Everything posted by ஏராளன்
-
கோலூன்றிப் பாய்தலில் டுப்லான்டிஸ் புதிய உலக சாதனை
18 SEP, 2023 | 11:57 AM (நெவில் அன்தனி) ஐக்கிய அமெரிக்காவின் இயூஜின், ஒரிகொன் ஹேவோட் பீல்ட் விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (17) நடைபெற்ற வொண்டா டயமண்ட் லீக் இறுதிச்சுற்றின் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் 6.23 மீற்றர் உயரம் தாவி சுவீடன் வீரர் ஆர்மண்ட் டுப்லான்டிஸ் உலக சாதனை நிலைநாட்டினார். ஒரு வருடத்திற்கு முன்னர் இதே மைதானத்தில் தனது முதலாவது சிரேஷ்ட உலக வெற்றியை மொண்டோ என அழைக்கப்படும் டுப்லான்டிஸ் ஈட்டியிருந்தார். 6.23 மீற்றர் உயரத்தை ஒரே தடவையில் தாவிய டுப்லான்டிஸ், தனது சொந்த உலக சாதனையை 7ஆவது தடவையாக புதுப்பித்து வரலாறு படைத்தார். இந்தப் போட்டியில் முதலாவது முயற்சில் 5.62 மீற்றர் உயரத்தைத் தாவிய டுப்லான்டிஸ் அதன் பின்னர், 5.72 மீற்றர், 5.82 மீற்றர் ஆகிய உயரங்களை இலகுவாக தாவி முடித்தார். 5.92 மீற்றர் உயரத்திற்கு விடுகை கொடுக்க தீர்மானித்த டுப்லான்டிஸ் 6.02 மீற்றர் உயரத்தை சிரமம் இன்றி தாவி அப் போட்டியில் முதலாம் இடத்தை உறுதி செய்தார். இது அவர் தாவிய 73ஆவது 6 மீற்றரைவிட உயரமான பெறுதியாகும். அத்துடன் அவர் நின்றுவிடவில்லை. கோலூன்றிப் பாய்தலுக்கான குறுக்குக் கம்பம் 6.23 மீற்றர் உயரத்தில் வைக்கப்பட்டது. க்ளமொன்ட் ஃபெராண்ட் அரங்கில் கடந்த பெப்ரவரி மாதம் டுப்லான்டிஸ் நிலைநாட்டியிருந்த உலக சாதனையை விட இது ஒரு சென்றிமீற்றர் கூடியதாகும். ஆனால் அந்த உயரத்தையும் டுப்லான்டிஸ் தாவி இரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தினார். இரசிகர்களின் ஆரவாரங்களுக்கு மத்தியில் கோலுடன் ஓடிய டுப்லான்டிஸ், கிடங்கில் கோலை ஊன்றி உயரே சென்று தாவிய போது 6.23 மீற்றர் உயரத்தில் இருந்த குறுக்குக் கம்பம் ஆடாமல் அசையாம் அப்படியே இருந்தது. அதன் மூலம் டுப்லான்டிஸ் தனது உலக சாதனையை 7ஆவது தடவையாக புதுப்பித்துக்கொண்டார். டுப்லான்டிஸின் உலக சாதனை முன்னேற்றம் https://www.virakesari.lk/article/164825
-
சூரியனை ஆய்வு செய்ய நாளை விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1
ஆதித்யா எல் -01 விண்கலம் தொடர்பில் இஸ்ரோவின் அறிவிப்பு! சூரியனை ஆய்வு செய்வதற்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல் -01 விண்கலம், சூரியனின் எல் – 01 புள்ளியை நோக்கிய பயணத்தை இன்று ஆரம்பித்துள்ளதாக இந்திய விண்வெளி ஆய்வு மையமான இஸ்ரோ அறிவித்துள்ளது. இன்று அதிகாலை 2 மணியளவில் விண்கலத்தின் உயரம் 5வது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ குறிப்பிட்டுள்ளது. சூரியனை ஆய்வு செய்வதற்காக கடந்த 2ம் திகதி பி.எஸ்.எல்.வி. மூலம் ஆதித்யா எல்-1 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. புவி சுற்றுப்பாதையில் தமது பயணத்தை தொடங்கிய விண்கலத்தின் உயரம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டிருந்தது. "இஸ்ரோ ஒரு பாதையில் உள்ள ஒரு பொருளை மற்றொரு வான உடல் அல்லது விண்வெளியில் உள்ள இடத்திற்கு வெற்றிகரமாக மாற்றுவது இது தொடர்ந்து ஐந்தாவது முறையாகும்” என்று இஸ்ரோ அறிவித்துள்ளது. https://thinakkural.lk/article/273615
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
போருக்கு இடையில் மனிதாபிமானம்: உக்ரைன் அகதிகளுக்கு உதவும் ரஷ்யர்கள் 2022 பெப்ரவரியில் ரஷ்யா, தனது அண்டை நாடான உக்ரைனை ஆக்ரமித்தது. ரஷ்யாவை எதிர்த்து அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன், உக்ரைன் கடுமையாக போரிட்டு வருகிறது. ரஷ்யாவில் இப்போர் குறித்து ரஷ்யாவையோ, அதிபர் விளாடிமிர் புட்டினையோ விமர்சிப்பவர்கள் மீது ரஷ்ய அரசாங்கம் கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனால் அரசுக்கு தெரியாமல், உக்ரைன் அகதிகளுக்கு ரஷ்யாவை சேர்ந்த பலர் மனிதாபிமான உதவிகளை செய்து வருகின்றனர். இராணுவ தாக்குதல் காரணமாக ரஷ்யாவிற்கோ அல்லது ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள உக்ரைனின் பிராந்தியங்களுக்கோ, உக்ரைனின் பிற பகுதிகளிலிருந்து மக்கள் அகதிகளாக தினம் வந்திறங்குகின்றனர். தங்களது வீடு, உடைமைகள் மற்றும் செல்வம் அனைத்தையும் இழந்து அகதிகளாக எதிர்காலம் குறித்த அச்சத்துடன் வந்திறங்கும் உக்ரைனியர்களுக்கு ரஷ்ய மக்கள் தன்னார்வலர்களாக உதவி செய்து வருகின்றனர். “இந்த அகதிகளுக்காக இணையவழியாக நன்கொடை பெற்று உடைகள், மருந்துகள் மற்றும் உணவு வசதி போன்றவற்றை செய்து தருகிறேன். ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகருக்கு ரயிலில் வருபவர்களுக்கு வேலை வாய்ப்பு, தங்குமிடம் போன்றவற்றையும் ஏற்பாடு செய்கிறேன். என்னை போல் ஆயிரக்கணக்கான ரஷ்யர்கள் உதவி செய்கிறார்கள். பாதுகாப்பு காரணங்களால் இது குறித்து நாங்கள் வெளியில் பேசுவதில்லை,” என கலினா அர்ட்யோமென்கோ (58) எனும் ரஷ்ய பெண்மணி தெரிவித்தார். “எங்களை விட மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டவர்களை நாங்கள் வெறுமனே வேடிக்கை பார்த்து கொண்டு நிற்க முடியாது. நாங்கள் அவர்களுக்கு உதவியே ஆக வேண்டும்” என ல்யுட்மில்லா (43) எனும் மற்றொரு ரஷ்ய பெண் தெரிவித்துள்ளார். 2022 டிசம்பர் மாதமே ரஷ்யாவில் உக்ரைன் நாட்டு அகதிகள் 10 இலட்சத்திற்கும் மேல் உள்ளனர் என ஐநா சபை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/273523
-
சந்திரயான்-3: நாசா நிலவில் கால் பதித்துவிட்ட பிறகு ஆளில்லா ரோவர்களை அனுப்புவதால் என்ன பயன்?
நிலவுக்கு விண்கலத்தை அனுப்ப இஸ்ரோவுக்கு உதவியவர்கள் ஊதியம் கிடைக்காமல் டீ விற்கும் அவலம் பட மூலாதாரம்,ANAND DUTT படக்குறிப்பு, பொதுத் துறை நிறுவனத்தில் பணியாற்றுபவர்களுக்கு 18 மாதங்களாக ஊதியம் அளிக்கப்படாத காரணத்தால் அவர்கள் இட்லி கடை நடத்தும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். கட்டுரை தகவல் எழுதியவர், ஆனந்த் தத் பதவி, பிபிசி நியூஸ் 45 நிமிடங்களுக்கு முன்னர் சந்திரயான் -3 விண்கலம் நிலவின் தென் துருவத்தின் மேற்பரப்பில் மெதுவாக தரையிறங்கி நிலவின் தென்துருவத்தில் ஒரு விண்கலத்தை வெற்றிகரமாகத் தரையிறக்கிய முதல் நாடு இந்தியா என்ற சிறப்பை பெற்றது. சந்திரயான் - 3 நிலவில் தரையிறங்கிய நேரத்தில், பிரதமர் நரேந்திர மோதி தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்பதற்காக அங்கு சென்றிருந்தார். விண்கலம் நிலவில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய போது, ஜோகன்னஸ்பர்க்கிலிருந்தே அவர் இஸ்ரோ (ISRO) விஞ்ஞானிகள் மற்றும் நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அதே நேரத்தில் பிரதமர் மோதி உரையாற்றிய போது, சந்திரயான் விண்கலத்துக்கான ஏவுதளத்தை உருவாக்கிய ஊழியர்கள், தங்களுக்கு 18 மாதமாக நிலுவையில் உள்ள ஊதியம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ராஞ்சியில் இருக்கும் துர்வாவில் உள்ள ஹெவி இன்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட் (எச்இசி) நிறுவனத்தில் பணிபுரியும் 2,800 ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கூறுகின்றனர். எச்இசி (HEC) ஒரு மத்திய பொதுத்துறை நிறுவனமாகும் (CPSU). 810 டன் ஏவுதளத்தை உருவாக்கியதைத் தவிர, எச்இசி சந்திரயானுக்கான மடிப்பு தளம், நெகிழ் கதவு உள்ளிட்டவற்றையும் உருவாக்கியுள்ளது. மேலும், இஸ்ரோவுக்காக மற்றொரு ஏவுதளத்தையும் ஹெச்இசி தற்போது உருவாக்கி வருகிறது. பட மூலாதாரம்,ANAND DUTT படக்குறிப்பு, 2,800 ஊழியர்களுக்கு கடந்த 18 மாதங்களாக சம்பளம் கிடைக்கவில்லை என்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஊழியர்கள் கூறுகின்றனர். ஒருவர் டீ விற்கிறார், மற்றொருவர் இட்லி விற்கிறார் ஹெச்இசியில் தொழில்நுட்ப வல்லுனராகப் பணியாற்றும் தீபக் குமார் உபராரியா கடந்த சில நாட்களாக இட்லி விற்பனை செய்து வருகிறார். இவரது கடை ராஞ்சியில் இருக்கும் துர்வா பகுதியில் உள்ள பழைய சட்ட மன்ற கட்டடத்துக்கு நேர் எதிரில் உள்ளது. காலையில் இட்லி விற்றுவிட்டு மதியம் அலுவலகம் செல்கிறார். மாலையில் மீண்டும் இட்லிகளை விற்றுவிட்டு வீட்டுக்குச் செல்கிறார். தீபக் குமார் உபராரியா பிபிசியிடம் பேசுகையில், "முதலில் நான் கிரெடிட் கார்டு மூலம் எனது வீட்டை நிர்வகித்து வந்தேன். அதில் இருந்து 2 லட்சம் ரூபாய் கடன் அளவை முழுமையாகப் பெற்ற பின், அதைத் திரும்பக் கட்டுவது இயலாமல் போனது. இதனால் நான் கடனைத் திருப்பிச் செலுத்தாதவனாக வங்கியால் அறிவிக்கப்பட்டேன். அதன்பிறகு, உறவினர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு என் வீட்டை நிர்வகிக்கத் தொடங்கினேன்," என்றார். "இதுவரை நாலு லட்சம் ரூபாய் கடன் வாங்கி இருக்கிறேன். வாங்கிய கடனை திருப்பித் தராததால், அதன் பின் எனக்கு யாரும் கடன் கொடுக்கவில்லை. இதன் காரணமாக, மனைவியின் நகைகளை அடமானம் வைத்து சில நாட்கள் வீட்டை நிர்வகித்தேன்." என்றார். தனது குடும்பத்தின் ஆதரவற்ற நிலையை விளக்கும் தீபக், "நான் பசியால் உயிர் விடுவதைத் தவிற வேறு வழியில்லை என்ற நிலைக்கு வந்த போது, சிறிய அளவில் ஒரு இட்லி கடையைத் திறந்தேன். என் மனைவிக்கு நன்றாக இட்லி செய்யத் தெரியும். இந்தக் கடையில் நான் தினமும் 300 முதல் 400 ரூபாய் வரை இட்லிகளை விற்று வருகிறேன். இதில் சில சமயம் ரூ 50 அல்லது ரூ. 