Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. கரூர் சம்பவத்துக்கு பிறகு முதல் மக்கள் சந்திப்புக் கூட்டத்தில் விஜய் பேசியது என்ன? பட மூலாதாரம், TVK 23 நவம்பர் 2025, 08:18 GMT புதுப்பிக்கப்பட்டது 24 நிமிடங்களுக்கு முன்னர் காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்புக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை (நவ. 23) நடைபெற்றது. இதில் பேசிய விஜய், தாங்கள் ஆட்சிக்கு வரும்போது செய்ய விரும்பும் விஷயங்கள் என்ன என்பதைக் குறிப்பிட்டார். மேலும், தங்கள் ஆதரவாளர்கள் மீதான விமர்சனத்துக்கும் அவர் பதிலளித்துள்ளார். மேலும், திமுக மீது பல்வேறு விமர்சனங்களையும் முன்வைத்துள்ளார். அதுகுறித்து பதிலளித்த திமுக மூத்த தலைவர் டிகேஎஸ் இளங்கோவன், "திமுகவை குறை சொல்வதற்கு விஜய்க்கு தகுதி இல்லை" என்றார். விஜயின் குற்றச்சாட்டுகளையும் அவர் மறுத்தார். கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்குப் பிறகு டிசம்பர் 4 அன்று சேலம் மாவட்டத்தில் விஜய் பங்கேற்கும் பரப்புரைக் கூட்டத்திற்கு அனுமதி கோரி காவல்துறையில் மனு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், தவெக தரப்பில் அளிக்கப்பட்ட மனுவை கவனமாகப் பரிசீலித்ததாகக் கூறியுள்ள டவுன் சரக காவல் உதவி ஆணையாளர் சரவணன், சில காரணங்களால் அனுமதி மறுக்கப்படுவதாக கடிதம் மூலம் தெரிவித்திருந்தார். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. சுமார் 2,000 பேர் கலந்துகொண்ட இந்த நிகழ்ச்சிக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இந்த நிகழ்ச்சியில் மக்களை சந்தித்த விஜய், காஞ்சி மக்களின் பிரச்னைகளைப் பற்றிப் பேசி தன் உரையைத் தொடங்கினார். "வாலாஜாபத் அருகே உள்ள அவலூர் ஏரி பாலாறை விட உயரமாக இருப்பதால் ஆற்றுத் தண்ணீர் ஏரிக்குப் போக முடியவில்லை. தடுப்பணை கட்டுவதன் மூலம் விவசாயம் சிறப்பாக நடக்கும். இதற்காக எத்தனை ஆண்டு மக்கள் போராட வேண்டும்?" என்று விஜய் கேள்வியெழுப்பினார். மேலும், "பரந்தூர் விமான நிலையப் பிரச்னையில் நாங்கள் விவசாயிகளின் பக்கம் மட்டுமே நிற்போம்" என்று கூறிய அவர், புகழ்பெற்ற காஞ்சிப் பட்டு நெய்பவர்களின் நிலை மோசமாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். 60 ஆண்டுகளாக காஞ்சிபுரம் பேருந்து நிலையம் புதுப்பிக்கப்படாமல் இருப்பதையும் விமர்சித்த அவர், அரசால் அதற்கு ஒரு இடத்தை ஒதுக்க முடியாதா என்ற கேள்வியையும் எழுப்பினார். செய்ய நினைக்கும் திட்டங்கள் தவெக ஆட்சி அமைந்தால், தான் செய்ய நினைக்கும் திட்டங்கள் குறித்தும் அவர் கூறினார். "எல்லோருக்கும் நிரந்தரமான வீடு. எல்லா வீட்டுக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் வாகனம் உறுதியாக இருக்கும். கார் லட்சியம், அதற்கான வசதி வாய்ப்பை உண்டாக்கும் வகையில் பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும். வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் குறைந்தது பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். வீட்டில் குறைந்தது ஒருவருக்கு நிரந்தர வருமானம். அதற்கான வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும். அதற்கு வழிவகுக்கும் வகையில் கல்வியில் சீர்த்திருத்தம் செய்ய வேண்டும்" என பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டார். இந்தத் திட்டங்கள் எப்படி செயல்படுத்தப்படும் என்பது தவெகவின் தேர்தல் அறிக்கையில் தெளிவாக விளக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம், TVK 'தற்குறிகள் அல்ல ஆச்சர்யக்குறிகள்' தங்கள் கட்சி மீதான விமர்சனம் குறித்து பேசிய விஜய், "எம்ஜிஆர் கட்சியை ஆரம்பத்தில் இருந்தே கூத்தாடியின் கட்சி என்றுதான் சொல்கிறார்கள். ஆனால், அப்படிச் சொன்னவர்கள் அனைவரும், மக்கள் போல் எம்ஜிஆர் அவர்களோடுதானே போய்ச் சேர்ந்தார்கள். இது வரலாறு. இது நம்மைவிட அவர்களுக்கு நன்றாகவே தெரியும்" என்று கூறினார். அதுமட்டுமல்லாமல், தவெக ஆதராவளர்களைப் பொதுவெளியில் விமர்சிப்பது குறித்தும் பதிலளித்தார். "தற்குறி தற்குறி என்கிறீர்களே, இவர்களெல்லாம் ஒன்றாக சேர்ந்துதான் உங்கள் அரசியலை கேள்விக்குறியாக்கப் போகிறார்கள். இவர்களெல்லாம் தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்யக்குறி. தமிழ்நாட்டு அரசியல் மாற்றத்திற்கான அறிகுறி" என்றும் அவர் கூறினார். திமுக சொல்லும் பதில் என்ன? 'திமுகவின் கொள்கையே கொள்ளைதான்' என்றும் விஜய் தன் பேச்சில் விமர்சித்திருந்தார். அதற்கு பதில் கொடுத்த திமுக மூத்த தலைவரும் அக்கட்சி செய்தித் தொடர்பாளருமான டிகேஎஸ் இளங்கோவன், "இன்று மக்களின் முக்கிய தேவை 4 விஷயங்கள் - கல்வி, உணவு, மருத்துவம், பெண் உரிமை & பெண் பாதுகாப்பு. இது எல்லாவற்றிலும் திமுகவின் திட்டங்கள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டிருக்கிறது. கொள்கைப்படி பல திட்டங்கள் நிறைவேற்றிக்கொண்டிருக்கிறோம். திட்டங்களை நிறைவேற்றாமல் இருக்கிறோமா? கொள்கையிலிருந்து மாறுபட்டு நிற்கிறோமா? இல்லை. கொள்ளை என்பது எல்லோரும் அரசியலில் குற்றம் சொல்ல வேண்டும் என்பதற்காக சொல்வது" என்று கூறினார். மேலும், கொள்கைகளுக்காகவே திமுகவினர் போராட்டங்கள் நடத்தி சிறைக்குச் சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார். பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்ற விஜயின் குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அவர், "பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை என்பது அரசாங்கத்தால் அல்ல" என்று கூறினார். மேலும், "அது தனி மனித குற்றம். அதில் ஈடுபடுபவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். இது மணிப்பூர் அல்ல. இங்கே என்ன குற்றம் நடந்தாலும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம், X/TKS Elangovan படக்குறிப்பு, டிகேஎஸ் இளங்கோவன் அண்ணா ஆரம்பித்த கட்சியைக் கைப்பற்றியவர்கள் என்று திமுகவை விஜய் குறிப்பிட்டது பற்றிக் கேட்கப்பட்டதற்கு, "அவருக்கு அண்ணா யாரென்றே தெரியாது. முதல்வர் ஆகும் ஆசையில் இருக்கிறார். அண்ணாவே முதல்வர் ஆகவேண்டும் என்று கட்சி தொடங்கவில்லை. முதல் தேர்தலில் அவரே போட்டியிடவில்லை. அவர் போராட்டகளத்தில் நின்று சிறை சென்றவர். அவர் சொன்னவற்றைத்தான் தலைவரும் (மு.க. ஸ்டாலின்) நாங்களும் கடைபிடிக்கிறோம்" என்று கூறினார். மேலும், "ஏன் கரூரில் பரப்புரைக்கு 12 மணிக்கு வராமல் 7.30 மணிக்கு வந்தார் என்ற பதிலைக் கூட விஜய் இன்னும் சொல்லவில்லை. இதற்கு அவர் ஏன் பதில் சொல்லவில்லை? நாமக்கல்லில் 11 மணிக்குப் பேசிவிட்டு உடனே கரூர் வராதது ஏன்? இடைப்பட்ட நேரத்தில் என்ன செய்துகொண்டிருந்தார்? இவர் எங்களைக் குறை சொல்வதற்கு தகுதி இல்லாதவர்" என்றும் டிகேஎஸ் இளங்கோவன் பேசினார். தற்குறி என்று தாங்கள் யாரையும் சொல்லவில்லை என்று குறிப்பிட்ட அவர், "தற்குறி என்று நாங்கள் யாரையும் சொல்லவில்லை. விஜயை வேண்டுமானால் சொல்லியிருக்கலாம். பேச்சு பொருத்தமாக இல்லையென்றால் அப்படி விமர்சிப்பார்கள். அது பொதுவாக எல்லோரும் சொல்வதுதான்" என்று அவர் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cpvd24prpl3o
  2. அண்ணை, அழகான பெண் அதிகாரிகளை நியமிக்கச் சொல்லி ஜனாதிபதிக்கு ஒரு வேண்டுகோளை அனுப்புங்கோ!
  3. பட மூலாதாரம், Imran Qureshi கட்டுரை தகவல் இம்ரான் குரேஷி பிபிசி இந்திக்காக 23 நவம்பர் 2025, 06:41 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை எடுத்துச் செல்லும் வாகனத்தில் இருந்து, சினிமா பட பாணியில் 7.11 கோடி ரூபாய் பணத்தைக் கொள்ளையடித்ததாக சந்தேகிக்கப்பட்ட 7 பேரைப் பிடித்திருப்பதாக பெங்களூரு போலீஸார் தெரிவித்தனர். கொள்ளையடிக்கப்பட்ட பணத்தில் 6.29 கோடி ரூபாயை மீட்டிருப்பதாகவும் காவல் துறையினர் தெரிவித்தனர். பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய பெங்களூரு காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங், விசாரணை சரியான திசையில் இருப்பதாகக் கூறினார். மேலும், மீதமுள்ள தொகை மற்றும் இந்த குற்றத்தில் தொடர்புடையவர்கள் விரைவில் பிடிபடுவார்கள் என்றும் கூறினார். கைதானவர்களில், கோபால் பிரசாத் என்பவர் காவலாளியாக இருக்கிறார். சேவியர் என்பவர் பண மேலாண்மை சேவை (CMS) நிறுவனத்தில் பணியாற்றியிருக்கிறார். அன்னப்பா நாயக், பெங்களூருவின் மேற்குப் பகுதியில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் நியமிக்கப்பட்டிருந்தார். இந்த வழக்கைத் தீர்க்க கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு, தெலங்கானா, ஆந்திரா மற்றும் கோவா உள்ளிட்ட தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் 200 அதிகாரிகள் மற்றும் பணியாளர்களை காவல்துறை நியமித்திருந்தது. பணத்தைத் திருடிய பிறகு திருடர்கள் வாகனங்களை மாற்றியிருக்கிறார்கள். போலியான நம்பர் பிளேட்களைப் பயன்படுத்திய அவர்கள், சிசிடிவி கேமராக்கள் குறைவாக உள்ள, அல்லது இல்லாத இடங்களில் நிறுத்தி பணப் பெட்டிகளை மாற்றியிருக்கிறார்கள். இந்நிகழ்வு புதன்கிழமை மதியம் 12:48 மணியளவில் நடந்திருக்கிறது. ஆனால், போலீஸ் கமிஷனரைப் பொறுத்தவரை சிஎம்எஸ் என்ற நிறுவனம் இதுபற்றிய தகவலை மதியம் 1:20 மணியளவில் காவல்துறைக்குத் தெரிவித்திருக்கிறது. வேன் ஓட்டுநரிடம் துப்பாக்கியைக் காட்டி பணத்தை அந்த கும்பல் கொள்ளையடித்ததாக காவல்துறை ஆணையர் தெரிவித்தார். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது உங்கள் வீட்டுக்கு அருகே இந்தச் செடிகள் இருந்தால் உண்மையில் பாம்புகள் வராதா? சியா, ஆளி உள்ளிட்ட விதைகளை எப்படி சாப்பிட வேண்டும்? யாரெல்லாம் சாப்பிட கூடாது? துபையில் கீழே விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானத்தில் இருந்த விமானி யார்? முழு விவரம் பல நாள் பட்டினி கிடந்து, கொடிய விஷத் தவளைகளை உண்ட பாம்புகள் உயிர் பிழைத்தது எப்படி? End of அதிகம் படிக்கப்பட்டது பெங்களூரு நகரின் மத்தியில் பட்டப்பகலில் இந்நிகழ்வு நடந்ததாக காவல்துறை தெரிவித்தது. அதன்பிறகு கொள்ளையர்களைப் பிடிப்பதகான திட்டத்தை காவல்துறை வகுத்தது. இதுபற்றி பிபிசியிடம் பேசிய பெங்களூரு காவல்துறை ஆணையர் சீமந்த் குமார் சிங், புதன்கிழமை மதியம் ஒரு எஸ்யூவி காரில் வந்த ஆறு பேர் பணத்தை எடுத்துச்செல்லும் வாகனத்தை நிறுத்தியதாகக் கூறினார். அப்போது அந்த வாகனம் ஒரு வங்கியில் இருந்து இன்னொரு வங்கிக்கு பணத்தை எடுத்துச் சென்றுகொண்டிருந்தது. அந்த வேனில் ஓட்டுநர், பணப் பாதுகாவலர் மற்றும் ஆயுதம் ஏந்திய இரு காவலர்கள் இருந்துள்ளனர். ரிசர்வ் வங்கி அதிகாரிகளாக நடித்த திருடர்கள் அந்தத் திருடர்கள் தாங்கள் இந்திய ரிசர்வ் வங்கி அதிகாரிகள் என்று சொல்லியிருக்கிறார்கள். வேனில் அவ்வளவு பெரிய தொகையை எடுத்துச் செல்வதற்கான சரியான ஆவணங்களை அவர்கள் வைத்திருக்கிறார்களா என்று சோதனை செய்வதற்காக வாகனத்தை நிறுத்தியதாக வேனில் இருந்தவர்களிடம் கொள்ளையர்கள் சொன்னதாக காவல்துறை ஆணையர் தெரிவித்தார். முதல்கட்ட தகவலின்படி, அந்த கும்பல் பணப் பாதுகாவலரையும் காவலர்களையும் தங்களின் ஆயுதங்களை விட்டுவிட்டு எஸ்யூவியில் ஏறச் சொல்லியிருக்கிறார்கள். பின்னர் வேனை பணத்தோடு ஓட்டிச்செல்லுமாறு அதன் ஓட்டுநரிடம் கூறியிருக்கிறார்கள். காவல்துறை கூற்றுப்படி அந்த கொள்ளையர்கள் லால்பாக்-குக்கு அருகில் உள்ள அஷோக் பில்லர் ரோட்டில் அந்த வேனை நிறுத்தியிருக்கிறார்கள். அந்த கும்பல் தங்கள் ஆள் ஒருவரை, பணத்தை எடுத்துச் சென்ற வேனோடு அனுப்பியிருக்கிறார்கள். சில தூரம் சென்ற எஸ்யூவி, நிம்ஹான்ஸ் (NIMHANS) பேருந்து நிறுத்தத்தில் அந்த மூன்று பணியாளர்களையும் இறக்கிவிட்டிருக்கிறது. பின்னர் அந்த கும்பல், குறைவான சிசிடிவி கேமராக்களே இருந்த பெங்களூரு டெய்ரி சர்க்கிள் மேம்பாலத்திற்கு எஸ்யூவியை ஓட்டிச் சென்றிருக்கிறது. பட மூலாதாரம், Imran Qureshi படக்குறிப்பு, பத்திரிகையாளர்களிடம் இந்த கொள்ளைச் சம்பவம் குறித்துப் பேசிய ஆணையர் சீமந்த் சிங் (நடுவே இருப்பவர்) மாறிய வண்டிகள், மாற்றப்பட்ட பணம் சிஎம்எஸ் நிறுவனம் இந்த சம்பவம் நடந்த இடமாக டிஜே ஹல்லியைக் குறிப்பிட்டதாக சீமந்த் குமார் சிங் தெரிவித்தார். அது நகரத்தின் கிழக்குப் பக்கம் இருக்கும் இடம். ஆனால், சம்பவம் நடந்த அஷோக் பில்லரோ தெற்குப் பகுதியில் உள்ளது. இதுபற்றிப் பேசிய கமிஷனர், "இந்த விவகாரத்தில் ஏஜென்சியின் பங்கு என்ன என்பதும் விசாரிக்கப்படுகிறது. பணப் பரிமாற்றத்தின் போது பல ரிசர்வ் வங்கி விதிகள் மீறப்பட்டுள்ளன. அவர்களிடம் தவறுகள் ஏதுமில்லை என்று சொல்லிவிட முடியாது" என்று கூறினார். ரிசர்வ் வங்கியின் சுற்றறிக்கையை மேற்கோள் காட்டிய சீமந்த் சிங், பண வேன்களில் பணப்பெட்டிகள் மற்றும் பணியாளர்களுக்கு இரண்டு தனித்தனிப் பெட்டிகள் இருக்க வேண்டும் என்றார். பயணிகள் பெட்டியில் இரண்டு பாதுகாவலர்கள், இரண்டு ஆயுதமேந்திய காவலர்கள் மற்றும் ஓட்டுநர் இருக்க வேண்டும் என்று கூறிய அவர், இரண்டு பெட்டிகளிலுமே சிசிடிவி கேமராக்கள் இருக்கவேண்டும் என்று கூறினார். பணம் எடுத்துச்செல்லும் ஒவ்வொரு வேனிலும் ஜிபிஎஸ், நேரடி கண்காணிப்பு, ஜியோ-ஃபென்சிங் மற்றும் வழித்தடத்தில் அருகிலுள்ள காவல் நிலையத்தின் குறிப்பேடு ஆகியவை பொருத்தப்பட்டிருக்க வேண்டும். வேன்கள் ஒரே பாதையிலோ அல்லது ஒரே நேரத்திலோ மீண்டும் மீண்டும் பயணிக்கக் கூடாது. அவற்றின் இயக்கம் பற்றிக் கணித்துவிடக்கூடாது என்பதற்காக இந்த விதிமுறை. சிஎம்எஸ் நிறுவனத்திடமிருந்து இதுபற்றிய கருத்து பெறுவதற்காக பிபிசி முயற்சி செய்தது. அவர்களிடம் கருத்து பெற்ற பிறகு இந்தக் கட்டுரை புதுப்பிக்கப்படும். தன் பெயர் சொல்ல விரும்பாத காவல்துறை அதிகாரி ஒருவர், கொள்ளையடிப்பதற்குப் பயன்படுத்தப்பட எஸ்யூவி போலியான நம்பர் பிளேட்டையும் இந்திய அரசு ஸ்டிக்கரையும் பயன்படுத்தியிருந்ததாக பிபிசியிடம் தெரிவித்தார். அந்த நிறுவனத்துக்கு இந்தக் கொள்ளையுடன் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா என்றும் காவல்துறை விசாரிப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார். இந்தக் கொள்ளையில் பயன்படுத்திய எஸ்யூவி காரை காவல்துறை மீட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்தார். ஆனால் கொள்ளையர்கள் தப்பிக்கப் பயன்படுத்திய வாகனம் எது என்று தெளிவாகத் தெரியவில்லை என்று உள்துறை அமைச்சர் ஜி.