Everything posted by கிருபன்
-
இலங்கையின் இறைமை, பாதுகாப்புக்கு அமெரிக்கா முழு ஆதரவு
இலங்கையின் இறைமை, பாதுகாப்புக்கு அமெரிக்கா முழு ஆதரவு இலங்கையின் இறைமை மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அமெரிக்காவின் முழுமையான ஆதரவு கிடைக்குமென ஐக்கிய அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் (Jake Sullivan) உறுதியளித்துள்ளார். தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் சாகல ரத்நாயக்கவுடன் இன்று (10) நடந்த தொலைபேசிக் கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரு நாடுகளுக்குமிடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பல முக்கிய விடயங்கள் இங்கு கலந்துரையாடப்பட்டதுடன். விரைவான பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கான இலங்கையின் தொடர்ச்சியான முயற்சிகளைப் பாராட்டினார். அத்தோடு, சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டத்தின் மூலம் சுட்டிக்காட்டப்பட்ட பொது நிதி, பணம் மற்றும் நிர்வாகம் ஆகிய துறைகளில் சீர்திருத்தங்களை மேற்கொள்வதன் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார். எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் வாய்ப்புகள் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டது. பிராந்தியத்தில் சமாதானம் மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக இலங்கையுடன் அர்பணிப்பாக பணியாற்றுவதாகவும் சலிவன் தெரிவித்தார். இந்த கலந்துரையாடல் ஐக்கிய அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான உறவுகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதோடு, இந்து-பசுபிக் வலயத்தின் ஸ்திரத்தன்மை மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவதற்கான இருநாடுகளினதும் அர்பணிப்பையும் வலியுறுத்துகிறது. http://www.samakalam.com/இலங்கையின்-இறைமை-பாதுகா/
-
'கடவுளின் துகள்' விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் காலமானார்... மனித வரலாற்றில் முக்கியமானவர் - ஏன்?
Particle Physics இன் அடிப்படையை புரியவேண்டுமென்றால் இந்தக் காணொளியை சில தடவை திரும்பத் திரும்பப் பாருங்கள். ஓரளவு புரிந்தாலே போதும்.
-
19 வயதுக்குட்பட்ட இங்கிலாந்து பயிற்சி குழாத்தில் தமிழ் யுவதி அமுருதா
நேற்றைய போட்டியில் அம்மு நன்றாக விளையாடினார். ஆனால் இங்கிலாந்து படுதோல்வி. Result SL-WMN U19 vs ENG-WMN U19, 3rd Match Sri Lanka Tri-Nation Women's Under-19s ODI Tournament SL-W 226 ENG-W 118 SL-WMN U19 won by 108 runs Click here to view more @espncricinfo : https://www.espncricinfo.com/series/women-s-under-19s-tri-nation-in-sri-lanka-2023-24-1427797/sri-lanka-women-under-19s-vs-england-women-under-19s-3rd-match-1427800/full-scorecard
-
மோடியும் கச்சதீவும்
மோடியும் கச்சதீவும் April 9, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்தியா கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்த பிறகு கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் அது தொடர்பாக சர்ச்சை கிளப்பிய முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. அதுவும் பத்து வருடங்களாக பதவியில் இருந்துவரும் அவர் இதுகாலவரை எதுவும் பேசாமல் இருந்துவிட்டு தற்போது பிரச்சினையை கிளப்புவது கச்சதீவை மீண்டும் இந்தியா வசமாக்குவதற்காக அல்ல, எதிர்வரும் லோக்சபா தேர்தலில் தனது பாரதிய ஜனதா கட்சிக்கு தமிழ்நாட்டு மக்களின் ஆதரவை பெறுலாம் என்ற எதிர்பார்ப்பிலேயே என்பதை புரிந்துகொள்வதற்கு அரசியல் ஞானம் தேவையில்லை. வடஇந்தியாவில் அமோகமான மக்கள் செல்வாக்குடைய தலைவராக இருந்துவரும் மோடி மூன்றாவது தடவையாகவும் பிரதமராக வருவார் என்று உறுதியாக நம்பப்படுகிறது. அவ்வாறு நடந்தால் ஜவஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ச்சியாக மூன்று தடவைகள் பிரதமராக பதவிக்கு வருபவர் என்ற பெருமையை அவர் தனதாக்கிக்கொள்வார். ஆனால், அவரின் பாரதிய ஜனதா தென்னிந்திய மாநிலங்களில் குறிப்பாக, சுமார் ஏழு தசாப்தங்களாக மாறி மாறி இரு பெரிய திராவிட இயக்கக் கட்சிகளின் ஆட்சியில் இருந்துவரும் தமிழ்நாட்டில் கணக்கில் எடுக்கத்தக்க ஆதரவைப் பெறமுடியாமல் இருக்கிறது. இது அவருக்கு ஒரு பெரும் சவாலாக இருக்கிறது. நீண்டகாலமாக கூட்டணி சேர்ந்து இயங்கிவரும் திராவிட முன்னேற்ற கழகத்தையும் காங்கிரஸ் கட்சியையும் தேர்தல் பிரசாரங்களில் ஒருங்கே தாக்குவதற்கு மோடியும் கட்சியும் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் உணர்ச்சியைக் கிளறக்கூடிய கச்சதீவு பிரச்சினையை பயன்படுத்த முனைந்து நிற்பதே தற்போதைய சர்ச்சைக்கு காரணமாகும். எதிர்க்கட்சியை தாக்குவதற்கு மோடி கச்சதீவு பிரச்சினையை பயன்படுத்துவது இதுதான் முதற்தடவை அல்ல. கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் பாராளுமன்றத்தில் நிகழ்த்திய உரையொன்றில் அவர் “தமிழ்நாட்டுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள கச்சதீவை இன்னொரு நாட்டுக்கு கொடுத்து விட்டார்கள். இந்திரா காந்தியின் தலைமைத்துவத்தின் கீழ்தான் அது நடந்தது….. அந்தத் தீவு பாரதமாதாவின் ஒரு பகுதியாக அல்லவா இருந்தது? ” என்று குறிப்பிட்டார். அவரது அந்தப் பேச்சு தற்போது மூண்டிருப்பதைப் போன்று ஊடகங்களின் அதீத கவனிப்புடன் கூடியதாக பெரும் சர்ச்சையை உருவாக்கவில்லை. லோக்சபா தேர்தல் பிரசாரங்களின் சூடு இயல்பாகவே தற்போதைய சர்ச்சை மீது கவனத்தை பெரிதும் திருப்பியிருக்கிறது. கச்சதீவை முன்னாள் இந்திய பிரதமர் இந்திரா காந்தியின் காங்கிரஸ் அரசாங்கம் இலங்கைக்கு கையளிக்க எடுத்த தீர்மானம் தொடர்பில் விபரங்களை அறிவதற்கு பாரதிய ஜனதாவின் தமிழ்நாடு தலைவர் குப்புசாமி அண்ணாமலை தகவலைப் பெறுவதற்கான உரிமையின்( Right to Information) அடிப்படையில் வெளியுறவு அமைச்சை நாடியது ஒன்று தற்செயலானது அல்ல. “இந்திய அரசாங்கம் 1974 ஆம் ஆண்டில் கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தது. அந்தத் தீவு பாரதத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்தளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை தமிழ்நாட்டுக்கு வெளியில் இருப்பவர்களும் விளங்கிக் கொள்வார்கள். ஆயிரக்கக்கான வருடங்களாக தமிழ்நாட்டு மீனவர்கள் எந்தவித இடையூறும் இன்றி மீன்பிடிக்கும் உரிமையைக் கொண்டிருந்த கச்சதீவு தமிழ்நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும். அது சூட்சுமமான முறையில் இலங்கைக்கு விட்டுக் கொடுக்கப்பட்டது. ஏன் அவ்வாறு நடந்தது? அதற்கு ஏதாவது தீர்வு இருக்கிறதா? ஆர்வமிகுதி காரணமாக அந்த காலப்பகுதியின் முக்கியமான ஆவணங்களை தந்துதவுமாறு நான் வெளியுறவு அமைச்சை அணுகினேன்” என்று அண்ணாமலை கூறினார். பாரதிய ஜனதா உயர்மட்டத்தின் முழுமையான அனுசரணையுடன்தான் அண்ணாமலை தகவலைக் கோரினார் என்பதில் சந்தேகமில்லை. அத்துடன் வெளியுறவு அமைச்சிடம் இருந்து ஆவணங்கள் கிடைக்கப் பெற்றதும் அவர் தனக்கு நெருக்கமான ஊடகங்களுடன் அவற்றைப் பகிர்ந்துகொண்டார். காங்கிரஸ் கட்சியின் பொதுத் தொடர்பாடலுக்கு பொறுப்பான பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் மக்களின் கவனத்தை திசைதிருப்புவதற்காகவே இவ்வாறு பாரதிய ஜனதா செய்திருக்கிறது என்று குற்றஞ்சாட்டினார். “தமிழ்நாட்டில் மக்களின் கவனத்தை திசைதிருப்பும் ஒரு தந்திரோபாயமாகவே பாரதிய ஜனதா தகவல் அறியும் உரிமையைப் பயன்படுத்தி வெளியுறவு அமைச்சிடம் கச்சதீவு விவகாரம் தொடர்பில் விபரங்களைப் பெற விண்ணப்பித்தது. மக்கள் எதிர்நோக்கும் எரியும் பிரச்சினைகள் தொடர்பில் தகவல்களை அறிவதற்கு செய்யப்பட்டிருக்கும் இலட்சக்கணக்கான விண்ணப்பங்கள் அலட்சியம் செய்யப்பட்டு அல்லது நிராகரிக்கப்பட்டிருக்கும் நிலையில் இந்த விண்ணப்பம் அதிமுக்கியத்துவம் கொடுத்துக் கவனிக்கப்பட்டு பதில் வழங்கப்பட்டிருக்கிறது. பாரதிய ஜனதாவின் தமிழ்நாட்டு தலைவர் தனக்கு கிடைத்த பதிலை மிகவும் வசதியாகவே தனக்கு நெருக்கமான ஊடகங்களுடன் பகிர்ந்துகொண்டார். பிரதமர் மோடி உடனடியாகவே அதைப் பெரிதுபடுத்திச் சர்ச்சையாக்கிவிட்டார். இது கிரிக்கெட் விளையாட்டில் இடம்பெறும் ஆட்டநிர்ணயச்சதி (Match fixing ) போன்று இருக்கிறது ” என்று ரமேஷ் கூறினார். அண்ணாமலைக்கு வெளியுறவு அமைச்சிடம் இருந்து கிடைத்த ஆவணங்கள் தொடர்பில் கடந்தவாரம் ரைம்ஸ் ஒஃப் இந்தியா பத்திரிகையில் வெளியான விரிவான செய்தியை அடுத்தே பிரதமர் மோடி முதலில் ‘ எக்ஸ் ‘ சமூக வலைத்தளத்தில் பதிவைச் செய்தார். இந்திரா காந்தி மக்களின் உணர்வுகளை மதிக்காமல் கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்தார்; இலங்கையுடன் இந்திய அரசாங்கம் அன்று நடத்திய பேச்சுவார்த்தைகள் தொடர்பில் தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த கலைஞர் மு. கருணாநிதிக்கு முழுமையாக தெரியப்படுத்தப்பட்டது ; கச்சதீவு இலங்கைக்கு வழங்கப்படுவதை வெளிப்படையாக கருணாநிதி எதிர்த்தாலும், முறைமுகமாக மத்திய அரசாங்கத்துடன் இணங்கிப்போனார் என்பனவே வெளியுறவு அமைச்சு வழங்கிய பதிலைப் பயன்படுத்தி காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்ற கழகத்துக்கு எதிராக செய்யப்படும் பிரசாரத்தின் முக்கிய அம்சங்களாகும். மேலும் காங்கிரஸ் ஒருபோதுமே இந்தியாவின் ஆட்புல ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பில் அக்கறையுடன் செயற்பட்டதில்லை என்ற தனது குற்றச்சாட்டுக்கு ஆதாரமாக பிரதமர் ஜவஹர்லால் நேரு கச்சதீவு குறித்து தெரிவித்த கருத்தையும் மோடி சுட்டிக் காட்டியிருக்கிறார். ” அந்த சிறியதொரு தீவுக்கு எந்த வகையிலும் நான் முக்கியத்துவத்தைக் கொடுக்கவில்லை. அதன் மீதான எமது உரிமைக் கோரிக்கையை கைவிடுவதில் எனக்கு எந்த தயக்கமும் கிடையாது. இந்த விவகாரம் காலவரையறையின்றி நீடிப்பதையும் பாராளுமன்றத்தில் பிரச்சினை கிளப்பப்படுவதையும் நான் விரும்பவில்லை ” என்று 1961 மே 10 நேரு குறிப்பிட்டதாக வெளியுறவு அமைச்சின் பதிலில் தெரிவிக்கப் பட்டிருப்பதாக ரைம்ஸ் ஒஃப் இந்தியா செய்தி கூறுகிறது. ” புதிய தகவல்கள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமல் காங்கிரஸ் எவ்வாறு கச்சதீவை விட்டுக் கொடுத்தது என்பதை வெளிக்காட்டுகின்றன. அவை அதிர்ச்சியை தருகின்றன. திடுக்கிட வைக்கின்றன. இது ஒவ்வொரு இந்தியனையும் ஆத்திரமடையச் செய்திருக்கிறது. காங்கிரஸை நாம் ஒருபோதும் நம்பமுடியாது என்ற மக்களின் எண்ணத்தை இது மீண்டும் உறுதிப்படு்த்துகிறது. இந்தியாவின் ஐக்கியம், ஒருமைப்பாடு மற்றும் நலன்களை பலவீனப்படுத்தும் முறையிலேயே 75 வருடங்களுக்கும் அதிகமாக காங்கிரஸ் செயற்பட்டு வந்திருக்கிறது” என்று மார்ச் 31 மோடி ‘ எக்ஸ் ‘ பதிவில் கூறினார். ஏப்ரில் முதலாம் திகதி செய்த இரண்டாவது பதிவில் ரைம்ஸ் ஒஃப் இந்தியாவின் இரண்டாவது செய்தி ஒன்றைப் பகிர்ந்துகொண்ட இந்திய பிரதமர், ஆரவாரப் பேச்சைத் தவிர திராவிட முன்னேற்றக் கழகம் தமிழ்நாட்டின் நலன்களைப் பாதுகாப்பதற்கு எதையும் செய்யவில்லை. கச்சதீவு விவகாரம் தொடர்பில் வெளியாகும் புதிய விபரங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இரட்டை வேடத்தை முற்றுமுழுதாக அம்பலப்படுத்துகின்றன. காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமும் குடும்பக்கட்சிகள். அவற்றுக்கு தங்களது சொந்த புதல்வர்கள், புதல்விகளின் முனனேற்றத்தில் மாத்திரமே அக்கறை. குடும்பங்களின் மேம்பாட்டுக்கே அவர்கள் முன்னுரிமை கொடுப்பார்கள் என்று குறிப்பிட்டார். அதே தினம் இந்த பிரச்சினை குறித்து புதுடில்லியில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்கள் மகாநாட்டில் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் கச்சதீவு விவகாரத்தில் உண்மையில் என்ன நடந்தது என்பதை அறிவதற்கான உரிமை மக்களுக்கு இருக்கிறது என்றும் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உடன்படிக்கையின் கீழ் கச்சதீவு இந்திய பிராந்தியத்திற்குள் வரப்போவதில்லை என்பதை முதலமைச்சர் கருணாநிதி நன்கு அறிந்திருந்தார் என்றும் குறிப்பிட்டார். ‘ இந்திரா காந்தி அரசாங்கம் இலங்கையுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின் விபரங்கள் அவ்வப்போது