Everything posted by ஏராளன்
-
வட மாகாண வைத்தியசாலைகளுக்கு அதிரடி அறிவிப்பை வெளியிட்ட ஆளுநர்
வடக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு ஆளுநர் பிறப்பித்துள்ள அவசர உத்தரவு வடக்கு மாகாணத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் முறைப்பாடுகளுக்கான தொடர்பிலக்கங்கள் அடங்கிய அறிவிப்பு பதாதை காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அவசர பணிப்புரை விடுத்துள்ளார். வடக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து வைத்தியசாலைகள், அரச மருந்தகங்கள் ஆகியவற்றில் முன்னெடுக்கப்படும் சேவைகள் தொடர்பான தகவல் அடங்கிய பதாதைகள் காட்சிப்படுத்தப்பட வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் மாகாண சுகாதார அமைச்சுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். நோயாளர்களுக்கு வழங்கப்படும் சேவைகள், நோயாளர்களும், வைத்தியர்களும் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள், சேவையை பெற்றுக் கொள்வதில் தாமதம் அல்லது சிக்கல்கள் ஏற்பட்டால் தொடர்பு கொள்ள வேண்டிய உயர் அதிகாரிகளின் தொடர்பு இலக்கங்கள் ஆகியன குறித்த பதாதையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் ஆளுநர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், ஆளுநரின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கும் “அபயம்” பிரிவின் தொலைபேசி இலக்கமும் அறிவித்தல் பதாதையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/308179
-
நாட்டுக்கோழியை விட 'கடக்நாத்' கோழியில் அதிக ஊட்டச்சத்து உள்ளதா? கருமை நிறம் எப்படி வந்தது?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.சுபகுணம் பதவி, பிபிசி தமிழ் 21 ஆகஸ்ட் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் கடக்நாத் கோழி அல்லது கருங்கோழி என அறியப்படும் ஒரு வகை நாட்டுக்கோழி வகை பற்றிக் கடந்த சில ஆண்டுகளில் நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். இந்தக் கோழியைச் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் என்பது போன்ற கருத்துகளையும் சமூக ஊடகங்களில் படித்திருப்போம் அல்லது கேட்டிருப்போம். முன்பு மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஒடிஷா மாநிலங்களில் மட்டுமே அதிகம் காணப்பட்ட இந்தக் கோழி இனம், இப்போது இந்தியா முழுக்கப் பரவலாக காணப்படுகிறது. மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள ஜபுவா என்ற பகுதியில் கிடைக்கும் கருங்கோழி இறைச்சிக்குக் கடந்த 2012ஆம் ஆண்டில் புவிசார் குறியீடு அளிக்கப்பட்டது. கருங்கோழி என்ற பெயர் வருவதற்கு முக்கியக் காரணமே அதன் கருமை நிறம்தான். கருமை என்றால் அதன் இறகுகளோ, கொண்டையோ மட்டுமல்ல. கோழியின் மொத்த உடலுமே கருப்புதான் என்கிறார் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் முனைவர் ப.குமரவேல். முட்டைகளை அடைகாக்க முடியாத கருங்கோழிகள் கருங்கோழி என்று தமிழ்நாட்டில் பரவலாக அறியப்படும் கடக்நாத் கோழியின் “இறகுகள் மட்டுமின்றி, அதன் கொண்டை, கண்கள் முதல் அதன் மற்ற உறுப்புகள் வரை அனைத்துமே கருமை நிறத்தில்தான் இருக்கும். அவ்வளவு ஏன், அதன் ரத்தம் கூட கருஞ்சிவப்பு நிறத்தில்தான் இருக்கும். மற்ற நாட்டுக்கோழிகளின் எலும்பு மஞ்சள் நிறத்திலானது என்றால், இவற்றின் எலும்புகள் கருமஞ்சள் நிறத்தில் இருக்கும்,” என்று விவரிக்கிறார் முனைவர் குமரவேல். பெருவாரியான நாட்டுக்கோழி வகைகளைப் போல் இந்தக் கோழி இனத்தில் இருக்கும் கோழிகள் அனைத்துமே அடைகாக்கும் பழக்கம் கொண்டவை கிடையாது என்கிறார் முனைவர் குமரவேல். அவரது கூற்றுப்படி, நாட்டுக் கோழிகள் அனைத்துமே முட்டையை அடைகாத்து குஞ்சு பொறிக்கும் தன்மை கொண்டவை. ஆனால், “இந்தக் கோழிகளைப் பொருத்தவரை. மற்ற நாட்டுக் கோழிகளைப் போல் முட்டையிட்ட பிறகு எல்லா சூழ்நிலைகளிலும் முட்டை மீது அமர்ந்து அடைகாப்பதில்லை. அவற்றுக்காகவே அடைகாக்கும் இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டன" என்கிறார் அவர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கருங்கோழிகள் முட்டையிட்ட பிறகு அவற்றை அடைகாப்பதில் சில சிக்கல்களைச் சந்திக்கின்றன. கடந்த 23 ஆண்டுகளாகக் கோழி வளர்ப்பில் ஈடுபட்டு வரும் தமிழ்செல்வன் இந்தக் கூற்றை ஆமோதிக்கிறார். ஓர் ஆண்டுக்கு 180 முட்டைகள் வரை கருங்கோழிகள் இட்டாலும்கூட மற்ற கோழி வகைகளுடன் ஒப்பிடுகையில் அடை காப்பது என்பது சற்றுக் குறைவுதான் என்கிறார் கிழக்குக் கடற்கரை சாலையில் அமைந்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்தின் வெண்ணாங்குப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தமிழ்செல்வன். ஆகையால், “சில நேரங்களில் அவற்றின் முட்டைகளை அடைகாக்க மற்ற நாட்டுக் கோழிகளின் உதவியை நாட வேண்டியிருக்கும். அல்லது அதற்காக இன்குபேட்டர் இயந்திரங்களைப் பயன்படுத்த வேண்டியிருக்கும்,” என்கிறார் அவர். இன்குபேட்டர் இயந்திரம், தாய்க்கோழி அடை காக்கும்போது இருக்கும் சூழலை முட்டைக்கு வழங்கி குஞ்சு பொறிக்க வைக்கும் செயல்முறையை மேற்கொள்ளும். இந்தச் செயல்முறையில் தாய்க்கோழி தொடர்ச்சியாக முட்டையை சுமார் 36% செல்சியஸ் வெப்பநிலையில் வைத்திருப்பது போலவே இயந்திரமும் முட்டையை வைத்திருந்து குஞ்சு பொறிக்க வைக்கும். கடக்நாத் கோழியில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமா? பட மூலாதாரம்,TAMIL SELVAN படக்குறிப்பு, கடக்நாத் கோழிகளிடம் அடைகாக்கும் தன்மை குறைவு என்கிறார் தமிழ் செல்வன் “இந்தக் கோழி இந்திய நாட்டுக்கோழி இனங்களில் ஒன்று. இவற்றுக்கான வளர்ப்பு முறையைப் பொறுத்தவரை, பண்ணை முறையைவிட மேய்ச்சல் முறையில் வளர்க்கும் போது அதிக நோய் எதிர்ப்புத் திறனுடன் வளர்கின்றன, நல்ல லாபம் கிடைக்கும். அதன்படி பார்த்தால், பொதுவாக 1000 கோழிகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் கண்டிப்பாக வேண்டும். அதில் அவற்றை இயற்கையான மேய்ச்சலில் விட்டு வளர்க்கும் போதுதான் ஆரோக்கியமானவையாக வளரும்,” என்கிறார் விவசாயி தமிழ்செல்வன். கருக்கோழிகளைப் பொறுத்தவரை, “முட்டையிடும் பருவத்தை அடைய 23 முதல் 28 வாரங்கள் வரை ஆகும். அவற்றை ஐந்து முதல் ஆறு மாதங்களுக்குப் பிறகு விற்பனைக்குக் கொண்டு செல்லலாம்,” என்கிறார் அவர். கடக்நாத் கோழி - பிராய்லர் இரண்டில் எதில் ஊட்டச்சத்து அதிகம்? கடக்நாத் இறைச்சியின் ஊட்டச்சத்து குறித்து தேசிய ஊட்டச்சத்து நிறுவனம் நடத்திய ஆய்வு, அவற்றில் கொழுப்பு குறைவாகவும், புரதம் மற்றும் இரும்புச் சத்து அதிகமாகவும் இருப்பதாகக் கூறுகிறது. தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் தரவுகள்படி, கடக்நாத் எனப்படும் கருங்கோழியில் 1.94% முதல் 2.6% வரை கொழுப்பு இருக்கும். ஆனால், பிராய்லர் கோழியில் 13 முதல் 25 சதவீதம் வரை கொழுப்பு இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாட்டுக்கோழிகள் இயற்கையான சூழலில் வளர்வதால் அவை மருத்துவ குணம் வாய்ந்தவையாகக் கருதப்படுகின்றன. கடக்நாத் கோழிகளின் கருமை நிறத்திற்குக் காரணமாக முனைவர் குமரவேல் கூறுவது அவற்றில் இருக்கும் அதீத அளவிலான நிறமிகள்தான். பொதுவாக உடலில் கருமை நிறத்திற்குக் காரணமாக இருப்பது மெலனின்(Melanin) எனப்படும் நிறமி. "இந்த நிறமி கருங்கோழியின் உடலில் அதிகளவில் இருப்பதே அவற்றின் உடலின் மேல்புறத்தில் இருந்து ரத்தம் மற்றும் எலும்பு வரைக்கும் கருமையாக இருப்பதற்குக் காரணம்,” என்கிறார் அவர். ஆனால், அவற்றின் உடலில் மற்ற கோழிகளைவிட அதிக நோய் எதிர்ப்புத் திறன் இருப்பதற்கு அதீத மெலனின் ஒரு காரணமாக இருக்கலாம் என்று நம்பப்பட்டாலும், அது இன்னும் ஆதாரப்பூர்வமாக முழுதாக நிரூபிக்கப்படவில்லை என்கிறார். அதேபோல், இந்தக் கோழிகளைச் சாப்பிடுவதால் ஆண்மை அதிகரிக்கும் என்ற கூற்றுக்கும் அறிவியல்பூர்வ ஆதாரங்கள் இல்லை என்கிறார் அவர். ‘காலநிலை மாற்றங்களைச் சமாளிக்கும்’ பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கருங்கோழிகள் எந்தவித தட்பவெப்ப நிலையிலும் வாழக்கூடியவை என்று ஆய்வுகள் கூறுகின்றன. இந்தக் கோழிக்காக வழங்கப்பட்ட புவிசார் குறியீடு தொடர்பான தரவுகள் இவை எந்தவித தீவிர காலநிலைகளிலும் உயிர் வாழக் கூடியவை என்று கூறுகின்றன. அதில் வழங்கப்பட்டுள்ள தகவல்களின்படி, இந்த உயிரினம் தீவிர தட்பவெப்ப நிலைகளையும் தாங்கி வளரக்கூடியது. அதீத வெப்பம், அதீத குளிர் போன்ற சூழ்நிலைகளிலும் அதிக அழுத்தங்களுக்கு உட்படாமல் இவை வாழப் பழகிக்கொண்டுள்ளன. அதுமட்டுமின்றி, “சுற்றுப்புறம், சுகாதாரம், ஊட்டச்சத்துகளுக்கான கூடுதல் உணவுகள் போன்ற குறைந்தபட்ச நிர்வாகத் தேவைகள் இல்லாதபோதும்கூட இவை செழித்து வளர்வதாக” புவிசார் குறியீடு ஆவணத்தில் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், கருங்கோழிகள் மத்தியில் வளர்ச்சி வேகம் மெதுவாக இருப்பதோடு, இவற்றின் உடல் அளவு சிறிதாகவும் பாலியல் முதிர்ச்சி தாமதமாகவும் இருப்பதாக புவிசார் குறியீடு ஆவணம் கூறுகிறது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பான டி.ஆர்.டி.ஓ-வின் கிளை அமைப்பான, டி.ஐ.ஹெச்.எ.ஆர் (DIHAR), கடந்த 2022ஆம் ஆண்டு நடத்திய ஓர் ஆய்வில், கருங்கோழியில் ஊட்டச்சத்து மற்றும் மருத்துவப் பயன்கள் அதிகம் என்று கூறுகிறது. 'தி கோட்' விஜய் போல படங்களில் நடிகர்களை டீ-ஏஜிங் மூலம் இளமையாக காட்டுவது எப்படி?20 ஆகஸ்ட் 2024 கோலார் தங்க வயலில் தங்கம் எடுத்த தொழிலாளர்கள் இன்று என்ன செய்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு20 ஆகஸ்ட் 2024 பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடக்நாத் கோழி அல்லது கருங்கோழி எனப்படும் இவற்றின் இறகுகள், இறைச்சி ஆகியவை கருமை நிறத்தில் இருக்கும். மேலும், “இதை அதிக உயரத்திலுள்ள நிலப்பகுதியில் வாழும் மக்களுக்கான மிகச் சிறந்த உணவு எனவும், அதன் இறைச்சியின் கடினத்தன்மை, நோய் எதிர்ப்பு, ஊட்டச்சத்து நன்மைகள், லடாக் போன்ற கடுமையான காலநிலைகளைக் கொண்ட நிலப்பகுதிகளில் வளர்ப்பதற்குக்கூட பரிந்துரைக்கப்படுகிறது” என்று அந்த ஆய்வு கூறுகிறது. லடாக் போன்ற மலைப்பாங்கான உயர்ந்த இடங்கள் மட்டுமின்றி, தமிழ்நாடு போன்ற மாநிலங்களிலும் கருங்கோழிகள் வளர்க்கப்படுகின்றன. இதன் மூலம், கருங்கோழிகள் எந்தவித தட்பவெப்ப நிலையிலும் வாழக்கூடியவை என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. கருங்கோழிகள் காட்டில் வாழ்ந்தவையா? பட மூலாதாரம்,GETTY IMAGES பொதுவாக, இந்தக் கோழிகள் காட்டில் வாழ்ந்ததாகவும் அவை கடந்த நூற்றாண்டில்தான் வளர்ப்புக் கோழியாக மாற்றப்பட்டதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. ஆனால், இது நிரூபிக்கப்பட்ட கூற்று இல்லையென்று வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதாவது, காட்டுக் கோழியாக இருந்த கருங்கோழிகள் முதலில் மத்திய பிரதேச பழங்குடி மக்களால் உணவுக்காகப் பிடிக்கப்பட்டதாகவும் பின்னர் இதன் நன்மைகளை உணர்ந்து, அது வளர்ப்புக் கோழியாக மாற்றப்பட்டதாகவும் சொல்லப்படும் கூற்று ஏற்புடையதாக இல்லை என்று காட்டுயிர் மற்றும் கால்நடை வல்லுநர்கள் சிலரிடம் பேசியபோது தெரிவித்தனர். கடைசியாக மனிதர்கள் மத்தியில் வளர்ப்பு உயிரினமாக மாற்றப்பட்டது பறவைகள்தான் என்றாலும், அதுவும் சுமார் 2,000-2,500 ஆண்டுகளுக்கு முன்புதான் கடைசியாகப் பதிவு செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர். “இந்தியாவில் உள்ள நாட்டுக் கோழி இனங்கள் அனைத்துக்குமே மூலமாகக் கருதப்படுவது, தற்போது காடுகளில் காணப்படும் சிவப்புக் காட்டுக்கோழி (Red Jungle Fowl) என்ற காட்டுக்கோழி இனம்தான். இருப்பினும், அவற்றில் இருந்து தற்போது வளர்க்கப்படும் நாட்டுக் கோழிகள் பிரிந்து வந்து பல்லாண்டு காலம் ஆகிவிட்டது,” என்கிறார் முனைவர்.குமரவேல். அவரது கூற்றுப்படி, கடக்நாத் மட்டுமில்லை, மொட்டைக் கழுத்துக் கோழி, அசில் கோழி (சண்டைக் கோழி) என்று அனைத்து வகையான நாட்டுக் கோழிகளுமே இந்த சிவப்புக் காட்டுக் கோழியில் இருந்து பிரிந்து வந்தவைதான். https://www.bbc.com/tamil/articles/c62r824den8o
-
நிறைவேற்றுத்துறை அதிகார ஜனாதிபதி முறைமை நாட்டுக்கு பெரும் சுமை - ரொஷான் ரணசிங்க!
