Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. திட்வா புயல்: '200 ஆண்டு பின்னோக்கி' சென்ற மலையகத் தமிழர்களின் வாழ்க்கை கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையில் 200 ஆண்டுகளுக்கும் அதிகமான வரலாற்றை கொண்ட இந்திய வம்சாவளி மலையக தமிழர்களின் வாழ்க்கையை, திட்வா புயல் முற்றாக மாற்றியமைத்துள்ளது. எந்தவித வசதிகளும் இல்லாத லைன் அறைகளில் (Line Rooms) வாழ்ந்து வந்த மலையக தமிழர்கள் கடந்த சில வருடங்களாகவே படிப்படியாக தனி வீடுகளுக்கு செல்ல ஆரம்பித்திருந்தனர். இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் என்ற அடிப்படையில் இவர்களின் வாழ்க்கை, சுமார் 200 ஆண்டுகளின் பின்னர் படிப்படியாக மாற ஆரம்பித்திருந்தது. பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் தனி வீடுகளுக்கு சென்ற மலையக தமிழர்களில் பலர் இன்று மீண்டும் லைன் அறைகளில் வாழ்க்கைக்கு திரும்பியுள்ளமை கவலையளிக்கின்றது. இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் மற்றும் இந்திய அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் ஆகியவற்றில் ஏற்பட்ட அபாயகர நிலைமையே இதற்கான பிரதான காரணமாக அமைந்துள்ளது. இந்த வீட்டுத் திட்டங்களை அமைப்பதற்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் இரண்டு விதமான ஆய்வு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்தது. வீட்டுத் திட்டம் அமையப் பெறும் முழு காணிக்கான ஆய்வு அறிக்கை மற்றும் தனி வீடுகளை அமைக்கும் காணிகளுக்கான ஆய்வு அறிக்கை என இரண்டு விதமான அறிக்கைகளை சமர்ப்பித்ததன் பின்னரே இந்த வீட்டுத் திட்டங்கள் அமைக்கப்பட்டன. எனினும், அபாயகரமற்ற, அதிவுயர் பாதுகாப்பு பகுதிகளையும் திட்வா புயல் அபாயகரமான பகுதிகளாக இப்போது மாற்றியுள்ளது. லைன் அறைகளுக்கு மீண்டும் சென்ற மலையக மக்கள் வாழ்க்கையை தலைகீழாக மாற்றிய திட்வா மாத்தளை - ஹூன்னஸ்கிரிய பகுதியில் வாழ்ந்து வருபவர்கள் எலிஸ்டன் மற்றும் ஜூலியட் தம்பதியின் குடும்பம். மூன்று பிள்ளைகளின் பெற்றோராகிய இவர்கள் தேயிலை தோட்டத்தில் வேலை செய்து வந்தமையினால், இந்த குடும்பத்திற்கு வீட்டுத் திட்டம் கிடைத்துள்ளது. தலைமுறையின் 200 வருட லைன் வாழ்க்கையிலிருந்து விடுபட்டு, தனி வீட்டு வாழ்க்கைக்கு சென்ற அவர்கள், தமது பிள்ளைகளின் எதிர்காலம் தொடர்பில் பல்வேறு வகையிலும் சிந்தித்ததாக கூறுகின்றனர். தனது கையில் முறிவு ஏற்பட்டதை அடுத்து தோட்ட தொழிலுக்கு செல்வதை தான் தவிர்த்ததாக ஜூலியட் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து, ஜூலியட்டின் கணவர் எலிஸ்டன், கூலித் தொழிலை செய்வதற்காக தோட்டத்திலிருந்து வெளியில் சென்றுள்ளார். எலிஸ்டனின் தொழில் முன்னேற்றம் காரணமாக வாழ்க்கை படிப்படியாக முன்னேறிய வந்த நிலையில், திட்வா புயல் தாக்கியது. பல எதிர்பார்ப்புக்களுக்கு மத்தியில் லைன் வீட்டிலிருந்து தனி வீட்டுக்கு சென்ற தம்மை, திட்வா புயல் மீண்டும் லைன் வாழ்க்கைக்கே திரும்பியனுப்பியதாக எலிஸ்டன், பிபிசி தமிழிடம் தெரிவித்தார். படக்குறிப்பு,200 வருட வாழ்க்கையை விட்டு போக வேண்டும் என்று சொல்லி தான் கொஞ்சம் முன்னோக்கி போனோம். கடைசியில் மீண்டும் கீழே வீழ்ந்து விட்டோம் என்கிறார் எலிஸ்டன் ''நாங்கள் சாப்பிட போகும் போது பின்நேரம் 4.30 (மாலை) இருக்கும். எங்களுடைய வீட்டின் பின்னால் இருந்த சுவர் இடிந்து வீழ்ந்து விட்டது. சாப்பாடு கூட சாப்பிடாமல் அப்படியே எல்லாவற்றையும் போட்டு விட்டு மாமா விட்டுக்கு வந்து விட்டோம். 200 வருட வாழ்க்கைக்கு திரும்பவும் வந்து விட்டோம். எங்களுடைய பிள்ளைகளுக்கு ஆசையை காட்டி மோசம் பண்ணி விட்டோம். திரும்புவும் அந்த வீட்டில் இருக்க முடியாது. திரும்பவும் ஒரு அனர்த்தம் வந்தால் எங்களுடைய பிள்ளைகளை நாங்களே குழியில் தள்ளுற மாதிரி தான். லைன் வாழ்க்கையை தொடரக்கூடாது என்பதே எமது ஆசை. இதையும் விட்டு வெளியில் போக வேண்டும். 200 வருட வாழ்க்கையை விட்டு போக வேண்டும் என்று சொல்லி தான் கொஞ்சம் முன்னோக்கி போனோம். கடைசியில் மீண்டும் கீழே வீழ்ந்து விட்டோம்.'' என எலிஸ்டன் குறிப்பிடுகின்றார். மீண்டும் லைன் வாழ்க்கைக்கு திரும்பியது தமக்கு கவலை அளிப்பதாக எலிஸ்டனின் மனைவியான ஜூலியட் தெரிவிக்கின்றார். ''கதைக்க இயலாது. சரியான கவலையாக இருக்கு. அப்பாவுடைய வீடு இருந்ததால் அங்கு வந்திருக்கிறோம். நான் தோட்டத்தில் வேலை செய்தேன். விழுந்து கையில் மூட்டு ஒன்று விலகியதனால் தோட்டத்தில் வேலை இல்லை. கணவர் மட்டும் தான் வேலை பார்க்கிறார். 3 பிள்ளைகள் படிக்கின்றார்கள். லைன் வீட்டை விட்டுவிட்டு தான் நாங்கள் அங்கே போனோம். பிள்ளைகள் நல்ல நிலைமைக்கு வர வேண்டும் என்றே நாங்கள் புதிய காணிக்கு போனோம். மறுபடியும் இந்த நிலைமைக்கு வந்தது கவலை தான்.'' என ஜூலியட் தெரிவிக்கின்றார். இந்த திட்வா புயல் எலிஸ்டன், ஜூலியட்டை மாத்திரம் 200 வருடங்களை நோக்கி பின்தள்ளவில்லை. அதே இடத்தில் வாழ்ந்த பலரையும் மீண்டும் லைன் வாழ்க்கைக்கு அனுப்பியுள்ளது. படக்குறிப்பு,மீண்டும் லைன் வாழ்க்கைக்கு திரும்பியது தமக்கு கவலை அளிப்பதாக எலிஸ்டனின் மனைவியான ஜூலியட் தெரிவிக்கின்றார். ஹூன்னஸ்கிரிய பகுதியைச் சேர்ந்த நடராஜாவும் இதே பாதிப்பை எதிர்நோக்கியுள்ளார். ''எங்களுக்கு ஐந்து வருடங்களுக்கு முன்னர் வீடு கட்டிக் கொடுத்தார்கள். நாங்கள் அந்த வீட்டிற்கு போய் இரண்டு வருடங்கள் இருக்கும். எங்களுடைய பிள்ளைகள் நல்லா வாழ வேண்டும் என்றே அந்த காணியை நாங்கள் வாங்கினோம். இப்போது அந்த காணிகளில் வாழ இயலாமல் இருக்கு. எங்களுடைய வீட்டிற்கு 20 அடி கீழே மண் சரிவு போயிருக்கு. அன்றைக்கே தோட்ட நிர்வாகம் சொல்லி விட்டார்கள். இங்கே இருக்க வேண்டாம். லயின் அறைக்கே போகுமாறு சொல்லிவிட்டார்கள். இந்த வீட்டில் இருக்க எங்களுடைய பிள்ளைகள் விருப்பம் இல்லை.'' என அவர் கூறுகின்றார். இலங்கை அரசாங்கத்தின் வீட்டுத் திட்டங்கள் மாத்திரமன்றி, இந்திய வீட்டுத் திட்டங்களிலும் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர். படக்குறிப்பு,புதிய வீடுகளைச் சுற்றி சேதங்கள் இருப்பதால், அச்சமடைந்து மக்கள் வெளியேறியுள்ளனர் இந்தியாவிலிருந்து வருகைத் தந்த தமது முன்னோர், இலங்கையில் தமது வாழ்க்கையை ஆரம்பித்த அதே லைன் அறைகளில் மீண்டும் தற்போதைய தலைமுறையும் வாழ வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறுகின்றார். ஹூன்னஸ்கிரிய பகுதியிலுள்ள 16 வீடுகளை கொண்ட வீட்டுத் திட்டத்தின் ஒவ்வொரு வீடும் ஒவ்வொரு விதமான பாதிப்புக்களை சந்தித்துள்ளன. ஒரு சில வீடுகளின் மீது மண்மேடுகள் சரிந்துள்ளதுடன், சில வீடுகளுக்குள் வெள்ள நீர் பிரவேசித்துள்ளன. அத்துடன், பெரும்பாலான வீடுகளில் பாரிய வெடிப்புக்கள் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. இந்த வீடுகளுக்கு கீழ் சில இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளமையினால், தமது வீடுகள் பாரிய அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளதாக அந்த பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளமை, வீடுகள் தாழிறங்கியுள்ளமை, மண்மேடுகள் சரிந்து வீடுகளின் மீது வீழ்ந்துள்ளமை உள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக வைத்து, அதிகாரிகள் தம்மை மீண்டும் லைன் அறைகளுக்கு செல்லுமாறு அறிவுறுத்தியதாக அந்த பிரதேச மக்கள் குறிப்பிடுகின்றனர். படக்குறிப்பு,ஆபத்தற்றது என கருதப்பட்ட பகுதிகளும் திட்வா புயலுக்குப் பின் அபாயகரமானதாக மாறியுள்ளன எதிர்க்கட்சி அரசாங்கத்திடம் விடுக்கும் கோரிக்கை மலையக மக்களுக்கான வீட்டுத் திட்டத்துடன் நெருங்கி செயற்பட்ட தமிழ் முற்போக்கு கூட்டணியின் உபத் தலைவரும், பெருந்தோட்ட மனிதவள நிதியத்தின் முன்னாள் தலைவருமான பாரத் அருள்சாமியிடம் பிபிசி தமிழ் இந்த விடயம் தொடர்பில் வினவியது. ''எந்த வீட்டுத் திட்டமாக இருந்தாலும், தனியான காணியை தேர்வு செய்து வீடுகளை கட்டுவதாக இருந்தாலும் அதற்கான சரியாக திட்டம், கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையோடு தான் இதை செய்வார்கள். இந்த நடைமுறை இந்திய வீட்டுத் திட்டத்திலும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கை இருந்தால் மாத்திரமே அந்த இடத்தில் வீடுகளை கட்ட முடியும். அது இல்லாமல் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையை முழுமையாக காணிகளுக்கும் பெற்று, அதே போன்று வீடுகளை நிர்மாணிக்கும் இடத்திற்கும் எடுத்திருந்தோம். ஏனென்றால், கட்டப்படும் பெரும்பாலான வீடுகள் மலைப்பாங்கான இடங்களில் இருப்பதனால், அந்த முறையை கொண்டு வந்தோம். இப்போது ஏற்பட்டிருக்கின்ற இயற்கை அனர்த்தம் யாருமே எதிர்பார்க்காத இடங்களிலும் ஏற்பட்டிருக்கின்றது. பாதிக்கப்பட்ட மலையக மக்களுக்கு ஏனைய மக்களைப் போன்றே உதவிகள் வழங்கப்பட வேண்டும். நாங்கள் இந்த நாட்டு பிரஜைகளே. ஏனைய பிரஜைகளுக்கு வழங்கப்படும் உரிமைகள், எமக்கும் உரித்தாகும். அந்த நிவாரண திட்டங்கள் எங்கள் மக்களுக்கும் வழங்கப்பட வேண்டும்.'' என பாரத் அருள்சாமி கோரிக்கை விடுக்கின்றார். ''இவர்கள் இந்த இடத்திலிருந்து மீண்டும் லைன் அறைகளுக்குப் போவது என்பது மிகவும் கவலைக்குரிய விடயம். இவர்கள் தனிவீட்டிற்கு போய் விட்டார்கள். அப்படியென்றால் கிராம வாழ்க்கைக்கு போய்விட்டார்கள். அப்படியென்றால், அரசாங்கம் அறிவித்த அந்த நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.'' எனவும் பாரத் அருள்சாமி குறிப்பிடுகின்றார். படக்குறிப்பு,திட்வா புயலால் பாதிக்கப்பட்ட வீடுகள் அரசாங்கத்தின் பதில் லைன் அறைகளிலிருந்து தனிவீட்டிற்கு சென்று திட்வா புயல் காரணமாக பாதிக்கப்பட்ட பின்னணியில், மீண்டும் லைன் வீடுகளுக்கு சென்றவர்கள் குறித்து பெருந்தோட்ட, உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீபனிடம் பிபிசி தமிழ் வினவியது. ''தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கைகளின் பிரகாரம், தனி வீட்டுத் திட்டத்திற்குள் உள்வாங்கப்பட்டு பாதிக்கப்பட்டுள்ள மலையக மக்களுக்கு மீண்டும் அதே வாழ்க்கையை ஏற்படுத்தி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்'' என பிபிசி தமிழிடம் அவர் உறுதியளித்தார். பெருந்தோட்ட பகுதிகளில் லைன் அறைகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவிகளை வழங்க தாம் நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் இதன்போது குறிப்பிட்டார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cre3pgez439o
