Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. கைது செய்யப்பட்ட கே.பி.யுடன் தனித்து உரையாடிய கோத்தா! பொன்சேகா வெளியிடும் தகவல்கள் மலேசியாப் பொலிஸாரே கே.பி.யைக் கைது செய்தனர். இலங்கைக்கு கொண்டுவரப்படும் வரை அவர் கே.பி என்பது எமக்குத் தெரியாது என்று முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கோத்தாபய ராஜபக்ச கே.பி.யை வீட்டுக்கு வரவழைத்தே உரையாடினார். அவர் வசம் இருந்த புலிகளின் பணம், கப்பல்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு ராஜபக்சக்களும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் பொன்சேகா தெரிவித்துள்ளார். அவர்மேலும் தெரிவிக்கையில், கே.பி.யை மலேசியப் பொலிஸாரே கைது செய்தனர். அது பற்றி நாம் அறிந்திருக்கவில்லை. இலங்கையால் தேடப்படும் நபரொருவர் எம்மிடம் உள்ளார். குழுவொன்றை அனுப்பினால் ஒப்படைக்கலாம் என மலேசியாவில் இருந்து எமக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இதற்கமைய நால்வரடங்கிய சி.ஐ.டி குழு அங்கு சென்றது. அந்தக் குழுவுடன் மலேசியா வில்இருந்தும் குழுவொன்றும் வந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னரே, கைதுசெய்யப்பட்ட வர் கே.பி என்ற தகவலை அவர்கள் வெளியிட்டனர். கோத்தாபய ராஜபக்ச என்ன செய்தார்? 24 மணி நேரத்துக்குள் கே.பி.யை வீட்டுக்கு அழைத்தார். தனியாகப் பேச்சு நடத்தினார். அப்போது கே.பி. வசம்தான் புலிகளின் நிதி, கப்பல்கள் இருந்தன. ஒரு மாதத்துக்குப் பின்னர் கேபி விடுவிக்கப்பட் டார். அப்போது நான் இராணு வத்தில் இருக்கவில்லை. கே.பி வசம் இருந்த பணத்துக்கு என்ன நடந்தது? அவை அரசுடமையாக்கப்படவில்லை. கேபியுடன் இவர்கள் தான் (ராஜபக்சக்கள்) கலந்துரையாடினார்கள். என்ன நடந்தது என்பது அவர்களுக்குதான் தெரியும். எனவே, இதற்கு பொறுப்புக்கூறவேண்டும் என்றார். https://newuthayan.com/article/கைது_செய்யப்பட்ட_கே.பி.யுடன்_தனித்து_உரையாடிய_கோத்தா!
  2. இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா அறிக்கை வெளியிட்டது! adminSeptember 9, 2025 ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஐக்கிய இராச்சியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை மனித உரிமைகளுக்கான பிரித்தானிய உயர் ஆணையர் எலினோர் சாண்டர்ஸ் முன்வைத்துள்ளார். இலங்கைக்கு ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் பயணம் செய்தமைக்கும், ஆணையர் வெளியிட்ட அறிக்கைக்கும் எலினோர் சாண்டர்ஸ் தனது அறிக்கையின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார். இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் குறித்த விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், சர்வதேச தரத்தின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரித்தானியா வலியுறுத்துகிறது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யத் தவறுவதன் மூலம் அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்த சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது குறித்தும் இந்த அறிக்கையில் கவலை வெளியிடப்பட்டுள்ளது. மோதல் தொடர்பான பாலியல் வன்முறையில் இனப் பாகுபாடு ஒழிப்புக்கான ஐ.நா அலுவலகத்தின் (ORAC) பணியை பிரித்தானியா ஊக்குவிப்பதுடன், இந்தப் பிரச்சினையை முன்னுரிமையாகக் கையாள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. இந்தப் பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கத்துடன் திறம்பட ஈடுபடுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பிரித்தானியா தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில், கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் முக்கிய குழுவும் நேற்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது. ஐ.நா.வுக்கான பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி குமார் அய்யர் தொடர்புடைய அறிக்கையை வெளியிட்டார், மேலும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத்தின் வருகைக்கும் நன்றி தெரிவித்தார். மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நல்லாட்சி மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் ஆகியவற்றிற்கான அதன் உறுதிப்பாட்டை அர்த்தமுள்ள நடவடிக்கையாக மாற்ற இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு நேற்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் தொடங்கியது. அமர்வில் பேசிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், நாட்டில் மனித உரிமை மீறல்களை விசாரிக்க முன்மொழியப்பட்ட எந்தவொரு வெளிப்புற தலையீடு அல்லது பொறிமுறையையும் இலங்கை நிராகரிப்பதாகக் கூறினார்.https://globaltamilnews.net/2025/220202/
  3. கொக்கென நினைத்தாயோ ? ஆங்கில மூலம் : யமுனா ஹர்ஷவர்தன் தமிழாக்கம் : கார்த்திக் பாண்டவர்கள் வனத்தில் வசித்து வந்த காலத்தில் அவர்களை சந்திக்க ரிஷி மார்கண்டேயர் அங்கே வந்தார். அப்பொழுது அவரிடம் யுதிஷ்டிரன் பெண்களை பற்றி உயர்வாக பேசினான். அந்த சமயத்தில் அவர்களுக்கு மார்க்கண்டேயர் ஒரு கதையைக் கூறினார். முன்னொரு காலத்தில் கௌசிகன் என்றொரு ப்ராமண பிரம்மச்சாரி வசித்து வந்தார். கடுமையான விரதங்கள் மூலம் தனது பிரம்மச்சரியத்தை காத்து வந்தார். ஒருநாள் மரத்தடியில் அவர் த்யானத்தில் இருந்த பொழுது அங்கே பறந்த கொக்கு ஒன்று அவரது தலையில் எச்சமிட்டது. அதனால் கோபமடைந்த கௌசிகன் கோபத்துடன் எரித்து விடும் எண்ணத்துடன் அதை பார்த்தார். அடுத்த நொடி அந்த கொக்கு எரிந்து சாம்பலானது. தான் நினைத்தது உடனே பலித்ததை எண்ணி பெருமை அடைந்தார். அடுத்த நாள், தனது தினசரி வழக்கப்படி பிக்ஷை எடுக்க சென்றார். அவர் சென்ற வீட்டுப் பெண்மணி, தனது வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்ததனால் அவரைக் காத்திருக்க சொன்னாள். அவள் வேலையை முடிக்கும் தருணத்தில் அவளது கணவன் வந்து விட அவனை கவனிக்க சென்று விட்டாள். அவனுக்கு உணவளித்தப் பின், கௌசிகனுக்கு பிக்ஷை இட வந்தாள். வெகுநேரம் காத்திருந்ததால் கோபமடைந்த கௌசிகன் அவளை கோபமாய் பார்க்க அவளோ ” நீ கோபத்துடன் பார்த்தால் எரிந்து விட நான் என்ன கொக்கா? நான் எனது தர்மத்தை சரியாக கடைப்பிடிக்கும் பெண்” என்றுக் கூறினாள். தான் கொக்கை எரித்தது இவளுக்கு எவ்வாறு தெரிந்தது என கௌசிகனுக்கு ஆச்சர்யம். அதைக் கண்ட அந்த பெண் “பார்த்தால் கற்றறிந்தவர் போல் இருக்கிறீர்கள். ஆனால் , எது தர்மம் என அறியாமல் உள்ளீர்களே? உண்மையான தர்மத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்றால் பக்கத்துக்கு நகரத்தில் வசிக்கும் தர்மவியாதரை சென்று சந்தியுங்கள்” எனக் கூறினாள். வியப்புடன் நகரத்திற்கு சென்ற கௌசிகனுக்கு அடுத்த ஆச்சர்யம் காத்திருந்தது. தனிமையான குடிலில் தவம் செய்து கொண்டிருக்கும் ஒருவரை எதிர்ப்பார்த்து சென்றவருக்கு தர்மவியாதர் கசாப்பு தொழில் செய்பவர் என தெரிந்ததும் அவர் என்ன தர்மத்தை தமக்கு சொல்லி விட முடியும் என்ற யோசனை தோன்றியது. கௌசிகனை கண்டதும் “தர்மம் அறிந்த பெண்மணி அனுப்பியவர்தானே தாங்கள்? சற்று காத்திருங்கள். என் வேலையை முடித்துவிட்டு வருகிறேன்” எனக் கூறி தனது வேலையை கவனிக்க துவங்கினார். மீண்டும் ஆச்சரியப்பட்ட கௌசிகன் அவருக்காக காத்திருந்தார். தன் வேலையை முடித்துக்கொண்டு கௌசிகனை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு சென்றார் தர்மவியாதர். அங்கே சென்றும் எதுவும் கூறாமல் , அங்கே இருந்த அவரது வயதான பெற்றோருக்கு பணிவிடை செய்யத் துவங்கினார். அதுவரை தன்னைப் பற்றி மட்டும் எண்ணி வந்த கௌசிகனுக்கு உண்மையான தர்மம் என்னவென்று புரிந்தது. தனது வீட்டிற்கு திரும்பியவர் தனது பெற்றோரை கவனிக்கத் துவங்கினார். தங்கக் கூண்டில் இருந்து விடுதலை வனவாசத்தின் பொழுது ஒருமுறை ரிஷி விபாண்டகர் வசித்த ஆசிரமத்தின் வழியாக சென்றனர் பாண்டவர்கள். அப்பொழுது அவர்களுக்கு விபாண்டகரின் மகனான ரிஷி ரிஷ்யஸ்ருங்கரை பாரிய கதையை லோமேஸர் அவர்களுக்கு கூறினார். விபாண்டகர், தன் மகனுடன் துறவிகளுக்கு உண்டான வாழ்வை வசித்து வந்தார். பொதுமக்களிடம் இருந்து மிகவும் தள்ளி தனியாக வசித்து வந்த காரணத்தினால் ரிஷ்யஸ்ருங்கர் மற்ற யாருடனும் பழகியதே இல்லை. தன் தந்தையிடம் இருந்து கற்று தேர்ந்த ஞானத்துடன், பிரம்மச்சரிய வாழ்வை கடைப்பிடித்ததால் உண்டான தூய்மை மற்றும் புனிதத்தினால் அவர் மிக அதிக சக்தி உடையவராக இருந்தார். அருகில் இருந்த அங்க தேசத்தில் ஒரு முறை கடுமையான வறட்சி ஏற்பட்டு அதனால் பஞ்சம் உண்டானது. அங்க தேச அரசனான ரோமபாதா, கற்றறிந்த ஞானிகளிடம் இதற்கு தீர்வை கேக்க, அவர்கள் ரிஷ்யஸ்ருங்கரை நாட்டுக்கு வரவழைக்க சொன்னார்கள். ரிஷ்யஸ்ருங்கர் எங்கு சென்றாலும் அங்கே மழை வரும். எனவே அவரை எப்பாடுபட்டாவது அழைத்து வர கூறினார்கள். அதன் பின், ரிஷ்யஸ்ருங்கரை அழைத்து வர ரோமபாதா திட்டம் தீட்டினான். நாட்டின் மிக சிறந்த அழகிகளை அழைத்து ரிஷ்யஸ்ருங்கரை தன் நாட்டுக்கு அழைத்துவர உத்தரவிட்டான். உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்தால் அரசனின் கோபத்திற்கு உள்ளாக நேரிடலாம். அதே நேரத்தில், அதற்கு கட்டுப்பட்டு ரிஷியிடம் சென்றால் அவர் சபிக்க நேரிடலாம். எனவே பயந்து கொண்டே தகுந்த திட்டம் தீட்டினர் அந்த அழகிகள். ஒரு மிகப் பெரிய படகொன்றை தோட்டங்கள் நிறைந்த ஆசிரமம் போல அலங்கரித்து ரிஷ்யஸ்ருங்கரின் ஆசிரமம் அருகே கொண்டு சென்றனர். அந்த நேரத்தில் ரிஷி விபாண்டகர் எங்கோ வெளியே சென்றிருக்க, அதை உபயோகப்படுத்திக் கொண்ட அழகி தன்னை ஒரு இளம் பெண் துறவி போல் உருமாற்றிக் கொண்டு ரிஷ்யஸ்ருங்கரை காண சென்றாள். அது நாள் வரை , வேறு மனிதரையே பார்த்து அறியாத ரிஷ்யஸ்ருங்கர், அந்த இளம் துறவியை பார்த்தவுடன் மயங்கினார். அதை பயன்படுத்திக் கொண்டவள் ஆசை வார்த்தைகளாலும், மலர்களாலும் தன் தொடுகையாலும் அவரை தன் வசப்படுத்திவிட்டு அங்கிருந்து அகன்றாள். சிறிது நேரம் கழித்து தன் ஆசிரமம் திரும்பிய விபாண்டகர் எப்பொழுதும் தெளிந்து இருக்கும் தன் மகனின் முகமானாது இப்பொழுது குழம்பி எதோ ஒன்றில் மயங்கி இருப்பது போல் இருப்பதைக் கண்டு, ரிஷ்யஸ்ருங்கரிடம் என்ன நடந்தது என விசாரித்தார். நடந்ததை உள்ளவாறு அவர் விவரிக்க, கோபம் கொண்ட விபாண்டகர் அந்த இளம் பெண் துறவியை தேடி காடு முழுவதும் சுற்றினார். ஆனாலும் அவள் அகப்படவில்லை. சிலநாள் கழித்து விபாண்டகர் ஆசிரமத்தில் இல்லாத சமயத்தில் மீண்டும் அந்த படகு அங்கே வந்தது. இம்முறை ரிஷ்யஸ்ருங்கர் படகில் அந்தப் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த சமயத்திலேயே படகை அங்கிருந்து நகர்த்தி சென்றனர். அந்தப் படகு அங்க தேசத்தில் நுழைந்து, ரிஷ்யஸ்ருங்கர் கரையிலே காலடி வைத்தவுடன் நாடு முழுவதும் மழை பெய்து மண்ணை நனைத்தது. ரிஷ்யஸ்ருங்கருக்கு ராஜ உபச்சாரம் தந்து கௌரவித்த ரோமபாதா, தன் மகள் சாந்தாவையும் அவருக்கு மணம் செய்து வைத்தான். நடந்ததை அறிந்த விபாண்டகர் கோபத்துடன் அங்க தேசத்தை நோக்கி சென்றார். இதை முன்பே எதிர்பார்த்திருந்த அரசன், அவர் வரும் வழியில் அவருக்கு உபசாரங்கள் செய்வித்து மனம் குளிர்விக்க ஏற்பாடுகள் செய்திருந்தான். கோபத்துடன் தன் பயணத்தை துவங்கிய ரிஷி , அவனின் உபச்சாரங்களால் மனம் குளிர்ந்தார். தன் அரண்மனைக்கு வந்த ரிஷி விபாண்டகரை அவருக்கு உரிய மரியாதைகள் செய்வித்து நடந்ததை அவருக்கு விளக்கினான் ரோமபாதா. பின், மணமக்களை ஆசிர்வதித்த விபாண்டகர், ஆண் குழந்தை பிறக்கும் வரை அரணமனையில் இருந்துவிட்டு அதன் பின் ஆசிரமம் திரும்ப ரிஷ்யஸ்ருங்கருக்கு உத்தரவிட்டார். அவர்களுக்கு ஆண் மகவு பிறந்ததும் கானகம் சென்ற தம்பதியர், அதன் பின் துறவு வாழ்க்கை வாழ்ந்தனர். https://solvanam.com/2025/03/23/கொக்கென-நினைத்தாயோ/
