Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்

Everything posted by ஏராளன்

  1. 18 Nov, 2025 | 05:22 PM இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்தில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இன்று செவ்வாய்க்கிழமை (18) காலை இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங் மற்றும் மஹிந்த ராஜபக்ஷ இடையில் கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன. இதன்போது மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த நாளுக்கு, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா சார்பில் இந்திய துணைத் தூதுவர் ஸ்ரீ ஹர்விந்தர் சிங், வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்து செய்வதற்காக அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டமூலம் செப்டெம்பர் 10 ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதையடுத்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் தங்கியிருந்த கொழும்பு விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச வாசஸ்தலத்திலிருந்து செப்டெம்பர் 11 ஆம் திகதி வெளியேறி, அம்பாந்தோட்டை - தங்காலையில் உள்ள கால்டன் இல்லத்திற்கு குடிபெயர்ந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/230729
  2. Published By: Digital Desk 3 18 Nov, 2025 | 05:20 PM தெளிவுத்தன்மை தான் நம்பிக்கையை உருவாக்கும் அடித்தளம் என்ற கருத்தை வலியுறுத்தும் வகையில், அமெரிக்காவின் மொண்டானா தேசிய காவல் படைக்கும இலங்கை பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கிடையிலான பாதுகாப்பு பங்காண்மையினை உத்தியோகபூர்வமாக முறைப்படுத்தும் வகையில், (State Partnership Program – SPP) தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) நவம்பர் 14ஆம் திகதி கைச்சாத்தானது. இந்த ஒப்பந்தம் இன்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. இது குறித்து அமெரிக்கத் தூதர் ஜூலி சங் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, இரு தரப்புகளுக்கும் இடையிலான இந்த ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் பரஸ்பர நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான எங்களது உறுதியை வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது. இது குறித்து நாம் பெருமையடைகின்றோம். இந்த கூட்டாண்மையின் மூலம் அபாய மேலாண்மை மற்றும் பேரிடர் மீட்பு, கடல் பாதுகாப்பு, தொழில்முறை இராணுவப் பயிற்சிகள் மற்றும் பரிமாற்றங்கள் ஆகிய துறைகளில் இருதரப்புகளுக்கும் பயனளிக்கும் வகையில் புதிய ஒத்துழைப்புகள் விரிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. State Partnership Program திட்டத்தின் மூலம் ஏற்படும் இத்தகைய விரிவான ஒத்துழைப்பு இரு நாடுகளுக்கும் மட்டுமல்லாமல், மேலும் பாதுகாப்பான இந்தோ–பசிபிக் பிராந்தியத்தை உருவாக்கவும் உதவும் என குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/230727
  3. 21 எதிர்ப்பு பேரணியில் பங்கேற்பதாக மஹிந்த அறிவிப்பு Nov 18, 2025 - 09:44 PM எதிர்வரும் 21ஆம் திகதி ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தலைமையிலான எதிர்க்கட்சிகள் ஒழுங்கு செய்துள்ள பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவும் கலந்துகொள்ள உள்ளார். தனது பிறந்தநாளை முன்னிட்டு ஆசீர்வாதம் பெறுவதற்காக கண்டி தலதா மாளிகைக்கு விஜயம் செய்தபோது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் மக்கள் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக மக்களை அணிதிரட்ட வேண்டும் என்றும் அவர் கூறினார். முன்னதாக இந்த பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ பங்கேற்கமாட்டார் என நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmi4rx2mg01r6o29nnrvhgnlp
  4. Nov 18, 2025 - 06:07 PM நாட்டில் மீண்டும் இனவாதம் ஏற்படுவதற்கு தாம் மட்டும் அல்ல எந்தவொரு இலங்கையரும் இனி அனுமதிக்கமாட்டார்கள் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சற்று முன்னர் பாராளுமன்றத்தை வந்தடைந்தார். தற்போது பாராளுமன்றத்தில் இடம்பெற்று வரும் பாதுகாப்பு அமைச்சின் செலவினத் தலைப்புகள் மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். திருகோணமலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரிடம் முழுமையான அறிக்கை கோரியுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். இதற்கு 2014 போன்ற காலப்பகுதியில் ஒரு பழைய அனுமதிப்பத்திரம் உள்ளது. ஆனாலும், இது ஒரு விகாரை எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், அதன் பிறகு இது ஒரு விகாரையாக அண்மைக் காலத்தில் பயன்படுத்தப்படவில்லை. அது ஒரு உணவகமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த உணவகத்தின் கட்டுமானங்கள் குறித்து ஒரு பிரச்சினை எழுந்தது. அதில் சட்டவிரோத கட்டுமானங்கள் இருப்பதாகக் கூறி, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அந்தக் கட்டுமானங்களை அகற்றுமாறு உத்தரவொன்றை பிறப்பித்திருந்தார். அந்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு ஒன்றும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. அதன்பின்னர், நகர அபிவிருத்தி அதிகாரசபையுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின்போது, தேரர் ஒரு வார கால அவகாசம் தருமாறு கேட்டிருந்தார். அந்தக் கால அவகாசம் வழங்கப்பட்டது. அந்தக் கால அவகாசம் 14 ஆம் திகதியுடன் முடிவடைகிறது. இந்தச் சம்பவம் 16 ஆம் திகதி தான் எழுகிறது. எனவே, இது ஒரு மத ஸ்தாபனத்தை நிறுவுவது மட்டுமல்லாமல், வேறு ஒரு கதையும் இதற்குள் இருப்பது தெரிகிறது. பொது மக்கள் அங்கு ஒரு விகாரை இருக்கிறது என்று நினைக்கலாம். இல்லை... அங்கே எவ்வித மத வழிபாடுகளும் இடம்பெறவில்லை. அதுதான் உண்மை. சம்பவம் நடந்த பிறகு மாவட்டச் செயலகத்தில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது. அந்தக் கலந்துரையாடலில், அங்கீகரிக்கப்பட்ட நில அளவையாளரைக் கொண்டு நிலத்தைப் பிரித்து, முறையாக அளவீடு செய்து, கடற்கரை பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமான பகுதி எது, விகாரைக்குச் சொந்தமான பகுதி எது என்பதைக் குறித்துக் கொடுக்க ஒரு இணக்கப்பாடு நேற்று எட்டப்பட்டது. தற்போது நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு என்னவென்றால், புதிய கட்டுமானங்கள் எதனையும் மேற்கொள்ள வேண்டாம், இருக்கும் கட்டுமானங்களையும் அகற்ற வேண்டாம், நீதிமன்றம் தீர்ப்பை வழங்கிய பின்னர் தொடர்புடைய பணிகளைச் செய்யலாம் என்பதாகும். இப்போது பார்த்தால், இந்தப் பிரச்சினை முடிந்துவிட்டது. இப்போது ஏன் மேலும் ஆடுகிறார்கள் (பிரச்சினை செய்கிறார்கள்)?... அந்த இனவாதக் குழுக்கள் இப்போது எல்லா இடங்களிலும் தீ வைத்துக்கொண்டே செல்கின்றன. நாம் மிகவும் உறுதியாக இனவாதத்திற்கு இடமளிக்க மாட்டோம். இந்த நாட்டின் பொது மக்களும் இனவாதத்திற்கு இடமளிக்க மாட்டார்கள். எனவே, யாராவது மீண்டும் பழைய இனவாத நாடகங்களை இந்த நாட்டில் உருவாக்க முயற்சித்தால், அது வரலாற்றில் மட்டுமே இருக்கும். அது நிகழ்காலமும் அல்ல, எதிர்காலமும் அல்ல." எனவும் ஜனாதிபதி தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmi4k6wzb01qzo29nt32frmoh
  5. பவுமா கேலி செய்யப்பட்ட தன் உயரத்தையே பலமாக மாற்றி இந்தியாவை வீழ்த்தியது எப்படி? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் சில தினங்களுக்கு முன் இந்தியாவும் தென்னாப்பிரிக்காவும் மோதிய முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளில், ஒருகட்டத்தில் டெம்பா பவுமாவும், மார்கோ யான்சனும் இணைந்து பேட்டிங் செய்துகொண்டிருந்தனர். ஓவர்களுக்கு இடையே அவர்கள் அருகருகே நின்று விவாதித்துக் கொண்டிருந்தபோது, வர்ணனையாளர்கள் இப்படிப் பேசினார்கள்: "சர்வதேச கிரிக்கெட்டில் உயர வித்தியாசம் அதிகமாக இருக்கும் ஜோடி இதுவாகத்தான் இருக்கும்." அந்த இருவரும் அருகருகே இருக்கும் காட்சியைப் பார்த்த பலரும் அதைப் பற்றித்தான் பேசுகிறார்கள். அவர்களுக்கு இடையே சுமார் 40 சென்டிமீட்டர் அளவுக்கும் மேல் உயர வித்தியாசம் இருப்பதால் அது பேசுபொருளாகிவிடுகிறது. குறிப்பாக இன்று சர்வதேச கிரிக்கெட்டில் உயரம் குறைவான வீரர்களில் பவுமாவும் ஒருவர் என்பதால், அதை பற்றிக் குறிப்பிடாமல் பெரும்பாலான உரையாடல்கள் முடிவதில்லை. இதே போட்டியின் முதல் நாளில் பவுமாவுக்கு எதிராக ரிவ்யூ எடுப்பது பற்றி ரிஷப் பந்த் மற்றும் ஜஸ்ப்ரித் பும்ரா ஆகியோர் பேசிய உரையாடலில் 'பௌனா' என்ற இந்தி வார்த்தை (உயரம் குறைவானர்களைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் பேச்சு வழக்கு வார்த்தை) பயன்படுத்தப்பட்டது சர்ச்சைகளை ஏற்படுத்தியது. அது பவுமாவை நேரடியாகக் குறிக்கும் வார்த்தை இல்லை என்று சிலர் கூறினாலும், அதைத் தவிர்த்திருக்கலாம் என்று சிலர் வாதிட்டனர். பவுமா பற்றிப் பேசினாலே அவரது உயரம் பற்றி பேச்சு வந்துடுவிடுகிறதே என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் பலரும் வருத்தம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில், தமிழ் வர்ணனையாளர்கள் இந்தப் போட்டியின்போது பவுமாவின் உயரம் பற்றி வேறொரு பரிமாணத்தில் பேசினார்கள். ஒவ்வொரு பேட்டரும் இந்தப் போட்டியில் பேட்டிங் செய்யத் தடுமாறும்போது, பவுமா மட்டும் எப்படி சிறப்பாக ஆடிக்கொண்டிருக்கிறார் என்று பேசியவர்கள், "பவுமாவின் உயரம் அவருக்கு சாதகமான அம்சமாக இருக்கிறது." என்று குறிப்பிட்டார்கள். அவரது குறைவான உயரம்தான் அவரை நீண்ட நேரம் விளையாட வைத்தது என்றார்கள். அதுதான் இரண்டாவது இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்க எதிர்பார்த்ததை விட பெரிய ஸ்கோரை எட்டக் காரணம் என்றும் கூறினார்கள். தென்னாப்பிரிக்கா பெரிய ஸ்கோர் எடுக்கவும், இந்தியாவை அவர்கள் வீழ்த்தவும், பவுமாவின் உயரம் உதவியதா? கடினமான களத்தில் பவுமாவின் போராட்டம் இந்த முதல் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 100 பந்துகளுக்கும் மேலாக சந்தித்த, அரைசதம் அடித்த ஒரே வீரர் பவுமா மட்டும்தான். தென்னாப்பிரிக்க அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் நீண்ட நேரம் போராடிய அவர், கடைசி வரை ஆட்டமிழக்காமல் 136 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டி நடந்த ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் பேட்டர்கள் அனைவரும் பெரும் சவாலை எதிர்கொண்டிருந்தனர். மொத்தம் இரண்டே முக்கால் நாள்களிலேயே முடிந்திருந்த இந்த ஆட்டத்தில் 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்தே 594 ரன்கள் தான் எடுக்கப்பட்டிருந்தது. அதிலும் குறிப்பாக ஸ்பின்னர்களை எதிர்கொள்வது அனைவருக்குமே மிகவும் சிரமமாக இருந்தது. பெரும் விமர்சனங்களுக்குள்ளான இந்த ஆடுகளத்தில் பந்துகளைக் கணிப்பது கடினமாக இருந்தது. பந்தின் 'டர்ன்', 'பவுன்ஸ்', 'டிப்' போன்ற விஷயங்களை சரியாக யூகிக்க பேட்டர்கள் தடுமாறினார்கள். . பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியா vs தென்னாப்பிரிக்கா முதல் டெஸ்ட் போட்டியில் அரைசதம் கடந்த