  2. இந்திய வெளிவிவகார அமைச்சர் உத்தியோக பூர்வமான விஜயம் - ஜனாதிபதி, பிரதமருடன் முக்கியமான சந்திப்பு! 21 Dec, 2025 | 11:43 AM (ஆர்.ராம்) இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி.சுப்பிரமணியம் ஜெய்சங்கர் நாளையதினம் இருநாள் உத்தியோக பூர்வமான விஜயம் மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தரவுள்ளார். இந்த விஜயத்தின் போது முதலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரணி அமரசூரிய ஆகியோருடன் முக்கியமான சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளார். அதனைத்தொடர்ந்து வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்ட அரசாங்கத்தின் சில முக்கிய அமைச்சர்களை சந்திக்கவுள்ளதோடு, எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிரணியையும் சந்திக்கவுள்ளார். அதேநேரம், மலையகத் தலைவர்களை தனியாகச் சந்திப்பதற்கு ஏற்பாடாகியுள்ளதாக தெரிவிக்கப்படும் அதேவேளை, நாளை மறுதினம் தமிழ்த் தேசியக் கட்சிகளைச் சேர்ந்த ஆறு தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைவிடவும், பொதுஜனபெரமுனவின் தலைவர்களையும் ஏனைய பெரும்பான்மைக்கட்சியின் சில தலைவர்களையும் சந்திக்கவுள்ளதோடு முன்னாள் ஜனாதிபதிகளான ரணில் விக்கிரமசிங்க, மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்டவர்களுடனும் சந்திப்புக்கள் இடம்பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவனது, இலங்கையில் தித்வா சூறாவளியால் ஏற்பட்ட பேரனத்தங்களுக்கு சாகர்பந்து திட்டத்தின் கீழாக உடனடியாக மீட்புக்குழு, நிவாரணங்கள், பாதை மறுசீரமைப்பு உள்ளிட்ட பல்வேறு உதவிகளை உடனடியாக முன்னெடுத்து வருகின்றது. இந்நிலையில் இலங்கையின் மீள் கட்டுமானங்களுக்கான மேலதிக உதவித்திட்டங்கள்உட்பட பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் இந்த விஜயத்தின்போது அறிவிப்பார் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதேநேரம், திடீர் ஏற்பாட்டில் இலங்கைக்கு வருகை தரும் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் தன்னுடைய நெருக்கடியான சந்திப்பு நிகழ்ச்சி நிரல்களுக்கு அமைவாக போதுமான நேர ஒதுக்கீடு காணப்படும் பட்சத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிடுவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும், குறித்த களவிஜயம் தொடர்பில் இதுவரையில் எவ்விதமான உறுதிப்படுத்தல்களும் செய்யப்படவில்லை. இதேவேளை, பிரதமர் ஹரிணி அமரசூரிய டில்லிக்குச் சென்றிருந்த வேளையில் இறுதியாக வெளிவிகார அமைச்சர் ஜெய்சங்கர் உத்தியோக பூர்வ சந்திப்பை மேற்கொண்டிருக்கும் இல்லையில் இந்த ஆண்டில் அவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் இரண்டாவது விஜயம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/233994
  3. சவால்மிக்க தருணங்களில் இராணுவத்தின் பணிகள் மகத்தானவை - ஜனாதிபதி Dec 21, 2025 - 05:01 PM புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டல் மற்றும் வசதிகளை வழங்கும் செயற்பாடுகளில் இராணுவம் செய்த சிறப்பான பணிக்காக நன்றி தெரிவிப்பதாகவும் ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதற்குப் பதிலாக, எந்தவொரு சவாலையும் எதிர்கொண்டு, உறுதியுடனும், ஒரே நோக்கத்துடனும், நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகளை நிறைவேற்றும் போதே ஒரு நாடாக நாம் முன்னோக்கி செல்ல முடியும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதியாகவும் அரசாங்கமாகவும் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், மதங்கள் என்ற வகையில் வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளையும், மக்கள் மற்றும் பாதுகாப்புப் படைகள் என்ற வகையில் நமக்கு ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்புகளையும் முறையாக நிறைவேற்றுவது அவசியமாகும். அதன் மூலம், வரலாற்றில் நமக்கு இருந்த பெருமை மற்றும் கெளரவத்துடன் தாய்நாட்டை மீண்டும் விரைவாக கட்டியெழுப்ப முடியும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றுவோம் என்று அழைப்பு விடுத்தார். இன்று (21) முற்பகல் தியதலாவ இலங்கை இராணுவ கல்வியியல் கல்லூரியின் கெடட் அதிகாரிகளின் அணிவகுப்பு நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைக் குறிப்பிட்டார். நமது நாடு ஒரு சிறந்த பாரம்பரியத்தையும் வெற்றிகளையும் பெற்றிருந்தாலும், கடந்த சில தசாப்தங்களாக நாடு அனைத்து வகையான வீழ்ச்சிகளுக்கும் உள்ளாகியுள்ளது. இன்று அனைவருக்கும் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பு, தாய்நாட்டை மீண்டும் உலகில் மதிப்புமிக்க மற்றும் பாராட்டப்படும் ஒரு நாடாக மாற்றுவதாகும் என்று தெரிவித்தார். ஒரு அரசாங்கமாகவும் ஜனாதிபதியாகவும் தமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை, நாட்டின் வளர்ச்சிக்காக முழுமையாகப் பயன்படுத்துவேன் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதற்கும், அதற்கு தேவையான பொறிமுறைகளைத் தயாரிப்பதற்கும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்வதற்கும், அரசியலை மக்களின் செல்வத்தை குவிக்கும் தொழிலிலிருந்து, பொதுமக்களுக்கு சேவை செய்யும் சமூகப் பணியாக மாற்றுவதற்கும் அரசாங்கம் தனது பொறுப்பை நிறைவேற்றி வருவதாக இங்கு தெரவித்தார். இன்று முற்பகல் தியதலாவ, இராணுவ கல்வியியல் கல்லூரிக்கு வருகை தந்த முப்படைகளின் தளபதி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இராணுவ மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. தேசத்திற்கும் இலங்கை இராணுவத்திற்கும் வீரமிக்க தலைவர்களை உருவாக்கிய இராணுவத்தின் சிறந்த பயிற்சி நிறுவனமான தியத்தலாவ இராணுவ கல்வியியல் கல்லூரியின் 100 ஆவது விடுகை அணிவகுப்பு நிகழ்வு இதுவாகும். வதிவிட கெடட் உத்தியோகத்தர் பாடநெறி எண் 93, 94B குறுகிய கால பாடநெறி எண்23, வதிவிட பாடநெறி எண்62 மற்றும் தன்னார்வ பெண் கெடட் உத்தியோகத்தர் பாடநெறி எண்19 ஆகியவற்றைச் சேர்ந்த 240 கெடட் உத்தியோகத்தர்கள் வெற்றிகரமான இராணுவப் பயிற்சிக்குப் பிறகு அதிகாரிகளாக இராணுவ சேவையில் இணைந்தனர். இவர்களில், வெளிநாடுகளைச் சேர்ந்த பல கெடட் உத்தியோகத்தர்களும் பயிற்றுவிக்கப்பட்டு அதிகாரிகளாக நியமிக்கப்பட்டமை விசேட அம்சமாகும். முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, கெடட் உத்தியோகத்தர்களின் விடுகை அணிவகுப்பை பார்வையிட்டதுடன், திறமை வாய்ந்த கெடட் அணிக்கு விருதினையும், கெடட் வீரர்களுக்கு கௌரவ சின்னங்களையும், ஒவ்வொரு பாடநெறியிலும் முதலிடம் பெற்ற அதிகாரிகளுக்கு ஜனாதிபதி விருதுகளையும் வழங்கினார். நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஒவ்வொரு கடினமான சூழ்நிலையிலும் நாட்டிற்கும் மக்களுக்கும் இராணுவம் ஆற்றிய சேவை பாராட்டத்தக்கது என்றும், அண்மைய சூறாவளியின் போது மக்களை மீட்டெடுத்தல் மற்றும் அவர்களுக்கான வசதிகளை வழங்குவதில் ஆற்றிய சிறந்த பணிக்கு நன்றி தெரிவித்தார். இங்கு மேலும் உரையாற்றிய முப்படைகளின் தளபதி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கெடட் உத்தியோகத்தர்களாக தியத்தலாவ இராணுவ கல்வியியல் கல்லூரியில் சேர்ந்து சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியைப் பெற்ற நீங்கள், இன்று அதிகாரிகளாக மாறியுள்ளீர்கள். அரசாங்கத்திற்கும், ஜனாதிபதியாக எனக்கும், உங்கள் மீது பாரிய எதிர்பார்ப்பு உள்ளது. நமது நாடு பல்வேறு கால கட்டங்களில் பல்வேறு சவால்களை எதிர்கொண்டது. அந்த சவால்களை வெற்றிகொள்ள, இந்த தாய்நாட்டின் பாதுகாப்பு, அமைதி மற்றும் மக்களுக்காக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த உங்கள் சிரேஷ்ட அதிகாரிகள் உள்ளனர். நீங்களும் நானும் இன்று கால்களை வைத்திருப்பது, கடந்த காலங்களில், வீரச் செயல்கள் மூலம், நமது தாய்நாட்டை விடுவிப்பதற்கான போராட்டத்தில் உயிர்கள் தியாகம் செய்யப்பட்ட பூமியில் ஆகும். எனவே, கைவிட முடியாத ஒரு பொறுப்பு நம் அனைவருக்கும் உள்ளது. இலங்கை இராணுவமாக, நமது தாய்நாட்டின் மற்றும் அதன் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் அசைக்க முடியாத பொறுப்பு உங்களுக்கு உள்ளது. இந்த விடயத்தில் உங்கள் மீது எங்களுக்கு நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் உள்ளது. சூறாவளியினால் நமது நாடு பேரழிவைச் சந்தித்தது. மக்களின் வாழ்க்கை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. சிலருக்கு உணவு வழங்குவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இன்னும் சிலரது