  4. உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்கா விஜயம்! உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அமெரிக்காவிற்கு வருகை தருவார்கள் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனும் “விரைவில்” பேசுவேன் என்றும், மொஸ்கோ மீது இரண்டாம் கட்டத் தடைகளை விதிக்க தனது நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மேலும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எரிசக்தியை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது இரண்டாம் நிலை வரிகளை விதிக்கும் ட்ரம்பின் திட்டங்களையும் ஜெலென்ஸ்கி வரவேற்றார். உக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பு 2022 மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து ரஷ்யா சுமார் $985 பில்லியன் (£729 பில்லியன்) எண்ணெய் மற்றும் எரிவாயுவை விற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப்பெரிய கொள்முதல் நாடுகள் சீனாவும் இந்தியாவும் ஆகும். ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எரிசக்தி கொள்முதலை வியத்தகு முறையில் குறைத்துள்ளது – ஆனால் முழுமையாக நிறுத்தப்படவில்லை. ஜூன் மாதத்தில், 2027 ஆம் ஆண்டுக்குள் பிரஸ்ஸல்ஸ் அனைத்து கொள்முதலையும் நிறுத்துவதற்கான திட்டங்களை வகுத்தது. கடந்த மாதம், ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து வாங்குவதற்கான பதிலடியாக, இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரிகளை விதித்தது. எனினும் இந்திய அரசாங்கம், தனது மக்களின் பொருளாதார நலன்களுக்காக எண்ணெய் வாங்குவதில் “சிறந்த ஒப்பந்தத்தை” தொடர்ந்து பின்பற்றுவதாகக் கூறியுள்ளது. கடந்த வாரம் பெய்ஜிங்கில் நடந்த ஒரு கூட்டத்தில் சீனாவிற்கு எரிவாயு விநியோகத்தை அதிகரிப்பதாக ரஷ்யா கூறியது. இதனிடையே, கடந்த மாதம் அலாஸ்காவில் ட்ரம்ப் மற்றும் புட்டின் உச்சிமாநாடு நடத்தியதிலிருந்து ரஷ்யா உக்ரேன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=340055
  5. மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் மனிதப் புதைகுழியா?; உறுதிப்படுத்த வேண்டும் என்கிறது காணாமல் போனோர் அலுவலகம் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்களோ மனித எலும்புக்கூடுகளோ இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் வட பிராந்தியத்தில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் போது மண்டைதீவு மனித புதைகுழி தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டுக்கமைய பொலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மேற்படி பகுதிக்கு சென்றது அந்தப் பகுதி சந்தேகத்துக்கிடமாக இருக்கின்றபடியால் அதனை துரிதமாக அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை 2019 ஆம் ஆண்டிலேயே நாம் விடுத்திருந்தோம். அந்த விடயம் பொருளாதார சிக்கல் கொரோனாவுக்கு பிறகு தற்போது தலை தூக்கி இருக்கிறது. மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட இருக்கின்ற நிலையில் அந்த இடத்தில் அது திறக்கப்படுகிறதோ என்ற அச்ச சூழ்நிலை காரணமாக அந்த விவகாரம் மேற்கிளம்பியுள்ளது. இந்த விடயப் பரப்புகளில் எங்கள் கரிசனை அதிகமாக இருக்கும். மைதானம் அமைக்கப்படுவதாக இருந்தால் சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்களோ மனித எலும்புக்கூடுகளோ இல்லை என்ற உறுதிப்பாடு இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதன் பின்னரே இந்த மைதானம் அமைக்கப்பட வேண்டும்.அந்தப் பகுதி அந்த இடத்தில் இருக்குமாக இருந்தால் சம்பந்தப்பட்ட வழக்கு வரும் போது காணாமல் போனோர் பற்றிய அலுவலம் அதனை முன்வைக்கும் – என்றார். https://akkinikkunchu.com/?p=340073
  6. நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக தமிழ் நீதியரசர் நியமனம்! உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.துரைராஜா நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி முர்து பெர்னாண்டோ சேவையில் இருந்து ஓய்வுப்பெற்றதை தொடர்ந்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.துரைராஜா 1988 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு அரச தரப்பு சட்டத்தரணியாக இணைந்துக் கொண்டார். அதன்பின்னர் மேலதிக சொலிட்டர் ஜெனராலாக பதவிக்கு நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியால் எஸ்.துரைராஜா ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டு அதே ஆண்டு மேன்முறையீட்டு நீதியரசராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/நீதிச்_சேவைகள்_ஆணைக்குழுவின்_உறுப்பினராக_தமிழ்_நீதியரசர்_நியமனம்!
  7. இன்று முதல் கடுமையாகும் போக்குவரத்து சட்டம் செய்திகள் போக்குவரத்து சட்டம் இன்று (08) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார். போக்குவரத்திற்கு தகுதியற்ற வாகனங்கள் மற்றும் வண்ணங்கள் மாற்றப்பட்ட வாகனங்கள் குறித்தும் இதன்போது சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், வெவ்வேறு வண்ணங்களில் கூடுதல் விளக்குகளுடன் இயங்கும் வாகனங்கள், வாகனங்களின் முன், பின் மற்றும் இரு பகுதிகளின் சித்திர வடிவமைப்புகள் மற்றும் விளம்பரங்கள் பிரசுரித்தல் மற்றும் சட்டவிரோத மேலதிக உதிரி பாகங்கள் தொடர்பிலும் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் கொண்ட வாகனங்கள் தொடர்பாக இன்று முதல் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். https://www.samakalam.com/இன்று-முதல்-கடுமையாகும்/
  8. ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லை! adminSeptember 8, 2025 ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பாரானால், அது நாட்டுக்கு நல்லது என்றும் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்துக்கு செல்வதாக இருந்தால், சரியான நேரம், காலம் பார்த்து அறிவிப்பார். ஆனால், இதுதொடர்பில் எந்த கலந்துரையாடலும் தற்போதுவரை இடம்பெறவில்லை எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். https://globaltamilnews.net/2025/220197/
  9. நெடுக்ஸ் கன காலத்திற்குப் பின்னர் AI Robot கவிதையோடு வந்திருக்கின்றார்😀 கவிதை நல்லாத்தான் இருக்கு. 10 வருடங்களுக்கு முன்னர் Ex Machina இல் Alicia Vikander ஐப் பார்த்து வந்த கிறக்கம்🥰 இன்னும் போகவில்லை!
  10. ஜனாதிபதி அநுரவின் கச்சதீவு விஜயம் September 7, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் தகராறுக்குரிய ஒரு பிராந்தியமாக கச்சதீவு இருந்திருந்தால் கடந்த வாரம் (செப்டெம்பர் 1) ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க தரிசு நிலமாகக் கிடக்கும் அந்த தீவுக்கு மேற்கொண்ட முன்கூட்டியே அறிவிக்கப்படாத விஜயம் சர்ச்சை ஒன்று மூளுவதற்கு காரணமாக இருந்திருக்க முடியும். ஆனால், இலங்கைக்கு சொந்தமான ஒரு நிலப்பரப்புக்கு அதன் ஜனாதிபதி செய்த விஜயம் அரசியல் மற்றும் இராஜதந்திர உரையாடல்களில் ஒரு பேசுபொருளாக கச்சதீவை மாற்றியிருக்கிறது. இந்திய அரசாங்கம் திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் குறித்து இதுவரையில் எந்தவிதமான பிரதிபலிப்பையும் வெளிக்காட்டவில்லை. ஆனால், இந்திய அரசியல் அரங்கிலும் ஊடகப்பரப்பிலும் பெருமளவில் விமர்சனரீதியான கருத்துக்கள் முன்வைக்கப்படுகின்றன. அந்த விஜயத்தின் மூலமாக இலங்கை ஜனாதிபதி எத்தகைய செய்தியை, யாருக்கு கூறுவதற்கு முயன்றார் என்ற கேள்வியைச் சுற்றியவையாகவே அந்த கருத்துக்கள் அமைந்திருக்கின்றன. இந்தியாவின் மூத்த பத்திரிகையாளர்களில் ஒருவரும் அரசியல் அவதானியுமான நிருபமா சுப்பிரமணியன் “இலங்கையின் ஒரு தீவிடமிருந்து சமிக்கை” ( Signal From a Lankan island) என்ற தலைப்பில் எழுதிய கட்டுரையில் ‘சீனாவில் ஜனாதிபதிகள் சி ஜின்பிங்குடனும் விளாடிமிர் புட்டினுடனும் கமராக்களுக்கு முன்னால் நின்று பிரதமர் நரேந்திர மோடி தோழமை பாராட்டியபோது இந்தியா வடக்கு நோக்கி கவனத்தைச் செலுத்திக் கொண்டிருந்த அதேவேளை, இந்தியாவின் தென்திசை அயல்நாடு புதுடில்லிக்கும் தமிழ்நாட்டுக்கும் ஆரவாரமின்றி ஒரு செய்தியை அனுப்பியிருக்கிறது” என்று குறிப்பிட்டிருந்தார். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் மிகுந்த நல்லுறவு நிலவுகின்ற ஒரு நேரத்தில், அதுவும் கச்சதீவு தொடர்பில் புதுடில்லி எந்தப் பிரச்சினையையும் கிளப்பியிராத வேளையில், புதுடில்லிக்கு ஒரு செய்தியை அனுப்ப வேண்டிய தேவை ஜனாதிபதி திசநாயக்கவுக்கு இருந்திருக்குமா என்ற கேள்வி எழுகிறது. ஆனால், தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் இன்னமும் ஆறு மாதங்களில் சட்டசபை தேர்தல்கள் நடைபெறவிருக்கும் பின்புலத்தில் மாநில அரசியல்வாதிகள் கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் முனைப்புடன் முன்வைக்கத் தொடங்கியிருப்பதால் அவர்களுக்கு ஒரு செய்தியைக் கூறுவதற்காக திசநாயக்க அந்த தீவுக்கு விஜயம் செய்திருக்கக்கூடும் என்ற ஒரு கருத்து இருக்கிறது. கச்சதீவுக்கு செல்வதற்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்கள் மத்தியில் உரையாற்றிய ஜனாதிபதி திசநாயக்க அந்தத் தீவு இலங்கை மக்களுக்குச் சொந்தமானது என்றும் பலவந்தமாக அதை பறிக்க எவரையும் ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை என்றும் கூறினார். எது எவ்வாறிருந்தாலும், திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் அடையாளபூர்வமான கனதியொன்றைக் கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் உடன்படிக்கையை கைச்சாத்திட்டதன் மூலம் கச்சதீவை இலங்கைக்கு சொந்தமாக்கிய முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க கூட கச்சதீவை பார்வையிட வேண்டும் என்று அக்கறை காட்டவில்லை. அவருக்கு பிறகு பதவிக்கு வந்த எந்தவொரு பிரதமரோ அல்லது ஜனாதிபதியோ கச்சதீவுக்கு விஜயம் செய்ததில்லை. இந்தியாவுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்க்கூடாது என்பதற்காகத்தான் அவர்கள் 285 சதுரகிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட அந்தத்தீவுக்கு விஜயம் செய்வதற்கு அக்கறை காட்டாமல் இருந்தார்களோ தெரியவில்லை. அந்தத் தீவில் காலடிவைத்த முதல் இலங்கை அரச தலைவராக ஜனாதிபதி திசநாயக்க “வரலாற்றுப் பெருமையை” தனதாக்கிக் கொண்டிருக்கிறார். அவரின் அந்த விஜயம் குறித்து அறிக்கையொன்றை வெளியிட்ட ஜனாதிபதி ஊடகப்பிரிவு “யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியான பல அங்குரார்ப்பண நிகழ்வுகள் மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்களில் இன்று (01) பங்கேற்றதை தொடர்ந்து ஜனாதிபதி அநுரா குமார திசநாயக்க கச்சதீவுக்கு ஒரு கண்காணிப்பு விஜயத்தை மேற்கொண்டார். கடற்தொழில், நீரியல்வள மற்றும் சமுத்திர வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பொதுப் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற விவகாரங்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, வடபகுதி கடற்படைத் தளபதி றியர் அட்மிறல் புத்திக்க லியனகமகே ஆகியோரும் ஜனாதிபதியுடன் அந்த விஜயத்தில் இணைந்து கொண்டனர்” என்று மாத்திரம் குறிப்பிட்டது. பாக்குநீரிணையில் தமிழ்நாட்டு மீனவர்களின் அத்துமீறல்களினால் படுமோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கையின் வடபகுதி மீனவர்களுக்கு தனது ஒருமைப்பாட்டை வெளிக்காட்டும் ஒரு “துணிச்சலான சமிக்கையாக” ஜனாதிபதி கச்சதீவுக்கு சென்றிருக்கக்கூடும் என்று இன்னொரு கருத்து இருக்கிறது. ஆனால், வடபகுதி மீனவர்கள் தங்களது கரையோரங்களுக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் நெருக்கமாக வந்து கடல் வளங்களைச் சூறையாடுவது குறித்து கவலைப்படுகிறார்களே தவிர, கச்சதீவைப் பற்றி அவர்களுக்கு அக்கறை இருப்பதாக கூறமுடியாது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் கூறுவது போன்று கச்சதீவை மீண்டும் இந்தியா தனதாக்கிக் கொள்வதன் மூலம் மாநில மீனவர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வைக் காணமுடியும் என்றால், யாழ்ப்பாணக் குடாநாட்டின் கரையோரங்களுக்கு மாத்திரமல்ல, கிழக்கிலங்கை கரையோரத்துக்கும் நெருக்கமாக இந்திய மீனவர்கள் எதற்காக வருகிறார்கள் என்ற கேள்வி எழுகிறது. இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் குறித்து நிருபமா சுப்பிரமணியன் தனது கட்டுரையில் முன்வைத்திருக்கும் கருத்து மிகுந்த கவனத்துக்குரியது. “இழுவைப்படகுகள் போன்ற நீண்டகாலத்துக்கு பயன்படுத்த முடியாத மீன்பிடி முறைகளை தமிழ்நாட்டு மீனவர்கள் கடைப்பிடித்து வந்ததால், பாக்குநீரிணையின் இந்தியப் பக்கத்தில் இருந்த கடல் வளங்கள் அழிக்கப்பட்டுவிட்டன. மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போரின்போது கண்டிப்பான பாதுகாப்புக் கட்டுப்பாடுகளின் விளைவாக யாழ்ப்பாண மீனவர்கள் கடலுக்கு செல்லாத காரணத்தால் பெருமளவு வளங்களை கொண்டதாக இருந்த பாக்குநீரிணையின் இலங்கைப் பக்கம் இந்திய மீனவர்களை கவர்ந்திழுக்கிறது. “அனேகமாக தினமும் இலங்கைக் கடற்பரப்புக்குள் இந்திய மீனவர்கள் செய்கின்ற ஊடுருவல்கள் அவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்வதிலும் படகுகளையும் வலைகளையும் பறிமுதல் செய்வதிலும் வந்து முடிகிறது. ஆனால், மாற்று வாழ்வாதாரங்களை உருவாக்குவதில் அல்லது மீன்பிடித்துறையை பல்வகைப்படுத்துவதில் உள்ள பிரதான சவால்களை கையாளுவதற்கு பதிலாக, தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள தலைவர்கள் மீனவர்களின் சகல பிரச்சினைகளுக்கும் கச்சதீவே பதில் என்ற மாயையை ஊக்குவிக்கிறார்கள்.” என்று அவர் எழுதியிருக்கிறார். கச்சதீவை இந்தியா மீண்டும் சொந்தமாக்க வேண்டும் என்று இரு பிரதான திராவிட இயக்கக் கட்சிகளின் அரசாங்கங்கள் இதுவரையில் நான்கு தீர்மானங்களை தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றியிருக்கின்றன. கச்சதீவு தொடர்பில் இலங்கையுடன் இந்தியா செய்த உடன்படிக்கைக்கு எதிராக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2008 ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசாங்கம் தற்போது அந்த வழக்கை தொடர்ந்து முன்னெடுக்கிறது. அந்த வழக்கு மீண்டும் செப்டெம்பர் 15 ஆம் விசாரணைக்கு வருகிறது. இத்தகைய பின்புலத்தில் சினிமா நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய் ஆகஸ்ட் 21 ஆம் திகதி மதுரையில் தனது கட்சியின் மகாநாட்டில் கச்சதீவை இலங்கையிடம் இருந்து மீட்டெடுக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் வேண்டுகோள் விடுத்தார். “இலங்கை கடற்படையின் தாக்குதல்களினால் இதுவரையில் சுமார் 800 தமிழ்நாட்டு மீனவர்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இதைக் கண்டிப்பதற்கு பெரிதாக எதையும் செய்யுமாறு நான் பிரதமர் மோடியைக் கேட்கவில்லை. மிகவும் சிறிய ஒரு விடயத்தை செய்யுமாறுதான் கேட்கிறேன். எமது மீனவர்களின் பாதுகாப்புக்காக இப்போதாவது கச்சதீவை இலங்கையிடமிருந்து பிரதமர் மீட்டெடுக்க வேண்டும்” என்று விஜய் கூறினார். இது தொடர்பாக கொழும்பில் செய்தியாளர்கள் மகாநாட்டில் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் “தேர்தல்காலப் பேச்சு” என்று அதை அலட்சியம் செய்தார். “தென்னிந்தியாவில் தேர்தல்கள் நடத்தப்படவிருக்கின்றன. வாக்குகளை பெறுவதற்காக தேர்தல் மேடைகளில் அரசியல்வாதிகள் பல்வேறு விடயங்களைக் கூறுவார்கள். இது முதற்தடவை அல்ல. முன்னரும் கூட கச்சதீவை இலங்கையிடமிருந்து மீட்கவேண்டும் என்ற கோரிக்கைகள் தேர்தல் பிரசாரங்களின்போது முன்வைக்கப்பட்டன” என்று அவர் கூறினார். ஜனாதிபதி திசநாயக்கவின் கச்சதீவு விஜயத்துக்கு பிறகு கடந்த வியாழக்கிழமை (4) அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய அரசாங்க பேச்சாளரான சுகாதார அமைச்சர் நாலிந்த ஜயதிஸ்ஸ தென்னிந்திய அரசியல்வாதிகளுக்காக கூச்சல்களுக்காக ஜனாதிபதி கச்சதீவுக்கு செல்லவில்லை என்றும் இலங்கைக்கு சொந்தமான அந்த தீவு குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டிய அவசியமில்லை என்றும் குறிப்பிட்டார். தமிழ்நாட்டு அரசியலைப் பொறுத்தவரை மக்களின் உணர்ச்சிகளை கிளறக்கூடிய கோரிக்கைகளை சிறிய உதிரிக்கட்சிகள் மாத்திரமல்ல, பிரதான கட்சிகளும் கூட தேர்தல் காலங்களில் முன்வைக்கத் தவறுவதில்லை. இலங்கை தமிழர் பிரச்சினை மற்றும் தமிழ்நாட்டு மீனவர் பிரச்சினை போன்றவை அவற்றில் முக்கியமானவை. தேர்தல்கள் முடிவடைந்ததும் அந்த கோரிக்கைகளின் உக்கிரம் தணிந்து விடுவதும் வழமை. கடந்த வருடம் புதிதாக கட்சியை தொடங்கி அரசியலில் குதித்திருக்கும் நடிகர் விஜயை பொறுத்தவரை, மற்றைய அரசியல்வாதிகளை விடவும் முற்றிலும் வேறுபட்டவராக தன்னை காண்பிக்க வேண்டிய அவசியம் இருக்கிறது. கச்சதீவு விவகாரத்தில் இந்திய மத்திய அரசாங்கம் உத்தியோகபூர்வமாக பல தடவைகள் அறிவித்திருக்கின்ற போதிலும் கூட, மீனவர் சமூகத்தின் வாக்குகளைப் பெறுவதற்கான போட்டியில் அந்தத் தீவை மீட்கவேண்டும் என்ற கோரிக்கையை தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தொடர்ந்து முன்வைத்துக் கொண்டேயிருக்கிறார்கள். திராவிட இயக்கத்துக்கு எதிரான தீவிரமான தமிழ்த் தேசியவாதியாக தன்னைக் காட்டிக் கொள்ளும் நாம் தமிழர் கட்சியின் தலைவரான சீமான் தனது வழமையான தான்தோன்றித்தனமான பாணியில் கச்சதீவை இந்தியாவிடமிருந்து மீட்காவிட்டால் தமிழ்நாடு மாநிலம் இந்தியாவில் இருந்து பிரிந்துசெல்ல நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்திருக்கிறார். விஜயின் அரசியல் பிரவேசத்தின் விளைவாக தனது கட்சியின் மக்கள் ஆதரவில் வீழ்ச்சி ஏற்படக்கூடும் என்று அஞ்சும் சீமானுக்கு இனத்துவ தேசியவாத உணர்ச்சிகளை தூண்டிவிட வேண்டிய அரசியல் நிர்ப்பந்தம் இருப்பதாக தெரிகிறது. வழமையாக தமிழ்நாட்டு மாநிலக் கட்சிகளே கச்சதீவுப் பிரச்சினையை தேர்தல் காலங்களில் கிளறுவதை வழக்கமாகக் கொண்டிருந்த ஒரு போக்கில் 2024 லோக்சபா தேர்தல் பிரசாரங்கள் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் கண்டன. இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கரும் கூட பாரதிய ஜனதாவுக்கு மாநில மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக கச்சதீவுப் பிரச்சினை பயனபடுத்துவதில் அக்கறை காட்டினர். இந்திரா காந்தி இந்தியாவின் பிரதமராகவும் கருணாநிதி தமிழ்நாட்டு முதலமைச்சராகவும் இருந்த காலப்பகுதியிலேயே தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை மதிக்காமல் கச்சதீவை இலங்கைக்கு விட்டுக் கொடுக்கும் உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது என்பதை சுட்டிக்காட்டிய மோடியும் ஜெய்சங்கரும் தமிழ்நாட்டு மீனவர்கள் பாக்குநீரிணையில் அனுபவிக்கும் துன்பங்களுக்கு காங்கிரஸும் திராவிட முன்னேற்றக் கழகமுமே முக்கிய காரணம் என்று தேர்தல் மேடைகளில் பேசினர். கச்சதீவை இலங்கைக்கு விட்டுக்கொடுத்த பிறகு கடந்த அரை நூற்றாண்டு காலத்தில் உடன்படிக்கை தொடர்பில் தேர்தல் பிரசாரங்களின்போது பிரச்சினை கிளப்பிய முதல் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே என்பது குறிப்பிடத்தக்கது. லோக்சபா தேர்தல் முடிந்த பிறகு அவர் கச்சதீவைப் பற்றி பேசியதாக செய்தி எதுவும் வந்ததாக இல்லை. காங்கிரஸுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு எதிரான பிரசாரத்துக்காக கச்சதீவு உடன்படிக்கை பற்றி மோடியும் ஜெய்சங்கரும் பேசினார்களே தவிர, அந்தத் தீவை மீட்டெடுப்பது குறித்து எதுவும் பேசவில்லை. அடுத்த வருடம் ஏப்ரில் — மே மாதங்களில் நடைபெறவிருப்பதாக எதிர்பார்க்கப்படும் தமிழ்நாட்டு சட்டசபை தேர்தலில் மீண்டும் மோடி கச்சதீவு விவகாரத்தை மற்றைய கட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியாக பிரசாரங்களில் பெருமளவுக்கு பயன்படுத்தக்கூடிய சாத்தியம் இருக்கிறது. அதன் அறிகுறிகளை தற்போது இருந்தே காணக்கூடியதாக இருக்கிறது. ஜனாதிபதி திசநாயக்கவின் கச்சதீவு விஜயம் மீண்டும் இலங்கை கடற்படையின் தாக்குதல்கள் தீவிரமடையக்கூடும் என்ற அச்சத்தை தமிழ்நாட்டின் இராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் மற்றும் நாகபட்டினம் மாவட்டங்களின் மீனவர்கள் மத்தியில் ஏற்படுத்தியிருப்பதாக சில இந்தியப் பத்திரிகைகள் செய்தி வெளியிட்டிருக்கின்றன. ஜனாதிபதியின் விஜயத்தை இலங்கை கடற்படையினர் கச்சதீவுக்கு அண்மையாக மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களை தாக்குவதற்கு கிடைத்திருக்கும் “இலவச அனுமதியாக” கருதாமல் இருப்பதை உறுதிசெய்து கொள்வதற்கு கொழும்புடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று மீனவர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் இந்திய அரசாங்கத்தைக் கேட்டிருப்பதாக டெக்கான் ஹெரால்டசெய்தி வெளியிட்டிருந்தது. திசநாயக்கவின் விஜயம் கச்சதீவை மீட்கவேண்டும் என்ற தமிழ்நாட்டின் கோரிக்கைக்கு நேரடியான ஒரு சவாலே தவிர வேறு ஒன்றுமில்லை என்று தமிழ்நாடு படகு மீனவர்கள் சங்கத்தின் தலைவர் என்.ஜே. போஸ் கூறியதாக அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது. ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் இந்திய அரசாங்கம் எத்தகைய வியாக்கியானத்தை செய்யும் என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். https://arangamnews.com/?p=12304
