Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Justin

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Justin

  1. மூவருக்கும் நன்றி! உங்கள் மூன்று பேருக்காகவாவது சுவாரசியமான பனிப்போர் நிகழ்வுகளைப் பற்றிய இந்த தொடர் 10 நாட்களுக்கொரு முறை வரும். வேலையும் இறுக்கமாக மாறி விட்டதால் 10 நாட்கள்! 😂
  2. ஓயாத நிழல் யுத்தங்கள் - 2 ஆகஸ்ட் 13 ஆம் திகதி, 1961 பனிப்போர் கதையில் ஓர் முக்கியமான நாள். இந்த தினத்தில் தான் பனிப்போரின் இரு தரப்பினரும் மிக நெருக்கமாக எதிரெதிர் திசைகளில் ஆளணிகளை நிறுத்தி வைத்திருந்த ஒரு புவியியல் எல்லை ஒரு திடப்பொருளாக உருவானது. அந்த எல்லையின் பெயர் "பெர்லின் சுவர்". பெர்லின் சுவரின் கதை, ஆகஸ்ட் 13, 1961 முதல், நவம்பர், 9 1989 வரை நீழும் ஒரு சுவாரசியக் கதை. இந்தச் சுவரின் அரசியல், இராணுவ, மற்றும் சொந்த அனுபவக் கதைகள் இன்னும் எழுதப் பட்டுக் கொண்டிருக்கின்றன. மேற்கும் கிழக்கும் 1945 இல் ஐரோப்பாவில் இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வருகிறது. இறுதியாக ஹிற்லரின் மரணத்திற்கு முன்னர், கிழக்கிலிருந்து நாசி ஜேர்மனியை சோவியத் படைகள் ஊடுருவி, ஜேர்மனியின் கிழக்கு மூலையில் அமைந்திருந்த பேர்லினை நிர்மூலமாக்கி விட்டு, மேலும் கிழக்கு நோக்கி முன்னேறியிருந்தன. மேற்கிலிருந்து, பிரிட்டன், அமெரிக்க, பிரெஞ்சுப் படைகள் முன்னேறி மேற்குப் பாதியில் நிலை கொண்டன. இதன் பின்னர், பொற்ஸ்டாம் மகாநாட்டின் முடிவுகளின் படி, ஜேர்மனியின் மேற்கை பிரிட்டனும், அமெரிக்காவும் நிர்வகிக்க, கிழக்கை சோவியத் நாடு கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் என்ற ஏற்பாடு உருவானது. பின்னர், பிரிட்டனின் ஒரு பகுதி, பிரான்சிடம் கையளிக்கப் பட்டதோடு, மேற்கு ஜேர்மனியில் அமெரிக்க, பிரிட்டன், பிரெஞ்சுப் பகுதிகள் உருவாகின. இதில் கவனிக்க வேண்டியது, கிழக்கில், சோவியத் கட்டுப் பாட்டில் ஜேர்மனியின் வரலாற்றுப் புகழ் மிக்க பெர்லின் அமைந்திருந்தது. எனவே, பெர்லினையும் கிழக்கு, மேற்காகப் பாதியாக்கி நிர்வகிக்க ஏற்பாடு. இது 1946 இல் நிகழ்ந்த போது கிழக்கு, மேற்கு ஜேர்மனிகள் தேசங்களாக உருவாகியிருக்கவில்லை. 1949 இல், கிழக்கு ஜேர்மனி (ஜனநாயக ஜேர்மன் குடியரசு) , மேற்கு ஜேர்மனி (ஜேர்மன் சமஷ்டிக் குடியரசு) ஆகிய இரு தேசங்கள் உருவாகின. மேற்கு ஜேர்மனி, மேற்கின் அடியொற்றிய ஜனநாயக ஆட்சி, தேர்தல்கள், நாடாளுமன்றம் என ஒரு ஆட்சி முறையை ஏற்படுத்திக் கொண்டது. கிழக்கு ஜேர்மனி, சோவியத் முறைமையைப் பின்பற்றி கிழக்கு ஜேர்மன் சோசலிசக் கட்சியெனப் படும் ஒரு கட்சியின் கீழ், சோவியத்தின் மறைமுகக் கட்டுப்பாட்டில் ஒரு ஆட்சியை உருவாக்கிக் கொண்டது. கிழக்கும் மேற்கும் சந்தித்த பெர்லின் ஏற்கனவே, கிழக்கு-மேற்கு ஜெர்மனிகளுக்கிடையே ஒரு கம்பி வேலி வகையிலான எல்லை எழுப்பப் பட்டிருந்தது. இது, தேச எல்லையாக முழு நீளத்திற்கும் இரு நாடுகளையும் பிரித்திருந்தது. கிழக்கு மேற்கு பெர்லினுக்கிடையே எல்லைகள் திடமாக இருக்கவில்லை. ஒரு கட்டத்தில், ஒரு வீதியில் வரையப் பட்ட 6 அங்குலத் தடிப்பான ஒரு வெள்ளைக் கோடு தான் கிழக்கு மேற்கு பேர்லின்களைப் பிரித்த எல்லையாக இருந்தது. இதன் விளைவு, இரு தேசங்களுக்குமிடையே, ஜெர்மனியர்கள் சாதாரணமாகப் போய் வந்து கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் கிழக்கு மேற்குப் பாதிகளிடையே 80 இடங்களில் மக்கள் இரு நகரங்களுக்குமிடையே சென்று வரக்கூடிய நுழைவாயில்கள் இருந்தன. எனவே, கிழக்கில் இருந்து மேற்கிற்குள் நுழைய விரும்பும் பெரும்பாலானோர், கண்காணிப்புகள் குறைந்த பெர்லின் எல்லைகளின் வழியாகவே பயணம் செய்யலாயினர். கிழக்கு ஐரோப்பாவினூடாக மேற்கினுள் நுழையும் வெளிநாட்டு அகதிகளுக்கும் கூட இதுவே சிறந்த வழியாக விளங்கியது. மக்களை இழந்த கிழக்கு ஜேர்மனி மத்திய பெர்லினில் (Berlin Mitte) கிழக்கு - மேற்கு பெர்லின்களிடையேயான எல்லையின் 2008 ஆம் ஆண்டுத் தோற்றம். கிழக்கு பேர்லின் பக்கமிருந்து எடுக்கப் பட்ட படத்தில் தெரியும் அகற்றப் பட்ட கட்டிடம் முன்னாள் கிழக்கு ஜேர்மனி நாடாளுமன்றம். பின்னணியில், மேற்கு பெர்லின் பக்கம் தெரிவது Berlin Dom எனப்படும் பெர்லின் பேராலயம் (Berlin Cathedral) (படம்: சொந்த ஆவணம் 2008). கிழக்கு ஜேர்மனி, சோவியத் கோட்பாட்டை அடியொற்றி உருவாக்கிய ஒரு கட்சி ஆட்சி முறை விரைவிலேயே அந்த நாட்டின் பொருளாதார, சமூக நிலைமைகளில் பிரதிபலிக்க ஆரம்பித்தது. வயதான கிழக்கு ஜேர்மனியர்கள் ஓரளவுக்கு சோசலிசத்தை, எளிமையான வாழ்க்கையை ஏற்றுக் கொண்டு உயிரோடிருக்கக் கற்றுக் கொண்டனர். ஆனால், இளம் கிழக்கு ஜேர்மனியர்களுக்கு இந்த எல்லைகள் வகுத்த வாழ்க்கை தேங்கிய குட்டையில் இருப்பது போன்ற ஒரு நிலையாகத் தெரிந்தது. இதனால், கணிசமான எண்ணிக்கையில் இளம் கிழக்கு ஜேர்மனியர்கள் மேற்கு ஜேர்மனி நோக்கிக் குடிபெயர்ந்து கொண்டிருந்தார்கள். 1951 இல், கிழக்கு ஜேர்மன் அரசு மேற்கு நோக்கிப் பயணம் செய்வோருக்கு பயண அனுமதி முறையொன்றைக் கொண்டு வந்தது. இதன் பிறகும், இளம் சந்ததி மேற்கு நோக்கி இடம் பெயர்வதைத் தடுக்க இயலவில்லை. 