உயிர்களைக் காப்பாற்றுவது ஒரு பெரிய சவாலாக அமைந்தது. அன்றிலிருந்து இன்று வரை, ஒவ்வொரு சவாலிலும் இலங்கை இராணுவம் பெரும் பங்காற்றியுள்ளது. அவர்களுக்கு நன்றி தெரிவிக்கவும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்துகிறேன். படையினர் மிகவும் கடினமான பணியில் ஈடுபட்டு மக்களின் வாழ்க்கையை மீட்டெடுக்க கடுமையாக உழைத்து வருகின்றனர். உங்களுக்கு இருப்பது தொழில் ரீதியான பொறுப்பு மாத்திரமல்ல. பல்வேறு வகையான தொழில்கள் உள்ளன. உங்கள் நண்பர்கள் வெவ்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். ஒவ்வொரு தொழிலுக்கும் அதற்கே உரிய பொறுப்பு மற்றும் மதிப்பு உள்ளது. நீங்கள் மிக உயர்ந்த மதிப்பைப் பெற்றுள்ளீர்கள் என்றும் அதே நேரம் ஒரு பாரிய பொறுப்பு உங்கள் தோள்களில் சுமத்தப்பட்டுள்ளது என்றும் நான் நினைக்கிறேன். நமது தாய்நாட்டை நாம் மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். நமது தாய்நாடு பல தரப்பிலிருந்தும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்கிறது. ஒருபுறம், நமது அரச பொறிமுறை பலவீனமாகவும் வீழ்ச்சி அடைந்தும் இருந்த ஒரு சகாப்தம் இருந்தது. நமது பொருளாதாரம் பெரும் சவாலுக்கு உள்ளாகி சரிவடைந்து கொண்டிருந்த ஒரு சகாப்தம் இருந்தது. நமது சமூகத்தின் நல்வாழ்வு முற்றிலுமாக தோழ்வி கண்ட ஒரு சகாப்தம் இருந்தது. மனித உறவுகள் பெறுமதியற்ற உறவுகளாக மாறிக்கொண்டிருந்தன. பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையிலான உறவு உடையத் தொடங்கியது. ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையிலான உறவு உடையத் தொடங்கியது. மதஸ்தலங்களுக்கும் நிர்வாக சபைக்கும் இடையிலான உறவு உடையத் தொடங்கியது. நமது நாடு அனைத்து மனித உறவுகளும் உடைந்த ஒரு சகாப்தத்தில் நுழைந்து கொண்டிருந்தது. அதன்போது நமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு என்ன? நாம் வரலாற்று பாரம்பரியத்தையும் வரலாற்று சாதனைகளையும் கொண்ட ஒரு நாடு. ஆனால் நமது நாடு எல்லா வகையான வீழ்ச்சிகளுக்கும் உள்ளானது. இப்போது நமக்கு ஒப்படைக்கப்பட்ட பொறுப்பு, இந்த தாய்நாட்டை உலகில் உயர்ந்த, மதிப்புமிக்க மற்றும் பாராட்டப்படும் ஒரு நாடாக மாற்றுவதாகும். ஒவ்வொருவருக்கும் ஒப்படைக்கப்பட்ட பொறுப்புகள் உள்ளன. ஜனாதிபதியாகவும் அரசாங்கமாகவும், நமக்கு ஒரு பொறுப்பு உள்ளது. பொருளாதாரத்தை கட்டியெழுப்பவும் தேவையான பொறிமுறையைத் தயாரிக்கவும், சட்டத்தின் ஆட்சியை உறுதி செய்யவும், அரசியலை மக்களின் செல்வத்தை குவிக்கும் ஒரு தொழிலாக அன்றி, மாறாக மக்களுக்கு சேவை செய்யும் ஒரு சமூகப் பணியாக மாற்றும் பொறுப்பு நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உங்களுக்கும் அதே போன்ற பொறுப்புகள் உள்ளன. இங்கு கூடியிருக்கும் பெற்றோருக்கும் நமது நாட்டிற்கான பொறுப்புகள் உள்ளன. நமது மதஸ்தலங்களுக்கும் பொறுப்புகள் உள்ளன. ஒருவருக்கொருவர் எதிராகச் செயல்படுவதன் மூலமோ அல்லது ஒருவரையொருவர் சந்தேகத்துடனும் அவநம்பிக்கையுடனும் பார்ப்பதன் மூலமோ இந்த நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாது. நம்மிடம் ஒப்படைக்கப்பட்ட பொறுப்பை முறையாக நிறைவேற்றுவதற்கான உறுதியான தீர்மானத்துடன் நாம் அனைவரும் செயல்பட்டால் மாத்திரமே நாம் ஒரு நாடாக முன்னேற முடியும். ஒரு நாடாக நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொறுப்பை இந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்குப் பயன்படுத்துவோம் என்று நான் உங்களுக்கு உறுதி அளிக்கிறேன். மேலும் உங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட பணிகள் மற்றும் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுமாறு உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன். உங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பை முறையாக நிறைவேற்றுமாறு பொதுமக்களையும் நான் அழைக்கிறேன். நாம் அனைவரும் ஒரே குறிக்கோளுடன் தைரியமாக தொடர்ந்தும் இணைந்து பணியாற்ற முடிந்தால், வரலாற்றில் நம் நாடு பெற்ற பெருமை மற்றும் கௌரவத்துடன் தாய்நாட்டை மிக விரைவில் மீண்டும் கட்டியெழுப்ப முடியும். அதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம் என்று அழைப்பு விடுப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmjfnctey02z4o29nqk7ccx9z
  4. இந்தியாவை வீழ்த்தி 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ணத்தை 13 வருடங்களின் பின்னர் சுவீகரித்தது பாகிஸ்தான் Published By: Vishnu 21 Dec, 2025 | 08:29 PM (நெவில் அன்தனி) துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை (21) நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய இளையோர் அணியை 191 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கொண்ட பாகிஸ்தான் இளையோர் அணி 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆசிய சம்பியன் பட்டத்தை 13 வருடங்களின் பின்னர் சுவீகரித்தது. சமீர் மின்ஹாஸ் குவித்த பாகிஸ்தானுக்கான சாதனைமிகு அதிரடி சதம், அலி ராசா பதிவுசெய்த 4 விக்கெட் குவியல் என்பன பாகிஸ்தான் இளையோர் அணியை இலகுவாக வெற்றி பெறச்செய்தன. இப் போட்டியில் சில தனிப்பட்ட மைல்கல் சாதனைகளை நிலைநாட்டிய மின்ஹாஸ் தனி ஒருவராக 172 ஓட்டங்களைக் குவித்தார். அவர் பெற்ற எண்ணிக்கையைக் கூட இந்தியாவின் மொத்த எண்ணிக்கை நெருங்கவில்லை. இம் முறை 19 வயதுக்குட்பட்ட ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் தோல்வி அடையாத அணியாக இந்தியாவும் ஒரு தோல்வியுடன் பாகிஸ்தானும் இறுதிப் போட்டியில் ஒன்றையொன்று எதிர்த்தாடின. முதல் சுற்றில் ஏ குழுவில் இந்தியாவிடம் தோல்வி அடைந்த பாகிஸ்தான் இறுதிப் போட்டியில் ஈட்டிய வெற்றியுடன் அந்த தோல்வியை நிவர்த்திசெய்துகொண்டது. இந்தப் போட்டிக்கான நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய இளையோர் அணித் தலைவர் ஆயுஷ் மஹாத்ரே களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தார். இந்தத் தீர்மானம் எவ்வளவு பெரிய தவறு என்பதை இந்திய இளையோர் அணியினருக்கு புரிந்துகொள்ள வெகுநேரம் செல்லவில்லை. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட பாகிஸ்தான் இளையோர் அணி 50 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 347 ஓட்டங்களைக் குவித்தது. ஆரம்ப விரர் சமீர் மின்ஹாஸ் அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 113 பந்துகளை எதிர்கொண்டு 17 பவுண்டறிகள், 9 சிக்ஸ்களை விளாசி 172 ஓட்டங்களை குவித்தார். 19 வயதுக்குட்பட்டவர்களுக்கான சர்வதேச போட்டி ஒன்றில் பாகிஸ்தான் வீரர் ஒருவர் பெற்ற அதிகூடிய ஓட்டங்கள் இதுவாகும். இதற்கு முன்னர் ஷாஸெய்ப் கான் பெற்ற 159 ஓட்டங்களே பாகிஸ்தானின் முந்தைய தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கையாக இருந்தது. அத்துடன் அவர் பெற்ற 172 ஓட்டங்களில் 122 ஓட்டங்கள் பவுண்டறிகள் மூலம் பெறப்பட்டது. பவுண்டறிளால் மட்டும் அதிகூடிய ஓட்டங்களைப் பெற்ற 19 வயதுக்குட்பட்ட பாகிஸ்தான் வீரர் என்ற சாதனையையும் சமீர் மின்ஹாஸ் நிலைநாட்டினார். இந்தப் போட்டியில் 35 ஓட்டங்களைப் பெற்ற உஸ்மான் கானுடன் 2ஆவது விக்கெட்டில் 92 ஓட்டங்களையும் 56 ஓட்டங்களைப் பெற்ற அஹ்மத் ஹுசெய்னுடன் 3ஆவது விக்கெட்டில் 137 ஓட்டங்களையும் சமீர் மின்ஹாஸ் பகிர்ந்து பாகிஸ்தான் இளையோர் அணியை பலமான நிலையில் இட்டார். பந்துவீச்சில் தீப்பேந்த்ரா 83 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் கிலான் பட்டேல் 44 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹெனில் பட்டேல் 62 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பாகிஸ்தான் இளையோர் அணியினால் நிர்ணயிக்கப்பட்ட மிகவும் கடினமான 348 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடத்தாடிய இந்திய இளையோர் அணி 26.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 156 ஓட்டங்களை மாத்திரம் பெற்று படுதோல்வி அடைந்தது. இந்திய இளையோர் அணியில் இருவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். பின்வரிசை வீரர் தீப்பேஷ் தேவேந்த்ரன் 36 ஓட்டங்களையும் ஆரம்ப வீரர் வைபவ் சூரியவன்ஷி 26 ஓட்டங்களையும் பெற்றனர். பந்தவீச்சில் அலி ராஸா 42 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹுஸெய்பா அஹ்சான் 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் அப்துல் சுப்ஹான் 29 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் மொஹம்மத் சையாம் 38 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன்: சமீர் மின்ஹாஸ் https://www.virakesari.lk/article/234042
