Everything posted by ஏராளன்
-
“ஜென் Z” போராட்டங்கள்; அரசாங்கத்தை கலைத்தார் மடகஸ்கார் ஜனாதிபதி
Madagascar-ஐ உலுக்கிய Gen Z Protest: போராட்டத்தால் கவிழ்ந்த ஆட்சி; ராணுவம் கையில் ஆட்சி இந்தியப் பெருங்கடல் தீவான மடகாஸ்கரில் Gen Z தலைமுறையினர் நடத்திய போராட்டத்துக்கு பிறகு கேப்சாட் (CAPSAT) என்ற சிறப்பு ராணுவ பிரிவு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த போராட்டம் வெடித்தது எதனால்? மடகாஸ்கரில் நடந்தது என்ன? #Madagascar #GenZ #Protest இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
-
தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்வதற்கு யார் காரணம்?
பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதற்கு முன்பு தங்கத்தின் விலை இவ்வளவு உயர்வைக் கண்டிருக்க வாய்ப்பில்லை. சில மாதங்களுக்கு முன்பு தங்க நகைகளை வாங்கியவர்கள் அல்லது தங்கத்தில் முதலீடு செய்தவர்கள், இன்னும் அதிகமாக வாங்கியிருக்க வேண்டும் என்று இப்போது வருத்தப்படுகிறார்கள். அவ்வாறு முதலீடு செய்யாதவர்கள், தங்கத்தின் விலை இப்படியே உயர்ந்துகொண்டே செல்லுமா என்று கேட்கிறார்கள். உடனடியாக தங்க நகைகளை வாங்குவது அல்லது தங்க ஈடிஎஃப்-களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமா என்றும் அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை, தங்கத்தின் தேவை குறைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதை உணர்த்துகிறது. உண்மையில் தங்கத்திற்கான தேவை அதிகரித்திருக்கிறதா அல்லது வேறு ஏதாவது காரணமா? உலக தங்க கவுன்சிலின் சமீபத்திய தரவுகளின்படி, உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தங்களது தங்க இருப்புகளை அதிகரித்து வருகின்றன, மேலும் உலகெங்கிலும் உள்ள மக்கள் தங்க ஈடிஎஃப்-களில் அதாவது பரிமாற்ற வர்த்தக நிதிகளில் முதலீடு செய்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். செப்டம்பர் மாதத்தில் தங்க ஈடிஎஃப்-களில் பதிவாகியுள்ள முதலீடுகள் ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. ஜூலை-செப்டம்பர் காலாண்டிலும், தங்க ஈடிஎஃப்-களில் அதிக முதலீடுகள் பதிவாகியுள்ளன. தங்கம் குறித்த கதையைத் தொடர்வதற்கு முன், தங்க ஈடிஎஃப் என்றால் என்ன என்பதை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்வோம். தங்க ஈடிஎஃப் என்றால் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவில் பண்டிகை மற்றும் திருமண காலங்களில் தங்கத்திற்கு அதிக தேவை உள்ளது. நீங்கள் தங்க ஈடிஎஃப்-ஐ டிஜிட்டல் தங்கம் என்று அழைக்கலாம். இது 99.5 சதவீத தூய தங்கத்தின் விலையைக் கண்காணிக்கும் ஒரு மியூச்சுவல் ஃபண்ட் போன்றது. ஒவ்வொரு யூனிட்டும் தோராயமாக ஒரு கிராம் தங்கத்தின் மதிப்புடையது. இந்த நிதிகளை பங்குச் சந்தையில் வாங்கவும் விற்கவும் முடியும். தங்க ஈடிஎஃப்-களில் முதலீடு செய்ய, ஒரு டீமேட் கணக்கு வைத்திருப்பது அவசியம், ஏனெனில் வாங்குதல் மற்றும் விற்பது பங்குச் சந்தை மூலம் நடக்கிறது. பங்குச் சந்தையின் வர்த்தக நேரத்தில் எப்போது வேண்டுமானாலும் இந்த யூனிட்களை வாங்கலாம் அல்லது விற்கலாம். தங்கத்தின் விலையை உன்னிப்பாகக் கண்காணிக்க விரும்புவோருக்கும், தங்கள் முதலீடுகளைக் கட்டுப்படுத்த விரும்புவோருக்கும் இந்த முதலீடு பொருத்தமானது. தங்க ஈடிஎஃப்-களில் அதிக முதலீடு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கடந்த ஒரு வருடத்தில் தங்கம் பங்குச் சந்தைகளை விட சிறந்த வருமானத்தைக் கொடுத்துள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும், பொதுவான முதலீட்டாளர்கள் ஈடிஎஃப்-கள் மூலம் தங்கத்தில் முதலீடு செய்கிறார்கள். ஜூலை-செப்டம்பர் காலாண்டைப் பொறுத்தவரை, தங்க ஈடிஎஃப்-களில் சுமார் 26 பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்பட்டுள்ளது. உலக தங்க கவுன்சிலின் கூற்றுப்படி, இந்த காலாண்டில், அமெரிக்காவில் உள்ள மக்கள் தங்க ஈடிஎஃப்-களில் $16 பில்லியன் முதலீடு செய்துள்ளனர், அதே நேரத்தில் ஐரோப்பியர்கள் சுமார் $8 பில்லியன் முதலீடு செய்துள்ளனர். இந்தியாவில் மட்டும், $902 மில்லியன் அல்லது தோராயமாக ரூ.8,000 கோடி மதிப்புள்ள ஈடிஎஃப்-கள் வாங்கப்பட்டன. ஆசியாவைப் பொறுத்தவரை, சீனா $602 மில்லியனுடன் இரண்டாவது இடத்தையும், ஜப்பான் $415 மில்லியன் மதிப்புள்ள ஈடிஎஃப் கொள்முதலுடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. மக்கள் தங்க ஈடிஎஃப்-களில் முதலீடு செய்யும் விதத்தைப் பார்க்கும்போது, தங்கம் தங்களிடம் இருந்தால், 'அது பிரகாசித்துக் கொண்டே இருக்கும், அது தங்களைக் கைவிடாது' என்றும் அவர்கள் நம்புகிறார்கள் என்பது தெளிவாகிறது. ஒட்டுமொத்தமாக, உலகளவில் தங்க ஈடிஎஃப்-களின் மொத்த அளவு $472 பில்லியனை எட்டியுள்ளது, இது முந்தைய காலாண்டை விட 23 சதவீதம் அதிகமாகும். இந்த தங்க ஈடிஎஃப்-களின் அளவு உலகின் பல நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விட அதிகம் என்பதை தனியாக சொல்லத் தேவையில்லை. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, வரலாற்றுத் தரவுகளைப் பார்த்தால், உலகில் பொருளாதார நெருக்கடி ஏற்படும் போதெல்லாம், தங்கத்தின் விலை அதிகரிக்கத் தொடங்குகிறது. தங்கம் ஒரு பாதுகாப்பான முதலீடா? தங்கத்தின் மீதான அதிக முதலீடுகளுக்குப் பின்னால் வேறு பல காரணங்கள் இருப்பதாக நிபுணர்கள் நம்புகின்றனர், உதாரணமாக, டிரம்பின் வரி கொள்கை உலகம் முழுவதும் உள்ள முதலீட்டாளர்களின் கணக்கீடுகளை புரட்டிபோட்டுள்ளது. ரஷ்யாவிற்கும் யுக்ரேனுக்கும் இடையிலான போர் தொடர்கிறது, அதேசமயம் மத்திய கிழக்கிலும் பதற்றம் நிலவுகிறது. டாலரின் மதிப்பு பலவீனமடைந்து வருகிறது, அமெரிக்காவில் சமீபத்திய 'அரசு முடக்கம்' (Shutdown) நடவடிக்கை அதன் நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. அமெரிக்க மத்திய வங்கி, வட்டி விகிதங்களை 25 அடிப்படைப் புள்ளிகள் குறைத்துள்ளது. மேலும் இந்த ஆண்டு இறுதிக்குள் ஒன்று அல்லது இரண்டு கூடுதல் வட்டி விகிதக் குறைப்புகளை நிபுணர்கள் எதிர்பார்க்கின்றனர். இதன் பொருள் பங்குச் சந்தைகள் நிலையற்றதாகவே இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலையில், மக்கள் தங்கத்தை ஒரு பாதுகாப்பான முதலீடாக கருதுகிறார்கள். இருப்புகளை அதிகரித்து வரும் மத்திய வங்கிகள் மற்றொரு காரணம், உலகெங்கிலும் உள்ள மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தை வாங்குகின்றன. உலக தங்க கவுன்சில் அறிக்கையின்படி, ஆகஸ்ட் மாதத்தில் மத்திய வங்கிகள் 15 டன் தங்கத்தை வாங்கியுள்ளன. இதில் ஆச்சரியம் என்னவென்றால், கஜகஸ்தான், பல்கேரியா மற்றும் எல் சால்வடார் போன்ற நாடுகள் தங்கம் வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளன. தங்க இருப்பை அதிகரித்த நாடுகளில் இந்தியா, சீனா மற்றும் கத்தார் ஆகியவையும் அடங்கும். ஆனால், தங்க இருப்பைப் பொறுத்தவரை, உலக தங்க கவுன்சிலின் புள்ளிவிவரங்கள் வேறு ஒரு பார்வையை அளிக்கின்றன. டிசம்பர் 2024 நிலவரப்படி, அமெரிக்கா 8133 டன் தங்க இருப்பைக் கொண்டு முதலிடத்தில் உள்ளது, ஜெர்மனி 3,351 டன்களுடன் இரண்டாவது இடத்திலும், இத்தாலி மூன்றாவது இடத்திலும், பிரான்ஸ் நான்காவது இடத்திலும், சீனா 2280 டன்களுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன. இந்தப் பட்டியலில் இந்தியா 876 டன் தங்க இருப்புடன் ஏழாவது இடத்தில் இருந்தது. தங்கம் எப்போதாவது முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளதா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள மக்கள் தங்கள் வருமானத்தில் சராசரியாக 2 முதல் 3 சதவீதம் வரை தங்கமாக வைத்திருக்கிறார்கள், இந்தியாவில் இந்தப் பங்கு 16 சதவீதம் வரை உள்ளது. தங்கத்தின் மீது தற்போது முதலீட்டாளர்களுக்கு இருக்கும் மோகத்தைக் கருத்தில் கொண்டு, அதிகமாக தங்கம் வாங்குவது நஷ்டத்தை ஏற்படுத்தும் ஒரு விஷயமாக எப்போதாவது இருந்திருக்கிறதா என்ற கேள்வி எழுவது நியாயமானதே. கடந்த 20 ஆண்டுகளில் தங்கத்தின் விலைகளைப் பார்த்தால், நான்கு குறிப்பிட்ட ஆண்டுகளில் மட்டுமே தங்கத்தின் விலைகள் சரிந்து முதலீட்டாளர்கள் சில இழப்புகளைச் சந்தித்துள்ளன. இருப்பினும், இந்த இழப்பு ஒற்றை இலக்க சதவீதத்திற்குள் மட்டுமே இருந்தது. உதாரணமாக, 2013 ஆம் ஆண்டில், தங்கத்தின் விலை 4.50 சதவீதம் குறைந்துள்ளது, அதே நேரத்தில் 2014 இல் 7.9 சதவீதம், 2015 இல் 6.65 சதவீதம் மற்றும் 2021 ஆம் ஆண்டில் தங்கத்தின் விலை 4.21 சதவீதம் குறைந்துள்ளது. தங்கத்தின் விலை விரைவில் குறையுமா? இறுதியில் ஒரே கேள்வி மீண்டும் எழுகிறது, தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்குமா அல்லது அதன் விலைகள் இப்போது குறையத் தொடங்குமா? 2026 ஆம் ஆண்டின் நடுப்பகுதிவாக்கில், தங்கத்தின் விலைகள் மேலும் 6 சதவீதம் அதிகரிக்கும் என்று கோல்ட்மேன் சாக்ஸ் தனது ஆய்வு ஒன்றில் மதிப்பிட்டுள்ளது. இருப்பினும், எந்தவொரு நிபுணரிடமும் இதற்கு சரியான பதில் இல்லை. ஆனால் தங்க ஈடிஎஃப்-கள் மீதான மக்களின் நாட்டம் அதிகரித்துள்ளதைப் பார்த்தால், இந்த ஒளிரும் உலோகத்தின் மீதான அவர்களின் நம்பிக்கை முன்பை விட பன்மடங்கு அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cr43x524nldo
-
குருந்தூர் மலையை மகாவம்சந்துடன் தொடர்புபடுத்தி காட்சிப்படுத்தப்பட்ட போலி வரலாற்றுப் புனைவு; தொல்லியல் திணைக்களத்தை வன்மையாகக் கண்டிக்கும் - ரவிகரன் எம்.பி
Published By: Vishnu 15 Oct, 2025 | 09:08 PM தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான முல்லைத்தீவு - தண்ணிமுறிப்பு, குருந்தூர்மலையை பௌத்தவரலாற்றுடனும், பௌத்தவரலாற்றுநூலான மகாவம்சத்துடனும் தொடர்புபடுத்தி போலியான வரலாற்றுத் தகவல்கள் புனையப்பட்ட காட்சிப்பலகைகள் குருந்தூர்மலைப்பகுதிகளில் தொல்லியல் திணைக்களத்தால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் இதுதொடர்பில் அறிந்த வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குருந்தூர்மலைப்பகுதிக்கு 15.10.2025இன்று நேரடியாகச்சென்று நிலமைகளைப் பார்வையிட்டதுடன், தொல்லியல் திணைக்களத்தின் இத்தகைய கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாட்டிற்குத் தனது வன்மையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளார். மேலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், குருந்தூர்மலையில் சில விளம்பரப் பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவித்தல் கிடைக்கப்பெற்றது அதற்கமையவே இப்பகுதிக்கு வருகைதந்தேன். ஏற்கனவேயும் தமிழர்களின் பூர்வீக குருந்தூர் மலையை பௌத்த இடமென விவரிக்கும் வகையில் காட்சிப்பலகைகள் குருந்தூர்மலை அடிவாரத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. இந்நிலையில் 14.10.2025அன்று புதிதாக "குருண்டி தொல்லியல் தளம்" எனத் தலைப்பிடப்பட்டு போலியான பௌத்த வரலாறுகள் புனையப்பட்ட காட்சிப்பலகைகள் தொல்லியல் திணைக்களத்தினால் குருந்தூரமலையின் அடிவாரம், குருந்தூர்மலையின் மேற்பகுதி மற்றும் குருந்தூர்மலையைச் சுற்றியுள்ள பகுதிகளிலுமாக மொத்தம் நான்கு இடங்களிவ் நிறுவப்பட்டுள்ளன. இவ்வாறான போலியான வரலாற்று புனைவுகளை இங்கு நிறுவுவதை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். குறிப்பாக எமது தமிழ் மக்கள் இந்தக் குருந்தூர்மலையை அண்டியுள்ள தண்ணிமுறிப்பு பகுதியில் பூர்வீகமாக வாழ்ந்துவந்ததுடன், இந்த குருந்தூர்மலையில் அமைந்திருந்த ஆதிசிவன் ஐயானாரை வழிபட்டுவந்துள்ளனர். இதுவே தண்ணிமுறிப்பினதும் குருந்தூர் மலையினதும் வரலாறாக இருக்கின்றது. இந்நிலையில் இந்த தண்ணிமுறிப்புப் பகுதியில் பூர்வீகக் குடிகளாக வாழ்ந்த எமது தமிழ் மக்கள் இன்னும் மீளக்குடியமர்த்தப்படவில்லை. இத்தகையசூழலில் தமிழர்களுடைய பூர்வீக வாழிடமான தண்ணிமுறிப்பையும், குருந்தூர்மலையையும் மகாவம்சத்துடனும், பௌத்த வரலாறுகளுடனும் தொடர்புபடுத்தி தொல்லியல் திணைக்களத்தினால் போலியானதொரு வரலாறு புனையப்பட்டு காட்சிப்பலகைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறாக போலியான வரலாறுகளைப் புனைந்து காட்சிப்பலகைகளை காட்சிப்படுத்துவது தொல்லியல் திணைக்களத்தினுடைய பணியில்லை. தொல்லியல் திணைக்களமென்றால் இந்தநாட்டில் சிங்களமக்கள், தமிழ்மக்களென்ற வேறுபாடின்றி வரலாறுகளை ஆராய்ந்து உண்மையான வரலாறுகளை பதிவுசெய்யவேண்டும். ஆனால் இலங்கையிலுள்ள தொல்லியல் திணைக்களம் பௌத்தர்களுக்கு சார்பாக போலியான வரலாற்றுபுனைகதைகளை உருவாக்குவது மற்றும் காட்சிப்படுத்துகின்ற செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுக்கின்றனர். இவ்வாறாக எம்மீது கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளன. குருந்தூர்மலை மற்றும் அதனை அண்டிய சகல இடங்களும் எமது தமிழ் மக்களுடைய பூர்வீக இடங்களாகும். தற்போதும் தொல்லியல் திணைக்களத்தால் அடாவடியாக ஆக்கிரமிக்கப்பட்ட இடங்கள் தவிர்ந்த ஏனைய இடங்களிலெல்லாம் தமிழ் மக்களே பயிர்ச்செய்கை மேற்கொண்டுவருகின்றனர். குறிப்பாக குருந்தூர்மலையைச்சூழவுள்ள தமிழ் மக்களுக்குச் சொந்தமான 300ஏக்கருக்கும் மேற்பட்ட காணிகள் தொல்லியல் திணைக்களத்தினால் அத்துமீறி ஆக்கிரமிக்கப்பட்டு எல்லைக்கற்கள் இடப்பட்டுள்ளன. இவ்வாறு தொல்லியல் திணைக்களம் பாரிய அளவில் எமது தமிழ் மக்களின் குடியிருப்பு மற்றும் பயிர்ச்செய்கைக்காணிகளையும் அபகரித்து வைத்திருப்பதற்கு எந்த அவசியமும் இல்லை. எனவே அந்தக் காணிகளும் விடுவித்து எமது தமிழ் மக்களிடம் கையளிக்கப்படவேண்டும். எமது தமிழ் மக்கள் தண்ணிமுறிப்பில் மீளக்குடியமர்த்தப்படவேண்டும் என்றே நாம் தொடர்சியாக கோரிவருகின்றோம். எமது பூர்வீக தாயகத்தில் நாம் எமது வரலாறு, பண்பாடு, கலாச்சாரம்,வாழ்வியல் வழிபாட்டு அம்சங்களுடன் நிறைவாக வாழ்வதையே விரும்புகின்றோம். ஆனால் எமது கட்டமைப்புக்களைச் சீர்குலைக்கின்ற வகையிலேயே கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகளை தொல்லியல் திணைக்களம் தொடர்ச்சியாகச் செயற்பட்டுவருகின்றது. தொல்லியல் திணைக்களம் போலியாக வரலாறுகளைப் புனைந்துள்ள மகாவம்சக் காலத்திற்கு முன்பிருந்தே எமது தமிழர்கள் ஆண்ட இடங்களாக இந்த இடங்கள் காணப்படுகின்றன. இந்த நாடு பெரும்பான்மை பௌத்தர்களின் ஆட்சியின் கீழ் இருக்கின்றதென்பதற்காக, பெரும்பான்மை பௌத்தர்களுக்கு ஏற்றவர்களுக்கு போலியான வரலாறுகளைப் புனைந்து தமிழர்களின் பூர்வீக வரலாற்றிடங்களைத் திட்டமிட்டு ஆக்கிரமிப்புச் செய்வதை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. தொல்லியல் திணைக்களத்தின் இத்தகைய செயற்பாட்டை மிகவும் வன்மையாகக் கண்டிக்கின்றேன். மேலும் இந்த குருந்தூர்மலையில் நீதிமன்ற கட்டளைகளையும் மீறி சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைக்கு பொறுப்பாகவுள்ள தேரரரும் இவ்வாறான அபகரிப்பு மற்றும் பௌத்த வரலாற்று புனைவுச் செயற்பாடுகளுக்கு முழு ஆதரவுடன் செயற்படுவதாக அறிகின்றோம். இவ்வாறாக பௌத்த துறவியாக இருப்பதற்கு அடிப்படைத் தகுதியே இல்லாத ஒருவரையே இங்கு பொறுப்பாக நியமிக்கப்பட்டுள்ளது. அவருடைய அத்துமீறல்கள் மற்றும் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புச் செயற்பாடுகளுக்கு எனது வன்மையான கண்டனங்களையும் தெரிவித்துக்கொள்கின்றேன். மேலும் இத்தகைய வரலாற்றுப் புனைவுகளூடாக மேற்கொள்ளப்படும் கட்டமைக்கப்பட்ட தமிழ் இனவழிப்புச் செயற்பாடுகள் தொடர்பிவ் உரியவர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதுடன், இத்தகைய செயற்பாடுகளைத் தடுப்பதற்கும் எம்மாலான சகலநடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்றார். https://www.virakesari.lk/article/227838
-
எதிர்பாராத காட்சிப்படுத்தல்களுடன் குறுங்காணொளிகள்
மிரண்டு ஓடிய வளர்ப்பு யானை கட்டுப்பாடிழந்து வானில் சுழன்று மரத்தில் மோதிய ஹெலிகொப்டர் https://youtube.com/shorts/-rwV6Hvsvyk?si=XXMy87cLZVLoRoxE
-
இன்னா செய்தாரை ஒறுத்தல்!
