ஆனால் ஜனவரி 31-ஆம் தேதி வரை 5 ஜிபி டேட்டா மட்டுமே கிடைக்கும் என்பதால், இத்தகைய அழைப்புகளும் நீண்ட காலம் நீடிக்காது என்று கேப்டன் விஜய் குமாரின் சகோதரர் வினோத் பன்வார் கூறுகிறார். ஆரம்பத்தில், அனைவரும் மொபைல் போன்கள் பயன்படுத்தக் கடுமையாகத் தடை விதிக்கப்பட்டது. சமீப நாட்களில், அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் தொடர்பு கொள்ள மொபைல் போன்களைப் பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் கப்பலில் நிலவும் தண்ணீர் உள்ளிட்ட பிற அடிப்படை வசதிகளின் தட்டுப்பாடு குறித்துப் பேசிய ஜோகிந்தர் பிரார், "அவர்களுக்குத் தேவையான வசதிகளை விரைவாக வழங்க நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சி செய்து வருகிறோம்," என்றார். அதே சமயம் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கப்பல் நிறுவனம் மீது அதிருப்தி தெரிவிக்கின்றனர். கப்பலின் மூன்றாவது பொறியாளர் கேதன் மேத்தாவின் தந்தை முகேஷ் மேத்தா கூறுகையில், "டிசம்பர் 8-ஆம் தேதி இந்தச் சம்பவம் நடந்தபோதே, கப்பல் நிறுவனம் இதைத் தீவிரமாக எடுத்து முன்னுரிமை அளித்திருந்தால், இன்று எனது மகன் உட்பட பத்து பேர் சிறையில் இருந்திருக்க மாட்டார்கள்," என்றார். பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,மசூத் ஆலமின் தந்தை இப்ரார் அன்சாரி உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த தலைமை அதிகாரி அனில் குமார் சிங், சீமேன் ஆகாஷ் குமார் சிங், கோபால் சௌகான் மற்றும் ஷோயப் அக்தர், ஆந்திரபிரதேசத்தைச் சேர்ந்த மூன்றாம் நிலை அதிகாரி ஜம்மு வெங்கட், ஹரியானாவைச் சேர்ந்த இரண்டாம் பொறியாளர் சதீஷ் குமார், டெல்லியைச் சேர்ந்த மூன்றாவது பொறியாளர் கேதன் மேத்தா, தமிழ்நாட்டைச் சேர்ந்த தொழில்நுட்ப பணியாளர் ஏரோ தாரிஷ், பிகாரைச் சேர்ந்த ஆயிலர் மசூத் ஆலம் மற்றும் மும்பையைச் சேர்ந்த ஆயிலர் அன்சாரி மன்சூர் அகமது ஆகியோர் ஜனவரி 6-ஆம் தேதி இரானிய பாதுகாப்புப் படையினரால் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த 16 பணியாளர்களில், பலரது பயணம் இந்த ஜனவரியில் முடிவடையவிருந்தது. விஷால் குமார், நந்தகி வெங்கடேஷ் மற்றும் மசூத் ஆலம் ஆகியோரின் ஒன்பது மாதப் பயணம் இந்த ஜனவரியில் முடிவடையவிருந்தது. பிகாரைச் சேர்ந்த மசூத் ஆலமின் தந்தை இப்ரார் அன்சாரி கூறுகையில், "எனது மகன் கடைசியாக ஜனவரி 5-ஆம் தேதி அழைத்தான், ஆனால் அப்போது குறைவான நேரமே பேச முடிந்தது. அதன்பிறகு என்னால் அவனுடன் பேச முடியவில்லை," என்றார். தனது மகனின் ஆரோக்கியம் குறித்து கவலைப்படும் இப்ரார் அன்சாரி, "டிசம்பர் 8-ஆம் தேதி அனைவரும் காவலில் எடுக்கப்பட்டபோது, மசூத் ஆலமுக்கு காய்ச்சல் இருந்தது. இப்போது அவரது நிலை குறித்து எந்தத் தகவலும் இல்லை," என்றார். ஈத் பண்டிகைக்குப் பிறகு மசூத் திருமணம் செய்யவிருந்தார், ஆனால் இப்போது அவரது குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. மசூத்தைப் போலவே, ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த துங்கா ராஜசேகரின் ஒரே சகோதரிக்கு மார்ச் மாதம் திருமணம் நடைபெறவுள்ளது. இத்தகைய சூழல்கள் குறித்துப் பேசிய முகேஷ் மேத்தா, "எனது வீட்டில் திருமணம் எதுவும் இல்லை, ஆனால் மகன் கேதன் சிறைக்குச் சென்ற செய்தியைக் கேட்ட பிறகு, அவரது தாயாரின் உடல்நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது," என்றார். பிபிசி ஹிந்தியிடம் பேசிய அவர், "இது எனது குடும்பத்தின் பிரச்னை மட்டுமல்ல, 16 குடும்பங்களின் பிரச்னை. நாங்கள் மின்னஞ்சல் அனுப்பாத துறையே இல்லை, ஆனால் இன்றுவரை யாரிடமிருந்தும் எங்களுக்கு எந்தப் பதிலும் கிடைக்கவில்லை," என்றார். குடும்பத்தினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,அனில் சிங்கின் மனைவி காயத்ரி சிங் முகேஷ் மேத்தாவைப் போலவே, அனில் சிங்கின் மனைவி காயத்ரி சிங், தனது கணவர் உட்பட கப்பல் பணியாளர்கள் அனைவரையும் இரான் மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாக நம்புகிறார். "இரானுக்குக் கப்பல் நிறுவனம் மீதோ அல்லது அதில் ஏற்றிச் செல்லப்படும் சரக்கு குறித்தோ ஏதேனும் பிரச்னை இருந்தால், அது நேரடியாக நிறுவனத்திடம் பேச வேண்டும், ஊழியர்களைத் துன்புறுத்தக் கூடாது," என்றார் காயத்ரி சிங். இந்தக் கருத்துடன் உடன்படும் இந்திய மாலுமிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரதீப் சிங் கூறுகையில், "நிறுவனமே கப்பலின் ஆபரேட்டர். கப்பலில் என்ன செல்கிறது என்பதை நிறுவனம் தான் தீர்மானிக்கிறது, பணியாளர்கள் அல்ல. எனவே, பணியாளர்களைச் சிறைக்கு அனுப்பும் இரானின் முடிவு முற்றிலும் மனிதத்தன்மையற்றது," என்றார். துபாயைச் சேர்ந்த 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' நிறுவனத்தின் உரிமையாளர் ஜோகிந்தர் பிரார், "இரானுடன் பேச்சுவார்தை நடத்த நிறுவனம் முயற்சி செய்து வருகிறது, ஆனால் இரான் அரசு பேசத் தயாராக இல்லை" என்றார். "இது முதல் முறை அல்ல, இரண்டாவது முறையாக எங்களது கப்பல் இரானால் கைப்பற்றப்பட்டுள்ளது," என்கிறார் ஜோகிந்தர் பிரார். பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,இந்திய மாலுமிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரதீப் சிங் டிசம்பர் 5, 2023 அன்று, பிராரின் மற்றொரு கப்பல் சட்டவிரோத டீசல் ஏற்றிச் சென்றதாகக் கூறி இரானால் பறிமுதல் செய்யப்பட்டது. அப்போது அந்தக் கப்பலில் "21 பணியாளர்கள் இருந்தனர். ஒன்பது மாதங்களுக்குப் பிறகு அவர்களில் 18 பேரை இரான் விடுவித்தது. மூன்று பணியாளர்கள் இன்றும் சிறையில் உள்ளனர்," என்று ஜோகிந்தர் பிரார் கூறுகிறார். "நாங்கள் அன்றிலிருந்து முயற்சி செய்து வருகிறோம். இப்போது அவர்கள் இரண்டாவது கப்பலைப் பறிமுதல் செய்துள்ளனர். இரண்டு கப்பல்களிலும் மிகக் குறைந்த கந்தக எரிபொருள் எண்ணெய் (VLSFO) தொடர்பான ஆவணங்கள் இருந்தபோதிலும், இரானில் எந்த விசாரணையும் நடைபெறவில்லை," என்கிறார் அவர். இந்திய மாலுமிகள் பொதுச் செயலாளர் பிரதீப் சிங், 'பிரைம் டேங்கர்ஸ் எல்எல்சி' தொடர்பாகப் பல பிரச்னைகள் தனது கவனத்திற்கு வந்துள்ளதாகவும், அது குறித்து ஏற்கனவே கப்பல் போக்குவரத்துத் துறை இயக்குநரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார். ஆனால் கேப்டன் விஜய் குமாரின் மனைவி சோனியா பெரும் சோகமும் கோபமும் கலந்த ஒரு நிலையில் தவிக்கிறார். "இந்த 42 நாட்களில் நாங்கள் விரக்தியடைந்துவிட்டோம். எனவே இந்தப் பிரச்னையை சமாளிக்க, நாங்கள் (குழுவினரின் குடும்ப உறுப்பினர்கள்) அனைவரும் நீதிமன்றத்தை அணுகியுள்ளோம்," என்றார். பட மூலாதாரம்,Mohd Sartaj Alam/BBC படக்குறிப்பு,கேப்டன் விஜய் குமாரின் மனைவி சோனியா நீதிமன்றத்தை நாடியுள்ளார். டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் விஜய் சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் தாக்கல் செய்த மனுவின் மீதான விசாரணை ஜனவரி 15 அன்று நடைபெற்றது. அதில் நீதிமன்றத்தில் மத்திய அரசு சார்பில் ஆஜரான சிஜிஎஸ்சி (CGSC) நிதி ராமன், "அரசாங்கத்தால் தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. மனுதாரர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற சாத்தியமான அனைத்து உதவிகளும் வழங்கப்படும்," என்று கூறினார். நீதிமன்றத்தில் அடுத்த விசாரணை ஜனவரி 21-ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதே நேரத்தில் கப்பல் நிறுவன உரிமையாளர், "விவகாரத்தைத் தீர்க்க நாங்கள் ஒரு வழக்கறிஞரை நியமித்துள்ளோம். ஆனால் இரானில் நிலவும் மோசமான உள்நாட்டுச் சூழ்நிலை காரணமாக, வழக்கறிஞரால் பணியாளர்களைச் சந்திக்க முடியவில்லை," என்றார். இருப்பினும், சரக்குகளை கையாளும் கப்பல் நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று இந்திய மாலுமிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பிரதீப் சிங் கூறுகிறார். "பணியாளர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. எனவே, இந்த விவகாரத்தை முழுமையாக ஆய்வு செய்த பிறகு, அனைத்துப் பணியாளர்களையும் உடனடியாகத் தாயகம் அழைத்து வரக் கோரி கப்பல் போக்குவரத்து தலைமை இயக்குநரைச் சந்திப்போம்" என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgkzg67v6xo
-
“சீனா அச்சுறுத்தல்” என்ற பெயரில் அரசியல் இலாபம் தேடுகிறது அமெரிக்கா – சீனா குற்றச்சாட்டு