100 லாபம் கிடைக்கும். இதை வைத்துக்கொண்டு எனது குடும்பத்தை நிர்வகித்து வருகிறேன்," என்றார். பட மூலாதாரம்,ANAND DUTT படக்குறிப்பு, அலுவலகம் செல்லும் முன்பும், அலுவலகத்தில் இருந்து வந்த பின்பும் சிறுசிறு தொழில்களைச் செய்து பணியாளர்கள் குடும்பத்தை நிர்வகித்து வருகின்றனர். தீபக் குமார் உபராரியா மத்திய பிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தைச் சேர்ந்தவர். 2012 ஆம் ஆண்டில், தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.25,000 சம்பளத்தில் வேலை செய்துகொண்டிருந்த போது, அந்த வேலையை விட்டுவிட்டு எச்இசி-யில் ரூ.8,000 சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். அரசு நிறுவனம் என்பதால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் அவர் அவ்வாறு செய்திருக்கிறார். ஆனால் இப்போது எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. தொடர்ந்து பேசிய அவர், "எனக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இருவரும் பள்ளிக்குச் செல்கிறார்கள். இந்த வருடம் அவர்களுடைய கல்விக் கட்டணத்தை என்னால் இன்னும் கட்ட முடியவில்லை. பள்ளிகளில் இருந்து தினமும் நோட்டீஸ் அனுப்புகின்றனர். குழந்தைகள் படிக்கும் வகுப்பில் கூட எச்இசி-யில் பணியாற்றும் பெற்றோரின் குழந்தைகள் யார் என்று ஆசிரியர் கேட்டு, அவர்களை எழுந்து நிற்கச் சொல்கிறார்," என்றார். "இதற்குப் பிறகு அவர்கள் அவமானப்படுத்தப்படுகிறார்கள். என் மகள்கள் இருவரும் அழுதுகொண்டு வீட்டிற்கு வருகிறார்கள். அவர்கள் அழுவதைப் பார்க்கும் போது, என் இதயம் உடைகிறது. ஆனால் நான் அவர்கள் முன் அழுவதில்லை," என்று அவர் உருக்கமாகக் கூறினார். இதைச் சொல்லும் போதே அவருடைய கண்களில் கண்ணீர் வடிந்தது. இது தீபக் குமார் உபராரியாவின் நிலை மட்டுமல்ல. அவரைப் போலவே, எச்இசியுடன் தொடர்புடைய வேறு சிலரும் இதேபோன்ற வேலையைச் செய்து தங்கள் வாழ்க்கையை ஓட்டிவருகின்றனர். உதாரணமாக, மதுர் குமார் என்பவரை எடுத்துக்கொண்டால், அவர் மோமோஸ் விற்பனை செய்துவருகிறார். பிரசன்னா என்பவர் டீ விற்கிறார். மிதிலேஷ் குமார் ஒளிப்பதிவு செய்கிறார். சுபாஷ் குமார் கார் வாங்குவதற்காக வங்கியில் கடன் பெற்று திரும்பச் செலுத்தாததால், கடன் செலுத்தாதவர் என வங்கி நிர்வாகம் அறிவித்துள்ளது. சஞ்சய் டிர்கி என்பவருக்கு ரூ.6 லட்சம் கடன் சுமை ஏற்பட்டுள்ளது. பணம் இல்லாத காரணத்தாலும், உரிய சிகிச்சை கிடைக்காததாலும் சசிகுமார் என்பவரின் தாய் உயிரிழந்தார். இவர்களைப் போல் மொத்தம் 2,800 பணியாளர்கள் உள்ளனர். ஒரு குடும்பத்தில் சராசரியாக ஐந்து பேரை எடுத்துக் கொண்டாலும், 14,000க்கும் மேற்பட்டோர் நேரடியாக இந்த துயர நிலையில் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர். பட மூலாதாரம்,ANAND DUTT படக்குறிப்பு, அரசு நிறுவனம் என்பதால் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும் என நம்பி வேலைக்குச் சேர்ந்தவர்கள் தற்போது பெரும் பொருளாதார சிக்கலில் சிக்கித் தவிக்கின்றனர். போராட்டக்காரர்களுக்கு 'இந்தியா' கூட்டணியின் ஆதரவு செப்டம்பர் 14 அன்று, 'இந்தியா' கூட்டணி தலைவர்கள் எச்இசி பணியாளர்களின் துயரம் தொடர்பாக ராஜ்பவன் முன் போராட்டம் நடத்தினர். இது குறித்து மாநில காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் தாக்கூர் கூறுகையில், “எச்இசி என்பது பண்டிட் ஜவஹர்லால் நேரு உருவாக்கிய ஒரு நிறுவனம். அந்த நிறுவனம் இது போன்ற ஒரு சூழ்நிலையில் தத்தளிக்கிறது என்பதைக் காட்டிலும், அதைக் காப்பாற்றுவது நமது பொறுப்பு. வியர்வை காய்வதற்குள் தொழிலாளர்களுக்கு சம்பளம் கிடைக்க வேண்டும் என்று போராடி வருகிறோம்," என்றார். காங்கிரஸ் மூத்த தலைவர் சுபோத் காந்த் சஹாய் கூறுகையில், “எச்இசி ஊழியர்களின் குழந்தைகள் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். கடைக்காரர் அவர்களுக்கு ரேஷன் பொருட்களைத் தருவதில்லை. மத்திய அரசின் கொள்கை எச்இசியின் கழுத்தை நெரித்துவிட்டது. அதை தனியார் முதலாளிகளுக்கு வழங்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இன்று, நிதி ஆயோக் 48 பொதுத்துறை நிறுவனங்களின் பட்டியலை விற்பனைக்கு மத்திய அரசிடம் சமர்ப்பித்துள்ளது," என்றார். ஜார்கண்ட் முக்தி மோர்ச்சாவின் மத்திய பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா, “நாட்டை வடிவமைக்க உழைத்த தாய் தான் இந்த (எச்இசி) நிறுவனம். அதை தனியார் முதலாளிகளிடம் ஒப்படைக்க மோதி அரசு முடிவு செய்துள்ளது. இந்நிறுவனத்தைக் காப்பாற்றப் போராடுகிறோம்," என்றார். 'எனக்கு ஏன் சம்பளம் கிடைக்கவில்லை?' மாநிலங்களவை உறுப்பினர் பரிமல் நத்வானி கடந்த மழைக்கால கூட்டத்தொடரில் (ஆகஸ்ட், 2023) கனரக தொழில்துறை அமைச்சகத்திடம் எச்இசி தொடர்பாக சில கேள்விகளைக் கேட்டிருந்தார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, எச்இசி என்பது நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட ஒரு தனி மற்றும் சுதந்திரமான நிறுவனம் என்று அரசு கூறியது. அதன் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க அதன் சொந்த வளங்களை உருவாக்க வேண்டியுள்ளது என்பதுடன் தொடர்ச்சியான நஷ்டங்களால் பெரும் கடன்களை எதிர்கொள்கிறது என்றும் அரசு கூறியது. இந்த பதிலில், கடந்த ஐந்து ஆண்டுகளாக எச்இசி தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன்படி, 2018-19ஆம் ஆண்டில் ரூ.93.67 கோடியும், 2019-20ஆம் ஆண்டில் ரூ.405.37 கோடியும், 2020-21ஆம் ஆண்டில் ரூ.175.78 கோடியும், 2021-22ஆம் ஆண்டில் ரூ.256.07 கோடியும், 2022-23 ஆம் ஆண்டில் ரூ.283.58 கோடியும் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக அரசு கூறியுள்ளது. அதாவது, கடந்த ஐந்து ஆண்டுகளில் விற்றுமுதல் ரூ.356.21 கோடியில் இருந்து ரூ.87.52 கோடியாக குறைந்துள்ளது. 2018-19 ஆம் ஆண்டில், இந்நிறுவனம் அதன் மொத்த திறனில் 16 சதவீதத்தைப் பயன்படுத்தியிருக்கிறது. அதேசமயம் 2022-23 ஆம் ஆண்டுக்கான தணிக்கை செய்யப்படாத அறிக்கையின்படி, தற்போது இந்நிறுவனம் அதன் மொத்த திறனில் 1.39 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்தியிருக்கிறது. ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்கு மட்டும் எச்இசிக்கு உடனடியாக சுமார் ரூ.153 கோடி தேவைப்படுகிறது. எச்இசி அதிகாரிகள் சங்கத்திடம் இருந்து பெறப்பட்ட தகவலின்படி, இந்நிறுவனத்தின் மொத்த கடன் சுமை சுமார் ரூ.2,000 கோடியாக உள்ளது. பட மூலாதாரம்,ANAND DUTT படக்குறிப்பு, நவீனமயமாக்கப்படாததாலேயே எச்இசி நிறுவனம் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குவதாக அங்கு பணியாற்றுபவர்கள் தெரிவிக்கின்றனர். எல்லாவற்றிற்கும் மேலாக, ஏன் எச்இசி தொடர்ந்து நஷ்டத்தில் இயங்குகிறது? எச்இசி அதிகாரிகள் சங்கத் தலைவர் பிரேம்சங்கர் பாஸ்வான் கூறுகையில், கடந்த நான்கு ஆண்டுகளாக நிரந்தர நிர்வாக இயக்குனர் (சிஎம்டி) நியமிக்கப்படவில்லை என்றும், தயாரிப்பு துறைக்கான இயக்குனர் நியமிக்கப்படவில்லை என்றும், இயந்திரங்கள் நவீனப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவித்தார். அவர் தொடர்ந்து பேசிய போது, ''நிரந்தர தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (சி.எம்.டி.,) இல்லாததால், கோப்புகள் பல மாதங்களாக சுற்றி வருகின்றன. தற்போதைய எங்கள் பொறுப்பு நிர்வாக இயக்குனர் நளின் சிங்கால் முதன்மையாக பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL) இன் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஆவார். அவர் எச்இசிக்கு கடந்த நான்கு ஆண்டுகளில் நான்கு முறை மட்டுமே வந்துள்ளார். பிறகு எப்படி நிர்வாகம் சரியாக நடக்கும்?" எனக் கேட்கிறார். பிரேம்சங்கர் தொடர்ந்து பேசிய போது, “ஹெவி மெஷின் பில்டிங் பிளாண்ட் (HMBP), ஹெவி மெஷின் டூல்ஸ் பிளாண்ட் (HMTP), ஃபவுண்டரி ஃபோர்ஜ் ஆலை (FFP) மற்றும் திட்டப் பிரிவு ஆகிய மூன்று ஆலைகள் உள்ளன. உற்பத்தித் துறை இயக்குனர்களாக இருப்பவர்கள் மூன்று ஆலைகளில் பெறப்பட்ட ஆர்டர்கள் மற்றும் வேலைகளை ஒருங்கிணைக்கிறார்கள்," என்றார். அதாவது இயக்குனர் மட்டத்தில் செய்ய வேண்டிய வேலைகளுக்கு நிர்வாக இயக்குனரிடம் போக வேண்டிய நிலை காணப்படுகிறது. இதுவே உற்பத்தி பாதிக்கப்படுவதற்கு முக்கிய காரணம் என்கிறார். பட மூலாதாரம்,ANAND DUTT படக்குறிப்பு, புதிய தொழில்நுட்பத்தின்படி தயாரிப்பைத் தொடங்கினால் தான் லாபகரமாகச் செயல்படமுடியும் என எச்இசி மஸ்தூர் யூனியனின் பொதுச் செயலாளர் ராமசங்கர் பிரசாத் கூறுகிறார். நவீன இயந்திரங்கள் இல்லாததே பெரும் பிரச்னை பிரேம்சங்கர் மேலும் பேசிய போது, “எச்இசி நிறுவனத்தில் 6,000 டன் ஹைட்ராலிக் பிரஸ் இருக்கிறது. ஆனால், அது மோசமான நிலையில் உள்ளது. இந்த பிரஸ்ஸில் தான் பாதுகாப்புத் துறைக்கான உபகரணங்கள் தயாரிக்கப்படுகின்றன. பாபா அணு ஆராய்ச்சி மையத்திடம் (BARC) தற்போது அணு உலைக்கான ஆர்டருக்கு 300 கோடி ரூபாய் மதிப்பிலான ஆர்டரைப் பெற்றுள்ளது. இப்போது இந்த ஆர்டரை தனியார் நிறுவனமான எல் அண்ட் டி நிறுவனத்திடம் கொடுத்துள்ளோம். எங்கள் ஹைட்ராலிக் பிரஸ் நன்றாக இருந்திருந்தால், எல் அண்ட் டிக்கு ஆர்டரை வழங்க வேண்டிய அவசியமில்லை, நாங்கள் லாபகரமாக இருந்திருப்போம்," என்றார். எச்இசி மஸ்தூர் யூனியனின் பொதுச் செயலாளர் ராமசங்கர் பிரசாத், இதற்குப் பின்னால் உள்ள