Everything posted by ஏராளன்
-
இலங்கை முன்னேற்றம் அடைந்துள்ளது - உலக வங்கி
நெருக்கடிக்குப் பின்னர் பொருளாதார ஸ்திரத்தன்மையை நோக்கி இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது. உலக வங்கி விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கை பொது நிதி மதிப்பாய்வானது சமச்சீர் நிதி சரிசெய்தலை நோக்கி நிலைப்படுத்தல் முயற்சிகளை இலங்கை முன்னெடுத்துள்ளது. முதன்மை இருப்பானது 2021 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) 7.9 சதவீதத்தால் குறைந்த நிலையில் தற்போது அதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. கடந்த கால கொள்கை தவறுகளை மாற்றியமைத்தல் மற்றும் அடிமட்டத்தில் இருந்து வரிகளை அதிகரித்தல் உள்ளிட்ட குறிப்பிடத்தக்க வருவாய் அதிகரிப்பு நடவடிக்கைகளால் இது உந்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் 9.6 சதவீத மொத்த பொருளாதார வீழ்ச்சிக்கு பின்னர் 2024 ஆம் ஆண்டில் சுமார் 5 சதவீதம் பொருளாதாரம் மீண்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. 2024 வரை பொருட்களின் விலைகள் அதிகமாக இருந்தபோதிலும், பணவீக்கத்தைச் சமாளிப்பதற்கான நிதி மற்றும் பணவியல் முயற்சிகள் குடும்பங்களுக்கு, குறிப்பாக பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளுக்கு பயனளித்துள்ளதாகவும் உலக வங்கி குறிப்பிட்டுள்ளது. கடன் மறுசீரமைப்பு நிறைவடைந்தவுடன் கடன் நிலைத்தன்மை மீட்டெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது இது நிதிச் சந்தைகளுக்கான அணுகலை மீண்டும் பெறுவதற்கான ஒரு அத்தியாவசிய படியாகும். வளர்ச்சி அல்லது சமத்துவத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தாமல் 2029 ஆம் ஆண்டுக்குள் இலங்கை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2 சதவீதம் வரை வருவாயை அதிகரிக்க முடியும் என்பதை இந்த மதிப்பாய்வு எடுத்துக்காட்டுகிறது. பொது செலவினங்களை சிறப்பாக இலக்கு வைப்பதும் நிர்வகிப்பதும் தற்போதைய வரவு செலவு திட்ட வரம்புகளுக்குள் மேம்பட்ட விளைவுகளை வழங்க முடியும் என்பதையும் உலக வங்கியின் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது. https://adaderanatamil.lk/news/cmfdz9ky600bcqplp45ysbrdu
-
இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது
கத்தாரில் இஸ்ரேல் தாக்குதல் பற்றி அரபு ஊடகங்கள் கூறுவது என்ன? Reuters 10 செப்டெம்பர் 2025, 10:05 GMT புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் செப்டம்பர் 9 அன்று கத்தாரின் தலைநகர் தோஹாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், அமெரிக்காவின் பங்கு இருந்ததாக அரபு மற்றும் பிராந்திய ஊடகங்கள் கூறுகின்றன. இந்த தாக்குதல், உயர்நிலை ஹமாஸ் பேச்சுவார்த்தை குழுவை குறிவைத்து நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. செளதி அல் அரேபியா டிவியின் செய்தித் தொகுப்பில், இஸ்ரேல் ஊடகங்களில் வந்த செய்தியை மேற்கோள் காட்டி, தாக்குதல் குறித்து அமெரிக்காவுக்கு முன்கூட்டியே தெரிவிக்கப்பட்டதாகவும், அதிபர் டிரம்ப் அதற்கு "பச்சைக்கொடி காட்டினார்" என்றும் ஒரு அதிகாரி கூறியதைத் தெரிவித்தது. மேலும், பெயர் வெளியிட விரும்பாத ஹமாஸ் தலைவர் ஒருவரின் கூற்றைச் சுட்டிக்காட்டிய அந்த தொலைக்காட்சி, தாக்குதல் தோல்வியடைந்தது, பேச்சுவார்த்தை குழுவினர் உயிர் பிழைத்தனர் என்றும் தெரிவித்தது. "தோல்வியடைந்த தாக்குதல்" என்று அல் அரேபியா சேனல் விவரித்ததைப் பற்றி விவாதிக்க பாதுகாப்பு ஆய்வாளர் ரியாட் கஹ்வாஜியை அழைத்தது. இந்த தாக்குதல் இஸ்ரேலின் தவறான மதிப்பீடு மற்றும் உளவுத்துறை தோல்வியைக் காட்டுகிறது அல்லது பேச்சுவார்த்தை குழுவினருக்கு உளவியல் அழுத்தம் கொடுத்து பயத்தை ஏற்படுத்தி, அவர்களை சமரசம் செய்யத் தள்ளும் நோக்கத்துடன் நடத்தப்பட்டது என கஹ்வாஜி கூறினார். அல் அரேபியா, தொடர்ச்சியாக வெளியிட்ட முக்கிய செய்திகளில், இந்த தாக்குதல் குறித்து செளதி அரேபியா தெரிவித்த கண்டனத்தையும் பதிவு செய்தது "கத்தார் எத்தகைய நடவடிக்கை எடுத்தாலும் அதனை ஆதரிக்க எங்களின் திறன் அனைத்தையும் வழங்குவோம். இஸ்ரேலின் நடவடிக்கைகளுக்கு கடுமையான விளைவுகள் ஏற்படும் என செளதி அரசு எச்சரித்ததாகவும் அந்த தொலைக்காட்சி கூறியது. AL ARABIYA TV கத்தாரின் தலைநகர் தோஹா மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில், அமெரிக்காவின் பங்கு இருந்ததாக அரபு மற்றும் பிராந்திய ஊடகங்கள் கூறுகின்றன 'அமெரிக்காவை நம்ப வேண்டாம்' இரான் ஆதரவு பெற்ற ஹூத்தி இயக்கத்தின் அல்-மசிரா டிவி சேனல் தனது இணையதளத்தில் வெளியிட்ட செய்தியில், ஆரம்பத் தகவல்களின்படி இந்தத் தாக்குதல் அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து நடத்தப்பட்டதாக கூறியது. இதற்கிடையில், அந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஒரு நிபுணர், அரபு நாடுகளின் பங்கைப் பற்றி பேசினார். "ஜூன் மாதத்தில் அமெரிக்காவின் அல்-உதீத் ராணுவத் தளத்தை குறிவைத்த இரானிய ராக்கெட்டுகளைத் தடுத்த அரபு பாதுகாப்பு அமைப்புகள் இப்போது எங்கே?" என்று கேள்வி எழுப்பினார் அவர் மேலும், அரபு நாடுகள் வெளியிடும் அறிக்கைகளைச் சுட்டிக்காட்டி, "'நாங்கள் கண்டிக்கிறோம். நாங்கள் கோருகிறோம்' போன்ற வார்த்தைகளே அதிகம் உள்ளது" என்றார் அவர். ஹூத்தி உச்ச அரசியல் கவுன்சில் (SPC) தலைவர் மஹ்தி அல்-மஷாத், "குற்றவாளி டிரம்பின் அனுமதி இல்லாமல் இந்தத் தாக்குதல்கள் நடந்திருக்காது" என்று கூறி, அமெரிக்கா உடந்தையாக இருப்பதாகவும் குற்றம் சாட்டினார். ஹூத்தி கட்டுப்பாட்டில் உள்ள சபா செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், "சியோனிச எதிரி (இஸ்ரேல்) இருக்கும் வரை பிராந்தியத்தில் அமைதியோ, நிலைத்தன்மையோ இருக்க முடியாது என்பதை இந்தச் சம்பவம் எந்த சந்தேகமும் இல்லாமல் நிரூபித்துள்ளது" என்றும் அவர் தெரிவித்தார். Reuters மேலும், இது அனைத்து அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளுக்கும் ஒரு எச்சரிக்கையாக இருக்கிறது என்றும், "தாமதமாகிவிடும் முன் எச்சரிக்கையாக இருங்கள். சியோனிச அச்சுறுத்தலை எதிர்கொள்ள நாம் ஒன்றுபடாவிட்டால், தோஹாவில் நடந்தது மற்ற நாடுகளிலும் மீண்டும் மீண்டும் நடக்கும்" என்றும் மஷாத் எச்சரித்தார். தொடர்ந்து பேசிய அவர், "இஸ்லாமியர்களே, அமெரிக்காவை நம்பாதீர்கள். அது சியோனிசத்தின் ஆதரவாளரும், பணியாளரும் ஆகும்'' என்றார். லெபனானின் ஹெஸ்பொலா இயக்கத்தின் அல்-மனார் டிவி, லெபனான் அதிபர் ஜோசப் அவுன் உட்பட பல பிராந்திய தலைவர்களின் கண்டன அறிக்கைகளை தொடர்ந்து வெளியிட்டது. அந்த சேனல், கத்தாரின் மத்தியஸ்தர் பங்கு குறித்து ஒரு நிபுணருடன் விவாதித்தது. "அரபு நாடுகளின் பங்கு சரியான பாதைக்கு திரும்ப வேண்டும். எங்களுக்கு இப்போது உண்மையான, தீவிரமான பங்கு தேவை. பாதிக்கப்பட்டவருக்கும் தண்டனை வழங்குபவருக்கும் இடையில் நீங்கள் மத்தியஸ்தராக இருக்க முடியாது" என்றார் அந்த நிபுணர். லெபனான் அரசு செய்தி நிறுவனமான என்என்ஏ (NNA), அதிபர் அவுனின் அறிக்கையை மேற்கோள் காட்டியது. கத்தார், அதன் தலைமை மற்றும் மக்களுடன் தனது நாட்டின் ஒற்றுமையை அதில் வலியுறுத்தினார் அதிபர் அவுன். மேலும், ''இந்தத் தாக்குதல், இஸ்ரேல் நடத்திய தொடர் தாக்குதல்களின் ஒரு பகுதியாகும். இது, பிராந்திய நாடுகளில் நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் தகர்க்கும் நடவடிக்கை" என்று கூறியிருந்தார். ஹெஸ்போலா சார்பு கொண்ட அல்-அக்பர் பத்திரிகையும், இந்த தாக்குதலுக்கு எதிராக வெளியான பரவலான சர்வதேச மற்றும் அரபு கண்டனங்களை முன்னிலைப்படுத்தியது. இது, "பிராந்தியத்தின் பாதுகாப்பை அச்சுறுத்தும் விரிவாக்கமாக கருதப்படுகிறது" என்று அது குறிப்பிட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cd72dxe9d2eo
-
யாழில் பெண் நாய்களை பிடித்து கொடுப்பவர்களுக்கு சன்மானம் - பிரதேச சபை அறிவிப்பு!
எங்கட வீட்டு பெண் நாயைப் பிடித்தால் தகுந்த சன்மானம் தருவோம் அண்ணை! இலவச விசர்நாய்த் தடுப்பூசி போட அம்பிடுதில்லை(தண்டப் பணம் 25000 ரூபாவாம்), மயக்க ஊசி போட்டு கர்ப்பத்தடை செய்திருக்கிறார்கள் யாரோ புண்ணியவான்.
-
மட்டுநகரில் வெள்ளைக்கொடிகள்..!சத்துருக்கொண்டான் இனப்படுகொலை 35ஆவது ஆண்டு நினைவு!
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 ஆண்டு நினைவேந்தல் 10 Sep, 2025 | 11:38 AM மட்டக்களப்பு சத்துருக்கொண்டானன் இனப்படுகொலையின் 35வது ஆண்டு நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாட்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் செவ்வாய்க்கிழமை (09) மாலை சுடர் ஏற்றி மலர்தூவி இரண்டுநிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். கடந்த 1990 ம் ஆண்டு செட்டெம்பர் 9 ம் திகதி சத்துருக்கொண்டான், பிள்ளையாரடி, பனிச்சையடி போன்ற பிரதேசங்களை இராணுவத்தினர் மற்றும் ஊர்காவல்படையினர் சுற்றிவளைத்து அங்கிருந்த குழந்தைகள் பெண்கள் உட்பட 186 பேரை போயிஸ் ரவுண் இராணுவமுகாம் பகுதிக்கு அழைத்து சென்று அவர்களை வெட்டியும் துப்பாக்கியால் சட்டும் படுகொலை செய்து ரயர்கள் போட்டு எரித்தனர். இவ்வாறு படுகொலை செய்யப்பட்வர்களின் நினைவேந்தல் நினைவு தூபியில் இடம்பெற்றது அதில் மட்டு மாநகரசபை முதல்வர் சிவம்பாக்கியநாதன், பிரதி முதல்வர் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன், முன்னாள் மாநகரசபை முதல்வர் ரி.சரவணபவன், மற்றும் மாநகரசபை உறுப்பினர்கள் படுகொல செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் பொதுமக்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர். இதனை தொடர்ந்து 4 கிராமங்களை சேர்ந்த 4 பேர் ஒன்றிணைந்து பொது சுடர் ஏற்றியதையடுத்து அங்கிருந்த அனைவரம் சுடர் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட வர்களின் ஆத்மசாந்திவேண்டி மலர்தூவி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்திய பினனர் படுகொலை செய்யப்பட்ட இராணுவ முகாம் அமைந்திருந்த பகுதியை அகழ்வு பணி முன்னெடுக்குமாறும் சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என ஊடகங்கள் ஊடாக கோரிக்கை விடுத்தனர். https://www.virakesari.lk/article/224706
-
'டி.எஸ்.பி கைது' - காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதியின் உத்தரவு சர்ச்சையானது ஏன்?