ஒரே பேட்டர் டெம்பா பவுமா தான் இரண்டாவது நாளின் இறுதியில் வர்ணனை செய்துகொண்டிருந்தபோது, இந்த ஆடுகளத்தில் நான்காவது இன்னிங்ஸுக்கு 120 ரன்கள் என்ற இலக்கே கடினமாக இருக்கும் என்று கூறியிருந்தார் இந்திய முன்னாள் வீரர் ஶ்ரீதரன் ஶ்ரீராம். ஆனால், முதல் இன்னிங்ஸில் 30 ரன்கள் பின்தங்கியிருந்த தென்னாப்பிரிக்க அணி, இரண்டாம் இன்னிங்ஸில் ஒருகட்டத்தில் 75/6 என்ற நிலையில் இருக்க, 150 ரன்களெல்லாம் வாய்ப்பே இல்லை என்று கருதப்பட்டது. ஆனால், அவர்களை 153 என்ற ஸ்கோருக்கு எடுத்துச் சென்றார் பவுமா. தென்னாப்பிரிக்க அணியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஒருகட்டத்தில் இந்திய ஸ்பின்னர்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தினார்கள். குறிப்பாக ஜடேஜா விக்கெட்டுகள் மேல் விக்கெட்டுகளாக வீழ்த்தினார். அதிலும் இரண்டாவது நாளின் மூன்றாவது செஷனில் ஆடுகளம் பேட்டிங் செய்யக் கடினமாக இருந்தது. அப்போது தன்னுடைய போராட்டத்தைத் தொடங்கினார் பவுமா. ஒருபக்கம் விக்கெட்டுகள் வீழ்ந்துகொண்டே இருந்தாலும், அவர் நிலைத்து நின்று விளையாடினார். யான்சன் மற்றும் கார்பின் பாஷ் உடன் சிறு பார்ட்னர்ஷிப்களும் அமைத்தார். அனைவரையும் அச்சுறுத்திய ஜடேஜாவுக்கு எதிராக 46 பந்துகள் சந்தித்திருந்தாலும், அதை அற்புதமாகக் கையாண்டார் அவர். அப்போதுதான் தமிழ் வர்ணனையாளளர்கள் அவரது உயரம் அவருக்கு எப்படி சாதகமாக இருக்கிறது என்று பேசினார்கள். பவுமாவின் ஈர்ப்பு மையம் (சென்ட்டர் ஆஃப் கிராவிட்டி - Centre of Gravity) நன்கு தாழ்ந்து இருப்பதாலும், அவரது அடித்தளம் நன்கு திடமாக இருப்பதாலும், அது அவருக்கு இந்தப் போட்டியில் உதவியதாக பிபிசி தமிழிடம் கூறினார் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே அணிகளின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான கே.பி.அருண் கார்த்திக். அவரது தாழ்ந்த ஈர்ப்பு மையத்தின் காரணமாக மற்ற வீரர்களைவிட எளிதாக அவரால் இந்த ஆடுகளத்தையும் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களையும் எதிர்கொள்ள முடிந்தது என்றார் அவர். தாழ்ந்த ஈர்ப்பு மையம் என்றால் என்ன? அதன் சாதகம் என்ன? ஒரு பொருளின் மொத்த எடை, ஒரே புள்ளியில் செயல்படுவதாகக் கொள்ளப்படுவதே ஈர்ப்பு மையம் (Centre of Gravity) எனப்படும். உதாரணமாக ஒரு பேனாவின் மையப் பகுதியை நம் விரலில் வைத்து நம்மால் சமநிலைப்படுத்த (balance) முடிகிறது அல்லவா, அதற்குக் காரணம் அந்தப் பேணாவின் ஈர்ப்பு மையம் அந்த நடுப்பகுதியில் இருக்கிறது. இப்படி ஒவ்வொரு பொருளுக்கும் அதன் ஈர்ப்பு மையம் ஒவ்வொரு இடத்தில் இருக்கும். ''மனிதர்களைப் பொறுத்தவரை ஈர்ப்பு மையம் நம் நிலையைப் பொறுத்து மாறும். நாம் கால்களை அகன்று வைத்திருக்கும்போது ஈர்ப்பு மையம் கீழே இருக்கும். அப்போது நல்ல நிலைத்தன்மை இருக்கும். அதுவே கால்களை ஒட்டி வைத்திருக்கும்போது ஈர்ப்பு மையம் மேலே இருக்கும். அப்படியான சூழ்நிலைகளில் நாம் எளியில் விழுந்துவிடுவோம். சுமோ வீரர்களோ, மல்யுத்த வீரர்களோ சண்டையிடும்போது கால்களை அகற்றி வைப்பதற்கான காரனம் இதுதான்" என்று பிபிசி தமிழிடம் கூறினார் விளையாட்டு மருத்துவரான ஹரிணி முரளிதரன். சுறுக்கமாகச் சொன்னால், ஈர்ப்பு மையம் தாழ்வாக இருந்தால் நிலைத்தன்மை அதிகமாக இருக்கும். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தங்கள் நிலைத்தன்மையை அதிகப்படுத்தும் நோக்கில், கால்களை அகலமாக வைத்து தங்கள் ஈர்ப்பு மையத்தை சுமோ வீரர்கள் தாழ்வாக்குகிறார்கள் (கோப்பு படம்) பவுமாவின் உயரம் சாதகமாக அமைந்தது எப்படி? பவுமாவின் உயரம் மற்றும் தாழ்ந்த ஈர்ப்பு மையம் பற்றிப் பேசிய கே.பி.அருண் கார்த்திக், "பொதுவாக 'லோ சென்ட்டர் ஆஃப் கிராவிட்டி' இருக்கும் வீரர்களிடம் நல்ல சமநிலை இருக்கும். பவுமா உயரம் குறைவாக இருப்பதால் அவரது சென்ட்டர் ஆஃப் கிராவிட்டி தாழ்ந்து இருக்கிறது. மேலும், அவரது பேட்டிங் ஸ்டான்ஸ் (பேட்டர்கள் பந்தை சந்திப்பதற்குத் தயாராகும்போது நிற்கும் முறை) சற்று அகலமாக இருக்கிறது. இதனால் அவரால் திடமாக நகர முடிகிறது" என்று கூறினார். "பந்து நன்கு திரும்பும் விக்கெட்டுகளில் இது சாதகமான ஒரு அம்சம். பந்தைப் பற்றி அவரால் நன்கு கணிக்க முடியும். அது எப்படியான பந்து என்பதையும் சீக்கிரம் அறிந்துகொள்ள முடியும். பொதுவாக 'லென்த்தில்' வீசப்படும் பந்துகளுக்கு பெரும்பாலான வீரர்கள் 'ஃப்ரன்ட் ஃபூட்' (கால்களை முன் நகர்த்தி) வைத்து ஆடுவார்கள். ஆனால் அவர் அந்தப் பந்துகளை பேக் ஃபூட்டில் (கால்களைப் பின் நகர்த்தி) ஆடினார். அதனால் பந்தின் தன்மையை இன்னும் சரியாகக் கணிக்க முடிகிறது, அதை எதிர்கொள்வதற்கான கூடுதல் அவகாசமும் அவருக்குக் கிடைக்கிறது" என்றும் அருண் கார்த்திக் கூறினார். ஒருவேளை பந்துகள் திரும்பினாலும் கூட அவர் பேட்டுக்கு வெளியே செல்கிறதே தவிர, உள்ளே வரவில்லை என்றும் அவர் கூறினார். அதேசமயம் பவுமாவின் உயரம், ஒரு கட்டத்தில் யான்சன், பாஷ் போன்ற வீரருக்கும் உதவியது என்று கூறினார் அருண் கார்த்திக். "மிகவும் உயர வித்தியாசம் கொண்ட வீரர்கள் ஆடும்போது பௌலர்கள் தங்களின் 'லென்த்தை' மாற்றவேண்டிய நிலை ஏற்படும். அது அவர்களுக்கு சற்று பாதகமான அம்சம். சீராக ஒரே போல் வீசிக்கொண்டிருந்தவர்களுக்கு இந்த மாற்றம் பின்னடைவைக் கொடுக்கும். அது பேட்டர்களுக்கு சாதகமாக அமையும்" என்றார் அவர். வர்ணனையின்போது இந்த விவாதத்தைத் தொடங்கிவைத்த இந்திய முன்னாள் வீரர் அபினவ் முகுந்த் இந்த தாழ்வான ஈர்ப்பு மையமும், பவுமான டிஃபன்ஸிவ் மனநிலையும் இணைந்து ஒரு மிகச் சிறந்த இன்னிங்ஸைக் கட்டமைத்தது என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பவுமாவின் ஈர்ப்பு மையம் தாழ்வாக இருந்தது ஈடன் கார்டன் போட்டியில் அவருக்கு சாதகமாக அமைந்தது பிபிசி தமிழிடம் இதுபற்றிப் பேசிய அபினவ் முகுந்த், "தன்னுடைய உயரத்தை நன்கு சாதகமாக்கிக்கொண்ட பவுமா, பந்துகளுக்கு அதிகமாக 'கமிட்' (commit) ஆகவில்லை'' என்றார். ''அவர் அதிகமாக 'இனிஷியல் மூவ்மென்ட்' எதுவும் கொடுக்கவில்லை. அதிகம் முன்னே நகராமல் ரொம்பவும் கொஞ்சமாகதான் கால்களை முன்பு நகர்த்தினார் (a small front press). அதனால் எந்தப் பந்துக்கும் அவர் முன்கூட்டியே சென்றுவிடவில்லை. இது டிஃபன்ஸிவ் கிரிக்கெட் விளையாடுவதற்கான ஒரு நல்ல வழிமுறை." என்று கூறினார். தற்போது டி20 போட்டிகளில் அதிகம் விளையாடாத பவுமாவால் தடுப்பு ஆட்டத்தின் முக்கியத்துவத்தை நன்கு புரிந்துகொள்ள முடிந்திருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார். தென்னாப்பிரிக்கா 75/6 என்ற தடுமாறிக்கொண்டிருந்தபோது யான்சன் மற்றும் பாஷ் உடன் கூட்டணி அமைத்துத்தான் தென்னாப்பிரிக்காவின் ஸ்கோரை உயர்த்தினார் பவுமா. பவுமாவுக்கு அடுத்து அந்த இன்னிங்ஸில் தென்னாப்பிரிக்காவுக்காக அதிக ரன்கள் அடித்தது பாஷ் (25 ரன்கள்) மற்றும் யான்சன் (13 ரன்கள்) இருவரும்தான். இந்த எதிர்பாராத இன்னிங்ஸ்கள்தான் தென்னாப்பிரிக்கா 123 என்ற பெரிய முன்னிலை (அந்த ஆடுகளத்துக்கு அது பெரிய இலக்காகவே கருதப்பட்டது) பெறக் காரணமாக அமைந்தது. கவாஸ்கர், சச்சின் போன்றவர்களுக்கும் உதவியது பவுமா மட்டுமல்ல, சுனில் கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர் முதல் மெஸ்ஸி வரை உயரம் குறைவான வீரர்கள் அதீத நிலைத்தன்மையோடு காணப்பட்டதற்கு அந்த ஈர்ப்பு மையம் தாழ்வாக இருந்ததுதான் காரணம் என்று வல்லுநர்கள் சொல்லியிருக்கிறார்கள். சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ராகுல் டிராவிட் கூட பாட்காஸ்ட்டில் சில மாதங்கள் முன்பு இதுபற்றிப் பேசியிருந்தார். தனக்கு முந்தைய தலைமுறை வீரர்களிடம் பேட்டிங் பற்றி டிராவிட் ஏதும் பின்பற்றியிருக்கிறாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதுபற்றிப் பேசிய டிராவிட், "கவாஸ்கர் அற்புதமான நிலைத்தன்மை கொண்டவர். அதை நான் எப்போதும் வியந்திருக்கிறேன். நான் சற்று உயரம் அதிகம் என்பதால், என்னால் எதையும் பின்பற்ற முடியவில்லை. அதனால் எனக்கு ஏற்ற வகையில் நான் நின்றேன். அதேசமயம் டெண்டுல்கரும் நன்கு நிலைத்தன்மை கொண்டிருந்தார். உயரம் குறைவான வீரர்களுக்கு 'லோ சென்ட்டர் ஆஃப் கிராவிட்டி' இருப்பதால் அவர்களுக்கு எப்போதுமே அதிக நிலைத்தன்மை கொண்ட பார்வை ஏற்படும் என்று சொல்வார்களே" என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தன்னை விட உயரம் குறைவான சச்சின், சிறந்த நிலைத்தன்மை கொண்டிருந்ததாகக் கூறுகிறார் டிராவிட் (கோப்புப் படம்) மேலும், "கடந்த காலத்தில் விளையாடிய வீரர்களில் பல சிறந்த பேட்டர்கள் உயரம் குறைவானவர்களாக இருந்திருக்கிறார்கள். கவாஸ்கர், டெண்டுல்கர், லாரா, பான்டிங்... அந்தக் காலத்தில் பிராட்மேன் வரை பாருங்கள். கோலி கூட கொஞ்சம் உயரம் குறைவானவர்தான். அவருக்கு நான் அப்படி சொல்வது பிடிக்காமல் போகலாம்" என்றும் டிராவிட் கூறியிருந்தார். தற்போது கிரிக்கெட் மாறிவரும் சூழலில், டி20 கிரிக்கெட் எழுச்சி பெற்றிருக்கும் நிலையில், அது உயரமான வீரர்களுக்கு சாதகமாக இருப்பதாகக் கூறினார் டிராவிட். உயரமான வீரர்கள் பந்தை எட்டுவதற்கும் நன்கு பலம் கொடுத்து அடிப்பதற்கும் அவர்கள் உயரம் உதவுவதாகக் கூறிய டிராவிட், கெவின் பீட்டர்சன், கரன் பொல்லார்ட் போன்றவர்களை உதாரணமாகக் கூறினார். அதேசமயம், டெஸ்ட் போட்டிகளில் உயரம் குறைவான வீரர்களால் மற்றவர்களைவிட அதிகம் சோபிக்க முடியும் என்கிறார் கே.பி.அருண் கார்த்திக். ஆலன் டொனால்டுக்கு எதிராக ஈர்ப்பு மையத்தை மேலும் தாழ்வாக்கிய சச்சின் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியொன்றில் ஆலன் டொனால்டுக்கு எதிராக தான் ஈர்ப்பு மையத்தை மிகவும் தாழ்த்தி விளையாடியதைப் பற்றி பத்திரிகையாளர் போரியா மஜும்தாரிடம் ஒருமுறை சொல்லியிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர். "அரௌண்ட் தி ஸ்டம்ப் (around the stump line) வந்து எனது விலாவைக் குறிவைத்து பந்துவீசிக்கொண்டிருந்தார் ஆலன் டொனால்ட். 'உயரமான வீரர்கள் பந்துக்கு மேலே சென்று ஆடுவதுபோல், நாம் ஏன் பந்துக்கு கீழே சென்று ஆடக்கூடாது' என்று யோசித்தேன். உடனே என்னுடைய ஈர்ப்பு மையத்தைத் தாழ்த்தி, பந்துக்குக் கீழே செல்லத் தொடங்கினேன். அதன்பிறகு அவரை எதிர்கொள்வது சற்று எளிதானது," என்று கூறியிருக்கிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஈர்ப்பு மையத்தை நன்கு தாழ்வாக்கியதன் மூலம் வீசப்படும் பந்து பற்றி நன்கு புரிந்துகொள்ள முடிந்தது என்று குறிப்பிட்டிருக்கிறார் சச்சின் டெண்டுல்கர் (கோப்புப் படம்) மேலும், "ஒருவேளை பந்து 'ஷார்ட் ஆஃப் குட் லென்த்தில்' (short of good length) பிட்ச் ஆனாலும், என்னால் அதற்குக் கீழே செல்ல முடிந்தது. அதைத் தொடர்ச்சியாக செய்ய நான் என் ஸ்டான்ஸை அகலப்படுத்தி, இன்னும் கீழே செல்லத் தொடங்கினேன். அதன்பிறகு பந்தின் லென்த்தைக் கணிப்பதுதான் விஷயம். அதை நான் சரியாகக் கணித்தபின், பந்தைப் பற்றி நன்கு அறிந்துகொள்ளும் நிலையில் இருந்தேன்." என்றும் சச்சின் கூறினார். ஈடன் கார்டனில் பவுமா இந்திய ஸ்பின்னர்களை எதிர்கொண்டது கிட்டத்தட்ட இப்படித்தான். உயர்ந்து நின்ற பவுமா ஈர்ப்பு மையம் தாழ்வாக இருப்பதோடு, நன்கு அகலமான ஸ்டான்ஸ் கொண்டிருந்ததால், வீசப்படும் பந்துகளைப் பவுமாவால் நன்கு அறிந்திருக்க முடிந்தது என்றார் அருண் கார்த்திக். அதனால் தான் ஜடேஜாவுக்கு எதிராக அனைவரும் விக்கெட்டுகள் இழந்தபோது பவுமா உறுதியாக நின்றார் என்கிறார் அவர். ஜடேஜா அன்று வீசியது மிகச் சிறந்த ஸ்பெல்களில் ஒன்றாகக் கருதப்பட்டது. அவர் வீசிய 20 ஓவர்களில், 17 ஓவர்களில் குறைந்தது ஒரு பந்தையாவது சந்தித்திருந்தார் பவுமா. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 75/6 என்ற நிலையில் இருந்த தென்னாப்பிரிக்கா, பவுமாவின் இன்னிங்ஸாலும், அவர் அமைத்த இரு பார்ட்னர்ஷிப்களாலும் 153 என்ற ஸ்கோருக்கு எடுத்துச் சென்றன மற்ற பேட்டர்கள் ஜடேஜாவின் பந்தைக் கணிக்கத் தவறியபோது, பவுமா அதில் எந்தத் தவறும் செய்யவில்லை. காரணம், தமிழ் வர்ணனையாளர்கள் சொன்னதுபோல், பவுமாவின் உயரமும், அவரது ஸ்டான்ஸும். அந்த இன்னிங்ஸ் இல்லாமல் இருந்திருந்தால் தென்னாப்பிரிக்கா விரைவில் ஆல் அவுட் ஆகியிருக்கும். இலக்கு குறைவாக இருந்திருந்தால் இந்தியா அந்தப் போட்டியை வென்றிருக்கும். ஆனால், பவுமாவின் அந்த இன்னிங்ஸ் அதைத் தடுத்துவிட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgk2vpyjewo