  5. மேற்கிந்தியத் தீவுகள் பந்துவீச்சாளர்களைத் துவம்சம் செய்த லெதம், கொன்வே சதங்கள் குவித்து அசத்தல் 18 Dec, 2025 | 06:27 PM (நெவில் அன்தனி) மெற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக மௌன்ட் மௌங்கானுய் பே ஓவல் விளையாட்டரங்கில் இன்று வியாழக்கிழமை ஆரம்பமான மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்து ஓட்ட மழை குவித்து பலமான நிலையில் இருக்கிறது. அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த நியூஸிலாந்து, ஆரம்ப வீரர்கள் பெற்ற சதங்களின் உதவியுடன் முதல் நாள் ஆட்ட நேர முடிவில் அதன் முதல் இன்னிங்ஸில் ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 334 ஓட்டங்களைக் குவித்திருந்தது. அணித் தலைவர் டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் 323 ஓட்டங்களைப் பகிர்ந்து பலமான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். முதலாவதாக ஆட்டம் இழந்த டொம் லெதம் 246 பந்துகளை எதிர்கொண்டு 15 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 137 ஓட்டங்களைக் குவித்தார். 91ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் டொம் லெதம் பெற்ற 15ஆவது சதம் இதுவாகும். மறுபக்கத்தில் 279 பந்துகளை எதிர்கொண்ட டெவன் கொன்வே 25 பவுண்டறிகள் அடங்கலாக 178 ஓட்டங்களைக் குவித்து ஆட்டம் இழக்காதிருந்தார். இது அவர் பெற்ற 6ஆவது டெஸ்ட் சதமாகும். கொன்வேயுடன் களத்திலிருக்கும் ஜேக்கப் டவி 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். இரண்டு அணிகளுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்ததுடன் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து 9 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந் நிலையில் மூன்றாவதும் கடைசியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே தொடரை சமப்படுத்த முடியும் என்ற நிலையில் மேற்கிந்தியத் தீவுகள் களம் இறங்கியது. ஆனால் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதுவும் சாதகமாக அமையவில்லை. மைல்கல் சாதனைகள் டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் ஜோடியாக 86.4 ஓவர்கள்வரை துடுப்பெடுத்தாடி மேற்கிந்திய பந்துவீச்சாளர்களை நையப்புடைத்தனர். அவர்கள் இருவரும் முதலாவது விக்கெட்டில் பகிர்ந்த 323 ஓட்டங்களானது நியூஸிலாந்தின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஆரம்ப விக்கெட்டில் பகிரப்பட்ட இரண்டாவது அதிகூடிய ஓட்டங்களைக் கொண்ட இணைப்பாட்டமாகும். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக ஜோர்ஜ்டவுனில் 1979இல் க்ளென் டேர்னர், டெரி ஜாவிஸ் ஆகிய இருவரும் பகிர்ந்த 387 ஓட்டங்களே ஆரம்ப விக்கெட்டுக்கான நியூஸிலாந்தின் முந்தைய அதிகூடிய எண்ணிக்கையாகும். டொம் லெதம், டெவன் கொன்வே ஆகிய இருவரும் பகிர்ந்த 323 ஓட்டங்களானது சொந்த மண்ணில் பெறப்பட்ட அதிகூடிய ஓட்டங்களைக் கொண்ட முதலாவது விக்கெட்டுக்கான இணைப்பாட்டமாகும். இதற்கு முன்னர் 1930இலும் பின்னர் 1999இலும் முதலாவது விக்கெட்டில் பகிரப்பட்ட 276 ஓட்டங்களே முந்தைய சாதனையாக இருந்தது. கொன்வே பெற்ற ஆட்டம் இழக்காத 178 ஓட்டங்களானது முதலாம் நாளில் பெறப்பட்ட தனிநபருக்கான 3ஆவது அதிகூடிய எண்ணிக்கையாகும். இலங்கைக்கு எதிராக 214இல் ப்றெண்டன் மெக்கலம் பெற்ற 195 ஓட்டங்களும் பங்களாதேஷுக்கு எதிராக 2022இல் டொம் லெதம் பெற்ற ஆட்டம் இழக்காத 186 ஓட்டங்களும் இதற்கு முன்னர் நியூஸிலாந்து சார்பாக டெஸ்ட் போட்டி ஒன்றில் முதலாவது நாளில் பெறப்பட்ட அதிகூடிய எண்ணிக்கைகளாகும். இவை இரண்டும் கிறைஸ்ட்சேர்ச்சில் பதிவான மைல்கல் சாதனைகளாகும். https://www.virakesari.lk/article/233757
  6. இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் கிரிக்கெட் தொடரை இப்போதைக்கு 3 - 0 என சுவீகரித்தது அவுஸ்திரேலியா 21 Dec, 2025 | 12:43 PM (நெவில் அன்தனி) இங்கிலாந்துக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் கிரிக்கெட் டெஸ்ட் தொடரில் 2 போட்டிகள் மீதம் இருக்க இப்போதைக்கு தொடரை 3 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா சுவீகரித்துக் கொண்டது. அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற 3ஆவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியில் கடும் முயற்சிக்கு பின்னர் போட்டியின் கடைசி நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை பகல்போசன இடைவேளைக்குப் பின்னர் அவுஸ்திரேலியா 82 ஓட்டங்களால் வெற்றியீட்டி தொடரைக் கைப்பற்றியது. இந்தத் தொடரை 11 நாட்களுக்குள் அவுஸ்திரெலியா வென்றமை விசேட அம்சமாகும். பேர்த் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டி 2 நாட்களிலும் பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டி 4 நாட்களிலும் அடிலெய்ட் ஓவல் விளையாட்டரங்கில் நடைபெற்ற மூன்றவாது டெஸ்ட் போட்டி 5 நாட்களிலும் நிறைவடைந்தன. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் 435 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 207 ஓட்டங்களிலிருந்து கடைசி நாள் ஆட்டத்தைத் தொடர்ந்த தொடர்ந்த இங்கிலாந்து சகல விக்கெட்களையும் இழந்து 352 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. மத்திய வரிசை விரர்களான ஜெமி ஸ்மித், வில் ஜெக்ஸ். ப்றைடன் கார்ஸ் ஆகியோர் இங்கிலாந்தை தோல்வியிலிருந்து மீட்க எடுத்துக்கொண்ட கடுமையான முயற்சிகள் கைகூடாமல் போயின. அவுஸ்திரேலியாவின் துல்லியமான பந்துவீச்சுகளும் சிறப்பான களத்தடுப்புளும் இங்கிலாந்தை தோல்வி அடையச் செய்தன. ஜெமி ஸ்மித், வில் ஜெக்ஸ் ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் கிட்டத்தட்ட 30 ஓவர்கள் தாக்குப் பிடித்து 91 ஓட்டங்களைப் பகிர்ந்து இங்கிலாந்தை ஓரளவு கௌரவமான நிலையில் இட்டனர். தொடர்ந்து வில் ஜெக்ஸ் ப்றைடன் கார்ஸ் ஆகிய இருவரும் 8ஆவது விக்கெல் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து அவுஸ்திரேலியாவின் வெற்றியைத் தாமதப்படுத்தினர். இந்த மூவரும் 35 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். இப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் 106 ஓட்டங்களையும் இரண்டாவது இன்னிங்ஸில் 72 ஓட்டங்களையும் பெற்றதுடன் முழுப் போட்டியிலும் 6 பிடிகளை எடுத்த அலெக் கேரி ஆட்ட நாயகனானார். இந்த டெஸ்ட் போட்டி முடிவுடன் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷப்பில் அவுஸ்திரேலியா இதுவரை விளையாடிய தனது ஆறு போட்டிகளிலும் வெற்றியீட்டி 72 புள்ளிகளைப் பெற்று 100 சதவீத புள்ளிகளுடன் முதல் இடத்தில் இருக்கிறது. எண்ணிக்கை சுருக்கம் அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 371 (அலெக்ஸ் கேரி 106, உஸ்மான் கவாஜா 82, மிச்செல் ஸ்டாக் 54, ஜொவ்ரா ஆச்சர் 53 - 5 விக்., ப்றைடன் கார்ஸ் 89 - 2 விக்., வில் ஜெக்ஸ் 105 - 2 விக்.) இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 286 (பென் ஸ்டோக்ஸ் 83, ஜொவ்ரா ஆச்சர் 51, ஹெரி ப்றூக் 45, ஸ்கொட் போலண்ட் 45 - 3 விக்., பெட் கமின்ஸ் 69 - 3 விக்., நேதன் லயன் 70 - 2 விக்.) அவுஸ்திரேலியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 349 (ட்ரவிஸ் ஹெட் 170, அலெக்ஸ் கேரி 72, உஸ்மான் கவாஜா 40, ஜொஷ் டங் 70 - 4 விக்., ப்றைடன் கார்ஸ் 80 - 3 விக்.) இங்கிலாந்து 2ஆவது இன்: வெற்றி இலக்கு 435 ஓட்டங்கள் - சகலரும் ஆட்டம் இழந்து 352 (ஸக் க்ரோவ்லி 85, ஜெமி ஸ்மித் 60, வில் ஜெக்ஸ் 47, ஜோ ரூட் 39, ப்றைடன் கார்ஸ் 39, ஹெரி ப்றூக் 30, பெட் கமின்ஸ் 48 - 3 விக்., மிச்செல் ஸ்டாக் 62 - 3 விக்., நேதன் லயன் 77 - 3 விக்.) https://www.virakesari.lk/article/234001
  7. 25,000 ரூபா எங்களுக்கும் வேண்டும்; புத்தளத்தில் ஆர்ப்பாட்டம்! Dec 21, 2025 - 01:25 PM வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு வீட்டை சுத்தம் செய்ய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 25,000 ரூபா கொடுப்பனவுக்கான பெயர்ப்பட்டியல் தயாரிப்பில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாக கூறி முந்தல் பிரதேச செயலகத்திற்குட்பட்ட வீரபுர கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த கரிக்கட்டை மற்றும் ஹிதாயத் நகர் உள்ளிட்ட கிராம மக்கள் நேற்று மாலை 3.00 மணி முதல் 6.00 மணி வரை எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். புத்தளம்-கொழும்பு பிரதான வீதியின் மதுரங்குளி கரிக்கட்டை - ஹிதாயத் நகர் மஸ்ஜிதுக்கு முன்பாக இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். இதன்போது, "நாங்கள் பாதிக்கப்பட்டவர்கள், எங்களுக்கு அநீதி இழைக்காதீர்கள், " பாதிக்கப்பட்டவர்களுக்கு பாகுபாடு காட்டாது, அனைவருக்கும் நிவாரணங்களை வழங்குங்கள் ", " அரசாங்கம் கொடுத்த 25,000 ரூபாவை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குங்கள்" இதுபோன்ற பல வாசகங்கள் எழுதப்பட்ட சுலோகங்களை ஏந்தியவாறு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது கடும் எதிர்ப்பை வெளியிட்டனர். மேற்படி வீட்டை சுத்தம் செய்ய அரசாங்கத்தினால் கொடுக்கப்படும் 25,000 ரூபா பணத்தை வழங்குவதற்காக வீரபுர கிராம சேவகர் பிரிவில் தயாரிக்கப்பட்ட பெயர் பட்டியலில் தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் , உண்மையாக பாதிக்கப்பட்ட குடும்பங்கள் இந்தக் கொடுப்பனவை பெறுவதற்கு பட்டியலில் உள்வாங்கப்படவில்லை எனவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம் சுமத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரதான வீதியை மறைத்து போராட்டத்தில் ஈடுபட முற்பட்ட போது பொலிஸார் அதனை தடுத்ததுடன் அவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதனால் புத்தளம் - கொழும்பு பிரதான வீதியின் ஹிதாயத் நகர் பகுதியில் சுமார் மூன்று மணி நேரமாக ஒரு வழிப்பாதையாகவே வாகனங்கள் பயணித்தன. பின்னர் சம்பவ இடத்திற்கு வருகை முந்தல் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கணக்காளர் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்ட பொதுமக்களுடன் சுமுகமாக கலந்துரையாடியதுடன், அவர்களின் கருத்துக்களையும் அமைதியான முறையில் கேட்டறிந்துகொண்டனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பட்டியலில் உள்வாங்கப்படாதவர்கள் நாளை மறுதினம் திங்கட்கிழமை முந்தல் பிரதேச செயலகத்திற்கு வருகை தந்து தமது விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும் முந்தல் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தரும், கணக்காளரும் இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்களிடம் குறிப்பிட்டனர். மேலும், 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவை வழங்கும் போது பொய்யான தகவல்களை வழங்கி அரச பணத்தை பெற முயற்சி செய்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினர். குறித்த கொடுப்பனவு வழங்குவதில் எவ்விதமான பாகுபாடுகளும் இன்றி, உண்மையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்தக் கொடுப்பனவை பெற்றுக் கொடுப்பதற்கு தாம் முயற்சி எடுப்பதாக இதன்போது முந்தல் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் கணக்காளர் ஆகியோரினால் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களிடம் தெரிவக்கப்பட்டதையடுத்து, ஆர்ப்பாட்டக்காரர்கள் அங்கிருந்து அமைதியாக களைந்து சென்றனர். இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்ற போது முந்தல் மற்றும் மதுரங்குளி பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. -புத்தளம் நிருபர் ரஸ்மின்- https://adaderanatamil.lk/news/cmjffmp5402yzo29nrnlch3v9