UGC டிஎஸ்பி சங்கர் கணேஷ் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 10 செப்டெம்பர் 2025, 13:17 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷை கைது செய்வதற்கு மாவட்ட நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை, செவ்வாய்க்கிழமைன்று (செப்டெம்பர் 9) சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மாவட்ட நீதிபதிக்கும் காவலர் ஒருவருக்கும் இடையேயான தனிப்பட்ட தகராறு காரணமாக, டி.எஸ்.பியை கைது செய்ய நீதிபதி உத்தரவிட்டதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட நீதிபதி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்குமாறு உயர் நீதிமன்ற பதிவாளருக்கு நீதிபதி என்.சதீஷ்குமார் உத்தரவிட்டுள்ளார். என்ன பிரச்னை? காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் தாலுகாவில் உள்ள பூசிவாக்கத்தில் பேக்கரி கடையை சிவக்குமார் என்பவர் நடத்தி வருகிறார். இவரது கடைக்கு அதே பகுதியைச் சேர்ந்த முருகன் என்பவர் கடந்த ஜூலை 25 ஆம் தேதி வந்துள்ளார். அப்போது பேக்கரியில் வாங்கிச் சென்ற பொருள் தொடர்பாக சிவக்குமாரிடம், முருகன் தரப்பினர் வாக்குவாதம் செய்துள்ளனர். இந்தநிலையில், சிவக்குமாரின் மருமகனும் காவலருமான லோகேஸ்வரன் ரவி உள்பட நான்கு பேர், தன் கணவரைத் தாக்கியதாக வாலாஜாபாத் காவல்நிலையத்தில் முருகனின் மனைவி பார்வதி புகார் மனுவை அளித்தார். அதேபோல், முருகன் மீது சிவக்குமார் புகார் அளித்தார். இரண்டு மனுவையும் ஏற்றதாக சி.எஸ்.ஆர் (Community Service Register) மட்டும் போலீஸார் வழங்கியுள்ளனர். பிறகு இரு தரப்பும் சமாதானமாக செல்வதாக முடிவெடுத்ததால் சி.எஸ்.ஆர் மனு முடித்து வைக்கப்பட்டதாக, செப்டெம்பர் 9 அன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நடந்த வாதத்தில் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதுதொடர்பாக செப்டெம்பர் 4 அன்று காஞ்சிபுரம் மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் தாமாக முன்வந்து விசாரணையைத் தொடங்கினார். 'முருகன் தரப்பில் அளிக்கப்பட்ட புகார் மனுவின் மீது எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நான்கு பேரையும் ஏன் கைது செய்யவில்லை?' எனக் கேள்வி எழுப்பினார். டி.எஸ்.பி கைதானபோது என்ன நடந்தது? UGC கடந்த 8 ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது காஞ்சிபுரம் காவல் துணைக் கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் ஆஜரானார். அப்போது, காவலர் லோகேஸ்வரன் மீது நடவடிக்கை எடுக்காததைக் குறிப்பிட்ட நீதிபதி, டி.எஸ்.பி சங்கர் கணேஷை 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் அடைப்பதற்கு உத்தரவிட்டார். நீதிமன்றத்தின் உத்தரவை ஏற்று டி.எஸ்.பியை கைது செய்வதற்கு காவலர்கள் முன்வராததால், தனது காரிலேயே நீதிமன்ற வளாகத்தில் உள்ள கிளைச் சிறைக்கு அழைத்துச் செல்லுமாறு போலீஸாருக்கு நீதிபதி ப.உ.செம்மல் அறிவுறுத்தினார். இதையடுத்து, நீதிபதி காரிலேயே கிளைச் சிறைக்கு சங்கர் கணேஷ் அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது அங்கிருந்த காவல் வாகனத்தில் அவர் ஏறிய சில நொடிகளில் வாகனம் விரைந்து சென்றதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு நிலவியது. சுமார் 10 நிமிட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கிளைச் சிறையில் டி.எஸ்.பி சங்கர் கணேஷ் ஆஜரானார். அவரைக் கிளைச் சிறையில் காவலர்கள் அடைத்தனர். டி.எஸ்.பி கைது தொடர்பாக ஊடகங்களிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் சண்முகம், "முருகன் தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் நடவடிக்கை எடுத்துள்ளோம். இந்த வழக்கில் தனிப்பட்ட வெறுப்பு உள்ளது. டி.எஸ்.பியை கைது செய்தது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் தீர்வைப் பெறுவோம்" எனக் கூறினார். 'நீதிபதியுடன் தனிப்பட்ட தகராறு' மாவட்ட நீதிபதி ப.உ.செம்மலுக்கும் அவரது தனிப் பாதுகாப்பு (PSO) அதிகாரியாக பணிபுரிந்த காவலர் லோகேஸ்வரனுக்கும் இடையிலான தனிப்பட்ட தகராறு காரணமாகவே அவர் பேக்கரி வழக்கை தாமாக முன்வந்து விசாரித்ததாக சென்னை உயர் நீதிமன்றத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, டி.எஸ்.பி சங்கர் கணேஷை நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு ப.உ.செம்மல் உத்தரவிட்டதாகவும் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. வழக்கின் விசாரணையில் கூடுதல் அரசு வழக்கறிஞர் (APP) கே.எம்.டி முகிலன் வாதிடும்போது, "தனக்கு எதிரான சில அநாமதேய புகார்களை காவலர் லோகேஸ்வரன் அனுப்பி வருவதாக மாவட்ட நீதிபதி சந்தேகப்பட்டுள்ளார். காவலரின் மாமனாருக்கும் வாடிக்கையாளருக்கும் இடையே ஏற்பட்ட மோதலை நீதிபதி அறிந்து கொண்டார்" எனக் குறிப்பிட்டார். ''இந்த வழக்கில் வாலாஜாபாத் காவல்நிலைய ஆய்வாளரை மாவட்ட நீதிமன்றத்துக்கு வரவழைத்த ப.உ.செம்மல், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்யுமாறு வாய்மொழியாக கூறியுள்ளார்'' அதன்பேரில், எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞர் கே.எம்.டி முகிலன் தெரிவித்தார். 'நீதிமன்றத்தில் அமர வைக்கப்பட்ட டி.எஸ்.பி' செப்டெம்பர் 4 அன்று, பாதிக்கப்பட்ட நபரை குற்றம் சுமத்தப்பட்டுள்ள நபர்கள் அச்சுறுத்துவதற்கு வாய்ப்புள்ளதாகக் கூறி அவர்களை காஞ்சிபுரம் மாவட்டத்தை விட்டு விலகி இருக்குமாறு மாவட்ட நீதிபதி ப.உ.செம்மல் உத்தரவிட்டார். "எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 10ன்கீழ் வெளியேற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. வழக்கின் சூழ்நிலைகள் மற்றும் உண்மைகளுக்கு இந்தப் பிரிவு பொருந்தாது" என சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு கூடுதல் வழக்கறிஞர் கே.எம்.டி.முகிலன் தெரிவித்தார். செப்டெம்பர் 8 அன்று காஞ்சிபுரம் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்த சம்பவத்தை மேற்கோள் காட்டிய அரசு கூடுதல் வழக்கறிஞர், "அப்போது, குற்றம் சுமத்தப்பட்டவர்களை ஏன் கைது செய்யவில்லை என டி.எஸ்.பியிடம் கேள்வி எழுப்பிய நீதிபதி ப.உ.செம்மல், காலை முதல் மாலை வரை நீதிமன்ற வளாகத்தில் அவரை அமரவைத்தார்" எனக் கூறினார். இந்த வழக்கில் எந்த விசாரணையையும் நடத்தாமல், எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4(1)ன்படி (கடமையை புறக்கணித்ததற்கான தண்டனை) கைது செய்வதற்கான உத்தரவை பிறப்பித்ததாக, சென்னை உயர் நீதிமன்றத்தின் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களை மேற்பார்வையிட்ட உயர் நீதிமன்ற நீதிபதி என்.சதீஷ்குமார், டி.எஸ்.பி சங்கர் கணேஷுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட கைது உத்தரவை ரத்து செய்தார். மாவட்ட நீதிபதி மீது சுமத்தப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகள் குறித்தும் முழுமையான விசாரணையை நடத்தி வரும் 23 ஆம் தேதிக்குள் அறிக்கையைத் தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றப் பதிவாளருக்கு (விஜிலென்ஸ்) உத்தரவிட்டார். வழக்கு தொடர்பாக, காஞ்சிபுரம் எஸ்.பி சண்முகத்திடம் பிபிசி தமிழ் பேசியது. "தற்போது அலுவல்ரீதியான கூட்டத்தில் இருப்பதால் பிறகு பேசுகிறேன்" என்று மட்டும் அவர் பதில் அளித்தார். 'வாய்ப்பளிக்காமல் நடவடிக்கை' - முன்னாள் நீதிபதி அரி பரந்தாமன் மாவட்ட நீதிபதியின் உத்தரவு தொடர்பாக, சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமனிடம் பிபிசி தமிழ் பேசியது. " எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் பிரிவு 4 மற்றும் 10 ஆகிய பிரிவுகளின்படி நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக, குற்றம் சுமத்தப்பட்ட நபர்களுக்கு பதில் அளிப்பதற்கு வாய்ப்பளிக்க வேண்டும். இந்த வழக்கில் அப்படிப்பட்ட நடைமுறைகள் எதுவும் பின்பற்றப்படவில்லை" எனக் கூறினார். "எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4ன்படி, புகார் வந்தால் அதன்பேரில் உடனே நடவடிக்கை எடுப்பது சரியானதல்ல. கடமையைச் செய்வதில் இருந்து விலகியிருந்தால் துறைரீதியான விசாரணை நடத்தி அதன் அறிக்கையை எஸ்.சி, எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்துக்கு அனுப்ப வேண்டும்" என்கிறார், ஹரி பரந்தாமன். Hariparandaman எஸ்.சி, எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டப்பிரிவு 4ன்படி, புகார் வந்தால் அதன்பேரில் உடனே நடவடிக்கை எடுப்பது சரியானதல்ல என்கிறார், ஹரிபரந்தாமன் 'நீதிபதியின் உத்தரவு, உச்சகட்டமானது' காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து குற்றம் சுமத்தப்பட்ட நபர்கள் வெளியேற உத்தரவு (Externment order) பிறப்பித்ததை சுட்டிக் காட்டிய அரி பரந்தாமன், "சாதி ஆணவப் படுகொலைகளின்போது, குற்றம் சுமத்தப்படும் நபர்களை வெளியேற்றுமாறு சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கின்றனர். அப்போதுகூட, இப்படிப்பட்ட உத்தரவுகள் பிறப்பிக்கப்படுவதில்லை" என்கிறார். "காவல்துறை தரப்பில், 'தொடர்புடைய நபர் ஊரில் இருந்தால் கலவரம் நடக்கும்' என அறிக்கை கொடுக்கும்போது தான் வெளியேற்ற உத்தரவை பிறப்பிக்க முடியும். பேக்கரி தகராறு என்பது தனிப்பட்ட விவகாரம். அதற்கு இப்படியொரு உத்தரவு என்பது உச்சகட்டமானது" எனவும் அவர் குறிப்பிட்டார். "இதன் விளைவுகளை மாவட்ட நீதிபதி எதிர்கொள்ள வேண்டியது வரலாம்" எனக் கூறும் அரி பரந்தாமன், "மாவட்ட நீதிபதி மீது உயர் நீதிமன்ற நீதிபதி விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிப்பார். அதில் முழு விவரங்களும் தெரியவரும்" எனவும் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c98dy3q2vyjo
-
பிரித்தானியா, கனடா உள்ளிட்ட 6 நாடுகள் இணைந்து ஐ. நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பில் சமர்ப்பித்துள்ள புதிய பிரேரணை
Published By: Priyatharshan 10 Sep, 2025 | 08:34 AM பிரித்தானிய, கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், இலங்கை தொடர்பான ஒரு புதிய தீர்மான வரைவு (A/HRC/60/L.1) ஒன்றை சமர்ப்பித்துள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில், ஐக்கிய இராச்சியம், கனடா, மலாவி, மொண்டெனீக்ரோ மற்றும் வடக்கு மாசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து இலங்கை தொடர்பான ஒரு புதிய தீர்மான வரைபை சமர்ப்பித்துள்ளன. சமர்ப்பிக்கப்ட்டுள்ள தீர்மான வரைபில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, இந்தத் தீர்மானம், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகிறது. 2024 செப்டம்பர், நவம்பர், 2025 மே மாதங்களில் நடைபெற்ற ஜனாதிபதி, பாராளுமன்ற மற்றும் உள்ளூராட்சித் தேர்தல்களைத் இந்த தீர்மானம் வரவேற்றுள்ளது. அத்துடன், ஊழல் மற்றும் பொருளாதார முறைகேடுகளுக்குப் பொறுப்புக்கூற அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளையும் அது அங்கீகரித்துள்ளது. அனைத்துத் தரப்பினராலும், குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உட்பட, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு முழுமையான பொறுப்புக்கூறல் அவசியம் என்று தீர்மானம் வலியுறுத்துகிறது. பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்குவதற்கான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைத் தீர்மானம் கவனத்தில் கொள்கிறது. எனினும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இச்சட்டத்தின் கீழ் தொடர்ந்து தடுத்து வைக்கப்படுவதை அது கவலையுடன் சுட்டிக்காட்டுகிறது. எனவே, இச்சட்டத்தைப் பயன்படுத்துவதை உடனடியாக நிறுத்தி, அதனை நீக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்துகிறது. இலங்கையில் காணாமல்போனோர் தொடர்பான பல வழக்கு விசாரணைகள் தீர்க்கப்படாமல் இருப்பது குறித்து தீர்மானத்தில் கவலை வெளியிடப்பட்டுள்ளது. அத்துடன், கண்டுபிடிக்கப்பட்ட மனித புதைகுழிகளை சர்வதேச தரங்களுக்கு இணங்க அகழ்வதற்குத் தேவையான நிதி, மனிதவளம் மற்றும் தொழில்நுட்ப வளங்களைப் பெறுவதற்கு சர்வதேச உதவியை நாட வேண்டும் என்றும் இலங்கை அரசை இந்த தீர்மானம் வலியுறுத்துகிறது. பாலின அடிப்படையிலான வன்முறையை எதிர்த்துப் போராடுவதன் மூலம் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும் தீர்மானம் வலியுறுத்துகிறது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான முக்கிய வழக்குகளில் மீண்டும் விசாரணைகளைத் தொடங்குவதையும், சுதந்திரமான சட்டவாளர் அலுவலகத்தை நிறுவுவதற்கும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளைத் தீர்மானம் வரவேற்கிறது. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தின் செயல்பாடுகளை மேலும் நீட்டிக்கவும், இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் குறித்து வாய்மொழி மற்றும் எழுத்துபூர்வ அறிக்கைகளை எதிர்கால அமர்வுகளில் சமர்ப்பிக்கவும் இந்தத் தீர்மானம் கோருகிறது. https://www.virakesari.lk/article/224686
-
இலங்கை மின்சார கட்டண உயர்வு பரிந்துரை
10 Sep, 2025 | 09:54 AM இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்தபடி, இலங்கை மின்சார சபை (CEB) 2025 இறுதி காலாண்டுக்காக மின்சார கட்டணத்தில் 6.8% உயர்வு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, முன்மொழியப்பட்ட திருத்தங்கள் குறித்து பொதுமக்களின் கருத்தைப் பெற இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. பொதுமக்கள் தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் எழுத்துப்பூர்வமாக ஆணையத்திடம் சமர்ப்பிக்கலாம் என இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுதெரிவித்துள்ளது. வாய்மொழி கருத்துக்களைப் பெற, இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஒன்பது மாகாணங்களையும் உள்ளடக்கிய ஒன்பது பொது ஆலோசனைகளை நடத்தும். வாய்மொழி சமர்ப்பிப்புகளுக்கான இந்தப் பொது ஆலோசனை அமர்வுகள் செப்டம்பர் 18, 2025 அன்று ஆரம்பமாகவுள்ளது. 2025 ஆம் ஆண்டின் மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் குறித்த பொது ஆலோசனை தொடர்பான எழுத்துப்பூர்வ கருத்துகள் மற்றும் பரிந்துரைகளை ஒக்டோபர் 7, 2025 க்கு முன் பின்வரும் முறைகள் மூலம் சமர்ப்பிக்கலாம் என்று இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மேலும் தெரிவித்துள்ளது: மின்னஞ்சல்: info@pucsl.gov.lk வாட்சப் இலக்கம் : 076 427 1030 பேஸ்புக் : www.facebook.com/pucsl அஞ்சல்: மூன்றாவது மின்சார கட்டண திருத்தம் – 2025 குறித்த பொது ஆலோசனை இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு 6வது மாடி, இலங்கை வங்கி வர்த்தக கோபுரம், கொழும்பு 3. https://www.virakesari.lk/article/224692
-
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் செப்டெம்பர் 8 ஆம் திகதி ஆரம்பம்
ஐ.நா.வில் எமக்கு அழுத்தமில்லை : மனித உரிமைகள் குறித்த எமது நடவடிக்கைகளை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது - அமைச்சரவை பேச்சாளர் 09 Sep, 2025 | 09:43 PM (எம்.மனோசித்ரா) ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை கூட்டத் தொடரின் போது கடந்த அரசாங்கங்களுக்கு காணப்பட்ட அழுத்தம் எமது அரசாங்கத்துக்கு இல்லை. மனித உரிமைகள் குறித்த எமது நடவடிக்கைகளை சர்வதேசம் ஏற்றுக் கொண்டுள்ளது. அந்த வகையில் தேசிய பொறிமுறைக்குள் பாதிக்கப்பட்டோருக்கு நியாயத்தைப் பெற்றுக் கொடுப்போம் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (09) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மாகாணசபைத் தேர்தல் உரிய காலத்தில் இடம்பெறும். எனினும் அதற்கான காலம் தொடர்பில் தற்போது குறிப்பிட முடியாது. இது குறித்த சட்ட திருத்தங்கள் முன்னெடுக்கப்பட வேண்டியுள்ளது. கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே மாகாணசபைத் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பாகும். இதற்கு முன்னர் செப்டெம்பரில் ஜெனீவாவில் மனித உரிமைகள் கூட்டத்தொடர் ஆரம்பமானால் அரசாங்கங்கள் எவ்வாறு அழுத்தத்தில் இருந்தன என்பது அனைவருக்கும் தெரியும். ஆனால் எமது அரசாங்கத்துக்கு அவ்வாறு எந்த அழுத்தமும் இல்லை. கடந்த ஜூனில் நாட்டுக்கு விஜயம் செய்த ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகரின் அறிக்கை எமக்கு சார்பானதாகவே காணப்படுகிறது. இலங்கையில் மனித உரிமைகள், நல்லிணக்கம், ஜனநாயகம் தொடர்பில் சர்வதேசத்தின் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது. குறுகிய காலத்துக்குள் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கும், மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கம் என்ற ரீதியில் நடவடிக்கை எடுத்திருக்கின்றோம். எமது நீதிமன்ற கட்டமைப்பின் சுயாதீனத்தன்மை, நம்பிக்கை பல சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே தேசிய பொறிமுறைக்குள் மனித உரிமை மீறல்க்ள குறித்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்று நம்புகின்றோம். இது தொடர்பில் சர்வதேசத்தின் மதிப்பீடுகளையும் அங்கீகரிக்கின்றோம். எனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள விசாரணைகளில் அநாவசிய தலையீடுகளை செலுத்தி அவற்றை வீணடிக்க விரும்பவில்லை. அதேவேளை சிறிய அடிப்படைவாத, தீவிரவாத குழுக்கள் தலைதூக்குவதற்கும் இடமளிக்கப்பட மாட்டாது. பயங்கரவாத தடை சட்டத்தையும் இரத்து செய்து, புதிய சட்டத்தை நடைமுறைப்படுத்துவோம். நிகழ்நிலை காப்பு சட்ட திருத்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இவற்றை மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம் என்றார். https://www.virakesari.lk/article/224664
-
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.
அண்ணை, இது தடுப்பூசி அல்ல. நோய் வந்தவர்களுக்கு போட்டால் சுகம் வருதாம்.
-
இலங்கை, வங்கதேசம் வரிசையில் நேபாளமா? - இந்தியாவின் அண்டை நாடுகளில் என்ன நடக்கிறது?
