Everything posted by ஏராளன்
-
யாழில் இடம்பெற்ற மாபெரும் பட்டத்திருவிழா
யாழ். வல்வெட்டித்துறையில் பட்டத்திருவிழா தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு நேற்று (15) யாழ்ப்பாணம்- வல்வெட்டித்துறையில் பட்டத்திருவிழா இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற குறித்த பட்டத்திருவிழாவில் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதனை போட்டியாளர்கள் பறக்க விட்டுள்ளனர். படங்கள் – சமூகவலைதளம் https://thinakkural.lk/article/288218
-
IMF பிரதிநிதிகள் குழு நாளை நாட்டிற்கு விஜயம்
IMF பிரதிநிதிகள் – இலங்கை அதிகாரிகள் இன்று கலந்துரையாடல் நாட்டிற்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகள்(IMF) குழு மற்றும் இலங்கை அதிகாரிகள் இடையிலான உத்தியோகபூர்வ கலந்துரையாடல் இன்று(16) ஆரம்பமாகவுள்ளது. 6 பேர் அடங்கிய IMF பிரதிநிதிகள் குழு, மின்சார சபை, மத்திய வங்கி மற்றும் நிதி அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியத்திற்கு இடையிலான வேலைத்திட்டத்தை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார். அவர்கள் அண்மையில் ஜனாதிபதியை சந்தித்து, பொருளாதார மறுசீரமைப்பை மேற்கொண்டு இலங்கை குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் அடைந்துள்ளமை தொடர்பில் தமது பாராட்டுகளை தெரிவித்திருந்தனர். இக்குழுவினர் எதிர்வரும் 19 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கவுள்ளனர். https://thinakkural.lk/article/288185
-
தமிழகத்தில் அயலக தமிழர் விழா : செந்தில், மனோ, செல்வம், சாணக்கியன் பங்கேற்பு
ஈழ இனவழிப்புக்கான நீதி உலகத் தமிழர்களின் தன்மானத்தில் தங்கியுள்ளது - ஒன்றாறியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் லோகன் கணபதி முதல்வர் ஸ்டாலின் முன் தெரிவிப்பு Published By: DIGITAL DESK 3 16 JAN, 2024 | 09:27 AM ஈழ இனவழிப்புக்கான நீதியை வென்றெடுப்பதில் உலகத் தமிழர்களின் தன்மானமும், பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும் என்ற வரலாற்றுப் பணிக்கு தமிழ்நாடு முதன்மையான பங்களிப்பை வழங்க வேண்டும் என கனடா நாட்டின் ஒன்றாரியோ மாநில சட்டமன்ற உறுப்பினர் லோகன் கணபதி தெரிவித்துள்ளார். கடந்த வார இறுதியில் இந்திய தமிழ்நாட்டில இடம் பெற்ற அயல் உறவு மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழரின் தொன்மையைக் கீழடியும், கந்தரோடையும் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. 2,500 ஆண்டுகளுக்கு முன்பே நகர நாகரிகம் கண்டு, எழுத்தறிவு பெற்ற மக்கள் கூட்டத்தின் வழிவந்தவர்கள். தமிழர்கள் கொத்துக் கொத்தாக கேட்பார் யாருமின்றி படுகொலை செய்யப்பட்டதன் குறியீடாக ’முள்ளிவாய்க்கால்’ என்ற இடம் அமைந்துள்ளது. உலகம் எங்கும் 700 கோடிபேர் தமிழர்கள் வாழ்ந்தாலும் இத் தாய் தமிழ்நாட்டில் தான் 2009 இல் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையை தடுக்க வேண்டும் என்று 18 பேர் தீக்குளித்து தம்மை ஆகுதி ஆக்கினார்கள். அந்த நினைவுகள் நெஞ்சில் மிகுந்த கனத்த இதயத்துடன் சுமந்துகொண்டு தமிழ்நாட்டிற்கும் தமிழக மக்களுக்கும் உலக எங்கும் பரந்து வாழும் ஈழத் தமிழர்கள் சார்பில் எனது அன்பை நன்றியையும் பகிர்ந்து கொள்கின்றேன். நான் கனடா நாட்டு ஒண்டாரியோ மாகாண நாடாளுமன்ற உறுப்பினராக உங்கள் முன் இங்கே நின்று கொண்டிருந்தாலும் நான் பிறந்து வளர்ந்தது மேற்சொன்ன கந்தரோடையும், முள்ளிவாய்க்காலும் அமைந்திருக்கும் ஈழ தேசம் தான். எனது பூர்வீகம் என்று கம்பீரமாக செல்வதில பெருமை கொள்கின்றேன். இலங்கைத் தீவின் வடக்கு, கிழக்கை தாயகமாகக் கொண்ட, அரைநூற்றாண்டுக்கும் மேலாக சபிக்கப்பட்டவர்களாக வாழ்ந்துவரும் இலட்சகணக்கான தமிழர்களில் நானும் ஒருவன். இன்றும் இன ஒடுக்குமுறைக்கு எதிராகவும், தமிழர் தேசத்திற்காகவும் தம் குரலை அணைவிடாமல் வைத்திருக்கும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தில் 80 களில் மாணவத் தலைவர்களில் ஒருவராக நானும் இருந்து சிறீலங்கா அனசின் இனவழிப்பினால் நாட்டை விட்டு உலகம் முழுவதும் சிதறி ஓடிய இலட்சக்கணக்கான ஈழத் தமிழர்களில் நானும் ஒருவன். புலம்பெயர்ந்து கனடா தேசத்தில் தஞ்சமடைந்தேன் இன்று உங்கள் முன்னால் ஒரு நாடாளுமன்ற உறுப்பினராக நிற்கும் நிலைக்கு கனடா எனக்காக அனைத்து உரிமைகளையும் அங்கீகரித்துள்ளது. இது என்னொருவனின் கதையல்ல, என்னைப் போல் பல இலட்சக்கணக்கில் அகதிகளாக உலக நாடுகளில் தஞ்சம் புகுந்துள்ள தமிழர்களின் கதையாகும். இந்த மண்ணிலும் நம் சகோதர்கள் அகதிகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் குடியுரிமை கேட்டு தலைமுறை தலைமுறையாக காத்திருக்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும் போது ஒருவகையில் நான் ஆசிர்வதிக்கப்பட்டவன். கனடாவின் குடிமகனாகவும் மக்கள் பிரதிநிதியாகவும் உங்கள் முன் நிற்கிறேன். அகதி ஒருவர் மக்கள் பிரதிநிதியாக அமைச்சராக ஆக முடியும் என்ற அதியுன்னத செயற்பாட்டை முன்னெடுத்த உலகில் முதன்மையான சனநயாக நாடாக நீதியின் முகமாக உள்ள கனடா தேசத்தில் என் குரலை வெளிப்படுத்தி வருகிறேன். உலக வரலாற்றில் முதல் தடவையாக என்னைப் போன்ற கனடா வாழ் மக்கள் அனைவரதும் முயற்சியோடு தமிழ் மரபுத் திங்கள் கனடா தேசத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளமை உலகத் தமிழர்களுக்கு கிடைத்துள்ள வரலாற்று மிக்க அங்கீகாரமும் சாதனையுமாகும். அத்துடன் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை கனடா ஏற்றுக்கொண்டமைக்கு முன்னோடியாக தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்திற்கு தமிழக மக்கள் கொடுத்த பேராதரவுக்கும் நமது தோழமை கலந்த நன்றி உணர்வை இந்தச் சிறப்பு நாளில் வெளிப்படுத்திக் கொள்கிறேன். விண்வெளி ஆராய்ச்சி, மருத்துவம், தகவல் தொழில்நுட்பம், தொழில், வணிகம், கலை, இலக்கிய, இசை என தமிழர்கள் கோலோச்சாத துறைகளே இல்லை உலகின் நான்கு திசைகளிலும் தமிழர்கள் மலையென சாதனைகளைக் குவித்து வருகின்றனர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இந்தியாவிற்குள்ளும் சாதியப் பாகுபாடுகளுக்கு எதிராக சமூக நீதியைக் கடைப்பிடித்து ஒரு முன்னோடி மாநிலமாக தமிழ்நாடு தலைநிமிர்ந்து நிற்கிறது.. தமிழ்நாடு அரசு சமூக நீதி அரசு என்று புகழாரம் சூட்டும் அளவுக்கு வளர்ச்சிப் பரவலாக்கத்திற்கு உழைத்து வருகிறது. இந்த சாதனைகளையும், வெற்றிகளையும் தாண்டி 21 ஆம் நூற்றாண்டில் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட மக்கள் கூட்டமாகவும் நம் இனம் இருந்து வருகிறது இது நமது தொன்மைக்கும் பண்பாட்டுச் செழுமைக்கும், நாகரிகத்திற்கும், 100 மில்லியனுக்கும் மேற்பட்ட தமிழர்களினத்திற்கும் விடப்பட்டிருக்கும் சவால் ஆகும். உலக அரங்கிலே இனவழிப்புக்கு உள்ளானது மட்டுமின்றி அதற்கான நீதியை இன்னும் வென்றெடுக்காதவர்களாகவும் நாம் இருந்து வருகிறோம். ஆனால், நாம் நீதியின் பால் மிகுந்த பற்று கொண்ட ஓர் இனம். சிலப்பதிகார நாயகி கண்ணகியை தெய்வமாக வழிபடும் இனம். நீதியின் குறியீடாக அவள் சென்னை மெரினாவில் கண்கள் சிவக்க நின்று கொண்டிருக்கிறாள் அந்த கண்ணகித் தாயின் வழிவந்த நாம், நம்மினத்திற்கு எதிராக இழைக்கப்பட்ட படுகொலைகளுக்கு நீதியைப் பெறத் தவறுவோமாயின் இந்தப் இந்த உலகில் வாழும் பிற சமூகத்தினர் தமிழர்களின் ஆளுமை பற்றி கேள்வி எழுப்புவார்கள். நான் பிறந்த மண்ணின் இன்றைய நிலையை சொல்லில் விவரிக்க முடியாது. தமிழினத்தின் பண்பாட்டு பெருமிதத்தோடு இந்த மாநாடு நடந்துக் கொண்டிருக்கும் இதே சமநேரத்தில் எமது தமிழர் தாயகத்தில் பண்பாட்டு படுகொலைகள் சத்தமின்றி அரங்கேறிவருகிறது. இதற்கு அண்மைய சாட்சியாக முல்லைதீவு மாவட்ட நீதிபதி சரவணராசா அவர்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் அவர் குடும்பத்தோடு தலைமறைவாகும் சூழல் உருவாகி இருக்கிறது . தமிழ் நீதிபதிக்கு கூட அங்கு பாதுகாப்பு இல்லை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் கட்டமைக்கப்பட்ட இனவழிப்புக்கு எமது தாய்நாடு இரையாகிக் கொண்டிருக்கிறது. தமிழன் சறுக்கி விழுந்தாலும் ஒன்றுபட்ட உணர்வுடன் பீனிக்ஸ் பறவை போல் எழுந்தான் என்ற வரலாற்றை நாம் படைக்க வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற தமிழ்நாட்டுப் புலவன் கணியன் பூங்குன்றனாரின் வரிகளுக்கு ஏற்ப உலகமெங்கும் சிதறி வாழ்கின்ற நாம் ஒரு நாடற்றவர்களாகி இனமழிந்து போகின்ற நிலைக்கு ஆளாவிடக்கூடாது. அதற்கு எம் தாய் தமிழ்நாடு துணை நிற்க வேண்டுமென எமது தாய் நிலத்திலே கண்ணீரோடு காத்திருக்கும் எமது உறவுகளின் சார்பில் கேட்டுக்கொள்கின்றேன். நான் தொடங்கிய இடத்திற்கே மீண்டும் வருகிறேன். தமிழனுக்கு எங்கு அநீதி இழைத்தாலும் அவன் திரும்பிப் பார்க்கும் இடம் தமிழ்நாடு தான். இந்த மண் தமிழினத்திற்காக பன்னாட்டரங்கில் குரல் கொடுப்பதில் தான் உலகெங்கும் பரவிவாழும் தமிழர்களின் மாண்பும் பாதுகாப்பும் இருக்கிறது. இனவழிப்புக்கு உள்ளான தமிழினம் நீதியை வென்றெடுப்பதில்தான் உலகத் தமிழர்களின் தன்மானமும் பாதுகாப்பும் உறுதிசெய்யப்படும். அந்த வரலாற்றுப் பணிக்கு தமிழ்நாடு முதன்மையான பங்களிப்பை வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/174022
-
யாழில் இடம்பெற்ற மாபெரும் பட்டத்திருவிழா
Published By: DIGITAL DESK 3 16 JAN, 2024 | 10:19 AM தமிழர் திருநாளான தைப்பொங்கல் தினத்தினை முன்னிட்டு ஆண்டுதோறும் இடம்பெறும் இராட்சத ‘விசித்திர பட்டத்திருவிழா' திங்கட்கிழமை (15) இடம்பெற்றது. யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை உதயசூரியன் உல்லாசக் கடற்கரையில் இடம்பெற்ற பட்ட போட்டியில் பலவிதமான வண்ணங்களில் விசித்திர பட்டங்கள் செய்து அதனை போட்டியாளர்கள் பறக்க விட்டனர். https://www.virakesari.lk/article/174026
-
நாட்டின் பல பகுதிகளிலும் காற்றின் தரம் குறைந்தது!