கருணாநிதிக்கு கூறப்பட்டுவந்தன. 1973 ஆம் ஆண்டில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் நடைபெற்ற வெளியுறவுச் செயலாளர்கள் மட்டத்திலான பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஒரு வருடம் கழித்து 1974 ஜூனில் முதலமைச்சர் கருணாநிதிக்கு வெளியுறவுச் செயலாளர் கெவால் சிங் கச்சதீவுக்கு உரிமைகோருவதைக் கைவிடுவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானம் குறித்து கூறினார். ‘ அந்த தீர்மானத்தை இரு வருடங்களுக்கு தாமதிக்க முடியாதா என்று கெவால்சிங்கிடம் கேட்ட கருணாநிதி அரசியல் காரணங்களுக்காக உடன்படிக்கைக்கு ஆதரவான தீர்மானம் ஒன்றை தன்னால் எடுக்கமுடியாது. ஆனால் பெரிய எதிர்ப்புகள் கிளம்பாமல் பார்த்துக்கொள்ள முயற்சிப்பதாக கூறினார்’ என்று வெளியுறவு அமைச்சின் ஆவணங்களில் கூறப்பட்டிருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்வது குறித்து புதுடில்லி சிந்திக்கிறதா? இலங்கையுடன் அது தொடர்பில் பேச்சுவார்த்தை நடைபெறுகிறதா ? என்று செய்தியாளர்கள் ஜெய்சங்கரிடம் திரும்பத்திரும்ப கேட்டபோது அவர், ” அதுவல்ல முக்கியமான பிரச்சினை. கச்சதீவு விவகாரம் நீதிமன்றத்தில் விசாரணையில் இருக்கிறது ” என்று கூறி நேரடியாக பதிலளிப்பதைத் தவிர்த்துக்கொண்டார். ஆனால், கச்சதீவு பிரச்சினை அரை நூற்றாண்டுக்கு முன்னர் தீர்த்துவைக்கப்பட்ட ஒன்று என்று கூறப்படுவதை அவர் திட்டவட்டமாக நிராகரித்தார். கச்சதீவை இலங்கைக்கு இந்திரா காந்தி விட்டுக் கொடுத்ததன் விளைவாகவே இந்திய மீனவர்கள் நெருக்கடியை எதிர்நோக்கவேண்டியிருக்கிறது என்பதை வலியுறுத்துவதிலேயே ஜெய்சங்கர் கூடுதல் அக்கறை காட்டினர். “கடந்த இருபது வருடங்களில் 6,184 இந்திய மீனவர்கள் இலங்கையினால் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். 1175 இந்திய மீன்பிடிப் படகுகள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. இதுவே நாம் ஆராய்கின்ற பிரச்சினையின் பின்னணி. காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமும் கச்சதீவு பிரச்சினையில் தங்களுக்கு பொறுப்பு எதுவும் இல்லை என்பது போன்று நடந்து கொள்கின்றன” என்று அவர் கூறினார். பாரதிய ஜனதாவின் பல முக்கிய தலைவர்களும் இந்த பிரச்சினை குறித்து காங்கிரஸ் கட்சியையும் திராவிட முன்னேற்றக் கழகத்யைும் கடுமையாக விமர்சித்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். இது இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளைப் பாதிக்கக்கூடிய ஆபத்தைக் கொண்ட பிரச்சினை என்பதைப் பற்றிய கரிசனை எதுவும் இல்லாமல் வெறுமனே தேர்தல் அரசியல் நலன்களை நோக்கமாகக் கொண்ட கருத்துக்களாகவே அமைந்திருக்கின்றன. ” பந்து இப்போது மத்திய அரசாங்கத்தின் பக்கத்திலேயே இருக்கிறது. சாத்தியமான சகல தீர்வுகள் குறித்தும் பரிசீலிக்கப்படும். தமிழ் மீனவர்களைப் பாதுகாப்பது மாத்திரமே பாரதிய ஜனதாவின் நோக்கம். பிரதமர் மோடியும் வெளியுறவு அமைச்சரும் இந்த விடயத்தில் மிகுந்த அக்கறை கொண்டிருக்கிறார்கள். கச்சதீவு இலங்கைக்கு சட்டவிரோதமாகவே கையளிக்கப்பட்டது. அந்த தீவை மீட்டெடுப்பதற்கு சாத்தியமான சகல நடவடிக்கைகளையும் மத்திய அரசாங்கம் எடுக்கின்றது” என்று கடந்த வாரம் அண்ணாமலை சென்னையில் செய்தியாளர்களிடம் கூறினார். மோடி கிளப்பியிருக்கும் சர்ச்சைக்கு ‘ எக்ஸ் ‘ சமூக வலைத்தளத்தில் உடனடியாகவே பதிலளித்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, பிரதமர் அவர்களே, உங்களது தவறான ஆட்சியின் பத்தாவது வருடத்தில் தீடீரென்று உறக்கத்தில் இருந்து எழுந்தவர் போன்று இந்தியாவின் ஆட்புல ஒருமைப்பாடு, தேசிய பாதுகாப்பு பிரச்சினைகளைக் கிளப்புகிறீர்கள். தேர்தல் தான் அதற்கு காரணம் போலும். என்ன செய்வது என்று தெரியாமல் நீங்கள் தடுமாற்றத்தில் இருப்பதை புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். மோடி அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு பங்களாதேஷுடன் செய்துகொண்ட நில எல்லை உடன்படிக்கையுடன் கச்சதீவு உடன்படிக்கையை ஒப்பிட்ட கார்கே “உங்களது அரசாங்கத்தின் கீழ் ஒரு நட்புறவு அடையாளமாக இந்தியாவின் 111 நிலப்பகுதிகளை விட்டுக்கொடுத்து பங்களாதேஷிடமிருந்து 55 நிலப்பகுதிகளை மாத்திரம் இந்தியாவுடன் சேர்த்துக்கொண்டீர்கள். அப்போது நீங்கள் இரு நாடுகளுக்கும் இடையில் செய்துகொள்ளப்பட்ட எல்லை உடன்படிக்கை நிலப்பகுதிகளைப் பரிமாறிக்கொள்ளும் ஒரு செயல் அல்ல, இதயங்களின் சந்திப்பு பற்றியது என்று கூறினீர்கள். அதே போன்றே கச்சதீவு உடன்படிக்கையும் இன்னொரு அயல்நாடான இலங்கையுடன் நட்புறவின் அடிப்படையில் செய்து கொள்ளப்பட்டதேயாகும்” என்று மோடிக்கு சுட்டிக்காட்டினார். “தமிழ்நாட்டில் தேர்தல் நடைபெறவிருப்பதற்கு முன்னதாக உணர்ச்சிபூர்வமான பிரச்சினையை கிளப்பியிருக்கிறீர்கள். ஆனால், கச்சதீவு தொடர்பான வழக்கில் 2014 ஆம் ஆண்டில் உங்களது சொந்த அரசாங்கத்தின் சட்டமா அதிபர் ஸ்ரீ முகுல் றோராக்கி உயர்நீதிமன்றத்தில் கூறியதை மறந்துவிட்டீர்களா? ‘ 1974 உடன்படிக்கையின் மூலமே கச்சதீவு இலங்கை வசமானது…. அதை எவ்வாறு திருப்பியெடுக்கமுடியும்? கச்சதீவை மீளப் பெறவிரும்பினால், நீங்கள் போருக்கு போகவேண்டியிருக்கும் ‘ என்று அவர் கூறியிருந்தார். பிரதமர் அவர்களே கச்சதீவை மீட்டெடுத்து இந்த பிரச்சினைக்கு தீர்வைக்காண உங்களது அரசாங்கம் ஏதாவது நடவடிக்கையை எடுத்ததா என்பதை நீங்கள் கூறவேண்டும்” என்று ‘ எக்ஸ் ‘ மூலமாக மோடியை நோக்கி கேட்டிருக்கிறார் கார்கே. காங்கிரஸ் கட்சியின் பல்வேறு தலைவர்களும் பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளித்து வருகிறார்கள். ஆனால் சோனியா காந்தி, ராகுல் காந்தி போன்ற நேரு — காந்தி குடும்ப தலைவர்கள் இதுவரையில் எந்த கருத்தையும் கூறவில்லை. கச்சதீவு உடன்படிக்கையை நியாயப்படுத்திய ஜெய்ராம் ரமேஷ், “கச்சதீவு இலங்கையின் ஒரு பகுதியாக மாறிய அதே 1974 ஆம் ஆண்டில் இந்திரா காந்தி — சிறிமா பண்டாரநாயக்க உடன்படிக்கை இலங்கையில் இருந்து 6 இலட்சம் தமிழ் மக்கள் இந்தியாவுக்கு வருவதற்கு அனுமதித்தது. அந்த நடவடிக்கை மூலமாக பிரதமர் இந்திரா காந்தி அதுகாலவரை நாடற்றவர்களாக இருந்த 6 இலட்சம் மக்களின் மனித உரிமைகளையும் கண்ணியத்தையும் காப்பாற்றினார் ” என்று கூறினார். மோடி அரசாங்கம் பங்களாதேஷுடன் செய்துகொண்ட உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதற்கு வசதியாக நில எல்லை சட்டத்தைக் கொண்டுவந்தபோது அந்த உடன்படிக்கையின் விளைவாக இந்தியா 10,000 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பை இழக்கப்போகின்ற போதிலும், மனிதாபிமான தேவையை ஏற்றுக்கொண்டு காங்கிரஸ் சிறுபிள்ளைத் தனமான குற்றச்சாட்டுக்களை முன்வைக்காமல் பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் ஆதரவை வழங்கியது என்றும் ரமேஷ் குறிப்பிட்டார். இலங்கை தரப்பின் பிரதிபலிப்பு : கச்சதீவு பிரச்சினை பாரதிய ஜனதாவினால் தேர்தல் பிரசாரப் பொருளாக்கப்பட்டு விட்ட நிலையில் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இரு தரப்பு உறவுகளில் அதனால் ஏற்படக்கூடிய தாக்கம் முக்கிய கவனத்துக் குரியதாகும். மோடி சர்ச்சையைக் கிளப்பி ஒரு வாரகாலம் கடந்துவிட்ட நிலையில் இலங்கை அரசாங்கம் எந்தவிதமான உத்தியோகபூர்வ பிரதிபலிப்பையும் வெளியிடாமல் மிகுந்த இராஜதந்திர விவேகத்துடன் நடந்துகொள்கிறது. வெளியுறவு அமைச்சர் அலி சப்பரி, கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நீர்விநியோக அமைச்சர் ஜீவன் தொண்டமான் போன்றவர்கள் தனிப்பட்ட முறையில் கருத்துக்களை வெளியிட்டிருக்கிறார்கள். அமைச்சரவை பேச்சாளரான பந்துல குணவர்தனவிடம் செய்தியாளர்கள் கேட்டபோது இந்தியாவில் தேர்தல் நடக்கிறது என்று மாத்திரம் பதிலளித்ததா செய்தி வெளியானது. ஆனால், இரு நாடுகளினதும் முக்கியமான ஆங்கிலப் பத்திரிகைகள் ஆசிரிய தலையங்கங்கள் மூலமாக வெளியிட்ட கருத்துக்கள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. ” லோக்சபா தேர்தலை முன்னிட்டு பிரதானமாக உள்நாட்டுப் பாவனையை நோக்காகக்கொண்டு இந்தியாவில் அரசியல் விவாதம் மூண்டிருக்கின்ற போதிலும், கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்த உடன்படிக்கையை மாற்றியமைக்கும் நோக்கம் இந்தியாவுக்கு இல்லை” என்று டெயிலி மிறர் அதன் ஆசிரிய தலையங்கத்தில் கூறியிருக்கிறது. இந்திய உயர்மட்ட தலைவர்களை சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளாக அன்றி அறிவார்ந்த அரசியல்ஞானிகளாகப் பார்க்கவே இலங்கையர்கள் விரும்புகிறார்கள். வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூட இராஜதந்திரப் பக்குவத்தை கைவிட்டு தமிழ்நாட்டில் சொற்ப வாக்குகளுக்காக பிரதமர் மோடியுடன் கைகோர்த்து நிற்பது பெரும் ஏமாற்றத்தை தருகிறது என்று டெயிலி மிறர் எழுதியிருக்கிறது. ” 2014 ஆம் ஆண்டுக்கு பிறகு குறிப்பாக கொவிட் பெருந்தொற்று / பொருளாதார நெருக்கடி காலப் பகுதிகளில் இலங்கையில் நல்லெண்ணத்தை வளர்ப்பதற்கு இந்தியா அயராது எடுத்துவந்த முயற்சிகளை பாதிக்கக்கூடிய ஆபத்தை கச்சதீவுச் சர்ச்சை கொண்டிருக்கிறது. மாலைதீவில் இந்தியா கண்டிருக்கும் பின்னடைவுக்கு பிறகு தேர்தல் நலனுக்காக குறுகிய நோக்கத்துடன் முன்னெடுக்கப்படும் இந்த பிரசாரம் அனாவசியமானது. பாக்கு நீரிணைக்கு இடையில் உறவுகளை பலப்படுத்துவதற்கு இது உதவாது ” என்று த மோர்ணிங் பத்திரிகை எழுதியிருக்கிறது. பாக்குநீரிணைக்கு இடையில் நல்லெண்ண உறவுகளில் ஏற்படக்கூடிய பாதிப்பை தங்களுக்கு அனுகூலமாகப் பயன்படுத்துவதற்கு பல வல்லாதிக்க நாடுகள் நாட்டம் காட்டும் என்பது இந்திய அரசாங்கத்துக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என்றும் அந்த பத்திரிகை தெரிவித்திருக்கிறது. ” தமிழ்நாடடில் உணர்ச்சிபூர்வமானதாக இருந்துவரும் ஒரு பிரச்சினையை இந்தியப் பிரதமர் கிளப்பியிருப்பது வேறு பிராந்தியங்களில் நண்பர்களை தேடுவது குறித்து சிந்திக்க இலங்கையை தூண்டுவதற்கு போதுமானதாகும். இந்தியாவில் அதிகார உயர்பீடத்தில் உள்ளவர்கள் இலங்கையின் பிராந்தியத்துக்கு தொடர்ச்சியாக உரிமை கோரினால் வேறு எங்காவது பாதுகாப்பு உத்தரவாதத்தை தேடவேண்டிய நிர்பந்தம் இலங்கைக்கு ஏற்படும் ” என்று ஃபைனான்சியல் ரைம்ஸ் ஆசிரிய தலையங்கத்தில் எழுதியிருக்கிறது. இந்திய பத்திரிகைகள் ” பிரதமரின் கருத்துக்கள் துரதிர்ஷ்டவசமானவை.குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக கூறப்படுபவை.பல வருடங்களுக்கு முன்னர் தீர்க்கப்பட்டுவிட்ட ஒரு பிரச்சினையை மீண்டும் கிளறுவது மிகவும் தவறானது. விவேகமானதல்ல. மக்களின் உணர்ச்சிகளைக் கிளறக்கூடிய பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களைக் கூறும்போது பிரதமர் பெருமளவுக்கு பொறுப்புணர்வுடன் நடந்துகொள்ள வேண்டும் ” என்று டெக்கான் ஹெரால்ட் கூறியிருக்கிறது. இலங்கையுடனான உறவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு பிரச்சினையை அரசியல் அனுகூலத்துக்கு பயன்படுத்த முனைந்திருப்பதன் மூலம் பிரதமர் மோடி ஆரோக்கியமற்ற ஒரு போக்கை தொடக்கி வைத்திருக்கிறார் என்று ‘ த இந்து ‘ பத்திரிகை குறிப்பிட்ட அதேவேளை, அரசியல் எதிரிகளுக்கு மேலாக புள்ளிகளை எடுப்பதற்கு பாரதிய ஜனதா தலைமைத்துவம் கச்சதீவு பிரச்சினையை கிளப்புவது பெரும் குழப்பத்தை தருகிறது என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் கூறியிருக்கிறது. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரின் கருத்துக்களை மறுதலித்திருக்கும் இந்துஸ்தான் ரைம்ஸ் இந்திய மீனவர்களின் பாதுகாப்புப் பிரச்சினைக்கும் கச்சதீவுக்கும் தொடர்பு கிடையாது என்று கூறியிருக்கிறது. பழைய பிரச்சினைகளை கிளறாமல் இருப்பதில் தலைவர்கள் முதிர்ச்சியை வெளிப்படுத்த வேண்டும். தேர்தல் அனுகூலத்துக்காக நட்பு நாடொன்றுடனான உறவுகளை சீர்குலைக்கும் வகையில் நடந்துகொள்ளக்கூடாது. பெய்ஜங் அவதானித்துக் கொண்டிருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது என்று மோடிக்கும் ஜெய்சங்கருக்கும் அறிவுரை கூறுவது போன்று இந்துஸ்தான் ரைம்ஸ் எழுதியிருக்கிறது. இந்திய இராஜதந்திரிகள் 2004 — 2006 காலப்பகுதியில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராக இருந்த நிருபமா ராவ் கருத்து தெரிவிக்கையில் தேர்தலுக்கு முன்னதாக இந்தியாவின் உள்நாட்டு அரசியலில் கச்சதீவு தொடர்பில் கிளம்புகின்ற சர்ச்சை தமிழ்நாட்டு அரசியலில் முக்கியமான தாக இருந்த பழைய பிரச்சினை மீண்டும் கிளப்பப்படுவதாக இலங்கையில் அர்த்தப்படுத்தப்படக்கூடிய சாத்தியம் இருக்கிறது என்று கூறியிருக்கிறார். நீண்டகாலத்துக்கு முன்னர் கைச்சாத்திடப்பட்ட ஒரு சர்வதேச உடன்படிக்கையை மீள்பரிசீலனை செய்வதற்கு இந்தியா விரும்புகிறதா? அவ்வாறு செய்வதன் மூலம் சர்வதேச அரசியலில் வழமைக்கு மாறான முன்னுதாரணம் ஒன்றை வகுக்க இந்தியா விரும்புகிறதா? என்று வெளியுறவுச் செயலாளராகவும் பதவியில் இருந்த நிருபமா ராவ் கேள்வியெழும்பினார். இலங்கையில் இருந்த இன்னொரு இந்திய உயர்ஸ்தானிகரான அசோக் காந்தா ( 2009 — 2013 ) கச்சதீவு பிரச்சினை தற்போது கிளப்பப்பட்டிருப்பது இந்தியாவில் ஒரு தேர்தல் பிரச்சினை என்பதை கொழும்பு விளங்கிக்கொள்ளும் என்று குறிப்பிட்டார். மீட்புக்கோரிக்கை தமிழ்நாட்டில் திராவிட கட்சிகள் கச்சதீவை இலங்கையிடம் இருந்து மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ச்சியாக முன்வைத்து வந்திருக்கின்றன. அண்ணா திராவிட முன்னேற்றக் கழகமும் ( 2008) திராவிட முன்னேற்றக்கழகமும் (2013 ) இந்த விவகாரம் தொடர்பில் இந்திய உயர் நீதிமன்றத்தையும் நாடின. ஆனால், மத்திய அரசாங்கங்கள் உடன்படிக்கையை மாற்றியமைக்க முடியாது என்ற நிலைப்பாட்டையே உறுதியாக அறிவித்தன. இன்றும் புதிய தலைமைத்துவங்களின் கீழும் திராவிடக் கட்சிகள் மீட்புக் கோரிக்கையை வலியுறுத்திய வண்ணமே இருக்கின்றன. தற்போது பிரதமர் மோடியும் பாரதிய ஜனதாவும் தமிழ்நாட்டு மக்களின் குறிப்பாக பெரிய வாக்கு வங்கியாக விளங்கும் மீனவர் சமூகத்தை இலக்கு வைத்து அரசியல் அனுகூலத்துக்காக திட்டமிட்டு இந்த பிரச்சினையைக் கிளப்புகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் இந்த பிரசாரத்திற்கு எடுபடக்கூடிய சாத்தியமில்லை. இலங்கைத் தமிழர் பிரச்சினையை மாத்திரம் முன்னிலைப்படுத்தி தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை தேர்தல்களில் அந்த மாநில மக்கள் ஒருபோதும் பெரிதாக ஆதரித்ததில்லை. அதே கதியே கச்சதீவுப் பிரச்சினையை கிளப்புவதன் மூலமாக வாக்குகளைப் பெறலாம் என்ற பாரதிய ஜனதாவின் எதிர்பார்ப்புக்கும் ஏற்படும். இந்திரா காந்தி காலத்தில் கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுத்தமைக்காக காங்கிரஸை மோடி குற்றஞ்சாட்டுகிறாரே தவிர தீவை மீட்டெடுக்கப் போவதாகக் கூறவில்லையே! https://arangamnews.com/?p=10609
-
”தமிழ் வேட்பாளரை தேட முன்னர் இதை செய்யுங்கள்”- மனோ கணேசன்
”தமிழ் வேட்பாளரை தேட முன்னர் இதை செய்யுங்கள்” கடந்த காலங்களில் தமிழ் மக்கள், குறிப்பாக வடகிழக்கு ஈழத்தமிழ் உடன்பிறப்புகள், தென்னிலங்கை தமிழ் வேட்பாளர்களுக்கு தாராளமாக வாக்களித்தார்கள். ஒருமுறை தேர்தலை பகிஸ்கரித்தார்கள். இந்த இரண்டு செயன்முறைகளும் எதிர்பார்க்கப்பட்ட பயன்பாட்டை தராத காரணத்தால்தான், இன்று பொது தமிழ் வேட்பாளர் என்ற யோசனை முன்வைக்கப்பட்டு கலந்து உரையாடபடுகிறது. இதன் சாத்தியப்பாடு, பயன்பாடு தொடர்புகளில் கவனமாக ஆராய வேண்டும் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். இன்று கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இவ்விதமாக பொது பொது தமிழ் வேட்பாளர் போட்டி இடுவார் எனில் அவருக்கு தமிழ் வாக்காளர்கள், குறிப்பாக வடகிழக்கு தமிழ் வாக்காளர்கள் ஒட்டுமொத்தமாக வாக்களிப்பார்கள் என்பதை உறுதி செய்ய வேண்டும். அடுத்தது, இதன் மூலமாக முழு உலகிற்கும் இலங்கை தமிழர்கள் சார்பில் என்ன சொல்லப்பட உள்ளது என்பது தீர்மானிக்கப்பட வேண்டும். பொது தமிழ் அரசியல் அபிலாசைகள் என்ன? குறிப்பாக, அது பதின்மூன்றின் முழுமையான அமுலாக்கமா? பதின்மூன்று “ப்ளசா”? சமஷ்டியா? வடகிழக்கு இணைப்பா? இவை குறித்து முதலில் பொது முடிவுக்கு, தமிழ் கட்சிகள் வர வேண்டும். தமிழ் தேசிய அரசியல் பரப்பில் சில கட்சிகள், இன்று, ஜனாதிபதி தேர்தலை பகிஸ்கரிக்க வேண்டும் என கோருகின்றன. அவற்றின் சாத்தியப்பாடு, பயன்பாடு தொடர்பில் பல்வேறு கருத்தோட்டங்கள் இருக்கின்றன. ஆனால், இத்தகைய கருத்துகளை முன்வைக்க, அந்த கட்சிகளுக்கு உரிமை இருக்கின்றது. ஆனால், பகிஸ்காரம் வேண்டாம். பொது தமிழ் வேட்பாளர் வேண்டும் என்று சொல்பவர்கள், அதன்மூலம் உலகத்திற்கு என்ன சொல்ல விரும்புகிறார்கள் என்பதை தீர்மானிக்க வேண்டும். குறைந்த பட்ச அல்லது அதிக பட்ச கோரிக்கைகள், நிலைபாடுகள், அபிலாசைகள் என்ன? என்பவை பற்றி உரையாட வேண்டும். தொடர்ந்தும் ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்படவில்லை. அதற்கிடையில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பாராளுமன்ற தேர்தலும் நடைபெறலாம். மறுபுறம், தேர்தகள் ஆணையாளர் என்ன சொன்னாலும் கூட, ஜனாதிபதி தேர்தலும், பாராளுமன்ற தேர்தலும் ஒருசேர நடந்தாலும் ஆச்சரியப்பட முடியாது. ஆகவே இவை அனைத்தையும் கணக்கிலெடுக்க வேண்டும். இதற்கிடையில் எனது பெயரும் பொது தமிழ் வேட்பாளர் பரிசீலனையில் முன்மொழியபட்டு உள்ளது. பொது அரசியல் பரப்பில் நாடறிந்த தமிழ் கட்சி தலைவராக நான் இருக்கின்ற காரணத்தால் இப்படியான ஒரு யோசனை சொல்லபடுகிறது. இதை சொல்ல எவருக்கும் உரிமை உண்டு. இதுபற்றி நானும், எனது கட்சியும்தான் தீர்மானிக்க வேண்டும். ஆகவே இதுபற்றி பெரிதும் அலட்டிக்கொள்ள தேவை இல்லை. இங்கே பொது தமிழ் வேட்பாளரை அடையாளம் காணமுன், பொது தமிழ் அரசியல் அபிலாசைகள் என்ன என தீர்மானிக்க வேண்டும் என்பதுதான் பிரதானமான தேவைபாடாகும் என தெரிவித்தார். -(3) http://www.samakalam.com/தமிழ்-வேட்பாளரை-தேட-முன்/
-
ஆமையும் தமிழனும்....
இந்திய தொன்மக் கதைகளின்படி இப்புடவியை நான்கு ஆமைகள் தாங்கிக்கொண்டு இருப்பதால்தான் பூமி நிலைத்து நிற்கின்றது.
-
'கடவுளின் துகள்' விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் காலமானார்... மனித வரலாற்றில் முக்கியமானவர் - ஏன்?
'கடவுளின் துகள்' விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் காலமானார்... மனித வரலாற்றில் முக்கியமானவர் - ஏன்? Physicist Peter Higgs Passes Away: 'கடவுளின் துகள்' என்றழைக்கப்படும் மனித வரலாற்றில் முக்கிய கண்டுபிடிப்பை நிகழ்த்திய நோபல் பரிசு வென்ற விஞ்ஞானி பீட்டர் ஹிக்ஸ் நேற்று முன்தினம் காலமானார். அவர் குறித்த முக்கிய தகவல்களை இங்கு காணலாம். அவருக்கு வயது 94 இவர் இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர். இவர் 2013ஆம் ஆண்டு இயற்பியலுக்காக நோபல் பரிசை வாங்கினார். Physicist Peter Higgs Passes Away: இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இயற்பியலாளர் பீட்டர் ஹிக்ஸ். கடவுளின் துகள் (God's Particle) அல்லது ஹிக்ஸ் போஸான் (Higgs Boson) என்றழைக்கப்படும் புலத்துடன் தொடர்புடைய துகளின் (Mass-giving Particle) கண்டுபிடிப்புக்காக இவர் உலகப் புகழ் பெற்றவர். அதாவது, பிரபஞ்ச உருவாக்கத்தில் இந்த துகள் முக்கிய பங்காற்றியதாக அறிவியலாளர்கள் கூறுவதால், இதனை கடவுளின் துகள் என்று அழைக்கின்றனர். இதனை கண்டுபிடித்ததற்காக இங்கிலாந்தின் இயற்பியலாளரும், எடின்பெர்க் பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான பீட்டர் ஹிக்ஸ் கடந்த 2013ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசை பெல்ஜியத்தை சேர்ந்த இயற்பியலாளர் ஃபிராங்கோயிஸ் எங்லெர்ட் என்பவருடன் இணைந்து வென்றார். கடவுளின் துகள் குறித்து 1964ஆம் ஆண்டே இவர் கோட்பாட்டை வகுத்துள்ளார் என்பத இங்கு குறிப்பிடத்தக்கது. 1964ஆம் ஆண்டின் கோட்பாடு இவரின் கோட்பாடு சுமார் 49 ஆண்டுகளுக்கு அதாவது 2012ஆம் ஆண்டு அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பு மேற்கொண்டு சோதனையில் உறுதியானது. கோட்பாடு பரிசோதனை ரீதியாக உறுதியான பின்னரே இவர் 1964ஆம் ஆண்டு நிறுவிய கோட்பாட்டிற்காக நோபல் பரிசை வென்றார். இந்த கடவுளின் துகள் கண்டுபிடிப்பின் மூலம் பீட்டர் ஹிக்ஸ் உலக புகழ்பெற்றார். அந்த துகளுக்கு அவரின் பெயரை சேர்த்து 'ஹிக்ஸ் போஸான்' என்று பெயரிடப்பட்டுள்ளது. பிரபஞ்ச உருவாக்கம் குறித்து பல்வேறு கருத்துகள், கோட்பாடுகள் முன்வைக்கப்பட்ட சூழலில் பீட்டர் ஹிக்ஸின் இந்த கடவுளின் துகள் கண்டுபிடிப்பு மிகப்பெரிய திறப்பை ஏற்படுத்தியதாக அறிவியலாளர்கள் கூறுவார்கள். மனித வரலாற்றில் நீங்காத இடத்தை பிடித்தவர் என பீட்டர் ஹிக்ஸை கூறலாம். இவரின் கண்டுபிடிப்பின் மூலம் எதிர்காலத்தில் பிரபஞ்ச உருவாக்கம் குறித்த பெரிய திறப்பு ஏற்படலாம். மிக முக்கியமானவர்... அதாவது, பிரபஞ்சத்தின் நிறை எவ்வாறு உள்ளது என்பதை விளக்குவதற்கு பீட்டர் ஹிக்ஸின் கோட்பாடு பயன்படும். இதனால் இயற்பியலில் மிகப்பெரிய புதிர்களில் ஒன்றைத் தீர்க்கலாம். ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் மற்றும் மேக்ஸ் பிளாங்க் போன்ற மாபெரும் விஞ்ஞானிகளின் வரிசையில் பீட்டர் ஹிக்ஸ் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது. உடல்நலக்குறைவால் காலமானார் இந்நிலையில், அவர் கடந்த திங்கட்கிழமை அன்று உயிரிழந்தார் என அவர் பணியாற்றிய எடின்பர்க் பல்கலைக்கழகம் உறுதிப்படுத்தியுள்ளது. அவரின் வயது 94. இதுகுறித்து எடின்பெர்க் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,"பீட்டர் ஹிக்ஸ் உடல்நலக்குறைவால் கடந்த திங்கட்கிழமை (ஏப். 😎 அன்று உயிரிழந்தார்" என தெரிவித்துள்ளது. எடின்பர்க் பல்கலைக்கழகம் இரங்கல் மேலும், அந்த அறிவிப்பில்,"பீட்டர் ஹிக்ஸ் ஒரு சிறந்த ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் இருந்தார். இளம் தலைமுறை விஞ்ஞானிகளுக்கு ஓர் ஊக்குமளிப்பவராகவும் திகழ்ந்தார்" என புகழப்பட்டுள்ளது. மேலும் இந்த துக்கமான நேரத்தில் அவரின் குடும்பத்தினரின் தனியுரிமைக்கு மதிப்பளிக்க வேண்டும் என ஊடகங்களுக்கு பல்கலைக்கழகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. பீட்டர் ஹிக்ஸ் எடின்பர்க் பல்கலைக்கழக்கத்தில் சுமார் 50 ஆண்டுகளுக்கும் மேல் பணியாற்றிவர் ஆவார். எடின்பர்க் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பீட்டர் மேதிசன் வெளியிட்ட இரங்கல் பதிவில்,"பீட்டர் ஹிக்ஸ் ஒரு தனித்துவமான மனிதர். அவர் ஒரு திறமையான விஞ்ஞானி, அவரது தொலைநோக்கு பார்வை மற்றும் கற்பனை நம்மைச் சுற்றியுள்ள உலகத்தைப் பற்றிய நம் அறிவையே வளப்படுத்தியுள்ளது. அவரது முன்னோடியான பணி ஆயிரக்கணக்கான விஞ்ஞானிகளை ஊக்கப்படுத்தியுள்ளது எனலாம். மேலும் அவரது பணி இன்னும் பல தலைமுறைகளுக்கு ஊக்கமளிக்கும் எனலாம்" என குறிப்பிட்டுள்ளார். https://zeenews.india.com/tamil/world/noble-prize-winning-physicist-peter-higgs-passes-away-gods-particle-higgs-boson-why-is-he-most-important-in-human-history-498382
-
வாசிப்புக் குதிரைகளும் மறதி மலையும் - காந்தப் புலம் நாவலை முன்வைத்து