“சீனா அச்சுறுத்தல்” என்ற பெயரில் அரசியல் இலாபம் தேடுகிறது அமெரிக்கா – சீனா குற்றச்சாட்டு 20 Jan, 2026 | 11:41 AM கிரீன்லாந்துக்கு சீனா அச்சுறுத்தலாக இருப்பதாக அமெரிக்கா முன்வைத்து வரும் குற்றச்சாட்டுகளை சீனா கடுமையாக மறுத்துள்ளது. இந்த விவகாரத்தில் “சீனா அச்சுறுத்தல்” என்ற சொற்றொடரை பயன்படுத்தி அமெரிக்கா தன்னிச்சையான சுயலாபங்களை அடைய முயற்சிப்பதாக சீன அரசு குற்றம் சாட்டியுள்ளது. பீஜிங்கில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் குவோ ஜியாகுன் இந்த விடயத்தைத் தெரிவித்தார். “சீனா அச்சுறுத்தல்” என்ற பெயரை ஒரு காரணமாகக் கொண்டு தங்களின் அரசியல் மற்றும் இராணுவ இலக்குகளை முன்னெடுக்க அமெரிக்கா முயற்சிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்த கண்டனம், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட நீண்ட பதிவைத் தொடர்ந்து வெளியாகியுள்ளது. அந்த பதிவில், ஆர்க்டிக் பிராந்தியத்தில் சீனா மற்றும் ரஷ்யா ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளவும், வட அமெரிக்காவை கண்டம் விட்டு கண்டம் தாண்டும் ஏவுகணை தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும் “கோல்டன் டோம்” (Golden Dome) என அழைக்கப்படும் பாதுகாப்புத் திட்டத்தை உருவாக்க அமெரிக்காவுக்கு கிரீன்லாந்து அவசியம் என ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். இதற்குப் பதிலளித்த சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர், கிரீன்லாந்து தொடர்பான சீனாவின் நிலைப்பாடு ஏற்கனவே பல தடவைகள் தெளிவாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஐக்கிய நாடுகள் சபைச் சட்டத்தின் நோக்கங்களும் கொள்கைகளும் அடிப்படையாகக் கொண்ட சர்வதேச சட்டமே இன்றைய உலக ஒழுங்கின் அடித்தளமாக இருப்பதாகவும், அந்தச் சட்டங்களை அனைத்து நாடுகளும் மதித்து பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். மேலும், ஆர்க்டிக் பிராந்தியத்தில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் ஒத்துழைப்பை பேணுவது சர்வதேச சமூகத்தின் பொது பொறுப்பாகும் எனவும், மோதல்களை தூண்டும் வகையிலான குற்றச்சாட்டுகள் உலக அமைதிக்கு பாதகமாக அமையும் எனவும் சீனா தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/236505
-
தனியார் துறையினருக்கான சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிப்பு!
தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் அதிகரிப்பு Jan 20, 2026 - 01:26 PM ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் தனியார் துறையின் குறைந்தபட்ச சம்பளம் 3,000 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டு தொழில் ஆணையாளர் நாயகம் எச். எம். டி. என். கே. வத்தலியத்த குறிப்பிடுகையில், அதற்கமைய குறைந்தபட்ச சம்பளம் 27,000 ரூபாவிலிருந்து 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படுவதாகத் தெரிவித்தார். 2025 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க ஊழியர்களின் தேசிய குறைந்தபட்ச சம்பள திருத்தச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இந்தச் சம்பள அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திருத்தச் சட்டத்தை உரிய முறையில் நடைமுறைப்படுத்தும் போது, இடைத்தரகர் அல்லது ஒப்பந்தக்காரர் மூலம் ஏதேனும் கைத்தொழில் அல்லது சேவையில் ஈடுபடுத்தப்படும் ஊழியர் தொடர்பில், அண்மைய தொழில் வழங்குநர் மற்றும் இறுதித் தொழில் வழங்குநர் உட்பட அனைத்துத் தொழில் வழங்குநர்களும் அச்சட்டத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டுள்ளதாகத் தொழில் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளார். மேலும், திருத்தச் சட்டத்தின் 4 ஆவது பிரிவின் படி, வரவு செலவுத்திட்ட நிவாரணக் கொடுப்பனவுகளைச் சேர்ப்பதைத் தவிர, ஊழியர் ஒருவரால் 2025.03.31 ஆம் திகதியாகும் போது பெற்றுக்கொண்டிருந்த வேறு எந்தக் கொடுப்பனவையும் குறைந்தபட்ச சம்பளத்திற்காக ஈடுசெய்ய பயன்படுத்தக்கூடாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தச் சம்பள அதிகரிப்பிற்கு அமைய ஊழியர் சேமலாப நிதியம் (EPF), ஊழியர் நம்பிக்கை நிதியம் (ETF), மேலதிக நேரம் (Overtime), பணிக்கொடை (Gratuity), மகப்பேற்று நன்மைகள் மற்றும் விடுமுறைத் தினக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட அனைத்துச் சட்டப்பூர்வ கொடுப்பனவுகளுக்கும் இதனைப் பிரயோகிக்கும் பொறுப்பு தொழில் வழங்குநர்களுக்கு உரித்தாகும். ஏதேனும் ஒரு வகையில், உரிய முறையில் கொடுப்பனவுகளை மேற்கொள்ளாத தொழில் வழங்குநர்கள் இருப்பின், அது தொடர்பான முறைப்பாடுகளை cms.labourdept.gov.lk ஊடாக தொழில் திணைக்களத்தின் முறைப்பாட்டு முகாமைத்துவக் கட்டமைப்பில் பதிவிடலாம் அல்லது அருகில் உள்ள தொழில் அலுவலகத்தில் எழுத்துமூலம் சமர்ப்பிக்க முடியும். https://adaderanatamil.lk/news/cmkmavctd046ao29ng3cgx9f5
-
சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் ; சரத் வீரசேகர
சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் ; சரத் வீரசேகர 19 Jan, 2026 | 09:40 PM (இராஜதுரை ஹஷான்) பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் அரசாங்கம் செயற்படுகிறது. சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சரத் வீரசேகர தெரிவித்தார். திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப்ப தேரர் உட்பட ஒன்பது பேர் திங்கட்கிழமை (19) திருகோணமலை நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இதன்போது கஸ்ஸப்ப தேரருக்கு சார்பாக சரத் வீரசேகர உட்பட பௌத்த அமைப்புக்களின் பிரதிநிதிகள் முன்னிலையாகியிருந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, பௌத்த மதம் பாதுகாக்கப்பட வேண்டும், போசிக்கப்பட வேண்டும் எந்நிலையிலும் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்கப்பட வெண்டும் என்று தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் இந்த அரசாங்கம் பௌத்தத்துக்கு முன்னுரிமை வழங்காமல் அரசியலமைப்புக்கு முரணாக செயற்படுகிறது. திருகோணமலை பகுதியின் காணி உறுதிப்பத்திரம் வழங்கப்பட்ட பகுதியில் புத்தர் சிலை வைத்ததற்கு எதிராக கரையோர பாதுகாப்பு அதிகாரசபை வழக்குத் தாக்கல் செய்துள்ளது. அவ்வாறாயின் கடற்கரையோரங்களில் உள்ள சகல புத்தர்சிலைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அநுராதபுரத்துக்கு பௌத்த வழிபாடுகளுக்கு வருபவர்கள் மனதில் குரோதத்துடன் வருவதாக ஜனாதிபதி குறிப்பிட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த அரசாங்கம் பௌத்தத்துக்கு எதிராகவே செயற்படுகிறது. சிங்கள பௌத்தர்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு என்பதை ஜனாதிபதி விளங்கிக் கொள்ள வேண்டும். குறுகிய அரசியல் நோக்கங்களுக்காகவும், தமிழ் அரசியல்வாதிகளை மகிழ்விப்பதற்காகவும் பௌத்த தேரர்களை நெருக்கடிக்குள்ளாக்குவதை அரசாங்கம் தவிர்த்துக்கொள்ள வேண்டும், இல்லையேல் விளைவுகள் பாரதூரமானதாக அமையும் என்றார். https://www.virakesari.lk/article/236460
-
ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் 2026 தொடர்
அயர்லாந்தை வெற்றிகொண்ட இலங்கை உலகக் கிண்ண சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது Published By: Vishnu 19 Jan, 2026 | 11:35 PM (நெவில் அன்தனி) விண்ட்ஹோக், நமிபியா கிரிக்கெட் மைதானத்தில் திங்கட்கிழமை (19) நடைபெற்ற 16ஆவது ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண ஏ குழு போட்டியில் அயர்லாந்தை 106 ஓட்டங்களால் மிக இலகுவாக இலங்கை வெற்றிகொண்டது. ஏற்கனவே ஜப்பானை வெற்றிகொண்ட இலங்கை 3.090 என்ற நிகர ஓட்ட வித்தியாசத்துடன் ஏ குழுவுக்கான அணிகள் நிலையில் 4 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பெற்று தனது சுப்பர் சிக்ஸ் வாய்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது. இக் குழுவில் இடம்பெறும் அவுஸ்திரேலியா நாளைய போட்டியில் ஜப்பானை வெற்றிகொண்டால் சுப்பர் சிக்ஸ் சுற்றில் இலங்கை விளையாடுவது உறுதிசெய்யப்படும். இன்றைய போட்டியில் விமத் தின்சார, சாமிக்க ஹீனட்டிகல ஆகியோர் குவித்த அரைச் சதங்களும் துல்னித் சிகேரா, ரசித் நிம்சார ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் இலங்கையின் வெற்றியில் முக்கிய பங்காற்றின. அயர்லாந்துடனான இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 50 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 267 ஓட்டங்களைப் பெற்றது. எவ்வாறாயினும் இன்றைய போட்டியில் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. ஜப்பானுக்கு எதிரான முதல் போட்டியில் சதங்கள் குவித்து உலகக் கிண்ண சாதனை நிலைநாட்டிய திமன்த மஹாவின்ச, விரான் சமுதித்த ஆகிய இருவரும் ஒற்றை இலக்கை எண்ணிக்கைகளுடனும் துல்னித் சிகேரா 22 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். (59 - 3 விக்.) எனினும், அணித் தலைவர் விமத் தின்சார நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 4ஆவது விக்கெட்டில் கவிஜ கமகேயுடன் 80 ஓட்டங்களையும் 5ஆவது விக்கெட்டில் சாமிக்க ஹீனட்டிகலவுடன் 100 ஓட்டங்களையும் பகிர்ந்து இலங்கையை பலமான நிலையில் இட்டார். விரான் சமுதித்த துரதிர்ஷ்டவசமாக 5 ஓட்டங்களால் சதத்தைப் பெறத் தவறினார். 102 பந்துகளை எதிர்கொண்ட விமத் தின்சார 6 பவுண்டறிகள், ஒரு சிக்ஸுடன் 95 ஓட்டங்களையும் கவிஜ கமகே 49 ஓட்டங்களையும் சாமிக்க ஹீனட்டிகல ஆட்டம் இழக்காமல் 51 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் ஒலிவர் ரைலி 51 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அயர்லாந்து 40.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 161 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. துடுப்பாட்டத்தில் கெலம் ஆம்ஸ்ட்ரோங் (39), ரூபன் வில்சன் (32), அணித் தலைவர் ஒலிவர் ரைலி (31 ஆ.இ.) ஆகிய மூவரும் 30 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பந்துவீச்சில் துல்னித் சிகேரா 14 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ரசித் நிம்சார 29 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் குகதாஸ் மாதுளன் 27 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன்: விமத் தின்சார https://www.virakesari.lk/article/236471