பரமேஷ்வரா தெரிவித்தார். ''வாகனங்களை மாற்றி பண பரிமாற்றம் செய்தது உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார். சமீபகாலமாக கர்நாடகாவில் நடந்த மற்ற வங்கிக் கொள்ளை சம்பவங்களை போலீசார் தீர்த்ததுபோல், இந்த வழக்கையும் விரைவில் தீர்த்து வைப்பார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். கடந்த மே மாதம் விஜயபுரா மாவட்டத்தில் உள்ள ஒரு வங்கியில் இருந்து 53.26 கோடி ரூபாய் மதிப்புள்ள 59 கிலோ தங்கம் திருடப்பட்டது. இதுவரை 39 கிலோ தங்கமும் கொஞ்சம் பணத்தையும் போலீசார் மீட்டுள்ளனர். இந்தத் திருட்டு தொடர்பாக இரண்டு முன்னாள் ஊழியர்கள் உள்பட 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cdxernjq1jzo
  4. கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள மின்னணு நுழைவாயில் (E-Gate) வசதியால் நன்மை ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டிலிருந்து வரும் இலங்கை கடவுச்சீட்டை கொண்டுள்ள பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த வசதி மூலம் குடிவரவுப் பணிகளுக்காக நீண்ட வரிசைகளில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். விமானத்தில் இருந்து இறங்கி, நேரடியாக விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வாய்ப்பு மின்னணு நுழைவாயில்கள் காரணமாக கிடைத்துள்ளது. சுயமாக குடிவரவு பணி வெளிநாடுகளில் இருந்து இலங்கை செல்வோர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து விரைவாக வெளியேறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சில நிமிடங்களில் சுயமாக குடிவரவு பணிகளை நிறைவு செய்து கொண்டு வெளியேற முடியும். இதற்கு முன்னர் மணித்தியாலக்கணக்கில் காத்திருந்து குடிவரவு பணிகளை முடிக்க வேண்டிய நிலை இருந்தது. இலங்கைக்கு அடிக்கடி வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இதுவோரு சிறந்த வழிமுறையாகும் என பயணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் மின்னணு நுழைவாயில் (E-Gate)வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து கடவுச்சீட்டுகளையும் கொண்ட பயணிகளுக்கு இந்த வாய்ப்பு கிடைக்கும். பல இலட்சம் சுற்றுலாப் பயணிகளை உள்ளீர்க்கும் வகையிலான செயற்பாடுகளை அரசாங்கம் மேற்கொண்டு வரும் நிலையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்த வசதி குறிப்பிடத்தக்க நன்மையை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது. https://tamilwin.com/article/good-news-foreigners-who-visting-sri-lanka-1763883182
  5. அஸ்வெசும நலன்புரி உதவித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்திற்குத் தகுதி பெற்று, இன்னும் வங்கிக் கணக்கைத் திறக்காத பயனாளிகள் வங்கிக் கணக்குகளை விரைவில் திறக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். வங்கிக் கணக்குகள் இல்லாததால், முந்தைய ஆண்டில் (2024) 43,703 அஸ்வெசும பயனாளிகள் தங்கள் உரிமை பலன்களைப் பெறவில்லை என்பது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக, தகுதியான பயனாளிகள் தங்கள் பலன்களைப் பெற முடியாமல் போகலாம் அல்லது இழக்க நேரிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரச்சினையை தீர்க்க பொருத்தமான வழிமுற ஜூன் 2025 இறுதிக்குள் இந்த பிரச்சினையைத் தீர்க்க பொருத்தமான வழிமுறையை நிறுவி செயல்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அஸ்வெசும திட்டத்தின்படி தகுதியான நபர்களுக்கு சலுகைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பல சந்தர்ப்பங்களில் வங்கிக் கணக்குகளைத் திறக்காத பயனாளிகளுக்கு கணக்குகளைத் திறக்குமாறு தனிப்பட்ட முறையில் தெரிவித்துள்ளதாக நலன்புரி சபை தெரிவித்துள்ளது. நலன்புரி சபை தொடர்பாக 2024 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த தகவல் சேர்க்கப்பட்டுள்ளது. https://tamilwin.com/article/important-instructions-for-opened-bank-accounts-1763885116
  6. இந்த நாட்டில் அனைவரும் சமன் என ஜனாதிபதி சொல்வது உண்மையாக இருக்குமாக இருந்தால் உங்கள் சகாக்களை வணங்குவது போல் எமது மாவீரர்களது கனவையும் நனவாக்குகின்ற வகையில் அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சி யின் பதில பொதுச்செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் கோரிக்கை விடுத்தார். முல்லைத்தீவு வள்ளிபுனத்தில் நடைபெற்ற மாவீரர் பெற்றோர் உரித்துடையோர் மதிப்பளித்தல் நிகழ்வில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், நவம்பர் மாதம் என்பது உலகலாவிய ரீதியில் தங்கள் தேசங்களுக்காகப் போரிட்டு மடிந்தவர்களை நினைவு கூருகின்ற மாதம். போராடி மடிந்தவர்களை நினைவு அதனால்தான் உலகெங்கும் இராணுவத்தினராக இருக்கலாம் போராடியவர்களாக இருக்கலாம் அவர்களைப் பொப்பி மலரால் நினைவு கூருவார்கள். இது உலகம் எங்கும் நடைபெறும் ஒரு நிகழ்வு. இப்படியான கார்த்திகை மாதத்திலே தான் நாங்களும் தங்களுக்காக அன்றி எங்களுக்காகப் போராடி மடிந்தவர்களை நினைவு கூருகின்ற ஒரு வாரத்தை அனுஷ்டிக்கிறோம். சில நாட்களுக்கு முன்னர் நவம்பர் 13 ஆம் திகதி நாட்டின் தற்போதைய ஜனாதிபதியும் விகாரமாதேவி பூங்காவிலே தன்னோடு தோள் நின்று ஆயுதம் ஏந்தி மடிந்தவர்களை நினைவு கூருகின்ற படங்களை நாங்கள் பார்த்தோம். தங்களின் அன்றைய தலைவரின் சீருடையோடு அவர் இருக்கின்ற படம் அதன் பின்னணியில் இருக்கின்றது, ஜனாதிபதி அந்த மேடையில் பேசுகின்றார். அன்றும் அதற்குப் பின்பு அவரின் தோளோடு தோள் நின்றவர்கள் இப்படியாக மலர் அஞ்சலி செலுத்தி அவர்கள் உணர்வுபூர்வமாக அனுஷ்டித்தமையை நாங்கள் பார்த்தோம். இனத்தின் விடிவுக்காக போராடியர்கள் அதே போன்று ஓர் இனத்தின் விடிவுக்காக போராடியவர்கள் என்றும் எங்களின் மனங்களிலே நீங்கா இடம் பெற்றவர்கள். ஏனென்றால் எங்களுக்காகக் தங்கள் உயிர்களை அவர்கள் கொடுத்தவர்கள். இது நான் எப்போதுமே சொல்லுகின்ற விடயம். அவர்களுடைய அந்த அர்ப்பணிப்புக்கு ஈடாக நாம் எதையும் சொல்ல முடியாது. ஏனென்றால் தங்களிடத்தில் இருக்கும் அனைத்தையூம் அதாவது தமது உயிரையே எமக்காக அவர்கள் கொடுத்தவர்கள். இந்த அஞ்சலி செலுத்துகின்ற நிகழ்விலே பெற்றோர் வருகின்றபோது விசேடமாக தாய்மார், சகோதரிகள் வருகின்றபோது இன்னமும் அவ்கள் அழுது புலம்புவதை கண்டோம். இங்கே இன்னமும் என நான் கூறுவது இத்தனை வருடங்களாகியும் அவர்கள் அழுகின்றனர் என்றால் அதற்கு ஒரு காரணம் உண்டு. அந்தக் காரணம் இவர்கள் எம்மை விட்டுப் போய்விட்டனர் என்ற வருத்தம் மட்டும் அல்ல அதாவது நான் பெற்றவள் இருக்கப் பிள்ளை மடிந்து விட்டானே என்ற அங்கலாய்ப்பு மட்டுமல்ல, அவர்களின் தியாகத்தினாலே இன்னமும் எமது இனம் ஒரு விடிவைக் காணவில்லையே அது வீணாகப் போய்விடுமோ என்ற அங்கலாய்ப்பு அங்கே தென்படுகின்றது. அவர்கள் மடிந்ததாலே இந்த இனம் விடிந்தது என்று தெரிந்தால் ஒரு பூரிப்பும் அதிலே கலந்து வரும். ஆனால் அப்படி இல்லாமல் போய்விடுமோ என்ற அங்கலாய்ப்போடு எங்களது இனம் காத்திருக்கின்றது. விடிவு ஏற்பட வேண்டும் தனியான ஓர் இறைமை மிக்க நாடுகாக அவர்கள் போராடினார்கள். ஆனால் சுயமாக ஆட்சி செய்கின்ற முறையிலாவது நாங்கள் எங்களை ஆளுகின்ற ஒரு முறைமையை ஏற்படுத்த வேண்டும் என்று நாங்கள் விளைகின்றோம். அவர்களுடைய அர்ப்பணிப்பும் தியாகமும் வீணாகப் போய் விடக் கூடாது. அவர்கன் பெற்றோர் இருக்கின்ற காலத்திலேயே ஒரு விடிவு ஏற்பட வேண்டும். சுயாட்சி முறையாவது எங்கள் கைகளில் கிடைக்க வேண்டும் என்று நாங்கள் பயணிக்கின்றோம். சில நாள்களுக்கு முன்னர் ஜனாதிபதியை எங்கள் கட்சி சந்தித்துப் பேசியபோதும் இந்த விடயம் குறித்துப் பேசினோம். அதில் ஒரு மணித்தியாலம் அரசியல் தீர்வு குறித்து பேசினோம். 70 வருடங்களாக வெவ்வேறு வடிவத்திலான போராட்டங்களை நடத்தி வருகிறோம். உலகத்திலே எந்தச் சமூகமும் எந்த மக்களும் இரண்டாந்தரப் பிரஜைகளாக வாழ மாட்டார்கள் அதனை ஏற்கவும் மாட்டார்கள். அதிகாரப் பகிர்வைக் கோருகின்றோம் அப்படியிருக்க ஒரு ஜனநாயகக் கட்டமைப்பிலே ஒரு மக்கள் எண்ணிக்கையில் 3 மடங்காக இருக்கின்றபோது எண்ணிக்கையில் குறைந்ததாகக் காணப்படும் சமூகம் எப்படி சம அந்தஸ்து உடையவர்களாக வாழ முடியும்? ஏனெனில் வாக்கெடுப்பு நடத்தினால் அது ஒரு பக்கமாக சாய்ந்துதான் நிற்கும். ஆனபடியால் தான் அதிகாரப் பகிர்வைக் கோருகின்றோம். நாட்டிலே நாங்கள் பெரும்பான்மையாக வாழாவிட்டாலும் நாம் பெரும்பான்மையாக வாழுகின்ற பிரதேசங்களிலே எங்களுக்கான அரச அங்கீகாரங்களைப் பகிர்ந்து கொடுங்கள் எனக் கேட்பதன் தார்ப்பரியம் நியாயப்பாடு அதுதான். இது செய்யப்பட வேண்டும். எவர் நிமித்தம் செய்யப்படாது விட்டாலும் மடிந்துபோன எங்களுடைய மாவீரர்களது தியாகத்தின்நிமித்தமாக அது செய்யப்பட வேண்டும். மாவீரர்களது உறவூகள் விசேடமாக அவர்களது பெற்றார்கள் அதனைக் காண வேண்டும். துரோகி பட்டம் என்னுடைய மகன் என்னுடைய மகள் இதற்காகத்தான் தன்னுடையவாழ்வைக் கொடுத்தார், அதன் பெறுபேற்றை நானாவது காண்கின்றேன் என்று சொல்லக்கூடியதாக இருக்கவேண்டும். தனி நாடு என்ற இலக்கை விட்டு விலகி விட்டோம் எனத் துரோகி பட்டம் சுட்டுகின்றவர்கள் இன்றைக்கும் எவராவது தனிநாட்டை கோருகின்றார்களா எனக் கேட்டுப் பார்க்க வேண்டும். தங்களோடு கூடக் களமாடு மடிந்தவர்களுக்கு என்று அந்தக் காலங்களில் நாட்டின் பயங்கரவாதிகள் என முத்திரை குத்தப்பட்டு வீதி வீதியாக ரயர்கள் போட்டு எரிக்கப்பட்ட தங்களுடைய சகாக்களுக்காக நினைவு கூருகின்றபோது ஜனாதிபதியிடம் கேட்கின்றோம் அந்த நேரத்தில் அடக்குமுறையை மேற்கொண்டவர்களிடம் கேட்கவில்லை அடக்குமுறைக்கு உட்படுத்தப்பட்டவர்களிடம் நாம் கேட்கின்றோம். எங்கள் மக்களிடமிருந்து எங்கள் பிள்ளைகள் மடிந்திருக்கின்றார்கள் ஒரு நியாயத்துக்காகப் போரிட்டு மடிந்திருக்கின்றார்கள் நீங்கள் உங்கள் சகாக்களை நினைவூ கூருகின்றீர்கள் அதைப் போற்றுகிறார்கள். இந்த நாட்டில் அனைவரும் சமன் என நீங்கள் சொல்கின்றமை உண்மையாக இருக்குமாக இருந்தால் உங்கள் சகாக்களை வாங்குவது போல் இதோ இந்த மாவீரர்களது கனவையும் நனவாக்குகின்ற வகையில் அரசியல் தீர்வை ஜனாதிபதி கொடுக்க வேண்டும் என்றார். https://ibctamil.com/article/ma-sumanthithran-speech-in-mullaitivu-1763876050#google_vignette
  7. பஹல கடுகன்னாவ மண்சரிவு - சிசிடிவி காணொளி வௌியானது Nov 23, 2025 - 02:05 PM ஆறு பேர் உயிரிழப்பதற்கு காரணமான பஹல கடுகன்னாவ கனேதென்ன பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு தொடர்பான சிசிடிவி காணொளி வௌியாகியுள்ளது. பஹல கடுகன்னாவ, கனேதென்ன பகுதியில் நேற்று (22) மண்சரிவு ஏற்பட்ட நிலையில் வர்த்தக நிலையம் ஒன்றின் மீது பாறை ஒன்று வீழ்ந்தது. இதனையடுத்து 10 பேர் குறித்த இடிபாடுகளுக்குள் சிக்கிய நிலையில் பொலிஸார், அனர்த்த முகாமைத்துவ நிலையம், இராணுவத்தினர் மற்றும் பிரதேச மக்கள் இணைந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது 6 பேர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டதுடன் 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான சிசிடிவி காணொளி இன்று வௌியாகியுள்ளது காணொளியை பார்வையிட, https://www.youtube.com/watch?v=rYnLb-9cdx8&t=74s https://adaderanatamil.lk/news/cmibgr25o01wio29ni16ltx2j
  8. நன்றி அண்ணா பகிர்விற்கு. கடந்த வருடமோ/ இந்த வருட ஆரம்பத்திலா என நினைவில்லை, காரைநகரைச் சேர்ந்த 16 வயது மாணவர் எலும்புமச்சை மாற்று சிகிச்சைக்காக 1.5 கோடி ரூபா சேர்க்க தொடங்கி பின்னர் இறந்துவிட்டார். எங்கட மக்களுக்கு இது சம்பந்தமான விழிப்புணர்விற்கு இந்த பதிவு பயன்படும்.