இன்னா செய்தாரை ஒருத்தல்! ‘நட்புகள், உறவுகள் சில சமயங்களில் எதிராக மாறும் போது நகக்கண்களில் ஊசி குத்தினால் வலிப்பது போல் மனதில் வலிக்கும்’ என அனுபவப்பட்டவர்கள் எழுதியதைப்படித்துள்ள வருணுக்கு நிஜமாகவே அது தனக்கு நடந்த போது மனதால் துவண்டு போய் விட்டான். “நானும் நினைவு தெரிஞ்சதுல இருந்து யாருக்கும் மனசறிஞ்சு துரோகம் பண்ணினதில்லை. யாரையும் பார்த்து பொறாமைப்பட்டதில்லை. நண்பர்களுக்கும், சொந்தக்காரங்களுக்கும் நெறைய உதவி செஞ்சிருக்கேன். ஆனா எனக்கு போய் இப்படிப்பண்ணிட்டாங்களே….? அவங்க தலைல மண்ணை வாரி போட்டவங்க, என்னோட தலைல கல்லைப்போட்டிட்டாங்க….” சொன்னவன் கண்களில் கண்ணீர் பெருகியது. “ஆதி காலத்துல இருந்தே உலகம் இப்படித்தாங்க இருக்கு. நம்ம தாத்தா, பாட்டிக்கும் நம்பிக்கை துரோகம் நடந்திருக்கிறதா கேள்வி பட்டிருக்கறோம். படிச்ச நீங்க இப்படி கவலைப்பட்டா எப்படி?” மனைவி ரம்யா ஆறுதல் சொல்லி அணைத்த போதிலும் மனம் ஏற்காமல் தவித்தான். ‘சிறப்பாக வேலை செய்து பதவி உயர்வு பெற்று தனது முதல் புராஜெக்ட் இப்படி சொதப்பி விட்டதே…. நாளை விடியாமலேயே இருந்து விட்டால் நிம்மதி. தலைமை செயல் அதிகாரி என்ன முடிவு எடுக்கப்போகிறாரோ….?’ கவலையால் உறக்கம் பிடிபடாமல் தவித்தான் வருண். வருண் படிப்பில் கெட்டிக்காரன். எல்.கே.ஜி முதல் கல்லூரி வரை முதல் மாணவன் தான். படிப்பிற்காக எதையும் தியாகம் செய்வான். எதற்காகவும் படிப்பை தியாகம் செய்ய மாட்டான். “என்னடா மச்சா ஒரு படத்துக்கு வர மாட்டேங்கிறே….? காலேஜ்ல ஒரே க்ளாஸ்ல படிக்கிற சேது அவனோட அக்கா கல்யாணத்துக்கு கூப்பிட்டு ஒட்டு மொத்தமா எல்லாருமே நாங்க போயிட்டு வந்தோம். நீ மட்டும் தான் மிஸ்ஸிங்… இப்படி படிச்சு, வேலைக்கு பேயி சம்பாதிச்சு என்னடா பண்ணப்போறே….? ரதி மாதிரி இருக்கிற ராதா உன்னையே சுத்தி, சுத்தி வாரா…. நீ கண்டுக்காம போறே… போடா நீயெல்லாம்…. ஒரு….” “முழுசா சொல்லிட வேண்டியது தானே….? ஏண்டா பாதிய முழுங்கறே….? த பாரு ஒன்னா படிக்கிறவங்கெல்லாம் ஒன்னில்லை…. அத மொதல்ல தெரிஞ்சுக்கோ…. அப்பா, அம்மா தங்களோட ஆசைகளை துறந்து கஷ்டப்பட்டு நம்ம எதுக்கு படிக்க வைக்கிறாங்க…? இப்படி பாஸ் மட்டும் பண்ணிணாப்போதும்னு ஊரச்சுத்தறதுக்கா….? சொந்தக்காரங்க கல்யாணத்துக்கே போக முடியல. இதுல கூட படிக்கிறவனோட அக்கா, அக்காவோட பிரண்ட்ஸ் னு போனா…. போயிட்டே இருக்கலாம். நெறையப்பேர் எழவுக்கும், கல்யாணத்துக்கும் போயே பல பேர் வாழ்க்கைய வீணாக்கிட்டிருக்காங்க. பொன்னான காலத்த வீணாக்கலாமா….? ஏதாவது புதுசா யோசிக்கலாமே….?” வருணின் மனநிலை, அறிவுரை புரியாத நண்பன் நரேன் அங்கிருந்து வெளியேறினான். வருண் தனது முயற்ச்சியால், திறமையால் ஒரு ஐடி கம்பெனியில் சேர்ந்து குறுகிய காலத்தில் பல படி உயர்ந்து நின்றான். கல்லூரியில் ஊரைச்சுற்றும் உடன் படிப்போர் இருந்தது போலவே வேலை செய்யும் இடத்திலேயும் நிறைய பேரைப்பார்த்தான். “என்ன வருண் பெரிய உத்தம புத்திரன்னு நினைப்பா….? பார்டின்னு கூப்பிட்டா வரனம். பொண்ணுகளோட கடலை போடனம். எதுவும் பேசாம உம்மனா மூஞ்சி மாதிரி இருந்தீன்னா ஒரு நாளைக்கு உன்னை விட்டு டீம் மொத்தமா விலகிடும். டீம் லீடர்னா சொன்ன வேலைய செய்யறவங்களை வாரம் ஒரு தடவ பார்ட்டிக்கும், மாசம் ஒரு தடவை டூர் டிரிப்பும் கூட்டிட்டு போகனம். செலவு உன்னோட சம்பளத்துல இருந்து கொடுக்க வேண்டியதில்லை. கம்பெனி பாத்துக்கும்….” மது போதையில் தள்ளாடியபடி உடன் வேலை செய்யும் ரஞ்சன் பேசிய போது பிரசர் கூடியது. விடுமுறையின்றி கொடுத்த வேலையை சரியான நேரத்தில் முடித்துக்கொடுத்ததால் அசோசியேட் பிரின்சிபலாக பதவி உயர்வு பெற்றது பலருக்கும் புருவத்தை உயர்த்தச்செய்தது. வருடத்துக்கு ஐம்பது லட்சங்களுக்கு மேல் சம்பளம். பலரது பொறாமை கண்கள் வருண் மேல் ஈட்டி போல் பாய்ந்தது. வருணுக்கு முன் வேலையில் சேர்ந்தவர்கள் அந்த இடத்தைப்பிடிக்க முயன்று கொண்டிருக்கும் போது எதிர்பாராமல் தலைமை எடுத்த முடிவால் மகாலட்சுமி இரண்டு கண்களையும் ஒரு சேர திறந்து வருணை பார்த்து விட்டதால் ஏற்பட்ட அதிர்ஷ்டம் என பேசிக்கொண்டனர். உயர்பதவிக்கு வந்தாலும் வருணுக்கு கீழ் வேலை செய்தவர்கள் ஒத்துழைக்காததோடு வருணை கம்பெனியை விட்டே வேலையை ராஜினாமா செய்து விட்டு ஓடச்செய்ய வேண்டும் என அடுத்தது பதவிக்காக காத்திருந்த ரஞ்ஜன் தனது சொந்த சம்பளத்தையே வார இறுதி நாளில் பார்ட்டிகளில் வாரி இறைத்ததின் பலனாக வருணை நம்பி எடுத்திருந்த புராஜெக்ட் சரியான நேரத்தில் வெளிநாட்டுக்கம்பெனிக்கு ஒப்பந்தப்படி கொடுக்க முடியாமல் போனது. காலையில் எழுந்ததும் கோவிலுக்கு சென்று விட்டு பதட்டத்துடன் அலுவலகம் சென்றான். தலைமைச்செயல் அதிகாரி கேட்ட கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் கண்களில் கண்ணீரையே பதிலாக வெளிப்படுத்தினான். “உங்களுக்கு இந்தக்கம்பெனில் இனி வேலை இல்லை” அதிர்ந்தவன் ” ஸார்….” என்றான். “ஜெர்மன்ல இருக்கிற கம்பெனிக்கு உங்களை அனுப்ப முடிவு பண்ணிட்டேன். அதோட உங்களோட இடத்துக்கு அடுத்து சீனியாரிட்டி பிரகாரம் வர வேண்டியவர் ரஞ்சன் தான். ஆனா ரகுவை போட்டிருக்கேன். ரஞ்சனோட மொத்த டீமையும் வேலைல இருந்து தூக்கிட்டேன். “ஸார்….” “என்ன வருண். உங்கள தூக்கிட்டதா சொன்னதுக்கு அதிர்ச்சியடைஞ்ச நீங்க உங்களுக்கு எதிரா செயல்பட்ட ரஞ்சன் டீமை தூக்கினதுக்கு அதிர்ச்சியடையறீங்க…?” “எனக்கு வேலை போனா நான் மட்டும் தான் பாதிக்கப்படுவேன். ரஞ்சனோட நண்பர்களை தூக்கினா பல குடும்பம் வீதிக்கு வந்திடுமே...?” “வரட்டும். ஏன் வருது? தப்பு பண்ணியிருக்காங்க. அவங்க பொறாமைப்பட்ட உங்களை வீட்டுக்கு அனுப்ப நெனைச்சு சம்பளம் கொடுக்கிற கம்பெனிக்கு கெட்ட பேரு, நஷ்டம், கால விரையத்தக்கொடுத்திருக்காங்க. அவங்களுக்கு இந்த தண்டனை தான் சரி…” உறுதியாகவும், இறுதியாகவும் சொன்ன தலைமை செயல் அதிகாரியிடம் எதுவும் பேச இயலாமல் வெளிநாடு செல்ல வேண்டியதற்கான வேலைகளை துவங்கினான். மறுநாள் வருண் வீட்டில் ரஞ்சன் உள்பட அவனது டீம் இருபது பேர் வந்திருந்தனர். காலையில் குளித்து விட்டு வருவதற்குள் அனைவருக்கும் காபி கொடுத்துக் கொண்டிருந்தாள் மனைவி ரம்யா. “ஸாரி வருண். எங்க நிலைமை இப்படியாகும்னு தெரியலை. உன்னை தூக்க நெனைச்ச நாங்க கம்பெனியால தூக்கப்பட்டிருக்கோம். உன்ன மாதிரி சம்பளத்துல சேமிப்பெல்லாம் கிடையாது. இந்த மாசம் வீட்டு வாடகை, ஸ்கூல் பீஸ், சாப்பாட்டு செலவு மத்த செலவுன்னு எதுக்குமே வழி இல்லை. இதுல நெறைய பேருக்கு பேரண்ஸோட ஆஸ்பத்திரி, மாத்திரை மருந்து செலவு வேற… எங்களை மொத்தமா மன்னிச்சிடு…” என காலில் விழ, உருகிப்போனான் வருண். “சேரி நானும் எனக்கு கெடைச்சிருக்கிற வெளிநாட்டு வேலைய ரிசைன் பண்ணிடறேன். நாம எல்லாரும் சொந்த ஊருக்கு போயி விவசாயம் பார்க்கலாம். ஓகேவா..?” காதில் கேட்டவர்கள் யாருக்கும் வாயில் பேச்சு வரவில்லை. “இப்படி கம்பெனி வேலைய நம்பி இருக்கிற நீங்க கம்பெனிக்கு நஷ்டம் வர்ற மாதிரி செய்யலாமா? செய்திருக்க கூடாது தானே…? நீங்க எனக்கு எதிரா நடந்திட்டதை கம்பெனி கண்டு பிடிச்சிருக்கு. அதனால எனக்கு வெளி நாட்ல வேலை கெடைச்சிருக்கு. கம்பெனிக்கு உங்களோட கேர்லஸால நஷ்டம் வரக்கிடையாது. திட்டமிட்ட சதியால ஏற்பட்ட நஷ்டத்த ஈடு கட்ட தினமும் ரெண்டு மணி நேரம் ஆறு மாசத்துக்கு கம்பெனிக்கு வேலை பார்க்கனம். ஓகே வா…?” அனைவரும் கோரஸாக ‘ஓகே ஸார்” என கூற, தனது தலைமைச்செயலதிகாரியிடம் பேசி, இங்கே நடந்ததைச்சொல்லி, இழந்த வேலையை அனைவருக்கும் மீட்டுக்கொடுத்ததோடு, தானும் உள் நாட்டிலேயை அலுவலகம் மாறாமல் வேலை செய்து கம்பெனிக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஆறு மாதங்களில் மீட்டுக்கொடுத்த வருணுக்கு கம்பெனியின் தலைமைச்செயல் அதிகாரி பதவி கிடைத்தது. ‘சாதாரணமாக நல்லவர்களாக இருக்கிறவர்களை விட தான் செய்த தவறை உணர்ந்து திருந்தியவர்கள் மிகவும் மேலானவர்கள்’ என தனது டைரியில் எழுதி வைத்து விட்டு, பிறரால் தனக்கு கெடுதல் வந்தாலும் தன்னால் பிறருக்கு கெடுதல் வந்து விடக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் வருண், இன்று தனது மேன்மையான குணத்தால் பல குடும்பம் கெட்டுப்போகாமல் பாது காத்த திருப்தியில் தனது பணியில் மேலும் கூடுதல் கவனம் செலுத்தத்துவங்கினான். https://www.sirukathaigal.com/%e0%ae%87%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%b0%e0%af%88-%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b2%e0%af%8d/
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
29 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல் 15 Oct, 2025 | 05:04 PM நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களையும் விளக்கமறியல் வைக்க யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கைது செய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு புதன்கிழமை (15) ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் 28ம் திகதி நெடுந்தீவு கடலில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட 12 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். அதேபோல் கடந்த 9ம் திகதி நெடுந்தீவு கடற்பரப்பில் சட்ட விரோத மீன்பிடியில் ஈடுப்பட்ட 17 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இவ்வாறு இரு வேறு தினங்களில் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தனர். குறித்த வழக்கினை விசாரித்த ஊர்காவற்றுறை நீதவான் எதிர்வரும் 29ம் திகதி வரை 29 மீனவர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். இதேவேளை வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 36 படகுகளுடன் 279 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227825
-
ஸ்பேஸ்எக்ஸின் 11-ஆவது ரொக்கெட் சோதனை வெற்றி : நிலவுப் பயணத்திற்கான மைல்கல்
15 Oct, 2025 | 09:23 AM ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்டமான ஸ்டார்ஷிப் (Starship) ரொக்கெட், 11-ஆவது முறையாக விண்ணில் ஏவி சோதிக்கப்பட்ட நிலையில், அது தனது பணிகளை வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளது. அமெரிக்காவின் டெக்ஸாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸின் ஸ்டார்பேஸ் (Starbase) ஏவுதளத்திலிருந்து குறித்த ரொக்கெட் ஏவப்பட்டது. விண்ணில் ஏவப்பட்ட ரொக்கெட், பூமியை வெற்றிகரமாகச் சுற்றி வந்தது. அதன் பின்னர், முந்தைய சோதனைகளைப் போலவே, போலியான செயற்கைக்கோள்களை (Dummy Satellites) விண்ணில் செலுத்தியது. இறுதியாக, ரொக்கெட் மீண்டும் பூமிக்குத் திரும்பி, ஏவுதளத்தில் பாதுகாப்பாகத் தரையிறங்கியது. 123 மீற்றர் உயரம் கொண்ட இந்த ஸ்டார்ஷிப் ராக்கெட், உலகின் மிகப் பெரிய மற்றும் சக்திவாய்ந்த ரொக்கெட்டாகக் கருதப்படுகிறது. இந்த ரொக்கெட் சோதனையின் வெற்றி, விண்வெளி ஆய்வுத் துறையில் ஒரு முக்கிய மைல்கல்லாகும். இந்த ரொக்கெட் மூலமாகவே, இன்னும் சில ஆண்டுகளில் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப நாசா (NASA) விண்வெளி ஆய்வு மையம் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/227764
-
இந்தியாவில் பெருமளவு நிதி முதலீட்டில் மெகா தரவு மையம் அமைப்பதாக கூகுள் அறிவிப்பு
ஆந்திராவில் அமைக்கப்படும் கூகுள் 'டேட்டா சென்டர்' - இந்த ஏஐ மையத்தில் என்ன நடக்கும்? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் கரிக்கிபாட்டி உமாகாந்த் பிபிசிக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் விசாகப்பட்டினத்தில் 1 ஜிகாவாட் ஹைப்பர் ஸ்கேல் டேட்டா சென்டர் அமைப்பதற்காக, கூகுளின் துணை நிறுவனமான ரைடன் (Ryden) உடன் ஆந்திரப் பிரதேச அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் (MOU) செய்துகொண்டுள்ளது. அக்டோபர் 14 ஆம் தேதி டெல்லியில், ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், ஆந்திரப் பிரதேச தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் நாரா லோகேஷ், ஆந்திரப் பிரதேச அரசுப் பிரதிநிதிகள், கூகுள் கிளவுட் தலைமைச் செயல் அதிகாரி தாமஸ் குரியன் மற்றும் பிற கூகுள் உயர் மட்டப் பிரதிநிதிகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். இந்தச் சந்தர்ப்பத்தில் பேசிய ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு, ஏஐ (செயற்கை நுண்ணறிவு) அடிப்படையிலான கண்டுபிடிப்புகள் மற்றும் டிஜிட்டல் மாற்றத்தில் நாட்டிலேயே ஆந்திரப் பிரதேசத்தை முன்னணியில் நிறுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கம் என்று தெரிவித்தார். விசாகப்பட்டினத்தில் கூகுளின் முதல் ஏஐ மையம் தொடர்பான திட்டங்களைப் பிரதமர் மோதியுடன் பகிர்ந்து கொண்டதாகவும், இந்த ஏஐ மையம் ஒரு முக்கிய மைல்கல்லாக இருக்கும் என்றும் கூகுள் தலைமைச் செயல் அதிகாரி சுந்தர் பிச்சை கூறினார். இந்த மையத்தில் ஜிகாவாட் அளவிலான கணினித் திறன் (Gigawatt-scale compute capacity) மற்றும் சர்வதேச நீருக்கடி நுழைவாயில் (International Sub-Sea Gateway) இருக்கும் என்று அவர் விளக்கினார். டேட்டா சென்டர் அமைப்பது குறித்துப் பிரதமர் நரேந்திர மோதியும் கருத்துத் தெரிவித்தார். "இந்த ஜிகா சென்டரின் உருவாக்கம் 'வளர்ந்த இந்தியா' இலக்குகளுக்கு ஏற்ப உள்ளது. இந்த ஏஐ மையம் ஒரு வலுவான சக்தியாகச் செயல்படும். இதன் மூலம் செயற்கை நுண்ணறிவு அனைவருக்கும் சென்றடையும். இது டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு மேலும் ஊக்கமளிக்கும். உலகளாவிய தொழில்நுட்பத் தலைவராக இந்தியாவின் நிலையை மேலும் உறுதிப்படுத்தும்" என்று பிரதமர் மோதி தெரிவித்தார். பட மூலாதாரம், X/@ncbn படக்குறிப்பு, ஆந்திரப் பிரதேச முதல்வர் சந்திரபாபு, மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், அஷ்வினி வைஷ்ணவ், ஆந்திரப் பிரதேச ஐடி அமைச்சர் நாரா லோகேஷ் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசுப் பிரதிநிதிகள், கூகுள் கிளவுட் தலைமைச் செயல் அதிகாரி தாமஸ் குரியன் மற்றும் பிற கூகுள் உயர் மட்டப் பிரதிநிதிகள் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் டாலர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் விசாகப்பட்டினத்தில் அடுத்த ஐந்து ஆண்டுகளில் 15 பில்லியன் டாலர்கள் (சுமார் ரூ.1.33 லட்சம் கோடி) முதலீடு செய்ய வாய்ப்புள்ளதாக கூகுள் கிளவுட் தலைமைச் செயல் அதிகாரி தாமஸ் குரியன் கூறினார். விசாகப்பட்டினத்தில் அமையவுள்ள கூகுள் டேட்டா சென்டர், இந்தியாவிற்கு மட்டுமல்லாமல், விசாகப்பட்டினத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கு இணைப்பை வழங்கும் ஒரு தளமாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார். விசாகப்பட்டினத்திலிருந்து 12 நாடுகளுடன் கடலுக்கடியில் கேபிள் முறை (Sub-Sea Cable System) மூலம் இணைக்கப்படும் என்று குரியன் கூறினார். அமெரிக்காவிற்கு வெளியே கூகுள் நிறுவனம் இவ்வளவு பெரிய அளவில் முதலீடு செய்வது இதுவே முதல் முறை என்றும் அவர் தெளிவுபடுத்தினார். ஜெமினி-ஏஐ மற்றும் பிற கூகுள் சேவைகளும் இந்த டேட்டா சென்டர் மூலம் கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். இந்த டேட்டா சென்டர் விசாகப்பட்டினத்தை இந்தியாவின் ஏஐ மாற்றத்தின் மையமாக நிலைநிறுத்தும் என்று ஆந்திர அரசாங்கத்தின் தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்புத் துறைச் செயலாளர் காட்டம்னேனி பாஸ்கர் பிபிசியிடம் தெரிவித்தார். "விசாகப்பட்டினத்தில் அமைக்கப்படும் டேட்டா சென்டர் மூலம் கூகுள் தனது முழுமையான செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைப்பைச் செயல்படுத்தி, இந்தியாவில் ஏஐ அடிப்படையிலான மாற்றத்தை விரைவுபடுத்த உள்ளது. இந்த ஏஐ மையம் , அதிநவீன ஏஐ உள்கட்டமைப்பு, டேட்டா சென்டர் திறன், பெரிய அளவிலான எரிசக்தி வளங்கள், ஃபைபர் ஆப்டிக் நெட்வொர்க்குகள் ஆகியவற்றை ஒரே இடத்தில் ஒருங்கிணைத்து, விசாகப்பட்டினத்தை இந்தியாவின் ஏஐ மாற்றத்தின் மையமாக நிலைநிறுத்தும். இந்தத் திட்டம், கூகுளின் உலகளாவிய நெட்வொர்க்குடன் நீருக்கடி மற்றும் நிலத்தடி கேபிள் இணைப்பு மூலம் இணைக்கப்பட்டு, சுத்தமான எரிசக்தியுடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது," என்று காட்டம்னேனி பாஸ்கர் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் எத்தனை வேலைவாய்ப்புகள் வரும்? "இந்தத் திட்டத்தின் முதல் கட்டப் பணி இரண்டரை ஆண்டுகளுக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 2026 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் கட்டுமானப் பணிகளைத் தொடங்கி, 2028 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் பணிகளை முடித்துச் செயல்பாடுகளைத் தொடங்க ரைடன் நிறுவனம் அரசாங்கத்திற்குத் திட்டங்களை அனுப்பியுள்ளது. இந்த காலகட்டத்தில், 2028-2032 வரை சுமார் 1,88,220 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று தகவல் தொழில்நுட்பத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் கூறினார். "கூகுள் கிளவுட் அடிப்படையிலான திட்டங்களின் மூலம் ஆண்டுக்கு ரூ.9,553 கோடி கூடுதல் வருமானம் ஈட்டப்படும் என்றும், ஒட்டுமொத்தமாக