16 JAN, 2024 | 09:44 AM நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. கொழும்பு, யாழ்ப்பாணம், மன்னார் மற்றும் காலி ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபையின் ஊடகப் பேச்சாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, சுவாசக் கோளாறு உள்ள நோயாளிகள் அதிக எண்ணிக்கையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/174023
-
க.பொ.த உயர்தர பரீட்சை சம்பந்தமான செய்திகள்
வினாத்தாள் வெளியான சம்பவம்: மற்றொருவர் மொரட்டுவையில் கைது! 16 JAN, 2024 | 08:41 AM இந்த வருடம் நடைபெற்ற உயர்தரப் பரீட்சைக்கான விவசாய வினாத்தாளை குறித்த பாடப் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்னரே சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட சம்பவம் தொடர்பில் மொரட்டுவ பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றின் அலுவலக உதவியாளர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் நேற்று (15) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மொரட்டுவையில் உள்ள பாடசாலை ஒன்றில் அலுவலக உதவியாளராக பணியாற்றிய 38 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் விவசாய வினாத்தாள்களை மாணவர் ஒருவருக்கு பணத்துக்காக விற்பனை செய்துள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர். https://www.virakesari.lk/article/174019
-
பிரபஞ்சத்தில் மனித அறிவுக்கு சவால் விடும் 'பெரிய வளையம்' கண்டுபிடிப்பு - எவ்வாறு உருவானது?
பட மூலாதாரம்,STELLARIUM படக்குறிப்பு, பெரிய வளையம் (நீல நிறத்தில்) மற்றும் ராட்சத வளைவு (சிவப்பு நிறத்தில் காட்டப்பட்டுள்ளது) ஆகியவற்றின் நிலைகளை குறிக்கும் மாதிரி தோற்றம். கட்டுரை தகவல் எழுதியவர், பல்லப் கோஷ் பதவி, அறிவியல் செய்தியாளர் 15 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் பிரிட்டனில் உள்ள மத்திய லாங்கிஷா பல்கலைக்கழகத்தின் அறிவியலாளர்கள் விண்வெளியில் பெரிய, வளைய வடிவிலான அமைப்பு ஒன்றை கண்டுபிடித்துள்ளனர். இது 130 கோடி ஒளியாண்டுகள் விட்டம் கொண்டது மற்றும் பூமியில் இருந்து பார்க்கும்போது இரவு வானில் நிலாவை அளவை விட 15 மடங்கு பெரிதாக உள்ளது. வானியல் நிபுணர்களால் 'பெரிய வளையம்’ (Big Ring) என்று பெயரிடப்பட்ட இது, பல விண்மீன் திரள்களால் ஆனது. அளவில் மிகப் பெரியதான இந்த வளையம், பிரபஞ்சத்தைப் பற்றிய மனித அறிவுக்கும் புரிதலுக்கும் சவால் விடுப்பதாக வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். இந்த வளையத்தை வெறும் கண்ணால் பார்க்க முடியாது. மிகவும் தொலைவில் அமைந்துள்ள இந்த பெரும் அமைப்பை உருவாக்கிய அனைத்து விண்மீன் திரள்களையும் அடையாளம் காண அதிக நேரம் மற்றும் கணினி ஆற்றல் தேவைப்பட்டது. அண்டவியல் கொள்கை எனப்படும் வானவியலின் வழிகாட்டும் கொள்கை ஒன்றின்படி, இத்தகைய பெரும் அமைப்புகள் இருக்கக்கூடாது. அக்கொள்கையின்படி, அனைத்து வானியல் பொருட்களும் பிரபஞ்சம் முழுவதும் சீராகப் பரவுகின்றன. பட மூலாதாரம்,MARCEL DRECHSLER, XAVIER STROTTNER, YANN SAINTY படக்குறிப்பு, கோப்புப்படம் நட்சத்திரங்கள், கோள்கள் மற்றும் விண்மீன் திரள்கள் ஆகியவை நமது பார்வையில் பெரும் திரள்களாக இருந்தாலும், பிரபஞ்சத்தின் அளவை வைத்துப் பார்க்கும்போது அவை முக்கியமானவை அல்ல. மேலும் இத்தகைய பொருட்களின் மிகப் பெரும் திட்டுகள் உருவாகக்கூடாது என்ற கோட்பாடும் உள்ளது. இந்த பெரிய வளையம் அண்டவியல் தத்துவத்தில் முதல் மீறலாக இருக்க முடியாது. பல்வேறு காரணிகளால் கண்டுபிடிக்கப்படாத மற்றொரு மீறலும் விண்வெளியில் இருக்கலாம். ராயல் அஸ்ட்ரோனாமிகல் சொசைட்டியின் துணை இயக்குனர் டாக்டர் ராபர்ட் மாஸ்ஸியின் கூற்றுப்படி, வானியலின் மையப்புள்ளி என்ன என்பதை மறுபரிசீலனை செய்வதற்கான சான்றுகள் வளர்ந்து வருகின்றன. “பிரபஞ்சத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஏழாவது பெரிய அமைப்பு இதுவாகும். இது, பிரபஞ்சம் சீரானது என்ற பெரும்பான்மை கருத்துக்கு முரணானது. இந்த அமைப்புகள் உண்மையானவை என்றால், அது நிச்சயமாக அண்டவியலாளர்களின் சிந்தனையையும் காலப்போக்கில் பிரபஞ்சம் எவ்வாறு பரிணாமம் அடைந்தது என்பது குறித்த சிந்தனையையும் தூண்டும்” என்றார். இந்த பெரிய வளையத்தை லாங்கிஷா பல்கலைக்கழகத்தின் முனைவர் பட்ட ஆய்வு மாணவி அலெக்ஸியா போபெஸ் அடையாளம் கண்டார். விண்வெளியில் 330 கோடி ஒளி ஆண்டுகளுக்குப் பரவியுள்ள ராட்சத வளைவை (Giant Arc) கண்டுபிடித்தவரும் இவரே. பட மூலாதாரம்,NASA படக்குறிப்பு, ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கியின் பார்வையில் விண்மீன் திரள்கள் பிரபஞ்சத்தில் சமமாக பரவியுள்ளதை காட்டும் படம். இவற்றைக் கண்டுபிடித்தது குறித்து எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டதற்கு, "இது உண்மையில் ஒரு கனவு போல இருக்கிறது. என்னை நானே கிள்ளிப் பார்த்துக்கொள்கிறேன். ஏனென்றால் இதனை நான் தற்செயலாகத்தான் கண்டுபிடித்தேன். ஆனால் இது ஒரு பெரிய விஷயம். அதுகுறித்து நான் பேசுகிறேன் என்பதை என்னால் நம்ப முடியவில்லை. நான் தான் கண்டுபிடித்தேன் என்பதை நம்ப முடியவில்லை,” என்றார். “பிரபஞ்சம் குறித்த தற்போதைய புரிதலை வைத்துக்கொண்டு இந்த இரு மிகப்பெரிய அமைப்புகள் குறித்தும் பேசுவது எளிதானது அல்ல,” என்றார் அவர். “அதன் மிகப்பெரிய உருவமைப்பு, தனித்துவமான வடிவம் போன்றவை, அவை நிச்சயமாக நம்மிடம் ஏதோ முக்கியமான ஒன்றை சொல்லவருவது போலிருக்கிறது. ஆனால் என்ன அது?” பெரிய வளையம் மற்றும் ராட்சத வளைவு இரண்டும் ’பூட்ஸ் தி ஹெர்ட்ஸ்மேன்’ (Bootes the Herdsman) எனும் விண்மீன் கூட்டத்திற்கு அருகில் ஒப்பீட்டளவில் நெருக்கமாகத் தோன்றுகின்றன. வார்விக் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் பேராசிரியர் டான் பொல்லாக்கோ, இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக இருக்கலாம், மேலும் இரண்டும் சேர்ந்து இன்னும் பெரிய அமைப்பை உருவாக்கலாம் என்றார். "இவ்வளவு பெரிய அமைப்புகள் எப்படி உருவாகின்றன என்பதுதான் கேள்வி,” என்கிறார் அவர். பட மூலாதாரம்,MARCEL DRESCHSLER படக்குறிப்பு, கோப்புப்படம் "இந்த அமைப்புகளை உருவாக்கக்கூடிய எந்தவொரு பொறிமுறையையும் கற்பனை செய்வது மிகக் கடினம். அதற்கு பதிலாக ஆரம்பகால பிரபஞ்சத்தின் எச்சங்கள் குறித்து நாங்கள் யூகிக்கிறோம். அதன்படி, அதிக மற்றும் குறைந்த அடர்த்தி கொண்ட பொருட்களின் அலைகள், பால்வெளி மண்டலத்திற்கு வெளியே உறைந்திருக்கும்," என்கிறார் அவர். மற்ற அண்டவியலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இதேபோன்ற பெரிய அமைப்புகளும் உள்ளன. ‘ஸ்லோன்’ என்ற பெருஞ்சுவர் (Sloan Great Wall), சுமார் 1.5 பில்லியன் ஒளி ஆண்டுகள் நீளம் கொண்டது. மேலும், தென்துருவ சுவர் (South Pole Wall), 140 கோடி ஒளி ஆண்டுகள் நீளம் கொண்டது. ஆனால், 1000 கோடி ஒளியாண்டுகள் அகலமுள்ள ஹெர்குலஸ்-கொரோனா பொரியாலிஸ் பெருஞ்சுவர் (Hercules-Corona Borealis Great Wal) எனப்படும் பெரும் விண்மீன் திரள்களையும் விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த பெரிய வளையம் வானத்தில் கிட்டத்தட்ட சரியான வளையமாகத் தோன்றினாலும், லோபஸின் பகுப்பாய்வின்படி, அது சுருள் வடிவில் அல்லாமல் திருகி போன்ற வடிவமைப்பில், அதன் முகம் பூமியுடன் ஒருங்கமைக்கப்பட்டுள்ளது. "பெரிய வளையம் மற்றும் ராட்சத வளைவு, தனித்தனியாகவும் ஒன்றாகவும், பிரபஞ்சத்தையும் அதன் வளர்ச்சியையும் புரிந்துகொள்வதில் பெரும் அண்டவியல் மர்மத்தை நமக்கு அளிக்கிறது," என்றார். நியூ ஆர்லியன்ஸில் நடைபெற்ற அமெரிக்க வானியல் சங்கத்தின் (ஏஏஎஸ்) 243-வது கூட்டத்தில் இந்த கண்டுபிடிப்புகள் முன்வைக்கப்பட்டன. https://www.bbc.com/tamil/articles/cmljj2dp1ggo
-
ஒரு இலட்சம் கோடி ரூபா நிலுவை வரியை அறவிட நடவடிக்கை எடுக்கவில்லை - சம்பிக்க குற்றச்சாட்டு
15 JAN, 2024 | 07:12 PM (இராஜதுரை ஹஷான்) சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளை அமுல்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு அரசாங்கம் முக்கிய நிபந்தனைகளை புறக்கணித்து செயற்படுகிறது. ஒரு இலட்சம் கோடி ரூபாய் நிலுவை வரியை அறவிடுவதற்கு எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். கண்டியில் ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற ஐக்கிய குடியரசு முன்னணியின் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் உரையாற்றியதாவது, நாடும், நாட்டு மக்களும் இன்று பொருளாதார ரீதியில் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளதற்கு ராஜபக்ஷர்களே காரணம். இதனை அரசியலுக்காக குறிப்பிடவில்லை. ராஜபக்ஷர்கள் பொருளாதார படுகொலையாளிகள் என்பதை உயர்நீதிமன்றம் பகிரங்கப்படுத்தியுள்ளது. வீழ்ந்துள்ள பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்புவதாக ராஜபக்ஷர்கள் குறிப்பிடுவது நகைப்புக்குரியது. நாட்டையும், நாட்டு மக்களையும் அதளபாதாளத்துக்குள் தள்ளியதை ராஜபக்ஷர்கள் மறந்து விட்டார்கள். 2019 ஆம் ஆண்டு அரசியல் ரீதியில் 69 இலட்ச மக்கள் செய்த தவறால் ஒட்டுமொத்த மக்களும் இன்று நெருக்கடிக்குள்ளாகியுள்ளார்கள். முறையற்ற நிர்வாகத்தால் நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ள ராஜபக்ஷர்கள் அரசியலில் இருந்து முழுமையாக புறக்கணிக்கப்பட வேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் ஆலோசனைகளுக்கு அமைய அரசாங்கம் செயற்படுகிறது. பரிந்துரைக்கப்பட்ட யோசனைகளை செயற்படுத்துவதாக குறிப்பிடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. வற் வரி ஊடாக அரச வருமானத்தை 60 கோடி ரூபா வரை பெற்றுக்கொள்ள உத்தேசிக்கப்பட்டுள்ளது. முக்கிய வர்த்தகர்கள், அரசியல் செல்வாக்கு உள்ளவர்களிடமிருந்து மதுவரி திணைக்களம், தேசிய இறைவரித் திணைக்களம் மற்றும் சுங்கத் திணைக்களம் சுமார் ஒரு இலட்சம் கோடி ரூபா வரியை அறவிடவில்லை. இந்த நிலுவை வரியை அறவிட அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகள் தெரிவு செய்யப்பட்ட வகையில் செயற்படுத்தப்படுகிறது. நடுத்தர மக்களை நெருக்கடிக்குள்ளாக்கும் விடயங்கள் மாத்திரம் செயற்படுத்த அவதானம் செலுத்தப்படுகிறது. வங்குரோத்து நிலையிலும் செல்வந்தர்களுக்கு விசேட சலுகை வழங்கப்பட்டுள்ளது என்றார். https://www.virakesari.lk/article/174002
-
ஐஸ்லாந்தில் 14 மணித்தியாலத்தில் 800 முறை நிலநடுக்கம் !