-
ஐசிசி ஆடவர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர்
ரி20 உலகக் கிண்ணத்துக்கான பங்களாதேஷின் நிலைப்பாடு குறித்து ஐசிசி காலக்கெடு விதித்துள்ளது 19 Jan, 2026 | 06:00 PM (நெவில் அன்தனி) இந்தியாவுக்கு சென்று ஐசிசி ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் விளையாடுவதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்க பங்களாதேஷுக்கு ஜனவரி 21வரை (நாளைமறுதினம்) ஐசிசி காலக்கெடு விதித்துள்ளது. டாக்காவில் கடந்த சனிக்கிழமை (18) நடைபெற்ற கலந்துரையாடலின் போது பங்களாதேஷுக்கு ஐசிசி இந்த காலக்கெடுவை விதித்தது என அறியக்கிடைத்ததாக கிரிக்இன்போ செய்தி வெளியிட்டுள்ளது. ஐசிசிக்கும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபைக்கும் இடையில் ஒரே வாரத்தில் நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தின்போது, தனது ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளை விளையாடத் தயார் எனவும் ஆனால் அவை இந்தியாவுக்கு வெளியே விளையாடப்படவேண்டும் எனவும் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மீண்டும் தெரிவித்திருந்தது. ரி10 உலகக் கிண்ணத்தை இணை வரவேற்பு நாடாக நடத்தும் இலங்கை அவர்களது மாற்று இடமாகும். இந்தியாவுக்கு பயணிப்பதிலும் அங்கு விளையாடுவதிலும் பாதுகாப்பு கரிசனைகள் இருப்பதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் சி குழுவில் இடம்பெறும் பங்களாதேஷின் போட்டி அட்டவணை மாற்றப்படமாட்டாது என ஐசிசி உறுதிபடத் தெரிவித்துள்ளது. தங்களது கரிசனை குறித்து ஜனவரி 4ஆம் திகதி பங்களாதேஷ் முதல் தடவையாக ஐசிசியுடன் தொடர்பாடலில் ஈடுபட்டதிலிருந்து இந்த பிணக்கு கடந்த 3 வாரங்களாகத் தொடர்கிறது. பங்களாதேஷ் தனது ஆரம்பப் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகளை கொல்கத்தாவில் பெப்ரவரி 7ஆம் திகதி எதிர்த்தாடவுள்ளது. அதே மைதானத்தில்தான் இத்தாலியை பெப்ரவரி 9ஆம் திகதியும் இங்கிலாந்தை பெப்ரவரி 14ஆம் திகதியும் பங்களாதேஷ் சந்திக்கவுள்ளது. நேபாளத்துக்கு எதிரான பங்களாதேஷின் கடைசி போட்டி மும்பை வான்கேட் விளையாட்டரங்கில் பெப்ரவரி 17ஆம் திகதி நடைபெறவுள்ளது. ஒருவேளை, ரி20 உலகக் கிண்ணத்தில் பங்குபற்ற இந்தியா செல்வதை பங்களாதேஷ் முற்றாக மறுத்தால் 1996இல் அவுஸ்திரேலியாவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் நடந்த கதியை பங்களாதேஷ் எதிர்கொள்ள நெரிடும் என கருதப்படுகிறது. அவுஸ்திரேலியாவும் மேற்கிந்தியத் தீவுகளும் பாதுகாப்பு காரணங்களைக் காட்டி 1996 உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட இலங்கைக்கு செல்ல முடியாது என விடாப்பிடியாக இருந்தன. இதனை அடுத்து அவுஸ்திரேலியா, மேற்கிற்தியத் தீவுகள் ஆகியவற்றுடனான இலங்கையின் போட்டிகளுக்கு போட்டியின்றி தலா 3 வெற்றிப் புள்ளிகள் இலங்கைக்கு வழங்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அடுத்து 1996 உலகக் கிண்ணப் போட்டி ஆரம்பமாவதற்கு முன்னரே இலங்கை 6 வெற்றிப் புள்ளிகளை சம்பாதித்துக்கொண்டது. அந்த வருடம் தோல்வி அடையாத அணியாக இலங்கை உலக சம்பியனாகி இருந்தது. https://www.virakesari.lk/article/236459
-
ரஷ்யாவின் கம்சட்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு; 02 பேர் உயிரிழப்பு
ரஷ்யாவின் கம்சட்காவில் 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் பனிப்பொழிவு ; 02 பேர் உயிரிழப்பு Published By: Digital Desk 3 20 Jan, 2026 | 11:44 AM ரஷ்யாவின் தூரக் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள கம்சட்கா தீபகற்பத்தில் (Kamchatka Peninsula) கடந்த ஜனவரி 12 ஆம் திகதி முதல் பெய்து வரும் வரலாறு காணாத பனிப்பொழிவு, அந்தப் பிராந்தியத்தையே உறைய வைத்துள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலான சாதனைகளை முறியடித்துள்ள இந்தப் பனிப்பொழிவை உள்ளூர் மக்கள் "பனி அபோகாலிப்ஸ்" (Snow Apocalypse) என அழைக்கின்றனர். பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சட்ஸ்கி (Petropavlovsk-Kamchatsky) நகரில் 2 மீட்டருக்கும் அதிகமான பனி கொட்டியுள்ளது. சில இடங்களில் பனிச்சரிவுகள் 5 மீட்டர் (16 அடி) உயரம் வரை குவிந்துள்ளன. கட்டிடங்களின் கூரைகளில் இருந்து திடீரென சரிந்த பனிக் கட்டிகளில் சிக்கி இரண்டு முதியவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனைத் தொடர்ந்து நகரில் அவசரநிலை (State of Emergency) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. பனி வீடுகளின் வாசல்களை மறைத்ததால், மக்கள் சுரங்கங்கள் தோண்டி வெளியே வர வேண்டிய நிலை ஏற்பட்டது. பல அடுக்குமாடி குடியிருப்புகளின் இரண்டாவது மாடி வரை பனி மூடியுள்ளது. பாடசாலைகள், வணிக நிறுவனங்கள் மூடப்பட்டு, பொது போக்குவரத்து முற்றிலும் இடைநிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 15 ஆம் திகதி முதல் அவசரநிலை அறிவிக்கப்பட்டு, வீதிகளைச் சீரமைக்க மேலதிக இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டன. இராணுவ வீரர்களும் மீட்புப் பணியில் களமிறக்கப்பட்டனர். போக்குவரத்து முடங்கியதால் கடைகளில் பால், ரொட்டி போன்ற அத்தியாவசியப் பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது வீதிகள் மெதுவாகச் சீரமைக்கப்பட்டு வருகின்றன. ஜனவரி 21 ஆம் திகதிக்குள் முக்கிய வீதிகளை முழுமையாகச் சீரமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், குளிர் காற்று வீசுவதால் மீட்புப் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/236502
-
செம்மணி அகழ்வுப் பணியை முன்னெடுப்பது குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு
செம்மணி அகழ்வுப் பணியை முன்னெடுப்பது குறித்து நீதிமன்றம் முக்கிய உத்தரவு Jan 19, 2026 - 08:30 PM யாழ்ப்பாணம் - செம்மணி, சித்துபாத்தி இந்து மயானப் பகுதியில் அமைந்துள்ள மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணையில், அகழ்வுப் பணிகளைத் தொடர்வது குறித்து இன்று (19) முக்கியத் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ். லெனின்குமார் முன்னிலையில் இன்று இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிமன்ற விசாரணையைத் தொடர்ந்து, இன்று பிற்பகல் 3.00 மணியளவில் நீதிபதி எஸ். லெனின்குமார் தலைமையில், பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள், காணாமல் போனோர் அலுவலகத்தின் சட்டத்தரணிகள், குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் மயான நிர்வாகக் குழுவினர் ஆகியோர் அகழ்வுப் பணி நடைபெறும் இடத்தை நேரில் சென்று பார்வையிட்டனர். ஏற்கனவே அகழ்வுப் பணிகள் இடம்பெற்ற குழிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால், உடனடியாக அகழ்வுப் பணிகளைத் தொடர முடியாத நிலை காணப்படுகின்றது. எனவே, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி, நீதிமன்றக் கண்காணிப்பின் கீழ், சட்ட வைத்திய அதிகாரியின் மேற்பார்வையில் நல்லூர் பிரதேச சபையின் உதவியுடன் தேங்கியுள்ள நீரை வெளியேற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. நீர் அகற்றப்பட்ட பின்னரே அகழ்வுப் பணிகளுக்கான திகதி நிர்ணயிக்கப்படும். மயானத்தின் உட்புறத்தில் உள்ள பாதையை நல்லூர் பிரதேச சபையினர் சீரமைத்துள்ளமை தொடர்பில் பாதிக்கப்பட்டோர் தரப்பு சட்டத்தரணிகள் நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவந்தனர். இதனைப் பரிசீலித்த நீதிமன்றம், அகழ்வுப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை குறித்த வளாகத்தில் எவ்வித அபிவிருத்திப் பணிகளையோ அல்லது நிலத்தின் தோற்றத்தில் மாற்றங்களையோ ஏற்படுத்தக் கூடாது என உத்தரவிட்டுள்ளது. நீதிமன்ற அனுமதியின்றி எவ்வித பணிகளையும் அங்கு மேற்கொள்ள முடியாது எனவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளான ரனிதா ஞானராஜா மற்றும் நிரஞ்சன் ஆகியோர் ஊடகங்களுக்கு இந்தத் தகவல்களைத் தெரிவித்தனர். இந்த வழக்கு விசாரணை மீண்டும் பெப்ரவரி மாதம் 9ஆம் திகதி நடைபெறவுள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmklakm8f0459o29n81uv65ns
-
கொழும்பில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் !