மற்றொரு காரணத்தைச் சுட்டிக்காட்டினார், “நிறுவனம் மிகக் குறைவான மொத்த ஆர்டர்களைக் கொண்டுள்ளது. உதாரணமாக, ஒரு ஏவுதளத்தை உருவாக்க வேண்டும் என்றால், ஒன்று மட்டுமே கட்டப்படும். அதேசமயம் ஒன்றுக்கு மேல் சம்பாதித்தால் லாபம் அதிகமாக இருக்கும். ஏனெனில் அதே அளவு பணத்திற்கு ஒரு உபகரணத்தை தயார் செய்யலாம். சற்றே அதிக செலவில் அதிக உபகரணங்களை தயார் செய்யலாம்," என்றார். “ஒரு சாதனத்திற்காக நாம் தயாரிக்கும் அச்சு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பயன்படுத்தப்படுகிறது. அந்த நேரத்தில் அந்த அச்சும் கெட்டுவிடும். இதைத் தவிர, ஐம்பது வருடங்களாக வேலை செய்யும் அதே இயந்திரத்தில் வேலை செய்ய முடியுமா? இல்லை என்பதே பதில். புதிய தொழில்நுட்பத்தின்படி தயாரிப்பைத் தொடங்கினால் தான் லாபகரமாகச் செயல்படமுடியும்,” என்றார். பட மூலாதாரம்,ANI படக்குறிப்பு, சந்திரயான் விண்கலங்களை நிலவுக்கு அனுப்பியதில் எச்இசி நிறுவனத்தின் உதவி பெரும் அளவில் பயன் அளித்துள்ளது. ராமசங்கர் பிரசாத் தொடர்ந்து பேசிய போது, “31 டிசம்பர் 1958 இல் நிறுவப்பட்ட நேரத்தில், சோவியத் ரஷ்யா மற்றும் செக்கோஸ்லோவாக்கியாவின் ஒத்துழைப்புடன் எச்இசி தயாரிக்கப்பட்டது. அப்போது நிறுவப்பட்ட இயந்திரங்கள் இன்று வரை மாற்றப்படவில்லை என்பது மட்டுமல்லாமல், மாறிவரும் தொழில்நுட்பத்திற்கு ஏற்ப தயாரிக்கப்படவில்லை,” என்றார். அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள், கனரக தொழில்துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டேவை 2023 பிப்ரவரி 7ஆம் தேதியும், மீண்டும் ஜூன் 26ஆம் தேதியும் சந்தித்தனர். இந்த சந்திப்பின் போது, நிறுவனத்தை மீண்டும் லாபநோக்கில் செயல்படும் விதமாகக் கொண்டு வர நிரந்தர தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் இயக்குனர்களை நியமிப்பது மட்டுமின்றி கூடுதலாக 3000 கோடி ரூபாய் மானியமாக அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என மத்திய அமைச்சர் உறுதி அளித்ததாக சங்கம் தெரிவித்துள்ளது. பிரதமர் மோதி அப்பதவிக்கு வருவதற்கு முன், எச்இசி தொழிற்சாலையை விரிவுபடுத்த வேண்டும் என்று கடுமையாக வாதிட்டார். 2013ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது ராஞ்சியில் உள்ள பிரபாத் தாரா மைதானத்தில் பிரதமர் மோதி பேசுகையில், “ஒரு காலத்தில் பெருமையுடன் இருந்த எச்இசி தொழிற்சாலை இப்போது அந்த நிலையில் இல்லை," எனப்பேசினார். அவர் தனது உரையில், “இந்தியாவில் உருவாகும் பொதுத்துறை நிறுவனங்கள் விரைவில் தடுமாறி வீழ்ச்சியடைகின்றன. ஒன்று அதை விற்க வேண்டிய அவசியம் உள்ளது. அல்லது அதை மூடவேண்டிய தேவை ஏற்படுகிறது. இது போன்ற நிலையில், அந்நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் வேலையை இழக்கும் நிலை ஏற்படுகிறது," என்றார். பட மூலாதாரம்,ANAND DUTT படக்குறிப்பு, நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட பல பணிகள் நிரப்பப்படாமல் இருப்பது நிறுவனத்தின் முன்னேற்றத்தில் பெரும் பின்னடைவை ஏற்படுத்துவதாக எச்இசி பணியாளர்கள் கூறுகின்றனர். 'சந்திரயான்-3யில் எச்இசி பங்களிப்பு இல்லை' ராஜ்யசபா எம்பி பரிமல் நத்வானி, சந்திரயான்-3க்கான ஏவுதளம் மற்றும் பிற உபகரணங்களை உருவாக்க எச்இசிக்கு அங்கீகாரம் உள்ளதா என்றும் மத்திய அரசிடம் கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த கனரக தொழில்துறை இணையமைச்சர் கிருஷ்ணபால் குர்ஜார், சந்திரயான்-3க்கான எந்த உபகரணத்தையும் தயாரிக்க எச்இசிக்கு அதிகாரம் இல்லை என்று கூறினார். இருப்பினும், 2003 மற்றும் 2010 ஆம் ஆண்டுகளுக்கு இடையில், எச்இசி மொபைல் லாஞ்சிங் பெடஸ்டல், ஹாமர் ஹெட் டவர் கிரேன், ஈஓடி கிரேன், ஃபோல்டிங் கம் ரிபொஸிஸனபிள் பிளாட்ஃபார்ம், ஹொரிசாண்டல் ஸ்லைடிங் டோர்ஸ் போன்றவற்றை இஸ்ரோவுக்கு வழங்கியதாக அவர் தனது பதிலில் ஒப்புக்கொண்டார். எச்இசியில் மேலாளராகப் பணிபுரியும் புரேந்து தத் மிஸ்ரா கூறுகையில், “சந்திரயான்-3க்கு தனி ஏவுதளம் எதுவும் உருவாக்கப்படாததால் தொழில்நுட்ப ரீதியாக மத்திய அரசு சரியாக இருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால், எங்களைத் தவிர, இந்தியாவில் வேறு எந்த நிறுவனமும் ஏவுதளங்களை உருவாக்கவில்லை," என்றார். "வெளிப்படையாக, நாங்கள் முன்பு தயாரித்து இஸ்ரோவுக்கு வழங்கிய ஏவுதளம் மற்றும் பிற உபகரணங்கள் சந்திரயான் -2 மற்றும் சந்திரயான் -3 ஐ விண்ணில் செலுத்த பயன்படுத்தப்பட்டுள்ளன. இத்தகைய சூழ்நிலையில், இந்த பணியில் எச்இசியின் பங்களிப்பு இல்லை என்று அரசாங்கம் கூறினால், அது எப்படி?" எனக்கேட்கிறார் அவர். இந்த நேரத்தில், விண்கலங்கள் ஏவப்பட்ட போது, எச்இசியின் இரண்டு பொறியாளர்ள் இஸ்ரோவுக்கு எச்இசி வழங்கிய உபகரணங்களை நிறுவச் சென்றனர் என்றும் அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,ANAND DUTT படக்குறிப்பு, அரசு உதவினால் மட்டுமே எச்இசி நிறுவனம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர முடியும் என தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கூறுகின்றனர். அரசு ஏன் உதவவில்லை? இந்த நிறுவனத்தை காப்பாற்றி முன்னேற்றுவதற்கு மத்திய அரசால் சில நூறு கோடி ரூபாய் மட்டும் உதவ முடியாதா? இதுகுறித்து ராஞ்சி பாஜக எம்பி சஞ்சய் சேத் கூறுகையில், கனரக தொழில்துறை அமைச்சகத்திடம் தொடர்ந்து இந்த பிரச்னையை எழுப்பி வருவதாகத் தெரிவித்தார். பிபிசியிடம் பேசிய அவர், “இந்தப் பிரச்னையை சம்பந்தப்பட்ட அமைச்சகத்தின் அமைச்சரிடம் பலமுறை எழுப்பியுள்ளேன். பிரகாஷ் ஜவடேகர், அர்ஜூன் ராம் மேக்வால், மகேந்திர நாத் பாண்டே ஆகியோர் அமைச்சராக இருந்த போதெல்லாம் அவர்களை சந்தித்து இது தொடர்பாகப் பேசினேன்," என்றார். ஜூலை 19, 2022 அன்று, சஞ்சய் சேத் மக்களவையில் எச்இசியை சீராக மறுதொடக்கம் செய்ய மத்திய அரசு என்ன திட்டம் வைத்துள்ளது என்று கேட்டிருந்தார். இதற்கு பதில் அளித்த அரசு, இதற்கான திட்டம் ஏதும் இல்லை என்று தெளிவாக கூறியிருந்தது. எச்இசி பிரச்னைகளில் குரல் கொடுக்கும் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சுபோத்காந்த் சஹாய், துறை அமைச்சர் மகேந்திர நாத் பாண்டேவை மூன்று முறை சந்தித்ததாகவும் ஆனால் எந்த உதவியும் கிடைக்கவில்லை என்றும் பிபிசியிடம் கூறுகிறார். சுபோத் காந்த் சஹய் கூறுகையில், “எச்இசி மூடப்பட்டால் யாரும் ஜார்கண்டில் முதலீடு செய்ய வர மாட்டார்கள். பிரதமர் மோடி எச்இசிக்கு உதவவில்லை. இதுபோன்ற சூழ்நிலையில், மாநிலத்தின் அடையாளத்தை காப்பாற்ற அவர் முன்வர வேண்டும் என்று முதல்வர் ஹேமந்த் சோரனிடம் கேட்டுக்கொள்கிறேன்," என்றார். எச்இசி ஏன் முக்கியமானது? இந்நிறுவனம் தற்போது ரூ.1,356 கோடி மதிப்பிலான ஒர்க் ஆர்டரை வைத்துள்ளது. அதன் வாடிக்கையாளர்களில் ISRO, BARC, DRDO உட்பட நாட்டின் பல பெரிய அரசு மற்றும் அரசு சாரா நிறுவனங்கள் அடங்கும். ஆனால், போதிய மூலதனம் இல்லாததால் இவற்றிற்கான பணிகள் முடிக்கப்படாமல் உள்ளன. நம் சாதனைகளைப் பார்த்தால், எச்இசி ஒரு சூப்பர் கண்டக்டிங் சைக்ளோட்ரானை உருவாக்கியுள்ளது. இவை அணு மற்றும் எரிசக்தித் துறை தொடர்பான ஆராய்ச்சியில் பயன்படுத்தப்படுகின்றன. இவை தவிர, போர்க்கப்பல்களில் பயன்படுத்தப்படும் உயர் தாக்க எஃகு அமைப்புகளைத் தயாரிக்கும் தொழில்நுட்பத்தையும் கொண்டுள்ளது. ஐஎன்எஸ் விக்ராந்தின் கட்டுமானத்தில் பயன்படுத்தப்படும் ஏபிஏ தர எஃகு மற்றும் நியூக்ளியர் பவர் கார்ப்பரேஷன் இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்காக குறைந்த அலாய் ஸ்டீல் போர்ஜிங் செய்யும் இயந்திரம் ஆகியவற்றை இந்நிறுவனம் தான் உருவாக்கியது. இதுமட்டுமின்றி, இஸ்ரோவுக்காக சிறப்பு தர மென்மையான ஸ்டீல் தயாரிக்கப்பட்டுள்ளது. பிஎஸ்எல்வி மற்றும் ஜிஎஸ்எல்வி ராக்கெட்டுகளை ஏவும் பணிகளுக்கு உதவும் ஆறு அச்சு சிஎன்சி இயந்திரமும் இங்குதான் தயாரிக்கப்பட்டுள்ளது. இது தவிர, 105 மிமீ துப்பாக்கி, டி72 டேங்கின் கோபுர வார்ப்பு, இந்தியன் மவுண்டன் கன் மார்க்-2, அர்ஜூன் பிரதான போர் டாங்கியின் கவச எஃகு வார்ப்புகள் ஆகியவை பாதுகாப்புத் துறையில் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்திய கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பல்களுக்கான ப்ரொப்பல்லர் ஷாஃப்ட் அசெம்பிளி, ரேடார் ஸ்டாக் அசெம்பிளி மற்றும் மெரைன் டீசல் என்ஜின் பிளாக் ஆகியவை எச்இசியால் தயாரிக்கப்படுகின்றன. மேலும் இந்திய கடற்படைக் கப்பல் ராணாவுக்கான ஸ்டெர்ன் கியர் அமைப்பின் PYB எந்திரம், 120 மிமீ துப்பாக்கி போன்றவையும் இங்கு தான் தயார் செய்யப்பட்டன. அணுசக்தி தர எஃகு தயாரிப்பதன் மூலம், எச்இசி, அத்தகைய தொழில்நுட்பத்தைக் கொண்ட உலகின் ஆறு நாடுகளில் இந்தியாவை இடம்பெறச் செய்துள்ளது. எச்இசி என்பது ஒரு தொழில்துறை அமைப்பாகக் கருதப்படுகிறது. அதாவது மற்ற தொழில்களுக்கு தேவையான கனரக இயந்திரங்களும் இங்கு உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. இந்நிறுவனம் நடைமுறைக்கு வந்ததிலிருந்து, எச்இசி நாட்டின் பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு 550 ஆயிரம் டன்களுக்கும் அதிகமான உபகரணங்களை தயாரித்து வழங்கியுள்ளது. https://www.bbc.com/tamil/articles/cn46neg726yo
-
இரசித்த.... புகைப்படங்கள்.
ஆந்தையும் படத்திற்கு போஸ் கொடுக்குது!