21 AUG, 2024 | 06:40 PM (எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னரே இந்த நாட்டில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. நாட்டுக்கு சுமையாக உள்ள நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமையை முழுமையாக இரத்துச் செய்ய வேண்டும், அதற்கான சூழல் தோற்றம் பெற்றுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று புதன்கிழமை (21) இடம்பெற்ற அமர்வின் போது விசேட கூற்றை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, ஊழலற்ற அரச நிர்வாகத்தை தோற்றுவிப்பதற்காகவே கோட்டபய ராஜபக்ஷ தலைமையிலான அரச நிர்வாகத்தை தோற்றுவித்தோம். இருப்பினும் மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. இவ்வாறான பின்னணியில் தான் 2022 ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. 1972 ஆம் ஆண்டுக்கு முன்னர் இலங்கையில் இரண்டு தேர்தல்கள் மாத்திரமே காணப்பட்டன. நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தியதன் பின்னர் நான்கு தேர்தல்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சிறிய அரச நிர்வாக அலகினை கொண்ட இந்த நாட்டுக்கு நான்கு தேர்தல்கள் அவசியமற்றது. 1994 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமையை இரத்து செய்வதாக குறிப்பிட்டார். இருப்பினும் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த எந்த தலைவர்களும் நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்து செய்ய நடவடிக்கை எடுக்கவில்லை. 2015 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த மைத்திரி- ரணில் அரசாங்கம் நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்துச் செய்வதாக சோபித தேரருக்கு வாக்குறுதி வழங்கினார்கள். அதிகார கதிரையை கண்டவுடன் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. நிறைவேற்றுத்துறை ஜனாதிபதி முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே இந்த நாட்டில் பல பிரச்சினைகள் தோற்றம் பெற்றன. அரசியலமைப்பு திருத்தம் மற்றும் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்து செய்யும் தேவை தோற்றம் பெற்றுள்ளது. அரசியலமைப்பு திருத்தம் தொடர்பான வரைவினை முன்னாள் பிரதம நீதியரசர் ஒருவர் முன்வைத்துள்ளார். நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமை இந்த நாட்டுக்கு சுமையானது. ஆகவே பாராளுமன்றத்துக்கு பொறுப்புக் கூறும் பிரதமர் பதவியை வலுப்படுத்தி விட்டு நிறைவேற்றுத்துறை அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையை இரத்து செய்ய வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/191632
-
திமுக - பாஜக: தமிழ்நாட்டில் கூட்டணிகள் மாறுமா? அடுத்தடுத்த இரு நிகழ்வுகளால் எழும் கேள்விகள்
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம் பதவி, பிபிசி தமிழ் 20 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாடு அரசியலில் சமீபத்திய இரு நிகழ்வுகள் கட்சிகள் அணி மாற்றத்திற்கான தயாராகி வருகின்றனவா என்ற கேள்வியை ஏற்படுத்தியுள்ளன. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும், மூத்த அமைச்சர்களும் பங்கேற்றதும், கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றதுமே இதற்குக் காரணம். எதிர்க்கட்சியான அதிமுக இதுகுறித்த சந்தேகங்களை எழுப்ப திமுக மட்டுமின்றி, பாஜகவும் கூட விளக்கம் அளித்துள்ளது. தமிழ்நாடு அரசியல் அரங்கில் என்ன நடக்கிறது? அடுத்த சட்டமன்ற தேர்தலில் கூட்டணிகள் மாறுமா? ஆளுநரின் தேநீர் விருந்தும், நாணய வெளியீட்டு விழாவும் பட மூலாதாரம்,@UDHAYSTALIN படக்குறிப்பு, ஆகஸ்ட் 18ஆம் தேதி கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக பொறுப்பேற்றது முதலே, அவரது தேநீர் விருந்தை திமுக புறக்கணித்தே வந்துள்ளது. கட்சி சார்பிலோ, அரசு சார்பிலோ யாரும் கலந்து கொண்டதில்லை. ஆனால், இம்முறை ஆளுநர் அளித்த தேநீர் விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் பங்கேற்றது அரசியல் அரங்கில் பலரது புருவங்களை உயர்த்தியது. அடுத்தபடியாக, ஆகஸ்ட் 18ஆம் தேதி கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய வெளியீட்டு விழாவில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று, 100 ரூபாய் நினைவு நாணயத்தை வெளியிட்டார். அந்த நாணயத்தில் கருணாநிதி கையெழுத்தில் 'தமிழ் வெல்லும்' என்ற வாசகமும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் 'கலைஞர் எம்.கருணாநிதி பிறந்த நூற்றாண்டு' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘பாஜகவுடன் ரகசிய கூட்டு’ என்ற அதிமுக விமர்சனம் பட மூலாதாரம்,EDAPPADI PALANISAMY/FACEBOOK படக்குறிப்பு,அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி "ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தை தி.மு.க., புறக்கணிக்கும் என்று கூறிவிட்டு அரசு கலந்து கொள்ளும் என்கின்றனர். அக்கட்சிக்கு ஸ்டாலின் தலைவர், பொதுச்செயலாளர் துரைமுருகன். அவர்கள் இருவருமே கலந்து கொண்டு இரட்டை வேடம் போடுகின்றனர்" என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார். கருணாநிதி நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவின் மூலம் தி.மு.க., பா.ஜ.க உறவு வெளிப்பட்டுவிட்டதாகவும் அவர் விமர்சித்தார். கோவையில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய அவர், "அ.தி.மு.க., ஆட்சியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் நாணயம் வெளியிட்ட போது, கூட்டணியில் இருந்தாலும் கூட பா.ஜ.க-வை அழைக்கவில்லை. நாணய வெளியீட்டு விழாவுக்கு ராகுல்காந்தியை அழைக்காததன் மூலம் தி.மு.க - பா.ஜ.க உறவு வெட்ட வெளிச்சமாகிவிட்டது" என்று குற்றம்சாட்டினார். கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணயத்தில் இந்தியில் எழுத்துகள் உள்ளதைச் சுட்டிக் காட்டிய அவர், "தமிழ் தமிழ் என்று உச்சரித்தாலும் இந்திக்கு ஸ்டாலின் முக்கியத்துவம் தருவது ஏன்?" என்றும் கேள்வி எழுப்பினார். அதிமுக குற்றச்சாட்டுக்கு திமுகவின் பதில் என்ன? பட மூலாதாரம்,FACEBOOK எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து, முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நாணய வெளியீட்டு விழாவுக்கு மத்திய அரசில் உள்ளவர்களை பழனிசாமி அரசு அழைத்தும் அவர்கள் மதிக்கவில்லை” என்று குறிப்பிட்டிருந்தார். ஆனால், முதலமைச்சரின் இந்த கூற்றை கடந்த அ.தி.மு.க அரசில் வருவாய்த்துறை அமைச்சராக இருந்த ஆர்.பி.உதயகுமார் மறுத்தார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "அன்றைக்கு ஸ்டாலின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்தார். நாங்கள் யாரை அழைத்தோம் என்பது நிர்வாகத்தில் உள்ளவர்களுக்குத்தான் தெரியும். ஸ்டாலினுக்கு தெரிய வாய்ப்பில்லை. அன்று மத்திய அரசில் உள்ள யாருக்கும் நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை" என்றார். கருணாநிதி நாணயத்தில் இந்தி இடம் பெற்றிருப்பது தொடர்பான எடப்பாடி பழனிசாமியின் குற்றச்சாட்டிற்கு தி.மு.க., எம்.பி., ஆ.ராசா எக்ஸ் தளத்தில் பதிலளித்துள்ளார். "இந்தியாவில் உள்ள நாணயங்கள் எதுவாக இருந்தாலும் அதில் ஆங்கிலமும் இந்தியும் இருப்பது வழக்கம். எம்.ஜி.ஆருக்கு வெளியிட்ட நாணயத்திலும் இந்தி இருப்பதை பழனிசாமி அறியவில்லை" என்று அவர் கூறியுள்ளார். கோலார் தங்க வயலில் தங்கம் எடுத்த தொழிலாளர்கள் இன்று என்ன செய்கிறார்கள்? பிபிசி கள ஆய்வு20 ஆகஸ்ட் 2024 விழாவை நடத்தியது மத்திய அரசா? மாநில அரசா? பட மூலாதாரம்,@MKSTALIN "விழா அழைப்பிதழில் எந்த இடத்திலும் மத்திய அரசுத் துறையின் பெயர் இடம்பெறவில்லை. தமிழக அரசின் இலச்சினைதான் இடம்பெற்றுள்ளது. அனைவருக்கும் அழைப்பிதழை அனுப்பி அழைத்தவர் தமிழக அரசின் தலைமைச் செயலாளர். இந்நிகழ்ச்சிக்கு ராகுல்காந்தியை அழைத்திருக்கலாம்" என்று எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியிருந்தார். கடந்த திங்கள்கிழமையன்று சென்னையில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் விளக்கம் அளித்த மு.க.ஸ்டாலின், "நாணயத்தை வெளியிட்டது மத்திய அரசு. இது தி.மு.க நிகழ்ச்சி அல்ல. மத்திய அரசின் நிகழ்ச்சி என்பதால் ராகுல் காந்தியை அழைக்கவில்லை" என்றார். இதுகுறித்து திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதியிடம் பிபிசி தமிழ் சார்பில் கேட்டபோது, "மாநில அரசின் ஏற்பாட்டில் மத்திய அரசு நடத்திய விழா. மாநில அரசின் வேண்டுகோளை ஏற்று மத்திய அமைச்சர் பங்கேற்று நாணயத்தை வெளியிட்டார். இதை முதலமைச்சரும் தெளிவாக கூறிவிட்டார்" என்றார். ஆளுநரின் தேநீர் விருந்து சர்ச்சைக்கு திமுகவின் விளக்கம் பட மூலாதாரம்,RSBHARATHI/X படக்குறிப்பு,ஆளுநர் என்ற பதவியின் மீதும் அந்தப் பொறுப்பின் மீதும் முதலமைச்சர் பெரும் மதிப்பு வைத்திருக்கிறார் என்கிறார் ஆர்.எஸ்.பாரதி "ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்தில் தி.மு.க., என்ற கட்சி பங்கேற்காது. அரசின் சார்பில் யாராவது பங்கேற்பார்களா என்பதை முதலமைச்சர் தெரிவிப்பார்" என்று செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் ஆர்.எஸ். பாரதி முன்னர் தெரிவித்திருந்தார். அதன் பிறகு தேநீர் விருந்தில் முதலமைச்சரும், அமைச்சர்களும் பங்கேற்றனர். இதுகுறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், ஆளுநர் என்ற பதவியின் மீதும் அந்தப் பொறுப்பின் மீதும் முதலமைச்சர் பெரும் மதிப்பு வைத்திருக்கிறார் என்றும், அந்த கோட்பாட்டின் அடிப்படையில் ஆளுநரின் தேநீர் விருந்தில் பங்கேற்றதாகவும் கூறினார். ஆளுநரின் தேநீர் விருந்தை கட்சி புறக்கணித்துவிட்டது, அரசு சார்பில்தான் முதலமைச்சரும், அமைச்சர்களும் பங்கற்றார்கள் என்பதை இதன் மூலம் திமுக தரப்பு தெளிவுபடுத்தியது. பாஜக கூறியது என்ன? கடந்த செவ்வாய் அன்று (ஆகஸ்ட் 20) செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், "தமிழக அரசின் சார்பில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்றார். இதில் அரசியலுக்கு இடமில்லை" என்றார். தி.மு.க. - பாஜக இடையே ரகசிய உறவு உள்ளதாக எடப்பாடி பழனிசாமி கூறியதை, தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். "ரகசிய உறவு என்று கூறுவதற்கு என்ன காரணம்... பா.ஜ.க என்ன தொடக்கூடாத கட்சியா?" என்று அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பா.ஜ.க எதிர்ப்பில் திமுக சமரசமா? மேற்கூறிய இரு நிகழ்வுகளும் பா.ஜ.க எதிர்ப்பில் தி.மு.க., அரசு சமரசம் செய்து கொள்கிறதா? என்கிற கேள்வியை தமிழ்நாட்டின் அரசியல் அரங்கில் எழுப்பியுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். அதனையே எதிர்க்கட்சியான அதிமுகவின் விமர்சனமும் வெளிப்படுத்துகிறது. "கருணாநிதி நூற்றாண்டு நினைவு நாணய நிகழ்ச்சியை அரசு நிகழ்ச்சியாக நான் பார்க்கவில்லை. நாணயத்தை வெளியிட வந்த ராஜ்நாத் சிங், கருணாநிதியின் சமாதிக்கு சென்றதே அரசியல் தான்" என்று தனது பார்வையை முன்வைக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஆர்.மணி. மத்திய ஆட்சியில் மைனாரிட்டியாக உள்ள பா.ஜ.க அரசுக்கு புதிய கூட்டணிகள் தேவை என்பதால், தி.மு.கவை நோக்கி வலை வீசப்படுவதாக குறிப்பிடும் ஆர்.மணி, "சமாதியை ராஜ்நாத் சிங் சுற்றி வரும்போது, ஸ்டாலின், கனிமொழி, தயாநிதி மாறன், டி.ஆர்.பாலு ஆகியோர் இருக்கும் புகைப்படம், மக்களுக்கு என்ன மாதிரியான தகவலை தெரிவிக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தி.மு.க.,வுக்கு மத்திய அரசின் நிதி தேவை. தவிர, மத்திய புலனாய்வு அமைப்புகளின் நெருக்கடிகளைத் தவிர்க்க விரும்புகிறது" என பிபிசி தமிழிடம் பேசிய அவர் கூறினார். முன்னாள் அமைச்சரும் அ.தி.மு.க செய்தித் தொடர்பு செயலருமான வைகைச்செல்வனின் கருத்தும் இதையொட்டியதாகவே இருக்கிறது. பிபிசி தமிழிடம் பேசிய வைகைச்செல்வன், "தி.மு.க.,வின் நட்பு பா.ஜ.க.,வுக்கு தேவைப்படுகிறது. தி.மு.க.,வுக்கும் பா.ஜ.க.,வின் உறவு தேவைப்படுகிறது. இது ரகசிய உறவாக நீடித்துக் கொண்டிருக்கிறது. மாநில அரசு இயங்குவதற்கு பா.ஜ.க.,வின் நட்பு தி.மு.க.,வுக்கு தேவைப்படுவதாக இதை எடுத்துக் கொள்ளலாம்" என்றார். ஜனநாயகக் கட்சி மாநாடு: ‘அமெரிக்காவுக்கு என்னால் முடிந்ததை எல்லாம் செய்துவிட்டேன்’- கண்கலங்கிய அதிபர் ஜோ பைடன்20 ஆகஸ்ட் 2024 இஸ்ரேல் இரான் இடையே பல ஆண்டுகளாக நிலவி வரும் பதற்றம் பிற பகுதிகளில் எவ்வாறு பரவி வருகிறது?20 ஆகஸ்ட் 2024 ‘தொடர்ந்து விரோதப் போக்கில் செயல்பட முடியாது’ பட மூலாதாரம்,GETTY IMAGES தி.மு.க., மீதான விமர்சனங்கள் குறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பு செயலர் பேராசிரியர் கான்ஸ்டன்டைனிடம் பேசிய போது, "எந்த இடத்திலும் பா.ஜ.க அரசு மற்றும் அதன் கொள்கையின் மீதான விமர்சனத்தை தி.மு.க., மென்மையாக அணுகவில்லை. கடந்த வாரம் நடந்த தி.மு.க., மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், நிதிப் பங்கீட்டில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது" என்கிறார். "அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி, அரசின் பிரதிநிதியாக ஆளுநர் இருக்கும்போது, தொடர்ந்து விரோதப் போக்கில் செயல்பட முடியாது" எனக் குறிப்பிடும் கான்ஸ்டன்டைன், நாணய வெளியீட்டு விழா சர்ச்சைக்கு பதில் அளித்தார். "நாணய வெளியீட்டு விழாவுக்கு தமிழகத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் முதலமைச்சர் ஸ்டாலின் அழைத்தார். அரசியல் களத்தில் எதிரெதிர் நின்றாலும் தமிழர்களாக அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்பது ஜனநாயக முதிர்ச்சி. பா.ம.க நிறுவனர் ராமதாஸையும் தி.மு.க., அழைத்தது. இது நூற்றாண்டுக்கு ஒருமுறை நடக்கும் நிகழ்ச்சி." என்கிறார் கான்ஸ்டன்டைன். 2026 தேர்தலில் கூட்டணிகள் மாறுமா? பா.ஜ.கவுடன் தி.மு.க., இணக்கமாக செல்வதால் இந்தியா கூட்டணியில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்கிறார் பத்திரிகையாளர் ஆர்.மணி. "2026 சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன்தான் தி.மு.க., கூட்டணி இருக்கும். மோதி எதிர்ப்பு என்பதுதான் தி.மு.கவுக்கு பிரதானம். நேரடியாக பா.ஜ.கவுடன் தி.மு.க., செல்லாது. ஆனால், கண்ணுக்குத் தெரியாமல் மத்திய அரசுடன் பல வகைகளில் இணக்கமாக இருக்க வாய்ப்புள்ளது. அந்தவகையில், பா.ஜ.க எதிர்ப்பை தற்போதைக்கு தி.மு.க தள்ளி வைத்துள்ளது" என்கிறார் ஆர்.மணி. https://www.bbc.com/tamil/articles/c4gxdgxv34zo
-
பற்றி எரியும் அமேசான் காடு; மூச்சுவிட திணறும் பிரேசிலிய மக்கள்
Published By: DIGITAL DESK 3 21 AUG, 2024 | 03:30 PM பிரேசிலில் அமேசான் காட்டுப்பகுதியில் தீப்பரவல் ஏற்பட்டுள்ளதால் ரொண்டோனியா மாநிலத்திலுள்ள போர்டோ வெல்ஹோவில் சூரிய வெளிச்சத்தை கூட காணமுடியாத அளவிற்கு அடர்த்தியான புகை சூழ்ந்துள்ளது. இந்நிலையில், புகை சூழ்ந்துள்ளமையினால் 460,000 பேர் வசிக்கும் பொலிவியாவின் எல்லைக்கு அருகிலுள்ள நகரத்திலுள்ள 30 வயதுடைய ஆசிரியர் தயானே மோரேஸ், "நாங்கள் சுவாசிக்க சிரமப்படுகிறோம்" என்று கூறியுள்ளார். போர்டோ வெல்ஹோவில் செவ்வாய்க்கிழமை (20) பிஎம்2.5 எனப்படும் புற்றுநோயை உண்டாக்கும் நுண்துகள்களின் செறிவு ஒரு கன மீட்டர் காற்றில் 56.5 மைக்ரோகிராம்களாக அதிகரித்துள்ளது. உலக சுகாதார ஸ்தாபனத்தின் நுண்துகள்களின் அதிகபட்ச வழிகாட்டுதல் வரம்புகளை விட 11 மடங்கு அதிகரித்துள்ளது. இந்த நுண்துகள்களை சுவாசிப்பதால் நுரையீரல் புற்றுநோய், இதய நோய், பக்கவாதம், நீரிழிவு மற்றும் பிற உடல்நலப் பிரச்சனைகளின் அபாயத்தை அதிகரிப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. 14 ஆம் திகதி ஒரு கன மீட்டருக்கு 246.4 மைக்ரோகிராம் ஆபத்தான அளவில் காணப்பட்டுள்ளதாக காற்றின் தரத்தைர கண்காணிக்கும் IQAir நிறுவனம் தெரிவித்துள்ளது. வீட்டில் இருந்தாலும் இவ்வாறான ஆபத்தான புகையிலிருந்து தப்பிப்பது கடினமாக காரியம். விவசாயங்கள் நிலத்தை பயன்படுத்த சட்டவிரோதமாக தீ வைப்பதால் காட்டுத் தீ பரவுவதாக ரொண்டோனியா மாநில அரசாங்கம் நம்புவதால் இது தொடர்பில் முறைப்பாடு அளிக்க ஒன்லைன் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது. பிரேசிலின் INPE விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் செயற்கைக்கோள்களால் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, 19 ஆண்டுகளில் ரொண்டோனியாவில் மிக மோசமாக ஜூலை மாதத்தில் 1,618 காட்டுத் தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. ஆகஸ்ட் மாதத்தில் இதுவரை 2,114 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அமேசான் காட்டில் இவ் ஆண்டு ஜனவரி 1 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 19 ஆம் திகதி வரை 42,000 க்கும் மேற்பட்ட காட்டுத் தீ சம்பவங்கள் பதிவு செய்துள்ளன. இது இரண்டு இரண்டு தசாப்தங்களில் மிக மோசமான நிலை என கூறப்படுகிறது. கடந்த 2023 ஆம் ஆண்டு இதே காலக்கட்டத்துடன் ஒப்பிடுகையில் 87 சதவீதம் அதிகமாகும். கடந்த ஆண்டு ஜூன் முதல் நவம்பர் வரை அமேசான் வரலாறு காணாத வறட்சியையும் சந்தித்துள்ளது. https://www.virakesari.lk/article/191630
-
அரசியலில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் கேரள திரையுலகம்
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு இழைக்கப்படும் பாலியல் தொல்லை தொடர்பாக நீதிபதி ஹேமா கமிட்டி வெளியிட்ட அறிக்கை கேரள அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. கேரளாவில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடிகர் திலீப் உள்ளிட்ட பலர் பாலியல் துன்புறுத்தல் வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டனர். அதைத் தொடர்ந்து மலையாள திரையுலகில் பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்களா? என்பது குறித்து ஆய்வு செய்ய நீதிபதி ஹேமா தலைமையிலான 3 பேர் கொண்ட குழுவை கேரள அரசு அமைத்தது. கேரள அரசிடம் நிபுணர் குழு அறிக்கை சமர்ப்பித்து 5 ஆண்டுகளாகிய நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் அந்த அறிக்கையின் அதிர்ச்சியூட்டும் விவரங்கள் கடந்த திங்கள்கிழமை வெளியாகி அரசியல் களத்தில் விவாதத்தை எழுப்பியுள்ளது. அந்த நிபுணர் குழுவின் அறிக்கையில், மலையாள திரையுலகின் தொழில்துறையை சில தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மற்றும் தயாரிப்பு கட்டுப்பாட்டாளர்கள் உள்ளிட்ட 10-15 பேர் அடங்கிய அதிகார ‘கும்பல்’ கட்டுப்படுத்துகிறது. இவர்கள் திரையுலகின் பெண் தொழிலாளர்கள் மீது பாலியல் சீண்டல்களில் ஈடுபடுகின்றனர்’ என்று குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நடிகைகள் மட்டுமின்றி தொழில்நுட்ப பணிகளில் ஈடுபடும் பெண்களும் பாலியல் சமரசங்கள் செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றனர். சமரசம் செய்ய மறுக்கும் பெண்களுக்கு திரைத் துறையில் அறிவிக்கப்படாத தடை விதிக்கப்படுகிறது எனவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மலையாள திரையுலகம் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள ‘ஹேமா குழு’ அறிக்கை, மாநில அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. இந்த அறிக்கையை வெளியிடாமல் 5 ஆண்டுகள் காலம் தாழ்த்தி குற்றவாளிகளைப் பாதுகாத்ததாக ஆளும் இடதுசாரி கூட்டணி அரசை எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு முழு ஆதரவு தெரிவிப்பதாக கலாச்சார விவகாரத் துறை அமைச்சர் சாஜி செரியன் கூறினார். மேலும், குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்கான நடவடிக்கையை அரசு ஏற்கெனவே தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களுடனும், பெண் சமூகத்துடனும் அரசு என்றும் துணை நிற்கும். அறிக்கையின் எந்தப் பகுதி வெளியிடப்பட வேண்டும் என்பதை உயர்நீதிமன்றமும் தகவல் ஆணையமுமே முடிவெடுத்தது. இந்த அறிக்கையில் எந்த தனிநபர் குறித்தும் குற்றஞ்சாட்டப்படவில்லை’ என்றார் சாஜி செரியன். அமைச்சர் செரியனின் கருத்தை விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. சசி தரூர், ‘திரையுலகைச் சேர்ந்த பெண்கள் ஹேமா குழுவிடம் மட்டுமே சென்று புகாரளித்ததாகவும், அரசிடம் புகாரளிக்கப்பட்டிருந்தால் முறையான விசாரணையை நடத்தியிருப்போம் எனவும் கலாசார விவகாரத் துறை அமைச்சர் கூறியிருக்கிறார். குழுவை அரசுதானே நியமித்தது. அந்தக் குழு சமர்ப்பித்த அறிக்கையின் அடிப்படையில் அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அறிக்கை தொடர்பாக சுமார் 5 ஆண்டுகளுக்கு மௌனம் காத்த அரசின் செயல் வெட்கக்கேடானது. 200 ஆண்டுகளுக்கு முன்னரே பெண்களுக்கு ஆரம்பக்கல்வியை உறுதிப்படுத்திய மாநிலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது’ என்றார். குற்றஞ்சாட்டப்பட்டவர்களின் அடையாளங்களைக் காக்க மாநில அரசு முயற்சிப்பதாகவும் குழு அறிக்கையின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் வி.டி.சதீஷன் வலியுறுத்தினார். விரிவான திரைத்துறைச் சட்டத்தை உருவாக்குவது, திரைத் துறை தொடர்பான பிரச்னைகளுக்குத் தீர்வு காண தீர்ப்பாயம் அமைப்பது உள்பட ஹேமா குழு அறிக்கையின் பல்வேறு பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் அரசு தீவிரமாக உள்ளது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் பினராயி விஜயன், ‘குழு பரிந்துரைத்த ஒழுங்கு நடவடிக்கைகளை காவல்துறை கவனித்து வருகிறது. பாதிக்கப்பட்டவர்களுடன் நிற்கும் அரசு, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கும்’ என்றார். https://thinakkural.lk/article/308170
-
தமிழ்நாடு - இலங்கை இடையே பாலமா? சாத்தியக்கூறுகளை விரைவில் ஆய்வு செய்ய திட்டம்
இலங்கையையும் இந்தியாவையும் இணைக்கும் உத்தேச பாலம் - மல்வத்த பீடாதிபதி கவலை 21 AUG, 2024 | 11:53 AM இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும் விதத்தில் உத்தேச பாலத்தை அமைப்பது குறித்து மல்வத்த பீடத்தின்மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் கவலை வெளியிட்டுள்ளார். இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜாவுடனான சந்திப்பின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பின்போது உத்தேச பாலம் குறித்த கரிசனையை வெளியிட்டுள்ள அவர் பாலத்தை அமைப்பது தொடர்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் அதன் காரணமாக ஏற்படக்கூடிய பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் குறித்தும் கேள்வி எழுப்பியுள்ளார். உத்தேச பாலத்தினால் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகள்இபோதைபொருள் கடத்தல் அதிகரிப்பு குறித்தும் திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள தேரர் கருத்து தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/191604
-
குரங்கம்மை பரவல்: சர்வதேச சுகாதார நெருக்கடியாக அறிவித்த உலக சுகாதார நிறுவனம் - எப்படிப் பரவுகிறது?