'இது கருப்பு நாள்' 40 KM தடுப்புகளை தாண்டி வீடுகளை தீக்கிரையாக்கிய எரிமலை குழம்பு | Iceland
-
நூறு நகர் திட்டத்திற்கு இவ்வருட வரவு - செலவு திட்டத்தில் 600 மில்லியன் ரூபா ஒதுக்கீடு
15 JAN, 2024 | 07:08 PM நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்திற்காக இந்த வருட வரவு செலவு திட்டத்தில் 600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. மேற்படி விதிமுறைகளுடன் 9 திட்டங்களின் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை கூறுகிறது. கம்பஹா, மினுவாங்கொடை, பாணந்துறை, அலவ்வ, ஹொரண மற்றும் அவிசாவளை பொதுச் சந்தைகளின் அபிவிருத்தி, வரக்காபொல மற்றும் முல்லைத்தீவு பேருந்து நிலையங்களின் அபிவிருத்தி, நிந்தவூர் கடற்கரைப் பூங்கா நிர்மாணம் ஆகியன இந்தத் திட்டங்களாகும். நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் ஆலோசனையின் பேரில் இந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுகின்றன. இந்த வருட இறுதிக்குள் உரிய வேலைத்திட்டங்களை நிறைவு செய்வதற்கான திட்டங்களை தயாரிக்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார். நாடு முழுவதும் பரவியுள்ள வசதிகள் குறைவான நகரங்களை கண்டறிந்து, அவற்றின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, அந்த நகரங்களை முறையாக அழகுபடுத்தும் நோக்கில், நூறு நகர அபிவிருத்தித் திட்டம் தொடங்கப்பட்டது. அதாவது 2021ஆம் ஆண்டு ஆரம்பத்தில், 100 சிறிய மற்றும் நடுத்தர நகரங்கள் இதற்காக அடையாளம் காணப்பட்டன, ஆனால் பின்னர் அது 116 நகரங்களாக அதிகரித்தது. 2022 ஆம் ஆண்டின் இறுதியில், இந்த 116 நகரங்களின் அபிவிருத்திப் பணிகள் நிறைவடைந்தன. அதற்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை 1,620 மில்லியன் ரூபா. நூறு நகரங்களை அழகுபடுத்தும் திட்டத்தின் கீழ் 2023 ஆம் ஆண்டிற்கான அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கிய 156 திட்டங்கள் அடையாளம் காணப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளன. பொதுச் சந்தைகள், பேருந்து நிலையங்கள், வாகன நிறுத்துமிடங்கள், நடைபாதைகள், பல்நோக்கு கட்டிடங்கள், நகரப் பூங்காக்கள் மற்றும் நகரங்களை அழகுபடுத்தும் திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும். 2023 ஆம் ஆண்டு இறுதிக்குள் 133 வேலைத்திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நகர அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. எஞ்சியுள்ள 23 திட்டங்கள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. நாட்டிலுள்ள அனைத்து நகரங்களின் அபிவிருத்திக்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபையே பொறுப்பு. அதற்கான பணிகளை தற்போது அதிகாரசபை மேற்கொண்டு வருகிறது. நகர அபிவிருத்தியின் மூலம் நாட்டில் பெருமளவிலான நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியும் என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க சுட்டிக்காட்டியுள்ளார். நகரங்களை அழகுபடுத்துவதன் மூலம் சுற்றுலாப் பயணிகளின் ஈர்ப்பு வளர்ச்சியடைவதோடு நகரங்களை அண்மித்து வாழும் மக்களின் தூய்மையும் ஆரோக்கியமும் அதிகரிக்கும் என அமைச்சர் குறிப்பிடுகிறார். எனவே, நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு கிடைக்கும் வருமானத்தை நிர்வகித்து இந்த அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துமாறும் அமைச்சர் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார். https://www.virakesari.lk/article/174005
-
மத்திய இஸ்ரேலில் நடந்த இரட்டைத் தாக்குதல்களில் 1 பேர் உயிரிழந்தனர் மற்றும் குறைந்தது 17 பேர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேலில் பாலஸ்தீனியர்கள் காரால் மோதி தாக்குதல் - ஒருவர் பலி பலர் காயம் Published By: RAJEEBAN 15 JAN, 2024 | 08:06 PM இஸ்ரேலில் பாலஸ்தீனியர்கள் இருவர் காரால் மீது மோதி மேற்கொண்ட தாக்குதலில் பெண்ணொருவர் கொல்லப்பட்டுள்ளார் 12 பேர் காயமடைந்துள்ளனர். ரனானா நகரில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றுள்ளது இரண்டு சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். இஸ்ரேலினால் ஆக்கிரமிக்கப்பட்ட ஹெப்ரோனை சேர்ந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவரே இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் இருவரும் சட்டவிரோதமாக இஸ்ரேலிற்குள் நுழைந்துள்ளனர். அவர்கள் ஒரேநேரத்தில் செயற்பட்டு இரண்டு கார்களை கடத்தி இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர் என இஸ்ரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/174014
-
ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் - மஹிந்த ராஜபக்ஷ
15 JAN, 2024 | 02:29 PM (இராஜதுரை ஹஷான்) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர். பொதுஜன பெரமுன சார்பில் வேட்பாளர் போட்டியிடலாம் அல்லது போட்டியிடாமல் இருக்கலாம் என பொதுஜன பெரமுனவின் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். கொழும்பில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் மேலும் தெரிவித்ததாவது, அரசியல் ரீதியில் நாங்கள் குறிப்பிடும் கருத்துக்கள் திரிபுப்படுத்தப்படுகின்றன. எமது அரசாங்கம் வரி குறைத்ததால் நெருக்கடிகள் தோற்றம் பெற்றது என குறிப்பிடப்படுகிறது. தற்போது வரி அதிகரிப்பினால் சமூக கட்டமைப்பில் நெருக்கடிகள் தோற்றம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது. பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என்பதை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளோம். அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காணாமல் நிலையான இலக்கை அடைய முடியாது என்பதை தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளோம். கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு நாங்கள் தயாராகவே உள்ளோம். பிரிந்து சென்றவர்கள் எம்முடன் தாராளமாக ஒன்றிணையலாம். அரசியலில் நான் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை. கேள்வி – ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தேசிய தலைவராக ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்கப்படுவவதாக குறிப்பிடப்படுகிறது,? பதில்- அவர் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர். கேள்வி – உங்களின் ஜனாதிபதி வேட்பாளர் யார்? பதில் - நாங்கள் இதுவரை ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிக்கவில்லை.பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் களமிறங்கலாம், அல்லது களமிறங்காமல் இருக்கலாம் என்றார். https://www.virakesari.lk/article/173991
-
மயிலத்தமடு பசுக்களுக்கும் காளைகளுக்கும் இழைக்கப்படும் கொடுமைகளை கண்டித்து யாழில் நாளை போராட்டத்திற்கு அழைப்பு!
15 JAN, 2024 | 02:27 PM மட்டக்களப்பு - மாதவனை, மயிலத்தமடு பகுதிகளில் இடம்பெறும் மிருக வதை மற்றும் நில ஆக்கிரமிப்புக்கு எதிராக போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தென்கயிலை ஆதீனம் தவத்திரு அகத்தியர் அடிகளின் தலைமையில் இந்த போராட்டத்திற்கு ஊடக அறிக்கை மூலம் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, மட்டக்களப்பு - மாதவனை, மயிலத்தமடு மேய்ச்சல் தரையில் அத்துமீறி குடியேறவும் பயிர்செய்யவும் முனையும் ஆக்கிரமிப்பாளர்கள் தொடர்ச்சியாக அங்கு மேய்ச்சலில் ஈடுபடும் பசுக்களுக்கும் காளைகளுக்கும் துயரங்களை ஏற்படுத்தி வருகின்றனர். வெங்காய வெடி வைத்து அவற்றின் வாயில் கொடும் காயங்களை ஏற்படுத்தி அவை உணவு உண்ணக்கூட முடியாத, வார்ததையால் வடிக்க முடியாத கொடுமைகளை வாயில்லா ஜீவன்களுக்கு ஏற்படுத்தி வருகின்றனர். அதனை விட சுட்டும், வெட்டியும், மின்சாரம் பாய்ச்சியும் இந்த பசுக்களுக்கும் காளைகளிற்கும் ஏற்படுத்தப்பட்டு வரும் கொடுமைகள் பூரணமாக நிறுத்தப்பட வேண்டும். அரசினால் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளும், நீதிமன்றத் தீர்ப்புக்களும் முறையாக அமுல் செய்யப்படுவது உறுதிப்படுத்தப்பட்டு, பட்டி மேய்ச்சல் தரைகளிலிருந்து அனைத்து சட்டவிரோதிகளும் அகற்றப்பட வேண்டும். மேய்ச்சல் நிலத்தில் எந்தவொரு பிற நடவடிக்கைளும் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் இவற்றை ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் குரலாக ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பாக அரச இயந்திரத்திற்கு ஆணித்தரமாக வலியுறுத்துகின்றோம். சொல்லொணாத் துயரை சந்திதுள்ள கிழக்கின் பண்ணையாளர்களையும் பசுக்களையும் பாதுகாக்க அனைவரும் அணி திரள்வோம். தமிழர்களின் பசுக்களிற்கும் காளைகளிற்கும் பொங்கலிட்டு நன்றி செலுத்தும் உயரிய நாளில் அனைவரும் எமது உணர்வுகளை வெளிக்காட்ட யாழ் நல்லை ஆதீன முன்றலில் பட்டிப் பொங்கலான நாளை 16.01.2024 செவ்வாய் மாலை 05மணிக்கு, ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் நடைபெறும் கவனயீர்ப்பில் அனைவரையும் பங்கு கொண்டு கிழக்கின் மயிலத்தமடுவில் தொடர்ச்சியாக நடைபெறும் போராட்டங்கள் வெற்றிபெற வலுச்சேர்க்குமாறு வேண்டுகின்றோம் என்றுள்ளது. https://www.virakesari.lk/article/173989
-
அதிகரிக்கும் இணையத்தள கடன் மோசடி: விரைவில் அறிமுகமாகவுள்ள புதிய சட்டம்
தெஹிவளையில் இணையவழி கடன் மோசடி கும்பல் ; சீன பிரஜைகள் உட்பட 6 பேர் கைது 15 JAN, 2024 | 03:13 PM தெஹிவளை பிரதேசத்தில் உள்ள இணையவழி கடன் வழங்கும் நிறுவனம் ஒன்றைச் சேர்ந்த சீன பிரஜைகள் உட்பட 6 சந்தேக நபர்கள் கணினி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து 21 கணினிகள் மற்றும் 49 கையடக்க தொலைபேசிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. இத்தகைய இணையவழி கடன் மோசடி தொடர்பான முறைப்பாடுகளை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு கணினி குற்றப் புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கணினி குற்றப் புலனாய்வு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/173997
-
IMF பிரதிநிதிகள் குழு நாளை நாட்டிற்கு விஜயம்
வடமாகாண ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்ற பொங்கல் விழாவில் கலந்துகொண்ட சர்வதேச நாணயநிதிய பிரதிநிதிகள் Published By: VISHNU 15 JAN, 2024 | 07:15 PM யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிதிகள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்ற பொங்கல் விழாவில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/173999
-
யாழ்ப்பாணத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச விஜயம்
யாழ். காரைநகரில் நீதியமைச்சரின் பங்குபற்றுதலுடன் தேசிய நல்லிணக்க பொங்கல் Published By: VISHNU 15 JAN, 2024 | 03:09 PM யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில் தேசிய நல்லிணக்க தைப்பொங்கல் விழா திங்கட்கிழமை (15) காலை இடம்பெற்றது. நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவின் பங்குபெற்றுதலுடன் இடம்பெற்ற பொங்கல் விழாவில், வியாவில் வாழ் மக்கள் வர்த்தக சமூகத்துடன் வெளிநாட்டு வாழ் உறவுகளும் இணைந்து சிறப்பாக இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/173992
-
முடிவு பிழை என்றால் கனடிய தூதுவரை ஏன் திருப்பி அழைக்கவில்லை,சுரேன்.சுரேந்திரன்.