  11. விமர்சனம் : மதராஸி! 7 Sep 2025, 11:07 AM சிவகார்த்திகேயன் – முருகதாஸ் ‘காம்பினேஷன்’ திருப்தியளிக்கிறதா? முதல் படமான ‘தீனா’வில் தொடங்கி ‘ரமணா’, ‘கஜினி’, ‘துப்பாக்கி’, ‘ஏழாம் அறிவு’ என்று வித்தியாசமான ‘ஆக்‌ஷன்’ படங்களைத் தந்தவர் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ். இடையே ‘கத்தி’, ‘சர்கார்’ என்று ‘ப்ளாக்பஸ்டர்’கள் தந்தாலும் ‘ஸ்பைடர்’, ‘தர்பார்’ படங்களில் சரிவைச் சந்தித்தார். சமீபத்தில் இந்தியில் சல்மான்கானை நாயகனாகக் கொண்டு இவர் தந்த ‘சிக்கந்தர்’ பெருந்தோல்விக்கு உள்ளானது. இந்த நிலையில் தற்போது தியேட்டர்களில் ‘மதராஸி’ வெளியாகியிருக்கிறது. இதில் நாயகனாக சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார். இவர்களது காம்பினேஷன் எதிர்பார்ப்பை உருவாக்கினாலும், அது மிகப்பெரியதாக மாறவில்லை. அது ஏன்? தியேட்டரில் ‘மதராஸி’ தரும் திரையனுபவம் அந்த கேள்வியைத் தவிடுபொடியாக்கியிருக்கிறதா? ’ஆபத்பாந்தவன்’ பார்முலா! மிகப்பிரமாண்டமாகத் தயாரிக்கப்படுகிற ‘ஆக்‌ஷன்’ படங்களின் கதை என்னவாக இருக்கும்? மக்களை ஆபத்திற்கு உள்ளாக்குகிற வகையில் சில பிரச்சனைகளை வில்லன்கள் இழுத்துக் கொண்டுவருவார்கள். அதனைச் சமாளிக்க முடியாமல் எல்லோரும் திணறும் நேரத்தில், அந்த களத்திற்குள் ஹீரோ வருவார். வில்லனை நேருக்கு நேராக எதிர்கொண்டு வெல்வார். அவரே எல்லோரையும் காக்கிற ‘ஆபத்பாந்தவன்’ என்பதைப் பாதிப்படத்திலேயே உணர்த்திவிடுவதே இப்படிப்பட்ட படங்களின் சிறப்பு. நட்சத்திர நடிகர்களின் ரசிகர்களும் அதனையே விரும்புவார்கள் என்பதே திரையுலகின் நம்பிக்கை. கிட்டத்தட்ட அதனைப் பிரதிபலித்திருக்கிறது ‘மதராஸி’ கதை. பெருமளவில் துப்பாக்கிகளைச் சுமந்துகொண்டு சில ட்ரக்குகள் தமிழ்நாட்டு எல்லைக்குள் புகுகின்றன. அதனை முன்னரே அறிந்து தடுக்க முயற்சிக்கின்றனர் என்.ஐ.ஏ. அதிகாரிகள். அவர்களாலும் எதுவும் செய்ய இயலவில்லை. அந்த நிகழ்வில் காயம்பட்ட என்.ஐ.ஏ குழு அதிகாரியின் முன்னே சம்பந்தமில்லாமல் ஆஜராகிறார் ஒரு இளைஞன். காதலி தன்னைவிட்டுச் சென்றுவிட்டார் எனத் தற்கொலை செய்யத் துடிப்பவர் அந்த நபர். அவரது இருப்பு அந்த அதிகாரியை எரிச்சலுக்கு உள்ளாக்குகிறது. இந்த நிலையில், அந்த கும்பல் எங்கிருக்கிறது என்ற விவரம் தெரிய வருகிறது. அந்த இடத்தைச் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்துவது அபாயகரமானது என்பதை அறிந்தவுடன், ‘தற்கொலைப்படை நடவடிக்கை’ போன்ற ஒன்றைச் செய்யலாம் என்று திட்டமிடுகிறார் அந்த அதிகாரி. அதற்காக, அதிகாரப்பூர்வமற்ற முறையில் அந்த இளைஞனை இந்த பிரச்சனைக்குள் தள்ளுகிறார். அந்த இளைஞரும் அந்த துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்ட ஒரு ஆலைக்குள் நுழைகிறார். இந்த நேரத்தில், அந்த இளைஞரைத் தேடி அவரது காதலியும் என்.ஐ.ஏ. அலுவலம் வருகிறார். ஆலைக்குள் சென்ற இளைஞர் அந்த இடத்தைத் தகர்க்க முற்படுகையில், அந்த கும்பலின் தலைவர் அவர் கையில் சிக்குகிறார். அதனை அவர் அந்த அதிகாரியிடம் தெரிவிக்கிறார். அதேநேரத்தில், அந்த கும்பலைச் சேர்ந்த இன்னொருவரிடமும் அத்தகவலைத் தெரிவிக்கிற கட்டாயம் உருவாகிறது. அப்போது, ‘அந்த கும்பலின் தலைவனைச் சுட்டுவிடு’ என்கிறார் அந்த அதிகாரி. ‘அப்படிச் சுட்டால் உன்னைச் சார்ந்தவர்களை துவம்சம் செய்துவிடுவேன்’ என்கிறார் எதிர்முனையில் இருக்கிற அந்த கும்பலைச் சேர்ந்தவர். அவர்கள் சொன்னதைக் கேட்டபிறகு, அந்த இளைஞர் என்ன செய்தார்? அந்த இளைஞனின் காதலி ஏன் அவரை விட்டுச் சென்றார்? முடிவில், ‘துப்பாக்கி’ பிரச்சனை என்னவானது என்று சொல்கிறது ’மதராஸி’யின் மீதி. ஆக்‌ஷன் படங்களுக்கான சிக்கல்! குறிப்பிட்ட காலகட்டத்தில் சில ‘ஆக்‌ஷன்’ படங்கள் பெரிய வெற்றியைப் பெறும். ஆனால், ’அதே பார்முலா’வில் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கிற சில படங்கள் சில காலம் கழித்து வெளியாகித் தோல்வியைத் தழுவும். எம்ஜிஆர், சிவாஜி காலம் தொட்டு இப்போதுவரை தொடர்கிறது அந்த சிக்கல். ஏ.ஆர்.முருகதாஸும் அப்படியொரு சிக்கலைச் சமீப ஆண்டுகளாக எதிர்கொண்டு வருகிறார். ‘கஜினி’ சூர்யா போல, ‘மதராஸி’ படத்தில் சிவகார்த்திகேயன் பாத்திரத்தை வடிவமைத்திருக்கிறார். அதனை ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்களா, இல்லையா என்பதே இப்படத்தின் ப்ளஸ் அல்லது மைனஸாக இருக்கும். ’மதராஸி’ திரைக்கதையில் இரண்டு, மூன்று முக்கியத் திருப்பங்கள் இருக்கின்றன. வில்லன்களின் உலகத்திற்குள் நாயக பாத்திரம் காலடி எடுத்து வைப்பது அதிலொன்று. அதற்கான விதையாக, ‘பிளாஷ்பேக்’கள் இதில் இருக்கின்றன. நாயகியின் இருப்பும் அதையொட்டி கதையில் நியாயப்படுத்தப்படுகிறது. இடைவேளையை ஒட்டி, அந்த வில்லன்களோடு நாயகனுக்கு நேரடியாக மோதல் ஏற்படுவது இன்னொரு திருப்பம். இவையிரண்டும் ‘முருகதாஸின் வெற்றிகரமான ஆக்‌ஷன் பட’ அனுபவத்தைத் தருகின்றன. இப்படத்தின் பின்பாதியிலும் சில திருப்பங்கள் இருக்கின்றன. அவை ‘க்ளிஷே’க்களாக தெரிகின்றன. மற்றபடி, ஒரு வழக்கமான ஆக்‌ஷன் படத்திற்கான உள்ளடக்கத்தை கொண்டிருக்கிறது ‘மதராஸி’. அதற்கு சுதீப் இளமோனின் ஒளிப்பதிவு, ஸ்ரீகர் பிரசாத்தின் படத்தொகுப்பு, அருண் வெஞ்சாரமூடுவின் தயாரிப்பு வடிவமைப்பு, அனிருத்தின் பின்னணி இசை ஆகியன துணை நிற்கின்றன. அனிருத் இசையில் ‘சலம்பல’, ‘தங்கப்பூவே’ பாடல்கள் ஓகே ரகம். ஆனால், ‘தூள் கிளப்பும்’ ரகத்தில் இந்த படத்தில் ஒரு பாடல் கூட இல்லை என்பது குறையே. விஎஃப்எக்ஸ், டிஐ உள்ளிட்ட பல நுட்பங்கள் இதில் சிறப்புற அமைந்திருக்கின்றன. கமர்ஷியல் படங்களில் நாயக பாத்திரம் என்றால் ‘கெத்தாக’ இருக்க வேண்டுமென்று நம்புவதில், அதனை மிகத்தீவிரமாகக் கடைபிடிப்பதில் சில நடிகர்கள் உறுதியாக இருந்து வருகின்றனர். மிகச்சில நாயகர்கள் அந்த எல்லைக்கோட்டில் இருந்து அவ்வப்போது விலகி நிற்பார்கள். அப்படியொரு பாத்திர வார்ப்பினை இதில் முயற்சித்திருக்கிறார் சிவகார்த்திகேயன். என்ன, குழந்தைகளும் ரசிக்கிற அவரது படத்தில் ‘நான் தற்கொலை பண்ணிக்கப் போறேன்’ என்று அடிக்கடி வசனம் பேசுவதைத்தான் ஏற்க முடியவில்லை. அந்த இடங்களைக் கொஞ்சம் சரிப்படுத்தியிருக்கலாம். நாயகி ருக்மிணி வசந்த் அழகாகத் திரையில் காட்டப்பட்டிருக்கிறார். ஆனாலும், ‘ரொம்ப மெச்சூர்டு’ என்ற எண்ணம் அடிக்கடி தலைதூக்குகிறது. ஒரு காட்சியில் ‘இப்பதான் நல்ல வொய்ப் மெட்டீரியலா ஆயிருக்கே’ என்று சிவகார்த்திகேயன் வசனம் பேசுவார். அது போன்ற இடங்களைத் தவிர்த்துப் பார்த்தால், இந்த படத்திற்கு இவர் தேவையில்லைதான். வில்லனாக இதில் வித்யுத் ஜாம்வால், சபீர் கல்லாரக்கல் தோன்றியிருக்கின்றனர். இருவருக்குமே தனித்தனியாகச் சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. இருவருமே அதில் கலக்கியிருக்கின்றனர். ஆனாலும், பல படிகள் முன்னே நிற்கிறார் வித்யுத். நாயகனாகத் தொடங்கிவிட்டார் என்பதற்காகவே, அவருக்காகப் பிரத்யேகமாகச் சில ‘பில்டப்’களை இதில் சேர்த்திருக்கிறார் இயக்குனர். இந்த படத்தில் பிஜு மேனன், விக்ராந்த் முக்கியப் பாத்திரங்களை ஏற்றிருக்கின்றனர். அவர்களுக்கு முக்கியத்துவம் தரப்பட்டபோதும், அது திரைக்கதையில் அடிக்கோடிடும் வகையில் அமையவில்லை. இவர்களோடு தலைவாசல் விஜய், ஆடுகளம் நரேன், லிவிங்ஸ்டன் உட்படச் சிலர் ஓரிரு காட்சிகளில் தலைகாட்டியிருக்கின்றனர். வினோதினி வைத்தியநாதன், சந்தானபாரதி போன்றவர்களும் அதில் அடக்கம். இன்னும் சித்தார்த் சங்கர், ரிஷி ரித்விக் உட்படச் சிலர் இப்படத்தில் இடம்பெற்றுள்ளனர். இவர்களுக்கு நடுவே விமலா ராமன் போன்ற சிலரும் ‘ஒப்புக்கு சப்பாணியாக’ச் சில ஷாட்களில் தலைகாட்டியிருக்கின்றனர். மேற்சொன்னவற்றில் இருந்து இப்படத்தில் நாயகி தவிர்த்து பெண் பாத்திரங்களுக்கான முக்கியத்துவம் குறைவு என்பது புரிந்துவிடும். தற்போது இப்படம் பற்றிய பார்வையாளர்களின் கருத்துகள் கலவையாக உள்ளன. இப்படம் இதற்கு முன் வந்த ஏ.ஆர்.முருகதாஸின் படங்களை நினைவூட்டுகிற வகையில் உள்ளது. அதேநேரத்தில், சமீபத்திய ட்ரெண்டுக்கு ஏற்றவாறு ‘மதராஸி’ உள்ளதா என்ற கேள்வி அவ்விஷயத்தைப் பின்னுக்குத் தள்ளுகிறது. மேற்சொன்ன இரண்டும் ஒன்றிணைகிறபோது சில முரண்கள் எழும். அவை இப்படத்திற்கான பலவீனங்கள். லாஜிக் மீறல்கள் என்று பார்த்தால் ‘மதராஸி’யில் கணிசமாகச் சிலவற்றை நம்மால் கண்டறிய முடியும். அதேநேரத்தில் சமீபகாலமாகத் தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியான ‘பெரிய நாயகர்களின்’ ஆக்‌ஷன் படங்களை ஒப்பிடுகையில் இப்படத்தின் கதை சொல்லலும் காட்சியாக்கமும் நம்மை பெரிதாக அயர்ச்சியுற வைக்காது. இது தமிழைவிடத் தெலுங்கில் பெரிய வரவேற்பைப் பெறவும் வாய்ப்புள்ளது. ஒருவேளை மேற்சொன்னது நிகழாவிட்டால், இப்படத்தை ஓடிடியிலோ, தொலைக்காட்சிகளிலோ காணும்போது ‘இந்த படம் நல்லாத்தானே இருக்கு’ என்று அதே ரசிகர்கள் சொல்லலாம். அதற்கான வாய்ப்புகளையும் கொண்டிருக்கிறது ‘மதராஸி’. மற்றபடி, ஏ.ஆர்.முருகதாஸ் உடன் சிவகார்த்திகேயன் கூட்டணி சேர்ந்துவிட்டால் அற்புதமான ’கமர்ஷியல் பட அனுபவம்’ கிடைக்கும் என்று அவர்களது ரசிகர்கள் நம்பினாற் போன்றதொரு விஷயத்தை ‘மதராஸி’ நிகழ்த்தவில்லை..! https://minnambalam.com/sivakarthikeyan-madharasi-movie-review/
  12. தையிட்டி; மயிலிட்டி; கச்சதீவு ; செம்மணி - நிலாந்தன் “நாங்கள் கேட்டது சர்வதேச விசாரணையை. அனுர தருவது சர்வதேச விளையாட்டு மைதானத்தை”. என்று முகநூலில் ஒரு பதிவு காணப்பட்டது. தமிழ் மக்கள் அனைத்துலக விசாரணைப் பொறிமுறை ஒன்றைக் கேட்டுக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் அரசாங்கமோ “இதோ உங்களுக்கு விளையாட்டு மைதானம்; இதோ உங்களுக்கு மயிலிட்டித் துறைமுகம்; இதோ உங்களுக்கு வட்டுவாகல் பாலம்” என்றிவ்வாறாக அபிவிருத்தித் திட்டங்களை முன்வைக்கின்றது. அனுர அரசுத் தலைவராக தெரிவு செய்யப்பட்டு இந்த மாதத்தோடு ஒராண்டு முடிகிறது. பதவியேற்ற ஓராண்டு காலப் பகுதிக்குள் வடக்கிற்கு அதிக தடவைகள் வருகை தந்த ஒரே ஜனாதிபதியாக அவர் காணப்படுகிறார். கடந்த கிழமை அவர் வடக்கில் பல அபிவிருத்தி திட்டங்களையும் தொடக்கி வைத்துள்ளார். இடையில் ஒரு சாகசப் பயணமாக கச்சதீவுக்கும் போய் வந்திருக்கிறார். கடந்த ஓராண்டு கால பகுதிக்குள் வடபகுதிக்கு மட்டும் 1250 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டிருப்பதாக அவர் முல்லைத்தீவில் வைத்துச் சொன்னார். கடந்த கிழமை வடக்கில் அவர் மண்டை தீவில் ஒரு சர்வதேச கிரிக்கெட் மைதானத்துக்கான அடிககல்லை நாட்டினார். மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்திக்கான வேலைகளையும் தொடக்கி வைத்தார். யாழ்.நூலகத்தை டிஜிட்டல் தளத்தில் நுகர்வதற்குரிய வேலைகளையும் தொடக்கி வைத்தார். யாழ்ப்பாணத்தில் ஒரு கடவுச்சீட்டு அலுவலகத்தையும் திறந்து வைத்தார். வன்னியில் தெங்கு முக்கோணத் திட்டம் ஒன்றை தொடக்கி வைத்தார். வவுனியாவில் 7 ஆண்டுகளுக்கு முன் கட்டி முடிக்கப்பட்டு திறக்கப்படாமல் இருந்த மத்திய பொருளாதாரம் மையத்தைத் திறந்து வைத்தார். முல்லைத்தீவில் வட்டுவாகல் பாலத்தைப் புதிதாகக் கட்டுவதற்கான அடிக்கல்லை நாட்டினார்.”