1951 முதல் 1961 வரையான 10 ஆண்டுகளில் மட்டும் 2 மில்லியன் வரையான கிழக்கு ஜேர்மனியர்கள் மேற்கு ஜேர்மனி நோக்கி இடம்பெயர்ந்தனர் - அவர்களுள் அரைவாசிப்பேர் 25 வயதுக்குட்பட்ட இளையோர் என ஒரு கணக்கெடுப்புச் சொல்கிறது. இந்த மேற்கு நோக்கிய இடம்பெயர்வு, கிழக்கில் பாரிய பொருளாதாரத் தேக்க நிலையையும், சனத்தொகை வளராத தேக்க நிலையையும் உருவாக்கியது தான், பெர்லின் சுவரை கிழக்கு ஜேர்மனி எழுப்பக் காரணமாக இருந்தது. ஆனால், இதை 1951 இன் பயண அனுமதி போலச் செய்யாமல், இரகசியமாக ஒரே இரவில் செய்தால் தான் மக்கள் எல்லையைப் பிய்த்துக் கொண்டு ஓடிவிடாமல் தடுக்கலாம் என கிழக்கு ஜேர்மன் அரசு உணர்ந்திருந்தது. ஒபரேசன் றோஸ் இந்த இரகசிய சுவர் எழுப்பல் நடவடிக்கைக்கு இடப்பட்ட பெயர் ஒபரேசன் றோஸ்! மிகவும் இரகசியமாக, மக்களுக்கு எந்த முன் சமிக்ஞையும் தராமல் திட்டமிடப் பட்ட இந்த நடவடிக்கைக்குத் தலைவராக எரிக் ஹெனேக்கர் இருந்தார் (இவர் பின்னர் கிழக்கு ஜேர்மன் தலைவராகவும் பதவி வகித்தவர்). மேற்கின் உளவு நிறுவனங்கள் கூட இது நடப்பதற்கு இரு நாட்கள் முன்னதாகத் தான் ஏதோ பெரிய திட்டம் இருப்பதை அறிந்து கொண்டிருந்தனர். ஒபரேசன் றோஸ், ஆகஸ்ட் 13 நள்ளிரவில் ஆரம்பமான போது, முதல் நடவடிக்கையாக இரு பெர்லின் பாதிகளுக்குமிடையிலான நிலக்கீழ் (U-bahn), தரைமேல் (S-bahn) ரயில்கள் உடனே நிறுத்தப் பட்டன - இதுவே மக்கள் ஏதோ நடக்கிறதென முதலில் உணர்ந்த தருணமாக இருந்தது. சடுதியாகவே கிழக்கு ஜேர்மன் எல்லைக் காவல் பொலிசின் பாதுகாப்போடு, பாரிய இயந்திரங்கள் கொண்டு வரப்பட்டு உயரமான கம்பி வேலிகள் கிழக்கு மேற்கு எல்லையில் எழுப்பப் பட்டன. இந்தக் கம்பி வேலிகள் அடுத்த ஒரு வாரத்தில் கொங்க்ரீட் சுவர்களால் பலம் பெற்றன. நூற்றுக் கணக்கான வீதிகள் கிழக்கு மேற்கு எல்லையில் மூடப் பட, பெர்லினில் இருந்த 80 எல்லைக் கடவைகள் 3 ஆக ஒரே இரவில் குறுக்கப் பட்டன. ஒபரேசன் றோஸ் வெற்றி, கிழக்கு பெர்லினில் இருந்து கிழக்கு ஜேர்மனியர் யாரும் மேற்கிற்கு நினைத்த வாக்கில் போக முடியாத சுவர் எழுந்து விட்டது. ஜேர்மன் மக்கள் என்ன செய்தார்கள்? தடாலடியாக நிகழ்ந்த இந்த நடவடிக்கைக்கு, கிழக்கு ஜேர்மன் மக்களிடமிருந்து எதிர்ப்புகள் பெரிதாக வரவில்லை. அதற்கான அவகாசமும் இருக்கவில்லை. ஆனால், மேற்கு பெர்லின் வாசிகள், எல்லைப் பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் செய்து தம் எதிர்ப்பைக் காட்டினர். அமெரிக்க, பிரிட்டன், பிரெஞ்சுப் படைகள் -குறிப்பாக இவர்கள் இராணுவ பொலிஸ் பிரிவைச் சேர்ந்த எல்லைப் பாதுகாப்புப் படையினர்- எந்த துலங்கலையும் காட்டாமல், மேற்கு பெர்லின் மக்களைக் கட்டுப் படுத்த மட்டும் செய்தனர். கிழக்கு ஜேர்மன் படையினருக்கு மேற்கின் திசை நோக்கி ஒரு துப்பாக்கி வேட்டுக் கூட தீர்க்கக் கூடாதென கடுமையான உத்தரவு பிறப்பிக்கப் பட்டிருந்தது. ஆனாலும், பின்னரங்கில், சோவியத் படையின் தாங்கிகள் நின்றதையும் மேற்கின் உளவுப் பிரிவு பதற்றத்தோடு அவதானித்துக் கொண்டிருந்தது. ஆனால், முள் வேலிகள் எழ ஆரம்பித்ததுமே, இது ஒரு மேற்கு நோக்கிய சோவியத் ஆக்கிரமிப்பு அல்ல என அமெரிக்கத் தரப்பு விளங்கிக் கொண்டதால், பதற்றம் தணிந்தது. ஆனால், கிழக்கு பேர்லின் மக்கள் முன்னரை விட தீவிரமாக இப்போது மேற்கு பெர்லினை நோக்கிச் செல்ல ஆரம்பித்தார்கள். பெர்லின் சுவர் சில பகுதிகளில் வீடுகளின் கொல்லைப் புறச் சுவராகவே தெரியும் அளவுக்கு குடிமனைகளுக்கு நெருக்கமாகச் சென்றிருக்கிறது. இந்த இடங்களில் சில கிழக்கு பெர்லின் வாசிகள், சாளரங்கள் வழியாகக் குதித்து மேற்கு பெர்லினுக்குள் தப்பியோடிய சம்பவங்கள் நடந்தன. ஒரு கட்டத்தில், இத்தகைய சுவருக்கு அண்மைய வீடுகளின் கீழ் தளத்தை கிழக்கு ஜெர்மன் பொலிசார் முற்றாக சீல் வைத்து, மேல் தளத்தை மட்டும் விட்டு வைத்திருந்தனர். மக்கள், மேல் தளச் சாளரத்தின் வழியே மெத்தை, தலையணைகள் என்பவற்றை மேற்கு பெர்லின் பக்கம் எறிந்து, அவற்றின் மேல் குதித்து தப்ப முயன்ற சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன. வெளிப்படையாக இல்லாமல், தப்பியோடுவோரை வேறு வழிகளில் தடுத்து நிறுத்த முடியாத பட்சத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தும் உத்தரவும் வழங்கப் பட்டிருந்தது. பெர்லின் சுவர் இருந்த காலப்பகுதி முழுவதும், 170 பேர் வரை கிழக்கு ஜேர்மன் எல்லைப் பொலிசாரினால் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியாகினர். ஆனாலும், மக்கள் தப்பியோடுவதும், சுரங்கப் பாதைகள் அமைத்து கிழக்கிலிருந்து மேற்கிற்கு ஆட்களைக் கடத்துவதும் தொடர்ந்தே வந்திருக்கிறது. இதனால், மேற்கு ஜேர்மனியின் சனத்தொகையும் (அதனால் பொருளாதாரமும்) வளர, கிழக்கு ஜேர்மனியின் சனத்தொகை 1951 முதல் 1989 வரை வளராமல் தேங்கியது. மேற்கு அணியின் துலங்கல் என்னவாக இருந்தது? 