குரங்கம்மையை கொரோனாவோடு ஒப்பிட முடியாது என்கிறது உலக சுகாதார அமைப்பு குரங்கு அம்மை நோயை பழைய அல்லது புதிய திரிபு வகை கொரோனா தொற்றோடு ஒப்பிட முடியாது என உலக சுகாதார அமைப்பு அதிகாரி தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் குரங்கு அம்மை தொற்று அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே சமீபகாலமாக தென்பட்ட இந்தநோய், இப்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்நிலையில் ஆப்பிரிக்க நாடுகளில் பரவிவரும் குரங்கு அம்மை நோய் புதிய கோவிட் தொற்று இல்லை எனவும், நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அதிகாரிகளுக்கு தெரியும் எனவும் உலக சுகாதார அமைப்பு அதிகாரி ஹன்ஸ் க்ளூஜ் தெரிவித்துள்ளார். இது குறித்து பத்திரிகையாளர்களிடம் அவர் பேசியதாவது; “நாம் ஒன்றாக இணைந்து இந்த குரங்கு அம்மை நோயை சமாளிக்க முடியும். நாம் சமாளிக்க வேண்டும். நாம் குரங்கு அம்மை நோயைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை பின்பற்றி உலகெங்கும் இந்த நோய்ப் பரவலை முற்றாக அழிக்கப் போகிறோமா? அல்லது இதனைப் புறக்கணித்து மீண்டும் அச்சத்தின் சுழலில் சிக்கப் போகிறோமா? நாம் எவ்வாறு இந்த நோயை எதிர்கொள்கிறோம் என்பதில் தான் நாம் இதிலிருந்து மீள்வதற்கான வழி இருக்கிறது. குரங்கு அம்மை நோயை கொரோனாவோடு ஒப்பிட இயலாது. ஏனெனில் இதனை கட்டுப்படுத்த முடியும். இதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்வார்கள்’ என தெரிவித்துள்ளார். குரங்கு அம்மை என்பது ஒரு அரிய வகை தொற்று நோய். இந்த நோயை எம்பாக்ஸ் என்று அழைக்கின்றனர். இது மனிதர்களுக்கு இடையே எளிதில் பரவாது. நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட விலங்குகளிடமிருந்தே மனிதர்களுக்குப் பரவுகிறது. https://thinakkural.lk/article/308160
-
ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகாவின் பரிதாப நிலை.
கதிரைகளுடன் பேசிய பொன்சேகா; முதலாவது கூட்டத்திலேயே ஏமாற்றம் முன்னாள் இராணுவ தளபதியும், சமகால ஜனாதிபதி வேட்பாளரான சரத் பொன்சேகாவின் நிலை பரிதாபமாக மாறியுள்ளது. அவரது முதலாவது தேர்தல் பிரசார கூட்டம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பொன்சேகாவின் குறித்த கூட்டத்திற்கு ஐந்து பேர் கூட வராதமை பெரும் ஏமாற்றத்தை அவருக்கு ஏற்படுத்தியுள்ளது. மேடையில் பொன்சேகா உட்பட சுமார் 10 பேர் இருந்தனர். மேலும் மேடையின் முன் இருக்கைகளில் யாரும் அமரவில்லை. அத்துடன், பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்த காலத்தில் தாக்குதலுக்கு உள்ளான காரையும் லொறியில் ஏற்றி மேடைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருந்தது. அதன் காட்சிகளும் புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் பதிவிடப்பட்டுள்ளது. மேலும் கூட்டத்தை 5 பேர் மட்டுமே நின்ற நிலையில் பார்த்து விட்டு செல்வதனையும் அவதானிக்க முடிந்துள்ளது. இதேவேளை 2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட சரத் பொன்சேகா, அப்போது முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு பெரும் சவால்மிக்க நபராக இருந்தார். எனினும் 14 வருடங்களில் ஏற்பட்ட மாற்றம் காரணமாக சரத் பொன்சேகா பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://thinakkural.lk/article/308146
-
12 வயது மாணவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதி
Published By: VISHNU 21 AUG, 2024 | 01:57 AM வவுனியா நகரையண்டிய பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் ஐஸ் போதைப் பொருள் பாவித்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரது உடல் நிலை தேறி வருவதாக பொலிசார் தெரிவித்தனர். இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வவுனியா நகரையண்டிய பிரபல பாடசாலையில் தரம் 7 இல் கல்வி பயிலும் 12 வயது மாணவன் ஒருவன் பாடசாலைக்கு முன்பாகவுள்ள கடை ஒன்றின் அருகிலிருந்த ஒதுக்கு புறமான இடம் ஒன்றிற்குச் சென்றுவிட்டு மீண்டும் பாடசாலைக்குள் சென்றுள்ளார். சிறிது நேரத்தில் குறித்த மாணவன் தொடர்ச்சியாக வாந்தி எடுத்தமையால் பெற்றோருக்கு தெரியப்படுத்தி அவர்கள் ஊடாக வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். வவுனியா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்ட மாணவன் தற்போது நோயாளர் விடுதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர். குறித்த மாணவன் ஜஸ் போதைப் பொருளைப் பாவித்ததன் காரணமாக இவ் அசம்பாவிதம் ஏற்பட்டதாக பொலிசார் தெரிவித்தனர். அத்துடன் குறித்த மாணவன் இந்து மதகுரு ஒருவரின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/191574
-
கொக்குத்தொடுவாய் புதைகுழிக்கு முன்பாக போராட்டத்துக்கு அழைப்பு
கொக்குத்தொடுவாய் பகுதியில் மேலும் பல இடங்களில் புதை குழிகள் - துரைராசா ரவிகரன் Published By: VISHNU 21 AUG, 2024 | 02:06 AM கொக்குத்தொடுவாய் பகுதியில் பல இடங்களில் புதை குழிகள் இருக்கிறது என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்தார். முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத்தினரால் இன்றையதினம் (20.08.2024) கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி முன்பாக கொக்குதொடுவாய் மனித புதைகுழி விடயத்தை மூடி மறைக்க வேண்டாம், எமக்கு உண்மையும் நீதியும் வேண்டும் என கூறி போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்து. குறித்த போராட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விடயமானது ஆரம்பத்திலே நீதிமன்றத்தில் கலந்துரையாடல்கள் இடம்பெற்ற போது பலராலும் வைக்கப்பட்ட கோரிக்கை சர்வதேச பொறிமுறையோடு சர்வதேசத்தினுடைய கண்காணிப்பே வேண்டும். யாழ் பல்கலைக்கழக தொல்லியல் பீட துறையினை சேர்ந்த மாணவர்களோ, பேராசிரியர்களோ இந்த கண்காணிப்பில் பார்வையிடுதலில் இருக்க வேண்டும். அந்த கோரிக்கைகள் பலவாறாக முன் வைக்கப்பட்டது. இருந்தும் இவை நடைமுறைப்படுத்தப்பட்டதாக இல்லை. இரண்டு, மூன்று நாட்கள் பரமு புஷ்பரட்ணம் ஐயா அவர்கள் வந்திருந்தார். ஆனால் அவரும் பின்னர் வரவில்லை. ஏனோ தெரியவில்லை. இருந்தாலும் எங்களுக்கு இந்த உள்ளக பொறிமுறையில் நம்பிக்கை இல்லை. இலங்கை அரசாங்கமானது எத்தனையோ படுகுழிகளை இலங்கை அரசாங்கத்தினுடைய பார்வையில், கண்டுபிடிக்கப்பட்டும் ஒன்றுக்கும் நீதியான, நேர்மையான வகையில் அறிக்கைகள் வரவில்லை . 1984 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்த கொக்குளாய், கொக்குத்தொடுவாய், கர்நாட்டுக்கேணி ஆகிய 6 கிராம சேவையாளர் பிரிவுகளை சேர்ந்த மக்களும் இடம்பெயர்ந்து 2011 ஆம் ஆண்டு காலப்பகுதியில் தான் மீள்குடியேற்றப்பட்டார்கள். இப்படி இருக்கும் போது இப் பிரதேசம் இராணுவ பிரதேசமாக இருந்தது. 2009 ஆம் ஆண்டு கையளிக்கப்பட்ட, உறவுகள் வட்டுவாகலில், கடலில், முகாமில் என்று பலவாறு கையளிக்கப்பட்ட உறவுகள், சரணடைந்தவர்கள் இந்த புதைகுழியில் அகப்பட்டிருக்கலாம் என்பது மக்களுடைய நம்பிக்கை. எங்களுடைய நம்பிக்கை. அப்படி இருக்கும்போது அகழ்வை செய்து இப்போது முடிந்துவிட்டது என கூறிகின்றார்கள். கொக்குத்தொடுவாய் பகுதியில் பல இடங்களில் இப்படிப்பட்ட புதை குழிகள் இருக்கிறது என்பது இந்த மக்களுடைய கருத்து. ஆனால் இதற்கான ஒரு நீதி கிடைக்கவில்லை. உள்ளக பொறிமுறையிலே மக்கள் யாருக்குமே நம்பிக்கை இல்லை. யுத்தம் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து இன்று வரை முழு பொய்யுரைப்பவர்களாகத்தான், பொய்களை பேசி வருகின்றார்கள் அறிக்கை இடுகின்றார்கள். தமிழ் மக்களுக்கான நியாயமான எந்த ஒரு கருத்துக்களும் வழங்கப்பட்டதா? என பார்க்க வேண்டும். எங்களுக்கு தேவை சர்வதேச பொறிமுறையூடாக நீதி கிடைக்க வேண்டும். எத்தனை தாய்மார் குழந்தைகளை தேடி, பிள்ளைகளை தேடி இறந்து விட்டார்கள். இப்படியான நிலமையில் அவர்களுடைய ஏக்கம், அவர்களுடைய கண்ணீர், இவற்றிற்கு பதில் கூறியே ஆக வேண்டும். எங்களை ஏமாற்ற வேண்டாம். ஆனால் சர்வதேசம் நிச்சயமாக கண்காணித்து நியாயமான தீர்ப்புகளை வழங்க வேண்டும் என மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/191575
-
தொழில்நுட்ப வளர்ச்சியால் காணாமல் போகும் வேலைகளும் வேகமாக வளர வாய்ப்புள்ள 5 துறைகளும்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புதிய தொழில்நுட்பங்களின் வருகை ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஓர் உத்வேகத்தை அளிக்கும். கட்டுரை தகவல் எழுதியவர், ஓலெக் கார்பியாக் பதவி, பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் தொழிலாளர் சந்தை முன்னெப்போதையும்விட வேகமாக மாறி வருகிறது. இப்போது நடைமுறையில் இருக்கும் பல வேலைகள் நாளை இல்லாமல் போகலாம். உலகப் பொருளாதார மன்றத்தின் (World Economic Forum) சமீபத்திய ஆய்வுப்படி, தொழிலாளர் சந்தையில் இரண்டு முக்கியக் காரணிகள் மாற்றங்களுக்கு வழிவகுக்கின்றன. புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் தானியங்கி தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பசுமைப் பொருளாதாரம் மற்றும் நிலைத்தன்மையை நோக்கிய இயக்கம் மீப்பெரும் தரவு(Big Data), கிளவுட் கம்ப்யூட்டிங், செயற்கை நுண்ணறிவு போன்ற புதிய தொழில்நுட்பங்களில் ஏற்படும் விரைவான முன்னேற்றம் தொழிலாளர் சந்தையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வரும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதில் நல்ல செய்தி என்னவென்றால், புதிய தொழில்நுட்பங்களின் வருகை ஒட்டுமொத்த பொருளாதாரத்திற்கும் ஓர் உத்வேகத்தை அளிக்கும். சில வேலைகளை அழித்து, பல வாய்ப்புகளை உருவாக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஒரு வணிகம் குறைவான வளங்களைக் கொண்டு அதிக உற்பத்தியை அடையும் போது அது இயல்பாகவே விரிவடைகிறது. உலகப் பொருளாதார மன்றத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தற்போது இருக்கும் தொழில்களில் கிட்டத்தட்ட கால் பகுதி மாறிவிடும் என்று கூறுகிறார்கள். அதிக போட்டி நிலவும் தொழிலாளர் சந்தையில் நிலைத்திருக்க ஒருவர் தொடர்ந்து புதிய திறன்களைத் தேர்ந்தெடுத்துக் கற்க வேண்டும். அதோடு, ஏற்கெனவே உள்ள திறன்களை மேம்படுத்த வேண்டும். எதிர்காலத்தில் வளர வாய்ப்புள்ள 5 துறைகளும் காணாமல் போகும் வேலைகளும் என்ன? அதற்காக வளர்த்துக் கொள்ள வேண்டிய திறன்கள் என்ன? தலைசிறந்த திறன்கள் தொழில்நுட்ப ரீதியான கல்வியறிவு என்பது புதிய வேகமெடுக்கும் தொழிலாளர் சந்தையில் போட்டியிடுவதற்கான முக்கியத் திறன்களில் ஒன்று. அதற்காக எல்லோரும் நிரல் தொகுப்பு மொழி (Programming language) பயில வேண்டும் அல்லது இயந்திர கற்றலின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, எதிர்காலத்தில் STEM சார்ந்த வேலைகளுக்கான தேவை அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனால் எதிர்காலத்தில், STEM சார்ந்த வேலைகளுக்கான தேவை அதிகமாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. `STEM’ என்பது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகியவற்றின் தனித்துவமான, ஆனால் தொடர்புடைய தொழில்நுட்பத் துறைகளை ஒன்றிணைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு சொல். (Science, Technology, Engineering and Math - STEM) எனவே, எதிர்காலத்துக்கு ஏற்றவாறு உங்கள் குழந்தை பள்ளியில் எந்தெந்தப் பாடங்களில் கவனம் செலுத்த வேண்டும் என்று நீங்கள் யோசித்தால் இதோ அதற்கான பதில்: கணிதம், கணினி அறிவியல் மற்றும் அறிவியல். அடுத்ததாக நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம்: பகுப்பாய்வு சிந்தனைத் திறன் (analytical thinking). அதை மேம்படுத்த, ஒருவர் அறிவாற்றல் திறன்களை மெருகூட்ட வேண்டும். வேறுவிதமாகச் சொல்ல வேண்டுமெனில், ஒரு விஷயத்தை பகுப்பாய்வு செய்யும்போது அதன் வடிவங்களைக் கூர்ந்து கவனிக்கும் திறன் வேண்டும். நம் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தகவல்களை ஆராய்ந்து முடிவுகளை எடுக்க வேண்டும். பகுப்பாய்வுத் திறனை மேம்படுத்த, நீங்கள் கவனமாக எல்லாவற்றையும் உற்றுநோக்க கற்றுக் கொள்ள வேண்டும். ஏனென்றால் கேட்ஜெட்டுகள், சமூக ஊடகங்கள், ஆன்லைன் கேம்கள் மற்றும் விளம்பரங்கள் தொடர்ந்து நம் கவனத்திற்காகப் போராடுகின்றன. மேலும் தகவல்களைத் தவறவிடும் பயத்தை ஒருவருக்குத் தூண்டுகின்றன. இதை FOMO, அல்லது "fear of missing out" என்பர். பகுப்பாய்வுத் திறனை மேம்படுத்த ஆர்வம் மற்றும் சுய அறிவை வளர்த்துக் கொள்ளுதல் முக்கியப் பங்கு வகிக்கும். தொடர்ந்து கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்க வேண்டும். நீங்கள் உங்கள் இலக்கில் கவனம் செலுத்த வேண்டும். ஆங்கிலத்தை உயர்மட்ட நிலைக்கு ஏற்றவாறு கற்றுக் கொள்வது மிகவும் மதிப்புமிக்க திறமையாகும். படைப்பாற்றல் மிகவும் முக்கியம். அறிவியல், பொறியியல், வடிவமைப்பு அல்லது கலை ஆகியவற்றில் தொழில்நுட்பக் கல்வி அறிவைப் படைப்பாற்றலுடன் இணைத்து நிர்வகிக்கும் நபருக்கு கண்டிப்பாக அசத்தலான பதவி உயர்வு கிடைக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,படைப்பாற்றல் மிகவும் முக்கியம் குறிப்பாக செயற்கை நுண்ணறிவு காலகட்டத்தில் தொடர்பு மற்றும் ஒத்துணர்வு (empathy) ஆகியவை இரண்டும் மிக உயர்ந்த மதிப்புமிக்க திறன்களாக இருக்கும். இயந்திரங்கள் எவ்வளவு வேகமாக மேம்பட்டாலும், மனிதர்களுக்கு எப்போதும் சக மனிதர்களின் தேவை இருக்கும். கவனம், குழுவாக இணைந்து பணி செய்யும் திறன், கேட்கும் திறன், கதை சொல்லும் திறன், ஆதரவு, அனுதாபம் ஆகிய பண்புகள் அதிகமாக மதிக்கப்படும். கடந்த 2020இல் வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையின்படி, தொழில் வல்லுநர்களுக்கான சமூக ஊடகமான LinkedInஇல், தகவல் தொடர்பு என்பது இன்றைய தொழிற்சந்தையில் மிகவும் தேவைப்படும் திறனாக மாறியுள்ளது. "பணியிடத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ரோபாட்டிக்ஸ் பயன்பாடு, வளர்ந்து வரும் தொலைதூரப் பணியாளர் முறை மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை உலகெங்கிலும் உள்ள மக்களுடன் தொடர்பு கொள்ள அனுமதிக்கின்றன. ஒருவருக்கொருவர் எவ்வாறு தொடர்புகொள்வது, மற்றவர் சொல்வதைக் கேட்பது மற்றும் உறவுகளை எவ்வாறு உருவாக்குவது என்பதைக் கற்றுக்கொள்வது இதற்கு முன் எப்போதும் மிக முக்கியமானதாக இருந்ததில்லை. ஆனால் இனி இது அவசியம்” என்று பணியிடத் திறமை மற்றும் உரையாடல் நிபுணர் டான் நெக்ரோனி கூறுகிறார். புதிய தொழில்நுட்பங்கள் தகவல் தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் எதிர்காலத்தில் மிகவும் நம்பிக்கைக்குரிய தொழில்களில் ஒன்றாக