  8. தென்னாப்பிரிக்காவில் துப்பாக்கி சூடு - ஏழு பேர் பலி Published By: Digital Desk 2 21 Dec, 2025 | 05:03 PM தென்னாப்பிரிக்காவில் ஜோகன்னஸ்பர்க் பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஏழு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த தாக்குதலில் ஏழு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் மேலும் 10 பேர் காயமடைந்துள்ளனர். பெக்கர்ஸ்டாலில் இரண்டு வாகனங்களில் வந்த சுமார் 12 அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள்,வாடிக்கையாளர்களை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். தென்னாப்பிரிக்கா உலகிலேயே அதிக கொலை விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இந்த ஆண்டு ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 63பேர் கொல்லப்பட்டதாக பொலிஸாரின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/234033
  9. காங்கேசன்துறை - அனுராதபுரம் இடையிலான ரயில் சேவை மீண்டும் ஆரம்பம் Dec 21, 2025 - 12:14 PM வடக்கு ரயில் மார்க்கத்தின் காங்கேசன்துறை மற்றும் அனுராதபுரம் நிலையங்களுக்கு இடையிலான ரயில் போக்குவரத்து மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இலங்கை ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளதற்கமைய, நாளை (22) முதல் 'யாழ் ராணி' ரயில் மூலம் இந்தச் சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. இதற்கமைய, காங்கேசன்துறையிலிருந்து அனுராதபுரம் வரையும், அனுராதபுரத்திலிருந்து காங்கேசன்துறை வரையும் முன்னெடுக்கப்படவுள்ள நாளாந்த ரயில் சேவைக்கான நேர அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjfd3loz02yxo29n58l4wjd2
  10. 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட விவகாரம் : முன்னாள் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி விடுவிக்கப்பட்டதில் சிக்கல் 21 Dec, 2025 | 05:02 PM (நமது நிருபர்) கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 இளைஞர்கள் கப்பம் பெறுவதற்காக கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சட்டமா அதிபரின் ஆலோசனைக்கமைய விடுவிக்கப்பட்ட முன்னாள் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்னவை விடுவித்தமைக்கு எதிராக சட்டமா அதிபரிடம் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் கோட்டை நீதிவான் இசுரு நெத்திகுமாரவிடம் கடந்த 17ஆம் திகதி அறிவித்தது. இந்த விடுவிப்பு சட்டமா அதிபரினால் மேற்கொள்ளப்பட்டதனால், இது குறித்து மீண்டும் பரிசீலிக்கப்படுவதாயின், அடுத்த கட்டம் குறித்து உடனடியாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதித்துவம் ஊடாக மன்றுக்கு அறிவிக்குமாறு நீதிவான் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டார். இந்த வழக்கின் இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டிருந்த முன்னாள் பாதுகாப்பு பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி ரவீந்திர விஜேகுணரத்னவை விடுவித்தமை தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவு அறிவித்ததையடுத்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக எடுக்கப்பட்டுள்ளது. அவர் சட்டமா அதிபரினால் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணைக்காக நான்காவது தடவையாகவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இனி எந்தக் காரணத்திற்காகவும் திகதி வழங்கப்படமாட்டாது. அரச சட்டத்தரணிக்காக வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. விசாரணையை மீண்டும் மீண்டும் ஒத்திவைக்குமாறு கோர வேண்டாம். இச்சம்பவம் நடந்து நீண்ட காலம் கடந்துவிட்டது. வேறெந்த விடயத்திற்காகவும் விசாரணையைத் தள்ளிப்போட முடியாது எனத் தெரிவித்த நீதிவான், சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்று பிரதிநிதி ஒருவருடன் முன்னிலையாகுமாறு குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு உத்தரவிட்டார். இரண்டாவது சந்தேகநபரின் விடுவிப்பு தொடர்பாக சட்டமா அதிபர், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் மற்றும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன மன்றுக்குத் தெரிவித்தார். இந்தச் சந்தேகநபருக்கு எதிராகப் போதுமான சாட்சிகள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். அதேவேளை, பிரதிவாதிகள் தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், இச்சம்பவம் தொடர்பான ஆரம்பத் தகவல்களின் சான்றளிக்கப்பட்ட பிரதிகளை குற்றப்புலனாய்வுப்பிரிவிடம் கோரியும் கிடைக்கவில்லையென மன்றுக்குத் தெரிவித்தனர். இதனைப் பரிசீலித்த நீதிவான், இதற்கு விசேட கட்டளைகள் தேவையில்லை என்றும், ஒரு வார காலத்திற்குள் அந்த ஆவணங்களின் பிரதிகளை பிரதிவாதிகள் தரப்பிற்கு வழங்குமாறும் குற்றப்புலனாய்வுப்பிரிவுக்கு உத்தரவிட்டார். இச்சம்பவத்தின் பிரதான சந்தேகநபர்களில் ஒருவரான முன்னாள் கடற்படை லெப்டினன்ட் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி தலைமறைவாக இருப்பதற்கு உதவியளித்ததாகத் தொடரப்பட்ட வழக்கு பகிரங்க நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன்போது சந்தன பிரசாத் ஹெட்டியாராச்சி மற்றும் அவர் தங்கியிருந்த தென்னந்தோட்டத்தைப் பராமரித்த லக்ஸிரி அமரசிங்க ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தனர். 11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கின் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட ஒருவருக்கு அடைக்கலம் கொடுத்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் இவர்களுக்கு எதிராக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234035
  11. இலங்கையில் அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புக்களை ஊக்குவியுங்கள் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்ராமருக்கு பிரித்தானியத் தமிழர் பேரவை கடிதம் 21 Dec, 2025 | 11:13 AM (நா.தனுஜா) தற்போதைய சூழ்நிலையில் கட்டமைப்பு ரீதியான மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற வலுவான ஊக்குவிப்புடனேயே இலங்கைக்கு சர்வதேச உதவிகள் வழங்கப்படவேண்டும். அத்தோடு சர்வதேசப் பங்காளிகளுடன் இணைந்து இலங்கையில் நிலவும் மோதல்களை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும், அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்புக்களுக்கு ஆதரவளிப்பதற்குமான செயன்முறையொன்றை ஆரம்பியுங்கள் என பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்ராமரிடம் பிரித்தானியத் தமிழர் பேரவை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து பிரித்தானியத் தமிழர் பேரவையின் பொதுச்செயலாளர் வி.