Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. பட மூலாதாரம்,ALEX KRAUS/BLOOMBERG கட்டுரை தகவல் எழுதியவர், ஜெசிகா பார்க்கர் பதவி, பிபிசி பெர்லின் நிருபர் 44 நிமிடங்களுக்கு முன்னர் ராணுவத் தளங்களைச் சுற்றியுள்ள வேலிகளில் மர்ம துளைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஜெர்மனியின் முன்னணி ஆயுத உற்பத்தியாளரை படுகொலை செய்வதற்கான சதித்திட்டம் கண்டறியப்பட்டுள்ளது. உயர்மட்ட `லுஃப்ட்வாஃப்’ அமைப்பின் தொலைபேசி அழைப்புகள் ஒட்டுக் கேட்கப்படுகிறது. இவை 1960களின் உளவு நாவலில் இருந்து எடுக்கப்பட்ட கதைக்களங்கள் அல்ல, இந்த ஆண்டு ஜெர்மனியில் நடக்கும் நிஜ சம்பவங்கள். இந்த நிகழ்வுகள் அனைத்துக்கும் ரஷ்யா மீது திட்டவட்டமாக குற்றம் சாட்ட முடியாது. ஆனால் ரஷ்ய தரப்பில் மேற்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்படும் நாசவேலைகளுக்கு ஜெர்மனி தீவிர எச்சரிக்கையுடன் உள்ளது. ஏனெனில் யுக்ரேனுக்கு ஜெர்மனி தொடர்ச்சியாக ராணுவ ஆதரவு கொடுத்து வருவதால், ரஷ்யா ஜெர்மனிக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட வாய்ப்பிருக்கிறது. ரஷ்யாவுக்கும் யுக்ரேனுக்கும் இடையே கடுமையான மோதல் வெடித்துள்ளதால் ஐரோப்பா புதிய பனிப்போரை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளதோ என்னும் கவலைகள் எழுந்துள்ளன. "பனிப்போரைப் பற்றி நாம் சிந்திக்கையில் கண்டிப்பாக 1970களைப் பற்றிய நினைவுகள் வரும். ஏனெனில் அப்போது தான் பனிப்போர் உச்சக்கட்டத்தில் இருந்தது" என்கிறார் ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிடியூட் (Rusi) மற்றும் மாயக் உளவுத்துறையின் இயக்குனர் மார்க் கலியோட்டி. "1950கள் மற்றும் 1960களில் இருந்த ஆரம்பகால பனிப்போர் சூழலை போலவே நாம் இப்போது மோசமான தருணத்தில் இருக்கிறோம்" என்று விவரித்தார். இருப்பினும், ஐரோப்பாவின் மிகப்பெரிய பொருளாதாரமாக வளர்ந்திருக்கும் மற்றும் பனிப்போர் கால கட்டத்தில் இரும்புத்திரையால் பாதியாகப் பிரிக்கப்பட்ட தேசத்திற்குப் இந்த புதுப்பிக்கப்பட்ட பனிப்போர் எப்படி இருக்கும்? ஆயுத நிறுவன தலைமை நிர்வாகியை கொல்ல திட்டமிட்டது யார்? ஜெர்மனியின் மிகப்பெரிய ஆயுத நிறுவனமான ரைன்மெட்டாலின் தலைமை நிர்வாகியைக் கொல்ல ரஷ்ய சதி செய்திருப்பதாக அமெரிக்க அதிகாரிகள் ஜெர்மனியிடம் கூறியதாக கடந்த மாதம் சிஎன்என் செய்தி வெளியிட்டது. அப்போது அந்த செய்தி மிகப்பெரிய அதிர்வலைகள் உருவானது. ரஷ்யா இந்த கூற்றை மறுத்தது. ஆனால் ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பெயர்பாக் "ஒரு ஹைப்ரிட் ஆக்கிரமிப்புப் போரை நடத்துகிறது" என்று ரஷ்யாவைத் தாக்கி பேசினார். பிப்ரவரியில் ஒரு புதிய ஆயுத தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டு விழாவில்தான் ரெயின்மெட்டால் (Rheinmetal) தலைமை நிர்வாக அதிகாரி அர்மின் பேப்பர்கரை நான் சந்தித்தேன். 61 வயதான அவரை பற்றி சொல்ல வேண்டுமெனில் உண்மையில் அவர் "யாரோ" என்று தான் ஆரம்பத்தில் தோன்றியது. ஏனெனில் நேட்டோ நாடுகள் யுக்ரேனுக்கு ஆயுதங்களை மீண்டும் வழங்கவும் தங்கள் சொந்த பாதுகாப்பை அதிகரிக்கவும் பில்லியன்களை செலவிடும் நிலையில் அர்மின் பேப்பர்கர் முக்கியத்துவம் உள்ளவரா என்று சிந்திக்க வைக்கிறது. ஜெர்மனி சான்சலர் ஓலாஃப் ஷூல்ஸ், பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் மற்றும் டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சென் ஆகியோர் லோயர் சாக்சனி பகுதியில் தொழிற்சாலை அமைக்கும் திட்டத்தை பற்றி பேச அவர்களுடன் அர்மின் பேப்பர்கரும் நின்றார். அப்போது தான் அவர் எவ்வளவு முக்கியமானவர் என்பது தெளிவாகத் தெரிந்தது. அவரைக் கொல்வதற்கான சதி வெற்றிகரமாக செயல்படுத்தப்பட்டிருந்தால், அது மேற்குலகில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தி இருக்கும். பட மூலாதாரம்,RONNY HARTMANN/AFP படக்குறிப்பு, ஜெர்மன் சான்சலர் மற்றும் டேனிஷ் பிரதமருடன் அர்மின் பேப்பர்கர் தொலைபேசி உரையாடலை ஒட்டுக் கேட்ட உளவாளிகள் பாதுகாப்பு நடவடிக்கை குறைபாட்டால், ஜெர்மன் விமானப்படையின் மூத்த அதிகாரிகளுக்கு இடையேயான மிகவும் உணர்ச்சிகரமான உரையாடல் ஒட்டு கேட்கப்பட்டது. பின்னர் அது ரஷ்ய தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டது. லுஃப்ட்வாஃபில் உள்ள ஒரு பிரிகேடியர் ஜெனரல், பாதுகாப்பற்ற தொலைபேசி இணைப்பை பயன்படுத்தியதால் உளவாளிகள் ஒட்டு கேட்க வழிவகுத்தது. இது ஜெர்மனிக்கு கடுமையான சங்கடத்தை ஏற்படுத்தியது. இது நடந்து சில வாரங்களுக்குப் பிறகு, பவேரியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை நாசப்படுத்த திட்டமிட்டதாக சந்தேகத்தின் பேரில் இரண்டு ஜெர்மன்-ரஷ்ய பிரஜைகள் கைது செய்யப்பட்டனர். ஜெர்மனியின் வெளியுறவு அமைச்சர் அன்னலெனா பேர்பாக் ரஷ்ய தூதரை வரவழைத்து புகார் அளித்தார்: "புதின் தனது பயங்கரவாதத்தை ஜெர்மனிக்கு கொண்டு வர நாங்கள் அனுமதிக்க மாட்டோம்." என்றார் அவர். பட மூலாதாரம்,AXEL HEIMKEN/AFP கடந்த வாரம்தான், வடக்கு ரைன்-வெஸ்ட்பாலியாவில் உள்ள இரண்டு ராணுவத் தளங்களுக்கு நீர் வழங்குவதற்கு அமைக்கப்பட்டிருந்த வேலிகளில் துளைகள் இடப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. யாரோ நீரில் விஷம் கலக்க முற்படுகிறார்கள் என்ற கவலை எழுந்தது. சந்தேகத்திற்குரிய நாசவேலைச் செயல்களால் குறிவைக்கப்பட்ட பல ஐரோப்பிய நாடுகளில் ஜெர்மனியும் ஒன்று. இரண்டாம் உலகப் போருக்கு பிறகு நிறுவப்பட்ட, ஏராளமான அமெரிக்க ராணுவ தளங்களை ஜெர்மனி கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ரஷ்யா ஜெர்மனியை மிகப்பெரிய அதே சமயம் "பலவீனமான" சக்தியாகக் கருதுகிறது என்று மார்க் கலியோட்டி நம்புகிறார். நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களை தகர்த்தது யார்? ரஷ்யா - ஜெர்மனி இடையே பால்டிக் கடலுக்கு அடியில் உள்ள நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயுக் குழாய் 2022 இல் தகர்க்கப்பட்டது (Nord Stream blasts). சமீப ஆண்டுகளில் ஜெர்மனியைப் பாதித்த மிகப் பெரிய நாசவேலையாக இது கருதப்படுகிறது. இந்த தாக்குதலுக்கு யார் உத்தரவிட்டது என்பது குறித்த ஊகங்கள் அன்றிலிருந்து எழுந்த வண்ணம் இருந்தன. ஆனால் தற்போது அந்த சம்பவம் தொடர்பாக யுக்ரேனிய டைவிங் பயிற்றுவிப்பாளரைக் கைது செய்ய ஜெர்மனி இப்போது உத்தரவு பிறப்பித்துள்ளது. இது உண்மையில் அதிர்ச்சியூட்டும் விஷயம். கடந்த வாரம் வால் ஸ்ட்ரீட் ஜர்னல், இந்த சிறிய அளவிலான நடவடிக்கை தனிப்பட்ட முறையில் நிதியளிக்கப்பட்டது என்றாலும் யுக்ரேனில் இருந்து மேற்பார்வையிடப்பட்ட ஒன்று என்று தெரிவித்தது. யுக்ரேன் இந்த அறிக்கையை முட்டாள்தனம் என்று நிராகரித்தது. அதிபர் புதின் தனது சொந்த குழாய் திட்டத்தை அழிக்க உத்தரவிட்டிருக்க வாய்ப்பிருக்கிறது என்ற சந்தேகம் இருந்தபோதிலும், இது உளவுத்துறையின் சிக்கலான மற்றும் கணிக்க முடியாத தன்மையை பிரதிபலிக்கிறது. ஒவ்வொரு முறையும் வெளிப்படையான நாசவேலை சம்பவங்கள் நிகழும் போது, உடனடியாகவும், நிச்சயமாகவும் ரஷ்யாவை காரணம் காட்ட முடியாது. பிரான்சில் ஒலிம்பிக்கிற்கு முன்னதாக நாட்டின் அதிவேக ரயில் வலையமைப்பை குறிவைத்ததாக குற்றம் சாட்டப்பட்டவர்கள், தீவிர இடதுசாரி செயற்பாட்டாளர்களாக இருந்தனர். ஆரம்பத்தில் ரஷ்ய ஏஜெண்ட்களாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுந்தது. பட மூலாதாரம்,BENJAMIN WESTHOFF/EPA-EFE/REX/SHUTTERSTOCK படக்குறிப்பு, கொலோன்-வான் பகுதியில் உள்ள ஜெர்மன் விமானப்படை தளம் "நீரில் காணப்பட்ட தன்மை" காரணமாக பல மணி நேரம் சீல் வைக்கப்பட்டது. ஜெர்மனியிலும் தீவிர இடதுசாரி போராளிகளின் தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. நார்ட் ஸ்ட்ரீம் தகர்புக்கு யுக்ரேனிய ஏஜெண்டுகளே காரணம் என்று தற்போது கூறப்பட்டு வருகிறது. இது ஜெர்மனியில் உள்ள அரசியல் கட்சிகள் மத்தியில் புதிய விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஜெர்மனி யுக்ரேனுக்கு ஆதரவு அளிப்பதை பற்றி அவர்கள் விமர்சித்து வருகின்றனர். தீவிர வலதுசாரி ( AfD) கட்சியின் தலைவரான ஆலிஸ் வீடல், யுக்ரேனுக்கு உதவி செய்வதை நிறுத்த வேண்டும் மற்றும் நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களை சேதப்படுத்தியதால் ஏற்பட்ட இழப்பை யுக்ரேன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பனிப்போர் ஒப்பீடுகள் ஐரோப்பிய பாதுகாப்பை சார்ந்திருப்பதால், அந்தக் கால அரசியலும் ஜெர்மனியில் முற்றிலும் எதிர்பாராத விதத்தில் தன்னைப் புதுப்பித்துக் கொண்டுள்ளது. பாதுகாப்பை வலுப்படுத்தும் முயற்சியில், ஜெர்மன் அரசாங்கம் முக்கியமான உள்கட்டமைப்பு பிரச்னைகளை சரிசெய்யும் நோக்கத்தில் ஒரு புதிய சட்டத்தை உருவாக்கி வருகிறது. "அனைத்து பகுதிகளிலும் அதிகபட்ச பாதுகாப்பு நடவடிக்கைகள்" இருக்க வேண்டும் என்று ஜெர்மன் உள்துறை அமைச்சர் நான்சி ஃபைசர் கூறுகிறார். பட மூலாதாரம்,DANISH DEFENCE HANDOUT படக்குறிப்பு, நார்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் தகர்ப்பு ஜெர்மனி பாதுகாப்பை மீண்டும் வலுப்படுத்துமா? கிரிட்டிஸ் அம்ப்ரெல்லா சட்டத்தின் கீழ் (Kritis Umbrella Act), ஆற்றல், போக்குவரத்து மற்றும் நீர் போன்ற முக்கியமான துறைகளில் செயல்படுபவர்கள் குறைந்தபட்ச பாதுகாப்பு தரங்களைப் பின்பற்ற வேண்டும். இது ஜெர்மனியில் வகுக்கப்படும் முதல் பெடரல் சட்டம், ஆனால் போரைச் சுற்றி அதிக பதற்றங்கள் இருந்தபோதிலும் இன்னும் இறுதி ஒப்புதல் பெறப்படவில்லை. ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட கவச மோர்ட்டார் வாகனங்கள் ரஷ்ய எல்லைக்குள் யுக்ரேன் மேற்கொள்ளும் ராணுவ நடவடிக்கையில் பயன்படுத்தப்படுவதாக கூறப்படுகிறது. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு ஜெர்மனியின் மற்றொரு வெளியுறவுக்கொள்கை மீதான தடை உடைக்கப்படுவதை இது குறிக்கிறது. 2026 முதல் அமெரிக்காவின் நீண்ட தூர ஏவுகணைகளை தனது மண்ணில் நிலைநிறுத்த ஜெர்மனி ஒப்புக் கொண்டிருப்பதும் முக்கியமான மாற்றங்களில் ஒன்று. யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பு தொடங்கிய போது, ஜெர்மனி சான்சலர் ஷூல்ஸ், `ஜெய்டென்வெண்டே’ (Zeitenwende) அதாவது தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்த உறுதியளித்தார். எவ்வாறாயினும், ஜெர்மனி அரசாங்கத்தின் ஆதரவாளர்களும் எதிர்ப்பாளர்களும் பல ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையில் குறைவாகவே முதலீடு செய்யும் போக்கை மாற்றியமைக்கவும், ஜெர்மனியின் துயரமான கடந்த காலத்தால் ஏற்பட்ட காயத்தை மாற்றுவதற்கும் நேரம் எடுக்கும் என்று ஒப்புக் கொள்கிறார்கள். சமீபத்திய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு, ஜெர்மனி இந்த நிகழ்வுகளுக்கு எவ்வளவு காலம் எடுத்து கொள்ளும் என்ற கேள்விக்குறி எழுகின்றது. பாதுகாப்பை மீண்டும் கட்டியெழுப்புவது பற்றி மட்டுமல்ல, இணைய பாதுகாப்பை மேம்படுத்துவதும் உளவுத்துறையை மேம்படுத்துவதும் இதில் அடங்கும் என்று மார்க் கேலியோட்டி கூறுகிறார். "பாதுகாப்பு திட்டமிடல் என்பது சில வாரங்கள் அல்லது மாதங்களில் நடந்துவிடாது. வருடங்கள் ஆகும்.." என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c6239xe0ge2o
  2. பெண் சிங்கம் வேட்டையாடுவது நமது களத்தில் உள்ள ஆண் சிங்கங்களுக்கு பிடிக்கவில்லையோ?! கருத்தொன்றையும் காணவில்லை.
  3. ரஷ்யா vs யுக்ரேன் போர் உக்கிரம் - ஜபோரிஷியா அணுமின் நிலைய பாதுகாப்பு பற்றி ஐ.நா. அமைப்பு கவலை பட மூலாதாரம்,UKRAINIAN PRESIDENCY/HANDOUT படக்குறிப்பு, ஜபோரிஷியா அணு மின் நிலையத்தில் குளிரூட்டும் கோபுரம் ஒன்றில் இருந்து கரும்புகை வெளிவரும் காட்சி கட்டுரை தகவல் எழுதியவர், சோபியா ஃபெரீரா சாண்டோஸ் பதவி, பிபிசி செய்தி 12 ஆகஸ்ட் 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட யுக்ரேனில் உள்ள ஜபோரிஷியா என்ற இடத்தில் இருக்கும் மின் நிலையத்தின் அணுசக்திப் பாதுகாப்பு நிலைமை மோசமாகிக் கொண்டே வருவதாக, ஐ.நா-வின் அணுசக்திக் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. முன்னர் அந்த மின்நிலையத்தின் அருகே ஒரு ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. சர்வதேச அணுசக்தி முகமையின் (International Atomic Energy Agency - IAEA) தலைவர் ரஃபேல் க்ரோஸ்ஸி, இது குறித்து ‘மிகவும் கவலையுடன்’ இருப்பதாகவும், அணுமின் நிலையத்தைப் பாதுகாக்க ‘எல்லா தரப்பிலிருந்தும் அதிகபட்ச கட்டுப்பாடு’ தேவை என்றும் கூறினார். அங்கு நடந்த தாக்குதல் அணுமின் நிலையத்துக்கு வெளியே உள்ள சாலையில் நடந்தது. அங்கு அமைந்திருக்கும் அத்தியாவசிய நீர் தெளிப்பான் குளங்களுக்கு அருகில், மீதமுள்ள ஒரே உயர் மின்னழுத்த இணைப்பிலிருந்து சுமார் 100 மீ., தொலைவில் தாக்குதல் நடந்தது. இந்த ஆலை போரின் ஆரம்பத்தில் ரஷ்யாவின் படைகளால் கைப்பற்றப்பட்டது. இங்கு நடந்த தாக்குதலுக்கு ரஷ்யா-யுக்ரேன் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டிக்கொண்டனர். ஆலையின் அருகில் வெடிச்சத்தம் கடந்த வாரம், ஆலையின் குளிரூட்டும் கோபுரங்களில் ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டதை அடுத்து, யுக்ரேனும் ரஷ்யாவும் ஒன்றையொன்று குற்றம் சாட்டிக்கொண்டன. ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஜபோரிஷியா-வில் நடந்த தாக்குதலை நடத்தியது யார் என்று லுக்கு யார் காரணம் வேலைநிறுத்தத்தை நடத்தியது யார் என்று சர்வதேச அணுசக்தி முகமை கூறவில்லை, ஆனால் ஜபோரிஷியா-வில் நிலைகொண்டிருந்த அதன் குழு, வெடிபொருளை ஏற்றிச் சென்ற ஆளில்லா விமானத்தால் சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கிறது. "ஆலைக்கு அருகில் பல்வேறு இடங்களில் இருந்து அடிக்கடி வெடிச்சத்தங்கள், தொடர் கனரக இயந்திரத் துப்பாக்கி, துப்பாக்கி, மற்றும் பீரங்கி ஆகியவற்றின் சத்தம் கேட்டுள்ளது," என்று அந்நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜபோரிஷியா மின்நிலையம் மின்சாரம் உற்பத்தி செய்தி இரண்டு ஆண்டுகள் ஆகின்றன. கடந்த ஏப்ரல் மாதம் முதல் அதன் ஆறு உலைகளும் மூடப்பட்டுள்ளன. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,2022-ஆம் ஆண்டு முதல் ஜபோரிஷியா அணு மின் நிலையம், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது என்ன நடந்தது? யுக்ரேனில் உள்ள ஜபோரிஷியா அணு மின் நிலையத்தில் ஆகஸ்ட் 11-ஆம் தேதி ஏற்பட்ட தீ விபத்து குறித்து ரஷ்யா மற்றும் யுக்ரைன் ஆகிய இரு நாடுகளும் ஒருவரையொருவர் குற்றம் சாட்டின. இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ரஷ்யப் படைகளின் ஆக்கிரமிப்பில் உள்ள இந்த அணுமின் நிலையத்தில் அந்தப் படைகளே தீ வைத்து கொளுத்தியதாக யுக்ரேன் அதிபர் வொலோடிமிர் ஸெலன்ஸ்கி கூறினார். ஆனால், யுக்ரேன் தாக்குதலால் தான் இந்த தீ விபத்து ஏற்பட்டதாக ஜபோரிஷியாவில் ரஷ்ய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநர் கூறியுள்ளார். ஐ.நா.வின் அணு ஆயுத கண்காணிப்பு அமைப்பு, அந்த அணுமின் நிலையத்தில் இருந்து கடுமையான புகை வந்ததாகவும், அணுசக்தி பாதுகாப்பில் இதனால் எந்தவொரு தாக்கமும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. யுக்ரேன் மீதான ரஷ்யப் படையெடுப்பு 2022-ஆம் ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய பிறகு முதன் முறையாக ரஷ்ய எல்லைக்குள் 30கி.மீ. வரை யுக்ரேனிய படைகள் முன்னேறியுள்ள பின்னணியில் ஜப்போரிஷியா அணுமின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஆகஸ்ட் 11-ஆம் தேதி, ஜபோரிஷியாவில் ரஷ்ய அரசால் நியமிக்கப்பட்ட ஆளுநரான எவ்ஜெனி பலிட்ஸ்கி, அணு மின் நிலையத்தின் குளிரூட்டும் கோபுரங்களில் தீ விபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறினார் அதற்கு யுக்ரேன் தாக்குதலே காரணம் என்று குற்றம் சாட்டிய அவர், அணுமின் நிலையத்தை சுற்றிலும் கதிர்வீச்சு அதிகரிப்பு ஏதும் இல்லை என்றும் கூறினார். ரஷ்யாவுக்குள் எல்லை தாண்டி முன்னேறும் யுக்ரேனை அச்சுறுத்தும் நோக்கில் ரஷ்யப் படைகள் வேண்டுமென்றே ஜபோரிஷியா அணுமின் நிலையத்தில் தீ வைத்திருப்பதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். ஜபோரிஷியாவில் ரஷ்ய அரசால் நியமிக்கப்பட்ட மற்றொரு அதிகாரியான விளாடிமிர் ரோகோவ், 'தீ முழுவதும் அணைக்கப்பட்டுவிட்டது' என்று ஆகஸ்ட் 12-ஆம் தேதி அதிகாலை தனது டெலிகிராம் பதிவில் குறிப்பிட்டார். 2022-ஆம் ஆண்டு முதல் ஜபோரிஷியா அணு மின் நிலையம், ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இங்கு எந்த ஒரு மின் உற்பத்தியும் நடைபெறவில்லை. இங்குள்ள ஆறு அணு உலைகளும் ஏப்ரல் முதல் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சர்வதேச அணுசக்தி அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், பல வெடிப்புகளை தொடர்ந்து, ஜபோரிஷியா அணுமின் நிலையத்தில் இருந்து கடுமையான புகை வெளி வந்ததாக, அதன் நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. குளிரூட்டும் கோபுரங்களில் ஒன்றின் மீது டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக அணுமின் நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டதாக அந்த அமைப்பு அப்போது கூறியது. எனினும், அணுசக்தி பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும் சர்வதேச அணுசக்தி அமைப்பு அப்போது தெரிவித்திருந்தது. "குளிரூட்டும் கோபுரத்தில் ஏற்பட்டுள்ள சேதத்தை உடனடியாக மதிப்பீடு செய்ய வேண்டும்" என்றும் சர்வதேச அணுசக்தி அமைப்பு கூறியுள்ளது. ரஷ்ய எல்லைக்குள் புகுந்து யுக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது என்பதை அந்நாட்டு அதிபர் ஸெலன்ஸ்கி முதன் முறையாக ஒப்புக் கொண்ட மறுநாள் ஜபோரிஷியா அணு மின் நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் பேசிய மூத்த யுக்ரைன் அதிகாரி ஒருவர், நிறுவனத்திடம் கூறுகையில், ரஷ்ய படை தொடக்கத்தில் குறிப்பிட்டதைக் காட்டிலும் கூடுதலான படைகள் இந்த தாக்குதலில் ஈடுபட்டுள்ளதாக கூறினார். செவ்வாய்கிழமையன்று யுக்ரேனிய படைகள் ரஷ்யாவுக்குள் 30 கிலோமீட்டர் (19 மைல்) தொலைவுக்கு முன்னேறிச் சென்று தாக்குதல் நடத்தியது. பிப்ரவரி 2022-ஆம் ஆண்டில் ரஷ்யா படையெடுப்பை தொடங்கியதில் இருந்து யுக்ரேன் நடத்திய மிகப்பெரிய தாக்குதல் இதுவாகும். யுக்ரேன் தாக்குதலை தடுத்த நிறுத்த ரஷ்யா தொடர்ந்து போராடி வருகிறது. போர் நடக்கும் குர்ஸ்க் பகுதியில் 76,000-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர். அங்கு உள்ளூர் அதிகாரிகள் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். குர்ஸ்க் பகுதியில் இருந்து பாதுகாப்பு தேடி மாஸ்கோ செல்ல விரும்பும் மக்களுக்காக அவசர இரயில் சேவைகள் அளிக்கப்படுகின்றன. யுக்ரேன் நடத்திய தாக்குதலில் சிலர் காயமடைந்ததாக குர்ஸ்க் ஆளுநர் தெரிவித்துள்ளார். அங்கே இருநாட்டுப் படைகளுக்கும் இடையே இந்த வார இறுதி வரை சண்டை நீடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. யுக்ரைனின் இந்த தாக்குதல் ஆத்திரமூட்டும் ஒன்று என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் இந்த வார தொடக்கத்தில் கூறினார். https://www.bbc.com/tamil/articles/cjrd82j1lx3o