1987 ஜூன் 12: மேற்கு பெர்லினில் றொனால்ட் றீகன் உரை. பின்னணியில் பெர்லின் சுவரும், அதன் பின்னால் பெர்லினில் பிரபலமான ப்றண்டன்பேர்க் வாயிலும் (Brandenburg Tor) தெரிகின்றன. (பட உதவி, நன்றியுடன்: அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம்). மேற்கு ஜேர்மனி, கிழக்கிலிருந்து வரும் ஜேர்மனியர்களை அதிக அலட்டலில்லாமல் உள்வாங்கிக் கொண்டது. வருவோரில் பெரும்பாலானோர் வேலை செய்யக் கூடிய, மூளைசாலிகளாக இருந்தனர், எனவே மேற்கிற்கு இது ஒரு வரப்பிரசாதம். மேற்கு ஜேர்மனி திடீரென சோவியத் தாங்கிகளால் ஆக்கிரமிக்கப் படுமோ என்ற உசார் நிலையில் இருந்த அமெரிக்க, பிரிட்டன், பிரெஞ்சு அணிக்கு, பெர்லின் சுவர் சிறிது நிம்மதியைக் கொடுத்தது. ஆனாலும், பெர்லினுக்கு வெளியே இருக்கும் எல்லை வழியாக சோவியத் தாங்கிகள் நுழைவதை எதுவும் தடுக்க முடியாதென்பதும் அவர்களுக்குத் தெரியும். இதற்கு ஒரே வழியாக, மேற்கில் நேட்டோவின் இருப்பை பலப்படுத்துவதும். பெர்லினை முழுவதும் கைவிட்டு விடாமல் இருப்பதுமே வழிகளென மேற்கு அணி உணர்ந்திருந்தது. பெர்லினை இராணுவங்களற்ற சூனியப் பிரதேசமாக மாற்ற வேண்டுமென்ற சோவியத் தரப்பு வாதங்களையும் மேற்கு ஏற்றுக் கொள்ளவில்லை. ஒரே இரவில் எழுந்து, ஒரே இரவில் வீழ்ந்த சுவர் பெர்லின் சுவரின் எச்சங்கள் இன்றும் பெர்லின் நகரின் சில பகுதிகளில் காணப்படுகின்றன. இங்கே பேருந்துச் சாளரத்தினூடு தெரிவது பெர்லின் இந்திய தூதுவராலயத்திற்கு அருகில் காணப்படும் பெர்லின் சுவரின் எச்சம் (படம்: சொந்த ஆவணம், 2008). கிழக்கு ஐரோப்பாவின் மீது சோவியத்தின் செல்வாக்கு படிப்படியாக பலவீனமடைந்து வந்து கொண்டிருந்தது. 1946 முதல், கிழக்கு ஐரோப்பாவின் சில நாடுகளில் மக்கள் எதிர்ப்பு உள்ளூர் கம்யூனிச ஆட்சிகளுக்கெதிராக எழுந்த போதெல்லாம், சோவியத் தாங்கிகள் தெருவில் இறங்கி மக்களை எதிர் கொள்வதே வழமையாக இருந்தது. கிழக்கு ஜேர்மனியில் கூட ஒரு தொழிலாளர் புரட்சி ஆர்ப்பாட்டம் இப்படித் தான் சோவியத் உதவியுடன் அடக்கப் பட்டது. ஆனால், 1985 இல் மிகையில் கொர்பசேவ் சோவியத் நாட்டின் தலைமையை ஏற்றது முதல் சில மாற்றங்களை ஏற்படுத்த முனைந்தார். இதனால், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும், ஒரு கட்சி ஆட்சிக்கெதிராக புதிய கட்சிகளும், அமைப்புகளும் உருவாக ஆரம்பித்தன. போலந்தில், லெக் வலெசா தலைமையில் உருவான "ஒற்றுமை இயக்கம் – Solidarity Movement" இதற்கு ஒரு சிறந்த உதாரணம். கிழக்கு ஐரோப்பாவை மேற்கிலிருந்து பிரித்து வைத்திருந்த "இரும்புத் திரை" (Iron Curtain- இந்தச் சொற்பதத்தை முதலில் பாவித்தவர் வின்ஸ்ரன் சேர்ச்சில்) மீது, சிறு ஓட்டைகள் விழ ஆரம்பித்தன. நவம்பர் 1989 இல் பெர்லின் சுவர் தாரை தப்பட்டைகளோடு வீழந்தமை தான் செய்திகளில் பெரிதாக பிரபலமானது. ஆனால், அதே ஆண்டு ஏப்ரலில், அதிக ஊடக வெளிச்சமில்லாமல், ஹங்கேரி, ஆஸ்திரியாவின் எல்லையில் தான் எழுப்பி வைத்திருந்த மின்சார வேலியை அகற்றியது. ஹங்கேரியில் கம்யூனிச ஆட்சி ஈடாட்டம் கண்ட பின்னர் இந்த மாற்றம். யார் பெர்லின் சுவரைத் தகர்த்தது? படிப்படியான கிழக்கு ஐரோப்பிய மாற்றங்களோடு, அமெரிக்காவின் தலைமையில் மேற்கு அணி செயல்படுத்திய அழுத்தங்களும் பெர்லின் சுவரைத் தகர்த்தன என்பதே சரியானது. 1987 இல் பெர்லின் சுவருக்கு அண்மையான ப்றண்டன்பேர்க் வாயிலுக்கருகில் வரலாற்று முக்கியத்துவம் மிக்க ஒரு உரையை ஆற்றிய அன்றைய அமெரிக்க ஜனாதிபதி றொனால்ட் றீகன் “Mr. President, tear down this wall!” என்று (கொர்பச்சேவ் நோக்கி) பகிரங்க அழைப்பு விடுத்தது ஒரு பிரபலமான நிகழ்வு. இரு ஆண்டுகள் கழித்து, நவம்பர் 9, 1989 இல் ஒரு கிழக்கு ஜேர்மன் அதிகாரி ஒரு பத்திரிகையாளர் மாநாட்டில் " கிழக்கு, மேற்கு பேர்லின் வாசிகள் தடையின்றிப் பயணிக்கலாம்” என்ற தொனியிலான ஒரு அறிவித்தலை விடுத்த சில மணித்துளிகளில், ஆயிரக்கணக்கான கிழக்கு பேர்லின் வாசிகள் பெர்லின் சுவரை நோக்கிப் படையெடுக்க ஆரம்பித்தனர். அன்றிரவு 11 மணிக்கு கிழக்கு ஜேர்மன் எல்லைக்காவலர்கள் தடுப்புகளின்றி மக்கள் மேற்கினுள் நுழைய அனுமதிக்க ஆரம்பித்தார்கள். 11.30 மணிக்கு சகல பெர்லின் எல்லைக் கடவைகளும் திறக்கப் பட்டன. பெர்லின் வாசிகள் சில இடங்களில், சுவரை அகற்ற ஆரம்பித்தார்கள். அடுத்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 2 மில்லியன் கிழக்கு ஜேர்மன் வாசிகள் திறந்த பெர்லின் சுவரினூடாகப் பயணித்து மேற்கு ஜேர்மனியில் கொண்டாட்டங்களில் ஈடுபட்டார்கள் என ரைம்ஸ் இதழ் சொல்கிறது. விளைவுகள் எவை? பெர்லின் சுவர் அகற்றப் பட்டவுடனேயே கிழக்கும் மேற்கும் ஒன்று சேர்ந்து விடவில்லை, அது 1990 ஒக்ரோபரில் சோவியத் - மேற்கு அணிக்கிடையிலான பேச்சு வார்த்தைகளின் பின்னர் நிகழ்ந்தது. ஆனால், இரு ஜேர்மனிகளும் சேர்ந்தமை, சோவியத் ஒன்றியம் என்ற கம்யூனிச நாட்டின் சவப்பெட்டி மீது அடிக்கப் பட்ட முதல் பெரிய ஆணி என்று சொல்லலாம். இதையடுத்து நிகழ்ந்த சம்பவங்கள், சோவியத் ஒன்றியத்தை உள்ளிருந்தே நொருங்க வைத்த காரணிகளாகத் தொடர்ந்து, 1991 டிசம்பரில் சோவியத் ஒன்றியம் முற்றாக இல்லாமல் போனது. -மேலும் வரும்
  3. வாசித்த, கருத்துப் பகிர்ந்த அனைவருக்கும் நன்றிகள். இதை நியானி பின் செய்திருப்பதால், இந்த திரியிலேயே தொடர்ந்து எழுதுவேன். அடுத்தது பெர்லின் சுவரின் கதை, அடுத்த வெள்ளி இணைக்கிறேன்.