  6. பட மூலாதாரம், X/rajprathaban படக்குறிப்பு, (கோப்புப்படம்) கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் மதுரை மாநகரின் மேயராக இருந்த இந்திராணி ராஜினாமா செய்து நான்கு வாரங்களுக்கு மேலாகிவிட்டது. ஆனால், இப்போதுவரை புதிய மேயர் தேர்வு செய்யப்படவில்லை. மதுரை மாநகராட்சியில் நடந்த வரி மோசடி விவகாரம் சில மாதங்களுக்கு முன்பாக மிகப் பெரிய அளவில் வெடித்தது. இந்த விவகாரத்தில் மாநகராட்சி ஊழியர்கள், அலுவலர்கள், கவுன்சிலரின் கணவர் உட்பட 23 பேர் கைது செய்யப்பட்டனர். விவகாரம் பெரிதான நிலையில் மாநகராட்சியின் நிலைக்குழுத் தலைவர்கள் இரண்டு பேரும் மண்டலத் தலைவர்கள் ஐந்து பேரும் ராஜினாமா செய்தனர். இதற்குப் பிறகு மதுரை மாநாகராட்சியின் மேயராக இருந்த இந்திராணியின் கணவர் பொன் வசந்த் ஆகஸ்ட் 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். அக்டோபர் 9-ஆம் தேதி பொன் வசந்த் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த நிலையில் அக்டோபர் 15-ஆம் தேதி மாநகராட்சியின் மேயரான இந்திராணி பொன் வசந்த் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமா 17-ஆம் தேதி மாமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நிகழ்வு நடந்து ஒரு மாதத்திற்கு மேலாகியும் மதுரை மாநகராட்சியின் புதிய மேயராக யாரும் தேர்வு செய்யப்படவில்லை. மதுரை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 இடங்களில் 69 இடங்கள் தி.மு.க. வசமே இருக்கும் நிலையிலும், புதிய மேயரை நியமிக்க முடியாதது பல கேள்விகளை எழுப்பியிருக்கிறது. பிரச்னையின் பின்னணி என்ன? மதுரை மாநகராட்சியில் சொத்து வரி நிலுவை விவரங்களை 2024-ஆம் ஆண்டில், அப்போதிருந்த மாநகராட்சி ஆணையர் சி. தினேஷ் குமார் வழக்கம்போல ஆராய்ந்தபோது, 100-க்கும் மேற்பட்ட கட்டடங்களுக்கான வரி பாக்கித் தொகை வெகுவாகக் குறைந்திருப்பதைக் கண்டறிந்தார். இதையடுத்து, இது குறித்து ஒரு ரகசிய விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இந்த விசாரணையில் மாநகராட்சியின் ஊழியர்களும் ஒப்பந்த ஊழியர்களும் சேர்ந்து, மாநகராட்சியின் சொத்து வரியைக் கணக்கிடும் மென் பொருளில் இருந்த ஒரு சிறிய ஓட்டையைப் பயன்படுத்தி பலரது சொத்து வரிகளைக் குறைத்தது தெரியவந்தது. இதன் காரணமாக, இந்த சொத்தின் உடமையாளர்கள், மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையும் கணிசமாகக் குறைந்தது. 2024-ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதல் 2024 ஜூலை 31 வரையிலான சொத்து வரி விதிப்பு விவரங்களை ஆராய்ந்தபோது இது தெரியவந்தது. 2024-ஆம் ஆண்டு செப்டம்பரில் மதுரை நகரக் காவல் துறையில் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவுசெய்த மதுரை நகரக் காவல்துறை, மூன்றாவது மண்டலத்தில் குறைந்தது 150 பேரின் வரி குறைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்தது. சிலர் கைது செய்யப்பட்டார்கள். இதையடுத்து 83வது வார்டின் அ.தி.மு.க. கவுன்சிலர் டி. ரவி, இந்த வழக்கை சி.பி.ஐக்கு மாற்ற வேண்டுமென சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் வழக்கு ஒன்றைத் தொடுத்தார். வழக்கு நடந்துகொண்டிருந்தபோதே, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவின் பேரில் மண்டலத் தலைவர்கள் ஐந்து பேரும் ராஜினாமா செய்தனர். வழக்கை தொடர்ந்து விசாரித்த உயர் நீதிமன்ற கிளை, ஐ.பி.எஸ். அதிகாரி தலைமையில் ஒரு சிறப்பு விசாரணைக் குழுவை அமைக்க உத்தரவிட்டது. பட மூலாதாரம், X/rajprathaban படக்குறிப்பு, மதுரை நகர மேயர் இந்திராணி பொன்வசந்த் (வலது) மற்றும் அவரின் கணவர் பொன். வசந்த் (இடது) இந்த சிறப்பு விசாரணைக் குழு மாநகராட்சியின் தற்காலிக ஊழியர்கள், நிரந்தர ஊழியர்கள் சிலர், வரி விதிப்பிற்கான நிலைக் குழு தலைவரின் கணவர் ஆகியோரைக் கைது செய்தது. மதுரை மாநகராட்சியின் முன்னாள் துணை ஆணையர் சுரேஷ் குமாரும் கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னையில் மதுரை நகர மேயரின் கணவர் பொன். வசந்த்தை சென்னையில் கைது செய்தது காவல் துறை. அதற்கு முன்னதாகவே, மே மாதத்திலேயே கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக அவரை இடைநீக்கம் செய்வதாக தி.மு.க. அறிவித்திருந்தது. "மதுரையில் வரலாறு காணாத அதிசயமாக மேயரின் கணவர் சிறையில் இருந்தபோதும், மனைவி மேயராக தொடர்ந்து செயல்பட்டார். எங்களுடைய அழுத்தத்தின் காரணமாகத்தான் பல நாட்கள் கழித்து அவர் ராஜினாமா செய்தார். இருந்தாலும் இத்தனை நாட்கள் ஆன பிறகும் புதிய மேயர் நியமிக்கப்படவில்லை. புதிய மேயராக வருவதற்கு மதுரை தி.மு.கவிற்குள் சரியான ஆட்கள் இல்லை போலிருக்கிறது." என்கிறார் அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜு. "அதனால்தான் புதிய மேயரை நியமிக்காமல் இருக்கிறார்கள். மேயர் மட்டுமல்ல ஐந்து மண்டலத் தலைவர்கள், இரண்டு நிலைக்குழு தலைவர்களும் ராஜினாமா செய்திருக்கிறார்கள். அந்தப் பதவிகளுக்கும் புதிதாக ஆட்கள் நியமிக்கப்படவில்லை," என்றார். இந்திராணி பொன். வசந்த் ராஜினாமா செய்து பல நாட்களாகியும் மேயர் பதவிக்கென யாரையும் தி.மு.க. அறிவிக்கவில்லை. பட மூலாதாரம், X/Sellur Raju படக்குறிப்பு, முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு 'பொறுப்பு மேயராக அறிவிப்பதில் என்ன சிரமம்?' இதைப்பற்றி பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, "அமைச்சர்களுக்கிடையே முரண்பாடு இருப்பதாகக் கூறப்படுகிறது. அதைப்பற்றி எனக்குத் தெரியவில்லை. பி.டி.ஆர். இப்போது இதிலெல்லாம் தலையிடுவதில்லை. இருந்தாலும், புதிய மேயரை நியமிப்பதில் தி.மு.க. தலைமை ஆர்வம் காட்டவில்லை. மதுரையில் எங்கு பார்த்தாலும் குண்டும் குழியுமாக இருக்கிறது. சாலைகள் எல்லாம் குப்பைகளாகக் கிடக்கின்றன." "அ.தி.மு.க. ஆட்சியில் துவங்கப்பட்ட முல்லைப் பெரியாறு கூட்டுக் குடிநீர் திட்டத்தை இப்போதுவரை சரியாக செயல்படுத்தவில்லை. மேயர் இல்லாததால் மாநகராட்சி நிர்வாகமே ஸ்தம்பித்துப் போய்க் கிடக்கிறது. எந்தப் பணிகளும் நடக்கவில்லை. வைகை ஆறு கூவத்தைப் போல மாறி வருகிறது. இருந்தாலும் அப்படியே போட்டுவைத்திருக்கிறார்கள்" எனக் குற்றச்சாட்டுகளை முன் வைக்கிறார் செல்லூர் ராஜு. 1971-ஆம் ஆண்டின் மதுரை மாநகராட்சிச் சட்டத்தின் 40வது பிரிவு, மேயர் பதவி காலியாக இருக்கும்போதோ, 15 நாட்களுக்கு மேல் மேயர் நகரத்தில் இல்லாவிட்டாலோ துணை மேயர் அந்தப் பொறுப்பை வகிப்பார் எனக் கூறுகிறது. . இதனால், துணை மேயரான டி. நாகராஜன் மேயருக்கான பணிகளை தற்போது மேற்கொண்டுவருகிறார். டி. நாகராஜன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் (சி.பி.எம்.) சேர்ந்தவர் என்பதால் அவருக்கு தி.மு.க வட்டாரங்கள் ஒத்துழைப்பதில்லை என சி.பி.எம். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. "மாநகராட்சியின் அதிகார அடுக்கில், மேயருக்கு அடுத்த இடத்தில்தான் ஆணையர். இப்போது துணை மேயர்தான், மேயரின் கடமைகளை ஆற்றுகிறார். ஆனால், இப்போதும் விழாக்களுக்கான அழைப்பிதழ்களில் ஆணையாளருக்குக் கீழ் சிறிய எழுத்தில் துணை மேயர் எனக் குறிப்பிட்டு அவரது பெயரை அச்சிடுகிறார்கள். கல்வெட்டுகளிலும் அப்படித்தான் பொறிக்கப்படுகிறது. துணை மேயரை, பொறுப்பு மேயராக அறிவிப்பதில் என்ன சிரமம் எனத் தெரியவில்லை" என சி.பி.எம் மாவட்ட நிர்வாகி ஒருவர் தன் பெயரை குறிப்பிட விரும்பாமல் பிபிசியிடம் தெரிவித்தார். பட மூலாதாரம், D Nagararajan படக்குறிப்பு, துணை மேயர் டி. நாகராஜன். துணை மேயர் டி. நாகராஜன் தன்னை பொறுப்பு மேயராக அறிவிப்பதில் பிரச்னை இருக்கிறதா என்பது குறித்து ஏதும் பேச விரும்பவில்லை. எல்லாத் தரப்பினருடனும் இணைந்து செயல்பட தான் தயாராகவே இருப்பதாக மட்டும் கூறுகிறார். இது குறித்து பிபிசியிடம் பேசிய அவர், "மேயர் இல்லாத காலகட்டத்தில் புதிதாக மேயர் நியமிக்கப்படும் வரை, துணை மேயரே பொறுப்பு மேயராக செயல்படலாம் என்கிறது மதுரை மாநகராட்சி சட்டம். அந்த அதிகாரத்தின் கீழ் நான் தற்போது செயல்படுகிறேன். மேயரின் ராஜினாமா 17-ஆம் தேதி ஏற்கப்பட்டது. நான் 19-ஆம் தேதியில் இருந்தே கோப்புகளில் கையெழுத்திட்டு வருகிறேன். மாநகராட்சியின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள பூங்கா முருகன் கோவில் கணக்குகளையும் நான்தான் பார்க்கிறேன். அதிகாரிகள், ஆளும்கட்சி, அமைச்சர் ஆகியோரோடு இணைந்து செயல்பட தயாராக இருக்கிறேன்" என்று மட்டும் தெரிவித்தார். மதுரை நகரின் உள்கட்டமைப்பு, சுத்தம் ஆகியவை குறித்து ஏற்கனவே பல புகார்கள் இருக்கும் நிலையில், மேயர் இல்லாத காரணத்தால் மாநகராட்சிப் பணிகள் முற்றிலுமாக முடங்கிப்போயிருக்கின்றன என்றும் சிறிய பணிகள்கூட நடப்பதில்லை என்றும் தெரிவிக்கிறார்கள் அந்த நகரைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள். "மழை நீர் வடிகாலைத் தூர்வாரும் பணிகள் அப்படியே நின்று போயிருக்கின்றன. மழை பெரிதாக பெய்தால் நிலைமை மோசமாகிவிடும். குண்டும் குழியுமான சாலைகளை சீர்செய்ய முடியவில்லை. மாமன்றக் கூட்டம் ஒவ்வொரு மாதமும் நடக்க வேண்டும். ஆனால், மேயர் இல்லாததால் ஒன்றரை மாதமாக மாமன்றக் கூட்டமே நடக்கவில்லை." என்கிறார் மதுரை மாநகராட்சி ஆணையரின் கௌரவ ஆலோசகராக முன்பு இருந்தவரும் சமூக ஆர்வலருமான டி.ஆர். தேசிகாச்சாரி. "மாமன்றக் கூட்டம் நடக்கவில்லை என்பதால் அதன் ஒப்புதலைப் பெற்று செயல்படுத்தப்பட வேண்டிய பணிகள் ஏதும் நடைபெறவில்லை. மாநகராட்சியின் சார்பில் ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க் கிழமையன்று குறை தீர்க்கும் கூட்டம் நடக்கும். வரி ஏய்ப்பு தொடர்பான புகார் வந்ததில் இருந்து அந்தக் கூட்டமும் நடக்காமல் கிடக்கிறது. மக்களின் சின்னச் சின்னக் கோரிக்கைகளைக்கூட செயல்படுத்த முடியவில்லை" என்கிறார் அவர். பட மூலாதாரம், X/Madurai Corporation வேறு சில பிரச்னைகளையும் சுட்டிக்காட்டுகிறார் டி.ஆர். தேசிகாச்சாரி. 