  9. 23 Nov, 2025 | 10:41 AM (நா.தனுஜா) இலங்கைவாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும், சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை ஒன்றின் தேவைப்பாட்டினையும் பிரித்தானியத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் ஜோன் ஸ்வின்னிக்கிடம் வலியுறுத்தியுள்ளனர். ஸ்கொட்லாந்தின் முதலமைச்சர் (முதலமைச்சரே ஸ்கொட்லாந்து அரசாங்கத்தின் தலைவரும் அரசாங்கத்தின் சகல கொள்கைகள், தீர்மானங்களுக்குப் பொறுப்பானவரும் ஆவார்) ஜோன் ஸ்வின்னிக்கும் பிரித்தானியத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு கடந்த வாரம் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது சுமார் 16 வருடங்களாக நீதிக்காகக் காத்திருக்கும் தமிழ் மக்கள் தற்போது முகங்கொடுத்துவரும் மிகமோசமான நிலைவரம் தொடர்பில் பிரித்தானியத் தமிழர் பேரவை உறுப்பினர்கள் ஸ்கொட்லாந்து முதலமைச்சரிடம் எடுத்துரைத்தனர். அதுமாத்திரமன்றி சர்வதேச குற்றவியல் நீதிப்பொறிமுறை ஒன்றின் தேவைப்பாட்டினையும், இலங்கைவாழ் தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும் ஸ்கொட்லாந்து தேசிய கட்சியுடனான தொடர்புகளைத் தொடர்ந்து பேணுவதற்கு எதிர்பார்ப்பதாகவும், தமிழ் மக்களுக்கான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நியாயமான அரசியல் அபிலாஷைகள் என்பவற்றை அடைந்துகொள்வதை இலக்காகக்கொண்டு ஸ்கொட்லாந்து தேசிய கட்சியுடன் இணைந்து பணியாற்றுவதற்குத் தயாராக இருப்பதாகவும் பிரித்தானியத் தமிழர் பேரவை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/231170
  10. ட்ரவிஸ் ஹெட் அசத்தலான சதம், முதலாவது ஆஷஸ் டெஸ்டில் 2 நாட்களில் அவுஸ்திரேலியா வெற்றி; கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியாவுக்கு வருவாயில் பெரு நட்டம் Published By: Digital Desk 3 23 Nov, 2025 | 11:47 AM (நெவில் அன்தனி) பேர்த் விளையாட்டரங்கில் இரண்டே நாட்களில் நிறைவுக்கு வந்த முதலாவது ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ட்ரவிஸ் ஹெட் குவித்த ஆட்டம் இழக்காத அதிரடி சதத்தின் உதவியுடன் இங்கிலாந்தை 8 விக்கெட்களால் அவுஸ்திரேலியா வெற்றிகொண்டது. இந்த டெஸ்ட் போட்டியின் ஆரம்ப நாளான வெள்ளிக்கிழமையன்று பலம் வாய்ந்த நிலையில் இருந்த இங்கிலாந்து மிக மோசமாக தோல்வி அடைந்தது. மிச்செல் ஸ்டார்க் மிகத் துல்லியமாக பந்துவீசி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பெறுதியைப் பதிவுசெய்து (58 - 7 விக்.) அவுஸ்திரேலியாவின் வெற்றிக்கு வித்திட்டிருந்தார். இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்டு டெஸ்ட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் அவுஸ்திரேலியா முன்னிலை அடைந்துள்ளது. இது இவ்வாறிருக்க, இரண்டு நாட்களில் டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்தால் கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியாவுக்கு மில்லியன் கணக்கில் நட்டம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. வரவு, செலவுகளை சமநிலைப்படுத்தும் வகையில் இங்கிலாந்துடான ஆஷஸ் டெஸ்ட் தொடரை கிரிக்கெட் ஒஸ்ட்ரேலியா ஒதுக்கியிருந்தது. ஆனால், குறுகிய டெஸ்ட் போட்டிகள் கருப்பொருளாக மாறினால் அது மிகவும் கடினமான சூழலை தோற்றுவிக்கும் என தெரிவிக்கப்படுகிறது. இந்தப் போட்டி 2 நாட்களில் முடிவடைந்ததால் அவுஸ்திரேலியாவுக்கு 3ஆம், 4ஆம் நாட்களில் கிடைக்கவிருந்த 3 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர் வருவாய் இல்லாமல் போய் நட்டம் ஏற்பட்டுள்ளது. வேகப்பந்து வீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்திய முதலாம் நாளன்று 19 விக்கெட்கள் வீழ்த்தப்பட்டன. முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 172 ஓட்டங்களைப் பெற்றதுடன் அவுஸ்திரேலியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 9 விக்கெட்களை இழந்து 123 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. பென் ஸ்டோக்ஸ் திறமையாக பந்துவீசி 5 விக்கெட் குவியலைப் பதிவுசெய்திருந்தார். இரண்டாம் நாள் தனது முதல் இன்னிங்ஸை தொடர்ந்த அவுஸ்திரேலியா மேலதிகமாக 9 ஓட்டங்களைப் பெற்று கடைசி விக்கெட்டை இழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் இங்கிலாந்து 164 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியாவுக்கு 205 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. ஆக்ரோஷமாகத் துடுப்பெடுத்தாடிய ட்ரவிஸ் ஹெட் 83 பந்துகளில் 16 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் அடங்கலாக 123 ஓட்டங்களைப் பெற்று அவுஸ்திரேலியாவை இரண்டு நாட்களுக்குள் வெற்றி அடையச் செய்தார். ட்ரவிஸ் ஹெட், மானுஸ் லபுஷேன் ஆகிய இருவரும் 2ஆவது விக்கெட்டில் 117 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். எண்ணிக்கை சுருக்கம் இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 172 (ஹெரி ப்றூக் 52, ஒலி போப் 46, ஜமி ஸ்மித் 33, மிச்செல் ஸ்டார்க் 58 - 7 விக்., ப்றெண்டன் டொகெட் 27 - 2 விக்.) அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 132 (அலெக்ஸ் கேரி 26, கெமரன் க்றீன் 24, ட்ரவிஸ் ஹெட் 21, பென் ஸ்டோக்ஸ் 23 - 5 விக்., ப்றைடன் கார்ஸ் 45 - 3 விக்., ஜொவ்ரா ஆச்சர் 11 - 2 விக்.) இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 164 (கஸ் அட்கின்சன் 37, ஒலி போப் 33, பென் டக்கட் 28, ப்றைடன் கெயார் 20, ஸ்கொட் போலண்ட் 33 - 4 விக்., ப்றெண்ட்ன் டொகெட் 51 - 3 விக்., மிச்செல் ஸ்டாக் 55 - 3 விக்.) அவுஸ்திரேலியா (வெற்றி இலக்கு 205 ஓட்டங்கள்) 2ஆவது இன்: 205 - 2 விக். (ட்ரவிஸ் 123, மானுஸ் லபுஷேன் 51 ஆ.இ., ஜேக் வெதரோல்ட் 23, ப்றைடன் கெயார் 44 - 2 விக்.) https://www.virakesari.lk/article/231189
  11. மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கைக்கு இரண்டாவது நேரடித் தோல்வி 23 Nov, 2025 | 04:39 AM (நெவில் அன்தனி) ராவல்பிண்டி கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் மும்முனை சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இலங்கை தனது இரண்டாவது போட்டியிலும் தோல்வியைத் தழுவியது. பாகிஸ்தானுக்கு எதிராக சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் இலங்கை 7 விக்கெட்களால் தோல்வி அடைந்தது. ஏற்கனவே ஸிம்பாப்வேயிடம் தோல்வி அடைந்த இலங்கைக்கு எஞ்சியுள்ள இரண்டு போட்டிகளிலும் மிகப் பெரிய வெற்றிகளை ஈட்டினால் மாத்திரமே இறுதிப் போட்டிக்கு செல்லக்கூடியதாக இருக்கும். சனிக்கிழமை நடைபெற்ற போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் மத்திய வரிசை வீரர் ஜனித் லியனகே 41 ஓட்டங்களையும் குசல் ஜனித் பெரேரா 25 ஓட்டங்களையும் ஆரம்ப வீரர் காமில் மிஷார 22 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் மொஹம்மத் நவாஸ் 16 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினர். துடுப்பாட்டத்திற்கு கடினமாக அமைந்த ஆடுகளத்தில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் 15.3 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 131 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் இறுதிப் போட்டிக்கு முன்னேற பாகிஸ்தானுக்கு இன்னும் ஒரே ஒரு வெற்றி தேவைப்படுகிறது. துடுப்பாட்டத்தில் ஆரம்ப வீரர் சஹிப்ஸாதா பர்ஹான் 45 பந்துகளை எதிர்கொண்டு 6 பவுண்டறிகள், 5 சிக்ஸ்கள் உட்பட 80 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். சய்ம் அயூப் 20 ஓட்டங்களைப் பெற்றார். பந்துவீச்சில் துஷ்மன்த சமீர 29 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்களைக் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: மொஹமத் நவாஸ் https://www.virakesari.lk/article/231152
  12. 23 Nov, 2025 | 11:24 AM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) வளரும் காலத்தில் தாயையும் இழந்து பின்னர் வளர்த்த பாட்டியையும் இழந்து தற்போது தனித்திருக்கும் பல ஆண்டுகாலமாக சிறையில் இருக்கும் தமிழ் அரசியல் கைதி ஆனந்தசுதாகரின் பிள்ளைகளின் ஆரோக்கியத்துக்கு அரசாங்கத்தின் வரவு , செலவுத்திட்டம் என்ன ஆற்றுப்படுத்தலை வழங்கப்போகிறதென தமிழரசுக் கட்சியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் கேள்வி எழுப்பினார். பாராளுமன்றத்தில் சனிக்கிழமை (23) நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு - செலவுத் திட்டத்தில் சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்கான குழு நிலை விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, இத் தீவிலே ஆயுதங்களை விரும்பி ஏற்ற இனமல்ல எங்கள் இனம். அரசியல் வழியில் போராடித்தோற்று ஆயுதங்களை ஏந்த நிர்ப்பந்திக்கப்பட்டோம். 2009 உடன் ஆயுதமும் மௌனிக்கப்பட்டது. இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தவே மாறிவரும் அரசுகள் முயல்வதாக அறிக்கைகள் காட்டுகின்றன. செய்திகளில் அரசுகளின் சார்பாளர்களாக நீங்கள் மாறி மாறி எங்களை ஏமாற்றுகிறீர்கள். எங்கள் அயல் வீட்டுப் பிள்ளை – தம்பி ஆனந்தசுதாகரின் மகன் மற்றும் மகளைப் போல பிறந்தது முதல் இறக்கும் வரை பிள்ளைகளும், சகோதரர்களும்,மனைவிகளும், கணவர்மாரும், தந்தையரும் தாய்மாரும், பாட்டன், பாட்டி மாருமாக ஒட்டுமொத்த ஈழத்தமிழினமும் இன்னமும் வடுக்களோடு தான் நகர்கிறோம். எங்களுக்கு ஆரோக்கியமான சமூக வாழ்வுக்கான கதவை உங்கள் அரசு எப்போது திறக்கப்போகிறது. இந்தத்தீவின் நல்லிணக்கத்துக்கான முதற்படியே – எங்களுக்காக குரல்கொடுத்து இப்போதும் சிறையில் வாடும் எங்களின் உறவுகளின் விடுதலைதான். தயவுசெய்து எங்கள் உறவுகளை விடுவித்து நல்லிணக்கச் சைகையை காட்டுங்கள். உங்கள் வரவு ,செலவுத்திட்டம் முன்மொழியும் ஆரோக்கிய வாழ்வுக்கான வழியை ஈழத்தமிழர்களுக்கும் திறந்து விடுங்கள் என்றார். https://www.virakesari.lk/article/231171