நேபாளத்தில் சமூக ஊடகங்கள் தடை செய்யப்பட்டதற்கு எதிராக இளைஞர்களின் ஆர்ப்பாட்டங்கள். கட்டுரை தகவல் சந்தன் குமார் ஜஜ்வாரே பிபிசி செய்தியாளர் 9 மணி நேரங்களுக்கு முன்னர் நேபாளத் தலைநகர் காத்மாண்டுவில் சமூக ஊடகங்களுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் குறைந்தது 17 பேர் உயிரிழந்தனர். நாடு முழுவதும் இந்த எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. கடந்த வாரம் நேபாள அரசு 26 சமூக ஊடக தளங்களுக்குத் தடை விதித்தது. ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற பிரபலமான சமூக ஊடக மற்றும் மெசேஜிங் தளங்களும் இதில் அடங்கும். சமூக ஊடகங்களுக்குத் தடை விதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இளைஞர்கள் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தனர். நேபாளத்தில் திங்கள்கிழமை நடந்த போராட்டத்தின் காட்சிகள், கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தை நினைவூட்டின. இதற்கு முன்னர் 2022ஆம் ஆண்டில் இலங்கையிலும் மக்கள் அரசுக்கு எதிராக பெரிய போராட்டங்களை நடத்தினர். BBC/Madhuri Mahato பீர்கஞ்சில் போராட்டக்காரர்கள் டயர்களை எரித்துப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமீபத்திய ஆண்டுகளில், இந்தியாவின் அண்டை நாடுகளில் உள்ள இளைஞர்கள் போராட்டங்கள் மூலம் பல வெற்றிகளைப் பெற்றுள்ளனர். தெற்காசியப் புவிசார் அரசியல் நிபுணரும், தெற்காசியப் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியருமான தனஞ்சய் திரிபாதி, "இந்த தெற்காசியப் பகுதி இளைஞர்கள் நிறைந்த பகுதி, ஆனால் அரசுகளால் இந்த இளைஞர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியவில்லை. இந்த மூன்று நாடுகளின் போராட்டங்களிலும் இதுதான் பொதுவான ஒற்றுமை" என்கிறார். தனஞ்சய் திரிபாதியின் கூற்றுப்படி, நேபாளத்தில் 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களின் எண்ணிக்கை மிக அதிகம், ஆனால் இவர்களுக்கு வேலைவாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ளன. "நேபாளத்தில் மற்றொரு நெருக்கடி என்னவென்றால், முடியாட்சி முடிந்த பிறகு எந்த ஒரு அரசாங்கமும் ஐந்து ஆண்டுகள் முழுமையாகப் பதவியில் இல்லை. இதன் காரணமாக நாட்டில் அரசியல் ஸ்திரமின்மை நிலவுகிறது, மேலும் ஊழல் குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து எழுகின்றன. இப்போது, அரசு இளைஞர்களிடையே பிரபலமான செயலிகளையும் தடை செய்துவிட்டது," என்று அவர் கூறுகிறார். நேபாளத்தில் இருந்து பெருமளவிலான மக்கள் இந்தியா உட்படப் பல நாடுகளுக்கு வேலை தேடிச் செல்கின்றனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் இல்லாதது ஒருபுறம் இருக்க, சமீபத்திய தடைகளுக்குப் பிறகு அவர்களால் ஒருவருடன் ஒருவர் தொடர்புகொள்ளக்கூட முடியவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இளைஞர்களின் பங்கு நேபாளத்தில் நாடாளுமன்றத்திற்கு வெளியே போராட்டக்காரர்கள் மீது போலீசார் நீர் பீரங்கிகளைப் பயன்படுத்தினர். கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த போராட்டத்தில் இளைஞர்களின் பங்கு மிக முக்கியமானதாக இருந்தது. அதேசமயம், இலங்கையின் போராட்டத்தில் பொருளாதாரப் பிரச்னைகள் ஆதிக்கம் செலுத்தின. டெல்லியில் உள்ள அப்சர்வர் ரிசர்ச் ஃபவுண்டேஷன் அமைப்பின் ஆய்வு மற்றும் வெளியுறவுக் கொள்கைப் பிரிவின் துணைத் தலைவர் பேராசிரியர் ஹர்ஷ் பந்த் கூறுகையில், "இலங்கை, வங்கதேசம் மற்றும் நேபாளம் ஆகிய மூன்று நாடுகளின் போராட்டங்களுக்கான காரணங்கள் வேறுபட்டிருந்தாலும், மக்கள் எதிர்பார்ப்புகளுக்கும் அரசின் செயல்பாடுகளுக்கும் இடையே உள்ள இடைவெளிதான் இந்த போராட்டங்களுக்குப் பொதுவான காரணம்." அவரது கூற்றுப்படி, "இந்த மூன்று போராட்டங்களிலும் 'இளைஞர்கள்' தான் மிகப் பெரிய காரணி. ஆட்சி மாற்றத்தின் மிகப் பெரிய தாக்கம் இளைஞர்கள் மீதே விழுகிறது. இந்த இளைஞர் பிரிவினர்தான் அரசின் மீது கோபமாக உள்ளனர்." அரசு இளைஞர்களின் கோபத்தைத் தணிக்க முயற்சி செய்யாவிட்டால், இந்த போராட்டம் இன்னும் பெரிதாக வளரக்கூடும் என்று ஹர்ஷ் பந்த் நம்புகிறார். இருப்பினும், நேபாளப் போராட்டத்தில் தலைவரோ அல்லது அமைப்போ இல்லை என்றும் அவர் கூறுகிறார். தனஞ்சய் திரிபாதியும் இந்த கருத்தை ஒப்புக்கொள்வதாகத் தெரிகிறது. "அரசு புரிதலுடனும் நெகிழ்வுத்தன்மையுடனும் நடந்து கொண்டால், இந்தப் போராட்டத்தை அமைதிப்படுத்த முடியும். இதில் இறந்தவர்களின் மரணம் குறித்து விசாரிக்க ஒரு உயர்மட்டக் குழு அமைக்கப்பட வேண்டும். அரசு இளைஞர்களிடம் உணர்வுபூர்வமாக நடந்து கொள்ள வேண்டும், அது தற்போது காணப்படவில்லை," என்று அவர் கூறுகிறார். இதற்கு முன்னதாக, வங்கதேசத்தில் அரசு போராட்டக்காரர்களை கடுமையாகக் கையாள முயற்சித்தது, ஆனால் அது இளைஞர்களின் கோபத்தை இன்னும் அதிகரித்தது. வங்கதேச மாணவர் போராட்டம் Getty Images வங்கதேசத்தில் பிரதமரின் இல்லத்தில் இருந்த போராட்டக்காரர்கள் (கோப்புப் படம்) கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மாணவர் போராட்டம், வன்முறை மற்றும் நூற்றுக்கணக்கானோர் இறப்பு ஆகியவற்றிற்கு மத்தியில், வங்கதேசத்தின் அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா தனது பதவியையும் நாட்டையும் விட்டு வெளியேற வேண்டியிருந்தது. அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய இந்த மாணவர் போராட்டம், நாடு தழுவிய போராட்டமாக மாறியது. இறுதியில் ஷேக் ஹசீனாவின் அரசு கவிழ்வதற்கு காரணமாக இருந்தது. இதன் மூலம் அவரது 15 ஆண்டுகால தொடர் ஆட்சி மற்றும் ஐந்தாவது பதவிக்காலம் திடீரென முடிவுக்கு வந்தது. கடந்த ஆண்டு ஜூலை 1ஆம் தேதி தொடங்கிய மாணவர் போராட்டத்திற்குப் பிறகு, ஜூலை 21ஆம் தேதி வங்கதேச உச்ச நீதிமன்றம் அரசு வேலைகளில் இடஒதுக்கீட்டை கிட்டத்தட்ட ரத்து செய்தது. ஆனால், இந்தத் தீர்ப்பு வந்தபிறகும் மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் கோபம் தீரவில்லை. ஷேக் ஹசீனாவின் ராஜினாமா கோரிக்கை மேலும் வலுப்பெற்றது. பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் தொடங்கிய போராட்டம், நாட்டின் மூலை முடுக்குகளை அடைந்தது. எதிர்க்கட்சிகளும் வீதியில் இறங்கின. மாணவர் அமைப்புகள் ஆகஸ்ட் 4 முதல் முழு ஒத்துழையாமைப் போராட்டத்தைத் தொடங்குவதாக அறிவித்திருந்தன. அரசு இந்தப் போராட்டங்களை கடுமையாக ஒடுக்க முயன்றது. துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது, ராணுவம் வீதியில் இறங்கியது, ஆனால் மக்கள் பின்வாங்கவில்லை. ஆகஸ்ட் 4ஆம் தேதி நடந்த வன்முறையில் குறைந்தது 94 பேர் கொல்லப்பட்டனர். மாணவர் போராட்டம் தொடங்கியதில் இருந்து உயிரிழப்புகள் எண்ணிக்கை 300ஐத் தாண்டியது. ஆகஸ்ட் 5ஆம் தேதி ஷேக் ஹசீனா தனது பதவியை ராஜினாமா செய்தார். 2022ஆம் ஆண்டில் இலங்கையில் நடந்த போராட்டம் EPA/CHAMILA KARUNARATHNE 2022ஆம் ஆண்டில் போராட்டக்காரர்களைக் கலைக்க கண்ணீர்ப்புகை குண்டுகளை வீசும் இலங்கை போலீஸ் (கோப்புப் படம்). 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையில் பணவீக்கம் வேகமாக அதிகரித்தது. அந்நிய செலாவணி கையிருப்பு காலியானது. நாட்டில் எரிபொருள், உணவுப் பொருட்கள் மற்றும் மருந்துகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு ஏற்பட்ட இந்த மிகப் பெரிய பொருளாதார நெருக்கடியில், மக்கள் ஒரு நாளைக்கு 13 மணி நேரம் வரை மின்வெட்டை எதிர்கொண்டனர். இந்த நிலைக்கு அதிபர் கோட்டாபய ராஜபக்சேவையும் அவரது குடும்பத்தினரையும் பலர் குற்றம் சாட்டினர். அவரது மோசமான கொள்கைகள்தான் அந்நிய செலாவணி கையிருப்பு காலியானதற்குக் காரணம் என்று நம்பப்பட்டது. ராஜபக்சே குடும்பத்தினர் மீது ஊழல் மற்றும் பொதுமக்களின் பணத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இருப்பினும், இந்த குற்றச்சாட்டுகளை அவர்கள் மறுத்தனர். கோவிட் பெருந்தொற்றுக்குப் பிறகு சுற்றுலா வருவாய் குறைந்தது மற்றும் யுக்ரேன் போரால் எண்ணெய் விலைகள் உயர்ந்ததால் இந்த நெருக்கடி ஏற்பட்டதாக அவர்கள் வாதிட்டனர். அப்போது, போராட்டங்கள் இரவும் பகலும் தொடர்ந்து நடந்தன. மாலையில் கூட்டம் அதிகரித்தது. பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் முதல் பாதிரியார்கள் மற்றும் புத்த பிக்குகள் வரை அனைவரும் இந்தப் போராட்டங்களில் பங்கேற்றனர். நாடு முழுவதும் "கோட்டா கோ ஹோம்" (கோட்டா வீட்டுக்கு போ) என்ற கோஷம் எதிரொலித்தது. இந்தப் போராட்டங்கள் சிங்களர், தமிழர் மற்றும் முஸ்லிம்கள் ஆகிய மூன்று முக்கிய சமூகங்களை ஒன்றிணைத்தன. சில வாரங்களுக்குப் பிறகு, போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகைக்குள் நுழைந்தபோது, இந்தப் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்தது. சில நாட்களுக்குப் பிறகு, கோட்டாபய ராஜபக்சே நாட்டை விட்டு வெளியேறி, சிங்கப்பூரிலிருந்து தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார். இந்த நிகழ்வு "அரகலய" அல்லது மக்கள் போராட்டத்தின் வெற்றியாகப் பார்க்கப்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cnvr3rl84n1o
-
தமிழர்களின் நீதி மற்றும் பொறுப்புக்கூறல் கோரிக்கையை ஆதரிக்கிறோம் - அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள் தெரிவிப்பு
09 Sep, 2025 | 09:23 PM (நா.தனுஜா) செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தமது கரிசனையை வெளிப்படுத்தியிருக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர்கள், தமிழர்களின் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வலியுறுத்தலை தாம் ஆதரிப்பதாகத் தெரிவித்துள்ளனர். செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவொன்றைச் செய்திருக்கும் அமெரிக்க காங்கிரஸ் உறுப்பினர் ராஜா கிருஷ்ணமூர்த்தி, இலங்கையில் எலும்புக்கூடுகள், சிறுவர்களின் உடைகள் மற்றும் குழந்தைகளின் பால் போத்தல் உள்ளிட்ட பொருட்களுடன் அடையாளம் காணப்பட்ட மனிதப்புதைகுழியானது யுத்தகாலத்தில் இடம்பெற்ற அட்டூழியங்களை நினைவுறுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அத்தோடு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கான நீதி நிலைநாட்டப்படுவதுடன் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்கள் சுயாதீன விசாரணையையும், உண்மையான பொறுப்புக்கூறலையும் கோருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதேவேளை இத்தகைய மீறல்களால் பாதிக்கப்பட்ட தமிழ் சமூகத்துக்கு வட கரோலினா ஒரு வீடாக இருப்பதனையிட்டுப் பெருமிதமடைவதாகவும், இந்த மனிதப்புதைகுழி அகழ்வை அடுத்து அதுபற்றித் தன்னைத் தொடர்புகொண்டு பேசிய தனது தொகுதி மக்களை நினைத்துப்பார்ப்பதாகவும் காங்கிரஸ் உறுப்பினரான டெபோரா ரோஸ் அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதுமாத்திரமன்றி தமிழர்களின் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கான வலியுறுத்தலை தான் ஆதரிப்பதாகவும் அவர் அப்பதிவில் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/224676
-
நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும் - அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
09 Sep, 2025 | 04:03 PM (எம்.மனோசித்ரா) நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை நீக்கப்படும். அரசியலமைப்பு திருத்தத்தில் அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும். பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட்ட பின்னர் இதற்குரிய வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும். முன்னாள் ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்டமூலம் மஹிந்த ராஜபக்ஷவை இலக்காகக் கொண்டு முன்வைக்கப்பட்டதல்ல. அது ஓய்வு பெற்ற அனைத்து ஜனாதிபதிகளுக்குப் பொதுவானதாகும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (09) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பில் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது முன்வைத்த கொள்கை பிரகடனத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளோம். அரசியலமைப்பு திருத்தத்தின் போது நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை தொடர்பில் தீர்மானம் எடுப்பதற்கு மக்கள் எமக்கு ஆணையை வழங்கியிருக்கின்றனர். எனினும் அரசியலமைப்பு திருத்தத்துக்கான நடவடிக்கைகளை நாம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. அதற்கு சற்று காலம் எடுத்துக் கொள்வதில் பிரச்சினையில்லை என்று நினைக்கின்றோம். ஜனாதிபதி பதவியேற்று ஒரு வருட காலம் மாத்திரமே கடந்துள்ளது. அரசாங்கம் பதவியேற்று பத்து மாதங்களே ஆகின்றன. எனினும் நாட்டின் அபிவிருத்திக்கான பல்வேறு அமைச்சரவை பத்திரங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கின்றன. அந்த வகையில் முதலில் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதே எமது இலக்காகும். பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி மக்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். இவற்றுக்கிடையில் ஊழல், மோசடிகளுக்கெதிரான சுற்றி வளைப்புக்களிலும் அரசாங்கம் ஈடுபட்டு வருகிறது. சர்வதேசத்தின் நம்பிக்கையையும் பெற்று வருகின்றோம். இவற்றுக்கு மத்தியில் அரசியலமைப்பு திருத்தத்துக்கான நடவடிக்கைகளையும் விரைவில் ஆரம்பிப்போம். அதன் அடிப்படையிலேயே தற்போது முன்னாள் நிறைவேற்றதிகார ஜனாதிபதிகளுக்கான சிறப்புரிமைகளை நீக்குவதற்கான சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புரிமைகளால் திறைசேரிக்கு ஏற்படும் சுமை, அதனால் அதிகரிக்கும் மறைமுக வரி என்பவற்றால் தான் மக்கள் நிறைவேற்றதிகார ஜனாதிபதி முறைமை ஒழிக்கப்பட வேண்டும் என்று கோருகின்றனர். எனவே தான் அதனை நீக்குவதற்கான சட்ட மூலத்தை சமர்ப்பித்துள்ளோம். இதற்கெதிராக ஒரு தரப்பினர் நீதிமன்றம் சென்ற போதிலும், அதனை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பாராளுமன்றத்தில் சகல உறுப்பினர்களும் இதற்கு ஆதரவான வாக்களிப்பர் என்று நம்புகின்றோம். ஓய்வு பெற்ற ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளுக்காக திறைசேரி பெரும் சுமையை சுமக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் எண்ண வேண்டிய தேவை அவற்றுக்கு இல்லை என்று நினைக்கின்றோம். வாக்களிப்பின் போது இது தொடர்பில் எதிர்க்கட்சிகளின் நிலைப்பாடுகளை அறிந்து கொள்ள முடியும். இது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை மாத்திரம் இலக்கு வைத்து அறிமுகப்படுத்தப்பட்ட சட்ட மூலமல்ல. சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் சகல முன்னாள் ஜனாதிபதிகளும் அதற்கமைய செயற்படுவர் என எதிர்பார்க்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/224637
-
ஆஸ்திரேலியாவில் 'அரை முழம் மல்லிகைப் பூவுக்கு 1980 டாலர்'; அபராதம்