2011-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் வரை மதுரை மாநகராட்சிப் பகுதிக்குள் 72 வார்டுகள் இருந்தன. அதற்குப் பிறகு திருப்பரங்குன்றம், ஆவனியாபுரம் என்ற இரு முனிசிபாலிடிகளும் இரண்டு பஞ்சாயத்து யூனியன்களும் 13 பஞ்சாயத்துகளும் மதுரை மாநகராட்சியோடு இணைக்கப்பட்டன. இதனால், மாநகராட்சிக்குள் உள்ள தெருக்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஆனால், ''புதிதாக மாநகராட்சிக்குள் இணைந்த பல தெருக்கள் மாநகராட்சியின் இணைய தரவுத் தளத்தில் உள்ளிடப்படவில்லை. இதனால், இந்தத் தெருக்களுக்கு வரி விதிப்பதில் சிரமம் இருக்கிறது. அதேபோல, குடிநீர் இணைப்புகள், பாதாளச் சாக்கடை இணைப்புகளையும் தர முடியவில்லை. இந்தப் பணிகள் எல்லாமே கிடப்பில் கிடக்கின்றன. இந்த நிலையில் மேயரும் இல்லாதது நிலைமையை மோசமாக்கியிருக்கிறது'' என்கிறார் டி.ஆர். தேசிகாச்சாரி. மேயர் பதவி மட்டுமல்லாமல், மாநகராட்சியில் வேறு சில பதவிகளும் காலியாகக் கிடக்கின்றன. வரி ஏய்ப்பு மோசடி குறித்த விவகாரம் வெடித்ததும் ஐந்து மண்டலங்களின் தலைவர்களும் ராஜினாமா செய்தனர். அந்தப் பதவிகளும் இன்னும் நிரப்பப்படவில்லை. மண்டலங்களைப் பொறுத்தவரை, சிறு சிறு பராமரிப்புப் பணிகளைச் செய்வதற்கு என தனியாக நிதி ஒதுக்கீடு செய்யப்படும். மண்டலக் கூட்டங்கள் மாதாமாதம் நடத்தப்பட்டு, அந்தப் பணிகள் முடிவுசெய்யப்படும். "ஆனால், மண்டலத் தலைவர்கள் இல்லாததால் கூட்டங்களும் நடப்பதில்லை; பராமரிப்புப் பணிகளும் நடப்பதில்லை" என்கிறார் தேசிகாச்சாரி. பட மூலாதாரம், X/ptrmadurai படக்குறிப்பு, "நான் இந்த விவகாரங்களில் இப்போது தலையிடுவதில்லை." என்று மட்டும் தெரிவித்தார் அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் 'தலைமைதான் முடிவுசெய்ய வேண்டும்' மதுரை மாவட்ட தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் இது குறித்து விரிவாகப் பேச விரும்பவில்லை. "பிரச்னை வெடித்ததும் மேயரை ராஜினாமா செய்ய வைக்கச் சொன்னார்கள். மேயரை ராஜினாமா செய்ய வைத்தோம். அதோடு எங்கள் பணி முடிந்தது. புதிய மேயர் யார் என்பதை கட்சித் தலைமைதான் முடிவுசெய்ய வேண்டும். இது தொடர்பான எல்லா விஷயங்களையும் கட்சித் தலைமைதான் முடிவுசெய்ய வேண்டும்." என்கிறார் மதுரை மாநகர மாவட்டச் செயலாளரும் மதுரை வடக்குத் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருமான கோ. தளபதி. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சரான பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜனிடம் கேட்டபோது, "நான் இந்த விவகாரங்களில் இப்போது தலையிடுவதில்லை." என்று மட்டும் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தி.மு.கவின் செய்தித் தொடர்பாளர் ரவீந்திரன் கான்ஸ்டைன்டீனிடம் கேட்டபோது, இந்த விவகாரத்தால் மக்கள் பணிகள் எதுவும் பாதிக்கப்படவில்லை என்கிறார். "புதிய மேயரை நியமிப்பது தொடர்பான பணிகள் நடந்துவருகின்றன. தவிர, துணை மேயர் மேயருக்கான பணிகளைப் பார்த்துவருகிறார்" என்று தெரிவித்தார். துணை மேயரை, பொறுப்பு மேயராக அறிவிப்பதில் என்ன பிரச்னை? என கேட்டப்போது, "பொறுப்பு மேயராக நியமிப்பது குறித்து எந்த விதியும் இல்லை. மேயர் இல்லாவிட்டால், துணை மேயரே மேயராகச் செயல்படுவார். அப்படித்தான் செயல்படுகிறார். இதில் ஒரு பிரச்னையும் இல்லை." என்கிறார் ரவீந்திரன் கான்ஸ்டைன்டீன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9867l08e85o
  7. ஏ.ஐ துறையில் இது நடந்தால் 'எந்த நிறுவனமும் தப்பிக்காது' - சுந்தர் பிச்சை எச்சரிக்கை கட்டுரை தகவல் ஃபைசல் இஸ்லாம் பொருளாதார ஆசிரியர் ரேச்சல் க்ளன் வணிக செய்தியாளர் 18 நவம்பர் 2025, 12:15 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் செயற்கை நுண்ணறிவுக்காக்கான மவுசு குறைந்தால் ஒவ்வொரு நிறுவனமும் பாதிக்கப்படும் என்று கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட்டின் தலைவர் சுந்தர் பிச்சை பிபிசியிடம் தெரிவித்துள்ளார். பிபிசி நியூஸிடம் பிரத்யேகமாக பேசிய சுந்தர் பிச்சை, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ) முதலீட்டின் வளர்ச்சி ஒரு "அசாதாரண தருணம்" என்றாலும், தற்போது அதில் சில "பகுத்தறிவற்ற தன்மை" உள்ளது என்றார். சமீபத்திய மாதங்களில் ஏ.ஐ தொழில்நுட்ப நிறுவனங்களின் மதிப்பு உயர்ந்துள்ளதால் சிலிக்கான் பள்ளத்தாக்கு மற்றும் அதற்கு அப்பால் இது பற்றிய அச்சங்கள் நிலவி வருகின்றன. மேலும் நிறுவனங்கள் வளர்ந்து வரும் இந்த தொழில்துறையில் பெரிய அளவில் செலவு செய்கின்றன. செயற்கை நுண்ணறிவு மவுசு சரிந்தால் ஏற்படும் தாக்கத்திலிருந்து கூகுள் தப்பித்துக் கொள்ளக்கூடுமா என்று கேட்டதற்கு, அந்த பிரச்னையை கூகுள் சமாளிக்க முடியும் என்று சுந்தர் பிச்சை கூறினார். ஆனால் ஒரு எச்சரிக்கையையும் வெளியிட்டார். "நாங்கள் உட்பட எந்த நிறுவனமும் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். கூகுளின் கலிபோர்னியா தலைமையகத்தில் ஒரு விரிவான பிரத்யேக நேர்காணலில், அவர் எரிசக்தி தேவைகள், காலநிலை இலக்குகளை அடைவதில் தாமதம், பிரிட்டனில் முதலீடு, அவரது ஏ.ஐ மாதிரிகளின் துல்லியம் மற்றும் வேலைகளில் ஏ.ஐ புரட்சியின் தாக்கம் ஆகியவற்றை குறித்தும் பேசினார். செயற்கை நுண்ணறிவு (AI) சந்தையின் நிலை குறித்து முன்பைவிட மிக அதிகமாக தீவிரமான ஆய்வு இருக்கும் நேரத்தில் இந்த நேர்காணல் வந்துள்ளது. பட மூலாதாரம், Getty Images போட்டி யாருடன்? ஆல்ஃபபெட் பங்குகளின் மதிப்பு ஏழு மாதங்களில் இரட்டிப்பாகி 3.5 ட்ரில்லியன் டாலராக உயர்ந்துள்ளன. இதற்கு காரணம், கூகுள் நிறுவனத்துக்கு ChatGPT-ஐ உருவாக்கிய OpenAI உடனான போட்டியை சமாளிக்கும் திறன் அதிகம் உள்ளது என்று சந்தையில் நம்பிக்கை இருப்பதுதான். அல்பபெட் நிறுவனம் உருவாக்கி வரும் ஏ.ஐக்கான சிறப்பு சூப்பர் சிப்கள் மீது தற்போது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. இந்த சிப்கள், சமீபத்தில் உலகில் முதல்முறையாக $5 டிரில்லியன் மதிப்பை எட்டிய, என்வீடியா நிறுவனத்துடன் போட்டியிடுகின்றன. மதிப்பீடுகள் அதிகரித்து வரும் நிலையில், சில ஆய்வாளர்கள் OpenAI-ஐ சுற்றியுள்ள சிக்கலான 1.4 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள ஒப்பந்தங்கள் குறித்து சந்தேகம் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு OpenAI- யின் வருமானம் மிகக்குறைவாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது முதலீட்டில் ஆயிரத்தில் ஒரு பங்கிற்கும் குறைவான வருவாயைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பட மூலாதாரம், Getty Images டாட்காம் ஏற்றத்தின் போது, 2000 -ஆம் ஆண்டில் அந்த சந்தை வீழ்ச்சியடைவதற்கு முன்பே, 1996-ஆம் ஆண்டில் அமெரிக்க மத்திய வங்கித் தலைவர் ஆலன் கிரீன்ஸ்பான் சந்தையில் நிலவிய "பகுத்தறிவற்ற உற்சாகம்" குறித்து எச்சரித்தார். அதே கருத்துக்களை எதிரொலிக்கும் தொனியில் பேசிய சுந்தர் பிச்சை, இது போன்ற முதலீட்டு சுழற்சிகளில் தொழில்துறை "மிகையாக முதலீடு செய்யக்கூடும்'' என்று கூறினார். "நாம் இப்போது இணையத்தை திரும்பிப் பார்க்கலாம். நிறைய அதிகப்படியான முதலீடு (அப்போது) இருந்தது, ஆனால் இணையம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் குறித்து யாருக்கும் சந்தேகங்கள் இல்லை," என்று அவர் கூறினார். "ஏ.ஐயும் அதே மாதிரியாக இருக்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன். எனவே இது பகுத்தறிவு மற்றும் இது போன்ற ஒரு தருணத்தில் பகுத்தறிவற்ற கூறுகள் இரண்டையும் கொண்டுள்ளன என்று நான் நினைக்கிறேன்" என்றார். சிப் முதல் யூடியூப் தரவு, அதிநவீன அறிவியல் வரை – அனைத்தையும் சொந்தமாக கொண்டிருப்பது கூகுளின் தனித்துவம் என்றும் இதனால் செயற்கை நுண்ணறிவு சந்தை மாற்றங்களை சமாளிக்கும் நிலையில் கூகுள் இருப்பதாக பிச்சை கூறினார். சுந்தர் பிச்சையின் நிறுவனம் பிரிட்டனிலும் தனது தடத்தை விரிவுபடுத்தி வருகிறது. செப்டம்பரில், ஆல்ஃபபெட் பிரிட்டனின் செயற்கை நுண்ணறிவு துறையில் முதலீடு செய்வதாக அறிவித்தது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் உள்கட்டமைப்பு மற்றும் ஆராய்ச்சிக்கு 5 பில்லியன் பவுண்டுகள் முதலீட்டை உறுதி செய்துள்ளது. லண்டனை தளமாகக் கொண்ட அதன் முக்கிய செயற்கை நுண்ணறிவு பிரிவான டீப்மைண்ட் உட்பட பிரிட்டனில் "அதிநவீன" ஆராய்ச்சிப் பணிகளை ஆல்ஃபபெட் உருவாக்கும் என்று பிச்சை கூறினார். அதிகபடியான மின்சார தேவைகள் முதல் முறையாக, கூகுள் "காலப்போக்கில்" "நமது (ஏஐ) மாதிரிகளை பயிற்றுவிக்க" ஒரு நடவடிக்கையை எடுக்கும் என்று அவர் கூறினார். இது பிரிட்டன் அரசாங்கம் அழுத்தம் கொடுக்கும் ஒரு நடவடிக்கையாகும். இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மூன்றாவது ஏ.ஐ "வல்லரசு" ஆக பிரிட்டனை உறுதிப்படுத்தும் என்று பிரிட்டன் அமைச்சர்கள் நம்புகின்றனர். "பிரிட்டனில் மிகவும் குறிப்பிடத்தக்க முறையில் முதலீடு செய்ய நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்" என்று பிச்சை கூறினார். இருப்பினும், சர்வதேச எரிசக்தி முகமையின் கூற்றுப்படி, கடந்த ஆண்டு உலகின் மின்சார நுகர்வில் 1.5% ஆக இருந்த செயற்கை நுண்ணறிவின் அதிகபடியான மின்சார தேவைகள் குறித்தும் அவர் எச்சரித்தார். "ஆற்றலை அடிப்படையாகக் கொண்டு ஒரு பொருளாதாரத்தை கட்டுப்படுத்த (நெருக்கடிக்கு உள்ளாக்க) விரும்பவில்லை. அது விளைவுகளை ஏற்படுத்தும் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறினார். தனது நிறுவனத்தின் விரிவடைந்து வரும் ஏ.ஐ முயற்சிகள் காரணமாக மின்சார தேவைகள் தீவிரமாக இருப்பதால், நிறுவனத்தின் காலநிலை இலக்குகளில் சறுக்கல் இருக்கின்றன என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் புதிய எரிசக்தி தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதன் மூலம் 2030-க்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கான இலக்கை ஆல்ஃபபெட் இன்னும் கொண்டுள்ளது என்று வலியுறுத்தினார். 'மிக ஆழமான தொழில்நுட்பம்' ஏ.ஐ நாம் வேலை செய்யும் முறையையும் மாற்றும் என்று சுந்தர் பிச்சை கூறினார். இது மனிதகுலம் பணியாற்றிய "மிக ஆழமான தொழில்நுட்பம்" என்று கூறினார். "சமூக இடையூறுகளுக்கு நடுவில் நாம் செயல்பட வேண்டும்," என்று அவர் கூறினார், இது "புதிய வாய்ப்புகளை உருவாக்கும்" என்றும் கூறினார். "இது சில வேலைகளை உருவாக்கி மாற்றும், மேலும் மக்கள் மாற்றத்துக்கு தயாராக இருக்க வேண்டும்," என்று அவர் கூறினார். ஏ.ஐக்கு ஏற்ப மாற்றிக் கொள்பவர்கள் "சிறப்பாக செயல்படுவார்கள்" என்றார். "நீங்கள் ஒரு ஆசிரியராக [அல்லது] மருத்துவராக இருக்க விரும்புகிறீர்களா என்பது முக்கியமல்ல. அந்த தொழில்கள் அனைத்தும் இருக்கும். ஆனால் அந்த தொழில்கள் ஒவ்வொன்றிலும் சிறப்பாகச் செயல்படும் நபர்கள் இந்த கருவிகளை எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்றுக்கொண்டவர்களாக இருப்பார்கள்," என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c8749jzjxn2o
  8. என்னுடைய புரிதலின்படி பெண் பயணி பாதை விசாரிக்க நிறுத்தி உள்ளார், பையன் பாதையை விளங்கப்படுத்திய பின் பிளீஸ் என கெஞ்சிக்கொண்டு குற்றத்தை செய்திருக்கிறார். பயணி பாதுகாப்பு நிமித்தம் காணொளிப் பதிவை தொடர்ந்து செய்திருக்கலாம் அல்லது யுரியூப்பர் ஆக இருக்கலாம்!
