Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    20094
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by ஏராளன்

  1. கேரளாவும் தமிழ்நாடும் எழுத்தாளர்களை நடத்தும் விதம் மூன்றாண்டுகளுக்கு முன்பு நான் சுமார் 90 பேர் கொண்ட என் வகுப்புக்கு ஒரு அசைன்மெண்ட் கொடுத்தேன். தனியாகவோ நான்கைந்து பேர் சேர்ந்தோ தமது தாய்மொழியில் அல்லது இந்திய மொழி ஒன்றில் இருந்து ஒரு கதையை ஆங்கிலத்தில் மொழியாக்க வேண்டும். அக்கதைகளில் பத்தை மட்டும் தேர்ந்தெடுத்து ஒரு புத்தகமாகக் கொண்டு வந்தேன். அப்போது நான் ஒரு விசித்திரத்தைக் கண்டேன். எங்கள் பல்கலைக்கழகத்தில் மலையாளிகள் அதிகம், ஓரளவுக்கு தமிழ் மாணவர்களும் உண்டு, அடுத்து இந்திக்காரர்கள் வருவார்கள். கன்னட மொழி பேசும் மாணவர்கள் அமைதியாக நிழலைப் போல் இருப்பார்கள். ஒரு மாணவர் கூட கன்னடக் கதையை மொழியாக்கவில்லை. முப்பதுக்கு மேல் மலையாள சிறுகதைகளும், இருபதுக்கு மேல் இந்திக் கதைகளும் (நிறைய பிரேம் சந்த் கதைகள்) மொழியாக்கப்பட்டு வந்தன. நான் தமிழ் பேசத் தெரிந்த ஒரு மாணவியை அழைத்து அவரை ஒரு கதையையாவது மொழியாக்கக் கேட்டேன். அவர் தனக்கு தமிழ் படிக்கத் தெரியாது என்றதால் யுடியூபில் இருந்து ஒரு பு.பியின் கதையின் வாசிப்பு ஒன்றை எடுத்துக் கொடுத்தேன். அவர் அதைக் கேட்டு எப்படியோ போராடி மொழியாக்கினார். மற்ற தமிழ் மாணவர்கள் சிலர் இந்த விளையாட்டுக்கு வரவே தயாரில்லை. அப்போது என்னை ஆச்சரியப்படுத்தியது கதைகளை மொழியாக்குவதில் மலையாள மாணவர்கள் காட்டிய ஆர்வம் தான். (இந்திக்கதைகளையும் கூட அவர்களே மொழியாக்கினார்கள்.) சில மாணவர்கள் இணைந்து எம்.டி வாசுதேவன் நாயரின் நூறு பக்கங்களுக்கு மேலான ஒரு சுயசரிதையை மொழியாக்கி அளித்தார்கள். நான் அசந்து போனேன். ஒன்று ஒரு நூலை மொத்தமாக மொழியாக்குவதில் அவர்களுக்கு இருந்த பண்பாட்டு ஆர்வமும், தமது மொழியின் சிறப்புகளை அயல் மொழிக்கு கொண்டு போவதில் அவர்கள் காட்டிய துடிப்பும். இரண்டு, அந்த கதைகளை நான் பரிந்துரைக்கவில்லை. அவர்களாகவே தேடி அடைந்தார்கள். அவர்களுக்கு முக்கியமான படைப்பாளிகளின் பெயர்கள் தெரிந்துள்ளதே ஆச்சரியமளித்தது. விசாரித்த போது தமது பள்ளி நூல்களில் முக்கியமான கதைகள் அறிமுகமாயின என்றார்கள். எம்.டியின் அந்த நூலை ஒரு தனிப்புத்தகமாகக் கொண்டு வர வேண்டும் என விரும்பினேன். ஆனால் அதில் நிறைய திருத்தங்கள் செய்ய வேண்டி இருந்ததாலும், எம்.டியிடம் உரிமை பெற வேண்டி இருந்ததாலும் பிறகு கொண்டு வரலாம் என எடுத்து வைத்தேன். தமிழ் பள்ளி / கல்லூரி மாணவர்கள் எங்காவது இப்படி ஒரு முக்கியமான தமிழ் நவீன இலக்கிய நூலை ஆங்கிலத்தில் மொழியாக்கிக் கொடுத்திருக்கிறார்களா? எனக்குத் தெரிந்து இல்லை. இதை எதற்குக் குறிப்பிடுகிறேன் என்றால் இன்றைய தலைமுறை மலையாளிகளுக்கு இலக்கிய ஆர்வம் இல்லை என ஒரு கருத்து சிலர் மத்தியில் நிலவுவதால் தான். நாம் வெளியே காணும் ஒரு சிலரை வைத்து அந்த முடிவுக்கு வரக் கூடாது. நான் நூற்றுக்கணக்கான மாணவர்களை ஒவ்வொரு ஆண்டும் காண்கிறவன் எனும் முறையில் இது உண்மையில்லை என்று உறுதியாகக் கூற முடியும். ஆனால் ஆங்கிலத்தில் எழுதத் தெரிந்த எத்தனை தமிழக மாணவர்களுக்கு தமிழ் இலக்கியம் தெரியும்? நூற்றில் ஒருவர் கூட இருந்தால் ஆச்சரியம்! அடுத்த சல்ஜாப்பு தமிழ் நவீன இலக்கியம் மக்களிடம் ‘கனெக்ட்’ ஆவதில்லை, மக்களிடம் இருந்து விலகி பூடகமாக இருக்கிறது என்பது. ஆனால் கேரளாவில் எல்லா வகையான எழுத்தாளர்களும் கவனிக்கவும் வாசிக்கவும் படுகிறார்கள். சிக்கலான இருண்மையான படைப்பாளிகளும் அங்கே விறப்னையாகிறார்கள். “கஸாப்பின்றே இதிகாசம்” ஒரு சிக்கலான பிரதி தான், அது மலையாள படங்களில் ஒரு ஜோக்காகக் கூட குறிப்பிடப்படுகிறது. அந்தளவுக்கு மக்களிடம் போய் சேர்ந்துள்ளது. அங்கு இறுக்கமான, நுட்பமான மொழியில் எழுதப்பட்ட, தோல்வியின் இருத்தலிய சித்திரத்தை கட்டியெழுப்பும் எம்.டியின் எழுத்துக்களும் தாம் நன்றாக விற்பனை ஆகின்றன. அவரையும் கொண்டாடுகிறார்கள். ஆனால் அதே எம்.டி தமிழகத்தில் இருந்திருந்தால் யாரும் மதித்திருக்க மாட்டார்கள். அதனால் பிரச்சனை கனெக்ட் ஆவதில் இல்லை, நம் பண்பாட்டில் தான் உள்ளது. இங்கே மாற்று சினிமா, ஒவியம், சாஸ்திரிய சங்கீதம் போன்றவற்றுக்கும் வெகுமக்கள் இடையே முக்கியத்துவம் இல்லை என்பதை கவனியுங்கள். பிராமணர்கள் இல்லாவிடில் கர்நாடக சங்கீதம் என ஒன்றே இங்கு இருக்காது. சூப்பர் சிங்கரில் பாடுபவர்கள் அனேகமாக அனைவரும் மலையாளிகள் அல்லது பிராமணர்கள். கடந்த நாற்பதாண்டுகளின் சிறந்த பின்னணிப் பாடகர்கள், பாடகிகள் நிறைய பேர் வேற்றுமொழிக்காரர்களே. நீங்களே ஒரு கணக்கெடுங்கள் - இலக்கியத்தை விடுங்கள், உங்கள் பக்கத்து வீடுகளில் எத்தனை பிள்ளைகள் சதவீதம் பிள்ளைகள் சாஸ்திரிய சங்கீதம் (மேற்கத்திய இசையோ, கர்நாடக சங்கீதமோ, இந்துஸ்தானியோ) படிக்கிறார்கள்? சாஸ்திரிய நடனம், சிலம்பம், கிரிக்கெட் என எதையாவது கற்கப் போகிறார்கள்? மிக மிக சொற்பமாகவே இந்த எண்ணிக்கை இருக்கும். கலை, இலக்கியம், இசை, நடனம், விளையாட்டு என எதிலும் பங்கெடுக்காத ஒரு கும்பலாகவே நாம் இருக்கிறோம். கிட்டார், சேர்ந்திசை போன்ற விசயங்களில் பயிற்சி பெற்றவர்களுக்குக் கூட கிறித்துவ தேவாலய பின்னணியே உதவியிருக்கிறது. கிறித்துவமும் இல்லையெனில் தமிழ்நாட்டில் இசையின் வாசனையே, பயிற்சியே மக்களுக்கு இருக்காது என நினைக்கிறேன். நாம் கேரளாவுக்கே போக வேண்டாம், நம் பக்கத்தில் உள்ள ஒவ்வொரு பிராமணக் குடும்பத்தையும் எடுத்துப் பாருங்கள் - படிப்புக்கு அப்பால் இசை, நடனப் பயிற்சியில் தம் பிள்ளைகளை சேர்த்து விட மிகுந்த அக்கறை காட்டுகிறார்கள் இப்பெற்றோர்கள். கிரிக்கெட் பயிற்சியிலும் சேர்த்து விடுகிறார்கள். அவர்களுக்கு ஓரளவுக்கு இலக்கிய ஆர்வமும் வந்து விடுகிறது. இந்த பயிற்சிகளால் பணம் கிடைக்காது என்றாலும் அதில் மதிப்பும், மரியாதையும் உண்டு, அது பெருமைமிகு மரபு என நினைத்து முன்னெடுக்கிறார்கள். இதுவே கிறித்துவர்கள் அல்லாத மற்ற சாதி மத்திய வர்க்கத்தினரின் குடும்பங்களைப் பாருங்கள் - வெறும் படிப்பு, டிவி, தெருவில் விளையாடுவது, மொபைலை நோண்டுவதைத் தாண்டி அந்த பிள்ளைகளின் வாழ்வில் ஒன்றுமே இருக்காது. பெற்றோர்கள் வேறெதையும் அனுமதிக்கவோ அறிமுகப்படுத்தவோ ஊக்குவிக்கவோ மாட்டார்கள். இப்பிள்ளைகள் வளர்ந்து எப்படியே தப்பித்து இலக்கியம் பக்கம் வந்தால் உண்டு. நாம் எல்லா நூற்றாண்டுகளிலும் இப்படி இருந்ததில்லை. நம்மிடம் தமிழிசை, நடனம், சிற்பக்கலை, சங்க இலக்கியம், தமிழ் பௌத்தம், தத்துவ நூல்கள், தற்காப்புக் கலைகள், மருத்துவம் என என்னென்னமோ இருந்தது. ஆனால் ஏதோ ஒரு கட்டத்தில் இப்படி சோறு தான் முக்கியம், சினிமா தான் அடைக்கலம் என மாறி விட்டோம். அதன் பின்னர் நமக்கு வயிற்றுப்பாடு மட்டுமே முக்கியமாக இருக்கிறது, நீண்ட காலமாக. இந்த கெடுநிலையை மாற்ற முயலாத, வேலைவாய்ப்பு, பிம்ப அரசியல், புலன்கிளர்ச்சியே முக்கியம் எனக் கருதுகிற அரசுகளுக்கு, பள்ளிக் கல்வித்துறைக்கு, ஊடகங்களுக்கும் இதில் ஒரு முக்கிய பங்குள்ளது. Posted 10 hours ago by ஆர். அபிலாஷ் http://thiruttusavi.blogspot.com/2022/07/blog-post_5.html
  2. போரிஸ் ஜான்சனுக்கு அழுத்தம்: ரிஷி சுனக், சாஜித் ஜாவித் பதவி விலகல் - இனி என்ன நடக்கலாம்? ஜோசுவா நெவெட் பிபிசி செய்தியாளர், அரசியல் பிரிவு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நாட்டை வழிநடத்தும் பொறுப்பில் உள்ள பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் மீது தங்களுக்கு இனி நம்பிக்கை இல்லை என்று கூறி அந்நாட்டின் நிதியமைச்சர் பதவியில் இருந்து ரிஷி சுனக்கும் சுகாதார அமைச்சர் பதவியில் இருந்து சாஜித் ஜாவித்தும் செவ்வாய்க்கிழமை மாலையில் பதவி விலகியுள்ளனர். இதனால் போரிஸ் ஜான்சனுக்கு அரசியல் அழுத்தம் அதிகரித்துள்ளது. பதவி விலகல் முடிவை அறிவித்தது தொடர்பாக ரிஷி சுனக் கூறுகையில், அரசாங்கம் "சரியாக, திறமையாக மற்றும் தீவிரமாக" நடத்தப்படும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு," என்று தெரிவித்தார். இதே கருத்தை பிரதிபலித்த சாஜித் ஜாவித், "அரசாங்கம் தேசிய நலனுக்காக செயல்படவில்லை," என்று தெரிவித்தார். எம்.பி பதவி வகித்த கிறிஸ் பிஞ்சரை அரசாங்கப் பதவிக்கு நியமித்ததற்காக பிரதமர் மன்னிப்புக் கேட்ட சில நிமிடங்களில் இந்த ராஜினாமா அறிவிப்புகள் வெளிவந்தன. இந்த நிலையில், நாட்டின் புதிய நிதியமைச்சர் பதவிக்கு கல்வித்துறை அமைச்சர் பொறுப்பை கவனித்து வரும் நாதிம் ஜஹாவி நியமிக்கப்பட்டுள்ளார். இதேபோல, பிரதமர் அலுவலக தலைமை நிர்வாகியாக பணியாற்றி வந்த ஸ்டீவ் பார்க்லேவசம் சுகாதார அமைச்சர் பதவி ஒப்படைக்கப்பட்டுள்ளது. உயர்கல்வி அமைச்சர் மிஷெல் டோனலன் கல்வி அமைச்சராக பதவி உயர்வு பெற்றுள்ளார். இந்தியாவில் 'மத்திய அமைச்சர்' என்று குறிப்பிடப்படும் பதவி, பிரிட்டனில் 'செயலாளர்' என்று அழைக்கப்படுகிறது. அதனால் இந்த செய்தியில் பிரிட்டன் செயலாளர் என்பதை வாசகர்களின் புரிதலுக்காக 'பிரிட்டன் அமைச்சர்' என்றே குறிப்பிடுகிறோம். போரிஸ் ஜான்சன் - நரேந்திர மோதி சந்திப்பு- பிரிட்டன் பிரதமரின் இந்திய வருகை உலகத்துக்கு ஏன் முக்கியம் பதவியை தக்க வைத்தார் பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் - நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பிரிட்டன் நிதியமைச்சர் ரிஷி சுனாக்: "என் மனைவி அக்ஷதா மூர்த்தி வரி ஏய்ப்பு செய்யவில்லை" வருத்தம் தெரிவித்த பிரதமர் முன்னதாக, "இந்த ஆண்டு தொடக்கத்தில் சில குற்றச்சாட்டுகள் எம்.பி கிறிஸ் பஞ்சருக்கு எதிராக நிலுவையில் இருந்தபோதும், அது பற்றி அறிந்திருந்தும் அவரை 'துணை தலைமைக் கொறடா' பதவிக்கு நியமனம் செய்தது எனது மிகப்பெரிய தவறு," என்று போரிஸ் ஜான்சன் ஒப்புக் கொண்டார். இது தொடர்பாக பிபிசிக்கு போரிஸ் ஜான்சன் அளித்த நேர்காணலின்போது, "பின்னோக்கிப் பார்த்தால் அது நான் செய்த தவறான செயல். அதனால் மோசமாகப் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்," என்று கூறினார். ஆனால், அத்தகைய பதவி நியமன நடவடிக்கையில் பிரதமர் தொடர்ச்சியாக நடந்து கொண்ட விதம், எதிர்கட்சிகள் மட்டுமின்றி அவரது சொந்த கட்சி எம்.பி.க்கள் சிலராலும் கடுமையான விமர்சிக்கப்பட்டது. சுனக், ஜாவித் ஆகியோருடன் சேர்த்து டோரி துணைத் தலைவராக இருந்த பிம் அஃபோலமி ஓர் தொலைக்காட்சி நிகழ்ச்சி நேரலையிலேயே தமது பதவி விலகல் அறிவிப்பை வெளியிட்டார். இவர் மட்டுமின்றி வர்த்தக தூதர் பதவியை ஆண்ட்ரூ முர்ரிசன் ராஜினாமா செய்தார். அமைச்சக உதவிப்பணியில் இருந்த ஜோனாத்தன் குல்லிஸ், சாகிப் பாட்டி ஆகியோரும் தங்களுடைய பொறுப்புகளில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர். இதேவேளை, தமது அமைச்சரவையில் தனக்கு எதிராக திரும்பிய அதிருப்தியாளர்களின் எண்ணிக்கையை பிரதமர் போரிஸ் ஜான்சன் மதிப்பிட்டு வருகிறார். ஆனால், அவரது தலைமையை வெளியுறவு அமைச்சர் லிஸ் ட்ரஸ், பதவி உயர்வு பெறும் அமைச்சர் மைக்கேல் கோவ் மற்றும் பிற கேபினட் அமைச்சர்கள் ஆதரிப்பதாக பிபிசி அறிகிறது. போரிஸ் ஜான்சனுக்கு விசுவாசமான கூட்டாளிகளாக கருதப்படும் கலாசாரத்துறை அமைச்சர் நாடின் டோரிஸ், பிரெக்ஸிட் வாய்ப்புகள் துறைக்கான அமைச்சர் ஜேக்கப் ரீஸ்-மோக் ஆகியோர் பகிரங்கமாகவே தங்களுடைய ஆதரவை தெரிவித்துள்ளனர். "பிரதமர் வேலைக்கு சரியானவர் போரிஸ்" என்று அவர்கள் கூறியுள்ளனர். புதிய தலைவலி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரிஷி சுனக் சமீபத்தில்தான் தமது தலைமைக்கு நெருக்கடி வந்தபோது நடத்தப்பட்ட நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பில் போரிஸ் ஜான்சன் வெற்றி பெற்றிருந்தார். அந்த சிக்கலில் இருந்து மீண்டு வந்த சில மாதங்களிலேயே போரிஸ் ஜான்சன், தமது சொந்த அமைச்சரவை சகாக்களின் ராஜினாமாவால் புதிய நெருக்கடியை எதிர்கொண்டிருக்கிறார். ஏற்கெனவே நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடந்து அதில் போரிஸ் 59 சதவீத வாக்குகளுடன் வெற்றியும் பெற்று விட்டார். அதனால் கட்சி விதிகளின்படி கன்சர்வேட்டிவ் தலைமை மாற்றத்துக்கான நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பு நடத்தப்படுவதில் இருந்து அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை போரிஸுக்கு நிவாரணம் உள்ளது. இந்த நிலையில், தொழிலாளர் கட்சித் தலைவர் கெய்ர் ஸ்டார்மெர், "ஒரு விரைவான தேர்தல் வந்தால் அதை நான் வரவேற்பேன். நாட்டிற்கு அரசாங்க மாற்றம் தேவை," என்று கூறினார். "அனைத்து தோல்விகளுக்குப் பிறகு, இந்த டோரி அரசாங்கம் (பழமைவாத கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சியை இப்படி குறிப்பிடுகின்றனர்) இப்போது சரிந்து கொண்டிருக்கிறது என்பது தெளிவாகிறது," என்று அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,AFP பிரிட்டனில் போரிஸ் அரசின் பதவிக்காலம் 2024ஆம் ஆண்டில் நிறைவடைகிறது. எனவே அடுத்த பொதுத்தேர்தல் முறைப்படி பதவிக்காலத்தின் நிறைவில் நடப்பதாக இருந்தால் அதற்கு 2024 வரை காத்திருக்க வேண்டும். இதற்கு இடைப்பட்ட காலத்தில் முன்கூட்டியே தேர்தலுக்கு அழைப்பு விடுக்க பிரதமர் தமது அதிகாரத்தைப் பயன்படுத்தி நடவடிக்கை எடுக்கலாம். எதிர்ப்புக்குரல் கொடுக்கும் தலைவர்கள் இந்த நிலையில், லிபரல் டெமாக்ராட்ஸ் கட்சித் தலைவர் சர் எட் டேவி, பிரதமரின் "குழப்பம் நிறைந்த அரசாங்கம் நம் நாட்டில் தோல்வியடைந்துள்ளது" என்று கூறி, அவர் பதவியில் இருந்து வெளியேற வேண்டும் என்று அழைப்பு விடுத்தார். ஸ்காட்டிஷ் முதல் அமைச்சரும் எஸ்ன்பி தலைவருமான நிகோலா ஸ்டர்ஜியன், ஜான்சனின் அரசாங்கத்தில் "முழுமையாக அழுகிப் போன" எல்லாம் போக வேண்டும். அவரது அமைச்சரவையில் இருப்பவர்கள் "பொதுமக்களிடம் பொய் உரைத்தவர்கள்" என்று குற்றம்சாட்டினார். இது போரிஸ் ஜான்சனின் அரசியல் முடிவின் தொடக்கமா? மூத்த அமைச்சர்கள் பதவி விலகிய பிற்பாடு நடந்த நாளின் அலுவலில், பிரதமரின் முக்கிய விமர்சகர்கள் சிலர், இந்த வாய்ப்பை பயன்படுத்தி பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று போரிஸுக்கு மற்ற அமைச்சர்கள் அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று கூறினர். ரிஷி சுனக்கும் சாஜித் ஜாவித்தும் அதைத்தான் செய்துள்ளனர். பிரதமரை வெளியேற்ற வேண்டுமானால் தங்களின் ராஜினாமா அவசியம் என்று இருவரும் கருதியுள்ளனர். ஒருவேளை அந்த இருவரும் எதிர்கால தலைமைப் போட்டிக்கான நிலைப்பாட்டை கொண்டிருக்கலாம். ஆனால் இங்குள்ள நிலைமையை பார்க்கும்போது, இப்போதும் இந்த சூழலை தவிர்க்க முடியும் என்று பிரதமர் இல்லம் நம்புவதாகத் தோன்றுகிறது. ரிஷி, ஜாவித் வெளியேறிய பிறகும் போரிஸ் ஜான்சனின் ஆதரவாளர்களே வெளியுறவு அமைச்சர், உள்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் வணிக அமைச்சர் பதவிகளை வகிக்கிறார்கள். கார்டன் பிரெளன் பிரதமராக இருந்தபோது (2007-10) அவரது அமைச்சரவையில் இருந்த சிலர் பதவி விலகினார்கள். அப்போது அவரது விசுவாச அமைச்சர்கள் தொடர்ந்து பதவியில் நீடித்ததால் அவரது அமைச்சரவை தப்பித்த வரலாறையும் நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஆனால், இப்போதைய சூழலில் மற்றொரு விஷயத்தையும் பார்க்க வேண்டும். போரிஸ் ஜான்சனை தனிப்பட்ட முறையில் விமர்சிக்கும் சில அமைச்சர்களில், குறிப்பாக இளநிலை அமைச்சர்கள் ரிஷி சுனக், சஜித் ஜாவித் வழியை பின்பற்றலாம் என்றே தோன்றுகிறது. தெரீசா மேவுக்கும் இதே தலைவலிதான் போரிஸுக்கு முன்பு பிரதமர் பதவி வகித்த தெரீசா மேவும் இதேபோன்ற சூழலில் கட்சி அளவிலான நம்பிக்கை வாக்கெடுப்பை எதிர்கொண்டார். அதில் அவர் வெற்றி பெற்றார். ஆனால் ஆறு மாதங்களுக்குப் பிறகு பிரெக்சிட்டை அணுகிய விவகாரத்தில் அவரது நடவடிக்கைகள் சர்ச்சையாக பார்க்கப்பட்டன. அதன் அழுத்தம் அதிகரித்ததால் அவர் பதவியில் இருந்து விலகினார். இந்த நிலையில், போரிஸ் ஜான்சனின் அரசாங்கம் சமீபத்திய மாதங்களில் தொடர்ச்சியான சர்ச்சைகளில் சிக்கி வருகிறது. அது அவரது சொந்த கட்சி எம்பிக்கள் சிலரை, பிரதமரின் ராஜினாமாவைக் கோரத் தூண்டியது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பெருந்தொற்று மிகவும் தீவிரமாக இருந்தபோது, பிரதமர் இல்லம் மற்றும் அதற்கு அருகே உள்ள பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்ட இடத்தில் கேளிக்கை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. அதில் பிரதமரின் பிறந்த நாள் விழாவும் அடங்கும். அந்த செயல்பாட்டுக்காக நாட்டின் பிரதமராக இருந்த போரிஸ் ஜான்சனுக்கே, கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறியதாக லண்டன் போலீஸ் அபராதம் விதித்தது. அதன் மூலம் பிரிட்டனில் அரசாங்க விதியை மீறிய குற்றத்துக்காக அபராதம் விதிக்கப்பட்ட முதல் பிரதமரானார் போரிஸ் ஜான்சன். இது மட்டுமின்றி, சில கன்சர்வேட்டிவ் எம்.பி.க்கள், வரி உயர்வு நடவடிக்கை மற்றும் நாட்டில் அதிகரித்து வரும் மக்கள் செலவினத்தை கட்டுப்படுத்தும் அரசின் கொள்கையில் தெளிவில்லை என்று விமர்சித்து வந்தனர். இத்துடன் கடந்த ஜூன் மாதம் டிவெர்டன், ஹோனிட்டன் மற்றும் வேக்ஃபீல்டில் நடந்த இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சி தோல்வி அடைந்ததும் பிரதமர் போரிஸுக்கு சொந்தக் கட்சிக்குள்ளேயே மேலதிக அழுத்தத்தை அளித்தது. இதன் உச்சமாக கன்சர்வேடிவ் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஆலிவர் டெளடென் விலகவும் நேர்ந்தது. காணொளிக் குறிப்பு, பதவி விலகிய பிறகு வீட்டுக்குத் திரும்பிய சாஜித் ஜாவித் செவ்வாய்க்கிழமை மாலையில் அடுத்தடுத்து நடந்த அரசியல் திருப்பங்களின் தொடர்ச்சியாக சாஜித் ஜாவித் தமது ராஜினாமா கடிதத்தை அவரது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். அதுவும் தமது இல்லத்தில் செய்தியாளர்களை பிரதமர் போரிஸ் சந்தித்த சில நிமிடங்களில் தமது ராஜினாமா கடிதத்தை சாஜித் பகிர்ந்திருந்தார். சாஜித் ஜாவித் - 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பிரிட்டன் சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தார். அவர் பதவி விலகல் கடிதத்தில், "இனி நல்ல மனசாட்சியுடன் இந்த அரசாங்கத்தில் தொடர்ந்து பணியாற்ற முடியாது," என்று கூறியுள்ளார். மேலும், "உள்ளுணர்வாகவே நான் ஒரு அணி வீரன். ஆனால் தங்களுடைய அரசாங்கத்திடம் இருந்து அதே நேர்மையை எதிர்பார்க்க பிரிட்டிஷ் மக்களுக்கு உரிமை உள்ளது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். "ஒரு தலைவராக நீங்கள் வெளிப்படுத்தும் தொனி மற்றும் பிரதிநிதித்துவப்படுத்தும் மதிப்புகள், உங்களுடைய சகாக்கள், கட்சி மற்றும் இறுதியில் நாட்டை பிரதிபலிக்கும்," என்றும் தமது கடிதத்தில் சாஜித் கூறியுள்ளார். இந்த நிலையில், ரிஷி சுனக்கும் தமது ராஜினாமா கடிதத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார். கன்சர்வேடிவ் கட்சியின் எதிர்கால தலைவராகும் சாத்தியம் மிக்கவராக கருதப்படும் ரிஷி சுனக், பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் அரசாங்கத்தில் தரநிலைகள் "போராடத் தகுந்தவை" என்று கூறியுள்ளார். பட மூலாதாரம்,RISHI SUNAK 2020, பிப்ரவரியில் பிரிட்டன் நிதியமைச்சராக பதவியேற்றதில் இருந்து, ரிஷி சுனக் எப்போதும் பொருளாதாரக் கொள்கை மற்றும் பொதுச் செலவின விவகாரங்களில் பிரதமருடன் ஒத்துப்போகாதவராகவே தோன்றினார். "நான் உங்களுக்கு விசுவாசமாக இருந்தேன். எங்கள் கட்சியின் தலைவராவதற்கு நான் உங்களை ஆதரித்தேன், மற்றவர்களையும் அவ்வாறு செய்ய ஊக்கப்படுத்தினேன்.நாட்டின் பொருளாதாரம் மற்றும் நிதிகளின் பொறுப்பை நீங்கள் என்னிடம் ஒப்படைத்ததற்கு நன்றியுடன் நான் உங்களின் நிதிமைச்சராக பணியாற்றினேன். ஆனால், இனியும் என்னால் உங்களை ஆதரிக்க முடியாது," என்று ரிஷி சுனக் தமது ராஜினாமா கடிதத்தில் கூறியுள்ளார். நமக்குள் எழும் சில கருத்து வேறுபாடுகள் விஷயத்தில் சமரசம் செய்து கொள்ள முடியாது என்று கூறியுள்ள ரிஷி, "அடுத்த வாரம் பொருளாதாரம் தொடர்பாக உத்தேசிக்கப்பட்ட கூட்டு உரை தயாரிப்பின்போது, நம் இருவரது 'அணுகுமுறைகளும்' அடிப்படையிலேயே 'மிகவும் மாறுபட்டவை' என்பது எனக்குத் தெளிவாகிவிட்டது," என்று குறிப்பிட்டுள்ளார். "இந்த அரசாங்கத்தை விட்டு வெளியேறுவது எனக்கு வருத்தமாக இருக்கிறது, ஆனால் இனியும் இதில் தொடர முடியாது என்ற முடிவுக்கு நான் தயக்கத்துடன் வந்துள்ளேன்," என்றும் ரிஷி சுனக் கூறியுள்ளார். இந்திய தொழில் அதிபரும், இன்ஃபோசிஸ் நிறுவனருமான நா. ரா. நாராயணமூர்த்தி-சுதா மூர்த்தி ஆகியோர் ரிஷி சுனக்கின் மாமனார்-மாமியார் ஆவர். பிரிட்டனின் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் தேர்வு செய்யப்படலாம் என்று ஊகங்கள் வலுவாக எழுந்த சூழலில் அவரது ராஜினாமா வெளிவந்திருக்கிறது. பிரிட்டனில் இவர் செளத்ஹாம்ட்டன் மக்களவைத் தொகுதியிலிருந்து உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். https://www.bbc.com/tamil/global-62060003