  13. Published By: Digital Desk 1 23 Nov, 2025 | 10:37 AM ஆர்.ராம் ஜனாதிபதி அநுரகுமாரதிசாநாயக்க புத்தசாசன அமைச்சினால் காண்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் தமிழ் மொழி காணப்படாமை தொடர்பில் அதிருப்தியடைந்து அதுதொடர்பில் அதிகரிகளிடத்தில் கேள்விகளை எழுப்பியதோடு தமிழ் மொழியில் குறிப்பிடுமாறும் வலியுறுத்தியுள்ளார். இன நல்லிணக்கத்தை அடிப்படையாக்கொண்டு இலங்கையர் தினம் எதிர்வரும் டிசம்பர் மாதம் 12, 13, 14 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. இந்நிலையில் குறித்த நிகழ்வு பற்றி சிறுபான்மை கட்சி தலைவர்களுக்கும் ஜனாதிபதிக்குமிடையிலான சந்திப்பு நேற்றையதினம் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போது, புத்தசாசன அமைச்சினால் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படவுள்ள நிகழ்ச்சிகள் தொடர்பிலான அறிக்கையொன்று ஜனாதிபதி உட்பட சிறுபான்மை பிரதிநிதிகளுக்கு காண்பிக்கப்பட்டிருந்தது. இந்த அறிக்கையில் அதிகமாக ஆங்கிலமொழியிலேயே விவரிப்புக்கள் காணப்பட்டிருந்தன. இதனை அவதானித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சொற்ப நேரத்திலேயே அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளை நேரடியாகவே சுட்டிக்காட்டி குறித்த விடயங்கள் ஏன் தமிழ் மொழியில் மொழிபெயர்ப்புச் செய்யவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். அப்போது அதிகாரிகள் ஆங்கில மொழியில் நாங்கள் அளிக்கையை தயாரித்துள்ளதாக பதிலளித்தபோது, கட்டாயமாக தமிழ் மொழியில் விடயங்களை விவரிக்கும் வகையில் தயாரிக்குமாறு பணிப்புரை விடுத்துள்ளார். இதனையடுத்து கலந்துரையாடல் ஆரம்பித்தபோது இலங்கைத் தமிழரசுக்கட்சியின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறித்த அறிக்கையில் தமிழ் மொழி குறைவாக காணப்படுவது தொடர்பில் தான் கேள்வி எழுப்பவிருந்த நிலையில் ஜனாதிபதி அநுரகுமார அதனை அவதானித்து வெளிப்படுத்திய கரிசனைக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்வதாக கூறியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/231165
  14. Published By: Digital Desk 3 23 Nov, 2025 | 10:33 AM (லியோ நிரோஷ தர்ஷன்) உலகளாவிய பாதுகாப்புச் சூழல் ஒரு சவாலான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் வேகமாக வளர்ந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு அழுத்தங்களை எதிர்கொள்கிறது. எனவே கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் தேவை முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானதாக உள்ளது என இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் தெரிவித்தார். இந்து சமுத்திரத்தில் மூலோபாய நிலைப்பாடு கொண்ட நாடாக இலங்கை இருப்பதால், அதனை ஒத்துழைப்பு கடல்சார் கண்காணிப்புக்கும், பாதுகாப்புக்கும் மிகவும் இன்றியமையாதது என்றும் வலியுறுத்தினார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் கடல்சார் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் 7வது தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் மட்டக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. கூட்டத்தின் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றாக, இலங்கை பாதுகாப்பு செயலாளர் மற்றும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நடத்திய இருதரப்பு கலந்துரையாடல் ஆகும். இரு நாடுகளும் பரஸ்பர நலன் சார்ந்த பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தின. கொழும்பு பாதுகாப்பு மாநாடு கூட்டம், இலங்கை - இந்திய பாதுகாப்புப் பங்காளித்துவத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த ஒரு காலகட்டத்தில் வந்துள்ள நிலையில், இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவால் இந்த மாநாட்டில் ஆற்றிய உரை, பிராந்தியத்தின் மாறிவரும் பாதுகாப்புச் சூழலைக் கூர்மையாக எடுத்துக்காட்டியது. உலகளாவிய பாதுகாப்புச் சூழல் ஒரு சவாலான கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, இந்தியப் பெருங்கடல் பிராந்தியம் வேகமாக வளர்ந்து வரும் புவிசார் அரசியல் மற்றும் பாதுகாப்பு அழுத்தங்களை எதிர்கொள்வதால், கொழும்பு பாதுகாப்பு மாநாட்டின் தேவை முன்னெப்போதையும் விட இன்று மிகவும் பொருத்தமானதாக உள்ளது என்று கூறினார். இந்தியப் பெருங்கடலை 'நமது மிகப்பெரிய பகிரப்பட்ட பாரம்பரியம்' என்று வலியுறுத்திய தோவால், பிராந்திய கடற்பரப்பை பாதுகாப்பதற்காக உறுப்பு நாடுகள் கூட்டாக செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். சட்டவிரோத கடத்தல், கடற்கொள்ளை மற்றும் பிராந்திய வல்லரசுப் போட்டி ஆகியவை மீண்டும் எழுந்துள்ள நிலையில், அனைவரையும் உள்ளடக்கிய, திறந்த, விதிகளின் அடிப்படையிலான கடல்சார் ஒழுங்கின் அவசியத்தையும் இதன் போது அவர் வலியுறுத்தினார். இது இலங்கையின் நிலைப்பாட்டிற்கும், அதன் புவிசார் அரசியல் முக்கியத்துவத்திற்கும் வலு சேர்க்கிறது. இந்த மாநாட்டில், ஆழ்கடல் பாதுகாப்பில் ஒத்துழைப்பு, பயங்கரவாதம் மற்றும் தீவிரவாதத்தை எதிர்த்தல், மற்றும் பேரிடர் நிவாரணத்தில் கூட்டுச் செயல்பாடு ஆகிய முக்கியத் தூண்களின் கீழ் ஒத்துழைப்பை மேம்படுத்த உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்டன. இந்த ஐந்து தூண்களிலும் பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு மூலம் கூட்டுத் திறன்களை மேம்படுத்துவதற்கு இந்தியா உறுதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/231176
  15. நான் நினைக்கிறேன் புதிய கட்டுப்பாடுகள்/விதிகளின்படி அவ்வாறு நடைபெறுகிறது போல.
  16. மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க என்றுமில்லாதவாறு எழுச்சி பெற்ற புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம் 22 Nov, 2025 | 04:23 PM போரில் உயிரிழந்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாளுக்கான அலங்கரிப்பு ஆயத்த பணிகள் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசத்தில் அலங்கரிப்பு பணி நடைபெற்று மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தயார் நிலையில் இருக்கின்றது. தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை போற்றி வணங்கும் மாவீரர் நாள் இவ்வாண்டும் கார்த்திகை 27 ஆம் திகதி தமிழ் மக்களால் அனுஷ்டிக்கப்படவுள்ளது. அந்தவகையில் இவ்வாண்டும் மாவீரர் நாள் நிகழ்வுகள் மேற்கொள்ள தமிழர் தாயகப் பகுதிகள் மாத்திரமின்றி தமிழ் மக்கள் வாழும் தேசமெங்கும் தயாராகி வருகிறது. அந்தவகையில் புதுக்குடியிருப்பு கோம்பாவில் பிரதேசம் என்றுமில்லாதவாறு கோம்பாவில் புலம்பெயர் தேசத்து உறவுகளும் , கோம்பாவில் மக்கள், இளைஞர்கள் இணைந்து மாவீரர் நாளினை அனுஷ்டிக்க தயார் நிலையில் ஏற்பாடாகியுள்ளது. https://www.virakesari.lk/article/231126
  17. 22 Nov, 2025 | 10:56 AM நைஜீரியாவின் நைஜர் மாநிலத்தில் உள்ள செயிண்ட் மேரிஸ் கத்தோலிக்க பாடசாலையில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆயுதக்குழுவினர் 215 மாணவர்களையும் 12 ஆசிரியர்களையும் கடத்திச் சென்றுள்ளனர். சம்பவம் வெள்ளிக்கிழமை (21) அதிகாலை நடைபெற்றது. மாணவர்கள் கடத்தப்பட்ட விவகாரத்துக்குப் பின், நைஜீரிய பாதுகாப்பு படைகள் நாடு முழுவதும் பாதுகாப்பை பலப்படுதியுள்ளனர். பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடத்தப்பட்டவர்களைத் தேடி வனப்பகுதிகளில் விரிவான தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தப்பட்டவர்களில் 7 முதல் 10 வயது குழந்தைகளும் அடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த சம்பவத்தையடுத்து, பெற்றோர்கள் மற்றும் கிராம மக்கள் கடும் அதிர்ச்சியில் உள்ளனர். இந்தக் கடத்தல் சம்பவத்துக்குப் பின்னர் நைஜீரிய ஜனாதிபதி போலா டினுபு, தென் ஆப்பிரிக்காவில் நடைபெறும் G20 உச்சி மாநாட்டுக்கான பயணத்தை இரத்து செய்துள்ளார். இதேவேளை, கடந்த சில நாட்களுக்கு முன்னர், வடமேற்கு நைஜீரியாவின் கெப்பி மாநிலத்தில் 25 பாடசாலை மாணவிகள் கடத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் தப்பி வந்துள்ளார். மேலும், இந்த வாரம் மேற்கு நைஜீரியாவில் உள்ள ஒரு தேவாலயத்தில் நடைபெற்ற திடீர் தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு, பலர் கடத்தப்பட்டுமுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/231091
  18. தேஜஸ் விமான விபத்து பற்றி துபை ஊடகங்களும், நேரில் கண்டவர்களும் சொல்வது என்ன? பட மூலாதாரம், Giuseppe CACACE / AFP via Getty Images படக்குறிப்பு, நவம்பர் 20 அன்று துபையில் நடைபெற்ற விமான கண்காட்சிக்கு முன்பு எடுக்கப்பட்ட தேஜஸ் போர் விமானம் 3 மணி நேரங்களுக்கு முன்னர் வெள்ளிக்கிழமை (2025 நவம்பர் 20) துபையில் நடைபெற்ற விமானக் கண்காட்சியின்போது, இந்திய போர் விமானம் தேஜஸ் விபத்துக்குள்ளான செய்தியே துபை ஊடகங்களில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்த விபத்தில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில், அதை இயக்கிய விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யால் உயிரிழந்தார். துபையில் இருந்து வெளியாகும் ஆங்கில நாளிதழான கல்ஃப் நியூஸ், தேஜஸ் விபத்து தொடர்பான பல செய்திகளை அதன் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. தேஜஸ் விமானத்தில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரித்த இந்தியா, அது போலிச் செய்தி என்று கூறியதாக கல்ஃப் நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இந்திய அரசின் பி.ஐ.பி-யின் உண்மைச் சரிபார்ப்பு சமூக ஊடகக் கணக்கில் இருந்து வெளியிடப்பட்டுள்ள பதிவு ஒன்றில், "துபை விமானக் கண்காட்சியில் இருந்து எடுக்கப்பட்டதாகக் கூறி வீடியோ ஒன்று பகிரப்படுகிறது. அதில் விமானத்தில் எண்ணெய்க் கசிவு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இந்தக் கூற்றுகள் முற்றிலும் போலியானவை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விபத்துக்குப் பிறகு, துபை விமான நிலைய தலைவர் ஷேக் அகமது பின் சயீத் அல்-மக்தூம், விமானியின் குடும்பத்தினருக்கும் சக ஊழியர்களுக்கும் வருத்தத்தையும் இரங்கலையும் தெரிவித்ததாக துபை செய்தி ஊடகமான அமராத் அல்-யூம் தெரிவித்துள்ளது. நேரில் பார்த்தவர்கள் கூறுவது என்ன? கல்ஃப் நியூஸ் வெளியிட்ட மற்றொரு செய்தியில், "தேஜஸ் விமானம் விபத்துக்குள்ளான நேரத்தில் எங்கள் செய்தியாளர்களில் ஒருவர் அங்கு இருந்தார். விமானம் கீழே விழுந்தவுடன், அந்த இடம் முழுவதும் புகைமூட்டம் பரவியது. அவசரக் குழு உடனடியாக விபத்து நடந்த இடத்தை நோக்கி விரைந்தது" எனத் தெரிவித்துள்ளது. மேலும் "விமானக் கண்காட்சியைக் காண காலையில் இருந்தே கூட்டம் கூடியிருந்தது. மதியம் 1:30 மணியளவில், இந்தியாவின் சூர்ய கிரண் குழுவினர் இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உறவுகளைக் கொண்டாடும் விதமாக வானில் சாகசம் நிகழ்த்தினர். Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading அதிகம் படிக்கப்பட்டது பல நாள் பட்டினி கிடந்து, கொடிய விஷத் தவளைகளை உண்ட பாம்புகள் உயிர் பிழைத்தது எப்படி? தேஜஸ் விமான விபத்து பற்றி துபை ஊடகங்களும், நேரில் கண்டவர்களும் சொல்வது என்ன? ரஷ்ய எண்ணெய் இறக்குமதியில் வீழ்ச்சி - புதினின் இந்திய வருகைக்கு முன்பு என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? சமையல் அலுமினிய பாத்திரங்களை எப்போது மாற்ற வேண்டும்? End of அதிகம் படிக்கப்பட்டது குறிப்பாக இதய வடிவிலான சாகசத்திற்குப் பிறகு மக்கள் சத்தமாகக் கைதட்டினர். நூற்றுக்கணக்கான மக்கள் அதைப் பார்த்து ரசித்துக்கொண்டே தங்கள் மொபைல் போன்களில் சாகசங்களை வீடியோ எடுத்துக் கொண்டிருந்தனர்." பட மூலாதாரம், @Suryakiran_IAF படக்குறிப்பு, துபையில் விழுந்து நொறுங்கிய தேஜஸ் விமானத்தின் விமானி விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யால் "சில நிமிடங்களுக்குப் பிறகு, எஃப்-35 விமானத்தின் ஓசை கூட்டத்தின் கவனத்தை ஈர்த்தது. மதியம் 2:10 மணியளவில், மற்றொரு ஜெட் விமானம் தோன்றியது. அது இந்தியாவின் தேஜஸ் என்று செய்தியாளர்கள் உடனடியாக அடையாளம் கண்டுகொண்டனர்" என்று கல்ஃப் நியூஸ் எழுதியிருக்கிறது. சம்பவ இடத்தில் இருந்த கல்ஃப் நியூஸ் செய்தியாளர், "விமானம் தோன்றிய சுமார் மூன்று நிமிடங்கள் கழித்து வேகமாக உயர்ந்தது. ஆனால் மேலே ஏறும்போது நடுவில் அது திடீரெனத் தனது சக்தியை இழந்து கீழே வந்து மோதியது. ஒரு கணம் நான் அப்படியே உறைந்துபோனேன். என்னைச் சுற்றி குழப்பமும் பீதியும் நிலவிய போதும், என் மொபைல் போன் அங்கு நடந்து கொண்டிருந்தவற்றைப் பதிவு செய்து கொண்டிருந்தது" என்று தெரிவித்துள்ளார். அருகில் நின்றிருந்த பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ஒருவர், "அடக் கடவுளே... விமானி நலமாக இருப்பார் என நம்புகிறேன்" என்று கூறியதாக கல்ஃப் நியூஸ் செய்தியாளர் கூறினார். கல்ஃப் நியூஸ் செய்தியின்படி, "கூட்டத்தில் பீதி எப்படி இருந்தது என்பதை மற்றவர்கள் விவரித்தனர். வெளிநாடுவாழ் இந்தியர் ஷாஜுதீன் ஜப்பார் தனது மனைவி மற்றும் மகளுடன் விமான சாகச நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார். இந்தத் துயர சம்பவம் சில நொடிகளில் நடந்துவிட்டதாக அவர் கூறினார்." "விமானங்களின் சாகசக் காட்சியை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தபோது, திடீரென்று விபத்து ஏற்பட்டது. மக்கள் அலறத் தொடங்கினார்கள். பின்னர் ஆம்புலன்ஸ் வந்தது. சிறந்த நிகழ்ச்சியாக நடந்து கொண்டிந்தபோது திடீரென இந்தத் துயர விபத்து நடைபெற்றது. விமானியைக் காப்பாற்ற முடியாதது துரதிர்ஷ்டவசமானது. நம் கண் முன்னே ஒருவர் இறப்பதைப் பார்ப்பது மனவேதனை அளிக்கிறது" என்று விபத்தை நேரில் கண்ட ஷாஹத் அல்-நக்பி கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஒற்றை எஞ்சின் கொண்ட தேஜஸ் போர் விமானம் ஹிந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிடட் நிறுவனத்தால் முழுக்கவும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. எட்டு ஆண்டுகளாக துபையில் வசித்து வரும் ஹாபிஸ் ஃபைசல் மதனி, "இதுவொரு துயரமான, எதிர்பாராத சம்பவம். நான் பார்த்த முதல் விமானக் கண்காட்சி இதுதான். என் சகோதரர் முகமது உஸ்மானுடன் வான்வழிக் கண்காட்சிப் பகுதிக்குள் அப்போதுதான் நுழைந்தோம். திடீரென்று ஜெட் விமானம் ஒன்று கீழே விழுவதைக் கண்டோம். அது நமது தேஜஸ் என்பதை அறிந்ததும் வருத்தமாக இருந்தது. விமானியைக் காப்பாற்ற முடியவில்லை என்று தெரிய வந்தது" என்று கல்ஃப் நியூஸிடம் கூறினார். 'பிரிட்டனை சேர்ந்த வில் கில்மோர் என்பவர் விபத்து நடந்தபோது விமானக் கண்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தார்' என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அரசு நாளிதழ் தி நேஷனல் நியூஸ் தனது இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது. "யாரும் வெளியேறுவதையோ அல்லது அதுபோன்ற எதையும் நான் பார்க்கவில்லை. எல்லாம் மிக வேகமாக நடந்தது. கண் இமைக்கும் நேரத்தில் அனைத்தும் நடந்துவிட்டதாக நினைக்கிறேன்" என்று வில் கில்மோர் கூறினார் "நான் ஒரு கூடாரத்தின் பின்னால் இருந்தேன், அதனால் விமானம் தரையில் மோதியது சரியாகத் தெரியவில்லை" என்று கில்மோர் கூறினார். "புகைமூட்டத்தைத்தான் நாங்கள் பார்த்தோம். விபத்து நடைபெற்றவுடன் அதிகாரிகள் துரிதமாக நடவடிக்கை எடுத்தனர். உடனடியாக சைரன்கள் ஒலிக்கத் தொடங்கின. சூழல் முற்றிலும் மாறியது. மிகவும் உற்சாகமாக இருந்த சூழல், ஒரே நொடியில் சோகமயமாகிவிட்டது." பட மூலாதாரம், @SukhuSukhvinder படக்குறிப்பு, விங் கமாண்டர் நமான்ஷ் ஸ்யால் நிபுணர்களின் கருத்து என்ன? கலீஜ் டைம்ஸ், லண்டனை தளமாகக் கொண்ட ஸ்ட்ராடஜிக் ஏரோ ரிசர்ச் நிறுவனத்தின் தலைமை ஆய்வாளர் சஜ் அகமதுவிடம் இந்த விபத்து குறித்துப் பேசியது. "தரையில் இருந்து மிகக் குறைந்த உயரத்தில் இந்த சாகசம் நிகழ்த்தப்பட்டதாகத் தெரிகிறது. விமானி தனது சுழற்சியை (லூப்) முடித்த நேரத்தில் விமானத்துக்கும் தரைக்கும் இடையில் போதுமான இடைவெளி இல்லை. இதனால் விமானம் விபத்துக்குள்ளாகி விமானி உயிரிழந்தார்" என்று அவர் கூறினார். இருப்பினும், "விசாரணை ஆரம்பக் கட்டத்திலேயே உள்ளது. முக்கிய விஷயம் என்னவென்றால், இந்தச் சம்பவம் பல கேமராக்களில் பதிவாகியுள்ளது" என்று அவர் கூறுகிறார். "சூலூர் விமானப்படை தளத்தின் நம்பர் 45 ஸ்குவாட்ரன் 'ப்ளையிங் டாகர்ஸ்-இன் மிகவும் திறமையான விமானி நமான்ஷ் ஸ்யால். ஏரோ இந்தியா மற்றும் பல தேசிய விமானக் கண்காட்சிகளில் தனது அற்புதமான பறக்கும் திறன்களால் பார்வையாளர்களின் இதயங்களை வென்றவர் எனக் கூறப்படுகிறது" என்று கலீஜ் டைம்ஸ் எழுதிய மற்றொரு செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. "வெளிநாட்டு இயந்திரம் பொருத்தப்பட்ட இந்தியாவின் உள்நாட்டு இலகுரக போர் விமானமான (LCA) HAL தேஜஸை நமான்ஷ் ஸ்யால் ஓட்டிச் சென்றார். இந்த விபத்து தேஜஸ் சம்பந்தப்பட்ட இரண்டாவது விபத்து" என்று அந்தச் செய்தி கூறுகிறது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் தேஜஸ் விமானம் ஒன்று விபத்துக்கு உள்ளானது. அந்த விபத்து நடப்பதற்கு முன்னர் விமானத்தில் இருந்த விமானி பாதுகாப்பாக வெளியேறிவிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cgexdpe802do
  19. கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள் Published By: Vishnu 22 Nov, 2025 | 05:09 AM மாவீரர் வாரம் வெள்ளிக்கிழமை (21) ஆரம்பமாகியுள்ள நிலையில் கோப்பாய் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன. கோப்பாய் துயிலும் இல்லம் அமைந்திருந்த இடத்தில் பாரிய இராணுவ முகாம் அமைந்துள்ளமையால், துயிலும் இல்ல வாயிலுக்கு முன்பாக சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது. ஈகைச்சுடரினை, இரண்டு மாவீரர்களின் தாயார் ஏற்றி வைத்ததை தொடர்ந்து மாவீரர்களின் கல்லறைகளின் கற்களுக்கு மலர் மாலை அணிவித்து மலரஞ்சலி செலுத்தப்பட்டது. அதனை தொடர்ந்து மாவீரர்களின் பெயர்கள் அடங்கிய பெயர் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டது. https://www.virakesari.lk/article/231065
  20. பட மூலாதாரம், Courtesy of Tel Aviv University படக்குறிப்பு, இஸ்ரேலின் கார்மல் மலையில் குழந்தை 'ஸ்குல் I' (Skhūl I) கண்டுபிடிக்கப்பட்ட குகை கட்டுரை தகவல் இசபெல் காரோ பிபிசி முண்டோ 22 நவம்பர் 2025, 01:46 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் நமது இனத்தின் பரிணாம வளர்ச்சியையும், நவீன மனிதர்களின் சடங்கு சம்பிரதாயங்களையும் புரிந்துகொள்வதற்கு உதவும் புரட்சிகரமான கண்டுபிடிப்பு இது. 140,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த குழந்தையின் மண்டை ஓடு, வடமேற்கு இஸ்ரேலில் உள்ள கார்மல் மலையின் குகைகள் ஒன்றில் கண்டறியப்பட்டது. மிகப் பழமையான கல்லறையாக அறியப்படும் இந்தக் குகையில் இருந்து கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முன்பு தோண்டியெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் ஓர் பகுதியாக இந்த மண்டையோடும் இருந்தது. இந்த மண்டையோடு தொடர்பான ஆய்வு, L'Anthropologie என்ற அறிவியல் இதழில் ஜூலை மாதத்தில் வெளியிடப்பட்டது. கிட்டத்தட்ட 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த புதைபடிவங்கள் கண்டுபிடிக்கப்பட்டதிலிருந்து அவை அறிவியல் ரீதியாக ஆராயப்பட்டு வந்த நிலையில், அவை பெரும்பாலும் உடற்கூறியல் ரீதியாக நவீன மனிதர்களாகக் கருதப்பட்டன. 3 முதல் 5 வயதுக்குட்பட்ட இந்தக் குழந்தை, லெவண்டினின் அந்தப் பகுதியில் வேண்டுமென்றே புதைக்கப்பட்டிருக்கலாம். இந்தப் பகுதி, மத்திய ப்ளீஸ்டோசீனின் காலத்தின் போது ஆப்பிரிக்கா மற்றும் யூரேசியாவிலிருந்து வந்த பூர்வீக வம்சாவளிகளுக்கும் பிற குழுக்களுக்கும் இடையில் மரபணு ஓட்டங்கள் கலந்த உயிர் புவியியல் பகுதியாகும். 1931-ஆம் ஆண்டு பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் டோரதி கரோட் மற்றும் அமெரிக்க இயற்பியல் மானுடவியலாளர் தியோடர் மெக்கவுன் ஆகியோர் இந்தப் பகுதியை ஆராய்ந்தபோது கண்டுபிடித்த முதல் புதைபடிவத்தில் உள்ள இந்த குழந்தையின் மண்டையோடு ஸ்குல் I (Skhūl I) என்று அழைக்கப்படுகிறது. இந்த புதிய ஆராய்ச்சியின் படி, அதன் உருவவியல், ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ் மற்றும் ஹோமோ சேபியன்களுக்கு இடையிலான கலப்பினத்திற்கான பழமையான சான்றாக இருக்கலாம். இரண்டு இனங்களும் கலந்திருந்தன என்பதும், நவீன மனிதர்களுக்கு நியாண்டர்தால் மரபணுக்கள் 1% முதல் 5% வரை இருப்பதும் தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது, ஆனால் ஸ்குல் I என்ற குழந்தையின் வயதுதான் வித்தியாசமாக உள்ளது. "நாங்கள் இப்போது சொல்வது உண்மையில் புரட்சிகரமான ஒன்று" என்று இந்த ஆராய்ச்சிக்கு தலைமை தாங்கிய இஸ்ரேலிய பழங்கால மானுடவியலாளரும் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் உடற்கூறியல் மற்றும் மானுடவியல் துறையின் பேராசிரியருமான இஸ்ரேல் ஹெர்ஷ்கோவிட்ஸ் பிபிசியிடம் விளக்குகிறார். "முன்னர் கருதப்பட்டது போல், நியாண்டர்தால்களுக்கும் ஹோமோ சேபியன்களுக்கும் இடையிலான முதல் சந்திப்பு சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழவில்லை என்பதை நாங்கள் காட்டுகிறோம், அது குறைந்தது 100,000 ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 140,000 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது என்பது முக்கியமானது," என்று அவர் கூறுகிறார். ஆனால் எல்லா விஞ்ஞானிகளும் இந்தக் கருத்தை ஏற்றுக்கொள்ளவில்லை. பட மூலாதாரம், Dan David Center for Human Evolution, Tel Aviv University படக்குறிப்பு, ஸ்குல் I மண்டை ஓட்டின் படங்கள். இளம் வயதிலேயே இயற்கையான காரணங்களால் ஸ்குல் I குழந்தை இறந்தது. அந்தக் குழந்தையின் வாழ்க்கை தொடர்பான தகவல்கள் அதிகம் அறியப்படவில்லை. இளம் வயதிலேயே அந்தக் குழந்தையின் இறப்புக்கு காரணமான நோய் என்ன என்பதை மட்டுமல்ல, அந்தக் குழந்தையின் பாலினத்தைக் கூட உறுதியாக கூற முடியாது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லெவண்ட் பகுதியில் தொல்பொருள் ஆராய்ச்சிக்கான மிக முக்கியமான கண்டுபிடிப்புகளில் ஒன்றாகவும், கூட்டு கல்லறையாகவும் கருதப்படும் அந்த இடத்தில், பிற குழந்தைகள் மற்றும் பெரியவர்களுடன் சேர்ந்து ஸ்குல் I குழந்தையும் அடக்கம் செய்யப்பட்டிக்கலாம் என்று அறியப்படுகிறது. ஸ்குல் I