Everything posted by ஏராளன்
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் 8 ஆம் திகதி ஆரம்பம்
இலங்கைக்கு மிக முக்கியத்துவமானது : அரசாங்கம் மிக நுணுக்கமாக அணுக வேண்டும் - பேராசிரியர் பிரதீபா மஹாநாம 08 Sep, 2025 | 01:58 PM (எம்.மனோசித்ரா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத் தொடர் ஆரம்பமாகியுள்ளது. இந்தக் கூட்டத் தொடர்பில் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். 2010 இலிருந்து இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிரேரணைகள் நிறைவுக்கு கொண்டுவரப்படாவிட்டால் அவற்றை இணைத்து ஐ.நா. பொதுசபைக் கூட்டத்திலும் பின்னர் பாதுகாப்பு சபையிலும் சமர்ப்பிக்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது. எனவே அரசாங்கம் இதனை மிகவும் நுணுக்கமாக அணுக வேண்டும் என பேராசிரியர் பிரதீபா மஹாநாம தெரிவித்தார். கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், 2010ஆம் ஆண்டிலிருந்து இலங்கைக்கு எதிராக ஐ.நா.வில் பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அவ்வாறிருக்கையில் இவ்வாண்டும் புதிய பிரேரணையொன்று முன்வைக்கப்படவுள்ளது. இவ்வாறு தொடர்ச்சியாக முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் பிரேரணைகளை நாம் நிறைவுக்கு கொண்டு வராவிட்டால் இவை அனைத்தையும் இணைத்து நியூயோர்க்கிலுள்ள ஐ.நா. பொதுசபைக் கூட்டத்தில் சமர்ப்பிப்பர். அவ்வாறு சமர்ப்பிக்கப்படும் பட்சத்தில் அதனை நேரடியாக பாதுகாப்பு சபை கூட்டத்துக்கும் அனுப்ப முடியும். இது மிகவும் பாரதூரமானதாகும். பாதுகாப்பு சபைக் கூட்டத்தில் எமக்கு சார்பாக இந்த பிரேரணைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படாவிட்டால் எமக்கு வெவ்வேறு தடைகள் விதிக்கப்படக் கூடும். எனவே இம்முறை ஜெனீவா கூட்டத்தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இம்முறை இலங்கை தொடர்பில் முன்வைக்கப்படவுள்ள பிரேரணை குறித்த வரைவொன்று வெளிவிவகார அமைச்சிற்கு வழங்கப்பட்டது. அதில் இலங்கை செய்ய வேண்டியவை தொடர்பில் மிகத் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அவற்றில் பிரதானமானது புதிய பிரேரணைக்கு இலங்கை இணை அனுசரணை வழங்க வேண்டும் என்பதாகும். ஆனால் இலங்கை அரசாங்கம் அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளமை சிறந்ததாகும். காரணம் இலங்கை ஒரு சுயாதீன இராச்சியமாகும். எவ்வாறிருப்பினும் இதற்கு முந்தைய பிரேரணைக்கு அமெரிக்க இணை அனுசரணை வழங்கியிருக்கிறது. ஆனால் தற்போது அமெரிக்கா அதன் அங்கத்தவர்களை விலக்கிக் கொண்டுள்ளது. இதனால் இதற்கு இணை அனுசரணை வழங்கிய பிரித்தானியா தற்போது தனித்து விடப்பட்டுள்ளது. எனவே தான் அவர்கள் எம்சார்பில் சிறந்த விடயங்களை முன்வைத்திருந்தனர். தற்போது மனித உரிமை மீறல்கள் தொடர்பான வேலைத்திட்டங்கள் படிப்படியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எவ்வாறிருப்பினும் பிரதான சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. அவற்றில் முதலாவது ரோம் உடன்படிக்கையில் கையெழுத்திட வேண்டும் என்பதாகும். இதில் கையெழுத்திட்டால் இராணுவத்தினர் எவருக்கும் வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது. இரண்டாவது பயங்கரவாத தடை சட்டத்தை நீக்குவதற்கு நாம் இணக்கம் தெரிவித்திருக்கின்றோம். அதற்கு பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை அறிமுகப்படுத்துவதற்கும் இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சிறந்த விடயமாகும். திட்டமிட்ட குற்றச்செயல்கள் நாடளாவிய ரீதியில் இடம்பெறுவதால் இது தொடர்பில் சிந்தித்து தீர்மானங்கள் எடுக்கப்பட வேண்டும். அடுத்தது தேசிய நல்லிணக்கம், புனர்வாழ்வளிப்பு உள்ளிட்டவையாகும். அவை சிறந்த முறையில் முன்னெடுக்கப்படுகின்றன. இறுதியான வடக்கிலுள்ள காணி விடுவிப்பு பிரச்சினையாகும். தற்போது வடக்கில் பெரும்பாலான காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளன. ஜெனீவாவில் 77 அங்கத்துவ நாடுகள் உள்ளன. அவற்றில் குறைந்தபட்சம் 24 நாடுகளின் ஆதரவைப் பெற்றால் போதுமானது. அதற்கான சாதகமான சூழல் எமக்கு காணப்படுகிறது. இதில் கால அவகாசத்தை கோருவதை விட முறையான நீண்டகால வேலைத்திட்டத்தை திட்டமிட வேண்டும். எவ்வாறிருப்பினும் இவற்றில் முக்கியமானது இந்தியாவின் நிலைப்பாடாகும். இந்தியா, இலங்கைக்கு சாதமாக தீர்மானத்தை எடுக்கும் பட்சத்தில் அதிகளவான நாடுகளின் ஆதரவைப் பெற முடியும் என்றார். https://www.virakesari.lk/article/224511
-
இளம் தலைமுறைக்கு சட்டம் கற்பிக்கவேண்டும் - ஆணைக்குழு தலைவர் ரங்க திஸாநாயக்க
08 Sep, 2025 | 01:46 PM (இராஜதுரை ஹஷான்) சட்டத்தை மதிக்கும் சமூகம் ஒன்று தோற்றம் பெற வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரும் சட்டத்தை பற்றி முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். அடிப்படை சட்டத்தை பாடத்திட்டத்துக்குள் உள்ளடக்கினால் சிறந்த சமூகத்தை உருவாக்கலாம். தற்போதைய இளம் தலைமுறையினரின் எதிர்காலத்துக்காக சட்டத்தை அவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் தலைவர் ரங்க திஸாநாயக்க தெரிவித்தார். சட்டத்தை மதிக்கும் சமூகம் தொடர்பில் தனியார் தொலைக்காட்சியுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் குறிப்பிட்டதாவது, கைதுகள் தொடர்பில் தற்போது மாறுப்பட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. நாட்டு மக்கள் அனைவரும் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்கிறார்கள். 225 உறுப்பினர்கள் ஒட்டுமொத்த மக்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் சட்டத்தை இயற்றுகிறார்கள். ஆகவே மக்கள் தாம் தெரிவு செய்யும் பிரதிநிதிகள் பற்றி போதுமான தெளிவை பெற்றிருக்க வேண்டும். நாட்டின் சட்டத்தை பற்றி மக்கள் பூரண தெளிவில்லாமல் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்தால் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்த முடியாது. ஆகவே அரசியலமைப்பு மற்றும் பாராளுமன்றத்தால் இயற்றப்படும் சட்டம் தொடர்பில் முதலில் மக்கள் தெளிவுப்பெற வேண்டும். எமது கால சூழல் தற்போது கிடையாது.தற்போதைய இளம் தலைமுறையினர் மாறுப்பட்ட வகையில் உள்ளார்கள். அவர்களுக்கு சட்டம் மற்றும் அடிப்படை விடயங்கள் குறித்து போதுமான புரிதல் கிடையாது. குறைந்தபட்சம் அவர்கள் பத்திரிகை கூட வாசிப்பது கிடையாது. சட்டத்தை மதிக்கும் சமூகம் ஒன்று தோற்றம் பெற வேண்டுமாயின் நாட்டு மக்கள் அனைவரும் சட்டத்தை பற்றி முதலில் தெரிந்துக் கொள்ள வேண்டும். அடிப்படை சட்டத்தை பாடத்திட்டத்துக்குள் உள்ளடக்கினால் சிறந்த சமூகத்தை உருவாக்கலாம்.தற்போதைய இளம் தலைமுறையினரின் எதிர்காலத்துக்காக சட்டத்தை அவர்களுக்கு கற்பிக்க வேண்டும். முதலில் சட்டத்தை கடுமையாக செயற்படுத்த வேண்டும் அதற்கு முதலில் சட்டத்தை பற்றி அனைவரும் அறிந்துக் கொள்ள வேண்டும். தமக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எவ்வாறு சட்டத்தின் ஊடாக காப்பீடு பெற்றுக்கொள்வது, எங்கு சென்று முறையிடுவது என்பது கூட பெரும்பாலானோருக்கு தெரியாது. ஆகவே அடிப்படை சட்டத்தை கல்வி கட்டமைப்புக்குள் உள்ளடக்க வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/224518
-
15 வைத்தியசாலைகளுக்கு தொற்றுக் கழிவு மேலாண்மை உபகரணங்களை ஒப்படைத்தது ஜப்பான்
08 Sep, 2025 | 06:29 PM இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் அகியோ இசொமதா, திருகோணமலை பொது வைத்தியசாலையில் தொற்று கழிவு மேலாண்மை உபகரணங்களை ஒப்படைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டார். சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு துணை அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன மற்றும் JICA இலங்கை அலுவலகத்தின் தலைமை பிரதிநிதி கென்ஜி குரொணுமா ஆகியோரும் கலந்து கொண்டனர். இந்த உபகரணங்கள் தொற்று கழிவு மேலாண்மையை மேம்படுத்துவதற்கான திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ளன, இதற்காக ஜப்பான் அரசாங்கத்தால் ஏப்ரல் 2023இல் JPY 503 மில்லியன் (அண்ணளவாக USD 3.7 மில்லியன்) நிதி உதவியுடன் குறிப்புகள் பரிமாற்றம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ், இலங்கையின் 9 மாகாணங்களிலும் உள்ள 15 வைத்தியசாலைகளுக்கு வெப்பநிலை கட்டுப்பாடு மற்றும் வெளியேற்ற வாயு சுத்திகரிப்பு அமைப்புகளுடன் கூடிய மருத்துவ கழிவு எரியூட்டிகள் வழங்கப்படுகின்றன. முறையான கழிவு மேலாண்மை மற்றும் உபகரண செயல்பாடு குறித்த தொழில்நுட்பப் பயிற்சியுடன், நாடு முழுவதும் தொற்று தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டுத் திறனை வலுப்படுத்துவதஇந்தத் திட்டத்தின் நோக்கமாகும். தூதுவர் இசொமதா தனது கருத்துக்களில், இந்தத் திட்டம் தொற்றுக் கழிவு மேலாண்மைக்கான மேம்பட்ட வசதிகளை வழங்குவதோடு மட்டுமல்லாமல், கைசன், 5S மற்றும் TQM முறைகளின் பயிற்சி மூலம் சுகாதாரப் பணியாளர்களின் திறனை வலுப்படுத்துகிறது என்று வலியுறுத்தினார். இந்தத் திட்டம் அதன் திறன் மேம்பாட்டுக் கூறு, பயிற்சியாளர்களுக்கான பயிற்சி (ToT) அணுகுமுறையில், நவீன நடத்தை அறிவியலை அடிப்படையாகக் கொண்ட நட்ஜ் கோட்பாட்டைப் பயன்படுத்தி ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதையும் அவர் எடுத்துரைத்தார். இந்த ToT அணுகுமுறையைப் பயன்படுத்தி, சுகாதார அமைச்சக அதிகாரிகளிடமிருந்து மருத்துவமனை தொற்று கட்டுப்பாட்டு அதிகாரிகள் மற்றும் மருத்துவ சேவை பணியாளர்களின் பரந்த குழுக்களுக்கு கற்றறிந்த அறிவு, பரந்த அடிப்படையில் பாதுகாப்பான மருத்துவ சூழலை திறம்பட உருவாக்குகிறது. திருகோணமலை பொது மருத்துவமனையில் ஒரு வடிகுழாய் ஆய்வகம் இரண்டு ஆண்டுகளில் தொடர்ச்சியான யென் கடன் திட்டத்தின் மூலம் நிறுவப்படும் என்றும், இதன் மூலம் கிழக்கு மாகாணம் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் மருத்துவ சேவைகளின் தரம் மேலும் மேம்படுத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார். சமூக-பொருளாதார மேம்பாடு மற்றும் தேசிய நல்லிணக்கம் நெருக்கமாக ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ள வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்குவதற்கான ஜப்பானின் உறுதிப்பாட்டை தூதர் மீண்டும் உறுதிப்படுத்தினார். எதிர்காலத்தில் இருதரப்பு ஒத்துழைப்பு நிலையானதாக இருக்க, அரசாங்கத்திற்கு அரசு ஒத்துழைப்பு மட்டுமல்லாமல், மருத்துவம் மற்றும் தொடர்புடைய தொழில்துறை துறைகள் உட்பட தனியார் துறை கூட்டாண்மையும் மேலும் ஊக்குவிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கருத்து தெரிவித்தார். நிலையான வளர்ச்சியை அடைவதிலும், இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்பை மேலும் ஆழப்படுத்துவதிலும் இலங்கையை ஆதரிப்பதில் ஜப்பான் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் உள்ளது. https://www.virakesari.lk/article/224566
-
அவுஸ்திரேலியாவில் விஷக்காளான் உணவைக் கொடுத்து மூவரை கொன்ற பெண்! - 33 ஆண்டுகள் பிணையில்லாத ஆயுள் தண்டனை!
