Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    20287
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by ஏராளன்

  1. குழந்தை வளர்ப்பு: குழந்தைகளிடம் பெற்றோர் செய்யக்கூடாதவை என்னென்ன? நதாஷா பத்வார் பிபிசி இந்திக்காக 25 ஜூலை 2022 சிறுவயதில் கொஞ்ச நேரத்திற்கு எங்கோ தொலைந்து போன கதைகள் என் வயதில் இருக்கும் பெரும்பாலானோரிடம் இருக்கும். பெற்றோருடன் ஒரு பொது இடத்திற்கு சென்று, பெற்றோர் இருவரும் உங்கள் கையைப் பிடித்திருக்கவில்லை என்பதை திடீரென்று உணர்ந்து, அவர்களிடமிருந்து பிரிந்து, கூட்டத்தில் தொலைந்து போன அந்த நினைவுகள் அனைவரிடமும் உள்ளன. அப்போதைய உலகம் மிகவும் பரிச்சயமானதாகவும் ஒப்பீட்டளவில் சிறியதாகவும் இருந்தது. அந்த காலகட்டத்தில் மொபைல் போன் இல்லையென்றாலும்கூட பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பைப் பற்றி அவ்வளவாக கவலைப்பட்டதில்லை. பஞ்சாபின் சிறிய நகரமான ஃபரித்கோட்டின் தெருக்களில் நான் என் சித்தி மகளுடன் தொலைந்து போன ஒரு சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. அப்போது எனக்கு ஐந்து வயது. குடும்பத்தில் ஒரு திருமணம் இருந்தது. எல்லா பெரியவர்களும் ஏதோ சடங்குக்காக மணமகள் வீட்டிற்குச் சென்றிருந்தனர். மாப்பிள்ளை வீட்டார் தங்கியிருந்த இடத்தில் சிறு குழந்தைகளாகிய நாங்கள் சிலரே இருந்தோம். என் பாட்டி மற்றும் சித்தி கொடுத்திருந்த சிறிதளவு பணம் என்னிடம் இருந்தது. அருகில் இருக்கும் கடைக்குச்சென்று சாக்லேட் வாங்கலாம் என்றும் என்னுடன் வருமாறும் என்னைவிட சிறியவளான என் சித்தி மகளிடம் சொன்னேன். திரும்பும் வழி எனக்குத் தெரியும் என்பதில் நான் உறுதியாக இருந்தேன். நாங்கள் டாஃபி வாங்கினோம். பிறகு ஃபரித்கோட்டின் சிறிய பாதைகளில் தொலைந்து போனோம். திரும்பிவரும் வழி தெரியவில்லை. இதில் சில தெருக்கள், சில அடி தூரம் சென்றவுடனேயே முடிந்துவிடும். ஆனால் நான் தைரியமாக என் தங்கையின் கையைப் பிடித்துக் கொண்டே சென்றேன். நீண்ட நேரமாக நாங்கள் நடந்தோம். தனது வீட்டின் முன் ஸ்கூட்டரை சர்வீஸ் செய்து கொண்டிருந்த ஒரு நபர் எங்களைப் பார்த்தார். நாங்கள் இருவரும் திருமணம் நடக்கும் வீட்டிற்கு வந்துள்ளோம் என்று கூறினோம். வேறு சிலரின் உதவியுடன் அவர் கடைசியாக எங்களை வீட்டிற்கு அழைத்து வந்தார். தங்கையை சித்தி அடித்தார் நாங்கள் அங்கு சென்றபோது, தெருவில் பெரியவர்கள் மிகவும் கவலையுடன் இருப்பதைக் கண்டோம். நான் இப்போது மீண்டும் பாதுகாப்பாக இருக்கிறேன் என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. அந்த நேரத்தில் நான் எவ்வளவு ஆழ்ந்த நிம்மதி அடைந்தேன் என்பது எனக்கு இன்னும் நினைவிருக்கிறது. ஆனால் என்னுடன் சென்ற என் தங்கையின் தாயான என் சித்தி நேராக எங்களிடம் வந்து, தனது செருப்பைக் கழற்றி, தனது நான்கு வயது மகளை பலமுறை அடித்தார். பெற்றோருக்கும் அவரது குழந்தைக்கும் இடையே நடந்த அந்த காட்சியை என்னால் மறக்கவே முடியாது. பெரியவர்கள் எங்களைப் பார்த்து மகிழ்ச்சி அடைவார்கள், கட்டிப்பிடிப்பார்கள் என்று நாங்கள் நம்பினோம். ஆனால் வீட்டை விட்டுச்சென்றதற்காக என் தங்கை நிறைய அடிகள் வாங்கியதோடு கூடவே வசவுகளையும் கேட்டவேண்டியிருந்தது. ஒரு பெற்றோர் மற்றும் பெரியவர் என்ற முறையில், என் சித்தி நடந்து கொண்ட விதம் மோசமானது என்றாலும் அது ஏன் என எனக்கு இப்போது புரிகிறது. மற்றவர்கள் என்ன சொல்வார்கள் என்று அவர் பயந்தார். தன் குழந்தையைக் கூட தன்னால் சரியாக கவனிக்க முடியவில்லையே என்ற அவமானம் அவரை வாட்டியது. தன் மகளுக்கு பாடம் கற்பிக்க விரும்பினார். எதிர்காலத்தில் வீட்டை விட்டு வெளியே செல்லும் எண்ணமே ஏற்படக்கூடாது என்பதற்காக, தன் மகளின் மனதில் பயத்தை உருவாக்கி, தாயின் கோபத்தை அவள் என்றுமே நினைவில் கொள்ளும்படி செய்ய விரும்பினார். தன் கணவர் மற்றும் குடும்பத்தில் உள்ள மற்ற பெரியவர்களின் கோபத்திற்கு சித்தி மிகவும் பயந்தாள். ஏற்கனவே பயத்தில் அழுதுகொண்டிருந்த, தன் தவறை சரியாகப் புரிந்துகொள்ளக்கூட முடியாத அளவுக்கு சிறியவளாக இருந்த தன் பெண் மீது தன் மன அழுத்தத்தையெல்லாம் வெளிப்படுத்தினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உங்கள் குழந்தைகள் இப்போது உங்களைச் சுற்றி இருந்தால் அவர்களைக் கட்டியணையுங்கள். அவர்கள் தூரத்தில் இருந்தால் போன் செய்யுங்கள் அல்லது மெஸேஜ் அனுப்புங்கள். (சித்திரிப்புப் படம்) எந்த நெருக்கடியான தருணத்திலும் என் குழந்தையை எப்படி நடத்தக்கூடாது என்பதற்கு அந்தக் காட்சி எனக்கு ஒரு அளவுகோலாக அமைந்தது. எந்தத் தவறும் செய்யாத சிறுமியை அடித்த அதிர்ச்சியை என்னால் மறக்கவே முடியவில்லை. குழந்தைக்கு அரவணைப்பு தேவைப்பட்டது, அடிகள் அல்ல. நம் குழந்தைகளுடன் நாமும் வளர்வோம் - மூன்று பெண் குழந்தைகளை வளர்க்கும் ஒரு தாயின் அனுபவப் பகிர்வு 40 ஆண்டுகள் கழித்து அமெரிக்காவில் சந்தித்த கோவை அக்கா, தம்பி - ஒரு நெகிழ்ச்சி கதை மீச வச்ச பொம்பள: அழகை நினைத்து அவதிப்படுகிறாரா? முறுக்கிவிட்டு பெருமைப்புடகிறாரா? குழந்தைகள் மீது பயம் மற்றும் பதற்றத்தை திணிக்காதீர்கள் பெற்றோர்களாகிய நாம், நம் குழந்தைகளின் பாதுகாப்பு விஷயத்தில் பெரும்பாலும் உதவியற்றவர்களாகவே இருக்கிறோம். பெரும்பாலும் பயம் மற்றும் பீதி நிலை உள்ளது. ஆனால் நம் பயம் மற்றும் கோபத்தின் சுமையை நம் குழந்தையின் மீது சுமத்தக்கூடாது. அவர்கள் ஏற்கனவே நிறைய பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளனர். நாம் மற்ற பெரியவர்களின் உதவியை நாட வேண்டும். குழந்தை நாம் இல்லாமல் எவ்வளவு பாதுகாப்பாக உணர்கிறதோ, நம்முடன் இருக்கும்போது அதைவிட அதிக பாதுகாப்பாக உணரும்படி நாம் செய்ய வேண்டும். வளரும்போது நம்மில் பெரும்பாலோர் நம் பெற்றோரின் கோபத்தை நம் மீது எடுத்துக்கொள்கிறோம். பல சமயங்களில் வெளியுலகில் ஏற்படும் துன்பங்களை விட பெற்றோருடன் சேர்ந்து துன்பப்படுவது அதிக சிரமமாக இருப்பதாகத்தோன்றும். என்னுடைய சில நண்பர்களுக்கு எதேனும் பிரச்னை இருந்தால், கல்வி நிறுவனங்களுடன் ஏதாவது சிக்கல் இருந்தால், தேர்வு சரியாக எழுதவில்லை என்றால், அல்லது வேறு ஏதேனும் மருத்துவ உதவி தேவையென்றால் அவர்கள் தங்கள் வீட்டில் உதவி தேடாமல், பெற்றோருக்கு உண்மை தெரிந்தால் என்ன நடக்கும் என்று நினைத்து பயப்படுகின்றனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நம் பயம் மற்றும் கோபத்தின் சுமையை நம் குழந்தையின் மீது சுமத்தக்கூடாது. அவர்கள் ஏற்கனவே நிறைய பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், பெற்றோருக்குத் தெரிவிக்காமல் எல்லா ஆபத்துகளையும் தானே தாங்கிக் கொள்வது நல்லது என்று நினைக்கிறார்கள். தனது பெற்றோரை மன அழுத்தத்திலிருந்து விலக்கி வைப்பதற்காக, இத்தகைய முடிவுகளை எடுக்கிறார்கள். இதனால் கடுமையான உடல்நலக்குறைவு ஏற்படுகிறது. இது பெற்றோரின் மிகப்பெரிய தோல்விகளில் ஒன்று இல்லையென்றால் வேறு என்ன? நமக்கு மிகவும் பாதுகாப்பான இடமாக நம் வீடும் குடும்பமும் இருக்கவேண்டும். ஆனால் இது எப்போதும் நடப்பதில்லை. இது போன்ற சூழ்நிலைகளை நாம் தான் உருவாக்குகிறோம். அதை நாம் உணர்வதில்லை. இது மிகவும் மோசமான விஷயம். நம் குழந்தைகள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறோம். ஏனென்றால் இது நமது எதிர்மறையை வெளிப்படுத்த பாதுகாப்பான இடமாகத் தெரிகிறது. என் சித்தி தான் பயப்படாமல் இருந்திருந்தால், சிறுமியை அடித்திருக்க மாட்டார். தன் சொந்த வாழ்க்கையில் தன்னைத் துன்புறுத்தும் பெரிய மனிதர்களை எதிர்த்து நிற்க அவருக்குத் துணிவில்லை. ஆனால் தனது குழந்தையின் மீது ஆத்திரத்தை, கோபத்தை காட்டமுடியும். அதனால்தான் தாய்மார்கள் தங்கள் குழந்தைகள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறார்கள். தந்தையும் அவ்வாறே செய்கிறார். அந்த நேரத்தில் குழந்தைகளால் பதில் சொல்ல முடியாது. குழந்தைகள் பெரியவர்கள் முன் உதவியற்றவர்களாக உணர்கிறார்கள். மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், குடும்பத்தில் பெரியவர் ஒருவரின் வசவுகள், மற்றும் ஏளனம், குழந்தைக்குள் ஒரு விமர்சனக் குரலாக மாறி, அவரது வாழ்நாள் முழுவதும் அவரைத் துன்புறுத்துகிறது. உதாரணமாக, 'நான் கெட்டவன்', 'நான் எப்போதும் தவறு செய்கிறேன்', 'நான் இருப்பதே ஒரு பிரச்னை' என்ற எண்ணங்கள் ஏற்படும். கலாசார ரீதியாக குழந்தைகள் மீதான பெற்றோரின் அன்பைப் பற்றி நாம் நிறைய எழுதியுள்ளோம், பேசியுள்ளோம். ஆனால் பிள்ளைகள் பெற்றோர் மீது வைத்திருக்கும் அன்பு பற்றி அவ்வளவாக புரிதல் இல்லை. அதற்கு பெரிய அங்கீகாரமும் இல்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைப் பாதுகாப்பது போல், குழந்தைகளும் தங்கள் பெற்றோரைப் பாதுகாக்க விரும்புகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நம் குழந்தைகள் மீது கோபத்தை வெளிப்படுத்துகிறோம். ஏனென்றால் இது நமது எதிர்மறையை வெளிப்படுத்த பாதுகாப்பான இடமாகத் தெரிகிறது. குழந்தைகள் அருகில் இருக்கும்போது இதைச் செய்யுங்கள் குழந்தைகளின் அன்பின் மீது, சார்பு, பற்று, கோழைத்தனம் போன்ற சொற்களை இணைக்கிறோம். அவர்களை நம்புவதில்லை. அவர்களைப் பார்த்து சிரிக்கிறோம். குழந்தைகளின் அன்பின் வெளிப்பாட்டை வெட்கக்கேடு போல ஆக்கிவிடுகிறோம். பட மூலாதாரம்,GETTY IMAGES பெரும்பாலான பெரியவர்கள் அன்பைப் பெறுவதில் தங்களுக்கு உள்ள இயலாமையை அடையாளம் கூடக்காண்பதில்லை. குடும்ப வட்டங்களில் நம்பிக்கை மற்றும் மரியாதை காட்டுவதில் நமக்கு மிகக் குறைவான அனுபவமே உள்ளது. நாம் வளர்ந்த பெரிய கூட்டுக்குடும்பங்களில், ஒருவரின் தவறான நடத்தையை மீண்டும் மீண்டும் விமர்சிக்கிறோம். அப்படிச்செய்வதை நாம் உணர்வது கூட இல்லை. பயம், கட்டுப்பாடு மற்றும் ஆதிக்கம் போன்ற உணர்வைப் பேணுவது பெற்றோரின் இயல்பான கட்டமைப்பாகிவிட்டது. குழந்தைகள் தங்கள் வாயை மூடிக்கொண்டு நம்மிடம் ஒட்டாமல் இருக்கத்தொடங்கும்போது, நாம் அவர்களைப் பற்றி தன்னிச்சையான முடிவுகளை வரைய ஆரம்பிக்கிறோம். அவர்களை இந்த ஓட்டுக்குள் தள்ளியது எது என்பதை நாம் யோசிப்பதுகூட இல்லை. அவர்கள் தங்கள் கருத்தைக் கூற விரும்புகிறார்கள். ஆனால் இதற்காக அவர்களுடனான நம் உறவை மீண்டும் பாதுகாப்பான மண்டலமாக மாற்ற வேண்டும். இந்த வார்த்தைகளின் எதிரொலியை நீங்கள் உணர்ந்தால், மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டது என்பதை நீங்கள் அறியலாம். நச்சு வழிகளை ஒதுக்கி வைத்துவிட்டு, உங்கள் அன்பு செழிக்க ஒரு வாய்ப்பை வழங்க வேண்டிய நேரம் இது. உங்கள் குழந்தைகள் இப்போது உங்களைச் சுற்றி இருந்தால், அவர்களைக் கட்டித்தழுவவும். அவர்கள் தூரத்தில் இருந்தால் அவர்களை அழைக்கவும் அல்லது அவர்களுக்கு செய்தி அனுப்பவும். இரண்டு தரப்புமே பரஸ்பரம் இணையவேண்டும். இது அனைவரின் காயங்களையும் ஆற்றிவிடும். https://www.bbc.com/tamil/india-62286601
  2. மறைதல் திபெத்திய பௌத்த எமன் நான் சொல்லப் போவது ஒரு பிரபலமான கருத்தாக இருக்கப் போவதில்லை எனத் தெரியும். ஆனால் இவ்விசயத்தில் இது தான் என் பார்வை. ஒருவர் காலமாவது அத்தனை கொடூரமான விசயம் இல்லை. எங்கிருந்தோ, சில ‘சார்புநிலைகளால்’ ஆன சூழல்களால் பூமியில் தோன்றியவர் அதே போல போய் விட்டார். காலமின்மையில் இருந்து வந்தவர் காலமின்மைக்குள்ளே போய் விட்டார் என்றே புரிந்து கொள்கிறேன். வாழும் போதும் நாம் அந்த காலமின்மையை உணர தத்தளித்தபடியே இருக்கிறோம், நீருக்குள் மீன் காற்றுக்காக தன் செவுள்களைத் திறந்து திறந்து மூடுவதைப் போல. காலமானவர் நாம் அனுதினமும், ஒவ்வொரு நொடியும் திறந்து திறந்து பார்க்கும் காலம் எனும் ஜன்னலை முழுக்கத் திறந்து அதன் வழி குதித்து விடுகிறார். அல்லது அவர் (ஹைடெக்கர் சொல்வதைப் போல) நம் பார்வையில் படும்படி எங்குமே போகவில்லை. அவர் எங்கு போனார் என்றே கண்டறிய முடியாது போவதே மரணம். எங்கு போனார் என்றறியாத போது ஏன் அழ வேண்டும்? அவரே தான் போவதைக் காண முடியாது, வாழும் எவருமே வாழ்கையில் மரணிக்க முடியாது, சாவின் கணத்தில் இந்த உலகத்தை அவர் தன் உடலால் அறிய முடியாது என்கிறார் ஹைடெக்கர். காலமாகிறவருக்கே முடியாத ஒன்றைப் பற்றி நாம் ஏன் கலங்க வேண்டும், அந்த அபூர்வத்தை கையெடுத்து வணங்காமல்? சாகக் கூடாது எனும் உயிர்த்துடிப்பு நம்மில் அனைவரிடம் உள்ளது. ஆனால் அதே நேரும் ஒவ்வொரு நொடியும் நாம் சாகத் துடிக்கிறோம். பேச்சில், எழுத்தில், சாப்பிடுவதில், அசைகையில், இயற்கையை ரசிக்கையில், சிரிக்கையில், வெறுமனே எங்கோ அமர்ந்திருக்கையில். இரண்டுமே சேர்ந்தது தான் மனிதனின் இருத்தல், அவனது வாழ்க்கை. அதன் நீட்சி மட்டுமே மரணம். நாம் மரணத்தை ஒரு ‘இழப்பாக’ மட்டும் காண்பது வாழ்வையும் இழப்பாகக் காண்பதாகும். இது ஒவ்வொரு நிமிடத்தையும் உற்பத்திக்கான உழைப்பாகக் காணும் மேற்கத்திய முதலீட்டிய பார்வையில் இருந்து வருவதென நினைக்கிறேன். அது மட்டுமே வாழ்க்கை அல்ல. பொருளியலைத் தாண்டி தான் நமது இருத்தல் உள்ளது. அதனால் தான் பௌத்தத்தில் காலமாதல் ஒரு ஞானமடைதலாகிறது. அதாவது இருத்தலின் இன்மையை அறிவது. அறிவது என்று கூட சொல்லக் கூடாது. அது இது தான் என்று காண்பது. அது ஒன்றுமில்லை என்று பார்க்க முடிவது. அதனாலே எமனை ஒரு தர்மபாலனாக பௌத்தம் கண்டது. பின்னர் பௌத்தத்தை எதிர்த்து உருவான மதங்கள் எமனை ஒரு தீய கடவுளாக, மக்கள் அஞ்சக் கூடிய கரிய உருவமாக, பாசக்கயிறுடன் எருமையில் ஏறி வருகிறவனாக மாற்றியது. ஆனால் நிஜத்தில் எமன் ஒரு அற்புதமான தெய்வம். அந்த கருமை கூட நிஜத்தில் அருமையான நிறமே. கருமையில், இருட்டில் ஒன்றுமே இருப்பதில்லை. நாம் இருட்டில் தோன்றி இருட்டுக்குள் செல்கிறோம். நமது பண்பாட்டில் மரணத்தைக் கொண்டாடும் போக்கு உள்ளது. அதை நாம் நகரமயமாக்கலால் இழந்து வருகிறோம். எப்போதும் மௌனமாக கண்ணீர் வடிக்கிறோம். சத்தமாக அழுவதோ சிரிப்பதோ இல்லை. இரங்கல் குறிப்புகளில் மௌனமாக விசும்புகிறோம். இதுவும் நமது தன்னலம் மட்டுமே. அவர் இருந்திருந்தால் இன்னும் கூடுதலாக அவரால் அடைந்திருக்கலாமே எனும் தன்னலம். நானும் தன்னலத்தால் ஒருவரது மரணத்திற்காக அழுதிருக்கிறேன். ஆனால் பெரும்பாலான நேரங்களில் நான் அப்படி இருப்பதில்லை. ஒருவரை உணர்வுவயப்பட்டு பற்றிக் கொண்டிருப்பது ஒரு நோய்மை. இந்த சமூக வாழ்க்கையில் நம்மால் அதைத் தவிர்க்க இயல்வதில்லை. ஆனால அப்படி தீவிர பற்றுதல் இல்லாத போது நாம் மகிழ்ச்சியுடன் ஒருவரது ‘காலமற்று ஆதலைக்’ கொண்டாட வேண்டும். மேலே உள்ள கிளையில் தொக்கி நிற்கும் தேன்கூட்டில் இருந்து சொட்டும் தேனை நாம் கீழே நின்றும் துளித்துளியாகப் பருகிக் கொண்டிருந்தோம். இப்போது நம்மில் ஒருவர் அந்த தேன்கூட்டையே நேராகப் போய் அடைந்து விட்டார். நாம் இன்மையாகத் தவிக்கையில் அவர் ஒரு முழுமையைப் பெற்று விட்டாரே? அது எவ்வளவு அழகானது! அது ஒரு சாதனை அல்லவா! ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என்று ஒருவரது பாடையைத் தூக்கிச் செல்வது எவ்வளவு அற்புதமான ஒரு பண்பாடு. நாம் அதை ஒரு பெரும் சமூக நிகழ்வாக மீட்க வேண்டும். அது முடியாவிட்டாலும் தனித்தனியாக ஒரு புன்னகையுடன், இனிப்புடன், அன்பான சொற்களுடன் நாம் காலமாதலைக் கொண்டாடலாம். அழுவது காலத்திற்கு நாம் செய்யும் அவமரியாதை அல்லவா? Posted 7 hours ago by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2022/07/blog-post_26.html
  3. கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: 'போலீசார் விசாரணையில் குறைபாடு' - தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாணவி மர்மமான முறையில் மரணித்த வழக்கில், போலீசார் விசாரணையில் சில குறைபாடு இருந்துள்ளது என்றும் பள்ளி நிர்வாகம் மாணவிகளின் பாதுகாப்பு விஷயத்தில் அலட்சியமாக இருந்துள்ளதாகவும் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கானூங்கோ தெரிவித்துள்ளார். மாணவி மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாணவியின் பெற்றோர், விசாரணை அதிகாரிகள் ஆகியோரிடமும், பள்ளி விடுதிக்கு சென்றும் சுமார் ஐந்தரை மணி நேரம் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் விசாரணை நடத்தினர். தமிழ்நாடு: ஒரே நாளில் 3 பள்ளி மாணவர்கள் உயிரிழப்பு “ஆண்கள் அனைவரையும் தவறாக நினைத்தேன்” - பெண்கள் பள்ளியில் படித்த மாணவியின் குரல் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலம் கணியாமூர் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பள்ளியில் கடந்த 13ஆம் தேதி பள்ளி விடுதியில் உள்ள மாணவி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக வழக்கை சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இணைந்து இன்று இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கள்ளக்குறிச்சி வந்தனர். முதற்கட்டமாக மாணவியின் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோர், பள்ளியில் மாணவி தங்கியிருந்த விடுதி மற்றும் அவர் உயிரிழந்ததாக கூறப்படும் பள்ளி வளாகம், இறுதியாக மாணவி மரணம் தொடர்பாக ஆரம்பம் முதல் இந்த வழக்கை விசாரணை செய்த அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொண்டனர். தேசிய மற்றும் மாநில குழுவினர் இணைந்து விசாரணை இன்று காலை கள்ளக்குறிச்சி வந்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் பிரியங் கானூங்கோ தலைமையிலான 7 பேர் கொண்ட குழு, கடலூர் மாவட்டம் வேப்பூர் பெரிய நெசலூர் கிராமத்தில் உள்ள உயிரிழந்த மாணவியின் பெற்றோரை சந்தித்து ஒரு மணி நேரம் விசாரணை செய்தது. இதனையடுத்து மாணவி உயிரிழந்ததாக கூறப்படும் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்ன சேலத்தில் உள்ள தனியார் பள்ளி விடுதிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வின் போது மாணவி தங்கியிருந்த விடுதி, அவர் படித்த வகுப்பு, அவர் மூன்றாவது மாடியில் இருந்து கீழே விழுந்ததாக கூறப்படும் இடம், மாணவி தரை தளத்தில் விழுந்ததாக கூறப்படும் இடங்களை பார்வையிட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பள்ளியில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய குழுவினர், இந்த வழக்கை ஆரம்பத்தில் இருந்து விசாரணை செய்து வந்த அதிகாரிகள், பணியிடை மாற்றம் செய்யப்பட்ட கள்ளக்குறிச்சி காவல் கண்காணிப்பாளர் செல்வக்குமார், காவல் துறையினர், மாணவியை உடற் கூராய்வு செய்த மருத்துவர்களிடம் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர். பள்ளி நிர்வாகத்தின் அலட்சியம், போலீசார் விசாரணை குறைபாடு இன்று(ஜூலை 27) காலை 9 மணிக்கு தொடங்கிய விசாரணை பிற்பகல் 2.30 மணி வரை மூன்று இடங்களில் நடைபெற்றது. இந்த விசாரணையை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் பிரியங் கானூங்கோ, "தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் மற்றும் மாநில குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் இணைந்து உயிரிழந்த மாணவியின் வீட்டிற்கு சென்று முதலில் விசாரணை செய்தோம். இதையடுத்து மாணவி உயிரிழந்த பள்ளிக்கு சென்று அவர் தங்கியிருந்த விடுதி மற்றும் உயிரிழந்த இடத்தை பார்வையிட்டோம். அதுமட்டுமின்றி இந்த வழக்கு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் அனைத்து அதிகாரிகளையும் சந்தித்து விசாரணை செய்துள்ளோம். இதில் மாணவிக்கு உடற் கூராய்வு செய்த மருத்துவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய அதிகாரி, மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டோம் மேலும் நாங்கள் கவனித்தது வரை ஆரம்பக்கட்ட விசாரணையில் சில குறைபாடுகள் இருப்பதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி பள்ளி நிர்வாகம் அனுமதியின்றி விடுதி இயக்கியது தெரியவந்துள்ளது. பள்ளி நிர்வாகமும் மாணவி மரணத்தில் அலட்சியமாக இருந்துள்ளனர். மேலும் மாணவர்களுடைய அடிப்படை வசதிகள் குறித்து சரியாக ஆய்வு செய்யாமல் பள்ளி நிர்வாகம் இருந்துள்ளனர். நாங்கள் விசாரணை செய்த அனைத்தையும் அறிக்கையாக மத்திய மற்றும் மாநில அரசிடம் சமர்ப்பிக்க இருக்கிறோம்," என தெரிவித்துள்ளார். மேலும் விசாரணையில் என்ன குறைபாடு என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு அதை அறிக்கையில் குறிப்பிடுவோம் என்று தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் தெரிவித்துள்ளார். https://www.bbc.com/tamil/india-62320705