மண்டை ஓடு மற்றும் தாடையின் உருவவியல் (அகழாய்வின் போது எலும்புக்கூட்டிலிருந்து தற்செயலாகப் பிரிக்கப்பட்டு பிளாஸ்டருடன் ஒருங்கிணைக்கப்பட்டது) அதன் தொடர்பு மற்றும் வகைப்பாட்டை தெளிவுபடுத்துவதற்காக டோமோகிராஃபி படங்கள் மற்றும் 3D மெய்நிகர் புனரமைப்புகளைப் பயன்படுத்தி மறு மதிப்பீடு செய்தனர். பிற ஹோமோ சேபியன்கள் மற்றும் நியாண்டர்தால் குழந்தைகளின் எச்சங்களுடன் அவற்றை ஒப்பிட்டுப் பார்த்த ஹெர்ஷ்கோவிட்ஸ் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு, "அவற்றின் உருவவியல் பண்புகளின் மொசைக் தன்மை" மற்றும் இரு குழுக்களுக்கிடையில் ஓர் "இருவகை உருவவியல்" இருப்பதைக் கவனித்தது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், குழந்தையின் மண்டை ஓட்டின் அமைப்பு பொதுவாக ஹோமோ சேபியன்களின் சிறப்பியல்புகளைக் கொண்டிருந்தாலும், தாடையின் குணங்கள் நியாண்டர்தால்களின் பரிணாமக் குழுவுடன் "வலுவான உறவை" சுட்டிக்காட்டின. பட மூலாதாரம், Dan David Center for Human Evolution, Tel Aviv University படக்குறிப்பு, ஸ்குல் I இன் தாடையின் படம் "ஸ்குல் I-இல் காணப்பட்ட பண்புகளின் கலவையைப் பொறுத்தவரை, அந்தக் குழந்தை நியாண்டர்தால்களுக்கும் ஹோமோ சேபியன்களுக்கும் இடையிலான கலப்பினமாக இருக்கலாம் என்று கூற முடியும்" என்று ஆய்வு விவரங்கள் தெரிவிக்கின்றன. இதுவரை அந்தக் குழந்தை நவீன மனிதனாக வகைப்படுத்தப்பட்டிருந்தது. இருப்பினும், அதை நியாண்டர்தால் அல்லது ஹோமோ சேபியன் என வகைப்படுத்துவது "கிட்டத்தட்ட சாத்தியமற்றது" என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "கலப்பினம்" என்ற சொல், அந்தக் குழந்தை ஒரு நியாண்டர்தால் மற்றும் ஹோமோ சேபியன் பெற்றோருக்குப் பிறந்தது என்பதைக் குறிக்கவில்லை என்றும், மாறாக இரு குழுவுக்கும் இடையிலான படிப்படியான கலவையின் விளைவாகும் என்று ஹெர்ஷ்கோவிட்ஸ் தெளிவுபடுத்துகிறார். "நாங்கள் அதை 'மரபணு ஊடுருவிய மக்கள் குழு' என்று அழைக்கிறோம், அதாவது ஓர் மக்கள் குழுவின் மரபணுக்கள் மெதுவாகவும் படிப்படியாகவும் மற்றொன்றுக்குள் ஊடுருவின. எனவே, உண்மையில், ஸ்குல் I-இல் நாம் காண்பது கிட்டத்தட்ட ஹோமோ சேபியன்களைக் கொண்ட ஓர் இனமாகும், ஆனால் இது நியாண்டர்தால் மரபணுக்களின் அதிக விகிதத்தைக் கொண்டுள்ளது," என்று அவர் விளக்குகிறார். அந்த வகையில், அந்தக் குழந்தையை "பேலியோடீம்" என்று வகைப்படுத்த வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர், அதாவது, இனக்கலப்பு காரணமாக ஏற்படும் உயிரியல் பன்முகத்தன்மை கொண்ட மக்கள் குழு, இது ஓர் இனத்திற்குள் குறிப்பிட்ட குழுவாக அங்கீகரிக்கப்படத் தகுதியானது ஆகும். பட மூலாதாரம், Fudan University படக்குறிப்பு, சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட மில்லியன் ஆண்டுகள் பழமையான மனித மண்டை ஓடு, மனித பரிணாம வளர்ச்சி குறித்த நமது புரிதலை "முற்றிலும் மாற்றிவிட்டது" என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர் லபெடோ குழந்தை மற்றும் இரண்டாம் யுன்சியான் II-வின் பின்னணி 1990களின் பிற்பகுதி வரை, நியாண்டர்தால்களும் நவீன மனிதர்களும் இரண்டு வெவ்வேறு இனங்கள் என்பதால் அவர்கள் கலப்பினமாக இருக்க முடியாது என்ற அறிவியல் கருத்தொற்றுமை இருந்தது. 1998-ஆம் ஆண்டு போர்ச்சுகலில் லபெடோ குழந்தை போன்று கிட்டத்தட்ட அப்படியே இருந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. அது, சேபியன்கள் மற்றும் நியாண்டர்தால்களுக்கு இடையிலான கலவையான பண்புகளையும் கொண்டிருந்தது, பரிணாம வளர்ச்சியைப் பற்றிய நமது புரிதலில் இது தீவிர மாற்றத்தை இது ஏற்படுத்தியது. சுமார் 29,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த கிட்டத்தட்ட 4 வயது குழந்தை இரு குழுக்களுக்கும் இடையில் கலப்பினத்திற்கான தெளிவான ஆதாரங்களைக் காட்டியது. இந்தக் கோட்பாட்டை உறுதிப்படுத்திய பெருமாற்றம் 2010-களில் வந்தது, அப்போது முதல் நியாண்டர்தால் மரபணு வரிசைப்படுத்தப்பட்டது. வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்த நவீன மனிதர்களுடன் ஒப்பிடும்போது, ஆப்பிரிக்கர் அல்லாத மக்களின் டி.என்.ஏவில் 1% முதல் 5% வரை நியாண்டர்தால்களிடமிருந்து தோன்றியது என கண்டறியப்பட்டது. மனித பரிணாம வரலாற்றின் சமீபத்திய கிராசிங்கைப் பற்றி லபெடோ குழந்தை நமக்குச் சொன்னது போல், ஸ்குல் I மிகவும் முந்தைய காலத்தைப் பற்றி வெளிச்சம் போட்டுக் காட்டுவதாக இருக்கிறது. சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட பத்து லட்சம் ஆண்டுகள் பழமையான மனித மண்டை ஓடு யுன்சியான் II பற்றிய ஆய்வை, journal Science இதழ் இந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிட்டது. அதன்படி, ஹோமோ சேபியன்கள் நாம் நினைத்ததை விட குறைந்தது ஐந்து லட்சம் ஆண்டுகளுக்கு முன்பே தோன்றத் தொடங்கியது என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். இருப்பினும், இந்தக் கண்டுபிடிப்பு தங்கள் ஆய்வின் முடிவுகளுடன் தொடர்புடையது அல்ல என்று ஸ்கல் I தொடர்பாக ஆய்வு செய்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். "சீன யுன்சியான் II மண்டை ஓடு மிகவும் பழமையானதாகக் கூறப்படுகிறது. அதற்கும் எங்கள் ஆய்வுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை" என்று ஹெர்ஷ்கோவிட்ஸ் கூறுகிறார். "மத்திய மற்றும் பிற்பகுதியில் ப்ளீஸ்டோசீன் காலத்தில் பூமியில் அதிக அளவிலான ஹோமோ இனங்கள் நடமாடியதில் ஆச்சரியமில்லை" என்றும் அவர் கூறுகிறார். ஸ்பெயினில் உள்ள தேசிய இயற்கை அறிவியல் அருங்காட்சியகத்தின் (CSIC) பழங்கால உயிரியல் துறையின் ஆராய்ச்சிப் பேராசிரியரான அன்டோனியோ ரோசாஸ், ஸ்குல் I பற்றிய சில கண்டுபிடிப்புகள் பற்றி கேள்வி எழுப்புகிறார். ஹோமோ சேபியன்களின் மண்டை ஓட்டின் அடிப்பகுதி மற்றும் நியாண்டர்தால் உடற்கூறியல் தொடர்பான தாடை ஆகியவற்றின் கலவை "உயிரியல் ரீதியாகப் பொருந்தாதது" என்கிறார். "உடற்கூறியல் மரபணு நிர்ணயம் சிக்கலானது மற்றும் பொதுவாக தனிமைப்படுத்தப்பட்ட எலும்பு கூறுகளில், அதாவது மண்டை ஓடு மற்றும் தாடையில் இவ்வளவு நெருக்கமாக இருப்பதில்லை" என்று அவர் கூறுகிறார். போர்ச்சுகலில் சேபியன்ஸ்-நியாண்டர்தால் கலப்பினத்தின் மற்றொரு உதாரணமாக இருப்பது லாகர் வெல்ஹோ. இது, மிக சமீபத்திய காலத்தின் ஹோமோ சேபியன்ஸின் தாடை எலும்பை சந்தேகத்திற்கு இடமின்றி காட்டுகிறது, இது ஸ்குல் I-இல் இருந்து முற்றிலும் மாறுபட்டுள்ளது. அன்டோனியோ ரோசாஸின் கூற்றுப்படி, சடலத்தின் அடக்கத்தின் வகைப்பாடு முக்கியமானது. அடக்கம் செய்யப்பட்ட சடலம் அதற்குப் பிறகு மாற்றங்களுக்கு உட்பட்டதாக அறியப்படுகிறது. "ஸ்குல் I கீழ் தாடை நியாண்டர்தால் நபருக்கு சொந்தமானது, அவர் ஹோமோ சேபியன்களுடன் சேர்த்து அடக்கம் செய்யப்பட்டது ஏன் என்பதற்கான சாத்தியக்கூறுகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்," என்று அவர் வலியுறுத்துகிறார். அறிவியல் உலகில் பரவலாக அங்கீகரிக்கப்பட்டுள்ளபடி, பரிணாம ஆய்வின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று பண்டைய புதைபடிவங்களிலிருந்து டிஎன்ஏவை மீட்டெடுக்கும் திறன் ஆகும். "சந்தேகத்திற்கு இடமின்றி, இங்கே வழிமுறை சிக்கல் உள்ளது. மனித இனங்களுக்கிடையேயான கலப்பினமாக்கல், பழங்கால மரபணு தரவுகள் மூலம் மறுக்க முடியாத வகையில் நிரூபிக்கப்பட்டுள்ளது. தற்போது, உருவவியல் தரவுகளை மட்டுமே பயன்படுத்தி இந்த நிகழ்வுகளை உறுதிப்படுத்துவது கடினம். நியாண்டர்தால் மற்றும் ஹோமோ சேபியன்களின் மரபணு தகவல்களின் கலவையானது உடற்கூறியல் துறையில் எவ்வாறு வெளிப்படுத்தப்படுகிறது என்பது எங்களுக்கு பெரும்பாலும் தெரியாது" என்று ரோசாஸ் கூறுகிறார். இந்த ஆய்வு மண்டை ஓடு பற்றிய நமது புரிதலை மேம்படுத்துகிறது. ஆனால், அதன் டிஎன்ஏவைப் பிரித்தெடுக்காமல் அந்தக் குழந்தையை ஒரு கலப்பினமாக உறுதியாக அடையாளம் காண முடியாது என பிற விஞ்ஞானிகளும் கருதுகின்றனர். பட மூலாதாரம், Mike Kemp/In Pictures via Getty Images படக்குறிப்பு, நியாண்டர்தால்களும் நவீன மனிதர்களும் கலப்பினமாக வாழ்ந்தனர் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது ஒருங்கிணைப்பு மற்றும் கலாசார நடைமுறைகள் ஸ்குல் I ஆய்வு, மனித பரிணாம வளர்ச்சியில் ஆரம்பகால கலப்பினமாக்கல் குறித்த அறிவை வழங்குவதுடன், இரு குழுக்களுக்கிடையிலான ஒருங்கிணைவு மற்றும் வரலாற்று ரீதியாக நவீன மனிதர்களுடன் தொடர்புடைய கலாசார நடைமுறைகள் பற்றிய புதிய நுண்ணறிவுகள் என இரு முக்கியமான தகவல்களையும் வழங்குகிறது. "மிகவும் வியத்தகு மற்றும் முக்கியமான விஷயம் என்னவென்றால், இரண்டு குழுக்களும் மிக நீண்ட காலத்திற்கு அருகருகே வாழ முடிந்தது என்பது நமக்கு இப்போது தெரிய வந்துள்ளது" என்பதை ஹெர்ஷ்கோவிட்ஸ் சுட்டிக்காட்டுகிறார். அவரைப் பொறுத்தவரை, இது ஹோமோ சேபியன்ஸ் என்பது "வலிமையானவர்களின் சட்டத்தின்" மூலம் மற்றவர்களை விட மேலோங்கிய ஓர் இனம் என்ற விஷயத்திற்கு மாறுபட்டுள்ளது. "இதுதான் உண்மையான ஆச்சரியம், ஏனென்றால் பூமியில் உள்ள பிற அனைத்து ஹோமோ குழுக்களையும் ஒழிப்பதற்கு ஹோமோ சேபியன்கள் மட்டுமே காரணம் என்று மானுடவியலாளர்கள் நீண்ட காலமாக நினைத்தார்கள்," என்று அவர் கூறுகிறார். "நாம் ஆக்கிரமிப்பு இனமாக இருந்ததால் அவற்றை வெளியேற்றினோம், இடம்பெயர்த்தோம் அல்லது அழிவுக்கு அழுத்தம் கொடுத்தோம் என்று சொல்லிவிட முடியாது. மாறாக, அடிப்படையில், சிறிய எண்ணிக்கையிலான ஹோமோ சேபியன்களை பெரிய குழுக்களாக இணைத்தோம், அவை சிறிது சிறிதாக மறைந்துவிட்டன" என்று அவர் மேலும் கூறுகிறார். ஸ்குல் குகை என்ற கூட்டு கல்லறையில் ஸ்குல் I குழந்தையும் அடக்கம் செய்யப்பட்டதாகவும், அங்கு இறந்தவர்களின் சடலங்களுடன் காணிக்கைகளும் (பொருட்களும்) வைக்கப்பட்டிருந்ததாகவும் ஆய்வு குறிப்பிடுகிறது, இது குழு சார்ந்த உணர்வு மற்றும் குழந்தைகளுக்கான மரியாதை மற்றும் ஆரம்பகால பிராந்திய நடத்தை ஆகியவற்றைக் குறிக்கிறது. "அனைவராலும் நம்பப்படும் முன்னுதாரணத்திற்கு மாறாக, அடக்கம் சம்பந்தப்பட்ட பழமையான சவக்கிடங்கு நடைமுறைகள் போன்றவை, ஹோமோ சேபியன்கள் அல்லது ஹோமோ நியாண்டர்தாலென்சிஸ் என்பதாக மட்டுமே இருக்க முடியாது" என்று ஆய்வு குறிப்பிடுகிறது. "பல ஆண்டுகளாக, கல்லறை என்பது மனித கலாசாரத்தின் மிக சமீபத்திய கண்டுபிடிப்பு என்பதை நாம் புரிந்துகொண்டோம். கல்லறை என்பது சமூக அடுக்குமுறை என்றும், மரணத்திற்குப் பிறகான வாழ்க்கையில் நம்பிக்கை, மனித கலாசாரம், அதன் இயல்பு, அதன் நம்பிக்கைகள், உளவியல் பற்றிய பல விஷயங்களைக் குறிக்கிறது," என்று ஹெர்ஷ்கோவிட்ஸ் மேலும் கூறுகிறார். "140,000 ஆண்டுகளுக்கு முன்பே அவற்றை நாம் கொண்டிருந்தோம் என்பதை இங்கே நாம் ஒப்புக்கொள்ள வேண்டும்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr7lre1xp3yo