  3. இலங்கை பொருளாதார நெருக்கடி: "குழந்தைக்கு பால் கூட வாங்க முடியாமல் தவிக்கிறேன்" - ஓர் தாயின் கண்ணீர் கதை ரஜினி வைத்தியநாதன் பிபிசி செய்தி, கொழும்பு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சுடச்சுட பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்கும் சாப்பாடு, குழம்பு மற்றும் கீரையை பெறுவதற்காக கைகளில் குழந்தையுடன் நீண்ட வரிசைகளில் பெண்களும், மற்ற குடும்ப உறுப்பினர்களும் காத்திருக்கிறார்கள். ஏனெனில், இதுதான் அவர்களுக்கு, அந்த நாளுக்கான ஒரு வேளை உணவாக இருக்கலாம். இதுதான் இலங்கையின் தற்போதைய களநிலவரமாக உள்ளது. "பசிக்கொடுமையால் நாங்கள் இங்கு நிற்கிறோம்" என்று கூறுகிறார் நான்கு குழந்தைகளுக்கு தாயான சந்திரிகா. இவ்வாறு வரிசையில் நின்று பெறப்பட்ட உணவை பிசைந்து தன் குழந்தை ஒன்றுக்கு ஊட்டிக்கொண்டே பேசிய அவர், தற்போதைய பொருளாதார நெருக்கடியில், ஒரு துண்டு ரொட்டி வாங்குவது கூட மிகவும் கடினமாக உள்ளதாக கூறுகிறார். "நான் குழந்தைகளுக்கு அவ்வப்போது பால் மற்றும் சாப்பாடு போன்றவற்றை கொடுப்பதுண்டு, ஆனால் காய்கறிகளின் விலை மிகவும் அதிகமாக உள்ளதால் அவற்றை வாங்கி சமைப்பதில்லை." மோசமான நிலையில் உள்ள அந்நிய செலாவணி கையிருப்பு மற்றும் அதிகரித்து வரும் பணவீக்கம் ஆகியவை இலங்கையின் பொருளாதாரத்தை படுமோசமான நிலைக்கு கொண்டு சென்றுள்ளது. அரசின் வருமானத்தை பாதிக்கும் வரிக் குறைப்புகளை முன்னெடுத்ததுடன், நாட்டின் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக சீனாவிடம் இருந்து பெருமளவு கடன் வாங்கிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே இந்த பொருளாதார நெருக்கடிக்கு காரணம் என பல்வேறு தரப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். இலங்கை பொருளாதார நெருக்கடி: வெறிச்சோடி போன சாலைகள், எரிபொருளுக்கு மேலும் தட்டுப்பாடு இலங்கை பாட்டி மரணம் - தமிழ்நாட்டுக்கு கணவருடன் அடைக்கலம் தேடி வந்தவர் இதுமட்டுமின்றி, நாட்டின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் சுற்றுலாத்துறை கொரோனா நோய்த்தொற்று பரவலால் பாதிக்கப்பட்டதும், யுக்ரேன் போரால் தொடர்ந்து உயர்ந்து வரும் கச்சா எண்ணெய் விலையுயர்வும் இலங்கையை மோசமான நிலைக்கு தள்ளியுள்ளது. இலங்கை தற்போது மனிதாபிமான நெருக்கடியின் விளிம்பில் உள்ளது என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான பிரதிநிதி பிபிசியிடம் தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியால் இலங்கையிலுள்ள 70 சதவீதம் குடும்பங்கள் தங்களது தினசரி உணவுத் தேவையை பூர்த்தி செய்வதற்கே சிரமப்படும் சூழ்நிலை இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நிலவி வருவதாகவும், எரிபொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் கையிருப்பு வேகமாக குறைந்து வருவதாகவும் யுனிசெஃப் அமைப்பு கூறுகிறது. "குழந்தைகளின் நிலை பரிதாபமாக உள்ளது" படக்குறிப்பு, தனது மூன்று குழந்தைகளுடன் சஹ்னா குடும்பத்தின் உணவுத் தேவையை நிறைவேற்றுவதற்கான வழிகள் குறைந்ததால், தனது வீட்டிற்கு அருகே உள்ள சமுதாய சமையல் கூடத்திற்கு முதல் முறையாக சென்ற சந்திரிகா, "எங்களால் விண்ணை முட்டும் தினசரி செலவை தாக்குப்பிடிக்க முடியவில்லை; அங்கும் இங்கும் கடன் வாங்கியே பிழைப்பை நடத்தி வருகிறோம்" என்று கூறுகிறார். சுமார் ஒரு மாதத்துக்கு முன்பு ஒற்றைப் பலாப்பழத்தை வைத்து மூன்று நாட்களுக்கான உணவுத் தேவையை பூர்த்தி செய்த கணவன் அற்ற தாய் ஒருவரின் அவலநிலையை கண்ட கிறித்தவப் பாதிரியாரான மோசஸ் ஆகாஷ் தேவாலயம் ஒன்றில் சமுதாய சமையல் கூடத்தை தொடங்கினார். "கடந்த நான்கு மாதங்களாக ஒரு நாளைக்கு இரண்டு வேளைக்கூடஉணவு சாப்பிடாத பலரை பார்க்க முடிகிறது" என்கிறார் பாதிரியார் மோசஸ். கடந்த மாதம் இந்த சமுதாய சமையல் கூடத்தை திறந்தபோது சுமார் 50 பேர் தினமும் உணவுக்காக வந்த நிலையில், அது தற்போது ஏறக்குறைய 250ஆக அதிகரித்துள்ளதாக கூறுகிறார் அவர். கடந்த ஜூன் மாதம் மட்டும் இலங்கையில் உணவுப்பொருட்களின் விலை 80% உயர்ந்த நிலையில், இந்த தகவல் வியப்பளிப்பதாக இல்லை. "ஊட்டச்சத்துக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள எண்ணற்ற குழந்தைகளை இப்போதெல்லாம் பார்க்க முடிகிறது" என்று அவர் மேலும் கூறுகிறார். 'ஒரே நாடு, ஒரே சட்டம்' செயலணி: இனவாத ரீதியிலான பரிந்துரைகள் என முஸ்லிம்கள் கண்டனம் தன்பாலின உறவை குற்றமாகக் கருதக் கூடாது: 'ஒரே நாடு - ஒரே சட்டம்' செயலணி பரிந்துரை 34 வயது கர்ப்பிணி பெண்ணான சஹ்னாவும் தனது மூன்று குழந்தைகளுடன் உணவை பெறுவதற்காக வரிசையில் நின்றுகொண்டிருந்தார். வரும் செப்டம்பர் மாதம் தனது நான்காவது குழந்தையை பெற்றெடுக்க உள்ள சஹ்னா, குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து அதிக மன உளைச்சலில் இருப்பதாக கூறுகிறார். "என் குழந்தைகளின் நிலை பரிதாபகரமாக உள்ளது. அவர்கள் எல்லா வகையிலும் கஷ்டப்பட்டு வருகிறார்கள். குழந்தைகளுக்கு ஒரு பாக்கெட் பிஸ்கட் அல்லது பால் பாக்கெட் கூட வாங்க முடியாத நிலையில் நான் இங்கு நிற்கிறேன்" என்று அவர் கூறுகிறார். கூலித் தொழிலாளியாக இருக்கும் சஹ்னாவின் கணவர் வாரத்திற்கு 800 இந்திய ரூபாய் மட்டுமே சம்பாதிக்கும் நிலையில், அதை வைத்து ஒட்டுமொத்த குடும்பத்தின் உணவுத் தேவையை நிறைவேற்ற வேண்டியுள்ளதாக அவர் கூறுகிறார். "நாட்டின் தலைவர்கள் நல்ல வாழ்க்கையை வாழ்கிறார்கள்; அவர்களின் குழந்தைகள் மகிழ்ச்சியாக உள்ளனர் என்றால், என் குழந்தைகள் ஏன் அப்படி இருக்கக்கூடாது?" என்று அவர் கேள்வி எழுப்புகிறார். மனிதாபிமான நெருக்கடி படக்குறிப்பு, இலங்கையில் ஓராண்டு காலத்தில் மிகப் பெரிய விலை உயர்வை சந்தித்த உணவுப் பொருட்களில் சிலவற்றின் ஒப்பீடு சூழ்நிலை இப்படி இருக்க, சஹ்னா தனது அடுத்த குழந்தையை பெற்றெடுக்கும் நேரத்தில் நாட்டின் பொருளாதார சூழ்நிலை மென்மேலும் மோசமடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் தலைநகரான கொழும்புவில் செப்டம்பர் மாதம் வரை மட்டுமே தேவையான உணவுப் பொருட்கள் கையிருப்பில் உள்ளதாக அதன் மேயர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு, சமையல் எரிவாயு தட்டுப்பாடு மற்றும் தொடர் மின்வெட்டு போன்றவை தினசரி வாழ்வின் அங்கமாகிவிட்டதால் மக்களால் ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு சென்று பொருட்களை வாங்கவோ மீண்டு வரவோ அல்லது சமைக்கவோ முடியாத சூழல் நிலவுகிறது. "மக்களால் தாங்கள் முன்பு வாங்கி வந்த பொருட்களை இப்போது வாங்க முடியவில்லை. எனவே, மக்கள் உணவு உண்பதையும், குறிப்பாக சத்தான உணவு உண்பதை குறைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்கள். ஊட்டச்சத்து குறைபாடு நாட்டின் மிகப் பெரிய பிரச்னை என்ற நிலையை நோக்கி சென்றுகொண்டிருக்கிறோம்" என்று யுனிசெஃப்பின் இலங்கைக்கான பிரதிநிதி கிறிஸ்டியன் ஸ்கூக் கூறுகிறார். "நாங்கள் ஒரு மனிதாபிமான நெருக்கடியைத் தவிர்க்க முயன்று வருகிறோம். ஊட்டச்சத்து குறைபாட்டால் குழந்தைகள் இறக்கும் நிலை இன்னும் ஏற்படவில்லை என்பது நல்லதுதான், ஆனால் அதைத் தவிர்க்க பல்வேறு தரப்பினரின் ஆதரவு அவசியம்." கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள ஆயிரக்கணக்கான குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கவும், மேலும் 10 லட்சம் மக்களுக்கு சுகாதார சேவையை வழங்கவும் அவசர நிதி உதவிக்கு யுனிசெஃப் வேண்டுகோள் விடுத்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கையில் ஊட்டச்சத்து குறைபாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எண்ணிக்கை 13 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக அதிகரிக்கும் என்று என்று இலங்கை மருத்துவ ஊட்டச்சத்து சங்கத்தின் தலைவர் ரேணுகா ஜயதிஸ்ஸ கூறுகிறார். மக்கள் பெரும்பாலும் அந்நியர்களின் தயவை நாடியிருப்பதால், இந்த பொருளாதார நெருக்கடி ஒற்றுமை உணர்வை வெளிப்படுத்தும் தருணமாகவும் அமைந்துள்ளது. ஆனால் இரக்கமும் நம்பிக்கையும் கூட இப்போது விலைமதிப்பற்றவைகளாக மாறி வருகின்றன. கொடையாளர்களின் உதவி மட்டும் கிடைக்காவிடில் தங்களது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பச்சிளம் குழந்தைகளின் உயிர் ஆபத்தில் இருந்திருக்கும் என்று கொழும்புவிலுள்ள மருத்துவமனை ஒன்றின் மருத்துவரான சமன் குமாரா கூறுகிறார். தற்போது அத்தியாவசிய மருத்துவ பொருட்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதில் "முற்றிலும் கொடையாளர்களின் நிதியுதவியை நம்பியே இந்த மருத்துவமனை இயங்குகிறது" என்றும் பல நோயாளிகளின் உயிர் ஆபத்தில் உள்ளதால் இன்னும் நிறைய கொடையாளர்கள் உதவ முன்வர வேண்டுமென்றும் அவர் கூறுகிறார். மறுபுறம், சமுதாய சமையல் கூடத்தில் உள்ள சந்திரிகா, தனது மகனுக்கு கிடைத்த உணவை ஊட்டிவிடுவதை நிறைவு செய்கிறார். "என்னுடைய மகிழ்ச்சியான நாட்கள் முடிந்துவிட்டன. ஆனால் எங்களது குழந்தைகள் கடக்க வேண்டிய தூரம் இன்னும் நிறைய உள்ளது" என்று அவர் கூறுகிறார். "அவர்கள் வளரும்போது சூழ்நிலை என்னவாகும் என்று எனக்கு தெரியவில்லை." https://www.bbc.com/tamil/sri-lanka-62052912
  4. "லட்சுமண ரேகையை மிஞ்சிய செயல்" - நூபுர் ஷர்மா விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு முன்னாள் நீதிபதிகள் உள்பட 117 பேர் கடிதம் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நூபுர் ஷர்மா நபிகள் நாயகம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் பேசிய விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த நூபுர் ஷர்மாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றம் சமீபத்தில் கருத்துக்களை வெளியிட்ட செயலை ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் அதிகாரிகள் மற்றும் படை அதிகாரிகள் அடங்கிய குழு கடுமையாக விமர்சித்திருக்கிறது. இது தொடர்பாக இந்திய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி. ரமணாவுக்கு 15 ஓய்வுபெற்ற நீதிபதிகள், 77 முன்னாள் அதிகாரிகள் மற்றும் 25 முன்னாள் படை அதிகாரிகள் கையெழுத்திட்ட திறந்தவெளி கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. கேரள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என். ரவீந்திரன், கேரள அரசு முன்னாள் தலைமை செயலாளர் ஆனந்த் போஸ் ஆகியோரை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டும், மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஷிதிஜ் வியாஸ், குஜராத் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.எம்.சோனி, ராஜஸ்தான் உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதிகள் ஆர்.எஸ்.ரத்தோர், பிரசாந்த் அகர்வால், டெல்லி உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.என். திங்ரா, முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் ஆர்.எஸ். கோபாலன் மற்றும் எஸ். கிருஷ்ண குமார், தூதர் (ஓய்வு பெற்றவர்) நிரஞ்சன் தேசாய், முன்னாள் டிஜிபிக்கள் எஸ்பி வைத் மற்றும் பி.எல். வோஹ்ரா, லெப்டினன்ட் ஜெனரல் வி.கே. சதுர்வேதி (ஓய்வு பெற்றவர்) மற்றும் ஏர் மார்ஷல் (ஓய்வு பெற்றவர்) எஸ்.பி. சிங் ஆகியோரும் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர். உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சூர்ய காந்த் மற்றும் ஜெ.பி. பார்டிவாலா அடங்கிய அமர்வு, நூபுர் ஷர்மா தாக்கல் செய்த மனுவை விசாரித்தனர். அதில், தமக்கு எதிராக நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளையும் டெல்லிக்கு மாற்ற உத்தரவிடுமாறு நூபுர் கோரியிருந்தார். ஆனால், அவரது கோரிக்கையை ஏற்காத நீதிபதிகள், நூபுர் ஷர்மா கருத்து வெளியிட்ட முறையை கடுமையாக விமர்சித்தனர். குறிப்பாக, "நூபுர் ஷர்மாவுக்கு அச்சுறுத்தலா அல்லது அவர் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகியுள்ளாரா?" என்று கேட்ட நீதிபதிகள், அவர் சிந்திக்காமல் பேசிய பேச்சு ஒட்டுமொத்த நாட்டையும் பற்றி எரிய வைத்துள்ளது என்று கூறினர். "நூபுர் ஷர்மாவின் பேச்சு மொத்த நாட்டையும் பற்றி எரிய வைத்துள்ளது" - உச்ச நீதிமன்றம் நூபுர் ஷர்மா vs முகமது ஜுபைர்: ஒரே பிரிவில் வழக்கு - வெவ்வேறு நடவடிக்கை ஏன்? நீதிபதிகளின் கடுமையான விமர்சனம் பட மூலாதாரம்,GETTY IMAGES உதய்பூர் தையல்காரர் படுகொலை செய்யப்பட்ட துரதிருஷ்டவசமான சம்பவத்திற்கு அவருடைய இந்தச் செயல் தான் பொறுப்பு என்றும் நீதிபதிகள் கண்டித்தனர். மேலும், "அரசியல் திட்ட நோக்கத்தை விளம்பரப்படுத்துவதைத் தவிர, ஏற்கெனவே நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கும் ஒரு விஷயத்தைப் பற்றி தொலைக்காட்சி நிகழ்ச்சியில் விவாதிக்க வேறு என்ன நோக்கம் இருக்க முடியும்?" என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். "நூபுர் ஷர்மாவின் கருத்துக்கள் 'வருத்தத்தை' உண்டாக்கும் வகையில் உள்ளன. அதை அவர் வெளியிட வேண்டிய அவசியம் என்ன?" என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இந்த விவகாரத்தில் நூபுரின் வழக்கறிஞர் முன்வைத்த வாதங்களுக்கும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், "இந்த பெண் நாடு முழுவதும் உணர்வுகளை தூண்டிய விதம், நாட்டில் நடப்பதற்கு அவர் ஒருவரே பொறுப்பு என்று காட்டுகிறது," என்று குறிப்பிட்டனர். இந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஓய்வு பெற்ற நீதிபதிகள், முன்னாள் உயரதிகாரிகள் குழு எழுதியுள்ள கடிதத்தில், "உச்ச நீதிமன்றம் அதன் "லக்ஷ்மண் ரேகையை" மிஞ்சிவிட்டது. அதுவே இதுபோன்ற திறந்தவெளி அறிக்கையை வெளியிட தங்களை கட்டாயப்படுத்தியுள்ளது என்று கூறியுள்ளனர். பரவலான கவனத்தை பெற்றிருக்கும் இந்த கடிதத்தின் முழு விவரத்தை இங்கே வழங்குகிறோம். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 எதிர்வினையாற்றும் முன்னாள் நீதிபதிகள், அதிகாரிகள் அக்கறையுள்ள குடிமக்களாகிய நாங்கள், அரசியலமைப்பின்படி அனைத்து அமைப்புகளும் அவற்றின் கடமைகளைச் செய்யும் வரை எந்தவொரு நாட்டின் ஜனநாயகமும் அப்படியே இருக்கும் என்று நம்புகிறோம். உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகளின் சமீபத்திய கருத்துகள் லக்ஷ்மண் ரேகையை விஞ்சிய செயல், எங்களை ஒரு வெளிப்படையான அறிக்கையை வெளியிட கட்டாயப்படுத்தியுள்ளது. 1) உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அமர்வில் இருந்த நீதிபதி சூர்ய காந்த் மற்றும் நீதிபதி ஜே.பி. பர்திவாலா நூபுர் ஷர்மாவின் மனுவில் விடுத்த கோரிக்கையை ஏற்காத நிலையில், அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் நாட்டுக்குள்ளேயும் வெளியேயும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அனைத்து செய்தி சேனல்களும் ஒரே நேரத்தில் அதிக ஒலி அளவில் வெளியிட்ட நீதிபதிகளின் கருத்துக்கள், நீதித்துறை நெறிமுறைகளுக்கு ஒத்ததாக இல்லை. நீதித்துறை ஒழுங்கின் ஒரு பகுதியாக இல்லாத அந்த அவதானிப்புகள், நீதித்துறையின் உரிமை மற்றும் நேர்மையின் அடிப்படையிலானவை என்று கூறி அந்த செயலை புனிதப்படுத்திட முடியாது. இத்தகைய மூர்க்கத்தனமான அத்துமீறல்கள் நீதித்துறையின் வரலாற்றில் இருக்கக் கூடாதவை. 2) நூபுர் ஷர்மா உச்ச நீதிமன்றத்தின் முன் நீதியைக் கேட்டு அணுகினார். காரணம், அது மட்டுமே அவருக்கு நிவாரணத்தை பரிசீலிக்கக் கூடிய ஒரே அமைப்பாக இருந்தது. அவரது மனுவில் எழுப்பப்பட்ட பிரச்னையுடன் சட்டரீதியாக எந்த தொடர்பும் இல்லாத அவதானிப்புகள், நீதி வழங்குவதற்கான அனைத்து நியதிகளையும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மீறியுள்ளன. நீதி பெறுவதற்கான அணுகல் அவருக்கு அடிப்படையிலேயே மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அது இந்திய அரசியலமைப்பின் முகப்புரை, ஆன்மா மற்றும் சாராம்சத்தின் மீதே சீற்றம் கொள்ள வைத்ததாக இருந்தது. Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 3) நீதிமன்ற நடவடிக்கையின்போது நூபுர் ஷர்மாவை கடுமையான குற்றவாளி என்ற வகையிலேயே நீதிபதிகள் தீர்மானித்தபடி கருத்துக்களை வெளியிட்டனர். அங்கு அது ஒரு பிரச்னையே இல்லை - குறிப்பாக, "நாட்டில் நடக்கும் கொந்தளிப்புக்கு அவர் மட்டுமே பொறுப்பு" என்பது போல அமைந்த நீதிபதிகளின் கருத்தில் எந்த நியாயமும் இல்லை. உதய்பூரில் பட்டப்பகலில் நடந்த கொடூரமான தலை துண்டிக்கப்பட்ட சம்பவத்துக்கும் அவரது கருத்தே தூண்டுதல் என்றும் ஒற்றை நோக்கத்தை திருப்திப்படுத்துவதற்காக அப்படி நூபுர் பேசியதாகவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்திருப்பது விமர்சனத்தின் உச்சமாகும். 4) ஒரு எஃப்.ஐ.ஆர் கைதுக்கு வழிவகுக்கும் கருத்தால் நீதித்துறை சமூகம் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடையவே செய்யும். நாட்டிலுள்ள மற்ற ஏஜென்சிகள் குறித்த அவதானிப்புகள், அவற்றின் விளக்கத்தைக் கேட்காமல் தெரிவிக்கப்பட்ட கருத்துக்கள், உண்மையில் கவலையளிக்கின்றன. ஆபத்தானதாகவும் உள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 3 Twitter பதிவின் முடிவு, 3 5) நீதித்துறையின் வரலாற்றில், துரதிருஷ்டவசமாக வெளியிடப்பட்ட அந்த கருத்துகளுக்கு மாற்று இல்லை. மிகப்பெரிய ஜனநாயகத்தின் நீதி அமைப்பில் அது அழிக்க முடியாத வடுவாகி உள்ளது. ஜனநாயக விழுமியங்கள் மற்றும் நாட்டின் பாதுகாப்பில் இவை கடுமையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை என்பதால், அவசர திருத்த நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன. 6) உதய்பூரில் பட்டப்பகலில் காட்டுமிராண்டித்தனமாகவும் கொடூரமாகவும் தலை துண்டிக்கப்பட்ட சம்பவம் விசாரிக்கப்படும் வேளையில், அதை நீர்த்துப்போகச் செய்யும் வகையில் வெளியான நீதிபதிகளின் அவதானிப்புகள், விரிவாகவே உணர்ச்சிப்பிழம்பை தீவிரமாக்கியுள்ளன. 'நீதிபதிகளின் செயலில் நியாயமில்லை' Twitter பதிவை கடந்து செல்ல, 4 Twitter பதிவின் முடிவு, 4 7) தன் முன் இல்லாத ஒரு பிரச்னை மீதான அவதானிப்புகள், அடிப்படையில் முடிவு செய்து விட்டு வெளியிடும் கருத்துக்கள் போல உள்ளன. அப்படி செய்வது இந்திய அரசியலமைப்பின் சாராம்சத்தை சிலுவையில் அறைவது போலாகும். இத்தகைய மோசமான அவதானிப்புகளால் ஒரு மனுதாரரை வற்புறுத்தி, விசாரணையின்றி அவரை குற்றவாளி ஆக கருதத் தூண்டுவது அவருக்கு நீதி மறுப்பதற்கு ஒப்பாகும். ஒரு ஜனநாயக சமூகத்தின் அம்சமாக இந்த செயல்பாடு இருக்க முடியாது. 😎 நீதித்துறை அத்துமீறல்கள் மற்றும் விசாரணை அமைப்புகளின் மீது செல்வாக்கை செலுத்தும் வகையில் தங்களுடைய கருத்துக்களை பிரதிபலிக்கச் செய்வது பகுத்தறிவு மனதையும் குழப்பம் அடையச் செய்யும். 9) சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகம் நிலைத்து மலரவும் நீதிக்காக அக்கறைப்படும் மனதை அமைதிப்படுத்தவும் வேண்டுமானால், நீதிமன்ற அவதானிப்புகளை மிகக் கடுமையானதாகக் கருத வேண்டும். அவை திரும்பப் பெற தகுதி வாய்ந்தவையே. நூபுர் ஷர்மா விவகாரம்: அரபு நாடுகளில் எழும் எதிர்ப்பு; இந்தியாவின் பதில் என்ன? பாஜக-வின் மத நல்லிணக்க அறிக்கை, நபிகள் பற்றி பேசிய நிர்வாகிகள் நீக்கம்: என்ன நடக்கிறது? 10) உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் தேவையற்ற மற்றும் வாய்மொழி அவதானிப்புகள் அவசியம் ஏற்படாத போதிலும், இந்த விஷயத்தில் மற்றொரு முக்கியமான அம்சம் உள்ளது. மேலே குறிப்பிட்டுள்ளபடி, ஒரு தொலைக்காட்சி விவாதத்தின் போது நூபுர் ஷர்மா கூறியதாக வெளியான கருத்துக்கள் தொடர்பாக, பல்வேறு மாநிலங்களில் தனக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கைகளை டெல்லிக்கு மாற்றுமாறு கோரியே மனுதாரர் உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளார். தனித்தனி வழக்குகள் (எஃப்ஐஆர்) ஒரே குற்றம்சாட்டப்பட்ட விஷயத்துக்காக தொடரப்பட்டுள்ளன. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 20 (2) ஒரே குற்றத்திற்காக ஒன்றுக்கு மேற்பட்ட முறை வழக்கு தொடுப்பதையும் தண்டிப்பதையும் தடை செய்கிறது. அரசியலமைப்பின் 20ஆவது விதி, பகுதி IIIஇன் கீழ் வருகிறது. அது அடிப்படை உரிமைக்கு உத்தரவாதம் தருகிறது. இந்திய அரசுக்கும் அர்னாப் கோஸ்வாமிக்கும் எதிரான வழக்கு, கேரள அரசுக்கும் டி.டி. ஆண்டனிக்கும் எதிரான வழக்கு போன்றவற்றில் ஒரே விஷயத்தில் இரண்டாவது முதல் தகவல் அறிக்கை பதிவு தேவையில்லை என்றும் தனி விசாரணை அவசியமில்லை என்றும் உச்ச நீதிமன்றம் தெளிவாகத் தெரிவித்து உள்ளது. அப்படி செய்வது அடிப்படை உரிமைக்கு உத்தரவாதம் தரும் அரசியலமைப்பு விதி 20(2)-ஐ மீறுவதற்கு ஒப்பாகும். 11) உச்ச நீதிமன்றம், மனுதாரரின் அடிப்படை உரிமையைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, அவரது மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள மறுத்து, அவர் தமது மனுவைத் திரும்பப் பெறும்படி கட்டாயப்படுத்தியது. மேலும், அத்தகைய வெவ்வேறு மாநிலங்களில் உள்ள ஒரே விவகாரம் தொடர்புடைய வழக்குகளை ஒன்றாக விசாரிக்க உத்தரவிடும் அதிகாரத்தை உயர் நீதிமன்றம் பெற்றிக்கவில்லை என்பதை நன்கு அறிந்தபோதும் உச்ச நீதிமன்றம் மனுதாரரிடம் இவ்வாறு கூறியிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இத்தகைய அணுகுமுறை எந்த கைதட்டலுக்கும் தகுதியற்றது. அது நாட்டின் உச்சபட்ச நீதிமன்றத்தின் புனிதத்தன்மை மற்றும் கௌரவத்தையும் பாதிக்கிறது என்று கடிதத்தில் ஓய்வு பெற்ற நீதிபதிகள், அதிகாரிகள் கூறியுள்ளனர். https://www.bbc.com/tamil/india-62051020