Published By: Digital Desk 1 08 Sep, 2025 | 01:23 PM அவுஸ்திரேலிய பெண் எரின் பேட்டர்சனுக்கு 33 ஆண்டுகள் பிணை இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 2023ஆம் ஆண்டு நச்சுத்தன்மையான மதிய உணவினை பரிமாறி மூன்று உறவினர்களைக் கொன்றதாகவும், மற்றொருவரைக் கொல்ல முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மதிய உணவின்போது அவர் நச்சுத்தன்மை வாய்ந்த காளான்கள் கலந்த மாட்டிறைச்சியை தனது உறவினர்களுக்கு பரிமாறியுள்ளதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு, எரின் பேட்டர்சன் குற்றவாளி என கடந்த ஜூலை மாதம் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது. 50 வயதான எரின் விசாரணைகளின்போதும் எந்த விதத்திலும் உணர்ச்சிவசப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் கண்களை மூடிக்கொண்டு நின்ற எரின், நீதிபதி தீர்ப்பினை அறிவிக்கையில் குற்றத்துக்கான தண்டனையை வாசிக்கும்போது மட்டுமே கண்களைத் திறந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 2023ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி எரின் பரிமாறிய உணவினை உட்கொண்டவர்களில் எரினின் முன்னாள் மாமனார் டான் பேட்டர்சன், மாமியார் கெயில் பேட்டர்சன் மற்றும் கெயிலின் சகோதரி ஹீதர் வில்கின்சன் ஆகியோர் அந்த உணவை உட்கொண்ட பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சில நாட்கள் கழித்து உயிரிழந்தனர். அத்துடன், நச்சுத்தன்மையான உணவினை உட்கொண்ட மற்றுமொருவரான, ஹீதர் வில்கின்சனின் கணவர் இயன் வில்கின்சன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று, உயிர் பிழைத்த நிலையில், நீதிமன்ற அறைக்கு வெளியே செய்தியாளர்களிடம் தமது கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/224495
-
பல்தரப்பு “ பசுபிக் ஏஞ்சல் 25” பயிற்சி நடவடிக்கையை ஆரம்பிக்கும் அமெரிக்கா மற்றும் இலங்கை
Published By: Priyatharshan 08 Sep, 2025 | 05:17 PM அமெரிக்காவும் மற்றும் இலங்கையும் பசுபிக் ஏஞ்சல் (Pac Angel) 25 பயிற்சி நடவடிக்கையை கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் இன்று உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்தன. இந்த பயிற்சி நடவடிக்கையை ஆரம்பிக்கும் நிமித்தம் இலங்கைக்கான அமெரிக்க பாதுகாப்பு தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் மெத்தியூ ஹவுஸ் இலங்கை விமானப்படையின் அதிகரிகளுடன் இணைந்துக் கொண்டார். பேரனர்த்த பதிலளிப்பு மற்றும் உயிர்காப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்துவதன் நிமித்தம் செப்டெம்பர் 8 ஆம் திகதி தொடக்கம் 12 ஆம் திகதி வரை நடக்கும் இந்த 5-நாள் பல்தரப்பு நிகழ்வானது, சுமார் 90 அமெரிக்க மற்றும் 120 இலங்கை விமானப்படை வீரர்களை ஒன்றிணைப்பதுடன், அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், இந்தியா, ஜப்பான், மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்களும் மற்றும் பார்வையாளர்களும் இதில் கலந்துகொள்கின்றனர். இந்த பயிற்சியானது, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை, மருத்துவ தயார்நிலை, வான் பாதுகாப்பு மற்றும் பொறியியல் ஒத்துழைப்பு என்பன தொடர்பில் கவனம் செலுத்துகிறது. அமெரிக்காவின் இரண்டு C-130J விமானங்கள் மற்றும் இலங்கையின் Bell-412, B-212 ஹெலிகப்டர்கள் மற்றும் கிங் எயார் 350 விமானம் ஆகியவற்றின் ஆதரவுடன் நடைபெறும் இந்த Pac Angel 25 பயிற்சி நடவடிக்கையானது, நடப்பு உலக நெருக்கடிகளுக்கு அவசியமான விரைந்த மற்றும் உறுதியான பதிலளிப்பு செயற்பாடுகளுக்கான அணியமைப்பு மற்றும் நம்பிக்கையை கட்டியெழுப்புகிறது. இந்த பயிற்சி நடவடிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்ட இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜுலீ சங், பசுபிக் ஏஞ்சல் 25 இந்த ஆண்டில் இலங்கையில் நடத்தப்படும் மிகப்பெரிய பல்தரப்பு பயிற்சி நடவடிக்கையாகும் என்பதுடன், அவுஸ்திரேலியா, பங்காளதேஷ், இந்தியா, ஜப்பான், மாலைத்தீவு, இலங்கை மற்றும் அமெரிக்காவில் இருந்து இதில் கலந்துகொள்பவர்களை வரவேற்பதில் நாம் பெருமை கொள்கிறோம். பேரனர்த்த பதிலளிப்பு முதல் மனிதாபிமான நெருக்கடிகள் வரையான நடப்பு உலக சவால்களுக்கு தயாராவதன் நிமித்தம் எமது நாடுகள் எப்படி ஒன்றுபட்டு பணிபுரிகின்றன என்பதை இந்த பயிற்சி நடவடிக்கை எடுத்துக்காட்டுகிறது. இந்து-பசுபிக் பிராந்தியத்தின் பங்காண்மையாளர்கள் என்ற வகையில், நாம் பாதுகாப்பு மற்றும் திறந்த வர்த்தகத்தை பேணிப் பாதுகாப்பதுடன், எமது இந்த பிராந்தியம் தங்கியிருக்கும் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை பாதுகாப்பதன் நிமித்தம் சவால்களுக்கு ஒன்றுசேர்ந்து முகம் கொடுப்பதற்கான எமது ஆற்றலை Pac Angel போன்ற பயிற்சி நடவடிக்கைகள் வலுப்படுத்துகின்றன, என்று தெரிவித்தார். இலங்கைக்கான அமெரிக்க பாதுகாப்பு தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் மெத்தியூ ஹவுஸ் இந்த பயிற்சி நடவடிக்கையின் நடைமுறை தாக்கத்தை சுட்டிக்காட்டி அதில் கலந்துகொள்பவர்களை அமெரிக்காவின் சார்பில் வரவேற்றார். “Pac Angel நடவடிக்கையானது ஒரு சாதாரண பயிற்சிக்கும் மேலானதாகும். இது நெருக்கடி நிலைமைகளுக்கான துரித மற்றும் ஒருங்கிணைக்கப்பட்ட பதிலளிப்பு செயற்பாடுகளை சாத்தியமாக்கும் எமது நண்பர்கள் மற்றும் பங்காண்மையாளர்களுடனான நடப்பு உலக ஒத்துழைப்பை உருவாக்குவது பற்றியதாகும். ஒன்றிணைந்து பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் நாம் நம்பிக்கையை வலுப்படுத்துகிறோம், அச்சுறுதல்களை தடுக்கிறோம், மற்றும் பேரனர்த்தங்கள் தாக்கும் போது எம்மால் விரைந்தும் மற்றும் பயனுறுதிமிக்க வகையிலும் பதிலளிக்க முடியும் என்பதையும் உறுதிபடுத்துறோம். நாம் இன்று ஒன்றிணைந்து கட்டமைக்கும் ஒவ்வொரு முயற்சியும் நாளைய பொதுவான பாதுகாப்புக்கான அடித்தளமொன்றாகும், என்று அவர் குறிப்பிட்டார். பசுபிக் ஏஞ்சல் என்பது அமெரிக்க பசுபிக் விமானப்படைகளின் தலைமையிலும் அமெரிக்க இந்து-பசுபிக் கட்டளையகத்தின் (U.S. Indo-Pacific Command - USINDOPACOM) அனுசரணையிலும் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் மனிதாபிமான பதிலளிப்பு செயற்பாடுகள் தொடர்பான பயிற்சி நடவடிக்கையொன்றாகும். இந்த பயிற்சியானது தற்போது அதனது 18 ஆவது ஆண்டில் உள்ளது. 2008 ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட பசுபிக் ஏஞ்சல் பயிற்சி நடவடிக்கையானது, கிரிபாஸ், நவூரு மற்றும் வனுவாட்டு ஆகியவற்றுக்கு முக்கியமான உதவிகளை வழங்கிய அதனது 2007 ஆம் ஆண்டு தொடக்க நடவடிக்கையின் வெற்றியின் அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அதிலிருந்து தமது பசுபிக் அயலவர்களுக்கான அமெரிக்காவின் நீடித்த உறுதிப்பாட்டை பிரதிபலித்து இந்து-பசுபிக் பிராந்தியத்தில் அமெரிக்காவின் ஈடுபாட்டின் இன்றியமையாத அம்சமொன்றாக Pac Angel உருவெடுத்துள்ளது. பசுபிக் ஏஞ்சல் பயிற்சி நடவடிக்கைகளானது அதை நடாத்தும் நாட்டு அரசாங்கங்களின் கோரிக்கையின் அடிப்படையில் மேற்கொள்ளப்படுவதுடன், பல மாதங்களுக்கு முன்பாகவிருந்தே அது திட்டமிடப்படுகிறது. இந்த நடவடிக்கைகளானது எந்தவொரு தற்போதைய நடப்பு உலக நெருக்கடிகளுக்குமான பதிலளிப்பு செயற்பாடாக அமையவில்லை. மாறாக இந்த பயிற்சியை நடத்தும் நாடுகள் தமது குடிமக்களுக்கு உதவுவதற்கும் மற்றும் இயற்கை பேரனர்த்தங்கள் மற்றும் ஏனைய சவால்களுக்கு ஆக்கப்பூர்வமாக பதிலளிப்பதற்கும் அவற்றின் ஆற்றல்களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்டவையாகும். கட்டுநாயக்க விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றுடன் அமெரிக்காவும் இலங்கையும் பசுபிக் ஏஞ்சல் 25 பயிற்சி நடவடிக்கையை உத்தியோகப்பூர்வமாக ஆரம்பித்தன. இலங்கை விமானப்படை அதிகாரிகள் மற்றும் பசுபிக் ஏஞ்சல் 25 பயிற்சி நடவடிக்கையின் ஏனைய பங்கேற்பாளர்களின் முன்னிலையில் இலங்கைக்கான அமெரிக்க பாதுகாப்பு தொடர்பு அதிகாரி லெப்டினன்ட் கேர்ணல் மெத்தியூ ஹவுஸ் உரையாற்றுவதை இங்கு காணலாம். இலங்கை, அமெரிக்கா, அவுஸ்திரேலியா, பங்களாதேஷ், ஜப்பான் மற்றும் மாலைத்தீவில் இருந்து இந்த பயிற்சியில் பங்கேற்பவர்கள் பசுபிக் ஏஞ்சல் 25 நடவடிக்கை ஆரம்பமாவதற்கு முன்னதாக எடுத்துக் கொண்ட புகைப்படம். https://www.virakesari.lk/article/224555
-
சமூகவலைத்தள முடக்கத்துக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த 'Gen Z' இளைஞர்கள் போராட்டம்
பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நேபாள தலைநகர் காத்மாண்டுவில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடைக்கு எதிராக நடந்த போராட்டத்தின்போது இளைஞர்களிடையே ஏற்பட்ட மோதலில் 19 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. காயமடைந்த பலரும் நியூ பனேஷ்வரில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்த சுமார் 150 பேர் பல்வேறு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக காத்மாண்டுவில் உள்ள உள்ளூர் செய்தியாளர் பிபிசிக்கு தகவல் அளித்துள்ளார். மேலும் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும், ராணுவமும் தெருக்களில் குவிந்துள்ளதாகவும், கடுமையான மோதல் நிலவி வருவதாகவும் அவர் தெரிவித்தார். "இந்த சூழலிலும் போராட்டக்காரர்கள் பின் வாங்கவில்லை. உயிரிழப்பு ஏற்பட்ட பிறகும் அவர்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்" எனக் கூறினார். உள்ளூர் நிர்வாகம் பல இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. தங்களை Gen Z தலைமுறை என குறிப்பிடும் போராட்டக்காரர்கள் ஊழல் குறித்தும் குற்றச்சாட்டை எழுப்பி வருகின்றனர். இளைஞர்களின் போராட்டம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இரவு 10 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. காத்மாண்டுவில் உள்ள சிங்கா துர்பாரில் இன்று (திங்கட்கிழமை) காலை ஆயிரத்திற்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் திரண்டனர். பின் நியூ பனேஷ்வரில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கி அவர்கள் பேரணி சென்றனர். "சில போராட்டக்காரர்கள் தடுப்புகளை தாண்டி நாடாளுமன்ற வளாகத்திற்குள் செல்ல முயன்றதாகவும், அப்போது தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்" என பிபிசி செய்தியாளர் கேஷவ் கொய்ரலா கூறுகிறார். ராஷ்டிரபதி பவன், ஷீதல் நிவாஸ், நாராயண் தர்பார் அருங்காட்சியகம், பிரதமர் இல்லம் மற்றும் நாடாளுமன்ற வளாகப் பகுதிகளில் இரவு 10 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள் கட்டுக்கடங்காமல், தடை உத்தரவுகளை மீறுவதாக செய்தித்தொடர்பாளர் கூறுகிறார். ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டதும், தெருக்களில் நேபாள ராணுவம் குவிக்கப்பட்டது. நேபாள ராணுவத்தின் செய்தித்தொடர்பாளரான துணை ஜெனரல் ராஜாராம் பேட்னெட், "எழுத்துப்பூர்வ உத்தரவு பிறப்பிக்கப்பட்ட பின், அமைதியை நிலைநாட்டுவதற்காக சிறிய ராணுவ படை அனுப்பப்பட்டது" எனக் கூறினார். சில போராட்டக்காரர்கள் நாடாளுமன்ற வளாகத்திற்குள் நுழைய முயன்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். போராட்டத்தின்போது கலவரம் ஏற்பட்டதாகவும் அதில் காயமடைந்த பலரும் மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவித்தனர். நேபாளத்தில் இருந்து கிடைக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களில் திரளான போராட்டக்காரர்கள் காணப்படுகின்றனர். இந்த போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவர்கள் ஒருவர், "இங்கு நிலநடுக்கத்திற்கான அவசியம் இல்லை. தினமும் ஊழலால் நேபாளம் நடுங்கிக்கொண்டுதான் உள்ளது" என்ற வாசகம் கொண்ட பதாகையை ஏந்தியிருந்தார். இளைஞர்கள் பலரும் ஊழலுக்கு எதிரான பதாகைகளை ஏந்தி வந்திருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன் நேபாளத்தில் அரசாட்சியை நிலைநாட்ட ஓர் போராட்டம் நடந்தது. அப்போதும் போராட்டக்காரர்கள் ஊழலுக்கு எதிராக குரல் எழுப்பினார்கள். சமூக வலைதளம் மீதான தடை பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நேபாள அரசு 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதித்தது. கடந்த வாரம் நேபாள அரசு 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதித்திருந்தது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட பிரபல சமூக வலைதளங்களும் இதில் அடங்கும். நாட்டின் சட்டத்திற்கு இணங்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு ஒரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்திருந்தது. சீனாவைச் சேர்ந்த டிக்-டாக் கொடுக்கப்பட்ட கால அவகாசத்திற்குள் நிபந்தனைகளை பூர்த்தி செய்துகொண்டதால் அதற்கு தடை விதிக்கப்படவில்லை. நேபாளத்தைச் சேர்ந்த மிகப்பெரிய அளவிலான மக்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர். இந்த சமூக வலைதளங்களின் தடையால் வெளிநாட்டில் வசிக்கும் நேபாள குடிமக்கள் தங்களின் குடும்பத்தினரை தொடர்பு கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. டிக் டாக் மூலம் திரண்ட போராட்டக்காரர்கள் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நேபாளத்தில் டிக் டாக் ட்ரெண்டிங்கில் உள்ளது. சமூக வலைதளங்களின் தடைக்குப் பிறகு இளைஞர்கள் போராட்டத்திற்கு ஒன்று திரண்டுள்ளனர். தற்போது நேபாளத்தில் டிக் டாக் ட்ரெண்டிங்கில் உள்ளது. போராட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் டிக் டாக்கில் வீடியோக்களை பகிர்ந்து இளைஞர்களை போராட்டத்திற்கு அழைத்துள்ளனர். டிக் டாக்கில் 'நெப்போ பேபி' என்ற வார்தையும் ட்ரண்டில் உள்ளது. அதில் அரசியல்வாதிகளின் குழந்தைகளின் சொகுசு வாழ்க்கை குறித்த புகைப்படம் மற்றும் வீடியோக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. இதில் அரசியல்வாதிகளால் அவர்களின் குழந்தைகள்தான் பயனடைகிறார்கள் ஆனால் நாட்டிற்கு அவர்கள் வேலை செய்வதில்லை என கேள்வி எழுப்பப்படுகிறது. பல வீடியோக்களில் நோபாளத்தில் உள்ள தொலைதூர பகுதிகளில் வாழும் மக்கள் மற்றும் வசதியாக வாழும் தலைவர்களையும் ஒப்பிட்டுள்ளனர். கடந்த வியாழன் அன்று நேபாள அரசு சமூக வலைதளங்களுக்கு தடை விதித்திருந்தது. அப்போதில் இருந்து இளைஞர்கள் இந்த நடவடிக்கையை கையில் எடுத்துள்ளனர். போலீஸ் குவிப்பு பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பு. காத்மாண்டு மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இன்று (திங்கட்கிழமை) காலை முதலே காத்மாண்டு மற்றும் பல்வேறு நகரில் போராட்டங்கள் நடைபெற்று வருவதாக போலீசாரின் செய்தித் தொடர்பாளர் பினோத் கிமிரே தெரிவித்தார். "காத்மாண்டு மட்டுமல்லாமல் நகரின் பல்வேறு பகுதிகளில் போராடி வருகின்றனர். காவல்துறை இவர்களை கண்காணித்து வருகிறது. அமைதியை நிலைநாட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் திட்டமிட்டு அனைத்து இடங்களிலும் படைகளை குவித்துள்ளோம்" என கிமிரே பிபிசி நேபாளத்திடம் கூறியுள்ளார். போராட்டம் ஏன்? அந்நாட்டு அரசின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறையின் கீழ் பதிவு செய்யாததால் X, யூடியூப், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் போன்ற 26 சமூக வலைதளங்களுக்கு தடை விதிக்கப்பட்டது. அது மக்கள் மத்தியில் கடும் கோபத்தை கிளப்பியது. இதனையடுத்து டிக் டாக் மூலமாக ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் போராட்டக் களத்தில் ஒன்று திரண்டுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் கல்லூரி மாணவர்கள் ஆவர். இதனால் இதனை Gen-Z போராட்டம் எனக் குறிப்பிடுகின்றனர். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c70183j4l53o
-
வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் அக்கறை கொள்வதில்லை - ஷர்துல் தாக்கூர் வேதனை!
தொடர்ந்து விளையாடி வரும் வீரர்களின் உடல்நிலை குறித்து அணி நிர்வாகம் எவ்வித அக்கறையையும் வெளிப்படுத்துவது இல்லை என்று ஷர்துல் தாக்கூர் வேதனை தெரிவித்துள்ளார். கடந்த 11 மாதங்களாக இடைவெளியின்றி பல்வேறு போட்டிகளில் விளையாடி வரும் ஷர்துல் தாக்கூர், வீரர்களின் உடல் தகுதி விஷயத்தில் கவனம் செலுத்தும் அணி நிர்வாகம் தொடர்ந்து விளையாடும் வீரர்களின் உடல் நிலை குறித்து கவனம் கொள்வதில்லை என வேதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர், "ஆண்டு முழுதும் பல்வேறு தொடர்களில் ஆடுகிறோம். எனவே ஒரே மாதிரியான உடல்தகுதியினை பராமரிப்பது கடினம். பெரும்பாலான நேரங்களில் நாங்கள் சாதாரணமாக எடுத்துக்கொள்ளப்படுகிறோம். நிர்வாகம் உயர்ந்த மட்டத்தில் இல்லை. பல மாதங்கள் ஆடிய பிறகும் கூட எங்கள் உடல் நிலை என்ன? எப்படியிருக்கிறது? எப்படி உணர்கிறோம் என்று யாரும் எங்களிடம் நேரடியாகக் கேட்பது கூட கிடையாது. ஆனால் நான் என் உடல்தகுதியை சுயமாகவே பரமாரிக்கிறேன். விளையாடுவதற்குத்தானே எல்லாம். விளையாடாமல் ஆட்டத்திலிருந்து விலகுவதற்காகவா இருக்கிறோம்? ஆனால் சிலபல இடைவெளிகளும் ஓய்வுகளும் அவ்வப்போது அவசியமாகிறது. ஏனெனில் ஆட்டத்திற்குள் நுழைந்து விட்டால் பணிச்சுமை பற்றியெல்லாம் பேச முடியாது. அங்கு ஆட்டச்சூழ்நிலையில் நாம் மூழ்கி விடுவோம். ஆட்டத்திற்குள் நுழைந்து விட்டால் நம்மால் சிறப்பாக என்ன செய்ய முடியுமோ அதைச் செய்து தான் ஆகவேண்டும். ஆனால் ஆட்டத்திற்கு இடையே ஓய்வு முக்கியம். அந்த ஓய்வில்தான் உடல்நிலையைப் பாதுகாக்க முடியும், பரமாரிக்க முடியும். ஆட்டத்தில் நமக்கு பெரிய ரோல் இல்லை என்றால் வலையில் கொஞ்சம் அதிக நேரம் செலவழிக்கலாம். ஆனால் ஆட்டத்தில் முழுச்சுமையும் உங்கள் மேல் இருக்கும் போது வலையில் கொஞ்சம் ரிலாக்ஸாக இருக்கலாம்" என தெரிவித்துள்ளார். அவர் இப்படிக் கூறக் காரணம், பும்ராக்களையும் ஷமிக்களையும் யோசிக்கும் நிர்வாகம், சலுகை அளிக்கும் நிர்வாகம் ஷர்துல் தாக்கூர்களைக் கண்டு கொள்வதில்லை என்பதுதான் உண்மை. அவர் கடந்த 11 மாதங்களாக இடைவெளியில்லாமல் கிரிக்கெட் ஆடி வருகிறார். கடந்த அக்டோபரில் இரானி கோப்பையில் தொடங்கிய சீசன் அவருக்கு 2024-25 ரஞ்சி சீசன், விஜய் ஹஜாரே டிராபி, சையத் முஷ்டாக் அலி கோப்பை, முதலில் விற்கப்படாமல் போனாலும் 2025 ஐபிஎல் தொடரில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்காக ஆட நேரிட்டது, பிறகு இந்தியா ஏ தொடர் என்று வரிசையாக அவர் ஓய்வு ஒழிச்சல் இல்லாமல் ஆடிவருகிறார். எனவே பணிச்சுமை விவகாரம் சில எலைட் வீரர்களுக்கு ஒருதலைப்பட்சமாகச் சாதகமளிக்கும் வேளையில் ஷர்துல் தாக்கூர் போன்ற விளிம்பில் இருக்கும் வீரர்களுக்கு சாதகமாக இருப்பதில்லை. https://www.hindutamil.in/news/sports/1375793-there-is-no-concern-about-the-health-of-the-players-shardul-thakur-1.html
-
இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!
போதைப்பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து மித்தெனியவில் போராட்டம்! 08 Sep, 2025 | 04:45 PM அநுராதபுரத்தில் மித்தெனிய பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக போதைப்பொருட்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதேசவாசிகள் சிலர் இணைந்து இன்று திங்கட்கிழமை (08) பிற்பகல் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். நாடளாவிய ரீதியில் பரவி வரும் போதைப்பொருள் கலாச்சாரத்தை முடிவுக்கு கொண்டுவருமாறு கோரி இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் போதைப்பொருளுக்கு உடந்தையாக உள்ள அரசியல்வாதிகளை மக்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டுமாறும் பேராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224547
-
5 நாட்களில் ரூ.5.8 கோடி இழந்த பெண் - டிஜிட்டல் கைதுகளை வங்கிகள் எப்படி கையாளுகின்றன?