  21. இன்றைய வானிலை Nov 22, 2025 - 06:20 AM அடுத்த சில நாட்களில் நாட்டில் மழையுடனான வானிலை நிலைமை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் 100 மி.மீ அளவான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. சப்ரகமுவ, மத்திய, ஊவா, மேல் மற்றும் தென் மாகாணங்களில் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக அதிகரித்து வீசக் கூடிய பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். https://adaderanatamil.lk/news/cmi9kouct01v0o29nqzga7aba
  22. Published By: Vishnu 22 Nov, 2025 | 05:18 AM (எம்.மனோசித்ரா) 'பொய்களை நிறுத்தி தயவுசெய்து இனியாவது வேலைகளை ஆரம்பியுங்கள்' என்று இன்று மக்கள் கூறியுள்ள செய்தியை நன்றாக புரிந்து கொள்ளுங்கள். அவ்வாறில்லை என்றால் எமக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே அரசாங்கத்தை வீழ்த்துவோம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். நுகேகொடையில் வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற அரச எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய நாமல், அரசாங்கம் சிறைச்சாலைகளை காண்பித்தாலும் அதற்கு அஞ்சாமல் தமது பொறுப்பை நிறைவேற்றுவதற்காக கூடியுள்ள சகல எதிர் காட்சிகளுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எந்த ஒரு தனிப்பட்ட தேவைக்காகவும் நாம் இங்கு கூட வில்லை. எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் மக்கள் நலனுக்காக அவர்களுக்கான போராட்டத்திற்கான தலைமைத்துவத்தை வழங்குவதற்கு எமது அரசியல் குழு தயாராக உள்ளது. எல்லையற்று வழங்கிய வாக்குறுதிகளையும் கூறிய பொய்களையும் மக்களுக்கு உணர்த்துவது பொறுப்புள்ள எதிர்க்கட்சியாகிய எமது கடமையாகும். எனவே இனியாவது பொய் கூறுவதை நிறுத்திவிட்டு வேலைத்திட்டங்களை ஆரம்பிக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். தமது அரசியல் தேவைகளுக்காக அரச உத்தியோகத்தர்கள் அரசாங்கத்தால் பழிவாங்கப்படுகின்றனர். அரசியல் செய்வதற்கு ஜனாதிபதி இருக்கின்றார், எனவே அரசியலில் இருந்து விலகும் மாறு பொலிஸ்மா அதிபருக்கு நினைவுபடுத்துகின்றோம். அரசாங்கத்துக்கும் எமக்கும் உள்ள அரசியல் பிரச்சனைகளை நாம் அரசாங்கத்துடன் மோதி தீர்த்துக் கொள்கின்றோம். அதில் பொலிசார் தலையிடத் தேவையில்லை. போதைப் பொருட்களை கைப்பற்ற வேண்டாம் என நாம் கூறவில்லை. ஆனால் துறைமுகத்திலிருந்து அனுமதியின்றி அனுப்பப்பட்ட 323 கொள்கலன்களிலுள்ள போதைப்பொருட்களும் உள்ளடங்களாக அனைத்தையும் கைப்பற்றுமாறு வலியுறுத்துகின்றோம். போதைப் பொருள் தொடர்பில் எதிர்க்கட்சிகள் மீது குற்றம் சுமத்தும் அதே வேலை தமது கட்சியினர் போதைப் பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டால் அதனை மூடி மறைக்கின்றனர். அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை கொண்டு எதிர்க்கட்சிகளை முடக்குவதற்கு அரசாங்கம் திட்டமிடுகின்றது. அரசாங்கத்தின் அந்த திட்டங்கள் ஒருபோதும் வெற்றியளிக்காது. 'பொய்களை நிறுத்தி தயவுசெய்து இனியாவது வேலைகளை ஆரம்பியுங்கள்' என்று எங்கள் மக்கள் கூறிய செய்தியை நன்றாக புரிந்து கொள்ளுமாறு அரசாங்கத்தை எச்சரிக்கின்றோம். அவ்வாறில்லை என்றால் எமக்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே இந்த அரசாங்கத்தை வீழ்த்துவோம் என்று இங்கு உறுதியாக கூறுகின்றேன் என்றார். https://www.virakesari.lk/article/231068
  23. நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் November 16, 2025 1 Minute அண்மைய காலங்களில் யாழ் குடாநாட்டின் பல பகுதிகளில் “மாவா” பாக்கு பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்யப்படுகின்ற நிலை அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் மாவா பாக்கு என்றால் என்ன?, அது எவ்வாறு உடலில் போதையினை ஏற்படுத்துகின்றது?, மாவா பாக்கு உடலில் ஏற்படுத்தும் தீங்கான விளைவுகள் என்ன? மற்றும் அது எவ்வாறு மனிதனை அடிமையாக்குகின்றது என்பது பற்றி இப்பதிவு விளக்குகின்றது. 1. மாவா பாக்கில் என்ன இருக்கின்றது? மாவா பாக்கின் முக்கிய உள்ளடக்கம் மூன்று பொருட்கள்தான்: பாக்கு (Areca Nut): கொட்டைப் பாக்கை சிறு துண்டுகளாக நறுக்கி அல்லது சீவி பயன்படுத்துகின்றனர். புகையிலை (Tobacco): உலர்ந்த புகையிலை இலைகள். சுண்ணாம்பு (Slaked Lime): புகையிலை மற்றும் பாக்கின் காரத்தன்மையை (alkalinity) மாற்றி, அதில் உள்ள நிக்கோடினை (Nicotine) உடல் வேகமாக உறிஞ்சிக்கொள்ள இது உதவுகிறது. சில நேரங்களில், கூடுதல் சுவைக்காக சில மசாலாப் பொருட்களும் சேர்க்கப்படலாம், ஆனால் மேற்கண்ட மூன்றுமே இதன் முக்கியப் பொருட்கள் ஆகும். 2. மாவா பாக்கில் கஞ்சா இருக்கின்றதா? இல்லை. மாவா பாக்கின் அடிப்படை மற்றும் பொதுவான தயாரிப்பு முறையில் கஞ்சா (Ganja) சேர்க்கப்படுவது இல்லை.அதன் போதைத்தன்மைக்கு முக்கிய காரணங்கள் புகையிலையில் உள்ள நிக்கோட்டின் (Nicotine) மற்றும் பாக்கில் உள்ள அரெகோலின் (Arecoline) ஆகிய இரண்டு பொருட்களும்தான்.இருப்பினும், சட்டவிரோதமாகத் தயாரிக்கப்படும் சில இடங்களில், கூடுதல் போதைக்காகவோ அல்லது மக்களை வேகமாக அடிமையாக்கவோ, அதில் கஞ்சா அல்லது வேறு சில ஆபத்தான ரசாயனங்கள் கலப்படம் செய்யப்படலாம். ஆனால், இது மாவா பாக்கின் அதிகாரப்பூர்வமான தயாரிப்பு முறை அல்ல. 3. மாவா பாக்கினை எவ்வாறு தயாரிப்பார்கள்? இந்தியாவில் பெரும்பாலும் கடைகளில், வாடிக்கையாளர் கேட்கும் போதே உடனடியாகத் தயார் செய்து தரப்படும் ஒரு கலவையாகும். நறுக்கப்பட்ட பாக்கு, புகையிலை மற்றும் சிறிதளவு சுண்ணாம்பு ஆகியவற்றை உள்ளங்கையில் வைத்து, சிறிதளவு தண்ணீர் தெளித்து, கட்டை விரலால் நன்கு தேய்ப்பார்கள் (நசுக்குவார்கள்). இந்த கலவை ஒரு சிறிய தாளில் மடித்துக் கொடுக்கப்படும். இதை பயன்படுத்துபவர் வாயில் வைத்து மெதுவாக மென்று, அதன் சாற்றை உமிழ்நீருடன் கலந்து கொள்வார். இலங்கையில் கிடைக்கும் ஏற்கனவே தயாரித்து விற்கப்படும் (Pre-Packaged) மாவா பாக்குகள் வீரியம் குறைந்தவை அல்ல. அவை உடனடியாகத் தயார் செய்யப்படும் மாவா பாக்கைப் போலவே, அல்லது சில சமயங்களில் அதைவிட மோசமாக, அதிக வீரியமும் அடிமையாக்கும் திறனும் கொண்டவை. தொழிற்சாலைகளில், புகையிலை, பாக்கு, சுண்ணாம்பு, மற்றும் வாசனைப் பொருட்கள் அனைத்தும் ஒன்றாகக் கலக்கப்பட்டு, பாக்கெட் (Sachet) செய்யப்படுகிறது. இதிலும் சுண்ணாம்பு ஏற்கனவே கலக்கப்பட்டுள்ளது. அதனால், இந்த பாக்கெட்டில் உள்ள கலவை எப்போதுமே தீவிர காரத்தன்மை (High pH) உடனேயே இருக்கும். இந்த பாக்கெட்டைப் பிரித்து வாயில் போடும்போது, அது உமிழ்நீருடன் கலந்தவுடனேயே, அந்த உயர் காரத்தன்மை நிக்கோட்டினை “சுதந்திர நிக்கோட்டினாக (free nicotine)” மாற்றி ரத்தத்தில் கலக்கத் தொடங்கிவிடும். இதற்கு “தேய்க்கும்” அல்லது “கசக்கும் ” வேலை கூடத் தேவையில்லை. “வீரியம்” (Potency) என்பது நிக்கோட்டின் (Nicotine) எவ்வளவு வேகமாக உங்கள் மூளையைச் சென்றடைகிறது என்பதைப் பொறுத்தது. 4. மாவா பாக்கினை வாயில் மென்றவுடன் கிறுகிறுவென போதை தலைக்கு ஏற காரணம் என்ன? இதன் பின்னால் பின்வரும் மூன்று இரசாயனவியல் மற்றும் உயிரியல் காரணங்கள் இருக்கின்றன 1. முக்கிய காரணம்: சுண்ணாம்பு (Slaked Lime)மக்களுக்கு ஏற்படும் தீவிரமான போதை உணர்விற்குக் காரணம் புகையிலையின் அளவு மட்டுமல்ல, அந்த புகையிலையிலிருந்து நிக்கோட்டினை நமது உடல் எவ்வளவு வேகமாக உறிஞ்சுகிறது (absorb) என்பதைப் பொறுத்தது.இங்கேதான் சுண்ணாம்பு ஒரு முக்கிய இரசாயனவியல் வேலையைச் செய்கிறது. a. pH அளவை மாற்றுதல்: புகையிலை இலைகள் இயற்கையாகவே சற்று அமிலத்தன்மை (Acidic) கொண்டவை. ஆனால், சுண்ணாம்பு ஒரு தீவிர காரத்தன்மை (Alkaline) கொண்டது. b. இரசாயனவியல் மாற்றம்: புகையிலையும், பாக்கும், சுண்ணாம்புடன் கலந்து உமிழ்நீருடன் சேரும்போது, அந்த கலவையின் pH அளவு (காரத்தன்மை) மிக அதிகமாகிறது. c. “Free-Basing” நிக்கோட்டின்: இந்த உயர் pH சூழலில், புகையிலையில் உள்ள நிக்கோட்டின் அதன் வேதியியல் அமைப்பை மாற்றிக் கொள்கிறது. அது “நிக்கோட்டின் உப்பு” (Nicotine Salt) வடிவத்திலிருந்து “சுதந்திர நிக்கோட்டின்” (Free-Base Nicotine) வடிவத்திற்கு மாறுகிறது. 2. “சுதந்திர நிக்கோட்டின்” (Free-Base) நிக்கோட்டினின் இந்த “Free-Base” வடிவம் தான் அதன் போதைத்தன்மைக்கு முக்கிய காரணம். a. எளிதில் உறிஞ்சுதல்: “நிக்கோட்டின் உப்பு” வடிவம் நமது வாயின் உட்புறச் சவ்வுகள் (Buccal Mucosa) வழியாக எளிதில் உறிஞ்சப்படாது. ஆனால், இந்த “சுதந்திர நிக்கோட்டின்” வடிவம் கொழுப்பில் கரையக்கூடியது (Lipid-Soluble). b. நேரடி ரத்த ஓட்டம்: நமது வாயின் உட்புறம், ரத்த நாளங்கள் (Blood Vessels) நிறைந்தது. மாவா பாக்கை மெல்லும்போது அல்லது வாயில் அடக்கி வைக்கும்போது, இந்த “சுதந்திர நிக்கோட்டின்” நேரடியாக வாயின் சவ்வுகள் வழியே ஊடுருவி, உடனடியாக ரத்த ஓட்டத்தில் கலக்கிறது. c. மூளைக்குச் செல்லும் வேகம்: இவ்வாறு ரத்தத்தில் கலக்கும் நிக்கோட்டின், செகண்டுகளில் மூளையைச் சென்றடைகிறது. இது புகை பிடிப்பதைப் (Smoking) போலவே மிக வேகமான பாதிப்பை ஏற்படுத்துகிறது.சுருக்கமாகச் சொன்னால்: சுண்ணாம்பு, புகையிலையில் உள்ள நிக்கோட்டினை “பூட்டி வைக்கப்பட்ட” நிலையிலிருந்து “திறந்துவிடுகிறது” (unlocks). இதனால் அது மிக வேகமாக ரத்தத்தில் கலந்து, மூளையைத் தாக்கி, கடுமையான போதை உணர்வை உடனடியாகத் தருகிறது. 3. கூடுதல் காரணம்: பாக்கு (Areca Nut)மாவா பாக்கில் உள்ள மற்றொரு போதைப்பொருள் பாக்கு. பாக்கில் “அரெகோலின்” (Arecoline) என்ற வேதிப்பொருள் உள்ளது. இதுவும் ஒரு இலகுவான போதையைத் தரக்கூடியது (Stimulant).நிக்கோட்டின் (புகையிலையிலிருந்து) மற்றும் அரெகோலின் (பாக்கிலிருந்து) ஆகிய இரண்டும் ஒன்று சேரும்போது, அவை இரண்டும் சேர்ந்து உருவாக்கும் ஒட்டுமொத்த போதை உணர்வு (Synergistic Effect) தனித்தனியாக எடுத்துக்கொள்வதை விட மிகவும் அதிகமாக இருக்கும். 5. மாவா பாக்கு பாவிக்கும் பொழுது குறித்த நபர் மாவா பாக்கு பாவனைக்கு அடிமை ஆகுவாரா? நிச்சயமாக அடிமை ஆகுவார். மாவா பாக்கில் “நிக்கோட்டின்” இருப்பதினால் அவர் அதற்கு அடிமையாகுவார். நிக்கோட்டின் (புகையிலை), உலகில் மிகவும் அடிமையாக்கக்கூடிய போதைப்பொருட்களில் ஒன்றாகும்.பல அறிவியல் மற்றும் மருத்துவ தரவரிசைகளின்படி, ஒருவரை அடிமையாக்கும் திறனில் (Addictive Potential) நிக்கோட்டின், ஹெராயின் (Heroin) மற்றும் கோகோயின் (Cocaine) போன்ற போதைப்பொருட்களுக்கு இணையாகவோ அல்லது சில அளவீடுகளின்படி அவற்றை விட மோசமாகவோ மதிப்பிடப்படுகிறது. இது நிச்சயமாக மதுபானம் (Alcohol) மற்றும் ஐஸ் (Methamphetamine) ஆகியவற்றுடன் ஒப்பிடத்தக்க கொடிய போதைப் பொருளாகும். 6. மாவா பாக்கு எவ்வாறு மிகவும் அடிமையாக்குகிறது? ஒரு பொருளைப் பயன்படுத்தியவுடன், எவ்வளவு வேகமாக அது மூளையைச் சென்று இன்ப உணர்வைத் (Dopamine release) தூண்டுகிறதோ, அவ்வளவு வேகமாக ஒருவர் அதற்கு அடிமையாவார்.