  4. சிங்கப்பூரில் கோட்டாபய ராஜபக்ஷ: மேலும் 14 நாட்களுக்கு விசா நீட்டிப்பு சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக 26 ஜூலை 2022 புதுப்பிக்கப்பட்டது 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை முன்னாள் ஜனாதிபதி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரில் கோரிக்கை வலுத்து வந்த நிலையில் அவரின் விசா மேலும் 14 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூர் அரசு தலைமை சட்ட அதிகாரியிடம் (அட்டர்னி ஜெனரல்) குற்றவியல் புகார் அளிக்கப்பட்டது. தென்னாப்பிரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு இந்தப் புகாரை அளித்தது. அனைத்துலக சட்ட வரம்புக்கு உட்பட்டு கோத்தபாய மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சிங்கப்பூர் அரசாங்கமும்கூட தனது நாட்டுச் சட்டங்களின் கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இயலும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பு வகித்தார் கோட்டாபய ராஜபக்ஷ, அப்போது இலங்கை ராணும் தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டதாக அவர் மீது புகார்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் பலியானதாக் கூறப்பட்ட நிலையில், அவர் இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், போர் குற்றங்கள் உட்பட கோட்டாபயவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள பல்வேறு புகார்கள் குறித்து சிங்கப்பூரிலேயே அவர் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்கிறது அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு. அதற்கான காரணங்களையும் அது பட்டியலிட்டுள்ளது. இலங்கையில் நிகழ்ந்த இறுதிகட்ட போரின்போது கோட்டாபய பல்வேறு போர்க்குற்றங்களைப் புரிந்ததாக அந்த அமைப்பு சாடியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு தகவல்களைத் திரட்டி இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே முன்னாள் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அமைப்பின் வழக்கறிஞர் அலெக்சாண்டிரா லில்லி கேதர். இலங்கை மக்கள் நிராகரித்த ரணில் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்ற முரண்: அரசியலமைப்பில் தீர்வு உண்டா? ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தனித்தீவு போல மாறிய கொழும்பு காலிமுகத் திடல் - கள நிலவரம் புகார் என்ன? படக்குறிப்பு, அலெக்சாண்டிரா லில்லி கேதர் அலெக்சாண்டிரா தற்போதுபெர்லின் நகரில் உள்ளார் என்றும், ராய்ட்டர்ஸ் செய்தி முகமை அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தததாகவும் கூறப்பட்டுள்ளது. "கோட்டாபயவுக்கு எதிராக புகார் செய்துள்ளோம். சிங்கப்பூர் அரசாங்கம் அவரை கைது செய்வதன் மூலம் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உண்மை நிலையைப் பறைசாற்ற முடியும். அதற்கான அரிய வாய்ப்பு இப்போது சிங்கப்பூருக்கு அமைந்துள்ளது," என்கிறார் அலெக்சாண்டிரா லில்லி கேதர். சிங்கப்பூர் தனது சொந்த சட்டங்களையும் கொள்கைகளையும் கொண்டுள்ளது. அவற்றின் அடிப்படையிலேய கோத்தபாய ராஜபக்ஷ மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார். சிங்கப்பூர் தலைமைச் சட்ட அதிகாரியிடம் அளிக்கப்பட்டுள்ள புகார் கடிதத்தை தயாரித்த குழுவில் அலெக்சாண்டிராவும் ஓர் உறுப்பினர். இற்கிடையே, சிங்கப்பூரில் உள்ள கோத்தபாயவை தொடர்புகொள்ள ராய்ட்டர்ஸ் முயற்சி மேற்கொண்ட போதிலும், பலன் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இறுதிக்கட்ட போரின்போது கோத்தபாய ராஜபக்சே ஜெனிவா ஒப்பந்தங்களை மீறிவிட்டதாகவும், அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு அளித்துள்ள 63 பக்கங்களுக்கு நீளும் குற்றவியல் புகார் மனுவில் குறிப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் முகமை கூறியுள்ளது. கோத்தபாயவைக் கைது செய்வது தொடர்பாக அந்த அமைப்பிடம் இருந்து ஒரு கடிதம் கிடைக்கப் பெறற்றுள்ளதாக சிங்கப்பூர் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். கடந்த 23ஆம் தேதி இந்தக் கடிதம் பெற்றபட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து மேலதிக கருத்துகள் எதையும் தெரிவிக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெளியுறவுத்துறை விளக்கம் படக்குறிப்பு, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட காரணங்களுக்காக சிங்கப்பூர் வந்திருப்பதாகவும், அவர் புகலிடம் கோரவில்லை என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. "போர்க்குற்றம், இனப்படுகொலை, சித்ரவதை தொடர்பான குற்றச்சாட்டுகளை சிங்கப்பூர் நீதிமன்றத்தால் விசாரிக்க இயலும் என்றாலும், சிங்கப்பூர் அந்த நடவடிக்கையை கடைசி வாய்ப்பாக மட்டுமே பயன்படுத்தும்," என்று அரசு பலமுறை தெரிவித்துள்ளது என்றுறார் பிரிட்டனில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் பேராசிரியர் ஷுபாங்கர் டாம். இவர் சிங்கப்பூரிலும் சில காலம் பணியில் இருந்துள்ளார். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தனித்தீவு போல மாறிய கொழும்பு காலிமுகத் திடல் - கள நிலவரம் இலங்கை நெருக்கடி: 'மத அரசியல்' விளைவித்த துன்பங்கள் - வரலாறு மாற்றியமைக்கப்படுமா? சிங்கப்பூர் தனது வெளியுறவுக் கொள்கையில் நடுநிலையைக் கடைப்பிடிப்பதாக அதிகாரபூர்வமா அறிவிக்கவில்லை என்றாலும் அந்நாடு நீண்டகாலமாக அவ்வாறு செயல்பட்டு வருவதாகவும் ஷுபாங்கர் தெரிவித்துள்ளார். எனவே, ஒரு வெளிநாட்டுத் தலைவரை மீது வழக்கு தொடுக்கப்பட வேண்டும் எனில், சிங்கப்பூரின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு ஏற்ப அதை சமநிலைப்படுத்த வேண்டிய அவசியம் எழும் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இதற்கிடையே, கடந்த 2008ஆம் ஆண்டு போர்ப் பகுதியில் இருந்து ஐ.நா, நிவாரண முகமைகளை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டதாகவும், அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு கூறியுள்ளது. "இதன் மூலம் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் கட்டவிழ்த்துவிடும் வன்முறைக்கும் படுகொலைகளுக்கும் சாட்சிகள் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டார் கோத்தபாய. கோட்டாபயவை கைது செய்து விசாரணை செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை சட்ட அதிகாரியிடம் மனு அளிதி்துள்ளோம். இதுவே எங்கள் வழக்கின் அடிப்படையாக இருக்கும்," என்கிறார் அந்த அமைப்பின் செயல் இயக்குநர் யாஸ்மின் சூக்கா (Yasmin Sooka). சிங்கப்பூரில் இருந்து கோட்டாபய வெளியேற வேண்டுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES இதற்கிடையே கோட்டாபய எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் அவர் மீண்டும் இலங்கைக்கு வர உள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தணா தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக SOCIAL PASS அடிப்படையில்தான் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், இவ்வாறான ஏற்பாட்டில் ஒருவர் சிங்கப்பூர் வந்தால், சம்பந்தப்பட்டவர் அங்கு 14 நாள்கள் மட்டுமே தங்கி இருக்க முடியும். கோத்தாபய கடந்த 13ஆம் தேதியே சிங்கப்பூர் சென்றடைந்தார். எனவே அவர் வெளியேற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவக்கு, குறுகிய கால விசா வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. பொதுவாக இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு 30 நாள்களுக்கான 'சோஷியல் விசிட்' எனும் சுற்றுப்பயண விசா வழங்கப்படும். அந்த விசா 30 நாள்களுக்குச் செல்லுபடியாகும். ஆனால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 நாள் விசா வழங்கப்பட்டதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' ஊடகம் தெரிவித்துள்ளது. எனவே, அவர் மேலும் சில காலம் தங்க சிங்கப்பூரின் குடிநுழைவு சட்டங்கள் அனுமதிக்குமா என்பது குறித்து அரசுத்தரப்பில் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. https://www.bbc.com/tamil/global-62306565
  5. தமிழ்நாடு சித்த மருத்துவமனை பல்கலைக்கழக மசோதா: ஆளுநர் போட்ட கிடுக்கிப்பிடி - மற்ற முக்கிய மசோதாக்கள் நிலை என்ன? பரணிதரன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் படக்குறிப்பு, தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்த தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் (ஜூன், 2, 2022) தமிழ்நாட்டில் சித்த மருத்துவமனை பல்கலைக்கழக மசோதா சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு மாநில ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டபோதும், அது தொடர்பாக சில கேள்விகளை அரசுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி எழுப்பியிருப்பதாக பிபிசி தமிழுக்குத் தெரிய வந்துள்ளது. தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டபோது, மாநிலத்தின் பாரம்பரிய மருத்துவ முறையின் பெருமையைப் போற்றும் வகையில் இந்திய மருத்துவ முறைகளுக்கான சித்த மருத்துவ பல்கலைக்கழகம் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த பல்கலைக்கழகத்தை சென்னைக்கு அருகே தொடங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இதற்கான சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. மசோதாவில் என்ன உள்ளது? தமிழ்நாடு இயல், இசை, கவின் கலை பல்கலைக்கழகம் நீங்கலாக மற்ற அனைத்து அரசு கட்டுப்பாட்டில் உள்ள பல்கலைக்கழகங்களின் வேந்தர் ஆக மாநில ஆளுநரே இருந்து வருகிறார். ஆனால், தமிழ்நாடு அரசு புதிதாக தொடங்க உத்தேசித்துள்ள சித்த மருத்துவ பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஆக முதலமைச்சரே இருப்பார் என்று அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா அனைத்திற்கும் முதலமைச்சர் தலைமை வகித்து பட்டங்கள், பட்டயங்கள் அல்லது பிற கல்வி சிறப்பு பட்டங்களையும் வேந்தர் என்ற முறையில் முதலமைச்சரே வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளது. படக்குறிப்பு, 2019இல் வெளியிடப்பட்ட நீட் தேர்வுக்கான அறிவிக்கை இந்த மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கக் கோரி அதை மாநில ஆளுநரின் பார்வைக்கு தமிழ்நாடு சட்டப்பேரவையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நிலையில், கடந்த மே மாதம் மாநில ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாடு சட்டப்பேரவையில் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார். அதுநாள்வரை இந்த மசோதாவை ஆளுநர் தமது வசம் வைத்துக் கொண்டு இழுத்தடிப்பதாக ஆளும் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கூறி வந்தன. ஸ்டாலின் கோரிக்கையும் ஆளுநர் கருத்தும் கடந்த ஜூன் மாதம் ஆளுநரை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்த முதலமைச்சர் ஸ்டாலின், அவரது பார்வைக்கு அனுப்பப்பட்ட தமிழ்நாடு பல்கைகலைக்கழக மசோதா, சித்த மருத்துவமனை பல்கலைக்கழக மசோதா, பல மாதங்களாக நிலுவையில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு சங்க மசோதா போன்ற பல மசோதாக்களுக்கும் ஒப்புதல் வழங்கும்படி கேட்டுக் கொண்டார். இந்த சந்திப்பின்போது அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோரும் உடனிருந்தனர். இந்த நிலையில், தமிழ்நாடு கூட்டுறவு சங்க திருத்த மசோதா தொடர்பாக தமக்குள்ள ஆட்சேபங்களை மீண்டும் 'கோடிட்டு' மாநில ஆளுநர் ஆர்.என். ரவி சட்டப்பேரவை சபாநாயகருக்கு அனுப்பி வைத்துள்ளதாக பிபிசி தமிழுக்குத் தெரிய வந்துள்ளது. நீட் தேர்வு: கேரளாவில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற சொன்னதாக புகார் - என்டிஏ விளக்கம் விருத்தாசலத்தில் பிளஸ் டூ மாணவி தற்கொலை - முழு விவரம் தற்கொலை எண்ணத்துக்கான காரணம் என்ன? விடுபடுவது எப்படி? தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதாக யாராவது சொன்னால் என்ன செய்வது? ஆளுநர் அறிவுரை மேலும், திருத்த மசோதாவில் கூட்டுறவு சங்க பதவிக்காலத்தை ஐந்து ஆண்டுகளில் இருந்து மூன்று ஆண்டுகளாக குறைப்பது தொடர்பாக தமக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்றும் அந்த மசோதாவில் பதிவாளரே விசாரணையின்றி சங்கத்தை நீக்கவோ நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கவோ முடியும் என்ற ஷரத்து ஜனநாயகப்படி இல்லை என்று ஆளுநர் கூறியுள்ளதாகவும் இது குறித்து சட்ட ஆலோசனைகளைப் பெற்று முடிவெடுக்கும்படி ஆளுநர் அரசுக்கு அறிவுரை வழங்கியுள்ளதாகவும் அறிய முடிகிறது. சித்த மருத்துவமனை பல்கலைக்கழக மசாதோவை பொருத்தவரை, மாநில ஆளுநருக்கு பதிலாக மாநில முதல்வரை வேந்தராகக் கொண்டு தமிழ்நாட்டில் ஆளும் திமுக அரசு எடுத்துள்ள முயற்சிகளை ஆளுநர் வரவேற்றுள்ளார். இதுபோன்ற ஒரு மசோதாவை கொண்டு வர மாநில அரசுக்கு உரிமை உள்ளது. காரணம், மாநில அளவிலான பல்கலைக்கழகத்தை கொண்டு வருவது மாநில பட்டியலில் (கன்கரன்ட் லிஸ்ட்) உள்ள விஷயம்தான். ஆனால், இந்திய ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா மற்றும் ஹோமியோபதி எனப்படும் ஆயுஷ் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிக்கையின்படி அந்த பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கை நடைமுறை இருக்குமா என்பதில் தமிழ்நாடு அரசு தமது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று ஆளுநர் ரவி தமிழ்நாடு அரசிடம் கேட்டிருப்பதாகவும் அறிய முடிகிறது. இந்த விவகாரங்கள் தொடர்பாக முதலமைச்சருடன் வந்த அமைச்சர்கள் குழுவில் இருந்த தமிழக அமைச்சர் தங்கம் தென்னரசிடம் விவரிக்கப்பட்டுள்ளதாகவும் நமக்கு தெரிய வந்துள்ளது. YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 நீட் விலக்கு மசோதா விவகாரத்தில் ஏற்கெனவே மாநில அரசு நிறைவேற்றிய ஆளுநருக்கு இரண்டாவது முறையாக அனுப்பி வைக்கப்பட்ட மசோதா, குடியரசு தலைவருக்கு அவரால் அனுப்பி வைக்கப்பட்டு அங்கு அது அவரது செயலக பரிசீலனையில் இருக்கிறது. இந்த நிலையில், நீட் தேர்வு விதிகளுக்கு உட்பட்டு சித்த மருத்துவம், ஆயுர்வேதம், யுனானி, இயற்கை மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுடன் கூடியதாக தமிழ்நாடு சித்த மருத்துவமனை பல்கலைக்கழம் இருக்குமா இல்லையா என்பதில் ஒரு தெளிவு இல்லாததால் ஆளுநர் அலுவலகம் அதன் மீதான முடிவை எடுக்கவில்லை என்றும் பிபிசி தமிழுக்குத் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவியிடம் பிபிசி தமிழ் பேசிய.போது, "அரசின் நிர்வாக விவகாரங்களில் ஆளுநரின் பணி வரம்புக்கு உட்பட்டது. அதுவே, சட்டப்பேரவை விவகாரங்கள் என வரும்போது அரசியலமைப்பு விதிகளின்படி அனைத்தும் உள்ளதா என்பதை சரிபார்த்து கடமையாற்ற வேண்டியது ஆளுநரின் பொறுப்பு," என்று மட்டும் கூறினார். நாடாளுமன்ற திமுக குழு தலைவர் டி.ஆர். பாலுவிடம் நீட் விலக்கு விவகாரத்தில் புதிய குடியரசு தலைவர் திரெளபதி முர்மூவை சந்தித்து பேச திமுக எம்பிக்கள் திட்டமிட்டுள்ளனரா என்று கேட்டோம். "முதல்வருடன் ஆலோசித்து விரைவில் முடிவெடுப்போம்," என்று அவர் பதிலளித்தார். மற்ற மசோதாக்கள் தொடர்பாக ஆளுநர் வழங்கியுள்ள அறிவுரைகள் பற்றி கேட்டபோது, அது தொடர்பான தகவல் தமக்கு இதுவரை கிடைக்கவில்லை என்று டி.ஆர். பாலு தெரிவித்தார். https://www.bbc.com/tamil/india-62315562
  6. சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலக ரஷ்யா முடிவு: சொந்தமாக அமைக்கத் திட்டம் பென் டோபியாஸ் பிபிசி நியூஸ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ROSKOSMOS படக்குறிப்பு, லுஹான்ஸ்க் கொடியுடன் ரஷ்ய விண்வெளி வீரர்கள் 2024க்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விலகிக்கொண்டு சொந்தமாக ஒரு விண்வெளி நிலையத்தை அமைக்க இருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. "அதுவரை, தற்போதிருக்கும் அனைத்து கடமைகளையும் ரஷ்ய விண்வெளி முகமையான ராஸ்காஸ்மோஸ் ஆற்றும்" என்று அந்த அமைப்பின் புதிய தலைவரான யூரி பார்சோவ், தெரிவித்துள்ளார். 1998ஆம் ஆண்டிலிருந்து அமெரிக்காவும் ரஷ்யாவும் இன்னும் பிற நாடுகளுடன் இணைந்து, சர்வதேச விண்வெளி மையத்தில் வெற்றிகரமாக இயங்கி வந்தன. ஆனால், யுக்ரேன் மீதான ரஷ்யாவின் போரால் இந்த உறவுகள் மோசமடைந்துள்ளன. அத்துடன், மேற்கத்திய நாடுகளின் தடைகள் காரணமாக இந்த திட்டத்திலிருந்து விலகுவதாக ரஷ்யாவும் அச்சுறுத்தியது. பட மூலாதாரம்,ESA/NASA படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து பூமி 5 உலக நாடுகளின் விண்வெளி முகமைகள் இணைந்து உருவாக்கப்பட்ட சர்வதேச விண்வெளி நிலையம், புவியின் சுற்றுவட்டப்பாதையில் இருந்துகொண்டு 1998 ஆம் ஆண்டு முதல் இதுவரை ஆயிரக்கணக்கான சோதனைகளை மேற்கொண்டுள்ளது. வரும் 2024ஆம் ஆண்டு வரை இந்த நிலையம் இயங்குவதற்கு அனுமதி உண்டு. எனினும், இதனை மேலும் ஆறு ஆண்டுகளுக்கு, மற்ற பங்குதாரர்களுடன் ஒப்புதலுடன் நீட்டிக்க அமெரிக்கா முயற்சித்து வருகிறது. சூரிய கிளர்ச்சி என்றால் என்ன? இதனால் பூமிக்கு ஆபத்தா? பேரண்டத்தின் ஆரம்ப காலத்தைக் காட்டும் புகைப்படத்தை வெளியிட்ட ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி ஜேம்ஸ் வெப் புதிய படங்கள்: நட்சத்திரங்களின் பிரசவ விடுதி, 5 உடுத்திரள்களின் அண்டவெளி நடனம் இந்த நிலையில்தான், 2024ஆம் ஆண்டுக்குப்பின், இந்த திட்டத்திலிருந்து விலக முடிவெடுத்துள்ளது குறித்து ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுடனான சந்திப்பின்போது, போரிசோவ் தெரிவித்துள்ளார். மேலும், "விண்வெளியில் ரஷ்யாவின் மையத்தை இந்த முறை தொடங்கிவிடுவோம் என்று நான் நம்புகிறேன்" என்று தெரிவித்த அவர், "புதிய மையத்தை அமைப்பதுதான் இப்போது எங்கள் முகமையின் முதல் கடமை" என்றும் தெரிவித்துள்ளார் . இதற்கு, "சிறப்பு" என்று புதினும் பதிலளித்தார். ரஷ்யாவின் திட்டங்கள் குறித்து அமெரிக்காவின் விண்வெளி முகமைக்கு எந்தவிதமான அதிகாரபூர்வ தகவலும் இல்லை. எனவே, இந்த முடிவுக்கு பிறகான சர்வதேச விண்வெளி நிலையத்தின் எதிர்காலம் குறித்து தற்போது எந்த தகவலும் தெளிவாக தெரியவில்லை" என்று நாசாவின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்ததாக ராய்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது. படக்குறிப்பு, ஜோனதன் ஆமோஸ் - பகுப்பாய்வு சர்வடேச விண்வெளி நிலையத்திலிருந்து திரும்பப் பெறுவது குறித்து சில காலமாகவே ரஷ்யர்கள் குரலெழுப்பி வருகின்றனர், ஆனால் அவை எவ்வளவு தீவிரமானவை என்பது தெளிவாகத் தெரியவில்லை. தங்களுக்கென்று சொந்தமாக ஒரு நிலையத்தை (ரஷ்யாவின் விண்வெளி சேவை நிலையம்) உருவாக்குவது பற்றி அவர்கள் பேசினர். ஆனால் அதற்கு ரஷ்ய அரசாங்கத்தின் அர்ப்பணிப்பு மிக்க நிதிவளம் தேவைப்படும். ISS இல் உள்ள ரஷ்ய கூறுகள் பழையதாகிவிட்டன, ஆனால் பொறியாளர்களின் பார்வை என்னவென்றால், 2030 வரை இந்த அவற்றால் வேலை செய்ய முடியும். ரஷ்யா வெளியேறினால், நிச்சயமாக அது ஒரு சிக்கல்தான். ஏனெனில், கூட்டாளிகள் ஒருவரையொருவர் சார்ந்திருக்கும் வகையில்தான் இந்த நிலையம் வடிவமைக்கப்பட்டது. ISS இன் அமெரிக்க தரப்பு ஆற்றலை வழங்குகிறது; பூமியில் விழாமல் வைத்திருக்கும் உந்து விசையை ரஷ்ய தரப்பு வழங்குகிறது. அந்த உந்துவிசை திறன் திரும்பப் பெறப்பட்டால், அமெரிக்காவும் அதன் மற்ற கூட்டாளிகளான ஐரோப்பா, ஜப்பான் மற்றும் கனடாவும், வானத்தின் உயரத்தில் இந்த நிலையத்தை நிறுத்துவதற்கான பிற வழிகளை உருவாக்க வேண்டும். இது அமெரிக்க ரோபோக்களால் செய்ய முடிந்த ஒன்றுதான். ISS சர்வதேச விண்வெளி நிலையத்தில் ரஷ்யாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு, யுக்ரேனில் நடந்த போரால் ஒப்பீட்டளவில் பாதிப்பில்லாமல் இருந்தது. இரு நாடுகளும் இந்த மாத தொடக்கத்தில் ரஷ்ய விண்வெளி வீரர்கள் அமெரிக்க விண்கலத்தில் நிலையத்திற்கு பயணிக்க அனுமதிக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.இந்த ஒப்பந்தம் "ஐஎஸ்எஸ் திட்டத்தின் கட்டமைப்பிற்குள் ஒத்துழைப்பை பெருக்கும்" என்று ரோஸ்கோஸ்மோஸ் அறிக்கை கூறியது. பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, சர்வதேச விண்வெளி நிலையம் இருப்பினும், ரஷ்யாவிற்கும் மேற்கு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பின் மற்ற பகுதிகளை இந்த போர் பாதித்தது. ஐரோப்பிய விண்வெளி ஏஜென்சி (ESA) செவ்வாய் கிரகத்திற்கு ஒரு ரோவரை ஏவுவதற்கான ரோஸ்காஸ்மோஸ் உடனான தனது ஒத்துழைப்பை முடித்துக்கொண்டது, மேலும் பிரெஞ்சு கயானாவில் உள்ள ESA ஏவுதளத்தில் இருந்து ரஷ்யா அதன் சோயூஸ் விண்கலத்தை ஏவுவதையும் நிறுத்தியுள்ளது. சோவியத் யூனியனும் ரஷ்யாவும் விண்வெளி ஆராய்ச்சியின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளன, மேலும் 1961 இல் விண்வெளியில் முதல் மனிதனை அனுப்புவது போன்ற சாதனைகள் ரஷ்யாவின் தேசிய பெருமைக்கு ஆதாரமாக உள்ளன. ரஷ்ய அதிபர் புதினுடனான தனது சந்திப்பில், "இந்த புதிய ரஷ்ய விண்வெளி நிலையம், வழிகாட்டல் மற்றும் தரவுப் பரிமாற்றம் போன்ற, ரஷ்யாவின் நவீன வாழ்க்கைக்கு தேவையான, விண்வெளி ரீதியிலான சேவைகளை வழங்கும்" என்று தெரிவித்தார் ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் போரிசோவ். https://www.bbc.com/tamil/science-62314772