  4. Published By: VISHNU 16 AUG, 2024 | 03:46 AM சுஹாசினி ஹைதர் இந்த தசாப்தத்தின் தொடக்கத்தில் இருந்து இந்தியாவுக்கு அதன் அயல்நாடுகளில் இடம்பெற்றுவரும் நிகழ்வுகள் ஒன்றுக்குப்பின் ஒன்றாக அதிர்ச்சியை கொடுத்துவருகின்றன. 2021 ஆம் ஆண்டில் மியன்மாரில் சதிப்புரட்சியும் ஆப்கானிஸ்தானில் மீண்டும் தலிபான்களின் ஆட்சியும். 2022 ஆம் ஆண்டில் பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் பதவி கவிழ்க்கப்பட்டார். இலங்கையில் மக்கள் கிளர்ச்சியினால் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அதிகாரத்தில் இருந்து விரட்டப்பட்டார். அதற்கு பிறகு மாலைதீவு தேர்தலில் இந்தியாவுடன் மிகவும் நெருக்கமான உறவுகளைப் பேணிவந்த ஜனாதிபதி சோலீ அரசாங்கம் தோற்கடிக்கப்பட்ட அதேவேளை, நேபாளத்திலும் கூட்டரசாங்கங்களின் வீழ்ச்சி அதே தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்தியாவுடன் குறைந்தளவு நட்புறவைக் கொண்ட பிரதமர் ஒலீயின் அரசாங்கம் பதவிக்கு வந்தது. அடுத்து இப்போது பங்களாதேஷ் மக்கள் கிளர்ச்சி பிரதமர் ஷேய்க் ஹசீனாவை திடீரென்று பதவியில் இருந்து விரட்டியிருக்கிறது. அவர் இந்தியாவுக்கு தப்பி வந்திருக்கிறார். ஹசீனா அரசாங்கத்தின் மீது இந்தியா எவ்வாறு பெருமளவுக்கு நம்பிக்கை வைத்துச் செயற்பட்டது என்பதை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்கக்கூடிய அதிர்ச்சியை உணர்ந்து கொள்ளமுடியும். ஹசீனாவுக்கு பிறகு பதவிக்கு வருபவர்களுடன் எவ்வாறு உறவுகளை ஏற்படுத்திக்கொள்வது என்பதில் இந்தியா தடுமாறிக் கொண்டிருக்கிறது. கடந்த சில வருடங்களின் நிகழ்வுப்போக்குகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தெற்காசியாவில் ஏற்பட்டிருக்கும் சடுதியான மாற்றங்களின் விளைவுகளினால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் அது போன்ற விளைவுகளில் இருந்து தான் தப்பித்துக் கொள்வதற்கும் இந்தியாவுக்கு கிடைத்திருக்கக்கூடிய பாடங்கள் எவை? இந்திய அரசாங்கம் அதன் சொந்த அயலகத்தில் இடம்பெறும் நிகழ்வுகளின் விளைவுகளை எதிர்கொள்வதற்கு தயாரில்லாத ஒரு நிலையில் இருந்திருக்கக்கூடாது என்பது முதல் பாடம். பங்களாதேஷில் இந்தியாவின் பிரசன்னத்தை பொறுத்தவரை, தலைநகர் டாக்காவில் உள்ள உயர்ஸ்தானிகரகத்துக்கு புறம்பாக, சிட்டாகொங், ராய்ஷாஹி, குல்னா மற்றும் சில்ஹெற் ஆகிய நகரங்களில் துணைத் தூதரகங்களைக் கொண்டிருக்கிறது. அத்துடன் பல இந்திய அமைப்புக்கள் அந்த நாட்டில் பல்வேறு செயற்திட்டங்களில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றன. இவை எல்லாம் கடந்த ஒரு சில மாதங்களாக மாத்திரமல்ல, கடந்த சில வருடங்களாக ஹசீனா அரசாங்கத்துக்கு எதிராக வளர்ந்துகொண்டிருந்த எதிர்ப்பை பற்றிய விபரங்கள் முழுமையாக திரட்டப்பட்டு புதுடில்லிக்கு அனுப்பப்படுவதை உறுதிசெய்திருக்க வேண்டும். அவாமி லீக் அரசாங்கம் ஒரு எதேச்சாதிகார, தனிக்கட்சி ஆட்சியாக மாறிக்கொண்டுவந்தது. எதிரணி அரசியல்வாதிகள் பலர் சிறையில் அடைக்கப்பட்டதுடன் மேலும் பலர் வெளிநாடுகளில் அஞ்ஞாதவாசம் செய்கிறார்கள். சிவில் சமூகத்தின் பல்வேறு பிரிவினர் தாங்கள் ஒதுக்கப்படுவதாகவும் தொல்லைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் உணர்ந்தார்கள். நிலைமை இவ்வாறாக இருந்தபோதிலும், அதைப் புரிந்துகொள்வதற்கோ அல்லது தனது அக்கறைகளை ஹசீனா அரசாங்கம் விளங்கக்கூடிய முறையில் கூறுவதற்கோ இந்திய அரசாங்கம் எதையும் செய்யவில்லை. மேலும், பங்களாதேஷ் எதிரணியுடன் நெருக்கமான தொடர்புகளை வைத்துக் கொள்வதற்கு இந்திய இராஜதந்திரிகள் தவறினார்கள். முன்னாள் பிரதமர் பேகம் காலிதா ஸியாவின் தலைமையிலான பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் தலைவர்கள் இந்தியாவுக்கு விஜயம் செய்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டது. அது மாத்திரமல்ல, ஒரு சந்தர்ப்பத்தில், ஹசீனா அரசாங்கத்தின் வேண்டுகோளையடுத்து பங்களாதேஷ் தேசியவாத கட்சியின் பிரிட்டிஷ் வழக்கறிஞர் ஒருவரை இந்திய அரசாங்கம் நாடுகடத்தியது. இவையெல்லாம் அரசியல் மதிலின் ஒரு பக்கத்தில் மாத்திரம் நின்றுகொள்வதற்கு இந்திய வெளிவிவகார அமைச்சு எடுத்த தீர்மானத்தை தெளிவாக வெளிக்காட்டுகின்றன. அத்தகைய ஒரு பக்கச்சார்பான ஊடாட்டத்தை வரலாறு பல தடவைகள் வேண்டிநிற்கிறது. பேகம் காலிதா ஸியாவின் கீழான பங்களாதேஷ் தேசியவாத கட்சி அரசாங்கத்தின் பதவிக்காலத்தில், குறிப்பாக பயங்கரவாதம் மற்றும் எல்லையோரக் கொலைகள் தொடர்பான பிரச்சினைகள் காரணமாக இந்தியாவுக்கும் பங்களாதேஷுக்கும் இடையிலான பதற்றம் மிகவும் பாரதூரமானதாக இருந்த அதேவேளை, ஒரு நீண்டகாலத்துக்கு அயல்நாட்டில் உள்ள பிரதான எதிர்க்கட்சியை அலட்சியம் செய்வதற்கு இந்தியா முடிவெடுத்திருக்க முடியாது. ஆப்கானிஸ்தானில் இந்திய தூதரகங்கள் மீது நடத்தப்பட்ட படுமோசமான தாக்குதல்களில் தலிபான் தலைவர்கள் சம்பந்தப்பட்டிருந்த போதிலும்கூட, அந்த இயக்கத்துடன் உறவுகளை வலுப்படுத்துவதற்கு இந்தியா தீர்மானித்தது. இலங்கையின் ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) அடிக்கடி இந்திய விரோத நிலைப்பாடுகளை எடுத்த வரலாற்றைக் கொண்டிருந்த போதிலும், அதன் தலைவர்களை இந்திய அரசாங்கம் வரவேற்றது. கே.பி. சர்மா ஒலீ தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் இந்தியா கடுமையாகாஆட்சேபித்த வரைபடங்கள் தொடர்பிலான அரசியலமைப்பு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் கூட அந்த கட்சியுடன் புதுடில்லி விவகாரங்களை கையாண்டது. இந்த செயற்பாடுகள் எல்லாம் நடைமுறைச்சாத்தியமான அணுகுமுறை அயல்நாடுகளில் உள்ள தரப்புகளுடன் ஊடாட்டங்களை வேண்டிநிற்கிறது என்பதைக் காட்டுகிறது. மாலைதீவில் அன்றைய ஜனாதிபதி இப்ராஹிம் முஹமட் சொலீக்கு இந்தியா அளித்த முழுமையான ஆதரவும் முஹமட் முய்சுவை இந்திய விரோத தலைவர் என்று காண்பித்துக் கொண்டதும் தேர்தல் அலை மறுபக்கம் மாறியபோது பயனில்லாமல் போய்விட்டது. கசப்பான ஒரு உண்மையை இந்தியா ஜீரணித்துக்கொள்ள வேண்டியிருந்ததுடன் மாலைதீவில் இருந்து படைகளை விலக்கிக்கொண்ட போதிலும், கடந்த வாரம் மேற்கொண்ட விஜயத்தின்போது இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் ஜனாதிபதி முய்சுவின் அரசாங்கத்துடன் நெருக்கமான ஊடாட்டங்களை நாடினார். புதுடில்லி அதன் வீறுகாட்டும் மனோபாவத்தைக் கைவிட்டு அயல்நாடுகளுடனான ஊடாட்டங்களை பரந்தளவில் பேணினால் இத்தகைய கடுமையான பாடங்களை தவிர்த்திருக்க முடியும். ஒரு கட்சி ஆட்சியின் உறுதிப்பாட்டை விடவும் நாட்டுக்குள்ளும் எல்லைகளுக்கு வெளியேயும் பன்முகத்தன்மை கொண்ட அரசியல் கருத்துக்களை புதுடில்லி விரும்பி ஆதரிக்கவேண்டும். இழந்த நற்பெயரும் இனவாதப் பார்வையும் இந்தியா அதன் நண்பர்களை ஒருபோதும் மறக்கக்கூடாது என்பது பங்களாதேஷ் மற்றும் ஷேய்க் ஹசீனா விவகாரத்தில் நாம் பெற்றுக்கொண்ட இன்னொரு படிப்பினையாகும். காபூலின் வீழ்ச்சிக்குப் பிறகு தலிபான்களிடம் இருந்து தப்பியோடிவந்த நூற்றுக்கணக்கான ஆப்கானியர்களுக்கு விசா வழங்குவதற்கு மறுத்தபோது நம்பிக்கைக்குரிய பங்காளி என்ற நற்பெயரை புதுடில்லி இழந்துவிட்டது. அந்த ஆப்கானியர்களில் முன்னைய ஆப்கான் அரசாங்கத்தில் சிரேஷ்ட பாதுகாப்பு அதிகாரிகளும் அடங்குவர். அவர்கள் தங்களுக்கு தனிப்பட்ட ரீதியில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களையும் பொருட்படுத்தாமல் இந்திய இராஜதந்திரிகளை பாதுகாத்தவர்கள். அவர்களுக்கு கதவை மூடுவதற்கு இந்தியா எடுத்த தீர்மானம் தொடர்ந்தும் ஒரு கசப்பான விவகாரமாகவே நீடிக்கிறது. கோட்பாட்டுக்கு அப்பால் நடைமுறைச் சாத்தியமான அணுகுமுறையை கடைப்பிடிப்பது அவசியமாகும். தெற்காசியாவில் அதிகாரத்தை அடிக்கடி இழக்கும் தலைவர்கள் சில காலத்துக்கு பிறகு திரும்பவும் பதவிக்கு வருகிறார்கள். ஷேய்க் ஹசீனா இன்னொரு பாதுகாப்பான நாட்டைத் தேடிக்கண்டு பிடிக்கும்வரை தங்கியிருப்பதற்கு அனுமதித்ததன் மூலம் நல்ல காரியம் ஒன்றை இந்தியா செய்திருக்கிறது. அவரை இந்தியாவுக்குள் அனுமதிக்காமல் திருப்பி அனுப்பியிருந்தால் அது ஒரு துரோகச் செயலாக அமைந்திருக்கும். எதிர்காலத்திலும் அவரை கையாளும் விடயத்தில் மிகவும் நிதானமான அணுகுமுறை கடைப்பிக்கப்பட வேண்டும் ஹசீனா தொடர்ந்தும் இந்தியாவில் தங்கியிருப்பது புதிய அரசாங்கத்துடனான உறவுகளைச் சிக்கலாக்கும். குறிப்பாக அவரை நாடுகடத்துமாறு அவர்கள் கோரிக்கை விடுத்தால் அல்லது அவாமி லீக் கட்சியினர் தங்களை மீள அணிதிரட்டுவதற்கு இந்தியாவைப் பயன்படுத்துவதாக கருதப்பட்டால் பிரச்சினை தோன்ற சாத்தியம் இருக்கிறது. அயல்நாடுகளில் உறவுகளை இனவாத நோக்கின் அடிப்படையில் அணுகுவது ஒரு தவறு என்பது காலந்தாழ்த்தாமல் இந்தியா படிக்கவேண்டிய மூன்றாவது பாடமாகும். தெற்காசியா மதரீதியான பெரும்பான்மைச் சமூகங்களைக் கொண்ட ஒரு பிராந்தியமாகும். வெவ்வேறு நாடுகளில் சனத்தொகையின் அதிகப்பெரும்பான்மையான பிரிவினராக இந்துக்களும் முஸ்லிம்களும் பௌத்தர்களும் வாழ்கிறார்கள். நல்லுறவுகள் ஏதோ ஒரு வகையில் மதத்துடன் பிணைக்கப்பட்டவையாக இருக்கின்றன என்று எண்ணுவது தவறானதாகும். இந்துக்களை பெரும்பான்மையினராகக் கொண்ட நேபாளத்துடன் இந்தியா மிகவும் சிக்கலான உறவைக் கொண்டிருக்கின்ற அதேவேளை பௌத்தர்களைப் பெரும்பான்மையினராகக் கொண்ட பூட்டானும் முஸ்லிம்களை பெரும்பானமையினராகக் காண்ட மாலைதீவும் பெரும்பாலும் இந்தியாவுடன் சிறந்த உறவுகளைக் கொண்டிருந்தன. முஸ்லிம்களை பெரும்பான்மையினராகக் கொண்ட நாடுகளில் ( ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான், பஙகளாதேஷ் ) இருந்துவந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு மாத்திரம் குடியுரிமையை வழங்குவதை துரிதப்படுத்துவதற்கு குடியுரிமை திருத்தச் சட்டத்தைக் கொண்டுவந்த இந்திய அரசாங்கத்தின் நடவடிக்கை அயல்நாடுகளில் ( மேலே குறிப்பிட்ட நாடுகளில் மாத்திரமல்ல) எதிர் விளைவுகளை ஏற்படுத்தியது. ஹசீனாவின் பதவி விலகலை தொடர்ந்து பங்களாதேஷில் உள்ள சிறுபான்மை இனத்தவர்கள் தொடர்பில் மோடி அரசாங்கத்தின் காட்டும் அக்கறை சரியானதே. ஆனால், இந்திய உள்துறை அமைச்சின் ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட குழு போன்ற கருவிகளின் ஊாடாக அல்லாமல் மிகவும் சாதுரியமாக அந்த அக்கறை வெளிக்காட்டப்பட வேண்டும். தனது எல்லகைளுக்குள் வாழ்கின்ற சிறுபான்மை இனத்தவர்களையும் பாதுகாப்பதில் பற்றுறுதி கொண்டிருப்பதாக, சொல்லால் அன்றி செயலால், இந்திய அரசாங்கம் காண்பிப்பதன் மூலமாக பங்களாதேஷ் சிறுபான்மை இனத்தவர்கள் மீதான இந்தியாவின் அக்கறை கரிசனையுடன் நோக்கபடுவதை உறுதிசெய்யலாம். தெற்காசிய தனித்துவ பொறிமுறை இந்தியா முதன்மையான வல்லரசு என்ற அந்தஸ்தை மீண்டும் பெறவேண்டும் என்பது நான்காவது பாடம். பிராந்தியத்தில் சீனாவின் ஊடுருவல்களை எதிர்க்கவேண்டியது அவசியம் என்கின்ற அதேவேளை சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான போட்டாபோட்டிக்கான களமாக பிராந்தியம் மாறிவிடக்கூடாது. வர்த்தகம், இணைப்பு , முதலீடு மற்றும் மூலோபாய உறவுகளில் இந்தியாவை ஓரங்கட்டுவதற்கு சீனா மேற்கொள்ளும் முயற்சிகள் நன்கு தெரிந்தவையே. பங்களாதேஷில் ஹசீனா அரசாங்கத்துக்கு எதிரான அமெரிககாவின் நடவடிக்கைகள் இந்தியாவின் நலன்களை நசுக்கிவிட்டன. பாகிஸ்தான் தேர்தல்கள் குறித்து எந்த கருத்தையும் அமெரிக்கா கூறாமல் இருந்த பின்புலத்தில் நோக்கும்போது வாஷிங்டன் ஹசீனா அரசாங்கத்துக்கு எதிராக வெளியிட்ட கடுமையான அறிக்கைகளும் பங்களாதேஷில் ஜனநாயகத்தை பாதுகாக்கும் நடவடிக்கைகளுடன் விசேட விசேட விசா கொள்கையை பிணைக்கும் அமெராக்கத் தீர்மானமும் பாசாங்குத்தனமானவை என்பதை புரிந்துகொள்ள முடியும். பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சங்கம் (சார்க் ) போன்ற தனித்துவமான தெற்காசிய பொறிமுறைகளை மீட்டெடுத்து இந்தியா வெளித்தலையீடுகள் இன்றி அயல்நாடுகளுடன் ஊடாட்ங்களைச் செய்வதற்கு வழிவகைகளை கண்டறியவேண்டும். பாகிஸ்தானுடனான இரு தரப்பு பிரச்சினைகள் இந்தியா ஒரு தசாப்த காலமாக சார்க் அமைப்பை பகிஷ்கரிக்க வழிவகுத்தன. பங்களாதேஷுடனான உறவுகள் மோசமடையுமேயானால் ( சார்க்கை கைவிட்டதைப் போன்று ) பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா செயற்திட்டம் ( Bay of Bengal Initiative for Multi - Sectoral Technical and Economic Cooperation ) or BIMSTEC ) போன்ற மற்றைய பொறி முறைகளையும் கைவிடவேண்டுமா அல்லது அவ்வாறு செய்தால் அதன் விளைவு எத்தகையதாக இருக்கும் என்பது குறித்தும் இந்தியா பரிசீலனை செய்யவேண்டும். இறுதியாக, கடந்த சில வருடங்களாக இடம்பெற்று வரும் கொந்தளிப்புகளில் இருந்தும் தேர்தல் முடிவுகளில் இருந்தும் பெறக்கூடியதாக இருக்கும் குறிப்பிட்ட சில பொதுவான பாடங்கள் மீது புதுடில்லி மாத்திரமல்ல, சகல தெற்காசிய தலைநகரங்களும் கவனம் செலுத்தியாக வேண்டும். தொழில் வாய்பின்மையும் சமத்துவமற்ற வளர்ச்சியும் வீதிகளுக்கு மக்களை இறக்குகின்றன. ஆனால், எந்தளவு பொருளாதார முன்னேற்றம் ஏற்பட்டாலும் ஜனநாயக பின்னடைவை மூடிமறைக்க முடியாது. நவீன ஜனநாயகங்களில் எதிர்ப்பை நசுக்கும் செயற்பாடுகளை நீண்டகாலத்துக்கு தொடரமுடியாது."நீங்கள் ஒரு வருட காலத்துக்கு பயிரை வளர்க்க விரும்பினால் சோளத்தை பயிருடுங்கள்..... காலாதிகாலத்துக்கு பயிர் செய்ய விரும்பினால் ஜனநாயகத்தை வளருங்கள்" என்ற ஒரு பழைய கூற்று இருக்கிறது. இது இந்தியாவையும் அயல்நாடுகளுடனான அதன் உறவுகறையும் பொறுத்தவரை உண்மையாகும். https://www.virakesari.lk/article/191184
  5. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஆரிஃப் ஷமீம் பதவி, பிபிசி உருது மற்றும் பிபிசி பெர்ஷிய மொழிச் சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் இஸ்ரேல்-இரான் இடையே பதற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மத்திய கிழக்குக் பகுதி கொந்தளிப்பாகவே உள்ளது. மத்திய கிழக்கில் மீண்டும் ஒரு பெரிய மோதல் பற்றிய அச்சம் எழுந்துள்ளது. இந்நிலையில் இஸ்ரேல் மற்றும் இரான், இரண்டு நாடுகளில், எந்த நாட்டின் ராணுவம் பலம் மிக்கது என்ற கேள்வி எழுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இரானின் முக்கிய ராணுவ பலம், அதன் ஏவுகணைகள் இஸ்ரேல், இரான் - யார் கை ஓங்கியிருக்கிறது? பிபிசி இந்த கேள்வியைக் கீழே பட்டியலிடப்பட்டுள்ள ஆதாரங்களைப் பயன்படுத்தி எடைபோட்டது. இரு நாடுகளுக்கும் குறிப்பிடத்தக்க திறன்கள் உள்ளன, அவை ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. சர்வதேச மூலோபாய ஆய்வுகள் நிறுவனம் (International Institute for Strategic Studies - IISS) இரு நாட்டு ராணுவத்தின் தாக்கும் திறனை ஒப்பிட்டு, பல்வேறு அதிகாரப்பூர்வ மற்றும் இணையத்தில் கிடைக்கும் முறைகளைப் பயன்படுத்தி சிறந்த மதிப்பீடுகளை உருவாக்குகிறது. ஸ்டாக்ஹோம் இன்டர்நேஷனல் பீஸ் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் போன்ற பிற நிறுவனங்களும் இத்தகைய மதிப்பீடுகளைச் செய்கின்றன. ஆனால், பெரும்பாலும் புள்ளிவிவரங்களை வழங்காத இந்த நாடுகள் குறித்த ஆய்வில் துல்லியம் மாறுபடும். இருப்பினும், ஓஸ்லோ அமைதி ஆராய்ச்சி நிறுவனத்தைச் (Peace Research Institute Oslo - PRIO) சேர்ந்த நிக்கோலஸ் மார்ஷ், உலகெங்கிலும் உள்ள நாடுகளின் ராணுவ வலிமையை மதிப்பிடுவதற்கான அளவுகோலாக ஐ.ஐ.எஸ்.எஸ் கருதப்படுகிறது, என்கிறார். இஸ்ரேல், தனது பாதுகாப்பு வரவு செலவுத் திட்டத்தில் இரானை காட்டிலும் அதிகமாகச் செலவழிக்கிறது என்று ஐ.ஐ.எஸ்.எஸ் கூறுகிறது. கடந்த 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் இரானின் பாதுகாப்பு பட்ஜெட் சுமார் 740 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது (இந்திய மதிப்பில் சுமார் 62,000 கோடி ரூபாய்). இஸ்ரேலின் பாதுகாப்பு பட்ஜெட் அதைவிட இருமடங்காக இருந்தது. அதாவது 1,900 கோடி அமெரிக்க டாலர்களாக இருந்தது. (இந்திய மதிப்பில் சுமார் 1.6 லட்சம் கோடி ரூபாய்). இஸ்ரேலின் பாதுகாப்புச் செலவு, அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடும்போது இரானைவிட இரட்டிப்பாகும். தொழில்நுட்ப ரீதியில் முந்துவது யார்? ஐ.ஐ.எஸ்.எஸ் (IISS) புள்ளிவிவரங்கள், இஸ்ரேலிடம் 340 ராணுவ விமானங்கள் போருக்குத் தயாராக இருப்பதாகக் காட்டுகின்றன. ஜெட் விமானங்களில் நீண்டதூர வேலைநிறுத்த வரம்பைக் கொண்ட F-15 விமானங்கள், ரேடாரை தவிர்க்கக்கூடிய உயர் தொழில்நுட்ப F-35 ‘ஸ்டெல்த்’ விமானங்கள், மற்றும் வேகமான தாக்குதல் ஹெலிகாப்டர்கள் ஆகியவை இதில் அடங்கும். இரானிடம் சுமார் 320 போர்த் திறன் கொண்ட விமானங்கள் இருப்பதாக ஐ.ஐ.எஸ்.எஸ் மதிப்பிட்டுள்ளது. இந்த ஜெட் விமானங்கள் 1960களில் இருந்தே இருப்பவை. இதில் F4, F5 மற்றும் F14 ஆகியவை அடங்கும். (F14 விமானம், 1986 திரைப்படமான ‘டாப் கன்’ மூலம் பிரபலமானது). ஆனால் PRIO அமைப்பின் நிக்கோலஸ் மார்ஷ் கூறுகையில், இந்தப் பழைய விமானங்களில் உண்மையில் எத்தனை பறக்க முடியும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏனெனில் பழுதுபார்க்கும் பாகங்களைப் பெறுவது மிகவும் கடினமாக இருக்கும், என்கிறார். அயர்ன் டோம் மற்றும் ஏரோ அமைப்புகள் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இஸ்ரேலின் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் அயர்ன் டோம் மூலம் முறியடிக்கப்பட்டன இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பின் முதுகெலும்பாக, அதன் ‘அயர்ன் டோம்’ மற்றும் ‘ஏரோ’ அமைப்புகள் இருக்கின்றன. ஏவுகணைப் பொறியாளர் உசி ரூபின், இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சகத்தில், இஸ்ரேல் ஏவுகணைப் பாதுகாப்பு அமைப்பின் நிறுவனர் ஆவார். இப்போது ஜெருசலேம் இன்ஸ்டிடியூட் ஃபார் ஸ்ட்ராடஜி அண்ட் செக்யூரிட்டியின் மூத்த ஆராய்ச்சியாளரான அவர், கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது இரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் அனைத்தையும் ‘அயர்ன் டோம்’ மற்றும் இஸ்ரேலின் சர்வதேச கூட்டாளிகள் அழித்ததைக் கண்டபோது தாம் எவ்வளவு ‘பாதுகாப்பாக’ உணர்ந்ததாக பிபிசியிடம் கூறினார். "நான் மிகவும் திருப்தியாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்தேன். இலக்குகளுக்கு எதிராக இது மிகவும் சிறப்பு வாய்ந்தது. இதுவொரு குறுகிய தூர ஏவுகணைப் பாதுகாப்பு. வேறு எந்த அமைப்பிலும் இது போன்ற எதுவும் இல்லை," என்றார். இஸ்ரேலில் இருந்து இரான் எவ்வளவு தொலைவில் உள்ளது? இஸ்ரேல், இரானில் இருந்து 2,100கி.