ஐந்து ஆண்டுகளில் சுமார் ரூ.47,720 கோடி உற்பத்தி இருக்கும் என்றும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்," என்று அந்த அரசு அதிகாரி கூறினார். எஸ்ஐபிபி ஒப்புதல் இந்தத் திட்டத்திற்குச் சமீபத்தில் முதலமைச்சர் சந்திரபாபு தலைமையில் நடைபெற்ற மாநில முதலீட்டு மேம்பாட்டு வாரியக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டத்தை விரைவாகத் தொடங்க ஒற்றை சாளர அனுமதி (Single Window Clearance), அதிநவீன உள்கட்டமைப்பு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் பிளக்-அண்ட்-ப்ளே உள்கட்டமைப்பு ஆகியவற்றை ஆந்திரப் பிரதேச பொருளாதார மேம்பாட்டு வாரியம் மற்றும் ஐடி மற்றும் மின்னணுவியல் துறைகள் ஒருங்கிணைப்புடன் வழங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதாக அரசாங்கம் அந்தக் கூட்டத்தில் தெரிவித்தது. பட மூலாதாரம், Getty Images ரைடன் நிறுவனம் எங்கிருந்து வந்தது? சிங்கப்பூரைச் சேர்ந்த ரைடன் ஏபிஏசி இன்வெஸ்ட்மென்ட் ஹோல்டிங் கம்பெனி (Ryden APAC Investment Holding Company) அமெரிக்காவைச் சேர்ந்த கூகுளின் துணை நிறுவனமாகச் செயல்படுகிறது. இந்த நிறுவனம் 'ரைடன் இன்ஃபோடெக் இந்தியா பிரைவேட் லிமிடெட்'டில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்டுள்ளது. ரைடன் இன்ஃபோடெக் இந்தியா பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கென்றே ஏற்படுத்தப்பட்ட சலுகைகளை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவுகளை இரண்டு நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. நில குத்தகை, மின்சாரம், பதிவு கட்டண விலக்கு ஆகியவற்றையும் சேர்த்து மொத்தமாக ரூ.22,000 கோடி மதிப்புள்ள சலுகைகளை ரைடனுக்கு வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதன்படி, அந்த நிறுவனத்திற்கு 480 ஏக்கர் நிலத்தை சலுகை விலையில் ஒதுக்கீடு செய்ய உள்ளது. விசாகப்பட்டினம் மாவட்டத்தின் அடவிவரத்தில் 120 ஏக்கர், தர்லுவாடாவில் 200 ஏக்கர், ராம்பில்லி அச்சுதாபுரம் தொகுப்பில் 160 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நிலங்களின் மதிப்பில் 25% சலுகை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது. அதேபோல், டேட்டா சென்டருக்குத் தேவையான தண்ணீருக்காகச் செலுத்த வேண்டிய கட்டணங்களில் 10 ஆண்டுகளுக்கு 25% சலுகை வழங்கப்படும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. மேலும், டேட்டா சென்டருக்குப் பயன்படுத்தப்படும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டுக்கு ஒரு ரூபாய் வீதம் 15 ஆண்டுகளுக்குச் சலுகை வழங்கப்படும் என்றும் கூறியுள்ளது. படக்குறிப்பு, ருஷிகொண்டா ஐடி பார்க் அசோசியேஷன் துணைத் தலைவர் ஓ. நரேஷ் ஏன் விசாகப்பட்டினத்தில் அமைக்கப்படுகிறது? "கூகுளின் தரவுகள் அனைத்தும் இதுவரை அமெரிக்காவில் தான் சேமிக்கப்பட்டு வந்தன. கூகுளின் சர்வர் அமெரிக்காவில் தான் இருந்தது. எனவே, இந்தியாவிற்குச் சொந்தமான சர்வர் இங்கேயே இருக்க வேண்டும் என்று மத்திய அரசு முன்பு கோரியது. அதன்படி, கூகுள் டேட்டா சென்டரை இந்தியாவில் அமைக்க முடிவு செய்து இப்போது விசாகப்பட்டினத்திற்கு வருகிறது," என்று விசாகப்பட்டினம் ருஷிகொண்டா ஐடி பார்க் அசோசியேஷன் துணைத் தலைவர் ஓ. நரேஷ் பிபிசியிடம் தெரிவித்தார். "இந்த டேட்டா சென்டரை அமைக்க நீருக்கடி கேபிள் தேவை. விசாகப்பட்டினத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா நாடுகளுடன் நீருக்கடி கேபிள் மூலம் கூகுள் ஏஐ டேட்டா சென்டர் இணைக்கப்பட உள்ளது. விசாகப்பட்டினம் ஒரு கடலோர நகரமாக இருப்பதால், நீருக்கடி கேபிள் இணைப்பு நிலையங்களுடன் (Under-Sea Cable Landing Stations) இணைவது மிகவும் எளிதானது. விசாகப்பட்டினத்தில் அமைக்கப்படும் டேட்டா சென்டருக்குச் சிங்கப்பூரிலிருந்து ஒரு நீர்மூழ்கிக் கேபிள் அமைக்கப்பட உள்ளது. இது அதிவேக உலகளாவிய இணைய இணைப்பை வழங்கும், டேட்டா பரிமாற்ற தாமதத்தைக் குறைக்கும். ஏற்கனவே மெட்டா நிறுவனம் தனது 'வாட்டர்வேர்த்' நீருக்கடி கேபிள் திட்டத்தின் கீழ் மும்பை மற்றும் விசாகப்பட்டினம் நகரங்களைத் கேபிள் இணைக்கும் தளங்களாகத் தேர்ந்தெடுத்துள்ளது," என்று நரேஷ் தெரிவித்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, விசாகப்பட்டினம் நீர்ப் பிரச்னை பற்றி.. உண்மையில், டேட்டா சென்டர் இயங்க அதிக அளவு மின்சாரம் மற்றும் நல்ல தண்ணீர் தேவைப்படுகிறது. அதிக அளவில் மின்சாரம் மற்றும் நல்ல தண்ணீரைப் பயன்படுத்துவதன் மூலம், மையத்தில் பயன்படுத்தப்படும் அமைப்புகள் உருவாக்கும் வெப்பத்தால் சுற்றுச்சூழல் பிரச்னை ஏற்படும் வாய்ப்பு உள்ளது என்ற வாதங்கள் உள்ளன. இது குறித்து மென்பொருள் நிபுணர்களின் வாதம் வேறு விதமாக உள்ளது. "இந்த டேட்டா சென்டர் இயங்க 1 ஜிகாவாட் சக்தி தேவை. இருப்பினும், மாநிலத்தில் சூரிய சக்தி மற்றும் காற்றாலை சக்தி அதிகமாகக் கிடைப்பதால், மின்சாரப் பிரச்னை வராது என்று நாங்கள் நினைக்கிறோம். மேலும், கடல் இருப்பதால், உப்புநீரை நீக்கி (Desalination) நல்ல நீரை விநியோகிக்கலாம். அதேபோல், போலாவரம் திட்டம் நிறைவடைந்தால் விசாகப்பட்டினத்திற்கு 5 டிஎம்சி நீர் வரும். அதில் ஒரு பகுதியையும் ஒதுக்கலாம். டேட்டா சென்டர் மலைப் பகுதியில் அமைக்கப்பட்டிருப்பதால், அதிக வெப்பம் உருவாகாமல் போகலாம்," என்று ஆந்திரப் பிரதேச தொழில்நுட்பச் சேவைகளின் முன்னாள் தலைவர் கொய்யா பிரசாத் ரெட்டி பிபிசியிடம் கருத்துத் தெரிவித்தனர். பட மூலாதாரம், https://x.com/naralokesh/status படக்குறிப்பு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் லோகேஷ் விசாகப்பட்டினத்திற்கு மேலும் என்னென்ன வருகின்றன? விசாகப்பட்டினத்தில் சிஃபி (Sify) நிறுவனத்திற்குச் சொந்தமான முதல் ஏஐ எட்ஜ் டேட்டா சென்டர் மற்றும் ஓபன் கேபிள் இணைப்பு நிலையத்திற்கு அக்டோபர் 12 ஆம் தேதி தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர் லோகேஷ் அடிக்கல் நாட்டினார். விசாகப்பட்டினத்தில் 1000 மெகாவாட் டேட்டா சென்டர் அமைக்க டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம் முன்வந்துள்ளது என்று அரசு அறிவித்தது. அதேபோல், 'ஆக்சென்ச்சர் (Accenture), காக்னிசென்ட் (Cognizant) நிறுவனங்கள் விசாகப்பட்டினத்தில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளன' என்று அமைச்சர் லோகேஷ் சமீபத்தில் தெரிவித்தார். புவியியல், பொருளாதாரம், தொழில்நுட்பம், கொள்கை சார்ந்த அம்சங்கள் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பல நிறுவனங்கள் தங்கள் டேட்டா சென்டர் மையமாக விசாகப்பட்டினத்தைத் தேர்ந்தெடுப்பதாக லோகேஷ் தெரிவித்தார். இந்த டேட்டா சென்டர்கள் மருத்துவம், கல்வி, விவசாயம், தொழில்கள் போன்ற துறைகளில் சேவைகளை வழங்கும் என்று அவர் கூறினார். பட மூலாதாரம், Facebook/Gudivada Amarnath படக்குறிப்பு, முன்னாள் அமைச்சர் குடிவாடா அமர்நாத் (கோப்புப் படம்) மாசுபாடு குறித்து அரசு பேசாதது அநியாயம்: குடிவாடா அமர்நாத் "சந்திரபாபு முதல்வராக இருந்தபோது இதுபோன்ற புரிந்துணர்வு ஒப்பந்தங்களைச் செய்வது வழக்கம். இப்படிப்பட்டவைகளை எத்தனை பார்த்திருக்கிறோம். இதுவும் அப்படித்தான். வந்த பின்னர்தான் வந்தது என்று நினைக்க வேண்டும்," என்று ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் தலைவர் மற்றும் முந்தைய அரசாங்கத்தில் ஐடி துறை அமைச்சராகப் பணியாற்றிய குடிவாடா அமர்நாத் பிபிசியிடம் கருத்துத் தெரிவித்தார். இந்த டேட்டா சென்டர்களில் இருந்து வரும் அதிகப்படியான மாசுபாடு குறித்து உலகம் முழுவதும் கவலைகள் எழுப்பப்படும் நிலையில், அது குறித்து அரசு பேசாதது அநியாயம் என்று அமர்நாத் கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c93dpdn04pyo
-
யாழில் வாய்பேச முடியாத இளம் பெண் மீது பலாத்கார முயற்சி
வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவரை நள்ளிரவில் வீடு புகுந்து பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் அல்லைப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வாய்பேச முடியாத பெண் ஒருவர் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் நேற்று (14) நள்ளிரவு 11.30 மணியளவில் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து ஊர்காவற்றுறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கடந்த மாதம் 27 ஆம் திகதி குறித்த பெண் வீட்டில் இருந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர் வீட்டிற்குள் புகுந்து அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முற்பட்டுள்ளார். எனினும் அவரிடம் இருந்து அந்த பெண் தப்பிச் சென்று தமது உறவினர்களுக்கு அறியப்படுத்திய நிலையில், பெண்ணின் உறவினர்களால் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சந்தேகநபர் தலைமறைவாகியிருந்ததுடன் அவரை தேடி பொலிஸார் தீவிர விசாரணையில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையிலேயே சந்தேகநபர் அல்லைப்பிட்டி கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டிருந்தார். இதனை அடுத்து சந்தேகநபர் இன்று ஊர்காவற்றுறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmgrviros0117o29nfawimp1u
-
கோவையில் நாய் கடித்து இருவர் மரணம், எச்சரிக்கும் மருத்துவர்கள் - ரேபிஸ் தடுப்பூசி ஏன் அவசியம்?
செல்லம்னா கடிக்காதா என்ன? வீட்டுல நாய் வளர்க்கிறோம். கொஞ்சறோம். அருமையா கவனிக்கிறோம். இருந்தாலும், சில சமயங்களில், அந்த செல்லம் நம்மைக் கடித்து விட்டால் என்ன ஆகும்? மருத்துவ ஏற்பாடுகள் என்னென்ன? வேறு என்ன செய்ய வேண்டும்? உளவு ரீதியாக செல்லமும், நாமும் எப்படி புதிய அத்தியாயம் தொடங்க வேண்டும்? இவற்றைத் தெரிந்துகொள்ள, இந்த நிகழ்வை கொஞ்சம் விரிவாகப் படிக்கவும். நிறைய புத்திக் கொள்முதல் ஏற்படும். சமீபத்தில்(ஜூன் 5) என்னுடைய மனைவியை எங்கள் செல்லம் (இறந்து போன நண்பருடைய வளர்ப்பு நாய்; அவர் குடும்பத்தினர் வேண்டிக் கொண்டதனால், நாங்கள் கொஞ்ச காலம் பராமரிக்க வேண்டி, எங்களிடம் வந்து ஒரு மாதமே ஆகி இருந்தது) பலமாகக் கடித்து விட்டது. வலது உள்ளங்கையில் ஆழமான ரத்தக் காயம். எதிர்பாராத இந்தக் கடியினால் மனைவி உளவு ரீதியாக மிகவும் பாதிக்கப் பட்டு விட்டார். அந்தச் செல்லமும் கொஞ்சம் குற்ற உணர்வுடன் தென்பட்டது. அத்த விடுங்க! என்ன செய்தோம்னு கவனியுங்க! கடித்தது மதியம் 1 மணி இருக்கும். உடனே, காயத்தைக் கழுவி இரத்தப் பெருக்கைக் குறைக்க பஞ்சு வைத்து நன்றாக சுத்தம் செய்து அதன் மேல் “betadine” களிம்பு தடவி முதலுதவி ஆயிற்று! சிறிய ஒரு கட்டும் கட்டி விட்டோம். எங்கள் டாக்டர் வரும்வரையில். டாக்டர் தீர்மானமாகச் சொல்லிவிட்டார் - வீட்டுப் பிராணியானாலும், தடுப்பூசி போட்டே ஆக வேண்டும் என்று. ‘ரிஸ்க் எடுக்கவேண்டாம் சார்’. அவனுக்கு டிசம்பரில் தடுப்பூசி போட்டிருந்தாலும் மீண்டும் இன்று போட்டு விடுவோம். அனுபவ அட்வைஸ்: அரசு மருத்துவ மனையா? பிரைவேட்டா? நாய்க்கடிக்கு தடுப்பூசி போட சிறந்த இடம் அரசு மருத்துவ மனை அல்லது சுகாதார மையம்தான்! மொத்தம் 4டோஸ் ஊசிகளும் முறையே, (கடித்த நாளில் போட்ட ஊசியைச் சேர்க்காமல்) 1. முதல் டோஸ் – 3ஆம் நாள் 2. இரண்டாம் டோஸ் – 7 ஆம் நாள் 3. மூன்றாம் டோஸ் – 14 ஆம் நாள்; 4. நான்காம் டோஸ் 28ஆம் நாள் என்பதாக அட்டவணை கொடுக்கப் படும். என்ன காரணம்: 1. உடனடி மருத்துவ உதவி 2. நாய்க்கடி மருத்துவத்தில் சிறந்த அனுபவம்- அனைத்து லெவல்களில் உள்ள மருத்துவப் பணியாளர்களுக்கும் எல்லா விஷயங்களும் மனப்பாடம்! 3. பிரைவேட்டில் இது புதிய சவாலாகக் கருதப் படுகிறது- ஆராய்ச்சி தொடங்குகிறது- நேரம் வீணாகிறது- அதிகச் செலவு செய்தும் கூட! 4. மருத்துவம் இலவசம்; மருந்து மாத்திரையும் இலவசம் 5. ஊசி செலுத்தும் அட்டவணை உடனே கொடுக்கப்பட்டு விடும். 6. மிகவும் கண்ணியமாக, கனிவாக அவர்கள் இதைச் செய்கிறார்கள். 7. லஞ்சம் துளிக்கூட இல்லை! 8. OP ticket எடுக்கவேண்டியது ஒன்றுதான் நம் வேலை! கவனத்திற்கு சில பாயின்ட்டுகள்: கடித்த தினம் ARV (நாய்க்கடி தடுப்பூசி) மற்றும் Anti-Tetanus(ஜன்னி வராமல் தடுக்க) ஊசிகள் உண்டு. எவ்வளவு ஆழமாகக் கடித்துள்ளது என்பதைப் பொறுத்து ஊசிகள் செலுத்தப் படும். கீறலாக இருந்தால் ஊசிகள் குறைவு ஆழமில்லாக் காயம் என்றால் 4 டோஸ் ஆழமான காயமானால் IMMUNOGLOBLIN(இம்யூனோகுளோப்ளின்) என்ற ஊசி கட்டாயம். நாய்க் கடிக்கு பேண்டேஜ் கிடையாது. ஏனெனில் காயம் விரைவில் ஆற வேண்டுமே! IMMUNOGLOBLIN(இம்யூனோகுளோப்ளின்) குறித்து சிறு குறிப்பு: 1. ஆழமாகக் கடிபட்டவர் 24 மணி நேரத்திற்குள் இந்த ஊசியைப் போட்டுக் கொள்ள வேண்டும். 2. இது காயத்தைச் சுற்றிலும் உள்ள பகுதியில் ஒரே நாளில், ஒரே சமயத்தில் 5 அல்லது 6 ஊசிகளாகச் செலுத்தப் படும். வலி பிராணனை வாங்கிவிடும். 3. காயமடைந்தவரின் எடை, உயரம் இவற்றைப் பொறுத்து, ஊசி மருந்தின் அளவு தீர்மானிக்கப் படும். 4. இந்த ஊசி மிகவும் விலையுயர்ந்தது.அரசு மருத்துவ மனையில் மட்டும் உடனே கிடைக்கும். 5. காயம் உடனடியாக ஆற வழிசெய்யும் இந்த ஊசி, தடுப்பூசியின் பலனுக்கு முன்னரே வேலை செய்ய ஆரம்பிக்கும். என்ன சொல்ல வரீங்க? : என் மனைவி குணமடைந்து விட்டார். எங்கள் guest செல்லமும் இன்னொரு ஊசியைப் போட்டுக் கொண்டு பழைய நிலைமைக்கு திரும்புகிறது. முக்கியமான விஷயம்: அந்த செல்லம் காதுபட, இதுதான் அது! என்று கூறக் கூடாது. மேலும், பயத்தில் (உள்ளூர இருந்தாலும்) செல்லத்தை நிராகரிக்கக் கூடாது. வழக்கம்போல பராமரித்து வர வேண்டும் என்பது கட்டாயம். திருப்பி அனுப்புவதோ, வேறு ஒருவருக்கு இலவச இணைப்பாகக் கொடுப்பதோ கொடுமையிலும் கொடுமை- செல்லத்திற்குத்தான்! பின் குறிப்பு: குழந்தைப் பருவம் முதல் என் மனைவியின் இல்லத்தில் நாய் வளர்ப்பு உண்டு. எங்கள் இல்லத்தில் கடந்த 50 ஆண்டுகளாக, செல்லங்கள் உண்டு. தற்போது guest செல்லத்தையும் சேர்த்து எங்கள் வீட்டில் 20 ஆக இருந்து வந்த செல்லங்களில் இப்போது(பன்னிரண்டு ஆண்டுகளில்) 8 ஆகக் குறைந்து தற்போது ஆனந்தமாக வலம் வருகின்றன. மனைவிக்கு இதுதான் முதற் கடி! எங்கள் செல்லங்கள் இதுவரை யாரையும் கடித்ததாக சரித்திரம் கிடையாது! சிறப்பு என்னவென்றால், கடித்த அயல்-செல்லத்தின் ஒரிஜினல் உடைமையாளர்களில் ஒரு ஜீவன் கூட இன்றுவரை, கடிபட்ட என் மனைவியை வந்து பார்க்கவோ, கடித்த செல்லத்தின் நிலை குறித்து விசாரிக்கவோ, நேரிலோ, போனிலோ அவுட் ஆஃப் கவரேஜ் ஏரியா! அவர்களுக்கும் இந்த சம்பவத்திற்கும், அவர்களுடைய மாஜி-செல்லத்திற்கும் எந்தத் சம்பந்தமும் கிடையாது போலத்தான் தோன்றுகிறது! வாழ்க்கையில் நாம் படிக்கும் பாடங்கள் தொடர்கதைதான்: வயதோ, இனமோ பாலினமோ இதற்குத் தடையில்லை ! பாடம் 1: என்னதான் கடித்தாலும், கடிபட்டாலும், வாழ்வில், செல்லம் செல்லம்தான்! பாடம் 2: எந்த சந்தர்ப்பத்தில் யாருக்கு எந்த உதவியாக இருந்தாலும், கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே! பழமொழியை நினைவில் கொள்ளவும்! செய்நன்றி கொல்பவர்கள் அதிகரித்துக் கொண்டிருக்கிறார்கள்!- இதுதான் நிதர்சனமான உண்மை! https://www.sirukathaigal.com/%e0%ae%9a%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d%e0%ae%a9%e0%ae%be-%e0%ae%95%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%8e%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9/
-