https://www.parliament.lk/ta/prime-ministers இலங்கைப் பாராளுமன்ற இணையத்தளத்தில் இருந்து வெட்டி எடுத்த படத்தை மேலே இணைத்துள்ளேன். இலங்கையின் சனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமானவர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் 2022 ஜூலை மாதம் 21 ஆம் திகதி இலங்கையின் சனாதிபதியாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார். அவர் ஆறு முறை இலங்கையின் பிரதமராக பதவிவகித்துள்ளார். சனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்கள் படுகொலை செய்யப்பட்டதன் பின்னர், 1993–94 காலப்பகுதியில் முதற் தடவையாக ரணில் விக்ரமசிங்க அவர்கள் பிரதமராக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், சந்திரிக்கா குமாரதுங்க சனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் 2001 முதல் 2004 வரை ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை வழிநடத்த, பிரதமராக பதவியேற்றார். 2015 ஜனவரியில், சனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் சனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டதன் பின்னர் உருவான கூட்டரசாங்கத்தின் பிரதமராக அவர் பதவியேற்றார். அவரது இந்நியமனம் 2015 ஆகஸ்ட் மாதம் நடந்த பொதுத் தேர்தலில் இலங்கை மக்களால் அங்கீகரிக்கப்பட்டது. 2018 அக்டோபரில் அவரை சட்டவிரோதமாக பதவியிலிருந்து அகற்றிய பின்னர், 2018 டிசம்பர் மாதம் மீண்டுமொருமுறை அவரை பிரதமராக நியமிப்பதற்கு சனாதிபதி சிறிசேன நிர்ப்பந்திக்கப்பட்டார். 2019 நவம்பரில், ஐ.தே.க.வின் சனாதிபதி வேட்பாளர் தேர்தலில் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், அவர் தனது பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார். 2022 ஆண்டு நாட்டில் ஏற்பட்ட பொருளாதார மற்றும் அரசியல் சீரழிவைத் தடுத்துநிறுத்த, தனது நிபுணத்துவத்தையும் அனுபவத்தையும் வழங்குவதற்காக ஓர் இடைக்கால அரசாங்கத்தின் பிரதமராக பதவியேற்குமாறு சனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் 2022ஆம் ஆண்டு மே மாதம் விடுக்கப்பட்ட வேண்டுகோளை அவர் ஏற்றுக்கொண்டார். அவர் 1946 ஆம் ஆண்டு தாபிக்கப்பட்ட இலங்கையின் மிகப் பழமையான அரசியற் கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராவார். அவர் 1977 ஆம் ஆண்டிலிருந்து (2020 ஆகஸ்ட் முதல் 2021 ஜூன் வரை ஒரு பத்து மாத இடைவெளியைத் தவிர) அனைத்துப் பாராளுமன்றங்களிலும் பாராளுமன்ற உறுப்பினராக சேவையாற்றிய இலங்கையின் மிகவும் மூத்த, அனுபவமிக்க ஒருவராவார். https://www.presidentsoffice.gov.lk/index.php/the-president/?lang=ti WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை Sri Lanka plunges into constitutional crisis இலங்கை அரசியல் யாப்பு நெருக்கடிக்குள் மூழ்கிப்போயுள்ளது By K. Ratnayake 5 November 2003 Use this version to print | Send this link by email | Email the author இலங்கையின் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மூன்று ஐக்கிய தேசிய முன்னணி (ஐ.தே.மு) அமைச்சர்களை முக்கிய பொறுப்புக்களில் இருந்து விரைவாக வெளியேற்றவும் பாராளுமன்றத்தை நவம்பர் 19 வரை ஒத்திவைப்பதற்காகவும் தனது நிறைவேற்று அதிகாரத்தை பயன்படுத்தியதன் மூலம், நேற்று ஒரு கூர்மையான அரசியல் நெருக்கடியைத் தோற்றுவித்தார். குமாரதுங்க, அரசாங்கத்துக்கு எதிரான தனது நடவடிக்கைகளை மேற்கொண்டது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வாஷிங்டனில் இருந்துகொண்டிருந்த போதேயாகும். அவர் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷை இன்று சந்திக்கவிருந்தார். குமாரதுங்க பாதுகாப்பு, உள்துறை மற்றும் ஊடக அமைச்சுக்களை தனது கைகளில் எடுத்துக்கொண்டதோடு, திலக் மாரபன, ஜோன் அமரதுங்க மற்றும் இம்தியாஸ் பகீர் மார்கர் ஆகியோரையும் அவர்களது பதவிகளில் இருந்து நீக்கினார். இந்த மூவரும் எஞ்சிய பொறுப்புக்களை கொண்டிருப்பதோடு அமைச்சரவையிலும் உள்ளனர். ஒவ்வொரு அமைச்சுக்குமான உயர் மட்ட அலுவலர்களும் பதிலீடு செய்யப்பட்டுள்ளனர். பாராளுமன்ற ஒத்திவைப்பானது நவம்பர் 12 அன்று முன்வைக்கப்படவிருந்த அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தை முன்வைப்பதைத் தடுக்கும். இராணுவத்தை வழிநடத்தும் வகையில், ஜனாதிபதி தேசிய தொலைக்காட்சி நிலையங்கள், வானொலி, அரசாங்க அச்சகம் மற்றும் தலைநகரில் உள்ள பிரதான மின்நிலையங்களில் துருப்புக்களை குவித்துள்ளார். அமைச்சர்களை விலக்குவதற்கான வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளதா என்பதை நிச்சயிப்பதற்காக ஒரு விசேட பொலிஸ் குழுவொன்று அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அமெரிக்க, பிரித்தானிய, நோர்வே மற்றும் இந்தியத் தூரகங்களுக்கு வெளியிலும் மற்றும் இலங்கைக் கண்காணிப்புக் குழுவுக்கு வெளியிலும் பாதுகாவலர்கள் இருத்தப்பட்டனர். நாடு பூராவும் பொலிசார் அதிக விழிப்புடன் இருத்தப்பட்டிருந்ததோடு எல்லா விடுமுறைகளும் விலக்கப்பட்டன. நாட்டின் வடக்கில், கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான பிரதான பாதையில் நுழைவாயிலில் கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. நேற்றுப் பின்னிரவு தேசிய தொலைக்காட்சியில் தோன்றிய குமாரதுங்க அவரது நடவடிக்கைகள் "தேசியப் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு" அவசியமானது எனக் குறிப்பிட்டார். "கடந்த சில மாதங்களாக காணப்பட்ட கொந்தளிப்பான அபிவிருத்திகள் மற்றும் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட விளைபயனற்ற நடவடிக்கைகளும் என்னை உறுதியானதும் நிலையானதுமான நடவடிக்கைகளை எடுக்கத் தள்ளியது," என அவர் குறிப்பிட்டார். ஆனால் அவர் தனது அசாதாரணமான நகர்வுக்கு தெளிவான காரணங்களையோ அல்லது தனது அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதையிட்டோ தெளிவுபடுத்தவில்லை. https://www.wsws.org/tamil/articles/2003/nov/101103_SLConCris.shtml
-
தமிழ்நாடு ஏறுதழுவுதல் செய்திகள்
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: 435 வீரர்கள், 817 காளைகள் - சிறந்த வீரர், சிறந்த காளை பரிசுகளை வென்றது யார்? கட்டுரை தகவல் எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன் பதவி, பிபிசி தமிழ் 15 ஜனவரி 2024, 02:13 GMT புதுப்பிக்கப்பட்டது 16 நிமிடங்களுக்கு முன்னர் இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டுப் போட்டியான மதுரை அவனியாபுரம் ஜல்லிகட்டு இன்று திங்கள் (ஜனவரி 15) நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்துகொள்வதற்காக ஆன்லைன் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 435 மாடுபிடி வீரர்களும் 10 சுற்றுகளாக அனுமதிக்கப்பட்டதோடு 817 காளைகளும் அவிழ்க்கப்பட்டன. 9 சுற்றுகளிலும் இருந்து குறைந்தது 5 காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடி வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு இறுதி சுற்றில் கலந்துகொண்டனர். சிறந்த மாடுபிடி வீரருக்கு 10 லட்சம் மதிப்பிலான கார் மற்றும் கறவை பசு ஆகியவை பரிசாக வழங்கப்பட்டன. சிறந்த காளைக்கும் கார் மற்றும் மற்றும் கறவை பரிசாக வழங்கப்பட்டது. இந்தப்போட்டியில் 2 காவல்துறையினர் உள்ளிட்ட 51 பேருக்கு காயம் எற்பட்டது. இதில் 10 பேர் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். போட்டியின் போது திறம்பட விளையாடி 17 காளைகளை அடக்கிய மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த கார்த்திக்கு முதல் பரிசாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சார்பில் நிசான் கார் மற்றும் மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி சார்பில் கன்றுடன் கூடிய கறவை பசுவும் பரிசாக வழங்கப்பட்டது. இதேபோன்று போட்டியில் சிறப்பாக விளையாடிய சிறந்த காளைகளான அவனியாபுரம் பகுதியை சேர்ந்த தமிழ்நாடு ஜல்லிக்கட்டு இளைஞர் பேரவை தலைவர் மறைந்த G.R.கார்த்திக் பெயரில் அவிழ்க்கப்பட்ட காளைக்கு முதல் பரிசாக நிசான் காரும், கன்றுடன் கூடிய கறவை பசுவும் வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து 2 ஆவது மற்றும் 3 ஆவதாக சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் காளைக்கு பரிசுகள் அறிவிக்கப்படாத நிலையில் மாடுபிடி வீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்கள் ஜல்லிக்கட்டு களத்திலயே எதிர்ப்பு தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து 2 ஆவது இடம் பிடித்த மதுரை அவனியாபுரம் பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமாருக்கு ஒரு பீரோ மற்றும் சைக்கிளும், 2ஆவது இடம் பிடித்த சிறந்த காளையான திருப்பரங்குன்றம் முன்னாள் எம்.எல்.