-
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : விடுதலைப்புலி பெண்போராளிகளின் இருமனித எச்சங்கள் மீட்பு ; துப்பாக்கி ரவைகள், ஆடைகளில் இலக்கங்கள்
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி விவகாரத்தில் உண்மைகள் வெளிக்கொணரப்பட வேண்டும் - தவறினால் மக்கள் போராட்டத்தில் குதிப்பர் - ரவிகரன் 16 SEP, 2023 | 10:38 AM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி முழுமையாக அகழ்ந்து, ஆய்வுசெய்யப்பட்டு உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டுமென முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார். அவ்வாறு உண்மைகள் வெளிக்கொணரத் தவறினால் மக்கள் போராட்டத்தில் குதிக்கவேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஒன்பதுநாட்கள் இடம்பெற்ற நிலையில், செப்ரெம்பர் (15) நேற்று தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் ஒக்ரோபர் மாத மூன்றாவது வாரத்தில் அகழ்வாய்வுகள் மீளவும் ஆரம்பிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. இதுதொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் கடந்த ஒன்பது முன்னெடுக்கப்பட்டுவந்தநிலையில், 17மனித எலும்புக்கூட்டத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், இன்னும் பல மனித எலும்புக்கூடுகள் அங்கே இருப்பதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இந் நிலையில் ஒன்பதுநாட்கள் அகழ்வாய்வுகள் இடம்பெற்றதையடுத்து, குறித்த அகழ்வாய்வுப் பணிகள் இடைநிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனிதப்புதைகுழியை ஆய்வுசெய்த தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர், ஏற்கனவே திட்டமிட்டிருந்த வேறு பணிக்காக செல்வதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இருப்பினும் இந்த மனிதப் புதைகுழி முற்று முழுதாக அகழ்ந்து ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்பதுடன், இந்த மனிதப் புதைகுழி தொடர்பான உண்மைத் தன்மை வெளிவரவேண்டும் என்பதே எமது நிலைப்பாடகவிருக்கின்றது. அத்தோடு சர்வதேச நாடுகள் இந்த மனிதப் புதைகுழி தொடர்பான விடயத்தில் தலையிட்டு, இந்த மனிதப் புதைகுழி விவகாரத்தில் இலங்கை அரசின் பொறுப்புக் கூறலுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்கவேண்டும். குறிப்பாக தற்போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் தமது உறவுகளைத் தேடி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இந் நிலையில் இறுதிக்கட்டப் போர் இடம்பெற்றபோது இராணுவத்திடம் சரணடைந்து, தற்போது காணாமல் ஆக்கப்பட்டவர்களாகத் தேடப்படுபவர்கள், குறித்த கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் எலும்புக்கூடுகளாக இருக்கலாம் என்இங்குள்ள பலருக்கும் சந்தேகங்கள் இருக்கின்றன. இப்படியான சூழலில் இங்கு அகழ்வாய்வு மேற்கொள்பவர்களை நாம் நம்புகின்றோம். இந்த அகழ்வாய்வுகளில் உண்மைகள் வெளிக்கொணரப்படவேண்டும். அவ்வாறு உண்மைகள் வெளிக்கொணரத் தவறும் பட்சத்தில் மக்கள் திரண்டு போராட்டங்களை நடாத்தவேண்டிய சூழல் ஏற்படும் - என்றார். https://www.virakesari.lk/article/164691
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி ஆகழ்வு தற்காலிக இடைநிறுத்தம் : 17 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டெடுப்பு 15 SEP, 2023 | 09:22 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்தப்படும் அகழ்வாய்வுப்பணிகளை ஒக்டோபர் மாத மூன்றாவது வாரத்தில் மீளவும் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த மனிதப்புதைகுழி அகழ்வாய்வில் ஈடுபட்டுவந்த தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினர் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட வேறு பணிகளுக்கு செல்லவிருப்பதால், குறித்த மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் இவ்வாறு தற்காலிகமாக இடைநிறுத்திவைக்கப்படுவதாகவும் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்தார். இந் நிலையில் இதுவரை ஒன்பது நாட்கள் இடம்பெற்ற அகழ்வாய்வுகளின் முடிவுகள் தொடர்பில் தாம் அறிக்கை சமர்ப்பிக்கவுள்ளதாகவும், அதன் பின்னர் குறித்த அகழ்வாய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வதற்கு முல்லைத்தீவு நீதிமன்றம் அனுமதி வழங்கினால் தாம் தொடர்ந்தும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகவும் அகழ்வாய்வுகளில் ஈடுபட்ட தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவ தெரிவித்துள்ளார். அதேவேளை கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (15) இன்று முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதவான் கெங்காதரன் முன்னிலையில், சட்டத்தரணிகளான கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தா ஞானராசா, முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவன், தொல்லியல் ஆய்வாளர் பரமு புஷ்பரட்ணம் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல்துறைப் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்ன. குறித்த ஒன்பதாம்நாள் அகழ்வாய்வுகளில் மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், தடையப் பொருளாக விடுதலைப்புலிகள் அமைப்பின் இலக்கத் தகடொன்றும், ஆடைகளும் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு மீட்கப்பட்ட ஆடைகளில் இலக்கங்களிடப்பட்டுள்ளன. அந்தவகையில் இதுவரை ஒன்பது நாட்கள் இடம்பெற்ற அகழ்வாய்வுப் பணிகளின் நிறைவில் மொத்தமாக 17மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அத்தோடு குறித்த ஒன்பதாம் நாள் அகழ்வாய்வுகளின் நிறைவில், குறித்த மனிதப் புதைகுழி ட்ரோன் கருவியைப் பயன்படுத்தி காணொளி எடுக்கப்பட்ஞதுடன், (பிளாஸ்டிக்) விரிப்புக் கொண்டு மூடப்பட்டது. குறித்த விரிப்பின் விளிம்புப் பகுதிகளில் மண்இடப்பட்டுள்ளன. மேலும் குறித்த முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் சங்க முல்லைத்தீவு இணைப்பாளர் மரியசுரேஸ் ஈஸ்வரி ஆகியோர் குறித்த மனிதப்புதைகுழி வளாகத்திற்கு வருகைதந்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/164680
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி : இதுவரை 14 எலும்புக்கூடுகள் மீட்பு முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வுப் பணிகள் 9 ஆவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்படுகின்றன. முல்லைத்தீவு நீதவான் தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் தொடர்ச்சியாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. நேற்று (14) முன்னெடுக்கப்பட்ட அகழ்வின் போது 5 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. அத்துடன், துப்பாக்கி ரவை ஒன்றும் ஆடைகள் சிலவும் அங்கிருந்து மீட்கப்பட்டன. கடந்த 6 ஆம் திகதி முதல் முன்னெடுக்கப்பட்டு வரும் அகழ்வுப் பணிகளில் இதுவரை 14 எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. அவை, முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியாசாலையில் வைக்கப்பட்டுள்ளன. எலும்புக்கூடுகள் தொடர்பாக ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு சட்டவைத்திய அதிகாரி மற்றும் தடயவியல் நிபுணர்களின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையின் விசேட சட்ட வைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு கொக்குத்தொடுவாயில் கடந்த ஜூன் மாதம் 29 ஆம் திகதி சில மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன. தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையினர் நீர் இணைப்பினை மேற்கொள்வதற்கான அகழ்வினை மேற்கொண்ட போது மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/273297
-
விரைவில் தேசிய கல்விக் கொள்கை : பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு - விஜயதாச ராஜபக்ஷ
அதிகமானவர்கள் சிறைக்குச் செல்வதற்கான காரணத்தை கூறுகிறார் நீதி அமைச்சர் விஜயதாச Published By: VISHNU 14 SEP, 2023 | 09:09 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை கல்வி முறைமை மாற்றப்பட வேண்டும். அதிக எண்ணிக்கையிலானவர்கள் சிறைப்படுத்தப்பட்டிருப்பது முன்பிள்ளை பருவ அபிவிருத்தி கிடைக்காதமையாகும். அதனால் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி முறையாக மாற்றப்பட வேண்டும் என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ் தெரிவித்தார். சிறந்த தலைமைத்துவத்துக்காக எதிர்கால சந்ததியினரை கொண்டு செல்லும் நாடுதழுவிய வேலைத்திட்டத்தின் தொடக்க விழா புதன்கிழமை (13) கம்பொல விக்ரமபாகு மத்துய கல்லூரியில் இடம்பெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில், எமது நாட்டின் பெறுமதிவாய்ந்த வளம் குழந்தை செல்வமாகும். நாங்கள் இதனை விளங்கி செயற்பட வேண்டும். நாங்கள் தற்போது கலந்துரையாட வேண்டி இருப்பது சிறைச்சாலைகளை நிர்மாணிப்பது தொடர்பில் அல்ல. சிறைச்சாலைகளை மூடிவிடுவதே எமது இலக்காக இருக்கவேண்டும். எமது கல்வி முறைமையில் திரிவுபடுத்தல் இருக்கிறது. அந்த திரிவுபடுத்தலை சரிசெய்யும்வரை சிறைச்சாலைகளை மூடிவிட முடியாது. அதற்காக நாங்கள் பாராளுமன்ற விசேட தெரிவுக்குழுவொன்றின் ஊடாக பரிந்துரைகளை முன்வைத்தோம். அரசியலமைப்பின் 13ஆம் திருத்தத்தின் மூலம் தேசிய பாடசாலை மற்றும் மாகாண பாடசாலை என பாடசாலை கட்டமைப்பு திரிவுபடுத்தப்பட்டது. இந்த நாட்டில் ஆரம்ப மற்றும் இரண்டாம் நிலை கல்வி முறைமை மாற்றப்பட வேண்டும். எமது நாட்டில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் சிறைப்படுத்தப்பட்டிருப்பது முன்பிள்ளை பருவ அபிவிருத்தி கிடைக்காதமையாகும். அதனால் முன்பிள்ளை பருவ அபிவிருத்தி முறையாக மாற்றப்பட வேண்டும். பிள்ளைகளின் அறிவு அதிகமாக விருத்தியடைவது 6வயது வரையாகும் என கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அதேபோன்று எமது சந்ததியினரை பாேதைப்பாெருள் பாவனையில் இருந்து பாதுகாத்துக்கொண்டால் சிறைச்சாலைக்கு செல்பவர்களை குறைத்துக்கொள்ள முடியுமாகும். மேலும் இலங்கையில் உயர்கல்வி வாய்ப்பை விருத்திசெய்வதற்காக பொருத்தமான பரிந்துரைகளை முன்வைப்பதற்கு நியமிக்கப்பட்ட பாராளுமன்ற விசேட தெரிவுக்குழு எமது நாட்டின் கல்வி முறைமையை மறுசீரமைப்பது தொடர்பில் தேடிப்பார்த்து ஆராய்ந்து பரிந்துரைகளை சமர்ப்பித்திருக்கிறது. கல்வி பொதுத் தராதர சாதாரண பரீட்சையை பாடசாலையில் 10ஆம் தரத்தில் நடத்துவதற்கும் உயர்தர பரீட்சையை 12ஆம் தரத்தில் நடத்துவதற்கும் பரிந்துரை செய்தோம். தற்போது இருக்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவை நீக்கிவிட்டு, பிரதான 4 அலகுகளுக்கு கீழ் செயற்படும் வகையில் உயர்கல்வி ஆணைக்குழு ஒன்றை பிரேரித்திருக்கிறோம். அதேபோன்று எமது தொழில் கல்விக்கு இருந்து வரும் கேள்வியை அதிகரிப்பதற்காக பல்கலைக்கழக மட்டத்தில் தொழில் கல்வியை அபிவிருத்தி செய்யவும் அறிவு மற்றும் ஞானத்தை அடிப்படையாக்கொண்ட கல்வி முறைமையொன்றுக்கான பரிந்துரைகளை முன்வைத்திருக்கிறோம். இந்த புதிய கல்வி யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை செயற்படுத்தாவிட்டால் மேலும் பல வருடங்கள் செல்லும்போது எமது நாட்டின் கல்வி முறைமை நாகரிக உலகுக்கு முகம்கொடுப்பதற்கு பொருத்தம் இல்லாமல்போகும் என்றார். https://www.virakesari.lk/article/164601
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி 8 ஆம் நாள் அகழ்வாய்வில் 5 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுப்பு ; ஆடையில் (இ1124) இலக்கம் 14 SEP, 2023 | 10:26 PM கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் எட்டாம் நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (14)இடம்பெற்றநிலையில், ஐந்து மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், தடையப் பொருளாக துப்பாக்கி ரவை ஒன்றும் ஆடைகளும் மீட்கப்பட்டன. இவ்வாறு மீட்கப்பட்ட ஆடைகளில், நீளக்காட்சட்டையில் (இ1124) இலக்கம் இடப்பட்டுள்ளது. இந்நிலையில் எட்டுநாட்கள் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 14மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்தவாரம் செப்ரெம்பர் (06) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் ஏழாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (14) நேற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது. அதேவேளை குறித்த அகழ்வாய்வுகளில் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், யாழ்ப்பாணம் சட்டவைத்திய அதிகாரி செ.பிரணவன், சட்டத்தரணிகளான இரட்ணவேல், கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தாஞானராசா, தடையவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன. மேலும் இந்த அகழ்வாய்வு இடம்பெறும் இடத்திற்கு தமிழரசுக்கட்சியின் தலைவரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராசா, பாராளுமன்ற உறுப்பினர்களான வினோநோகராதலிங்கம், சாள்ஸ் நிர்மலநாதன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், முன்னாள் புதுக்குடியிருப்பு பிரதேசசபை உறுப்பினர் இராமலிங்கம் சத்தியசீலன் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/164606
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
கிரிமியாவில் ரஸ்யாவின் கப்பல் தளத்தை இலக்குவைத்து உக்ரைன் தாக்குதல் - ரஸ்ய கப்பல்களுக்கு சேதம் Published By: RAJEEBAN 14 SEP, 2023 | 11:12 AM உக்ரைன் மேற்கொண்ட ஏவுகணை மற்றும் அதிவேக படகு தாக்குதல்கள்காரணமாக கிரிமியா தீபகற்பத்தில் இரண்டு கப்பல்கள் சேதமடைந்துள்ளன செவஸ்டபோல் கப்பல்கட்டும் தளம் தீப்பிடித்து எரிகின்றது என ரஸ்யாதெரிவித்துள்ளது. பத்து ஏவுகணைதாக்குதல்களும் மூன்று அதிகவேக படகு தாக்குதல்களும் இடம்பெற்றன என ரஸ்யா தெரிவித்துள்ளது. ஏழு ஏவுகணைகளும் மூன்று படகுகளும் அழிக்கப்பட்டன என தெரிவித்துள்ள ரஸ்ய பாதுகாப்பு அமைச்சு திருத்தப்பட்டுக்கொண்டிருந்த இரண்டு கப்பல்கள் தீப்பிடித்துள்ளன எனவும் குறிப்பிட்டுள்ளது. 24 பேர் காயமடைந்துள்ளனர் என செவஸ்டபோல் ஆளுநர் தெரிவித்துள்ளார். உக்ரைனிலிருந்து ரஸ்யா ஆக்கிரமித்த கிரிமியாவின் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்த கப்பல் கட்டும் தளம் ரஸ்யாவின் கருங்கடல் கப்பல் படையணியின் கப்பல்களையும் நீர்மூழ்கிகளையும் பழுதுபார்ப்பதற்கு உதவுகின்றது. துறைமுகத்தில் தீப்பிடித்துள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன. யுத்தம் ஆரம்பமான பின்னர் இந்த துறைமுகத்தின்மீது உக்ரைன் மேற்கொண்ட குறிப்பிடத்தக்க தாக்குதல் இதுவாகும். https://www.virakesari.lk/article/164537
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
மூன்று வருடங்களுக்குள் அஸ்வெசும கொடுப்பனவை நிறுத்த தீர்மானம் மூன்று வருடங்களுக்குள் அஸ்வெசும கொடுப்பனவை நிறுத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக பெண்கள், சிறுவர் விவகாரங்கள் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்துள்ளார். குறித்த திட்டத்தில் பயனடையும் நபர்களை வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதியின் ஆலோசனைக்கமைய திட்டமொன்று தயாரிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அதற்கமைய, சமுர்த்தி பிளஸ் (SAMURDHI PLUS) வேலைத்திட்டத்தின் கீழ் அவர்களை பல்வேறு தொழில்களில் ஈடுபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக பதில் அமைச்சர் அனுப பெஸ்குவல் தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமுர்த்தி முகாமையாளர்களின் ஆலோசனைகளைப் பெற்றுக்கொள்ளும் செயற்பாடு தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். https://thinakkural.lk/article/272969
-
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : விடுதலைப்புலி பெண்போராளிகளின் இருமனித எச்சங்கள் மீட்பு ; துப்பாக்கி ரவைகள், ஆடைகளில் இலக்கங்கள்
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி 7 ஆம் நாள் அகழ்வாய்வு : 3 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும் விடுதலைப்புலிகளின் சைனட்குப்பியும் 2 இலக்கத்தகடுகளும் மீட்பு 13 SEP, 2023 | 07:42 PM கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஏழாம் நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (13)இடம்பெற்றநிலையில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், விடுதலைப் புலிகளின் சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடையப் பொருட்களாக எடுக்கப்பட்டன. இந்நிலையில் ஏழுநாட்கள் அகழ்வாய்வுப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இதுவரை 09மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதேவேளை குறித்த அகழ்வாய்வுப் பணிகளுக்கென, 5.7மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும், அந்த நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி கடந்தவாரம் அகழ்வுப்பணிகள் மேற்கொள்ள முடிந்ததுடன், இந்தவாரமும் அகழ்வுப் பணியை மேற்கொள்ளவுள்ளதாகவும், தொடர்ந்து அடுத்தவாரமும் அகழ்வாய்வுகளை மேற்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டால் அகழ்வாய்வுகளை மேற்கொள்ள நிதி போதுமானதாக உள்ளதாகவும் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் கடந்தவாரம் செப்ரெம்பர் (06) புதன்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் ஏழாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (13) நேற்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது. அதேவேளை குறித்த அகழ்வாய்வுகளில் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன், ரனித்தாஞானராசா தடையவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டன. குறித்த ஏழாம்நாள் அகழ்வாய்வுகள் தொடர்பில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா கருத்துத் தெரிவிக்கையில், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஏழாம்நாள் அகழ்வாய்வில், மூன்று மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முற்றாக அகழ்ந்தெடுக்கப்பட்டதுடன், சைனட் குப்பி ஒன்றும், இரண்டு இலக்கத் தகடுகளும் தடையப் பொருட்களாக எடுக்கப்பட்டன. இந்த புதைகுழியிலுள்ள எலும்புக்கூட்டுத் தொகுதிகள் மிக நெருக்கமாக, ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்து காணப்படுவதால், அகழ்வாய்வு செய்வதற்கு அதிக நேரத்தைச் செலவிடவேண்டியுள்ளது. அகழ்வாய்வுகள் மேற்கொள்ளும்போது, சில நாட்களில் ஓரிரு எலும்புக்கூட்டுத் தொகுதிகளையே அகழ்ந்தெடுக்கமுடிகின்றது. குறித்த மனிதப்புதைகுழியிலுள்ள எலும்புக்கூட்டுத் தொகுதிகளையும், தடையப்பொருட்களையும் எடுத்தாலே, இது தொடர்பில் சரியான ஆய்வுகளை மேற்கொள்ளமுடியும். எனவே குறித்த அகழ்வாய்வுப் பணிகளின் காலத்தை வரையறுக்க முடியாதுள்ளது. ஏற்கனவே அகழப்பட்டுள்ள குழியிலிருந்து மனித எச்சங்களையும், தடையப்பொருட்களையும் முழுமையாக அகழ்வாய்வு செய்து எடுப்பதற்கு ஒரு சில வாரங்கள் நீடிக்கலாம் என நினைக்கின்றேன். அதனைவிட இன்னும் மேலதிகமாக குழியைத் தோண்டி அகழ்வாய்வுகள் மேற்கொள்வதற்கு எவ்வளவு காலம்எடுக்கும் எனக்கூறமுடியாது. இந்தப் புதைகுழி தொடர்பிலான அறிக்கைகள், அகழ்வாய்வு செய்யும் குழுவினால், முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிற்கு சமர்ப்பிக்கப்படும். அகழ்வாய்வில் எடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளும், தடையப்பொருட்களும் முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் உள்ள பிரேதசாலையில், விசேட அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த அகழ்வாய்விற்கென 5.7மில்லியன் நிதி ஒதுக்கீடு கிடைகப்பெற்றது. இவ்வாறு கிடைக்கப்பெற்ற நிதி ஒதுக்கீட்டினைப் பயன்படுத்தி, புதைகுழிக்குரிய தகரப் பந்தல், தங்குமிட வசதி, மலசலகூட வசதி உள்ளிட்ட விடயங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு ஒருக்கின்ற நிதி மூலத்தை வைத்து கடந்த வாரத்தில் அகழ்வாய்வுகள் மேற்கொள்ளப்பட்டதுடன், இந்தவாரத்திலும் அகழ்வாய்வுகளை மேற்கொண்டுவருகின்றோம். அடுத்தவாரமும் அகழ்வாய்வுகளை மேற்கெிள்வதற்கு ஒதுக்கப்பட்ட நிதி போதுமாகவுள்ளது. தொடர்ந்து அகழ்வாய்வுகளை மேற்கொள்வதற்கு நீதவான் உத்தரவிடுவாரெனில் அகழ்வாய்வுகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம். எடுக்கப்பட்ட தகட்டிலக்கம் தொடர்பாக, அவை எந்தக் காலத்துக்குரியவை போன்ற விடயங்களை ஆராய்ந்து வருகின்றோம். அதன்பின்னர் தகட்டிலக்கங்கள் தொடர்பன விபரங்கள் அறியத்தரப்படும் என்றார். மேலும் இந்த அகழ்வாய்வு இடம்பெறும் இடத்திற்கு முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/164520
-
‘ஐபோன் 15’… களமிறக்கிய ‘ஆப்பிள்’: விலை, சிறப்பம்சங்கள் என்ன?