  7. தமிழ்நாட்டில் கேரளா போல அனைத்துப் பள்ளிகளும் கோ-எட் ஆகவேண்டுமா? பெண்கள் பள்ளியில் படித்த மாணவி என்ன சொல்கிறார்? க. சுபகுணம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் "பெண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு ஆண்- பெண் சேர்ந்து படிக்கும் கோ-எட் கல்லூரியில் சேர்ந்தபோது, ஆண்கள் இருந்த இடத்தில் பேசுவதற்கே எனக்கு தன்னம்பிக்கை வரவில்லை. நான் நன்றாகவே பேசினாலும் அவர்கள் கேலிதான் செய்வார்கள் என்று எனக்கு நானே நினைத்துக் கொண்டிருந்தேன். அது வாய்ப்புகளை எடுத்துக் கொள்ளவிடாமல் என்னைத் தடுத்தது," என்கிறார் பெண்கள் பள்ளியிலேயே முழுவதுமாக தனது பள்ளிப் படிப்பை முடித்த கீதாஞ்சலி. "பள்ளிப் படிப்பைத் தொடங்கியது முதல் 12-ஆம் வகுப்பு வரை நான் படித்தது முழுக்கவே பெண்கள் மேல்நிலைப் பள்ளியில்தான். கல்லூரியும் பெண்கள் கல்லூரியாகப் பார்த்துதான் சேர்க்க வேண்டுமென்று குடும்பத்தினர் கூறினார்கள். ஆனால், என் அம்மாவின் வலியுறுத்தலின் பேரில் இருபாலரும் படிக்கக்கூடிய கோ-எட் கல்லூரியில் சேர்க்கப்பட்டேன். பெண்கள் வட்டத்திலேயே இருந்துவிட்டு வெளியே வந்தபோது, ஆண்களிடம் பேசவே மிகவும் தயங்கினேன். கல்லூரியில் சேர்ந்த புதிதில், ஒரு கூட்டத்தின் முன்னால் பேசுவதிலோ, படிப்பு சார்ந்து ஏதேனும் செயல்பாடுகளில் ஈடுபடுவதிலோ எனக்கு மிகுந்த தன்னம்பிக்கை இல்லாமல் இருந்தது. ஆண்களே வந்து பேசினாலும், அவர்களிடம் எப்படிப் பேசுவது என்று தயங்கினேன். ஆண்களிடம் நேருக்கு நேராக கண்களைப் பார்த்துப் பேசவே இரண்டு ஆண்டுகளுக்கும் மேல் ஆனது. கல்லூரியின் இறுதி ஆண்டுக்கு வந்தபோது தான், ஓர் ஆண் என்ன மாதிரியான அணுகுமுறையில் என்னிடம் பேசவோ பழகவோ வருகிறார் என்பதைப் புரிந்துகொள்ளத் தொடங்கினேன்," என்கிறார். மரபணு குறைபாட்டால் மாறிய முகம்: சவால்களை சாதனையாக மாற்றிய யுவராஜ் குழந்தைகளிடம் பெற்றோர் செய்யக்கூடாதவை என்னென்ன? மனிஷா ரூபேட்டா: பாகிஸ்தானில் டிஎஸ்பி ஆன முதல் இந்து பெண் "முன்பு ஆண்கள் அனைவருமே தவறானவர்கள் என்று நினைத்தேன். பிறகு, பெண்களிடம் பேச வரும் அனைத்து ஆண்களுமே தவறானவர்கள் இல்லை. அனைவருமே காதலிக்கும் எண்ணத்தோடு அணுகுவதில்லை. நட்போடும் பழகுவார்கள். அனைவருமே கடுமையாக நடந்து கொள்ள மாட்டார்கள், பண்பாகவும் பழகுவார்கள் என்பதை நான் புரிந்துகொள்ள வருடங்கள் ஆனது. குறிப்பாக, பணியிடத்தில் ஏதோவொரு விஷயத்தைப் பற்றிய கருத்து வேறுபாடுகள் இருக்கும்போதோ அல்லது மாற்றுக் கருத்து இருக்கும்போதோ அதை ஆண்களிடம் எடுத்துச் சொல்வதற்கு நீண்ட நேரமும் சிரமமும் ஆனது. இதுவே, இருபாலர் கல்வி நிலையத்தில் தொடக்கத்தில் இருந்தே படித்து, எங்களுக்கு ஆண்களோடு சமமாகப் பழகுவதற்கான, கல்வி பயில்வதற்கான வாய்ப்பு கிடைத்திருந்தால், அந்த சிக்கல்கள் இருந்திருக்காது. பாலின சமத்துவம் என்றால் என்னவென்று எனக்குத் தெரிந்திருக்கும். ஆரோக்கியமான போட்டியை என்னால் வழங்கியிருக்க முடியும்," என்கிறார் கீதாஞ்சலி. இயல்பாகப் பழகுவதில் சிக்கல் இந்த சமுதாயத்தில் ஒரு விஷயத்தைச் செய்வதில் நம் மீது நமக்கு எந்தளவுக்கு நம்பிக்கை இருக்கிறது என்பது குறித்து நாமே சுய மதிப்பீடு செய்து கொள்ளவேண்டும் என்று கூறும் கீதாஞ்சலி, "இந்தச் சமுதாயத்தில் அனைத்து பாலினத்தவர்களும் இருக்கிறார்கள். இருந்தும் நான் பெண்களிடையே தான் இருப்பேன், ஆண்களிடையே நம்பிக்கையுடன் என்னால் செயல்பட முடியாது என்று நாம் தவிர்த்துவிட முடியாது. இருபாலர் கல்வி நிலையங்கள் இந்தத் தடைகளைத் தாண்டுவதை மிகவும் எளிதாக்கும்," என்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் கல்லூரியில் தொடங்கி பணியிடம் வரை நீண்ட காலமாகப் பல்வேறு முயற்சிகள், தயக்கங்கள் ஆகியவற்றைக் கடந்து இன்று தனியார் நிறுவனம் ஒன்றில் விற்பனை மேலாளராக இருக்கிறார் கீதாஞ்சலி. ஆனால், இவரைப் போலவே அனைத்து பெண்களும் இருப்பதில்லை. இன்றளவும் பெண்கள் பள்ளியிலேயே, கல்லூரியிலேயே படிப்பை முடித்த பல பெண்கள், பணியிடங்களிலும் வெளியுலகிலும் இன்னமும் ஆண்களிடம் பழகுவதில், தங்களுக்கான வாய்ப்புகளை தன்னம்பிக்கையோடு பெறுவதில் பல சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். அது அவர்களது வளர்ச்சியில் ஒரு பெரிய சவாலாகவே கூட இருந்து வருகிறது. கேரள மாநிலத்தின் முடிவு அத்தகைய தாக்கங்களைத் தவிர்க்க வேண்டும், பாலின சமத்துவம் இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டு, கேரள மாநிலத்தின் குழந்தை உரிமைகள் பாதுகாப்பு வாரியம் அடுத்த கல்வியாண்டில் இருந்து கேரளா முழுக்க மாணவர்களில் ஆண்களுக்கு, பெண்களுக்கு என்று தனித்தனியாக கல்வி நிலையங்கள் இயங்கத் தடை விதித்து, அனைத்து கல்வி நிலையங்களையும் கோ-எட் பள்ளிகளாக மாற்ற உத்தரவிட்டுள்ளது. கேரள மாநிலத்தின் இந்த முடிவு குறித்துப் பேசியபோது, "பாலினரீதியாக தனித்தனியாக பள்ளிகள் மட்டுமின்றி பல கல்லூரிகளும் இருக்கவே செய்கின்றன. இன்னும் பல கோ-எட் கல்வி நிலையங்களிலும் கூட ஆண்களும் பெண்களும் பேசிக் கொள்ளக் கூடாது என்ற விதிமுறை கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், கேரளாவில் கொண்டுவரப்பட்டுள்ள இந்த உத்தரவு வரவேற்கப்பட வேண்டும் என்று நான் கருதுகிறேன். ஏனெனில், இப்படி தனித்தனிப் பள்ளிகளில் படிக்கும்போது, அவர்களுக்கு உள்ளாகவே இந்த பாலினத்தைச் சேர்ந்தவர்கள் இப்படித்தான் என்ற தவறான பார்வைகளை உடைப்பதற்கு இது உதவும்" என்கிறார் கீதாஞ்சலி. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் "அதோடு மாணவர்களை வெளியுலகுக்குத் தயார் செய்ய உதவும், கருத்துப் பரிமாற்றம், தொடர்புத் திறன் ஆகியவற்றை அதிகரிப்பதோடு, ஆரோக்கியமான, சமமான போட்டியை உருவாக்க முடியும். சிறு வயதிலிருந்து ஆண்கள் பள்ளியிலேயே படித்து வளரக்கூடிய மாணவர்களிடையே, பெண்கள் என்றால் இப்படித்தான் என்றொரு விதமான பார்வைகளும் ஆண்கள் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும், ஆண்கள் அழவே கூடாது என்பன போன்ற சிந்தனைகளும் இருக்கும். அவர்கள் வளர்ந்து வெளியுலகுக்குள் வந்த பிறகு இவற்றிலிருந்து வெளியேறி, நடைமுறையைப் புரிந்துகொள்ள தனியாக நேரம் எடுக்கும். பாலியல் கல்வி எந்தளவுக்கு முக்கியம் என்று பேசுகிறோமோ, அதே அளவுக்கு வாழ்வியல் கல்வியை, அதிலும் குறிப்பாக இருபாலின மாணவர்களையும் ஒன்றாக வைத்துக் கற்றுத் தருவதும் முக்கியம். அது பல நன்மைகளை விளைவிக்கும். யார், யாரிடம் எப்படிப் பேச வேண்டும் என்பது போன்ற சமூகத் திறன்களை மட்டுமின்றி எதிர் பாலினத்தவர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதையும் எதிர்பாலினத்தவர்களோடு பேசுவதற்கான நம்பிக்கையையும் அவர்களுக்கு இதன்மூலம் வழங்க முடியும்," என்கிறார். "பேசக்கூடாது எனத் தடுத்தால், சிந்தனை அதைச் சுற்றியே சுழலும்" கல்வி நிலையங்களில் மாணவர்களை பாலினரீதியாகப் பிரித்து வைப்பது குறித்துப் பேசிய மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த தமிழ் ஆசிரியரான ரகுராஜ், "சில ஆண்டுகளுக்கு முன்பு மாதவன் நடித்த ஸ்கூட்டர் விளம்பரம் ஒன்று வெளியானது. அந்த விளம்பரத்தில் பெண் ஒருவர் அனைவருக்கும் நோட்டீஸ் வழங்கிக் கொண்டிருப்பார். ஆனால், அதைப் படிக்காமல் அனைவரும் அப்படியே எறிந்துவிடுவார்கள். தமிழ்நாடு அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு நீதிமன்றம் இடைக்காலத் தடை குஜராத் கலவரம்: பாடப் புத்தகங்களிலிருந்து நீக்கினால் வரலாறு மாறிவிடுமா? "குழந்தைத் திருமணங்களை வன்முறையாக சமூகம் கருதவில்லை" - சமீபத்திய ஆய்வு சொல்வது என்ன? அதைப் பார்த்த மாதவன், அந்த நோட்டீஸை வாங்கி, அனைவருக்கும் சுருட்டிக் கொடுப்பார். அப்போது, மக்கள் அதைப் பிரித்துப் படித்துக் கொண்டிருப்பார்கள். இதைப் போலத்தான் இந்த விஷயத்தையும் நாம் அணுக வேண்டும். ஆண்கள், பெண்களை தனித்தனியாகப் படிக்க வைக்கும்போது தான் அவர்களுடைய சிந்தனையில் எதிர்பாலினத்தின் மீதான சிந்தனை அதிகமாகிறது. அதேபோல், இருபாலர் கல்வி நிலையங்களாக இருந்தாலும், அதில் அவர்களை நாம் இயல்பாக இருக்க விடுகிறோமோ அந்தளவுக்கு அவர்களுடைய மனதும் சிந்தனையும் இயல்பாக இருக்கும். மாணவர்களையும் மாணவிகளையும் சரிசமமாக நாம் பார்க்கும்போது, அவர்களுக்கும் பாலின வேறுபாடு தெரியாது. இருபாலர் பள்ளிளிலும் ஆண்- பெண் பேசக்கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பது வீண். நாம் எதைச் செய்யக்கூடாது என்று கட்டுப்படுத்துகிறோமோ அதன் மீது மாணவர்களுக்கு ஆர்வம் அதிகமாகும். ஏன் பேசக்கூடாது என்ற கேள்வி எழும். அவர்களுடைய சிந்தனை முழுக்க அதைச் சுற்றியோ சுழலும்," என்கிறார். பருவமெய்தும் காலகட்டத்தில் எதிர்பாலினத்தின் மீதான ஈர்ப்பு என்ன மாதிரியானது என்பதைப் புரிந்துகொள்வதில், இதுபோல் தனித்தனி பள்ளிகளில் கல்வி பயிலும் மாணவர்கள் மிகவும் சிரமப்படுவதாகக் கூறுகிறார் திவ்யபிரபா. இதுமட்டுமின்றி, "அந்த ஈர்ப்பு கட்டுப்படுத்தப்படும்போது, அது மறைக்கப்படும். அப்படி மறைத்து வைத்திருக்கும்போது, எது உண்மை என்பதை அவர்கள் தெரிந்துகொள்வது தடுக்கப்படுகிறது. அது சிக்கலைத்தான் பெரிதாக்கும். இதுவே இருபாலினத்தவரும் ஒன்றாகப் பயிலும் கல்வி நிலையங்களில் இருதரப்புக்குமான தொடர்பு இயல்பானதாகவும் வெளிப்படையாக அணுகும் வாய்ப்பும் இருக்கும். அது எதிர்பாலினத்தின் மீதான புரிதலை எளிதாக்கும்," என்கிறார். "பெண்கள் பேசினால் தலையைக் குனிந்து கொள்வேன்" ஆண்கள் பள்ளியிலேயே படித்துவிட்டு வரும் ஆண்கள் பணியிடத்தில் தன் மேலதிகாரியாக ஒரு பெண் வரும்போது அதை ஏற்றுக்கொள்ள சிரமப்படுவதாகவும் பெண்கள் தங்களுடைய ஆண் மேலதிகாரியிடம் வெளிப்படையாகப் பேசி தங்களுக்கான வாய்ப்புகளை முழுதாக எடுத்துக்கொள்ள சிரமப்படுவதாகவும் திவ்யபிரபா கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் அதோடு, "இந்த பாலின ஏற்றத்தாழ்வை பலரும் எதிர்கொள்கிறார்கள். இதுவே சிறுவயதிலிருந்து அனைத்து பாலினத்தவர்களுக்குமான இடைவெளியைக் குறைக்கும் வகையில் கல்வி நிலையங்கள் அமைவது, இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்கும்," என்று கூறுபவர், "சிறு வயதிலிருந்தே எதிர்பாலினத்தவரோடு பேசிப் பழகுவதில் எந்தத் தவறும் இல்லை, எதிர்பாலினத்தவரிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற புரிதலை வழங்குவதற்கும் இதன்மூலம் சமுதாயத்தில் ஆண்-பெண் சமம் என்ற கருத்து உருவாகவும் இது உதவும்," என்றார். ஆண்-பெண் ஒன்றாகப் பயின்ற பள்ளியாக இருந்தாலும், நியூஆல் என்ற ஆண் மாணவர் படித்த பள்ளியில் ஆண்களும் பெண்களும் பேசிக் கொள்ளக்கூடாது என்ற விதி இருந்தது. இதனால், மாணவிகளுடன் நட்பு கொள்ளவோ, குறைந்தபட்சம் பேசுவதற்கான வாய்ப்போகூட அவருக்குக் கிடைக்கவில்லை. இதனால், பள்ளிப்படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்குச் சென்றபோது அவர் சிரமங்களை எதிர்கொண்டார். "நான் படித்த பள்ளியில், பெண்களோடு பேசினாலே திட்டுவார்கள். அதனால் அதுகுறித்து எதுவும் தெரிந்திருக்கவில்லை. பெண்கள் என்றால் மரியாதையும் பயமும் தான் ஏற்படும், பேசவே தயக்கமாக இருக்கும். ஆண் நண்பர்களுடனேயே பழகியபோது அனைவரும் விளையாட்டாக கேலி பேசிச் சிரித்துக் கொண்டு, கொண்டாட்ட மனநிலையுடனேயே இருப்போம். பெண் நண்பர்களுடன் பழகத் தொடங்கியபோது, அவர்கள் ஆண் நண்பர்களைப் போலன்றி, அக்கறையோடு நடந்து கொண்டது புதிய உணர்வாக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்பு படம் பள்ளிக் காலத்தின்போது பெண்களிடம் பேசாமல் இருப்பது நல்ல பழக்கம் என்பது போன்ற எண்ணம் தான் இருந்தது. கல்லூரியில் சேர்ந்தபோது சக பெண் நண்பர்களிடம் இயல்பாகப் பேசுவதற்கு இது பெரிய தடையாக இருந்தது. பெண்கள் யாராவது என்னிடம் வந்து பேசினால் தலையைக் குனிந்து கொள்வேன், சரியாக பதில் சொல்லமாட்டேன். ஏன் இப்படிச் செய்தேன் என்று என்னாலேயே புரிந்துகொள்ள முடியவில்லை. அப்படிச் செய்யக் கூடாது என்று நினைப்பேன். ஆனால், தானாகவே அப்படிச் செய்துவிடுவேன். இது மாறுவதற்கு மிக அதிகமான காலம் எடுத்தது," என்றார். "தமிழ்நாட்டு பள்ளிகளில் பாலின பாகுபாடு இல்லை" இதுமட்டுமின்றி, "பள்ளிப் பருவத்தின்போது அம்மாவைத் தாண்டி வேறு எந்த பெண்ணிடமும் பேசியிருக்காத காலகட்டத்தில், பெண்கள் என்றாலே நல்ல குணமுடையவர்கள், எந்தத் தவறுமே செய்யமாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்தேன். வெளியுலகத்திற்கு வந்து இயல்பாக இருபாலினத்தினரிடமும் பழகத் தொடங்கிய பிறகுதான், ஆண்களில் எப்படி அனைத்து விதமானவர்களும் இருக்கிறார்களோ, அதேபோல் பெண்களிலும் இருக்கிறார்கள் என்பதை நான் புரிந்துகொண்டேன். அப்போதும்கூட, பெண்களாக என்னிடம் வந்து பேசினால் மட்டுமே நான் பேசினேன். நானாகச் சென்று பேசுவதற்கு நீண்ட காலம் எடுத்தது," என்று கூறுகிறார். தமிழ்நாட்டிலுள்ள கல்விமுறையிலும், கேரளாவைப் போன்ற முன்னெடுப்பு சாத்தியமாகுமா என்பது குறித்து பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷிடம் பேசினோம். அவர், "தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வியைப் பொறுத்தவரை, ஆண்கள், பெண்கள் என்ற பாலின பாகுபாடு என்பதே இல்லை. அனைவரையும் சமமாகத்தான் நடத்துகிறோம். கேரளாவில் எடுத்த நடவடிக்கையைப் போல் இங்கும் செய்ய வேண்டிய தேவை உள்ளதா என்பது கல்விக் கொள்கை அளவில் எடுக்க வேண்டிய முடிவு. இதுகுறித்து முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவருடைய அறிவுரையின்படி செயல்படுவோம்," என்று கூறினார். https://www.bbc.com/tamil/india-62312163
  8. கோவையில் அதிர்ச்சி சம்பவம்: `மொட்டை அடித்தனர், பைப்பால் தாக்கினர், விடிய, விடிய சித்ரவதை` மோகன் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் `நாங்க எந்த இடையூறும் இல்லாமல் கிடைத்த வேலையைப் பார்த்துட்டு பிழைச்சிட்டிருந்தோம். எங்களை திருடங்க மாதிரி பிடிச்சுட்டு போயி அடைச்சு வச்சு மொட்டை அடிச்சது மட்டுமில்லாம பைப்பால அடிச்சு சித்ரவதை பண்ணிட்டாங்க` என்று குமுறுகிறார் கோவையில் தெருவோரம் வசித்து வரும் முகமது ஹூசைன். கோவையில் தனியார் ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டவர்களுள் முகமது ஹூசைனும் ஒருவர். இவரைப் போல தெருவோரம் வசித்து வந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தலுக்கு உள்ளானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்களை அவமானப்படுத்தியது மட்டுமில்லாமல் மனித உரிமை மீறலுக்கு உட்படுத்தியுள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்கள் முறையிடுகின்றனர். கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூர் என்கிற இடத்தில் தனியார் தொண்டு நிறுவனம் முன்பு இயங்கி வந்தது. அந்த கட்டடத்தை தமிழ்நாடு முழுவதும் வெவ்வேறு ஊர்களில் இருந்து வந்த சிலர் வாடகைக்கு எடுத்து ஆதரவற்றோருக்கான முகாம் நடத்தி வந்தனர். அந்த இடம், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த அன்பு அனாதை ஆசிரமம் என்கிற தனியார் தொண்டு நிறுவனம் பெயரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஜூலை 24ஆம் தேதி நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த முகவரியில் அடைத்து வைக்கப்பட்டு துன்புறுத்தப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதைத்தொடர்ந்து தொண்டாமுத்தூர் பொதுமக்களும் அரசியல் கட்சியினரும் அங்கு கூடியதால் அந்த பகுதி பரபரப்புடன் காட்சியளித்தது. அங்கு நடந்த சலசலப்பில் ஆசிரமத்தின் வாகனம் கவிழ்க்கப்பட்டது. இதனால் அங்கு காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர். யார் இவர்கள், இந்தப் பகுதிக்கு எப்படி வந்தார்கள், இவர்களுக்கு என்ன ஆனது என்பதைப் பார்ப்போம். கடந்த ஜூலை 22ஆம் தேதி கோவை மாநகர காவல்துறையின் ஆட்கடத்தல் தடுப்பு பிரிவு கோவை மாநகர் முழுவதும் சோதனை நடத்தியது. அதில் மாநகர் முழுவதிலும் இருந்து தெருவோரம் வசித்து வந்த ஆதரவற்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர். இவர்களில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களும் அடங்குவர். இவர்கள் அனைவரையும் தொண்டாமுத்தூர், கெம்பனூர் பகுதியில் உள்ள அன்பு அனாதை ஆசிரமத்தில் தங்க வைத்து பராமரிக்க முடிவு செய்து அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். சிங்கப்பூரில் கோட்டாபயவை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை - நாட்டை விட்டு வெளியேறுகிறாரா? குழந்தை சித்ரவதை: தாய் போலீஸிடம் வெளியிட்ட அதிர்ச்சி காரணங்கள் சமூக ஊடக தகவலுக்குப் பிறகு நடவடிக்கை ஆனால் தங்களுடைய விருப்பத்தை மீறியும் தாங்கள் அழைத்து செல்லப்பட்டதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். அன்பு அனாதை ஆசிரமத்தில் தங்கியிருந்தவர்களை நிர்வாகிகள் மொட்டை அடித்துள்ளனர். வயதானவர்களை பிவிசி பைப் கொண்டு அடித்தும் துன்புறுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் பிபிசி தமிழிடம் கூறினர். ஜூலை 24ஆம் தேதி அன்பு அனாதை ஆசிரமம் தொடர்பான செய்தி பரவிய பிறகு பேரூர் தாசில்தார் மற்றும் காவல்துறையினர் அங்கு வந்து பாதிக்கப்பட்டவர்களை மீட்டனர். உரிய அனுமதியின்றி முகாம் இயங்கி வந்தது முதல் கட்ட விசாரணையில் காவல்துறையினர் அறிந்தனர். அதன் பின்னர் முகாம் நடத்தி வந்த ஜூபின், செந்தில்குமார், செல்வின், பாலசந்திரன், அருண், ஜார்ஜ் ஆகிய ஆறு பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டனர். இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய பேரூர் தாசில்தார் இந்துமதி, `அந்த கட்டிடத்தில் இயங்கி வந்த பிளஸ் இந்தியா என்கிற நிறுவனம் பல வருடங்களாக செயல்பாட்டில் இல்லை. வெளியூரிலிருந்து வந்த சிலர் ஆதரவற்றோருக்கு முகாம் நடத்தப்போவதாக அந்த கட்டடத்தை வாடகைக்கு எடுத்துள்ளனர். ஆனால் இத்தகைய முகாம் தொடர்பாக எந்த முன் அனுமதியும் பெறவில்லை. இதனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து மீண்டும் அவர்கள் இடத்தில் கொண்டு விட்டுவிட்டோம்` என்றார். அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களிடம் பிபிசி தமிழ் சார்பில் நேரடியாக பேசினோம். அதில் சிலரது முறையீட்டை இங்கே வழங்குகிறோம். `என் பெயர் இருதய சாமி. எனக்கு கோவை தான் சொந்த ஊர். ஆனால் கடந்த 15 வருடங்களாக கோவை அரசு மருத்துவமனையை சுற்றிய பகுதிகளில் வசித்து கிடைத்த வேலைகளை செய்து வந்தேன். அரசு மருத்துவமனை முன்பு உணவு வழங்குவார்கள் என்பதால் அதைப் பெற அங்கு செல்வேன். என்னிடம் வந்த தன்னார்வலர்கள் சிலர் மொட்டை அடித்து உணவு மற்றும் உடை வழங்குவதாக கூறியதால் அவர்களுடன் சென்றேன். அங்கு சுமார் 150 பேர் அழைத்துவரப்பட்டிருந்தனர். தொண்டாமுத்தூர் ஊர் மக்கள் தலையிட்டதனால் தான் இந்த விஷயம் வெளியில் தெரியவந்தது.` என்றார். `என் பெயர் முகமது ஹுசைன். கோவை தான் சொந்த ஊர் என்றாலும் 20 வருடங்களாக தெருவோரங்களில் தான் வசித்து வருகிறேன். காகிதம், பாட்டில் போன்ற பொருட்களை சேகரித்து அதன் மூலம் கிடைக்கும் வருவாய் வைத்து செலவுகளை பார்த்து கொள்வேன். சில நேரங்களில் தன்னார்வலர்கள் உதவி செய்வார்கள். கடந்த வெள்ளிக்கிழமை மதியம் வந்தவர்கள் வலுக்கட்டாயமாக என்னை அழைத்துச் சென்றார்கள். அவர்கள் யாருமே கோவையைச் சேர்ந்தவர்கள் கிடையாது. முடி வெட்ட வேண்டும் என வற்புறுத்தினார்கள். முதலில் நான் அதற்கு மறுப்பு தெரிவித்ததால் என்னை காலில் அடித்தார்கள். வயது முதிர்ந்த பலரையும் பிவிசி பைப் மற்றும் மரக் கட்டை கொண்டு மூர்க்கமாக தாக்கினார்கள். இத்தனை வருடங்களில் இது போல நடந்தது இல்லை. எங்களை ஒரு சில தினங்களில் விட்டுவிடுவதாகக் கூறி தான் அழைத்துச் சென்றார்கள். ஆனால் அங்கு சூழ்நிலை அவ்வாறாக இல்லை. தொண்டாமுத்தூர் மக்கள் தலையிட்டதால் தான் எங்களை சித்ரவதையிலிருந்து காப்பாற்ற முடிந்தது,` என்றார். `என் பெயர் ராஜேந்திரன். எனக்கு சொந்த ஊர் பழனிக்கு அருகே உள்ள ஆயக்குடி. கடந்த 25 வருடங்களாக கோவையில் தான் வசித்து வருகிறேன். என்னையும் வலுக்கட்டாயமாக தான் அழைத்துச் சென்றாற்கள். அங்கே இருந்தவர்கள் எங்கள் கைவசம் இருந்த பணத்தையும் பிடுங்கிவிட்டார்கள். ஆதரவற்றவர்களுக்காக டிரஸ்ட் நடத்துபவர்கள் ஏன் இவ்வளவு கடுமையாக நடந்து கொள்ள வேண்டும் எனப் புரியவில்லை. அங்கே வலுக்கட்டாயமாக அனைவருக்கும் மொட்டை அடித்தார்கள். அதற்கு சம்மதிக்காதவர்களை வயது வித்தியாசம் பார்க்காமல் அடித்து துன்புறுத்தினர்,` என்றார். தொண்டாமுத்தூர் ஆசிரமம் விவகாரம் தொடர்பாக உரிய விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் சமீரன் தெரிவித்துள்ளார். வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று மொட்டை அடித்து அவமானப்படுத்தியதோடு மட்டுமில்லாமல் கடுமையாக தாக்கி மனித உரிமை மீற்ல்களும் நடந்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர். இது தொடர்பாக மாநில மனித உரிமைகள் ஆணையத்தை தொடர்பு கொண்டு பேசும்போது, `கோயம்புத்தூரில் நிகழ்ந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விவரங்கள் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. விரிவான தகவல்களை சேகரித்து வருகிறோம்,' என்று அதன் அதிகாரிகள் தெரிவித்தனர். https://www.bbc.com/tamil/india-62309628