  4. ஓயாத நிழல் யுத்தங்கள் – 1 இது வரை இரு உலகப் போர்களை உலகம் கண்டிருக்கிறது. இவற்றுள் இரண்டாவது உலகப் போரின் பின்னர் இரு துருவங்களாக உருவான தேசங்கள் பனிப்போர் எனப்படும் நிழல் யுத்தங்களில் ஈடுபட்டதன் தாக்கம் இன்றும் உலகின் அரசியல், பூகோள நிலைமைகளில் எதிரொலிக்கிறது. அமெரிக்காவின், ஐரோப்பாவின் சில நகரங்களில் இன்றும் பனிப்போர் காலக் கட்டமைப்புகள் - அணுவாயுதத் தாக்குதலில் இருந்து காக்கும் காப்பரண் கட்டிடடங்கள்- நிலைத்திருக்கின்றன. 90 இற்குப் பிறந்த இளவல்களுக்கு இந்தக் கட்டிடங்கள் பற்றி எதுவும் தெரியாது. 90 களில் வயசுக்கு வந்த (சுவியர் சில சமயங்களில் குறிப்பிடும் 90’s kids) எங்கள் போன்றோருக்கு பனிப்போரின் முடிவு காலம் ஒரு “வாழ்ந்த அனுபவம்”. தனிப்பட்ட ரீதியில், என் வாசிப்பார்வத்தை வளர்த்ததில் பனிப்போருக்கு பெரிய பங்கிருக்கிறது. இதை ஒரு தட்டையான வரலாறாகச் சொல்லி விட முடியாது. ஆனால், அந்தக் காலங்களில் நிகழ்ந்த சம்பவங்கள் சார்ந்து முப்பரிமாணச் சித்திரமாக எங்கள் நினைவுகள் இருக்கின்றன. இவை சார்ந்து சில கட்டுரைகளை தனித்தனியாக எழுதும் முயற்சி இது. இதன் மூலம் உலக வரலாற்று வாசிப்பையும், பகிர்வையும் ஊக்குவிக்கும் ஒரு சிறு முயற்சி. இரு முன்னறிவித்தல்கள்: 1. இது மிகவும் மெதுவாக நகரப் போகும் ஒரு முயற்சி, எழுதுபவருக்கு வேறு வேலைகள் இல்லாமல் வெட்டியாக இருக்கக் கிடைக்கும் போது மட்டும் இது எழுதப் படும். 2. இந்தத் தொகுப்பில் இணைக்கும் படங்கள் அனேகமாக அமெரிக்க ஆவணக்காப்பகத்தில் (National Archives) இருந்து எடுக்கப் பட்டவையாக இருக்கும். இதன் அர்த்தம், அமெரிக்கா சொல்வதை மட்டும் விபரிக்கும் நோக்கமல்ல. இந்த ஆவணக்காப்பகத்தில் தான் பெரும்பாலான அரிய புகைப்படங்கள் பதிப்புரிமையில்லாமல் பயன்படுத்தக் கூடியவையாக இருக்கின்றன. கொரியா ஜூன் ஜூலை மாதங்கள் கொரிய தீபகற்பத்திற்கு முக்கியமான மாதங்கள். ஜூன் மாதம் 25, 1950 இல் கொரிய நேரப்படி அதிகாலையில் வடகொரியாவின் படைகள் சத்தமில்லாமல் எல்லையைத் தாண்டி தென் கொரிய தலை நகர் நோக்கி நகர்ந்தன. இது ஏன் முக்கியமெனில், இரண்டாம் உலகப் போரின் பின்னர், உலகில் முதன் முதலாக ஒரு நாட்டின் படைகள் எல்லை தாண்டி இன்னொரு அயல் நாட்டினுள் நுழைவது இது தான் முதல் தடவை. 3 ஆண்டுகள் கழித்து, பல இலட்சம் அமெரிக்க, கொரிய, மற்றும் சீனப் படைகள் உள்ளடங்கிய தரப்புகள் பலியான பின்னர் ஜூலை 27, 1953 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் கொரிய யுத்தம் முடிவுக்கு வந்தது. எப்படி இரு கொரியாக்கள் உருவாகின? ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த கொரியாவை, இரண்டாம் உலகப் போர் முடிந்த பின்னர் தற்காலிகமாக சோவியத்தும், அமெரிக்காவும் பாதியாகப் பிரித்து அங்கேயிருந்து சரணடைந்த ஜப்பானியப் படைகளை அகற்றுவது எனத் தீர்மானிக்கப் பட்டிருந்தது. இதை எப்படிச் செய்வதென யோசித்துக் கொண்டிருக்கும் போதே, சோவியத் நாடு தன் படைகளை வட கொரியாவில் நிலை நிறுத்த ஆரம்பித்தது. அவசர அவசரமாக அமெரிக்கா தன் படைகளை தெற்கில் குவிக்க ஆரம்பித்தது. கொரிய தீபகற்பம், 38thparallel சமாந்தரக் கோடு எனப்படும் latitude இன் படி வட, தென் கொரியாக்களாக உருவானது. இதன் பின்னர், 1946 இல் தற்போதிருக்கும் (கோசானின் தெய்வமச்சான்) கிம்மின் தாத்தா கிம் இல் சங் வட கொரியாவில் கம்யூனிச ஆட்சியை நிறுவியதுடன் அந்த 38 சமாந்தர எல்லைக் கோடும் அப்படியே நிரந்தர எல்லையாக நிலைத்து விட்டது. இந்த எல்லையைத் தாண்டித் தான் 1950 இல் வட கொரிய படைகள் தெற்கை ஆக்கிரமிக்க முனைந்தன. இந்த வடகொரிய ஆக்கிரமிப்பிற்கு ஒரு பின்கதை இருக்கிறது - இது ஒரே இரவில் நிகழ்ந்த ஒரு திடீர் நடவடிக்கையல்ல. உலகப் போர் முடிந்த பின்னர் 1948 இல், பசுபிக் பிராந்தியத்திலிருந்து அமெரிக்கா தன் பெருமளவிலான படைகளை அகற்றி விட்டிருந்தது. ஜப்பான், பிலிப்பைன்ஸ் தளங்களில் மட்டும் அமெரிக்க படைகள் இருந்தன, ஆனால் பாரிய யுத்த தயாரிப்புகள் இருக்கவில்லை. இதைக் கவனித்த வட கொரியாவின் கிம் இல் சங், ஸ்ராலின் தெற்கை ஆக்கிரமிக்க தங்களுக்கு உதவ வேண்டுமெனத் தொடர்ந்து நச்சரித்து வந்தார். முதலில் மறுத்த ஸ்ராலின், ஒரு கட்டத்தில் அனுமதியும் கொடுத்து தனது இராணுவ ஜெனரல்களைத் தாக்குதல் திட்டம் தயாரிக்கவும் வழங்கினார். பின்னர் படிப்படியாக, சோவியத் ஆயுதங்கள், விமானத் தாக்குதல் பாதுகாப்பு என்பனவும் சோவியத் மூலம் கிடைத்தன வட கொரியாவிற்கு. இதையெல்லாம் இன்னொரு கம்யூனிசத் தலைவர் பதற்றத்தோடு பார்த்துக் கொண்டிருந்தார்: சீனாவின் மாவோ சே துங் தான் அவர். மாவோ, ஸ்ராலினை உலக கம்யூனிசப் பிதாமகராக ஏற்றுக் கொள்வதைத் தந்திரமாகத் தவிர்த்து வந்த ஒருவர். 