வாசிப்புக் குதிரைகளும் மறதி மலையும் காந்தப் புலம் நாவலை முன்வைத்து நிரூபா ஆழமான கருவைக்கூடச் சுருக்கமாகவும், துல்லியமாகவும். குறைந்த பாத்திரங்களுடனும் சொல்லக்குடியன என்பதால் சிறுகதை எனக்கு எப்போதுமே பிடித்தமான இலக்கிய வடிவம் என்றாலும், மனித வாழ்வோடு பிணைந்திருக்கும் மரபுகள், பண்பாடுகள். கலைகள், அரசியல், உளவியல் தொடர்பாக நுன்னிப்பாகவும் விரிவாகவும் சொல்வதற்கு நாவல்களே சிறந்த வடிவம் என்று தோன்றுகின்றது. நீண்ட கால எனது வாசிப்புப் பயணத்தில், கதைகளை மட்டுமே வாசிப்பதில் ஒரு போதாமையை அண்மைக் காலமாக உணரத்தொடங்கியபோது எனது தேடல்களும் புதிய சிந்தனைத் தளத்தை நோக்கி நகரத்தொடங்கியுள்ளன. வாழ்வியற் கூறுகளை உணர்வுரீதியாகவும், கதையாகவும் திறம்படச் சொல்லும் நாவல்கள் சுய சிந்தனை வளர்சியை ஊக்கப்படுத்தும்வகையில் இருப்பது அரிது. கதைகள் ஒருவகையில் என் மனதை வளப்படுதியிருந்தாலும் மறுபக்கம் மீண்டும் மீண்டும் உணர்வுகளுக்குள் உழன்றவும் வைத்துள்ளன. நாவல்களுக்குக் கதைகள் இன்றியமையாதன. தற்போதைய மனநிலையில் கதைகளோடு சிந்தனை வளத்தையும் ஊக்கப்படுத்தும் நாவல்கள் வாசிப்பதில் எனக்கு அதிக ஆர்வம் ஏற்பட்டுள்ளது. மனிதர்களுக்கிடையில் சமத்துவத்தை உருவாக்கச் சட்டங்கள், சித்தாந்தங்கள் அவசியம்தான், ஆனாலும் அக மாற்றமும் இணைந்தே சமத்துவ உணர்வை முழுமைபெறச்செய்யும். மனிதரை மனிதர் ஒடுக்கின்ற உணர்வு அகத்தளத்திலிருந்து எழுவதால், சமத்துவ உணர்வும் அகத் தளத்திலிருந்து எழுவது அவசியம். ‘காந்தப் புலம்’ ஒரு மனப் பயணக் குறிப்பு. இந்த நூலின் மீதான வாசிப்பு அகச் சுவையையும். அறிவுத் தளத்தில் புதிய சிந்தனைகளையும் கிளறிவிட்டது என்பதனாலேயே எனது வாசக அனுபவங்களை இங்கு பகிர்ந்துகொள்கின்றேன். “அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உண்டு” மனிதர்கள் இயற்கையின் ஒரு கூறாய் பரிணமித்தவர்கள். இயற்கையின் கூறுகள் மனிதர்களுக்குள்ளேயும் இருக்கின்றன. “அண்டத்தில் உள்ளதுதான் பிண்டத்திலும் உண்டு” என்பது காந்தப் புலத்தில் மையப் புள்ளியாய் உள்ளது. இயற்கையின் அசைவுகள்(நீர், நெருப்பு, காற்று) மனிதர்களுக்குள்ளேயும் அசைந்து கொண்டிருக்கின்றன. இந்த அசைவு, தேங்கத்திற்கு முரணானது. தேக்கமுறுபவைகள் கழிவுகள்தான். மனித மனம் தனக்குள் ஊடாடும் மரபுகள், எண்ணங்கள், உணர்வுகள், அனைத்தையும் புதுப்பித்துக்கொள்வதன்மூலமே புதிய மனிதர்களாய் பரிணமிக்கவும் இயலும். காந்தப் புலத்தின் உயிர்த்துடிப்பாய் உள்ளது சமத்துவம். சமத்துவத்தை வெளியுலகில் உருவாக்குவதற்கு எத்தனையோ முயற்சிகள் எடுக்கப்படுகின்றன. சாதியத்துக்கெதிரான போராட்டம், இனவிடுதலைப் போராட்டம், பொருள் சமத்துவம், பால் சமத்துவம்… இவைகளைச் சட்டங்களால் மாற்ற முயலலாம். ஆனால், அகத்தளவில் மனிதர்கள் மாறாதபட்சம், முழுமையான மாற்றம் சாத்தியமில்லை என்பதால் மனிதர்கள் தம்மைத் தாமே உணருதல் அவசியம். காந்தப் புலத்தின் மனப்பயணம் இவ்வாறுதான் தன் புதிய சிந்தனைகளால் பூத்திருக்கின்றது. இது ஒரு ஈழத்து இளைஞனின் மனப் பயணம். இரு தலைமுறைகளுக்கிடையிலான ஊடாட்டம். ஊடறுப்புகள்: பயணத் தளங்கள், பாத்திரங்கள் மனித அகவெளியும், புறச்சூழலும் (அண்டமும் பிண்டமும்) காந்தப் புலத்தின் மையக் கதைக் களங்கள். இந்த இரண்டு கூறுகளும் மனிதர்களது வாழ்வில் பின்னிப்பிணைந்து இயங்கும் தளங்களாகவும் உள்ளன. இது ஒவ்வொரு மனிதருக்கும் இயல்பாக நிகழ்ந்துகொண்டுதானிருக்கின்றது. ஆனால், இந்த இயக்கம் பற்றிய விழிப்பு நிலையும், தொடர்ச்சியான அவதானிப்பும் இங்கு முக்கியமானது. ஓர் ஈழத்து இளைஞனின் யுத்தகால இடப்பெயர்வுச் சூழலில் ஆரம்பிக்கும் கதை, பின்னர் அவனது அக உலகிலேயே பெரும்பாலும் நிகழ்கின்றது. இளைஞனின் அகம் தனியொரு பாத்திரமாக உருவகிக்கப்பட்டுள்ளது. அந்தப் பாத்திரத்தின் பெயர் “சடையன்.” அகவுலகம் முழுக்க முழுக்கக் குறியீடுகளாலேயே சித்தரிக்கப்படுகின்றது. பிரதான கதாபாத்திரமான இளைஞனின் அகம் உணர்வுகள், சிந்தனைகள், மரபுகள் ஆழங்கள், நினைவுகள், மறதிகள், இரகசியங்கள், இன்னும் அறியப்படாத இருள்மைககள் அல்லது வெளிகள் என்று எமது மனதின் தன்மைகளைப் பிரதிபலிக்கின்றது. குறியீடுகளாலான இவ் அகவுலகக் காட்சிகள் எம்மை ஒரு புதியதொரு உலகத்துக்கு அழைத்துச் செல்கின்றது. அந்தப் புதிய உலகில், உணர்வுகள் மரங்களாக அசைகின்றன. அங்கு காதல் கனி காய்க்கின்றது. சொற்கள் மழைத் தூறல்களாக அல்லது பெரும் மழையாய்ப் பொழிகின்றன. எண்ணங்கள் பறவைகளாகிச் சிறகடிக்கின்றன. மனதில் ஆழ ஊறிப்போயுள்ள மரபுகள் நதியென அவனை ஊடறுத்து ஓடிக்கொண்டிருக்கின்றது. இளைஞனின் நினைலிருந்து தொலைந்திருக்கும் மறதி, மலைகளாய் உருப்பெற்றுள்ளன. மனங்களின் இரகசியம் ஒரு பொதிக்குள் மறைத்துவைக்கப்பட்டுள்ளது. பொதுவாகக் குறியீடுகள் பேசுபொருளை மேலும் ஆழமாகப் புரிந்துகொள்ள உதவுவதோடு, அழகியலுக்கு மெருகூட்டுவனவும்கூட. காந்தப் புலம் நாவலில், வெளியுலகத்திலும், அகவுலகிலும் இன்னும் பல குறியீடுகள் (நாகம், யானை, கடல், கப்பல், நரி, பன்றி, செம்மீன்) போன்றவை கருத்தியல் அழகுணர்ச்சியை மெருகுபடுத்தியுள்ளன. மனம், அகத்திலும் புறத்திலும் மாறி மாறிப் பயணிக்கக்கூடிய தன்மைகொண்டிருப்பதால், கதைக் களங்கள் அகமும், புறவெளியும் (ஈழம், புலம் பெயர் நாடொன்று) என்று மாறி மாறியே நிகழ்கின்றது. புறவெளியில் சந்தித்த மனிதர்கள் ‘சடையன்’ என்கிற அகத்திலும் வாழ்கின்றார்கள். துயரத்தின்போது அல்லது ஆழமான சிந்தனையிலோ எமது மனசுக்குள்ளேயே நாம் சில கணங்களில் தொலைந்துபோவதைப் போன்றே, காந்தப் புலத்தில் காலப் பள்ளத்துள் சடையன் மனசு தனது துயரகாலத்தில் தொலைந்துபோகின்றது. இவ்வாறான பல தளங்களில் கதை பயணிக்கின்றது. இங்கு காலப் பயணம் (time travel) கதைக் களங்களில் முக்கியமான ஒன்று. ஈழவிடுதலைப் போர்- இடப்பெயர்வுக் காலம் இறந்தகாலங்களாகவும், பின்னர் தற்காலத்திலும் கதை நிகழ்கின்றது. பின்னர் ஆதிகாலத்துக் செல்கின்றது மனசு. அங்கிருந்து திரும்பி தற்காலத்திற்கு வருகின்றது. உடல் காலத்தின் நேர் வழியில் பயணிப்பதுதான், ஆனால் மனமோ இந்தத் தம்மைக்கு முரணானது. உடலோடு மனம் ஒன்றியிருப்பதுபோல தோன்றினாலும் மனம் வேறாகவும் இருக்கின்றது. பல பாத்திரங்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தினர். அவர்கள் சமூகப் பற்றுடையவர்களாகவும், சமூகப் போராளிகளாகவும் படைக்கப்பட்டுள்ளனர். காந்தப் புலத்தின் பிரதான பாத்திரம், ஒரு மலையகத்து இளைஞன். பெரும்பாலான பெண் பாத்திரங்கங்கள் அப் பாத்திரங்களின் கதை தொடங்கிய குறுகிய காலத்திலேயே இறந்துவிடுகின்றனர். ஆசிரியர் கதைக் கருவின் தேவை கருதியே இவ்வாறு எழுதியிருக்கலாம். யதார்த்தத்திலும், பெண்கள் பல சமூக ஒடுக்குமுறைகளால் இறக்கும் சம்பவங்களோடு பொருத்திப்பார்த்துக்கொண்டாலும், இத்தனை பெண்பாத்திரங்கள் மரணமெய்வது, அவர்களது கருத்துக்களைச் சொல்வதற்கான தொடர்ச்சி இல்லாமல் போய்விடுகின்றது. மனிதர்களுக்கிடையிலான சமத்துவம் ‘காந்தப் புலம்’ முழுவதும் ஒரு நூலிழை போன்று தொடர்கின்றது. பொருளியல் சமத்துவம், பால் சமத்துவம். அகநிலைச் சமத்துவம், இறுதியல் ஞானம். சமத்துவத்தை நிலைநாட்ட வரலாறு முழுவதும் உருவாக்கப்பட்ட சித்தாந்தங்கள், வாழ்வியல் முறைகள், அவற்றை நடைமுறைப்படுத்துவதிலுள்ள சிக்கல்கள், சித்தாந்தங்களில் இருக்கும் முரண்கள், ஒன்றுமைகள் காந்தப்புலத்தின் பேசுபொருள்கள். மார்க்சியத்துக்கும் பௌத்தத்துக்குமான ஒற்றுமை பொதுவுடமை சார்ந்து மிக நெருக்கமாக இருப்பதைப் பற்றியும் காந்தப்புலம் பேசுகின்றது. ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த புத்தர் தனியுடமை மனிதர்களுக்கான அழிவென்றும், பொதுவுடமையே மனித சமத்துவத்திற்கு அவசியமென்றும் முன்மொழிந்தார். ஆசை துன்பத்திற்கான காரணி. ஆசையின் விளைவுதான் தனியுடமை. பொறாமை. போட்டி, குரோதம் போன்ற பாதகமான உணர்வுகளும் தனியுடமை மனநிலையிலிருந்துதான் எழுகிறது. தனியுடமைக் குவிப்புக்கு முரணாகவுள்ளது மார்க்சியம். ஆகவே மனித வாழ்வை மேம்படுத்த உருவாக்கப்பட்ட தத்துவங்களின் ஒன்றுமைகள் முக்கியமானவை. சமத்துவத்திற்கு முரணான சாதியத்தை ஒழிப்பதற்கு எமது நிலத்தில் நடந்த போராட்ட முறைகள் அல்லது போராட்டத்தை முன்னெடுத்தவர்களின் போதாமைகளும், முரண்களும் பற்றிப் பேசும்போது, ஈழத்தில், சாதியத்திற்கு எதிராகப் போராடிய மூத்த தலைமுறை மார்க்சிஸ்டுக்களின் வெள்ளாள சாதிய மனநிலைதான் பெரியாரியத்தை ஈழத்திற்குக் கொண்டுவரத் தடையாக இருந்தது என்கின்ற விமர்சனமும் இங்கு முன்வைக்கப்படுகின்றது. இந்தகைய விமர்சனத்துக்கு இன்றும் வாழ்ந்துகொண்டிருக்கும் மூத்த தலைமுறை மார்க்ஸியவாதிகளிடம் எவ்வாறான பதில்கள் இருக்கின்றது? போராட்டப் பெருமைகளைப் இன்றும் பேசிக்கொண்டிருப்பவர்கள் விமர்சனங்களைத் தட்டிக்கழிப்பவர்களாகத்தான் தெரிகிறது. சுயவிமர்சனங்களும், கடந்தகால சாதியத்துக்கெதிரான போராட்டம் தொரர்பான சரியான மதிப்பீடுகளும் அடுத்த தலைமுறையினருக்கு பலனுள்ளதான இருக்கும். கத்தோலிக்க மதத்திலிருந்து விலகும் ஒரு பாதிரியார் ஆத்மீகத்தை உணர்கின்றார். இங்கு ஆத்மீகம் மதத்துடன் தொடர்பற்றதாகப் பார்க்கப்படுகின்றது. எழுத்தாளர், ஆத்மீகத்தை “தன்சார ஆழ அனுபவம்” என்று குறிப்பிடுகின்றார். நம்மை நாமே அவதானித்தல், புரிந்துகொள்ளுதல் ஞானத்தை அடையும் வழிகளாக முன்மொழியப்படுகின்றது. “தன் சார ஆழ அனுபவம்” என்கின்ற இந்தப் பதம் ஆசிரியரின் புதிய உருவாக்கம். இவ்வாறு கருத்தியலோடு புதியசொற்களையும் உருவாக்குவதன் மூலம் தமிழ் மொழியும் புதுப்பிக்கப்படுகின்றது. கால ஓட்டத்தில் கருத்தியல் மாறும்போது மொழியும் மாற்றமடைதல் தவிர்க்கமுடியாததாகவும் உள்ளது. “கற்பு” பற்றிய கருத்தியல் மாறியபோது “வன்புணர்வு” என்ற சொல் மாற்றப்பட்டது. இன்று முற்போக்கு இலக்கிய சூழலில் பலரும் இச் சொல்லைப் பாவித்துவருகிறார்கள். நாவல் முழுக்க நூலிழைபோன்று நகர்ந்துகொண்டிருக்கும் முக்கியமான விடயங்கள் சமத்துவம் மற்றது பௌத்தமும். ‘அண்டத்திலுள்ளதுதான் பிண்டத்திலுமுண்டு’ என்ற கூற்று கருத்தியலாகவும் இருக்கின்றது. வௌிச் சூழலில் நிகழுபவை அகத்தில் தாக்கமுறுகின்றன. தன்னைத் தானே புரிந்துகொள்வதோடு, தனிமனித உருவாக்கத்தின் அவசியம் பற்றிய பௌத்தத்தின் அறிவுரைகள் தொடர்பாக இங்கு பேசப்படுகின்றது. துன்பத்திலிருந்து விடுபட ஆசைகளைத் துறத்தல் அவசியம் என்பது பௌத்த நெறியின் பிரதான ஒரு கூற்று. கதாபாத்திரமான இளைஞன் ஆசை, பொறாமை, காதல் பிரிவு என்கின்ற மனிதரது வழமையான உணர்வுகளுக்கு ஆளாகி பின் ஆழத் துயரத்துக்குச் சென்று, துயரத்திலிருந்து மீளுகின்ற காலத்தில் தன் உணர்வுகளை அவதானித்தும், உணர்ந்தும் தனக்குள் பகுத்தறிந்துபார்த்தும், துயரத்திலிருந்து விடைபெற்று பௌத்தம் வழி ஞானதை நோக்கிச் செல்கின்றான். “மின்காந்தத் துகள்கள்” என்று பொருளுடைய “இயனி” இயற்கையோடு ஒன்றிய, சுய சிந்தனையும் கொண்ட, ஒரு ஆழுமை மிக்கப் பெண். பிரதான ஆண் பாத்திரமும் இயனியுமும் நேசத்தைப் பகிர்ந்துகொள்பவர்கள். இவர்களுக்குள் ஏற்படும் முரண் பலவீனமானதாக உள்ளது. இத்தனை ஆழுமையுடன் உருவாக்கப்பட்ட பெண் பாத்திரமும் குறுகிய காலத்தில் இறந்துபோவதால், அவளுக்குகெனப் பேசுவதற்கான பெரிய வெளி இருக்கவில்லை. ஆனால் அவளுடைய ஆளுமை அவள் இறந்த பின்னரும் உணரப்படுகின்றது. மனசின் மாறி மாறிப் பயணக்கும் தன்மையால், சில சம்பவங்கள் அகத்தில் நிகழ்கின்றனவா அல்லது வெளியேயா என்கின்ற குழப்பம் வாசகருக்கு சில நேரங்கள் வருதவதற்கு வாய்ப்புண்டு என்பதால் அவதானமான வாசிப்பு அவசியம். பெரும்பாலான நாவல்கள் கதைகளை மட்டுமே வைத்து எழுதப்படுபவை. காந்தப்புலத்திலும் கதைகள் இருக்கின்றனதான். ஆனால் கதைகளோடு தத்துவ விசாரணைகளும், தத்துவங்களை இணைத்துப் பார்த்தலும்(மார்க்சியம்-பௌத்தம்) ஆய்வுசெய்தலும் நிழந்திருக்கின்றது. தத்துவங்கள் தொடர்பாகவும், “தன் சார ஆழ அனுபவங்கள்” தொடர்பாகவும், ஆசிரியரின் சுய ஆய்வுகளும், சுய கண்டுபிடிப்புக்களும் எழுதப்பட்டுள்ளன. அத்துடன் உணர்வுகள், எண்ணங்கள் தொடர்பான தனது சொந்த அவதானிப்புகள், கண்டுபிடிப்புகளை ஆசிரியர் எழுதியுள்ளார். இவையே இந்த நாவலின் மிகப் பலமாகவும், வழமையான நாவல்களிலிருந்து வித்தியாசன தன்மையையும் கொண்டிருக்கின்றது. மெலிஞ்சி முத்தனின் “அத்தாங்கு”, “வேருலகு” போன்ற முன்னைய நாவல்களிலும் சிறிதளவான தத்துவ விசாரணைகளோடு கதைகள் சொல்லப்பட்டுள்ளன. ‘வேருலகு” நாவல் கனவுகளின் தொகுப்பு. காந்தப் புலத்தில் அகவுலகக் காட்சிகள் ஒரு கனவு போன்றே மனதில் படிகின்றன. அங்கும் உணர்வுகள் எண்ணங்கள் பற்றிப் பேசப்பட்டிருப்பது கனவுக்கும் நனவுக்கும் இடைப்பட்ட ஒரு மயக்க உணர்வையும் கொடுக்கிறது. கதைசொல்லும் உத்தியும், காட்சிப் படிமங்களும். யதார்த்தமுடைய ஒரு மனசைக் கதாபாத்திரமாக உருவாக்கியிருப்பதும், அதன் அக- புற பயணங்கள் மாயத் தன்மையானதாகவும் இருக்கின்றது. காந்தப் புலத்தில் பாவிக்கப்டும் மொழி அவசிறமற்ற வார்த்தைகளின்றி சொற் சிக்கனங்களோடு, வாசிப்பதற்கு இனிமையைத் தரும், புதுவகையான எழுத்துப் பாணியாகவே இருக்கிறது. ஆசிரியரின் பெரும்பாலான நாவல்களில் உரையாடல்கள் குறைவாகவும், கதைசொல்லப் பாணியே அதிகமாகவும் காணலாம். காந்தப்புலமும் விதிவிலக்கல்ல. ௦௦௦ நிரூபா நிரூபா கனடாவில் வசித்துவரும் எழுத்தாளர். ‘சுணைக்கிது’ , ‘இடாவேணி’ ஆகிய சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர். https://akazhonline.com/?p=6916
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
- வந்துட்டேன்னு சொல்லு…. திரும்ப வந்துட்டேன்னு….