  9. இலங்கையில் இயல்புநிலை திரும்புகிறதா? எரிபொருள் நிலையங்களில் குறையும் கூட்டம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் தீவிரமடைந்துள்ள பொருளாதார நெருக்கடி இன்னும் அவ்வாறே காணப்படுகின்ற போதிலும், அதனை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மிக வேகமாக முன்னெடுத்து வருகின்றது. புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றதன் பின்னரான காலப் பகுதியில் அத்தியாவசிய பொருட்களுக்கான வரிசைகள் குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக சமையல் எரிவாயு வரிசைகள் பெருமளவு குறைவடைந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது. சமையல் எரிவாயு விநியோகத்தை தற்போது வழமை போன்று விநியோகிக்க முடியும் என அரசாங்கம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. அத்துடன், டீசல் மற்றும் பெட்ரோலை பெற்றுக்கொள்வதற்கான வரிசைகள் அவ்வாறே காணப்படுகின்ற போதிலும், அதனை வழமைக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது. இதன்படி, வாகன இலக்கத் தகடுகளின் இறுதி இலக்கத்தை அடிப்படையாகக் கொண்டு எரிபொருளை விநியோகிப்பதற்கு தற்போது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது. எரிபொருள் பெற புதிய வசதி பட மூலாதாரம்,@LANKAIOCPLC படக்குறிப்பு, நாளாந்த எரிபொருள் விநியோகத்தை உரிய வகையில் முன்னெடுக்க முடியாமை காரணமாகவே, கியூ ஆர் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதாக இலங்கை எரிபொருள் அமைச்சர் காஞ்சன விஜசேகர தெரிவித்துள்ளார். எரிபொருள் விநியோகம், மூன்று கட்டங்களாக பிரித்து, வாகன இலக்கத் தகடுகளின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் விநியோகிக்கப்படுகின்றது. அத்துடன், கியூ ஆர் இலத்திரனியல் நடைமுறையொன்றும் தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES https://fuelpass.gov.lk/ என்ற இணையத்தளத்தில் பதிவு செய்து, அதனூடாக கிடைக்கும் கியூ ஆர் இலக்கத்தை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் காண்பித்து, அதனூடாக குறிப்பிட்டளவு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை மக்கள் நிராகரித்த ரணில் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்ற முரண்: அரசியலமைப்பில் தீர்வு உண்டா? கோவையில் அதிர்ச்சி சம்பவம்: `மொட்டை அடித்து விடிய, விடிய சித்ரவதை` அந்நிய செலாவணி சர்ச்சை தொடர்ந்து காணப்படுகின்ற நிலையில், எதிர்வரும் 12 மாதங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இலங்கை ஜனாதிபதி மாளிகை முன்பாக கண்காணிப்பில் ஈடுபட்டிருக்கும் அதிரடிப்படை கமாண்டோ வீரர்கள் நாளாந்த எரிபொருள் விநியோகத்தை உரிய வகையில் முன்னெடுக்க முடியாமை காரணமாகவே, கியூ ஆர் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டதாகவும் அவர் கூறுகின்றார். இதேவேளை, எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக அனைத்து முச்சக்கரவண்டிகளும், தமது அதிகாரத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் பதிவு செய்யப்பட வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவிக்கின்றார். ஜுலை மாதம் 31ம் தேதிக்கு முன்னர், அனைத்து முச்சக்கரவண்டிகளும் பதிவு செய்யப்பட வேண்டும் என அவர் கூறுகின்றார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 தாம் பதிவு செய்யும் போலீஸ் நிலைய அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காணப்படுகின்ற எரிபொருள் நிரப்பு நிலையங்களின் ஊடாக மாத்திரம், முச்சக்கரவண்டிகளுக்கு எரிபொருளை விநியோகிக்க எதிர்வரும் மாதம் முதலாம் தேதி முதல் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் குறிப்பிடுகின்றார். மேலும், மின்பிறப்பாக்கி உள்ளிட்ட எரிபொருள் ஊடாக பயன்படுத்தப்படும் இயந்திரங்களுக்கு தேவையான எரிபொருளை பெற்றுக்கொள்வதற்கு பிரதேச செயலகங்கள் பதிவு செய்ய வேண்டும் என அமைச்சர் தெரிவிக்கின்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES இவ்வாறு பதிவு செய்யப்படுவதன் ஊடாக, அருகாமையிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து இயந்திரங்களுக்கு எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் கூறுகின்றார். பஸ் போக்குவரத்து நடவடிக்கைகள் படிப்படியாக வழமைக்கு திரும்பி வருகின்ற நிலையில், பஸ்களில் தொடர்ந்தும் சனநெரிசல் காணப்படுவதை அவதானிக்க முடிகின்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES அத்தியாவசிய பொருட்கள் வழமை போன்று கிடைத்தாலும், அத்தியாவசிய பொருட்களுக்கான விலைகள் தொடர்ந்தும் அதிகரித்த நிலையிலேயே காணப்படுகின்றன. கடந்த காலப் பகுதிகளுடன் ஒப்பிடுகையில் பொருட்களில் விலைகள் அவ்வாறே பல மடங்காக அதிகரித்திருப்பதை காண முடிகின்றது. புதிய ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க பதவி பிரமாணம் எடுத்துக் கொண்ட பிறகு, எரிபொருள் வாங்க வரும் வாகன ஓட்டிகளின் எண்ணிக்கை, முந்தைய வாரங்களுடன் ஒப்பிடும்போது படிப்படியாக குறைந்து வருகிறது. https://www.bbc.com/tamil/sri-lanka-62310384
  10. கார்கில் போர் தோல்வியை எப்படி பார்த்தது பாகிஸ்தான் ராணுவம்? ஷுமைலா ஜாஃப்ரி பிபிசி செய்திகள் இஸ்லாமாபாத் 29 ஜூலை 2019 புதுப்பிக்கப்பட்டது 26 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES (இன்று கார்கில் தினம் என்பதால் இந்த கட்டுரை பகிரப்படுகிறது) கார்கில் சண்டை தொடர்பாக இந்தியாவிலும் பாகிஸ்தானிலும் நிறைய புத்தகங்கள் எழுதப்பட்டுள்ளன. அந்தச் சண்டையில் வெளிவராத தகவல்கள் அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளன. ``கார்கில் தொடங்கி ஆட்சி மாற்றம் வரை - பாகிஸ்தானை உலுக்கிய நிகழ்வுகள்'' என்ற தலைப்பில் நசீம் ஜாஹ்ரா எழுதிய புத்தகமும் அவற்றில் ஒன்று. பிபிசி செய்தியாளர் ஷுமைலா ஜெப்ரி, புத்தகத்தின் ஆசிரியர் நசீம் ஜாஹ்ராவுடன் பேசினார். புத்தகத்தில் அவர் விவரித்துள்ள நிகழ்வுகள் பற்றி அவர் கலந்துரையாடினார். இந்தியாவின் நிர்வாகத்தில் உள்ள காஷ்மீர் பகுதியில் சில மலை சிகரங்களைக் கைப்பற்றுவது தான் கார்கில் போரின் முதலாவது திட்டமாக இருந்தது என்று நசீம் ஜாஹ்ரா கூறினார். மலைகளின் உச்சியில் கைப்பற்றப்படும் இடங்களில் இருந்து திடீர் தாக்குதல்கள் நடத்தி ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலையை முடக்குவதும் அந்தத் திட்டத்தில் அடங்கும் என்றார். அந்தச் சாலை மிகவும் முக்கியமானது. காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்தினருக்குத் தேவையான பொருட்களைக் கொண்டு செல்வதற்கான ஒரே வழித்தடம் அது மட்டும் தான். இவ்வாறு செய்வதால் நிலைமை மோசமாகும் என்றும், காஷ்மீர் பிரச்னை பற்றி பேச்சு நடத்தும் கட்டாயம் இந்தியாவுக்கு ஏற்படும் என்றும் கார்கில் போருக்கு திட்டமிட்டவர்கள் நம்பினர் என்று நசீம் கூறினார். ஆனால் பாகிஸ்தான் வீரர்கள் போரிட்ட விதம் - அவர்களுடைய தைரியம் - உலகின் எட்டாவது அதிசயம் போல அமைந்துவிட்டது. ``கார்கில் முயற்சி பற்றி பாகிஸ்தானியர்கள் பெருமை கொள்ளும் அதே நேரத்தில் வருத்தமும் கொள்ள வேண்டும் என்பது தான் குறிப்பிடத்தக்க விஷயம். இளம் வீரர்கள் 17 - 18,000 அடி உயரத்தில் உள்ள சிகரத்துக்கு, பாறைகள் மீது ஏறி, குளிர் பருவத்தில், மோசமான சூழ்நிலைகளைத் தாண்டி சென்றார்கள் என்பது பெருமைப்பட வேண்டிய விஷயம். ஆனால் அவர்கள் எதற்காக அங்கு அனுப்பப் பட்டார்கள் என்ற கேள்வியும் எழுகிறது'' என்று அவர் கூறியுள்ளார். ``ஆரம்பத்தில் இந்திய ராணுவத்தினருக்குப் பெரிய பாதிப்புகளை பாகிஸ்தானிய வீரர்கள் ஏற்படுத்தினர். என்ன நடந்தது என்று இந்திய ராணுவத்துக்கே தெரியவில்லை.பாகிஸ்தானிய வீரர்களை அவர்களுடைய இடத்தில் இருந்து சில மணி நேரங்கள் அல்லது சில நாட்களில் தூக்கி எறிந்துவிடுவோம் என்று இந்திய ராணுவ ஜெனரல்கள் கூறினர்'' என்றும் நசீம் ஜாஹ்ரா தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,PIB பாகிஸ்தானிய வீரர்கள் மலையின் உச்சியில் இருந்ததால், உயரமான இடத்தில் இருந்து இந்திய வீரர்கள் மீது தாக்குதல் நடத்துவது அவர்களுக்கு எளிதாக இருந்தது. ஆனால் அதன் பிறகு நிலைமை மாறிவிட்டது என்று ஜாஹ்ரா குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியுள்ள விஷயங்கள் பற்றி கருத்து பெறுவதற்கு பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை. ``பெரிய முட்டாள்தனம்'' என்ன நடந்திருக்கிறது என்பதை உணர்ந்த பிறகு, இதுபோன்ற நடவடிக்கைகளில் பொதுவாகப் பயன்படுத்தப்படாத போபர்ஸ் பீரங்கிகளை இந்திய ராணுவம் கொண்டு வந்தது. ``கார்கில் போரில் நிலைமையை மாற்றியது எது என்று நீங்கள் சொல்ல வேண்டுமானால், அது போபர்ஸ் பீரங்கிகள் தான். பாகிஸ்தானியர்கள் முடக்க விரும்பிய ஸ்ரீநகர் - லே நெடுஞ்சாலையில் இந்திய ராணுவத்தினர் போபர்ஸ் பீரங்கிகளை நிலைநிறுத்தினர். மலைச் சிகரங்களை போபர்ஸ் பீரங்கிகள் சுக்குநூறாக உடைத்துவிட்டன என்பதை இந்தியா மற்றும் பாகிஸ்தான் தரப்பினர் உறுதி செய்கின்றனர். மேலே இருந்து இந்திய விமானப் படை தொடர்ந்து குண்டுகள் வீசியது. கார்கில் மலைகளில் இருந்து இறங்கி வரும் போதுகூட பாகிஸ்தான் ராணுவத்துக்கு பெருமளவு உயிரிழப்புகள் ஏற்பட்டது'' என்று நசீம் ஜாஹ்ரா தெரிவித்துள்ளார். நரேந்திர மோதி காஷ்மீருக்கு போகாமல் ஜம்முவுக்கு மட்டும் செல்வது ஏன்? யாசின் மாலிக்: காஷ்மீர் விடுதலை கோரி ஆயுதம் எடுத்து பிறகு கைவிட்ட இவர் யார்? ``அவர்கள் திரும்பி வருவதற்கு சாலையோ அல்லது வாகனங்கள் செல்லும் பாதையோ கிடையாது. நட்புறவான சூழலிலும் அவர்கள் இறங்கி வரவில்லை. 16-18 ஆயிரம் அடி உயரமான மலைகளில் இருந்து இறங்கி வருவது, சரிவுகள் நிறைந்த பகுதிகளைக் கடந்து வருவது, குளிரில் தாண்டி வருவது சிரமமானது. தங்களுக்கு வாய்ப்பு கிடைத்ததும், இந்திய வீரர்கள் சரியான தாக்குதல் நடத்தினர். அது சிறிய போர், ஆனால் உக்கிரமாக நடந்த போர்.'' கார்கிலில் இந்தியா தனது விமானப் படையை நன்றாகப் பயன்படுத்தியது என்று நசீம் ஜாஹிர் கூறியுள்ளார். ஆனால் பாகிஸ்தான் ராணுவம் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைத் தாண்டிச் சென்ற பிறகுதான் கார்கில் போர் பற்றியே பாகிஸ்தான் விமானப் படைக்குத் தெரியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். கார்கில் போரில் பாகிஸ்தானியர்கள் எத்தனை பேர் கொல்லப்பட்டனர் என்ற இறுதி தகவல் எதுவும் இல்லை என்கிறார் அவர். ``300 பேர் இறந்ததாக சிலர் கூறுகின்றனர். இல்லை, சுமார் 2000 பேர் இறந்தனர் என சிலர் கூறுகின்றனர். ஆனால் அநேகமாக அங்கே 2000 பேர் செல்லவில்லை. ராணுவத்தினரிடம் நான் பேசிய வரையில், 1965 அல்லது கிழக்கு பாகிஸ்தான் சம்பவங்களின் போது கூட இப்போது (கார்கிலில்) ஏற்பட்ட அளவுக்கு உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றும், அது மிகப் பெரிய முட்டாள்தனம் என்றும் அவர்கள் கூறினர்'' என்று நசீம் ஜாஹ்ரா குறிப்பிட்டுள்ளார். `காஷ்மீர், சியாச்சின், கார்கில்' கார்கில் திட்டம் பல ஆண்டுகளாகவே பரிசீலனையில் இருந்து வந்திருக்கிறது என்றும், ஆனால் 1999ல் அமல்படுத்தப்பட்டது என்றும் நசீம் ஜாஹ்ரா கூறியுள்ளார். ``பெனாசிர் புட்டோவிடம், ஜெனரல் பர்வேஸ் முஷாரப் இந்தத் திட்டத்தை அளித்தார். அநேகமாக ராணுவ நடவடிக்கைகள் பிரிவின் டைரக்டர் ஜெனரலாக இருந்தபோது இதை அளித்திருக்கிறார். அதை பெனாசிர் நிராகரித்துவிட்டார். முன்னதாக ஜெனரல் ஜியா-உல்-ஹக் ஆட்சியின் போதும் இதுபற்றி பேசப் பட்டிருக்கிறது'' என்று நசீம் ஜாஹ்ரா குறிப்பிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீரில் கைதான லஷ்கர் தீவிரவாதி பாஜக உறுப்பினரா? காஷ்மீர் ஃபைல்ஸ்: இவ்வளவு சர்ச்சை ஏன்? படத்தை பாஜக ஆதரிப்பதன் காரணம் என்ன? கார்கில் நடவடிக்கைக்கு முக்கிய காரணமே காஷ்மீர் பிரச்னை தான் என்று நசீம் கூறியுள்ளார். ``இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான சர்ச்சை உயிர்ப்புடனேயே உள்ளது, சில நேரம் மவுன யுத்தமாக இருக்கும், சில நேரம் மோதல்களாக இருக்கும். இந்தச் சண்டையில் காஷ்மீரிகளும் பாதிக்கப்படுவர். காஷ்மீர் தான் முக்கிய பிரச்னை என்பதை புல்வாமா, பாலகோட் சம்பவங்கள் வெளிப்படுத்தின; மற்ற விஷயங்கள் இந்தப் பிரச்னையின் தொடர்ச்சியாகத் தான் நடைபெறுகின்றன என்பது தெரிந்தது'' என்றும் நசீமா தெரிவித்துள்ளார். கார்கில் ஆக்கிரமிப்பை பாகிஸ்தான் ராணுவம் செய்ததற்கு, வேறொரு விஷயமும் உத்வேகமாக அமைந்திருந்தது என்றும் அவர் விவரித்துள்ளார். ``இந்தியா 1984ல் கைப்பற்றிய சியாச்சின் பிரச்னையை இரு நாடுகளும் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்பது மற்றொரு பிரச்னை'' என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நான்கு ஜெனரல்கள் குழு' நான்கு ஜெனரல்களைக் கொண்ட குழு தான் கார்கில் திட்டத்தை அமல்படுத்தியது என்று நசீம் ஜாஹ்ரா கூறியுள்ளார். அப்போதைய ராணுவ தலைமைத் தளபதி பர்வேஸ் முஷரப், வடக்குப் பகுதிகளின் படை கமாண்டர் மேஜர் ஜெனரல் ஜாவித் ஹசன், ஜெனரல் ஸ்டாஃப் பிரிவு தலைவர் லெப் ஜெனரல் அஜீஸ் கான், 10வது படைப் பிரிவு கமாண்டர் லெப் ஜெனரல் மெஹமூத் அஹமது ஆகியோர் தான் இதைச் செய்தார்கள். ராணுவத்தின் மற்ற பிரிவுகளின் தலைவர்களுக்கு இந்த நடவடிக்கை பற்றி தெரியாது. பட மூலாதாரம்,GETTY IMAGES ``எல்லைக் கட்டுப்பாட்டு கோடு பகுதியில் நான்கு ஜெனரல்கள் பணியில் இருந்தனர். காஷ்மீர் பிரச்னையில் அவர்கள் ஆர்வமாக இருந்தனர். பாகிஸ்தானில் மக்கள் அரசுக்கும் ராணுவத்திற்கும் இடையிலான உறவுகள், ராணுவத்தினரின் நிலைப்பாட்டை சார்ந்ததாகவே இருந்தது. பிரச்னைகள் வந்தால் அதை சமாளித்துவிட முடியும் என்று ஜெனரல்கள் அறிந்திருந்தனர். முன்பும் அப்படி நடந்திருக்கிறது.'' ஆனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின், முறைப்படியான ஒப்புதல் இல்லாமல் கார்கில் நடவடிக்கையில் ஈடுபட்டதன் மூலம், தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமருக்கான அதிகாரம் குறித்த கொள்கையை நான்கு ஜெனரல்களும் மீறிவிட்டனர் என்று நசீம் ஜாஹ்ரா நம்புகிறார். 1999 பிப்ரவரியில் நவாஸ் ஷெரீப் மற்றும் வாஜ்பாயி இடையே லாகூரில் கையெழுத்தான அறிவிக்கையை நசீம் ஜாஹ்ரா நினைவுகூர்ந்துள்ளார். பேச்சுவார்த்தை என்ற கொள்கையின் அடிப்படையில் இருதரப்பு உறவுகளில் புதிய அத்தியாயத்தைத் தொடங்குவதற்கு இரு நாடுகளும் அதில் ஒப்புக் கொண்டிருந்தன. `ஜெனரல்களின் ஆட்சேபங்கள்' ஜெனரல் பர்வேஸ் முஷாரப் 1999 மே 16 ஆம் தேதி கார்கில் பற்றி படைப் பிரிவுகளின் தலைவர்களுக்குத் தகவல்களைத் தெரிவித்தார் என்று நசீம் ஜாஹ்ரா தெரிவித்துள்ளார். பட மூலாதாரம்,AFP ``அப்போது பல ஜெனரல்களும், கார்கிலில் பாகிஸ்தான் ராணுவம் என்ன செய்து கொண்டிருந்தது என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். ஆனால் அப்போதைய சூழ்நிலை மாறுபட்டிருந்தது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். கார்கில் நடவடிக்கையைத் தொடங்கியவர்கள், தாங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், சாதகமான நிலையில் இருப்பதாகவும், நம்மை யாராலும் அசைக்க முடியாது என்றும் மற்றவர்களிடம் கூறி வந்தனர். நிறைய பகைமை இருந்ததாகத் தெரிகிறது. ஆனால் அப்போதும் கூட சில ஜெனரல்கள் தெளிவாக, கார்கில் நடவடிக்கைகள் பற்றி கேள்விகள் எழுப்பியுள்ளனர்.'' `கார்கிலின் வெற்றியாளர்' பிரதமர் நவாஸ் ஷெரிபுக்கு 1999 மே 17ல் அளித்த தகவலின் போது தான் கார்கில் நடவடிக்கைகள் பற்றி தெரிவிக்கப்பட்டது என்று நசீம் ஜாஹ்ரா கூறியுள்ளார். எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ராணுவத்தினர் தாண்டி சில வாரங்கள் கழித்து தான் பிரதமருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்கிறார் நசீம் ஜாஹ்ரா. ``நமது ராணுவத்தினர் சிலர் எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை கடந்துவிட்டதாக, நிலைமையைப் புரிந்து கொண்ட அப்போதைய வெளியுறவு அமைச்சர் சர்ட்டஜ் அஜீஸ், பிரதமரை தொடர்பு கொண்டு, இதுகுறித்து இந்தியாவுடன் பேசி வருவதாகத் தெரிவித்தார்.'' ``லாகூர் உச்சி மாநாட்டுக்குப் பிறகு பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன'' என்றும் நசீம் குறிப்பிட்டுள்ளார். காஷ்மீர் பெண்கள்: இயல்பு வாழ்க்கை கானல் நீரா? துயரங்களை ஓவியமாக வெளிப்படுத்திய காஷ்மீர் குழந்தைகள் பாகிஸ்தான் ஜெனரல் முஷரஃபின் சதித்திட்டத்தை ஒட்டு கேட்டு முறியடித்த இந்திய உளவு அமைப்பு ஆனால், தொடக்கத்தில் தனது நடவடிக்கை மூலம் காஷ்மீர் பிரச்னையை ராணுவத்தால் தீர்க்க முடியும் என்று நவாஸ் தெரீப் உண்மையில் திருப்தி கொண்டிருந்தார் என்று நசீம் ஜாஹ்ரா கூறியுள்ளார். ``சர்வதேசப் படைகள், குறிப்பாக அமெரிக்கா இதை ஏற்றுக் கொள்ளாது என்று சர்ட்டஜ் அஜீஸ் விளக்கியுள்ளார். அமெரிக்கா எப்போதும் இந்தியாவுக்கு ஆதரவாகவே உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். இல்லை சர்ட்டஜ் சாஹிப், பேச்சுவார்த்தை சந்திப்புகள் மற்றும் கோப்புகளை பரிமாறிக் கொள்வதன் மூலமாக காஷ்மீர் பிரச்னைக்கு ஒருபோதும் தீர்வு காண முடியாது என்று நவாஸ் ஷெரீப் அப்போது கூறியுள்ளார்'' என்றும் நசீம் தெரிவித்துள்ளார். கார்கில் நடவடிக்கையில் அங்கமாக இருந்த ஜெனரல் அஜீஸ் கான், நவாஸ் ஷெரீபை தொடர்பு கொண்டு, காயிதே அஜாம் முகமது அலி ஜின்னா பாகிஸ்தானை உருவாக்கினார், இப்போது காஷ்மீரை வெற்றி கொள்ள உங்களுக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று கூறியுள்ளார். ``காஷ்மீர் விவரிப்பு திரிக்கப்பட்டது'' ஜெனரல் முஷரப் கார்கில் நடவடிக்கையை எடுத்தபோது பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையில் உறவுகள் மேம்பட்டுக் கொண்டிருந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, வெற்றியை கொண்டாடும் இந்திய சிப்பாய்கள் ``வாஜ்பாயி பாகிஸ்தானுக்கு வந்தார். இந்தியப் பிரதமருக்கு பாகிஸ்தான் உற்சாக வரவேற்பு அளித்தது. அவர் பேச்சு நடத்துவதற்காக வந்திருந்தார். பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தன. பேச்சுவார்த்தைக்கு வருமாறு பின்னர் ஜெனரல் முஷரப் இந்தியாவுக்கு அழைப்பு விடுத்தார். பாகிஸ்தானுடன் பேச்சு நடத்த வருவதற்கு சம்மதிக்க வைப்பதற்காக அவர் இந்தியாவுக்குச் செல்ல வேண்டியிருந்தது.'' காஷ்மீர் நிகழ்வுகளை பாகிஸ்தான் தரப்பு விவரித்ததைக் கொண்டு அது பாகிஸ்தானுக்கு பயன் தந்தது என்று கூறினால், அது தவறானது என்கிறார் நசீம். ``உண்மைகள் இதற்கு ஆதரவாக இல்லை. பேச்சுவார்த்தை நடைமுறைகளை மீண்டும் தொடங்குவதற்கு பாகிஸ்தான் பல ஆண்டுகள் முயற்சி செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும் வகையில் அது தவறான நடவடிக்கையாக அமைந்துவிட்டது. 1971 மற்றும் சியாச்சினில் இந்தியா ஏற்கெனவே அடி கொடுத்துள்ள போதிலும், கார்கில் நடவடிக்கையில் ஈடுபட்டது மிகவும் பொறுப்பற்றத்தனம். பாகிஸ்தான் நற்பெயருக்கு அது பாதிப்பு ஏற்படுத்திவிட்டது.'' இருந்தபோதிலும், எந்த லாபமும் நட்டமும் நிரந்தரமானது அல்ல என்று நசீம் நம்புகிறார். தங்கள் கொள்கைகளை மறு ஆய்வு செய்வதற்கான வாய்ப்பு நாடுகளுக்கு கிடைக்கின்றன என்கிறார் அவர். (பிபிசி தமிழில் 29 ஜூலை 2019 வெளியான கட்டுரை இது) https://www.bbc.com/tamil/global-49147914
  11. சொல்வனம், இலக்கிய சிகரத்தில் வெளியான பேட்டி - பகுதி 2 3. உங்களுக்கு வாசிப்பில் எப்போது ஆர்வம் வந்தது? 4. குடும்பச் சூழலில் உங்களிடம் கிடைத்த புத்தகங்கள் என்னென்ன? பள்ளிப் பருவத்தில் எதெல்லாம் வாசிக்கக் கிடைத்தது? பதில்: கதைகளை ஓரளவுக்கு வாசிக்கக் கற்றுக் கொண்டது எட்டு, ஒன்பது வயதில் என நினைக்கிறேன். அப்போது நாளிதழ்களின் இணைப்பாக வரும் குழந்தைகளுக்கான பத்திரிகைகளையும், ராணி காமிக்ஸ் போன்ற புத்தகங்களையுமே படித்தேன். நான் ஊனமுற்றவன் என்பதால் வெளியே சென்று விளையாட அம்மா அனுமதிக்கவில்லை. படிக்க நிறைய நேரம் இருக்கும். ஒரே காமிக்ஸை அலுக்க அலுக்க திரும்பத் திரும்ப படிக்கும் அளவுக்கு. பிறகு எனக்கு நானே கதை சொல்ல ஆரம்பித்தேன். அதாவது தனிமையில் இருந்து எனக்கே நான் சொல்லிக் கொள்வேன். அதை பகற்கனவு என வகைப்படுத்தி விட முடியாது - துவக்கம், பல பிரச்சனைகள், தீர்வுகள், முடிவைக் கொண்ட சாகசக் கதைகள். பள்ளியில் என் நண்பர்களிடம் அக்கதைகளை எழுதிப் படிக்கக் கொடுப்பேன். அப்படித்தான் என் கற்பனை வளர்ந்தது. பிறகு எனக்கு பன்னிரெண்டு வயதிருக்கும் போது என் அப்பாவின் வங்கிக் கிளையில் ஒரு நூலகம் ஆரம்பித்தார்கள். அங்கு செய்திப் பத்திரிகைகளில் இருந்து வணிக நாவல்கள் வரை வரும். அவற்றை அவர் வீட்டுக்கு கொண்டு வருவார். அப்படித்தான் நான் பரவலாக படிக்க ஆரம்பித்தேன். கல்கி, அகிலன், சிவசங்கரி, அனுராதா ரமணன், பாலகுமாரன் எல்லாம் அறிமுகமானார்கள். “பொன்னியின் செல்வனை” அப்பா, அக்கா, நான் மூவரும் ஆளுக்கு ஒரு மணிநேரம் என வகுத்துக் கொண்டு படித்தது நினைவுள்ளது. எனக்கு ஏனோ கல்கியை விட அகிலனை அந்த காலத்தில் மிகவும் பிடித்திருந்தது. “சித்தரப் பாவை” நாவலை உருகி உருகிப் படித்தேன். வளர்ந்த பிறகு அது எவ்வளவு பொய் எனப் புரிந்து போனாலும் நாவலின் நாயகனான அரவிந்த மீதுள்ள பிரேமை ஒரு போது மறையவில்லை. குறிப்பாக அவன் தோட்டத்தில் கிடக்கும் ஒரு பூவை எடுத்து ரசித்து விட்டு அதைப் பற்றி சிலாகிக்கவோ ஒரு ஓவியம் வரையவோ செய்வோன். நாவலுக்கு முக்கியமில்லாத காட்சி தான். ஆனால் அது ரொம்ப முக்கியமாக எனக்குப் பட்டது. அது தான் அவனுடைய காதல். நாயகி மீதானது அதன் நீட்சி என நினைத்தேன். அகிலனின் மற்றொரு சிறுகதையில் ஒரு நாடோடி எதேச்சையாக ஒரு நாய்க்குட்டியை எடுத்து வளர்த்து பின்னர் அது இறந்து போக அவன் மனம் உடைவதாக வரும். அந்த கதையையும் என்னால் ரொம்ப காலத்துக்கு மறக்க முடியவில்லை. இன்னொரு சிறுகதையில் நாயகன் தன் இஸ்லாமியன் நண்பனின் தங்கையை காதலிப்பான் என நினைக்கிறேன். புர்கா அணிந்த அழகான இஸ்லாமிய பெண். பின்னர் என் பதின்பருவத்தில் அப்படி ஒரு பெண்ணை நானும் காதலித்தேன். என் வாழ்வின் மகத்தான கட்டமாக அது அமைந்தது. இப்படி அகிலன் என் இளமை முழுக்க என்னோடு இருந்திருக்கிறார். அதன் பிறகு என்னுலகினுள் பாலகுமாரன் வந்தார். எனக்கு அப்போது சுஜாதாவை விட பாலகுமாரனையே பிடித்திருந்தது. சுஜாதாவின் மொழி நுணுக்கங்கள், பாத்திர அமைப்பின் லாவகம் அப்போது எனக்குள் இறங்கவில்லை. ஆனால் பாலகுமாரனின் அன்னியோன்யமான குரல், பெரிய உலகம், மத்திய வர்க்க வாழ்வு, அதன் லட்சியவாதம், பெண் உளவியல், தன்னை ஏற்றுத் தகவமைக்கும் ஒரு பெண்ணுருவுக்கான ஒரு ஆணின் தவிப்பு, ஆன்மீகம், இளைஞர்களை நோக்கிய போதனை இதெல்லாம் பிடித்திருந்தது. முக்கியமாக பாலுணர்வுக்கென ஒரு கவித்துவத்தை, கம்பீரத்தை, நெகிழ்வை அவர் உருவாக்கினார். மேலும் அவர் சித்தரித்த ஆண்கள் நான் பார்த்த ஆண்களைப் போலில்லை. அவர்கள் சுலபத்தில் உடைந்து போகிறவர்களாக, பெண்களால் தேற்றப்பட வேண்டியவர்களாக இருந்ததும் எனக்குப் பிடித்திருந்தது. ஆனால் இப்போது யோசிக்கையில் பாலகுமாரனின் உலகில் பெண்களே இல்லை, முழுக்க பெண்ணுடல்கள் மட்டுமே, பெண்ணாளுமையை அவரது ஆண்கள் எடுத்துக் கொண்டிருந்தார்கள், ஆணாளுமையை பெண்கள் கொண்டிருந்தார்கள் எனத் தோன்றுகிறது. இந்த உலகம் எனக்கு அப்போது வெகுநெருக்கமாக இருந்தது. அப்போது சாதிக் எனும் ஒரு நண்பர் வாய்த்தார். அவர் என் அக்காவின் கணவரின் நண்பர். தீவிரமான பாலகுமாரன் உபாசகர். இருவருமாக பாலகுமாரனைப் பற்றி சலிக்க சலிக்கப் பேசுவோம். பதிமூன்று வயதில் எனக்கு பரிசாக பாரதியார் கவிதைகள் நூல் கிடைத்திருந்தது. அதை ஒரு நூறு முறையாவது படித்து மனனம் செய்திருப்பேன். அதன் பிறகு அதே போல வைரமுத்து, மு. மேத்தாவின் கவிதைத்தொகுப்புகள் பரிசாகக் கிடைத்தன. நான் வானம்பாடிகளின் தீவிர விசிறியானேன். வைரமுத்துவின் உருவக மொழி என்னை ஆச்சரியப்படுத்தியது. பள்ளிப் படிப்பு முடிந்ததும் வைரமுத்துவை போய் சந்தித்து அவரது உதவியாளனாக வேண்டும் என்றெல்லாம் ஆசைப்பட்டேன். பிறகு என் பதினைந்து வயதில் எங்கள் ஊரில் ஹாமீம் முஸ்தபா எனும் தோழர் களஞ்சியம் எனும் நூலகம் ஆரம்பித்தார். அங்கு புத்தகங்களின் பெரும் உலகம் எனக்கு அறிமுகமானது. அங்கேயே குடியிருப்பேன். அங்கே எனக்கு கலை இலக்கியப் பெருமன்ற நண்பர்கள் அறிமுகமாகி நான் மரபுக் கவிதை எழுதுவது, மரபிலக்கியம். வானம்பாடி இலக்கியம் படிப்பது ஆகியவற்றில் இருந்து விடுபட்டு நவீன இலக்கியம், நவீன சிந்தனைகள், கோட்பாடுகள் நோக்கி சென்றேன். குறிப்பாக சாதிக் எனக்கு பசுவய்யாவின் கவிதைகளை அறிமுகப்படுத்தினார், எப்படி பூடகமான சொல்லப்பட்ட விசயங்களை கற்பனையாலும் அறிவாலும் திறந்து படிக்க வேண்டும் எனக் காட்டித் தந்தார். நட. சிவகுமார் அண்ணனுடனான உரையாடல் நவீன கவிதையை புரிந்து கொள்ளவும், வாழ்க்கையில் இருந்து கவிதையை எடுக்கவும், வட்டார வழக்கில் எந்த அலங்காரமும் இன்றி எழுதவும் தூண்டியது. எனக்கு ஒரு முற்றிலும் புதிய உலகை அடைந்ததைப் போலிருந்தது. மெல்ல மெல்ல வைரமுத்துவையும் மு.