1950 இல் தான் மாவோ தன் கம்யூனிச ஆட்சியை சீனாவில் ஓரளவுக்கு நிலை நாட்டி விட்டு, தப்பிப் போய் போர்மோசா (Formosa) தீவில் (இன்று தாய்வான் என்று அழைக்கப் படும் தீவு) தனிதேசம் அமைத்திருந்த போட்டிக் குழுவை நோக்கிப் பாய திட்டம் தீட்டிக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தான் கிம் இல் சங் ஸ்ராலினை நெருங்கி தெற்கைத் தாக்க அனுமதியும் உதவியும் பெற்று, மாவோவின் கனவுக்கு மறைமுக ஆப்பு வைத்திருக்கிறார். அமெரிக்க வடிவில் வந்த ஆப்பு கிம் இல் சங், மாவோவிற்கு வைத்த இந்த மறைமுக ஆப்பு அமெரிக்கக் கடற்படையின் வடிவில் வந்திறங்கியிருந்தது. "தாய்வானிற்கு இராணுவ ரீதியில் உதவப் போவதில்லை" என்ற முடிவை எடுத்திருந்த அமெரிக்க அதிபர் ட்ரூமன், வட கொரியாவின் ஆக்கிரமிப்பை முறியடிக்க ஒரு மட்டுப்படுத்தப் பட்ட "பொலிஸ் நடவடிக்கையை" அனுமதித்தார் (இந்தப் பதத்தில் இருந்து தான் பின்னாளில் அமெரிக்கா "உலக பொலிஸ்காரன்" என்ற சொற்பதம் உருவாகியிருக்கக் கூடுமென நினைக்கிறேன்). அதே நேரம், இந்த நடவடிக்கையில் அமெரிக்கா கவனம் செலுத்தும் போது, மாவோ தாய்வானை நோக்கிப் படையெடுக்கக் கூடும் என்ற ஊகத்தில், அமெரிக்க கடற்படையின் 7வது கப்பற் படையை (7th Fleet) தாய்வான் சீனா எல்லையில் தொடர் ரோந்து செய்யவும் ட்ரூமன் கட்டளை பிறப்பித்திருந்தார். இது தான் மாவோ, 1950 இல் தாய்வானை நோக்கி சீன மக்கள் இராணுவத்தை ஏவாமல் தவிர்த்தமையின் பிரதான காரணம். வடகொரியாவின் மீது நடவடிக்கை எடுத்த ஐ.நா பாதுகாப்புச் சபை இன்று ஐ.நா பாதுகாப்புச் சபை உலக வல்லரசுகளின் போட்டிக் களமாக திகழ்கிறது. ஆனால், 1950 இல் உருவாக்கப் பட்ட புதிதில், உண்மையாகவே உலக சமாதானம், பாதுகாப்பு என்பவற்றைப் பேணும் அதன் பணியை சீரியசாகச் செய்ய முயன்றது என்று தான் சொல்ல வேண்டும். இந்த அடிப்படையில், இதன் முதல் பணியாக, வட கொரியா மீது நடவடிக்கை எடுத்து தென்கொரியாவை விட்டு படைவிலகலைக் கோரும் தீர்மானத்தை ஏகமனதாக ஐ.நா பாதுகாப்புச் சபை எடுத்தது. ஆனால்,கொஞ்சம் நிதானித்து இந்த தீர்மானத்தை ஆராய்ந்தால், இந்த தீர்மானம் ஏகமனதாக நிறைவேறவும் சோவியத் நாடு தான் மறைமுகக் காரணமாக இருந்தது என்பதைக் காணலாம். 50 களில் இருந்த ஐ.நா பாதுகாப்புச் சபையில் நிரந்தர உறுப்பு நாடுகளாக (எனவே வீட்டோ அதிகாரமுடைய நாடுகள்) அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனக் குடியரசு, சோவியத் நாடு என்பன இருந்தன. இங்கே “சீனக் குடியரசு” என்பது தாய்வானில் இருந்த, மேற்கு ஏற்றுக் கொண்ட சீனா, தற்போதிருக்கும் “மக்கள் சீனக் குடியரசு” அல்ல என்பதைக் கவனிக்க வேண்டும். கம்யூனிச சீனாவான மக்கள் சீனக் குடியரசை, ஐ.நா அங்கீகரிக்காமல் இருந்ததை எதிர்த்து, சோவியத் நாடு ஐ.நா பாதுகாப்புச் சபையை பகிஷ்கரித்துக் கொண்டிருந்த காலப் பகுதியில் தான், வட கொரியா மீது படையெடுக்கும் தீர்மானத்தை ஐ.நா பாதுகாப்புச் சபை எடுத்தது. எனவே, ஸ்ராலின் ஒரு பக்கம் கிம் இல் சங்கிற்கு தெற்கை ஆக்கிரமிக்க உதவி செய்தபடியே, ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் வட கொரியா மீதான எதிர் நடவடிக்கையை தடுக்காமலும் விட்டிருக்கிறார். இது முட்டாள் தனமென சில ஆய்வாளர்கள் சொல்கின்றனர். ஆனால், ஸ்ராலினின் நடவடிக்கைகளின் பின்னால் இன்னொரு உள் நோக்கம் இருந்திருக்கலாம். மேற்கு ஐரோப்பாவில் கண் வைத்திருந்த சோவியத் ஒன்றியம் இரண்டாம் உலகப் போர் முடிந்தவுடனேயே, சோவியத் ஒன்றியமும், மேற்கும் கொள்கையளவில் இரு துருவங்களாக உருவாகின. இந்த விரிசல்கள், ஐரோப்பாவின் எதிர்காலத்தை தீர்மானிப்பதற்காக நடத்தப் பட்ட பொற்ஸ்டாம் (Potsdam Conference) மாநாட்டிலேயே வெளிப்பட ஆரம்பித்து விட்டன. சோவியத் ஒன்றியம், கிழக்கு ஐரோப்பாவை மட்டுமன்றி, மேற்கு ஐரோப்பாவையும் கம்யூனிச குடையின் கீழ் கொண்டு வரும் ஆர்வத்தில் காய் நகர்த்தியது. இதற்கு மிகச் சிறந்த சாட்சியமான சம்பவம் கொரிய யுத்தம் ஆரம்பிப்பதற்கு சரியாக இரு ஆண்டுகள் முன்னர், ஜூன் 1948 இல் சோவியத் ஒன்றியம் மேற்கு பேர்லினிக்கான வினியோகப் பாதைகளை ஒரு தலைப்பட்சமாக மூடிய நிகழ்வு. நேட்டோ அமைப்பு உருவாக வித்திட்ட இந்த நிகழ்வை, ஒரு தனிக் கட்டுரையில் பின்னர் பேசலாம். சுருக்கமாகச் சொன்னால், மேற்கின், அமெரிக்காவின் படைகளை ஐரோப்பாவில் இருந்து, தொலைவிலிருக்கும் கொரியா நோக்கிப் போக வைத்தால், தனது மேற்கு ஐரோப்பா நோக்கிய விரிவாக்கம் இலகுவாகலாம் என்ற ஸ்ராலினின் கணிப்பும் வட கொரியாவை அவர் யுத்தமொன்றை நோக்கித் தள்ளக் காரணமாக இருந்தது. சுதாரித்து, வென்று பின் தோற்ற மேற்கு இஞ்சொன் தரையிறக்கத்தின் போது அமெரிக்கப் படையினர். எழுபதாயிரம் அமெரிக்க மரைன்கள், 200 இற்கு மேற்பட்ட கடற்கலங்களில் தரையிறங்கிய இந்த தாக்குதல். பட உதவி நன்றியுடன்: அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம். ஐ.நா வட கொரியா மீது பொலிஸ் நடவடிக்கையை எடுத்த போதும், ஐ.நா படைகளின் பிரதான அணியாக அமெரிக்காவின் படைகளே விளங்கின. அமெரிக்காவோடு, தென்கொரியாவின் இராணுவமும் சம எண்ணிக்கையில் நடவடிக்கையில் இணைந்தது. தெற்கின் உள்ளே நன்கு ஊடுருவி விட்ட வட கொரிய இராணுவத்தை நேரடியாக அவர்களுக்குப் பரிச்சயமான நிலப்பரப்பில் எதிர் கொள்வது தற்கொலைக்குச் சமன் என அமெரிக்க இராணுவ வல்லுனர்கள் கருதினர். இந்த சந்தர்ப்பத்தில் தான், பசுபிக் பிராந்தியத் தளபதியாக இருந்த ஜெனரல் மக் ஆர்தரின் இராணுவ அனுபவம் மீண்டும் பயன்பட்டது. நோர்மண்டி தரையிறக்கம் போல, ஆனால் எண்ணிக்கையில் சிறிதாக, வட கொரிய படைகளின் பக்க வாட்டில் அமெரிக்க மரைன் டிவிஷன் ஒன்றை 1950 செப்டெம்பரில் இன்ஞொன் (Inchon) என்ற பகுதியில் மக் ஆர்தர் தரையிறக்கினார். இஞ்சொன் தரையிறக்கம் நோர்மண்டி போல பெரிதாகப் பேசப்படா விட்டாலும், பல வழிகளில் அது நோர்மண்டியை விட வெற்றிகரமானதாகக் கருதப் படுகிறது. ஒரு நாளில் இஞ்சொன் அமெரிக்க மரைன்களிடம் வீழ்ந்து, அடுத்த 11 நாட்களில் வட கொரிய படைகள் சியோலில் இருந்து பின்வாங்கி வடக்கு நோக்கிப் பின்வாங்க ஆரம்பித்தமைக்கு இஞ்சொன் தரையிறக்கம் தான் மூலக் காரணி. 1950 ஒக்ரோபர் 1 ஆம் நாள், ஐ.நா வின் கட்டுப்பாட்டில் தென் கொரியா வந்தது. 