-
யாழில் பிரபல ஆண்கள் பாடசாலை மாணவர்களுக்கு காசநோய்
யாழில் பிரபல ஆண்கள் பாடசாலை மாணவர்களுக்கு காசநோய் எப்படி பரவியது என தெரியாதாம்!! (மாதவன்) யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் சிலருக்கு காசநோய் கண்டறியப்பட்ட நிலையில் துறைசார்ந்த மருத்துவர்களால் சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. குறித்த விடயம் தொடர்பில் தெரிய வருவது, குறித்த ஆண்கள் பாடசாலையில் ஒரு வகுப்பில் கல்வி பயிலும் மாணவனுக்கு உடல் மெலிவு ஏற்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டார். இவ்வாறு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட மாணவனுக்கு காசநோய் அறிகுறி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவருடன் நெருங்கிப் பழகிய சில மாணவர்களும் பரிசோதனைக்கு உட்படுத்தபட்டனர். குறித்த மாணவர்களுக்கும் காசநோய் இருப்பது தெரியவந்தது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு துறை சார்ந்த மருத்துவ நிபுணர்களால் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதுடன் தொடர்ந்தும் அவர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக மருத்துவ அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குறித்த நோய் பாடசாலையில் எவ்வாறு பரவியது என அவரிடம் வினவிய போது எவ்வாறு பரவியது என தங்களால் உறுதிப்படுத்த முடியவில்லை என தெரிவித்தார். குறித்த நோய் ஏனைய மாணவர்களுக்கு பரவாமல் இருப்பதற்கு எவ்வாறான முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றது என வினவிய போது அவர்களுக்கு 14 நாட்கள் வீட்டில் வைத்து சிகிச்சை வழங்கப்படுவதாகவும் பின்னர் முக கவசங்களை அணிந்து தமது செயற்பாடுகளை முன்னெடுக்க முடியும். குறித்த மாணவர்களுக்கு காச நோயின் ஆரம்ப நிலை காணப்படுவதுடன் உரிய முறையில் சிகிச்சை பெற்றால் ஏனையவர்களுக்கு பரவமல் தடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார். குறித்த விடயம் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த கல்வி உயர் அதிகாரியை தொடர்பு கொண்ட போது குறித்த பாடசாலையில் குறித்த நோய் இனம் காணப்பட்டமையை உறுதி செய்தார். (ஏ) https://newuthayan.com/article/யாழில்_பிரபல_ஆண்கள்_பாடசாலை_மாணவர்களுக்கு_காசநோய்
-
”நாட்டின் ஜனாதிபதியைத் தீர்மானிப்பவர்கள் தமிழர்களாக இருக்கவேண்டும்” - சாணக்கியன்
”நாட்டின் ஜனாதிபதியைத் தீர்மானிப்பவர்கள் தமிழர்களாக இருக்கவேண்டும்” ”நாட்டின் ஜனாதிபதியைத் தீர்மானிப்பவர்கள் தமிழர்களாக இருக்கவேண்டும்” என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” வடமாகாணத்தில் கிளிநொச்சி என்னும் இடத்திற்குள்ளேயே செல்லமுடியாத அமைச்சர் ஒருவரின் ஆதரவினை கொண்டு ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெறுவார் என நினைத்தால் அது ஒரு சவாலான விடயம் தான். ஐக்கிய மக்கள் சக்தி சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்துள்ளது. தேசிய மக்கள் சக்தி அனுரகுமார திசாநாயகப்பினை ஜனாதிபதிவேட்பாளராக அறிவித்துள்ளது. தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எந்த கட்சியில் போட்டியிடப்போகின்றார்,கூட்டமைப்பினை எவ்வாறு அமைக்கப்போகின்றார் என்பதே தற்போதுள்ள எழுந்துள்ள பிரச்சினை. இன்று மொட்டு கட்சியும் பிரிந்த நிலையில் உள்ளது.மொட்டுக்கட்சி உருவாக்கப்பட்டது ராஜபக்ஸக்களின் எதிர்காலத்திற்காகும்.ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொறுப்புகள் அனைத்து பொறுப்புகளும் மகிந்த ராஜபக்ஸவிடம் இருந்தநேரத்தில் அதனை மைத்திரிபால சிறிசேனவிடம் வழங்கிவிட்டு மொட்டுக்கட்சியை ஆரம்பித்தனர். இன்று அந்த கட்சி குழப்பநிலையில் உள்ளது. இன்று நாமல்ராஜபக்ஸ தனது தந்தையினைப்போன்று கும்பிடுபோட்டுக்கொண்டு விகாரைகள் எல்லாம் சுற்றிதிரிகின்றார். இவர்கள் விகாரைகளை சுற்றிதிரிவதே நாட்டுக்கு ஒரு ஆபத்தான நிலைமையாகப் பார்க்கப்படுகின்றது. அதேநேரம் மொட்டுக்கட்சின் பிரதான உறுப்பினரும் பசில் ராஜபக்ஸவின் வலதுகையுமான பிரசன்ன ரணதுங்க நாமல்ராஜபக்ஸவை ஜனாதிபதி வேட்பாளராக நியமித்தால் மொட்டு பிளவுபடும் என்று சொல்கின்றார். இன்று அவர்களுக்குள்ளே குழப்பம் இருக்கின்றது. எதிர்வரும் காலத்தில் தேர்தல் ஒன்று நடந்தால் அந்த சந்தர்ப்பத்தினை மக்கள் சரியாக பயன்படுத்திக்கொள்ளவேண்டும். ஐந்து வருடத்திற்கு ஓரு முறை வரும் சந்தர்ப்பத்தினை மக்கள் சரியாக பயன்படுத்தாமல்விட்டால் அடுத்த ஐந்துவருடத்திற்கு எமது எதிர்காலம் மிக மோசமான எதிர்காலமாகவே இருக்கும்” இவ்வாறு இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/நாட்டின்-ஜனாதிபதியைத்-த/
-
அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்!
அரசியலில் இருந்து ஓய்வுப்பெறப் போவதாக அறிவித்த டக்ளஸ்! எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் செயற்பாட்டு அரசியலில் இருந்து தான் ஒதுங்கிக்கொள்ளவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் அரசியலுக்கு வந்த தான், முடிந்தளவு தமிழ் மக்களின் பொருளாதாரத்தை உயர்த்த சேவைகளை செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த தேர்தலின் போது தான் அரசியலில் இருந்து ஓய்வுப்பெற எதிர்பார்த்த போதும், முன்னெடுத்திருந்த வேலைத்திட்டங்களால் தேர்தலில் போட்டியிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தற்போது தனது வயது மற்றும் உடல்நிலைகளை கருத்திற்கொண்டு அடுத்த தேர்தலின் பின்னர் அரசியலில் இருந்து ஓய்வுபெறவுள்ளதாக டக்ளஸ் தெரிவித்துள்ளார். http://www.samakalam.com/அரசியலில்-இருந்து-ஓய்வுப/
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
எல்லோருக்கும் அதிஷ்டம் அடித்தால் போட்டி ஏன்?😂 சறுக்கு மரத்தில் ஏறாமல் மேலே போகமுடியாது! இறுதி நாளுக்குப் பின்னரும் 36 ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் இருக்கின்றன! எத்தனை பேர் கடைசி நேரத்தில் பங்குபற்றினாலும் ஒருவர்தான் முதல்வர்😃 விதிகளின்படி பையன் ஏற்கனவே போட்டியில் குதித்துவிட்டார்! கால்பந்து விளையாடும்போது பந்து அப்படி இப்படிப் போனால் மீளவும் முயன்று கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரமுடியும். ஆனால் கிரிக்கெட்டில் இன்னொரு சான்ஸ் இல்லை. ஒரு தருணம் கவனம் பிசகினால் அதை மீளவும் கேட்கேலாது! டெஸ்ட் போட்டியில் மூன்று நாள் காத்திருந்து முதல் பந்தில் அவுட்டாக வேண்டும் என்று விதியிருந்தால் அதை மாற்றமுடியாது!
-
முல்லையில் மாணவ சிப்பாய்கள் படையணி பயிற்சி முகாம்
முல்லையில் மாணவ சிப்பாய்கள் படையணி பயிற்சி முகாம் செல்வன் தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சி முகாம், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னக்கோனால் இன்று திறந்து வைக்கப்பட்டது. முல்லைத்தீவு பாதுகாப்புப் படை கட்டளைத் தலைமையகத்தின் கீழ் நந்திக்கடல் பகுதியில் உருவாக்கப்பட்ட இராணுவப் படையணி பயிற்சிப் பாடசாலையானது தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சிப் பாடசாலையாக அமைப்பதற்காக இராணுவத்தினரால் தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இதற்கிணங்க, இப்பயிற்சிப் பாடசாலையை தேசிய மாணவச் சிப்பாய்கள் படையணி பயிற்சிப் பாடசாலையாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ப்ரமித்த பண்டார தென்னக்கோன் இன்று திறந்து வைத்தார். ஏற்கனவே பல்வேறு இடங்களில் பயிற்சிகளை நிறைவு செய்த மாணவர்களுக்கு இதன்போது சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன. இந்நிகழ்வில், கல்விப் பணிமனை அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், வடக்கு - கிழக்கைச் சேர்ந்த பல பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (க) https://newuthayan.com/article/முல்லையில்_மாணவ_சிப்பாய்கள்_படையணி_பயிற்சி_முகாம்
-
ஊர்காவற்றுறை தாக்குதல் - உண்மையில் நடந்தது என்ன
ஊர்காவற்றுறை தாக்குதல் - உண்மையில் நடந்தது என்ன இனியபாரதி யாழ்ப்பாணம் ஊர்காவற்றுறையில் உள்ள தமது வீட்டுக்கு விருந்துக்கு வந்தவர்கள் மீது ஊரிலுள்ள சிலர் மதுபோதையில் தாக்குதல் நடத்தி, அவர்கள் மீது பொய்க் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி பொலிஸாரிடம் பிடித்துக்கொடுத்துள்ளதாக பாதிக்கப்பட்ட வீட்டார் தெரிவித்துள்ளனர். இதேவேளை, தாக்குதலாளிகளுக்கு ஆதரவாகப் பொலிஸாரும் நடந்து கொண்டதாக குற்றம்சாட்டியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: ஊர்காவற்றுறை மெலிஞ்சி முனைப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர், யாழ்ப்பாணம் நகர்ப் பகுதியைச் சேர்ந்த தனது நண்பனான இளைஞனை தனது வீட்டுக்கு விருந்துக்கு வருமாறு கடந்த 04 ஆம் திகதி அழைத்துள்ளார். அதனையடுத்து, யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இளைஞன், தனது நண்பர்களான மேலும் மூவருடன் முச்சக்கரவண்டியில் ஊர்காவற்றுறைக்குச் சென்றுள்ளனர். தம்மை விருந்துக்கு அழைத்த இளைஞனின் வீட்டுக்கு முன்னால் முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு, நால்வரும் வீட்டினுள் சென்று அமர்ந்து உரையாடிக்கொண்டிருந்த வேளை, ஊரைச் சேர்ந்த சிலர் மதுபோதையில் அங்கு வந்து வெளியூரைச் சேர்ந்தவர்கள், யாரின் அனுமதி பெற்று ஊருக்குள் வந்தார்கள் என முரண்பட்டு, அவர்களின் முச்சக்கரவண்டி கண்ணாடிகளை உடைத்துள்ளனர். அவ்வேளை, இளைஞனை விருந்துக்கு அழைத்த இளைஞன் தாக்குதலாளிகளைத் தடுக்க முற்பட்ட வேளை இளைஞன் மீது தாக்குதல் மேற்கொண்டு அவர்களின் வீட்டின் மீதும் தாக்குதலை மேற்கொண்டு, யாழிலிருந்து சென்ற இளைஞர்கள் மீதும் தாக்குதல் மேற்கொண்டு, அவர்களைப் பிடித்து ஊர்காவற்றுறை பொலிஸாரிடம், தம்மைத் தாக்க யாழிலிருந்து வந்ததாகக் கூறி பிடித்துக்கொடுத்துள்ளனர். பொலிஸார் அவர்களைக் கைது செய்த வேளை யாழிலிருந்து சென்ற இளைஞர்கள் தாக்குதலுக்கு இலக்காகி காயமடைந்து இருந்தமையால், அவர்களைச் சட்ட மருத்து அதிகாரி முன்பாக முன்னிலைப்படுத்தி சிகிச்சை வழங்கியதுடன், மருத்துவ அறிக்கையையும் பெற்றிருந்தனர். பின்னர் பொலிஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை யாழைச் சேர்ந்த இளைஞர்கள் மீது வழக்குத் தொடர்வதற்கான எந்த முகாந்திரமும் இல்லாத நிலையில் 04 ஆம் திகதி பொலிஸ் பிணையில் விடுவித்துள்ளனர். அவ்வேளை, ஊரில் தமது வீட்டினை தாக்கி, தமது வீட்டுக்கு வந்தவர்கள் மீது தாக்குதல் நடத்தி, அவர்களின் முச்சக்கரவண்டியை சேதமாக்கியமை தொடர்பில் பாதிக்கப்பட்ட தரப்பினர் முறைப்பாடு செய்துள்ளனர். குறித்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில், ஊரைச் சேர்ந்த ஒருவர், யாழ்ப்பாணத்திலிருந்து வந்த நபர்கள் தங்களின் வீட்டிற்குள் புகுந்து தம்மைத் தாக்க வந்ததாக பரஸ்பர முறைப்பாடு வழங்கியுள்ளார். முதல் முறைப்பாட்டுக்கு விசாரணைகளை முன்னெடுக்காத பொலிஸார், இரண்டாவதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்து, முதல் நாள் பொலிஸ் பிணையில் விடுவித்த இளைஞர்களை பொலிஸ் நிலையம் அழைத்து மீளக் கைது செய்து நேற்றைய தினம் 06 ஆம் திகதி நீதிமன்றில் முற்படுத்தியிருந்தனர். இதன்போது, கைது செய்யப்பட்ட நபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி, பிணை விண்ணப்பம் செய்ததையடுத்து மன்று அவர்களுக்குப் பிணை வழங்கியுள்ளது. அதேவேளை, முதலாவது முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுக்குமாறு மன்று பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது. மண்டைதீவு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற வன்முறைச் சம்பவத்தில் ஈடுபட்ட கும்பல் ஒன்று தமக்கு ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் ஆதரவு உள்ளதாக பெயர் குறிப்பிட்டு கூறிய சம்பவம் தொடர்பில் பொலிஸ் உயர் அதிகாரிகள் விசாரணைகளை எதிர்கொண்டு வரும், பொலிஸ் உத்தியோகத்தரே ஊர்காவற்றுறை சம்பவத்திலும் விசாரணை அதிகாரிகளில் ஒருவராக இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. (க) https://newuthayan.com/article/ஊர்காவற்றுறையில்_உண்மையில்_நடந்தது_என்ன
-
ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசிய கட்சிகளை ஓரணியாக்கும் பொறுப்பை ஏற்றது ஜ. த. தே. கூட்டணி
தமிழ்த் தேசிய கட்சிகளை ஓரணியாக்கும் பொறுப்பை ஏற்றது ஜ. த. தே. கூட்டணி புதியவன் அரச தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களுடன் பேசுவதற்கான பொறுப்பை ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி ஏற்றுள்ளது. அத்துடன், இந்த மாதத்துக்குள் இதுதொடர்பான பேச்சுக்களை ஆரம்பிக்கவும் அந்தக் கட்சி திட்டமிட்டுள்ளது என்று அந்தக் கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிறேமச்சந்திரன் தெரிவித்தார். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பங்காளிக் கட்சிகளின் கூட்டம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானங்கள் குறித்து அறிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். நேற்று வவுனியா - கோவில் புளியங்குளத்தில் தனியார் விடுதியில் நடந்த இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய தீரமானங்கள் வருமாறு: அரச தலைவர் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் விடயத்தை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொள்வது. என்றும் இதற்காக தமிழ்த் தேசிய சிந்தனை கொண்ட ஏனைய கட்சிகளான இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி, தமிழ் மக்கள் கூட்டணி, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் ஆகிய கட்சிகளுடன் பேசி அவர்களின் அபிப்பிராயங்களையும் அறிந்து இந்த விடயத்தை தொடர்ந்து முன்னகர்த்துவது என்று தீர்மானிக்கப்பட்டது. அத்துடன், ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கட்சிக்கு மாவட்டந்தோறும் குழுக்களை அமைத்து கட்சியை வலுப்படுத்துவது என்றும் இதில், பெண்களின் வகிபாகத்தையும் உறுதிப்படுத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது. (க) https://newuthayan.com/article/தமிழ்த்_தேசிய_கட்சிகளை_ஓரணியாக்கும்_பொறுப்பை_ஏற்றது_ஜ._த._தே._கூட்டணி
-
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதம் - நிலாந்தன்