'QR கோடு ஏடிஎம், மாத வருமானம் ரூ1.5 லட்சம்' - கோவையில் புதிய ஏடிஎம் மோசடியா?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் கட்டுரை தகவல் சேவியர் செல்வகுமார் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கோவையில் ஏடிஎம் உரிமம் வழங்குவதாகக் கூறி ஒரு கும்பல் பல கோடி ரூபாயை வசூலித்து ஏமாற்றிவிட்டதாக புகார் எழுந்துள்ளது. கடந்த ஆண்டிலேயே இதுகுறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை என்று சிலர் குற்றம்சாட்டுகின்றனர். பாதிக்கப்பட்டவர்களில் சிலர், கடுமையாகப் போராடி பணத்தைத் திரும்பப் பெற்றுள்ளனர். இன்னும் பலருக்கு பணம் கிடைக்காத நிலையில், வரும் டிசம்பருக்குள் பிரச்னையை சரி செய்துவிடுவோம் என காவல் நிலையத்தில் நிறுவன இயக்குநர்கள் எழுதிக்கொடுத்திருப்பதாக காவல்துறை தரப்பில் பதில் தரப்படுகிறது. கவர்ச்சி விளம்பரம் உலகத்தின் முதல் யுபிஐ, க்யூ ஆர் கோடு ஏடிஎம் என்று கூறுகிறது அந்த சமூக ஊடக விளம்பரம். சிடிஎம் மற்றும் ஏடிஎம் நிறுவுவதற்கு ரூ.3.54 லட்சம் செலுத்தினால் மாதம் ஒரு லட்ச ரூபாய் மற்றும் பராமரிப்புத் தொகை ரூ.50 ஆயிரம் கிடைக்குமென்றும் கூறுகிறது. கோவை நவஇந்தியாவில் ஒரு முகவரியில் இயங்கிவந்த IZET E-PAYMENT PVT LTD என்ற நிறுவனம்தான் இந்த விளம்பரத்தை வெளியிட்ட நிறுவனம். இந்த நிறுவனத்தின் சார்பில் நிறுவப்படும் பணம் செலுத்தும் CDM இயந்திரம் மற்றும் பணம் எடுக்கும் இயந்திரத்தை (ztm atm) நிறுவ இடம் கொடுப்பவர்களுக்குதான் இந்த வருமானம் வாய்ப்பு என்று அந்த விளம்பரத்தில் கூறப்பட்டிருந்தது. இன்ஸ்டராகிராம், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் வெளியான இந்த விளம்பரத்தைப் பார்த்து, பல மாநிலங்களிலிருந்தும் பலரும் பணம் செலுத்தியுள்ளனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் 'முதலீடு ரூ.3.54 லட்சம் மாத வருமானம் ரூ.1.5 லட்சம்' பணம் செலுத்தியவர்களிடம் ஒன்று அல்லது 2 இயந்திரங்கள், பிரீமியம் ஜோன் எனப்படும் மினி வங்கி போன்றவை அமைத்துத்தருவதாகக் கூறி, ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.9 லட்சம் வரை பணம் வசூலிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஓராண்டுக்கு மேலாகியும் பெரும்பாலானவர்களின் இடங்களில் இந்த இயந்திரங்கள் நிறுவப்படவில்லை. நிறுவிய சில இடங்களிலும் அவை எடுத்துச் செல்லப்பட்டுள்ளன. நிறுவப்பட்ட சில இயந்திரங்களும் முறையாக இயங்கவில்லை. கோவை நவஇந்தியாவில் இயங்கி வந்த அந்த அலுவலகங்கள் மூடப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளன. தொடர்பு எண் என்று அவர்கள் கொடுத்த எந்த எண்ணிலும் யாரையும் தொடர்பு கொள்ளமுடியவில்லை. இந்நிலையில்தான் பணம் செலுத்தி ஏமாந்த பலரும் பீளமேடு காவல் நிலையத்தில் புகார்கள் கொடுத்துள்ளனர். இந்தநிலையில் அக்டோபர் 13 ஆம் தேதியன்று பலரும் ஒன்று கூடி வந்து மாநகர காவல் ஆணையரிடம் மீண்டும் புகார் அளித்துள்ளனர். ஏடிஎம் இயந்திரம் நிறுவுவதற்காக பணம் செலுத்தி ஏமாந்த நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த சிவகிரி, ''ஃபேஸ்புக் விளம்பரத்தைப் பார்த்து கடந்த 2024 மார்ச் மாதத்தில் அந்த நிறுவனத்தை அணுகினேன். இன்றே பணம் செலுத்தினால் மாதம் ரூ.49 ஆயிரம் சிறப்பு ஊக்கத்தொகை கிடைக்குமென்றனர். அதை நம்பி அன்றே ரூ.50 ஆயிரம் செலுத்தி இணைந்தேன். நிறுவன இயக்குநர் ரம்யா நேரில் வந்து இடத்தைப் பார்த்தார். சேலத்தில் ஏடிஎம் இயங்குவதைக் காண்பித்தனர். கடை எடுத்துத் தயார் செய்தபின் பல மாதங்களாக மெஷின் வரவேயில்லை.'' என்றார். ஏழெட்டு மாதங்கள் கழித்து இவருடைய இடத்தில் ஏடிஎம் இயந்திரம் வைத்துள்ளனர். அதிலும் பணம் போட்டு எடுக்கும் சோதனை மட்டுமே நடந்துள்ளது. ஆனால் பணம் எடுக்க முடியவில்லை. அதன்பின் மெஷினை மாற்றுவதாகக் கூறியுள்ளனர். அதை எடுக்க வந்ததை இவர் தடுத்தபோது நிர்வாக இயக்குநர் துரைசாமியே வந்ததாகக் கூறுகிறார் சிவகிரி. அதன்பின் விசாரித்தபோது அலுவலகம் இயங்காததையும், ஏடிஎம் இயந்திரம் எங்குமே இயங்கவில்லை என்பதையும் கண்டறிந்த பின்பே போலீசில் புகார் அளித்ததாகக் கூறுகிறார். இவரைப் போலவே கோவையைச் சேர்ந்த ஜீவானந்தன், இந்த நிறுவனத்தில் ரூ.3 லட்சம் செலுத்தி ஏமாற்றம் அடைந்துள்ளார். இவருக்கு எந்த இயந்திரமும் பெயரளவுக்குக் கூடத்தரப்படவில்லை. இவர்கள் பணம் செலுத்தியபோது, 45 நாட்களில் ஏடிஎம் இயந்திரத்தை கொடுப்பதாகவும், அதில் எந்த வங்கி ஏடிஎம் கார்டுகளை வைத்தும் பணம் எடுக்கலாம், செலுத்தலாம் என்றும், UPI மூலமும் பணத்தை ஆன்லைனில் செலுத்தி விட்டு பணமாக எடுக்கலாம் என்றும் கூறியுள்ளனர். இயந்திரத்தில் பணத்தை தங்கள் நிறுவனமே வந்து லோடு செய்யும் என்றும், மினி வங்கி போன்ற செட்டப் உள்ள பிரீமியம் ஜோன் வைக்க இடம் கொடுப்பவர்களுக்கு கூடுதல் வருவாய் கிடைக்குமென்றும் விளக்கியுள்ளனர். இதை நம்பி தமிழகம் மட்டுமல்லாமல் பல மாநிலங்களில் பல நுாறு பேர் பல கோடி ரூபாய் ஏமாந்திருக்க வாய்ப்புள்ளதாக பிபிசி தமிழிடம் பேசிய பலரும் தெரிவித்தனர். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் வங்கியில் லோன் போட்டு ரூ.9 லட்சம் செலுத்திய இளைஞர்! புகார் அளிக்க வந்தவர்களில் அதிகபட்சமாக பணம் செலுத்தி ஏமாற்றமடைந்தவர், நெய்வேலியைச் சேர்ந்த பிரேம்குமார். இவர் வங்கியில் ரூ.10 லட்சம் பெர்சனல் லோன் பெற்று, அதில் 9 லட்ச ரூபாயை இந்த நிறுவனத்தில் செலுத்தியுள்ளார். கடந்த டிசம்பர் 13 அன்று சமூக ஊடக விளம்பரத்தைப் பார்த்து, டிசம்பர் 19 அன்று ரூ.3 லட்சம் செலுத்திய இவர், தன் பெயரில் ஏடிஎம் உரிமமும், தன் தாயார் பெயரில் பிரீமியம் ஜோன் அமைக்கவும் இந்த நிறுவனத்திடம் ஒப்பந்தம் போட்டுள்ளார். முழுத்தொகையையும் செலுத்திய பின்பே இவை செய்து தரப்படுமென்று கூறியதால் 2025 ஏப்ரலுக்குள் மொத்தம் ரூ.9 லட்சத்தைச் செலுத்தியிருக்கிறார். இதை நம்பி 2 கடைகளை வாடகைக்குப் பிடித்து, அவற்றில் சில உள் அலங்கார வேலைகளையும் இவர் செய்துள்ளார். ஆனால் இவருக்கு இறுதிவரை இயந்திரமே வரவில்லை. இவர் உட்பட பலரும் கோவையில் வந்து பணம் செலுத்தி, ஒப்பந்தம்போட்ட போது, 2 அலுவலகங்களில் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றியதைப் பார்த்துள்ளனர். இவர்களுக்கு ஆர்எஸ்புரம் பகுதியில் இயங்கி வந்த ஒரு ஏடிஎம் இயந்திரமும் நேரடியாகக் காண்பிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஏப்ரலில் முழுப்பணம் செலுத்திய பின்னும் பிரேம்குமாருக்கு ஆகஸ்ட் மாதம் வரையிலும் ஏடிஎம் இயந்திரம் வரவில்லை என்பதால் கோவைக்கு நேரில் வந்து பார்த்தபோது, முன்பு பார்த்த அந்த அலுவலகம் மூடிக்கிடந்துள்ளது. அங்கு விசாரித்தபோது, அலுவலகத்தில் பணியாற்றிய பலருக்கும் பல மாதங்களாக ஊதியம் தரப்படவில்லை என்பதும், அந்த அலுவலகக் கட்டடத்துக்கான வாடகையும் பல மாதங்களாக செலுத்தப்படவில்லை என்பதும் தெரியவந்ததாக பிரேம்குமார், ஜீவானந்தன், அரவிந்த் உள்ளிட்ட பலரும் பிபிசியிடம் தகவல் பகிர்ந்தனர். நிர்வாகிகளை தொடர்புகொண்டு பேசிய இவர்களுக்கு, பக்கத்து கட்டடத்தில் அலுவலகம் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கு பெயரே இல்லாத அலுவலகத்தில் நான்கைந்து பேர் பணியாற்றியுள்ளனர். அவர்களும் சரியான பதில் தராத நிலையில், சில நாட்களில் அந்த அலுவலகமும் மூடப்பட்டுள்ளது. ''பணம் செலுத்தியபின் எந்த பதிலும் இல்லாததால் நான் சண்டை போடும் போதெல்லாம் மீண்டும் மீண்டும் வந்து கட்டடத்தை அளந்து சென்றனர். கடந்த ஆகஸ்ட்டில் போலீஸ் புகார் கொடுப்பதாகச் சொன்னபோது, கான்ஃபரன்ஸ் காலில் துரைசாமி பேசினார். ஆகஸ்ட் 15க்கு மேல் மெஷின் வரும் என்றார். ஒரு வாரத்தில் கடை வாடகை தருவதாகக் கூறினர். எதுவும் வரவில்லை. அப்போது கோவை வந்தபோதுதான் அலுவலகம் மூடப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.'' என்றார் பிரேம்குமார். ''என்னிடம் கஸ்டமர் கேர், சப்போர்ட் டீம், எச்ஆர் என எல்லா எண்களிலும் பேசியதும் துரைசாமியின் மனைவி ரம்யா என்று தெரிந்துகொண்டேன். இதைப் பற்றிக் கேட்டதும் சுத்தமாக தொலைத்தொடர்பு துண்டிக்கப்பட்டது. இறுதியாக செப்டடெம்பர் 28 அன்று மெஷின் வர இன்னும் 6 மாதமாகும் என்று மெயில் வந்தது. நான் ஆன்லைனில் பணத்தைத் திருப்பிச் செலுத்தச் சொல்லி மெயில் போட்டதற்கு எந்த பதிலும் வரவேயில்லை.'' என்றார். கடந்த மாதம் ஆயுதபூஜையன்று, பீளமேடு காவல் நிலையத்தில் இவரும், பாதிக்கப்பட்ட ரகுராம் என்பவரும் இணைந்து புகார் கொடுக்கச் சென்றுள்ளனர். அன்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் துரைசாமி, அவரின் மனைவி ரம்யா இருவரும் வந்துள்ளனர். அப்போது அவரிடம் பெர்சனல் லோன் வாங்கிக் கொடுத்துவிட்டு, இப்போது தற்கொலை செய்யும் நிலையில் இருப்பதாக தான் சொன்னபோது, எல்லோருமே லோன் வாங்கிக் கொடுத்தால் நாங்கள் என்ன செய்வது என்று துரைசாமி கேட்டதாகத் தெரிவித்தார் பிரேம்குமார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப்படம் கவர்ச்சிகரமான வாக்குறுதிகளால் பலரும் நம்பி பணத்தைச் செலுத்தியுள்ளனர் என்று குற்றம்சாட்டுகிறார் வழக்கறிஞர் சினேகா. பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ள இவர், இதற்கு முன்பாக பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்கிறார். சிலர் அளித்த புகாருக்கு சிஎஸ்ஆர் மட்டும் போட்டுவிட்டு, அதையும் மறுநாளே கேன்சல் செய்து விட்டதாகக் கூறுகிறார் சினேகா. பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் சினேகா, ''பீளமேடு காவல்நிலையத்தில் ஏராளமானவர்கள் புகார் கொடுத்துள்ளனர். ஒரு வழக்கும் பதிவு செய்யவில்லை. அதனால்தான் மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வந்தோம்.நாங்கள் சிவில் வழக்கை முன்னெடுக்கிறோம். ஆனால் கிரிமினல் புகாரின் மீது நடவடிக்கை எடுத்தால்தான் வங்கிக் கணக்கு, பாஸ்போர்ட் போன்றவற்றை முடக்கி பணத்தை மீட்க முடியும்.'' என்றார். கட்டிய பணத்தை திரும்பவும் முழுமையாக வாங்கிய கேரள இளைஞர் பணம் கொடுத்து பலரும் ஏமாற்றமடைந்த நிலையில், கேரளா மாநிலம் வாளையாரைச் சேர்ந்த கார்த்தி என்ற இளைஞர், ரூ.5 லட்சத்து 54 ஆயிரம் செலுத்தி, ஏடிஎம் நிறுவுவதற்கு கட்டட வாடகைக்கும் சேர்த்து மொத்தம் ரூ.6 லட்சத்து 40 ஆயிரம் வரை செலவழித்து அதைத் திரும்பப் பெற்றுள்ளார். இவருக்கும் பணம் செலுத்தியபின் ஏடிஎம் இயந்திரம் தராமல், கப்பலில் மெஷின் வரத்தாமதம் என்று இழுத்தடித்துள்ளனர். இவர் வக்கீல் நோட்டீஸ் அனுப்பிய பின், ஏடிஎம் இயந்திரத்தை நிறுவியுள்ளனர். அதில் யார் கை வைத்தாலும் திறக்கும் வகையில் பாதுகாப்பின்றியும் இருந்துள்ளது. அதில் நிறுவனம் செலுத்திய ஓரிரு லட்ச ரூபாய் பணத்தை எடுப்பதிலும் பல பிரச்னை இருந்துள்ளது. முதலில் சமூக ஊடக விளம்பரத்தில் காண்பித்த ஏடிஎம் இயந்திரமும் இதுவும் வேறு வேறாக இருப்பதை வைத்து, வீடியோ எடுத்து தான் நடத்தும் யூடியூப் சேனலில் கார்த்தி வெளியிட்டுள்ளார். அதன்பின் இவரிடம் நிறுவனத்திலிருந்து சமாதானம் பேச அழைத்துள்ளனர். அதன்பின் நடந்ததை பிபிசி தமிழிடம் விளக்கிய கார்த்தி, ''நான் கடுமையாக சண்டையிட்டதும், அந்த அலுவலக ஊழியர் ஒருவரை வைத்து என்னிடம் பேசி கோவைக்கு வரவைத்து, என்னை பீளமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்று, நான்தான் தவறான தகவலைப் பரப்பும் புகாரில் அக்யூஸ்ட் என்று கூறிவிட்டனர். ஆனால் நான் அதற்கு முன்பே, கோவை மாநகர காவல்துறைக்கு ஆன்லைன் புகார் அளித்திருந்தேன்.'' என்றார். ''அதையும் பிற ஆதாரங்களையும் வைத்து மீண்டும் ஒரு புகார் தருவதாகக் கூறினேன். சிவில் வழக்கு, நுகர்வோர் கோர்ட் வழக்கு தொடர்வேன் என்று கூறினேன். அதன்பின் ரூ.5.54 லட்சம் திரும்பத்தருவதாகப் பேசினர். ஆனால் நான் கூடுதலாகச் செலவழித்த தொகையையும் தராவிடில் யூடியூபில் நடந்த அனைத்தையும் ஆதாரத்துடன் வெளியிடுவேன் என்று கூறியதால் ரூ.6 லட்சத்து 30 ஆயிரத்துக்கு செக் கொடுத்தனர். அதையும் இறுதிநாளில் திரும்பத்தரக்கூறினர். நான் கிரிமினல் வழக்குத் தொடுப்பேன் என்று கூறிய பின், அந்த செக்கிற்கான பணத்தைச் செலுத்தினர். என்னைப் போல சிலரும் பணத்தைத் திரும்ப வாங்கியுள்ளனர்.'' என்றார் கார்த்தி. படக்குறிப்பு, நிறுவனத்தின் இயக்குநர்கள் துரைசாமி அங்கமுத்து, தமிழ்மணி ஆகியோரை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் பலனிக்கவில்லை. இந்த நிறுவனத்திடம் பணம் செலுத்தி ஏமாற்றமடைந்துள்ள பலரும் பீளமேடு காவல் நிலையம், கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் ஆகிய இடங்களில் புகார்கள் அளித்தும் இப்போது வரை எந்த வழக்கும் பதிவு செய்யப்படவில்லை. இதுகுறித்து பீளமேடு காவல் ஆய்வாளர் அர்ஜூனிடம் கேட்டபோது, ''அங்கேயும் இங்கேயும் புகார் கொடுத்துள்ளனர். தங்கள் நிறுவனத்தைப் பற்றி ஃபேஸ்புக்கில் தவறாக விளம்பரம் செய்ததால் நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டதாக கோர்ட்டில் அவர்கள் புகார் அளித்து நீதிமன்ற உத்தரவின்படி, அதை விசாரிக்கிறோம். மற்ற புகார்களையும் விசாரிக்கிறோம். எந்த சிஎஸ்ஆரையும் நாங்கள் கேன்சல் செய்யவில்லை. வரும் டிசம்பருக்குள் பிரச்னையை சரி செய்வோம் என்று எழுதிக் கொடுத்துள்ளனர்.'' என்றார். ஏடிஎம் இயந்திரம் தருவதாகக் கூறி, பணம் வாங்கி மோசடி செய்துள்ளதாகக் குற்றம்சாட்டப்படும் நிறுவனத்தின் இயக்குநர்கள் துரைசாமி அங்கமுத்து, ரம்யா துரைசாமி, தமிழ்மணி ஆகியோரை தொடர்பு கொள்ள எடுத்த முயற்சிகள் பலனிக்கவில்லை. இந்த நிறுவன விளம்பரத்தில் விசாரணைக்குரிய எண் என்றும், நிறுவனம் தற்காலிகமாக மூடப்பட்டதாக பழைய அலுவலகத்தின் முன்பு ஒட்டப்பட்ட நோட்டீசிலும் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணையும் தொடர்பு கொண்டபோது அது 'ஸ்விட்ச் ஆஃப்' செய்யப்பட்டிருந்தது. இந்த நிறுவனத்தின் பதிலை மெயில் மூலமும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2emkj31xn0o
-
சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்தின் முதல் கொடி ஜனாதிபதியின் செயலாளருக்கு அணிவிக்கப்பட்டது
15 Oct, 2025 | 04:09 PM சர்வதேச வெள்ளைப் பிரம்பு பாதுகாப்பு தினத்துடன் இணைந்ததாக, கொடி விற்பனை வாரத்தை முன்னிட்டு முதல் கொடி, அடையாள ரீதியாக ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவுக்கு இன்று (15) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் அணிவிக்கப்பட்டது. இலங்கை பார்வையற்றோர் சம்மேளனத்தின் தலைவி நில்மினி சமரவீர, கொடியை ஜனாதிபதியின் செயலாளருக்கு அணிவித்தார். பின்னர், வெள்ளைப் பிரம்பு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி அலுவலகத்திற்கு வருகை தந்த சம்மேளனத்தின் பிரதிநிதிகளுக்கு ஜனாதிபதியின் செயலாளர் வெள்ளைப் பிரம்புகளை வழங்கி வைத்தார். கொடி விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் பார்வையற்றோர் சமூகத்தின் நலனுக்காகப் பயன்படுத்தப்படும் என்று சம்மேளனத்தின் தலைவி தெரிவித்தார். இலங்கை பார்வையற்றோர் சம்மேளனத்தின் உறுப்பினர்களுடன் ஜனாதிபதியின் செயலாளர் கலந்துரையாடியதுடன், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, இலங்கை பார்வையற்றோர் சம்மேளனத்தின் உதவிச் செயலாளர் சமீர புபுது குமார உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/227815
-
“ஜென் Z” போராட்டங்கள்; அரசாங்கத்தை கலைத்தார் மடகஸ்கார் ஜனாதிபதி
ஜென் 'ஸி' போராட்டத்தால் மேலும் ஒரு நாட்டில் அரசு கவிழ்ப்பா? ராணுவம் புதிய அறிவிப்பு பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, மடகாஸ்கரில் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது கட்டுரை தகவல் சாம்மி அவாமி பிபிசி ஆப்பிரிக்கா,அன்டானனாரிவோ டானாய் நெஸ்டா குபெம்பா 15 அக்டோபர் 2025, 03:03 GMT இந்தியப் பெருங்கடல் தீவான மடகாஸ்கரில், ஜென் ஸி இளைஞர்கள் முன்னின்று வாரக்கணக்காக நடத்திய போராட்டங்களுக்குப் பிறகு, ஒரு சிறப்பு ராணுவப் பிரிவு, அதிபர் ஆண்ட்ரி ராஜோலினாவிடமிருந்து (Andry Rajoelina) ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக அறிவித்துள்ளது. செவ்வாய்க்கிழமை அதிபர் மாளிகைக்கு வெளியே நின்றபடி, கேப்சாட் (CAPSAT - பணியாளர் நிர்வாகம் மற்றும் தொழில்நுட்ப மற்றும் நிர்வாக சேவைகள் பிரிவு) தலைவர் கர்னல் மைக்கேல் ரான்ட்ரியனிரினா (Col Michael Randrianirina), ராணுவம் ஒரு அரசை அமைக்கும் என்றும், இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்தல் நடத்தும் என்றும் கூறினார். தேர்தல் ஆணையம் போன்ற முக்கிய ஜனநாயக அமைப்புகளின் செயல்பாட்டையும் அவர் இடைநிறுத்தம் செய்துள்ளார். ஜென் ஸி (Gen Z) போராட்டக்காரர்கள் மாற்றத்தின் ஒரு பகுதியாக இருப்பார்கள் என்றும், "இயக்கம் தெருக்களில் உருவாக்கப்பட்டது, எனவே அவர்களின் கோரிக்கைகளுக்கு நாம் மதிப்பளிக்க வேண்டும்" என்றும் அவர் மேலும் கூறினார். அதிபர் ராஜோலினா பதவியிலிருந்து தூக்கியெறியப்பட்டதாக தெரியவந்ததைத் தொடர்ந்து, தலைநகர் அன்டானனாரிவோவில் கொடிகளை அசைத்து ராணுவத்தினரும், போராட்டக்காரர்களுமாக ஆயிரக்கணக்கானோர் கொண்டாடி வருகின்றனர். கேப்சாட் என்பது மடகாஸ்கரின் மிகவும் சக்திவாய்ந்த ராணுவப் பிரிவாகும். இந்த பிரிவுதான் 2009 இல் ராஜோலினா ஆட்சிக்கு வந்தபோது அவருக்கு ஆதரவளித்தது. ஆனால், சனிக்கிழமை அந்த ராணுப் பிரிவு போராட்டக்காரர்களுடன் இணைந்தது. மடகாஸ்கரின் அரசியலமைப்பு நீதிமன்றம், கர்னல் ரான்ட்ரியனிரினாவை நாட்டின் புதிய தலைவராக அறிவித்துள்ளது. இருப்பினும், அதிபர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஓர் அறிக்கையில், ராஜோலினா இன்னும் பொறுப்பில் இருப்பதாகவும், இது "ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சி" என்றும் கண்டனம் தெரிவிக்கப்பட்டிருந்தது. பட மூலாதாரம், Real TV Madagascar / YouTube படக்குறிப்பு, இரண்டு ஆண்டுகளுக்குள் தேர்தல் நடத்தப்படும் என ராணுவ தலைவர் கர்னல் மைக்கேல் ரான்ட்ரியனிரினா உறுதியளித்துள்ளார் ராஜோலினா எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை, ஆனால் "ராணுவப் பணியாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளால்" தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதாகக் கூறப்படும் ஒரு கொலை முயற்சிக்குப் பிறகு, தான் ஒரு "பாதுகாப்பான இடத்தில்" தஞ்சம் புகுந்துள்ளதாக அவர் கூறியுள்ளார். இத்தகைய எந்தவொரு செயலிலும் தாங்கள் ஈடுபடவில்லை என்று CAPSAT ராணுவப் பிரிவு மறுத்துள்ளது. பிரெஞ்சு ராணுவ விமானம் மூலம் நாட்டிலிருந்து அதிபர் ராஜோலினா பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வந்துள்ளன. மடகாஸ்கர் "இப்போது குழப்பம் நிலவும் ஒரு நாடு" என்று கர்னல் ரான்ட்ரியனிரினா பிபிசியிடம் கூறினார். "அதிபர் இல்லை - அவர் வெளிநாடு சென்றுவிட்டார் என்பதால் குழப்பம் நிலவுகிறது." நாடு முழுவதும் நிலவும் நீண்டகால நீர் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டுகளை எதிர்த்து, இளைஞர்கள் தலைமையிலான இயக்கம் போராட்டங்களைத் தொடங்கிய இரண்டு வாரங்களுக்கு முன்பு இந்தக் குழப்பம் தொடங்கியது. பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மின்வெட்டுகளை கண்டித்து ஜென் ஸியின் போராட்டம் தொடங்கியது இந்த ஆர்ப்பாட்டங்கள் விரைவில் தீவிரமடைந்து, அதிக வேலையின்மை, ஊழல் மற்றும் விலைவாசி நெருக்கடி ஆகியவற்றால் ராஜோலினா அரசாங்கத்தின் மீதான பரவலான அதிருப்தியைப் பிரதிபலித்தது. ஐ.