உங்களுக்கு ஒரு சக்தி வாய்ந்த பொருளாதாரத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பு. அந்தப் பொறுப்பை ஏற்க நாங்கள் தயாராக இருக்கிறோம்” என்று முல்லைத்தீவில் வைத்து அனுர கூறினார். அபிவிருத்தி வேண்டும். அதில் சந்தேகமில்லை. போரால் பாதிக்கப்பட்ட ஒரு பகுதி மக்கள் தொடர்ந்து அந்த பாதிப்பில் இருந்து விடுபடாதவர்களாக காணப்படுகிறார்கள். அவர்கள் தங்களைப் பொருளாதார ரீதியாக பலப்படுத்த வேண்டும். எனவே அபிவிருத்தி வேண்டும். ஆனால் தமிழ் மக்கள் போராடியது அபிவிருத்திக்காக அல்ல. அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு உரிமைகளுக்காகத்தான். அபிவிருத்தி என்பது ஒரு சமூகம் அதன் நோக்கு நிலையில் இருந்து செய்ய வேண்டியது. அது அதன் நோக்கு நிலையிலிருந்து அபிவிருத்தியைத் திட்டமிடுவதற்கு அவசியமான கூட்டு உரிமைகளைக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் தனது கடலின் மீதும், துறைமுகங்களின் மீதும்,காட்டின் மீதும்,நிலத்தின் மீதும் அதன் வளங்களின் மீதும் அதிகாரத்தைக் கொண்டிராத ஒரு மக்கள் கூட்டமானது தனக்குரிய அபிவிருத்தியைத் தானே திட்டமிட முடியாது. அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு உரிமைகளை உறுதிப்படுத்தாமல் அபிவிருத்தியை முன்னெடுப்பது என்பது இனப்பிரச்சினையை ஒரு பொருளாதாரப் பிரச்சினையாக வியாக்கியானப்படுத்தும் ஓர் உத்திதான். எதை அபிவிருத்தி செய்வது? எப்பொழுது செய்வது? எப்படிச் செய்வது? யாரிடம் உதவி எடுப்பது? போன்ற எல்லாவற்றையும் திட்டமிடுவதற்கும் செயற்படுத்துவதற்கும் தமிழ் மக்களுக்கு உரிய கூட்டுஉரிமைகள் வேண்டும். அந்தக் கூட்டு உரிமைகள் அதாவது அரசியல் உரிமைகளைக் கேட்டுத்தான் தமிழ் மக்கள் போராடினார்கள். இனப்பிரச்சினைக்கான தீர்வு வரும் வரையிலும் அதாவது தமிழ் மக்களின் கூட்டு உரிமைகள் உறுதி செய்யப்படும் வரையிலும் அபிவிருத்தியைச் செய்யாமல் இருக்க முடியாது என்பதனை கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் தமிழ்மக்கள் தமது கூட்டுரிமைக்கான கோரிக்கையைக் கைவிட வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு அபிவிருத்தி முன்னெடுக்கப்படுகிறதா என்ற சந்தேகம் தமிழ் மக்களிடம் எப்பொழுதும் இருக்கும். அனுர அவருடைய யாழ்ப்பாண விஜயத்தின்போது தன்னுடைய கட்சிக்காரர்களுக்கு தெரியாமல் தனது நண்பர் ஒருவரின் வீட்டில், தட்டாதெருவில் தங்கியிருக்கிறார். இதற்கு முதல் முறை யாழ்ப்பாணம் வந்த பொழுது அவர் குருநகர் மத்தியூஸ் வீதியில் உள்ள க்யூடெக் அலுவலகத்திற்கு சற்று நேரே உள்ள ஒரு நண்பரின் வீட்டில்தான் இளைப்பாறிக் ,குளித்து உடைமாற்றிக் கொண்டு சாப்பிட்டார். கடந்த கிழமை புதுக்குடியிருப்புக்குச் சென்ற போது அங்கே தன்னுடைய கட்சிக்காக உழைக்கும் ஒருவருடைய வீட்டில் மதிய உணவை எடுத்தபின் அந்த வீட்டுக் குழந்தையைத் தூக்கிவைத்துக் கொண்டு ஒரு படம் எடுத்துக் கொண்டார். பொதுவாக வடக்குக்கு வரும் ஜனாதிபதிகள் இங்குள்ள உயர்தர விடுதிகளில்தான் தங்குவார்கள். பாதுகாப்பு ஒரு காரணமாகக் கூறப்படும். ஆனால் அனுர தன் பழைய நண்பர்களைத் தேடிச் சென்று அவர்களுடைய வீடுகளில் தங்குகிறார்; உணவருந்துகிறார்; குளித்து உடுப்பு மாற்றிக் கொள்கிறார். சிங்கள மக்கள் மத்தியில் அவர் ஒரு எளிமையான, எளிதில் கிடைக்கக்கூடிய தலைவர் என்ற அபிப்பிராயம் ஏற்கனவே ஸ்தாபிக்கப்பட்டு விட்டது. தமிழ் மக்கள் மத்தியிலும் அப்படி ஒரு பிம்பத்தை கட்டியெழுப்ப முயற்சிக்கிறார். அவர் எந்தப் பிம்பத்தை கட்டியெழுப்பினாலும் இறுதியாக நிலைக்கப் போகும் பிம்பம் எது என்பதை இனப்பிரச்சினைக்கான அவருடைய தீர்வு எது என்பதுதான் தீர்மானிக்கப் போகிறது. தேசிய மக்கள் சக்தி,தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக்கொள்ளவில்லை என்பதனை அதன் தேர்தல் பிரச்சாரங்களிலும் அதன் தேர்தல் அறிக்கையிலும் காண முடிந்தது. தமிழ் மக்களை ஒரு தேசிய இனமென்று ஏற்றுக்கொண்டால்தான் சுயநிர்ணய உரிமையின் அடிப்படையில் அவர்கள் தங்களைத் தாங்களே அபிவிருத்தி செய்யத் தேவையான கூட்டு உரிமைகளை ஏற்றுக்கொள்ளலாம். உதாரணமாக மயிலிட்டித் துறைமுகத்தின் மூன்றாம் கட்ட விரிவாக்கம். மயிலிட்டித் துறைமுகம் எனப்படுவது ஒரு காலம் இலங்கைத்தீவின் முன்னணி கடல் வாணிபத் துறைமுகமாக விளங்கியது. தமிழ் மக்கள் நீண்ட கடல் எல்லையைக் கொண்டவர்கள். போருக்கு முன்பு தீவின் மொத்தக் கடலுணவில் கிட்டத்தட்ட 40 விகிதம் வடக்கிலிருந்தே கிடைத்தது. வடக்கில் மயிலிட்டிதான் முன்னணித் துறைமுகமாகக் காணப்பட்டது. போரில் அது உயர் பாதுகாப்பு வலையத்துக்குள் விழுங்கப்பட்டது. விளைவாக மயிலிட்டி அதன் சோபையை, பொலிவை இழந்து விட்டது. அதன் மக்கள் இடம்பெயர்ந்து, புலம்பெயர்ந்து மெலிந்து போய்விட்டார்கள். தொடர்ச்சியான இடப்பெயர்களால் ஒரு தலைமுறை அதன் பாரம்பரிய தொழில் தொடர்ச்சியை,தொழில் திறன்களின் தொடர்ச்சியை இழந்து வருகிறது. இப்படிப்பட்டதோர் பின்னணியில் மயிலிட்டி துறைமுகத்தின் மூன்றாம் கட்ட அபிவிருத்தியை ஜனாதிபதி தொடக்கி வைத்திருக்கிறார். .ஆனால் மயிலிட்டி அமைந்திருக்கும் அதே பிரதேசத்தில் சில கிலோமீட்டர் தொலைவில்தான் தையிட்டி அமைந்திருக்கிறது. அங்கு கட்டப்பட்டிருக்கும் ஒரு விகாரையானது சிங்கள பௌத்த மயமாக்கலின்,நிலப் பறிப்பின் ஆகப்பிந்திய குறியீடாக நிற்கிறது. தையிட்டி விகாராதிபதி மயிலிட்டியில் நடந்த வைபவத்துக்கு வருவாராக இருந்தால் அது ஒரு விவகாரமாக மாறும் என்று கருதியதனால் அந்த வைபவத்துக்கு எந்த மதத் தலைவர்களும் அழைக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால் மண்டைதீவில் வைத்து அனுர தையிட்டி விகாரதிபதியிடம் ஆசிர்வாதங்களைப் பெற்றுக்கொண்டார். மயிலிட்டியில் அபிவிருத்தி;தையட்டியில் நிலப்பறிப்பும் சிங்கள பௌத்தமயமாக்கலும். இது தற்செயலான முரண்பாடு அல்ல. இவை இரண்டுமே ஒரே நோக்கத்தை கொண்ட அரசு இயந்திரத்தின் இரு வேறு செயற்பாடுகள்தான். ஒன்று வெளிப்படையாக ஆக்கிரமிப்பைச் செய்கின்றது. தமிழ் மக்களுக்கு அவர்களுடைய நிலத்தின் மீதும் கடலின் மீதும் உரிமை இல்லை என்பதனை அது நிரூபிக்கின்றது. இன்னொன்று தமிழ் மக்களை அபிவிருத்திக்குள் கரைத்து விட முயற்சிக்கின்றது. அதனால்தான் திரும்பத்திரும்பக் கூறவேண்டியிருக்கிறது,தமிழ் மக்கள் கேட்பது அபிவிருத்தியை அல்ல.அபிவிருத்தி செய்வதற்கான கூட்டு உரிமைகளை என்று. கடந்த வாரம் அனுர யாழ்ப்பாணத்தில் நின்ற அன்று செம்மணியில் ஏழு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டன. செம்மணிப் புதைகுழியை உள்நாட்டு நீதியின் நம்பகத்தன்மையை நிரூபிப்பதற்கான ஒரு களமாக அரசாங்கம் கையாண்டு வருகிறது. புதுக்குடியிருப்பில் அனுர ஒரு சிறு பிள்ளையைத் தூக்கி வைத்துக்கொண்டு படம் எடுத்திருக்கிறார். அதுபோல ஒரு சிறு பிள்ளையை அணைத்தபடி செம்மணியில் ஒரு தாய் புதைக்கப்பட்டார். அந்தத் தாய்க்கும் குழந்தைக்கும் நீதி கிடைத்தால்தான் புதுக்குடியிருப்பில் அனுர எடுத்த படத்துக்கு ஒரு வரலாற்றுப் பெறுமதியிருக்கும். இல்லையென்றால் அது வரலாற்றின் குப்பை கூடைக்குள் எறியப்பட்டுவிடும். ஏனென்றால் “வரலாறு ஒரு கண்டிப்பான கிழவி” என்று மார்க்சிஸ்டுக்கள் கூறுவார்கள். https://www.nillanthan.com/7726/
  13. ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவிப்பு 07 Sep, 2025 | 04:05 PM ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் லிபரல் ஜனநாயக கட்சியின் பிளவை தடுக்கும் நோக்கில் தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார். 68 வயதான ஷிகெரு இஷிபா, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜப்பான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். எல்டிபி கட்சியின் தலைவர் பொறுப்பிலும் அவர் உள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் ஜப்பான் பாராளுமன்றத்தின் மேலவையில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது. அவரது எல்டிபி கட்சி மற்றும் அதன் கூட்டணி மேலவையில் பெருபான்மையை பெறவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஜப்பான் தேர்தலில் மக்களவையில் அவரது எல்டிபி கூட்டணி பெரும்பான்மை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த சில மாதங்களாக தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலக வேண்டுமென அவரது கட்சியின் உறுப்பினர்கள் வற்புறுத்தி வந்தனர். ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடந்த கூட்டத்தில் அவருக்கு எதிராக கருத்து எழுந்தது. இருப்பினும் ஜப்பானுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி, அதனால் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பதவி விலக அவர் மறுத்து விட்டார். இந்த சூழலில் ஜப்பான் நாடாளுமன்ற மேலவையில் 141 என இருந்த எல்டிபி கூட்டணியின் எண்ணிக்கையை 122 ஆக குறைந்தது. மேலவையில் மொத்த எண்ணிக்கை 248. பெரும்பான்மையை நிரூபிக்க 3 ஆசனங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் அதில் தோல்வி கண்டுள்ளது எல்டிபி கூட்டணி. இந்த நிலையில் தான் பிரதமர் பொறுப்பில் இருந்து விலக ஷிகெரு இஷிபா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. https://www.virakesari.lk/article/224456
  14. பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பெண் ஒருவர் உள்துறைச் செயலாளராக நியமனம் 07 Sep, 2025 | 03:51 PM பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முஸ்லிம் பெண் உள்துறைச் செயலாளராகப் பதவி ஏற்றுள்ளார். பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஷபானா மஹ்மூத் இந்த முக்கியப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார். இந்த நியமனத்தின் மூலம், பிரிட்டனின் உள்நாட்டுப் பாதுகாப்பு, குடியேற்றக் கொள்கைகள் மற்றும் காவல் துறையின் மிக முக்கியமான துறைகளை ஷபானா மேற்பார்வையிடுவார். பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்தின் பர்மிங்காமுக்குக் குடிபெயர்ந்த பெற்றோருக்கு 1980 இல் பிறந்த ஷபானா, புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று சிறிது காலம் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார். 2010 இல், பர்மிங்காம் லேடிவுட் தொகுதியிலிருந்து தொழிலாளர் கட்சியின் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நுழைந்த முதல் முஸ்லிம் பெண் எம்.பி.க்களில் ஒருவரானார். கட்சியில் பல முக்கிய நிழல் பதவிகளை வகித்த ஷபானா, 2024 தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, நீதித்துறை செயலாளராகவும், லார்ட் சான்சலராகவும் நியமிக்கப்பட்டார். தற்போது, உள்துறைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார். https://www.virakesari.lk/article/224459