'அரை முழம் மல்லிகைப் பூவுக்கு ரூ. 1 லட்சம்'; விமான நிலையத்தில் நடிகை நவ்யா நாயருக்கு அபராதம் Navya nair/Facebook நடிகை நவ்யா நாயர் கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் மல்லிகைப் பூவை கொண்டு சென்றதற்காக கேரள நடிகை நவ்யா நாயருக்கு அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் 1.14 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளனர். அபராதத்தைச் செலுத்துவதற்கு 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நடிகை நவ்யா நாயர் தெரிவித்துள்ளார். விமானத்தில் மல்லிகைப் பூவை அணிந்து செல்வதில் என்ன சிக்கல்? ஆஸ்திரேலிய நாட்டின் சட்டம் என்ன சொல்கிறது? ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் வசிக்கும் மலையாளிகள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 6 ஆம் தேதி ஓணம் பண்டிகையைக் கொண்டாட திட்டமிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேரள நடிகை நவ்யா நாயர் பங்கேற்றார். முன்னதாக, கொச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து மெல்போர்ன் சென்றதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். அதில், 'நான் மெல்போர்ன் வருவதற்கு முன்பு என் தந்தை மல்லிகைப் பூவை வாங்கித் தந்தார். அதை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொடுத்தார்' எனக் கூறியுள்ளார். '15 செ.மீ மல்லிகைப் பூ, 1.14 லட்ச ரூபாய்' Navya nair/Facebook ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் வசிக்கும் மலையாளிகள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 6 ஆம் தேதி ஓணம் பண்டிகையைக் கொண்டாட திட்டமிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேரள நடிகை நவ்யா நாயர் பங்கேற்றார். கொச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் நேரத்தில் மல்லிகைப் பூ வாடிவிடும் என்பதால் ஒன்றை தலையிலும் இரண்டாவது பூவை கைப்பையில் உள்ள கேரி பேக்கிலும் வைக்குமாறு தனது தந்தை கூறியதாக, நவ்யா நாயர் தெரிவித்துள்ளார். "15 சென்டிமீட்டர் அளவுள்ள மல்லிகைப் பூவை கைப்பையில் கொண்டு வந்ததற்காக ஆஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகள், 1980 ஆஸ்திரேலிய டாலரை (இந்திய ரூபாயின் மதிப்பில் 1.14 லட்ச ரூபாய்) அபராதமாக செலுத்துமாறு கூறினர்" என நவ்யா நாயர் தெரிவித்துள்ளார். "நான் அறியாமையில் செய்திருந்தாலும் அதை ஒரு காரணமாக முன்வைக்க முடியாது. பூ கொண்டு வந்தது சட்டத்துக்கு எதிரானதாக உள்ளது. இதை வேண்டும் என்றே செய்யவில்லை. இதற்கான அபராதத்தை 28 நாட்களுக்குள் செலுத்துமாறு அதிகாரிகள் கூறினர்" எனவும் நவ்யா நாயர் கூறியுள்ளார். விக்டோரியா மாகாணத்தில் நடந்த ஓணம் திருவிழாவில் பேசியபோது இதனைக் குறிப்பிட்ட நவ்யா நாயர், "ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான மல்லிகைப் பூவை தலையில் அணிந்திருக்கிறேன்" என நகைச்சுவையாக குறிப்பிட்டார். பூ, பழங்களுக்கு தடை ஏன்? Navya nair/Facebook "15 சென்டிமீட்டர் அளவுள்ள மல்லிகைப் பூவை கைப்பையில் கொண்டு வந்ததற்காக ஆஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகள், 1980 ஆஸ்திரேலிய டாலரை (இந்திய ரூபாயின் மதிப்பில் 1.14 லட்ச ரூபாய்) அபராதமாக செலுத்துமாறு கூறினர்" என நவ்யா நாயர் தெரிவித்துள்ளார். "ஆஸ்திரேலியாவுக்கென்று தனித்தன்மை வாய்ந்த சூழலியல் உள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த பூ, பழம், விதைகள் உள்ளே நுழைந்துவிட்டால் தங்கள் நாட்டின் சூழல் மாறிவிடும் எனக் கருதுகின்றனர்" எனக் கூறுகிறார், ஆஸ்திரேலியாவாழ் இந்தியரான ஜெயச்சந்திரன் தங்கவேலு. இவர் கடந்த 22 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வர்த்தகம் செய்து வருகிறார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "விமானம் மூலம் பழங்கள் (Fresh Fruits) மற்றும் காய்கறிகளைக் கொண்டு வர அனுமதியில்லை. பூ கொண்டு வருவதை அனுமதிப்பதில்லை. நெய்யால் தயாரிக்கப்பட்ட பொருள் எதையும் கொண்டு வரக் கூடாது என்பது விதியாக உள்ளது" எனவும் குறிப்பிட்டார். "ஆஸ்திரேலியா வருவதற்கு முன்பு சிங்கப்பூர் விமான நிலையத்தில் உணவு வாங்கி சாப்பிட்டாலும் மீதமான உணவை விமானத்தில் கொண்டு வரலாம். ஆனால், குடியுரிமை அதிகாரிகளின் சோதனைக்குச் செல்வதற்கு முன்பாக அதனை குப்பைத் தொட்டியில் எறிந்துவிட வேண்டும்" எனக் கூறுகிறார், ஜெயச்சந்திரன் தங்கவேலு. ஆஸ்திரேலிய நாட்டின் சுங்கத்துறை அதிகாரிகளை எல்லைப் படை அதிகாரிகள் (Australian Border Force) எனக் கூறுகின்றனர். இவர்கள், ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் பயணிகளின் உடைமைகைளை ஆய்வு செய்கின்றனர். Jayachandran Thangavelu Handout ஆஸ்திரேலியாவாழ் இந்தியரான ஜெயச்சந்திரன் தங்கவேலு. ஆஸ்திரேலிய நாட்டின் சட்டம் சொல்வது என்ன? தங்கள் நாட்டுக்குள் வரும் வெளிநாட்டு பயணிகள், தண்டனைகளை தவிர்ப்பதற்காக கொண்டு வரக் கூடிய மற்றும் கொண்டு வரக் கூடாத பொருட்கள் குறித்த பட்டியலை (studyaustralia.gov.au) அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, * அனைத்து உணவு, தாவரப் பொருட்கள் மற்றும் விலங்கு பொருட்கள் *துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் * சில வகையான மருந்துகள் * ஆஸ்திரேலிய நாணயத்தின் மதிப்பில் 10 ஆயிரம் டாலர்கள் - இதனை வருகை அட்டையில் (incoming passengers Arrival card) தெரிவிக்க வேண்டும் என அந்நாட்டு அரசின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரி பாதுகாப்பு (bio security) என்ற பெயரில் கொண்டு வரக் கூடாத பொருட்களையும் ஆஸ்திரேலிய அரசு பட்டியலிட்டுள்ளது. அதன்படி, * புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள் * கோழி இறைச்சி, பன்றி இறைச்சி *முட்டை, பால் பொருட்கள் * தாவரங்கள் அல்லது விதைகள் - 'இவை ஆஸ்திரேலியாவில் பூச்சிகள் மற்றும் நோய்களை அறிமுகப்படுத்தி தனித்துவமான சூழலை அழிக்கக் கூடும்' என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. 'நாட்டின் உள்ளே வரும் பயணிகள் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு பொருளையும் அறிவிக்க (Declare) வேண்டும்' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 'அவ்வாறு அறிவிக்கவில்லையென்றால் 5,500 ஆஸ்திரேலிய டாலர் வரையில் அபராதம் விதிக்கப்படலாம்' எனக் கூறியுள்ள அந்நாட்டு அரசு, 'விசா ரத்து செய்யப்பட்டு தங்கள் நாட்டில் இருந்து புறப்படும் வரை காவலில் வைக்கப்படலாம்' எனவும் கூறியுள்ளது. இதனைத் தவிர்க்கும் வகையில், 'தங்களின் உடைமைகள் குறித்து எல்லைப் படை அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்கலாம்' எனவும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது. 'பூ கொண்டு வரத் தடை...ஆனால்?' "ஆஸ்திரேலியாவுக்குள் விமானம் மூலம் கொண்டு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவில் மல்லிகைப் பூ விற்கப்படுகிறது" எனக் கூறுகிறார், ஜெயச்சந்திரன் தங்கவேலு. "ஒரு முழம் மல்லிகைப்பூ 40 டாலர் வரை விற்கப்படுகிறது. அதையும் தமிழர் ஒருவர் தான் இறக்குமதி செய்து விற்று வருகிறார்" எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார். தொடர்ந்து பேசிய அவர், "பூக்களை இறக்குமதி செய்யும்போது தனிமைப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. பூவின் தன்மை, சாகுபடி விவரம், பயன்படுத்தப்பட்ட உரம் என அனைத்து விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழுடன் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது" எனத் தெரிவித்தார். 'மோப்ப நாய்கள் மூலம் சோதனை' 'கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை நாட்டின் உள்ளேயும் வெளியேயும் கொண்டு செல்வது சட்டவிரோதம்' என அறிவித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, 'போதைப் பொருள் அல்லது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தன்மையைக் கண்டறிய பயிற்சி பெற்ற நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன' எனக் கூறியுள்ளது. இதைப் பற்றி பிபிசி தமிழிடம் குறிப்பிட்ட ஆஸ்திரேலியா வாழ் இந்தியர் ஜெயச்சந்திரன் தங்கவேலு, "சில பொருட்களை அறிவிக்காமல் கொண்டு வரும்போது மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடத்துவார்கள். இதற்காக பயணிகளை வரிசையாக நிற்க வைப்பது வழக்கம். தற்போது இதை அனைவருக்கும் செய்வதில்லை" எனக் கூறுகிறார். தொடர்ந்து, விமான நிலையத்துக்குள் நுழைந்த பிறகு மேற்கொள்ளப்படும் நடைமுறைகளை அவர் பட்டியலிட்டார். சோதனை நடைமுறைகள் என்ன? "ஆஸ்திரேலிய அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வரலாம். ஆனால், அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போது அவற்றை அறிவிக்க வேண்டும்" எனக் கூறுகிறார். "விமான நிலையத்தில் இருந்து வெளியில் வரும்போது கிரீன் சேனல், ரெட் சேனல் என இரண்டு நுழைவாயில்கள் இருக்கும். பயணிகள், அனுமதிக்கப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு வருவதைப் பொறுத்து அதிகாரிகள் சேனலை முடிவு செய்கின்றனர்" எனக் கூறுகிறார், ஜெயச்சந்திரன் தங்கவேலு. "கிரீன் சேனல் என்றால் எந்தவித சோதனையும் இல்லாமல் வெளியில் சென்றுவிடலாம்" எனக் கூறும் அவர், "ரெட் சேனலாக இருந்தால் கொண்டு சென்றுள்ள அனைத்து பொருட்களையும் சோதனை செய்வார்கள். அதில், திருப்தியடைந்தால் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிப்பார்கள்" என்கிறார். தடை செய்யப்பட வேண்டிய பொருளாக இருந்தால் பயணியின் அனுமதியுடன் அதை குப்பைத் தொட்டியில் எறிந்துவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார். "அவ்வாறு எறிவதற்கு பயணி எதிர்ப்பு தெரிவித்தால், அந்தப் பொருளை தனிமைப்படுத்தி (quarantine) செய்து வேறொரு துறைக்கு அனுப்புவார்கள். பிறகு ஒருநாள் அதற்குரிய அதிகாரியை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித் தருவார்கள்" எனக் கூறுகிறார், ஜெயச்சந்திரன் தங்கவேலு. அப்போதும் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அந்தப் பொருள் குப்பைத் தொட்டிக்கு சென்றுவிடும் என்றும் அதற்குரிய அபராதத்தை செலுத்த வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 'மண் ஒட்டியிருந்தால் கூட அபராதம் தான்' Ashok Raja Handout திருச்சியை சேர்ந்த முன்னாள் விமானி அசோக் ராஜா. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என இரண்டு நாடுகளும் ஒரே மாதிரியான விதிகளைப் பின்பற்றி வருவதாகக் கூறுகிறார், திருச்சியை சேர்ந்த முன்னாள் விமானி அசோக் ராஜா. உயிரி பாதுகாப்பு என்பதை மிக முக்கியமானதாக ஆஸ்திரேலிய அரசு கருதுவதாகக் கூறும் அவர், "மாறுபட்ட புவியியல் மற்றும் உயிரினங்கள் உள்ளதால் எந்தவித உயிரினங்களோ பொருட்களோ ஊடுருவிவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்" என்கிறார். ஆஸ்திரேலியாவில் தனது உறவினர் ஒருவர் கிரிக்கெட் மட்டையை எடுத்துச் சென்றபோது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறும் அசோக் ராஜா, "கிரிக்கெட் மட்டையில் மண் ஒட்டிக் கொண்டிருந்ததை காரணமாக கூறினர். எந்த நாட்டின் மண்ணும் தங்கள் நாட்டுக்குள் வந்துவிடக் கூடாது என்பதால் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன" எனவும் தெரிவித்தார். "செருப்பு அணிந்து செல்லும்போது அதில் மண் எதுவும் ஒட்டியிருக்கக் கூடாது. தங்கள் நாட்டு மண்ணை வெளிநாட்டு மண் கெடுத்துவிடக் கூடாது என்பது தான் அடிப்படையான நோக்கம்" என்கிறார், ஆஸ்திரேலியாவாழ் இந்தியரான ஜெயச்சந்திரன் தங்கவேலு. தற்காத்துக் கொள்வது எப்படி? "ஒரு நாட்டில் பின்பற்றப்படும் விதிமுறைகளைப் பற்றி ஏர்லைன்ஸ் நிர்வாகத்தில் கூற மாட்டார்கள். விமான நிலையத்தில் இறங்கியதும் உறுதிமொழி படிவத்தில் அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் தகவல்களைத் தெரிவித்துவிட்டால் தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறுகிறார், முன்னாள் விமானி அசோக் ராஜா. "ஒரு பொருளை அறிவிக்காமல் கொண்டு வந்தால் முதல்முறையான தவறாக இருந்தால் மன்னிப்பு அல்லது அபராதம் விதிப்பார்கள்" எனக் கூறும் ஜெயசந்திரன் தங்கவேலு, "இது அந்தந்த அதிகாரிகளைப் பொறுத்தது. சிலர் மன்னிப்பு மட்டும் வழங்குவார்கள். தொடர்ந்து தவறு நடந்தால் சிறையில் அடைப்பதற்கான நடைமுறைகள் வரை செல்லும்" என்கிறார். " உடைமைகளைக் கொண்டு செல்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதைக் கொண்டு சென்றாலும் நூறு சதவீதம் அதனை வெளிப்படையாக அறிவித்துவிட வேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் எல்லைப் படை அதிகாரிகள் உதவுவார்கள்" எனக் கூறுகிறார், ஜெயசந்திரன் தங்கவேலு. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c98el8jj8pro
-
கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கென தனியாக நடத்த வேண்டிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைத்து நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது - கே.கோடீஸ்வரன்
09 Sep, 2025 | 05:24 PM (எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்) கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கென தனியாக நடத்த வேண்டிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைத்து நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது அவ்வாறு ஒன்றாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்படுவதை தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே கருதப்படும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும் இடையிலான பல்துறை ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது, கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை விடயத்தில் அதற்கென தனியாக 30 வருடங்களாக பிரதேச ஒருங்கிணைப்பு தலைவர் நியமிக்கப்பட்டிருந்தார். இப்போது பிரதி அமைச்சர் வசந்த பியதிச நியமிக்கப்பட்டுள்ளார். இது வரவேற்கதக்க விடயமே. ஆனால் இன்று வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு கூட்டம் இதுவரை நடைபெறவில்லை. கல்முனை பிரதேச செயலகத்துடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தையும் சேர்த்து ஒரு ஒருங்கிணைப்பு குழு கூட்டதை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயமாகும். இவ்வளவு காலமும் நடந்த இரண்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டத் நிறுத்தி விட்டு இப்போது இரண்டு பிரதேச செயலகங்களை சேர்த்து ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நடத்துவது ஆரிய மோசடிக்கு தள்ளப்படக்கூடிய மற்றும் பெரிய பிளவுக்கு தள்ளப்படக்கூடிய காரணமாக இருக்கப் போகின்றது. மீண்டும் மீண்டும் இவ்வாறான பிளவுகள் ஏற்படுவதற்கு இந்த அரசாங்கம் காரணமாக இருக்கக் கூடாது. நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட ஏனைய விடயங்கள் இந்த வடக்கு பிரதேச செயலகம் ஊடாகவே இடம்பெற்று வந்தது. இப்போது இரண்டையும் சேர்த்து இரண்டு சமூகங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றீர்கள். அங்கு தேசிய மக்கள் சக்தியினருக்கு அதிக அளவில் வாக்குகளை வழங்கி இருந்தனர் ஆனால் இன்று அந்த தமிழர்கள் வெட்கி தலைகுனிந்து இருக்கின்றார்கள். தலைவரை நியமித்தும் அந்தப் பிரதேச செயலக குழு கூட்டங்கள் நடைபெறாமல் இருக்கின்றது. இதை நாங்கள் எதிர்க்கின்றோம் வன்மையாக கண்டிக்கின்றோம். இலங்கை வரலாற்றில் எப்போதும் நடக்காத வகையில் நீங்கள் இரண்டு பிரதேச செயல்களையும் இணைத்து வைக்கின்றீர்கள். இது வடக்கு செயலகப் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு செய்கின்ற துரோகமாகவே நாங்கள் பார்க்கின்றோம். இதனை இந்த அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்த சபையில் நான் கேட்டுக்கொள்கிறேன் என்றார். https://www.virakesari.lk/article/224659
-
செம்மணியோடு முடக்கப்படுமா யுத்தகால மீறல்களுக்கான நீதி?