  9. தொண்டி கடலோர பகுதிகளில் துள்ளி குதித்து விளையாடிய டால்பின்கள் ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடலோரப் பகுதிகளில் இன்று காலை டால்பின்கள் கூட்டம் கூட்டமாக துள்ளி குதித்து விளையாடின. டால்பின்கள் கூட்டமாக கடலின் மேல் பகுதிக்கு வந்து குதித்து விளையாடுவது வழக்கமாக நடைபெறும் நிகழ்வு அல்ல. எனவே பல டால்பின்கள் ஒரே நேரத்தில் துள்ளி குதித்து நீந்தியதை தொண்டி கடலோரப் பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்தனர். இந்த அழகான காட்சிகளை அப்பகுதியினர் பலர் செல்போன்களில் வீடியோ எடுத்துள்ளனர். கரைக்கு மிகவும் அருகில் டால்பின் கூட்டங்கள் வருவதற்கான காரணம் குறித்து பாண்டிச்சேரி பல்கலைக்கழக பேராசிரியர் கு.சிவக்குமார் பிபிசி தமிழிடம் கூறுகையில், கடல் பசு, திமிங்கலம், டால்பின், உள்ளிட்ட சில கடல் வாழ் உயிரினங்கள் அடிக்கடி வசிப்பிடத்தை மாற்றி வேறு இடத்திற்கு குடியேறும் வழக்கத்தை கொண்டவை என்றார். “இவ்வகையான கடல் வாழ் உயிரினங்கள் மகாராஷ்டிரா, குஜராத், கர்நாடகா, கேரள கடற்கரை வழியாக தமிழக கடற்பகுதிக்கு பின்னர் மீண்டும் அவை மகாராஷ்டிரா செல்லும். பருவமழை காலங்களில் மழை நீர் கடலில் சேர்வதன் காரணமாக கடல் நீரில் உப்பு தன்மை குறைவதால் கடல் புற்கள் நல்ல வளர்ச்சி அடையும். பொதுவாக கடல் மீன்கள் கடல் புற்களுக்கு மத்தியில் வாழ்விடத்தை அமைத்து கொள்ளும். அப்படி அமைக்கும் போது கடல் மீன்களை உண்ணும் கடல் பசு, கடல் ஆமை, திமிங்கலம், டால்பின் போன்றவை கடல் புற்களை நோக்கி கரை பகுதிக்கு வர நேரிடுகிறது” என்றார். https://www.bbc.com/tamil/live/c7v8pjqg0n7t?post=asset%3Aaaefd337-afc4-43de-904d-cbf95e77caac#asset:aaefd337-afc4-43de-904d-cbf95e77caac
  10. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் நோபெர்டோ பரெதஸ் பிபிசி ஒரு மணி நேரத்துக்கு முன்னர் லத்தீன் அமெரிக்காவுக்கு அருகில் உள்ள கடல் பகுதிக்கு அமெரிக்காவின் யுஎஸ்எஸ் ஜெரால்ட் ஆர் ஃபோர்டு விமானந்தாங்கி போர்க்கப்பல் வந்தடைந்துள்ளது. இது அமெரிக்கா மற்றும் வெனிசுவேலாவுக்கு இடையிலான அதிகரிக்கும் பதற்றத்தில் ஒரு திருப்புமுனையாகும். 1989 பனாமா மீதான படையெடுப்புக்கு பிறகு, இந்த பிராந்தியத்தில் அமெரிக்காவின் பெரிய அளவிலான நடவடிக்கையை இது குறிக்கிறது. மூன்று தசாப்தங்களுக்கு முன்பு போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டுகளை மானுவல் நோரிகா எதிர்கொண்டதைப் போல இப்போது வெனிசுவேலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவும் அதே போன்ற குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளார். அந்த குற்றச்சாட்டுகளை அவர் உறுதியாக மறுக்கிறார். வெனிசுவேலாவின் கரையோரங்களுக்கு அருகில் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் அதிநவீன விமானந்தாங்கி கப்பலை நிலைநிறுத்தினாலும், அமெரிக்கா அதன் நோக்கங்களை தெளிவாக வெளிப்படுத்தவில்லை. எவ்வாறாயினும், வெனிசுவேலா எதையும் எதிர்கொள்ளும் நிலைக்கு தயாராக இருப்பதாகத் தெரிகிறது. கடந்த வாரம், பாதுகாப்பு அமைச்சர் விளாடிமிர் பாட்ரினோ லோபஸ், மதுரோவின் அரசாங்கத்துக்கான (வெனிசுவேலா அதிபர்) அச்சுறுத்தலை எதிர்கொள்ள, நாடு முழுவதும் பொதுமக்கள் படைகளுடன் சேர்ந்து நிலம், கடல், வான்வழி, நதி மற்றும் ஏவுகணை படைகளை "பெரியளவில் நிலைநிறுத்த" இருப்பதாக அறிவித்தார். ஒரு தொலைக்காட்சி உரையில், இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக கிட்டத்தட்ட 200,000 துருப்புக்களை அணி திரட்ட மதுரோ உத்தரவிட்டுள்ளார் என்று பாட்ரினோ லோபஸ் கூறினார். அமெரிக்க விமானந்தாங்கி கப்பலின் வருகை என்பது, வெனிசுவேலாவில் செயல்படுவதாக டிரம்ப் குற்றம் சாட்டும் போதைப்பொருள் கும்பல்களுக்கு எதிரான அவரது ராணுவ நடவடிக்கையின் தீவிரப்படுத்தலாகப் பார்க்கப்படுகிறது. இந்த நடவடிக்கை, படகு மற்றும் கப்பல்களில் பயணித்த 80க்கும் அதிகமான உயிர்களை ஏற்கனவே பறித்துள்ளது. ஆனால் சில ஆய்வாளர்கள் இந்த நடவடிக்கை மதுரோவை பலவீனப்படுத்துவதற்கான அல்லது கவிழ்ப்பதற்கான பரந்த உத்தியின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று வாதிடுகின்றனர். கடந்த ஆண்டு நடைபெற்ற வெனிசுவேலா அதிபர் தேர்தல் ஒரு மோசடி என எதிர்க்கட்சிகள் மற்றும் சர்வதேச பார்வையாளர்களால் முத்திரை குத்தப்பட்டது. அமெரிக்கா மதுரோவின் அரசாங்கம் சட்டவிரோதமானது என்று கருதுகிறது. 'பலவீனமான படைப்பலம்' மதுரோவின் படைகள் உலகின் மிக சக்திவாய்ந்த ராணுவத்தின் தாக்குதலைத் தாங்க முடியுமா? செப்டம்பரில், மதுரோ வெனிசுவேலாவைப் பாதுகாக்க 80 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தயாராக இருப்பதாகக் கூறினார். அத்தகைய எண்ணிக்கையிலான ஒரு படைக்கு ஆயுதம் வழங்கும் வாய்ப்பும் இருப்பதாக அவர் தெரிவித்தார். நிபுணர்கள் அந்த எண்ணிக்கையை கடுமையாக மறுக்கின்றனர். "அது உண்மை இல்லை. உண்மையான எண்ணிக்கை மிகக் குறைவு. மதுரோ கடந்த ஆண்டு 40 லட்சம் வாக்குகளை கூட பெற முடியவில்லை," என்று 2020 முதல் 2023 வரை கொலம்பியாவில் அமெரிக்க மூத்த தூதரக அதிகாரியாக இருந்த ஜேம்ஸ் ஸ்டோரி பிபிசியிடம் கூறினார். "ராணுவத்திலிருந்து வெளியேறும் விகிதம் அதிகமாக உள்ளது," என்றார் அவர். உத்தி ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் (ஐஐஎஸ்எஸ்) ஓர் அறிக்கை, வெனிசுவேலாவில் 123,000 துருப்புக்கள், அத்துடன் 220,000 பொதுமக்கள் படை மற்றும் 8,000 ரிசர்வ் படையினர் இருப்பதாக மதிப்பிடுகிறது. பட மூலாதாரம், Getty Images வெனிசுவேலா வீரர்கள் அரிதாகவே பயிற்சி பெறுகிறார்கள், மேலும் சாவிஸ்டா படையில் உள்ள பல உறுப்பினர்களிடம் ஆயுதம் இல்லை என்று ஜேம்ஸ் ஸ்டோரி கூறினார். "ஒருவேளை ராணுவத்தில் ஒரு சில திறமையான பிரிவுகள் இருக்கலாம், ஆனால் ஒரு போரிடும் சக்தியாக, அவை குறிப்பாக திறமையானவை அல்ல." வெனிசுவேலாவின் ராணுவம் முன்பு இருந்ததைப்போல் இல்லை என்று கூறும் அவர், ஆனால் பிராந்தியத்தில் சில தனித்துவமான வளங்கள் இன்னும் அதற்கு உள்ளன எனத் தெரிவித்தார். 2006-இல் முன்னாள் அதிபர் ஹ்யூகோ சாவேஸ் ரஷ்யாவிடமிருந்து வாங்கிய சுமார் 20 சுகோய் போர் விமானங்களைத் தவிர, வெனிசுவேலா 1980-களில் அமெரிக்காவின் முக்கிய பிராந்திய கூட்டாளியாக இருந்தபோது, ஒரு டஜனுக்கும் அதிகமான அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட F-16 விமானங்களையும் வாங்கியது. "சுகோய் தாக்குதல் ஜெட் விமானங்கள் பிராந்தியத்தில் உள்ள வேறு எதையும் விட உயர்ந்தவை, சில இன்னும் செயல்படுகின்றன. F-16 களைப் பொறுத்தவரை, ஒன்று அல்லது இரண்டு இன்னும் வேலை செய்கின்றன என்று நான் நினைக்கிறேன்," என்று ஜேம்ஸ் ஸ்டோரி குறிப்பிட்டார். விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் அக்டோபர் பிற்பகுதியில், அமெரிக்காவுடன் அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், வெனிசுவேலா ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட 5,000 இக்லா-எஸ் விமான எதிர்ப்பு ஏவுகணைகளை "முக்கிய வான் பாதுகாப்பு நிலைகளில்" நிலைநிறுத்தியுள்ளதாக மதுரோ அறிவித்தார். "உலகில் உள்ள எந்த ராணுவ சக்தியும் இக்லா-எஸ் இன் சக்தியை அறிந்திருக்கும்," என்று மதுரோ ஒரு தொலைக்காட்சி ராணுவ நிகழ்வின் போது கூறினார். பட மூலாதாரம், Getty Images இக்லா-எஸ் (Igla -S) என்பது குறுகிய தூர, குறைந்த உயரத்தில் செயல்படும் வான் பாதுகாப்பு அமைப்பாகும், இது க்ரூஸ் ஏவுகணைகள், டிரோன்கள், ஹெலிகாப்டர்கள் மற்றும் குறைந்த உயரத்தில் பறக்கும் விமானங்களை சுட்டு வீழ்த்தும் திறன் கொண்டது. வெனிசுவேலா சீனாவால் தயாரிக்கப்பட்ட VN-4 கவச வாகனங்களையும் கொண்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில், தாக்குதல்களை நடத்தும் திறன் கொண்ட ஆயுதமேந்திய டிரோன்களைக் கொண்ட ஒரே தென் அமெரிக்க நாடாக வெனிசுவேலா உள்ளது. இதை மதுரோ 2022-இல் ஒரு ராணுவ அணிவகுப்பின் போது காட்சிப்படுத்தினார். வெனிசுவேலா இரானிடமிருந்து கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளை ஏவும் வசதி கொண்ட பேகாப்-III எனும் வேகமான தாக்குதல் படகுகளையும் பெற்றுள்ளது. அன்டோனியோ ஜோஸ் டி சுக்ரே 100 மற்றும் 200 (ANSU-100 மற்றும் ANSU-200) ஆகியவை இரானிய மாடல்களின் மேம்படுத்தப்பட்ட பதிப்புகளை அடிப்படையாகக் கொண்ட வெனிசுவேலாவில் தயாரிக்கப்பட்ட டிரோன்கள் ஆகும். கூடுதலாக, ரஷ்ய நாடாளுமன்ற உறுப்பினர் அலெக்ஸி ஜுராவ்லெவின் கூற்றுப்படி, ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பான்ட்சிர்-எஸ் 1 மற்றும் புக்-எம் 2 இ ஏவுகணை அமைப்புகள் சமீபத்தில் ஐஎல் -76 போக்குவரத்து விமானங்களில் வெனிசுவேலாவுக்கு அனுப்பப்பட்டுள்ளது. 'எளிதாக' வீழ்த்தக்கூடிய ஓர் அமைப்பு ஆனால் "வெனிசுவேலா இருப்பதாகக் கூறுவதற்கும் உண்மையில் செயல்படுவதற்கும் இடையே ஒரு பெரிய இடைவெளி உள்ளது" என்று 100-க்கும் மேற்பட்ட ஆராய்ச்சி மையங்களின் நெட்வொர்க்கான பொருளாதார மற்றும் சமூக ஆராய்ச்சிக்கான பிராந்திய ஒருங்கிணைப்பாளர் அமைப்பில் (CRIES) வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்பில் நிபுணத்துவம் பெற்ற சர்வதேச ஆய்வாளர் ஆண்ட்ரே செர்பின் பாண்ட் கூறுகிறார். வெனிசுவேலாவுக்குள் நேரடி தாக்குதல்கள் மேலும் தீவிரமடையக்கூடும் என்று வரும் அறிக்கைகளுக்கு மத்தியில், நாட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் அதிக கவனத்தை ஈர்த்துள்ளன. ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பெச்சோரா எனும் தரையிலிருந்து வானில் ஏவப்படும் ஏவுகணை அமைப்புகள் போன்றவை, இப்போது பயன்பாட்டில் இல்லாத 1960-களுக்கு முந்தைய வடிவமைப்பை கொண்டவை. அவை அமெரிக்க தொழில்நுட்பத்தால் "எளிதாக வீழ்த்தப்படலாம்" என்று செர்பின் பாண்ட் பிபிசியிடம் கூறினார். பட மூலாதாரம், Getty Images கொரில்லா போர் மதுரோவும் அவரது நெருக்கமான வட்டமும் ஒரு கொரில்லா போரை நடத்த தயாராகி வருவதாக பல ஆய்வாளர்கள் நம்புகின்றனர். செப்டம்பரில், வெனிசுவேலாவின் உள்துறை அமைச்சர் டியோஸ்டாடோ கபெல்லோ நாடு ஒரு "நீடித்த போருக்கு" தயாராக இருப்பதாக எச்சரித்தார். சிறிது நேரத்திற்குப் பிறகு, மதுரோவின் அரசாங்கம் பொலிவேரியன் தேசிய ஆயுதப் படையிடம், ஏழை சமூகங்களைச் சேர்ந்த தன்னார்வலர்களுக்கு ஆயுதங்களைப் பயன்படுத்த பயிற்சி அளிக்க உத்தரவிட்டது. வெனிசுவேலா மக்கள் மதுரோவின் பின்னால் அணிதிரள்வார்கள் என்ற கருத்தை ஜேம்ஸ் ஸ்டோரி நிராகரிக்கிறார். "மதுரோ ராணுவத்தாலோ அல்லது மக்களாலோ நன்கு விரும்பப்படவில்லை, அதனால்தான் மக்கள் அவரைப் பின்தொடர்வார்கள் அல்லது ஒரு கொரில்லா போரில் அவரை ஆதரிப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை," என்று அவர் கூறினார். ''வெனிசுவேலா ராணுவம் அமெரிக்காவுடன் ஓர் உண்மையான மோதலுக்கு தயாராக இல்லை,'' என்று கூறுகிறார். "ஒரு அண்டை நாடான கொலம்பியா அல்லது பிரேசில் உடனான மோதலில் வெனிசுவேலாவின் வழக்கமான ஆயுத அமைப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்," என்று அவர் விளக்கினார், ''ஆனால் அவை அமெரிக்காவிற்கு உண்மையான அச்சுறுத்தலை ஏற்படுத்தாது'' என்றும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx2lekv1dn8o