  15. கூட்டாட்சி அரசியல் முறைமை பற்றி இலங்கை அரசியல்வாதிகளுக்குத் தெளிவூட்டல் : சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை 07 Sep, 2025 | 11:11 AM (நா.தனுஜா) இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 13 பேரை சுவிட்ஸர்லாந்துக்கு அழைத்துச்சென்று, அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி விளக்கமளிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கும் அந்நாட்டு அரசாங்கம், அரசியல் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு உத்தேசித்திருக்கும் இலங்கைக்கு இந்நகர்வு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது. எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுடன் இலங்கைக்கும் சுவிட்ஸர்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 70 வருடங்கள் நிறைவடைகின்றன. அதனை முன்னிட்டு இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் மேற்படி செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளது. இம்மாதம் 14 - 21 ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தில் நடைபெறவுள்ள இச்செயலமர்வில் பங்கேற்பதற்கு இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு அந்நாட்டின் வெளிவிவகாரங்களுக்கான கூட்டாட்சித் திணைக்களத்தின் சமாதானம் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் செயலாளரால் அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அக்கட்சிகளால் உறுதிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கிராமிய அபிவிருத்தி, சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சரும் இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவருமான கலாநிதி உபாலி பன்னிலகே, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலஃப்பர், பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்ததின் செயலாளர் சந்திம ஹெட்டியாராச்சி, பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான கலாநிதி நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான நிலாந்தி கொட்டஹச்சி மற்றும் சமன்மலி குணசிங்க ஆகியோரும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவலவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கமும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரளவும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் டபிள்யூ.ரி.சி.பத்மா மஞ்சுளவும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான கபிலன் சுந்தரமூர்த்தியும் இதில் பங்கேற்கவுள்ளனர். சுவிட்ஸர்லாந்தில் 8 நாட்கள் நடைபெறவுள்ள இச்செயலமர்வின்போது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிட்ஸர்லாந்தின் கூட்டாட்சி முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புக்களில் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்படவிருப்பதுடன் முக்கிய கட்டமைப்புக்களுக்கான கள விஜயங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புக்கள் என்பனவும் இடம்பெறவுள்ளன. இச்செயலமர்வானது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்குமான வாய்ப்பை இலங்கை அரசியல்வாதிகளுக்கு வழங்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ற், இலங்கை அரசியல் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு உத்தேசித்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் சுவிஸ் அரசியல் முறைமையின் முக்கிய கூறுகளை உள்வாங்குவதற்கும், பல்லின மற்றும் பன்மொழி சமூகங்களுக்கு மத்தியில் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவது குறித்து அறிந்துகொள்வதற்கும் இது உதவும் எனத் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/224431
  16. மேய்ச்சல் நிலத்தை பெற்றுத்தர துரித நடவடிக்கை வேண்டும் தங்களின் போராட்டம் இரண்டு வருடங்கள் கடக்கவுள்ள போதிலும் தமக்கான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை என மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நில பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் நேற்று (6) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளனர். மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டத்தின் இரண்டு வருடம் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் பூர்த்தியடைகின்றது. எனினும் இந்த அறவழிப் போராட்டத்தில் அடைந்த நன்மைகள் குறைவு. மேய்ச்சல் தரைக்காக. ஒதுக்கப்பட்ட 3025 ஹெக்டயர் நிலப்பரப்பு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. பின்னர் 3000 ஏக்கர் தருவோம் என கூறப்பட்ட போதிலும் இன்னமும் அதற்கான எந்த பதிவும் இடம்பெறவில்லை. இந்த இரண்டு வருடத்திற்கான பூர்த்தியை முன்னிட்டு எங்களுடைய போராட்டம் அரசாங்கத்திற்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கும் என நினைக்கின்றோம் கால்நடைகளினால் நாங்கள் மட்டும் பயனடையவில்லை. அரசாங்கத்திற்கும் இதனால் வருமானம் வருகிறது. எனவே கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். -மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்- https://adaderanatamil.lk/news/cmf96frfb0092qplpb12op5d2
  17. விஜித ஹேரத் ஜெனிவாவுக்கு பயணமானார் வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) காலை 06.45 மணியளவில் ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். நாளை (08) ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 வது அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார். இந்த விஜயத்தின் போது, ஜெனீவாவில் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் அமைச்சர் விஜித ஹேரத் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையேயான விசேட சந்திப்பொன்றும் இதன்போது நடைபெற உள்ளது. வோல்கர் டர்க்கின் இலங்கை விஜயத்திற்குப் பிறகும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கழித்தும் நடைபெறும் இந்த மாநாட்டில், மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக புதிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்களை முன்வைக்க முடியும். இந்த ஆண்டு மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அமைச்சர் விஜித ஹேரத்துடன், வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸும் பங்கேற்கவுள்ளார். https://adaderanatamil.lk/news/cmf98vnf100a2o29nty78ym4a
  18. உக்ரேன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா உக்ரேன் - ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று கூறப்படுகிறது. இத்தாக்குதலில் உக்ரேன் அரசு தலைமை அலுவலக கட்டிடத்தின் மேல்தள பகுதியில் தீப்பிடித்து, புகை எழுந்தது. இதை சர்வதேச ஊடகவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். 800 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்த தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நடந்துள்ளது. இதுநாள் வரையில் கீவ் நகரில் அரசு கட்டிடங்கள் மீதான தாக்குதலை ரஷ்யா தவிர்த்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஞாயிற்றுக்கிழமை (07) அன்று ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரில் ஒரு வயது குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தாக்குதலில் கர்ப்பிணி உட்பட 11 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரேன் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதை கீவ் நகரின் நிர்வாக தலைவரும் உறுதி செய்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று சேதமடைந்துள்ளது. அதில் உள்ள மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது. கடந்த இரண்டு வார காலத்தில் உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்ட மிக தீவிர ட்ரோன் தாக்குதலில் இது இரண்டாவதாக அமைந்துள்ளது. தீ பற்றிய அரசு தலைமையக அலுவலக கட்டிடத்தில் உக்ரேன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வசிப்பதாக தகவல். இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவில் உள்ள பிரையன்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள எரிசக்தி உள்கட்டமைப்பை சிதைக்கும் வகையில் எண்ணெய் குழாய் வழிதடத்தை ட்ரோன் மூலம் உக்ரேன் தாக்கியது. இதை உக்ரைனின் ட்ரோன் படை தளபதி ராபர்ட் ப்ரோவ்டி உறுதி செய்துள்ளார். அண்மையில் உக்ரேன் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை, ட்ரோன் மூலம் ரஷ்யா தகர்த்தது. இதில் உக்ரேன் வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 2022-ல் தொடங்கிய ரஷ்யா - உக்ரேன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முயற்சி எடுத்தார். ஆனால், ரஷ்ய ஜனாதிபதி புட்டின், உக்ரேன் மீதான தாக்குதலை இன்னும் நிறுத்தவில்லை. இந்த சூழலில் உக்ரேன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை தொடர்கிறது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/உக்ரேன்-மீது-800-ட்ரோன்களை-ஏவிய-ரஷ்யா/50-364136
  19. இலங்கை இராணுவத்தால் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் 29 ஆவது நினைவு தினம்! adminSeptember 7, 2025 செம்மணியில் இராணுவத்தால் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட பின் படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தி குமாரசுவாமியின் 29 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (07.09.25) நடந்தது. கிருசாந்தி வடக்கு, கிழக்கு நினைவேந்தல் குழுவின் ஏற்பாட்டில் இந்த நிகழ்வு செம்மணி சந்தி பகுதியில் நடந்தது. படுகொலை செய்யப்பட்ட கிருசாந்தியின் மைத்துனன் சந்திரகாந்தன் மயூரன் மற்றும் உறவினர்கள் இந்த நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினார். அத்தோடு “வாசலிலே கிருசாந்தி” எனும் செம்மொழி தொடர்பான கவிதை நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டது. https://globaltamilnews.net/2025/220176/
  20. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம் September 6, 2025 8:00 pm பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் எடுத்துரைத்துள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (2) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத் மனித உரிமைகள்சார் விடயங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சமகால நகர்வுகள் குறித்தும், அவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் விளக்கமளித்தார். அதன்படி புதிய அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டின் மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாறுபட்ட பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றின் மூலம் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்கள் அடையப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார். அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை மறுசீரமைப்பதற்கான நகர்வுகள், ஊழல் ஒழிப்பு செயற்றிட்டம், கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டம், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பன உள்ளடங்கலாக உள்ளகக் கட்டமைப்புக்களின் சமகால முன்னேற்றங்கள், சுயாதீன வழக்குத்தொடுனர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் உள்ளிட்ட நகர்வுகள் பற்றியும் அமைச்சர் விஜித ஹேரத் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்! https://oruvan.com/we-will-provide-solutions-to-the-problems-of-the-tamil-people-and-build-reconciliation/
  21. மன்னாரில் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை 06 Sep, 2025 | 05:19 PM மன்னாரில் 16 வயதுக்கு குறைந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி கடந்த வியாழக்கிழமை (04) தீர்ப்பளித்தார். குற்றத்தின் பாரதூர தன்மை, பாதிக்கப்பட சிறுமியின் நிலை, மேலும் இவ்வாறான குற்றங்கள் இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்ற தன் அடிப்படையில் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 7 வருட கடூழிய சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக தண்டப்பணமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய் நஷ்ட ஈட்டு தொகையும் வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது. இதில் சகோதரர் குறித்த வயது குறைந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய உதவி புரிந்தமைக்காக இரண்டாம் எதிரிக்கு அதே தண்டனை அதாவது 7 ஆண்டு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. வழக்கு தொடுனர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் மற்றும் சிவஸ்கந்தஶ்ரீ ஆகியோர் வழக்கை நெறிப்படுத்தி இருந்தனர். வழக்கு தொடுநர் தரப்பில் வழக்கு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224391