  5. அறிவியல் சிக்கல்: தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா? - விஞ்ஞானிகள் கூறுவது என்ன? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நம்மில் பலருக்கு முதல்முறையாக நடக்கும் அனுபவங்கள், பார்க்கும் இடங்கள் போன்றவை ஏற்கெனவே நடந்தவையாகத் தோன்றும். இதை தேஜாவு என்கிறார்கள். இது சற்று வினோதமாக இருப்பதால், அமானுஷ்யங்களுடன் தொடர்புபடுத்தி நீண்ட காலமாகப் பேசப்பட்டு வருகிறது. இன்னும் சிலர் இதை மறுபிறவி என்பார்கள். 1870-களில் 'ஏற்கெனவே பார்த்தது' என்று பொருள்படும்படியாக பிரெஞ்சு மொழியைப் பயன்படுத்தி தேஜாவு என இதற்குப் பெயர் வைத்தவர் எமிலி போயராக். இவர் பிரெஞ்சுத் தத்துவ ஞானி. இவர் பெயர் வைத்தாரே தவிர துல்லியமான விளக்கம் எதையும் கூறவில்லை. அதனால் மறுபிறவி அமானுஷ்யம் என்பது போன்ற பல கற்பிதங்கள் தேஜாவுக்கு கூறப்பட்டு வந்தன. பல ஹாலிவுட் திரைப்படங்கள் முதல் தமிழ்த் திரைப்படங்கள் வரை தேஜாவு பற்றிப் பேசியிருக்கின்றன. ஆனால் அவையும் அறிவியல் ரீதியாக அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டவை அல்ல. ஏன் மனிதர்களால் முன்னாள் காதலை மறக்க முடிவதில்லை? பிரிந்து பிரிந்து சேருவதற்கு பின்னிருக்கும் உளவியல் என்ன? ருசியான பிரியாணிக்கு ஆசையா? இவைதான் சமையல் விதிகள்! கூகுள், அமேசான், மைக்ரோசாஃப்ட்டில் வேலைக்கு சேர என்ன படிக்க வேண்டும்? எப்படி தயாராவது? உண்மை என்னவென்றால் தேஜாவு என்று கூறப்படும் அந்த உணர்வு பற்றி யாராலும் 100 சதவிகிதம் விளக்கம் தர முடியவில்லை. ஆனால் உளவியல் ஆராய்ச்சியாளர்கள், இதற்கு பல வகையான சாத்தியக்கூறுகளைக் கூறுகின்றனர். மூளை, அதன் நினைவுதிறன், அறிவாற்றல் உள்ளிட்டவற்றை இணைக்கும் வகையிலான கோட்பாடுகள் அவை. ஒரு சூழ்நிலையை நாம் முழுமையாக அறிந்துகொள்வதற்கு முன்பு, நமது மூளை அதை விரைவாகவும் மேம்போக்காகவும் உள்வாங்குகிறது. சிறிது நேரத்தில் நாம் அதை முன்பே பார்த்தது போன்ற ஒரு அதிர்ச்சியைப் பெறலாம். இதை பிளவுபட்ட சிந்தனை என்கிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES இதேபோல மற்றொரு கருத்துருவும் உண்டு. மூளையின் அரைக் கோளங்களிலிருந்தும் நமது எண்ணங்கள் டெம்போரல் லோப் எனப்படும் மூளையின் பொட்டு மடல் பகுதிக்குள் நுழைகின்றன. அப்போது ஒன்று மற்றொன்றை விட ஒருசில மில்லி விநாடிகள் தாமதமாகச் செல்கிறது. இந்த தாமதமான தருணத்தில் தான் தேஜாவு ஏற்படுகிறது என்று சில விஞ்ஞானிகள் விளக்குகிறார்கள். தேஜாவு பற்றி ஆய்வு செய்வதில் உள்ள சிக்கல் என்னவென்றால், அப்படியொன்று நடப்பது வரை காத்திருக்க முடியாது என்பதுதான் என்று கூறுகிறார்கள் விஞ்ஞானிகள். அதே நேரத்தில் டெம்போரல் லோப் பாதிப்பு உள்ளவர்களை ஆய்வு செய்யும்போது அவர்களுக்கு அடிக்கடி தேஜாவு நடப்பதை அறிய முடிகிறது என்கிறார்கள் மற்றொரு தரப்பு விஞ்ஞானிகள். 2012 இல், ஒரு ஆய்வு மெய்நிகர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மக்களை வெவ்வேறு முப்பரிமாணச் சூழல்களுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். மருத்துவமனையின் காத்திருப்பு அறை, திரையரங்கம் போன்றவை அதில் இடம்பெற்றிருந்தன. அந்த நேரத்தில் பலருக்கு தேஜாவு போன்ற அனுபவங்கள் ஏற்பட்டன. அதனால் தேஜாவூ என்பது நமது நினைவுடன் தொடர்புடையது என்று அறிய முடிகிறது. ஆனால் 2014-ஆம் ஆண்டில் நடந்தப்பட்ட மற்றொரு ஆய்வு வேறு மாதிரியான முடிவுகளைக் கொண்டிருந்தது. இந்த ஆய்வில் பங்கேற்றவர்களுக்கு 'படுக்கை', 'தலையணை', 'தூக்கம்', 'கனவு' போன்ற சொற்கள் காட்டப்பட்டன. ஆனால் இவற்றுக்கெல்லாம் பொதுவான 'தூக்கம்' என்ற சொல் காட்டப்படவே இல்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES முதலிலேயே ஆங்கில எழுத்து 'எஸ்' இல் தொடங்கும் சொற்கள் ஏதாவது தென்படுகிறதா என்பதைப் பார்த்துக் கூறவும் என்று அனைவருக்கும் அறிவுறுத்தப்பட்டிருந்தது. பலர் அப்படிச் சொல் எதுவும் தோன்றவில்லை என்று உறுதியாகக் கூறினார்கள். ஆனால் தங்களுக்கு தூக்கம் அதாவது 'Sleep' என்ற சொல் காட்டப்பட்டதாக சிலர் கூறினார்கள். இது தேஜாவுவுக்கு சமமான அனுபவமாக அவர்களுக்கு இருந்தது. தேஜாவுவின் போது மூளையை ஸ்கேன் செய்த நிபுணர்கள் இந்த முறையைப் பயன்படுத்தினர். அவர்கள் தேஜாவு என்பது மூளையின் நினைவகத்தில் ஏற்படும் பிரச்னையல்ல. மாறாக முன்மூளையில் ஏற்படும் மாற்றம் என்று அவர்கள் கூறுகின்றனர். இந்தப் பகுதிதான் நாம் எடுக்கும் முடிவுகளுக்குக் காரணமாகிறது என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். அதனால் தேஜாவு ஏற்படுகிறவர்களுக்கு நினைவாற்றல் மிகச் சிறப்பாக வேலை செய்கிறது என்று அவர்கள் கூறுகின்றனர். ஆனால் இவை எவையும் தேஜாவு பற்றி முழுமையாக விளக்கவில்லை. தேஜாவு என்பது பேரலல் யுனிவெர்ஸ் என்று கூறப்படும் வேறொரு பிரபஞ்சத்துக்குச் செல்லும் வழியாகவும் இருக்கலாம். இல்லையெனில் காலத்தில் ஏற்பட்ட பிளவாக இருக்கலாம். வருங்கால ஆராய்ச்சிகள்தான் முடிவு செய்ய வேண்டும். https://www.bbc.com/tamil/science-62047029
  6. Tamil in Mecca: Arafat Day சொற்பொழிவு நேரலையாக தமிழில் மொழிபெயர்க்கப்படும் - சௌதி அரசு அறிவிப்பு
  7. லீனா மணிமேகலை காளி பட சர்ச்சை: டெல்லி, உத்தர பிரதேச காவல் நிலையங்களில் வழக்குப்பதிவு 5 ஜூலை 2022, 08:45 GMT பட மூலாதாரம்,LEENA MANIMEKALAI லீனா மணிமேகலையின் 'காளி' ஆவணப்படத்தின் போஸ்டர் சர்ச்சைக்குள்ளாகியுள்ள நிலையில், அதன் ஆவணப்பட இயக்குனர் லீனா மணிமேகலை மீது டெல்லி மற்றும் உத்தர பிரதேசத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தான் இயக்கியுள்ள 'காளி' என்கிற நிகழ்த்து ஆவணப்படத்தின் (Performance Documentary) 'ஃபர்ஸ்ட் லுக்' போஸ்டரை சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் லீனா மணிமேகலை பதிவிட்டிருந்தார். இதுதான் தற்போதைய சர்ச்சையின் மையமாக உள்ளது. அந்த போஸ்டரில் 'காளி' போன்று வேடமணிந்துள்ள பெண், தன் வாயில் சிகரெட்டுடன், கையில் பால்புதுமையினர் (LGBT) கொடியை பிடித்திருப்பது போன்று உள்ளது. இந்த போஸ்டர் வெளியிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே அதற்கான எதிர்வினைகள் வெளிவரத் தொடங்கின. 'ArrestLeenaManimekalai' என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் ஜூலை 4 அன்று டிரெண்டானது. "செய்வதற்கும் சாவதற்கும் இடையில் கலை ஊசலாடிக் கொண்டிருக்கிறது" - லீனா மணிமேகலை சூர்யா, கஜோலுக்கு 'ஆஸ்கர்ஸ்' அகாடமியில் உறுப்பினராக அழைப்பு - சுவாரசிய தகவல்கள் 'வாரிசு' விஜய், தளபதியாக உயர்ந்த கதை - நீங்கள் அறிந்திராத பல தகவல்களுடன் டெல்லி, உத்தர பிரதேசத்தில் வழக்குப்பதிவு இந்நிலையில், 'காளி' ஆவணப்பட போஸ்டர் மத உணர்வுகளை புண்படுத்தியதாக இயக்குநர் லீனா மணிமேகலை மீது திங்கள்கிழமை (ஜூலை 4) டெல்லி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் ஒருவர் அவருக்கு எதிரான புகாரை பதிவு செய்துள்ளார். காளி பட போஸ்டர் "மிகவும் ஆட்சேபனைக்குரியது" என்று அவர் கூறியிருக்கிறார். ஜூலை 2ஆம் தேதி லீனாவால் பகிரப்பட்ட சர்ச்சைக்குரிய போஸ்டர் தொடர்பான தமது புகாரில், ஆவணப்படத்தின் ஆட்சேபனைக்குரிய புகைப்படம் மற்றும் கிளிப்பிங்கை தடை செய்யுமாறு வழக்கறிஞர் வினீத் ஜிண்டால் கோரியுள்ளார். காளி தேவியின் வேடமிட்ட பெண் ஒருவர் சிகரெட் பிடிப்பது போன்ற அந்த போஸ்டர், இந்து சமூகத்தினரின் உணர்வுகளையும் நம்பிக்கைகளையும் புண்படுத்துவதாக அவர் வினீத் ஜிண்டால் கூறியுள்ளார். அதேபோன்று, டெல்லி காவல்துறையின் சிறப்பு ஐ.எஃப்.எஸ்.ஓ பிரிவும் லீனா மணிமேகலை மீது ஐபிசி 153 ஏ மற்றும் 295ஏ ஆகிய பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 மேலும், உத்தர பிரதேசத்திலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. லக்னோவில் உள்ள ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்தில் இந்த வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. உதவி ஆணையர் அகிலேஷ் சிங் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 Twitter பதிவின் முடிவு, 2 இதுதவிர, லீனா மணிமேகலையின் 'காளி' ஆவணப்படம் திரையிடப்படும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களிடம் இந்த "ஆத்திரமூட்டும் வகையிலான" போஸ்டரை திரும்பப் பெறுமாறு திங்கள்கிழமை இரவு, கனடாவிலுள்ள இந்திய உயர் ஆணையரகம் கேட்டுக்கொண்டது. மேலும், இந்த போஸ்டர் தொடர்பாக "கனடாவில் உள்ள இந்து சமூகத்தின் தலைவர்கள் தெரிவித்துள்ள புகார்கள்" குறித்தும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் இந்திய உயர் ஆணையரகம் தெரிவித்துள்ளது. என்ன சொல்கிறார் லீனா மணிமேகலை? இந்த சர்ச்சை தொடர்பாக, பிபிசி தமிழுக்கு லீனா மணிமேகலை அளித்திருந்த பேட்டியில், "என்னைப் பொருத்தவரை "காளி" பேராற்றல் கொண்ட, கட்டற்ற, அசுரத்தனம் என்று கருதப்படுவதையெல்லாம் காலில் போட்டு மிதிக்கிற, தீமையின் தலைகளையெல்லாம் ஒட்ட நறுக்கி கெட்ட ரத்தமாக ஓடவிடுகிற துடியான ஆதி மனுஷி. அப்படி ஒரு மனுஷி ஒரு மாலை நேரம் எனக்குள் இறங்கி டொரோண்டோ மாநகர வீதிகளில் வலம் வந்தால் என்ன நடக்கும் என்பதை நிகழ்த்திக் காட்டும் படம் தான் காளி. நான் பால்புதுமையராகவும், திரைப்படங்களை இயக்கும் பெண்ணாக இருப்பதாலும் எனக்குள் இறங்கும் காளி, பால்புதுமையர் கொடியையும் கேமராவையும் பிடித்திருக்கிறார். பூங்காவில் படுத்துறங்கும் கனடாவின் வீடற்ற ஏழை கருப்பின உழைக்கும் மக்களிடம் காளியை உபசரிக்க ஒரு சிகரெட் தான் இருக்கிறது. அதை அன்புடன் ஏற்றுக் கொள்கிறார் காளி" என ஆவணப்படம் குறித்து விளக்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES யார் இந்த லீனா மணிமேகலை? கவிஞர், ஆவணப்பட இயக்குநர், சுயாதீன திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்ட லீனா மணிமேகலை, பாலியல் - சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் ஈழப்போராட்டங்கள் குறித்தும் திரைப்படங்களையும், ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த இவருடைய 'மாடத்தி, 'செங்கடல்' போன்ற திரைப்படங்கள் சர்வதேச கவனம் பெற்றிருக்கின்றன. சர்வதேச திரைப்பட விழாக்களிலும் இவரது படங்கள் திரையிடப்பட்டுள்ளன. பல்வேறு சர்வதேச விருதுகளையும் லீனா மணிமேகலை பெற்றுள்ளார். தற்போது, கனடாவில் திரைப்பட தயாரிப்பு குறித்து படித்து வருகிறார். "கனடாவின் யோர்க் பல்கலைக்கழகம் சர்வதேச அரங்கில் திறம்பட இயங்கும் படைப்பாளியென என்னை வரவழைத்து உதவித்தொகை வழங்கி மேலதிக பயிற்சிக்கான களத்தையும் மாஸ்டர்ஸ் டிகிரிக்கான வாய்ப்பையும் வழங்கியது" என, பிபிசி தமிழிடம் லீனா மணிமேகலை தெரிவித்தார். இந்தியாவில் மதக்கடவுள்களை திரையில் சித்தரிக்கும் விதம் எப்போதும் 'சென்சிட்டிவ்' விஷயமாகவே கருதப்படுகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு பாலிவுட் திரைப்படமான 'ஆங்ரி இந்தியன் காடசஸ்' (Angry Indian Goddesses) திரைப்படத்தில் தணிக்கை வாரியம் சில காட்சிகளை நீக்கியது. மதம் சார்ந்த சித்தரிப்புகளுக்காக பல திரைப்பட இயக்குநர்கள் எதிர்ப்பை சந்தித்துள்ளனர். லீனா மனிமேகலையின் திரை கையாடல்களில் பெண் தெய்வங்கள் குறித்த குறியீடுகள் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டுள்ளன. அவருடைய தேவதைகள் (Goddesses) ஆவணப்படத்தில், ஒப்பாரி பாடும் பெண், இடுகாடுகளில் கைவிடப்பட்ட பிணங்களை அப்புறப்படுத்தும் பெண், மீனவப் பெண் என அசாதாரண வேலைகளை செய்யும் சாமானிய பெண்களின் வாழ்வை ஆவணப்படுத்தியிருப்பார். 2019ஆம் ஆண்டு வெளியான 'மாடத்தி' திரைப்படத்தில் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த இளம்பெண், எப்படி தெய்வமாக, அழியாதவளாக மாறுகிறாள் என்பதே கதையின் அடிப்படையாகும். இதனிடையே, தமிழ் திரைப்பட இயக்குநர் சுசி கணேசன் மீது 2018ஆம் ஆண்டில் பாலியல் புகாரை தெரிவித்திருந்தார் லீனா மணிமேகலை. இதுதொடர்பாக, சுசி கணேசன் தொடர்ந்த அவதூறு வழக்கில், சுசி கணேசனுக்கு எதிராக, உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற கருத்துகளை வெளியிட லீனா மணிமேகலைக்கு சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்திருந்தது. 'காளி' ஆவணப்பட சர்ச்சையில் லீனா மணிமேகலை சிக்கியுள்ள நிலையில், இன்று மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வருகிறது. பட மூலாதாரம்,@LEENAMANIMEKALI/TWITTER https://www.bbc.com/tamil/india-62047561
  8. ரயர் ரியூப் 3200ரூபா, முன்னர் சிறிய ஒட்டு ஏற்பட்டால் ரியூப் மாற்றுபவர்கள் இப்ப திரும்ப திரும்ப ஒட்டி பாவிக்கின்றனர். இப்போது சைக்கிள் திருத்தும் கடைகள் புதிதாக தொடங்கப்படுகிறது.
  9. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த பழங்குடிப் பெண்ணுக்கு அமெரிக்காவில் ஹாக்கி பயிற்சி - யார் அந்த பெண்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SHAKTIVAHINI ஜார்கண்டின் குந்தி மாவட்டத்தில் 70 வீடுகள் மட்டுமே கொண்ட ஹெசல் கிராமம் பற்றி தற்போது பரபரப்பாகப் பேசப்படுகிறது. ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு இந்த கிராமம் பற்றிய பேச்சு இப்போது மேலும் அதிகமாகியுள்ளது. இதற்குக் காரணம் 17 வயதான புண்டி சாரு. ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த வளரும் ஹாக்கி வீரர்களில் புண்டி சாருவும் ஒருவர். இவர் தற்போது அமெரிக்காவில் உள்ள மிடில்பரி கல்லூரியில் கலாசார பரிமாற்றத் திட்டத்தின் கீழ் பயிற்சி பெற்று வருகிறார். புண்டி சாருவின் ஹெசெல் கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் மண்ணால் ஆன சுவர்களோடும் ஓடுகள் வேயப்பட்ட கூரையோடும் உள்ளன. ஆனால், ஒலிம்பிக் போட்டியின் போது (2016) கூட இங்கு பத்திரிகையாளர்களின் கூட்டம் இருந்தது. அப்போது இந்த கிராமத்தைச் சேர்ந்த நிக்கி பிரதான், ஒலிம்பிக்கில் விளையாடும் இந்திய பெண்கள் ஹாக்கி அணிக்குத் தேர்வானார். அதற்கு முன் இந்த கிராமத்தைச் சேர்ந்த புஷ்பா பிரதான், இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம் பெற்றிருந்தார். இப்போது இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு பெண்ணும் ஹாக்கி விளையாடுகிறார்கள். இந்திய மகளிர் ஹாக்கி அணியில் சேர வேண்டும் என்பதே அவர்களின் கனவு. நிக்கி தற்போது இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். பட மூலாதாரம்,RAVI PRAKASH/BBC படக்குறிப்பு, புண்டி சாருவின் ஹெசெல் கிராமத்தில் உள்ள பெரும்பாலான வீடுகள் மண்ணால் ஆன சுவர்களோடும் ஓடுகள் வேயப்பட்ட கூரையோடும் உள்ளன புண்டி சாருவின் கதை புண்டியின் தந்தை எத்வா சாரு, சில வருடங்களுக்கு முன் ஏற்பட்ட சாலை விபத்துக்குப் பிறகு முன்பு போல் வேலை செய்ய முடியாமல் உள்ளார். மெட்ரிகுலேஷன் (பத்தாம் வகுப்பு) தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றதால் மூத்த சகோதரி மங்குரி தற்கொலை செய்து கொண்டார். இப்போது வீட்டை நடத்தும் பொறுப்பு புண்டியின் அண்ணன் சஹாரா சாரு, அம்மா சாந்து சாரு மற்றும் புண்டியின் மீதும் விழுந்துள்ளது. இதனால் பலமுறை இவர் ஹாக்கி பயிற்சியை விட்டுவிட்டு, வயல்வெளிகளிலும் வேலை செய்கிறார். இந்தப் பெண்களை சொந்தக்காலில் நிற்கவைத்தவை காளான்கள்தான் - எப்படி? மித்தாலி ராஜ் ஓய்வு: இந்திய பெண்கள் கிரிக்கெட் ராணியின் சாதனைகள் என்னென்ன? தன்னைத் தானே மணந்துகொள்ள இருக்கும் குஜராத்திப் பெண் கிளப்பும் விவாதங்கள் 2016 ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் விளையாட தேர்வு பெற்ற நிக்கி பிரதானின் தாயார் ஜிதன் தேவியை ஹெசல் கிராமத்தில் நான் பிபிசிக்காக சந்திக்கச் சென்றபோது, சகோதரிகள் (புண்டி மற்றும் மங்குரி) ஒன்றாக ஹாக்கி விளையாடுவார்கள். அந்தப் படத்தை அப்போது பிபிசி வெளியிட்டது. ஆனால், இப்போது புண்டி சாரு தனியாக ஹாக்கி விளையாடுகிறார். "முன்பு நான் கால்பந்து விளையாடுவேன். அப்போது ஹாக்கி விளையாடினால் விரைவில் வேலை கிடைத்து விடும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால் ஹாக்கி விளையாட ஆரம்பித்தேன். குடும்பத்தை நல்லபடியாக நடத்துவதற்கு அரசு வேலை முக்கியம். இப்போது நான் இந்தியாவுக்காக ஹாக்கி விளையாட விரும்புகிறேன். இந்த வாய்ப்பு நிச்சயம் வரும் என்றும் இந்திய மகளிர் ஹாக்கி அணிக்காக செண்டர் ஹாஃபில் விளையாடுவேன் என்றும் நம்புகிறேன்," என்று புண்டி சாரு பிபிசியிடம் கூறினார். புண்டி சாரு ஒரு பழங்குடியினப் பெண். அவருடைய ஹாக்கி பயணம் மிகவும் எளிதானதாக இருக்கவில்லை. அவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 2020 இல் இந்த கலாசார பரிமாற்ற திட்டத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், கோவிட் தொற்றுநோய் பரவியதால் அவரால் அமெரிக்கா செல்ல முடியவில்லை. பட மூலாதாரம்,SHAKTIVAHINI இவருடன் குந்தி மாவட்டத்தைச் சேர்ந்த ஜூஹி குமாரி, சிம்டேகாவைச் சேர்ந்த ஹென்ரிட்டா டோப்போ, பூர்ணிமா நேட்டி, கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த பிரியங்கா குமாரி ஆகியோரும், ஜூன் 24 முதல் ஜூலை 13 வரை மிடில்பரியில் நடைபெறும் பயிற்சி முகாமில் கலந்துகொள்ள ஜார்கண்டில் இருந்து அமெரிக்கா சென்றுள்ளனர். விமானங்களில் திறக்காத ஜன்னல்கள் அமெரிக்கா செல்வதற்கு முன், புண்டி சாரு பிபிசியிடம், "அமெரிக்கா செல்வதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். முதல் முறையாக விமானத்தில் பயணம். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு முதல் முறையாக ரயிலில் ஏறினேன். பிறகு காரில் உட்காரும் வாய்ப்பு கிடைத்ததும் அதிக மகிழ்ச்சி அடைந்தேன். இப்போது விமானத்தில் ஏற வேண்டும். விமானத்தில் ஜன்னல் திறக்காது என்று சொல்கிறார்கள். அதில் ஏசி இயங்கும். அது நீண்ட நேரம் பறந்து பின்னர் அமெரிக்காவை அடையும் என்கிறார்கள். அங்கிருந்து இங்கு வந்திருந்த வெளிநாட்டுப் பெண்மணி, என்னை தன் வீட்டுக்கு அழைத்துச் செல்வதாகச் சொன்னார்," என்று குறிப்பிட்டார். "அமெரிக்காவில் என் கிராமத்தைப் போல சுத்தமான காற்றும் திறந்தவெளியும் இருக்காது. அங்குள்ள மக்கள் சாதாரண உணவே சாப்பிடுகிறார்கள். எனக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை. பிடிக்கவில்லையென்றாலும் சாப்பிடுவேன். வயிற்றை நிரப்ப வேண்டும். நிறைய சுற்றிப் பார்ப்பேன். அங்குள்ள மக்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று பார்ப்பேன். ஹாக்கி கற்றுக்கொண்டு மீண்டும் இங்கு வந்து நிறைய விளையாடுவேன்," என்று அவர் மேலும் கூறினார். ஆங்கிலத்தை பார்த்து பயம் ஆங்கிலத்தில் இருந்து ஹிந்திக்கு மொழிபெயர்ப்பு செய்பவர் உடன் இல்லையென்றால் பேசுவதில் சிரமம் ஏற்படும் என்று புண்டி சாரு பயப்படுகிறார். புண்டி சாரு, பேலோலில் உள்ள உயர்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார். அங்கு இந்தி மீடியத்தில் படிப்பு சொல்லிக் கொடுக்கப்படுகிறது. அவர் முண்டாரியில் (பழங்குடியினரின் மொழி) புலமை பெற்றுள்ளார். பட மூலாதாரம்,RAVI PRAKASH/BBC நான் அவரை ஆங்கிலத்தில் பேசச் சொன்னபோது புண்டி சாரு, "என் பெயர் புண்டி சாரு. நான் ஹெசெலில் வசிக்கிறேன். என் தந்தையின் பெயர் எத்வா சாரு. தாயார் பெயர் சாந்து சாரு. நான் ஹாக்கி விளையாடுகிறேன்," என்று ஆங்கிலத்தில் கூறினார். அமெரிக்கா எப்படி இருக்கிறது? அமெரிக்காவிலிருந்து புண்டி சாரு மற்றும் அவரது குழுவினரின் சில படங்களை நாங்கள் கேட்டுப் பெற்றோம். இந்தப் பெண்களின் முகத்தில் புன்னகை ஒளிர்கிறது. அவர்கள் பிஸியாக இருக்கிறார்கள். ஹாக்கி பயிற்சியுடன் ஆங்கிலம் பேசவும் கற்றுக் கொள்கிறார்கள். இப்பொழுது எப்படி உணா்கிறீா்கள்? "அமெரிக்கா மிகவும் அழகாக உள்ளது. இங்குள்ள மக்கள் நல்லவர்களாக உள்ளனர். இவர்கள் எங்களை விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் சென்றனர். இப்போது எந்த பிரச்னையும் இல்லை. விமான நிலையம் மற்றும் விமானப் பயணம் மிகவும் நன்றாக இருந்தது. மேகங்கள் எங்களுக்குக் கீழே இருந்தன, நாங்கள் மேலே இருந்தோம். இங்கே அமெரிக்காவில், கேத்ரின் மேம் நாங்கள் நன்கு சாப்பிடவேண்டும் என்பதற்காக எங்கள் உணவைக் கவனித்துக் கொள்கிறார். எங்கள் பயிற்சியாளரும் மிகவும் நல்லவர்," என்று புண்டி சாரு தெரிவித்தார். ஜார்கண்டில் இருந்து அவருடன் அமெரிக்கா சென்ற சக்தி வாஹினி அமைப்பைச் சேர்ந்த சுர்பி," புண்டி மட்டுமல்ல ஐந்து பெண்களுமே மிகவும் உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளனர். புதிய விஷயங்களை ஆராய்கின்றனர்," என்றார். "எல்லா சிறுமிகளும் விமானப் பயணத்திற்கு மிகவும் பயந்தனர். ஆனால், பின்னர் அவர்கள் அதை அனுபவிக்கத் தொடங்கினர். வானத்தில் உள்ள எல்லா நட்சத்திரங்களும் தங்களுக்காக தரையில் வந்தது போல் தெரிகிறது என்று ஹென்ரிட்டா என்னிடம் கூறினார். அமெரிக்க மக்கள் மிகவும் நல்லவர்கள், நட்புடன், எப்போதும் புன்னகையுடன் இருக்கிறார்கள். நாம் வேறு நாட்டில் இருப்பது போன்ற உணர்வு கூட இல்லை என்று மற்ற சிறுமிகள் என்னிடம் சொன்னார்கள்," என்று சுர்பி பிபிசியிடம் தெரிவித்தார். பட மூலாதாரம்,SHAKTIVAHINI அமெரிக்கா செல்ல தேர்வு பெண்கள் கடத்தலுக்கு எதிராகச் செயல்படும் சக்தி வாஹினி என்ற அமைப்பு, 2019-20 ஆம் ஆண்டில் அமெரிக்க தூதரகத்தை அணுகி பழங்குடியின பெண்களை ஊக்குவிக்கும் ஒரு திட்டத்தை அளித்தது. பின்னர் அமெரிக்க கான்ஸலகத்தின் (கொல்கத்தா) சில அதிகாரிகள் ராஞ்சிக்கு வந்து மகளிர் ஹாக்கி வீராங்கனைகள் முகாமை ஏற்பாடு செய்தனர். இதையடுத்து ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து 5 சிறுமிகளை அமெரிக்கா அழைத்துச் சென்று பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டது. "கலாசார பரிமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக, அவர்கள் வெர்மான்ட்டில் உள்ள புகழ்பெற்ற மிடில்பரி கல்லூரியில் பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதற்கான செலவை அமெரிக்க தூதரகம் ஏற்கிறது. இந்த வீராங்கனைகள் அனைவரும் ஏழை வீடுகளைச் சேர்ந்தவர்கள். அவர்களின் தாய்மார்கள் கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்துகிறார்கள். இவர்களுக்கு மிடில்பரி கல்லூரியில் ஆங்கிலம் பேசுதல் மற்றும் ஆளுமை மேம்பாடு ஆகியவற்றிலும் பயிற்சி அளிக்கப்படுகிறது. அங்குள்ள முக்கிய பிரமுகர்களையும் இவர்கள் சந்திப்பார்கள்," என்று சக்தி வாஹினியின் ரிஷிகாந்த் பிபிசியிடம் தெரிவித்தார். இந்திரா எமர்ஜென்சியை அறிவித்தது ஏன்? அந்த அரை மணி நேரத்தில் நடந்தது என்ன? 100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும்? பிரிட்டிஷ் வரலாற்றில் மறக்கப்பட்ட லண்டனின் இந்திய ஆயாக்கள் - இவர்கள் செய்தது என்ன? பயிற்சிக்காக சைக்கிள் பயணம் புண்டி சாருவின் கிராமத்தில் மைதானம் இல்லை. இந்த காரணத்திற்காக அவர் தனது தோழி சிந்தாமணி முண்டுவுடன் தினமும் எட்டு கிலோமீட்டர் சைக்கிள் ஓட்டிச் சென்று குந்தியில் உள்ள பிர்சா கல்லூரி மைதானத்தில் ஹாக்கி பயிற்சி செய்வது வழக்கம். அங்கு மணல் தரையில் இவர்களின் பயிற்சி நடக்கும். சில சமயங்களில் அரசால் கட்டப்பட்ட ஆஸ்ட்ரோடர்ஃப் மைதானத்தில் விளையாடும் வாய்ப்பும் கிடைக்கும். அங்கு தஷ்ரத் மஹதோ மற்றும் சில பயிற்சியாளர்கள் அவருக்கு ஹாக்கி விளையாட பயிற்சி அளிக்கின்றனர். இந்திய மகளிர் ஹாக்கி அணியில் இடம்பெற்றுள்ள நிக்கி பிரதானின் ஆரம்ப பயிற்சியாளராகவும் தஷ்ரத் மஹதோ இருந்துள்ளார். பட மூலாதாரம்,SHAKTIVAHINI "புண்டி உட்பட பல பெண்கள் மத்தியில் ஹாக்கி மோகம் உள்ளது. நன்றாக விளையாடுகிறார்கள். வரும் நாட்களில் இந்திய அணியில் இங்கிருந்து இன்னும் சில பெண்களை நீங்கள் பார்க்கக்கூடும். திறமை அழிந்துபோகாமல் இருக்க அரசு அவர்களுக்கு வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். இங்குள்ள சிறுவர்களும் நன்றாக ஹாக்கி விளையாடுகிறார்கள்," என்று தஷ்ரத் மஹ்தோ பிபிசியிடம் தெரிவித்தார். கிராமத்திற்கு பெருமை கிராம மக்கள் அனைவரும் தங்கள் மகள்களை நினைத்துப் பெருமைப்படுவதாக ஹெசெல் பகுதியைச் சேர்ந்த கிருஷ்ணா முண்டா கூறினார். இங்குள்ள மக்கள் தங்கள் மகள்களை, மடுவா (ஒரு வகை காட்டு தானியம்) ரொட்டி மற்றும் கீரைகளை ஊட்டி வளர்த்துள்ளனர். பணம் இல்லாததால் எல்லோருமே மூங்கில் குச்சிகளை வைத்து ஹாக்கி விளையாட ஆரம்பித்தனர். இப்போது சிலர் மரத்தாலான மற்றும் ஃபைபர் ஹாக்கி ஸ்டிக், டி-ஷர்ட்கள் போன்றவற்றை வழங்கியுள்ளதால் வசதி கிடைத்துள்ளது. அமெரிக்கா செல்வதற்கு முன் இந்த ஐந்து வீராங்கணைகளும் ராஞ்சியில் முதல்வர் ஹேமந்த் சோரேனை சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பின் போது அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்த முதலமைச்சர், இது மாநிலத்திற்குப் பெருமை சேர்ப்பதாகக் கூறினார். "கிராமப்புறங்களில் இருந்து திறமையான விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து அவர்களின் திறமையை மேம்படுத்த எங்கள் அரசு முயற்சி எடுத்து வருகிறது. நாங்கள் ஒரு விளையாட்டு சக்தியாக மாறுவதற்கான பாதையில் இருக்கிறோம். இந்தப் பெண்களுக்காக நாங்கள் பெருமைப்படுகிறோம். அவர்களின் அனைத்து தேவைகளையும் நாங்கள் நிறைவேற்றுவோம். இந்தப் பெண்கள் அமெரிக்காவிலிருந்து திரும்பி வந்ததும், நான் அவர்களை மீண்டும் சந்திப்பேன். அவர்களின் அனுபவங்களை அறிந்துகொள்வது எதிர்கால திட்டங்களை உருவாக்க உதவும்," என்று முதல்வர் ஹேமந்த் சோரேன் கூறினார். https://www.bbc.com/tamil/india-62042051