  11. 18 Nov, 2025 | 04:41 PM ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு விடுத்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன. வெள்ளை மாளிகையில் பத்திரிகையாளர்களை சந்தித்தபோதே இதனைத் தெரிவித்துள்ள ட்ரம்ப், “குடியரசு கட்சி எம்.பிக்கள் செனட் சபையில் பொருளாதார தடைகளுக்கான சட்ட மசோதாக்களை தாக்கல் செய்துகொண்டே இருப்பார்கள். இதுதான் அவர்களுடைய பணி. ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும். இதில் பாரபட்சம் இல்லை. அது எந்த நாடாக இருந்தாலும் சரி. இந்த பட்டியலில் ஈரானையும் சேர்க்கச் சொல்லியிருக்கிறேன்” என்றார். ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்றது முதல் கடுமையான பல அறிவிப்புகளை அடிக்கடி வெளியிட்டு சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார். குறிப்பாக, பிற நாடுகளுக்கு பரஸ்பர வரி விதிப்பதாக அவர் தொடர்ந்து மிரட்டி வருவதோடு, உலக நாடுகளிடையே நிலவி வரும் யுத்தங்களை நிறுத்துவதற்காக வரி விதிப்பை தான் கடுமையாக்கி வருவதாகவும் பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருக்கிறார். 2022இல் உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததை தொடர்ந்து அந்நாட்டின் மீது ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. குறிப்பாக, ரஷ்யாவின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்குவதற்காக பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், ட்ரம்ப் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் நாடுகள் மீது அதிகப்படியான வரியை விதித்து, ரஷ்யா மீதான தனது எதிர்ப்பினை வெளிப்படுத்தினார். இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே, மீண்டும், ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடை விதிக்கும் என ட்ரம்ப் மிரட்டலான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/230718
  12. மாற்று அவயவங்களுக்காக இந்தியா சென்ற வடக்கு கிழக்கைச் சேர்ந்த குழு! Nov 18, 2025 - 01:35 PM யாழ். பல்கலைக் கழகத்தின் ஒழுங்கமைப்பில் வடக்கு கிழக்கில் வாழும் அவயவங்களை இழந்த மற்றுமொரு தொகுதியினருக்கான மாற்று அவயவங்கள் பொருத்தும் இரண்டாம் கட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட 35 பேர் கொண்ட குழு சென்னை சென்றுள்ளது. கனேடிய அரசு, கனடா வாழ். இலங்கை புலம்பெயர் மக்கள் ஆகியோரின் நிதிப்பங்களிப்புடன் யாழ். பல்கலைக் கழகம் முன்னெடுக்கும் இந்த திட்டமானது வடக்கு கிழக்கில் அவயவங்களை இழந்து வாழும் மக்களின் மறுவாழ்வை மையப்படுத்தியதாக குறித்த திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இதன் அடிப்படையில் மாற்று அவயவங்கள் பொருத்தும் திட்டத்தின் இரண்டாம் கட்டம் செயற்பாடுகளுக்காக 35 பேர் கொண்ட மாற்றுத் திறனாளிகள் இன்று (18) சென்னைக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளனர். யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து இன்று காலை குறித்த 35 பேர் கொண்ட அவயவங்களை இழந்த குழு சென்னை சென்றுள்ளது. யுத்தம் மற்றும் இதர பாதிப்புகளால் பாதிப்புற்று பல்வேறு இடர்பாடுகளுடன் வாழும் மாற்றுத் திறனாளிகளின் வழமையான செயற்பாடுகளை இலகுபடுத்தும் நோக்குடன் நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய, இலகுவாகக் கையாளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்ட செயற்கை அவயவங்கள் குறித்த 35 பேருக்கும் "சென்னை ஸ்பாக் மிண்டா" நிறுவனத்தினூடாக வழங்கப்படவுள்ளதாக குறித்த ஏற்பாட்டுக் குழு தெரிவித்துள்ளது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmi4ah7da01qoo29n08rl60us
  13. அண்ணை, விசா எடுக்காட்டியும் சனத்திற்கு இலவசமாக விளையாட்டு காட்டும் டொல்பின்களுக்கு நன்றி தான் சொல்லவேணும்.
  14. 18 Nov, 2025 | 12:31 PM இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்திற்குள் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழை வீழ்சியாக யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் 101.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக யாழ். மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் என் சூரியராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 24 மணித்தியாலத்துக்குள் யாழ். மாவட்டத்தில் கிடைக்கப்பெற்ற அதி கூடிய மழைவீழ்ச்சி காரணமாக நான்கு குடும்பங்களைச் சேர்ந்த 14 பேர் பாதிப்புக்கு உள்ளாகி உள்ள நிலையில் 4 வீடுகள் பகுதி அளவில் சேதமடைந்துள்ளன. மேலும் செவ்வாய்க்கிழமை (18) வரை மழை நீடித்து குறைவதற்கான சாத்தியங்கள் உள்ள நிலையில் எதிர்வரும் 22 ஆம் திகதி மீண்டும் வடக்கு கிழக்கு மாகாணங்களில் மழை பெய்வதற்கான எதிர்ப்பு கூறல்கள் விடப்படுகின்று. வடக்கு கிழக்கு மாகாணங்களில் எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கும் மழையானது எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. கடற் தொழிலாளர்களைப் பொறுத்தவரையில் சூறாவளிக்கான எச்சரிக்கைகள் விடப்படாத நிலையில் மழை பெய்யும் போது இடி மின்னல் தாக்கங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ள நிலையில் கடற் தொழில் நடவடிக்கைகளின் போது எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டப்படுகின்றனர் என்றார். https://www.virakesari.lk/article/230670
  15. இராமநாதபுரம் கடற்கரையோர பகுதிகளில் உலாவரும் மன்னாரில் தென்பட்ட டொல்பின்கள் 18 Nov, 2025 | 12:28 PM மன்னார் இலுப்பைக்கடவை கடற்பகுதிக்கு கூட்டமாக வருகை தந்த டொல்பின்கள் தற்போது இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை தாலுகா, தொண்டி கடலோரப் பகுதிகளுக்கு சென்ற நிலையில் செவ்வாய்க்கிழமை (18) காலை முதல் குறித்த டொல்பின் கூட்டம் கூட்டமாக கரையோர பகுதிகளுக்கு வருகை தந்துள்ளன. இந்த அற்புதமான காட்சி அப்பகுதி மக்களை வெகுவாக கவர்ந்துள்ளன. பொதுவாக அரிதாகவே நிகழும் இத்தகைய நிகழ்வு, இன்று பல டொல்பின்கள் ஒரே நேரத்தில் துள்ளி குதித்து நீந்துவது, காண்போரை வியப்பில் ஆழ்த்தியது. இத்தகைய ஒரு நிகழ்வு, அதாவது இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான டொல்பின்கள் ஒரே நேரத்தில் கடலோர பகுதிக்கு வந்து துள்ளி குதிப்பது, இதுவே முதல்முறை என்று அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/230668
  16. பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல் வெளியானது Nov 18, 2025 - 12:02 PM சமீபத்தில் கைது செய்யப்பட்ட இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் பற்றிய தகவல்கள் வௌியாகியுள்ளதாகப் பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். இன்று (18) பாராளுமன்ற வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். இந்தத் தகவல்கள் தொடர்பில் விசாரணைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். மேலும் 80 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்குச் சிவப்பு அறிவித்தல்கள் வௌியிடப்பட்டுள்ளதாகவும், அவர்களைக் கைது செய்ய சர்வதேசப் பொலிஸாருடன் இணைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அண்மையில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளிடம் மேற்கொண்ட விசாரணைகளின் மூலம் ஓகஸ்ட் 30 ஆம் திகதிக்குப் பின்னர் 7 T56 ரக துப்பாக்கிகள், ஒரு T81 ரக துப்பாக்கி, 6 பிஸ்டல்கள், 9 ரிவோல்வர்கள், வேறு 2 ஆயுதங்கள் மற்றும் 909 தோட்டாக்கள் ஆகியன கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmi474yvb01qio29nqzuhha26
  17. “முழு நாடுமே ஒன்றாக” போதைப்பொருள் சுற்றிவளைப்பு : 931 பேர் கைது! Published By: Digital Desk 1 18 Nov, 2025 | 11:02 AM நாடு முழுவதும் போதைப்பொருளை தடுக்கும் “முழு நாடுமே ஒன்றாக” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், பொலிஸ்மா அதிபரின் அறிவுறுத்தலுக்கமைய, இலங்கை பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்டுவரும் தொடர்ச்சியான, போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின்போது, பலர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களிடமிருந்து போதைப்பொருட்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி, நேற்று திங்கட்கிழமை (17) முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளுக்கமைய, 677 கிராம் ஹெரோயின், 1 கிலோகிராம் 177 கிராம் ஐஸ், 63 கிலோகிராம் 495 கிராம் கஞ்சா, 23,097 கஞ்சா செடிகள், 273 கிராம் குஷ்ரக போதைப்பொருள், 49 கிராம் ஹஷீஷ் ரக போதைப்பொருள், 1357 போதை மாத்திரைகள் மற்றும் 2 கிலோகிராம் 319 கிராம் மாவா போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. அதேநேரம், குறித்த போதைப்பொருட்களுடன் தொடர்புடைய 931 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மேலும், தடுப்புக்காவல் உத்தரவு பெற்ற 34 பேரும், சட்டவிரோத சொத்துக்கள் தொடர்பான விசாரணைக்கமைவாக இருவரும்; கைது செய்யப்பட்டுள்ளனர். அதேநேரம், 936 சோதனைகள் நடத்தப்பட்டுள்ளதுடன், 64 பேர் மறுவாழ்வு நிலையங்களுக்கு அனுப்பிவைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/230655
  18. இலங்கை தேசிய T-20 அணியில் இடம்பிடித்த வியாஸ்காந்த் Nov 18, 2025 - 01:56 PM பாகிஸ்தானில் நடைபெறும் டி20 முத்தரப்பு தொடருக்கான இலங்கையின் தேசிய ஆடவர் அணியில் சுழற்பந்து வீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார். ‘ஆசிய கோப்பை ரைசிங் ஸ்டார்ஸ்’ போட்டியில் இலங்கை ‘ஏ’ அணியில் இடம் பெற்றிருந்த அவர் கட்டாரில் இருந்து அவர் நேரடியாக பாகிஸ்தானுக்கு பயணம் செய்வார் என ஶ்ரீ லங்கா கிரிக்கெட் தெரிவித்துள்ளது. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரின் வனிந்து ஹசரங்கவுக்கு காயம் ஏற்பட்டிருந்த நிலையில் அவர் இன்னும் முழுமையாக குணமடையாததால், வியாஸ்காந்த் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இந்த முத்தரப்பு தொடரில் எதிர்வரும் 20 ஆம் திகதி இலங்கை சிம்பாப்வே அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmi4b80oa01qqo29n1uakqsyu
  19. Published By: Digital Desk 3 18 Nov, 2025 | 03:09 PM (இணையத்தள செய்திப் பிரிவு) ஏஐ கருவிகள் சொல்லும் அனைத்தையும் மக்கள் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது என கூகிளின் தாய் நிறுவனமான ஆல்பபெட்டின் தலைவர் சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். பிபிசிக்கு வழங்கிய நேர்காணலிலேயே இதனை அவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, ஏஐ மாதிரிகளில் பிழைகள் ஏற்பட வாய்ப்புள்ளதால் மற்றைய கருவிகளுடன் அவற்றைப் பயன்படுத்த வேண்டும். இதன்மூலம், ஏஐ தொழில்நுட்பத்தை மட்டுமே நம்பியிருக்காமல், செழுமையான தகவல் அமைப்பைக் (information ecosystem) கொண்டிருப்பதன் முக்கியத்துவத்தை இது எடுத்துக்காட்டுகிறது. "இதனால்தான் மக்கள் கூகிள் தேடலையும் பயன்படுத்துகிறார்கள், மேலும் எங்களிடம் துல்லியமான தகவல்களை வழங்குவதில் அதிக உறுதியுடன் இருக்கும் பிற தயாரிப்புகளும் உள்ளன." "நீங்கள் ஆக்கப்பூர்வமாக ஏதேனும் எழுத விரும்பினால்" ஏஐ கருவிகள் உதவியாக இருந்தாலும், மக்கள் "இந்தக் கருவிகள் எதற்குச் சிறந்ததோ அதற்காகப் பயன்படுத்தக் கற்றுக்கொள்ள வேண்டும், சொல்லும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்பக்கூடாது" "எங்களால் முடிந்த அளவு துல்லியமான தகவல்களை வழங்குவதற்காக நாங்கள் செய்யும் பணியில் பெருமை கொள்கிறோம், ஆனால் தற்போதைய அதிநவீன ஏஐ தொழில்நுட்பத்தில் சில பிழைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன," https://www.virakesari.lk/article/230693