மீ., தொலைவில் உள்ளது. ஏவுகணைகள்தான் இரானை தாக்குவதற்கான இஸ்ரேலின் முக்கிய வழி, என ‘டிஃபென்ஸ் ஐ’ இதழின் ஆசிரியர் டிம் ரிப்லி பிபிசியிடம் கூறினார். இரானின் ஏவுகணைத் திட்டம் மத்தியக் கிழக்கில் மிகப் பெரியதாகவும் மிகவும் மாறுபட்டதாகவும் கருதப்படுகிறது. கடந்த 2022ஆம் ஆண்டில், அமெரிக்க மத்திய கட்டளையின் ஜெனரல் கென்னத் மெக்கென்சி, இரானிடம் ‘3,000க்கும் அதிகமான’ பாலிஸ்டிக் ஏவுகணைகள் இருப்பதாகக் கூறினார். சி.எஸ்.ஐ.எஸ் (CSIS) ஏவுகணைப் பாதுகாப்புத் திட்டத்தின் படி, இஸ்ரேலும் பல நாடுகளுக்கு ஏவுகணைகளை ஏற்றுமதி செய்கிறது. இரானின் ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் கடந்த 1980 முதல் 1988 வரை அண்டை நாடான இராக் உடன் செய்த போரின் நேரத்தில் இருந்து, இரான் தனது ஏவுகணை அமைப்புகள் மற்றும் ட்ரோன்களில் விரிவான பணிகளை மேற்கொண்டுள்ளது. இரான் குறுகிய மற்றும் நீண்டதூர ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை உருவாக்கியுள்ளது. அவற்றில் பல, கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. ஹூத்தி கிளர்ச்சியாளர்களால் சௌதி அரேபியாவை குறிவைத்துத் தாக்கப்பட்ட ஏவுகணைகளை ஆய்வு செய்த ஆய்வாளர்கள், அவை இரானில் தயாரிக்கப்பட்டவை என முடிவு செய்துள்ளனர். நீண்ட தூர தாக்குதல் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிரியாவில் உள்ள இரானிய துணைத் தூதரகக் கட்டடம் ஏப்ரல் 1ஆம் தேதி வான்வழித் தாக்குதலில் அழிக்கப்பட்டது, அதில் மூத்த இரானிய ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர் ‘டிஃபென்ஸ் ஐ இதழின் டிம் ரிப்லி கூறுகையில், இஸ்ரேல் இரானுடன் தரைப் போரில் ஈடுபடுவது சாத்தியமில்லை என்கிறார். "இஸ்ரேலின் பெரிய நன்மை அதன் விமானப் படை, மற்றும் அதன் வழிகாட்டும் ஆயுதங்கள். எனவே இரானில் உள்ள முக்கிய இலக்குகளுக்கு எதிராக வான்வழித் தாக்குதல்களை நடத்தும் திறன் அதனிடம் உள்ளது," என்றார். அதிகாரிகளைக் கொல்லவும், எண்ணெய் நிறுவல்களைக் காற்றில் இருந்து அழிக்கவும் இஸ்ரேலுக்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரிப்லி கூறுகிறார். "இதன் மையத்தில் இருப்பது ‘பனிஷ்’ தண்டனை. இஸ்ரேலிய ராணுவம் மற்றும் அரசியல் தலைவர்கள் அந்த வார்த்தையை எப்போதும் பயன்படுத்துகிறார்கள். அது அவர்களின் தத்துவத்தின் ஒரு பகுதி, இது அவர்களின் தத்துவத்தின் ஒரு பகுதி," என்கிறார். கடந்த காலத்தில், இரானின் தாக்குதலைத் தூண்டிய சிரியாவின் தலைநகரில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தை கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அழித்தது உட்பட, உயர்மட்ட இரானிய ராணுவம் மற்றும் பொதுமக்கள் வான்வழித் தாக்குதல்களில் கொல்லப்பட்டனர். அதற்கோ, அல்லது இரானின் முக்கிய அதிகாரிகளைக் குறிவைத்து நடத்தப்பட்ட பல தாக்குதல்களுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. ஆனால் மறுக்கவுமில்லை. பட மூலாதாரம்,IRGC HANDOUT / REUTERS படக்குறிப்பு,அபு மூசா தீவில் ஒரு பாதுகாப்புப் பயிற்சியின்போது, இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படையின் கடற்படை வேகப் படகுகள் கடற்படையின் பலம் என்ன? ஐ.ஐ.எஸ்.எஸ் அறிக்கைகளின்படி, இரானின் கடற்படையில் சுமார் 220 கப்பல்கள் உள்ளன. இஸ்ரேலிடம் சுமார் 60 கப்பல்கள் உள்ளன. சைபர் தாக்குதல்கள் சைபர் தாக்குதல் நடந்தால், இரான் இழப்பதைவிட இஸ்ரேல் இழப்பது அதிகம். இஸ்ரேலின் பாதுகாப்பு அமைப்பு இரானின் பாதுகாப்பு அமைப்பைவிட தொழில்நுட்ப ரீதியாக மேம்பட்டது. எனவே இஸ்ரேல் ராணுவத்தின் மீது மின்னணு தாக்குதல் நடத்தப்பட்டால் அதிக அளவில் சாதிக்க முடியும். இஸ்ரேலிய அரசாங்கத்தின் தேசிய சைபர் இயக்குநரகம், “இணைய தாக்குதல்களின் தீவிரம் முன்பைவிடக் குறைந்தது மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. மேலும், ஒவ்வொரு இஸ்ரேலிய துறையிலும் தாக்குதல்கள் நடக்கக்கூடும். போரின்போது இரான் மற்றும் லெபனானில் இயங்கும் ஹெஸ்பொலா அமைப்பு இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்தது. கடந்த 2023ஆம் ஆண்டின் அக்டோபர் 7 தாக்குதல்களுக்கும் அந்த ஆண்டின் இறுதிக்கும் இடையே 3,380 சைபர் தாக்குதல்கள் நடந்ததாக அது தெரிவிக்கிறது. இரானின் குடிமைத் தற்காப்பு அமைப்பின் தலைவர் பிரிகேடியர் ஜெனரல் கோலம்ரேசா ஜலாலி கூறுகையில், சமீபத்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இரான் கிட்டத்தட்ட 200 இணையத் தாக்குதல்களை முறியடித்துள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில், இரானின் எண்ணெய் அமைச்சர் ஜாவத் ஓவ்ஜி, ஒரு இணையத் தாக்குதல் நாடு தழுவிய அளவில் பெட்ரோல் நிலையங்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறினார். பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, இரான் இஸ்ரேலின் மீது கடந்த ஏப்ரல் மாதம் ஏவிய ஒரு பாலிஸ்டிக் ஏவுகணை சாக்கடல் கரையில் கிடக்கிறது அணு ஆயுதத் தாக்குதல் அச்சுறுத்தல் இஸ்ரேல் அதன் சொந்த அணு ஆயுதங்களைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் இதுபற்றி அந்நாடு தெளிவாகப் பேசுவதில்லை என்ற கொள்கையைப் பின்பற்றுகிறது. இரானிடம் அணு ஆயுதங்கள் இருப்பதாகக் கருதப்படவில்லை. குற்றச்சாட்டுகள் இருந்தாலும், அது அணு ஆயுதங்கள் உருவாக்குவதற்குத் தனது அணுசக்தித் திட்டத்தைப் பயன்படுத்த முயல்வதாக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை மறுக்கிறது. நிலவியல் மற்றும் மக்கள்தொகை இரான் இஸ்ரேலைவிடப் பலமடங்கு பெரிய நாடு. அதன் மக்கள் தொகை கிட்டத்தட்ட 8.9 கோடி. இது இஸ்ரேலின் மக்கள்தொகையான 1 கோடியைவிட கிட்டத்தட்ட பத்து மடங்கு. இரான், இஸ்ரேலைவிட ஆறு மடங்கு அதிகமான ராணுவ வீரர்களைக் கொண்டுள்ளது. இரானிடம் 6 லட்சம் ராணுவ வீரர்கள் உள்ளனர். இஸ்ரேலிடம் 1.7 லட்சம் வீரர்கள் உள்ளனர் என்று ஐ.ஐ.எஸ்.எஸ். கூறுகிறது. https://www.bbc.com/tamil/articles/c77l1rxmx2zo
  6. கொல்கத்தாவில் பெண் மருத்துவர் கொலை - நீதி கேட்டு இந்தியா முழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம் 18 AUG, 2024 | 01:57 PM புதுடெல்லி: கொல்கத்தாவில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்து கொல்லப்பட்டதை கண்டித்தும் உடனடியாக நீதி வழங்க நடவடிக்கை எடுக்க கோரியும் இந்தியாமுழுவதும் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தினர். இதனால் மருத்துவ சேவைகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 9-ம் தேதி 31 வயது பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டார். இந்நிலையில் பயிற்சி பெண் மருத்துவர் கொலையை கண்டித்தும் அதற்கு விரைவாக நீதி கிடைக்க வேண்டும் என்று கோரியும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வலியுறுத்தியும் இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) 24 மணி நேர வேலைநிறுத்த போராட்டத்துக்கு அழைப்பு விடுத்தது. அதன்படி நாடு முழுவதும் நேற்று மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டம் தொடங்கினர். நேற்று காலை 6 மணி முதல் இன்று காலை 6 மணி வரை நடைபெற்ற 24 மணி நேர போராட்டத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பங்கேற்றனர். பயிற்சி பெண் மருத்துவர் கொல்லப்பட்ட கொல்கத்தா ஆர்.ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் கூறும்போது ‘‘இவ்வழக்கை கொல்கத்தா போலீஸார் திசை திருப்பும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசு தடயங்கள்இஆதாரங்களை அழிக்க முயற்சிக்கிறது. சம்பந்தப்பட்ட குற்றவாளியை காப்பாற்ற அரசு முயற்சிக்கிறது’’ என்று குற்றம்சாட்டினர். இந்த போராட்டத்தால் வெளிநோயாளிகள் பிரிவு சேவை பாதிக்கப்பட்டது. மேலும் சாதாரண அறுவை சிகிச்சைகள் எதுவும் நடைபெறவில்லை. அதேவேளையில் அவசர அறுவை சிகிச்சைகள் வழக்கம் போல் நடைபெறும் என்று இந்திய மருத்துவ சங்கம் (ஐஎம்ஏ) ஏற்கெனவே அறிவித்திருந்தது. மருத்துவர்கள் போராட்டத்தால் நாடு முழுவதும் சேவைகள் பாதிக்கப்பட்டன. இதற்கிடையில் டெல்லியில் பயிற்சி மருத்துவர்கள் சங்கங்களின் சம்மேளனம் இந்திய மருத்துவர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் நேற்று மத்திய சுகாதாரத் துறைஅமைச்சக அதிகாரிகளை சந்தித்து கோரிக்கை மனுவை அளித்தனர். அவர்களிடம் சுகாதாரத் துறைஅமைச்சக அதிகாரிகள் கூறும்போது ‘‘பொதுமக்கள் நலன் கருதிமருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தை கைவிட வேண்டும்.நாடு முழுவதும் மருத்துவர்கள் மருத்துவத் துறை ஊழியர்கள் பாதுகாப்பை உறுதி செய்வதுகுறித்து ஆராய குழு அமைக்கப்படும். அரசு பிரதிநிதிகள் மருத்துவர்கள் மருத்துவத் துறை சார்ந்தவர்கள் யார் வேண்டுமானாலும் அந்தக் குழுவிடம் தங்கள் கருத்துகளை எடுத்துரைக்கலாம். மருத்துவத் துறையில் உள்ளவர்களின் பாதுகாப்பை மத்திய அரசு நிச்சயம் உறுதி செய்யும்’’ என்று தெரிவித்தனர். டெல்லியில் உள்ள குருதேக்பகதூர் ராம் மனோகர் லோகியாஇடிடியு போன்ற மருத்துவமனைகளில் வெளிநோயாளிகள் பிரிவுசெயல்படவில்லை. அந்த மருத்துவமனைகளை சேர்ந்த மருத்துவர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் பங்கேற்றனர். அதேபோல் ஜார்க்கண்ட்டில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மருத்துவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும் பல்வேறு மருத்துவ அமைப்புகள் ஜார்க்கண்ட்டில் நேற்று எதிர்ப்பு பேரணிநடத்தின. வடகிழக்கு பகுதியில் மிகவும் பழமையான அசாம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர். தமிழகத்தில் சென்னையிலும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். சண்டிகர் பெங்களூரு போன்ற இடங்களில் உள்ளஇந்திய மருத்துவ சங்க அலுவலகங்களில் ஆயிரக்கணக்கான மருத்துவர்கள் ஒன்று திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து மருத்துவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும் பணிபுரியும் மருத்துவர்களின் வேலை சூழல் பயிற்சி மருத்துவர்களின் வாழ்க்கை நிலை போன்றவற்றில் சீர்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும். குறிப்பாக 36 மணி நேர ஷிப்ட் நேரத்தின் போது மருத்துவர்கள் தங்குவதற்கு பாதுகாப்பான இடங்களை உறுதி செய்யவேண்டும். பணி இடங்களில் மருத்துவர்கள் மீது தாக்குதல் நடத்துவதை தடுக்க புதிய கடுமையான சட்டங்களை மத்திய அரசு கொண்டு வரவேண்டும். கரோனா வைரஸ் பரவலின் போது கொண்டு வரப்பட்ட அவசர சட்டம் போன்று மருத்துவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய மத்தியஅரசு கொள்கை முடிவு எடுக்க வேண்டும். கொல்கத்தா பயிற்சி பெண் மருத்துவர் கொலை வழக்கை குறிப்பிட்ட கால கெடுவுக்குள் முடித்து நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சம்பந்தப்பட்ட மருத்துவமனையில் தாக்குதல் நடத்திய குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக கொல்கத்தா பயிற்சிபெண் மருத்துவர் கொலையை கண்டித்து நேற்று முன்தினம் நாடு முழுவதும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் பெரும் போராட்டம் நடத்தினர். இந்நிலையில் மருத்துவர்கள் நேற்று வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தியது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் நேற்றுகூறும்போது ‘‘பயிற்சி பெண் மருத்துவர் கொலை தொடர்பாக சந்தேகப்படும் சுமார் 30 பேரை அடையாளம் கண்டுள்ளோம். அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/191362
  7. அன்டார்டிகா: பெருங்கடலின் சுழலில் சிக்கியுள்ள உலகின் பிரமாண்ட பனிப்பாறை பட மூலாதாரம்,CHRIS WALTON/BAS படக்குறிப்பு, உலகின் மிகப்பெரிய பனிப்பாறை ஏ23ஏ கட்டுரை தகவல் எழுதியவர், ஜோனதன் அமோஸ் & எர்வான் ரிவால்ட் பதவி, பிபிசி செய்திகள் 18 ஆகஸ்ட் 2024, 08:41 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஏ23ஏ (A23a) என்பது உலகின் மிகப்பெரிய பனிப்பாறை. அன்டார்டிக் பெருங்கடலில் நீண்டகாலமாக நகராமல் இருந்த இந்தப் பாறையில் தற்போது மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. உலகின் மிக வலிமையான கடல் நீரோட்டத்தோடு சேர்ந்து பயணிக்க வேண்டிய இந்தப் பனிப்பாறை, அன்டார்டிகாவின் வடக்குப் பகுதியில் கடந்த சில மாதங்களாகச் சுழலில் சிக்கிச் சுழன்ற வண்ணம் இருக்கிறது. பெரிய நீர் சுழற்சியின் மையப் பகுதியில் லண்டனை காட்டிலும் இரண்டு மடங்கு பெரிய அளவில் உள்ள இந்தப் பனிப்பாறை சிக்கிக் கொண்டதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். டெயல்ர் காலம் (Taylor Column) என்று கடல்சார் ஆராய்ச்சியாளர்களால் அழைக்கப்படும் இந்தச் சுழலில் இருந்து ஏ23ஏ பனிப்பாறை அவ்வளவு விரைவில் வெளியேறாது என்றும் தெரிவிக்கின்றனர். "பொதுவாக மக்கள், பனிப்பாறை உருமாறிக் கொண்டே இருக்கும் என்று நினைப்பார்கள். அவை சிறிது சிறிதாக உடைந்து உருகிவிடும். ஆனால் இந்தப் பனிப்பாறையின் நிலைமை அப்படியல்ல," என்று கூறுகிறார் துருவப் பகுதிகளில் ஆய்வு மேற்கொள்ளும் பேராசிரியர் மார்க் பிராண்டன். பிபிசி செய்தியிடம் பேசிய, அவர், "A23a பனிப்பாறை அழிய மறுப்பதாக," கூறினார். இந்தப் பனிப்பாறையின் பயணம் நீண்ட காலமாக ஆவணப் படுத்தப்பட்டுள்ளது. அன்டார்டிக் கடற்கரையில் இருந்து 1986ஆம் ஆண்டு பிரிந்த இந்தப் பனிப்பாறை உடனடியாக வேடெல் கடல்தரை மணலில் சிக்கிக் கொண்டது. படக்குறிப்பு, கடந்த 30 ஆண்டுகளாக இதுவொரு நிலையான பனித் தீவாகச் செயல்பட்டது. துளியும்கூட அங்கிருந்து நகரவில்லை. கடந்த 30 ஆண்டுகளாக இதுவொரு நிலையான பனித் தீவாக இருந்தது. துளியும்கூட அங்கிருந்து நகரவில்லை. ஆனால் 2020ஆம் ஆண்டில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக நகரத் துவங்கியது இந்தப் பனிப்பாறை. வெப்பமான காற்று மற்றும் நீர் உள்ள வடக்குப் பகுதியை நோக்கி நகர்வதற்கு முன் அது மிகவும் மெதுவாகவே நகர்ந்தது. இந்த ஆண்டின் ஏப்ரல் மாதத்தில், A23a அன்டார்டிகாவின் துருவவட்ட நீரோட்டப் பகுதியில் நுழைந்தது. உலகிலுள்ள நதிகளில் இருக்கும் நீரைக் காட்டிலும் நூறு மடங்கு அதிக நீரைக் கொண்ட மிகவும் வலிமையான நீரோட்டம் இது. இது பொதுவாக டிரில்லியன் டன் எடை கொண்டுள்ள பனிப்பாறையை அட்லான்டிக் பகுதியில் சேர்ப்பதற்கான ஊக்கியாகச் செயல்பட வேண்டும். பட மூலாதாரம்,DERREN FOX/BAS படக்குறிப்பு, உலகின் மிக வலிமையான கடல் நீரோட்டத்தோடு போட்டியிட வேண்டிய இந்தப் பனிப்பாறை, அன்டார்டிகாவின் வடக்குப் பகுதியில் கடந்த சில மாதங்களாகச் சுழன்று கொண்டிருக்கிறது. ஆனால் இந்த A23a பனிப்பாறையோ இந்த நீரோட்டத்தின் உதவியோடு எங்கும் செல்லவில்லை. மாறாக தெற்கு ஓர்க்னே தீவுகளுக்கு வடக்குப் பகுதியில் இருக்கிறது. நாள் ஒன்றுக்கு 15 டிகிரி கோணத்தில் எதிர்கடிகார திசையில் சுற்றி வருகிறது. இவ்வாறாக இது சுற்றிக் கொண்டிருக்கும் காலம் வரை இந்தப் பனிப்பாறைக்கு அழிவே இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். கடற்கரையில் இருந்து பிரிந்த பனிப்பாறை மீண்டும் கடலின் அடிப்பகுதியோடு இணையவில்லை. கடலின் தரைக்கும் பனிப்பாறையின் அடிப்பகுதிக்கும் இடையே குறைந்தது ஆயிரம் மீட்டர்கள் நீரால் நிறைந்துள்ளது. கடந்த 1920ஆம் ஆண்டில் முதன்முதலாக சர் ஜி.ஐ.சர் ஜி.ஐ.(ஜியோஃபெரி இன்கிராம்) டெய்லர் இந்தச் சுழல் குறித்து விவரித்துள்ளார். இப்போது அந்தச் சுழலில் இந்தப் பனிப்பாறை சிக்கியுள்ளது. படக்குறிப்பு, இந்தப் பனிப்பாறையைப் பொறுத்தவரை, தடையானது 100 கி.மீ. அகலம் கொண்ட, பிரீ கரை எனப்படும் கடல் முகடு. இந்த பிரீ கரையின் மேலே நீர்ச்சுழல் ஏற்பட்டுள்ளது. கேம்பிரிட்ஜில் படித்த இவர் திரவ இயக்கவியல் துறையில் ஒரு முன்னோடியாகச் செயல்பட்டார். மேலும் உலகின் முதல் அணுகுண்டு சோதனையின் மாதிரியைக் காட்ட மன்ஹாட்டன் திட்டத்தில்கூட இவர் இணைக்கப்பட்டார். பேராசிரியர் டெய்லர், சரியான சூழலில், நீரோட்டத்தில் ஏற்படும் தடை எவ்வாறு இரு வித்தியாசமான நீரோட்டங்களை உருவாக்கும் என்பதையும் அவற்றுக்கு மத்தியில் எவ்வாறு ஆழமான நீர் சுழற்சியை உருவாக்கும் என்பதையும் விவரித்தார். இந்தப் பனிப்பாறையைப் பொறுத்தவரை, 100 கி.மீ வரை விரிந்துள்ள, பிரீ கரை எனப்படும் கடல் முகடு தடையாக உள்ளது. இந்த பிரீ கரையின் மேலேதான் நீர்ச்சுழல் ஏற்பட்டுள்ளது. இந்தச் சுழலில் தற்போது A23a வசமாக சிக்கிக் கொண்டுள்ளது. படக்குறிப்பு, கடலின் தரைக்கும் பனிப்பாறையின் அடிப்பகுதிக்கும் இடையே குறைந்தது ஆயிரம் மீட்டர்கள் நீரால் நிறைந்துள்ளது. கடல் ஆச்சரியங்களால் நிறைந்தது. இதன் டைனமிக் அம்சம் அதில் சிறப்பான ஒன்று என்கிறார் பிரிட்டிஷ் அன்டார்டிக் சர்வேயில் இருந்து பேசிய பேராசிரியர் மைக் மெரெடித். "இத்தகைய டெய்லர் (Taylor Columns) நிகழ்வானது காற்றிலும் ஏற்படும். மலைகளுக்கு மேலே நகரும் மேகங்களில் இத்தகைய நிகழ்வுகளை நீங்கள் காண இயலும். ஆய்வகத் தொட்டியின் மேல் இது ஒரு சில சென்டிமீட்டர்கள் மட்டுமே நீளம் கொண்டதாகவும் அது இருக்கலாம் அல்லது இந்தப் பனிப்பாறை போன்ற மிகப்பெரிய அளவிலும்கூட இருக்கலாம்," என்கிறார் மைக். ஆனால் எவ்வளவு காலத்திற்கு A23a இப்படி சுழலில் சிக்கி சுற்றிக் கொண்டிருக்கும்? படக்குறிப்பு, இவ்வாறாக இது சுற்றிக் கொண்டிருக்கும் காலம் வரை இந்தப் பனிப்பாறைக்கு அழிவே இல்லை என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். யாருக்குத் தெரியும். ஒரு மிதவை கருவியை பேராசிரியர் மெரெடித், பிரீ கரையின் மற்றொரு பகுதியில் ஆராய்ச்சிக்காக வைத்திருந்தார். நான்கு ஆண்டுகள் ஆன பிறகும்கூட அந்த இடத்தில் இந்த மிதக்கும் கருவியானது இன்றும் சுழன்று கொண்டிருக்கிறது. கடல் தரையின் அமைப்பு பற்றித் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம் என்பதற்கு இந்தப் பனிப்பாறை ஒரு நல்ல உதாரணம். கடலில் உள்ள மலைகள், பள்ளத்தாக்குகள் மற்றும் முகடுகள், நீரின் ஓட்டம், நீர் கலப்பது, கடலில் உள்ள ஊட்டச்சத்துகள் கடல் உயிரினங்களுக்கு சரியாகச் சென்று சேர்வது உள்ளிட்ட அனைத்திலும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. பட மூலாதாரம்,SEABED2030/NIPPON FOUNDATION படக்குறிப்பு, கறுப்பு நிறத்தில் அமைந்திருக்கும் கடலின் தரைப்பகுதிகளில் இன்னும் அதிக அளவிலான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை. இது காலநிலையிலும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. உலகம் முழுவதும் வெப்பத்தைப் பரப்புவதில் இந்த நீரின் போக்கானது உதவுகிறது. இந்த செயல்பாட்டிற்கான காரணத்தைப் புரிந்துகொள்ள முடியும். ஏனெனில், தெற்கு ஓர்க்னேவின் வடக்குப் பகுதியானது நன்கு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் இதேநிலை உலகிலுள்ள மற்ற இடங்களுக்குப் பொருந்தாது. தற்போது வரை, உலகிலுள்ள கடல் தரைகளில் கால்பகுதி மட்டுமே நவீன தரத்திற்கு ஏற்ப வரைபடமாக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/articles/c24pp857r79o