இருப்பதில் ஆச்சரியமில்லை. செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றலின் வளர்ச்சி அதிக வேலை வாய்ப்புகளைக் கொண்டு வரும். இந்தத் துறையில் நம்பிக்கைக்குரிய எதிர்காலத் தொழில்களில் ஒன்று, ப்ராம்ட் இன்ஜினியரிங் (prompt engineer). இத்துறை நிபுணர்கள் செயற்கை நுண்ணறிவு மாதிரிகளுடன் தொடர்புகொண்டு, அதன் தேவையானவற்றை சரியாக உருவாக்கவும், செயற்கை நுண்ணறிவுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு வகையான இடைத்தரகராகச் செயல்படவும் உதவுவார்கள். செயற்கை நுண்ணறிவு தொடர்பான பிற சாத்தியமான வேலைகளில் நெறிமுறைவாதி (ethicists) பணியும் அடங்கும். அதாவது நெறிமுறைகள், பாதுகாப்பு பொறியியல் மற்றும் மனித-இயந்திர தொடர்புக்கான பயனர் நட்பு இடைமுகங்களை உருவாக்கும் பணிகளைச் செய்வது ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற நபர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இணையப் பாதுகாப்பு நிபுணர்களுக்கு நிச்சயமாக வேலைக்குப் பஞ்சம் இருக்காது செயற்கை நுண்ணறிவைப் பொறுத்தவரை, பிற தொழில்களைச் சேர்ந்தவர்கள் அதை ஒரு போட்டித் தொழிலாக கருதக் கூடாது. ஒரு கூட்டாளராக உணரவும், அதனுடன் எவ்வாறு ஒத்துழைக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். முக்கியத்துவம் பெறும் மற்றொரு துறை, பெரிய தரவுகளின் பகுப்பாய்வு (analysis of big data), இது ஹாட்ரான் மோதல் (Hadron Collider) அல்லது கட்டுப்பாட்டு அமைப்புகளில் இருந்து நெட்ஃபிக்ஸ் போன்ற இணைய தளங்கள் வரையிலான தகவல்களின் தொகுப்பாகும். இணையப் பாதுகாப்பு நிபுணர்களுக்கு நிச்சயமாக வேலைக்குப் பஞ்சம் இருக்காது. ஏனென்றால் நம்மைச் சுற்றி மிகவும் முக்கியமான தகவல்கள் நிறைந்துள்ளன, அவற்றைப் பாதுகாப்பது முக்கியமான ஒன்று. நிதி தொழில்நுட்பங்களில் வல்லுநர்கள், வணிக ஆய்வாளர்கள் மற்றும் பிளாக்செயின் அமைப்புகளை உருவாக்குபவர்களின் தேவையும் அதிகமாக இருக்கும். பசுமை வேலைகள் (Green jobs) உலகப் பொருளாதார அமைப்பின் 2023 வேலை வாய்ப்பு அறிக்கைப்படி, பசுமை வேலைகளுக்கான தேவை, துறைகள் மற்றும் தொழில்களில் வேகமாக வளர்ந்து வருகிறது. "உலகளவில், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், 2030ஆம் ஆண்டிற்குள் தூய ஆற்றல், செயல்திறன் மற்றும் குறைந்த உமிழ்வு தொழில்நுட்பங்களில் 30 மில்லியன் வேலைகள் உருவாகலாம்" என்று அறிக்கை கூறுகிறது. இப்போதைக்கு, பசுமை ஆற்றல் மற்றும் நிலையான வளர்ச்சியில் புதிய வேலை வாய்ப்புகளில் முன்னணியில் இருப்பது மேற்கத்திய நாடுகள் மற்றும் ஜப்பான். சீனாவும் படிப்படியாக இத்துறையில் வளர்ந்து வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த வேலைகள் வணிகம், அறிவியல், அரசியல் அல்லது நேரடியாக சுற்றுச்சூழலுடன் தொடர்புடையதாக இருக்கலாம். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அல்லது புதிய எரிசக்தி ஆதாரங்கள் மற்றும் பேட்டரிகளின் வளர்ச்சியில் பணிபுரியும் துறைகளுக்குள் இருக்கலாம். அழிந்து வரும் உயிரினங்களைப் பாதுகாத்தல், வணிக ஆலோசனை கொடுப்பது ஆகிய துறைகளும் இதில் அடங்கும். நகர்ப்புறத் திட்டமிடுபவர்கள், கட்டடக் கலைஞர்கள், வடிவமைப்பாளர்கள் மற்றும் ஸ்மார்ட் வீடுகளை உருவாக்குபவர்களின் தேவையும் அதிகமாக இருக்கும். மருத்துவப் பணியாளர்கள் உலக மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. மக்களின் ஆயுட்காலம் அதிகரித்து வருகிறது. மக்களுக்கான கவனிப்பும் சிகிச்சையும் இன்னும் அதிகமாகத் தேவைப்படும். எனவே, எதிர்காலத்தில் மருத்துவ நிபுணர்களுக்கும் தேவை அதிகமாக இருக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நோயாளிக்கு மருந்து மட்டுமல்ல, தார்மீக ஆதரவையும் வழங்கும் மருத்துவ ஊழியர்கள் மதிப்பு மிக்கவர்களாகப் பார்க்கப்படுவார்கள். நோயாளிக்கு மருந்து மட்டுமல்ல, தார்மீக ஆதரவையும் வழங்கும் மருத்துவ ஊழியர்கள் மதிப்பு மிக்கவர்களாகப் பார்க்கப்படுவார்கள். மருத்துவர்கள் மற்றும் சுகாதார நிபுணர்கள் தொடர்ந்து புதிய நோயறிதல் மற்றும் சிகிச்சை முறைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். இதற்கு செயற்கை நுண்ணறிவும் உதவியாக இருக்கும். உளவியலாளர்கள் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியின் பல்வேறு வழிகாட்டிகள் அல்லது ஆன்மீக நடைமுறைகளைப் பயிற்றுவிப்பவர்களுக்கும் தேவைகள் இருக்கும். உடல் உழைப்பு தொழில்துறை மெக்கானிக், ரிப்பேர்மேன், எலக்ட்ரீஷியன் அல்லது பில்டர்கள் போன்ற கைத்தொழில் செய்பவர்களுக்கான தேவை இனி வரும் ஆண்டுகளில் அதிகரிக்கும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,விவசாயத்தில் புதிய தொழில்களுக்கான தேவையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது வெவ்வேறு சூழ்நிலைகளில் சிறிய மற்றும் துல்லியமான பணிகளைச் செய்வது அவசியமானால், இயந்திரங்களைக் காட்டிலும் மனிதர்களின் தேவை ஈடுசெய்ய முடியாததாக இருக்கும். ஆனால் இந்த வல்லுநர்கள் தங்கள் தொழில்நுட்ப அறிவைத் தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் மற்றும் புதிய ஸ்மார்ட் கருவிகளில் தேர்ச்சி பெற வேண்டும். விவசாயத்தில் புதிய தொழில்களுக்கான தேவையும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் தொகை அதிகரித்து வருகிறது, எல்லோரும் சாப்பிட வேண்டும். ஆனால் விவசாயிகளைவிட திறமையான பொறியாளர்களுக்கான தேவை அதிகமாக இருக்கும். முக்கியத்துவம் இழக்கும் வேலைகள் தொழில் சந்தையில் இருந்து விரைவில் மறையத் தொடங்கும் பல வேலைகள் இருக்கின்றன. தொழிலாளர் சந்தையில் இருந்து விரைவில் மறைந்துவிடக் கூடிய சாத்தியமான வேலைகளின் பட்டியல் இதோ: வாடிக்கையாளர் சேவை (காசாளர்கள், விற்பனையாளர்கள், ஆலோசகர்கள் முதலியன) அலுவலக மேலாண்மை (தொலைநிலைப் பணியின் அதிகரிப்பு காரணமாக) தரவு உள்ளீடு (புள்ளியியல் துறையில் எழுத்தர்கள், நிதி, தட்டச்சு செய்பவர்கள், தொழில்நுட்ப மொழிபெயர்ப்பாளர்கள்) கணக்கியல் ஒரே மாதிரியான பணிகளைச் செய்யும் ஆலைத் தொழிலாளர்கள் கதை சொல்லி எதிர்கால தலைமுறையினரால் அரிதாகவே குறிப்பிடப்படும், ஆனால் எதிர்காலத்தில் சந்தேகத்திற்கு இடமின்றி தேவைப்படும் மற்றொரு தொழில் கதைசொல்லுதல். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மனித அனுபவத்தைக் கடத்துவது தொடர்பான கலைகள் மற்றும் ஆக்கப்பூர்வமான எந்தவொரு பணியும் சவால்கள் இருந்தபோதிலும் நிலைத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு தேவைப்பட்டது போலவே, மனித அனுபவத்தைக் கடத்துவது தொடர்பான எந்தவொரு ஆக்கப்பூர்வமான வேலையும் இப்போதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். செயற்கை நுண்ணறிவு இந்தத் துறைகளில் புதிய சவால்களைக் கொண்டு வந்தாலும் எழுத்தாளர்கள், கவிஞர்கள், இயக்குநர்கள், நடிகர்கள், நகைச்சுவை நடிகர்கள், கலைஞர்கள் மற்றும் இசைக் கலைஞர்களின் தேவை இருக்கும். https://www.bbc.com/tamil/articles/cgm7wr1z7jeo
-
எல்ரீஎல் ஹோல்டிங்ஸ் மற்றும் இந்தியா பெட்ரோநெட் எல்என்ஜி நிறுவனத்திற்கு இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்து
Published By: VISHNU 21 AUG, 2024 | 02:25 AM கெரவலப்பிட்டிய "சொபாதனவி" ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையத்திற்கு திரவ இயற்கை எரிவாயு சேமிப்பிற்கான உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், எல்என்ஜி எரிவாயுபரிமாற்றம் மற்றும் விநியோகம் தொடர்பில் இலங்கை எல்.டி.எல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மற்றும் பெட்ரோநெட் எல்.என்.ஜி நிறுவனம் ஆகியவற்றுக்கிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (20) பிற்பகல் கொழும்பு கலதாரி ஹோட்டலில் நடைபெற்றது. இலங்கை எல்ரீஎல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நுஹுமான் மரிக்கார் மற்றும் இந்தியாவின் பெட்ரோநெட் எல்என்ஐி நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அக்ஷய் குமார் சிங் ஆகியோர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, இலங்கையின் நுகர்வோர்களுக்கு தொடர்ச்சியான மற்றும் தரமான மின்சார விநியோகத்தை உறுதிசெய்து குறைந்த செலவில் மின்சாரத்தை வழங்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நோக்கத்திற்கமையவே இத்திட்டம் செயற்படுத்தப்படுவதாக தெரிவித்தார். கடந்த இரண்டு வருடங்களில் மின்சாரக் கட்டணம் தொடர்பில் அரசாங்கம் கடினமான கொள்கைத் தீர்மானங்களை எடுக்க வேண்டியிருந்த போதிலும், இன்று மின்சார சபையானது கடனற்ற பலமான நிறுவனமாக மாறியுள்ளதாகவும் அதனால்தான் உள்நாட்டு வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஊக்குவிப்பதன் ஊடாக புதிய உடன்படிக்கைகளை மேற்கொள்ள சந்தர்ப்பம் கிடைத்துள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார். எல்ரீஎல் ஹோல்டிங்ஸ் நிறுவனம் மற்றும் பெட்ரோநெட் எல்என்ஐி நிறுவனத்திற்கு இடையிலான கூட்டுமுயற்சியின் ஊடாக சொபாதனவி மின் உற்பத்தி நிலையத்திற்கு எல்என்ஐி வழங்குவதற்கான இடைக்கால தீர்வாக, இந்தியாவின் கொச்சியில் அமைந்துள்ள பெட்ரோநெட் நிறுவனத்தின் முனையத்தின் அதி குளிரூட்டல் வசதியுடன் கூடிய கொள்கலன்கள் ஊடாக கொழும்பு துறைமுகத்திற்கு எல்என்ஐி இறக்குமதி செய்வதற்கான தொழில்நுட்ப ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்த பின்னர், சொபாதனவி நிலையத்திற்கு அருகில் நிர்மாணிக்கப்படும் கெரவலப்பிட்டி சேமிப்பு மற்றும் எரிவாயுபரிமாற்ற முனையத்திற்கு ISO கொள்கலன்களில் எல்என்ஐி எடுத்துச் செல்லப்படும். சொபாதனவி ஆலையின் முதல் கட்டம் ஆகஸ்ட் 2024 லும், இரண்டாம் கட்டம் 2025 முதல் காலாண்டிலும் ஆரம்பிக்கப்படுவதோடு இந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். அத்தோடு எல்ரீஎல் ஹோல்டிங்ஸ் நிறுவன மின் அபிவிருத்திப் பிரிவான லக்தனவி நிறுவனத்தினால் அபிவிருத்தி செய்யப்பட்டு இயக்கப்படும் .இந்த ஆலை அரசாங்கத்தின் தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப நாட்டின் எரிசக்தி ஆற்றல் உற்பத்தி திறனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தூய எரிசக்தி ஆதாரமான எல்என்ஜியின் பயன்பாட்டின் ஊடாக பசுமை இல்ல வாயு உமிழ்வை குறிப்பிடத்தக்க அளவினால் குறைத்து இலங்கை தனது சுற்றுச்சூழல் இலக்குகளை அடைய உதவும்.மேலும், எல்என்ஜி மின்சார உற்பத்திச் செலவைக் குறைக்கும் என்பதோடு நுகர்வோருக்கு பொருளாதார நிவாரணம் மற்றும் பரந்த பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கருத்துத் தெரிவித்த மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர, கடந்த எரிசக்தி நெருக்கடியின் போது, இந்த நாட்டில் மின்சாரத்தின் தேவையை கருத்தில் கொண்டு, பல்வேறு முன்மொழிவுகள் குறித்து ஆராயப்பட்டது. எரிசக்தி நெருக்கடிக்கு தீர்வு வழங்குவது மற்றும் இயற்கை திரவ எரிவாயு மூலம் செலவைக் குறைப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது. இதன் விளைவாக கடந்த வருடம் மார்ச் மாதம் இந்திய அரசாங்கத்தின் இயற்கை எரிவாயு மற்றும் பெற்றோலிய அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்த போது இத்திட்டத்திற்கான முதற்கட்ட முன்மொழிவு கையளிக்கப்பட்டது. அந்த முன்மொழிவைத் தொடர்ந்து கடந்த சில மாதங்களாக இடம்பெற்ற கலந்துரையாடலின் பலனாக இன்று இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்படுகிறது. இன்றிலிருந்து 18 மாதங்களுக்குள், ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டுள்ள எல்ரீஎல் குழுமத்தின் தற்போதைய மின் நிலைய கட்டமைப்புக்கு தேவையான உட்கட்டமைப்பு மேம்பாடு மற்றும் தேவையான திரவ இயற்கை எரிவாயு விநியோகம் ஆகியவற்றுடன் இந்த நாட்டு மக்களுக்கு தேவையான நன்மைகளை வழங்க எதிர்பார்க்கிறோம். திரவ இயற்கை எரிவாயு மூலம் மின்சார உற்பத்தி ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் இந்த நாட்டில் மின்சாரச் செலவைக் குறைக்க முடியும்.மின் உற்பத்தி நிலையங்கள் எல்என்ஜியில் இயங்கும் போது, குறைந்தபட்சம் 40% முதல் 50% வரை செலவைக் குறைக்க முடியும். அந்த அனுகூலத்தை நுகர்வோருக்கு வழங்குவதற்கும் இலங்கையில் எரிசக்தி செலவைக் குறைப்பதற்கும் நாங்கள் எதிர்பார்க்கிறோம். இது எளிதான பணி அல்ல என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், குறிப்பாக யுகதனவி மற்றும் சொபாதனவி மின் உற்பத்தி நிலையங்களில் இந்த மின் உற்பத்தி நடவடிக்கைகளை ஆரம்பிக்க எதிர்பார்க்கிறோம். ஆனால் சொபாதனவி மின்உற்பத்தி நிலையம் ஆகஸ்ட் 28ஆம் திகதி திறக்க எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உடன்படிக்கை கைச்சாத்திடுவதன் மூலம் இந்நாட்டு மின்சார பாவனையாளர்கள் எதிர்காலத்தில் பாரிய அனுகூலத்தைப் பெறப் போகிறார்கள். இது நிதி நன்மைகளைப் பெறுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. நாட்டின் மின்சாரத் தேவையில் 70% புதுப்பிக்கத்தக்க எரிசக்தியிலிருந்தும், மீதமுள்ள 30% இயற்கை எரிவாயுவைப் பயன்படுத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது. 2022ஆம் ஆண்டில் மின்சார சபை 300 பில்லியன் ரூபா நட்டத்தைச் சந்தித்துள்ளது. அவற்றில் நாட்டின் இரண்டு அரச வங்கிகளில் இருந்து பெறப்பட்ட கடன்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய பணமும் அடங்கும். வங்கிக் கடன்களில் பெரும் பகுதியைச் செலுத்திவிட்டோம். மேலும், மின் உற்பத்தி நிலையங்களை இயக்கும் விநியோகஸ்தர்களுக்கு செலுத்த வேண்டிய அனைத்து கட்டணங்களும் தற்போது செலுத்தப்பட்டுள்ளன. மேலும், கடினமான மற்றும் சரியான முடிவுகளை எடுத்ததன் காரணமாக பெற்றோலியக் கூட்டுத் தாபனத்தின் அனைத்து கடன்களையும் செலுத்த முடிந்துள்ளது" என்றும் அவர் தெரிவித்தார். இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தானிகர் கலாநிதி சத்தியஞ்சல் பாண்டே: அனைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு நம்பகமான, சுத்தமான மற்றும் நிலையான எரிசக்தி வழங்கல் மிகவும் முக்கியமானது. எமது கூட்டு முயற்சிகள் இலங்கையின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதிலும் பொருளாதார அபிவிருத்தியின் முக்கிய அங்கமாக செயற்படும். ஆற்றல் செலவினங்களைக் குறைப்பதிலும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. உலகளாவிய எரிசக்தி வலையமைப்பில் இலங்கையை இணைப்பதன் ஊடாக பிரதான எரிசக்தி பரிமாற்ற மத்திய நிலையமாக இலங்கையின் மிகப்பெரிய பசுமை மூலங்களை பயன்படுத்தவும் முதலீட்டை ஈர்க்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எங்கள் தற்போதைய திட்டங்களில் எரிசக்தி வலையமைப்பு இணைப்பு, உட்கட்டமைப்பு இணைப்பு மற்றும் பல்உற்பத்திக் குழாய்களை நிறுவுதல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படுகிறது. சம்பூரில் சூரிய சக்தி மின் திட்டம் போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திட்டங்களிலும் முதலீடு செய்து வருகிறோம்" என்றார். மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி சுலக்ஷன ஜயவர்தன,எல்ரீஎல் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் தலைவர் யு.டி.ஜயவர்தன, இலங்கை மின்சார சபையின் தலைவர் நளிந்த இளங்ககோன், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சாலிய விக்கிரமசூரிய மற்றும் ஏனைய அமைச்சின் அதிகாரிகள், அரச அதிகாரிகள், முதலீட்டாளர்கள். , இரு நிறுவனங்களின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/191578