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பிய கடிதம் - நிலாந்தன் கடந்த 19ஆம் திகதி தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை கொண்ட 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஒரு கூட்டுக் கடிதம் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய உப தூதரகத்தில் கையளிக்கப்பட்டது. திருச்சி சிறப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த மூன்று அரசியல் கைதிகளை விடுவிக்குமாறு தமிழக முதல்வரிடம் அக்கூட்டுக் கடிதம் கோரிக்கை விடுத்திருந்தது. திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களின் நலன்களைக் கவனிக்கும் ஒரு வழக்கறிஞரின் பங்களிப்போடு அக்கூட்டுக் கடிதம் தயாரிக்கப்பட்டது. கடந்த 17 ஆம் தேதி உத்தியோகப் பற்றற்ற விதத்தில் தமிழக முதல்வரிடம் கையளிக்கப்பட்டது. பின்னர் 19ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உள்ள உபதூதரகம் ஊடாக அனுப்பப்பட்டது. தமிழ்த்தேசிய நிலைப்பாட்டை கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் 12பேர் ஒன்றாக இணைந்து அப்படி ஒரு கடிதத்தை அனுப்பியமை முக்கியமான ஒர் அடைவு. உடல்நலக் குறைவு காரணமாக சம்பந்தர் கையெழுத்திடவில்லை. 2021ஆண்டும் ஒரு கூட்டுக் கடிதம் தயாரிக்கப்பட்டது. அந்த ஆண்டு நடக்கவிருந்த ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரை முன்னிட்டு அந்த ஆண்டு ஜனவரி மாதம் அக்கடிதம் அனுப்பப்பட்டது. கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளின் பின் மீண்டும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து ஒரு கூட்டுக் கடிதத்தை தமிழக முதல்வருக்கு அனுப்பியிருக்கிறார்கள். அதிகம் கவனத்தை ஈர்க்காத அந்த முயற்சி மகத்தானது என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் சிறப்பு முகாம் கைதிகளின் விடயத்தில் ஒன்றிணைந்த அதே கட்சிகள் ஏனைய எல்லா விடயங்களிலும் ஒன்றிணையும் என்று கற்பனை செய்யத் தேவையில்லை. தமிழரசுக் கட்சிக்குள் நடப்பவை முழுத் தமிழ் அரசியலுக்கும் பொருந்தும். தமிழ் மக்களுக்கு இப்பொழுது எதிரிகள் வெளியில் இல்லை . சொந்த வீட்டுக்குள்தான் இருக்கிறார்கள். ஒரு தேர்தல் ஆண்டில் தமிழ் மக்கள் ஒருமித்து முடிவெடுக்க முடியாத ஒரு நிலை. ஜனாதிபதி தேர்தல் தொடர்பில், தமிழ் மக்கள் மத்தியில் மூன்று விதமான முடிவுகள் காணப்படுகின்றன. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தேர்தலைப் புறக்கணிக்கின்றது. ஆனால், அந்த முடிவை மக்கள் மயப்படுத்த வேண்டும் என்று அக்கட்சி சிந்திக்கவில்லை. அதாவது தன்னுடைய முடிவு சரி என்று மக்களை ஏற்றுக்கொள்ளச் செய்து தேர்தலைப் புறக்கணிக்கும் ஒரு மக்கள் மக்கள் ஆணையைப் பெற அக்கட்சி முயற்சிக்கவில்லை. தமிழரசுக் கட்சி இரண்டாகி நிற்கிறது. ஒரு பிரிவு சஜித்தோடு நிற்பதாகத் தோன்றுகிறது. மற்றொரு பிரிவு தமிழ்ப் பொது வேட்பாளருக்குக் கிட்டவாக நிற்கிறது. குத்துவிளக்கு கூட்டணிக்குள், ஈபிஆர்எல்எப் தமிழ்ப் பொது வேட்பாளர் என்ற முடிவை எப்பொழுதோ எடுத்துவிட்டது. ஏனைய கட்சிகள் அது தொடர்பாக தமது உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளை அறிவிக்கவில்லை. விக்னேஸ்வரன்,பொது வேட்பாளரை ஏற்றுக்கொள்கிறார். இப்படியாகத் தமிழ்த் தரப்பில் மூன்று நிலைப்பாடுகள் உண்டு. ஆனால் அவை நிலைப்பாடுகள்தான். கருத்துருவாக்கம் என்ற செயற்பாட்டுக்கும் அப்பால் என்பதற்கும் அப்பால் அதை நோக்கிய கட்டமைப்புகள் எவையும் இதுவரை உருவாக்கப்படவில்லை. அதாவது கிட்டத்தட்ட ஆறு மாதங்களில் வரக்கூடிய ஒரு தேர்தலை எதிர்கொள்வதற்கு தமிழ்த் தரப்பு இப்படித்தான் தயாராகக் காணப்படுகின்றது. அதேசமயம் தென்னிலங்கையில் பிரதான கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி திட்டமிட்டு உழைக்கின்றன. ஜேவிபிதான் முதலில் உற்சாகமாக உழைக்க தொடங்கியது. “அரகலய”வின் விளைவு அது. அமெரிக்காவிலிருந்து நாடு திரும்பிய பசில் அதிகரித்து எதிர்பார்ப்போடு உழைத்து வருகிறார். அமெரிக்காவிலிருந்து வந்த பசில் தமது பேர பலத்தை அதிகரிக்கும் நோக்கத்தோடு கருத்து தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தலை முதலில் வைப்பதற்குப் பதிலாக பொதுத் தேர்தலை முதலில் வைக்க வேண்டும் என்று அவர் கூறுகிறார். ஏனென்றால் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் மக்களுக்கு முற்கற்பிதங்களை ஏற்படுத்தும். முன் முடிவுகளை உருவாக்கும். ஒரு வெற்றி அலையானது தொடர்ந்து அடுத்தடுத்த தேர்தல்களிலும் எதிரொலிக்கும். எனவே ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் பொதுத் தேர்தலிலும் மக்கள் வாக்களிக்கக்கூடும். ஒரு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றி பெறுவாராக இருந்தால், அவர் பொருளாதாரத்தை மறுசீரமைப்பதற்காக கிடைத்த வெற்றியாக அது காட்டப்படும். அதனால் ரணிலின் பேரபலம் அதிகரிக்கும். அதன்பின் நடக்கக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் தாமரை மொட்டுக் கட்சி, ரணிலோடு பேரம் பேசி வேண்டிய அமைச்சுகளைப் பெறுவது கடினமாகலாம். எனவேதான் முதலில் ஒரு பொதுத் தேர்தலை வைக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். ஒரு ஜனாதிபதித் தேர்தலில் ரணில் வெற்றி பெறுவாராக இருந்தால் அது அவருடைய சொந்தக் கட்சியின் வாக்கு வங்கியால் அல்ல என்பது அவருக்கே தெரியும். தாமரை மொட்டுக்களின் பலமின்றி வெற்றிபெற முடியாது என்ற நிலைதான் இப்பொழுதுவரை உண்டு. அவருடைய சொந்தக் கட்சியின் பலம் அவருக்கு குறைவு. எனவே அவருடைய சொந்தப் பலம் எது என்பதனை அவருக்கு உணர்த்தும் விதத்தில் ஒரு பொதுத் தேர்தலை முதலில் வைத்தால் அதில் ரணில் தன்னுடைய சொந்தப் பலம் எது என்பதைக் கண்டுபிடித்து விடுவார். அப்பொழுது அவருடைய பேரம் குறைவாக இருக்கும். அந்த நேரத்தில் ராஜபக்சங்கள் அவருடன் பேரம் பேசுவது இலகுவாக இருக்கும். நாமலை பிரதமராக நியமிக்கும்படி கேட்கலாம். எனவே முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடந்தால் அதில் ரணிலுக்குப் பேர பலம் அதிகரிக்கும். முதலில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்தால் அதில் ரணிலின் பேரம் குறையும். எனவே ரணிலின் பேரத்தைக் குறைப்பதுதான் ராஜபக்சகளின் திட்டம். இதை இன்னும் ஆழமாகச் சொன்னால் அடுத்த நாடாளுமன்றத்தையும் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதுதான் அவர்களுடைய திட்டம். எனவே ராஜபக்சத்தை தங்களுடைய பேரபலத்தை நிரூபிப்பதற்குத் தயாராகி வருகிறார்கள் என்று பொருள். இதை அதன் சாராம்சத்தில் சொன்னால், ராஜபக்சக்கள் தற்காப்பு நிலையில் இருந்து வலிந்து தாக்கும் நிலையை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள். கடந்த 2021 ஆம் ஆண்டு “அரகலய”வின் பொது அவர்கள் பின்வாங்கும் நிலையில் இருந்தார்கள். சொந்தத் தேர்தல் தொகுதிகளிலேயே அவர்களுக்குப் பாதுகாப்பு இருக்கவில்லை. படை முகாம்களில் அவர்கள் அடைக்கலம் தேட வேண்டி வந்தது. ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய வெளிநாடு ஒன்றுக்கு தப்ப வேண்டி வந்தது. ஆனால் அவ்வாறான தற்காப்பு நிலையில் இருந்து இப்பொழுது வலிந்து தாக்கும் ஒரு நிலையைத் தாங்கள் அடைந்து விட்டதாக அவர்கள் நம்புகிறார்கள். எனவே அதை நோக்கித்தான் அவர்கள் திட்டமிடுகிறார்கள். கோட்டாபயவின் புத்தகமும் அந்த அடிப்படையில் எழுதப்பட்டதுதான். ஆனால் அமெரிக்காவிலிருந்து வந்த பசில் நினைத்தபடியெல்லாம் அரசியலை நகர்த்த முடியாது என்பதைத்தான் அண்மையில் அமெரிக்காவுக்கு சென்று வந்த மைத்திரியின் சர்ச்சைக்குரிய கூற்று வெளிப்படுத்துகின்றதா? மைத்திரி கூறுகிறார், ஈஸ்டர் குண்டு வெடிப்புத் தொடர்பாக தனக்கு ரகசியங்கள் தெரியும் என்று. அவர் ஏன் அவ்வாறு கூறுகிறார் ? அதுவும் ஒரு ஜனாதிபதித் தேர்தல் வர இருக்கும் பின்னணியில் ஏன் அப்படிக் கூறுகிறார்? ஏனென்றால், ஈஸ்டர் குண்டு வெடிப்பைப்பற்றிப் பேசினால் அதன் விளைவின் விளைவுகள் ராஜபக்சக்களைத்தான் பாதிக்கும். ராஜபக்சக்கள் தற்காப்பு நிலையில் இருந்து வலிந்து தாக்கும் நிலைக்கு முன்னேறுவதை, மேற்கு நாடுகள் விரும்பவில்லையா? அப்படிப் பார்த்தால், மைத்திரி கிளப்பிய சர்ச்சையும் “சனல் நாலு” வீடியோவை போன்றதுதானா? இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், ராஜபக்சக்களை அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலுக்குச் சவாலாக எழாதபடி பார்த்துக் கொள்வதுதான் மேற்கு நாடுகளின் திட்டமா ? அதாவது ரணிலுடைய வழிகளை இலகுவாக்கிக் கொடுத்தல்? மேற்கு நாடுகளும் மேற்கத்திய பெரு நிறுவனங்களாகிய பன்னாட்டு நாணய நிதியம் போன்றனவும் ரணில் பதவியில் தொடர்ந்துமிருப்பதைத்தான் விரும்புவதாகத் தெரிகிறது. மேற்கத்திய பாரம்பரியத்தில் வந்த அவரைக் கையாள்வது இலகுவானது என்று அவை நம்புகின்றன. கத்தியின்றி ரத்தமின்றி,தேர்தலின்றிக் கிடைத்த ஆட்சிமாற்றத்தை அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கும் தொடர விரும்புகின்றன. எனவே மேற்கு நாடுகளின் விருப்பத் தெரிவு ரணில்தான். ராஜபக்சக்கள் தாம் வலிந்து தாக்கும் நிலைக்கு வளர்ந்து விட்டதாக நம்பினாலும்கூட, தங்களுக்குப் பொருத்தமான முன் தடுப்பு ரணில் விக்கிரமசிங்கதான் என்பதில் தெளிவாக இருக்கிறார்கள். எனவே, அவர்கள் ரணிலுடன் தமது பேரத்தை அதிகப்படுத்த விரும்பினாலும், ரணிலை விட்டால் அவர்களுக்கு வேறு தெரிவில்லை. அப்படித்தான் மகா சங்கத்திற்கும், படைத்தரப்புக்கும். அதாவது உள்நாட்டிலும் அனைத்துலக அளவிலும் மேற்கு நாடுகள் மத்தியிலும் ரணில் விக்கிரமசிங்கவுக்குத்தான் அதிகம் வரவேற்புக் காணப்படுகின்றது. அதனால்தான் ராஜபக்சக்கள் அவருடைய வழிகளைத் தடுக்காமல் இருக்க மைத்திரி அவ்வாறு பேச வைக்கப்படுகின்றாரா? ஆயின், இந்த விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? ரணில் விக்கிரமசிங்க எல்லாப் பேரரசுகளையும் சம தூரத்தில் வைத்துக் கையாளக்கூடிய ஒருவர். அப்படிப்பட்ட ஒருவர் இந்தியாவைப் பொறுத்தவரையிலும் கையாளக் கடினமானவர். அப்படிப் பார்த்தால் இந்தியா ரணிலை ஒரு விருப்பத் தெரிவாக எடுக்க முடியாது. அது ரணிலுக்கும் விளங்கும். அதனால்தான் அவர் ஜனாதிபதித் தேர்தலில் இந்தியா தனக்கு எதிராகப் போகாமல் தடுப்பதை நோக்கமாகக் கொண்டு இந்தியாவுடன் குறிப்பிடத்தக்க அளவுக்கு இணங்கிப் போக முயற்சிக்கின்றார். யாழ்ப்பாணத்தின் மூன்று தீவுகளிலும் இந்திய நிறுவனங்களுக்கு மீளப் புதுப்பிக்கும் எரிசக்தி திட்டங்களை வழங்கும் உடன்படிக்கைகள் கடந்த மார்ச் மாதம் முதலாம் திகதி கையெழுத்திடப்பட்டன. அதுபோலவே ராமர் பாலம் என்ற விடயத்திலும் ரணில் உண்மையாக இருக்கிறார் என்ற ஒரு தோற்றம் வெளிக்காட்டப்படுகிறது. ராமர் பாலத்தை கட்டப் போவதாக ரணில் இந்தியாவை நம்ப வைக்கின்றார். தன்னை நம்பத் தயாரற்ற ஒரு பக்கத்து பேரரசுக்கு நாட்டை முழுமையாகத் திறக்கத் தயார் என்று காட்ட ரணில் முற்படுகிறாரா? இந்தியப் பொருளாதாரம் அண்மை ஆண்டுகளில் வளர்ச்சி கண்டு வருகிறது. தமிழகத்திலும் அதுதான் நிலைமை. இவ்வாறு ஒரு பெரிய பொருளாதாரத்தோடு சிறிய இலங்கைத் தீவை நிலத்தால் இணைத்தால், இலங்கைத் தீவு விழுங்கப்பட்டு விடும் என்ற ஒரு பயத்தை சிங்கள மக்கள் மத்தியில் இலகுவாகத் தூண்ட முடியும். இந்த விடயத்தை ரணில் எப்படிக் கையாள்வாரோ தெரியவில்லை. ஆனால் அவர் ஒரு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி. பாலங் கட்டத் தயார் என்று சொன்னதிலிருந்து அவர் பின்வாங்க முடியுமா இல்லையா என்பது இந்தியா அந்த விடயத்தை எப்படிக் கையாளப்போகிறது என்பதில்தான் தங்கியிருக்கின்றது. புதுடில்லி ஜேவிபியை அழைத்து கதைத்தமையும் ரணில் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் நோக்கிலான ஒரு நடவடிக்கைதான். ரணிலுக்கு எதிராகக் கையாளப்படத்தக்க சக்திகளை இந்தியா அரவணைக்கிறது என்று பொருள். எதுவாயினும், அடுத்த ஜனாதிபதித் தேர்தல் வரையிலும் இந்தியா தனக்கு நெருக்கடிகளைத் தரக்கூடாது என்று ரணில் கருதுவதால், அவர் இந்தியாவை எப்படியும் சுதாகரிக்கத்தான் முயற்சிப்பார். இவ்வாறாக தென்னிலங்கையில் ஜனாதிபதித் தேர்தலை நோக்கி கட்சிகள் வியூகங்களை அமைத்து உழைத்து வருகின்றன. தமிழ்த் தரப்பிலோ பிரதான கட்சி நீதிமன்றத்தில் இருந்து வீட்டுக்கு வரமுடியாமல் திணறிக் கொண்டிருக்கிறது. ஒரு கட்சி புறக்கணிப்பு என்று சொல்லிவிட்டு ஒதுங்கி விட்டது. தமிழ்ப் பொது வேட்பாளரை முன்னிறுத்தும் கட்சிகள் கருத்துருவாக்கம் என்ற கட்டத்தைத் கடந்து அதற்கான கட்டமைப்பு சார்ந்த நடவடிக்கைகளில் இன்னமும் இறங்கவில்லை. தமிழ்ப் பொது வேட்பாளர் என்பது கடந்த வாரக் கட்டுரையில் கூறப்பட்டது போல, தமிழ் ஐக்கியந்தான். கடந்த 15 ஆண்டுகளாக முடியாமல் போன காரியம் அது.கடந்த மாதம் தமிழக முதல்வருக்கு அனுப்பப்பட்ட கூட்டுக் கடிதத்தைப் போல, அரிதாக ஏதாவது நடக்கும். மற்றும் படி கடந்த 15 ஆண்டுகளாக தமிழ்மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவதில் எல்லாக் கட்சிகளுமே தோல்வியடைந்து விட்டன. இந்த லட்சணத்தில் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை நோக்கி இதே கட்சிகளை எப்படி ஒருங்கிணைப்பது? அல்லது கட்சிகளைக் கடந்து மக்கள் அமைப்புகள் அதை முன்னெடுக்க வேண்டுமா ? https://www.nillanthan.com/6677/
-
தேசியத் தலைவரையும், மாவீரர்களையும், போராட்டத்தையும், தமிழர்களையும் வார்த்தைகளால் புண்படுத்திய பெண்ணிற்கு பரிசில் கொடுக்கப்பட்ட படிப்பினை
சமூகவலைத் தளங்களில் வரும் வெறுப்புக் காணொளிகளை Report செய்து அவர்களை வெளியிடுபவர்களுக்கு மேடை இல்லாமல் பார்க்கவேண்டும். ஆனால் மிகமோசமாக கதைக்கும் ஒருவரைப் இன்னும் பலர் சமூகவலைத் தளங்களில் பின்தொடர வைக்கும் இலவச விளம்பரம்தான் அவரைப் பற்றி வரும் பதிவுகள். இந்தத் திரி யாழில் வந்ததற்கு பின்னர் குறைந்தது 3 - 4 பேராவது யாழிலிருந்து அந்த உதிரிப் பெண்ணை சமூகவலைத் தளங்களில் பின்தொடர்வார்கள்! மேலும் அந்த பெண்ணை பொது இடத்தில் வைத்து அடித்து எந்தப் படிப்பினையையும் அவருக்குக் கொடுக்கவில்லை. தாமும் அவரைப் போல தரம் தாழ்ந்து, தலைவருக்கும் புலிகளுக்கும் அவமானத்தைத்தான் கொடுத்துள்ளார்கள். வீதியில் நாயின் மலம் 💩 இருந்தால் அதை விலத்தி நடப்பதுபோல சமூகவலைத் தளங்களில் கொட்டப்படும் மலங்களில் இருந்து தூர விலகவேண்டும். ஆனால் சிலர் மலநாற்றத்தை முகர்ந்து பின் தொடர்கின்றனர்!