  10. "வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆபத்து" - காப்புக்காடு அருகே புதிய கல்குவாரிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் இயற்கை வளங்களை சுரண்டுவதற்காக எடமச்சி காப்புக்காட்டில் தடையை மீறி புதிய கல்குவாரிக்கான சுரங்கப் பணிகள் நடைபெறுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் சுற்றுவட்டார பகுதிகளில் பழையசீவரம், திருமுக்கூடல், அருங்குன்றம், பழவேலி, மதூர், பட்டா, சிறுமையூலூர் என பல கிராமங்களில் சுமார் 25-க்கும் மேற்பட்ட கல்குவாரிகள் மற்றும் கிரஷர்கள் பல ஆண்டுகளாக இயங்கி வருகின்றன. உரிய அனுமதி இல்லாமலும் பல எண்ணிக்கையில் கிரஷர்களும் குவாரிகளும் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாத சூழ்நிலை கல்குவாரிகள் மற்றும் கிரஷர்களில் இருந்து வெளிவரும் தூசு, கிராமப் பகுதியினர் இடையே பெரும் சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது. பொதுமக்கள் தூசு கலந்த காற்றை ஒவ்வொரு முறையும் சுவாசிப்பதால் சுவாசக் கோளாறு, தோல் நோய்கள், நுரையீரல் பாதிப்புகள் போன்ற பல பிரச்னைகளுக்கு ஆளாகி வருகின்றனர். வீடுகளில் மட்டுமல்லாமல் விவசாய நிலங்களிலும் தூசு படிந்து விவசாயம் முற்றிலும் பாதிப்பு அடைந்துள்ளது. அத்தோடு பல்வேறு கல்குவாரிகளில் பாறைகளை உடைப்பதற்கு தொடர்ச்சியாக வெடிகள் வைப்பதனால் அதிர்வு ஏற்பட்டு வீடுகள் இடிந்து போவதும், சுவர்களில் விரிசல் விடுவதும், முதியோர்கள் மற்றும் கர்ப்பிணிகள் மனரீதியாகவும், உடல்ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றனர். காப்புக்காடு அருகேபுதிய கல் குவாரி? நெற்குன்றம் கிராமத்தில் 5 ஏக்கரில் புதியதாக ஒரு கல்குவாரியும் அதன் அருகே மற்றொரு நான்கு கல்குவாரிகளும் அமையவுள்ளது. இந்த புதிய கல்குவாரிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கெனவே காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் நேரடியாக சென்று பல முறை மனு கொடுத்துள்ளனர். சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கு பாதிப்பு: ஆசையாக வாங்கிய வீடுகளில் அகதியாக வாழும் மக்கள் துருவப் பகுதியில் மட்டுமே காணப்படும் அரியவகைப் பறவை தமிழ்நாட்டுக்கு வந்தது எப்படி? சுற்றுச்சூழல் தரவரிசையில் இந்தியாவுக்குக் கடைசி இடம்: அதிருப்தியில் இந்திய அரசு – காரணம் என்ன? ஏரிகள் நிறைந்த ஒருங்கிணைந்த காஞ்சிபுரம் மாவட்டத்தில் மதுராந்தகம் ஏரிக்கு அடுத்தபடியாக எடமச்சி கிராமத்தில் உள்ள ஏரி மிகப்பெரிய ஏரி. இந்த ஏரியை நம்பி ஆனம்பாக்கம், நெற்குன்றம், எடமச்சி, கணபதிபுரம், பொற்பந்தல், மாமண்டூர், பாலேஸ்வரம், சின்னாலம்பாடி, மெய்யூர் ஓடை என 10-க்கும் மேற்பட்ட கிராம விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர் இந்தப் பகுதியில் கல்குவாரிகள் அமைந்தால் ஏரி முழுவதுமாக சேதமடையும், மேலும் காப்புக் காடுகள் முழுமையாக அழிக்கப்படும் என கிராம மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் முற்றிலும் அழியக்கூடிய நிலை உருவாகும் என அப்பகுதி கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். பட மூலாதாரம்,BABS PHOTOGRAPHY / GETTY IMAGES உத்தரவை மீறி குவாரி அமைக்கும் பணி மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை வழிகாட்டுதல்படி, வேடந்தாங்கல் மற்றும் கரிக்கிலி சரணாலய எல்லையில் இருந்து 5 கி.மீ. சுற்றளவு பகுதியிலிருந்து, 10 கி.மீ. சுற்றளவு வரை இயல்புநிலை 'சூழல் கூருணர்வு மண்டலமாக' உள்ளது. எனவே, வன உயிரின பாதுகாப்புச் சட்டம், 1972ன்படி, சரணாலயப்பகுதி மற்றும் 10 கி.மீ. என மொத்தம் 15 கி.மீ. சுற்றளவுப் பகுதியில், எவ்விதமான கல்குவாரி மற்றும் தொழிற்சாலைகள் இயங்க அனுமதி இல்லை என, சென்னை வன உயிரின கோட்டத்தின் வன உயிரின காப்பாளர் பிரசாந்த் காஞ்சிபுரம் கனிம வளத்துறைக்கு கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். இந்த நிலையில், எடமச்சி காப்புக்காடு அருகே பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவையும் மீறி தற்பொழுது புதிதாக கல்குவாரி அமைக்கும் பணி நடைபெற்றதை அந்த கிராமப் பகுதி மக்கள் தடுத்து நிறுத்தி உள்ளனர். 94 வகையான உயிரினங்களுக்கு பேராபத்து காப்புக் காடான எடமச்சி வனப்பகுதியில் 94 வகையான உயிரினங்கள் வாழ்கின்றன. காப்புக்காடு அருகே குவாரி அமைத்தால் அனைத்து உயிரினங்களுக்கும் கடுமையான பாதிப்பு ஏற்படும் என்கிறார், EMAI சுற்றுச்சூழல் கண்காணிப்பு மற்றும் செயல் துவக்கத்திற்கான அறக்கட்டளை திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் முருகவேல். மேலும் இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது: "வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் பல நாட்டில் இருந்து பறவைகள் வந்து இங்கு இனப்பெருக்கம் செய்து, சொந்த நாடு திரும்புவது வழக்கம். வேடந்தாங்கல் பறவைகள் சரணாலய ஏரிக்கு நீர் ஆதாரமே எடமச்சி ஏரி தான். இந்த ஏரி தண்ணீர் தான் வேடந்தாங்கல் செல்கின்றது. அதுமட்டும் இல்லாமல், நெற்குன்றத்தில் இருந்து 15 கிலோ மீட்டர் தூரத்தில் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் உள்ளது. பட மூலாதாரம்,SAIKAT MUKHOOPADHYAY / GETTY IMAGES வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகளுக்கு உணவு எடமச்சி ஏரியும் அதன் அருகே உள்ள மலை மற்றும் காட்டுப் பகுதியிலிருந்துதான் கிடைக்கிறது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் இருந்து இரைக்காக காலையில் வந்து இரைகளை தேடிவிட்டு மாலை நேரத்தில் மீண்டும் வேடந்தாங்கல் திரும்பும். எனவே, இந்த நெற்குன்றம், பாலேஸ்வரம், ஆனம்பாக்கம், மாமண்டூர் பகுதிகளில் புதிதாக கல்குவாரிகள் அமைத்தால், வேடங்தாங்கல் பறவைகள் சரணாலயம் நிரந்தரமாக மூடக்கூடிய அபாயம் ஏற்படும். அதுமட்டுமல்லாது, கல்குவாரியை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களும் கடுமையாக பாதிக்கப்படும். இயற்கை வளங்களும் அழியக்கூடிய நிலை உருவாகும். எனவே, புதிய கல்குவாரிக்கு காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கக் கூடாது" என்றார். பட மூலாதாரம்,HARIKESH PK/GETTY IMAGES இயற்கை வளங்களை சுரண்டுவதற்கு காப்புக்காடு ஒன்று அப்பகுதியில் இருக்கிறது என்பதையே மறைத்து புதியதோர் கல்குவாரிக்கு அனுமதி வழங்கியிருந்தார்கள், இதை எதிர்த்து தற்போது பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்துத் தடை வாங்கி உள்ளோம் என்கிறார், ஓய்வு பெற்ற கர்னல் அர்ஜூன். மேலும் இவர் பிபிசி தமிழிடம் தெரிவித்ததாவது: "எடமச்சி மலை மற்றும் அதன் ஏரியை நம்பி சுற்றுவட்டாரத்தில் பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்களின் வாழ்வாதாரம் உள்ளது. பெரும்பாலான கிராம மக்கள் இந்த ஏரியை நம்பித்தான் இருக்கிறார்கள். பெரும்பாலான வீடுகளில் கால்நடைகள் அதிகம் உள்ளன. தற்பொழுது கால்நடைகள் மேய்ச்சலுக்கு வரக்கூடிய இடத்தில்தான் புதிதாக கல்குவாரி அமைய இருக்கிறது. அதுவும் காப்புக்காட்டின் அடிவாரத்தில் அமையவுள்ளது. சட்டத்திற்கு எதிராக குவாரி அமைந்தால் மிகப்பெரிய சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதோடு பத்துக்கும் மேற்பட்ட கிராமங்களின் வாழ்வாதாரம் அடியோடு பாதிக்கப்படும். பட மூலாதாரம்,JAYBEE/GETTY IMAGES பசுமை தீர்ப்பாயத்தில் புதிதாக குவாரி அமைப்பதற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தேன். தற்பொழுது வழக்கு முடியும் வரை எந்தவிதமான சுரங்கப் பணிகளும் அங்கு மேற்கொள்ளக் கூடாது என பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டிருக்கிறது. இருப்பினும் மலை அடிவாரத்தில் சுரங்கப் பணிகளுக்கு தேவையான முதற்கட்ட பணிகளை தற்போது ஆரம்பித்திருக்கிறார்கள். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தற்பொழுது பணியை நிறுத்தி இருக்கிறார்கள். மாவட்ட நிர்வாகம் இதில் சிறப்பு கவனம் செலுத்தி இயற்கையை அழிக்கத் துடிக்கும் நபர்களிடமிருந்து கிராம மக்களை காப்பாற்ற முன்வர வேண்டும்" என்றார். பிளாஸ்டிக்கை உட்கொண்டு வாழும் புழுக்கள் இனம் - பிளாஸ்டிக் மறுசுழற்சியில் புரட்சியை ஏற்படுத்துமா? அண்டார்டிகா பனியிலும் பிளாஸ்டிக் நுண்துகள்கள் - ஏன் இது கவலையானது? மண் பாதுகாப்பு, சர்ச்சைக்குரிய பிரச்னைகள் பற்றி ஜக்கி வாசுதேவ் சிறப்பு பேட்டி ஒருபோதும் மாவட்ட நிர்வாகம் காப்புக்காடு அருகே புதிய கல்குவாரி அமைப்பதற்கு அனுமதி வழங்காது என்கிறார், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி. மேலும் இவர் பிபிசி தமிழிடம் கூறியதாவது: "சுரங்கத்திற்கு தேவையான அனுமதியை மாவட்ட நிர்வாகம் தான் வழங்க வேண்டும். அதேபோல், அங்கிருந்து கனிமங்களை எடுத்துச் செல்வதற்கும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும். காப்புக்காடு அருகே சுரங்கத்திற்கு ஒருபோதும் மாவட்ட நிர்வாகம் அனுமதி நிச்சயம் வழங்காது. தற்பொழுது சம்பந்தப்பட்ட இடத்தில் கல்குவாரி அமைப்பதற்கு தடை உள்ளது. அவ்வாறு இருக்க அங்கே எப்படி குவாரி அமைக்க முடியும்? இந்தப் பகுதியில் குவாரி அமையாது என்பது குறித்து கனிமவளத் துறையும் மாவட்ட நிர்வாகமும் பலமுறை சம்பந்தப்பட்ட கிராம மக்களுக்கு எடுத்துச் சொல்லி உள்ளோம்" என்றார். https://www.bbc.com/tamil/india-62046251
  11. வருங்கால அறிவியல்: உலகத்தின் சாலைகள் அனைத்தும் நிலத்தடிக்கு மாற்றப்பட்டால் எப்படியிருக்கும்? லாரா பேடிஸன் பிபிசிக்காக 41 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ZHUANG WANG/GETTY சாலைகள் நகரங்களை மாசுபடுத்துகின்றன. பொது இடங்களையும் ஆங்காங்கே துண்டுகளாக இருக்கும் வாழ்விடங்களையும் விழுங்கிவிடுகின்றன. அத்தகைய சாலைகளை நிலத்தடி சுரங்கச் சாலைகளாக மாற்ற முடியுமா? அது இந்தப் பிரச்னையைத் தீர்க்க உதவுமா? 1863-ஆம் ஆண்டில், தெருக்களில் இருக்கும் போக்குவரத்தைக் குறைக்கும் முயற்சியில், உலகின் முதல் சுரங்கப் பாதையான மெட்ரோபோலிட்டன் ரயில்பாதையை லண்டன் திறந்தது. அதற்கு இருபது ஆண்டுகளுக்கு முன்னர், தேம்ஸ் நதிக்குக் கீழே உலகின் முதல் நதிக்கு அடியிலான சுரங்கப்பாதை கட்டமைக்கப்பட்டது. இது பாதசாரிகள் மற்றும் சுற்றுலா பயணிகளிடையே பிரபலமானது. தொடக்கத்தில், லண்டனில் நிலத்தடிப் பாதைகள், மேற்பரப்பிலிருந்து சற்று கீழாகத் தோண்டப்பட்டு, அதற்கு மேலே மூடிய வகையில், தடங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், தொழில்நுட்பம் மேம்பட்டதும் ரயில்கள் நீராவியிலிருந்து மின்சாரத்திற்கு மாறியதும், பாதைகளும் நிலத்தடியில் இன்னும் ஆழமாகச் சென்றன. இப்போது லண்டன்வாசிகளின் கால்களுக்குக் கீழே இருக்கும் நிலத்திலுள்ள பாதைகள், டியூப் பாதைகளின் விரிவான வலையமைப்புடன் மக்களை வேகமாகவும் திறன்மிக்க முறையிலும் கொண்டு செல்கின்றன. ரயில்கள், மின்சார லைன்கள், குழாய்கள், கேபிள்கள், சாக்கடைகள் ஆகியவற்றோடு, சாலைகளையும் நிலத்தடிக்குக் கொண்டுபோக சிலர் நீண்டகாலமாக விரும்புகிறார்கள். சாலைகளை நிலத்தடிக்கு மாற்றுவதால் ஏற்படும் தாக்கம் என்ன? உலகளவில் 64 மில்லியன் கிமீ சாலைகள் உள்ளன. குறிப்பாக வளரும் நாடுகளில், உலக மக்கள் தொகை அதிகரித்து வருமானம் உயரும்போது, அதிக மக்கள் கார்களை வாங்க முடியும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. 2040-ஆம் ஆண்டுக்குள் சாலையில் இரண்டு பில்லியன் கார்கள் ஓடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மொத்த போக்குவரத்தின் அளவு 50 சதவீதத்திற்கும் மேல் அதிகரிக்கும். காணாமல்போகும் காட்டுயிர்: இந்தியாவில் 10 ஆண்டுகளில் 984 புலிகள் பலி - காரணம் என்ன? சுற்றுச்சூழல் தரவரிசையில் இந்தியாவுக்குக் கடைசி இடம்: அதிருப்தியில் இந்திய அரசு – காரணம் என்ன? மேற்குத் தொடர்ச்சி மலை: மாதவ் காட்கில் பரிந்துரைகளை நீர்த்துப் போகச் செய்கிறதா கஸ்தூரி ரங்கன் அறிக்கை? போக்குவரத்து நெரிசல் மக்களின் அதிகமான நேரத்தை உறிஞ்சுகிறது. சராசரி அமெரிக்க ஓட்டுநர் ஒவ்வோர் ஆண்டும் 54 மணிநேரத்தை போக்குவரத்து நெரிசலில் உட்கார்ந்தபடி வீணாக்குகிறார். மேலும், எரிபொருள் நுகர்வு, கரிம உமிழ்வு, காற்று, ஒலி மாசுபாடு ஆகிய சூழலியல் விளைவுகளை அதிகரிப்பதும் இதில் நிகழ்கிறது. டெஸ்லா நிறுவனர் ஈலோன் மஸ்க் 2018-ஆம் ஆண்டில் தனது சுரங்கப்பாதை நிறுவனமான போரிங் நிறுவனத்திற்கான நிகழ்வில், "இறுதியாக, போக்குவரத்துப் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்று நான் நினைக்கிறேன்," என்றார். அவருடைய தீர்வு சாலைகளுக்கான பாதையை நிலத்தடியில் தோண்ட வேண்டும் என்பதாக இருந்தது. இருப்பினும் உலகின் ஒவ்வொரு சாலையையும் நிலத்தடிக்கு மாற்ற ஈலோன் மஸ்க் கூட பரிந்துரைக்கவில்லை. ஆனால், அவையனைத்தையும் மேற்பரப்பிலிருந்து நிலத்தடிக்கு மாற்றினால் என்ன நடக்கும்? நகரமயமாக்கல், ஏற்றத்தாழ்வு மற்றும் காலநிலை நெருக்கடி அதிகரித்து வரும் நேரத்தில், இது ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை கற்பனை செய்வது, உலகளாவிய போக்குவரத்து அமைப்பு எப்படியானது என்ற முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. மேலும், உண்மையில் நாம் எங்கு செல்ல விரும்புகிறோம் என்பதைக் கருத்தில் கொள்ளவும் தூண்டுகிறது. மேற்பரப்பு சாலைகள் இல்லையெனில் உலகில் ஏற்படக்கூடிய மிக உடனடியான தாக்கங்களில் ஒன்று, உலகம் முழுவதும் பெரியளவிலான நிலப்பகுதிகள் விடுவிக்கப்படும். கிராமப்புறங்களில், காட்டுயிர்களுக்கான வாழ்விடங்களுக்கும் கரிம கிரகிப்புக்கும் வேளாண்மை செய்யவும் அதிக நிலம் கிடைக்கும். அது, நிலப்பரப்புகள் துண்டாவது என்ற சாலைகளால் ஏற்படக்கூடிய இன்னொரு பிரச்னையையும் குறைக்கும். காட்டுயிர்களுக்கு, சாலைகள் ஒரு தடையாகச் செயல்படலாம். அவற்றைத் தம் கூட்டத்திடமிருந்தோ அவற்றின் இரைகளிடமிருந்தோ பிரிக்கலாம். சாலை இணைப்புகளின் உலகளாவிய விரிவாக்கம், காட்டுயிர்களில் வேட்டையாடி உயிரினங்களின் பாதுகாப்பிற்கான முயற்சிகளை அச்சுறுத்துகிறது. மேலும், ஊடுருவும் சாலைகளால் காடுகள் துண்டாக்கப்படுவதால், காடுகளின் விளிம்புகளின் அளவை அதிகரிப்பதால், அங்கு மரங்களின் இழப்பு அதிகமாக உள்ளது. இது, அதிகமான கரிம உமிழ்வுக்கும் வழிவகுக்கிறது. அமெரிக்க வேளாண்மை துறையைச் சேர்ந்த சூழலியல் ஆராய்ச்சி நிபுணரன அலிசா காஃபின், சாலைகள் நீரோட்டத்திலும் குறுக்கிடுவதாகக் கூறுகிறார். தம்பா மற்றும் மியாமியை இணைக்கும் சாலையான டாமியாமி டி ரெயிலை அவர் சுட்டிக்காட்டுகிறார். இது எவர்க்லேட்ஸ் என்ற பகுதிக்கான நீரோட்டத்தைத் தடுப்பதன் மூலம் பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தியது. நீரோட்டம் தடைபடுவது, காட்டுத்தீ அதிகரிக்கவும் தாவரங்களும் காட்டுயிர்களும் அதனால் பாதிக்கப்படவும் காரணமாகின்றன. "பாதிப்புகள் என்னவாக இருக்கும் என்பதைப் புரிந்துகொள்ளாமல் ஒரு சாலை எப்படி கட்டமைப்படுகிறது என்பதற்கு இதுவோர் உதாரணம்," என்கிறார் காஃபின். பட மூலாதாரம்,GETTY IMAGES 2050-இல் 70% மக்கள் நகரங்களில் வசிக்கலாம் மனித-காட்டுயிர் எதிர்கொள்ளல் மற்றொரு பெரிய பிரச்னையாக உள்ளது. கார்டிஃப் பல்கலைக்கழக விரிவுரையாளரான சாரா பெர்கின்ஸ், பிரிட்டன் சாலைகளில் கொல்லப்படும் காட்டுயிர்களைக் கண்காணிக்கும் பத்தாண்டுகள் பழைமையான ப்ராஜெக்ட் ஸ்ப்ளாட்டர் என்ற மக்கள் அறிவியல் ஆராய்ச்சித் திட்டத்தை ஒருங்கிணைத்து வருகிறார். ஒவ்வோர் ஆண்டும் விபத்தில் உயிரினங்கள் இறப்பது குறித்த சுமார் 10,000 தகவல்களை மக்களிடமிருந்து இந்தத் திட்டத்தின் கீழ் அவர் பெறுவதாகக் கூறுகிறார். சாலைகளை நிலத்தடியில் அமைப்பது, "காட்டுயிர்-வாகன எதிர்கொள்ளலைக் குறைக்கும்," என்று பெர்கின்ஸ் கூறுகிறார். அதோடு, ஒலி மற்றும் ஒளி மாசுபாடு இதன்மூலம் அகற்றப்படும்போது, சுற்றியிருக்கும் காட்டுயிர்களின் நடத்தைகளிலும் அது தாக்கத்தை ஏற்படுத்தும் என்கிறார். சாலைகளிடமிருந்து மேற்பரப்பு நிலம் விடுபடுவதால் இத்தகைய சூழலியல் தாக்கங்கள் இருக்கின்றன. நகரங்களைப் பொறுத்தவரை, 2050-ஆம் ஆண்டளவில் உலக மக்கள் தொகையில் 70% மக்கள் நகரங்களில் வசிக்கலாம் எனக் கணிக்கப்படுகிறது. அங்கு சாலைகளாக இருக்கும் நிலப்பகுதிகள் விடுவிக்கப்படுவது, மக்கள் மீது பெரியளவிலான தாக்கத்தை ஏற்படுத்தும். "நகரங்கள் எப்படி மாறும் என்று உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?" என்று கேட்கிறார், பொறியியல் நிறுவனமான ஆரேகானின் (Aurecon) சுரங்கப்பாதை திட்ட இயக்குநர் டாம் அயர்லேண்ட். "நீங்கள் நகர மையத்திற்கு புத்துயிர் அளிக்க விரும்பினால், சாலைகளை பாதசாரிகளாக ஆக்க வேண்டும். இது மரங்கள், பூங்காக்கள், நடைபாதை கஃபேக்கள் மற்றும் பிற பொது வசதிகளுக்கு இடமளிக்கும்," என்கிறார். உதாரணமாக, நகரின் அதிக நெரிசல் மிகுந்த எலிவேட்டட் நெடுஞ்சாலையை நிலத்தடியில் மாற்றுவதற்கான ஒரு பெரிய திட்டமான பாஸ்டனின் பிக் டிக், 300 ஏக்கர் திறந்தவெளி நிலத்தை உருவாக்கியது. இதில் ரோஸ் கென்னடி பசுமைச் சாலை, 17 ஏக்கர் பூங்கா, பசுமையான இடம், நீரூற்றுகள், கலை கண்காட்சிகள் மற்றும் இசை விழாக்கள் அடக்கம். இதில் வாகன நிறுத்துமிடமும் நிலத்தடியில் அமைக்கப்படும். சிறு பூங்காக்கள், பொது இருக்கைகள் அல்லது சிறு சிறு விளையாட்டு மைதானங்கள் எனப் பலவும் அமைக்கப்படும். காலநிலை நெருக்கடி, தீவிர வானிலை நிகழ்வுகளின் அதிர்வெண் மற்றும் தீவிரத்தை அதிகரிக்கிறது. இந்நிலையில், கான்க்ரீட் ஊடுருவாத பசுமையான இடங்கள் அதிக தண்ணீரை உறிஞ்சி, வெள்ளத்திற்கு எதிராக அதிகப் பாதுகாப்பை வழங்குகிறது. மரங்கள் பகல் நேரத்தில் வெப்பநிலையை 40% வரை குறைக்கலாம். பாம்புகளை பார்த்தவுடன் அடித்துக் கொன்றவர், இன்று பாம்புகளின் பாதுகாவலர் மான் வேட்டை, தொடரும் மரணங்கள் - யார் காரணம்? சென்னை ஐஐடியில் என்ன நடக்கிறது? காடுகள் பரப்பளவு அதிகரித்துள்ளதாக இந்திய அரசு சொல்வது உண்மைதானா? பெரிய சாலைகளால் மக்கள் சமூகங்கள் இடம்பெயர்வது, வருமான சமத்துவமின்மை, பிரிவினையை அதிகரிக்கும். சியாட்டிலில் உள்ள நெடுஞ்சாலைகளை மூடுவதால் ஏற்படும் பாதிப்புகளைப் பார்க்கும் 2021-ஆம் ஆண்டின் அறிக்கை, அந்த முடிவு சுற்றுப்புறங்களை மீண்டும் இணைக்கலாம், 4.7 மில்லியன் சதுர அடி அளவில் புதிய வீடுகளுக்கான இடத்தை வழங்கலாம் எனக் கண்டறிந்தது. லண்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் போக்குவரத்து பேராசிரியரான ரேச்சல் ஆல்ட்ரெட், "மக்களோடு மோட்டார் போக்குவரத்து கலப்பது இயல்பாகவே பிரச்னைக்குரியது. சாலைப் போக்குவரத்து விபத்துகளால் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1.3 மில்லியன் மக்கள் உயிரிழக்கின்றனர். இது ஐந்து முதல் 29 வயதுக்கு உட்பட்டவர்களின் மரணங்களுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. இது, டிராம்கள் போன்ற மின்மயமாக்கப்பட்ட பொதுப் போக்குவரத்துக்கான இடத்தை வழங்கும். மேலும் அவற்றை மிகவும் கவர்ச்சிகரமான தேர்வாக மாற்றும். நாம் வாகனம் ஓட்டுவதை மிகவும் கடினமாக்க வேண்டும். பொதுப் போக்குவரத்தைச் சிறப்பானதாக்க வேண்டும்," என்று கூறுகிறார். போக்குவரத்து நெரிசலைத் தீர்க்குமா? இவையனைத்திலும் பலருக்கும் எழும் மிகப்பெரிய கேள்வி, நிலத்தடி சாலைகள் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்குமா? தீர்ப்பது சாத்தியமே என்று நிபுணர்கள் கூறுகின்றனர். தரைக்கு மேலேயுள்ள சாலைகள் நிலத்தடியில் வெறுமனே நகலெடுக்கப்படுவதால், "நெரிசல் மேம்படும் என்று நான் கருதவில்லை" என்கிறார் அயர்லேண்ட். இது "தூண்டப்பட்ட தேவை" என்ற கோட்பாடாகும். சாலைகளை அமைப்பது, அதிகமான மக்கள் அவற்றைப் பயன்படுத்த ஊக்குவிக்கிறது. அதாவது சாலையின் திறனை அதிகரிப்பதன் மூலம் போக்குவரத்து நெரிசலைத் தீர்க்க இயலாது. "இதுவொரு வித்தியாசமான முன்னுதாரணமாக இருக்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,KEN JACK/GETTY சீரான, கட்டுப்படுத்தக்கூடிய அதிவேகங்களில் நகரும் பாதைகளோடு பூட்டப்பட்டிருக்கும் தானியங்கி கார்கள் நெரிசலை மேம்படுத்தவும், மேற்பரப்பு சாலைகளின் வாகனங்களை நிறுத்துவது மீண்டும் ஸ்டார்ட் செய்வது என்ற சிக்கல்களை அகற்ற முடியும். "தனியார் வாகன உரிமை என்பது உண்மையில் ஒரு விஷயமாக இல்லாத ஓர் உலகத்தை நீங்கள் இதன்மூலம் காணலம," என்று அயர்லேண்ட் கூறுகிறார். "நீங்கள் உங்கள் கைபேசியைப் பயன்படுத்தி, சுயமாக இயங்கும் ரைட்ஷேருக்கு அழைக்கலாம்." இருப்பினும், தானியங்கி கார்கள் இன்னும் பல ஆண்டுகள் தொலைவில் உள்ளன. ஏனெனில், நிறுவனங்கள் பாதுகாப்பு சிக்கலைச் சமாளிக்கப் போராடுகின்றன. அப்போதும் கூட, சில அறிக்கைகள் தானியங்கி கார்கள் போக்குவரத்தை மோசமாக்கும் என்று கூறுகின்றன. ஏனெனில், மக்கள் பொதுப் போக்குவரத்தை விட ஓட்டுநர் இல்லாத கார்களைத் தேர்வு செய்யலாம், அதோடு அதைப் பகிர்ந்துகொள்ள விரும்பாமல் இருக்கலாம். நிலத்தடியில் வாகனங்களை ஓட்டுவது சுமூகமான அனுபவமாக இருக்கலாம். ஏனெனில், மக்கள் அதிக வெப்பம், குளிர் அல்லது மழை போன்ற வானிலைகளைத் தவிர்க்க முடியும். "உங்கள் இருப்பை மிகவும் திறமையாக நிலத்தடியில் வடிவமைக்க முடியும். இதன்மூலம், பொதுவாக நிலத்தடியில் நாம் உருவாக்கும் உள்கட்டமைப்பு நீண்ட காலம் நீடிக்கலாம்," என்று டுப்ளின் பல்கலைக்கழக கல்லூரியின் கலாசார நிலவியலாளர் ப்ராட்லி காரெட் கூறுகிறார். நிலத்தடி கட்டமைப்பு நிலநடுக்கத்தால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைப்பதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. 