ரவிக்குமாரினால் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்ராமருக்கு அனுப்பிவைக்கப்பட்டிருக்கும் கடிதத்தில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது: இலங்கையில் ஏற்பட்ட “தித்வா” சூறாவளியினால் பல உயிர்கள் பறிபோயிருப்பதுடன் உட்கட்டமைப்பு வசதிகள், விவசாயம், வாழ்வாதாரம், சூழலியல் மற்றும் நீர் வளங்கள் என மிகப்பாரியளவு சேதங்கள் ஏற்பட்டிருக்கின்றன. ஏற்கனவே நாட்டை மீளக்கட்டியெழுப்புவதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருந்த அரசாங்கத்துக்கு, சூறாவளி அனர்த்தத்தின் பின்னரான தற்போதைய சூழ்நிலை மேலும் சவால் மிகுந்ததாக மாறியிருக்கின்றது. இவ்வேளையில் சர்வதேச சமூகம் இலங்கைக்கு வழங்கிய உதவிகளுக்கு நன்றி கூறும் அதேவேளை, நிலையான மீட்சியை அடைவதற்கு உள்ளக ஆட்சியியல் கட்டமைப்பு தொடர்பான இறுக்கமான மீள்மதிப்பீட்டை மேற்கொள்வது அவசியமாகும். குறிப்பாக எவ்வித இன, மத, மொழி பேதங்களுமின்றி நாட்டுமக்கள் மத்தியில் அதிகாரமும், பொறுப்பும் நியாயமான முறையில் பகிரப்படுவதன் ஊடாக மாத்திரமே நாட்டை வெற்றிகரமாக மீளக்கட்டியெழுப்பமுடியும். ஒரு காலத்தில் ஆசியப்பிராந்திய அபிவிருத்தியின் முன்மாதிரியாக நோக்கப்பட்ட இலங்கை, இன்று தீவிர பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுத்திருப்பதுடன் “தித்வா” சூறாவளி காரணமாக அந்நெருக்கடி மேலும் தீவிரமடைந்துள்ளது. நாட்டை மீளக்கட்டியெழுப்புவதற்கு சுமார் 7 பில்லியன் டொலர் நிதி தேவை என மதிப்பிடப்பட்டிருக்கும் அதேவேளை, மொத்த வெளியகக் கடன்களின் பெறுமதி 57 பில்லியன் டொலராகவும், 2025 இல் வர்த்தகப்பற்றாக்குறை 7 பில்லியன் டொலராகவும் பதிவாகியிருக்கின்றது. எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துடன் சர்வதேச நாணய நிதியத்தின் அனுசரணை முடிவுக்குவரும் நிலையில், நாடு பாரிய பொருளாதாரப் பேரழிவுக்கு முகங்கொடுக்கக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. எனவே கட்டமைப்பு மற்றும் நிறுவன ரீதியான மறுசீரமைப்புக்களும், அரசியலமைப்பு மறுசீரமைப்பும் மேற்கொள்ளப்படவேண்டும் என்ற வலுவான ஊக்குவிப்புடன் சர்வதேச உதவிகள் வழங்கப்படவேண்டும். அர்த்தமுள்ள நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு தமிழ் மக்களின் அபிலாஷைகள் கருத்திற்கொள்ளப்படவும், ஒடுக்குமுறை கலாசாரம் முடிவுக்குக்கொண்டுவரப்படவும் வேண்டும். அத்தகைய மறுசீரமைப்புக்கள் மேற்கொள்ளப்படாவிடின், இலங்கை வன்முறைகள், இனவழிப்பு மற்றும் ஸ்திரமற்ற தன்மை என்பவற்றுக்குள் மீண்டும் சிக்கக்கூடிய அச்சுறுத்தல் நிலைக்குள்ளேயே இருக்கும். எனவே சர்வதேசப் பங்காளிகளுடன் இணைந்து இலங்கையில் நிலவும் மோதல்களை முடிவுக்குக்கொண்டுவருவதற்கும், நீதியை நிலைநாட்டுவதற்கும், அரசியலமைப்பு மற்றும் கட்டமைப்பு மறுசீரமைப்புக்களுக்கு ஆதரவளிப்பதற்குமான செயன்முறையொன்றை விரைந்து ஆரம்பிக்குமாறு கோருகின்றோம் என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/233984
  12. சர்ச்சைக்குரிய மருந்தை அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் பரிசோதனை செய்யுங்கள் - மான் பார்மாசூட்டிகல்ஸ் கோரிக்கை 21 Dec, 2025 | 11:09 AM (எம்.மனோசித்ரா) நாட்டில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள “ஒன்டன் செட்ரான்”மருந்து தயாரிப்பு நிறுவனமான மான் பார்மாசூட்டிகல்ஸ் (Maan Pharmaceuticals) , சர்ச்சைக்குரிய குறித்த மருந்தை சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆய்வகத்தில் (International accredited laboratory) பரிசோதனைக்கு உட்படுத்துமாறு இலங்கை சுகாதார அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாகக் கோரிக்கை விடுத்துள்ளது. அந்த நிறுவனம் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை (NMRA), அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் (SPC) மற்றும் மருத்துவ வழங்கல் பிரிவு (MSD) ஆகியவற்றுக்கு கடிதம் ஒன்றின் மூலம் இந்தக் கோரிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. சர்வதேச ரீதியிலான இந்தப் பரிசோதனைக்கு ஆகும் அனைத்துச் செலவுகளையும் ஏற்கத் தாங்கள் தயாராக இருப்பதாக மான் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளதை தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை தலைவர் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரம உறுதிப்படுத்தியுள்ளார். பக்கவிளைவுகள் ஏற்பட்டதாகக் கிடைத்த தகவல்களைத் தொடர்ந்து இலங்கையில் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட சர்ச்சைக்குரிய ஒன்டன்செட்ரான், மான் பார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்திடமிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 10 வகையான ஊசி மருந்துகளின் பயன்பாட்டைத் தற்காலிகமாக நிறுத்துவதற்கு தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தும் அதிகாரசபை ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/233982
  13. 'கொளத்தூரில் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்' - நயினார் நாகேந்திரன் கூறியது என்ன? பட மூலாதாரம்,X/H.RAJA தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் (எஸ்.ஐ.ஆர்) பணிகள் நிறைவுற்று வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 19-ஆம் தேதி வெளியிடப்பட்டது. முந்தைய வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 1 கோடி வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இதில் இறந்தவர்கள், இடம்பெயர்ந்தவர்கள், இரட்டைப் பதிவு கொண்ட வாக்காளர்கள், விண்ணப்பம் சமர்ப்பிக்காதவர்கள், தொடர்பு கொள்ள முடியாதவர்கள் அடங்கும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து புதிய வாக்காளர்களைச் சேர்ப்பது, வரைவுப் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்வது போன்ற பணிகள் தற்போது தொடங்கியுள்ளன. இந்த நிலையில் எஸ்.ஐ.ஆர் பற்றி இன்று செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக ஏன் பயப்பட வேண்டும் எனக் கேள்வி எழுப்பியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், "எஸ்.ஐ.ஆரில் இறந்து போனவர்கள், இடம் மாறி போனவர்கள் தான் நீக்கப்பட்டிருக்கிறார்கள். உயிரோடு இருக்கும் யாரும் நீக்கப்படவில்லை. திமுகவினர் அவ்வளவு கள்ள ஓட்டு சேர்த்து வைத்துள்ளார்கள். அதைத்தான் நீக்கியுள்ளனர். சென்னையில் மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் நீக்கப்பட்டுள்ளனர்." என்றார். கொளத்தூர் தொகுதியில் வாக்காளர்கள் நீக்கப்பட்டது பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதில் அளித்து பேசிய நயினார் நாகேந்திரன், "கொளத்தூரில் மட்டும் 1 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதை நீங்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். 1 லட்சம் பேர் தப்பான ஓட்டு போட்டு முதல்வர் ஜெயித்திருக்கிறார் என்று தான் அர்த்தம்." என்று கூறினார். https://www.bbc.com/tamil/live/cm28x9rjepet?post=asset%3A5d5baa64-df78-445b-959e-0b73ef93bf2c#asset:5d5baa64-df78-445b-959e-0b73ef93bf2c
  14. அசாமில் ரயிலுடன் மோதி எட்டு யானைகள் பலி! 20 Dec, 2025 | 10:29 AM இந்தியாவின் அசாம் மாநிலம் ஹோஜாய் பகுதியில், ரயிலுடன் யானைக் கூட்டம் மோதியதில் எட்டு யானைகள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒரு குட்டி யானை காயமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த விபத்து சனிக்கிழமை (20) அதிகாலை இடம்பெற்றுள்ளது. இந்த விபத்து காரணமாக ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. விபத்தின் போது, ரயிலின் இயந்திரங்கள் மற்றும் ஐந்து பெட்டிகள் தடம்புரண்டதுடன், பயணிகளுக்கு எந்தவித காயமும் ஏற்படவில்லை என அந்நாட்டு ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரயில் தடத்தில் யானைகளின் உடல் பகுதிகள் சிதறி கிடந்ததாலும், ரயில் தடம் புரண்டதாலும், அப்பர் அசாம் மற்றும் வடகிழக்கு மாநிலங்களுக்கு செல்லும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. https://www.virakesari.lk/article/233912
  15. யாழ்ப்பாணத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் உயிரிழப்பு! Published By: Digital Desk 1 21 Dec, 2025 | 07:50 AM யாழ்ப்பாணத்தில் வீட்டின் சுவர் இடிந்து வீழ்ந்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. முல்லைத்தீவு - விசுவமடுவைச் சேர்ந்த 17 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இது குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுவன் குடும்ப வறுமை காரணமாக யாழ்ப்பாணத்திற்கு வேலைக்கு சென்றுள்ளார். அங்கு குருநகர் - பாஷையூரில் பழைய வீட்டினை இடித்துக்கொண்டிருந்துள்ளார். ஒரு பக்க சுவரினை இடித்துவிட்டு அந்த சுவர் விழப்போகின்றது என அறையின் உள்ளே ஓடியுள்ளார். இதன்போது மற்றைய சுவர் அவர்மீது விழுந்ததில் சம்பவ இடத்திலேயே குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். https://www.virakesari.lk/article/233959
  16. அதிகரிக்கும் போர் பதற்றம் - வானில் வட்டமிட்ட சீன போர் விமானங்கள் :எச்சரிக்கும் தாய்வான் Published By: Digital Desk 2 21 Dec, 2025 | 11:46 AM தாய்வான் எல்லையில் வலம் வரும் போர்கப்பல் மற்றும் போர் விமானங்களினால் அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் தாய்வான் கடல் பகுதிகளை சீனாவின் விமானங்களும், கப்பல்களும் சுற்றி வளைத்துள்ளதாக அந்நாட்டு பாதுகாப்புத்துறை உறுதிப்படுத்தியுள்ளது. கிழக்காசியாவில் தென் சீன கடல், கிழக்கு சீன கடல் மற்றும் பிலிப்பைன்ஸ் கடல் ஆகியவற்றிற்கு மத்தியில் இருக்கும் தீவுதான் தைவான். 1949இல் சீனாவின் கட்டுப்பாட்டிலிருந்து தாய்வான் தனிநாடாக பிரிந்து சென்றது. ஆனாலும் சீனா தாய்வானை தனது ஒருங்கிணைந்த பகுதியாகவே பார்த்து வருகிறது. ஆனாலும் தனி நாடாக தங்களுக்கென தனி இறையாண்மை உள்ளது எனக்கூறி தாய்வான் அதனை மறுத்து வருகிறது. இவ்வாறான பின்னனியில் தாய்வான் எல்லையில் அவ்வப்போது போர்க்கப்பல்கள், விமானங்களை அனுப்பி சீனா பதற்றத்தைத் தூண்டுடியயுள்ளது. இந்நிலையில் தைவான் பாதுகாப்புத்துறை வெளியிட்ட எக்ஸ் தளப்பதிவில் , தாய்வானை சுற்றி சீனாவின் 7 விமானங்களும், 11 கடற்படை கப்பல்களும் ரோந்து வந்ததை உறுதி செய்துள்ளது. மேலும் அவர்களின் ஆயுதப்படைகள் நிலவரத்தை கண்காணித்து உடனடியாக தகுந்த நடவடிக்கை எடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளது. சீனாவின் அத்துமீறலை தொடர்ந்து கண்காணித்து வரும் தாய்வான் மக்களுக்கு இடையூறு ஏற்பட்டால் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவின் இந்த செயலால் கிழக்காசியப் பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. சீனா தாய்வானை ஒருபோதும் பிரிக்க முடியாத பகுதி என்று கருதி வருகிறது. எனவே தான் தாய்வானைஅடிக்கடி அச்சுறுத்தி, அதன் சுயாட்சியை மிரட்டுவதற்காக, அடிக்கடி தாய்வானைச் சுற்றி இராணுவப் பயிற்சிகளை நடத்துகிறது. இதில் விமானங்கள், போர்க்கப்பல்கள், ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் சுற்றி வளைப்பதும், அதன் விமான பாதுகாப்பு மண்டலத்தில் ஊடுருவுவதும், போர் ஒத்திகைகள் செய்வதுமாக அந்தப் பகுதியில் எப்போதும் பதற்றத்தை அதிகரித்து வருகிறது. அதேவேளை, தீவு நாடான தாய்வானுக்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. தாய்வானுக்கு அதிக அளவில் அமெரிக்கா ஆயுதங்களை விற்பனை செய்து வருவதுடன் சீனா படையெடுக்கும் பட்சத்தில் தாய்வானை பாதுகாப்போம் என அமெரிக்கா தெரிவித்துள்ளமையயும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/233980