நா.வின் கூற்றுப்படி, போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையிலான மோதல்களில் குறைந்தபட்சம் 22 பேர் உயிரிழந்தனர் மற்றும் 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இருப்பினும், மடகாஸ்கர் அரசாங்கம் இந்தத் தகவலை "வதந்திகள் மற்றும் தவறான தகவல்களின்" அடிப்படையில் இருப்பதாகக் கூறி நிராகரித்திருந்தது. தொழில்முனைவோர் மற்றும் முன்னாள் டிஜே (DJ) ஆன அதிபர் ராஜோலினா, ஒரு காலத்தில் மடகாஸ்கருக்கு ஒரு புதிய தொடக்கமாகக் காணப்பட்டார். அவர் தனது 34 வயதில் அதிபரானார். ஆப்பிரிக்காவின் இளைய தலைவர் என்ற பெருமையைப் பெற்ற அவர், நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தார். பின்னர் 2018 தேர்தலில் மீண்டும் ஆட்சிக்கு வந்தார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அதிபர் ராஜோலினா திங்கட்கிழமை ஃபேஸ்புக் மூலம் உரையாற்றினார் ஊழல் மற்றும் அடியாட்களின் ஆதிக்கம் தொடர்பான குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து அவர் செல்வாக்கை இழந்தார், அவர் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்தார். அதிகாரம் அவரிடமிருந்து விலகிச் சென்ற போதிலும், அவர் தொடர்ந்து தனது செல்வாக்கை செலுத்த முயற்சித்து வருகிறார். அவரை அதிபர் பதவியிலிருந்து நீக்க எதிர்க்கட்சிகள் வாக்களிப்பதற்கு முன்பு தேசிய சபையைக் கலைக்க ராஜோலினா முயன்றார், ஆனால் அது பலனளிக்கவில்லை. செவ்வாயன்று, தேசிய சபை உறுப்பினர்கள் ராஜோலினாவை 130-க்கு ஒன்று என்ற வாக்குகள் வித்தியாசத்தில் பதவி நீக்கம் செய்தனர். அவரது சொந்தக் கட்சியான இர்மாரை (Irmar) சேர்ந்த உறுப்பினர்கள் கூட அவருக்கு எதிராகப் பெருமளவில் வாக்களித்தனர். இந்த வாக்கெடுப்பு "செல்லாது" என்று ராஜோலினா நிராகரித்தார். மடகாஸ்கரின் அரசியல் விவகாரங்களில் ராணுவம் "தலையிடுவதற்கு" எதிராக ஆப்பிரிக்க ஒன்றியம் (AU) எச்சரித்துள்ளதுடன், "அரசியலமைப்புக்கு முரணான அரசாங்க மாற்றங்களுக்கான எந்தவொரு முயற்சியையும்" நிராகரித்துள்ளது. பிரெஞ்சு அதிபர் இமானுவேல் மக்ரோங், இந்தச் சூழ்நிலை "மிகவும் கவலையளிக்கிறது" என்று கூறியுள்ளார். இந்தத் தீவு நாடு சமீபத்திய ஆண்டுகளில் பல அரசியல் எழுச்சிகளைக் கடந்து வந்துள்ளது. உலக வங்கியின் கூற்றுப்படி, மடகாஸ்கர் உலகின் மிக ஏழ்மையான நாடுகளில் ஒன்றாகும். அதன் 30 மில்லியன் மக்களில் 75% பேர் வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்கின்றனர். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy0kljejn7wo
-
பிரதமர் ஹரிணி நாளை இந்தியா விஜயம்
பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய நாளை (16) இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ள உள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. பிரதமர் நாளை முதல் எதிர்வரும் 18 ஆம் திகதி வரை இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார். பிரதமர் தனது விஜயத்தின் போது, இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடனும் உயர் மட்ட பிரதிநிதிகளுடனும் சில கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். ஒக்டோபர் 17 ஆம் திதகி NDTV மற்றும் சிந்தன் ஆராய்ச்சி அறக்கட்டளை ஏற்பாடு செய்யும் NDTV உலக உச்சி மாநாட்டில், "நிச்சயமற்ற காலங்களில் ஏற்படும் மாற்றங்களை வழிநடத்துதல்" என்ற தலைப்பில் பிரதமர் சிறப்புரையாற்றவுள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmgro6se10113o29nihpjx5ac
-
சிறுகதை: வேம்பின் நிழல்போல... - ஶ்ரீரஞ்சனி
பகிர்விற்கு நன்றி அக்கா.
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
நாட்டிற்கு அழைத்துவரப்பட்டார் இஷாரா செவ்வந்தி சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய சந்தேகநபராக கருதப்படும் இஷாரா செவ்வந்தி உட்பட ஐந்து இலங்கையர்களும் சற்றுமுன்னர் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஶ்ரீ லங்கன் விமான சேவைக்கு சொந்தமான UL 182 ரக விமானத்தின் ஊடாக காத்மண்டுவில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று மாலை அழைத்துவரப்பட்டுள்ளனர். அவர்களை நாட்டிற்கு அழைத்து வருவதற்காக முன்னதாக விசேட அதிரடிப் படையின் இரண்டு அதிகாரிகள் நேபாளத்திற்கு புறப்பட்டு சென்றிருந்தனர். ஏற்கனவே நேபாளத்தில் உள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்கள (CID) குழுவிற்கு உதவுவதற்காக அவர்கள் இவ்வாறு சென்றிருந்தனர். நேபாளத்தின் காத்மண்டுவில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு வீட்டில் தங்கியிருந்தபோது, நேபாள பாதுகாப்புப் படையினருடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட கூட்டு நடவடிக்கையில் இஷாரா செவ்வந்தி கைது செய்யப்பட்டார். இஷாரா செவ்வந்தியுடன் மற்றொரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில் தற்போது பொலிஸ் காவலில் உள்ள கெஹெல்பத்தர பத்மேவின் நெருங்கிய கூட்டாளியும் ஒருவரும் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன, அல்லது ‘கணேமுல்ல சஞ்சீவ’ கடந்த பிப்ரவரி 19 அன்று புதுக்கடை நீதிமன்றத்திற்குள் சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில், முக்கிய குற்றவாளியாக கருதப்படும் இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்றிருந்த நிலையில் நீண்ட நாட்களாக தேடப்பட்டிருந்தார். இந்தக் கொலை கெஹெல்பத்தர பத்மேவின் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டது என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். https://adaderanatamil.lk/news/cmgs1jqla010nqplpz3k5npfr
-
இடி, மின்னலின் போது செல்போன் பேசலாமா? - பாதுகாப்பாக இருப்பது எப்படி?
ஒருவரை மின்னல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே அவர் உணர்ந்து தப்பிக்க முடியுமா...? இந்த கேள்விக்கான பதிலை தெரிந்துக்கொள்வதற்கு முன் இடி, மின்னல் பற்றி நாம் முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும். மின்னல் பற்றி தெரிந்துக்கொள்ள நிறைய இருப்பதால் முதலில் இடி எப்படி உருவாகிறது என்பதை சுருக்கமாக பார்த்துவிடுவோம். * மேகம்+ நிலம் ஆகியவற்றின் மூலம் கண நேரத்தில் உருவாகும் மின்னல் சுமார் 30,000 டிகிரி செல்சியஸ், அதாவது சூரியனின் மேற்பரப்பு வெப்பத்தை விட 3 மடங்கு அதிகமான வெப்பத்துடன் ஒளியை உண்டாக்கும். * இந்த அதீத ஆற்றல் கொண்ட மின்னல் கீற்று மேகத்திற்கும் நிலத்திற்கும் இடையே உள்ள காற்றை படுவேகமாக கிழிக்கும். இப்படி கிழித்து பிரிக்கும்போது, காற்று அதே வேகத்துடன் பின்னோக்கி விரிவடையும். * இப்படி வேகமாக விரிவடையும்போது ஏற்படும் பயங்கரமான ஒலி தான் இடி. * சிலர் நினைப்பது போல் மேகங்கள் மோதிக்கொள்ளும் போது தான் இடி உருவாகும் என்பது தவறான கருத்து. மின்னல் காற்றை கிழித்துக் கொண்டு பயணிக்கும்போது காற்று உருவாக்கும் ஒலி தான் இடி. உதாரணமாக... * ஒரு பட்டாசில் தீ வைக்கிறோம். திரி மருந்தை அடைந்ததும் அது ஒலியுடன் வெடிக்கும். சரி தானே...? * ஆனால், ஒரு பலூனை நன்றாக ஊதிவிட்டு பின்னர் அதனை ஒரு ஊசியால் குத்தினால் அது எப்படி பலத்த ஓசையுடன் வெடிக்கிறது...? உள்ளே மருந்து என எதுவும் இல்லையே...? எப்படி ஒலி உண்டானது...? * காரணம், நாம் காற்றை நன்றாக ஊதிவிட்டு பின்னர் அதனை ஊசியால் குத்தும் போது, அடைத்து வைக்கப்பட்ட காற்று அதீத வேகத்தில் வெளிப்பட்டு வெளிக்காற்றுடன் சேர்ந்து விரிவடையும்போது தான் இந்த ஒலி உண்டாகும். * இதே பலூனை நீங்கள் நிலாவில் வெடித்தால், அங்கே ஒலி கேட்காது. ஏனெனில், அங்கு காற்று இல்லை. அது விரிவடைய முடியாது. * இதே போல் தான்... ஒரு அணுகுண்டை வெடிக்க வைக்கும்போது அந்த வெடிப்பில் உண்டாகும் ஆற்றல் காற்றை கிழித்து வேகமாக விரிவடைய செய்யும்போது தான் அந்த 'பூம்ம்ம்' ஒலி நமக்கு கேட்கும். * இதே அணுகுண்டை நிலாவில் வெடித்தால் நமக்கு ஒளி மட்டுமே தெரியும். ஒலி கேட்காது. * ஆக, மின்னல் உருவாகும்போது அது காற்றை கிழித்து பாதையை உருவாக்கும்போது காற்று வேகமாக விரிவாகும் நிலையில் கேட்கும் ஒலி தான் இடி. சரி இப்போது மின்னலை பார்ப்போம். * மழையை உருவாக்கும் குமுலோநிம்பஸ் மேகங்கள் அடர்த்தியாக திரண்ட பின்னர் அதே வேகமாக சுமார் 10-15 கிமீ வரை மலை போல் வளரும். * இந்த மேகத்திற்குள் சிறிய ஐஸ் துகள்கள்(ice crystals) மற்றும் பெரிய ஆலங்கட்டிகள்(hails) பல பில்லியன் எண்ணிக்கையில் காணப்படும். * சிறிய ஐஸ் துகள்கள் positive charge-வுடன் மேகத்தின் மேற்பரப்பிற்கு சென்று விடும். பெரிய ஆலங்கட்டிகள் negative charge-வுடன் மேகத்தின் அடிப்பாகத்தில் தங்கிவிடும். * பின்னர் இவை பலமாக மோதிக்கொள்ளும்போது ஒரு electric current உருவாகும். இந்த கரண்ட் மேகத்திலிருந்து வெளிப்பட்டு சுமார் 50 மீட்டர் வரை மட்டுமே கீழே பூமியை நோக்கி நீளும். * இதற்கு அடுத்த நிலையில், பூமியில் உள்ள மனிதர்கள் உள்பட அனைத்து பொருட்களும் இந்த மழை, புயல் நேரங்களில் ஒருவித மின்னழுத்த பாதையை வெளியிடுவார்கள். இதனை ஆங்கிலத்தில் Streamer எனக் கூறுவார்கள். * மனிதர்கள், மரங்கள், வீடுகள், கம்பங்கள் என செங்குத்தாக நிற்கும் அனைத்தும் இந்த Streamer- களை வெளியிடுவார்கள். இவை மேல்நோக்கி செல்லும். * இப்போது மேலே 50 மீட்டர் தொலைவு வரை வந்த electric current-ஐ இந்த Streamer தொட்டு இணைந்து விட்டால், கீழே எதன் மூலம் இந்த Streamer வெளியானதோ அது மீண்டும் ஒரு பலமான return stroke கொடுக்கும். இதுவும் electric current-ம் சேர்ந்து தான் ஒரு பயங்கரமான மின்னல் வெட்டை உருவாக்கும். * பலரும் நினைப்பது போல் மின்னல் மேகத்திலிருந்து தோன்றி அப்படியே பூமியில் உள்ளவைகளை நேரடியாக தாக்காது. மின்னல் என்பது கிட்டத்தட்ட பூமியில் உருவாகி மேலே செல்கிறது. உதாரணமாக.... * மின்னல், இடி அடிக்கும்போது நாம் வெளியே செல்கிறோம். நாம் எப்போதும் செங்குதாகவே நடப்போம்/நிற்போம். * அதே சமயம், நாம் இருக்கும் இடத்தில் நம்மை விட உயரமான மரம், கம்பம், வீடு என எதுவும் இல்லை. * இப்போது மேலே அந்த electric current 50 மீட்டர் தொலைவில் (மேகத்திலிருந்து) ஒரு பாதையை உருவாக்க Streamer-காக காத்துக் கொண்டு இருக்கும். * கீழே நடக்கும் நம் தலை மற்றும் உடலில் இருந்து Streamer வெளியாகி மேல் நோக்கி செல்லும். * இரண்டும் இணையும்.... return stroke ஏற்படும். இப்போது electric current-க்கு பாதை கிடைத்ததும் அந்த பாதையின் எல்லை வரை அது பயணம் செய்யும். அந்த பாதையின் எல்லை எது..? நம் தலை தான்... * இதில் கவனிக்கப்பட வேண்டிய விஷயம்... பூமியும் Streamer-களை வெளியிடும். * ஆனால், flat-ஆன பூமி வெளியிடும் Streamer மேலே செல்வதற்குள் செங்குத்தாக நிற்கும் நாம் வெளியிடும் Streamer விரைவாக மேலே சென்று இணைந்து விடும். * ஆக, எலக்ட்ரிக் கரண்டின் டார்க்கெட் நம் தலை தான். * சரி, நாம் நிற்கும் இடத்தில் நம்மை விட உயரமான மரம் உள்ளது. யாரை எலக்ட்ரிக் கரண்ட் தேர்வு செய்யும்...? * அஃப்கோர்ஸ், உயரமான மரம் தான் பிரைமரி டார்க்கெட்..ஆனால், நாமும் ஆபத்தில் தான் இருப்போம். * ஏனெனில், மரம் வெளியிடும் Streamer மேலே இணைந்தவுடன் பாதை ஏற்படும் மரத்தின் உச்சி வரை எலக்ட்ரிக் கரண்ட் வந்துவிடும். அருகில் வேறு ஏதாவது உயரமாக இருந்து அது Streamer-ஐ வெளிப்படுத்தும்போது அந்த எலக்ட்ரிக் கரண்ட் அசுர வேகத்தில் அங்கே Jump செய்துவிடும். * இதனால் தான் உயரமான மரத்திற்கு அருக நிற்க கூடாது என்கிறார்கள். * சரி, மேலே எலக்ட்ரிக் கரண்ட் தயார் நிலையில் உள்ளது... கீழே நாம் நடக்கிறோம்... நம்மை விட உயரமானது எதுவும் அருகில் இல்லை. நம்மை இன்னும் சில வினாடிகளில் மின்னல் தாக்கப்போகிறது என்பதை முன்கூட்டியே உணர முடியுமா..?முடியும். * வெளியே நீங்கள் நிற்கும்போது/நடக்கும்போது உங்கள் உடல் Streamer-களை வெளியிடும். அப்போது... * உங்கள் தலைமுடிகள் நேராக நிற்கும்.. * உங்கள் தோலை யாரோ வருடி விடுவதுபோல் தோன்றும்... * உங்களிடம் இரும்பு சாவி, செயின், மோதிரம், டூல்ஸ் என ஏதாவது இருந்தால் அவை vibrate ஆகும். * இந்த மாற்றங்களை நீங்கள் உணர்ந்தால், உடனடியாக ஒரு இருப்பிடத்திற்குள் படுவேகமாக நுழைந்து விட வேண்டும். * இருப்பிடம் இல்லையெனில், அப்படியே கீழே அமர்ந்து இரண்டு கால்களுக்கு இடையில் தலையை கீழ்புறமாக தொங்கவிட்டு இரண்டு காதுகளையும் மூடிக்கொள்ள வேண்டும். (போட்டோ பார்க்கவும்) * அதாவது, ஒரு செங்குத்தான நிலையை மேலே உள்ளவனுக்கு கொடுக்க கூடாது. * ஆக, மின்னல் என்பது தானாக, எதேச்சையாக உங்களை தாக்கவில்லை. அதாவது, அது தாக்கும் இடத்தில் நீங்கள் நிற்கவில்லை. * மாறாக, நீங்கள் அங்கே சென்று அந்த மின்னலை வா வா என அழைத்ததால்(Streamers) அது உங்களை குறிவைத்து தாக்கியது. ஒருவேளை, நீங்கள் அங்கே இல்லாமல் இருந்திருந்தால், அங்கே மின்னல் தாக்குவதும் தவிர்க்கப்பட்டிருக்கும். * ஏனெனில், மேகங்கள் நகரும்போது காத்திருக்கும் அந்த எலக்ட்ரிக் கரண்ட் வேறு ஒரு இடத்தில் உயரமான பொருள் மீது தாக்கியிருக்கும். * ஆக, இடியை மேகங்கள் உருவாக்கவில்லை. அது காற்றிலிருந்து வெளியாகிறது... மின்னல் மேகத்திலிருந்து நேராக நம்மை தாக்கவில்லை. நாம் அதனை கீழே இருந்து வரவழைக்கும் ஒரு 'இணைப்பு புள்ளியாக' இருக்கிறோம் என்பதை நாம் தெரிந்துக் கொண்டோம்! https://www.facebook.com/groups/2491490137808049/permalink/3937668153190233/?rdid=pv2TT2MBU0rdWgaO&share_url=https%3A%2F%2Fwww.facebook.com%2Fshare%2Fp%2F18gSHQJZRQ%2F#
-
38ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா
38ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழா: அதிசிறந்த மெய்வல்லுநர்கள் அயோமல், ஜித்மா; மேல் மாகாணம் ஒட்டுமொத்த சம்பியன் Published By: Vishnu 14 Oct, 2025 | 09:24 PM (நெவில் அன்தனி) தியமக, மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (14) நிறைவுக்கு வந்த 38ஆவது அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவின் கடைசி அம்சமான மெய்வல்லுநர் போட்டிகளில் அயோமல் அக்கலன்க அதிசிறந்த ஆண் மெய்வல்லுநராகவும் ஜித்மா விஜேதுங்க அதிசிறந்த பெண் மெய்வல்லுநராகவும் தெரிவாகினர். ஐந்து தினங்களாக நடைபெற்ற மெய்வல்லுநர் போட்டிகளில் ஆண்கள் பிரிவில் மேல் மாகாண பாடசாலைகள் முதல் மூன்று இடங்ளைப் பெற்றன. நீர்கொழும்பு மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 148 புள்ளிகளைப் பெற்று சம்பியனானதுடன் வென்னப்புவை புனித ஜோசப் வாஸ் கல்லூரி 99 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் திம்பிரிகஸ்கட்டுவ மாரிஸ் ஸ்டெல்லா கல்லூரி 77 புள்ளிகளுடன் 3ஆம் இடத்தையும் பெற்றன. பெண்கள் பிரிவில் மேல் மாகாணத்தின் வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை 213 புள்ளிகளைப் பெற்று சம்பியனானது. மத்திய மாகாணத்தின் வலல்ல ஏ. ரத்நாயக்க மத்திய கல்லூரி 93 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தையும் மேல் மாகாணத்தின் பன்னிப்பிட்டி தர்மபால கல்லூரி 61 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தையும் பெற்றன. அகில இலங்கை விளையாட்டு விழா மெய்வல்லுநர் போட்டிகளில் மொத்தமாக 38 புதிய போட்டி சாதனைகள் நிலைநாட்டப்பட்டன. ஆண்கள் பிரிவில் 21 சாதனைகளும் பெண்கள் பிரிவில் 17 சாதனைகளும் பதிவாகின. 20 வயதுக்குட்பட்ட ஆண்களுக்கான 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியை 49.90 செக்கன்களில் ஓடி முடித்து புதிய போட்டி சாதனை நிலைநாட்டி தங்கப் பதக்கம் சுவீகரித்த அம்பகமுவ மத்திய மகா வித்தியாலய வீரர் அயோமல் அக்கலன்க, 1135 சர்வதேச மெய்வல்லுநர் சங்க புள்ளிகளுடன் அதிசிறந்த ஆண் மெய்வல்லுநரானார். 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 54.09 செக்கன்களில் நிறைவுசெய்து தங்கப் பதக்கம் சுவீகரித்த வத்தளை லைசியம் சர்வதேச பாடசாலை வீராங்கனை ஜித்மா விஜேதுங்க, 1047 சர்வதேச மெய்வல்லுநர் சங்க புள்ளிகளுடன் அதிசிறந்த பெண் மெய்வல்லுநரானார். அகில இலங்கை பாடசாலைகள் விளையாட்டு விழாவில் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளிலும் 1277 புள்ளிகளைப் பெற்ற மேல் மாகாணம் ஒட்டுமொத்த சம்பியனானதுடன் 414 புள்ளிகளைப் பெற்ற மத்திய மாகாணம் ஒட்டுமொத்த நிலையில் இரண்டாம் இடத்தைப் பெற்றது. வட மாகாணம் 138 புள்ளிகளுடன் 6ஆம் இடத்தையும் கிழக்கு மாகாணம் 67 புள்ளிகளுடன் 9ஆம் இடத்தையும் பெற்றன. https://www.virakesari.lk/article/227740
-
உலக உணவு தினம் 2025 : சிறந்த உணவுகளுக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் கைகோர்ப்போம் !