மேத்தாவையும் அடுத்தடுத்த ஸ்டாப்பில் இறக்கி விட்டு நவீன இலக்கியம் நோக்கி பயணித்தேன். நவீன கவிதைகளை எழுத முயன்றேன். ரொம்ப பிடிவாதமாக அதை அப்போது செய்தேன் என இப்போது தோன்றுகிறது. ஏனென்றால் அப்போது நான் நவீன இலக்கியத்தின் மனநிலையைப் புரிந்து கொள்ளாமல் அதை ஒரு வடிவமாக மட்டுமே பார்த்தேன் எனத் தோன்றுகிறது. தமிழில் மட்டும் தான் பதினைந்து வயது வரைப் படித்திருந்தேன். ஆங்கிலத்தில் சொந்தமாக எதைப் படித்தாலும் புரியாது. ஒரு நாவலின் ஒரு பக்கத்தை படிக்க எனக்கு பல மணிநேரங்கள் ஆகும். அதன் பிறகு முயற்சி எடுத்து என் ஆங்கில அறிவை விருத்தி செய்து உலக இலக்கியங்களை ஆங்கிலத்தில் நேரடியாக படிக்க ஆரம்பித்தேன். தற்செயலாக, என் விருப்பத்தையும் மீறி நான் இளங்கலை ஆங்கில இலக்கியப் படிப்பில் சேர்க்கப்பட்டது அதற்கு ஒரு முக்கிய காரணமாகியது. கல்லூரியில் சேர்ந்தால் தமிழ் இலக்கியமே படிக்க வேண்டும் என பதினைந்து வயதிலேயே முடிவு செய்தேன். என்னுடைய பெரியம்மாவின் மகள் தமிழில் முனைவர் படிப்பு முடித்து ஒரு விரிவுரையாளராக இருந்தார். அவரைக் கண்டு நானும் தமிழ் தமிழ் ஆசிரியராக வேண்டும் என ஆசைப்பட்டேன். அந்த வயதிலேயே ஆசிரியப்பா, வெண்பா எல்லாம் எழுதிக் கொண்டிருந்தேன். சங்கக் கவிதைகள், கம்பராமாயணம், சிலப்பதிகாரம் வாசித்திருந்தேன். சரி தமிழ் இலக்கியம் படிக்க முழுமையான தகுதி பெற்று விட்டோம் என நினைத்திருந்தால் வீட்டில் நான் பொறியியலே படிக்க வேண்டும் என்றார்கள். அது இல்லாவிட்டால் அறிவியல் பாடம் என்றார்கள். எனக்கு கணிதம் என்றாலே கசக்கும். அதனாலே பன்னிரெண்டாம் வகுப்பில் அறிவியல், கணிதப் பாடங்களில் குறைவான மதிப்பெண் எடுத்தேன் (இல்லாவிட்டாலும் அவ்வளவு தான் எடுத்திருப்பேன்.). நியாயமாக நான் அப்பாடங்களில் தோற்றிருக்க வேண்டும். எப்படியோ தேறி விட்டேன். ஆனால் மொழிப்பாடங்களில் மட்டும் அதிக மதிப்பெண்கள் பெற்றேன். சரி நாம் இலக்கை நெருங்கி விட்டோம் என பெருமிதமாக இருந்தேன். என்னுடைய அம்மாவும் ‘சரி இலக்கியம் என்றால் அதையே படித்துத் தொலை’ என்று என்னை ஒரு கல்லூரிக்கு அழைத்து சென்றார். அங்கே பார்த்தால் நான் தமிழ்த்துறை அல்லாமல் ஆங்கிலத் துறைக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். “முடியவே முடியாது” என்று முரண்டு பிடித்தால் அம்மா “நீ தமிழ் படிப்பதற்கு வீட்டிலேயே கிட” என்று சொன்னார்கள். அவருக்கு நான் தமிழ் இலக்கியம் படித்தால் வேலை கிடைக்காமல் போய் விடும் என பயம். இப்படி ஆங்கில இலக்கியம் இளங்கலைப் பட்டப்படிப்பில் சேர்ந்து முதல் ஒரு மாதம் மனம் உடைந்து, ஈடுபாடின்றி வகுப்பில் வெளியேயே பார்த்தபடி இருந்தேன். பிறகு சனியன், இதில் சேர்ந்தாகிற்று, இதையாவது ஒழுங்காகப் படிப்போம் என ஆர்வம் செலுத்தினேன். ஒரு விதத்தில் ஆங்கிலப் படிப்பில் சேர்ந்ததே எனக்கு உலக இலக்கியத்தை அறிமுகம் பண்ணிக் கொள்ளவும், கோட்பாடுகளை, தத்துவங்களைக் கற்கவும் உதவியது. இன்னொரு பக்கம் கலை இலக்கியப் பெருமன்றக் கூட்டங்களின் வழியாக எனக்கு தமிழ் நவீன இலக்கியமும் பரிச்சயமாகி வந்தது. தோழர்கள் என் சமூக அரசியல் பார்வையை, இலக்கிய நோக்கை, ஆளுமையை வெகுவாக செதுக்கினார்கள். எங்கள் வீடருகே இருந்த ஜெயமோகனின் பழக்கம், எங்கள் கல்லூரியை ஒட்டி வாழ்ந்த சுந்தர ராமசாமியின் நட்பு என்னை மேலும் செறிவுபடுத்தியது. சு.ரா நமது ஆளுமையை மிக நுட்பமாக தன் உரையாடல்கள் வழி செதுக்கக் கூடியவரே அன்றி நமது வாசிப்பை நேரடியாக திசைமாற்ற முயல்பவர் அல்ல. ஒரு மனிதன் தனக்கான பாதையை தானே கண்டறிய வேண்டும் என நம்பியவர் அவர். நான் போய் சுத்த அபத்தமாக பேசிக் கொண்டிருந்தாலும் கவனித்துக் கேட்டு விட்டு இயல்பாகப் புன்னகைத்து கடந்து விடுவார். ஆனால் ஜெயமோகனோ ரோட்டில் போகிற ஒருவரையே கையைப் பிடித்திழுத்த நவீன இலக்கியம் பற்றி மணிக்கணக்காகப் பேசி மனம் திருந்த வைக்கிற பிடிவாதக்காரர். அவரை ஒரு புத்தகக் கடையில் பார்த்து என் அறியாமையால் சண்டை போட்டு விட்டு பிறகு அவரது “ரப்பரைப்” படித்து விட்டு அவரது நடையிலும் சித்தரிப்புகளிலும் மயங்கி மீண்டும் சந்திக்க சென்றேன். அது ஒரு முக்கியமான சந்திப்பு. ஏனென்றால் அவர் அன்று தல்ஸ்தாய் பற்றி நிறைய பேசினார். அது ஒரு மாலைப் பொழுது. எங்களை மறந்து பேசிக் கொண்டிருந்தோம். இல்லை, அவர் பேசிக் கொண்டே இருந்தார், நான் கேட்டுக் கொண்டிருந்தேன். அப்போது மின்சாரம் போனது. அவர் அந்த இருட்டிலும் அதே உணர்வெழுச்சியுடன் பேசிக் கொண்டிருந்தார். அந்த சித்திரம் என் மனதை வெகுவாக பாதித்தது. அது நீண்ட காலம் என் நெஞ்சில் இருந்தது. நான் முதிர்ந்து ஒரு படைப்பாளியானதும் இதே லட்சிய ஆவேசத்துடன் இலக்கியத்தில் இருக்க வேண்டும், நடைமுறைப் பிரச்சனைகள் எல்லாம் இரண்டாம் பட்சம் தான் என்று முடிவெடுத்தேன். அடுத்த நாளே நான் என் கல்லூரி நூலகத்தில் இருந்து “போரும் வாழ்வும்” நாவலின் தமிழ் மொழியாக்கத்தை எடுத்து வாசித்தேன். அந்த நாவல் தான் என்னை ஒரு வாசகனாக புரட்டிப் போட்டது. பாலகுமாரனில் இருந்து விடுவித்தது. வெகுஜன நாவல்களில் காட்டப்படுவது சுத்த முட்டாள்தனம் என நினைக்க வைத்தது. அப்படி ஒரு அட்டகாசமான உலகம், பிரம்மாண்டம், துல்லியமான உளவியல் சித்தரிப்புகள் அந்நாவலில் இருந்தது. முக்கியமாக அந்நாவல் வாழ்க்கையைப் பற்றி, காலத்தைப் பற்றி நேரடியாகப் பேசியது - அதாவது வரலாற்றின் வழியாக. நான் அதுவரைப் படித்த நாவல்கள் ஒன்று ஒரு தனிமனிதனின் வாழ்வை, வாழ்வின் சவால்களை மிகச்சுருக்கமாக, நெகிழ்வாக, கவித்துவமாக அலசியவை. ஆனால் இங்கு ஒரு எழுத்தாளர் அனாயசமாக நேரடியாக காலத்தைப் பற்றி ஜனங்களின் அகவுலகங்களை முன்வைத்தும், வரலாற்றை புனைவாக சித்தரித்தும் எழுதுகிறார்! என்னால் அந்த வியப்பைக் கடந்து சுலபத்தில் வர முடியவில்லை. அதன் பிறகு சு.ரா, அசோகமித்திரன், தி.ஜா, தஸ்தாவஸ்கி, காப்கா ஆகியோரை அந்நாட்களில் வாசித்த போதும் தல்ஸ்தாய் மீதான பிரமித்து இவர்களைக் குறைவாக மதிப்பிட வைத்தது. என்ன இருந்தாலும் தல்ஸ்தாய் ஒரு அத்தியாத்தில் பேசிப் போகிறவற்றைத் தானே இவர்கள் மொத்த நாவலிலும் பேசுகிறார்கள், அற்ப மானுடனர்கள் என நினைத்தேன். தல்ஸ்தாய்க்கு அடுத்த படியாக மார்க்வெஸ், கோர்த்தஸார், போர்ஹெ உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க படைப்பாளிகள் என்னைக் கவர்ந்தார்கள். அவர்களிடம் இதே போல ஒட்டுமொத்த வாழ்க்கையையும் தத்துவார்த்தமாக நோக்குகிற போக்கு, பிரம்மாண்டம், மாய எதார்த்தம் இருந்தது ஒரு முக்கிய காரணம் என நினைக்கிறேன். மேலும் அந்நாட்களில் எனக்கு எதார்த்த நாவல்கள் மீது ஒரு ஒவ்வாமை இருந்தது. அ. மாதவன், நீல பத்மநாபன், தோப்பில் என யாரையும் பிடிக்கவில்லை. பதினைந்து ஆண்டுகளுக்குப் பிறகு தான் ஒவ்வொரு வகையான நாவலையும் அதன் வடிவத்தையும் நோக்கையும் பொறுத்து வாசிக்க வேண்டும் என்று புரிந்து கொண்டேன். அன்று எனக்கு முக்கியமல்லாதவர்களாகப் பட்டவர்களெல்லாம் இப்போது முக்கியமான எழுத்தாளர்களாகத் தோன்றுகிறார்கள். தல்ஸ்தாய் என் மதிப்பில் பலமடங்கு உயர்ந்து தல்ஸ்தாய் விழுந்து விட்டார். ஆனால் முதன்முதலாக ஒரு இலக்கிய மதிப்பீட்டை உருவாக்க எனக்கு “போரும் வாழ்வுமே” உதவியது. ஒரே ஒரு எழுத்தாளர் பற்றின மதிப்பீடு மட்டும் நிலைக்கிறது - ஜெயகாந்தன். அவரை என் 17 வயதில் இருந்து இப்போது வரை பலமுறைப் படித்தும் அவர் ஒரு புனைவெழுத்தாளரே அல்ல, அவருக்கு சிறுகதை, நாவல் ஆகிய கலைவடிவங்கள், உலக இலக்கியம் பற்றி ஒன்றும் தெரியாது, ஒரு ஒழுக்க போதகர், பேச்சாளர், முரட்டுத்தனமான கதைசொல்லி என்று தோன்றுகிறது. அந்நாட்களில் நான் எதை வாசித்தாலும் என் கேள்விகளை தொகுத்து எடுத்துக் கொண்டு ஜெயமோகனைக் காணச் செல்வேன். அனேகமாக தினமும் அவரை சந்தித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய முடிவுகள் தவறென்று அவர் ஒவ்வொன்றாக உடைத்துக் கொண்டே இருந்தார். ஆவேசமான வாசிப்பில் கவனிக்கத் தவறும் நுட்பமான பகுதிகளை கவனிக்க அவரே அந்நாட்களில் சொல்லித் தந்தார். அது மட்டுமல்ல, போகப் போக கல்விப்புலத்தில் ஆங்கில இலக்கிய வாசிப்பும், நடைமுறையில் நவீன இலக்கியமும் என்னுடைய ரொமாண்டிக்கான பார்வையை மாற்றி வேறொரு நுண்ணுணர்வை அளித்தது. என்னுடைய சிந்தனை உணர்ச்சிகரமாக அன்றி விலகி நின்று தர்க்கரீதியாக அணுகுவதாக மாறியது. அதுவே பின்னர் என் புனைவு, அபுனைவிலும் தாக்கம் செலுத்தியது என நினைக்கிறேன். கடந்த ஏழாண்டுகளில் கிடைத்த பின்னமைப்பியல் வாசிப்பு என்னுடைய அந்த விட்டேந்தியான சிந்தனாமுறையின் போதாமையை உணர வைத்தது. இது தான் என் வாசிப்பின் பயணம். Posted 2 hours ago by ஆர். அபிலாஷ் https://thiruttusavi.blogspot.com/2022/07/2.html
  12. குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 26 பேர் உயிரிழப்பு - என்ன நடந்தது? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SACHIN PITHHVA குஜராத் மாநிலத்தில் கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளனர். ஞாயிறன்று கள்ளச்சாராயம் அருந்தியவர்களுக்கு வாந்தி, கண் எரிச்சல் போன்ற அறிகுறிகள் தென்பட்டு அருகாமையில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் பின் உயிரிழப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து தற்போது 26 பேர் வரை உயிரிழந்துள்ளனர் என்று கூறப்படுகிறது. மேலும் 30க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிப்பட்டுள்ளனர். குஜராத் மாநிலத்தின் போடாட் மற்றும் அதன் அருகாமை மாவட்டத்தில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவம் தொடர்பாக மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையினர் விசாரணையை தொடங்கியுள்ளனர். குஜராத் கடற்கரையில் தஞ்சம் புகுந்த சிங்கங்கள் - கிர் காட்டிலிருந்து வெளியேறியதன் காரணம் என்ன? கள்ளக்குறிச்சி வன்முறையில் விட்டுச்சென்ற 141 வாகனங்களை மீட்க யாரும் வரவில்லை - காவல்துறை இந்த சம்பவம் தொடர்பாக மதுபானத்தை தயாரிக்க தேவையான ரசாயனத்தை கொடுத்தவர், மதுபானத்தை விற்றவர் ஆகியோர் உட்பட ஐந்து பேரை காவல்துறையினர் இதுவரை கைது செய்துள்ளனர். பட மூலாதாரம்,SACHIN PITHHVA இந்த சம்பவத்தில் மாநிலத்தில், இரு மாவட்டங்களில் உள்ளவர்கள் ஈடுபட்டதாக குஜராத்தின் உள்துறை அமைச்சர் ராஜ் குமார் ராயட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார். மேலும்,"இந்த சம்பவத்தை நாங்கள் தீவிரமாக ஆராய்ந்து வருகிறோம். விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்" என்றும் தெரிவித்தார். "23க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என்பது வருத்தமளிக்கிறது. அதுமட்டுமல்லாமல் கள்ளச்சாராயத்தை குடித்து மேலும் 40 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் உயிரிழந்தவர்களுக்கு நான் எனது இரங்கலை தெரிவித்து கொள்கிறேன்." என டெல்லியின் முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தில் மதுபானம் விற்பனை செய்வது மற்றும் அருந்துவது இரண்டுமே சட்டவிரோதமானது. அரசால் வழங்கப்பட்ட சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே மதுபானம் அருந்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/india-62301699
  13. திருவள்ளூர் மாணவி மரணம்: பெற்றோரிடம் உடல் ஒப்படைப்பு 5 மணி நேரங்களுக்கு முன்னர் திருவள்ளூரில் உயிரிழந்த பள்ளி மாணவியின் பிரேத பரிசோதனை முடிந்த நிலையில், முறையான காரணம் தெரிவிக்கப்படவில்லை என்று கூறி 'உடலை வாங்க மாட்டோம் என்று மாணவியின் உறவினர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். என்ன நடந்தது? திருவள்ளூர் மாவட்டம், மப்பேடு காவல் எல்லைக்கு உட்பட்ட கீழச்சேரி பகுதியில் இயங்கும் தனியார் பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவி விடுதியில் தங்கி பயின்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று (ஜூலை 26) காலை மாணவி சடலமாக மீட்கப்பட்டார். மாணவியின் உடலை கைப்பற்றிய போலீசார் திருவள்ளூர் மருத்துவ கல்லூரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதனையடுத்து மப்பேடு காவல் துறையினர் இதனை சந்தேக மரணமாக வழக்கு பதிவு செய்து முதற்கட்ட விசாரணையை தொடங்கினர். இதனிடையே காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா, திருவள்ளூர் எஸ்பி கல்யாண் உள்ளிட்ட காவல் துறை உயர் அதிகாரிகள் பள்ளி மற்றும் விடுதியில் ஆய்வு செய்தனர். அவர்களுடன், தடயவியல் வல்லுநர் குழுவும் ஆய்வு செய்தது. பின்னர், இந்த வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டது. திருவள்ளூர் சிபிசிஐடி ஆய்வாளர் திரிபுரசுந்தரி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் இருந்து சிபிசிஐடி அதிகாரிகள் நேரில் வந்து பள்ளி மற்றும் விடுதியில் மாணவி உயிரிழந்த இடத்தில் ஆய்வு செய்தனர். மேலும், பள்ளி விடுதி காப்பாளர்களிடம் மாணவியின் ஆசிரியர்கள் மற்றும் உறவினர்களிடமும் அவர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் ஏதும் அசம்பாவிதம் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக அதிவிரைவு படை போலீசார் மருத்துவமனை வளாகம் முழுவதும் குவிக்கப்பட்டனர். உறவினர்கள் போராட்டம் இந்நிலையில் இன்று காலை மாணவியின் உடல் உடற்கூறு ஆய்வு நடைபெற்றது. நீதிமன்ற அறிவுறுத்தல் படி உடற்கூறாய்வு முழுமையான வீடியோ பதிவு செய்யப்பட்டது. இதனை அடுத்து உறவினர்களிடம் மாணவியின் உடல் ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் மாணவி எப்படி, எதனால், எதற்காக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து சிபிசிஐடி போலீசார் தெளிவுபடுத்த வேண்டும் எனக்கூறி மாணவியின் உறவினர்கள் உடலை பெற்றுக்கொள்ள சமாதிக்காமல் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டார்கள். மேலும் போலீசாரின் விசாரணை முன்னேற்றத்தை முறையாக தெரிவிக்காவிட்டால் மாணவியின் உடலை வாங்கிக் கொள்ள மாட்டோம் என்றார்கள். இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. அசம்பாவிதம் ஏற்படக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து போலீசார் அதிக அளவில் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு இருந்தார்கள். அதேபோல் அதிவிரைவு படை போலீஸாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தார்கள். உறவினர்கள் குற்றச்சாட்டு முன்னதாக மாணவியின் உடலை வாங்க மறுத்து செய்தியாளர்களிடம் பேசிய உறவினர் ஒருவர், "மாணவி உயிரிழப்பதற்கு முன்பு இரவு 9 மணிக்கு அவர் பெற்றோருடன் தொலைபேசியில் நல்லபடியாக பேசினார். ஆனால் காலை மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறுகிறார்கள். எப்படி? எதனால்? 'எதற்காக தற்கொலை செய்து கொண்டார்?' என்பது குறித்து தற்போது வரை முறையாக யாரும் தெரிவிக்கவில்லை. விசாரணை முன்னேற்றத்தை முறையாக தெரிவிக்காவிட்டால் மாணவியின் உடலை நாங்கள் வாங்கிக் கொள்ள மாட்டோம்" என்றார். படக்குறிப்பு, மாணவியின் உறவினர் சமரச பேச்சுவார்த்தை இதற்கிடையில் காவல்துறை உயர் அதிகாரிகள், வருவாய் துறையினர் உள்ளிட்டோர் மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரரிடம் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டார்கள். மாணவி தற்கொலைக்கு உரிய விளக்கம் வேண்டும், தவறு இழைத்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு பணி வழங்க வேண்டும் என பெற்றோர்களின் கோரிக்கை முழுவதையும் நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் வாக்குறுதி அளித்ததை அடுத்து மாணவியின் உடலை பெற்றோர்கள் பெற்றுக்கொள்ள சம்பந்தம் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து மாணவியின் உடலை அவரது சொந்த ஊரான தெக்களூர் கிராமத்திற்கு நல்லடக்கம் செய்ய போலீஸ் பாதுகாப்போடு எடுத்துச் சென்றனர். முன்னதாக பள்ளி மற்றும் விடுதியில் ஆய்வு செய்த திருவள்ளூர் ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், "இந்த வழக்கு விசாரணை வெளிப்படை தன்மையாக நடந்து வருவதாகவும், தம்முடைய கவனத்திற்கு வந்தவுடன் இந்த வழக்கில் துறை ரீதியிலான விசாரணை நடைபெற்று வருகிறது" என்றும் தெரிவித்திருந்தார். https://www.bbc.com/tamil/india-62302187
  14. நிர்மலா சீதாராமன்: ஸ்விஸ் பணம் அனைத்தும் கருப்பு பணம் அல்ல - இந்திய நிதியமைச்சர் 26 ஜூலை 2022, 02:11 GMT பட மூலாதாரம்,ANI இன்று (26.07.2022) தமிழ்நாடு, இலங்கையில் வெளியான நாளிதழ்கள் மற்றும் இணையதள செய்திகளில் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம் ஸ்விட்சா்லாந்து வங்கிகளில் இந்தியா்கள் சேமித்து வைத்துள்ள பணம் அனைத்தும் கருப்புப் பணம் (கணக்கில் வராத பணம்) அல்ல என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியுள்ளதாக தினமணி நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது. இது தொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய நிதியமைச்சா் நிர்மலா சீதாராமன் எழுத்துபூா்வமாக அளித்த பதிலில், ''அண்மையில் வெளியான சில தரவுகளின்படி, கடந்த 2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த 2021-ஆம் ஆண்டில் ஸ்விஸ் வங்கிகளில் இந்தியா்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. எனினும், அதைக் கருப்புப் பணமாகக் கருதக்கூடாது. ஸ்விஸ் வங்கிகளில் கணக்கு வைத்துள்ள இந்தியா்கள் குறித்து அதிகாரபூா்வ கணக்கீடுகள் ஏதுமில்லை. வெளிநாட்டு வங்கிகளில் கணக்கில் காட்டாமல் சேமித்துவைத்துள்ள தொகைகள் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்குகளில் ரூ.8,468 கோடிக்கும் அதிகமான வரியைச் செலுத்துமாறும் ரூ.1,294 கோடியை அபராதமாகச் செலுத்துமாறும் சம்பந்தப்பட்ட நபா்களிடம் கோரப்பட்டுள்ளது. கருப்புப் பணச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட 368 வழக்குகளில் ஆய்வு நடத்தப்பட்டு, சம்பந்தப்பட்ட நபா்களிடம் இருந்து ரூ.14,820 கோடி வரியாகக் கோரப்பட்டுள்ளது. இத்தரவுகள் கடந்த மே மாதம் வரையிலானவை'' என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/india-62301447