  17. Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Tiesh by Lakmini Kandy (Pvt) Ltd இனால் 25 மில்லியன் ரூபா நன்கொடை 20 Dec, 2025 | 02:25 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு Tiesh by Lakmini Kandy (Pvt) Ltd இனால் 25 மில்லியன் ரூபா நன்கொடை வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை Tiesh by Lakmini Kandy (Pvt) Ltd நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் கே. எம். எல். பொன்சேகா, வெள்ளிக்கிழமை (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளித்தார். ஆர்.பி. கிறிஸ்டினாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டார். https://www.virakesari.lk/article/233980
  18. ரி20 உலகக் கிண்ணம் வரை இலங்கை அணியின் தலைவர் தசுன் ஷானக்க Published By: Vishnu 19 Dec, 2025 | 08:32 PM (நெவில் அன்தனி) ரி20 உலகக் கிண்ணம் முடியும் வரை இலங்கை அணியின் (ரி20) தலைவராக தசுன் ஷானக்க செயற்படுவார் எனவும் இலங்கையிலும் இந்தியாவிலும் அடுத்த வருடம் கூட்டாக நடத்தப்படவுள்ள ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு அதி சிறந்த 15 வீரர்கள் தெரிவுசெய்யப்படுவார்கள் எனவும் தெரிவுக்குழுத் தலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ள பிரமோதய விக்ரமசிங்க தெரிவித்தார். ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையக கேட்போர்கூடத்தில் இன்று வெள்ளிக்கிழமை (19) நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இதனைத் தெரிவித்தார். உப்புல் தரங்க தலைமையிலான தேர்வுக் குழுவின் பதவிக் காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் நியமிக்கப்பட்டுள்ள புதிய தேர்வுக் குழுவில் பிரமோதய விக்ரமசிங்க (தலைவர்), வினோதன் ஜோன், இந்திக்க டி சேரம், தரங்க பரணவித்தான, ரசஞ்சலி டி அல்விஸ் ஆகியோர் இடம்பெறுகின்றனர். அவர்கள் அனைவரும் ஊடக சந்திப்பில் கலந்துகொண்டனர். அங்கு தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரமோதய விக்ரமசிங்க, 'முந்தைய தெரிவுக் குழு மற்றும் தலைமைப் பயிற்றுநர் சனத் ஜயசூரிய ஆகியோர் வகுத்த திட்டத்தை ரி20 உலகக் கிண்ணம் வரை மாற்றாமல் தொடரவுள்ளோம். திடீர் மாற்றங்கள் செய்வதால் பலன் கிடைக்காது. ரி20 உலகக் கிண்ணத்தை முன்னிட்டு அவர்கள் 25 வீரர்களைக் கொண்ட முன்னோடி குழாத்தை பெயரிட்டுள்ளனர். எமது முதலாவது பணி என்னவெனில் ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு மிகச் சிறந்த வீரர்களைத் தெரிவுசெய்வதாகும். இதுதான் எமது குறுகிய கால திட்டமாகும். உலகக் கிண்ணத்திற்கு முன்னர் பாகிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிரான இருதரப்பு தொடர்களில் இலங்கை 6 ரி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. அத்துடன் இலங்கை குழாத்திற்கு தீவிர பயிற்சிகள் வழங்கப்படவுள்ளது. இரண்டு பயிற்சிப் போட்டிகளும் நடத்தப்படும்' என்றார். சரித் அசலன்கவை தலைவர் பதவியிலிருந்து நீக்கியமை மற்றும் தசுன் ஷானக்கவை ரி20 அணித் தலைவராக நீயமித்தமை தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பிரமோதய விக்ரமசிங்க, 'நான் தெரிவுக் குழுத் தலைவராக இருந்த முதலாவது தவணையின்போது தசுன் ஷானக்க தலைவராக இருந்தார். அவர் தலைமைப் பதவியிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் சரித் அசலன்கவை தலைவராக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அப்போதைய தெரிவுக் குழுவினர் விரும்பினர். அதன் படி அவர் இரண்டுவகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் தலைவராக நியமிக்கப்பட்டார். இரண்டு வகை கிரிக்கெட் போட்டிகளிலும் அவர் திறமையை வெளிப்படுத்தி வந்தபோதிலும் அண்மைக்காலமாக ரி20 போட்டிகளில் அவரால் பிரகாசிக்க முடியாமல் போயுள்ளது. தலைவராக அழுத்தங்களை எதிர்கொள்வதால் அவரால் பிரகாசிக்க முடியாமல் போயிருக்கலாம் என்பதைக் கருத்தில்கொண்டே அவரை நீக்கிவிட்டு தசுன் ஷானக்கவை ரி20 அணியின் தலைவராக நியமித்துள்ளோம். இது முந்தைய தெரிவுக் குழுவினால் எடுக்கப்பட்ட முடிவாகும். எனவே அடுத்துவரும் போட்டிகளில் சரித் அசலன்கவுக்கு சுதந்திரமாக விளையாடக்கூடியதாக இருக்கும். மேலும் 3 உலகக் கிண்ணப் போட்டிகள், 2 ரி20 உலகக் கிண்ணப் போட்டிகளில் விளையாடிய அனுபசாலியான தசுன் ஷானக்க சகலதுறை வீரராக அணியில் இடம்பெறுவார்' என்றார். இதேவேளை, இடைக்கால மற்றும் நீண்டகாலத் திட்டங்களையும் அவர் வெளியிட்டார். 'ரி20 உலகக் கிண்ணம் முடிவடைந்தவுடன் இடைக்காலத் திட்டம் ஆரம்பமாகும். தற்போது தேசிய அணி வாயிலைத் தட்டிக்கொண்டிருக்கும் பல வீரர்கள் இலங்கை குழாத்திற்குள் ஈர்க்கப்படுவார்கள். இந்த வீரர்களின் குறைகளை பயிற்றுநர்கள் கண்டறிந்து அவர்களுக்கு உயர்ஆற்றல் வெளிப்பாட்டு நிலையத்தில் அதிஉயர் பயிற்சிகளை வழங்கவேண்டும். வீரர்களின் திறமை மேம்படாவிட்டால் அதற்கான பொறுப்பை பயிற்றுநர்கள், உடற்பயிற்சி ஆலோசகர்கள் பொறுப்பேற்கவேண்டும். பயிற்றுநர்கள், உடற்பயிற்சி ஆலோசகர்கள் கடமையில் தவறினால் அது குறித்து ஸ்ரீலங்கா கிரிக்கெட் தீர்மானம் எடுக்க வேண்டும்' எனவும் தெரிவுக் குழுத் தலைவர் கூறினார். 'நீண்டகாலத் திட்டத்திதின்கீழ் பாடசாலைகள் கிரிக்கெட்டில் திறமையை வெளிப்படுத்தும் 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் 45 பேரை வருடா வருடம் தெரிவு செய்து அவர்களுக்கு ஒரு வருட பயிற்சி முகாம் நடத்தப்படும். இதற்கான அனுமதியை ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்திடம் பெறவுள்ளோம். இந்த ஒரு வருட பயிற்சி முகாமின்போது அவர்களுக்கு ஆங்கில மொழி அறிவு, தொழில்நுட்பம், ஆளுமை உருவாக்கம், ஒழுக்கம், கிரிக்கெட் விதிகள் என்பன போதிக்கப்படும். அத்துடன் அடிப்படை பயிற்சிகளும் வழங்கப்படும். அதன் பின்னர் அவர்களை கழக மட்டப் போட்டிகளில் விளையாடச் செய்து உயர் ஆற்றல் வெளிப்பாட்டு நிலையத்தில் மேலதிக பயிற்சிகளில் ஈடுபட அனுப்புவோம்' எனவும் அவர் கூறினார். https://www.virakesari.lk/article/233877
  19. நிவாரண நிதியை பெறும் போது அவதானத்துடன் செயற்படவும் Dec 20, 2025 - 10:12 PM - 0 அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்கள் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதி மற்றும் வங்கிக் கடன்களைப் பெற்றுக்கொள்ளும் போது மிகவும் அவதானமாக செயற்பட வேண்டும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். கண்டியில் இன்று (20) நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பெற்றுக்கொள்ளும் கடன் தொகைகள் மற்றும் நிவாரணங்களை முறையாக முகாமைத்துவம் செய்து கொள்வது பொதுமக்களின் கடமையாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். அங்கு தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அனர்த்த நிலைமையின் போது பாதிக்கப்பட்டவர்களுக்காக அரசாங்கம் பாரிய நிதியை ஒதுக்கியுள்ளது. எனவே, பிரஜைகள் என்ற ரீதியில் தமக்குத் தேவையான அளவை மாத்திரம் பெற்றுக்கொள்ளும் பொறுப்பு அனைத்து தரப்பினரிடமும் காணப்பட வேண்டும். இதன் மூலம், தேவையுள்ள ஏனைய தரப்பினருக்கு முறையான முகாமைத்துவத்தின் கீழ் அந்த நிதியை வழங்கும் ஆற்றல் அரசாங்கத்திற்கு கிட்டும். அத்துடன், பெற்றுக்கொள்ளும் நிவாரண நிதியை சரியான முகாமைத்துவத்துடன் பயன்படுத்த வேண்டும். கடந்த காலங்களில் பொருளாதார நெருக்கடி காரணமாக சுற்றுலாத்துறை வீழ்ச்சியடைந்த போது, அத்துறையினருக்கு நிவாரணக் கடன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. இதன்போது பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்காத தரப்பினர் என இரு சாராரும் தேவைக்கு அதிகமாக கடன்களைப் பெற்றனர். பின்னர் அக்கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அந்த வணிகங்கள் நெருக்கடிக்கு முகங்கொடுத்ததை ஆளுநர் நினைவுகூர்ந்தார். எனவே, வழங்கப்படும் நிவாரணக் கடன்களைக் கூட தமது வணிகத்திற்குத் தேவையான அளவு மாத்திரம் பெற்றுக்கொள்வதன் மூலம் கடன் நெருக்கடிக்கு ஆளாகாமல் இருக்கலாம் எனச் சுட்டிக்காட்டிய அவர், மக்களின் வாழ்க்கையையும் தொழிலையும் மீட்டெடுக்க அரசாங்கம் வழங்கும் பணத்தை முறையாகப் பயன்படுத்துவது அனைவரின் பொறுப்பாகும் என்றார். https://adaderanatamil.lk/news/cmjej0snj02yko29nd30ixnco