கொழும்பில் இடம்பெற்ற ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் ! 19 Jan, 2026 | 05:55 PM படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்டட ஊடகவியலாளர்களுக்கான நீதி மறுக்கப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு இதுவரை முழுமையான நீதியினை பெற்றுத் தர முடியாத நிலை தொடரும் பின்னணியில், சுதந்திர ஊடக இயக்கம் ஆண்டுதோறும் ஏற்பாடு செய்யும் ‘கறுப்பு ஜனவரி’ நினைவேந்தல் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (19) இலங்கை பத்திரிகை நிறுவனத்தின் (SLPI) கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. ‘இருளை போக்கக்கூடிய வழி’ (අඳුර දුරු කළ හැකි මඟ) என்ற கருப்பொருளின் கீழ் இந்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது. இதில் ஊடக அமைப்புகள், ஊடகவியலாளர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில், படுகொலை செய்யப்பட்ட மற்றும் காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுகூரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடலில் பேராசிரியர் சாவித்ரி குணசேகர, மூத்த ஊடகவியலாளர் விஜயானந்த ஜயவீர மற்றும் ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமரப்பெரும ஆகியோர் பங்கேற்று கருத்துகளை பகிர்ந்தனர். கருத்து வெளிப்பாட்டு சுதந்திரம், ஊடக சுதந்திரம் மற்றும் ஜனநாயகத்தை பாதுகாப்பது ஆகிய நோக்கங்களுடன் இந்த நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது. மேலும், சுனில் ஜயசேகர, ஹனா இப்ராஹீம் மற்றும் ஆர். ராம்குமார் ஆகியோரும் இந்நிகழ்வில் உரையாற்றியதுடன், ஊடக சுதந்திரத்தின் அவசியத்தையும், ஊடகவியலாளர்களுக்கு நீதியினை உறுதிப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினர். https://www.virakesari.lk/article/236456
-
விஜயின் அறிவிப்பு தமிழக அரசியலில் மாற்றத்திற்கான தொடக்கம்
'விஜய் அறிவிப்பு தமிழக அரசியலில் மாற்றத்திற்கான தொடக்கம்' - பிபிசி தமிழுக்கு கிருஷ்ணசாமி பேட்டி பட மூலாதாரம்,Krishnasamy கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் "ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதை திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் கம்பளிப்பூச்சி போலப் பார்க்கின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறியிருப்பது, தமிழகத்தில் நடக்கவிருக்கின்ற அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பம் என்று நான் கருதுகிறேன்.'' என்று புதிய தமிழகம் கட்சியின் நிறுவனத் தலைவர் மருத்துவர் கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். பிபிசி தமிழுக்கு அவர் அளித்த பேட்டி: கடந்த சில தேர்தல்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம்பெற்றிருந்த புதிய தமிழகம், இப்போதும் அந்த கூட்டணியில் நீடிக்கிறதா? இந்த தேர்தலில் கூட்டணி மாறுவதற்கு வாய்ப்பிருக்கிறதா? கடந்த 2019 தேர்தலில் நாங்கள் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இடம் பெற்றிருந்தோம். அதன்பின் 2021 சட்டமன்றத் தேர்தலின்போது, சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டன. ஏழு பிரிவுகளை இணைத்து தேவேந்திர குல வேளாளர் என்று பெயரிட வேண்டும், இந்த சமுதாயத்தை பட்டியல் பிரிவிலிருந்து (SC) பிற்படுத்தப்பட்டோர் (OBC) பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற எங்கள் கோரிக்கை ஏற்கப்படாமல் பெயர் மாற்றம் மட்டும் ஏற்கப்பட்டதால் தனித்துப் போட்டியிடுவது என்ற முடிவை எடுத்தோம். சென்ற 2024 நாடாளுமன்றத் தேர்தலின்போது, அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் இடம்பெற்றது. அப்போது பாஜவுடன் கூட்டணியில் இருந்தால்தான் திமுக கூட்டணியை எதிர்கொள்ள முடியுமென்று கூறினோம். அதை அதிமுக ஏற்கவில்லை. அப்போதும் நாங்கள் அதிமுகவுடன் இருந்தோம். ஆனால், அதன்பின் சில மாதங்களிலேயே பாஜவுடன் மீண்டும் சேரும் முடிவை அதிமுக தலைமை எடுத்தது.'' கடந்த தேர்தலில் எங்களுடன் அதிமுக கூட்டணியில் இருந்த தேமுதிக, எஸ்டிபிஐ போன்ற கட்சிகளிடம் இதைப் பற்றிச் சொன்னார்களா என்று தெரியாது. ஆனால், எங்களிடம் எந்தத் தகவலும் சொல்லவில்லை. அதனால் நாங்கள் இப்போது இந்த கூட்டணியில் இருந்து விலகியதாகவும் இல்லை. துாரமாகப் போய்விட்டதாகவும் இல்லாமல் நாங்கள் நாங்களாக இருக்கிறோம்.'' தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக ஆட்சி மீதான அதிருப்தியால் (Anti Incumbency) மட்டுமே இரு கட்சிகளிடையே ஆட்சி மாற்றம் நடக்கிறது. மதுவிலக்கு, ஊழல் ஒழிப்பு, கனிம வளக்கொள்ளை நிறுத்தம், வேலைவாய்ப்பு சார்ந்து கொள்கைரீதியான ஆட்சி மாற்றம் வரவேண்டுமென்று நினைக்கிறோம். அது மட்டுமின்றி, இந்தத் தேர்தலில் ஜெயித்து சட்டமன்றத்துக்குப் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அதற்கேற்ப இந்த தேர்தலில் கூட்டணி முடிவெடுக்கப்படும். தமிழகத்தில் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு 'ஆட்சி அதிகாரத்தில் பங்கு' என்ற குரல், இந்த தேர்தலில் ஓங்கி ஒலிக்கிறது. கேரளாவைப் போல இங்கேயும் கூட்டணிக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தரவேண்டுமென்று நீங்களும் வலியுறுத்தியிருக்கிறீர்கள். தமிழகத்தில் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டுள்ள ஒரே கட்சி தவெக என்பதால் அக்கட்சியுடன் புதிய தமிழகம் கூட்டணி சேர வாய்ப்புள்ளதா? தமிழகத்தில் கடந்த 1967 ஆம் ஆண்டுக்குப் பின்பு, அரசியல் மாற்றம் எதுவும் நிகழவில்லை. இரு கட்சிகள்தான் மாறிமாறி ஆளுகின்றன. கூட்டணிக் கட்சிகளுக்கு எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. கடந்த 2006–2011 இடையிலான காலத்தில் திமுகவுக்குத் தனிப்பெரும்பான்மை இல்லாத நிலையிலும், ஆட்சிக்கு ஆதரவளித்த காங்கிரஸ் கட்சி முயன்றும் அமைச்சரவையில் பங்கேற்க முடியவில்லை. இப்போதும் இந்த கோரிக்கையை காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் வெளிப்படையாகப் பேச மறுப்பது வருத்தமாக உள்ளது. கேரளா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தந்ததால் அந்த ஆட்சிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டதில்லை. நன்றாகத்தான் ஆட்சியும் நடந்தன, நடக்கின்றன. இங்கு மட்டும் அந்த கட்சிகள் அதை பேச மறுப்பது ஏனென்று தெரியவில்லை. கூட்டணி ஆட்சி என்பதை திமுக, அதிமுக இரு கட்சிகளும் கம்பளிப்பூச்சியைப் போலப் பார்க்கின்றன. சமூகநீதி என்று வாயில் மட்டும் பேசக்கூடாது. சமூகநீதி என்பது எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான். இந்த தேர்தலில் எந்தக் கட்சியும் தனித்து பெரும்பான்மை பெற வாய்ப்பில்லை. அந்த வகையில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று விஜய் கூறியிருப்பது, தமிழகத்தில் அரசியல் மாற்றத்துக்கான ஆரம்பம் என்றே கருதுகிறேன். சமீபத்திய ஆண்டுகளில் மாநில உரிமைகள் தொடர்பான பல்வேறு பிரச்னைகளில் நீங்கள் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக தெரிவித்த பல கருத்துகள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகின... இதற்கு உங்கள் கட்சியில் எதிர்ப்பு எழவில்லையா... உண்மையிலேயே மாநில உரிமைகளில் பாஜக அரசு சரியாக