38 வது அகலாங்கு எல்லை மீண்டும் வட, தென்கொரியாக்களின் எல்லையாக உருவானது. அடுத்து நடந்த நிகழ்வுகள், அபரிமித வெற்றியுணர்வு எப்படி தோல்விகளுக்கு வழி வகுக்கும் என்பதைப் பற்றிய ஒரு பாடம்! ஜெனரல் மக் ஆர்தர், வட கொரியப் படைகளை, வடக்கு நோக்கி மேலும் துரத்திச் செல்ல வாஷிங்ரனிடம் அனுமதி கேட்கிறார். இதன் மூலம், வட கொரிய இராணுவ பலத்தை நிரந்தரமாக அழித்து, வட - தென் கொரியாக்களை ஒரே தேசமாக இணைப்பதே நோக்கம். இது நிகழ்ந்தால், சோவியத் ஒன்றியத்திற்கும், சீனாவுக்கும் மிக நெருக்கமாக ஒரு மேற்கின் இராணுவப் பிரசன்னம் உருவாகும். இதை, சோவியத் ஒன்றியமும், சீனாவும் எப்படி எதிர் கொள்ளும் என்ற கேள்வியைக் கேட்டு பதிலைத் தேட அமெரிக்காவின் பாதுகாப்புக் கட்டமைப்பில் யாருக்கும் தோன்றவில்லை அப்போது. இதன் பிரதான காரணம், வட கொரியாவை நிரந்தரமாக ஆக்கிரமிக்க அமெரிக்க அரசியல் தலைமைகள், மற்றும் பொதுமக்கள் அமைப்புகளின் ஆதரவு இருந்திருக்கிறது. அமெரிக்கா இந்த தொடர் இராணுவ நடவடிக்கைக்கு பச்சைக் கொடி காட்டியதோடு, ஐ.நாவும் வட தென் கொரியா என்ற பதங்களைத் தவிர்த்து "முழுக் கொரியாவிலும் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும்" என மறைமுகமாக கொரியாக்களை இணைப்பதற்கு ஆதரவு தெரிவித்தது. எனவே, குறுகிய காலத்தில், 38 வது அகலாங்கு எல்லையைக் கடந்து , வட கொரியாவின் பியொங் யாங்கை அமெரிக்கப் படைகள் கைப்பற்றின. தொடர்ந்து, வட கொரிய - சீன எல்லையில் இருக்கும் யாலு நதி நோக்கியும் அமெரிக்க இராணுவம் நகர ஆரம்பித்த போது சீனா தன் பங்களிப்பைத் தீவிரமாக்கியது. சீனாவின் "கம்யூனிசத் தொண்டர்கள்" “கம்யூனிசத் தொண்டர் படை” என்பது தான், சீனா வட கொரியாவினுள் அனுப்பிய தன் சீன மக்கள் இராணுவத்திற்கு இட்ட பெயர். சீனாவிடம் ஆட்பலம் - மூன்று இலட்சம் படையினர் வரை- இருந்த அளவுக்கு தொழில் நுட்பம் இருக்கவில்லை. ஆனால், வடக்கு நோக்கி நகர்ந்த ஐ.நா படைகளை (பெருமளவுக்கு அமெரிக்க படைகள்) தங்கள் அலை அலையான ஆட்பலம் மூலம் சீன இராணுவம் துவம்சம் செய்ய ஆரம்பித்தது. அமெரிக்கர்களுக்கு இருந்த பிரதான பலம் விமானப் படை. இந்த அமெரிக்க வான்படை மேலாண்மையை ஈடு கட்ட, சோவியத் ஒன்றியம் தன் “மிக்” ஜெற் விமானங்களைப் பயன்படுத்தி யாலு நதிப் பகுதியில் மட்டும் தனது சொந்த விமானிகளை வைத்து நடவடிக்கைகளில் ஈடு பட்டது. எனவே நடைமுறையில், இது அமெரிக்க, சோவியத், சீனப் படைகளிடையேயான போர் என்றாலும், மூன்றாம் உலகப் போர் உருவாகும் ஆபத்தைத் தவிர்க்க மூன்று நாடுகளும் இதனை வெளிப்படையாக அறிக்கையிடவில்லை. இறுதியில், 3 வருடங்கள் முன்னகர முடியாத பதுங்கு குழி யுத்தத்தை எதிர் கொண்ட ஐ.நா படைகள், பின்வாங்கி 38 வது அகலாங்குக் கோட்டு எல்லையில் மீண்டும் பிரிக்கப் பட்ட கொரியாவை ஏற்றுக் கொண்டதோடு, கொரியப் போர் ஜூலை 27, 1953 இல் போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் முடிவுக்கு வந்தது. ஜூலை 27, 1953 இல், ஐ.நா படைகளின் தளபதியான அமெரிக்க ஜெனரலும், வட கொரிய இராணுவ ஜெனரலும் போர் நிறுத்த உடன்படிக்கையில் கையெழுத்திட்டதோடு கொரிய யுத்தம் ஓய்வுக்கு வந்தது. பட உதவி நன்றியுடன்: அமெரிக்க தேசிய ஆவணக்காப்பகம். போரில் இருந்து உதித்த நாயகர்களும் வில்லன்களும் கொரிய யுத்தம் அமெரிக்காவிற்கு பாதகமாகத் திரும்பிய போது, ஜப்பான் மீது அணுவாயுதத் தாக்குதலை எதிர்த்த மக் ஆர்தர், சீனாவின் மீது அணுவாயுதம் பயன்படுத்த வேண்டுமென்று வாதிட ஆரம்பித்தார். ஆனால், 1945 இல் ஜப்பான் நிலையும், 1950 களில் கொரிய நிலையும் ஒன்றல்ல என்ற தெளிவான பார்வையோடிருந்த அமெரிக்க அதிபர் ட்ரூமன், மக் ஆர்தரின் கோரிக்கையை நிராகரித்து, போரை விரைவாக முடித்து வைக்க விரும்பினார். இதற்காக ஒரு கட்டத்தில், ட்ருமன் ஜெனரல் மக் ஆர்தரை அவரது பசுபிக் கட்டளைத் தளபதி பதவியிலிருந்து நீக்கவும் வேண்டியிருந்தது. இதன் பின்னரே, கொரிய தீபகற்பத்தின் போர் வெப்பம் ஓரளவு தணிந்து, போர் ஓய்வுக்கு வந்தது. மறுபக்கம், ஸ்ராலின் மார்ச் 1953 இல் இறந்து போக, ஸ்ராலினை விட சிறிது வித்தியாசமான பார்வை கொண்ட குருசேவ் சோவியத் தலைவரானார் - இதுவும் கொரியாவில் சோவியத்தின் பங்களிப்பை மாற்றியது என்கிறார்கள். சீனாவின் மாவோவும், வட கொரியாவின் கிம் இல் சங்கும் தங்கள் கம்யூனிச ஆட்சியை உள்நாட்டில் பலப்படுத்திக் கொண்டனர். இரு கொரியாக்களுக்குமிடையேயான 38 வது அகலாங்கு எல்லை, பனிப்போரில் ஒரு முக்கிய எல்லைக் கோடாக நிலைத்து, இன்றும் தொடர்கிறது. - முற்றும்
  5. இது தான் என் அவதானிப்பும். ஏனைய தளங்களில், ரஷ்ய உக்ரைன் யுத்தம் பற்றி எழுதப் பட்டிருக்கும் பெரும்பாலான கட்டுரைகள், ஆய்வுகள் எதையும் கூர்மையாக நேரம் செலவழித்து வாசித்தறிந்த பின் எழுதப்பட்டவையாக எனக்குத் தெரியவில்லை. இவற்றை மிக இலகுவாகக் கண்டு பிடிக்க ஒருவழி, சமூக வலை ஊடகங்களில் மிதந்து திரியும் cliche எல்லாம் ஏதோ வரலாற்றின் அரிய தரவுகள் போல மீள ஒப்புவிக்கப் பட்டிருக்கும். மேலே ஒரிஜினல் கட்டுரையாளரின் இந்த வசனம் ஒரு உதாரணம்: "...நவீன உலகில் அதி­க­மான நாடு­களில் போர்­களை நடத்­திய நாடு, தொடர்ந்தும் போர்­களை நடத்திக் கொண்­டி­ருக்­கின்ற நாடு எது­வெனக் கேள்வி கேட்டால் அது அமெ­ரிக்கா எனச் சிறு­பிள்ளை கூடச் சொல்­லி ­விடும்" இதை ஒப்புவித்த சிலரிடம் நான் கேட்டிருக்கிறேன்: சரி, இரண்டாம் உலகப் போரின் பின் உலகில் நிகழ்ந்த யுத்தங்கள் மொத்தமாக எத்தனை? அதில் அமெரிக்கா/நேட்டோவினால் ஆரம்பிக்கப் பட்டவை எத்தனை? இரண்டிற்கும் பதில் கிடைக்காது. "நீ மேற்கின் அடிவருடி!" என்ற மூலையில் போய் நிற்பார்கள்😂