இனி ஐஃபோனிலும் சாதாரண சார்ஜர்தான் - புதிய மாடல்கள் வெளியீடு ஒரு மணி நேரத்துக்கு முன்னர் புதிய ஐஃபோனில் தனது பிரத்யேக சார்ஜருக்கு பதிலாக பெரும்பாலான ஆண்ட்ராய்டு போன்களில் பயன்படுத்தப்படும் டைப்-சி சார்ஜரையே பயன்படுத்துவதாக ஆப்பிள் நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தின் உத்தரவின் காரணமாக இந்த முடிவை ஆப்பிள் நிறுவனம் எடுத்திருக்கிறது. செவ்வாய்க்கிழமை நடந்த அதன் வருடாந்திர நிகழ்வில் "iPhone 15, USB-C கேபிளை பயன்படுத்தும்” ஆப்பிள் நிறுவனம் அறிவித்திருக்கிறது. இந்த நிகழ்வின்போது மேம்பட்ட சிப் கொண்ட புதிய ஆப்பிள் வாட்ச் சீரிஸ் வெளியிடப்பட்டது. புதிய ஐஃபோன் 15 அடுத்த வாரம் விற்பனைக்கு வர இருக்கிறது. 2012 ஆம் ஆண்டுக்குப் பிறகு மாற்று சார்ஜிங் போர்ட்டைக் கொண்ட முதல் ஐபோன் இதுவாக இருக்கும். iPad Pro மற்றும் Mac மடிக்கணினிகள் ஏற்கெனவே USB-C வகை சார்ஜரை பயன்படுத்தி வருகின்றன. ஐபோன்கள் மட்டுமே பிரத்யேகமான சார்ஜரை பயன்படுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, புதிய ஆப்பிள் சாதனங்களில் சுற்றுச்சூழல் உறுதிமொழிகளை ஆப்பிள் நிறுவனம் வழங்கி இருக்கிறது. ஐஃபோன்கள் மட்டுமல்லாமல் அதன் AirPods Pro போன்ற இயர்போன்கள் EarPods ஹெட்ஃபோன்களின் புதிய பதிப்புகளிலும் சி வகை சார்ஜர் வேலை செய்யும் என்று ஆப்பிள் கூறியுள்ளது. நுகர்வோர்களுக்கு எளிதாக இருப்பதற்காகவும் பணத்தை மிச்சப்படுத்தவும், சார்ஜர்களை மீண்டும் பயன்படுத்துவதை ஊக்குவிப்பதன் மூலம் மின்-கழிவைக் குறைக்கவும் பிரத்யேக சார்ஜிங் போர்ட்களை கைவிடுமாறு ஆப்பிள் நிறுவனத்திடம் ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியது. இருப்பினும், இந்த நடவடிக்கை அடுத்த ஆண்டுகளில் ஐபோன் சார்ஜர் கேபிள்களின் குப்பை அதிகரிப்புக்கு வழிவகுக்கும் என்று சிலர் எச்சரிக்கின்றனர். புதிய ஆப்பிள் சாதனங்களில் சுற்றுச்சூழல் உறுதிமொழிகளை ஆப்பிள் நிறுவனம் வழங்கி இருக்கிறது. உதாரணமாக புதிய ஆப்பிள் வாட்சில் முதல் முறையாக கார்பன் நடுநிலை உத்தரவாதத்தை அளித்திருக்கிறது. இது பேட்டரிகள், வாட்ச் மற்றும் ஐபோன்களில் மறுசுழற்சி செய்யப்படும் பொருள்களை பயன்படுத்துவதையும் ஆப்பிள் ஊக்குவித்திருக்கிறது. பாகங்கள் எதிலும் தோலைப் பயன்படுத்த மாட்டோம் என்பதையும் ஆப்பிள் நிறுவனம் உறுதிப்படுத்தியது. 2030 க்குள் கார்பன் நடுநிலை என்ற இலக்கை ஆப்பிள் எட்டும் என்றும் உறுதியளித்திருக்கிறது. புதிய ஐபோனில் என்ன சிறப்பு? ஐபோன் 15 மற்றும் 15 பிளஸ் ஆகியவற்றில் பிரகாசமான திரைகள் மற்றும் மேம்படுத்தப்பட்ட கேமரா அமைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில் உயர்நிலை ஐபோன் 15 ப்ரோ மற்றும் ப்ரோ மேக்ஸ் ஆகியவை இப்போது டைட்டானியம் சட்டத்துடன் வருகின்றன. ப்ரோ மற்றும் மேக்ஸ் ஆகியவை ம்யூட் பொத்தானுக்கு பதிலாக "செயல் பொத்தான்" ஒன்றைக் கொண்டுள்ளன. அவை பல்வேறு செயல்பாடுகளுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். புதிய ஆப்பிள் வாட்ச் சைகைக் கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கும். உதாரணமாக அணிந்திருக்கும் அதே கையில் இரண்டு விரல்களை ஒன்றாகத் தட்டினால், அழைப்பிற்கு பதிலளிக்கவோ, உரையாடலை முடிக்கவோ முடியும். ஆனால் இதற்கு முந்தைய ஐஃபோன் மற்றும் வாட்ச்களை விட பெரிய அளவில் மேம்பாடு இல்லாத சாதனங்களுக்கு அதிக விலையைக் கொடுக்க நுகர்வோர் தயாராக இருப்பார்களா என்று கேள்வியை நிபுணர்கள் எழுப்புகிறார்கள். https://www.bbc.com/tamil/articles/cz70231wj4eo
-
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : விடுதலைப்புலி பெண்போராளிகளின் இருமனித எச்சங்கள் மீட்பு ; துப்பாக்கி ரவைகள், ஆடைகளில் இலக்கங்கள்
கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரத்தில் சர்வதேச நீதி சாத்தியமாவதற்கு தமிழ் பிரதிநிதிகளின் அழுத்தங்கள் அவசியம் - அனந்தி சசிதரன் 13 SEP, 2023 | 10:09 AM (பாலநாதன் சதீஸ்) மக்கள் பிரதிநிதிகள் அனைவரும் கொக்குதொடுவாய் புதைகுழி தொடர்பான உலக கவனத்தை ஈர்ப்பதற்கான தங்களுடைய முழு அழுத்தத்தையும் பிரயோகிப்பதன் மூலமே சர்வதேச நீதியை பெற வழிவகுக்கும் என வடக்கு மாகாண சபையின் முன்னாள் மகளீர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார். கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி அகழ்வு நடைபெறும் இடத்தினை பார்வையிட்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார். அதிக எதிர்பார்ப்போடு போராடிக் கொண்டிருக்கின்ற பெற்றோருக்கும் தங்களுடைய பிள்ளையோ என்ற ஒரு வேதனை இருக்கிறது. இறந்தவர்களின் உடலங்களை அடக்கம் செய்கின்றது போலான தோற்றத்தில் இங்கே புதைக்கப்பட்டிருக்கவில்லை. இன்னும் நூற்றுக்கணக்கான உடலங்கள் இதற்குள் போட்டு குவிக்கப்பட்டுள்ளதாகவே பார்க்கின்றோம். ஏனெனில் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்த ஒரு தடயமாக தான் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. சனல் 4 வில் 269 பேருடைய கொலைகள் தொடர்பாக விவாதித்துக்கொண்டிருக்கின்ற ஒருபக்கம் மனித படுகொலையை செய்து இந்த மண்ணிலே புதைக்கப்பட்டு மூடப்பட்டிருக்கின்ற ஒரு விடயத்தை பேசு பொருளாக்காமல் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். ஏற்கனவே இந்த மண்ணிலே வாழ்ந்தவர்கள் என்ற வகையில் இது ஒரு சூனிய பிரதேசமாக, சுற்றிவர இராணுவ முகாம்கள் தான் இருந்திருக்கிறது. இறுதி போரின் பின்னர் பெண் போராளிகளை பேருந்துகளில் ஏற்றி செல்வதனை படங்களிலும், நேரடியாகவும் பல விடயங்களை பார்த்திருக்கின்றோம். மக்கள் பிரதிநிதிகளாக இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் குறித்த இடத்திற்கு வந்து தங்களது ஆதரவை கொடுப்பதன் ஊடாக தான் நிறைய உண்மைகள் வெளிக்கொண்டுவரப்படுவதோடு அழுத்தங்களும் பிரயோகிக்கப்படுவதாக இருக்கும். தொடர்ந்தும் இவ் இடம் முழுமையாக ஆய்வுக்கு கொண்டுவர வேண்டும். எதிர்வரும் காலம் மழைக்காலம் ஆகையால் எவ்வாறு இவர்களுடைய ஆய்வுகள் கொண்டு செல்லப்படும் என்ற கேள்வியும் இருக்கிறது. அல்லது இத்தோடு நிறுத்தி விடுவர்களா என்ற ஐயப்பாடும் இருக்கிறது. தமிழ் தேசிய பரப்பில் பயணிக்கின்ற அனைத்து மக்கள் பிரதிநிதிகளும் புதைகுழி தொடர்பான உலக கவனத்தை ஈர்ப்பதற்கான தங்களுடைய முழு அழுத்தத்தையும் பிரயோகித்து தான் எங்களுக்கு ஒரு சர்வதேச நீதியை பெற்றுத்தர வழிவகுக்கும் என கருதுகின்றேன். https://www.virakesari.lk/article/164452
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி 6 ஆம் நாள் அகழ்வாய்வு : இதுவரை 6 மனித எலும்புக்கூட்டுத்தொகுதி, ரஷ்யத் தயாரிப்பு நீர்சுத்திகரிப்புக் கருவியொன்று மீட்பு 12 SEP, 2023 | 08:00 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியின் ஆறாம் நாள் அகழ்வாய்வு செப்ரெம்பர் (12)இன்று முன்னெடுக்கப்பட்டநிலையில், கழிவு நீரினைச் சுத்திகரித்து அருந்துவதற்கு பயன்படுத்தப்படும், ரஷ்யத் தயாரிப்பு நீர் சுத்திகரிப்புக் கருவி ஒன்றும், துப்பாக்கி ரவை ஒன்றும் தடையப் பொருட்களாகப் பெறப்பட்டுள்ளன. இதுவரை கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வாய்வுகள் ஆறு நாட்கள் இடம்பெற்றுள்ளநிலையில், 06மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பில் மேலும் தெரியவருகையில், முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) புதனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந் நிலையில் ஆறாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (12) இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது. அதேவேளை குறித்த அகழ்வாய்வுகளில் தொல்லியல் பேராசிரியர் பரமு புஷ்பரட்ணம், முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன், தடையவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆறாம்நாள் அகழ்வாய்வுகள் தொடர்பில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கனகசபாபதி வாசுதேவா கருத்துத் தெரிவிக்கையில், கொக்குத்தொடுவாய் ஆறாவதுநாள் அகழ்வாய்வில் ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதி முற்றுமுழுதாக அகழ்ந்தெடுக்கப்பட்டிருந்ததுடன், செப்ரெம்பர் (11) திங்களன்று பகுதியளவில்அகழந்தெடுக்கப்பட்ட மனித எலும்புக்கூட்டுத் தொகுதியின் மிகுதிப் பாகங்களும் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டன. அத்தோடு குறித்த ஆறாம் நாள் அகழ்வாய்வில் துப்பாக்கி ரவை ஒன்றும், கழிவு நீரினைச் சுத்திகரித்து அருந்துவதற்கு பயன்படுத்தப்படும், ரஷ்யத் தயாரிப்பு நீர் சுத்திகரிப்புக் கருவி ஒன்றும் தடையப் பொருட்களாக பெறப்பட்டுள்ளன. அதேவேளை இவ்வாறு அகழ்ந்தெடுக்கப்படும் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்கள் கட்டப்பட்ட நிலையிலேயோ, கைகள் கட்டப்பட்ட நிலையிலேயோ மீட்கப்படவில்லை. இந்த அகழ்வாய்வுப் பணிகள் இடம்பெறும்போது காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் சார்பில், இரண்டு சட்டத்தரணிகள் அகழ்வாய்வுகள் ஆரம்பமாகி முடிவடையும்வரை நேரடியாக நின்று பார்வையிடுகின்றனர். இதனைவி தடையவியல் போலிசார் அகழ்வுப்பணிகளின்போது புகைப்படங்களை எடுத்து ஆவணப்படுத்துகின்றனர். இவ்வாறான சூழலில் இங்கு அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டுவரும்நிலையில் கைகள் கட்டப்பட்டநிலையில் எலும்புக்கூட்டுத் தொகுதிகளோ, கண்கள் கட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட துணிகளோ இதுவரை இனங்காணப்படவில்லை என்றார். https://www.virakesari.lk/article/164445
-
விரைவில் தேசிய கல்விக் கொள்கை : பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு - விஜயதாச ராஜபக்ஷ