-
ரஷ்யா பெரும் தாக்குதலுக்கு தயாராகும் வேளையில் யுக்ரேன் செல்வதா? மோதியை எச்சரிக்கும் பாதுகாப்பு நிபுணர்கள்
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பிரதமர் நரேந்திர மோதி மற்றும் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி 2 மணி நேரங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதி இந்த வாரம் யுக்ரேனுக்கு அதிகாரபூர்வ பயணமாகச் செல்ல இருக்கிறார். இந்திய வெளியுறவு அமைச்சகம் ஒரு செய்தியாளர் சந்திப்பில் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளது. "யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் 23 வெள்ளிக்கிழமை யுக்ரேனுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார்" என்று வெளியுறவு அமைச்சக செயலர் (மேற்கு), தன்மய் லால் திங்களன்று செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். "இதுவொரு முக்கியமான மற்றும் வரலாற்றுப் பயணம். ஏனெனில் நமது தூதாண்மை உறவுகள் ஏற்படுத்தப்பட்ட 30 ஆண்டுகளுக்கும் கூடுதலான காலத்தில் இந்திய பிரதமர் ஒருவர் யுக்ரேனுக்கு செல்வது இதுவே முதல்முறை" என்று அவர் கூறினார். ரஷ்யா-யுக்ரேன் மோதல் குறித்துப் பேசிய தன்மய் லால், "இந்தியா மிகவும் தெளிவான மற்றும் நிலையான நிலைப்பாட்டைப் பராமரிக்கிறது. இந்த மோதலை தூதாண்மை மற்றும் பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்க முடியும். அது நீடித்த அமைதிக்கு வழிவகுக்கும். எனவே பேச்சுவார்த்தை மிகவும் முக்கியமானது," என்று குறிப்பிட்டார். இருதரப்புக்கும் ஏற்புடைய மாற்றுவழிகள் மூலம் மட்டுமே நிரந்தர அமைதியை அடைய முடியும். எனவே பேச்சுவார்த்தை மூலம் மட்டுமே தீர்வு காண முடியும் என்றார் அவர். ”இந்தச் சிக்கலான பிரச்னைக்கு அமைதியான முறையில் தீர்வு காண சாத்தியமான எல்லா உதவிகளையும், பங்களிப்பையும் வழங்க இந்தியா தயாராக உள்ளது. இந்தியா-யுக்ரேன் தலைவர்களுக்கு இடையிலான பேச்சுவார்த்தையின் முடிவு என்னவாக இருக்கும் என்று முன்கூட்டியே கணிப்பது சரியாக இருக்காது,” என்று தன்மய் லால் தெரிவித்தார். யுக்ரேன் செல்வதற்கு முன் பிரதமர் மோதி போலந்துக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்வார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ”போலந்து பிரதமர் டொனால்ட் டஸ்கின் அழைப்பின் பேரில் பிரதமர் நரேந்திர மோதி, ஆகஸ்ட் 21, 22 ஆகிய தேதிகளில் போலந்துக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார். இந்திய பிரதமர் ஒருவர் 45 ஆண்டுகளுக்குப் பிறகு போலந்து செல்கிறார்" என்றார் தன்மய் லால். நமது தூதாண்மை உறவுகள் நிறுவப்பட்டதன் 70ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடும் வேளையில் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்தார். ஸெலென்ஸ்கி என்ன சொன்னார்? பட மூலாதாரம்,GETTY IMAGES யுக்ரேன் அதிபர் அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பிரதமர் நரேந்திர மோதியின் பயணம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. "ஆகஸ்ட் 23ஆம் தேதி யுக்ரேனின் தேசியக் கொடி தினத்தையொட்டி இந்திய பிரதமர் நரேந்திர மோதி யுக்ரேனுக்கு அதிகாரப்பூர்வ பயணமாக வருகிறார். இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகள் துவங்கிய பிறகு இந்திய பிரதமர் ஒருவர் யுக்ரேனுக்கு பயணம் மேற்கொள்வது இதுவே முதல்முறை,” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "இந்தப் பயணத்தின் போது, இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து அதிபர் ஸெலென்ஸ்கி விவாதிப்பார். இரு நாடுகளுக்கும் இடையே பல ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும்" என்று அந்த அறிக்கை மேலும் தெரிவிக்கிறது. கடுமையான எதிர்வினை கடந்த 2022 பிப்ரவரியில் ரஷ்யா-யுக்ரேன் போர் வெடித்த பிறகு பிரதமர் மோதி இத்தாலி மற்றும் ஜெர்மனியில் நடந்த ஜி7 உச்சி மாநாடுகளின் போது யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியை சந்தித்தார். ஆனால் அவர் இதுவரை யுக்ரேனுக்கு செல்லவில்லை. இத்தாலியில் ஸெலென்ஸ்கியை சந்தித்த மோதி, யுக்ரேன் நெருக்கடிக்கு அமைதியான முறையில் தீர்வு காண இந்தியா தன்னால் முடிந்த அனைத்தையும் செய்யும் என்று கூறினார். தற்போது பிரதமர் மோதியின் யுக்ரேன் பயணத் திட்டம் பலரிடமிருந்து கடுமையான எதிர்ப்பைப் பெற்றுள்ளது. “இந்த நேரத்தில் மோதியின் யுக்ரேன் பயணம் மிகவும் மோசமானது என்று நிரூபணமாகலாம். யுக்ரேனின் சமீபத்திய கைப்பற்றல்களுக்குப் பிறகு ரஷ்யா அதன் மீது பெரும் தாக்குதலை நடத்தத் தயாராகி வருகிறது. இங்கு போர் நிறுத்தத்தில் அமெரிக்காவுக்கு எந்த ஆர்வமும் இல்லை,” என்று பாதுகாப்பு விவகார நிபுணர் பிரம்மா செலானி தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். வங்கதேசத்தைக் குறிப்பிட்ட பிரம்மா செலானி, இந்தியா எதிர்கொள்ளும் சவால்கள் மீது கவனம் செலுத்துமாறு மோதிக்கு அறிவுரை வழங்கினார். மோதி யுக்ரேன் செல்ல அமெரிக்காவின் அழுத்தமே காரணமா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,கடந்த ஜூன் மாதம் ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோதி இத்தாலி சென்றார். முன்னதாக பிரதமர் நரேந்திர மோதி ஜூலை மாதம் ரஷ்யா சென்றிருந்தார். ரஷ்ய அதிபர் புதினுடனான பிரதமர் மோதியின் சந்திப்பு குறித்து யுக்ரேன் அதிபர் கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் தாம் மிகுந்த ஏமாற்றம் அடைந்ததாக வொலோதிமிர் ஸெலென்ஸ்கி எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். ”இது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் தலைவர், ரத்தக்களரியை ஏற்படுத்தியுள்ள உலகின் மிகப்பெரிய குற்றவாளியைத் தழுவிக்கொண்டது அமைதி முயற்சிகளுக்கு மிகப்பெரிய அடி" என்று அவர் குறிப்பிட்டார். சமூக ஊடகங்களில் 'தி வயர்' வெளியிட்ட ஒரு வீடியோவில், தூதாண்மை விவகார நிபுணர் கிருஷ்ணன் சீனிவாசனும் யுக்ரேன் செல்லும் மோதியின் திட்டம் குறித்துக் கேள்வி எழுப்பியுள்ளார். “பிரதமர் யுக்ரேன் சென்றால் நான் ஏமாற்றமடைவேன். இதிலிருந்து எந்த நேர்மறையான விளைவையும் நான் காணவில்லை. மேலும் இந்தியாவின் தற்போதைய கொள்கைகளுக்கு இந்தப் பயணம் மிகவும் ஆபத்தானதாக நிரூபணமாகக் கூடும்,” என்று கரண் தாப்பரின் நிகழ்ச்சி ஒன்றில் கிருஷ்ணன் சீனிவாசன் குறிப்பிட்டார். இந்தியாவின் தற்போதைய கொள்கை சரியானதுதான் என்று கூறிய கிருஷ்ணன் சீனிவாசன், ”இந்தியா தனது சொந்த சுதந்திரக் கொள்கையைப் பராமரிக்கிறது. ஆனால் இந்தப் பயணத்திற்குப் பிறகு இந்தியா மீது மேற்கத்திய நாடுகளின் எந்த அழுத்தமும் இல்லை என்பதைக் காட்டுவது கடினம்,” என்றும் தெரிவித்தார். 'இந்தியாவின் சுதந்திர பாதுகாப்பு கொள்கையின் ஒரு பகுதி' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் சர்வதேச விவகார நிபுணரும், ஜேஎன்யு பேராசிரியருமான ஸ்வரன் சிங், தனியார் செய்தி சேனலில் நடந்த ஒரு விவாதத்தில், “பிரதமர் மோதி ஜூலை 8ஆம் தேதி ரஷ்யாவுக்கு சென்றதிலிருந்து அவர் விரைவில் யுக்ரேனுக்கும் செல்வார் என்றே தோன்றியதாக,” குறிப்பிட்டார். "இந்தியா உலகிற்கு புத்தரைக் கொடுத்தது, போரை அல்ல என்பது உண்மைதான். ஆனால் அவரது ரஷ்ய பயணத்திற்குப் பிறகு அமெரிக்கா கடுமையான எதிர்வினையை வெளியிட்டது. பிரதமரின் யுக்ரேன் பயணம் அதன் தாக்கமாகவும் இருக்கலாம். ஆனால் இது இந்தியாவின் சுதந்திரமான பாதுகாப்பு செயல் உத்தியின் ஒரு பகுதி என்று நான் கருதுகிறேன்,” என்றார் அவர். கடந்த 2022 பிப்ரவரியில் யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திய தாக்குதலுக்குப் பிறகு மேற்கத்திய நாடுகள் ரஷ்யா மீது பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தன. இருப்பினும் இந்தியா, சீனா போன்ற நட்பு நாடுகள் ரஷ்யாவுடன் வர்த்தகத்தைத் தொடர்கின்றன. இந்தப் போருக்கு ரஷ்யாவை நேரடியாகக் குற்றம் சாட்டுவதை இந்தியா தவிர்த்து வருகிறது. ரஷ்யா இதை ஒரு சிறப்பு ராணுவ நடவடிக்கை என்று அழைக்கிறது. அதே நேரத்தில் பேச்சுவார்த்தை மற்றும் தூதாண்மை வழிகள் மூலம் மோதலைத் தீர்க்குமாறு இரு அண்டை நாடுகளையும் இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது. ”ரஷ்யாவுடனான இந்தியாவின் உறவுகள் குறித்து அமெரிக்கா கவலை தெரிவித்தது. குறிப்பாக சீனாவின் வளர்ந்து வரும் ஆதிக்கத்திற்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்தியாவுடனான உறவுகளை வலுப்படுத்த அமெரிக்கா முயலும் நேரத்தில் இந்தக் கவலை வெளியானது,” என்று ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. அதே நேரத்தில், 'மோதி யுக்ரேனுக்கு பயணம் மேற்கொண்டால் அதை நாங்கள் வரவேற்போம்' என்று செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் வேதாந்த் படேல் தெரிவித்தார். அமெரிக்க தூதரின் எதிர்வினை பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மூன்றாவது முறையாக பிரதமரான பிறகு நரேந்திர மோதி தனது முதல் வெளிநாட்டுப் பயணத்திற்கு ரஷ்யாவை தேர்வு செய்தார். ஜூலை 8, 9 ஆகிய தேதிகளில் நரேந்திர மோதி ரஷ்யாவுக்கு பயணம் மேற்கொண்டார். அந்த நேரத்தில் ரஷ்ய ஏவுகணை தாக்குதல்களில் யுக்ரேனில் டஜன்கணக்கான மக்கள் கொல்லப்பட்டனர். ஏவுகணைத் தாக்குதலில் சில குழந்தைகள் இறந்த செய்தியும் வெளியானது. அதே நேரத்தில் நேட்டோவின் சிறப்பு உச்சி மாநாடும் வாஷிங்டனில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கியும் பங்கேற்றார். அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சல்லிவன் மற்றும் வெளியுறவு அதிகாரி டொனால்ட் லூ உட்பட பல மூத்த அமெரிக்க அதிகாரிகள் மோதியின் ரஷ்ய பயணம் ‘நேரம் மற்றும் அது தரும் செய்தியின் அடிப்படையில் ஏமாற்றம் தருவதாக’ கூறினர். குறிப்பாக மோதிக்கும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கும் இடையே நடந்த கட்டித் தழுவலை ஸெலென்ஸ்கி கடுமையாக விமர்சித்தார். இதுதவிர அமெரிக்காவை ’லேசாக எடுத்துக் கொள்ள வேண்டாம்’ என்றும் ’போர்க் காலங்களில் செயல் உத்தி சுயாட்சி என்று எதுவும் இல்லை’ என்றும் அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கூறினார். இதைத் தொடர்ந்து ஜேக் சல்லிவனிடம் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசினார். 'சேதத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சி' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிரதமர் மோதியின் ரஷ்ய பயணத்தை இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் எரிக் கார்செட்டி கடுமையாக விமர்சித்தார். ‘மோதியின் ரஷ்ய பயணத்தால் ஏற்பட்ட பாதிப்புகளைக் குறைக்க இந்திய வெளியுறவு அமைச்சகம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக ’தி இந்து’ ஆங்கில நாளிதழில் வெளியான செய்தி தெரிவிக்கிறது. பிரதமர் மோதி யுக்ரேனுக்கும் பயணம் மேற்கொள்ளக் கூடும் என்று வெளியுறவு அமைச்சகம் அந்த நேரத்தில் சூசகமாகத் தெரிவித்திருந்தது. இந்தியாவுக்கான யுக்ரேன் தூதர் ஒலெக்சாண்டர் போலிஷ்சுக் வெளியுறவு அமைச்சகத்தில் ஒரு சந்திப்புக்கு அழைக்கப்பட்டார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், ’இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது’ தொடர்பாக யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுடன் தொலைபேசியில் பேசினார். இதுதவிர இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் யுக்ரேன் பாதுகாப்பு ஆலோசகர் ஆண்ட்ரே யெர்மக் இடையிலும் தொலைபேசி உரையாடல் நடந்தது. இந்தியா-யுக்ரேன் உறவுகள் பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு,கடந்த ஆண்டு ஹிரோஷிமாவில் நடைபெற்ற ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோதியும் அதிபர் ஸெலென்ஸ்கியும் சந்தித்தனர். இந்தியாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது. ரஷ்யா - யுக்ரேன் போருக்கு முன்பு ஏராளமான இந்திய மாணவர்கள் யுக்ரேனுக்கு உயர்கல்விக்காகச் சென்றனர். இதுதவிர இந்தியா மற்றும் யுக்ரேன் இடையே பரஸ்பர வர்த்தகமும் உள்ளது. யுக்ரேனிடம் இருந்து பல்வேறு பொருட்களை வாங்கும் நாடாக இந்தியா இருந்து வருகிறது. இருதரப்பு உறவுகளில் பதற்றம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் ரஷ்யாவை விமர்சிக்க இந்தியாவின் மறுப்பு ஆகியவற்றுக்கு இடையே யுக்ரேன் வெளியுறவு அமைச்சர் திமித்ரி குலேபா இந்த ஆண்டு மார்ச் மாதம் முதல்முறையாக இந்தியா வந்தார் என்று 'தி இந்து' நாளிதழில் வெளியான ஒரு செய்தி தெரிவிக்கிறது. குலேபாவுடன் பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றமும், அமைதித் தீர்வு குறித்த விரிவான விவாதமும் நடைபெற்றதாக இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது. மார்ச் 25ஆம் தேதி தனது வருகையை அறிவித்த குலேபா, ’இந்தியாவை ’ஒரு சக்தி வாய்ந்த சர்வதேச குரல் மற்றும் ஒரு முக்கியமான உலகளாவிய சக்தியாக’ யுக்ரேன் பார்ப்பதாகக் கூறினார். மாறாக, மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் இருந்த போதிலும் ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து எண்ணெய் வாங்குவதை 2022 ஆகஸ்டில் அவர் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்தியாவிற்கு வழங்கப்படும் ஒவ்வொரு பீப்பாய் ரஷ்ய கச்சா எண்ணெயிலும் "குறிப்பிடத்தக்க அளவு யுக்ரேனிய ரத்தம் உள்ளது” என்று அவர் கூறியிருந்தார். இருப்பினும், இரு நாடுகளுக்கும் இடையே நட்பும் திறந்த உறவும் இருப்பதாகவும், ரஷ்ய தாக்குதலுக்குப் பிறகு இந்திய மாணவர்களைப் பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கு யுக்ரேன் உதவி செய்ததாகவும் அவர் கூறினார். கடந்த 2022ஆம் ஆண்டில் போர் தொடங்கியதில் இருந்து யுக்ரேன், ரஷ்யா ஆகிய இரு நாடுகளுக்கும் சென்ற ஒரு சில தலைவர்களில் மோதியும் ஒருவராக இருப்பார். இவர்களில் ஹங்கேரி, இந்தோனீசியா, தென்னாப்பிரிக்கா, துருக்கி ஆகிய நாடுகளின் தலைவர்கள் அடங்குவர். https://www.bbc.com/tamil/articles/cx2g48464n9o
-