2010-ஆம் ஆண்டு சிலியில் ஏற்பட்ட பெரிய பூகம்பம் சான்டியாகோவின் மேற்பரப்பில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தியது. ஆனால், நிலத்தடி மெட்ரோ ரயில் கட்டமைப்புகளுக்குச் சேதமே ஏற்படவில்லை என்று ப்ரோயெர் கூறுகிறார். ஆனால், காலநிலை மாற்றத்தால் அதிகரிக்கக்கூடிய வெள்ளப்பேரிடர் ஏற்படும்போது, அது நிலத்தடி கட்டமைப்புகளில் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தலாம். ஆகையால் மக்கள் நிலத்தடி கட்டமைப்புகளுக்கு நுழையும் மற்றும் வெளியேறும் பகுதிகள் வழக்கத்தைவிட சில மீட்டர் மேலாக அமைக்கப்பட வேண்டும் என்கிறார் ப்ரோயெர். மேற்பரப்பில் சாலைகளே இல்லாமல் இருப்பது இத்தகைய சூழ்நிலைகளில் மக்களை அபாயத்தில் தள்ளலாம். புதைபடிம எரிபொருளால் இயங்கும் லட்சக்கணக்கான வாகனங்கள் நிலத்தடியில் இயங்குவது பெரும் அபாயங்களைக் கொண்டு வரும். "விபத்துகளின்போது தீ விபத்து ஏற்படும் அபாயம் மிக முக்கியமானது," என்கிறார் ப்ரோயெர். அத்தகைய சூழல்களில் புகை தானாகவே வெளியேறாது. “சென்னைக்கு மின்சாரம், வடசென்னைக்கு நஞ்சா?” அனல் மின் நிலைய விரிவாக்கத்தை எண்ணூர் மக்கள் எதிர்ப்பது ஏன்? சென்னை பெருங்குடி குப்பைக் கிடங்கு பாதிப்பு: ஆசையாக வாங்கிய வீடுகளில் அகதியாக வாழும் மக்கள் காலநிலை நெருக்கடி குறித்த அறிக்கை சென்னையை எச்சரிப்பது ஏன்? "புகையை வெளியேற்றுவதற்கான வழிகளையும் சிந்திக்க வேண்டும். சுரங்கப்பாதைகளில் இருந்து விபத்தான வாகனங்களை அகற்றுவதற்கு, அவசர சேவைகள் மக்களைச் சென்றடவைதற்குப் போதுமான அகலம் இருக்க வேண்டும்," என்கிறார் காரெட். மேலும் அவர், "காற்று மாசுபாடு மேற்பரப்பில் குறையும். ஆனால், அங்கிருந்து நிலத்தடிக்கு மாற்றப்படும். அந்த மாசுபாடுகளை வடிகட்டுவதற்கான, காற்றோட்டத்திற்கான வழிகளைச் சிந்திக்க வேண்டும்," என்றும் கூறுகிறார். நிலத்தடி சாலைகளை அமைக்கும் செலவைச் சமாளிக்க முடியுமா? ஒருவேளை நிலத்தடி சாலைகளை அமைப்பதற்கு முதன்மைத்துவம் அளித்தால், அதற்கான செலவுகளை நம்மால் சமாளிக்க முடியுமா? எவ்வளவு செலவாகும் என்பது இடத்தைப் பொறுத்தது. சீனா, இந்தியா மற்றும் தென்கிழக்கு ஆசியாவில் ஒரு மைல் நிலத்தடி சுரங்கப்பாதைக்கு ஆகும் செலவு, 100 முதல் 200 மில்லியன் டாலர். ஐரோப்பாவில் 250 முதல் 500 மில்லியன் டாலர். அமெரிக்காவில் 1.5 முதல் 2.5 பில்லியன் டாலர். பாஸ்டனின் பிக் டிக் திட்டத்தில், 12 கி.மீ நீளத்தில் நிலத்தடி சாலை அமைக்க 15 ஆண்டுகள் ஆனது. அதற்கான செலவு 20 பில்லியன் டாலருக்கும் அதிகமானதாகக் கணிக்கப்படுகிறது. சுரங்கம் உருவாக்கும் தொழில்நுட்பம் மேம்பட்டிருந்தாலும், வேகம் குறைவாகவும் கடினமானதாகவும் உள்ளது. இயந்திரம், பொருட்கள் மற்றும் உழைப்புக்கான செலவு மட்டுமல்ல, அனுமதி, சூழலியல் தாக்க மதிப்பாய்வுகள் போன்றவற்றுக்கும் செலவாகும். சுரங்கப்பாதை திட்டங்கள் மற்ற நிலத்தடி உள்கட்டமைப்போடு சிக்கலாகாமலும் கொண்டு செல்லப்பட வேண்டும். சாக்கடை அமைப்பு, மின்சாரம், நீர் மற்றும் எரிவாயு சுரங்கங்கள், குழாய்கள், ரயில் பாதைகள் ஆகியவற்றைக் கொண்ட நிலத்தடியில் அவற்றோடு சிக்கல் ஏற்படாமல் அமைக்கப்பட வேண்டும் என்று காரெட் கூறுகிறார். நிலத்தடி நிலப்பரப்பைத் தவறாக மதிப்பிடுவது அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும். கட்டுமானங்கள் முடிவதோடு செலவுகள் நிற்காது. காற்றோட்டம், மின் விளக்குகள் வெளிப்புறத்துடன் ஒப்பிடுகையில் 24 மணிநேரமும் இயங்க வேண்டும், அதற்கு அதிக ஆற்றல் தேவைப்படும், அதேநேரத்தில் ஆபரேட்டர்கள் தீ போன்ற அபாயங்களையும் கண்காணிக்க வேண்டும் என்று அயர்லேண்ட் கூறுகிறது. பட மூலாதாரம்,JIM BYRNE/GETTY இந்தப் பெரிய நிதி செலவினங்களைத் திரும்பப் பெற அரசுகள் போராடும். வாகன ஓட்டிகளிடம் கட்டணம் வசூலிப்பதன் மூலம் ஓரளவு பணம் திரட்ட முடியும். மேற்புறத்தில் புதியதாக விடுவிக்கப்பட்ட நிலங்களை விற்பதன் மூலம் கட்டுமானத்திற்கு நிதியளிக்க உதவலாம் என்கிறார் இன்ஸ்டிடியூட் ஆஃப் டிரான்ஸ்போர்ட்டேஷன் ஸ்டடீஸின் துணை இயக்குநர் ஜூவான் மேட்யூட். இருப்பினும், பெரிய நிலத்தடி சாலை திட்டங்களுக்கு நிதிகளைத் திசை திருப்புவது, பொதுப் போக்குவரத்து உட்பட பல பொது சேவைகளுக்கு இழப்பை ஏற்படுத்தும் என்று ஆல்ட்ரெட் கூறுகிறார். மேலும், அதிக திறன் கொண்ட ரயில் அல்லது பேருந்தைப் பயன்படுத்துவது, தனியார் வாகனங்களைக் குறைக்க உதவும். அதன்மூலம் பொதுப் போக்குவரத்து அந்த இடங்களை நிரப்புவதால், சாலை அதிக இடவசதி கொண்டதாக நெரிசல் குறைவாக இருக்கும் என்றும் அவர் கூறுகிறார். பெட்ரோலில் இயங்கும் கார்களுக்கான நெரிசல் கட்டணங்கள் போன்ற சிக்கல் குறைவான மற்றும் ஒப்பீட்டளவில் விலையுயர்ந்த கொள்கைகள், நகரங்கள் கார் பயன்பாட்டைக் குறைக்கவும் மாசு அளவைக் குறைக்கவும் மேலும் பசுமையான இடங்கள், பூங்காக்கள் மற்றும் மரங்களை உருவாக்குவதற்கு பணத்தைத் திரட்டவும் உதவும் என்று ஜூவான் மேட்யூட் கூறுகிறார். "காட்டுயிர்கள், சூழலியல் அமைப்புகளின் மீதான சாலைகளின் பாதிப்புகளை, காட்டுயிர் பாலங்கள், நீரோட்டத்தில் ஏற்படும் தாக்கங்களைக் குறைக்க சாலைகளை உயர்த்துவது போன்ற நடவடிக்கைகளின் மூலமாகக் குறைக்கலாம். இது ஏற்கெனவே ஃப்ளோரிடாவில் உள்ள தமியாமி பாதையில் நடக்கிறது. அதோடு காட்டுயிர்கள் இடம்பெயரும் காலங்களில் சில சாலைகள் மூடப்படலாம்," என்கிறார் காஃபின். "எந்த வகையான முன்மொழிவையும் மதிப்பிடும்போது கேட்கப்பட வேண்டிய கேள்வி ஒன்றுண்டு. அந்த முன்மொழிவு, யாருடைய பிரச்னைகளைத் தீர்க்கிறது? நகரங்களைச் சுற்றி நாம் எவ்வாறு பயணிக்கிறோம் என்பதில் ஆழமான சமூகப் பிரச்னைகள் உள்ளன," என்று காஃபின் கூறுகிறார். இவற்றுக்கு எளிய ஒற்றைத் தீர்வு என்பதும் என்றுமே இருக்காது. https://www.bbc.com/tamil/science-62042046
  12. இஸ்லாமியர்களின் மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கும்: அரபு ஊடகம் 4 ஜூலை 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES சௌதி அரேபியாவில் உள்ள இஸ்லாமியர்களின் புனித தலங்களில் ஒன்றான மெக்காவில் இனி தமிழும் ஒலிக்கப்போகிறது. இஸ்லாமியர்களின் புனித நாட்களில் ஒன்றான அரஃபா நாள் சொற்பொழிவின் மொழிபெயர்ப்பு நேரலையாக ஒலிபரப்பப்படுவது ஏற்கெனவே 10 மொழிகளில் நிகழ்ந்து வரும் சூழலில் தமிழ் உள்ளிட்ட நான்கு மொழிகளுக்கும் அது விரிவுபடுத்தப்பட்டுள்ளது என்று சௌதி அரேபிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி இஸ்லாத்தின் மிதவாதம் மற்றும் சகிப்புத்தன்மைக்கான செய்தி இந்த உலகுக்கு அறிவிக்கப்படும் என்று மெக்கா மற்றும் மதீனாவில் உள்ள இரு புனித மசூதிகளுக்கான பொது தலைமையின் தலைவர் அப்துல் ரகுமான் அல் - சுதைஸ் தெரிவித்துள்ளார் என்று 'அராப் நியூஸ்' ஊடகம் தெரிவிக்கிறது. மெக்கா 1979: சௌதி வரலாற்றை மாற்றிய மசூதி முற்றுகை முகமது நபியின் படம் வரைய இஸ்லாம் மதத்தில் தடை ஏன்? அரஃபா தினம் இசுலாமிய நாட்காட்டியில் பன்னிரெண்டாவது மாதமான துல் ஹஜ் மாதத்தின் 9ஆம் தேதியன்று கடைப்பிடிக்கப்படுகிறது. அரஃபா குன்றின் மீது முகமது நபிகள் தமது இறுதிப் பேருரையை நிகழ்த்திய நாளே அரஃபா நாளாக அனுசரிக்கப்படுகிறது. மெக்காவில் உள்ள அல் நிம்ரா மசூதியில் நிகழ்த்தப்படும் அராஃபத் நாள் சொற்பொழிவு கடந்த ஐந்தாண்டுகளாக அரபு தவிர்த்த உலகின் வெவ்வேறு மொழிகளில் மொழிபெயர்த்து ஒலிபரப்பப்பட்டு வருகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஏற்கெனவே அவ்வாறு ஆங்கிலம், பிரெஞ்சு, மலாய், உருது, பாரசீகம், ரஷ்ய மொழி, சீன மொழி, வங்க மொழி, துருக்கிய மொழி ஹவுசா ஆகிய பத்து மொழிகளில் மொழிபெயர்ப்புகள் நிகழ்ந்து வரும் சூழலில் இந்த ஆண்டு முதல் தமிழ், இந்தி, ஸ்பானிய மொழி மற்றும் ஆப்ரிக்க மொழியான ஸ்வாஹிலி ஆகிய மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன என்று அல்-சுதைஸ் தெரிவித்துள்ளார். இந்த மொழிபெயர்ப்பு முதல் ஆண்டு 10 லட்சம் பேருக்கும், இரண்டாம் ஆண்டு 1 கோடியே 10 லட்சம் பேருக்கும், மூன்றாம் ஆண்டு 50 லட்சம் பேருக்கும், நான்காம் ஆண்டு 10 கோடி பேருக்கும் பயனாக இருந்தது என்று கூறும் அல் - சுதைஸ் இந்த ஆண்டு 20 கோடி பேருக்கு பலனளிக்கும் என்று தெரிவித்தார் என அராப் நியூஸ் ஊடகத்தின் செய்தி தெரிவிக்கிறது. https://www.bbc.com/tamil/global-62040310
  13. காணாமல் போன கிரிப்டோ ராணி: டாக்டர் ருஜா இக்னடோவா தான் உலகில் அதிக கிரிப்டோகரன்சியை வைத்திருக்கிறாரா? 6 மணி நேரங்களுக்கு முன்னர் கிரிப்டோ சந்தைகள் அசாதாரணமான சூழலில் இருப்பதால், பிட்காயின் முதலீட்டாளரான, "காணாமல் போன கிரிப்டோராணி" என்றழைக்கப்படும் டாக்டர் ருஜா இக்னாடோவாவும் நஷ்டத்தைச் சந்தித்திருக்கலாம் என்று பிபிசியால் பார்க்கப்பட்ட கோப்புகள் தெரிவிக்கின்றன. 2017-ஆம் ஆண்டில் அவருடைய கிரிப்டோகரன்சியான ஒன்காயின் அதன் உச்சத்தில் இருந்தநேரத்தில் பில்லியன்கணக்கில் முதலீடுகளை ஈர்த்து மோசடி செய்துவிட்டு அவர் காணாமல் போனார். இதன்மூலம், அமெரிக்காவில் மோசடி மற்றும் பண மோசடி குற்றச்சாட்டுகளோடு மத்திய புலனாய்வுப் பிரிவின் மிகவும் தேடப்படும் 10 பேரில் ஒருவரானார். ஆக்ஸ்ஃபோர்டில் படித்த தொழில்முனைவோரான இவர், முதலீட்டாளர்களிடம் "பிட்காயினை அழிக்கக்கூடிய ஒன்றை" உருவாக்கியதாகக் கூறினார். ஆனால், அவர் காணாமல் போவதற்கு முன்பு பிட்காயினுக்கு போட்டியாக அவர் உருவாக்கிய நாணயத்தில் பல பில்லியன்களை ரகசியமாகச் சேகரித்ததாக கோப்புகள் தெரிவிக்கின்றன. துபாய் நீதிமன்றங்களில் இருந்து கசிந்த ஆவணங்களின் விவரங்கள் முதன்முதலில் 2021-ஆம் ஆண்டு வெளிவந்தன. டாக்டர் ருஜாவை "வரலாற்றில் மிகவும் வெற்றிகரமான குற்றவாளி" என்று குறிப்பிட்டு ஒரு வழக்கறிஞர் ஆன்லைனில் பதிவிட்டார். பட மூலாதாரம்,FBI படக்குறிப்பு, டாக்டர் இக்னடோவா ஆயுதம் ஏந்திய பாதுகாவலர்களோடு பயணிப்பதாக மத்திய புலனாய்வுப் பிரிவு நம்புகிறது துபாய் கோப்புகள் துபாய் கோப்புகளில் உள்ள சில தகவல்களை எங்களால் சுயாதீனமாகச் சரிபார்க்க முடிந்தது. ஆனால், அனைத்தையும் பார்க்க முடியவில்லை. குறைந்தபட்சம், டாக்டர் ருஜாவிற்கு துபாய் ஒரு முக்கியமான நிதிசார் பாதை என்று கசிந்த கோப்புகளின் தகவல் தெரிவிக்கிறது. ஐக்கிய அரபு எமிரேட்ஸை அவர் தொடர்பு கொண்ட ஐந்து நாடுகளில் ஒன்றாக மத்திய புலனாய்வுப் பிரிவு குறிப்பிட்டது. "இங்கு உங்களுடைய நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் ஆபத்தில் இருக்கின்றன," என்று முதலில் கோப்புகளை ஆன்லைனில் வெளியிட்ட வழக்கறிஞர் ஜோனாதன் லெவி பதிவிட்டார். அவர், ஒன்காயின் கிரிப்டோகரன்சியால் பாதிக்கப்பட்டு இழப்பீடு கேட்பவர்களிடமிருந்து தகவல்கள் கிடைக்கும் என்று நம்புகிறார். ஒன்காயின் பயன்படுத்தியதாகக் கூறப்படும் இணைய டொமைனை ஹோஸ்ட் செய்ததால், பிரிட்டிஷ் இந்தியப் பெருங்கடல் பிரதேசத்தின் உச்சநீதிமன்றத்தில் இந்த இழப்பீடு உரிமைகோரல் தாக்கல் செய்யப்பட்டது. டாக்டர் லெவி, பெரும்பாலும் அரபு மொழியில் இருந்த ஆயிரக்கணக்கான ஆவணங்களை, துபாயிலுள்ள மக்கள் "அநியாயமாக பணக்காரர்களாக்கப் படுகிறார்கள்" என்று நினைத்த ஓர் இடித்துரைப்பாளரிடம் இருந்துப் பெற்றார். பட மூலாதாரம்,ONECOIN/YOUTUBE படக்குறிப்பு, 2015-ஆம் ஆண்டு துபாயில் ஒரு ஒன்காயின் நிகழ்வின்போது மேடையில் பேசிய டாக்டர் ருஜா 'பிட்காயின் ஒப்பந்தம்' ஒரு பணக்கார வணிக அதிபரின் மகனான ஷேக் சவுத் பின் பைசல் அல் காசிமி என்ற எமிரேட்டி அரச அதிகாரியுடன் ஒரு பெரிய பிட்காயின் ஒப்பந்தம் செய்யப்பட்டது என்பதுதான், டாக்டர் லெவியின் சட்ட வழக்கில் கூறப்பட்ட மிகவும் அதிர்ச்சியூட்டும் கூற்று. 2015-ஆம் ஆண்டில், ஷேக் சவுத் டாக்டர் ருஜாவுக்கு 230,000 பிட்காயின் இருந்த நான்கு யூஎஸ்பி மெமரி ஸ்டிக்குகளை வழங்கினார். அந்த நேரத்தில் அதன் மதிப்பு 48.5 மில்லியன் யூரோக்கள். பதிலுக்கு, டாக்டர் ருஜா மஷ்ரெக் வங்கியிலிருந்து ஷேக் சவுத்திடம் மொத்தமாக 210 மில்லியன் எமிரேட்டி திர்ஹாம்கள் மதிப்பிலான மூன்று காசோலைகளை வழங்கினார். அதாவது சுமார் 50 மில்லியன் யூரோ. நடந்ததாகச் சொல்லப்படும் இந்த ஒப்பந்தத்திற்கு முன்னதாக, துபாயின் மஷ்ரெக் வங்கி பண மோசடி கவலைகளுக்கு மத்தியில் டாக்டர் ருஜாவின் கணக்குகளை மூடத் தொடங்கியது. எனவே காசோலைகளைப் பணமாக்க முடியவில்லை. 2020-ஆம் ஆண்டில், துபாய் அதிகாரிகள் டாக்டர் ருஜாவின் முடக்கி வைத்திருந்த நிதியைத் தளர்த்தினர். ஓராண்டுக்கு முன்பே அமெரிக்க நீதித்துறை அவர்மீது ஒரு குற்றச்சாட்டை வெளியிட்டது. "ஒன்காயின் ஒரு மோசடியான கிரிப்டோகரன்சி" என்று முத்திரை குத்தியது. எல் சால்வடோர்: பிட்காயின் மூலம் இந்த நாட்டில் எதையும் வாங்கலாம். எப்படி? கிரிப்டோகரன்சி முறைகேடுகள்: இந்தியா எப்படி எதிர்கொள்ளப் போகிறது? கிரிப்டோகரன்சி என்றால் என்ன, அவற்றில் முதலீடு செய்யலாமா? ஆனந்த் ஸ்ரீநிவாசன் ருஜாவின் நிதியை முடக்குவதைத் தளர்த்தும் முடிவை எடுப்பதற்குச் சில மாதங்களுக்கு முன்பு, டாக்டர் ருஜாவின் முன்னாள் நிதி மேலாளர் மார்க் ஸ்காட் நியூயார்க்கில் ஒன்காயின் வருமானத்தில் 400 மில்லியன் டாலர் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார். இந்த முடிவு குறித்து பிபிசி கேட்டதற்கு, துபாய் அரசு வழக்கறிஞர் பதிலளிக்கவில்லை. துபாய் நீதிமன்றத்தின் மேல்முறையீடு தொடர்பான ஆவணங்களின்படி, 28 ஏப்ரல் 2022 அன்று, ஷேக் சவுத் டாக்டர் ருஜாவின் நிதியை தன்னிடம் ஒப்படைக்க வைக்க முயன்றார். இவர்களுக்கு இடையே ஒருவித ஒப்பந்தம் முதலில் நடந்ததாக அந்த ஆவணங்கள் கூறுகின்றன. கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக பொதுவெளியில் பார்க்கப்படாவிட்டாலும், டாக்டர் ருஜாவும் ஒரு பிரதிவாதியாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளார். டாக்டர் ருஜா மற்றும் ஷேக் ஷேக் சவுத் பற்றி அதிகம் தெரியவில்லை, ஆனால் உடற்பயிற்சியில் ஆர்வமுள்ள இவர் பொதுவெளியில் அரிதாகவே காணப்படுகிறார் என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கல்வி முயற்சிகளை ஆதரிப்பதாகக் கூறும் ஐ.சி.ஏ.எஃப்.இ (Intergovernmental Collaborative Action Fund for Excellence) என்ற அமைப்புக்கான 2017-ஆம் ஆண்டு யூட்யூப் வீடியோ ஒன்றில் அவர் இடம்பெற்றுள்ளார். ஆனால், துபாய் கோப்புகள் வெளியான பிறகு, ஐசிஏஎஃப்இ அமைப்பின் பொதுச் செயலாளர் ஷேக் அல் காசிமியின் குறிப்புகள் அதன் இணையதளத்தில் இருந்து மறைக்கப்பட்டுவிட்டன. பட மூலாதாரம்,WFDP/YOUTUBE படக்குறிப்பு, துபாயில் ஐசிஏஎஃப்இ நிகழ்வில் அதன் மற்றொரு நிறுவனரான ஷரியர் ரஹிமி உடன் ஷேக் சவுத் அல் கசிமி சமீபத்தில் தொடங்கப்பட்ட கிரிப்டோகரன்சியும் அதன் தலைவராக ஷேக்கை பட்டியலிட்டுள்ளது. துபாய் கோப்புகள் அல் காசிமி குடும்பத்திற்கும் டாக்டர் ருஜாவுக்கு இடையே ஒரு காலத்தில் நெருங்கிய உறவைக் காட்டுகின்றன. 3 செப்டம்பர் 2015 அன்று, துபாயின் மஷ்ரெக் வங்கி டாக்டர் ருஜாவின் தனிப்பட்ட கணக்குகளை முடக்குவதாகவும் அதற்கான காரணத்தை விளக்கியும் கடிதம் எழுதியது. பதினொரு நாட்களுக்குப் பிறகு, அமெரிக்க நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு மின்னஞ்சல், ஒன்காயினின் சக ஊழியருக்கு மஷ்ரெக் வங்கியிலிருந்து 50 மில்லியன் யூரோக்களை அனுப்புவது குறித்து டாக்டர் ருஜா கடிதம் எழுதியதைக் காட்டுகிறது. அதற்கு அடுத்த வாரம் "துபாயிலுள்ள ஷேக்குகளில் ஒருவருடனான" சந்திப்பைக் குறிப்பிட்ட டாக்டர் ருஜா, "அவர் எங்களுக்காக ஏதாவது செய்ய முயல்வார்," என்று குறிப்பிடுகிறார். டாக்டர் ருஜா யாரைச் சந்திக்க விரும்பினார் அல்லது சந்திப்பு நடந்ததா என்பது தெரியவில்லை. ஆனால், கோப்புகள் இதில் ஒரு சாத்தியமான விளக்கத்தைச் சுட்டிக் காட்டுகின்றன. கோப்புகளில், ஷேக் சவுத்தின் தந்தை ஷேக் பைசல் அருகில் டாக்டர் ருஜா நிற்கின்ற ஒளிப்படம் ஒன்று இருந்தது. அது அக்டோபர் 8, 2015 தேதியில் எங்கு எனத் தெரியாத இடத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அல் காசிமி குடும்பம் ஷார்ஜாவை ஆட்சி செய்கிறது. இது துபாய் மற்றும் ராஸ் அல் கைமா ஆகிய எல்லைகளைக் கொண்ட, வடகேயுள்ள எமிரேட் ஆகும். டாக்டர் ருஜாவுடனான அவருடைய குடும்ப உறவு குறித்து ஷேக் பைசல் எங்களிடம் பதிலளிக்கவில்லை. பட மூலாதாரம்,UNKNOWN படக்குறிப்பு, ஷேக் சவுத்தின் தந்தை ஷேக் பைசல் அருகில் டாக்டர்.ருஜா இக்னடோவா ஷேக் சவுத் ஒரு காலத்தில் மூத்த பொறுப்பிலிருந்த ஐசிஏஎஃப்இ அமைப்பின் "சிறப்பு ஆலோசகராக" ருஜாவுக்கு வழங்கப்பட்ட ராஜ்ஜியரீதியிலான அடையாள அட்டையும் கோப்புகளில் உள்ளன. இந்த அமைப்பு ஐக்கிய நாடுகள் சபையோடு இணைக்கப்பட்டதாகத் தெரிகிறது. ஆனால், ஐ.நா பொதுச் செயலாளரின் செய்தித் தொடர்பாளரால் சாதாரண வழிகளில் இணைக்கப்பட்டதற்கான எந்த ஆவணங்களையும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த அமைப்பின் மற்றொரு நிறுவனரான ஷரியார் ரஜிமி கூறுகையில், ஐசிஏஎஃப்இ அமைப்பு ஐ.நா-வில் "பதிவு செய்யப்பட்டுள்ளது," ஆனால் இதற்கான ஆதாரங்களை வழங்கத் தவறிவிட்டது. டாக்டர் ருஜாவிடம் வழங்கப்பட்ட ஐசிஏஎஃப்இ ஆவணங்கள் ஷேக் சவுத் மூலமாகக் கிடைத்ததாகக் கூறினார். டாக்டர் ருஜாவின் பிட்காயின் ஒப்பந்தத்திற்குப் பிறகு, அவர்களுடைய உறவு மோசமடைந்ததாகத் தெரிகிறது. கசிந்த கோப்புகளில் ஒரு கடிதம் ஷேக் சவுத் டாக்டர் ருஜாவை ஐசிஏஎஃப்இ அமைப்பின் தூதர் பதவியிலிருந்து நீக்கியதைக் காட்டுகிறது. இருவருக்கும் இடையிலான வழக்கு ஜூன் 28-ஆம் தேதியன்று துபாய் மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் முடிவுக்கு வந்தது. குற்றம்சாட்டப்படும் பிட்காயின் ஒப்பந்தம், டாக்டர் ருஜாவுடனான அவருடைய உறவு மற்றும் ஐசிஏஎஃபி-இல் அவருடைய பங்கு குறித்துக் கேட்டதற்கு, ஷேக் சவுத்தின் வழக்கறினர் நேரடியாக பதிலளிக்கவில்லை. ஆனால், "உங்களிடம் உள்ள அனைத்து தகவல்களும் ஆதாரமற்றவை," என்றார். பட மூலாதாரம்,UNKNOWN படக்குறிப்பு, ஐசிஏஎஃப்இ அமைப்பின் "சிறப்பு ஆலோசகராக" ருஜாவுக்கு வழங்கப்பட்ட ராஜ்ஜியரீதியிலான அடையாள அட்டையும் கோப்புகளில் உள்ளன சொல்லப்படும் பிட்காயின் பரிவர்த்தனை கோல்ட் ஸ்டோரேஜ் வால்லெட் என்று அழைப்படுவதைப் பயன்படுத்தி நடந்ததாகக் கூறப்படுகிறது இது உண்மையில் நடந்ததா என்பதைக் கண்டறிவது மிகவும் கடினம். பிட்காயின் பரிவர்த்தனைகளைப் பெரும்பாலும் கண்டறிய முடியும். ஏனெனில் பணப்பைகளுக்கு இடையேயுள்ள மெய்நிகர் நாணயத்தின் அனைத்து பரிமாற்றங்களும் பொதுவில் பார்க்கக்கூடிய தரவுத் தளத்தில் பதிவு செய்யப்படுகின்றன. இருப்பினும், நீதிமன்ற ஆவணங்களில் இந்த பிட்காயின்கள் எந்தெந்த பணப்பைகளில் எத்தனை முறை சேமிக்கப்பட்டன என்பது பற்றிய விவரங்கள் எதுவும் இல்லை. டாக்டர் ருஜாவிடம் இன்னும் அவை இருந்தால், இவ்வளவு பெரியளவிலான பிட்காயினை நகர்த்து அவருக்குக் கடினமாக இருக்கலாம். கிரிப்டோ ஆசிரியர் டேவிட் பிர்ச், பிட்காயினின் "அநாமதேய" நாணயம் என்ற பெயர் துல்லியமற்றது எனக் கருதுகிறார். ஏனெனில், சட்ட அமலாக்க முகமைகள் நாணயங்கள் கணினியில் பரிமாறப்படும்போது, அவற்றைக் கண்காணிக்க புத்திசாலித்தனமான அல்காரிதம்களை அதிகளவில் பயன்படுத்துகின்றன. "சில பில்லியன் டாலர் மதிப்பிலான பணத்தைக் கையாள்வது நீங்கள் நினைப்பதைவிட மிகவும் கடினமானது," என்று அவர் கூறினார். டாக்டர் ருஜாவிடம் இன்னும் 230,000 பிட்காயின்கள் இருந்தால், அவர் மிகப்பெரிய அளவிலான கிரிப்டோ கரன்சி வைத்திருப்பவர்களில் ஒருவராக இருப்பார். நவம்பர் 2021-இல் அவருடைய பங்கு ஏறக்குறைய 15 பில்லியன் டாலர்களாக இருந்திருக்கும். ஆனால், இதை எழுதும் நேரத்தில் அது சுமார் 5 பில்லியனாக குறைந்துவிட்டது. இருப்பினும் அவர் மறைந்திருப்பதற்கு இதுவே போதுமானது. https://www.bbc.com/tamil/science-62026633