பட மூலாதாரம், Anahita Sachdev/BBC படக்குறிப்பு, ஓராண்டுக்கு முன்பு 'டிஜிட்டல் கைது' செய்யப்பட்ட அஞ்சலி* 5.8 கோடி ரூபாயை இழந்துள்ளார். கட்டுரை தகவல் நிகில் இனாம்தார், கீதா பாண்டே பிபிசி நியூஸ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் அஞ்சலியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு தொலைபேசி அழைப்புக்கு பதிலளித்ததால் ரூ.5.8 கோடி விலை கொடுத்துள்ளார். தொலைபேசியில் அழைத்தவர் தான் ஒரு கூரியர் நிறுவனத்தைச் சேர்ந்தவர் என்று கூறினார். அஞ்சலி பெய்ஜிங்கிற்கு அனுப்பிய போதைப்பொருள் பார்சலை மும்பை சுங்கத்துறை பறிமுதல் செய்ததாக அவர் அஞ்சலியிடம் கூறினார். இந்திய தலைநகர் டெல்லியின் புறநகர்ப் பகுதியான குருகிராமில் வசிக்கும் அஞ்சலி, "டிஜிட்டல் கைது" மோசடிக்கு இரையானவர்களில் ஒருவர். மோசடி செய்பவர்கள் வீடியோ அழைப்புகளில் சட்ட அமலாக்க அதிகாரிகளாக வேடமிட்டு, அவர் கீழ்ப்படியாவிட்டால் அவருக்கு ஆயுள் தண்டனை மற்றும் அவரது மகனின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று அச்சுறுத்தினர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐந்து நாட்கள் அவர்கள் அஞ்சலியை ஸ்கைப்பில் 24 மணி நேர கண்காணிப்பின் கீழ் வைத்திருந்தனர். அவரை மிரட்டி பயமுறுத்தினர், அவரது சேமிப்பு கணக்குகளிலிருந்து பணத்தை வேறு வங்கிக் கணக்குகளில் மாற்றவும் வற்புறுத்தினர். "அதன் பிறகு, என் மூளை வேலை செய்யவில்லை. என் மனம் நொறுங்கிப் போனது" என்கிறார் அவர். அழைப்புகள் வருவது நின்றது, ஆனால் அதற்குள் அஞ்சலி உடைந்து போனார் - அவரது நம்பிக்கை சிதைந்தது . இது போன்ற மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்கள் அஞ்சலியைப் போன்று நிறைய பேர் உள்ளனர். "டிஜிட்டல் கைதுகளால்" இந்தியர்கள் கோடிக்கணக்கான பணத்தை இழந்ததாக அரசாங்க தகவல்கள் காட்டுகின்றன, 2022 மற்றும் 2024 க்கு இடையில் பதிவான வழக்குகள் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகரித்து, 1,23,00 வழக்குகள் பதிவாகியிருந்தன. இந்த மோசடி மிகவும் பரவலாக நடந்து வருகிறது. அரசு முழு பக்க விளம்பரங்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி பிரசாரங்களை செய்து வருகிறது. பிரதமரும் கூட எச்சரிக்கை விடுத்துள்ளார். மோசடியுடன் தொடர்புடைய கிட்டத்தட்ட 4,000 ஸ்கைப் ஐடிகள் மற்றும் 83,000 க்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை முடக்கியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். அஞ்சலி கடந்த ஒரு வருடமாக காவல் நிலையங்களுக்கும் நீதிமன்றங்களுக்கும் மாறி மாறி அலைந்து வருகிறார். இழந்த தனது பணத்தை தேடி, பிரதமர் உட்பட அதிகாரிகளிடம் உதவி கோரி மனு அளித்தார். பட மூலாதாரம், Anahita Sachdev/BBC படக்குறிப்பு, அஞ்சலி தான் இழந்த பணம், எந்த கணக்குகளுக்கு மாற்றப்பட்டுள்ளது என்ற விவரங்களை மிகுந்த முயற்சி எடுத்து சேகரித்துள்ளார். அதிகரித்து வரும் மோசடிகள், பலவீனமான வங்கி பாதுகாப்புகள் மற்றும் மோசமான பண மீட்பு ஆகியவை டிஜிட்டல் வங்கி பரிவர்த்தனைகளில் உள்ள ஒழுங்குமுறை இடைவெளிகளை அம்பலப்படுத்துகின்றன. இதில் அனைத்து வர்க்க மக்களும் சிக்கிக் கொள்வதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறுகின்றனர். அஞ்சலி தனது பணத்தை மீட்க முயன்ற போது, இந்தியாவின் முன்னணி வங்கிகளின் ஒவ்வொரு மட்டத்திலும் உள்ள பாதுகாப்பு குறைகள் அம்பலமாகின என்று அவர் கூறுகிறார். செப்டம்பர் 4, 2024 அன்று இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கடன் வழங்குநரான தனது எச்.டி.எஃப்.சி வங்கிக் கிளைக்கு விரைந்ததாகவும், மோசடி செய்பவர்களின் வீடியோ கண்காணிப்பின் கீழ் பீதியடைந்ததாகவும், ஒரு நாள் 2.8 கோடி ரூபாயையும் அடுத்த நாள் மேலும் 3 கோடி ரூபாயையும் தனது வங்கிக் கணக்கிலிருந்து அனுப்பியதாக அஞ்சலி பிபிசியிடம் தெரிவித்தார். அவர் அப்படி அனுப்பிய தொகைகள் அவரது வழக்கமாக பரிமாற்றம் செய்யும் தொகைகளை விட 200 மடங்கு அதிகமாக இருந்தபோதிலும், வங்கிக்கு அது ஒரு எச்சரிக்கை மணியாக தெரியவில்லை, அசாதாரண பரிவர்த்தனைகள் ஏன் நடந்தன என்று வங்கி கவனிக்க தவறிவிட்டது என்று அவர் குற்றம் சாட்டுகிறார். பிரீமியம் கணக்கு வைத்திருக்கும் தனக்கு தனது வங்கி உறவு மேலாளரிடமிருந்து ஏன் அழைப்பு வரவில்லை என்றும், இவ்வளவு பெரிய பரிவர்த்தனையை வங்கி ஏன் கவனிக்க தவறியது என்றும் அவர் ஆச்சரியப்படுகிறார். "மூன்று நாட்களுக்குள் நான் செய்த பரிமாற்றங்களின் தொகை சந்தேகத்தை எழுப்பவும், குற்றத்தைத் தடுக்கவும் கூட போதுமானதாக இருந்திருக்க வேண்டாமா? கிரெடிட் கார்டு மூலம் 50,000 ரூபாய் செலவழித்தால் சரிபார்ப்பு அழைப்புகள் வரலாம் என்றால், சேமிப்புக் கணக்குகளில் இருந்து ஏன் பல கோடி பண பரிமாற்றம் செய்யும் போது அதை சரிபார்க்கக் கூடாது" என்று அஞ்சலி கேட்கிறார். அஞ்சலிக்கு அனுப்பிய மின்னஞ்சலில், எச்.டி.எஃப்.சி வங்கி தங்கள் மீதான குற்றச்சாட்டுகளை "ஆதாரமற்றது" என்றும், மோசடி சம்பவம் இரண்டு-மூன்று நாட்கள் தாமதத்திற்குப் பிறகு வங்கிக்கு தெரிவிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது. அவரது அறிவுறுத்தலின் பேரில் பரிவர்த்தனைகள் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டன, எனவே வங்கி அதிகாரிகளை இதில் குற்றம் சொல்ல முடியாது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எச்.டி.எஃப்.சிக்கு எதிரான அஞ்சலியின் புகாரை இந்தியாவின் வங்கி குறைதீர்ப்பாளர் 2017 விதியை மேற்கோள் காட்டி முடித்து வைத்து விட்டார். அஞ்சலி போன்ற வாடிக்கையாளர்கள் மோசடி செய்ததாக கருதினால் முழு இழப்பையும் தாங்களே ஏற்க வேண்டும் என்று கூறப்பட்டது. பிபிசியின் கேள்விகளுக்கு எச்டிஎஃப்சி வங்கி பதிலளிக்கவில்லை. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, கோடிக் கணக்கில் வாடிக்கையாளர்களை பணத்தை இழந்த பிறகு, அரசு இது போன்ற சைபர் மோசடி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. நாங்கள் அஞ்சலியைச் சந்தித்தபோது, அவரது பணம் ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு எவ்வாறு சென்றது என்பது குறித்து அவர் தொகுத்த ஒரு பெரிய விளக்கப்படத்தை எங்களிடம் காட்டினார். இந்தியாவின் மிகப்பெரிய தனியார் கடன் வழங்குநர்களில் ஒன்றான ஐசிஐசிஐ வங்கியில் "திரு பியூஷ்" என்ற நபர் வைத்திருக்கும் கணக்கிற்கு எச்.டி.எஃப்.சி.யிலிருந்து பணம் முதலில் சென்றது என்று அது காட்டியது. பணப் பரிமாற்றம் குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த பரிவர்த்தனைக்கு முன்பாக, பியுஷின் கணக்கில் சில ஆயிரம் ரூபாய் மட்டுமே இருப்பு இருந்தது தெரியவந்தது. "இதுபோன்று திடீரென பெரிய அளவில் தொகைகள் வங்கிக் கணக்கில் வரும் போது எந்தவொரு வங்கியின் பணமோசடி எதிர்ப்பு கடமைகளின் கீழ் தானியங்கி பரிவர்த்தனை கண்காணிப்பு அமைப்புகளைத் தூண்டியிருக்க வேண்டும்" என்று அஞ்சலி கேள்வி எழுப்புகிறார். பியூஷின் கணக்கிலிருந்து பணத்தை தற்காலிகமாக முடக்காமல் அல்லது உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள் (KYC) சரிபார்ப்பு செய்யாமல் வங்கி எவ்வாறு பணத்தை விரைவாக வேறு கணக்குக்கு அனுப்ப அனுமதித்தது என்றும் அவர் ஆச்சரியப்படுகிறார். பியுஷ் கைது செய்யப்பட்டு சிறிது காலத்திலேயே பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவர் மீது ஐ.சி.ஐ.சி.ஐ புகார் அளித்துள்ள நிலையில், கணக்கை முடக்குவதில் ஏற்பட்ட தாமதம் தனக்கு மிகுந்த இழப்பை ஏற்படுத்தியதாக அஞ்சலி கூறுகிறார். பிபிசிக்கு அளித்த அறிக்கையில், ஐசிஐசிஐ கணக்கைத் திறக்கும்போது "உங்கள் வாடிக்கையாளரை அறிந்து கொள்ளுங்கள்" என்று பரிந்துரைக்கப்பட்ட அனைத்து நடைமுறைகளையும் பின்பற்றியதாகவும், சர்ச்சைக்குரிய பரிவர்த்தனைகள் நடைபெறும் வரை சந்தேகத்திற்கிடமான நடவடிக்கைகள் எதுவும் பியூஷின் கணக்கில் நடத்தப்படவில்லை என்றும் கூறியது. "வங்கி அதன் கடமைகளில் தவறியது என்ற எந்தவொரு குற்றச்சாட்டும் முற்றிலும் ஆதாரமற்றது" என்று அது கூறியது. அஞ்சலியின் புகாரைத் தொடர்ந்து உடனடியாக கணக்கை முடக்கியதாகவும், அஞ்சலி போலீஸ் வழக்கைப் பதிவு செய்யவும், போலி கணக்கு வைத்திருப்பவரைக் கண்டுபிடிக்கவும் உதவியதாகவும் வங்கி கூறியது. பியூஷின் கணக்கைத் திறக்கும்போது வங்கி கேஒய்சி விதிகளைப் பின்பற்றியதாகவும், மோசடி நடவடிக்கைகளுக்கு அந்த கணக்கு பயன்படுத்தப்படும் என்று முன்பே கணித்திருக்க முடியாது என்றும் ஐ.சி.ஐ.சி.ஐ.க்கு எதிரான அஞ்சலியின் புகாரை குறைதீர்ப்பாளர் முடித்து வைத்தார். ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி கணக்கில் பணம் வந்தவுடன் நான்கு நிமிடங்களுக்குள், ஹைதராபாத் நகரத்தில் உள்ள பெடரல் வங்கியின் துணை நிறுவனமான ஸ்ரீ பத்மாவதி கூட்டுறவு வங்கியில் உள்ள 11 கணக்குகளில் அந்த பணம் செலுத்தப்பட்டதை போலீசார் கண்டுபிடித்தனர். 11 கணக்குகளில் எட்டு கணக்குகளின் உரிமையாளர்களின் முகவரிகள் போலியானவை என்றும், கணக்கு வைத்திருப்பவர்களைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்றும் அவர்கள் கண்டறிந்தனர். அவர்களின் கே.ஒய்.சி ஆவணங்களும் வங்கியில் இல்லை. மீதமுள்ள மூன்று கணக்குகளை வைத்திருப்பவர்கள் ஒரு ரிக்ஷா ஓட்டுநர், ஒரு சிறிய குடிசை பகுதியில் தையல் வேலை செய்யும் கணவரை இழந்த பெண் மற்றும் ஒரு தச்சர். இவர்களில் ஒருவரைத் தவிர, மற்றவர்களுக்கு தங்கள் கணக்குகளில் பரிவர்த்தனை செய்யப்பட்ட பெரிய தொகைகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்பதை போலீசார் கண்டறிந்தனர். மே மாதத்தில், கூட்டுறவு வங்கியின் முன்னாள் இயக்குநர் சமுத்ராலா வெங்கடேஸ்வரலுவை போலீசார் கைது செய்தனர் - அவர் சிறையில் உள்ளார். "இணைய மோசடிகளின் தீவிரம் மற்றும் நீண்டகால தாக்கத்தை கருத்தில் கொண்டு" அவரது ஜாமீன் மனுவை நீதிமன்றம் மூன்று முறை நிராகரித்தது. இந்த கணக்குகளில் பல வெங்கடேஸ்வரலுவின் உத்தரவுக்கு உட்பட்டு தொடங்கப்பட்டவை என்றும், அவை போலி கணக்குகள் என்றும் போலீஸ் அறிக்கை குற்றம் சாட்டுகிறது - அவை மற்றவர்களின் பெயர்களில் திறக்கப்பட்டுள்ளன. பணத்தை வெள்ளையாக்குவதற்காக அவற்றை இயக்கும் குற்றவாளிகளுக்கு விற்கப்பட்டுள்ளன. பிபிசியின் விரிவான கேள்விகளுக்கு ஃபெடரல் வங்கியோ அல்லது ஸ்ரீ பத்மாவதி வங்கியோ பதிலளிக்கவில்லை. பட மூலாதாரம், Anahita Sachdev/BBC படக்குறிப்பு, அஞ்சலி தான் இழந்த 5.8 கோடியில் ஒரு கோடி ரூபாயை மட்டுமே மீட்க முடிந்துள்ளது. பணத்தை இழந்த அஞ்சலியும் மற்றவர்களும் ஜனவரி மாதம் இந்தியாவின் உச்ச நுகர்வோர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இது வங்கிகளின் "சேவைகளில் குறைபாடு" என்ற அடிப்படையில் அவர்களின் புகார்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. இதற்கு வங்கிகள் பதிலளிக்க வேண்டும், நவம்பரில் விசாரணை நடைபெற உள்ளது. இத்தகைய மோசடிகள் மிகவும் சிக்கலானதாக இருப்பதால், நிதி மோசடிக்கு இறுதியில் யார் பணம் செலுத்துகிறார்கள் - வங்கிகள், நிதி நிறுவனங்கள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் என்ன பொறுப்பைக் கொண்டுள்ளனர் என்பது குறித்து உலகளவில் விவாதங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த அக்டோபரில் இங்கிலாந்து கட்டண சேவை வழங்குபவர்களின் பொறுப்பு குறித்த விதிகளை கடுமையாக்கியது. சில வகையான நிதி மோசடிகளுக்கு பலியாகக்கூடியவர்கள் தவிர, பிற வாடிக்கையாளர்களுக்கு பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டும். என்று கூறியது. "வாடிக்கையாளர்கள் மீது அக்கறை செலுத்த வேண்டிய கடமை வங்கிகளுக்கு உள்ளது. ஒரு வங்கி அதன் ஒட்டுமொத்த பரிவர்த்தனை முறைகளுக்கு முரணான எந்தவொரு செயல்பாட்டையும் கவனித்தால், அது அந்த பரிவர்த்தனையை நிறுத்த வேண்டும்" என்று அஞ்சலி உட்பட டிஜிட்டல் கைதுகளால் பாதிக்கப்பட்ட பத்துக்கு மேற்பட்டவர்களின் வழக்குகளை எடுத்து வாதாடும் வழக்கறிஞர் மகேந்திர லிமாயே பிபிசியிடம் தெரிவித்தார். போலி கணக்குகளைத் திறப்பதன் மூலம் புகார்தாரர்களின் நிதி தற்கொலைக்கு வங்கிகள் மறைமுகமாக "உடந்தையாக" இருப்பதாகவும், வாடிக்கையாளர்களின் பணத்தை பாதுகாக்கவும் தங்கள் கடமையில் தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார். ஆனால் இதுவரை, அஞ்சலிக்கு நிவாரணம் பெரிய அளவில் கிடைக்கவில்லை - மோசடியால் இழந்த 5.8 கோடி ரூபாயில் ஒரு கோடியை மட்டுமே அவரால் மீட்டெடுக்க முடிந்தது. இது ஒரு நீண்ட போராட்டமாக இருக்கும் என்று வழக்கறிஞர் லிமாயே கூறுகிறார். தன்னிடமிருந்து திருடப்பட்ட பணத்திற்கு வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் அஞ்சலி கூறுகிறார். மோசடி செய்பவர்களிடம் இழக்கப்பட்டாலும் கூட, முதலீட்டு ஆதாயங்களுக்கு வரி விதிக்கப்படுகின்றன. அவர் இப்போது அத்தகைய வரிவிதிப்பிலிருந்து விலக்கு அளிக்குமாறு மன்றாடுகிறார். "இதுவரை, இதுபோன்ற குற்றங்களை வருமான வரித் துறை அங்கீகரிக்கவில்லை, இது பாதிக்கப்பட்டவர்களின் நிதி துயரத்தை அதிகரிக்கிறது", என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3e78kpv0gno