  20. சௌதியில் இந்தியர்கள் சென்ற பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் பலி - என்ன நடக்கிறது? பட மூலாதாரம், Raj K Raj/Hindustan Times via Getty படக்குறிப்பு, கோப்புப் படம் 17 நவம்பர் 2025 (இந்தப் பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது) சௌதி அரேபியாவுக்கு புனித யாத்திரை சென்ற இந்தியர்கள் பயணித்த பேருந்து விபத்துக்குள்ளானதில் 45 பேர் இறந்துவிட்டதாக ஹைதராபாத் போலீஸ் கமிஷனர் வி.சி.சஜனார் தெரிவித்துள்ளார். ஹைதராபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மொத்தம் 54 பேர் ஹைதராபாத்தில் இருந்து ஜெட்டாவுக்கு நவம்பர் 9ம் தேதி கிளம்பியிருக்கிறார்கள். அதில் நான்கு பேர் மெக்காவிலேயே இருந்துவிட்டனர். இன்னும் நான்கு பேர், கார் மூலம் ஞாயிற்றுக்கிழமை மதினா சென்றடைந்தனர். மீதமிருந்த 46 பேர் பேருந்தில் பயணம் செய்திருக்கிறார்கள்" என்று கூறினார். அவர்கள் மெக்காவிலிருந்து மதினா சென்றுகொண்டிருந்தபோது, பேருந்து ஆயில் டேங்கர் லாரியில் மோதி விபத்து ஏற்பட்டிருக்கிறது. இந்த விபத்து மதினாவிலிருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் நடந்திருக்கிறது. "பேருந்தில் சென்றவர்களில் ஒருவர் தவிர 45 பேர் இறந்துவிட்டனர். காயமடைந்த ஒரேயொரு பயணி மொஹம்மது அப்துல் ஷோயப் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்" என்று தெரிவித்தார் வி.சி.சஜனார். இவர்கள் அனைவரும் வரும் 23ம் தேதி ஜெட்டாவில் இருந்து ஹைதராபாத் திரும்புவதற்கு விமான டிக்கட் பதிவு செய்திருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம், PTI ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகமும் விபத்தை உறுதி செய்திருக்கிறது. அத்துடன், பேருந்து விபத்து தொடர்பான தகவல்களை அது வழங்கியுள்ளது. "ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் சௌதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் மற்றும் பிற உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்பில் உள்ளன. அவர்கள் சம்பந்தப்பட்ட உம்ரா நடத்துபவர்களுடனும் தொடர்பில் உள்ளனர்" என்று அதன் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "இந்திய சமூகத்தைச் சேர்ந்த துணைத் தூதரக ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர் குழுக்கள் பல மருத்துவமனைகளிலும் சம்பவ இடத்திலும் உள்ளன. ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் மற்றும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகம் முழு உதவியை வழங்கி வருகின்றன" என்று அதில் கூறப்பட்டுள்ளது. ஜெட்டாவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் ஒரு கட்டுப்பாட்டு அறையையும் அமைத்திருக்கிறது. "சௌதி அரேபியாவின் மதீனா அருகே இந்திய யாத்ரீகர்கள் பயணம் செய்த பேருந்து துயர விபத்தை சந்தித்தது. இதையடுத்து, ஜெட்டாவில் உள்ள இந்திய துணை தூதரகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது" என்று துணை தூரதகம் அறிவித்திருக்கிறது. உதவி எண்: 8002440003 மெக்காவில் இருந்து மதீனா சென்றபோது இந்தப் பேருந்து விபத்துக்குள்ளானதாகவும், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர்களும் அதில் இருந்தனர் என்றும் தகவல்கள் சொல்லப்பட்டிருப்பதாக தெலங்கானா முதல்வர் அலுவலகம் தெரிவித்திருக்கிறது. தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி இதுதொடர்பாக அனைத்து தகவல்களையும் விரைந்து பெறுமாறு தலைமைச் செயலாளர் மற்றும் காவல் துறை டிஜிபி-க்கு (DGP) உத்தரவிட்டுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் சௌதி அரேபியா தூதரகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்குமாறு அதிகாரிகளை அவர் அறிவுறுத்தியுள்ளார். பட மூலாதாரம், Stefan Wermuth/Bloomberg via Getty படக்குறிப்பு, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் சௌதி அரேபியா தூதரகத்துடன் தொடர்ச்சியாக தொடர்பில் இருக்குமாறு அதிகாரிகளை தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி அறிவுறுத்தியுள்ளார் ஹைதராபாத் எம்பி-யும் ஏஐஎம்ஐஎம் தலைவருமான அசாதுதின் ஒவைசியும் இந்தச் சம்பவம் குறித்துப் பேசியிருக்கிறார். "ரியாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் நான் பேசினேன். இதுபற்றி தகவல்கள் பெற்றுவருவதாக அவர்கள் தெரிவித்தார்கள். இந்த விஷயத்தில் உடனடியாக கவனம் செலுத்துமாறும், இறந்தவர்களின் உடலை இந்தியா கொண்டுவருவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும் இந்திய அரசையும், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரையும் கேட்டுக்கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு உரிய தரமான சிகிச்சை அளிக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார். இந்த விபத்துடன் தொடர்புடைய தகவல்களை பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கும் உறவினர்களுக்கும் வழங்குவதற்கும், மீட்பு பணிகளை கண்காணிப்பதற்கும், தெலங்கானா தலைமைச் செயலகத்தில் ஒரு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அறை மொபைல் எண்கள்: +91 79979 59754 +91 99129 19545 பட மூலாதாரம், Sonu Mehta/Hindustan Times via Getty Images இந்திய வெளியுறவு அமைச்சர் கூறியது என்ன? சௌதி அரேபியாவின் மதீனாவில் உம்ரா பயணத்திற்காக இந்தியர்கள் பயணம் செய்த பேருந்து விபத்து குறித்து இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் இரங்கல் தெரிவித்துள்ளார். "சௌதி அரேபியாவின் மதீனாவில் இந்திய குடிமக்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் நான் மிகவும் வருத்தமடைந்தேன். ரியாத்தில் உள்ள இந்திய தூதரகமும் ஜெட்டாவில் உள்ள துணைத் தூதரகமும் இந்த விபத்தில் பாதிக்கப்பட்ட இந்திய குடிமக்கள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு முழு உதவியை வழங்கி வருகின்றன" என்று எஸ். ஜெய்சங்கர் தனது எக்ஸ் பக்கத்தில் கூறினார். குடும்பத்தினர் கோரிக்கை பட மூலாதாரம், Getty Images இந்த சம்பவத்தில் உயிரிழந்த ஒருவரின் உறவினரான முகமது மன்சூஃப் கூறுகையில், "என்னுடைய மூத்த சகோதரர் முகமது மன்சூர், தாய் ஷோஹ்ரத் பேகம், என்னுடைய அண்ணி ஃபர்ஹீன் பேகம் மற்றும் உடன்பிறந்தவரின் மகன் ஷாஹீன் ஆகிய நால்வரும் மெதீனாவுக்கு சென்றனர்." என்றார். அவர் ஏஎன்ஐ செய்தி முகமையிடம் பேசுகையில், தனது குடும்பத்தினர் குறித்து தகவல் அளிக்கப்பட வேண்டும் எனவும், தாங்கள் அங்கு செல்ல ஏற்பாடு செய்து தர வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார். இதனிடையே, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தெலங்கானா அரசு ரூ. 5 லட்சம் நிதியுதவி அறிவித்துள்ளது. மேலும், மாநில சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முகமது அசாருதீன் தலைமையிலான அரசுக் குழுவை அனுப்பவும் அமைச்சரவை திட்டமிட்டுள்ளது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxr3p9d3yno
  21. நாம் இனவாதத்தை வெறுக்கின்றோம் - இராமலிங்கம் சந்திரசேகர் 18 Nov, 2025 | 10:47 AM (இணையத்தள செய்திப்பிரிவு) இனவாத பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்டு, நாம் அனைவரும் இலங்கையர்கள்தான் என்ற நிலைமையை உணர வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதற்கான ஆரம்பமாகவே இலங்கையர் தினம் நடத்தப்படவுள்ளது என்று கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார். கடந்த சனிக்கிழமை (15) நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நாட்டில் இனவாதம் மற்றும் மதவாதத்தை தூண்டிவிட்டு அரசியல் நடத்தியவர்கள் உள்ளனர். நாம் இனவாதத்தை வெறுக்கின்றோம். தேசிய மக்கள் சக்தியென்பது இலங்கையர்களுக்கான கட்சியாகும். எமது கட்சியின் கொள்கையானது நாட்டுக்கானது. இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு கடந்தகால ஆட்சியாளர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. தமது இனத்தையே அவர்கள் முன்னிலைப்படுத்தினர். இனங்களுக்கிடையிலான முறுகல் நிலையால்தான் இந்நாட்டில் போர்கூட ஏற்பட்டது. ஐக்கிய தேசியக் கட்சி காடையர்கள்தான் அன்று யாழ். நூலகத்தை எரித்து நாட்டை நாசமாக்கினர். 94 ஆயிரம் புத்தகங்களை கொளுத்திய பாவிகள் அவர்கள். தமிழ் இளைஞர்கள் ஆயுதத்தை கையிலெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எமது ஜனாதிபதி நாட்டில் சிறந்த முன்னுதாரணத்தை வழங்கிவருகின்றார். பிரதமரும் அவ்வாறுதான் சிறப்பாக செயல்படுகின்றார். இலஞ்ச, ஊழல் மோசடிகளில் இருந்து நாடு இன்று மீண்டுவருகின்றது. எனவே, தேசிய ஒற்றுமையையும் நாம் கட்டியெழுப்ப வேண்டும். அதற்காக அரசாங்கம் அர்ப்புணிப்புடன் செயற்படுகின்றது. அதனால்தான் வடக்கு குறித்து கூடுதல் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இனவாத பொறிக்குள் இருந்து நாட்டு மக்களை மீட்டு, நாம் அனைவரும் இலங்கையர்கள் எனக் கூரும் நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்கான அடித்தளமாக இலங்கையர் தினம் எதிர்வரும் டிசம்பரில் நடத்தப்படுகின்றது என்றார். https://www.virakesari.lk/article/230656
  22. Nov 18, 2025 - 10:49 AM பொலிஸ் அதிகாரிகளுக்காக 7,000 ரூபா கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளதாக பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். பாராளுமன்ற வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தில் இன்று (18) கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் இந்தக் கொடுப்பனவு எதிர்வரும் மாதத்திலிருந்து வழங்கப்படும் என்று தெரிவித்தார். இந்தக் கொடுப்பனவு பொலிஸ் அதிகாரிகளின் சீருடை மற்றும் பாதணிகளுக்காக வழங்கப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால இது தொடர்பில் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: "பொலிஸ் அதிகாரிகளின் சீருடை மற்றும் பாதணிகளுக்காக அந்தக் கொடுப்பனவை வழங்குவதற்கு நேற்று அமைச்சரவை தீர்மானம் எடுத்தது. அதன்படி, ஒவ்வொரு பொலிஸ் அதிகாரிக்கும் ரூபா 7,000/- கொடுப்பனவு வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதற்காக 2025 ஆம் ஆண்டிற்காக 1,100 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்தக் கொடுப்பனவு எதிர்வரும் மாதமே அந்த அதிகாரிகளுக்கு வழங்கப்படும். அத்துடன், அதிகாரிகளின் விளையாட்டுப் பாதணிகள் மற்றும் உடைகளுக்காகவும் கொடுப்பன ஒன்றை அதிகாரிகளுக்கு வழங்க அமைச்சரவை தீர்மானம் எடுத்துள்ளது. அடுத்த வாரமே அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ள முடியும் என்று நம்புகிறோம்." https://adaderanatamil.lk/news/cmi44izn601qfo29n7zmiyq9v