-
ஆடுஜீவிதம் Review: எளிய மனிதனின் வாழ்வியல் போராட்டம் தரும் தாக்கம் என்ன?
அகன்ற திரையில் தமிழ் டப்பிங்கில் பார்த்தேன். மிகவும் அசலான மலையாள சினிமா. அத்துடன் தொழில்நுட்பமும் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது. ——— ஆடுஜீவிதம் - சுவாலையின் சுவை தெய்வீகன் மீட்சியற்ற கொடும் பொறியில் சிக்கிய அப்பாவிப் புலம்பெயரி ஒருவனின் விடுதலைக்கான போராட்டமும் அதன் பின்னணியில் அவன் அனுபவித்த வாதைகளையும் நுட்பமாக விவரித்த நாவல் பென்யாமின் எழுதிய ஆடுஜீவிதம். மலையாளத்தில் மாத்திரம் நூறு தடவைகளுக்கு மேல் பதிப்பிக்கப்பட்ட நாவல். ஐந்துக்கும் மேற்பட்ட பிறமொழிகளில் மொழிபெயர்கக்ப்பட்டது. உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட இந்த நாவலில் நிகழும் பல சம்பவங்களும் பாத்திரங்களின் மன அமைப்புக்களும் அவற்றின் முரண்களும் ஆடுஜீவிதம் என்ற புலம்பெயர் களத்தில் கதையுடைய பிரதிக்கு கூடுதல் பலம் சேர்ப்பவை. சவுதியில் வேலை செய்வதற்காக கேரளத்திலிருந்து போயிறங்கும் நஜீப் என்ற இளம் குடும்பஸ்தன், கூடச்சென்ற ஹக்கீம் என்ற இளைஞனோடு விமானநிலையத்தில் வைத்து ஆட்டுப்பண்ணை நடத்துபவன் ஒருவனால் கூட்டிச்செல்லப்படுகிறான். பாலை நிலப் பண்ணையொன்றில் கொண்டுபோய் அடைத்தபிறகுதான், தான் அடிமையாகக் கொண்டுவரப்பட்டதை நஜீப் உணர்கிறான். ஆடு மேய்ப்பவனாக அவன் அனுபவிக்கின்ற தொடர் துயரத்திலிருந்து தப்புவதற்கு ஒரு வழி பிறக்கிறது. அருகிலிருந்த இன்னொரு பண்ணையில் அடிமையாக அடைக்கப்பட்டிருந்த அவனது தோழன் ஹக்கீமுடனும் புதிய அடிமை இப்ராஹிம் என்பவனோடும் அங்கிருந்து தப்புகிறார்கள். கதையின் நாயகன் நஜீப் எவ்வாறெல்லாம் நரக வாதைப்பட்டு, ஈற்றில் இந்தியா திரும்புகிறான் என்பது இந்த நாவிலின் சுருக்கம். நாவலின் முக்கிய பகுதிகளை கதைப்புள்ளிகளின் அடிப்படையில் வகுத்தால் - நஜீப் மீதான அவனது அரேபிய முதலாளியின் கொடுமை அடிமையாகப் பணிபுரியும் பண்ணையென்றாலும், நஜீபுக்கும் அவன் வளர்க்கும் ஆடுகள் - ஒட்டகங்களுக்கும் இடையான உறவின் இறுக்கம். பணனையிலிருந்து தப்பும்போது எதிர்கொள்ளும் கொடுந்துயரை, பாலை நிலத்தின் நுட்பமான அவதானங்களின் ஊடாக நில வரைவியல் சார்ந்து முன்வைப்பது. நஜீபின் இறைபக்தி இந்த உணர்வுபூர்வமான பகுதிகளைச் சுற்றித்தான் இந்த ஒட்டுமொத்த நாவலும் விரிகிறது. "ஆட்டுப் பண்ணையில் அடிமையாக வாழ்ந்த தனது வாழ்வும் அங்கிருந்த ஆட்டின் வாழ்வும் ஒன்றே. அங்கு தானும் ஒரு ஆடுதான்" - என்ற நஜீபின் வலிநுரைக்கும் வாக்குமூலத்தோடு நாவல் நிறைவுறுகிறது. ஆடுஜீவிதம் நாயகன் மாத்திரமல்ல, உலகின் அத்தனை நாடுகளிலும் புலம்பெயரிகளாகத் தங்கள் வாழ்க்கையை ஒப்புக்கொடுத்தவர்கள் அனைவருமே, ஆடுஜீவிதத்தில் வருகின்ற ஆடுதான். இது புலம்பெயரிகள் ஒவ்வொருவருக்கும் தெரியும். அரேபியப் பண்ணையில் ஆண்மை சிதைக்கப்பட்டு, முடிந்தவரையில் பாலும் கம்பளியும் எடுக்கப்பட்ட பின்னர், தேர்ந்த ஆடுகள் இறைச்சிக்கு அனுப்பப்டுவதைப் போலவும் எஞ்சியவற்றின் இறப்புக்களுக்கு கணக்கே இல்லை என்பது போலவும்தான் புலம்பெயரி ஒவ்வொருவனுடைய வாழ்வுக்கும் சாவுக்கும் வெளிநாட்டு மண்ணில் எஞ்சியுள்ள பெறுமானம். இந்த உண்மையை ஒவ்வொரு நாடும், வெவ்வேறு கலைச்சொற்களால் போர்த்திக்கொல்லாம். ஆனால், உண்மை வேறானது. ஈழத்தமிழர்களின் புலம்பெயர் வாழ்வு இவ்வாறான பல லட்சம் ஆடுகளால் ஆனது. கரை சேர்ந்த நாடுகள் ஒவ்வொன்றிலும் தொண்ணூறுகளிலிருந்து கணக்கெடுத்தால், இவ்வாறான பல ஆடுஜீவிதத் தொடர்களை எழுதிவிடக்கூடிய கதைகளைக் கொண்டது. எயார் போர்ட் கதைகள், ஏஜென்ஸி கதைகள், படகுக் கதைகள், பழம்பிடுங்குவதற்கு ஏற்றிச்செல்லப்பட்டவர்களின் பண்ணைக் கதைகள் என்று பல்லாயிரம் திரைப்படங்கள் எடுத்துவிடப்போதுமானவை. இந்தப் புலம்பெயர் வாழ்வின் கூட்டுவலியின் பிரதியாக ஆடுஜீவிதம் திரைப்படம் எம் முன் விரிகிறது. ஒரு புலம்பெயரியாக நாவலின் தீவிரத்தையும் நஜீபின் ஒவ்வொரு உணர்வையும் காட்சிக்குள் யதார்த்தபூர்வமாகப் பொருந்திக்கொண்ட கதையையும் ப்ரிதிவிராஜின் நடிப்பினையும் திரையில் மிகவும் ரசித்தேன். நாவலில் உள்ள அத்தனை காட்சிகளையும் நீட்டி முழக்கும் வசதியிருந்தால், ஒரு தொடராகவே ஆடுஜீவிதத்தை இன்னும் விரித்துக்கொள்ளலாம். ஆனால், இரண்டரை மணிநேரத் திரைப்படத்திற்குள் நாவலின் கதைமையத்தை எவ்வாறு நுட்பமாகப் பார்வையாளனிடம் கொண்டுசெல்வது என்ற சவாலை இயக்குனர் திறம்படக் கையாண்டிருக்கிறார். திரைப்படத்திற்காக நாவலிலிருந்து வெட்டிய நீக்கிய பகுதிகளை ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவே இருந்தது. அதுபோல, விரித்துச்சொல்லப்படவேண்டிய பல விடயங்களை அர்த்தபூர்வமான ஒற்றைக் காட்சிகளால் குறிப்புணர்த்திய இடங்களும் திரைக்கதைக்கு தீவிரத்தன்மையைக் கொடுத்திருந்தது. உதாரணமாக, மழைக்கு அஞ்சும் பண்ணை முதலாளி, அவனைச் சுடக்கூடிய வாய்ப்பிருந்தும் நஜீப் துப்பாக்கியைத் திருடாமல் விட்டுவிடுவது, ஆடுகளின் ஆண்மை நீக்கம் போன்ற பல காட்சிகள் கிட்டத்தட்ட இந்தத் திரைக்கதைக்குத் தேவையற்றவை. ஆனால், ஆடுகளுக்கும் நஜீபிற்கும் இடையில் காலப்போக்கில் உருவான உறவு மிகவும் நெருக்கமானது. தனது மகனுக்குச் சூட்டுவதற்காக எண்ணியிருந்த பெயரை புதிதாய் பிறந்த ஆட்டுக்குட்டிக்கு வைத்துக்கொண்டளவு ஆடுகளுக்கும் அவனுக்குமான பிணைப்பு வலியது. ஆனால், அந்த உறவின் பெறுமானத்தை, தப்பியோடுவதற்கு முன்னரும் ஆடுகளுக்கும் ஒட்டகத்திற்கும் தீவனம் போடுகின்ற காட்சியின் மூலம் ப்ரிதிவிராஜின் நடிப்பு இலகுவாக உணர்த்திவிடுகிறது. தப்பிச்செல்லும் பாலையின் கொடூரத்தை ஹக்கீம் பலியாகும் காட்சி ஆத்மார்த்தமாகச் சொல்லிவிடுகிறது. பாலையின் தன்மைகள் ஓரளவுக்கு சூடானியன் இப்ராஹிமின் வழியாக காட்சியாகின்றன. இவ்வாறு நாவலின் பல இடங்கள் யதார்த்தத்தை மீறாமலும் திரையின் இலக்கணத்தோடு ஒத்துப்போனதும் கச்சிதமாயிருந்தது. 'ஆடுஜீவிதம்' திரைப்படம், நாவலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு துளியிலிருந்து விரிவான கடல் அல்ல. நாவல் எனும் கடலையே ஏறக்குறைய தனக்குள் போதுமானளவு ஏற்றுக்கொண்டிருக்கிறது. ஆடுஜீவிதம் - நிறைந்த அனுபவத்தை அருளிய திரைப்படம். https://www.theivigan.co/post/10009
-
விவாகரத்து – கையாள்வது எப்படி? மறுமணம் சரியானதா?