  15. இந்திய குடியுரிமையை கைவிட்ட சுமார் ஒரு லட்சம் பேர் - என்ன காரணம்? சுபம் கிஷோர் பிபிசி செய்தியாளர் 26 ஜூலை 2022, 01:51 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES 2021 ஆம் ஆண்டில், ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 370 பேர் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவிக்கிறது. இவர்கள் "சொந்த காரணங்களுக்காக" குடியுரிமையை கைவிட முடிவு செய்துள்ளதாக நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிகபட்சமாக 78,284 பேர் அமெரிக்க குடியுரிமைக்காக இந்திய குடியுரிமையை விட்டுள்ளனர். 23,533 பேர் ஆஸ்திரேலிய குடியுரிமையும், 21,597 பேர் கனடாவின் குடியுரிமையும் பெற்றுள்ளனர். சீனாவில் வசிக்கும் 300 பேர் அந்த நாட்டின் குடியுரிமையையும், 41 பேர் பாகிஸ்தான் குடியுரிமையையும் பெற்றுள்ளனர். 2020 ஆம் ஆண்டில் குடியுரிமையை கைவிட்டவர்களின் எண்ணிக்கை 85,256 ஆகவும், 2019 ஆம் ஆண்டில், 144,017 ஆகவும் உள்ளது. 2015 மற்றும் 2020 க்கு இடையில் எட்டு லட்சத்திற்கும் அதிகமானோர் குடியுரிமையை கைவிட்டனர். 2020 ஆம் ஆண்டில் இந்தப்போக்கில் குறைவு ஏற்பட்டது. ஆனால் இதற்குப் பின்னால் உள்ள காரணம் கொரோனா என்று நம்பப்படுகிறது. "இந்த முறை எண்ணிக்கை அதிகரித்ததற்குக் காரணம், கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பணிகள் முடங்கியதால் குடியுரிமை பெற முடியாத சிலருக்கு இந்த ஆண்டு குடியுரிமை கிடைத்துள்ளது,"என்று வெளிநாட்டு விவகார நிபுணர் ஹர்ஷ் பந்த் பிபிசியிடம் தெரிவித்தார். குழந்தைகளிடம் பெற்றோர் செய்யக்கூடாதவை என்னென்ன? ஆணுறுப்பில் குரங்கம்மை புண்கள்: ' தீயில் இருப்பது போல் இருக்கும்' - பாதிக்கப்பட்ட பிரேசில் மனிதரின் அனுபவம் உலகளவில் உணவு நெருக்கடியை உருவாக்கியதா ரஷ்யா? இந்தியர்கள் ஏன் குடியுரிமையை கைவிடுகிறார்கள்? நாட்டிற்கு வெளியே வாழும் குடியுரிமையை கைவிட்டவர்கள், கைவிட விரும்புபவர்கள் மற்றும் நிபுணர்களிடம் இந்தப் போக்கு குறித்து பிபிசி பேசியது. வெளிநாட்டில் வாழ்வதால் பல நன்மைகள் தனது குடியுரிமை கைவிடப்படுவது அல்லது 'ப்ரெயின் ட்ரெயினை' கட்டுப்படுத்த இந்தியா விரும்பினால், அது பல நடவடிக்கைகளை எடுக்க வேண்டியிருக்கும் என்று அமெரிக்காவில் வசிக்கும் பாவ்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) கூறுகிறார். புதிய வாய்ப்புகள், மேம்பட்ட வசதிகள் மற்றும் இரட்டை குடியுரிமை போன்றவற்றை இந்தியா கருத்தில் கொள்வது அவசியம் என்கிறார் அவர். பாவனா கடந்த 2003-ம் ஆண்டு வேலை தொடர்பாக அமெரிக்கா சென்றிருந்தார். அவருக்கு அங்கு பிடித்துப்போனதால் அங்கேயே குடியேற முடிவு செய்தார். அவரது மகள் அங்குதான் பிறந்தார். பின்னர் அவர் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்தார். சில ஆண்டுகளுக்கு முன்பு அவர் அமெரிக்க குடியுரிமையைப் பெற்றார். "இங்கு வாழ்க்கை மிகவும் எளிதாக உள்ளது. வாழ்க்கைத் தரம் மிகவும் நன்றாக உள்ளது. குழந்தைகள் நன்றாக படிக்கிறார்கள். அவர்களுக்கு இந்தியாவை விட சிறந்த வாய்ப்புகள் இங்கு கிடைக்கும்."என்று பாவ்னா குறிப்பிட்டார். "மேலும், பணிச்சூழல் மிகவும் நன்றாக உள்ளது. நீங்கள் செய்யும் வேலையின் அளவிற்கு ஏற்ப உங்களுக்கு நல்ல சம்பளம் கிடைக்கும்." பணியிட சூழல் கனடாவில் வசிக்கும் 25 வயதான அபினவ் ஆனந்த், இதே கருத்தைக் கொண்டுள்ளார். அங்கு படிப்பை முடித்த அவர் கடந்த ஓராண்டாக வேலை பார்த்து வருகிறார். அவர் இன்னும் இந்திய பாஸ்போர்ட்டைத்தான் பயன்படுத்துகிறார். ஆனால் இந்திய குடியுரிமையை கைவிடத்தயாராக உள்ளார். நல்ல பணிச்சூழல் இதற்கு ஒரு காரணம் என்று அவர் கூறுகிறார். எனவே அவர் இந்தியாவுக்குத் திரும்பிவர விரும்பவில்லை. பட மூலாதாரம்,PATRICK T. FALLON/AFP VIA GETTY IMAGES) "வேலை நேரம் இங்கே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பணியிடத்தில் விதிகள் மற்றும் சட்டங்கள் பின்பற்றப்படுகின்றன. நீங்கள் செய்யும் வேலைக்கு ஏற்ப உங்களுக்கு ஊதியம் கிடைக்கும். இந்தியாவில் விதிகள் அவ்வளவு சரியாகப் பின்பற்றப்படுவதில்லை. அதனால் நான் வேலைக்காக அங்கு செல்ல விரும்பவில்லை. வேறு ஒரு நாட்டில் இருந்துகொண்டு வேலை செய்யவேண்டும் என்றால் அந்த நாட்டின் குடியுரிமையைப்பெறுவதில் என்ன தவறு," என்று அபினவ் வினவுகிறார். நல்ல வேலை, அதிக பணம் மற்றும் சிறந்த வாழ்க்கையைத் தேடி பெரும்பாலான மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் என்று ஹர்ஷ் பந்த் கூறுகிறார். "பெரிய நாடுகளில் சிறந்த வசதிகள் உள்ளன. ஆனால் பலர் சிறிய நாடுகளுக்கும் செல்கின்றனர். பல சிறிய நாடுகள் வர்த்தகத்திற்காக சிறந்த வசதிகளை வழங்குகின்றன. பலரின் குடும்பங்களும் அத்தகைய நாடுகளில் குடியேறியுள்ளன,"என்று அவர் மேலும் தெரிவித்தார். உணர்ச்சிபூர்வ நெருக்கம், நன்மைகள் குறைவு மூத்த பத்திரிகையாளர் ஹரேந்திர மிஷ்ரா கடந்த 22 ஆண்டுகளாக இஸ்ரேலில் வசித்து வருகிறார். இந்தியாவுடன் உணர்ச்சிபூர்வ நெருக்கம் இருப்பதால் இந்தியாவின் குடியுரிமையை விட்டுக்கொடுக்க முடியாது என்கிறார் அவர். அவரது மனைவி இஸ்ரேலைச் சேர்ந்தவர். அவரது குழந்தைகள் அங்கு பிறந்து அந்த நாட்டின் குடியுரிமை பெற்றுள்ளனர். பட மூலாதாரம்,STEFANI REYNOLDS/AFP VIA GETTY IMAGES ஆனால் இந்திய பாஸ்போர்ட் காரணமாக தனக்கு நிறைய பிரச்னைகள் இருப்பதாக கூறுகிறார். பெரும்பாலான நாடுகளுக்கு செல்ல தான் விசா பெற வேண்டியுள்ளதாக அவர் கூறுகிறார். ஓர் உதாரணத்தை சுட்டிக்காட்டும் அவர், "எனக்கு லண்டன் செல்ல விசா வேண்டும். ஆனால் உங்களிடம் இஸ்ரேலிய பாஸ்போர்ட் இருந்தால், விசா இல்லாமல் நீங்கள் அங்கு செல்லலாம். எனவே விசாவிற்கு விண்ணப்பிக்க இங்கே அலுவலகம் இல்லை" என்று கூறுகிறார்." விசா முத்திரையைப் பெற இஸ்தான்புல்லுக்குச் செல்லவேண்டும்.அங்கு செல்வதற்கான செலவும் அதிகமாக இருக்கும். இது போன்ற விஷயங்கள் சிரமத்தை அளிக்கின்றன," என்கிறார் ஹரேந்திர மிஷ்ரா. "நான் இந்தியாவுடன் உணர்ச்சிபூர்வமாக மிகவும் இணைந்திருக்கிறேன். ஆகவே நான் குடியுரிமையை விட்டுவிட விரும்பவில்லை. ஆனால் அதைத் தவிர என்னை பொறுத்தவரை எந்த நன்மையும் இல்லை." என்று அவர் குறிப்பிட்டார். இந்திய பாஸ்போர்ட்டுடன் இப்போது விசா இல்லாமல் 60 நாடுகளுக்குச்செல்லலாம். மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவு. பாஸ்போர்ட் தரவரிசையில், 199 நாடுகள் பட்டியலில் இந்தியா தற்போது 87வது இடத்தில் உள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வாக்குரிமை? தேர்தல் ஆணையம் ஆலோசனை வெளிநாடுவாழ் இந்தியர்களை திருமணம் செய்து கொள்வோருக்கு சட்டப்பாதுகாப்பு இல்லையா? டெல்லியில் ஸ்டாலின்-மோதி, பாஜக அமைச்சர்களுடன் சந்திப்பு முழு விவரம் இரட்டை குடியுரிமை தேவையா? இரட்டை குடியுரிமை வழங்குவதை இந்தியா கொண்டுவந்தால், குடியுரிமையை கைவிடுபவர்கள் என்ணிக்கை குறையும் என்கிறார் ஹரேந்திர மிஷ்ரா. தான் வேறு நாட்டின் குடியுரிமை பெற முயற்சிப்பதாகவும், ஆனால் வேறு வழி இல்லாமல்தான் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாகவும் அபினவ் ஆனந்த், கூறுகிறார். "நான் பிறந்த நாட்டின் குடியுரிமை எனக்கு எப்போதும் இருக்க வேண்டும். ஆனால் இந்தியா இரட்டைக் குடியுரிமையை அனுமதிப்பதில்லை. எனவே குடியுரிமையை கைவிடுவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை. இரட்டை குடியுரிமை பெறமுடியாததால், இந்திய குடியுரிமையை கைவிட்ட பலரை எனக்குத் தெரியும்,"என்கிறார் அவர். பாவனா தற்போது தனது இந்திய குடியுரிமையை கைவிட்டுவிட்டார். அவரிடம் OCI கார்டு உள்ளது . ஆனால் இரட்டை குடியுரிமை இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்கிறார் அவர். பட மூலாதாரம்,PTI OIC கார்டு என்றால் என்ன? இந்தியா இரட்டைக் குடியுரிமை வழங்குவது இல்லை. அதாவது நீங்கள் வேறு ஒரு நாட்டின் குடியுரிமை பெறவிரும்பினால் இந்திய குடியுரிமையை கைவிட வேண்டும். OCI கார்டு என்பது வெளிநாட்டில் குடியேறி அங்கு குடியுரிமை பெற்ற இந்தியர்களுக்கான சிறப்பு வசதியின் பெயர். OCI என்பது ஓவர்சீஸ் சிட்டிசன் ஆஃப் இந்தியா( இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன்). உலகின் பல நாடுகளில் இரட்டைக் குடியுரிமை வசதி உள்ளது. ஆனால் இந்திய குடியுரிமைச் சட்டத்தின்படி, ஒருவர் வேறொரு நாட்டின் குடியுரிமையைப் பெற்றால், அவர் தனது இந்திய குடியுரிமையை விட்டுக்கொடுக்க வேண்டும். அமெரிக்கா, பிரிட்டன் அல்லது கனடா போன்ற நாடுகளின் குடியுரிமை பெற்றுள்ள இத்தகையவர்களின் எண்ணிக்கை லட்சக்கணக்கில் உள்ளது. ஆனால் இந்தியாவுடனான அவர்களின் தொடர்பு இப்போதும் உள்ளது. இந்திய குடியுரிமையை கைவிட்ட பிறகு இவர்கள் இந்தியாவுக்கு வர விசா பெற வேண்டியுள்ளது. அப்படிப்பட்டவர்களின் வசதியைக் கருத்தில் கொண்டு, 2003-ல் இந்திய அரசு PIO அட்டையை வழங்கியது. PIO என்றால், இந்திய வம்சாவளி நபர். இந்த அட்டை பாஸ்போர்ட் போல பத்து ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது. இதற்குப் பிறகு 2006 இல் ஹைதராபாத்தில் நடந்த வெளிநாடு வாழ் இந்தியர் மாநாட்டில் ஓசிஐ கார்டு வழங்குவதாக இந்திய அரசு அறிவித்தது நீண்ட காலமாக PIO மற்றும் OCI கார்டுகள் இரண்டுமே புழக்கத்தில் இருந்தன. ஆனால் 2015 இல் PIO வழங்குவதை ரத்து செய்து, OCI கார்டை தொடர்வதாக அரசு அறிவித்தது. OCI இந்தியாவில் வாழ்வதற்கும், வேலை செய்வதற்கும் மற்றும் எல்லா வகையான பொருளாதார பரிவர்த்தனைகளை செய்வதற்கும் அனுமதிக்கிறது, மேலும் OCI வைத்திருப்பவர் எப்போது வேண்டுமானாலும் விசா இல்லாமல் இந்தியாவிற்கு வரலாம். OCI அட்டை வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும். OCI கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்திய குடிமக்களைப் போலவே எல்லா உரிமைகளும் உள்ளன என்றும் ஆனால் அவர்களால் நான்கு விஷயங்களைச் செய்ய முடியாது என்றும் இந்திய உள்துறை அமைச்சகத்தின் இணையதளம் கூறுகிறது. அந்த நான்கு விஷயங்கள் தேர்தலில் போட்டியிட முடியாது வாக்களிக்க முடியாது அரசு வேலை அல்லது அரசியலமைப்பு பதவியை வகிக்க முடியாது விவசாய நிலத்தை வாங்க முடியாது. வரும் ஆண்டுகளில் எண்ணிக்கை அதிகரிக்குமா? தற்போதைய பொருளாதார நிலையைப் பார்க்கும்போது, வரும் சில ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறையலாம் என்கிறார் பந்த். மற்ற நாடுகளின் நிலையை விட இந்தியாவின் பொருளாதார நிலை சிறப்பாக உள்ளது. இப்போது இங்கு அதிக வாய்ப்புகள் வரும். அதனால் மக்கள் இந்தியாவில் வாழ விரும்புவார்கள். ஆனால், அமெரிக்காவில் கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்தவர்கள் அங்கு குடியுரிமை பெறுவதில் இருந்து பின்வாங்கமாட்டார்கள்," என்கிறார் அவர். https://www.bbc.com/tamil/india-62297251
  16. ஒவ்வொரு மாநிலத்தைச் சேர்ந்தவர்களையும் சுழற்சி முறையில் ஜனாதிபதியாக நியமித்தால் இன்னும் சிறப்பு.
  17. சிங்கப்பூரில் கோட்டாபயவை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை - நாட்டை விட்டு வெளியேறுகிறாரா? சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை முன்னாள் ஜனாதிபதி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரில் கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக சிங்கப்பூர் அரசு தலைமை சட்ட அதிகாரியிடம் (அட்டர்னி ஜெனரல்) குற்றவியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு இந்தப் புகாரை அளித்துள்ளது. அனைத்துலக சட்ட வரம்புக்கு உட்பட்டு கோத்தபாய மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சிங்கப்பூர் அரசாங்கமும்கூட தனது நாட்டுச் சட்டங்களின் கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இயலும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பு வகித்தார் கோட்டாபய ராஜபக்ஷ, அப்போது இலங்கை ராணும் தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டதாக அவர் மீது புகார்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் பலியானதாக் கூறப்பட்ட நிலையில், அவர் இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், போர் குற்றங்கள் உட்பட கோட்டாபயவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள பல்வேறு புகார்கள் குறித்து சிங்கப்பூரிலேயே அவர் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்கிறது அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு. அதற்கான காரணங்களையும் அது பட்டியலிட்டுள்ளது. இலங்கையில் நிகழ்ந்த இறுதிகட்ட போரின்போது கோட்டாபய பல்வேறு போர்க்குற்றங்களைப் புரிந்ததாக அந்த அமைப்பு சாடியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு தகவல்களைத் திரட்டி இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே முன்னாள் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அமைப்பின் வழக்கறிஞர் அலெக்சாண்டிரா லில்லி கேதர். இலங்கை மக்கள் நிராகரித்த ரணில் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்ற முரண்: அரசியலமைப்பில் தீர்வு உண்டா? ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தனித்தீவு போல மாறிய கொழும்பு காலிமுகத் திடல் - கள நிலவரம் புகார் என்ன? படக்குறிப்பு, அலெக்சாண்டிரா லில்லி கேதர் அலெக்சாண்டிரா தற்போதுபெர்லின் நகரில் உள்ளார் என்றும், ராய்ட்டர்ஸ் செய்தி முகமை அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தததாகவும் கூறப்பட்டுள்ளது. "கோட்டாபயவுக்கு எதிராக புகார் செய்துள்ளோம். சிங்கப்பூர் அரசாங்கம் அவரை கைது செய்வதன் மூலம் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உண்மை நிலையைப் பறைசாற்ற முடியும். அதற்கான அரிய வாய்ப்பு இப்போது சிங்கப்பூருக்கு அமைந்துள்ளது," என்கிறார் அலெக்சாண்டிரா லில்லி கேதர். சிங்கப்பூர் தனது சொந்த சட்டங்களையும் கொள்கைகளையும் கொண்டுள்ளது. அவற்றின் அடிப்படையிலேய கோத்தபாய ராஜபக்ஷ மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார். சிங்கப்பூர் தலைமைச் சட்ட அதிகாரியிடம் அளிக்கப்பட்டுள்ள புகார் கடிதத்தை தயாரித்த குழுவில் அலெக்சாண்டிராவும் ஓர் உறுப்பினர். இற்கிடையே, சிங்கப்பூரில் உள்ள கோத்தபாயவை தொடர்புகொள்ள ராய்ட்டர்ஸ் முயற்சி மேற்கொண்ட போதிலும், பலன் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இறுதிக்கட்ட போரின்போது கோத்தபாய ராஜபக்சே ஜெனிவா ஒப்பந்தங்களை மீறிவிட்டதாகவும், அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு அளித்துள்ள 63 பக்கங்களுக்கு நீளும் குற்றவியல் புகார் மனுவில் குறிப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் முகமை கூறியுள்ளது. கோத்தபாயவைக் கைது செய்வது தொடர்பாக அந்த அமைப்பிடம் இருந்து ஒரு கடிதம் கிடைக்கப் பெறற்றுள்ளதாக சிங்கப்பூர் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். கடந்த 23ஆம் தேதி இந்தக் கடிதம் பெற்றபட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து மேலதிக கருத்துகள் எதையும் தெரிவிக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெளியுறவுத்துறை விளக்கம் படக்குறிப்பு, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட காரணங்களுக்காக சிங்கப்பூர் வந்திருப்பதாகவும், அவர் புகலிடம் கோரவில்லை என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. "போர்க்குற்றம், இனப்படுகொலை, சித்ரவதை தொடர்பான குற்றச்சாட்டுகளை சிங்கப்பூர் நீதிமன்றத்தால் விசாரிக்க இயலும் என்றாலும், சிங்கப்பூர் அந்த நடவடிக்கையை கடைசி வாய்ப்பாக மட்டுமே பயன்படுத்தும்," என்று அரசு பலமுறை தெரிவித்துள்ளது என்றுறார் பிரிட்டனில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் பேராசிரியர் ஷுபாங்கர் டாம். இவர் சிங்கப்பூரிலும் சில காலம் பணியில் இருந்துள்ளார். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தனித்தீவு போல மாறிய கொழும்பு காலிமுகத் திடல் - கள நிலவரம் இலங்கை நெருக்கடி: 'மத அரசியல்' விளைவித்த துன்பங்கள் - வரலாறு மாற்றியமைக்கப்படுமா? சிங்கப்பூர் தனது வெளியுறவுக் கொள்கையில் நடுநிலையைக் கடைப்பிடிப்பதாக அதிகாரபூர்வமா அறிவிக்கவில்லை என்றாலும் அந்நாடு நீண்டகாலமாக அவ்வாறு செயல்பட்டு வருவதாகவும் ஷுபாங்கர் தெரிவித்துள்ளார். எனவே, ஒரு வெளிநாட்டுத் தலைவரை மீது வழக்கு தொடுக்கப்பட வேண்டும் எனில், சிங்கப்பூரின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு ஏற்ப அதை சமநிலைப்படுத்த வேண்டிய அவசியம் எழும் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இதற்கிடையே, கடந்த 2008ஆம் ஆண்டு போர்ப் பகுதியில் இருந்து ஐ.நா, நிவாரண முகமைகளை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டதாகவும், அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு கூறியுள்ளது. "இதன் மூலம் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் கட்டவிழ்த்துவிடும் வன்முறைக்கும் படுகொலைகளுக்கும் சாட்சிகள் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டார் கோத்தபாய. கோட்டாபயவை கைது செய்து விசாரணை செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை சட்ட அதிகாரியிடம் மனு அளிதி்துள்ளோம். இதுவே எங்கள் வழக்கின் அடிப்படையாக இருக்கும்," என்கிறார் அந்த அமைப்பின் செயல் இயக்குநர் யாஸ்மின் சூக்கா (Yasmin Sooka). சிங்கப்பூரில் இருந்து கோட்டாபய வெளியேற வேண்டுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES இதற்கிடையே கோட்டாபய எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் அவர் மீண்டும் இலங்கைக்கு வர உள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தணா தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக SOCIAL PASS அடிப்படையில்தான் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், இவ்வாறான ஏற்பாட்டில் ஒருவர் சிங்கப்பூர் வந்தால், சம்பந்தப்பட்டவர் அங்கு 14 நாள்கள் மட்டுமே தங்கி இருக்க முடியும். கோத்தாபய கடந்த 13ஆம் தேதியே சிங்கப்பூர் சென்றடைந்தார். எனவே அவர் வெளியேற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவக்கு, குறுகிய கால விசா வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. பொதுவாக இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு 30 நாள்களுக்கான 'சோஷியல் விசிட்' எனும் சுற்றுப்பயண விசா வழங்கப்படும். அந்த விசா 30 நாள்களுக்குச் செல்லுபடியாகும். ஆனால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 நாள் விசா வழங்கப்பட்டதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' ஊடகம் தெரிவித்துள்ளது. எனவே, அவர் மேலும் சில காலம் தங்க சிங்கப்பூரின் குடிநுழைவு சட்டங்கள் அனுமதிக்குமா என்பது குறித்து அரசுத்தரப்பில் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. https://www.bbc.com/tamil/global-62306565
  18. கடலூரில் கபடி வீரர் மரணம்: விளையாட்டின்போது நம் ஆரோக்கியத்தில் எதையெல்லாம் கவனிக்க வேண்டும்? க. சுபகுணம் பிபிசி தமிழ் 26 ஜூலை 2022, 05:01 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடலூர் மாவட்டம் காடாம்புலியூரை அடுத்த புரங்கணி கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர், கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த களத்திலேயே மயங்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு விளையாட்டு வீரர்கள் என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியத்தை பேண வேண்டும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. என்ன நடந்தது? கபடி வீரர் விமல், கபடி போட்டியின்போது ஒருவரைப் பிடிக்க முயன்று அப்படியே கீழே மயங்கி விழும் காட்சி அவருடைய நண்பர்கள் அவர் விளையாடுவதைப் பதிவு செய்த காணொளியில் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் விமலை மீட்டு பண்ருட்டி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், விமல் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். அதைத் தொடர்ந்து, அவருடைய உடல் விழுப்புரம் முண்டியம்பாக்க மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 'இது முதல் முறையல்ல' விளையாட்டு வீரர் ஒருவர் இப்படி விளையாடிக் கொண்டிருக்கும்போதே உயிரிழப்பது இது முதல்முறையல்ல. உலகளவில் இதுபோல் பலமுறை நிகழ்ந்துள்ளது. 1993-ஆம் ஆண்டு, அமெரிக்க கூடைப் பந்து வீரர் ரெஜ்ஜி லூவிஸ், மாசாசூஸட்ஸில் விளையாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 2007-ஆம் ஆண்டில், ஸ்பானிய கால்பந்து வீரர் ஆன்டோனியோ புவெர்டா, ஆக்ஸ்ட் 25-ஆம் தேதியன்று லா லிகா ஆட்டத்தின்போது மைதானத்தின் பெனால்டி பகுதியில் மாரடைப்புக்கு உள்ளாகி, 28-ஆம் தேதியன்று உயிரிழந்தார். போலி ஐபிஎல்: ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய குஜராத் கிராமத்தினர் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா – உலக தடகள சாம்பியன்ஷிப்பின் இறுதிச்சுற்று எப்படி நடந்தது? ஃபிபா உலகக்கோப்பை: மைதானங்களைப் பாதுகாக்க ட்ரோன்களை பயன்படுத்த திட்டம் இந்தியாவிலும் கூட 2019-ஆம் ஆண்டு கேரளாவில் நடந்த கால்பந்து போட்டியின்போது ராதாகிருஷ்ணன் தனராஜன் என்ற கால்பந்து வீரர் ஆட்டத்தின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். விளையாட்டின்போது ஏற்படும் இத்தகைய உயிரிழப்புகளுக்கு என்ன காரணம், அதிலிருந்து தற்காத்துக் கொள்ள என்ன மாதிரியான ஆரோக்கியம் சார்ந்த கவனிப்புகள் தேவை என்பதைத் தெரிந்துகொள்ள விளையாட்டு மருத்துவ நிபுணரான மருத்துவர்.சத்ய விக்னேஷிடம் பேசினோம். "இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியம்" "இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியம். பொதுவாக, ஓடும்போதோ அதீத ஆற்றலைச் செலவழித்து விளையாடும்போதோ, அவர்களுடைய இதயம் அதற்கு ஏற்றாற்போல் ஈடுகொடுக்க வேண்டும். இத்தகைய செயல்பாடுகளின்போது இதயத் துடிப்பு மிகவும் வேகமாக இருக்கும். இதயத்துடிப்பு தொடர்ச்சியாக வேகமாக இருக்கையில், ஒருவேளை இதயத்தில் ஏதேனும் பிரச்னை இருந்து கவனிக்காமல் விடப்பட்டிருந்தால் இப்படியான உயிரிழப்பு நிகழ வாய்ப்புண்டு. விளையாட்டின் போது ஒருவர் மயங்கி விழுகிறார் என்றால் அதற்கு குறைசர்க்கரைத்தன்மை (hypoglycemia) தான் பெரும்பாலும் காரணமாக இருக்கும். விளையாடும்போது அதீதமாக வியர்ப்பது, நீர்ச்சத்து குறைவாக இருப்பது, மின்பகுபொருள் (Electrolytes) குறைவாக இருப்பது, குளுகோஸ் முற்றிலுமாகக் குறைவது போன்ற சூழல்களின்போது மயக்கம் வரும். சில நேரங்களில், வெறும் வயிற்றில் சாப்பிடாமல், ஆற்றல் குறைவாக இருக்கும்போது இப்படி நிகழலாம். ஆகையால், உடற்பயிற்சி, விளையாட்டு, சைக்கிளிங் போன்ற எந்தச் செயல்பாட்டிற்கு முன்பும், கார்போஹைட்ரேட் உள்ள செவ்வாழைப் பழம் போன்ற சிற்றுண்டியை எடுத்துக் கொள்வது நல்லது. அதன்மூலம், தொடக்கத்திலேயே ஊட்டச்சத்துகளை எரித்து ஆற்றலை உருவாக்காமல், உடலும் கார்போஹைட்ரேட்டில் இருந்து ஆற்றலை எடுக்கும்," என்று கூறுகிறார். பட மூலாதாரம்,DR.SATHYA VIGNESH உடல் பரிசோதனை பொதுவாக, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்படும். அத்தகைய பரிசோதனைகளில், "இதய ஆரோக்கியம், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்றவற்றைக் கண்காணிப்பார்கள். அதுபோக, குறிப்பிட்டு ஏதேனும் பிரச்னை யாருக்காவது அதுகுறித்த பரிசோதனையும் செய்யப்படும். இத்தகைய பொதுவான ஆரோக்கியத்தைத் தான் பார்ப்பார்களே தவிர, இளைஞர்களாக இருப்பதால் மிகவும் ஆழமான பரிசோதனை வழக்கமாக நடக்காது," என்கிறார் மருத்துவர் சத்ய விக்னேஷ். அவரிடம் உடல்ரீதியான குறிப்பிட்ட பிரச்னை இருப்பவர்கள் விளையாட்டில் பங்கெடுக்கக்கூடாது என்று ஏதேனும் கட்டுப்பாடுகள் உண்டா என்பது குறித்துக் கேட்டபோது, "தசைநார் காயங்கள் இருந்தால், அதில் அறுவை சிகிச்சை செய்திருந்தால், குறிப்பிட்ட கால அளவுக்கு பங்கெடுக்கக்கூடாது என்று கூறப்படும். தசைநார் முழுமையாகக் குணமடைய எடுத்துக் கொள்ளும் கால அளவு வரை விளையாட்டுகளில் கலந்து கொள்ள வேண்டாம் என வலியுறுத்தப்படுவார்கள். சிலநேரங்களில், போட்டிகளுக்கு இடையில் இருக்கும்போது இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டிருக்கும். அந்த நேரத்தில் அவர்கள் முழு போட்டிகளையும் முடிக்க வேண்டியிருக்கும். அப்படியான சூழல்களில், அதற்கான உடனடி சிகிச்சைகளை வழங்குவது, பிசியோதெரபி, பிரேசிங் போன்ற நடவடிக்கைகள் கையாளப்படும். அவற்றின் மூலம், பங்கெடுத்தாக வேண்டிய குறிப்பிட்ட போட்டிகளை மட்டும் முடித்துவிட்டு வரவைத்து, பிறகு முழுமையான சிகிச்சை அளிக்கப்படும். ஆனால், இதயத்தில் ஏதும் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளைக் கொண்டிருப்பவர்கள் அதிகமாக உடலை வருத்தக்கூடிய விளையாட்டுகளில் பங்கெடுப்பது பரிந்துரைக்கப்படுவதில்லை," என்று கூறினார். திடீர் விளையாட்டு/உடற்பயிற்சிகள் ஆபத்து அதிகமாக உடலை வருத்தி விளையாடும்போது, சிலருக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அதிக நீர் அருந்த வேண்டியது அவசியம். உடலில் நீர்ச்சத்து அளவை சமநிலையில் வைக்க வேண்டியது முக்கியம் என்கிறார் மருத்துவர் சத்ய விக்னேஷ். பட மூலாதாரம்,GETTY IMAGES "அதோடு, எப்போதும் விளையாட்டையோ உடற்பயிற்சியையோ தொடங்கும்போது, வார்ம் அப் செய்வதும் இறுதியில் முடிக்கும்போது கூல் டன் பயிற்சிகளைச் செய்வதும் அவசியம். அதைச் செய்வதன் மூலம் சதைகள் காயமடைவது தசைநார் பாதிக்கப்படுவது குறையும்," என்பவர், இதில் ஸ்டிரெச்சஸ் எனப்படும் உடற்பயிற்சிகளைக் கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும், "சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அவ்வப்போது திடீரென ஒன்றாகச் சென்று விளையாடுவார்கள். அப்படி விளையாடும் போதெல்லாம் இத்தகைய பாதிப்புகளைப் பலரும் சந்திக்கிறார்கள். சிலர் மாதக்கணக்கில் விளையாடாமல் இருப்பார்கள். அப்படியிருக்கும் சூழலில், திடீரென ஒரு நாள் அதிகமாக உடலை வருத்தி விளையாடும்போது இத்தகைய பிரச்னைகள் எழும். அதைத் தவிர்ப்பதற்கு இது அவசியம். நம்முடைய வாழ்க்கை முறை, அலுவலகப் பணிகளில் பெருமளவு உட்கார்ந்தே இருக்க வேண்டிய, ஓடியாடிச் செயலாற்றாத நிலைக்கு மாறிவிட்டது. இந்த மாதிரியான வாழ்க்கை முறையில், தசைகள் மிகவும் சுருங்கியிருக்கும். ஒரு விளையாட்டோ அல்லது உடற்பயிற்சியோ செய்யும்போதும் அப்படியே இருப்பதால், நரம்புப் பிடிப்புகள், தசைப் பிடிப்புகள் ஆகியவை ஏற்படும். சிலருக்கு நீண்ட காலத்திற்கு அந்தப் பிடிப்போ வலியோ இருந்து கொண்டேயிருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஸ்டிரெச்சஸ் என்ற உடற்பயிற்சிகளைச் செய்யும்போது, அவற்றைத் தவிர்க்க முடியும்," என்றார். அதோடு, விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து சமநிலையிலான ஊட்டச்சத்துகளைப் பெறும் வகையில் உணவு முறையைப் பின்பற்றுவது மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் சக்தி விக்னேஷ். https://www.bbc.com/tamil/india-62297246