  20. ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு இரண்டு நிதி நன்கொடைகள்! 20 Dec, 2025 | 03:37 PM டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்தின் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்திற்கு நாளாந்தம் நன்கொடைகள் கிடைத்து வருகின்றன. அதன்படி, Containers Transport Owners Association இனால் 15 இலட்சம் ரூபா மற்றும் Association of SriLankan Airlines Licensed Aircraft Engineers இனால் 13.5 இலட்சம் ரூபா நன்கொடையும் வழங்கப்பட்டன. இதற்கான காசோலைகள் வெள்ளிக்கிழமை (19) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன. இந்நிகழ்வில் Containers Transport Owners Association பிரதிநிதித்துவப்படுத்தி அதன் தலைவர் டபிள்யூ.எம்.எஸ்.கே. மஞ்சுள, திலீப் நிஹால் என்ஸ்லம் பெரேரா மற்றும் ஜயந்த கருணாதிபதி ஆகியோருடன், Association of SriLankan Airlines Licensed Aircraft Engineers பிரதிநிதித்துவப்படுத்தி தேஷான் ராஜபக்ஷ, சமுதிக பெரேரா மற்றும் தேவ்ஷான் ரொட்ரிகோ ஆகியோர் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/233945
  21. அருள்பரன் வாகீஸ்பரனைக் கௌரவிக்கும் விழா Dec 21, 2025 - 08:44 AM உலகப்புகழ் பெற்ற கவித்துவக் கலைஞர் அருள்பரன் வாகீஸ்பரனைக் கௌரவிக்கும் விழா நேற்று (20) மாலை இணுவில் அறிவாலயத்தில், இணுவில் கலைச் சமூகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்வின் ஆரம்பத்தில், இணுவில் பரராஜசேகரப் பிள்ளையார் ஆலயத்திலிருந்து வாகீஸ்பரன், அவரது பெற்றோர் மற்றும் விருந்தினர்கள் அழைத்துவரப்பட்டனர். இதன்போது, இணுவில் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக வைத்து வாகீஸ்பரனுக்கு வேல் வழங்கி கௌரவிக்கப்பட்டது. தொடர்ந்து இணுவில் அறிவாலயத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன. குறித்த கௌரவிப்பு விழாவில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், தெல்லிப்பளை துர்க்காதேவி தேவஸ்தானத் தலைவர் கலாநிதி ஆறு திருமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmjf5ln0g02yqo29n8cwlsfb2
  22. சமஷ்டி அரசியலமைப்புக்காக அழுத்தமளிக்க வேண்டும் : பா.ஜ.க. தமிழக மாநில தலைவரிடம் தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள் வலியுறுத்து 21 Dec, 2025 | 09:17 AM (நா.தனுஜா) தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பினைத் திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதனைத் தடுத்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை டில்லி பிரயோகிக்கவேண்டுமென கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனிடம் வலியுறுத்தியுள்ளனர். தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை வழங்குமாறு வலியுறுத்தி தமிழக அரசியல் தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த்தேசியப் பேரவையின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழ்த்தேசிய பசுமை இயக்கத்தின் தலைவர் பொ.ஐங்கரநேசன், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன், அதன் தேசிய அமைப்பாளர் த.சுரேஸ், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கை பரப்புச் செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர் இவ்வாரத் தொடக்கத்தில் சென்னையை சென்றடைந்தனர். அங்கு தமிழக அரசியல் தலைவர்களுடன் நடாத்துவதற்கு உத்தேசித்திருந்த சந்திப்புக்களின் ஓரங்கமாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணியை நேற்று முன்தினம் (19) பெரியார் திடலிலும், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் தமிழக சட்டமன்ற உறுப்பினருமான திருநாவுக்கரவு வேல்முருகனை நேற்று முன்தினம் (19) அவரது அலுவலகத்திலும் சந்தித்தனர். அதேவேளை நேற்று சனிக்கிழமை (20) பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநில தலைவர் நயினார் நாகேந்திரனை அக்கட்சியின் மாநில தலைமையகமான கமலாலயத்தில் சந்தித்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய பேரவை உறுப்பினர்கள், தமிழ் மக்களுக்கான நிரந்தர அரசியல் தீர்வாக இலங்கை அரசு ஏக்கிய இராச்சிய அரசியலமைப்பினைத் திணிப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்நிலையில் அதனைத் தடுத்து தமிழர்களுக்கான அரசியல் தீர்வாக தமிழர் தேசம், இறைமை, சுயநிர்ணய உரிமை அங்கீகரிக்கப்பட்ட சமஷ்டி அரசியலமைப்பினைக் கொண்டுவருவதற்கான அழுத்தங்களை இந்தியா பிரயோகிக்கவேண்டும் என வலியுறுத்தினர். அத்தோடு இருநாடுகளுக்கும் இடையில் தீர்வின்றித் தொடரும் மீனவர் பிரச்சினை குறித்தும் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டது. https://www.virakesari.lk/article/233964
  23. தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது Dec 21, 2025 - 11:18 AM தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு எதிராக இன்று (21) முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இதனையடுத்து வேலன் சுவாமிகள் உள்ளிட்ட மதத் தலைவர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். தையிட்டி 'திஸ்ஸ' விகாரைக்காகச் சட்டவிரோதமாகக் கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும், விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் பதவி உயர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் விகாரைக்கு முன்பாக இன்று இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்திற்கு எதிராக பொலிஸார் நீதிமன்றத் தடையுத்தரவைப் பெற்றுள்ளதுடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேர் போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாதெனப் பெயர் குறிப்பிட்டுத் தடையுத்தரவு பெறப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று போராட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளையில், விகாரையை அண்மித்த சூழலில் கலகம் அடக்கும் பொலிஸார் உட்படப் பெருமளவான பொலிஸார் குவிக்கப்பட்டனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டு, அப்பகுதியில் அமைதியின்மை ஏற்பட்டது. "இது ஓர் அமைதிவழியான போராட்டம். இங்கு எந்த விதத்திலும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கப்படவில்லை. விகாரைக்குள் போராட்டக்காரர்கள் செல்லவோ, விகாரைக்குச் சேதம் விளைவிக்கவோ இல்லை. அவ்வாறிருக்கையில், விகாரைக்குச் செல்லும் வீதியை நீங்கள் எவ்வாறு அடாத்தாக மறித்து வைத்திருக்க முடியும்?" எனப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பொலிஸாருடன் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வலி. கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராசா நிரோஷ், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள் மற்றும் வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். கைது நடவடிக்கையினால் போராட்டக்களத்தில் அமைதியின்மை ஏற்பட்டுள்ள போதிலும், போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmjfb3o7k02ywo29npez5i2v0
  24. நயினார் நாகேந்திரனுடன் தமிழ்த் தேசியப் பேரவையினர் சந்திப்பு Dec 20, 2025 - 06:11 PM தமிழ்த் தேசியப் பேரவையின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுடன் சந்திப்பு இன்று (20) நடைபெற்றது. சென்னை, தியாகராய நகரில் அமைந்துள்ள பா.ஜ.க-வின் மாநிலத் தலைமையகமான 'கமலாலயத்தில்' இச்சந்திப்பு இடம்பெற்றது. இன்று காலை 10.00 மணியளவில் ஆரம்பமான இக்கலந்துரையாடல் சுமார் ஒரு மணித்தியாலம் நீடித்தது. இதன்போது தமிழ்த் தேசியப் பேரவையினால் பின்வரும் முக்கிய கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன: தமிழர் தேசத்தின் இறைமை மற்றும் சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்கும் வகையிலான சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்பட வேண்டும். இலங்கையில் ஒற்றையாட்சி அரசியலமைப்பை நிறைவேற்றுவதைத் தடுத்து நிறுத்தி, சமஷ்டி அடிப்படையிலான தீர்வொன்றை வலியுறுத்துமாறு இந்திய மத்திய அரசைக் கேட்டுக்கொள்ள வேண்டும். ஈழத்தமிழ் கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் நிரந்தரத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும். மேற்கண்ட விடயங்கள் தொடர்பில் இந்திய மத்திய அரசை வலியுறுத்துவதற்கு, பா.ஜ.க மாநிலத் தலைவராகிய தாங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இதன்போது கோரிக்கை விடுக்கப்பட்டது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmjeaf38c02yeo29n29ppjn6w
  25. T20 World cup 2026: இந்தியக் குழாம் அறிவிப்பு - சுப்மன் கில் நீக்கம் Dec 20, 2025 - 03:17 PM எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள இருபதுக்கு 20 உலகக்கிண்ணத் தொடருக்கான இந்தியக் கிரிக்கெட் குழாம் இன்று (20) பிற்பகல் அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் தலைமையில் 15 பேர் கொண்ட குழாம் பெயரிடப்பட்டுள்ளதுடன், உப தலைவர் சுப்மன் கில் குழாத்தில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதற்கமைய, அக்ஷர் படேலுக்கு உப தலைமைத்துவப் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் குழாத்தில் ரிங்கு சிங் மற்றும் இஷான் கிஷன் ஆகியோருக்கும் இடம் வழங்கப்பட்டுள்ளது. 2026 T20 உலகக்கிண்ணத்திற்கான இந்தியக் குழாம் பின்வருமாறு, சூர்யகுமார் யாதவ் (தலைவர்) அக்ஷர் படேல் (உப தலைவர்) அபிஷேக் சர்மா சஞ்சு சம்சன் (விக்கெட் காப்பாளர்) திலக் வர்மா ஹர்திக் பாண்டியா சிவம் டுபே ரிங்கு சிங் ஜஸ்பிரித் பும்ரா ஹர்ஷித் ரானா அர்ஷ்தீப் சிங் குல்தீப் யாதவ் வருண் சக்ரவர்த்தி வாஷிங்டன் சுந்தர் இஷான் கிஷன் (விக்கெட் காப்பாளர்) https://adaderanatamil.lk/news/cmje46uix02y7o29nu7984w56

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.