-
உள்நாட்டுப் பொறிமுறை மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் : ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத்
Published By: Vishnu 08 Sep, 2025 | 07:54 PM இலங்கையின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதையும், சர்வதேச தலையீடுகளை நிராகரிப்பதாகவும் உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் என இலங்கை நம்புவதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்தார். வெளித் தலையீடுகள் அதன் உள்நாட்டு நீதி மற்றும் நல்லிணக்க முயற்சிகளுக்குத் தடையாக இருக்கும் என்றும் இலங்கை மக்கள் ஒரு நியாயமான, சமமான மற்றும் வளமான சமுதாயத்தை உருவாக்க விரும்புகிறார்கள் என்றும், வெளிப்புற நடவடிக்கைகள் பிரிவினையை மட்டுமே ஏற்படுத்தும் என்றும் மேலும் தெரிவித்தார். 60 ஆவது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில், ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் இலங்கை குறித்த அறிக்கை தொடர்பாக இலங்கை அரசு சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் உரையாற்றிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். இலங்கை அரசாங்கம் கடந்த 11 மாதங்களில் அடைந்துள்ள முன்னேற்றங்கள், எதிர்காலத் திட்டங்கள் மற்றும் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் ஊழல் ஒழிப்புக்கான உறுதிப்பாடுகள் குறித்து இந்த உரையில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. அதில், அரசியல் மற்றும் ஆட்சிமுறை மாற்றங்கள் * 2024 செப்டம்பர் ஜனாதிபதித் தேர்தலிலும், அதைத் தொடர்ந்து நவம்பர் மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் தேசிய மக்கள் சக்தி கட்சிக்கு (NPP) மக்கள் அமோக ஆதரவை வழங்கினர். * வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் உள்ள மக்கள் ஒரு கட்சிக்கு இவ்வளவு ஆதரவு வழங்கியது இலங்கையின் வரலாற்றில் இதுவே முதல்முறை. * பல்வேறு சமூகத்தினரையும், சாதனை படைத்த எண்ணிக்கையிலான பெண்களையும் உள்ளடக்கிய இலங்கையின் வரலாற்றிலேயே மிகச் சிறந்த நாடாளுமன்றம் இது. முதன்முறையாக, மலையக சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண் உறுப்பினர்களும், ஒரு கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளியும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டனர். * பல ஆண்டுகளாக ஒத்திவைக்கப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. எந்தவித வன்முறைச் சம்பவங்களும், அரச வளங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட நிகழ்வுகளும் இல்லாமல் தேர்தல்கள் சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடைபெற்றன. பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றங்கள் * அரசாங்கம் பொறுப்பேற்றபோது நாடு எதிர்கொண்டிருந்த பொருளாதார நெருக்கடியைச் சமாளிக்க முன்னுரிமை அளித்து, சமூக பாதுகாப்பு மற்றும் நலத்திட்டங்கள் மூலம் பொருளாதார சவால்கள் குறைக்கப்பட்டன. * விவசாயம், மீன்பிடி உள்ளிட்ட பாதிக்கப்படக்கூடிய துறைகளுக்கு சிறப்பு நிவாரணங்கள் வழங்கப்பட்டன. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளுக்கு வரலாற்றுபூர்வமான நிதி ஒதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. * வறுமையில் வாடுவோர், பெண்கள், குழந்தைகள், மாற்றுத்திறனாளிகள் போன்ற பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி வழங்குவதற்காக சமூக நலன்புரி நிதி அதிகரிக்கப்பட்டது. * மீள்குடியேற்ற தேவைகளைப் பூர்த்தி செய்யவும், வீட்டுத் திட்டங்களை விரைவுபடுத்தவும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் ரூ. 1500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் * பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்குப் பதிலாக புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உருவாக்குவதற்காக ஒரு குழு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டமூலம் இந்த மாதமே வர்த்தமானியில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. * இணையவழி பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. * காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் (OMP), இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் (ONUR) போன்ற உள்நாட்டு நல்லிணக்க பொறிமுறைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன. * காணாமல்போனோர் தொடர்பான விசாரணைகளை விரைவுபடுத்த காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) ரூ. 375 மில்லியன் மேலதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. * உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றை நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. * செம்மணி புதைகுழி உட்பட பல்வேறு புதைகுழிகள் குறித்து சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. * பொலிஸ் துறையின் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டு, ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் போன்ற பல நீண்டகால வழக்குகள் மீண்டும் விசாரிக்கப்படுகின்றன. * பெரும்பாலான தனியார் காணிகள் உரிமையாளர்களிடம் விடுவிக்கப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்பிற்கு அத்தியாவசியமான காணிகள் மட்டுமே அரசு கட்டுப்பாட்டில் வைக்கப்படும், அதற்கான உரிய இழப்பீடு வழங்கப்படும். * மோதல்களில் உயிரிழந்தோரை நினைவு கூரும் உரிமைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது, இதனால் இந்த ஆண்டு பல இடங்களில் நினைவு நிகழ்வுகள் சுதந்திரமாக நடத்தப்பட்டன. * சிவில் சமூக அமைப்புகளுக்கு சுதந்திரமாக செயல்பட ஏற்ற சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. ஊழல் ஒழிப்பு மற்றும் சீர்திருத்தங்கள் * கடந்த சில மாதங்களில், ஊழல் ஒழிப்புக்கு வலுவான புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. சமூக நிலை எதுவாக இருந்தாலும், அரசியல் தலையீடு இல்லாமல், குற்றச்சாட்டுகள் குறித்த சுதந்திரமான விசாரணைகள் மற்றும் வழக்குகள் தொடரப்பட்டு பல முக்கிய தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன. * இந்த ஆண்டின் தொடக்கத்தில், புதிய அரசியல் கலாசாரம் மற்றும் நெறிமுறை சார்ந்த நல்லாட்சியை ஊக்குவிக்கும் நோக்கில் 'தூய இலங்கை' என்ற நிகழ்ச்சித்திட்டம் ஜனாதிபதியால் ஆரம்பிக்கப்பட்டது. * ஊழலற்ற இலங்கை ஒவ்வொரு குடிமகனின் கண்ணியத்திற்கும், நலனுக்கும் இன்றியமையாதது என அரசாங்கம் உறுதியாக நம்புகிறது. அத்துடன் ஐ.நா. மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்கள், பார்வையாளர்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களும் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றும், அதன் முயற்சிகளைப் புரிந்து கொண்டு ஆதரவு வழங்க வேண்டும் என்றும் இலங்கை கேட்டுக்கொண்டுள்ளது. இலங்கையில் ஏற்பட்டுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மாற்றங்களைப் பயன்படுத்திக்கொண்டு, உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் அனைத்து இலங்கை மக்களின் உரிமைகளையும் மேம்படுத்த வேண்டும் என்று அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது. இலங்கையின் இறையாண்மைக்கு முக்கியத்துவம் அளிப்பதையும், வெளிநாட்டுத் தலையீடுகளை நிராகரிப்பதையும், உள்நாட்டுப் பொறிமுறைகள் மூலம் நல்லிணக்கம் மற்றும் பொறுப்புக்கூறலை அடைய முடியும் என இலங்கை நம்புகின்றது. மேற்குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் விஜித்த ஹேரத் தனது உரையில் குறிப்பிடப்பட்டுள்ளார். https://www.virakesari.lk/article/224569
-
யாழில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்
யாழ் மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். செய்தி குறிப்பொன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் பரம்பல் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் 937 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் பதிவு செய்யப்படவில்லை. யாழ் மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைக்கும் நோக்குடன் கடந்த செப்டெம்பர் 4ம் திகதி மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டுக்குழுக் கூட்டம் இடம் பெற்றது. இதன் அடுத்த கட்டமாக பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச டெங்கு கட்டுப்பாட்டு குழுக் கூட்டங்களும் , கிராமசேவையாளர் தலைமையில் கிராம மட்ட டெங்கு கட்டுப்பாட்டு குழுக் கூட்டங்களும் எதிர்வரும் செப்டெம்பர் 08ம் திகதி முதல் 12ம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெறும். பொதுமக்கள் மத்தியில் டெங்கு கட்டுப்பாட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களிலும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 14ம் திகதி சகல வணக்கத்தலங்களிலும் , 15ம் திகதி சகல அரச நிறுவனங்களிலும் , 16ம், 17ம் திகதிகளில் சகல பாடசாலைகளிலும் இந்த டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரையிலான மூன்று தினங்களும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக பிரகடனப்படுத்தப்படுகின்றன. இந்த காலப்பகுதியில் சகல வீடுகளிலும், வேலைத்தலங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும், பொது இடங்களிலும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்கும் சிரமதானப்பணி ஏற்பாடு செய்யப்படவேண்டும். இக்காலப் பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஏற்பாட்டில் மேற்பார்வைக்குழுக்கள் வீடுகளையும் , வேலைத்தலங்களையும் , கல்வி நிறுவனங்களையும் , வர்த்தக நிலையங்களையும் பார்வையிடுவர். இக்குழுக்களில் சுகாதார திணைக்கள, பிரதேச செயலக , உள்ளூராட்சி மன்ற மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பங்குபற்றுவர் எனவே யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி ஆ. கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmfat3qgx009qqplpo0zf89ka
-
இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!
“கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி; சம்பத் மனம்பேரியை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி! 08 Sep, 2025 | 11:01 AM “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியை 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மேல்மாகாண வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) அனுமதி வழங்கியுள்ளது. மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி கடந்த சனிக்கிழமை (06) கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது “கெஹெல்பத்தர பத்மே”, “கொமாண்டோ சலிந்த” மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது. இதனையடுத்து “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்தையடுத்து அவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224503
-
'வாரத்திற்கு 2 அல்லது 3 பேர் மரணம்' - இந்த கிராமத்தில் என்ன நடக்கிறது? தலித் மக்கள் அச்சம்
படக்குறிப்பு, "கிராமத்தின் நிலைமை அச்சமாக இருப்பதாக" கூறுகிறார் சீதம்மா கட்டுரை தகவல் கரிகிபட்டி உமாகாந்த் பிபிசிக்காக 8 செப்டெம்பர் 2025, 03:14 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆந்திர பிரதேசத்தின் குண்டூருக்கு அருகேயுள்ள துரகபளம் எனும் கிராமத்தில் அடுத்தடுத்து நிகழும் திடீர் மரணங்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக இந்த மரணங்களால் அங்குள்ள தலித் சமூகத்தினர் கலங்கிப் போயுள்ளனர். குண்டூர் மாவட்ட ஆட்சியர் நாகலஷ்மி கூறுகையில், அந்த கிராமத்தில் எஸ்சி காலனியைச் சேர்ந்த 29 பேர், கடந்த ஐந்து மாதங்களில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். எனினும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என கிராமத்தினர் கூறுகின்றனர். படக்குறிப்பு, அரசு மருத்துவ முகாம் அமைத்துள்ளது, அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை செய்து வருகிறது இதுதொடர்பான தங்கள் கவலைகளை பிபிசியிடம் எஸ்சி காலனி பகுதியை சேர்ந்த மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இவர்களுள் இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை அடங்குவர். இதுதொடர்பாக, சில தினங்களுக்கு முன்பு அரசு கருத்து தெரிவித்தது. கிராமத்தில் மருத்துவ முகாம் அமைத்து, அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை செய்தது. காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி கொண்டவர்கள் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுகின்றனர். பட மூலாதாரம், x.com/ncbn படக்குறிப்பு, ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 'ஒரு வாரத்தில் கண்டறியப்படும்' - முதலமைச்சர் சந்திரபாபு துரகபளம் கிராமத்தில் நிலவும் தற்போதைய சூழலை சுகாதார அவசரநிலையாக கருதி நடவடிக்கை எடுக்குமாறு, ஆந்திரபிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சுகாதார அமைச்சர் சத்யகுமார் மற்றும் அதிகாரிகளுடன் அமராவதியில் அவசர கூட்டம் ஒன்றையும் அவர் நடத்தியுள்ளார். அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் 42 விதமான மருத்துவப் பரிசோதனைகளை நடத்த சந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மரணத்தை ஏற்படுத்தும் நோய் என்ன என்பதை ஒரு வாரத்தில் கண்டறிய அறிகுறிகள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார். அந்த கிராமத்தில் யாரும் சமைக்க வேண்டாம் என்றும் எவ்வித உணவை உட்கொள்வதோ அல்லது நீரை பருகுவதோ கூடாது என முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். இன்னும் சில நாட்களுக்கு அங்குள்ள மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். படக்குறிப்பு, தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த போது தன் தாயின் சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டது என்று கூறப்பட்டதாக துரகபளம் கிராமத்தை சேர்ந்த விஜயராமராஜு கூறுகிறார் 'திடீரென இறந்தனர்' - கிராம மக்கள் "இரு மாதங்களுக்கு முன்பு என் அம்மாவுக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்டது, அவரை உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்றேன், அவர் லேசான காய்ச்சல் தான் எனக்கூறி சில மருந்துகளை வழங்கினார். அதன்பின்னும் சரியாகாததால், அவரை குண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். என் அம்மாவுக்கு தொற்று ஏற்பட்டிருந்தது, சிறுநீரகங்கள் செயலிழந்தன. உடனடியாக அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டியிருந்தது. அதற்கு 50,000 ரூபாய் செலவாகும். பணம் அதிகம் தேவைப்பட்டதால், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன், அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவையனைத்தும் சில நாட்களிலேயே நடந்து முடிந்துவிட்டன," என துரகபளம் எஸ்சி காலனியை சேர்ந்த விஜயராமராஜு பிபிசியிடம் கூறினார். படக்குறிப்பு, கடந்த 5 மாதங்களில் துரகபளம் கிராமத்தை சேர்ந்த 29 பேர் உயிரிழந்ததாக, குண்டூர் மாவட்ட ஆட்சியர் நாகலஷ்மி தெரிவித்தார் "என் கணவரை அனுமதித்த பிறகு மருத்துவமனைக்கு சென்றோம், அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆனால், அனுமதிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள்ளேயே அவர் உயிரிழந்தார். அதன்பின், எங்கள் கிராமத்தில் பலரும் இறந்தனர். எனக்கும் உடல்நிலை சரியில்லை. கிராமத்தின் நிலையை கண்டு எனக்கு அச்சமாக இருக்கிறது," என, துரகபளத்தை சேர்ந்த தலித் பெண் குமாரி தன் கவலைகளை பிபிசியிடம் தெரிவித்தார். "கிராமத்தில் வாரந்தோறும் இரண்டு அல்லது மூன்று பேர் இறக்கின்றனர், என்னுடைய தம்பியும் இறந்துவிட்டார். ஏன் இப்படி நடக்கிறதென தெரியவில்லை. இது மிகவும் அச்சமாக இருக்கிறது," என எஸ்சி காலனியை சேர்ந்த சீதம்மா பிபிசியிடம் தெரிவித்தார். குழந்தைகளுக்கு காய்ச்சல் எஸ்சி காலனியில் உள்ள பலரும் காய்ச்சல், மூட்டு வலி மற்றும் மற்ற பிரச்னைகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துரகபளம் எஸ்சி காலனியில் 230 வீடுகள் உள்ளன, தலித் சமூகத்தை சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் இங்கு வசிக்கின்றனர். "கடந்த இரண்டு மாதங்களாக, எங்கள் கிராமத்தில் உள்ள அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் இறந்துள்ளனர். நான்காம் வகுப்பு படிக்கும் என் மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கிறோம்," என அக்கிராமத்தை சேர்ந்த அனுஷா கூறுகிறார். "இங்கு நிலவும் சூழலால் எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது." என அவர் தெரிவித்தார். படக்குறிப்பு, குண்டூர் மாவட்ட ஆட்சியர் நாகலஷ்மி துரகபளம் கிராமத்தில் இத்தகைய திடீர் இறப்புகளை தொடர்ந்து, கிராம தேவாலயத்தில் சில தினங்களுக்கு முன்பு அரசு மருத்துவ முகாம் நடத்தியது. சுகாதார அமைச்சர் சத்யகுமார், துறை ஆணையர் வீரபாண்டியன், மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கிராமத்தில் ஆய்வு செய்தனர். மருத்துவப் பணியாளர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர், கிராம மக்கள் பலரும் ஏன் திடீரென மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறித்து அறிய ரத்த மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். குண்டூர் மாவட்ட மற்றும் சுகாதார துறை அதிகாரி விஜயலஷ்மி பிபிசியிடம் கூறுகையில், துரகபளம் கிராமத்துக்கென தனியே செல்போன் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சுகாதார ரீதியிலான தகவல்கள் பதிவு செய்யப்படுவதாகவும் கூறினார். படக்குறிப்பு, முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் நக்கா ஸ்ரீநிவாஸ் தண்ணீர் மாசுபாடு காரணமா? முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நக்கா ஸ்ரீநிவாஸ் உட்பட கிராமத்தினர் பலரும், சில ஆண்டுகளாக அக்கிராமத்தில், குறிப்பாக தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் அருகிலுள்ள குவாரியிலுள்ள குளம் ஒன்றிலிருந்து விநியோகிக்கப்படும் தண்ணீர் மாசடைந்திருப்பதாகவும் அதனாலேயே தற்போதைய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். "திறந்த குவாரியில் உள்ள குளத்திலிருந்து தண்ணீர் எடுப்பது பெரும் தவறு. அந்த மாசடைந்த தண்ணீரை பயன்படுத்தியதாலேயே இச்சூழல் ஏற்பட்டதாக நாங்கள் நம்புகிறோம்," என ஸ்ரீநிவாஸ் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து பிபிசியிடம் பேசிய மண்டல மேம்பாட்டு அதிகாரி (MPDO) ஸ்ரீநிவாஸ் கூறுகையில், "அந்த தண்ணீர் இப்போது பயன்படுத்தப்படுவது இல்லை" என்றார். குவாரியில் உள்ள குளத்திலிருந்து அக்கிராமத்துக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுவது சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் தற்போது கிராம மக்கள் ஆழ்துளை கிணற்றின் மூலம் தண்ணீர் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். படக்குறிப்பு, பிரதிபாடு எம்எல்ஏ பர்லா ரமஞ்ஜனெயலு 'மதுவும் காரணமாக இருக்கலாம்': எம்எல்ஏ பிரதிபாடு எம்எல்ஏ பர்லா ரமஞ்ஜனெயலு பிபிசியிடம் கூறுகையில், ஆரம்பத்தில் இந்த இறப்புகள் ஆல்கஹாலால் ஏற்பட்டதாக நம்பப்பட்டதாகவும் எனினும் பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னரே உண்மையான காரணம் தெரியவரும் என்றும் அவர் கூறினார். "கிராமத்தில் உள்ள சிலர் மதுவுக்கு அடிமையானவர்கள், அதிகமாக குடிப்பார்கள். தற்போது நிறுத்தப்பட்டு விட்டாலும், மலிவான மதுபானங்கள் முன்பு இங்கு கிடைத்தன. முன்பு அதை குடித்ததன் விளைவுகள் இப்போது தெரியலாம்." என அவர் கூறினார். "இந்த கிராமத்தில் 5,600 பேர் இருந்தால், எல்லோருமா பாதிக்கப்பட்டுள்ளனர்? சிலர் மட்டுமே பாதித்திருப்பதால், அது மதுவினால் கூட இருக்கலாம். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னரே காரணம் தெரியவரும்," என அவர் தெரிவித்தார்., படக்குறிப்பு, சுகாதார ஆணையர் வீர பாண்டியன் 'அறிக்கை வருவதற்கு முன்பு கூற முடியாது' - சுகாதார ஆணையர் சுகாதார ஆணையர் வீர பாண்டியன் ஊடகங்களிடம் கூறுகையில், அனைத்து கோணங்களிலும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் தண்ணீர் மாசுபாடு அல்லது ஆல்கஹால் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பதையும் விசாரித்துவருவதாகவும் கூறினார். "பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பு வரை எதையும் தெளிவாக கூற முடியாது. இறந்த 29 பேரில் 8 பேர் பெண்கள். தண்ணீரை பரிசோதித்ததில் அதில் எந்த மாசுபாடும் இல்லை என தெரியவந்துள்ளது. எனவே இறுதி அறிக்கை வருவதற்கு முன்னால் நம்மால் முடிவுக்கு வர முடியாது," என அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், Kalyan படக்குறிப்பு, புர்கோல்டெரியா சூடோமல்லெய் எனும் மோசமான பாக்டீரியா தொற்று காரணமாக இருக்கலாம் என, மருத்துவர் கல்யாண் நம்புகிறார் மருத்துவர்கள் கூறுவது என்ன? குண்டூரில் உள்ள தோல் மருத்துவர் கல்யாண், துரகபளத்தை சேர்ந்த இரு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். புர்கோல்டெரியா சூடோமல்லெய் (Burkholderia pseudomallei) எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் ஆபத்தான தொற்றாக கருதப்படும் மெலியோய்டோசிஸ் அவர்களுக்கு ஏற்பட்டதாக தெரிவித்தார். ரத்தத்தில் பாக்டீரியா தொற்று உள்ளதா என்பதை பரிசோதித்ததில் இது தெரியவந்ததாக கூறினார். கல்யாண் கூறுகையில், நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற நாள்பட்ட நோய்களை கொண்டவர்களுக்கே இது அதிகமாக ஏற்படும் என அவர் தெரிவித்தார். காய்ச்சல், இருமல், மூட்டு வலி போன்ற அறிகுறிகள் இருந்து, அது காசநோய் இல்லை என்பது தெரியவந்தால், அவர்களுக்கு இந்த தொற்று இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். தன்னிடம் வந்த இரு நோயாளிகளில் ஒருவருக்கு தொற்று மோசமானதால் இறந்ததாக அவர் கூறினார். எனினும், குண்டூர் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி விஜயலஷ்மி பிபிசியிடம் கூறுகையில், 29 பேரின் ரத்தப் பரிசோதனையில் மெலியோய்டோசிஸ் உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்தார். 'ஆராய குழு': அமைச்சர் சத்யகுமார் துரகபளத்தில் ஏற்படும் இந்த திடீர் இறப்புகளை அடையாளம் காண்பதிலும் அதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுவதிலும் தாமதம் இருந்தது உண்மைதான் என அமைச்சர் சத்யகுமார் ஒப்புக்கொள்கிறார். கிராமத்துக்கு சென்றபோது ஊடகங்களிடம் பேசிய அவர், இத்தகைய தகவல் குறைபாட்டுக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gvmv2ele4o
-
கருத்து படங்கள்
அததெரண கருத்துப்படம்
-
செம்மணி மனிதப்படுகொலை : புதிய தகவல்கள் வெளிப்படுத்துவேன் - சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி
Published By: Vishnu 08 Sep, 2025 | 03:05 AM (நா.தனுஜா) செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகக் குறிப்பிட்டு கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம 10.07.2025 எனும் திகதியிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைத்திருந்தர்ர. அவற்றின் பிரதிகள் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. அக்கடிதத்தில் 7 ஆம் இராணுவக் காலாட்படைத் தலைமையகத்தில் படுகொலை செய்யப்பட்டு செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமியினதும், அவரது குடும்பத்தினரினதும் சடலங்களை கப்டன் லலித் ஹேவாகேயின் ஆணைக்கு அமைவாகப் புதைத்ததைத் தவிர தனது கணவர் வேறெந்தக் குற்றத்தையும் புரியவில்லை எனவும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியமளிப்பதற்கு சோமரத்ன ராஜபக்ஷ தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து சோமரத்ன ராஜபக்ஷ மேலும் பல வெளிப்படுத்தல்களைச் செய்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஜுலை மாதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு பதிலும் கிட்டாததன் காரணமாக, சோமரத்ன ராஜபக்ஷ மீண்டும் தனது மனைவியின் ஊடாக கடந்த வாரம் ஜனாதிபதிக்கு மற்றுமொரு கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை விவகாரத்தில் தனது வகிபாகம், தான் உள்ளடங்கலாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏனைய 5 இராணுவத்தினரும் திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டமை, இவ்விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வகிபாகம் என்பன உள்ளடங்கலாக சோமரத்ன ராஜபக்ஷவினால் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திலும், முன்னைய வெளிப்படுத்தல்களிலும் குறிப்பிட்டிருந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதேபோன்று செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி 1996 ஆம் ஆண்டில் வடக்கில் இடம்பெற்ற செம்மணி மனிதப்படுகொலை, வடக்கில் சித்திரவதைக்கூடங்கள் நடாத்தப்பட்ட விதம், அவற்றுடன் தொடர்புடைய இராணுவ உயரதிகாரிகள் தொடக்கம் ஜனாதிபதி வரை அவற்றை செயற்படுத்திய சகல அதிகாரிகளினதும் பெயர் விபரங்கள் போன்றவற்றை இந்நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளக்கூடியவகையில் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவ்விவகாரம் தொடர்பில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும், சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளையும் சட்டத்தின்முன் நிறுத்துமாறும், பாதிக்கப்பட்ட யாழ் மக்களுக்கான நீதியை நிலைநாட்டுமாறும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224486
-
சென்னை உள்பட உலகம் முழுவதும் சந்திர கிரகணம் எப்படி தெரிந்தது?