  8. Published By: DIGITAL DESK 7 18 AUG, 2024 | 11:04 AM (நா.தனுஜா) சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் திகதியன்று வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் கிளிநொச்சி கந்தசாமி ஆலயத்திலிருந்து டிப்போ சந்தி வரை விசேட கவனயீர்ப்புப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டு 15 வருடங்கள் கடந்திருக்கும் நிலையில், கடந்த கால மீறல்கள் மற்றும் மனிதகுலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் இன்னமும் பொறுப்புக்கூறல் உறுதிசெய்யப்படவில்லை. அதேவேளை நாட்டில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியிலும், இறுதிக்கட்ட யுத்தத்தின்போதும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு என்ன நேர்ந்தது என்ற உண்மையை வெளிப்படுத்துமாறும், தமக்குரிய நீதியை நிலைநாட்டுமாறும் கோரி வட, கிழக்கு மாகாணங்களில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் 2000 மேலாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவ்வாறானதொரு பின்னணியில் ஆகஸட் மாதம் 30ஆம் திகதி சர்வதேச வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், அன்றைய தினம் கடந்த வருடங்களைப் போன்று விசேட கவனயீர்ப்புப் பேரணியை முன்னெடுப்பதற்கு வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய எதிர்வரும் 30ஆம் திகதி காலை 9.30 மணிக்கு கிளிநொச்சி கந்தசாமி ஆலயம் முன்பாக திரளவுள்ள வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் காலை 10.00 மணிக்கு டிப்போ சந்தியை நோக்கிப் பேரணியாகச் சென்று, அங்குள்ள ஐக்கிய நாடுகள் சபை கிளை அலுவலகத்தின் அதிகாரிகளிடம் தமக்கான நீதியைக் கோரி மகஜரொன்றையும் கையளிக்கவுள்ளனர். 'வட, கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த தமிழ் உறவுகளினதும், ஏனைய சகல தரப்பினரதும் ஆதரவுடன் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட எமது கவனயீர்ப்புப் போராட்டம் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் 2749ஆவது தினத்தைப் பூர்த்திசெய்யவுள்ள நிலையில், அன்றைய தினம் எமது போராட்டத்தில் கலந்துகொண்டு ஆதரவு வழங்குமாறு சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றோம்' என வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் அழைப்புவிடுத்துள்ளது. https://www.virakesari.lk/article/191350
  9. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மேட்டூர் அணை நிரம்புவது தமிழ்நாட்டில் மிகப்பெரிய செய்தியாகக் கவனிக்கப்படுகிறது. மாநிலத்தின் மிகப்பெரிய இந்த அணை எதற்காகக் கட்டப்பட்டது, இதன் வரலாறு என்ன? மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து 42வது முறையாக தற்போது நிரம்பியுள்ளது. ஒவ்வொரு முறை மேட்டூர் அணையில் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டும்போதும் முழு உயரமான 120 அடியை எட்டும்போதும் அந்தச் செய்தி மாநிலம் முழுவதும் பெரும் கவனத்தைப் பெறுகிறது. ஒரு அணை இந்த அளவு கவனத்தைப் பெறுவதற்குக் காரணம் இருக்கிறது. மேட்டூர் அணை தமிழ்நாட்டின் மிகப்பெரிய அணை மட்டுமல்ல; இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்றும்கூட. மேட்டூர் அணையின் வரலாறு காவிரியில் இருந்து கிடைக்கும் நீரின் மூலம் டெல்டா பகுதிகளில் பல ஆயிரம் ஆண்டுகளாகவே விவசாயம் நடந்து வந்தது. ஆனால், 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் காவிரியால் பாசனம் நடந்து வந்த பல இடங்களில் கால்வாய்கள் தூர்ந்து போயிருந்தன. இந்தக் கட்டத்தில்தான் அதாவது, 1801இல் தஞ்சாவூர் மாவட்டத்தின் நிர்வாகம் கிழக்கிந்திய கம்பெனியின் கீழ் வந்தது. அந்தத் தருணத்தில் டெல்டா பகுதியில் பாசன வசதிகள் மிகவும் மோசமடைந்திருந்ததாக சேலம் மாவட்ட கெஸட்டியர் கூறுகிறது. கால்வாய்கள் தூர்ந்து போயிருந்ததால், பல இடங்களில் தண்ணீரின்றி விவசாயம் செய்வது நிறுத்தப்பட்டிருந்தது. கிழக்கிந்திய கம்பெனி விவசாயத்தை மேம்படுத்த எடுத்த முயற்சிகளுக்குப் பெரிய பலன் ஏதும் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான், சென்னை மாகாணத்தில் நீர்ப்பாசன பொறியாளராகப் பணியாற்றி வந்த சர் ஆர்தர் தாமஸ் காட்டன், காவிரியின் மீது தனது கவனத்தைத் திருப்பினார். இவரது முயற்சியில் 1834இல் திருச்சிக்கு அருகில் முக்கொம்பில் மேலணை கட்டப்பட்டது. இதற்குப் பிறகு அந்தப் பகுதியில் நீர்ப்பாசன வசதிகள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டன. கல்லணையில் 1887-89இல் ரெகுலேட்டரும் பொருத்தப்பட்டது. இதையடுத்து இந்த அணைக்குக் கிழக்கே உள்ள பகுதிகளில் நிலத்தின் மதிப்பு, அந்தப் பகுதியில் இருந்த மக்களின் வாழ்க்கைத் தரம் போன்றவை உயர ஆரம்பித்தன. இதைக் கவனித்த பிரிட்டிஷ் அரசு, காவிரியின் குறுக்கே ஒரு மிகப்பெரிய அணையைக் கட்டி நீரைத் தேக்கினால், அது பாசனத்திற்குப் பயனுள்ளதாக இருக்கும் என உணர்ந்தது. படக்குறிப்பு,காவிரியின் குறுக்கே ஒரு அணையைக் கட்டலாம் என்ற யோசனை 1910 வாக்கில் ஏற்கப்பட்டது. ஆனால், இது தொடர்பாக ஆங்கில அரசு உடனடியாக முடிவெடுக்கவில்லை. பல ஆண்டுகள் இது தொடர்பான வாத - பிரதிவாதங்கள் நடந்தன. முடிவில், ராயல் பொறியாளரான கர்னல் டபிள்யு.எம்.எல்லிஸ் மேட்டூரில் காவிரிக்குக் குறுக்கே ஒரு அணையைக் கட்டலாம் என முன்வைத்த யோசனை 1910வாக்கில் ஒரு வழியாக ஏற்கப்பட்டது. ஆனால், அணையைக் கட்டும் பணிகள் துவங்குவதற்கு முன்பாக முதல் உலகப் போர் வெடித்தது. இதற்குப் பிறகு மைசூர் அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடத்த வேண்டியிருந்தது. மைசூருக்கும் சென்னை மாகாணத்திற்கும் இடையே 1924இல் ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், 1925ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் தேதி சென்னை மாகாண ஆளுநர் 2வது விஸ்கவுன்ட் கோஸ்சென் முன்னிலையில் பணிகள் துவங்கின. மேட்டூர் அணை முதலில் திட்டமிடப்பட்டப்போது, தற்போது அணை இருக்கும் இடத்தில் கட்டுவதற்குத் திட்டமிடப்படவில்லை. மாறாக, தற்போதுள்ள இடத்திலிருந்து சுமார் ஒரு மைல் தூரம் தள்ளி இருக்கும் வகையில் திட்டமிடப்பட்டது. ஆனால், 1924ஆம் ஆண்டு காவிரியில் மிகப்பெரிய வெள்ளம் ஒன்று ஏற்பட்டது. அப்போதுதான், முன்பு திட்டமிட்டதைவிடக் கூடுதல் நீரைத் தேக்கும் வகையில் அணை கட்டப்பட வேண்டும் என்பதற்காகத் தற்போதுள்ள இடம் தேர்வு செய்யப்பட்டது. இந்தத் திட்டத்திற்கு ஏழு கோடியே 37 லட்ச ரூபாய் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. இந்த அணை கட்டி முடிக்கப்பட்ட பிறகு, வரி வருவாய் உயர்வதன் மூலம், செய்யப்பட்ட முதலீட்டிற்கு 6 சதவீதம் அளவுக்குப் பலன் கிடைக்கும் என மதிப்பிடப்பட்டது. ஆனால், இந்த அணையின் மூலமாக டெல்டா மாவட்டங்களில் உருவாகும் வேலைவாய்ப்பு, வாழ்க்கைத் தரம் உயர்ந்தது போன்றவற்றைக் கணக்கிடும்போது இந்த வருவாய் மிகக் குறைவுதான். இந்த அணைக்கான செலவைத் திட்டமிடும்போது, மிகத் துல்லியமாகத் திட்டமிடப்பட்டது. கட்டுமானப் பணிக்கான செலவு, நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான செலவு, ஊழியர்களின் வீடுகளுக்கான செலவு, கால்வாய்கள், இயந்திரங்கள், ஓய்வூதியம், இவ்வளவு ஏன் வரைபடம் உள்ளிட்ட காகிதங்களுக்கு ஆகும் செலவுகள்கூட துல்லியமாகக் கணக்கிடப்பட்டன. இந்த அணையைக் கட்ட 2,16,000 டன் சிமென்ட் தேவைப்பட்டது. இந்த அளவுக்கு சிமென்ட் சப்ளை செய்ய ஷகாபாத் சிமென்ட் கம்பெனியுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டது. சிமென்ட்டை எடுத்துவர, சேலத்தில் இருந்து மேட்டூர் வரை ஒரு ரயில் பாதை போடப்பட்டது. அந்த ரயில் பாதைக்கான செலவின் ஒரு பகுதி மேட்டூர் திட்டச் செலவிலிருந்தே அளிக்கப்பட்டது. குக்கிராமமாக இருந்து மாவட்டமாக உருவெடுத்த மேட்டூர் அணை கட்டப்படுவதற்கு முன்பாக மேட்டூர் ஒரு குக்கிராமம். ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து 37 மைல் தூரத்தில் இருந்தது. அங்கிருந்து மேட்டூரை வந்தடைய மண் சாலைதான் இருந்தது. அணை குறித்த நேரத்தில் கட்டப்பட வேண்டுமென்றால், அணையின் கட்டுமானப் பணிகளுக்காக வரும் தொழிலாளர்கள், பொறியாளர்கள் தங்கும் அளவுக்கு ஒரு சிறிய நகரத்தையாவது மேட்டூரில் உருவாக்க வேண்டியிருந்தது. இதையடுத்துதான் பொருட்களை எடுத்துவர, சேலத்தில் இருந்து ஒரு ரயில் பாதையும் தார் சாலையும் போடப்பட்டது. இதற்குப் பிறகு, அணையின் பணியாளர்களுக்காக வீடுகளைக் கட்டத் திட்டமிடப்பட்டது. மொத்தமாக 10,000 பேர் தங்கும் அளவுக்கான வீடுகள் இதற்காகக் கட்டப்பட்டன. ஒரு குக்கிராமம், ஒரு சிறு நகரமாக உருவெடுக்க ஆரம்பித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்து 42வது முறையாக தற்போது நிரம்பியுள்ளது (கோப்புப்படம்) மேட்டூர் டவுன் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்டது. தூய்மையான குடிநீர், பாதாள சாக்கடை வசதிகளுடன் இந்தச் சிறுநகர் உருவாக்கப்பட்டது. மைசூர் அரசுக்கு உட்பட்டிருந்த சிவசமுத்திரத்தில் இருந்த மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டது. இங்கு வசித்த மக்களுக்காக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையன்றும் மிகப்பெரிய வாரச் சந்தை கூடியது. நிலம் எடுக்கும் பணிகளுக்காக, மேட்டூர் ஒரு தனி மாவட்டம் என அறிவிக்கப்பட்டது. மேட்டூர் அணை அமையும் இடம், அணையின் நீர் தேங்கும் இடம், தொழிலாளர்களின் கேம்ப், மின் நிலையம், ஒர்க் ஷாப் பகுதிகள் போன்றவற்றை உள்ளடக்கி இந்த மாவட்டம் உருவாக்கப்பட்டது. ஆனால், இந்த அந்தஸ்து நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. நில எடுப்புப் பணிகள் முடிந்த பிறகு, 1929 ஜூலையில் மேட்டூர் மாவட்டம், சேலம் மாவட்டத்தின் ஒரு தாலுகாவாக கீழிறக்கப்பட்டது. நீரில் மூழ்கிய திருமலை நாயக்கர் கோட்டை அணை கட்டப்படும் இடத்தில் காவேரிபுரம் என்ற ஊர் ஒன்று இருந்தது. அணை கட்டப்பட்ட தருணத்தில் இங்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கிறிஸ்தவர்கள் வசித்து வந்தனர். சிதிலமடைந்த நிலையில் ஒரு கோட்டையும் ஒரு சிவன் கோவிலும் இந்தக் கிராமத்தில் இருந்தன. மைசூருக்கு செல்லும் கணவாயின் துவக்கத்தில் இந்தக் கோட்டை அமைந்திருந்தது. மைசூரிலிருந்து வரும் படையெடுப்பைக் கண்காணிக்க, திருமலை நாயக்கரால் இந்தக் கோட்டை கட்டப்பட்டது. இந்தக் கோட்டை 1768இல் ஆங்கிலேயர் வசம் வந்தது. அதற்கு அடுத்த ஆண்டிலேயே ஹைதர் அலி அதைக் கைப்பற்றினார். மைசூர் போர் நடந்த காலம் நெடுகவே இந்தக் கோட்டை வியூகரீதியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது. ஆனால், அணை கட்டப்பட்டுக் கொண்டிருந்த 20ஆம் நூற்றாண்டில் இந்தக் கோட்டைக்கு எந்த முக்கியத்துவமும் இல்லை. முடிவில், இந்தக் கோட்டை ஊரோடு சேர்ந்து மேட்டூர் அணையில் மூழ்கியது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மேட்டூர் மாவட்டம், 1929 ஜூலையில் சேலம் மாவட்டத்தின் ஒரு தாலுகாவாக கீழிறக்கப்பட்டது (கோப்புப்படம்) சோழப்பாடி, நெருஞ்சிப்பேட்டை, சம்பள்ளி ஆகிய கிராமங்களும் அணையின் நீரில் மூழ்கின. பணிகள் இடைவிடாமல் நடந்ததில், 1934இல் அணையின் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்தன. அந்த ஆண்டு ஆகஸ்ட் 21ஆம் தேதி கட்டுமானப் பணிகள் முடிவுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. மேட்டூர் அணையால் உருவாகும் நீர்த்தேக்கத்திற்கு, அப்போதைய சென்னை மாகாண ஆளுநரான கர்னல் ஜார்ஜ் ஃப்ரெட்ரிக் ஸ்டான்லியின் பெயர் சூட்டப்பட்டு, அணை பயன்பாட்டிற்கு வந்தது. மேட்டூர் அணையின் உயரம் 120 அடி. நீளம் 1,700 மீட்டர். 59.25 சதுர மைல் பரப்பிற்கு இந்த அணையில் நீர் தேங்குகிறது. தற்போதும் மேட்டூர் அணை, இந்தியாவின் மிகப்பெரிய அணைகளில் ஒன்று. 93.5 டி.எம்.சி. நீரை இந்த அணையில் தேக்க முடியும். இது கிருஷ்ணராஜ சாகர் அணையின் கொள்ளளவைவிட இரு மடங்கு. https://www.bbc.com/tamil/articles/c0mnrxev4n7o
  10. 18 AUG, 2024 | 03:03 PM யாழ்ப்பாணத்தில் மனவளர்ச்சி குன்றிய யுவதியை பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உட்படுத்திய சிறிய தந்தை உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், கைதான மூவரையும் விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார். சுகவீனம் காரணமாக இந்த யுவதியை பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்தவேளையில் மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் யுவதி கர்ப்பமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்தபோது தாயின் சகோதரியினது கணவர் (சித்தப்பா) மற்றும் இரு இளைஞர்கள் என மூன்று பேர் இணைந்து யுவதியை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பாலியல் துஸ்பிரயோகத்துக்கு உள்ளாக்கி வந்துள்ளனர். சில தடவைகள் கூட்டு வன்புணர்வுக்கும் யுவதியை உட்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த நெல்லியடி பொலிஸார் யுவதியின் சிறிய தந்தை உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். விசாரணைகளின் பின்னர், பருத்தித்துறை பதில் நீதவான் முன்னிலையில் மூவரையும் முற்படுத்தியதையடுத்து, பதில் நீதவான் சந்தேக நபர்களை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/191364
  11. 18 AUG, 2024 | 10:37 AM உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த விசாரணைகளில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து கண்காணித்து வருவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் மேலாண்மை மற்றும் வளங்களுக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் துணை செயலாளர் ரிச்சர்ட் ஆர் வெர்மா இதனை தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்குவதற்காக மேற்கொள்ளப்படும் முயற்சிகளிற்கு அமெரிக்காவின் அர்ப்பணிப்பை அவர் மீள வலியுறுத்தியுள்ளார். வலுவான விசாரணை மற்றும் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் சிவில் சமூகத்தின் பங்களிப்பின் அவசியத்தை அவர் வலியுறுத்தியுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதல் இடம்பெற்றது முதல் இலங்கை அதிகாரிகளிற்கு ஆதரவாக சட்ட விசாரணை ஆதரவினை இலங்கை வழங்கிவருகின்றது என அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலால் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை வழங்கும் பொறுப்புக்கூறும் இலக்கை அமெரிக்கா பகிர்ந்துகொள்கின்றது ,விசாரணைகள் தொடரும் இவ்வேளையில் எங்கள் இணைந்த செயற்பாடுகளில் நாங்கள் உறுதியாக உள்ளோம்,என வெர்மா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/191351
  12. அண்மையில் திருத்தப்பட்ட கடற்றொழில் விதிமுறைகள் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதாலும், இலங்கை கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபடும் தமிழக கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து கைது செய்யப்பட்டதாலும், அண்மைய மாதங்களில் இலங்கை கடலுக்குள் இந்திய மீன்பிடிக்கும் இழுவை படகுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதை வடக்கின் கடற்றொழிலாளர்கள் அவதானித்துள்ளனர். அண்மையில் கைது செய்யப்பட்ட இந்திய கடற்றொழிலாளர்களுக்கு எதிராக ஊர்காவற்துறை நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டமை, இரண்டாவது தடவையாக குற்றமிழைத்தவர்களுக்கு பாரிய தண்டனைகள் மற்றும் சிறைத்தண்டனைகளை வழங்கியமை என்பன இதற்கான காரணமாக இருக்கலாம் என்று ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா கருத்து தெரிவித்துள்ளார். சிறைத்தண்டனை இந்தநிலையில் இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபடுவதைத் தடுப்பதற்காக அண்மைக்காலமாக இயற்றப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இறையாண்மையுள்ள தேசம் என்ற வகையில் எமது வளங்களைப் பாதுகாப்பது அதிகாரிகளின் பொறுப்பாகும் என்று தெரிவித்துள்ளார். கடந்த வாரம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம், நெடுந்தீவுக்கு அருகில் கைப்பற்றப்பட்ட இழுவைப்படகு உரிமையாளர்களுக்கு 4 மில்லியன் மற்றும் 8 மில்லியன் ரூபாய் அபராதங்களை விதித்தது. 7 கடற்றொழிலாளர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டது என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார். விழிப்புணர்வு பிரசாரங்கள் இதேவேளை, அண்மை மாதங்களில் மன்னாருக்கு வடக்கே பிரவேசிக்கும் இந்திய படகுகளின் எண்ணிக்கை குறைந்துள்ள போதிலும், தெற்கே பல இழுவை படகுகளை காணமுடிவதாக ஊர்காவற்துறை கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் செயலாளர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்துள்ளார். இதற்கிடையில் இராமேஸ்வரத்தில் உள்ள தமிழக கடற்றொழிலாளர் சமூகங்கள் சர்வதேச கடல் எல்லைக் கோட்டை தாண்டி இலங்கை கடல் எல்லையில் மீன்பிடியில் ஈடுபட வேண்டாம் என்று இந்திய அதிகாரிகள் விழிப்புணர்வு பிரசாரங்களை தொடங்கியுள்ளனர். அத்துடன், தமிழ்நாட்டின் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இந்திய கடற்படை, சுங்கம், கடற்றொழில் துறை மற்றும் காவல்துறையின் உயர் அதிகாரிகள், அண்மையில் கடற்றொழிலாளர் சமூகத்துடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. https://tamilwin.com/article/fewer-indian-trawlers-stricter-laws-sl-navy-action-1723952128
