Everything posted by ஏராளன்
-
வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட குழுவை நியமித்தது தமிழரசு கட்சி; மீள் தெரிவுக்கு தாயாரென மீண்டும் அறிவித்தார் சிறீதரன்
வழக்குத் தொடுநர்களுடன் சமரசத்துக்காக மூவர் கொண்ட குழுவை நியமித்தது தமிழரசு கட்சி; மீள் தெரிவுக்கு தாயாரென மீண்டும் அறிவித்தார் சிறீதரன் Published By: VISHNU 23 FEB, 2024 | 07:40 PM ஆர்.ராம் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் புதிய தலைமை உட்பட அனைத்துப் பதவி நிலைகளுக்கான தெரிவுகளுக்கு எதிராகவும், தேசிய மாநாட்டுக்கு எதிராகவும் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளவர்களுடன் சமரசத்தை ஏற்படுத்திக் கொள்வதற்காக இலங்கைத் தமிழரசுக்கட்சி மூவர் கொண்ட குழுவொன்றை நியமித்துள்ளது. குறித்த குழுவின் வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினரான சாள்ஸ்நிர்மலநாதன், வைத்தியர்.ப.சத்தியலிங்கம், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் மேயர் தி.சரவணபவன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், குறித்த வழக்கில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டுள்ள கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் எழுவரும் வழக்கை நீதிமன்றத்தின் ஊடாக கையாள்வது தொடர்பாக, பொதுநிலைப்பாடொன்றை எடுத்து அறிவிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. இதேநேரம், தெரிவு செய்யப்பட்டுள்ள தலைவர் சிவஞானம் சிறீதரன், தனது தலைமைப்பதவி உட்பட அனைத்துப் பதவிகளையும் மீளவும் தெரிவு செய்வதற்கு தயாராகவுள்ளதாகவும் அறிவித்துள்ளார். இலங்கைத் தமிழரசுக்கட்சிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை கையாளல், மற்றும் அடுத்தகட்ட செயற்பாடுகள் சம்பந்தமாகக் கலந்துரையாடுவதற்காகக் கிளிநொச்சியில் உள்ள அக்கட்சியின் அறிவகம் அலுவலகத்தில் நேற்றையதினம் விசேட கூட்டமொன்று நடைபெற்றிருந்தது. இந்தக் கூட்டத்தில் முதலில் மாவை.சோ.சேனாதிராஜா உரையாற்றினார். அவர், கட்சியின் தலைமைத்தெரிவு உட்பட பல்வேறு விடயங்களில் தான் கூறிய எதனையும் கேட்காது அங்கத்தவர்கள் நடந்துகொண்டுள்ளார்கள் என்பதைச் சுட்டிக்காட்டி தனது ஆதங்கங்களை வெளியிட்டார். அதுமட்டுமின்றி, கடந்த ஜனவரி 21ஆம் மற்றும் 27ஆம் திகதிகளில் நடைபெற்ற விடயங்களை மீளவும் கதைத்து பிரச்சினைகளை பெரிதாக்க வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். இதனையடுத்து அரியநேத்திரன், எழுந்து, நீங்கள் குறிப்பிட்ட விடயங்களைக் கட்சியில் அங்கத்தவர்கள் கேட்கவில்லை என்றால், அந்த விடயங்கள் என்ன? அதனை யார் செவிமடுக்கவில்லை என்பதை வெளிப்படுத்துங்கள் என்று கோரிக்கை விடுத்தார். எனினும், கடந்தகால விடயங்களை மீண்டும் கலந்துரையாடுவதால் வீணாக நேரமே செலவழியும் என்றுரைத்ததோடு, அந்த விடயம் அப்படியே கைவிடப்பட்டது. தொடர்ச்சியாக, சிவஞானம் சிறீதரன் உரையாற்றினார். அவர் தனது தலைமைத்தெரிவு உட்பட ஏனைய அனைத்து தெரிவுகளையும் முன்னெடுப்பதற்கு தயாராகவுள்ளதாகவும், விசேடமாக மூலக்கிளைகளிலிருந்து தெரிவுகள் அனைத்தும் மீண்டும் நடைபெறவேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்தினார். இவரைத்தொடர்ந்து, வைத்தியர் சத்தியலிங்கம், சாள்ஸ் நிர்லநாதன் உள்ளிட்டவர்கள் தமது கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள். இந்த நிலையில், கட்சியின் புதிய தெரிவுகளுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்கானது தனியே எழு பேருக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்காக பார்க்கக்கூடாது அது அதுகட்சிக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள வழக்காகும். ஆகவே கட்சியே இந்த விடயத்தில் அதினளவான கவனத்தினை எடுத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் பிரதிவாதிகள் தமது நிலைப்பாடுகளை ஏகோபித்து அறிவிக்க வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா தெரிவித்தார் குறிப்பாக, திருகோணமலை வழக்கினை கையாள்வது குறித்து விசேடமாக கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. ஆகவே, மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிட்டுள்ள எழுவரும் முடிவொன்றினை எடுத்து அறிவிக்கும் பட்சத்திலேயே தான் அடுத்த கட்டம் நோக்கி நகரமுடியும் என்றும் அவர் சுட்டிக்காண்பித்தார். இதனையடுத்து வழக்குத் தொடுநர்களுடன் சிவில் அமைப்பின் பிரதிநிதிகள், சமயத்தலைவர்கள், ஆகியோருடன் சமரசப் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக மூவர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவில் சாள்ஸ் நிர்மலநாதன், வைத்தியர்.சத்தியலிங்கம், சரவணபவன் ஆகியோர் உள்ளடக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டபோது, ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதனையடுத்து, குறித்த வழக்குத்தொடுநர்கள் சமரசப் பேச்சுவார்த்தைகளுக்கு இணங்காது விட்டால் நீதிமன்றத்தின் ஊடாகவே விடயங்களை கையாள்வதென்றும் அந்த விடயங்களை ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவே முன்னெடுப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதேநேரம், வைத்தியர் சிவமோகன், ஞானமுத்து ஸ்ரீநேசன் தான் ஏற்படுத்திக்கொண்ட இணக்கப்பாட்டை மீளவும் மாற்றிக் கொண்டிருக்காது விட்டால் இந்த நிலைமைகள் ஏற்பட்டிருக்காது என்று குறிப்பிட்டார். எனினும், முடிந்த விடயங்களை மீளப்பேசுவதால் பயனில்லை என்று தெரிவிக்கப்பட்டு அவ்விடயம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது. இதேநேரம், ஏனைய விடயங்கள் சம்பந்தமாக உத்தியோகப் பூர்வமாக மத்திய செயற்குழு கூட்டம் கூட்டப்படுகின்றபோது அதில் விடயங்களை ஆராயுமாறு குறிப்பிட்டு கூட்டம் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்டது. https://www.virakesari.lk/article/177152
-
ஐ.பி.எல் 2024 - செய்திகள்
ஐபிஎல் 2024: எந்தெந்த வீரர்கள் மீது எதிர்பார்ப்பு குவிகிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஐபிஎல் டி20 கிரிக்கெட் திருவிழா மார்ச் 22-ஆம் தேதி கோலாகலமாகத் தொடங்கவிருக்கிறது. இந்த ஐபில் டி20 தொடர் நடக்கும்போது மக்களவைத் தேர்தலும் நடக்க இருப்பதால், முதல் 21 போட்டிகளுக்கான தேதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஐபிஎல் தொடரும் ஒவ்வொரு விதமான ஸ்வாரஸ்யங்களையும் எதிர்பார்ப்புகளையும் கொண்டிருக்கும். அந்த வகையில் இந்த ஐபிஎல் டி20 தொடரில் பல வீரர்கள் அணி மாறியுள்ளனர், பல வீரர்கள் கழற்றிவிடப்பட்டுள்ளனர், இளம் வீரர்கள் அறிமுகமாகிறார்கள். அது மட்டுமல்லாமல் பல வீரர்களுக்கு இந்த ஐபிஎல் டி20 தங்களின் திறமையை உரசிப்பார்க்கும் உரைகல்லாக மாற இருக்கிறது. ஏனென்றால், இந்த ஐபிஎல் டி20 தொடரில் அந்த குறிப்பிட்ட வீரர்கள் சரியாக விளையாடாத பட்சத்தில் பட்சத்தில் இது அவர்களுக்கு கடைசி ஐபிஎல் தொடராக அமையக்கூடும் என்று கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். வீரர்களுக்கு ஒரு ஐபிஎல் தொடர் கடைசித் தொடராக மாறுவதற்கு அவர்களின் வயது, உடற்தகுதி, களத்தில் எவ்வாறு விளையாடுகிறார்கள் ஆகிய அளவு கோள்களும் பொருந்தும். அந்த வகையில் பார்த்தால் ஒவ்வொரு அணியலும் பல வீரர்களின் பட்டியல் நீள்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES நட்சத்திர வீரர்களுக்கு சோதனையா? இந்திய ரசிகர்களின் மனதில் இடம் பெற்ற ‘ஐகான்’ வீரர்களும், வெளிநாட்டு நட்சத்திர வீரர்களுக்கும் கூட இந்த ஐபிஎல் தொடர் என்பது கம்பி மீது நடப்பதுபோலத்தான். சரியாக விளையாடமல் போகும்பட்சத்தில் கிரிக்கெட் எதிர்காலம் முடிவுக்கு வரக்கூடும். ஐபிஎல் டி20 தொடரரில் வீரர்கள் சரிவர செயல்படாவிட்டால் அடுத்த ஆண்டு நடக்கும் ஏலத்தில் அந்த வீரர்களை வாங்கத் நிர்வாகம் தயங்குவார்கள் என்பது நிதர்சனம். இது கடந்த காலங்களில் நடந்துள்ளது. 2024 ஐபிஎல் டி20 தொடர் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 7-ஆம் தேதிவரை நடப்பதற்கான போட்டி அட்டவணையை மட்டும் ஐபிஎல் நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதில் ஐபிஎல் டி20 தொடரின் இறுதிப் போட்டி மே 26-ஆம் தேதி நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் இறுதிப் போட்டி முடிந்த 5 நாட்களுக்குப்பின் டி20 உலகக் கோப்பைத் தொடரும் தொடங்குகிறது. ஜூன் 1-ஆம் தேதி, கரிபியன் தீவுகளிலும், அமெரிக்காவிலும் டி20 உலகக் கோப்பைத் தொடர் தொடங்குகிறது. அதனால், இந்த ஐபிஎல் டி20 தொடர் ஒவ்வொரு நாட்டு தேசிய அணியில் இடம் பெற்ற வீரர்களுக்கும் முக்கியமாகப் பார்க்கப்படுகிறது. 4 டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள் இந்திய அணியைப் பொறுத்தவரை, ஐபிஎல் டி20 தொடரில் சிறப்பாகச் செயல்படும் வீரர்களில் பலருக்கு டி20 உலகக் கோப்பைக்கான அணியில் இடம் கிடைக்கவும் வாய்பப்புண்டு. டி20 உலகக் கோப்பைக்கு அணியைத் தேர்வு செய்வதில் ஐபிஎல் தொடரும் அளவுகோலாக தேர்வுக்குழுவினரால் பார்க்கப்படலாம். இதில் ஐபிஎல் டி20 தொடரின் 2வது போட்டித் தொடர் அட்டவணை, மக்களவைத் தேர்தல் தேதி அறிவிப்புக்குப்பின் ஐபிஎல் நிர்வாகம் வெளியிடுகிறது. இந்த 21 நாட்கள் நடக்கும் போட்டியில் 4 நாட்களில் 2 போட்டிகள் நடக்கின்றன. மார்ச் 22-ஆம் தேதி நடக்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ஆர்சிபி அணியும் மோதுகின்றன. இந்த ஆட்டம் இரவு 8 மணிக்குத் தொடங்குகிறது. அதன்பின் நடக்கும் மற்ற ஆட்டங்கள் இரவு 7.30 மணிக்கு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டபுள் ஹெட்டர்ஸ் என்று அழைக்கப்படும் இரு போட்டிகள் நடக்கும் நாளில், முதல் ஆட்டம் பிற்பகல் 3.30 மணிக்கும், 2-வது ஆட்டம் இரவு 7.30 மணிக்கும் தொடங்குகிறது. மார்ச் 23, 24 ஆகிய இரு நாட்களில் டபுள் ஹெட்டர்ஸ் போட்டிகள் நடக்கின்றன. அதன்பின் மார்ச் 31, ஏப்ரல் 7-ஆம் தேதிகளில் டபுள் ஹெட்டர்ஸ் ஆட்டங்கள் நடத்தப்படுகின்றன. டெல்லி கேபிடல்ஸ், குஜராத் டைட்ன்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகள் தங்களின் 14 போட்டிகளில் 5 ஆட்டங்களை ஏப்ரல் 7-ஆம் தேதிக்குள் விளையாடி முடித்துவிடுவர். கொல்கத்தா அணி 3 போட்டிகளிலும், மற்ற அணிகள் 4 போட்டிகளிலும் விளையாடும். பஞ்சாப் கிங்ஸ் அணி வழக்கமாக தங்களின் மொஹாலி மைதானத்தில் ஆட்டத்தைத் தொடங்காமல், சண்டிகாரின் புறகநரில் உள்ள முலான்பூர் மைதானத்தில் முதல் போட்டியில் விளையாடுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES மார்ச் முதல் வாரத்தில் சென்னையில் தோனி பயிற்சி முதல் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சிஎஸ்கே அணி, ஆர்சிபியுடன் மோதுகிறது. இந்தத் தொடரின் பயிற்சிக்காக மார்ச் முதல்வாரத்தில் தோனி சென்னை வந்து, அணியினருடன் பயிற்சியில் ஈடுபடுகிறார். கடந்த ஆண்டு சீசனில் சிஎஸ்கே கோப்பையை வென்றவுடன் தோனி முழங்கால் அறுவைசிகிச்சை செய்து கொண்டார். அதன்பின் இதுவரை எந்தவிதமான போட்டிகளிலும் அவர் பங்கேற்கவில்லை. ஹர்திக் பாண்டியா கடந்த 2 சீசன்களாக குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்தநிலையில் இந்தமுறை மும்பை இந்தியன்ஸ் வாங்கியுள்ளது. இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ஹர்திக் பாண்டியா திரும்புகிறார். கடந்த 2022-ஆம் ஆண்டில் கார் விபத்தில் சிக்கிய ரிஷப் பந்த் ஓர் ஆண்டு இடைவெளிக்குப்பின், மீண்டும் ஐபிஎல் தொடரில் விளையாட உள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு ரிஷப் பந்த் கேப்டனாகவும், முழு தொடரிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒட்டுமொத்தமாக ஐபிஎல் தொடரில் 4 ப்ளே ஆஃப் ஆட்டங்கள் உள்பட 74 போட்டிகள் நடைபெற உள்ளன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிஎஸ்கே அணியில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது அணிகள் மீதான எதிர்பார்ப்புகள் என்ன? இந்த ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு அணிக்கும் பல புதிய வீரர்கள் வந்துள்ளனர். அந்த வகையில் புதிய வீரர்கள் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. சிஎஸ்கே - ரச்சின் ரவீந்திரா, ரிஸ்வி,டேரல் மிட்ஷெல் சிஎஸ்கே அணியில் நியூசிலாந்து ஆல்ரவுண்டர் ரச்சின் ரவீந்திரா, உ.