  19. விருத்தாசலத்தில் பிளஸ் டூ மாணவி தற்கொலை - முழு விவரம் 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES விருத்தாசலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். சரியாக படிக்க முடியாத மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆயியார் மடத்தை சேர்ந்த தம்பதி கோபி மற்றும் இளவரசி. விருத்தாசலத்தில் உள்ள செல் சர்வீஸ் சென்டரில் கோபி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், இரண்டாவது மகள், விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்குச் சென்ற மாணவி மாதாந்திர தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதி விட்டு, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில், வீட்டில் யாரும் இல்லாத போது, வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சூழலில் நீண்ட நேரமாகியும் வெளியே வராது மாணவியின் அறைக்கு சென்று பெற்றோர் பார்த்த போது அவர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று, மாணவியின் உடலை மீட்டு கீழே இறக்கி உள்ளனர். பின்னர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக, மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள், இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். இதற்கிடையே மாணவியின் மரணம் தொடர்பாக தகவலறிந்து வந்த விருத்தாசலம் காவல் துறையினர், இறுதி சடங்குக்காக வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை மீட்டு, உடல் கூராய்வு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதாக யாராவது சொன்னால் என்ன செய்வது? தற்கொலை எண்ணத்துக்கான காரணம் என்ன? விடுபடுவது எப்படி? இது குறித்து விருத்தாசலம் காவல் துறையினரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. "மாணவி விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவி முன்பு நன்றாக படித்ததாகவும், தற்போது சரியாக படிக்கவில்லை என்று மாணவியின் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு திட்டியுள்ளனர். மேலும் மகளை ஐஏஎஸ் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவு மாணவியின் பெற்றோருக்கு இருந்துள்ளது. அதனால் மாணவியின் படிப்பு விஷத்தில் அழுத்தம் இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே சமீபத்தில் நடந்த தேர்வில் தன்னால் சரியாக எழுத முடியவில்லை என்று அருகே உள்ளவர்களிடம் கூறி கவலையுடன் இருந்துள்ளார். குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக மன அழுத்தத்தில் இருந்த மாணவி நேற்று வீட்டின் அறையில் தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் மகள் வெளியே வராததால் மகள் தங்கியிருந்த அறைக்கு அவரது பெற்றோர் சென்று பார்த்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. பின்னர், மாணவியின் உடலை இன்று காலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால் ,காவல் துறைக்கு தகவல் தெரிந்த பின்னர் மாணவியின் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு பரிசோதனை அனுப்பி வைத்தோம்," என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மாணவியின் தற்கொலை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி தற்கொலை தொடர்பாக அவர் படித்த பள்ளிக்கு எந்த தொடர்பும் இல்லை என இதுவரை நடந்த முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும் காவல்துறையினர் கூறினர். தற்கொலை எண்ணம் வந்தால் அழைக்க வேண்டிய தொலைபேசி உதவி எண் '104' பட மூலாதாரம்,GETTY IMAGES அப்படிப்பட்ட எண்ணம் வரும்போது, மருத்துவரைத்தான் பார்க்க வேண்டும் என்றில்லை. உங்கள் மீது அக்கறை வைத்துள்ள யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம். பள்ளிகளில் ஆசிரியர்கள் சிலர் அக்கறையுடன் இருப்பார்கள். வளரிளம் சிறார்கள் மத்தியில் இதனைக் கையாள்வதில் சிக்கல் இருக்கலாம். இதற்காக '104' என்ற உதவி எண் உள்ளது. அதனைத் தொடர்பு கொண்டால் உரிய வழிகாட்டுதல்கள் கிடைக்கும். இதன் அடுத்தகட்டமாக, `மருத்துவரைப் பார்க்க வேண்டிய தருணம் இதுதானா?' என்பது தெரியவரும். இந்த விவகாரத்தில் மனநல மருத்துவரைத்தான் சென்று பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் குடும்ப மருத்துவரை முதலில் சென்று பாருங்கள். அதன்பிறகு தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடம் செல்லலாம். அப்போதும் உடனடியாக மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை. `இதனை வெளியில் சொன்னால் அவமானம்' என நினைப்பதைவிட `உயிர் முக்கியம்' என நினைக்க வேண்டும். `தற்கொலை முடிவு என்பது எவ்வளவு தவறானது' என்பதை அவர்கள் உணர வேண்டிய நிலையை உருவாக்க வேண்டும். https://www.bbc.com/tamil/india-62307011
  20. முருகன் பாடல் | 2022 New Year Murugan Song Tamil | Aaru Padai | Kovai Kamala | Vijay Musicals ஆறு படை வீடும் அருள் வழங்கும் முருகா அருகே நீ ஓடோடி வா மூவிரண்டு முகம் ஜொலிக்க ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடி வா
  21. இயக்குநர் வஸந்த் பேட்டி: "எனக்கு நான்தான் வாத்தியார்" வீ. விக்ரம் ரவிசங்கர் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, வசந்த் சாய், திரைப்பட இயக்குநர் பெண்ணை ஆணின் கண்ணுக்கு விருந்தாகக் காட்சிப்படுத்துவது அல்லது பெண்ணை மையமாக வைத்துப் படமெடுப்பதாகச் சொல்லி, நாயகனின் சாகசங்களைத் தானும் செய்கிறவளாக வடிவமைப்பது. இந்த இரண்டைத் தவிர பெண்ணை பெண்ணாகவே காட்டி பெண்ணியம் பேசும் கதைகளைக் கையாளும் வெகு சில இயக்குநர்களில் முக்கியமானவர் இயக்குநர் வஸந்த் சாய். அவரது இயக்கத்தில் வெளியான 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படமும் அப்படித்தான். வெவ்வேறு காலகட்டங்களை சேர்ந்த மூன்று பெண்களின் மூன்று தனித்தனி கதைகளைச் சொல்லும் ஆந்தாலஜி வகைப் படம் அது. எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகிய மூவரும் எழுதிய சிறுகதைகளை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் வஸந்த். ஆண்மை, பெண்மை என்று இந்தச் சமூகம் வகுத்து வைத்திருக்கிற கற்பிதங்களை இந்தப் படம் கேள்விக்குட்படுத்துகிறது. எதை ஆண்மை என நாம் கொண்டாடுகிறோமோ அது இவ்வளவு கேவலமானதா என்பதை 'பொட்டில் அடித்தது போல்' இயல்பாகச் சொல்கிறது. 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்குத் தேர்வான படங்கள், 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது. சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது, சிவரஞ்சனி கதாபாத்திரத்தில் நடித்த லக்‌ஷ்மி பிரியா சந்திரமௌலிக்கு சிறந்த துணை நடிகர் விருது, ஸ்ரீகர் பிரசாத்துக்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருது என, மூன்று தேசிய விருதுகளை வாங்குகிறது இந்தப்படம். படத்தின் இயக்குநர் வஸ்ந்துடன் பிபிசி தமிழ் நடத்திய நேர்காணலை, கேள்வி பதில்களாக இங்கே வழங்குகிறோம்… தேசிய திரைப்பட விருதுகள்: சூர்யா, அபர்ணா, ஜி.வி. பிரகாஷ், சூரரைப் போற்று, மண்டேலா படங்கள் தேர்வு "5 விருதுகள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை" - சுதா கொங்கரா பிரத்யேக நேர்காணல் சிறந்த தமிழ் படம், சிறந்த துணை நடிகர், சிறந்த படத்தொகுப்பு- மூன்று தேசிய விருதுகள் கிடைத்திருக்கின்றன. இது நீங்கள் எதிர்பார்த்தது தானா? படம் எடுக்கும்போது, இத்தனை விருதுகள் கிடைக்கும் என்று நினைச்சீங்களா? எதிர்பார்க்காமல் இருக்க முடியுமா? கண்டிப்பாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை விட, கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். இன்னும் அதிகம் பேர் படத்தைப் பார்ப்பார்கள் என்பதால் எதிர்பார்த்தேன். அந்த வகையில், விருதுகள் கிடைத்ததில் மகிழ்ச்சி. பெண்களுக்காக எடுக்கப்பட்ட படத்தை இன்னும் நிறைய பேர் கூடுதலாகப் பார்ப்பதற்கு இந்த விருதுகள் காரணமாக இருக்கின்றன என்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த படம் வெளியாகும் முன்பே பல சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்திருந்தது. படம் உருவாகும்போது குறிப்பிட்ட பிரிவில், விருது உறுதி என்று நினைத்தீர்களா? அப்படியென்றால் அது எந்த பிரிவு? ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது முதல் படத்தில் இருந்தே, விருதுக்காக படம் எடுப்பதை நான் விரும்புபவனும் அல்ல. அதை நம்புபவனும் அல்ல. நோக்கம் அதில் இருக்கக் கூடாது. செய்வதை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். செடியை வளர்க்க விரும்புபவன், தினமும் அந்தச் செடியைப்பிடுங்கி வளர்கிறதா என்று பார்த்தால், அது வளராது. ஏமாற்றம்தான் மிஞ்சும். எனக்குப் பிடித்ததை எடுக்கிறேன். எனக்குள் ஒரு சவாலை உருவாக்கிக்கொண்டு, அதை எவ்வளவு தூரம் எதிர்கொள்ள முடியும் என்று நானே சோதித்துப் பார்க்கிறேன், அவ்வளவுதான். அதுபோன்ற படைப்புகளை நானே தயாரிப்பதும் அதற்காகத்தான். உங்கள் படத்திற்கான கதைகளை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கான கதைத்தேர்வு எப்படி நடந்தது? நான் படத்திற்காக கதைகள் படிக்கவில்லை. கதைகளை எழுதுவதும், படிப்பதும் எனக்குப் பிடிக்கும். எனது அன்றாட நடவடிக்கைள் அவை. இந்தப் படத்திற்காக தேர்வு செய்த இந்த கதைகளும் நான் இப்போது படித்தவை அல்ல. எனது 20 வயதில் படித்திருக்கிறேன், 40 வயதில் படித்திருக்கிறேன், ஒவ்வொரு முறை படிக்கும்போதும் என்னுடைய முதிர்ச்சிக்கு ஏற்ற தாக்கத்தை இந்தக் கதைகள் ஏற்படுத்தின. எனது திருமணத்திற்கு முன் இந்தக் கதைகளை நான் படித்தபோது ஒரு தாக்கம் ஏற்பட்டது. திருமணத்திற்கு பின் படித்தபோது வேறொரு தாக்கம் ஏற்பட்டது. இப்படி, எனக்குள் ஏற்பட்ட தாக்கத்தை படமாக்கினேன். அதை முடிந்தவரை எந்த வகையிலும் சமரசம் செய்துகொள்ளாமல் படமாக்க ஒவ்வொரு முறையும் தொடர்ந்து முயற்சிக்கிறேன். என்னால் முடியுமா என்று நானே செய்து பார்க்கும் முயற்சிதானே தவிர, வேறொன்றுமில்லை. எனது பார்வையில், அப்படிப்பட்ட முயற்சிகளை மேற்கொள்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த வகையில், `வாழ்` படத்தின் இயக்குநர் அருண் பிரபுவை நான் பாராட்டுகிறேன். அந்தப் படமும் இன்னும் கவனிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அருவி என்கிற படத்தைக் கொடுத்த அவர், அதற்கு அடுத்ததாக எடுத்த முயற்சிக்கு எனது பாராட்டுகள். சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தின் பிரதான கதாபாத்திரங்களான, சரஸ்வதி, தேவகி, சிவரஞ்சனி மூவரும் காலத்தால் வேறுபட்டாலும் இரண்டாம் பாலினமாக ஒடுக்கப்படுவதில் ஒரே கோட்டில் நிற்கிறார்கள். ஆண்களுடன் வாழும் பெண்கள் அனைவரது நிலையும் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றுதானா? அப்படியெல்லாம் நான் சொல்லவில்லை. 'இந்த கேள்வி கேட்டால்' அதுதான் நீங்கள். இன்னும் இதுபோல், கதை சார்ந்தோ, கதாபாத்திரம் சார்ந்தோ என்னென்ன கேள்விகள் யார் யாருக்குத் தோன்றுகிறதோ, அது அவர்களது எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருக்குமே தவிர, அதை நான் சொல்வதாக ஆகிவிடாது. ஆதே சமயம், அவரவர் எண்ணங்களையும், கருத்துக்களையும் நான் மதிக்கிறேன். ஆனால், நான் நினைத்ததை படத்தில் சொல்லிவிட்டேன். அதுதான் அந்தப் படம். அதில் எல்லாம் இருக்கிறது. ஜெயகாந்தன் அருமையாகச் சொல்வார், ``கதையில் சொல்லாததையா நீங்கள் கேட்கும்போது சொல்லப் போகிறேன்`` என்று. அப்படித்தான் அது. உங்கள் முதல் படமான கேளடி கண்மணி, ஆசை, அப்பு, ரிதம், சத்தம் போடாதே, நேருக்கு நேரில் 'அண்ணி' கதாபாத்திரம், பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நாயகனின் 'தாயார்' கதாபாத்திரம் என, பெண்களுடைய உளவியல் சார்ந்த சிரமங்களை ஒவ்வொரு முறையும் இவ்வளவு அழுத்தமாக தொடர்ந்து பதிவு செய்வதற்கான காரணம் என்ன? நான் அதை கவனித்ததுதான் காரணம். பெண்களின் வாழ்க்கையோ, நிலையோ அப்படி இல்லை என்று யாரும் சொல்ல முடியாதே… உங்கள் அம்மாவைப் பற்றிய காட்சிகள்தான் அவை, என் அம்மாவை பற்றிய காட்சிகள்தான் அவை. தினமும் காலையில் எழுந்து குழந்தைகளை கிளப்பி பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது, கணவர் வேலைக்குச் செல்லும்வரை அவருக்கு தேவையானதைச் செய்வது, வீட்டு வேலைகளை கவனிப்பது, பெரியவர்களை கவனிப்பது என, இதிலேயே அவர்கள் சுழல்வதைப் பார்க்கையில், இதில் ஏதோ ஒன்று இருக்கு. காட்சிப்படுத்த வேண்டும் என்று எனக்கு தோன்றியது. எடுத்தேன், எடுத்துக்கொண்டிருக்கிறேன். அதில் கூட கைத்தட்டல்கள் வாங்க முடிகிறதே… இந்தப் படத்தில் கூட, இறுதிக்காட்சிக்கு முன் சிவரஞ்சனிக்கு கிடைத்த கைத்தட்டல்களை அப்படித்தான் நான் பார்க்கிறேன். திடீரென ஆந்தாலஜி பக்கம் திரும்பியது ஏன்? இந்தக் கதையை ஆந்தாலஜியாதா எடுக்கணும்னு நினைச்சதுக்கு காரணம் என்ன? எல்லாத்தையும் முயற்சி செய்யுறது எனக்குப் பிடிக்கும். இந்தக் கதைகளை இணைத்து ஹைபர்லிங்க் படமாகக் கூட எடுத்திருக்க முடியும். நவீனமாகவும் கொடுத்திருக்க முடியும். அதையெல்லாம் தாண்டி, இதை ஒரு கிளாசிக் சினிமாவாக உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன், செய்தேன். அப்படிச் செய்யவேண்டும் என்று எனக்குள் இருந்த பிடிவாதம்தான் அதைச் செய்ய வைத்தது. இன்னும் சொல்லப்போனால், ஒரே கதையாகச் செல்வதைவிட, இந்த விஷயத்தை 3 கதைகளில் சொல்லும்போது தாக்கம் அதிகமாக இருக்கும் என்று நம்பினேன். அதோடு, எனக்குப் பிடித்த மூன்று எழுத்தாளர்களின் கதைகளும் கூட. அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகிய மூன்று பேரின் கதைகளைத் தழுவிய திரைக்கதைதான் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும். இந்த மாதிரி சிறுகதைகள், இலக்கியங்கள மெயின் ஸ்ட்ரீம்க்காக ஒரு முழுநீள படமா காட்சிப்படுத்துறதுல என்னென்ன சவால்கள் இருப்பதாக நினைக்கிறீர்கள்? முழு நீள படமான்னு கேட்டால் இல்லை… காட்சிப்படுத்துறதுனாலே சவால்தான். ஏனென்றால் அது வேறு ஒருவர் எழுதிய கதை. இன்னொருவரின் கதையை காட்சிப்படுத்துவது என்றாலே சவால்தானே. என்னைப் பொறுத்தவரை, என்னால் எழுதாமல் படமெடுக்க முடியாது. ஒரு ரைட்டர் டைரக்டர் ஆகத்தான் என்னை நான் பார்க்கிறேன். ஆனால் ஒரு கட்டத்தில் பிடித்த கதைகளை எடுக்கத் தோன்றியது. என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டு, ஒரு விஷயத்தை செய்யத்தூண்டுவது நானேதான். எனக்கு நானே வாத்தியார் என்கிற வகையில், எனக்குப் பிடித்த கதை படமாக வரவில்லை என்றால், என்னை நானே ஏன் என்று கேட்டுக்கொள்வதுண்டு, கோபப்படுவதும் கூட உண்டு. அந்தக் கேள்விக்கான விடையாகத்தான் படித்த பிடித்த கதைகளை எடுக்கிறேன். அதையும் பெர்பெக்டாக எடுக்க வேண்டும் என்று நானே என்னை வற்புறுத்துகிறேன். பெர்பெக்ஷன் என்பது என்னைப்பொறுத்தவரை பெர்சப்ஷன் தான். யாராவது ஒருவருக்கு அது புரியும். அந்த ஒருவருக்காக பெர்பெக்ஷன் அவசியப்படுகிறது. உதாரணத்திற்கு கேளடி கண்மணி படத்தை கூறலாம். மொத்த கதையையும் இரண்டே ஷாட்டில் சொல்லியிருப்பேன். அதை நான் சொன்னால்தான் பலருக்குப் புரியும். அனாதை ஆசிரமத்திற்குச் சென்ற குழந்தைய அழைத்துவர எஸ்.பி.பி-யும், ராதிகாவும் ஒரு குடையில் செல்வார்கள். வரும்போது குழந்தையும், எஸ்.பி.பி-யும் மட்டும் குடைக்குள் இருப்பார்கள், ராதிகா தனியாக நிற்பார். யாராவது இருவர் மட்டுமே அந்தக் குடையில் இருக்க முடியும், இதுதான் அந்தப் படத்தின் மொத்தக் கதை. இதைச் செய்ய வேண்டும் என்று யாரும் என்னை கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை. ஆனால், ஒரு மேடையில் இதைக் குறிப்பிட்டுப் பேசினார் பாரதிராஜா. அந்தத் தருணம்தான் எனக்குத் தேவைப்பட்டது. ஓடிடி தளங்கள் அதிகரிக்கத் தொடங்கியதில் இருந்து ஆந்தாலஜி வகை படங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? ஒவ்வொருவருக்கும் ஒன்னொன்னு பிடிக்கும். அதில் ஆந்தாலஜி வகை என்பதும் ஒன்று, அவ்வளவுதான். இதை நல்ல விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன். நான் தனியாக மூன்று கதைகளை எடுத்திருக்கலாம். ஆனால், இந்த பார்மட்டில், நான்கைந்து பேர் சேர்ந்து ஆளுக்கொரு கதையாக படமெடுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. குறைந்த பொருட்செலவில் எடுக்க முடிகிறது. ஆனால், குறும்படத்திற்கும் ஆந்தாலஜிக்குமான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆளுக்கொரு ஷார்ட்பில்ம் பண்ணா ஆந்தாலஜி என்று எண்ணிவிடக் கூடாது. அந்தக் குறுங்கதையை எந்தளவுக்கு எபக்டிவ்வா சொல்ல முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டு. அப்போதுதான் சினிமாவின் தரத்தைப் பராமரிக்க முடியும். மூன்று தசாப்தங்களை கண்ட இயக்குநர் நீங்கள்… இத்தனை ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்கள் பார்வையில் வளர்ச்சி என்றால் என்ன? நன்றாகவே வளர்ந்திருக்கிறது. வித்தியாசமான கதைகள் சொல்வதிலும், நம்ம ஊர் கதைகளைச் சொல்வதிலும் பலர் கவனம் செலுத்தி வருவது ஆரோக்கியமான விஷயம்தான். அதே சமயம், சினிமாத்துறை தொழில்நுட்ப ரீதியில் எந்தளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறதோ, அதற்கு ஈடுகொடுத்து, அதையெல்லாம் பயன்படுத்தி, அதன் மூலம் வித்தியாசமான கதைகளையும், நம்ம ஊர் கதைகளையும் சொல்வதில் கவனம் செலுத்த வேண்டும். https://www.bbc.com/tamil/arts-and-culture-62294123