15 Oct, 2025 | 01:25 PM ( இணையத்தள செய்திப் பிரிவு ) உலக உணவு தினம் 2025 ஐ “ சிறந்த உணவுகளுக்கும் சிறந்த எதிர்காலத்திற்கும் – கைக்கோர்ப்போம் ” என்ற மையக்கருத்தில் இலங்கை உலக நாடுகளுடன் இணைந்து கொண்டாடுகிறது. அனைவருக்கும் உணவுப் பாதுகாப்பையும் சிறந்த போசாக்கையும் உறுதிப்படுத்த, நிறுவன வரம்புகள், துறைகள் மற்றும் தலைமுறைகளைக் கடந்து வலுவான ஒத்துழைப்பு அவசியம் என்ற செய்தி தெளிவாகிறது. இந்நிலையில், ஒக்டோபர் 16 ஆம் திகதி உலக உணவு தினத்தை முன்னிட்டு இலங்கை மற்றும் மாலைதீவுக்கான உணவு மற்றும் விவசாய அமைப்பின்(FAO ) பிரதிநிதி விம்லேந்திர ஷரன், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்தின் ( IFAD ) பணிப்பாளர் ஷெரீனா தபஸ்ஸூம் மற்றும் உலக உணவுத் திட்டத்திற்கான இலங்கை பிரதிநிதி மற்றும் பணிப்பாளர் பிலிப் வார்ட் ஆகியோர் இணைந்து அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இலங்கையின் சவால்கள் மற்றும் நிலை: இலங்கை தற்போது பட்டினி மற்றும் போசாக்குக் குறைபாட்டைக் குறைப்பதில் முன்னேற்றம் கண்டிருந்தாலும், பொருளாதார ஸ்திரமின்மை, காலநிலை மாற்றங்கள் மற்றும் சந்தைச் சீர்குலைவுகளின் கூட்டு விளைவுகளால் குடும்பங்களும் சமூகங்களும் தொடர்ச்சியான சவால்களை எதிர்கொள்கின்றன. கிராமப்புற சமூகங்கள், குறிப்பாக சிறு பரிமாண விவசாயிகள், உலகளாவிய மற்றும் உள்நாட்டுச் சந்தைகள், நிதி வசதிகள் மற்றும் காலநிலைக்கு உகந்த தொழில்நுட்பங்களை அணுகுவதில் தடைகளை எதிர்கொள்கின்றனர். நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது என்பது உலகளாவிய கடமைகளை நிறைவேற்றுவதுடன், நாட்டினுள் மக்களின் வாழ்வாதாரம், கண்ணியம் மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதையும் குறிக்கிறது. ஐ.நா.வின் ரோமைத் தளமாகக்கொண்ட நிறுவனங்களின் பங்களிப்பு: ஐக்கிய நாடுகள் சபையின் ரோம் நகரத்தை தளமாகக் கொண்ட உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியம் (IFAD), மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியன இலங்கையின் முயற்சிக்கு தனித்துவமான பலத்தை வழங்குகின்றன: FAO: விவசாயத்தை நவீனமயமாக்குதல் மற்றும் பல்வகைப்படுத்துதல் தொடர்பான கொள்கை வழிகாட்டுதல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவத்தை வழங்குகிறது. IFAD: கிராமப்புற வளர்ச்சியில் முதலீடு செய்து, அனைத்துப் பிரிவினரையும் உள்ளடக்கிய மதிப்புச் சங்கிலிகளை வலுப்படுத்துகிறது, அத்துடன் சிறு பரிமாண விவசாயிகளுக்கு நிதி அணுகலை மேம்படுத்துகிறது. WFP: உடனடி உணவு மற்றும் போசனைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதுடன், மீண்டெழும் திறனையுடைய உணவு கட்டமைப்புகளை உருவாக்க பாடசாலை உணவுத் திட்டங்கள், அவசரகாலத் தயார்நிலை மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களை வலுப்படுத்துகிறது. இந்த முயற்சிகளை ஒன்றிணைத்து, தேசிய முன்னுரிமைகளுடன் இணைத்து, அரச நிறுவனங்களுடனான கூட்டாண்மைகள், தனியார் துறையின் புத்தாக்கம், சிவில் சமூக ஈடுபாடு மற்றும் சமூகப் பங்கேற்பு மூலம் வலுப்படுத்தப்படும்போது மட்டுமே சாதகமான விளைவுகளை எட்ட முடியும். நம்பிக்கைக்குரிய வழிமுறைகள் (இலங்கையில் உள்ள உதாரணங்கள்): இலங்கையில் உணவுப் பாதுகாப்பை நோக்கிய நம்பிக்கைக்குரிய பல வழிமுறைகள் ஏற்கனவே உள்ளன: நவீன தொழில்நுட்பம்: சந்தை அணுகலுக்கான டிஜிட்டல் தளங்கள், காலநிலைக்கு உகந்த திட்டமிடலுக்கான தொலை உணர்வு (ரிமோட் சென்சிங்) தொழில்நுட்பம் போன்றவை விவசாயத்தை மறுவடிவமைக்கின்றன. நீர்வள முகாமைத்துவம் : குளங்களின் அடிப்படையிலான நீர்ப்பாசன முறைகளை மீட்டெடுப்பது, சிறு பரிமாண விவசாயிகளின் உற்பத்தித்திறனை அதிகரிக்க உதவுகிறது. இளைஞர் புத்தாக்கம்: இளைஞர்களால் முன்னெடுக்கப்படும் வேளாண் தொழில்நுட்பத் தீர்வுகள், உற்பத்தியாளர்களை நேரடியாக நுகர்வோருடன் இணைக்கின்றன. போசணை மேம்பாடு: செறிவூட்டப்பட்ட அரிசியை பாடசாலை உணவில் சேர்ப்பது இளம் பாடசாலைப் பிள்ளைகளின் ஊட்டச்சத்து தேவைகளைப் பூர்த்தி செய்கிறது. பால்நிலை சமத்துவம்: பெண் உற்பத்தியாளர் குழுக்கள் வருமான ஆதாரங்களை விரிவுபடுத்துவதிலும், பால்நிலை சமத்துவத்தை ஊக்குவிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. முன்னோக்கிச் செல்லும் வழி - ஐந்து முன்னுரிமைகள்: உணவுப் பாதுகாப்பு மற்றும் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை நோக்கிய இலங்கையின் முன்னேற்றத்தை விரைவுபடுத்த, பின்வரும் ஐந்து முன்னுரிமை விடயங்கள் அவசியமாகும்: டிஜிட்டல் மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றம்: விவசாயத்தில் வேகத்தை அதிகரித்து, சிறு விவசாயிகள் (குறிப்பாக பெண்கள், இளைஞர்கள்) காலநிலைத் தகவல், நிதிச் சேவைகள் மற்றும் சந்தை இணைப்புகளின் நன்மையை அனுபவிப்பதை உறுதி செய்ய வேண்டும். பெண்கள் மற்றும் இளைஞர் தலைமை:மீண்டெழும் தன்மை கொண்ட வேளாண் உணவு கட்டமைப்புகளை உருவாக்குவதில் பெண்கள் மற்றும் இளைய தலைமுறையினரைத் தலைவர்களாகவும் புத்தாக்கவியலாளர்களாகவும் பார்க்க வேண்டும். காலநிலைக்கு இயைபாக்கம்: குளங்களை அடிப்படையாகக் கொண்ட சுற்றுச்சூழல் அமைப்புகளைப் புதுப்பித்தல், காலநிலைக்கு பொருத்தமான நடைமுறைகள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாத்தல் மூலம் மீண்டெழும் திறனை வலுப்படுத்தல். ஒருங்கிணைந்த தேசியத் தளம்: கூட்டாண்மைகள், தரவுகள் மற்றும் பொறுப்புக்கூறலுக்கான ஒருங்கிணைந்த தேசியத் தளத்தை அரசு, தனியார் துறை, கல்வித்துறை மற்றும் சிவில் சமூகம் ஆகியவற்றை ஒன்றிணைத்து உருவாக்க வேண்டும். போசணை உணர்திறன் கொண்ட சமூகப் பாதுகாப்பு: பாதிக்கப்படக்கூடிய சமூகங்களை (குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளை) சென்றடையக்கூடிய சமூகப் பாதுகாப்புச் செயற்திட்டங்களை உறுதி செய்வதன் மூலம் சத்தான உணவுக்கான அணுகலை உறுதி செய்தல். இவ்வருட உலக உணவு தினத்தன்று, அனைவரும் ஒன்றாகக் கைகோர்ப்பதன் மூலம் நிகழ்காலத் தலைமுறைகளுக்கும், எதிர்காலத் தலைமுறையினருக்கும் சிறந்த உணவையும் சிறந்த எதிர்காலத்தையும் இலங்கை உறுதி செய்ய முடியும். https://www.virakesari.lk/article/227787
-
மாரத்தான் போட்டிகளுக்கு தயாராவது எப்படி?
சென்னையில் இளைஞர் மரணம்: மாரத்தானில் யாரெல்லாம் பங்கேற்கக் கூடாது? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 9 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற மாரத்தான் ஒன்றில் கலந்து கொண்ட 24 வயது இளைஞர் போட்டியின்போதே திடீரென சுருண்டு விழுந்து உயிரிழந்தார். கோட்டூர்புரம் அருகே நடைபெற்ற இந்த மாரத்தானில் பங்கேற்ற, தாம்பரத்தைச் சேர்ந்த தனியார் வங்கி ஊழியரான பரமேஷ் திடீரென மயங்கி விழுந்தார். மருத்துவர்கள் மற்றும் விழா ஒருங்கிணைப்பாளர்கள் அவரை ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்ததாக தெரிவித்துவிட்டனர். மருத்துவ பரிசோதனை மற்றும் உடல்தகுதி பரிசோதனை இல்லாமல் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ளக்கூடாது என்கிறார் உடற்பயிற்சி நிபுணரான சுஜாதா. மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ள குறைந்தது 3 மாதம் பயிற்சி தேவை என்கிறார் அப்போலோ மருத்துவமனையில் பணிபுரியும் மூத்த நரம்பியல் மருத்துவரான வி சதீஷ் குமார். மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் தங்களால் முடிந்த தூரம் மட்டுமே செல்ல வேண்டும் என்கிறார் சதிஷ் குமார். "பெரும்பாலான மாரத்தான் போட்டிகளில் கட்டணம் செலுத்தி தான் கலந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. அதனால் கட்டணம் செலுத்தி நுழைவுச்சீட்டு பெறுபவர்கள் எப்படியாவது முடித்து விட வேண்டும் என்று கருதி அவர்கள் உடல் ஒத்துழைக்கும் தூரத்தையும் தாண்டி செல்வது தான் சிக்கல்களுக்கு காரணம்," என்கிறார் சுஜாதா. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் இதய துடிப்பின் முக்கியத்துவம் மாரத்தான், மலையேற்றம் போன்ற தீவிர செயல்பாடுகளில் ஈடுபடுபவர்கள் அதற்கான முன் தயாரிப்பின்றி செல்லக்கூடாது என்றும் கூறுகிறார். "தசை, எலும்பு ஆரோக்கியம் இதில் முக்கியமானது. மாரத்தான் போட்டிக்கு முன்பாக நம்முடைய உடல் தகுதியை தீர்மானிக்க சில வழிகள் உள்ளன. இதயம் மற்றும் சுவாசம் சீராக இருப்பது முதன்மையானது. இதய துடிப்பின் அளவை கணிக்க வேண்டும்." என்கிறார் சுஜாதா. இதில் ரெஸ்ட்டிங் ரேட் (resting rate), ரிக்கவரி ரேட் (recovery rate) என்கிற இரண்டு அம்சங்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டார். ரெஸ்ட்டிங் ரேட் என்பது நாம் தூங்கி எழுந்த உடன் உள்ள நமது இதயத் துடிப்பின் அளவைக் குறிப்பதாகக் கூறும் அவர், அது 60 - 80 என்கிற அளவில் இருக்க வேண்டும். மாரத்தானில் யாரெல்லாம் பங்கேற்கக் கூடாது? "முன் அனுபவம் இல்லாமல் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் படிப்படியாகத் தான் பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும். உடற்பயிற்சிக்கு பின்பு இதய துடிப்பு அதிகரிப்பது இயல்பானது. ரிக்கவரி ரேட் என்பது நாம் உடற்பயிற்சியை நிறுத்திய பிறகு இயல்பு நிலைக்கு திரும்பும் கால அளவை தான் இது குறிக்கிறது. இந்த அளவை நாம் கண்காணிக்க வேண்டும். 1 நிமிடத்திற்குள் நமது இதய துடிப்பு இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும்." என்றார். பல்வேறு அம்சங்கள் நாம் இயல்புநிலைக்கு திரும்புவதை பாதிப்பதாகக் கூறும் அவர், "அழுத்தம், தூக்கமின்மை மற்றும் தீவிர பணிச் சுமை இருப்பவர்கள் மாரத்தானில் பங்கேற்பதை தவிர்க்க வேண்டும். சுவாசம் மற்றும் இதயம் சார்ந்த பிரச்னை இருப்பவர்கள் அதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும்." என்கிறார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் இரு கட்ட பரிசோதனை மாரத்தான் போட்டிகளுக்கு தயாராவதற்கு முன்பாக மருத்துவ பரிசோதனை அவசியம் என்கிறார் சுஜாதா. "நம்முடைய உடலில் அறியப்படாமல் நோய்கள் அல்லது அறிகுறிகள் ஏதேனும் இருக்கின்றவா என்பதை உறுதி செய்து முழுமையான சான்று பெற்றுக் கொள்ள வேண்டும். மலையேற்றம் செல்வதற்கு உள்ளதைப் போலவே மாரத்தான் போட்டிகளுக்கும் உடல்தகுதி சான்று கட்டாயமாக்கப்பட வேண்டும்." என்று தெரிவித்தார். மாரத்தான் ஒடுவதற்கு இதயமும் தசைகளும் பழக வேண்டும் என்கிறார் மருத்துவர் சதீஷ்குமார். "மாரத்தான் போட்டிகளில் அட்ரினலின் அதிக அளவில் வெளியேறும் என்பதால் ஜோன் 2 (Zone 2) என்கிற பயிற்சியை எடுத்துக் கொள்ள வேண்டும். நம்முடைய அதிகபட்ச இதய துடிப்பிலிருந்து ஒரு சீரான அளவில் பயிற்சி மேற்கொள்வதை அது குறிக்கிறது." என்றார். முன் பயிற்சியோ அல்லது அனுபவமோ இல்லாமல் மாரத்தான் சென்றால் இதயத்தின் மீது அழுத்தம் அதிகரிக்கும் என்று குறிப்பிடுகிறார். அதனை மேலும் விவரித்த அவர், "குறைந்தது ஆறு வார காலம் பயிற்சி எடுத்துக் கொண்டால் தான் அதிகரித்த இதய துடிப்புக்கு நம் உடல் தகவமைத்துக் கொள்ளும். இதயத்தின் மீது சுமை அதிகரிக்கும் போது சமநிலை பாதிக்கப்பட்டு ரத்த சுழற்சி நின்றுவிடும். இதனால் ரத்த நாளங்கள் அடைக்கப்பட்டு மாரடைப்பு ஏற்படும் சூழல் உருவாகின்றது." என்றார். மாரத்தான் போட்டி அல்லது பயிற்சியில் அசௌகரியம் ஏற்பட்டால் உடனடியாக நிற்க வேண்டும் என்றும் கூறுகிறார். "நம்மால் தொடர முடியாதபோது நம் உடல் அதனை வெளிப்படுத்தும். அதனை புறந்தள்ளிவிட்டு தொடர்வது தவறு." என்றும் குறிப்பிட்டார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோப்புப் படம் மாரத்தான் போட்டிகளுக்கு தயாராவது எப்படி? முதலில் நாம் ஓட நினைக்கும் தூரத்தை தீர்மானிக்க வேண்டும் எனத் தெரிவிக்கிறார் சதீஷ்குமார். "நீண்ட தூரம் செல்ல வேண்டுமென்றால் குறைந்தது 4 மாதம் பயிற்சி அவசியம். உதாரணத்திற்கு 40 கிமீ மாரத்தான் என்றால் 10 கிலோமீட்டரிலிருந்து தொடங்க வேண்டும், வாரத்திற்கு மூன்று நாட்களாவது ஓடி பயிற்சி எடுக்க வேண்டும். அதனை பகுதியாக மேற்கொள்ளலாம். வாரத்தில் ஒருநாள் இடைவெளி இல்லாமல் நீண்ட தூர பயிற்சியில் ஈடுபட வேண்டும். தூரத்தை ஒவ்வொரு வாரமும் சீராக அதிகரிக்க வேண்டும். அதிகரித்த இதய துடிப்பை சமாளிக்க இதயம் பழக வேண்டும், அதற்கான கால அவகாசத்தை நாம் கொடுக்க வேண்டும்." என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crklddknello
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
இஷாரா செவ்வந்தி; பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் நேபாளம் நோக்கி பயணம்! 15 Oct, 2025 | 01:44 PM இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் நேபாளம் நோக்கி பயணித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கொழும்பு, புதுக்கடை நீதிமன்றத்துக்குள் கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி பாதாள உலக கும்பலைச் சேர்ந்த “கணேமுல்ல சஞ்சீவ” என்பவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவத்துடன் தொடர்புடைய இஷாரா செவ்வந்தி நாட்டை விட்டு தப்பிச் சென்று தலமைறைவாக இருந்த நிலையில் நேபாளத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (14) கைதுசெய்யப்பட்டார். நேபாள அரசாங்கத்தின் உதவியுடன் இலங்கை பொலிஸார் மற்றும் சர்வதேச பொலிஸார் இணைந்து மூன்று நாட்களாக நேபாளத்தில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போது இஷாரா செவ்வந்தி கைதுசெய்யப்பட்டார். இஷாரா செவ்வந்தியுடன் ஜேகே பாய் உட்பட மேலும் நால்வர் கைதுசெய்யப்பட்டிருந்தனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்ட இஷாரா செவ்வந்தியை நாட்டுக்கு அழைத்துவருவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் இருவர் நேபாளம் நோக்கி புதன்கிழமை (15) பயணித்துள்ளனர். இஷாரா செவ்வந்தி இன்று இரவுக்குள் நாட்டுக்கு அழைத்துவரப்படுவார் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. https://www.virakesari.lk/article/227791 பிள்ளை படத்துக்கு போஸ் கொடுப்பதைப் பார்த்து பல விசிறிகள் வரப்போகினம்!!🤪
-
சீனாவுக்கு உளவு பார்த்ததாக இந்திய வம்சாவளி நபர் அமெரிக்காவில் கைது - யார் அவர்?