பியைச் சேர்ந்த சமீர் ரிஸ்வி ஆகியோர் மீது மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதில் ரூ.8.5 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள சமீர் ரிஸ்வி வலதுகை சுரேஷ் ரெய்னா என்று அழைக்கப்படுகிறார் என்பது கூடுதல் எதிர்பார்ப்பாகும். இதுதவிர ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள நியூசிலாந்து வீரர் டேரல் மிட்ஷெல், ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ள வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் ஆகியோர் தோனி கைகளில் எவ்வாறு செயல்படப் போகிறார்கள் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஹர்திக் பாண்டியா, கோட்ஸி மும்பை இந்தியன்ஸ் அணியில் ஹர்திக் பாண்டியா மீண்டும் வந்திருப்பது அந்த அணிக்கு கூடுதல் பலமாகும். ரோஹித் சர்மா கேப்டனாகத் தொடர்வார் என்பது அவர் மீது நிர்வாகம் வைத்துள்ள நம்பிக்கையை காட்டுகிறது. இது தவிர தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் கோட்ஸி ஏலத்தில் எடுத்திருப்பது பந்துவீச்சில் பெரிய பலத்தை காட்டுகிறது. கேகேஆரும் ஸ்டார்க்கும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ரூ.24 கோடிக்கு ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க்கை வாங்கியுள்ளது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹர்ஷல் படேல் பஞ்சாப்புக்கு வலுசேர்ப்பாரா ஹர்ஷல் படேல்? பஞ்சாப் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை ரூ.11.4 கோடிக்கு ஹர்ஷல் படேலை விலைக்கு வாங்கியுள்ளதால், அவரின் பந்துவீச்சு எந்த அளவுக்கு இருக்கப் போகிறது என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இது தவிர ரூஸோ, கிறிஸ் வோக்ஸ் என பந்துவீச்சாளர்களையும் அந்த அணி வாங்கியுள்ளது. ராவ்மென் பாவல் வருகை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏற்கெனவே ஸ்திரமான அணியாக இருந்தபோதிலும் கூட, ஏலத்தில் ரோவ்மென் பாவல் ரூ.7.4 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார். இவரின் வருகை பேட்டிங்கை எந்த அளவுக்கு பலப்படுத்தும் என்பது தெரியவில்லை. ஷாருக்கான்,ஓமர்ஜாய், ரூ.10 கோடி ஜான்சன் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக ஆடி வந்த ஷாருக்கான் இந்த முறை குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். பிக் ஹிட்டரான ஷாருக்கான் வருகை, ஆப்கானிஸ்தான் ஆல்ரவுண்டர் ஓமர்ஜாய் ஆகியோரின் வருகையும் பலம் சேர்க்கும். ஸ்பென்சர் ஜான்சன் ரூ.10 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மாயம் செய்வாரா மாவி? லக்னோ சூப்பர் ஜெயிட்ஸ் அணி ஏலத்தில் ஷிவம் மாவியை ரூ.6.4 கோடி கொடுத்து வாங்கியுள்ளது வியப்பை ஏற்படுத்தியது. இந்த சீசனில் மாவியின் பந்துவீச்சு எவ்வாறு இருக்கும், பிற அணியின் பேட்டர்களுக்கு எந்த அளவுக்கு சிம்மசொப்னமாக மாறும் என்பது எதிர்பார்ப்பு. டெல்லி கேபிடல்ஸ் நிலை என்ன? டெல்லி கேபிடல்ஸ் அணி, மார்க்கெட் இழந்த ஹேரி ப்ரூக்கை ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது எந்த அளவுக்கு பயன் அளிக்கும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. ஹை ரிச்சர்ட்சன், ஷாய் ஹோப் ஆகியோரின் வருகையும் டெல்லி அணிக்கு வலு சேர்க்குமா என்பது பொறுத்திருந்து பார்க்கலாம். பந்துவீச்சில் அதிக கவனம் ஆர்சிபி அணி இந்த ஏலத்தில் மேற்கிந்தியத்தீவுகள் வேகப்பந்துவீச்சாளர் அல்சாரி ஜோஸப்பை ரூ.11 கோடிக்கு வாங்கி பந்துவீச்சை பலப்படுத்த முயன்றுள்ளது. இடதுகை வேகப்பந்துவீச்சாளர் யாஷ் தயாலை ரூ.5 கோடிக்கு வாங்கி பந்துவீச்சு மீது கூடுதல் கவனத்தை செலுத்தியுள்ளது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதபோல நியூசிலாந்து வேகப்பந்துவீச்சாளர் லாக்கி பெர்குஷன் வருகையும் ஆர்சிபிக்கு கூடுதல் பலத்தை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சன்ரைசர்ஸ் அணியின் நிலைமை என்ன? சன்ரைசர்ஸ் அணி எப்போதுமே இளைஞர்கள் மீது அதிக கவனத்தைச் செலுத்தும். இந்த முறை ரூ.20 கோடிக்கு பாட் கம்மின்ஸை வாங்கியுள்ளது. உலகக் கோப்பையில் பட்டையக் கிளப்பிய டிராவிஸ் ஹெட் ரூ.6.80 கோடிக்கும், ஹசரங்கா ரூ.1.50 கோடிக்கும், உனத்கட் ரூ.1.60 கோடிக்கும் வாங்கியுள்ளது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சன்ரைசர்ஸ் அணியில் பேட்டர்களைவிட, பந்துவீச்சாளர்களே அதிகம் இருப்பதால், யாரைத் தேர்ந்தெடுத்து விளையாட வைக்கப்போகிறது, ப்ளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES 40 வயது கடந்தும் தோனி விளையாடுவாரா? ஐபிஎல் தொடரில் உள்ள ஒவ்வொரு அணியிலும் ஐகான் வீரர்களைத் தவிர 30 வயதுக்கு மேற்பட்ட வீரர்கள், விளம்பு நிலை வீரர்கள் அதாவது ஐபிஎல் தொடரில் மட்டும் விளையாடும் வீரர்கள், சில சீசன்களாக திறமையை வெளிப்படுத்தாத வீரர்களுக்கு இந்தத் சீசன் கடைசியாக இருக்கலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். 40 வயதைக் கடந்தாலும் தோனிக்கு இருக்கும் பிராண்ட் மதிப்பு, விளம்பரம், வர்த்தகரீதியான மதிப்பு ஆகியவை அவரை இன்னும் விளையாட வைக்கலாம். அதேபோல கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு அறிவித்தாலும், ரசிகர்களின் மத்தியில் இருக்கும் வரவேற்பால், இன்னும் சில ஆண்டுகள் ஐபிஎல் தொடரில் விளையாடலாம். ஆனால், இவை அனைத்துமே கணிப்பாகத்தான் இருக்குமே தவிர நிதர்சனத்தில் ஏதும் மாறலாம். ஐபிஎல் தொடரை வைத்து வீரர்கள் இந்திய அணிக்குள், அல்லது பிற அணிகளுக்குள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்களா என்ற கேள்விக்கு விளையாட்டுத்துறை மூத்த பத்திரிகையாளர் முத்து குமார் பிபிசி செய்திகளுக்கு அளித்த பேட்டியில் “ ஐபிஎல் தொடர் என்பது முழுமையான வர்த்தக நோக்கோடு நடத்தப்படும் தொடர். இதை வைத்து ஒவ்வொரு நாட்டு அணியும், பிசிசிஐ நிர்வாகமும் வீரர்களைத் தேர்வு செய்கிறார்கள் என்று கூறிவிட முடியாது. சில வீரர்கள் ஐபிஎல் தொடரில் சிறப்பாக ஆடியதால் அணிக்குள் வந்திருக்கலாம். ஆனால், இது அளவுகோலாக கருத முடியாது” எனத் தெரிவித்தார். ஐகான் வீரர்களுக்கு வயதாகிவிட்டதால் ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவார்களா என்று கேட்டபோது “ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடாத வெளிநாட்டு வீரர்கள், வயது காரணமாக ஆண்டுதோறும் வீரர்கள் செல்வது இயல்புதான். ஆனால், இதில் தோனி, கோலி, ரோஹித் சர்மா, ஷகர் தவண் இவர்களைக் கணக்கில் சேர்க்க முடியாது. இதில் இஷன் கிஷன், ரிஷப் பந்த் ஆகியோரும் வருவார்கள். "இவர்கள் மீது கோடிக்கணக்கான முதலீடுகளை விளம்பர நிறுவனங்கள் செய்துள்ளன. இவர்களே நினைத்தாலும்கூட ஐபிஎல் தொடரில் இருந்து விலக முடியாது என தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்த அளவுக்கு இவர்கள் மீது பிராண்ட் கட்டமைக்கப்பட்டுள்ளது. இதற்கு ஐபிஎல் கட்டமைப்பும் ஒரு காரணம்,” என்றார் முத்துக்குமார். "ஐபிஎல் முழுக்க முழுக்க வணிக ரீதியில்தான் நடத்தப்படுகிறது. அணிகளின் நிர்வாகங்களுக்கு லாபம்தான் முழுமையாக நோக்கமாக இருக்கிறது,” என முத்துக்குமார் தெரிவித்தார். ‘தோனி நினைத்தாலும் ஓய்வு பெற முடியாது’ தோனி, கோலி, ரோஹித் சர்மாவுக்கு வயதாகிவிட்டதால் அவர்களுக்கு இந்தத் தொடர் கடைசியாக இருக்குமா என்று கேட்டபோது, “தோனி, கோலி, ரோஹித் ஆகியோர் ஐகான் வீரர்கள். இவர்கள் மீது வர்த்தகரீதியான அழுத்தம் விழுந்துள்ளது. ஆதலால், ஓய்வு என்பது ஐகான் வீரர்களின் தனிப்பட்ட முடிவு இல்லை என்பது என்னுடைய கருத்து,” என்றார் முத்துக்குமார். “ஆதலால், தோனி, ரோஹித், கோலி ஆகியோர் இன்னும் சில ஆண்டுகள்கூட விளையாடலாம்,” என்கிறார் அவர். மேலும், “விளம்பு நிலை வீரர்கள், ஐபிஎல் தொடரை மட்டுமே நம்பி இருக்கும் வீரர்கள், வெளிநாட்டு வீரர்கள் ஆகியோருக்கு இந்தத் தொடரில் சரியாக விளையாடாவிட்டால் அடுத்த சீசனில் நீக்கப்படலாம். குறிப்பாக ஆந்த்ரே ரஸல், சுனில் நரேன், இசாந்த் சர்மா, உமேஷ் யாதவ், அமித் மிஸ்ரா, பியூஷ் சாவ்லா, ஷமி, மணிஷ் பாண்டே ஆகியோர் வயது காரணமாகவும், உடற்தகுதி காரணமாகவும் அடுத்தசீசனில் காணாமல் போகலாம் என்பது என்னுடைய கணிப்பு. ஆனால், ஐகான் வீரர்களுக்கான மார்க்கெட் இருக்கும்வரை ஐபிஎல் தொடரில் விளையாடலாம்,” எனத் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ce5ke3e43jno
-
விராட் – அனுஷ்கா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை
சர்வதேச கிரிக்கெட்டில் முன்னணி வீரர் விராட் கோலி. இந்திய அணிக்காக விளையாடி வரும் விராட் கோலி பொலிவுட் நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு பெண் குழந்தை உள்ளது. இந்த நிலையில், விராட் கோலி – அனுஷ்கா ஷர்மா தம்பதிக்கு இரண்டாவதாக அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அத்தம்பதி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக அனுஷ்கா ஷர்மா தனது இன்ஸ்டாகிராம் அக்கவுண்டில் பதிவிட்டுள்ளார். அதில், “பெப்ரவரி 15 ஆம் திகதி எங்கள் ஆண் குழந்தை அகாயையும், வமிகாவின் சிறிய சகோதரனையும் இந்த உலகிற்கு வரவேற்றோம் என்பதை மிகுந்த மகிழ்ச்சி மற்றும் மனம் முழுக்க அன்புடன், உங்களிடம் பகிர்ந்து கொள்கிறோம். எங்கள் வாழ்க்கையில் மிகவும் அழகான இந்த நேரத்தில் உங்கள் அனைவரின் அன்பு மற்றும் வாழ்த்துக்களை எதிர்நோக்குகிறோம். இந்த நேரத்தில் எங்களின் தனிமைக்கு மரியாதை அளிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். அன்பும், நன்றியும், விராட் மற்றும் அனுஷ்கா,” என குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/292729
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
இஸ்ரேலியர்கள் மீது மீண்டும் தாக்குதல் - மர்மநபர்களின் துப்பாக்கி சூட்டில் இருவர் பலி இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பினர் இடையே கடுமையான சண்டை நடந்து வருகிறது. காசா உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக இஸ்ரேல் படை குண்டுகளை வீசி வருவதால் இறந்தவர்களின் எண்ணிக்கை 26 ஆயிரத்தை தாண்டி விட்டது. இந்த சூழ்நிலையில் இஸ்ரேலியர்கள் மீது மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தி உள்ளனர். இஸ்ரேல் ஆக்கிரமித்துள்ள மேற்கு கரை பகுதியில் கிழக்கு ஜெருசலேம் பிரதான நெடுஞ்சாலையில் உள்ள சோதனை சாவடி அருகே மர்ம நபர்கள் 3 பேர் காரில் சென்றவர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டனர். இதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே குண்டு பாய்ந்து இறந்தனர். ஒரு பெண் உட்பட 5 பேர் படுகாயம் அடைந்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வீரர்கள் மர்ம நபர்கள் 2 பேரை பதிலடி தாக்குதல் நடத்தி சுட்டுக்கொன்றனர். மற்றொருவரை மடக்கி பிடித்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 2 பேரும் இஸ்ரேல் மேற்கு கரையையொட்டியுள்ள பாலஸ்தீன நகரமான பெத்லகேம் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. துப்பாக்கி சூட்டில் படுகாயம் அடைந்த 5 பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காசாவில் சண்டை நடந்து வரும் நிலையில் இஸ்ரேலியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டு இருப்பது மேலும் பதற்றத்தை அதிகரித்து உள்ளது. https://thinakkural.lk/article/292963
-
புலம்பெயர் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பம்
23 FEB, 2024 | 06:12 PM புலம்பெயர்ந்து வாழும் இலங்கையர்களை கணக்கெடுக்கும் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்படும் என வெளிநாடு வாழ். இலங்கையருக்கான அலுவலகத்தின் பணிப்பாளர் நாயகம் வீ. கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார். ஜனாதிபதி ஊடகப் பிரிவின் ஏற்பாட்டில் நடத்தப்படும் பேசாப்பொருள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், புலம்பெயர்வு என்பது புதிய விடயமல்ல. மனித வாழ்க்கை முறை ஆரம்பித்த காலத்திலிருந்து பல்வேறுபட்ட காரணங்களுக்காக இடம்பெயர்வுகள் நிகழ்ந்துள்ளன. மனிதன் தனக்கு சாத்தியமான வளங்கள் காணப்படும் பகுதிகளை நோக்கி நகர்வதை காண முடிகிறது. இன்றளவில் நியூசிலாந்து வட அமெரிக்கா வரையில் இலங்கை உலகின் பல பகுதிகளில் தமிழர்கள் வாழ்கிறார்கள். இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இடைக்கால வரவு செலவு திட்டத்தில் வெளிநாட்டு வாழ். இலங்கையர்களுக்கான நிதியம், அலுவலகம், அலுவலகச் சட்டமூலம் உள்ளிட்ட மூன்று விடயங்கள் குறித்து சுட்டிக்காட்டியிருந்தார். அதற்கமைய வெளிநாடு வாழ். இலங்கையர்களுக்கான அலுவலகம் கடந்த வருடத்தின் இறுதியில் கொழும்பு பழைய சார்டட் கட்டடத்தில் அமைச்சரவை அனுமதியுடன் திறந்து வைக்கப்பட்டது. இலங்கையர்கள் இதுவரையில் 5 அலையாக வெளிநாடுகளுக்குச் சென்றுள்ளனர். 2.5 - 3 மில்லியன் வரையில் இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்திருப்பதாக அண்ணளவாக கணக்கிட்டுள்ளோம். அவர்களில் 1.6 மில்லியன் பேர் புலம்பெயர்ந்த தொழிலாளர்களாக உள்ளனர். தொழிலாளர்கள் பதிவு செய்துவிட்டு செல்வதால் அவர்களுடைய தகவல்கள் எம்மிடத்தில் உள்ளன. ஏனைய காரணங்களுக்காக புலம்பெயர்ந்தவர்கள் பற்றிய தகவல்கள் சரியான வகையில் இல்லை. ஆனால், விரைவில் மற்றைய தூதரங்களைத் தொடர்பு கொண்டு இவர்கள் பற்றிய தகவல்களை நாம் சேகரிக்க முயற்சிக்கிறோம். அதற்காக அவர்களின் சுய விருப்பத்தின் பேரில் சில அடிப்படை தகவல்களை மாத்திரம் அவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கிறோம். இந்த தகவல்களின் இரகசியத்தன்மை முழுமையாக பாதுகாக்கப்படும் என்பதோடு, இந்த அலுவலகம் வெளிநாட்டு வாழ். இலங்கையர்களையும் தாயகத்தையும் ஒன்றிணைக்கும் மையப்புள்ளியாக செயற்படும் என்று தெரிவித்தார். https://www.virakesari.lk/article/177149
-
கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா
கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலய திருவிழாவுக்கு தலைமன்னாரிலிருந்து 40 படகுகளில் பக்தர்கள் பயணம் 23 FEB, 2024 | 06:18 PM கச்சதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் இவ்வருட திருவிழாவை சிறப்பிக்கும் முகமாக மன்னார் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் மக்கள் பயணமாகியுள்ளனர். அந்த வகையில், இன்று வெள்ளிக்கிழமை (23) 40 படகுகளில் 400க்கும் மேற்பட்ட பக்தர்கள் தலைமன்னார் துறைமுகத்தின் ஊடாக கச்சதீவு தேவாலயத்துக்கு சென்றுள்ளனர். இன்று மாலை வழிபாடுகளுடன் ஆரம்பமாகும் திருவிழாவானது நாளை சனிக்கிழமை (24) காலை யாழ்ப்பாணம் நெடுந்தீவு பங்கின் பங்குத்தந்தையர்களின் தலைமையில் விசேட திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டு புனித அந்தோனியார் தேவாலய திருவிழா சிறப்பாக நடைபெறவுள்ளது. மேலும், இந்த திருவிழாவுக்கு இந்தியாவிலிருந்து பக்தர்கள் எவரும் வருகை தரவில்லை என தேவாலயத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/177148
-
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு பதிலாக புதிய ஆணைக்குழு
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்குப் பதிலாக தேசிய உயர்கல்வி அபிவிருத்தி ஆணைக்குழுவை நிறுவுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பான சட்டமூலம் மார்ச் மாத இறுதிக்குள் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டுக்கு முன்னதாக இந்த சட்டமூலம் குறித்து விவாதம் நடத்த எதிர்பார்ப்பதாக அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையின் அடிப்படையில் புதிய ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும். ஜனாதிபதி மற்றும் அரசியலமைப்புச் சபையால் நியமிக்கப்பட்ட 11 உறுப்பினர்களை இந்த ஆணைக்குழு உள்ளடக்கும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/292967
-
வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்குப் பெரும்பான்மை இனப் பேராசிரியரும் விண்ணப்பம்!
வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்குப் பெரும்பான்மை இனப் பேராசிரியர் உட்பட நால்வர் விண்ணப்பம்! Published By: DIGITAL DESK 3 23 FEB, 2024 | 03:54 PM வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கு பெரும்பான்மை இனப் பேராசிரியர் ஒருவர் உட்பட நான்கு விண்ணப்பங்கள் கிடைத்துள்ளதாக அறிய வருகிறது. தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தின் பேரவைச் செயலாளரால் புதிய துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. அதற்கான இறுதித் தினம் நேற்று 21 ஆம் திகதி புதன்கிழமையாகும். நேற்றுப் பிற்பகல் 3:00 மணியுடன் துணைவேந்தர் பதவிக்கான விண்ணப்பங் கோரல் நிறைவடைந்த வேளையில் வவுனியாப் பல்கலைக் கழகப் பேராசிரியர்கள் இருவரும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழப் பேராசிரியர் ஒருவரும், ருகுண மற்றும் ரஜரட்ட பல்கலைக் கழகங்களில் பணியாற்றிய பெரும்பான்மை இனப் பேராசிரியர் ஒருவருமாக நான்கு பேர் துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. எதிர்வரும் 24 ஆம் திகதி சனிக்கிழமை நடைபெறவுள்ள பல்கலைக்கழகப் பேரவையின் மாதாந்தக் கூட்டத்தில் பேரவையின் பதவிவழிச் செயலாளரான பதிவாளரால் நால்வரது விண்ணப்பங்களும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பேரவை விண்ணப்பங்களை ஆராய்ந்த பின்னர் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கு அமைய விசேட பேரவைக் கூட்டத்துக்கான திகதியைத் தீர்மானிக்கும். அன்றைய விசேட பேரவைக் கூட்டத்தில் தெரிவுக்கான புள்ளிகள் வழங்கப்பட்டு, புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெறுபவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்படும். பல்கலைக் கழகச் சட்டத்தின் படி ஜனாதிபதிக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் துணைவேந்தராக ஜனாதிபதி தெரிவு செய்து, நியமனம் செய்வார். https://www.virakesari.lk/article/177136
-
தேசிய வருமான வரி : வருடத்திற்கு 12 இலட்சத்துக்கும் அதிக வருமானம் பெறுபவர்கள் உட்பட 14 தொழிற்துறைகளை சார்ந்தவர்கள் பதிவு செய்தல் கட்டாயம்
அடுத்த வாரம் TIN தொடர்பான முன்மொழிவு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும் வரி பதிவுக்கான வரி அடையாள இலக்கம் அல்லது TIN இலக்கம் வழங்குவது தொடர்பான யோசனை அடுத்த வாரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கான தேசிய அடையாள அட்டைகளை வழங்கும் போது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை TIN இலக்கமாக பயன்படுத்துவதற்கு அமைச்சரவை பத்திரம் தயாரிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பான பிரேரணை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக ஆறு நிறுவனங்களிடமிருந்து பரிந்துரைகள் கோரப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். இதுவரை நான்கு நிறுவனங்கள் பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/292953
-
யாழில் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் தாக்குதல்!
யாழில் சிறுவர் இல்ல மாணவன் மீது ஆசிரியர் கொடூரத் தாக்குதல்! 23 FEB, 2024 | 03:37 PM யாழ்ப்பாணம் - திருநெல்வேலியில் அமைந்துள்ள பிரபல பாடசாலையொன்றில் கல்வி பயிலும் சிறுவர் இல்ல மாணவனை ஆசிரியர் மிலேச்சத்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். 9ஆம் தரத்தில் கல்வி பயிலும் இந்த மாணவனை விளையாட்டுத்துறைக்குப் பொறுப்பான ஆசிரியர் அழைக்க, மாணவன் அந்த இடத்துக்குச் செல்லவில்லை. இதனால் கோபமடைந்த ஆசிரியர், உடலில் காயங்கள் ஏற்படும் வகையில் மாணவனை தடியால் அடித்துள்ளார். ஆசிரியர் முரட்டுத்தனமாக தாக்கியதில் சிறுவனின் கைகளில் இரத்தக் காயங்கள் ஏற்பட்டுள்ளன. சிறுவர் இல்ல மாணவன் என்று தெரிந்தும் இப்படி மனிதாபிமானம் இல்லாமல் ஆசிரியர் தாக்கியமை, தாக்குதலை நேரில் கண்ட மாணவர்கள், ஆசிரியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. https://www.virakesari.lk/article/177133
-
இலங்கை மனிதப் புதைகுழி போர் நடைபெற்ற காலத்தை சேர்ந்தது – அறிக்கை கூறும் அதிர்ச்சித் தகவல்
கட்டுரை தகவல் எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத் பதவி, பிபிசி தமிழுக்காக 23 பிப்ரவரி 2024, 10:43 GMT புதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர் இலங்கையில் கடந்த 30 ஆண்டுகளாக, இருபதுக்கும் அதிகமான மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டு வருகின்றன. இந்நிலையில், முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி சமீபத்தில் அடையாளம் காணப்பட்டது. இலங்கையில் 56 மனித புதைகுழிகள் இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற நிலையில், இதுவரை 21 மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த பின்னணியில், முல்லைத்தீவு நீதிமன்றத்தில் இந்த மனிதப் புதைகுழியின் காலப்பகுதி தொடர்பான அறிக்கையொன்றை தொல்பொருள் அதிகாரிகள் சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கை இப்புதைகுழியின் காலப்பகுதி இலங்கையில் உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலப்பகுதியுடன் ஒத்துப் போகின்றதாகச் சொல்கிறது. கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி குடிநீர் குழாய் பதிக்கும்போது வெளிவந்த புதைகுழி முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி கடந்த ஆண்டு ஜுன் மாதம் 29-ஆம் தேதி அடையாளம் காணப்பட்டது. கொக்குத்தொடுவாய் பகுதியில் குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப் பணிகளின் போது இந்த மனித புதைகுழி அடையாளம் காணப்பட்டது. கொக்குத்தொடுவாய் - முல்லைத்தீவு பிரதான வீதியோரத்தில் இந்த மனித புதைகுழி அடையாளம் காணப்பட்டது. குழாய் நீர் பொருத்தும் நடவடிக்கைகளுக்காக வீதியோரத்தில் அகழ்ந்த சந்தர்ப்பத்தில் மனித எச்சங்கள் மற்றும் பெண்களின் உள்ளாடைகள் சில அடையாளம் காணப்பட்டன. இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதை நிலையில், குறித்த அகழ்வு பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன. அதையடுத்து, நீதவான் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதை அடுத்து, ஜுலை மாதம் 6-ஆம் தேதி நீதவான் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. பட மூலாதாரம்,JDS,FOD, CHRD, ITJP 40 மனித எலும்புக்கூடுகள் மீட்பு குறித்த பகுதியில் மனித புதைகுழி காணப்படுகின்றதா என்பதை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு, புதைகுழி இருப்பதை நீதவான் உறுதிப்படுத்தினார். அதையடுத்து, இந்த சம்பவம் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதி ஒதுக்கீடு உள்ளிட்ட விடயங்கள் குறித்து ஆராயப்பட்டு, அகழ்வு பணிகளை முன்னெடுக்க நீதவான் உத்தரவு பிறப்பித்திருந்தார். இந்த நிலையில், முதல் கட்ட அகழ்வுப் பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 6-ஆம் தேதி நடாத்தப்பட்டது. இவ்வாறு மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளின் ஊடாக 40 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் மீட்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால அறிக்கை படக்குறிப்பு, மன்னார் மனித புதைக்குழி தொடர்பாக அமெரிக்காவில் கார்பன் ஆய்வு செய்யப்பட்ட போது புதைகுழியின் காலகட்டம் என்ன? கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி தொடர்பான இடைகால அறிக்கையை, தொல்லியல்துறை சிரேஷ்ட பேராசிரியர் ராஜ் சோமதேவ முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நேற்றைய தினம் சமர்ப்பித்திருந்தார். இந்த இடைகால அறிக்கையின் பிரகாரம், குறித்த மனித புதைக்குழி 1994-ஆம் ஆண்டுக்கு முற்படாததும், 1996-ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியை கொண்டிருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளதாக வழக்குரைஞர் கே.வி.நிறஞ்சன் தெரிவிக்கின்றார். கொக்குத்தொடுவாய் மனித புதைக்குழி வழக்கு மீதான விசாரணைகள் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்தில் நேற்றைய தினம் (வியாழன், பிப்ரவரி 22) எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார். ''ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்களிலிருந்தும், பிறிதான எடுக்கப்பட்ட பிற பொருட்கள் தொடர்பான அறிக்கை பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களினால் இன்று நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதன் அடிப்படையில், நீதவான் பிரதீபனினால் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதற்கமைவாக எடுக்கப்பட்ட பொருட்களின் அடிப்படையில் பகுப்பாய்வு செய்யப்பட்ட போது, இது 1994-ஆம் ஆண்டுக்கு முற்படாததும், 1996-ஆம் ஆண்டுக்கு பிற்படாததுமான காலப்பகுதியை கொண்டிருக்கலாம் என்று பல பக்க அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன,” என்கிறார் அவர். படக்குறிப்பு, கே.வி.நிறஞ்சன் புதைகுழியில் கிடைத்த பொருட்கள் என்ன? மேலும் பேசிய அவர், “அதனடிப்படையில், இது இடைக்கால அறிக்கையாக பார்க்கப்படுகின்றது. அத்துடன், எஞ்சிய மனித எச்சங்களை அகழ்ந்து எடுப்பதற்கான அநேகமாக மார்ச் மாதம் 4-ஆம் தேதி தொடங்க இருக்கின்றது. அதற்கான பண உதவிகள் அமைச்சகத்தினால் வழங்கப்படும் பட்சத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது," என வழக்குரைஞர் கே.வி.நிறஞ்சன் தெரிவிக்கின்றார். இந்த மனித புதைக்குழியிலிருந்து கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்களின் வயது, அதன் பால் மற்றும் இறப்புக்கான காரணம் போன்ற அறிக்கைகள் இன்னும் வெளிவராது நிலுவையில் உள்ளதாக வழக்கறிஞர் கே.வி.நிறஞ்சன் மேலும் குறிப்பிடுகின்றார். ''மனித எலும்புகள் தொடர்பாக இந்த அறிக்கை வெளிவரவில்லை. புதைக்குழியிலிருந்து எடுக்கப்பட்ட வேறு பொருட்கள் தொடர்பாகவே அறிக்கை வெளிவந்துள்ளது. இனிப்பு பண்டங்களின் கடதாசிகள், துப்பாக்கி தோட்டாக்கள், ஆடைகள் உள்ளிட்ட பொருட்களின் அடிப்படையிலேயே இந்த காலப்பகுதிக்குள் இருக்கலாம் என்று பேராசிரியர் ராஜ் சோமதேவ இந்த அறிக்கையை சமர்ப்பித்துள்ளார். "முழுமையான அறிக்கை இதுவரை கிடைக்கவில்லை. நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்ட அறிக்கையில் இது மாத்திரமே சொல்லப்பட்டுள்ளது. அறிக்கையை பெற்றுக்கொள்ள நாம் அனுமதித்துள்ளோம். ஓரிரு தினங்களில் முழமையான அறிக்கை கிடைக்கவாய்ப்புள்ளது," என வழக்குரைஞர் கே.வி.