  14. காதல்: பிரிந்து பிரிந்து சேரும் காதலர்களுக்கு பின்னிருக்கும் உளவியல் என்ன? 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "நம் இருவருக்கும் இனிமேல் ஒத்துவராது" என்று முகத்தில் கண்ணீர் வழிந்தோடியபடி, ஜார்ஜிடம் சொன்னார் யேன்ஸ். இதைச் சொல்லிவிட்டு இதயம் நொறுங்க, விசும்பலுடன் வீடு திரும்பினார் அவர். ஆனால், இது முதன்முறையல்ல. கடந்த இரண்டு மாத காலத்தில் இது மூன்றாவது முறை. இந்த முறை யேன்ஸ் திரும்பி வரப்போவதில்லை என்றும் சொல்லியிருந்தார். "பழைய நினைவுகளைக் கிண்டிவிட்டு அதில் உழலுவதென்பது மனித வாழ்வில் இயல்பானது. சொல்லப்போனால், மூன்றில் இரண்டு பங்கு கல்லூரி மாணவர்கள் பிரிந்து சேர்ந்த காதலுடன்தான் இருக்கின்றனர். இதில் பாதிப்பேர் தங்கள் காதல் முறிவுக்குப் பிறகும் உடலுறவைத் தொடர்கின்றனர். திருமணத்துக்குப் பிறகும், உறுதிமொழிகள் பரிமாறப்பட்ட பிறகும் கூட, தன் முந்தைய காதலின் நினைவுகள் விவகாரத்திலிருக்கும் தெளிவின்மை தொடரத்தான் செய்கிறது. திருமணமான தம்பதிகளில் ஐந்தில் ஒரு தம்பதி பிரிந்து மீண்டும் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர். உலகில் ஏராளமான கவிதைகளுக்கும், நாவல்களுக்கும், சினிமாக்களுக்கும் அடி நாதமாக அமைந்த இந்த - பிரேக் அப் செய்துவிட்டு மன்னிப்பு தேடும் - உணர்ச்சி, நம் உளவியலில் ஆழப்பதிந்துள்ளது என்பதில் ஆச்சரியம் ஏதுமில்லைதான். ஆனால், ஏன் இது நடக்கிறது? முறிந்து போன ஒரு உறவை மீண்டும் மீண்டும் பரிசீலிப்பது ஏன்? பட மூலாதாரம்,JAVIER HIRSCHFELD/ GETTY IMAGES மூளையை ஸ்கேன் செய்யும் "முதல் முதலாக உறவில் முறிவு ஏற்படும்போது, மனம் போராட்டமாக உணர்கிறது. யார் நிராகரித்தார்களோ அவரை மீண்டும் வெல்ல வேண்டும் என்ற வேட்கையில் மனம் துடிக்கிறது" என்கிறார், கின்ஸ்லீ இன்ஸ்டிட்யூட் நரம்பியல் நிபுணரான ஹெலென் ஃபிஷர். ஹெலெனும் அவருடனான விஞ்ஞானிகளும் சுமார் 15 பேரிடம் ஒரு ஆய்வை நடத்தினர். மூளையை ஸ்கேன் செய்யும் (functional magnetic resonance imaging -fMRI) அந்த ஆய்வின்மூலம், அவர்களின் மூளைகள் கண்காணிக்கப்பட்டன. அவர்களிடம், அவரவர்களது முன்னாள் காதலர்களின் புகைப்படங்கள் வழங்கப்பட்டன. அதைப் பார்க்கும்போது, அவர்களது மூளையில் உணர்ச்சியுடனும், காதலுடன் தொடர்புடைய மகிழ்ச்சியான சங்கடமான எல்லா நினைவுகளோடும் தொடர்புள்ள பகுதிகள் புத்துயிர் பெற்றன. நிராகரிப்புக்குப் பிறகு, நீங்கள் அவர்களை காதலிப்பதை நிறுத்துவதில்லை. மாறாக, இன்னும் அதிகமாகக் காதலிக்கிறீர்கள் என்கிறார் ஹெலென். தாய்ப்பால் பரிசுத்தமானதா? ஃபார்முலா பாலை குழந்தைகளுக்கு தரலாமா? மனிதர்கள் ஏன் முத்தமிடுகின்றனர்? - அறிவியல் கூறும் காரணம் இறைச்சி உணவை விட 'வீகன்' உணவு ஆரோக்கியமானதா? படங்களைப் பார்க்கும் அந்த நேரத்தில், நிராகரிக்கப்பட்ட காதலர்களின் உடலில் டோப்பமைன் மற்றும் நோர்ப்ன்ஃப்ரைன் ஆகிய ஹார்மோன்கள் அதிகரிக்கின்றன. மனித உடலில் அதிகரிக்கும் மன அழுத்தத்துடன் தொடர்புடையது இந்த நோர்பைன்ஃப்ரைன். இதனை `விரக்திக்கான ஈர்ப்பு` என்று சொல்கிறார் ஹெலென். நிராகரிக்கப்பட்ட ஆண்கள் மற்றும் பெண்கள் இரு பாலரிடமும், செயல்பாட்டு நிலையில் இருப்பது நியூக்ளியஸ் அக்யூம்பென்ஸ் ஆகும். இது ஒரு மனிதருடைய, அதீத பற்றுடன் (அடிமையாகும் அளவுக்கு) தொடர்புடைய முக்கியமான மூளைப் பகுதி. மொத்தத்தில், மீண்டும் இணைய வேண்டும் என்ற எண்ணம் எப்போது இருக்கிறது. தன் ஆய்வில் கலந்து கொண்டவர்கள் எல்லோருமே "தங்கள் பிரிந்து போன இணையைப் பற்றி மிகமிக அதிகமாக சிந்தித்தார்கள். அத்துடன் ஒரு உணர்ச்சிவசமான மறுசந்திப்பை எண்ணியும் ஏங்கினர்" என்கிறார் ஹெலென். பட மூலாதாரம்,JAVIER HIRSCHFELD/ GETTY IMAGES பற்று வைத்தலில் மூன்று வகை "ஒரு ஜோடி ஏராளமான குழப்பங்களை எதிர்கொண்டு பிரிந்தபிறகும் மீண்டும் தான் காதலித்துக்கொண்டிருப்பதாகவே கருதிக்கொள்கிறார்கள். எனவே இங்கு பிரச்னைகளோ முரண்களோ சரி செய்யப்பட்டனவா என்பது பொருட்டே அல்ல. வெறுமனே பிரிவு மட்டும் ஏற்பட்டால், தாம் மெல்ல மெல்ல சரியாகிவிட்டதாக உணர்ந்து, மனித மனம் மீண்டும் உறவைத் தொடர்கிறது" என்கிறார், பிரிந்து பிரிந்து சேரும் உறவுகள் குறித்து ஆய்வு செய்த டெக்சாஸ் பல்கலைக்கழக பேராசியர் ரீன் டெய்லி. உளவியலில் மிகவும் பிரபலமான பற்றுதல் விதி (Attachment theory) குறித்தும் ரீன் டெய்லி பேசுகிறார். அதன்படி, பற்று வைத்தலில் மூன்று வகைகள் உண்டு. பாதுகாப்பான பற்று, பதற்றத்துடன் கூடிய பற்று, நிராகரிப்புடன் கூடிய பற்று. முதல் வகையைப் பொறுத்தவரை, ஆரோக்கியமான உணர்ச்சிமிக்க உரையாடல்கள் இடம்பெறும். ஆனால், இரண்டாவது வகையில், சுய சந்தேகங்கள் அதிகமாகி நெருக்கத்தை மீட்டெடுக்க பெரும் முயற்சி செய்பவர்களாக இருப்பர். ஆனால், மூன்றாவது வகையில், தன்னளவில் தன்னிறைவு பெற்ற இவர்கள் உணர்ச்சிவசமான உரையாடல்களுக்கு கிடைக்கமாட்டார்கள். அதேசமயம், நெருக்கத்தை தவிர்க்கும் தன் பழக்கத்துக்காக காரணங்களுடன் வாதிடுபர்களாகவும் இருப்பர். இந்த விதியின்படி, இரண்டு மற்றும் மூன்றாம் வகையினர் ஒருவரையொருவர் ஈர்த்துக்கொண்டு, பின்னர் முழுமையாக பிரியவும் முடியாமல் சிரமப்படுவர் என்று சொல்லப்படுகிறது. ஆனால், அதற்கு ஆய்வு ரீதியிலான எந்த ஆதாரங்களும் இல்லை. பட மூலாதாரம்,JAVIER HIRSCHFELD/ ALAMY எப்படி சரி செய்வது? உடைந்த மனதை சரிசெய்வது என்பது போதை பழக்கத்திற்கு சிகிச்சையளிப்பது போன்றது. "நீங்கள் அவர்களின் நினைவான பொருட்களை ஒதுக்கி வையுங்கள். அவர்களது சமூக ஊடகப் பக்கங்களை பார்ப்பதை நிறுத்துங்கள், அவர்களுடன் உங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை" என்று ஹெலென் கூறுகிறார். இதற்கு no-contact rule என்று பெயர். இந்த விதி "சில அறிவியல் அடிப்படைகளைக் கொண்டுள்ளது" என்றும் மியாமி பல்கலைக்கழக பேராசிரியர் ப்ரோகார்ட் கூறுகிறார். அதாவது, காலப்போக்கில் கோபம், துரோகம் மற்றும் பல கசப்பான உணர்ச்சிகள் குறைகின்றன என்கிறார் அவர். "ஒருவரை பிரேக்-அப்பில் இருந்து மீட்க, பயிற்சியாளர்களும் உண்டு. ஆனால், அவர்களின் பரிந்துரைகள் அறிவியல் ரீதியாக நம்பத்தகுந்ததாக இருக்காது. "பிரேக்-அப் பயிற்சியாளர்களுக்கு நரம்பியல், உளவியல், அறிவாற்றல் அறிவியல், தத்துவம் அல்லது சமூகப் பணி போன்ற தொடர்புடைய துறைகளில் சரியான பயிற்சியோ அல்லது கல்வியோ கூட இருக்காது" என்கிறார் ப்ரோகார்ட். பட மூலாதாரம்,GETTY IMAGES பிரேக்-அப் பயிற்சிக்காக பணத்தைச் செலவழிப்பதற்குப் பதிலாக, சரியான தகவல்கள் கொண்ட, உறவுகள் குறித்த இலக்கியங்களைப் படிக்குமாறும் ப்ரோகார்ட் அறிவுறுத்துகிறார். ஆனால், ஒருவரை மீண்டும் வெல்வதற்காக உங்கள் அதிக நேரத்தையும் சக்தியையும் செலவிடுவதை குறித்தும் அவர் எச்சரிக்கிறார். உங்கள் முன்னாள் காதலருடன் நீங்கள் மீண்டும் இணைவதற்கு உத்திகள் எதுவும் இல்லை. ஆனால், தோல்வியுற்ற உறவில் என்ன தவறு நடந்தது என்பதைப் பற்றி நேர்மையுடன் பேச வேண்டும் என்கிறார் அவர். தங்கள் முந்தைய காதலுடன் சமரசம் செய்ய முடியாதவர்களுக்கு, மூளை விரக்தி நிலைக்குச் செல்லலாம். அதன்பிறகுதான், அந்த மனநிலையை ஏற்றுக்கொள்வது, பின் அலட்சியப்படுத்துவது, பின்னர் மீள்வது போன்றவை ஒன்றன்பின் ஒன்றாக நிகழும் என்கிறார் ஹெலென். "நீங்கள் தீவிர வலி மற்றும் கவலையை அனுபவிப்பீர்கள், ஆனால் இறுதியாக அதிலிருந்து மீள்வீர்கள்," என்று நிறைவு செய்யும் ஹெலென், "உங்களைத் தூக்கி எறிந்த நபரை நீங்கள் ஒருபோதும் மறப்பதில்லை. ஆனால், நீங்கள் அதிலிருந்து மீண்டு புதியவரை நேசிப்பீர்கள்" என்றும் தெரிவிக்கிறார். https://www.bbc.com/tamil/science-62027423
  15. இலங்கை பொருளாதார நெருக்கடி: வெறிச்சோடி போன சாலைகள், எரிபொருளுக்கு மேலும் தட்டுப்பாடு 2 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீவிர நிலையில் காணப்படுகின்ற சூழ்நிலையில், நாடு முழுவதும் உள்ள வீதிகள் பெருமளவில் வெறிச்சோடி காணப்படுகின்றன. நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்ள முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு முன்பாக இன்றும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக காத்திருக்கின்றன. சுகாதாரம், போக்குவரத்து, அத்தியாவசிய உணவு பொருள் விநியோகம், முப்படை உள்ளிட்ட சில அத்தியாவசிய தேவைகளுக்கு மாத்திரம் எரிபொருளை விநியோகிக்க அரசாங்கம் கடந்த வாரம் தீர்மானித்திருந்தது. இதனால், இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பு நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. 'ஒரே நாடு, ஒரே சட்டம்' செயலணி: இனவாத ரீதியிலான பரிந்துரைகள் என முஸ்லிம்கள் கண்டனம் இலங்கை: "தமிழக நிவாரணப் பொருட்களை நேர்மையாக வழங்குங்கள்" இந்த நிலையில், இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனம் வசமுள்ள எரிபொருள் தொகை குறித்து, எரிசக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர கருத்து தெரிவித்தார். இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்தின் கொலன்னாவை களஞ்சியசாலையில் 5274 மெட்ரிக் டன் டீசல் காணப்படுகின்றது. லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்திடமிருந்து 7500 மெட்ரிக் டன் டீசலை பெற்றுக்கொள்வதற்கு, கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் 11 மில்லியன் அமெரிக்க டாலர் செலுத்தப்பட்டுள்ளது. இதன்படி, 12,774 மெட்ரிக் டன் டீசல் கையிருப்பில் உள்ளதாக அமைச்சர் காஞ்சன விஜேசேகர குறிப்பிடுகின்றார். அதேபோன்று, 92 ரக பெட்ரோல் 1414 மெட்ரிக் டன்னும் 95 ரக பெட்ரோல் 2647 மெட்ரிக் டன்னும் காணப்படுகின்றது. அத்துடன், சூப்பர் டீசல் 233 மெட்ரிக் டன்னும், விமானங்களுக்கு பயன்படுத்தப்படும் எரிபொருள் 500 மெட்ரிக் டன்னும் காணப்படுவதாக அவர் கூறுகின்றார். இந்த நிலையில், அத்தியாவசிய சேவைகளை கூட பூர்த்தி செய்துக்கொள்ள முடியாத அளவிற்கான எரிபொருள்தான் இலங்கை வசம் காணப்படுகின்றது. இதனால், அத்தியாவசிய தேவைகளை தவிர்த்த, ஏனைய தேவைகளுக்கு எரிபொருள் விநியோகம் தற்போது இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்தினால் முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. எனினும், இலங்கையில் செயற்பட்டு வரும் இந்தியாவிற்கு சொந்தமான லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் எரிபொருள் விநியோகத்தை குறிப்பிட்டளவு மேற்கொண்டு வருவதை காண முடிகின்றது. லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் இலங்கை முழுவதும் சுமார் 211 எரிபொருள் நிரப்பு நிலையங்களை லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் செயற்படுத்தி வருகின்றது. இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்தினால் எரிபொருள் விநியோகம் முழுமையாக இடைநிறுத்தியுள்ள இந்த தருணத்தில், லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தமது எரிபொருள் விநியோகத்தை விஸ்தரித்துள்ளதாக நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்துள்ளார். இதன்படி, நேற்றைய தினம் ஒரு மில்லியன் லிட்டர் எரிபொருளை விநியோகித்துள்ளதாக தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை பகுதியிலுள்ள ஐ.ஓ.சி நிறுவனத்தின் களஞ்சியசாலையிலிருந்து எரிபொருள் விநியோகம் நாளாந்தம் இடம்பெற்று வருகின்றது. நேற்றைய தினம் விடுமுறை தினம் என்ற போதிலும், திருகோணமலை களஞ்சியசாலையின் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் கூறியுள்ளார். இலங்கை பெட்ரோலிய கூட்டுதாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் கொள்கலன்கள் மேலதிகமாக ஈடுபடுத்தப்பட்டு, எரிபொருள் விநியோகம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. பொது போக்குவரத்து முழுமையாக முடங்கும் அபாயம் இலங்கை எதிர்நோக்கியுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக பொது போக்குவரத்து சேவைகளுக்கும் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது. 10 வீதத்திற்கும் குறைவான பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பஸ் உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவிக்கின்றார். நாடு முழுவதும் சுமார் 1000 தனியார் பஸ்களே சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள போதிலும், அதன் சேவைகளும் உரிய வகையில் முன்னெடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. பாடசாலைகள் விடுமுறை எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக எதிர்வரும் ஒரு வார காலத்திற்கு பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு அனுமதி பெற்ற பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்ச நேற்று அறிவித்துள்ளது. இதன்படி, இன்று முதல் எதிர்வரும் 8ம் தேதி வரை பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/sri-lanka-62033572
  16. ஆவணப்பட போஸ்டர் சர்ச்சை: வாயில் சிகரெட், கையில் எல்ஜிபிடி கொடியுடன் 'காளி' - சர்ச்சை குறித்து என்ன சொல்கிறார் லீனா மணிமேகலை? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,@LEENAMANIMEKALI கவிஞர், ஆவணப்பட இயக்குநர், சுயாதீன திரைப்பட இயக்குநர் என பன்முகம் கொண்ட லீனா மணிமேகலை, பாலியல் - சமூக ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் ஈழப்போராட்டங்கள் குறித்தும் திரைப்படங்களையும், ஆவணப்படங்களையும் இயக்கியுள்ளார். இவருடைய 'மாடத்தி, 'செங்கடல்' போன்ற திரைப்படங்கள் சர்வதேச கவனம் பெற்றன. சர்வதேச அளவிலான பல்வேறு திரைப்பட விழாக்களில் இத்திரைப்படங்கள் திரையிடப்பட்டுள்ளன. பல்வேறு சர்வதேச விருதுகளையும் லீனா மணிமேகலை பெற்றுள்ளார். இந்நிலையில், தான் இயக்கியுள்ள 'காளி' என்கிற நிகழ்த்து ஆவணப்படத்தின் (Performance Documentary) 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரை சமீபத்தில் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதுதான் தற்போதைய சர்ச்சையின் மையமாக உள்ளது. அந்த போஸ்டரில் 'காளி' போன்று வேடமணிந்துள்ள பெண், தன் வாயில் சிகரெட்டுடன், கையில் பால்புதுமையினர் (LGBT) கொடியை பிடித்திருப்பது போன்று உள்ளது. Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 இந்த போஸ்டர் வெளியிடப்பட்ட சில மணிநேரங்களிலேயே அதற்கான எதிர்வினைகள் வெளிவரத் தொடங்கின. 'ArrestLeenaManimekalai' என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் இந்திய அளவில் தற்போது டிரெண்டாகிவருகிறது. இந்த போஸ்டர் இந்து மதத்தை அவமதிப்பதாகவும், லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் எனவும் சமூக வலைதளங்களில் பலரும் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, ஹரியாணா பாஜகவின் மாநில பொறுப்பாளர் அருண் யாதவ், இதுகுறித்து வீடியோ ஒன்றை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். அதில், இந்த ஆவணப்படம் தடை செய்யப்பட வேண்டும் என்றும், அனைவரும் இந்து மத உணர்வுகளை மதிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். அவரது வீடியோவை ரீட்வீட் செய்து பலரும் ArrestLeenaManimekalai என்ற ஹேஷ்டேகை பதிவிட்டு வருகின்றனர். விஷ்வ இந்து பரிஷத் தலைவர்களுள் ஒருவரான பிராச்சி சாத்வி, தன் ட்விட்டர் பக்கத்தில், "இந்துக்களே விழித்திருங்கள், இந்து மதத்திற்கு எதிரான இயக்குநரை புறக்கணியுங்கள்" என பதிவிட்டுள்ளார். Twitter பதிவை கடந்து செல்ல, 2 Wake Up Hindus . Boycott Anti Hindu Film Director . Retweet Maximum And Demand #ArrestLeenaManimekalai https://t.co/Zx1zyT6dlo — Dr. Prachi Sadhvi (@Sadhvi_prachi) July 3, 2022 Twitter பதிவின் முடிவு, 2 மேலும், இயக்குனர் அஷோக் பண்டிட், ஹரியாணா பாஜகவின் சமூக ஊடக ஒருங்கிணைப்பாளர் ஹரிஷ் ஷர்மா உள்ளிட்டோரும் தங்களின் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கங்களில் இந்த போஸ்டருக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம்,@LEENAMANIMEKALI/TWITTER நூபுர் ஷர்மா vs முகமது ஜுபைர்: ஒரே பிரிவில் வழக்கு - வெவ்வேறு நடவடிக்கை ஏன்? அமராவதி கொலை: நூபுர் ஷர்மாவை ஆதரித்ததற்காக கொலை செய்யப்பட்டாரா உமேஷ் கோல்ஹே? முஸ்லிம் வெறுப்பால் இந்தியா வெளிநாடுகளில் எதிர்கொள்ளும் சிக்கல்கள் என்ன? நூபுர் ஷர்மா விவகாரம், அதைத்தொடர்ந்து உதய்பூரில் நிகழ்ந்துள்ள கொலை உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் இந்தியாவில் பல விவாதங்களை எழுப்பியுள்ள வேளையில், நாடு முழுவதும் பல்வேறு பெயர்களிலும் வடிவங்களிலும் வணங்கப்படும் 'காளி' ஏன் சர்ச்சையின் மையமாக்கியுள்ளார்? கனடாவில் உள்ள இயக்குனர் லீனா மணிமேகலை இந்த ஆவணப்படம் குறித்தும் அதைத்தொடர்ந்த சர்ச்சை குறித்தும் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார்: 'காளி' எனும் நிகழ்த்துக்கலை ஆவணப்படத்தின் போஸ்டரில் பெண் தெய்வம் கையில் சிகரெட் மற்றும் கையில் 'பால்புதுமையினர்' கொடியையும் பிடித்திருக்கிறார்... 'காளி' இதன்மூலம் சொல்ல வருவது என்ன? என்னைப் பொருத்தவரை "காளி" பேராற்றல் கொண்ட, கட்டற்ற, அசுரத்தனம் என்று கருதப்படுவதையெல்லாம் காலில் போட்டு மிதிக்கிற, தீமையின் தலைகளையெல்லாம் ஒட்ட நறுக்கி கெட்ட ரத்தமாக ஓடவிடுகிற துடியான ஆதி மனுஷி. அப்படி ஒரு மனுஷி ஒரு மாலை நேரம் எனக்குள் இறங்கி டொரோண்டோ மாநகர வீதிகளில் வலம் வந்தால் என்ன நடக்கும் என்பதை நிகழ்த்திக் காட்டும் படம் தான் காளி. நான் பால்புதுமையராகவும், திரைப்படங்களை இயக்கும் பெண்ணாகவும் இருப்பதாலும் எனக்குள் இறங்கும் காளி, பால்புதுமையர் கொடியையும் கேமராவையும் பிடித்திருக்கிறார். என்ன செய்ய?. என் மேல் இறங்கும் காளி கனடாவில் வாழும் பழங்குடி மக்களோடும், ஆப்பிரிக்க, ஆசிய, யூத, பாரசீக இனங்களை சேர்ந்த மக்களோடும் கலந்து மனித நேயத்தைக் கொண்டாடி மகிழ்ச்சியாக இருக்கிறார். கனடாவில் கஞ்சா சட்டப்பூர்வமானது என்றாலும் விலை அதிகம். பூங்காவில் படுத்துறங்கும் கனடாவின் வீடற்ற ஏழை கறுப்பின உழைக்கும் மக்களிடம் காளியை உபசரிக்க ஒரு சிகரெட் தான் இருக்கிறது. அதை அன்புடன் ஏற்றுக் கொள்கிறார் காளி. பட மூலாதாரம்,@LEENAMANIMEKALI/TWITTER இந்த போஸ்டர் இந்துக்கடவுளை அவமதிப்பதாகவும் மத உணர்வுகளை புண்படுத்துவதாகவும் கூறி, ட்விட்டரில் 'ArrestLeenaManimekalai' என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டாகி வருவதை பார்த்தீர்களா? இதுகுறித்து என்ன நினைக்கிறீர்கள்? இந்திய அரசாங்கம் மத அடிப்படைவாத எதேச்சதிகார அரசாங்கம். சமூக செயற்பாட்டாளர்களையும், பத்திரிகையாளர்களையும், தெருவில் இறங்கிப் போராடும் மாணவர்களையும், கலைஞர்களையும் நசுக்குவதை முழுநேர வேலையாக வைத்திருக்கும் இந்த அரசாங்கத்திற்குப் பெயர் மக்களாட்சி அல்ல, பாசிசம். சிறுபான்மையினரை ஒடுக்கி மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்து துண்டுதுண்டாக்கி நாட்டை மெல்ல மெல்ல திறந்தவெளி இன அழிப்பு கூடமாக்கி கொண்டிருக்கும் இந்த நாசகார கும்பல் கையில் சிக்கி இந்தியாவின் ஆன்மா தனது இறுதி சுவாசத்தை இழுத்துப் பிடித்துக் கொண்டிருக்கிறது. கடந்த பதினேழு ஆண்டுகால கலை வாழ்க்கையில் கொலை மிரட்டல், வன்புணர்வு செய்யப்படுவாய்-ஆசிட் அடிக்கப்படுவாய் போன்ற அச்சுறுத்தல்கள், அரசியல் கைதுகள், சென்சார் தலையீடுகள், அவதூறுகள், போலீஸ் புகார்கள், அரசியல் கைதுகள், மீடூ இயக்கத்தில் இணைந்து பாலியல் அத்துமீறல்களைப் பற்றி பேசியதால் தொடுக்கப்பட்ட வழக்குகள், அதன் அடிப்படையில் பாஸ்போர்ட் முடக்கம், அதை முறியடிக்க போராட்டங்கள் - இப்படி எல்லாவற்றையும் பார்த்தாயிற்று. எனக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை. இருக்கும் வரை எதற்கும் அஞ்சாமல் நம்புவதைப் பேசும் குரலோடு இருந்துவிட விரும்புகிறேன். அதற்கு விலை என் உயிர் தான் என்றால் தரலாம். போஸ்டருக்காக மட்டுமே இத்தகைய சர்ச்சை ஏற்படும் என நினைத்தீர்களா? ஆவணப்படம் தடை செய்யப்பட வேண்டும் என கூறுவது குறித்து... படைப்பூக்கத்தில் இருக்கும்போது எந்த நினைப்பும் எனக்குத் தடையாக இருப்பதை நான் அனுமதிப்பதில்லை. சுய தணிக்கையை விட மோசமான தடை கலைக்கு வேறெதுவும் இல்லை. படத்தைப் பார்த்தால் இந்த hashtag கொடூரர்களின் மனம் மாறுவதற்கு வாய்ப்புண்டு. அதனால் தான் தடை செய்ய விரும்புகிறார்கள். இந்த இன்டர்நெட் யுகத்தில் அரசாங்க ரகசியங்களையே எதேச்சிதிகாரங்களால் காப்பாற்ற முடியவில்லை. கலை எப்படியாவது மக்களைப் போய் சேர்ந்து விடும். என் முந்தையப் படைப்புகள், கவிதையாகட்டும், திரைப்படங்களாகட்டும், தடைகளை சந்தித்திருக்கின்றன. அதனால் அவை வாசிக்கப்படாமலோ, பார்க்கப்படாமலோ போனதில்லை. பட மூலாதாரம்,@LEENAMANIMEKALI/TWITTER இந்திய பிரதமர், உள்துறை அமைச்சரையும் டேக் செய்து உங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிலர் கூறிவருவது குறித்து என்ன நினைக்கிறீர்கள்? இந்தியாவில் மோதியும் அமித்ஷாவும் வைப்பது தான் சட்டம். இது உலகத்திற்கே தெரிந்த விஷயம். அதற்காக, எல்லாரும் மூச்சையும் இயக்கத்தையும் நிறுத்திக் கொள்ள முடியுமா என்ன? பயத்தை அவர்கள் விதைக்கலாம். கலைஞர்கள் அதை அறுவடை செய்ய முடியாது. நூபுர் ஷர்மா விவகாரத்தையடுத்து தேசிய அளவில் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், இந்த போஸ்டரால் ஏற்பட்டுள்ள சர்ச்சை தவிர்த்திருக்கக்கூடியதா? இந்த போஸ்டரை வெளியிடுவதற்கான தகுந்த நேரம் இதுவென்று கருதுகிறீர்களா? “தீவிரவாதிகளிடமிருந்து இந்து மதத்தை காப்பாற்றுங்கள்” - உதய்பூர் கொலைக்கு எதிராக சர்வதேச அளவில் எழும் கண்டனம் புல்டோசர்கள்: கட்டடங்களை இடிக்கும் ஓர் ஆயுதமாக மாறியதன் பிண்ணனி பிரதமர் நரேந்திர மோதியின் மௌனம் தற்செயலானது அல்ல: ஹமித் அன்சாரி பிபிசிக்கு பேட்டி கனடாவின் யோர்க் பல்கலைக்கழகம் சர்வதேச அரங்கில் திறம்பட இயங்கும் படைப்பாளியென என்னை வரவழைத்து உதவித்தொகை வழங்கி மேலதிக பயிற்சிக்கான களத்தையும் மாஸ்டர்ஸ் டிகிரிக்கான வாய்பையும் வழங்கியது. கனடாவில் சினிமா படிக்கும் கலைஞர்களுள் சிறந்தவர்களைத் தேர்நதெடுத்ததில் - டொரண்டோ மெட்ரோபாலிடன் பல்கலைக்கழகம் "பன்முக கலாசாரம்" பற்றிய படமொன்றை எடுக்கும் முகாமில் என்னை இணைத்தது. காளி உருவான கதை அது தான். இந்தப் படத்தை ஒடுக்க நினைப்பவர்கள் கலையோடு நில்லாமல் கல்விப்புலத்தையும் அவமதிக்கிறார்கள். ரொம்ப நாட்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு இந்த உலகமும் மக்களும் சகித்துக் கொண்டிருக்க மாட்டார்கள் என நம்புகிறேன். மதம் குறித்த வெறுப்புணர்வு பேச்சுகளும், குற்றங்களும் அதிகமாகியுள்ள இந்த காலத்தில், ஒரு கலைஞராக நீங்கள் எதிர்கொள்ளும் சவால்கள் என்ன? இந்த காலகட்டத்தில் 'கலை' என்பது உங்களை பொறுத்தவரை என்ன? செய்வதற்கும் சாவதற்கும் இடையில் கலை ஊசலாடிக்கொண்டிருக்கிறது. எனக்கு அதைவிட பற்றிக் கொள்ள ஏதும் இல்லை. https://www.bbc.com/tamil/india-62033556
  17. யுபுன் அபேகோன்: "இலங்கையில் யாரும் உதவவில்லை" - 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் புதிய சாதனைப் படைத்த வீரர் 53 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, யுபுன் அபேகோன் 100 மீட்டர் ஓட்ட பந்தயப் போட்டியில் இலங்கையின் தடகள வீரரான யுபுன் அபேகோன், புதிய சாதனையொன்றை படைத்துள்ளார். 100 மீட்டர் ஓட்டப் பந்தயப் போட்யை 9.95 நொடிகளில் கடந்து, இந்த புதிய சாதனையை யுபுன் அபேகோன் நிலைநாட்டியுள்ளார். சுவிட்சர்லாந்தில் நடைபெற்று வரும் மெய்வல்லுநர் போட்டியிலேயே, இந்த சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. இலங்கை சாதனை மற்றும் தெற்காசிய சாதனை, யுபுன் அபேகோனினால் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மகாபலிபுரத்தில் மோதும் ரஷ்யா - யுக்ரேன் - ஆனால், இது வேற மாதிரி செஸ் விளையாட்டில் செயற்கை நுண்ணறிவு சாத்தியமா? - விஸ்வநாதன் ஆனந்த் பேட்டி மித்தாலி ராஜ் ஓய்வு: இந்திய பெண்கள் கிரிக்கெட் ராணியின் சாதனைகள் என்னென்ன? தெற்காசிய வீரர் ஒருவர் 100 மீட்டர் ஓட்டப் போட்டியை, 10 நொடிகளுக்கும் குறைவான காலத்தில் நிறைவு செய்த முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். பட மூலாதாரம்,YUPUN ABEYKOON'S FACEBOOK PAGE போட்டியை நிறைவு செய்ததன் பின்னர், யுபுன் அபேகோன் தனது சமூக வலைதளங்களில் வீடியோ ஒன்றை வெளியிட்டு கருத்து தெரிவித்திருந்தார். ''9.95 நொடிகளில் பந்தயத்தை நிறைவு செய்தேன். இலங்கை வரலாற்றை மாற்றி அமைத்தேன். தெற்காசியாவிலும் அதனை நான் செய்தேன். என்னுடன் இருந்தமைக்கு உங்களுக்கு நன்றி தெரிவிக்கின்றேன். பல தடவைகள் முயற்சி செய்தேன். இன்று அந்த சந்தர்ப்பம் கிடைத்தது. நன்றி. ஒன்றை கூறிக் கொள்ள வேண்டும். இதற்கான உரிமை எனக்கு உள்ளது. அத்துடன், எனது குழுவிற்கு உள்ளது. இலங்கையில் யாரும் இதற்காக உதவி செய்யவில்லை. இதனை நான் கூற வேண்டும். எனது சாதனை நேரம் பலகையில் தென்படுவதை பார்வையிடுவதற்கு காத்திருந்த, எனக்கு வாழ்த்துக்களை தெரிவித்தவர்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்" என யுபுன் அபேகோன் தெரிவிக்கின்றார். பட மூலாதாரம்,YUPUN ABEYKOON'S FACEBOOK PAGE யுபுன் அபேகோனுக்கு இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 யார் இந்த யுபுன் அபேகோன்? கொழும்பு புறநகர் பகுதியான நீர்கொழும்பு பகுதியில் 1994ம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ம் தேதி யுபுன் அபேகோன் பிறந்துள்ளார். பன்னல தேசிய பாடசாலையில் தனது ஆரம்ப கல்வியை தொடர்ந்த அவர், மேல் நிலை கல்வியை வென்னப்புவ பகுதியில் தொடர்ந்துள்ளார். சிறு வயதிலிருந்து விளையாட்டில் ஆர்வம் காட்டிய யுபுன் அபேகோன், ராஞ்சியில் 2013ம் ஆண்டு நடைபெற்ற தெற்காசிய இளையோர் தடகள போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடியிருந்தார். அதனைத் தொடர்ந்து, சர்வதேச ரீதியில் நடைபெற்ற பல்வேறு தடகள போட்டிகளில் பல்வேறு பதக்கங்களை யுபுன் அபேகோன் வென்றெடுத்துள்ளார். https://www.bbc.com/tamil/sport-62033769