12 SEP, 2023 | 09:23 PM இலங்கையின் கல்வித் தரத்தை மேம்படுத்துவதற்கு தேசிய கல்விக் கொள்கையொன்றை உருவாக்குவது காலத்தின் தேவையாக இருப்பதாக இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவர் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ தெரிவித்தார். போட்டித் தன்மைகொண்ட கல்வி முறையொன்று இருக்கும் வரையில் நல்லொழுக்கமுள்ள சமூகத்தை கட்டியெழுப்ப முடியாது எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். தொழிற்பயிற்சிக் கல்வி நாட்டின் தற்போதைய தேவை எனவும், பல்கலைக்கழகங்களுக்கு வழங்கப்படும் அங்கீகாரம் அந்த நிறுவனங்களுக்கும் வழங்கப்பட வேண்டும் எனவும் அமைச்சர் வலியுறுத்தினார். ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (12) நடைபெற்ற ஊடக சந்திப்பில் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, “இந்த நாட்டின் கல்வி, உயர் தரத்தில் அமைந்துள்ளது. ஆனால், அவற்றில் நம் பிள்ளைகள் உயர்கல்வி பெறுவதற்கான வாய்ப்புகள் குறைவாகவே உள்ளன. இன்றிருக்கும் போட்டித் தன்மையான கல்வி முறை, குழந்தைகளின் திறன், அறிவு மற்றும் புத்திசாலித்தனத்தை வளர்க்க பயிற்றுவிப்பதில்லை. தற்போது மனனம் செய்யும் வெறுமனே அறிவை மாத்திரம் வழங்கும் ஒரு கல்வி முறையே உள்ளது. ஐந்தாம் தர புலமைப்பிரிசில் பரீட்சை, ஆரம்பத்திலேயே ஒரு போட்டித் தன்மையை ஏற்படுத்துகின்றது. இந்தப் போட்டியால் குழந்தைகளிடையே வெறுப்பும், கோபமும் எழுகிறது. பரீட்சையில் அதிக புள்ளிகள் பெற்றாலும், மறுபுறம் மானிடப் பண்புகளில் வளர்ச்சி ஏற்படுவதில்லை. மேலும், சாதாரண தரம் மற்றும் உயர்தரப் பரீட்சைகளிலும் போட்டி நிலவுகிறது. போட்டித் தன்மையைக் கொண்ட கல்வி முறை இருக்கும் வரை, நாட்டிற்காக ஒரு தன்னலமற்ற சமூகத்தை உருவாக்குவது கடினம். உலகில் வளர்ந்த நாடுகளில் உள்ள கல்வி முறையைப் பார்த்தால் சாதாரண தரம் போன்ற பரீட்சைகள் நடைபெறுகின்றன. ஆனால் புள்ளி வழங்கும் முறை இல்லை. ஒவ்வொரு பிள்ளையையும் சித்தி அடையச் செய்வதுடன், குறைந்த புள்ளிகளைக் கொண்ட பிள்ளைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படுகிறது. சிறந்தக் கல்வியைக் கொண்ட நாடாகத் தரவரிசையில் முன்னிலையில் உள்ள பின்லாந்தில் 1970 இல் நம் நாட்டில் இருந்த அதே கல்வி முறையே உள்ளது. பிள்ளைகளுக்கு ஓய்வுடன் கூடிய மனநிலை இருக்கவில்லை என்றால், அறிவைப் புரிந்துகொள்வது கடினம். பல நாடுகளில் பிரத்தியேக தனியார் வகுப்புக்கள் நடத்தப்படுவதில்லை. ஆனால் அவர்கள் கல்வி நிலையில் வெற்றிகரமாக உள்ளனர். போட்டியின் பின்னர் பல்கலைக்கழகங்களுக்குள் பிரவேசிக்கும் பெரும்பாலான மாணவர்கள், மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்தக் காரணங்களுக்காக, பல்கலைக்கழகத்திற்கு வழங்கப்படும் முன்னுரிமையை முன்பள்ளி மேம்பாட்டுக்கும் வழங்க வேண்டும் என்று நாம் பரிந்துரைத்துள்ளோம். உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு கற்பிப்பது கடினமல்ல. ஆனால் முன்பள்ளிப் பருவத்தையே நாம் முதலில் சீர்செய்ய வேண்டும். தற்போது உயர்கல்வி முறையில் ஒரு ஒழுங்கமைக்கப்படாத கல்வி முறையே காணப்படுகின்றது. 16 அரச பல்கலைக்கழகங்கள் உள்ளன. அந்த அரச பல்கலைக்கழகங்கள், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் நிர்வகிக்கப்பட்டாலும், அவை சுதந்திரமாக செயல்படுகின்றன. பல்கலைக்கழகங்களுக்குத் தேவையான வசதிகளை வழங்கும் நடவடிக்கைகளையே பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு நிறைவேற்றுகின்றது. இலவசக் கல்வி தனியாருக்குத் திறந்து விடப்பட்டாலும் அதற்கான முறையான பொறிமுறையொன்று இன்னும் தயாரிக்கப்படவில்லை. வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களும், அவற்றின் கிளைகளாக இயங்கும் பல்கலைக்கழகங்களும் இந்நாட்டில் உள்ளன. அவற்றின் தரத்தைக் கண்காணிக்கவும் எந்தப் பொறிமுறையும் இல்லை. தொழிற்பயிற்சி அதிகார சபையின் கீழ் கல்வி நிறுவனங்கள் உள்ளன. தொழிற்கல்வி நிறுவனங்களுக்கு பல்கலைக்கழகங்களுக்கு இருக்கும் அங்கீகாரம் இல்லை. தற்காலத்தில் தொழில் பயிற்சிக் கல்வி நாட்டின் தேவையாக இருப்பதனால், அதற்கான அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும். இந்த சூழ்நிலையில் நாட்டின் இளைஞர் சமூகம் தொழிற்கல்வியில் கவனம் செலுத்துவதை தவிர்த்து வருகின்றது. ஏனைய நாடுகளில், அவர்களுக்கு தமது தொழில்பயிற்சி தொடர்பான பட்டத்தை வழங்குகிறார்கள். இங்கு அவ்வாறு தொழில்பயிற்சிக்காக குறித்த நிறுவனங்களால் பட்டம் வழங்கப்படுவதில்லை. அதனால்தான் இந்த நாட்டின் கல்வி முறையில் முழுமையான மாற்றம் இடம்பெறவேண்டும் என்று நாங்கள் பரிந்துரைத்துள்ளோம். இந்திய மாதிரியை ஆய்வு செய்து, 1978 இல் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு இலங்கையில்நிறுவப்பட்டது . இப்போது இந்தியா அந்த உயர் கல்வி முறையை நீக்கிவிட்டு வெகுதூரம் சென்று விட்டது. இன்று இந்தியாவில் ஒரு சுதந்திரமான உயர்கல்வி ஆணைக்குழுவே உள்ளது. கல்வித் துறை, அரசாங்கத்துக்குரியதா அல்லது தனியாருக்குரியதா என்பதைப் பொருட்படுத்தாமல், முறையான தரநிலைகளின்படி கண்காணிப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் பல்கலைக்கழகங்கள் அங்கு பதிவு செய்யப்படுகின்றன. நமது நாட்டில் உயர்கல்வி வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்கத் தவறுவதனாலேயே சில மாணவர்கள் வெளிநாடு செல்கின்றனர். மேலும், மாணவர்களின் காலத்தை வீணடிப்பது கடுமையான குற்றமாகும். பரீட்சை முடிந்து பெறுபேறுகள் வெளியிடப்படும் வரை, பல மாதங்களாக அவர்கள் வீட்டிலேயே தங்கியிருக்கின்றனர். மாணவர்களின் காலத்தை வீணடிக்கும் கல்வி முறை மாற்றப்பட வேண்டும். இவ்வாறான நிலையில், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு மற்றும் தொழிற்பயிற்சி அதிகார சபைக்குப் பதிலாக சுயாதீனமாக செயற்படக்கூடிய உயர்கல்வி ஆணைக்குழு ஒன்றை நாம் முன்மொழிந்துள்ளோம். இனிமேல், கல்விக் கடைகள் உருவாக்கப்படுகின்றன என்றும், கல்வி, பணத்திற்கு விற்கப்படு கின்றது என்றும் கல்வி தரமற்றது என்றும் யாரும் கூற முடியாது. கடந்த காலத்தில் கல்வி முறையில் ஏற்பட்ட தவறுகள் எதிர்காலத்தில் நடபெறாமல் இருக்க பல்வேறு ஆலோசனைகளை முன்வைத்துள்ளோம். மேலும், 10 ஆம் வகுப்பில் சாதாரண தரப் பரீட்சையையும், 12ஆம் வகுப்பில் உயர்தரப் பரீட்சையை நடத்துவது குறித்தும் பரிந்துரைகளை முன்வைத்துள்ளோம். ஒரு தெரிவுக் குழுவாக, இதுபோன்ற பல்வேறு அடிப்படை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக ஆழமாக ஆய்வு செய்த பின்னரும், நிபுணர்கள், வல்லுனர்கள் உட்பட துறைசார் நபர்கள் அனைவரிடமும் கருத்துகளைப் பெற்றே குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. நாட்டில் தற்போது நடைமுறையில் உள்ள இலவசக் கல்வி முறை தொடர்பில் விரிவான கருத்தாடல் ஒன்று அவசியம். நாட்டு மக்களையும் உள்ளடக்கிய தேசிய அரச கொள்கையொன்றை தயாரிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. பாராளுமன்றத்தின் சட்டமொன்றை நிறைவேற்றுவதன் மூலமே இந்தக் கொள்கை தயாரிக்கப்பட வேண்டும். அரசாங்கங்கள் , அமைச்சர்கள் மாறிவிட்டார்கள் என்பதற்காக அந்தக் கொள்கை மாறக்கூடாது. இந்த நாட்டில் கல்வி முறையில் சீர்திருத்தங்களை ஏற்படுத்துவது குறித்து சிலர் அரசியல் ஆதாயம் அடையலாம். பிள்ளைகளின் கல்வியை அழித்து விடுவதா? இல்லையா? என்பதை நாட்டு மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எனவே, நாட்டின் கல்வி முறையை மாற்றுவதற்கு அவசியமான வழிகாட்டல்களை வழங்க நாம் தயாராக உள்ளோம். ஆனால் இந்த நாட்டில் உயர்கல்வியை சீர்குலைக்கும் அமைப்புகளுக்கு வேண்டியவாறு செயற்பட அரசாங்கம் தயாராக இல்லை.” என்றும் இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதற்கான பொருத்தமான பரிந்துரைகளை வழங்குவதற்கான பாராளுமன்ற விசேட தெரிவுக் குழுவின் தலைவர் அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ, தெரிவித்தார். https://www.virakesari.lk/article/164446
-
சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது
யாழ்.தையிட்டியில் காணி அளவிடும் பணிகள் இடைநிறுத்தம்! யாழ்ப்பாணம் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள தனியார் காணியினை அளவிடும் பணி தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. குறித்த காணியை சுவீகரிப்பதற்காக இன்றைய தினம் காணி அளவீடு மேற்கொள்ளப்படவிருந்ததாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அறிவித்திருந்தது. இந்த நிலையில் குறித்த திட்டத்தை தடுத்து நிறுத்த மக்களுக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு விடுத்திருந்தது. இதற்கமைய மக்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையில் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியினை அளவிடும் நடவடிக்கை கைவிடப்பட்டுள்ளது. இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் மக்கள் பிரதிநிதிகள், காணி உரிமையாளர்கள், மற்றும் பொது மக்கள் பங்கேற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. https://thinakkural.lk/article/272717
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழியிலிருந்து தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த பெண் போராளிகளுடையது என சந்தேகிக்கப்படும் சில சாட்சியங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
-
கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி : விடுதலைப்புலி பெண்போராளிகளின் இருமனித எச்சங்கள் மீட்பு ; துப்பாக்கி ரவைகள், ஆடைகளில் இலக்கங்கள்
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் உரியவாறு முன்னெடுக்கப்படவேண்டியது அவசியமென அமெரிக்கா, கனடா வலியுறுத்தல் 11 SEP, 2023 | 09:40 PM (நா.தனுஜா) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையின மக்களின் காணிகள் அபகரிக்கப்படுவது குறித்து தீவிர கரிசனையை வெளிப்படுத்தியுள்ள அமெரிக்க மற்றும் கனேடியப் பிரதிநிதிகள், கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் உரியவாறு முன்னெடுக்கப் படவேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 54 ஆவது கூட்டத்தொடர் திங்கட்கிழமை ஜெனிவாவில் ஆரம்பமானது. இங்கு ஐ.நா மனித உரிமைகள் பதில் உயர்ஸ்தானிகர் நாடா அல்-நஷீஃப்பின் உரையைத் தொடர்ந்து ஏனைய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் உரையாற்றினர். அதன்படி பேரவையில் கருத்து வெளியிட்ட அமெரிக்கப்பிரதிநிதி, இலங்கை தொடர்பான உயர்ஸ்தானிகரின் அறிக்கையை வரவேற்பதாகக் குறிப்பிட்டதுடன் ஊழல் ஒழிப்புச்சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டமை, பயங்கரவாதத்தடைச்சட்டத்தின்கீழ் கைதுசெய்யப்பட்ட பலர் விடுவிக்கப்பட்டமை உள்ளடங்கலாக இலங்கையால் முன்னெடுக்கப்பட்ட முன்னேற்றகரமான நடவடிக்கைகளைப் பாராட்டுவதாகத் தெரிவித்தார். இருப்பினும் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் சிறுபான்மையின மக்களுக்குச் சொந்தமான காணிகள் அபகரிக்கப்படும் சம்பவங்கள் குறித்து கரிசனையை வெளிப்படுத்திய அவர், பயங்கரவாதத்தடைச்சட்டம் சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைக்கப்படவேண்டியதன் அவசியத்தையும் மீளவலியுறுத்தினார். அதேபோன்று பாதிக்கப்பட்ட தரப்பினரை மையப்படுத்தியதும், வெளிப்படைத்தன்மை வாய்ந்ததுமான பொறிமுறையின் ஊடாக கடந்தகால மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் என்பன உறுதிப்படுத்தப்படவேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார். அதேவேளை பேரவையில் உரையாற்றிய கனேடியப் பிரதிநிதி, இலங்கையின் அண்மையகால மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் தீவிர கரிசனையை வெளிப்படுத்தினார். குறிப்பாக முல்லைத்தீவு, கொக்குத்தொடுவாயில் கண்டறியப்பட்டுள்ள மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகள் மற்றும் விசாரணைகள் என்பன உரியவாறு முன்னெடுக்கப்படவேண்டும் என்று வலியுறுத்திய அவர், பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்தை உறுதிசெய்வதற்குரிய அர்த்தமுள்ள நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும் என்றும் குறிப்பிட்டார். அத்தோடு பயங்கரவாதத்தடைச்சட்டத்தை சர்வதேச நியமங்களுக்கு அமைவாகத் திருத்தியமைத்தல் மற்றும் பால்புதுமையின சமூகத்தினரது உரிமைகளைப் புறக்கணிக்கும் வகையிலான சரத்துக்களை நீக்கல் என்பன பற்றியும் அவர் வலியுறுத்தினார். https://www.virakesari.lk/article/164367