பட மூலாதாரம், AAMIR QURESHI/AFP via Getty Images படக்குறிப்பு, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் தெரிந்த சந்திர கிரகணம் இது. நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்கள் அடர் சிவப்பு நிறத்தில் இருப்பதை இந்த புகைப்படம் அழகாக காட்சிப்படுத்தியுள்ளது. 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வானியல் ஆர்வலர்கள் ஒரு முழு சந்திர கிரகணத்தின் போது முழு நிலவும் செந்நிறமாக காட்சியளிக்கும் ஒரு அழகான காட்சியை நேற்று இரவு கண்டு ரசித்தனர். பூமியின் நிழலில் கடந்து செல்லும் போது, நிலவு ஆழமான சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும், இது 'பிளட் மூன்' அல்லது "ரத்த நிலவு" என்று அழைக்கப்படும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் காணப்படும். பூமியின் வளிமண்டலத்தின் வழியாக சூரிய ஒளி செல்லும்போது நீல ஒளியை வடிகட்டி, சிவப்பு ஒளி நிலவை நோக்கி வளைக்கப்படுவதால் இது ஏற்படுகிறது. சூரியனிலிருந்து பூமிக்கு எதிர் பக்கத்தில் நிலவு வரும்போது முழு நிலவு அல்லது பெளர்ணமி ஏற்படுகிறது. அப்போது நம்மை நோக்கி இருக்கும் நிலவின் முழு பக்கமும் ஒளிரும். இந்திய நேரப்படி இரவு 9:57 மணிக்கு பூமியின் நிழல் நிலவின் மீது விழ தொடங்கியது. இரவு 11:01 மணிக்கு பூமியின் நிழல் நிலவு முழுவதையும் மறைத்த்து, முழு சந்திர கிரகணம் தோன்றியது. அப்போது நிலவு செந்நிறமாக தோன்ற ஆரம்பித்தது. இந்தக் காட்சி இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, டென்மார்க், எகிப்து, என உலகின் பல்வேறு நாடுகளில் தெரிந்தது. எனினும் லண்டன் உள்ளிட்ட சில பகுதிகளில் வானிலை காரணமாக சந்திர கிரகணத்தை காண முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். பட மூலாதாரம், PTI படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சென்னையில் நேற்று இரவு தெரிந்த சந்திர கிரகணம். பட மூலாதாரம், MADS CLAUS RASMUSSEN/Ritzau Scanpix/AFP via Getty Images படக்குறிப்பு, டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் முழு சந்திர கிரகணத்தை மக்கள் கூடி கண்டு ரசித்தனர். பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் மக்கள் பார்வைக்கு தெரிந்த சந்திர கிரகணம் பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, சுவிட்சர்லாந்து நாட்டின் போட்டன்ஸ் பகுதியில் ஒரு தேவாலய கோபுரத்துக்கு மேலே தெரியும் சந்திர கிரகணம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னி நகரின் வானில் தென்பட்ட சந்திர கிரகணத்தின் காட்சி. பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, தென் ஆப்பிரிகாவில் ஜோஹனஸ்பர்க் நகரில் தெரிந்த சந்திர கிரகணம் பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, எகிப்து தலைநகர் கெய்ரோவில் அடர் செந்நிறத்தில் தெரிந்த நிலவு. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நேற்று மாலை வானில் தெரிந்த சந்திர கிரகணம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ceq2xpd272go
-
பாதாளக் குழுக்களின் முன்னிலை தரப்பினரின் கைதால் ஒரு சில அரசியல்வாதிகள் கலக்கம் - வசந்த சமரசிங்க
Published By: Vishnu 08 Sep, 2025 | 02:51 AM (இராஜதுரை ஹஷான்) பாதாள குழுக்களின் முன்னிலை தரப்பினரை கைது செய்தவுடன் ஒருசில அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளார்கள்.போதைப்பொருள் வியாபாரத்துக்கும்,அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புள்ளது என்பதை நாட்டு மக்கள் வெகுவிரைவில் உறுதியாக அறிந்துக்கொள்வார்கள் என வர்த்தகத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (7) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஊழல்வாதிகளுக்கு சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கும் போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் தற்போது ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் நண்பர்கள் என்பதை நாட்டு மக்கள் இதனூடாக விளங்கிக் கொள்ள வேண்டும்.இவர்கள் ஆட்சியில் இருந்தால் அவர்களின் நண்பர்களான ஊழல்வாதிகள் அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள். ஊழல் மோசடியினால் தான் இந்த நாடு வங்குரோத்து நிலையடைந்தது. ஆகவே ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல்பழிவாங்கள் என்று எவ்வாறு குறிப்பிடுவது. பாதாளக் குழுக்களின் முன்னிலை தரப்பினரை கைது செய்தவுடன் ஒருசில அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளார்கள்.இதனையும் அரசியல் பழிவாங்கல் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரியது. போதைப்பொருள் வியாபாரத்துக்கும்,அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புள்ளது என்பதை நாட்டு மக்கள் வெகுவிரைவில் உறுதியாக அறிந்துக்கொள்வார்கள்.கடந்த அரசாங்கங்களின் அரச அனுசரணையில் பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் பாதுகாக்கப்பட்டார்கள். பாதாளக் குழுக்களின் முன்னிலை தரப்பினர் கைது செய்யப்பட்டு அவர்களினால் வெளிப்படுத்தப்படும் விடயங்களால் ஜனாதிபதி கனவு காண்பவர்கள் தற்போது அச்சமடைந்துள்ளார்கள்.இவர்கள் தான் கடந்த காலங்களில் பாதாளக்குழுக்களை போசித்தார்கள்.அதன் விளைவையே நாடு இன்று எதிர்கொள்கிறது என்றார். https://www.virakesari.lk/article/224484
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஷ்யா vs யுக்ரேன்: அதிநவீன ஆயுதங்களை தேடும் போர்க்களத்தில் எதிரியை ஏமாற்றும் 'பழைய தந்திரம்' பட மூலாதாரம், Na Chasi படக்குறிப்பு, ரேடார்கள், கையெறி குண்டுகள், ஜீப்புகள், லாரிகள், டாங்கிகள் உள்ளிட்ட அனைத்தும் போலியாக இருக்கலாம். கட்டுரை தகவல் விட்டலி ஷெவ்சென்கோ பிபிசி செய்தியாளர் 7 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரஷ்ய போருக்கு ஆதரவான சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பரவியது. அது யுக்ரேனிய டாங்கிகளை ட்ரோன் மூலம் தாக்கி வெடிக்கச் செய்யும் வீடியோதான் அது. ஆனால் ரஷ்யா, யுக்ரேன் இடையிலான போர் நாம் காண்பதைப் போல இல்லை. இந்த வீடியோவிற்குப் பிறகு யுக்ரேன் ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில் சேதமடைந்த டாங்கியை, ராணுவ வீரர் ஒருவர் சிரித்தபடி காண்பித்து " எனது மர டாங்கியை உடைத்துவிட்டனர்" எனக் கூறுகிறார். அங்கிருந்த டாங்கி ரஷ்யாவை குழப்புவதற்காக யுக்ரேன் படைகள் ஏற்பாடு செய்த பலகையால் ஆன ஏமாற்றுவேலை ஆகும். எதிரிகளை ஏமாற்றி வெடிபொருட்கள், அவர்களின் நேரம் மற்றும் முயற்சியை வீணாக்குவதற்காக யுக்ரேன் மற்றும் ரஷ்யா என இருநாடுகளும் ஆயிரக்கணக்கான போலி ராணுவ மாதிரிகளை வடிவமத்துள்ளதைப் போலவே இதுவும் ஒரு உத்தியாகும். சிறிய ரேடார்கள் மற்றும் கையெறி குண்டுகள், ஜீப்புகள், லாரிகள், டாங்கிகள் வீரர்கள் என கிட்டத்தட்ட அங்கிருக்கும் அனைத்தும் போலியாக இருக்கலாம். இந்த போலி மாதிரிகள் பெரும்பாலும் தட்டையான பொதிகளாகவோ, ஊதக்கூடிய பலூன் போன்றவையாகவோ, 2D அல்லது ரேடியோ அலைகளை பிரதிபலிப்பதன் மூலம் ஒரு டாங்கியின் ரேடார் மாயை என உருவாக்கப்பட்டிருக்கலாம். ஒருவேளை யுக்ரேனில் ஒரு ஆயுதத்தை செலுத்தினால் அதில் பாதிக்கப்படுவதில் பாதி இந்த போலி மாதிரிகளாகவே இருக்கும். பலூன் பீரங்கிகள் பட மூலாதாரம், Back and alive படக்குறிப்பு, M777 ஹோவிட்சர் பீரங்கி மிகவும் பிரபலமானதாகும். யுக்ரேன் ராணுவம் பயன்படுத்துவதும் போலிகளிலேயே பிரிட்டிஷ் தயாரித்த M777 ஹோவிட்சர் பீரங்கிதான் மிகவும் பிரபலமானதாகும். மேற்கத்திய நட்பு நாடுகள், 150-க்கும் மேற்பட்ட எளிதில் கையாளக்கூடிய பீரங்கிகளை யுக்ரேனுக்கு வழங்கியதாக நம்பப்படுகிறது. இது யுக்ரேனிய வீரர்களால் 'மூன்று கோடாரிகள்' என அழைக்கப்படுகிறது. யுக்ரேனிய ராணுவம் பயன்படுத்தும் பல ஆயுதங்களைப்போலவே, இந்த போலி மாதிரிகளையும் தன்னார்வலர்கள் தயாரித்துக் கொடுத்து உதவிவருகிறார்கள். நா சாஸி (Na Chasi) என்ற தன்னார்வ அமைப்பு மட்டும் யுக்ரேனிய ராணுவத்திற்கு சுமார் 160 மாடல் M777-களை வழங்கியுள்ளதாக ரஸ்லன் க்ளிமென்கோ கூறுகிறார். இவற்றை ஒன்றுசேர்க்க பெரிய கருவிகள் எதுவும் தேவைப்படாது. 2 பேர் சேர்ந்து மூன்றே நிமிடங்களில் இதை தயார் செய்துவிட முடியும் என்பதே இவர்களை மிகவும் பிரபலமாக காட்டுவதாக க்ளிமென்கோ தெரிவித்துள்ளார். "எத்தனை பொருட்களை வழங்குகிறோம் என்பது முக்கியமில்லை. அவையனைத்தும் நல்ல காரியத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றன" என அவர் பிபிசியிடம் கூறினார். ரியாக்டிவ்னா போஷ்டா என்ற மற்றொரு தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பாவ்லோ நரோஷ்னி, பொதுவாக ஒரே சமயத்தில் 10 முதல் 15 M777 பீரங்கிகளை தயாரிப்போம் என தெரிவித்தார். ரியாக்டிவ்னா போஷ்டாவின் மாதிரிகள் பொதுவாக பலகையில் செய்யப்படுகின்றன. இவை 500 முதல் 600 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.44,000 முதல் ரூ.52,000 வரை) மதிப்பு கொண்டவை. ரஷ்யா அடிக்கடி 35,000 டாலர் மதிப்புள்ள லான்செட் காமிகாஸ் (Lancet kamikaze) ட்ரோன்கள் மூலம்தான் குறிவைக்கும். "இப்போது நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள்" என நரோஷ்னி கூறுகிறார். ட்லோயா என அழைக்கப்படும் அவரின் ஒரு M777 போலி பீரங்கி ஓராண்டுக்கும் மேலாக தரைப்படையில் உழைத்துள்ளது. இது 14 லான்செட் ட்ரோன்களை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் யுக்ரேன் படைகள் இதை டேப் போட்டு ஒட்டியோ அல்லது ஸ்க்ரூக்களை மாற்றியே மீண்டும் செயல்படுத்துவார்கள் என அவர் கூறினார். சக்கரங்களின் தடம் மற்றும் போலி கழிவறைகள் பட மூலாதாரம், Apate படக்குறிப்பு, ரஷ்யாவிடமும் விலையுயர்ந்த மற்றும் பல்வேறு ரகங்களில் போலி மாதிரிகள் உள்ளன. இந்த போலி மாதிரிகள் எப்படி வரிசைப்படுத்தப்படுகின்றன என்பது மிகவும் முக்கியம். எதிரிகளை ஏமாற்றி அவர்களை தாக்குதலை தொடரத் தூண்டுவதற்கு உண்மையான ராணுவ நிலைகளைப் போலவே இருக்கவேண்டும். அதனால் வாகனங்களின் சக்கரங்களின் தடம், கழிவறைகள் போன்றவை அச்சுஅசலாக இருக்கவேண்டும். இதனால் எதிரிகள் மட்டுமல்ல அதிகாரிகளும் கூட சில சமயங்களில் ஏமாந்துவிடுவார்கள். இதுபோன்ற மாதிரிகளால் அதிகாரி ஒருவர் ஏமாந்ததற்கான உதாரணமும் எங்களிடம் உள்ளது. அவர் "பீரங்கிகளை வரிசைப்படுத்த யார் உத்தரவிட்டது? M777 பீரங்கிகளை எங்கிருந்து வாங்கினீர்கள்?" எனக் கேட்டதாக யுக்ரேனின் 33வது பிரிக்கப்பட்ட இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார். இவர் இன்னொரு உத்தியையும் குறிப்பிடுகிறார். அது என்னவென்றால் உண்மையான போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்ட பிறகு உண்மையான பீரங்கிகளை உடனடியாக அகற்றிவிட்டு அதற்கு பதிலாக போலியானதை மாற்றிவிடுவார்களாம். "இவர்கள் எதிரிகளை ஏமாற்றி, அவர்களின் விலையுயர்ந்த உபகரணங்களை ஒன்றுமே இல்லாத போலிகளிடம் வீணடையச் செய்வதில் வல்லவர்கள். இதுபோல நமக்கு நிறைய தேவை" என்கிறார். ரஷ்யாவிடமும் விலையுயர்ந்த மற்றும் பல்வேறு ரகங்களில் போலி மாதிரிகள் உள்ளன. ரஷ்யாவின் சமீபத்திய வான்வழி தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களில் பெரும்பாலானவை மலிவான மாதிரிகள் என யுக்ரேனிய ராணுவம் கூறுகிறது. "இது இப்போது 50-50 என உள்ளது. 