Published By: Vishnu 08 Sep, 2025 | 01:02 AM (நா.தனுஜா) இலங்கையில் மனிதகுலத்துக்கு எதிராக சக மனிதன் நிகழ்த்திய அட்டூழியங்கள் பற்றிய உண்மைகள் வெளிப்படுத்தப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் எனக் காத்திருந்த காலமும், அந்த அட்டூழியங்களின் சாட்சியாக அமைதிகாத்து நின்ற நிலமும், நீளும் காத்திருப்பின் வலி தாழாமல் இன்று தம் அமைதி கலைத்துப் பேச ஆரம்பித்திருக்கின்றன. இப்போது செம்மணி நிலம் உரத்துச் சொல்லிக்கொண்டிருக்கும் மனிதப்பேரவலக்கதை உலகின் மனசாட்சியை உலுக்க ஆரம்பித்திருக்கிறது. இலங்கையில் இனவழிப்போ, போர்க்குற்றங்களோ இடம்பெறவில்லை எனக் காலம் காலமாக மறுத்து வந்தவர்களை வாயடைக்கச்செய்திருக்கிறது. கிருஷாந்தி குமாரசுவாமி கொல்லப்பட்டு 29 ஆண்டுகள் நாமறிந்த செம்மணி நிலத்தின் கதை கிருஷாந்தி குமாரசுவாமியின் படுகொலையுடன் ஆரம்பமாகிறது. 1996 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7 ஆம் திகதி யாழ் சுண்டுக்குளி மகளிர் கல்லூரியில் க.பொ.த உயர்தரப்பரீட்சை எழுதச்சென்ற கிருஷாந்தி குமாரசுவாமியும், அவரைத்தேடிச்சென்ற அவரது தாய் ராசம்மா குமாரசுவாமி, இளைய சகோதரன் குமாரசுவாமி பிரணவன், அயலவர் சிதம்பரம் கிருபாமூர்த்தி ஆகியோர் இராணுவத்தினரால் கொல்லப்பட்டு இன்றோடு 29 வருடங்கள் பூர்த்தியடைகின்றன. கிருஷாந்தி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்ட வழக்கில் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, 1998 ஆம் ஆண்டு முதன்முறையாக செம்மணி பற்றிய உண்மைகளை உலகுக்கு வெளிப்படுத்தினார். 1995 - 1996 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் அரச படையினரால் கைதுசெய்யப்பட்டதன் பின்னர் காணாமல்போன பலர் கொல்லப்பட்டு செம்மணியில் புதைக்கப்பட்டதாகவும், அங்கு சுமார் 300 - 400 பேர் வரை புதைக்கப்பட்டிருக்கக்கூடும் எனவும் சோமரத்ன வெளிப்படுத்தியதை அடுத்து, 1999 இல் அவரால் அடையாளம் காண்பிக்கப்பட்ட பகுதிகளில் சர்வதேசக் கண்காணிப்புடன் மேற்கொள்ளப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான அகழ்வுகளில் 15 எலும்புக்கூடுகள் கண்டறியப்பட்டன. அத்தோடு செம்மணி பற்றிய உண்மைகள் ஓர் தற்காலிக ஓய்வுக்குச் சென்றன. மீளப் பேசும் செம்மணி நிலம் இந்நிலையில் இவ்வாண்டு பெப்ரவரி மாதம் செம்மணி சித்துபாத்தி இந்து மயானத்தின் புனரமைப்புப்பணிகளின்போது சில மனித எச்சங்கள் கண்டறியப்பட்டதை அடுத்து, சட்ட மருத்துவ அதிகாரிகள், பொலிஸார் மற்றும் தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் மேற்பார்வையின்கீழ் அகழ்வுப்பணிகளை முன்னெடுக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதன்படி கடந்த வியாழக்கிழமையுடன் (4) இரண்டாம் கட்ட அகழ்வுப்பணிகளில் 43 நாட்கள் பூர்த்தியடைந்துள்ளன. இதுவரையான காலப்பகுதியில் (4 செப்டெம்பர் 2025) மொத்தமாக 235 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 224 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. செம்மணியில் கண்டறியப்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் எலும்புக்கூடுகள், சிறுவர்கள் பயன்படுத்தும் பாடசாலைப் புத்தகப்பை, விளையாட்டுப்பொம்மை, பால் போத்தல் என்பனவும், கடந்த ஜுன் மாதம் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கின் செம்மணி மனிதப்புதைகுழிக்கான விஜயமும் இதுவரை வட, கிழக்கின் பேரவலக்கதைகளைக் காதுகொடுத்துக் கேட்காத, புரிந்துகொள்ள முயற்சிக்காத தெற்கின் கவனத்தைக்கூட செம்மணியின் பக்கம் திருப்பியிருக்கிறது. 'செம்மணிக்கு நீதி' என ஒட்டுமொத்த நாடும் ஒருமித்துக் குரல் எழுப்பாவிட்டாலும், அந்நீதியைக்கோரி குறித்தவொரு தரப்பு எழுப்பும் கோஷத்தைத் தடுக்க முற்படாத சூழ்நிலையொன்று தெற்கில் பகுதியளவில் உருவாகியிருக்கிறது. சோமரத்ன ராஜபக்ஷவின் புதிய வெளிப்படுத்தல்கள் இது ஒருபுறமிருக்க 1996 ஆம் ஆண்டு 7 ஆம் காலாட்படை தலைமையகத்தில் கொல்லப்பட்டு செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமியினதும், அவரது குடும்பத்தாரினதும் சடலங்களை கப்டன் லலித் ஹேவாகேயின் ஆணைக்கு அமைவாகப் புதைத்ததைத் தவிர வேறெந்தக் குற்றத்தையும் புரியாத தனது கணவர், செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியமளிப்பதற்குத் தயாராக இருக்கிறார் எனக் குறிப்பிட்டு மரணதண்டனைக்கைதி சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி சேனாலி சம்பா விஜேவிக்ரம அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்தார். அதுமாத்திரமன்றி 'யாழ். அரியாலையில் சம்பத் எனும் பெயரில் குறிப்பிடத்தக்களவு காலம் பணியாற்றியவன் என்ற ரீதியில், 1996 ஆம் ஆண்டில் அரியாலை பிரதேசத்தில் காணாமல்போன சகல நபர்களும் 7 ஆவது இராணுவக் காலாட்படை தலைமையகத்தின் உயரதிகாரிகளினாலேயே கைதுசெய்யப்பட்டனர் என்பதை நானறிவேன். அவ்வதிகாரிகள் யார் என்பதையும், 1996 இல் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சகல குற்றங்கள் பற்றிய விபரங்களையும் வெளிப்படுத்தத் தயாராக இருக்கிறேன்' என சோமரத்ன ராஜபக்ஷ பிறிதொரு வெளிப்படுத்தலையும் செய்திருந்தார். காலம் கனிந்திருக்கிறது ஆக, கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலையுடன் வெளிச்சத்துக்கு வந்து கிடப்பில் போடப்பட்ட ஒரு மனிதப்பேரவலத்தையும், அதன் காரணகர்த்தாக்களையும் வெளிக்கொணர்வதற்கான காலம் கனிந்திருக்கிறது. செம்மணி மனிதப்புதைகுழி என்பது தனியொரு சம்பவம் அல்ல. மாறாக அது தமிழர்களுக்கு எதிராக அரச அனுசரணையுடன் இராணுவத்தினரால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட மனிதகுலத்துக்கு எதிரான மீறல்களின் ஒரு சாட்சியம் மாத்திரமே என்பதை சோமரத்ன ராஜபக்ஷவின் அண்மைய வெளிப்படுத்தல்கள் உணர்த்துகின்றன. இப்போது எம்முன் இரண்டு கேள்விகள் தொக்குநிற்கின்றன. முதலாவது, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை (8) ஆரம்பமாகவிருக்கும் நிலையில் யுத்தகாலத்தில் இடம்பெற்ற சகல மீறல்களுக்குமான நீதியையும், பொறுப்புக்கூறலையும் உறுதிசெய்வதற்கான சாட்சியமாகத் திகழும் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தை எவ்வாறு கையாளப்போகிறோம்? இரண்டாவது, ஒட்டுமொத்த மீறல்களுக்குமான நீதியை அரசாங்கம் செம்மணியோடு மாத்திரம் மட்டுப்படுத்திவிடுமா? இங்கு முதலாவது கேள்விக்கான பதிலை சரிவரக் கண்டறிந்து, அதனை தமிழ் அரசியல் தலைமைகள், சிவில் சமூகம், புலம்பெயர் தமிழர்கள், பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளிட்ட ஒட்டுமொத்த தமிழ்ச்சமூகமும் ஒன்றிணைந்து உரியவாறு நடைமுறைப்படுத்துவதன் ஊடாக மாத்திரமே இரண்டாவது கேள்வியில் எழுப்பப்பட்டிருக்கும் சந்தேகத்தைக் களையமுடியும். மனிதப்புதைகுழி விவகாரத்தையும், வலிந்து காணாமலாக்கப்பட்டோர் விவகாரத்தையும் வேறுபடுத்திப் பார்க்கமுடியாத பின்னணியில், சர்வதேச விசாரணை பற்றிய சோமரத்ன ராஜபக்ஷவின் கருத்து நீண்டகாலமாக நீதிக்காகப் போராடிவரும் தமக்குச் சாதகமாக அமைந்திருப்பதாகவும், அதனை தமிழ்த்தரப்புக்கள் சரிவரப்பயன்படுத்திக்கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள், அரசாங்கம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சர்வதேச விசாரணையை நோக்கிச் செல்லப்போவதில்லை என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். இருப்பினும் இங்கு மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை நாடுவதற்கு வாய்ப்பளிக்கக்கூடியவகையில் ரோம சாசனத்தில் கையெழுத்திட்டிருக்காத இலங்கையை வேறு எந்த அடிப்படைகளில் நடைமுறைச்சாத்தியமான சர்வதேச நீதி மற்றும் பொறுப்புக்கூறல் பொறிமுறையை நோக்கித் தள்ளமுடியும் என்ற கேள்வி எழுகிறது. சர்வதேச விசாரணைக்கான சாத்தியப்பாடுகள் 'சர்வதேச விசாரணை என்பது கட்டாயமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெறவேண்டிய விசாரணையா? அல்லது வேறு வகையான சர்வதேச விசாரணையா? என்ற வினா மக்கள் மத்தியில் நிலவும் அதேவேளை, அரசியல்வாதிகள் மத்தியிலும் இதுபற்றிய புரிதலின்மை காணப்படுகிறது. ரோம சாசனத்தில் உறுப்புரிமை அற்ற நாடுகளிலும், உறுப்புநாடுகள் ரோம சாசனத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னரான காலப்பகுதியில் அந்நாடுகளிலும் இடம்பெற்ற மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கான நியாயதிக்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு இல்லை. எனவே ரோம சாசனத்தில் கையெழுத்திடாத இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் அங்கு விசாரணைகளை முன்னெடுப்பதற்கான சாத்தியப்பாடு மிகக்குறைவு. இருப்பினும் சர்வதேச நீதியை நோக்கி நகர்வதற்கான வேறுபல வழிமுறைகள் சர்வதேச சட்டங்களில் உண்டு. உதாரணமாக யூகோஸ்லாவியா மற்றும் ருவாண்டா போன்ற நாடுகளில் இடம்பெற்ற இனப்படுகொலைகள் தொடர்பான விசாரணைகளுக்கான யுன ர்ழஉ வுசiடிரயெட எனப்படும் சர்வதேச தீர்ப்பாயங்கள் நெதர்லாந்தின் ஹேக் நகரில் தனியாக உருவாக்கப்பட்டன. அதேபோன்று கம்போடியாவில் இடம்பெற்ற இனப்படுகொலை உள்ளடங்கலாக பல்வேறு சந்தர்ப்பங்களில் கலப்புமுறையிலான பல தீர்ப்பாயங்கள் காலத்துக்குக்காலம் நிறுவப்பட்டுள்ளன' என சர்வதேச நீதியை நாடுவதில் உள்ள மாற்றுத்தெரிவுகள் பற்றி விளக்கமளிக்கிறார் சிரேஷ்ட சட்டத்தரணி மரியதாஸ் யூட் டினேஷ். அதுமாத்திரமன்றி, கனேடிய அரசாங்கத்தின் பங்களிப்புடன் சர்வதேச சட்டத்தில் உட்புகுத்தப்பட்ட விடயமான 'பாதுகாக்கவேண்டிய கடப்பாடு' பற்றி சுட்டிக்காட்டிய அவர், இக்கோட்பாட்டின் பிரகாரம் இலங்கையில் இடம்பெற்ற மனிதப்பேரவலத்தைத் தடுப்பதற்கு ஐ.நா தவறிவிட்டது என்பதை அப்போதைய செயலாளர் நாயகம் பான் கி-மூன் பகிரங்கமாக ஏற்றுக்கொண்டிருந்ததாகவும், எனவே மேற்படி கோட்பாட்டின்படி உள்நாட்டில் பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாதவிடத்து, அடுத்தகட்டமாக அதனைச் செய்யவேண்டிய கடப்பாடு ஐ.நா வுக்கு இருப்பதாகவும் தெரிவித்தார். செம்மணியோடு நீதி முடக்கப்படக்கூடாது அதேவேளை கடந்தகாலங்களில் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விவகாரம் பின்தள்ளப்பட்டுவந்த நிலையில், தற்போது கண்டறியப்பட்டிருக்கும் செம்மணி மனிதப்புதைகுழியானது 1948 ஆம் ஆண்டு முதல் தமிழர்களுக்கு எதிராக நிகழ்த்தப்பட்டுவரும் இனவழிப்பை வெறுமனே இறுதிக்கட்ட யுத்தம் இடம்பெற்ற 6 மாதகாலத்துக்குள் முடக்கிவிடக்கூடாது எனத் தொடர்ச்சியாகக் கூறிவரும் தரப்பினருக்குக் கிடைத்த பெருவாய்ப்பு என குறிப்பிட்ட தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், 'இலங்கை தொடர்பில் இதுவரை காலமும் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்டுவந்த தீர்மானங்களின் பலவீனம் மற்றும் குறுகிய தன்மையை வெளிப்படுத்துவதற்கும், அத்தீர்மானங்களைப் பரந்துபட்ட அடிப்படையில் விரிவுபடுத்துவதற்கும் நாம் செம்மணி விவகாரத்தைப் பயன்படுத்தவேண்டும். அதேவேளை இலங்கையில் இடம்பெற்ற மீறல்கள் தொடர்பில் சுமார் 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதாரங்கள் திரட்டப்பட்டிருக்கும் நிலையில், இனி இவ்விவகாரம் சர்வதேச மட்டத்தில் நீதிமன்றப்பொறிமுறை ஒன்றின் ஊடாக விசாரிக்கப்படும் அதேவேளை, அதில் செம்மணி மனிதப்புதைகுழியும் உள்வாங்கப்படவேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும்' என்றார். உள்ளகப்பொறிமுறைகளை உதாசீனப்படுத்தக்கூடாது இருப்பினும் செம்மணி மனிதப்புதைகுழி உள்ளடங்கலாக இலங்கையில் இடம்பெற்ற மீறல் குற்றங்கள் தொடர்பான சர்வதேச நீதி, பொறுப்புக்கூறல் பொறிமுறைகளுக்கான சாத்தியப்பாடு குறித்து ஆராய்வதுடன் அவற்றுக்கான முயற்சிகளை மேற்கொள்ளும் அதேவேளை, உள்ளக ரீதியில் இயங்கிவரும் பொறிமுறைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டியது அவசியம் என வலியுறுத்தும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், மனித உரிமைகள் செயற்பாட்டாளருமான சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன், மறுபுறம் மனிதப்புதைகுழி தொடர்பில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டுவரும் விசாரணைகள் குறித்து நிலவும் நம்பிக்கையீனம் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினர் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்பக்கூடியவகையில் அச்செயன்முறை மாற்றியமைக்கப்படவேண்டிய விதம் என்பன பற்றியும் பின்வருமாறு விளக்கமளிக்கிறார். 'முதலாவதாக செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வுப்பணிகளில் சர்வதேச நிபுணத்துவம் மற்றும் சர்வதேச கண்காணிப்பாளர்கள் உள்வாங்கப்படவேண்டும். அப்புதைகுழி மழைக்காலத்தில் உரியவாறு பேணப்படவேண்டும். அத்தோடு அங்கு கண்டறியப்படும் எலும்புக்கூடுகள் யாருக்குச் சொந்தமானவை என்பதைக் கண்டறிவதற்கு உள்நாட்டிலேயே மரபணு வங்கியொன்று (னுNயு டீயமெ) நிறுவப்படவேண்டும். இவற்றுக்கு அப்பால் இந்த மனிதப்புதைகுழி தொடர்பில் யார் விசாரணைகளை முன்னெடுக்கப்போகிறார்கள் என்பது மிகமுக்கியம். இலங்கையைப் பொறுத்தமட்டில் பொலிஸார் யுத்தத்துடன் தொடர்புடைய மற்றும் அதனுடன் தொடர்பற்ற பல்வேறு மீறல்களில் ஈடுபட்ட வரலாறு இருக்கிறது. அவ்வாறிருக்கையில் இந்த பொலிஸார் மனிதப்புதைகுழி தொடர்பில் சுயாதீனமானதும், நியாயமானதுமான விசாரணைகளை முன்னெடுப்பார்களா? அவ்விசாரணைகள்மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் உள்ளடங்கலாகப் பொதுமக்கள் நம்பிக்கை வைப்பார்களா? என்ற கேள்வி நிலவுகிறது. எனவே இவ்விசாரணைகளுக்காக பொலிஸ் திணைக்களத்துடன் தொடர்பற்ற, உரிய நிபுணத்துவம் உடைய அதிகாரிகள் மற்றும் சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய சுயாதீன விசாரணைக் கட்டமைப்பொன்றை அரசாங்கம் உருவாக்கவேண்டும். அடுத்ததாக சர்வதேச நியாயாதிக்கம் (ருniஎநசளயட துரசளைனiஉவழைn) உள்ளடங்கலாக சர்வதேச நீதிக்கான நகர்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் அதேவேளை, உள்நாட்டுப்பொறிமுறைகளை உதாசீனப்படுத்தக்கூடாது. ஏனென்றால் நீதியை நிலைநாட்டவேண்டிய கடமை அரசாங்கத்துக்கு இருக்கிறது. அவ்வாறிருக்கையில் நாம் அவற்றை உதாசீனப்படுத்துமிடத்து, தாம் மேற்கொண்ட முயற்சிகளுக்கு மக்கள் ஒத்துழைப்பு வழங்கவில்லை எனவும், ஆகையினால் தம்மால் எதனையும் செய்யமுடியவில்லை எனவும் அரசாங்கம் கூறிவிடும்' எனச் சுட்டிக்காட்டினார். மனிதப்புதைகுழிகள் சிக்கலானவை அதற்கமைய இலங்கையில் வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பில் இயங்கிவரும் உள்ளகப்பொறிமுறையான காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் மிராக் ரஹீம், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தமட்டில் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதியைப் பெற்றுக்கொடுப்பதிலும், கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்தல்களை மேற்கொள்வதிலும் தமது அலுவலகத்தின் பங்களிப்புக் குறித்துத் தெளிவுபடுத்தினார். 