  22. ஆணுறுப்பில் குரங்கம்மை புண்கள்: ' தீயில் இருப்பது போல் இருக்கும்' - பாதிக்கப்பட்ட பிரேசில் மனிதரின் அனுபவம் ஜூலியா ப்ரான் பிபிசி நியூஸ் பிரேசில் 25 ஜூலை 2022, 07:46 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES 2022 ஜூலை மாதம் நிலவரப்படி, உலகம் முழுவதும் 15,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கம்மை நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையங்கள் (CDC) தெரிவிக்கின்றன. உலக சுகாதார அவசரநிலை என உலக சுகாதார அமைப்பு WHO வகைப்படுத்த வேண்டுமா என்று விவாதிக்க குரங்கம்மை நோய் நிபுணர்கள் வியாழக்கிழமை சந்தித்தனர். இதன்பிறகு, குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது. சாவோ பாலோவில் வசிக்கும் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவரான தியாகோ, அதிக காய்ச்சல், சோர்வு, நடுக்கம் மற்றும் உடல் முழுவதும் புண்கள் உள்ளிட்ட அறிகுறிகளுடன் உள்ளூர் மருத்துவமனைக்குச் சென்ற பிறகு, அவர் குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவர் என்பதை அறிந்தார். ஆனால், அவரது ஆணுறுப்பு பகுதியில் வலி, வீக்கம் மற்றும் எரியும் உணர்வு இருப்பதே அவரதுமுக்கிய பிரச்னை. அந்த உறுப்பில் குறைந்தது ஒன்பது தோல் புண்கள் தோன்றின. "இது மிகவும் வலிக்கும்; அரிப்பு எடுக்கும்," என்று அவர் பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறினார். "எல்லா பாகங்களும் மிகவும் வீங்கியிருக்கிறது. சில சமயங்களில் அது தீயில் எரிவது போல் இருக்கும்." பெரியம்மை பாதிப்பு ஏற்படுத்தும் வைரஸால்தான் குரங்கம்மையும் ஏற்படுகிறது, ஆனால் பெரியம்மை மிகவும் குறைவான தீவிரத்தன்மை கொண்டது. இது குரங்கு, எலி அல்லது அணில் போன்ற பாதிக்கப்பட்ட விலங்கிலிருந்து மனிதர்களுக்குப் பரவும். மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட நபருடன் யாராவது நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது அப்படி ஏற்படலாம். தோலில் கீறல், சுவாசக்குழாய், கண்கள் மற்றும் வாய் வழியாக இந்த தொற்று பரவுகிறது. குரங்கம்மை பாதிக்கப்பட்ட ஒருவர் பயன்படுத்தும் ஆடைகள், படுக்கை அல்லது துண்டுகளைத் தொடுவதும் நோய் பரவும். குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டவர்கள் எப்படி உணர்வார்கள்? பட மூலாதாரம்,UKHSA படக்குறிப்பு, படிப்படியாக ஏற்படும் குரங்கம்மை புண் தியாகோவின் அறிகுறிகள் ஜூலை 10ம் தேதி அன்று தொடங்கியது. "முதலில் நான் கடுமையான குளிரை உணர்ந்தேன், அதைத் தொடர்ந்து அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் பொதுவாக ஏற்படும் அசெளகரியம் ஏற்பட்டது. என் உடல் முழுவதும் நொறுங்கியதைப் போல் உணர்ந்தேன்," என்று அவர் கூறுகிறார். "இது காய்ச்சலாகவோ அல்லது கோவிட் -19ஆகவோ இருக்கலாம் என்று நான் நினைத்தேன், ஆனால் அடுத்த நாள், நான் குளிக்கும்போது, என் முதுகிலும் ஆண்குறியிலும் புண்கள் இருப்பதை முதலில் கவனித்தேன்." அப்போது முதல், தியாகோ தனது கால்கள், தொடைகள், கை, வயிறு, மார்பு, முகம் மற்றும் ஆணுறுப்பில் புண்கள் இருப்பதைப் பார்த்தார். "இது கிட்டத்தட்ட வீங்கிய, வலிமிகுந்த பருக்கள் போன்றது," என்று அவர் கூறுகிறார். ஒரு வாரத்திற்கு முன்பு அவர் தொடர்பு கொண்ட நண்பருக்கு குரங்கம்மை பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அறிகுறிகள் தென்பட்ட மூன்றாவது நாளில் அவர் மருத்துவமனைக்குச் சென்றார். ரத்த பரிசோதனையில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கான பரிசோதனை மேற்கொண்டார். அது நெகட்டிவ் என்று வந்தது. ""மருத்துவமனைக்கு செல்ல எனக்கு சில நாட்கள் பிடித்தது. ஏனென்றால் வலி மிகவும் கடுமையானதாக இருந்ததால், ஆடைகளை அணிய முடியாமல் இருந்தது. . கார் பயணம் கூட வலியையும் வீக்கத்தையும் மிகவும் மோசமாக்கியது. "மருத்துவமனையில், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட அழற்சி எதிர்ப்பு, வலி மருந்து மற்றும் ஒரு மயக்க மருந்து, இது எரிச்சல் ஏற்படும் உணர்வை போக்கியது" என்கிறார். அந்த மருத்து உதவுகிறது. ஆனால் நான்கு மணி நேரம் கழித்து, அது வேலை செய்வது நின்றுவிடும் மற்றும் வலி மீண்டும் ஏற்படும்," என தியாகோ மேலும் கூறுகிறார். அவரும் அவரது நண்பரும் சமீப காலமாக பிரேசிலை விட்டு வெளியே வரவில்லை. "நான் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவுடன், முந்தைய சில நாட்களில் நான் தொடர்பு கொண்ட நண்பர்களை அழைத்து, எனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை பற்றி அவர்களிடம் கூறினேன்," என்று அவர் கூறுகிறார். பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிற சவால்கள் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, காங்கோவில் 1996 முதல் 1997 வரை குரங்கம்மை பரவியது இந்த போராட்டங்களுடன், தியாகோ மருத்துவமனையில் தான் கடினமான தருணங்களைச் சந்தித்ததாக கூறுகிறார். "புண்களை எவ்வாறு சுத்தம் செய்வது, எவ்வளவு காலம் நான் நோய்வாய்ப்பட்டிருப்பேன் அல்லது எப்போது தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே வர முடியும் என்பது பற்றி எனக்கு எந்த தகவலும் தரவில்லை. இந்த தகவலை நான் இணையத்தில் பார்க்க வேண்டும் அல்லது மருத்துவ நண்பர்களிடம் கேட்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார். "குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மையம் எதுவும் இல்லை. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து சுதந்திரமாக நடமாடுகிறார்கள். இந்த சூழ்நிலையை சமாளிக்க அவர்கள் தயாராக இருப்பதாக நான் உணரவில்லை" என்று தியாகோ மேலும் கூறுகிறார். டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் "முரட்டுத்தனமாகவும், அவமதித்தாகவும் அவர் குறிப்பிட்டார். "நான் சென்ற மருத்துவமனையில் எல்லா இடங்களிலும், நான் எச்.ஐ.வி பாசிட்டிவ்வா அல்லது எனக்கு வேறு ஏதேனும் பாலியல் ரீதியாக தொற்று இருக்கிறதா என்று கேட்கப்பட்டது." என்கிறார். குரங்கம்மையை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்புக்கு முதலாவதாக இலக்கான கேரளா இளைஞர் டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை: எப்படி பரவுகிறது? சிகிச்சை, அறிகுறிகள் என்ன? எல்.ஜி.பி.டி.க்யூ (LGBTQ) சமூகத்தில் உள்ளவர்களிடையே இந்த நோய் அதிகம் பரவுவதாக ஒரு கூற்று இருப்பதால் அது தொடர்பாக நான் அவமானப்படுத்தப்பட்டேன். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ளும் ஆண்களில் பாலியல் சுகாதார மருத்துவமனைகள் மூலம் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், பாதிக்கப்பட்ட ஒருவருடன் நீங்கள் தொடர்பு கொண்டால் யாருக்கும் இந்த நோய் வரக்கூடும் என்று இந்த அமைப்பு எச்சரிக்கிறது. பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் சமீபத்திய பாதிப்புகளில் "குறிப்பிடத்தக்க விகிதத்தில்" தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் மற்றும் இருபாலின ஆண்களிடம் கண்டறியப்பட்டுள்ளன. ஆகவே, அறிகுறிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவும், தேவைப்பட்டால் உதவியை நாடவும் நாங்கள் அவர்களுக்கு குறிப்பாக அறிவுறுத்துக்கிறோம்," என்று பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குரங்கம்மை வைரஸ் குரங்கம்மை பற்றி பொதுவாக மத்திய ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் மேலும் குறிப்பாக மழைக்காடு பகுதிகளில் காணப்படுகிறது. அடர்ந்த காடுகளைக் கொண்ட காங்கோ ஜனநாயகக் குடியரசில், இந்த ஆண்டு மட்டும் 1,200 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் 2022 மே 1ம் தேதி வரை 57 இறப்புகள் பதிவாகியுள்ளன என்ற உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வைரஸின் இரண்டு முக்கிய விதங்கள் உள்ளன. அவை மேற்கு ஆப்பிரிக்க மற்றும் மத்திய ஆப்பிரிக்க இருப்பதாக அறியப்படுகிறது, இது மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பாதிப்பு சற்றே வலு குறைந்தது. இது இப்போது உலகின் பிற பகுதிகளில் பரவுகிறது. வழக்கத்திற்கு மாறாக, இந்த பிராந்தியத்திற்கு எந்த பயண இணைப்புகளும் இல்லாத நிலையில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஆப்பிரிக்காவிற்கு வெளியே குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது வைரஸ் இப்போது சமூகத்தில் பரவுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குரங்கம்மை காரணமாக ஏற்பட்ட தோல் புண் பிரிட்டன் ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி கூறுகையில், தங்களுக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடும் என்று கவலைப்படுபவர்கள் தங்கள் உள்ளூர் பாலியல் சுகாதார கிளினிக்கைத் தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் வருகைக்கு முன்னதாக அழைக்கவும் அல்லது மின்னஞ்சல் செய்யவும்", என தெரிவிக்கிறது. நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் அறிகுறிகள் இருக்கும் போது உடலுறவு கொள்ள வேண்டாம் என்றும், நோய்த்தொற்று ஏற்பட்ட எட்டு வாரங்களுக்கு முன்னெச்சரிக்கையாக ஆணுறைகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. வைரஸின் பெரும்பாலான பாதிப்புகள் மிதமானவை. சில சமயங்களில் சின்னம்மை போலவே இருக்கும். மேலும் சில வாரங்களில் அவை தானாகவே மறைந்துவிடும். ஆனால், குரங்கம்மை சில சமயங்களில் மிகவும் கடுமையானதாக இருக்கலாம். உலக சுகாதார அமைப்பு இதுவரை பதிவு செய்யப்பட்ட அனைத்து இறப்புகளும் ஆப்பிரிக்க நாடுகளில் பதிவு செய்யப்பட்டவை. நோய்த்தொற்றுக்குப் பிறகு, முதல் அறிகுறிகள் தோன்றுவதற்கு வழக்கமாக 5 முதல் 21 நாட்கள் ஆகும். தோல் பகுதியில் வெடிப்பு தோன்றும், பொதுவாக முகத்தில் தொடங்கி பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கு, குறிப்பாக கைகள் மற்றும் கால்களில் பரவுகிறது. அடிக்கடி மிகவும் எரிச்சலூட்டும், வலிமிகுந்ததாக இருக்கும் இந்த வெடிப்பு , மாறும். அது வெவ்வெறு நிலைகளுக்கு செல்லும், - சிக்கன் பாக்ஸ் போன்றது - ஒரு சிரங்கு உருவாவதற்கு முன், பிறகு அது விழும். இந்த தொற்று பொதுவாக 14 முதல் 21 நாட்களுக்குப் பிறகு முடிவடைகிறது. https://www.bbc.com/tamil/science-62283889
  23. திருவள்ளூர் பள்ளி மாணவி சந்தேக மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் - முழு விவரம் 7 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் திருவள்ளூரில் உள்ள பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உள்ளூர் காவல் நிலையம் கூறியதைத் தொடர்ந்து மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை விசாரணை மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) சத்ய பிரியா தெரிவித்துள்ளார். திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழச்சேரியில் அரசு உதவி பெறும் தனியார் மகளிர் மேல் நிலைப்பள்ளி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். இதில் திருத்தணி அருகே தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய தம்பதியின் மகள் இந்த பள்ளியின் விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல விடுதியில் இருந்து பள்ளிக்கு புறப்பட்ட மாணவி, மற்ற மாணவிகள் காலை உணவு அருந்தச் சென்ற நேரத்தில் தமது அறையில் தூக்கிட்ட நிலையில் கிடந்தார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவம் இடத்துக்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்ய அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார் என்று மட்டுமே தகவல் கூறப்பட்டதாக மாணவியின் உறவினர்கள் தெரிவித்தனர். அவரது நிலை தொடர்பாக பெற்றோருக்கு முறைப்படி பள்ளி நிர்வாகம் தெரியப்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டது. இதையடுத்து மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அவரது சொந்த ஊரான தெக்கலூரில் மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சாலைகளில் கற்களால் தடுப்புகளை அமைத்து அரசு பேருந்துகளை சிறைப் பிடித்தனர். கள்ளக்குறிச்சி மாணவி இறுதி சடங்கு: ஊர் மக்கள் பங்கேற்பு, வெளியூர் ஆட்களுக்கு அனுமதி மறுப்பு அரியலூர் மாணவி மரணம்: குழந்தைகள் ஆணையம் கூறும் புதிய புகார்கள் இந்த நிலையில், மாணவி உயிரிழந்த தகவல் அவரது சொந்த கிராமத்தில் பரவியதை தொடர்ந்து அவரது உறவினர்களும் கிராமத்தினரும் பள்ளி வளாகத்தை நோக்கி வரத் தொடங்கினர். இதையடுத்து முன்னெச்சரிக்கையாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து போலீசார் பெருமளவில் கிராமத்தில் குவிக்கப்பட்டனர். வட்டார வருவாய்த்துறை அலுவலர் அர்ஷத் பேகம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சாரதி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு இதற்கிடையே, மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பபள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் மாணவியுடன் தங்கி இருந்த சக மாணவிகள், விடுதி காப்பாளர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யப் பிரியா மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கல்யாண் நேரடியாக தனித்தனியே விசாரணை மேற்கொண்டார்கள். மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து விடுதியில் தங்கிப் படிக்கும் மற்ற மாணவிகளின் பெற்றோரும் பல்வேறு கிராமத்திலிருந்து அங்கு வந்தனர். யாரையும் பள்ளி வளாகத்துக்குள் போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் சக மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியதால், விடுதியில் தங்கியிருந்த மற்ற சக மாணவிகளை பெற்றோருடன் விடுதி நிர்வாகம் அனுப்பி வைத்ததது. சிபிசிஐடிக்கு மாற்றம் இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்ய பிரியா, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி பள்ளிகளில் ஏதாவது மாணவர்கள் உயிரிழக்க நேர்ந்தால் அந்த வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். அதன் அடிப்படையில் மாணவி உயிரிழந்த வழக்கை முதல் கட்டமாக சந்தேக மரண வழக்காக பதிவு செய்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுகிறோம். இதுவரை நடத்திய விசாரணையில் மாணவியை மாடியில் இருந்து தள்ளியோ மாடியில் இருந்து விழுந்ததாகவோ தெரிய வரவில்லை. அதற்கான காயங்களோ வேறு அறிகுறியோ அவரது உடலில் இல்லை. தூக்கிட்டதாலேயே அவர் இறந்துள்ளார். சிபிசிஐடி விசாரணைக்கு பிறகே மற்ற விவரங்கள் தெரிய வரும்," என்று கூறினார். https://www.bbc.com/tamil/india-62292201
  24. பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? பாம்புகள் பழிவாங்குமா? பிரஷாந்த் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பாம்பு கடித்தால் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்? பாம்புகளால் பழிவாங்க முடியுமா? பாம்புக்கடிக்கான சிகிச்சைமுறைகள் என்ன? இந்த கேள்விகளுக்கான பதில்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம். பாம்புக்கடியால் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் ஏற்படுகின்ற உயிரிழப்பில் பாதி எண்ணிக்கை இந்தியாவில் பதிவாகிறது. 2017-ம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு, பாம்புக்கடியை புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களின் பட்டியலில் முன்னிலை படுத்தியுள்ளது. இதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு. இறப்புகளைப் பற்றிய போதுமான தரவுகள் இல்லாமை, பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்வகள் பெரும்பாலும் கட்டுக்கதைகளை நம்பி தவறான சிகிச்சைகளை எடுப்பது, பாம்பு விஷ எதிர்ப்பு மருந்துகளின் பற்றாக்குறை. பாம்புக்கடி விவகாரத்துல இது போன்று பல்வேறு சவால்கள் உண்டு. இந்தியாவில் பாம்புக்கடியால் எத்தனை பேர் உயிரிழக்கின்றனர்? ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஐம்பது லட்சம் பேர் பாம்புக்கடியை எதிர்கொள்வதாகவும் அதில் கிட்டத்தட்ட இருபத்து ஏழு லட்சம் விஷமுள்ள பாம்புக்கடிகள் என்றும் உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 81 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் வரை பாம்புக்கடியால் இறப்பதாக பல்வேறு அறிக்கைகள் மூலமாக தெரிய வந்துள்ளது. பெரும்பாலான பாம்புக்கடிகள் பதிவு செய்யப்படுவதே இல்லை, ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவம் அல்லாத சிகிச்சை முறையை தேடி செல்கிறார்கள் அல்லது போதுமான மருத்துவ வசதிகள் அவர்களுக்கு கிடைப்பது இல்லை. இந்தியாவில் இரண்டாயிரமாவது ஆண்டு முதல் 2019-வது ஆண்டு வரை 12 லட்சம் பேர் பாம்புக்கடியால் இறந்திருப்பதாக 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. அதாவது சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 58 ஆயிரம் உயிர்கள் பாம்புக்கடியால் பறிபோகிறது. இந்தியாவில் நிலவும் மூட நம்பிக்கைகள் என்ன? பாம்புகள் மற்றும் பாம்புக்கடி தொடர்பாக இந்தியாவில் பல்வேறு மூடநம்பிக்கைகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடவுள் வழிபாடு பட மூலாதாரம்,GETTY IMAGES பொதுவாக இந்தியாவில் உள்ள சில சமூகங்கள் பாம்புகளை கடவுளாக வழிபடுகிறார்கள். தங்களின் விவசாய நிலங்களை பாதுகாப்பதற்கு கடவுள் பாம்புகளை அனுப்பி வைத்துள்ளதாக பழங்குடி சமூகங்கள் நம்புகிறார்கள். ஆணுறுப்பில் குரங்கம்மை புண்கள்: ' தீயில் இருப்பது போல் இருக்கும்' - பாதிக்கப்பட்ட பிரேசில் மனிதரின் அனுபவம் சூரிய கிளர்ச்சி என்றால் என்ன? இதனால் பூமிக்கு ஆபத்தா? மேலும், பாம்புகள் தொடர்பாக இந்த சமூகங்கள் மத்தியில் நிலவும் சில நம்பிக்கைகள் பாம்புக்கடி உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாக இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர் ராஹு கஜ்பியே தெரிவிக்கிறார். பாம்புகள் பழிவாங்குமா? பாம்புகள் பழிவாங்குவதற்காக மனிதர்களை தேடி வந்து கொல்லும் என்று பல இந்திய சினிமாக்களில் காட்டப்பட்டதுண்டு. இது ஒரு மோசமான கட்டுக்கதைனு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முக்கியமாக ஒருத்தர் ஒரு நாகப்பாம்பை அடித்து கொன்றுவிட்டால் அந்த பாம்பின் துணை அடித்து கொன்னவர தேடி வந்து பழிவாங்கும்னு பழங்குடி சமூகங்கள் நம்புவதாகவும், ஆனால் இது மோசமான கட்டுக்கதைனு மருத்துவர் கஜ்பியே தெரிவிக்கிறார். இது போன்ற சில மூட நம்பிக்கைகள் மற்றும் நிறுவப்படாத மருத்துவ சிகிச்சைகள் இந்தியாவின் சில இடங்களில் இன்னும் கடைபிடிக்கப்படுகிறது. கடிபட்ட இடங்களில் வாய் வைத்து உறிதல் இந்தியாவின் சில இடங்கள்ள பாம்பு கடித்தால் மருத்துவர்களை பார்க்காமல் மந்திரவாதிகளை பார்ப்பதுண்டு. YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 அது மட்டும் அல்லாமல் முதலுதவி செய்வதாக நினைத்து மந்திரங்களை ஓதுவது மற்றும் நிறுவப்படாத மூலிகைகளை பயன்படுத்தும் பழக்கமும் பரவலாக உண்டு. பாம்புக் கடித்த இடத்தை அறுத்துவிட்டு வாய் வைத்து உறிஞ்சி விஷத்தை எடுக்குறமாதிரி பல திரைப்படக் காட்சிகள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த மாதிரி நிச்சயம் செய்யக்கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் பதிவாகும் பாம்புக்கடி எண்ணிக்கையில் 70 சதவீதம் விஷமற்ற பாம்புகள், 30 சதவீதம் விஷமுள்ள பாம்புகள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பாம்புக் கடித்த உடனே அருகில் இருக்கும் மருத்துவனைக்கு செல்ல வேண்டும். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னதாக வேறு ஏதேனும் உணவோ அல்லது மாற்று மருந்துகளையோ உட்கொள்ளக் கூடாது. கடிபட்டவர் தானாக நடந்தோ அல்லது வண்டியை ஓட்டி கொண்டோ மருத்துவமனைக்கு போக கூடாது. அவசர ஊர்தியோ அல்லது வேறு விதமான வாகனத்தில் பாதுகாப்பாக போக வேண்டும். பாம்பு கடிபட்ட இடத்தில் இருந்து காலனிகள், மோதிரம், நகைகள் மற்றும் இறுக்கமான ஆடைகள் இருந்தால் அதை கண்டிப்பாக அகற்ற வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES காயங்களை கழுவுதல், கீறி விடுதல், துணியை வத்து இறுக்கமாக கட்டுதல், ஏதேனும் மூலிகைகள பயன்படுத்துதல், என்று செய்வதால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம். குறிப்பாக, பாம்பு கடித்த உடனே ஒரு நபர் மாற்று மருத்துவம் என்ற பெயரில் நேரத்தை வீணடிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வதுதான் சரியான வழிமுறை என்று நிபுணர்கள் உறுதியா தெரிவிக்கின்றனர். இந்தியாவில் போதுமான மருந்துகள் உள்ளதா? முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று சொல்கின்ற மாதிரி பாம்பு விஷத்த முறிப்பதற்கும் பாம்போட விஷம் தான் பயன்படுத்தப்படுகின்றது. பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை வைத்துதான் விஷ முறிவு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. 1895-ம் ஆண்டு, இந்திய நாகப்பாம்பு விஷத்திற்கு எதிராக பிரெஞ்சு மருத்துவர் ஆல்பர்ட் கால்மேட் முதல் விஷ எதிர்ப்பு மருந்தை உருவாக்கினார். ஆனால், இந்தியாவில் விஷ எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதில் இரண்டு முக்கியமான சவால்கள் இருப்பதாக மருத்துவர் ஷர்மா தெரிவிக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதகாவும், விஷ முறிவு மருந்துகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு போறதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் மருத்துவர் ஷர்மா கூறுகிறார். இதுமட்டும் இல்லாமல், நோயாளிக்கு எவ்வளவு மருந்து கொடுக்க வேண்டும் என்பது போன்ற போதுமான விழிப்புணர்வு இல்லை. மருத்துவ ஊழியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முக்கியமான நான்கு பாம்புகள் நீங்கள் பார்க்கும் எல்லா பாம்புகளுக்கும் விஷம் இருக்காது. இந்தியாவில் கிட்டத்தட்ட 300 பாம்பு இனங்கள் உள்ளன. அதுல அறுபது வகையான பாம்புகள் தான் விஷமிக்கவை. அதில் குறிப்பா நான்கு பாம்புகள் தான் பெரும்பாலான பாதிப்புகளுக்கு காரணம். கண்ணாடி விரியன் இந்தியாவில் காணப்படும் மிகவும் ஆபத்தான பாம்புகளில் கண்ணாடி விரியனும் ஒன்று. கண்ணாடி விரியனின் தலை முக்கோண வடிவத்தில் காணப்படும். மேலும் 'வி' வடிவத்திலான வெள்ளைநிறக் கோடும் காணப்படும். கண்ணாடி விரியன் பொதுவாக புல் மற்றும் புதர் நிறைந்த பகுதிகளில் காணப்படும். கட்டு விரியன் பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்ததாக கட்டு விரியன் பாம்பு. இந்த பாம்பு பொதுவாக இரவு நேரத்தில்தான் அதிகமாக தென்படும். சற்று கறுமை நிறமான இதன் உடம்பில் இருக்கும் வெள்ளை நிற பட்டைகள் மூலம் இதை அடையாளப்படுத்தலாம். இந்திய நாகம் நாகப்பாம்பு வெவ்வேறு வகையான நிறங்கள் மற்றும் தகவமைப்புகளை கொண்டிருக்கும். காடுகள், சமவெளிகள் மற்றும் விவசாய நிலங்களில் இது பொதுவாக காணப்படும். மேலும், மக்கள் நெருக்கம் அதிகமான நகர்ப்புறங்களிலும் இதை பார்க்க முடியும். சுருட்டை விரியன் இறுதியாக சுருட்டை விரியன் பாம்பு, இதடோ வடிவம் சிறியதாக இருந்தாலும் அதோட தாக்கும் திறன் மிகவும் ஆபத்தானது. விரியன் வகைப் பாம்புகளில் சுருட்டை விரியன் பாம்புகள் பொதுவாக வளர்ச்சியில் சிறிய அளவிலேயே காணப்படும். ஆனா, இதன் விஷம் மிகவும் கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். பாம்பு கடிச்ச உடனையே பதட்டப்படாம உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது சிறந்த முடிவாக இருக்கும். மொத்தத்தில் பாம்புகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றவும் அதே நேரத்துல பாம்புகளின் அழிவை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் தேவையானதாக உள்ளது. https://www.bbc.com/tamil/science-62289118
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.