நடந்துகொள்கிறதா? மாநில உரிமைகள் சார்ந்த பிரச்னைகளில் மத்திய பாஜக அரசு முழுமையாக நியாயமாக நடந்துகொள்கிறது என்றோ, அனைத்திலும் அநியாயமாக நடந்துகொள்கிறார்கள் என்றோ நான் சொல்லவில்லை. ஆனால், அனைத்து விஷயங்களிலும் திமுக அரசியல் மட்டுமே செய்கிறது என்பதுதான் என் குற்றச்சாட்டு. கடந்த 2021 கோவிட் காலத்துக்குப் பின்பு, நிலக்கரி சுரங்கங்களை தனியாருக்கு தாரை வார்க்க முயன்றபோது மத்திய அரசை தமிழகத்தில் கண்டித்த ஒரே கட்சி நாங்கள்தான். நாடாளுமன்றத் தொகுதி மறுவரையறை துவங்கும் முன்பே தமிழகத்தில் 8 தொகுதி போய்விடுமென்று திமுக பீதியைக் கிளப்பியது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் வந்தால் மொத்தமாக வாக்காளர் உரிமை போகுமென்று திமுக சொன்னதும் அரசியல்தான். ஆனால், நாங்கள் அதை ஆதரித்தோம். இப்போது திமுகதான் எஸ்ஐஆரில் அதிகமாக பங்களித்துக்கொண்டிருக்கிறது. இந்தியா பல மாநிலங்களைக் கொண்ட ஒரு நாடு. இங்கே மத்திய, மாநில அரசுகள் இருந்தாலும் ஒரே நாடு என்ற வகையில் சில முடிவுகளை மத்திய அரசுதான் எடுக்க வேண்டும். அதில் மாநில சுயாட்சி என்ற பெயரில் தமிழகத்தை தனி நாடு போன்ற உணர்வைக் காட்டி சுயமாக கொள்ளையடிப்பதும், அரசியல் செய்வதும்தான் திமுகவின் முயற்சியாக உள்ளது. அதனால்தான் நாங்கள் சில விஷயங்களில் திமுக நிலைப்பாட்டை ஆதரிப்பதில்லை. பட மூலாதாரம்,Krishnasamy கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்ட அனுமதி, கோவை விமான நிலைய விரிவாக்கம் போன்ற வளர்ச்சித் திட்டங்கள், கல்வி உள்ளிட்ட நிதி ஒதுக்கீடு போன்ற விஷயங்களில் தமிழகத்தை மத்திய பாஜக அரசு தொடர்ந்து புறக்கணிப்பதாக திமுக குற்றம்சாட்டி வருகிறதே? நாடாளுமன்றத்தில் திமுக கூட்டணியின் 40 எம்.பி.க்கள் என்ன செய்கிறார்கள்... நீட் தேர்வை ரத்து செய்கிறோம் என்றார்கள். அதைச் செய்ய முடிந்ததா? உங்கள் கடமையை சரியாகச் செய்யாமல் மத்திய அரசு மீது குற்றம்சாட்டுவதில் அர்த்தமே இல்லை. மத்திய அரசு ஒதுக்குகின்ற நிதி அனைத்தையும் இந்த அரசு சரியாகப் பயன்படுத்துவதும் இல்லை. பட்டியலின மக்களுக்கு அடிப்படை வசதிகளைச் செய்து தர ஆந்திரா, தெலங்கானா அரசுகள் தனி பட்ஜெட் போடுகின்றன. இங்கே ஏன் அதைச் செய்வதில்லை... பட்டியலின மக்கள் வசிக்கும் கிராமங்களில் குடிநீர், சாலை, மயான வசதிகள் இல்லை. கிடைக்கின்ற நிதியைச் சரியாகப் பயன்படுத்தி எல்லா திட்டங்களையும் தமிழக அரசு சிறப்பாகச் செயல்படுத்தி, அடித்தட்டு மக்களுக்கும் உரியவை கிடைக்கச் செய்துவிட்டு, நிதி போதவில்லை என்று கேட்டால் அதை ஆதரித்து நாங்களும் குரல் கொடுக்கத் தயாராகவுள்ளோம். கடந்த 5 ஆண்டுகளில் எந்தவொரு நல்ல திட்டத்தையுமே திமுக அரசு செயல்படுத்தவில்லை என்கிறீர்களா? நல்ல திட்டம் என்பது வேறு. கவர்ச்சித் திட்டம், இலவசத்திட்டம் என்பது வேறு. திமுக அரசு கடந்த தேர்தலில் கொடுத்த பெரும்பாலான வாக்குறுதிகளை நிறைவேற்றவே இல்லை. நிலைத்த, நீடித்த வளர்ச்சிக்கான (Sustainable Development) எந்த திட்டத்தையும் இந்த அரசு செய்யவில்லை என்பதுதான் என்னுடைய குற்றச்சாட்டு. ஆனால் திமுக கூட்டணிதான் தற்போது பலமாக இருக்கிறது என்ற ஒரு தோற்றம் இருக்கிறதே... அதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? நான் அப்படி நினைக்கவில்லை. தவறு செய்பவர் ஒருவரின் தலைமையில் 10, 15 நல்லவர்கள் சேர்ந்தாலும், தலைமையில் இருப்பவர் தவறானவராக இருந்தால் மற்றவர்களையும் மக்கள் அப்படித்தான் பார்ப்பார்கள். முதல் எண் பூஜ்யம் என்றால் அதன்பின் வரும் எல்லாமே பூஜ்யம்தான். ஆட்சியின் மீதான அதிருப்தி என்பதைத் தாண்டி திமுக அரசு செய்யத் தவறிய பல விஷயங்களால் மக்களுக்கு கோபம் இருக்கிறது. தமிழக அரசியலில் விஜய் வருகை, அவரது கட்சியின் கொள்கை, அவருக்கு கிடைக்கும் வரவேற்பு ஆகியவற்றை எப்படிப் பார்க்கிறீர்கள்... விஜய் கட்சியின் வளர்ச்சி, எந்தக் கட்சியின் வாக்குவங்கிக்கு ஆபத்தாக மாறுமென்று நினைக்கிறீர்கள்? தமிழகத்தில் எந்தக் கட்சிக்கும் உண்மையான கொள்கை என்று எதுவும் கிடையாது. திமுக, அதிமுக, பாஜ, காங்கிரஸ் கட்சிகள் பேசும் கொள்கை வேறு, நடந்து கொள்ளும் விதம் வேறு. விஜய் தமிழகத்தில் ஒரு அரசியல் மாற்றம் வர வேண்டுமென்று நினைக்கிறார். அவருக்கு எவ்வளவு வாக்கு கிடைக்குமென்று அறுதியிட்டுக் கூறமுடியவில்லை. ஆனால், அவர் அபரிமிதமான மக்கள் செல்வாக்குடன் இருக்கிறார் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. தமிழகத்தில் தனி நபராக, ஒரு புதிய கட்சியைத் துவக்கியிருக்கிறார். அவர் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் வீசப்பட்டாலும் அவை எல்லாமே அவருக்கு சாதகமாக மாறுவதைத்தான் நான் பார்க்கிறேன். அதனால் அவர் மற்ற கட்சிகளின் வாக்கு வங்கியைப் பிரிப்பார் என்று மட்டும் பார்க்க முடியாது. மாறாக அவரே ஒரு பெரும் அரசியல் சக்தியாக வளர்கிறார் என்பதாகத்தான் தெரிகிறது. பட மூலாதாரம்,TVK விடுதலைச் சிறுத்தைகள், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி போன்ற சில கட்சிகள் எம்.பி., எம்எல்ஏக்கள் என்று வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், புதிய தமிழகம் கட்சிக் கட்டமைப்பும் வாக்குவங்கியும் ஒரு கட்டத்தைத் தாண்டாமல் இருப்பது ஏன்? கட்சி துவங்கி 30 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. ஆனால் இப்போது ஒரு நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் இல்லை என்பது ஏற்றுக்கொள்ள வேண்டிய உண்மைதான். ஆனால், ஒரு கட்சியின் செயல்பாட்டையும், மதிப்பையும், மக்களிடமுள்ள மரியாதையையும் அப்படிப் பார்க்கக் கூடாது. சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கையை மட்டும் வைத்து ஒரு கட்சியின் வளர்ச்சியை மதிப்பிடக்கூடாது. கடந்த 1995 ஆம் ஆண்டில் கொடியங்குளம் கொடுமையை உலகறியச் செய்ததில் துவங்கி எத்தனையோ போராட்டங்களை முன்னெடுத்து, எத்தனையோ சாதனைகளை புதிய தமிழகம் செய்திருக்கிறது. மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளிகள் உட்பட மாநிலம் முழுவதும் உள்ள 5 லட்சம் தேயிலைத் தோட்டத் தொழிலாளிகளுக்கு வெறும் 65 ரூபாய் சம்பளத்திலிருந்து 450 ரூபாய் சம்பளத்தைக் கொண்டு வந்தது புதிய தமிழகம் கட்சியின் செயல்பாட்டால் ஏற்பட்ட விளைவுதான். தமிழகத்திலுள்ள ஒரு லட்சம் கிராமங்களில் 40 ஆயிரம் கிராமங்களில் டீக்கடைகளில் பட்டியலின மக்கள் சமமாக நடத்தப்படாமல் இருந்த இரட்டைக்குவளை முறையை ஒழித்ததும் புதிய தமிழகம்தான். கண்டதேவி உட்பட கிராமக்கோவில்களில் பட்டியலின மக்கள் நுழைய முடியாத நிலையை மாற்றியதும், கிராமங்களில் பட்டியலின மக்கள் சுதந்திரமாக நடமாடும் நிலையை உருவாக்கியதும் நாங்கள்தான். அரசியலில் எந்த சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் தவறு என்றால் தவறு என்று சுட்டிக்காட்டுவதால்தான் நாங்கள் இந்த நிலையில் இருக்கிறோம். ஆட்சியாளர்களுக்கு ஆதரவாக இருந்து, ஐந்தாண்டுகளுக்கு புகழ்வதாக இருந்திருந்தால் நாங்களும் சில சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்றிருப்போம். அது தேவையில்லை. ஆனால் வரும் தேர்தலில் வெற்றி பெற்று புதிய தமிழகம் சட்டமன்றத்தில் இடம்பெறும். பட மூலாதாரம்,Krishnasamy தமிழகத்தில் வேறு எந்தக் கட்சியும் ஆதரிக்காத அளவுக்கு, பாஜகவை