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஷ்லே டெல்லிஸ் 2001 ஆம் ஆண்டில் அமெரிக்க வெளியுறவுத் துறையில் பணியாற்றத் தொடங்கினார் (கோப்புப் படம்) 4 மணி நேரங்களுக்கு முன்னர் வெர்ஜீனியாவின் வியன்னாவைச் சேர்ந்த 64 வயதான ஆஷ்லே டெல்லிஸ் தேசிய பாதுகாப்பு தொடர்பான தகவல்களை சட்டவிரோதமாகத் சேகரித்ததாக கிரிமினல் குற்றம்சாட்டப்பட்டு வார இறுதியில் கைது செய்யப்பட்டதாக அமெரிக்காவின் வெர்ஜீனியாவின் கிழக்குப் பகுதிக்கான அமெரிக்க அட்டர்னி லிண்ட்சே ஹாலிகன் கூறியுள்ளார். வெர்ஜீனியாவின் கிழக்கு மாவட்ட அமெரிக்க அட்டர்னி அலுவலகம் இதை உறுதிப்படுத்தியுள்ளது. லிண்ட்சே ஹாலிகன், "நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து வகையான அச்சுறுத்தல்களிலிருந்தும் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். இந்த வழக்கில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் நமது குடிமக்களின் பாதுகாப்புக்கு (Safety and Security) ஒரு தீவிரமான அச்சுறுத்தலாகத் தெரிகிறது," என்று கூறினார். "இந்த வழக்கில் உண்மைகளும் சட்டமும் தெளிவாக உள்ளன. நாங்கள் நீதியை நிலைநாட்டுவதற்காக அவற்றைத் தொடர்ந்து பின்பற்றுவோம்." இந்த வழக்கில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஆஷ்லே டெல்லிஸ் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாகப் பத்து ஆண்டுகள் சிறைத்தண்டனையும் மற்றும் இரண்டரை லட்சம் டாலர் வரை அபராதமும் விதிக்கப்படலாம். ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, டெல்லிஸின் வீட்டிலிருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ரகசிய ஆவணங்கள் மீட்கப்பட்டதாக நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 64 வயதான டெல்லிஸ், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் பதவிக்காலத்தில் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் (National Security Council) உறுப்பினராக இருந்துள்ளார். பட மூலாதாரம், Getty Images ராய்ட்டர்ஸ் செய்திப்படி, எஃப்.பி.ஐ உறுதிமொழிப் பத்திரத்தில் (Affidavit), அவர் வெளியுறவுத் துறையின் ஊதியம் பெறாத ஆலோசகராகவும், பாதுகாப்பு அமைச்சகத்தின் (பென்டகன்) ஒப்பந்ததாரராகவும் பட்டியலிடப்பட்டுள்ளார். ஆவணங்களின்படி, அவர் சனிக்கிழமை கைது செய்யப்பட்டு, திங்கட்கிழமை அவர் மீது முறையாகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. டெல்லிஸ் வாஷிங்டனைச் சேர்ந்த சிந்தனைக் குழுவான (Think Tank) கார்னெகி எண்டோமென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸ் (Carnegie Endowment for International Peace) என்ற அமைப்பில் ஒரு மூத்த ஆய்வாளராகவும் உள்ளார். டெல்லிஸ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டதாக வெளியுறவுத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள ஒரு வழக்கு குறித்துத் தாங்கள் கருத்து தெரிவிக்கப் போவதில்லை என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறியதாக ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. வீட்டில் ரகசிய ஆவணங்கள் கண்டுபிடிப்பு எஃப்.பி.ஐ உறுதிமொழிப் பத்திரத்தின்படி, செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில், டெல்லிஸ் பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத் துறை கட்டடங்களுக்குச் சென்று, ரகசிய ஆவணங்களை அச்சிட்டுப் பைகளில் எடுத்துச் செல்வது கண்டறியப்பட்டது. சனிக்கிழமை, வெர்ஜீனியாவில் உள்ள அவரது வீடு சோதனையிடப்பட்ட போது, "டாப் சீக்ரெட்" மற்றும் "சீக்ரெட்" என்று முத்திரையிடப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் கொண்ட ஆவணங்கள் மீட்கப்பட்டன. நீதிமன்றத்தில் எஃப்.பி.ஐ சமர்ப்பித்த ஆவணங்களின்படி, "டெல்லிஸ் கடந்த சில ஆண்டுகளில் பலமுறை சீன அரசு அதிகாரிகளைச் சந்தித்துள்ளார். இவற்றில் ஒரு சந்திப்பு செப்டம்பர் 15-ஆம் தேதி வெர்ஜீனியாவின் ஃபேர்ஃபாக்ஸில் உள்ள ஒரு உணவகத்தில் நடைபெற்றது. அங்கு அவர் ஒரு உறையை கொண்டு சென்றார், ஆனால் திரும்பி வரும்போது அவரிடம் அது இல்லை." வெளியுறவுத் துறை மற்றும் பாதுகாப்புத் துறையில் தனது பங்கு காரணமாக டெல்லிஸ் "டாப் சீக்ரெட்" பாதுகாப்பு அனுமதியைப் பெற்றிருந்தார். இதன் கீழ் அவருக்கு முக்கியமான தகவல்களை அணுகும் உரிமை இருந்தது என்று உறுதிமொழிப் பத்திரம் கூறியது. சீன அதிகாரிகளுடனான சந்திப்பு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமெரிக்கப் பாதுகாப்புத் துறை இந்த விவகாரத்தில் தற்போது எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை (சித்தரிப்புப் படம்) ஃபாக்ஸ் நியூஸ் அறிக்கையின்படி, ஒரு அமெரிக்க வெளியுறவுத் துறை ஊழியர் 2023 ஆம் ஆண்டு முதல் பாதுகாப்பான இடங்களிலிருந்து ரகசிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும், சீன அதிகாரிகளைச் சந்தித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித் துறையின்படி, டெல்லிஸ் வெளியுறவுத் துறையின் ஊதியம் பெறாத மூத்த ஆலோசகராகவும், மற்றும் பாதுகாப்புத் துறையின் ஆஃபீஸ் ஆஃப் நெட் அசெஸ்மென்ட்டின் (இப்போது "டிபார்ட்மென்ட் ஆஃப் வார்") ஒப்பந்தத்தாரராகவும் இருந்தார். அவர் இந்தியா மற்றும் தெற்காசிய விவகாரங்களில் நிபுணராகக் கருதப்படுகிறார். நீதிமன்ற ஆவணங்களில், டெல்லிஸ் 2001 ஆம் ஆண்டில் வெளியுறவுத் துறையில் பணியாற்றத் தொடங்கினார் என்று கூறப்பட்டுள்ளது. அவர் சட்டவிரோதமாக நாட்டின் பாதுகாப்பு தொடர்பான தகவல்களை வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரது வீட்டில் "டாப் சீக்ரெட்" மற்றும் "சீக்ரெட்" என்று முத்திரையிடப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்கங்கள் மீட்கப்பட்டன. செப்டம்பர் 12 அன்று, அவர் அரசாங்க அலுவலகத்தில் தனது சகா ஒருவர் மூலம் பல ரகசிய ஆவணங்களை அச்சிட்டு பெற்றார். செப்டம்பர் 25 அன்று, அவர் அமெரிக்க விமானப்படையின் திறன் தொடர்பான ஆவணங்களை அச்சிட்டார். குற்றச்சாட்டுகளின்படி, அவர் கடந்த பல ஆண்டுகளாகச் சீன அரசாங்க அதிகாரிகளைப் பலமுறை சந்தித்துள்ளார். செப்டம்பர் 2022 இல் ஒரு உணவகத்தில் சீன அதிகாரிகளைச் சந்தித்தார். அதே சமயம், ஏப்ரல் 2023 இல் நடந்த ஒரு கூட்டத்தில், இரான்-சீனா உறவுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் குறித்து அவர் விவாதித்தது தெரியவந்தது. ஃபாக்ஸ் நியூஸ் செய்தியின்படி, செப்டம்பர் 2 ஆம் தேதி நடந்த மற்றொரு கூட்டத்தில், அவர் சீன அதிகாரிகளிடமிருந்து ஒரு பரிசுப் பையைப் பெற்றார். ஆஷ்லே டெல்லிஸ் யார்? ஆஷ்லே ஜே. டெல்லிஸ் சிகாகோ பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பிஎச்.டி. பட்டம் பெற்றவர். அவர் அதே பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. பட்டமும் பெற்றுள்ளார். ஆஷ்லே ஜே. டெல்லிஸ் பி.ஏ. மற்றும் எம்.ஏ. (பொருளாதாரம்) பட்டங்களை பம்பாய் பல்கலைக்கழகத்தில் படித்தார். டெல்லிஸ், கார்னெகி எண்டோமென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸில் உத்தி ரீதியான விவகாரங்களுக்கான டாடா சேரில் (Tata Chair for Strategic Affairs) மூத்த ஆய்வாளராக உள்ளார். அவர் குறிப்பாக ஆசியா மற்றும் இந்தியத் துணைக்கண்டம் தொடர்பான சர்வதேச பாதுகாப்பு மற்றும் அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை மற்றும் பாதுகாப்புக் கொள்கை ஆகியவற்றில் நிபுணர். அவர் அமெரிக்க வெளியுறவுத் துறையின் அரசியல் விவகாரங்களுக்கான துணைச் செயலாளரின் (Under Secretary for Political Affairs) மூத்த ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அங்கு அவர் இந்தியாவுடனான சிவிலியன் அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முக்கியப் பங்காற்றினார். அவர் தேசிய பாதுகாப்பு கவுன்சிலில் (NSC) அதிபர் ஜார்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் சிறப்பு உதவியாளராகவும் பணியாற்றினார். அரசு சேவைக்கு முன், அவர் RAND கார்பரேஷனில் மூத்த கொள்கை ஆய்வாளராகவும், RAND பட்டதாரி பள்ளியில் கொள்கை பகுப்பாய்வுப் பேராசிரியராகவும் இருந்தார். அவர் ஆசிய ஆராய்ச்சி தேசிய பணியகத்தில் (National Bureau of Asian Research) ஆலோசகராகவும், அதன் மூலோபாய ஆசியா திட்டத்தின் ஆராய்ச்சி இயக்குநராகவும் உள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c74j9d2m3nno
-
இஷாரா செவ்வந்தி மற்றும் நால்வர் அதிரடி கைது.
இ.கா.மாஅதிபர், கனம் ஐயா கனடாவிலும் ஒருவர் பதுங்கி இருப்பதாக தெரிகிறது! தயவு செய்து ஆளணியை வீணடிக்க வேண்டாம், அவர் தானாகவே பிணை எடுக்க கொழும்பு வருவார் என தெரிய வருகிறது! இப்படிக்கு தங்கை இ.செ எதிர்ப்புச் சங்க தலைவர்(பெண் பிள்ளைகள் வீட்டிற்குள் ரகளை செய்யலாம் ஆண்கள் தாங்குவினம் நாடு தாங்குமா?!)
-
ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்(50 ஓவர்) போட்டித் தொடர் - 2025
பங்களாதேஷிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 3 பந்துகள் மீதமிருக்க பரபரப்பான வெற்றியை ஈட்டியது Published By: Vishnu 14 Oct, 2025 | 01:46 AM (நெவில் அன்தனி) விசாகப்பட்டினம் மாவட்ட கிரிக்கெட் சங்க விளையாட்டரங்கில் திங்கட்கிழமை (13) நடைபெற்ற ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்களாதேஷிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 3 பந்துகள் மீதம் இருக்க 3 விக்கெட்களால் பரபரப்பான வெற்றியை ஈட்டியது. மாரிஸ்ஆன் கெப், க்ளோ ட்ரையொன், நாடின் டி க்ளார்க் ஆகியோரின் சிறந்த துடுப்பாட்டங்கள் தென் ஆபிரிக்காவை வெற்றிபெறச் செய்தன. பங்களாதேஷினால் நிர்ணயிக்கப்பட்ட 233 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தென் ஆபிரிக்கா 49.3 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 235 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. முதல் 23 ஓவர்களில் பங்களாதேஷ் பந்துவீச்சாளர்களிடம் சிரமத்தை எதிர்கொண்ட தென் ஆபிரிக்கா 5 விக்கெட்ளை இழந்து 78 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. இதன் காரணமாக பங்களாதேஷ் தலைகீழ் வெற்றியை ஈட்டலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துடுப்பாட்டத்தில் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்திய மாரிஸ்ஆன் கெப் (56 ஓட்டங்கள்), க்ளோ ட்ரையொன் (62), நாடின் டி க்ளார்க் (37 ஆ.இ.) ஆகியோர் தென் ஆபிரிக்காவுக்கு மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர். அவர்களைவிட அணித் தலைவி லோரா வுல்வார்ட் (31), ஆன்எக் பொஷ் (28) ஆகியோரும் சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர். பந்துவீச்சில் நஹிதா அக்தர் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். முன்னதாக முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த பங்களாதேஷ் 50 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 236 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஷொர்னா அக்தர் (51 ஆ.இ.), ஷர்மின் அக்தர் (50), அணித் தலைவி நிகார் சுல்தானா (32), பர்கானா ஹொக் (30) ஆகியோர் திறமைமையை வெளிப்படுத்தினர். பந்துவீச்சில் நொன்குலுலேக்கோ மிலாபா 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினர். ஆட்டநாயகி: க்ளோ ட்ரையொன் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட்டின் 13ஆவது அத்தியாயத்தில் கிடடத்ட்ட அரைவாசி போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் அவுஸ்திரேலியா 7 புள்ளிகளுடன் முதலாம் இடத்திலும் இங்கிலாந்து மற்றும் தென் ஆபிரிக்கா ஆகியன தலா 6 புள்ளிகளுடன் முறையே 2ஆம், 3ஆம் இடங்களிலும் இருக்கின்றன. https://www.virakesari.lk/article/227649
-
கரூர் விஜய் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியானது எப்படி? ஆம்புலன்ஸ் வந்தது ஏன்? சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்
'கரூரில் ஒரே நாளில் 39 உடல்களுக்கு உடற்கூராய்வு செய்தது எப்படி?' சட்டமன்றத்தில் ஸ்டாலின் பதில் பட மூலாதாரம், Tamilnadu Assembly கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 31 நிமிடங்களுக்கு முன்னர் கரூரில் நடந்த தமிழக வெற்றிக் கழக கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று விளக்கமளித்தார். ஆனால், தாங்கள் கேள்விகளை எழுப்புவதற்கு முன்பாகவே முதலமைச்சர் பதில் சொல்வதாகக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி கண்டனம் தெரிவித்தார். பிறகு, அ.தி.மு.க. வெளிநடப்புச் செய்தது. கரூரில் கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் குறித்து விவாதிப்பதற்காக அ.தி.மு.க. உள்ளிட்ட பல கட்சிகள் ஒத்திவைப்புத் தீர்மானமும் கவன ஈர்ப்புத் தீர்மானமும் கொண்டுவந்திருந்தன. இந்நிலையில், அவை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படுவதற்கு முன்பாக இந்த விவகாரம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச ஆரம்பித்தார். இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி கடும் எதிர்ப்புத் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புவதற்கு முன்பாகவே முதலமைச்சர் பதிலளிக்கக்கூடாது என அவர்கள் கூறினர். இதற்கிடையில் முதலமைச்சர் இந்த விவகாரம் தொடர்பாக பேச ஆரம்பித்தார். கரூர் நிகழ்ச்சிக்கு சம்பந்தப்பட்ட கட்சியைச் சேர்ந்தவர்கள் போதுமான ஏற்பாடுகளைச் செய்திருக்கவில்லையென அவர் குற்றம்சாட்டினார். "கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27.09.2025 அன்று தமிழக வெற்றிக் கழக கட்சித் தலைவரின் அரசியல் நிகழ்ச்சி நடைபெற்றது. அந்தக் கட்சியின் கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் பல்வேறு இடங்களைக் குறிப்பிட்டு அனுமதியைக் கோரினார். அவர் அனுமதி கோரிய இடங்களில் போக்குவரத்து நெரிசல் இருக்கும் என்பதாலும் பொதுமக்களுக்கு தொல்லை ஏற்படும் என்பதாலும் பாதுகாப்பு காரணங்களாலும் அனுமதி வழங்கப்படவில்லை. 25.09.2025ஆம் தேதியன்று காலையில் லைட் ஹவுஸ் கார்னர் அல்லது உழவர் சந்தை பகுதியில் கூட்டம் நடத்த அனுமதி கோரிய மனுவும், கூட்ட அளவு மதிப்பீடு மற்றும் பாதுகாப்புக் காரணங்களால் நிராகரிக்கப்பட்டது. பிறகு செப்டம்பர் 26ஆம் தேதியன்று வேலுச்சாமிபுரத்தில் செப்டம்பர் 27ஆம் தேதியன்று அன்று மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்த அக்கட்சியின் மேற்கு மாவட்டச் செயலாளர் அனுமதி கோரினார். அவர் கொடுத்த மனு ஏற்கப்பட்டு, 11 நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது'' என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார் பட மூலாதாரம், DIPR 'கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள்' இந்த நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர்கள், 5 காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், 18 ஆய்வாளர்கள், 75 உதவி ஆய்வாளர்கள், ஆயுதப்படை காவலர்கள் உள்ளிட்ட 517 காவலர்கள் கரூர் மாவட்டத்திலிருந்து பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர் என ஸ்டாலின் கூறினார். '' வெளி மாவட்டங்களிலிருந்து 1 காவல் துணை கண்காணிப்பாளர், 2 ஆய்வாளர்கள், 8 உதவி ஆய்வாளர்கள், 60 ஆயுதப்படை காவலர்கள், 20 அதிவிரைவுப்படை காவலர்கள் என 99 பேர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். மொத்தம் 606 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். காவல்துறையைப் பொறுத்தவரை, வழக்கமாக அரசியல் பரப்புரை கூட்டங்களுக்கு வழங்கப்படும் பாதுகாப்புக் காவலர்களின் எண்ணிக்கையைவிட அதிகமாகவே வழங்கப்பட்டிருந்தது. பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களால் 10 ஆயிரம் பேர்கள் வருவார்கள் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அதைவிட அதிகமாக கூட்டம் வரும் என்று எதிர்பார்த்து கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. கூட்டம் நடத்த அனுமதி கோரி கொடுத்த கடிதத்தில் மாலை 3 முதல் இரவு 10 மணி வரை என்று குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால், செய்தியாளர் சந்திப்பு மற்றும் சமூக ஊடகங்களில் மதியம் 12 மணிக்கு கட்சித் தலைவர் கரூர் வருவதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் தெரிவித்திருந்தார். இதனால் கரூரில் காலை முதலே மக்கள் வரத் தொடங்கி விட்டனர்.'' என்றார் ஸ்டாலின். பட மூலாதாரம், DIPR 'பிடிவாதமாக முன்னேறிச் சென்றனர்' மேலும், ''செப்டம்பர் 27ஆம் தேதியன்று, அக்கட்சியின் தலைவர் சென்னையிலிருந்து காலை 8.40 மணிக்குப் புறப்பட்டு, 9.25 மணிக்கு திருச்சி வந்தடைந்தார். அதன் பின்னர் நாமக்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிறகு, கரூருக்கு இரவு 7 மணிக்கு வந்துள்ளார். அதாவது அறிவிக்கப்பட்ட 12.00யை மணியைக் கடந்து, 7 மணி நேரம் கழித்துத்தான் வந்தார். இந்தக் காலதாமதம் கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணமாக அமைந்தது. கூட்ட ஏற்பாட்டாளர்கள் சில முக்கியமான ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். அவை அன்றைய தினம் கரூரில் செய்யப்படவில்லை. காலை முதல் காத்திருந்த மக்களுக்குப் போதிய குடிநீர் வழங்கவில்லை; உணவு வழங்க எந்தவிதமான ஏற்பாடுகளும் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களால் செய்யப்படவில்லை. இயற்கை உபாதைகளைக் கழிக்க பெண்களால் வெளியில் செல்ல முடியவில்லை. சம்பவம் நடந்த அதே வேலுசாமிபுரத்தில் இதற்கு இரு தினங்களுக்கு முன்பாக அதாவது செப்டம்பர் 25-ஆம் தேதியன்று எதிர்க்கட்சித் தலைவர் கலந்துகொண்ட பரப்புரை நிகழ்ச்சி நடந்தது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருந்தவர்கள் முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு, கட்டுப்பாட்டோடு நடந்து கொண்டனர். எந்தவித அசம்பாவிதமும் இல்லாமல் அக்கூட்டம் நடந்து முடிந்தது. அதில் சுமார் 12 ஆயிரம் முதல் 15 ஆயிரம் பேர் பங்கேற்றனர். அந்தப் பரப்புரைக் கூட்டத்திற்கு சுமார் 137 காவலர்களும், 30 ஊர்க்காவல் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். ஆனால், அதற்கு நேர்மாறாக இந்தக் கட்சியின் நிகழ்ச்சி நடந்துள்ளது.'' என ஸ்டாலின் கூறினார் கரூர் மாவட்ட எல்லை தவிட்டுப்பாளையம் சோதனைச் சாவடி நிகழ்ச்சிக்குப் பின் கேரவன் வாகனத்தைப் பின்தொடர்ந்து பெருவாரியான ரசிகர்களும், கட்சியினரும் நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு வந்து கொண்டிருந்தனர் என்றார் ஸ்டாலின் ''நிகழ்ச்சி நடைபெறும் பகுதியில் கூட்டம் அதிகமாக இருந்ததாலும், பிரசார வாகனத்தின் பின்னால் ஏராளமானோர் வந்ததாலும், கரூர் நகர உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் , பிரசார வாகனத்தில் இருந்த ஏற்பாட்டாளர்களை அக்ஷயா மருத்துவமனை அருகே நிறுத்தி கூட்டத்தில் உரையாற்றுமாறு அறிவுறுத்தினர். அதற்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள், முன்பே அனுமதிக்கப்பட்ட இடத்தில்தான் பேசுவோம் என்று பிடிவாதமாக தொடர்ந்து முன்னேறிச் சென்றனர். கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அக்கட்சியின் இணைச் செயலாளரிடம் பலமுறை தொடர்புகொண்டு பிரசார வாகனத்தை நிறுத்துமாறு கேட்டுக்கொண்டும், அவர் த.