'மனிதப்புதைகுழிகளைக் கையாள்வது மிகச்சிக்கலானதாகும். ஏனெனில் இவ்விவகாரத்தில் மனித எச்சங்களை ஆராயவேண்டும். மனிதப்புதைகுழி மண்ணின் தன்மையை ஆராயவேண்டும். வாக்குமூலங்களை சேகரிக்கவேண்டும். முன்னைய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளைப் பரிசீலிக்கவேண்டும். இவ்வாறு பல்வேறு தரப்பினரின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் ஊடாகவே மனிதப்புதைகுழிகளில் கண்டெடுக்கப்பட்ட எலும்புக்கூடுகள் யாருடையவை? அவர்கள் எவ்வாறு மரணித்தார்கள்? அவர்கள் அங்கு எப்படிப் புதைக்கப்பட்டார்கள்? என்ற கேள்விகளுக்கான பதில்களைப் பெறமுடியும்' எனச் சுட்டிக்காட்டிய மிராக், மறுபுறம் மனிதப்புதைகுழி அகழ்வு மற்றும் பகுப்பாய்வுப் பணிகளில் எதிர்வருங்காலங்களில் உள்வாங்கப்படவேண்டியிருக்கும் தடயவியல் மற்றும் தொழில்நுட்ப நிபுணத்துவம், எலும்புக்கூடுகள் தொடர்பான பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான ஆய்வுகூட வசதிகள் இன்மை பற்றியும் பிரஸ்தாபித்தார். சகல மீறல்களுக்குமான நீதி ஆக, யுத்தகாலத்தில் இடம்பெற்ற இனவழிப்பு, போர்க்குற்றங்கள், மனிதகுலத்துக்கு எதிரான மீறல்கள் என்பன உள்ளடங்கலாக சகல குற்றங்களுக்குமான நீதியையும், பொறுப்புக்கூறலையும் நிலைநாட்டுமாறு தமிழர்கள் கோரிவரும் நிலையில், அது செம்மணிக்கான நீதியாக மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டுவிடக்கூடாது. மாறாக ஏனைய அனைத்து மீறல்களுக்குமான நீதியை தேசிய மற்றும் சர்வதேச ரீதியில் இன்னமும் உரத்து வலியுறுத்துவதற்கான ஆயுதமாக செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தைப் பயன்படுத்தவேண்டும். செம்மணியின் கீழும், இன்னமும் அடையாளம் காணப்படாத மனிதப்புதைகுழிகளின் கீழும் உதவிகோரத் திராணியின்றி உயிரடங்கிப் புதையுண்ட ஆயிரமாயிரம் உறவுகளுக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்கவேண்டிய தார்மீகக் கடப்பாடு சகலருக்கும் உண்டு. https://www.virakesari.lk/article/224483
-
வடக்கு மாகாணத்தின் சவால்களைத் தீர்ப்பதற்கு வித்தியாசமான அணுகுமுறையை பின்பற்றவேண்டும் - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்
09 Sep, 2025 | 01:01 PM (எம்.நியூட்டன்) வடக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு பிள்ளைகளினதும் அடிப்படை உரிமைகளையும் அவர்களது தேவைகளையும் வசதிகளையும் உறுதிப்படுத்தவேண்டியது எங்கள் அனைவரினதும் பொறுப்பாகும். அதேநேரம் அவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு பலர் தன்னார்வமாக தயாராக உள்ளபோதும் அது ஒருங்கிணைந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பின் ஊடாக கிடைக்கப்பெறுவதற்குரிய ஏற்பாடுகளை நாம் துரிதமாகச் செய்யவேண்டியிருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்தியத் துணைத்தூதரகமும், போலோ ஆய்வகமும் இணைந்து 'போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு – ஒரு குழந்தையின் எதிர்காலத்துக்கான இணைப்பு' என்னும் தலைப்பில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில் செவ்வாய்க்கிழமை காலை (09) இந்தியாவிலிருந்து வருகை தந்த கல்வி உளவியாளரும் சிறுவர் உரிமைக்கான நிபுணருமான கலாநிதி சரண்யா ஜெய்குமார் தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு ஆளுநர் உரையாற்றுகையில் , வடக்கு மாகாணத்தை நாட்டின் ஏனைய மாகாணங்களிலிருந்து வித்தியாசப்படுத்தி நோக்க வேண்டும். மிக நீண்ட நெடிய போரால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற நோக்கு நிலையிலேயே அணுகவேண்டும். இந்த மாகாணத்தின் குழந்தைகள் போரால் தங்கள் பெற்றோர்களை இழந்திருக்கின்றார்கள். பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தின் வருமானமீட்டுபவர்களை பறிகொடுத்திருக்கின்றார்கள். இந்தப் பின்னணிகளையும் கருதிலெடுத்தே எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நாம் வடிவமைக்கவேண்டியிருக்கின்றது. கல்விக்கு வறுமை ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது. அதற்காகத்தான் அரசாங்கம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றது. ஆனால் பிள்ளைகள் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு குடும்பச் சூழல் செல்வாக்குச் செலுத்துகின்றது. மீள்குடியமர்ந்த குடும்பங்கள் இன்னமும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாகத் திரும்பவில்லை. அதேபோல பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்ட எதிர்கொண்டு இருக்கின்ற குடும்பங்களின் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லுமா என்பது கேள்விக்குறியே? அதேநேரம் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட பல கிராமங்கள் இருக்கின்றன. அங்கு பிள்ளைகளும் குறைவு. அதனால் அங்குள்ள பாடசாலைகள் - ஆரம்பப் பாடசாலைகள் மூடப்படுகின்றன. அந்தப் பிள்ளைகளுக்கு பல கிலோ மீற்றர் தூரம் பயணித்து கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான இயலுமையும் குறைவு. அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது அந்தப் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. இதை மாற்றியமைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். போர் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் எங்கள் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை இழந்திருக்கின்றார்கள். அவர்கள் பேரன் அல்லது பேர்த்தியின் அரவணைப்பில்தான் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்புக் குறித்தும் நாம் கவனம் செலுத்தவேண்டியவர்களாக இருக்கின்றோம். எனவேதான் வடக்கு மாகாணத்தை ஏனைய மாகாணங்களிலிருந்து தனித்துவமான கோணத்தில் நோக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன். எமது மாகாணத்தின் இந்தச் சவால்களைத் தீர்ப்பதற்கும் நாம் வித்தியாசமான அணுகுமுறையையே பின்பற்றவேண்டியிருக்கும். எனவே அதற்கு இந்தக் கருத்தரங்கு உதவியாக இருக்கும் என்றார் . இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் ஆகியோரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தேசியக் கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள். https://www.virakesari.lk/article/224618
-
சமூகவலைத்தள முடக்கத்துக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த 'Gen Z' இளைஞர்கள் போராட்டம்
நேபாளத்தில் நாடாளுமன்ற கட்டடத்துக்கும் பிரதமர் வீட்டுக்கும் தீ வைப்பு - 12 மணி நேரத்தில் என்ன நடந்தது? பட மூலாதாரம், EPA நாடாளுமன்ற கட்டடம் மற்றும் சிங் தர்பார் எனும் அரண்மனைக்கு போராட்டக்காரர்கள் செவ்வாய்கிழமை தீ வைத்தனர். சிங் தர்பாரில் பல்வேறு அரசு துறை அலுவலகங்கள் உள்ளன 9 செப்டெம்பர் 2025, 13:41 GMT புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர் நேபாளத்தில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், போராட்டக்காரர்கள் நாடாளுமன்றக் கட்டடத்திற்கும், ராஜினாமா செய்துள்ள பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் வீட்டுக்கும் தீ வைத்துள்ளனர். காத்மாண்டுவில் உள்ள நேபாள நாடாளுமன்றக் கட்டடத்திற்குள் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் நுழைந்துள்ளனர். கட்டடத்தின் ஒரு பகுதியிலிருந்து புகை தொடர்ந்து எழுகிறது. கட்டட வளாகத்தைச் சுற்றி மோட்டார் சைக்கிள்கள் சுற்றி வருகின்றன. சிலர் தோட்டத்திலிருந்து தோண்டியெடுக்கப்பட்ட செடிகளையும், கட்டடத்தின் உட்புறத்திலிருந்து ஓவியங்களையும் எடுத்துச் செல்கின்றனர். கட்டடத்தின் நுழைவாயிலில் உள்ள நெருப்பைச் சுற்றி போராட்டக்காரர்கள் நடனமாடி கோஷங்களை எழுப்பி வருகின்றனர், பலர் நேபாளக் கொடியை ஏந்தியுள்ளனர். சிலர் கட்டடத்தின் உள்ளே நுழைந்துள்ளனர். அங்கு அனைத்து ஜன்னல்களும் உடைக்கப்பட்டுள்ளன. கட்டடத்தின் வெளிப்புறத்தில் அரசாங்க எதிர்ப்பு படங்கள் வரையப்பட்டுள்ளன. இதற்கிடையே நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி தன் பதவியை செவ்வாய்கிழமை மதியம் ராஜினாமா செய்தார். நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் 'ஜென் Z' இளைஞர்கள் நடத்திய போராட்டத்தில் சிலர் உயிரிழந்ததையடுத்து, கேபி சர்மா ஒலி மீது விமர்சனங்கள் எழுந்தன. இந்த இளைஞர்கள் நேபாளத்தில் சமூக ஊடகங்கள் மீதான தடையை எதிர்த்தும் ஊழலை எதிர்த்தும் போராட்டம் நடத்தினர். Play video, "நேபாளம்: இளைஞர்களின் போராட்டம் அரசை ஆட்டம் காண வைத்தது எப்படி?", கால அளவு 4,36 04:36 காணொளிக் குறிப்பு, காணொளி: நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் அரசையே ஆட்டம் காண வைத்தது எப்படி? கேபி சர்மா ஒலி தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்பதுதான் போராட்டக்காரர்களின் முக்கிய கோரிக்கைகளுள் ஒன்றாக இருந்தது. இளைஞர்கள் போராட்டத்தைக் கட்டுப்படுத்தியதில் 21 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர். இதில் இருவர் செவ்வாய்கிழமை உயிரிழந்தனர். கேபி சர்மா ஒலி தன் பதவியை ராஜினாமா செய்ததை பிரதமர் செயலகம் பொதுவெளியில் வெளியிட்டுள்ளது. கேபி சர்மா ஒலி நேபாளத்தின் பிரதமராக நான்காவது முறையாக பதவி வகித்துவந்தார். ஷார்ட் வீடியோ Play video, "காணொளி: தீவிரமடையும் போராட்டம் - பற்றி எரியும் நேபாளம்", கால அளவு 0,26 00:26 காணொளிக் குறிப்பு, காணொளி: தீவிரமடையும் போராட்டம் - பற்றி எரியும் நேபாளம் கே.பி. சர்மா ஒலியின் வீடு எரிந்து நாசமானது காத்மாண்டுவில் செவ்வாய்க்கிழமை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், பல்வேறு இடங்களில் போராட்டங்கள் மற்றும் மோதல்கள் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. போராட்டக் குழுக்களால் பல்வேறு தலைவர்கள் மற்றும் அமைச்சர்களின் வீடுகள் நாசமாக்கப்பட்டதாகவும், தீ வைக்கப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன. பக்தபூரில் உள்ள பாலகோட்டில் உள்ள தற்போது ராஜினாமா செய்துள்ள பிரதமர் கே.பி. சர்மா ஒலியின் வீடு தீ பற்றி எரிவதையும், சேதப்பட்டிருப்பதையும் காட்டும் காணொளிகள் வெளியாகின. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, தீக்கிரையாக்கப்பட்ட நேபாளி காங்கிரஸ் கட்சி அலுவலகம் இதனுடன், புத்தனில்காந்தாவில் உள்ள நேபாளி காங்கிரஸ் தலைவரும் முன்னாள் பிரதமருமான ஷேர் பகதூர் தியூபாவின் வீட்டை போராட்டக்காரர்கள் சூறையாடியதாகவும் செய்திகள் வந்துள்ளன. தங்கடியில் உள்ள தியூபாவின் இல்லமும் போராட்டக்காரர்களால் இலக்கு வைக்கப்பட்டது. நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட் சென்டர்) செய்தித் தொடர்பாளர் அக்னி பிரசாத் சப்கோடா கூறுகையில், அக்கட்சியின் தலைவரும் முன்னாள் பிரதமருமான புஷ்ப கமல் தஹாலின் குமல்தாரில் அமைந்துள்ள இல்லத்தில் போராட்டக்காரர்கள் தொடர்ந்து பெட்ரோல் குண்டுகளை வீசியதாக தகவல் தெரிவித்தார். முன்னதாக, தகவல் தொடர்பு துறை அமைச்சர் பிரித்வி சுப்பா குருங், உள்துறை அமைச்சர் ரமேஷ் லேகாக் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் தீபக் கட்கா ஆகியோரின் இல்லங்களும் சூறையாடப்பட்டன. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, போராட்டங்களின் போது, பல இடங்களில் தீ வைக்கப்பட்டன, பல தலைவர்களின் வீடுகள் நாசப்படுத்தப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ராஜினாமா கடிதம் ஆளும் கூட்டணியில் அங்கம் வகித்த நேபாள காங்கிரஸ் மற்றும் நேபாள சமாஜ் கட்சிகளின் அமைச்சர்கள் பலர் பதவி விலகியதைத் தொடர்ந்து பிரதமர் கே.பி. ஷர்மா ஒலி உடனடியாகப் பதவி விலகினார். 'ஜென் Z' போராட்டங்களின் போது ஒரே நாளில் அதிக எண்ணிக்கையிலானோர் இறந்ததால் கே.பி. ஷர்மா ஒலிக்கு பதவி விலக வேண்டும் என்ற அழுத்தம் அதிகரித்தது. பிபிசி நேபாளி சேவையின்படி, சில நாளிதழ்கள் ஒலியின் பதவி விலகலைக் வலியுறுத்தி சிறப்பு தலையங்கங்களை வெளியிட்டிருந்தன. படக்குறிப்பு, பிரதமர் கேபி சர்மா ஒலியின் இல்லமும் போராட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, திங்கட்கிழமை நாடாளுமன்ற கட்டடத்தையும் போராட்டக்காரர்கள் சூறையாடினர். காத்மாண்டு விமான நிலையம் மூடப்பட்டது பிபிசி நேபாளி சேவையின்படி, செவ்வாய்க்கிழமை கோபமடைந்த போராட்டக்காரர்கள் நியூ பனேஷ்வரில் உள்ள நாடாளுமன்றக் கட்டிடத்தைத் தாக்கி தீ வைத்தனர். திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி புகை எழுவதால், விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக நேபாள சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு விமானங்கள் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன, ஆனால் இப்போது சர்வதேச விமானங்களும் பாதிக்கப்படும். (இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது) - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ckg2xngqz48o
-
நேபாளத்தில் அரசு கவிழ்ந்தது: இளைஞர் போராட்டத்தால் பிரதமர் கே.பி.ஒலி ராஜினாமா
நேபாள பிரதமர் இராஜினாமா! Published By: Digital Desk 3 09 Sep, 2025 | 03:23 PM நாட்டில் இடம்பெற்றுள்ள மக்கள் கொந்தளிப்பை தொடர்ந்து நேபாள அரசின் பிரதமர் கே.பி.ஷர்மா சற்றுமுன் இராஜினாமா செய்துள்ளார். சமூக ஊடகங்களுக்கு நேபாள அரசு விதித்த தடைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் பெரும் வன்முறைப் போராட்டங்கள் வெடித்துள்ளன. இதுவரை ஆர்ப்பாட்டக்காரர்களில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் காயமடைந்துள்ளனர். நேபாளத்தின் தொலைத்தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகத்தின் விதிகளின் கீழ் பதிவு செய்யத் தவறிய இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் உள்ளிட்ட 26 சமூக ஊடக தளங்களுக்கு நேபாள அரசு விதித்த தடைக்கு எதிராக வெடித்த போராட்டம், பெரும் வன்முறையாக மாறியது. இதையடுத்து, இந்தத் தடை திங்கட்கிழமை (8) நள்ளிரவில் நீக்கப்பட்டது. இருப்பினும், ஊழல் குற்றச்சாட்டுகளைக் காரணம் காட்டி நேபாள பிரதமர் கே.பி. ஷர்மா ஒலியை பதவி விலகக் கோரி, இளைஞர்கள் இரண்டாவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்கள் நேபாள ஜனாதிபதி மற்றும் பிரதமர் இல்லங்கள், பாராளுமன்ற கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்குத் தீ வைத்தனர். இதனால், பாராளுமன்றம் முழுவதும் கரும் புகை சூழ்ந்தது. விமான நிலையம் அருகிலும் தீ வைக்கப்பட்டதால் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்தக் கடுமையான அழுத்தத்தைத் தொடர்ந்து, நேபாளப் பிரதமர் ஷர்மா ஒலி தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். நேற்று உள்துறை அமைச்சர் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், இன்று பிரதமர் தனது பதவியை இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224631