விவாகரத்து – கையாள்வது எப்படி? மறுமணம் சரியானதா? KaviApr 06, 2024 09:36AM சத்குரு விவாகரத்து மோசமான ஒரு விஷயமா? விவாகரத்தை எப்படி கண்ணியமாக கடந்து செல்வது? விவாகரத்துக்குப் பின்பு, மறுமணம் செய்துகொள்வது சரியா? மறுமணத்தினால் குழந்தைக்கு ஏற்படும் விளைவுகள் என்ன? இத்தனை கேள்விகளுடன், இந்தப் பதிவில், விவாகரத்தின் எல்லாக் கோணங்களையும் உள்ளடக்கியுள்ள சுவாரஸ்யமான மேலும் பல அம்சங்களுக்கு சத்குரு பதில் தருகிறார். விவாகரத்துக்கான காரணங்கள் கேள்வியாளர் : திருமணம், சோர்வை ஏற்படுத்தும் ஒரு யுத்தகளமாகும் போது, விவாகரத்து செய்துகொள்வது மேலானதுதானே? பதில் நம்மால் மற்றொரு நபருடன் சண்டையிடாமல் வாழமுடிந்தால், அப்போது விவாகரத்து என்ற கேள்வியே எழாது. நீங்கள் வீதியில் செல்லும் யாரோ ஒருவருடன் சண்டையிடவில்லை, ஒரு காலத்தில் அற்புதமானவர் என்று யாரை நீங்கள் நினைத்தீர்களோ அவருடன் சண்டையிடுகிறீர்கள். இந்த சண்டையானது, அந்த நபர் திடீரென்று அசிங்கமானவர் ஆகிவிட்டார் என்ற காரணத்தினால் அல்ல. இந்த சண்டை ஏன் எழுந்துள்ளது என்றால், நாம் வளர்ந்து வரும் நிலையில், நமக்குள் சில மாற்றங்கள் நிகழ்கின்றன. ஆனால், அதை நாம் ஏற்றுக்கொள்ள மறுக்கிறோம். இரண்டு நபர்கள், இரண்டு திசைகளில் வளர்வது சரியானதுதான். இணைந்திருப்பதற்கு ஒரே விதமாக நாம் இருக்கவேண்டியது இல்லை. இருவரும் ஒரே விஷயங்களை விரும்பவேண்டும், ஒரே விஷயங்களைச் செய்யவேண்டும் அல்லது ஒரே விதமாக உணரவேண்டும் என்ற அவசியமில்லை. அவர்கள் வெவ்வேறு வழிகளில் வித்தியாசமாக இருந்துகொண்டும், இணைந்து வாழமுடியும். உங்களுடன் இணைந்திருப்பதற்கு, மற்றவரும் உங்களைப் போலவே இருக்கவேண்டும் என்று நினைப்பதில் ஒருவிதமான முதிர்ச்சியின்மை இருக்கிறது. உலகில் எங்குமே, இரண்டு தனிமனிதர்கள் அச்சு அசலாக ஒரே விதமாக இல்லை. இரண்டு தனிமனிதர்களுக்கு இடையில், வாழ்வின் சில அம்சங்களில் சில வித்தியாசங்கள் இருக்கும். ராபர்ட் ஒவன் என்ற அமெரிக்க நூலாசிரியர் கூறினார்,” உலகத்தில் இருக்கும் அனைவரும் வினோதமானவர்களாகவே இருக்கின்றனர், என்னையும் உங்களையும் தவிர. ஆனால் நீங்களும்கூட சிறிது வினோதமானவர்தான்” தயவுசெய்து உங்கள் மனதை உற்றுப்பாருங்கள். உங்கள் காரண அறிவின் பாதையில் நீங்கள் சென்றால், உலகத்தில் ஒருவரும் சரியானவர் இல்லை. உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு மிகவும் அன்பான நபரை சற்று நெருங்கிச் சென்று, அந்த நபருடன் உங்களுக்கு எத்தனை அடுக்குகள் எதிர்ப்பு இருக்கிறது என்று சோதனை செய்து பாருங்களேன். வீதியில் செல்லும் மனிதரை மறந்துவிடுங்கள், உங்கள் வாழ்க்கையில் இருக்கும் நெருங்கிய நபரிடம்கூட உங்களுக்கு பல அடுக்குகளில் எதிர்ப்பு இருக்கிறதல்லவா? ஆகவே, அதன் பொருள் என்னவென்றால், உலகில் ஒருவரும் உங்களுக்கு சரியானவர் இல்லை. ஒருவரும் சரியில்லை என்றால், இதில் சரி அல்லது சரியில்லை என்பதெல்லாம் கிடையாது. அது என்னவென்றால் நீங்கள் உளவியல் ரீதியாக பாதிப்படைந்து கொண்டிருக்கிறீர்கள். ஏற்கனவே அதை நோக்கி நீங்கள் முதல் அடியை எடுத்துவைத்துள்ளது போல் தோன்றுகிறது. அந்த நோக்கில் நீங்கள் மேலும் முன்னேறினால், அது மேலும் பெரிய பிரச்சனைகளைக் கொண்டுவரும். இரண்டு வெவ்வேறு நபர்கள், இரண்டு வித்தியாசமான புரிதல்களுடன் செயல்படுவதில் தொந்தரவு எதுவும் இல்லை. அடிநாதமான காதல் உணர்ச்சிதான் இருவரையும் இணைத்து வைத்திருக்கிறது. எல்லாவற்றையும் விட, நீங்கள் இருவரும் பரஸ்பரம் மற்றவரின் நல்வாழ்வுக்கான தேடுதலில் இணைந்தீர்கள். நாம் இதைப் புரிந்துகொள்வோம். காதல் என்று இப்போது வழக்கத்தில் இருப்பதெல்லாம் பொதுவாகவே பரஸ்பர இலாப திட்டமாகத்தான் இருக்கிறது. உங்களுக்கென்று சில தேவைகள் உள்ளன, மற்றொரு நபருக்கும் சில தேவைகள் உள்ளன. இந்தத் தேவைகளை நிறைவேற்றிக்கொள்வதற்காக, இருவரும் இணைகின்றீர்கள். அந்தத் தேவைகள் உடலியல், உளவியல், உணர்ச்சி, சமூகம் அல்லது பொருளாதாரம் என்று பல்வேறு நிலைகளில் இருக்கக்கூடும். உங்களது ஏதோ ஒரு தேவை சரிவர நிறைவேறாமல் போகும் அந்தக் கணமே, அது முடிந்துவிடுகிறது. அப்படித்தான் நீங்கள் வாழ்க்கையில் பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறீர்கள். உறவு நிலையில் அங்கே வேறெதுவும் இருப்பதில்லை. இன்னொரு நபரிடமிருந்து நீங்கள் மிகச் சிறந்ததைப் பெற்றுக்கொள்ள விரும்புகிறீர்கள், மற்றொரு நபரும் உங்களிடமிருந்து மிகச் சிறந்ததைப் பிழிந்தெடுத்துக்கொள்ள விரும்புகிறார். இது ஒரு யுத்தம்தானே தவிர, காதல் உறவு அல்ல. காதல் என்பது உங்களைப் பற்றியது நீங்கள் எதனைக் காதல் என்று அழைக்கிறீர்களோ, அது யாரோ ஒருவரைப் பற்றிய விஷயம் அல்ல, அது உங்களைப் பற்றியது, உங்களுக்குள் நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் என்பதைப் பற்றியது. உங்கள் உடல் இனிமையாக இருந்தால், இதை நாம் ஆரோக்கியம் மற்றும் இன்பம் என்று அழைக்கிறோம். உங்கள் மனம் இனிமையாக இருந்தால், இதை நாம் மகிழ்ச்சி மற்றும் ஆனந்தம் என்கிறோம். உங்களுடைய உணர்ச்சிகள் மிகவும் இனிமையாக இருந்தால், இதை நாம் அன்பு அல்லது நேசம் என்று அழைக்கிறோம். உங்கள் சக்தி நிலைகள் மிகவும் இனிமையாக இருந்தால், இதை நாம் பரவசம் என்று அழைக்கிறோம். இவைகள் உங்களுக்குள் நீங்கள் எப்படி இருப்பது என்பதற்கான சில வழிகள். இதற்கு வேறு எவருடனும் எதுவும் செய்வதற்கில்லை, ஆனால் நீங்கள் இதை யாரோ ஒருவருடன் தொடர்புபடுத்துகிறீர்கள். யாரோ ஒருவர் உங்கள் மனம், உணர்ச்சி மற்றும் உடலை இனிமைப்படுத்த வேண்டும் என்று இருந்தால், நீண்ட காலத்திற்கு இது நிகழப்போவதில்லை. எந்த மனிதரும் அதை என்றென்றும் ஒரே நிலையில் தொடர்ந்து வைத்திருக்கமுடியாது. ஒருவேளை அவர்கள் உங்களைச் சந்தித்த புதிதில், மூன்று நாட்களுக்கு, உங்கள் மனம், உணர்ச்சி மற்றும் உடலை இனிமையாக வைத்திருப்பதற்கு எல்லாவற்றையும் செய்வார்கள், ஆனால் அதையே ஒருவராலும் நீடித்திருக்கச் செய்யமுடியாது. அது எந்த மனிதருக்கும் சாத்தியமே இல்லை. ஆகவே, உங்கள் மனம், உணர்ச்சி மற்றும் உடலை இனிமையாக வைத்திருப்பது எப்படி என்பதை நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும். உங்களது உணர்ச்சிகள் இனிமையின் வழியில் இருந்தால், நீங்கள் உங்கள் இயல்பிலேயே அன்பாக இருப்பதுடன், வேறுபாடுகள் என்னவாக இருந்தாலும், எல்லாம் சரியாக இருக்கிறது. அது இல்லையென்றால், ஒவ்வொரு சிறு வித்தியாசமும் ஒரு பெரிய பிரச்சனையாக இருக்கிறது. உங்களுக்குள் ஒருவிதமான இனிமை இருக்கும்போதுதான், மற்றவர்கள் உங்களுடன் நெருக்கமான வட்டத்தில் இருக்கமுடியும். https://minnambalam.com/featured-article/how-to-deal-with-divorce-is-remarriage-right-by-sadhguru-article-in-tamil/
-
தமிழரசுக் கட்சி வழக்கு ஏப்ரல் 24 க்கு ஒத்திவைப்பு – எதிராளிகள் ஆட்சேபனைகளை தெரிவிக்க அவகாசம்
தமிழரசுக் கட்சி வழக்கு ஏப்ரல் 24 க்கு ஒத்திவைப்பு – எதிராளிகள் ஆட்சேபனைகளை தெரிவிக்க அவகாசம் April 5, 2024 இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நிர்வாகத்துக்கு எதிராக அதன் உறுப்பினர் ஒருவர் தாக்கல் செய்த வழக்கில் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி. தவிர்ந்த ஏனைய எதிராளிகள் அறுவரும், தங்களின் ஆட்சேபனைகளை எழுத்தில் சமர்ப்பிப்பதற்காக கால அவகாசம் கோரியமையை அடுத்து எதிர்வரும் 24 ஆம் திகதி வரை அவகாசம் வழங்கி அந்தத் திகதிக்கு வழக்கை ஒத்திவைத்தது நீதிமன்றம். திருகோணமலை மாவட்ட நீதிபதி மா.கணேசராஜா முன்னிலையில் இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்டது. அப்போது, ஏழு எதிராளிகளில் ஒருவரான சுமந்திரன் தமது தரப்பு ஆட்சேபனைச் சமர்ப்பணங்களை எழுத்தில் சமர்ப்பித்தார். ஏனைய எதிராளிகள் தமது ஆட்சேபனை சமர்ப்பணங்களை சமர்ப்பிக்காத நிலையில் தாங்களும் அதனை முன்வைப்பதற்குக் கால அவகாசம் கோரினர். அதற்கு அவகாசம் வழங்கி வழக்கை 24ஆம் திகதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார். இந்த வழக்கு இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது எதிராளியான சுமந்திரன் முதல் தடவையாக நீதிமன்றில் முன்னிலையானார். அவர் தமக்காகத் தாமே சமர்ப்பணம் செய்தார். கடந்த 17ஆம் திகதி வவுனியாவில் நடைபெற்ற கட்சியின் அரசியல் குழு, கட்சியின் நிலைப்பாட்டை நீதிமன்றத்தில் வெளிப்படுத்தும்படி தம்மை வழிப்படுத்தி இருப்பதால் அதன் அடிப்படையில் தான் இந்த ஆட்சேபனைச் சமர்ப்பணங்களை முன் வைக்கின்றார் என சுமந்திரன் தெரிவித்தார். வழக்காளி கட்சி மீது சுமத்திய குற்றச்சாட்டுகளையும் தவறுகளையும் அப்படியே ஏற்றுக்கொள்வது கட்சியின் முடிவல்ல என்பதையும், கட்சியின் உண்மையான நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும்படி அரசியல் குழு தன்னை வழிப்படுத்தி இருக்கின்றது என்றும் சுமந்திரன் நீதிமன்றத்தில் சொன்னார். வழக்காளியும், ஏனைய எதிராளிகளும் இந்த உறுப்பினரின் விண்ணப்பம் தொடர்பில் ஆட்சேபனை ஏதும் தங்களுக்கு இருக்குமாயின் அதனைத் தெரிவிப்பதற்கு கால அவகாசம் கோரியதனால் அதற்கும் 24ஆம் திகதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டது. https://www.ilakku.org/தமிழரசுக்-கட்சி-வழக்கு-ஏ/
-
வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் அற்புதராஜா முன்னிலை..
வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் அற்புதராஜா முன்னிலை.. வவுனியாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பதவிக்கான தெரிவில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடப் பேராசிரியர் அ. அற்புதராஜா புள்ளிகளின் அடிப்படையில் முன்னிலை பெற்றிருக்கிறார். தற்போதைய துணைவேந்தர் பேராசிரியர் தம்பு மங்களேஸ்வரனின் பதவிக் காலம் எதிர்வரும் ஜூலை 13 ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ள நிலையில், அந்தப் பல்கலைக்கழகத்தின் பதிவாளரால் துணைவேந்தர் பதவிக்காகக் கடந்த மாதம் விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. பெரும்பான்மை இனப் பேராசிரியர் ஒருவர் உட்பட நான்கு விண்ணப்பங்கள் கிடைத்திருந்தன. அவை கடந்த மாதம் இடம்பெற்ற விசேட பேரவைக் கூட்டமொன்றில் சமர்ப்பிக்கப்பட்ட போது, அவற்றில், பெரும்பான்மை இனப் பேராசிரியரின் விண்ணப்பம் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சுற்றறிக்கைக்கேற்பச் சமர்ப்பிக்கப்படவில்லை என நிராகரிக்கப்பட்டது. விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்ட மூவரும் நேற்று, 5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விசேட பேரவைக் கூட்டத்தில் தமது எதிர்காலத் திட்டங்கள் குறித்து விளக்கமளித்தனர். அதனைத் தொடர்ந்து பேரவை உறுப்பினர்கள் விண்ணப்பங்களை மதிப்பீடு செய்து புள்ளிகளை வழங்கினர். பெறப்பட்ட புள்ளிகளின் அடிப்படையில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தின் இலத்திரனியல் மற்றும் மின்னியல் துறைப் பேராசிரியர் அ. அற்புதராஜா முதல் நிலையிலும், வவுனியா பல்கலைக்கழகப் பிரயோக விஞ்ஞான பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் திருமதி அனந்தினி நந்தகுமாரன், வியாபாரக் கற்கைகள் பீட சிரேஷ்ட விரிவுரையாளர் பேராசிரியர் அ. புஸ்பநாதன் ஆகியோர் முறையே இரண்டாம், மூன்றாம் இடங்களையும் பெற்றுள்ளனர். இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தெரிவு செய்வதற்கான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுச் சுற்றறிக்கையின் படி, புள்ளிகளின் அடிப்படையில் முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்களின் விபரங்கள் பல்கலைக் கழக மானியங்கள் ஆணைக்குழு, கல்வி அமைச்சு ஆகியவற்றினூடாக அரசதலைவருக்கு அனுப்பி வைக்கப்படும். பல்கலைக் கழகச் சட்டத்தின் படி அரசதலைவருக்குள்ள அதிகாரத்தின் அடிப்படையில், பேரவையினால் முன்மொழியப்பட்ட மூவரில் இருந்து ஒருவரைத் துணைவேந்தராக அரசதலைவர் தெரிவு செய்து, நியமனம் செய்வார். https://newuthayan.com/article/வவுனியாப்_பல்கலைக்கழகத்_துணைவேந்தர்_பதவிக்கான_தெரிவில்___அற்புதராஜா_முன்னிலை..
-
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது!
கனடாவில் தமிழ் இளைஞன் ஒருவர் கைது! Vhg ஏப்ரல் 05, 2024 43 வயதான சுரேஷ் நித்தியானந்தன் ரொரன்ரோ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். Don Mills ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கிய குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பெண் மீது தாக்குதல் கடந்த (30-03-2024)ஆம் திகதி ரயில் நிலையத்திற்கு அருகில் பெண் ஒருவரை தாக்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேகநபருக்கு எதிராக நான்கு குற்றச்சாட்டுகள் பதிவாகியுள்ளன. அவருக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் எதுவும் நீதிமன்றத்தில் இதுவரை நிரூபிக்கப்படவில்லை. காயம் அடைந்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கனடா பொலிஸார் தெரிவித்துள்ளனர். அந்தப்பெண் ஈழத்தமிழர்களின் போராட்டத்தை மிக இழிவாக தகாத வார்த்தைகளால் பேசிய ஒரு இலங்கை பெரும்பான்மை இன பெண் என கூறப்படுகிறது. https://www.battinatham.com/2024/04/blog-post_73.html Toronto man, 43, facing multiple charges in Don Mills Station assault probe Woman allegedly assaulted while walking with her children, police say Published Apr 01, 2024 • Suresh Nithiyananthan, 43. Photo by Toronto Police A 43-year-old Toronto man has been charged in connection with an alleged assault of a woman walking with her children near Don Mills Station over the weekend. Suresh Nithiyananthan is charged with assault with a weapon, assault causing bodily harm, uttering death threats and mischief/damage to property not exceeding $5,000. Police said that on Saturday at about 12:26 p.m., the victim was walking when a man made a comment toward her children, which prompted the victim to reply to the suspect. The man then allegedly kicked the woman before grabbing an object, striking her multiple times over the head and threatening to kill her. The victim dropped her phone, which ended up being broken, during the alleged assault. The suspect fled on foot. Anyone with information is asked to contact the police at 416-808-3300 or Crime Stoppers anonymously at 416-222-TIPS (8477) or 222tips.com. https://torontosun.com/news/local-news/toronto-man-43-facing-multiple-charges-in-don-mills-station-assault-probe
-
பாரிஸ் இலக்கியச் சந்திப்பும் கூக்குரல் இட்டோரும்
உங்கள் யூகம் கூட ஒழுங்காக வேலை செய்யவில்லை! 🤪