நிறஞ்சன் பிபிசி தமிழுக்கு கூறினார். ‘யுத்தகாலத்து புதைகுழியாக இருக்கலாம்’ பிபிசி தமிழிடம் பேசிய முல்லைத்தீவு சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவ, "இந்த மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகள் கடந்த ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, இரண்டு கட்டங்களாக நடத்தப்பட்டன. அப்போது அகழ்வாய்வு பணிகளில் ஈடுபட்ட தொல்பொருளியியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ அவர்களின் இடைகால அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது,” என்றார். "இடைக்கால அறிக்கையின் படி தொல்பொருளியியல் குழுவினரால் 40 சடலங்கள் ஆராயப்பட்டுள்ளன. அவர்களின் முடிவுகளின் பிரகாரம், இந்த சடலங்கள் சமய ஆச்சார முறைப்படி அல்லாமல் மிக விரைவாக இந்த சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளன. "அத்துடன், இந்த சடலங்கள் 94-ஆம் ஆண்டுக்கும், 96-ஆம் ஆண்டு காலப்பகுதிக்கும் இடையில் நடைபெற்ற யுத்தத்தினால் இறந்தபோது புதைக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகின்றது," என கனகசபாபதி வாசுதேவ தெரிவிக்கின்றார். படக்குறிப்பு, கனகசபாபதி வாசுதேவ முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடவடிக்கைகளை தொடர்ந்தும் முன்னெடுக்க முல்லைத்தீவு நீதிமன்றம் தீர்மானித்துள்ளதாகவும் சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவ குறிப்பிடுகின்றார். எனினும், இந்த மனித புதைகுழியின் அகழ்வுப் பணிகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு இதுவரை நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்படவில்லை என அவர் கூறுகின்றார். இந்த விடயம் தொடர்பாக முல்லைத்தீவு அரசாங்க அதிபர், நீதி அமைச்சகத்தின் செயலாளருக்கு கடிதம் மூலம் அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். இந்த நிதியுதவி கிடைக்கும் பட்சத்தில், கொக்குத்தொடுவாய் அகழ்வு பணிகளை மார்ச் மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் சட்ட மருத்துவ அதிகாரி கனகசபாபதி வாசுதேவ குறிப்பிடுகின்றார். இந்த வழக்கு மீதான விசாரணைகள் எதிர்வரும் மார்ச் மாதம் 4-ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 1800-களைச் சேர்ந்த புதைகுழி என்பது சரியா? பிபிசி தமிழிடம் பேசிய ‘காணாமல் போனோர் குடும்பங்கள் ஒன்றிய’த்தின் தலைவர் பிரிட்டோ பெர்ணான்டோ, "நாம் அகழ்ந்த அனைத்து மனித புதைகுழிகளிலும், உதாரணமாக மாத்தளை, மன்னார் உள்ளிட்ட மனித புதைக்குழிகள் தொடர்பாக கிடைக்கப் பெற்ற அறிக்கையின் பிரகாரம், இந்த மனித புதைகுழிகள் 1800-களில் இடம்பெற்ற கிளர்ச்சிகள் என்றே இறுதி பெறுபேறாக அமைந்தது," என்றார். "ஆனால், அதனை நாம் நம்ப போவதில்லை. எனினும், சட்டத்திற்கு முன்பாக அதனை சவாலுக்கு உட்படுத்தும் போது, அது தொடர்பான விஞ்ஞான ரீதியான சாட்சியங்கள் எப்படி வெளிவரும் என கூற முடியாது. எனினும், நீதிமன்றங்கள் விஞ்ஞான ரீதியான அறிக்கைகளையே ஏற்றுக்கொள்கின்றன," என்றார். "குறிப்பாக, மாத்தளை மனித புதைகுழி தொடர்பாக கிடைக்கப் பெற்ற கார்பன் அறிக்கையில் குறிப்பிடப்பட்டது ஒன்று. இலங்கை நிபுணர்கள் கூறியது வேறொன்று. அதேபோன்றே, கொக்குத்தொடுவாய் தொடர்பாக உள்ளுர் நிபுணர்கள் என்ன கூறினாலும், சர்வதேச ரீதியில் வேறொரு கருத்து வரக்கூடும்," என்றார். மேலும், "ஆட்சியிலுள்ள அரசாங்கங்களுக்கு நியாயமான அரசியல் தேவை இல்லையென்றால், இந்த சம்பவங்கள் தொடர்பான உண்மைளை வெளிக்கொணர்வதற்கு எந்தவொரு உடலையும் பழைய உடலாக மாற்ற முடியும்," என்றார். பட மூலாதாரம்,BRITO FERNANDO படக்குறிப்பு, பிரிட்டோ பெர்ணான்டோ மேலும் பேசிய பிரிட்டோ பெர்ணான்டோ, "இந்த விடயத்திற்கு இன்றும் நாங்கள் நிர்கதி நிலையில் உள்ளோம். மக்கள் கருத்துக் கணிப்பொன்றை ஏற்படுத்தி, அதனை சரியான முறையில் செய்வதற்கு நாங்கள் இன்றும் நிர்கதியாகியுள்ளோம். இவ்வாறு கூறப்படுகின்ற கருத்தை எம்மால் நம்ப முடியாதுள்ளது. ஏனென்றால், பழைய அனுபவங்களின் ஊடாக கூறுகின்றேன். இந்த கருத்தை நம்ப முடியாது," என்று பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். போர் நடைபெற்ற பகுதியொன்றிலிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மனித புதைகுழி, போர் இடம்பெற்ற காலப் பகுதிக்கு உரித்துடையது என்ற நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையிலான உள்நாட்டு நிபுணர்களினால் வெளியிடப்பட்ட முதலாவது அறிக்கையாக இது அமைந்துள்ளது என அவர் கூறுகின்றார். ''காணாமல் போன மக்களின் அறிக்கையொன்றை வழங்குமாறு வவுனியா நீதிமன்றம் ராணுவத்திற்கு உத்தரவு பிறப்பிக்கின்றது. ஆனால், ராணுவம் இன்றும் அதனை வழங்கவில்லை. குறித்த அறிக்கைகளை நீதிமன்றத்திடம் சமர்ப்பிக்குமாறு காணாமல் போனோர் அலுவலகம் பல கடிதங்களை அனுப்புகின்றது. அதனை கருத்தில் கொள்ளவில்லை. "அவ்வாறான நாடொன்றிலேயே நாம் வாழ்ந்து வருகின்றோம். எந்த அறிக்கைகளை வழங்கினாலும், அரசாங்கத்தின் அரசியல் தேவைகளுக்கு இதனை கீழ்படிய வைக்க முடியும். அதனால், இது போர் நடைபெற்ற காலப்பகுதிக்கு சொந்தமானது என ராஜ் சோமதேவ அவர்கள் கூறுகின்றார்கள் என்றால், அந்த காலப் பகுதியில் அந்த பகுதியை ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்தது என்றால், இனி வேறு என்ன சாட்சி தேவைப்படுகின்றது. "எனினும், நீதிமன்றத்தில் அதனை உறுதிப்படுத்த முயற்சித்தால், அதனை எம்மால் உறுதிப்படுத்த முடியாது போகும்," என அவர் மேலும் குறிப்பிடுகின்றார். பாதுகாப்பு அமைச்சகத்தின் பதில் பட மூலாதாரம்,MOD, SRI LANKA படக்குறிப்பு, நலின் ஹேரத் பேராசிரியர் ராஜ் சோமதேவவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்ட காலப்பகுதியானது, குறித்த மனித புதைக்குழி காணப்பட்ட கொக்குத்தொடுவாய் நிலப்பரப்பு முழுமையாக ராணுவத்தின் கட்டுப்பாட்டில் இருந்ததாக அந்த பிரதேச மக்கள் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் தொடர்ச்சியாக கூறிவருகின்றனர். இந்த நிலையில், இது குறித்து பிபிசி தமிழ் இலங்கை பாதுகாப்பு அமைச்சகத்திடம் கேள்வி எழுப்பியது. ''இந்த சம்பவம் தொடர்பிலான தகவல்களை ஆராய்ந்து, பதிலை பின்னர் கூறுகின்றேன்," என, பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பேச்சாளர் கேணல் நலின் ஹேரத், பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/ce9572p748go
-
மின் கட்டண குறைப்பு தொடர்பான பிரேரணை மீளாய்வு!
மின் கட்டண குறைப்பு தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானிக்கப்படும் மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான தீர்மானம் எதிர்வரும் வாரத்தில் இலங்கை மின்சார சபைக்கு வழங்கப்படும் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது. மின்சாரக் கட்டணக் குறைப்பு தொடர்பான முன்மொழிவை CEB நேற்று PUCSL க்கு சமர்ப்பித்ததாக ஆணைக்குழு தெரிவித்துள்ளது. பிரேரணையை ஆராய்ந்து, தரவுகளின் உண்மைச் சரிபார்ப்பின் பின்னர், அடுத்த வாரத்திற்குள் CEBக்கு பரிந்துரைகளை வழங்குவதாக PUCSL தெரிவித்துள்ளது. கடந்த ஒக்டோபர் மாதம் அதிகரிக்கப்பட்ட மின் கட்டணத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர அண்மையில் தெரிவித்திருந்தார். மத வழிபாட்டுத் தலங்கள், அரசு அலுவலகங்கள், சுற்றுலா விடுதிகள் ஆகியவற்றுக்கான உயர்த்தப்பட்ட மின் கட்டணம் அதே அளவு குறைக்கப்படும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/292961
-
பௌர்ணமி பொங்கலை தடுத்து நிறுத்திய பொலிஸார்
Published By: DIGITAL DESK 3 23 FEB, 2024 | 01:35 PM திருகோணமலை மாவட்டத்தின் எல்லைக்கிராமமான தென்னைமரவாடி கந்தசாமி மலை முருகன் ஆலயத்தில் வருடாந்த பொங்கல் வழிபாடுகளுக்கு சென்ற மக்களுக்கு புல்மோட்டை பொலிஸாரால் நீதிமன்ற தடையுத்தரவு வழங்கப்பட்டு பொங்கல் நிகழ்வை நடாத்த விடாது தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை (23) தென்னைமரவாடி மக்களால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கந்தசாமி மலை முருகன் ஆலயத்தின் மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் மற்றும் அன்னதான நிகழ்வினை புல்மோட்டை பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர். மாதாந்தம் பௌர்ணமி தினத்தன்று தென்னமரவாடி கிராம மக்களால் நடத்தப்படும் பொங்கல் விழா வழமை போன்று இன்றைய தினமும் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. இப்பொங்கல் விழாவிற்கு கிராம மக்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் பல பிரதேசங்களிலிருந்து பக்தர்கள் மற்றும் சிவில் அமைப்புகள் விழாவில் கலந்து கொள்ள வந்திருந்தனர். இச்சந்தர்ப்பத்தில் இக்கிராம மக்களால் பொங்கலுக்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் ஆலய வளாகத்திற்குள் திடீரென நுழைந்த நூறுக்கணக்கான பொலிஸார் மற்றும் விசேட அதிரடி படையினர், இராணுவத்தினர், புலணாய்வாளர்கள் கலகம் அடக்கும் ஆயுதங்களுடன் வருகை தந்து அப்பிரதேசத்திலிருந்த கிராம மக்களையும் வெளி பிரதேசத்திலிருந்து வருகை தந்த மக்களையும் காரணமின்றி தடுத்து வைத்தனர். புல்மோட்டை பொலிஸாரால் திருகோணமலை நீதவான் நீதிமன்றில் தென்னமராவடி கந்தசாமி மலை முருகன் கோவில் அமைந்துள்ள பிரதேசம் சங்கமலை புராதன விகாரைக்குரிய இடமான தொல்லியல் பிரதேசம் என்பதால் அப்பகுதிக்குள் உள்நுழைந்து இந்துமத வழிபாடுகளில் ஈடுபடுவது மற்றும் ஏதேனும் செயற்பாடுகளில் ஈடுபடுவது ஆர்ப்பாட்டம் ஏற்படக்கூடிய வகையில் செயற்பாடுகளை மேற்கொள்வது போன்ற நடவடிக்கைகளை தடுக்குமாறு கோரி புல்மோட்டை பொலிஸார் திருகோணமலை நீதவான் மன்றில் செய்த விண்ணப்பத்துக்கு ஏற்றவகையில் நீதிமன்றம் மேற்குறித்தவாறு தடை ஏற்படுத்தியுள்ளது. பொலிஸாரால் பெறப்பட்ட அந்த தடையுத்தரவில் தென்னைமரவாடி பகுதியைச் சேர்ந்த நான்கு தமிழ் மக்களின் பெயர் குறிப்பிட்டும், அகம் அமைப்பினர் மற்றும் தமிழ் தேசிய மக்கள் ஆகிய அனைவரும் குற்றவியல் நடவடிக்கை சட்டக்கோவை 106 (01) (3) பிரிவின் கீழ் இந்த தடையுத்தரவு செல்லுபடியாகும் என பொலிஸார் தடையுத்தரவை வழங்கி பொங்கல் நிகழ்வுக்கு வந்த தமிழ் மக்களை அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்டுள்ளனர். தென்னைமரவாடி பிரதேசம் முற்றுமுழுதாக தமிழ் மக்கள் நிறைந்து வாழும் வடக்கு கிழக்கு மாகாணத்தின் எல்லையில் திருகோணமலை மாவட்டத்தின் சிறப்பு வாய்ந்த தமிழ் கிராமமாகும் இந்த கிராமத்தில் உள்ள தமிழ் மக்கள் 1984 ஆம் ஆண்டு சிங்கள காடையர்கள் மற்றும் இராணுவத்தினரால் சுட்டும் வெட்டியும் கொல்லப்பட்டு கிராமத்தை தீயிட்டு கொளுத்தி கிராமத்தை விட்டு விரட்டியடிக்கப்பட்டனர் . மீண்டும் 2010 க்கு பின்னர் தமிழ் மக்கள் மீள்குடியேறிய பின்னர் அப்பகுதியில் உள்ள பெருமளவான தமிழ் மக்களின் இடங்கள் சிங்களமயமாக்கபட்டிருந்த நிலையில் கந்தசாமி மலை முருகன் கோவில் அமைந்துள்ள பகுதியும் தொல்லியல் பிரதேசம் என குறிப்பிட்டு புல்மோட்டை அரிசிமலை பகுதியில் உள்ள பனாமுரே திலகவன்ச என்ற பிக்குவும் இராணுவத்தினரும் தமிழ் மக்களின் வழிபாடுகளுக்கு தடை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177123
-
யாழில் பெண் உயிரிழந்த சம்பவம்: பஸ்ஸின் வழித்தட அனுமதி இரத்து
Published By: DIGITAL DESK 3 23 FEB, 2024 | 01:10 PM சாரதியின் அவசரத்தால் பெண்ணொருவர் உயிரிழந்த சம்பவத்தை அடுத்து, குறித்த பஸ்ஸின் வழித்தட அனுமதி வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினால் இரத்து செய்யப்பட்டள்ளது. யாழ்ப்பாணம் - அனலைதீவு பகுதியில் கடந்த திங்கட்கிழமை பஸ்ஸிலிருந்து பெண்ணொருவர் இறங்க முற்பட்டபோது சாரதி அவசரமாக பஸ்ஸை நகர்த்திமையால், அப்பெண் விழுந்து படுகாயமடைந்தார். பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்திருந்தார். சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஊர்காவற்துறை பொலிஸார் சாரதியை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து, நீதிமன்ற உத்தரவில் சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இந்நிலையில், குறித்த விபத்து சம்பவம் தொடர்பில் வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினர் விசாரணைகளை முன்னெடுத்து, பஸ்ஸின் வழித்தட அனுமதியினை இரத்து செய்துள்ளனர். பஸ்கள் போட்டி போட்டு ஓடுவதனாலேயே அதிகளவான விபத்துகள் இடம்பெற்று வருவதாகவும், அவ்வாறு அதிக வேகமாக பஸ்களை செலுத்தும் சாரதிகள் தொடர்பில், யாழ்.மாவட்ட செயலக வளாகத்தில் உள்ள வடமாகாண போக்குவரத்து அதிகார சபையினருக்கு முறையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/177120
-
தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் மணல் அகழ்விற்கு சென்றவர்களை தடுத்து நிறுத்திய மக்கள்
23 FEB, 2024 | 12:36 PM தலைமன்னார் இறங்கு துறை பகுதியில் நேற்று வியாழக்கிழமை (22) மாலை மணல் அகழ்வு பணியில் ஈடுபட வந்த நிலையில் அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தனர். தலைமன்னார் இறங்கு துறை, தலைமன்னார் ஊர் மனை, தலைமன்னார் ஸ்டேஷன் பகுதி மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்பை தெரிவித்தனர். இந்த நிலையில் தலைமன்னார் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு சென்றிருந்தனர். எவ்வித அனுமதியும் இன்றி மக்களுக்கு எவ்வித அறிவுறுத்தல்களும் வழங்கப்படாமல் மணல் அகழ்வு நடவடிக்கைகளுக்காக சகல ஆயத்தங்களுடனும் குறித்த குழுவினர் வருகை தந்ததாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அப்பகுதிக்கு வருகை தந்த மணல் பரிசோதனை குழுவினர் தாங்கள் ஒரு ஒப்பந்த நிறுவனம் என்றும் தமது ஒப்பந்தத்தினை காண்பித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மக்களின் எதிர்ப்பை தொடர்ந்து குறித்த குழுவினர் அங்கிருந்து வெளியேறியுள்ளதுடன் சம்பவ இடத்திற்கு வந்த தலைமன்னார் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/177113
-