நீங்கள் அதிதீவிரமாக ஆதரித்தும் உங்களுக்கான அங்கீகாரத்தை அவர்கள் தரவில்லை என்ற வருத்தம் உங்களுக்கு இருக்கிறதா? சமீபத்தில் கூட மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தில் காந்தியின் பெயரை நீக்கியதும், உறுதி என்பதை அகற்றியதையும் நான் கண்டித்தேன். அதனால் மத்திய அரசை எங்கே எப்போது கண்டிக்க வேண்டுமோ அந்தளவுக்கு நான் கண்டித்துக் கொண்டுதான் இருக்கிறேன். பாஜவை கண்மூடித்தனமாக என்றைக்குமே நான் ஆதரித்ததில்லை. திருப்பரங்குன்றம் விவகாரத்தில் எனது நிலைப்பாட்டை நான் தெளிவாகக் கூறினேன். ஏனெனில், திருப்பரங்குன்றம், பாஜகவுக்கோ, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கோ எழுதி வைக்கப்பட்டதில்லை. அந்த விவகாரத்தில் திமுகதான் உண்மையை உணராமல் கண்மூடித்தனமாக எதிர்த்தது. இறுதியில் நாங்கள் சொன்னதையே நீதிமன்றமும் சொன்னது. தமிழ் கலாசாரம், பாரம்பரியத்தின் அடிப்படையில்தான் இந்த விஷயத்தை நாங்கள் அணுகினோம். அதற்கும் பாஜக, ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட இந்து அமைப்புகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்திய விடுதலைப் போராட்டத்தை காங்கிரஸுடனும், தமிழ் மொழிக்கான போராட்டத்தை திமுகவுடனும் பொருத்திப் பார்ப்பது எவ்வளவு தவறோ, அதேபோல வழிபாட்டு உரிமைகளை குறிப்பிட்ட கட்சியுடன் பொருத்திப் பார்ப்பதும் தவறு. தேவேந்திர குல வேளாளர் சமுதாயத்தை ஓபிசி பட்டியலில் சேர்க்க வேண்டுமென்ற கோரிக்கை மத்திய அரசால் நிராகரிக்கப்பட்ட பின்பு அதுதொடர்பான உங்களின் முயற்சி முடிவடைந்துவிட்டதா? மீண்டும் மீண்டும் மத்திய அரசை அணுகுவதில் பயனில்லை. அதனால் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்தில் புதிய தமிழகம் பங்கேற்கும் நிலை வரும்போது, 'தேவேந்திர குல வேளாளர் சமுதாயம் பட்டியலினப் பிரிவில் இருந்து நீக்கப்பட்டு, ஓபிசி பட்டியலில் இணைக்கப்படுகிறது' என்ற பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி அதைச் செயல்படுத்த வைப்போம். அந்த நம்பிக்கை எனக்கு நிறையவே இருக்கிறது.'' மற்ற மாநிலங்களில் தலித் முதலமைச்சர் அல்லது தலித் துணை முதலமைச்சர் என்கிற கனவு சாத்தியப்படும்போது, தமிழகத்தில் மட்டும் அது கானல் நீராக இருப்பது ஏன்? தமிழக அரசியலில் பொய் முகங்கள்தான் அதிகம். திராவிட இயக்கங்கள் தமிழகத்தில் பிராமணர்களுக்கு எதிரான ஒரு கட்டமைப்பை உருவாக்கியது வெளிப்படை. வெளியே தெரியாத விஷயம், தமிழகம் முழுவதும் கிராமங்களில் பட்டியலின மக்களுக்கு எதிரான ஒரு மனநிலையைத்தான் அவை உருவாக்கி வைத்திருக்கின்றன. அந்தக் கட்சியில் இருக்கும் பட்டியலினத்தவரும் அப்படியே நடக்கின்றனர். உத்தரப்பிரதேசத்திலும், கர்நாடகத்திலும் இவர்கள் சொல்லும் சமத்துவம் பேசப்படுவதில்லை. ஆனால், அங்கே பட்டியலினத்தைச் சேர்ந்தவரால் முதலமைச்சர், துணை முதலமைச்சராக அல்லது முதலமைச்சர் வேட்பாளராக முடிகிறது. மல்லிகார்ஜுன கார்கே காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவராக முடிகிறது. உத்தர பிரதேசத்தில் மாயாவதி முதலமைச்சராக இருந்துள்ளார். இத்தனை ஆண்டுகளில் பட்டியலின முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் என்ற நிலை இங்கே உருவாகியிருக்க வேண்டும். ஆனால், திராவிடக் கட்சியினர் சமத்துவம் பேசுகின்றனரே தவிர, அதைச் செயல்படுத்த முன்வருவதில்லை. திமுக, அதிமுக இரு கட்சிகளிலுமே மத்திய, மாநில அமைச்சர்களாக முக்கியப் பொறுப்புகளில் பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார்களே... அதனால் பட்டியலின மக்களுக்கு என்ன பயன் கிடைத்தது... அவர்கள் அந்த கட்சிகளின் கொள்கை சார்ந்துதான் நாடாளுமன்றத்திலும் சட்டமன்றத்திலும் பேசுகிறார்கள். மாஞ்சோலை விவகாரம், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பிரச்னை, வேங்கை வயல் என்று பட்டியலின மக்களின் பிரச்னைகளைப் பேசுவதில்லை. முதலமைச்சர் அல்லது துணை முதலமைச்சர் நிலைக்கு இந்த சமுதாயங்களைச் சேர்ந்தவர்கள் வரும்போதுதான், உண்மையாகவே இந்த சமுதாயத்தால் முன்னேற முடியும். அதற்கான வாய்ப்பு, வரும் தேர்தலில் இருப்பதாகவே நான் கருதுகிறேன். அது எப்படி யாரால் சாத்தியமாகும் என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg1kx931k2o
-
இந்தியா - நியூசிலாந்து ஒருநாள், டி20 கிரிக்கெட் போட்டித் தொடர்
முன்னணி வீரர்கள் இருந்தும் இந்தியா சொந்த மண்ணில் தொடரை இழந்ததற்குக் காரணம் இதுவா? பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் எழுதியவர்,பிரதீப் கிருஷ்ணா பதவி,பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் இந்திய கிரிக்கெட் அணியை வீழ்த்தி இந்திய மண்ணில் முதன் முறையாக ஒருநாள் தொடரை வென்றிருக்கிறது நியூசிலாந்து. வெற்றியோடு தொடரைத் தொடங்கியிருந்தாலும், அடுத்தடுத்து தோல்விகளால் இந்திய அணி பின்னடைவை சந்தித்தது. ஜஸ்ப்ரித் பும்ரா, ஹர்திக் பாண்ட்யா தவிர்த்து இந்திய அணியின் அனைத்து முன்னணி வீரர்களுமே இந்தத் தொடரில் இடம்பிடித்திருந்தார்கள். நியூசிலாந்து அணியிலோ வில்லியம்சன், சான்ட்னர், ஹென்றி, ரச்சின் ரவீந்திரா உள்ளிட்ட பல்வேறு முன்னணி வீரர்கள் இந்தத் தொடரில் பங்கேற்கவில்லை. அப்படியிருந்தும் இந்திய அணியை அதன் சொந்த மண்ணில் நியூசிலாந்து அணி ஒருநாள் தொடரில் வீழ்த்தியிருப்பது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்திய அணியின் தோல்விக்கான காரணங்கள் என்ன? மிடில் ஓவர்களில் இந்தியா vs நியூசிலாந்து மூன்று போட்டிகளில் ஒரு அரைசதம், 2 சதங்கள் என இந்தத் தொடரின் நாயகனாக விளங்கினார் டேரில் மிட்செல். 176 என்ற சராசரியில் 352 ரன்கள் எடுத்தார் அவர். அதையும் 110.34 என்ற ஸ்டிரைக் ரேட்டில் அவர் எடுத்தார். ராஜ்கோட், இந்தூர் ஆகிய இரு இடங்களிலும் சதமடித்து இந்தியாவுக்கும் வெற்றிக்கும் இடையே பெரிய இடைவெளியை ஏற்படுத்தினார் மிட்செல். நான்காவது வீரராக ஆடிய மிட்செல், மிடில் ஓவர்களாக கருதப்படும் 11 முதல் 40வது ஓவர் வரை நியூசிலாந்து அணியின் ஸ்கோரை உயர்த்தியதில் முக்கிய பங்கு வகித்தார். அவருடன் மற்ற வீரர்களும் ஒத்துழைப்பு தர மிடில் ஓவர்களில் இந்தியாவைக் காட்டிலும் நியூசிலாந்து அணியின் செயல்பாடு சிறப்பாக இருந்தது. Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது கரும்பு தின்றால் ரத்த சர்க்கரை உயருமா? - 4 சந்தேகங்களும் விளக்கமும் இரானின் இந்த பலம்தான் அமெரிக்கா தாக்காமல் பின்வாங்க காரணமா? சாபஹார்: அமெரிக்காவின் அழுத்தத்தால் இரானிடமிருந்து விலகுகிறதா இந்தியா? 'கடந்த 8 ஆண்டுகளில் எனக்கு பாலிவுட் வாய்ப்பு நின்றுவிட்டது' - ஏ.ஆர். ரஹ்மான் பேட்டி குறித்து பாலிவுட் கலைஞர்கள் கருத்து End of அதிகம் படிக்கப்பட்டது "மிடில் ஓவர் பேட்டிங் மற்றும் மிடில் ஓவர் பௌலிங் இரண்டிலும் சொதப்பியதுதான் இந்தியா இந்தத் தொடரை தோற்றதற்கான காரணம்" என்கிறார் கிரிக்கெட் வல்லுநரும், வர்ணனையாளருமான நானி. இரண்டாவது போட்டியின் மிடில் ஓவர்களில் நியூசிலாந்து அணி 2 விக்கெட்டுகளை இழந்து 193 ரன்கள் எடுத்தது. இந்த 30 ஓவர்களில் அவர்களுடைய சராசரி ரன்ரேட் 6.43. ஆனால், முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி இந்த கட்டத்தில் எடுத்த ஸ்கோர் 142 மட்டுமே. 