-
நேபாளத்தில் அரசு கவிழ்ந்தது: இளைஞர் போராட்டத்தால் பிரதமர் கே.பி.ஒலி ராஜினாமா
பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் கெல்லி என்ஜி பிபிசி நியூஸ் 9 செப்டெம்பர் 2025, 05:32 GMT புதுப்பிக்கப்பட்டது 12 நிமிடங்களுக்கு முன்னர் நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளார். அவர் ராஜினாமா செய்திருப்பதை அவரது செயலகம் அறிக்கை வாயிலாக உறுதிப்படுத்தியுள்ளது. தற்போதைய நெருக்கடிக்கு அரசியலமைப்பு ரீதியாக தீர்வு காண வழி வகுக்கும் வகையில் ராஜினாமா செய்ததாக பிரதமர் ஒலி கையெழுத்திட்ட அந்த அறிக்கை கூறுகிறது. தலைநகர் காத்மாண்டுவிலும், நேபாளம் முழுவதும் அதிகாலை முதல் போராட்டங்கள் நடந்தன. ஒலி மற்றும் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தியூபாவின் வீடுகள் உட்பட பல மூத்த அரசியல்வாதிகளின் வீடுகள் தாக்கப்பட்டன. நேபாளத்தில் என்ன நடக்கிறது? முன்னதாக உள்நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்படவில்லை என 26 சமூக ஊடக தளங்களுக்கு நேபாள அரசு தடை விதித்திருந்தது. இந்த தடையை நீக்கவும் ஊழலைக் கட்டுப்படுத்தவும் வலியுறுத்தி நேபாள தலைநகர் காத்மண்டுவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நாடாளுமன்ற கட்டடத்தை நோக்கி பேரணியாக சென்று போராட்டத்தில் ஈடுபட்டனர். திங்கள் இரவு நடைபெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில் தடையை நீக்க முடிவு எடுக்கப்பட்டது. "ஜென் Z இளைஞர்களின் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக" இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தகவல் தொடர்பு அமைச்சர் பிரித்வி சுப்பா குருங் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. இரண்டு அமைச்சர்கள் தற்போது வரை ராஜினாமா செய்துள்ளனர். தலைநகருக்கு வெளியே நடைபெற்ற போராட்டங்களிலும் ஏற்பட்ட மோதல்களில் 100-க்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். பட மூலாதாரம், Getty Images நேபாளத்தில் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடக தளங்களை லட்சக்கணக்கானோர் பயன்படுத்துகின்றனர். பொழுதுபோக்கு, செய்தி மற்றும் வணிகத்திற்காக சமூக ஊடகங்களை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆனால் போலிச் செய்தி, வெறுப்புப் பேச்சு மற்றும் இணைய மோசடிகளை எதிர்கொள்வதற்காக அவற்றை தடை செய்யும் முடிவு எடுக்கப்பட்டது என நேபாள அரசு நியாயப்படுத்தியது. திங்கட்கிழமை போராட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள், இது அரசின் சர்வாதிகார அணுகுமுறை எனக் கூறி எதிர்ப்பு தெரிவித்தனர். பலரும் ஊழலை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பது உள்ளிட்ட பதாகைகளை ஏந்தி வந்தனர். சில போராட்டக்காரர்கள் தற்போது ராஜினாமா செய்துள்ள நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலியின் சொந்த ஊரான டமாகில் உள்ள அவரின் வீட்டின் மீது கற்களை வீசினர். முன்னதாக சபானா புடாதோகி என்கிற போராட்டக்காரர் பிபிசியிடம் பேசியபோது, சமூக ஊடகத் தடை தான் அவர்கள் ஒன்று கூடியதற்கு காரணம் என்றார். "சமூக ஊடகத் தடையை விட அனைவரின் கவனமும் ஊழலின் மீது தான் உள்ளது. எங்களுக்கு எங்களின் நாடு திரும்பவும் வேண்டும். ஊழலை தடுத்து நிறுத்த வேண்டும்." என அவர் தெரிவித்தார். நேபாளத்தில் சமீபத்தில் "நெபோ கிட்" என்கிற பிரசாரம் சமூக ஊடகங்களில் வைரலானது. அரசியல்வாதிகளின் வாரிசுகள் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதை சுட்டிக்காட்டியும் அது ஊழலால் தான் எனக் குற்றம்சாட்டியும் இந்தப் பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, போராட்டங்களில் 19 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். திங்கட்கிழமை, காவல்துறை தண்ணீரை பீச்சியும், தடியடி நடத்தியும் போராட்டக்காரர்களைக் கலைக்க முயன்றது. இதன் தொடர்ச்சியாக, ரப்பர் குண்டுகளைக் கொண்டு துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. வன்முறைக்கும் உயிரிழப்புக்கும் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ள கேபி சர்மா ஒலி, அசம்பாவிதங்களுக்கு சுய நலன் சார்ந்த குழுக்கள் ஊடுருவியதே காரணம் எனத் தெரிவித்துள்ளார். போராட்டத்தை விசாரிக்க அரசு குழு அமைக்கும் என்றும் தெரிவித்த ஒலி, பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணமும் காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சையும் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். போராட்டத்தில் காவல்துறையைப் பயன்படுத்தியதற்கு கடுமையான விமர்சனங்கள் எழுந்த நிலையில் உள்துறை அமைச்சர் ரமேஷ் லெகாக் ராஜினாமா செய்துள்ளார். கடந்த வாரம் சமூக ஊடகங்களுக்குத் தடை விதித்த நேபாள அரசு அவற்றை முழுமையாக தடை செய்யவில்லையென்றும் நேபாளம் சட்டத்தின் கீழ் அவற்றை கொண்டு வர மட்டுமே முயற்சிப்பதாகவும் தெரிவித்திருந்தது. பட மூலாதாரம், Getty Images மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா நேபாளத்தில் நடைபெற்று வரும் போராட்டங்களில் வன்முறையால் உயிரிழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் வேளாண் துறை அமைச்சரும் நேபாள காங்கிரஸ் தலைவருமான ராம்நாத் அதிகாரி போராட்டக்காரர்களைக் கட்டுப்படுத்த காவல்துறை பயன்படுத்தப்பட்டதற்கு அதிருப்தி தெரிவித்து பதவியை ராஜினாமா செய்துள்ளார். தனது ராஜினாமாவை பேஸ்புக் மூலமாக அறிவித்துள்ளார். பிரதமரைச் சந்திக்க முடியாததால் தனது ராஜினாமா சமூக ஊடகம் மூலம் அறிவித்ததாக பிபிசி நியூஸ் நேபாளி சேவையிடம் அவர் தெரிவித்துள்ளார். தனது பேஸ்புக் பதிவில் நேபாளம் சர்வாதிகாரத்தை நோக்கி நகர்வதாகக் கூறியுள்ளார் ராம்நாத், "கேள்வி கேட்பதும் அமைதியான முறையில் போராடுவதும் குடிமக்களின் அடிப்படை உரிமை, ஒரு ஜனநாயகத்தில் அதனை அங்கீகரிக்காமல் அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒடுக்குவது எனக்கு அதிர்ச்சியளிக்கிறது. பரவலான அடக்குமுறை, கொலைகள் மற்றும் அதிகாரத்தைப் பயன்படுத்துவதன் மூலம் நாம் ஜனநாயகத்திலிருந்து சர்வாதிகாரத்தை நோக்கி நகர்கிறோம்." என்றுள்ளார் மேலும் அவர் தனது பதிவில், "இந்த நாட்டை கட்டமைக்க உதவியிருக்க வேண்டிய ஒரு தலைமுறையை போரைப் போல எப்படி அணுக முடியும்? இந்த கேள்விகளுக்கு பதில் காணாமல் அதிகாரத்தில் இருப்பது எனக்கு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை. எனது மனசாட்சி என்னை எச்சரிக்கிறது. இளம் குழந்தைகள் ஒடுக்கப்பட்டு கொல்லப்பட்ட பிறகு தேசமே கவலையில் ஆழ்ந்துள்ளபோது அரசாங்கத்தில் தொடர்வது நான் என் கட்சியில் பெற்றுள்ள தார்மீக உணர்வு மற்றும் கல்விக்கு எதிரானது. எனது அதிகாரப்பூர்வ கடமைகளில் தொடர்வது எனக்கு குற்றவுணர்ச்சியைத் தருகிறது" என்றார். மறுபுறம் நேபாள காங்கிரஸ் கட்சியின் தலைவர் மற்றும் முன்னாள் பிரதமர் ஷேர் பகதூர் தூபாவின் சொந்த மாவட்டத்திலும் போராட்டங்கள் தொடங்கியுள்ளன. அவரின் வீட்டை சூரையாடிய போராடிய போராட்டக்காரர்கள் அவரின் வீட்டை தீக்கிரையாக்கினர். படக்குறிப்பு, போராட்டக்காரர்கள் முன்னாள் பிரதமரின் வீட்டிற்கு தீ வைத்தனர். நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் எதிரொலியாக, கே.பி.சர்மா ஒலி தலைமையிலான அமைச்சரவையின் பல அமைச்சர்கள் அடுத்தடுத்து பதவிகளை ராஜினாமா செய்யத் தொடங்கியுள்ளனர். இதுவரை மூன்று மூத்த அமைச்சர்கள் ராஜினாமா செய்துள்ளனர். சிறிது நேரத்திற்கு முன்பு, குடிநீர் அமைச்சர் பிரதீப் யாதவ் தனது பதவியை ராஜினாமா செய்தார். "அன்புள்ள இளம் சகோதர சகோதரிகளே, நீங்கள்தான் எனது முதல் கூட்டாளிகள் மற்றும் எனது ஆற்றல் மற்றும் உற்சாகத்தின் ஆதாரம். நேற்று தொடங்கிய போராட்டத்திற்கு ஆதரவாகவும், அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவும், நான் அமைச்சர் பதவியை ராஜினாமா செய்கிறேன்." என்று அவர் கூறியுள்ளார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ce84n39w7wwo
-
ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் - 2025
ஆசியக் கிண்ணம் 2025 : போட்டி நடுவர்கள் குறித்த அட்டவணை அறிவிப்பு! Published By: Digital Desk 1 09 Sep, 2025 | 09:36 AM ஆசியக் கிண்ணம் 2025 போட்டிக்கான நடுவர்கள் தொடர்பான அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டுக்கான ஆசிய கிண்ணப்போட்டி, செவ்வாய்க்கிழமை ( செப்டெம்பர் 9) ஆரம்பமாகவுள்ள நிலையில், குறித்த போட்டியின் நடுவர்களாக ரிச்சி ரிச்சர்ட்சன் மற்றும் ஆண்டி பைக்ராஃப்ட் நியமிக்கப்பட்டுள்ளனர். அபுதாபியில் உள்ள சயீத் கிரிக்கெட் மைதானத்தில் குறித்த போட்டி இன்று ஆரம்பமாகவுள்ளது. குழு டீ உள்ளடங்கியுள்ள ஆப்கானிஸ்தான், ஹொங்கொங் மற்றும் சீனா ஆகிய அணிகளுக்கிடையேயான போட்டியுடன் குறித்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. இன்று (செப்டம்பர் 9 ) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை குறித்த போட்டிகள் நடைபெறும் என ஆசிய கிரிக்கெட் பேரவை தெரிவித்துள்ளது. 12 போட்டிகள் கொண்ட குழு நிலைக்கான போட்டி நடுவர்களின் நியமனங்களை ஆசிய கிரிக்கெட் பேரவை உறுதிப்படுத்தியுள்ளது. போட்டி நடுவர்களின் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. நடுவர்களாக * அஹ்மத் பக்டீன் (ஆப்கானிஸ்தான்) * ஆசிப் யாகூப் (பாகிஸ்தான்) * ஃபைசல் அப்ரிடி (பாகிஸ்தான்) * காஸி சோஹெல் (பங்களாதேஷ்) * இஜாத்துல்லா சஃபி (ஆப்கானிஸ்தான்) * மசுதூர் ரஹ்மான் (பங்களாதேஷ்) * ரவீந்திர விமலசிரி (இலங்கை) * ரோஹன் பண்டிட் (இந்தியா) * ருசிரா பல்லியகுருகே (இலங்கை) * வீரேந்தர் ஷர்மா (இந்தியா) ஆசிய கிண்ணம் 2025 - குழு நிலைக்கான போட்டி அதிகாரிகளின் நியமனங்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, செவ்வாய், 2025 செப்டம்பர் 9 ஆம் திகதி - ஆப்கானிஸ்தான் எதிர் ஹொங்கொங் சீனா ஆகிய அணிகள் மோதுகின்ற போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணி இடம்பெவுள்ளது. கள நடுவர்கள்: ஆசிப் யாகூப் மற்றும் வீரேந்திர சர்மா. தொலைக்காட்சி நடுவர்: பைசல் அப்ரிடி நான்காவது நடுவர்: ரவீந்திர விமலசிறி போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் புதன், 2025 செப்டம்பர் 10ஆம் திகதி - இந்தியா எதிர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் மோதுகின்ற போட்டி, துபாயயில் மாலை 6:30 மணி இடம்பெவுள்ளது. கள நடுவர்கள்: காசி சோஹெல் மற்றும் இசதுல்லா சஃபி தொலைக்காட்சி நடுவர் : ருச்சிர பல்லியகுருகே நான்காவது நடுவர் : மசுதூர் ரஹ்மான் போட்டி நடுவர் : ஆண்டி பைக்ராஃப்ட் வியாழக்கிழமை, 2025 செப்டம்பர் 11 ஆம் திகதி - பங்களாதேஷ் எதிர் ஹொங்காங் சீனா மோதுகின்ற போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணி இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: ரவீந்திர விமலசிரி மற்றும் ரோஹன் பண்டிட் தொலைக்காட்சி நடுவர்: ஆசிப் யாகூப் நான்காவது நடுவர்: பைசல் அஃப்ரிடி போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் வெள்ளிக்கிழமை, 2025 செப்டம்பர் 12ஆம் திகதி - பாகிஸ்தான் எதிர் ஓமான் ஆகிய அணிகள் மோதும் போட்டி, துபாயில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: மசுதூர் ரஹ்மான் மற்றும் அஹ்மத் பக்தீன் தொலைக்காட்சி நடுவர்: காசி சோஹெல், நான்காவது நடுவர்: ருசிர பள்ளியகுருகே போட்டி நடுவர்: ஆண்டி பைகிராஃப்ட் சனிக்கிழமை, 2025 செப்டம்பர் 13ஆம் திகதி - பங்களாதேஷ் எதிர் இலங்கை ஆகிய அணிகள் மோதும் போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: ரோஹன் பண்டிட் மற்றும் பைசல் அப்ரிடி தொலைக்காட்சி நடுவர்: வீரேந்திர சர்மா நான்காவது நடுவர்: ஆசிப் யாகூப் போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் ஞாயிறு, 2025 செப்டம்பர் 14ஆம் திகதி - இந்தியா எதிர் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் போட்டி, துபாயில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: ருச்சிர பள்ளியகுருகே மற்றும் மசுதுர் ரஹ்மான் தொலைக்காட்சி நடுவர்: அஹ்மத் பக்தீன் நான்காவது நடுவர்: இசதுல்லா சஃபி போட்டி நடுவர்: ஆண்டி பைகிராஃப்ட் திங்கள், 2025 செப்டம்பர் 15 ஆம் திகதி - ஐக்கிய அரபு இராச்சியம் எதிர் ஓமான் ஆகிய அணிகள் மோதும் போட்டி, அபுதாபியில் மாலை 4:00 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: வீரேந்திர சர்மா மற்றும் ஆசிப் யாகூப் தொலைக்காட்சி நடுவர்: ரவீந்திரன் விமலசிறி நான்காவது நடுவர்: ரோஹன் பண்டிட் போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் திங்கள், 2025 செப்டம்பர் 15ஆம் திகதி - இலங்கை எதிர் ஹொங்காங் சீனா ஆகிய அணிகள் மோதும் போட்டி, துபாயில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: காசி சோஹெல் மற்றும் இசதுல்லா சஃபி தொலைக்காட்சி நடுவர்: மசுதூர் ரஹ்மான் நான்காவது நடுவர்: அஹ்மத் பக்தீன் போட்டி நடுவர்: ஆண்டி பைக்ராஃப்ட் செவ்வாய், 2025 செப்டம்பர் 16ஆம் திகதி - பங்களாதேஷ் எதிர் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: பைசல் அப்ரிடி மற்றும் ரவீந்திர விமலசிறி தொலைக்காட்சி நடுவர்: ரோஹன் பண்டிட் நான்காவது நடுவர்: வீரேந்தர் சர்மா போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் புதன், 2025 செப்டம்பர் 17 ஆம் திகதி - பாகிஸ்தான் எதிர் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகள் மோதும் போட்டி, துபாயில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: அஹ்மத் பக்தீன் மற்றும் ருச்சிர பல்லியகுருகே தொலைக்காட்சி நடுவர்: இசதுல்லா சஃபி நான்காவது நடுவர்: காசி சோஹல் போட்டி நடுவர்: ஆண்டி பைகிராஃப்ட் வியாழன், 2025 செப்டம்பர் 18 ஆம் திகதி - இலங்கை எதிர் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: ஆசிப் யாகூப் மற்றும் வீரேந்திர சர்மா தொலைக்காட்சி நடுவர்: பைசல் அப்ரிடி நான்காவது நடுவர்: ரோஹன் பண்டிட் போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் வெள்ளிக்கிழமை, 2025 செப்டம்பர் 19ஆம் திகதி - இந்தியா எதிர் ஓமன் ஆகிய அணிகள் மோதும் போட்டி, அபுதாபியில் மாலை 6:30 மணிக்கு இடம்பெறவுள்ளது. கள நடுவர்கள்: ரவீந்திர விமலசிரி மற்றும் பைசல் அப்ரிடி தொலைக்காட்சி நடுவர்: ஆசிப் யாகூப் நான்காவது நடுவர்: வீரேந்திர சர்மா போட்டி நடுவர்: ரிச்சி ரிச்சர்ட்சன் https://www.virakesari.lk/article/224544