  6. பகிடிக்குத் தான் இரண்டு பேரும் சொல்லியிருக்கிறீர்களென்றாலும், இந்த சமூக வலைத் தளங்களில் வரும் போலித் தகவல்களை ஆதாரமாக வைத்துக் கட்டுரை எழுதும் ஆய்வாளர்களால் தான் புலம் பெயர் தமிழ் சமூகத்தின் ஒரு பிரிவினரிடையே ரஷ்ய ஆதரவு நிலைப்பாடு வேரூன்றியது. சில கட்டுரைகள் deadpan comedy போல இருக்கும்: உதாரணமாக பதிவுகள் இணையத்தில் ஒரு வருடம் முன்பு, ஜோதிகுமார் என்ற சிவப்புப் சட்டைக்காரர் எழுதியிருக்கும் தகவலைப் பாருங்கள்: "....போரின் மூன்றாவது சுற்று இப்படியாய் முடிவடைந்த நிலையில் அடுத்த நான்காவது சுற்று, ரஷ்யாவின் இலத்திரனியல்-மின்னியல் தாக்குதல்களை முறியடிக்கும் வகையில் அரங்கேற்றப்பட்டது. எலன்-மஸ்க் (Elon Musk) தனது Starlink செய்மதிகளை உக்ரைனுடன் தொடர்புபடுத்துவது மாத்திரமல்லாமல் தேவைப்படும் Terminalகளையும் உக்ரைனுக்கு தந்துதவி ரஷ்ய தாக்குதல்களால் செயலிழந்து போன உக்ரைன் அலைவரிசைகளை மீள உயிர்ப்பிக்க உதவப் போவதாக அறிவித்தார். இதனைத் தொடர்ந்து, ரஷ்யா, கீவ்வின் மிக உயர்ந்த தொலைதொடர்பு கோபுரத்தை துல்லிய குண்டுவீச்சுகளால் தாக்கியழித்து, அங்கே பணியாற்றிய ஐந்து ஊழியரையும் கொன்றொழித்து விட்டதாய் உக்ரைனே அறிவித்தது. அதாவது எலன் மஸ்க்கின், Starlink செய்மதிகளின் தொடர்பாடல், ரஷ்யா படைத்தரப்பால் ஏட்டிக்குப் போட்டியான நிலையில் பரிசீலிக்கப்பட்டு, அதற்கு பதிலடியான நடைமுறை மேற்கொண்டதன் மூலம், மேற்படி நான்காம் சுற்று முடிவுக்கு கொண்டு வரப்பட்டது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், போரை, விண்வெளி நோக்கி விஸ்தரிக்க எடுக்கப்பட்ட நகர்வு, முதலடியிலேயே நிறுத்தப்பட்டது" அதாவது, உக்ரைனின் வானலை வழி தொலைத்தொடர்பை ரஷ்யா குறிவைத்துத் தாக்கி வந்த நிலையில், செய்மதி மூலம் உக்ரைனை வெளியுலகோடு இணைக்கும் நோக்கில் Starlink வழங்கப் படுகிறது. "உள்ளூர் வானலைக் கோபுரத்தை அழித்ததால், ரஷ்யா செய்மதித் தொடர்பை அழித்து விட்டதாக ஜோதிகுமார் எழுதுகிறார். இது தொழில்னுட்பம் புரியாமையா அல்லது, "வாசிப்பவர்கள் கேனையர்கள்" என்ற நம்பிக்கையா என்பது இவர் போன்ற கட்டுரையாளர்களுக்கே வெளிச்சம்! 😂
  7. செய்திகளுக்குத் திரும்பினால், தென்னாபிரிக்காவில் நடக்கவிருக்கும் மாநாட்டிற்கு புரின் வரமாட்டாராம், அவருக்குப் பதிலாக ரஷ்ய வெளிநாட்டமைச்சர் லவ்ரோவ் வருவாராம். பிபிசி சொல்கிறது. https://www.bbc.com/news/world-africa-66247067 ரஷ்யாவைப் பகைக்கவும் முடியாமல், மேற்கின் ஆக்கினையை உதறவும் முடியாமல் தென்னாபிரிக்கா தவிக்கிறதெனத் தெரிகிறது.
  8. ரஷ்யர்களே கழட்டி மடித்து வைத்த சிவப்புச் சட்டையோடு "நடுநிலை" நாடான சுவிசிலிருந்து எழுதியிருக்கிறார். ரஷ்யா "உக்ரைன் பாவித்தால், நானும் பாவிப்பேன்" என்று சொன்னதை, "ரஷ்யா இது வரை பாவிக்கவேயில்லை" என்று நம்பி எழுதுகிறார் - அங்க நிற்கிறார் ஆய்வாளர்!😂
  9. நேட்டோ நேரடியாக வெளுக்கும் நிலையை ஏற்படுத்தினால் நல்லது தான்! ஒரு வாரத்தில் முடிவு வரலாம்!
  10. நன்றி ஏராளன் (நீண்ட பதில், மன்னிக்கவும்!) முன்கதை சந்திராயன் போன்ற ஒரு விண்கலம் பூமியின் ஈர்ப்பு விசையை மீறி அதன் சுற்றுப் பாதைக்குச் செல்வதற்கு முதலில் இரண்டு ரொக்கற் இயந்திரங்களைப் பாவிக்க வேண்டும். சந்திராயன் 3 இன் தோற்றத்தில் அந்த இரண்டு பக்கமும் அமைந்திருக்கும் தாங்கிகள் தான் முதல் நிலை (Stage 1) இயந்திரம். இவற்றை ஊக்கிகள் (boosters) என்றும் அழைக்கலாம். இந்த ஊக்கிகள் முதல் சில நிமிடங்களில் எரிந்து முடித்து கழன்று பூமியில் வீழ்ந்து விடும். இதன் பிறகு, இரண்டாம் நிலை (Stage 2) ஊக்கி வேலை செய்து விண்கலத்தை பூமியில் இருந்து 22 000 மைல்கள் தொலைவு வரை தள்ளி விடும். இந்த உயரத்தில் தான் சந்திராயன் பூமியைச் சுற்றி வரும் சுற்றுப் (orbit) பாதையில் நுழையும். தன் வேலையை முடித்த பின்னர், இந்த இரண்டாம் நிலை எஞ்சின் பகுதியும் விண்கலத்திலிருந்து கழரும், ஆனால் பூமிக்கு முழுமையாக மீளுவதில்லை. இனித் தான் நீங்கள் கேட்ட கேள்விக்கான பதில்: சந்திராயனோ, அல்லது நிலவுக்கு முன்னர் சென்ற எந்த விண்கலமுமோ நேராக நிலவுக்குப் பறக்கவில்லை. பூமியைச் சுற்றி மிக உயரத்தில் Geo-synchronous orbit (GEO) என்ற வட்டப் பாதையில் அவை சுற்றி வந்து கொண்டிருக்கும். படிப்படியாக, 22,000 மைல்கள் உயரத்தில் இருந்து மேலதிக உயரத்திற்கு ஏறி, விண்கலம் சுற்றிக் கொண்டிருக்கும். ஒரு கட்டத்தில் இந்த பூமியின் சுற்றுப் பாதையில் இருந்து விலகி, நிலவினைச் சுற்றி வரும் ஒரு வட்டப் பாதையில் விண்கலம் இணையும். இப்படி, சுற்றுப் பாதையை மாற்றிக் கொள்ளவும் (orbit transfer), விண்கலத்தின் திசையை மாற்றிக் (maneuver) கொள்ளவும் தான் விண்கலத்திற்கு விசையுருவாக்கும் இயந்திரம் தேவை. அந்த இயந்திரத்தின் பெயர் மூன்றாம் நிலை (Stage 3) இயந்திரம். வெற்றிடத்தில், காற்றில்லாமல் வேலை செய்யக் கூடிய இந்த இயந்திரம் "உறைநிலை எரிபொருள்" (cryogenic) இயந்திரம் எனும் விசேட வகையைச் சார்ந்தது. இந்தியாவின் தயாரிப்பான உறைநிலை இயந்திரம் CE-20 சந்திராயன் 3 இல் விண்கலத்திற்குப் பின்னால் தாங்கி போல இருக்கும் பகுதி தான் CE-20 எனப்படும் உள்ளூர் தயாரிப்பான கிறையோஜெனிக் ரொக்கற் இயந்திரம். இந்த இயந்திரம் உள்ளூர் தயாரிப்பாக உருவாக வித்திட்டது, 1992 இல் அமெரிக்கா இந்தியாவின் விண்வெளி ஆய்வை முடக்க எடுத்த ஒரு நடவடிக்கை தான். 