  22. அஜீவன் அண்ணாவுடன் யாழ்கள உறுப்பினர்களின் சந்திப்பு பற்றிய திரி
  23. இளந்தாரி வழிபாடு தி. செல்வமனோகரன் அறிமுகம் எந்த உயிரியின் பரிணாமத்திலும் வளர்ச்சியிலும் இளமைப் பருவம் முக்கியமானதாகும். மனிதரில் இளைஞர்களை வாலிபர், இளைஞர் – இளந்தாரி என்று சுட்டுதல் வழக்கம். போர், காதல், உழைப்பு என எல்லாத்தளங்களிலும் இளமை தவிர்க்க முடியாத பிரதானமான அம்சமாகத் திகழ்கிறது. வாழ்வில் துடுக்குத்தனமும் அளவற்ற செயற்பாடுகளும் உடைய அப்பருவம் ஒவ்வொரு மனிதராலும் மறக்க முடியாத ஒன்றாகும். போரிலும் வீரத்திலும் ஆற்றலிலும் இளந்தாரிப் பருவம் தவிர்க்க முடியாத பருவமாகின்றது. மண், பொன், காதல் என்பவற்றுக்காகத் தன்னை அழித்துக் கொள்கின்ற – தியாகித்துக் கொள்கின்ற பருவமும் இதுதான். அதீத கோபம் இதன் தவிர்க்க முடியாத குணமாகின்றது. ஆதலால் விபரீத முடிவுகளையும் இது எடுத்துவிடுகிறது. நாட்டுப்புறவியல் ஆய்வில் ஈழத்துப்புலத்தின் தனித்துவமான தெய்வங்களுள் ஒன்றாக இளந்தாரி காணப்படுகின்றார். இளந்தாரி எனும் தெய்வம் இளந்தாரி எனும் சொல்லை வாலிபனைக் குறிக்கும் சொல்லாகவே அகராதிகள் சுட்டுகின்றன. ஆனால் பஞ்சவன்னத் தூது ‘குலதேவன், ஊரை என்றும் காக்கும் தெய்வம், செஞ்சடா முடித்தேவன், மாதர் போற்றும் அண்ணல், கரந்தை சூடி அருள்புரிதூயன், கறையர் கண்டன், அருள் பெற்ற தெய்வம், கந்தமாமலரப் பொற்பதன், நற்றவர் போற்றும் மெய்த்தெய்வம், எத்திசையும் புகழ் – கருணை சேரும் கைலாயன்’ எனப் பலவாறு சுட்டுகிறது. இளந்தாரி வழிபாடு இடம்பெறும் இடங்கள் பொதுவில் இணுவிலில் மட்டுமே இளந்தாரி வழிபாடு காணப்படுவதாக நூல்களிலும் சமூக வலைத்தளங்களிலும் எழுதப்பட்டிருப்பதைக் காணமுடிகிறது. இளந்தாரி வழிபாட்டுக்கான பெருங்கோயில் இணுவைப் பேரூரிலேயே இருப்பதாக தமிழ்வேள் க.இ.க. கந்தசாமி குறிப்பிடுவது உண்மைதான். ஆயினும் இளந்தாரி வழிபாடு வன்னியில் – பூநகரியில் இருந்து மன்னார் செல்லும் வழியில் உள்ளமைந்திருக்கும் ஊர்களான கிராஞ்சி, வேரவில், கல்லாவில் போன்றவற்றிலும் காணப்படுகின்றது. சாமுவல் லிவிங்ஸ்ரன் (Samuel Livingston) தனது ‘The Sinhalese of Ceylon and The Aryan Theory’ எனும் நூலில் அனுராதபுர மாவட்டத்தில் உள்ள ‘கலாவெவ’ குளம் உள்ளிட்ட குளங்களுக்குக் காவல் தெய்வமாக ‘Kadavara, Ilandari deviyo’ என்பன காணப்படுவதாகக் குறிப்பிடுகின்றார். இங்கு குறிப்பிடப்படும் இளந்தாரி தெய்யோ என்பது குளத்தோடு தொடர்புபட்டதாகவும், அவ்வழிபாடு அனுராதபுரத்தில் நிகழ்ந்ததாகவும் காணப்படுகின்றது (P.34). தவிர, இங்கு இடம்பெறும் காடவர – காட்டுவைரவராகச் சுட்டப்படுகின்றார். வரணியில் உள்ள குருநாத சுவாமி கோயிலில் ‘இளந்தாரி’ வைரவர் எனும் தெய்வம் பரிவாரமாக இருப்பதை அந்த ஆலயத்தின் பூசாரியும் ஸ்ரீபாத தேசிய கல்வியியல் கல்லூரி விரிவுரையாளருமான சி.கா. கமலநாதன் எமக்கு உறுதிப்படுத்தினார். அது காவல் தெய்வமாகவே கருதப்படுகிறது. அதுபோல புங்குடுதீவில் இளந்தாரி நாச்சியார் கோயில் என்கின்ற மடத்துவெளி பாலசுப்பிரமணியர் கோயில் இன்றும் சிறப்புடன் திகழ்கிறது. நானூறு வருடப்பழமை கொண்ட இக்கோயில் இளந்தாரி நாச்சியார் கோயில் என அழைக்கப்பட்டமைக்கான தெளிவான காரணமெதனையும் அறிய முடியவில்லை. மட்டக்களப்புத் தேசத்தில் வழக்கத்தில் உள்ள வதனமார் வழிபாட்டோடு இணைந்த இலக்கியங்களில் ஒன்றாகவும், வழிபாட்டில் பாடப்படுவதாகவும் உள்ள ‘வதனமார் குழுமாடு கட்டு அகவலில்’ பத்துப்பாலர் பிறந்த பாடலின் பின் “பிறந்து வளர்ந்தாரோ பெரிய இளந்தாரி பத்து வயதும் பதினாறுஞ் சென்ற பின்பு” என வரும் வரிகள் மங்கலனாரை பெரிய இளந்தாரியாகச் சுட்டி வழிபடுதலைக் குறிக்கின்றது. குழு மாடுகளைப் பிடித்து பட்டியில் உள்ள ஏனைய மாடுகளோடு இணைத்து விடுதல் வழக்கம். இது ஒரு வீர விளையாட்டாகவும் கருதப்படுகின்றது. குழுமாட்டினைப் பிடிக்கச் செல்லும் வதனமாரை ‘இளந்தாரிமார் கூட்டம்’ எனச் சொல்வதாக ஈழத்துப் பூராடனார் (2000) குறிப்பிடுதல் கவனத்திற்குரிய ஒன்றாகும். ஆக இளந்தாரி எனும் வழக்காறு இளைஞர்களைக் குறிக்கின்றது எனப் பொதுவில் குறிப்பிடப்படினும் இது இளந்தாரியான தெய்வத்தைக் குறிக்க நாட்டாரியலில் பயன்படுத்தப்படுகின்றமையையும், இளந்தாரி தெய்வம் ஈழத்துக்கே உரிய தெய்வமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது. இணுவில் இளந்தாரி கோவில் பற்றிய ஆய்வை நண்பர்களான கோ. விஜிகரன், கு. டனிஸ்ரன் ஆகியோருடனும், கிராஞ்சி, வேரவில் பிராந்திய இளந்தாரி கோவில்கள் பற்றிய கள ஆய்வினை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை விரிவுரையாளர் சி. செரஞ்சன், ஆய்வு ஆர்வலர் கோ. விஜிகரன் ஆகியோரின் துணையோடும் மேற்கொண்டோம். இளந்தாரி பற்றிய கதைகள் 1. யாழ்ப்பாண அரசர் காலத்தில் இணுவைப் பேரூரின் அரசனாக விளங்கியவர் காலிங்கராயன் என்பவர். காலிங்கராயனின் பின் ஆட்சிக்கு வந்த அவனுடைய மகனே கைலாயநாதன் என்கின்ற இளந்தாரி ஆவான். உடலுறுதி உள்ள துடிப்பான இளைஞர்களை இளந்தாரி என்று அழைப்பர். இவனது வீரம், கொடை, விருந்தோம்பல், ஆட்சித் திறன், இறைவழிபாடு ஆகிய சிறந்த பண்புகளையும் வரலாற்றுச் சிறப்புகளையும் கைலாயநாதன் பஞ்சவன்னத் தூது நூலாலும் செவிவழிச் செய்திகளாலும் அறிய முடிகிறது. இளந்தாரி, தனது உலகு நீத்தலை மக்களுக்கு முன்பே குறிப்பாக உணர்த்தியிருந்தார் எனவும், ஒருநாள் ஒரு புளியமரத்தின் வழியே உருக்கரந்து விண்ணுலகு சென்றார் எனவும் கூறப்படுகிறது. அதனை அறிந்த மக்கள் அங்கு அவரைத் துதித்தனர் என்றும், இளந்தாரி அம்மக்கள் முன் தோன்றி அருளினார் என்றும் இணுவில் சின்னத்தம்பிப் புலவர் இயற்றிய ‘கைலாயநாதன் பஞ்சவன்னத் தூது’ நூலில் கூறப்படுகிறது. 2. சாதாரண சனங்களை நேர்கண்டபோதும், இணுவில் இளந்தாரி கோயில் பூசாரியாக இருந்த ஆறுமுகராசாவின் மனைவி சின்னாச்சி (வயது 94) என்பவரை நேர்காணல் செய்த போதும் கூறப்பட்ட கதை வேறாக இருந்தது. இணுவில் கிழக்கில் கிணறு வெட்டுவதற்காக ஒரு குடும்பம் ஏழாலையிலிருந்து துலா கொண்டுவந்து வேலை செய்தார்கள். தாய் – தந்தையர், இரு இளந்தாரி மகன்கள் என அந்தக் குடும்பம் காணப்பட்டது. ஒருநாள் வீட்டில் நின்ற கன்று தாய்ப் பசுவில் பாலைக் குடித்துவிட்டது. தாயார் குளிப்பதற்கு இவர்கள் கிணற்றிலிருந்து நீரும் அள்ளிக் கொடுக்கவில்லை. இதனால் இரு இளந்தாரி மகன்மாரையும் தந்தையார் கடிந்து கொண்டார். இதனால் இவ்விரு இளந்தாரிகளும் கோபித்துக்கொண்டு புளியமரத்தில் ஏறிக் காணாமல்போன அற்புதம் நிகழ்ந்தது. இவர்களுக்கு உதவியாளராக இருந்தவர் “நான் என்ன செய்ய” என அவர்களிடம் கேட்க “நீ பனையில் ஏறு” என்று அந்த இருவரும் கூற, அவரும் சற்றுத் தூரத்தில் இருந்த பனை மரத்தில் ஏறிக் காணாமல் போனார். மக்கள் யாவரும் திகைத்து வணங்கி நிற்க “எமக்கு காய்மடை, பூமடை வைத்து வழிபடுங்கள் நல்லன நிகழும்” என புளிய மரத்தடியில் அசரீரி கேட்டது. அன்றிலிருந்து இவ்வழிபாடு நிகழ்ந்து வருகின்றது. இங்கு இளந்தாரிகள் இருவரும் வேளாளர் சமூகத்தவராகவும் பனையில் ஏறியவர் பள்ளர் சமூகத்தவராகவும் இருந்தனர். தாமேறிய மரத்தில் அவரை ஏற்றாதது அக்காலச்சமூகத்தில் இருந்த அடுக்கமைவின் இறுக்கத்தை தெற்றெனப் புலப்படுத்துகிறது. இளந்தாரிகளை வேளாளரும், பனையில் ஏறியவரை அவரது சமூகத்தவரும் ஆதரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இன்று பனைமரம் இல்லை. அதில் வளர்ந்த ஆலமரமே உண்டு. அவர் அண்ணமாராக பொல்லு வைத்து வழிபடப்படுகின்றார். இளந்தாரி கோயிலில் புளியமரம் பரந்து நிற்கிறது. அதன் அடியில் பாதம் வழிபடப்பட்டதாகக் கூறப்படினும் இன்று அது இல்லை. நடுகல் வழிபாடு தொடர்ந்து காணப்படுகின்றது. வேல், சூலம் என்பனவும் உள்ளன (நேர்காணல் – பரமானந்தராசா வாகீசன்). கிராஞ்சி, வேரவில், அனுராதபுரம் கிழக்குப் பிராந்தியங்களில் இவ்வாறான கதைகள் எதனையும் அறிய முடியவில்லை. இணுவில் இளந்தாரி கோயில் இணுவில் பகுதியை ஆட்சி செய்த அரச வம்சத்தவராகவும், அருளாளராகவும் தனது உயிர் நீத்தலை முன்பே அறிந்திருந்த தீர்க்கதரிசியாகவும் கருதப்படுகின்ற கைலாயநாதன் வாழ்ந்த அரண்மனையாகவும், வேளாள இளந்தாரிகளின் வீடாகவும் கருதப்படும் வளவில் சிறுகோயில் அமைத்து வழிபடப்பட்டு வந்துள்ளது. அவர்கள் தம் உருவை மறைத்த (உருக்கரந்த) தினம் பெருவிழாவாகக் கொண்டாட்டப்பட்டு வந்துள்ளது. (கந்தசுவாமி,க.இ.க.(பதி), (1998), பஞ்ச பஞ்சவன்னத் தூது, பக், 62 – 74) காலப்போக்கில் இளந்தாரிகள் மறைந்த புளிய மரத்தடியில் இவ்வழிபாடு நிகழ்த்தப்பட, இவர்களது உதவியாளரது வழிபாடு பனை மரத்தடியில் நிகழ்த்தப்பட்டது. இப்புளியமரத்தடி வழிபாடு வைத்திலிங்கம் அவர்களால் கொட்டிலமைத்து தொடக்கிவைக்கப்பட்டது. அவரது மகன் நாகலிங்கம், பின்னர் ஆறுமுகராசா, பரமானந்தபிள்ளை இன்று கானமூர்த்தி மற்றும் சகோதரர்கள் என ஆண்வழிப் பூசாரிகளை கொண்ட வழிபாட்டு முறையாக நிகழ்ந்து வருகிறது. சிறுகொட்டிலாக ஆரம்பித்து 1968 இன் பின்னர், 2024இல் பிராமணர்களால் கும்பாபிக்ஷேகம் நிகழ்த்தப்பட்டதாயினும், இப்பூசாரிகளே நாளாந்தப் பூசை தொட்டு வருடாந்த மடை வரை யாவற்றையும் செய்து வருகின்றனர். இந்த ஆலயத்தின் சிறப்பு, நடுகல் வழிபாடு காணப்படுதலாகும். கருவறையில் புளியமரத்தின் ஒரு பகுதி, நடுகல், வேல், சூலம் போன்றன காணப்படுகின்றன. அருகில் பனைமரத்தடியில் உள்ள அண்ணமார் கோயில் கிருஷ்ணன் கோயிலாக்கப்பட்டுள்ளது. இக்கோயிலிலும் கிருஷ்ணன் சிலை வைக்கப்பட்டிருந்தாலும், இது ஆகமமயப்படவில்லை; கிருஷ்ணர் மூலமூர்த்தியாக்கப்படவுமில்லை. கிராஞ்சி குறிப்பன் இளந்தாரி கோயில் கிராஞ்சி, பிருந்தாவனம் பகுதியில் இரண்டு இளந்தாரி கோயில்கள் அமைந்துள்ளன. அவற்றுள் ஒன்று கிராஞ்சி பிருந்தாவன சந்தியில் புளிய மரத்தடியின் கீழ் அமைந்துள்ளது. குறிப்பன் இளந்தாரி கோயில் நீண்ட காலமாக அமைந்திருக்கும் கோயிலாயினும் வீரன், கந்தையா, செல்வரத்தினம் , இளையராசா எனும் நான்கு தலைமுறைப் பூசாரிகளையே அறியமுடிகிறது. இதில் கந்தையா என்பாரின் மனைவி பூரணம், யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியைச் சேர்ந்தவர் (தகவல் ஜீவமலர் விக்னேஸ்வரன், செல்வரத்தினம் பூசாரியின் மகள்). இன்றும் ஓலைக் கொட்டிலாலான சிறு கோயிலாகவே அமைந்துள்ளது. முன்புறம் நான்கு தூண்கள் கூரையின்றிக் காணப்படுகின்றன. விழாக்காலத்தில் பந்தலிடப்படும். மூலத்தில் சூலம் மூன்று வெவ்வேறு அளவுகளில் நாட்டப்பட்டிருந்தது. மையத்தில் இருந்த சூலம் உயரமாகவும், திருசூல இடைவெளியில் கண்ணாடி வைக்கப்பட்டும் இருந்தது. சூலத்தின் இடைப்பகுதியில் இரு கொம்புகள் அல்லது கொழுக்கிகள், ஒன்று மேல் நோக்கியும் மற்றையது கீழ்நோக்கியும், இருபுறமாகவும் காணப்படுகின்றன. இந்த ஆலயத்துக்கு எதிர்ப்பக்கத்தில் புதிய இளந்தாரி ஆலயம் அமைக்கப்பட்டிருப்பினும், ஒரு வருடமே பூசை நடாத்தப்பட்டது. இன்று கைவிடப்பட்ட நிலையில் உள்ளது. இளந்தாரி கோயிலுக்கு மடைப்பண்டம் வைக்கப்படுகின்ற கிராஞ்சி பட்டிமோட்டை நாகபூசணியம்மன் ஆலயம், இவ்வாலயத்திலிருந்து 100M அளவு தூரத்தில் உள்ளது. அவ்வாலய முன்றலில் உள்ள ஆலமரத்தின் கீழ் குறிப்பன் கோயில் உள்ளது. அங்குள்ள