50% உண்மையான ட்ரோன்களும், 50% மாதிரிகளுமாக உள்ளன. "எங்கள் வான் பாதுகாப்புகளை முறியடித்து, விலையுயர்ந்த ஏவுகணையைப் பயன்படுத்தி மலிவான ட்ரோனை சுட்டு வீழ்த்த நம்மை ஏமாற்றுவதே அவர்களின் குறிக்கோள்" என யுக்ரேனிய விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட் கூறுகிறார். சில நேரங்களில், இது பள்ளி மாணவர்களால் ஒன்றாக இணைக்கப்பட்டதைப்போல தோன்றும் ஒரு பலகை மாதிரியாகவும் இருக்கும். பட மூலாதாரம், People's Front Novosibirsk படக்குறிப்பு, போரில் போலி மாதிரிகளை வைப்பது ஒன்றும் புதிது கிடையாது. இது வானில் இருக்கும்போது, யுக்ரேனிய ரேடார் மூலம் பார்க்கையில் உண்மையான ராணுவ ட்ரோன்களைப் போலவே இருக்கும் என கர்னர் இன்ஹாட் கூறுகிறார். ரஸ்பல் என்ற ரஷ்ய நிறுவனம் வான்வழி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பை ஏமாற்றும் வகையில் 2D மாதிரிகளை தயாரிக்கிறது. இது எஞ்சின் வெப்பம், ரேடியோ சிக்னல்கள், வாக்கி-டாக்கி, பிரதிபலிப்பான் என எதிரிகளை ஏமாற்ற அனைத்தையும் போலியாக வடிவமைக்கிறது. உண்மையில் ராணுவ வீரர்களும் போலியாக வடிவமைக்கப்படுகின்றனர். நோவோசிபிர்ஸ்கில் உள்ள ரஷ்ய ஆதரவு பெற்ற மக்களைக் கொண்ட தன்னார்வலர்கள், ராணுவ சீருடை அணிந்திருக்கும் போலி வீரர்களை உருவாக்குகிறார்கள். யுக்ரேனின் வெப்ப கேமராக்களை ஏமாற்ற, மனித உடலின் வெப்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஜாக்கெட்டுகளுக்கு அடியில் டம்மிகளின் உடல்களைச் சுற்றி வெப்பமூட்டும் கம்பிகளைச் சுற்றி வைக்கின்றனர். ஆனால், போரில் இந்த போலி மாதிரிகளை வைக்கும் யோசனை ஒன்றும் புதிது கிடையாது. டி-டே (D-Day) சமயத்தில்கூட எதிரிகளை திசைதிருப்புவதற்காக இங்கிலாந்து, ராணுவ படைகள், டாங்கிகள், விமானங்கள் என அனைத்தையும் முழுக்க முழுக்க போலியாக வடிவமைத்திருந்தது. களத்தின் உண்மையான நிலவரத்தை மறைப்பதற்காக இந்த உத்தி கையாளப்பட்டது. மேலும் எதிரிகளை ஆச்சர்யப்படுத்த நட்பு நாடுகளை ஆயத்தப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ராணுவ தொழில்நுட்பம் பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. உதாரணமாக போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களும் தானியங்கி கருவிகளும் பெரிய கண்டுபிடிப்புகளாக உள்ளன. ஆனால், என்னதான் புதுப்புது ஆயுதங்களை பயன்படுத்தினாலும், இதுதான் தந்திரமாக உள்ளது. மிகச்சிறிய பொம்மை போன்ற ஒன்று கூட போரில் மிகப்பெரிய பங்காற்ற முடியும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly02422gpqo
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் 8 ஆம் திகதி ஆரம்பம்
ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம் : முதல் அமர்விலேயே இலங்கை குறித்த கலந்துரையாடல்! 08 Sep, 2025 | 09:45 AM ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இன்று திங்கட்கிழமை (08) ஆரம்பமாகின்ற நிலையில், இந்த கூட்டத்தொடர் இன்று முதல் ஒக்டோபர் மாதம் 08 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தலைமையிலான குழு ஜெனிவாவுக்கு பயணமாகியுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரின் முதல் அமர்விலேயே இலங்கை குறித்த கலந்துரையாடல் இடமபெறவுள்ளது. இந்த முறை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். இந்த விஜயத்தின் போது அரச பிரதிநிதிகள் ஜெனீவாவில் ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் உள்ளிட்ட பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடவுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோக்கர் டர்க் மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் இடையே விசேட சந்திப்பு ஒன்றும் இடம்பெறவுள்ளது. இதற்கிடையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் இலங்கைக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக அமைந்துள்ளதாக இலங்கையின் முன்னாள் மனித உரிமைகள் ஆணையாளரான சட்டத்தரணி பிரதிபா மஹாநாம ஹேவா தெரிவித்துள்ளார். இந்த அமர்வில் நாட்டிற்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்டுள்ள யோசனை தொடர்பான வரைவு சுமார் ஒரு மாதத்திற்கு முன்பு வெளியுறவு அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் இலங்கைக்கான விஜயத்தின் பின்னர் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பித்த அறிக்கை தொடர்பில் அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வ பதில் அறிக்கை மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பதில் அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது, எந்தவொரு வெளியகபொறிமுறையும் தற்போது தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு இடையூறாக அமைவதுடன் அவை சமூகங்களை துருவமயப்படுத்தும். எனவே சர்வதேச பொறிமுறைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளை ஒருபோதும் ஏற்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இன, மத, வர்க்க பேதங்களின் அடிப்படையிலான பிளவுகளோ அல்லது ஒடுக்குமுறைகளோ அற்ற, பல்லினத்தன்மையை கொண்டாடக்கூடிய நாட்டை கட்டியொழுப்புவதற்கான அர்ப்பணிப்புடன் கூடிய கடப்பாட்டையும் மக்கள் ஆணையையும் அரசாங்கம் கொண்டிருக்கின்றது. இலங்கையில் இனவாதமோ, தீவிரவாதமோ தலைதூக்குவதற்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்காகது. எந்தவொரு வெளியக பொறிமுறைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு இடையூறாகவே அமையும் என்பதையும் அவை சமூகங்களை துருவமயப்படுத்தும் என்பதையும் அவதானித்துள்ளோம். எனவே உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சர்வதேச நடவடிக்கைகள் தொடர்பில் உள்வாங்கப்பட்டுள்ள முடிவுரையையும் பரிந்துரையையும் இலங்கையால் ஏற்றுக்கொள்ள முடியாது என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/224496
-
மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் சர்வதேச அறிக்கை வெளியீடு
Published By: Vishnu 07 Sep, 2025 | 09:52 PM ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை சர்வதேச உண்மை மற்றும் நீதி திட்ட அமைப்பினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. யாழ் ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (7) இடம்பெற்ற நிகழ்வில் குறித்த அறிக்கை வெளியிடப்பட்டது. இதன்போது நிமலராஜனின் உருவப் படத்திற்கு சுடர் ஏற்றப்பட்டு மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. யாழ் ஊடக அமையத்தின் தலைவர் குமாரசாமி செல்வக்குமாரால் குறித்த அறிக்கையின் முதல் பிரதி நிமலராஜனின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டதுடன் குறித்த அறிக்கையின் பிரதிகள் கலந்துகொண்ட ஏனையோருக்கும் வழங்கப்பட்டது. குறித்த நிகழ்வில் ஊடகவியலாளர்கள், ஊடக துறை சார்ந்தவர்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என்போர் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/224481
-
யாழில் நூலகம் ஒன்றை திறந்த ரில்வின் சில்வா
மக்கள் விடுதலை முன்னணியின் பொது செயலாளர் ரில்வின் சில்வாவால் யாழ்ப்பாணத்தில் இன்று நூலகம் ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. இன்று (07) பிற்பகல் யாழ் கந்தர்மடம் பகுதியில் அமைந்துள்ள தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண தலைமை காரியாலய வளாகத்தில் குறித்த நூலகம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்போது அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன், ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன், தேசிய மக்கள் சக்தியின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் கொலை வழக்கின் விசாரணை தொடர்பான அறிக்கை அடங்கிய புத்தகம் ஒன்று யாழ் ஊடக அமையத்தால் குறித்த நூல் நிலையத்திற்கு வழங்கிவைக்கப்பட்டது. -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmf9w523x009eqplp48cd1nqe
-
தம்பலகாமத்தில் பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் பலி!
திருகோணமலையில் பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழப்பு Published By: Vishnu 07 Sep, 2025 | 06:55 PM திருகோணமலை தம்பலகாமம் பகுதியில் உள்ள ஆலயமொன்றில் சனிக்கிழமை (06) இரவு நடைபெற்ற வருடாந்திர திருவிழாவின் போது பட்டாசு வெடித்து ஒருவர் உயிரிழந்தார். அங்கு நடைபெற்ற தேர் பவனியின் போது வானவேடிக்கை நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில், வெடிக்காமல் இருந்த ஒரு பட்டாசை அருகில் இருந்த ஒருவர் காலால் உதைத்துள்ளார். அது மற்றொருவரைத் தாக்கி வெடித்ததில், அவர் தீவிரமாக காயமடைந்தார். காயமடைந்தவர் தம்பலகாமம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார். இவரின் சடலம் தொடர்பான பிரேத பரிசோதனை கந்தளாய் சட்ட வைத்திய அதிகாரியால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பாக தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/224475
-
வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் – பொலிஸார் எச்சரிக்கை
பரிசில்கள் தருவதாக வரும் குறுஞ்செய்திகள் குறித்து எச்சரிக்கை வங்கியின் ஊடாக பரிசில்கள் வழங்கப்படுவதாக கூறி சமூக ஊடகங்களில் ஒரு மோசடி செய்தி தற்போது பகிரப்படுவதாக பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது மோசடியானதும் மிகவும் ஆபத்தானதுமான போலிச் செய்தியாகும் என பொலிஸ் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது. தனிநபரின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுவதற்காகவும், கைப்பேசிகளின் மென்பொருளை மாற்றியமைப்பதற்காகவும் இந்த மோசடி செய்திகள் பகிரப்படுகின்றது. இது தொடர்பில் கணினி அவசர தயார்நிலை குழுவுக்கு பல முறைப்பாடுகள் வந்துள்ளதாக அதன் தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்தார். கைப்பேசிகள் மூலம் வங்கிச் சேவை செய்பவர்கள் இதுபோன்ற போலிச் செய்திகள் தொடர்பில் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார். https://adaderanatamil.lk/news/cmf9hm1sd009aqplpul2ndo92
-
தையிட்டி; மயிலிட்டி; கச்சதீவு ; செம்மணி - நிலாந்தன்
பகிர்விற்கு நன்றி @கிருபன் அண்ணை.
-
நாட்டை உலுக்கிய எல்ல விபத்து - ஒருவர் கைது!
விபத்துக்குள்ளான பேருந்து சாரதியின் இரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எல்ல - வெல்லவாய வீதியில் விபத்துக்குள்ளான பேருந்து சாரதியின் இரத்த மாதிரிகள் அரச இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்திற்கு பரிசோதனைகளுக்காக அனுப்ப முடிவு செய்யப்பட்டுள்ளது. விபத்து ஏற்பட்ட சந்தர்ப்பத்தில் சாரதி மது அருந்தியிருந்தாரா என்பது தொடர்பில் அறிவதற்காகவே, சாரதியின் இரத்த மாதிரிகளை இன்று (7) அந்த திணைக்களத்திற்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை இரவு எல்ல வெல்லவாய வீதியில் இடம்பெற்ற விபத்தில் 15 பேர் உயிரிழந்த நிலையில் 17 பேர் காயமடைந்தனர். இந்த விபத்தில் பேருந்து சாரதியும் உயிரிழந்தார். இந்நிலையில் விபத்து ஏற்பட்ட போது அவர் ஏதேனும் போதைப்பொருள் அல்லது மதுபானம் அருந்தியிருந்தாரா என்பது தொடர்பில் உறுதி செய்ய இரத்த மாதிரிகள் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளதாக கூறப்படுகின்றது. https://adaderanatamil.lk/news/cmf9gmnv000a5o29n9id9zhxf