சிந்துஜாவின் மரணத்தின் எதிரொலி; மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் பல்வேறு தீர்மானங்கள் முன்னெடுப்பு
Published By: DIGITAL DESK 3 21 AUG, 2024 | 09:04 AM மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை (20) மாலை அவசர கலந்துரையாடல் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரன் தலைமையில் இடம்பெற்ற குறித்த கலந்துரையாடலில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கணகேஸ்வரன், மேலதிக அரசாங்க அதிபர், பிரதேச செயலாளர், உதவி மாவட்ட செயலாளர், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியசாலை பணிப்பாளர், அருட்தந்தையர்கள், வைத்திய நிபுணர்கள் ,சிவில் சமூக பிரதிநிதிகள், ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். இதன்போது மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் எதிர்கால நகர்வு தொடர்பாகவும் மக்கள் அச்சமின்றி வைத்தியசாலைக்கு வரும் சூழலை ஏற்படுத்தி முன்னோக்கி நகர்வோம் என்னும் நோக்கு நிலையில் பல விடயங்கள் அறிவு பூர்வமாக ஆராயப்பட்டன. இதன் போது சில விடயங்களுக்கு தீர்வு கோரி ஜனாதிபதிக்கு கடிதம் எழுதுவதாக அரசாங்க அதிபர் கூறினார். மேலும் இன்முகத்தோடு நோயாளரை அணுகும் முறைமை தொடர்பில் பயிற்சி வழங்குவது என்றும் தீர்மானிக்கப்பட்டது. சிந்துஜாவின் துன்பியல் சம்பவம் போன்று இனி நிகழக் கூடாது என்று வலியுறுத்தப்பட்டது. https://www.virakesari.lk/article/191585
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
காஸாவில் ஆறு பணயக் கைதிகளின் உடல்கள் மீட்பு - இஸ்ரேல் ராணுவம் கூறுவது என்ன? பட மூலாதாரம்,HOSTAGE FAMILIES FORUM படக்குறிப்பு, மேல் இடமிருந்து வலம்: நடவ் பாப்பிள்வெல், அவ்ரஹாம் முண்டர், யாகேவ் புச்ஷ்டாப், அலெக்ஸ் டான்சிக், சைம் பெரி, யோரம் மெட்ஜெர் கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பென்னெட் பதவி, பிபிசி செய்திகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹமாஸால் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டிருந்த 6 பேரின் உடல்கள் காஸா முனையில் உள்ள ஒரு சுரங்கப்பாதையில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது. கான் யூனிஸ் பகுதியில் இருந்து யாகேவ் புச்ஷ்டாப், அலெக்சாண்டர் டான்சிக், அவ்ரஹாம் முண்டர், யோரம் மெட்ஸ்கர், ஹைம் பெர்ரி மற்றும் பிரிட்டிஷ் - இஸ்ரேலியரான நடவ் பாப்பிள்வெல் ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக திங்கட்கிழமை அன்று வெளியான இஸ்ரேல் பாதுகாப்பு படையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் அவ்ரஹாம் முண்டர் உயிருடன் இருப்பதாக நம்பப்பட்டது. ஆனால் மீதம் இருக்கும் ஐந்து நபர்களும் இறந்துவிட்டதாக இஸ்ரேல் ஏற்கனவே அறிவித்திருந்தது. சில மாதங்களுக்கு முன்பு, இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஏற்பட்ட காயங்களின் காரணமாக பணயக்கைதிகளுள் ஒருவரான பாப்பிள்வெல் இறந்ததாக முன்பு ஹமாஸ் ஆயுதக்குழு கூறியிருந்தது. பாதுகாப்பு நிறுவனமான ஷின் பெட் உடன் இணைந்து இஸ்ரேல் ராணுவப் படை, இந்த மீட்பு நடவடிக்கையை எடுத்து வந்தது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி அன்று ஹமாஸ் ஆயுதக்குழு தெற்கு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலின் போது இவர்கள் ஆறு பேரும் உயிரோடு கடத்தப்பட்டு, பின்னர் காஸாவிற்கு கொண்டு செல்லப்பட்டதாக 'பணயக்கைதிகள் குடும்பங்கள் மன்றம்' கூறுகின்றது. "இவர்களின் உடல்கள் மீட்கப்பட்டதே, இக்குடும்பங்கள் அனுபவிக்கும் துயரத்திற்கு தீர்வாக இருக்க முடியும். மீதம் உள்ள 109 பணயக்கைதிகளை காஸாவிலிருந்து விடுவித்து அழைத்து வருவது என்பது பேச்சு வார்த்தைகள் மூலம் மட்டுமே சாத்தியம் ஆகும்" என்று அந்த மன்றத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. "தற்போது பேச்சு வார்த்தையில் இருக்கும் ஒப்பந்தங்களுக்கு முடிவு காண தன்னால் முடிந்த அனைத்தையும் அரசாங்கம் செய்ய வேண்டும்" என்று அந்த மன்றம் இஸ்ரேலிய அரசாங்கத்தை கேட்டுக்கொண்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் 40,000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் போர்நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான ஒப்பந்தங்கள் குறித்த பேச்சு வார்த்தைகள் நடந்து வருகின்றன. இஸ்ரேல்-காஸா இடையே இது குறித்த ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்று தற்போது மத்திய கிழக்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கன் வலியுறுத்தி வருகிறார். திங்கட்கிழமை அன்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ஆண்டனி பிளிங்கனும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும் இஸ்ரேலின் டெல் அவிவ் நகரத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே போர்நிறுத்தம் தொடர்பான "இணைப்பு முன்மொழிவு" (bridging proposal) ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானதாக பிளிங்கன் கூறினார். பணயக்கைதிகளின் உடல்கள் மீட்கப்பட்டதற்கு பிறகு, "இறந்தவர்களின் குடும்பத்திற்கு எங்களது ஆழ்ந்த இரங்கல் தெரிவிப்பதோடு இந்த துக்கத்தை பகிர்ந்துகொள்கிறோம்" என்று செவ்வாய்கிழமை அன்று இஸ்ரேல் அதிபர் ஐசக் ஹெர்சாக் கூறினார். "அனைத்து பணயக்கைதிகளையும் விடுவித்து நாட்டிற்கு அழைத்து வரும்வரை நமது முயற்சிகளை ஒரு கணம் கூட நிறுத்தக்கூடாது", என்று இஸ்ரேல் அதிபர் கூறினார். கான் யூனிஸ் மற்றும் டெய்ர் அல்-பாலாவின் புறநகர்ப் பகுதிகளில் தனது செயல்பாட்டை விரிவுபடுத்தி இருப்பதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை கூறியுள்ளது. மேற்கு கான் யூனிஸில் உள்ள இணைய விநியோக மையம் ஒன்றின் மீது இஸ்ரேலிய விமானத் தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டதாக உள்ளூர் சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். கான் யூனிஸின் கிழக்கே உள்ள அபாசனில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக மருத்துவ அதிகாரி ஒருவர் ஏஃஎப்பி செய்தி முகமையிடம் கூறினார். அக்டோபர் 7 ஆம் தேதி அன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் ஆயுதக் குழுவினர் முன்னறிவிப்பின்றி நடத்திய தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 251 பேர் பணயக்கைதிகளாக கொண்டுசெல்லப்பட்டனர், பதிலடி கொடுக்கும் விதமாக காஸாவில் இஸ்ரேல் ராணுவம் தனது தாக்குதலை தொடங்கியது. https://www.bbc.com/tamil/articles/cq6rm362e8lo
-
அரிய வானியல் நிகழ்வு: சிவப்பு நிறத்தில் தோன்றிய சூப்பர் - ப்ளூ மூன், எங்கே?
பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, வானில் அரிய நிகழ்வாக கருதப்படும் சூப்பர்- ப்ளூ மூன் ஞாற்றுக்கிழமை இரவு பிரிட்டனில் தென்பட்டது 30 ஆகஸ்ட் 2023 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் (2024 ஆகஸ்ட் 18-ம் தேதி சூப்பர் ப்ளூ மூன் தென்பட்டதையடுத்து 2023-ல் வெளியிடப்பட்ட இந்த கட்டுரை புதிய தகவல்களுடன் புதுப்பிக்கப்பட்டுள்ளது) வானில் அரிய நிகழ்வாக கருதப்படும் ‘சூப்பர்- ப்ளூ மூன்’ (Super- Blue moon) ஞாற்றுக்கிழமை இரவு பிரிட்டனில் தென்பட்டது. அப்போது நிலவு திடீரென சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது. வானில் தென்பட்ட இந்த அரிய காட்சியை பிரிட்டன் மக்கள் கண்டு மகிழ்ந்தனர். ‘ப்ளூ மூன்’ என்று அழைக்கப்பட்டாலும், நிலவு உண்மையில் நீல நிறமாக மாறுவதில்லை. ஆனால், பிரிட்டனின் மேல் உள்ள வளிமண்டலத்தில், வடஅமெரிக்க காட்டுத்தீயால் உண்டான புகை நிலைகொண்டதால், ஞாயிற்றுக்கிழமை இரவு தோன்றிய ‘ப்ளூ மூன்’ சிவப்பு நிறத்தில் காணப்பட்டது. வளிமண்டலத்தில் புகைத் துகள்கள் இருந்தால், ஸ்பெக்ட்ரமின் (நிற மாலை) ஆரஞ்சு மற்றும் சிவப்பு நிறங்கள் வழக்கத்தை விட அதிகமாகத் தெரியும் வகையில் வளிமண்டலத்தின் வழியாகச் செல்லும் ஒளியானது சிதறடிக்கப்படும். இதுவே இந்த சிவப்பு நிலவிற்கு காரணம். இந்த 'சூப்பர்-ப்ளூ மூன்' என்றால் என்ன? இதற்கு வானியல் மற்றும் புவியியல் ரீதியான முக்கியத்துவம் ஏதேனும் உண்டா? சூப்பர் மூன் என்றால் என்ன? பட மூலாதாரம்,BBC WEATHER WATCHERS / COASTAL JJ நிலவு பூமியை ஒரு நீள்வட்டப் பாதையில் சுற்றி வருகிறது. இந்தப் பாதையில், நிலவு பூமியில் இருந்து மிகத் தொலைவான புள்ளியில் இருக்கும்போது சற்று சிறியதாகத் தோன்றும். இந்தப் புள்ளி பூமியில் இருந்து சராசரியாக 405,500 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. அதுவே நிலவு தனது நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது சற்றே பெரிதாகத் தெரியும். இந்தப் புள்ளி பூமியில் இருந்து கிட்டத்தட்ட 363,300 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. ஆனால், இந்த வித்தியாசங்கள் மிகச் சிறியவை. வெறும் கண்களால் இதைக் கண்டறிவது கடினம். ஒரு தொலைநோக்கியின் மூலம் அதைப் படம் பிடித்தால்தான் அதன் வித்தியாசத்தை நாம் காண முடியும் என்கிறார், விஞ்ஞான் பிரசார் அமைப்பின் முதுநிலை விஞ்ஞானி த.வி.வெங்கடேஸ்வரன். பட மூலாதாரம்,BBC WEATHER WATCHERS / WRIGHTSAYCHEESE படக்குறிப்பு, ப்ளூ மூன் என்பது, ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவு ப்ளூ மூன் என்றால் என்ன? ப்ளூ மூன் என்பது, ஒரே மாதத்தில் வரும் இரண்டாவது முழுநிலவு. இது அரிய நிகழ்வாகப் பார்க்கப்படுவதால், ஆங்கிலத்தில் ‘ப்ளூ’, அதாவது அரிதான நிகழ்வு என்ற அர்த்தத்தில் மேற்குலகில் அழைக்கப்படுகிறது. இதற்கான காரணம் ஆங்கில மாதங்களின் அமைப்புதான் என்கிறார் வெங்கடேஸ்வரன். ஐரோப்பிய காலண்டர் அமைப்பில் ஜூலியஸ் சீசர் மற்றும் அகஸ்டஸ் சீசர் ஆகிய ரோமானிய மன்னர்களின் பெயரில் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்கள் அடுத்தடுத்து 31 நாட்களுடன் இணைக்கப்பட்டதால், மாதங்களின் நாட்கணக்குகள் கூடக் குறைய மாறின. உதாரணத்துக்கு பிப்ரவரி மாதத்துக்கு 29 நாட்கள். ஆனால், நிலவு பூமியைச் சுற்றிவர 29.5 நாட்கள் ஆகிறது. இதனால், ஆங்கில நாட்காட்டியின் படி, ஒரே மாதத்தில் இரண்டு முழுநிலவுகள் வருவது அரிதானது. அதைக் குறிக்கவே இதை ‘ப்ளூ மூன்’ என்று அழைத்தனர் என்கிறார் வெங்கடேஸ்வரன். இது நாட்காட்டிகளைப் பொறுத்து மாறும். உதாரணத்துக்கு வட இந்தியப் பஞ்சாங்கத்தின்படி ஒரு மாதத்துக்கு 29 அல்லது 30 நாட்கள் இருப்பதால், ப்ளூ மூன் என்னும் நிகழ்வு சாத்தியப்படாது. ஆனால் தமிழ் மாதங்கள் சூரியனை அடிப்படையாகக் கொண்டவை. சில நேரங்களில் தமிழ் மாதங்களுக்கு 32 நாட்கள்கூட இருக்கும். அதனால் தமிழ் மாத அமைப்பின்படி, ‘ப்ளூ மூன்’ சாத்தியப்படும். ஆனால் தமிழ் கலாசாரத்தில் அதற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுவதில்லை, என்கிறார் வெங்கடேஸ்வரன். முக்கியமாக, ‘ப்ளூ மூனு’க்கும் நீல வண்ணத்துக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,இது மனித வரலாற்றில் நாட்காட்டிகள் கடந்து வந்த மாற்றத்தால் நிகழும் ஒரு சகநிகழ்வு மட்டுமே என்கிறார் வெங்கடேஸ்வரன் சூப்பர் ப்ளூ மூன் எப்போது நிகழும்? மேற்சொன்ன இரண்டு நிகழ்வுகளும் ஒன்றாக நடக்கும் நிகழ்வே ‘சூப்பர் ப்ளூ மூன்’ என்று அழைக்கப்படுகிறது. அதாவது நிலவு தனது நீள்வட்டப் பாதையில் பூமிக்கு மிக அருகில் வரும்போது, அதுவே மாதத்தின் இரண்டாவது முழுநிலவாக அமைந்து விட்டால், அது சூப்பர் ப்ளூ மூன் என்று அழைக்கப்படுகிறது. இது மிக அரிதான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. ஓராண்டுக்கு மொத்தம் 12 முழுநிலவுகள். 168 முழுநிலவுகள் நடந்தால்தான் ஒரு ‘சூப்பர் ப்ளூ மூன்’ நிகழும். பட மூலாதாரம்,BBC WEATHER WATCHERS / JANEYB இதற்கு ஏதாவது முக்கியத்துவம் உண்டா? இல்லை, என்கிறார் வெங்கடேஸ்வரன். இது மனித வரலாற்றில் நாட்காட்டிகள் கடந்து வந்த மாற்றத்தால் நிகழும் ஒரு சகநிகழ்வு மட்டுமே, என்கிறார் வெங்கடேஸ்வரன். “இதனால் எந்த பெரிய வானியல் மாற்றங்களும் நிகழாது,” என்கிறார் அவர். ஆனால், நிலவை பார்த்து ரசிப்பதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு இது ஒரு முக்கியமான நிகழ்வாக இருக்கக்கூடும். https://www.bbc.com/tamil/articles/c2x41kn3kzvo
-
ஜனாதிபதித் தேர்தல் 2024 - செய்திகள்
ஜனாதிபதி வேட்பாளர்களை விவாதத்துக்கு அழைத்துள்ள பஃப்ரல் ஜனாதிபதி வேட்பாளர்கள் 6 பேரும் தமது கொள்கைகளை முன்வைப்பதற்கான விவாதம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளதாக பஃப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச, அனுரகுமார திஸாநாயக்க, நாமல் ராஜபக்ச, திலித் ஜயவீர மற்றும் வடக்கு கிழக்கை பிரநிதித்துவப்படுத்தி போட்டியிடும் அரியநேந்திரன் ஆகியோருக்கு அந்த அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் அவர்களுள் இருவர் தற்போது விவதாதத்திற்கான அழைப்பை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்தார். https://thinakkural.lk/article/308132
-
ஜப்பானில் கத்தரிக்கோல் காணாமல் போனதால் விமானங்கள் இரத்து
Published By: DIGITAL DESK 3 20 AUG, 2024 | 01:18 PM விமான நிலையத்தில் கத்தரிக்கோல் ஒன்று காணாமல் போனதால் விமானங்கள் இரத்து செய்யப்பட்ட சம்பவம் ஒன்று ஜப்பானில் இடம்பெற்றுள்ளது. கடந்த சனிக்கிழமை (17) ஜப்பானில் கொக்கைடோவின் நியூ சிட்டோஸ் விமான நிலையத்தின் உள் நுழையும் வாயிலின் அருகே இருந்த கடையொன்றில் கத்தரிக்கோல் காணாமல் போனதால் 36 விமானங்கள் இரத்து செய்யப்பட்டதோடு, 201 விமான சேவைகள் தாமதமடைந்துள்ளன. விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் பாதுகாப்பு சோதனை நடவடிக்கைகளுக்காக சனிக்கிழமை (18) காலை சுமார் இரண்டு மணி நேரம் ஸ்தம்பித்ததால் பயணிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். விமான நிலைய ஓய்வறையில் இருந்த பயணிகள் மீண்டும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதால் பெரும் நெரிசல் மற்றும் வரிசைகள் காணப்பட்டன. ஞாயிற்றுக்கிழமை (18) கடையில் ஒரு தொழிலாளியால் கத்தரிக்கோல் கண்டுபிடிக்கப்பட்டதாக கொக்கைடோ விமான நிலையம் திங்களன்று அறிவித்தது. காணாமல் போன கத்தரிக்கோலும் இதுவும் ஒன்றுதான் என்பதை உறுதிப்படுத்தும் வரை அறிவிப்பை வெளியிடுவதை நிறுத்தி வைத்திருந்ததாக அதிகாரிகள் விளக்கினர். ஹொக்கைடோ விமான நிலையத்தை சம்பவம் தொடர்பில் ஆராய்ந்து, இவ்வாறு மீண்டும் நடைபெறாமல் தடுக்குமாறு நிலம், உட்கட்டமைப்பு, போக்குவரத்து மற்றும் சுற்றுலா அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. https://www.virakesari.lk/article/191519
-
ஒரு நாட்டின் தலைநகரமே கடலில் மூழ்கும் பேரழிவு
வேகமாக மூழ்கும் தலைநகரம்; காட்டுக்குள் கோடிகளை கொட்டும் Indonesia; புது கவலை என்ன?