-
கொக்குதொடுவாயில் மனித எச்சங்கள் மீட்பு
கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் எலும்புக்கூட்டுத் தொகுதிகள் : எத்தனை எலும்புக்கூடுகள் இருக்கின்றன என்பதை இனங்காண்பதில் சவால் 11 SEP, 2023 | 07:27 PM முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழியில் மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் ஒன்றோடு ஒன்று நெருக்கமாகவும், ஒன்றின் மீது ஒன்று பல அடுக்காகவும் காணப்படுவதால், எத்தனை எலும்புக்கூடுகள் காணப்படுகின்றன என்பதை இனங்காண்பதில் சவால்கள் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கொக்குத்தொடுவாய் மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகள் ஐந்தாவதுநாளாக (11) இன்று இடம்பெற்ற நிலையில், அகழ்வுப் பணிகளின் நிறைவில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே, இத் தகவலை வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் மேலும் அறியவருகையில், முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழியின் அகழ்வாய்வு நடவடிக்கைகள் செப்ரெம்பர் (06) புதனன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிலையில் ஐந்தாம்நாள் அகழ்வாய்வுகள் செப்ரெம்பர் (11) இன்று முல்லைத்தீவு நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் இடம்பெற்றது. அதேவேளை குறித்த அகழ்வாய்வுகளில் முல்லைத்தீவு சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா, சட்டத்தரணி கே.எஸ்.நிரஞ்சன், தடையவியல் பொலிசார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஆகியோரின் பங்கேற்புடன், தொல்லியல் பேராசிரியர் ராஜ் சோமதேவ தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது. ஐந்தாம்நாள் அகழ்வாய்வுகள் தொடர்பில் சட்டவைத்திய அதிகாரி கே.வாசுதேவா கருத்துத் தெரிவிக்கையில், ஐந்தாம்நாள் அகழ்வாய்வுகளில் இரண்டுமனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் முழுமையாகவும், ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதி பகுதியளவிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளதுடன், ஒரு துப்பாக்கி ரவையும் தடயப் பொருளாக எடுக்கப்பட்டுள்ளது. ஒன்றின் மீது ஒன்று மிக நெருக்கமாகவும், பல அடுக்குகளாகவும் மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் காணப்படுகின்றன. எனவே எத்தனை மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் உள்ளன என்பதை தற்போது இனங்காணமுடியாதுள்ளது. படிப்படியாக அகழ்வுகளை மேற்கொண்டு, மனித எச்சங்களின் மேலுள்ள மண்ணை அகற்றும்போதுதான் எத்தனை மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் உள்ளன என்பதை இனங்காண முடியும். இன்னும் ஓரிரு தினங்களில் எத்தனை எலும்புக்கூட்டுத்தொகுதிகள் இனங்காணப்பட்டுள்ள என்பதை தெரிவிக்கமுடியும். அதேவேளை கடந்த செப்ரெம்பர்(08) வெள்ளியன்று இரண்டு மனித எலும்புக்கூட்டுத்தொகுதிகள் மீட்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மொத்தம் 04 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் முழுமையாகவும், ஒரு மனித எலும்புக்கூட்டுத் தொகுதி பகுதியளவிலும் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இதுவரை 14மீற்றர் நீளத்திலும், 3மீற்றர் அகலத்திலும், 1.5மீற்றர் தொடக்கம் 2மீற்றர் வரையான ஆழத்திலும் அகழ்வாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அத்தோடு கடந்த செப்ரெம்பர் (09) சனிக்கிழமையன்று விடுதலைப்புலிகள் அமைப்பின் தகடு ஒன்று எடுக்கப்பட்டது. அதுதொடர்பில் பின்னர் அறியத்தரப்படும் என்றார். மேலும் குறித்த ஐந்தாம் நாள் அகழ்வுப்பணிகள் இடம்பெறும் இடத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், செல்வராசா கஜேந்திரன் ஆகியோர் வருகைதந்திருந்ததுடன், முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர்களான துரைராசா ரவிகரன், அனந்தி சசிதரன் முன்னாள் உள்ளூராட்சிமன்ற தலைவர்கள், உறுப்பினர்கள், சமூகசெயற்பாட்டாளர்கள், கிராமமட்ட பிரதிநிதிகள் எனப் பலரும் பிரசன்னமாகியிருந்தனர். https://www.virakesari.lk/article/164363
-
7 வயது மாணவிக்கு எயிட்ஸ் தொற்று : காலங்கடந்து வெளியான திடுக்கிடும் உண்மை!
Published By: VISHNU 10 SEP, 2023 | 12:27 PM (எம்.மனோசித்ரா) 8 மாதங்களில் சிறுவர்கள் மீதான 654 பாலியல் குற்றச் சம்பவங்கள் பதிவு அறியாமை , சமூகத்தின் விமர்சனங்கள் மீதான அச்சத்திலிருந்து பெற்றோர் வெளிவர வேண்டும் சிறுவர்களை இலக்கு வைத்து அதிகரித்து வரும் பாலியல் வன்கொடுமைகள் இலங்கையில் சமீப காலமாக மிகவும் அதிகரித்து உயர் புள்ளிகளைப் பதிவு செய்துள்ளது. நவீன காலத்தில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் மற்றும் உளவியல் சார் வன்கொடுமைகளுக்கு நிலையான தீர்வை நோக்கி ஐக்கிய நாடுகள் சபை உட்பட பல உலக அமைப்புக்கள் செயற்படுகின்ற போதிலும் , அவற்றால் இறுதி இலக்கை அடைய முடியாதுள்ளது. பன்னாடுகளில் காணப்படுகின்ற பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் , வறுமை , மனித குலத்துக்கு அப்பாலான செயற்பாடுகளால் சிறுவர் தொழிலாளர்கள் உருவாக்கப்படுகின்றனர். இவ்வாறு நெருக்கடிக்கு உள்ளாகும் சிறுவர்கள் முதல் சவாலாக பாலியல் ரீதியிலான வன்கொடுமைகள் காணப்படுகின்றன. இலங்கையிலுள்ள சிறுவர்களும் இதில் உள்ளடங்குகின்றனர். பாடசாலைக் கல்வியை இடைநிறுத்தி தொழிலுக்குச் செல்வதால் பல மில்லியன் கணக்கான குழந்தைகளின் எதிர்காலம் ஆபத்தில் உள்ளதாக சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organization) தெரிவித்துள்ளது. இதனால் சிறுவர்கள் பாலியல் சுரண்டல்களை எதிர்கொள்ளும் வீதம் அதிகரித்துள்ளதாக சுட்டிக்கட்டியுள்ள அந்த அமைப்பு, இதற்கு தீர்வினைக் காண்பதற்கு விரைவாக செயற்படாவிட்டால் நிலைமை மேலும் மோசமடையும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்நிலையில் இலங்கையின் நிலைமையை அவதானிக்கும் போது சிறுவர் துஷ்பிரயோகம் , சிறுவர்கள் மீதான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றது. இதில் குறிப்பிட்டுக் கூற வேண்டிய விடயம் யாதெனில் சிறுவர்கள் பாடசாலைகளிலும் , தனியார் வகுப்புக்களிலும் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்படுகின்றமையாகும். சிறுவர்கள் மத்தியில் இதுவரையும் பாலியல் தொடர்பான புரிதல் இன்மையும் , பெரும்பாலான பெற்றோரின் அறியாமையும் , அநாவசிய அச்சமும் இவற்றுக்கான வாய்ப்புக்களை அதிகரிக்கச் செய்கின்றன. இவ்வாறான நிலையில் ஆசிரியர் ஒருவரால் 7 வயதுடைய பாடசாலை மாணவியொருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பான தகவல்கள் சுமார் 8 மாதங்களின் பின்னர் வெளிக் கொண்டு வரப்பட்டுள்ளது. (தனிநபர் தகவல் பாதுகாப்பு நலன் கருதி பாடசாலையின் பெயர் , பாதிக்கப்பட்ட மற்றும் சந்தேகநபரின் பெயர் விபரங்கள் குறிப்பிடப்படவில்லை). சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஆரம்ப வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்கும் ஆசிரியர் என்பதோடு , அவரது மனைவி பாலர் பாடசாலை ஆசிரியையாவார். சந்தேகநபர் 3, 4 மற்றும் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மேலதிக வகுப்புக்களை நடத்துவதோடு , அவரது மனைவி முதலாம் மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மேலதிக வகுப்பினை நடத்துகின்றார். இவர்கள் இருவர் தமது வீட்டிலேயே மேலதிக வகுப்புக்களை நடத்தியுள்ளனர். கணவன் வீட்டிற்குள் காணப்படும் அறையொன்றிலும் , மனைவி வீட்டிற்கு வெளியிலும் வகுப்புக்களை நடத்தியுள்ளனர். இவ்வாறானதொரு சூழலிலேயே சிறுமி குறித்த ஆசிரியரால் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் உடல் ரீதியான மாற்றங்களை அவதானித்த அவரது தாயார் , சிறுமியை மருத்துவ சிகிச்சைக்க்காக அழைத்து சென்ற போதே தனது மகள் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாகியுள்ளமையை அறிந்து கொண்டுள்ளார். இது தொடர்பில் சிறுமி வழங்கிய தகவலின் அடிப்படையில் குறித்த ஆசிரியர் சந்தேகநபராக அடையாளம் காணப்பட்டுள்ளார். ஆனால் அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க அவரது பெற்றோர் முன்வரவில்லை. காரணம் சமூகம் தொடர்பான அச்சமும் , அதனால் ஏற்படக் கூடிய அவமானமும் அவர்களை முற்போக்காக சிந்திக்க இடமளிக்கவில்லை. இதனால் அந்த பெற்றோர் அங்கிருந்து இடம்பெயர்ந்து பிரிதொரு பிரதேசத்தில் குடியமர்ந்ததோடு, அதே பிரதேசத்திலுள்ள பாடசாலையில் தனது மகளை சேர்த்துள்ளனர். குறித்த சிறுமியை முதலில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர் சம்பவம் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளிக்குமாறு பெற்றோரிடம் தெரிவித்துள்ள போதிலும் , அவர்கள் மகளின் எதிர்காலம் கருதி அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவில்லை எனத் தெரியவருகிறது. எவ்வாறிருப்பினும் கடந்த ஆகஸ்ட் மாதம் குறித்த சிறுமி சுகயீனமடைந்ததையடுத்து , அவரது தாயார் அவரை அருகிலுள்ள ஆதார வைத்தியசாலையொன்று அழைத்துச் சென்றுள்ளார். இதன் போது மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனையில் சிறுமி எயிட்ஸ் (எச்.ஐ.வி.) தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் சிறுமியை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய வைத்தியர்கள் பெற்றோரிடம் மேலதிக தகவல்களைக் கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடளித்துள்ளனர். வைத்தியர்களின் முறைப்பாட்டுக்கமைய கடந்த ஆகஸ்ட் 23ஆம் திகதி சந்தேகநபரான ஆசிரியர் கைது செய்யப்பட்டு 24ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு செப்டெம்பர் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். (விளக்கமறியல் இம்மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.) வேலியே பயிரை மேய்தலைப் போன்று பெற்றோருக்கு அடுத்ததாக பிள்ளைகளின் பாதுகாவலராகவும் , தெய்வத்துக்கு மேலாகவும் கருதப்படுகின்ற ஆசிரியர்களே இவ்வாறு மாணவர்களின் வாழ்வை சீரழிப்பது மன்னிக்க முடியாத , தண்டிக்கப்பட வேண்டிய குற்றமாகும். பிரணீதா வர்ணகுலசூரிய இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இந்த சந்தேகநபர் மாத்திரமின்றி, சிறுவர்களை தமது பாலியல் இச்சையைத் தீர்த்துக் கொள்வதற்காக பயன்படுத்திக் கொள்ளும் ஒவ்வொரு குற்றவாளிகளும் தண்டிக்கப்பட வேண்டும் என்று ஐக்கிய மனித உரிமைகள் அமைப்பின் (United Nations Human Rights Organization) நிறைவேற்றுப்பணிப்பாளர் பிரணீதா வர்ணனுலசூரிய கூறுகின்றார். சிறுவர் துஷ்பிரயோகங்கள் மற்றும் அவர்களுக்கெதிரான வன்முறைகள் தொடர்பில் இலங்கையில் சேவைகளை வழங்கி வரும் இலாப நோக்கற்ற அமைப்பின் நிறைவேற்றுப்பணிப்பாளரும், சிறுவர் பாதுகாப்பு தொடர்பான சமூக செயற்பாட்டாளருமான பிரணீதா வர்ணகுலசூரியவிடம் இந்த சம்பவம் தொடர்பில் வினவிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். 