மாவா பாக்கில், சுண்ணாம்பின் உதவியால் நிக்கோட்டின் உடனடியாக ரத்தத்தில் கலப்பதால், பயனருக்கு உடனடி போதை கிடைக்கிறது. இந்த “உடனடி திருப்தி” (Instant Gratification) தான், ஒருவரை மிக எளிதாகவும், மிக ஆழமாகவும் இந்த பழக்கத்திற்கு அடிமையாக்குகிறது.எனவே, மாவா பாக்கின் அதிக போதைத்தன்மைக்குக் காரணம் நிக்கோட்டினின் அளவு மட்டுமல்ல, சுண்ணாம்பின் மூலம் அந்த நிக்கோட்டின் ரத்தத்தில் கலக்கப்படும் வேகமே ஆகும். 7. மாவா பாக்கினை பாடசாலை மாணவர்களுக்கு விற்பனை செய்வது குற்றமா? தற்பொழுது இலங்கையில், புகையிலை பொருட்கள் (tobacco products) விற்பனை, வாங்குதல் மற்றும் விளம்பரம் செய்வதற்கான குறைந்தபட்ச வயது எல்லை 21ஆக இருக்கின்றது. எனவே புகையிலையினை கொண்டிருக்கும் மாவா பாக்கினை 21 வயதிற்குட்பட்டவர்களுக்கு விற்பனை செய்வது சட்ட விரோதமானது. 8. மாவா பாக்கிணை பாவிப்பதினால் உடலில் ஏற்படும் தீங்கான விளைவுகள் என்ன? மக்களை மிக எளிதில் அடிமையாக்கக் கூடியது. இதை பயன்படுத்துவதால் வாய் புற்றுநோய் (Oral Cancer), பல் மற்றும் ஈறு நோய்கள், மாரடைப்பு, மற்றும் பக்கவாதம் உள்ளிட்ட மிகக் கொடிய நோய்கள் வர அபாயம் உள்ளது. இலகுவாக சொல்வதானால் சிகரெட் மற்றும் புகையிலை போன்றவற்றினை பாவிப்பதினால் ஏற்படும் தீங்கான விளைவுகள் அனைத்தும் ஏற்படும். 9. குட்கா மற்றும் மாவா இரண்டும் ஒன்றா? குட்கா (Gutkha) மற்றும் மாவா (Mawa) இரண்டும் ஒரே பொருள் அல்ல, ஆனால் இரண்டும் புகையிலை சார்ந்த பொருட்கள். இரண்டிலும் புகையிலை முக்கிய கூறு. குட்கா என்பது சுண்ணாம்பு, புகையிலை, அரிசி பப்பாளி, மசாலாஞ்சிகள் போன்றவற்றின் கலவையாக இருக்கும் மெல்லக்கூடிய புகையிலை வகை. மாவா என்பது சுண்ணாம்பு, சுடுகலை (Areca nut / betel nut) மற்றும் புகையிலை கலப்பு; இதில் சில நேரங்களில் சிறிய அளவு இனிப்பும் சேர்க்கப்படும். பைக்கற்றில் உள்ள குட்கா மற்றும் மாவா நன்றி https://tamilforensic.wordpress.com/2025/11/16/
  24. பலரினை பலியெடுத்த பஸ் விபத்து – நடந்து என்ன? நிஜத்திலிருந்து..... சட்ட மருத்துவம் November 20, 2025 1 Minute மூன்று தினங்களுக்கு முன்னர் (17/11/2025) அன்று ஓர் துயர சம்பவம், சவூதி அரேபியாவின் மக்காவில் இருந்து மதீனா செல்கின்ற இந்திய யாத்திரிகர்களை ஏற்றிய பேருந்து ஒரு டீசல் எரிபொருள் டேங்கர் லாரியுடன் மோதியது. இந்த விபத்தின் காரணமாக பேருந்தில் இருந்த 45 பயணிகள் பரிதாபரமாக இறக்கின்றனர். ஒருவர் மட்டுமே உயிர் பிழைக்கின்றார். எவ்வாறு தீ பரவியது, ஏன் பயணிகள் தப்பி ஓட முடியவில்லை , ஏன் அவ்வாறு நடந்தது, “Kiln Effect” என்றால் என்ன? என்பதை அறிவியல் ரீதியாகப் இப்பதிவு விளக்குகின்றது. 1. வாகன மோதலின் பொழுது எவ்வாறு எரிபொருள் சிந்தியது (Atomization vs. Spillage)? வழமையாக விபத்து நடந்த சாலைகளில் பேருந்துகள் 100 – 120km வேகத்திலேயே செல்வது வழமை . இவ்வாறே குறித்த பேருந்தும் 100km/h இற்கு மேற்பட்ட அதிவேகத்திலேயே பிரயாணித்தது. வழமையாக டேங்கரில் முற்றாக நிரம்பிய நிலையிலேயே எரிபொருள் கொண்டுசெல்லப்படும். பகுதியளவில் கொண்டுசெல்வது டேங்கருக்கு சேதத்தினை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது இவ்வாறு இரு வாகனங்களும் மிக மிக அதி வேகத்தில் மோதும் பொழுது டேங்கரில் இருந்த டீசலில் மிக அதிக அழுத்தம் உருவாகும் இதன் காரணமாக டீசல் ஆனது டேங்கரில் ஏற்பட்ட சிறு துவாரங்கள் மற்றும் சிறு வெடிப்புக்கள் வழியாக பீச்சி அடிக்கப்படும். இச் செயற்பாட்டின் பொழுது டீசல் ஆவியாகும் அதாவது திரவ நிலையில் இருந்து வாயு நிலைக்கு மாறும் (atomization) மேலும் அந்த சூழலில் நிலவிய அதீத வெப்பம் இவ்வாறான ஆவியாதலினை மேலும் அதிகமாக துரிதப்படுத்தும் மேலும் சில மில்லி செக்கன்களில் டேங்கரில் ஏற்பட்ட சிறு துவாரம் மற்றும் சிறு வெடிப்பு என்பன பெரிதாக டேங்கரில் இருந்த டீசல் ஓர் வாளியில் இருந்த நீர் ஊற்றுவது போல் அருவியாக வெளியேறி டேங்கரினை சுற்றியுள்ள நிலத்தில் வீழ்ந்து தேங்கும். இவ்வாறு உருவாக்கிய டீசல் ஆவி இருவாகனங்களையும் கணப்பொழுதில் சூழ்ந்து கொள்ளும். 2. எவ்வாறு தீப்பொறி ஏற்பட்டது? பின்வரும் காரணங்களினால் தீப்பொறி உண்டாகியிருக்கலாம் அதி வேகத்தில் இரு வாகனங்களும் மோதியமையால் இரண்டினதும் உலோக பகுதிகள் உரசுவதினால் வாகன மின் சுற்றில் இருந்து சூடான வாகனத்தின் இயந்திர பகுதியில் இருந்து இவ்வாறான நிலையில் சூழ இருந்த டீசல் ஆவி மிக இலகுவாக தீப்பற்றும் தன்மையுடையது. உண்மையில் திரவ டீசல் ஆனது இலகுவில் தீப்பற்றாது ஆனால் இவ்வாறான டீசல் ஆவி மிக இலகுவில் தீப்பற்றும் தன்மை உடையது. மேலும் டீசல் ஆவி வளியுடன் குறித்த விகிதத்தில் கலந்து இருக்கும் பொழுது வெடித்தலுடன் தீப்பற்றும். டீசல் வாகனங்களில் இன்ஜெக்டர் இந்த வேலையினை செய்கின்றது. ஆனால் இங்கு மிக மிக பெரிய அளவில் இச்செயற்பாடு நடந்துள்ளது 3. எவ்வாறு தீ பரவியது? உண்டாகிய பொறியில் இருந்து தீ உடனடியாகவே வாகனத்தினை சூழ இருந்த டீசல் ஆவிக்கு பரவி ஒரு சில வினாடிகளில் கண்ணிமைக்கும் நேரத்தில் (Flash fire ) இரு வாகனத்தினையும் தீ சூழ்ந்திருக்கும். இதன் பிற்பாடே டேங்கரில் இருந்து கீழே சிந்திய டீசலுக்கு பரவியிருக்கும் (pool fire )சம நேரத்தில் பேருந்தின் இயந்திரம் மற்றும் ஏனைய பகுதிகளுக்கும் பரவியிருக்கும். தொழில்நுட்ப ரீதியாக, நெருப்புப் பந்து விளைவு என்பது எரியக்கூடிய வாயுக்கள் அல்லது காற்றில் கலந்த திரவ எரிபொருளின் விரைவான எரிப்பு காரணமாக ஏற்படலாம், இது ஒரு கோள வடிவ சுடர் முகப்பை உருவாக்குகிறது, இது விரைவாக வெளிப்புறமாக விரிவடைகிறது. நெருப்புப் பந்தின் தீவிரம், அளவு மற்றும் கால என்பன எரிபொருள் வகை, அளவு மற்றும் சூழல் என்பவற்றில் தங்கியிருக்கும் 4. “Kiln Effect” என்றால் என்ன? Kiln என்பதன் அர்த்தம், செங்கல், மண் பொருட்கள், செராமிக் போன்றவற்றை மிக அதிக வெப்பத்தில் எரிக்கப் பயன்படுத்தப்படும் அடுப்பு (பொதுவாக 800°C – 1,200°C அல்லது அதற்கு மேல்). இலகு தமிழில் பாண் போறணைக்கு எதிரான விளைவு ( பாண் போறணை உட்பக்கத்திலேயே வெப்பம் உண்டாக்கப்படுகின்றது). அதாவது ஒரு மூடிய கட்டமைப்பு உதாரணமாக பேருந்து, கார், அறை வெளியில் இருந்து வரும் தீவிர வெப்பத்தால் உட்புறம் முழுவதும் மிக அதிக வெப்பத்தில் சூடாக மாறும் நிகழ்வு. சுருக்கமாக (Kiln Effect)பேருந்து போன்ற மூடிய இடம் திடீரென “சூப்பர்-ஹீட்டட் ஓவன்” (superheated oven) போல மாறும் நிலை. அதாவது வெளியில் எரியும் தீயின் வெப்பம் அதை உலோக சுவர் மற்றும் மேல் தகடுகள் உறிஞ்சி உள்ளே நோக்கி கதிர்வீச்சாக (radiate) அனுப்புவதால் உள்ளே இருக்கும் மனிதர்கள் சில வினாடிகளில் மிக அதிக வெப்பத்தால் செயலிழந்து சுவாசிக்க முடியாத நிலை ஏற்படும் 5. பேருந்தில் இருந்த பிரயாணிகளுக்கு என்ன நடந்திருக்கும்? பேருந்து தீ விபத்துகளில் அதிக உயிரிழப்பு ஏற்படுவதற்கான அறிவியல் காரணம் ஆரம்ப கட்டத்தில் தீ அல்ல; பேருந்து மிக அதிக வெப்பமுள்ள அடுப்பு போல மாறுவதுதான். அதற்கான காரணிகள் கதிர்வீச்சு வெப்ப பரிமாற்றம்: பேருந்தின் இரும்பு உடல் வெளியில் எரியும் எரிபொருளில் இருந்து வெப்பத்தை உறிஞ்சி, அதை உள்ளே நோக்கி கதிர்வீச்சாக செலுத்துகிறது. கண்ணாடிகள் வெப்ப அதிர்ச்சி (thermal shock) காரணமாக திடீரென உடைந்து விழும். நச்சு வாயு சூழல்: உள்ளே உள்ள இருக்கைகள், பிளாஸ்டிக், இன்சுலேஷன் போன்றவை எரிவதால், கார்பன் மொனாக்சைடு (CO) மற்றும் ஹைட்ரஜன் சயனைடு (HCN) கொண்ட அடர்த் கரும்புகை உருவாகிறது. விளைவுவாக குறுகிய, மூடிய இடத்தில் இவ்வாயுக்கள் ஆக்சிஜனை சில வினாடிகளில் முடித்து விடுகின்றன இதனால் பேருந்தில் பயனித்தவர்களுக்கு ஆரம்பத்தில் மூச்சு திணறல் (suffocation) ஏற்படும் 6. யாத்திரிகர்கள் தப்பி ஓடமுடியாமைக்கும் மரணம் அடைந்தமைக்கும் என்ன காரணம்? இந்தச் சம்பவத்தில் துயரத்தை மேலும் அதிகரித்த காரணம், விபத்து இரவு 1:30 மணியளவில் நடந்தது; பெரும்பாலான பயணிகள் தூக்கத்தில் இருந்தனர். மனிதர்கள் தப்பி ஓடமுடியாமை (Incapacitation): Flash fire ஏற்பட்டவுடன் வெப்பம் திடீரென அதிகரிப்பதால், அதிகரித்த வெப்ப காற்று காரணமாக தொண்டை கட்டி மூச்சு விடுவது கடினம் (laryngeal spasm ) இதனால் மனிதர்கள் கத்தவோ சுவாசிக்கவோ முடியாத நிலை உண்டாகிறது. உயிரிழத்தல் காரணம் – மூச்சுத்திணறல்: தீ உடலில் தொடுவதற்கும் முன், எரியும் பிளாஸ்டிக்கில் இருந்து வரும் ஹைட்ரஜன் சயனைடு காரணமாக சில வினாடிகளில் மயக்கம் ஏற்படும். வெப்ப அதிர்ச்சி: சுற்றியுள்ள வெப்பம் 150°C–200°C கடந்தவுடன் மனித உடல் உடனடியாகத் தளர்ந்து விழும்; எனவே தப்பிக்க முயல்வதும் கூட இயலாத நிலை இறுதியாக இந்த விபத்து பேருந்து கணநேரத்தில் அணுவாக்கமடைந்த டீசல் எரிபொருளால் (டீசல் ஆவி) மூடப்பட்டு உடனே தீப்பற்றியது. “Fireball” தாக்கத்தின் காரணமாக பயணிகளுக்கு எந்தவித எதிர்வினை நேரமும் கிடைக்கவில்லை. இழந்த 45 உயிர்களும் தீ மெதுவாக பரவியதற்கல்ல; அது உடனடியாக, மிகவும் தீவிரமான வெப்ப வெடிப்பு போல உருவாகி, அனைவரும் தூக்கத்தில் இருக்கும் நேரத்தில் பேருந்தை முழுவதும் சூழ்ந்துகொண்டதால்தான் ஏற்பட்டது. நன்றி https://tinyurl.com/3y7jbdea
  25. டுபாய் விமான கண்காட்சியில் இந்திய போர் விமானம் விழுந்து நொறுங்கியது - விமானி பலி Published By: Digital Desk 3 21 Nov, 2025 | 06:01 PM டுபாய் விமான கண்காட்சியில் இந்தியாவின் தேஜஸ் போர் விமானம் விழுந்து நொறுங்கியுள்ளது. இந்த விபத்தில் விமானி உயிரிழந்ததாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. டுபாயில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் விமான கண்காட்சி கடந்த திங்கள் கிழமை (நவம்பர் 17) ஆரம்பமானது. இதில் உலகம் முழுவதிலிருந்து சுமார் 1,500 விமானங்கள் பங்கேற்றன. இந்நிலையில் விமான கண்காட்சியின் இறுதி நாளான இன்று வெள்ளிக்கிழமை இந்திய விமானப் படையின் தேஜஸ் போர் விமானம் ஒன்று விழுந்து நொறுங்கி தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. கண்காட்சியில் ஆயிரக்காணக்கான மக்கள் சாகசத்தை பார்த்துக்கொண்டு இருக்கும்போது இந்த விபத்து நடந்துள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேஜஸ் விமானம் இந்தியாவில் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவத்தால் தயாரிக்கப்படும் மிக முக்கியமானது எனக் கூறப்படுகிறது. இது மணிக்கு 2200 கிலோ மீட்டருக்கு மேல் வேகமாக செல்லக் கூடியது. மேலும் விமானம் தாங்கி கப்பலில் இருந்து புறப்படவும், அதில் தரையிறங்கும் விதமாகவும் வடிவமைக்கப்பட்டது. இது தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. https://www.virakesari.lk/article/231030

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.