  13. கட்டுரை தகவல் எழுதியவர், ராகவேந்திர ராவ் பதவி, ஜம்முவிலிருந்து திரும்பிய பிபிசி நிருபர் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ரியாசி, கதுவா, ரஜோரி, டோடா – இவை ஜம்முவில் சமீபத்தில் தீவிரவாதத் தாக்குதல்கள் நடந்த பகுதிகள். ஜம்மு காஷ்மீர் சட்டசபைத் தேர்தலை செப்டம்பர் மாத இறுதியில் நடத்த மத்திய தேர்தல் ஆணையம் தயாராகி வரும் வேளையில் இந்தத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா, சமீபத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இந்தப் பிரச்னை விரைவில் கட்டுப்படுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார். கதுவாவை தவிர, இந்தத் தாக்குதல்களுக்குக் காரணமானவர்கள் பிடிபடவோ, கொல்லப்படவோ இல்லை. கடந்த சில ஆண்டுகளாக ஜம்முவில் நடக்கும் தீவிரவாத சம்பவங்களைக் கூர்ந்து கவனித்தால், தாக்குதல் நடத்தியவர்கள் பிடிபடாமல் இருப்பது ஒரு புதிய போக்காக வெளிப்படுகிறது. இந்தப் போக்கு, 2021ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஜம்முவின் பூஞ்ச் மற்றும் மெந்தார் பகுதிகளில் தீவிரவாதிகளுடனான என்கவுன்டரில் மொத்தம் ஒன்பது ராணுவ வீரர்கள் இறந்தபோது துவங்கியது. இந்த இரண்டு என்கவுன்டர்களுக்கு பிறகு இந்திய ராணுவம் காடுகளில் ரோந்துப் பணிகளைத் துவங்கியது. ஒரு மாதத்துக்கும் மேலாக ராணுவத்துக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே அடர்ந்த காடுகளில் மோதல்கள் நடப்பதாகச் செய்திகள் வந்துகொண்டே இருந்தன. இது இன்று வரை நீடிப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் பல வாரங்களுக்குப் பிறகும், தீவிரவாதிகள் குறித்த எந்தத் தடயமும் கிடைக்கவில்லை. படக்குறிப்பு,ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் முன்னாள் டி.ஜி.பி-யான எஸ்.பி வைத் உத்தியில் மாற்றமா? தீவிரவாதிகளின் உத்தியில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் முன்னாள் டி.ஜி.பி-யான எஸ்.பி.வைத் கூறுகிறார். இதுகுறித்துப் பேசிய அவர், "முதலில், அவர்கள் (தீவிரவாதிகள்) காட்டுப் போர், மலைப்போர் ஆகியவற்றில் பயிற்சி பெற்றவர்கள். அவர்களுக்கு நவீன ஆயுதங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவை மிகவும் சக்தி வாய்ந்தவை. அவர்கள் கிட்டத்தட்ட துப்பாக்கி சுடும் வீரர்களைப் போலவே செயல்படுகிறார்கள். இந்த ஆயுதங்கள் ‘நைட் விஷன்’ கொண்டவை. எனவே அவற்றை இரவிலும் பயன்படுத்தலாம்," என்கிறார். "இரண்டாவதாக, ராணுவத்தைக் கண்காணித்து, அவர்களது நடமாட்டத்தைக் குறித்து வைத்து, அவர்களைத் தாக்கிவிட்டு தப்பிக்க வழி தேடுமாறும் அவர்களுக்குக் கூறப்பட்டுள்ளது," என்கிறார். ரஜோரி மற்றும் பூஞ்ச் போன்ற எல்லைப் பகுதிகளில் ஊடுருவல் மற்றும் தாக்குதல்கள் ஒரு பொதுவான விஷயம். ஆனால், தாக்குதல் நடத்தியவர்கள் தடயமே இல்லாமல் மறைந்து விடுவதும், பாதுகாப்புப் படையினருக்கு இது பெரும் தலைவலியாக மாறுவதும் புதிய விஷயம். இதனால், பொதுமக்களிடையே அச்சமும், பதற்றமும் நிலவி வருகிறது. டாக்டர் ஜம்ருத் முகல் இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள பூஞ்ச் பகுதியில் வசித்து வருகிறார். "அவர்கள் (தாக்குதல் செய்பவர்கள்) வருகிறார்கள், குற்றங்களைச் செய்து பின்னர் மறைந்துவிடுகிறார்கள். அவர்கள் எங்கே போகிறார்கள்? சில நிமிடங்களிலோ அல்லது நொடிகளிலோ அவர்களால் எல்லையைத் தாண்ட முடியாது. எனவே அவர்கள் எங்காவது இருக்கிறார்கள் என்று அர்த்தம். இங்கு காடுகள் எவ்வளவு அடர்ந்துள்ளன என்பதை நீங்கள் பார்த்திருக்க வேண்டும். பெரிய மலைகளும் உள்ளன. இது மிகவும் கடினமான பகுதி,” என்கிறார் அவர். "காஷ்மீருடன் ஒப்பிடும்போது இந்தப் பகுதியில் தீவிரவாதிகளைக் கண்டுபிடிப்பது கடினம் என்பதால் இங்கு இப்படி நடப்பதாக," அவர் கூறுகிறார். பூஞ்சில் வசிக்கும் வழக்கறிஞர் முகமது ஜமான், ‘பீர் பஞ்சால் மனித உரிமைகள் அமைப்பை’ நடத்தி வருகிறார். அவர், “இந்தச் சம்பவங்களின் முழு உத்தியும் மாறிவிட்டது என்று நாங்கள் எண்ணுகிறோம். ஒருவகையில், கொரில்லா போரைப் பற்றி நாங்கள் கேள்விப்பட்டோம். அதே வழியில் அவர்கள் வந்து வாகனங்கள் மீதும், பாதுகாப்புப் படையினர் மீதும் தாக்குகிறார்கள். இது கவலைக்குரிய விஷயம். தாக்குதலுக்குப் பிறகு அவர்களின் எந்தத் தடயமும் இருப்பதில்லை. அவர்கள் காடுகளில் மறைந்திருக்கிறார்கள்," என்கிறார். பயத்தின் நிழலில் வாழ்க்கை படக்குறிப்பு,மே 5ஆம் தேதி இந்திய விமானப்படையின் கான்வாய் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர் ஜம்முவில் சமீபத்தில் நடந்த ஒரேயொரு தாக்குதலில் அதற்குக் காரணமானவர்கள் இருவரும் கொல்லப்பட்டனர். கதுவாவின் சுஹால் கிராமத்தில் ஜூன் 11ஆம் தேதி இரண்டு தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியபோது இந்தத் தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் தனது சொந்த கையெறி குண்டு வெடித்ததாலும் மற்றவர் பாதுகாப்புப் படையினருடனான என்கவுண்டரிலும் கொல்லப்பட்டார். அன்றைய தினம் சுஹாலில் என்ன நடந்தது என்பதை நேரில் பார்த்த அக்கிராமத்தின் மக்கள் சிலர் பேசினார்கள். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ஓர் இளைஞர், "அவர் எங்களை உரக்க அழைத்தார். குடிக்கத் தண்ணீர் கொடுங்கள் என்றார். நீங்கள் யாரென்று சொல்லுங்கள் தண்ணீர் தருகிறேன் என்று நான் சொன்னேன். அதற்கு 'முதலில் எங்களுக்குத் தண்ணீர் கொடுங்கள், பிறகு சொல்கிறேன்' என்றார். முதலில் அவரது பெயரையும் ஊரையும் கேட்டேன். அவர் அமர்ந்து பேசலாம் என்றார். அவர் பஞ்சாபியும் டோக்ரியும் கலந்த மொழியைப் பேசினார். அவர் முன்னோக்கி வந்ததும், தனது முதுகில் தொங்கிய ஆயுதத்தை எடுத்து சுடத் தொடங்கினார்," என்றார். தாக்குதல் நடத்திய இருவரும் தன்னிடம் வந்து குடிக்கத் தண்ணீர் கேட்டதாக சுஹால் கிராமத்தைச் சேர்ந்த வயதான கடைக்காரர் ஒருவர் தெரிவித்தார். “தண்ணீர் குடித்துவிட்டு, திறந்த வெளியில் நான்கைந்து முறை துப்பாக்கியால் சுட்டனர். அதன் பிறகு கடையின் ஷட்டரை மூடிவிட்டு காலை வரை உள்ளேயே கிடந்தேன்,” என்றார் அவர். இந்தக் கிராமத்தில் உள்ள ஒரு வீட்டின் சுவர்களில் தோட்டாக்கள் சுடப்பட்ட இடங்களைக் கண்டோம். படக்குறிப்பு,ஓம்கார் நாத்தின் தாயார் ஞானோ தேவி, தாக்குதல் நடத்தியவர்கள் மீண்டும் வரக்கூடும் என்று மக்கள் அச்சத்தில் உள்ளதாகக் கூறுகிறார் ஓம்கார் நாத் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியவர்கள் துப்பாக்கியால் சுட்டதில் அவரது கையில் காயம் ஏற்பட்டது. 90 வயதான அவரது தாயார் ஞானோ தேவி கூறுகையில், "தீவிரவாதிகள் வந்ததாகக் கூறினர். வெடிகுண்டு வீசினர். ஓம்கார் வெளியே சென்று பார்த்தார். அவர் அங்கு சென்றவுடன் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தினர்," என்றார். "நான்கு தோட்டாக்கள் சுடப்பட்டன. நாங்கள் பயந்து போயிருக்கிறோம். மாலை ஆறு மணிக்கு கிராமம் வெறிச்சோடி விடுகிறது. அவர்கள் மீண்டும் வரக்கூடும் என்று மக்கள் பயப்படுகிறார்கள்," என்றார். சுஹால் கிராமத்தில் துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் கொல்லப்பட்டனர். ஆனால் கிராம மக்கள் இன்னும் கவலையில் உள்ளனர். இந்தக் கிராமத்தில் வசிக்கும் ரிங்கு ஷர்மா கூறுகையில், "இன்னும் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. ஏனென்றால் அவர்கள் இன்னும் சுற்றத்தில் எங்கோ இருப்பதாக மக்கள் நினைக்கிறார்கள். இது காட்டுப் பகுதி என்பதால் இப்போது தாக்குதல்கள் நடக்கின்றன. அதனால் மக்கள் மத்தியில் பீதி நிலவுகிறது,” என்கிறார் அவர். சுஹால் கிராமத்தைப் போலவே ஜம்முவின் பல பகுதிகளும் அடர்ந்த காடுகளால் சூழப்பட்டுள்ளன. இந்தப் பகுதிகளில் இருந்து 20கி.மீ., தொலைவில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான சர்வதேச எல்லை உள்ளது. இந்த அடர்ந்த காடுகளுக்குள் பதுங்கியிருந்து தீவிரவாதிகள் எல்லை தாண்டி இந்தியாவுக்குள் நுழைவதாகப் பாதுகாப்பு அமைப்புகள் கூறுகின்றன. ஜூன் 11ஆம் தேதி சுஹால் கிராமத்தில் நடந்த வன்முறை சம்பவத்திற்குப் பிறகு, இங்குள்ள மக்களிடையே பாதுகாப்பு குறித்த கவலை அதிகரித்துள்ளது. இப்பகுதி மக்கள் தொடர்ந்து அச்சத்தின் நிழலில் வாழ்ந்து வருகின்றனர். ஆறாத பழைய காயங்கள் படக்குறிப்பு,தீவிரவாத தாக்குதலில் சரோஜ் பாலா தனது இரண்டு மகன்களை இழந்தார் ஜம்மு பகுதியில் சமீபகாலமாக நடந்த சம்பவங்களால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவி வரும் நிலையில், கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்த வன்முறையின் காயங்கள் இன்னும் ஆறாமல் உள்ளன. ரஜோரியின் தாங்ரி கிராமத்தில் உள்ள ஒரு வீடு இப்போது துணை ராணுவப் படையினரால் எப்போதும் பாதுகாக்கப்படுகிறது. இதே இடத்தில்தான் 2022ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதி இரவு இரண்டு தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். மறுநாள் இந்த வீட்டின் அருகே வெடிகுண்டு வெடித்தது. இந்த இரண்டு சம்பவங்களிலும் மொத்தம் 7 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் அடங்குவர். இந்தத் தாக்குதலில் சரோஜ் பாலாவின் இரண்டு இளம் மகன்கள் கொல்லப்பட்டனர். தாக்குதல் நடத்தியவர்கள் தப்பியோடிவிட்டனர். சரோஜ் இன்னும் நீதிக்காக காத்திருக்கிறார். சரோஜ் பாலா, "யாரால் தங்கள் குழந்தைகளை மறக்க முடியும்? கிராமத்தில் கார்கள் வரும்போது, என் குழந்தைகள் வருவதாக உணர்கிறேன். என் குழந்தைகள் இன்னும் உயிருடன் இருப்பதாக உணர்கிறேன். என் வீட்டில் செங்கற்கள் மட்டுமே உள்ளன. என் குழந்தைகள் மறைந்து பதினெட்டு மாதங்கள் ஆகின்றன. அவர்கள் பல பெரிய புலனாய்வு அமைப்புகளை இங்கே வரவழைத்தனர். ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஒருநாள் கடவுள் எங்கள் குழந்தைகளுக்கு நீதி வழங்குவார்,” என்றார். தனது மகன்களைக் கொன்றது யார், ஏன் அவர்களைப் பிடிக்கவில்லை என்ற கேள்விக்கான பதிலைத் தேடுகிறார் சரோஜ் பாலா. "இவ்வளவு பேர் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்று சொன்னால், நமது ஏஜென்சிகள் என்ன செய்கின்றன? அவர்களது கடமை என்ன? எல்லா எல்லைகளும் மூடப்பட்டால், அவர்கள் வருவதற்கு ஏதாவது வழி இருக்க வேண்டும். நாம் அந்த வழியை மூடவேண்டும்,” என்கிறார். படக்குறிப்பு,தீவிரவாத தாக்குதல் நடந்த சரோஜ் பாலாவின் வீடு மேலும், உள்ளூர்வாசிகளின் உதவியின்றி இதுபோன்ற தாக்குதல்கள் நடக்காது என்று அவர் நம்புகிறார். "அவர்களுக்கு உள்ளூர் மக்களின் ஆதரவு கிடைக்கவில்லை என்றால், அவர்கள் எங்கு தங்குவார்கள்? எங்கே உணவு சாப்பிடுவார்கள்? அவர்கள் கொண்டு வரும் பொருட்கள், ஆயுதங்கள் போன்றவற்றை எங்கே வைத்திருப்பார்கள்? அவர்கள் வாழ்வதற்கு ஒரு இடம் வேண்டும், அவர்களுக்கு உடுத்த உடைகள் தேவை,” என்கிறார். ரஜோரியில் இருந்து 90கி.மீ., தொலைவில் உள்ள பூஞ்ச் என்ற இடத்தில் நாங்கள் இதே போன்ற ஒரு குரலைக் கேட்டோம். பூஞ்சில் உள்ள அஜோத் கிராமத்தில் வசிக்கும் முகமது ரஷித்தின் மகானன ‘ஹவில்தார்’ ராணுவ வீரர் அப்துல் மஜீத், 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரஜோரி காடுகளில் நடந்த தேடுதல் நடவடிக்கையின் போது தீவிரவாதிகளின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார். சமீபத்தில் அவருக்கு மரணத்திற்குப் பின் கீர்த்தி சக்ரா விருது வழங்கப்பட்டது. முகமது ரஷீத் கூறும்போது, “இது இங்கிருப்பவர்களின் ஒத்துழைப்பின்றி நடக்காது. என் வீட்டுக்கு அந்நியர் வந்தால், வீட்டில் யார் எங்கே அமர்ந்திருக்கிறார்கள், யார் எங்கே தூங்குகிறார்கள் என்று அவருக்குத் தெரியாது. அது நம் பக்கமிருக்கும் யாராவது சொன்னால்தான் தெரியும். இதனால் ராணுவத்தினர் கொல்லப்படுகிறார்கள், வீரர்கள் இறக்கிறார்கள், சிறு குழந்தைகள் இறக்கிறார்கள்,” என்றார் அவர். ஜம்மு குறிவைக்கப்படுவது ஏன்? படக்குறிப்பு,ஜம்மு நகரம் (கோப்புப் படம்) சமீபத்திய சம்பவங்களுக்குப் பிறகு, முக்கியமான கேள்வி இதுதான்: ஜம்முவின் பகுதிகள் ஏன் குறிவைக்கப்படுகின்றன? காஷ்மீர் பள்ளத்தாக்குக்குப் பதிலாக ஜம்முவை குறிவைப்பது தீவிரவாதிகளின் புதிய உத்தியா? ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் முன்னாள் டி.ஜி.பி-யான எஸ்.பி.வைத், "ஜம்மு பகுதியில் கடந்த 15 ஆண்டுகளாகப் பார்த்தால், சுமார் 2007-08க்குப் பிறகு தீவிரவாதம் இங்கு முடிவுக்கு வந்தது. தேவைக்கேற்ப பாதுகாப்புப் படைகள் அனுப்பப்படுகின்றன. லடாக்கில் இந்தியா-சீனா எல்லையில் மோதல் ஏற்பட்டபோது, ஜம்முவில் இருந்து ராணுவம் மற்றும் ராஷ்டிரிய ரைபிள்ஸ் படைகள் அங்கு அனுப்பப்பட்டன,” என்கிறார். "அதேபோல், ஜம்முவில் மத்திய ஆயுதப் படைகளின் இருப்பு குறைக்கப்பட்டு, அவர்கள் காஷ்மீருக்கு அனுப்பப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கை குழுக்களும் தளர்ந்துவிட்டன. கிராமப் பாதுகாப்புக் குழுக்களும் செயலிழந்தன. இந்தச் சூழலை பாகிஸ்தான் சாதகமாக்கிக் கொண்டது என்று நினைக்கிறேன். ஜம்முவின் பகுதிகளைக் குறிவைக்கத் தொடங்கியது. ஜம்மு-காஷ்மீரின் லெப்டினன்ட்-கவர்னர் மனோஜ் சின்ஹா கூறுகையில், இந்த நிலைமை துரதிர்ஷ்டவசமானது, ஆனால் இது மிகவும் கவலைக்குரியது அல்ல என்கிறார். சமீபத்தில் ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளிதழுக்குப் பேட்டியளித்த சின்ஹா, "இதைத் திறம்படச் சமாளிப்போம் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. இதுவும் பாகிஸ்தானின் சதிதான். மிகப்பெரிய சவால் உள்ளூர் ஆட்சேர்ப்பு. அது இப்போது முற்றிலும் இல்லை. ராணுவமும், காவல்துறையும் இதை கவனித்துக் கொள்வார்கள், விரைவில் பயங்கரவாத எதிர்ப்புக் கட்டம் அமைக்கப்படும்,” என்றார். மேலும், “சில ஊடுருவல்கள் நடந்ததாக எங்களிடம் உள்ளீடுகள் உள்ளன. படைகள் நிலைகொள்ளத் தொடங்கியுள்ளன. வியூகம் தயாராக உள்ளது, பயங்கரவாத எதிர்ப்புக் கட்டம் விரைவில் நிறுவப்படும் என்று நான் நம்புகிறேன். ஜம்மு மக்கள் தீவிரவாதத்திற்கு எதிராகப் போராடியுள்ளனர். உள்துறை அமைச்சர் இதை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்” என்றார். ஜம்மு-காஷ்மீர் சட்டசபைத் தேர்தலை நடத்த மத்திய அரசுக்கு செப்டம்பர் 30ஆம் தேதி வரை உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. இந்தக் காலக்கெடுவுக்குள் தேர்தலை நடத்த தேர்தல் ஆணையமும் ஆயத்தங்களைச் செய்து வருகிறது. இத்தனைக்கும் நடுவில், ஒரே ஒரு சந்தேகம் எழுப்பப்படுகிறது: இந்தத் தாக்குதல்களின் நோக்கம் ஜம்முவை குறிவைத்து, வரவிருக்கும் தேர்தலை நிறுத்துவதா? https://www.bbc.com/tamil/articles/cj089r9nv61o
  14. டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் பெற்றவர் என்ற சச்சின் டெண்டுல்காரின் சாதனையை இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் முறியடிப்பர் என ரிக்கி பொன்டிங் தெரிவித்துள்ளார். இந்தப் பட்டியலில் ஜோ ரூட் தற்போது ஏழாவது இடத்தில் உள்ள அவரின் தற்போதைய சராசராசரியில் ஆட்டத்தை தொடர்ந்தால் இலகுவாக இந்த சாதனையை முறியடிப்பர் என கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், 15,921 ஓட்டங்கள் ''டெண்டுல்கர் 200 போட்டிகளில் விளையாடி 53.78 சராசரியுடன் 15,921 ஓட்டங்களை எடுத்துள்ளார். இந்தப் பட்டியலில் ஜோ ரூட் தற்போது ஏழாவது இடத்தில் உள்ளார். அவர் 143 போட்டிகளில் விளையாடி 12,027 ஓட்டங்களை குவித்துள்ளார். ரூட் ஆண்டுக்கு 800 முதல் 1000 ஓட்டங்களை எடுத்தால் டெண்டுல்கரின் சாதனையை அவரால் முறியடிக்க முடியும். ஜோ ரூட்டுக்கு 33 வயது. 10 முதல் 14 டெஸ்ட் போட்டிகள் சுமார் 3,000 ஓட்டங்களில் அவர் பின்தங்கியுள்ளார். அவர் எத்தனை டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறார் என்பதைப் பொறுத்து இது அமையும். அவர் ஆண்டுக்கு 10 முதல் 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால், ஆண்டுக்கு 800 முதல் 1,000 எடுத்தால் ஜோ ரூட் இடத்தை அடைவதற்கு இன்னும் மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் மாத்திரமே இருக்கும். டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்களை எடுக்க அவருக்கு அதற்கான வயதும் உள்ளது." என தெரிவித்த்துள்ளார். https://tamilwin.com/article/england-player-waiting-to-challenge-sachin-record-1723795759
  15. வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுவன் கடத்தல் - சிறுவனை மீட்டு கடத்தியவரை மடக்கிப் பிடித்த பொதுமக்கள் 17 AUG, 2024 | 05:59 PM வீடொன்றில் தூங்கிக்கொண்டிருந்த 5 வயது சிறுவனை கடத்தல்காரர் ஒருவர் கடத்தி, காட்டுக்குள் கொண்டு சென்றதையடுத்து, சிறுவனை மீட்டு, கடத்திய நபரை பிரதேச மக்கள் மடக்கிப் பிடித்து நையப்புடைத்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று சனிக்கிழமை (17) அதிகாலை மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் இடம்பெற்றது. இதனால் அப்பகுதியில் இன்று பெரும் பரபரப்பான சூழ்நிலை நிலவுவதாகவும் கைதான நபரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். வாகரை 5ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த 5 வயது சிறுவன் தாய், தந்தையுடன் உறங்கிக்கொண்டிருந்தபோது, இன்று அதிகாலை 3.30 மணியளவில் சிறுவன் பால் கேட்க, சிறுவனின் தாயார் தந்தைக்கு பக்கத்தில் சிறுவனை விட்டுவிட்டு சமையலறைக்குச் சென்றுள்ளார். பின்னர், பால் போத்துலுடன் திரும்பி வந்து பார்த்தபோது சிறுவனை காணாத நிலையில், அப்பகுதி மக்கள் ஒன்றுதிரண்டு சிறுவனை தேடியுள்ளனர். இதன்போது சிறுவனை கடத்திக்கொண்டு நபரொருவர் காட்டுப் பகுதிக்கு செல்வதை கண்ட மக்கள் காட்டை சுற்றி தேடியுள்ளனர். இந்நிலையில், சிறுவனை காட்டில் விட்டுவிட்டு சந்தேக நபர் அந்த பகுதியில் ஒளிந்திருந்தபோது, அவரை பொதுமக்கள் மடக்கிப் பிடித்து அடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்ததுடன் சிறுவனை மீட்டனர். கைது செய்யப்பட்ட நபர் வாழைச்சேனை செம்மண் ஓடை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர்; போதைப்பொருளுக்கு அடிமையானவர்; ஏற்கெனவே பல திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடையவர்; பதிவு செய்யப்பட்ட குற்றவாளிப் பட்டியலில் (ஜ.ஆர்.சி) சேர்க்கப்பட்டவர் எனவும் போதைப்பொருள் வாங்க பணத்துக்காக சிறுவனை கடத்தி பணம் பறிக்க முயற்சித்துள்ளதாகவும் சந்தேக நபர் தொடர்பான பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவர் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/191329