'பெற்றோரின் அறியாமை, அச்சம் மற்றும் வெட்கத்தால் சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டமை கடந்த 7 மாத காலமாக மறைக்கப்பட்டுள்ளது. அதே போன்று ஆரம்பத்திலேயே இது தொடர்பில் தெரிந்து கொண்ட வைத்தியரும் பொலிஸாருக்கு அறிவிக்கவில்லை. இதனால் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை. இது மிகவும் கவலைக்குரிய விடயமாகும். சிறுவர்களைப் பாதுகாக்க வேண்டியவர்களே, அதற்கு முரணாகச் செயற்பட்டால் அதனை எவ்வாறு கூறுவது?' என்ற கேள்வியை கண்ணீருடன் முன்வைக்கிறார் பிரணீதா வர்ணகுலசூரிய. 'இந்த சம்பவத்தையும், அதனுடன் தொடர்புடைய சட்ட நடவடிக்கைகளையும் நாம் தொடர்ந்து அவதானித்து வருகின்றோம். சந்தேகநபரிடம் இந்த மாணவி தவிர மேலும் 14 மாணவிகள் மேலதிக வகுப்பிற்குச் சென்றுள்ளனர். அது மாத்திரமின்றி சந்தேநபருக்கும் 8 மற்றும் 11 வயதுகளில் இரு பெண் பிள்ளைகள் உள்ளனர். உண்மையில் அவர்கள் உட்பட ஏனைய மாணவிகளும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். பெருந்தோட்டங்களில் லயன் அறைகளுக்குள் இதுபோன்று மறைக்கப்பட்ட கதைகள் எத்தனை இன்னும் இருக்கக் கூடுமல்லவா? இந்த சம்பவத்துக்கு சந்தேகநபரின் மனைவியும் பொறுப்பேற்க வேண்டும். இது தொடர்பில் நாம் சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையிடம் முறைப்பாடளிக்கவில்லை. காரணம் அந்த அதிகாரசபையால் எந்தவொரு நடவடிக்கைகளையும் முன்னெடுக்க முடியாது. இதற்கு முன்னர் பல சந்தர்ப்பங்களில் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ள போதிலும், சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையால் அவை மூடி மறைக்கப்பட்டுள்ளன. அரச நிறுவனமான சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை இவ்வாறான குற்றச் செயல்களின் போது குற்றவாளிகளுக்கு எதிராக சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு அழுத்தம் பிரயோகித்திருந்தால் இன்று அந்த சிறுமிக்கு இந்த நிலைமை ஏற்பட்டிருக்காது.' என்றும் பிரணீதா வர்ணகுலசூரிய தெரிவித்தார். குறித்த சிறுமி ஜனவரி மாதமளவிலேயே பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டிருக்கின்றார். ஆனால் 7 மாதங்களின் பின்னரே இவ்விடயம் வெளிக்கொண்டுவரப்பட்டுள்ளது. எவ்வாறிருப்பினும் பருவமடையாத இந்த சிறுமிக்கு எவ்வாறு எயிட்ஸ் தொற்று ஏற்பட்டது என்ற சந்தேகம் காணப்படுகிறது. எனவே சிறுமியின் பெற்றோர் , சந்தேகநபரான ஆசிரியர் மற்றும் அவரது குடும்பத்தினரும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தால் மாத்திரமே சிறுமிக்கு தொற்று ஏற்பட்டதன் மூலத்தை அறிய முடியும். சம்பவம் இடம்பெற்றதற்கும் , அது தொடர்பான தகவல்கள் வெளியாவதற்கும் இடையில் காணப்பட்ட 7 மாத காலத்தை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு கோணங்களிலும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் நாம் வலியுறுத்துகின்றோம் என்றும் பிரணீதா வர்ணகுலசூரிய மேலும் தெரிவித்தார். எவ்வாறிருப்பினும் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் பொறுப்பு கூற வேண்டிய அரச நிறுவனம் என்ற ரீதியில் தேசிய சிறுவர் அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் சானக உதயகுமார அமரசிங்கவை பல முறை தொடர்பு கொண்டு வினவ முயற்சித்த போதிலும் , அவர் பதிலளிக்கவில்லை. பின்னர் சிறுவர் அபிவிருத்தி அதிகாரசபையின் சட்டப்பிரிவின் சிரேஷ்ட அதிகாரியொருவரிடம் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்பில் எடுக்கப்படக் கூடிய சட்ட நடவடிக்கைகள் தொடர்பில் வினவிய போது அவர் விளக்கமளிக்கையில் , 'இந்த சம்பவம் தொடர்பில் இதுவரையில் சிறுவர் பாதுகாப்பு சபைக்கு முறைப்பாடளிக்கப்படவில்லை. எவ்வாறிருப்பினும் இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில் தகவல்கள் தெரிந்தவர்கள் எமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கவோ அல்லது முறைப்பாடளிக்கவோ முடியும். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் அரச பாடசாலையொன்றின் ஆசிரியர் என்பதால் அவர் அரச உத்தியோகத்தர் ஆவார். சகல அரச உத்தியோக்கதர்களுக்கும் பொதுவான ஒழுக்க கோவையொன்று காணப்படுகிறது. அதன் அடிப்படையில் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டின் கீழ் குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டு , விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் மாகாண கல்வி பணிப்பாளருக்கு அறிவிக்கப்பட வேண்டும். எமக்கு தகவல்கள் கிடைக்கப் பெற்றிருந்தால், சந்தேகநபரான ஆசிரியருக்கு எதிராக ஒழுக்க விசாரணையை முன்னெடுக்குமாறு நாம் மாகாண கல்வி பணிப்பாளருக்கு அறிவித்திருப்போம். இதன் போது பாதிக்கப்பட்ட மாணவியால் சாட்சியமளிக்கப்படும். விளக்கமறியல் மற்றும் வழக்கு விசாரணை ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு 'அரச சேவையின் நற்பெயருக்கு கலங்கம் ஏற்படுத்தல்' என்ற குற்றச்சாட்டின் கீழ் குறித்த ஆசிரியரை பணியிடை நிறுத்தம் செய்ய அல்லது நிரந்தர பணி நீக்கம் செய்ய அல்லது இடமாற்றத்தை வழங்க முடியும். எனினும் இந்த நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு பிரதான வழக்கு விசாரணை நிறைவடைய வேண்டும். உண்மையில் ஒரு ஆசிரியரின் கடமை மாணவர்களுக்கு கல்வி கற்பிப்பதேயன்றி, அவர்களிடம் தனது இச்சைகளைத் தீர்த்துக் கொள்வதல்ல. இவ்வாறான சம்பவங்கள் மறைக்கப்பட வேண்டியவையல்ல. எனவே இவை தொடர்பில் சமூகத்துக்கும் , அரசியல் தலைவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமையும் பொறுப்பும் ஊடகங்களுக்கு காணப்படுகிறது. அரச உத்தியோகத்தர்களுக்கான நடத்தை நெறிமுறையை மீறியுள்ள இந்த ஆசிரியர் உட்பட இவரைப் போன்ற அனைவரும் தண்டிக்கப்பட வேண்டியவர்கள். இவ்வாறான சம்பவங்கள் எவரும் அறியாமல் மறைக்கப்பட்டிருக்கக் கூடும். இவை தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பிலான புரிதல் இன்மையே அதற்கான காரணமாகும். எனவே அனைவருக்கும் அவற்றை அறிய செய்யும் படியான வேலைத்திட்டங்களை முன்னெடுத்தால் சிறுவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும்.' எனத் தெரிவித்தார். இலங்கையில் கடந்த ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் சிறுவர் துஷ்பிரயோகம் உள்ளிட்ட 32 வகையான குற்றச்சாட்டுகளின் 6408 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது. அவற்றில் 273 பாலியல் துன்புறுத்தல் சம்பவங்களும் , 6 பாலியல் சுரண்டல் சம்பவங்களும் , 39 கற்பளிப்புக்களும் , 3 முறையற்ற பாலியல் உறவுக்கு உட்படுத்தலுடன் தொடர்புடைய சம்பவங்களும் , 309 பாலியல் துஷ்பிரயோக சம்பவங்களும் , 16 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமை தொடர்பில் 6 சம்பவங்களும் , சிறுவர்களிடம் தவறான நடத்தை கொண்டமை தொடர்பில் 18 சம்பவங்களும் பதிவாகியுள்ளன. உண்மையில் இவை சில தரவுகள் மாத்திரமே. உத்தியோகபூர்வமாக வெளிவராத பல சம்பவங்கள் சமூகத்தில் இருக்கக் கூடும். எனவே துரதிஷ்டவசமாக இவ்வாறான சம்பவங்களை எதிர்கொண்டுள்ள சிறுவர் மற்றும் அவர்களது பெற்றோர் அடுத்த கட்டமாக சரியான தீர்மானங்களை எடுக்க வேண்டும். சமூகத்தின் விமர்சனங்களுக்கு அஞ்சி ஊரையும், பாடசாலையையும் மாற்றுவதால் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு விட முடியாது. எனவே பெற்றோர் முதலில் விழிப்புணர்வுடன் முற்போக்காக சிந்தித்து செயற்பட வேண்டும். சமூகத்துக்குள் காணப்படும் போட்டித்தன்மையும் , மற்றவரைப் போன்று நாமும் எமது பிள்ளைகளை எல்லா வகுப்புக்களுக்கும் அனுப்ப வேண்டும் எண்ணத்திலும் வீண் சுமைகளை சிறுவர்கள் மீது சுமத்துவதை நிறுத்த வேண்டும். இலங்கையில் பாலர் பாடசாலை மற்றும் ஆரம்ப பாடசாலைகளில் கற்பித்தல் முறைமைகள் மிகவும் இலகுவானவையாகவே காணப்படுகின்றன. எனவே ஆரம்ப பிரிவு மாணவர்களை மேலதிக வகுப்புக்களுக்கு அல்லது தனியார் வகுப்புக்களுக்கு அனுப்ப வேண்டிய கட்டாயம் கிடையாது. 5ஆம் தர மாணவர்களை புலமைப்பரிசிலுக்கான வகுப்புக்களுக்கு அனுப்புவதாயினும் தமது பிள்ளைகளின் பாதுகாப்பினை முதலில் உறுதிப்படுத்த வேண்டியது பெற்றோரின் கடமையாகும். அதே போன்று பெற்றோருக்கு அடுத்ததாக ஆசிரியர்கள் மாணவர்களின் பாதுகாவலர்களாக வேண்டும். ஆசிரியர்கள் என்பதற்கு அப்பால் தாமும் ஒரு பெற்றோர் என்ற ரீதியில் ஆசிரியர்கள் ஏனைய சிறுவர்களை பார்க்க வேண்டும். அதனை விடுத்து சொற்ப சந்தோஷங்களுக்காக ஆசான் என்ற புனிதமான தொழிலை இழிவாக்கி விடக் கூடாது. https://www.virakesari.lk/article/164217
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
"ABC” ஜூஸ் – நன்மைகள் என்ன? என்னென்ன சத்துக்கள் உள்ளன? இது மேஜிக் பானமா? – அறிவியல் மற்றும் ஆதார பூர்வமாக அலசுவோம். ஜூசை வடிகட்டாது குடிக்கவேண்டுமாம், மருத்துவர் அருண்குமார்.
-
சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது
தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியை சுவீகரிக்க முயற்சி யாழ்ப்பாணம் தையிட்டியில் விகாரை அமைக்கப்பட்டுள்ள காணியை சுவீகரிக்க முயற்சி எடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளது. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக அதன் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கே.சுகாஷ் தெரிவித்துள்ளார். தையிட்டி பிரதேசத்தில் விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள காணியை அளவீடு செய்வதற்கு நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதிக்கு வருகை தர உள்ளதாக நம்பத்தகுந்த தகவல் கிடைத்துள்ளன. இந்த அளவீட்டு பணிகள் இடம்பெறுமாயின் அந்தக் காணிகள் நிரந்தரமாகவே சுவீகரிப்பதற்கான வாய்ப்புகள் ஏற்படும் என அவர் தெரிவித்துள்ளார். எனவே குறித்த விகாரைக் கட்டுமானம் மற்றும் நில அளவைப் பணிகளை எதிர்த்து நாளை மறுதினம் தையிட்டி பகுதியில் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப்பேச்சாளர் கே. சுகாஷ் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/272570
-
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
நல்ல ஏற்பாடு.