ஏ SM சீனிவேல் பெயரில் அவிழ்த்த காளைக்கு ஒரு பீரோ மற்றும் சைக்கிள் பரிசாக அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியின்போது 2400 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். போட்டியில் காளைகளை அடக்கிய சிறந்த மாடுபிடிவீரர்கள் மற்றும் காளை உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், குக்கர், கட்டில், சைக்கிள், சில்வர் அண்டாக்கள் உள்ளிட்ட பல்வேறு பரிசுபொருட்கள் வழங்கப்பட்டன. காலை 7 மணிக்கு தொடங்கிய போட்டி மாலை 5மணிக்கு நிறைவடைந்தது. தைத்திருநாளான பொங்கல் விழாவை முன்னிட்டு தென் தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடைபெறுவது வழக்கம். இதில், குறிப்பாக மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய 3 இடங்களில் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும். தைத்திருநாளான இன்று (ஜன. 15) அவனியாபுரத்திலும், நாளை (ஜன.16), பாலமேட்டிலும் நாளை மறுநாள் (ஜன. 17) உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடைபெறும். இந்த மூன்று நாளும் மதுரையே விழாக்கோலம் பூண்டிருக்கும். அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மதுரை அவனியாபுரத்தில் 3 ஆண்டுகளாகவே ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தும் ஒருங்கிணைப்புக் குழுவில் அனைத்து சாதியினரும் இடம்பெறுவது தொடர்பான பிரச்னை நீதிமன்ற படியேற நேரிட்டது. இதில் தீர்வு எட்டப்படாததால், நீதிமன்ற உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகமே அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தி வருகிறது. அதற்கு இந்த ஆண்டும் விதிவிலக்கு இல்லை. அவனியாபுரத்தை சேர்ந்த கல்யாணசுந்தரம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், கடந்தாண்டைப் போல இந்தாண்டும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை மாவட்ட நிர்வாகமும் மாநகராட்சியும் இணைந்து நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. மாவட்ட நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட குழுவில் இல்லாத நபர்கள் ஏதேனும் இடையூறுகள் ஏற்படுத்தினால் அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களின் பதிவு 2 நாட்களாக நடைபெற்றது. அதன் முடிவில், ஆயிரம் காளைகளும், 600 மாடுபிடி வீரர்களும் களமிறங்க டோக்கன்கள் வழங்கப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டின் முதல் ஜல்லிக்கட்டு அவனியாபுரத்தில் வெகு விமரிசையாக தொடங்கியுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் மாடுபிடி வீரர்கள் ஜல்லிகட்டு உறுதி மொழி ஏற்க, அமைச்சர் மூர்த்தி போட்டிகளை கொடியசைத்து போட்டி துவங்கி வைத்தார். முதல் சுற்றில் 50 பேர் களமிறங்கினர். திருமா காளைக்கு பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பரிசு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் சார்பாக காளை ஒன்று களமிறக்கப்பட்டது. வாடிவாசலில் இருந்து சீறி வந்த அந்த காளையை எந்தவொரு மாடுபிடி வீரராலும் பிடிக்க முடியவில்லை. பிடிபடாத அந்த காளைக்கு அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் தங்கக்காசு பரிசளித்தார். ஜல்லிக்கட்டு களத்திற்குள் புகுந்த நாய் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் மூன்றாவது சுற்று விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த நாய் ஒன்று திடீரென களத்திற்குள் புகுந்துவிட்டது. வாடிவாசலில் இருந்து காளைகள் அவிழ்க்கப்பட்டுக் கொண்டிருந்த போதே, அந்த காளைகள் ஓடிச் செல்லும் பாதையில் அந்த நாய் படுத்துக் கொண்டது. ஆனாலும், ஜல்லிக்கட்டு எந்தவொரு தடங்கலும் இன்றி தொடர்ந்தது. காளைகள் வாடிவாசலில் இருந்து சீறி வந்த போதும் அந்த நாய் அசராமல் களத்திலேயே படுத்திருந்தது. சுமார் அரை மணி நேரத்திற்குப் பிறகே அந்த நாய் அங்கிருந்து எழுந்து சென்றது. படக்குறிப்பு, அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் களத்திற்குள் அமர்ந்து வேடிக்கை பார்க்கும் நாய் கடந்த ஆண்டு முதல் பரிசு வென்ற கார்த்திக் காயம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் ஆறு சுற்றுகள் முடிவில் காவல்துறை சார்பு ஆய்வாளர் மற்றும் பார்வையாளர் இருவர் உட்பட மொத்தம் 40 பேர் காயமடைந்துள்ளனர். 6 பேர் மேல் சிகிச்சைக்காக அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர். அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் கடந்த ஆண்டு 15 காளைகளை அடக்கி முதல் இடம் பிடித்த அவனியாபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற இளைஞருக்கு கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த இளைஞருக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். முதலமைச்சர், உதயநிதி சார்பில் 2 கார்கள் பரிசு அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர் மற்றும் சிறந்த மாட்டுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர் உதயநிதி ஆகியோர் சார்பில் கார் பரிசாக அளிக்கப்படவுள்ளது. மேலும், அமைச்சர் மூர்த்தி மாடுகளை பிடித்த வீரர்கள் மற்றும் பிடிபடாத மாடுகளுக்கு தங்கக்காசு பரிசளித்தார். இதுவரை ஆறு சுற்றுகள் முடிந்துள்ள நிலையில், 300 மாடுபிடி வீரர்களும் 510 காளைகளும் ஜல்லிக்கட்டில் பங்கேற்றுள்ளன. அதிக காளைகளை பிடித்த 3 வீரர்கள் அடுத்த சுற்றுக்கு தேர்வாகியுள்ளனர். அவனியாபுரம் வாடிவாசலில் பின்புறம் மாடுகளை அழைத்து வரும்போது மாட்டின் உரிமையாளர்கள் ஒருவருக்கொருவர் முண்டியடித்துக் கொண்டு செல்வதால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசாருக்கும் மாட்டின் உரிமையாளர்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது தொடர்ந்து போலீசார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். https://www.bbc.com/tamil/articles/c9x26l32pkjo
-
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அவசரமாக குருதி தேவை
Published By: VISHNU 15 JAN, 2024 | 07:17 PM மக்கள் மத்தியில் இரத்ததானம் செய்தல் தொடர்பில் விழிப்புணர்வு குறைவாகவே காணப்படுகின்றது. இதனாலேயே நாடளாவிய ரீதியில் இரத்த வங்கிகளில் குருதித் தட்டுப்பாடு நிலவுகின்றது எனவும் வருகின்ற ஒரு சில வாரங்களில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியில் காணப்படும் இரத்தங்கள் முடிவடையவுள்ளமையினால் அவசரமாக குருதியினை வழங்குமாறு வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையினர் தெரிவித்துள்ளனர். வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் இரத்த வங்கி சேவை ஓரளவிற்கு திருப்திகரமாக காணப்படுகின்றது. எனினும் சில குருதிவகைகளுக்கு தட்டுப்பாடு நிலவுகின்றது. இதன்படி எதிர்மறை இரத்தவகைகளுக்கு கூடுதல் தட்டுப்பாடு நிலவுகின்றது. அதனை நிவர்த்தி செய்வதற்கு பொது மக்கள் முன்வரவேண்டும் எனினும் மக்களிடையே இரத்ததானம் பற்றிய சரியான விழிப்புணர்வு இல்லாமையே இதற்கு காரணம் என சுட்டிக்காட்டினார். மேலும் இரத்ததானம் தொடர்பான விளக்கத்தினை பொதுமக்களுக்கு ஊடகங்களே வழங்க முன்வரவேண்டும் என்றும் மேலதிக தகவல்களை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியூடாக பெற்றுக்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளனர்.மேலும் 18 – 60 வயதுக்குட்பட்ட 50 கிலோ நிறையுடைய ஆரோக்கிமான நிலையிலுள்ள சுகதேகி ஒருவரால் இரத்ததானம் செய்து கொள்ள முடியும் என்பதை வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவினர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனையடுத்து இளைஞர்கள் சிலர் ஒன்றிணைந்து வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலை இரத்த வங்கியில் இரத்ததானம் வழங்கி வைத்திருந்தனர். இரத்த தானம் செய்வோம்! மனித உயிர் காப்போம்! அனைவரும் ஒத்துளைப்பு வழங்குங்கள். https://www.virakesari.lk/article/174000
-
இருவருக்கு ஒரே கைரேகை சாத்தியமே - அமெரிக்க ஆய்வு முடிவால் தடய அறிவியலில் சிக்கலா?
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், ஜோ க்ளீன்மேன் பதவி, தொழில்நுட்ப செய்தியாளர் 5 மணி நேரங்களுக்கு முன்னர் ஒவ்வொரு நபரின் கைகளில் உள்ள ரேகையும் முற்றிலும் தனித்துவமானது என்று ஒரு பொதுவான நம்பிக்கை நிலவுகிறது. ஆனால் அந்த நம்பிக்கைக்கு இப்போது கொலம்பியா பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சி ஒன்றின் மூலம் சவால் விடப்பட்டுள்ளது. இந்த அமெரிக்க பல்கலைக் கழகத்தில் உள்ள ஒரு குழு, 60 ஆயிரம் கைரேகைகளை ஆய்வு செய்ய ஒரு செயற்கை நுண்ணறிவுக் கருவியைப் பயிற்றுவித்தது. ஒருவரின் வெவ்வேறு விரல்களிலிருந்து பெறப்பட்ட கைரேகைகள் ஒரே நபருடையது தானா என்பதை 75-90% துல்லியத்துடன் இந்த தொழில்நுட்ப கருவி அடையாளம் காண முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். ஆனால் அது எப்படி வேலை செய்கிறது என்று தெரியவில்லை. "செயற்கை நுண்ணறிவுக் கருவி அதை எவ்வாறு செய்கிறது என்பது எங்களுக்கு உறுதியாகத் தெரியவில்லை," என்று ஆய்வை மேற்பார்வையிட்ட கொலம்பியா பல்கலைக் கழகத்தின் ரோபோட்டிஸ்ட் பேராசிரியர் ஹோட் லிப்சன் ஒப்புக்கொண்டார். "இருவருக்கு ஒரே கைரேகை சாத்தியம்" இந்த கருவி கைரேகைகளை பாரம்பரிய முறைகளுக்கு மாறாக பகுப்பாய்வு செய்வதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதாவது ஒவ்வொரு தனிப்பட்ட ரேகையும் எங்கே தொடங்கி எங்கே முடிவடைகிறது என்பதுடன் அதன் தன்மையைக் குறிக்கும் மினுட்டியேவில் இந்த கருவி கவனம் செலுத்துகிறது. "இந்தக் கருவி தடயவியல் துறையில் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தப்பட்டு வரும் பாரம்பரிய குறிப்பான்களைப் பயன்படுத்தவில்லை என்பது தெளிவாகிறது" என்று பேராசிரியர் லிப்சன் கூறினார். "இது வளைவு மற்றும் மையத்தில் உள்ள சுழல்களின் கோணம் போன்ற ஒன்றைப் பயன்படுத்துவது போல் தெரிகிறது." பேராசிரியர் லிப்சன், தானும் இளங்கலை மாணவரான கேப் குவோவும் இந்த முடிவைக் கண்டு ஆச்சரியமடைந்ததாகவும் கூறினார். "இது குறித்து நாங்கள் உண்மையில் மிக அதிகமாகச் சந்தேகப்பட்டோம். நாங்கள் இந்த முடிவை மீண்டும் இரண்டு முறை சரிபார்க்க வேண்டியிருந்தது," என்று அவர் கூறினார். இத்துறையில் உள்ள மற்றவர்களுக்கு அது செய்தியாக இருக்காது. ஹல் பல்கலைக்கழகத்தின் தடய அறிவியல் பேராசிரியரான கிரஹாம் வில்லியம்ஸ், தனித்துவமான கைரேகைகள் பற்றிய நம்பிக்கை ஒருபோதும் நிரந்தரமான ஒன்றாகக் கருதப்படவில்லை என்று கூறினார். "கைரேகைகள் தனித்துவமானவை என்பது உண்மையா என்பது எங்களுக்கு உண்மையில் தெரியாது," என்று அவர் கூறினார். "எங்களுக்குத் தெரிந்த வரையில், ஒரே மாதிரியான கைரேகையை இதுவரை உலகில் ஏதேனும் இருவர் நிரூபிக்கவில்லை என்று மட்டுமே நாங்கள் கூற முடியும்." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, செயற்கை நுண்ணறிவுக் கருவியால் ஒரே நபரின் வெவ்வேறு விரல்களிலிருந்து எடுக்கப்பட்ட கைரேகைகளை அடையாளம் காண முடிந்தது. தடய அறிவியலில் சிக்கல் வருமா? கொலம்பியா பல்கலைக்கழகத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் பயோமெட்ரிக்ஸ் துறை - ஒரு குறிப்பிட்ட விரலைப் பயன்படுத்தி ஒரு சாதனத்தைத் திறக்க அல்லது அடையாளத்தை வழங்க - மற்றும் தடய அறிவியல் துறை ஆகிய இரண்டையும் பாதிக்கும் திறனைக் கொண்டிருக்கலாம். எடுத்துக்காட்டாக, குற்றம் நடந்த இடத்தில் அடையாளம் தெரியாத கட்டைவிரல் அச்சு மற்றும் அடையாளம் தெரியாத ஆள் காட்டி விரல் ரேகை காணப்பட்டால், இரண்டையும் தற்போது ஒரே நபருடன் தடயவியல் ரீதியாக இணைக்க முடியாது. ஆனால் இந்த செயற்கை நுண்ணறிவு கருவியால் இதை அடையாளம் காண முடியும். கொலம்பியா பல்கலைக்கழகக் குழுவினர், "தங்களில் யாரும் தடயவியல் துறையைச் சேர்ந்தவர்கள் அல்ல, மேலும் ஆராய்ச்சி தேவை" என்பதை ஒப்புக்கொண்டனர். செயற்கை நுண்ணறிவுக் கருவிகள் பொதுவாக பரந்த அளவிலான தரவுகளில் பயிற்சியளிக்கப்படுகின்றன. மேலும் இந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்த இன்னும் பல கைரேகைகள் தேவைப்படும். இதற்கும் மேலாக, மாதிரியை உருவாக்கப் பயன்படுத்தப்படும் அனைத்து கைரேகைகளும் முழுமையான அச்சுகள் மற்றும் நல்ல தரம் வாய்ந்தவை என்ற நிலையில், நிஜ உலகில் பெரும்பாலும் பகுதியளவிலான அல்லது மோசமான விரல் ரேகை அச்சுகள் தான் அதிகமாகக் காணப்படுகின்றன. "நீதிமன்ற வழக்குகளில் சாட்சியங்களை தீர்மானிக்க எங்கள் கருவி போதுமானதாக இல்லை. ஆனால் தடயவியல் விசாரணைகளில் முன்னணிகளை உருவாக்குவதற்கு இது நல்லது" என்று குவோ கூறினார். ஆனால் ஸ்டாஃபோர்ட்ஷையர் பல்கலைக் கழகத்தின் தடய அறிவியல் இணைப் பேராசிரியரான டாக்டர் சாரா ஃபீல்ட்ஹவுஸ், இந்த கட்டத்தில் குற்றவியல் வழக்குகளில் இந்த ஆய்வு "குறிப்பிடத்தக்க தாக்கத்தை" ஏற்படுத்தும் என்று தான் நினைக்கவில்லை என்றார். அச்சு மேற்பரப்புடன் தொடர்பு கொள்ளும்போது தோல் எவ்வாறு முறுக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து செயற்கை நுண்ணறிவுக் கருவி கவனம் செலுத்தும் குறிப்பான்கள் ஒரே மாதிரியாக இருக்கின்றனவா, மேலும் அவை பாரம்பரியத்தைப் போலவே வாழ்நாள் முழுவதும் ஒரே மாதிரியாக இருக்கின்றனவா என்ற கேள்விகள் இருப்பதாக அவர் கூறினார். பல செயற்கை நுண்ணறிவுக் கருவிகளைப் போலவே, செயற்கை நுண்ணறிவு சரியாக என்ன செய்கிறது என்பது குறித்து ஆராய்ச்சியாளர்கள் நிச்சயமற்றவர்களாக இருப்பதால், பல கேள்விகளுக்குப் பதில் அளிப்பது ஒரு சிரமமான ஒன்றாக இருக்கலாம். கொலம்பியா பல்கலைக்கழக ஆய்வு சக மதிப்பாய்வு செய்யப்பட்டு வெள்ளிக்கிழமையன்று அறிவியல் முன்னேற்றங்கள் ஆய்விதழில் வெளியிடப்படும். பட மூலாதாரம்,GETTY IMAGES "கைரேகை ஒத்துப் போகும் இரட்டையர்கள்" ஆனால் செஷயரில் ஒரு ஜோடி இரட்டையர்கள் இந்த விஷயத்தில் உலகில் உள்ள அனைவருக்கும் முன்னால் இருக்கலாம். ஏனென்றால், அவர்களுடைய பாட்டி கரோல் பிபிசியிடம் பேசுகையில், தனது இரண்டு பேரக் குழந்தைகளும் தங்கள் சொந்த விரல்களைப் பயன்படுத்தி ஒருவருக்கொருவர் ஐபோன்களை ஓபன் செய்ய முடிகிறது என்று கூறினார். "கிறிஸ்துமஸ் நாளன்று அவர்கள் எனக்கு இதைக் காட்டினார்கள்," என்று அவர் சொன்னார். "அவர்கள் பிறக்கும் போது அவர்கள் இருவரும் ஒரே மாதிரியானவர்கள் என்று எங்களிடம் கூறப்பட்டது. ஆனால் பின்னர் வளர்ந்த பொழுது அவர்களுக்கு இடையேயான வித்தியாசத்தை என்னால் தெளிவாகக் கூற முடியும்." தனது இரண்டு பேரக் குழந்தைகளும் கைபேசிகளின் ‘முக அங்கீகார அம்சத்தை’ ஏமாற்றி ஒரு செல்போனை யாருடைய முகத்தைக் காட்டியும் ஓபன் செய்ய முடியும் என்று அவர் கூறினார். கைரேகைகள் பிறப்பதற்கு முன்பே உருவாகின்றன. கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட ஆராய்ச்சிக் குறிப்பு ஒன்று, வரிக்குதிரைகள் மற்றும் சிறுத்தை போன்ற விலங்குகள் அவற்றின் அடையாளங்களைப் பெறுவதைப் போலவே மரபணு செயல்முறையும் இருக்கலாம் என்று பரிந்துரைத்தது. 1950 களில் கோட் பிரேக்கர் ஆலன் டூரிங் முன்மொழிந்த ஒரு கோட்பாடு இது தான். https://www.bbc.com/tamil/articles/cyr34m6v48no
-
இலங்கை ஸிம்பாப்வே கிரிக்கெட் போட்டி
முன்னாள் தலைவர்கள் மெத்யூஸ், ஷானக்க அபாரம் : ஸிம்பாப்வேயை 3 விக்கெட்களால் வென்றது இலங்கை 15 JAN, 2024 | 02:43 AM (ஆர். பிரேமதாச அரங்கிலிருந்து நெவில் அன்தனி) இலங்கை - ஸிம்பாப்வே அணிகளுக்கு இடையில் கொழும்பு, ஆர். பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (14) இரவு நடைபெற்ற மிகவும் பரபரப்பான முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் 3 விக்கெட்களால் இலங்கை வெற்றியீட்டியது. ஸிம்பாப்வேயினால் நிர்ணயிக்கப்பட்ட 144 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து உரிய வெற்றி இலக்கை அடைந்தது. முன்னாள் அணித் தலைவர்கள் ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க ஆகிய இருவரும் மத்திய வரிசையில் திறமையாக துடுப்பெடுத்தாடியதன் பலனாக இலங்கை வெற்றியை ஈட்டியது. இந்த வெற்றியுடன் 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ரி20 கிரக்கெட் தொடரில் 1 - 0 என்ற ஆட்டக் கணக்கில் இலங்கை முன்னிலை அடைந்துள்ளது. சுமார் 3 வருடங்களின் பின்னர் ரி20 அணியில் இடம்பிடித்த ஏஞ்சலோ மெத்யூஸ் அனுபவசாலிக்கே உரித்தான பாணியில் துடுப்பெடுத்தாடி இலங்கையை வெற்றி அடையச் செய்து ஆட்ட நாயகன் விருதை தனதாக்கிக்கொண்டார். 14 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 83 ஓட்டங்களைப் பெற்று தோல்வியின் விளிம்பில் இலங்கை இருந்தபோது ஜோடி சேர்ந்த ஏஞ்சலோ மெத்யூஸும் தசுன் ஷானக்கவும் 7ஆவது விக்கெட்டில் 55 ஓட்டங்களைப் பகிர்ந்து ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தினர். கடைசி 3 பந்துகளில் வெற்றிக்கு 6 ஓட்டங்களே தேவைப்பட்டபோது ஏஞ்சலோ மெத்யூஸ், சிக்ஸ் மூலம் வெற்றி ஓட்டங்களைப் பெற முயற்சித்து ஆட்டம் இழந்ததால் அரங்கில் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அடுத்து களம் நுழைந்த துஷ்மன்த சமீர் கடைசி 2 பந்துகளில் 4, 2 என 6 ஓட்டங்களைப் பெற்று இலங்கையின் வெற்றியை உறுதி செய்தனர். ஆரம்பத்தில் மிகவும் நிதானமாக துடுப்பெடுத்தாடிய மெத்யூஸ் பின்னர் அதிரடியில் இறங்கி 38 பந்துகளில் 5 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 46 ஓட்டங்கைளப் பெற்றார். தசுன் ஷானக்க 18 பந்துகளில் 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். எவ்வாறாயினும் இலங்கையின் ஆரம்பம் சிறப்பாக அமையவில்லை. பெத்தும் நிஸ்ஸன்க (2) முதல் ஓவரிலேயே ஆட்டம் இழந்தார். குசல் மெண்டிஸ் (17), குசல் ஜனித் பெரேரா (17) ஆகிய இருவரும் அடுத்தடுத்த ஓவர்களில் களம் விட்டகன்றனர். தொடர்ந்து சதீர சமரவிக்ரம 9 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். சரித் அசலன்கவும் ஏஞ்சலோ மெத்யூஸும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் 32 ஓட்டங்களைப் பகிர்ந்திரந்தபோது சரித் அசலன்க (16) கவனக் குறைவான அடி காரணமாக நடையைக் கட்டினார். ரி20 அணிக்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்ட வனிந்து ஹசரங்கவும் இந்தப் போட்டி சிறப்பாக அமையவில்லை. அவர் இரண்டாவது பந்தில் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்து வெளியேறினார். ஆனால், அதன் பின்னர் மெத்யூஸும் தசுன் ஷானக்கவும் ஆட்டத்தின் பிடியை இலங்கை பக்கம் திருப்பி வெற்றிக்கு அடிகோலினர். பந்துவீச்சில் சிக்கந்தர் ராஸா 4 ஓவர்களில் 13 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ப்ளெசிங் முஸராபனி 33 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட ஸிம்பாப்வே 20 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது. ஆரம்ப வீரர்களான டினாஷே கமுன்ஹுகம்வே (26 ஓட்டங்கள்), க்ரெய்க் ஏர்வின் (10) ஆகிய இருவரும் 31 பந்துகளில் 37 ஓட்டங்களைப் பகிர்ந்து நல்ல ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால், இருவரும் ஒரு ஓட்ட வித்தியசத்தில் 6ஆவது ஓவரில் ஆட்டம் இழந்தனர். அணித் தலைவர் சிக்கந்தர் ராஸா மிக வேகமாகத் துடுப்பெடுத்தாடி 42 பந்துகளில் 5 பவுண்டறிகள், 2 சிக்ஸ்கள் உட்பட 62 ஓட்டங்களைக் குவித்தார். முன்னாள் அணித் தலைவர் சோன் வில்லியம்ஸுடன் 3ஆவது விக்கெட்டில் சிக்கந்தர் ராஸா பகிர்ந்த 48 ஓட்டங்களே ஸிம்பாப்வே இன்னிங்ஸில் அதி சிறந்த இணைப்பாட்டமாக பதிவானது. உபாதையிலிருந்து மீண்டுவந்த சோன் வில்லியம்ஸ் 14 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். ரெயான் பேர்ல் 5 ஓட்டங்களை மாத்திரம் பெற்றார். ப்றயன் பெனெட் 10 ஓட்டங்களுடனும் லூக் ஜொங்வே 13 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். இந்தப் போட்டியில் இலங்கை அணியின் களத்தடுப்பும் வேகப்பந்தவீச்சும் சிறப்பாக அமையவில்லை. காய்ச்சலில் இருந்து குணமடைந்து அணிக்கு திரும்பிய பெத்தும் நிஸ்ஸங்க இரண்டு பிடிகளைத் தவறவிட்டதுடன் வேகப்பந்துவீச்சாளர்களான நுவன் துஷார (43 ஓட்டங்கள்), துஷ்மன்த சமீர (38) ஆகிய இருவரும் மொத்தமாக 81 ஓட்டங்களை வாரி வழங்கியிருந்தனர். மஹீஷ் தீக்ஷன 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/173968
-
14 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய பெரிய தந்தை கைது !
15 JAN, 2024 | 01:01 PM யாழ். சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மயிலங்காடு பகுதியில் 14 வயதுடைய சிறுமி ஒருவரை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் பெரிய தந்தையார் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில் சந்தேக நபர் குளிர்பானத்தில் மயக்க மருந்தினை சிறுமிக்கு கொடுத்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார் . இந்நிலையில் சுன்னாகம் பொலிஸார் அவரை கைது செய்து விசாரணைகளை மேற்கொண்ட நிலையில் குறித்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என கூறப்படுகிறது. இருப்பினும் அது உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் கூறுகின்றதுடன் சிறுமி பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிறுவர்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்துள்ள நிலையில் பெற்றோர் பிள்ளைகளை தனியாக விட்டு செல்லவோ அல்லது பாதுகாப்பற்ற நபர்களுடன் விட்டு செல்லவோ வேண்டாம் என்றும், வெளியே செல்லும் போது அவர்களது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறும் சுன்னாகம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/173981
-
மாலத்தீவு அதிபர் இந்தியாவை விமர்சித்தாரா? சீன பயணம் முடிந்து தாயகம் திரும்பியதும் என்ன பேசினார்?