-
இலங்கையர்கள் உள்ளிட்ட 22 பேர் பயணித்த படகு இத்தாலி கடலில் மூழ்கியது
"இடிமின்னல், அலைகளால் படகு தத்தளித்தது அது உலகின் முடிவை போல தோன்றியது இரண்டு செகன்ட்கள் எனது மகளை கடலில் தொலைத்தேன்" - சிசிலி படகு விபத்தில் சிக்கிய பெண் 20 AUG, 2024 | 04:35 PM சிசிலியில் உல்லாசப்பயணிகளின் ஆடம்பர படகு நீரில் மூழ்கியவேளை தனது இரண்டு வயது மகளை காப்பாற்றுவதற்காக தான் மேற்கொண்ட போராட்டத்தினை தாய் ஒருவர் விபரித்துள்ளார். சிசிலியில் கடலில் பெயேசியன் என்ற ஆடம்பர படகு மூழ்கியவேளை காப்பாற்றப்பட்ட 15 பேரில்; ஒருவரான சார்லொட்டே கொலுன்ஸ்கி என்ற பெண் தனது நீரின் மேற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த தனது இரண்டு வயது மகளை காப்பாற்றுவதற்காக மேற்கொண்ட போராட்டத்தினை விபரித்துள்ளார். பிரிட்டனின் தொழிலதிபர் மைக் லிஞ் உட்பட ஆறு பேர் காணாமல்போயுள்ளனர், ஒருவரின் உடலை சிதைவுகளின் உள்ளேயிருந்து மீட்டுள்ளனர். 22 பேருடன் பயணித்துக் கொண்டிருந்த படகு புயலை எதிர்கொண்டதால் நீரில் மூழ்கியது. கப்பல் மூழ்கியவேளை நாங்கள் மேற்தளத்தில் இருந்ததால் உயிர்பிழைத்தோம் என சார்லொட்டே கொலுன்ஸ்கி தெரிவித்துள்ளார். நாங்கள் இடிமுழக்கம் மின்னல் எங்கள் படகை தள்ளாடச்செய்த அலைகள் காரணமாக உறக்கத்திலிருந்து விழித்தோம், அது உலகின் முடிவை போல காணப்பட்டது. பின்னர் நாங்கள் நீரிற்குள் தூக்கி வீசப்பட்டோம் என அவர் தெரிவித்துள்ளார். ஒரு இரண்டு செகன்ட்கள் நான் எனது மகளை நீரில் தவறவிட்டேன், ஆனால் சீற்றத்துடன் காணப்பட்ட அலைகளின் மத்தியில் அவளை இறுக்கி அணைத்துக்கொண்டேன் என அவர் தெரிவித்துள்ளார். எனது பலம் முழுவதையும் பயன்படுத்தி எனது குழந்தையை மிதக்கவைத்தேன், அவள் நீரில் மூழ்காமலிருக்க எனது கைகளை மேல்நோக்கி நீட்டினேன் என அவர் தெரிவித்துள்ளார். எங்களை சுற்றி முழுவதும் இருட்டாகயிருந்தது, நீரில் என்னால் எனது கண்ணை திறந்து வைத்திருக்க முடியிவில்லை, நான் உதவிக்காக அலறினேன். ஆனால் என்னை சுற்றிலும் ஏனையவர்களின் அலறலையே கேட்டேன் என சார்லொட்டே கொலுன்ஸ்கி தெரிவித்துள்ளார். உயிர்காக்கும் படகை பயன்படுத்தியதால் அவரும் 11பேரும் மேலே ஏறமுடிந்தது. குடும்பத்தை சேர்ந்த மூவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தனது படகின் பணியாளர்கள் சிலரை காப்பாற்றினார்கள் என அருகில் பயணித்துக்கொண்டிருந்த படகின் கப்டன் தெரிவித்துள்ளார். அவர்களில் மூவர் காயமடைந்த நிலையில் காணப்பட்டனர் என அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/191537
-
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் 2024 - செய்திகள்
ஜனநாயகக் கட்சி மாநாடு: ‘அமெரிக்காவுக்கு என்னால் முடிந்ததை எல்லாம் செய்துவிட்டேன்’- கண்கலங்கிய அதிபர் ஜோ பைடன் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அந்தோனி ஸர்ச்சர் பதவி, பிபிசி நிருபர், வட அமெரிக்கா 4 மணி நேரங்களுக்கு முன்னர் அதிபர் பதவிக்கு பிரியாவிடை கொடுக்கும் விதத்தில் ஒரு உணர்ச்சிகரமான சொற்பொழிவை இந்த ஆண்டு கொடுப்போம் என அமெரிக்க அதிபர் பைடன் நினைத்திருக்க மாட்டார். அதுவும் இந்த தேர்தல் சூழலில். ஆனால் ஒருவரது அதிர்ஷ்டம் எவ்வளவு விரைவாக மாறும் என்பதை யாராவது அறிந்துகொள்ள வேண்டுமென்றால், அதற்கு இன்னல்கள் மற்றும் துன்பங்களால் பாதிக்கப்பட்டுள்ள பைடனின் தனிப்பட்ட மற்றும் அரசியல் வாழ்க்கையே சான்றாகும். அமெரிக்காவின் சிகாகோவில் நடந்துவரும், ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டின் முதல் நாள் நிகழ்வில் (நேற்று), மக்கள் நிறைந்த அரங்கத்தில் உரையாற்றினார் பைடன். தனது ஆட்சி காலத்தின் நடவடிக்கைகளை முழுவதுமாக நியாயப்படுத்தி அவர் பேசினார். 2020 மற்றும் 2024 அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தில் தான் எழுப்பிய பிரச்னைகள் குறித்தும், ஜுலை மாதத்தில் அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து விலகியது குறித்தும் பேசினார். "உங்களில் பலரைப் போலவே, நானும் என் இதயத்தையும் ஆன்மாவையும் இந்த தேசத்திற்காக கொடுத்துள்ளேன்," என்று அவர் கூறினார். கிட்டத்தட்ட ஒரு மணிநேரம் அவர் நிகழ்த்திய உரையின் முடிவில் "நன்றி, ஜோ" போன்ற பைடனுக்கு ஆதரவான குரல்கள் அரங்கம் முழுவதும் ஒலித்தது. 'கமலா மிகவும் தைரியமான பெண்' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, "உங்கள் மீது பேரன்பு உள்ளது" என்று துணை அதிபர் கமலா, பைடனிடம் கூறுவதைக் காண முடிந்தது தனது மனைவி ஜில் மற்றும் மகள் ஆஷ்லே ஆகியோரது அறிமுக உரைக்குப் பிறகு, மேடையேறினார் பைடன். “அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக பைடன் எடுத்த முடிவு என்பது அவர் தீவிரமாக ஆராய்ந்து எடுத்த முடிவு, " என்று ஜில் அந்த அறிமுக உரையில் தெரிவித்தார். மேடையேறிய பைடன், தனது மகள் ஆஷ்லியை ஆரத்தழுவி, தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்ததைக் காண முடிந்தது. பிறகு அதிபர் பைடன் தனது நெஞ்சின் மீது கைவைத்து, நிமிர்ந்து நின்று, ஒரு புன்னகையுடன் கூட்டத்தினரைப் பார்த்தபோது அவர்கள் ஆரவாரம் செய்தனர். அவரது உரையில் பெரும்பாலும், அமெரிக்க வரலாற்றில் தனக்கான இடத்தைப் பற்றி பேசினாலும் கூட, துணை அதிபரான கமலா ஹாரிஸை புகழ்வதிலும் குறிப்பிட்ட நேரத்தைச் செலவிட்டார். "கமலாவை எனது துணை அதிபர் வேட்பாளராக தேர்வு செய்ததே, நான் அதிபர் வேட்பாளர் ஆனவுடன் எடுத்த முதல் முடிவாகும். அதுமட்டுமல்லாது இது எனது அரசியல் பயணத்தில் நான் எடுத்த சிறந்த முடிவும் அதுதான்" என்று அவர் கூறினார். "கமலா மிகவும் தைரியமான, அனுபவம் வாய்ந்த பெண். அவரிடம் நேர்மையும் வெளிப்படைத்தன்மையும் உள்ளது." என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பைடன் தனது மனைவி ஜில் பைடனுடன் 'பைடனை போன்ற இரக்கக்குணம் கொண்ட மனிதரை சந்தித்ததே இல்லை' நான்கு வாரங்களுக்கு முன்பு அவரது ஓவல் அலுவலகத்தில் வைத்து பேசியது போலல்லாமல், ஒரு புதிய தலைமுறையிடம் பொறுப்பை அளிப்பது குறித்து அவர் நேரடியாக குறிப்பிடவில்லை, ஆனால் சொல்ல வந்த செய்தி தெளிவாகப் புரிந்தது. அதிபர் தனது கருத்துகளைக் கூறி முடித்த பிறகு, பைடனையும் அவரது மனைவி ஜில்லையும் கட்டித் தழுவ, ஹாரிஸ் மற்றும் அவரது கணவர் டக் எம்ஹாஃப் மேடைக்கு வந்தனர். "உங்கள் மீது பேரன்பு உள்ளது" என்று துணை அதிபர் கமலா, பைடனிடம் கூறுவதைக் காண முடிந்தது. பைடன் தனது உரையின் முடிவில், கணிசமான பகுதியை கமலா ஹாரிஸைப் புகழ்வதற்காகச் செலவிட்டார். இருப்பினும், பிற பேச்சாளர்கள் தற்போதைய அதிபர் பைடனைப் பாராட்டியே அதிகம் பேசினார்கள். பின்னர் மேடையில் பேச கமலா ஹாரிஸ் முன்வந்தபோது, மக்களின் பெரும் உற்சாகம், அரங்கம் முழுவதும் எதிரொலித்த கைத்தட்டல்களில் வெளிப்பட்டது. "ஜோ, உங்கள் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த தலைமைக்கும், எங்கள் தேசத்திற்கான உங்கள் வாழ்நாள் சேவைக்கும், நீங்கள் தொடர்ந்து செய்யப்போகும் அனைத்திற்கும் நன்றி," என்று கூறினார். "நாங்கள் உங்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்." என்றும் கூறினார் கமலா ஹாரிஸ். பின்னர், டெலாவேர் மாநில செனட்டரும் பைடனின் நெருங்கிய நண்பர்களில் ஒருவருமான கிறிஸ் கூன்ஸ், அதிபரைப் பற்றி பாராட்டிப் பேசினார். "ஜோ பைடனை போன்ற ஒரு இரக்கக்குணம் கொண்ட மனிதரை நான் சந்தித்ததே இல்லை," என்று அவர் கூறினார். "தனிப்பட்ட இழப்புகளைக் கடந்து, நம்பிக்கையோடு பலரின் எதிர்காலத்திற்காக இவ்வளவு விஷயங்களைச் செய்த ஒரு மனிதனை நான் ஒருபோதும் அறிந்ததில்லை." என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் நிரம்பிய மாநாட்டு அரங்கத்தில் இருந்து பைடனுக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது பைடனின் அரசியல் வாழ்க்கை அதற்கு முன்னதாக மாலையில் மேடையில் பேசிய ஹிலாரி கிளிண்டன், "வெள்ளை மாளிகை இழந்த கண்ணியம், நேர்மை மற்றும் ஆற்றலை மீண்டும் கொண்டு வந்தவர் ஜோ பைடன்" என்று கூறினார். ஜனநாயகக் கட்சியின் சார்பாக 2016 ஆம் ஆண்டில் அதிபர் வேட்பாளராக போட்டியிட்டவர் ஹிலாரி கிளிண்டன். அவர் மேடையேறியபோது பெரும் வரவேற்பு கிடைத்தது. ''அமெரிக்காவின் முதல் பெண் அதிபர் என்ற சாதனையை தன்னால் படைக்க முடியவில்லை, ஆனால் அதிபராக கமலா ஹாரிஸ் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளும்போது அது நிறைவேறும்’' என்று அவர் கூறினார். ஜனநாயகக் கட்சியின் ஆதரவாளர்கள் நிரம்பிய மாநாட்டு அரங்கத்தில் இருந்து பைடனுக்கு கிடைத்த வரவேற்பும் அதே அளவில், பெரும் உற்சாகத்துடன் இருந்தது. சிகாகோவில் கூடியிருந்த ஜனநாயகக் கட்சியினர் நாள் முழுவதும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர். ஆனால் பைடனுக்கு அவர்கள் வெளிப்படுத்திய உற்சாக அலை என்பது, தேர்தலில் இருந்து விலகுவதாக அவர் எடுத்த முடிவுக்கு நன்றி தெரிவிப்பதன் அடையாளமாக இருக்கலாம் அல்லது அவரது நீண்ட கால அரசியல் வாழ்க்கைக்கான ஒரு பிரியாவிடையாகவும் இருக்கலாம். பைடனின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது 1972இல். அமெரிக்க அரசின் அவையான காங்கிரசுக்கு அவர் தனது 29வது வயதில் முதன்முதலில் தேர்ந்தெடுக்கப்பட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பைடன் தனது மகள் ஆஷ்லேவுடன் நாளை பராக் ஒபாமா இந்த மாநாட்டு கூட்டத்தில் உரையாற்றுகிறார். புதன்கிழமை, பில் கிளிண்டன் உரையாற்றுவார். இருவரும், தொடர்ந்து இரண்டாவது முறை தேர்தலில் நின்று வெற்றி பெற்ற முன்னாள் அதிபர்கள். பைடனுக்கு அந்த வாய்ப்பு கிடைக்காது. அவரால் ஒருமுறை மட்டுமே அமெரிக்க அதிபராக இருக்க முடிந்தது. அந்த பதவிக்காலத்தை குறித்து விளக்கவும் நியாயப்படுத்தவும் அவர் இந்த உரையில் கவனம் செலுத்தினார். அடுத்த ஐந்து மாதங்களில் முக்கிய தேசிய நிகழ்வு ஏதும் இல்லை என்றால், கணிசமான அமெரிக்க தொலைக்காட்சி பார்வையாளர்கள் முன் அவர் உரையாற்றுவது இதுவே கடைசியாக இருக்கும். உரையின் முடிவில், ‘அமெரிக்காவின் கீதம்’ என்ற பாடலில் இருந்து ஒரு வரியை மேற்கோள் காட்டினார். "எனது பணி நிறைவடையும்போது, நான் ஒன்றை மனதில் நினைவுபடுத்திக் கொள்கிறேன், அமெரிக்கா, அமெரிக்கா, நான் உங்களுக்கு என்னால் முடிந்த அனைத்தையும் வழங்கினேன்," என்று அவர் கூறினார். மீண்டும் அரங்கம் மக்களின் கைத்தட்டல்களால் நிறைந்தது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, அவர் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக இருந்த போது, கொரோனா பெருந்தொற்று காரணமாக, இத்தகைய ஒரு ஜனநாயகக் கட்சி மாநாட்டையும், கட்சியினரின் பாராட்டுகளையும், மக்களின் உற்சாகத்தையும் அவரால் காண முடியவில்லை. ஜனநாயகக் கட்சி மாநாட்டில் பைடனுக்கு கிடைக்கக்கூடிய மிகச்சிறந்த தருணமாக இது இருந்தது. பைடன் தனது உரையை முடித்ததும், அரங்கை விட்டு வெளியேறி, ‘ஏர்ஃபோர்ஸ் ஒன்’ விமானத்தில் விடுமுறைக்காக கலிபோர்னியாவிற்குச் சென்றார். சிகாகோவில் நடக்கும் இந்த ஜனநாயகக் கட்சியின் தேசிய மாநாட்டிற்காக அவர் ஒதுக்கியது சில மணிநேரங்கள் மட்டுமே, நாட்கள் அல்ல. அதேபோல, ஒரு சில மாதங்களுக்கு முன்பாக அமெரிக்காவின் அதிபராக மேலும் சில ஆண்டுகள் இருப்போம் என்ற ஆசை அவர் மனதில் இருந்தபோதிலும், இப்போது அவருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது சில மாதங்களே. https://www.bbc.com/tamil/articles/cj9lvxmp18yo
-
மகளிர் ரி20 உலகக் கிண்ணம் - செய்திகள்
மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தை பங்களாதேஷிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றியது ஐசிசி Published By: VISHNU 20 AUG, 2024 | 10:05 PM (நெவில் அன்தனி) ரி20 மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி பங்களாதேஷிலிருந்து ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. பங்களதேஷில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் ஜூலை மாதத்திலும் ஆகஸ்ட் மாத முற்பகுதியிலும் இடம்பெற்றதை அடுத்து சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) போட்டி நடைபெறும் இடத்தை மாற்றியுள்ளது. அரசுக்கு எதிரான போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து பிரதமர் ஷெய்க் ஹசினா இராஜினாமா செய்துவிட்டு இந்தியாவுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் இராணுவத்தினால் இடைக்கால அரசாங்கம் நிறுவப்பட்டது. ஆனால், பரவலாக பொதுச் சொத்துக்கள் சேதமாக்கப்பட்டதாகவும் கொள்ளையிடப்பட்டதாகவும் வன்முறைகள் இடம்பெற்றதாக பங்களாதேஷிலிருந்து செய்திகள் வெளியாகின. ஐக்கிய நாடுகள் சபையின் ஊடாக மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை நடத்துவதற்கு பங்களாதேஷின் இடைக்கால அரசு கடைசி முயற்சியில் ஈடுபட்டது. ஆனால், தங்களது நாட்டு பிரஜைகள் பங்களாதேஷுக்கு பயணிக்கக்கூடாது என அவுஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, ஐக்கிய இராச்சியம் (இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து) ஆகிய நாடுகள் உட்பட மற்றும் சில நாடுகள் பயண ஆலோசனைகள் விடுத்ததால் ஐசிசி இந்த முடிவுக்கு வந்துள்ளது. 'மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியை பங்களாதேஷ் நடத்தாதது வெட்கத்துக்குரியதாகும். ஏனேனில் பங்களாதேஷ் கிரிக்கெட் சபை மிகச்சிறப்பாக இந்தப் போட்டியை நடத்தும் என்பதை நாங்கள் அறிவோம்' என ஐசிசி பிரதம நிறைவேற்ற அதிகாரி ஜெவ் ஆல்ரிஜ் தெரிவித்தார். 'பங்களாதேஷில் போட்டியை நடத்துவதற்கு பங்களாதேஷ் கிரிக்கெட் சபை எடுத்துக்கொண்ட சகல முயற்சிகளுக்காகவும் நன்றி கூறுகிறேன். ஆனால் சில நாடுகள் பயண ஆலோசனைகளை விடுத்ததால் அது சாத்தியப்படவில்லை. எனினும் போட்டிகளை முன்னின்று நடத்தும் பொறுப்பு பங்களாதேஷுக்கே உரித்தாகும். பங்களாதேஷில் விரைவில் ஒரு ஐசிசி உலக கிரிக்கெட் போட்டியை நடத்த எண்ணியுள்ளோம். 'பங்களாதேஷ் சார்பாக போட்டியை நடத்த முன்வந்த எமிரேட்ஸ் கிரிக்கெட் சபைக்கும் ஆதரவு வழங்க முன்வந்த இலங்கைக்கும் ஸிம்பாப்வேக்கும் நன்றி கூற விரும்புகிறேன். இந்த இரண்டு நாடுகளில் 2026இல் ஐசிசி உலக கிரிக்கெட் போட்டிகள் நடைபெறுவதை பார்க்க விரும்புகிறோம்' என ஆல்ரிஜ் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/191571