குறிப்பன் தெய்வத்துக்கான சூலம் இளந்தாரி சூலத்துடன் ஒத்திருப்பதும், இவை பட்டிமாட்டுடன் இணைந்த வழிபாடாக சிறுகுடி வேளாள சமூகமான பள்ளர் சமூகத்துடன் இணைந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தக் கிராஞ்சி இளந்தாரி ஆலயத்தை ஒத்த மரபுகளே வேரவில், கல்லாவில் ஆலயங்களிலும் காணப்படுகின்றன. வழிபாட்டு மரபுகள் இணுவில் ஆலயத்தில் நாளாந்தம் விளக்கு வைத்து சிறு படையல் இட்டு வழிபடும் முறை காணப்படுகிறது. கிராஞ்சி கோயிலில் வெள்ளிக்கிழமைகள் தோறும் விளக்கு வைக்கப்படுகிறது. இதைவிட தைப்பொங்கல், சித்திர வருடப்பிறப்பு மற்றும் வருடாந்த மடை உள்ளிட்ட விசேட தினங்களில் விசேட பூஜை உண்டு. இணுவில் இளந்தாரி ஆலயத்தில் மரத்தில் ஏறி உரு மறைப்புச் செய்த நாளினை மையமாகக்கொண்டு வருடாந்த மடை நடைபெறுகிறது. வருடாந்தப் பொங்கலுக்குரிய நாளை மூ. சிவலிங்கம் சித்திரை வருடப் பிறப்புக்கு முன்பு வரும் செவ்வாய்க்கிழமை எனவும், கந்தசாமி வருடப் பிறப்புக்கு பின்பு வரும் செவ்வாய்க்கிழமை எனவும் தத்தம் நூல்களில் குறிப்பிட்டுள்ளனர். இதில் வருடப்பிறப்புக்கு முதல் வருகின்ற செவ்வாய்க்கிழமையில் முதலாம் மடை என்கின்ற முதலியார் மடை நடைபெறும். இதுவே பெருவழிபாடாக, பெருவிழாவாகக் கொண்டாடப்படும். வருடப் பிறப்புக்கு பின்பு வரும் செவ்வாய்க்கிழமை எட்டாம் மடையாக அமையும். இது பெரிய அளவில் நிகழ்த்தப்படாமல் சிறப்பு வழிபாடாக நடைபெறும் என ஆலயத்தின் பரிபாலகர்கள் விளக்கம் தருகின்றனர். முதல் மடை நிகழும் நாளை ஒரு மாதத்திற்கு முன்பே பூசாரி ஊரவர்க்கு அறிவிப்பார். அடியவர்கள் கூடி வீடுகள் தோறும் சென்று காணிக்கை பெற்று வருவர். பணம், அரிசி, மரக்கறிகள், தேங்காய், பழம், இளநீர் உள்ளிட்டவை காணிக்கையாகக் கிடைக்கப்பெறும். ஆலயமுன்றலில் மண்பானையில் வளந்து வைக்கப்பட்டு பொங்கல் இடம்பெறும். இதன்போது வாத்தியங்கள் இசைக்கப்பட்டு பூசை நடைபெறும். பூசாரி உருவேறி தெய்வமாடுவார். ஒரு கையில் பிரம்பும் மறுகையில் தீபமும் ஏந்தி வருவார்; கையில் கற்பூரமேற்றி அதனை அடுப்பில் இட்டு பொங்கலை ஆரம்பித்து வைப்பார். அதன்பின் வளந்துப் பானைக்கு அருகே சோறு, கறிகளுக்கான அடுப்புகளும் மூட்டப்பட்டு படையலுணவு ஆக்கப்படும். பலகாரங்களும் படைக்கப்படும். மக்களும் நேர்த்திக்கடனுக்கான பொங்கலைப் பொங்குவர். வளந்து கட்டலின் பின் சின்னத்தம்பிப்புலவரின் பஞ்சவன்னத் தூது ஏடு படிக்கப்படும். இன்று பஞ்சவன்னத் தூது ஏடு நூலுருப் பெற்று இரண்டாம் பதிப்பும் வெளிவந்துள்ளது. இதன்பின் இளந்தாரி வழிபட்ட சிவகாமியம்மன், காளியாச்சி, வைரவர் தெய்வங்களுக்கு படையல்கள் எடுத்துச் செல்லப்படும். அந்தப் பயணத்தில் சங்கு, பறை, முழவு, சேமக்கலம் முதலிய வாத்தியங்கள் இசைக்கப்படும். இளந்தாரி திருவீதியுலாப் பாடல், திருமுறைகள் என்பன பாடப்படும். அந்த ஆலயங்களில் படையல் முடிந்தபின் இளந்தாரியின் ஏவலின்வழி பனைமரத்தில் ஏறிக் காணாமல்போன உதவியாளரின் ஆலயத்திற்குச் (அண்ணமார்) சென்று படையல் படைத்து வழிபாடு இயற்றப்படும். அதன்பின்பே இளந்தாரி கோயிலுக்கு வந்து படையல் வைக்கப்படும். சோறு கறியோடு பழம், வெற்றிலை, பாக்கு, பலகார வகைகள் படைக்கப்பட்டு பூசை இடம்பெறும். பூசாரி தெய்வமேறி, கலையாடி, குறி சொல்லி, விபூதி இடுவர். இறுதியில் கும்ப நீரினை இளந்தாரியின் காலடி இருந்ததாக நம்பப்படும் புளிய மரத்தடியில் ஊற்றி வழிபடுவர். இது காலடி நீர் வார்த்தலாக – காலடி வழிபாடாகச் சொல்லப்படுகின்றது. இவற்றைவிட தீமிதித்தல் முக்கிய வழிபாட்டு முறையாக இன்றுவரை காணப்படுகிறது. கடும் நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் இத்தெய்வத்தை வழிபட்டு நோய் நீக்கம் பெற்றதாகக் கூறப்படுகிறது. இதேபோல கிராஞ்சி கோயிலிலும் தனித்துவமான வழிபாட்டு மரபு காணப்படுகிறது. காட்டுப் பிள்ளையார், அம்மன், குறிப்பன், இளந்தாரி எனும் தெய்வங்களுக்கான வளந்துகள் குறிப்பன் கோயிலில் வைத்தெடுக்கப்பட்டு முதலில் பிள்ளையாருக்கும் பின்பு அம்மனுக்கும் பொங்கலிடப்படும். பின்பு குறிப்பன் முன்றலில் குறிப்பனுக்கும் இளந்தாரிக்கும் பொங்கலிடப்படும். பொங்கலுக்கு முதல் நாள் வெற்றிலை மடை வைக்கப்படும். இளந்தாரிக்கான படையல், குறிப்பன் முன்றலில் இருந்தே எடுத்துச் செல்லப்படும். அதில் பொங்கல் இடம்பெறுவதில்லை. இணுவில் இளந்தாரி கூறியது போல காய்மடை, பூமடையே வைக்கப்படுகிறது. பழங்கள் சிறப்பாகப் படைக்கப்படுகின்றன. இங்கும் பறை, சங்கு, சேமக்கலம் முதலான இசைக்கருவிகளின் இசையோடு பூசை நடாத்தப்படுகிறது. அதன்போது பூசாரி தெய்வமேறிக் கலையாடுவார். குறிசொல்லி விபூதியிடுவார். இந்தக் கோயிலின் பூசாரியாக இருந்த செல்வரத்தினம் உருவேறி, கும்பம் ஏந்திச் சென்றபோது (2006) பகைவர் மந்திரத்தால் கட்டியதால் கும்பத்தை இறக்க முடியாத சூழல் ஏற்பட்டதாகவும், பின்பு அவரது தம்பியே கும்பம் இறக்கியதாகவும் கூறப்படுகிறது. இணுவில் இளந்தாரி கோயில் போலவே இங்கும் வருடப்பிறப்பை ஒட்டி மடை வைக்கப்படுகிறது. மடையில் ‘நிறைமணி’யாக மோதகம், பழம், பஞ்சாமிர்தம் என்பன வைக்கப்படும். சித்திரை வருடப்பிறப்புக் கழிய வரும் திங்களில், விளக்கு வைப்பர். செவ்வாய் தினத்தில் பொங்கல் வைப்பர். மூன்றாம் நாளே எட்டாம் மடை வைக்கப்படுகிறது. இணுவிலில் எட்டாம் நாளே எட்டாம் மடை வைக்கப்படுகிறது. இளந்தாரி கோயிலில் நீத்துக்காய், இளநீர் என்பன வெட்டிக் கழிப்புச்செய்யும் முறையுண்டு. ஏனைய நாட்களில் நீத்துக்காய் வெட்டும் மரபு இல்லை. தவிர்க்கமுடியாத சந்தர்ப்பத்தில் நீத்துக்காய் வெட்டப்படாது குத்தி உடைக்கப்படும். இம்மரபு இணுவிலில் இல்லை. கிராஞ்சியில் கழிப்புக் கழித்தல் பிரதான சடங்காக, சாதாரண நாட்களிலும் நடைபெற்று வருகிறது. ஆரம்பத்தில் பலியிடல் காணப்பட்டாலும், இப்போது பலியிடப்படுவது இல்லை. வழிவெட்டல் சடங்கு நிகழ்த்தும் காலத்தில் தூளி குடித்தல், தூளி பிடித்தல் சடங்குகள் நிகழ்த்தப்படுகின்றன. பிரம்பு, பொல்லு, பாவாடை, கெண்டையம் அணிந்து வரும் பூசாரி தெய்வமேறிய நிலையில் ஒன்பதுமுறை மடையை வலம்வந்து இறுதியில் மடைகளை அள்ளி ஒன்றாக முகர்ந்து பார்த்து, பின் அள்ளி எறிந்தபடி ஓடுதல் தூளி குடித்தல் எனப்படுகிறது. அதேபோல எல்லாப் பரிகலங்களையும் அழைத்து, பச்சரிசி எறிந்த பின், நீரைத் தெளித்துத் தெளித்து, எல்லாத் தெய்வங்களும் ஒன்றாக நின்றாடுதல் தூளி பிடித்தல் எனப்படுகிறது. வழிவெட்டல் சடங்குகளில் இன்றும் பெண்கள், சிறுவர்கள் என்போருக்கு அனுமதி இல்லை. எல்லா இளந்தாரி ஆலயங்களிலும் இரண்டாம் மடையாக ஆனித்திங்களில் விழா நடைபெற்று வருகின்றது. பட்டிமோட்டை அம்மனிற்கு, இளந்தாரி உருவேறிய பூசாரியே கொடித்தடி தேடி வெட்டி எடுத்து வருவார். பின்பு இளந்தாரி கோயிலில் வைத்து வேப்பமிலை, அம்மன்கொடி, மாலை என்பன கட்டி பறை மேளத்தோடு எடுத்துச் செல்லப்படும் வழக்கம் கிராஞ்சியில் இன்றும் காணப்படுகிறது. சிங்கள இளந்தாரி கிராஞ்சியில் உள்ள கரும்புக்காரன் கோயிலில் பொங்கல் விழாக்காலத்தில் உருவேறி நின்றாடும் தெய்வங்களில் ஒன்றாக சிங்கள இளந்தாரித் தெய்வம் காணப்படுகின்றார். இவர் ஏனைய தெய்வங்களோடு தெய்வமாடுவதோடு பூசையில் பயன்படுத்தப்படும் மாட்டை இனங்காட்டும் தெய்வமாகவும் விளங்குகிறார். இந்த சிங்கள இளந்தாரி வெள்ளை, சிவப்பு இணைந்த ஆடைகளோடே தெய்வமாடுவார். இவர் தெய்வமாடும் போது பேசுகின்ற பாஷை யாருக்குமே புரிவதில்லை என்பதனால் அவர் சிங்கள இளந்தாரி எனப்படுகின்றார் (தகவல் பா. செல்வம், கிராஞ்சி, வயது 66). சிங்கள மக்கள், பிறருக்கு விளங்காமல் கதைப்பதை தமிழைப் போல் இருக்கிறது எனக் கூறுவதாக பேராசிரியர் கணநாத் ஒபயசேகர குறிப்பிடுகின்றார். யாழ்ப்பாணத்தில் ‘தானறியாச் (தானடாச்) சிங்களம் தன் பிடரிக்குச் சேதம்’ என்ற பழமொழி நின்று நிலவுகிறது. சில அவதானிப்புகள் இளந்தாரி பற்றிய இருகதை மரபுகள் காணப்படுகின்றன. அரச பரம்பரையோடு இணைந்த கதையை இணுவில் சின்னத்தம்பிப் புலவரின் பஞ்சவன்னத் தூதிலேயே காணமுடிகிறது. சாதாரண சனங்களின் கதை நிலவுடமைச் சமூக மனிதர்களின் கதையாக, இரு இளைஞர்களினதும் அவர்களது உதவியாளரதும் கதையாகவே நின்று நிலவுகிறது. இளந்தாரி, இணுவிலில் வேளாளரின் தெய்வமாகக் காணப்படினும் ஏனைய இடங்களில் சிறுகுடி வேளாளரின் தெய்வமாகவே விளங்குகிறது. இளந்தாரி ஆலயங்கள் யாவற்றிலும் பூசாரிகளே இன்றும் பூசை செய்கின்றனர். இணுவில் அண்ணமார் கோயில் மேனிலையாக்கமுற்ற போதும் இளந்தாரி வழிபாடு நாட்டாரியல் மரபோடு தான் விளங்குகிறது. இளந்தாரி என்ற சொல் பல தெய்வங்களோடு இணைந்த சொல்லாகக் காணப்படினும் தனித்தெய்வமாக வணங்கப்படுவதற்கு இக்கோயில்கள் சான்றாகின்றன. கறிசோறு மடை, பழமடை, வெற்றிலை மடை என்பனவே முதன்மை பெறுகின்றன. பொங்கல் இடம்பெறுவதில்லை. பூசாரி, கலையாடி குறிசொல்லும் மரபு இக்கோயில்களில் காணப்பட்டபோதும் இன்று இணுவிலில் அது இல்லாமல் போய்விட்டது. இணுவில் இளந்தாரி மடை இன்று சிவகாமி அம்மன், காளி, வைரவர், அண்ணமாருக்கு எடுத்துச் செல்லப்படுவதில்லை. இதன் பின்னணியில் சூழல், நேரம், சமூக மாற்றம் எனப் பல காரணிகள் காணப்படுகின்றன. கிராஞ்சி, கல்லாவில், வேரவில் இளந்தாரி கோயில்கள் மந்திரம், சடங்கு என்பனவற்றோடும் கழிப்புக்கழித்தல் மற்றும் தீய கட்டுக்களுடனும் பின்னிப்பிணைந்திருப்பதை அவதானிக்க முடிகின்றது. நாம் சென்றபோது, கிராஞ்சி இளந்தாரி கோயிலில் கழிப்புக்கழிக்க பயன்பட்ட தேசிக்காய், இளநீர் உள்ளிட்ட பொருட்கள் ஆலய முன்றலில் எங்கும் பரவிக் கிடந்தன. சிங்கள இளந்தாரி எனும் சொல்லாடல் இனத்துவ, மொழி சார் பண்பாடு பற்றிய மனப்பாங்கின் சொல்லாடலாக விளங்குகிறது. முடிவுரை ஈழத்துப் புலத்துக்கேயான தனித்துவமான நாட்டார் தெய்வமாக இளந்தாரி விளங்குகின்றது. இளந்தாரி பற்றிய கதைகள் சமூக அடுக்கமைவினதும் மனப்பாங்கினதும் வெளிப்பாடாக அமைந்துள்ளன. இத்தெய்வத்தை கயிலைநாதன் எனும் ஓர் இளந்தாரியாக பஞ்சவன்னத் தூது கூற, மக்கள் வாய்மொழிக் கதைகளோ அண்ணன், தம்பி ஆகிய இருவரே இளந்தாரிமார் என உரைப்பதும் (கோயிலின் பின்புறத்தில் மரத்தின் கீழ் இருவருடைய சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளன). பனையில் ஏறியவரை மெய்ப்பாதுகாவலர் எனத் தூதிலக்கியம் கூற, மக்களின் வாய்மொழிக் கதைகளோ சிறுகுடி வேளாளர் என உரைப்பதும் மேற்சொன்ன கூற்றைத் தெளிவுபடுத்துகிறது. சமூக மேனிலையாக்கம் மற்றும் சாதிய நீக்கத்தின் வழி அண்ணமார் வேணுகோபாலனாக மாற்றப்பட்டார். இளந்தாரி இன்றும் நாட்டார் தெய்வமாகவே நின்றுநிலவுகிறார். பூசாரி உருவேறி ஆடும்போது பிரம்பேந்தி வருவது விவசாய – கால்நடைத் தெய்வ வழிபாட்டு மரபுடன் இது இணைவதைத் தெளிவுபடுத்துகிறது. முன்பு பலியிடல் காணப்பட்டபோதும் இன்று எவ்வாலயத்திலும் அது நிகழ்வதில்லை. தீமிதித்தல் உள்ளிட்ட நேர்த்திக்கடன் தீர்த்தல் மரபுகள் பல காணப்படுகின்றன. கிராஞ்சி, வேரவில், கல்லாவில் போன்ற இடங்களில் துதிப்பாடல்கள் இல்லையாயினும்; மந்திரக்கட்டு, சடங்காசாரங்கள் நின்றுநிலவும் இடங்களாக அவை காணப்படுகின்றன. இளந்தாரி வலிமையின் – வீரத்தின் அடையாளம். ஆதலால் அது நடுகல்லின் வழியும் சூலத்தின் வழியும் நின்று நிலவுகின்றது. https://www.ezhunaonline.com/ilandari-worship/
  24. ஆழ்ந்த இரங்கல்கள். அஜீவன் அண்ணாவுடனான கருத்தாடல்கள் நினைவுக்கு வந்து போகின்றன.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.