இந்திய ராணுவம் வெளியேற மாலத்தீவு கெடு - சீனா சென்று திரும்பியதும் முய்சு ஆக்ரோஷம் ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES 32 நிமிடங்களுக்கு முன்னர் மாலத்தீவு அதிபர் முகமது முய்சுவின் அரசு இந்திய ராணுவ வீரர்களை மார்ச் 15ஆம் தேதிக்குள் மாலத்தீவை விட்டு வெளியேறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியப் படைகளை வாபஸ் பெறும் நடவடிக்கையை தொடங்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டிருப்பதாக மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய ராணுவத்தை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மாலத்தீவு தலைநகர் மாலேயில் உயர்மட்ட மையக் குழுக் கூட்டம் நடைபெற்றதாகக் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையே பரஸ்பர உறவுகள் மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மாலத்தீவு மக்களுக்கு மனிதாபிமான மற்றும் மருத்துவ வசதிகளை வழங்கும் இந்தியாவின் விமானப் போக்குவரத்து தளத்தை தொடர்ந்து இயங்க வைப்பதற்கான தீர்வை காண்பது குறித்து இரு நாடுகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையே மற்றொரு சந்திப்பும் நடைபெறவுள்ளது. இந்தியப் படைகளை வாபஸ் பெறுவது தொடர்பாக இரு நாடுகளிலும் நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கைகளில் ஒற்றுமை இல்லை. ஒருபுறம், படைகளை வாபஸ் பெற இந்தியா தயாராக இருப்பதாக மாலத்தீவும், மறுபுறம் அப்படி எதுவும் கூறவில்லை என்று இந்தியாவும் கூறி வருகின்றன. இரு நாடுகளுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவும் நிலையில் மாலத்தீவில் உள்ள முய்சு அரசு இந்தியாவுக்கு இந்த காலக்கெடுவை வழங்கியுள்ளது. மாலத்தீவு குறித்து ஜெய்சங்கர் என்ன சொன்னார்? பட மூலாதாரம்,GETTY IMAGES ஞாயிற்றுக்கிழமை, மாலத்தீவு அதிபரின் பொதுக் கொள்கைக்கான பிரதம செயலாளர் அப்துல்லா நஜிம் இப்ராஹிம் செய்தியாளர் சந்திப்பின் போது இந்தத் தகவலைத் தெரிவித்தார். பிடிஐ செய்தி முகமை வெளியிட்டுள்ள செய்தியின்படி, சமீபத்திய அரசாங்க புள்ளிவிவரங்களின்படி, மாலத்தீவில் தற்போது 88 இந்திய வீரர்கள் உள்ளனர். முகமது முய்சு கடந்த தேர்தலில் 'இந்தியாவை வெளியேற்றுவோம்' என்ற முழக்கத்தைக் கொடுத்தார். அதிபரான பிறகு, அவரது ஆரம்ப முன்னுரிமைகளில் ஒன்று இந்திய துருப்புகளை திரும்பப் பெறச் செய்வதாகும். இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த வாரம் சனிக்கிழமை நாக்பூரில் உள்ள மந்தன் டவுன்ஹாலில் உரையாற்றினார். அதன்போது, மாலத்தீவுடனான உறவு மோசமடைந்து வருவது குறித்து அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “ஒவ்வொரு நாடும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொருவரும் எங்களை ஆதரிப்பார்கள் அல்லது எங்களுடன் உடன்படுவார்கள் என்று என்னால் உத்தரவாதம் அளிக்க முடியாது. கடந்த 10 ஆண்டுகளில் சிறப்பாக செயல்பட முயற்சி செய்து வெற்றி பெற்றுள்ளோம். பல சந்தர்ப்பங்களில் நாங்கள் வலுவான தொடர்புகளை ஏற்படுத்தியுள்ளோம். இந்தியா - மாலத்தீவு அரசியல் உறவில் கொந்தளிப்பு நிலவுகிறது ஆனால், மாலத்தீவில் உள்ள சாமானியர்களுக்கு இந்தியாவைப் பற்றி நல்ல அபிப்பிராயம் உள்ளது, இந்தியாவுடனான நல்லுறவின் முக்கியத்துவம் அவர்களுக்குத் தெரியும்.” என ஜெய்சங்கர் பதில் அளித்தார். பட மூலாதாரம்,ANI "மாலத்தீவில் இந்திய வீரர்கள் தங்க முடியாது" மார்ச் 15 ஆம் தேதிக்குள் துருப்புகளை வாபஸ் பெறுமாறு முகமது முய்சு இந்தியாவுக்கு காலக்கெடு விதித்துள்ளதாக மாலத்தீவைச் சேர்ந்த ஒன் ஆன்லைன் எனும் செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. மாலத்தீவு அரசாங்கத்தின் பொதுக் கொள்கை முதன்மைச் செயலாளர் அப்துல்லா நசீம் இப்ராஹிம், இந்திய வீரர்கள் மாலத்தீவில் தங்க முடியாது என்றும், நாட்டு மக்களும் அதையே விரும்புகிறார்கள் என்றும் கூறினார். முகமது முய்சு மற்றும் பிரதமர் மோதி ஆகியோர் சந்தித்த போதும் இந்த பிரச்சினை எழுப்பப்பட்டதாக அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது. மாலத்தீவில் இருந்து தனது இராணுவ வீரர்களை உடனடியாக அகற்ற இந்தியா ஒப்புக்கொண்டதாகவும் இந்த விவகாரம் குறித்து ஆலோசிக்க இந்தியாவில் இருந்து சிறப்புக் குழு வந்துள்ளதாகவும் மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் கூறுவதாக ஒன் ஆன்லைன் வெளியிட்டுள்ள செய்தியில் கூறப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,PRESIDENCY.GOV.MV சீனப் பயணத்துக்கு பிறகு முய்சுவிடம் உள்ள மாற்றங்கள் மாலத்தீவு அதிபரான முகமது முய்சு, சீனாவுக்கு தனது முதல் அதிகாரப்பூர்வ பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய பிறகு, இந்தியா மீது ஆக்ரோஷமான அணுகுமுறையைக் கடைப்பிடித்துள்ளார். இந்தியா என்ற பெயரை குறிப்பிடாமல் மறைமுகமாக இந்தியாவை தாக்குகிறார் முகமது முய்சு. இந்தியா மற்றும் பிரதமர் மோதி குறித்து மாலத்தீவு அமைச்சர்கள் கூறிய ஆட்சேபகரமான கருத்துகளுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் ஏற்பட்டுள்ள பிரச்னையை நீக்க சில சாதகமான முயற்சிகள் எடுக்கப்படலாம் என்று நம்பப்பட்டது. மாலத்தீவின் எதிர்க்கட்சிகளும் அமைச்சர்களை இடைநீக்கம் செய்வது போதாது என்றும், இந்த விவகாரத்தில் மாலத்தீவு அரசு அதிகாரப்பூர்வமாக இந்தியாவுக்கு வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்றும் கோரி வந்தது. ஆனால், சனிக்கிழமையன்று, சீனாவுக்கு ஐந்து நாள் பயணமாக சென்று திரும்பிய முய்சு, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது, "நாம் ஒரு சிறிய நாடாக இருக்கலாம், ஆனால் அது எங்களை அச்சுறுத்தும் உரிமத்தை யாருக்கும் வழங்காது" என்று கூறினார். இந்தியப் பெருங்கடல் குறித்து அவர் கூறுகையில், “இந்தக் கடல் குறிப்பிட்ட நாட்டிற்கு சொந்தமானது அல்ல. இது அதைச் சுற்றியுள்ள அனைத்து நாடுகளுக்கும் சொந்தமானது.” எனத் தெரிவித்தார். முய்சு மேலும் கூறுகையில், “நாங்கள் யாரோ ஒருவரின் கொல்லைப்புறத்தில் இருக்கும் நாடு அல்ல, நாங்கள் ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடு.” எனத் தெரிவித்தார். இவை அனைத்தின் போதும், மாலத்தீவு அதிபர் எந்த நாட்டின் பெயரையும் குறிப்பிடவில்லை. ஆனால், இந்தியாவிற்கும் மாலத்தீவிற்கும் இடையிலான சமீபத்திய பதற்றத்தின் மத்தியில், அவர் பேசுவது இந்தியாவுடன் தொடர்புடையது என்று நம்பப்படுகிறது. இந்த அறிக்கைகளைத் தவிர, முய்சு சீனாவிலிருந்து மாலத்தீவுக்குத் திரும்பியவுடன், அங்குள்ள அரசாங்கம் இந்தியாவுடன் நேரடியாக தொடர்புடைய சில முடிவுகளை எடுத்தது. மாலத்தீவு நோயாளிகள், உயர் சுகாதார வசதிகள் மற்றும் சிகிச்சைக்காக இந்தியாவிற்கும் வேறு சில நாடுகளுக்கும் அனுப்பப்பட்டதைப் போல, அவர்கள் இனி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் மலேசியாவிற்கு அனுப்பப்படுவார்கள் என்று முய்சு தனது சீன பயணத்திற்கு பின் அறிவித்தார். இது தவிர, இந்தியா - மாலத்தீவு பதற்றத்தில் இருக்கக் கூடிய சமீபத்திய செய்திதான், தனது படைகளை மார்ச் 15-ஆம் தேதிக்குள் திரும்பப் பெறுமாறு இந்தியாவை மாலத்தீவு ஞாயிற்றுக்கிழமை கேட்டுக்கொண்டிருப்பது. பட மூலாதாரம்,GETTY IMAGES சீனா சென்று திரும்பியதும் முய்சு ஆக்ரோஷம் ஏன்? முகமது முய்சுவின் இந்திய விரோத நிலைப்பாடு புதிய விஷயம் அல்ல. கடந்த ஆண்டு அவர் தேர்தலில் போட்டியிட்ட போது, அவரது தேர்தல் பிரசாரம் இந்திய எதிர்ப்பு என்ற புள்ளியில் கவனம் செலுத்தியது. 'இந்தியாவை வெளியேற்றுவோம்' என்ற கோஷத்தை எழுப்பிய அவர், தான் ஆட்சிக்கு வந்தவுடன், மாலத்தீவில் இருக்கும் இந்திய ராணுவ வீரர்கள் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்று உறுதியளித்தார். ஆனால், சீனப் பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பியவுடனேயே முய்சு இந்தியா மீது காட்டியுள்ள ஆக்ரோஷத்துக்குக் காரணம் என்ன? டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியரும், சர்வதேச விவகாரங்களில் நிபுணருமான எஸ்.டி.முனி இது குறித்து கூறுகையில்,“முகமது முய்சு இந்தியாவின் பெயரை குறிப்பிடாமல் இருக்கலாம். ஆனால், அவரது பேச்சு இந்தியாவை நோக்கிதான் இருந்தது. அதே சமயம், முய்சுவின் இந்த கருத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படக் கூடாது” என தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், "கோட்பாட்டு ரீதியாக, எந்த நாடும் எந்த நேரத்திலும் தன்னை இறையாண்மை கொண்ட நாடு என்று சொல்லலாம். இது சாதாரணமாக பார்க்கப்பட வேண்டும். ஏனென்றால் பெரிய நாடுகள் நம்மைத் தாக்கும் என்று சிறிய நாடுகள் எப்போதும் பயப்படுகின்றன." எனத் தெரிவித்தார். மேலும், “முய்சு சீனாவில் இருந்து திரும்பி வந்துவிட்டார். நாங்கள் உங்களுக்கு உதவுவோம் என்றும் நீங்கள் உங்கள் சுதந்திரமான கொள்கையை பின்பற்றுங்கள் என்றும் மாலத்தீவுக்கு சீனா உறுதியளித்திருக்கும். அப்படிப்பட்ட சூழ்நிலையில், சீனாவின் ஆதரவு உள்ளது என முய்சுவின் மனதில் நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். இதை நான் வெளிப்படையாக சொல்ல முடியும்.” என அவர் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/cqe13z3veg1o
-
யாழ். இளவாலையில் கைக்குண்டுடன் சந்தேகநபர் கைது !
15 JAN, 2024 | 10:43 AM யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில், கைக்குண்டுடன் சந்தேகநபர் ஒருவர் இளவாலை பொலிஸாரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை (14) கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், இளவாலை பகுதியில் உள்ள வீடு ஒன்றினை உடைத்து திருட்டில் ஈடுபட்ட குற்றச்சாட்டுடன் தொடர்புடையவர் என சந்தேகித்து, குறித்த சந்தேகநபரை கைது செய்வதற்காக இளவாலை பொலிஸார் நேற்று அவரது வீட்டிற்கு சென்றனர். இதன்போது அவரது வீட்டில் இருந்து கைக்குண்டு கைப்பற்றப்பட்ட நிலையில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/173977
-
சோழர் காலத்தில் இறந்த அரசருடன் உயிரோடு புதைக்கப்பட்ட பெண்கள் - எதற்காக தெரியுமா?