  16. இலங்கை இராஜதந்திரி ஹிமாலி அருணதிலகவுக்கு எதிரான அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத் தீர்ப்பு - வெளிவிவகார அமைச்சு 18 AUG, 2024 | 06:58 AM (நா.தனுஜா) இலங்கை இராஜதந்திரி ஹிமாலி அருணதிலக அவுஸ்திரேலியாவுக்கான பிரதி உயர்ஸ்தானிகராகப் பணியாற்றிய காலப்பகுதியில் அந்நாட்டு நியாய ஊழியச் சட்டத்தை மீறி செயற்பட்டிருக்கிறார் எனவும், அதற்காக அக்காலப்பகுதியில் அவரது வீட்டுப்பணிப்பெண்ணாகப் பணியாற்றிய பிரியங்கா தனரத்னவுக்கு அவர் 543,000 டொலர்களைச் செலுத்தவேண்டும் எனவும் அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கின்றது. இருப்பினும் இதுகுறித்து விளக்கமளித்திருக்கும் இலங்கையின் வெளிவிவகார அமைச்சு, அப்பணிப்பெண்ணுக்கு அமைச்சின் ஊடாக அனுமதியளிக்கப்பட்டு, இருதரப்பினராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொடுப்பனவு முழுமையாக செலுத்தப்பட்டிருப்பதாகவும், அவர் (பிரியங்கா) ஹிமாலி அருணதிலக நாடு திரும்புவதற்கு முன்பதாக உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இரகசியமாக வெளியேறியதாகவும் தெரிவித்திருக்கிறது. தற்போது ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதியாகப் பதவி வகிக்கும் ஹிமாலி அருணதிலக, கடந்த 2015 - 2018 வரையான காலப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்கான இலங்கையின் பிரதி உயர்ஸ்தானிகராகப் பணியாற்றினார். அப்போது ஹிமாலி அருணதிலகவின் கன்பரா இல்லத்தில் வீட்டுப்பணிப்பெண்ணாக இலங்கையைச்சேர்ந்த பிரியங்கா தனரத்ன இணைந்துகொண்டார். அங்கு மூன்று வருடங்களாக வாரத்தில் ஏழு நாட்களும் பணியாற்றிய பிரியங்காவுக்கு, அம்மூன்று ஆண்டுகளில் இரு நாட்கள் மாத்திரமே ஓய்வு வழங்கப்பட்டிருக்கின்றது. அதுவும் உணவு சமைக்கும் போது அவரது கையில் தீக்காயம் ஏற்பட்டதன் காரணமாகவே அந்த ஓய்வு வழங்கப்பட்டதாக சிட்னியை தளமாகக்கொண்டு இயங்கிவரும் சட்டத்தரணி டேவிட் ஹிலார்ட் தெரிவித்திருக்கிறார். மேற்குறிப்பிட்டவாறு முழுமையாக மூன்று ஆண்டுகள் வீட்டுப்பணிப்பெண்ணாகப் பணியாற்றிய பிரியங்காவுக்கு அதற்காக மொத்தமாக 11,212 டொலர்கள் மாத்திரமே ஊதியமாக வழங்கப்பட்டிருப்பதாகவும், இருப்பினும் பிரியங்கா அவுஸ்திரேலியாவில் பணியாற்றத் தொடங்கிய 2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் வாரமொன்றில் 36 மணிநேரப் பணிக்கான தேசிய மட்டத்திலான குறைந்தபட்ச ஊதியம் 656.90 டொலர்கள் எனவும் டேவிட் ஹிலார்ட் சுட்டிக்காட்டியிருக்கிறார். அதுமாத்திரமன்றி அனுமதிக்கப்பட்டதை விட அதிக நேரம் பணிக்கு அமர்த்தியிருத்தல் மற்றும் நிர்ணயிக்கப்பட்டதை விடவும் குறைந்தளவு ஊதியமே வழங்கப்பட்டிருத்தல் ஆகியவற்றின் விளைவாக ஹிமாலி அருணதிலகவினால் அவுஸ்திரேலியாவின் ஊழியச்சட்டம் மீறப்பட்டிருப்பதாகவும், இது 'நவீன அடிமைத்துவத்துக்கு' சிறந்த உதாரணம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டிருக்கிறார். இவ்வாறானதொரு பின்னணியில் அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றத்தில் நியாயமான ஊழியச்சட்டத்தின் கீழ் ஹிமாலி அருணதிலகவுக்கு எதிராக பிரியங்கா தனரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அவர் சார்பாக சட்டத்தரணி டேவிட் ஹிலார்ட் ஆஜராகியிருந்தார். இவ்வழக்கின் மீதான விசாரணைகளை அடுத்து, ஹிமாலி அருணதிலகவினால் நியாய ஊழியச்சட்டம் பல்வேறு வழிகளில் மீறப்பட்டிருப்பதாகவும், எனவே அவர் செலுத்தவேண்டியிருக்கும் 374,000 டொலர் நிலுவைச் சம்பளத்துடன், வட்டியாக 169,000 டொலரைச் சேர்த்து மொத்தமாக 543,000 டொலர்களை பிரியங்கா தனரத்னவுக்குச் செலுத்துமாறு அவுஸ்திரேலிய பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. இருப்பினும் இவ்விவகாரம் தொடர்பில் தாம் அவதானம் செலுத்தியிருப்பதாகக் குறிப்பிட்டு வெளிவிவகார அமைச்சினால் வெளியிடப்பட்டிருக்கும் அறிக்கையில், வெளிநாடுகளில் இராஜதந்திரப்பதவிகளுக்கு நியமிக்கப்படும் அதிகாரிகள் அவர்களது உதவிக்கென பணியாளர் ஒருவரை அழைத்துச்செல்வதற்கு அவசியமான வசதிகளை வெளிவிவகார அமைச்சு செய்துகொடுப்பது வழமையான விடயம் எனத் தெரிவித்துள்ளது. அதேவேளை 'இவ்விவகாரத்துடன் தொடர்புடைய வீட்டுப்பணிப்பெண் அவரது 3 வருட பணிக்காலத்தை முழுமையான நிறைவுசெய்திருந்த நிலையில், தொழில் வழங்குனர் (ஹிமாலி அருணதிலக) அவுஸ்திரேலியாவிலிருந்து மீண்டும் இலங்கைக்கு வருவதற்குத் திட்டமிட்டிருந்த தினத்துக்கு முதல் நாள் தொழில் வழங்குனரின் உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து இரகசியமாக வெளியேறிவிட்டார். இருப்பினும் வீட்டுப்பணிப்பெண்ணின் ஊதியமாக வெளிவிவகார அமைச்சினால் அனுமதியளிக்கப்பட்டிருந்த கொடுப்பனவு அவருக்கு முழுமையாக செலுத்தப்பட்டுவிட்டது' எனவும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/191335
  17. 400 ஆண்டு தலைநகரை விட்டு, அடர்ந்த காட்டுக்குள் இந்த நாடு புதிய தலைநகரை நிர்மாணிப்பது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நுசந்தரா, அடர்ந்த காட்டின் நடுவே உருவாகி வரும் இந்தோனீசிய தலைநகர் கட்டுரை தகவல் எழுதியவர், அஸ்டுடெஸ்ட்ரா அஜெங்க்ராஸ்ட்ரி பதவி, பிபிசிக்காக ஜகார்த்தாவில் இருந்து 17 ஆகஸ்ட் 2024, 10:49 GMT புதுப்பிக்கப்பட்டது 6 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தோனீசியாவின் தலைநகர் ஜகார்த்தா உலகின் மிக வேகமாக மூழ்கி வரும் நகரமாக அறியப்படுகிறது. எனவே அந்நாட்டு அரசாங்கம் புதிதாக ஒரு தலைநகரை உருவாக்கும் திட்டத்தை வேகமாக செயல்படுத்தி வருகிறது. புதிய தலைநகரம் ஓர் அடர்ந்த காட்டின் நடுவில் உருவாக்கப்பட்டு வருவதால் இது ஒரு துணிச்சலான திட்டமாக கருதப்படுகிறது. அதிபர் ஜோகோ விடோடோவின் பதவி காலம் முடிவடையும் நிலையில் இந்த புதிய தலைநகரின் உருவாக்கம் அவரின் லட்சிய திட்டமாகவும் மிகப்பெரிய பாரம்பரிய சின்னமாகவும் இருக்கும். முதலில் 2019 இல் அறிவிக்கப்பட்ட தலைநகர் கட்டமைக்கும் திட்டத்தின் கட்டுமானம் 2022 ஆம் ஆண்டின் மத்தியில் தொடங்கியது. தற்போது கட்டுமானங்கள் நடந்து வருகிறது. விரைவில் அந்த தலைநகரம் அதன் குடியிருப்பாளர்களை வரவேற்க தயார் நிலையில் இருக்கும். "நுசந்தரா தலைநகரம் எதிர்காலத்தை உருவாக்குவதற்கான ஒரு தளமாக பார்க்கப்படுகிறது. ஒரு தலைநகரை புதிதாகக் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பும் திறனும் அனைத்து நாடுகளுக்கும் கிடைத்துவிடாது.” என்று கடந்த வாரம் புதிய நகரத்தில் நடந்த முதல் அமைச்சரவைக் கூட்டத்தின் போது அதிபர் விடோடோ கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தோனீசியாவின் புதிய தலைநகர் நுசந்தராவின் மையத்தில் அமைந்திருக்கும் அதிபர் மாளிகை இந்தோனீசீயாவில் 1600 களில் டச்சு காலனித்துவ காலத்திலிருந்து சுமார் 400 ஆண்டுகளாக நாட்டின் தலைநகராக இருந்த ஜகார்த்தா, தற்போது மக்கள் தொகை அதிகரித்து நெரிசல் மிகுந்த நகரமாக மாறிவிட்டது. உலகின் மிக வேகமாக மூழ்கி வரும் நகரமாகவும் மிகவும் மாசுபட்ட பகுதியாகவும் உருமாறி விட்டது. 10.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட பெருநகரத்தின் 40% இப்போது கடல் மட்டத்திற்கு கீழே உள்ளது. நுசந்தரா ஒரு பசுமையான, உயர் தொழில்நுட்ப நகரமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அரசாங்கம் இயற்கையான சூழல் நிறைந்த பகுதியில் நவீன பெருநகரத்தின் உள்கட்டமைப்பை நிறுவியுள்ளது. அதன் மொத்த பரப்பளவில் 60%, (நியூயார்க் நகரத்தின் இரு மடங்கு அளவு) நடைபாதைகள் மற்றும் பைக் டிராக்குகளுடன் கூடிய பசுமையான இடங்களாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நுசந்தராவில் கட்டுமான தொழிலாளர்கள் தற்போது, பெரும்பாலான பகுதிகளில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. பிபிசி சமீபத்தில் அந்த இடத்தைப் பார்வையிட்டபோது, ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் அனைவரும் பல மாதங்களாக இடைவிடாமல் உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயம் டிரக்குகளும் பெரிய ஜே.சி.பி. இயந்திரங்களும் சாலையில் தூசிகளைக் கிளறின. படக்குறிப்பு,நுசந்தரா மற்றும் ஜகார்த்தாவுடன் இந்தோனீசியா வரைபடம் தலைநகரைஉருவாக்கும் பணிகள் ஐந்து கட்டங்களாக திட்டமிடப்பட்டுள்ளது, முதற்கட்ட பணிகள் இந்த ஆகஸ்ட் மாதம் நாட்டின் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது முடிவடையும் என முன்னர் திட்டமிடப்பட்டது. இருப்பினும், கட்டுமானப் பணிகள் இன்னும் நிறைவடையாததால் இந்த ஆண்டு இறுதியில் தான் முதல் கட்டம் முடிவடையும். "எல்லாம் சரியாக நடக்கிறது. நாங்கள் சரியான பாதையில் செல்கிறோம்” என்று நுசந்தராவின் உள்கட்டமைப்பு மேலாளர் டேனிஸ் சுமதிலகா பிபிசியிடம் கூறினார். கிட்டத்தட்ட 90% முதற்கட்ட பணி முடிந்துவிட்டது என்று கூறினார். "நாங்கள் ஆகஸ்ட் மாதமே முடிக்க வேண்டும் என்பதற்காக அவசர கதியில் செயல்படவில்லை. இது வளர்ச்சியின் ஒரு பகுதியாகும், நாட்டின் எதிர்காலத்திற்காக நாங்கள் இதை செய்கிறோம்” என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புதிய நகரத்துக்கான திட்டம் முன்மொழியப்பட்டதில் இருந்தே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர் முழு நகரத்தையும் கட்டமைக்க 33 பில்லியன் டாலர் செலவாகும், அரசாங்கம் அந்த தொகையில் ஐந்தில் ஒரு பங்கை மட்டுமே உறுதி செய்துள்ளது. மீதமுள்ள தொகையை தனியார் முதலீடு மூலம் திரட்ட போராடி வருகிறது. முதலீட்டாளர்களை கவரும் வகையில், அதிபர் விடோடோ சமீபத்தில் 190 ஆண்டுகள் வரை நில உரிமை உள்ளிட்ட சலுகைகளை வழங்கினார். கடந்த ஆண்டில், அவர் நவம்பரில் இந்தியாவில் நடந்த ஜி20 உச்சி மாநாடு உட்பட பல உலகத் தலைவர்களிடம் நுசந்தரா பற்றி குறிப்பிட்டு முதலீடுக்கு அழைப்பு விடுத்தார். ஆனால் இதுவரை குறிப்பிடத்தக்க ஒப்பந்தங்கள் எதுவும் கையெழுத்திடப்படவில்லை. "நீங்கள் 80% தனியார் முதலீட்டை நம்பியிருப்பது பயமாக இருக்கிறது. முதலீட்டாளர்கள் பொருளாதார சாத்தியத்தையும் தொடர்ச்சியான வளர்ச்சியையும் கருத்தில் கொள்வார்கள். கட்டுமானங்களை நீங்கள் பாதியில் நிறுத்தும் சூழல் உருவாக கூடாது ” என்று மோனாஷ் பல்கலைக் கழகத்தின் நகர்ப்புற வடிவமைப்பில் இணைப் பேராசிரியரான ஏகா பெர்மனாசரி கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,அதிபர் விடோடோ நுசந்தரா ஆணையத்தின் திட்டமிடல் மற்றும் முதலீட்டின் துணைத் தலைவரான அகுங் விகாக்சோனோ, பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டை உறுதிப்படுத்தும் பல்வேறு கட்டங்களில் இருப்பதாகக் கூறினார். சிலர் தற்போது நகரின் பல்வேறு சூழல்களை பற்றி ஆய்வு மேற்கொண்டு வருவதாகக் கூறினர். "முதலீட்டாளர்களை பொருத்தவரை நகரின் உள்கட்டமைப்பு தயாராக உள்ளது என்று நம்பிக்கையை பெற விரும்புகிறார்கள், மக்கள் தொகையை அவர்கள் லாப நோக்கத்துடன் பார்க்கிறார்கள். அவர்கள் முதலீடு செய்ய யோசிக்கவில்லை. அதற்கான வேலைகளை செய்து வருகின்றனர். ” என்று விகாக்சோனோ கூறினார். அவரது குழு தற்போது ஒரு திட்டத்தை முன்வைத்துள்ளது. அரசாங்கம் எதிர்கால முதலீட்டாளர்களுடன் கூட்டு சேர்ந்து, சாத்தியமான முதலீட்டாளர்களுடன் அபாயத்தை பகிர்ந்து கொள்ளும். காட்டுப்பகுதியில் உயர் தொழில்நுட்பம் புதிய தலைநகரம் ஜாவா தீவில் அமைந்துள்ள ஜகார்த்தாவிலிருந்து 12,000 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது போர்னியோவில் கிழக்கு கலிமந்தனில் உள்ள காட்டுப் பகுதியில் உருவாக்கப்பட்டுள்ளது. வெள்ளம் மற்றும் பூகம்பங்கள் போன்ற இயற்கை பேரழிவுகள் ஏற்படும் வாய்ப்பு குறைவு என்பதால் இந்த பகுதி தேர்வு செய்யப்பட்டுள்ளது. வரைபடத்தில், நுசந்தரா இந்தோனீசியாவின் புவியியல் மையத்தில் மூலோபாய ரீதியாக அமைந்துள்ளது. ஜகார்த்தா மற்றும் ஜாவாவிலிருந்து தொலைவில் உள்ள பெரிய தீவுக்கூட்டத்தில் (இந்தோனீசியா 17,500 தீவுகளால் ஆனது) செல்வம் மற்றும் வளங்களை மறுபங்கீடு செய்ய உதவும் நோக்கத்துடன் அதன் இருப்பிடம் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. இந்தோனீசியாவின் மிகவும் அதிக மக்கள் தொகை கொண்ட தீவான ஜாவா, தேசிய பொருளாதாரத்தில் சுமார் 60% வரை பங்களிக்கிறது. "நாட்டின் பெரும்பாலான வளர்ச்சி ஜாவாவை சார்ந்துள்ளது. எனவே, தலைநகரை வேறு இடத்திற்கு மாற்றுவது மற்றும் ஜாவாவிலிருந்து விலகிச் செல்வது என்பது ஒரே பகுதியை சார்ந்திருக்கும் சூழலை மாற்றும் . இது சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும்." என்று நகர்ப்புற நிபுணர் ஏகா பெர்மனாசரி கூறினார். இந்த மெகா திட்டம் சுமார் 1,000 சதுர மைல் பரப்பளவை உள்ளடக்கியது. ஜகார்த்தாவை விட நான்கு மடங்கு மற்றும் நியூயார்க் நகரத்தை விட இரண்டு மடங்கு பெரியது. புதிய நகரத்துக்கான திட்டம் முன்மொழியப்பட்டத்தில் இருந்தே சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். நகரத்தை கட்டமைப்பது சுற்றுச்சூழலை சீர்குலைத்து, ஒராங்குட்டான்கள் மற்றும் நீண்ட மூக்கு குரங்குகள் போன்ற அழிவின் விளிம்பில் இருக்கும் விலங்குகளின் வாழ்விடத்தை மேலும் சுருக்கிவிடும் என்று அவர்கள் கவலையை வெளிப்படுத்தி உள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்தோனீசியாவின் மத்திய ஜகார்த்தாவின் தனாஹ் அபாங் மாவட்டத்தில் குடியிருப்பு கட்டிடங்களுக்கு அப்பால் வானளாவிய கட்டிடங்கள் காணப்படுகின்றன அரசாங்கம் இந்த கூற்றுகளை நிராகரித்துள்ளது. ஒரு காலத்தில் ஒரு தொழிற்துறை யூகலிப்டஸ் தோட்டமாக இருந்த நிலத்தில் தான் நுசந்தரா கட்டப்படுகிறது என்று வாதிட்டது. ஆனால் காட்டு பகுதியை அழிப்பது நீண்ட காலத்திற்கு சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்று ஆர்வலர்கள் கூறுகின்றனர். இந்த புதிய நகரம் முற்றிலும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலால் இயக்கப்படும் என்றும், `ஸ்மார்ட் கழிவு மேலாண்மை’ வசதியுடன் இருக்கும் என்றும் அதிகாரிகள் கூறுகின்றனர். மின்சார வாகனங்களை பிரத்யேகமாக இயக்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், 2045 இல் முழு கட்டுமானங்கள் நிறைவடைவதற்குள் நிகர-பூஜ்ஜிய உமிழ்வை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது அடையப்பட்டால், இந்தோனீசியாவின் தேசிய இலக்கை விட 15 ஆண்டுகளுக்கு முன்னதாக சுற்றுச்சூழல் இலக்கை அடையும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சுதந்திர தின நிகழ்வின் போது ஜகார்த்தாவில் உள்ள தேசிய நினைவுச் சின்னத்தில் இருந்து நுசந்தரா வரை பாரம்பரிய கொடியை எடுத்துச் சென்றனர் புதிய நகரத்தில் குடியேறும் மக்களின் கருத்து நுசந்தராவின் எதிர்கால குடியிருப்பாளர்கள் உட்பட இந்தோனீசியர்கள் மத்தியிலும் பல்வேறு சந்தேகங்கள் எழுகின்றன. இந்த நிர்வாக தலைநகரமானது 2045 ஆம் ஆண்டுக்குள் 1.9 மில்லியன் மக்களைக் குடியமர்த்த திட்டமிடப்பட்டுள்ளது, அவர்களில் பெரும்பாலோர் அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினராக தான் இருப்பார்கள். முதல் குழு, சுமார் 10,000 அரசு ஊழியர்கள், செப்டம்பரில் நுசந்தராவுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில அரசு ஊழியர்கள், பெயர் குறிப்பிடாமல் பிபிசியுடன் பேச ஒப்புக்கொண்டனர், தங்கள் தயக்கத்தைப் பகிர்ந்து கொண்டனர். “நகரின் உள்கட்டமைப்பு இன்னும் தயாராகவில்லை. எனது குழந்தையை நான் எங்கே பள்ளிக்கு அனுப்புவேன்? அவர்களுக்கான வசதிகள் உள்ளனவா, பொழுதுபோக்கு அம்சங்கள் உள்ளதா?” என்று ஒரு குழந்தையின் தந்தை பிபிசியிடம் கூறினார். மற்றொரு அரசு ஊழியர் தரை தளத்தில் வசிப்பதற்கு முன்னுரிமை அளிக்கிறார். மற்ற தனி நபர்களுடன் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வாழ நிர்ப்பந்திக்கப்படுவதைப் பற்றி கவலைப்படுகிறார். நுசந்தராவில் கட்டப்பட்டு வரும் குடியிருப்பு கட்டடங்களில் தற்போது மூன்று படுக்கையறைகள் மட்டுமே உள்ளன, எனவே குடும்பம் இல்லாதவர்கள் மற்ற தனி நபர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,Located in the middle of a forest, the city offers green spaces and walking trails நுசந்தராவைச் சுற்றி வசிக்கும் பழங்குடியின மக்கள் தாங்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்கிறார்கள். நகரின் வளர்ச்சிப் பணிக்காக ஏற்கனவே அரசாங்க மண்டலத்திற்கு அருகில் வசித்து வந்த கிட்டத்தட்ட 100 மக்களை வேறு இடத்தில் குடியமர்த்தி உள்ளனர். சுங்கச்சாவடிகள் மற்றும் புத்தம் புதிய விமான நிலையத்தின் கட்டுமானம் மேலும் பழங்குடிகள் இடம்பெயரும் சூழல் ஏற்படலாம் என்னும் அச்சத்தை எழுப்பியுள்ளது. அருகிலுள்ள கிராமத்தில் வசிக்கும் பாண்டி, நகரமயமாக்கல் தனது கலாசார அடையாளத்தை அழித்துவிடும் என்று கவலைப்படுகிறார். 2019 இல் தலைநகரின் இடமாற்றம் அறிவிக்கப்பட்டதிலிருந்து, நுசந்தரா அமைந்துள்ள பெனாஜாம் பாசர் ரீஜென்சி, நிலையான மக்கள் தொகை அதிகரிப்பைக் கண்டுள்ளது. “எங்கள் கிராமத்தை மீண்டும் கட்டியெழுப்புவதாகவும், சுற்றுலாப் பிரதேசமாக மாற்றுவதாகவும் அவர்கள் உறுதியளிக்கின்றனர். ஆனால் இவை வெற்று வாக்குறுதிகளாக இருக்குமோ என்று நான் அஞ்சுகிறேன், மேலும் நாங்கள் எங்கள் வீடுகளை இழந்துவிடுவோம் என்று அஞ்சுகிறோம்” என்று அவர் கூறினார். படக்குறிப்பு,பெரிய அளவிலான நகரமயமாக்கலின் அச்சுறுத்தல்களைப் பற்றி பாண்டி கவலைப்படுகிறார் ஏகா பெர்மனாசாரியின் கூற்றுப்படி, இது மற்றொரு விமர்சனப் புள்ளியாக உள்ளது. உயர் தொழில்நுட்ப நுசந்தராவின் வடிவமைப்பு காட்டு பகுதியில் வசிக்கும் உள்ளூர் மக்களை புறக்கணிக்கும் அதே வேளையில் உயரடுக்கினருக்கான பிரத்யேக நகரத்தை உருவாக்கலாம். “அவர்கள் வெறும் பார்வையாளர்களாக மாறுவார்கள். அவர்கள் இந்த இறக்குமதி செய்யப்பட்ட உயர்தர தொழில்நுட்ப கட்டிடங்களையும் மக்களையும் பார்க்கிறார்கள். நீங்கள் மிகவும் தனித்துவமான ஒரு நகரத்தை உருவாக்கும் போது, அது ஜகார்த்தாவைப் போலவே ஒரு சமூக-பொருளாதார ஏற்றத்தாழ்வை உருவாக்கும்,”என்று அவர் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c74jn0321geo