வெ.கவின் தலைவரிடம் உரையைத் தொடங்குமாறு கேட்டுக்கொண்டார். வாகனம் அக்ஷயா மருத்துவமனையிலிருந்து, 30-35 மீட்டர் தூரம் சென்றபோது இருபுறமும் இருந்த கூட்டத்தினரை இது நிலைகுலைய செய்தது. இதனால் கூட்டத்தில் பல இடங்களில் அலைமோதல் ஏற்பட்டிருக்கிறது. கூட்டத்திலிருந்த பெண்கள், குழந்தைகள் மத்தியில் பீதி, மூச்சுத் திணறல், மயக்கம், நெரிசல் ஏற்பட்டது. பலரும் கீழே விழுந்து மிதிபட்டிருக்கிறார்கள்.'' என்றார் ஸ்டாலின். பட மூலாதாரம், Getty Images 'நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்சும் வரவில்லை' ''கூட்டத்தின் ஒருபகுதியினர் ஜெனரேட்டர் பகுதிக்குள் நுழைந்து, தகரக் கொட்டகையை அகற்றி வெளியேற முயற்சி செய்திருக்கிறார்கள். இதனால் மின்சாரம் தாக்குவதைத் தடுக்க, ஜெனரேட்டர் ஆபரேட்டர் மின்சாரத்தைத் துண்டித்திருக்கிறார். நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தில் கூட்ட நெரிசலால் காயமடைந்தும், சோர்வினால் மயக்கமடைந்தும் மக்கள் உதவி கோருவதை கவனித்து, காவல் துறையினர் மருத்துவமனை ஆம்புலன்சுக்கு தகவல் அனுப்பி வரவழைத்திருக்கிறார்கள். இவ்வாறு கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது அவர்களைக் காப்பற்றத்தான் ஆம்புலன்ஸ் வந்ததே தவிர, நெரிசல் ஏற்படுவதற்கு முன்பு எந்த ஆம்புலன்சும் வரவில்லை. காவல் துறை, தீயணைப்பு - மீட்புத் துறையினர் மற்றும் ஆம்புலன்ஸ் மீட்புக் குழுவினர் காயமடைந்தவர்களை மீட்டு, அருகிலுள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைத்தனர்.'' என்றார் ஸ்டாலின் மீட்புப் பணிகள் முழு வீச்சில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, த.வெ.கவினர் இரண்டு ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைத் தாக்கி ஆம்புலன்ஸ் வாகனத்தைச் சேதப்படுத்தியிருக்கிறார்கள் என ஸ்டாலின் குற்றஞ்சாட்டினார் ''இதனால் மீட்புப் பணிகள் தடைபட்டன. இது தொடர்பாக, கரூர் நகர காவல் நிலையத்தில், இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்துவருகிறது. சம்பந்தப்பட்ட நபர் கரூர் நீதித் துறை நடுவர் முன்பு சரணடைந்திருக்கிறார். மற்றொரு நபர், கைது செய்யப்பட்டிருக்கிறார். கரூரில் நெரிசல் ஏற்பட்டு மக்கள் இறப்பு ஏற்பட்டுள்ளது என்ற தகவல் அறிந்த உடனேயே மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், முதன்மைச் செயலர், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் உள்ளிட்டோர் உடனடியாக கரூருக்கு அனுப்பப்பட்டார்கள். மேலும், அன்றிரவே நானும் கரூருக்குச் சென்று, பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்தித்து ஆறுதல் கூறினேன். கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூட்ட நெரிசலில் பாதிக்கப்பட்ட முதல் நபர் இரவு 7.47 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். தொடர்ச்சியாக 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக கொண்டுவரப்பட்டார்கள். அனுமதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்புச் சிகிச்சை அளிப்பதற்காக சேலம், நாமக்கல், மதுரை, திருச்சி, திண்டுக்கல், கோயம்புத்தூர், புதுக்கோட்டை ஆகிய இடங்களிலிருந்து 152 மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்கள் வந்து பணியில் ஈடுபட்டார்கள். பொது சுகாதார இயக்குநர் தலைமையில் கூடுதல் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டன.'' என்றார் ஸ்டாலின் பட மூலாதாரம், Getty Images 'ஒருவர் மட்டும் சிகிச்சையில் உள்ளார்' கரூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 700 படுக்கைகளோடு எந்த அவசர நிலையையும் சமாளிக்க ஏதுவாக, கூடுதல் 400 படுக்கை வசதிகள் ஏற்படுத்தப்பட்டன என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார். ''24 மணி நேர அவசர சிகிச்சை மையம், சிடி ஸ்கேன், ஆய்வகங்கள் செயல்பட்டன. பணிகளை விரைவுபடுத்திட திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர்கள், அம்மாவட்ட மருத்துவக் குழுவினர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்து "Help Desk" அமைத்து, இறந்தவர்களின் உடல்களை காவல் துறை உதவியோடு அடையாளம் கண்டு, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறை அலுவலர்களின் உதவியோடு உடற்கூறாய்வு செய்வதற்கு ஏற்பாடு செய்தனர். கரூருக்கு அருகில் உள்ள சேலம், நாமக்கல் மற்றும் மதுரை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்கள் தங்கள் மருத்துவக் கல்லூரியில் இருந்து சிறப்பு மருத்துவக் குழுக்களுடன் 27ஆம் தேதியன்று இரவு கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். இதுதவிர, திருச்சிராப்பள்ளி, திண்டுக்கல், கோயம்புத்தூர், புதுக்கோட்டை உள்ளிட்ட அரசு மருத்துவ கல்லூரியில் இருந்தும் சிறப்பு மருத்துவர்கள், செவிலியர்கள், ஆய்வக வல்லுநர்கள், பிரேத பரிசோதனை உதவியாளர்கள் என மொத்தம் 152 பேர் கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு வந்தனர். இச்சம்பவத்தில் சிகிச்சை பெற்று வந்த அனைவரும் வீடு திரும்பியிருக்கிறார்கள். ஒருவர் மட்டும் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சையிலே இருக்கிறார்.'' என முதலமைச்சர் ஸ்டாலின் கூறினார் '' உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 41. இதில் ஆண்கள் 13 பேர், பெண்கள் 18 பேர், குழந்தைகள் 10 பேர். கரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிணவறையில், இறந்த அனைத்து உடல்களையும் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதற்கு போதிய வசதி இல்லாத காரணத்தினால் அன்று இரவில் உடற்கூராய்வு செய்வதற்கு மாவட்ட ஆட்சித் தலைவரின் சிறப்பு அனுமதி பெற்று உடற்கூராய்வு மேற்கொள்ளப்பட்டது. உடனடியாக, உடற்கூராய்வு நடைமுறையை முடித்து பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டி கரூர் அரசு மருத்துவக் கல்லூரி தடயவியல் துறைத் தலைவர் மரு.சங்கர் தலைமையில் 24 மருத்துவர்கள் மற்றும் 16 உதவிப் பணியாளர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டு உடற்கூராய்வு செய்யப்பட்டது. 28.09.2025 அன்று அதிகாலை 1.45 மணிக்கு, முதல் உடற்கூராய்வு தொடங்கப்பட்டு, 28.09.2025 அன்று மதியம்1.10 மணியளவில் 39வது உடற்கூராய்வு முடிவுற்றது'' என்றார் ஸ்டாலின் பட மூலாதாரம், Tamilnadu Assembly ஒரே நாளில் 39 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு செய்தது எப்படி? இதற்குப் பிறகு பேசிய சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அ.தி.மு.க. பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, "தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கரூர் சம்பவத்தை தவிர்த்திருக்கலாம் என்று குறிப்பிட்டார். "கரூரில் மக்கள் சந்திப்பு நடத்துவதற்கு முன்பாகவே திருச்சி, அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர் என்று 4 மாவட்டங்களில் விஜய் பிரசாரம் செய்திருக்கிறார். அங்கு கூடிய கூட்டத்தை வைத்தே கரூரில் விஜய் பிரசாரத்துக்கு எவ்வளவு கூட்டம் கூடும் என்பது குறித்து காவல்துறையும் உளவுத்துறையும் அரசுக்கு தகவல் தெரிவித்திருக்கும். அதற்கேற்ப பாதுகாப்பு வழங்கியிருந்தாலே, அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டிருக்கும். மேலும், ஒரே நாளில் 39 பேரின் உடல்களுக்கு உடற்கூராய்வு செய்தது எப்படி, உடற்கூராய்வு செய்வதில் அவசரம் காட்டப்பட்டது ஏன்?" என்று கேள்வி எழுப்பினார். இதற்குப் பிறகு பேசிய மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், குஜராத் விமான விபத்தின்போது இரவிலும் பிரேதப் பரிசோதனைகள் நடத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டினார். "அதிகாலை 1.45 மணிக்கு பிரேதப் பரிசோதனை துவங்கியது. மொத்தம் ஐந்து மேசைகளில் பிரேதப் பரிசோதனை நடைபெற்றது. மொத்தம் 14 மணி நேரத்திற்கு உடற்கூராய்வு நடைபெற்றது. உடற்கூராய்வு முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆகவே இதில் சந்தேகம் எழுப்ப வேண்டியதில்லை" என்று தெரிவித்தார். பட மூலாதாரம், X/EDAPPADI PALANISAMY 'எதிர்க்கட்சித் தலைவரின் கூட்டத்தில் நெரிசல் ஏற்படவில்லை' இதற்குப் பிறகு அமைச்சர் எ.வ. வேலு பேசினார். அவர் பேசும்போது, "அங்கு நடந்த எதிர்க்கட்சித் தலைவரின் கூட்டத்திற்கும் கூட்டம் வந்தது. ஆனால், நெரிசல் ஏற்படவில்லை. அங்கு வந்தவர்கள் அவர் பேசுவதைக் கேட்க வந்தார்கள். மேலும் எதிர்க்கட்சித் தலைவர் ஆங்காங்கே தொண்டர்களைப் பார்த்து கையசைத்தார். இதனால் கூட்ட நெரிசல் ஏற்படவில்லை. ஆனால் விஜய் வாகனத்திற்குள்ளேயே அமர்ந்திருந்தார். இதனால், கூட்டம் வாகனத்தைப் பின்தொடர்ந்து கூட்டம் நடக்கும் இடத்திற்கு வந்தது. இதனால் நெரிசல் ஏற்பட்டது. கரூரில் அ.தி.மு.க. கூட்டத்திற்கு பாதுகாப்பு அளித்த அதே காவலர்கள்தான் த.வெ.க.வின் கூட்டத்திற்கும் பாதுகாப்பு அளித்தனர்" என்றார் எ.வ. வேலு. மீண்டும் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி, "நாங்கள் மக்களுக்காகப் பேசுகிறேன். இந்த கூட்டத்தில் எப்படி விபத்து ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர் என்பதைச் சொல்லுங்கள். அம்புலன்ஸ்களில் தி.மு.க. ஸ்டிக்கர் வந்தது எப்படி?" என அவர் கேள்வியெழுப்பினார். இதற்குப் பிறகு பேசப்பட்ட சில விஷயங்களை சட்டப்பேரவைக் குறிப்பிலிருந்து நீக்க வேண்டுமென அ.தி.மு.கவினர் கோரினர். இதற்குப் பிறகு அமளியிலும் ஈடுபட்டனர். அவர்கள் அமைதியாக இருக்க வேண்டுமென சபாநாயகர் கோரினார். இதற்குப் பிறகு அ.தி.மு.கவினர் வெளிநடப்புச் செய்தனர். வெளிநடப்புச் செய்த அ.தி.மு.கவினர் பேரவைக்கு வெளியில் செய்தியாளர்களைச் சந்தித்தனர். "பிரதான எதிர்க்கட்சி அ.தி.மு.க. கரூர் சம்பவம் குறித்து எதிர்க்கட்சி கருத்தைத் தெரிவித்த பிறகு முதல்வர் பேசுவதுதான் சரியாக இருக்கும் என்றேன். ஆனால், சட்டப்பேரவைத் தலைவர் முதல்வரை அழைத்து பேச அனுமதித்தார். இது முக்கியப் பிரச்சனை என்ற காரணத்தால், 41 பேர் உயிரிழந்த நிகழ்வு என்பதால் அமைதிகாத்தோம். முதல்வர் சொல்வதைக் கேட்போம் என அங்கேயே அமர்ந்து கேட்டுக்கொண்டிருந்தோம். அவர் தி.மு.க. அரசு கரூர் நிகழ்வு குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தெரிவித்தார். அதற்குப் பிறகு பிரதான எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் பேச ஆரம்பித்தேன். அதில் செப்டம்பர் 27-ஆம் தேதி வேலுச்சாமிபுரத்தில் த.வெ.க. தலைவர் மக்கள் சந்திப்புக்கூட்டத்தில் பேசியபோது, ஒரு செருப்பு வந்து விழுந்தது. அதைப் பற்றி அரசு கருத்து எதையும் சொல்லவில்லை. அதற்குப் பிறகு கூட்ட நெரிசலில் 41 பேர் இறந்துபோயிருக்கிறார்கள். கூட்டத்திற்கு முழுமையான பாதுகாப்பு அளித்திருந்தால் இந்த உயிர் பலிகளைத் தவிர்த்திருக்கலாம். '' என எடப்பாடி கே. பழனிசாமி கூறினார் ''இந்த அரசு ஆளுங்கட்சிக்கு ஒரு நீதி, எதிர்க்கட்சிக்கு ஒரு நீதி என்றுதான் நடத்துகிறது. இந்த அரசின் அலட்சியத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதாக குறிப்பிட்டேன். ஏற்கனவே த.வெ.க. தலைவர் நான்கு மாவட்டங்களில் மக்கள் சந்திப்புக் கூட்டங்களை நடத்தியுள்ளார். ஏற்கனவே நடந்த கூட்டங்களை வைத்து எவ்வளவு பேர் இந்தக் கூட்டங்களில் பங்கு பெற்றார்கள் என்பது அரசுக்குத் தெரியும். அவர்கள் கேட்ட இடத்தை ஒதுக்கியிருக்க வேண்டும், பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்திருக்கவேண்டும். அதை செய்யவில்லை. காவல்துறை அதிகாரிகள் ஒரு பேட்டியில் பேசும்போது 500 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதாகக் குறிப்பிட்டார். ஆனால், அவ்வளவு பேர் அந்த இடத்தில் இல்லை. மேலும் இன்று முதல்வர் பாதுகாப்புப் பணியில் 606 பேர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டதாக முரண்பட்ட தகவலைச் சொல்கிறார். அதனால்தான் சந்தேகம் வருகிறது.'' என்றார் எடப்பாடி கே. பழனிசாமி. ''வேலுச்சாமிபுரம் த.வெ.க. கூட்டத்திற்கு ஒதுக்கப்பட்டது. இந்த இடத்தை எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழாவுக்குக் கேட்டோம். அந்தக் கூட்டம் அந்த இடத்தில் நடைபெற அனுமதிக்கவில்லை. போக்குவரத்து மிகுந்த இடம் என்பதால் அனுமதி மறுத்தார்கள். கரூரில் எழுச்சிப் பயணத்திற்கு இடம் கேட்டோம். அனுமதி மறுக்கப்பட்டது. அதையடுத்து நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது. வேறு வழியில்லாமல் இந்த இடத்தை அவர்கள் கொடுத்தார்கள். அதே இடத்தைத்தான் மக்கள் சந்திப்பு இடத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். அவர்கள் நிராகரித்த இடத்தை எப்படிக் கொடுத்தார்கள்? முதலமைச்சர் முப்பெரும் விழா நடத்திய இடத்தைக் கொடுத்திருக்கலாம். ஆனால் அசம்பாவிதம் நடக்க வேண்டுமென்பதற்காகவே இந்த இடத்தைக் கொடுத்தார்கள். ஆகவே, அரசின் அலட்சியத்தாலும் காவல்துறை பாதுகாப்பு அளிக்காததாலும்தான் இந்த நிகழ்வு ஏற்பட்டது.'' என்றார் அவர் ''இந்தச் சம்பவம் நடந்தவுடனேயே இரவில் ஒன்றே முக்கால் மணிக்கே பிரேதப் பரிசோதனை துவங்கினார்கள். மூன்று மேசைகளில் எப்படி 39 பேருக்கு உடற்கூராய்வு செய்தது எப்படி? வெளியிலிருந்து மருத்துவர்கள் வந்தாலும்கூட, நான் செல்வதற்கு முன்பாகவே எல்லோருக்கும் உடற்கூராய்வு செய்துவிட்டார்கள். ஒரு உடலுக்கு செய்ய ஒன்றரை மணி நேரம் தேவைப்படும். அதற்கு எப்படி உடற்கூறு செய்ய முடியும். இந்த நிகழ்வு குறித்து அரசு அதிகாரிகள் பேட்டி கொடுத்தனர். அவர்கள் அரசின் திட்டங்கள் குறித்துப் பேச நியமிக்கப்பட்டனர். அப்படியிருக்கும்போது, ஒரு நபர் ஆணையம் எப்படி சுதந்திரமாக செயல்படும்? சிறுநீரக முறைகேடு தொடர்பாக சிறப்பு விசாரணைக் குழு அமைக்க வேண்டுமென நீதிமன்றம் கூறிய பிறகும் அதைச் செய்யவில்லை. ஆனால், இந்த விவகாரத்திற்கு அமைக்கப்பட்டது. அதேபோல, கள்ளக்குறிச்சி விவகாரம், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ஆகியவற்றுக்கும் சி.பி.ஐ. விசாரணை விதிக்கப்பட்டது. அதனை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்றிருக்கிறார்கள். இப்போது இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது. கரூர் நிகழ்வைப் பொறுத்தவரை அரசின் அலட்சியம், காவல்துறை உரிய பாதுகாப்பு அளிக்கப்படாததுதான் காரணம்" என்று குற்றம்சாட்டினார் எடப்பாடி கே. பழனிசாமி. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cn8vyvp3j9ko