நாட்டில் 40,000க்கும் மேற்பட்ட போலி வைத்தியர்கள்
Published By: DIGITAL DESK 3 23 FEB, 2024 | 12:45 PM நடளாவிய ரீதியில் 40,000 க்கும் அதிகமான போலி வைத்தியர்கள் உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் (GMOA) தெரிவித்துள்ளது. இவ்வாறான வைத்தியர்கள் ஆபத்தான நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்க பேச்சாளர் வைத்தியர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, வைத்திய உதவியாளர்கள், தாதியர்கள் அல்லது துணை வைத்திய சேவைகளில் அங்கம் வகிக்கும் ஒருவர் வைத்தியர் போன்று அடையாளப்படுத்தி அவர்கள் இருக்கும் கிராமத்திலோ அல்லது சொந்த ஊரிலோ நோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், இலங்கையின் சுகாதார அமைப்பிற்குள், ஒரு நோயாளிக்கு மருந்துகளை பரிந்துரைக்கும் திறனும், பொறுப்பும் மற்றும் அதிகாரமும் ஒரு வைத்தியருக்கு மட்டுமே உண்டு. அவ்வாறு செய்யக்கூடிய திறனோ அல்லது அதிகாரமோ வேறு யாருக்கும் இல்லை, நோயாளிக்கு வைத்தியர் ஒருவரால் பரிந்துரைக்கப்பட்ட மருந்து அல்லது ஆய்வக சோதனைக்கு மட்டுமே உட்படுத்த முடியும் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/177110
-
நிலாவில் தரையிறங்கிய தனியார் விண்கலம்
நிலாவில் தரையிறங்கிய தனியார் விண்கலம் அமெரிக்கா கொண்டாடும் அளவுக்கு என்ன செய்யப்போகிறது? பட மூலாதாரம்,INTUITIVE MACHINES படக்குறிப்பு, அமெரிக்கா கடந்த அரை நூற்றாண்டு காலமாக நிலாவுக்கு செல்லாத குறையை, இன்டுயடிவ் மெஷின்ஸ் நிறுவனம் போக்கியுள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், ஜொனாதன் அமோஸ் பதவி, அறிவியல் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க நிறுவனம் ஒன்று நிலவில் விண்கலத்தை தரையிறக்கிய முதல் வணிக நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது. ஹூஸ்டனை தளமாகக் கொண்ட இன்டுயடிவ் மெஷின்ஸ்(Intuitive Machines) நிறுவனம் அதன் ஒடிசியஸ்(Odysseus) ரோபோவை நிலவின் தென் துருவத்திற்கு அருகில் தரையிறக்கியுள்ளது. விண்கலம் தற்காலிகமாக செயலிழந்ததை கண்டுபிடிக்க சில நிமிடங்கள் ஆனதாகவும், ஆனால், சிறிது நேரத்தில், அது சரி செய்யப்பட்டு, சமிக்ஞைகள் கொடுக்கத் தொடங்கியதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. “தற்போது எந்த சந்தேகமும் இன்றி எங்களின் உபகரணங்கள் நிலவின் மேற்பரப்பில் உள்ளது என்பதை எங்களால் உறுதியாச் சொல்ல முடியும். நாங்கள் அவற்றிக்கு தகவல் கொடுக்கிறோம்,” என திட்டத்தின் இயக்குநர் டிம் கிரெய்ன் அறிவித்தார். இந்த செய்தியைக் கேட்ட அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் கைதட்டி, ஆரவாரம் செய்து, உற்சாகமடைந்தனர். விண்வெளியின் வணிக நோக்கத்திற்காக மட்டுமல்லாமல், பொதுவாக, அமெரிக்க விண்வெளித் திட்டத்திற்கும் இந்த வெற்றி முக்கியமானது.D இன்டுயட்டிவ் மெஷின்ஸ் நிலவின் மேற்பரப்புக்குச் சென்றதன் மூலம், அமெரிக்காவில் புதிய சாதனையைப் படைத்துள்ளது. அமெரிக்கா கடந்த அரை நூற்றாண்டு காலமாக நிலவிற்கு செல்லாத குறையை, இன்டுய்டிவ் மெஷின்ஸ் நிறுவனம் போக்கியுள்ளது. கடைசியாக, அமெரிக்க விண்வெளி நிறுவனமான நாசா 1972இல் தங்களின் விண்கலத்தை நிலவில் தரையிறக்கியிருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, விண்கலத்தில் உயரத்தையும் வேகத்தையும் கணக்கிடும் லேசர்கள் திடீரென சரியாக வேலை செய்யவில்லை. கடைசி நிமிடத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு நாசாவின் நிர்வாகி பில் நெல்சன் தனியார் நிறுவனத்தின் இந்த வெற்றிக்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். “அமெரிக்க மீண்டும் நிலவுக்கு சென்றுவிட்டது. இன்று மனிதகுல வரலாற்றில், முதன்முறையாக ஒரு அமெரிக்க வணிக நிறுவனம், நிலாவுக்கு தனது பயணத்தை தொடங்கியுள்ளது. இது நாசாவின் வணிக கூட்டின் சக்தியைக் காட்டுகிறது,” என்றார் பில் நெல்சன். தரையிறங்கும் பணி தொடங்குவதற்கு முன்பே, அந்த விண்கலத்தின் கட்டுப்பாட்டாளர்கள் மிக மோசமான தொழில்நுட்பச் சிக்கலைச் சமாளிக்க வேண்டியிருந்தது. விண்கலத்தில் உயரத்தையும் வேகத்தையும் கணக்கிடும் லேசர்கள் திடீரென சரியாக வேலை செய்யவில்லை. ஆனால், நல்வாய்ப்பாக, நாசாவிடமிருந்து வாங்கிய சில லேசர்கள் அந்த விண்கலத்தில் இருந்ததால், பொறியாளர்கள் அவற்றை கணினியில் இணைத்து செயல்பட வைத்தனர். ஒடிஸியஸ் விண்கலம் இந்திய நேரப்படி நேற்று மாலை 6.23 மணிக்கு நிலவில் தரையிறங்கியது. முதலில் நிலவில் தரையிறங்கிய ரோபோக்களிடமிருந்து எந்த சமிக்ஞையும் வரவில்லை. பின், நீண்ட போராட்டத்திற்கு பிறகு, அந்த ரோபோக்களுடன் தொடர்பு ஏற்படுத்தப்பட்டது. இந்த தொழில்நுட்பச் சிக்கல், தரையிறக்கம் தொடர்பாக சில கவலைகளை ஏற்படுத்தியது. ஆனால், ஒரு சில மணி நேரத்திற்குள் அவை சரி செய்யப்பட்டு, நிலவில் இருந்து படங்கள் உள்ளிட்ட தரவுகளை அவை அனுப்பியதாக அந்நிறுவனம் தெரிவித்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES "நிலாவில் உள்ள பனியை பயன்படுத்தலாம்" தரையிறங்கிய இடம், மலாபெர்ட்(Malapert) எனப்படும் சுமார் 5 கிமீ உயரமுள்ள மலை போன்ற பகுதிக்கு அடுத்ததாக உள்ள ஒரு பள்ளம் நிறைந்த நிலப்பரப்பாகும். இது நிலவின் இதுவரை தரையிறங்காத தென்துருவப்பகுதியாகும், அதாவது நிலவில் இருந்து 80 டிகிரி தெற்குப் புறம். இந்த தசாப்தத்தின் பிற்பகுதியில், ஆர்ட்டெமிஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக நிலவிற்கு விண்வெளி வீரர்களை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ள இடங்களில் இதுவும் ஒன்று. இந்தப் பகுதியில் சூரிய ஒளியைக் காணாத சில பள்ளங்கள் உள்ளன. அவை நிரந்தரமாக நிழலில் உள்ள பகுதிகள். மேலும், இந்தப் பகுதியில் உறைந்த நீர் இருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். “நிலவில் உள்ள பனி மிகவும் முக்கியமானது. ஏனென்றால், நிலவின் மேற்பரப்பில் உள்ள பனியை நம்மால் உண்மையில் பயன்படுத்திக் கொள்ள முடிந்தால், அதுவே நாம் இந்தப் பயணத்தில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டிய விஷயம்,” என்றார் நாசாவின் கிரக அறிவியல் இயக்குனர் லோரி கிளேஸ். “நாம் அந்த பனியை தண்ணீராக மாற்றலாம். அவை குடிப்பதற்கு பயன்படுத்தக்கூடிய குடிநீராக இருக்கும். மேலும், ஆக்ஸிஜன் மற்றும் ஹைட்ரஜனை பிரித்தெடுத்து, அவற்றை எரிபொருளாகவும், விண்வெளி வீரர்கள் சுவாசிப்பதற்கும் பயன்படுத்த முடியும். எனவே, இது உண்மையில் மனித ஆய்வுக்கு உதவும்,”என்றார். பட மூலாதாரம்,NASA நிலாவில் உள்ள தூசியால் விஞ்ஞானிகள் கவலை ஒடிசியஸ் விண்கலத்தில் நாசாவின் ஆறு பேலோடுகள் (உபகரணத் தொகுப்புகள்) உள்ளன. இவற்றில் முக்கியமாக ஆய்வுக்குட்படுத்த வேண்டியது நிலாவில் உள்ள தூசி எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றித்தான். ஏனென்றால், அமெரிக்காவின் அப்போலோ விண்வெளி வீரர்கள் இதனை ஒரு கடுமையான பிரச்னையாகப் பார்க்கிறார்கள். இந்த தூசியால், விண்வெளியில் செலுத்தப்படும் உபகரணங்களில், அரிப்பு மற்றும் அடைப்புகள் ஏற்படுகின்றன. தரையிறங்கிக்கலன் உள்ளிட்டவை மீது எவ்வாறு தூசி படிகிறது என்பதை நாசாவின் விஞ்ஞானிகள் புரிந்துகொள்ள முயற்சிக்கிறார்கள். விண்கலத்தில் உள்ள ஆறு வணிக பேலோடுகளில் எம்ப்ரி-ரிடில் ஏரோநாட்டிக்கல் பல்கலைக்கழகத்தின் (Embry-Riddle Aeronautical University) மாணவர் கேமரா அமைப்பு உள்ளது, இது நிலவின் மேற்பரப்பில் இருந்து 30 மீ உயரத்தில் இருக்கும்போதே ஒடிஸியஸிலிருந்து பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும். ரோபோ தன்னைத்தானே கீழே வைத்து செல்ஃபி படங்களை எடுக்கும் வகையில் இந்த அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க கலைஞரான ஜெஃப் கூன்ஸ், ஒரு மாதத்தில் நிலவின் வெவ்வேறு கட்டங்களைக் குறிக்க 125 சிறிய துருப்பிடிக்காத எஃகு பந்துகளைக் கொண்ட ஒரு பெட்டியை தரையிறங்கிக்கலனின் பக்கத்தில் இணைத்துள்ளார். https://www.bbc.com/tamil/articles/cjevxyrg2wqo
-
தினமும் ஒரு சூரியனை விழுங்கும் 'பிரபஞ்சத்தின் நரகத்தை' கண்டுபிடித்த விஞ்ஞானிகள்
பட மூலாதாரம்,THAT படக்குறிப்பு, சித்தரிப்பு: J0529-4351 துடிப்பண்ட கருந்துளையின் பிரகாசமான மையம் கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ்டியன் வுல்ஃப் பதவி, வானியற்பியல் இணை பேராசிரியர் 44 நிமிடங்களுக்கு முன்னர் நரகம் உண்மையில் எப்படி இருக்கும் என்பதை விஞ்ஞானிகளால் இதுவரை விவரிக்க முடியாத நிலை இருந்தது. ஒருவேளை அது குறித்து சொல்ல நரகத்திலிருந்து யாரும் திரும்பி வர முடியாததால் கூட இருக்கலாம். நரகம் என்பது மிகவும் மோசமான, நெருப்பால் சூழப்பட்ட, மனிதர்கள் வாழத் தகுதியற்ற ஒரு இடமாக தான் கற்பனை செய்யப்பட்டுள்ளது. இறுதியாக ஒரு பெரிய வானியல் ஆய்வின் மூலமாக, பிரபஞ்சத்தின் நரகம் எது என்பதை விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. நேச்சர் ஆஸ்ட்ரோனமி என்ற அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ள ஒரு புதிய கட்டுரையில், விண்வெளித் துகள்கள் மற்றும் பிரகாசமான வாயுக்களின் அடுக்குகளால் சூழப்பட்ட ஒரு கருந்துளை குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. J0529-4351 என்று பெயரிடப்பட்ட இந்த கருந்துளை, பிரபஞ்சத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகவும் பிரகாசமான பொருளாகும். பட மூலாதாரம்,CRISTY ROBERTS/ANU, CC BY-NC மிகப்பெரிய கருந்துளைகள் பிரபஞ்சம் முழுவதும் வேகமாக வளர்ந்து வரும் லட்சக்கணக்கான பிரம்மாண்ட கருந்துளைகளை வானியலாளர்கள் ஏற்கெனவே கண்டறிந்துள்ளனர். இவை பொதுவாக விண்மீன் திரள்களின் மையங்களில் காணப்படும். மேலும், பலநூறு கோடி சூரியன்களை விட அளவில் மிகப்பெரியதாக இருக்கும் இந்த கருந்துளைகள். கருந்துளைகள் வேகமாக வளர, நட்சத்திரங்கள் மற்றும் வாயு மேகங்களை அவற்றின் சுற்றுப்பாதையில் இருந்து வெளியே இழுத்து, திரட்டல் வட்டின் (Accretion disk) சுற்றுப்பாதை வளையத்துக்குள் வருமாறு ஈர்க்கின்றன. அந்த வளையத்தில் சிக்கிக்கொண்டால், மிகக் குறைவான பொருட்களே வெளியேறுகின்றன. கருந்துளையால் விழுங்கப்படும் பொருட்களை இந்த வட்டு தக்க வைத்துக் கொள்கிறது. அதில் உள்ள பொருட்கள் ஒன்றோடொன்று உராய்வதால் வட்டு மேலும் வெப்பமடைகிறது. போதுமான பொருட்கள் உள்ளே ஈர்க்கப்பட்டால், வெப்பத்தால் உண்டாகும் பளபளப்பு மிகவும் பிரகாசமாகி, ஆயிரக்கணக்கான விண்மீன் திரள்களையே அந்த பிரகாசம் மிஞ்சுகிறது. இதனால் தான் பூமியிலிருந்தும் 1200 கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள கருந்துளை வளர்வதை காண முடிகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES பிரபஞ்சத்தில் அதிவேகமாக வளரும் கருந்துளை J0529-4351 கருந்துளையின் திரட்டல் வட்டு நமது சூரியனை விட 50000 கோடி மடங்கு அதிகப் பிரகாசமான ஒளியை வெளியிடுகிறது. கருந்துளை ஒவ்வொரு நாளும் ஒரு சூரியனை விழுங்கினால் மட்டுமே இவ்வளவு வியக்கத்தக்க அளவு ஆற்றலை வெளியிட முடியும். எனவே இந்த கருந்துளை ஏற்கெனவே ஒரு மிகப்பெரிய அளவு நிறையைக் கொண்டிருக்க வேண்டும். J0529-4351 என்பது நமது சூரியனின் நிறையை விட 1500 முதல் 2000 கோடி மடங்கு அதிகமாக இருப்பதாக தரவுகள் கூறுகின்றன. ஆனால் இந்த கருந்துளைகளைப் பார்த்து பயப்பட தேவையில்லை. இந்த அசுரனின் ஒளி பூமியை வந்தடைய 1200 கோடி ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டது, இதன் அர்த்தம் நீண்ட காலத்திற்கு முன்பே அதன் வளர்ச்சி நின்றுவிட்டது. அருகிலுள்ள பிரபஞ்சத்தில், இன்றைய மிகப்பெரிய கருந்துளைகள் பெரும்பாலும் தூங்கும் அசுரர்களாக இருப்பதைக் காண முடிகிறது. கட்டுப்பாட்டை இழக்கும் கருந்துளைகள் சுற்றியிருக்கும் அனைத்தையும் கண்டபடி ஈர்த்து, விழுங்கி கருந்துளைகள் வளர்ந்த காலமெல்லாம் முடிந்துவிட்டது. ஏனெனில் விண்மீன் திரள்களில் மிதக்கும் வாயுக்கள் பெரும்பாலும் நட்சத்திரங்களாக மாறிவிட்டன. பலநூறு கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, நட்சத்திரங்கள் தங்களை ஒரு குறிப்பிட்ட வடிவங்களில் அமைத்துக் கொண்டன. பெரும்பாலும் விண்மீன் திரள்களின் மையங்களில் உறங்கும் கருந்துளைகளைச் சுற்றி நீண்ட, ஒழுங்கான சுற்றுப்பாதையில் இந்த நட்சத்திரங்கள் உள்ளன. ஆனால் ஒரு