90 களில் இந்தியா இந்த கிறையோஜெனிக் இயந்திரங்களை வெளிநாட்டிலிருந்து வாங்க முயன்றது. அமெரிக்காவும், பிரான்சும் சொன்ன விலையை விட, ரஷ்யாவின் இயந்திரங்கள் மலிவாக இருந்ததால், இந்தியா ரஷ்யாவின் கிறையோஜெனிக் இயந்திரங்களை வாங்க ஒப்பந்தம் போட்டது. அமெரிக்காவோ, இது ஏவுகணைத் தொழில்நுட்பத்தை ஒத்தது, எனவே ஏவுகணைப் பெருக்கக் கட்டுப்பாட்டு விதிகளுக்கு முரண் எனக் கூறி, அடுத்த 2 வருடங்களுக்கு இந்தியாவின் விண்வெளி ஆய்வு நடவடிக்கைகளை முடக்கும் வகையில் ஏற்றுமதி இறக்குமதித் தடையை விதித்தது. அன்றே, இந்தியா உள்ளூரில் கிறையோஜெனிக் இயந்திரங்களை உருவாக்கும் முயற்சிகளைத் தொடங்கி, இன்று பெங்களூரில் இதற்கெனத் தனியான ஒரு பிரிவை உருவாக்கியிருக்கிறது. அங்கே உருவாக்கப் பட்டு, தமிழ்நாட்டில் போன வருடம் வெற்றிகரமாகப் பரீட்சிக்கப் பட்ட ஒரு இயந்திரம் தான் இந்த CE-20. எப்படி வேலை செய்கிறது கிறையோஜெனிக் இயந்திரம்? சில நாட்கள் முன்பு ஒரு திரியில், ஐதரசன் வாயு ஒட்சிசனுடன் சேர்ந்தால் பெரும் வெப்பம் உருவாகும் என்று குறிப்பிட்டுப் பேசிக் கொண்டிருந்தோம் அல்லவா? அதே exothermic இரசாயனத் தாக்கம் தான் கிறையோஜெனிக் இயந்திரத்தின் செயல்பாட்டுப் பொறிமுறை. மொத்தமாக 27,000 கிலோ நிறையுடைய திரவ நிலை ஓட்சிசனும், திரவ நிலை ஐதரசனும் இந்த இயந்திரத்தின் தாங்கிகளில் சேமிக்கப் பட்டிருக்கிறது. தேவையேற்படும் போது, பம்பிகள் மூலம் இந்த திரவ வாயுக்கள் கலக்கப் பட்டு, தீயை ஒரு தீயுருவாக்கி (ignition) ஏற்படுத்த, தாரை இயந்திரம் போன்ற அமைப்பு அந்தத் தீ-வாயுக்கலவையை பின் நோக்கித் தள்ளுவதால் உந்துகை (propulsion) நிகழ்கிறது. இதில் கவனிக்க வேண்டியது என்னவெனில், இந்த கிறையோஜெனிக் இயந்திரம் தொடர்ந்து இயங்க வேண்டியதில்லை: மொத்தமாக 40 நாட்கள் எடுக்கும் சந்திராயனின் நிலவுப் பயணத்தில், வெறும் 720 செக்கன்களுக்குத் தான் இந்த கிறையோஜெனிக் இயந்திரம் வேலை செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில், நியூட்டனின் முதல் விதியின் படி: இயக்கத்திலிருக்கும் பொருள் தடை ஏற்படும் வரை இயக்கத்திலிருக்கும். இதனால், உராய்வில்லாத விண்வெளி வெற்றிடத்தில் தொடர்ந்த உந்துகையின்றியே சந்திராயன் நகரும். சுற்றுப் பாதைகளை மாற்றும் போது மட்டும், கிறையோஜெனிக் இயந்திரம் வேலை செய்து விசையை வழங்கும். அப்படி அது வேலை செய்ய வேண்டிய கால அளவு மொத்தமாக வெறும் 720 செக்கன்கள் என்று கணித்திருக்கிறார்கள். மேலே, சந்திராயன் ஏவப் பட்ட பின்னர், இந்தியர்கள் பெருமைப் பட்ட சந்தர்ப்பங்களை நக்கல் நையாண்டி செய்திருப்போர் கவனிக்க வேண்டிய ஒன்று: உள்ளூரில் இப்படிப்பட்ட ஒரு சிக்கலான கிறையோஜெனிக் ரொக்கற் இயந்திரத்தை உருவாக்கியமை உண்மையில் சாதனை தான். 90 களில், அமெரிக்காவின் ஒரு சில்லறைத்தனமான சேட்டைக்குப் பதிலாக நரசிம்மராவ் உருவாக்கிய உள்ளூர் முயற்சி, அதில் முழுமையாக உள்ளூர் விஞ்ஞானிகளின் பங்களிப்பு (பலர் தென்மாநிலத்தவர், தமிழர்கள் என்பது கூடுதல் பெருமை!) என்பன தென்னாசிய நாடுகளைப் பொறுத்த வரை ஒரு சிறப்பான முன்மாதிரி. இந்தியர்கள் பெருமைப் பட சந்திராயன் 3 நியாயமான காரணம் தான்!
  11. நியூட்டனின் மூன்றாம் விதி: ஒரு விசையை உருவாக்கினால் அதற்கு சமனும் எதிருமான விசை உருவாகும், இது வெற்றிடத்திலும் நடக்கும். விண்கலம் எரிபொருளை எரித்து வெளிவிடும் உந்துகைக்கு (thrust) எதிர் விசை விண்கலத்தை முன் தள்ளும். (பயனுள்ள திசையில் திரியை நகர்த்த முனைந்தமைக்கு ஒரு பச்சை!) உங்கள் கேள்வி "காற்றில்லை, அதனால் ஒட்சிசன் இல்லாமல் எப்படி உந்துகை கிடைக்கிறது" என்பதா?
  12. நல்ல செய்தி! நாதத்தின் மொழியில் சொல்வதானால்: "அடிச்சான் பாரு அப்பாயின்ற்மென்ற் லெட்டரு!"😂
  13. இது நிகழ்ந்தால், மிகவும் தவறான ஒரு நடவடிக்கை. கொத்துக் குண்டுகளால், உக்ரைன் படைகளுக்கு மேலதிக நன்மை எதுவும் கிடைக்குமென நினைக்கவில்லை. மறு பக்கம், வெடிக்காத bomblets நிறைந்த நிலப்பகுதியை ரஷ்யாவிடமிருந்து மீட்டு உக்ரைனியர்கள் குடியேறும் போது அது உக்ரைனிய மக்களுக்கு ஆப்பாக முடியும். யுத்தம் முடிந்த பின்னர், இந்தக் கொத்துக் குண்டுகளை கறுப்புச் சந்தையில் வேறு நாடுகளும், பயங்கரவாத அமைப்புகளும் உக்ரைனிடமிருந்து வாங்கவும் வாய்ப்புகள் உண்டு. பைடன், அனேகமாக நல்ல முடிவை எடுப்பாரென நம்புகிறேன்.
  14. இந்தச் செய்தி ஆச்சரியமாகத் தான் இருக்குது. நவால்னிக்குப் பக்கத்தில் அறை ஒதுக்கியிருப்பார்களோ என்று யோசிக்கிறேன். அரச தொலைக்காட்சியில் பிரிகோஷினின் மாளிகை, கைப்பற்றப் பட்ட தங்கக் கட்டிகள் என்பன காட்டினார்களாம் என்கிறது பிபிசி.
  15. ஓம், இப்படித் தான் நடந்திருக்கிறது. அது நான், எங்காவது உடையாமல் சிக்கிக் கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகங்கள் இருந்த போது எழுதியது.
  16. ஒரு குறுகிய 20 அடிகள் நீள உருளைக்குள், ஆழ் சமுத்திரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஒக்சிசனும் வெப்பநிலையும் குறைந்து, இறப்பதென்பது கொடுமையான விடயம். இது போன்ற தண்டனையைப் பெறுவதற்கு இந்த ஐந்து பேரும் செய்த குற்றங்கள் செல்வந்தர்களாக இருப்பதும், தங்கள் செல்வத்தைப் பாவித்து ஒரு தனித்துவமான அனுபவத்தைப் பெற முயன்றமையும் மட்டும் தான் என நினைக்கிறேன்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.