  18. புதுச்சேரி: பரவும் காலராவை தடுக்க மக்கள் என்ன செய்ய வேண்டும்? - மருத்துவர் பதில்கள் 4 ஜூலை 2022, 01:30 GMT புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, காலரா புதுச்சேரியில் காலராவால் பாதிக்கப்பட்டு இதுவரை ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். இதில் இணை நோய்களுடன் இருந்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் புதுச்சேரி அரசு தெரிவிக்கிறது. நிலைமையின் தீவிரத்தன்மையைக் கணக்கில் கொண்டு, அங்கு பொது சுகாதார அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் பள்ளி, கல்லூரிகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், காலரா பரவலுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக, யூனியன் பிரதேச ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், பிரதானமாக நீர் மாசுபாட்டால் பரவும் நோயான காலராவுக்கான அறிகுறிகள் என்ன? வரும் முன் காப்பது எப்படி? வந்தால் செய்ய வேண்டியவை என்ன? ஆகியவை குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இது குறித்து எளிமையாக விளக்குகிறார் மருத்துவர் பூபதி ஜான். காலரா பரவுவது எப்படி? acute diarrhoeal disease எனப்படும், வயிற்றுப்போக்குடன் கூடிய உடல் உபாதைகள் வந்தாலே நாம் காலரா குறித்து சந்தேகம் கொள்வது நல்லது. காலரா பரவுவதற்கு இரண்டு முக்கியமான காரணிகள் உண்டு. ஒன்று நீர் மற்றொன்று உணவு. மக்கள் பயன்படுத்தும் நீர் மாசடைந்திருந்தால் அதன் விளைவாக காலரா ஏற்படலாம். அதுபோலவே உணவும் சுகாதாரமற்றதாக இருந்தால் காலரா உருவாகலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES உணவைப் பொறுத்தவரை, ஈக்கள் முதன்மையான மாசுபடுத்திகளாக இருக்கின்றன. குறிப்பாக, லேசாக அழுகிய பழங்களில் சிறுபகுதியை நீக்கிவிட்டு பயன்படுத்துவது, சுத்தமான நீரில் கழுவாமல் பயன்படுத்துவது சுகாதாரமற்ற நீரில் சமைக்கப்பட்ட உணவுகளை உண்பது ஆகியவற்றால் காலரா ஏற்படலாம். காலரா அறிகுறிகள் என்னென்ன? தொடர் வாந்தி அல்லது வாந்தி வருவது போன்ற உணர்வு வயிற்றுப்போக்கு காய்ச்சல் நா வறட்சி உடலில் நீரிழப்பு ஆகியவை காலராவின் பொதுவான அறிகுறிகள். இவை பொதுவான அறிகுறிகள் என்றாலும், காலராவில் சாதாரண நிலை, தீவிர நிலை, அதி தீவிர நிலை என்று மூன்று வகைகள் உண்டு. சாதாரண நிலை: வயிற்றுப்போக்கு வாந்தி காய்ச்சல் ஆகியவை காலராவின் சாதாரண நிலைக்கான அறிகுறிகள் குடல் நாளத்தை நலமுடன் வைத்திருக்க என்ன சாப்பிட வேண்டும்? காரைக்காலில் காலரா, வயிற்றுப்போக்கால் 700 பேர் பாதிப்பு உணவே மருந்து: கொழுப்பை சாப்பிடலாம்... ஆரோக்கியமாக வாழலாம்.. .எப்படி? தீவிர நிலை: வலியுடன் கூடிய அதிதீவிர வயிற்றுப்போக்கு அதீத தாகம் நா வறட்சி குறைந்த ரத்த அழுத்தம், நீரிழப்பால் வரும் உடல் சோர்வு கண்கள் ஒளியிழந்து போதல் கண்ணங்கள் வற்றிப்போதல் அதி தீவிர நிலை: சிறுநீரகம் செயலிழப்பு, மறதி, பார்வை மங்கல், சுயநினைவு இழப்பு ஆகியவை காலராவின் அதிதீவிர நிலையின் அறிகுறிகளாகும். வருமுன் காப்பதற்கான வழிகள் என்ன? சுகாதாரமான நீரும் உணவும்தான் வழி. நீரை எப்போதும் காய்ச்சிக் குடிக்க வேண்டும். காய்ச்சிக் குடிப்பதென்றால், நீர் சூடாகும் அளவுக்கு மட்டுமல்ல. நன்கு கொதிக்க வைத்து ஆறிய பின் பருக வேண்டும். சிலர், வெந்நீரில் சாதாரண நீரைக் கலந்து குடிக்கின்றனர். அது துளிகூட பயனற்றது. கிருமிகள் கொல்லப்பட்ட நீரில், மீண்டும் கிருமிகளைக் கலந்து குடிப்பது போலத்தான் இதுவும். எனவே, கொதிக்க வைத்த நீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES பழங்கள், காய்கறிகளை கழுவி பயன்படுத்தும்போதும் கூட வெந்நீரை பயன்படுத்துவது சிறந்தது. குளிர்பதனப் பெட்டியிலிருந்து எடுத்து அப்படியே சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். அத்துடன் உங்கள் பயன்பாட்டு நீர் சுகாதாரமாக உள்ளதா என்பதை உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலம் பரிசோதித்துக் கொள்ளலாம். இப்படியான வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் காலரா உள்ளிட்ட நீரினால் ஏற்படும் நோய்களிலிருந்து பாதுகாத்துக் கொள்ளலாம். ஒருவேளை வந்துவிட்டால் என்ன செய்வது? பயப்பட வேண்டியதில்லை. முதலில் மருத்துவரை அணுக வேண்டும். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்து மாத்திரைகளையும் உட்கொள்ளக்கூடாது. பட மூலாதாரம்,GETTY IMAGES தொடக்க நிலையில் வீட்டிலேயே, ஓ.ஆர்.எஸ் எனப்படும், உப்புக்கரைசல் (சோடியம்) வழங்குவது நீரிழப்பைத் தடுக்கும். பெரும்பாலான நேரங்களில் இந்த ஓ.ஆர்.எஸ். முறை மூலமே சரி செய்ய முடியும். இந்த ஓ.ஆர்.எஸ். பாக்கெட்டுகள் அருகிலுள்ள மருந்துக்கடைகளில் கிடைக்கும். காய்கறிகள், பழங்கள் என நீர்ச்சத்து மிக்க உணவுப்பொருட்கள் சிலவற்றை பரிந்துரையுங்கள் என்றும் சிலர் கேட்கின்றனர். ஆனால், வயிற்றுப்போக்கு இருக்கும் சமயங்களில் திட உணவுகள் பரிந்துரைக்கு ஏற்றவை அல்ல. மருத்துவரை அணுகியபின் நோயின் தீவிரத்தை பொறுத்து அவருக்கு குளுக்கோஸ் மற்றும் உடலுக்குத் தேவையான உப்புச்சத்துகள் உடலுக்குள் செலுத்தப்படும். வயது வந்த பெரியவர்களால் இதனைத் தாங்க முடியும். ஆனால், குழந்தைகள் இதனைத் தாங்க மாட்டர். அவர்களுக்குத்தான் உடனடியாக ஓ.ஆர்.எஸ். வழங்க வேண்டும். நாட்டு வைத்திய முறைகளைப் பின்பற்றுவதாக இலை, தழைகளை வழங்குவர். அது கூடாது. ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகள் என்றால், உடனடியாக மருத்துவமனை செல்ல வேண்டும் என்றும் தெரிவிக்கிறார் மருத்துவர் பூபதி ஜான். முறையான மருத்துவச் சிகிச்சை வழங்கப்படாவிட்டால், காலரா உயிரைப்பறிக்கும் என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டியது. காலராவால் ஆண்டுதோறும் 13 லட்சம் முதல் 40 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவதாகவும், 21,000 முதல் 1லட்சத்து 43ஆயிரம் பேர் வரை இறப்பதாகவும் உலக சுகாதார நிறுவனத்தின் அதிகாரபூர்வ இணையம் தெரிவிக்கிறது. https://www.bbc.com/tamil/india-62027418
  19. இலங்கை கச்சத்தீவும் ஸ்டாலின் கருத்தும்: "தவித்த முயலை அடிப்பது போல ஆதாயம் தேடுகிறதா இந்தியா?" யூ.எல். மப்றூக் பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,INDIA IN SRI LANKA/TWITTER 'இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை, இந்தியா தனது நலன்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி வருவதாக எழும் குற்றச்சாட்டு, இலங்கையில் பல்வேறு தரப்பினராலும் மிகப் பெரிய அளவில் முன்வைக்கப்படுகிறது. இது எந்த அளவுக்கு உண்மை? ஏன் இந்த திடீர் சந்தேகம்? 'தவித்த முயலை அடிப்பது போல' இலங்கை விவகாரத்தில் இந்தியா நடந்து கொள்வதாக பலரும் இங்கே குற்றம்சாட்டுகின்றனர். குறிப்பாக, தற்போது நாடு இருக்கும் பொருளாதார நெருக்கடியில் இலங்கை வசமுள்ள கச்சதீவை - இந்தியா கைப்பற்றிக் கொள்ள வேண்டுமென்றும், இதுவே அதற்குப் பொருத்தமான சந்தர்ப்பம் எனவும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அண்மையில் தெரிவித்திருந்த கருத்து, இத்தகைய குற்றச்சாட்டை முன்வைக்க அவர்களைத் தூண்டியிருக்கிறது. "பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கைக்கு, நிவாரண உதவிகளை தமிழகம் வழங்கி விட்டு, கச்சதீவை கைப்பற்றிக்கொள்ள முயற்சிப்பது, பசித்த ஒருவருக்கு நிவாரணமாக மாவையும் சீனியையும் பருப்பையும் அனுப்பி விட்டு, அவரின் கிட்னியைப் பிடுங்கி எடுப்பதைப் போன்றதொரு செயலாகும்" என, வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் காத்தலிங்கம் அண்ணாமலை பிபிசி தமிழிடமும் தெரிவித்தார். இலங்கை வந்த இந்தியத் தூதுக்குழு: தொடர்ந்து இந்தியா, தமிழ்நாடு வழங்கும் உதவிகள் என்ன? 'ஒரே நாடு, ஒரே சட்டம்' செயலணி: இனவாத ரீதியிலான பரிந்துரைகள் என முஸ்லிம்கள் கண்டனம் இலங்கையில் எரிபொருள் விற்பனைக்குத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு சில தினங்களுக்கு முன்னர் 'நியூஸ் பெஸ்ட்' உள்ளுர் தொலைக்காட்சிக்குப் பேட்டியளித்த - முன்னிலை சோஷலிச கட்சியின் பொதுச் செயலாளர் குமார் குணரட்ணம்; "இந்தியா மற்றும் சீனா போன்ற பிராந்திய நாடுகள், இலங்கை நெருக்கடியை தமது தேவைகளுக்காகப் பயன்படுத்திக் கொண்டிருக்கின்றன" என்று குற்றஞ்சாட்டியிருந்தார். "இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் பாரிய முரண்பாடுகள் உள்ளன. கடந்த மஹிந்த ஆட்சிக் காலத்தில் சீனாவுடன் சேர்ந்தவாறு இலங்கையின் பொருளாதாரத் திட்டங்கள் இருந்தன. தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை, தனது அரசியல் மற்றும் பொருளாதாரத் தேவைகளுக்காக இந்தியா பயன்படுத்திக் கொண்டிருக்கிறது," என அவர் தெரிவித்திருந்தார். மன்னாரில் - பூநகரியில் அமைக்கப்படவுள்ள காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை, இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்குமாறு - இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் அழுத்தங்களைக் கொடுத்ததாக, இலங்கை மின்சார சபையின் தலைவராக இருந்த எம்.எம்.சீ. பெர்டினண்டோ அண்மையில் தெரிவித்திருந்தமையும், அதன் பின்னர் அவ்வாறு கூறியமையினை அவர் வாபஸ் பெற்றமையும் நினைவு கொள்ளத்தக்கது. எம்.எம்.சீ. பெர்டினண்டோ வெளியிட்ட அந்த தகவல், இலங்கை மற்றும் இந்திய அரசியலரங்கில் பாரிய அதிர்வுகளை ஏற்படுத்தியிருந்த நிலையில், அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். மறுபுறம், கடந்த வாரம் இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளியுறவுச் செயலாளர் வினய் குவாத்ரா தலைமையிலான இந்திய நிதியமைச்சின் உயர்மட்ட அதிகாரிகளைக் கொண்ட குழுவினர், இலங்கையில் இந்தியா முன்னெடுக்கவுள்ள வேலைத் திட்டங்களை விரைவாக செயற்படுத்துமாறு அழுத்தம் கொடுத்ததாக 'சண்டே டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம்,INDIA IN SRI LANKA/TWITTER மேற்படி இந்திய குழுவினர் - ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரை தனித்தனியாகச் சந்தித்துப் பேசியிருந்தனர். கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வது மற்றும் மன்னார் - பூநகரி பகுதியில் காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்பதற்கான திட்டங்கள் இந்தியாவின் அதானி குழுமத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், சம்பூர் அனல்மின் உற்பத்தித் திட்டம் மற்றும் திருகோணமலையில் அதிக எண்ணைத் தாங்கிகளை அமைப்பதற்கான திட்டம் ஆகியவையும் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளன. "சந்தர்ப்பம் பார்த்து இந்தியா உள்ளே வந்திருக்கிறது" - பேராசிரியர் பவன் இந்த நிலையில், இந்தியா மீது சுமத்தப்படும் இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பில் கிழக்குப் பல்கலைக்கழக பொருளியல்துறைப் பேராசிரியர் ரி. பவனுடன் - பிபிசி தமிழ் பேசியபோது; "ஒரு நாடு இன்னொரு நாட்டுக்கு எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி கடன்களை வழங்கி - உதவிக் கொண்டிருக்க மாட்டாது. ஒவ்வொரு உதவிக்குப் பின்னாலும் பூகோள அரசியலும், பொருளாதார நலன்களும் இருக்கும்" என்கிறார். "ஒரு நாட்டில் இயற்கை அனர்த்தமொன்று ஏற்படும்போது, ஏனைய நாடுகள் ஓரிரு தடவை ஏதிர்பார்ப்புகளின்றி உதவிகளை வழங்குவது வேறு விடயமாகும். ஆனால் இலங்கைக்கு ஏற்பட்டுள்ள பொருளாதார சிக்கலின் பொருட்டு, ஏனைய நாடுகள் தொடர்ச்சியாக உதவிகளை வழங்கும் போது, அந்த நாடுகள் சில விடயங்களை இலங்கையிடமிருந்து எதிர்பார்க்கும்". "இந்தியாவைப் பொறுத்த வரையில் இலங்கை அண்டை நாடாக இருப்பதால், இலங்கைக்கு உதவ வேண்டிய தார்மீகக் கடமையொன்று உள்ளது. இலங்கைக்கும் இந்தியாவுக்கும் வரலாற்றில் நீண்டகாலமாக தொடர்புகள் இருந்து வருகின்றன. இலங்கை - இந்தியா ஒப்பந்தம் அதற்கு ஓர் உதாரணமாகும்". "இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியைப் பயன்படுத்தி, இலங்கையிலிருந்து சீனாவை - வெளியே அனுப்புவதையும் இந்தியா நோக்கமாகக் கொண்டுள்ளது. இலங்கையின் பொருளாதாரம், முதலீடு மற்றும் வர்த்தகம் போன்ற விடயங்களில் இதுவரையில் சீனாதான் ஆதிக்கம் செலுத்தி வந்தது. இந்த விடயத்தில் இந்தியா பொறுமை காத்து வந்ததோடு, அவற்றினை 'நாம் அவதானித்துக் கொண்டிருக்கிறோம்' என, இந்தியா பல தடவை கூறி வந்தது. இப்போது சந்தர்ப்பம் பார்த்து இந்தியா உள்ளே வந்திருக்கிறது" எனக் கூறினார். பட மூலாதாரம்,PROF PAVAN "எந்தவித எதிர்ப்பார்ப்புகளுமின்றி, ஒருநாடு நமக்கு உதவிக் கொண்டிருக்கும் என, நாமும் எதிர்பார்க்க முடியாது. இப்போது வர்த்தகம் மற்றும் முதலீடு ஆகியவற்றில் தனது காலினை இலங்கையில் பதிப்பதற்கு இந்தியா முயற்சிக்கும். மின் சக்தி திட்டம், இல்மனைட் ஏற்றுமதி, கச்சதீவு விவகாரங்களில் இந்தியா உள்நுழையலாம். அதேபோன்று, மன்னார் கடற்பரப்பில் எண்ணெய் வளம் உள்ளதாக கூறப்படுகிறது அதிலும் இந்தியா ஆர்வம் காட்டலாம்" என பேராசிரியர் பவன் குறிப்பிட்டார். "இலங்கையின் எல்லாத்துறைகளிலும் மற்றைய நாடுகள் முதலீடு செய்ய முடியாது. அவ்வாறானதொரு கட்டுப்பாடு உள்ளது. உதாரணமாக தேயிலை, ரத்தினக்கல் உள்ளிட்ட சில துறைகளில் மற்றைய நாடுகள் முதலீடு செய்ய முடியாது. சுற்றுலா, ஆடை உற்பத்தி போன்ற துறைகளே முதலீடுகளுக்காக ஏனைய நாடுகளுக்கு திறந்து விடப்பட்டுள்ளன. இந்த நிலையில், இவ்வாறு கட்டுப்பாடுகள் உள்ள துறைகளில் முதலீடு செய்வதற்கான கோரிக்கைகளை இலங்கையிடம் இந்தியா முன்வைக்கக் கூடிய சாத்தியம் உள்ளது. மன்னார் காற்றாலை மின் உற்பத்தித் திட்டத்தை அதானி நிறுவனத்துக்கு வழங்குமாறு இலங்கை ஜனாதிபதிக்கு இந்தியப் பிரதமர் அழுத்தங்களை வழங்கியதாக மின்சார சபையின் முன்னாள் தலைவர் கூறி விட்டு, பின்னர் அதனை மறுத்திருந்தாலும், தாங்கள் உதவி செய்யும் நாடொன்றுக்கு அவ்வாறான அழுத்தத்தை இந்தியா வழங்குவதற்கான சாத்தியங்கள் உள்ளதையும் மறுக்க முடியாது" எனவும் அவர் கூறினார். இதேவேளை வடக்கிலிருந்து இந்தியாவுக்கான போக்குவரத்தை ஆரம்பிப்பதிலும் இந்தியாவின் வர்த்தக நோக்கமே உள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார். இலங்கை: "தமிழக நிவாரணப் பொருட்களை நேர்மையாக வழங்குங்கள்" இலங்கை: தன்பாலின திருமணத்துக்கு முயன்ற இலங்கை பெண்ணை காப்பகத்தில் வைக்க உத்தரவு ரணிலுக்கு எதிராக திரும்பிய இலங்கை போராட்டம் - காரணம் என்ன? வடக்கிலிருந்து இந்தியாவுக்கு கப்பல் போக்குவரத்து ஆரம்பிக்கப்பட்டு அதன் மூலமாக இந்தியர்கள் இங்கு வந்து வர்த்தக நடவடிக்கைகளைத் தொடங்கினால், அவர்களுடன் நம்மவர்களால் போட்டியிட முடியாமல் போகும். அதாவது இலங்கையின் உள்நாட்டுச் சந்தையை இந்தியாவுக்கு நேரடியாகத் திறந்து விடும் போது, அது இலங்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தும். ஆனால், வெளிநாடுகளின் முதலீடுகள் இலங்கைக்குத் தேவைதான். வெளிநாட்டு முதலீடுகளை அனுமதிக்கும் போது, அது நூறு வீதம் இலங்கைக்கு சாதமாக அமையும் என எதிர்பாக்க முடியாது. சாதகம், பாதகம் என இரண்டும் இருக்கும். அதற்குள் நாம் எவற்றினைப் பெற்றுக் கொள்ளப் போகிறோம் என்பதுதான் இங்கு முக்கியமானதாகும். 'இந்தியாவே ஒரே நம்பிக்கை' இலங்கை கடல் எல்லைக்குள் இந்திய மீனவர்கள் நுழைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இலங்கை மீனவர்கள் போராட்டங்களை நடத்துவதைப் போல், தமிழக மீனவர்களும் இலங்கையர்களால் தடுக்கப்படுவதாகக் கூறி, உண்ணா விரதங்களை மேற்கொண்டு வருகின்றனர். எனவே, தமிழக மீனவர்களுக்கு ஒரு தீர்வை - தமிழக முதல்வர் வழங்க வேண்டியுள்ளது, அல்லது ஒரு வாக்குறுதியை கொடுக்க வேண்டியுள்ளது. அதற்காகத்தான் அவர் கச்சதீவை மீட்க வேண்டுமெனக் கூறியிருக்கின்றார். பட மூலாதாரம்,INDIA IN SRI LANKA/TWITTER மன்னார் காற்றாலை மின் திட்டத்தை வழங்க - திறந்த விலைமனுக் கோராமல், இந்தியாவின் அதானி நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளமை இலங்கையில் சர்ச்சைக்குரிய ஒரு விடயமாக மாறியுள்ளது. ஆனாலும், இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடி நிலையில், குறித்த திட்டத்துக்காக, திறந்த விலைமனுக் கோரினாலும் அதற்காக விண்ணப்பிக்க எத்தனை கம்பனிகள் முன்வரும் என்பதும் கேள்விக்குரியதாகும். வெளிநாட்டு முதலீடுகளை உள்வாங்குவதென்றால் அதற்கான சூழ்நிலை சரியாக இருக்க வேண்டும். அதாவது பேரினப் பொருளாதார குறிகாட்டிகள் நிலையான தன்மையுடையவையாக இருக்க வேண்டும். ஆனால் இலங்கையில் பணவீக்கம் உச்சமடைந்துள்ளது, எரிபொருள்கள் இல்லை, மின்சாரத் தடை உள்ளது, அரசியல் மற்றும் சமூக அமைதியின்மை காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில், இலங்கையில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டவர் எவரும் முன்வர மாட்டார்கள். எனவே, இவ்வாறானதொரு சூழ்நிலையில் அதானி நிறுவனம் இலங்கையில் முதலீடு செய்வதற்கு முன்வருகின்றமையினை இலங்கைக்கு சாதகமாகவே நான் பார்க்கிறேன்" என்றும் அவர் கூறினார். "1983க்கு முன்னர் இலங்கையில் முதலீடு செய்வதற்கு வெளிநாட்டவர்கள் பலர் முன்வந்தனர். ஆனால், 83 ஜுலை கலவரத்தையடுத்து, அந்த முதலீட்டாளர்கள் திரும்பிச் சென்று, பிலிப்பைன்ஸ் மற்றும் தாய்லாந்து போன்ற நாடுகளில் அந்த முதலீடுகளைச் செய்தனர். இலங்கை விவகாரத்தில் 'தவித்த முயலை அடிப்பது' போன்ற செயலில் இந்தியா ஈடுபட்டாலும் கூட, இப்போதுள்ள நிலையில் இந்தியாதான் இலங்கைக்குள்ள ஒரேயொரு நம்பிக்கையாகும். சீனாவைப் பொறுத்தவரை இலங்கை விவகாரத்தில் வர்த்தக ஈடுபட்டினையே வெளிப்படுத்தி வருகின்றது. ஆனால், இந்தியாவைப் பொறுத்தவரை இலங்கை விவகாரத்தில் வர்த்தக ஈடுபட்டுடன் தார்மீகத்தையும் வெளிப்படுத்தி வருகின்றது. குறிப்பாக, தமிழகத்துக்கும் இலங்கையின் வடக்கு - கிழக்கு மக்களுக்கும் இடையில் ஓர் உறவு உள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்த வரையில், இலங்கை விவகாரத்தில் அவர்கள் வேறொரு நிகழ்ச்சி நிரலின் கீழ் செயற்படுகின்றனர். எனவே, இந்தியாவை இப்போதுள்ள நிலையில் இலங்கையினால் தவிர்க்க முடியாது" என, பேராசிரியர் பவன் தெரிவித்தார். இலங்கைக்கான இந்திய உதவிகள் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை அடுத்து, இலங்கைக்கு இந்தியா 3.5 பில்லியன் அமெரிக்க டாலர் பெறுமதியான உதவியை வழங்கியுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகராலயம் கடந்த வாரம் வெளிட்ட ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்நியச் செலாவணிக்கு ஆதரவாக 2 பில்லியன் டாலர்களும், கடனுதவியாக 1.5 பில்லியன் டாலர்களுமாக மேற்படி உதவியை இந்தியா வழங்கியுள்ளது. மேலும் 3 பில்லியன் இலங்கை ரூபா மதிப்பிலான அரிசி, பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளிட்ட மனிதாபிமான நிவாரணப் பொருட்களையும் இலங்கைக்கு இந்தியா அனுப்பியது. இவை இந்திய மக்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த மாதம் 24ஆம் தேதி இந்தப் பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன. தமிழக அரசினால் வழங்கப்படும் 40000 மெட்ரிக் டன் அரிசி, 500 மெட்ரிக் டன் பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் உள்ளடங்கிய பாரிய நிவாரணத்தின் இரண்டாம் கட்டமாக - மேற்படி நிவாரணத்தொகுதி அமைந்திருந்ததாகவும் இந்திய தூதரகம் குறிப்பிட்டிருந்தது. https://www.bbc.com/tamil/sri-lanka-62025955