-
சமூகவலைத்தள முடக்கத்துக்கு எதிராக நேபாளத்தில் வெடித்த 'Gen Z' இளைஞர்கள் போராட்டம்
நேபாளத்தில் சமூக ஊடகத் தடை நீக்கம் Published By: Digital Desk 1 09 Sep, 2025 | 09:27 AM நேபாளத்தில் போராட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே ஏற்பட்ட மோதல்களால், சுமார் 19 பேர் கொல்லப்பட்டதையடுத்து, சமூக ஊடகத் தடை நீக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவில் உள்ள பாராளுமன்றக் கட்டிடத்திற்குள் நேற்றையதினம் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் நுழைந்து, பேஸ்புக் மற்றும் யூடியூப் உள்ளிட்ட 26 சமூக ஊடகத் தளங்கள் மீதான தடையை நீக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்தனர். இதேவேளை, அங்கு இடம்பெறும் ஊழலை எதிர்த்துப் போராடவும் அழைப்பு விடுத்துள்ளனர். ஜெனரல் இசட்டின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்வதற்காக நேற்று இரவு அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பின்னர் தடையை நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, அந்த நாட்டு தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சர் பிருத்வி சுப்பா குருங் கருத்து வெளியிட்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. நேபாளத்தின் தலைநகரிலும், தலைநகருக்கு வெளியிலுள்ள நகரங்களிலும் இடம்பெற்ற போராட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். https://www.virakesari.lk/article/224590
-
யாழில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் கிழ் குளங்கள் தூர்வார நடவடிக்கை
Published By: Digital Desk 1 09 Sep, 2025 | 12:32 PM யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் ஒரு பகுதியாக குளங்கள் தூர்வாரப்படவேண்டும் : அதற்கான பொறிமுறை உருவாக்குவது தொடர்பில் கலந்துரையாடல் இடம்பெற்றது. யாழ். மாவட்டத்திலுள்ள குளங்களை தொடர்ச்சியாக தூர்வாருவது தொடர்பான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும், பரீட்சார்த்தமாக தூர்வாருதலை உடனடியாக நடைமுறைப்படுத்தவது தொடர்பாகவும் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் திங்கட்கிழமை(நேற்று) நடைபெற்றது. யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் ஒரு பகுதியாக குளங்கள் தூர்வாரப்படவேண்டும் என்றும் அதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராய்வதே கலந்துரையாடலின் நோக்கம் என குறிப்பிட்ட ஆளுநர் அது தொடர்பில் துறைசார் அதிகாரிகளிடமிருந்து ஆலோசனைகளை எதிர்பார்ப்பதாக தெரிவித்தார் . குளத்தை தூர்வாருதல் தொடர்பான பொறிமுறை நீண்ட காலத்தைக் கொண்டதாகக் காணப்படுவதாகவும், இதனால் தன்னார்வலர்கள் இந்த முயற்சியில் பங்கெடுக்க வந்தாலும் அவர்களும் சலிப்படைவதாகவும், கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது. அத்துடன் அரசாங்க நிதியில்லாமல் இதைச் செயற்படுத்துவதற்கு பல்வேறு நிதி வழங்கும் தரப்புக்கள் தயாராக இருந்தாலும் அனுமதிக்கான பொறிமுறை சிக்கலுக்குரியதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. மேலும், இன்னும் சில வாரங்களில் மழை காலம் ஆரம்பித்தால் இந்தப் பணிகளை தொடர முடியாது என்றும், ஏற்கனவே அனுமதி கோரப்பட்ட கந்தரோடை குளத்தையாவது தூர்வாருவதற்கான அனுமதிகள் உடனே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது. கந்தரோடை குளத்தை தூர்வாருவதற்கான அனுமதி வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களத்தால் உடனடியாக வழங்கப்படும் என்றும், அகழப்படும் மண்ணை கொண்டு செல்வதற்கான அனுமதி பிரதேச செயலாளரால் வழங்கப்படும் எனவும் இந்தப் பணியை விரைவாக ஆரம்பித்து குளங்கள் தூர்வாருதல் தொடர்பில் தன்னார்வலர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது. யாழ். மாவட்டத்தில் கமநல சேவைகள் திணைக்களத்தின் கீழேயே அதிகளவு குளங்கள் உள்ள நிலையில் அவற்றின் கீழ் தூர்வாருவதற்கு உடனடியாக அனுமதிகள் வழங்கக் கூடியவற்றுக்கு அனுமதி வழங்குமாறும் ஏனையவற்றை தூர்வாருவதற்கான முன்னுரிமைப் பட்டியலை தயாரித்து உரிய நியாயப்படுத்தலுடன் தலைமையகத்துக்கு அனுப்புமாறும் கலந்துரையாடலின் போது ஆலோசனை வழங்கப்பட்டது. மேலும் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரின் கீழ், குளங்களை தூர்வாருதலுடன் தொடர்புடைய சகல திணைக்களங்களையும் ஒருங்கிணைத்து கலந்துரையாடலை நடத்தி இதற்கான நிரந்தரப் பொறிமுறையை உருவாக்குமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார். இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், கமநலசேவைகள் உதவி ஆணையாளர், பிரதி விவசாயப் பணிப்பாளர், நீர்பாசனப் பொறியியலாளர்கள், குளங்களைத் தூர்வாரும் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/224612
-
சமூக வலைத்தளங்களில் வீடியோ பரவியதால் மனமுடைந்து உயிரை மாய்த்த நபர் : விசாரணையில் குற்றமற்றவரென வெளியான தகவல் !
Published By: Digital Desk 3 09 Sep, 2025 | 12:46 PM கொழும்பில் இருந்து வெலிமடை நோக்கி பஸ்ஸில் பயணித்த ரமச்சந்திரன் புவனேஸ்வரன் என்ற முரளி (34), நித்திரையால் தான் செல்ல வேண்டிய இடத்தைத் தாண்டி, ரம்பொட பகுதியில் அதிகாலை 2 மணியளவில் இறங்கியுள்ளார். உறவினர் ஒருவரைத் தேடிச் சென்றபோது, தவறுதலாக ஒரு வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். இதைக் கண்ட வீட்டின் உரிமையாளர்கள், குறித்த நபரை திருடன் என நினைத்து சத்தம் போட்டுள்ளனர். சத்தம் கேட்டு ஓடிவந்த கிராம மக்கள், அவரை கடுமையாகத் தாக்கி, மரத்தில் கட்டிவைத்துள்ளனர். மேலும், இந்தச் சம்பவத்தை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றியுள்ளனர். பின்னர், கிராம மக்களால் கொத்மலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட முரளியிடம் விசாரணைகள் நடத்தப்பட்டன. விசாரணையில் அவர் குற்றமற்றவர் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து, மருத்துவப் பரிசோதனைக்குப் பின்னர், முரளி பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டு, அவரது உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டார். ஆனால், கிராம மக்கள் அவரைத் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியதால் மனமுடைந்த முரளி, தவறான முடிவெடுத்து தனது உரை மாய்த்துள்ளார். முரளி, புசல்லாவை ரோத்ஸ்சைல்ட் தோட்டத்தில் வசித்துவந்தவர். அவரது பெற்றோர் ஏற்கனவே உயிரிழந்துவிட்ட நிலையில், அவரது ஒரே சகோதரி வேறு ஒரு பகுதியில் வசித்து வருகிறார். இந்தச் சம்பவம் குறித்து கொத்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வஜிரா ரத்நாயக்க தலைமையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/224617
-
புதையல் தோண்டுதல்; கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!
09 Sep, 2025 | 10:54 AM கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட 9 பேரை செப்டெம்பர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது. கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி உட்பட 8 பேர் இணைந்து அநுராதபுரம், சிராவஸ்திபுர, திம்பிரிகடவல பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து புதையல் தோண்டிய சம்பவத்துக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி உட்பட 8 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் ஆகஸ்ட் 25 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 பேரும் நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224607
-
இன்று முதல் கடுமையாகும் போக்குவரத்து சட்டம்
நுவரெலியாவில் தேர் போன்று அலங்கரித்து வரும் பஸ்களால் ஆபத்து Published By: Digital Desk 3 09 Sep, 2025 | 10:57 AM நுவரெலியாவில் அதிகரிக்கும் போக்குவரத்து விதிமீறல்கள் ஒலி, ஒளி தீவிர பாதிப்பை உண்டாக்குகிறது. சுற்றுலா நிமிர்த்தம் நுவரெலியா வரும் பஸ்கள் போக்குவரத்து விதிமீறல்களால் ஏற்படும் அதிக ஒலி, ஒளி காரணமாக ஏற்படும் பாதிப்புகளைக் உடனடியாக கட்டுப்படுத்த வேண்டும் என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக இரவு நேரங்களில் நுவரெலியா கிரகரி வாவிக் கரையோரம் உள்ளிட்ட சில சுற்றுலா பிரசித்திப்பெற்ற இடங்களில் சுற்றுலா பயணிகள் வருகைத்தரும் பஸ்கள் தற்கால சூழ்நிலைக்கேற்ப நவீன வடிவமைப்பில் தயாரிக்கப்பட்டு விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களைக் கொண்டு பலநிறங்களில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு வருகிறது. அத்துடன் அதிரும் அதிகச் சத்தமான பாடல்களை ஒலிபரப்பபட்டு தங்களுடைய பொழுதுகளை கழிக்கின்றனர். இதில் அதிக ஓசையை எழுப்பக்கூடிய ஒலி எழுப்பிகளை ( ஹோர்ன்கள் Horn) பயன்படுத்தி வருகின்றனர். இது குறித்து பொலிஸாரோ அல்லது போக்குவரத்து விதிமீறல்களை கண்காணிக்கும் அதிகாரிகளோ கண்டுகொள்வதில்லை என பொது மக்கள் குற்றம் சுமத்தப்படுகிறது. இது குறித்து பொது மக்கள் கூறுகையில், நுவரெலியாவிற்கு வரும் பஸ்களில் அதிக வெளிச்சத்தை உமிழும் திறன் வாய்ந்த பரவலாக ஒளி பரப்பும் நவீன (எல்.இ.டி) மின்குமிழ்கள் பொருத்தப்பட்டுள்ளன. நுவரெலியா நகரின் மையப் பகுதிகளிலும் அதிக எண்ணிக்கையிலான விளக்குகளுடன் ஒளியை பரப்பிச் செல்லும் இவ்வாறான பஸ்களால் எதிரே வரும் வாகன சாரதிகளின் கண்களுக்கு கூச்சத்தை ஏற்படுத்துகின்றன. இதேபோல் பயன்படுத்தப்படும் அதிக ஓசையை எழுப்பக்கூடிய ஒலி எழுப்பிகள் ( ஹோர்ன்கள் Horn) மிருகங்களைப் போல் ஒலி எழுப்புவதாகவும் இருக்கின்றன. பிரதான வீதிகளில் திடீரென ஒலிக்கப்படும் இந்த வகை ஒலி எழுப்பிகள் குழந்தைகள் மட்டுமின்றி பெரியவர்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்துகின்றன. இவ்வாறான செயற்பாடு காரணமாக ஏனைய வாகன சாரதிகள் மட்டுமின்றி, பாதசாரிகளுக்கும் உளவியல் ரீதியான பாதிப்பை ஏற்படுத்துகிறது . முதலில் அதிக ஒலி எழுப்பும் ஹோர்ன்களை பயன்படுத்துவதால் பொதுமக்களுக்கு ஏற்படும் இடையூறு குறித்து பஸ் சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் அறிவுறுத்த நடவடிக்கை வேண்டும். மேலும் நுவரெலியாவிற்கு வருகைத்தரும் பஸ்களால் அதிக ஒலியானது நம்மை அறியாமலே நம் அரோக்கியத்தை பாதிக்கிறது. அதேபோல் மற்றைய உயிரினங்களுக்கும் தீவிர பாதிப்பை உண்டாக்குகிறது. மேலும் இவ்வாறான அதிக ஒலி செவிகளில் துன்புறுத்தக் கூடிய இரைச்சலாக மாறுகிறது. இது காதுகளில் ஏற்படும் நோய்களுக்கு அதிக வலியை உண்டாக்கும் அனுபவத்தை அதிகரிக்கிறது. தற்போது திரையரங்குகளை விஞ்சும் வகையில் நவீன சவுண்ட் சிஸ்டம், ஊபர் ஸ்பீக்கர்கள் மூலம் பாடல்கள் ஒலிபரப்பபட்டு தங்களுடைய பொழுதுகளை கழிக்கின்றனர். இதில் இவர்கள் நள்ளிரவு வரை ஒரே இடத்தில் பஸ்களை நிறுத்தி தங்களுடைய தேவைகளை பூர்த்தி செய்கின்றன ,. இதனால் நாங்கள் நகர மத்தியில் வாழ்வதற்கு ஏற்றதாக இல்லை. வீடுகளில் இரவில் கண்ணயர முயற்சிப்பவர்கள் திடீரென அதிரும் சத்தத்தால் அதிர்ச்சியடைகின்றனர். பெரியவர்களின் நிலை இப்படி என்றால் குழந்தைகளின் நிலையை விவரிக்க முடியாததாக உள்ளது. பஸ்ஸில் எழும் அதிக சத்தத்தால் வீறிட்டு அழும் கைக் குழந்தைகளைச் சமாதானப்படுத்த முடியாமல் பெற்றோர் தவிக்கும் நிலை தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக ஒருவர் கேட்கும் சத்தம் எப்போது அவர்களின் செவிகளில் துன்புறுத்தக் கூடிய இரைச்சலாக மாறுகிறதோ அப்போது அதை ஒலி மாசு என்று வைத்தியர்கள் மற்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றன. இதனையே நாங்கள் தினமும் அனுபவித்து வருகிறோம். இவ்வாறு அதிக சத்தங்களை கேட்கும்போது முதலில் எங்களுக்கு செவி பாதிப்பு பிரச்சினைகளை சந்திக்கின்றோம். மேலும், ஒலி மாசினால் உயர் இரத்த அழுத்தம், தலைவலி, உளவியல் பிரச்சனைகளான மன அழுத்தம், கவலை, தூக்கமின்மை, நினைவாற்றல் குறைதல் போன்ற பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது . இதிலும் கடந்த காலங்களில் பாட்டுகள் மட்டும் ஒலிக்க விடப்பட்ட நிலையிலிருந்து, அடுத்த வளர்ச்சியாக அதிக தொழில்நுட்பத்தினைக்கொண்ட புதிய Smart தொலைக்காட்சிகள் மூலம் திரைப்படங்கள் மற்றும் வீடியோ பாடல்கள் ஒளிபரப்ப தொடங்கியதும் பொது மக்களின் சோதனை பல மடங்காக மாறியுள்ளது. இதில் ஆபாசக் காட்சிகள் மிகுந்த ஒளிபரப்பப்படும்போது, படங்கள் ,பாடல்களை அருகில் வசிக்கும் குடும்பதினர் தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். நுவரெலியாவிற்கு வருகை தரும் விசித்திரமான பஸ்களால் ஏற்படும் ஒலி மாசினால் மனிதர்கள் மட்டும் பாதிக்கப்படுவதில்லை. அது ஒட்டுமொத்த இயற்கை சூழலையும் பாதிக்கிறது. இங்குதான் நாம் இதன் தீவிரத்தை உணர வேண்டும். ஒலி மாசு மனிதர்களைவிட அதிகளவில் பறவைகள், உயிரினங்கள், விலங்குகளுக்குதான் அதிக பாதிப்பை ஏற்படுத்துவதாக ஆய்வுகள் கூறுகின்றன. இதனால் பஸ்களில் சந்திக்கும் இந்தக் கொடுமைக்கு முற்றுப்புள்ளி வைப்பது யார் எனத் தெரியாமல் நாள்தோறும் வேதனையைச் சந்திக்கும் பொது மக்களுக்கு நல்வழி ஏற்படுத்த வேண்டும் என்பதே எங்களின் பாரிய எதிர்பார்ப்பாக உள்ளது எனத் தெரிவிக்கின்றனர். எனவே பஸ்களில் விபத்துகள் ஏற்படக்கூடிய வகையில் பொருத்தப்பட்டுள்ள அபாயகரமான மேலதிக உதிரிபாகங்களை அகற்றி முன் மற்றும் பின் பக்கங்களில் பொருத்தக்கூடிய சமிஞ்சை மின்விளக்குகளுக்கு மேலதிகமாக பொருத்தப்பட்டுள்ள மின்குமிழ்களை அகற்றவும் அதிகம் சத்தம் கூடிய ஒலி அமைப்புக்களை குறைத்துக்கொள்ளவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் நுவரெலியாவிற்கு புதிதாக வருகின்ற பஸ்களால் அவதியுறும் பொதுமக்களின் எதிர்பார்ப்பாகும். https://www.virakesari.lk/article/224605