4.73 என்ற ரன்ரேட்டில் ஆடியிருந்த இந்திய அணி 5 விக்கெட்டுகளை இழந்திருந்தது. அதுவே இந்தூரில் நடந்த மூன்றாவது ஆட்டத்தில் மிடில் ஓவர்களில் 6.37 என்ற ரன்ரேட்டில் 191 ரன்களை எடுத்தது நியூசிலாந்து. இந்த முறை அவர்கள் இழந்தது ஒரு விக்கெட் மட்டுமே. மிட்செலோடு சேர்ந்து கிளென் ஃபிலிப்ஸும் சதம் அடித்தார். ஆனால், சேஸ் செய்த இந்திய அணி மிடில் ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 164 ரன்களே எடுத்தது. ரன்ரேட் 5.47. இந்த வித்தியாசம் இந்தியா மிடில் ஓவர் பேட்டிங் மற்றும் மிடில் ஓவர் பௌலிங் இரண்டிலுமே பின்தங்கியதைக் காட்டுகிறது. படக்குறிப்பு,இந்தத் தொடரில் மிடில் ஓவர்களில் முன்னிலை பெற்ற அணிகளே அந்தப் போட்டியையும் வென்றிருக்கின்றன. வதோதராவில் இந்தியாவும், மற்ற இரு போட்டிகளில் நியூசிலாந்தும் மிடில் ஓவர்களில் முந்தி, போட்டிகளிலும் வெற்றி பெற்றன. மிடில் ஓவர்களில் இந்திய பந்துவீச்சு பின்தங்கியது ஏன்? கடைசி இரண்டு போட்டிகளின் மிடில் ஓவர்களில், மொத்தம் 60 ஓவர்களில் இந்தியா வீழ்த்தியது 3 விக்கெட்டுகள் தான். இது இந்தியாவுக்குப் பெரும் பின்னடைவாக அமைந்தது. இரண்டாவது ஒருநாள் போட்டி முடிந்ததும் பேசிய கேப்டன் சும்பன் கில், "எங்களால் மிடில் ஓவர்களில் விக்கெட்டுகள் எடுக்க முடியவில்லை. சர்க்கிளுக்கு உள்ளே ஐந்து வீரர்கள் இருக்கும்போது விக்கெட் வீழ்த்த முடியவில்லையெனில் அதன்பிறகு அது மிகவும் கடினம். புதிய பந்தில் நன்றாகத்தான் வீசினோம். நாங்கள் இன்னும் கொஞ்சம் தைரியமாகப் பந்துவீசியிருக்கலாம்" என்று தெரிவித்தார். "விக்கெட் எடுக்கவேண்டிய முக்கியமான இந்தக் கட்டத்தில் இந்திய அணி அதைச் செய்யத் தவறிவிட்டது" என்று சொல்லும் நானி, கேப்டன் சுப்மன் கில் கூட இரு தவறுகளை செய்ததாக கூறுகிறார். "குல்தீப் யாதவ் பந்தை நன்கு தூக்கிப் போடுபவர், விக்கெட் எடுப்பவர். ஆனால், மிட்செல் அடித்துவிடுவாரோ என்ற பயத்தில் அவர் மிகவும் 'flat'-ஆகவே பந்துவீசிக் கொண்டிருந்தார். அப்படியிருக்கும்போது அவருடைய விக்கெட் எடுக்கும் தன்மையே போய்விடும். ஒரு பௌலர் அப்படி சற்று யோசிக்கும்போது, கேப்டனோ, வேறு யாராவதோ சென்று அவருக்கு நம்பிக்கை கொடுத்திருக்க வேண்டும். அதை யாரும் செய்யவே இல்லை. அவர் ராஜ்கோட் போட்டியில் 82 ரன்கள் கொடுக்கக் காரணமே அதுதான்.'' என்கிறார் நானி. இந்தியாவின் முக்கிய 'விக்கெட் டேக்கிங் பௌலர்' என்று கருதப்படுபவர்களுள் ஒருவரான குல்தீப், இந்தத் தொடரில் மூன்று விக்கெட்டுகள் மட்டுமே வீழ்த்தினார். நியூசிலாந்து பேட்டர்கள் அவருக்கு எதிராக யோசிக்காமல் அதிரடியைக் கையில் எடுத்தார்கள். அதனால் அவர்களது ரன்ரேட் மிடில் ஓவர்களில் மிகவும் சீராகச் சென்றது. ஜடேஜா மீது விமர்சனம் அதேபோல், ஜடேஜாவைப் பயன்படுத்திய விதம் குறித்தும் நானி தன் விமர்சனத்தை முன்வைத்தார். "ஒரு ஸ்பின்னரை எப்போது பந்துவீச்சுக்குக் கொண்டு வருகிறார்கள் என்பது முக்கியம். மூன்றாவது போட்டியில் ஜடேஜாவை 30-வது ஓவரில்தான் கில் பயன்படுத்தவே தொடங்கினார். என்னதான், பௌலர் ஃபார்மில் இல்லாவிட்டாலும், ஒரு முன்னணி ஸ்பின்னர் இருக்கும்போது அவர் மீது நம்பிக்கை வைக்கவே வேண்டும்" என்று சுட்டிக்காட்டினார். அதேசமயம், ஜடேஜாவின் செயல்பாடு பின்னடைவை சந்தித்திருக்கிறது என்பதையும் அவர் குறிப்பிட்டார். ஒருநாள் போட்டிகளில் ஜடேஜாவின் செயல்பாடு சமீபமாக கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இந்தத் தொடரில் 23 ஓவர்கள் வீசிய அவர் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. பந்துவீச்சில் அவரது எகானமியும் 6.13 என அதிகமாகவே இருக்கிறது. கடைசி 6 ஒருநாள் போட்டிகளில் அவர் ஒரேயொரு விக்கெட் தான் வீழ்த்தியிருக்கிறார். கிரிக்பஸ் வலைதளத்தில் உரையாடிய ஜாஹிர் கான் மற்றும் அஜிங்க்யா ரஹானே, ஜடேஜா - அக்ஷர் பட்டேல் இடையிலான போட்டி பற்றிப் பேசியிருந்தார்கள். அக்ஷர் பட்டேல் நிச்சயம் ஜடேஜாவுக்கு தொடர் நெருக்கடி கொடுப்பார் என்று கூறிய ஜாஹிர் கான், "இந்த ஃபார்மட் மாறிவருகிறது. மிடில் ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தும் பௌலராக இருந்தால் மட்டும் போதாது, நீங்கள் விக்கெட் எடுக்கத் தொடங்கவேண்டும். அதை ஜடேஜா புரிந்துகொள்ள வேண்டும்" என்று கூறினார். ரஹானேவோ, "ஒருநாள் போட்டிகளுக்கு நிறைய வேரியேஷன்கள் தேவை. ஜடேஜா சிறந்த வீரர் என்றாலும் அவர் ஒரே மாதிரியான வேகத்தில் பந்துவீசக் கூடியவர். அதை பேட்டர்கள் கணித்துவிடுவார்கள். அதேசமயம் அக்ஷர் படேலிடம் நிறைய வேரியேஷன்கள் இருக்கின்றன" என்று கூறினார். வழக்கமாக ரன்களைக் கட்டுப்படுத்தும் ஜடேஜா ஒருபக்கம் அதிக ரன்களைக் கொடுத்ததுமே, குல்தீப் மீதும் அது நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கும். இந்த இடத்தில் தான் இந்திய அணி வருண் சக்கரவர்த்தி போன்ற ஒரு விக்கெட் எடுக்கக்கூடிய பௌலரைத் தவறவிட்டதாகச் சொல்கிறார் நானி. சாம்பியன்ஸ் டிராபியில் நன்கு செயல்பட்ட அவரை, இப்போது ஒதுக்கி வைத்திருப்பது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், வருண் இருந்தால் இந்த மிடில் ஆர்டர் விக்கெட் பிரச்னை நிச்சயம் தீர்ந்துவிடும் என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,இந்தத் தொடரில் இந்திய ஸ்பின்னர்களை மிகச் சிறப்பாக எதிர்கொண்டார் டேரில் மிட்செல் மிடில் ஓவர் & மிடில் ஆர்டர் பேட்டிங் பிரச்னை நியூசிலாந்து அணி மிடில் ஓவர்களில் நன்றாக ரன் சேர்க்க வில் யங், கிளென் ஃபிலிப்ஸ் போன்றவர்கள் மிட்செலுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்ததும் ஒரு காரணம். இந்த ஒத்துழைப்பு விராட் கோலிக்கோ, இரண்டாவது போட்டியில் கேஎல் ராகுலுக்கோ கிடைக்கவில்லை. இந்தத் தொடரில், இந்திய மிடில் ஆர்டர் (நான்காவது முதல் ஏழாவது வரிசை வரை களமிறங்கும்) பேட்டர்களின் சராசரி 34.7. இதுவே நியூசிலாந்தின் சராசரி 80.86. அதில் பெரும்பகுதி ரன்களை எடுத்த மிட்செலின் பங்களிப்பை நீக்கினாலும் கூட அந்த சராசரி 42.8 ஆக இருக்கும். இந்த வித்தியாசத்துக்குக் காரணம் இந்தியா இங்கு நிறைய விக்கெட்டுகளை இழந்தது. "இந்திய பேட்டர்களுக்கு ஸ்பின் ஆட வருவதில்லை. அதுதான் இதற்கான மிகப் பெரிய பிரச்னை" என்று இதற்கான காரணத்தைக் கூறுகிறார் நானி. "இது கொஞ்சம் கடுமையாகக் கூடத் தெரியலாம். ஆனால், அதுவே உண்மை. இந்திய பேட்டர்கள் ஸ்பின்னுக்கு எதிராக முன் வந்து விளையாடவே அஞ்சுகிறார்கள். காலை நகர்த்தவே அவர்கள் மறந்துவிட்டார்கள். முதல் போட்டியின் ஒருகட்டத்தில் ஷ்ரேயாஸ், ஆதித்யா அஷோக் ஓவரில் சிறப்பாக ஆடினார். அதன்பிறகு இந்திய அணி ஸ்பின்னை சரியாகவே கையாளவில்லை" என்றும் அவர் கூறினார். கடைசி 2 போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயராலும் அப்படியான ஆட்டத்தைக் கொடுக்க முடியவில்லை. அவர் வேகப்பந்துவீச்சாளர்களிடம் விரைவாக வீழ்ந்துவிட்டார். அடுத்து வந்த நித்திஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா ஆகியோரலும் சுழலை சரியாக எதிர்கொள்ள முடியவில்லை. இப்படி ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்து கொண்டிருந்ததால், கோலி, ராகுல் ஆகியோரும் ரன் சேர்ப்பதை விட விக்கெட் வீழ்ச்சியைத் தடுப்பதில் அதிக கவனம் செலுத்த வேண்டியதாக இருந்தது. அதனால், ரன் ரேட் வெகுவாகக் குறைந்தது. இந்திய