  18. தென்லெபனானில் இஸ்ரேல் தாக்குதல் - பத்துபேர் பலி 17 AUG, 2024 | 07:07 PM தென்லெபனானில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் பத்துக்கும் மேற்கொண்டவர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இஸ்ரேலிய தாக்குதலை தொடர்ந்து ஹெஸ்புல்லா ரொக்கட் தாக்குதலை மேற்கொண்டுள்ளது. இஸ்ரேலின் தாக்குதலில் லெபனானில் கொல்லப்பட்டவர்கள் அனைவரும் சிரிய பிரஜைகள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொல்லப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அவரதுஇரண்டு பிள்ளைகளும் உள்ளனர் என லெபானின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. ஐந்துபேர் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்,இருவர் ஆபத்தான நிலையில் உள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. ஹெஸ்புல்லா அமைப்பின் ஆயுதகிடங்குகளை இலக்குவைத்துள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/191337
  19. காங்கேசன்துறையிலிருந்து நாகபட்டினம் நோக்கி புறப்பட்ட பயணிகள் கப்பல் காங்கேசன்துறை- நாகபட்டினம் பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று ஆரம்பமாகியது. இன்று காலை 10.45 மணிக்கு காங்கேசந்துறை துறைமுகத்தில் இருந்து சிவகங்கை கப்பல் 25 பயணிகளுடன் பயணத்தை ஆரம்பித்தது. கப்பலில் செல்லும் பயணிகளுக்கு கப்பல் நிறுவனத் தலைவரால் வரவேற்பு வழங்கப்பட்டது. இந் நிகழ்வில் இந்து சிறி கப்பல் சேவை நிறுவனத்தின் தலைவர் நிரஞ்சன் நந்தகோபன், காங்கேசன்துறை துறைமுகத்தின் அதிகாரிகள், கடற்படையினர் எனப் பலரும் கலந்து கொண்டனர். https://thinakkural.lk/article/308019
  20. உலகையே அச்சுறுத்தும் குரங்கம்மையின் அறிகுறிகள் என்ன? எவ்வாறு பரவுகிறது? முழு விவரம் பட மூலாதாரம்,GETTY IMAGES 17 ஆகஸ்ட் 2024, 03:45 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஆப்பிரிக்க கண்டத்தில் பரவி வரும் குரங்கம்மையை (MPox) உலகளாவிய சுகாதார நெருக்கடியாக அறிவித்துள்ளது உலக சுகாதார மையம். எம்பாக்ஸ் அல்லது குரங்கம்மை என்று அழைக்கப்படும் இந்த நோய் காங்கோ ஜனநாயக குடியரசில் குறைந்தது 450 நபர்களின் இறப்புக்குக் காரணமாக அமைந்தது. உலகளாவிய நடவடிக்கையை எடுக்கவில்லை என்றால், குரங்கம்மை ஆப்பிரிக்க கண்டம் தாண்டியும் பரவும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கப்படுகிறது. இந்நிலையில், இந்தத் தொற்றுநோய் எப்படிப் பரவுகிறது, அதன் அறிகுறிகள் என்ன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது. குரங்கம்மை(MPox) என்றால் என்ன? சின்னம்மையை ஏற்படுத்தும் வைரஸின் குடும்பத்தில் உள்ள மற்றொரு வகை வைரஸே குரங்கம்மையைத் தோற்றுவிக்கிறது. ஆனால் அது அவ்வளவு ஆபத்தானது அல்ல. ஆரம்பத்தில் விலங்குகளிடம் இருந்து இந்தத் தொற்று மனிதர்களிடம் பரவியது. தற்போது இது மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு பரவுகிறது. எம்பாக்ஸ் அறிகுறிகள் என்ன? காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி போன்றவை ஆரம்பக்கால நோய் அறிகுறிகளாகும். காய்ச்சல் வந்தவுடன், தடிப்புகள் ஏற்படும். உடலின் மற்ற இடங்களில் பரவுவதற்கு முன்பு முகத்தில்தான் தடிப்புகள் ஏற்படும். உள்ளங்கை, கைகள் மற்றும் உள்ளங்கால்களிலும் இந்த அம்மை பரவும். படக்குறிப்பு,எம்பாக்ஸ் நோயின் அறிகுறிகள் என்ன? இந்தத் தடிப்புகள் அரிப்பையும் வலியையும் ஏற்படுத்தும். பல்வேறு கட்டங்களைக் கடந்து இறுதியாக அம்மை கொப்புளங்களாக உருமாறும். இறுதியில் இது உதிர்ந்துவிடும். இவை வடுக்களாகப் பின்னால் மாறிவிடும். இந்தத் தொற்று 14 முதல் 21 நாட்கள் கழித்து அதுவாகவே சரியாகிவிடும். ஆனால் சில நேரங்களில் இவை உயிரைக் கொல்லும் தொற்றாகவும் மாறிவிடும். குறிப்பாக குழந்தைகள் போன்ற மிகவும் பாதிக்கப்படக்கூடிய நபர்களுக்கு அதிக அச்சுறுத்தலை இந்த அம்மை நோய் ஏற்படுத்தும். அதிகம் பாதிக்கப்பட்ட நபர்களின் உடல் எங்கும் புண்கள் ஏற்படும். வாய், கண்கள் மற்றும் பிறப்புகளிலும் இந்தப் புண்கள் ஏற்படும். எந்தெந்த நாடுகளில் எம்பாக்ஸ் பரவுகிறது? பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு,காய்ச்சல், தலைவலி, வீக்கம், முதுகுவலி, தசைவலி போன்றவை ஆரம்பகால நோய் அறிகுறிகள். குரங்கம்மை(MPox) பொதுவாக மேற்கு மற்றும் மத்திய ஆப்பிரிக்காவில் அமைந்திருக்கும் ஜனநாயக காங்கோ குடியரசு போன்ற நாடுகளில் உள்ள வெப்பமண்டல மழைக்காடுகளில் இருக்கும் கிராமங்களில் அதிகமாகப் பரவி வருகிறது. பல ஆண்டுகளாக இந்தப் பகுதியில் குரங்கம்மை தொற்று இருந்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஆயிரக்கணக்கான நபர்கள் குரங்கம்மையால் பாதிக்கப்படுகின்றனர். 15 வயதுக்குக் குறைவான, தொற்றால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உட்பட நூற்றுக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். காங்கோ மற்றும் அதன் அண்டை நாடுகளில் பல்வேறு நோய்த் தொற்றுகள் தற்போது ஏற்பட்டு வருகிறது. புருண்டி, ருவாண்டா, உகாண்டா, கென்யா போன்ற நாடுகளில் தற்போது குரங்கம்மை ஏற்பட்டுள்ளது. இதற்கு முன்பு இந்த நாடுகளில் இந்த நோய்த் தொற்று அதிகம் ஏற்பட்டதில்லை. குரங்கம்மையின் வகைகள்? படக்குறிப்பு,இந்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் ஜூலை மாத இறுதி வரை ஆப்பிரிக்க கண்டத்தில் குரங்கம்மையால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இரண்டு வகையான குரங்கம்மைகள் உள்ளன. க்ளாட் 1 என்பது மிகவும் தீவிரமான தொற்று. மற்றொரு வகை க்ளாட் 2 ஆகும். க்ளாட் 1 வகை வைரஸ், காங்கோவில் பல ஆண்டுக் காலமாக இந்தத் தொற்றை ஏற்படுத்தி வருகிறது. க்ளாட்-1 வைரஸின் சில வகைகள் இளைஞர்களைக் காட்டிலும் குழந்தைகளை அதிகமாகத் தாக்குகிறது. கடந்த ஆண்டு பாதிப்புக்கு உள்ளான நபர்களுக்கு க்ளாட் 1பி (Clade 1b) என்ற புதிய வகை வைரஸால் குரங்கம்மை(MPox) ஏற்பட்டுள்ளது. இது அதிக அளவில் ஆபத்தை ஏற்படுத்துகிறது. இந்தப் புதிய வகை வைரஸ் பற்றி நிறைய தெரிந்துகொள்ள வேண்டியுள்ளதாகக் குறிப்பிடும் நிபுணர்கள், இது அதிகமாகப் பரவி தீவிரமான தொற்றை உருவாக்குவதாகக் கூறுகின்றனர். இந்த ஆண்டின் ஆரம்பம் முதல் ஜூலை மாதம் வரை 14,000 பேருக்கு குரங்கம்மை நோய்த்தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் அதில் 450 நபர்கள் இறந்துள்ளதாகவும் ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் (CDC) தெரிவிக்கிறது. கடந்த 2023ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் நோய்த் தொற்று 160% வரை அதிகரித்துள்ளது, இறப்பு விகிதமும் 19% வரை அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு 2022ஆம் ஆண்டு க்ளாட்-2 வகையால் ஏற்பட்ட குரங்கம்மை(MPox) தொற்றைத் தொடர்ந்து, பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டது. இந்த வைரஸை காண முடியாத ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகள் உட்பட 100 நாடுகளுக்கு இந்தத் தொற்று பரவியது. தடுப்பூசிகள் மூலம் தொற்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. குரங்கம்மை எப்படி பரவுகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்களோடு உடலுறவு வைத்துக்கொள்வது, தொட்டுப் பேசுதல், அருகே அமர்ந்து பேசுதல் மற்றும் சுவாவசித்தலால் இந்தத் தொற்று ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. காயங்கள் வழியாகவும், மூச்சுக்குழல் வழியாகவும், கண்கள், மூக்கு அல்லது வாய் வழியாகவும் இந்த வைரஸ் ஒருவரின் உடலுக்குள் செல்கிறது. இந்த வைரஸ் ஒட்டியிருக்கும் படுக்கைகள், ஆடைகள் மற்றும் துண்டுகள் போன்றவற்றைத் தொடுவதன் மூலமும் இந்தத் தொற்று ஏற்படுகிறது. பாதிப்புக்கு ஆளான குரங்கு, எலி, அணில் போன்றவற்றைத் தொடுவதாலும் இந்தத் தொற்று பரவுகிறது. 2022ஆம் ஆண்டு ஏற்பட்ட தொற்று பெரும்பாலும் உடலுறவால் ஏற்பட்டது. தற்போது காங்கோவில் ஏற்பட்டிருக்கும் பெருந்தொற்றுப் பரவலுக்கும் பாலுறவு மற்றும் பாதிக்கப்பட்டவர்கள் உடனான நெருங்கிய தொடர்பு ஆகியவை காரணமாக இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,ஜனவரி 2024 முதல் ஜூலை 2024 வரை 14000 பேருக்கு குரங்கம்மை ஏற்பட்டுள்ளது யார் அதிக ஆபத்தில் உள்ளனர்? குரங்கம்மை(MPox) நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு எளிதில் இந்தத் தொற்று ஏற்படும். தொற்றால் பாதிக்கப்பட்ட நபர்களுடன் பாலுறவு கொள்வது இளைஞர்கள் மத்தியில் இந்த நோய்த் தொற்று பரவுவதற்கு முக்கியக் காரணமாக உள்ளது. யாருக்கு அதிக ஆபத்து உள்ளது என்பதைத் தற்போதைய சூழலைக் கொண்டு ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். நோய் எதிர்ப்புத் திறனை மேம்படுத்தி வருகின்ற பருவத்தில், குழந்தைகள் அதிகமாகப் பாதிக்கப்படக் கூடிய நபர்களாக இருக்கின்றனர். இந்தப் பிராந்தியத்தில் பலரும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் கொண்டிருப்பதால் நோயை எதிர்த்துப் போராடுவது கடினமாகிறது. குழந்தைகள் விளையாடுவது மற்ற குழந்தைகளுடன் நெருக்கமாகப் பழகுவது போன்றவற்றால் அவர்களுக்கு எளிதில் தொற்று ஏற்படுவதாகச் சில நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட சின்னம்மை தடுப்பூசிகளையும் இவர்களால் பெற இயலாது. இந்தத் தடுப்பூசியைப் பெற்றுக்கொண்ட பெரியவர்களுக்கு குரங்கம்மை தொற்றில் இருந்து பாதுகாப்பு கிடைக்கலாம். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்களுக்கு இந்தத் தொற்று எளிதில் ஏற்படக்கூடும். கர்ப்பிணிப் பெண்களுக்கும் இதனால் ஆபத்து இருக்கலாம். குரங்கம்மையால் பாதிக்கப்பட்ட நபர்களுடனான தொடர்பைத் தவிர்க்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் உங்கள் பகுதியில் நோய்த் தொற்று இருக்கும் பட்சத்தில் கைகளை சோப்பு போட்டு நன்றாகக் கழுவ வேண்டும். உடலிலுள்ள புண்கள் ஆறும் வரை நோய்த் தொற்று உள்ளவர்கள் தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவேண்டும். தொற்றில் இருந்து மீண்ட பிறகும் 12 வாரங்களுக்குப் பாதுகாப்பு காரணங்களுக்காக ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்த வேண்டும் என்றும் உலக சுகாதார மையம் அறிவித்துள்ளது. குரங்கம்மைக்கு தடுப்பூசிகள் உள்ளனவா? பட மூலாதாரம்,GETTY IMAGES தடுப்பூசிகள் உள்ளன. ஆனால் தொற்று அபாயத்தில் உள்ளவர்கள் அல்லது தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் மட்டுமே இதைப் பெற இயலும். உண்மையான கவலை என்னவென்றால் தேவைப்படும் இடங்களுக்கு இந்தத் தடுப்பூசிகளை வழங்கப் போதுமான நிதி இல்லை. உலக சுகாதார மையம், மருந்து உற்பத்தியாளர்களிடம் உள்ள தடுப்பு மருந்துகளை அவசரத் தேவைகளுக்காக வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டது. முறையாக ஒப்புதல் இன்னும் வழங்கப்படாமல் இருந்தாலும், அதையும் கொடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது. ஆப்பிரிக்காவின் நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம், கண்டம் தழுவிய பொது சுகாதார அவசர நிலையாக இதை அறிவித்துள்ளது. அங்குள்ள நாடுகளின் அரசுகள் இது தொடர்பாக ஒருங்கிணைந்து செயல்பட்டு, பாதிக்கப்பட்ட இடங்களுக்கு மருந்துகளைத் தடையின்றி அனுப்பி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக அளவில் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இந்தத் தொற்று ஆப்பிரிக்க கண்டம் தாண்டியும் பரவும் ஆபத்து உள்ளது. https://www.bbc.com/tamil/articles/clyn84x4zlmo
  21. 17 AUG, 2024 | 04:32 PM கடலுடன் கலக்கின்ற நீரை குளத்திற்கு வழங்கி மக்களுடைய விவசாயத்திற்கும் நாட்டின் அபிவிருத்திக்கும் பங்காற்ற உதவுமாறு தென்னமரவடி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர். திருகோணமலை மாவட்டத்தின் எல்லைப்புற கிராமமாக இருக்கின்ற தென்னமரவடி கிராம மக்கள் அடிப்படை வசதிகள் பல பூர்த்தி செய்யப்படாத நிலையில் அக்கிராமத்தில் வாழ்ந்து வருவதாகவும், வாழ்வாதாரத்திற்காக மீன்பிடி மற்றும் விசாயத்தை பல சவால்களுக்கு மத்தியில் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கின்றார்கள். தென்னமரவடி கிராமத்தில் விவசாயத்தை வாழ்வாதார தொழிலாக மேற்கொண்டுவரும் மக்கள் விவசாயத்திற்கான நீர் இன்றி பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருகின்றார்கள். இந்நிலையில் ஸ்ரீபுர பகுதியில் இருந்து வருகின்ற மேலதிகமான வால்கடவ நீரானது 1 கிலோ மீற்றருக்கு மேலான தூரத்திற்கு பயணம் செய்து தென்னமரவடி பகுதியில் உள்ள கடலுடன் கலக்கின்றது. குறித்த நீரை மறித்து, 150 மீற்றர் தூரத்தில் உள்ள தென்னமரவடி பறையன்வெளி குளத்திற்கு விடுவதன் மூலம் அதனை அண்டி இருக்கின்ற 50 ஏக்கருக்கு மேற்பட்ட வயல்வெளிகளில் விவசாயம் மேற்கொள்வதோடு, அங்கிருந்து ஏனைய சிறிய குளங்களான அகம்படியான் குளம், போட்டாக்குளம் போன்ற குளங்களை நிரப்பி அங்கிருக்கின்ற 200 ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்களில் இருபோக நெற்பயயிர்ச் செய்கையிலும், உப உணவுப் பயிர்ச்செய்கையிலும், கால்நடை வளர்ப்பிலும் மக்கள் ஈடுபட முடியும். இதைவிட நிலத்தடி நீரையும் அதிகரிப்பதற்கு இது வாய்ப்பாக அமையும். அத்துடன் பறையன்வெளி குளத்தில் இருந்து 50 மீற்றர் தூரத்தில் உள்ள மா ஓயாவானது சுமார் 4 கிலோ மீற்றர் தூரம் பயணம் செய்து கொக்கிளாய் களப்புடன் கலக்கின்றது. எனவே குறித்த 50 மீற்றர் தொலைவில் உள்ள மா ஓயாவில் இருந்து பறையன்வெளி குளத்திற்கு நீரை வரவழைக்க முடிந்தால் தென்னமரவடி மக்களின் நீர்ப் பிரச்சினைக்கு முற்று முழுதான தீர்வை பெற்றுக் கொள்ள முடியும் என மக்கள் தெரிவிக்கின்றனர். https://www.virakesari.lk/article/191314
  22. பொன்னியின் செல்வன்-1: தேசிய விருது வென்ற நடிகர், நடிகைகளுக்கு பரிசுத்தொகை விவரங்கள் பட மூலாதாரம்,MADRAS TALKIES படக்குறிப்பு, சிறந்த தமிழ் திரைப்படத்திற்கான விருதை பொன்னியின் செல்வன் 1 பெற்றது. 17 ஆகஸ்ட் 2024, 05:21 GMT கடந்த 2022ஆம் ஆண்டுக்கான 70வது தேசிய திரைப்பட விருதுகளை மத்திய அரசு வெள்ளிக்கிழமை அறிவித்தது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் சிறந்த தமிழ் படத்திற்கான விருதை வென்றது. சிறந்த தெலுங்கு படத்திற்கான விருதை கார்த்திகேயா-2 பெற்றது. சிறந்த நடிகைக்கான விருது இந்த முறை இரண்டு நடிகைகளுக்குக் கிடைத்தது. தமிழ் படமான திருச்சிற்றம்பலம் படத்திற்காக நித்யா மேனனும், குஜராத்தி படமான கட்ச் எக்ஸ்பிரஸ் படத்திற்காக மானசி பரேக்கும் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றனர். கன்னட நடிகர் ரிஷப் ஷெட்டி காந்தாரா படத்திற்காகச் சிறந்த நடிகருக்கான விருதை வென்றார். பட மூலாதாரம்,TWITTER/RISHABSHETTY படக்குறிப்பு,'காந்தாரா' திரைப்படத்தில் ரிஷப் ஷெட்டி கன்னடத்தில் கே.ஜி.எஃப் இரண்டாம் பாகம் சிறந்த படம் விருதை வென்றது. சிறந்த இந்தி படத்திற்கான விருதை மனோஜ் பாஜ்பாய் மற்றும் ஷர்மிளா தாகூர் நடித்த குல்மோகர் வென்றது. பிரம்மாஸ்திரா பாகம் 1 படத்திற்காக இசையமைப்பாளர் ப்ரீதம் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும், தமிழ் திரைப்படமான பொன்னியின் செல்வன் பாகம் 1 பின்னணி இசைக்காக ஏ.ஆர்.ரகுமான் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதையும் வென்றனர். பிரம்மாஸ்திரா திரைப்படத்தின் முதலாம் பாகத்தில் கேசரியா பாடலுக்காக அர்ஜித் சிங் சிறந்த ஆண் பாடகர் விருது பெற்றார். இந்தி படமான நகாய் படத்திற்காக சூரஜ் பர்ஜாத்யா சிறந்த இயக்குருக்கான விருதை வென்றார். சிறந்த படத்துக்கான தேசிய விருதை மலையாள திரைப்படமான ‘ஆட்டம்’ பெற்றது. பரிசுத்தொகை எவ்வளவு? சிறந்த தமிழ்த் திரைப்படமான பொன்னியின் செல்வன் பாகம் ஒன்றின் தயாரிப்பு நிறுவனமான மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் இயக்குநர் மணிரத்னம் ஆகியோருக்கு வெள்ளி தாமரை விருதுடன் தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். சிறந்த படமாகத் தேர்வு செய்யப்பட்ட ஆட்டம் திரைப்படத்தின் தயரிப்பு நிறுவனமான ஜாய் மூவி புரொடக்‌ஷன்ஸ் மற்றும் இயக்குநர் ஆனந்த் ஏகர்ஷி ஆகியோருக்கு பொற்தாமரை விருதுடன் (கோல்டன் லோட்டஸ்) தலா ரூ.3 லட்சம் வழங்கப்படும். சிறந்த நடிகை பிரிவில் நித்யா மேனன் மற்றும் மானசி பரேக் ஆகியோருக்கு வெள்ளித் தாமரை விருது மற்றும் 2 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும். சிறந்த நடிகருக்கான விருதை வென்ற ரிஷப் ஷெட்டிக்கு வெள்ளி தாமரை விருது மற்றும் ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும். பட மூலாதாரம்,PIB படக்குறிப்பு,தேசிய திரைப்பட விருதுகளை அறிவித்த விருது குழுவினர் சிறந்த இயக்குநருக்கான விருதை வென்ற சூரஜ் பர்ஜாத்யாவுக்கு பொற்தாமரை விருதும் ரூ.3 லட்சம் பரிசும் வழங்கப்படும். சிறந்த தெலுங்கு திரைப்படமான கார்த்திகேயா பாகம் இரண்டின் தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ், பீப்பிள் மீடியா ஃபேக்டரி மற்றும் இயக்குநர் சந்து மொண்டேட்டி ஆகியோருக்கு வெள்ளித் தாமரை விருதுடன், தலா ரூ.2 லட்சம் வழங்கப்படும். கன்னடத்தில் சிறந்த படமான கே.ஜி.எஃப் பாகம் 2, வெள்ளித் தாமரை விருதையும், தயாரிப்பு நிறுவனமான ஹோம்பலே பிலிம்ஸ் மற்றும் இயக்குநர் பிரசாந்த் நீல் ஆகியோர் தலா ரூ.2 லட்சம் பரிசு பெறுவார்கள். சிறந்த ஹிந்தி படமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள குல்மோகருக்கு வெள்ளித் தாமரை மற்றும் தயாரிப்பு நிறுவனமான ஸ்டார் இந்தியா பிரைவேட் லிமிடெட் மற்றும் இயக்குநர் ராகுல் வி சித்தேலா ஆகியோருக்கு தலா ரூ.2 லட்சம் பரிசு வழங்கப்படும். பொன்னியின் செல்வன் பாகம் 1 மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியானது. இந்தப் படம் கல்கியின் ‘பொன்னியின் செல்வன்’ நாவலை அடிப்படையாகக் கொண்டது. பொன்னியின் செல்வன் திரைப்படம் இரண்டு பாகங்களாக வெளியானது. பொன்னியின் செல்வன் ஒரு வரலாற்றுப் புனைகதை. ‘கல்கி’ கிருஷ்ணமூர்த்தி (1899-1954) எழுதியது. இந்த நாவலை 1950 முதல் மூன்று ஆண்டுகள் தொடர் வடிவில் தனது ‘கல்கி’ இதழுக்காக அவர் வெளியிட்டார். ராஜராஜ சோழன் காலத்து சில வரலாற்று நிகழ்வுகளை வைத்து கல்கி இந்த நாவலை எழுதினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இயக்குநர் மணிரத்னம் கல்கி எழுதிய இந்த நாவலில் வரலாற்றுக் கதாபாத்திரங்களும் கற்பனைக் கதாபாத்திரங்களும் உள்ளன. புகழ்பெற்ற வரலாற்று ஆசிரியர்களான கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் ‘தி சோழாஸ்’ ('The Cholas') புத்தகம், டி.வி. சதாசிவ பண்டாரத்தரின் 'பிற்காலச் சோழர்களின் வரலாறு', ஆர். கோபாலன் எழுதிய 'காஞ்சியின் பல்லவர்கள்' புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு கல்கி இந்நாவலை எழுதினார். இந்த நாவலுக்காக சோழர்கள் ஆண்ட பல பகுதிகளுக்கு கல்கி பயணம் செய்தார். தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர், அரியலூர் மற்றும் இலங்கைக்கு பயணித்தார். அவருடன் மணியன் என்ற ஓவியரும் சென்றார். கல்கி இதழில் வெளியான அனைத்து சித்திரங்களையும் பொன்னியன் செல்வனின் நாவலுக்காக வரைந்தவர் மணியன். இந்நாவல் 2,400 பக்கங்கள் கொண்டது. இது 5 பகுதிகளாக எழுதப்பட்டது. கே.ஜி.எஃப் 2 திரைப்படம் ‘பாக்ஸ் ஆபிஸ்’ வசூலை உலுக்கி, பாலிவுட்டில் புயலைக் கிளப்பிய படம் கேஜிஎஃப். இதன் இரண்டாம் பாகமாக கேஜிஎஃப் 2 படத்தை பிரஷாந்த் நீல் தயாரித்து வெளியிட்டார். பட மூலாதாரம்,FACEBOOK/KGFMOVIE படக்குறிப்பு,கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தில் யஷ் தங்கச் சுரங்கப் பேரரசான நாராச்சியை மும்பை நகரத்தைச் சேர்ந்த ஒரு சாதாரண சிறுவன் எப்படிக் கைப்பற்றினான் என்பதை கே.ஜி.எஃப் 1-இல் பார்த்தோம். சாம்ராஜ்ஜியத்தை வென்ற பிறகு என்ன நடந்தது என்பதை இரண்டாம் பாகத்தில் இயக்குநர் காட்டினார். கார்த்திகேயா 2 இந்து புராணங்களில் பல கதாபாத்திரங்கள் உள்ளன. எண்ணற்ற ஆச்சரியங்கள் அக்கதாபாத்திரங்களைச் சுற்றித் தோன்றும். அவர்களைப் பற்றிப் பல கேள்விகளும் கதைகளும் உள்ளன. பல இயக்குநர்கள் இதிகாசங்களை வைத்து திரைப்படங்களை எடுத்துள்ளனர். பட மூலாதாரம்,FACEBOOK/KGFMOVIE படக்குறிப்பு,கலியுகத்தைச் சுற்றி நடைபெறும் புராண சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது கார்த்திகேயா திரைப்படம் கார்த்திகேயா 2 படமும் அப்படிப்பட்ட கதைதான். துவாரகை என்ற பெரிய நகரம் தண்ணீரில் மூழ்கியதாக இந்து புராணங்கள் கூறுகின்றன. “இது உண்மைதான்” என்று தொல்லியல் துறை விஞ்ஞானிகள் சிலர் கூறுகின்றனர். மூழ்கிய துவாரகையில் பல மர்மங்கள் மறைந்துள்ளன. துவாரகையைச் சுற்றிப் பல கேள்விகள் உள்ளன. அதில் ஒரு கேள்வி… "கிருஷ்ணரின் கால் விரல்கள் குறித்தது." அப்படிப்பட்ட ஒரு காலகட்டத்தில் புராணப் புதையலைத் தேடி கதாநாயகர் களம் இறங்கினால் எப்படி இருக்கும் என்பதுதான் இந்தப் படத்திபடத்தின் கதை. https://www.bbc.com/tamil/articles/cqxj454wrwxo