நட்சத்திரம் திடீரென கருந்துளையை நோக்கிச் சென்றாலும், அது பெரும்பாலும் 'ஸ்லிங்ஷாட் விளைவு' (slingshot effect) மூலம் மீண்டும் வேறு திசையில் பாய்ந்து தப்பிக்கும். விண்வெளி ஆய்வுகள் வியாழனிடமிருந்து ஊக்கத்தைப் பெற 'ஸ்லிங்ஷாட் விளைவு' எனப்படும் இந்த யுக்திகளைப் பயன்படுத்துகின்றன, இதனால் சூரிய குடும்பத்தின் கடினமான பகுதிகளை அடையலாம். ஆனால் விண்வெளியில் அதிகமான பொருட்கள் இருந்தால், எதிர் திசையில் வரும் ஒன்றை அவை எதிர்கொண்டால், இரண்டும் துகள் மேகத்தில் மோதி வெடித்து, உடனே வியாழனின் வளிமண்டலத்தில் விழுந்து விடும். இந்த கோளாறு காரணமாக பிரபஞ்சத்தின் தொடக்கத்தில் நட்சத்திரங்களுக்கு இடையே இந்த வகையான மோதல்கள் நடப்பது வழக்கமாக இருந்தது, இந்த மோதலால் கருந்துளைகள் தான் முதலில் பயனடைந்தன. பட மூலாதாரம்,DARK ENERGY CAMERA LEGACY SURVEY DR10 / NATURE ASTRONOMY, CC BY-SA திரட்டல் வட்டு: விண்வெளி வீரர்களுக்கு தடைசெய்யப்பட்ட பகுதி உள்ளே சென்றால் திரும்பி வர முடியாத ஒரு இடத்திற்கான நுழைவாயிலாக திரட்டல் வட்டுகள் இருக்கின்றன. ராட்சத புயல் அணுக்கள் போல தெரியும் இந்த திரட்டல் வட்டுகளின் மேகங்கள், பல்லாயிரக் கணக்கான டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை அடையும் போது, ஒளிரும் தன்மை கொண்டவையாக மாறும். துளையை நெருங்கும்போது இந்த மேகங்கள் மிகவும் வேகமாக நகரும். இந்த வேகம் ஒரு வினாடிக்கு 100,000 கிலோமீட்டர் வரை இருக்கும். ஒரு மணி நேரத்தில் பூமி நகரும் தொலைவை இந்த மேகம் ஒரு நொடியில் கடந்து விடும். J0529-4351 கருந்துளையைச் சுற்றியுள்ள திரட்டல் வட்டு ஏழு ஒளி ஆண்டுகள் கடந்து இருக்கிறது. இது சூரியனுக்கும் அதன் அருகில் உள்ள ஆல்பா சென்டாரிக்கும் இடையே உள்ள தூரத்தை விட ஒன்றரை மடங்கு அதிகம். இதுவரை கண்டுபிடிக்கப்படாதது ஏன்? இது பிரபஞ்சத்திலே பிரகாசமான பொருள் என்றால், அது ஏன் இதுவரை கண்டறியப்படவில்லை? காரணம், பிரபஞ்சம் முழுவதும் ஒளிரும் கருந்துளைகளால் நிறைந்துள்ளது. உலகின் தொலைநோக்கிகள் பல தகவல்களை தெரியப்படுத்துகின்றன, அதை சரிபார்ப்பதற்கு வானியலாளர்கள் அதிநவீன இயந்திர கருவிகளைப் பயன்படுத்த வேண்டும். ஆனால், இயல்பாகவே இயந்திர வழி கற்றல் முறை, முன்பு கண்டுபிடிக்கப்பட்ட விஷயங்களை மட்டுமே அடிப்படையாக கொண்டு மீண்டும் கண்டறிய முனைகிறது. கருந்துளைகளைச் சுற்றியுள்ள சாதாரணமான திரட்டல் வட்டுகளை கண்டறிவதில் இந்த கருவிகள் சிறப்பாக இருக்கின்றன (இதுவரை சுமார் பத்து லட்சம் வட்டுகள் கண்டறியப்பட்டுள்ளது), ஆனால் J0529-4351 போன்ற கருந்துளையை கண்டறிவதில் இவை அவ்வளவு பயனுள்ளதாக இருக்காது. 2015ஆம் ஆண்டில், சீனக் குழு ஒன்று வேகமாக வளர்ந்து வந்த கருந்துளை ஒன்றை அல்காரிதம் மூலம் கண்டறிந்தது, ஆனால் அது உண்மையாக இருக்க முடியாது என அல்காரிதம் கருதியதால், கிட்டத்தட்ட அதை தவறவிட்டது சீனக் குழு. இந்த வேலையில் மிகவும் தீவிரமான பொருட்கள், பிரகாசமாக ஒளிரும் மற்றும் வேகமாக வளரும் கருந்துளைகள் ஆகியவற்றைக் கண்டறிவதே அவர்களின் குறிக்கோளாக இருந்தது, எனவே இயந்திர வழி கற்றல் கருவிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்த்தோம், ஏனெனில் அவை உள்ளிடப்பட்ட தரவுகள் மூலமாக வழிநடத்தப்படுபவை. அதற்குப் பதிலாக, புதிய தரவைத் தேடுவதற்குப் பழமையான முறைகளையே பயன்படுத்தி சிறந்த முடிவுகளைப் பெற்றுள்ளோம். எங்கள் பணியானது, பெரிய அளவிலான வானியல் வசதிகளை கொண்ட பல ஐரோப்பிய நாடுகளின் நிதியுதவியுடன் இயங்கும் ஐரோப்பிய தெற்கு வானியல் ஆய்வகத்துடனான ஆஸ்திரேலியாவின் பத்து வருட கூட்டாண்மையைச் சார்ந்துள்ளது. *கிறிஸ்டியன் வுல்ஃப் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தில் வானியல் மற்றும் வானியற்பியல் இணை பேராசிரியராக உள்ளார். https://www.bbc.com/tamil/articles/cmmgg3pmn7po
-
புதினை கடுமையாக எதிர்த்த நஞ்சூட்டபட்ட அலெக்ஸி நவல்னி இறப்பு
ரஸ்ய எதிர்கட்சி தலைவரின் உடலை இரகசிய இடத்தில் புதைப்பதற்கு அனுமதி தரவேண்டும் -- தாயாரை மிரட்டும் ரஸ்ய அதிகாரிகள் Published By: RAJEEBAN 23 FEB, 2024 | 10:41 AM ரஸ்ய எதிர்கட்சி தலைவர் அலெக்சே நவால்னியின் உடலை தான் பார்வையிட்டுள்ளமதாக தெரிவித்துள்ள அவரது தாயார் தனது மகனின் உடலை இரகசியமாக புதைப்பதற்கு அனுமதிக்கவேண்டும் என ரஸ்ய அதிகாரிகள் வற்புறுத்துவதாகவும் தெரிவித்துள்ளார். மகனின் உடல் வைக்கப்பட்டுள்ள பிரேத அறைக்கு என்னை கொண்டு சென்றனர் நான் ஆவணங்களில் கைச்சாத்திட்டேன் என லியுட்மிலா நவல்ன்யா தெரிவித்துள்ளார். சட்டத்தின்படி அதிகாரிகள் எனது மகனின் உடலை கையளிக்கவேண்டும், ஆனால் தற்போது என்னை மிரட்டுகின்றனர் உடலை வழங்கமறுக்கின்றனர் என நவால்னியின் தாயார் தெரிவித்துள்ளார். எனது மகனின் உடலை புதைப்பதற்கு அதிகாரிகள் நிபந்தனை விதிக்கின்றனர் உடலை புதைக்கும் நேரம் உட்பட தாங்கள் தெரிவிப்பதை ஏற்றுக்கொள்ளவேண்டும் என அழுத்தம் கொடுக்கின்றனர் என நவால்னியின் தாயார் தெரிவித்துள்ளார். மயானத்தின் தொலைதூர பகுதியில் உள்ள புதிய புதைகுழிக்கு என்னை கொண்டு சென்று இதுதான் எனது மகனின் புதைகுழி என காண்பிப்பதற்கு அவர்கள் முயல்கின்றனர் அதிகாரிகள் என்னை அச்சுறுத்துகின்றனர் எனவும் நவால்னியின் தாயார் தெரிவித்துள்ளார். இரகசியமாக உடலை புதைப்பதற்கு இணங்காவிட்டால் உடலிற்கு ஏதாவது செய்துவிடுவோம் என கண்ணை நேரடியாக பார்த்து அவர்கள் தெரிவித்தனர் உங்களிற்கு போதிய நேரம் இல்லை உடல் பழுதடைகின்றது என அவர்கள் தெரிவித்தனர் எனவும் நவால்னியின் தாயார் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/177101
-
யுக்ரேனுடனான இரண்டாண்டு போர் ரஷ்யாவை எப்படியெல்லாம் மாற்றியுள்ளது?
படக்குறிப்பு, சோல்னெக்னோகோர்ஸ்க் கல்லறையில் ராணுவ வீரர்கள் ஓவியம் கட்டுரை தகவல் எழுதியவர், ஸ்டீவ் ரோசன்பெர்க் பதவி, பிபிசி ரஷ்ய ஆசிரியர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சமீபத்தில் சிறையில் இறந்து போன அலெக்ஸே நவால்னியின் கல்லறை மீது பலரும் மலர்களை வைத்து அஞ்சலி செலுத்துவதை பார்த்துக் கொண்டிருந்தேன். அங்கிருந்த இளைஞர் ஒருவர், “இரண்டாண்டுகளுக்கு முன்பு 24 பிப்ரவரி அன்று போர் ஆரம்பித்த போது இருந்தது போலவே, இப்போது நான் அதிர்ச்சியில் இருக்கிறேன்” என்று என்னிடம் கூறினார். இது எனக்கு, ரஷ்ய அதிபர் புதின் முழுவீச்சில் யுக்ரேனை ஆக்கிரமிக்க உத்தரவிட்டதில் இருந்து கடந்த இரண்டாண்டுகளாக நடந்த பல நிகழ்வுகளை நியாபகப்படுத்தியது. இது முழுக்க நாடகத்தன்மை, ரத்தம், கொடுமை என அனைத்தும் கலந்த கலவை. ரஷ்யா-யுக்ரேன் போரால் யுக்ரேனில் பல உயிர்சேதமும், அழிவும் ஏற்பட்டுள்ளது. அதே சமயம் ரஷ்ய ராணுவமும் பெரிய அளவிலான இழப்பை சந்தித்துள்ளது. ரஷ்ய நகரங்கள் குண்டுவீச்சுக்கும், டிரோன் தாக்குதலுக்கும் உள்ளாகின. ஆயிரக்கணக்கான ரஷ்ய இளைஞர்கள் ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். வாக்னர் படை கிளர்ச்சி செய்து மாஸ்கோவில் அணிவகுப்பு நடத்தியது. பின்னர் அவர்களின் தலைவர் எவ்ஜெனி பிரிகோஜின் விமான விபத்தில் உயிரிழந்தார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் புதினை போர் குற்றவாளியாக அறிவித்து அவருக்கு பிடி உத்தரவு பிறப்பித்தது. புதினின் தீவிர விமர்சகரான நவால்னி உயிரிழப்பு. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போரால் பாதிக்கப்பட்ட யுக்ரேன் கிராமம் ரஷ்ய - யுக்ரேன் வரலாற்றில் 24 பிப்ரவரி 2022 ஒரு திருப்புமுனையான நாள் ஆனால், கடந்து வந்த பாதையை திரும்பி பார்த்தால் எல்லாம் தெளிவாக இருக்கிறது. 2014 இல் ரஷ்யா யுக்ரேனின் கிரைமியா பகுதியை தன்னோடு இணைத்துக்கொண்டது. டான்பாஸ் பகுதியில் தனது முதல் ராணுவ தலையீட்டை தொடங்கியது. 2020-இல் அலெக்ஸே நாவல்னி மீது நரம்பு மண்டலத்தை தாக்கும் விஷத்தாக்குதல் நடத்தப்பட்டது. பின் 2021-இல் அவர் சிறையில் அடைக்கப்பட்டார். உக்ரைன் படையெடுப்புக்கு முன்பு ரஷ்யாவில் உள்நாட்டு அடக்குமுறை தொடங்கியது. விளாடிமிர் புதினை பொறுத்தவரை, இந்த இரண்டு வருட போரில் நாட்டிற்குள்ளேயும், வெளியேயும் உள்ள எதிரிகளை வீழ்த்துவதில் உறுதியாகவும், தீர்மானமாகவும் இருக்கிறார். புதின் யுக்ரேனுக்கு எதிரான போரை “மேற்குலக கூட்டணியால்” ரஷ்யா மீது தொடுக்கப்பட்டுள்ள போராகவும், தனது நாடு பிழைத்திருப்பதற்கான போராகவும் குறிப்பிடுகிறார். அமெரிக்கா, நேட்டோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மீதும் அவர் குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார். இது எப்போது எப்படி முடியும்? என்னால் எதிர்காலத்தை கணிக்க முடியாது. ஆனால், வரலாற்றை திரும்பி பார்க்க முடியும். சமீபத்தில் எனது வீட்டு அலமாரியில் தூசு படிந்த சில கோப்புகளை நான் கண்டெடுத்தேன். அதில் 20 ஆண்டுகளுக்கு முந்தைய ரஷ்யா குறித்த எனது குறிப்புகள் இருந்தன. அது புதினின் தொடக்க காலம். அவற்றை புரட்டிப்பார்க்கும் போது, ஏதோ பல்வேறு ஒளியாண்டுகள் தூரத்தில் உள்ள வேற்று உலகத்தை பற்றி படிப்பது போல் இருந்தது. “சமீபத்திய கருத்துக் கணிப்பின்படி, 59% ரஷ்யர்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் ரஷ்யா சேரும் யோசனைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்" என்று 17 மே 2001 அன்று நான் எழுதியுள்ளேன். "நேட்டோவும் ரஷ்யாவும் தீவிரமான ஒத்துழைப்பை நாடுகின்றன : இதுவே உலக அமைதிக்கான உண்மையான அச்சுறுத்தல் இவர்களிடத்தில் இல்லை என்பதற்கான அடையாளம்" (20 நவம்பர் 2001) ஆனால், எந்த புள்ளியில் இந்த நிலை மாறியது? எங்கு தப்பு நடந்தது? என்ற கேள்விக்கு நான் ஒருவன் மட்டும் ஆச்சரியப்படவில்லை. சமீபத்தில் நான் லண்டனில் சந்தித்த நேட்டோவின் முன்னாள் தலைவர் லார்ட் ராபர்ட்சனும் இதே போன்றதொரு உணர்வை என்னிடம் பகிர்ந்துகொண்டார். படக்குறிப்பு, நேட்டோவின் முன்னாள் தலைவர் லார்ட் ராபர்ட்சன் “நான் பார்த்த, நல்லுறவை பேணிய, நேட்டோ - ரஷ்யா கவுன்சிலை உருவாக்கிய புதின் இது இல்லை. தற்போது தன்னை தானே அதிகாரமிக்கவராக கருதிக்கொள்ளும் அவர் முழுமையாக வேறு மனிதராக தெரிகிறார்” என்று என்னிடம் கூறினார். “2002 மே மாதம் எனதருகில் நின்றுக்கொண்டு யுக்ரேன் ஒரு இறையாண்மை கொண்ட சுதந்திர நாடு. அது தனது பாதுகாப்பு குறித்த முடிவுகளை தானே எடுக்கும் என்று கூறிய அதே நபர் தான், இன்று யுக்ரேன் ஒரு நாடே இல்லை என்று கூறுகிறார்” ரஷ்யா நேட்டோவில் உறுப்பினராவதற்கு யோசித்ததை கூட லார்ட் ராபர்ட்சன் நினைவு கூர்ந்தார். "புதினுடனான எனது இரண்டாவது சந்திப்பில், அவர் வெளிப்படையாகவே 'ரஷ்யாவை நேட்டோவில் சேர எப்போது அழைக்கப் போகிறீர்கள்?' என்று கேட்டார். நானோ, 'நாங்கள் நேட்டோவில் சேர நாடுகளை அழைப்பதில்லை, அவை விண்ணப்பிக்கின்றன' என்றேன். அதற்கு அவர், 'அப்படியா சரி, ஒரு பொருட்டே இல்லாத நாடுகளின் அருகில் வரிசையில் நாங்கள் நிற்கப் போவதில்லை' என்றார்.” புதின் உண்மையில் நேட்டோவுக்கு விண்ணப்பிக்க விரும்பவில்லை என்றே தான் நினைப்பதாக கூறினார் லார்ட் ராபர்ட்சன். “அது அவருக்கு வழங்கப்பட வேண்டும் என்று அவர் விரும்பினார். காரணம், அவர் எப்போதுமே உலகிலேயே உயர்ந்த நாடு ரஷ்யா என்றும், சோவியத் யூனியனுக்கு இருந்த மரியாதை போல் தற்போதும் இருக்க வேண்டும் என்ற சிந்தனையை கொண்டுள்ளார் என்றே நான் நினைக்கிறன்” என்று என்னிடம் கூறினார் அவர். “அவர் ஒருபோதும் அனைத்து நாடுகளும் சமமாக அமர்ந்து பொது நலனின் கொள்கைக்காக விவாதிக்கும் நாடுகளின் கூட்டணிக்குள் பொருந்தி போகப்போவதில்லை.” என்றார் லார்ட் ராபர்ட்சன். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ‘வளரும் ஈகோ’ ஒருகாலத்தில் உலகின் இரண்டாவது சக்திவாய்ந்த நாடக சோவியத் ஒன்றியம் அங்கீகரிக்கப்பட்டது என்று கூறும் லார்ட் ராபர்ட்சன், தற்போது அதே வழியில் ரஷ்யா தன்னை கருதிக்கொள்ள முடியாது என்கிறார். “அதுவே அவரது ஈகோவை அழித்துவிட்டது என்று நினைக்கிறேன். அதோடு அவரது பலவீனம், சில நேரங்களில் மேற்குலகம் மற்றும் பல்வேறு வழிகளில் அவர் எதிர்கொண்ட கோபமூட்டல்கள், அவருக்குள் வளர்ந்த ஈகோ ஆகியவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுவே முன்பு நேட்டோவோடு ஒத்துழைக்க நினைத்த ஒரு நபரை, தற்போது அதே நேட்டோவை பெரும் அச்சுறுத்தலாக பார்க்கும் நிலைக்கு தள்ளியுள்ளது என நான் நினைக்கிறன்” இவற்றை மாஸ்கோ வேறு மாதிரியானதாக பார்க்கிறது. கிழக்கு நோக்கிய நேட்டோவின் விரிவாக்கமே ஐரோப்பிய பாதுகாப்பை வலுவிழக்க செய்தது மற்றும் போருக்கு வழிவகுத்தது என்று ரஷ்ய அதிகாரிகள் கூறுகின்றனர். சோவியத் ஒன்றியத்தின் இறுதி நாட்களில் முன்பு மாஸ்கோவின் வளையத்திற்குள் இருந்த நாடுகளை இந்த கூட்டணியில் சேர்த்துக்கொள்ள மாட்டோம் என கிரெம்ளினுக்கு அளித்த வாக்குறுதியை நேட்டோ மீறியதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். “அப்படி ஆவணப்பூர்வமாக எதுவும் இல்லை” என்று என்னிடம் கூறினார் லார்ட் ராபர்ட்சன். “அப்படி எதுவுமே ஒப்புக்கொள்ளப்படவில்லை. அது சார்ந்து எந்த ஒப்பந்தமும் போடப்படவில்லை. ஆனால், விளாடிமிர் புதின்தான் 2002 மே 28இல், பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் பிற நாடுகளில் தலையிடாமல் இருத்தலுக்கான அடிப்படைக் கொள்கைகளை உள்ளடக்கிய ரோம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார். அதே ஒப்பந்தத்தில் நானும் கையெழுத்திட்டேன். எனவே அவர் யாரையும் குற்றம்சாட்ட முடியாது.” மாஸ்கோவிலிருந்து 40 மைல் தொலைவில் உள்ள சோல்னெக்னோகோர்ஸ்க் நகரில் தான், ரஷ்யாவின் கடந்த இரண்டு ஆண்டு வரலாற்றின் நினைவுகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. வாக்னர் படைக்கு ஆதரவான எழுத்துருக்களை என்னால் பார்க்க முடிந்தது. அலெக்ஸே நவால்னியின் நினைவாக மலர்கள் வைக்கப்பட்டிருந்தன. இரண்டு உள்ளூர் ஆண்கள் மற்றும் யுக்ரேனில் கொல்லப்பட்ட ரஷ்ய படைவீரர்களின் கல்லறைகள் இருந்தன. அதற்கு அருகில் ஒரு இளம் ராணுவ வீரர் அவர்களுக்கு ராணுவ வணக்கம் வைப்பதை போல் ஓவியம் தீட்டப்பட்டிருந்தது. படக்குறிப்பு, சோல்னெக்னோகோர்ஸ்க் போர்வீரர்கள் நினைவுக் கல்லறை நகரத்தின் மையத்தில் அமைந்துள்ள இந்த கல்லறையில் கீழ்காணும் வாக்கியங்களோடு, இரண்டாம் உலகப்போர் மற்றும் ஆப்கன் போரில் உயிரிழந்த வீரர்களின் நினைவு கல்லறைக்கு அருகில் மற்றுமொரு பகுதியும் சேர்க்கப்பட்டுள்ளது. “சிறப்பு ராணுவ நடவடிக்கையில் கொல்லப்பட்ட ராணுவ வீரர்களுக்காக” 46 பெயர்கள் இந்தக் கல்லில் பொறிக்கப்பட்டிருந்தது. அப்போது அந்த பக்கம் தனது பேரனோடு நடந்துபோன லிடியா பெட்ரோவ்னாவிடம், இந்த இரண்டாண்டுகளில் வாழ்க்கை எப்படி மாறியுள்ளது என்று கேட்டேன். “முன்பு வெளிநாடுகளில் இருந்து வாங்கி கொண்டிருந்த பொருட்களை இப்போது எங்கள் தொழிற்சாலைகள் தயாரித்து வருகின்றன. அது நல்லதுதான்” என்று கூறினார் லிடியா. “ஆனால், கொல்லப்பட்ட அனைவருக்காகவும் நான் வருத்தப்படுகிறேன். எங்களுக்கு கண்டிப்பாக மேற்குலகோடு போர் தேவையில்லை. எங்கள் மக்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் போரை தவிர வேறு எதையும் பார்த்தது இல்லை.” என்றார் அவர். அடுத்து மரினாவோடு நான் பேசுகையில், ரஷ்ய வீரர்கள் யுக்ரேனில் தங்கள் கடமையை செய்வதாக அவர்களை பாராட்டினார் அவர். பின் தனது 17 வயது மகன் ஆண்ட்ரியை பார்த்த அவர், ஒரு அம்மாவாக எங்கு எனது மகனையும் போருக்கு அழைத்து விடுவார்களோ என்று பயமாகத்தான் இருக்கிறது என்றார். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் எங்களுக்கு அமைதி வேண்டும். அப்போதுதான் அடுத்த நாள் என்ன வரும் என்பது குறித்து பயப்படாமல் எங்களால் வாழ முடியும் என்றார் மரினா. https://www.bbc.com/tamil/articles/c6pvv4ljwx0o
-
தமிழ்நாட்டில் கணவரை இழந்த பெண்கள் அதிகமாக இருப்பது ஏன்? செய்ய வேண்டியது என்ன?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாடு அரசு வெளியிட்ட மாநில மகளிர் கொள்கை விதவைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்போவதாக தெரிவிக்கிறது. கட்டுரை தகவல் எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன் பதவி, பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் கணவரை இழந்த, ஆதரவற்றோர் விகிதம் தமிழ்நாட்டில் தேசிய சராசரியைவிட அதிகமாக இருப்பதாக சமீபத்தில் தமிழ்நாடு அரசு வெளியிட்ட மாநில மகளிர் கொள்கை குறிப்பிட்டுள்ளது. அவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்போவதாகவும் அந்தக் கொள்கை கூறுகிறது. தமிழ்நாட்டில் கணவரை இழந்த பெண்களின் விகிதம் அதிகமாக இருப்பது ஏன், செய்ய வேண்டியது என்ன? தமிழ்நாட்டிற்கான மாநில மகளிர் கொள்கை ஒன்றை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிப்ரவரி 21ஆம் தேதியன்று வெளியிட்டார். தமிழ்நாட்டில் அனைத்துப் பெண்களுக்கும் சமூக நீதியை உறுதி செய்வது, அவர்கள் உரிமைகளைப் பெற்று, திறன்களை உணர்வு, பெண்கள் சம வாய்ப்புகளுடன் அமைதியான வாழ்க்கை வாழச்செய்வதை நோக்கமாகக் கொண்டு இந்த கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்த பத்தாண்டுகளுக்கு என சில குறிக்கோள்களை இந்த கொள்கை முன்வைத்திருக்கிறது. பள்ளிக்கூடங்களில் பெண்களின் இடைநிற்றலை குறைத்தல், வளரிளம் பெண்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துதல், வேலை வாய்ப்பில் மகளிரின் பங்களிப்பை அதிகரித்தல், எல்லாப் பணியிடங்களிலும் பெண்களுக்கு பாதுகாப்பான சூழலை உறுதிசெய்வது, டிஜிட்டல் பாலின இடைவெளியைக் குறைத்தல், கடன் வசதிகளை ஏற்பாடு செய்தல், மகளிரை அரசியல் களத்தில் பங்கேற்க ஊக்குவித்தல் ஆகியவையே அந்த இலக்குகளாகக் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. இந்தக் கொள்கை எல்லா மகளிருக்கும் பொருந்தும் என்றாலும் அதன்படி, தனியாக வாழும் பெண்கள், கணவனை இழந்த ஆதரவற்றோர், ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள், பாதிக்கப்படக்கூடிய தொழில்களைச் செய்பவர்கள், மாற்றுத் திறனாளிகள், வயது முதிர்ந்தோர் உள்ளிட்ட சில பிரிவினருக்கு சிறப்பு கவனம் அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் பல முக்கியப் புள்ளிவிவரங்கள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி, இந்தியாவில் 5.6 கோடி கணவரை இழந்த பெண்கள் உள்ளனர் என்றும் இது மொத்த மக்கள் தொகையில் 4.6 சதவீதம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், கேரளா மற்றும் தமிழ்நாட்டில் தேசிய சராசரியைவிட அதிகமாக கணவரை இழந்த பெண்கள் உள்ளனர். பட மூலாதாரம்,M.K.STALIN / X படக்குறிப்பு, முதலமைச்சர் முக.ஸ்டாலின் தேசிய சராசரியை விட அதிகம் கேரளாவில் 6.7 சதவீதமும் தமிழ்நாட்டில் 6.4 சதவீதமும் கணவரை இழந்த பெண்கள் உள்ளனர். ஆண்களைவிட பெண்கள் அதிக காலம் உயிர்வாழ்வதால் கணிசமான முதியோரைக் கொண்ட மாநிலங்களில் கணவரை இழந்த பெண்கள் எண்ணிக்கை அதிகம் என குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்தப் பெண்களுக்கு என சிறப்புக் கவனமும் முன்னுரிமையும் அளிக்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இந்த அறிக்கை கூறுகிறது. அமைப்புகள் என்ன சொல்கின்றன? தமிழ்நாட்டில் கணவரை இழந்த பெண்களுக்கென பல அமைப்புகள் பணியாற்றி வருகின்றன. சமூகத்தில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் உள்ள இவர்களுக்கு என செய்ய வேண்டியது நிறைய இருக்கிறது என்கிறார்கள் இவர்கள். "கணவரை இழந்த பெண்களின் பிரச்சனை என்பது மிக முக்கியமானது. எண்ணிக்கை அடிப்படையில் பார்த்தால் இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில்தான் கணவரை இழந்த பெண்கள் அதிகம். ஆனால், சதவீத அடிப்படையில் கேரளா, தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வேலூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது" என்கிறார் கணவரை இழந்த பெண்களுக்கென பணியாற்றும் கலங்கரை அமைப்பின் இயக்குநரான குழந்தைச்சாமி. கணவரை இழந்த பெண்கள் அதிகம் இருப்பதற்குப் பல காரணங்கள் குறிப்பிடப்படுகின்றன. மதுப் பழக்கம், விபத்துகள், தற்கொலை, திருமணம் நடக்கும்போது பெண்ணைவிட ஆணின் வயது அதிகமாக இருப்பது ஆகியவற்றால் மனைவிக்கு முன்பாகவே கணவர்கள் உயிரிழப்பது நடக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த பெண்கள் கணவரை இழந்ததில் இருந்து பிரச்சனைகள் துவங்குகின்றன. "கணவரை இழந்த பிறகு இந்தப் பெண்களுக்கு நடக்கும் சடங்குகள் மிகக் கொடுமையானவை. அதற்குப் பிறகு எல்லா மங்கல நிகழ்வுகளில் இருந்தும் அவர்கள் ஒதுக்கிவைக்கப்படுகிறார்கள். இதனால், பல பெண்கள் கணவரை இழந்துவிட்டால் வாழ்க்கையையே இழந்துவிட்டதாக நினைக்கிறார்கள். இவர்கள் தங்களுக்கு என ஒரு மறுவாழ்வை ஏற்படுத்திக்கொள்வதில் மிகப் பெரிய பிரச்சனைகள் இருக்கின்றன" என்கிறார் தமிழ்நாடு கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியத்தின் உறுப்பினரும் கல்வியாளருமான கல்யாணந்தி. இதில் முக்கியப் பிரச்சனையாக இருப்பது மறுமணம். "கணவரை இழந்தவர்களில் சிலர் அப்படியே வாழ்ந்து முடித்துவிட நினைப்பார்கள். ஆனால், பல பெண்கள் பல்வேறு கட்டாயங்களின் காரணமாக அப்படி வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள். ஜாதி வழக்கம், குடும்பப் பாரம்பரியம் இதில் முக்கியக் காரணமாக இருக்கும். குடும்ப வன்முறையால் பாதிக்கப்பட்டவர்கள் இன்னொரு திருமணத்தை எதிர்கொள்ள பயந்து, திருமணம் செய்யாமல் இருப்பார்கள். அதேபோல, கணவரின் குடும்பத்தை சார்ந்து இருப்பவர்களால் மறுமணம் செய்ய முடியாது. கணவர் வழியில் வர வேண்டிய சொத்துகள், தன் குழந்தைகளுக்கு வர வேண்டும் என்பதற்காகவும் மறுமணம் செய்யாமல் வாழ வேண்டியிருக்கும். இதில் படித்தவர், படிக்காதவர், ஏழை, பணக்காரன் என்ற வித்தியாசமே கிடையாது" என்கிறார் கல்யாணந்தி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவிலேயே முதல் முறையாக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியம், தமிழ்நாடு அரசால் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அமைக்கப்பட்டது. தமிழ்நாட்டின் முன்னோடி திட்டங்கள் தமிழ்நாட்டில் கணவரை இழந்த பெண்களுக்கு என இந்தியாவிலேயே முதல் முறையாக கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் நல வாரியம், தமிழ்நாடு அரசால் 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 2ஆம் தேதி அமைக்கப்பட்டது. இதன் தலைவராக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சரே இருந்துவருகிறார். "கணவரை இழந்த பெண்கள் தொடர்பாக ஒரு மாற்றுக் கலாச்சார சிந்தனையை உருவாக்க வேண்டும். கணவரை இழந்த பிறகு பூவைக்கவோ, பொட்டு வைக்கவோ கூடாது என்ற சிந்தனையை மாற்ற வேண்டும். அவர்கள் மறுமணம் செய்ய விரும்பினாலும், சமூகக் கட்டாயங்கள் அதற்கு அனுமதிப்பதில்லை. இந்தப் பெண்களுக்கு வங்கிக் கடன்களில் முன்னுரிமை தரலாம். தவிர, தமிழ்நாடு கட்டடத் தொழிலாளர் நல வாரியத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு அளிக்கப்படும் சலுகைகளை இவர்களுக்கும் அளிக்க வேண்டும். வீடு கட்டும் திட்டத்தில் இவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டால், கூடுதலான உதவித் தொகையை அளிக்க வேண்டும். கழிப்பறைகள் வீட்டிற்குள்ளேயே இருப்பதுபோன்ற ஏற்பாடுகளையும் செய்ய வேண்டும்" என்கிறார் குழந்தைச்சாமி. கணவரை இழந்த பெண்களின் நலனில் சமூகத்தின் நலனும் அடங்கியிருக்கிறது என்கிறார் கல்யாணந்தி. "தமிழ்நாட்டில் கணவரை இழந்த பெண்கள் போட்டித் தேர்வில் பங்கேற்கும்போது அவர்களுக்கு என இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அதனை அவர்கள் பயன்படுத்தலாம். அதற்கு சமூகத்தின் தூண்டுதல் மிக முக்கியமானது. மேலும், ஒற்றைப் பெற்றோராக குழந்தையை வளர்ப்பது மிகக் கடினம். அந்தக் குழந்தைகள் சட்டமீறல்களில் ஈடுபடும் வாய்ப்பும் அதிகமாக இருக்கிறது. ஆகவே, கணவரை இழந்த பெண்களின் நலன் மேம்படும்போது சமூகத்தின் நலனும் மேம்படுகிறது" என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/articles/c25qq4l259jo
-
சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது
சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் ஆரம்பம்! Published By: VISHNU 23 FEB, 2024 | 01:30 AM தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பெற்ற திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டம் வியாழக்கிழமை (22) ஆரம்பமாகியுள்ளது. இந்த போராட்டமானது வெள்ளிக்கிழமை (23) மாலை 6:30 மணிவரை தொடரும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த போராட்டமானது தொடர்ச்சியாக ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் இடம்பெற்று வருகிறது. இந்த போராட்டத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் பொதுமக்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/177085