பேட்டர்களின் பயத்தால், லெனக்ஸ் போன்ற ஒரு புதிய வீரர் கூட ஆதிக்கம் செலுத்துவதுபோல் தெரிந்ததாகக் கூறினார் நானி. "நாளை சான்ட்னர், சோதி போன்றவர்கள் வந்துவிட்டால் இந்த வீரர்கள் பிளேயிங் லெவனிலேயெ இருக்கமாட்டார்கள். ராஜ்கோட் போட்டியில் பந்துவீசியபோது பிரேஸ்வெல் தன் முதல் 8 ஓவர்களில் 18 ரன்கள் தான் கொடுத்திருந்தார். அவருக்கு எதிராக இந்திய பேட்டர்கள் கடைபிடித்தது சரியான அணுகுமுறையே அல்ல." என்றும் அவர் கூறினார். மறுபுறம் நியூசிலாந்து அணியோ இந்தியா போல் அல்லாமல், ஸ்பின்னர்களை தைரியமாகக் கையாண்டதுதான் அவர்கள் மிடில் ஓவர்களில் ஆதிக்கம் செலுத்தக் காரணமாக அமைந்தது. குறிப்பாக குல்தீப் யாதவுக்கு எதிராக அதிரடியாக ஆடினார்கள். குல்தீப் இந்தத் தொடரில் வீசிய முதல் ஓவரிலேயே ரிவர்ஸ் ஸ்வீப் ஆடினார் கான்வே. டேரில் மிட்செல் பல தருணங்களில் இறங்கி வந்து பவுண்டரிகள் அடித்தார். குல்தீப் ஒரு ஆபத்தான பௌலராகக் கருதப்பட்டாலும், நியூசிலாந்து பேட்டர்கள் ரிஸ்க் எடுக்கத் தயங்கவில்லை. குல்தீப்புக்கு எதிராக அப்படி ஆடியது பற்றி இரண்டாவது போட்டிக்குப் பிறகு பேசிய நியூசிலாந்து கேப்டன் பிரேஸ்வெல், "எங்கள் பேட்டர்கள் சூழ்நிலையை உணர்ந்து நன்றாக ஆடினார்கள். அதை நினைத்து நாங்கள் பெருமைப்படுகிறோம்" என்றார். அதேசமயம், மிடில் ஆர்டர் பிரச்னை என்பது இன்றோ நேற்றோ தோன்றிய பிரச்னை அல்ல என்றும், இந்தியாவுக்குக் காலங்காலமாகத் தொடரும் ஒரு பிரச்னை என்று குறிப்பிட்டார் நானி. "இந்தியாவுக்கு இந்த மிடில் ஆர்டர் பிரச்னை எப்போதுமோ இருந்து வந்திருக்கிறது. என்ன பெரும்பாலும் யாராவது ஒருவர் காப்பாற்றிவிடுவார். அவ்வப்போது மொத்தமாக வெளிப்பட்டுவிடும். 2023 உலகக் கோப்பை இறுதிப் போட்டியைப் போல." என்றார் நானி. தென்னாப்ரிக்காவுக்கு எதிராக டெஸ்ட் தொடரை இந்தியா தோற்ற போதும் கூட சுழலுக்கு எதிரான இந்திய அணியின் பேட்டிங் பிரச்னை பெருமளவு விவாதிக்கப்பட்டது. பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,முதல் போட்டியில் ஷ்ரேயாஸ் தவிர்த்து, மற்ற போட்டிகளில் இந்திய மிடில் ஆர்டர் நியூசிலாந்தின் ஸ்பின்னர்களை தைரியமாக எதிர்கொள்ளவில்லை என்கிறார் நானி ஆல்ரவுண்டர்கள் அதிகமாக இருப்பது தான் பிரச்னையா? இந்தியாவின் இந்தத் பேட்டிங் தடுமாற்றத்துக்கு அதிக ஆல்ரவுண்டர்களை அணியில் சேர்த்திருப்பது ஒரு காரணம் என்று சமூக வலைதளங்களில் பரவலாகப் பேசப்பட்டுவருகிறது. நித்திஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் போன்றவர்களை அதிகமாகப் பயன்படுத்துவதற்குப் பதிலாக 'ஸ்பெஷலிஸ்ட்' பேட்டர்களைப் பயன்படுத்தலாமே என்றும் பலர் கேள்வியெழுப்புகின்றனர். இந்தியாவின் தடுமாற்றத்துக்கு இது காரணமா என்று கேட்டால், இல்லை என்று மறுக்கிறார் நானி. "இந்தியாவின் 'டெயில்' அதாவது பின்வரிசை பேட்டிங் மிகவும் பெரியது. பும்ரா, சிராஜ், குல்தீப், வருண், அர்ஷ்தீப் ஆகியோரில் மூவர் நிச்சயம் அணியில் இடம்பிடிப்பார்கள் எனும்போது ஆல்ரவுண்டர்கள் தேவை. ஜடேஜாவின் இடத்தில் அக்ஷரும், நித்திஷ் இடத்தில் ஹர்திக்கும் வந்துவிட்டால் பிரச்னைகள் சரியாகிவிடும்" என்று சொல்கிறார் அவர். 2027 உலகக் கோப்பை நடக்கும் தென்னாப்ரிக்க ஆடுகளங்களில் நித்திஷ் ரெட்டியாலும் நல்ல தாக்கம் ஏற்படுத்த முடியும் என்று அவர் சொல்கிறார். இந்த பேட்டிங் பிரச்னைக்குக் காரணம் என்ன? ஒரு நிலைத்தன்மை இல்லாதது தான் இதற்கெல்லாம் காரணம் என்கிறார் நானி. இதுபற்றிப் பேசிய அவர், "வீரர்கள் யாருக்கும் தங்கள் இடம், ரோல் பற்றிய தெளிவு இல்லை. சில வீரர்களுக்கு அடுத்த போட்டியில் ஆட இடம் கிடைக்குமா என்ற பயம் ஏற்பட்டுவிடுகிறது. அதனால் ஒரு அரைசதம் அடித்து இடத்தை உறுதிப்படுத்திக் கொள்வோம் என்று நினைக்கிறார்கள். ஸ்பின்னர்களுக்கு எதிராக தைரியமாக ரிஸ்க் எடுத்து ஆடவேண்டிய சூழ்நிலையில் அவர்கள் அப்படிச் செய்யாததன் காரணம் இந்த நிலையற்ற தன்மைதான். தொடர்ச்சியாக செய்துகொண்டே இருக்கும் மாற்றங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன" என்றார். அணியில் செய்யும் மாற்றங்கள், அணியின் வரிசையில் செய்யும் மாற்றங்கள் அனைத்துமே வீரர்களைப் பாதிக்கின்றன என்கிறார் அவர். இந்த விஷயத்திலும் கூட இந்தியாவுக்கும் நியூசிலாந்துக்கும் பெரிய வித்தியாசம் இருக்கிறது. இந்தத் தொடரில் நியூசிலாந்து அணியின் பேட்டிங் ஆர்டரில் ஒரேயொரு மாற்றம் மட்டுமே செய்யப்பட்டிருந்தது. முதலிரு போட்டிகளில் ஏழாவது வீரராகக் களமிறங்கிய பிரேஸ்வெல், கடைசிப் போட்டியில் ஆறாவது வீரராக பேட்டிங் செய்தார். மற்றபடி டாப் 7 இடங்களில் மாற்றங்கள் ஏதும் நிகழவில்லை. ஆனால், இந்திய அணியில் அப்படி இருக்கவில்லை. டாப் 4 ஒரே மாதிரி இருந்தாலும், 5 முதல் 7 வரை பல மாற்றங்கள் நடந்தன. இது இந்தத் தொடரில் இந்தியாவின் 5 முதல் 7 வரையிலான பேட்டிங் வரிசை: முதல் ஒருநாள் போட்டி: ஜடேஜா, ராகுல், ஹர்ஷித் ராணா 2வது ஒருநாள் போட்டி: ராகுல், ஜடேஜா, நித்திஷ் ரெட்டி 3வது ஒருநாள் போட்டி: ராகுல், நித்திஷ் ரெட்டி, ஜடேஜா ஒருநாள் மற்றும் டெஸ்ட் போன்ற போட்டிகளில் வீரர்களுக்கு ஒரு நிலையான இடமும், தெளிவான ரோலும் இருக்கவேண்டும் என்கிறார் நானி. இந்த இந்திய அணியில் ஒருசில வீரர்களுக்கு அது இல்லாதது பெரிய பிரச்னையாக இருக்கிறது என்றும் அவர் கூறுகிறார். இந்த மிடில் ஓவர் சுழல் பிரச்னைகள் இருந்தாலும், 2027 உலகக் கோப்பை தென்னாப்ரிக்காவில் நடப்பது ஒரு வகையில் நம்பிக்கையான விஷயம் என்று சொல்கிறார் நானி. இருந்தாலும், அதற்காக ஒரு 20 வீரர்களை மட்டும் தேர்வு செய்து, அவர்களுக்குப் போதுமான வாய்ப்புகள் கொடுத்து, அதிலிருந்து உலகக் கோப்பை அணியைத் தேர்வு செய்யவேண்டும் என்கிறார். அதேசமயம், அந்த வீரர்களுக்கும் நிலையான இடமும், தெளிவான ரோலும் கொடுக்கப்படவேண்டும் என்று கூறுகிறார் அவர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c5yvll0nn3wo
-
"கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை
"கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளரிடம் பொலிஸார் தீவிர விசாரணை 19 Jan, 2026 | 05:31 PM யாழப்பாணத்தில் "கந்தரோடை விகாரை " என திசை காட்டும் பெயர் பலகைகள் அகற்றபட்ட சம்பவம் தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா பிரகாஸிடம் பிரதேச சபையில் வைத்து பொலிஸாரால் இன்றைய தினம் திங்கட்கிழமை (19) வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் - வலிகாமம் தெற்கு பிரதேச சபையினால், கந்தோரோடை பகுதியில் விகாரைகள் அமைந்துள்ளதாக கூறப்படும் பகுதிகள் "கந்தரோடை தொல்லியல் ஆய்வு மையம்" என அடையாளப்படுத்தப்பட்டதை அடுத்து, பிரதேச சபையின் அனுமதியின்றி, யாழ்ப்பாணம் - காங்கேசன்துறை வீதியில் , சுன்னாகம் சந்தைக்கு அருகில், தனியார் காப்புறுதி நிறுவனம் ஒன்றினால் "கந்தரோடை விகாரை" என நாட்டப்பட்டிருந்த திசை காட்டும் பெயர் பலகை கடந்த 08 ஆம் திகதி பிரதேச சபையினரால் அகற்றப்பட்டது. அதேவேளை, குறித்த பகுதியில் காணப்படும் சந்தைக்கட்டடம் ஒல்லாந்தர் காலத்திற்கு உரியதாகும். அதன் சிறப்புக்கள் தொடர்பில் மும்மொழிகளிலும் எழுதிய கல்வெட்டு அப்பகுதியில் காட்சிப்படுத்தப்பட்டது. இந்நிலையிலையே பொலிஸார் தவிசாளரிடம் வாக்குமூலம் பெற்றுள்ளனர். https://www.virakesari.lk/article/236454