  23. 17 AUG, 2024 | 06:13 PM நாட்டில் எச்.ஐ.வி தொற்று நூற்றுக்கு முன்னூறு வீதம் அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் சமல் சஞ்சீவ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் கூறுகையில், அதன்படி, நாடளாவிய ரீதியில் இதுவரை 3,500 எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் அவர்களில் 52க்கும் மேற்பட்ட சிறுவர்கள் காணப்படுகின்றனர். அடையாளம் காணப்பட்ட எச்.ஐ.வி தொற்று நோயாளர்களில் நூற்றுக்கு 81 வீதமானோர் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். கொழும்பு, கம்பஹா மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் இருந்து அதிகளவான எச்.ஐ.வி தொற்று நோயாளர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அதிகளவான நோயாளர்கள் பாடசாலை மாணவர்களாகவும் பல்கலைக்கழக மாணவர்களாகவுமே உள்ளனர். பெரும்பாலும், ஒருபாலின உறவுகளில் ஈடுபடுபவர்கள் மற்றும் பாலியல் ரீதியிலான தொழில்களில் ஈடுபடுபவர்களிடம் எச்.ஐ.வி தொற்று காணப்படும் என்கிறார். https://www.virakesari.lk/article/191322
  24. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி, அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளை நம்பியுள்ளார் கட்டுரை தகவல் எழுதியவர், டாம் பேட்மேன் பதவி, வெளியுறவு விவகாரங்கள் செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் ரஷ்யாவின் குர்ஸ்க் பகுதியில் யுக்ரேன் ஊடுருவி வரும் நிலையில், சீம் ஆற்றின் மீதுள்ள மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பாலத்தை தற்போது அழித்துள்ளது. கிளஷ்கோவோ நகருக்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ராணுவ நடவடிக்கை, உள்ளூர் மாவட்டத்தின் ஒரு பகுதியைத் துண்டித்துள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தனது துருப்புகளுக்கான விநியோகச் சங்கிலியாக இந்தப் பாலத்தை ரஷ்யா பயன்படுத்தியது. அப்பாலம் அழிக்கப்பட்டது, அவர்களின் முயற்சிகளுக்கு இடையூறு விளைவிக்கும். யுக்ரேனிய துருப்புகள் குர்ஸ்கில் தங்கள் நிலைகளை வலுப்படுத்தி வருவதாக யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலென்ஸ்கி கூறியுள்ளார். மேலும் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களை ஒரு பரிமாற்ற நிதி என்று அவர் அழைத்தார். அதனால், அப்பகுதிகள் மாஸ்கோவால் ஆக்கிரமிக்கப்பட்ட யுக்ரேனிய பகுதிகளுக்குப் பதிலாக மாற்றப்படலாம். ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேனின் தீவிரத் தாக்குதல் மற்றும் யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கி மேற்கொண்ட துணிச்சலான நடவடிக்கையின் தாக்கத்தைக் குறைக்கும் முயற்சியில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது. யுக்ரேனின் இந்தத் திடீர் படையெழுச்சி, இரு நாடுகளுக்கு இடையிலான போரின் அரசியல் மற்றும் ராணுவப் பரிணாமங்களை எப்படி மாற்றும் என்பதையும் அமெரிக்கா விநியோகித்த ஆயுதங்களை யுக்ரேன் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதில் அந்நாட்டின் மாறிவரும் நிலைப்பாட்டின் தாக்கங்கள் குறித்தும் அமெரிக்க அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். யுக்ரேனின் இந்த நடவடிக்கை ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளின் தலைவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தாக்குதல், யுக்ரேனுக்கான மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் தொடர்புடைய மிக ஆபத்தான சிக்கலை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது. ரஷ்யா-அமெரிக்க உறவுகளை பாதிக்காமல், ரஷ்ய தாக்குதலின் வெளிச்சத்தில், யுக்ரேனுக்கு அதிகாரம் அளிக்க அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பலமுறை முயன்றார். இந்தப் போரை ரஷ்யா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு இடையிலான போராக ரஷ்ய அதிபர் புதின் சித்தரித்து வந்தார். ஆனால் பைடன் இந்தச் சித்தரிப்பை ஒடுக்கி, மோதலைக் குறைக்கும் வகையில், அமெரிக்க கொள்கைகளில் வரம்புகளை நிர்ணயித்துள்ளார். யுக்ரேன் தாக்குதல் குறித்து எழும் கேள்விகள் ராணுவ ஆய்வாளர்களின் கருத்துப்படி, குர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேனின் தாக்குதல், இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் இருந்து ரஷ்யாவுக்குள் நிகழ்ந்த மிகப்பெரிய வெளிநாட்டு ராணுவத் தாக்குதலாகும். இத்தாக்குதல், வெள்ளை மாளிகைக்குப் பல்வேறு முக்கியமான கேள்விகளை எழுப்பியுள்ளது. அவை, அமெரிக்கா மற்றும் நேட்டோ ஆயுதங்களை யுக்ரேன் எப்படிப் பயன்படுத்தலாம் என்பதற்காக வாஷிங்டன் நிர்ணயித்துள்ள கட்டுப்பாடுகளின் எல்லைகளை இத்தாக்குதல் விரிவுபடுத்துகிறதா? இந்தப் போரில் ரஷ்யா தனது மேற்கத்திய நட்பு நாடுகளுக்கு அமைத்துள்ள சிவப்புக் கோட்டைக் கடக்கும் அபாயம் உள்ளதா? இல்லையென்றால், புதினின் கூற்றுகளை அம்பலப்படுத்த முடியும் என்று அதிபர் ஸெலென்ஸ்கி வாஷிங்டனுக்கு காட்டியுள்ளாரா? அமெரிக்க அதிகாரிகள் கடந்த வாரத்தில் கூறிய கருத்துகளைப் பார்க்கும்போது, இந்தச் சூழல் குறித்த யோசனையை வழங்குகிறது. யுக்ரேன் இத்தாக்குதல் குறித்து முன்கூட்டி எந்த எச்சரிக்கையையும் விடுக்கவில்லை என அமெரிக்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. இதனிடையே, வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரீன் ஜீன்-பியர் இதில், வாஷிங்டனுக்கு “எவ்விதத் தொடர்பும் இல்லை” எனக் கூறினார். பட மூலாதாரம்,EPA படக்குறிப்பு,குர்ஸ்க் பிராந்தியத்தில் யுக்ரேனின் தாக்குதல் இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு ரஷ்யாவிற்குள் நடந்த மிகப்பெரிய தாக்குதலாகும். போரில் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தலாமா என்பது குறித்து வெள்ளை மாளிகை, பாதுகாப்புத் துறை, வெளியுறவுத் துறை உறுதியாக எதையும் கூறவில்லை. ஆனால், அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகளை ஆயுதங்களுக்காக யுக்ரேன் சார்ந்திருக்கிறது என்பது உறுதி. யுக்ரேன் ஆயுதப் படை அதிகாரிகள் பிரிவுக்கான முன்னாள் செய்தித் தொடர்பாளர் விளாடிஸ்லாவ் செலென்ஸ்னியோவ், படையெடுப்பில் தொடர்ந்து முன்னேறுவதற்கு அமெரிக்கா வழங்கிய HIMAR வகை ராக்கெட்டுகள் மிக முக்கியமானவை என வாய்ஸ் ஆஃப் அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளார். ரஷ்யாவின் குர்ஸ்க் பிராந்தியத்தில் அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான ஒப்புதல் மறைமுகமாக வழங்கப்பட்டுள்ளது. “நாங்கள் நிறுவிய கொள்கை எல்லைகளுக்கு உட்பட்டே ஆயுதப் பயன்பாடு இருந்ததாக நாங்கள் மதிப்பீடு செய்துள்ளோம். அந்தக் கொள்கைகளில் எந்த மாற்றமும் இல்லை. குறிப்பாக, அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான கொள்கையில் மாற்றம் இல்லை,” என அமெரிக்க பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் பேட்ரிக் ரைடர் இந்த வாரம் தெரிவித்துள்ளார். எல்லை கடந்த தாக்குதலில் இருந்து தற்காத்துக்கொள்ள, “ஆரம்பத்தில் இருந்தே” தங்கள் கொள்கைக்கு “ஏற்பவே” அந்நாட்டின் தாக்குதல் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். அமெரிக்க பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் சப்ரினா சிங் கூறுகையில், “ரஷ்யாவில் நீண்ட-தூர தாக்குதல்களை நாங்கள் ஆதரிக்கவில்லை என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். இப்போது நடந்தவை பதிலடித் தாக்குதல்கள். அவற்றில் நான் எந்தக் குறிப்பிட்ட கட்டுப்பாட்டையும் நிர்ணயிக்கப் போவதில்லை” எனத் தெரிவித்தார். தாக்குதலுக்கு யுக்ரேன் அனுமதி வாங்கியதா? யுக்ரேனுக்கு அதிகளவில் அமெரிக்கா ஆயுதங்களை வழங்கி வருவதால், யுக்ரேனை பொறுத்தவரை அமெரிக்காவுடனான உறவு மிகவும் முக்கியம். கடந்த மூன்று ஆண்டுகளில், அமெரிக்கா இலகுரக ஏவுகணைகள், பீரங்கி குண்டுகள் மற்றும் இதர ஆயுதங்கள் அடங்கிய 63வது ஆயுதத் தொகுப்பைக் கடந்த வாரம் வழங்கியது. ஆனால், ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்தில், HIMAR ராக்கெட்டுகள், நீண்ட தொலைவுக்குப் பாயக்கூடிய பேட்ரியாட் ஏவுகணை பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் F-16 போர் விமானங்கள் உள்ளிட்ட மேம்பட்ட ஆயுதங்களை அனுப்ப அமெரிக்க அதிபர் பைடன் மறுத்தார். ஆனால் பின்னர் அவர் தன் எண்ணத்தை மாற்றிக்கொண்டார். ரஷ்ய பிரதேசத்தில் யுக்ரேனிய தாக்குதல்கள் பற்றிய வெள்ளை மாளிகையின் கொள்கைக்கும் இது பொருந்தும். பல மாதங்களாக, யுக்ரேன் மீதான தாக்குதல்களை ஆதரிக்கும் ரஷ்ய ராணுவ தளங்களைத் தாக்குவதற்கு அதிபர் ஸெலென்ஸ்கி அனுமதி கோரினார். மே மாதம் அதிபர் பைடன் இறுதியாக அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி எல்லையைத் தாண்டி ரஷ்யாவிற்குள் தாக்குதல் நடத்த அனுமதி அளித்தார். வெள்ளை மாளிகை யுக்ரேனின் நடவடிக்கைகளை "பதிலடி தாக்குதல்" என்று விவரித்துள்ளது. "எல்லையின் மறுபக்கத்தில் உள்ள ரஷ்ய ராணுவ தளங்கள் யுக்ரேனில் குறிப்பிட்ட இலக்குகளைத் தாக்கப் பயன்படுத்தப்படும்போது, எல்லைக்கு அருகில் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறது" என ஜூன் மாதம் அதிபர் பைடன் கூறினார். "ரஷ்யாவிற்குள் 200 மைல் தொலைவில் தாக்குதல்களை நாங்கள் அனுமதிக்கவில்லை, மாஸ்கோ மற்றும் கிரெம்ளின் மீதான தாக்குதல்களை நாங்கள் அனுமதிக்கவில்லை" என்று அவர் கூறினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நீண்டதூர ஏவுகணைகளைப் பயன்படுத்த ஸெலென்ஸ்கி அனுமதி கேட்டபோது அதை அமெரிக்கா மறுத்துள்ளது. சில வாரங்களுக்குப் பிறகு, ரஷ்ய படைகள் யுக்ரேனை தாக்கத் தயாராகும் எல்லையில் உள்ள எந்த இலக்குகளுக்கும் ரஷ்ய எல்லைக்குள் தாக்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்பட்டது. அதிபர் ஸெலென்ஸ்கி சில ஐரோப்பிய கூட்டாளிகள் மற்றும் வாஷிங்டனில் ஜனநாயகக் கட்சியினர் சிலருடன் சேர்ந்து யுக்ரேனின் கைகளை மேலும் "அவிழ்த்துவிட" அமெரிக்காவை வலியுறுத்தினார். ரஷ்ய எல்லையில், ட்ரோன்கள் அல்லது ஏவுகணை ஏவுதளங்களை அழிப்பதற்காக ஆழமாக தாக்குவதற்கு அமெரிக்காவிடம் இருந்து பெறப்பட்ட ATCAMS அல்லது நீண்ட தூர ஏவுகணைகளைப் பயன்படுத்த ஸெலென்ஸ்கி குறிப்பாக அனுமதி கேட்டார். ஆனால், அதை அமெரிக்கா மறுத்துள்ளது. ரஷ்யாவின் பிராந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டால், "கிடைக்கும் அனைத்து வழிகளையும்" பயன்படுத்துவோம் என்று முன்னர் அச்சுறுத்திய அதிபர் புதினின் எச்சரிக்கைகள்தான் இத்தகைய அனைத்து முடிவுகளுக்கும் காரணம். யுக்ரேன் போரின் மூலம் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக அவர் கருதிய நிலையில், அணு ஆயுதப் பயன்பாடு குறித்து அவர் விடுத்த எச்சரிக்கை இது. யுக்ரேனுக்கு உள்ள கட்டுப்பாடுகள் இறுதியாக, அதிபர் பைடனின் நிலைப்பாட்டைப் பின்வருமாறு சுருக்கமாகக் கூறலாம்: "எல்லை தாண்டிய தாக்குதல்கள் உட்பட, அமெரிக்க ஆயுதங்களைப் பயன்படுத்தி தன்னை எவ்வாறு தற்காத்துக் கொள்வது என்பதை யுக்ரேன் தீர்மானிக்க முடியும். ஆனால் நீண்டதூர ஏவுகணைகளைப் பயன்படுத்தாதது உட்பட மிகத் தெளிவான எல்லைகளுக்குள் அம்முடிவு இருக்க வேண்டும்." ஜூன் மாதம் அவர் பயன்படுத்திய வார்த்தைகள், யுக்ரேனின் கட்டுப்பாடுகள் "எல்லைப் பகுதிகளுக்கு" மட்டுமே என்று பரிந்துரைத்தது. குர்ஸ்கில் நடந்த தாக்குதல் அமெரிக்காவின் இக்கட்டான நிலையை உண்மையிலேயே யாரும் அறியாத திசையில் கொண்டு செல்கிறது. யுக்ரேனிய படையெடுப்பு என்பது 5,000 முதல் 12,000 துருப்புகளை உள்ளடக்கியதாகக் கூறப்படும் ஒரு எல்லை தாண்டிய தரைத் தாக்குதலாகும். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சுமார் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ரஷ்யா கூறியுள்ளது. இந்த வாரத்தின் நடுப்பகுதியில், 70க்கும் மேற்பட்ட கிராமங்கள் மற்றும் நகரங்கள் உட்பட 1,000 சதுர கிலோமீட்டர் ரஷ்ய நிலப்பரப்பை தமது படைகள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துவிட்டதாகவும், நூற்றுக்கணக்கான போர்க் கைதிகளைக் கைப்பற்றியதாகவும் யுக்ரேன் கூறியது. சுமார் 1 லட்சத்து 32 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாக ரஷ்ய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர்க்களத்தின் நிலைமை, போரின் எதிர்காலம் மற்றும் அது புதினின் கணிப்புகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை மேலும் விரிவாகப் பேசுவதற்கு அமெரிக்க அதிகாரிகள் இன்னமும் தயங்குகின்றனர். அதிபர் பைடன் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார் அல்லது ஆயுதங்களைப் பயன்படுத்துவது குறித்த முடிவைத் தாமதப்படுத்துகிறார் என்று ஸெலன்ஸ்கி விரக்தியடைந்தால், அத்தகைய சூழ்நிலையில், அவர் பைடன் மற்றும் புதின் இருவரையும் கட்டாயப்படுத்த முடியும் என்று அவர் காட்ட முயல்கிறார். அவரது இந்த முயற்சி ஒரு துணிச்சலான சூதாட்டம். https://www.bbc.com/tamil/articles/c1epgq4826po
  25. பிரபாகரனை முதலில் நானே படம் பிடித்தேன் : அவர் கடும் சீற்றமடைந்தார் - இந்தியா டுடேயின் சிரேஸ்ட ஊடகவியலாளர் ராஜ் செங்கப்பா Published By: RAJEEBAN 17 AUG, 2024 | 02:48 PM ரஜீபன் விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை முதன்முதலில் படம்பிடித்தது தான் என இந்தியா டுடே குழுமத்தின் ஆசிரியபீட இயக்குநர் ராஜ் செங்கப்பா கொழும்பில் தெரிவித்துள்ளார். இலங்கை இந்திய ஊடக நட்புறவு சங்கம் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இலங்கைக்கு 15 வருடங்களின் பின்னர் மீண்டும் வந்துள்ளேன் . இறுதியாக 2009ம் ஆண்டு இலங்கைக்கு வந்தேன். அந்த ஆண்டு இலங்கையின் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக ஆண்டு. தற்போது தேர்தலை எதிர்நோக்கியுள்ள இலங்கை வரலாற்றின் முக்கியமான கட்டத்தில் உள்ளது. இந்தியாவிற்கு இந்த வருட தேர்தல் எவ்வாறு முக்கியமானதாக அமைந்ததோ அதேபோன்று இலங்கைக்கும் இந்த வருட தேர்தல் தீர்க்கமானதாக அமையலாம். வேலுப்பிள்ளை பிரபாகரனை முதலில் படம்பிடித்தவன் நான், நானே அவரின் முகத்தை உலகிற்கு முதலில் தெரியப்படுத்தினேன் 1982ம் ஆண்டு மெட்ராசில் ஒரு துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் தகவல் வந்தது. அவர்கள் யார் என்பது அவ்வேளை எனக்கு தெரியாது. அந்த துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் கைதுசெய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்தார். அவரை அதுவரை எவரும் பார்த்ததில்லை . அவரது புகைப்படங்கள் எதுவும் அதுவரை இருக்கவில்லை. இலங்கையின் புலனாய்வாளர்களிடம் கூட அவரின் புகைப்படம் இருக்கவில்லை. அவரை கைவிலங்குடன் நான் படமெடுத்தேன். நான் அவரை படமெடுத்தவேளை அவரின் முகத்தில் தெரிந்த சீற்றத்தை போல சீற்றத்தை வேறு எவரின் முகத்திலும் நான் பார்க்கவில்லை. கடும் சீற்றம் கோபம் அவரது முகத்தில் தென்பட்டது. நான் அச்சத்தில் கமராவை கீழே போட்டேன். இலங்கை புலனாய்வு பிரிவினர் அந்த படத்தை பெறுவதற்காக கடும் முயற்சிகளை மேற்கொண்டார்கள். அதன்பின்னர் மண்டபம் அகதிமுகாமிற்கு வரும் அகதிகள் மீனவர்கள் விவகாரம் குறித்து செய்தி சேகரித்திருக்கின்றேன். இம்முறை இந்திய தேர்தலில் தேவையில்லாமல் கச்சதீவு விவகாரம் பயன்படுத்தப்பட்டது. மீண்டும் நான் இலங்கை வந்தவேளை பிரபாகன் ஓயாத அலைகள் என்ற நடவடிக்கையை முன்னெடுத்திருந்தார். இலங்கை அரசாங்கத்தின் ஜெயசிக்குறு நடவடிக்கையை முறியடிப்பதற்கான நடவடிக்கை அது. முல்லைத்தீவில் யுத்தம் இடம்பெற்றது. அவ்வேளை ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்தவேளை சந்திரிகா குமாரதுங்க சமாதானத்திற்கான யுத்தத்தை நடத்துவதாக கூறினார் ஆனால் அவரால் சமாதானத்தை ஏற்படுத்த முடியவில்லை யுத்தத்தில் வெற்றிபெற முடியவில்லை என விமர்சித்தார். அதன்பின்னர் கிளிநொச்சியில் இடம்பெற்ற பிரபாகரனின் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டேன். பிரபாகரன் கொல்லப்பட்டுவிட்டார் என்ற செய்தி வெளியானதும் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டு சரத்பொன்சேகா உட்பட முக்கியமானவர்கள் சந்தித்தேன். பிரபாகரனின் மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதில் மர்மங்கள் சந்தேகங்கள் உள்ளன. https://www.virakesari.lk/article/191299

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.