-
சிறீதரனுடன் சந்திப்பை ஏற்படுத்திய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா
Published By: VISHNU 23 FEB, 2024 | 12:51 AM இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை அழைத்து, கொழும்பில் (India House) புதன்கிழமை (21) சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார். இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவுசெய்யப்பட்டமைக்காக சிறீதரனுக்கு வாழ்த்துரைத்த அவர், கட்சியின் அடுத்தகட்ட நகர்வுகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கைக்கான இந்தியத் தூதரகத்தின் பிரதி உயர்ஸ்தானிகர் சத்யஞ்சல் பாண்டேவும் இணைந்திருந்த இச் சந்திப்பில் ஈழத்தமிழர் நலன்சார் விடயங்களில் இந்தியாவின் முறையான வகிபங்கை உறுதிப்படுத்த வேண்டியுள்ளதன் அவசியம் குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/177084
-
உலகின் இரண்டாவது மிகப்பெரிய மீத்தேன் கசிவு விபத்து எப்படி நடந்தது? - அதிர்ச்சி தகவல்கள்
பட மூலாதாரம்,INSTAGRAM/MANGYSTAU ECOLOGY DEPARTMENT படக்குறிப்பு, கஜகஸ்தானில் பதிவான மோசமான மீத்தேன் கசிவு சம்பவம் கட்டுரை தகவல் எழுதியவர், மார்கோ சில்வா, டேனியல் பலும்போ, எர்வான் ரிவால்ட் பதவி, பிபிசி வெரிஃபை 22 பிப்ரவரி 2024 பசுமைக்குடில் வாயுக்களில் கார்பன் டை ஆக்ஸைடை விட, அதிக பாதிப்பை ஏற்படுத்துவது மீத்தேன். உலக நாடுகள் அனைத்தும் மீத்தேன் உமிழ்வை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. ஆனாலும், உலகம் முழுவதிலும் ஆங்காங்கே நடைபெறும் விபத்துகளால் ஏற்படும் மீத்தேன் கசிவு அச்சுறுத்தலாக மாறியுள்ளது. கடந்த ஆண்டு உலகின் மிக மோசமான மீத்தேன் கசிவு கஜகஸ்தானின் கிராமப்புறப்பகுதி ஒன்றில் உள்ள கிணற்றில் நடந்துள்ளது. சமீபத்தில் வெளியான புதிய பகுப்பாய்வு அறிக்கை மூலம் இதை உறுதி செய்துள்ளது பிபிசி வெரிஃபை குழு. இந்த விபத்தில் ஏற்பட்ட தீப்பரவல் ஆறு மாதங்களுக்கும் மேலாக நீடித்தது. இதில் 1,27,000 டன் வாயு வெளியேறியதாக ஆய்வில் மதிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மீத்தேன் வெளியேறிய கிணற்றின் உரிமையாளரான புசாச்சி நெஃப்ட் நிறுவனம், இந்த அளவுக்கான மீத்தேன் வெளியேறியுள்ளது என்ற கூற்றை மறுத்துள்ளது. அமெரிக்கச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் பசுமைக்குடில் வாயு கால்குலேட்டரின் படி, இந்த அளவிற்கான மீத்தேன் கசிவினால் ஏற்படக்கூடிய சுற்றுச் சூழல் பாதிப்பானது, ஒரு ஆண்டிற்கு 7,17,000 க்கும் மேற்பட்ட பெட்ரோல் கார்களை ஓட்டுவதற்கு நிகரானது என்று கூறப்பட்டுள்ளது. இந்தக் கசிவு குறித்து பேசியுள்ள ஐ.நா.வின் சர்வதேச மீத்தேன் உமிழ்வு ஆய்வகத்தின் தலைவர் மன்ஃப்ரெடி கால்டகிரோன், "இந்தக் கசிவின் அளவு மற்றும் கால அளவு அசாதாரணமானது என்றும், இது மிகவும் பெரியது," என்றும் கூறியுள்ளார். படக்குறிப்பு, 2023 ஜூன் தொடங்கிய தீ பரவல் 2023 இறுதி வரை அணையாமல் எரிந்து கொண்டிருந்தது. விபத்து எப்படி நடந்தது? தென்மேற்கு கஜகஸ்தானின் மங்கிஸ்டாவ் பகுதியில் உள்ள கிணறு ஒன்றில் துளையிட்டுக் கொண்டிருக்கும்போது, 2023-ஆம் ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி இந்த வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதில் அந்த கிணற்றில் இருந்து மீத்தேன் கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஏற்பட்ட தீ பரவல் 2023-ஆம் ஆண்டு இறுதி வரை அணையாமல் எரிந்து கொண்டிருந்தது. இறுதியில் 2023-ஆம் ஆண்டு டிசம்பர் 25-ஆம் தேதி அன்றுதான் தீப்பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. தற்போது அந்த கிணற்றை சிமெண்ட் கொண்டு மூடும் பணி நடந்து வருவதாக உள்ளூர் அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். இயற்கை எரிவாயுவின் முதன்மைகூறான மீத்தேன் வாயுவை மனிதர்களால் வெறுங்கண்ணால் பார்க்க முடியாது. ஆனால், மீத்தேன் கூட்டமாக சூழ்ந்துள்ள இடத்தில் சூரியஒளி படும்போது, தனித்துவமான தடயத்தை அது உருவாக்குகிறது. இதை சில செயற்கைக்கோள்களால் கண்டறிய முடியும். மேலே குறிப்பிடப்பட்டுள்ள மீத்தேன் கசிவு குறித்து முதலில் பிரெஞ்சு புவி பகுப்பாய்வு நிறுவனமான கெய்ரோஸ் ஆய்வு செய்தது. அவர்களது ஆய்வு முடிவுகள் தற்போது நெதர்லாந்தின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் ஸ்பெயினில் உள்ள வலென்சியா பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தால் சரிபார்க்கப்பட்டுள்ளது. ஜூன் மற்றும் டிசம்பர் மாதங்களுக்கு இடைப்பட்ட செயற்கைக்கோள் தரவுகளை ஆராய்ந்து, 115 தனித்தனி சூழல்களில் அதிக செறிவுள்ள மீத்தேன் காணப்பட்டதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். படக்குறிப்பு, மீத்தேன் கசிவு ஏற்பட்ட கிணறு 'இரண்டாவது மிகப்பெரிய மீத்தேன் கசிவு' இந்த அளவீடுகளை அடிப்படையாக கொண்டு, அந்த ஒரே கிணற்றிலிருந்து 1,27,000 டன் மீத்தேன் வெளியேறியுள்ளது என்ற முடிவுக்கு வந்துள்ளனர் விஞ்ஞானிகள். எனவே, இந்த நிகழ்வை மனிதர்களால் உருவாக்கப்பட்ட இரண்டாவது மோசமான மீத்தேன் கசிவு என்று எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர். கசிவை உறுதிசெய்யும் ஆய்வில் உதவிய வலென்சியா பாலிடெக்னிக் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த லூயிஸ் குவாண்டர், " 'நோர்ட் ஸ்ட்ரீம்' (Nord Stream) அழிவு மட்டுமே இந்தளவு அதிகமான கசிவை ஏற்படுத்த முடியும்," என்று கூறுகிறார். செப்டம்பர் 2022-இல், ரஷ்யாவில் இருந்து ஜெர்மனிக்கு இயற்கை வாயுவைக் கொண்டு செல்லும் இரண்டு குழாய்கள், நீருக்கடியில் குண்டு வெடித்ததில் சேதமடைந்தது. இதில் நோர்ட் ஸ்ட்ரீம் 1 மற்றும் 2 குழாய்களில் இருந்து 2,30,000 டன் மீத்தேன் வளிமண்டலத்தில் வெளியிடப்பட்டது. சர்வதேச ஆற்றல் முகமையின் கூற்றுப்படி, தொழிற்ப்புரட்சிக்குப் பின் உலக அளவில் ஏற்பட்ட 30% வெப்பநிலை அதிகரிப்புக்கு மீத்தேன் தான் காரணம். மேகமூட்டம் உள்ளிட்ட வேறு சில காரணங்களால் செயற்கைக்கோள் கணக்கீடுகளில் தாக்கம் ஏற்பட்டிருந்தாலும், இந்த ஒரு கிணற்றில் இருந்து மட்டும் அதிகளவிலான மீத்தேன் கசிந்துள்ளது என்பதில் உறுதியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர் விஞ்ஞானிகள். இதுகுறித்து பேசிய குவாண்டர், “வெவ்வேறு மீத்தேன் உணர்திறன் கொண்ட ஐந்து செயற்கைக்கோள்களின் மூலம், இந்த மீத்தேன் புகைப்படலம் (Plume) கண்டறியப்பட்டுள்ளது,” என்று கூறினார். மேலும், “இந்த ஒவ்வொரு செயற்கைக்கோள்களும் மீத்தேனை குறிப்பிட்ட வழிகளில் அளவிடுகின்றன, ஆனால், அவற்றிலிருந்து நிலையான அளவீடுகளை மட்டுமே நாங்கள் எடுத்துக்கொண்டோம்,” என்று தெரிவிக்கிறார். மங்கிஸ்டாவ் சூழலியல் துறை தனது அறிக்கை ஒன்றில், ஜூன் 9 மற்றும் செப்டம்பர் 21-க்கு இடைப்பட்ட காலத்தில் 10 வெவ்வேறு நேரங்களில், காற்றில் மீத்தேன் செறிவு சட்டவரம்புகளுக்கு அதிகமாக காணப்பட்டதாக, உறுதிப்படுத்தியுள்ளது. படக்குறிப்பு, கிணற்றின் உரிமையாளரான கஜகஸ்தானை சேர்ந்த புசாச்சி நெஃப்ட் நிறுவனம், அதிகளவிலான மீத்தேன் வெளியாகியுள்ளது என்ற தகவலை மறுத்துள்ளது. நிறுவனம் என்ன சொல்கிறது? மேலும், வெடிவிபத்துக்கு அடுத்த சில மணிநேரங்களில் காற்றில் மீத்தேன் அளவு அனுமதிக்கப்பட்ட அளவை விட 50% அதிகமாக இருந்ததாக அதில் கூறப்பட்டுள்ளது. ஆனால், கிணற்றின் உரிமையாளரான கஜகஸ்தானை சேர்ந்த புசாச்சி நெஃப்ட் நிறுவனம், அதிகளவிலான மீத்தேன் வெளியாகியுள்ளது என்ற தகவலை மறுத்துள்ளது. மேலும், அந்தக் கிணற்றில் குறைந்த அளவு வாயுவே இருந்ததாகவும், ஆழ்துளை கிணற்றில் இருந்து எந்தளவிலான வாயு வெளியாகியிருந்தாலும் தீ பற்றியிருக்கும் என்று அந்நிறுவனம் கூறியுள்ளது. அதேபோல், கிணற்றிலிருந்து நீராவி மட்டுமே வெளியாகியிருக்கும் என்றும், அதுவே செயற்கைக்கோள் பார்க்கும்போது வெள்ளை புகைப்படலாம் போல் தெரிந்திருக்கும் என்றும் தாங்கள் நம்புவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து பிபிசியிடம் பேசியுள்ள அந்த நிறுவனத்தின் மூலோபாய வளர்ச்சிக்கான துணை இயக்குனர் டானியார் துசெம்பாயேவ் , “நாங்கள் இந்த விபத்தை பொறுப்புடன் அணுகியுள்ளோம்,” என்று தெரிவித்துள்ளார். இந்த விஷயம் குறித்து ஆராய புசாச்சி நெஃப்ட் நிறுவனமும், தனி ஆய்வு குழு ஒன்றை அமர்த்தியுள்ளது. இந்த ஆய்வு கெய்ரோஸின் ஆய்வு முடிவுகளை கேள்விக்குட்படுத்தியுள்ளது. ஆனால், அதன் அறிக்கைகளை பார்க்க பிபிசி அனுமதிக்கப்படவில்லை. அந்த நிறுவனத்தின்படி, செயற்கைகோள்கள் மீத்தேனுக்கு பதிலாக, வளிமண்டலத்தில் தெரிந்த நீராவி போன்ற வேறு வாயுக்களை தவறுதலாக கணிக்கிட்டு விட்டதாகவும், கெய்ரோஸின் ஆய்வில் இந்த வெடிப்பு சம்பவத்திற்கு முன்பே வளிமண்டலத்தில் காணப்பட்ட மீத்தேன் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை என்றும், அந்த ஆய்வு பரிந்துரைத்துள்ளது. ஆனால், கசிவு குறித்த கெய்ரோஸின் ஆரம்பகட்ட ஆய்வை சரிபார்த்த குழுக்கள் இந்த கூற்றை மறுக்கின்றன. இதுகுறித்து பேசிய குவாண்டர், “நீராவி அல்லது புகையின் விளைவுகள் என்ன என்பதை நாங்கள் சோதித்தோம். அதன் முடிவுகளுக்கும், எங்களது அளவீடுகளுக்கும் எந்த தொடர்பையும் நாங்கள் கண்டறியவில்லை,” என்று கூறியுள்ளார். மேலும், தங்களது விஞ்ஞானிகள் 'ஒற்றை மீத்தேன் புகைப்படலங்களை' மட்டுமே தேடியதாகவும், எனவே 'விபத்திற்கு முன்பு ஏற்கனவே வளிமண்டலத்தில் காணப்பட்ட மீத்தேன் தங்களது வழிமுறையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது' என்றும் அவர் கூறியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இயற்கை எரிவாயு உற்பத்தி அதிகரிப்பின் மூலம், மேலும் அதிகமான மீத்தேன் கசிவு அபாயத்தை கஜகஸ்தான் எதிர்கொள்ளும் என்று கூறுகின்றனர். மீத்தேன் உமிழ்வை குறைக்க கஜகஸ்தான் முடிவு இந்த விபத்து குறித்த அதிகாரபூர்வ விசாரணை அட்யூராவின் தொழில்துறை பாதுகாப்புக் குழுவால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விசாரணையில், புசாச்சி நெஃப்ட் நிறுவனம் கிணறு துளையிடும் பணியை சரியாக மேற்பார்வை செய்யவில்லை என்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் துளையிடும் பணியில் ஏற்பட்டுள்ள பல்வேறு குளறுபடிகளுக்கு துணை ஒப்பந்ததாரான ஜமான் எனர்கோ மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. ஆனால், இதுகுறித்து அவர் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டார். கஜகஸ்தான் எரிசக்தி அமைச்சகம் பிபிசிக்கு வழங்கியுள்ள அறிக்கையில், “இந்தக் கசிவை கையாள்வது சிக்கலான தொழில்நுட்ப பணி என்றும், இது போன்ற விபத்துகளுக்கு உலக அளவில் எந்த விதமான தீர்வும் இல்லை,” என்றும் தெரிவித்துள்ளது. மத்திய ஆசிய பகுதியில் இது போன்ற பெரிய மீத்தேன் கசிவு விபத்து ஏற்படுவது இது முதல் முறையல்ல. அண்டை நாடான துர்க்மெனிஸ்தானைப் போலவே, கஜகஸ்தானும் டஜன் கணக்கான 'சூப்பர்-எமிட்டர்' நிகழ்வுகளைப் பதிவு செய்துள்ளது. சூப்பர்-எமிட்டர் என்பது வளிமண்டலத்தில் அதிக அளவு மீத்தேன் வெளியிடப்படும் நிகழ்வுகளை விவரிக்க விஞ்ஞானிகளால் பயன்படுத்தப்படும் பதமாகும். ஆனால், இதுவரை நடந்த மீத்தேன் கசிவு சம்பவங்களிலேயே மங்கிஸ்டாவில் நடந்த நிகழ்வே பெரியது எனவும், மற்றவற்றில் இருந்து அது தனித்து நிற்பதாகவும் தெரிவிக்கிறார் குவாண்டர். காலநிலை மாற்றத்தைத் தொடர்ந்து கண்காணித்து வரும் காலநிலை நிபுணர்கள், இயற்கை எரிவாயு உற்பத்தி அதிகரிப்பின் மூலம், மேலும் அதிகமான மீத்தேன் கசிவு அபாயத்தை கஜகஸ்தான் எதிர்கொள்ளும் என்று கூறுகின்றனர். கடந்த ஆண்டு நடந்த COP28 காலநிலை உச்சிமாநாட்டில், 2030-ஆம் ஆண்டுக்குள் உலகளவிலான மீத்தேன் உமிழ்வை 30% குறைப்பதற்கான தன்னார்வ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட 150 நாடுகளில் கஜகஸ்தானும் ஒன்று. https://www.bbc.com/tamil/articles/cpr8xrdvq1lo
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பிறந்தநாள் வாழ்த்துகள் தமிழ்சிறி அண்ணை, வாழ்க வளத்துடன்.