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க பதவி, பிபிசி தமிழுக்காக 14 ஜனவரி 2024 கணவர் இறந்தவுடன் உடன்கட்டை ஏறும் வழக்கம் தமிழ்நாடு மட்டுமல்லாது இந்தியாவில் பல்வேறு இடங்களிலும் இருந்தது. இதுபோல் ஒரு வினோத பழக்கம் தமிழ்நாட்டில் சோழர்கள் காலத்தில் இருந்துள்ளது. சோழர் காலத்தில் அரசர்கள் இறந்த பிறகு தமக்குப் பிடித்தமான நபர்களையும் தங்களது உடலுடன் சேர்த்து புதைக்கச் செய்துள்ளனர். இறந்த பின்பும் தன்னுடன் அவர்கள் வாழ்வார்கள் என்ற நம்பிக்கையில் அதைச் செய்து சோழர்கள் ஆட்சியில் கல்வெட்டிலும் பதிவு செய்து வைத்துள்ளனர். அப்படி சோழர்கள் ஆட்சியில் நடைபெற்ற ஒரு வினோத சம்பவம் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகக் காண்போம். குலோத்துங்க சோழன் அரசாட்சியில் திருவண்ணாமலை அருகே சிற்றரசன் பிரிதிகங்கன் ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற இந்த வினோதமான சம்பவம் பற்றித் தெரிந்துகொள்ள தாமரைப்பாக்கம் கிராமத்திற்குச் சென்றோம். இறந்த அரசருடன் உயிரோடு புதைக்கப்பட்ட 3 பெண்கள் கோவிலின் உள்ளே நுழைவதற்கு முன்பாகவே கல்வெட்டு பதிவு குறித்து பிபிசி தமிழுடன் வந்திருந்த திருவண்ணாமலை வட்டாட்சியரும், மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தின் செயலருமான பாலமுருகன் விவரித்தார். பாடகர்களான மூன்று பெண்கள் பிருதிகங்க மன்னன் இறந்தபோது அவரோடு சேர்த்து உயிருடன் புதைக்கப்பட்ட செய்தியைக் கூறும் மூன்று கல்வெட்டுகள் தாமரைப்பாக்கத்தில் அமைந்துள்ள அக்னீசுவரர் கோவிலில் உள்ளதாக அவர் கூறினார். அதில், "முதல் கல்வெட்டு தாமரைப்பாக்கம் அக்னீசுவரர் கோவில் முன்மண்டப கிழக்குச் சுவர் மற்றும் அரைத்தூணில் உள்ள 14 வரிக் கல்வெட்டாக உள்ளது. 'ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவந சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 10வது சோமனான பிருதி கங்கனேன் எங்களய்யர் கூத்தாடுந் தேவரான பிருதிகங்கர் உடன் பள்ளிகொண்ட பாடும் பெண்...' எனத் தொடங்கும் கல்வெட்டைப் படித்துக் காண்பித்து விளக்கம் கூறினார் பாலமுருகன். இழப்பீடாக வழங்கப்பட்ட நிலம் மூன்றாம் குலோத்துங்கனின் 10ஆம் ஆட்சி ஆண்டான கி.பி. 1188இல் அரசர் பிருதிகங்க சோமநாதன் இந்தக் கல்வெட்டை வெட்டியதாகக் கூறுகிறோர் பாலமுருகன். அதில், "தமது இறந்த தந்தை அரசன் கூத்தாடும் தேவ பிருதிகங்கனுடன் புதைகுழியில் உயிருடன் புதைக்கப்பட்ட பாடும் பெண்டிர் மூவர் குடும்பத்தாருக்கு இழப்பீடாக நிலம் வழங்கியதாக" கூறப்பட்டுள்ளது. அவர்களுடைய இழவு வருத்தத்தை தீர்க்கவும் பிள்ளைகள் இல்லாமல் போனதற்கு இழப்பீடாகவும் 16 சாண் கோலால் அளந்துவிட்ட ஒரு வேலி நிலம் அந்தப் பெண்களின் குடும்பத்தாருக்கு வழங்கப்பட்டதாக விவரித்தார் பாலமுருகன். அந்த நிலம் அவர்களது வம்சம் உள்ளவரையில் அவர்களுக்கு உரிமையாக இருக்கும் என அந்தக் கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, தன் வம்சத்தார் பிற்காலத்தில் யாரேனும் கொடையாகக் கொடுத்த நிலத்தில் வில்லங்கம் செய்தால், அவர்கள் 'மதுராந்தக வேளான் குண்டி கழுவிய மல தண்ணீரைக் குடித்து எச்சில் கலத்தில் சோறு உண்டவராவார்' என வசைமொழிந்திருப்பதையும் கல்வெட்டு ஆதாரம் காட்டுகிறது. அதுமட்டுமின்றி, கங்கைக்கும் குமரிக்கும் இடையே வாழும் மக்கள் செய்த பாவங்களையும் வில்லங்கம் செய்பவர் கொள்வார் என்று அரசர் பிருதிகங்க சோமநாதன் கல்வெட்டில் சபித்துள்ளதாக பாலமுருகன் விளக்கினார். இதுகுறித்த கல்வெட்டு ஆதாரங்கள் 'தாமரைப்பாக்கம் கல்வெட்டு' என்ற பெயரில் தமிழ்நாடு அரசின் தொல்பொருள் ஆய்வுத்துறை சார்பில் புத்தகமாக வெளியிடப்பட்டுள்ளது. புதைக்கப்பட்ட மூன்று பெண்கள் யார்? கோவிலின் முன் மண்டப கிழக்குச் சுவரில் இருந்த 4 வரிக் கல்வெட்டைக் காட்டினார் வட்டாட்சியர் பாலமுருகன். அதில் இருந்த, "ஸ்வஸ்தி... பிருதிகங்க எங்களய்யர் கூத்தாடுந் தேவரான பிருதிகங்கருடன் பள்ளிகொண்ட ஆடும் ஆழ்வார்க்கும், சதுர நடைப்பெருமாள்க்கும், நிறைதவந் சேதாளுக்கும்" என்ற வரிகளைப் படித்துக் காட்டி விளக்கினார். அதன்படி, மூன்றாம் குலோத்துங்கனின் 10ஆம் ஆட்சி ஆண்டான கி.பி. 1188இல் சிற்றரசர் சோமநாத பிருதிகங்கன் "தமது இறந்த தந்தை அரசன் கூத்தாடும் தேவ பிருதிகங்கனோடு சவக்குழியில் உயிருடன் புதைக்கப்பட்டவர்கள் ஆடும் ஆழ்வார், சதுரநடைப் பெருமாள், நிறைத்தவஞ்சேதாள் ஆகிய மூன்று தேவரடியார் குலப் பெண்கள்" என்று விளக்கினார். மேலும், அந்தப் பெண்களுக்கு பிள்ளையின்றிப் போனதற்கு, அதாவது அவர்களுடைய வம்சம் அழிந்து போனதற்கு "இழப்பீடாக வழங்கப்பட்ட நிலம் பதினாறு சாண் அளவுகோலால் அளந்து தரப்பட்டது," என்றும் கூறுவதாகத் தெரிவித்தார். இந்தக் கல்வெட்டில் உயிருடன் புதைக்கப்பட்ட பெண்களின் பெயர்கள் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல் கோவில் முன் மண்டப தென்புறச் சுவரில் 5 வரிக் கல்வெட்டு ஒன்றும் உள்ளது. "ஸ்வஸ்தி ஸ்ரீ திரிபுவன சக்கரவத்திகள் ஸ்ரீ குலோத்துங்க சோழ தேவற்கு யாண்டு 10வது ஆடும் ஆழ்வாரும்..." எனத் தொடங்கும் அந்த மூன்றாவது கல்வெட்டைப் படித்து விளக்கினார் பாலமுருகன். "சோழன் மூன்றாம் குலோத்துங்கனின் 10ஆவது ஆட்சி ஆண்டில் கி.பி 1188இல் ஆடும் ஆழ்வார், சதுரநடைப் பெருமாள், நிறைதவஞ்சேதாள் ஆகிய மூன்று பாடும் தேவரடியார் குலப் பெண்களின் வீட்டில் பிள்ளை இல்லாமல் போனதற்காக திருவங்கீசுவரமுடைய நாயனார் கோவில் தேவரடியார் ஐவருக்கு இத்துயர உடன்பாட்டிற்காக பதினாறு சாண் கோலால் அளந்து ஆயிரம் மேற்பட்ட குழி நிலத்தை பிருதிகங்க அரசன் சோமநாத தேவன் கொடுத்தான். இதை இல்லாமல் செய்பவன் கங்கைக்கும் குமரிக்கும் இடையே வாழும் மக்கள் செய்யும் பாவத்தைக் கொள்வான் என்று இழப்பீடு நிலம் யாருக்குக் கொடுக்கப்பட்டது என்பது தெளிவாக இந்தக் கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது." ஆனால், இங்கு அந்த மூன்று பெண்களின் பட்டப் பெயர்கள் மட்டுமே குறிக்கப்பட்டுள்ளன, அதேவேளையில் இங்கு இழப்பீடு நிலம் வாங்கிய ஐந்து தேவரடியார்களின் பெயர் குறிப்பிடப்படவில்லை என்று கூறிய வட்டாட்சியர் பாலமுருகன் தாமரைப்பாக்கம் கோவில் கல்வெட்டுகள் மிக வித்தியாசமான வினோத சம்பவங்களைப் பதிவு செய்துள்ளதாகக் கூறினார். இந்தக் கல்வெட்டு ஆதாரங்களின் மூலம் அக்காலத்தில் பெண்களின் நிலைமை மற்றும் அவர்களின் சமூக நிலையை நாம் அறியலாம் என்கிறார் பாலமுருகன். அதோடு, எல்லாக் காலத்திலும் பெண்கள் துன்பத்திற்கு ஆளானார்கள் என்பதற்குச் சான்றாகவும் இது விளங்குவதாகக் கூறினார். ஆந்திரா, கர்நாடகாவிலும் இருந்த 'உடன் புதைக்கும்' பழக்கம் இத்தகைய வினோத பழக்க, வழக்கங்கள் வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருப்பது குறித்துப் பேசிய விழுப்புரம் அறிஞர் அண்ணா கலை அறிவியல் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ், "வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பான கல்வெட்டுகள் ஒரு சில இடங்களிலேயே காணக் கிடைக்கின்றன. தமிழ்நாட்டில் மட்டுமல்லாது ஆந்திரா, கர்நாடகா போன்ற பகுதிகளிலும் இதுபோன்ற கல்வெட்டுகள் இருப்பதாக" கூறினார். மைசூர் மாவட்டம், தொட்ட ஹூண்டி கிராம குளத்தில் உள்ள 24 வரி கல்வெட்டு, இறந்த கணவனுடன் மனைவி பள்ளிகொண்டதைத் தெரிவிக்கிறது. அதேபோல் பெல்லாரி மாவட்டம் கலுகோடு கிராமத்திற்குத் தெற்கே உள்ள பலகையில் வெட்டிய 25 வரி கன்னட கல்வெட்டு இறந்த மன்னருடன் படைவீரன் ஒருவரும் சேர்த்துப் புதைக்கப்பட்டதாகக் கூறினார் பேராசிரியர் ரமேஷ். மேலும் வெளிநாடுகளிலும் இதுபோன்ற கல்வெட்டுப் பதிவுகள் காண கிடைக்கின்றன. அக்கால மக்களின் அதீத நம்பிக்கை அல்லது அரசர்களின் வானளாவிய அதிகாரத்தின் ஒரு வெளிப்பாடு என்றுகூட இதைச் சொல்லலாம் என்கிறார் பேராசிரியர் ரமேஷ். மேலும், "அக்காலத்தில் மன்னர்கள் இறைவனுக்கு நிகராக மதிக்கப்பட்டனர். அவர்களுடைய வார்த்தை இறை வார்த்தைக்கு இணையாக மதிக்கப்பட்டதும் ஒரு காரணம். ஆகையால், இதை அறியாமையின் செயல் அல்லது அதிகாரத்தின் வெளிப்பாடு எனக் கருதலாம்," என்றார் பேராசிரியர் ரமேஷ். அதிகார பண்பாட்டின் நீட்சி இதுபோன்ற வினோத சம்பவங்கள் குறித்தும் இதுபோன்ற வினோத பழக்கங்களை அக்கால மக்கள் பின்பற்றியது குறித்துப் பேசிய மருத்துவர் உதயகுமார், "உடன்கட்டை ஏறுதல், பள்ளிக்கொள்ளல், தன்னைப் பலியாக்கிக் கொள்ளுதல் போன்ற நிகழ்வுகள் அனைத்தையும் மனப் பிறழ்வு எனக் கூற முடியும் என்னும் அவர், இதற்கு "அதிகாரத்தின் உச்ச வெளிப்பாடு என்பது சரியான சொல்" என்று கூறினார். இது மூட நம்பிக்கையின் உச்சம் என்று கூறும் உதயகுமார், "விலைமதிக்க முடியாத தனது உயிரையே துறத்தல் என்பது வேதனைக்குரியது," என்றார். அக்காலத்தில் இறந்த பின்பும் வேறொரு உலகம் உள்ளதாகச் சொல்லும்போது தனக்குப் பிடித்தமானவர்களுடன் சென்று வாழ முடியும் என்ற நம்பிக்கை இருந்ததுகூட இதற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்கிறார் அவர். "இறந்த உடலுடன் அவர்களுக்கு விருப்பமான பொருட்களைப் புதைத்து வந்ததைப் போல் அவர்களுக்கு விருப்பமான மனிதர்களையும் சேர்த்துப் புதைக்கும் பழக்கம் ஒரு காலத்தில் இருந்தது. இதை உயிர்த் தியாகம் என்று சொல்லப்பட்டாலும் மூடநம்பிக்கை என்று சொல்வதுதான் சரி," என்கிறார் மனநல மருத்துவர் உதய்குமார். https://www.bbc.com/tamil/articles/cg3xe3lw314o