  20. "நீ அதுக்குத்தான் லாயக்கு" - பேராசிரியருக்கு எதிராக மாணவி புகார் - என்ன நடந்தது? பிரசன்னா வெங்கடேஷ் பிபிசி தமிழுக்காக 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES "நீ ஒரு பையனிடம் தவறாக இருந்ததற்கான வீடியோ இருக்கிறது" என்று கூறி, பேராசிரியர் ஒருவர் தன் பெற்றோர் முன்பே தன்னை அவதூறாகப் பேசுவதாக மாணவி ஒருவர் மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில், "நான் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பயின்று வருகிறேன். கடந்த டிசம்பர் மாதம் கல்லூரிக் கட்டணம் கட்டுவதற்காக என் வகுப்புக்கான பொறுப்பு பேராசிரியரை பார்க்க, உரிய பாடவேளை பேராசிரியரின் அனுமதி பெற்று சென்று வகுப்புக்குத் திரும்பி வந்தேன். அப்போது, என்னை வகுப்புக்குள் அனுமதிக்காமல், ஒரு பையனை பார்க்க போனதாக என் மீது அவதூறு குற்றச்சாட்டை துறைத் தலைவர் வைத்தார். அத்தோடு என்னை வகுப்பில் இருந்தும் சஸ்பெண்ட் செய்தார். என்னை ஒழுக்கம் கெட்ட மாணவி என்றும் கடுமையான அவதூறு வார்த்தைகளால் பேசி களங்கப்படுத்தி என் பெற்றோரை அழைத்து வர கட்டளையிட்டார்'' என்று அந்த மாணவி கூறியுள்ளார். "இந்த நிலையில், நீ ஒரு பையனிடம் தவறாக இருந்ததற்கான வீடியோ இருக்கிறது" என்று கூறி, பேராசிரியர் ஒருவர் தன் பெற்றோர் முன்பே தன்னை அவதூறாகப் பேசுவதாக புகார் அளித்துள்ளார். வீடியோ காட்டி மிரட்டல் "நானும் எனது பெற்றோரும் துறைத் தலைவரை பார்ப்பதற்கு வெகு நேரம் காத்திருந்தும் அனுமதிக்காமல் பலமுறை எங்களை காக்க வைத்தார். அவரை பார்க்க அனுமதிக்கப்பட்டபோது, எங்களுடைய மகள் மீது எந்தத் தவறும் இல்லாமல் "ஏன் என் மகளின் கல்விக்கு இடையூறு செய்தீர்கள்" என கேட்டனர். அதற்கு, துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் சேர்ந்து என்னை மிரட்டினார்கள். "நீ ஒரு பையனிடம் தப்பாக இருந்த வீடியோ ஆதாரம் இருக்கிறது என்று கூறி தன் செல்போனில் இருக்கும் ஒரு வீடியோவை காட்டி பேராசிரியர் மிரட்டி அவதூறாக பேசினார். என் பெற்றோர் முன்னிலையிலேயே "நீ எல்லாம், இங்கே படிக்கவா வர்ற, தப்பா நடக்கத்தான் வர்ற, நீ அதுக்குத் தான் லாயக்கு" என்று என்னை மிகவும் அவமானப்படுத்தி அனுப்பி வைத்தனர்" என அந்த மாணவி கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES மன உளைச்சலால் தற்கொலைக்கு முயன்றதாகவும் அந்த மாணவி கூறியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக கல்லூரி முதல்வரிடம் தான் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்கிறார் அந்த மாணவி. இந்த நிலையில், தேர்வறையில் தமது ஹால் டிக்கெட்டை பறிப்பது, தேர்வு எழுத விடாமல் இடையூறு செய்வது போன்ற நடவடிக்கைக்கு தாம் உள்ளாவதாகவும் ஏழ்மையான குடும்பத்தைச் சார்ந்த தனக்கு கல்வி ஒன்றே எதிர்காலம். ஆகவே தன்னைப் போன்ற மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மாணவி மாநில மனித உரிமைகள் ஆணையத்திடம் அளித்த புகாரில் குறிப்பிட்டுள்ளார். துறைத் தலைவர் விளக்கம் இந்த விவகாரத்தில் என்ன நடந்தது என்று சம்பந்தப்பட்ட கல்லூரியின் துறைத்தலைவரிடம் பிபிசி கேட்டது. "பெற்றோருடன் சந்திக்க வந்த மாணவியிடம், "என்ன இருந்தாலும், பேராசிரியரை அவதூறாக பேசியிருக்கக் கூடாது. அதற்காக மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடு என்று தான் கேட்டேன் ஆனால் அந்த மாணவி தற்போது வரை மன்னிப்புக் கடிதம் எழுதி கொடுக்கவில்லை," என்கிறார் துறைத் தலைவர். இதையடுத்து அவரது தரப்பு நிலையை விவரிக்குமாறு கேட்டோம். "அந்த மாணவி வகுப்பறையில் இருந்து வெளியேறிய பிறகு வகுப்பறையில் இருப்பது போல் வருகை பதிவேட்டில் எவ்வாறு குறிப்பிட முடியும்? ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் யார் பொறுப்பு? அதனால் சம்பந்தப்பட்ட மாணவியிடம் பேராசிரியர் எங்கே போனீங்க என்று கேட்டதற்கு? வருகைப் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டாம் என அலட்சியமாக பதில் கூறி வகுப்பறையை விட்டு வெளியேறி விட்டார். துறைத் தலைவர் என்ற முறையில் சம்பந்தப்பட்ட பேராசிரியர் என்னிடம் இது சம்பந்தமாக கூறியிருந்தார். அதனால் பெற்றோருடன் வகுப்பறைக்கு வரும்படி மாணவியிடம் அறிவுறுத்தியிருந்தேன். இந்தியாவில் கருத்தடையின் சுமையை பெண்களே சுமப்பது ஏன்? உதய்பூர் படுகொலை: "குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை கிடைக்கும்" - கள நிலவரம் சென்னையில் 5 பேர் மரணம்: பாதாள சாக்கடைக்குள் மனிதர்கள் இறக்கப்படுவது ஏன்? மேலும், அந்த மாணவி ஹால் டிக்கெட்டில் கையொப்பம் வாங்குவதற்கு என்னிடம் கடைசிவரை வரவே இல்லை. மாணவி வராத பட்சத்தில் நான் எவ்வாறு கையெழுத்திட முடியும்? அந்த மாணவி தொடர்பாக வீடியோ எடுப்பதற்கு எங்களிடம் எதுவும் இல்லை. அது அவசியமும் இல்லை என்கிறார் துறைத் தலைவர். "சாதி பாகுபாடு பார்ப்பதாக என் மீது புகார் கொடுக்கிறார்கள். மாணவர்கள் குறிப்பிடும் அதே சாதியை சார்ந்தவர் தான் நான். அப்படி இருக்கும்போது, நான் ஏன் பாகுபாடு பார்க்கப் போகிறேன்? சம்பந்தப்பட்ட மாணவி சிறுபிள்ளைத்தனமாக நடந்து கொண்டிருப்பதனால் எங்களால் எதுவும் செய்ய முடியாமல் நிற்கிறோம். இதுதான் யதார்த்த நிலைப்பாடு. அந்த மாணவிக்கு கவுன்சிலிங் நிச்சயம் தேவைப்படுகிறது," என்கிறார் துறைத் தலைவர். இன்னொரு பேராசிரியரே காரணம் "தனது பிரிவில் பணிபுரியும் இன்னொரு பேராசிரியரே பிரச்னைக்கு முழுக்க காரணம்," என்றும் கூறுகிறார் துறைத் தலைவர். அவர் குறித்து கல்லூரி முதல்வரிடம் மூன்று ஆண்டுகளாக தொடர்ச்சியாக புகார் அளித்து வந்ததாகவும் தன்னைப் போன்றே பலரும் புகார் தெரிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES அவர் குறிப்பிட்ட பேராசிரியரிடம் நாம் பேசினோம். அவரோ, ``பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகார் மீது கல்லூரி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்காமலும், சம்பந்தப்பட்ட நபர்கள் மாணவிக்கு உரிய விளக்கம் அளிக்காமலும், மாணவியின் புகாரை திசை திருப்புவதற்காக சம்பந்தமில்லாமல் என் மீது பழி போடுகிறார்கள்," என்கிறார். இந்த நிலையில், மாணவி அளித்த மனித உரிமைகள் ஆணைய புகார் சமூக செயல்பாட்டாளர்களின் கவனத்தையும் பெற்றிருக்கிறது. "கல்லூரி மாணவியிடம் இவ்வாறு நடந்து கொள்வது நிச்சயம் முறை அல்ல, அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்'' என்கிறார் சமூக ஆர்வலர் ஹென்றி திபேன். இது தொடர்பாக அவர் பிபிசி தமிழிடம் பேசுகையில், "எந்த பெண்ணையும் அவரது அனுமதி இன்றி புகைப்படம் எடுப்பது தனிமனித உரிமை மீறல். அதிலும் மிரட்டுவது குற்றவியல் தண்டனைக்கு உட்பட்டது. சம்பந்தப்பட்ட மாணவி தலித் மாணவி என்பதனால் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நிச்சயம் பழங்குடியினர்/பட்டியல் பிரிவினருக்கு எதிராக வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதில் மாணவி புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத கல்லூரி நிர்வாகத்தினரையும் இணைக்க வேண்டும்," என்றார். கடைசியாக பல்கலைக்கழக முதல்வரிடம் பேசியபோது, "மாணவியின் புகார் குறித்து விசாரிக்க குழு அமைத்துள்ளோம். அதன் விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது. அதன் முடிவில்தான் எதையும் கூற முடியும்," என முடித்துக் கொண்டார். https://www.bbc.com/tamil/india-62019950
  21. இலங்கை: "தமிழக நிவாரணப் பொருட்களை நேர்மையாக வழங்குங்கள்" 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,HIGH COMMISSION OF INDIA IN COLOMBO, SRI LANKA இந்தியா மற்றும் இலங்கை நாளிதழ்கள் மற்றும் இணையதளங்களில் இன்று (03/07/2022) வெளியான சில முக்கிய செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தமிழக அரசாங்கத்தால் கிடைக்கப்பெற்ற நிவாரணப் பொருட்கள் எந்த விதமான பாரபட்சமுமின்றி அனைத்து மக்களுக்கும் நேர்மையான முறையில் வழங்கப்பட வேண்டும் என்று தொழிலாளர் தேசிய சங்கத்தின் நிதிச் செயலாளரும் மத்திய மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்துள்ளதாக தமிழ் மிரர் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில், "முதலாவது தொகுதி நிவாரணப் பொருட்கள் கடந்த மாதம் வந்தடைந்த நேரத்தில், மலையக மக்களுக்கு சரியான முறையில் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்திருந்தது. இப்போது வந்துள்ள இரண்டாவது தொகுதியில் வந்துள்ள நிவாரணப் பொருட்களை அத்தகைய குறைபாடுகள் எதுவுமின்றி சரியான முறையில் பகிர்ந்தளிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதோடு, தமிழக அரசியின் நிவாரணப் பொருட்களை வழங்கும் போது, பதுளை மாவட்டத்தில் உள்ள சில பிரதேசங்களில் வாகனப் போக்குவரத்துச் செலவுக்காக சாதாரண மக்களிடம் தலா 50 ரூபா வீதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாகிருந்தன. இது வேதனைக்குரிய விடயம் ஆகும்," என்று அவர் தெரிவித்துள்ளார். 'ஒரே நாடு, ஒரே சட்டம்' செயலணி: இனவாத ரீதியிலான பரிந்துரைகள் என முஸ்லிம்கள் கண்டனம் இலங்கையில் எரிபொருள் விற்பனைக்குத் தடை; அத்தியாவசிய சேவைக்கு மட்டும் விலக்கு இலங்கை: தன்பாலின திருமணத்துக்கு முயன்ற இலங்கை பெண்ணை காப்பகத்தில் வைக்க உத்தரவு மேலும், "சாதாரண மக்களின் ஏழ்மை நிலையை அறிந்து நிவாரணம் வழங்குவதற்காக இலவசமாக வழங்கப்பட்டுள்ள பொருட்களுக்கு "வாகனச் செலவு" என்று கூறி பணம் அறவிட்டுள்ளமை கண்டிக்கத்தக்க விடயம் ஆகும். இவ்வாறு செயற்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். மேலும், ஒரு சிலரின் சமூக விரோத செயல்கள் ஊடாக மலையகத்துக்கு தலைகுனிவு ஏற்பட்டுள்ளதோடு, தமிழக அரசுக்கும் அவப்பெயரை ஏற்படுத்தி விடும் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும். எனவே, இலவசமாக வழங்கபப்டும் பொருட்களை இலவசமாகவே விநியோகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். சிலரின் தான்தோன்றித் தனமான செயற்பாடுகள் மூலம் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நிவாரணங்கள் கிடைக்காமல் போகக் கூடிய வாய்ப்புகள் ஏற்பட்டால் அது எமது சமூத்துக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்," என்று தெரிவித்துள்ளார் என்கிறது அந்த நாளிதழ் செய்தி. எரிபொருள் நிரப்பு நிலையங்களில் போலீஸ் அதிரடிப் படை எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அருகில் ஏற்படும் அமைதியின்மையைக் கட்டுப்படுத்த போலீஸ் விசேட அதிரடிப்படையினர் (Special Task Force) ஈடுபடுத்தப்படவுள்ளதாக நியூஸ் ஃபர்ஸ்ட் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. அந்தச் செய்தியில், "அமைதியின்மையில் ஈடுபடுவோர் போலீஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பொது பாதுகாப்பு அமைச்சகத்தின் செயலாளர் தெரிவித்தார். இதேவேளை, போலீஸ் உத்தியோகத்தர்களுக்காக 4000 சைக்கிள்களை வழங்குவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES தற்போதைய எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், போலீஸாரின் கடமைகளை இலகுவாக்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளது. எரிபொருள் நெருக்கடி காரணமாக சில விசாரணைகள் மற்றும் களப்பணிகள் தடைபட்டுள்ளதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இத்தகைய நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையில், இந்தத் திட்டம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சு குறிப்பிட்டுள்ளது" என்று கூறப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/sri-lanka-62025665
  22. சென்னையில் 2 நாட்களில் ஐவர் மரணம்: பாதாள சாக்கடைக்குள் மனிதர்கள் இறக்கப்படுவது ஏன்? ஆ.விஜயானந்த் பிபிசி தமிழுக்காக 1 ஜூலை 2022 பட மூலாதாரம்,SUDHARAK படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் சென்னையில் கடந்த 2 நாட்களில் மட்டும் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்ட 5 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ள விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 'சென்னையைப் போலவே கோவை, மதுரை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற பிரச்னைகள் உள்ளன. வேலைவாய்ப்பின்மை காரணமாகத்தான் பலரும் இந்தத் தொழிலுக்கு வருகின்றனர். இவர்களைப் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை'' என்கின்றன தொழிலாளர் சங்கங்கள். தொடரும் மரணங்கள் சென்னை, மாதவரம் 3-ஆவது மண்டலத்துக்கு உள்பட்ட முத்து மாரியம்மன் கோவில் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டது. அதை சரிசெய்யும் பணியில் கடந்த 27ஆம் தேதி நெல்சன் (26), ரவிக்குமார் (40) ஆகியோர் ஈடுபட்டிருந்தனர். அப்போது கழிவுநீர்த் தொட்டியின் மூடியைத் திறந்தபோது விஷவாயு தாக்கி நெல்சன் என்பவர் உள்ளே விழுந்து விட்டார். அவரைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற ரவிக்குமாரும் விஷவாயுவால் தாக்கப்பட்டார். இதனால் அதிர்ச்சியடைந்த மெட்ரோ வாரிய ஊழியர்கள், தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு முயற்சியில் உயிரிழந்த நிலையில் நெல்சன் மீட்கப்பட்டார். மற்றொரு ஊழியரான ரவிக்குமாரை சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ரவிக்குமாரும் இறந்து விட்டார். இந்த விவகாரத்தில், மெட்ரோ வாரியத்தின் ஒப்பந்ததாரர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கழிவுநீர்த் தொட்டியில் விழுந்து இறந்துபோன நெல்சனின் குடும்பத்துக்கு 15 லட்ச ரூபாயை நிவாரணமாக முதலமைச்சர் அறிவித்துள்ளார். இந்த சம்பவத்தின் துயரம் அடங்குவதற்குள் சென்னை, பெருங்குடியில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யச் சென்ற இரண்டு பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாதாள சாக்கடை சுத்தம் செய்த யாரும் இறக்கவில்லை என இந்திய அரசு சொல்வது உண்மையா? தமிழ்நாட்டில் தீண்டாமை கொடுமை கடைபிடிக்கும் 445 ஊர்கள்: ஆர்.டி.ஐ மூலம் வெளியான தகவல் என்ன? “பறையா” என்ற ஆங்கில சொற்பிரயோகம் தொடங்கியது எப்படி? – ஒரு வரலாற்றுப் பார்வை பெருங்குடி அதிர்ச்சி பெருங்குடியில் உள்ள காமராஜர் நகரில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 20 அடி ஆழமுள்ள கழிவுநீர்த் தொட்டியில் கடந்த 29-ஆம் தேதியன்று இரவு பள்ளிக்கரணையைச் சேர்ந்த பெரியசாமி, தட்சிணாமூர்த்தி ஆகியோர் இறங்கி சுத்தம் செய்யும் பணியில் இறங்கினர். அப்போது விஷவாயு தாக்கியதில் இருவரும் மயங்கி விழுந்தனர். இதில் நிகழ்விடத்திலேயே பெரியசாமி இறந்துவிட்டார். மற்றோர் ஊழியரான தட்சிணாமூர்த்தி, மருத்துவ சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். இது தொடர்பாக துரைப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், மடிப்பாக்கத்திலும் ஆவடியிலும் கழிவுநீர்த் தொட்டியை சுத்தம் செய்யும் பணியின்போது இரண்டு பேர் உயிரிழந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னையைப் போலவே, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, கோவை எனப் பல மாவட்டங்களில் சாக்கடைக் குழிகளில் இறங்கி இறந்து போனவர்களின் எண்ணிக்கை என்பது அதிகரித்தபடியே உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையில் உள்ள சரவணம்பட்டி பகுதியில் தனியார் குடியிருப்பு ஒன்றில் செப்டிக் குழிக்குள் இறங்கிய மூன்று தூய்மைப் பணியாளர்கள் இறந்துபோன சம்பவம் நடந்தது. அதேபோல், ஸ்ரீபெரும்புதூரில் கழிவுநீர்த் தொட்டியைச் சுத்தம் செய்யும்போது வீட்டின் உரிமையாளர் உள்பட ஆறு பேர் இறந்த சம்பவமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 100 பேரில் 35 பேர் யார்? பட மூலாதாரம்,AFP படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் ''சாக்கடையைச் சுத்தம் செய்யும் பணியின்போது மரணமடையும் தொழிலாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்தப் பணியை பட்டியலின சமூகத்தினர் செய்வதாகத்தான் பொதுவான பார்வை இருக்கிறது. ஆனால், சென்னை மெட்ரோ குடிநீர் வாரியத்தில் பிற்படுத்தப்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த பலரும் இந்த வேலையைச் செய்து வருகின்றனர். இந்தப் பணி செய்கிறவர்களில் 100 பேரில் 35 பேர் பி.சி, எம்.பி.சியாக உள்ளனர். இடஒதுக்கீடு குறித்தெல்லாம் பேசினாலும் இந்தப் பணியைச் செய்யும் பிரிவினரை முறைப்படுத்தும் வேலைகள் நடக்கவில்லை. கடந்த சில நாட்களுக்கு முன் ஆவடியில் இறந்துபோனவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் தான். கிராமப்புறங்களில் வேலையில்லாமல் நகரத்தை நோக்கி வேலைக்காக வருகின்றனர். இவர்களுக்கு எந்தவித வேலையும் கிடைப்பதில்லை; இந்த வேலைதான் கிடைக்கிறது. அதனாலேயே செப்டிக் குழிகளைச் சுத்தப்படுத்துவதற்கு எந்தவித உபகரணமும் இல்லாமல் இவர்களை இறக்கிவிடுவதால் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரிக்கின்றன,'' என்கிறார், சி.பி.எம் கட்சியின் மதுரவாயல் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ பீமாராவ். இவர் சென்னை மெட்ரோ குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரிய தொழிலாளர்கள் சங்கத்தின் தலைவராக இருக்கிறார். இது ஒரு சமூகக் குற்றம் பிபிசி தமிழுக்காக சில தகவல்களை பீமாராவ் விவரித்தார். ''மலக் குழிக்குள் இறங்குவதால் ஏற்படும் மரணங்களைத் தடுக்கும் வகையில் நவீன இயந்திரங்களை மெட்ரோ குடிநீர் வாரியம் கொண்டு வந்தது. ஆனால், தனியார் குடியிருப்புப் பகுதிகளில் சாக்கடைகளில் அடைப்பு ஏற்பட்டால் சில தனியார் ஏஜென்சிகள், தொழிலாளர்களைத் தவறாகப் பயன்படுத்துகின்றன. இவ்வாறு குழிக்குள் இறங்கக் கூடாது என்று 2013-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அது சட்டமாகவும் உள்ளது. மனிதனை சாக்கடைக்குள் இறக்கி விட்டால் தண்டனை கொடுக்க வேண்டும் என்பது சட்டமாக இருந்தாலும் அது முறையாகக் கடைப்பிடிக்கப்படுவதில்லை',' என்கிறார். மாதவரத்தில் சாக்கடைக்குள் இறங்கிய நபர் இறந்தது தொடர்பாகப் பதிவான முதல் தகவல் அறிக்கையில் (FIR No: 433/2022) சட்டப்பிரிவு 337, 304(ஏ) ஆகிய பிரிவுகளில் தற்செயலாக நடந்த விபத்தாகத்தான் பதிவு செய்துள்ளதாகவும் பிரேதப் பரிசோதனை அறிக்கையில் 'மூச்சுத் திணறல்' எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், இதைக் கொலை வழக்காகப் பதிவு செய்யவில்லை எனக் குறிப்பிடும் பீமாராவ், ''இதுபோன்ற மரணங்களின்போது அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும்," என்றார். கோவை, மதுரை போன்ற வளர்ந்து வரக்கூடிய பெருநகரங்களில் இதுபோன்ற பிரச்னைகள் வருகின்றன. மாதவரத்தில் உயிரிழந்த நெல்சன் என்ற நபரின் வயது 26 தான். அவருக்கு சிறு வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளன. தற்போது அந்தக் குடும்பம் நிர்கதியாகிவிட்டது. மற்றோர் ஊழியரான ரவிக்குமாரின் குடும்பமும் தவிக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES/SUDHARAK OLWE படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கடந்த 29ஆம் தேதி சென்னை, வானுவம்பேட்டையில் கழிவுநீர் குழாயை சுத்தப்படுத்தும்போது ஒருவர் இறந்துவிட்டார். கடந்த 2 நாள்களில் மட்டும் சாக்கடை குழிக்குள் இறங்கிய வகையில் 5 பேர் இறந்துவிட்டனர். இது மனித சமூகமே வெட்கப்படக் கூடிய ஒன்று. விலங்குகளை வதைப்படுத்தினால் சட்டம் தண்டிக்கிறது. சக மனிதன் மரணிக்கும்போது அதை வேடிக்கை பார்ப்பது என்பது சமூகக் குற்றம். இதுபோன்ற விவகாரங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டாலும் யாரும் தண்டிக்கப்படுவது இல்லை. இந்த வழக்குகளை நீர்த்துப் போக வைக்கும் வேலைகளே நடக்கின்றன,'' என்கிறார். மேலும், ''சென்னையில் 50, 100 வருடங்களாக இதே வேலையை பல தலைமுறைகளாகப் பார்த்து வருகிறவர்களும் உள்ளனர். இதை நவீன சமூகத்தின் அவலமாகத்தான் பார்க்கிறோம். இது வேலைவாய்ப்போடு பின்னப்பட்டது என்பதால் அரசுதான் உரிய தீர்வைக் கொடுக்க வேண்டும்,'' என்கிறார். ''சாக்கடையைச் சுத்தம் செய்யும் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் ஊதியம் என்பது குறைவாக உள்ளது. நாளொன்றுக்கு 414 ரூபாய் சம்பளமாகக் கிடைக்கிறது. அதுவும் சரியான முறையில் கிடைப்பதில்லை. அதனால் பணிநேரம் போக வேறு எங்காவது வேலை கிடைத்தால் அதை ஏற்றுக் கொண்டு செல்கிறார்கள். அதைத் தவறு எனக் கூறினாலும் அவர்கள் கண்டுகொள்வதில்லை. போதிய வருமானம் இல்லாததால் மது அருந்திவிட்டு வேலைக்குச் செல்கின்றனர். அவர்களை அறிவுறுத்தினாலும் எங்களைத் தவறாக நினைக்கும் போக்கு உள்ளது,'' என்கிறார், சென்னை மாநகராட்சி செங்கொடி சங்கத்தின் பொதுச் செயலாளர் சீனிவாசலு. மெட்ரோ குடிநீர் வாரியம் சொல்வது என்ன? இதுதொடர்பாக, சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவரை பிபிசி தமிழுக்காகத் தொடர்பு கொண்டோம். பெயர் குறிப்பிட மறுத்துப் பேசிய அந்த அதிகாரி, '' மாதவரத்தில் மெட்ரோ குடிநீர் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட பணியின்போது ஒருவர் இறந்துபோனார். அங்கு இறந்த நபருக்கு 15 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. அங்கு பணிகளை மேற்கொண்ட ஒப்பந்ததாரர் மீது காவல்துறையில் புகார் கொடுக்கப்பட்டு, அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. தற்போது அந்த ஒப்பந்ததாரரைக் கைது செய்துவிட்டனர். மாதவரத்தில் கழிவுநீர்த் தொட்டிக்குள் இறங்கி யாரும் வேலை பார்க்கவில்லை. ஜெட் ராடார் இயந்திரத்தை வைத்துப் பணிகளைத் தொடங்குவதற்கு முன் எட்டிப் பார்த்தபோது அந்த நபர் தவறி விழுந்துவிட்டார். அந்த நபரைக் காப்பாற்றச் சென்ற நபரும் தவறி விழுந்து இறந்துவிட்டார்,'' என்கிறார். அமெரிக்காவில் சாதிப் பாகுபாடு: தேன்மொழி உரையை ரத்து செய்த கூகுள் - பதவி விலகிய அலுவலர் கும்பகோணம் காதல் தம்பதி ஆணவக் கொலை செய்யப்பட்டனரா? - பிபிசி கள ஆய்வில் புதிய தகவல்கள் பிர்ஸா முண்டா: பழங்குடிகளால் கடவுளாக போற்றப்படும் இவர் யார்? தொடர்ந்து பேசியவர், '' உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மனிதன் இறங்கும் குழியாக (Man hole) இருந்ததை இயந்திரக் குழி (Machine hole) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிட்டது. இப்போது யாரும் குழிக்குள் இறங்கி வேலை பார்ப்பதில்லை. அவ்வாறு இயந்திரம் பயன்படுத்தும்போது போதிய உபகரணங்களை அணிந்து கொண்டு வேலை பார்க்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளோம். சென்னைக்குள் மனிதர்கள் யாரும் சாக்கடைக்குள் இறங்கி வேலை பார்ப்பதில்லை. சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகளில் பாதாள சாக்கடைகள் அமைக்கப்படவில்லை. இதுபோன்ற இடங்களில் மலக் குழிகளை சுத்தப்படுத்துவதற்கு முன் அதன் மூடியைத் திறந்துவிட்டு 15 நிமிடம் காத்திருக்க வேண்டும் என அறிவுரைகளை வழங்கியுள்ளோம். அதற்காகப் பயிற்சிகளும் வழங்கப்படுகின்றன. சில தனியார் ஏஜென்சிகள் மூலமாக சுத்தப்படுத்தும் பணிக்கு ஊழியர்களைப் பயன்படுத்துகின்றனர். இதனால்தான் பிரச்னை ஏற்படுகிறது,'' என்கிறார். ''போதிய சம்பளம் இல்லாததும் ஒரு காரணம் என்கிறார்களே?'' என்றோம். ''சம்பளத்தைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு வேலைக்கும் அடிப்படை சம்பளத்தை மாவட்ட ஆட்சியர் அலுவலங்கள் தான் நிர்ணயிக்கின்றன. அதன்படியே கொடுக்கப்படுகிறது. ஊழியர்களுக்குத் தேவையான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. மாதவரத்தில் நடந்த சம்பவம் என்பது ஒரு விபத்து. தவிர, பாதாள சாக்கடை குழிக்குள் யாரும் இறங்குவதில்லை. அதைத் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம்,'' என்கிறார். https://www.bbc.com/tamil/india-62002014
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.