-
கொல்கத்தா பெண் மருத்துவர் கொலை: கல்லூரி முதல்வர் ராஜினாமா; போலீஸுக்கு மம்தா ‘கெடு’
கொல்கத்தா பெண் மருத்துவரின் கடைசி வார்த்தைகள் என்ன? ஒரே மகளையும் இழந்த பெற்றோர் கண்ணீர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவில் 2022 ஆம் ஆண்டில் ஒரு நாளைக்கு சராசரியாக 90 வன்புணர்வுகள் பதிவாகியுள்ளன. கட்டுரை தகவல் எழுதியவர், கீர்த்தி துபே பதவி, பிபிசி ஹிந்தி 20 ஆகஸ்ட் 2024, 08:12 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் “62 வயதில் எனது கனவுகள் அனைத்தும் சிதைந்துவிட்டன. குற்றவாளிக்கு மிகக் கடுமையான தண்டனை வழங்க வேண்டும்.” கொல்கத்தாவில் 31 வயதான பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது இந்தியாவையே உலுக்கியுள்ளது. அவரது தந்தை அவர்களின் பூர்வீக வீட்டில் எங்களுடன் பேசினார். சாதாரணமான அந்த வெள்ளை நிற வீடு அவரது மகள் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட பிறகு, ஊடகத்தினரின் முற்றுகைக்கு உள்ளாகியுள்ளது. பாலியல் குற்றங்களில் பாதிக்கப்பட்டவரின் அடையாளம் மற்றும் அவரது குடும்பத்தினரின் அடையாளம் உள்ளிட்டவற்றை வெளிப்படுத்துவது இந்திய சட்டத்திற்கு எதிரானது என்பதால் இந்தக் கட்டுரையில் பெண் மருத்துவரின் குடும்பத்தினரின் பெயர்களும் மற்ற விவரமும் தரப்படவில்லை. "எங்கள் மாநிலம், நமது நாடு, இந்த ஒட்டுமொத்த உலகமும் என் மகளின் மரணத்திற்கு நீதி கேட்கிறது" என்று அவர் கூறினார். பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் தாயார் அவருக்குப் பக்கத்தில் அமைதியாக அமர்ந்திருந்தார். கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரிந்து வந்த ஜூனியர் மருத்துவர், ஆகஸ்ட் 9 அன்று இரவுப் பணியின்போது, அங்குள்ள கருத்தரங்கு கூடத்தில் (Seminar Hall) ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். அப்போது கொடூரமான முறையில் அவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நடந்த சில மணிநேரத்திற்கு முன்பு, இரவு 11 மணியளவில் அவர் தன் அம்மாவிடம் பேசியிருக்கிறார். அவரது தாயார் தொலைபேசியில் மகள் பேசிய கடைசி வார்த்தைகளை நினைவு கூர்ந்தார்: "தயவுசெய்து அப்பாவை சரியான நேரத்துக்கு மருந்துகளை சாப்பிட சொல்லுங்கள். என்னைப் பற்றி கவலைப்பட வேண்டாம்." என்று அந்த பெண் மருத்துவர் தனது தாயாரிடம் கூறியுள்ளார். “அதுதான் கடைசியாகப் பேசியது. அடுத்த நாள், அவரது போன் ஒலித்துக்கொண்டே இருந்தது." என்றார் அவர். அவருடைய தந்தைக்கு உயர் ரத்த அழுத்த பிரச்னை இருப்பதால், சரியான நேரத்தில் மாத்திரைகள் சாப்பிடுவது முக்கியம். "நான் சரியான நேரத்துக்கு மருந்துகள் எடுத்து கொள்ள வேண்டும் என்று சொல்லி கொண்டே இருப்பாள். ஒரு டோஸ் கூட தவற விடாமல் பார்த்துக் கொள்வாள்" என்று பிபிசிக்கு அளித்த பேட்டியில் மகளை பற்றி நினைவு கூர்ந்தார் அவரது தந்தை. “ஒருமுறை, நான் வழக்கமாக எடுத்துக் கொள்ளும் மருந்து தீர்ந்து போய் விட்டது. அதனை மறுநாள் வாங்கி கொள்ளலாம் என்று நினைத்தேன். அப்போது இரவு சுமார் 10 அல்லது 11 மணி இருக்கும். இதனை தெரிந்து கொண்ட என் மகள், 'அப்பா மருந்து இங்கே வரும் வரை இந்த வீட்டில் யாரும் சாப்பிட மாட்டார்கள்' என்றார் " என்று அன்றைய நிகழ்வை தந்தை நெகிழ்ச்சியுடன் கூறினார். "என் மகளின் இயல்பு இது தான். அவர் என்னை எதற்கும் கவலைப்பட விட மாட்டார்." என்றார் அவர். இந்திய தலைநகர் டெல்லியில் 2012 ஆம் ஆண்டு, ஓடும் பேருந்தில் 22 வயது மருத்துவ மாணவி கூட்டுப் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவத்தை கொல்கத்தா பெண் மருத்துவரின் கொலை நினைவூட்டுகிறது. அவரது உடலில் கொடூரமான காயங்கள் இருந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பெண் மருத்துவரை சித்தரிக்கும் சிலையின் மணிக்கட்டில் ராக்கி கட்டிய மருத்துவர் டெல்லி மருத்துவ மாணவி சம்பவத்தைத் தொடர்ந்து பாலியல் வன்முறைக்கு எதிரான சட்டங்கள் இந்தியாவில் கடுமையாக்கப்பட்டன. ஆனால் பாலியல் வன்புணர்வு வழக்குகள் பதிவு செய்யப்படுவது அதிகரித்துள்ளது. அதேநேரத்தில், இந்திய பெண்களுக்கு நீதி கிடைப்பது இன்னும் சவாலாகவே உள்ளது. கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டிருப்பது மருத்துவப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மீது மீண்டும் கவனத்தை திருப்பியுள்ளது. இந்த சம்பவத்தில் ஒரு முழுமையான மற்றும் பாரபட்சமற்ற விசாரணை வேண்டும், பணியிடத்தில் மருத்துவப் பணியாளர்களை - குறிப்பாக பெண்களை - பாதுகாக்க தேசிய அளவிலான சட்டம் கொண்டு வர வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். பணியிடத்தில் பாதுகாப்பை உறுதி செய்ய கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று மருத்துவர்களிடம் இந்திய சுகாதார அமைச்சர் ஜே.பி. நட்டா உறுதியளித்துள்ளார். இந்தியா முழுவதும் மருத்துவ கல்வியை மேலாண்மை செய்யும் தேசிய மருத்துவ ஆணையம், பாதுகாப்பான பணியிடத்தை உறுதி செய்வது குறித்து அனைத்து மருத்துவக் கல்லூரிகள் மற்றும் மருத்துவக் கல்வி நிறுவனங்களுக்கும் ஆலோசனை வழங்கியுள்ளது. ஓர் உயிர் பறிபோனது கொல்கத்தாவில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு குறுகிய தெருவில் பெண் மருத்துவரின் குடும்பத்தை நாங்கள் சந்தித்தோம். அங்கு போலீஸ் தடுப்பு போடப்பட்டிருந்தது. அதன் அருகே பல செய்தி சேனல்களின் கேமராக்கள் வரிசை கட்டி நின்றன. அங்கு ஒவ்வொரு கணத்தையும் கேமராக்கள் படம் பிடித்துக் கொண்டிருந்தன. மறுபுறம், 10 முதல் 15 போலீஸ் அதிகாரிகள் காவலுக்கு நின்று கொண்டிருந்தனர். போலீஸ் போட்டிருக்கும் தடுப்பை தாண்டி பாதிக்கப்பட்ட பெண் மருத்துவரின் பூர்வீக வீட்டை ஊடகங்கள் அடைந்துவிட கூடாது என்பதே காவல் அதிகாரிகளின் நோக்கம். ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு, 36 மணி நேரமாக பணியில் ஈடுபட்டிருந்த பாதிக்கப்பட்ட அந்த ஜூனியர் டாக்டர், கருத்தரங்கு கூடத்தில் ஓய்வெடுக்கச் சென்றிருந்தார். காலையில், ஒரு பகுதி ஆடைகளுடன் அவரது இறந்த உடல் அங்கு கண்டெடுக்கப்பட்டது. இந்த குற்றச்செயலின் கோர முகம் இந்தியா முழுவதும் சீற்றத்தைத் தூண்டியுள்ளது. கொல்கத்தாவில் மட்டுமல்ல, பல இந்திய நகரங்களிலும் போராட்டக்காரர்கள் நீதி கோரி பேரணி நடத்தினர். நாடு முழுவதும் பெண்களுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்த வலியுறுத்தி கொல்கத்தாவில் ‘ரிக்ளைம் தி நைட்’ அணிவகுப்பு நடத்தப்பட்டது. "பணியின் போது என் மகள் காட்டுமிராண்டித்தனமாக கொல்லப்பட்டிருக்கிறார். அதுவும் மருத்துவமனை வளாகத்தில்" என்று அவரது தந்தை கூறினார். பாதுகாப்பாக இருந்திருக்க வேண்டிய இடத்தில் இப்படி நடந்ததை அவர் சுட்டிக் காட்டுகிறார். பெண் மருத்துவரின் கடைசி வார்த்தைகள் பெண் மருத்துவரின் இழப்பால் ஒட்டுமொத்த குடும்பமும் இடிந்து போயுள்ளது. அவர் எப்பொழுதும் மற்றவர் நலனுக்கு முக்கியத்துவம் கொடுப்பார் என்பதை அவருடைய தந்தை நினைவு கூர்ந்தார்: “ என் மகளுக்கு திருமணம் நிச்சயிக்கப்படும் கட்டத்தில் இருந்தது. ஆனால் அவள், என் பொருளாதார சூழலை எண்ணி, 'அப்பா, உங்களால் எப்படி இந்த செலவை சமாளிக்க முடியும்? கவலைப்படாதே, நான் பார்த்துக் கொள்கிறேன்' என்று சொன்னாள்" என்கிறார் அவர். பெண் மருத்துவரின் தந்தை இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போதே பின்னே இருந்த தாயின் விசும்பல் கேட்டது. ஒரு தையல் இயந்திரம், நூல் கண்டு, ஒரு கனமான இரும்பு, தரையில் சிதறிக் கிடந்த துணிகள்.. வரவேற்பறையில் தென்பட்ட இந்த காட்சி அவர் ஒரு தையல்காரர் என்பதை பிரதிபலித்தன. அவரின் வாழ்நாள் முழுவதும் அந்த தையல் மெஷின் முன் இருந்துள்ளார். வரவேற்பறைக்கு அடுத்ததாக ஒரு படிக்கட்டு மற்ற அறைகள் மற்றும் கொலையுண்ட பெண் மருத்துவரின் படுக்கையறை வரை செல்கிறது. கடந்த 11 நாட்களாக அந்த அறைபூட்டியே கிடக்கிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதிக்குப் பிறகு அவரது பெற்றோர் மகளின் அறையில் கால் வைக்கவே இல்லை. "என் மகள் சிறுமியாக இருந்தபோது, நாங்கள் பொருளாதார ரீதியாக சிரமப்பட்டோம்," என்று அவருடைய தந்தை நினைவு கூர்ந்தார். "அவளுக்கு ஐந்து வயது இருக்கும். அவளுக்கு பழங்கள் பிடிக்கும் குறிப்பாக மாதுளை என்றால் என் மகளுக்கு கொள்ளைப் பிரியம். அவளை அழைத்துச் செல்லும் போது வழியில், மாதுளையை பார்த்து, ‘பாபி, பூஜைக்கு மாதுளை பழம் வாங்க மாட்டாயா?’ என்று கேட்டாள்.” இப்படி சொல்லிக் கொண்டிருக்கும் போதே தந்தை உடைந்து அழுதுவிட்டார். “அழாதே, தைரியமாக இரு” என்று அருகில் நின்றிருந்த உறவினர் அவரிடம் மெதுவாக சொன்னார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியா முழுவதும் உள்ள மில்லியன் கணக்கான பெண்களின் பாதுகாப்புக்காகவும் ரீக்லைம் தி நைட் அணிவகுப்பு நடந்தது. இந்த நெருக்கடியான சூழலில் குடும்பத்தில் தைரியமாக இருக்க வேண்டிய கட்டாயம் அவரது தோள்களில் சுமையாக இருந்தது. கொலையுண்ட பெண் மருத்துவர், அவர்களுக்கு ஒரே குழந்தை ஆவார். சிறு வயதிலிருந்தே படிப்பில் ஆர்வம் கொண்ட மகள், பள்ளியில் ஆசிரியர்களால் பாராட்டப்பட்டார். "என் மகள் சிறியவளாக இருந்த போது, அவளுடைய ஆசிரியர்கள் அவளை தூக்கிக்கொண்டு பள்ளிக்குச் செல்வார்கள்" என்று அவருடைய தந்தை நினைவு கூர்ந்தார். "நாங்கள் பொருளாதார ரீதியாக பின்தங்கிய பின்னணியில் இருந்து வந்தவர்கள். எங்களிடம் உள்ள ஒவ்வொரு பொருளும் நாங்களே பாடுபட்டு உருவாக்கியது." என்று அவர் கூறினார். "உங்களால் உங்கள் மகளை மருத்துவராக்க முடியாது" என்று சுற்றியிருக்கும் சிலர் கூறினார்கள். ஆனால் என் மகள் அவர்களது கூற்று தவறு என்று நிரூபித்து, அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தாள்." என்று கூறினார். அவருடைய அம்மா தன் மகளின் நினைவுகளை அமைதியாக தனக்குள் நினைவுப்படுத்தி கொண்டார். அவருடைய கைகளில் சிவப்பு மற்றும் வெள்ளை நிற வளையல்களுக்கு இடையில் இருந்த ஒரு தங்க வளையலை மீண்டும் மீண்டும் தொட்டு பார்த்து கொண்டார். அது அவரது மகள் வாங்கி கொடுத்த வளையல். ஒவ்வொரு இரவும் படுக்கைக்குச் செல்வதற்கு முன் தனது மகள் நாட்குறிப்பில் எழுதி வைக்கும் குறிப்புகளை அவர் நினைவு கூர்ந்தார். “மருத்துவப் படிப்பில் தங்கப் பதக்கம் வெல்ல வேண்டும் என்று எழுதியிருந்தார். அவர் ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதுடன் எங்களையும் நன்றாக கவனித்துக் கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்”என்று தாயார் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c8rxp8n8g54o
-
கண் சத்திர சிகிச்சை விவகாரம்; கெஹலியவிடமிருந்து 300 மில்லியன் ரூபாவை நஷ்ட ஈடாக கோரும் மூன்று நோயாளிகள்
Published By: DIGITAL DESK 3 20 AUG, 2024 | 05:07 PM கண் சத்திர சிகிச்சை மேற்கொண்டதன் பின்னர் ப்ரெட்னிசோலோன் அசிடேட்என்ற மருந்தின் பாவனையால் பார்வை குறைபாடு ஏற்பட்ட 3 பேர் முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலியவிடமிருந்து 300 மில்லியன் ரூபாவை நஷ்ட ஈடாக கோரி கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (20) வழக்குத் தாக்கல் செய்துள்ளனர். மேலும் பத்து பேருக்கு பார்வை குறைபாடு ஏற்பட்டுள்ளது. கெஹலிய ரம்புக்வெல்ல, ஜனக சந்திரகுப்த, தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம், பேராசிரியர். எஸ்.டி. ஜெயரத்ன, வைத்தியர் விஜித் குணசேகர, வைத்தியர் அசேல குணவர்தன, வைத்தியர் ரொஹான் எதிரிசிங்க, வைத்தியர் மகேந்திர செனவிரத்ன, யக்கலையைச் சேர்ந்த Chamee Chemist (Pvt) Ltd, Indiana Ophthalmics LLP மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த வழக்குகளின் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர். மேற்கூறிய பதினொரு பிரதிவாதிகளிடமிருந்து நட்டஈடு வழங்குமாறு கோரி, இன்விக்டஸ் சட்ட நிறுவனத்தின் சட்டத்தரணிகளான சம்பத் விஜேவர்தன, தமலி குருப்பு மற்றும் பிரவிங்க ரத்னசேகர ஆகியோரின் ஊடாக மனுதாரர் இந்த வழக்குகளை தாக்கல் செய்துள்ளனர். கடந்த 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 05 ஆம் திகதி நுவரெலியா பொது வைத்தியசாலையின் மருத்துவ ஊழியர்களால் கண்புரை சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டதாக கந்தப்பளை பகுதியைச் சேர்ந்த மனுதாரர் மக்கரி ராஜரத்தினம் தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார். அறுவை சிகிச்சை முடிந்து ஏப்ரல் 06 ஆம் திகதி வீட்டிற்கு அனுப்பப்பட்டதாகவும், இந்தியானா ஆப்தால்மிக்ஸ் எல்எல்பி இந்தியா தயாரித்த ப்ரெட்னிசோலோன் அசிடேட் (Prednisolone Acetate) கண் சொட்டு மருந்துகளைப் பயன்படுத்த நுவரெலியா வைத்தியசாலையின் மருத்துவ ஊழியர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறுவை சிகிச்சை முடிந்து பின்னர் குணமடைவதற்காக வைத்தியசாலையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இவர் பரிந்துரைத்தப்படி கண் சொட்டு மருந்தினை பயன்படுத்திய பிறகு ஏப்ரல் 19 ஆம் திகதி முதல் கண்ணீர், எரிச்சல், வலி மற்றும் தலைவலியால் பாதிக்கப்பட்டுள்ளார். பின்னர் மே மாதம் 10 ஆம் திகதி தேசிய கண் வைத்தியசாலையில் கூடுதல் மருத்துவப் பரிசோதனை மற்றும் அனுமதிக்கப்பட்ட போது, அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டு, மேற்கூறிய ப்ரெட்னிசோலோன் அசிடேட் கண் சொட்டு மருந்து மூலம் அவர் படிப்படியாக பார்வை இழப்பதைக் காண முடிந்ததாக மேலும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/191544