  23. வீரர்களை தக்க வைப்பதில் ஆச்சர்யம் தந்த சிஎஸ்கே அணி மினி ஏலத்தில் என்ன செய்யப் போகிறது? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 17 நவம்பர் 2025 ஐபிஎல் 2026 தொடருக்கான ஏலம் வரும் டிசம்பர் 16-ஆம் தேதி அபு தாபியில் நடக்கிறது. இதற்கு முன்பாக ஒவ்வொரு அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை சனிக்கிழமை (நவம்பர் 15) வெளியிட்டன. 11 ஆண்டுகளாக தங்கள் அணியின் முக்கிய அங்கமாக இருந்த ஆண்ட்ரே ரஸலை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் நிர்வாகம் வெளியே விட்டிருக்கிறது. வெங்கடேஷ் ஐயர், கிளென் மேக்ஸ்வெல், லியாம் லிவிங்ஸ்டன், ரவி பிஷ்னாய் போன்ற பல முன்னணி வீரர்கள் தங்கள் அணிகளிலிருந்து கழற்றி விடப்பட்டிருக்கிறார்கள். அதேபோல், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மதீஷா பதிரானா, டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா என அவர்களின் அங்கமாக இருந்த பல வீரர்களை வெளியே விட்டிருக்கிறார்கள். டிரேட் செய்யப்பட்ட ரவீந்திர ஜடேஜா மற்றும் சாம் கரண் தவிர்த்து 10 வீரர்களை ரிலீஸ் செய்திருக்கிறது சிஎஸ்கே. சூப்பர் கிங்ஸ் நிர்வாகத்தின் இந்த அதிரடி முடிவுக்குப் பின்னால் இருக்கும் காரணம் என்ன? என்ன திட்டத்தோடு அவர்கள் ஏலத்தில் களமிறங்குவார்கள்? தக்கவைத்த வீரர்கள் யார்? ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்கள் யார்? தக்கவைக்கப்பட்ட வீரர்கள்: எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், சஞ்சு சாம்சன் (டிரேட்), ஆயுஷ் மாத்ரே, டெவால் பிரெவிஸ், ஷிவம் தூபே, ஊர்வில் பட்டேல், நூர் அஹமது, நாதன் எல்லிஸ், ஷ்ரேயாஸ் கோபால், கலீல் அஹமது, ராமகிருஷ்ணா கோஷ், முகேஷ் சௌத்ரி, ஜேமி ஓவர்டன், குர்ஜப்னீத் சிங், அன்ஷுல் கம்போஜ். ரிலீஸ் செய்யப்பட்ட வீரர்கள்: ரவீந்திர ஜடேஜா (டிரேட்), ஆண்ட்ரே சித்தார்த், தீபக் ஹூடா, சாம் கரண் (டிரேட்), டெவன் கான்வே, ரச்சின் ரவீந்திரா, மதீஷா பதிரானா, கமலேஷ் நாகர்கோட்டி, ராகுல் திரிபாதி, ஷேக் ரஷீத், வன்ஷ் பேடி, விஜய் சங்கர் இதுவரை பார்க்காத சிஎஸ்கே வழக்கமாக இப்படி மினி ஏலத்துக்கு முன்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் பெரிய அளவில் மாற்றங்கள் செய்யாது. அதிகபட்சம் 4 அல்லது 5 வீரர்களை மட்டும் ரிலீஸ் செய்வார்கள். அவர்களும்கூட பெரும்பாலும் போட்டிகளில் விளையாடாத இளம் வீரர்களாகவோ, சோபிக்காத வெளிநாட்டு வீரர்களாகவோ தான் இருப்பார்கள். ஆனால், இம்முறை மெகா ஏலத்தில் ரீடெய்ன் செய்திருந்த வீரர் உள்பட பலரையும் சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் ரிலீஸ் செய்திருப்பது ஆச்சர்யமான ஒரு விஷயமாக கிரிக்கெட் வட்டத்தில் பார்க்கப்படுகிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் உணர்வுகளைக் கடந்து யோசிக்கத் தொடங்கிவிட்டது என்கிறார் கிரிக்கெட் வல்லுநரும் வர்ணனையாளருமான நானீ. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "ஐபிஎல் அணிகள் தங்களின் பழைய சென்ட்டிமென்ட்களை எல்லாம் ஓரங்கட்டிவிட்டு இம்முறை முடிவுகளை எடுத்திருக்கிறார்கள். இது மிகவும் நல்ல விஷயம். இப்போது சென்டிமென்ட் எல்லாம் பார்க்காமல் எதிர்காலத்துக்கு என்ன முக்கியம், கோப்பை வெல்ல என்ன முக்கியம் என்று யோசிக்கத் தொடங்கியிருக்கிறார்கள்" என்றார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சிஎஸ்கே-வின் அணுகுமுறைக்கு ஏற்ற வீரர்கள் என்று கருதப்பட்ட ராகுல் திரிபாதி, ரச்சின் ரவீந்திரா போன்றவர்களும் ரிலீஸ் செய்யப்பட்டிருக்கிறார்கள் "மற்ற அணிகள் நிறைய வீரர்களை ரிலீஸ் செய்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அப்படிச் செய்ததில்லை. அதிகபட்சம் இரண்டு அல்லது மூன்று வீரர்களை ரிலீஸ் செய்வார்கள். எப்போதும் குடும்பம் என்ற அந்த உணர்வை அவர்கள் கடைபிடிப்பார்கள். ஆனால், கடந்த 2 சீசன்களில் அதன் செயல்பாடு அனைத்தையும் மாற்றியுள்ளது. அதேசமயம், நல்ல செயல்பாட்டைக் காட்டிய வீரர்களைத் தக்கவைத்துவிட்டு, மற்றவர்களை ரிலீஸ் செய்து மிகச் சரியான முடிவை எடுத்திருக்கிறார்கள்" என்றும் அவர் கூறினார். 2024 சீசனில் முதல் முறையாக ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் களமிறங்கிய சூப்பர் கிங்ஸ். அப்போது ஐந்தாவது இடமே பிடித்து பிளே ஆஃப் வாய்ப்பை இழந்தது. அடுத்த சீசனோ, இன்னும் மோசமாக அமைந்தது. 14 போட்டிகளில் நான்கில் மட்டுமே வென்ற சிஎஸ்கே, கடைசி இடமே பிடித்தது. காயத்தால் கேப்டன் ருதுராஜ் பாதியில் விலக, அதன்பின் தோனி அந்தப் பதவியை ஏற்று அணியை வழிநடத்தினார். ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து இரண்டு சீசன்கள் சென்னை அணி பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாதது இதுவே முதல் முறை. இதனைத் தொடர்ந்தே சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை இல்லாத அதிரடி முடிவுகளை எடுத்திருக்கிறது என்று கருதப்படுகிறது. ஜடேஜா - சாம்சன் டிரேட் குறித்துப் பேசிய அந்த அணியின் நிர்வாக இயக்குநர் காசி விஸ்வநாதன் கூட, "எதிர்காலத்தை மனதில் வைத்து ஜடேஜாவை டிரேட் செய்யும் இந்த கடினமான முடிவை எடுக்க வேண்டியதாகிவிட்டது" என்று கூறியிருந்தார். பேட்டிங்: இளைஞர்கள் கொடுத்த நம்பிக்கை கடந்த ஆண்டு சூப்பர் கிங்ஸின் பேட்டிங் பெரும் விமர்சனங்களை சந்தித்தது. 180 ரன்களை சேஸ் செய்வது அவர்களால் இயலாத காரியமாக இருந்தது. பெரும்பாலான வீரர்கள் மற்ற அணிகளைப் போல் வேகமாக ரன் குவிக்கத் தடுமாறினார்கள். கான்வே, ரச்சின், திரிபாதி, ஹூடா, விஜய் சங்கர் என பெரும்பாலான பேட்டர்கள் வெளியே அனுப்பப்பட அது முக்கியக் காரணமாக இருக்கும். இவர்கள் எல்லோருமே 'சிஎஸ்கே பிராண்ட் ஆஃப் கிரிக்கெட்டர்ஸ்' என்று கருதப்பட்டவர்கள். தடாலடி அதிரடி பேட்டர்களை விட கொஞ்சம் நிதானம், கொஞ்சம் அதிரடி என்று ஆடும் இவ்வகை பேட்டர்களையே சென்னை சூப்பர் கிங்ஸ் அதிகம் நம்பியிருந்தது. ஆனால், இவர்கள் கடந்த சீசன் சொதப்பியதும், மற்ற அணிகள் அதிரடி வீரர்களை வைத்து அடுத்த தளத்தை நோக்கிப் பயணித்ததும் சிஎஸ்கேவின் மாறாத அணுகுமுறை மீது கேள்வியெழுப்பியது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த ஆண்டு மாற்று வீரராக ஒப்பந்தம் செய்யப்பட்ட பிரெவிஸ் இப்போது முக்கிய வீரராக உருவெடுத்திருக்கிறார் அதுமட்டுமல்லாமல், சீசனின் இறுதி கட்டத்தில் சிஎஸ்கே அணியின் இளம் வீரர்களே பழைய அணுகுமுறையிலிருந்து மாறி புதிய பாதையை நோக்கிப் பயணிப்பதற்கான உத்வேகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்திருக்கிறார்கள் என்கிறார் நானீ. "கடந்த சீசன் இறுதியில் மாற்று வீரர்களாக வந்த இளம் பேட்டர்களான மாத்ரே, ஊர்வில், பிரெவிஸ் ஆகியோர் தங்கள் அநாயச அதிரடி ஆட்டத்தால் போட்டிகளின் போக்கையே மாற்றினார்கள். அவர்கள் புதிய அணுகுமுறையின் தேவையை உணர்த்தியிருக்கிறார்கள். அதுதான் இந்த மாற்றத்துக்கான காரணம்" என்று கூறிய அவர், இந்த இளம் வீரர்களோடு சஞ்சு சாம்சன் இணைவது சூப்பர் கிங்ஸின் பேட்டிங்கை நன்கு பலப்படுத்தியிருக்கிறது என்கிறார். இப்போது தக்க வைத்திருக்கும் பேட்டர்களைப் பார்க்கும்போது, மாத்ரே, சாம்சன், ருதுராஜ், துபே, பிரெவிஸ் என சூப்பர் கிங்ஸின் டாப் 5 முழுமையாக இருக்கிறது. கேப்டன் ருதுராஜை சுற்றி, முதல் பந்தில் இருந்தே அதிரடி காட்டும் வீரர்கள் நிறைந்திருக்கிறார்கள். அதனால் புதியதொரு பேட்டிங் அணுகுமுறையை சிஎஸ்கேவிடம் இருந்து எதிர்பார்க்கலாம். பந்துவீச்சு: நிறைய கேள்விகள் இருக்கின்றன இங்குதான் சென்னை சூப்பர் கிங்ஸ் மீது நிறைய கேள்விகள் எழுகின்றன. முக்கியமாக ஜடேஜாவை டிரேட் செய்துவிட்டு இன்னொரு முன்னணி வேகப்பந்துவீச்சாளர் பதிரானாவையும் விடுவித்தது இரண்டு பெரிய ஓட்டைகளை ஏற்படுத்திவிட்டது. மெகா ஏலத்துக்கு முன்னதாக 13 கோடி ரூபாய்க்கு தக்கவைக்கப்பட்டிருந்தார் பதிரானா. சூப்பர் கிங்ஸின் எதிர்காலமாகப் பார்க்கப்பட்ட அவர், அதற்குள் விடுவிக்கப்படுவார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. அவரது பந்துவீச்சு முறை மாறியது, அவரது செயல்பாட்டில் தாக்கம் ஏற்படுத்தியது. அதனால்தான் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது என்கிறார் நானீ. "பதிரானாவின் பௌலிங் ஆக்‌ஷன் மாறிவிட்டது. இப்போது அவர் இலங்கை அணியில் கூட அதிகம் ஆடுவதில்லை. தென்னாப்பிரிக்கா, அமெரிக்காவில் நடந்த லீக்குகளிலும் அவர் சோபிக்கவில்லை. அதனால் இந்த முடிவை புரிந்துகொள்ள முடிகிறது. அதுமட்டுமல்லாமல் 13 கோடி ரூபாய் என்ற தொகையும் இந்த முடிவுக்கு ஒரு முக்கியக் காரணமாக இருந்திருக்கலாம். இப்போது வெளியே விட்டுவிட்டு, ஏலத்தில் குறைந்த தொகைக்கு எடுக்க நினைத்திருப்பார்கள். நிச்சயம் அவரை சென்னை அணி எடுக்கும் என்றே நான் நம்புகிறேன்" என்றும் அவர் கூறினார். இன்னொருபக்கம் எல்லிஸ் சமீபமாக சிறப்பாக செயல்படுவதால், அவர் பிரதான வேகப்பந்துவீச்சாளராக கருதப்படுவார் என்று கூறப்படுகிறது. ஆனாலும், பதிரானாவை சிஎஸ்கே மீண்டும் எடுக்கக் கூடும் என்று நானீ நம்புகிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஜடேஜா, அஷ்வின் இருவருமே இல்லாததால் சூப்பர் கிங்ஸின் சுழற்பந்துவீச்சு சற்று பலவீனமடைந்துள்ளது "கடந்த 2 ஆண்டுகளாக சேப்பாக்கம் முன்பு போல் சுழலுக்கு சாதகமான ஆடுகளமாக இருக்கவில்லை. அதனால் வேகப்பந்துவீச்சுக்கு உகந்த ஆடுகளங்களை அமைத்து, அதற்கு ஏற்ப அணியை கட்டமைப்பது சாதகமான விஷயமாக இருக்கும். அது சாம்சன் போன்ற சிஎஸ்கே பேட்டர்களுக்குமே கூட உகந்ததாக இருக்கும். அப்படி செய்தால் இரண்டாவது வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளரும் தேவை" என்கிறார் அவர். சேப்பாக்கத்தின் தன்மை குறித்தும், அதைச் சார்ந்த சூப்பர் கிங்ஸ் கட்டமைப்பு குறித்தும் கடந்த சீசனில் அதிகம் விவாதிக்கப்பட்டது. சிஎஸ்கே அணிக்கு சுழல் தான் வெகுகாலம் அடையாளமாக இருந்தது. அதற்கு ஏற்ப கடந்த மெகா ஏலத்தில் ஒரு பெரும் சுழல் கூட்டணியை அவர்கள் உருவாக்கினார்கள். ஏற்கெனவே ஜடேஜாவை ரீடெய்ன் செய்திருந்தவர்கள், நூர் அஹமது மற்றும் ரவிச்சந்திரன் அஷ்வினை வாங்கினார்கள். ஆனால், நூர் அஹமது தவிர்த்து மற்ற இருவராலும் பெரிய தாக்கம் ஏற்படுத்த முடியவில்லை. அதுமட்டுமல்லாமல் தோனியைப் போல் ருதுராஜ் கெய்க்வாட் சுழலை பெருமளவு பயன்படுத்தவும் யோசிக்கிறார். 2024 சீசனில் சேப்பாக்கத்தில் ஒருசில போட்டிகளில் 17-18 ஓவர்கள் வரை வேகப்பந்துவீச்சாளர்களையே அவர் பயன்படுத்தினார். இப்போது அவரே அணியின் கேப்டன் என்று சிஎஸ்கே அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கும் நிலையில், நானீ சொல்வதைப் போல் மாற்றம் நடக்கக்கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அஷ்வின் ஓய்வு பெற்றுவிட, ஜடேஜாவும் டிரேட் செய்யப்பட்டுவிட நூர் அஹமது மட்டுமே அணியின் முன்னணி ஸ்பின்னராக இருக்கிறார். இவர்போக, ஷ்ரேயாஸ் கோபால் மட்டுமே இப்போது தக்கவைக்கப்பட்டிருக்கும் ஒரே ஸ்பின்னர். அவர் கடந்த ஆண்டு ஒரு போட்டியில் கூட பயன்படுத்தப்படவில்லை. இந்த மினி ஏலத்தில் ராகுல் சஹார், ரவி பிஷ்னாய் போன்ற வெகுசில அனுபவ ஸ்பின்னர்களே இருக்கிறார்கள். அவர்களுள் ஒருவரை வாங்கினாலும், அதிகபட்சம் 2 பிரதான ஸ்பின்னர்களோடு மட்டுமே சிஎஸ்கே களமிறங்கக்கூடும். இந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே கேமரூன் கிரீனை வாங்க முயற்சி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது நடந்தால் அது ஹிட்டிங் மற்றும் வேகப்பந்துவீச்சை பலப்படுத்தும். பேட்டிங் அணுகுமுறையில் இன்னும் நேர்மறை எண்ணத்தை வலுப்படுத்தும். அதேசமயம் அவருக்குப்பதில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர்களான மேக்ஸ்வெல், கூப்பர் கானொலி, லியாம் லிவிங்ஸ்டன் போன்ற யாரையேனும் வாங்கும் பட்சத்தில் அது சுழற்பந்துவீச்சை ஓரளவு பலப்படுத்தலாம். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை அறியப்பட்ட அணுகுமுறையில் இருந்து மாறி வேறு பாதையில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறது என்பதை இந்த ரிடன்ஷன் பட்டியல் உணர்த்துகிறது. டிசம்பர் 16-ஆம் தேதி நடக்கும் மினி ஏலத்தில் சிஎஸ்கே அணி அதிரடியாக சில வீரர்களை வாங்கக்கூடும். அதற்கான பெரும் தொகை அவர்களிடம் இருக்கிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckgyqpk15pwo
  24. அததெரண கருத்துப்படம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.